ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -2- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-

பதவுரை

மால் விடையின்

(பசுவின்மேல்) வியாமோஹங்கொண்ட வ்ருஷபங்களினுடைய
துன்னு பிடர் எருத்து

பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே
தூக்குண்டு

தூக்கப்பட்டு
கன்னியர் கண் மிளிர

சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி
வன் தொடரால் கட்டுண்டு

வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு
மாலை வாய்

ஸாயம் ஸந்தியா காலத்தில்
இன் இசை ஓசையும் வந்து

இனிதான இசையின் ஒலியும் வந்து
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்

தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய
என் செவி தனக்கே

என்னுடைய காதுக்கு மாத்திரம்
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்

கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது
இதனை காக்கும் ஆ என்

இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?
சொல்லீர்

(ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.

“மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள்.

செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.

மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது.

அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.

எஃகு – ஆயுதப் பொதுப்பெயர், சூலத்துக்குச் சிறப்புப்பெயருமாம். ஈட்டியையும் சொல்லும்.

———

இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –

பதவுரை

இது விளைத்த மன்ன்ன்

(தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,
நறு துழாய் வாழ் மார்பன்

மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,
முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன்

முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,
காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன்

“காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,
வண்ணம் போல் அன்ன கடலை

தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே
மலைஇட்டு

மலைகளைக் கொண்டெறிந்து
அணை கட்டி

ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி)
மா மண்டு வெம் சமத்து

சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்
மன்னன் இராவணனை

ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள

அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து

அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை

(அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.

***- ஆகக் கீழ்வரையில், தானநுபவிக்கும் கஷ்டங்களைச் சொல்லி முடித்தாள்,

இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னானென்பதை நான் அறியாமையில்லை, நன்கு அறிவேன், அடிபணிந்தாரை ரக்ஷிப்பதற்கென்றே மார்பில் தனிமாலையிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லி உலகங்களை வஞசிப்பவனாம் அவன்,

“சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தொலைத்தேன், அப்படி உங்களுடைய துன்பத்தையும் தொலைத்தொழிப்பேன் வாருங்கள்“ என்று மயக்கி அழைப்பவன அவன்.

“காளமேகம் போலும் காபாமலர்போலும் என் வடிவு விளங்குகின்ற அழகைக்கண்டு களியுங்கள்“ என்றுமெனி நிறத்தைக்காட்டி வலைப்படுத்திக் கொள்பவன் அவன்,

ஒரு ஸீதாப் பிராட்டிக்காகவும் எப்படி யெப்படியோ உருமாறிப் படர்படுகள் பட்டுஅதிகமாநுஷமான காரியங்கள் செய்தவனாக்கும் நான், என்னை யடுப்பார்க்கு ஒரு குறையுமுறாது என்று சொல்லி அகப்படுத்திக்கொள்பவன் அவன்,

பல திருப்பதிகளிலே தனது பெருமையைக் காட்டிக்கொண்டு மேனாணித்திருப்பவன் அவன், அவன் படிகளெல்லாம் நான்கறிவேன் நான்,

அவனுள்ள திருப்பதிகள்தொறும் நுழைந்து புறப்பட்டு என் மனவருத்தங்களை இனி நான் சொல்லிக்கொள்ளப் போகிறேன், ஆதரித்து உஜ்ஜீவப்பித்தானாகில் பிழைத்துப் போகிறான், இல்லையாகில் என் வாய்க்கு இரையாகி அவன் படப்போகிற பாடுகளைப் பாருங்கள் – என்கிறாள் மேல்.

முன்னம் மாமதிகோள்கிவிடுத்த – சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கியருளினவன் இன்று எனக்கு க்ஷணத்தை விளைக்கலானது என்னோ என்று இரங்குகின்றாளாகவுமாம்.

“இப்போது கீடீர் அவன் ஆபந்நரானாரை நோக்கத் தவிர்ந்தது“ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,

“மதியுகுத்த இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்“ என்று கீழே அருளிச்செய்தபடி என்னை எரிக்கின்ற சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப்போக்கி என்னை நன்றாகத் தப்பிக்குமாறு அந்த சந்திரனுக்கு நியமித்த மஹாநுபாவன் என்றதாகவுமாம்.

மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க

மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.

“இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன.

மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.

———–

ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை

பதவுரை

ஆயிரம் கண் மன்னவன் வானமும்

ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும்

(மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை

தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின்

சிறிது காலம் பொறுத்து
ஓர் அரி உருவம் ஆதி

ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து
ஏரி விழித்து

நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,
கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே

கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே
வல்லாளன்

மஹாபலசாலியான அவ்வசுரனுடைய
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து

மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி

(அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு
அவனுடைய பொன் அகலம்

அவனது அழகிய மார்பை
வள்  உதிரால் போழ்ந்து

கூர்மையான நகங்களாலே பிளந்து
புகழ் படைத்த

(ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்
மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை

மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய்

***- தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம்,

“ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி வள்ளுகிரால் போழ்ந்து – தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி இரணியன் வரம்பெற்றிருந்தானாதலால் அந்த வரம் பழுதுபடாதபடி அவனைப் பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களாலே பிளந்தருளினன்.

———

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

,பதவுரை

மன்னு இ அகல் இடத்தை

எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப்பூமியை
மா முது நீர் விழுங்க

மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட
பின்னம்

அதற்கு பிறகு
ஓர் எனம் ஆய் புர்கு

ஒரு திவ்யவராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து
வளை மருப்பின்

வளைந்த கோட்டினுடைய
கொல் நவிலும் கூர் நுதி மேல்

(பகவரைக்) கொல்ல வல்ல கூர்மையான நுனியின் மீது
வைத்து எடுத்து கூத்தனை

(அந்தப்பூமியை) வைத்துக் கொணர்ந்த அழகிய சேஷ்டித்த்தையுடையனாய்

***- வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அக மகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக் கொண்டே யெழுக்கருளின்  போலும்.

மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்
இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா
இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்
வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்
அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –
வைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில்  மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்

———-

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –

பதவுரை

மன்னும் வடமலையை

அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தரகிரியை
மத்து ஆக

மத்தாகக்கொண்டு
மாசுணத்தால்

(வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி)
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து

விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக்கடைந்து)
வானவரை இன் அமுதம் ஊட்டி

தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து
அவருடைய

அத் தேவர்களுடைய
மன்னும் துயர் கடிந்த

நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த
வள்ளலை

பரம உதாரனாய்

***- மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர்.

கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ என்றார்.

மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன
போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து –
அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –

————-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

பதவுரை

மற்று அன்றியும்

தவிரவும்
தன் உருவம் ஆகும் அறியாமல்

தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி.
தான் ஓர் மன்னும்

பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி
மா வலி தன்

மஹா பலியினுடைய தான
பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து

ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி
போர் வேந்தர் மன்னை

போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை
மனம் கொள்ள வஞ்சித்து

(இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி
நெஞ்சு உருக்கி

(நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி
மன்னா

மஹாப்ரபுவே!
என்னுடைய பாத்த்தால் யான் அளப்ப

என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி
மூ அடி மண் தருக என்று

மூவடி நிலம் கொடு என்று
வாய் திறப்ப

வாய் திறந்து கேட்க,
அவனும்

(அதுகேட்ட) அந்த மாவலியும்
என்னால் தரப்பட்டது என்றலும்

அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல
அத்துணைக் கண்

அந்த க்ஷணத்திலேயே
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ

விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ,
மேல் எடுத்த

உயரத்தூக்கியருளின
பொன் ஆர் களை கழல் கால்

பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத்தண்டை யணிந்த திருவடி
ஏழ் உலகும் போய் கடந்து

மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி
அங்கு ஒன்னா அசுரர் துளங்க

அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி

(மேலே) நெடுகவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து

(இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை

நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை

தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய்

அத்துணைக்கண் – துணை –அளவு, அவ்வளவில் என்றபடி.

———-

தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-

பதவுரை

தாமரை மேல் மின் இடையாள் நாயகனை

தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்
விண்ணகருள் பொன் மலையை

திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்
பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை

காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற

யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்

தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை

தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய்,
தண் சேறை மன்னிய வள்ளலை

குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை

சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப்பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய்.
எவ்வுள் பெருமலையை

திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந்தருள்பவனாய்
கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை

சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்
மின்னை

மின்போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய்
இரு சுடரை

ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திருவாழி திருச்சங்குகளை யுடையனாய்
வெள்ளறையுள்

திருவெள்ளறையிலே
கல் அறை மேல்

கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே
பொன்னை

பொன் போல் விளங்குமவனாய்
மரதகத்தை

மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்
புட்குழி எம் போர் எற்றை

திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய்,
அரங்கத்துமன்னும்

திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்
எம் மா மணியை

நாம் கையாளக்கூடிய நீல மணி போன்றவனாய்

ஆகக் கீழே சில விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித்  திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார்.

பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்

“மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும்,

“வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்,

அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம்.

விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர்.

குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம்

குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே.

சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.

ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று.

எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்

கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல்

மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்

மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம்

“அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும்.

புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாமமாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர்.

அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர்.

இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.

————

வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124

பதவுரை

வல்லவாழ்

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற
பின்னை மணாளனை

நப்பின்னை நாயகனாய்
பேரில் பிறப்பு இலியை

திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய்
தொல் நீர் கடல் கிடந்த

என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய்
தோளா மணி சுடரை

துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய்
என் மனத்து மாலை

என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்
இடவெந்தை ஈசனை

திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்
கடல் மல்லை மன்னும் மாயவனை

திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய்
வானவர் தம் சென்னி மணி சுடரை

நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய்
தண்கால் திறல் வலியை

திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்
தன்னை பிறர் அறியா த்த்துவத்தை

(தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்துகொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய்
முத்தினை

முத்துப்போன்றவனாய்
அன்னத்தை

ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய்
மீனை

மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய்
அரியை

நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்
அருமறையை

ஸகல விதயாஸ்வருபியாய்
முன இ உலகு உண்ட முர்த்தியை

முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்
கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை

திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்
பேய் அலற முலை உண்ட பிள்ளையை

பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்
அன்னம்

ஹம்ஸங்களானவை
அள்ளல் வாய்

சேற்று நிலங்களில்
இரை ரே அழுந்தூர்

இரைதேடும்படியான திருவழுந்துரில்
எழும் சுடரை

விளங்கும் சோதியாய்
தென் தில்லை சித்தரை கூடத்து என் செலவனை

தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளியிருக்கிற) எனது செல்வனாய்
மழை

மேகங்களானவ
மின்னி

பளபளவென்று மின்னிக் கொண்டு
தவழும்

சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற
வேங்கடத்து

திருவேங்கட மலையில் (எழுந்தருளியிருக்கிற)
எம் பித்தகனை

நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய்.

***- வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும்.

பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி.

தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.

இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று.

தன்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தாங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தன்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர்.

திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன்.

தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி.

முத்தினை – முத்துப்பொலே தாபஹரனானவனை

அன்னத்தை மீனை அரியை

ஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு, *********** பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொப தேசத்திற்காகச் செய்தருளினவையாம்.

அருமறையை – ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுவன் என்ற கருத்து.

கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானதுபற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது.

இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும். “வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக.

அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதை யுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க.

அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.

தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.

வேங்கடம் – தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்றது வடசொல், வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க.

“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசலமெனும் பேர், வைத்தனாதுவேதென்னில் – வேமெனவழங்கெழுந்தே, கொத்துறுபவத்தைக்கூறும்  கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரம் கொளுத்தப்படுமெனச் சொல்வர் மேலோர“ என்றும்

“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திரடச்செய்வதால் நல் மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடலையான தென்று“ என்றுமுள்ள புராணச் செய்யுள்கள் காண்க.

அன்றி, வேம் என்பது அழிவின்மை. கடம் என்பது ஐச்வர்யம், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னையடைந்தார்க்குத் தருதலால் வேங்கடமெனப்பெயர் கொண்ட தென்றலுமுண்டு.

————

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-

பதவுரை

மன்ன்னை

ஸர்வேச்வரனாய்
மாலிருஞ்சோலை

திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாய்
கொல் நவிலும் ஆழிபடையானை

பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
கோட்டியூர்

திருக்கோடியூரில்
அன்ன உருவின் அரியை

அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியையுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய்
திரு மெய்யத்து

திருமெய்யமலையில்
இன் அமுதம் வெள்ளத்தை

இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய்
இந்தளூர்

திருவிந்தளூரில்
அந்தணனை

பரமகாருணிகனாய்
மன்னு மதிள்

பொருந்திய மதிகள்களையுடைய
கச்சி

காஞ்சிநகரத்தில்
வேளுக்கை ஆனரியை

வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய்
பாடகத்து மன்னிய எம்மைந்தனை

திருப்பாடகத்தில் நித்யவாஸம் பண்ணுகிற எமது யுவரவாய்,
வெஃகாவில்

திருவெஃகாவில்
உன்னியயோகத்து உறக்கத்தை

ஜாகரூகனாகவே யோகநித்ரை செய்பவனாய்

மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்தசோலைகளையுடைய மலை. வந்திரி எனப்படும்.

கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது.

அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்களை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி.

திரு மெய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும்

இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது.

அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.

வேளுக்கை – காஞ்சீபுரத்திலுள்ள திருப்பதிகளில் ஒன்று “வேள்இருக்கை“ என்பது மருவிற்றுப்போலும் வேள் – ஆசை, எம்பெருமான் தனது ஆசையினாலே வந்திருக்கும் தலம் என்றவாறாம் இத்திவ்ய தேசத்தைப்பற்றி ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிச்செய்த காமஸிகாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் “காமாத் அதிவஸந் ஜீயாத் கச்சித் அற்புத கேஸா“ என்றமையால் வேளுக்கை யென்பதற்கு இங்ஙனே பொருளாமென்று தோன்றுகிறது. காமாஸிகா என்பதன் அர்த்தமும் இதுவேயாம். காமேந ஆஸிகா – தன் ஆசையினாலே இருக்குமிடம். ஆளரியை – ஆளழகிய சிங்கர்ஸந்திதி என்று வ்யவஹரிக்கப்படும்.

பாடகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவ தூதர் ஸந்நிதி. “பாடுஅகம்“ என்ற பிரிக்க பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து

அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில்,

அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம்.

பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க.

வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.

———

ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்

பதவுரை

ஊரகத்துள் அன்னவனை

திருவூரகத்தில் விலக்ஷணனாய்
அட்ட புயகரத்து எம்மான் எற்றை

அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்
என்னை மனம் கவர்ந்த ஈசனை

எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்
வானவர் தம் முன்னவனை

தேவாதிராஜனாய்
மூழிக்களந்து விளக்கினை

திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்
அன்னவனை

இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய்
ஆதனூர்

திருவாதனூரில்
ஆண்டு அளக்கும் ஐயனை

ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய்
நென்னலை இன்றினை நாளையை

நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய்
நீர்மலை மேல் மன்னும்

திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கிற
மறை நான்கும் ஆனானை

சதுர்வேத ஸ்வரூபியாய்
புல்லாணி

திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
தென்னன் தமிழை வடமொழியை

உபயவேத ப்ரதிபாதயனாய்
நாங்கூரில்

திருநாங்கூரில்
மணிமாடக்கோயில் மன்னு மணாளனை

மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்
நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை

நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்
நான் வணங்கும் கண்ணனை

நான் வணங்கத்தக்க கண்ணனாய்
கண்ணபுரத்தானை

திருக்கண்ணபுரத் துறைவானாய்
தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னுமணுள்னை

திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய்
கல் நவில் தோள் காளையை

மலையென்று சொல்லத்தக்க தோள்களையுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை
ஆங்கு கண்டு கை தொழுது

அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து
என் நிலைமை எல்லாம் அறிவித்தால்

எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அதுகேட்டு)
எம்பெருமான்

அப்பெருமான்
தன் அருளும் ஆக மும் தாரான்ஏல்

தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவானாகில்
தன்னை

அவ்வெம்பெருமானை
நான்

(அவனது செயல்களையெல்லாமறிந்த) நான்
மின் இடையார் சேரியிலும்

ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்
வேதியர்கள் வாழ்வு இடத்தும்

வைதிகர்கள் வாழுமிடங்களிலும்
தன் அடியார்முன்பும்

அவனது பக்தர்கள் முன்னிலையிலும்
தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும்

பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்
நாடு அநத்து

மற்றுமு தேசமெங்கும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன்

அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன்.

ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல்.

அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர்.

என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.

மூழிக்களம் – மலைகாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம் “மூழிக்களத்து வளத்தனை“ என்றும் பாடமுண்டாம், வளமானது ஸம்பத்து, ஸம்பத் ஸ்வரூபனை யென்றபடி – ஆதனூர் – ஆதன் ஊர் காமதேநுவுக்குப் பிரத்யக்ஷமான கலமாதல்பற்றி வந்த திருநாம மென்பர் ஆ-பசு.

ஆண்டு அளக்கும்ஐயனை –ஆண்டு வருஷம் இது காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம் ஸகல காலங்களையும் பரிச்சோதிக்க ஸ்வாமி என்றப. காலசக்ரநிர்வாஹகனென்கை. நென்னல் – நேற்றுக் கழிந்தநாள், இறந்த காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம். “ஆண்டளக்குமையன்“ என்றதை விவரிக்கின்றார் மூன்று விசேஷணங்களாலே, பூத வர்த்தமான பவிஷ்யத் காலங்களுக் குநிர்வாஹக்னென்றவாறு.

நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.

புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும்.

தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.

கன்னவில் தோள்களியை – கீழே “இதுவிளைத்த மன்னன்“ என்று தொடங்கி இவ்வளவும் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றிப் பேசினாராயிற்று. கீழே இரண்டாம் வேற்றுமையாக வந்த அடைமொழிகளெல்லாம் இங்கு அந்வயித்து முடிந்தன.

இப்படிப்பட்ட எம்பெருமானை ஆங்காங்குச் சென்று ஸேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்றவுடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன்,

அதுகேட்டு திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக்கொள்ளாவிடில் மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள் தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களை யெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேனென்றாயிற்று.

ஆண்டாள் ஆய்ச்சிமார்போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசர்ர்போன்ற வைதிகர்களும், இளையபெருமாள் ப்ரஹ்லாதன்போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே,

அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.

“லோகமடங்கத் திரண்டவிடங்களிலே சென்று “ஸேச்வரம் ஜகத்து“ என்று ப்ரமித்திருக்கிறவர்களை “நிரீச்வரம் ஜகத்து“ என்றிருக்கும்படி பண்ணுகிறேன்“ என்ற வியாக்கியான ஸூக்தியுங் காண்க.

————

தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139

பதவுரை

முனம் நாள்

முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்)
மின் இடை ஆச்சியர் தம் சேரி

மின்போல் நுண்ணியஇடையையுடைய இடைச்சிகளின் சேரியிலே
தன்னு படல் திறந்து

நெருக்கமாகக் கட்டிவைத்த படலைத்திறந்து
களவின்கண் புக்கு

திருட்டுத்தனமாகப் புகுந்து
தயிர் வெண்ணெய்

தயிரையும் வெண்ணெயையும்
தன் வயிறு ஆர தான் விழுங்க

தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில்
கொழு கயல் கண்மன்னு மடவோர்கள்

நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர்
பற்றி

பிடித்துக்கொண்டு
ஓர் வான் கயிற்றால்

ஒரு குறுங்கயிற்றால்
உரலோடு

உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)
கட்டுண்ட பெற்றிமையும்

(கட்டையவிழ்த்துக் கொள்ளமாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன.

என்னினைவைத் தலைக்கட்டாவிடில் அவனுடைய ஸமாசாரங்களையெல்லாம் தெருவிலே எடுத்து விடுகிறேனென்று கீழ்ப் பிரதிஜ்ஞை பண்ணினபடியே சில ஸமாசாரங்களை யெடுத்துவிடத் தொடங்குகிறாள் பரகாலநாயகி –

“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான், பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாளுங்களுக்கு எச்சுக்கொலோ? நற்றெனபேசி வசவுணாதே“ என்று – எம்பெருமானுடைய சரிதைகளை இழிவாகக் கூறி ஏசுமவர்களை வாய்புடைக்கவேண்டிய இவ்வாழ்வார் தாமே ஏசத்தொடங்குவது ப்ரணயரோஷத்தின் பரம காஷ்டையாகும்.

“ஏசியே யாயினும் ஈனதுழாய் மாயனையெ பேசியே போக்காய் பிழை“ என்பாருமுண்டே. குணகீர்த்தனங்களில் இதுவும் ஒரு ப்ரகாரமேயாகும்.

இவ்வாழ்வார்தாமே பெரிய திருமொழியில் பதினோராம்பத்தில் மானமருமென்னோக்கி என்னுந் திருமொழியில், இரண்டு பிராட்டிகளின் தன்மையை எக்காலத்தில் அடைந்து முன்னடிகளால் இகழ்ந்துரைப்பதும் பின்னடிகளால் புகழ்ந்துரைப்பதுமாக அநுபவித்த்தும் அறியத்தக்கது.

(தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள்.

பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.

“தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க.

வான்கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும்.  கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.

—————

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்

பதவுரை

ஆயர் விழவின் கண்

இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில்
துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை

பலபல வண்டிகளால் கொண்டுசேர்த்த பெருஞ்சோற்றை
அன்னது ஓர் பூதம் ஆய்

வருணிக்க முடியாத வொருபெரும் பூகவடிவு கொண்டு
முன் இருந்து

கண் முன்னேயிருந்து கொண்டு
முற்ற

துளிகூட மிச்சமாகாதபடி
தான்

தானொருவனாகவே
தூற்றிய

உட்கொண்ட
தெற்றௌவும்

வெட்கக்கேடென்ன.

 

இன்னு சகடத்தால்புக்க – சிலர் தலை மேலே சுமந்துகொண்டு போய்க்கொட்டின சோறன்று பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றிக் கொண்டுபோய்ப் பெரிய மலைபோலே கொட்டிவைத்த பெருஞ்சோறு, இவற்றையெல்லாம் ஒரு திரை வளைத்துக்கொண்டாவது உண்டானோ? இல்லை,

முன்னிருந்து உண்டான அதிலே சிறிது சோறு மிச்சமாமபடி உண்டானோ? இல்லை, முற்றத்துற்றினால், உற்றாருறவினர்க்கும் சிறிது கொடுத்து உண்டானோ? அதுவுமில்லை, முற்றவும் தானே துற்றினான்,

இப்படி வயிறுதாரித்தனம் விளங்கச் செய்த செயலுக்குச் சிரிது வெட்கமாவது பட்டானோ? அதுவுமல்லை. இப்படிப்பட்ட வெட்கக்கேடான செய்தியைத் தெருவேறச் சொல்லிக்கொண்டுபோய் “வயிறுதாரிப் பையலோ இவன்“ என்று எல்லாரும் அமைதிக்கும்படி செய்துவிடுகிறேன். பாருங்கள் என்கிறாள்.

————–

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

பதவுரை

முனம் நாள்

முன்னொரு காலத்தில்
வாழ்வேந்தர் தூதன் ஆய்

பாண்டவர்களுக்குத் தூதனாய்
தன்னை இகழ்ந்து உரைப்ப

(கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக
மன்னர் பெருசவையுள் சென்றதும்

(துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன

கண்ணபிரான், பாண்டவர்களையும் துர்யோதநாதிகளையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதனாதியரிடம் தூது சென்ற வரலாறு ப்ரஸித்தமேயாம்

“கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலங் கூறிடுவான், தூதனாய் மன்னவனாய் சொல்லுண்டான்“ என்கிற இவ்விழிதொழிலை நாடறியச் சொல்லி “ஒரு வேலைக்காரப் பையவோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்கிறாள்.

————

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143

பதவுரை

மங்கையர் தம் கண் களிப்ப

(இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி
மன்னு பறை கறங்க

(அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க
கொல்சவிலும் கூத்தன் ஆய்

(பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தையாடுபவனாய்
போத்தும்

மேன்மேலும்
குடம் ஆடி

குடங்களை யெடுத்து ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்

“இப்படியும் கூத்தாடுவானொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர்கேடென்ன

கண்ணபிரான் அரையிலே பறையைக் கட்டிக்கொண்டு குடக்கூத்தாடுவது சாதி வழக்கத்தை அநுஸரித்த ஒரு காரியம்.

அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவார்கள்.

கண்ணபிரானும் சாதிமெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே“ என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம்.

தலையிலே அடுக்குக்குடமிருக்க. இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இருக்கையிலுங் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர்.

இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திவொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து“ என்று மேற்கோளுங் காட்டினர் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.

இவன் சில பெண்களைப் பிச்சேற்றுவதற்காகக் கூத்தாடினபடியைப் பலருமறியப்பேசி, “கூத்தாடிப் பையலோ இவன்!“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்றானாயிற்று.

ஈடறவு – சீர்கேடு, ஈடு- பெருமை, அஃது இல்லாமை – அற்பத்தனம் வீடறவும் என்று பிரித்து கூத்தனின்றும் மீளாமை என்று சிலர் சொல்வது எலாது.

————-

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –

பதவுரை

தென் இலங்கை யாட்டி

தென்னிலங்கைக்கு அரசியும்
அரக்கர் குலம் பாவை

ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்
மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை

பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்
வாள் எயிறு

வாள் போன்றபற்களையுடையளும்
துன்னு சுடு சினத்து

எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான
சூர்ப்பணகா

சூர்பணகை யென்பவள்
புலர்ந்து எழுந்த காமத்தால்

அதிகமாக வுண்டான காம நோயினால்
பொன் நிறம் கொண்டு

வைவர்ணிய மடைந்து
சோர்வு எய்தி

பரவசப்பட்டு (தளர்ந்து)
தன்னை நயந்தானை

தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை
தான் முனிந்து

தான் சீறி
மூக்கு அரிந்து

மூக்கையறுத்து
மன்னிய திண்ணெனவும்

இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading