ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –81-101-

பாண்
81- விடாது பூடந்தைமார் விரும்ப ஆயர் மாதர் தோள்
வியந்து முன் நயந்தவர்க்கு விற்கும் எங்கள் கொங்கை தான்
அடாதது அன்று பாண இன்னம் அங்கன் அன்றி இங்கனம்
அரங்கர் அன்பு கூர இன்பமாக வல்ல அல்லவே
எடாது இருக்கின் வாய் திறக்கும் எங்கள் ஐயன் உச்சி தோய்
எண்ணெய் பட்ட மெயில் இட்ட முத்தும் உத்தரீயமும்
படா முகம் திறந்து அசைந்து மழலை வாயின் மணம் அறாப்
பசு நரம்பு புடை பரந்து பால் சுரந்த முலையுமே –81-

(இ – ள்.) பாண – பாணனே! –
பூமடந்தைமார் – திருமகளும் நிலமகளும்,
விடாது – சிறிதும் விட்டுப்பிரியாமல்,
விரும்ப – விரும்பிக் கூடியிருக்கவும், (அவர்களைவிட்டு),
ஆயர் மாதர் தோள் – இடைப்பெண்ணான நப்பின்னையினது தோள்களை,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
வியந்து – அதிசயித்து,
நயந்தவர்க்கு – விரும்பிக் கூடிய தலைவர்க்கு,
விற்கும் எங்கள் கொங்கை – விலைக்கு விற்கின்ற எங்களது தனம்,
அடாததுஅன்று – தகாத தன்று;
இன்னம் – இன்னமும்,
அங்ஙன் அன்றி – அவ்வாறல்லாமல்,
இங்ஙனம் – இவ்வாறு,
எடாது இருக்கின் – எடுத்துப் பால் கொடாதிருந்தால்,
வாய் திறக்கும் – வாய்திறந்தழுகின்ற,
எங்கள் ஐயன் – எங்கள் குழந்தையினது,
உச்சி நோய் – உச்சியிற் பொருந்திய,
எண்ணெய் பட்ட – எண்ணெய் படப்பெற்ற,
மெய்யில் – எங்கள்உடம்பில்,
இட்ட – இடப்பட்ட,
முத்தும் – முத்துமாலையும்,
உத்தரீயமும் – மேலாடையும்,
படாம் முகம் திறந்து. (அக்குழந்தையால்) மேலாடை சிறிது வாங்கப்பட்டு,
அசைந்து -,
மழலை வாயின் மணம் அறா – மழலைச்சொற்களையுடைய (அக்குழந்தை) வாயினது வாசனை நீங்கப் பெறாமல்,
பசு நரம்பு புடை பரந்து – பச்சைநரம்புகள் புறத்தே பரவப்பெற்று,
பால் சுரந்த – பாலைச் சுரக்கின்ற,
முலையும் – தனங்களும், அரங்கர் -,
அன்பு கூர – அன்பு மிகும்படி,
இன்பமாக வல்ல அல்லவே – இன்பமாகத்தக்கனவேயாகும்; (எ – று.)

பரத்தையரைப் புணர்தற்பொருட்டுத் தலைமகளைப் பிரிந்து சென்ற தலைமகனால் தலைமகளது கருத்தை அறிந்து
அவளைச் சமாதானப்படுத்தி அவளிடம் தான் வரும்படி பேசிவருமாறு அனுப்பப்பட்ட பாணனுக்குத் தலைவி வெகுண்டு கூறியது இது;
“பாணனொடுவெருளுதல்” என்னுந் துறை. ஸ்ரீ பூமி தேவிகள் மனைவியராய் அமைந்திருக்க,
ஓரிடைப்பெண்ணை மணந்த தலைமகன் தான் முன்னர்க் கூடிய எங்களை இப்போது இழிவாக நினைப்பது
அத்தலைமகனுக்குச் சிறிதுந் தக்கதன்றென்று வெகுண்டு கூறின ளென்க.

பூமடந்தை யென்பதற்கு – இரட்டுறமொழிதலால், தாமரைப்பூவிலுள்ள ஸ்ரீதேவியென்றும், பூ வடசொல்லாய்ப் பூதேவியென்றுங் கொள்க;
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவி,”
“ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்விரும்பினாய்” என்று திருமழிசைப்பிரான்பாசுரம்.
“வாயு மனைவியர் பூ மங்கையர்க ளெம்பிராற்கு” என்றார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும்.
பாணன் – பாடுபவன். அங்ஙனன்றி யிங்ஙன மென்பதற்கு – அவ்விடத்திலே யல்லாமல் இவ்விடத்தில் வந்தென்றுமாம்.
அல்லவேயென்பது, தேற்றப்பொரு ளுணர்த்தி நின்றது. குழந்தையை ஐயனென்றது, உவகை பற்றிய மரபுவழுவமைதி.
உச்சி – நடுத்தலை. படாம் – படமென்னும் வட சொல்லின் விகாரம்; கச்சுமாம்.
இனி, படாமுகந்திறந்தென்பதற்கு – சாயாத முகந்திறந்தென்று உரைத்து, பால்சுரந்த வென்பதனோடு – கூட்டவுமாம்.
“எங்கைகொங்கை” என்னும் பாடத்துக்கு, தோழி கூறிய தென்க.

இதற்குச் செய்யுளிலக்கணம், 39 – ஆங் கவியிற் கூறியது.

————-

தலைமகள் இளமைக்குச் செவிலி இரங்கல்
82-முலை கொண்ட பால் மணம் வாய் மாறிற்றிலை-அம் மொய் குழலோ
அலை கொண்டது இன்னம் என்கை அணையே அலை ஆழி வற்றச்
சிலை கொண்ட செங்கை அரங்கேசர் தாள் கொண்ட தேசம் எல்லாம்
விலை கொண்ட வாள் விழியாள் சென்றவாறு எங்கன் வெஞ்சுரமே –82-

(இ – ள்.) (இச்சிறுமகளுக்கு) இன்னம் -,
முலை கொண்ட பால் மணம் – தாய்முலையிற் கொண்ட பாலினது வாசனை,
வாய் மாறிற்று இல்லை – வாயினின்றும் நீங்கிற்றில்லை;
அம் மொய் குழலோ – அழகிய நெருங்கிய கூந்தலோ,
அலை கொண்டது – அலைந்துகொண்டே யிருக்கின்றது (மயிர் முடி கூடிற்றில்லை) ;
என் கை அணையே – என் கையே படுக்குமிடமாயிருக்கின்றது; (இங்ஙனமிருக்கவும்), –
அலை ஆழி வற்ற – அலைகளையுடைய கடல்வற்றிப்போம் படி,
சிலை கொண்ட – (ஆக்நேயாஸ்திரத்தை விடுத்தற்குக்) கோதண்டத்தை யெடுத்த,
செங் கை – சிவந்த திருக்கையையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
தாள் – திருவடியால்,
கொண்ட – அளந்துகொள்ளப்பட்ட,
தேசம் எல்லாம் – உலகமுழுவதையும்,
விலை கொண்ட – தனக்கு விலையாகக் கொண்ட,
வாள் விழியாள் – வாள்போன்ற (கூரிய) கண்களையுடைய இவள்,
வெம்சுரம் – கொடிய பாலைநிலவழியில்,
சென்ற ஆறு – (தலைவன் இருக்குமிடத்தை நோக்கிப்) போன வகை,
எங்ஙன் – எவ்வாறோ? (எ – று.)

களவுப்புணர்ச்சிக்கண் தலைவி தலைமகனைப்புணர்ந்து பின்னர் அவனுடன் போக்கிற் சென்றனளாக, அதனையறிந்த செவிலி
“பேதைப்பருவத்தளான இவட்குத் தலைவனுடன் போக்கிற்கு இசையும் முதுக்குறைவு வந்தவாறு என்னோ!” என்று இரங்கிக்கூறியது, இது.
இதனை நற்றாய்வார்த்தையாகக் கொள்வாரு முளர்.
தலைவி யௌவநபருவத்தை யடைந்திருந்தும் இவள்தாய்மார்க்கு அன்புமிகுதியால் இவளது மிக்க இளமையே தோற்றுவதென்க.
தலைமகனை வசப்படுத்துவது முலையழகாலேயாதல் மயிர்முடியழகாலேயாதல் சொற்சாதுரியத்தாலேயாதல் கூடுவதாயிருக்க,
முலையும் அரும்பாதே குழலும்முடிகூடாதே சொல்லுங்குதலையாயுள்ள இந்தப்பேதைக்கு இப்படி
தலைவனிடம் அன்புண்டானவாறு என்கொல்? என்று அதிசயப்பட்டனளென்க.
“முலையோ முழுமுற்றும்போந்தில மொய்பூங்குழல் குறிய,
கலையோவரையில்லை நாவோகுழறும் கடன்மண்ணெல்லாம்,
விலையோ வெனமிளிருங்கணிவள் பரமே பெருமான்,
மலையோ திருவேங்கடமென்று கற்கின்றவாசகமே” என்ற நம்மாழ்வார் பாசுரம் இங்கு நோக்கத்தக்கது.

“வாயிற் பல்லுமெழுந்தில மயிரும் முடிகூடிற்றில,
சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோ டிணங்கித்,
தீயிணக்கிணங் காடிவந்திவ டன்னன்ன செம்மைசொல்லி,
மாயன் மாமணிவண்ணன்மே லிவண் மாலுறு கின்றாளே” என்றார் பெரியாழ்வாரும்.
“அடியளந்தான் றாஅய தெல்லாம்” என்றாற்போல, ‘அரங்கேசர் தாள்கொண்ட தேசமெல்லாம்’ என்றாள்

இது, நிரையசை முதற் கட்டளைக் கலித்துறை.

———–

தலைமகன் தலைமகளது இயல் கூறல்
83- வெஞ்சமும் கருதும் கஞ்சனும் எருதும் வேழமும் பரியும் வீழ முன் பொருதார்
தஞ்சம் என்றவருக்கு அஞ்சல் என்று அருளும் தாயில் அன்பு உடையார் கோயிலின் புடை ஆர்
மஞ்சும் வண்டினமும் துஞ்சு தண்டலை வாய் வல்லி ஓன்று அதிலே எல்லியும் திகழும்
கஞ்சம் உண்டு அதிலே நஞ்சம் உண்டு அதிலே கள்ளம் உண்டு அது என் உள்ளம் உண்டதுவே –83-

(இ – ள்.) வெம் சமம் கருதும் – கொடிய போரை விரும்புகின்ற,
கஞ்சனும் – கம்ஸனும்,
எருதும் – (அவனாற் கொல்லும்படி யேவப்பட்ட) எருதினுருவங் கொண்டுவந்த அரிஷ்டாசுரனும்,
வேழமும் – (குவலயாபீடமென்னும்) பட்டத்துயானையும்,
பரியும் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனும்,
வீழ – இறந்துவிழும்படி,
முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்திற்குழந்தைப்பருவத்தில்),
பொருதார் – போர்செய்தவரும்,
தஞ்சம் என்றவருக்கு – அடைக்கல மென்று கூறி வந்து சரணமடைந்தவர்களுக்கு,
அஞ்சல் என்று அருளும் – அஞ்சற்கவென்று சொல்லி (அபயப்பிரதானஞ் செய்து) காக்கின்ற,
தாயில் அன்புடையார் – (உயிர்களிடத்துத்) தாயினும் அன்பினையுடையவருமாகிய நம்பெருமாளது,
கோயிலின் புடை – பெரிய கோயிலின் புறத்தில்,
ஆர் – பொருந்திய,
மஞ்சு வண்டு இனமும் துஞ்சு தண்டலைவாய் – மேகக்கூட்டங்களும் வண்டுக்கூட்டங்களுந் தங்குகின்ற சோலையினிடத்தில்,
வல்லி ஒன்று (உண்டு) – கொம்பொன்று (மகள் ஒருத்தி) உண்டு;
அதிலே – அதனிடத்திலே,
எல்லியும் திகழும் கஞ்சம் – இராக்காலத்துங் குவியாமல் மலர்ந்து விளங்குகின்ற தாமரைமலர் (முகம்), உண்டு -;
அதிலே, – நஞ்சம் – விஷம் (கண்கள்), உண்டு -;
அதிலே -, கள்ளம் – கள்ளத்தனம், உண்டு -;
அது -, என் உள்ளம் – என்மனத்தை, உண்டது – கவர்ந்தது; (எ – று.)

இது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், தன்னை எதிர்ப்பட்டு நோக்கி ‘நீ இவ்வாறு மெலிவுறுதற்குக் காரணமென்னோ?’
என்று வினாவின பாங்கனுக்கு, ‘நேற்றுத் திருவரங்கங்கோயிற் சோலையிற் சென்றேன்; அவ்விடத்து ஒரு கொடிபோல்வாளது
விழிநோக்கால் இவ்வாறாயினேன்’ எனத் தனக்கு உற்றது உரைத்தது.

“வல்லியொன்று” என்பது முதல் “கள்ளமுண்டு” என்றதுவரையில் உபமேயப் பொருள்களை உபமானப்
பொருள்களாகவே மறைத்துக் கூறியது, உருவகவுயர்வுநவிற்சியணி; வடநூலார் ரூபகாதிஸயோக்தி யென்பர்.
ப்ராஸமென்னுஞ் சொல்லணியும் இச்செய்யுளி லுள்ளது.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மற்றை நான்கும் புளிமாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவி இரங்கல்
84-உண்டு உமிழ் வாசமுடன் தண்டலை மாருதம் வந்து உலவி சாளரமும் குலவிய வாள் நிலவும்
விண்டு அலர் பூ அணையும் மென்பனி நீர் புழுகும் வேனிலிலும் முதிரா வேனிலும் ஆகியவால்
அண்டர் தொழும் பெருமாள் அம்புயமின் பெருமாள் அருமறையின் பெருமாள் அழகிய நம் பெருமாள்
புண்டரிகம் கமழும் தண் துறை ஓதிமமே புன்னைகள் சிந்து அலரே இன்னமும் வந்திலரே –84-

(இ – ள்.) புண்டரிகம் கமழும் – தாமரைமலர்மணம் நாறுகின்ற,
தண்துறை – குளிர்ந்த தடாகத்தினிடத்தே யுள்ள,
ஓதிமமே அன்னமே! –
புன்னைகள் சிந்து அலரே – புன்னைமரங்கள் சொரிகின்ற பூவே! –
உண்டு உமிழ் வாசமுடன் – உட்கொண்டு வெளிவீசுகின்ற வாசனையோடு,
தண்டலை மாருதம் – பூஞ்சோலையின்கண் உள்ள இளங்காற்று,
வந்து உலவிய – வந்துவீசுகின்ற,
சாளரமும் – பலகணிகளும்,
குலவிய வாள் நிலவும் – விளங்குகின்ற நிலாவினொளியும்,
விண்டு அலர் பூ அணையும் – விரிந்துமலர்கின்ற புஷ்பசயனமும்,
மெல் பனிநீர் புழுகும் – குளிர்ந்த பனிநீருங் கஸ்தூரிப்புழுகும்,
வேனிலிலும் – இருவகைவேனிற்காலத்துள்ளும்,
முதிரா வேனிலும் – (இவற்றையுடைய) இளவேனிற்காலமும்,
ஆகிய – ஆயின;
இன்னமும் – அங்ஙனமாகவும்,
அண்டர் தொழும் பெருமாள் – தேவர்கள்வணங்குகின்ற சுவாமியும்,
அம்புயம்மின் பெருமாள் – தாமரைமலரிலுள்ள மின்னற்கொடிபோன்ற திருமகளுக்குத் தலைவரும்,
அரு மறை இன் பெருமாள் – அறிதற்கரிய வேதங்களாற் புகழப்படுகின்ற இனிய பெருமையையுடையவருமாகிய,
அழகிய நம்பெருமாள் – நமது அழகிய மணவாளப்பெருமாள்,
வந்திலரே – வந்தாரில்லையே; (எ – று.) – ஆல் – ஈற்றசை.

இதற்குத் துறை முன்னர்க் கூறப்பட்டது.

பனிநீர் – ஓர்வகை வாசனைநீர். முதிராவேனிலு மாகிய என்றது – இளவேனிற்பருவங் கழிந்து முதுவேனிற்பருவமும் வந்த தென்றபடி.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ் சீர்கள் விளச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங்காய்ச்சீர்களு மாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி உரைத்தல்
85-இன் இசை வேயினர் மன்னிய கோயிலை எய்தார் போல்
பொன் நினைவால் அவர் போன இடத்தினில் போகாதோ மின்னிய
முகில் துளி என்று என் மேல் எலாம்
வன்னியின் பொறிகளை வழங்கும் வாடையே –85-

(இ – ள்.) மின்னிய முகில் துளி என்று – மின்னுகின்ற மேகங்களின் மழைநீர்த்துளியென்று பெயர்வைத்து,
என் மேல் எலாம் – என்னுடம்பு முழுவதும்,
வன்னியின் பொறிகளை – நெருப்புப்பொறிகளை,
வழங்கும் – வீசுகின்ற,
வாடை – வாடைக்காற்றானது, –
இன் இசை வேயினர் – இனிய இசையினையுடைய வேய்ங்குழலையுடைய நம்பெருமாள்,
மன்னிய – எழுந்தருளியிருக்கின்ற,
கோயிலை – திருவரங்கத்தை,
எய்தார்போல் – அடையாதவர் போல,
பொன் நினைவால் – பொருள்தேடும் நினைவினால்,
அவர் – அத்தலைவர், போன -, இடத்தினில் -, போகாதோ – போகின்றதில்லையோ? (எ – று.)

தலைவனைப் பிரிந்து அப்பிரிவுத்துயரை யாற்றாத தலைவி தென்றல் வரவுக்கு ஒருசார் வருந்தி இரங்கிக்கூறிய வார்த்தைஇது.
எல்லாவுயிர்கட்கும் இயற்கையிற்குளிர்ச்சியைச் செய்யுந்தன்மையதும் மழைநீர்த்துளியைவீசுவதுமான தென்றற்காற்று
தலைவனைக்கூடியிருக்கும் நிலையில் மேல்வீசும்போது அமிருதம்போல இனிமையாயிருந்து
அதுதானே தணந்திருக்குஞ் சமயத்தில் வீசும்போது விஷம்போல மிக்கவருத்தத்தைச் செய்கின்றது.
அதுவேயுமன்றி, தாபசாந்தியான மழைநீர்த்துளியும் தாபத்தைத் தணியாமல் வெவ்விய தழலாகத் தோற்றி
விரகவேதனையை மிகுவிப்பதாகி மிக்கவெப்பஞ்செய்ய, அதனால், மிகவருந்திய தலைமகள் அவற்றைக்குறித்து வெறுத்துக் கூறினளென்க.

கோயிலை அடைந்தவர்க்கு மீண்டும் விரைவில் வாராதிருத்தல் இயல்பன்றாதலால் எய்தார்போ லென்றும்,
வாடை போகுமாயின் அவரும் என்னைப்போலவே பிரிவாற்றாமையால் வருந்தி விரைந்து வந்திருப்பரென்னுங்கருத்தாற் போகாதோ வென்றும்,
மழைத்துளிகள் தணந்திருக்கின்ற தனக்கு அனற்பொறிபோல வெப்பத்தையுண்டாக்குதலால்
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்கு மென்றுந் தலைவி கூறினாள்.
முகிற்றுளியென்று வன்னியின் பொறிகளை வழங்குமென்ற தொடரில் – உண்மையில் வன்னியின் பொறிகளா யிருக்க
அவற்றிற்கு முகிற்றுளியென்று வாடை பேர்வைத்து மறைத்திருக்கின்ற தெனக் கூறியது, கைதவாபநுதியென்னு மலங்காரம்.
எய்தார்போ லென்பதற்கு – மீண்டும் வாராதவர்போன் றென்றுமாம். எல்லாமென்பது, ஈண்டு “மேனியெல்லாம் பசலையாயிற்று”
என்பதிற்போல ஒருபொருளின் பலவிட முணர்த்திற்று.

இது, நான்கடியாய், முதலிரண்டடியும் – முதல்நான்குசீருங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் தேமாங்காய்ச்சீருமாய் வந்த நெடிலடிகளாய்,
பின்னிரண்டடியும் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றைமூன்றுசீர்களும் விளச்சீர்களுமாய்வந்த அளவடிகளாய்,
முன்னிரண்டடியும் ஓரோசையாய், ஏனையடிகள் வேறோசையாய் வந்த வேற்றொலிவெண்டுறை.

———–

கால மயக்கு
வாடையாய் இரு பனியும் ஆய் வேனிலாய் வந்தது கார் என்றே
பேடை மா மயில் சாயலாய் அன்பர் மேல் பிழை கருதிடல் செம்பொன்
ஆடை நாயகன் திருமகள் நாயகன் அரங்க நாயகன் ஏறும்
ஓடை மா இது மதம் இது பிளிறிய ஒலி இது மழை அன்றே –86-

(இ – ள்.) பேடை மா மயில் சாயலாய் – அழகிய மயிற்பேடுபோன்ற சாயலையுடையவளே! –
‘வாடை ஆய் – கூதிர்காலம் கழிந்து,
இரு பனியும் ஆய் – (முன்பனி பின்பனியென்னும்) இரண்டு பனிக்காலங்களும் கழிந்து,
வேனில் ஆய் – (இளவேனில் முதுவேனில் என்னும் இரண்டு) வேனிற்காலங்களும் கழிந்து,
கார் வந்தது – மழைக்காலமும் வந்தது,’
என்றே – என்று எண்ணியே,
அன்பர்மேல் – அன்பினையுடைய தலைவர்மீது,
பிழை கருதிடல் – குற்றம்நினைக்காதே; இது -,
செம் பொன் ஆடை நாயகன் – செம்பொன்மயமான பீதாம்பரத்தையுடைய தலைவனும்,
திருமகள் நாயகன் – ஸ்ரீய: பதியுமாகிய, அரங்க நாயகன் -,
ஏறும் – ஏறிநடத்துகின்ற,
ஓடை மா – முகபடாத்தையுடைய யானை; இது -,
மதம் – (அவ்யானையின்) மத நீர்ப்பெருக்கு; இது -,
பிளிறிய ஒலி – (அவ்யானை) வீரிடுகின்ற ஓசை; (ஆகையால்),
மழை அன்று – (இது) கார்காலமன்று; (எ – று.)

கார்காலத்து மீண்டுவருவதாகக் காலங்குறித்துத் தலைவியைப்பிரிந்து சென்ற தலைமகன் அக்கார்காலம் வந்தவளவிலும்
தான் வாராதொழியவே, அக்காலவரவை நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழி,
“இது, அவன் சொல்லிப்போன கார்காலம் வந்ததன்று; வானத்திற் கறுத்துச்செல்வது மேகமன்று,
திருமால் ஊர்ந்துசெல்லும் மதக்களிறாகும்; வானத்தினின்று நீர்சொரிவது அக்களிற்றின் மதநீராம்;
பேரிடிபோலத் தோன்றும் ஒலி அம் மதக்களிற்றின் பிளிறலாம்” என்று காலத்தை மாறுபடக்கூறி ஆற்றுவித்தனனென்க.
“காரெனக் கலங்கு மேரெழிற் கண்ணிக்கு, இன்றுணைத்தோழியன்றென்று மறுத்தது” என்பது காண்க.
இது, “பருவமன்றென்றுகூறல்” என்றும் வழங்கும். இத்துறை – திருக்கோவையாரில் “காலமறைததுரைத்தல்” என்றும்,
தஞ்சைவாணக்கோவையில் “இகுளைவம்பென்றல்” என்றும்,
தணிகைப்புராணத்துக் களவுப்படலத்தில் “ஆயிடைத்தோழியழிந்தியற்பழித் தல்” என்றும் கூறப்பட்டுள்ளது.

“பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்பவாதலால், இது, பொய்ம்மைக்குற்றத்தின்பாற்படாது;
அங்கு ‘குற்றந்தீர்ந்த நன்மைதருதலாவது – பெருந்தீங்கையாயினும் மரணத்தை யாயினும் அடையநின்றதோர்
உயிர்தான் கூறுஞ் சொற்களின் பொய்ம்மையால் அத்துன்பத்தினின்று நீங்கி இன்பமடைதல்’ என்றபடி
இங்குப் பிரிவாற்றாமையால் தலைமகளுக்கு உண்டாகும் அபாயத்தைப் புனைந்துரையால் ஒழித்தவாறு காண்க.

இருபனி யென்பதி லுள்ள இரண்டை வேனிலோடுங் கூட்டுக. முகப டாத்தையுடைய மாவெனவே, யானையாயிற்று.
ஓடை கூறியது, மேகத்திலுள்ள மின்னலைக் கருதி.

இது, முதற்சீர் தேமாச்சீரும், ஈற்றுச்சீர் காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தம்.

—————

தழை
மழை போல் மரகதம் போல் எம்பிரான் வளர் கோயில் அன்னீர்
பிழை போம் இவர்க்கு இதை யார் உரைப்பார் இவர் பின் வந்து எய்த
தழை யோய் உறைத்த வருத்தம் பொறாமை கொல் சங்கரன் பால்
உழை யோய் ஒதுங்க முயல் போய் மதி புக்கு ஒளித்ததுவே –87-

(இ – ள்.) மழைபோல் – கார்மேகம்போலும்,
மரகதம்போல் – நீல மணிபோலும்,
எம்பிரான் – நம்பெருமாள்,
வளர் – திருக்கண்வளர்ந்தருளு கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
அன்னீர் – ஒத்திருப்பவர்களே! –
பிழை போம் இவர்க்கு – தவறுசெய்துபோன இத்தலைவருக்கு,
இதை – இவ்வரலாற்றை,
யார் உரைப்பார் – யாவர் சொல்லுபவர்? (எவருமில்லை); (அவ்வ வரலாறு என்னையெனின்), – இவர் -,
பின் வந்து எய்த – தொடர்ந்துவந்து பிரயோகித்த,
தழை – தழையானது,
போய் உறைத்த – சென்று பட்ட,
வருத்தம் – வருத்தத்தை,
பொறாமைகொல் – பொறுக்கமாட்டாமையினாலன்றோ,
சங்கரன்பால் – சிவனிடத்தில்,
உழை – மானானது,
போய் ஒதுங்க – சென்று ஒளிக்க, –
முயல் – முயலானது, போய் -,
மதி புக்கு – சந்திரனிடத்திற் சேர்ந்து, ஒளித்தது – மறைந்திட்டது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சியும் பாங்கற்கூட்டம் அல்லது இடந்தலைப்பாடும் நிகழ்ந்தபின்பு தோழிக்குத் தன்கருத்தைப் புலப்படுத்தி
அவன்மூலமாகத் தலைமகளைச்சேர்தலாகிய தோழியிற்கூட்டத்திற் கருத்துவைத்த தலைமகன் அத்தோழியைத் தனியே
கண்டு தன்கருத்தை வெளிப்படையாக விரையக் கூறியிரவாமல் குறிப்பாகக் கூறக்கருதித் தலைமகளும் தோழியும்
ஒருங்குநிற்குஞ் செவ்விநோக்கித் தழையுங்கண்ணியுமாகிய கையுறைகளை யேந்திச் சென்று அவர்களைநோக்கி
வேட்டைக்குவந்தவன்போலச் சிலமொழிகளைப் புகல, தலைவியின் மனநிலையை யறிதற்பொருட்டு அத்தலைமகனது
நிலையைத் தோழி தலைமகளோடு நகைத்துக் கூறியது, இது.
தழை – மலர்களை யிடையிட்டுத் தளிர்களாற் செய்வதோ ருடைவிசேடம்;
இங்ஙனந்தொடுத்த தழையை ஆடையாக உடுத்துக்கொள்ளுதல், குறிஞ்சிநிலத்துமகளிரியல்பு.

அங்குவந்த தலைமகன் “இங்கு யானெய்த மான் வந்த துண்டோ?” என்று வினவினனாக,
தோழி “கையில் தழையைவைத்துக்கொண்டு இவர் வேட்டையாடுபவர்போல வினவுகின்றாரே!
இவர் இவ்வாறு வம்புக்காக வினவுவது பிழையென்று இவரிடத்து யார்சொல்வது?
இவர் இத்தழையைக்கொண்டு எய்ததனால்தான் கானகத்திலுள்ள மான் அவ்வருத்தம் பொறாது சங்கரனிடம்போய்ச் சேர்ந்தது;
அவ்வாறே முயலொன்று சந்திரனிடத்துப் போய்ச்சேர்ந்தது” எனப் பரிகசித்துக்கூறுகின்றனளென்க.
இதனை, தலைமகள் தோழியர்க்கு உரைத்ததாகக் கொள்வாருமுளர்.

“பித்தினர் போலப் பல தொடுத்தார் பிறங்கெக்கலைக்கும்,
வித்தினர்போல விடையும் விடுத்தனர் மெய்ம்மையுளம்,
பொத்தினர்போல வுரைக்கொத்தவில்லினரல்லர் பொற்பூங்,
கொத்தினர் யாவர்கொல் சேயருமல்லாக் குறிப்பினரே”,

“மின்னே தழைகொண்டு வேழமெய்தா ரந்த வேழம்வந்து,
பின்னே பிணைபிரியுங்கலையானது பேசி லின்னங்,
கொன்னேபுகழுங் குறுமுயலாகவுங் கூடுங்கொல்லோ,
வென்னே யுலகிலிவனையொப்பாரில்லை யேவினுக்கே” என்ற பாடல்கள் இங்குக் கருதத்தக்கன.

அன்னீர் – அன்னாரென்பதன் விளி. பிழைபோம்இவர்க்கு என்பதற்கு, குற்றமற்ற இவர்க்கு என்றும்,
தவறானவழியிலே வந்துவிட்ட இவர்க்கு என்றும் பொருள் கொள்க. சந்திரனிடத்துள்ள களங்கத்தை முயலென்பது, கவிமரபு.

இது, நிரையசைமுதலதான கட்டளைக்கலித்துறை.

————-

கார்காலம் -தலைவி இரங்கல் –
88-ஒளிக்கும் இரு சுடர்க் கவளம் விழுங்கும் பேழ்வாய் உரும் முழக்கத்து இந்திரவில் ஓடை நெற்றி
துளிக்கும் மழை மதக் கொண் மூக்களிற்றை மின்னல் தோட்டி மாருதப் பாகர் துரக்கும் காலம்
அளிக் குலங்கள் இசைபாட கத்த மஜ்ஞை ஆடு பொழில் திரு அரங்கர் அணையாக் காலம்
விளிக்கும் அலைக் கரும் கடலும் ஒறுக்கும் காலம் வினையேற்கு விழி துயிலை மேவாக் காலம் –88-

(இ – ள்.) ஒளிக்கும் – விளங்குகின்ற,
இரு சுடர் – சூரிய சந்திரர்களாகிய,
கவளம் – கபளங்களை,
விழுங்கும் – விழுங்குகின்ற,
பேழ் வாய் – பிளவுபட்டவாயையும்,
உரும் முழக்கத்து – இடியாகிய முழக்கத்தையும்,
இந்திரவில் ஓடை நெற்றி – இந்திர தனுசாகிய முகபடாத்தையணிந்த நெற்றியையும்,
துளிக்கும் மழை மதம் – பெய்கின்ற மழைநீராகிய மதநீரையுமுடைய,
கொண்மூ களிற்றை – மேகமாகிய யானையை,
மின்னல் தோட்டி – மின்னலாகிய அங்குசத்தால்,
மாருதம் பாகர் – காற்றாகிய பாகர்கள்,
துரக்கும் – செலுத்துகின்ற, காலம் -;
அளி குலமும் – வண்டுகளின் கூட்டமும்,
களிக்கும் மயில் குலமும் – களிக்கின்ற மயில்களின் கூட்டங்களும்,
பாடி ஆடு – முறையே பாடியாடுகின்ற,
பொழில் – சோலையையுடைய,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
அணையா – வந்து சேராத, காலம் -; (அதனால்),
விளிக்கும் அலை கருங்கடலும் – ஆரவாரஞ் செய்கின்ற அலைகளையுடைய கரியகடலும்,
ஒறுக்கும் – நோய்செய்கின்ற, காலம் -;
வினையேற்கு – தீவினையையுடைய எனக்கு,
விழிகள் – கண்கள்,
துயில்மேவா – தூக்கம்பொருந்தாத, காலம் -; (எ – று.)

பருவங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலம் வந்தவளவிலும் மீண்டுவாரானாக, தலைவி
அக்கார்காலத்தைக்கண்டு இரங்கிக் கூறியது, இது. இத்தன்மைய கார்காலத்தில் எனது அரங்கநாயகர் அணைவராகில்,
கடலும் ஒறுக்கவேண்டுவதில்லை; கண்ணும் உறங்காமை வேண்டுவதில்லை யென்றவாறு.

முன்னிரண்டடிகளில் உருவகவணி காண்க. மூன்றாமடி – நர்த்தனஞ் செய்பவர் ஆடப் பாடகர் பாடத் தாம்
அவ்வின்பத்தைக் கண்டுகளிக்கின்றாரேயன்றி, எனது துன்பத்தைக் காண்கின்றில ரென்ற குறிப்பு.
கவளம் – வடசொற்றிரிபு, உணவுத்திரளை. தோட்டி – மாவெட்டி. பாகர் – யானை யோட்டுபவர்.
மேகம் தான் சூரியசந்திரர்களை மறைத்தலால், ‘ஒளிக்குமிரு சுடர்க்கவளம் விழுங்கும் பேழ்வாய்’ என்ற
அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டது. காற்று மேகங்களைச் செலுத்துதலால், பாகராக உருவகப்படுத்தப்பட்டது.
கடலொலிக்கு வருந்தலுங் கண்ணுறங்காமையுங் கணவனைப்பிரிந்தார்க்கு இயல்பென்க.

இதற்குக் கவியிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

இள வேனில் காலம் -தலைவி இரங்கல் –
மேவலர் வாழ் தென்னிலங்கை மலங்க ஒரு கால் இரு கால் வில் குளித்து எய்
ஏவலர் வாழ் திரு அரங்கத்து எமை இருத்திப் போனவர் நாட்டு இல்லை போலும்
கோவலர் வாய்க் குழல் ஓசைக்கு ஆ நிரைகள் செவி ஏற்கும் குறும்புன் மாலை
பூ அலரின் மணம் பரப்பி இள வேனில் வர வந்த பொதியத் தென்றல் –89-

(இ – ள்.) இளவேனில்வர – இளவேனிற்காலம் வர, (அப்பொழுது),
கோவலர் வாய் குழல் ஓசைக்கு – இடையர்கள் வாயினாலூதுகின்ற வேய்ங்குழலினது ஒலிக்கு,
ஆ நிரைகள் – பசுக்கூட்டங்கள்,
செவி ஏற்கும் – காது கொடுக்கின்ற (கேட்கின்ற),
குறும் புன் மாலை – சிறிய புல்லிய மாலைப் பொழுதில்,
பூ அலரின் மணம் பரப்பி – மலர்ந்த மலர்களின் வாசனையை வீசிக்கொண்டு, வந்த -,
பொதியம் தென்றல் – மலையமலையினின்றும் வருகின்ற தென்றற்காற்று, –
மேவலர் வாழ் – பகைவர்கள் (அரக்கர்கள்) வாழ்கின்ற,
தென்இலங்கை – தெற்கிலுள்ள இலங்காபட்டணம்,
மலங்க – கலங்கும்படி,
ஒரு கால் – ஒருதரம்,
வில் இரு கால் – கோதண்டத்தின் இரண்டுகோடிகளையும்,
குனித்து – வளைத்து,
எய் – எய்த,
ஏ வலர் – அம்பில் வல்ல நம்பெருமாள்,
வாழ் – வாழ்கின்ற,
திருவரங்கத்து – ஸ்ரீரங்கத்தில்,
எமை – என்னை,
இருத்தி – தனியேவிட்டு,
போனவர் – பிரிந்துசென்றவர் (போன),
நாடு – நாட்டில், இல்லைபோலும் -; (எ – று.)

தலைமகனைப் பிரிந்த தலைமகள் இளவேனிற்காலம் வரக்கண்டு இரங்கிக்கூறியது, இது.

இந்த இளந்தென்றற் காற்று அங்கு இருக்குமாயின், எனது தலைவர் உடனேவந்திருப்பரென்றபடி.
மேவலர் – விரும்பாதவர். ஒருகால் – காலினாலென்றுமாம். கோவலர் – கோபாலரென்பதன் சிதைவு;
பசுக்களைக் காப்பவரென்று பொருள்; இனி, பசுக்களைக்காத்தலில் வல்லவரென்றுமாம்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியது கொள்க.

————-

தோழி இரங்கல்
தென்றலைக் குங்குமச் சேற்றைப் பொறாள் சிறியாள் பெரிய
துன்று அலைக்கும் துடிக்கும் என் செய்வாள் துயரால் அழைத்த
வன்தலைக் குஞ்சரம் காத்தாய் இலங்கை மலங்க வளைத்து
அன்று அலைக்கும் சரத்தாய் அரங்கா அண்டர் ஆதி பனே –90

(இ – ள்.) துயரால் – (முதலை கவர்ந்த) வருத்தத்தால்,
அழைத்த – (ஆதிமூலமே யென்று) கூப்பிட்ட,
வல் தலை குஞ்சரம் – வலிய தலையையுடைய கஜேந்திராழ்வானை,
காத்தாய் – பாதுகாத்தவனே!
இலங்கை -, மலங்க – கலங்கும்படி,
வளைத்து – (வில்லை) வளைத்து,
அன்று – அந்நாளில் (ஸ்ரீராமாவதாரத்தில்),
அலைக்கும் – அலையச்செய்த,
சரத்தாய் – அம்புகளையுடையவனே!
அரங்கா – அரங்கனே!
அண்டர்ஆதிபனே – தேவர்தலைவனே! –
சிறியாள் – சிறிய என்மகள்,
தென்றலை – தென்காற்றையும்,
குங்குமம் சேற்றை – குங்குமப்பூவோடு கலந்த சந்தனக்குழம்பையும்,
பொறாள் – பொறுக்கமாட்டாள்;
பெரிய துன்று அலைக்கும் – நீண்டு உயர்ந்த நெருங்கிய அலைகளுக்கும்,
துடிக்கும் – வருந்துவாள்;
என் செய்வாள் – என்ன பரிகாரஞ் செய்யமாட்டுவாள்; (எ – று.)

தலைமகளை ஒருவழித்தணந்த தலைமகன் மீண்டுவந்து சிறைப்புறமாக நிற்றலை யறிந்த தோழி,
தலைமகள் தென்றல் முதலியவற்றிற்கு ஆற்றாது ஒருபடியாலும் தேறுதலின்றி மிகவருந்துதலைத் தலைமகன் கேட்பக் கூறுவது,
இது. தலைமக ளாற்றாமைகண்டு வருந்துந்தோழி தன்னாற்றாமையாலே தலைமகளை யுட்கொண்டு விளித்து
முன்னிலைப்படுத்தியதென்றுங் கொள்ளலாம். இதனைச் செவிலியிரங்கலாகக் கொள்வாரு முளர்.

இலங்கை – ஆகுபெயர். ஆதிபன் – அதிபனென்பதன் விகாரம். அண்ட ராதிப னென்பதற்கு –
நித்தியசூரிகளுக்குத் தலைவ னென்றும்; இடையர்களுக்குத் தலைவனென்றுங் கொள்ளலாம்.
வண் தரா அதிப னெனப் பிரித்து, வளப்பம் பொருந்திய நிலமகளுக்குத் தலைவ னென்றுமாம்.

இது, நேரசை முதலதாகிய கட்டளைக்கலித்துறை.

————

தலைவி கூற்று
அண்டர் போற்றும் திரு அரங்கேசனார் அணி அரங்கத் திரு முற்றம் எய்தினால்
பண்டு போனவனை ஆழி வாங்குவேன் பாலியாது பரா முகம் பண்ணினால்
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே சங்கும் ஆழியும் தாரும் என் பேன் அவை
தொண்டருக்கு ஒற்றி வைத்தோம் என்று ஓதினால் துளவ மாலையைத் தொட்டுப் பறிப்பனே –91-

(இ – ள்.) அண்டர் போற்றும் – தேவர்களெல்லாம் வணங்கித் துதிக்கின்ற,
திருவரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
அணி அரங்கம் திரு முற்றம் – அழகிய அரங்கமாகிய திருமுன்றிலை,
எய்தினால் – (யான்) அடைந்தால், –
பண்டு போன – முன்னே கவர்ந்துகொண்டுபோன,
வளை ஆழி – சங்குவளையையும், மோதிரத்தையும்,
வாங்குவேன் – (மீளவும்) பெற்றுக்கொள்வேன்; (அவர்),
பாலியாது – (அவற்றைக்) கொடுத்தருளாமல்,
பராமுகம் பண்ணினால் – அலட்சியஞ் செய்தால், (அவ்வளையாழிகளுக்கு ஈடாக),
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே – (உமதுபஞ்சாயுதங்களுக்குள்) கதையும் வாளும் வில்லு மிருக்கவே,
சங்கும் ஆழியும் – சங்கையுஞ் சக்கரத்தையும்,
தாரும் என்பேன் – கொடுமென்று சொல்வேன்;
அவை – அவற்றை,
தொண்டருக்கு – அடியார்களுக்கு,
ஒற்றி வைத்தோம் – ஈடாக வைத்துவிட்டோம் (திருவிலச்சினையிட்டு வைத்துவிட்டோம்),
என்று ஓதினால் – என்று சொன்னால்,
துளவ மாலையை – திருத்துழாய்மாலையை,
தொட்டு பறிப்பென் – திருமேனி தீண்டிப் பிடுங்கிக்கொள்வேன்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தலைவி அப்பிரிவாற்றாமையால் மெலிந்தனளாக, அவ்வுடன்மெலிவைக்கண்டு தோழியர்
முதலியோர் காரணம் இன்னதென உணராது வெவ்வேறாகச் சங்கித்து அவ்வவற்றிற்கு ஏற்ப வெவ்வேறான
செய்கைகளைச் செய்யத்தொடங்க, தலைவி அத்தொழில்களை விலக்கி
“மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை,
யுற்றிருந்தேனுக் குரைப்பதெல்லா மூமையரோடு செவிடர் வார்த்தை,
பெற்றிருந்தாளையொ ழியவேபோய்ப்பேர்த்தொருதாயில்வளர்ந்த நம்பி,
மற்பொருதாமற்களமடைந்த மதுரைப்புறத்தென்னை யுய்த்திடுமின்” என்றாற்போலச் சொல்லி அறத்தொடு நின்று,
பிறகு தான் அங்குச்சென்றாற் செய்யுந்தொழிலை இதனால் தெரிவிக்கின்றன ளென்க.

தலைவனைத் தணந்த தலைவிக்கு அப்பிரிவாற்றாமையால் உடம்பு மெலிதலால் வளையும் மோதிரமுங் கழன்று
விழுந்து விடுதலாலும், மீண்டுந் தலைவனைப்புணர்ந்தால் அவை கழலவொண்ணாதபடி உடம்பு தணிந்து பூரித்து விடுதலாலும்,
“பண்டு போன வளையாழி வாங்குவேன்” என்றாள். பராமுகம் பண்ணுதல் – முகந்திரும்பிப்பார்த்தலுஞ் செய்யாது அசட்டை பண்ணுதல்.

இது, கட்டளைக்கலிப்பா; இலக்கணம் முன்னர்க் கூறப்பட்டது.

————-

தொட்டு உண்ட தயிர் வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி உரலோடு சூழ்ந்து கட்டக்
கட்டுண்டு கழல விரகு அறியாமல், இருந்து அழுத கள்வன் யாரோ
கட்டுண்டான் அரங்கன் எனக் கட்டுரைப் பாரானாலும் கங்கை சூடி
மட்டு உண்ட கொன்றை யான் மலர் மேலோன் அறிவரிய வடிவன் அன்றே –92-

(இ – ள்.) தொட்டு உண்ட – எடுத்துப்புசித்த,
தயிர் வெண்ணெய்க்கு – தயிர்க்கும் வெண்ணெய்க்குமாக,
அன்று – அந்நாளில் (கிருஷ்ணாவதாரத்தில்),
ஆய்ச்சி – இடைச்சி (யசோதை),
உரலோடு சூழ்ந்து கட்ட – உரலோடு பிடித்துச் சுற்றிக் (கடைகயிற்றாற்) கட்டிவிட,
கட்டுண்டு – கட்டப்பட்டு,
கழல – விலகிப்போக,
விரகு – உபாயத்தை,
அறியாமல் – தெரியாமல்,
இருந்து அழுத – (அங்கேயே) அழுதுகொண்டிருந்த,
கள்வன் – கள்ளத்தனமுடையவன், யாரே – யார்? (நம்பெருமாளன்றோ); அரங்கன் -,
கட்டுண்டான் என – கட்டுப்பட்டானென்று,
கட்டுரைப்பார் ஆனாலும் – உறுதிப்பட (இழித்து)ச் சொல்லுவாரானாலும், (அவன்),
கங்கை சூடி – கங்காநதியைச் சடையில் தரித்து,
மட்டுஉண்ட கொன்றையான் – வாசனையைக் கொண்ட (தேன் நிறைந்த) கொன்றைப் பூமாலையை யுடைய உருத்திரனும்,
மலர் மேலான் – தாமரைப் பூவில் தங்குகின்ற பிரமனும்,
அறிவு அரிய – அறிதற்கரிய, வடிவன் அன்றே – வடிவத்தை யுடையவனன்றோ? (எ – று.)

இப்பாட்டில், தங்களில் தோழமையாயிருப்பா ரிருவர்மகளிரது பேச்சாலே, ஒருத்தி பரத்வத்தை அநுசந்திக்க,
ஒருத்தி சௌலப்பியத்தை அநுசந்தித்து இவனது தாழ்வுகளைச் சொல்ல, ‘அப்படி தாழ்வுகள்செய்தானாயினும்
எல்லார்க்கும் மேலானவனன்றே இப்படிசெய்கிறான்’ என்று இருவர் பேச்சாலுமாக,
எம்பெருமானுடைய பரத்வத்தையும் சௌலப்பியத்தையும் பேசுகிறார்;
“வண்ணக் கருங்குழ லாய்ச்சியான் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றாற் கட்டுண்டானாகிலும்,
மெண்ணற் கரிய னிமையோர்க்குஞ் சாழலே” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வாறு இரண்டுபிராட்டிமார்தசை ஏககாலத்திற் கூடுவது எம்பெருமான் திருவருளினாலாகு மென்று பெரியோர் கூறுவர்.

இதற்கு யாப்பிலக்கணம் 4 – ஆங் கவியிற் கூறியதே.

——————

வடியாத பவக் கடலும் வடிந்து மூல மாயை கடந்து அப்பால் போய் வைகுந்தம் சேர்ந்து
அடியார்கள் குழாம் கூடி உனதடிக்கீழ் அடிமை செயும் அக்காலம் எக்காலம் தான்
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியோனே அடியேன் நான் முயற்சி இன்றி நின்னருளே பார்த்திருப்பேன் நீசனேனே –93-

(இ – ள்.) கொடி ஆடும் – துவசங்கள் அசைகின்ற,
மணி மாடம் – இரத்தினங்களிழைத்த மாளிகைகளையுடைய,
அயோத்தி முதுஊர் – திருவயோத்தியென்கிற பழையநகரத்தில்,
குடி – தங்குதலை,
துறந்து – விட்டு,
திருவரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
கோயில்கொண்ட – இருப்பிடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே – பெரியோனே! –
வடியாத பவம் கடலும் – வற்றிப்போகாத பிறவிப்பெருங்கடலும்,
வடிந்து – வற்றப்பெற்று,
மூல மாயை கடந்து – மூலப்பிரகிருதியைத் தாண்டி,
அப்பால் போய் – அதற்கப்புறஞ் சென்று,
வைகுந்தம் சேர்ந்து – ஸ்ரீவைகுண்ட மடைந்து,
அடியார்கள் குழாம் கூடி – தொண்டர்களது கூட்டத்தோடு சேர்ந்து,
உனது அடிக்கீழ் – உன்னுடைய திருவடியின்கீழ்,
அடிமை செயும் – கைங்கரியஞ் செய்திருக்கின்ற,
அக்காலம் -, எக்காலந்தான் – எப்பொழுதோ?
அடியேன் – (உனது) அடியவனும்,
நீசனேன் – கடைப்பட்டவனுமாகிய, நான் -,
முயற்சி இன்றி – பிரயத்தனஞ் சிறிது மில்லாமல்,
நின் அருளே – உனது திருவருளையே,
பார்த்திருப்பன் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; (எ – று.)

எம்பெருமானது திருவருணோக்கம் பதிதலால் இருவினைகள் நீங்கி அவைகாரணமாகத்தோன்றும் பிறவியற,
பின்பு இந்தப்பிரகிருதிமண்டலத்தைக் கடந்துபோய் ஸ்ரீவைகுண்டமாநகரில் அடியார்கள் குழாங்களுடன் சேர்ந்து
எம்பெருமானுக்குத்திருத்தொண்டுபுரியவேண்டுங்காலம்எப்போது கிட்டுமோ? என்று அக்காலத்தைப்பார்த்திருக் கின்றனரென்க.
“அடியார் குழாங்களையுடன் கூடுவதென்றுகொலோ,” “என்றுகொல் சேர்வதந்தோ
அரன் நான்முக னேத்துஞ் செய்யநின்திருப்பாதத்தை” என்றார் நம்மாழ்வாரும்.
சூரியகுலத்துத்தோன்றிய இக்ஷ்வாகுசக்கரவர்த்தி பிரமதேவனைக் குறித்துப் பலநாள் பெருந்தவஞ்செய்ய,
அப்பிரமன் அத்தவத்திற்கு மகிழ்ந்து தான்பலகாலமாய் ஆராதித்துவந்த எம்பெருமானை விமானத்துடன் பிரசாதித்தருள,
திருவயோத்தி சேர்ந்து அவ்விக்ஷ்வாகுவினாலும் பின்னுள்ள அக்குலத்தரசர்களாலுந் திருவாராதநஞ் செய்யப்பட்டுவந்த
நம்பெருமாள், ஸ்ரீராமபிரானால் இராவணவதம்முடிந்து திருவபிடேகம்செய்துகொண்டகாலத்தில்
விபீஷணாழ்வானுக்குக் கொடுத்தருளப்பட்டுத் திருவரங்கஞ் சேர்ந்ததனால்,
“அயோத்திமூதூர் குடிதுறந்து திருவரங்கங் கோயில்கொண்ட நெடியோன்” என்றார்.

இதற்குச் செய்யுளிலக்கணம் 15 – ஆங் கவியிற் கூறியதே.

————-

நீசச் சமர்க்கும் சூனிய வாதர்க்கும் நீதி அற்ற
பூசற் பவுத்தர்க்கும் சைவர்க்கும் யார்க்கும் புகலுகின்றேன்
நாசப் படா உயிர் எல்லாம் முதல் தந்த நாதன் கண்டீர்
ஆசு அற்ற சீர் அரங்கத்து ஆதி மூலத்து அரும் பொருளே –94-

(இ – ள்.) நீசம் சமணர்க்கும் சூனியவாதர்க்கும் – கீழ்மையையுடைய சமணர்களுக்கும் நாஸ்திகவாதிகளுக்கும்,
நீதி அற்ற பூசல் பவுத்தர்க்கும் சைவர்க்கும் – நியாயமல்லாத வாதஞ்செய்கிற பௌத்தர்களுக்கும் சைவர்களுக்கும்,
யார்க்கும் – மற்றைப் புறச்சமயத்தவர் யாவர்க்கும்,
புகலுகின்றேன் – சொல்லுகின்றேன்; –
நாசம் படா உயிர் எல்லாம் – அழிவில்லாத சீவன்களையெல்லாம்,
முதல் தந்த – ஆதியிற் படைத்த,
நாதன் – தலைவன்,
ஆசு அற்ற – குற்றமில்லாத,
சீர் அரங்கத்து – ஸ்ரீரங்கத்தி லெழுந்தருளி யிருக்கின்ற,
ஆதி மூலத்து – ஆதி மூலமாகிய,
அரும் பொருளே – அறிதற்கரிய பரவஸ்துவே;
கண்டீர் – அறியுங்கள்; (எ – று.)

சமணர் – ஜைநர்; இவர்கள் – காரியகாரணரூபத்தால் இந்த உலகம் நித்யாநித்யமாயும் பிந்நாபிந்நமாயும்
ஸத்யாஸத்யமாயுமிருக்கு மென்றும், ஆத்மாக்கள் இருவினைப்பயனால் வரும் தேகத்தின் பரிமாணங்களையுடையனவா மென்றும்,
மலதாரணம் அஹிம்ஸைமுதலிய செயல்களாலும் ஆத்ம ஜ்ஞாநத்தினாலும், இந்த ப்ரக்ருதியை விட்டு நீங்கி
மேலுலகத்தை யடைகையே மோஷமென்றும் இவ்வாறாகத் தமக்குத் தோற்றியபடியே வேதவிருத்தங்களான
விஷயங்களைத் தமது வாயில் வந்தபடியே பரக்கச்சொல்வார்கள்.
சமணர் – க்ஷபணர்; இவர்கள் – பௌத்தர்களை ஒருபுடை யொத்தலும் ஒவ்வாமையு முடையவர்.
சூனியவாதர் – சூனியமே தத்வமென்றிருக்கிற மாத்யமிகர்; இவர்கள் – ப்ரமாணமும் ப்ரமேயமும்
(ப்ரமாணத்தினால் அறியப்படும் பொருளும்) ப்ரமாதாவும் (ப்ரமாணத்தையறிபவனும்) ஆகிய இவையுண்டென்றறிவது
மதிமயக்கத்தின் செயலே யென்றும், ஸத்துமன்றாய் அஸத்துமன்றாய் ஸதஸத்துமன்றாய் ஸதஸத்விலக்ஷணமுமன்றாய்
இந்நான்கு எல்லையையும் கடந்திருப்பதொன்றே தத்வமென்றும், சூந்யத்திலே சூந்யமென்று அறிகையே மோக்ஷமென்றும் பிதற்றுவார்கள்.

மறுபிறப்பும் இருவினைப்பயனுங் கடவுளும் இல்லையென்று வாதஞ்செய்வர்.
இவர்களும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்களெனினும் இவர்களுடைய மதத்தின் கொடுமையைப்பற்றி
இவர்களைத் தனியே பிரித்துக்கூறின ரென்க.
இவ்வாறே “தர்க்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும்” என்று
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்திருத்தலுங் காண்க.
பௌத்தர் – வைபாஷிகள் ஸௌத்ராந்திகள் யோகாசாரன் மாத்யமிகன் என நால்வகைப்படுவர்:
இந்நால்வருள் மாத்யமிகனைச் சூனியவாதியென்று முற்கூறியதனால், “பூசற்பவுத்தர்” என்றது. மற்றை மூவரையுங் காட்டும்.
இவர்களுள், வைபாஷிகன் – பரமாணுத்திரளின் வடிவாய்க்கட்புலனாவதே உலகமென்றும், அவ்வுலகத்தைப்பற்றித்
தோன்றும் உணர்வு க்ஷணிகமென்றும், உணர்வுக்குப் புலனாகும் பொருள்களெல்லாம்
ஒரு நொடிப்பொழுதிற்குள்ளே தோற்றக்கேடுகளைப் பெறுமென்றும், எல்லாம் க்ஷணிகமென்று உண்டாகின்ற
விஜ்ஞாநத்தின் தொடர்ச்சியே ஆத்மாவென்றும், இதில் நிலையானதென்ற எண்ணமே ஸம்ஸாரம் நிலையிலதென்ற
எண்ணமே மோஷ மென்றுங் கூறுபவன்;
ஸௌத்ராந்திகன் – பொருள்கள் யாவும் உணர்விலே தங்களுடைய வடிவைப் படைத்துத் தாங்கள் உடனே நசித்துவிட
அவ்வுணர்வினாலுண்டான ஆகாரத்தினாலேயே அவ்வப்பொருள்கள் அநுமாநிக்கப்படுகின்றன வென்றும்,
ஆகவே பொருள்களின் பன்மையே பலவகை ஞானங்கள் தோன்றுவதற்குக் காரணமென்றும்,
அநுமாநத்தினால் உலகம் சித்திக்குமென்றும், அவ்வுலகத்தைக் குறித்த ஞானமும் க்ஷணிகம்,
அந்த க்ஷணிகவிஜ்ஞாநமே ஆத்மா, இதில் ஸ்திரமென்ற புத்தியே ஸம்ஸாரம், அஸ்திரமென்ற
புத்தியே மோக்ஷமென்றுங் கூறுபவன், யோகாசாரன் – ஞானமென்ற ஒன்றேயுள்ளது என்றும்,
அந்த ஞானமே பலவடிவங்களைப் பெற்றுப் பலபண்டங்கள் போலத் தோன்றுகின்றதென்றும்,
அந்த ஞானம் க்ஷணிகமென்று அறிகையே மோக்ஷமென்றுஞ் சொல்லுபவன்.
சைவர் – தன்னை ஈஸ்வரனென்று மயங்கி உலகமெல்லாம் வணங்கவேண்டுமென்று விரும்பி அதற்குத்தகப்
பகவானுடைய கட்டளையைப்பெற்று மோகசாஸ்திரங்களைப் பிரசாரஞ்செய்த ருத்ரனுடைய ஆகமத்தையே முக்கியமாகக் கொண்ட பாசுபதர்.

“ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லா,
வன்று நான்முக ன்றன்னொடு தேவருலகோ டுயிர் படைத்தான்”
“இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும்,
மலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந் தெய்வமுமாகி நின்றான்,
மலிந்துசெந்நெற்கவரிவீசுந் திருக்குருகூரதனுள், பொலிந்துநின்றபிரான் கண்டீ ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

நீசத்துவம் – வேதத்துக்குப் புறம்பாயிருத்தலும், காணப்படும் பொருள்களெல்லாங் கணிகமென்பதும் முதலாயின.
பௌத்தர் – புத்தனைத் தெய்வமாகக் கொண்டவர்; சைவர் – சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; தத்திதாந்த வடமொழிகள்.
“மன்னுயிர்” என்றாற்போல, “நாசப்படாவுயிர்” என்றார். ஆதிமூலம் – முதற்பொருள்களுக்கெல்லாம் முதற்பொருள்.

இது, நேரசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை.

———-

அரும்புண்ட ரீகத்து அடி இணைக்கே நெஞ்சு
இரும்பு உண்ட நீர் ஆவது என்றோ விரும்பி
அறம் திருந்தும் கோயில் அரங்கா உனை நான்
மறந்திருந்தும் மேல் பிறவாமல் –95-

(இ – ள்.) விரும்பி அறம் திருந்தும் கோயில் அரங்கா – எல்லாத்தருமங்களுந் திருத்தமாகச்செய்யப்படுகின்ற
திருவரங்கம் பெரியகோயிலில் திருவுள்ளமுகந்து எழுந்தருளியிருப்பவனே! –
உனை – உன்னை,
நான் -, மறந்திருந்தும் – மறந்திருந்தாலும்,
மேல் பிறவாமல் – இனிப் பிறவியெடாதபடி,
அரும் புண்டரீகத்து அடி இணைக்கு – பெறுதற்கரிய தாமரைமலர் போன்ற (உன்னுடைய) உபய திருவடிகளுக்கு,
என் நெஞ்சம் – எனதுமனம்,
இரும்பு உண்ட நீராவது – (பழுக்கக்காய்ச்சிய) இரும்பு உட்கொண்ட நீர் போல மீண்டுவாராமல் லயமடைவது,
என்றோ – எந்நாளோ? (எ – று.)

இனிப் பிறவியுண்டாகாதவாறு, பழுக்கக்காய்ந்த இரும்பில் நீர் சென்று லயிப்பதுபோல என்நெஞ்சம் உனது
திருவடித் தாமரைகளில் லயிப்பது எந்நாளோ? என்று எம்பெருமானது திருவடிகளில்
தமது மனம் பதியுங்காலத்தை வேண்டுகின்றனரென்க. பழுக்கக்காய்ச்சிய இரும்பில் நீரைவார்த்தால் அந்நீர்
அவ்விரும்பிற்சென்று வயப்பட்டு மீண்டும் வெளிப்படாது; இது மீளாமைக்கு உவமை கூறப்படுதலை,
“இரும்புண்டநீர் மீன்கினு மென்னுழையிற், கரும்புண்டசொன்மீள்கிலன்காணுதியால்” என்ற கம்பராமாயணச் செய்யுளிலுங் காண்க.
“நெடுவேங்கடத்தா, னீர விரும்புண்டரீகப்பொற் பாதங்க ளென்னுயிரைத்,
தீர விரும்புண்ட நீராக்குமா றுள்ளஞ் சேர்ந்தனவே” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“தீர விரும்புண்ட நீரது போல வென்னாருயிரை யாரப்பருக வெனக் காராவமு தானாயே,”
“இரும்பனன்றுண்டநீர்போ லெம்பெருமானுக்கு என்ற, னரும்பெறலன்பு புக்கிட்டடிமைபூண்டுய்ந்துபோனேன்” என்பன பெரியோர் பாசுரங்கள்.

நாளென்னும்வாய்பாட்டால் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா.

—————

பிறவி எனும் கடல் அழுந்தி பிணி பசியோடு இந்திரியச்
சுறவம் நுங்க கொடு வினையின் சுழல் அகப்பட்டு உழல்வேனோ
அறம் உடையாய் என் அப்பா அரங்கா என் ஆர் உயிருக்கு
உறவு உடையாய் அடியேனை உயக் கொல்வதுய் ஒரு நாளோ –96-

(இ – ள்.) அறம் உடையாய் – எல்லாத் தருமங்களையு முடையவனே!
என் அப்பா – எனது சுவாமியே! அரங்கா -!
என் ஆருயிருக்கு – எனது அரிய ஆத்துமாவுக்கு,
உறவு உடையாய் – உறவினனானவனே! –
பிறவி எனும் கடல் – பிறப்பென்கிற பெரிய கடலில்,
அழுந்தி – மூழ்கி,
பிணி பசியோடு இந்திரியம் – நோயும் பசியும் பஞ்சேந்திரியங்களுமாகிய,
சுறவம் – சுறாமீன்கள்,
நுங்க – விழுங்கும்படி,
கொடு வினையின் சுழல் – கொடிய இருவினைகளாகிய நீர்ச்சுழியில்,
அகப்பட்டு – உட்பட்டுச் சிக்கிக்கொண்டு,
உழல்வேனோ – சுழலக்கடவேனோ? அடியேனை -,
உய கொள்வது – உஜ்ஜீவிக்கும்படி ஆட்கொள்வதாகிய,
ஒரு நாளே – ஒருதினமும் (உளதாகுமோ) ? (எ – று.)

கரைகாணவொண்ணாதிருத்தலால் பிறவியைக் கடலாகவும், கடலில் வீழ்ந்தவரைச் சுறாமீன்கள் கொத்தித் தின்பது
போலப் பிணி பசி முதலியவை பிறவியிலுழல்கின்ற ஆத்மாவை வருத்துதலால் அப்பிணி பசி
முதலிய வற்றைச் சுறாமீன்களாகவும், சுழலிலகப்பட்டவர் அச்சுழலினின்று தப்புதலரிதாவதுபோல
இருவினையி லகப்பட்டவன் அதனினின்று மீளுத லரிதாதலால் இருவினைகளைச் சுழலாகவும் உருவகஞ்செய்தனர்; உருவகவணி.
இதனால், திருமாலாகிய தோணியொன்றே, பிறவிக்கடலினின்று மீண்டு கரையேறுதற்கு ஏற்ற உபாயமா மென்றவாறு.

“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் – விஷ்ணு போதம்விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்,”
“துன்பக்கடல் புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறா துழல்கின்றான்” என்பன காண்க.
“சென்மந் தரங்கங் கருமஞ் சுழிபிணி சேலினங்கு, சென் மந்த ரங்கதிர் பொன்கோள்கண் மாரி திண்கூற்றசனி,
சென்மந்த ரங்கவற்றுள் விழுவோர் கரைசேர்க்கும் வங்கஞ், சென்மந் தரங் கவின் றோளா ரரங்கர் திருப்பதமே” என்பர்
திருவரங்கத்தந்தாதியிலும்.
“ஒன்று சொல்லி யொருத்தனில் நிற்கிலாத லோரைவர்வன்கயவரை,
யென்று யான் வெல்கிற்ப னுன் றிருவருளில்லையேல்” என்றார் நம்மாழ்வார்.

இது, எல்லாச்சீரும் காய்ச்சீர்களாகிய கொச்சகக்கலிப்பா.

—————–

ஒரு பொருள் அல்லேன் இரு வினை உடையேன் உனது தொண்டு எனும் துறை குளித்து உன்
பெருகு தணணளியின் பாசம் தொட்டு இழிந்து பெரியது ஓர் முத்தி யான் பெற்றேன்
திருவும் மா மணியும் சங்கமும் ஏந்தி செய்ய தாமரை பல பூத்து
கரு நிறம் உடைத்தாய் நதி பொரு தரங்கம் கலந்தது ஓர் கருணை வாரிதியே –97-

(இ – ள்.) திருவும் – ஸ்ரீமகாலக்ஷ்மியையும் (நிதிகளையும்),
மா மணியும் – அழகிய கௌஸ்துபரத்தினத்தையும் (பெரிய ரத்தினங்களையும்),
சங்கமும் – பாஞ்சசன்னியத்தையும் (சங்குகளையும்),
ஏந்தி – தரித்து,
செய்ய தாமரை பல பூத்து – சிவந்த பல தாமரைமலர்போன்ற திருவவயவங்கள் விளங்கப்பெற்று (பலசெந்தாமரைமலர் பூக்கப்பெற்று),
கருநிறம் உடைத்தாய் – கறுத்தநிறத்தையுடையதாய்,
தரங்கம் பொரு நதி கலந்தது – அலைமோதுகின்ற காவேரியாற்றினிடஞ் சேர்ந்ததாகிய (அலைமோதுகின்ற நதிகள் சேரப்பெற்றதாகிய),
ஓர் – ஒப்பற்ற,
கருணை வாரிதியே – அருட்கடலே! –
ஒரு பொருள் அல்லேன் – ஒருபொருளாக மதிக்கப்படாதவனும் (செல்வஞ் சிறிதுமில்லாதவனும்),
இருவினை உடையேன் – (நல்வினை தீவினையென்னும்) இரண்டுவினைகளையு முடையவனும் (மிக்க முயற்சியையுடையேனும்) ஆகிய, யான் -,
உனது -, தொண்டு எனும் – கைங்கரியமாகிய,
துறை – வழியில் (இறங்குமிடத்தில்),
குளித்து – பிரவேசித்து (மூழ்கி),
உன் – உனது,
பெருகு தண் அளியின் – மிக்க குளிர்ந்த திருவருளாகிய,
பாசம் – கயிற்றை,
தொட்டு – பிடித்துக்கொண்டு,
இழிந்து – இறங்கி,
பெரியது ஓர் முத்தி – பெரியதொரு பரமபதத்தை (பெரியதோர் முத்து – சிறந்ததொரு முத்தை), பெற்றேன் -; (எ – று.)

ஒன்றுக்கும் பற்றாதவனாய் இருவினைகளையுமுடைய யான் உனக்கு அடிமை பூண்டு உனது தண்ணளியையே பற்றாசாகக்
கொண்டு முத்தியைப் பெற்றே னென்பதாம். இதில், நிதிகளையும் இரத்தினங்களையும் சங்கத்தையுமுடையதாய்ப்
பலதாமரைமலர்கள் மலரப்பெற்றுநதிகள் வந்துசேர்தற்கு இடமாகிய கடலிலே, வறியவனாகிய யான்பெருமுயற்சியோடு
பெருங்கயிற்றைப் பற்றிக்கொண்டு முத்துக்குளிக்குந் துறையில் இறங்கிக் குளித்து முத்துக்களைப் பெற்றே னென்ற
ஒருபொருளும் தொனிக்கின்றது. சருங்கச்சொல்லலணி; இதற்கு உருவகவணி அங்கமாய் நின்றது.

இருவினையுடையேனென்பதற்கு – பிறத்தலு மிறத்தலுமாகிய இரண்டு தொழில்களையு முடையே னென்றுமாம்.
முத்தி – முத்தென ஈறுதிரிந்தது; பக்தி – பத்து, ஸந்தி – சந்து என்றாற்போல, வாரிதி – நீர்தங்குமிடம்.
நீர் நிரம்பிய கடல்போலக் கிருபை நிறைந்தவ ரென்றற்குக் கருணைவாரிதியே யென்றார்.
பெற்றேன் என இறந்தகாலத்தாற் கூறியது, துணிவுபற்றிய காலவழுவமைதி.

இதற்குச் செய்யுளிலக்கணம், 38 – ஆங் கவியிற் கூறப்பட்டது.

——————

வாரி அரங்கம் வரு திருப் பாவைக்கும் மண் மகட்கும்
சீரியர் அம் கண் வளர் திருக் கோலமும் தென் திருக் காவேரி அரங்க
விமானமும் கோயிலும் மேவித் தொழார்
பூரியர் அங்கு அவர் கண் இரண்டாவன புண் இரண்டே –98-

(இ – ள்.) வாரிஅரங்கம்வரு – திருப்பாற்கடலினிடத்தினின்றுந் தோன்றிய,
திருப்பாவைக்கும் – திருமகளுக்கும்,
(வாரி அரங்கம் வரு) – கடலாற் சூழப்பட்ட –
மண்மகட்கும் – நிலமகளுக்கும்,
சீரியர் – சிறந்த கணவராகிய நம்பெருமாள்,
அம் கண் வளர் – அழகாகத் திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
திரு கோலமும் – திருக்கோலத்தையும்,
தென் திரு காவேரி – அழகிய திருக்காவேரியின் மத்தியிலுள்ள,
அரங்க விமானமும் – ஸ்ரீரங்கவிமானத்தையும்,
கோயிலும் – பெரியகோயிலையும்,
மேவி தொழார் – விரும்பி வணங்காதவர்கள், –
பூரியர் – கீழ்மக்களாவர்;
அங்கு அவர் கண் இரண்டு ஆவன – அத்தன்மையையுடைய அவர்களது இரண்டு கண்களும்,
புண் இரண்டே – இரண்டு புண்களேயாகும் (கண்களல்லவாம்); (எ – று.)

உரைமெழுக்கிற் பொன்போல ஆத்துமாக்கள் மூலப்ரக்ருதியிலே ஒட்டிக்கொண்டு இறகொடிந்த பட்சிபோலே
கரணகளேபரங்களின்றி நலிவுபடுவதைக் கண்டு எம்பெருமான் ஒருகருணை கொண்டு இவர்கட்குக்
கண் கை கால் முதலிய உறுப்புக்களைத் தந்து தன்னையறிந்து கரைமரஞ்சேரும் படி சாஸ்திரங்களையும் அளித்தனனாதலால்,
அவ்வாறுதந்த பயனைப் பெறாதவர்களது கண்கள் கண்களல்ல, புண்ணாகு மென்பதாம்;
“பூணாரமார்பனைப் புள்ளூரும் பொன்மலையைக்,
காணாதார்கண்ணென்றுங்கண்ணல்லகண்டாமே” என்றார் திருமங்கையாழ்வாரும். கண்ணைக்கூறியது,
மற்றைய உறுப்புக்கட்கும் உபலக்ஷணம்.
இச்செய்யுளில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. கண்படைத்தபயன் பெறாததனால்,
“கண்ணிரண்டாவன புண்ணிரண்டே” என்றார்.
இதனை “கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு, புண்ணுடையர் கல்லா தவர்” என்பதனோடு ஒப்பிடுக.

வாரி – நீர்; கடலுக்கு இலக்கணை. ‘வாரியரங்கம்வரு’ என்பது, இரட்டுறமொழிதலாய்ப் பொருளுரைத்து
மண்மகளோடுஞ் சேர்க்கப்பட்டது.

இது, நேரசை யாதியான கட்டளைக்கலித்துறை.

————-

புண் ஆர் உடல் பிறவி போதும் எனக்கும் உனக்கும்
எண்ணாது இருந்தது இனிப் போதும் கண்ணா
குழற்காளாய் தென் அரங்கக் கோயிலாய் நின் பொற்
கழற்கு ஆளாய் நின்றேனைக் கா –99-

(இ – ள்.) கண்ணா – கிருஷ்ணனே!
குழல் காளாய் – வேய்ங்குழலையுடைய காளைபோன்றவனே!
தென் அரங்கம் கோயிலாய் – தென்திருவரங்கங்கோயிலையுடையவனே! – இனி -,
எனக்கும் -, புண் ஆர் உடல் பிறவி – மாமிசம் நிறைந்த உடம்பையெடுத்துப் பிறக்கும் ஜன்மம்,
போதும் -; உனக்கும் -, எண்ணாது இருந்தது – (என்னை) நினையாமலேயிருந்தது, போதும் -;
(இனியாயினும்), நின் பொன் கழற்கு – உனது அழகிய திருவடிகளுக்கு,
ஆள் ஆய் நின்றேனை – அடிமையாய்நின்ற என்னை,
கா – ரக்ஷித்தருள்; (எ – று.)

எல்லையில்லாத காலமாக உன்னைநினையாமலே பிறந்துபிறந்து இளைத்துப்போனேன்; இது என்மீது பெருங்குற்றமே;
நான் நினைக்குமாறு நிர்ஹேதுகமான திருவருளினாற் செய்யவேண்டியவன் நீயே யாதலால், இத்தனை காலமாக
அடியேனைப்பற்றித் திருவுள்ளத்துக்கொள்ளாமல் வீணேபொழுதுபோக்கியது உனதுகுற்றமே;
இவ்விஷயத்தைக்குறித்து இப்போது தர்க்கித்துக்கொண்டிருத்தலிற் பயனில்லை; உனது திருவருளினால் உன் திருவடித்
தொண்டனாய் நிற்கும் அடியேனை இனியாவது கைந்நழுவவிடாமற் பாதுகாக்கவேண்டு மென்பதாம்;
“அக்கரை யென்னு மனத்தக்கடலுளழுந்தி யுன்பேரருளால்,
இக்கரையேறியிளைத்திருந்தேனை யஞ்சே லென்று கைகவியாய்” என்றார் பெரியாரும்.
காளாய் – காளையென்பதன் விளி. காளை – இளவெருது; உவமாகுபெயர்; உவமை – நடைக்கும், காம்பீரியத்துக்கும், வலிமைக்கும்.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசை வெண்பா.

——————–

காவிரி வாய்ப் பாம்பு அணை மேல் கரு முகில் போல் கண் வளும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் அரங்கர் பொன் அடியே தஞ்சம் எனப் பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்று இருவரினும் சீரியோரே –100-

(இ – ள்.) காவிரிவாய் – உபயகாவேரிமத்தியில்,
பாம்பு அணைமேல் – சேஷ சயனத்தில்,
கரு முகில்போல் – காளமேகம்போல,
கண்வளரும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
கருணை வள்ளல் – திருவருளையுடைய வரையாது கொடுப்பவராகிய,
பூ விரியும் துழாய் அரங்கர் – பொலிவுமிக்க திருத்துழாய்மாலை யையுடைய ரங்கநாதரது,
பொன் அடியே – அழகிய திருவடிகளையே,
தஞ்சம் என – அடைக்கலமாகக் கொண்டு,
பொருந்தி – சரணமடைந்து,
வாழ்வார் – வாழ்பவர்கள், –
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் – எல்லோரினும் தாழ்ந்த குலத்தில் தோன்றியவராயினும்,
அவர் கண்டீர் – அவரன்றோ,
இமையாநாட்டம் தேவரினும் – இமையாத கண்களையுடைய தேவர்களினும்,
முனிவரினும் – முனிவர்களினும்,
சிவன் அயன் என்ற இருவரினும் – சிவனும் பிரமனுமென்கிற இரண்டுபேரினும்,
சீரியோரே – சிறப்பினையுடையோராவர்.

எம்பெருமானது திருவடிகளே தஞ்சமென்ற உறுதியையுடைய சாத்துவிகர்கள் அகங்காரமமகாரங்கள் மண்டி
நிற்கப் பெற்றதேவர் முதலியோரினும் உயர்ந்தவராவரென்றவாறு.

இதற்குச் செய்யுளிலக்கணம், 15 – ஆங் கவியிற் கூறியதே.

————————–

மழை முகில் எனவே பணா முகம் திகழ் விரி யரவணை ஏறி வாழ் அரங்கர் தம்
எழில் பெறும் இரு தாளிலே கலம்பகம் எனும் ஒரு தமிழ் மாலை தான் அணிந்தனன்
குழல் இசை அளி மேவு கூரம் வந்தருள் குரு பரன் இரு பாத போதடைந்தவன்
அழகிய மணவாள தாசன் என்பவன் அடியவர் அடி சூடி வாழும் அன்பனே –101-

(இ – ள்.) பணா முகம் திகழ் – படங்களோடுகூடிய (ஆயிர) முகங்கள் விளங்குகின்ற,
வரி அரவு அணை – புள்ளிகளையுடைய திருவனந்தாழ்வானாகிய சயனத்தில்,
மழை முகில் என – கார்காலத்து மேகம் போல,
ஏறி வாழ் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரங்கர்தம் – ரங்கநாதரது,
எழில் பெறும் – அழகு பெற்ற,
இரு தாளிலே – உபயதிருவடிகளிலே,
கலம்பகம் எனும் – கலம்பகமென்கிற,
ஒரு தமிழ்மாலை – தமிழாலாகிய தொரு மாலையை (பிரபந்தத்தை),
அணிந்தனன் – சூடினான்; (யாரென்னின்), –
குழல் இசை அளி மேவு – வேய்ங்குழலினிசைபோலும் பாட்டிசையையுடைய வண்டுகள் விரும்பிமொய்க்கின்ற,
கூரம் – கூரமென்னும்பதியில்,
வந்தருள் – திருவவதரித்த,
குரு பரன் – சிறந்த ஆசாரியராகிய ஆழ்வானது,
இரு பாத போது – உபயதிருவடித்தாமரைகளை,
அடைந்தவன் – அடைந்தவனும்,
அடியவர் அடி சூடி வாழும் – அடியார்களது திருவடிகளை(த் தலைமேல் வைக்கும் மாலையாகக் கொண்டு) சூடிவாழ்கின்ற,
அன்பன் – பக்தனுமாகிய,
அழகிய மணவாள தாசன் என்பவன் – அழகிய மணவாளதாச னென்கிற திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்; (எ – று.)

இது, தன்னைப் பிறன்போலும் பதிகங் கூறியது; வடநூலாரும், சடகோபர் சம்பந்தர் முதலாயினாரும்,
திவாகரரும், பதினெண்கீழ்க்கணக்குச்செய்தாரும் முன்னாகப் பின்னாகத் தாமே பதிகங் கூறுமாறு காண்க.

“குருபரனிருபாதபோதடைந்தவன்” என்பதற்கு – கூரத்தாழ்வானது உபயபாதங்களாகிய பராசரபட்டர் வேதவியாசபட்டர்
என்னும் இரண்டு திருக்குமாரர்களை ஆசிரியராக அடைந்தவ னென்றவாறு; குருபரன் – பரமகுரு, தனதுகுருக்களுக்குக் குரு.

———

திருவரங்கக்கலம்பகம் முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading