ஸ்ரீ பரம புருஷனுடைய பரம புருஷார்த்தம் –

அருளிச் செயல்களில் நிகமனமாக பரம புருஷனின் கிருஷி பலனாக ஆழ்வார்கள் திரு உள்ளத்தில் நிலை பெற்று இருந்தமையை காட்டப்படுகிறது –

—————-

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இறே

—————

திருமலையிலே கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு ஸந்நிஹிதனாய்–என்னை விஷயீ கரித்து உன் கிருபையை எனக்கு அவலம்பமாம் படி பண்ணினாய்–இனி மேல் தேவர்க்குத் திரு உள்ளம் ஏது என்கிறார் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றால் போலே –
வெற்பு என்று வேம்கடம் பாடினேன் வீடாகி நிற்கின்றேன் -என்று இவர் அஹ்ர்தயமாக சொல்லிலும்-சஹ்ர்தயமாக சொன்னார் என்று இறே அவன் புகுந்தது –

இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க-அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகப்புக்கு மேல் இனி வேறு ஒரு பேறும் இல்லை என்று இவர் இருக்க –
இவர் கார்யத்திலே நாம் முதலடி இட்டிலோம் -என்று அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு –
விரோதிகள் அடைய போச்சுதாகில் –அபேஷிதங்கள் பெற வேண்டும் அம்சங்கள் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று-அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

நீ என்னுடைய ஹிருதயத்திலே ஞான விஷயமாகக் கொண்டு ஸந்நிஹிதனான பின்பு-என்னை விட்டு இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்கிறார் –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

அநந்த கருடாதிகளிலும் காட்டில் என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி–நீ என்னோடே ஸம்ஸ்லேஷிக்க
நானும் அத்தை அனுசந்தித்து விஸ்ராந்தனான பின்பு-இனி உனக்குப் போக்கிடம் உண்டோ என்கிறார் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

போக ஸ்தானங்கள் பல உண்டாய் இருக்க- கிடீர் அவற்றை உபேஷித்து-என் நெஞ்சையே போக ஸ்தானமாகக் கொண்டான் என்கிறார்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

(கீழே அவற்றை விட்டு ஓடி வந்தவர் உஜ்ஜவலமாக இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் -இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் –பூர்த்தியும் உண்டான படி –)

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும்- என் பக்கலிலே பண்ணினாயே –

—————-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –

இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஹிருதய கமலத்தையே தனக்கு அசாதாரணமான கோயிலாக
அங்கீ கரித்த கிருஷ்ணனை யாய்த்து இப்பிரபந்தத்தாலே ப்ரதிபாதித்தது –
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்தன் -என்னுமா போலே அன்று இவர் திரு உள்ளத்தில் கோயில் கொண்ட படி –

திரு மால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே எனது உடலே -என்றும்
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்களோடு ஒக்க இறே ஆழ்வார் திரு உள்ளத்தை ஆதரித்தது –

ஸர்வேஸ்வரனுக்கு ஹ்ருத்யரான ஆழ்வார்– இவர் திரு உள்ளத்திலே-
பர வ்யூஹாதி ஸ்தலங்களான ஸ்ரீ வைகுண்டாதிகளை எல்லாம் உபேக்ஷித்து ஆழ்வார் திரு உள்ளத்தையே அவை எல்லாமுமாகக் கொண்டான்
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பாய்த்து-குளிர்ந்து செவ்வி யுண்டாய்த் தன் நிறம் பெற்றது திரு மேனி

——————–

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே —நாச்சியார் திருமொழி -–9-7-

அடியேன் மனத்தே வந்து நேர் படில்–அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
வேறு ஓன்று பெறுமதில் காட்டிலும் அடிமை செய்யும் இத்தனை யாகாதே தான் அவன் விரும்பி இருப்பது –
புதியது ஓன்று பெறுமதில் காட்டிலும் -பழையதாய் இழந்தது பெற்றால் அன்றோ அவன் உகப்பது

—————–

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு-
உன்னைப் படுக்கையாகக் கொண்டு-உன்னோடு அணைந்து–பின்னையும் உன்னை நெருக்கிக் கடைந்து-பசை அறப் பண்ணினவன் அன்றோ –
அவன் இரந்தார் காரியமோ செய்தது –
என்னையும்- உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற இவனையும் அணைத்து யாய்த்து அகவாயில் பசை அறுத்தது

————————–

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –திருச்சந்த விருத்தம் –63-

அயர்வறும் அமரர்கள் அதிபதியான உன் மேன்மை பாராதே-அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று சுபாஸ்ரயமாகக் கொண்டு
அநாதிகாலம் விஷயாந்தர ப்ரவணமாயப் போந்த ஹ்ர்தயம் என்று குத்ஸியாதே ஆசன பலத்தாலே ஜெயிப்பாரைப் போலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து –
ஆந்தரமாயும் பாஹ்யமாயும் இருந்துள்ள அனுபவ விரோதிகளான துக்கங்களைப் போக்கும் ஸ்வபாவத்தை உடையவனே அவர்கள் ஹ்ர்தயத்தில் செல்லுகைக்கும் –
நெடுநாள் விஷயாந்தர ப்ரவணமான ஹ்ர்த்யம் என்று குத்ஸியாதே அதிலே நல் தரிக்க இருக்கையும் –
ஸ்வ ப்ராப்தி விரோதிகளான -அவித்யா கர்ம வாசநாதிகளை போக்கையும் தேவரீருக்கே பரம் இறே —

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

உடையவன் உடைமையை இழக்க மாட்டாமையாலே நின்று அருளுகின்றான் –
அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –
எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின செயல்கள் எல்லாவற்றையும் -திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய ஹ்ர்தயத்தில் பண்ணி அருளா நின்றான்-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

என்னைப் பெற்ற பின்பு அவனுக்கு இவை எல்லாம் நிறம் பெற்றது -என்னுதல்
என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –

——————-

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–திருமாலை –22–

மனத்து உளானை –
இப்படி எல்லாவற்றையும் விட்டு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று
தன் பக்கலிலே சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களுடைய நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணுமவன் –

இவர்கள் நெஞ்சுக்கு புறம்பு காட்டு தீயோபாதியாக வாய்த்து நினைத்து இருப்பது –
ஜலசாபதார்த்தங்கள் ஜலத்தை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே-இவர்கள் நெஞ்சை ஒழிந்த இடத்தில் தரிக்க மாட்டான் ஆய்த்து –
திருப்பதிகளிலே நித்ய வாசம் பண்ணுகிறதும்-ஒரு ஸூத்த ஸ்வபாவன் உடைய ஹ்ருதயத்தை கணிசித்து இறே –

————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —அமலானாதி பிரான் –10–

என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –
என் உள்ளம் -என்று மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் –
அவன் அடைத்தபடி அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

———————–

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —பெரிய திருமொழி -1-1-3-

தம்மடைந்தார் மனத்து இருப்பார் –
வடிவைக் காட்டித் துவக்கி -கையில் உள்ளது அடங்க அபஹரித்து உடம்பு கொடாதே எழ வாங்கி இருக்கை அன்றிக்கே –
ஆசா லேசமுடையார் நெஞ்சு விட்டு போய் இருக்க மாட்டாதவன் –
கலவிருக்கையான ஸ்ரீ பரமபதத்தையும் விட்டு நெஞ்சே கலவிருக்கையாக-ராஜ தர்பார்- கொள்ளும்-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

என் நெஞ்சிலே வந்து புகுந்து போக மாட்டு கிறிலன்-(ஏவ காரத்தால் -மன்னி நின்றான் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் பிராட்டி உடன் )

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே—1-10-7-

ருஷபங்களை அழியச் செய்து–நப்பின்னை பிராட்டியை லபித்து–அவளோடு கூட
அரவத்தமளியினோடும் -என்கிறபடியே வந்து-இனி ஒருகாலும் பேரான் என்று தோற்றும்படி இருந்தான் ஆயிற்று –

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—1-10-9-

முன்பு புகுர மாட்டாதே நின்றது உறவு இல்லாமை யன்று இறே –இத்தலையில் இசைவு கிடையாமை இறே –
இனிப் போகில் புகுர அரிதாம் என்று அதுவே நிலையாக நின்றான் ஆயிற்று
இப்படி இருக்கிற இடத்து ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்கக் கடவ
நாம் இங்கே வந்து சிறைப் பட்டோம் என்னும் இன்னாப்போடு அன்றிக்கே
இவர் பக்கலிலே புகுந்து இருக்கப் பெற்ற இது பெறாத பேறாய்-தனக்கு பண்டு இல்லாத ஐஸ்வர்யம் பெற்றானாய் உத்சலனாக நின்றான் ஆயிற்று –

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-ஒரே பாசுரத்தில் ஏழு சரித்திரங்கள்

பரிணாமாதிகள் இல்லை என்ன ஒண்ணாது இவ் வஸ்துவுக்கு –நித்ய வஸ்து என்ன ஒண்ணாது -(வளரும் -முளைத்து எழும் வஸ்து )சந்தமேநம் -என்னுமா போலே யாயிற்று
வஸ்து நித்யமாய் இருக்கச் செய்தே இறே -அஸன்நேவ என்கிறதும் -சந்தமேநம்-என்கிறதும்-அவனை அறியாத வன்று தான் இலானாய் அறிந்த வன்று உளனாய் இருக்குமா போலே
அவனும் தன்னை இவன் அறிந்த அன்று தான் உளனாய் -அறியாத அன்று இலானாய் இருக்கும் ஆயிற்று –
பகவானும் -நாம் அறிந்த அன்று தான் உளனாய் துயர் அறுப்பானே -மஹாத்மா விரகம் பொறுக்க மாட்டானே )

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்-(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும்
அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே–3-5-1-

எனக்கு தாரகனுமாய்
நிரதிசய போக்யனுமான நீ
திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து
தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே –

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–3-5-2-

திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று –
விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-

அகவாயில் பிரகாசிக்கிற இதுக்கு நான் ஏதேனும் கிருஷி பண்ணிற்று உண்டாகில் அன்றோ பிராப்திக்கு என்னால் கிருஷி பண்ணலாவது-
ஹிருதயத்தில் எப்போதும் ஒக்க பிரகாசியா நின்றான் ஆய்த்து-

இவருடைய சம்பத்து அவன் ஆயிற்று-திருவுக்கும் திருவாகிய திரு இறே

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-

இவருக்கு ஹிருதய பிரகாசமே அமையும் என்று ஆறி இராதே-நெஞ்சிலே பிரகாசிக்கிறவோபாதி அணைக்குக்கும் எட்டுதல்
அணைக்கு எட்டாதா போலே-ஹிருதயத்தில் பிரகாசியா இருத்தல் செய்யப் பெற்றிலோம் –அரவத்தமளிப் படியே ச விக்ரஹனாய் விளங்குகை-

சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

இப்படி பிராப்ய பிராபகங்கள்-இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –திருமாலை
திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு–
தானே வந்து–மனசிலே விடாதே-பொருந்தி இருக்கிறவனை –

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

நீயோ சால நாண் உடையையாய் இருக்கிறாய் –நீ முந்துற மடல் எடுத்து-பின்னை அன்றோ மடல் எடுப்பித்தது –
அவன் மடல் எடுக்கை யாகிறது -முற்பாடனாய் வர நிற்கை இறே-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத் தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே–என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )
திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும் சொல்லுகிறபடியே
இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் –

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

என்றும் ஒக்க என்னுடைய ஹிருதயத்தை விடாமல் இருக்கையால் வந்த புகழை உடையனாய் –
இங்கு புகுருகைக்கு உடலாக தஞ்சாவூரிலே நின்றவனை –

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

ஹிருதயத்திலே வந்து புகுந்து–மானஸ அனுபவமேயாய் கண்ணுக்கு விஷயமாகப் பெற்றிலோம் –என்கிற விஷாதம் கிடவாதபடி
கண்ணுக்கும் தானே விஷயமாய்-ஹிருதயமும் வேறு ஒன்றில் போகாதபடி தானே விஷயம் ஆனவன் –

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-

இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே–ஸ்மிதம் பண்ணி அருளி –என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்
தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி –
அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து
என் அருகே வந்து நின்று–அது சாத்மித்தவாறே-ஹிருதயத்திலே வந்து புகுந்து
இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்-கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

பந்தார் மெல் விரலி நல் வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் யுடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதனே நெடு மாலே
அந்தோ நின்னடி யன்றி மற்றறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-2-

இவ் வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி–விலக்காமை யுண்டான வாறே –ஆவாசந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே வந்து புகுந்தான் ஆய்த்து-
(ரிஷிகள் இடம் பெருமாள் தங்க இடம் கேட்டது போல் )

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரியக் கரையெங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறு புலியூர்ச் சல சயனத்
துள்ளும் எனதுள்ளத் துள்ளும் உறைவாரை உள்ளீரே —7-9-1-

உகந்து அருளின நிலங்களும்–இவர் திரு உள்ளமும்–ஒக்க வாய்த்து அவன் விரும்பி இருப்பது –
இப்படி இருக்கையாலே–ஆஸ்ரயிப்பாருக்கு ஆஸ்ரயணீய ஸ்தானம் இவை இரண்டும் யாய்த்து –
(நமக்கும் திவ்ய தேச ப்ராவண்யமும் ஆழ்வார் ப்ராவண்யமும் வேண்டும் )

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7-

இத்தால் சொல்லிற்று ஆயத்து –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே
இவ்வோ இடங்கள் தோறும்-இனி அவ்வருகு இல்லை என்னும்படி-குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும்–புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –
திருப்பாற் கடல் -அவதார கந்தம்–பலம் -திருமலையில் நிற்க
-இங்கு இருந்து தபஸ்ஸூ–ஆழ்வார் திரு உள்ளமான கலங்கா பெரு நகரம் பெறுவதற்காகவே
இக்குண ஆதிக்யத்திலே ஈடு படுகிறார் -)

———–

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —இரண்டாம் திருவந்தாதி -28-

என்னில் முன்னம் பாரித்தது இதில்–ஒவ்வொரு இடமும் தாண்டி மனத்துள்ளான்
தேவாதி தேவன் எனப்படுவான் -அத்தை விட்டு வந்தான்–இளம் கோயில் கைவிடேல் இவர் பிரார்த்தித்து தானே அங்கும் இருப்பான் -)
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு –வாரிக்கொண்டு என்னை விழுங்குபவன் போல் -என்னில் முன்னம் பாரித்து என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

————–

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம்

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —

————————-

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் –இரண்டாம் திருவந்தாதி -95-

———–

எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக் குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ

————-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத்பரன் மிகத்தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading