ஸ்ரீ பெரிய மொழி -1-10–கண்ணார் கடல் சூழ்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

பதவுரை

கண் ஆர் கடல் சூழ்

விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன்

லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க

திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம்

அம்புகளை
செல உய்த்தாய்

செலுத்தினவனே!
விண்ணோர் தொழும்

(பிரமன் முதலிய) தேவர்கள் வந்து ஸேவிக்கப் பெற்ற
வேங்கடம் மாமலை

திருமலையிலே
மேய அண்ணா

எழுந்தருளி யிருக்கிற பெருமானே!
அடியேன் இடரை களையாய்

என் துன்பங்களை நீக்கியருள வேணும்.

மிகப் பெரிய கடலையே அகழாகவுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய சரீரம் இருபிளவாகப் பிளவுறும்படியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே! என்று ஸ்ரீராமபிரானாக விளிக்கின்றார் திருவேங்கடமுடையானை;

அவனும் இவனும் ஒருவனேயென்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்காகவென்க.

இராவணனாலே குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்களெல்லாரும் களித்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமானே! இவ்விருள் தருமாஞாலத்தில் இருப்பு-பெருந்துக்கம் என்றுணர்ந்த என்னுடைய இவ்விடரைப் போக்கியருளாய் என்கிறார்.

கண்ஆர்கடல் = வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்படி யான (அழகிய) கடல் என்று முரைக்கலாம்.

————–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை பதிக்கு

லங்காபுரிக்கு
இறை ஆய

அரசர்களாயிருந்த
அரக்கரவர்

(மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள

கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக
கொடி

(தனக்கு) த்வஜமான
புள்

பெரிய திருவடியை
திரித்தாய்

ஸஞ்சரிப்பித்தவனே!,
விலங்கல் குடுமி

(மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள்) விலங்கிப் போகவேண்டும்படியான (உயர்த்திபொருந்திய) சிகரத்தையுடைய
திருவேங்கடம்

திருமலையிலே
மேய

மேவியிருப்பவனாய்
துளபம்

திருத்துழாயினாலாகிய
அலங்கல்

மாலையை
முடியாய்

திருமுடியிலே அணிந்துள்ளவனே!
அருளாய்

(அடியேன் மீது) க்ருபை பண்ணியருள வேணும்.

புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உறையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில்.

உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலி முதலிய அரக்கர்களை முடித்தவரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது, கண்டு கொள்க. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்திவிட்டானென்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங்கொண்டு அப்பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே யெழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றனன் என்று முணர்க. ‘இலங்கைப்பதிக்கென்று இறையாய ” என்ற பாடமும் பொருந்தும்.

குலம் மாள என்னாமல் ” குலம் கெட்டு மாள ” என்றதனால், பல அரக்கர்கள் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்களென்பதும் பலர் மாண்டொழிந்தனர் என்பதும் விளங்கும்.

விலங்கல் குடுமி = ”சேணுயர் வேங்கடம்” என்றாற் போலே திருமலையின் உயர்த்தியைச் சொல்லுகிறது இந்த விசேஷணம், வானத்தின்மீது ஸஞ்சரிக்கின்ற ஸுர்ய சந்திரர்கள் விலகிப்போகவேண்டும்படியான சிகரத்தையுடைய திருமலை என்கை. விலங்கல் என்று மலைக்கும் பேருண்டாகையாலே, குடுமி – சிகரத்தையுடைய, திருவேங்கடம் விலங்கல் – திருவேங்கடமலையிலே என்றும் உரைக்கலாமாயினும் அதுசிறவாது.

அலங்கல் துளபமுடியாய் அருளாய் = ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்கென்றே தனி மாலையிட்டிருக்கிற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய காரியமன்று; அருள் செய்ய வேண்டுமத்தனையென்கை –

——————-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

பதவுரை

நீர் ஆர் கடலும்

நீர் நிரம்பியிருக்கிற கடலையும்
நிலனும்

பூமியையும்
முழுது

மற்றுமுள்ள எல்லாவற்றையும் (பிரளயம் கொள்ளாதபடி)
உண்டு

அமுது செய்து
ஏர்

அழகியதும்
இள

இளையதுமான
ஆலந்தளிர் மேல்

ஆலந்தளிரின் மேலே
துயில்

திருக்கண்வளர்ந்தருளின
எந்தாய்

ஸ்வாமியே!,
சீர் ஆர்

சிறப்புப் பொருந்திய
திருவேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
ஆரா அமுதே

ஆராவமுதமான எம்பெருமானே!
அடியேற்கு அருளாய்

அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.

மற்ற பேர்களை ரக்ஷிக்க நான் சக்தனாயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரக்ஷித்தல் எனக்கு எளிதன்றே; இஃது அருமையான காரியமாயிற்றே!’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக;

பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்திட்டு இளையதொரு ஆலந்தளிரின் மேலே திருக்கண்வளர்ந்தருளின அகடி தகடநா ஸமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் உண்டோ ?

எல்லாம் எளிதேகாண் என்பார் போல வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார்.

அந்த சக்தி விசேஷ மெல்லாந் தோற்றத் திருமலையிலே ஸேவைஸாதிக்கின்ற என் ஆராவமுதமே! அருள் புரியாய் என்கிறார் –

————

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

பதவுரை

உறி மேல்

உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய்

நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய்

அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய்

வாமநனாகி
நிலம்

பூமியை
ஈர் அடியாலே

இரண்டடியாலே
கொண்டாய்

அளந்து கொண்டவனே!
விண் தோய் சிகரம்

பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய
திருவேங்கடம் மேய

திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற
அண்டா

தேவாதி தேவனே!
அடியேனுக்கு அருள் புரியாய்

அடியேன் மீது கிருபை செய்தருளவேணும்.

திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார்.

திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்துவைத்த நெய் முதலிய கவ்யங்களை அமுது செய்தாயென்று சொன்ன முகத்தால் ஸௌலப்ய குணத்தையும், குறளாகி மாவலியிடத்துச் சென்று நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகளந்தாயென்று சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினாராயிற்று.

திருவேங்கடமலை பூமண்டலத்திலே உள்ளதாகையாலே நம்போன்ற மனிசர்கள் சென்று ஸேவிப்பதற்குப் பாங்காயிருப்பது போல, * விண்தோய் சிகரத் திருவேங்கடமாகையாலே நித்யஸூரிகள் வந்து ஸேவிப்பதற்கும் பாங்காயிருக்கும்.

ஆனதுபற்றியே “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும்

“மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தது.

நித்யஸூரிகள் பரத்வத்திலே ஸர்வகாலமும் பழகினவர்களாகையாலே ஸௌலப்யத்தைக் காண விரும்பி வருவர்கள்; மனிசர்கள் பரத்வத்தைக்காண விரும்பிச் செல்லுவர்கள்; இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினாராயிற்று.

        ”திருவேங்கடம் மேய அண்டா என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது. அண்டன் என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர்.

”உறி மேல் நறுநெய் அமுதாக உண்ட அண்டா” என்று யோஜித்து, இடையனே! என்னுதல்;

“குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா” என்று யோஜித்து, ‘தேவனே!- பரம புருஷனே!’ என்னுதல்.

இரண்டு யோஜநையாலும் பரத்வ ஸௌலப்யங்கள் விளியிலும் விளங்கினபடி.

—————

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

பதவுரை

தூணாயதனூடு

வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய்

நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி

திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்

(தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர்

மிக்க உயர்த்தி பொருந்திய
திரு வேங்கடம் மா மலை மேய

திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும்
கோள் நாகம் அணைபாய்

மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே!
எனை

அடியேனை
நீயே குறிக்கொள்

நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும்.

பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.

“தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்னுமளவே போதுமாயிருக்க, தூணாயதனூடு = தூணாயிருக்கிற வஸ்துவினுள்ளே’ என்று சொல்லுகைக்குக் கருத்து என்னென்னில்; ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்துக் கட்டின கம்பமிது’ என்று சொல்லவொண்ணாதபடி வெறும் தூணானவதனுள்ளே என்பதாம்.

அரி-சிங்கம், பேணா அவுணன் – ஸர்வேச்வரனை மதியாத இரணியன் என்றும், பாகவத சிகாமணியான ப்ரஹ்லாதனை மதியாத இரணியன் என்றும் உரைக்கலாம்.

        சேண் = அகலம், ஆகாசம், உயர்ச்சி, தூரம், நீளம். கோள்நாகணையாய்! கோள் – மிடுக்கு; திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காவது – சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகையடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்குப் பாங்கானசக்தி.

குறிக்கொள் – ஓரடியானுமுளனென்று திருவுள்ளத்தில் வைத்திரு என்றபடி. திருவனந்தாழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய் என்பது உள்ளுறை.

————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

பதவுரை

மன்னா

நிலைத்திராத
இ மனிசப் பிறவியை

இந்த மநுஷ்யஜன்மத்தை
நீக்கி

போக்கடித்து
தன் ஆக்கி

தனக்கு ஆளாக்கிக்கொண்டு
தன் இன் அருள் செய்யும்

தனது பரமகிருபையைச் செய்கின்ற
தலைவன்

ஸ்வாமியும்,
மின் ஆர் முகில் சேர்

மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற
திருவேங்கடம்

திருமலையிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
என் ஆனை

எனது ஆனை போன்றவனுமான
என் அப்பன்

எம்பெருமான்
என் நெஞ்சில் உளானே

எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான்

கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது.

”அடியேனிடரைக்களை யாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனை நீயே ” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்ஙனே பிரார்த்திக்கிற உம்மை உபேக்ஷித்திருப்பேனோ?’ என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்;

அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அநுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்தவாறே தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகிவிட்ட தாகவே நினைத்துப் பேசுகிறார்.

        மன்னா என்பது மனிசப்பிறவிக்கு அடைமொழி. ”மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” என்றபடி மின்னலைக்காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப்பிறவியில் நின்றும் என்னை நீக்கித்தன்னையே யொக்க அருள் செய்யுமெம் பெருமான் என்னெஞ்சிலே வந்து புகுந்துநிற்கிறான் காண்மின் – என்கிறார்.

         தன்னாக்கி = தன்னைப்போலே என்னையும் மலர்ந்த ஞானாநந்தங்களையுடையவனாக்கி என்றாவது, தனக்கு சேஷமாக்கி என்றாவது உரைக்கலாம்.

மின்னார் முகில்சேர் = பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு உவமையிட்ட படி-

—————-

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

பதவுரை

மான் ஏய் மட நோக்கி திறத்து

மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக,
எதிர் வந்த

செருக்குடன் வந்த
ஆன் விடை ஏழ் செற்ற

ஏழு ரிஷபங்களைக் கொன்ற
அணி வரை தோளா

அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே
தேனே

தேன்போல் போக்யனானவனே!
திருவேங்கடம் மா மலை மேய கோனே

திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே!
என் மனம்

என்னுடைய நெஞ்சை
குடிகொண்டு

இருப்பிடமாகக்கொண்டு
இருந்தாய்

நிலைபெற்றிரா நின்றாய்.

அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.

மானினுடைய நோக்குப்போன்ற நோக்கையுடையளான நப்பின்னைப்பிராட்டியை மணந்துகொள்வதற்காக அவளுடைய தந்தையின் கட்டளைப்படி ஏழு ரிஷபங்களையும் கொன்றொழித்த பெருமிடக்கனே!; அன்று அவளுக்கு எவ்வளவு போக்யமாயிருந்தாயோ, எனக்கும் அவ்வளவு போக்யமாயிருப்பவனே! திருவேங்கடமுடையானே! அந்த நப்பின்னைப்பிராட்டியையும் கூட்டிக் கொண்டு என் மனத்தே வந்து குடி கொண்டிருக்கின்றாயே! இப்படியும் ஒரு திருவருளுண்டோ? என்றாராயிற்று.

எதிர் வந்த ஆனேழ்விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைத் தோளா! என்று அந்வயிப்பது–

———–

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

பதவுரை

சேயன்

(பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும்
அணியன்

(பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும்
என சிந்தையுள் நின்ற மாயன்

என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும்,
வேய் விண்டு

மூங்கில்களானவை பிளவுபட்டு
ஒளி வெண்தரளங்கள்

பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும்
வாள்மணி

ஒளியுள்ள ரத்னங்களையும்
உதிர்

உதிர்க்குமிடமான
வேங்கடம் மா மலை மேய

திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான
ஆயன்

ஸ்ரீக்ருஷ்ணனுடைய
அடி அல்லது

திருவடிகளையொழிய
மற்று

வேறொன்றையும்
அறியேன்

அறியமாட்டேன்.

இப்படி என்னெஞ்சிலே நப்பின்னைப்பிராட்டியோடுங்கூட வந்து புகுந்தானானபின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுகையொழிய வேறொன்றும் நானறியேன் என்கிறார்.

எம்பெருமான் சிலர்க்குச் சேயன், சிலர்க்கு அணியன்; சேயனென்றால் தூரத்திலிருப்பவனென்கை; அணியனென்றால் ஸமீபத்திலிருப்பவனென்கை.தன்னை உகவாதார்க்கு அவன் எட்டாதவன்; தன்னை உகந்தார்க்கு அவன் கையாளாயிருப்பவன். துரியோதநாதியர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக்காணலாம்.

சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை என்னைக்கொண்டேயறியலாமென்பவர் போல என் சிந்தையுள் நின்றமாயன் என்கிறார். என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து நித்யவாஸம்பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியனென்பது சொல்லவேணுமோ வென்கை.

        மணிவாளொளிவெண்தரளங்கள் வேய்விண்டுதிர் என்பது திருவேங்கட மலைக்கு விசேஷணம்.

யானைகளின் கும்பஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் உண்டாவதாக நூல்கள் கூறும்.

வேய்களானவை விண்டு விரிந்து, வாள் (ஒளி) பொருந்திய மணிகளையும், ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்(முத்து)க்களையும் உதிர்க்குமிடமான திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வஸுலபனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றுமறியேன்.

தரளம் – முத்து ; வடசொல்.

—————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

பதவுரை

நந்தாத

ஒருகாலும் அணையாத
கொழு சுடரே

சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ

எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே

நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய்

திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே!
வந்தாய்

என்பக்கல் வந்தாய்;
என் மனம் புகுந்தாய்

எனது நெஞ்சினுள்ளே புகுந்தாய்;
மன்னி நின்றாய்

உள்ளேயே பொருந்தி நின்றாய்;
இனி

இனிமேல்
யான்

அடியேன்
உன்னை என்றும் விடேன்

உன்னை ஒருநாளும் விடமாட்டேன்.

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய் – என் மனம் புகுந்தாய் – மன்னிநின்றாய் ” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார்.

        வந்தாய் – பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்.

என்மனம்புகுந்தாய் – வந்தவிடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்ளிற்சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தாய்.

மன்னிநின்றாய் – ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப் பட்டுக்கிடப்பானேன்’ என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கப்பாராமல், ‘இதனில் சிறந்த ஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருந்துவிட்டாய்.

அப்ராக்ருதனான நீ மிகவும் ஹேயமான என்னெஞ்சிலே வந்து புகுந்ததனாலே உன்னுடைய தேஜஸ்ஸுக்கு எள்ளளவும் குறையில்லை; முன்னிலும் தேஜஸ்ஸு விஞ்சுகின்றது என்பார் நந்தாத கொழுஞ்சுடரேஎன விளிக்கின்றார். நந்துதல் – கெடுதல் ; கந்தாத – கெடாத.

        சிந்தாமணியே!= காமதேநு, கல்பவ்ருக்ஷம் முதலானவை போலே நினைத்த மாத்திரத்தில் அபீஷ்டங்களையெல்லாம் தரக்கூடிய ஒரு மணிக்குச் சிந்தாமணியென்று பெயர்; அதுபோலே ஸர்வாபீஷ்டங்களையும் அளிப்பவனே! என்றபடி.

இப்படிப்பட்டவுன்னை இனி நான் ஒரு நொடிப்பொழுதும்விட்டுப் பிரியமாட்டேனென்று தமக்குப் பரபக்தி வாய்ந்தபடியைப் பேசினாராயிற்று.

—————-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

பதவுரை

வில்லார் மலி

வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற
வேங்கடம் மாமலை

திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே
மேய

எழுந்தருளியிருப்பவனும்
மல் ஆர் திரள் தோள்

மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும்
மணிவண்ணன்

நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான
அம்மானை

எம்பெருமானைக் குறித்து,
கல் ஆர் திரள் தோள்

மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான
கலியன்

திருமங்கைமன்னன்
சொன்ன

அருளிச்செய்த
மாலை

இச்சொல்மாலையை
வல்லாரவர் தாம்

ஓதவல்லவர்கள்
வானவர் ஆகுவர்

நித்யஸூரிகளாகப் பெறுவர்கள்.

திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.

பரமபதத்திலும் நித்யஸூரிகள் அஸ்தாநே பயத்தைச் சங்கித்துப் பரியும்போது, திருமலையிலே ஸ்ரீகுஹப்பெருமாள் போன்ற வேடர்கள் அஸுரராக்ஷஸமயமான இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று அதிசங்கைபண்ணி எப்போதும் ஏறிட்ட வில்லுங்கையுமாய் இருப்பர்களாகையாலே, அதனை உவந்து ஆழ்வார் அருளிச்செய்கிறாமென்க,

பெரியாழ்வார்-    “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்திவிசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும் அதிசங்கையின் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்றாப்போலே,

இவரும் * மல்லார்திரடோள் மணிவண்ணனென்று அறிந்து வைத்தும் அதிசங்கையினால் மங்களாசாஸநத்திலே நிஷ்டையுடையராயிருப்பர் என்பது இப்பாட்டில் அறியத்தக்கது.

இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே யென்று நினைக்க வேண்டா; ” மங்களாசாஸந பரர்கள் திருமலையிலே உள்ளார்” என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையிலே அந்வயிக்கும்.

திருவேங்கடமுடையானைத் திருமங்கையாழ்வார் கவிபாடின இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் நித்யஸுரிகளைப்போலே நித்யகைங்கரியம் பண்ணிக்கொண்டு வாழப்பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

———————

அடிவரவு :- கண் இலங்கை நீர் உண்டாய் தூணாய் மன்னா மானேய் சேயன் வந்தாய் வில் வானவர்.

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: