ஸ்ரீ திருமந்திரமும் நவவித ஸம்பந்தமும்–

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் தனியன்.

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யகளுக்குள், ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்ற வடக்குத் திருவீதிப்பிள்ளை திருக்குமாரர் பிள்ளை உலகாசிரியர், ஆசார்யர் நம்பிள்ளை அனுக்ரஹத்தால் ஸம்சாரம் (போகி) என்ற பாம்பில் கடியுண்ட நம்போன்ற ஜீவர்களுக்கு மருந்தாக, ஜீவன் ஜீவித்து உஜ்ஜீவனம் அடையவேண்டும், எம்பெருமானது திருவடிகளை அடையவேண்டும், நல்வழியில் நடக்கவேண்டும் என்ற ஒரே பிரயோஜனத்தை திருவுள்ளத்தில் கொண்டு 18 ரஹஸ்ய க்ரந்தங்களை அநுக்ரஹித்தார்.

பலர் பல பல பாசுரங்களை இயற்றலாம். ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்தோத்திரங்களும் எழுதலாம். ஸ்லோகங்கள் பல. இதிகாச புரணங்களும் பல. அதற்குண்டான வியாக்யானங்களும் பல. ஆனால் புராணங்களைச் சொல்வதைக் காட்டிலும், ஆழ்வார்கள் தாங்கள் தங்கள் பாசுரங்களைப் பாடினதைக் காட்டிலும், திருமந்திரம், துவயம், சரமஸ்லோகம் என்ற மூன்று ஆகியவற்றை ரஹஸ்யத்ரயம் என்பர். அதையே தன் கருத்தில் கொண்டு, அதற்காகவே முமுக்ஷுப்படி போன்ற பல அற்புதமான ரஹஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்த பிள்ளை உலகாரியனுக்கு தனிச் சிறப்பு.

 அதற்கு வியாக்யானம் அருளிச்செய்த விஸதவாக் சிகாமணியான பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு நம் ஸம்ப்ரதாயத்தில் தனி இடம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்கள் எல்லாம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்துக்கு அனுகுணமான பல அர்த்தங்களை சொல்வதாகவே அமைந்துள்ளது. தத்வத்ரயத்தை என்னவென்று காட்டுவதற்காக சில கிரந்தங்கள். ரஹஸ்யத் த்ரயங்கள் என்னவென்று சொல்வதற்கு சில க்ரந்தங்கள் ஸாதித்தார்.. அதற்குமேலே நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யரின் வைபவம் என்ன என்று சொல்வதற்காக ஸ்ரீவசனபூஷணம் என்ற சிறந்த க்ரந்தம். அந்த கிரந்தம்தான் தலையாய க்ரந்தம். அந்த தலைக்கு  அங்கங்கள் போலே பதினேழு ரஹஸ்ய க்ரந்தங்கள்.

இப்பொழுது நாம் பார்க்கப் போவது நவவித ஸம்பந்தம் ஒன்பது விதமான உறவு எனும் அழகான கிரந்தம். எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கக்கூடிய  ஒன்பது வித ஸம்பந்தங்கள் உறவுகளைச் சாதிக்கிறார் அந்த உறவுகளை எதை வைத்துச் சொல்கிறார் என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கும்.

திருமந்திரம்:

மூன்று ரஹஸ்யகளுக்குள் ப்ரதம ரஹஸ்யம் அஷ்டாக்ஷரம் – திருமந்திரம்.  ஓம் நமோ நாராயணாய! எட்டு எழுத்துமந்திரம்.  மூன்று பதங்கள். ஓம் என்று ஒரு எழுத்து, நம: என்று இரண்டு எழுத்து. நாராயணாய என்று ஐந்து எழுத்து.

ஓமித்யக்3ரே வ்யாஹரேத் நம இதி பஶ்சாத் |

நாராயணாயேத் யுபரிஷ்டாத்।  ஓமித்யேகாக்ஷரம் ।
நம இதித்3வே அக்ஷரே
 ।  நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி ।
ஏதத்3வை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பத3ம்
।–என்று திருமந்திரத்துக்குத் தனிச் சிறப்பு.

அந்த எட்டு எழுத்து, மூன்று பதங்களுக்குள் எத்தனை அர்த்தம் இருந்துவிடமுடியும் என்று நமக்குத் தோன்றலாம். அதில் இல்லாத அர்த்தங்கள் ருக், யஜுர், ஸாம வேதத்திலோ மற்று எதிலும் தேடினாலும் கிடைக்காது. ஏனெனில் அவைகளில் உள்ள அர்த்தங்கள் இந்த மூன்று பதங்களுக்குள்ளே அடக்கம். அந்தர்கதம். உள்ளேயே இருக்கிறது என்கிறார்கள் பூர்வர்கள்.

ருஜ: யஜூகும்சி ஸாமாநி ததைவ அதர்வணானி ச ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் … வாங் மய…  அனைத்தும் அந்த எட்டெழுத்துக்குள் அடக்கம்.  அனேக ஸாஸ்திரங்களும், மூன்று வேதங்களும் சொல்லிய அர்த்தங்கள் எல்லாம் இதில் உள்ளது. அப்போழுது இந்த எட்டெழுத்துக்கு எவ்வளவு சீர்மை இருக்கவேண்டும். திருமந்திரத்தை அலகலாகப் பிரித்து.  ஒவ்வொரு எழுத்தும் பகவானுக்கும் நமக்கும் உள்ள ஒவ்வொரு உறவைச் சொல்வதை விவரிக்கிறார்..

நம் சொந்த பந்தங்கள், பெற்றோர், பிள்ளை ஆகிய அனைத்து உறவுகளும் நிலையில்லாதது. இன்றைக்கு இருக்கும், நாளைக்குப் போகலாம்.  புதுப்புது உறவுகள் ஏற்படலாம். பிரியலாம். அதோடு உறவுகளுக்குள் சண்டை இல்லாமல் இருந்ததில்லை. பிதாவுக்கும் புத்திரனுக்கும் கூட பிரச்சினை இல்லாமல் இருந்ததில்லை. தாய்க்கும் தனயனுக்கும் அப்படியே.

ஒழிக்கவொண்ணா உறவு–இப்படித்தான் நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவா?. ஒரு உறவு இரண்டு உறவைப் போலேயா. நிலையில்லாததா என்ற சந்தேஹம் வரலாம். இதைப் போக்கிவிடவேண்டும் என்பதற்காக நம் பூர்வாசார்யர்கள் பகவானுக்கும் நமக்கும் இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாத ஒன்பது ஸம்பந்தம் என்று சொல்வர்கள். ஒரு நாளும் யார் எந்த முயற்சி எடுத்தாலும் இந்த உறவை அறுக்க முடியவே முடியாது.

பத்தன், முக்தன், நித்தியன் இம்மூவருக்கும்–பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனுக்கும் ஜீவாத்மாவான ஸம்ஸாரிகளுக்கும் ஒன்பது உறவுகள்.. ஜீவாத்மாவில் மூன்று வகை:

  1. பத்தன், (ஸம்ஸாரத்தில் தளையுண்டு நிற்பவர்)
  2. முக்தன், (ஸமாஶ்ரயணம் செய்துகொண்டு ஆசார்யன் க்ருபையால் பகவத் திருவடி ஸம்பந்தம் பெற்று மோக்ஷம் அடைந்து பரமபதம் சேர்ந்தவர்கள்)
  3. நித்தியர்,பெரியவரான திருவனந்தாழ்வான், பெரிய திருவடியான கருத்மான் எனும் கருடன், விஷ்வக்ஶேனர் ஆகிய இவர்கள் வைகுண்டத்தில் பெருமாளோடுகூட எப்போதும் இருப்பவர்கள்.  (நித்திய ஸூரிகள் அஸ்ப்ருஷ்ட ஸம்சாரகர்கள்) – ஸம்ஸாரத் தொடர்பே இல்லாமல் இருப்பவர்கள்).

பத்தர், முக்தர், நித்தியர் ஆகிய மூவருமே ஜீவாத்மாக்கள். இம்மூவருக்கும் பகவானுக்கும் உள்ள நவவித ஸம்பந்தம் எவை என்பதை பார்க்க இருக்கின்றோம்.

நித்தியர்களும் நாமும்:–ஸ்ரீ பிள்ளைலோகசாரியார் இந்த ஒன்பது வித ஸம்பந்தம் சொல்கிறார் என்றால் அது பத்தர்களான ஸம்சாரிகளுக்கு மட்டுமல்ல. முக்தர், நித்தியர் ஆகிய மூவருக்குமே இந்த நவவித ஸம்பந்தம் உண்டு. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் நித்தியர்களும் நாமும் பகவானோடு ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அவர்கள் அதிக நெருக்கம் என்றோ, நாம் குறைவான நெருக்கம் என்பதில்லை.

நித்தியர்களுக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் எத்தனை உரிமை பகவானிடம் உண்டோ அத்தனை உரிமையும் ஸம்ஸாரிகளான பிரம்மா முதல் எறும்பு வரை  அதே ஒன்பதுவித உறவுகளும் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் உண்டு. நவவித ஸம்பந்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள ஏற்ற தாழ்வே வித்யாஸம்..

விலக்கமுடியாத உறவு:–யாராலும் இந்த உறவை விலக்க முடியாது. ஸம்சாரி பகவானின் உறவு வேண்டாம் என்று விலகிப் போகப் பார்ப்பான். ஆழ்வார் பாசுரத்தில் சாதிதார்:

“யானொட்டி  என்னுள் இருத்துவமென்றிலன்*

தானொட்டி வந்து எந்தனிநெஞ்சைவஞ்சித்து*

ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து* இயல்

வானொட்டுமோ? இனி என்னை நெகிழ்க்கவே.”–திருவாய் 1-7-7-

“நான் உன்னிடம் நெருங்கி, நெருங்கி வந்து உன்னோடு சேர்ந்திருக்க வேண்டும். ஒட்டாமல் மட்டும் இல்லை. விலகி, விலகிப் போனேன். வெட்டிக் கொண்டு போனால் போகட்டும் என்று நீ விடவில்லை. எவ்வளவோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள், இவன் என்னத்துக்கு என்று நினைத்து விடாமல்  பகவான் நெருங்கி, நெருங்கி வந்து என்னை சேர்த்துக் கொண்டானே.” ஏன்கிறார் ஆழ்வார்.

நாஸ்திகர்களும் பகவானுடையவர்களே:-உலகில் ஆஸ்திகர்களும் இருக்கின்றனர், நாஸ்திகர்களும் இருக்கின்றனர். எம்பெருமான் உண்டு, உலகம் உண்டு, வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவர்கள் ஆஸ்திகர்கள். இவை எல்லாம் இல்லை இல்லை என்பவர்கள் நாஸ்திகர்கள். இந்த ஸம்பந்தம் ராவணனுக்கும் உண்டு, சிசுபாலனுக்கும் உண்டு. அறிவுடையவர்களுக்கும் உண்டு. அறிவேயில்லாத மரத்துக்கும் உண்டு. எதிர் அறிவு படைத்தவனான ரவணனுக்கும் உண்டு. விபரீத அதிகாரி ராவணன்.

விபரீத அதிகாரிகளுக்கும் இந்த ஒன்பது உறவு உண்டு. அனுகூலர்களுக்கும் உண்டு. பிரஹலாதனுக்கும் அதே ஒன்பது. இரண்யகசிபுவுக்கும் அதே ஒன்பது உறவு உண்டு. ஆத்திகனுக்கும், நாத்திகனுக்கும் இந்த ஒன்பது உறவும் உண்டு. அனைவருக்கும் நவவித ஸம்பந்தமும் உண்டு.இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வெட்டினோம் என்பதற்காக இந்த உறவை வெட்டி விடமுடியாது.  எம்பெருமான் யாரையும் விலக விட மாட்டார்.

நிரந்தரமான உறவு:-சரி நம்மால் விலக்க முடியாது. ஆனால் பகவானே பார்த்து இந்த ஹிரண்யகசிபோடு நமக்கு உறவு வேண்டாம் என்று வெட்டிவிடுவாரா? என்றால் இல்லை. பகவானும் இந்த ஒன்பது ஸம்பந்தங்களை வெட்ட மாட்டார். ஜீவனுக்கோ வெட்டத் தகுதியில்லை. பக்கத்திலிருக்கும் புருஷாகார பூதையான பெரியபிராட்டியும் விலக்க மாட்டாள். ஏனெனில் பத்தனை பகவானிடம் சேர்த்து வைப்பதற்காகவே பாடுபடுகிறவள் பெரிய பிரட்டியார். நம்மாலும் வெட்ட முடியாது. வேறு யாராலும் முடியாது. ஒழிக்க ஒண்ணாத ஒன்பது வித உறவுகள் என்றார்கள் பூர்வாசாரியர்கள்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

ஆகவே ஒழிக்க ஒண்ணா உறவு நவவித ஸம்பந்தம். ஸ்ரீய:பதியான ரமாபதியுடன் உள்ள ஸம்பந்தம்:

  1. ஸ்ரீயப்பதி  தந்தை   – குழந்தைகள்  (சிருஷ்டிப்பவன்)

பிதா – புத்ர ஸம்பந்தம். நம் ஸம்ப்ரதாயத்தில் சிஷ்டிப்பவர் பெருமாள்.

  1. காப்பாளன் (ரக்ஷ:) – ரக்ஷ்ய: காக்கப்படுபவன் அவன் நம்மைக் காப்பவன், நாம் காக்கப்படுபவர்கள். வேறு உறவுகளோ செல்வங்களோ எதுவும் நமக்குப் பாதுகாப்பில்லை. அவனே ரக்ஷகன். ஏனெனில் அவனே நமக்குப் பிதா.
  2. ஶேஷி (ஆண்டான்)         – ஶேஷன் (அடிமை)  [என்றென்றும் (ஶேஷியின் நன்மைக்கே இருக்க வேண்டும். அவர் பெருமைக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.ஶேஷன். அத்தனையும் அவனுக்கு அடிமை]
  3. பர்த்தா                     – பார்யை (மனைவி)

அனைவரும், புருஷர்கள் கூட பகவானுக்கு பார்யைதான். (ஜீவாத்மவர்க்கம் மூன்றுக்கும்) பகவான் பர்த்தா.   எங்கு திருமணம் நடந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் சைவர்களானாலும், காணாதிபத்தியர்களானாலும் மணமகன் விஷ்ணுவே தான். அழகிய மணவாளன் மாப்பிள்ளை. நாம் எல்லோரும் அவன் பத்தினி – திருமாங்கல்யம் எது?  திருமந்திரமே! ”ஓம் நமோ நாராயணாய” மூன்று பதம் எட்டெழுத்துக் கொண்ட, சரடு  எட்டிழையாய், மூன்று சரடாய் திருமாங்கல்யம். அஷ்டாக்ஷரம்,

பர்த்தா – பார்யை என்பது இன்றுதானே ஏற்படுகிறது. என்றென்றைக்கும் இருப்பது என்று எப்படிச் சொல்வது என்றால் ஸ்ரீராமனுக்கும் (12 வயது) சீதைக்கும், (6வயது) கல்யாணம். ஆனால் இப்பொழுதுதான் திருமணமா?  நாமும் பலபிறவிகள் எடுத்து வந்திருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பகவான் விஷ்ணுதான் மணமகன். ஆக என்றென்றைக்கும் இந்த உறவும் உண்டு. (என்றென்றைக்கும் எல்லா ஸம்பந்தமும் உண்டு)

  1. ஞேய: (அறியப்படுகிறான் பகவான்) – ஞாத்ரு  (ஜீவாத்மா- அறிபவன்)       

 ஞாதா – அறிபவர், ஞானம் – அறிவு , ஞேயம் – அறியப்படும் வஸ்து. நாம் அறிவை வைத்து இது புஸ்தகம் என்று  தெரிந்து கொள்கிறோம்.  தெரிந்து கொள்ளப்பட்ட புஸ்தகத்தை ஞேயம் (அறியப்படும் வஸ்து) என்று  சொல்வர். அறிய உதவி பண்ணியது எது? அதற்கு ஞானம் என்று பெயர். தெரிந்துகொண்டது யார்?. நாம். நமக்கு ஞாதா என்று பெயர். இங்கு எம்பெருமான் ஞேய: (அறியப்படுகிறார்). அறியப்படுகிறார் என்றால் யாரால் என்ற கேள்வி வரும். அவர்தான் ஞாதாவாகிற ஜீவாத்மா.

  1. ஸ்வ – ஸ்வாமி ஸம்பந்தம்.

ஸ்வாமி – உடையவன்   (ரமாபதி: – ஸ்ரீமன் நாராயணன்)                     – சொத்து ஜீவாத்மா விலிருந்து அனைத்தும். இந்த வீடு நமக்கு சொந்தம் என்றால் அது நமக்கு சொத்து. அதை உடையவன் நான். அதைப்போல பகவானுக்கு அவனைத் தவிர இந்த ப்ரபஞ்சத்தில் அனைத்தும் அவனுக்குச் சொத்து. சொத்து என்றால் அஃறிணைப் பொருள் அல்லவோ என்ற சந்தேஹம் வரும்.  அஃறிணையாய் இருந்தாலும் உயர்திணைப் பொருளாய் இருந்தாலும் எந்த திணையாக இருந்தாலும் அனைத்தும் அவனது சொத்துக்களே. இப்படி ஜீவாத்மாவையும் அசித்துக்களையும் சமமாகச் சொல்லலாமா என்றால் பரதன் அதற்கு விடையளித்துள்ளான்.

ராஜ்யமும் நானும் ராமனின் சொத்து:–பரதனுக்குக் கைகேயி வரத்தின் மூலம் ராஜ்யத்தை வாங்கி வைத்தாள். கேகய தேசத்திலிருந்து நாடு திரும்பினான். அழுது கொண்டே யிருந்தான் கைகேயி பட்டாபிஷேகம் செய்து கொள் என்றாள். பரதன் சொன்னான், “என்றென்றைக்கும் ராமன் தான் ஸ்வாமி. நானும் ராஜ்ஜியமும் ராமனுடைய சொத்துத் தான், இதை மட்டும் மாற்றவே முடியாது”

ராமனைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வர பரதன் காட்டுக்குச் செல்கிறான். அங்கு பரதன் ஸ்ரீராமனிடத்தில் தெரிவிக்கிறான்,”யவர்தா வர்த்ததே சக்ரம் யாவதீ ச வசுந்தரம் தாவத்துவமிக லோகஸ்ய ஸ்வாமித்வம் அநுவர்த்தய“ ராமா உலகில் இமாலயம் இருக்கிற வரைக்கும், கடல்கள் எல்லாம் அலையோடு இருக்கிற வரைக்கும் பூமி இருக்கிற வரைக்கும்,மலை இருக்கிற வரைக்கும், ஜ்யோதிஷ் சக்கரம் சுற்றுகிற வரைக்கும் நீதான் ஸ்வாமி, நான் உன் சொத்து..ராமா நீயும் இதை மாற்ற முற்படாதே. நானும் மாற்ற மட்டேன். இரண்டு பேராலும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டான் பரதன்.

ஏனெனில் நீ ஸ்வாமி நான் தாஸன். “ராஜ்யம்ஸ் ச அஹம் ச ராமஸ்ய.” இந்த ராஜ்யமும் நானும்  உன் சொத்துத்தான். என்றான் பரதன். இதற்கு பூர்வாசார்யர்கள் அதை எந்த விதத்தில் சேர்க்கலாம் என்று கேள்வி எழுப்பினர். தாயும், தந்தையும், பிதாவும் புத்திரனும் என்றெல்லாம் சேர்க்கலாம். ராஜ்யம் என்பதையும் நான் என்பதையும் எப்படிச் சேர்க்கலாம். ராஜ்யம் என்பது அறிவற்றது. அசித். ‘நான்’ அறிவுள்ளது.  சித்தான பரதனையும் அசித்தான ராஜ்யத்தையும், அறிவுடையதையும், அறிவற்றதையும் எப்படி ஒரே மேடையில் சேர்க்கலாம். இரண்டு பேரும் பகவானுக்கு சொத்து என்ற நிலையிலே தான் சேர்க்க முடியும். பரதனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவ்வளவு சிறப்பு பாரதந்த்ரியத்துக்கென்றே நின்று காட்டினவன் அதனால் அவனுக்குச் அவ்வளவு ஒரு சிறப்பு. . ஸ்வாமி தாஸன் என்ற உறவு எல்லோருக்கும் உண்டு. ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் .

  1. ஆதார: (தாங்குபவர்)      – ஆதேயம் (தாங்கப்படுபவர்கள்). பூவை எடுத்து கூடையில் வைக்கிறோம். பூவைக் கூடை தங்குகிறது. கூடை ஆதரம்.  பூ ஆதேயம். அதுபோல எம்பெருமான் தாங்குகிறார். நாம் தாங்கப்படுகிறோம். இதற்கு ஆதார-ஆதேய ஸம்பந்தம் என்று பெயர்.
  1. ஆத்மா (ஶரீரி)                  – ஶரீரம் (பகவான் – உடல், ப்ரகாரி – ப்ரகார)

 ஶரீர – ஶரீரி ஸம்பந்தம். எம்பெருமான் ஆத்மா. நாம் அனைவரும் எம்பெருமானுக்கு ஶரீரங்கள். இந்த என் ஶரீரத்தை நான் தான் தாங்குகிறேன். இந்த ஶரீரத்துக்கு ஆத்மா தான் சகலமும். இந்த ஆத்மா நினைக்கிறபடி யெல்லாம் இந்த ஶரீரம் நினைக்கும் அல்லவா? ஆத்மாவுக்காகவே இந்த ஶரீரம் இருக்குமல்லவா? ஆத்மாவையும்  ஶரீரத்தையும்  பிரிக்கவே முடியாதா!  உடல் நலிந்தால் பிரியும்.

அனைத்தும் பகவானுக்குச் ஶரீரம்–எம்பெருமான் ஆத்மா. நாம் எல்லோரும் உடல். இதைத்தான் “மமஆத்மா” என்று ஸாதிக்கிறார். ஶரீர ஆத்ம ஸம்பந்தம் என்று பெயரிடுவர்கள். ஶரீர – ஶரீரி ஸம்பந்தம் என்றும் ப்ரகார ப்ரகாரி ஸம்பந்தம் என்றும் சொல்லலாம். அவன் ஆத்மா நாம் அத்தனைபேரும் ஶரீரம்.

இதையும் ராமாயணம் சொல்லிற்று. ஜகத் ஸர்வம் ஶரீரம் தே ப்ரஹ்மம். நாராயணனை அதாவது ராமனைப் பார்த்து உலகில் எல்லோரும் கொண்டாடினார்கள், “ஜகத் அனைத்தும் உனக்கு ஶரீரம் ராமா!  நீதான் ஆத்மா!

இதை வேதாந்தங்கள் எல்லாம் சொல்லிற்று. யஸ்ய ஆத்மா ஶரீரம், யஸ்ய ப்ரித்வீ ஶரீரம் யஸ்ய ம்ருத்யு ஶரீரம். ஏஷ ஸர்வபூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்ய ஏக: ஸ; நாராயண: உலகத்தில் அத்தனைக்குள்ளும் தான் ஆத்மாவாக மற்ற அத்தனையையும் தனக்குச் சரீரமாகக் கொண்டுள்ளான்..

ஆழ்வார் சொல்கிறார் – உடன்மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன். உடலுக்குள் உயிர் இருக்கிறாப் போலே ஜகத் அத்தனையும் எம்பெருமான் வியாபித்து இருக்கிறான் ஆத்மாவாக. ஶரீர ஆத்ம ஸம்பந்தம்.

  1. போக்த்ரு       (அனுபவிக்கின்றவன்)         – போக்யம்   (அனுபவிக்கப்படுவது)

நாம் அவனை அனுபவிக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். ஒருவருக்கொருவர் அனுபவிக்கப் படுபவர்களாக இருக்கிறோம். அவன் நம்மை அனுபவிக்கிறான். அவன் போக்தா. நாம் போக்யம்.

எப்படி சந்தனமும் பூவும் போக்யம்.  பூவைத் தலையில் வைத்து நாம் அனுபவிக்கிறோம் அல்லவா. சந்தனத்தை எடுத்துத் தடவிக் கொள்கிறோம். நாம் போக்தா. சந்தனமும் பூவும் போக்யம். ஜீவாத்மா போக்தா. நம் ஆனந்தத்துக்காக அதை எடுத்து அனுபவிக்கிறோம்.

இப்பொழுது கொஞ்சம் இடத்தை மாற்றுங்கள்–பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே–இங்கு போக்யம் ஜீவாத்மா. பூவையும் சந்தனத்தையும் போலே ஜீவாத்மா. இதை எடுத்து தலையில் சூடிக் கொண்டு அனுபவிப்பவர் எம்பேருமான். அவர் போக்தா.. ஜீவாத்மா போக்யம். இங்கும் சந்தேஹம் வரும். பூவும் சந்தனமும் அசித். ஜீவாத்மா சித். எப்படி என்று கேள்வி?பூவை நான் தலையில் சூடிக் கொண்டால் பூ என்றைக்காவது சந்தோஷப் படுமா? படாது. பூவும் சந்தனமும் மற்றவருக்கென்றே  பிறத்தியாரோட சந்தோஷத்துக்கென்றே இருக்கிறதல்லவா?. அதைப்போல ஜீவாத்மாவும் பரமாத்மாவின் ஆனந்தத்துக்கு என்றே இருக்க வேண்டும்.. அதற்குத்தான் இந்த போக்தா – போக்ய ஸம்பந்தம் சொல்லப்பட்டது. அவன் ஆனந்தத்துக்காக, இஷ்ட விநியோகத்துக்கு அநுகுணமாக ஜீவாத்மா இருக்கவெண்டும்.

அஹமன்னாதோ(2) அஹமன்னாதோ(2) ஹமன்னாத: அஹகும் ச்லோகக்ரு– தஹகும் ச்லோகக்ரு- தஹகும் ச்லோக்ருத்  அஹமஸ்மி ப்ரதமஜா ருதா(3) ஸ்ய பூர்வம் தேவேப்யோ அம்ருதஸ்ய நா(3) பாஇ।–என்று தைத்ரீய உபனிஷத் சொல்லும்.

நான் அன்னம், அவன் அன்னத்தைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஆனந்தப்படுகின்றவர். அன்னம் என்பது போக்யம். அன்னாத: என்பது போக்தா. ஜீவாத்மா அன்னத்தினுடைய ஸ்தானம். அன்னாதன் – பகவான் போக்தா. அன்னத்தை அநுபவிப்பவர். அதையே இங்கு ஒன்பதாவது போத்ரு – போக்ய ஸம்பந்தமாக ஸ்தாபித்தார்.

நித்ய ஸூரிகள் கோஷ்டியில் சேரவேண்டுமா:–ரமாபதி: ஸ்ரீமன் நாரயணனை ஒவ்வொரு ஸம்பந்தத்துடன் சேர்த்துக் கொள்க.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:।
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித॥

இந்த ஒன்பது வித ஸம்பந்தத்தை மனப்பாடம் செய்து காலையில் எழுந்தவுடன், ஒன்பது உறவுகளையும் ஒரு நாளும் ஒழிக்கமுடியாது என்ற  நினைவோடு தினந்தோறும் சொல்லிச் சொல்லி ஞாபகத்தில் கொள்ளவும். அப்படிச் சொல்லி வந்தோமானால் இந்த எறும்பு கோஷ்டியை விட்டு நாம் நிச்சயம் நித்ய ஸூரிகள் கோஷ்டிக்குப் போகலாம். தைரியம் மனதுக்கு வரும். அவன் ஒருநாளும் கைவிடமாட்டான்.

ஒரு நிச்சயபுத்தி, விஶ்வாஸம் ஏற்படும். சரணாகதியில் மஹாவிஶ்வாஸம் ஒரு அங்கம். எப்ப விஶ்வாசம் வரும் இத்தனை உறவு நமக்கு அவனுக்கும் இருக்கிறது என்பது உறுதியானாலே மஹா விஶ்வாஸம் வரும். மோக்ஷத்தில் ஆசை படைத்த முமுக்ஷுவான ஒவ்வொருவரும் இந்த ஒன்பது ஸம்பந்தத்தைக் கண்டிப்பாக சொல்லி கொள்வர். இந்த ஒன்பதும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருமந்திரத்தில் இந்த ஒன்பது உறவுகள்–திருமந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒன்பது உறவை  எங்கு எங்கு எப்படிச் சொல்கிறது என்பதை அழகாக ஸாதிக்கிறார். ஒன்பது ஸம்பந்தத்தின் ஞானம் முக்கியம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸூகாசாரியார் கேட்டுக்கொண்டார் “தத்  பாதம் ஸலிலம் யதா வாஸுதேவ கதா ப்ரஶ்ந: பும்ஸாம் திரிம் புநாதிவை” வாஸுதேவனுடைய கதையைப் பற்றி யாரெல்லாம் பேசுகிறார்களோ, பேசுன்னு சொன்னார்களோ, கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் புண்யம் மூவேழு தலை முறைகளுக்கும் புண்ணியம்.

திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம்–எதேபோல என்பதற்கு அவரே ஒரு உதாரணம் சொல்கிறார். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் கங்கை. பார்த்தாலும் புண்யம், தீர்த்தமாடினாலும் புண்யம். அருந்தினாலும் புண்யம். மூவேழு தலைமுறைகளுக்கும் புண்யம்.

பூர்வர்கள் கேள்வி கேட்டனர், “அந்த கங்கைக்குள் நிறைய மீன்கள், திமிங்கிலங்கள், ஜந்துக்கள் இருக்கின்றனவே அவைகளுக்கெல்லாம் புண்யம் வந்து மோக்ஷத்துக்குப் போய்விடுமா? நல்ல கேள்வி. அதுக்குள் வாழ்ந்ததற்காக புண்யம் வராது. மோக்ஷம் கிடைக்காது. கங்கைக்கும் மீனுக்கும் ஸம்பந்தம் இருக்கிறது. ஞானம் வேண்டும். என்ன ஞானம்: இது திரிவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம். திருவிக்கிரமனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் என்பது ரொம்ப பாவனத்துவமும்,போக்யத்துவங்களும் கூடியது.

ஆகவே கங்கையைப் பார்த்தாலோ, குடித்தாலோ, தீர்த்தமாடினாலோ எனக்கு மோக்ஷம் கிடைக்கும் என்ற ஞானம், அந்த  ஞானத்தோடு தீர்த்தமாடினால் பலன் உண்டு. பகவானுக்கும் கங்கைக்கும் உள்ள உறவை உணர்ந்து குளித்தால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். ஸம்பந்த ஞானம் வேண்டும்.

ஸம்பந்த ஞானம் வேண்டும் என்பதற்காகவே இந்த க்ரந்தத்தை பிள்ளை லோகாசாரியார் ஸாதிக்கிறார். இல்லை யென்றால் இருக்கவே இருக்கிறது ஒன்பது ஸம்பந்தம் என்று கேட்டு விடுவோம் அல்லவா? ஒன்பது ஸம்பந்தத்தை உணர்ந்து அதை அனவரதமும் சிந்தனம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்கும் என்பதில் சந்தேஹம் இல்லை.

இந்த ஒன்பது ஸம்பந்தத்தை திருமந்திரத்தில் இருந்து எடுத்து விளக்குகிறார்.

அஹம் பிதா ச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித

கடுகைத் துளைத்து எழு கடலை புகட்டி–மேலே ஒவ்வொரு இடமாக இந்த ஸம்பந்தத்தைத் திருமந்திரத்திலே எங்கெங்கு வைக்கிறார் என்பது முக்யம். இருக்கிறதே எட்டெழுத்து அதற்குள் எப்படி ஒன்பது ஸம்பந்தத்தை புகுத்தினார் என்ற சந்தேஹம் வரும்.

ஒரு வரிக்கு ஒரு அர்த்தம் சொல்லலாம், ஒரு பதத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னாலே கிறப்பு. அதற்கு மேலும் ஒரு எழுத்துக்கு ஒரு அர்த்தம் சொன்னால் அவரைவிடச் சிறந்தவரில்லை. ஆனால் எட்டெழுத்துக்கு  ஒன்பது அர்த்தம் சொல்லிவிட்டார் ஸ்வாமி பிள்ளை உலகாசிரியர்.

திருக் குறளின் பெருமையைச் சொல்லும்போது “கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பெருமை சொல்வர். இரண்டுவரி, ஏழு பதத்திற்குள் அவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.

இரண்டு வரிக்குள் அவ்வளவு அர்த்தம் வைத்தது அங்கு பெருமை. அதுபோல திருமந்திரமான எட்டெழுத்துக்குள் இந்த ஒன்பது ஸம்பந்தம் காட்டியது இவருக்கு அதைவிட பெருமை. வரியே கிடையாது. மூன்று பதங்கள். எட்டெழுத்து. ௐ நமோ நாராயணாய.

திருமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும்:

அகாரத்தால்                       பிதா              – புத்திர ஸம்பந்தம்

அவரக்ஷணே (தாது)        ரக்ஷ:             – ரக்ஷி:

லுப்த சதுர்த்தி                    ஶேஷி          – ஶேஷ

உகாரத்தால்                        பத்ரு              – பார்யா

மகாரத்தால்                        ஞேயம்        – ஞாத்ரு

நம:                                        ஸ்வாமி        – சொத்து

நார ஸப்தத்தால்               ஶரீரி              – ஶரீர

அயன                                   ஆதார           – ஆதேயம்

ஆய:                                      போக்த்ரு     – போக்யம்

ௐ நம: நாராயணாய     ௐ என்பது ஒரு எழுத்து. நம: எனபது இரண்டு எழுத்து. நாராயணாய என்பது ஐந்து எழுத்து. ஆக மூன்று பதம் எட்டு எழுத்து, ஒன்பது ஸம்பந்தம்.

ௐ என்ற ஒரு பதம்

ஓம் – அ+உ+ம (மூன்று எழுத்து)

அ                               – பரமாத்மா

ம                                – ஜீவாத்மா

உ                                -பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இருக்கும் ஒழிக்க வொண்ணத ஸம்பந்தத்தைச் சொல்லும். (பரமாத்மாவுக்கே        ஜீவாத்மா)

தமிழில் வேற்றுமை உருபு:–அ, உ, ம என்றால் அது ஒரு முற்றுப்பெறாத சொல். ‘அ’ – பரமாத்மா, ‘ம’ –ஜீவாத்மா, ‘உ’ – அந்த பரமாத்மவுக்கே ஜீவாத்மா என்று சொல்கிறது. ஒருவருக்கும் மற்றொருவருக்கும் உறவைச் சொல்ல தமிழ் பாஷைப்படி ஒரு வேற்றுமை உருபு வேண்டும்.

என்னுடைய புஸ்தகம். என்னோடு வந்தார். கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.  இந்த புஸ்தகம் இவரால் தூக்கப்பட்டது. என் உடைய, ஓடு, ஐ, ஆல்  என்று சேர்க்கிறோம். உடைய என்பது நாலாவது வேற்றுமை உருபு.  உறவைச் சொல்ல நாலாவது(விபக்தி) வேற்றுமை உருபு வேண்டும். ஆல், ஓடு, உடைய, இன் ஐ போல. ஓம் என்பதற்குள் பரமாத்மாவுக்கும் ஜீவத்மாவுக்கு உறவு சொல்கிறது அல்லவா. வேற்றுமை உருபு இருந்தால்தானே உறவே வரும்.

ஒன்றை ஒன்று சேர்ப்பதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. மரத்தில் கண்ணாடியை ஒட்டவேண்டுமானால் அதாற்கு ஒரு விதமான் பசை வேண்டியிருக்கிறது. சொற்களைச் சேர்ப்பதற்கு வேற்றுமை உருபு வேண்டும். இங்கு பரமாத்மா வையும் ஜீவாத்மாவையும் சேர்க்கவேண்டும். கண்ணாடி வேற ஜாதி, மரம் வேறு ஜாதி. அதுபோல பரமாத்மா ஆள்கின்ற ஜாதி, ஜீவாத்மா அடிமை (ஆளப்படுகிறவன்) என்ற வேறு ஜாதி. இந்த இரண்டையும் ஒட்டுவது அவ்வளவு ஸுலபமில்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிரிவதே இல்லை::–ஆனால் ஆச்சர்யம் என்னெ வெனில் யாரும் ஒட்ட வைக்கவே யில்லை. பிரித்தால்தானே ஒட்ட வைக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தே தான் இருக்கிறது.

நாலாம் வேற்றுமை உருபு:–ஆனால் இலக்கணப்படி ‘அ’ வையும் ‘ம’  வையும் சேர்க்கவேண்டுமானால் ஒரு வேற்றுமை உருபு, நாலாம் (விபக்தி)வேற்றுமை உருபு வேண்டும். (உ.ம்) இருக்கு, பரமாத்மாவுக்கு ஜீவத்மா அடிமை என்று சொல்லவேண்டும். நாலாம் வேற்றுமை உருபு வேண்டும்.

ராமன்,(முதல் வேற்றுமை)  ராமனை(2), ராமனால்(3), ராமனுக்கு(4), ராமனின்(5), ராமனது(6), ராமனின் கண்(7), ஹே ராமா(8).ஆக எட்டு வேற்றுமை உருபுகள்.  4 வது வேற்றுமை உருபு  ‘க்கு’ என்பது ஸம்ஸ்க்ருத்த்தில் ‘ஆய’ என்று வரும்.

அச்சுதாய நம: அச்சுதனுக்கு. அனந்தாய, கேசவாய, அச்சுதனுக்கு, கேசவனுக்கு, என்று வரும்.ஸம்ஸ்க்ருதத்தில் “க்கு” என்பது “ஆய” என்று வரும்.  வேற்றுமை உருபு இருந்தால்தான் உறவு. ஓம் என்ற ஸப்தத்தில் தேடிப்பார்த்தால் இந்த வேற்றுமை உருபு இல்லை. அதனால் இதை லுப்த சதுர்த்தி என்று சொல்வர். லுப்தம் என்றால் ஏறிக்கழிந்தது என்று பொருள். இருந்தது, விழுந்துவிட்டது, கழிந்தது.வியாகரணத்தின்படி விழுந்ததாகக் கொண்டு  ‘அ’  என்ற எழுத்தால் சொல்லப்பட்ட பரமாத்மாவுக்கு, ‘ம’ என்ற எழுத்தால் சொல்லப்படுகிற ஜீவாத்மா, “ஆய“என்ற நாலாம் வேற்றுமை உருபால் அடிமை.என்பது ஓம் என்கிற சப்தத்தின் அர்த்தம்.

ௐ அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. நான்கு எழுத்துக்கள்–இன்னும் கொஞ்சம் பிரித்தால்: ஓம் என்பது அ, (ஏறிக் கழிந்த)ஆய, உ, ம. இதைக் கொண்டு நான்கு அர்த்தம் சொல்லிவிடுவார் ௐ என்ற பதத்துக்கு. மேலும் நம: என்பதும் நாராயணய என்பதும் இருக்கிறது. அதைப் பிரிக்கப் போவதை பின்னால் பார்க்கலாம்.

திருமந்திரத்தில் ஓம் என்ன ஸம்பந்தங்களைச் சொல்கிறது:என்று பார்க்கலாம்:

  1. அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி

அ – பிதா புத்ர ஸம்பந்தம்.-‘அ’ காரத்தின் மூலம் ஜகத் காரணத்துவ சொல்லிற்று. எம்பெருமான். முதல் எழுத்தான ‘அ’ என்பதில் இருந்து அனைத்து எழுத்துக்களும் பிறக்கும். , சொற்களும் ஸப்தங்களும் இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் தோன்றின. ஸமஸ்த ஸப்தங்களுக்கும்  காரணம் , முழு முதற்காரணம், வேர், விதை  “அ”காரம். அது போல எம்பெருமான் இந்த ஜகத்துகெல்லாம் காரணம்  அவனிடத்திருந்துதான் எல்லாம் தோன்றின.

எல்லாம் அவனிடமிருந்தே:–“யதோவா இமானி பூதானி ஜாயந்தே | யேன ஜாதானி ஜீவந்தி | யத்பிரந்த்-யபிஸம்விஸந்தி .. | (தைத்ரீய உபனிஷத்) இது எல்லாம் அவனிடத்திருந்துதான் தோன்றியது.. ‘அ’ இடம் இருந்துதான் எல்லா ஸப்தங்களும் தோன்றின. பகவானிடத்திருந்துதான் உலகம் அத்தனையும் தோன்றியது. அப்பொழுது ‘அ’ என்பது பகவானைக் குறிக்கும். அ காரத்துக்கும், பகவானுக்கும் ஒரு ஸாம்யம் பார்க்கலாமில்லையா? அதனால் தான் ‘”அகார: விஷ்ணு வாச்ய: “அ’ என்பதை ஒற்றை எழுத்துச் சொல் என்பர். அதைச் சொல் என்றும் எழுத்து என்றும் சொல்லலாம். அது விஷ்ணுவையே சொல்லும். அகாரம் என்ன சொல்கிறது. எப்படி ஸப்தங்களுக்  கெல்லாம் நான் காரணமோ அப்படி உலகத்துகெல்லாம் எம்பெருமான் காரணம். என்கிறது.‘

‘அ’ காரம் காரணத்வம்:–அ’ காரத்தைப் பார்க்கும் போதே காரணத்துவம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா? காரணத்துவம் என்பது என்ன? நமக்கும் நம் பிதாவுக்கும் உள்ள உறவு. அவர் பிதா காரணம். நான் பிள்ளை காரியம். அவராலே பிறந்தேன், அவராலே படைக்கப்பட்டேன். ஆக காரணத்தை வைத்து முதல் எழுத்து பிதா – புத்ர ஸம்பந்தம் சொன்னார். அவன் தந்தை என்றும் நான் புத்ரன் என்றும் பிதா புத்திர சம்பந்தம் சொல்லிற்று.

  1. அவ -ரக்ஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி–ஏற்கனவே அ வுக்கு ஒருவிதமாக அர்த்தம் பார்த்தோம். ‘இப்பொழுது இன்னொரு விதமாக அர்த்தம் சொல்கிறார். முதலில் அர்த்தம் பார்த்து ‘அ’வை ஒரு சொல்லாகக் கொண்டு.’அ’ என்ற சொல் அனைத்து ஸப்தங்களுக்கெல்லாம் காரணம். அகார வாச்யனான எம்பெருமான் ஜகத்துக்கெல்லாம் காரணம். காரணத்துவமிருக்கிறதாலே பிதா-புத்திர ஸம்பந்தம் என்று பார்த்தோம்.

‘அ’ வின் தாது ‘அவரக்ஷணே’–ஸம்ஸ்க்ருதத்திலே தாது என்று சொல்லுவர். 2000 தாதுக்கள் உண்டு. அந்த தாதுவைக் கொண்டு ஒரு சொல் எந்த வினையை ‘செயலைக்’. குறிக்கிறது என்று சொல்லப்படும். கச்ச – போகிறேன் ஒரு தாது, வத – பேசுகிறேன் ஒரு தாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தாது இருக்கிறதல்லவா?.. அ என்ற சொல்லுக்கு அவ ரக்ஷணே என்ற தாது. ரக்ஷிக்கிறான் என்ற வினையைச் சொல்கிறது.

அ வில் இரண்டாவது அர்த்தம் ரக்ஷிக்கிறான். உலகனைத்தையும் எம்பெருமான் ரக்ஷிக்கிறான் என்று பொருள். முதலில் ‘அ’ என்பதற்கு காரணத்துவம் சொல்லி எம்பெருமான் உலகனைத்துக்கும் காரணன் என்று பிதா – புத்திர ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

இப்பொழுது இரண்டாவதாக   ‘அ’ வுக்குள்ள அவரக்ஷணே என்ற தாதுவால் ரக்ஷகத்வம் சொல்லி ரக்ஷ: – ரக்ஷ்ய  ஸம்பந்தம் சொல்லியாயிற்று. அவன் காப்பவன். நாம் காக்கப்படுகிறோம்.

  1. லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி–லுப்த சதுர்த்தி – ஏறிக் கழிந்த நான்காவது வேற்றுமை உருபு என்பர். ‘க்கு’ ‘ஆய’ என்ற நாலாவது வேற்றுமை உருபு. மறைந்துள்ளது. அகார வாச்யனான பரமாத்மாவுக்கு ‘மகார’ வாச்யனான ஜீவாத்மா எல்லா விதத்தாலும் அடிமை என்று சொல்லிற்று. ‘க்கு’ என்கிற 4 ம் வேற்றுமை உருபு பகவானுக்கு (ஶேஷி) ஜீவாத்மா (ஶேஷ்ன்) அடிமை என்கிறது. ஆக லுப்த சதுர்த்தி ஶேஷி – ஶேஷ ஸமந்தம் சொல்லிற்று

கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன்–ஆய  – க்கு, ராமனுக்கு: அவனுக்கே இருக்கிறேன் என்று சொல்லுமல்லவா? ஶேஷி – ஶேஷ ஸம்பந்தம். அப்படியென்றால் என்னுடைய ஶேஷிக்கு நல்லதைச் சேர்க்கிறதுக்காகவே நான் இருக்கவேண்டும். ‘க்கு’ என்று சொல்லும் போதே அவனுக்கென்றே இருக்கிறேன் என்றாகின்றது அல்லவா. ராமனுக்கு சீதா ஸர்வ ப்ரகாரத்தாலும் அவனுக்கென்றே இருக்கின்றாள்.

ஶேஷ-ஶேஷி ஸம்பந்தம். ஸம்பந்தத்தை லுப்த சதுர்த்தியாலே சொல்லி. –

ஆழ்வார் “கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ’

‘கோவிந்தா உனக்கே நாம் ஆட்செய்வோம்” ஆண்டாள்.

கோவிந்தா என்பது ‘அ’,  ‘நாம்’ என்பது ‘ம’,  ‘க்கே’ என்பது ஆய என்ற லுப்த சதுர்த்தி. அதையே தான் திருமங்கை ஆழ்வாரும் பாடினார்  திருக்கண்ணபுரம் சவரிப்பெருமாள் விஷயமாக நூறு பாசுரங்கள். பெரிய திருமொழியில் எட்டாம்பத்து முழுமையும் சவரிப் பெருமாளுக்குத்தான் பட்டியுள்ளார். அதில் கடைசியில் சாதிக்கிறார்:

“நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் கண்ணபுரத்துறை அம்மானே” கற்றுக் கொண்டது என்ன?

“கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன், ஒருவர்க்கு உரியேனோ?’ கண்ணபுரம் பெருமாளுக்கே நான் உரியவன்.  “சவரிப் பெருமான் திருவடிகளில் பணிந்தவன், உன் அடியார் வசலில் நிற்பேனே தவிர கண்டபேர் வாசலில் நிற்கமாட்டேன்.

“உற்றதும் உன் அடியார்க்கு அடிமை”  உனக்கே உரியவன், “மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பரோடுற்றிலேன்” (பெரிய திருமொழி 8-10-3) மற்றும் ஓர் தெய்வம் உள்ளது என்று சொன்னாலே அவன் வாசலில் நிற்க மாட்டேன் என்கிறார்.

அப்படிச் சொல்பவனுக்கு எனக்கும் உறவே யில்லை என்று அறுத்துக் கொண்டார்..

‘க்கு’ என்பதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம் அவன் ஶேஷி நாம் ஶேஷர்கள். என்று ஶேஷ – ஶேஷி ஸம்பந்தத்தைச் சொல்லியாயிற்று.

  1. உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லிஅநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம்– ‘ உ’ காரம் – அநந்யார்ஹ நியாம்ய ஸம்பந்தம். பர்த்தா – பார்யா ஸம்பந்தம்.  ‘

அ’கார வாச்யனான எம்பெருமானுக்கே  ‘ம’கார வாச்யனான ஜீவாத்மா அடிமை. நடுவில் இருக்கும் ‘உ’ ரொம்ப முக்கியம் நம் ஸம்பிரதாயத்திலே. ஏவாகாரம் தான் ‘உ’காரத்தின் பொருள். ‘உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: பராசாபட்டர் அழகாக ஸாதித்தார் உகார: அநந்யார்ஹ ஸம்பந்தம்.. அநந்யார்ஹ ஸம்பந்தம் என்றால் அகார வாச்யனுக்கு மகார வாச்யன் அடிமை என்று பார்த்தோம்.

அடுத்து ஒருவன் சொல்லுவான். மனித மூளை எந்தவிதத்திலும் பாயும். அதுக்குக் குறைச்சலே இல்லை. வேணுங்கிறதுக்கு மட்டிலும் வேலை செய்யாதே தவிர, வேண்டாங்கிறதில் நன்றாகவே வேலை செய்யும். ஒருவன் சொல்லுகிறான், “ஸ்ரீமன் நாராயணனுக்கு நான் அடிமை” நான் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் வேறு எங்கோ நிற்கிறான். என்ன நாராயணனுக்கு என்று சொன்னாயே, இங்கு நிற்கிறாயே என்று கேட்டால் அவன், நான் நாராயணனுக்கு என்று சொன்னேன், ஆனால் அவனுக்கே என்று சொல்லவில்லையே என்றான்.

லுப்த சதுர்த்தி மூலம் பரமாத்மாவுக்கு என்று உள்ளது. அது பரமாத்மாவுக்கும் அடிமை. மற்றவர்களுக்கும் அடிமையாயிருப்பது என்றும் சொல்லலாம். அதில் உள்ள குறையைப் போக்கி உறுதி செய்ய “உ” காரத்தால் எம்பெருமானுக்கே என்று “ஏவா காரத்தால்” உறுதி செய்யப்படுகிறது. பரமாத்மாவுக்கே இந்த ஜீவாத்மா அடிமை என்று ‘உ’காரம் உறுதி செய்கிறது. மற்ற தெய்வத்தையும் தொழான். அரசனையும் தொழான்.  அவனுக்கே என்றதிலிருந்து பர்த்தா – பார்ய ஸம்பந்தம் சொல்லிற்று.

ஸ்வாமி தேஶிகனின் வைராக்ய பஞ்சகம்–வைராக்ய பஞ்சகம் என்று ஐந்து ஸ்லோகம். ஸ்வாமி தேஶிகன், தேவப்பெருமாள் விஷயமாக அருளியுள்ளார். அதில் “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

வேதந்த தேஶிகன் மகாசாரியார். அந்த ஆசார்யரிடத்தில் சின்ன வயதிலிருந்தே ஒரு நண்பர், ஸ்நேஹம். அவர் நல்ல நிலைமையில் ஒரு அரசனிடம் பணிபுரிந்து நல்ல நிலையில் இருந்தார்.

ஸ்வாமி தேஶிகனோ கிழிந்த உடையும், உஞ்ச விருத்தியுமாக இருந்தார். அந்த நண்பர், “நீ என்னிடம் வந்துவிடு. அரசனிடம் வந்தால் பட்டும், பொன்னாடையுமாக வசதியாக வாழலாம்” என்றார். நல்ல சம்பாவனை கிடைக்கும் வந்துவிடு என்று மறுபடி, மறுபடி சொல்லிப் பார்த்தார். அங்கிருந்து ஒரு ஆளை அனுப்பி நிர்பந்தப் படுத்தினார்.

வந்தவரை ஸ்வாமி, நீர் போய் தேவப் பெருமாளை சேவித்து வாரும் என்று அனுப்பிவைத்தார். அவன் பெருமாளை சேவித்துவிட்டு திரும்பி வந்தான்.என்ன பார்த்தாய் என்று கேட்டார். பெருமாள் சேவை ஸாதிக்கிறார். ஸேவித்தேன் என்றார்.

அதற்கு பதில் சொன்னார் ஸ்வாமி, “அஸ்தி மே ஹஸ்திசைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம். நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்” “எனக்குத் தந்தை சம்பாதித்து வைத்த செல்வம் ஒன்றுமில்லை. நானாகவும் ஒன்றும் ஸம்பாதிக்கவில்லை. ஆனால் உலகத்துகே பாட்டனார் ஹஸ்திகிரியின் உச்சியில் சம்பாதித்து வைத்திருக்கும் செல்வம் எனக்கு உள்ளது. அதாவது ப்ரம்மதெவன் அசுவமேத யாகம் செய்து ஹஸ்திகிரியின் உச்சியில் ஸம்பாதித்து வைத்த செல்வம் உள்ளது” என்றார்.

உலகத்துக்கே பாட்டனார். தேவப் பெருமாள். எனக்கும் பாட்டனார். இது உன் சொத்துமில்லை, என் சொத்துமில்லை எல்லோருடைய சொத்து. இந்த சொத்திருக்கும் வரையில் வெறு தனமே வேண்டாம்.என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

அப்பொழுது சொல்கிறார், நீங்களெல்லாம் ஏதோ ஸம்பாதித்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எதுக்காகத் தெரியுமா? “அபிந்தந் தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்” உள்ளே ஜாடராக்நி என்று ஒன்று எரிந்து கொண்டிருக்கும். உள்ளே போடுவதை எல்லாம் அதுதான் ஜரித்துக்கொண்டே இருக்கும். அந்த ஜாடராக்நி எத்தனை போட்டாலும் கொண்டா, கொண்டா என்று கேட்டுக்கொண்டே இருக்கும்.

அக்நிக்கு ‘அநல:’ என்று பெயர். போறும் என்ற எண்ணமே அதற்குக் கிடையாது. அதனால் ‘அநல:’ அந்த தீக்கு விறகுக் கட்டை போடுவதற்காக கண்ட பேர் கால் கழுவுகிறீர்கள். நான் அதைச் செய்வதில்லை என்றார் ஸ்வாமி தேஶிகன். உள்ளுக்குள் இருக்கும் நெருப்புக்கு அது விறகு. சோறு தான் விறகுக் கட்டை. “ஶரீர பதநாவதி ப்ரபு நிஷேவணாபாதனாத் ப்ரசமதம் தநம் தந்தநம் தநம்“

இந்த தனத்தை நான் விரும்பமாட்டேன். கோவர்த்தனம் போதும் கோவர்த்தனத்தைத் தூக்கிய கண்ணன். அவன்தான் எனக்குத் தனம் அவனே எனக்குப் போதும். அர்ஜுனனுடைய தேருக்குச் சாரதியான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளாக இருக்கும் கண்ணனே தனம். அவன் கொடுத்த தனம் கீதைதான். இதுதான் எங்களுக்குத் தனமே தவிர வேறு தனம் வேண்டியதில்லை

உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம்.-உ என்பது அந்ந்யார்ஹ ஸம்பந்தம். இன்னொருத்தர்.  வீட்டு வாசலில் நிற்க மாட்டேன். எந்த தெய்வத்தையும் தொழோம், பிரபுக்களையும் தொழோம். யாரையும் தொழோம். யாரையும் திரும்ப பாரோம் என்று இருக்கிறார்களல்லவா. அந்த வைராக்யத்தோடு வாழ்வதுதான் ‘உ’ என்ற லுப்த சதுர்த்திக்குப் பொருள். மேலிருக்கிற அவதாரணம் என்று சொல்லுவர். அவனுக்கே. அற்றுத் தீர்ந்தது. இவன் மற்றப்பேருக்கு ஆளாக மாட்டான். அவனுக்கே. அப்படின்னு சொல்கிறது ‘உ’.

கனவன் – மனைவி உறவு-அவனுக்கே என்றவுடன் நமக்கு என்ன ஞாபகம் வரும். . கணவன் மனைவி உறவுதானே. உலகில் மற்ற எல்லா உறவுகளையும் விட இந்த மனைவி கணவனுக்கென்றே தான் இருக்கப் போகிறாள். அடுத்த வீட்டுக்காரனையோ, எதிர்த்த வீட்டுக்காரனையோ திரும்பி பார்க்கமாட்டாள். அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்கட்டும், எவ்வளவு படித்தவனாக இருக்கட்டும் என் கணவன் எனக்குக் கணவன். அதில் தான் இவளுக்கு உயர்த்தி.

தேவாதாந்தரங்களைத் தொழோம்:-ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றி சொல்லிகொண்டே இருப்பர். இவர்கள் எல்லாம் மற்ற கோவிலுக்குப் போவதில்லை. ஆனால் மற்றபேர் மட்டும் விஷ்ணு கோவிலுக்கு வருகிறார்களே என்று கேட்பர். குறுகிய கண்ணோட்டம். அவர்களுக்குப் பரந்த நோக்கம் இல்லை என்றெல்லாம் குறை சொல்லுவர். ஒரு மனைவி தன் கணவனுக்காகவே இருந்தாள். இது என்ன குறுகிய கண்ணோட்டம் என்றா சொல்வர். அப்படிக் கேட்டால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவர்.

அதுபோலத்தான் வேறு கோயிலுக்கு போகமாட்டேன் என்கிறார்களே என்ற கேள்வியும்.கணவனுக்கு மட்டுமே இருக்கிறாள் மனைவி என்பது குறுகிய கண்ணோட்டம் என்றால் அதுவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் பரந்த கண்ணோட்டம் யாருக்கும் தேவையில்லை. ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷ்ணு கோவிலுக்கு மட்டுமே போவதும். குறுகிய கண்ணோட்டமாகாகவேதான்  இருந்துவிட்டுப் போகட்டும்.

அனைவருக்கும் அவனே கணவன்:-கணவன் நாராயணன் என்று புரிந்துகொண்டுவிட்டால், மனைவி ஜீவாத்மா என்றால் அந்த வட்டம் குறுகிய வட்டம். அதில் வேளிலே யாருக்கும் இடம் கிடையாது. அதில் அவனுக்கும் அவளுக்கும் மட்டும் இடமே தவிர, வேறு யாருக்கும் இல்லை. இதுல போய் இவங்கிட்டையும் திருமங்கல்யம் கட்டிக்கிறேனே,  மற்றவனிடமும் தாலி கட்டிக்கிறேனே என்று சொல்லுவதற்கு வழியே கிடையாது. .

‘உ’ காரம் என்ற நடு எழுத்தை, உ’ கார: அநந்யார்ஹம் நியம்யதி ஸம்பந்தமநயோ: அவனுக்கென்றே தீர்ந்திருக்கிற ஸம்பந்தத்தைச் சொல்லுமாம். பர்த்ரு – பார்யா உறவைச் சொல்லுகிறது. அவனுக்கே உரியவன்.

 நம்பெருமாளும் திருவானைக் காவலும்:-திருவானைக்காவல் என்று ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஜம்புகேஸ்வரர் க்ஷேத்ரம். பெரிய சிவ ஸ்தலம்.. அந்த ஸ்தலத்தின் பக்கத்தில் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு காண்கையில் திடீரென்று மழைவந்துவிட்டது..  ஸ்ரீரங்கம் போகமண்டபம். பெருமாள் போகி. எங்கோ மழைபெய்கிறது என்றவுடன் மணியக்கார ஸ்வாமி அக்கோவிலில் புறப்பாட்டை நிறுத்திவிடுவர்.

புறப்பாடு கண்டருள்வதில் ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிர் தேவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்  பெருமாள் கோவில்.. அது மழையோ வெயிலோ காற்றோ எது அடிச்சாலும் அந்த மூன்றரையும் மூன்றரையும் ஏழு மைல் புறப்பாடு நடந்தே தீரும். ஸ்ரீரங்கத்திலோ எங்கேயோ மழை அடிக்கிறது என்றால் புறப்பாடு நின்றுவிடும். பெருமாள் சுக போகி. தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் அல்லவோ. அவர் திருவானைக்காவல் வாசல் வழியாக ஏழிண்டிருக்கிறார். திடீரென்று மழை வந்து விட்டது. பெருமாளை ரக்ஷித்தாகணுமே.  திருவானைக்காவல் கோவிலுக்குள் கொண்டுபோய் ஏழப்பண்ணிவிட்டார்கள்.  அது சிவ க்ஷேத்ரம்.

ஸ்ரீ ராமானுஜரும் திருவானைக்காவலும்:-ஸ்ரீ ராமானுஜர் பின்னால் கோஷ்டியுடன் போய்க் கொண்டிருந்தார். அவர் உள்ளே போகாமல் வாசலிலேயே திரிதண்டத்தோடே, எழுபத்திநாலு சிம்மாஸனாதிபதிகள், எழுநூறு ஸந்யாசிகளோடே,பன்னிரண்டாயிரம் க்ரஹஸ்தர்களோடு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.

தீக்ஷிதர்கள் வாசலில் வந்து கேட்டார்களாம், என்ன ஸ்வாமி உள்ள ஏழலாமே, மழைபெய்கிறதே, நனையவேண்டாமே, மழை நின்னப்புறம் புறப்படலாமே  என்று உள்ளே  அழைத்தார்கள். இல்லை இல்லை வேண்டாம், .அடியேன் இங்கேயே இருந்துகொள்கிறேன் என்றார் ராமானுஜர்.

மறந்தும் புறந்தொழா மாந்தர் அல்லவோ. “திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்” திருமழிசை ஆழ்வார் அழகாக ஸாதித்துப் போந்தார். “அரவணைமேல் பேராயர்க்காட்பட்டார் பேர்” இந்த ஸ்ரீவைஷ்ணவர்களை எமன் மறந்தும் பார்க்கவே மாட்டனாம். எனெனில் புறந்தொழா மாந்தர். திரும்பியே பார்க்கிறதில்லை. எமனையும் இவர்கள் திரும்பி பார்க்கிறதில்லை. ராமானுஜர் வாசலிலே நின்றுவிட்டார்.

நம்பெருமாளும் யதிராஜரும்:-தீக்ஷிதர்கள் எல்லாம் வந்து ராமானுஜரிடம் கேட்டார்கள், பெருமாள், உங்கள் தெய்வம் அரங்கனே உள்ளே வந்துவிட்டார். அதுக்குமேலே உங்களுக்கு என்ன இப்பொ, நீரும் வரலாமே” என்று கேட்டனர் உடையவரிடம். .

அதற்கு ஸ்வாமி பாஷ்யகாரர், அழகாக பதில் சொன்னார், “கணவன் அப்படி இப்படி வாசலில் போய் திரிந்தார் என்பதற்காக மனைவி தானும் தேடிண்டு போய் நான் பார்த்தது கிடையாது.  பெருமாள் கணவன், பர்த்தா, எதுவும் அவனுக்கு ஒக்கும். நான் மனைவி எனக்கு அவன் மட்டுமே ஒக்கும்.மற்ற ஒன்றையும் நான் திரும்பிப் பார்க்கமாட்டேன்.

நம் பாரத்தேசத்துப் பெண்கள் எல்லாம் கணவன் தவறிழைத்தான் என்பதற்காக தானும் தவறிழைக்கலாம் என்று நினைக்கிற அன்று நானும் இந்த கோயிலுக்குள் வருகிறேன். அது வரை வருவதாயில்ல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாமி.  பழையபடி அந்தக் குறுகிய கண்ணோட்டம் என்பர். “எம்பெருமானே அந்த  கோவிலுக்குள் போனாலும் அவன் அடியார்கள் அதற்குள் போவதில்லை. எம்பெருமான் போவதற்குக் காரணம் என்ன? எல்லாமே அவர்க்கு ஒக்கும். ஏனெனில் எல்லாமே அவருக்குச் சரீரம், சிவனும் அவருக்குச் சரீரம், பிரம்மாவும் அவருக்குச் சரீரம்.

அக்னி:-அக்னி இருக்கிறது. எந்த ஒசந்த பதார்த்தைப் போட்டலும் எரித்துவிடும். எந்த தாழ்ந்த குப்பை செத்தையைப் போட்டாலும் எரிக்கும். குப்பை செத்தையைப் போட்டு எரித்தது என்பதற்காக அக்னியை யாராவது குறை சொல்வார்களா? சொல்லமாட்டார்கள். அக்னியுடைய தூய்மை என்னிக்குமே தூய்மைதான். அதேசமயம் குப்பை செத்தையை வீட்டில் கோண்டுவந்து வைக்கலாமா. நாறிவிடும்.

ஏன் ஸ்வாமி இப்படி. அக்னி மட்டும் குப்பை செத்தையுடன் சேர்ந்தால் நாறவில்லையே என்று கேட்டால் என்ன வித்யாசமோ அந்த வித்யாசம்தான் பகவான் எங்கும் போவதற்கும் நாம் போவதற்கும். அவன் அக்னியைப் போலே. அவர் பிரபு. எதுவும் அவனுக்குத் தகும். நமக்கு அவன் மட்டுமே தகும். வித்யாஸத்தை நன்கு அடியார்கள் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். “எம்பெருமான் கோவிலுக்குள் போகலாம். அவன் பர்த்தா, ஒதுங்கலாம், நான் பார்யை, பத்தினி எங்கும் ஒதுங்கக் கூடாது” என்றார். அவனுக்கே ஆட்பட்டவள். இது பர்த்தா – பார்யா ஸம்பந்தம். உ காரத்தாலே பர்த்தா பார்யா ஸம்பந்தம் சொல்லிற்று..

  1. மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி-மகாரத்தால் ஞேய – ஞாத்ரு ஸம்பந்தம்.

இப்பொழுது ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லப்போகிறார். என்னத்துக்காக இந்த ஜீவாத்மா  ஞானத்தோடு இருக்கிறார். ஞானத்துக்கு ஒரு விஷயம் வேண்டும். இது புஸ்தகம் என்று தெரிந்துகொண்டாலோ, இது கடிகாரம் என்று தெரிந்துகொண்டாலோ ஞானமா? ஞானம்தான். இந்த ஞானம் எல்லாம் மோக்ஷம் வாங்கிக் கொடுக்கப்பொவதில்லை. பின் எந்த ஞானம் மோக்ஷத்தைக் கொடுக்கும். . அர்த்தபஞ்சக ஞானம். இந்த ஐந்தைப் பற்றிய ஞானம் இருந்தேயாகவேண்டும்.

மிக்க இறை நிலையும், மெய்யா உயிர் நிலையும் *

தக்க நெறியும், தடையாகித் – தொக்கியலும்*

ஊழ்வினையும், வாழ்வினையும், ஓதும்

குருகையர்கோன் * யாழினிசை வேதத்தியல்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச பிரத்யகாத்மான

ப்ராப்த்யு பாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்தி விரோதி ச – வதந்தி சகலா வேதா: ஸேதிகாஸ புராணகாமுநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஐந்தைப் பற்றிய ஞானம். அதில் பரமாத்ம ஞானம் முதல்.அவனைப் பற்றிய ஞானம் நமக்கு முதலில் இருக்கவேண்டும். இந்த ஜீ(வாத்மா ஞாதா.கீழேயே மூன்று சொல்லப்பட்டதல்லவ? ஞானம், ஞாதா, ஞேயம் – அறியப்படுபவன் பரமாத்மா. அறிபவன் ஜீவாத்மா. அறிவிப்பது ஞானம். இந்த மூன்றையும் சேர்த்துப் பார்த்தோம் இல்லையா?

உலகில் எதைச் சொன்னாலும் மூன்று உண்டு.அதேபோல்தான் இங்கு ஞாதா, ஞானம், ஞேயம். இந்த ‘ம’ காரத்தாலே ஞாத்ரு – ஞேய ஸம்பந்தம். ஜீவாத்மாவால் பரமாத்மா அறியப்படுபவன். என்று இந்த எழுத்துச் சொல்லும்.

எங்கிருந்து இந்த விவரணம் கிடைத்தது. ம என்ற எழுத்தாலே இந்த பொருள் வருமா என்று தோன்றும். இருக்கு. ‘மனஜ்ஞானே’ – ‘மனு அவ போதனே’ கீழே அ காரத்துக்கு அவ ரக்ஷணே  என்ற தாது.பார்த்தோமில்லையா? அதுபோல மகாரத்துக்கு மன ஜ்ஞானே என்பது தாது.  ஞானம் படைத்தவன் ஜீவாத்மா. அவ போதனே – இவன் ஆராய்ச்சி பண்ணி, ஆராய்ச்சி பண்ணி ஞானத்தை சம்பாதிப்பவன் ஜீவாத்மா.. இந்த இரண்டு அர்த்தமும் மகாரத்துக்கு உண்டு.

அப்ப ஞானத்தைச் சம்பாதிப்பவன் என்றால் ஜ்ஞாதாவாகிறான் ஜீவாத்மா. அறிவாளி. எதைப் பற்றிய ஜ்ஞானம்? பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை சம்பாதிக்கிறான். வேறு எதைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொண்டாலும் அது ப்ரயோஜனமில்லை. ஐந்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் முதல் பரமாத்மாவைப் பற்றிய ஞானமே

‘ம’ என்ற எழுத்தால் ஞாத்ரு – ஞேய – ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

பிதா ச ரக்ஷ:ஶேஷி, பர்த்தா, ஞேய: என்று 5 ஸம்பந்தம். ஜீவாத்மா அறிவாளி. பரமாத்மாவை வேதத்தைக் கொண்டு அறிகிறான். ஞாதா – ஞேயம் என்ற ஸம்பந்தத்தை மகாரம் சொல்லும். ‘ஓம்’ என்பதில் ஐந்து ஸம்பந்தம் முடிந்தது

  1. நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி–நம:    ம: மு , ந – ம: எனக்கு, மு – நான், ந அல்லேன், நம: எனக்கு நான் அல்லேன். எனக்கு நான் அல்லேன். அப்ப நீ யாருக்கு ஸ்வாமிக்கு. ஸ்வாமி சொத்து ஸம்பந்தம் கிடைக்கிறது. பூ (புஷ்பம்) எனக்கு நான் என்று சொல்லிக்காது. என் வீடு எனக்கு நான் என்று சொல்லிக்கொள்ளாது. எதுவும் எனக்கு நான் என்று சொல்லிக்காது. அர்ச்சனை செய்கிறோம். ராமாய நம: என்கிறோம். ஸ்ரீ ராமனுக்காகவே நான். எனக்கு நான் அல்லேன். நான் கண்ணனுக்காக எனக்கு அல்லேன். ஸ்ரீ ராமானுஜருக்கே நான். எனக்கு அல்லேன். இவர்களுக்காகவே நான், எனக்கு அல்லேன் என்று சொல்வது தான் நம: என்பதின் பொருள். எனக்கு அல்லேன் என்று சொல்லிவிட்டால் அவன்தான் என்றாகிறது அல்லவா? இதிலிருந்து அவன் தான் ஸ்வாமி – நான் சொத்து என்றாகின்றது.

ஸ்வாமி (ப்ரஹ்மம்) – சொத்து .(ஜீவாத்மா). ஸ்வாமி தான் சொத்தைப் பற்றிக் கவலைப் படவேண்டும். சொத்து தனக்காகத் தான் கவலையே படாது. நாமல்ல. ஸ்வாமிதான் நமக்காக கவலைப் படுவார்.

ஸ்வாமி – சொத்து என்றால் வீடு, கார்  போலவா?–ஒரு வீடு. யாரோ ஒருவரை குடித்தனம் வைத்தேன். வீடு குடியிருக்கறவருக்கே சொந்தம் என்று சொல்லி,  காலி செய்யமாடேன் என்று.  நீதிமன்றம் போய்விட்டார்.. வக்கீலைவைத்து நான் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன். வீடு கவலையே படாது. எங்கிட்ட இருந்தாலும், குடித்தனக்காரரிடம் இருந்தாலும் கவலைப் படாது. நான் ஜயித்து வீடு என் கைக்கு வந்தபிறகு நல்ல வேளை, நாம் முதலாளி கையில் சேர்ந்துவிட்டோம் என்று சந்தோஷப் படுமா? இல்லை. பிறத்தியாரிடம் இருக்கும்போது அது அழவும் இல்லை. என்கிட்ட வந்ததால் அது சிரிக்கவும் இல்லை. வந்து சேருவதற்கு அது முயற்சியை எடுக்கவும் இல்லை. சொத்து என்பது தனக்காக இருக்காது.பிறருக்காகவே இருக்கும்.

அதே போல இந்த ஜீவாத்மாவும் ‘நம:’ தனக்காக இல்லை. என்றால் ஸ்வாமிக்காகவே இருந்தாக வேண்டும் அல்லவா? அதைத் தான் அழகாகச் சொல்லும் சாஸ்திரம், “ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்”-சொத்தாக இருக்கும் தன்மை ஜீவாத்மாவுக்கே உரியது. ஸ்வாமியாக இருக்கும் தன்மை ப்ரஹ்மத்துக்கே உரியது.. ஜீவன் ஒரு நாளும் ஸ்வாமி ஆகாது. அவன் ஒருநாளும் சொத்து ஆக மாட்டான்.

பகவான் சொத்தாவான். யாருக்கு?  அடியார்களான பாகவதர்களுக்கு அவன் சொத்தாகிறான். ஸ்வாமி தேஶிகனின் திருவாக்கு பார்த்தோம் அல்லவா? தேவ பெருமாள்தான் தன் சொத்து என்றார்.. ஸ்வ- ஸ்வாமி – எது நியாயம். அடங்கினவனுக்கு அவன் சொத்தாக இருக்கிறான். அடங்காதவனுக்கு நெருங்கமாட்டான். ஆழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில்;

அகலில் அகலும் அணுகில் அணுகும் 
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

நான் பிரிந்து பிரிந்து போனால் அவன் விலகி விலகிப் போவான். நாம் கிட்டக்க போனால் அவனும் கிட்டக்க வருவன். வெட்டிண்டு போனால் வருத்த்த்தோடே விலகி இருப்பன். நாம் அவனை நெருங்குகையில் நம்முடையவன் என்று அவன் நினைக்கிறான். நாம் சொத்து – அவன் ஸ்வாமி.

நமஸ் ஸாலே ஸ்வாமி – சொத்து ஸம்பந்தம் சொல்லிற்று, ஆறாவது அர்த்தம் சொல்லப்பட்ட்து..

ஏழாவது ஸம்பந்தம்:

நாராயணாய – மூன்றாகப் பிரித்தால்::-நார + அயன + ஆய – நாராயணாய, நாராயணாய என்ற பதம் மூன்றாகப் பிரிக்கப் படுகிறது. மூன்று சம்பந்தங்கள் சொல்கிறது.

‘அ’காரம் = நாராயணாய என்று சொல்கிறது. ஆகவே ‘அ’ காரத்தில் ‘ஆய’ லுப்த சதுர்த்தி. சம்ஸ்க்ருத இலக்கணத்தின்படி இருந்தாகணும். “நாராயணாய”வில் உள்ள ஆய என்ற விபக்தி ஸ்தானப் ப்ரமாணத்தால் ஓம் இல் உள்ள ‘அ’ காரத்தில் லுப்த சதுர்த்தியாக, (ஏறி கழிந்த சதுர்த்தியாக) எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று முமுக்ஷுப்படியில் பிள்ளைலோகாசாரியார் வியாக்யானம் பண்ணியுள்ளார். அ என்பது நாராயணாய வின் சுருக்கம்.

ஆனையாட்டம் பெரிய நாராயணாய பின்னால் வரும். அதற்கு மணியோசைபோல ‘அ’காரம் வருகிறது. அ முதலிலே, நாராயணாய பின்னால் வருகிறது. பின்னாடி வரும் ‘நாராயணாய’வில் நான்காம் வேற்றுமை உருபு இருக்கிறதல்லவா? சம்ஸ்க்ருத வியாகரணத்தின் படி முதலில் இருக்கும் ‘அ’ காரத்தில் நான்காம் வேற்றுமை உருபு இருந்தே ஆக வேண்டும். அது ஏறிக் கழிந்துள்ளது, லுப்த சதுர்த்தி என்று பார்த்து விட்டோம்.

நார – நித்ய வஸ்துக்களின் திரள்:-நார – ஸ்ரீமன் நாராயணனைத் தவிர இதர நித்திய வஸ்துக்களின் திரள். தன்னைக் காட்டிலும் வேறுபட்ட நித்திய வஸ்துக்கள் அவரைத் தவிர அனைத்தும் நார ஸப்தத்தால் குறிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜர் விடாமல் “ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண:” தன்னைத் தவிர உள்ள அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணன் என்கிறார்.

ரிங் க்ஷயே என்பது தாது.  ர – என்றால் அழிவது ந என்றால் இல்லை.  நார என்றால் அழியாததுகளின் கூட்டம். நித்ய வஸ்துக்களின் திரள். எது அழியாது. பெருமாளின் திருமேனி அழியாது. பெருமாளின் குணங்கள் அழியாது. பிராட்டி அழிய மாட்டார். ஏன்? நான் அழிய மாட்டேன், நீங்களும் அழிய மாட்டீர்கள். பூமியும் அழியாது. எதுவுமே அழியப் போவதில்லை. சேதனாசேதனங்கள் அத்தனையும் அழியாது. சித் – அசித்  இது இரண்டின் மொத்தக் கூட்டமும் நார ஸப்தத்துக்குள் அடக்கம்.

அயன = ஆதாரம்-அயன – ஆதாரம்.  இங்கு அமர்ந்திருக்கிறோம். அது ஆதாரம், தரை ஆதாரம், தரைக்குத் தூண் ஆதாரம். தூணுக்கு ஆதாரம் அடித் தளம். அடித் தளத்துக்கு ஆதாரம் பூமி தேவி. ஒரு வஸ்து என்று இருந்தால் அதைத் தாங்குவதற்கு ஒன்று இருந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது நாரங்கள் என்ற நித்திய வஸ்துக்களின் திரளுக்கு ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அயனம் என்றால் ஆஶ்ரயம். அவர் தான் நாராயணன். அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்துக்கும் ஆதாரம்.

கைங்கர்யமே பரம ப்ராப்தி:-ஆய – அந்த நாராயணனுக்காகவே கைங்கர்யம் பண்ணுவது எனக்கு ஸ்வரூபம். நான் தொண்டு புரிய வேண்டும். “தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க” என்று முக் கரணங்களாலும் அவருக்குக் கைங்கர்யம் பண்ணணும். அதைப் பார்த்து அவர் ஆனந்தப்பட வேண்டும்.   கைங்கர்யத்தின் மூலம்  அவனது முக மலர்த்தி பெறுதல். நார – அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்கள். அயன – இருப்பிடம். ஆய – அவனது முக மலர்த்திக்காகவே கைங்கர்யம் செய்தல். அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிற அனுபவம் ‘ஆய’ பதத்தால் சொல்லப் படுகிறது.

  1. நார பதத்தாலே -ஶரீர ஶரீரி சம்பந்தம் சொல்லி   —நார என்றல் நித்ய வஸ்துக்களின் கூட்டம் என்று பார்த்தோம். இது இத்தனையும் ஶரீரம். அப்பொழுது பெருமாள் ஶரீரி. என்பதால் ஶரீரி – ஶரீர  ஸம்பந்தம்., ஶரீர ஆத்ம ஸம்பந்தம். ‘மம ஆத்மா’ என்று சொல்லி இருக்கிறார் அல்லவா? பகவான் ஆத்மா, ஜீவன் உடல். அவனைத் தவிர அனைத்தும் ஶரீரம். அவனது திருமேனி மட்டும் அவனுக்குச் சரீரம் அல்ல. பிராட்டிமார் மட்டுமல்ல. உலகத்தில் இருக்கும் சித் அசித் கூட்டங்கள் அனைத்தும் அவனுக்குச் ஶரீரம். நித்ய வஸ்துக்களின் திரள் அனைத்துக்கும் ஶரீரம். அனைத்தும் பிரஹ்மத்துக்குச் ஶரீரம். ஶரீர – ஆத்ம ஸம்பந்த்த்தை நார பதத்தில் சொல்லியாயிற்று.
  1. அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி–அயனம்- ஆஶ்ரயம்,  இருப்பிடம் என்றலே ஆதாரம், தாங்குவது என்று பொருள். அவன் ஆதாரம். எது ஆதேயம் அவனைத் தவிர அனைத்து நித்ய வஸ்துக்களின் திரள் ஆதேயம். ஆக ஆதார – ஆதேய ஸம்பந்தம்.–ஆதாரம் பகவான் (தாங்குபவர்) – நாரம் ஆதேயம் ( தாங்கப்படுகிறோம்)  ஆதார ஆதேய ஸம்பந்தத்தை அயன பதத்தால் சொல்லியாயிற்று.
  1. ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி–ஆய –  போக்த்ரு  – போக்யம். இது வ்யக்த சதுர்த்தி.

ஆய என்பது நாம் செய்யும் கைங்கர்யம். அதனால் அவர் கொள்கிற ஆனந்தம். நாராயணனுக்காக. அவன் முக மலர்த்திக்காகவே. அனுபவிக்கிறான். எனக்காக புஷ்பம், எனக்காக சந்தனம். இது இத்தனையும் போக்யம். நான் போக்தா.

அதேபோல நாராயணாய – நாராயணனுக்காக என்று சொன்னால் நாரயணனுக்காக பிரம்மா. நாரயணனுக்காக சிவன், ராமாநுஜர், நான் அசித் அத்தனையும் நாராயணனுக்காகவே. இவை அத்தனையும் போக்யம்.  நாராயணன் போக்தா. இந்த .போக்த்ரு –போக்ய ஸம்பந்த்த்தை “ஆய” பதத்தால் ஸாதித்தார்.

நார என்பதால் ஶரீர – ஶரீரி ஸம்பந்தம், –அயன பதத்தால் ஆதார – ஆதேய ஸம்பந்தம், –ஆய பதத்தால் போக்த்ரு – போக்ய ஸம்பந்தம் சொல்லியாயிற்று.

ஆக -ப்ரதம ரஹஸ்யம் -திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

ஓம் நமோ நாராயணாய, மூன்று பதம் எட்டெழுத்துக்கள். ஓம் – அ+உ+ம, நம:, நார+ஆயனம்+ ஆய. அவ ரக்ஷணெ என்ற தாது அ காரத்தில் ஏறிக் கழிந்துள்ளது.

1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போக்ய சம்பந்தம் சொல்லி

திருமந்திரத்தால் நவ வித ஸம்பந்தம் சொல்லியாயிற்று.. ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தின் திரண்ட பொருள் நவவித ஸம்பந்தம்.

நம்மாச்சார்யர்கள் பிரதம ரஹஸ்ய தாத்பர்யமான நவவித சம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்ய அனுசந்தேயம் என்று அனுசந்தித்தும் உபதேசித்தும் போருவர்கள் 

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading