ஸ்ரீ ரெங்கம் பற்றி அறிய வேண்டியவை —

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.

ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

————

தாயார் சந்நிதியில் சேவை செய்து வைக்கும்போது மூன்று தாயார்கள் – ரெங்கநாயகி , ஸ்ரீதேவி , பூதேவி எனக் கூறுவார். ஆனால் மூலவர் இருவரும் ஒருவரே.

ஸ்ரீரங்கம் உலுஹ்கான் படையெடுப்பினால் கிபி 1323 இல் முழுவதுமாக சூறையாடப்பட்டு பெருமாளும் கோவிலைவிட்டு வெளியேறி கிபி 1371 மீண்டும் திரும்பினார். இந்த படையெடுப்பின்போது மூலவர் சந்நிதி கல்திரை இடப்பட்டது. இதனால் பின்னால் இருக்கும் தயார் மறைக்கப்பட்டுவிட்டார்

கோவிலை விட்டு துலுக்கர்கள் வெளியேறியபின் ( 20 – 30 ஆண்டுகள்) உள்ளூர் மக்கள் மூலவர் தயார் காணவில்லை என நினைத்து புதிதாக ஒரு மூலவரை ப்ரதிஷிட்டை செய்தனர். அவரே இப்போது முதலில் இருக்கும் மூலவர்.

பிற்காலத்தில் அரையர் ஒருவர் தாலம் இசைத்து பாசுரம் சேவித்தபோது ஜால்ராவின் ஓசை வித்தியாசமாக வருவதை உணர்ந்து மூலவருக்குப் பின்னால் ஏதோ ஒரு அரை உள்ளது எனக் கூறினார். இதன் பின்னர் அதைத் திறந்து பார்த்தபொழுது பழைய மூலவர் இருப்பது தெரிந்தது. அன்று முதல் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

————

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-

ப்ரணவாகார விமானம் ஓம் என்னும் வடிவத்தில் இருக்கும்.ஓம் எனும் சப்தத்தில் 3 (அ ,உ,ம) எழுத்துக்கள் உள்ளன. உட்சாஹ சக்தி (அ) , ப்ரபூ சக்தி (உ), மந்திர சக்தி (ம) ஆகிய 3 சக்திக்களுடன் பெரியபெருமாள் பிரகாசிக்கிறார்.

இந்த விமானத்தில் கிழக்கு மேற்காய் 4 கலசங்களும், தெற்கு வடக்காய் 4 மற்றும் 1 கலசம் முன்னதாக மொத்தமாக 9 கலசங்கள் இருக்கும். இந்த 9 கலசங்களும் நவக்கிரகங்கள் ஆராதிப்பதாகக் கூறுவர்.

தர்மவர்மா திருச்சுற்று (முதல் பிராகாரம்/ திருவுண்ணாழி பிரதக்க்ஷணம்) இதில்தான் காயத்ரி மண்டபம் உள்ளது. ஏன் இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர்?

காயத்ரி மந்திரத்தில் 10 சப்தங்கள் – இந்த 10 சப்தங்கள்தான் விமானத்தின் 10 திக்குகள்

காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் – இந்த மண்டபத்தில் 24 தூண்கள்

இந்த மண்டபத்தின் 24 தூண்கள் – 24 தேவதைகள் ஆவாகனம் (கேசவாதி த்வாதச நாமங்கள் 12 தூண்களுக்கு,வாசுதேவ – சங்கர்ஷண – பிரத்யும்ன – அநிருத்த ஆகிய நால்வரின் 3 நிலைகள் = 12)

காயத்ரி மந்திரத்திற்குப் பின்னால் வரும் ஸ்லோகத்தின் 9 சப்தங்கள் 9 கலசங்கள்

உள்ளே உள்ள 2 திருமணத்தூண்கள் ஹரி எனும் 2 எழுத்துக்கள் ப்ரணவாகார விமானத்தைத் தாங்குகின்றது.

காயத்ரி மண்டபத்தின் நடுவில் இருப்பது அமுது பாறை. பெருமாள் மூலஸ்தானிலிருந்து புறப்பாடு கண்டருளும்போது இங்கிருந்துதான் கிளம்புவார். இந்தத் திருச்சுற்றின் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.

அமுதுபாறையின் இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. பெருமாளுக்கு அலங்காரம் சாற்றி அர்ச்சக்கரகள் இந்த கண்ணாடிகளில் பெருமாள் திருமேனி அழகைக் கூட்டுவர். அமுது பாறை பொதுவாக பெருமாள் அமுது செய்யும்போது பிரசாதம் வைக்கும் இடம்.

அடுத்தமுறை மூலவர் சேவித்தபின்னர் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் 2 நிமிடங்கள் நின்று தீர்த்தம் கொடுப்புவருக்கு பின்னால் சற்று பார்க்கவும். அப்போது 3 விஷயங்கள் தெரியும்:

1) பெருமாள் திருவடி வெளிப்புற தங்க கவசம்

2) மேலே ப்ரணவாகார விமானம்

3) கீழே சிறிய அகழி (3 அடி ஆழம்)

பெருமாளுக்குப் பின்னால் இருக்கும் இந்த பிரகாரம் யாருக்கும் அனுமதியில்லை. இந்தத் திருச்சுற்றின் 2 மூலைகளில் வராகரும், மற்ற மூலைகளில் வேணுகோபாலனும், நரசிம்மனும் சேவைசாதிப்பர். பெருமாளுக்கு வலதுபுறம் விஷ்வக்க்ஷேனரும் இடதுபுறம் துர்கையும் விமானத்தின் சுவற்றில் கீழே சுவற்றில் சேவைசாதிப்பர்.

விமானத்தின் கீழே இருக்கும் சிறிய அகழியின் சிறப்பு:

ராமானுஜர் பெரிய ஆசாரியன் மற்றும் இல்லை. அவர் தலைசிறந்த நிர்வாகி மற்றும் பெருமாளின் திருமேனியின் மீது பறிவுகொண்ட மகான். கீழ்வரும் கைங்கரியம் அவர் ஆரம்பித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது: (செவிவழி செய்தி)

கோடைக் காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்யப்பட்டதுதான் இந்த அகழி. கோடைக் காலத்தில் தினமும் இந்த அகழியில் தண்ணீர் நிரப்பினால் அது விமானம் மற்றும் பெருமாளை சுற்றியுள்ள சுவற்றின் வெப்பத்தை இழுத்து பெருமாளை குளிர்விக்கும் (இயற்கை குளிர்சாதனம்). ஆனால் தினமும் இங்கு அவ்வளவு தண்ணீர் எப்படி கொண்டுவருவது?

இரண்டாம் திருச்சுற்றில் விமானத்தின் பின்னால் ஒரு சிறிய கிணறு உள்ளது. அந்த கிணற்றிலினருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு குழாய் (உள்ளே செல்ல மற்றும் வெளியே வர ஒரே குழாய்) மூலம் விமானத்தின் கீழேயிருக்கும் அகழி தினமும் மதியம் நிரப்பப்பட்டு இரவு அரவணைக்கு பிறகு வெளியேற்றப்படும்.

இந்த கைங்கரியத்தின் பெயர் #கோடைஜலம்

இந்தக் கிணற்றில் கீழே ஒருவரும், நடுவில் ஒருவரும், மேலே ஒருவரும் மண் பானைகளில் தண்ணீர் எடுத்து (கயிறு இல்லாமல் கையில்) ஒரு அண்டாவில் தினமும் 1008 பானைகள் அளவு நிரப்புவர். அதை சிறுவர்கள் எடுத்து மேலேயுள்ள தொட்டியில் ஊற்றுவர். அந்தத் தண்ணீர் முதல் திருச்சுற்றின் அகழியில் நிரம்பும். இந்த கைங்கர்யம் பூச்சாற்று உற்ஸவம் தொடக்கத்தன்று (சித்ராபௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னால்) தொடங்கி 48 நாட்கள் நடக்கும்.

இந்த கைங்கரியம் சிறுவர்களுக்கு அரங்கனிடம் ஈடுபாட்டுக்கு ஆரம்பக்கட்டம். அடியேனுக்கும் இந்த கைங்கரியத்தை செய்ய ரெங்கன் அருளினார்.

—————-

அரங்கன் திருபாதரக்க்ஷையும் (செருப்பு) மற்றும் சக்ளியன் கோட்டைவாசலும்

கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்!!!

இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம்.

அடுத்தமுறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடதுபறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும்.

என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர்🙏

பக்தருக்க்கு அரங்கநாதன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:

1. பாதரக்க்ஷை அளவு-2. அதன் வர்ணம்3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்

மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.

எப்ரல் 2017ல ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டுவந்தாதாக சொல்லுகிறார்கள்.

இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும் செய்வார்.

நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குக் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது 

——————-

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்-யார் இந்த பரமன்?-எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.-

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம். எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது. அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும் நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார். கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை. இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள் (தங்கச் சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம். ஆகும சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.–

அழகியமணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம் ( நம்பெருமாள் கிழக்குக்கு / கீழ்ப்படி படியேற்ற சேவை காணொலியில் பரமன் மண்டபம் மற்றும் சந்தனு மண்டபத்தை காணலாம்)

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:-1) தீபாவளி-2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர். அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம்  இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

——————-

பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் உற்சவர் அழகிய மணவாளன். அடுத்த முறை ரங்கநாதரை சேவிக்கும் போது சற்று கூர்ந்து அவரின் திருவடியை சேவித்தால், அங்கே மற்றொரு உற்சவர் சேவை சாதிப்பார். இவர் உற்சவ காலங்களில் யாக சாலையில் எழுந்தருளி இருப்பார்.

பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் யாகபேரர் (யாக சாலை பெருமாள்) சிறிய மூர்த்தியாக இருப்பார். இங்கோ இவர் அழகிய மணவாளனின் நிகரான உயரத்தில் இருப்பார்.

யார் இந்த உற்சவர்? எப்போது திருவரங்கத்திற்க்கு எழுந்தருளப்பட்டார்?-இவரின் திருநாமம் திருவரங்கமாளிகையார்

இந்த சரித்திரத்தை அறிய நாம் 640 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். 1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்தபிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்யகலத்திற்க்கு சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக்கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு)

கல்கல்வெட்டில் கூறப்படும் சக ஆண்டு 1293. சக ஆண்டிற்க்கும் நம் நாட்காட்டிக்கும் 78 ஆண்டுகள் வித்தியாசம். எனவே 1293+78 = 1371.

கொடவர் (பெருமாளை பல ஆண்டுகளாக பாதுகாத்தவர்) அழகிய மணவாளனுடன் வந்தார். பெருமாளை மீண்டும் திருவரங்கம் எழுந்தருள செய்த முயற்சியில் கோபன்ன உடையார் பங்கு சிறந்தது.

இந்த 48 ஆண்டுகளுக்குள் அழகிய மணவாளன் உற்சவ மூர்த்தி என்ன ஆனார் என்று தெரியாததால் ஒரு புதிய உற்சவரை பிரதிஷ்டை செய்து விட்டனர்.(எந்த ஆண்டு என்று குறிப்பு இல்லை).

48 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் அழகிய மணவாளனை, சேவித்த குடிமக்கள் இறந்து போய்விட்டதாலும், அதற்குப் பிறகு வந்தவர்கள் திருமேனியைச் சேவித்து அறியாதவர்களானதாலும், அழகிய மணவாளனைக் கோயிலில் எழுந்தருள மறுத்து விட்டனர். பழைய அழகிய மணவாள பெருமாளை சேவித்தவர் யாரும் எஞ்சி இல்லாததால் இரண்டு உற்சவர்களுள் எவர் முன்னால் இருந்த அழகிய மணவாளன் என்று சர்ச்சை எழுந்தது.

அப்போது மிக வயதான ஒருவர் தான் பழைய அழகிய மணவாளனை சேவித்தது உண்டு என்றும் ஆனால் அவருக்கு கண் பார்வை போய் விட்டது என்றும் கூறினார்.

அழகிய மணவாளனும் புதிதாக எழுந்தருளப்பட்ட உற்சவரும் காண்பதற்கும் உயரத்திலும் அங்க முத்திரைகளிலும் ஒரே போல் இருப்பர் என்பது வியப்பான ஒன்று.இந்த முதியவர் தன்னை ஒரு ஈரங்கொல்லி (வணத்தான்) கண் பார்வை இல்லாமையால், திருமேனி சேவிக்கவில்லை என்றாலும், அழகிய மணவாளன் சாற்றியிருந்த ஈரவாடை தீர்த்தம் (திருமஞ்சனம் போது சாற்றப்படும் வஸ்த்திரம்) சாப்பிட்டுக் கைங்கர்யம் பண்ணி பழகி இருப்பதைச் சொல்லி, அதன்மூலம் அழகிய மணவாளனைக் கண்டறிய முடியும் என்றார். அதன்படியே, அழகிய மணவாளன் திருமேனிக்கும், திருவரங்கமாளிகையார் திருமேனிக்கும், திருமஞ்சனம் செய்து, ஈரவாடை தீர்த்தம் சாதிக்குமாறு சொன்னார்.

அதனால் இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து தமக்கு தீர்த்தம் தருமாறு வேண்டினார். ஊர் பெரியோர்களும் அவ்வாறே செய்தனர்.

அனுமன் சீதையை கண்ட பின்னர் “கண்டேன் சீதையை!!” என ராமரிடம் கூறியது போல் அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தம் பெற்றதும் “கண்டேன் பெருமாளை” என்றும் “இவரே நம்பெருமாள்” என்றும் கூறினார்.

அன்று முதல் அழகிய மணவாளன் என்ற திருநாமத்தை விட நம்பெருமாள் என்ற திருநாமமே பிரசித்தம் ஆனது. புதிதாக வந்த உற்சவருக்கு “திருவரங்க மாளிகையார் ” என்று திருநாமம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவ வன்னாத்தனுக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது.

————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading