ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – 61-80-

நாமம் மிகு புகழ் யாதவர் வாழும் நகரில் உம்பர்
தாம் மருவும் சவை தத்தம ஆய தளை அவிழும்
தேமரு பொங்கர் அரங்கேசர் உக்கிர சேனனுக்கு
மாமுடி வைக்கும் படி படி மேல் கொடு வா எனவே –61-

(இ – ள்.) தளை அவிழும் -(அரும்புகள்) கட்டவிழப்பெற்ற,
தேன் மரு – தேன் பொருந்திய,
பொங்கர் – சோலைகளையுடைய,
அரங்கஈசர் – திருவரங்கத்துநாதர், –
உக்கிரசேனனுக்கு – உக்கிரசேனமகாராஜனுக்கு,
மாமுடி வைக்கும்படி – பெரிய கிரீடத்தைச் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்தருளும்படி யாக,
படிமேல் கொடுவா – இப்பூமியின்மேற் கொண்டுவா,
என – என்று (வாயுதேவனைநோக்கி) நியமித்தருள, –
நாமம் மிகும் புகழ் – பேர்மிக்க கீர்த்தியை யுடைய,
யாதவர் – யதுவம்சத்தார்,
வாழும் – வாழ்கின்ற,
நகரில் – வடமதுரா நகரத்தில்,
உம்பர்தாம் மருவும் – தேவர் வீற்றிருத்தற் கிடமாகிய,
சபை – (சுதர்மையென்கிற) சபாமண்டபம்,
தத்தம ஆய – தங்கள் தங்களதாயிற்று (யாதவரெல்லார்க்கும் உரியதாயிற்று என்றபடி); (எ – று.)

கண்ணன் கம்ஸவதஞ்செய்த பின்பு, மகனிழந்தவனும் தன்மாதாமகனு மாகிய உக்கிரசேனமகாராஜனைத்
தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகஞ் செய்தவுடனே வாயுவை நினைக்க,
அவனும் உடனே ஸ்வாமிஸந்நிதிக்கு வந்துநிற்க, அவனை நோக்கி
“ஓ வாயுவே! ஸுதர்மையெ ன்கிறதேவசபையானது நம்முடைய உக்கிரசேன மகாராஜாவுக்கே ஏற்றது;
அதில் யதுவமிசத்தார் வீற்றிருக்கத்தகுந்தவர்; ஆதலால், ஒப்பற்ற அந்தச் சபையை மகாராஜாவுக்கு அனுப்பிவிடு என்று
இந்திரனுக்கு என்கட்டளை யைத் தெரிவித்துச் சபையைக் கொண்டுவா” என்று நியமித்தவுடனே,
அக் கட்டளையை வாயு சிரசில் வகித்துப்போய்ப் புரந்தரனுக்குத் தெரிவிக்க,
அவனும் அச்சபையைச் சமீரணன்கையிற் கொடுத்துவிட, உடனே வாயு அதைக் கொண்டுவந்து
சுவாமிசந்நிதியிற் சமர்ப்பிக்க, அதனைச் சுவாமி உக் கிரசேனனுக்குப் பிரசாதித்தருள,
அச்சபையிலே யாதவர் யாவரும் வீற்றிருந்தார்க ளென்பதாம்.

யாதவர் – தத்திதாந்தநாமம். சவை – ஸபை. தத்தமவாய – தத்தமதாயது என்பதன் விகாரம்.
இனி, தளையவிழும் என்பதனை உக்கிரசேன னென்பதனோடு கூட்டி, தளையினின்றும் விடுவிக்கப்பட்ட என்றுமாம்;
தளை – கால் விலங்கு. உக்கிரசேனன் – கொடியசேனைகளை யுடையவன்.

———–

மறியா எழுந்திரை மா நீர் மதுரையில் மன்னவரைக்
குறியாதவன் படை வந்த அந்நாள் செழும் கோகனகப்
பொறி ஆடு அரவணைத் தென் அரங்கா ஒரு பூதரும் அங்கு
அறியா வகைத் துவரா பதிக்கே எங்ஙன் ஆக்கினையே –62-

(இ – ள்.) செழு கோகனகம் பொறி – செழித்த செந்தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளையுடைய,
ஆடு அரவு அணை – படமெடுத்தாடுகின்ற ஆதிசேஷனாகிய சயனத்திற் பள்ளிகொண்டருளுகின்ற,
தென் அரங்கா – !
மறியா எழும் – மடங்கி யெழுகின்ற,
திரை – அலைகளையுடைய,
மா நீர் – மிக்க நீர்வளத்தையுடைய,
மதுரையில் – வடமதுரையில்,
மன்னவரை குறியாதவன் – வேற்றரசர்களை ஒருபொருளாக மதியாத காலயவனனது,
படை – சேனை,
வந்த அ நான் – (யுத்தஞ்செய்ய) வந்தபொழுதில், –
ஒரு பூதரும் அறியாவகை – ஒருவரும் அறியாதபடி, (மதுரையிலிருந்த சகலபிரஜைகளையும்),
துவராபதிக்கே – துவாரகா நகரத்திலே,
எங்ஙன் ஆக்கினை – எப்படிக் கொண்டு போய்ச் சேர்த்தாய்? (எ – று.)

காலயவனனென்னும்யவனதேசாதிபதி யாதவர்மேற்படையெடுத்தற் காக அநேகமிலேச்சரோடு மதுரைக்கு வந்த தருணத்தில்,
கண்ணன் கால யவனனும் ஜராசந்தனுஞ் சேர்ந்து யாதவசேனையை நாசஞ்செய்யக்கூடு மென்று நினைத்துச்
சமுத்திரராஜனைப் பன்னிரண்டுயோசனைதூரம் இடம்விடும்படி கேட்டு,
அவன்விட்ட அவ்வளவு பூமியிலே துவாரகையை நிருமித் தருளி, மதுரையிலிருந்த தன்னுடைய பிரஜைகளை
அந்நகரத்திற் கொண்டு போய்ச் சேர்த்து, யதுவம்சமானது சத்துருபய மற்றதாயிருக்கும்படி செய் தன னென்று புராணம் கூறும்.
மது வென்பவன் கைக்கொண்டிருந்தது பற்றியும், கண்ணுக்கினிமையானது பற்றியும், மதுரையெனப் பெயர்.
ஒரு பூதர் – ஒருவரென்னுமாத்திரையாய் நின்றது. அங்கு – அசை. துவராபதி – த்வாரவதி யென்றவடசொல்லின் திரிபு;
விசாலமான வாயிலையுடையது என்று காரணப்பொருள் பெறும்; இது, முத்திதரும் நகர மேழனுள் ஒன்று.

————

நறைத்துள வம்புனை நம் பெருமாள் விறல் நாம் சொல்வதோ
மறைப் பரி பூட்டிய மா நிலத் தேர் இல்லை வாள் எயிற்றின்
கறைப் பணி நாண் உடை மேருவில் இல்லை கடும் பவனச்
சிறைத் தழல் அம்பு இல்லை ஒன்னார் அறு புரம் செற்றதற்கே –63-

(இ – ள்.) (கண்ணன்), ஒன்னார் – பகைவர்களுடைய,
அறு புரம் – ஆறு பட்டணங்களை,
செற்றதற்கு – அழித்ததற்கு, – (சிவபிரானது திரிபுரசங்காரத் துக்குப்போல),
மறை பரி பூட்டிய – நான்குவேதங்களாகிய குதிரைகளைக் கட்டிய,
மா நிலம் தேர் – பெரிய பூமியாகிய இரதம்,
இல்லை -;
வாள் எயிற்றின் – வாள்போலும் பற்களையும்,
கறை – விஷத்தையுமுடைய,
பணி – சர்ப்பமாகிய,
நாண் உடைய – நாணியையுடைய,
மேரு வில் – மகாமேருபர்வதமாகியவில், இல்லை – ;
கடு பவனம் – கடிய காற்றுப்போன்ற வேகத்தையுடைய,
சிறை – இறகுகளையுடைய,
தழல் – நெருப்பைக்கக்குகின்ற, அம்பு – இல்லை – ; (ஆதலால்), –
நறை துளவம் புனை – வாசனையையுடைய திருத்துழாய்மாலையைச் சூடிய,
நம்பெருமாள் – நம்பெருமாளது,
விறல் – வல்லமையானது,
நாம் சொல்வது ஓ – நம்மாற் சொல்லப்படுந் தன்மையதோ? (அன்றென்றபடி); (எ – று.)

இச்செய்யுளில் சிவபெருமான் முப்புரஞ்செற்றதற்கும் திருமால் அறுபுரஞ்செற்றதற்கு முள்ள வேறுபாட்டைத் தெரிவித்தது,
வேற்றுமையணி யாம்: இதனால், திருமால் அறுபுரஞ்செற்றது, சிவபெருமான் முப்புரஞ் செற்றதினும் பாராட்டத்தக்க தென்பது, கருத்து.
நறை – தேனுமாம். பணி – பணத்தையுடையது; பணம் – படம். தழலம்பு – தழல்போன்ற அம்பென்றுமாம்.
பரமசிவனது திரிபுரசங்காரத்துக்குத் திருமால் கணையாக இருந்து துணையாயினாற்போல,
கண்ணன் அறுபுரமழித்தற்குச் சிவனது துணை சிறிதுமில்லை யென்பார்.
“கடும்பவனச்சிறைத்தழலம்பில்லை” என்றார். ஒன்னார் – ஒன்றா ரென்பதன் மரூஉ; (இணங்காதவர்)

———-

அருட்கொண்டல் அன்ன அரங்கர் சங்கு ஓசையில் அண்டம் எல்லாம்
வெருள் கொண்டு இடர் பட மோகித்து வீழ்ந்தனர் -வேகமுடன்
தருக் கொண்டு போகப் பொறாதே தொடரும் சதமகனும்
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவரும் சேனையுமே –64-

(இ – ள்.) தரு கொண்டு போக – பாரிஜாதவிருக்ஷத்தைப் பெயர்த்து(த் துவாரகைக்குக்) கொண்டுபோக,
பொறாதே – (அதனை) மனம்பொறாமல்,
வேகமுடன் தொடரும் – வேகத்தோடு பின் தொடர்ந்துவந்த,
சதமகனும் – நூறுயாகங்களையுடைய இந்திரனும்,
செரு கொண்ட – யுத்தஞ்செய்துநின்ற,
முப்பத்துமுக்கோடி தேவரும் -, சேனையும் – (அவர்களது) சேனைகளும், –
அருள் கொண்டல் அன்ன – கருணையாகிய மழையைப் பொழிகின்ற மேகத்தை யொத்த.
அரங்கர் – திருவரங்கநாதரது,
சங்கு ஓசையில் – சங்கத்தினது நாதத்தினால்,
அண்டம் எல்லாம் – அகிலாண்டங்களும்,
வெருள் கொண்டு – அச்சங்கொண்டு,
இடர் பட – துன்பமடையாநிற்க,
மோகித்து வீழ்ந்தனர்; (எ – று.)

அண்டம் – ஆகுபெயர். செரு – செருக்கு என்பதன் விகாரமுமாம்.
முப் பத்துமுக்கோடி தேவர் – ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர்பதினொருவரும், வசுக்கள் எண்மரும்,
மருத்துவர் இருவருமாகிய முப்பத்து மூவரையுந் தலைவராகவுடைய முப்பத்துமூன்று கூறாகிய தேவர்கள்.
“பலவயினானு மெண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யுளுள்ளே” என்றதனால்,
“சதமகனும் செருக்கொண்ட முப்பத்துமுக்கோடிதேவரும் சேனையும்” என உயர்திணையும் அஃறிணையுங் கலந்து
எண்ணி “வீழ்ந்தனர்” என்று உயர்திணையான் முடிந்தன.

———-

நிணக் கோல நேமித் திரு வரங்கேச நினைக்கினிய
குணக் கோனகையும் கண்டனளோ மணிக் குன்றில் வைகும்
கணக் கோதையர் பதினாயிர வரைக் கைப் பிடிக்க
மணக் கோல மும் பதினாறாயிரம் கொண்டு வாழ்ந்த வன்றே –65-

(இ – ள்.) நிணம் – (பகைவரது) கொழுப்புத் தோய்ந்த,
கோலம் – அழகிய,
நேமி – சக்கரத்தையுடைய,
திருவரங்கேச – ! – (நீ),
மணி குன்றில் வைகும் – இரத்தின பருவதத்திலே தங்கியிருந்த,
கணம் கோதையர் பதினாறு ஆயிரவரை – கூட்டமாகிய பதினாறாயிரங் கன்னிகைகளை,
கை பிடிக்க – பாணிக்கிரகணஞ் செய்தருள,
மணம் கோலமும் பதினாறுஆயிரம் கொண்டு – அத்தனையாயிரங் கலியாணத்திருமேனியை யெடுத்து,
வாழ்ந்தஅன்று – மகிழ்ந்திருந்த அப்பொழுது, –
நினக்கு இனிய – உனது திருவுள்ளத்துக்கு உகப்பாகிய,
குணம் – நற்குணத்தையுடைய,
கோகனகையும் – திருமகளும்,
கண்டனளோ – (உன்னைப்) பார்த்தாளோ? (எ – று.)

தான் ஒருத்தி மனைவியாயிருக்க, நீ பதினாறாயிரவரை மணந்ததை இலக்குமி கண்டிருப்பளாகில்,
தான் ஆறியிருப்பளோ? என்பது, த்வநி. கண்ணபிரான் நரகாசுரவதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட
மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினகிரியிற் பலதிசைகளிலிருந்துங் கொணர்ந்து சிறைவைக்கப்பட்ட
பதினாறாயிரங் கன்னிகைகளையும் ஒவ்வொருவருக்குந் தனித்தனி ஒவ்வொருகணவனாயிருக்கும்படி
அத்தனையாயிரந் திருமேனியெடுத்துப் பாணிக்கிரகணஞ்செய்து அவரவர் மாளிகைகளிலெழுந்தருளி
அவர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தன னென்பதாம்.

கோகனகை – செந்தாமரையாள்: கோகனகம் – கோகநதம் என்பதன் விகாரம்;
அதற்கு – சக்கரவாகங்கள் இனிமையாகப் பேசப்படுவதென்பதுபொருள்.
பதினாறாயிரத்தொருநூற்றுவ ரென்று ஸ்ரீ விஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றது.
கணக்கோதையர் – தேவர், சித்தர், கந்தருவர் முதலிய தேவகணங்களுடைய கன்னிகைக ளென்றுமாம்.
“நிணக்கோலநேமித்திரு வரங்கேச” என்றது – பகைவனைக்கொன்று பதினாறாயிரவரையும் சிறையினின்றும்
மீட்டற்கு ஏற்ற கருவி படைத்தவனே! என்ற குறிப்பு

————–

விடம் தோய் அரவில் துயில் அரங்கேச விசும்பு முட்ட
நடந்து ஓகை தன்னுடன் நாரதன் காண நகைக்கும் முத்து
வடம் தோய் வனமுலை எண் இரண்டாயிரம் மாதர் தங்கள்
இடம் தோறும் நின்று எழில் வேறாய் இருந்தது அங்கு எவ்வண்ணமே –66-

(இ – ள்.) விடம் தோய் – விஷம்பொருந்திய,
அரவில் – ஆதிசேஷசயனத்தில்,
துயில் – யோகநித்திரை செய்தருளுகின்ற, அரங்கேச – ! – (நீ), –
அங்கு – ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில், நாரதன் – ,
விசும்பு முட்ட நடந்து – ஆகாயத்தை யணுகச் சென்று,
ஓகைதன்னுடன் – மகிழ்ச்சியோடு,
காண – பார்க்கும்படி, –
நகைக்கும் – ஒளிவிடுகின்ற,
முத்து வடம் – முக்தாஹாரங்கள்,
தோய் – நிறைந்த,
வனம் முலை – அழகிய தனங்களையுடைய,
எண் இரண்டு ஆயிரம் மாதர்தங்கள் – பதினாறாயிரம் மகளிரது, இடம்தோறும் -,
வேறு எழில் ஆய் – வெவ்வேறு ரூபமாய்,
நின்று இருந்தது – நிலைபெற்றிருந்தது,
எ வண்ணம் – எவ்வாறு? (எ – று.)

நாரதபகவான், ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனைச் சங்கரித்துக் கொண்டு வந்த பதினாறாயிரங் கன்னிகைகளையும்
ஒரு முகூர்த்தத்தில் விவாகஞ் செய்ததைக் கேள்வியுற்று, கண்ணன் அவர்கள் யாவருடனுஞ் செய்யுஞ் செய்கைகளை
யெல்லாங் கண்டு சேவிக்க வேண்டுமென்று அவரவர்களுடைய கிருகங்களிலெல்லாஞ் சென்று,
அவ்வக்கிருகங்கள் தோறும் எம்பெருமான் ஒவ்வொரு திவ்வியஸ்வரூபத்தை வகித்துத் திருவிளையாடல்
செய்தருள்வதைக் கண்டு அதியாச்சரிய மடைந்து துதித்து மகிழ்ந்தன ரென்பதாம்.

தேவர்கள் தோத்திரஞ்செய்வதைக் கேட்டு “இது பகைவர்செய்யும் ஒலியோ?” என்று பொங்கும் பரிவால்
அஸ்தாநே பயசங்கைகொண்டு சீறி விஷத்தைக் கக்குபவன் ஆதிசேஷ னாதலால், இங்கு, அவனை “விடந்தோயரவு” என்றார்;
“ஆங்காரவாரமதுகேட் டழலுமிழும், பூங்காரரவணையான்” என்றார் முதலாழ்வாரும்.
ஓகை – உவகை யென்பதன் மரூஉ. நாரதன் – ஒரு தேவமுனி. நாரம் – மனிதர் கூட்டம்: அதனை, தன் – பேதிப்பவன்;
அன்றிக்கே, நாரம் – மநுஷ்யதர்மத்தை, தன் – கொடுப்பவன் (ஆத்மஞானத்தை உபதேசிப்பவன்) என்றுமாம்.
“நின்றொழில்” என்றும்பாடம். அங்கு – அசை.

————–

பாவிக்க ஒணாத பெருமாள் விநோதம் பகருமதோ
வாவிக்குள்; நாரதன் நாரதி ஆய் ஒரு மன்னவன் தன்
ஆவிக் குலக் கொடி ஆய் நெடும் காலத்து அழிவு இல் இன்பம்
மேவி குடும்பத்து இடும்பை எல்லாம் எய்தி விட்டனனே –67-

(இ – ள்.) பாவிக்க ஒணாத – எண்ண முடியாத,
பெருமாள் – நம்பெருமாளது,
விநோதம் – திருவிளையாட்டு,
பகருமதோ – எளிதிற் சொல்லத்தகுமதோ? (அன்று என்றபடி); (அத்திருவிளையாட்டினால்),
வாவிக்குள் – ஒரு குளத்திலே,
நாரதன் – நாரதமுனிவன்,
நாரதி ஆய் – நாரதி யென்னும் ஒரு மகளாகி,
ஒரு மன்னவன்தன் – ஓரரசனது,
ஆவி – உயிரையொத்த,
குலம் கொடி ஆய் – சிறந்த பூங்கொடிபோன்ற மனைவியாய்,
நெடுங் காலத்து, – பலநாள்,
அழிவு இல் இன்பம் – குறைவில்லாத சிற்றின்பத்தை,
மேவி – அடைந்து;
குடும்பத்து இடும்பை எல்லாம் – குடும்பங்களி லுண்டாகின்ற துன்பங்களையெல்லாம்,
எய்திவிட்டனன் – அடைந்தான்; (எ – று.)

பிரமவிருடிகளையும் மயக்கவல்லது எம்பெருமானது மாயையென்று வியந்து கூறியவாறு.
வேதபுருஷன் எம்பெருமானது குணங்களுள் ஆனந்த குணமொன்றை ஆராயத்தொடங்கி முழுதும் ஆராயமுடியாமல்
“யதோ வாசோநிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸாஸஹ (பரம்பொருளைக் கிட்டமுடியா மல் வாக்குக்கள் மனத்துடன் திரும்புகின்றன)”
என்று கூறுகின்றா னென்றால், மற்றையோர் அப்பிரானை உள்ளபடியுணர்தல் கைகூடாத காரியமென் பதுதேற்றமாதலால்,
“பாவிக்கொணாதபெருமாள்” என்றார். பாவிக்கவொண் ணாத – தொகுத்தல்
“பாவிக்கொணாத பெருமாள் விநோதம் பகருமதோ” என்று கூறியதைப் பின்மூன்றடிகள் சமர்த்தித்து நிற்றலால்,
இச்செய்யுள் – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்.
நாரதி – நாரதனென்பதன் பெண்பால். வாவி – வாபீ: வடசொல். குலக்கொடி – அடையடுத்த உபமவாகுபெயர்.
ஆவிக் குலக்கொடி – உயிர் போன்ற மிக இனிய மனைவி.

————–

தண் துளவம் புனைதார் அரங்கா ஐவர் தையலுக்கு
வண் துகில் ஓன்று அவைக்கண் உற்ற போது தன் மன்னர் முன்னே
கண் துளி சோரத் தொழுது நின் பேர் கட்டுரைத்த பின்னை
ஒண் துகில் கோடி குவிந்தது எம்மாயம் உரிந்து உரிந்ததே –68-

(இ – ள்.) தண் துளவம் புனை – குளிர்ந்த திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட,
தார் – மாலையையுடைய, அரங்கா – !
அவைக்கண் – (துரியோதனனது) சபையிலே,
உற்ற போது – (அவனது தம்பியாகிய துச்சாதனனால் இழுத்து வந்து) சேர்ந்த பொழுது, –
தன் மன்னர் முன்னே – தனது கணவர்களாகிய பாண்டவர்களின் முன்பாக,
கண் துளி சோர – கண்ணீர்த்துளி சிந்தும்படி (அழுது),
தொழுது – வணங்கி,
நின் பேர் – உன்னுடைய திருநாமத்தை,
கட்டுரைத்த பின்னை – உறுதியாகச் சொன்னபின்பு,
ஐவர் தையலுக்கு -அப்பாண்டவரது மனைவியாகிய திரௌபதிக்கு,
வள் துகில் ஒன்று – (துரியோதனனது ஏவலினால் துச்சாதனன் உரிந்த) அழகிய ஆடையொன்றுதானே,
ஒள் துகில் கோடி – ஒள்ளிய அநேகவஸ்திரங்களாக,
உரிந்து உரிந்து – கழன்று கழன்று,
குவிந்தது – திரண்டது,
எ – மாயம் – எவ்வகையான மாயமோ?

துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது திரௌபதியானவள் தனக்குநேரும் மானபங்கத்தைச் சிந்தித்துக்
கண்ணீர் ஆறாய்ப்பெருகவும், துச்சாதனன் பிடித்து இழுத்துவந்தபோது அவிழ்ந்த கூந்தல் அவ்வாறே விரிந்துபுரளவும்,
அவன்வலிய அவிழ்த்தஆடையைத் தன்னாலானவரையுந் தகைந்துபார்த்தும் முடியாமல் தளர்ந்து
அச்செயலொழிந்து தலைமேற் கைகுவியவும், தன்வசந்தப்பிப் பரவசமாய், தத்துவஞானமுதிக்கப்பெற்றவளா தலின்
பர்த்தாக்களாவது பிறதெய்வங்களாவது உதவுவார்களென்ற கருத்தை விட்டு
“பெரிய ஆபத்துக்காலத்தில் உதவுபவன் திருமாலே” என்று துணிந்து அப்பெருமானது திருநாமத்தையே
உச்சரிக்கும்போது மெய்ப்பாட்டினால் உடம்புகுளிரப்பெற்று நாவில் அமிர்து ஊற,
பக்தியின்மேலீட் டினால் உடம்புபுளகமுற, மனம்நெக்குஉருகிக் கிருஷ்ணனைப் பிரார்த்தித்த பிறகு
அவனது திருவருளால் ஆடை மேன்மேல் வளரப்பெற்றன ளென்பதாம்.

இதுவரையில் ஸ்ரீகிருஷ்ணபகவான் செய்தருளிய மாயாசேஷ்டிதங் களைக் கூறிவந்த கவி,
இச்செய்யுளினால் அப்பரமன் தன்சங்கற்பத்தினாற் செய்த காத்தல் தொழிலைக் கூறினாரென்க.
உலகத்தில் விதிவசத்தாற் சுற்ற மாகின்றவர் யாவரும் ஆபத்துக்காலத்தில் உதவமாட்டா ரென்றும்,
எவர்கள் வேறொன்றையும் உபாயமாகப்பற்றாது தன்னையே நம்பித் தன்மீது காப்பாற்றும் பாரத்தை வைக்கின்றார்களோ
அவர்கட்கு எம்பெருமான் தவறாமல் உதவுகின்ற ஆபத்பந்து வாவ னென்றும் இச்செய்யுளில் ஏற்படுதலைக் குறிப்பாக நோக்குக.
“மகத்தான ஆபத்து நேருங்காலத்தில் பகவானாகிய திருமால் தியானிக்கத்தகுந்தவனென்று வசிஷ்டமுனிவர் கூறியுள்ளதை
நினைத்துத் திருமாலைக்குறித்துத் திரௌபதி முறையிடுபவளானாள்” என்று வியாசபாரதம் கூறும்.
“ஸ்திரீகளுக்குப் பர்த்தாக்கள் ரக்ஷகரல்ல ரென்னுமிடம் தர்மபுத்ராதிகள்பக்கலிலும்
நளன்பக்கலிலும் காணலாம்” என்ற ப்ரபந்ந பரித்ராணம் இங்கு நினைக்கத்தக்கது.

திருநாமத்தின் மகிமை இருந்தபடி என்னே! என்று வியந்தவாறு. அத்திருநாமம், கோவிந்த னென்பது.
“ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம் புனல் சோர வளகஞ்சோர,
வேறான துகிறகைந்த கைசோர மெய்சோர வேறோர் சொல்லுங்,
கூறாமற் கோவிந்தா கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்த நாவி,
லூறாத வமிழ்தூற வுடல் புளகித் துள்ளமெலா முருகினாளே” என்னும் பாரதச்செய்யுளை நோக்குக.
எம்பெருமானுக்குப் பல திருநா மங்க ளிருக்கவும் கோவிந்தனென்ற இப்பெயரால் விளித்தது,
இந்திரன் விடாப்பெருமழையைப் பொழிவித்தபோது தம்மாலும் தம்மைப்பாதுகாத்தற்கு உரிய இடையராலும்
காக்கமுடியாமல் தவித்துஅலைகிற நிலையிலே பசுக்களையெல்லாம் யாதொருகுறைவுமின்றிக்
கோவர்த்தனமலையைக் கொண்டு உனதுபேரருளினாற் காப்பாற்றியதுபோலவே,
என்னாலும் என்னைப் பாதுகாக்கவேண்டிய பர்த்தாக்களாலும் பாதுகாக்கமுடியாமல் தவித்து அநந்யகதியாய்
உன்னையே சரணமாக நம்பியிருக்கிற என்னை நீ பேரருள் கொண்டு காக்கவேண்டு மென்ற குறிப்பு.
(“இனி, அரைகுலையத் தலைகுலைய அலமாக்கும்படியாக முடிசூடின பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்;
“கோவிந்த – தன் ஆஸ்ரிதரை நோவுபட விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயித்தது?
“கோவிந்த – நீ கோவிந்தாபிஷேகம் பண்ணிக் கோப்தாவாயிருக்க, ஒருவர்கூறை எழுவருடுக்கும்படி யிருப்பதென்?”
“கோவிந்த – நீ ஆஸ்ரிதரக்ஷணத்திலே தீக்ஷித்திருக்க, “க்ருஷ்ணஸ்ரயா” என்றிருக்கிற என்னைக்ருபைபண்ணாதொழிவதென்?’
‘கோவிந்த – நாராயணாஎன்று உன்சிறுபே ரையோ நான் சொல்லிற்று?……
உன்னிலும்அதிகமான உன் பேரையன்றோ நான் சொல்லிற்று!’
‘கோவிந்த – என்னுடைய ரக்ஷணத்துக்கு மலையெடுக்க வேணுமோ? கண்ணாலே நோக்க அமையாதோ?” என்ற
வியாக்கியான வாக்கியங்கள், இங்கு நோக்கத்தக்கன.)

துளவம் – துளஸீ. ஐவர் – தொகைக்குறிப்பு. இனி, துகில் ஒன்று அவைக் கண் உற்றபோது எனப் பிரித்து,
சபையில் ஒருதுகில் காணப்பட்டபோது என்றுமாம்.

———-

இசை அளவிட்ட அரங்கேசர் ஐவர் தம் ஏவலின் போய்
வசை அளவிட்ட மகிபன் முன்னே வளரும் திரள் தோள்
திசை அளவிட்டன பார் அளவிட்டன சேவடி வான்
மிசை அளவிட்டன பொன் முடி மேல் என் விளம்புவதே –69-

(இ – ள்.) இசை – கீர்த்தியானது,
அளவிட்ட – எல்லாவுலகங்களி லுஞ் சென்று சேரப்பெற்ற, அரங்கேசர் -,
ஐவர்தம் ஏவலின் – பஞ்சபாண் டவர்களது கட்டளையினால்,
போய் – (தூது) சென்று,
வசை அளவிட்ட – இகழ்ச்சிச் சொற்களை மிகுதியாகச் சொல்லிய (அல்லது அபகீர்த்தி மிகுந்த),
மகிபன்முன்னே – துரியோதனனது முன்பே,
வளரும் – மேன்மேல் வளர்ந்த,
திரள் தோள் – திரண்ட (அவரது) தோள்கள்,
திசை அள விட்டன – திக்குக்களை அளாவின;
சேஅடி – சிவந்த திருவடிகள்,
பார் அளவிட்டன – பூமியை அளாவின:
பொன்முடி – பொன்மயமான கிரீடமணிந்த தலைகள்,
மிசை – மேலாக,
வான் – தேவலோகத்தை, அளவிட்டன-;
மேல் – இதனினும் மேலாக,
என் விளம்புவது – யாது சொல்வது? (எ – று.)

இங்குக் குறித்தது, துரியோதனன் தனது சபையில் பாண்டவர்க்குத் தூதாகவந்த கண்ணனைப் படுகுழி பாய்ச்சிச்
சிறையிடத் தொடங்குகையில் கண்ணன் விசுவரூபங்கொண்டபோது உண்டான நிகழ்ச்சியை.
துரியோதனனோ வசையொன்றையே அளவிட்டனன்; நீயோ தோள்களால் திசையையும், சேவடியால் பாரையும்,
முடியால் வானையும் அளவிட்டாய் என ஒருசமத்காரந்தோன்றக் கூறியமை காண்க.
துரியோதனனை “வசை யளவிட்ட மகிபன்” என்றது, கல்வி ஒழுக்கம் முதலிய புகழ்க்குக்காரணமான மேன்மைகளைச்
சிறிதும்பெறாது இழிகுணத்தையே பாராட்டி மிகக் கொண்டவனாதலினால்;
“இசையினும் பெருநன்றெனத் தனதியற்கையால் மிகவளர்த்திடும், வசை” என்பர் பாரதத்தும்.
அளவிட்டன என்ற சொல் ஒரேபொருளிற் பலமுறை வந்ததனால், சொற்பொருட்பின்வருநிலையணி யாம்.

அளவிடுதல் – அளாவிடுதல்; இனி, அளவுவிட்ட என்பதன் விகாரமாகக் கொண்டு
எண்ணிறந்த கீர்த்தியை யுடைய அரங்கேச ரென்றுமாம். மஹிபன் – பூமியைக் காப்பவன்; வடசொல் : மஹீ – பூமி.
முடியாயிரங் கொண்ட மூர்த்தி யாதலால், “அளவிட்டன பொன்முடி” எனப் பன்மையாற் கூறினார்.

————–

மா இரு ஞாயிறு பாரதப் போரில் மறைய அங்கன்
பாய் இருள் நீ தந்தது என்ன கண் மாயம் -பவள நெற்றிச்
சேய் உயர் மா மதில் சூழ் அரங்கேச திரண்டு உதித்த
ஆயிர கோடி திவாகரன் போல் ஒளிர் ஆழி கொண்டே -70-

(இ – ள்.) பவளம் நெற்றி – பவழத்தாலாகிய உச்சியையுடைய,
சேய் உயர் – நெடுந்தூரம் உயர்ந்த,
மா மதில் – பெரிய மதிலால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கஈச – திருவரங்கத்துநாதனே!நீ – ,
பாரதம் போரில் – பாரதயுத்தத்தில்
திரண்டு உதித்த – ஒருங்கே உதயமாகிய,
ஆயிரம் கோடி திவாகரன் போல் – பலகோடி சூரியர்போல,
ஒளிர் – பிரகாசிக்கின்ற,
ஆழிகொண்டு – சக்கரத்தினால்,
மா இரு ஞாயிறு – மிகவும் பெரிய சூரியன்,
மறைய – மறையும்படி,
அங்ஙன் – அவ்வாறு,
பாய் இருள் – பரவிய இருட்டை,
தந்தது – உண்டாக்கியது,
என்ன கண்மாயம் – என்ன கண்கட்டுவித்தையோ? (எ – று.)

அருச்சுனனைக் காத்தற்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் தனதுதிருக்கையிலுள்ள சக்கரத்தினாற் செய்த செயலை இச்செய்யுளினாற் கூறினார்.

மிக்க ஒளிமயமான சூரியனை இருள்மயமானதொரு பொருளைக்கொண்டு மறைப்பதன்றியே,
“ஸுதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்” என்னும்படி கோடிசூரியபிரகாசமமைந்த
திருவாழியாழ்வானைக்கொண்டு மறைத்தது என்னே! என்று வியந்தவாறு.
இனி, கோடிசூரியபிரகாசமான திருவாழியைக்கொண்டு சூரியனைமறைத்தல் எங்ஙனந்தான் கூடுமெனின், –
சூரியனுடையஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும்,
அப்படியில்லாமல் திருச்சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு காணமுடியாதவாறு அளவுபடாத
மிக்கபேரொளியை யுடைமையால் மிகவும் பளபளப்புக்கொண்டு கண்களை இருளப்பண்ணு மெனச் சமாதானங் கூறினர் ஆன்றோர்.

அருச்சுனனும் துரியோதனனும் கண்ணனைத் தத்தமக்குப் பாரதயுத் தத்திற் படைத்துணைசெய்யவேண்டுமென்று அழைத்தபோது,
“போரிற் படையெடாதொழிமின்” என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன்
“நடையுடைப்புரவித்திண்டேர் நானிவற்கூர்வதன்றி, மிடைபடையேவி நும்மோடமர்செயேன் வேந்த” என்று
வாக்குதத்தஞ்செய்துள்ளதையும் மறந்து இங்ஙனஞ் சக்கராயுதத்தைக்கொண்டு தொழில்செய்தத னால்,
தனது வாய்மை தவறியாயினும் அடியார்கட்கு வருகின்ற ஆபத்தைப் போக்கி அவர்களைக் காத்தருள்கிற
பகவானது பேரருளுடைமை வெளியாகின்றது;

“வஞ்சின மறந்து நேமியுந்தரித்து”,
“எழிற்படையெடுக்கிலே னென்றிசைத்த நின்மொழி விட்டு….. முறுகுவெஞ்சினத்த வாழி,
யழற் படையெடுத்தா யன்பர்க்களியை நீ பெரிதுமன்றே” என்பன இங்கு நோக்கத்தக்கன.
இங்குக் கண்ணன் தனது திருவாழியினால் வெயிலைமறைத்தது, “மமப்ராணாஹி பாண்டவா:
(எனக்குப் பிராணன்களன்றோ பாண்டவர்கள்)” என்று கண்ணபிரான் தானே அருளிச்செய்துள்ளபடி
தர்மிஷ்டர்களாகிய பாண்டவர்கள்பக்கல் அவன்கொண்டுள்ள பெருங்கருணையினாலேயே.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனங்களே திருவவதாரத்தின் நோக்க மாதலால், துரியோதனன் பக்கத்தவனான
சயத்திரதனைத் தொலைத்தற்காக இதுசெய்தனன்.
எம்பெருமானுக்குத் திவ்வியாயுதமான திருவாழி வேண்டியபொழுதெல்லாம் வேண்டியவாறெல்லாம் உதவுதல் இயல்பே.

பாரதர் – சந்திரகுலத் தரசனாகிய பரதனுடைய மரபிற் பிறந்தவர்; அவர் – துரியோதனாதியரும், பாண்டவரும்;
இவர்களுள் நிகழ்ந்த போர், பாரதப்போர். திவாகரன் – தனது உதயஅஸ்தமனங்களாற் பகலிரவுகளை உண்டாக்குபவன்:
திவா – தினம்; பகலுமாம். மாஎன்பது உரிச்சொல்லாதலின், அதன்முன் யகரவுடம்படுமெய் தோன்றிற்று.

————-

நெட்டரவின் பெரு மூச்சு எழ வீசு நெருப்பில் வெந்து
பட்ட கடம்பும் தழைத்தது மீள பசும் துளவின்
மட்டு அவிழ் தொங்கல் பொற்றாள் பட வாளி வெந்தீச்
சுட்ட கருங்கட்டையும் பெற்றது அரு உயிர் சொல்வது என்னே –71-

(இ – ள்.) பசு துளவின் – பச்சைத் திருத்துழாயினாலாகிய,
மட்டு அவிழ் – வாசனை வீசுகின்ற,
தொங்கல் – மாலையையுடைய,
அரங்கர் – திருவரங்கரது,
பொன் தாள் – அழகிய திருவடி,
பட – மேற்பட்டமாத்திரத்தில், –
நெடு அரவின் – பெரிய (காளியனென்னும்) நாகத்தினது,
பெரு மூச்சு -,
எழ – எழும்படி,
வீசும் – வீசுகின்ற,
நெருப்பில் – விஷாக்நி ஜ்வாலையில்,
வெந்து பட்ட – எரிபட்டு அழிந்த,
கடம்பும் – கடப்பமரமும்,
மீள தழைத்தது – மறுபடியும் தளிர்த்து வளர்ந்தது;
வாளி வெம் தீ – (அசுவத்தாமன் ஏவிய) அஸ்திரத்தினது கொடிய நெருப்பினால்,
சுட்ட – சுடப்பட்ட,
கரு கட்டையும் – தீந்துபோன கரிய கட்டையும்,
அரு உயிர் பெற்றது – (மீளவும்) அரிய உயிரை அடைந்தது;
சொல்வது என் – (அத்திருவடிகளின் மகிமையைக்குறித்துச்) சொல்வதென்னை? (எ – று.)

கொடிய காளியனென்னும் பாம்பினது விஷாக்கினியினாற் கருகிக் கிடந்த கடப்பமரமும்,
அசுவத்தாமனது அம்பின் வெப்பத்தினாற் கருகிப் போன கருப்பிண்டமும் கண்ணபிரானது திருவடி பட்ட
மாத்திரத்தால் முறையே தளிர்த்தும் உயிர்பெற்றும் வளர்ந்தமை கூறி அவ்வெம்பெருமானது
அகடிதகடநாசாமர்த்தியத்தை இச்செய்யுளில் விளக்கியவாறு.

மீள என்பதனை “ஆருயிர்பெற்றது” என்பதனோடுங் கூட்டுக.
வாளி – அபாண்டவாஸ்திர மென்பர். சுட்ட கருங்கட்டை – அபிமந்யுவின் மனைவியாகி உத்தரையின் வயிற்றுக்கரு.
“மீளஉருப்பெற்றது” என்றது, இளங்குழந்தையாகி நன்றாக வளர்ந்தமையை.
அவ்வாறு வளர்ந்தவனே பிறகு பரிக்ஷித்துமகாராஜனாயினனென அறிக.

————–

தாளால் சகம் கொண்ட தார் அரங்கா பண்டு சாந்திபன் சொல்
கேளா கடல் புக்க சேயினை மீட்டதும் கேதமுடன்
மாளாப் பதம் புக்க மைந்தரை மீட்டதும் மாறு அலவே
மீளாப் பதம் புக்க பாலரை நீ அன்று மீட்டதற்கே –72-

(இ – ள்.) தாளால் – திருவடியால்,
சகம் கொண்ட உலகங்களை அளந்து வசப்படுத்திக்கொண்ட,
தார் – மாலையையுடைய, அரங்கா -!
பண்டு – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்), நீ -,
சாந்திபன் – சாந்தீபிநியென்னும் ஆசாரியனது,
சொல் – வார்த்தையை,
கேளா – கேட்டு,
கடல் புக்க சேயினை – கடலில் முழுகி யிறந்துபோன (அவனுடைய) புத்திரனை,
மீட்டதும் – திரும்பவுங் கொண்டு வந்து (குருதக்ஷிணையாகக்) கொடுத்ததும், –
கேதமுடன் – வருத்தத்தோடு,
மாளா பதம் – புகுதற்கரிய பாதாளலோகத்தை,
புக்க – அடைந்த,
மைந்தரை – (இரணியகசிபுவின் குமாரரும் தேவகியின் கருப்பத்திற் சேர்ந்தவருமாகிய) அறுவரையும்,
மீட்டதும் – திரும்பவும் (தனதுதாயானதேவகி காணும்படி) கொண்டுவந்துகொடுத்ததும், –
அன்று – அந்நாளில்,
மீளா பதம் – மீண்டுந் திரும்பவொண்ணாத பரமபதத்தை,
புக்க – அடைந்த,
பாலரை – (வைதிக னொருவனது) புத்திரரை,
மீட்டதற்கு – திரும்பவுங் கொண்டுவந்து கொடுத்ததற்கு,
மாறு அல – ஒப்பாகமாட்டா; (எ – று.)

இதனால், ஸ்ரீகிருஷ்ணபகவான் தானே நடந்துசென்று இறந்தஉயிரை மீட்டுப் பாதுகாத்தமை சொல்லப்பட்ட தென்க.
கடலிற்புக்கசேயும் பாதாளத்திற்புக்க மைந்தரும் மீளுதற்குஉரிய இடத்திற் சென்றன ராதலால்
அவர்களை மீட்டலில் ஓர்அருமைப்பாடு இல்லை; பிறப்பகத்தே மாண்டொழி ந்த பிள்ளைகள் நால்வரோ
மீளாவுலகமாகிய பரமபதத்திற் புக்கன ராதலால் அவர்களை மீட்டுக்கொடுத்தது முன்னையசெயல்களினும்
மிகவும் பாராட்டத்தக்கதொன்று என்பது கருத்து.
இனி, மீளாவுலகம்புக்க மைந்தர் மீண்டது எங்ஙனமோ வெனின், –
பரமபதஞ்செல்லுதற்குத் தூமாதிமார்க்க மென்றும் அர்ச்சிராதிமார்க்க மென்றும் இரண்டுவழிகள் உள்ளன;
பகவானைத்தியானித்ததன் பயனாக அந்தஎம்பெருமானருளாற் பரமபதமடைகின்றவர் அர்ச்சிராதிமார்க்கத்தாற் செல்லுதலால் மீளுதலிலராவர்;
தூமாதிமார்க்கத்தாற்சென்றாலோ மீண்டுவரலாம்; பிராட்டிமார் கிருஷ்ணாவதாரத்தின் வடிவழகைத் தாம் தரிசிக்க வேணுமென்று
கருதித் தூமாதிமார்க்கத்தால் அப்பிள்ளைகளை யெடுத்துப்போய் வைத்தன ராதலின்,
அவர்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானால் மீட்டுக்கொணரப்பட்டன ரென்பர்.
இச்செய்யுளில் மீளாப்பதம் புக்க பாலரை மீட்டலாகிய மேற்செயலோடு ஒப்பிடுகையில் கடல்புக்கசேயினை மீட்டதும்
மாளாப்பதம்புக்கமைந்தரை மீட்டதும் குறைவுள்ளனவா மெனக்கூறியதனால், மலர்ச்சியணி தோன்றுதல் காண்க;
இது, வடமொழியில் “உல்லாஸாலங்காரம்” எனப்படும். சாந்திபன் – விகாரம். கேளா மீட்டதென்க.

(“மாதவத்தோன்புத்திரன்போய்மறிகடல்வாய்மாண்டானை,
யோதுவி த்ததக்கிணையாவுருவுருவேகொடுத்தான்,”
“வேதவாய்மொழியந்தணனொ ருவன்எந்தைநின்சரண்என்னுடைமனைவி,
காதல்மக்களைப்பயத்தலுங்கா ணாள்கடியதெய்வங்கொண்டொளிக்குமென்றழைப்ப,
ஏதலார் முன்னேயின் னருளவற்குச்செய்து உன் மக்கள் மற்றிவரென்று கொடுத்தாய்,”
“பூவைபோ லத் தேவகிவந்துசெவ்வாய்திறந்தனள்செப்பலுற்றாள்”,
“துஞ்சியபுதல்வற் கொண்டுதுணையறுகுரவற்குய்த்தாய்,
வெஞ்சினவுருமேறன்னவெகுளியங் களிநல்யானைக்,
கஞ்சன்முன்கோறல்செய்தகருங்கடற்பவளச்செவ்வாய்,
மஞ்சரைத்தருகவென்றுமனங்குழைந்துரைத்துநைந்தாள்,”
“இளங்கிளிமழலை யன்னை யிசைத்தசொற் கேட்டலோடும்,
உளங்கசிந்துருகவின்னேயுய்த்து நீகாண்டியென்னாக்,
களங்கனிவண்ணன் மற்றைக்கலைமதிவண்ணனோடு,
வளங்கெழுசுதல்லோகம்வல்லையிற்சென்றுசார்ந்தான்”,
“காவலனாகிமற் றுக்கண்ணகலுலகங்காக்கும், மாவலியெதிர்கொண்டேத்திமலரடியிரண்டி னானே,
மூவகையுலகங்கொண்டமுழுமுதலுற்றவண்ணம், யாவதோவென் னப்பூவை வண்ணனாங்கினிதியம்பும்”,
“ஆறறிமரீசிமைந்தரறுவருமலரோ னீன்ற, நாறிணர்க்கோதைகொங்கைநயந்தனரென்றுதக்கார்,
வீறினால் விரிஞ்சன்சாவவிளைவினாலவுணராகி, யீறிலாவுணர்வுகுன்றியிரணியற்குதித் தாரன்றே”,
“சிறந்தவெண்முறுவற்செவ்வாய்த்தேவகியகட்டின்மீட்டும்,
பிறந்தனர்பிறங்குஞாங்கர்ப்பெரும்படைக்கஞ்சன்வீட்ட,
இறந்தனர்வந்து நின்பாலிருந்தனர்தருகவென்றாங்,
குறைந்தவர் தமைக்கொண்டெய்தியுய்த் தனனன்னைக்கன்றே”,
“முந்து நூலும் முப்புரிநூலும்முனீந்த, அந்தணாளன் பிள்ளையைஅந்நான்றளித்தான்”,
“ஓதுவாய்மையுமுவனியப்பிறப்புமுனக்கு முன்தந்த அந்தணனொருவன்,
காதலென்மகன்புகலிடங்காணேன் கண்டு நீதருவாயெனக்கென்று,
கோதில்வாய்மையினானுனைவேண்டியகுறைமுடித் தவன்சிறுவனைக்கொடுத்தாய்”,
“தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய, வென்னப்ப”,
“பிறப்பகத்தே மாண்டொழிந்தபிள்ளைகளைநால்வரையும்,
இறைப்பொழுதிற்கொணர்ந்து கொடுத்தொருப்படுத்தவுறைப்பன்”,
“மாமறையோன் பால்தோன்றி, மாண் டாரைப்பண்டழைத்தார்” என்பன இங்கு நோக்கத்தக்கன.)

———–

பொரும் கேதனப்படை மன்னரை மாய்த்து புவி மடந்தை
பெரும் கேதம் நீக்கி நடந்தது மீள பிறங்கு புள்ளின்
வரும் கேசவன் சக்கர மாயோன் அரங்கன் வரவிடுத்த
கருங்கேசம் ஓன்று தன் இச்சையிலே செய்த காரியமே –73-

(இ – ள்.) பொரும் – போர் செய்கின்ற,
கேதனம் படை – துவசங்க ளோடுகூடிய படையையுடைய,
மன்னரை – அரசரை,
மாய்த்து – அழித்து,
புவி மடந்தை – நிலமகளது,
பெரு கேதம் – பெரிய துன்பத்தை,
நீக்கி -, மீள நடந்தது – திரும்ப நடந்த தொழிலானது, –
பிறங்கு புள்ளின் வரும் – விளங்குகின்ற பெரியதிருவடியின்மேல் எழுந்தருளுகின்ற,
கேசவன் – கேசவனென்னுந் திருநாமமுடையவனும்,
சக்ரம் – சக்கரத்தையுடைய,
மாயோன் – மாயையையுடையவனும்,
அரங்கன் – திருவரங்கநாதனுமாகிய திருமால்,
வர விடுத்த – வரும்படி அனுப்பியருளிய,:
கரு கேசம் ஒன்று – கரிய உரோம மொன்று,
தன் இச்சையிலே செய்த காரியம் – தனது விருப்பத்தின்படி அலட்சியமாகச் செய்த தொழிலாகும்; (எ – று.)

கவி இச்செய்யுளோடு கிருஷ்ணாவதாரத்தை முடிக்கின்றன ராதலின், அவதாரகாரணத்தையும் அதன்பயனையும்
இப்பாசுரத்திற் கூறினாரென்க. பொரும் படை யென்று கூட்டுக.
கேதம் – அதிகபாரத்தைப் பொறுக்க மாட்டாமையா லுற்ற துன்பம்.
கேசவன் என்பதற்கு – கேசியென்கிறஅசு ரனைக் கொன்றவ னென்றும்,
பிரம ருத்திரர்கள் தன்னிடத்தி லுண்டாகப்பெற்றவ னென்றும்,
பிரம ருத்திரர்கள் தன்னிடத்தி லிருக்கப்பெற்றவ னென்றும்,
அழகிய மயிர்முடியை யுடையவ னென்றும் காரணப்பொருள்கள்படும்; வடசொல்.

பூமிதேவி, தன்மேலிருக்கின்ற பெரிய அசுரர்களா லுண்டான மிகுந்த பாரத்தைப் பொறுக்கமாட்டாதவளாய்த் துன்ப முற்றுப்
பிரமதேவன் முதலான தேவர்களின்முகமாய் ஸ்ரீமந்நாராயணனைத் துதிசெய்து பிரார்த்திக்க, அவ்வெம்பெருமான்
தமது திருமேனியினின்றும் வெண்மையுங் கருமையுமான மயிர்கள்போற் காணப்பட்ட தேஜசுகளை யெடுத்து,
“இந்த எனது தேஜசுகள் பூமியில் தேவகியின் கருப்பத்தில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தினா லுண்டாகின்ற துன்பத்தை நீக்கும்”
என்று நியமித்து விட, அந்தத் தேஜசுகளே ஸ்ரீராமகிருஷ்ணர்களாய்த் திருவவதாரஞ்செய்து மிகவுங் கொடிய
அசுரரையும் அரசரையு மெல்லாஞ் சங்கரித்தருளிப் பூமிபாரத்தை நீக்கின வென்பது, இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

———–

ஸ்ரீ வேத வியாசாவதாரம்

அராவணையில் துயில் தென் அரங்கா மறை ஆயும் வண்ணம்
பராசரன் மா மகன் ஆகிய நீ பண்டு பாரதப் போர்
பொரா விழும் நூற்றுவர் சேனை எல்லாம் புனல் கங்கை வெள்ளத்
தராதல மேல் வரக் காட்டியவா தந்தை சந்திக்கவே –74-

(இ – ள்.) அரா அணையில் துயில் தென் அரங்கா – ! –
மறை ஆயும் வண்ணம் – வேதங்களை ஆராய்ந்து சீர்திருத்தும்படி,
பராசரன் மா மகன் ஆகிய – பராசரமுனிவரது சிறந்த புத்திரராகிய வியாசமுனிவராக அவதரித்த, நீ -,
பண்டு – முன்னே,
பாரதம் போர் – பாரதயுத்தத்தில்,
பொரா – போர்செய்து,
விழும் – இறந்துகிடந்த,
நூற்றுவர் – துரியோதனாதியர் நூற்றுவரது,
சேனை எல்லாம் – எல்லாச் சேனைகளையும்,
தந்தை சந்திக்க – (அவர்களது) தாதையாகிய திருதராட்டிரன் கூடிக் காணும்படி,
கங்கை புனல் வெள்ளம் தராதலமேல் – கங்கைஜலத்தின்பிரவாகத்தினிடத்தின்மேல்,
வர – வரும்படி,
காட்டிய ஆ – காண்பித்த விதம், (என்னே!) (எ – று.)

திருமாலின் தசாவதாரங்களைச் சொல்லிக்கொண்டுவந்த ஆசிரியர் இடையே வேதவ்யாஸமுனிவரது அவதாரத்தைக் கூறியது,
இவர் விஷ்ணு வின் அம்சமேயாதலாலும், கிருஷ்ணாவதாரகாலத்தோடு சமகாலத்தவராத லாலும்,
பாண்டவதுரியோதனாதியர்க்கு உறவினராய் ஸ்ரீகிருஷ்ணபகவானைப் போலவே அவர்கட்கு ஹிதாஹிதங்களை
உபதேசித்துவந்தமையாலு மென்னலாம்.
வேதங்களெல்லாம் சிதறி ஒன்றோடொன்று கலந்து ஓதற்கரிதாகி யிருந்த நிலையில்,
திருமால் வியாசரென்னும் பெயருடன் பராசரமுனிவர்க்குப் புத்திரராகத் திருவவதரித்து அவற்றைச் செம்மைப்படுத்தி
ருக் யஜுர்ஸாம அதர்வணங்க ளென்று நான்காகப் பகுத்தன ராதலால், “மறையாயும் வண்ணம் பராசரன்மாமகனாகிய நீ” என்றார்:
இவ்வாறு வேதங்களைப் பகுத்ததனால்தான், இவரை வ்யாஸரென்றும், வேதவ்யாஸரென்றும் வழங்குவரென்க.
பராஸர என்ற வடசொல், பரர்களான (பகைவர்களான) குத்ருஷ்டிகளை ப்ராமாணிகமான தர்க்கங்களாலே
நன்றாக ஹிம்ஸிப்பவ னென்றுகாரணப்பொருள்படும்.
பராசரபகவான் – வசிஷ்டமகாரிஷியினது பௌத்திரர்; புலஸ்திய முனிவரது அனுக்கிரகத்தால் சகல சாஸ்திரஞானமும் பெற்று,
வஸிஷ்டருபதேசத்தால் தத்துவஞானியாகி, பராசரஸ்மிருதியென்று வழங்கப்படும் கலியுகதர்மசாஸ்திரத்தையும்
புராணரத்நமெனப்படும் விஷ்ணுபுராணத்தையும் உரைத்தருளினர்.
ஆ – ஆறு என்பதன் விகாரம். என்னே எனவருவித்து முடிக்க.

———–

கல்கி திருவவதார வைபவம் –

தருமந்தவிர்ந்து பொறை கெட்டு சத்தியம் சாய்ந்து தயை
தெருமந்து தன் பூசனை முழுதும் சிதைய கலியே
பொரும் அந்தக் காலக் கடையினில் எம்பொன் அரங்கன் அல்லால்
அருமந்த கற்கி என்று ஆரே அவை நிலை ஆக்குவரே –75–

(இ – ள்.) தருமம் தவிர்ந்து – தருமங்கள் விட்டு விலகி,
பொறை கெட்டு – பொறுமை அழிந்து,
சத்தியம் சாய்ந்து – உண்மையொழிந்து,
தயை தெருமந்து – அருள் நிலைகலங்கி,
தன் பூசனை முழுதும் – தனது திருவாராதன முழுவதும்,
சிதைய – கெட,
கலியே பொரும் – பாவமே வெல்லுகின்ற,
அந்த காலம் – அந்தக் கலியுகத்தினது,
கடையினில் – முடிவில், –
எம் பொன் அரங்கன் அல்லால் – எமது அழகிய திருவரங்கநாதனல்லாமல்,
அருமந்த – கிடைத்தற்கரிய தேவாமிருதத்தையொத்த,
கற்கி என்று – கற்கியென்று திருவவதாரமெடுத்து,
அவை – அத்தருமம் முதலியவற்றை,
ஆரே – வேறு யாவர்தாம்,
நிலை ஆக்குவர் – நிலைபெறச் செய்வர்? (ஒருவரு மில்லை) ; (எ – று.)

திருமாலினது தசாவதாரங்களுள் மத்ஸ்யாவதாரம் முதலியவற்றில் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநங்கள்
முக்கியமானவையென்றும், இந்தக் கல்கியவதாரத்தில் தர்மஸம்ஸ்தாபநமே முக்கியமா மென்றும் உணர்க.

பொன் அரங்கன் – அழகிய அரங்கன்; அன்றிக்கே, கிடைத்தற்கரிய பொன்போன்ற அரங்கன்:
இலக்குமிக்குக் கணவனாகிய திருவரங்கநாதனு மாம். அருமந்த – அருமருந்தன்ன என்பதன் மரூஉ.
கற்கி – கல்கி; குதிரை. இது, எம்பெருமானது பத்தாந் திருவவதாரம். சந்தவின்பம்நோக்கி, அந்த காலமென இயல்பாயிற்று.

—————-

அந்தர்யாமி வைபவம்

தெள்ளும் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் சிலாகிக்குமாறு
எள்ளும் கரந்து உரை எண்ணெயும் போல் எண் இல் கோடி அண்டத்து
உள்ளும் புறம்பும் ஒழியாது நின்றும் உகங்கள் தொறும்
கொள்ளும் திரு உரு எல்லாம் அவர் அறி கோலங்களே –76-

(இ – ள்.) தெள்ளும் – தெளிவாகிய,
பொன்னி புனல் – காவேரிநதியி னது,
நல் நீர் – நல்ல நீர் சூழ்ந்த,
அரங்கர் – திருவரங்கத்துநாதர், –
சிலாகிக்கும் ஆறு – (யாவரும்) புகழும்படி,
எண் இல் – அளவில்லாத,
கோடி அண்டத்து – அண்டகோடிகளது,
உள்ளும் – உள்ளிடத்திலும்,
புறம்பும் – வெளியிடத்திலும்,
எள்ளும் -, கரந்து உறை – (அதற்குள்ளே) மறைந்து தங்குகின்ற, எண்ணெயும் போல் -,
ஒழியாது நின்றும் – நீங்காது பொருந்தியிருந்தும்,
உகங்கள்தோறும் – யுகங்களிலெல்லாம்,
கொள்ளும் – கொள்ளுகின்ற,
திருஉரு எல்லாம் – அழகிய ரூபங்களெல்லாம்,
அவர் அறி கோலங்களே – அவர் தமது இச்சையினா லெடுத்த திருவவதாரங்களேயாம்; (எ – று.) – ஏ – தேற்றம்.

எம்பெருமான் உலகத்திலுள்ள சேதநாசேதநப்பொருள்களது உள்ளே யும் புறம்பேயும் பிரியாமல் உடனுறையுந் தன்மை,
இச்செய்யுளின் முதல் மூன்றடிகளிற் குறிக்கப்பட்டது.
எம்பெருமான் “ஸாதுக்களை ரக்ஷிக்கும் பொருட்டும், துஷ்டர்களை நிக்கிரகிக்கும்பொருட்டும்,
தருமத்தை நிலை நிறுத்தும் பொருட்டும் யுகங்கள்தோறும் திருவவதரிக்கிறேன்” என்று அருளிச்செய்தபடி
அவ்வப்போது கொள்ளும் அவதாரங்களெல்லாம் தன் விருப்பத்தினாற் கொள்வனவன்றிப் பத்தசேதநரைப்போலக்
கருமவசத் தினாலாவனவல்ல என்னும் உண்மையை ஈற்றடியால் விளக்கினார்.

———-

தத்துவ உண்மை

உம்பர்க்கு அரிய பெருமாள் அரங்கர் தம் உண்மை எல்லாம்
இம்பர்க்கு உலகில் வெளியிட்டவே சரண் இல்லை என்று ஓர்
கும்பக் கட கயம் கூப்பிடச் சென்றதும் கோளரியாய்த்
தம்பத்து உதித்ததும் தாழிக்கு வீட்டினைத் தந்ததுமே –77-

(இ – ள்.) கும்பம் – குடம்போன்ற,
கடம் – மஸ்தகத்தையுடைய,
ஓர் கயம் – ஒப்பற்ற கஜேந்திராழ்வான்,
சரண் இல்லை என்று கூப்பிட – (தடா கத்தில் முதலையாற் பிடிப்புண்டு) “(நினது) உபயசரணமல்லாமல் (எனக்கு) வேறுசரண மில்லை” என்று அழைக்க, –
சென்றதும் – (அதனைப் பாதுகாத் தற்குப் பெரியதிருவடியின்மே லேறிப்) போனதும், –
கோள் அரி ஆய் – வலிமையையுடைய நரசிங்கமாய்,
தம்பத்து – கம்பத்தில்,
உதித்ததும் – திருவவதரித்ததும், –
தாழிக்கு – (ததிபாண்டனது) தயிர்த்தாழிக்கு,
வீட்டினை – பரம பதத்தை,
தந்ததும் – கொடுத்ததும், –
உம்பர்க்கு – தேவர்களுக்கும்,
அரிய – காணுதற்கரிய,
பெருமாள் அரங்கர்தம் – பெரியபெருமாளது,
உண்மை எல்லாம் – தத்துவத்தின் இரகசியங்களையெல்லாம்,
இம்பர்க்கு உலகில் – இவ்வுலகத்திலுள்ளார்க்கு, வெளியிட்ட – வெளிப்படுத்திவிட்டன; (எ – று.)

கஜேந்திராழ்வானைப் பாதுகாத்து நற்கதியளித்தது முதலிய எம்பெரு மானது செயல்கள்,
மற்றைத்தேவரன்றித் திருமாலே பரம்பொரு ளென்னுந் தத்துவத்தை விளக்கு மென்பது கருத்து.
உம்பர்க்கரியபெருமா ளென்ற சொற்போக்கில், அன்பர்க்கெளிய பெருமாளென்பது தொனிக்கும்.
கஜேந்திராழ்வான் “ஆதிமூலமே!” என்று விளித்தபோது அதற்குச் சேவைசாதித்ததனால் திருமாலே பரம்பொருளென்பதும்,
இங்கில்லையோவென்று இரணியன் தூண்புடைப்ப அங்கு அப்பொழுதே தோன்றியமையால் அப்பிரானது அந்தர்யாமித்வமும்,
தாழிக்கு முத்தியளித்ததனால் மோக்ஷப்ரதத்வமும் வெள்ளிடைமலைபோலத் தெள்ளிதிற் புலனாதல் காண்க.
கயம் – கஜம், தம்பம் – ஸ்தம்பம்; வடசொற்கள்.

————

எம்பெருமானது பரிகாரங்கள் -ஏவல் செய்வோர் –

பொங்கு அரவு எனபது மெல் அணை ஊர்தி வெம் புள் அரசு
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப் பவன் சேய்
கிங்கரர் விண்ணவர் சாதக நாடு இறை கேடில் ஒன்றாய்
அம் கண் நெடும் புவி எல்லாம் இடந்த அரங்கருக்கே –78-

(இ – ள்.) கேழல் ஒன்று ஆய் – ஒப்பற்ற வராஹஸ்வரூபியாய்,
அம் கண் – அழகிய இடத்தையுடைய,
நெடு – நீண்ட,
புவி எல்லாம் – பூமிமுழுவதையும்,
இடந்த – கோட்டாற் குத்தியெடுத்த,
அரங்கருக்கு, –
பொங்கு அரவு என்பது – சீறுகின்ற ஆதிசேஷன்,
மெல் அணை – மெல்லிய படுக்கை (மெத்தை;)
வெம் புள் அரசு – உக்கிரமான பெரியதிருவடி,
ஊர்தி – வாகனம்;
பங்கயம் மின்னொடு பார்மகள் – தாமரைமலரில் தோன்றிய மின்னல்போன்ற திருமகளும் நிலமகளும்,
தேவி – மனைவியர்;
படைப்பவன் – படைப்புத்தொழிலையுடைய பிரமன்,
சேய் – புத்திரன்;
விண்ணவர் – தேவர்கள்,
கிங்கரர் – ஏவல் செய்பவர்;
சாதக நாடு – பரமபதம்,
இறை – வீற்றிருக்குமிடம்; (எ – று.)

மின் – உவமவாகுபெயர்.
“போனகம் பதினாலு புவனந் திருப்பள்ளி பொறியரவணைப் பாற்கடல் பூமடந்தையு நிலமடந்தையுந்
தேவியர் புராத னமறைக்கு மெட்டா, வானகம் பேரின்பமுடன் வீற்றிருக்கு மிடம் வாகனம்
வயினதேயன் மலர்வந்த நான்முகன் திருமைந்த னவன்மைந்தன் மதி சூடி வாசவன்முதற், றேனகுந்
தொடைமௌலி முப்பத்து முக்கோடி தேவருன தேவல்செய்வோர்” என்பர், திருவரங்கக்கலம்பகத்தும்,
ஸாதகர் – உபாஸநை செய்வோர்; அவர் தாம்செய்யும் உபாசனையினாற் பெறுதற்கு உரிய நாடாதலின், பரமபதத்தை “சாதகநாடு” என்றார்.

———-

இதுவும் அது –

சிங்காதனம் பொற் கிரி திரு மஞ்சனம் தெய்வ விண் நீர்
கொங்கு ஆர் தொடை உடுத் தாமம் சுடர் உடைக் கோள் விளக்கம்
பொங்கு ஆழி மண் திருப் போனகம் ஆக்கினர் புண்டரிகை
தம் காதலர் நம் பெருமாள் அரங்கர் தமக்கு முன்னே –79-

(இ – ள்.) புண்டரிகைதம் காதலர் – திருமகள்கேள்வராகிய,
நம்பெரு மாள் அரங்கர் – , –
முன்னே – முற்காலத்தில், தமக்கு -,
பொன்கிரி – மேரு மலையை,
சிங்காதனம் – ஸிம்ஹாஸநமும்,
தெய்வம் விண் நீர் – தேவலோகத்திலுள்ள கங்கையை, திருமஞ்சனம் அபிஷேகமும்,
உடு தாமம் – நக்ஷத்திரங்களின் வரிசையை,
கொங்கு ஆர் தொடை – வாசனை நிறைந்த மாலையும்,
சுடர் உடை கோள் – ஒளியையுடைய கிரகங்களை,
விளக்கம் – தீபமும்,
பொங்கு ஆழி மண் – பொங்குகின்ற கடல்சூழ்ந்த பூமியை,
திரு போனகம் – இனியஉணவும்,
ஆக்கினர் – ஆகச் செய்துகொண்டனர்; (எ – று.)

சிங்காதனம் = ஸிம்ஹாஸநம்; சிங்கந் தாங்குவது போலச் செய்யப்பட்ட பீடம்,
சுடருடைக்கோள் – சூரியசந்திரர்களாகவுநாம். “பொங்காழிமண்” என்றதனால், மண் – உணவும்,ஆழிநீர் – பருகும் நீருமாகு தமன்க.

————-

தேவிமார்களின் சிறப்பு –

தேமா மலர்க்கயம் சூழ் கோயில் மேவும் திரு அரங்கர்
தாம் ஆதரித்த திருத்தேவி மாரில் தரங்க உடைப்
பூ மாது நாளும் புரத்தே சுமந்து புரக்கும் மலர்
மா மாது செல்வம் கொடுத்தே உயிர்களை வாழ்விக்குமே –80-

(இ – ள்.) தேன் – தேனையுடைய,
மா – பெரிய,
மலர் – பூக்கள்நிறைந்த,
கயம் – தடாகங்கள்,
சூழ் – சூழ்ந்த,
கோயில் – திருவரங்கம்பெரியகோயிலில்,
மேவும் – எழுந்தருளி யிருக்கின்ற, திரு அரங்கர் -,
தாம் ஆதரித்த – தாம் அன்புவைத்த,
திரு தேவிமாரில் – அழகிய (திருமகள் நிலமகளென்னும்) உபய தேவியர்களுள், –
தரங்கம் உடை – கடலை உடுக்குமாடையாக வுடைய,
பூமாது – நிலமகள்,
நாளும் – எந்நாளும்,
உயிர்களை – புரத்து – தனது உடம்பின் மேலே,
சுமந்து – தாங்கி
புரக்கும் – காப்பாற்றுவாள்;
மலர் மா மாது – தாமரையில் தோன்றிய திருமகள்,
செல்வம் கொடுத்து வாழ்விக்கும் – (அவ்வுயிர்கட்குச்) செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள்; (எ – று.)

எம்பெருமானது வலப்பக்கத்தில் ஸ்ரீதேவியும், இடப்பக்கத்தில் பூதேவி யும் எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடன் உறைவ ரென்க.
திருமால் காத்தல்தொழிற்கடவு ளாதலால் அவனது தேவிமார்தாமும் தமது கொ” நனுக்கு ஏற்ற குணமுடையவராய்க்
காத்தல் தொழிற்கு உபகாரப்பட்டிருப்ப ரென்று இப்பாசுரத்தால் அருளிச்செய்கிறார்.
தரங்கம் . ஆகுபெயர். பூ, மா – வடசொற்கள். மா – இலக்குமி. “புறத்தே” என்றும் பாடம்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading