ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கட மாலை –61-80-

நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
மென் முலையும் கற்பூரம் சேர் வேங்கடமே -முன் மலைந்து
தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –61-

(இ – ள்.) நல் முலை போல் வெள் நகையார் – அழகிய முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுடைய மகளிர்,
நாயகர்மேல் வைத்த – தம் தம் கணவரிடத்திற் செலுத்திய,
நெஞ்சும் – மனமும்,
கற்பு உரம் சேர் – பதி விரதா தருமத்தின் வலிமை பொருந்தப்பெற்ற:
மெல் முலையும் – (அம்மகளிருடைய) மென்மையானதனங்களும்,
கற்புரம் சேர் – பச்சைக்கற்பூரம் பூசப் பெற்ற:
வேங்கடமே -,-
முன் மலைந்து தோற்ற மாரீசனார் – முன்பு எதிர்த்துத் தோற்றோடின மாரீசன்,
தோற்றி மாயம் புரிய – மீண்டும்வந்து மாயை செய்ய,
சீற்றம் ஆர் – (அவனிடத்துக்) கோபங்கொண்ட,
ஈசனார் – (எல்லா வற்றுக்குந்) தலைவரான திருமால்,
சேர்வு – சேர்ந்திருக்கு மிடம்; (எ – று.)

எதுகைநயம்நோக்கி, முல்லை யென்பது, “முலை” என இடைக்குறை விகார மடைந்தது;
(“முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ” எனக் கலித்தொகையிலும்,
“முலையேயணிந்த முகிழ்நகையீர்” என மதுரைக்கலம்பகத்திலும்,
“அம்முலைக் கொடியா ரலர்தூற்றவே” எனத் திரு வேங்கடக் கலம்பகத்திலும்,
“பயிற்சியும் வனமுலைப்பாலே” என அழகர் கலம்பகத்திலும் காண்க.)
முல்லை – அதன் அரும்புக்கு முதலாகுபெயர். பல்லுக்கு முல்லையரும்பு உவமை – அழகிய வடிவிற்கும், வெண்மைக்குமாம்;
நாயகர் – தற்சம வடசொல். கற்பாவது – கணவனைத் தெய்வமெனக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம்.
திருக்குறளில் “கற்பென்னுந் திண்மை” என்றாற் போல, “கற்பு உரம்” என்றார். உரம் – கலங்காத நிலைமை.
கர்ப்பூரமென்ற வடசொல், கற்புரமென விகாரப்பட்டது. திருவேங்கடத்தில்வாழும் மாதர்களது உள்ளும் புறமும் ஒத்துள்ளன
வெனச் சொல்லொப்புமையாற் சமத் காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

மாரீசன் – தாடகையின் மகனும், சுபாகுவின் உடன் பிறந்தவனும், மாயையில் மிக வல்லவனுமான ஓர்அரக்கன்.
இராவணனுக்கு மாமன்முறை பூண்டவன்; விசுவாமித்திரமுனிவர் தமது யாகத்தைப் பாதுகாத்தற்பொருட்டு
ஸ்ரீராமலக்ஷ்மணர்களை அழைத்துச்செல்லும் வழியிடையே தாடகை வந்து எதிர்த்து இராமனாற் கொல்லப்பட்டு இறந்தபின்,
மாரீசன் சுபாகுவி னுடனும் மற்றும்பல அரக்கருடனும் வந்து விசுவாமித்திரருடைய வேள்வியை அழிக்கத் தொடங்கியபொழுது,
இராமபிரான் அம்புகளால் அரக்கரைக் கொன்று ஓர் அஸ்திரத்தாற் சுபாகுவை வதைத்து
மற்றோர் அஸ்திரத்தால் மாரீசனைக் கடலிலே தள்ளிவிட்டார். இங்ஙனம் தப்பிப்பிழைத்த இவன் சிலகாலங்கழித்து,
இராமன் தண்டகாரணியம் புகுந்தபொழுது பழைய வைரத்தால் வேறு இரண்டு அரக்கருடனே மான்வேடம்பூண்டு
இராமனைத் தன் கொம்புகளால் முட்டிக் கொல்லக் கருதி நெருங்குகையில் இராமன் எய்த அம்புகளால் உடன்வந்த அரக்கர் இறக்க,
இவன்மாத்திரம் தப்பியோடி உய்ந்து இலங்கைசேர்ந்தனன். இவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை எதிர்த்துத் தோற்றுத் தப்பிப்
பிழைத்தமைபற்றி, “முன்மலைந்துதோற்ற மாரீசனார்” என்றார். “ஆர்” விகுதி – மாயையில் அவனுக்குஉள்ள சிறப்பை நோக்கினது.
பின்பு சீதையைக் கவர்ந்துசெல்லக் கருதிய இராவணனது தூண்டுதலால் மாரீசன் மாயையாற் பொன்மானுருவங் கொண்டு
தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையின் எதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி
அதனைப் பிடித்தற்குத் தொடர்ந்து சென்ற இராமபிரான் நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று
அறிந்த வளவிலே அதன்மேல் அம்பெய்து வீழ்த்தினனென்ற வரலாறு இங்குக்குறிக்கப்பட்டது.
கொன்ற என்ற பொருளில். “சீற்றம் ஆர்” என்றது – காரியத்தைக் காரணமாக உபசரித்தவாறு.
மாயம் – மாயா என்ற வடசொல்லின் விகாரம். ஈசன் – வடசொல்: ஐசுவரியமுடையவன்.
“தோற்றமாயம்புரிய” என்று பாடமோதி, மாரீசன் -, ஆர் தோற்றம் – பொருந்திய தோற்றத்தையுடைய,
மாயம் – மாயையை, புரிய – செய்ய என்று உரைத்தலும் ஒன்று; மெய்த்தோற்றம்போன்ற பொய்த்தோற்றத்தைக் கொள்ள; என்க.

————

கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் கண் என்றும்
வீறு மருப்பிணை சேர் வேங்கடமே -நாறும்
துளவ மலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –62-

(இ – ள்.) கூறும் கிளிமொழியார் கொங்கை என்று – (கொஞ்சிப்) பேசு கின்ற கிளியின் சொற்போன்ற இன்சொற்களையுடைய மகளிரது தனங்க ளென்று,
வீறு – பெருமையுற்ற,
மருப்பு இணையும் – இரட்டையான யானைத் தந்தங்களும்:
கண் என்று – (அவர்களுடைய) கண்களின் நோக்க மென்று,
வீறு மரு – சிறப்புப்பொருந்திய,
பிணையும் – பெண்மானும்.
சேர் – பொருந்திய,
வேங்கடமே -,-
நாறும் துளவம் மலர் கண்ணியார் – பரிமளம் வீசுகின்ற திருத்துழாய் மலர்களாலாகிய மாலையை யுடையவரும்,
தொண்டு ஆய் – (தமக்கு) அடிமையாகி,
தமக்கு அன்பு உள – தம்பக்கல் பக்தியுள்ள,
அமலர்க்கு – குற்றமற்ற அடியார்களுக்கு,
அண்ணியார் – சமீபிக்கின்றவரு மாகிய திருமாலினது,
ஊர் – வாசஸ்தாநம்; (எ – று.)

“கொங்கை யென்று வீறு மருப்பிணை” என்பதற்கு – கொங்கையாகிய யானைத்தந்த மென்றும்,
“கண்ணென்று வீறுமருப்பிணை” என்பதற்கு – கண் பார்வையாகிய பெண்மான் பார்வை யென்றும் உருவகமாகக் கருத்துக் கொள்க;
அன்றி, கொங்கைபோன்று யானைத் தந்தமும், கண்போன்று பெண்மான்விழியும் பொருந்திய என,
எதிர்நிலையுவமையாகக் கருத்துக் கொள்ளினுமாம்.
கிளி – அதன்சொல்லுக்கும், பிணை – அதன் நோக்கத்துக் கும் முதலாகுபெயர். மரு – மருவு என்பதன் விகாரம்.
பிணை – பெண்மைப் பெயர். துளவம் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு. திருத்துழாய் மலர் மாலை, திருமாலுக்கு உரியது.
துளவமலர்க்கண்ணி – துளவினாலும் மலர் களினாலுமாகிய மாலையுமாம்.
“தமக்கு” என்பதை மத்திமதீபமாக “தொண்டாய்” என்பதனோடுங் கூட்டுக.
உள = உள்ள: தொகுத்தல். ந + மலம் + அர் – அமலர்; பரிசுத்தர்; வடமொழிச்சந்தி.
அண்ணியார் – அண்என்னும் வினைப் பகுதியினடியாப் பிறந்த இறந்தகாலவினையாலணையும்பெயர்:
“இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது. அன்போடு தமக்குத் தொண்டுபூண்ட தூயோரது உள்ளத்தில் உவந்து
வந்தெழுந்தருளி யிருத்தலுமன்றி, அவர்கட்குக் கட்புலனாய் அருகில் தோன்றி நின்று ஆவனசெய்தலு முடையரென்பது,
“தொண்டாய்த் தமக்கன்புள வமலர்க் கண்ணியார்” என்பதன் கருத்து.

————–

மாதர் அம் பொன் மேனி வடிவும் அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே -பூதம் ஐந்தின்
பம்பர மாகாயத்தார் பாடினால் வீடு அருளும்
நம் பர மா காயத்தர் நாடு –63-

(இ – ள்.) மாதர் – மகளிரது,
அம் பொன் மேனி வடிவும் – அழகிய பொன்னிறமான உடம்பின் தோற்றமும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேலுலகத்திலுள்ள ரம்பை யென்னுந் தேவமாதை இழிவு படுத்தப்பெற்ற:
அவர் குறங்கும் – அம்மகளிரது தொடையும்,
மீது அரம்பையை பழிக்கும் – மேன்மையுள்ள (செழித்த) வாழைத்தண்டை வெல்லப்பெற்ற:
வேங்கடமே -,-
பூதம் ஐந்தின் – பஞ்சபூதங்களினாலாகிய,
பம்பரம் – சுழல்கிற பம்பரம் போல விரைவில் நிலைமாறுவதான,
மா காயத்தார் – பெரிய உடம்பையுடைய சனங்கள்,
பாடினால் – துதித்தால்,
வீடு அருளும் – (அவர்கட்கு) முத்தியை அளிக்கின்ற,
நம் பரம ஆகாயத்தார் – நமது தலைவரும் பரமாகாசமெனப்படுகின்ற பரமபதத்தை யுடையவருமான திருமாலினது,
நாடு – ஊர்; (எ – று.)

திருவேங்கடமலையில் வாழும் மகளிர் அரம்பை யென்னும் தேவமாதினும் மேம்பட்ட வடிவழகையும்,
வாழைமரத்தண்டினும் அழகிதாகத்திரண்டு உருண்டு நெய்ப்பமைந்த தொடையையும் உடைய ரென்றவாறு.
மாதர் – விரும்பப்படும் அழகுடையோர். அரம்பை யென்பது – இருபொருளிலும் ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்.
பழிக்கும் என்பது – உவமையுருபுமாம். பூதம் ஐந்து – நிலம், நீர், தீ, காற்று, வானம்.
காயம், பரமாகாசம் – வடசொற்கள். மாகாயம் – ஸ்தூலசரீரம். வீடு – (பற்றுக்களை) விட்டு
அடையு மிடம்; இச்சொல் – “முக்தி” என்னும் வடசொல்லின் பொருள் கொண்டது. பரமாகாசம் – சிறந்த வெளியிடம்.

———-

கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சு ஆர் வேங்கடமே -நீள் கரனார்
தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடு அணனார் முத்து அலையார் குன்று –64-

(இ – ள்.) ) கோள் – (ஆடவரை) வருத்துந்தன்மையையும்,
கரவு – (அவர்கள் மனத்தை) வஞ்சனையாகக் கவருந் தன்மையையும்,
கற்ற – பயின்ற,
விழி – கண்களையுடைய,
கோதையர்கள் – மகளிரது,
பொன் தாளும் – அழகியபாதமும்,
அம் பஞ்சு ஆர் – அழகிய செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பெற்ற:
வேள்கரமும் – மன்மதனது கையும்,
அம்பு அஞ்சு ஆர் – பஞ்சபாணங்கள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
நீள் – பெரிய,
கரனார் – கரனும்,
தூடணனார் – தூஷணனும்,
முத்தலையார் – திரிசிரசும்,
துஞ்ச – இறக்கும்படி,
எய்து – அம்பு செலுத்தி,
துஞ்சாரை கூடு – உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த,
அணனார் – தமையனாராகவுள்ளவரும்,
முத்து அலையார் – முத்துக்களையுடைய கடலிற்பள்ளிகொள்ளுகின்ற வருமானதிருமாலினது,
குன்று – மலை; (எ – று.)

கோள் கரவு – உம்மைத்தொகை. கரவு – காத்தல்; தொழிற்பெயர். கோதையர் – மாலைபோல் மென்மையான தன்மையுடையார்;
கோதை – மாலை; கள் – விகுதிமேல்விகுதி. கரம் – வடசொல்.
“கண் களவுகொள்ளுஞ் சிறுநோக்கம்,”
“யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்லநகும்” என்றபடி
காதலன் தன்னைநோக்கும்பொழுது தான் எதிர்நோக்காது நாணித் தலைவணங்கி நிலத்தை நோக்கியும்,
அவன் தன்னை நோக்காத பொழுது தான் அவனை உற்றுநோக்கியும் வருகிற விழி யென்பார், “கரவு கற்ற விழி” என்றார்.
அதற்குக் கோள் கற்றலாவது – காதற்குறிப்பை வெளிப்படுத்துகின்ற நோக்கினாலும்,
பொதுநோக்கின் அழகினாலும் ஆடவர்க்கு வேட்கை நோயை விளைத்தல்.

வடிவின்பருமையோடு தொழிலின்மிகுதியும் உடைமை தோன்ற, “நீள்கரன்” என்றார்.
கரனார், தூடணனார், முத்தலையார் என்ற உயர்வுப்பன்மைகள், அவர்களுடைய வலிமைத்திறத்தை விளக்கும்.
கரனென்ற வடசொல் – கொடியவனென்றும், தூஷண னென்ற வடசொல் – எப்பொழுதும் பிறரைத் தூஷிப்பவ னென்றும் பொருள்படும்.
முத்தலையார் – மூன்று தலைகளை யுடையவனென்று பொருள்படும்; த்ரிசிரஸ் என்ற வடசொல்லின் பொருள் கொண்டது.

கரன் – இராவணனுக்குத் தாய்வழி யுறவில் தம்பிமுறையில் நிற்கின்ற ஓர் அரக்கன்;
தண்டகாரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறித்த ஜநஸ்தாந மென்னு மிடத்தில் அவட்குப் பாதுகாவலாக
இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர்சேனைக்கு முதல் தலைவன்.
இலக்குமணனால் மூக்கறுக்கப்பட்டவுடனே இராமலக்குமணரிடம் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை,
கரன்காலில் விழுந்துமுறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங்கொண்டு, மிகப்பெரியசேனையோடும்
அறுபது லட்சம் படைவீரர்களோடும் சேனைத்தலைவர் பதினால்வரோடும் தூஷணன் திரிசிரஸ் என்னும்
முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு வந்து போர் தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாகப்
பர்ண சாலையில் நிறுத்தித் தான் தனியேசென்று எதிர்த்துப் பெரும்போர் செய்து அவ்வரக்கரையெல்லாம் துணித்து
வெற்றிகொண்டு மீண்டு பர்ணசாலையிற் காவல்செய்துநின்ற இலக்குமணனைச் சார்ந்தனனென்ற வரலாறு, இங்கே குறிக்கப்பட்டது.

இறக்க என்ற பொருளில் “துஞ்ச” என்றல் – மங்கலவழக்கு; மீளவும் எழுந்திராத பெருந்தூக்கங் கொள்ள வென்க.
இராமன் வனவாசஞ்செய்த பதினான்கு வருடத்திலும் இலக்குமணன் தூங்காது அல்லும் பகலும் அநவரதமும்
இராமனுக்கும் சீதைக்கும் பாதுகாவலாய் விழித்தபடியேயிருந்தன னாதலால், அவனுக்கு “துஞ்சார்” என ஒருபெயர் கூறினார்.
அணனார் = அண்ணனார்: தொகுத்தல். துஞ்சார் – இளையபெருமாள். அண்ணனார் – பெருமாள்.
திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளிகொள்ளுதல்பற்றி, “அலையார்” என்றார்.
அலை – கடலுக்குச் சினையாகு பெயர். முத்து – முக்தா என்ற வடசொல்லின் விகாரம்; (சிப்பியினின்று) விடுபட்ட தெனப் பொருள்படும்.

————

கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக் கோடாதரிக்கும் வேங்கடமே -பூங்கைக்குள்
மெய்த்தவளைச் சங்கு எடுத்தார் மேகலை விட்டு அங்கை தலை
வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –65-

(இ – ள்.) கோங்கை – கோங்குமரத்தை,
கோடு ஏறி குலுக்கும் – கிளைகளின் மேலேறி மிகஅசைக்கின்ற,
அரியும் – குரங்கும்,
வேங்கை கோடு ஆதரிக்கும் – (அங்கிருந்து அருகிலுள்ள) வேங்கைமரத்தின்கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கப்பெற்ற:
கரியும் – யானைகளும்,
வேங்கைக்கு ஓடாது அரிக்கும் – புலிகளுக்கு அஞ்சியோடாமல் (எதிர்த்துநின்றுபொருது அவற்றை) அழிக்கப்பெற்ற:
வேங்கடமே -,-
பூ கைக்குள் – அழகிய திருக்கையினிடத்து,
மெய் தவளம் சங்கு எடுத்தார் – உருவம் வெண்மையான சங்கத்தை ஏந்தியவரும்,
மேகலை விட்டு அம் கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் – தனது ஆடையைப் பற்றுதலை விட்டு அழகியகைகளைத்
தன்தலைமேல் வைத்துக் கூப்பி வணங்கினவளான திரௌபதியினது பயத்தைப் போக்கியவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

மரக்கிளைகளிலேறிக் குலுக்குதலும், ஒருமரத்திலிருந்து மற்றொருமரத் தை விரும்பித்தாவுதலும், குரங்கினியல்பு.
கோங்கைக்குலுக்குமென இயையும். ஹரி, கரீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஹரி – (பிறர்கைப் பொருளைக்) கவர்வதெனக் காரணப்பொருள்படும்.
கரம் – கை; இங்கே, துதிக்கை; அதனையுடையது கரீ எனக் காண்க.
கரி என்பதற்கு – கருமையுடையதெனத் தமிழ்வகையாற் காரணப்பொருள்கூறுதல். பொருந்தாது, வடசொல்லாதலின்.
வேங்கை – ஓர்மரமும், புலியும். வேங்கடமலையிலுள்ள யானைகள் புலிகட்கு அஞ்சியோடாது எதிர்நின்று பொருது
அவற்றை அழிப்பனவென அவற்றின்கொழுமையை விளக்கியவாறு. அரித்தல் – ஹரித்தல்.

தவளம் – வடசொல். துரியோதனன் சொன்னபடி துச்சாதனன் திரௌபதியைச் சபையிற் கொணர்ந்து
துகிலுரியத் தொடங்கியபோது அவள் கைகளால் தனது ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே எம்பெருமானைக்
கூவியழைத்தபொழுது, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்து நின்று பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில்
ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பி வணங்கித் துதித்த வுடனே
எம்பெருமான் அவளுடைய ஆடை மேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னாதலால்,
“மேகலைவிட் டங்கை தலைவைத்தவ ளச் சங்கெடுத்தார்” என்றார்.
எம்பெருமானைச் சரணமடைவார்க்கு ஸ்வாதந்தி ரியம் சிறிதும் இருக்கக்கூடாதென்பதும்,
தன் முயற்சி உள்ளவளவும் பெருமான் கருணைபுரியா னென்பதும், இங்கு விளங்கும்.
மேகலை – எட்டுக் கோவை இடையணியுமாம்.

———-

மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
மேவிப் புயல் தவழும் வேங்கடமே -ஆவிக்குள்
ஆன அருள் தந்து அடுத்தார் ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி
வானவருடம் தடுத்தார் வாழ்வு –66-

(இ – ள்.) மாவில் – மாமரத்தில்,
குயிலும் – குயில்களும்,
ஒளி செய்ய – ஒளித்துக் கொள்ளும்படியும்: (அங்கு),
மயிலும் – மயில்களும்,
ஒளி செய்ய – பிரகாசமடையும்படியும்:
மேவி – பொருந்தி,
புயல் – மேகம்,
தவழும் – சஞ்சரிக்கப்பெற்ற,
வேங்கடமே -,-
ஆன அருள் தந்து – பொருந்தின கருணையைச் செய்து,
ஆவிக்குள் அடுத்தார் – (எனது) உயிரினுள் சேர்ந்தவரும்,
ஆன் நிரைக்கு ஆ – பசுக்கூட்டங்களைக் காக்கும்பொருட்டு,
குன்று ஏந்தி – (கோவர்த்தன) கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து,
வான வருடம் தடுத்தார் – மேகங்களின் மழையை (ஆநிரையின் மேலும் ஆயர்களின் மேலும் விழாமல்) தடுத்தவருமான திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)

வசந்தகாலத்திற் களிப்புக்கொண்டு இனிதாகக் கூவி விளங்குந்தன்மை யனவான குயில்கள் மேகங்களின்
வருகையைக் கண்டு கொண்டாட்ட மொழிந்து வருந்திப் பதுங்குதலும்,
மயில்கள் மேகங்களின் வருகையைக் கண்டவுடனே மகிழ்ச்சியடைந்து கூத்தாடிக்கொண்டு விளங்குதலும் இயல்பாதலால்,
“குயிலும் மயிலும் ஒளிசெய்யப் புயல் மேவித்தவழும்” என்றார்.
ஒன்றுக்குஒன்று எதிரான தன்மையுடைய குயிலும் மயிலும் புயல்வருகையில் ஒருநிகரான தன்மையை
அடைகின்றன வென்று “ஒளிசெய்ய” என்ற சொல்லின் ஒற்றுமையாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு. “மாவில்” என்றதனால்,
இவ்விரண்டுக்கும் மாமரம் தங்குமிடமாதல் அறிக. ஒளி – மறை

தலும், விளக்கமும்: முந்தினபொருளில் முதனிலைத் தொழிற்பெயர். பிந்தின பொருளில் பண்பு உணர்த்தும் பெயர்.
செய்ய என்ற வினையெச்சம் – இங்குக் காரியப்பொருளதாதலால், எதிர்காலம்.
ஆவிக்குள் – எல்லாவுயிர் களினுள்ளும் என்றுமாம்; என்றது, அந்தரியாமித்துவங் கூறியவாறாம்.
ஆவி – மனமுமாம். வான் என்ற ஆகாயத்தின் பெயர் – இடவாகுபெயராய், மேகத்தைக் குறிக்கும்;
அம் – சாரியை. வருடம் – வர்ஷமென்ற வடசொல் லின் விகாரம்.

————

கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி
மீனோ வெனக் கொழிக்கும் வேங்கடமே -வானோர்கள்
மேகன் அயன் அம் கொண்டு ஆர் வேணி அரன் காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் காப்பு –67-

(இ – ள்.) கான் ஓடு அருவி – காடுகளின்வழியாக ஓடிவருகின்ற நீர்ப் பெருக்குக்கள்,
கனகமும் முத்தும் தள்ளி – பொன்னையும் முத்தையும் அலைத்தெறிந்து,
மீனோ என கொழிக்கும் – நக்ஷத்திரங்களோவென்று (காண்கின்றவர்கள்) சொல்லும்படி (பக்கங்களில்) ஒதுக்கப்பெற்ற:
(அவ்வருவிகள்), மீ நோவு எனக்கு ஒழிக்கும் – மிகுதியான (பிறவித்) துன்பத்தை எனக்குப்போக்குதற்கு இடமான:
வேங்கடமே -,-
வானோர்கள் – மேலுலகில் வசிப்பவர்களான தேவர்களும்,
மேகன் – மேகத்தை வாகனமாகவுடையவனான இந்திரனும்,
அயன் – பிரமனும்,
அம் கொண்டு ஆர் வேணி அரன் – நீரை (கங்கா நதியின் வெள்ளத்தைத்) தரித்துப் பொருந்திய (கபர்த்தமென்னும்) சடை முடியையுடைய சிவபிரானும்,
காண்பு அரியார் – காணவொண்ணாதவரும்,
காகன் நயனம்கொண்டார் – காகாசுரனுடைய கண்ணைப் பறித்தவருமான திருமால்,
காப்பு – (எழுந்தருளிநின்று உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ – று.)

மீன் ஓ என கொழிக்கும் என்பதற்கு – மீன்கள் ஓவென்று அலறித்துள் ளும்படி கொழிக்குமென்று உரைப்பாரு முளர்.
மலையருவிகள் அங்கு உண்டாகிற பொன்னையும் முத்துக்களையும் தள்ளிக் கொழித்து வருதல் இயல்பு.
கான் – காநக மென்ற வடசொல்லின் விகாரம். கநகம் – வடசொல். திரு வேங்கடமலையி லுள்ள அருவிகளின்
வடிவமான பாபவிநாசம் ஆகாசகங்கை முதலிய புண்ணியதீர்த்தங்கள் தம்மிடம் நீராடுகின்றவர்களுடைய
பிறவித் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல மகிமையுடையன வாதலால், “அருவி மீநோவு எனக்கு ஒழிக்கும்” என்றார்.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும் ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமையால்,
சிலேடை யமகம் திரிபு இவற்றில் நகரனகரங்களை அபேதமாகக் கொண்டு அமைத்தல் மரபாதல்பற்றி, “மீனோவென்” எனப்பட்டது.
மேகம், அஜன், வேணீ, ஹரன்காகன், நயநம் – வடசொற்கள். அஜன் – அ – திருமாலினின்று, ஜன் – தோன்றினவன்;
ஹரன் – சங்காரக்கடவுள். அங்கு ஒள்தார்வேணி எனப்பிரித்து, ஒள்தார் என்பதற்கு – பிரகாசமான (கொன்றை) மாலையைத்
தரித்த என்றுஉரைத்து, அங்கு என்பதை அசையாகக் கொள்ளுதலும் ஒன்று.

“சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட, அத்திரமே கொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப, அத்திரமே யதன் கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற
பெரியாழ்வார் திருமொழி – நான்காமடிக்கு மேற்கோள்.

————-

கண்டு அடைந்த வானவரும் காந்தள் குல மலரும்
விண்ட விர்ந்து நிற்கின்ற வேங்கடமே -தொண்டருக்கு
வைகுந்தம் நாட்டான் மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்த நாட்டான் வரை –68-

(இ – ள்.) கண்டு – (அத்திருமலையின் அழகைக்) கண்டு,
அடைந்த – (அதனிடத்தில்) வந்துசேர்ந்த,
வானவரும் – தேவர்களும்,
விண் தவிர்ந்து நிற்கின்ற – (மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச்செல்ல மனமில்லாமையால்) தேவலோகத்தை நீங்கி
நிற்றற்குக் காரணமான
குலம் காந்தள்மலரும் – சிறந்தசாதிக் காந்தட்செடிகளின் மலர்களும்,
விண்டு அவிர்ந்து நிற்கின்ற – இதழ்விரிந்து மலர்ந்து விளங்கி நிற்றற்கு இடமான:
வேங்கடமே -,-
தொண்டருக்கு – தன் அடியார்களுக்கு,
வை குந்தம் நாட்டான் – கூரியசூலா யுதத்தை (யமன்) நாட்டாதபடி (அருள்) செய்பவனும்,
மருவு உருவம் ஈந்து – பொருந்திய தனது உருவத்தை (அவ்வடியார்கட்கு)க் கொடுத்து,
வைக்கும் வைகுந்தம் நாட்டான் – (அவர்களை) ஸ்ரீவைகுண்டமென்னுந் தனது தேசத்தில் நிலையாக வைப்பவனுமான திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

“கண்டுஅடைந்த வானவரும் விண்தவிர்ந்து நிற்கின்ற” என்றதனால், புண்ணிய லோகமாய்ச் சுகானுபவத்துக்கே யுரிய
தேவலோகத்தினும் திரு வேங்கடம் மிக இனிய வாசஸ்தாநமாகு மென்பதனோடு தேவர்கட்குப் புகலிட மாகுமது வென்பதும் விளங்கும்.
காந்தள்மலரைக் கூறினது, மற்றைக் குறிஞ்சி நிலத்து மலர்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.
குலம் – கூட்டமுமாம். விண்டு – வாய்விண்டு; விள் – பகுதி.

தன்அடியார்செய்த தீயகருமங்களையெல்லாம் தீர்த்தருளுதலால் அவர்கட்கு யமதண்டளை யில்லாதபடி செய்பவனென்பது,
“தொண்டருக்கு வை குந்தநாட்டான்” என்பதன் கருத்து. யமனுக்கும் அந்தராத்மாவாய் நின்று தொழில் செய்பவன் திருமாலேயாதலால்,
அவனதுதொழிலைத் திருமாலின் மேலேற்றிக் கூறினார்.
“வையே கூர்மை” என்ற தொல்காப்பியஉரியியற் சூத்திரத்தால், வை என்பது – கூர்மை யுணர்த்துகையில், உரிச்சொல்லென அறிக.
குந்தம் – வடசொல்: வேல், ஈட்டி, சூலம். நாட்டான் – நாட்டு என்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும் பெயர். எம்பெருமான் தனதுவடிவம்போன்ற வடிவத்தைத் தன் அடியார்கட்குக்
கொடுத்தலாகிய ஸாரூப்யநிலை “மருவுருவமீந்து” என்றதனாலும்,
தான்வசிக்கிற உலகத்தைத் தன்அடியார்கட்கு வாசஸ்தானமாகத் தருதலாகிய ஸாலோக
நிலை “வைக்கும் வைகுந்தநாட்டான்” என்றதனாலும் கூறப்பட்டன.
வைக்கும் வைகுந்த நாட்டான் – வைகுந்தநாட்டில் வைப்பவன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
நாட்டான் – நாடு என்ற இடப்பெயரின் மேற் பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு வினையாலணையும்பெயர்.

“மருவுருவமீந்துவைக்கும்” என்றவிடத்து “மருதினிடையே தவழும்” என்றும் பாடமுண்டு;
அதற்கு – மருதமரங்களின் நடுவிலே தவழ்ந்து சென்ற என்று பொருள்; இது, நாட்டானுக்கு அடைமொழி.

————-

வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே -ஊழின் கண்
சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –69-

(இ – ள்.) வாழ் – (கற்பகாலமளவும் அழிவின்றி) வாழ்கின்ற,
அம் புலியினொடு – சந்திரனுடனே,
வான் ஊர் தினகரனும் – ஆகாயத்திற் சஞ் சரிக்கின்ற சூரியனும்,
வலம் செய் – பிரதக்ஷிணஞ் செய்யப்பெற்ற:
வேழங் களும் – யானைகளும்,
வலம் செய் – வலிமை கொள்ளப்பெற்ற:
வேங்கடமே -,-
இனி – இனிமேல்,
யான் -, ஊழின்கண் – கருமவசத்திலே,
சற்று ஆயினும் சாரா வகை – சிறிதும் பொருந்தாதபடி,
அருளும் – (எனக்குக்) கருணைசெய்த,
நல் தாயினும் இனியான் – நல்ல தாயைக்காட்டிலும் இனிய வனான திருமாலினது,
நாடு – திவ்வியதேசம்; (எ – று.)

நாள்தோறும் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமித்துவருகின்ற சந்திர சூரியர்களின் சஞ்சாரம்,
பூமியில் உயர்ந்து தோன்றுகிற திருவேங்கடமலை யைப் பிரதக்ஷிணஞ் செய்தல் போலத் தோன்றுதலாலும்,
தேவாதிதேவனான திருமால் எழுந்தருளியிருக்கிற திருவேங்கடமலையைச் சந்திரசூரியாதி தேவர்கள்
எப்பொழுதும் பிரதக்ஷிணஞ் செய்தல் மரபாதலாலும், “அம்புலியினொடு தினகரனும் வலஞ்செய்” என்றார்.
வலஞ்செய்தல் – வலப்புறத்தாற் சுற்றிவருதல்.
“வாழ்”, “வானூர்” என்ற அடைமொழிகள் – அம்புலி, தினகரன் என்ற இருவர்க்கும் பொருந்தும்.
திநகரன் என்ற வடசொல் – பகலைச் செய்பவ னென்று பொருள்படும். குறிஞ்சிநிலத்துப் பெருவிலங்காகிய யானைகள்
அம்மலையின் வளத்தால் மிக்ககொழுமைகொண்டு ஒன்றோடொன்று பொருதும் பிறவற்றோடு பொருதும்
தம்வலிமையையும் வெற்றியையுங் காட்டுதல் தோன்ற, “வேழங்களும் வலஞ்செய்” என்றனரென்க.
வலம் – பலமென்ற வடசொல்லின் விகாரம்.

ஊழாவது – இருவினைப்பயன் செய்த உயிரையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி.
எனது கருமங்களை யெல்லாம் ஒழித்து எனக்கு முத்தியையருளும் பேரன்புடைய கடவுளென்பது, பிற்பாதியின் கருத்து.
சற்று, இனி – இடைச்சொற்கள். நல்தாய் – பெற்றதாய்.
தான்பெற்ற குழந்தைகட்கு ஆவனவெல்லாம் செய்யும் இயல்பு தோன்ற, “நல்தாய்” என்றார்.

———–

நாட்கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய் துதிரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே வாட் கலியன்
நா வியப்பு ஆம் பாட்டினர் நச்சு மடுவைக் கலக்கித்
தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –70-

(இ – ள்.) தாள் – நாளத்தோடு கூடிய,
கமலம் – தாமரையையுடைய,
பூ – அழகிய,
சுனைக்கும் – சுனைகளுக்கும்,
வடிவு இல்லா – நீர்குறைதல் இல்லாத:
சாயகங்கள் கொய்து திரி வேட்கும் – (தனக்குஅம்புகளாகிற) மலர்களைப் பறித்துக்கொண்டு திரிகிற மன்மதனுக்கும்,
வடிவு இல்லா – உருவம் இல்லாத:
வேங்கடமே -,-
வாள் – வாட்படையை ஏந்திய,
கலியன் – திரு மங்கையாழ்வாருடைய,
நா – நாவினின்றுவருகிற,
வியப்பு ஆம் பாட்டினார் – அதிசயிக்கத்தக்க பாடல்களையுடையவரும்,
தாவி – குதித்து,
நஞ்சு மடுவை கலக்கி – விஷத்தையுடைய மடுவைக் கலங்கச்செய்து,
அ பாம்பு ஆட்டினார் – அந்த(க் காளியனென்னும்) பாம்பை ஆட்டினவருமான திருமால்,
சார்பு – சார்ந்திருக்கு மிடம்; (எ – று.)

சுனை – நீரூற்றுள்ள மலைக்குளம். அதற்கு வடிவுஇல்லையென வேங்கடத்தின் நீர்வளச்சிறப்பை உணர்த்தியவாறாம்.
வடிவு – வடிதல்; ‘வு’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்புக்கு இரையாய் அங்கம் இழந்து அநங்கனான மன்மதன்,
தனக்கு அம்புகளாகின்ற தா மரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்பன
அம்மலையிற் செழித்திருத்தலால் அவற்றைப் பறித்தெடுத்துக் கொள்ளுதற் பொருட்டு அங்குத் திரிகின்றன னென்பார்
“சாயகங்கள்கொய்துதிரி வேட்கும் வடிவில்லா” என்றார்.
கொய்து என்ற வினையினால், “சாயகங்கள்” என்றது, மலர்களென விளங்கும். கமலம், ஸாயகம் – வடசொற்கள்.

திவ்யமான பாசுரங்களைத் திருமங்கையாழ்வார்பாடும்படி அருள்செய் தவர் திருமாலாதலாலும்,
திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவ ராதலாலும், “கலியன் நாவியப்பாம் பாட்டினார்” என்றார்.
சோழமண்டலத்தில் திருமங்கையென்னும் நாட்டில் சோழராசனுக்குச்சேனை த்தலைமைபூணும்பரம்பரையில் தோன்றி
நீலனென்னும் இயற்பெயர் பெற்ற இவர், தம்குடிக்கு ஏற்ப இளமையிலேயே படைக்கலத் தேர்ச்சிபெற்று
அவ் வரசனுக்குச் சேனாதிபதியாய் அமர்ந்து வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடகத்தையும் ஏந்திச்சென்று
பகைவரோடு பொருதுவென்று பரகாலனெ ன்றுபெயர்பெற்ற பராக்கிரமம் தோன்ற, “வாட்கலியன்” என்றார்.

“மாயோ னைவாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்”,
“தென்னரங்கன்றன்னை வழிபறித்தவாளன்” என்றபடி இவர் எம்பெருமானை வழிபறித்தபோது
கையிற்கொண்டவாளைக்காட்டி அச்சுறுத்தி அப்பெருமானிடம் மந்திரோப தேசம்பெற்றமை தோன்ற, “வாட்கலியன்” என்றாருமாம்.

சோழராசன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசனாகிய இவர் குமுதவல்லியென்னும் கட்டழகியை மணஞ்செய்து
கொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில்,
பொருள்முழுவதும் செலவாய் விட்டதனால் வழிபறித்தாகிலும் பொருள் தேடிப் பாகவததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து
வழிச்செல்வோ ரைக் கொள்ளையடித்துவரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள் ளக்கருதித்
தான் ஒருபிராமணவேடங்கொண்டு பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடன் இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலில் அணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க,
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்று ஒருபெயர்கூறினானென்றும்;

பின்புஇவர்பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில், அப்பொருட்குவை இடம்விட்டுப்
பெயராதிருக்கக் கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி “நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று
விடாதுதொடர்ந்து நெருக்க, அப்பொழுது அந்த அழகியமணவாளன்,
“அம் மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம்; வாரும்” என்று இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை
இவர் செவியில் உபதேசித்தருளி உடனே கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவை சாதிக்க,
அத் திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழி வாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாட வல்லவராய்,
பெரிய திருமொழி, திருக் குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரியதிருமடல்
என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய் மலர்ந்தருளினரென்றும் வரலாறு அறிக.
“வியப்பாம்” என்ற அடைமொழி – அப்பாசுரங்களின் அருமைபெருமைகளை உணர்த்தும்.

மடு – ஆற்றினுட்பள்ளம். “அப்பாம்பு” எனச்சுட்டினது, கதையை உட்கொண்டு.
அன்றி, அகரச்சுட்டு – கொடுமையிற் பிரசித்தியை விளக்குவது மாம்.
ஆட்டினார் – ஆட்டிவருத்தியவர்; பிறவினை யிறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும்பெயர்.
இனி, பாம்புஆட்டினார் – பாம்பின்மேற் கூத்தாட் டையுடையவ ரெனினுமாம்;
இப்பொருளில், இச்சொல் – குறிப்புவினையா லணையும்பெயர்: இன் – சாரியை.
ஆட்டு – ஆடுதல்; ஆடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர். கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி
நர்த்தநஞ்செய்தருளும்போது ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப்படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து நர்த்தநஞ்செய்து நின்று அப்பாம்பின் வலிமையை யடக்கி
அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, “பாம் பாட்டினார்” என்றனரென்க.

————–

ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும் வேயும்
கிளை விட்ட வேங்கடமே -தோயும்
தயிர்க்காத்தாம் கட்டுண்டார் தாரணியில் தந்த
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் –71-

(இ – ள்.) ஆயும் – (சிறந்ததென்று நூல்களினால்) ஆராய்ந்து கூறப்பட்ட,
துறவு அறத்தை – சந்நியாசாச்சிரமத்தை,
அண்டின – பொருந்திய,
முத் தண்டினரும் – திரிதண்டத்தையேந்திய முனிவர்களும்,
கிளை விட்ட – சுற்றத்தாரைப் பற்றறக் கைவிடுதற்கிடமான:
வேயும் – மூங்கில்களும்,
கிளை விட்ட – கிளைகளை வெளிவிட்டுச் செழித்து வளர்தற்கிடமான:
வேங்கடமே -,-
தோயும் தயிர்க்கு ஆ – தோய்ந்த தயிரைக் களவுசெய்து உண்டதற்காக,
தாம் கட்டுண்டார் – தாம் கட்டுப்பட்டவரும்,
தாரணியில் – உலகத்தில்,
தந்த – (தம்மாற்) படைக்கப்பட்ட,
உயிர் – உயிர்களை,
காத்து – பாதுகாத்து,
ஆங்கு – அதன்பின்பு,
அட்டு – அழித்து,
உண்டார் – விழுங்கியவருமான திருமாலினது, ஊர் -; (எ – று.)

மூன்று முங்கில்களை ஒருங்குசேர்த்துக் கட்டினதாகிய திரிதண்டத்தைக் கையிற்கொள்ளுதல், வைஷ்ணவ சந்யாசிகளின் இயல்பு.
துறவிகள் முக்கோல்பிடித்தல் காமம்வெகுளி மயக்க மென்னும் முப்பகையையும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை
யென்னும் ஈஷணாத் திரயங்களையும் வென்று அடக்கியதற்கும், சித் அசித் ஈசுவரன் என்னும் தத்துவத்திரயத்தைக்
கைப்பற்றினமைக்கும் அறிகுறியாகுமென்பர். ஆயுந்துறவறம் – தத்துவப்பொருளை ஆராய்தற்கு உரிய துறவறமுமாம்:
துறவறம் – பற்றுக்களைத் துறந்து செய்யும் ஒழுக்கம். தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம்.
“முத்தண்டினர் கிளைவிட்ட” என்றதனால், அவர்களுடைய ஒழுக்கச்சிறப்பை உணர்த்தியவாறு. வேய்க்குக் கிளைவிடுதல் – கப்புவிடுதல்.

ஆ – விகாரம். கட்டுண்டார் என்பதில், உண் என்ற துணைவினை – செயப்பாட்டுவினைப்பொருளை யுணர்த்தும்.
கண்ணன்இளமைப்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவுசெய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை அக்குற்றத்துக்கு ஒருதண்டனையாகக்
கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற் கட்டி உரலோடு பிணித்துவைத்தன ளென்பது அறிக.
நித்தியமான உயிர்களை “தந்தவுயிர்” என்றது, அவற்றிற்கு உடலுறுப்புக்களைத் தந்தமை பற்றி யென்க.
திரிமூர்த்தி சொரூபியாய் நின்று படைத்தல் காத்தல் அழித்தல் செய்பவரும், பிரளயகாலத்தில் அனைத்துயிரையும் வயிற்றினுள்
வைத்துப் பாதுகாப்பவரும் திருமாலேயாதலால், “தாரணியில் தந்த வுயிர்க் காத்து ஆங்கு அட்டு உண்டார்” என்றார்.
உயிர் காத்து என இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாமல் வரவேண்டிய தொடர்,
திரிபுநயம்நோக்கி “உயிர்க்காத்து” என வலிமிக்கது; இது, விரித்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தின்பாற் படும்.

————

தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும் சந்தனமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் வேங்கடமே -தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்தார் கோடு -ஆழியார் குழையின்
கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –72-

(இ – ள்.) தொண்டொடு – பணிவிடை செய்தலுடனே,
மெய் அன்பு உடையார் – உண்மையான பக்தியை யுடைய அடியார்களது,
தூய் மனமும் – பரிசுத்தமான உள்ளமும்,
விண்டொடு பொன் பாம்பு அணை சேர் – திருமாலுடனே அழகிய ஆதிசேஷ சயநத்தைத் தியானிக்கப் பெற்ற:
சந்தனமும் – சந்தனமரங்களும்,
விண் தொடு பொற்பு ஆம் பணை சேர் – (உயர்ச்சியால்) ஆகாயத்தை அளாவிய பொலிவான கிளைகள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
தண்டொடு – கதாயுதத்துடனே,
வாள் – வாளாயுதத்தையும்,
கோல் அமரும் கார்முகத்து – அம்புகள் பொருந்திய வில்லையும்,
ஆர் கோடு – ஒலிக்கின்ற சங்கத்தையும்,
ஆழியார் – சக்கரத்தையும் உடையவரும்,
குழையின் கோலம் மருங்கு ஆர் முகத்தார் – குண்டலங்களின் அழகு (இரண்டு) பக்கங்களிலும் பொருந்திய
திருமுகத்தை யுடையவருமான திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

தொண்டு – கைங்கரியம். மெய்யன்பு – மனப்பூர்வமாகிய பக்தி. ஆதி சேஷனாகிய சயனத்திற் பள்ளி கொண்டிருக்கின்ற
திருமாலை அடியார்கள் உள்ளத்திற்கொண்டு தியானிக்கின்றன ரென்க. விஷ்ணு என்ற வடசொல், விண்டு எனச் சிதைந்தது.
சேர்தல் – இடைவிடாது நினைத்தலாதலை, திருக்குறளில் “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்” என்றவிடத்துப்
பரி மேலழகருரையாலும் அறிக. கிளைகளுக்கும் வானத்துக்கும் சம்பந்தமில்லா திருக்கச் சம்பந்தத்தைக் கூறினது, தொடர்புயர்வுநவிற்சியணி;
இது, கிளைகளின் மிக்கஉயர்வை விளக்கும். பொற்பு – உரிச்சொல்.

திருமாலின் பஞ்சாயுதங்களுள், கதை கௌமோதகி யென்றும், வாள் நந்தக மென்றும், வில் சார்ங்க மென்றும்,
சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் சுதர்சநமென்றும் பெயர்பெறும். கார்முகம் – வடசொல்;
கர்மத்தில் (அதாவது (போர்த்) தொழிலில்) வல்லதென்று பொருள்படும். ஆர் கோடு – வினைத்தொகை; ஆர்த்தல் – ஒலித்தல்.
கோடு, வளை என்பன – பரியாய நாமம். ஆழி – (பகைவரை) அழிப்பது; அல்லது, வட்டவடிவமானது.
ஆர்முகம் – வினைத்தொகை; ஆர்தல் – பொருந்துதல்.

இச்செய்யுளின் பின்னிரண்டடியில் யமகம் அமைந்திருத்தல் காண்க.

————-

கிட்டும் நெறி யோகியரும் கிள்ளைகளும் தம் கூடு
விட்டுமறு கூடு அடையும் வேங்கடமே -எட்டுமத
மாவென்று வந்தான் வர நாளை வா இன்று
போ என்று உவந்தான் பொருப்பு –73-

(இ – ள்.) கிட்டும்நெறி யோகியரும் – (முத்தியை) விரைவிற் சேரும் உபாயமான யோகத்திற் பயில்கிற முனிவர்களும்,
தம் கூடு விட்டு மறு கூடு அடையும் – தமது சரீரத்தை விட்டு வேறு சரீரத்திற் புகப்பெற்ற;
கிள்ளைகளும் – கிளிகளும்,
தம் கூடு விட்டு மறுகு ஊடு அடையும் – தாம்வசிக்கிற கூண்டை விட்டு நீங்கி வீதிகளிற் சேரப்பெற்ற:
வேங்கடமே -,-
மதம் எட்டு மாவென்று வந்தான் – மதம்பிடித்த அஷ்டதிக்கஜங்களைச் சயித்துவந்தவனான இராவணன்,
வர – (தன் எதிரிற் போருக்கு) வர, (அவனை உடனே எளிதில் வென்று),
இன்று போ நாளை வா என்று – “இன்று போய் நாளைக்கு வா” என்று சொல்லி,
உவந்தான் – (அவனிடத்து) அன்புகாட்டிய வனான திருமாலினது, பொருப்பு – திருமலை; (எ – று.)

நெறி – மார்க்கம். யோகியர் தம் கூடுவிட்டு மறுகூடு அடைதல் – தம் உயிர் தம் உடம்பைவிட்டுநீங்கி
வேறோருடம்பினுட் புக்குத் தொழில்செய்யு மாறு செய்தல்; இது, பரகாயப்பிரவேச மென்னுஞ் சித்தி.
பறவைகள் வசிக்குங் கூடுபோல உயிர் தங்குமிடமாதலாலும், உயிர்கூடுமிட மாதல்பற்றியும்,
உடம்பு “கூடு” என்று பெயர்பெறும். கிள்ளை – பெயர்த்திரிசொல். மறுகூடு, ஊடு – ஏழனுருபு.
அடைதல் – உட்புகுதலும், சேர்தலும்.

இராவணன் திக்விஜயகாலத்தில் இந்திரன் முதலிய தேவர்களோடு பொருகையில் ஐராவதம் முதலிய
திக்கஜங்களை யெதிர்த்து அவற்றின் தந்தங்களை ஒடித்து அவற்றை வலிதொலைத்தனென அறிக.
இராமபிரான், முதல்நாட்போரில் தன்சேனை முழுவதும் படைக்கலமனைத்தும் அழியத் தனியனாய் அகப்பட்ட இராவணனது
எளிமையை நோக்கி இரங்கி மேலும் போர்செய்யாது நிறுத்தி “இன்றுபோய் நாளை நின்படையொடு வா” என்று
கூறி விட்டன னென்பது வரலாறு;
“ஆளையா வுனக் கமைந்தன மாருத மறைந்த,
பூளையாயின கண்டனை யின்றுபோய்நீ போர்க்கு,
நாளைவாவென நல்கினன் நாகிளங் கமுகின்,
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்” என்ற கம்பராமாயணச்செய்யுள் இங்கே காணத்தக்கது.
இங்ஙனம் பகைவனிடத்து அருள்கொண்டு அவனைவிடுதல், தழிஞ்சி யென்னும் புறப்பொருள் துறையாம்;
அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச் செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது.
இதனால், இராமபிரானது காம்பீரியம், கருணை, அறத்தின்வழிநிற்றல் முதலிய திருக்கலியாணகுணங்கள் விளங்கும்.

“மதமா” எனவே, யானையாயிற்று; விலங்கின் பொதுப்பெயராகிய “மா” என்பது – “மதம்” என்ற அடைமொழியால்,
சிறப்பாய் யானையை உணர்த்திற் றென்க.
எட்டுமதமா – ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனப் பெயர் பெறும்;
இவற்றைக் கிழக்கு முதலாக முறையே கொள்க. நாளை, இன்று என்பன முறையே
எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையுங் காட்டும் இடைச்சொற்கள்.
மூன்றாமடியில் உவந்தான் எனப் பதம்பிரித்துக் களிப்புக்கொண்டவனென்று பொருளுரைத்து,
நான்காமடியில் வந்தான் என்று பதம்பிரித்துப் போரொழிந்து மீண்டானென்று பொருளுரைப்பினும் அமையும்.

————

மட்டு வளர் சாரலினும் மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் வேங்கடமே -கட்டு சடை
நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான் நீள் குறள் ஆய்ப்
பார்க்கு அங்கை ஏற்றான் பதி –74-

(இ – ள்.) மட்டு வளர் சாரலினும் – (மலர்களினின்றும் கூண்டுகளினின்றும்) தேன் பெருகி வழியப் பெற்ற (அம்மலையின்) பக்கங்களிலும்,
மதி விட்டுவிளங்கும் – சந்திரன் (ஒளியை) வீசி விளங்கப்பெற்ற:
மா தவத்தோர் சிந் தையினும் – பெருந்தவத்தையுடைய முனிவர்களது மனத்திலும்,
விட்டு மதி விளங்கும் – திருமாலை விஷயமாகக் கொண்ட ஞானச்சுடர் விளங்கப்பெற்ற:
வேங்கடமே -,-
கட்டு சடை – தொகுத்துக் கட்டிய சடையில்,
நீர் கங்கை – கங்கைநீரையுடைய,
ஏற்றான் – ரிஷபவாகனனான சிவபிரானது,
இரப்பு – யாசித்தலை,
ஒழித்தான் – நீக்கியருளியவனும்,
நீள் குறள் ஆய் – (பின்பு) நீண்டு வளருந்தன்மையுள்ள வாமந வடிவங்கொண்டு,
பார்க்கு – உலகத்தைப் பெறும்பொருட்டு,
அம் கை ஏற்றான் – அழகிய கையில் (மகாபலி தந்தநீரை) ஏற்றுக்கொண்டவனுமான திருமாலினது,
பதி – திவ்வியதேசம்; (எ – று.)

பதி – திருப்பதி.
மட்டு வளர் சாரல் – மலர்களின் நறுமணம் வீசப் பெற்ற மலைப்பக்கமுமாம்.
சாரல் – சார்தல்; மலையைச் சார்ந்த பக்கத்துக் குத் தொழிலாகுபெயர். சாரலிற் சந்திரன் விளங்குமென
அம்மலையின் உயர்வை விளக்கியவாறு. மதி – சந்திரனென்னும் பொருளில், (பலராலும்) மதிக்கப்படுவதென்று
காரணப்பொருள்படும்; அறிவைக் குறிக்கையில், வட சொல். விஷ்ணு என்ற வடசொல், விட்டு என விகாரப்பட்டது.

ஏற்றான் என்றது – மூன்றாமடியில் ஏறு என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும்,
நான்காமடியில் ஏல் என்ற வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.
ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். நீள் குறள் – இனி நீளுங் குறள் என எதிர்கால வினைத்தொகை.
குறள் – குறுகிய வடிவம். “நீள்குறள்” என்றது, “ஆலமர்வித்தி னருங்குற ளானான்” என்றபடி மிகப்பெரிய
திரிவிக்கிரம வடிவத்தை உட்கொண்ட மிகச்சிறிய வாமநவடிவ மென்க.
பார் -பார்க்கப்படுவது, அல்லது பருமையுடையது எனக் காரணப்பொருள்படும்.

———-

புக்கு அரு மாதவரும் பூ மது உண் வண்டினமும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் வேங்கடமே -ஒக்க எனை
அன்பதினால் ஆண்டார் அரிவையொடும் கான் உறைந்த
வன்பதினால் ஆண்டார் வரை –75-

(இ – ள்.) புக்க – அங்கு வருகின்ற,
அரு மா தவரும் – அரிய பெரிய தவத்தையுடைய முனிவர்களும்,
மெய் கவசம் பூண்டு இருக்கும் – சத்தியமாகிய கவசத்தைத் தரித்திருக்கப்பெற்ற:
பூ மது உண் வண்டு இனமும் – மலர்களிலுள்ள தேனைக் குடிக்கின்ற வண்டுகளின் கூட்டமும்,
மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் – (அம்மதுபானத்தாலாகிய மயக்கத்தால் தமது) உடம்பில் தம்வசம்
தப்பிப் பரவசமாந்தன்மையைக் கொண்டிருக்கப்பெற்ற:
வேங்கடமே -,- ஒக்க – (தமது மெய்யடியாரை) ஒப்ப,
எனை – (அடிமைத்திறமில்லாத) என்னையும்,
அன்பு அதினால் ஆண்டார் – அன்பினால் ஆட்கொண்டவரும்,
அரிவையொடும் – சீதாபிராட்டியுடனே,
கான் உறைந்த – வனத்தில் வசித்த,
வல் பதினால் ஆண்டார் – கொடிய பதினான்கு வருடங்களையுடையவருமான திருமாலினது,
வரை – திருமலை; (எ – று.)

கவசம் – இரும்பு முதலியவற்றாலாகின்ற உடம்பின்மேற் சட்டை; அது உடம்பைப் பாதுகாப்பது போலச்
சத்தியம் உயிரைப் பாதுகாத்தலால், “மெய்க்கவசம்” எனப்பட்டது.
முனிவர்கட்கு வாய்மையுடைமை இன்றி யமையாத ஒழுக்கமாதலால், “புக்க அருமாதவர் மெய்க்கவசம்பூண்டிருக்கும் வேங்கடம்” எனப்பட்டது.
கவசம், மது, அவசம் – வடசொற்கள். மெய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
ந + வசம் = அவசம். வடமொழிச்சந்தி. புக்க அருமாதவர், மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் – பரம்பொருளை அனுபவிக்கும்
ஆனந்தமிகுதியால் தம் உடம்பு தம்வசமிழந்து பரவசமாகப்பெற்ற என்றும்; மலர்களில் மதுவை யுண்ட வண்டினம்,
மெய்க்கவசம் பூண்டு இருக்கும் – (அம்மலர்களின் தாதுக்கள் மேற்படிதலால்) உடம்புக்குக் கவசம்
பூண்டிருக்கப்பெற்ற என்றும் உரைப்பாரும் உளர்.

“அன்பதினால்” என்பதில், “அது” என்பது – பகுதிப்பொருள் விகுதி; இன் – சாரியை.
ஆண்டார் என்பது – மூன்றாமடியில் ஆள் என்னும் வினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத்தெரிநிலை வினையாலணையும்பெயரும்,
நான்காமடியில் ஆண்டுஎன்னும் பெயரின்மேற் பிறந்த குறிப்புவினையாலணை யும்பெயருமாம்.
அரிவையென்பது – இங்குப் பருவப்பெயராகாமல் பெண்ணென்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபது முதல் இருபத்தைந்தளவும். அரிவையொடும், உம் – இசைநிறை.
“வன்பதினாலாண்டு” என்றது, கொடியவனத்தில் வசிக்குங் காலம் கழித்தற்கு அரிதாத லாலும்,
அவ்வனவாசகாலத்திற் பிரானுக்கும் பிராட்டிக்கும் பலஇடையூறுகள் நேர்ந்ததனாலு மென்க.
இராமபிரான் தனது சிறியதாயான கைகேயிக்குத் தனது தந்தையாகிய தசரதன் கொடுத்திருந்த வரங்களை
நிறைவேற்றுதற்பொருட்டு அக்கைகேயியின் மகனான பரதனுக்கு உரியதாம்படி இராச்சியத்தைக் கைவிட்டுச் சீதையுடனே சென்று
பதினான்கு வருடகாலம் வனவாசஞ் செய்தமை பிரசித்தம். “அரிவையொடும் கானுறைந்த வன் பதினாலாண்டார்” என்றது,
வடமொழிநடை; கொடிய கானில் அரிவையுடனே பதினாலாண்டு உறைந்தவ ரென்க.

———-

தக்க மறையோர் நாவும் தண் சாரலின் புடையும்
மிக்க மனு வளையும் வேங்கடமே -அக்கு அரவம்
பூண்டார்க்கு மால் துடைத்தார் பொங்கு ஓத நீர் அடைத்து
மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு –76-

(இ – ள்.) தக்க மறையோர் நாவும் – தகுதியையுடைய அந்தணர்களின் நாக்கும்,
மிக்க மனு அளையும் – சிறந்த மந்திரம் (உச்சாரணத்தாற்) பொருந் தப்பெற்ற:
தண் சாரலின் புடையும் – குளிர்ந்த அம்மலைச்சாரல்களின் பக்கங்களும்,
மிக்க மனு வளையும் – மிகுதியான மனிதர்கள் பிரதக்ஷிணஞ்செய் யப்பெற்ற:
வேங்கடமே -,-
அக்கு அரவம் பூண்டார்க்கு – எலும்புமாலையையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த சிவபிரானுக்கு,
மால் துடைத்தார் – (பிரமகத்திதோஷத்தாலாகிய) மயக்கத்தைப் போக்கியருளியவரும்,
பொங்கு ஓதம் நீர் – பொங்குகிற அலைகளையுடைய கடலை,
அடைத்து – அணை கட்டி மறித்து,
மீண்டு – பின்பு,
ஆர்க்கும் ஆறு – ஆரவாரிக்கும்படி,
உடைத்தார் – (அத்திருவணையை) உடைத்தருளினவருமான திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)

மனு – காசியபமுனிவரது மனைவியருள் ஒருத்தி; இச்சொல் – இங்கு இலக்கணையாய், அவளினிடமாகத் தோன்றிய
மனிதர்களை உணர்த்திற்று. வளைதல் – சூழ்தல். அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம்.
அக்கரவம் பூண்டார் க்கு மால் துடைத்தார் – சிவபிரானது கையில் ஒட்டிய கபாலத்தை விடுவித் தவர்;
அன்றி, சிவபிரானுக்கு அஜ்ஞாநமயக்கம் நீங்குமாறு தத்துவஞானத்தை உபதேசித்தவ ரெனினுமாம்.

இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டி அதற்கும் இந்தப்பூமிக்கும்
இடையிலுள்ள கடலில் வானரங்களைக்கொண்டு மலைகளால் அணைகட்டி அதன்வழியாக இலங்கைபுக்கு
அரக்கரைத் தொலைத்து மீளுகையில், இராக்கதராசதானியான இலங்கையி லுள்ளார்க்கும் இப்பூமியிலுள்ள
மனிதர்க்கும் போக்குவரவு இல்லாமலிருத் தற்பொருட்டும், கடலிடையே மரக்கலமியங்குதற்பொருட்டும்
அச்சேதுவை உடைத்தன ரென்ற வரலாற்றை இங்கு அறிக.

—————

நீடு கொடு முடியும் நீதி நெறி வேதியர்கள்
வீடும் மகம் மருவும் வேங்கடமே –கோடும்
கருத்துள் அவ மாலையார் காணாமல் நின்ற
மருத்துளவ மாலையார் வாழ்வு –77–

(இ – ள்.) நீடு கொடுமுடியும் – உயர்ந்த அம்மலைச் சிகரங்களும்,
மகம் மருவும் – (வானத்திற்செல்லும்) மகநட்சத்திரம் பொருந்தப்பெற்ற:
நீதி நெறி வேதியர்கள் வீடும் – நியாயமார்க்கத்தில் நடக்கின்ற அந்தணர்களுடைய கிருகங்களும்,
மகம் மருவும் – யாகங்கள் பொருந்தப்பெற்ற:
வேங்கடமே -,-
கோடும் கருத்துள் – நேர்மைதவறிய மனத்தில்,
அவம் மாலையார் – வீண்எண்ணங்களின் வரிசைகளை யுடையவர்கள் (அடிமைக்கருத்தில்லாதவர்கள்),
காணாமல் – (தமது சொரூபத்தைக்) காணவொண்ணாதபடி,
நின்ற – (அவர்கட்குப் புலப்படாது) நின்ற,
மரு துளவம் மாலையார் – நறு மணமுள்ள திருத்துழாய் மாலையை யுடையவரான திருமால்,
வாழ்வு – எழுந்தருளி யிருக்குமிடம்; (எ – று.)

நீடு கொடுமுடி – வினைத்தொகை. மலைச்சிகரத்தைக் கொடுமுடியென் றல், மேல்வளைந்திருத்தலால்;
கொடுமை – வளைவு. “கொடுமுடி மகம்மருவும்” என்றது, அம்மலைச்சிகரங்களின் மிக்கஉயர்வை விளக்கும்
தொடர்புயர்வு நவிற்சியணி. மகம் என்றது, மற்றை நக்ஷத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் உபலக்ஷணம்.
வேதியர் – வேதம் வல்லவர்; கள் – விகுதிமேல்விகுதி. “அவர்கள்வீடு மக மருவும்” எனப் பிரித்து,
அவர்கள் வீடு புத்திரபாக்கியம் பொருந்தப்பெற்ற என்று உரைப்பினும் அமையும்.

அந்தர்யாமியாகிய கடவுள், உள்ளன்புடைய ஞானிகளுக்குப் புலப்படு வனேயன்றி மனத்தூய்மையில்லாத
அஜ்ஞாநமயக்கமுடையார்க்குப் புலனாகானென்பது, பின்னிரண்டடியில் விளங்கும்.
“அவ மலையார்” என்பதற்கு – வீணான மயக்கத்தை யுடையவர்களென்று உரைப்பாருமுளர்.
மால் – மயக்கம்: ஐ – சாரியை. “மாலையான்” என்று பாடமோதி,
வீணெண்ணங்களின் தொடர்ச்சியையுடைய நான் என்று உரைப்பர் ஒருசாரார்.

————

சீதம் கொள் சாரலினும் சீர் மறையோர் இல்லிடத்தும்
வேதம் கணால் வளரும் வேங்கடமே -போதன்
சிரித்துப் புரம் துடைத்தான் தேவரொடும் அண்டம்
விரித்துப் புரந்து உடைத்தான் வெற்பு –78-

(இ – ள்.) சீதம் கொள் சாரலினும் – குளிர்ச்சியைப் பெற்ற அம்மலைப் பக்கங்களிலும்,
வே தம் கணால் வளரும் – மூங்கில்கள் தம்முடைய கணுக்க ளோடு வளரப்பெற்ற;
சீர் மறையோர் இல் இடத்தும் – சிறந்த அந்தணர்களுடைய வீடுகளிலும்,
வேதங்கள் நால் வளரும் – நான்குவேதங்களும் (ஓதப்பட்டு) வளர்தற்கு இடமான:
வேங்கடமே -,-
போதன் – பிரமனும்,
சிரித்து புரம் துடைத்தான் – நகைத்துத் திரிபுரத்தை அழித்தவனான சிவனும்,
தேவரொடும் – மற்றைத் தேவர்களும் ஆகிய அனைவருடனே,
அண்டம் – அண்டகோளங்களை,
விரித்து – வெளிப்படுத்தி (படைத்து),
புரந்து – காத்து,
உடைத்தான் – அழிக்குந்தன்மையனான திருமாலினது,
வெற்பு – திருமலை.

வே – வேய் என்பதன் விகாரம். -கணால் – கண்ணால்: தொகுத்தல்;
கண் – கணு: இதில் ஆல் என்னும் மூன்றனுருபு, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
சீர் – ஸ்ரீ என்னும் வடமொழியின் சிதைவென்பர். வேதம் என்ற சொல் – (நன்மைதீமைகளை விதிவிலக்குகளால்)
அறிவிப்பது என்று பொருள்படும்; வித் – அறிவித்தல்.
வேதங்கள் நால் – இருக்கு, யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. நால் – நான்கு என்பதன் விகாரம்.
பிரம ருத்தி ரேந்திராதி தேவர்களுடனே எல்லா அண்டங்களையும் படைத்துக் காத்து அழிப்பவன் திருமாலென்பது, பிற்பாதியில் விளங்கும்.
உடைத்தான் என்பதில், இடைநிலை காலமுணர்த்தாது தன்மையுணர்த்தும் போதன் – திருமாலின் நாபித்தாமரைமலரில் தோன்றியவன்; போது – பூ.

—————

நன்கோடு போலும் முலை நாரியரும் சண்பகத்தின்
மென்கோடும் கற்பகம் சேர் வேங்கடமே -வன்கோடு
கூரு இடு வராகனார் கோகனகை பூமி என்னும்
ஓர் இருவர் ஆகனார் ஊர் –79-

(இ – ள்.) நல் கோடு போலும் முலை நாரியரும் – அழகிய யானைத்தந்தத் தைப்போன்ற தனங்களையுடைய மாதர்களும்,
கற்பு, அகம் சேர் – பதிவிரதா தருமம் மனத்தில் அமையப்பெற்ற:
சண்பகத்தின் மெல் கோடும் – சண்பக மரத்தினது அழகிய கிளைகளும்,
கற்பகம் சேர் – (மிக்க உயர்ச்சியால் தேவலோகத்துக்) கற்பகவிருட்சத்தை அளாவப்பெற்ற:
வேங்கடமே -,-
வல்கோடு கூர் இரு வராகனார் – வலிய கொம்பு (கோரதந்தம்) கூர்மையாக இருக்கப்பெற்ற பெரிய பன்றி வடிவமானவரும்,
கோகனகை பூமி என்னும் ஓர் இருவர் ஆகனார் – ஸ்ரீதேவியும் பூதேவியும் என்னும் ஒப்பற்ற இருவரையுந் தழுவும் திருமார்பை யுடையவருமான திருமாலினது,
ஊர் – திருப்பதி.(எ – று)

கோடு – மலைச்சிகரமுமாம். நாரி, சண்பகம், கற்பகம் – நாரீ, சம்பகம், கல்பகம் என்ற வடசொற்களின் விகாரம்.
சண்பகத்தின் கிளைக்கு மென்மை, கண்ணுக்கு இனிமை. அகம் – உள்ளுறுப்பு;
அந்த:கரணம் கல்பகம் – வேண்டுவார்க்கு வேண்டும் பொருள்களைக் கல்பிப்பது; இது, தேவதரு.
கோடு – வாயின் இருபுறத்தும் வளைந்து வெளித்தோன்றும் எயிறு. கோக நகை – தாமரைமலரில் வாழ்பவள்;
கோகநதா என்ற வடசொல் கோகநகை யென விகாரப்படும். ஆகம் – மார்பு; அதனையுடையவன்,
ஆகன்; அதன்மேல் “ஆர்” என்ற பலர்பால்விகுதி உயர்வுபற்றி வந்தது.

————-

கோடு அஞ்சும் கோதையர்கள் கொங்கையினும் குஞ்சரத்தும்
வேடன் சரம் துரக்கும் வேங்கடமே -சேடன் எனும்
ஓர் பன்னகத்திடம் தான் உற்றான் இரணியனைக்
கூர் பல் நகத்து இடந்தான் குன்று –80-

(இ – ள்.) கோடு அஞ்சும் – மலைச்சிகரம் (ஒப்புமைக்கு எதிர்நிற்க மாட்டாமல்) அஞ்சும்படியான,
கோதையர்கள் கொங்கையினும் – மாதர்களுடைய தனங்களிலும்,
வேள் தன் சரம் துரக்கும் – மன்மதன் தனது புஷ்ப பாணத்தைச் செலுத்தப்பெற்ற:
குஞ்சரத்தும் – யானைகளின்மீதும்,
வேடன் சரம் துரக்கும் – வேட்டுவன் அம்புகள் செலுத்தப்பெற்ற:
வேங்கடமே -,-
சேடன் எனும் – ஆதிசேஷனென்கிற,
ஓர் பன்னகத்து இடம் – ஒப்பற்ற தொரு பாம்பினிடத்தில்,
உற்றான் – பொருந்தியவனும்,
இரணியனை – இரணி யாசுரனை,
கூர் பல் நகத்து இடந்தான் – கூரிய பல கைந்நகங்களினால் (மார்பைப்) பிளந்தவனுமான திருமாலினது,
குன்று – திருமலை; (எ – று.)

கோடு – யானைத் தந்தமுமாம் “அஞ்சும்” என்பதை உவமவுருபாகவுங் கொள்ளலாம்.
சேஷன் என்ற வடசொல் – (பிரளயகாலத்திலும் அழிவின்றி) மிச்சமாய் நிற்பவ னென்றும்,
பந்நகம் என்ற வடசொல் – பத் ந கம் என்று பிரிந்து கால்களால் நடவாதது (மார்பினால் ஊர்வது) என்றும்,
ஹிரண்யன் என்ற வடசொல் – பொன்னிறமானவ னென்றும் காரணப்பொருள்படும்.
“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்றபடி
ஆதிசேஷனால் அநேகவித கைங்கரியஞ் செய்யப்பெறுபவ னென்பது தோன்ற,
“சேடனெனு மோர் பன்னகத்திடம் தான்உற்றான்” என்றார். தான் – அசை.
இடந்தான் என்பதில், இட – பகுதி; இடத்தல் – கீளுதல்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading