ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —தனியன்–அவதாரிகை–

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்ல பக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க் கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப் பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் அகப்பட
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக வேணும் –

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌ நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || –ஸ்ரீ கோதா ஸ்துதி(1)

————

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–

இந்த ஸ்லோகம் பட்டர் தென்னாட்டிலே எழுந்து அருளி இருக்க பெருமாளை பிரிந்த வ்யசனத்தாலே
திரு உள்ளம் கலங்கி இருக்கிற தசையில் திரு உள்ளம் ப்ரசன்னமாகைக்காக
நஞ்சீயர் ஆண்டாளை ஒரு ஸ்லோகமும் ஆழ்வார்களை ஒரு ஸ்லோகமும் அருளிச் செய்யலாகாதோ என்ன
அதி ப்ரீதராய்த் திருப்பாவைக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்து-ஆண்டாளை சரணம் புகுகிற ஸ்லோகம் –

அவன் ஆயர் கொழுந்து –இவள் குல வாயர் கொழுந்து –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –தோளி சேர் பின்னை –ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்

நஞ்சுண்டாரைப் போலே மயங்கிக் கிடந்து உறங்குகின்ற ஸிம்ஹத்தை யுணர்த்தினாள்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா என்றும் –
யசோதை இளம் சிங்கம்-என்றும் சொல்லக் கடவது இறே

பஹூ குடும்பியார் இருப்பார் சிலர் ஒரு மலை அடியைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே
சர்வ லோக குடும்பியான சர்வேஸ்வரன் இவள் முலை யடியைப் பற்றிக் கிடக்கிறான்-

ஸ்தன கிரி தடீ –திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே-ஸூப்தம் -மயங்கிக் கிடந்து உறங்கினவனாய்
என்கையாலே -அவயவ ஏக தேசத்தில் மக்நனான படி-மலராள் தனத்துள்ளான் -என்னுமா போலே –

ஸ்தந கிரி தடீ ஸூப்தம் -கிருஷ்ணம்-என்கையாலே –
பொற் குப்பியின் நுனியில் கரு மாணிக்கத்தை அழுத்தி வைத்தாப் போலேயும்
விகாச உந்முகமான பத்ம கோசத்தில் ஷட் பதம்-தெய்வ வண்டு –- படிந்தால் போலேயும் -இருக்கை

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம் –
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் –-என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி-

எல்லாரையும் கர்ம அனுகுணமாகக் கட்டுமவன்-காமிநி கழித்த கண்ணியாலே கட்டுண்டான்

கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி யாய்த்து –
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்-
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு அனுபவித்தாள் –
தறியார்ந்த கரும் களிறு இறே

கோதை -மாலை போலே போக்யையாய் இருக்கை
ஸ்ரீ மாலாகாரர் மகள் ஆகையாலே மாலை என்னலாம்படி ஆனாள்
மாலையான தான் தலையான மாலையை வழங்கினாள்
திருமாலை வழங்கினாள் இறே

அத்யாபயந்தீ என்கையாலே பாமாலை பாடிக் கொடுத்தபடி சொல்லிற்று
ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே – என்கையாலே பூ மாலை சூடிக் கொடுத்தபடி சொல்லுகிறது
எல்லாப் படியாலும் இவளுக்கு எம்பெருமானை வசீகரித்து ஆத்மாக்களை ரஷிப்பிக்க வல்ல புருஷகாரத்வமும்
இருவருமாக சேர்த்தியாலே ப்ராப்யத்வமும் சொல்லுகிறது

ஆகையால் இறே
எம்பெருமானார் நாறு நாறும் பொழிலிலே இவள் பிராத்தித்த படியே நடத்தியும்
திருப் பாவையை நாடொறும் நடத்தியும் -அத்தாலே
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுஜன் ஆனதும்
அவளுக்கும்
ஆழ்வார் திருமகளார் ஆனதுக்கு மேலே ராமானுசனை அண்ணராக அபிமானித்த ஏற்றமும் உண்டு இறே
இப்படி எல்லாவற்றாலும் நிரவதிக வைபவத்தை யுடைய அந்த ஆண்டாள் பொருட்டு
அடிமையாய் அற்றுத் தீர்ந்து ஓர் ஒன்றுகளிலே தம்மை எழுதிக் கொடுத்து ஆழங்கால் படுகிறார்

பூய ஏவாஸ்து பூய
அவள் தான் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றத்தை
தத் விஷயத்தியலே தாம் பிரார்த்திக்கிறார்

————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –

அன்ன வயல் -புதுவை
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் இறே
அன்ன நடைத் திங்கள் முக வல்லியான ஆண்டாள் போல இறே அவை இருப்பது
அன்னங்கள் சஞ்சரிக்கும் வயலை யுடைய புதுவை
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவைப் பட்டர் பிரான்
தண் புதுவைப் பட்டன் –என்று இறே திருத் தகப்பனாருக்கு நிரூபகம்
இவளுக்கும் அப்படியேயாய் இருக்கை-

புதுவை ஆண்டாள்
ஸ்ரீ பூமி நீளை களுடைய ப்ராதான்யமாய் இறே
திரு வெள்ளறை ஸ்ரீ வில்லி புத்தூர் திரு நறையூர் என்கிற த்ரி திவ்ய ஸ்தானங்கள் இருப்பது
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஆண்டாள் -சிஷ்யா தாசீ பக்தைகளாய் –

இவள் கிருஷ்ணனை அன்றோ திருப்பாவை பாடிற்று –
பெரிய பெருமாளுக்கு பாடிக் கொடுக்கை யாவது –

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கம் -என்றும்
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-என்றும் –
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடைய தேவர் திருவரங்கர்-என்றும் –
நிலமகள் கேள்வன்-என்றும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியான இவள் ஆதரித்துப் போருகிற ஸ்ரீ வராஹ நாயனார் படியும் —
அநுகாரத்தாலே ஆதரித்துப் போருகிற கோபாலர் படியும் –
தர்மி ஐக்யத்தாலும்
ஆஸ்ரித வ்யாமோஹ குணத்தாலும் பெரிய பெருமாள் இடத்திலே காணலாய் இருக்கும்

இனித் தான் -பள்ளி கொள்ளும் இடத்தே துயில் எழப் பாடி திருப்பள்ளி உணர்த்துவதும் இங்கே இறே
வட பெரும் கோயில் உடையானை கிருஷ்ணனாக அனுகரித்தால் போலே
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயோடே கண் வளர்ந்து அருளுகிறதாக அனுசந்திக்கலாம் இறே –
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட என்று பிரார்த்தித்த படியே-
பண வாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளோரோடு மணம் புணர்ந்து கூடினாள் இறே
ஆகையால் பாடின விஷயமும் அவரே இறே

விசேஷித்துப் பாட்டினால் கண்டு வாழும் பாணர் பாட்டுக் கேட்க்கும் இடம் ஆகையாலும்
இவள் அவள் மகள் ஆகையாலும்
பாட வல்ல நாச்சியாராய் அவ் விஷயத்தையே அவ் விஷயத்தையே பாடினாள் ஆய்த்து –

ஆகையால் திருப்பாவை அனுசந்தானத்துக்கு முன்னே
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்று அவளை அனுசந்திக்கச் சொல்கிறது –

இத்தால் அவள் திவ்ய ப்ரபந்தத்திலும் அவள் திரு நாமமே பிரதமம் அனுசந்தேயம் -என்றதாயிற்று –

———–

அவதாரிகை

இதில் சூடிக் கொடுத்த படியையும் 0பாடிக் கொடுத்த படியையும் சொல்லி-ஸ்தோத்ரம் பண்ணி
திருவேங்கடமுடையான் அடியாகச் சொன்ன இதன் அர்த்தங்களை நாம் அதிக்ரமியாத படி
அனுக்ரஹிக்க வேணும் என்று ஆண்டாளை அர்த்திக்கிறது
கீழே -அரங்கற்கு என்றது
இதில் வேங்கடவற்கு என்றது –
கோயில் திருமலைகளில் ஆய்த்து-கோதை சூடிக் கொண்டு இருப்பது

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு

சுடர்க் கொடியே
ஹேம லேகாம் –மங்கள தீப லேகாம்-ரூப சமஸ்தானம்- பொற் கொடி என்னலாம்படி இருக்கை -அவனைக் கட்டலாம் கொடி

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற–
நீ திரு வேங்கடத்தானை -நான் சென்று நாடி -என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணி
காம தேவா என்று உன்னுடைய காமத் தீயாலே-வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்ற–

இம் மாற்றம் –
இந்தச் சொல்லை என்னுதல் –
இந்தப் பிரகாரம் -என்னுதல்
பகவத் காமத்தால் சொன்ன பாசுரம் என்னுதல்
அர்த்தத்தை என்னுதல்

நாம் கடவா வண்ணமே நல்கு –
உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள் அதிக்ரமியாத பிரகாரம் உபகரிக்க வேணும்
நல்குதல் -கொடுத்தல்

இத்தால் –
ஆண்டாள் உடைய பகவத் ப்ரேமம் உண்டாக வேணும் என்று அவளை வேண்டுகிறது-

————–

ஹேமந்தே ப்ரதமே மாஸே நந்த வ்ரஜ குமாரிகா –காத்யாயனி விரதம் -நந்த கோபன் ஸூநுவையே –பதியாக பெற -நோன்பு –

அனுபவ பரிவாஹமாக வந்த திருப்பாவை

—————–

ஸ்ரீ திருப்பாவை வியாக்யான அவதாரிகை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை – –

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில்

அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –

இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-

1-பால்யாத் என்றால் போலே –
தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்

2-புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-
ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –

ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள்
அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –

3-மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு –
நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது-

இந் நோன்புக்கு மூலம் என் என்னில் –
மீமாம்ஸையிலே -ஹோளாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம்

மேலையார் செய்வனகள் -என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள்-
பொய்யே நோற்கிறோம் -என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹங்களிலும் மரண பர்யந்தமான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம் –

ஆண்டாள் இப்படி திருவவதரித்து வளர்ந்து அருளுகிற காலத்தில்
பெரியாழ்வார் வயிற்றிலே பிறக்கையாலும் தானான தன்மையாலும்
ஞான பக்திகள் க்ஷணம் தோறும் இட்டு மாறினால் போலே
வடிவிலே காணலாம் படி பெறுகிச் செல்லா நிற்க
பத்தி சம்யோக சுலபம் -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவமாய்
மானிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும்மனம் -என்னும் படியே
அபி நிவேசத்தைப் பண்ணிக்க கொண்டு

வட பெரும் கோயில் உடையான் உடன் தழுவி முழுசிப்  பரிமாற வேணும் என்னும் அபிநிவேசத்தால்-செல்ல
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசந்தனையாய் –
இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்து

திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு
அனுபவிக்கப் பெற்றார்கள் என்று அனுசந்தித்து –

அது காலாந்தரத்திலே யாகையாலே அதுக்கு உதவப் பெற்றிலோம்
என்று இன்னாதாய்

இனி அவன் உலாவிப் போன அடிச் சுவடும் –
அவனும் பெண்களுமாய் திளைத்த யமுனையும் அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடந்ததாகில்
அவற்றைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்க்க –

அதுக்கு தனக்குப் போக பலம் இல்லாமையால் அவற்றை அனுசந்தித்து
மிகவும் அவசந்தனையாய்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே –
வில் -என்று ஒரு அவதி பெறுதல் –
நப்பின்னைப் பிராட்டியைப் போலே -ரிஷபங்கள் -என்று ஒரு அவதி பெறுதல் -செய்யப் பெறாமையாலே
மிகவும் தளர்ந்து நமக்கு தரிக்கைக்கு விரகு என் என்று ஆராய –

சில தார்மிகர் அவ்வளவில் சொல்லுகிறார்கள் –
திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனும் பெண்களுமாய் திருக் குரவை கோத்து
அதி ரசம் செல்லா நிற்க ப்ரீதியாலே குமிழ் நீர் உண்டு
இனி நல் கேடு கெட ஒண்ணாது -என்று
இந்த ரசம் மாறுகைக்காக பெண்களை பிரிந்து கிருஷ்ணன் ஒளிக்க

பெண் பிள்ளைகள் தங்கள் ஆற்றாமையால் –
துஷ்ட காளிய-என்கிறபடியே
அவர்கள் அநு கரித்து தரித்தார்கள் –

என்று கேட்டு தானும் அவர்களை போலே அநு கரித்து தரிக்கப் பார்க்கிறாள் –

இவள் தான் ப்ராஹ்மணியாய் இருந்து வைத்து
அவர்களை போலே அநு கரிக்கும் படி எங்கனே என்னில் –

யாகத்தில் தீஷித்தவர்கள் தேவதத்தாதி நாமங்களை தவிர்ந்து யாகம் முடியும் அளவும்
எஜமான் என்றும் –
அத்வாயு -என்றும் –
ஹோதா -என்றும் -இத்யாதி நாமங்களே யாகிறது போலே

இவளும் ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய் படியாகவும்-
அங்குள்ள பெண்கள் இடைப் பெண்கள் போலே அவர்களில் தானும் ஒருத்தி யாகவும்
வட பெரும் கோயிலே ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையாகவும்
உள்ளே நிற்கிறவன் கிருஷ்ணனாகவும் அனுசந்தித்து

-தன்னுடைய திரு உள்ளம் திருவாய்ப் பாடியிலே குடி போய்-
பாவன பிரகரக்ஷத்தாலே அநு காரம் முற்றி -அவை தானேயாய்

-இடை நடையும்
இடை முடியும்
இடைப் பேச்சும்
முடை நாற்றமுமாய் விட்டது-

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
நஷ்டமாய் கிடக்கிற ஜகத்தை கிருபையால் ஸ்ருஷ்டித்து –
ஆத்மாக்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
சாஸனாத் சாஸ்திரம் -என்கிறபடியே
வேத சாஸ்திரங்களை தன்னைப் பெறுகைக்காக-உபாயமாகக் காட்டிக் கொடுக்க –

அவற்றைக் கால் கடைக் கொண்டு -விஷயாந்தரங்களிலே மண்டி
அநர்த்தப் பட்டு போகிற தசையில்
தான் வந்து பிறந்து அருளி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் சீலாதி குணங்களாலும் இந்த ஜகத்துக்களை ஈடுபடுத்தி
வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவானாகையாலே
தாதார்த்தமாக திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் குண சேஷ்டிதங்களுமாக
பஞ்ச லக்ஷம் குடியில் உள்ள பெண்களைத் தோற்பித்திக் கொண்டு
ஒத்த பருவத்தில் பெண்களும் தாணுமாய் வளர்ந்த காலத்தில் –

தானும் ப்ராப்த யவ்வனனாய் –
அவர்களுக்கும் யவ்வனம் வந்து தலைக் கட்டின வாறே
கோப வ்ருத்தர் எல்லாரும் கூடி
கிருஷ்ணன் தூர்த்தனாய் -காமுகனாய் -இரா நின்றான் –
இவன் முகத்தில் பெண்கள் விழிக்கல் ஆகாது -என்று பார்த்து இவர்களைக் கொண்டு போய்
நிலவறைகளிலே யடைக்க

பெண்களும் கிருஷ்ணனும் பண்ணின பாக்யத்தாலே வர்ஷம் இன்றிக்கே ஒழிய
பெண்கள் இருந்து மநோ ரதிக்கிறார்கள்
கோ தனராய் இருக்கிற இடையர் வர்ஷார்த்தமாக நம்மை நோற்கச் சொல்லக் கடவர்கள்-
கிருஷ்ணன் இதுக்கு கடைக் கூட்டாகவும்-நிர்வாஹமாகவும் கடவன்
நமக்கு ஒரு துக்கம் இல்லை என்று பெண்கள் ப்ரீதைகளாய் தரித்து இருக்கிற தசையில்

வர்ஷமும் இன்றிக்கே இருக்கிற படியைக் கண்டு
கோப வ்ருத்தர் எல்லாம் திரண்டு -பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்கும் விரகு ஏதோ என்று பார்த்து
வருஷார்த்தமாக நோற்க வர்ஷம் உண்டாம் என்று –
இவ்வூரில் பெண்கள் அடைய நோற்கக் கடவர்கள் –
இந்நோன்புக்கு இங்குத்தைக்கு அதிபனான ஸ்ரீ நந்தகோபர் மகன் கிருஷ்ணன் கடகனாவான் என்று
அத்யவசித்து

பெண்பிள்ளைகளை அடைய அழைத்து –கிருஷ்ணனையும் அழைத்து –
பெண்களை நோற்கச் சொல்லி

இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக வேணும் -என்று கிருஷ்ணனை அபேக்ஷிக்க –
அவன் எனக்கு ஷமம் அன்று -என்ன
இத்தனையும் செய்ய வேணும் -என்று மறுக்க ஒண்ணாத படி நிர்பந்திக்க

அவனும் இசைந்த பின்பு எல்லாரும் திரள இருந்து
பெண்கள் நோற்பார் -இதுக்கு வேண்டுவது கிருஷ்ணன் சஹகரித்து கொடுப்பான் -என்று
ஓம் அறைந்து
கிருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டிக் கொடுத்து

கோப வ்ருத்தர் எல்லாரும் போன பின்பு -பெண்களும் கிருஷ்ணனும் கூட இருந்து –
திருக் குரவை கோத்த ராத்திரி போலே
பெண்காள் இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே -என்று கிருஷ்ணன் கொண்டாடி

இனி அசிர்ப்பு -ஆயாசம் -பிறக்க இருப்போம் அல்லோம் –
இப்போது எல்லாரும் போய் அபர ராத்ராத்திரியிலே வந்து –
இரவின் பின் பாகம் – எழுப்புங்கோள் -நோன்புக்கு குளிக்கலாம் படி -என்று அருளிச் செய்து –

கிருஷ்ணனும் பெண்களை பிரிந்து போய் தரிக்க மாட்டாமே
நப்பின்னை பிராட்டி திரு மாளிகையில் புக்கான் –

பெண்களும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலே கால் நடை தந்து போய்
தம் தாம் மாளிகையில் புக்கு உறங்கப் புக்க இடத்தில் கண் உறங்காமையாலே
முற்பட உணர்ந்தவர்கள் கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்து எழுந்திருக்க மாட்டாதே
கிடக்கிறவர்களை தனித்த தனியே சென்று எழுப்பி

எல்லாரும் கூடி உத்தேசியமான ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையில் சென்று
கிருஷ்ணனை எழுப்பி தங்கள் அபேக்ஷிதத்தை அறிவித்து

யாவதா வர்த்தே சக்ரம் -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் பெருமாள் திருவடிகளில் விழுந்து வேண்டிக் கொண்டால் போலேயும்
அர்ஜுனன் ஷத்கத்ரயத்திலும் கூட எடுப்பும் சாய்ப்புமாய்ச் சென்று சரம ஸ்லோகம் கேட்டு தரித்தால் போலேயும்
அபேக்ஷிதம் பெற்று முடிக்கிறது –

இவள் மடலூராதே நோன்பில் கை வைப்பான் என் என்னில்
ராஜ மகிஷி உஞ்ச விருத்தி பண்ணி ஜீவித்தல் ராஜாவுக்கு அவத்ய அவஹமாம் போலே –
மடலிலும் காட்டிலும் இது அவத்ய அவஹமாகையாலும்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே குண வியசநியன் -குணத்துக்கு ஹானி வருமோ என்று
வியசனிப்பவன் அன்றியே தானும் ஒக்க மடல் எடுப்பான் ஒரு
சுணைக் கேடன் -லஜ்ஜா ஹீனன் -ஆகையாலும்
மடல் இவ்விஷயத்தில் பலியாது என்று நோன்பு நோற்கிறார்கள் –

உத்தேச்யம் வேறு ஒன்றாய் நோன்பு வியாஜ்ய மாத்திரம் ஆகில்
இவர்களுக்கு தேவதை வர்ஷிக்குமோ என்னில்
வ்ரத உபவாச கர்சிதமான வடிவைக் கண்டால்
சேதனம் அன்றோ வர்ஷியாதோ -என்று பார்த்தார்கள் –

திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப்பாவைக்கு ஆள் கிடையாது
மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்
முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானை தானே அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் இல்லை

பல சொல்லி என்
பத்து ஆழ்வார்கள் உடைய சார பூதையான தானே சொல்லி
தானே கேட்கும் இத்தனை –

எம்பெருமானார் அருளிச் செய்வர்

இவள் தான் எம்பெருமானுக்கு மதி நலம் அருளினாள்
பதின்மரின் ஞானமும் ஸ்திரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது -பகவத் சம்ருத்தியை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படி பெரியாழ்வார் திருமகளராது -ஸ்ரீ மதுரகவி களோடு ஒப்பர்
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வசித்து இருப்பர்

முதல் பாட்டிலே
நாராயணனே நமக்கே பறை தருவான் -உபாயத்தை அறுதி இட்டு
சிற்றம் சிறு -காலையில்
உபேயத்தை அறுதி இட்டு
நடுவில்
தேக யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள்

அன்று எனக்கு அவை பட்டினி நாள் என்னுமவர் திருமகள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் என்றும் உண்டு இறே
மாலாகரர் மகள் இறே
குண வித்தர் உறங்க கைங்கர்ய பரர் எழுப்ப –
அமரரும் முனிவரும் போலே -முனிவர் உறங்க அமரர் எழுப்ப

அநாதி காலம் உறங்கி இனி அநந்த காலம் உணர்ந்தே இருக்கிறபடி
எம்பெருமானை செறிய செறிய உணர்த்தி மிகும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன் –
அஸ்தமிதியாத-ஆதித்யனையும் கண்டேன் –

திருக்கண்டேன் -பின்பு பொன் மேனி கண்டேன்
பிரபை முந்துற கண்டு பின்பு ஆதித்யனை காணுமா போலே

கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ஆதித்யன் உண்டானாலும் கண் உள்ளாருக்கு தானே விடிவு

அவனை பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வம் உள்ளவள் –
ஆற்றாமை தன்னேற்றம்

தேகாத்ம அபிமானம் கூனி கைகேயி போல்வார்
தார்மிகத்வதுக்கு சக்கரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்
பகவத பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்

முந்துறவே பல்லாண்டு என்றார் பெரியாழ்வார் பகவத் சம்ருதியை
இவளோ நீராடப் போதுவீர் -என்றாள்
உபாயத்திலும் இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டிருப்பர்
இவளுக்கு உபாயம் -விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் –
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க

இவள் தன்னை அழித்து அவர்களைப் பெற பார்க்கிறாள்
நம் ஆழ்வார் நெடுமாற்கு அடிமையிலும்
வேய் மரு தோளிணையிலும் கடைகோடி நிலை இட்ட
அர்த்தம் இவளுக்கு முற்பட்டது

ஸ்ரீ ஜனக ராஜன் மகள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தி திருமகனைப் பெற உடல் ஆம் போலே

ஆண்டாள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
பெரிய பெருமாள் திருவடிகளைப் பிராபிக்க உடலாம்

ஸுவ உபதேசிகளால்
பகவத் தானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி

அந்ய உபதேசத்துக்கு எல்லை இவள் படி

———

ஈராயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

எம்பெருமானாரை -ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன –
திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப் பாவைக்கு ஆள் கிடையாது -என்று அருளிச் செய்தார் –
மோவாய் எழுந்த முருடர் கேட்க்கைக்கு அதிகாரிகள் அல்லர் -முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானைத் தங்கள் அனுபவிக்க வேணும் என்று இருக்கும் பரிவாணிச்சிகளான
பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல -பல சொல்லி என் –
பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான தானே சொல்லித் தானே கேட்க்கும் அத்தனை – என்று அருளிச் செய்தார் –

ஒரு பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் உள்ள வாசி போரும் ரிஷிகளுக்கும் சம்சாரிகளுக்கும் –
அத்தனை வாசி போரும் ஆழ்வார்களும் ரிஷிகளுக்கும் –
அப்படியே பெரியாழ்வாருக்கும் ஆழ்வார்களும் –
அத்தனை வாசி போரும் பெரியாழ்வாருக்கும் திரு மகளாருக்கும் –
பதின்மருடைய ஞானமும் ஸ்த்ரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது –
பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இறே –

ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றனர் –
இவள் தான் எம்பெருமானுக்கு மயர்வற மதி நலம் அருளினாள்
இவள் அருளுகையாவது எம்பெருமானை எழுப்பித் தன் குறையை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கை–
(அத்யாபயந்தி -தனியனில் பார்த்தோம் )

இளைய பெருமாள் படி ஆழ்வார்களது —
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது –
ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி அவர் திருமகளது –

ஆழ்வார்களும் இளைய பெருமாளும் பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ பரத ஆழ்வானும் பெரியாழ்வாரும் பகவச் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ சத்ருன ஆழ்வானும் நாய்ச்சியாரும் மதுரகவிகளோடு ஒப்பர்கள் –
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வஸித்து இருப்பர் –
இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-ரானாப் போலே –
இவளும் தொடக்கமே பிடித்து ஸ்னேஹித்துக் போரும் –

இப்படி விலக்ஷணையான நாய்ச்சியார் அருளிச் செய்த பிரபந்தம் இறே திருப்பாவை –
இப் பிரபந்தத்துக்கு கருத்து -மார்கழி நீராட -என்கிற இத்தை ஒரு வ்யாஜமாகக் கொண்டு
நோன்பு முன்னாக எம்பெருமானை –
உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மா அநர்த்தப் படாதபடி பண்ணி –
இதற்கு ஸ்வரூப அனுகுணமான கைங்கர்யத்தையும் கொடுத்து
அதுதான் யாவதாத்மா பாவியாம் படி பண்ணி யருள வேணும் -என்று அபேக்ஷிக்கிறாள் –

அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும் கூட -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று அவனைக் கொண்டு
உபாயத்தை அறுதியிடுவித்தாப் போலே
இவளும் முதல் பாட்டால் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று உபாயத்தை அறுதியிட்டுச்
சிற்றம் சிறுகாலையிலே உபேயத்தை அறுதியிட்டுக் கொண்டு
நடுவே தேஹ யாத்திரைக்கு உடலாக்கி விடுகிறாள் –
(ஆறு உபாயம் தொடங்கி பேறு நிகமித்து நடுவில் தேக யாத்திரை )

அன்று எனக்கு அவை பட்டினி நாள் -(பெரியாழ்வார் -5-1–6)-என்னுமவர் மக்கள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் -( திருவாய்-3-3-1-)என்றும் உண்டாய் இறே
மாலாகாரர் மகள் இறே –

ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –

இவளுடைய ஞான பக்திகள் க்ஷணம் தோறும் பகவத் விஷயத்திலே கை வளர –
வட பெரும் கோயிலுடையான் முகம் கூடாதே இருக்க
இவளும் ஐஸ்வர்யார்த்திகளுக்காக எல்லை நடந்து கொடுத்து -இளைப்பாலே கிடக்கிறான் என்று புத்தி பண்ணித்
தன் திரு முலைத் தடங்களை யிட்டு நெருக்கினாள் —
அத்தாலும் எழுந்து இருந்து பிரதிவசனம் பண்ணக் கண்டிலள் –
காணாமையாலே வ்யசனாதிகளாலே மீளவும் சிசிரோபசாரம் பண்ணினாள் –
அத்தாலும் எழுந்து இருக்கக் காணாமையாலே –

இது நோவு -அல்ல –நம் பக்கல் ப்ராணய அபராதத்தாலே கிடக்கிறான் -என்று நினைத்து
மிகவும் தளர்ந்து திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகளை அனுசந்தித்துப் பார்த்தாள்-
அது காலாந்தரத்திலே யாகையாலே உதவப் பெற்றிலோம் என்று தளர்ந்து மிகவும் அவசன்னையாய்
நமக்கு தரிகைக்கு விரகு என் -என்று கூப்பிடச் செய்தே
சில சாபராணி ப்ரப்ருதிகள் கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனோடு கலந்து பிரிந்த பெண்கள்
தங்கள் ஆற்றாமையாலே-
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று கிருஷ்ணனை அனுகரித்து தரித்தாப் போலே-
இவளையும் அனுகரித்து தரிக்கச் சொல்ல
இவளும் கிருஷ்ணனை அனுகரிப்பதிலும் கிருஷ்ணனை அனுகரித்த பெண்களை அநுகரிக்கை நன்று
என்று பார்த்து அனுகரித்து தரிக்கிறாள் —
அவ்வநுகாரம் முற்றி -இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் விட்டது

இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய்ப்பாடியாகவும் –
வட பெரும் கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும் –
வட பெரும் கோயிலுடையானே கிருஷ்ணனாகவும் –
தன்னைப் பிராட்டியாகவும் தோழிமாராகவும் அணுகரித்துக் கொண்டு நோற்கிறாள் –

நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட வாயாலே
எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –
பொய்யே நோற்கிறோம் என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹ சமயத்திலும் ப்ராணாந்திக சமயத்திலும் பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் உண்டு
உண்டு என்று சொல்ல வேணுமோ அனுஷ்டானம் யன்றோ பிரதானம் –
இவ்விரண்டுக்கும் கைம்முதல் வேறே தேட வேணுமோ –
இவர்களுடைய ஆற்றாமை தான் என் செய்யாது –

அழகிது -இது தான் இங்கு விளைந்தபடி என் என்னில் –
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -புருஷோத்தமனாய் -புண்டரீகாக்ஷனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சாத்விக சேவ்யனாய் இருக்கிற சர்வேஸ்வரன்
தன் கிருபையால் நிர்ஹேதுகமாக பிறந்து அருளி –
தன்னுடைய சீலாதிகளாலே ஜனங்களை ஈடுபடுத்தி –
வாரிப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவனாகையாலே –

ததார்த்தமாகத் திருவாய்ப்பாடியிலே வந்து திருவவதரித்துப் பெண்களும் தாணுமாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
கிருஷ்ணனும் ப்ராப்த யவ்வனனாய் பெண்களும் குமாரிகளாய் இருக்கிற இருப்பைக் கண்டு –
இவன் இப்படி தூர்த்தனாய் இரா நின்றான்
இவன் பாடு பெண்கள் சேரக் கடவர்கள் அன்று என்று எல்லாருமாகத் திரண்டு
இப் பெண் பிள்ளைகளை நிலவறைகளிலே அடைத்தார்கள் –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கிட்டாமல் வெண்ணெயையும் மறைத்து வைத்தார்கள் –
இப்படி வெண்ணெயும் பெண்களும் கிருஷ்ணனும் பிரிந்த
தர்ம ஹானி கண்டாவது –
இவர்கள் பண்ணின பாக்யமாவது
நாடு வர்ஷம் இன்றிக்கே நோவு பட்டுப்
பசுக்களுக்கு ஊண் இன்றிக்கே
பிராணன் இன்றிக்கே
ஸஸ்ய வ்ருத்திகளும் இல்லையாய்த்து –

நாடு வர்ஷம் இன்றிக்கே இருக்கிறபடியைக் கண்டு கோப வ்ருத்தர்கள் எல்லாம் திரண்டு –
பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்க விரகு என் என்று விசாரிக்க –
அசரீரி போலே புருஷ வாக்யம் -தேவதை திருப்தனாக வர்ஷமுண்டு -என்று பிறக்க –
இவர்களும் வருஷார்த்தமாக இவ்வூரில் பெண்பிள்ளைகள் அடைய நோற்கக் கடவர்கள்-என்றார்கள் –
இக்க்ரமம்-அபி வ்ருஷா பரிம்லா நா -என்றது போய்-
அகால பலிநோ வ்ருஷா-என்று புண்ய காலம் வந்தால் போலே இருந்தது –
அநந்தரம் வர்ஷார்த்தமாக நோற்க்கைக்காக நிலவறைகளிலே அடைத்த பெண்களை புறப்பட விட
நந்தகோபர் வ்ருத்தராகையாலே-எல்லாவற்றுக்கும் கடவானாக கிருஷ்ணனையும்
சாந்த்வ வாதனம் பண்ணிப் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர விட்டு சரணம் புக-

கிருஷ்ணனும்
கோபீ பரிவ்ருதோ ராத்ரிம் சரத் சந்த்ர மநோ ரமாம் -என்று சொல்லுகிறபடியே
தண்டலிட்ட நிலவும் -விள்ளலிட்ட நாண் மலர்ச் செறிவும் -இருந்த சோலையும் –
பளிங்குப் பாறையும்- செங்குன்றுத் தாழ்வரையும் –
பரப்பு மாறப் பூத்த காவியோடையும் – நாயடி இட்டுப் புகுந்த தென்றலுமாய் இருக்கிற- யமுனா தீரத்தில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையடைய
மெய்க்காட்டிக் கொண்டு கழகம் இருந்து –
இனி நாம் வைகல் இருக்கில்- மாதா பிதாக்கள் அதி சங்கை பண்ணுவார்கள் –
உந்தம் அகங்களிலே போய்ச் சேருங்கோள்-என்று தானும் நப்பின்னை பிராட்டி திரு மாளிகை சேர

பெண்களும் தந்தாம் அகங்களிலே போய்ப் படுக்கையிலே சேர- படுக்கை அடி கொதித்து
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் மத்திய ராத்ரியிலே எழுந்து இருந்து
சிலர் உறங்குகின்ற பெண் பிள்ளைகளை எழுப்புகிறார்கள்
உறங்குகிறவர் யார் எழுப்புகிறவர் யார் என்னில்
குண வித்தர் உறங்குகிறார்கள் -கைங்கர்ய பரர் எழுப்புகிறார்கள்
ராம சரம் ஒருபடிப் பட்டு இராது இறே
சின்னம் பின்னம் -அப்படி கிருஷ்ண குணங்களும் நாநாவாய் இறே இருப்பது
இரண்டு பிரகாரமும் பரமபதத்தில் உண்டு -அமரரும் முனிவரும் – இறே –
முனிவரோடு ஒப்பார் உறங்குகிறார்கள் -அமரரோடு ஒப்பார் எழுப்புகிறார்கள் –

ஆக
1-நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
2-இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
3-அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
4-வர்ஷிக்கும் படியை நியமித்து
5-நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி

6-15-மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்

16-30-மேல் விசதமாக இருக்கும்

————

ஹேமந்தே ப்ரதமே மாஸே நந்த வ்ரஜ குமாரிகா –காத்யாயனி விரதம் -நந்த கோபன் ஸூநுவையே –பதியாக பெற -நோன்பு –

அனுபவ பரிவாஹமாக வந்த திருப்பாவை

——–

நாலாயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

அநாதி மாயயா ஸூப்தா யதா ஜீவ ப்ரபுத்யதே-என்கிறபடியே அநாதி காலம் ஒரு போகியாக உறங்கினவன் (வாடினேன் -ஓடினேன்)இனி
(நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் )அநந்த காலம் ஒரு போகியாக உணர்ந்தே இருக்கும் படி சொல்லுகிறது –
உணர்ந்தது எம்பெருமானை யாகையாலே உணர்த்திக்கு பாதகம் இல்லை –
ப்ரக்ருதியைச் செறியச் செறிய இருள் மிகும் -(இருள் தரும் மா ஞாலம் அன்றோ )
எம்பெருமானைச் செறியச் செறிய உணர்த்தி மிகும் –

ஞான ஆனந்த மயமான (மன ஞானே -மன அவ போதனே )ஆத்ம ஸ்வரூபத்துக்குத் திரோதானம் பிறந்த அத்தனை இறே பண்டு செய்தது –
ஸ்வரூப சித்தி யன்றோ ப்ராப்யம்(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே ப்ராப்யம் )
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்(இரண்டாம் திருவந்தாதி )-உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன்

பாஸ்கரேண ப்ரபாயதா- திருக் கண்டேன் -என்ற பின்பு -பொன்மேனி கண்டேன் என்றார் இறே-
பிரபையை முந்துறக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
அத்யமே சபலம் ஜென்ம ஸூப்ரபாதா ச மே நிசா -என்று அக்ரூரனுக்கும் கம்ச சம்பந்தத்தால் விடிவு காண ஒண்ணாத ராத்ரியும் விடிந்து அஸ்தமியாத பகலாய்த்து

கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்(நிர்தேவத்வம் ஆசைப்பட்டு நித்ரா கேட்டு இழந்தானே )-
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ராவணனுடைய உணர்த்தியில் கும்பகர்ணனுடைய உறக்கம் நன்றாய் இருந்தது –
உணர்ந்தால் எம்பெருமான் பக்கலிலே செல்லுகைக்கு இறாய்க்கும் அத்தனை இறே –

ஆஜகாம முஹுர்த்தேன யத்ர ராம்ஸ ச லஷ்மண (புருஷகாரமாக இளைய பெருமாள் உடன் இருக்கும் பெருமாள் பக்கம் விபீஷணன் வந்து சேர்ந்தான் )- ஸூப்ரபாதாத்ய ரஜநீ மதுரா வார யோஷிதாம் -(கோகுல பெண்கள் மதுரா பெண்களைக் குறித்துப் பேசினது -கண்கள் வண்டு -கண்கள் திருப்பவளாம் தேன் பருகும் )என்று அங்குள்ளார்க்கு
நல் விடிவும் நமக்கு விடியாத ராத்திரியுமாய்த்து என்றார்கள் இறே –
ஆதித்யன் உண்டானாலும் கண்ணுள்ளார்க்கு இறே விடிவு உள்ளது –

(அநாதி மாயையால் நாமும் தூங்கி இருக்க -எழுப்பி அநந்த காலம் போகம் அனுபவிப்பிக்க தானே ஆண்டாள் வாய் அமுதம் நாம் கிடைக்கப் பெற்றோம்)

ஆண்டாளுக்கு பத்துத் தமப்பன்மாருக்கு உண்டான ஆற்றாமையும் ஸ்த்ரீதனமாகப் பெற்று இவள் பக்கலிலே குடி கொண்டது –
ஆழ்வார்களுக்கு தரிக்கைக்கும் ஒரு பொற்றை யுண்டு -தங்களான தன்மை அழிந்து இருக்கச் செய்தே-
நாய்ச்சியார் தசையாக அந்யாபதேசத்தாலே பேசி அனுபவித்தார்கள் –

பின்னை கொல் —இவள் பிறந்திட்டாள்-(6-5-11)என்னுமா போலே அந்யாபதேசத்தாலே அனுபவிக்க வேண்டாதே
அவனைப் பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வத்தை (பாரதந்தர்யம் )உடையளாய் இருக்கும் –
அவர்களில் காட்டிலும் ஆற்றாமை தன்னேற்றம் -எம்பெருமான் தன் அழகையும் குணங்களையும் இவளுக்கு கொடுத்தான் –
பிராட்டிமாரும் தங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் இவளுக்குக் கொடுத்தார்கள் –

தமப்பன்மாரைப் போலே ஏறிட்டுக் கொண்ட பெண்மை என்று -இவளுக்கு ஓர் அந்யாபதேசம் யுண்டு -அதாகிறது
ப்ரமணி இடைச்சியாகை-குலம் தரும் -என்று அவனுக்கு அந்நிய குலம் இறே –

(உறி அடி உத்ஸவம் பட்டர் இடைக்குலம் சேர்ந்து அனுபவித்த வ்ருத்தாந்தம் )

பதிம் சம்யோக ஸூலபம் வாயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசா சாதாப்லவோ யதா -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் பருவமாய்
மானிடவற்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன் என்னும் தன்மையை யுடையளாய்(நாச்சியார் -1-5)
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -(இரண்டாம் திருவந்தாதி )என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணிக் கொண்டு
வட பெரும் கோயிலுடையானோடே -தழுவி முழுசிப் பரிமாற்ற வேணும் என்று இவள் செல்ல –
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசன்னையாய்- இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்த இடத்திலே

திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு அனுபவிக்கப் பெற்றார்கள் என்று கேட்டு –
அதுக்கு நாம் உதவப் பெற்றிலோம் -என்று இன்னாதாக
கோவர்த்த நோ கிரிவா (அதிமானுஷ ஸ்தவம் )-அவன் பொருப்பான பன்னிரண்டும் காட்டின மலை கிடந்தது
யமுநா நதீ சா -அவனும் பெண்களும் புக்குக் கலக்கின நீர் இன்னமும் தெளிந்தது இல்லை –
மஞ்சளும் குங்குமாதிகளும் இப்போதும் காணலாம்

அனந்தாழ்வான் திரு முக்குளத்தில் புகுத்தி தடவினார் -இது என் என்ன –
அப்பெண் பிள்ளைகள் குளித்த தொரு மஞ்சள் கொழுந்தாகிலும் கிடைக்குமாகக் கருதிக் காண்-என்றார்

(கோவர்த்தனோ கிரிவரோ யமுனா நதீ சா பிருந்தாவனம் ச மதுரா புரீ புராணீ
அத்யாபி ஹந்த ஸூலபாஸ் க்ருதிநாம் ஜனாநாம் ஏதே பவச் சரண சாரஜூஷஸ் பிரதேசா–அதிமானுஷ ஸ்தவம்-49-

கோவர்த்தனோ கிரிவரோ –பர்வத ஸ்ரேஷ்டமான கோவர்த்தனமும்
யமுனா நதீ சா –அந்த யமுனா ஆறும்
பிருந்தாவனம் ச –ப்ருந்தாவனமும்
மதுரா புரீ புராணீ –புராதனமான மதுரா நகரையும் -ஆகிய
பவச் சரண சாரஜூஷஸ் ஏதே பிரதேசா–உன்னுடைய பாத சஞ்சாரம் பெற்ற இந்த ஸ்தலங்கள்
க்ருதிநாம் ஜனாநாம் –ஸூஹ்ருதிகளுக்கு
அத்யாபி ஸூலபாஸ் –இன்றைக்கும் ஸூல பமாய் உள்ளன –)

பிருந்தாவனம் ச -அவனாலும் பெண்களாலும் பருத்தி பட்ட பன்னிரண்டும் ஸ்ரீ பிருந்தா வனத்தில்
திருக் குரவை கோத்த அடிச் சுவடும் இன்னமும் அழிந்தது இல்லை
மதுரா ச புரி புராணி -ஆஸ்ரிதற்கு வயிறு எரித்தலான தேசம் -கொடும் தேசம் என்றுமாம் –
ஆனை படும் ஆகரம் போலே சர்வேஸ்வரன் படும் ஆகரம்
அத்யாபி அந்த ஸூலபாக்ருதி நாம் ஜனா நாம் –கால்நடை பாக்யவான்களுக்கு இப்போதும் காணலாம் கிடீர்-

வைலக்ஷண்யத்துக்கு த்ருஷ்டாந்தம் –
தேஹாத்ம அபிமானத்துக்கு கூனியும் கைகேயியும் –
தார்மிகத்வத்துக்கு சக்ரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்தர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்-

இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -ஸ்ரீ பரத ஆழ்வான் படி பெரியாழ்வாரது -ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி ஆண்டாளது
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார் -இவள் பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்டாள்-

முந்துறவே பல்லாண்டு என்றார் அவர் -இவள் நீராடப் போதுவீர் -என்றாள்
இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இவளுக்கு உபாயம் விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க -இவள் தன்னை அழித்து அவர்களை பெறப் பார்க்கிறாள்
நம்மாழ்வார் -நெடுமாற்கு அடிமையிலும் -வேய் மறு தோளிணையிலும் -கடை கோழி -கடைக் கோடி –
நிலையிட்ட அர்த்தம் -இவளுக்கு முற்பட்டது –

கிருஷ்ணனைப் பிரிந்த இத் தர்ம ஹானி கண்டு மாரி மறுத்தது –
கூடினால் -ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக -பிரிந்தாலும் -அபி வ்ருஷா பரிம்லாநா -என்னும்படியாம் இறே
முன்பே மழை பெய்யாமைக்கு நோற்றார்கள் ஆகவுமாம்-மேலையார் செய்வனகள் -என்று வ்ருத்த ஆசாரங்களை நினைக்கிறது ஆழ்வார்களை –

அர்ஜுனன் உபாயத்தை கடைக் கோழி கடைக் கோடி-நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்-
ஸ்ரீ பரத ஆழ்வான் உபேயத்தை நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆடச்செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –

வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத்ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்

இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப் பிரபந்தங்கள் –
சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

(அர்த்த பஞ்சகத்திலும் ப்ராப்யமே ஒன்றே ஆழ்வார்களுக்கு நோக்கு -மற்றவை பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-என்றவாறு)

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

ஸ்வாபாதேசாதிகளால் (உள்ளுறை–ஆதி -தானான தன்மை )பகவத் தியானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி –
அந்யாபதேசத்துக்கு (பாகவத ததீய சேஷத்வத்துக்கு ) எல்லை அவர் மகள் படி –

மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது –
கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் –
இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய் இருக்கிலும்-
நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –

——–

வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத் ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்
இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப் பிரபந்தங்கள் –
சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –

மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது –

ராஜ மகிஷி உஞ்ச விருத்தி பண்ணி ஜீவித்தல் ராஜாவுக்கு அவத்ய அவஹமாம் போலே –
மடலிலும் காட்டிலும் இது அவத்ய அவஹமாகையாலும்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே குண வியசநியன் -குணத்துக்கு ஹானி வருமோ என்று
வியசனிப்பவன் அன்றியே தானும் ஒக்க மடல் எடுப்பான் ஒரு
சுணைக் கேடன் -லஜ்ஜா ஹீனன் -ஆகையாலும்
மடல் இவ்விஷயத்தில் பலியாது என்று நோன்பு நோற்கிறார்கள் –

கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் –
இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய் இருக்கிலும்-
நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –

நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட வாயாலே
எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –

ஆக
1-நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
2-இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
3-அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
4-வர்ஷிக்கும் படியை நியமித்து
5-நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி

6-15-மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்

16-30-மேல் விசதமாக இருக்கும்

——————————————————

அந்த வைகுண்ட போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –
அவனில் எண் மடங்கான காமத் தீயுள் புகுந்து கதுவ-

அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்
இப்புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –

அது எங்கனே என்னில் –ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –

அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்

புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –

அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -என்றும்

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -என்றும்

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய -என்றும்

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்

ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்

உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் -என்றும்

பெண் கொடியை வதம் செய்தான் -என்றும் –

காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-

முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில்
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே

யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்

சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –

பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப்  பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –

இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –

இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –

புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ-ப்ராத காலயமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்நோத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதி மகுஹம் சீக்ரமா நயபத்ரந்தே தாரயிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபி மிதமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –

இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி

————

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

பலாத்காரம் பண்ணி அனுபவித்தாள் மாலை — ..திரு மாலை கட்டின பா மாலை -புஷ்ப மாலை-
மாலையே மாலை கட்டின கோதா- பூ மாலை கட்டிய பா மாலை –
திரு மாலை கட்டின கோதா–இதையே தனியனாக பராசர பட்டார் அருளி இருக்கிறார்
கண்ணனுக்கே ஆமது காமம்–மாலை மாலையாலே விலங்கு இட்டாள்-
கால் விலங்காகில் இறே கழற்றுவது -தந்தை காலில் விலங்கு அற -தந்தை தளை கழல
காமிநி அன்றோ -பத்தினிக்கு தோற்பான் பரம ரசிகன் –
கண்ணியாலே கட்டுண்டான்-கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆட்ச் செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –.பிஞ்சாய் பழுத்தாள் ஐந்தே வயசில் எல்லாம் அருளினாள்-

அப்பொழுது தோன்றிய ஹனுமான் இடம் கேட்டாள் சீதை– சங்கரையா உன் செல்வம் சால அழகியதே– –
குழல் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் ..திரு பவள வாய் தித்தித்து இருக்குமோ என்று அன்றோ -கேட்டாள்-இதிலும் ஏற்றம்
நாண் ஒலியும் சங்கு ஒலியும் சீதை ருக்மிணி பிராட்டிகள் இருவர் கேட்டதை -சேர்த்து கேட்டாள்-
திரி ஜடை சொப்பனம் கண்டு சீதை ஆசுவாச பட இவளே கனா கண்டேன் தோழி நான் என்று அருளுகிறாள்.
கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவம் –
மானிடருக்கு என்று பேச்சு படில் -யாராவது பேசினாலும் -வாழ கில்லேன் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் -மனம் உடையவள்
பாரிப்போடு -தழுவி அணைத்து கொள்ள –மனம் உடையவள்-

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிளி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து –

வில்லிபுத்தூர் என்று ஒரு கால் பெரியாழ்வாரும் ஆண்டாளும் சொன்னதே
ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேச மங்களா சாசன அருளிச் செயல்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5-5–

அன்னம் வண்டு என்றதே பெரியாழ்வாரையும் பெரிய பெருமாளையும் ஸூசிப்பிக்கும்–
அசாரம்- அல்ப சாரம் – சாரம்- சார தரம் -இவற்றைத் தள்ளி -சார தமம் அன்றோ அன்னம் கொள்ளும் –

ஆண்டாளை சொல்லி–அவள் குழல் மேல் ஒரு வண்டு நுழைந்ததாம்
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு -எம்பெருமான் ஆகிற வண்டு காதல் கொண்டது–கூந்தல் வண்டு இழுக்கும்-
இவள் தான் சூடிய மாலையாலே அவனை ஆகர்ஷித்தாள்–

இதில் ஹம்ச விருத்தாந்தம் -இருள் நீங்க வேதம் உரைக்கத் தோன்றிய திரு வவதாரம்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -கலியன்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே —பெரியாழ்வார்-
ப்ராஹ வேதான் அசேஷான் -இவ் உலகிருள் நீங்க–வேண்டிய வேதங்கள் ஓதி
வேத ப்ராதுர்பாவ விசேஷமான திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து–வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் –
பெரியாழ்வார் -தம்மையே -அன்னமாக–ஆச்சார்ய ஹிருதயத்திலும் –
நயா சலன் மெய் நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னம் என்னும் –
ஆக ஆண்டாள் பெருமையை பெரியாழ்வாரும்–பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும்–அருளிச் செய்ததாயிற்று-

ஸூகரம் அருளிய ஸூ கரமான உபாயம் -நில மடந்தை இடந்து எடுத்து –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி –
மனத்தினால் சிந்திக்க—போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும்-
இதை அருள வந்தவள் கண்ணன் மீது தனக்கு இருந்த காதலும்
இவள் பேரில் உள்ள கண்ணன் காதலும் அருள இரண்டு பிர பந்தங்கள்-

பறை–10 -பிரயோகங்கள்
நீராட்டம்–6-பிரயோகங்கள்
திருவடி –6 -பிரயோகங்கள்
பாடி- 18-பிரயோகங்கள் –
நாராயணன் -3- பிரயோகங்கள் –
ஓங்கி உலகளந்த-3- –
கோவிந்தன் -3- பிரயோகங்கள் – –
நப்பின்னை -4- பிரயோகங்கள் –
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –
புள்-4-பிரயோகங்கள் –
தூயோமாய்-3-பிரயோகங்கள் –
கறவை-3-பிரயோகங்கள் –
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

அணி அரங்கம் ஆடுதுமோ தோழி-திரு நெடும் தாண்டகம்-
அப்பன் திருவருள் மூழ்கினாள்–
பொற்றாமரை கயம் நீராட போனாள் -அடுத்து-அழகிய மணவாளன் -தான் பொற்றாமரை கயம்-சேஷ சயன -சௌந்தர்ய கடல்-
திரு மண தூண் ஆலம்ப -ஸ்தம்ப த்வயம் போல்-

திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் -பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
மேல் பத்து பட்டாலும்
பிரபத்வயனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –

முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும்
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து –
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம்
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள்
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் –
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –
ரக்ஷண தர்மம் -உணர்த்தி -அத்யாபயந்தி —

ஏஷ நாராயண ஸ்ரீ மான் – ஷீரார்ணவ நிகேதனன் -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -ஆகாதோ மதுராம் புரீம்-
மன்னு வட மதுரை மைந்தன் – -கண்ணனுக்கு முன்பு வாமனன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
ராமன் -சார்ங்கம் உததைத்த சாரம் -இப்படி அன்றோ முதல் ஐந்தும் –

திருமந்த்ரார்த்தம் -மார்கழி – த்வயார்த்தம் -வையத்து – சரம ஸ்லோகார்த்தம் -ஓங்கி –
ஆச்சார்யர் வைபவம் -ஆழி மழை-குரு பரம்பரை -மாயன் -என்றுமாம்

கூடி இருந்து குளிர பாகவதர்களுக்கும் திரு பள்ளி எழுச்சி அருளி மற்றைய ஆழ்வார்களையும் உணர்த்துகிறாள் ..
கேசவ நம்பியைக் கால் பிடிக்க ஆசை கொண்டு அரங்கனையே -அர்ச்சா மூர்த்தியையே -பெரிய பெருமாளையே -கால் பிடிக்கிறாள் –

மார்கழி வையத்து ஓங்கி ..முதல் வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை..திருப்பாவையில்
நாராயணனே தருவான் -உபாயமும்
நாராயணனே பறை -புருஷார்த்தம் பிராப்யம்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
நமக்கே -இச்சையே -அதிகாரமாக கொண்ட செல்வ சிறுவர்களான நமக்கு-
அனுபவ பரிவாகம் திருப்பாவை வாய் வழியே – –ஸ்ரீ கோதோ உபநிஷத் –

இச்சையே அதிகாரம்-இரக்கமே உபாயம்-
இன்று யாம் வந்தோம் இரங்கு–அவனின் இனிமையே பரம பிராப்யம்-வகுத்த பிராப்த விஷயம்-
போதுமினோ போதுவீர் -ஸ்வரூபம்–

ஆக நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
வர்ஷிக்கும் படியை நியமித்து
நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி
மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
மேல் விசதமாக இருக்கும் —

நாச்சியார் திருக்கோலம் -பிரசித்தம் -ஸ்த்ரீ அவதாரம் எடுக்காத இழவு தீர –
மோஹினி அவதாரம் என்றோ எதற்கோ அன்றோ –
கருணை பொறுமை இனிமை -ஸ்ரீ பூமி நீளா -பின்னை கொல் திரு மா மகள் கொல் ஆய் மகள் கொல் அன்றோ இவள்
ராஜ மஹிஷி உஞ்ச வ்ருத்தி போலே அன்றோ ஆண்டாள் மடல் எடுப்பது -ஆகவே பாவை நோன்பு
பட்டர் திருப்பாவை கால ஷேபம் செய்த பொழுது அறுவை சிகிச்சை -செய்யச் சொன்னாராம் —
திருப்பாவை ஜீயர் அன்றோ ஸ்வாமி –
மே மே புலி ஆட்டை கொள்வது போலே -ம ம்ருத்யு -யமானால் -சேதனன்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழன்று
அம்மே -நான் எனக்கு அல்லன்–நீர் நுமது -வேர் முதல் மாய்த்து -இதுவே வேண்டியது
அம்மே என்பது போலே அன்றோ நம் நாச்சியார் திரு மொழி இத் திருப்பாவை –
சீர்த்த முலை பற்றி -வேதம் -இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகக்ள் அருளிச் செயல்கள் இவற்றின்
ஞானம் இல்லா விடிலும் அம்மே என்று தாய் முலைப் பால் உண்டே உஜ்ஜீவிக்கும் அஸ்மாதாதிகள்
கூட உஜ்ஜீவிக்க அன்றோ இந்த திருப்பாவை –

————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading