ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்ரீ முதல் திருவந்தாதி தனியன் -ஸ்ரீ நம்பிள்ளை–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்- ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த – வியாக்யானம் —

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

————-

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை-

பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி
இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி
அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில்
இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும்
ஜலத்தின் உடைய த்ரவத்தையும்
தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து
இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து –

நித்ய விபூதி அடங்க உப லஷணமாக
திரு வாழி ஆழ்வானைச் சொல்லி

ஆக
இத்தனையாலும் உபய விபூதி யுக்தன்  என்னும் இடத்தைச் சொல்லி

இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்-
தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி

அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி
அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே
இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி

இப்படிப் பட்ட  அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக –
அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல்

அன்றிக்கே
இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே
சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து
அதுக்காக செய்தாராய் இருக்கிறது –

———-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி —
தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-
புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-
விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி
வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்–
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-
கேதகை –தாழை-

கைதை வேலி மங்கை –பெரிய திருமொழி -1-3-10–என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -4-10-8–என்னும் படி –
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம்பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற்றாமரைப் பூவிலே
ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது

பத்மஜனான பூவனைப் போலே யாயிற்று
பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -என்னக் கடவது இறே –

பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் –
மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் இறே

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி –
ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும் கொண்டாடப் படுமவராய் –
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்

இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று –

வையத்தடியவர்கள் -ஆகிறார் –
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால்
இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை

நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் –
அது தான் நூறு பாட்டாய் –
அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி –
ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே
பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே
பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச் சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் –
திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்

செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

——–

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-
கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப் பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி –
உபமானத்துக்கும்
திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து –
எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு –
புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்

அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading