ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு

இக்ஷ்வாகு காலம்தொடங்கி இருபத்து ஒன்றாம் 21m நூற்றாண்டின் முற் பகுதி வரை

ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மையானது திருவரங்கம். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்றைய ஆழ்வார்களாலும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைக்கப்படும் கோதை நாச்சியாராலும் பாடப்பெற்ற (ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘மங்களாசாஸனம் செய்தருளிய’ என்று குறிப்பிடுவர்). ஒரே திவ்யதேசம் திருவரங்கமாகும். திருமலையப்பனுக்கு பல பெருமைகள் அமைந்துள்ள போதிலும் அவனை அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்யவில்லை. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று அழைக்கப்படும் விப்ர நாராயணர் திருவேங்கடமுடையானை தமது பாசுரங்களால் கொண்டாடவில்லை. பதின்மர் பாடிய பெருமாள் என்ற கொண்டாட்டத்திற்கு உரியவர் திருவரங்கநாதனே ஆவார்.

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள். இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார். மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது. இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும். அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும். அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும். திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது. தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தின் வரலாறும் மிகப் பெரியதாகும். இந்த திருக்கோயிலில் சுமார் 650 கல்வெட்டுகளை மட்டுமே தொகுத்து தொல்லியல் துறை தனித்தொகுப்பாக வெளியிட்டு உள்ளது. South Indian Inscriptions Volume XXIV-24 என்ற தலைப்பில் வெளிவந்து உள்ளன. இந்த தொல்லியல் துறை புத்தகத்தில் இடம்பெறாத சில கல்வெட்டுகள் இந்த திருக்கோவிலில் அமைந்துள்ளன. அவை 20-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும்.

திருவரங்கத்தின் வரலாற்றினை கல்வெட்டுகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. இந்தக் திருக்கோயிலில் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், கொய்சாளர்கள், சங்கம, சாளுவ, துளுவ மற்றும் ஆரவீடு வம்சங்களைச் சார்ந்த விஜயநகர மன்னர்கள், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒருசில கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் Epigraphia-Indica வில் காணப்படுகின்றன. இந்தத் தொடர் கட்டுரைகளின் நோக்கம் கல்வெட்டுகள் வழியும், 19, 20ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த உரிமை வழக்குகளின் அடிப்படையிலும் திருவரங்கம் பெரியகோயில் வரலாற்றைத் தர உள்ளேன்.

கோயிலொழுகு, மாஹாத்மியங்கள், இதிகாச புராணச் செய்திகள், குருபரம்பரை நூல்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் திருவரங்கம் பெரிய கோயிலின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள கூடுமாகிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மிகைப்பட கூறப்படுகின்றன. மேலும், அந்தச் செய்திகளை ஒரு கால வரிசைப்படி அறிந்து கொள்ள முடிவதில்லை. பல்வேறு ஆண்டுகள் ஆய்வு செய்து கோயிலொழுகு நூலை அடியேன் பதிப்பித்தேன். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்திகள் எந்தெந்த இடங்களில் கல்வெட்டுகளுடன் முரண்படாமல் அமைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். 18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள் இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது, ‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம். இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது. அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ, குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது. திருவரங்கம் பெரிய கோயில் வரலாறு என்பது ஒரு தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. இந்த நாட்டை ஆண்ட மன்னர்களும், நம் முன்னோர்களும் 18-ஆம் நூற்றாண்டு வரை  திருக்கோயில் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளனர். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணிகளைப் பற்றிய செய்திகள் மிக குறைந்த அளவில் அமைந்துள்ளன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் திருக்கோயிலில் பணிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கிடையே எழுந்த உரிமைப் போராட்டங்களே அதிக அளவில் அமைந்துள்ளன.

பல்லவர்கள் காலத்து கல்வெட்டுகள் திருவரங்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள திருவெள்ளறை, உச்சிப் பிள்ளையார் கோயில் உய்யக்கொண்டான் திருமலை, ஆகிய இடங்களில் அமைந்துள்ள போதிலும், யாது காரணங்களாலோ திருவரங்கத்தில் காணப்படவில்லை. திருவரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது, முதலாம் பராந்தக சோழனின் 17-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். (பராந்தகனின் ஆட்சி ஆண்டு 907-953) சோழர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள் கால கல்வெட்டுகள், அவர்கள் அளித்த நிவந்தங்கள், கட்டிய மண்டபங்கள், கோபுரங்கள் ஏற்படுத்தி வைத்த நந்தவனங்கள், சந்திகள் (ஒவ்வோர் வேளையும் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கப்படும் திரு ஆராதனங்கள், சிறப்புத் தளிகைகள் போன்றவற்றை தெரிவிப்பன).

கி.பி. 1310 வரையில் திருவரங்கம் பெரிய கோயில் மிகச் செழிப்பான நிலையில் இருந்து வந்தது. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைப்பெற்ற திருவரங்கத்தின் மீதான மூன்று படையெடுப்புகள் திருவரங்க மாநகரை நிலைகுலையச் செய்துவிட்டது. கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான். பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான். (காயத்ரி மண்டபத்திற்கு முன் ஸந்நிதி கருடன் அமைந்திருக்கும் இடமே சந்தன மண்டபம். இதிஹாஸ கால சந்தனுக்கும் இந்த மண்டபத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

திருவரங்கத்தில் ‘பாட்டி காலத்து கதைகள்’ (Grandma Stories) அதிக அளவில் வழங்கி வருகின்றன. உடையவர் அவருடைய ஸந்நிதியில் அமர்ந்த திருக்கோலத்தில், பஞ்ச பூதங்களாலான திருமேனியுடன் ஸேவை சாதித்து அருள்கிறார். அந்தத் திருமேனியை பச்சை கற்பூரம், குங்குமப்பூ கொண்டு பாதுகாக்க முடியாது. எம்பெருமான் திருவுள்ளப்படி கீழ்க்கண்ட திவ்ய தேசங்களில் ஜீவாத்மா பிரிந்த பிறகு பஞ்ச பூதத்தாலான இந்தத் திருமேனிகள் கோயில் வளாகத்தில் பள்ளி படுத்தப்பட்டுள்ளன(புதைக்கப்பட்டுள்ளன).

1-ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்)நம்மாழ்வாருடைய திருமேனி.

2-ஸ்ரீமந் நாதமுனிகளின் சிஷ்யரான திருக் கண்ண மங்கை ஆண்டான் ஸ்ரீபகவத்சலப் பெருமாள் திருக்கோவினுள்.

3-திருவரங்கத்தில் அகளங்கன் திருச்சுற்றில் அமைந்திருந்த வசந்த மண்டபத்தில் இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்டார்.

இந்த மூன்று இடங்களிலும் திருமேனிகள் பள்ளிப்படுத்தப்பட்டவேயொழிய உயிரோடு உட்கார்த்தி வைக்கப் படவில்லை.

இதுபோன்று பல கற்பனைக் கதைகள் திருவரங்கத்தில் செலாவணியில் உள்ளன.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில் அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும் துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில் ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான். அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளை யம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின் படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

கி.பி. 1953ஆம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளை யம்மாள் நினைவாக நினை வாக தாளிகள் வீட்டில் இறப்பு நேரிட்டால் திருக்கோயில் மடைப்பள்ளியில் இருந்து இறந்த தாஸியின் உடலை எரியூட்டுவதற்காக “நெருப்பு தனல்” அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கம் 1953ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்த திருக்கோயிலில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போதும், வஸந்தோற்சவ காலங்களிலும் தாஸிகள் கோலாட்டம் அடித்துக் கொண்டு நம்பெருமான் முன்பு செல்வர் என்பதை தெற்கு கலியுகராமன் கோபுரத்தில் விதானப் பகுதியில் காணப்படும் நாயக்கர் காலத்து சுவர் ஓவியங்கள் (Mதணூச்டூ கச்டிணtடிணஞ்ண்) வழி அறியப்படுகிறது.

இந்த வெள்ளைக் கோபுரத்தின் மேலே ஏறி விஜயநகர சாளுவ நரசிம்மன் காலத்தில் (ஆட்சி ஆண்டு 1486-1493) இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாள தாஸர் என்ற திருமால் அடியாளும் திருவானைக்காவை தலைநகராகக் கொண்டு திருச்சிராப்பள்ளி சீமையை ஆண்டு வந்த கோனேரி ராயன் என்பானுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி பின்னர் விவரிக்கப்படும்.

மாலிக்காஃபூரின் படைவீரர்கள் திருக்கோயிலில் இருந்த பல விக்ரஹங்களை உடைத்து எறிந்தனர். படைத் தலைவன் கொல்லப்பட்டதால் இந்த அட்டூழியம் கட்டுக்குள் வந்தது. அழகிய மணவாளரை கரம்பனூரில் இருந்து வந்த ஒரு பெண்மனி யாருக்கும் தெரியாமல் வடக்கு நோக்கி எடுத்துச் சென்றாள். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் அளவற்ற செல்வத்தை பல யானைகள் மீது எடுத்துச் சென்றனர் என்று இபின் பட்டுடுடா என்பவரின் நாட்குறிப்பில் இருந்து அறியப்படுகிறது. வடக்கே எடுத்துச் செல்லப்பட்ட நம்பெருமாள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரையர்களால் மீட்கப்பட்டார். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் தெற்கு நோக்கி சென்ற பிறகு அழகிய மணவாளன் கர்ப்பக்ருஹத்தில் காணப்படாமையால் புதிதாக நம்பெருமாள் போன்ற விக்ரஹம் உருவாக்கப்பட்டது. அவருக்கு திருவாராதனங்கள் நடைபெற்று வந்தன. கோயிலொழுகு தெரிவிக்கும் குறிப்புகளின்படி டெல்லி பாதுஷா-வின் அந்தப்புரத்தில் அழகிய மணவாளன் இருந்ததாகவும், சுரதானி என்ற பெயர் கொண்ட அவன் மகள் அழகிய மணவாளனனைத் தனது அந்தப்புரத்தில் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்ததாக குறிப்பிடுகிறது. அழகிய மணவாளனைத் தேடிச்சென்ற அரையர்கள் டெல்லி பாதுஷா விரும்பி பார்க்கும் ஜக்கினி நாட்டிய நாடகத்தை அபிநயித்தார்கள். இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட டெல்லி பாதுஷா அந்தப்புரத்தில் இருக்கும் அழகிய மணவாளனை எடுத்துச்செல்லும்படி அனுமதியளித்தான். அவர்களும் சுரதானிக்கு தெரியாமல் அழகிய மணவாளனை எடுத்துக்கொண்டு திருவரங்கம் நோக்கி விரைந்து சென்றனர். தன் காதலனை பிரிந்ததால் சுரதானி நெஞ்சுருகி கலங்கி நின்றாள். தன் மகளின் துயரத்தினைக் காணப்பொறுக்க மாட்டாத டெல்லி பாதுஷா சில படை வீரர்களுடன் சுரதானியை திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால் அதற்குள் அரையர்கள் அழகிய மணவாளனை கருவறையில் கொண்டு சேர்த்தனர். திருவரங்கத்தை சென்றடைந்த சுரதானி இந்த செய்தியை அறிந்தவுடன் கிருஷ்ணாவதாரத்து சிந்தயந்தி போல, அவள் ஆவி பிரிந்தது. அர்ச்சுன மண்டபத்தில் கிழக்குப் பகுதியில் துளுக்க நாச்சியார்” என்ற பெயரில் சுரதானி இன்றும் சித்திர வடிவில் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறாள்.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால் அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார் என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார். யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம். அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு கரம்பனூர் பின் சென்ற வல்லி அழகிய மணவாளனை எடுத்துச் சென்றது, டெல்லி பாதுஷாவின் மகளான சுரதானி அந்தப்புரத்தில் அழகிய மணவாளனுடன் விளையாடியது. அரையர்கள் எடுத்துச் சென்றது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் காணக் கிடைக்கவில்லை. அது போன்று திருவரங்க மாளிகையார் யாக பேரராக அழகிய மணவாளனை ஒத்த திருமேனி கொண்டிருப்பதற்கும் வரலாற்று சான்றுகளோ, கல்வெட்டுகளோ காணப்படவில்லை. அந்தந்த காலங்களில் இன்று நாட்குறிப்பு எழுதுவது போல் பண்டைய காலங்களில் செயற்பட்டு வந்த ஸ்ரீவைஷ்ணவ வாரியம் மற்றும் ஸ்ரீபண்டார வாரியத்து கணக்கர்கள் எழுதி வைத்த குறிப்புகளே கோயிலொழுகு ஆகும். திருவரங்க பெரிய கோயில் பற்றிய செய்திகளை ஆராய்ந்து தொகுக்கும் போது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரித்திர சான்றுகளோ அல்லது கல்வெட்டுக்களையோ ஆதாரமாக கொடுக்கவியலாது. திருக்கோயில் பழக்க வழக்கங்களும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்துக் கூறும் சுவடிகளும் பல பயனுள்ள செய்திகளை தருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் வெள்ளையம்மாள் வரலாறு திருவரங்க மாளிகையாரின் பிரதிஷ்டை, துளுக்க நாச்சியாரின் திருவுருவப்படம் இடம் பெற்றிருப்பது ஆகியவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார். உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

பிள்ளைலோகாச்சாரியர் வடக்கு திருவீதிப்பிள்ளை என்னும் ஆசார்யரின் முதற் புதல்வர் ஆவார். இவர் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை விவரிக்கும் 18-ரகஸ்யங்களை (மறைப்பொருள் நூல்கள்) இயற்றியவர். அவர் வாழ்நாள் முழுவதும் ப்ரும்மச்சாரியாகவே வாழ்ந்து வந்தார். அவர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். பெரும் படையுடன் வரும் உலூக்கானால் திருவரங்கத்திற்கு பெரிய ஆபத்து நிகழப் போகிறது என்பதை அறிந்து அழகிய மணவாளனை திருவரங்கத்தில் இருந்து எங்கேயாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிள்ளைலோகாச்சாரியர் சில அந்தரங்க கைங்கர்யபரர்களோடும், திருவாராதனத்திற்குரிய பொருட்களோடும் உபய நாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செய்வததறியாது தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

திருவரங்கத்திற்குள் நுழைந்த உலூக்கானும் அவனது படையினரும் அந்த மாநகரின் பங்குனி விழாவிற்கு ஒட்டி கூடியிருந்த பன்னீராயிரம் திருமால் அடியார்களின் தலையைச் சீவினர். எங்கும் ரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கருவறை வாசல் கற்களால் மூடப்பட்டது. ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த மூலவர் விக்ரஹம் வில்வ மரத்தடியின் கீழ் புதைக்கப்பட்டார். உற்சவ ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி கோயிலொழுகில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. பிள்ளைலோகாச்சாரியர் அழகிய மணவாளன் உடன் ஸ்ரீரங்கநாச்சியாரையும் எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்றிருக்கலாம் என யூகித்துக் கொள்ளலாம்

வடகலை குருபரம்பரையின்படி நிகமாந்தமகா தேசிகன் ச்ருதப்ராகாசிகையை (பிரும்ம சூத்திரங்களுக்கு இராமானுசர் இட்ட விரிவுரைக்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீபாஷ்யத்திற்கு ச்ருதப்ராகாசிகா பட்டர் அருளிச்செய்த விளக்க உரையே ச்ருதப்ராகாசிகை ஆகும்). பிணங்களின் ஊடே படுத்திருந்து சுவடிகளை காப்பாற்றினார் என்று கூறுகிறது. வேத வ்யாஸ பட்டர் வம்சத்தில் பிறந்த இளவயதினர் இரண்டு பேரையும் அவர் காப்பாற்றி அழைத்துச் சென்றார் என்றும் அறியப்படுகிறது.

ஆனால் உலூக்கான் படையெடுப்பை பற்றி விவரிக்கும் கோயிலொழுகில் நிகமாந்த தேசிகனைப் பற்றியோ, அவர் ச்ருதப்ராகாசிகையை காப்பாற்றியது பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர். இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும், தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும், 16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண் (வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

தெற்கு நோக்கி அழகிய மணவாளனுடன் சென்ற பிள்ளைலோகாச்சாரியர் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அடர்ந்த காடுகள் வழியே அழகிய மணவாளனை எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்ற போது கள்ளர்கள் ஆபரணங்கள் பலவற்றை கொள்ளையடித்தனர். சில நாட்கள் சென்ற பிறகு அழகிய மணவாளன், பிள்ளைலோகாச்சாரியர், அவருடன் சென்ற 52 கைங்கர்யபரர்கள் ஆகியோர் மதுரை செல்லும் வழியில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஓர் குகையினை சென்று அடைந்தனர். சில மாதங்கள் அழகிய மணவாளன் உபய நாச்சிமார்களோடு அந்தக் குகையிலேயே எழுந்தருளியிருந்தார். வயது முதிர்வின் காரணமாக தன் அந்திமக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் பிள்ளைலோகாச்சாரியர். தென் தமிழகம் முழுவதும் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சி நிலவியிருந்த காலம் அது. தனக்குப் பிறகு ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க மதுரை மன்னனின் மந்திரியாய் இருந்து வந்த திருமலையாழ்வார் என்பாரை வற்புறுத்தி ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க ஆவண செய்வதற்கு உரிய நபராக தன் சீடர்களில் ஒருவரான கூரக்குலோத்தம தாஸரை நியமித்தார் பிள்ளைலோகாச்சாரியர்.

இவ்வாறு கூரகுலோத்தம தாஸரை நியமித்தருளிய பிறகு தன் சிஷ்யர்களில் ஒருவனான மரமேறும் இனத்தைச் சார்ந்தவரான விளாஞ்சோலை பிள்ளை என்பாரை தாம் பணித்த உன்னதமான, ஒப்புயர்வற்ற நூலான “ஸ்ரீவசனபூஷணத்தின்” சுருக்கமான பொருளை அனைவரும் அறிந்து கொள்ளும்படி ஓர் நூலாக எழுதி உலகத்தோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொண்டார் பிள்ளைலோகாச்சாரியர். சில நாட்களிலே அவர் பரமபதித்து விட்டார். அவருடைய பூத உடல் அழகிய மணவாளன் தங்கியிருந்த குகைக்கு அருகில் திருப்பள்ளிபடுத்தப்பட்டது (புதைக்கப்பட்டது). அந்த திருவரசை இன்றும் நாம் சென்று சேவிக்கலாம்.

முகமதிய படைவீரர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாலும், பிள்ளைலோகாச்சாரியர் பரமபதித்து விட்டதாலும் அச்சம் கொண்ட கைங்கர்யபரர்கள் அழகிய மணவாளனையும், உபயநாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருமாலிருஞ்சோலை (அழகர் மலை) திருக்கோயிலின் வெளிப்புற மதில்சுவர் ஓரத்தில் யார் கண்ணிலும் படாதபடி வைத்துக் காப்பாற்றி வந்தனர். அவருடைய திருவாராதனத்திற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றை இன்றும் நாம் பார்க்கலாம். திருமாலிருஞ்சோலை முகப்பில் இருந்து நுபுர கங்கைக்கு செல்லும் மலைப்பாதையில் சாலையின் இடது பக்கம் சப்த கன்னியர் கோயில் அமைந்துள்ளது. அதன் எதிர்ப்புறத்தில் மதில்சுவர் ஓரம் அழகிய மணவாளனுக்காக உண்டாக்கப்பட்ட கிணற்றை நாம் காணலாம். சில மாந்த்ரிகர்கள் சப்த கன்னியருக்கு பரிகாரபூஜை செய்த பொருட்களை இந்தக் கிணற்றில் சேர்ப்பதின் பயனாக துர்நாற்றம் வீசுகிறது.

சில மாதங்கள் அங்கே எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் பாலக்காடு வழியாக கோழிக்கோட்டை சென்று அடைந்தார். மற்றைய பகுதியில் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்து வந்த காலத்தில் கோழிக்கோடு சமஸ்தானத்தை ஆண்டு வந்த மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் இருந்த “அர்ச்சா திருமேனிகள்” கோழிக் கோட்டை சென்றடைந்தன. பிள்ளைலோகாச்சாரியரின் ஆணைப்படி “கூரக்குலோத்தும தாஸர்” மந்திரி பதவியில் இருந்து வந்த திருமலையாழ்வாரை சந்திக்க இயலவில்லை. செய்வதறியாது திகைத்து நின்ற கூரக்குலோத்தும தாஸர் ஓர் உபாயத்தைக் கையாண்டார். திருமலையாழ்வார் தமிழ்மொழிபால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டார். தினந்தோறும் திருமலையாழ்வார் தனது திருமாளிகையின் உப்பரிகையில் (மாடியில்) உட்கார்ந்து கொண்டு திருமண் காப்பு சாற்றிக் கொள்வார். இன்று தமிழர் நாகரிகத்தின் மிக உயர்ந்த அடிச்சுவடிகளை தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் கீழடி, மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் கண்டறிந்துள்ளனர். அத்தகைய இடங்களில் ஒன்றான கொந்தகையில் அவதரித்த திருமலையாழ்வார் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கியதில் எந்த வியப்பும் இல்லை.

ஒருநாள் கூரகுலோத்தம தாஸர் யானை மேலேறி கையில் தாளத்துடன் நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களை பொருளோடு எடுத்துரைத்துக்கொண்டு வந்தார். இதனைச் செவியுற்ற திருமலையாழ்வார் கூரகுலோத்தமதாஸரை தன்னுடைய திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைத் தண்டனிட்டு தனக்கு திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தினந்தோறும் உபன்யஸிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தமது மந்திரி பதவியையும் துறந்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவிருத்தத் ஆழ்பொருளை கற்றுக் கொள்வதில்லை. திருவிருத்தத்தை உபன்யஸிக்கிறவனும், அதன் பொருளை கேட்பவனும் இறந்து விடுவர் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இதைச் “சாவுப்பாட்டு” என்றே பெயர் இட்டுள்ளனர். அதாவது இறப்பு நிகழ்ந்த வீட்டில் “ஸ்ரீசூர்ணபரிபாலனம்” என்று பெயரளவில் ஒரு சடங்கு நடைபெறும். ஏனெனில், பிராமண ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லத்திலும், இடுகாட்டிலும் ஸ்ரீசூர்ணபரிபாலன முறைப்படி சடங்குகள் நடைபெறுவதில்லை. இந்த முறை மாற வேண்டும். ஆழ்வார்களின் கீதத் தமிழ் வேத வேதாந்தங்கள் உபநிஷத்துக்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். திருவிருத்தத்தின் நூறு பாட்டுக்களை 1102 பாடல்கள் கொண்ட திருவாய்மொழியாய் விரிந்தது என்று கூறிவிடுகிறோம். அத்தகைய பெருமை வாய்ந்த திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தமிழ் அக இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள வேண்டாமா?

திருவிருத்தத்திற்கு உரிய சிறப்பை ஸ்ரீவைஷ்ணவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பூமி, தட்டையாய் உள்ளதென்று இன்றும் வாதிடுவர் உளர். தொல்காப்பியத்தை படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே? கம்ப ராமாயணத்தைப் படிக்காதே என்று உபதேஸிக்கும். மகா வித்வான்களும் நம்மிடையே உளர். இத்தகைய சம்ஸ்க்ருத வெறியர்கள் தம்மை உபய வேதாந்திகள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள். “பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாம் ஓத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்”. (ஆசார்ய ஹ்ருதய நூற்பா – 76) இதன் பொருளாவது சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட நூல்களே உயர்ந்தன என்ற எண்ணம் கொண்டவர்கள், பௌத்தர்களும், ஜைனர்களும் இயற்றிய பொய் நூல்களான அவற்றை சமஸ்க்ருதத்தில் இயற்றப்பட்டது என்பதற்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர் குலத்தோர் செய்த நூல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையோர் செய்த நூல்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிடுபவர்கள் பராசர முனிவருக்கும், மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வேதவியாசர். அவர் செய்த ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தை வேதவ்யாசரின் பிறப்பை ஆராயுங்கால் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுபோலவே இடைச்சாதியில் பிறந்த கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பகவத்கீதையையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மகாபாரதத்தையோ, கீதையையோ நாம் சான்றாதார (ப்ரமாணங்களாய்) நூல்களாய் ஏற்றுக்கொண்டு உள்ளோம். வேளாளர் குலத்துதித்த நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களாகிய, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய தமிழ் நூல்களை நாம் சான்றாதாரங்களாய்க் கொள்ள வேண்டும் என்பது இந்த நூற்பாவின் தேறிய பொருளாகும்.

திருமலையாழ்வார் தம்மை திருவாய்மொழிப்பிள்ளை என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டார். நம்பிள்ளை அருளிச்செய்த திருவாய்மொழிக்கான உரை காஞ்சிபுரத்தில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் திருநாராயணபுரத்தை சென்றடைந்தது. திருவாய்மொழிப்பிள்ளை தமது இருப்பிடத்தை இராமநாதபுரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிக்கில் கிடாரம் என்ற ஊருக்கு மாற்றிக் கொண்டார். தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரையும், சிக்கில் கிடாரத்தில் ஓர் திருமாளிகை அமைத்து அவரை குடியமர்த்தி அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு பொருள் கேட்டறிந்தார். சிக்கில் கிடாரத்தில் அவர் பரமபதித்த பிறகு திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி, ‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார். சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம். மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம். இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர்அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

திருவாய்மொழிப்பிள்ளையின் தமிழ்ப் பற்றுக்கு மற்றுமோர் உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். திருவாய்மொழிப் பிள்ளையின் அந்திம தசையில் (மரணிக்கும் தருவாயில்) தமது சிஷ்யரான அழகிய மணவாளனிடம் (இவரே கி.பி. 1425ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டபின் “மணவாள மாமுனிகள்” என்று அழைக்கப்படுகிறார்). ஓர் சூளுரையைப் பெற்றார். “ஸ்ரீபாஷ்யத்தை ஒருகால் அதிகரித்து பல்கால் கண்வையாமல்” ஆழ்வார்கள் அருளிச்செயலையே பொழுது போக்காகக் கொண்டிரும் என்றாராம். ஸ்ரீமணவாளமாமுனிகள் சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை இயற்ற வல்லமை படைத்தவரேனும் தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மாறன் கலையாகிய திருவாய்மொழியையே உணவாகக் கொண்டிருந்தார்.

சில ஆண்டுகள் கோழிக்கோட்டில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த காலத்தில் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் நிகழ்ந்த முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக நம்மாழ்வாரின் அர்ச்சா விக்ரஹகத்தை கைங்கர்யபரர்கள் கோழிக்கோட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாலக்காட்டில் இருந்து மல்லாப்புரம் வரை படைகளோடு வந்த முகமதிய படைவீரர்கள் கோழிக்கோட்டை தாக்கக்கூடும் என்ற அச்சத்தினால் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் கோழிக்கோட்டுக்கு அண்மையில் உள்ள உப்பங்கழியைத் தாண்டி (ஆச்ஞிடு ஙிச்tஞுணூண்) கர்நாடக மாநிலத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்றனர் கைங்கர்யபரர்கள்.

அவ்வாறு படைகள் செல்லும்போது நம்மாழ்வாருடைய அர்ச்சா விக்ரஹம் உப்பங்குழி தவறி விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. விக்ரஹத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து நின்றபோது கருடபட்சி ஆழ்வார் இருக்கும் இடத்திற்கு மேலே வட்டமிட்டுக் காட்டியது. அந்த இடத்தில் நம்மாழ்வாரை நீரின் அடியில் இருந்து கைங்கர்யபரர்கள் கண்டெடுத்தார்கள். அதன்பிறகு கர்நாடகப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர். அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.

நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்). இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.

சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன. அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர். சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர். இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

இவ்வாறு நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருந்த காலத்தில் திருவாய்மொழிப்பிள்ளை மறைந்து வாழ்ந்து வந்த பாண்டிய மன்னனின் படை வீரர்களோடு திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் காடு மண்டி இருந்ததாலும், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் மணல்மூடிக் கிடந்திருந்த ஆழ்வார் மற்றும் பொலிந்து நின்ற பிரான் ஸந்நிதிகளை புனர் நிர்மாணம் செய்தார். நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருப்பதாக ஒற்றர்கள் மூலம் திருவாய்மொழிப்பிள்ளை அறிந்து திருக்கணாம்பிக்குச் சென்று நம்மாழ்வாரை மீண்டும் திருக்குருகூரில் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார். வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார். எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார் என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள். அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425. ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

திருக்கணாம்பியில் எழுந்தருளியிருந்த “அழகிய மணவாளன்” எம்பெருமானார் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஐம்பத்திருவர் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்ததுமான திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டைக்கு எழுந்தருளினார் தற்போதைய தேசிகன் ஸந்நிதியில் முன் மண்டபத்தில் அழகிய மணவாளன் எழுந்தருளப் பண்ணப்பட்டார். முகமதியர்களை எதிர்த்து போராடி வந்த ஹொய்சாள அரச மரபில் வந்த 3ஆம் வீர வல்லாளன் (ஆட்சி ஆண்டு கி.பி. 1291-1342) முகமதியர்களால் கொல்லப்பட்டான். முகமதியர்கள் மேலக்கோட்டை மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் கொண்ட திருவரங்கத்து கைங்கர்யபரர்கள் (திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட 52 கைங்கர்யபரர்களில் பலர் பல இடங்களில் இறந்து விட்டனர். திருநாராயணபுரத்தில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே). அழகிய மணவாளனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு திருமலையடிவாரத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் பாதுகாத்து வந்தனர். இதன் பிறகு அழகிய மணவாளன் எவ்வாறு திருவரங்கத்தை சென்றடைந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் விஜயநகர பேரரசின் தோற்றமும் அதன் வளர்ச்சியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும் காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான். 48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள். அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான். அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான். சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான். மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள். அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால் அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது. கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர் ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர். அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர். விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர்.

புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு  36 ஆயிரம் படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார். இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன் திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான். திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.  அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்சவம் (அழகிய மணவாளனுக்கு ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களை கேட்பதே இன்பம். நீண்ட நாட்கள் அழகிய மணவாளன் திவ்யப்பிரபந்த பாசுரங்களை செவிமடுத்தாததால் திருமேனியில் வாட்டம் காணப்பட்டது. அதைப் போக்குவதற்காக ஆழ்வார்களுடைய பாசுரங்களை கேட்பிக்கும் (அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்).

மலையில் ஒரு கோயிலை எழுப்பி அழகிய மணவாளனை சில காலம் ஆராதித்து வந்தான் கோபணாரியன். திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. தெற்கு நோக்கி படையெடுத்த வந்த வீரக்கம்பண்ண உடையார் சில ஆண்டுகள் கழித்தே காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த சம்புவராயர்களை வெற்றி கொள்ள முடிந்தது. சம்புவராயர்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்து வந்தனர். அவர்கள் ஆட்சிப் பரப்பில் அமைந்திருந்த கோயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆயினும் தமிழகத்தின் தென்பகுதியில் மக்களுக்குச் சொல்ல ஒண்ணாத துயரங்களை விளைவித்து வந்த மதுரை சுல்தான்களை எதிர்த்து சம்புவராயர்கள் போர் தொடுக்கவில்லை. தென் தமிழகம் முழுவதும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வர விரும்பி புக்கர், சம்புவராயர்களை போரில் வென்றிடுமாறு ஆணைபிறப்பித்தான். சம்புவராயர்களை போரில் வென்ற வீரக்கம்பண்ண உடையார் தற்போது “சமயபுரம்” என்றழைக்கப்படும் கண்ணனூரில் மதுரை சுல்தான்களோடு போரிட்டார். மதுரை அரண்மனை தகர்த்தெறியப்பட்டது. கன்னியாகுமரி வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினார் வீரக்கம்பண்ணர். இவ்வாறு தென் தமிழகம் முகமதியர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

செஞ்சியில் எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் மற்றும் உபயநாச்சிமார்கள் செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால் சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார். அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள். தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன் உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார். அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும். (வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.) படையெடுப்புகளின் விளைவாக பொன்வேய்ந்த ப்ரணாவாகார விமானம் (கர்ப்பக்ருஹ விமானம்) இடிந்து விழுந்ததனால் ஆதிசேஷனுடைய பணாமங்களின் கீழ் அரங்கநகரப்பன் துயில் கொண்டிருந்தான். பல மண்டபங்கள், ஆரியபட்டாள் வாசல் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டதால் இடிந்து விழுந்த நிலையில் காணப்பட்டன.

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில் கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர். திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம்கொண்டு திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர். பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர். பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.

தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன் உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார். தற்போது எழுந்தருளியிருப்பவர் முன்பு கர்ப்பக்ருஹத்தில் ஸேவை சாதித்த யுகம்கண்ட பெருமாள் தானா? என்ற ஐயம் கூடியிருந்த மக்களிடைய நிலவி இருந்தது. அதை நிரூபிக்க ஊரில் முதியவர்கள் யாரும் இல்லாததால் முடியவில்லை. அப்போது வயது முதிர்ந்த கண் பார்வையற்ற ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவன் படையெடுப்புக்கு முன்னர் அழகிய மணவாளன் உடுத்துக் களைந்த பரியட்டங்களை (ஆடைகளை) தினந்தோறும் சலவை செய்து சமர்ப்பித்திடுவான். இந்த ஈரங்கொல்லி, அழகிய மணவாளன் உடுத்துக்களைந்த ஆடைகளை தவிர வேறு யாருடைய ஆடைகளையும் சலவை செய்ய மாட்டான். அழகிய மணவாளனும் ஈரங்கொல்லி கொண்டு வருகின்ற வஸ்திரங்களை மறுபடியும் நீரில் நனைக்காமல் அப்படியே சாற்றிக் கொள்வார். (இந்த ஈரங்கொல்லிகளைப் பற்றிய மேலும் பல மகிழ்வூட்டக்கூடிய நிகழ்ச்சிகள் பின்வரும் நிகழ்ச்சித் தொகுப்பில் குறிப்பிடப்படவுள்ளது).

அந்த ஈரங்கொல்லி “என் கண்பார்வை போய்விட்டதால்” என்னால் இவர்தான் அழகிய மணவாளனா அல்லது வேறு ஒரு பெருமாளா என்று கண்டுபிடிக்க ஒரு யுக்தி உள்ளது என்றார்.

வஸ்திரங்களை துவைப்பதற்கு முன்பு நீரிலே நனைத்து அந்த ஈர ஆடையில் வெளிப்படும் நீரைப் பருகுவேன் இப்போது இந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பித்து அந்த ஈர ஆடையைப் பிழிந்து வெளிப்படும் நீரை பருகும்போது என் நாவின் சுவை கொண்டு இவர் தான் முன்பு எழுந்தருளி இருந்த அழகிய மணவாளன் என்று என்னால் கூற முடியும். அவ்வாறு அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம் ஸாதிக்கப்பட்டது  (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி “இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான். அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது. அவரை அழகிய மணவாளன் என்று தற்போது யாரும் கூறுவதில்லை.

ஒரு சிலர் பிள்ளைலோகாச்சாரியருடைய “இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம். முமுக்ஷுப்படி த்வய பிரகரணப் நாராயண ஸப்தார்த்தம் 141ஆம் நூற்பா”. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று கூறியது அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்பிய பிறகு சூட்டிய பெயராகும். பிள்ளைலோகாச்சாரியர் 141வது நூற்பாவில் நம்பெருமாள் என்று குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம். இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)

ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத்

ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:

செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத

நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந் >

லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம்

ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்

ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத

¯÷\õதர்ப்பணோ கோபணார்ய: >>

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்க நாதனை எழுந்தருளப்பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)

இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பிள்ளைலோகம்ஜீயர் போன்ற பெருமக்கள் தங்கள் நூல்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், வரலாற்று குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால், நம்மிடையே வாழும் சில கிணற்று தவளைகள் “திருக்குறளைப் படிக்காதே, கல்வெட்டுகள் சான்றுகள் அல்ல” என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர். நம்பிள்ளை 17 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். ஒரு திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளையும், பிள்ளைலோகம் ஜீயரும் பல இடங்களில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பி அகப்பொருள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஜைனன் ஒருவன் எழுதிய சம்ஸ்க்ருத நூலான அமரகோசத்தை பயிலும் இந்த வித்வான்கள் ஸ்ரீவைஷ்ணவர்களை தொல்காப்பியத்தைப் படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே, சங்க இலக்கியங்களைப் பயிலாதே என்றெல்லாம் பிதற்றலாமா? தங்களை மோட்சத்திற்கும் படிகட்ட வந்திருப்பவர்களாக கூறிக்கொள்ளும் இவர்கள் ஆழ்வார் பாசுரங்களில் பொதிந்துள்ள அக இலக்கிய கோட்பாடுகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். உபய வேதாந்திகளாய் இருக்க வேண்டிய ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்ஸ்க்ருத மொழியே உயர்வு தமிழில் ஆழ்வார் பாசுரங்களைத் தவிர மற்றைய தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை கற்க முன் வராதது. ஏன்? இவர்கள் திருந்தினாலே ஒழிய மிக உன்னதமான வைணவ நெறிகளை “பிறந்த வீட்டின் பெருமையை அண்ணனும், தங்கையும் கொண்டாடிக் கொள்வதற்கு” இணையாகும்.

இராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டங்கள் மிகுந்த பணச் செலவில் நாடெங்கும் கொண்டாடினோமே தவிர வைணவத்தைச் சார்ந்திராத பிற சமயத்தினர் நம் பக்கலில் இழுத்துக்கொள்ள முடிந்ததா? என்பது கேள்விக்குறியே. திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது. ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள் இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கோ திருவரங்க மாநகரை காப்பாற்றுவதற்காக நாங்கள் இராமானுசரால் நியமிக்கபட்டோம் என்றுக் கூறிக்கொள்ளும் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் ஆகியோரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இராமன் காட்டுக்குச் சென்றது 14 ஆண்டுகள் இராமனால் ஆராதிக்கப்பட்ட அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் செய்தார். 49 ஸ்ரீவைஷ்ணவர்களும் பிள்ளைலோகாச்சாரியரும் அழகிய மணவாளனைக் காக்கும் பணியில் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். பிள்ளைலோகாச்சாரியர் தமது 119வது வயதில் அர்ச்சாவதார எம்பெருமானை காக்கும் பணியில் தன்இன்னுயிரை நீத்தார். இன்றைக்கும் அல்லூரி வேங்கடாத்ரீ ஸ்வாமி சமர்ப்பித்த ஆபரணங்களை மாசி மாதத்தில் ஒருநாள் நம்பெருமாளுக்குச் சாற்றி மகிழ்கிறார்கள். ஆனால் இந்த நம்பெருமாள் பல ஆபத்துக்களை தாண்டி காடுமேடுகளையெல்லாம் கடந்து வந்த வரலாறு நூற்றுக்கு தொண்ணூற்றிதொன்பது சதவீதம் மக்களுக்குத் தெரியாது. ஏதோ சில தனி நபர்கள் தாங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டதுபோல் பறைச்சாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நம்பெருமாளை காப்பாற்றும் முயற்சியில் 50 பேருக்கு மேல் தியாகம் செய்துள்ளனர். பன்னீராயிரவர் தலை கொய்யப்பட்டது. எதைச்சொன்னாலும் “இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை” என்று தடுப்பணைபோடும் அடியார்கள்? இதை உணரவேண்டும்.

திருவரங்கம் திருமதில்கள்:

1.     பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர் அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திருவிக்கிரமன் வீதியும்

ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்

கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குல விராசமகேந்திரன் வீதியும்

தேடரிய தர்மவர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது. ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால் வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி, முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி: இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி. இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று –  திருவிக்கிரமன் திருச்சுற்று, ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135) இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது. அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்கிரமசோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும். இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன. அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும். இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த ‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.  (ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும் அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று. (The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330). அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது. கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை. ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்  விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.

‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால் விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும், இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய குறிப்பொன்று அமைந்துள்ளது –  திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.

“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன்  தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன். சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப் பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்; உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற, சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார். வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார். இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு  திருவுரு’ என்று புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம். (பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த வியாக்யா னத்தின் விவரணம், பதிப்பாசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், 2003ஆம் ஆண்டுப் பதிப்பு, பக்.442)

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத் தில் நடராஜருடைய விமானத்திற்குப் பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 119, (ARE No.340 of 1952-53).மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபம் என்றழைக்கப்படும் பவித்ரோத்ஸவம் நடைபெறும் மண்டபத்தில் அமைந்துள்ளது.

(1) “ஸ்வஸ்தி ஸ்ரீ: பூமாலை மிடைந்து பொந்மாலை திகழ்த்தா (பா)மாலை மலிந்த பருமணி(த்) திரள்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்பத் தந்வரை மார் வந்தனக் கெநப் பெற்ற திருமகளொருதநி யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்ந்த (க)ற்பிநளாகி விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொறும் தி – …………………………………………………………………….”.

(4) மண்முழுதும் களிப்ப மநுநெறி வள(ர்)த்து தந் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜையமும் புகழும் மேல்மேலோங்க ஊழி ஊழி (இ)ம்மாநிலங்காக்க திருமணிப்பொற்றெட்டெழுது புத்தாண்டு வருமுறை முந்நம் மந்நவர் சுமந்து திறை நிரைத்துச் சொரிந்த செம்பொற் குவையால் தந் குலநாயகந் தாண்டவம் புரியும்.

(5) செம்பொந் அம்பலஞ்சூழ் திருமாளிகை கொபுரவாசல் கூட(சா)ளரமும் உலகு வலங்கொண்டொளி விளங்கு நெமிக் குலவரை உதையக் குன்றமொடு நின்றெனப் பசும்பொந் மெய்ந்து பலிவளர் பிடமும் விசும்பொளி தழைப்ப விளங்கு பொந் மேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப் ö(ப)ரிய திருநாள்ப் பெரும் பி(ய)ர் விழா –

(6) வெநும் உயர் புரட்டாதியில் உத்திரட்டாதியில் அம்பலம் நிறைந்த அற்புதக் கூத்தர் இந்பர்வாழ எழுந் தருளுதற்கு(த்) திருத்ö(÷)த(ர்)க் கொயில் செம்பொந் மெய்ந்து பருத்திரள் முத்திந் பயில் வடம் பரப்பி (நி)றைமணி மாளிகை நெடுந்தெர் வீதி தந்திருவளர் பெரால் செய்து சமைத்தருளி பைம் பொற் குழித்த பரிகல முதலால் செம்பொற் கற்பகத்தெ(ரெ)õடு பரிச்சிந்நம் அளவி(ல்லா) –

(7) (த)ந ஒளிபெற வமைத்து பத்தாமாண்டு சித்திரைத் திருநாள் அத்தம் பெற்ற ஆதித்த வாரத்து(த்) திரு(வளர் பதியில் திர) யொத3‡ப்பக்கத்து இந்நந பலவும் இநிது சமைத்தருளி தந் ஒரு குடை நிழலால் (தரணி) முழுதும் தழைப்ப செழியர் வெஞ்சுரம் புக செரலர் கடல் புக அழிதரு சிங்கணர் அஞ்சி நெஞ்சலமர கங்கர் திறையிட கந்நிடர் வெந்நிட கொங்க ரொதுங்க கொ(ங்கண) –

இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி. முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:  திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார். பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.  அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு ஆலிநாடன் திருவீதி என்று பெயர்.  பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன்  என்னும் சொற்றொடரில் உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும். இவருடைய கைங்கர்யங்களைப் பற்றிய விரிவான செய்திகள் பின்வரும் பகுதிகளில் தெரிவிக்கப்படும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று : குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

“அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்

அணியரங்கன்திருமுற்றத்து* அடியார்தங்கள்

இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்

இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும்நாளே?”– பெருமாள்திருமொழி 1-10

என்று அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை அமைத்தார் என்று கொள்வது பொருத்தம். மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:  இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062. மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன். இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. “பனுவலுக்கு முதலாய வேத நான்கிற் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண், மனுவினுக்கு மும்மடி நான் மடியாஞ்சோழன் மதிக்குடைக் கீழ் அறந்தளிர்ப்ப வளர்ந்தவாறும்” என்று கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்ட மும்முடிச் சோழனே இராசமகேந்திரன் என்று கருத இடமிருக்கிறது.

அன்றியும் “பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும் விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு, அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை. கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது. திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள். எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங் களுள் தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

இதிகாச புராணச் செய்திகள்:

(2) இவ்வாறு ஏழுவீதிகளின் திருப்பெயர்களைத் தெரிவித்த பின்னர் ஒவ்வொருடைய கைங்கர்யத்தைப் பற்றி கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

கருடபுராணத்தில் 108 அத்தியாயமுள்ள சதாத்யாயீ, பிரமாண்ட புராணத்தில் 11 அத்தியாயமுள்ள தசாத்யாயீ ஆகிய இரு பகுதிகளிலும் ஸ்ரீரங்க மாஹாத்மியம் சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான பாரமேஸ்வர ஸம்ஹிதையில் 10ஆம் அத்தியாயம் ஸ்ரீரங்க மாஹாத்மியத்தைச் சொல்லுகிறது.  புராணங்களில் கண்டுள்ளபடி ப்ரஹ்மா நெடுங் காலம் தவம் இருந்து ஸ்ரீரங்க விமானத்தைத் திருப்பாற்கடலில் இருந்து பெற்றான். ஸ்ரீரங்கவிமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் தமது இருப்பிடமான ஸத்யலோகத்தில் ஆராதித்து வந்தான். இக்ஷ்வாகு அந்த விமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் பிரஹ்மாவிடம் இருந்து பெற்றுத் தனது தலைநகரமான அயோத்தியில் ஆராதித்து வந்தான். சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஸ்ரீரங்கநாதனை ஆராதித்து வந்தான்.

ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தர சதகம் 77-78 ஆகிய இரு ச்லோகங்களில் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்ய தேவதையாய் இருந்து வந்தபடியை அருளச் செய்துள்ளார்.

“மநுகுலமஹீ பாலவ்யாநம்ரமௌலிபரம்பரா

மணிமகரிகாரோசிர் நீராஜிதாங்க்ரிஸரோருஹ: >

ஸ்வயமத விபோ! ஸ்வேந ஸ்ரீரங்கதாமநி மைதிலீ

ரமணவபுஷா ஸ்வார்ஹாண்யாராதநாந்யஸி லம்பித: >> ”  – (77)

(எம்பெருமானே!, மநுகுலத்தவர்களான சக்ரவர்த்திகளினுடைய வணங்கின கிரீட பங்க்திகளிலுள்ள (கிரீடத்தில் அமைந்துள்ள வரிசைகளில்) மகரீஸ்வரூபமான (மீன் வடிவிலான) ரத்னங்களின் ஒளிகளினால் ஆலத்தி வழிக்கப்பட்ட திருவடித்தாமரைகளையுடைய தேவரீர் பின்னையும் ஸ்ரீராமமூர்த்தியான தம்மாலேயே ஸ்ரீரங்க விமானத்தில் தமக்கு உரிய திருவாராதனங்களை தம்மாலேயே அடைவிக்கப்பட்டீர்.)

(மநுகுல) இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்யதேவதையாக இருந்து வந்தபடியை இதனாலருளிச் செய்கிறார். ஸத்யலோகத்தில் நான்முகனால் ஆராதிக்கப்பட்டு வந்த திவ்யமங்கள விக்ரஹம் அவனால் இக்ஷ்வாகுவுக்கு அளிக்கப்பட்டு, பிறகு அநேக சக்ரவர்த்திகளால் பரம்பரையாய் ஆராதிக்கப்பட்டு வந்து, கடைசியாய் ஸ்ரீராமபிரனால் ஆராதிக்கப்பட்டு, பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ஸுக்ரீவ ப்ரமுகர்களான அன்பர்கட்குப் பரிசளிக்கும் அடைவிலே விபீஷணாழ்வானுக்கு இந்த திவ்யமங்கள விக்ரஹம் பரிசளிக்கப்பட்டு, லப்த்வா குலதநம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷணா: என்கிறபடியே அவரும் இத்திருக்கோலத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமளவில் காவிரிக்கரையிலே பெருமாளை எழுந்தருளப் பண்ணிவிட்டு நித்யாநுஷ்டாங்களை நிறைவேற்றிக் கொண்டு பெருமாளை மீண்டும் எழுந்தருளப் பண்ணிக்கொள்ள முயலுகையில் அவ்விடம் பெருமாளுக்கு மிகவும் ருசித்திருந்ததனால் பேர்க்கவும் பேராதபடியிருந்து விபீஷணனுக்கு நியமநம் தந்தருளி, அவனுடைய உகப்புக்காகவே “மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத்திசை நோக்கி மலர்க்கண்வைத்த” (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) என்கிறபடியே தென்திசை இலங்கை நோக்கி சயநித்தார் என்பது புராண வரலாறு. பூர்வார்த்தத்தினால் ஸ்ரீராமபிரானுக்கு முற்பட்ட சக்ரவர்த்திகள் ஆராதித்தமையை ஒரு சமத்காரமாகப் பேசுகிறார். நவமணிகள் பதித்த கீரீடமணிந்த மநுகுல மஹாராஜர்கள் முடியைத் தாழ்த்தி வணங்கும்போது அந்த முடிகளில் அழுத்தின ரத்னங்களின் ஒளி வீசுவதானது பெருமாள் திருவடிவாரத்திலே ஆலத்தி வழிக்குமாப் போலேயிருப்பதாம். (மணிமகரிகா) மகரவடிவமாக ரத்னங்கள் அழுத்தப் பெற்றிருக்கும் என்க. மகரிகா என்று ஸ்த்ரீலிங்க நிர்த்தேசம் – ஆலத்தி வழிப்பதாகிய காரியம் ஸ்திரீகளுடையது என்கிற ப்ரஸித்திக்குப் பொருந்தும்.

(ஸ்வயமத விபோ இத்யாதி) அந்த அரசர்கள் வணங்கி வழிபாடு செய்தது பெரிதன்று; ஸாக்ஷாத் பெருமாளும் பிராட்டியுமே ஸ்ரீராமனாகவும் ஸீதையாகவும் அவதரித்திருந்த அந்த திவ்ய தம்பதிகள் ஆராதித்த பெருமையன்றோ வியக்கத்தக்கது என்று காட்டுகிறபடி. ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனார் தம்மைத்தாமே தொழுவார்போல் தொழுது அர்ச்சித்த திவ்ய மங்கள விக்ரஹம் இதுகாணீர் என்கிறார்.

ஸ்வயம், ஸ்வேந என்ற இரண்டனுள் ஒன்று போராதோவென்னில், ஸ்ரீரங்கநாதனான ஸ்ரீமந்நாராயணமூர்த்தி தாமே ஸ்ரீராமபிரானாக அவதரித்தப் படியைக் காட்டுகிறது ஸ்வேந என்பது. அவர்தாமும் ஆளிட்டு அந்தி தொழாதே தாமே ஆராதித்தபடியைச் சொல்லுகிறது ஸ்வயம் என்பது. ஸ்வார்ஹாணி என்றவிடத்தில் ஸ்வசப்தத்தினால் ஆராத்யமூர்த்தியையும், ஆராதகமூர்த்தியையும் குறிப்பிடலாம். ஆசிரியர்க்கு இரண்டும் திருவுள்ளமே. –

மந்வந்வவாயே த்ரூஹிணே ச தந்யே விபீஷணேநைவ புரஸ்க்ருதேந >

குணைர் தரித்ராணமிமம் ஜநம் த்வம் மத்யேஸரிந்நாத! ஸுகாகரோஷி >> (78)

(ஸ்ரீரங்கநாதரே!, மநுகுலமும் க்ருதார்த்தனான பிரமனும் (இருக்கச் செய்தேயும்) திருவுள்ளத்திற்கு இசைந்த விபீஷணனாலேயே திருக்காவேரியினிடையே (ஸந்நிதிபண்ணி) ஒரு குணமுமில்லாத அடியேன் போல்வாரை மகிழ்விக்கின்றீர்)

(மந்வந்வவாயே) நான்முகக்கடவுளுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும், மநுவம்சத்து மஹாராஜர்களுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும்விட்டு, ஒரு விபீஷணாழ்வான் மூலமாக உபயகாவேரீ மத்யத்திலே அடியோங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டு இன்பம் பயக்குமிது என்னே! என்று ஈடுபடுகிறார். (விபீஷணேநைவ புரஸ்க்ருதேந) புரஸ்க்ருதேந விபீஷணேந என்று அந்வயிப்பது. வானர முதலிகள் திரண்டு விரோதித்தவளவிலும் ஒரு தலை நின்று ஸ்வகோஷ்டியில் புரஸ்காரம் அடைவிக்கப் பெற்ற விபீஷணாழ்வானாலே என்றபடி. அந்த மஹாநுபாவன் ஆற்றங்கரையிலே இங்ஙனே ஒரு தண்ணீர்ப்பந்தல் வைத்துப்போனானென்று அவனுடைய பரமதார்மிகத்வத்தைக் கொண்டாடுகிறபடி. (குணைர்தரித்ராணமிமம் ஜநம்) எம்பெருமானை ஆழ்வான் ஸ்வஸத்ரு ச தரித்ரம் என்றார். இவர் தம்மை குணைர்தரித்ரம் என்கிறார். இவ்வகையாலே பரமஸாம்யாபத்தி இந்நிலந்தன்னிலே பெற்றபடி. குணலேசவிஹீநனான (நற்குணம் ஒன்றும் இல்லாத) அடியேனை என்றவாறு. –

ஸ்ரீராமபிரான் மைதிலியோடு ஸ்ரீரங்கநாதனை ஆராதனம் பண்ணின வைபவத்தை “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயண முபாகமத்” என்று ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தக்க பரிசு ஒன்றை தந்திட விரும்பிய சக்ரவர்த்தி திருமகன் தம்முடைய குலதனமான ஸ்ரீரங்க விமானத்தைக் அவனுக்குக் கொடுத்தருளினார். ஸ்ரீவிபீஷணாழ்வானும் ஸ்ரீரங்கவிமானத்தைத் தன்னுடைய தலையிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு இரண்டு திருக்காவிரி நடுவிலே சந்திரபுஷ்கரணி கரையிலே கொண்டுவந்து தர்மவர்மாவிடம் சேர்ப்பித்தான்.  வால்மீகி ராமாயணம் உத்திரகாண்டத்தில் விபீஷணன் ஸ்ரீராமனிடமிருந்து அவனுடைய குலதனமாகிய ஸ்ரீரங்கவிமானத்தைப் பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

“கிஞ்சாந்யத் வக்துமிச்ச்சாமி ராக்ஷஸேந்த்ர மஹாபல, ஆராதய ஜகந்நாதம் இக்ஷ்வாகுகுலதைவதம்” – என்று உத்திர ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாத்ம புராணத்தில் யாவத் சந்த்ரச்ச ஸூர்யச்ச யாவத் திஷ்ட்டதி மேதிநீ, தாவத் ரமஸ்வராஜ்யஸ்த்த: காலே மம பதம் வ்ரஜ, இத்யுக்த் வா ப்ரததௌ தஸ்மை ஸ்வவிச்லேஷா ஸஹிஷ்ணவே, ஸ்ரீரங்கசாயிநம் ஸ்வார்ச்சயம் இஷ்வாகு குலதைவம், ரங்கம் விமாந மாதாய லங்காம் ப்ராயாத் விபீஷண: என்றும் தெளிவாக உள்ள வசநங்கள் மஹேச தீர்த்தாதிகளான ஸ்ரீராமாயண வ்யாக்யாதாக்களாலே உதாஹரிக்கப்பட்டவை. “மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த, என்னுடைய திருவரங்கற் கன்றியும்” என்றார் பெரியாழ்வாரும்.

திருவாலங்காடு, திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலச் செப்பேடுகள் சோழர்கள் மனுகுல வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகின்றன. சோழர்களின் முன்னோர்களாக இக்ஷ்வாகு, சிபி, பகீரதன், வளவன் ஆகியோரை இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

இக்ஷ்வாகுவின் வம்சத்தினர் சோழர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் வசிட்டர் இக்ஷ்வாகுவை நோக்கிக் கூறும் போது  “விபீஷணனால் கொண்டு செல்லப்படும் விமானம் காவிரி தீரத்திலுள்ள சந்திரபுஷ்கரிணியை அடையும். அங்கு உம்முடைய வம்சத்தினராகிய சோழ அரசர்களால் ஆராதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

நிஹமாந்தமஹாதேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தே†ம்’ என்னும் நூலில் ‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது. அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது. சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின் ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சேஷபீடத்தைப் பற்றி அந்நூலில் “அழகிய தோழனே, அந்தச் சந்திரபுஷ்கரணிக் கரையில் சேஷபீடம் என்ற ஓர் அடித்தளம் உள்ளது. அதை அங்குள்ள மனிதர்கள் சேவித்துக் கொண்டிருப்பார்கள். நீயும் மிக்க ஸ்ரத்தையுடன் உன் உடலை நன்கு குனிய வைத்துக்கொண்டு அந்தப் பீடத்தை வணங்க வேண்டும். அந்தப் பீடத்தை வணங்கக் காரணம் உள்ளது. இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த எங்களின் பரம்பரைச் சொத்தாக உள்ள ஸ்ரீரங்கவிமானம் நெடுங்காலமாக அயோத்தியில் எழுந்தருளியுள்ளது. அந்த விமானம் பிற்காலத்தின் அந்த சேஷபீடத்தின்மேல் அமரப்போவதாக மஹரிஷிகள் கூறியுள்ளார்கள்” என்று இலங்கையில் இருக்கும் சீதையிடம் அன்னத்தைத் தூதுவிடுமிடத்தில் அன்னத்திடம் ராமன் கூறுவதாகத் தேசிகன் கூறுகிறார்.

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா

ஸத்வீபரத்நாகர ரத்நசைலா >

ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம்

ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >>

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால் ஸப்தத்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள் ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)

ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப் பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும். கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம். கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்; ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும். ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல் மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

ஸ்ரீரங்க விமானத்தை நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த  ரிஷிகளும், தர்மவர்மாகிய அரசனும் விமானத்தையும், ஸ்ரீரங்கநாதனையும் சேவித்தார்கள். விபீஷணன் காவிரியில் நீராடி, பிறகு சந்திர புஷ்கரிணியிலும் நீராடிப் பெருமாளுக்கு வேண்டிய பலவிதமான புஷ்பம், தளிகை, பணியாரம் வகைகளை ஸமர்ப்பித்தான். மறுநாள் ஆதிபிரஹ்மோத்ஸவம்  ஆரம்பிக்க வேண்டிய தினம், இலங்கை சேரவேண்டுமென்றுப் பிரார்த்தித்துப் புறப்பட விரைந்தான் விபீஷணன். தர்மவர்மாவும், ரிஷிகளும் ஸ்ரீரங்க விமானத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் உத்ஸவத்தைக் காவிரி தீரத்திலேயே நடத்திவிட்டு, பிறகு இலங்கை சேரலாம் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப, பிரஹ்மோத்ஸவம் நடத்தப்பட்டது. இந்த உத்ஸவம்தான் இன்றும் பௌர்ணமியில் பங்குனி உத்தரத்தன்று நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தின் பெயரும் ‘நம்பெருமாள் ஆதி பிரஹ்மோத்ஸவம்’ என்று இன்றும் வழக்கில் உள்ளது. உத்ஸவம் முடிந்து விபீஷணன் இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்ல ஸ்ரீரங்கவிமானத்தை எடுக்கப் போனான். எடுக்க முடியவில்லை. தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அசைக்கமுடியாமல் பெரிய பெருமாளிடம் சென்று கதறினான்.

பெரிய பெருமாளும் விபீஷணனைத் தேற்றி, தாம் முன்பே காவிரிக்கு வரம் கொடுத்திருப்பதை அருளிச்செய்து, தனக்குக் காவிரி தீரத்தில் தங்க விருப்பமென்றும், விபீஷணனுக்கு இலங்கை அரசினையும், அளவில்லாத செல் வத்தையும், நீண்ட ஆயுளையும் ஸ்ரீராமன் கொடுத்திருப்பதால், அவைகளைப் பரிபாலித்துக் கொண்டு வரும்படி நியமித்து, தான் தெற்கு முகமாய் நோக்கி இலங்கையை எப்பொழுதும் கடாக்ஷித்து விபீஷணனுக்குச் சேவைசாதிப்பதாகச் சொல்லித் தேற்றி விபீஷணனுக்கு விடை கொடுத்தார். விபீஷணனும் தண்டனிட்டு விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான். அதுமுதல் தர்மவர்மா திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளைச் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தான். அதற்கனுகூலமாக திருமதிள் கோபுரம், திருவீதிகள், மண்டபங்களும் கட்டிவைத்து, வெகுகாலம் ஆராதித்து மோக்ஷமடைந்தார்.

இவ்வாறு பெரிய பெருமாள் “திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப்பள்ளி கொண்டிருக்கிற” வைபவத்தை ஆழ்வார்கள் பதின்மரும் 247 பாசுரங்களாலே மங்களாஸாசனம் செய்துள்ளனர்.

1. பொய்கையாழ்வார்

(முதல் திருவாந்தாதி)

பொய்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

2. பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் தம்முடைய இரண்டாம் திருவந்தாதி 28, 46, 70 மற்றும் 88 ஆகிய 4 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார்

பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதி 61, மற்றும் 62 ஆகிய 2 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

4. திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள்  இரண்டு. அவை முறையே திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியன. இவற்றுள் திருச்சந்தவிருத்தம் முதலாயிரத்திலும், நான்முகன் திருவந்தாதி மூன்றாம் ஆயிரத்திலும் இடம்பெற்றுள்ளன. திருச்சந்த விருத்தம் 21, 49, 50, 51, 52, 53, 54, 55, 93, 119, நான்முகன் திருவந்தாதி 3, 30, 36, 60 ஆகிய 14 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

5. நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவிருத்தம் 1, திருவாய்மொழி 11, ஆக 12 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

6. குலசேகராழ்வார்

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

7. பெரியாழ்வார்

பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழியில் 35 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

8. சூடிக்கொடுத்த நாச்சியார்

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியில் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

9. தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை 45 பாசுரங்களிலும், திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்களாலும் மொத்தம் 55 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

10. திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

11. திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 73 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.*****

——————————-

சித்திரை விருப்பன் திருநாள்-1
1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.
2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.
3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.
5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.
6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் காணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.
8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.
9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.
11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு  வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.
12)  கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.
13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.
16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

———-

நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவிதப் புஷ்பங்களை ஏராளமாகப் பரப்பி அதன் மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை) சாத்தாதவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப் பார். நம்பெருமாள் யாகசாலை எழுந்தருளியதும் திருவாரா தனம். இங்கு வேதபாராயணம் பண்ணும் பாத்தியமுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும். பவித்திரோத்ஸவம் நித்திய பூஜா லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்கிய பாத்தியத் துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும். 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடா மல் நடந்து கொண்டிருக்கும்.
முதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு சந்தோமித்ர;,(சரிபார்க்க) அம்பஸ்ய பாரே என்ற உபநிஷத்து பாகமும் அச்சித்ர அச்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும். திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும். ரக்ஷா பந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும். பவித்திரத்தை ஸ்வஸ்தி வாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு எல்லா மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும். தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார். பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading