ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –41-60-

இறுதி மடக்கு
41-திருவரங்கம் திருக் கோயில் சேர்ந்து உமது திருக்கு ஒயில்
தருவர் என்றும் வைகும் தம் தயங்கு ஒளி சேர் வைகுந்தம்
ஒரு மருங்கில் நந்து உடையார் ஒழிந்தோர் சனனம் துடையார்
மருவ மறந்திருப்பீரே வணங்க மறந்து இருப்பீரே –41-

(இ – ள்.) வணங்க – (எம்பெருமானை) வணங்குதற்கு,
மறந்திருப்பீரே – மறந்திருப்பவர்களே! – (நீங்கள்), –
திரு அரங்கம் திரு கோயில் – திருவரங்கம் பெரியகோயிலை,
சேர்ந்து – அடைந்து,
உமது – உங்களது,
திருக்கு – மாறுபாடு,
ஓயில் – ஒழிந்தால், –
ஒரு மருங்கில் நந்து உடையார் – ஒரு (இடது) பக்கத்திற் சங்கத்தையுடைய அவ்வரங்கநாதர்,
என்றும் – எந்நாளும்,
வைகும் – (தாம்) வீற்றிருக்கின்ற,
தம் – தமது,
தயங்கு ஒளி சேர் – விளங்குகின்ற ஒளி பொருந்திய,
வைகுந்தம் – பரமபதத்தை,
தருவர் – கொடுத்தருளுவர்;
ஒழிந்தொர் – அவரொழிந்த மற்றைத்தேவர்கள்,
சனனம் துடையார் – பிறப்பைப் போக்கமாட்டார்கள்; (ஆகையால்),
மருவ – (அந்த எம்பெருமானையே) சென்று – சேரும்படி,
மறம் – (உங்கள்) மாறுபாட்டை, திருப்பீர் – மாற்றுங்கள்; (எ – று.)

திருவரங்கம் பெரியகோயிலை யடைந்து உங்கள் மாறுபாட்டை யொழிப்பீராயின் எம்பெருமான்
உங்கள் பிறவிப்பிணியை யறுத்து முத்தியளிப்பனென்பதாம்.

திருக்கு – அகங்கார மமகாரங்கள். ஒழிந்தொர் – ஒழிந்தோ ரென்பதன் குறுக்கல்.
ஒழிந்தோர் சனனந் துடையார் – திருமாலை யொழிந்த மற்றைத் தேவர்கள் தம்மைச் சரணமடைந்தவரது
பிறப்பை யறுக்கும் ஆற்றலில்லாதவ ரென்க;
இனி, இதற்கு – அவ்வெம்பெருமான் திருவரங்கத்தை யடைந்தவரல்லாதவரது பிறவியைத் துடையா ரென்றுமாம்.

இது, அடிதோறுந் தனித்தனியே வந்த இறுதி முற்று மடக்கு.

இது, விளங்காய்ச்சீரும் மாங்காய்ச்சீரும் விரவிவந்த கொச்சகக்கலிப்பா.

—————

சித்து
42-திருப் பொற் பாவைக்குக் கஞ்சம் பொன் ஆக்கிய சித்தரேம் சுத்தக் காயா மலர் என
உருப் பொற்பு ஆன திரு அரங்கேசனார் ஊரகத்து நின்றார் சென்று இறைஞ்சினோம்
இருப்புப் பாடகம் காட்டினர் யாம் அவர்க்கு இரும்பை ஆடகம் ஆக்கினெம் ஈயத்தை
நருக்கி வெள்ளிய து ஆக உருக்குவோம் நமது வித்தைக்கு அமுதே அருமையே –42-

(இ – ள்.) திரு – அழகிய, பொன்பாவைக்கு – பொற்பதுமை செய்தற்கு (அழகிய திருமகளுக்கு),
கஞ்சம் பொன் ஆக்கிய – வெண்கலத்தைப் பொன்னாகச் செய்து கொடுத்த (பொற்றாமரைமலரைச் செய்துகொடுத்த),
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
சுத்த காயா மலர் என – தூயதாகிய காயாம்பூப்போல,
உரும் பொற்பு ஆன – வடிவழகு பொலிவுபெற்ற,
திருஅரங்கேசனார் -,
ஊரகத்து நின்றார் – ஊரினிடத்தில் நின்றார் (திருவூரகமென்னுந் திருப்பதியில் நின்றதிருக்கோலமா யெழுந்தருளியிருந்தார்);
சென்று இறைஞ்சினோம் – (அங்குச்) சென்று (அவரை) வணங்கினோம்; (அப்பொழுது அவர்),
இருப்பு பாடகம் காட்டினர் – இரும்பினாலாகியதொரு பாடகமென்னுங் காலணியைக் காண்பித்தார்
(பாடகமென்னுந்திருப்பதியைத் தாம்வீற்றிருக்குமிடமாகத் தெரிவித்தார்);
யாம் -, அவர்க்கு -, இரும்பை ஆடகம் ஆக்கினெம் – இரும்பைப் பொன்னாகச்செய்து தந்தோம்
[பெரிய (காளியனென்னும்பாம்பின்) படத்தை நடிக்குமிடமாகச் செய்தோம்];
ஈயத்தை நருக்கி -, வெள்ளியது ஆக – வெள்ளியாக (வெண்மையையுடையதாக), உருக்குவேம் -;
(இதுவெல்லாம் அருமையன்று) ; நமது வித்தைக்கு -,
அமுதே – உணவு (முத்தியுலகம்),
அருமையே – கிடைத்தற்கரிய தாமே? (அரியதன்று என்பதாம்); (எ – று.)

இரசவாதிகள் தமது திறமையை ஒருதலைவனுக்கு எடுத்துக்கூறுவதாகச் செய்யுள்செய்தல்,
சித்து என்னும் உறுப்பின் இலக்கணமாம்; இரசவாதமாவது – ஒருலோஹத்தை மற்றொருலோஹமாக மாற்றுதல்.

சித்தரென்பவர் – இரும்புமுதலிய தாழ்வான லோஹங்களைப் பொன் முதலிய உயர்ந்த லோஹங்களாகச் செய்யும் வல்லமையுள்ளவர்.
எம்பெரு மானைச்சரணமடைந்தோர் தாம் அப்பிரானையடைதற்குமுன்பிருந்த தாழ்வான நிலையினின்று மாறி
உயர்ச்சிபெறுவரென்பது, இங்குக் கருதத்தக்கது. இச்செய்யுள் – சிலேடையாக மற்றோர்பொருள் தருகின்ற நயம் பாராட்டத் தக்கது.
அடுத்த செய்யுளிலும் இங்ஙனமே காண்க.

கஞ்சம் – வெண்கலத்தைக் குறிக்கும்போது காம்ஸ்யமென்னும் வட மொழியின் சிதைவு.
சித்தர் – சித்திபெற்றவர். ஊரகம் – உலகளந்தபெருமாள் கோவில்.
பாடகம் – பாண்டவதூதர் சந்நிதி. பாடகம் – காலணியைக் குறிக்கும்போது பாதகடகமென்னும் வடசொல்லின் மரூஉ.
ஆடகம் – பொன்னைக் குறிக்கும்போது ஹாடகமென்னும் வடமொழியின் விகாரம்; நால்வகைப் பொன்களில் ஒன்று.
உள்ளுறை பொருளில் ஆடு அகமென வினைத் தொகை. வித்தை – வித்யை.

இது, முப்பத்தேழாங் கவி போன்ற கட்டளைக்கலிப்பா.

—————

(42)
(இதுவும் அது.)

43-அரும்பித் தளை அவிழ் நாள் மாலை மார்பன் அரங்கன் எங்கள்
பெரும் பித்து அளையும் பிறப்பு அறுத்து ஆண்ட பிரான் சித்தரேம்
தரும்பித்தளையும் தாராவும் பொன் ஆக்கித் தருவெம் அப்பா
திரும்பித்து அளையினும் நெய் பால் அமுதினும் சிந்தனையே –43-

(இ – ள்.) அரும்பி – (முன்னர்) அரும்பாகி,
தளை அவிழ் – (பின்பு) முறுக்குவிரிந்து மலர்ந்த,
நாள் மாலை – அன்றலர்ந்த பூமாலையையணிந்த,
மார்பன் – திருமார்பையுடையவனும்,
எங்கள் – எங்களது,
பெரும் பித்து அளையும் பிறப்பு – பெருமயக்கம் பொருந்திய பிறவியை,
அறுத்து – போக்கி,
ஆண்ட – அடிமைகொண்ட,
பிரான் – தலைவனுமாகிய அரங்கநாதனது,
சித்தரேம் – சித்தர்கள் (யாங்கள்);
தரும் – தரப்பட்ட,
பித்தளையும் – பித்தளையையும்,
[தரும் பித்தளையும் – (திருமாலுக்குப்) பித்துத்தருகின்ற திருமகளையும்,]
தராவும் – தராவையும் (பூமிதேவியையும்),
பொன் ஆக்கி தருவெம் – பொன்னாகச்செய்துகொடுப்போம்;
அப்பா -! (அங்ஙனமாகவும் எங்களுக்கு),
சிந்தனை – மனம்,
அளையினும் – வெண்ணையிலும்,
நெய் – நெய்யிலும்,
பால் அமுதினும் – பால்தயிர்களிலும், திரும்பித்து -; (எ – று.)

இச்செய்யுளில், சிலேடை யென்னும் பொருளணியோடு, திரிபு என்னுஞ் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க.
தரா – ஒருவகை லோஹம். பொன்னென்பது – வெண்பொன் கரும்பொன் முதலாக எல்லா வுலோகங்களுக்கும் பொதுப்பெயராகவும் வருதலால்,
பித்தளையையுந் தராவையும் பொன்னாக்குவே மென்றார்.
தரும்பித்தள் – பித்துத்தருமவள்; “பித்தர் பனிமலர் மேற்பாவைக்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
திருமகனைப் பொன்னாக்குதல் – பொன்னென்னும் பெயருடையவ ளாக்கல்;
நிலமகளைப் பொன்னாக்குதல் – பொன்னை யுடையவளாக (வசுமதியாக)ச் செய்தல்.
தரா – ஆகாரவீற்றுவடமொழி ஈறுதிரியாது நின்றது. அப்பா – இங்கே சித்தர்கள் வழங்குவதோர் சொல்விழுக்காடு;
“தெரிசித்து நேசமுடன் பூசித்துந் திரிகின்ற சித்த ரப்பா” என்றார் இரட்டையரும்.
திரும்பிற் றென்பது, எதுகைநோக்கி மரூஉவாய் நின்றது. இச்செய்யுளில் எங்கட்கு வெண்ணெய் முதலிய சிறு பொருள்களைக்
கொடுப்பீராயின் மிகப்பெரிய தொழில்களைச் செய்து தருவோ மென்று தோன்றுதல் காண்க.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

44-சிந்திக்கத் தித்திக்கும் செவ்வாய் துவர்த் துப்பு ஆம்
புந்திக்குளே இன்புளி மேவும் நம் தம்
கரு அரங்கம் தைத்து அழலும் காவிரியின் ஊடே
திருவரங்கத்தே வளரும் தேன் –44-

(இ – ள்.) காவிரியின் ஊடு – திருக்காவேரியின் நடுவில்,
திருவரங்கத்து -, வளரும் – திருக்கண்வளர்ந்தருளுகின்ற,
தேன் – (இன்பஞ்செய்தலால்) தேன்போன்ற கடவுள், –
சிந்திக்க – மனத்தினால் நினைத்துத் தியாநஞ் செய்யும் பொழுது,
தித்திக்கும் – இனித்திருக்கும்;
செவ் வாய் துவர் துப்புஆம் – மிகச் சிவந்த பவழம் போன்ற வாயோடு கூடியிருக்கும்;
புந்திக்குளே – அறிவினுள்ளே,
இன்பு உளி – நினைக்க நினைக்க இன்பந்தந்து,
மேவும் – பொருந்தும்;
நந்தம் – நமது,
கரு அரங்கம் – கர்ப்பமாகிய சிறு வீட்டை,
கைத்து அழலும் – கோபித்து ஒழிக்கும்; (எ – று.)

திருவரங்கத்தே வளரும் தேன் – ஸ்ரீரங்கத்தில் ஆதிசேஷசயனத்தில் யோகநித்திரை செய்தருளுகின்ற திருவரங்கநாத னென்க.
உலகத்திலுள்ள தேன் இன்சுவை யொன்றையே உடையது;
திருவரங்கத்தே வளருந் தேன் தித்திப்பு முதலிய அறுவகைச் சுவையையு முடைய தென வியந்தவாறு,
எம்பெருமான் பேரின்ப மயமானவ னாதலின், அவனைத் தேன் என உருவகஞ் செய்தனர்.

உளி – உள்ளி, இதனுள் தித்திப்பு, துவர்ப்பு, உப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு என்னும் அறுசுவையுஞ் சொல்லால்
அடுக்கி வந்தது காண்க; இது, அரதனமாலையணி; இதனை வடநூலார் ரத்நாவளி யென்பர்.
பின்னிரண்டடி – திரிபு என்னுஞ் சொல்லணியாம்.
இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

இது, நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

—————–

45- தேன் நந்து சோலை அரங்கேசர் சேவடி மேல் விசயன்
தான் அந்த நாளையில் சாத்திய மாலையும் தான் விலக்கும்
வானம் தரு கங்கை நல் நீரும் சென்னியில் வைக்கப் பெற்ற
ஆனந்தம் தான் அல்லலோ முக்கணான் மன்றுள் ஆடுவதே –45–

(இ – ள்.) தேன் நந்து சோலை – தேன் மிக்குப்பெருகுகின்ற பூஞ்சோலைகளையுடைய,
அரங்கேசர் – ரங்கநாதரது,
சேவடிமேல் – சிவந்த திருவடிகளின்மேல்,
விசயன் – அருச்சுனன்,
அந்த நாளையில் – பதினான்காநாட்பாரதப்போரில்,
சாத்திய – அருச்சனைசெய்த,
மாலையும் – பூமாலையையும்,
தாள் விளக்கும் – (உலகமளந்தகாலத்துப் பிரமன் தனது கைக் கமண்டல தீர்த்தத்தால்) ஸ்ரீபாதத்தை விளக்கிச்சேர்த்த,
வானம் தரும் கங்கை நல்நீரும் – ஆகாசகங்கையின் புண்ணிய தீர்த்தத்தையும்,
சென்னியில் வைக்கப்பெற்ற – (தனது) முடியில் தரிக்கப்பெற்ற,
ஆனந்தம் தான் அல்லவோ – பெருமகிழ்ச்சியன்றோ?
முக்கணான் – திரிநேத்திரனாகிய பரமசிவன்,
மன்றுள் – சபையில்,
ஆடுவது – நடநஞ்செய்வது; (எ – று.)

சிவபெருமான் ஆனந்ததாண்டவஞ் செய்வதற்குக் கவி இவ்வாறு ஒரு காரணங் கற்பித்துக் கூறினார்; ஏதுத் தற்குறிப்பேற்றவணி;
இதனால், சிவபெருமான் பரமபாகவதர்களுள் ஒருவனென்பதும்,
பகவத் பிரசாதம் அவனடியார்க்கு மகிழ்ச்சியை விளைக்குமென்பதும் போதரும்.

இங்கு எம்பெருமானது திருவடியின் சம்பந்தமான பத்திரபுஷ்பங்களும் தீர்த்தமும் சிவனைப் பரிசுத்தனாக்கிக்
களிப்புடன் தாண்டவமாடச் செய்தன வென்க.

விசயன் – மிக்கஜயமுடையவன். பாரதயுத்தத்திற் பதினான்கா நாளில் அருச்சுனன் ஒரு அஸ்திரத்தைப் பெறவேண்டிச்
சிவனை அருச்சிக்க விரும்ப, கண்ணன் அவனிளைப்பை ஆற்றுகைக்காக ‘மலர்களை நமது காலிலே இடு’ என்று அருளிச்செய்ய,
அவனும் கண்ணனது திருவடிகளிலே இட்டு அருச்சிக்க, அன்றிரவிற் பரமசிவன் அம்மாலையைத் தலையில் தரித்துக்கொண்டு
வந்து தோன்றி அஸ்திரத்தைக் கொடுத்துப்போயின னென்க.
பிரமன் திரிவிக்கிரமாவதார காலத்தில் தனது உலகத்துச் சென்ற ஸ்ரீ பாதத்தில் தீர்த்தஞ் சேர்த்த நீர்
சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து பின்னர்ப் பகீரதன் கொணர்ந்தபொழுது உருத்திரமூர்த்தியாற்சிரசில் வகிக்கப்பட்டதனால்,
“தாள்விளக்கும் வானந்தருங் கங்கை நன்னீர்” எனப்பட்டது.

“தீர்த்த னுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ்,
சேர்த்தி யவையே சிவன்முடிமேற் றான்கண்டு,
பார்த்தன் றெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை,
பேர்த்து மொருவராற் பேசக் கிடந்ததே,”

“குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறை கொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினா,
னண்டத்தான் சேவடியை யாங்கு” என்றார் பெரியார்களும்.

இது நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————–

தலைமகனது உரு வெளிப்பாடு கண்ட தளை மகன் இரங்குதல்
46-ஆடும் பட நா கணை மேல் அணையும் அமலன் கமலத்தவனும் சிவனும்
நாடும் திருமால் துயில் கோயிலின் வாய் நறைவார் பொழிலூடு உறைவார் அளகக்
காடும் குழையைச் சாடும் குவளைக் கண்ணும் குதலைப் பண்ணும் கரியின்
கோடும் தரளத் தோடும் புருவக் கோதண்டமுமே மூதண்டமுமே –46-

(இ – ள்.) ஆடும் – எடுத்தாடுகின்ற,
படம் – படங்களையுடைய,
நாகணை மேல் – சேஷசயனத்தின்மேல்,
அணையும் – பள்ளிகொண்டருளுகின்ற,
அமலன் – குற்றமற்றவனாகிய, –
கமலத்தவனும் – பிரமனும், சிவனும் -,
நாடும் – (எந்நாளும்) ஆராய்ந்து வணங்குகின்ற,
திருமால் – எம்பெருமான்,
துயில் – திருக்கண்வளர்கின்ற,
கோயிலின்வாய் – திருவரங்கம் பெரியகோயிலில்,
நறைவார் பொழிலூடு – தேனொழுகுகின்ற சோலையினிடத்தில்,
உறைவார் – தங்குகின்ற மாதரது,
அளகம் காடும் – கூந்தற்கற்றையும்,
குழையை சாடும் – காதை மோதுகின்ற,
குவளை கண்ணும் – கருங்குவளைமலர்போன்ற கண்களும்,
குதலை பண்ணும் – இசைப்பாட்டுப்போலினிய மழலைச்சொல்லும்,
கரியின் கோடும் – யானைத்தந்தம்போன்ற தனங்களும்,
தரளம் தோடும் – முத்தினாலாகிய தோடென்னுங் காதணியும்,
புருவம் கோதண்டமுமே – வில்லுப்போன்ற (வளைந்த) புருவங்களுமாகிய இவையே,
மூதண்டமும் – பழமையான அண்டகோளமுழுவதும் (காணப்படுகின்றன); (எ – று.)

இது, தான் முன்னர்ப் பொழிலிடத்துக் கண்டு காதலித்த தலைமகளது மேனியின் எழிலை உருவெளித்தோற்றத்திலே
கண்ட தலைமகன் இரங்கிக் கூறியது. ஒரு பொருளினிடத்து ஆசையினால் இடைவிடாது கருத்தைச் செலுத்த,
அந்தப் பாவனையின் ஊற்றத்தால் அப்பொருள் கண்ணுக்கு எதிரில் தோன்றியதுபோலக் காணப்படுதல் இயல்பு.
தலைவனது கண்பார்வை செல்லுமிடமெங்கும் தன்னால் விரும்பப்பட்ட தலைமகளது அவயவங்களே தோன்றுகின்றன வென்க.

நாகணை – நாகவணை யென்பதன் தொகுத்தல் விகாரம். அமலனாகிய திருமா லென்க.
அளகம் – கடைகுழன்ற கூந்தல்; மிகுதிபற்றி, காடென்றார். குழை – காதிற்கு ஆகுபெயர்.
குழையைச் சாடும் குவளைக்கண் – காதளவும் நீண்ட கண் என்றபடி,
குதலை – நிரம்பா மென்சொல். தரளத்தோடு மென்பதற்கு – முத்துப்போன்ற பற்களுடனே யென்றுமாம்.

இது, ஐந்தாங்கவி போன்ற எண்சீராசிரியவிருத்தம்.

————-

கைக்கிளை
47-அண்டம் முழுது உண்டவர் உமிழ்ந்தவர் இடந்தவர் அளந்தவர் வளர்ந்து அருளுமா
சண்ட பண ஐந்தலை அனந்த சயனம் திகழ் தரும் திரு அரங்கர் வரை மேல்
கண்டது ஒரு கொம்பு அதில் இரண்டு மகரங்கள் ஒரு கஞ்சம் இரு வெஞ்சிலை மணம்
கொண்டது ஒரு கொண்டல் இரு கெண்டை ஒரு தொண்டை இரு கும்பம் ஒரு செம்பணிலமே–47-

(இ – ள்.) அண்டம் முழுது – எல்லா வண்டங்களையும்,
உண்டவர் – (பிரளயகாலத்தில்) திருவயிற்றிற் கொண்டவரும்,
உமிழ்ந்தவர் – (பிரளயம் நீங்கியபின்பு மீண்டும்) வெளிப்படுத்தியவரும்,
இடந்தவர் – (வராகாவதாரத்திற்) கோட்டாற் குத்தியெடுத்தவரும்,
அளந்தவர் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளியவருமாகிய,
மா – பெரிய,
சண்டம் – கொடிய,
பணம் – படங்களையுடைய,
ஐந் தலை – ஐந்துமுடிகளையுடைய,
அனந்த சயனம் – திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்,
வளர்ந்தருளும் – திருக்கண் வளர்ந்தருளுகின்ற,
திகழ்தரும் – விளங்குகின்ற,
திருவரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
வரைமேல் – மலையின்மேல்,
கண்டது – காணப்பட்டதாகிய,
ஒரு கொம்பு – இளவஞ்சிக்கொம்பொன்று (உண்டு); அதில் -,
இரண்டு மகரங்கள் – இரண்டுமுதலைகளும்,
ஒரு கஞ்சம் – ஒருதாமரைமலரும்,
இருவெம்சிலை – இரண்டு வளைந்த விற்களும்,
மணம் கொண்டது – வாசனைகொண்டதாகிய,
ஒரு கொண்டல் – ஒரு நீர்கொண்ட மேகமும்,
இரு கெண்டை – இரண்டு கெண்டைமீன்களும்,
ஒரு தொண்டை – ஒரு கொவ்வைக்கனியும்,
இரு கும்பம் – இரண்டு குடங்களும்,
ஒரு செம் பணிலம் – அழகியதொரு சங்கமும், (உண்டு); (எ – று.)

இது, தலைவன் தலைவியைக்கண்டு அவளது எழிலை வியந்துரைத்தது.

அளந்தவராகிய அரங்கரென்க. மலையினிடத்தே காணப்பட்டாளொரு ஒல்கியொசிகின்ற தலைவியது
மேனியிடத்தே இரண்டு மகரகுண்டலங்களும், ஒப்பற்ற முகமும், இரண்டுபுருவங்களும்,
பூவின்மணங்கொண்டதொரு கூந்தலும், இரண்டுகண்களும், ஒப்பற்ற அதரமும், இரண்டு தனங்களும்,
ஒப்பற்ற கழுத்தும் உள்ளனவென்பதை மறைத்து உவமைப்பொருளாக ஆரோபித்துக் கூறினமையின், இது உருவகவுயர்வுநவிற்சியணி.

ஒருகொம்பு – தலைமகளின் உருவத்துக்கும், இரண்டு மகரங்கள் – இரண்டு குண்டங்களுக்கும், கஞ்சம் – முகத்துக்கும்,
இருவெஞ்சிலை – இரண்டு புருவங்களுக்கும்,
மணங்கொண்டதொரு கொண்டல் – இயற்கை நறுமணம் செயற்கை நறுமணங்களையுடைய கூந்தலுக்கும்,
இருகெண்டை – இரண்டு கண்களுக்கும், தொண்டை – அதரத்திற்கும், இருகும்பம் – இரண்டு தனங்களுக்கும்,
செம்பணிலம் – சிவந்தகழுத்துக்கும் உவமையாதல் காண்க.
இதில் திருவரங்கராகிய மரகதக்குன்றின்பக்கல் இத்தகைய அவயவச்சிறப்புக்களையுடைய திருமகளாகிய
ஒருபூங்கொம்பு காணப்பட்ட தென்னும் பொருளும் உள்ளுறையாய்த் தோன்றுமாறு அறிக.
புணர்ச்சி குறிஞ்சி நிலத்துக்கண்ணதாகலின், “அரங்கர்வரைமேற் கண்ட தொரு கொம்பு” என்றார்.

இது, ஆறாங்கவி போன்ற எழுசீராசிரியச்சந்தவிருத்தம்.

——————-

தலைவி இரங்கல்
48-செம்பொன் அரங்கத் தரங்க நீர்ச் சீதள சந்திர வாவி சூழ்
கம்புளுடன் பயில் நாரைகாள் காதலை என் சொலி ஆறுவேன்
வெம்பனி வந்தது வந்த பின் வேனிலும் வந்தது வேனில் போய்
பைம்புயல் வந்தது சென்ற நம் பாதகர் வந்திலர் காணுமே –48–

(இ – ள்.) செம் பொன் – சிவந்த பொன்மயமாகிய,
அரங்கம் – திருவரங்கத்திலுள்ள,
தரங்கம் நீர் – அலைகளோடு கூடிய நீரையுடைய,
சீதள சந்திர வாவி – குளிர்ந்த சந்திரபுஷ்கரிணியில்,
சூழ் – திரண்டுள்ள,
கம்புகளுடன் – நீர்ப்பறவைகளுடன்,
பயில் – பழகுகின்ற,
நாரைகாள் – நாரைகளே!
காதலை – (என்) காமநோயை,
என் சொலி – என்னவென்று சொல்லி,
ஆறுவேன் – தணிவேன்?
வெம் பனி – கொடிய பனிக்காலம்,
வந்தது – வந்தபின் – (அது) கழிந்தபின்பு,
வேனிலும் – வெயிற்காலமும்,வந்தது –
வேனில் போய் – வெயிற்காலங் கழிந்தபின்,
பைம் புயல் – பசிய கார்காலம், வந்தது-; (அங்ஙனம் வந்தபின்பும்),
சென்ற – விட்டுப்பிரிந்துபோன,
நம் – நமது,
பாதகர் -,
வந்திலர் – வந்தாரில்லை; (எ – று.)

இது, பனிக்காலத்தில் வருவதாகக் காலங்குறித்துச்சென்ற தலைமகன் கார்காலத்தளவும் வாராமையாற்
பிரிவாற்றாத நெய்தனிலத்துத் தலைமகள் வருந்தி அந்நிலத்துப் பறவைகளை நோக்கி இரங்கிக் கூறியது.
இப்படிப் பட்ட கார்காலத்தில் யான் எங்ஙனம் தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்வது? எனத் தலைவி இரங்கியவாறு.

கரையிற் சந்திரன் நின்று தவஞ்செய்து தன்குறைதீர்ந்ததனால், சந்திர புஷ்கரிணி யெனப் பெயர்.
வாவி – வாபீ என்னும் வடமொழியின் சிதைவு. பனி, வேனில், புயல் என்பன – அவ்வக்காலத்துக்கு ஆகுபெயர்.
மார்கழியுந் தையுமாகிய முன்பனிக்காலமும் மாசியும் பங்குனியுமாகிய பின்பனிக்காலமும் அடங்க ‘பனி’ என்றும்,
சித்திரையும் வைகாசியுமாகிய இளவேனிற் காலமும் ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலமும்
அடங்க “வேனில்” என்றும் பொதுவாகக்கூறினார். பாதகர் – தீவினையுடையவர்;
இரக்கஞ்சிறிது மின்றிப் பிரிந்துபோனதேயுமன்றிக் குறியிட்டகாலத்தே மீண்டும்வாராமை பற்றி, பாதகரென்றார்;
இனி, வருத்தமுறுத்துபவரென்றும் பொருள்கொள்ளலாம். காணும் – முன்னிலைப்பன்மையசைச்சொல்.

இது, எல்லாச்சீருங் கூவிளச்சீர்களாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————-

சம்பிரதம் –
49-காணாத புதுமை பல காட்டுவன் கட் செவிகள் எட்டையும் எடுத்து ஆட்டுவன்
கடல் பருகுவன் பெரிய ககன வரையைச் சிறிய சுடுகினில் அடைத்து வைப்பன்
வீண் ஆரவாரம் மூதண்டம் உறவிளைவிப்பன் இரவு பகல் மாறாடுவன்
விண்ணையும் மறைப்பன் எழு மண்ணையும் எடுப்பன் இவை விளையாடும் வித்தை அன்றால்
நீள் ராகணைப் பள்ளியில் திரு அரங்கத்து நெடிது ஊழி துயிலும் பிரான்
நெற்றிக் கண் ஆனவனை நான் முகனை வாசவனை நிமிரும் இரு சுடரை முதலாச்
சேண் நாடார் யாவரையும் அடிமை கொண்டு அவரவர் சிரத்தில் பொறித்து விட்ட
திருச் சக்கரப் பொறி இலாத ஒரு கடவுளைத் தேடி இனி முன் விடுவனே –49-

(இ – ள்.) காணாத – (இதுவரையிலுங்) கண்டிராத,
புதுமை பல – பல அற்புதச்செய்கைகளை,
காட்டுவன் – காண்பிப்பேன்;
கட்செவிகள் எட்டையும் – அஷ்டநாகங்களையும்,
எடுத்து ஆட்டுவன் – படமெடுத்து ஆடச்செய் வேன்;
கடல் – ஏழுகடல்களையும்,
பருகுவன் – குடிப்பேன்;
பெரிய -, கனக வரையை – பொன்மயமான மேருமலையை, சிறிய -,
கடுகினில் – கடுகினுள்ளே,
அடைத்து வைப்பன் – அடங்கும்படி சேர்த்துவைப்பேன்;
வீண் ஆரவாரம் – வீணான பேரொலியை,
முது அண்டம் உற – பழைய அண்டங்களிலெல்லாம் பொருந்தும்படி,
விளைவிப்பன் – உண்டாக்குவேன்;
இரவு பகல் மாறாடுவன் – இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாறச்செய்வேன்;
விண்ணையும் – ஆகாயமுழுவதையும்,
மறைப்பன் – மறைப்பேன்;
எழு மண்ணையும் – ஏழு உலகங்களையும்,
எடுப்பன் – எடுப்பேன்;
இவை – இவைகளெல்லாம்,
விளையாடும் வித்தை அன்று – விளையாட்டாகச்செய்யுஞ் சிறந்ததொரு ஜாலவித்தையல்ல; இனி -, திருவரங்கத்து -,
நீள் நாகணை பள்ளியில் – நீண்ட ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தையின்மேல்,
நெடிது ஊழி – நெடியபலஊழிகாலமாய்,
துயிலும் – திருக்கண்வளர்கின்ற,
பிரான் – எம்பெருமான்,
நெறிக்கண்ஆனவனை – நெற்றியில் நெருப்புக்கண்ணையுடைய சிவனையும்,
நான்முகனை – பிரமனையும்,
வாசவனை – இந்திரனையும்,
நிமிரும் – விளங்குகின்ற,
இரு சுடரை – சந்திர சூரியர்களையும்,
முதலா – முதலான,
சேணாடர் யாவரையும் – தேவர்களனைவரையும்,
அடிமை கொண்டு – (தமக்கு) அடிமையாகக் கொண்டு,
அவர் அவர் சிரத்தில் – அவ்வத்தேவர்களது தலைகளில்,
பொறித்துவிட்ட – அடையாளஞ்செய்துவைத்த,
திரு சக்கரம் பொறி – அழகிய சக்கரமுத்திரை,
இலாத – உடைத்தாகாத,
ஒரு கடவுளை – ஒருதெய்வத்தை,
தேடி – தேடிக்கொண்டுவந்து,
முன் விடுவன் – முன்னேவிடுவேவன். (எ – று.)

இந்திரஜாலம் முதலிய மாயவித்தை வல்லவர் தமது சிறப்பைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யுள் செய்வது,
சம்பிரதம் என்னும் உறுப்பாம்.

என்றது, எம்பெருமானது சக்கரப்பொறியில்லாத ஒரு தேவதாந்தரம் எவ்வுலகிலு மில்லையாதலால்,
அப்படிப்பட்ட தேவரைத் தேடிக்கொணர்தல் அருமை யென்பது தோன்ற, இனித் தேடிமுன்விடுவேனென
அருமை அறிவித்ததெனக் கொள்க. இனி, அங்ஙனம் திருமாலினது சக்கரப் பொறி யில்லாத தெய்வத்தை
முன்னே துறந்துவிடுவே னென்னும் பொருளும் இங்குத் தோன்றும்.

கட்செவி – கண்களையே காதுகளாகவும் உடையது; “சக்ஷுஸ்ர வா:” என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு.
அஷ்டமகா நாகங்க ளாவன – வாசுகி, அநந்தன், தக்ஷகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன்;
இவை, முறையே கிழக்குமுதலிய எட்டுத் திக்குக்களிலும் நின்று ஆதிசேஷனுக்குத் துணையாய்ப் பூமியைத் தாங்குவன.
எடுத்து – தூக்கியென்றுமாம். ஆரவாரம் – ஆரவாராவமென்ற வடமொழியின் சிதைவு. ஊழி – யுகம்.
சேணாடர் – உயர்ந்த சுவர்க்கலோகத்தி லுள்ளவர். திருச்சக்கரப்பொறி – ஸ்ரீசக்கராங்கம். சம்பிரதம் – ஜாலவித்தை.

இது, பெரும்பாலும் முதலைந்துசீர்களுங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் நின்ற பதினான்குசீராசிரியவிருத்தம்.

——–

இடம் அணித்து என்றல்
50-முன்னம் ஏழ் புரவி ஆர் இரவி காய் வெயிலினால்
முத்து அரும்பிய கலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னம் ஓர் காவதம் போது மேல்
அகலும் இப்பாபாலை அப்பால் அரைக் காவதம்
என்னை ஆளுடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மது கரம்
பூ விரிந்து உறையும் அக்காவிரித் துறையுமே –50-

(இ – ள்.) முன்னம் – எதிரில்,
ஏழ் புரவி ஆர் இரவி – ஏழுகுதிரைகள் பூண்ட (தேரினையுடைய) சூரியன்,
காய் – எறிக்கின்ற,
வெயிலினால் -, முத்து அரும்பிய – முத்துப்போலும் வேர்வை பொடித்த,
கலா முழு மதி – கலைகள் நிறைந்த பூர்ணசந்திரன்போன்ற,
திரு முகத்து – அழகிய முகத்தையுடைய,
அன்னமே – (நடையால்) அன்னம்போன்றவளே! –
இன்னம் ஓர்காவதம் – இன்னமொரு காததூரவழி,
போதும் ஏல் – போவோமாயின்,
இ பாலை அகலும் – இந்தப்பாலைநிலம் நீங்கும்;
அப்பால் – அதுநீங்கினபின்பு,
என்னை ஆளுடையவன் – என்னை அடிமையாகக் கொண்ட எம்பெருமான்,
துயில் – அறிதுயிலமர்கின்ற,
அரா அமளியும் – சர்ப்பசயனமும்,
இலகு பொன் கோயிலும் – விளங்குகின்ற பொன்மயமான திருக்கோயிலும்,
இந்துவின் பொய்கையும் – சந்திரபுஷ்கரிணியும்,
புன்னை வாய் நீழலும் – புன்னைமரத்தினது வாய்ப்பாகிய நிழலும்,
புரிசையும் – மதில்களும்,
மதுகரம் – வண்டுகள்,
பூ விரித்து உறையும் – மலர்களை விரித்துப் படிந்து தேனுண்ணுகின்ற,
அ காவிரி துறையும் – அந்தக் காவேரிதீரமும்,
அரைகாவதம் – அரைக்காததூரமே; (எ – று.)

எனவே, அவ்வளவும் நீ தளராமல் வரவேண்டு மென்றபடி. இது, தலைமகளை உடன்கொண்டுபோகின்ற தலைமகன்,
அவள் இடைவழியிற் பாலைநிலத்திற் செல்லும்போது வெயிலால் மிகவும் வருந்தி இளைப்புற்றது நோக்கி,
அவளுக்கு வழிநடையிளைப்புத் தோன்றாதிருத்தற்பொருட்டு அவளைத் தான்போகுமிடத்தின் அணிமை கூறி ஆற்றியது.
“கொடுங்கடஞ்சூழ் ந்த குழைமுகமாதர்க்குத், தடங்கிடங்கு சூழ் தன்னகர் காட்டியது” என்ற கொளுவையுங் காண்க.

தலைமகனும் தலைமகளும் தாம் விட்டுப்பிரியாது ஒருவர்க்கொருவர் தனிநிழலாயிருக்கையாலே இவர்களுக்குக்
கொடிய இந்தப்பாலைநிலத்தின் கொடுமையா லுண்டாகும் இளைப்பு இல்லையே யாகிலும் பொழுது போக்குக்காகத்
தலைவன் தலைவியை நோக்கி இங்ஙனங் கூறின தென்றலு முண்டு. நீர்வளமுள்ள மருதநிலத்து வாழும்
அன்னப்பறவை போன்ற இத்தலைவிக்கு இந்தக் கொடியபாலை வருத்தத்தை விளைக்குமென்பது தோன்ற,
“இரவிகாய் வெயிலினான் முத்தரும்பிய கலாமுழுமதித் திருமுக த்தன்னம்” என்றான்;
அப்பால் அரைக்காவதம் சென்றவாறே அங்கு அன்னத்துக்கு உவப்பாகிய சந்திரபுஷ்கரிணி காவிரியாற்றுத்துறை
முதலியன உளவாகக் கூறியதுங் காண்க. இவ்வாறு கூறியதனால், பாலைநிலத்தால் வந்த வெம்மையையும் போக்கி
நமக்கு ரக்ஷகமு மான தேசங்காண் அது;
இந்தப் பாலைநிலமேயன்றி இன்னமும் சிலபாலைவனமும் கடக்கலா மென்பது தொனிக்குமாறு காண்க.

காவிரித்துறையும் புரிசையும் கோயிலும் புன்னைநீழலும் இந்துவின் பொய்கையும் அராவமளியுந் தோன்றுமென்று முறைப்படுத்தி யுரைக்க;
பாடக்ரமத்தினும் அர்த்தக்ரமம் வலியுடைத்தென்பது நியாயமாதலால். புன்னைமரம் சந்திரபுஷ்கரிணியின் கரையிலுள்ளது;
இந்தவிருக்ஷத்தைப்பற்றி ஸ்ரீபட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் மிகவும் பாராட்டி அருளிச்செய்திருத்தல் காண்க.
சூரியனது தேர்க்குதிரைகள் ஏழென்னுந்தொகையின வென்பாரும், ஏழெனப் பெயர்பெற்ற குதிரையொன்றே யென்பாரும்,
எழு குதிரைகளுண்டு அவற்றுள் ஏழெனப்பெயர்பெற்ற தொன் றென்பாரும் உளர். முன்னங்காய் வெயில் – எதிர்வெயில்.

இது, எல்லாச்சீரும் விளச்சீர்களாகிய எண்சீராசிரியவிருத்தம்.

————-

தோழி தலைவனது இரவுக் குறி விலக்கல்
51-துறை மதியாமல் இக்கான்யாறு நீந்தி சுரம் கடத்தல்
நிறை மதி யாளர்க்கு ஒழுக்கம் அன்றால் நெடுமால் அரங்கத்து
இறை மதியா வரும் ஆரா அமிர்து அன்ன இந்த நுதல்
குறை மதியாள் பொருட்டால் கங்குல் வாரல் எம் கொற்றவனே –51-

(இ – ள்.) எம் கொற்றவனே – எமது தலைவனே! –
துறை மதியாமல் – செல்லும் வழியை நன்றாக ஆராயாமல்,
இ கான் யாறு நீந்தி – இக்காட்டாற்றை நீந்திக் கடந்து,
சுரம் கடத்தல் – கொடிய காடுகளைத் தாண்டிவருதல்,
நிறை மதியாளர்க்கு – நிறைந்த அறிவினை யாளுந்தன்மையுடையார்க்கு,
ஒழுக்கம் அன்று – நல்லொழுக்கமன்று;
ஆல் – ஆகையால், –
அரங்கத்து இறை – அரங்கநாதராகிய,
நெடு மால் – நீண்ட திருமால்,
மதியா – (திருப்பாற்கடலைத் தேவர்களோடுங்) கடையாமலே,
வரும் – தோன்றின,
ஆரா அமிர்து அன்ன – தெவிட்டாத அமிருதத்தை யொத்த,
இந்து நுதல் குறை மதியாள்பொருட்டால் – பிறைச்சந்திரன்போன்ற நெற்றியையுடைய இவள் நிமித்தமாக,
கங்குல் – இராத்திரியில்,
வாரல் – வருதலை (இனி) ஒழிவாயாக. (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளது தோழியினுதவியைக்கொண்டு தலைமகளைப் பகலிலும் இரவிலும்
களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே அத்தலைமகனையும் தலைமகளையும்
சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு, அவன் வரும் நெறியின் அருமையையும்,
அதுகருதித் தாங்கள் அஞ்சுதலையுங் குறித்து “நீ எந்தஇடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய
தேகபலம் மனோபலம் தந்திரம் முதலியவற்றை யுடையாயாயினும், நினது வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்று மாதலால்,
இனி இவ்விருளிடை இங்ஙனம் வரற்பாலையல்லை” என்று விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள்துறை.
இது, “ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி” எனப்படும். (ஆறு – வழி, கிளவி. பேச்சு.)
தலைவன் வரும் வழி மிகவும்இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவதென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன்பயன் – வெளிப்படையாக வந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
ஐவகை நிலங்களுள் மலையும் மலைசார்ந்தஇடமும் குறிஞ்சியாமென்பதும், “புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி
புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குரிய பொருளென்பதும், “குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்றபடி
பெரும் பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள் நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய காலமென்பதும் அறியத்தக்கன.
“உள்ளமஞ்சாய் வலியாய் வலியார்க்குமு பாயம்வல்லாய்,
கள்ள மஞ்சாயுதங் கைவருமாயினுங் கங்குலினில்,
வள்ள மஞ்சார்பொழில் வேங்கடக்குன்றினில் வீழருவிப்,
பள்ளமஞ்சாரல் வழிவரில் வாடு மிப்பாவையுமே” என்ற திருவேங்கடத்தந்தாதியையும் காண்க.

துறை மதித்தல் – இது செல்லுந் துறை, இது செல்ல வொண்ணாத் துறையென ஆராய்தல்.
திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினின்று தோன்றிய தேவாமிருதத்தினும் மேலானவ ளென்பார், “மதியாவருமாரா வமிர்து” என்றனர்.
வாரல் – வா என்னும் பகுதியிற் பிறந்த எதிர்மறைவிய ங்கோள். திரிபணி.

இது, நிரையசை முதலதான கட்டளைக்கலித்துறை.

————

மறம்
52- கொற்றவன் தன் திரு முகத்தைக் கொணர்ந்த தூதா
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்
அற்றவர் சேர் திரு அரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக் குலம் என்று அறியாய் போலும்
மற்றது தான் திரு முகமே ஆனால் அந்த
வாய் செவி கண் மூக்கு எங்கே மன்னர் மன்னன்
பெற்ற இள அரசு ஆனால் ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்கப் பேசுவாயே –52-

(இ – ள்.) கொற்றவன்தன் – வெற்றியையுடைய வேந்தனது,
திருமுகத்தை -, கொணர்ந்த – கொண்டுவந்த,
தூதா – தூதனே! –
குறை உடலுக்கோ – (முகமில்லாத) முண்டத்துக்கோ,
மறவர் கொம்பை – வேடர்களாகிய எங்களது பூங்கொம்பை,
கேட்டாய் – (மணஞ்செய்து தரும்படி) கேட்டாய்; (எங்கள் குலம்),
அற்றவர் சேர் – இருவகைப்பற்றுமற்று முற்றத்துறந்த முனிவர்களெல்லாம் அடைக்கலமடைகின்ற,
திருவரங்கப்பெருமாள் – திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கின்ற நம்பெருமாளது,
தோழன் – நண்பனாகிய குகப்பெருமாள்,
அவதரித்த – திருவவதாரஞ் செய்த,
திரு குலம் என்று – மேன்மையான குலமென்று,
அறியாய்போலும் – (நீ) அறிந்திலைபோலும்;
அது – நீ கொணர்ந்தது, திருமுகமே ஆனால் -,
அந்த – அதன் உறுப்பாகிய, வாய் செவி கண் மூக்கு எங்கே -?
மன்னர் மன்னன் பெற்ற – அரசர்க் கரசனாகிய சக்கரவர்த்தி பெற்ற,
இள அரசு ஆனால் – இளைய அரசானால், பிறந்த குலத்துக்கு ஏற்க.-
அதுதான் பிறந்தகுலத்திற்குப் பொருந்த, ஆலின் கொம்பை – ஆலமரத்தின் கொம்பை,
பேசுவாய் – மணம்பேசுவாயாக; (எ – று.)

தமதுமகளை மணம்பேசும்படி அரசரால் அனுப்பப்பட்ட தூதனைநோக்கி மறவர்கள் மணம் மறுத்து அவ்வரசரை இகழ்ந்து
பேசினதாகச் செய்யுள் செய்வது, மறம்என்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.
இதனை மகட்பாற்காஞ்சி யென்னும் துறையின் இனமாகக் கூறுவர்.
மகட்பாற்காஞ்சியென்பது – புறப்பொருள்திணை பன்னிரண்டனுள் காஞ்சித்திணைக்கு உரிய பலதுறைகளில் ஒன்று.
அதாவது – நின்மகளை எனக்குத்தருக வென்று சொல்லும் அரசனோடு மாறுபடுவது;
“ஏந்திழையாட்டருகென்னும், வேந்தனோடு வேறு நின்றன்று –
அளியகழல்வேந்தரம்மாவரிவை, யெளியளென்றெள்ளியுரைப் பிற் –
குளியாவோ, பண்போற்கிளவியிப்பல்வளையாள் வாண்முகத்த, கண்போற் பகழி கடிது” என்ற புறப்பொருள்வெண்பாவைக் காண்க.

“மணித்தாரரசன்றன்னோலையைத் தூதுவன் வாய்வழியே,
திணித்தாசழியச்சிதைமின் றலையை யெந்தீவினையைத்,
துணித்தான் குருகைப்பிரான் றமிழாற் சுருதிப் பொருளைப்,
பணித்தான் பணியன்றெனிற் கொள்ளுங்கொள்ளு மெம்பா வையையே” என்னுஞ் சடகோபரந்தாதிச் செய்யுள் கருதத்தக்கது.

திருவரங்கநாதனுக்கே உரிமை பூண்பவளான தமது மகளை மணம்பேசும் படி ஓர்அரசனால் ஓலைகொடுத்து அனுப்பப்பட்ட
தூதன் அவ்வரசன் கட்டளைப்படி தம்பக்கல்வந்து ஓலைகொடுத்துச் சிலவார்த்தை கூறி மணம் பேசுவானாக,
அம்மகட்கு உரியார் மிகக்கோபங்கொண்டு அந்தமணப்பேச்சை மறுத்து அவ்வரசனைக் குறித்துப் பரிகசித்துக் கூறினரென்க.
திருவரங்கநாதனுக்கே அடிமைபூண்ட எமதுஉயிர் பிறிதொரு கடவுளர்க்கேனும் மானிடர்க்கேனும் உரிமைபூணாது என்று,
அங்ஙனம் பிறர்க்கு ஆட்படுத்த முயல்வாரைநோக்கி ஐயங்கார் கடிந்து கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

ஓலையைத் திருமுகமென்பது, குழூஉக்குறி. மறவர் கொம்பென்றது, தம்மைப் பிறர்போற்கூறிய படர்க்கை; இடவழுவமைதி.
கொம்பு – பூங்கொம்பு போன்ற பெண்ணுக்கு உவமயாகுபெயர்.
அற்றவர்சே ரென்பதற்கு – வேறுபுகலிடமில்லாதவர்களாய் யாவருமடைகின்ற வென்றும் பொருள்கொள்ளலாம்.
குகன் தோழனானது, ஸ்ரீராமாவதாரத்தில். போலும் – ஒப்பில்போலி. மற்று – வினைமாற்று.
அரசென்னும் பண்புப்பெயர், அரசனுக்கு ஆகுபெயர். திருமுகமென்பதில் அழகியமுகமென்றும்,
கொம்பென்பதில் மரத்தின்கொம்பென்றும், அரசென்பதில் அரசமரமென்றும் பொருள்கொள்ளக்கிடத்தலால், இங்ஙனங் கூறினார்.

இது, பதினைந்தாங் கவிபோன்ற எண்சீராசிரியவிருத்தம்.

——————

இதுவும் அது –
53- பேச வந்த தூத செல் அரித்து ஓலை செல்லுமோ
பெரு வரங்கன் அருள் அரங்கர் பின்னை கேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்ட மன்னர் பட்டது எங்கள் பதி புகுந்து பாரடா
வாசலுக்கு இடும் படல் கவித்து வந்த கவிகைமா
மகுட கோடி தினை அளக்க வைத்த காலும் நாழியும்
வீச சாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலி இட்டது அவர்கள் இட்ட வில்லும் வாளும் வேலுமே –53-

(இ – ள்.) பேச – (எங்கள்பெண்ணை மணம்) பேசுவதற்கு, வந்த – தூத – தூதனே! –
செல் அரித்த – செல்லினால் அரிக்கப்பட்ட, ஓலை -, செல்லுமோ -?
பெரு வரங்கள் – பெரிய வரங்களை, அருள் – (தம் அடியார்கட்கு) அருளுகின்ற,
அரங்கர் – திருவரங்கநாதரும்,
பின்னை கேள்வர் – நப்பின்னையின் கணவரு மாகிய நம்பெருமாளது,
தாளிலே – திருவடிகளிலே, பாசம் வைத்த – அன்பு வைத்த,
மறவர் பெண்ணை – வேடர்களாகிய எங்களது மகளை, நேசம் வைத்து – விரும்பி,
முன்னமே – முன்னாட்களிலே,
பட்டம் மன்னர் – பட்டந்தரித்த அரசர்கள்,
பட்டது – பட்ட பாடுகளை,
எங்கள் பதி புகுந்து – எங்களூரினுள் வந்து, பார்அடா -;
வாசலுக்கு இடும் படல் – (எங்கள் வீட்டு) வாசலில் வைத்து மூடும் படல்,
கவித்து வந்த – (அவர்கள்) பிடித்துவந்த, கவிகை – குடைகளாம்;
தினை – தினையரிசிகளை, அளக்க – அளக்கும்படியாக, வைத்த -,
காலும் – மரக்கால்களும்,
நாழியும் – படியும் முதலிய அளவுகருவிகள்,
மா மகுடம் கோடி – (அவர்கள்தரித்துவந்த) பெரிய கிரீடங்களின் கூட்டமாம்;
குடில் தொடுத்த – (எங்கள்) குடிசைக்குமேல் மூடுகின்ற, கற்றை -,
வீசு சாமரம் – (அவர்களுக்கு) வீசி வந்த சாமரங்களாம்;
சுற்றிலும் – (எங்கள்வீட்டின்) நாற்புறத்திலும், வேலி இட்டது – வேலியாகப் போகட்டது,
அவர்கள் இட்ட – அவர்கள் (தோல்வியடைந்து) போகட்டுப்போன, வில்லும் வாளும் வேலுமே – (ஆகும்); (எ – று.)

இவ்வாறு கூறியது, உன்னை யேவிய அரசனுக்கும் இக்கதியே நேருமென்று குறித்தற்கு.
“எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக்கெடும்” ஆதலால், மிக்க கோபாவேசத்தால் இங்ஙனம் கொடுமைகூறின ரென்க.

செல் – கறையான். மறவர் தாம் எழுத்தறியாதவ ராதலால், எழுத்தெழுதிய ஓலையை “செல்லரித்தவோலை” என்றார்.
செல்லுதல் – பயன்படவழங்குதல். “நேசம்வைத்து” என்பது, ஒருசொல்நீர்மைத்தாய் “பெண்ணை” என்பதற்குப் பயனிலையாய் நின்றது.
வாசல் – வாயிலென்பதன் மரூஉ. படல் – கட்டி கவிகை – கவிந்திருப்பது. கற்றை – விழல்தொகுதி போல்வன.

இது, ஏழாஞ்சீரும் ஈற்றுச்சீரும் விளச்சீர்களும், மற்றையவெல்லாம் மாச்சீர்களுமாகிய பதினான்குசீராசிரியவிருத்தம்.

—————

54–வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை
மாலை அரங்கேசனை நாம் மாலையிலும் காலையிலும்
உன்னி நைந்தோம் இல்லை உடல் எடுத்த அன்று முதல்
என் நினைந்தோம் நெஞ்சே இருந்து –54–

(இ – ள்.) நெஞ்சே – ! – நாம் -, வேலை உலகில் – கடல்சூழ்ந்த இந்த நிலவுலகத்தில்,
பிறக்கும் வேலை – பிறக்குந் தொழிலை, ஒழிந்தோம் இல்லை. நீங்கிற்றிலோம்;
மாலை அரங்கேசனை – ரங்கநாதனாகிய திருமாலை,
மாலையினும் காலையினும் – காலையும் மாலையும்,
உன்னி -தியானித்து,
நைந்தோம் இல்லை – மனம்நெகிழ்கிற்றிலோம்;
உடல் எடுத்த அன்றுமுதல் – இவ்வுடம்பெடுத்த அந்நாள்முதல்,
இருந்து என் நினைந்தோம் – வேறு என்ன பெரிய காரியத்தை எண்ணியிருந்தோம்? (எ – று.)

நமது பிறப்புத்தொழிலை நீக்குதற்குக் கடவராகிய திருவரங்கநாதரது மகிமையை உணர்ந்து அவரையே
காலை மாலைகளில் தியானிப்பது நமதுகட மையாயிருக்க, அதுசெய்யாது இதுவரை பழுதே பலபகலும்
போயினவென்று அஞ்சி அதுகுறித்து அநுதாபங்கொண்டு கழிவிரக்கத்தாற்கூறியது இது.

வேலையுலகிற் பிறக்கும் வேலை யொழியாமைக்குக் காரணத்தை, காலை மாலைகளில், ஸ்ரீரங்கநாதனைத் தியானியாமல்
வீண்பொழுது போக்கினமை யெனப் பின்மூன்றடிகளில் விளக்கினார்; தொடர்நிலைச்செய்யுட்குறியணியின் பாற்படும்.
மடக்கு என்னுஞ் சொல்லணியும் இதிற் காணத்தக்கது. இனி, நா எனப் பிரித்து – நாவினால், உன்னி – துதித்து என்றுமாம்.

பிறப்பென்னும்வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா

———–

இயலிடம் கூறுதல்
55-இரும்புவனம் விரும்புவனம் அணி அரங்கர் பணி அரங்கர் இமய நண்ப
வரும் கொடியின் மருங்கு ஓடியின் மனம் குழைக்கும் கனங்குழைக்கும் அனங்கன் சாபக்
கரும்பு உருவம் பொரும் புருவம் முத்தம் நகை ஒத்தன கை காந்தள் பூந்தேன்
மருங்கு உழலும் கருங்குழலும் முருகு வளை இருகு வளை மழைக்கண் தாமே –55-

(இ – ள்.) இரும் புவனம் – பெரிய உலகங்கள் முழுவதையும்,
விரும்பு (உணவாக) விரும்பி அமுதுசெய்த,
வனம் அணி – வனமாலையை அணிந்த,
அரங்கர் – அரங்கநாதரும்,
பணி அரங்கர் – ஆதிசேஷனைப் பள்ளிகொள்ளுமிடமாக வுடையவரு மாகிய நம்பெருமாளது,
இமயம் – இமயமலைபோன்ற மலையினிடத்துள்ள, நண்ப – தோழனே! –
கனங் குழைக்கு – (யான் கண்ட) கனமாகிய காதணியையுடைய பெண்ணுக்கு,
வரும் கொடியின் – வளர்கின்ற பூங்கொடிபோன்ற,
மருங்கு – இடையானது,
ஒடியின் – (தான்) ஒல்கினால்,
மனம் – (ஆடவர்களது) நெஞ்சத்தை,
குழைக்கும் – தளரச்செய்யும்;
புருவம் – புருவங்கள்,
அனங்கன் – மன்மதனது,
சாபம் – வில்லாகிய,
கரும்பு – கரும்பினது,
உருவம் – வடிவத்தோடு,
பொரும் – போர்செய்யும்(ஒத்திருக்கு மென்றபடி);
நகை – பற்கள்,
முத்தம் ஒத்தன – முத்துக்களைப் போன்றனவாகும்;
கை – கைகள்,
காந்தள் – காந்தள்மலர்போலும்;
கருங்குழல் – கரிய கூந்தல்,
பூ தேன்மருங்கு உழலும் – மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் பக்கங்களிற் சுழலப்பெறும்;
மழை கண் – குளிர்ச்சியை யுடைய கண்கள்,
முருகு வளை இரு குவளை – வாசனை மிக்குப்பொருந்திய இரண்டு நீலோற்பலமலரை ஒப்பன; (எ – று.)

கலந்துபிரிந்த தலைமகன் பின்பு தனதுதோழனைத் துணையாகக் கொண்டு மீண்டும் அத்தலைமகளைச் சந்தித்தல் முறைமை;
அது, “பாங்கற்கூட்டம்” எனப்படும். அதற்கு உரிய துறைகள் பலவற்றில் “இயலிடங்கூறல்” என்னுந் துறை, இச்செய்யுளிற் கூறியது.
அஃதாவது – முதலிற் கலந்து பிரிந்த தலைமகன், பின்பு தன்னையடுத்துத் தன்மெலிவைக் கண்டு
‘நீ இவ்வாறாதற்குக் காரணம் என்னோ?’ என்று வினாவிய பாங்கனுக்கு,
“யான் ஒருத்தி வலையில் அகப்பட்டேன்’ என்று உற்றதுகூற, அதுகேட்ட பாங்கன் “நினது ஒழுக்கம் தக்கதன்று” என்று
சிலகூறியபின்பும் தலைமகன் தெளிவுபெறாது வருந்தவே, பாங்கன் இரக்கங்கொண்டு
“நின்னாற்காணப்பட்ட வடிவம் எத்தன்மைத்து?” என்று வினாவ, அதுகேட்ட தலைமகன் மகிழ்ச்சிகொண்டு
“என்னாற்காணப்பட்ட வடிவுக்கு இய லிவை” என்று கூறுதல்.

இனி, இரும்புவனம்விரும்புவனமணியரங்க ரென்பதற்கு – பெரிய உலகத்தவர் யாவராலும் விரும்பப்படுகின்ற
வனப்பையுடைய நீலமணிபோலும் நிறத்தினையுடைய அரங்கரென்றும்,
பணியரங்க ரென்பதற்கு – காளியனென்னும் பாம்பைக் கூத்தாடுமிடமாகக் கொண்டவ ரென்றுமாம்.
இமயம் – பனிமலை. கனங்குழைக்கும், கருங்குழலும், உம்மை – இசைநிறை.

இது, நான்காங் கவி போன்ற அறுசீராசிரியவிருத்தம்.

————

இதுவும் அது –
56-மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின் மலர் முல்லை மதி வளை கழை யாழ்
வாரிசம் கெளிறு தத்தை வாய் கலசம் மணி வட பத்திரம் எறும்பு ஊர்
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம் அரம்பை ஞெண்டு இளவரால் ஆமை
அணிதராசு இணை கந்துகம் துகிர் தரளம் அம்புயம் அரங்க நாடு அனையார்
குழல் நுதல் புருவம் விலோசனம் காது நாசி வாய் நகை முகம் கண்டம்
குலவு தோள் முன்கை அங்கை மெல் விரல்கள் கூர் உகிர் கொங்கை கண் வயிறு
விழை தரும் உரோமம் வரை இடை உந்தி விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி பிரடு மென்குதிவிரல் நகம் தாளே–56–

(இ – ள்.) அரங்க நாடு அனையார் – திருவரங்கமாகிய திருநாட்டை யொக்கின்ற (யான் கண்ட) மாதரது,
குழல் – கூந்தலும்,
நுதல் – நெற்றியும்,
புருவம் – புருவங்களும்,
விலோசனம் – கண்களும்,
காது – காதுகளும்,
நாசி – மூக்கும்,
வாய் – வாயும்,
நகை – பற்களும்,
முகம் – முகமும்,
கண்டம் – கழுத்தும்,
குலவு தோள் – விளங்குகின்ற தோள்களும்,
முன் கை – முன்னங்கைகளும்,
அங்கை – அகங்கைகளும்,
மெல் விரல்கள் – மெல்லிய விரல்களும்,
கூர் உகிர் – கூரிய நகங்களும்,
கொங்கை – தனங்களும்,
கண் – முலைக்கண்களும்,
வயிறு – வயிறும்,
விழைதரும் – விரும்பப்படுகின்ற,
உரோமம் – மயிரொழுக்கும்,
வரை – வயிற்றின் மடிப்புக்களும்,
இடை – இடுப்பும்,
உந்தி – நாபியும்,
விரும்பும் – விரும்பப்படுகின்ற,
அல்குல் – அல்குலும்,
தொடை – தொடைகளும்,
முழந்தாள் – முழங்கால்களும்,
மிளிர் – ஒளி செய்கின்ற,
கணைக்கால்கள் – கணைக்கால்களும்,
புறம் அடி – புறங்கால்களும்,
பரடு – காற்பரடுகளும்,
மெல் குதி – மெல்லிய குதிகால்களும்,
விரல் – விரல்களும்,
நகம் – நகங்களும்,
தாள் – பாதங்களும், (ஆகிய இவ்வவயவங்கள் முறையே), –
மழை – மேகமும்,
பிறை – பிறைச்சந்திரனும்,
சிலை – விற்களும்,
வேல் – வேல்களும்,
வள்ளை – வள்ளையிலைகளும்,
எள் (மலர்) – எள்ளுப்பூக்களும்,
இலவின் மலர் – இலவம்பூக்களும்,
முல்லை (மலர்) – முல்லைப் பூக்களும்,
மதி – பூர்ணசந்திரனும்,
வளை – சங்கமும்,
கழை – மூங்கில்களும்,
யாழ் – வீணையும்,
வாரிசம் – தாமரைமலர்களும்,
கெளிறு – கெளிறென்னும் மீன்களும்,
தத்தை வாய் – கிளியின் வாய்களும்,
கலசம் – குடங்களும்,
மணி – நீலமணியும்,
வட பத்திரம் – ஆலிலையும்,
எறும்பு ஊர் அழகு – எறும்பு ஊருகின்ற ஒழுங்கும்,
நீர் தரங்கம் – நீரின் அலைகளும்,
துடி – உடுக்கையும்,
சுழி – நீர்ச்சுழியும்,
அரவம் – பாம்பின் படமும்,
அரம்பை – வாழைமரங்களும்,
ஞெண்டு – நண்டுகளும்,
இள வரால் – இளைய வரால் மீன்களும்,
ஆமை – ஆமைகளும்,
அணி தராசு இணை – அழகிய இரண்டு தராசுதட்டுகளும்,
கந்துகம் – பந்துகளும்,
துகிர் – பவழங்களும்,
தரளம் – முத்துக்களும்,
அம்புயம் – தாமரைமலர்களும், (ஆகிய இவற்றை ஒக்கும்). (எ – று.)

எனவே, கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி பாதி மதியையும், புருவம் வில்லையும், கண் வேலையும்,
காது வள்ளையிலையையும், மூக்கு எள்ளுப்பூவையும், அதரம் இலவம்பூவையும், தந்தம் முல்லை மலரையும்,
முகம் பூர்ணசந்திரனையும், கண்டம் சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும்,
உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கைந்நகம் கிளிமூக்கையும், கொங்கை கும்பத்தையும்,
கொங்கைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், அதனிடத்து உள்ள மயிரொழுக்கு எறும்பொழுக்கையும்,
வயிற்றுமடிப்பு அலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும்,
தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் வரால்மீனையும், புறங்கால் ஆமையையும்,
காற்பரடு தராசுதட்டையும், குதிகால் பந்தையும், கால்விரல் – பவழத்தையும், கால்நகம் முத்தையும்,
பாதங்கள் தாமரைமலரையும் போலுமெனப் பெயர்ப்பயனிலையும் எழுவாயுமாக வந்த முறைநிரனிறைப்பொருள்கோள்.

இதனுள் கேசாதிபாதபரியந்தம் முப்பத்திரண்டு அவயவங்களும் அவற்றின் உபமானங்களோடு காண்க.
மழை – காளமேகம். பிறை – குறைந்தமதி. வள்ளை – அதன் இலைக்கு ஆகுபெயர். மலரை முன்னும் பின்னுங் கூட்டுக.
மதி – நிறைந்த சந்திரன், வாரிஜம், அம்புஜம் – நீரில் தோன்றுவது. கெளிறு,வரால் – மீனின்வகைகள்.
அரவம் – ஆகுபெயர். ஞெண்டு – போலி.
அரங்க நாடனையா ரென்றது – நிரதிசய இன்பத்தைத் தருபவ ரென்றற்கு. முன்கை – இலக்கணப்போலி.

இது, இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————

கைக்கிளை
57-தாள் இரண்டும் பார் ஒன்றும் தார்வாடும் வேர்வு ஆடும்
வாள் இரண்டும் காது இரண்டில் வந்து இமைக்கும் கோள் இரண்டும்
ஐவகைப் பூதம் அமைத்தருள் அரங்கர் மை வளர் சோலை மலையில்
தெய்வம் அல்லள் இத்திரு உருவினளே –57-

(இ – ள்.) தாள் இரண்டும் – இரண்டு கால்களும்,
பார் ஒன்றும் – பூமியிற் பொருந்தும்;
தார் – பூமாலை, வாடும் -;
வேர்வு ஆடும் – வியர்வை அரும்பும்;
வாள் இரண்டும் – வாள்போலும் இரண்டுகண்களும்,
காது இரண்டில் வந்து – இரண்டு காதுகளிலுஞ் சென்று மீண்டுவந்து, இமைக்கும் -; (ஆகையால்),
கோள் இரண்டும் – இராகு கேதுக்களென்னுங் கிரகங்களையும்,
ஐவகை பூதம் (உம்) – நிலம் நீர் தீ காற்று விசும்பென்னும் பஞ்சபூதங்களையும்,
அமைத்து அருள் – படைத்துக் காக்கின்ற,
அரங்கர் – அரங்கநாதரது,
மை வளர் – மேகங்கள் தவழ்கின்ற,
சோலைமலையில் – சோலைகளையுடைய மலையினிடத்தே யுள்ளவளாகிய,
இ திருஉருவினள் – அழகிய வடிவத்தையுடைய இம்மகள்,
தெய்வம் அல்லள் – தெய்வமகளல்லள் (மானுடமகளே); (எ – று.)

இது, பொழில்விளையாட்டு விருப்பால் ஆயம் நீங்க அதன்கண் தமியளாய்நின்ற தலைமகளை வேட்டைவிருப்பால்
இளையார் நீங்கத் தமியனாய் வந்த தலைமகன் தனியிடத்திற் கண்டவுடனே இம்மகள் தெய்வமகளோ மானுடமாதரோ வென்று
ஐயுற்று நின்று பிறகு இவ்வகைக்குறிகண்டு தெய்வமல்லள், மக்களுள்ளாளெனத் தெளிந்தது.
எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் – இனையன குறியே, வேற்றுமையில்லையென்பது கருத்து;
“பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்குந்,
தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி,
யாயுமனனே யணங்கல்லளம்மா முலைசுமந்து,
தேயு மருங்குற் பெரும்பணைத்தோ ளிச் சிறுநுதலே” என்றார் திருக்கோவையாரிலும்,
இது, தெளித லென்னுந் துறையாம்.
இது, தலைவன்தலைவியர்களுள் ஒருவருள்ளக்கருத்தை ஒருவர் அறியாத ஒருதலைக்காம மாதலால், கைக்கிளையாயிற்று.

வாள் – உவமவாகுபெயர், காதளவும் நீண்ட கண்களாதலால், “வாளிரண்டுங் காதிரண்டில் வந்திமைக்கும்” என்றார்.
கால் நிலந்தோய்தலும், மாலை வாடுதலும், வேர்வை யுண்டாதலும், கண்ணிமைத்தலும் தேவர்களுக்கு இல்லையென அறிக;
“கண்ணிமைத்தலா லடிகள் காசினியிற் றோய்தலால்,
வண்ண மலர்மாலை வாடுதலா – லெண்ணி,
நறுந்தாமரைவிரும்பு நன்னுதலேயன்னா,
ளறிந்தா ணளன்றன்னை யாங்கு” என்றார் புகழேந்தியும்,
கோள் – க்ரஹமென்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு. இராகு கேதுக்களைக் கூறியது, மற்றைக்கிரகங்களுக்கும் உபலக்ஷணம்.
முற்றும்மையைப் பூதமென்பதனோடுங் கூட்டுக. திருவென்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்;
என்றது – அழகு. இனி, திருவுருவினள் – திருமகள்போலும் வடிவத்தவ ளென்றுமாம்.

இது, முதல் மூன்று அடிகளும் வெண்பாவடிகளாய், மற்றைய இரண்டும் ஆசிரியவடிகளாய், அவற்றுள்ளும்
ஈற்றயலடி முச்சீரதாய் வந்து துணிதலை நுதலிய ஒருதலைக்காம முணர்த்தியதனால், கைக்கிளைமருட்பா.

————-

ஊசல்
58-உரு மாறிப் பல பிறப்பும் செத்தும் ஊசலாடுவது அடியேன் ஒளியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கி கருணை எனும் பாசத்தைக் கயிறாப் பூட்டி
மரு மாலைத் துழவு அசைய ஆடீர் ஊசல் மணி மகரக் குழி அசைய ஆடீர் ஊசல்
திருமாது புவி மாதோடு ஆடீர் ஊசல் திரு அரங்க ராசரே ஆடீர் ஊசல் –58-

(இ – ள்.) உரு மாறி – உருவம் மாறிமாறி,
பல பிறப்பும் – பலவகைப் பட்ட பிறவிகளிலும்,
பிறந்தும் -, செத்தும் -,
ஊசல் ஆடுவது – ஊஞ்சல் போல அலைவதனை, அடியேன் -,
ஒழியும் வண்ணம் – நீங்கும்படி,
கரு மா யத்து – மிக்க வஞ்சனையையுடைய,
என் நெஞ்சை – எனது மனத்தை,
பலகை ஆக்கி – ஊசற்பலகையாக்கொண்டு,
கருணை எனும் – (நினது) அருளென்கிற,
பாசத்தை -, கயிறு ஆ பூட்டி – ஊஞ்சற் கயிறாக மாட்டி,
மரு மாலை துளவு அசைய – வாசனையையுடைய திருத்துழாய்மாலை அசையும்படி,
ஊசல் ஆடிர் – ஊசலாடுவீராக;
மணி மகரம் குழை – இரத்தினத்தாலாகிய மகரகுண்டலங்கள், அசைய -, ஊசல் ஆடிர் -;
திருமாது புவிமாதோடு – பெரியபிராட்டியாரோடும் பூமிப்பிராட்டியாரோடும், ஊசல் ஆடிர் -;
திருவரங்கராசரே -! ஊசல் ஆடிர் -; (எ – று.)

யான் பிறப்பு நீங்கிப் பரமபதமடையும்படி தேவரீர் அருள்கூர்ந்து எனது மனத்தில் எஞ்ஞான்றும் இடைவிடாது
தங்கியிருக்கவேண்டு மென்பதாம். அன்பால் நினைவாரது உள்ளக்கமலம் எம்பெருமானுக்குத் தங்குமிடமாதலால்
“நெஞ்சைப்பலகையாக்கி” என்றும், கடவுளது திருவருள் அவ்வுள்ளத்தைக் கட்டித் தம்வயப்படுத்துதலால்
“கருணையெனும் பாசத்தைக் கயிறாப்பூட்டி” என்றுங் கூறினார்.
“பொருளலா விடயத்தைப் பொருளென்றெண்ணிப் போவதுமீள்வதுமா யெப்பொழுது மாடு,
மருளுலா மனவூசல் சுத்தஞ் செய்து மாறாது வளர்பத்தி வடத்தைப்பூட்டி,
யிருளைநேர் குழனி லப்பெண் ணலர்மேன் மங்கை யிருவரொடு மேயதன்மேலேறிவீறு,
மருளினான் மெள்ளவசைந்தாடி ரூச லாதிவடமலைமாய ராடி ரூசல்” என்றார் திருவேங்கடக் கலம்பகத்தும்.
இச்செய்யுளில் எம்பெருமான் ஊசலாடத் தாம் ஊசலாடுவது நீங்குமெனக் கூறிய நயம் கருதத்தக்கது.
ஊசலாடுதல்தொழில் எம்பெருமானைச்சேர அத்தொழில் சேதனனாகிய தம்மை விட்டுநீங்குதலைக் கூறியது –
முறையிற்படர்ச்சியணியின் பாற்படும்; இது, வடமொழியில் பர்யாயாலங்காரம் எனப்படும். இதற்கு உருவகவணி அங்கமாக நின்றது.

இஃது, ஊசல்; அஃதாவது – ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசையானாதல் “ஆடிரூசல், ஆடாமோவூசல்” என முடிவுகூறக் கூறுவது.

இது, பதினைந்தாங் கவிபோன்ற ஆசிரியவிருத்தம்

————

59- ஊசல் வடம் போல் ஊர் சகாடம் போல் ஒழியாமே
நாச உடம்போடு ஆவி சுழன்றே நலிவேனோ
வாசவனும் போது ஆசனனும் கூர் மழு வோனும்
நேசமுடன் சூழ் கோயில் அரங்கா நெடியோனே –59-

(இ – ள்.) வாசவனும் – இந்திரனும்,
போது ஆசனனும் – தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரமனும்,
கூர் மழுவோனும் – கூர்மையாகிய மழுவாயுதத்தையுடைய உருத்திரனும்,
நேசமுடன் – பக்தியுடனே,
சூழ் – சூழ்ந்துவழிபடுகின்ற,
கோயில் அரங்கம் – திருவரங்கம் பெரிய கோயிலிலெழுந்தருளியிருக்கின்ற,
நெடியோனே -, (அடியேன்),
ஊசல் வடம் போல் – ஊஞ்சற்கயிறுபோலவும்,
ஊர் சகடம்போல் – செல்லுகின்ற வண்டியின் உருளைபோலவும்,
ஒழியாமே – ஓய்வில்லாதபடி,
நாசம் உடம்போடு – அழியுந்தன்மையையுடைய உடம்புடனே,
ஆவி சுழன்றே – உயிர்அலையப் பெற்றே,
நலிவேனோ – வருந்தக்கடவேனோ? (எ – று.)

ஓடி யோடி வருவதும் போவதுமா யிருத்தலால் ஊசல் வடத்தையும், மாறி மாறி உருண்டுகொண்டே யிருத்தலால்
ஊர்சகடத்தையும் உவமைகூறினார். சகடம் – உருளைக்கு ஆகுபெயர். நெடியோன் – பெரிய பெருமாள்.

இது, பதினெட்டாங் கவிபோன்ற கலிநிலைத்துறை.

————-

கையுறை -தழை
60-நேசத்து அழைக்கும் மத யானை முன்பு நின்றோன் அரங்கம்
பேசத் தழைக்கும் என் அன்பு அனையாய் பெரும் கற்பகத்தின்
வாசத் தழைக்கும் நறுந்தழை காண் இது மந்தத் தென்றல்
வீசத் தழைக்கும் தழை போல் கெடாது விலை இல்லையே –60-

(இ – ள்.) நேசத்து – அன்பினாலே,
அழைக்கும் – (ஆதிமூலமே யென்று) அழைத்த,
மதயானை முன்பு – மதத்தையுடைய கஜேந்திராழ்வான்முன்னே,
நின்றோன் – வந்துநின்று காத்தருளின எம்பெருமானது,
அரங்கம் – ஸ்ரீரங்கத்தை,
பேசு – சொல்லுந்தோறும்சொல்லுந்தோறும்,
தழைக்கும் – மகிழ்கின்ற,
என் – எனது,
அன்பு – அன்பை,
அனையாய் – ஒத்திருப்பவளே! –
இது – இத்தழை,
பெருங் கற்பகத்தின் – பெரிய கல்பக விருக்ஷத்தினது,
வாசம் தழைக்கும் – வாசனையையுடைய தழையினும்,
நறுந் தழை காண் – நறுநாற்றம் மிக்க தழையேகாண்; (இது),
மந்தம் தென்றல் – இளந் தென்றற்காற்று,
வீச – வீசுதலால்,
தழைக்கும் – தழைக்கின்ற,
தழைபோல் – (மற்றை மரங்களின்) தழையைப்போல,
கெடாது – (பின்பு) வாடிப்போகாது; (அதுவேயுமன்றி),
விலை இல்லை – (இத்தழைக்கு) விலையும் இவ்வளவென்று ஓர் அறுதி இல்லை;
(ஆதலால், இதனை நீ ஏற்றுக்கொள்வாயாக); (எ – று.)

இத்துறை, தலைமகளைக் குறை நயப்பித்துச் சேட்படைகூறத் துணியாநின்ற தோழியிடைத் தலைமகன்
தழைகொண்டு சென்று (இத்தழையை வாங்கிக்கொண்டு என்குறைமுடித்தருளுவீராம்’ என்று
வேண்டிக் கையுறையாகக் கொடுக்க, அதனை அரிதின் ஏற்றுக்கொண்ட தோழி, தலைமகளிடஞ் சென்று,
அவள்குறிப்பறிந்து, “இத்தழை நமக்கு எளியதொன்றன்று;இதனை ஏற்றுக்கொள்வாயாக” எனத் தலைமகளைத் தழையேற்பித்தது.

இது, நேரசை முதலாக நின்ற கட்டளைக்கலித்துறை.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading