ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் சரமோபாய நிர்ணயம்

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்க வேணுமிறே.
எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமல ப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே.
அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”
என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே.
அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக் கூடாது என்றபடி.
பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்ல வேணுமென்கையாலே
தந்நாமாநுஸந்தானம் தத் பாத கமல ப்ராவண்ய (ஜநக?)மென்றபடி,

இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே.
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார்.

“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால்,
ப்ரதம பர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி
ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது.

இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக் கலசாதபடி இருக்கவேணுமென்றபடி.
இல்லையாகில் இரு கரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து
ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடு கநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம்.
ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே.
இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று.

ஒரு நாள் எம்பெருமானார் வடுக நம்பியை அழைத்தருளி,
‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள
‘வேம்பின் புழுப் போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார்.
அதாவது – வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி
இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதி யிட்டிருப்பது தத் அபிமானத்தை யொழிய
வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி.

‘கரும்பின் புழு’ என்று சொல்லுகை யன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில்
பரம தயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத்
தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும்,
‘நான் உன்னை யன்றியிலேன்” என்கிறபடியே ததபிமான ராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி
“களை கண் மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்க வேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று.

இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரண த்ரயத்தாலும் ததேக நிஷ்டனாயிருக்கிறவன்
தத் வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி.

ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத் வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே.
“பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று
எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ர வித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே,
எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று
திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள,
அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து,
“உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.
உம்மை யண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய,

நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய,
பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து,
நம்பிள்ளை சரம தஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில்,
“எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ?
அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரைய வேண்டா.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்;
நான் பெற்ற பேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய்,
பரம காருணிகராய் எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய்
அவர் திருவடிகளையே ப்ராப்ய ப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு
வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று
அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள்
களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி.

இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில்,
“உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம்.

“இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே
எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீல குணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை
சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே.

“இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே,
எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர் மிண்டரோடே
ஸஹவாஸ மின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி.

“சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத் ஸஹவாஸ ராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே
தத் ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி.

எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில்
ஸ்வரூபஹானி பிறக்குமிறே.

”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி.

“இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன்” என்கையாலே,
எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி.

“அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத் ஸ்மரணமே, அநிஷ்ட நிவ்ருத்திகரம் என்றபடி
தத் விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம்.

‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தி யிருக்கும்படி
தச் சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம்.

“உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே
எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தா தாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரி க்ருத்யம்.

“இராமானுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை” என்று தொடங்கி
“செய்வன் சோர்வின்றியே” என்கையாலே
எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸ யுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல்
கரண த்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம்.

எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும்.
“இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று
துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய,
அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம்
அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்ம தீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம்.

இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“,
“இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும்
நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும்.
உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading