ஸ்ரீ பெரிய மொழி -1-9—தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

அவதாரிகை :-

கீழ்த் திருமொழியில், பாசுரந்தோறும் “திருவேங்கடமடை நெஞ்சமே! – திருவேங்கடமடை நெஞ்சமே!” என்று சொல்லித் திருமலையை ஆச்ரயிக்குமாறு தம் திருவுள்ளத்தைத் தூண்டினார். அதுவும் அப்படியே இசைய, “யானுமென்னெஞ்சமிசைந் தொழிந்தோம்” என்றாற்போலே இருவரும் கூடித் திருவேங்கடமுடையானை அநுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தனர்.

ஸர்வஸ்வாமியாய் ஸர்வவிதபந்துவான திருமால் இங்கே நித்யவாஸம் செய்தருளுகிறபடியாலே நம்முடைய அபேக்ஷிதங்களெல்லாம் இங்கே பெறலாமென்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார்.

இப்படி வந்த ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தல் அணைத்தல் மதுரமாகவொரு வார்த்தை சொல்லுதல் குசலப்ரச்நம் பண்ணுதல் கைங்கரியத்திலே ஏவுதல் ஒன்றுஞ்செய்திலன் திருமலையப்பன்.

அதனால் ஆழ்வார் மிகவுந் திருவுள்ளம் நொந்து ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் நமக்கு வகுத்தநாதனாய் பிராட்டியை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதானாயிருக்குமிப்பெருமான் இப்போது நம்மை உபேக்ஷித்திருப்பதற்குக் காரணம் நம்முடைய கனத்த பாவங்களேயாகவேணும்; மஹாபாபியான இவனை நாம் கடாக்ஷிக்கலாகாதென்று திருவுள்ளம்பற்றியிருக்கிறான் போலும்’ என்று நிச்சயித்து, அப்பெருமான் திருவுள்ளத்திலே இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார்.

பந்துக்களல்லாதாரை பந்துக்களாக நினைத்தும், போக்யமல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும், ஜீவஹிம்ஸைகளை அளவறப்பண்ணியும், இன்னமும் பலவகைப்பாவங்களைச் செய்தும் காலம் கழித்தேனாகிலும், இப்போது உன்னை விட்டுத் தரிக்கமாட்டாத அன்பு பிறந்ததனால் அநுதாபத்துடனே இவ்விடம் வந்து சேர்ந்தேன்;

இனி என்னுடைய முன்னைத் தீவினைகளைப்பார்த்துக் கைவிடலாகாது; நீயோ ஸர்வரக்ஷகன்; நானோ அநாதன் அநந்யகதி; என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்குப் பிராட்டியும் – அகலகில்லேனிறையுமென்று திருமார்பிலே உறையாநின்றாள்;

ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனைக் கைக்கொண்டருளவேணுமென்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திருவடிகளிலேவிழுந்து சரணம்புகுகிறார்.

ஒன்பதாம் பாட்டிலே “மாயனே எங்கள் மாதவனே!” என்று பிராட்டி ஸம்பந்தம் ப்ரஸ்துதமாயிருக்கையாலே புருஷகாரம் முன்னாகச் சரணம் புகுகிறாரென்பது விளங்குமிறே.

——-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

பதவுரை

வேய் ஏய்

மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூ பொழில் சூழ்

பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
விரை ஆர்

பரிமளம் விஞ்சியிருக்கிற
திருவேங்கடவா

திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும்

தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
நோய் பட்டு ஒழிந்தேன்

அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன்

நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால்

(அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன்

உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
என்னை

சரணாகதனான என்னை
நல்கி

கிருபை செய்து
ஆள் கொண்டருள்

அடிமை கொண்டருளவேணும்.

1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே”

2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே

உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்;

அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.

“இப்படி ஆபாஸபந்துக்களை நம்பினபடி யாலன்றோ நமக்குக் கஷ்டங்கள் நேர்ந்தன; நிருபாதிகபந்துவான எம்பெருமானைப்பற்றினோமாகில் ஒரு குறையுமிராதே” என்று இன்று நல்ல புத்தியுண்டாயிற்று.

பரமபோக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டுத் திருவடிகளிலே விழுகின்றேன்; அடியேனுடைய முன்னைத்தீவினைகளைக் கணிசியாமல் சரணாகதன் என்பதையே குறிக்கொண்டு பர​மகிருபையுடன் அடிமை கொண்டருள வேணும் என்று பிரார்த்தித்தாராயிற்று.

நாயேன்=நாய் போலே நீசன் என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணுகிறபடி.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளையருளிச்செயல் பாரீர்-; “(நாயேன்.) நான் செய்து கொண்டபடியைப் பார்த்தால் பிறர்க்குமாகேன், தேவரீர்க்குமாகேன். புறம்போக்கில் கல்லையிட்டெறிவர்கள். உள்ளே புதரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டிவரும்.”

ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே ராஜாதிராஜனான நீயும் என்னை மேல் விழுந்து விரும்பவேணுமென்பது உள்ளுறை…

———

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

பதவுரை

தேன்ஏய்

வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ்

பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை

திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய்

ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து

இப்பெரிய பூமண்டலத்திலே
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு

மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு,
நாநாவித நரகம் புகும் பாவம்

பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை
நானே செய்தேன்

நானொருவனே செய்து வைத்தேன்;

(ஆகிலும் இன்று அநுதாபம் பிறந்தமையாலே)

வந்து அடைந்தேன்

உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;

போக்யமல்லாத துர்விஷயங்களை போக்யமென்று கொண்டிருந்த குற்றங்களைப் பொறுத்தருள வேணுமென்று சரணம் புகுகிறாரிதில்.

நெஞ்சு நஞ்சாயிருக்கச் செய்தேயும் வெளிநோக்கை வெகு அழகாகச் செய்து ஆண்பிள்ளைகளை ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண்வலையிலே அகப்பட்டு, அந்த மாதர்களை ஆராதிப்பதே பரம ப்ரயோஜநமென்றுகொண்டு, அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமுஞ் செய்து தீர்த்தேன்;

‘உள்ள நரகங்கள் போராது, இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும்’ என்னும்படி எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன்.

‘போக்யமல்லாத விஷயங்களிலே ப்ரமித்து ஈடுபட்டு அநர்த்தங்களை விளைத்துக்கொண்டோமே!’ என்று அநுதாபம் தோன்றியதனால், பரமபோக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மைபெறுவோமென்று நன்மதி உண்டாகி, போக்யதைக்கு எல்லை நிலமாகவுள்ள திருமலையிலே எழுந்தருளியிருக்குமிருப்பிலே வந்து சரணம் புகுந்தேன்;

பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டருளவேணுமென்று பிரார்த்திதாராயிற்று.

நானே நாநாவிதநரகம் புகும்பாவஞ் செய்தேன் = சேதந​வர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப்போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று சொல்லிக்கொள்ளுகிறார்.

“ஈச்வரனுக்கு ஜகந்நிர்வாஹம் நடக்கவேண்டில் வேறே சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேணும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல்.

நாநா விதநரகம் = வடமொழித் தொடர்.

என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி.

“தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர்.

“என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.

2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.

3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.

4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.

5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.

6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.

8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.

9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.

10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.

11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.

12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.

13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க…

————-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

பதவுரை

குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா

மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால்

விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு

யாசித்தவர்களுக்கு
இனிது ஆக

மதுரமாக
என்றேனும்

ஒருநாளும்
உரைத்து அறியேன்

பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை

பல பிராணிகளை
கொன்றேன்

கொலைசெய்து முடித்தேன்;
அன்றே

அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.

குறிக்கோள் ஒன்றிலாமையினால் பல்லுயிரைக் கொன்றேன் = குறிக்கோளாவது நம்பிக்கை; தேஹத்திற்காட்டிலும் வேறான ஆத்மா உண்டென்றும் தெய்வமுண்டென்றும் சாஸ்த்ரமுண்டென்றும் புண்யபாபங்களுண்டென்றும், பாபப்பலன்களை அநுபவிக்க நரகமுண்டென்றும் இவையொன்றிலும் நம்பிக்கையில்லாதவனாகையால், இவ்வளவென்று கணக்கிடமுடியாதபடி எல்லையில்லாத ஜீவராசிகளைக் கொலை செய்தேன்;

உகந்த பெண்களை திருப்தி செய்விப்பதற்குப் பொருளீட்டுவதற்காக வழிமறித்துப் பிராணிகளைக் கொன்றேனாகிலும், பிறகு கூடியிருந்து குலாவும்போது ‘தேஹி’ என்று ஒரு கவளமிரந்தவர்களுக்கு ஒருநாளாகிலும் ஐயமிட்டிருப்பேனோ, அதுவுமில்லை;

இடாவிடினும் “அப்பா! இப்போது கையில் ஒன்றுமில்லை; மற்றொரு போது வந்தால் பார்ப்போம்” என்று தேனொழுக வார்த்தையாவது சொல்லிவிடலாமே, அதுவும் செய்திலேன்.

“இந்த பாவியினிடம் வந்து யாசித்தோமே!” என்று வாழ்நாளுள்ள வரையிலும் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கும்படி மிகவும் திரஸ்காரமான வார்த்தைகளைச் சொல்லி வெருட்டினே னென்கை.

இப்படி பலபாவங்கள் செய்து போந்தேனாகிலும் சரணம் புகுந்துவிட்டேனாகையால் அடியேனைக் குளிரநோக்கி அடிமை கொள்ள வேணுமென்றாராயிற்று.

“இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானித்தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாப​ம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்., (உதிரக்கை – கொலைசெய்ததனால் ரத்தமயமான கை.)

————-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

பதவுரை

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா

பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும்

எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன்

பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன்

ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன்

நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்
அலந்தேன்

பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன்
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆட்கொண்டருள்-.

அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.

இன்னமும் பிறவிகள் பிறக்க வேண்டும்படியான கரும சேஷமிருந்தாலும் பிறப்பதற்கு சக்தியில்லாதபடி மிகவும் மெலிந்துபோனேன்.

இப்படிப் பலபல யோனிகளிற் பிறந்து வருகிற நாளிலே நடுவே ஒரு ஸுக்ருதமாகிலும் செய்ததுண்டோவென்னில் அஜ்ஞாதம் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகம் – ஒன்றிலும் அந்வயமுடையேனல்லேன்.

அஜ்ஞாத ஸுக்ருதமாவது இது ஒரு நல்ல காரியமென்று தனக்கும் தெரியாமல் நேரும் ஸுக்ருதம்; ஒரு பசுவைக் கொலைசெய்யத் துரத்திக்கொண்டுபோம்போது அப்பசு ஒரு பகவத்சந்நிதியை வலஞ்செய்து கொண்டுபோக, அதை பின் தொடர்ந்துபோமவனுக்கு பகவதாலேயே ப்ரதக்ஷிணமாகிற ஸுக்ருதம் தனக்குத் தெரியாமலே நேருவதுண்டிறே.

யாத்ருச்சிகஸுக்ருதமாவது-தான் எதிர்பாராமலிருக்கச் செய்தே பார்த்ததாக நேரும் ஸுக்ருதம். பகவத்பாகவதர்களை ஸேவிக்க வேணுமென்கிற எண்ணமில்லாமல் கொள்ளைகொல்லப் போமிடத்தில் பகவத் பாகவத ஸேவையும் கிடைப்பதுண்டிறே.

ப்ராஸங்கிகஸுக்ருதமாவது-வேறோரு காரியத்தைச் செய்யும்பொழுது இதுவுங்க்கூட இருக்கட்டும் என்று செய்யுமது. வெங்காயச் செடிக்குத் தண்ணீரிறைக்கும்போது, “தாஹித்தவர்களும் இந்த நீரைப்பருகிக் களைப்பாறுக” என்றெண்ணி இறைப்பதுண்டிறே.

இப்படிப்பட்ட ஸுக்ருதங்களொன்றிலும் அந்வயமுடையனல்லேனாயினும் “இனி நமக்கு ஒரு பாபமும் செய்ய சக்தியில்லை; இளைத்துத் திருவடிகளிலே வந்து விழுந்து விட்டேன்: பழைய குற்றங்களைப் பாராமல் அடியேனை அடிமை கொண்டருள வேணுமென்றாராயிற்று.”

நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் என்றதன் கருத்து:- மேகங்கள் கழுத்தளவும் நீரைப்பருகி, நீர்க்கனத்தாலே கால்வாங்கிப் போகமாட்டாமல் நகர்ந்து நகர்ந்து துளித்துத் துளித்துக்கொண்டு ஸஞ்சரித்த அடையாளம் வழிகளிலே விளங்காநின்றதென்கை

———————————————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

பதவுரை

செப்பு ஆர் திண் வரை சூழ்

அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட
திரு வேங்கடம் மா மலை

திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற
என் அப்பா

என் அப்பனே
துப்பா

ஸர்வசக்தனே!
எப்பாவம் பலவும் இவையே செய்து

பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி
இளைத்தொழிந்தேன்

துக்கப்பட்டவனாய்
நின் அடியே

உனது திருவடிகளை
தொடர்ந்து

அநுஸரித்து
ஏத்தவும்

துதிக்கவும்
கிற்கின்றிலேன்

சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.

பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம்! என்ன செய்தோம்!!’ என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.

கைசலியாமல் பாவங்களைச் செய்ததனாலுண்டான இளைப்பு எப்படிப்பட்டதென்றால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத அசக்தியாயிற்றுக்காண்.

ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேனாகையால் அடியேனை அடிமை கொண்டருளவேணும்.

துப்பன்-ரக்ஷிப்பதற்குப் பாங்கான சக்தியையுடையவன்.

செப்பார் திண்வரை சூழ் = ஆபரணம் முதலியவற்றை ரக்ஷிக்கும்படியான ஸம்புடத்திற்குச் செப்பு என்று பேராகையாலே, லக்ஷிதலக்ஷணையாலே, “செப்பு ஆர்-அரணாகப் போரும்படியான” என்றுரைக்கக் குறையில்லை.

———————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

பதவுரை

விண் ஆர் நீள் சிகரம்

ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர்

பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா

ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்

பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்
புண் ஆர்

புண்கள் நிறைந்ததுமான
ஆக்கை தன்னுள்

சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு)
புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்

கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன்

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.

1. “தீண்டாவழும்பும் செந்நீரும் சீயு நரம்பும் செறிதசையும், வேண்டாநாற்றமிகுமுடல்” என்றபடி புண்கள் நிறைந்து கிடக்குமிது.

இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன்; இனி ஒரு சரீரத்தையும் பரிக்ரஹிக்க சக்தியில்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி உன் திருவடிவாரத்திலே வந்துவிழுந்தேன், அடிமை கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

—————-

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

பதவுரை

கரி சேர்

யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ்

அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா

திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே

ஹரியே!
பாலகன் ஆய்

சிறியேனாயிருந்தபோது
தெரியேன்

அறிவில்லாதவனாய்
பல தீமைகள்

பல பாவங்களை
செய்தும் இட்டேன்

செய்து தீர்த்தேன்;
பெரியேன் ஆயின பின்

யௌவன பருவ மடைந்த பின்பு
பிறர்க்கே உழைத்து

விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு
ஏழை ஆனேன்

சதிர்கெட்டுப்போனேன்;

(இப்படிப்பட்ட அடியேன்)

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்

“தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே ஸதா” என்றும்

இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லியிருப்பதற்கு எதிர்த்தட்டாக நான் இளம்பிராயத்திலே அவிவேகியாய்ப் பல தப்புக்காரியங்களைச் செய்துவிட்டேன்;

பிறகு யௌவனம் வந்து முகங்காட்டினவாறே, எந்த வஸ்துவைக்கண்டாலும் ‘இது அவளுக்காகும், இது அவளுக்காகும்’ என்றே கொண்டு பலவற்றையும் மாதர்க்காகத்தேடித்திரிந்து அலைந்து சதிர்கேடனானேன்;

போன காலமெல்லாம்பழுதேபோனாலும், இனியாகிலும் ப்ராப்தவிஷயத்திலே தொண்டு பூண்டமுதமுண்ணப்பெறலாமென்று திருவடிகளின் கீழே வந்து சேர்ந்தேன், ஆட்கொண்டருள வேணும் என்றாராயிற்று.

முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன் – சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்களறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன் – (சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடிபலதீமைகள் செய்து திரிந்தேன் என்கை.

அரியே! – ஹரி என்ற வடசொல் அரியெனத்திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடர்க்கவொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி – சிங்கம்)

—————

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

பதவுரை

கோல் தேன் பாய்ந்து ஒழுகும்

கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான்

அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன்

எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.
உன்னை காண்பது ஓர் ஆசையினால்

உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே
இப்பிறப்பே ஏற்றேன்

இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன்.
இடர்உற்றனன்

(இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்;

(இனி பிறவிகள் நேராமைக்காக)

வந்து அடைந்தேன்-.

அடியேனை ஆள் கொண்டருள்-.

நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.

இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டேவரச் செய்தே யாத்ருச்சிக ஸுக்ருத விசேஷத்தாலே உன்னைக் காணவேணுமென்று ஆசைபிறந்தது இப்பிறவியில்;

அதனால், இதற்குக்கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாதென்று நெஞ்சில் பட்டது.

இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகிறவற்றையும் நினைத்து ஸஹிக்கமாட்டாமல் உன் திருவடிகளை வந்து பணிந்தேன்,

அடியேனை ஆட்கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

“உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, “உன்னை ஸேவிக்கவேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப்போயிற்றேயென்று இடருற்றேன்” – என்றும் உரைப்பர்.

இதனிலும் முன்ன முரைத்த பொருளே சிறக்கும்

————-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

பதவுரை

மாயனே

ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
எங்கள் மாதவனே

எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா

மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே!
பற்று ஒன்றும் இலேன்

ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய்
பாவமே செய்து பாவி ஆனேன்

பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்
மற்று ஒன்று அறியேன்

ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்
அற்றேன்

உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு

வந்து அடைந்தேன்-;

அடியேனை ஆள் கொண்டருள்-.

உன்னுடைய ஸம்பந்தத்தை               அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.

ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமும் நிரூபகமாயினும் என் வரையில் பாபமே நிரூபகமாம்படி பாவங்களையே செய்து பாபிஷ்டனானேன்;

உன்னைப் பெறுதற்குறுப்பான உபாய விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லை;

நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாக இரா நின்றாய்;

உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப்போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம்பிறந்தாலும் பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும் * அகலகில்லேனிறையுமென்று திருமார்விலே உறையா நின்றாள்.

இப்படியிருக்குமிருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பதுண்டோ?

“பற்றிலார் பற்ற நின்றானே!” என்றபடி ஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக்கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருளவேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.

பாவமே செய்து பாவியானேன் = “‘பாவமே செய்தேன்” என்றாவது, “பாவி யானேன்” என்றாவது இரண்டத்தொன்று சொன்னால் போராதோ?” பாவமே செய்து பாவியானேன்” என்ன வேண்டுவதென்? என்னில்; கேளீர்; –

பாவஞ் செய்து புண்யாத்மாவாக ஆவதுமுண்டு; புண்யஞ்செய்து பாபிஷ்டனாக ஆவது முண்டு;

தசரதசக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்ன வண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத்வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று; பரமபதப்ராப்திக்கு அநர்ஹனாய்விட்டானிறே.

“சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலன் உள்ள தனையும் பாவமே செய்து போந்தாலும் முடிவில் நல்ல பேறுபெற்றனனாதலால் அவனுடைய பாவமெல்லாம் புண்யமாகவே ஆயிற்று.

ஆகவிப்படி பாவஞ்செய்து புண்யசாலியாவதும், புண்யஞ் செய்துபாபிஷ்டனாவதும் உண்டாயினும், நான் பாவமே செய்து பாவியானேன் -(அதாவது) தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவனல்லேன், சிசுபாலனைப்போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனுமல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாபிஷ்டனாக – என்கை.

முதலடியிலும் இரண்டாமடியிலும், ஏல்- அசைச்சொற்கள்.

இப்பாட்டில் மாதவனே! என்கையாலே பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுந்தமை விளங்கும். (மா – பிராட்டிக்கு, தவன் – நாயகன்

———————

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

பதவுரை

ஏழ் உலகுக்கு

எல்லா வுலகங்களுக்கும்
கண் ஆய்

கண் போன்றவனும்
உயிர் ஆய

உயிர் போன்றவனும்
எம்

எமக்காக
கார் வண்ணணை

மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம்

நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே
வேதியதனை

வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன்

திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
பண் ஆர் பாடல் பத்தும்

பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்
பயில்வார்க்கு

ஓதுமவர்களுக்கு
பாவங்கள் இல்லை

பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.

“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி

ஏழுலகத்தவர்க்கும் கண்போன்றவனும் உயிர்போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கைமன்னனருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடுமென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

————-

அடிவரவு:- தாய் மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன்நோற்றேன் பற்றேல் கண்ணாய் கண்.

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: