ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -1- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

கைகேயியின் சொற்படி நடக்கவேண்டியவனான தசரத சக்ரவர்த்தி இராமபிரானை அழைத்து வாஸஞ் செல்லுமாறு நியமிக்க அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்ட இராமபிரான் வனத்திற்குப் புறப்படுங்காலத்தில் ஸிதாதேவியிடஞ் சென்று இச்செய்தியைத்  தெரிவித்து ‘நான் போய் வருகிறேன், வருமளவும் நீ மாமனார்க்கும் மாமியார்க்கும் ஒரு குறைவுமின்றிப் பணிவிடை செய்துகொண்டிரு என்று சொல்லுங்கால் தன்னை நிறுத்திப் போவதாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட

பிராட்டி மிகவும் கோபித்து ‘என்தகப்பனால் உம்மை ஒரு ஆண்பிள்ளையாக எண்ணி என்னை உமக்குக் கொடுத்தார் ஒரு பெண்டாட்டியை கூட கூட்டிக்கொண்டுபோய்க் காப்பாற்றி ஆளத்தக்க வல்லமையற்றவர் நிர் என்பதை அப்போது அவர் அறிந்திலர் இப்போது அவர்இச்செய்தியை கேட்டால் உம்மை நன்றாக வெகுமானிப்பார் ஒரு பெண்பிள்ளை ஆணுடை யுடுத்துவந்து நம் பெண்ணைக் கைக்கொண்டு போய்ந்துக்காண் என்று நினைப்பர் என்று ரோக்ஷந்தாற்ற வார்த்தை சொல்லி

தன்னையுங் கூட்டிக்கொண்டு போகவேணுமென்று நிர்பந்தித்து காட்டு வழிகளின் கொடுமையையுங் கணிசியாமல் காமஸித்தயையே தலையாகக்கொண்டு போகவில்லையா? இது மடலூர்தல்லவா? என்கிறார்.

தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம்.

மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை.

கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து.

கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும்.

சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.

திரைவயிற்றுப்பேய் –ஜநஸஞ்சாரமுள்ள காடாயிருந்தால் அங்குள்ள பேய்களுக்கு எதாவது உணவு கிடைக்கும் வயிறும் நிரம்பியிருக்கும் நிர்ஜநமான காடாகையாலே பேய்கள் உணவின்றிச் சுருங்கி மடிந்த வயிற்றையுடைடயனவாயிருக்கும்.

திரிந்துலவா – உலவுதலாவதும் ஒழிதலும், திரிந்துலவா என்றது திரிந்து மாளாத என்றபடியாய் எப்போதும் பேய்களே திரிந்துகொண்டிருக்கிறகாடு என்னவுமாம்.

வைதேவி – ஸீதைக்கு வடமொழியில் வைதேஹீ என்று பெயர். விதேஹராஜனான ஜநகனது மகள் என்றபடி. அணங்கு – தெய்வப்பெண் “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்பது நிகண்டு.

—————

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –

பதவுரை

பின்னும்

அது தவிரவும்
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல்

கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய்
வேகவதி என்று உரைக்கும் கன்னி

வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது

தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல்
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக

தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக
அங்கு

அவ்வவஸ்தையிலே
அன்னவனை

அந்தத் தமையனை
நோக்காது

லக்ஷியம் பண்ணாமல்
தான் சென்று

தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய்
வாள் அமருள்

பெரிய போர்க்களத்திலே
கல் நவில் தோள் காளையை

மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை
அழித்து உரப்பி

இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி
கை பிடித்து

பாணிக்ரஹணம் செய்து கொண்டு
மீண்டும் போய்

அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து
பொன் நவிலும் ஆகம்

(அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே
புணர்ந்திலளே

அணையப்பெற்றாளில்லையோ?

வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக் காட்டுகிறார்.

இதில் சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை.

தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது.

வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலத்தவர்கள் எழுதிய அப்புத்தகங்களை ஆழ்வார் –ஸ்ரீஸூக்திகட்கு மூலமாகச் சொல்ல வொண்ணாது. கதைப்போக்கிலும் வேறுபாடு உள்ளதுபோலும். ஆகையாலே இக்கதையை இங்கு விரித்துறைக்க விரும்புகின்றிலோம்.

அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது.

இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.

———–

சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –

பதவுரை

சூழ் கடலுள்

பரந்த கடலினுள்ளே
பொன் நகரம் செற்ற

ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான
புரந்தரனோடு ஏர் ஒக்கும்

தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான
மன்னவன்

ராஜாதி ராஜனாயும்
அவுணர்க்கு வாள் வேந்தன்

அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த

வாணன் தன்னுடைய பாவை பாணாஸுரனுடையமகளாய்

உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள்

எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள்
தன்னுடைய இன் உயிர் தோழியால்

தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு
ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன்

போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும்
பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன்

பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான
எம்பெருமான் தன்

கண்ணபிரானுடைய
காதலனை

அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை
மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க

(யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று
மற்றவனோடு

அந்த அநிருத்தனோடே
எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள்

பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள்.

பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து,

அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட,

அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).

பொன்னகரம் செற்ற –ஹிரண்யாஸுரனுக்குத் தமிழில் பொன் என்று பெயர் வழங்குதலால் பொன்னகரம் என்று அவ்வஸுரனுடைய பட்டணங்களைச் சொல்லுகிறது. புரந்தர என்ற வடசொல் (பகைவருடைய) பட்டணங்களை அழிப்படவன என்று பொருள்பட்டு இந்திரனுக்குப் பெயராயிற்று.

உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி.

அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று.

கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை.

மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.

—————

மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

பதவுரை

ஏழைகள்

அவிவேகிகளை!
மற்று இவை தான் என்னாலே கேட்டீரே

இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ?
என் உரைக்கேன்

(உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்)
மன்னு மலை அரையன் பொன்பாவை

(சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய்
வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய்

ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய்
உமை என்னும்

உமா என்னும் பெயரையுடையளாய்
அன்னம் நடையை அணங்கு

அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள்
தன்னுடையகூழை

தனது மயிர் முடியை
சடாபாரம் தான் தரித்து

தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு
நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட

துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும்
புலன் ஐந்தும் நொந்து அகல

இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும்

அன்ன அரு தவத்தின் ஊடு போய் (என்னபேறு பெற்றாளென்றால்)

ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து

(சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து,
மாதிரங்கள் மின்னி எரி வீச

திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக
மேல் எடுத்த

மேற்புறமாகத் தூக்கின
கழல் சூழ் கால்

வீரக்கழலணிந்த ஒரு பாதமானது
பொன் உலகம் ஏழும் கடந்து

மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து
உம்பர் மேல் சிலும்ப

மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி)
மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல

ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர
சுழன்று ஆடும்

தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும்
கொல் நவிலும் மூ இலை வேல்

கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும்
கூத்தன்

கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான
அன்னவன் தன்

அப்படிப்பட்ட சிவபிரானுடைய
பொன் அகலம் சென்று அணைந்திலளே

அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா?
பன்னி உரைக்குங் கால்

(இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில்
பாரதம் ஆம்

ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும்.

நாண்மட மச்சங்களைத் தவிர்த்து அதிப்ரவ்ருத்திபண்ணி நாயகனைப் புணர்ந்தவர்கள் ஒருவரிருவரல்லர், பல்லாயிரம் பேர்களுண்டு, இங்கே சில மாதர்களை எடுத்துக் காட்டினேன். இன்னும் எத்தனை பேர்களை நான் காட்டுவது. இவ்வளவு உதாஹரணங்கள் போராதா? ஆயினும் இன்னும் ஒரு பெரியாள் மடலூர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறேன். கேளுங்கள் – என்று பரமசிவனைப் பெறுதற்குப் பார்வதி தவம் புரிந்தபடியைப் பேசுகிறாள்.

தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு

“இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து

‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத்

தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம் என்று ஆவல்கொண்டு புறப்பட சிவபிரான் பழைய பகையை நினைத்து அங்கே நீ போகக்கூடாது என்று தடுத்தும் குதூஹலாதிசயத்தாலே அவள் விரைந்து புறப்பட்டுத் தந்தையினது இல்லம்செல்ல

அங்கே இவளைக்கண்டு தந்தை நல்வரவு கூறுதல் யோக்க்ஷேமம் வினவுதல் ஒன்றுஞ்செய்யாமல் பாங்முகமா யிருக்க மிருப்பையும் ருத்ரபாகமில்லாமல் வேள்வி நடைபெறுவதையுங்கண்டு வருத்தமும் சீற்றமுங்கொண்டு ‘இந்த மஹாபாபியான தக்ஷனிடத்தில் நின்று முண்டான இந்த என் சரீரம் இனி முடிநது போவதே நன்று என்று அறுதியிட்டுத்

தனது யோகபலத்தாலே அக்நியை உண்டாக்கி அதுதன்னிலே சரீரத்தைவிட்டொழிந்தாள். பிறகு மலையரசனாகிய ஹிமவானுக்குப் பெண்ணாய்ப் பிறந்து (பர்வத புத்ரீ என்னுங் காரணத்தால்) பார்வதி யென்று யெர் பெற்று அப்பிறப்பிலும் அந்தப் பரமசிவனையே கணவனாகப் பெறவேணுமென்று ஆசைகொண்டு கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பயனாக அங்ஙனமே மனோரதம் நிறைவேறி மகிழ்ந்தாளென்பது இங்கே அறியத்தக்கது.

மற்றொரு  மையத்திலும் பார்வதி தவம் புரிந்ததுண்டு முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிலே சிவபிரானும் தானும் ஏகாஸநத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது ப்ருங்கி யென்னும் மாமுனி சிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யவிரும்பி ஒரு வண்டு வடிவமெடுத்து அந்த ஆஸனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்து சென்று அம்பிகையை விட்டுச் சிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்ய,

அது கண்ட பார்வதீதேவி தன் பதியைநோக்கி முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு காரணம் என்ன? என்று கேட்க

அதற்குச் சிவன் இம்மை மறுமைகளில் இஷ்டஸித்தி பெற விரும்புமவர்கள் உன்னை வழிபடுவார்கள், முத்திபெற விரும்புமவர்கள் என்னை வழிபடுவார்கள் இது நூல் துணிபு என்று சொல்ல

அதுகேட்ட பார்வதி இறைவன் வடிவத்தப் பிரிந்து தனியே யிருந்த்தனாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது என்று வருந்தி தான் சிவ்பிரானைவிட்டுப் பிரியாதிருக்குமாறு கருதி புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம் புரிந்து வரம் பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனது இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றனள் என்று சைவபுராணங்களிற் சொல்லிப்போரும் கதையுமுண்டு.

முன்னே கூறிய தவமே இங்கு விவக்ஷிதம்.

மலையரையன் – அரையன் என்றது அரசனென்றபடி. பர்வதராஜன் என்கை. (உமை யென்னும்) பார்வதிக்கு உமா என்றும் ஒரு வடமொழிப் பெயருண்டு. அவள் தவம் புரிந்த காலத்து ஆஹாரமே யில்லாமையாலே பொன்னுடம்பு வாடப்பெற்றாள், அந்தந்த இந்திரியங்களுக்கு வேண்டிய விஷயங்களில் அவை பட்டிமேய வொண்ணாதபடி. காவலிற் புலனை வைத்துத் தவம் புரிந்தபடியாலே அந்த இந்திரியங்கள் ‘எத்தனை நாளைக்கு நாம் இவள்பால் பட்டினி கிடப்பது என வருந்தி அகனறனவாம்.

கூழை – கூந்தலுக்குப் பெயர் “முள்ளெயிறேய்ந்தில் கூழை முடிகொடா“ என்ற பெரிய திருமொழியுங் காண்க. தவநிலைக்கு தகுதியாகக் கூந்தலைச் சடையக்கின ளென்க.

(அன்ன அருந்தவத்தினூடு போய்) அவள் அநுஷ்டித்த தபஸ்ஸு ஸாமாந்யமல்ல. கோரமான தவஞ் செய்தன்ன் என்கிறது. ஊடுபோய் என்றது அந்த்த் தவத்தை முற்றமுடிய நடத்தி என்றபடி. “அருந்தவத்தினூடு போய் அன்னவன்றன் பொன்னகலஞ் சென்றாங் கணந்திலளே“ என்று அந்வயிப்பது.

ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ என்று தொடங்கித்“ தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்“ என்னுமளவும் சிவபிரானது நடனத்தின் சிறப்பு வர்ணிக்கப்படுகிறது. அப்படி அற்புதமான நாட்டியஞ் செய்ய வல்ல சிவபிரானது ஸம் ச்லேக்ஷத்தைப் பெற்றாளன்றோ என்கிறது. சிவன் கூத்தாடும் வகைகள் பல பலவுள்ளன. திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களில் அவற்றைக் கண்டுகொள்க.

இங்கே சொல்லப்படுகிற நாட்டியவகை – ஆயிரங் திசைகளில் வியாபிக்கச் செய்து ஒற்றைக்காலால் நின்றுகொண்டு மற்றொருகாலை மேலேதூக்கி, பம்பரம்போல் சுழற்றி ஆடினவகையாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய், தாள் களாயிரத்தாய் பேர்களாயிராத்தாய்“ என்று எம்பெருமானைச் சொல்வதுபோல சைவபுராணங்களில் சிவனைப்பற்றியும் சொல்லியிந்தலால் “ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ எனப்பட்டது.

தெய்வத் தன்மைக்குரிய சக்தி விசேஷத்தினால், வேண்டியபோது வேண்டியபடி வடிவுகொள்ள வல்லமைப் யுள்ளமைபற்றி ஒருநர்த்தன விசேஷத்தில் இங்ஙனே ஆயிரந்தோள் மன்னுகதலங்கள் கொண்டு ஆடினனாகவுங்கொள்க.

ஒருகால் தன்னுடைய நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தனது இரண்டு கைகளால் மத்தளங் கொட்டின பாணாஸுரனுக்கு உவந்து ஆயிரங்கைகள் உண்டாம்படி வரமளித்தன்னாகச் சொல்லப்பட்ட சிவபிரானுக்கு இஃது அருமையன்றென்ப. மட்டித்து –மட்டித்தலாவது மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்தல்.

மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி.

பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும்

(மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக.

இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.

————

பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82

பதவுரை

பாவியேற்கு என்று உறு நோய்

பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின்

நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்)
இரு பொழில் சூழ்

விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும்
மறையோர் மன்னும்

வைதிகர்கள் வாழப்பெற்றதுமான
திரு நறையூர்

திருநறையூரில்
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு

பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்

எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன்
நோக்குதலும்

பார்த்தவளவில்
மன்ன்ன்

(அங்குள்ள) எம்பெருமானுடைய
திரு மார்பும்

பிராட்டியுறையும் மார்வும்
வாயும்

(புன் முறுவல் நிறைந்த) அதரமும்
அடி இணையும்

உபய பாதங்களும்
பன்னு கரதலமும்

கொண்டாடத் தக்க திருக்கைகளும்
கண்களும்

திருக்கண்களும்
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப

ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச,
வீழ்நாணும்

விரும்பத்தக்க திருவரை நாணும்
தோள் வளையும்

தோள் வளைகளும்
மன்னிண குண்டலமும்

பொருத்தமான திருக்குண்டலங்களும்
ஆரமும்

திருமார்பில் ஹாரமும்
நீள் முடியும்

பெரிய திருவபிஷேகமும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப

மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க
மன்னு மாதகக்குன்றின் மருங்கே

எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது

விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள்.
அன்னம் ஆய்

(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும்
மான் ஆய்

(நோக்கில்) மானையொத்தும்
அணி மயில் ஆய்

(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும்
இடை மின் ஆய்

இடையழகில மின்னலை யொத்தும்
இள இரண்டு வேய் ஆய்

(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும்
இணை செப்பு ஆய்

(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும்
முன் ஆய் தொண்டை ஆய்

முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும்.
குலம் கொண்டை இரண்டு ஆய்

(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும்
அன்ன

அப்படிப்பட்டிருந்த
திரு உருவம்

திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி)
நின்றது அறியாது

(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த)
என்னுடைய நெஞ்சும்

எனது நெஞ்சும்
அறிவும்

(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும்
இனம் வளையும்

சிறந்த கைவளையும்
பொன் இயலும் மேகலையும்

ஸ்வர்ண மயமான மேகலையும்
ஒழிய போந்தேற்கு

(எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி)
மன்னு மறி கடலும் ஆர்க்கும்

சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும்

சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே

எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும்

தீக்ஷ்ணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல்

நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ.

இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.

பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலு ம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.

************     (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க.

யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன.

திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன்.

கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.

திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.

பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன.

அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.

(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும்  விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.

மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.

அன்னமாய் மானாய்.  என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.

அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும்.

நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.

(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?

—————-

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85

பதவுரை

தென்னன் பொதியில்

தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
செமு சந்திரன் தா துஅளைந்து

அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்

நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற
இன் இள பூ தென்றலும்

போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்
எனக்கே எரி வீசும்

எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது
முன்னிய பெண்ணை மேல்

முன்னே காணப்படுகிற பனை மரத்தில்
முள் முளரி கூடு அகத்து

முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே
பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும்

வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம்

எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது.
என் செய்கேன்

(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்?

எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள்.

தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது,

இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.

(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி –

விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.

————

கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-

பதவுரை

கல் நவில் தோள் காமன்

மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன்
கரும்பு சிலை வளைய

(தனது) கருப்பு வில்லை வளைத்து
கொல் நவிலும் பூ கணைகள் கோத்து

(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து
பொத அணைந்து

(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு)
தன்னுடைய தோள் கழிய வாங்கி

தனது தோள் வரையில் நீள இழுத்து
என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான்

எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான்.
பின் இதனை காப்பீர்தான் இல்லையே

இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே!

***- கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.

கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின்,

அநங்கன் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க.

மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.

கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.

———

—————————————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading