ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -41-60-

மாதவர் உம்பர் பெருமாள் அரங்கர் வலி உணராது
ஆதவன் மைந்தன் அயிரத்த அந்நாள் இலக்கு ஆய நெடும்
பாதவம் ஏழும் உடனே நெடும் கனை பட்டு உருவ
பூதலம் ஏழும் எழு பாதலங்களும் புண் பட்டவே –41-

இ – ள்.) மாதவர் – மாதவனென்னும்ஒருதிருநாமமுடையவரும்,
உம்பர் பெருமாள் – தேவர்கட்குத் தலைவரு மாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரது அவதாரவிசேஷமான இராமபிரானது,
வலி – வலிமையை,
உணராது – அறியாமல்,
ஆதவன் மைந்தன் – சூரியனது குமாரனான சுக்கிரீவன்,
அயிர்த்த அ நாள் – சந்தேகித்த அக்காலத்தில்,
இலக்கு ஆய – (அச்சுக்ரீவன்சொன்ன படி இராமபாணத்திற்கு) எய்யும்இலக்காகிய,
நெடும் பாதவம் ஏழும் – பெரிய மராமரங்க ளேழும்,
உடனே – ஒருசேர,
நெடுங் கணை பட்டு உருவ – நீண்ட அவ்விராமபாணம் பட்டுப் பாய்ந்து துளைத்தோடிச்செல்லப்பெற,
(அந்த அம்பினாலேயே),
பூதலம் ஏழும் ஏழு பாதலங்களும் புண்பட்ட – பூமி முதலிய மேலுலகங்க ளேழும் (அதலம் முதலிய) கீழுலகங்க ளேழும் விரணமடைந்தன; (எ – று.)

இராமபாணம் அம்மராமரங்களேழுடனே ஏழுலகங்களையும் துளை படுத்தியமையை,
“ஏழுமாமரமுருவிக் கீழுலகமென்றிசைக்கும், ஏழுமூடு புக்குருவிப்பின்னுடனடுத்தியன்ற,
ஏழிலாமையான்மீண்ட தவ்விராகவன் பகழி, ஏழுகண்டபினுருவுமா லொழிவதன்றின்னும்,”
“ஏழுவேலையு முலக மேலுயர்ந்தனவேழும், ஏழுகுன்றமு மிருடிகளெழுவரும் புரவி,
ஏழு மங் கையரெழுவரு நடுங்கின ரென்ப, ஏழுபெற்றதோ விக்கணைக் கிலக்கமென் றெண்ணி” என்ற கம்பராமாயணங்கொண்டும் உணர்க.

“இராமபிரானது வலிமையை யுணராது” என்ற பொருளில் “அரங்கர் வலியுணராது” என்றது,
இந்த அர்ச்சாவதாரமும் அந்த விபவாவதாரமும் ஆகியஇரண்டும் ஸ்ரீமந்நாராயணனது திருமூர்த்திகளே யாதலால்
அவ்வொ ற்றுமைநயம்பற்றி யென்க. இவ்வுரை, முன்னும் பின்னும் கொள்ளத்தக்கது.
ஆதவன் மைந்தன் – மேருமலையின் வடபுறச்சிகரத்தி லுள்ளதொரு சரசில் மூழ்கி யெழுந்தமாத்திரத்தாற் பெண்
வடிவமடைந்த ருக்ஷரஜஸ்என்னும் வாநரராஜனது கழுத்தினழகைக் கண்டு காதல்கூர்ந்த சூரியனது அநுக் கிரகத்தால்
அப்பெண் குரங்கினிடம் தோன்றினவன் சுக்கிரீவ னென்று உணர்க.
சுக்கிரீவனுக்கு “மஹாராஜர்” என்பது, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் பெயர். மராமரம் – ஒருவகை ஆச்சாமரம்.

மாதவர், ஆதபன், பாதபம், பூதலம், பாதலம் – வடசொற்கள்.
மாதவன் – மா -இலக்குமிக்கு, தவன் – கணவன் என்று காரணப்பொருள்படும்.
இனி, மாதவர் – பெருந்தவத்தையுடையவரான முனிவர்கட்கும், உம்பர் – தேவர்கட்கும், பெருமாள் – தலைவர் என்று உரைப்பினுமாம்.
உம்பர் – எல்லாவுல கங்கட்கும் மேலதான பரமபதத்தில் வாழும் நித்தியசூரிகளுமாம்.
ஆதபன் – எங்கும் தபிப்பவ னென்று பொருள்படும்; தபித்தல் – வெயிலினாற்சுடுதல். இலக்கு லக்ஷ்ய மென்ற வடசொல்லின் சிதைவு;
எய்யப்படுங் குறி. பாதபம் – மரம்; அடியால் நீரைக்குடிப்ப தென்று காரணப்பொருள்பெறும். உடனே – ஒருங்கு:
சமகாலத்தில். காலதாமதமின்றி விரைவிலே யென்றுமாம்.
மேலே “லகங்கள் – பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம், ஜநலோகம், தபோலோகம், ஸத்யலோகம் என்பன.
பூதலம் ஏழும் – பூமியின் தீவுகளேழும் என்றலும் ஒன்று.
கீழேழுலகங்கள் – அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் என்பன. புண்பட்ட – பலவின் பால்முற்று.

இப்பாசுரம், இராமபிரானது வேண்டுமளவினும்மிக்கதான பேராற்றலைக் கூறியது.

————

ஒற்றைச் சரம் சுட்ட உட்கடல் போல் புறத்து ஓலம் இட
மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ -மத மா அழைக்க
அற்றைக்கு உதவும் அரங்கர் வெங்கோ பத்தை அஞ்சி அரன்
கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே –42-

(இ – ள்.) மதம் மா அழைக்க – மதத்தையுடைய விலங்காகிய கஜேந்திராழ்வான் (“ஆதிமூலமே!” என்று) கூவியழைக்க,
அற்றைக்கு உதவும்.- அப்பொழுதே (ஓடிவந்து அதன்முன்னே நின்று அதனைவருத்திய முதலையைக் கொன்று அந்தயானையைக்) காத்தருளிய,
அரங்கர் – திருவரங்கநாதராகிய இராமபிரானது,
வெம் கோபத்தை – கடுங்கோபத்திற்கு,
அஞ்சி – பயந்து, –
அரன் சடை கற்றையின் இடையே கங்கையும் வெதும்பினள் – சிவபிரானது (கபர்த்தமென்னும்) சடைத்தொகுதியினிடையே (அடங்கியுள்ள) கங்கா தேவியும் வெப்பமடைந்தாள்:
(என்றால்), – ஒற்றை சரம் சுட்ட உள் கடல் போல் – (அந்தஸ்ரீராமனது) ஓரம்பினாற் சுடப்பட்ட உள்ளேயுள்ள நீர்க்கடல் போல,
புறத்து மற்றை கடல் – (அதற்கு) அப்புறத்திலுள்ள மற்றையகடல்களும்
ஓலம்இடவெந்தது – பேரொலிசெய்யுமாறு வெதும்பியது,
எவ்வண்ணமோ – எத்தன்மையதோ! (அதுசொல்லுதற்குஅரிது என்றபடி); (எ – று.)

மகாவீரனான ஸ்ரீராமன் ஜலாதிபதியான வருணன்மீது கோபித்துக் கடலின்மேல் அக்கினி யஸ்திரப் பிரயோகஞ்செய்த பொழுது
அந்த அஸ்திராக் கினிக்கும் அப்பெருமானது கோபாக்கினிக்கும் அஞ்சி ஜலதத்துவமென்ற மாத்திரத்தால்
உருத்திர மூர்த்தியின் ஜடாமகுடத்தில் நெடுநாளாக இருக்கின்ற கங்கையென்னுங் கடவுள்நதியும் கொதித்த தென்றால்,
கடலுக்கே இனமான மற்றைக்கடல்கள் பட்ட பாடு சொல்லுதற்கு ஆமோ! என்பது, இச்செய்யுளின் கருத்து.

ஒருபொருளைக் கூறி அதுகொண்டு மற்றொரு பொருளை எளிதிற்சித்திக்கச்செய்தலால், தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி;
இதனை வடநூலார் காவ்யார்த்தாபத்தியலங்காரமென்பர்.
“அண்ட மூலத்துக்கப்பாலாழியுங்கொதித்த தே”, தெண்டிரைக்கடலின் செய்கை செப்பியென் றேவன்சென்னி,
பண்டைநாளிருந்தநங்கைகங்கையும்பதைத்தாள் பார்ப்பான், குண்டிகையிருந்தநீருங்குளுகுளுகொதித்ததன்றே” என்ற
கம்பராமாயணம். இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
மற்றைக் கடல்கள் வெந்த வகையை, “உரவுத்திரைநீர்க்கடலடைப்பான் வருணற் பழிச்சி யுயர்கரை யின்.
விரியுந்தருப்பசயனத்தின்மேவி யோரேழ்நாள்நோற்ப, வருணன்போ தந்திலனாக வெகுண்டு வரிவெஞ்சிலையினொடும்,
புருவச்சிலைகால்குனி த்திடலும் புகைந்த வோரேழ்புணரியுமே” என்ற கூர்மபுராணத்தாலும்,
“வரு ணன்மேற் சரம்விட வாரிவெந்ததே,”
“பரவைகளேழினும் பகழிபாய்ந்திட, எரிகனல்மடு்த்திட” என்ற மகாபாகவதத்தாலும் காணலாம்.
நதிவெதும் பியமை கூறியதுகொண்டு நதிபதிவெதும்பியமை உணர்த்தப்பட்டது.
ஒற்றைச் சரம் – எவ்வளவுபெரியபகையையும் அழித்தற்கு வேறொன்றன்உதவியை வேண்டாத தனியம்பு;
ஒப்பற்ற அம்பு எனினுமாம்.
உட்கடல் – இந்த ஜம்பூத்வீபத்தையடுத்துள்ளதான உவர்நீர்க்கடல்.
புறத்து மற்றைக்கடல் – அக்கடலுக்கு அப்பால் ஒன்றன்பின் ஒன்றாகவுள்ள மற்றைஆறுதீவுகளையும்
தனித்தனி சூழ்ந்திருக்கின்ற கருப்பஞ்சாற்றுக்கடல் முதலிய ஆறுகடல்கள்.
இத்தொடரில் அண்டகடாகத்திற்குப் புறத்திலுள்ள ஆவரணஜலமாகிய பெரும்புறக்கடலும் அடங்கும்.

ஸரம், மதம், ஜடா, கங்கா – வடசொற்கள். ஓலம் – ஒலி. ஓலமிட – தமது வருத்தத்தை முறையிடுகின்றாற்போலக் கதற வென்க;
(இராமன்பக்கல்) அபயம்வேண்டுமாறு எனினுமாம். மற்றை – சுட்டியதற்கு இனமுணர்த்தும் இடைச்சொல்.
வெந்தது – வே என்ற பகுதியின் இறந்தகாலத்தொழிற்பெ யர்; பகுதி குறுகிற்று. ஓகாரம், வியப்புத்தோன்ற நின்றது.
மதம் மா – மதங்கொள்ளும் மிருகம்; எனவே, யானையாயிற்று.
“அச்சக்கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே பொருள்வயினான” என்ற தொல்காப்பியத்தை நோக்கி
“கோபத்தை யஞ்சி” எனப்பட்டது; உருபுமயக்கமாக, கோபத்திற்கு எனத் திரித்தலுமாம்.
உம் – உயர்வு சிறப்பு. “கங்கா” என்பது வடமொழியிற் பெண்பாற்சொல்லாதலாலும்,
நதிக்குஉரியதெய்வம் ஸ்த்ரீஜாதி யாதலாலும், “வெதும்பினள் கங்கை” எனப் பெண்பாலாற் கூறினார்.

இப்பாசுரமும், மேற்பாசுரம்போலவே இராமனது பேராற்றலை யுணர் த்தியது.

———–

கொங்கு உண்டு வண்டு அமர் தண் தார் அரங்கர் வெங்கோபமுடன்
பொங்கும் சரம் செய்த மாயம் என்னோ தன் புகழ் அடைய
மங்கும் படிக்கு மறம் செய் இராவணன் வாகினி கண்டு
எங்கும் குரங்கு எங்கும் ராமன் என்று ஏங்கி இரிந்திடவே –43-

(இ – ள்.) தன் புகழ் அடைய – தனது கீர்த்தி முழுவதும்,
மங்கும்படிக்கு – அழியும்படியாக,
மறம் செய் – கொடுந்தொழில்களைச் செய்த,
இராவணன் – இராவணனுடைய,
வாகினி – (மூலபலமென்னும்) சேனையானது,
கண்டு – பார்த்து,
எங்கும் குரங்கு எங்கும் ராமன் என்று ஏங்கி இரிந்திட – எங்கே பார்த்தாலும், குரங்கும் எங்கே பார்த்தாலும் இராமனுமா யிருக்கின்ற தென்று ஏக்கமடைந்து அழிந்திடும்படி, கொங்கு உண்டு வண்டு அமர் தண்தார் அரங்கர் வெம் கோபமுடன் பொங்கும் சரம் செய்த – தேனைக்குடித்துக் கொண்டு வண்டுகள் விரும்பிமொய்த்திருக்கப்பெற்ற குளிர்ச்சியான மாலையையுடைய ரங்கநாதராகிய இராமபிரானது கடுங்கோபமுடன் கொதித்து வந்த அம்பு செய்த,
மாயம் – மாயை.
என்னோ – யாதோ! (எ – று.)

அவரதுகோபம் பொங்கியபோதே அம்பும் பொங்கியதனால், “அரங்கர் வெங்கோபமுடன் பொங்குஞ் சரம்” எனப்பட்டது.
இரண்டுபொருள்களுக்கு ஒருவினைபொருந்தச் சொல்லுத லாகிய புணர்நிலையணி இங்குத் தோ ன்றுதல் காண்க.
இதனை வடநூலார் ஸஹோக்தியலங்காரமென்பர்: “உடன்” என்ற மூன்றாம்வேற்றுமையுருபு, இவ்வணிக்கு உரியது.
இனி, அரங்கரது கோபத்தை அவரது அம்பின்மேல்ஏற்றி வெங்கோபமுடன் பொங்குஞ்சரம்” என்றா ரென்றலுமாம்;
உடையானது பண்பை உடைமையின்மேலேற்றிக் கூறும் உபசாரவழக்கு பொங்குரல் – கொதித்துக்கிளர்தல். அரங்கர் சரமென்க.
மற்றும், அந்த அஸ்திரத்திற்குஉரியதேவதை கொள்ளுங் கோபத்தை அம்பின்மேல் ஏற்றவுந் தரும்.
“வெங்கோபமுடன் பொங்கும்” என்ற அடைமொழியை அரங்கர்க்குக் கூட்டவுமாம்.
“என்னோ என்றது, வியப்புப் பற்றி. பிரமனது குலத்திற்பிறந்தமை, வேதமுழுவதும்ஓதியமை,
அநேகசாஸ் திரங்களைக்கரைகண்டமை, நித்தியகர்மாநுஷ்டாநம், அரியதவவேள்விகள் செய்துபெருவரம்பெற்றமை
முதலியவற்றால் இராவணன் தான் அடையும் புகழ் முழுவதும் பொலிவுபெறாது கெடும்படி, தமையனையடக்குதல்,
முனிவர்கட்கும்தேவர்கட்கும் தீங்குவிளைத்தல், பிறர்மனைவியரைக்கவர்தல், பிராட்டியை வஞ்சனையால் அபகரித்தல்
முதலிய பல கொடுந்தொழில்களைச் செய்து பழிபாவம் மிகப்பெற்றதனால், “தன்புகழடைய மங்கும்படிக்கு மறஞ்செய் இராவணன்” என்றார்.

ராவணன் என்ற வடமொழிப்பெயர் – கூச்சலிடுபவ னென்றும், கூச்ச லிடச்செய்பவ னென்றும் பொருள்படும்.
சிவபிரானது கைலாசகிரியைப் பெயர்க்கத்தொடங்கி அதன்கீழ்த் தன்கைகள் அகப்பட்டுநசுங்குண்டபோது பேரிரைச்சலிட்டதனாலும்,
தனது கொடியசெய்கைகளால் உலகத்தைக் கதறச்செய்ததனாலும், இவனுக்கு இப்பெயர். இது, சிவபிரான் இட்டது.
தனக்கும் பிறர்க்கும் இதமறியாத துஷ்டஸ்வபாவமுடையவ னென்பதை இப்பெயர் விளக்கும்.
இனி, விசிரவமுனிவனது புதல்வனெனப் பொருள் படுந் தத்திதாந்தநாம மெனக் கொள்ளுதலு மொன்று.

மாயம், வாகினி – மாயா, வாஹிநீ என்ற வடசொற்களின் விகாரம்.
மாயை – உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும், ஒன்றை மற்றொன்றாகவுங் காட்டும் விசித்திரம்.
தனது நற்குண நற்செய்கைகளினாலும் திருமேனியழகினாலும் எல்லாரையும் மகிழ்விப்பவனென்பது,
ராமனென்ற திருநாமத்தின் பொருள். “ராமன்” எனத்தற்சமமாகவே கூறினார், செய்யுளோசையின்பொருட்டு.
மங்கும்படிக்கு என்றதில் கு – சாரியை. ஏங்கி யிரிந்திடச் செய்த மாயம் என இயையும்.
தண்தார் – திருத்துழாய்மாலையும், மலர்மாலைகளும். கொங்கு உண்டு – வாசனையை மோப்பத்தால் உட்கொண்டு எனினுமாம்.
கொங்கு – பூந்தாதுமாம். ஏங்குதல் – அச்சத்தால் உள்ளமும் உடலும் மெலிதல்.
இரிதல் – அழிதல்; “இடு” என்ற துணைவினை, தேற்ற முணர்த்திற்று.

இராமபிரான் மூலபலத்தை வதைத்தது “ஏழுநாழிகைக்குள்” என்றும், “மூன்றேமுக்கால்நாழிகைக்குள்” என்றும் கூறுதலும் உண்டு.

இப்பாசுரமும். இராமபிரானது பெருந்திறல் கூறியதே.

———-

பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண் கிணி சற்று ஒலித்திடும் அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே –44-

(இ – ள்.) பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் – புகழ்பொருந்திய ஆயிரம் வீரர்கள் (போரில்) இறந்தால்,
கவந்தம் பிறக்கும் நேர்ஒத்த ஆடும் – தலையற்றஉடற்குறை (யொன்று) எழுந்து சரிவரத் தாளவடைவுபொருந்தக்கூத்தாடும்,
அது ஆயிரம் ஆடில் – அவ்வாறு ஆயிரங்கவந்தங்கள் எழுந்துகூத்தாடினால்,
நெடுஞ் சிலையின் ஏர் ஒத்த கிண்கிணி சற்று ஓல்இடும் – பெரிய வில்லிற் கட்டப்பட்டிருக்கின்ற அழகுபொருந்திய மணியானது சிறிதுஒலிக்கும்;
கார் ஒத்த மேனி அரங்கர்தம்போரில் – காளமேகத்தைப்போன்ற திருமேனியையுடைய திருவரங்கநாதராகிய இராமபிரானது யுத்தத்தில்,
அது ஒர் யாமம் நின்று கறங்கியது – அந்தமணி (இராமன் கைக்கொண்ட கோதண்டத்தி லுள்ள மாணி) ஒருயாமகாலம் இடைவிடாமல் ஒலித்தது; (எ – று).

“அரங்கர்தம் போரில்” என்றது, மேற்கூறியபடி இராமபிரான் விசித் திரமாகப் போர்புரிந்து மூலபலவதை செய்தபொழுது என்றபடி.
அப் போரில் மடிந்தவர் அளவற்ற பலரென்பது, இவ்வாறு விளக்கப்பட்டது. அவர்தொகை, கூறுதற்கரிய தென்பதாம்.
இச்செய்யுளிற்கூறிய மரபை, கம்ப ராமாயணத்து மூலபலவதைப்படலத்தில்
“ஆனையாயிரந்தேர்பதினாயிரமடர் பரியொருகோடி,
சேனைகாவலராயிரம்பேர் படிற் செழுங்கவந்தமொன்றாடும்,
கானமாயிரமாயிரகோடிக்குக் கவின்மணி கணிலென்னும்,
ஏனையம் மணி யேழரைநாழிகையாடியதினிதன்றே” என்றதனாலும்,

வில்லிபுத்தூரார் பாரதத்துப் பதினான்காம் போர்ச்சருக்கத்தில்
“அநேகமாயிரம்பேர்படக் கவந்தமொன்றாடு மக்கவந்தங்கள்,
அநேகமாயிரமாட வெஞ்சிலைமணியசைந் தொருகுரலார்க்கும்,
அநேகநாழிகை யருச்சுனன்சிலைமணியார்த்த தக்களம் பட்ட,
அநேகமாயிரம்விருதரை யளவறிந்தார்கொலோவுரைக்கிற்பார்” என்றதனாலுங் காண்க.
சற்று ஓலிடும் – அசைந்து ஒருமுறை ஒலிக்கு மென்றபடி.

யாமம் – வடசொல்: ஏழரைநாழிகைப்பொழுது; ஒருநாளின் எட்டிலொருபகுதி; (மூன்றுமணிநேரம்)
(ஸ்ரீவால்மீகிராமாயணத்து மூலபலவத கட்டத்தில் “திவஸஸ்ய அஷ்டமே பாகே” என்றதற்கு
“ஒருபகலின் எட்டி லொருபாகத்திலே” என்று பொருள்கொண்டு, “மூன்றேமுக்கால்நாழிகை” என்று உரைசெய்திருக்கின்றார்கள்;
அதற்கு – “ஒருநாளின் எட்டிலொரு பாகத்தில்” என்று பொருள்கொண்டால், ஒருயாமகாலத்திலென்றதாகும்.)
கவந்தம் – கபந்த மென்ற வடசொல்லின் திரிபு;
அதற்கு – வடமொழிநிகண் டில், “தொழிலுடன்கூடின தலையற்றஉடல்” என்று பொருள் கூறப்பட்டி ருக்கின்றது.
கிண்கிணி – கிங்கிணீ என்ற வடசொல்லின் விகாரம்; சிறிது ஒலிப்பது என்பது, அதன் காரணப்பொருள்.
கிண்கிணியென்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு, கிண்கிண்என்று ஒலிப்பதெனக் காரணப்பொருள் கூறுதலும் ஒன்று.
பேர் – பெயர் என்பதன் மரூஉ, பிறக்கும் – முற்றெச்சம்.
ஒன்று மூன்று நான்காம் அடிகளில், “ஒத்த” என்பது – இறந்த காலப்பெயரெச்சம்; ஒ – பகுதி;
ஒத்தல் – பொருந்துதலும், சமானித்தலும், இரண்டாமடியில் “ஒத்த” என்றது – செயவென்னும்வாய்பாட்டு வினையெச் சம்;
ஒத்து – பகுதி: ஒத்துதல் – தாளம் போடுதல். ‘சற்று’ – இடைச்சொல். ஒல் இடுதல் – ஒலியைச் செய்தல்.

மேற்பாசுரம்போலவே, இராமன் மூலபலத்தையழித்த திறத்தை வியந்து கூறியது, இப்பாசுரமும்.

————-

சற்பத்து உறங்கும் அரங்கா உன் பாதம் தனை அடைந்த
நற்பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ நல மா மருத்தின்
வெற்பைக் கொணர்ந்த விறல் அனு மானும் அவ் வீடணனும்
கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் கற்பித்தையே –45-

(இ – ள்.) சற்பத்து உறங்கும் அரங்கா – ஆதிசேஷன்மேல் (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற திருவரங்கனே!
நலம்ஆம் – நன்மையைத் தருவதான,
மருத்தின் வெற்பை – ஸஞ்ஜீவிபர்வதத்தை,
கொணர்ந்த – தூக்கிக்கொண்டுவந்த,
விறல் அனுமானும் – வலிமையையுடைய ஹநுமானும்,
அ வீடணனும் – அந்த வீபிஷணாழ்வானும்,
கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் – உலகமுடியுங்காலமளவும்இறவாமலிருக்கும்படியாகவும்,
கற்பித்தையே – (நீ) கட்டளையிட்டருளினையே:(ஆதலால்),
உன்பாதம்தனை அடைந்த நல் பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ – உனது திருவடிகளை யடைந்த நல்லஅடியார்கட்கு அழிவுஉண்டோ? (இல்லையென்றபடி); (எ – று.)

இராமபிரான் தனது அடியவர்களான அநுமானுக்கும் விபீஷணனுக்கும் பிரமகற்பமளவும்அழியாமற்
சிரஞ்சீவியாய்வாழும்படி அநுக்கிரகஞ் செய்த தாகிய சிறப்புப்பொருளைக்கொண்டு, திருமாலின் திருவடிகளை யடைந்த
மெய்யடியார்கட்கு யாதோரழிவுமுண்டாகா தென்ற பொதுப்பொருளைச் சாதித்தலால், தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி.

அனுமான் – ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்; இப்பெயர், கன்னத்தில் விசேஷமுடையவ னென்று பொருள்படும்.
ஹநு – கன்னம், மாந் – உடைமைப்பொருள்காட்டும் வடமொழிப்பெயர்விகுதி.
மேருபர்வதத்திற் கேசரியென்ற வாநரவீரனது மனைவியான அஞ்ஜநாதேவியினிடம் வாயு தேவனது
அநுக்கிரகத்தாற் பிறந்த குமாரனான இவன், பிறந்தவுடனே இளஞ்சூரியனைக் கனிந்தபழமென்றுகருதிப் பிடித்தற்குப் பாய்ந்தபொழுது,
அதனையறிந்து கோபங்கொண்ட இந்திரன் வச்சிராயுதத்தினால் அடிக்க
அவ்வடிபட்டுச் சிதைந்த கன்னமுடையவ னானதனால், இவனுக்கு ஹநுமாந் என்று பெயராயிற்று; இது, இந்திரன் இட்டது.
இவ்வாநரவீரன் சுக்கிரீவனுக்கு மந்திரியும் சினேகிதனு மானவன்; ராமலக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு சென்றபொழுது,
அவர்கள்பக்கல் பேரன்புகொண்டுவந்து சந்தித்துப் பணிந்து பேசி இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்புச்செய்வித் தவன்;
இராம தூதனாய்ச்சென்று கடல்கடந்து இலங்கைசேர்ந்து சீதையின் வரலாற்றையறிந்து மீண்டுவந்து இராமபிரானிடம் செய்திகூறி,
அதன்பின் இராமன் சென்று இராவணன்முதலிய அரக்கர்களைக் கொல்வதற்கு மிக்க உதவிபுரிந்தவன். “சிறியதிருவடி” என்பது,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் அநுமானுக்கு வழங்குந் திருநாமம்.

வீடணன் – விபீஷணன் என்றவடசொல்லின் சிதைவு இப்பெயர், (பகை வர்க்கு) விசேஷமாய்ப் பயங்கரனானவனென்று காரணப் பொருள்படும்.
இனி, இதற்கு – பயங்கரனல்லாதவனென்று பொருளுரைப்பாரு முளர். இவன், இராவணனது இறுதித்தம்பி;
நற்குணநற்செயல்களை யுடையவன். இராம பிரான் இராவணாதியரை யழித்தற்பொருட்டுப் பெரியவாநர
சேனையைச் சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுத் தென்கடலின் இக்கரையைச்சேர்ந்தவள விலே,
இலங்கையில் சபைவீற்றிருந்த இராவணன் இனிச்செய்யத்தக்க தைக்குறித்து மந்திரிகளுடனே இரகசியமாக ஆலோசனை செய்கையில்,
அவனது தம்பியும் சத்துவகுணசீலனுமான விபீஷணன் பற்பலநீதிகளையெ டுத்துக்காட்டி
“மகாபலசாலியான இராமனிடத்திலே சீதையைக் கொண்டு போய் ஒப்பித்துவிடுவதே தகுதி” என்று வற்புறுத்திக்கூறவும்,
இராவணன் அதுகேளானாய்க் கோபங்கொண்டு பலவாறு இகழ்ந்துபேச, விபீஷணன் அதனைப்பொறாது
அத்தமையனையும் சுற்றத்தையும் இனத்தையும் விட்டுத் தீப்பற்றியவிடத்தினின்று வெளிப்படுமாறுபோல
அந்தத்துஷ்டர் கூட்டத்தி னின்று புறப்பட்டு வந்து இராமபிரானைச் சரணமடைந்து அப்பெருமானால் அன்போடு அபயமளித்து
ஏற்றுக்கொள்ளப்பட்டு அவனுக்கு உதவியாகி அரக்கர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் எடுத்துச்சொல்லி,
அவர்களனைவரையும் போரில்அழிததற்குப் பெருந்துணைசெய்து,
ஸ்ரீராமனால் இலங்கை யரசனாக முடிசூட்டப்பட்டன னென்ற வரலாறும், இங்கு அறியத்தக்கது.
‘அவ்வீடணன்’ என்றது, மேன்மைபற்றி; அகரச்சுட்டு, பிரசித்திபற்றி வந்தது.
ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனவற்றையேசெய்யுங் கொடிய அரக்கர்கோஷ்டியில் ஒருவனாயிருந்தும்
ஸத்வகுணமே மிக்கு நல்லனவேசெய்யுமியல்பினனான விபீஷணனது ஞானசீலங்களின் மேன்மை தோன்ற, ‘அவ்வீடணன்’ என்றார்.

அநுமான் மருத்துமலைகொணர்ந்து இலக்குமணனைஉயிர்ப்பித்த இரு முறையிலும் இராமபிரான் அவன்பக்கல்
மிகவுந்திருவுள்ளமுகந்து அவனைச் சிரஞ்சீவியாய் என்றும் வாழும்படி அருள்செய்தனன்.
(கம்பராமாயணத்து யுத்தகாண்டத்தில் மருத்துமலைப்படலத்தில்
“இன்றுவீசலா தெவரு மெம்மொடு, நின்றுவாழுநாள் நெடிதுநல்கினாய்,
ஒன்றுமின்னல்நோயுறுகிலாது நீ, என்றும்வாழ்தியா லினிதெனேவலால்” என்றதும்,
வேலேற்றுப்படலத் தில்
“வீர னனுமனைத் தொடரப் புல்லிப், பெற்றனெ னுன்னை யென்னை பெறாதன பெரியோ யென்றும்,
அற்றிடையீறுசெல்லாவாயுளையாக வென் றான்” என்றதுங் காண்க.)

இராமபிரான் திருவவதாரத்தை முடித்துக் கொண்டு இவ்வுலகத்தைநீத்துத் தன்னடிச்சோதிக்குஎழுந்தருளும்போது
விபீஷணனுக்குச் சிரஞ்சீவியாய்வாழுமாறுஅருள்செய்தன னென்பதை, உத்தரகாண்டத்து இறுதிப்படலத்தில்
“மின்பயில்தடக்கைவேல்வீடணன்தனைப், பொன்பயில்நகர்வயிற் போதி பூதல,
மன்பதையளவு நீவாழ்தியா லென, அன்புடனாணையானகலநீக்கினான்” என்றதனால் உணர்க.
இவர்களில் அநு மானுக்கு “ஒருநாளும்விளியாநாளுமுறுக” என்று பிரமனும்,
“யான் மறு விலாமனத்தேனென்னின், ஊழியோர்பகலாயோதும்யாண்டெலா முலக மேழு,
மேழும்வீவுற்றஞான்று மின்றெனவிருத்தி” என்று சீதாபிராட்டியும்,
விபீஷணனுக்கு “நீயென்றுமிரவாதிருத்தி” என்று பிரமனும் கொடுத்திருக்கின்ற அழிவிலாவரத்தைப் பெருமான்
இங்ஙனம் பரிபாலித்தருளின னென்க.
மற்றையோர்பலரைப் பெருமான் தன்னுடன் வைகுந்தத்திற்கு அழைத்துக்கொண்டுபோகின்றபோது
இவ்விருவரையும் உடன்கொண்டு செல்லாமற் பிரமகற்பமளவும் இவ்வுலகில்வாழுமாறு கட்டளைகூறி
முன்புஅவர்கட்குப்பிரமனும்பிராட்டியும்தந்தவரத்தைப் பரிபாலித்ததை இங்ஙனம் பாராட்டிக்கூறினாருமாம்.
விபீஷணனுக்கு இலங்கையிற் பட்டாபிஷேகஞ் செய்விக்கும்பொழுது இவ்வகைவரமளித்ததாகவும் கூறுவ துண்டு.
“இலங் கைகாத்தளிப்ப வீடணற்காயு ளியம்புமோர் கற்பம தளித்து” என்றது, ஸ்ரீபாகவதம்.

ஸர்ப்ப மென்ற வடசொல்லின் விகாரமான சர்ப்பமென்பது, எதுகை நயம் நோக்கிச் சற்பமெனத் திரிக்கப்பட்டது;
தரையென்பது தறையென வேண்டுமிடத்து ரகரம்மாற்றப்படுதல் போல. யாதம், பக்தர், நாஸம், கல்பம் – வடசொற்கள்.
ஓ – எதிர்மறை. மருத்தின் வெற்பு – மருந்தையுடைய மலை; ஓஷதிகிரி. “மருந்து” என்ற மென்றொடர் வன்றொடராயிற்று;
இன் – சாரியை. நலம் – நன்மையைத்தருகின்ற, மா மருந்து – மஹௌஷதி யென்றுங் கொள்ளலாம். நல என்றுஎடுத்து, நல்ல என்றலுமாம்.
விறல் – வெற்றியுமாம். முன்றாமடியில், உம்மைகள் – எண்ணுப்பொருளன. நான்காம் அடியில், உம்மைகள் – உயர்வுசிறப்பு.
“அழியாதிருக்கவும்” என்ற உம்மையை எச்சப்பொருளதாகக் கொண்டு, அவர்கட்கு முறையே தன்னால்தழுவிக் கொள்ளப்படுதலும்
இலங்கையரசனாதலும் முதலிய `சிறப்புக்களைத் தந்தது மன்றி யென்பதை வருவித்தலுமாம்.
கற்பித்தை – முன்னிலையொருமை யிறந்தகாலமுற்று; ஐ – விகுதி. ஒரு நாசம் உண்டோ – நாசம் ஒன்றேனும் உண்டோ? என்றபடி.

————————

ஆவும் பயமும் அமுதும் ஒப்பு ஆன அரங்கருக்கு
மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ அவர் மெய் அருளால்
தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சரா சரங்கள்
யாவும் கிளையுடன் வைகுந்த யோகத்தில் ஆர்ந்திட்டவே –46-

(இ – ள்.) ஆவும் பயமும் அமுதும் ஒப்புஆன – பசுவையும் (அதனிடத்துப்) பாலையும் (அதனிடத்து) இனிமையையும் போலுள்ள,
அரங்கருக்கு – திருவரங்கநாதராகிய இராமபிரானுக்கு,
மேவும் – உண்டான,
புகழ் – கீர்த்தி.
இன்னும் மேவும்கொல்ஓ – வேறு யார்க்கேனும் உண்டாகுமோ? (உண்டாகா தென்றபடி): (ஏனெனில்), –
தாவும் தரங்கம் தடம் சூழ் அயோத்தி சர அசரங்கள் ஆவும் – மேன்மேலெழுந்துவருகின்ற அலைகளையுடைய தடாகங்கள் சூழ்ந்த அயோத்தியாபுரியிலுள்ள சரங்களும் அசரங்களு மாகிய எல்லாப்பொருள்களும்,
கிளையுடன் – (தம்தம்) சுற்றத்துடனே,
அவர் மெய் அருளால் – அந்தஸ்ரீராமபிரானது பழுதுபடாத கருணையினால்,
வைகுந்தலோகத்தில் ஆர்ந்திட்ட – வைகுண்டலோகத்திற் சென்று சேர்ந்திட்டன. (எ – று)

“அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி”,
“கற்பாரிராம பிரானை யல்லால் மற்றுங்கற்பரோ, புற்பாமுதலாப் புல்லெறும்பாதி யொன்றின்றியே,
நற்பாலயோத்தியில்வாழுஞ் சராசரம் முற்றவும், நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார்பெற்றநாட்டுளே” என்றார் ஆழ்வார்களும்.

“இராமபிரானுக்குஉண்டானகீர்த்திவேறியார்க்கேனும் உண்டாகுமோ? என்று ஒருவிஷயத்தைக் கூறி,
அதனை, “அப்பெருமானது திருவருளால் அயோத்திச்சராசரங்கள்யாவும் கிளையுடன் வைகுந்தலோகத்தில் ஆர்ந்திட்டவே” என்ற
தக்க காரணத்தைக்கொண்டு சாதித்தது, ஏதுவணியின் பாற்படும்.
இப்படி தாம்திருவவதரித்த நகரத்தில் வாழ்ந்த சராசரங்களெல் லாவற்றிற்கும் வைகுந்தமளித்தவர் வேறெவரு மில்லை யாகையால்,
இவ்வகைக்கீர்த்தி பெருமாளுக்கே அஸாதாரணமாகின்ற தென்க.

பசுவினிடத்துப் பாலும் அதனிடத்து இன்சுவையும் போல அசித்தாகிய சரீரத்திலே சித்தாகிய ஜீவாத்மாவும்
அதனிடத்தே அந்தர்யாமியான பரமாத்மாவுமாக வாழ்பவரென்பார், “ஆவும் பயமும் அமுதுமொப்பான அரங்கர்” என்றார்.
இது, விசிஷ்டாத்வைத சித்தாந்தம். அமுது – பாலின் ஸார மெனினுமாம். சர + அசரம் = சராசரம்:
தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; உம்மைத்தொகை.
சரம் – அசையும்பொருள், இயங்குதிணைப் பொருள்; ஜங்கமம். அசரம் – அசையாப்பொருள், நிலைத்திணைப்பொருள்;
ஸ்தாவரம். இவையே இருவகைத்தோற்றம். மெய் அருள் – பயன்விளைத்தல்தவறாத அருள்.
பயஸ், அம்ருதம், அயோத்யா, வைகுண்டலோகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
அயோத்யா என்பது – போர்செய்து வெல்லமுடியாத தென்று பொருள்படும்.
நான்காம்அடியில், “யாவும்” என்பது, “ஆவும்” என விகாரப்பட்டது;
ஆனை, ஆடு, ஆளி, ஆமை, ஆறு, ஆர் என்பன போல. கிளை – மரத்திற்குக் கிளைபோலத் தமக்கு உறுப்பாகும் உறவினம்;
உவமவாகுபெயர். கொல் ஓ என்ற இரண்டு இடைச்சொற்களில், ஒன்று – வினாவகையால் எதிர்மறை குறித்தது; மற்றொன்று – அசை.
ஆர்ந் திட்ட – “அன்” சாரியை பெறாத பலவின்பால் முற்று; “இடு” என்ற துணை வினை, துணிவுணர்த்திற்று.
ஈற்றுஏகாரத்தைத் தேற்றப்பொருள தென்னலாம்; தேவதாந்தரங்களை ஏசுங் கருத்தினதுமாம்.
தரங்கம் – வடசொல். தடம் – சரயூநதியுமாம்; அந்த மகாநதி அயோத்தியாபுரியைத் தழுவுவது போல வளைந்திருத்தலால்,
“தாவுந்தரங்கத்தடஞ்சூழயோத்தி” எனலாகும்.

————-

(இதுவும், அடுத்தபாசுரமும் – ஸ்ரீபலராமாவதார வைபவம்.)

ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில்
ஒரு தாய் சொலச் சென்றது என் அரங்கா வையம் உய்யும் வண்ணம்
ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை
ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது எம்மாயம் உரைத்து அருளே –47-

(இ – ள்.) ஒரு தாய் சொல – ஒருதாய் (கைகேயி) சொன்னதனால்,
ஒரு தாய் இருந்து வருந்த – ஒருதாய் (கௌசல்யை) (அயோத்தியாபுரியிலேயே) இருந்து வருந்தும்படி,
வையம் உய்யும் வண்ணம் – உலகத்துஉயிர்கள் (கொடியோரால்நேர்ந்த உபத்திரவம் நீங்கி) வாழும்பொருட்டு,
வைதேகியுடன் சுரத்தில் சென்ற – சீதையுடனே கொடியகாட்டிற்குப்போயருளிய,
தென் அரங்கா – அழகிய திருவரங்கத்துநாதனே! – (நீ),
ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை – ஒருதாயின் (தேவகியினது) திருவயிற்றிலே ஆறுமாதகாலம் வசித்தபின்பு,
ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது – மற்றொருதாயின் (ரோகிணியினது) திருவயிற்றில் வந்துசேர்ந்தது,
எ மாயம் – என்ன மாயை!
உரைத்தருள் – சொல்லியருள்வாயாக.

தந்தை ஏவவேண்டுமென்பதை எதிர்பாராமலே இராமபிரான்
“மன்ன வன்பணியன்றாகில் நும்பணிமறுப்பனோ,…… இப்பணி தலைமேற்கொண் டேன்,
மின்னொளிர்கானமின்றேபோகின்றேன் விடையுங்கொண்டேன்” என்று சொல்லிப் புறப்பட்டமை தோன்ற,
“ஒருதாய்சொலச் சென்ற” என்றார்.

“தொத்தலர் பூஞ்சுரிகுழற் கைகேசி சொல்லால் தொன்னகரந் துறந்து” என்றார் குலசேகராழ்வாரும்.
முதலடியில் “ஒருதாய்” என்றது, பெற்றதாயை. இரண்டாமடியில் “ஒருதாய்” என்றது, மாற்றாந்தாயை.
ஒரேவகைச் சொல்லால் இருவரையும் சமமாகக் குறித்தது,
இராமபிரானுக்கு அவர்களினிடம் ஒருநிகராகவுள்ள அன்புநிலையைப்பற்றி யென்க.
புத்திரனைப்பிரிவதனால் வருத்தமுற்ற கௌசல்யை “என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டுபோ” என்று வேண்டவும்,
இராமன் அங்ஙனம் செய்யாமல் “சக்கரவர்த்தியுடன்இருந்து அவர்க்கு ஆவனசெய்தலே அறமாகும்” என்றுசொல்லி
அத்தாயைத் தந்தையினிடம் இருக்க விட்டுச் சென்றன னாதலால், “ஒருதாய் இருந்து வருந்தச் சென்ற” எனப்பட்டது.
“ஈற்றுத்தாய் பின்தொடர்ந் தெம்பிரா னென்றழக், கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன,
சீற்றமிலாதான்” என்றது, பெரியாழ்வார்திருமொழி.
இப்படி வனவாஸஞ்சென்றது ராவணாதிராக்ஷஸஸம்ஹாரஞ்செய்து உலகத்தவர்களை இனிதுவாழச்செய்தற்பொருட் டாதலால்,
“வையம்உய்யும்வண்ணம் சுரத்திற்சென்ற” என்றார். சுரம் – சுடுங்காடு.
(“மாதிரங்கள், மின்னுறுவின் விண்டேர் திரிந்துவெ ளிப்பட்டுக், கன்னிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று,
பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம்” என அதன்
கொடுமையைத் திருமங்கையாழ்வார் அருளிச்செய்தார்.)
சீதையை எடுத்துச்சென்று இராவணன் அழிய வையம் உய்தற்குப் பெருமாள் பிராட்டி யுடன்வனஞ்சென்றதே மூல மாதலால்,
“வையமுய்யும்வண்ணம் வைதேகி யுடன் சுரத்திற் சென்ற” எனலாயிற்று.

எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோகநித்திரை யெனப்படும் மா யை நந்தகோபருடைய கோகுலத்திலே யிருந்த
வசுதேவபத்தினியான ரோகிணியின் வயிற்றி லிருந்த வாயுரூபமான ஆறுமாதத்துக்கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு
வசுதேவருடைய மற்றொருபத்தினியான தேவகியின் வயிற்றி லிருந்த ஆதிசேஷாம்சமான கர்ப்பத்தைக் கொண்டுபோய்
அந்த ரோகிணியின்வயிற்றிற் சேர்த்திட, இங்ஙனம் வசுதேவபத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில்
(ஏழாவது கருவாக) ஆறுமாசமும், ரோகிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறுமாசமும் இருந்து
பிறந்தவன் பலராமனென்பது, பின்னிரண்டடியில் அறியத்தக்கது. இவன் – திருமாலின் எட்டாம்அவதாரம்;
இவனிடத்து, ஆதிசேஷனது அம்சமும் கலந்திருந்தது. தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிப்பவனும் திருமாலின்
ஒன்பதாம் அவதாரமுமான கண்ணனுக்கு முன்பு இவன் பிறந்ததனால் அவனுக்குத் தமையனாயினன்.
தசாவதாரங்களுள் ஏழாவதான தசரதராமாவதாரத்தோடு எட்டாவதான பலராமாவதாரத்தையுஞ் சேர்த்து அருமைபாராட்டினர்,
இப்பாசுரத்தில்; இரண்டும் அடுத்தஅவதாரங்க ளாதலால். “வையம்உய்யும்வண்ணம்” என்றதை மத்திமதீபமாக,
“உறைந்தபின்னை”, “வந்துற்றது” என்பவற்றோடுங் கூட்டலாம்;

துஷ்டஅசுரர்கள்பலரும் கெட்டஅரசர்கள் பலரும் ஒருங்கே கூடி வசிப்ப தனாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்து
உலகத்தவரைவாழ்வித்தற் பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனைப்படி தேவர்கள்வேண்டியதனால் திருமால்
வசுதேவகுமாரராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவவதரித்தன னென உணர்க.
இப்படி கருப்பம் ஒருத்திவயிற்றைவிட்டு மற்றொருத்தி வயிற்றிற்கு மாறுவது உலகத்தில் எங்கும் என்றுங்
காணாததோர் அதிவிசித் திர மாதலால், அதற்குக் காரணமான பகவானுடைய அற்புதசக்தியை “எம்மாயம்” என்று கொண்டாடினர்.
மாயை – அகடித கடநா ஸாமர்த்யம், செயற்கரியன செய்யுந் திறம். அது பிறர்கூறுதற்கரிய தென்ற கருத்தால் நீயே உரைத்தருளென்றார்.

வைதேஹீ என்ற வடசொல், விகாரப்பட்டது: உடம்பில்லாமற்போகக் கடவதென்று வசிட்டமுனிவராற்சபிக்கப்பட்டு
விதேகனாகிய நிமியரசனது மரபில் வளர்ந்தவ ளென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். சொல – தொகுத்தல். உதரம் – வடசொல். திங்கள் – சந்திரன்;
அமாவாசைக்கு அமாவாசை ஒருமாச மெனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாற் காலத்தைவரையறுக் குஞ் சாந்திரமான
ரீதிபற்றி, “திங்கள்” என்று மாதத்திற்குப் பெயர் வழங்க லாயிற்று: “மதி” என்பதும் இது; இலக்கணை. பினை, ஐ – சாரியை

—————-

கதி பட்ட பொன்னி அரங்கேசர் ஆடு -கருந்திரை நீர்
நவின்றிடல் ஆகும் நலம் கெழு கூர் நுதி பட்ட நெட்டலத் தாலே நலம் கெழு –
-கூர் நுதி பட்ட நெடு அலத்தாலே -இழிந்திட நூற்றுவர் தம்
பதி -பட்ட கண் கலக்கம் தெரியாது பகருதற்கே -48-

(இ – ள்.) கதி பட்ட பொன்னி அரங்க ஈசர் – விரைந்தோடுதல் பொ ருந்திய காவேரிநதியாற் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக் கின்ற எம்பெருமான்,
ஆடு – (பலராமாவதாரத்தில்) நீராடுகின்ற,
கரு திரை நீர் நதி – கருமையான அலைகளையுடைய நீரையுடைய யமுனையாறு,
பட்ட பாடு – (அவர் கலப்பைகொண்டு இழுத்திட்டதனால்) அடைந்த வருத்தம்,
நவின்றிடல் ஆகும் – (ஒருவாறு) சொல்லுதல்கூடும்;
நலம் கெழு – நன்மை மிக்க,
கூர் நுதி பட்ட – கூர்மையான நுனிபொருந்திய,
நெடு அலத்தாலே – நீண்ட கலப்பையாலே,
இழுத்திட – (அப்பலராமர்) இழுத்திட்டதனால்,
நூற்றுவர்தம் பதி – துரியோதனாதியரது ஊராகிய ஹஸ்திநாபுரி,
பட்ட – அடைந்த,
கண்கலக்கம் – துன்பமோ வென்றால்,
பகருதற்கு – சொல்வதற்கு, தெரியாது -; (எ – று.)

இதனால் இப்பொழுதும் அஸ்தினாபுரி தென்புறம் உயர்ந்து வடபுறம் தாழ்ந்து அப்பக்கத்திலுள்ள கங்கையினுள்ளே
விழுவதுபோல விருக்கின்ற தென்பதை,
“புரவல வின்னுநும்பொன்னஞ்சூட்டெயில், திருநகர் தென்ற லைச்சேணிலோங்குறா,
விரிதிரைக்கங்கையில்வீழ்தல்போன்று மற்று, ஒரு குழையவன்வலியுணர்த்துகின்றதால்” என்ற ஸ்ரீபாகவதத்தால் உணர்க.
(பலராமனுக்குக் கலப்பையும் உலக்கையும் முக்கியஆயுதங்கள்.)
அதனால், அவனுக்கு ஹலாயுதன், ஹலீ, முஸலீ என்ற பெயர்கள் வழங்கும்.
நலம் – சிறப்பு, துஷ்டநிக்கிரகமுமாம். நலங்கெழு – அலத்திற்கு அடைமொழி.
“நலங்கெழுகூர்நுதிபட்டநெட்டலத்தாலேயிழுந்திட” என்றதை மத்திமதீபமாக “நதிபட்ட” என்றதனோடுங் கூட்டுக.
யமுநாநதியின் ஜலம் கருநிறமுடைய தாதலால், “கருந்திரைநீர்நதி” எனப்பட்டது.

கதி, நதீ, ஹலம் – வடசொற்கள். நெடுமை + அலம் = நெட்டலம்: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டியது.
நூற்றுவர் – நூறுபேர்; இங்கே துரியோதனாதியர்க்குத் தொகைக்குறிப்பு.
துன்பம்உண்டானபோது கண் கலங்குதலால், துன்பத்திற்கு “கண்கலக்கம்” என்று ஒருபெயர் வழங்கும்; காரியவாகுபெயர்.
துன்பத்திற்கு “அலக்கண்” என்று ஒருபெயரிருத்தல் இங்குநினைக்கத்தக்கது. பகருதற்குத்தெரியாது – சொல்லமுடியாதென்றபடி.

யமுநாநதிபட்டபாட்டினும் அஸ்தினாபுரி்பட்டபாடு பெரிய தென்பது கருத்து. இங்ஙனம் பலராமனது பேராற்றலை யுணர்த்தினர்.

———–

இது முதல் 25 கவிகள் ஸ்ரீ கிருஷ்ணாவதார மகிமை

பண்டு விழுங்கிய பாரும் திசையும் பனிக் கடலும்
சண்ட நெடும் கிரித்தானம் எல்லாம் சண்பகாடவி மேல்
மண்டு பெரும் புனல் சூழ் அரங்கேசர் தம் வாய் மலருள்
கண்டு மருவினள் சீர் நந்த கோபர் தம் காதலியே –49-

(இ – ள்.) சண்பகம்அடவிமேல் – சண்பகமரச்சோலையின்மேல்,
மண்டு – மிக்குப்பாய்கின்ற,
பெரும்புனல் – பெரியகாவேரிநீரினால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கம் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற,
ஈசர்தம் – பெருமானாகிய கண்ணபிரானது,
வாய் மலருள் – செவ்வாம்பல்மலர்போன்ற திருவா யினுள்ளே, –
பண்டுவிழுங்கிய – முன்னே (கற்பாந்தகாலத்தில்) உட்கொண்ட,
பாரும் – பூமியையும்,
திசையும் – திக்குக்களையும்,
பனி கடலும் – குளிர்ந்த கடலையும்,
சண்டம் நெடுங் கிரி தானம் – மிகவும் பெரிய மலைகளினிடங்களையும்,
எல்லாம் – (அவற்றிலுள்ள) எல்லாப்பொருள்களையும்,
நந்தகோபர்தம் காதலி – நந்தகோபரது மனைவியான யசோதைப்பிராட்டி,
கண்டு – பார்த்து,
சீர் மருவினள் – சிறந்த மகிழ்ச்சியை யடைந்தாள்; (எ – று.)

நந்தகோபர் – இடையர்களையும்பசுக்களையுங்காப்பவர்: நந்தர் – இடையர்; கோ – பசு.
இவர், கண்ணனை வளர்த்த தந்தையார். வசுதேவனும் தேவகியும் கம்ஸனாற்சிறையிலிருத்தப்பட்டு வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்திற் கண்ணனாய் அவதரிக்க,
அக்குழந்தையைக் கம்சன்கொல்லக்கூடுமென்ற அச்சத்தால், தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அநுமதிபெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவரான நந்தகோபரது
திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவர்மனைவியான யசோதைக்கு
மாயையின் அம்சமாய்ப்பிறந் திருந்ததொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்துவிட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையிற் கண்ணபிரான் அந்தக்கோகுலத்திலேயே நந்தகோபகுமாரனாய்
யசோதைவளர்க்க வளர்ந்தருளினன்; அங்ஙனம் வளர்கையில் ஒருநாள், கண்ணன் குழந்தையாகிய தன்னை
நீராட்டும்போது மஞ்சளாலே தனது மெல்லியநாவை வழித்த யசோதைக்குத் திவ்ய சக்ஷுசைக்கொடுத்துத்
தன்வாயைத்திறந்துதன்வைபவத்தைக் காட்டியருள, அவள் அந்தப்பிள்ளையின்வாயினுள்ளே ஸகலலோகங்களையும் கண்டனளெ ன்க.

“கையுங்காலும்நிமிர்த்துக் கடாரநீர், பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ் சளா, லையநாவழித்தாளுக் கங்காந்திட,
வையமேழுங்கண்டாள் பிள்ளைவா யுளே,”
“வாயுள் வையகங் கண்ட மடநல்லார், ஆயர்புத்திரனல்ல னருந் தெய்வம்,
பாயசீருடைப் பண்புடைப்பாலகன், மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே” என்றார் பெரியாழ்வாரும்.

சண்டம், கிரி, ஸ்தாநம், சம்பகாடவீ, நந்தகோபர் – வடசொற்கள். வாய் மலர் – முன்பின்னாகத் தொக்க உவமத்தொகை.
மலர் – செந்தாமரை மலருமாம்;
“மண்டிணிஞாலமும் வானமு முட்பட, அண்டமுண்டுமிழ்ந்த தோ ரம்போருகமே” என்பர் திருவரங்கக்கலம்பகத்தில்.
சீர் நந்தகோபர் என்று எடுத்து, ஸ்ரீநந்தகோபர் என்றுஉரைத்து, “மருவினள்” என்பதற்கு – (மகிழ்ந்து அக்குழந்தையை)
அணைத்துக்கொண்டாள் என்றலும் ஒன்று. காதலி – அன்புக்குஉரியவள்; இ – பெயர்விகுதி

————–

உன்னைக் களவில் உரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி போது அலை ஆழி மங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்று ஆர் என்று பேசுகவே –50-

(இ – ள்.) அலை ஆழி மங்கைதன்னை – அலைகளையுடைய திருப்பாற் கடலில் தோன்றிய திருமகளை,
புணர்ந்தருள் – சேர்ந்தருள்கின்ற,
தார் அரங்கா – மாலையையுடைய திருவரங்கனே! –
களவில் – (நீ தயிர்நெய்பால் வெண்ணெய்) திருடியதற்காக,
ஒருத்தி – ஓர்இடைச்சி,
உன்னை உரலோடு கட்டிவைத்து – உன்னை உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்து,
உன்னுடைய அன்னைக்கு அறிவித்த போது – உனது தாயான யசோதைக்கு (அச்செய்தியை)த் தெரிவிக்கச்சென்றபொழுது,
அவள் – அவ்விடைச்சி,
தன் மருங்கில் – தன்இடையில்,
கொடு சென்ற – கொண்டுபோன,
பிள்ளை குழந்தை, பின்னை ஆர் என்று பேசுக – வேறுயாரென்று சொல்வேனாக? (எ – று.) – நீயே யாயினாய் என்றதாம்.

கண்ணன் இளம்பிராயத்தில் இடையர்வீடுதோறுஞ்சென்று வெண்ணெய் பால் தயிர் நெய் முதலியவற்றைக் களவாடி யுண்டுவர,
அதனை ஒரு நாள் பதிவிருந்து பார்த்த ஒரு கோபஸ்திரீ கிருஷ்ணனைத் தன்வீட்டில் உரலுடன் சேர்த்துக்கட்டிவைத்துவிட்டு,
அச்செய்தியை யசோதையினிடஞ் சொல்லி அவளைக்கொண்டு கண்ணனைத் தண்டிக்கவேண்டு மென்று கருதித்
தன்பிள்ளையை இடுப்பிலெடுத்துக்கொண்டு யசோதையினிடம்வந்து கண் ணன்செய்தியைச்சொல்லிமுறையிட,
அச்சமயத்திற் கண்ணபிரான் மாயை யால் அவளது இடுப்பிலுள்ள பிள்ளை தானாகவும்
அவள்வீட்டிற் கட்டுண்ட பிள்ளை அவள் மகனாகவு மாய்விட, அதுகண்டு
அவள் நாணங்கொண்டு சென் றன ளென்பது, இங்குக் குறித்தது.
களவில் – திருடியபொழுது, அன்னை – வளர்க்குந்தாய்.
“அலைஆழிமங் கைதன்னைப் புணர்ந்தருள்” என்றதற்கு – இரட்டுறமொழிதலென்னும்உத்தியால்,
அலைகளையுடைய கடல் சூழ்ந்த பூமிதேவியைச் சேர்ந்தருள்கின்ற என்ற பொருளுங் கொள்ளலாம்;
“பூமடந்தையும்நிலமடந்தையுந்தேவியர்” ஆதலால்: “பங்கயமின்னொடு பார்மகள் தேவி” என்பர் மேல் 78 – ஆம் பாசுரத்திலும்.
பேசுக – வியங்கோள்முற்று; இங்கே தன்மையொருமைக்கு வந்தது; நீ சொல்வாயாக என முன்னிலையொருமையுமாம்.

————-

கடிக்கும் கரளப் பிறை வாள் எயிற்று வெங்காளியன் மேல்
நடிக்கும் பெரிய பெருமாள் அரங்கர் நறை கமழ் பால்
குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே ஒரு கோபி பற்றி
அடிக்கும் பொழுதில் பதினால் உலகும் அடிபட்டவே –51-

(இ – ள்.) கடிக்கும் – கடிக்கின்ற,
கரளம் – விஷத்தையுடைய,
பிறை வாள் எயிறு – பிறையையும் வாளையும் போன்ற பற்களையுடைய,
வெம் காளியன் மேல் – கொடிய காளியனென்னுஞ் சர்ப்பத்தின்மேல்,
நடிக்கும் – கூத்தாடுகின்ற,
பெரியபெருமாள் அரங்கர் – பெரிய பெருமாளாகிய அரங்கநாதன், (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பருவத்தில்),
நறை கமழ் பால் – வாசனைவீசு கின்ற பாலை,
குடிக்கும் – (ஒருவரும்) அறியாதபடி குடிக்கின்ற,
களவுக்கு – திருட்டிற்காக,
மாறு கொண்டு – கோபங்கொண்டு,
ஒரு கோபி – ஓரிடைச்சி,
பற்றி – (அந்தக்கண்ணனைப்) பிடித்து,
அடிக்கும் பொழுதில்-,
பதினாலு உலகும் அடிபட்ட – பதினான்கு உலகங்களிலுள்ளனவான சராசரப்பொருள்க ளெல்லாம் அடிபட்டன; (எ – று.)

கண்ணபிரான் திருவாய்ப்பாடியிற் பால்முதலியவற்றைத் திருடினா னென்று அவனை ஒரு ஆய்ச்சி பருத்த
மத்தைக் கொண்டு அடித்தபொழுது எக் காலமுந் தனது திருவுதரத்திற்குள் அசையாதுவைத்து
அவனாற் பாதுகாக் கப்படும் ஸகலலோகங்களும், அவற்றிலுள்ள சராசரங்கள் யாவும் அடிபட்டன வென்பதாம்.
இங்கு, ஒரு அற்பகாரியத்தைச் செய்கையில் அதனுள் செய் தற்கு அரிய பெருங்காரியம் நிறைவேறுதலாகிய
சிறப்பணி அமைந்திருத்தல் காண்க. பருகுதற்கு அருகமாகாதபடி விஷமாய்க்கிடந்த நீரைப் பருகுதற்கு
உரிய அமுதமாக்கிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணன் தான் ஒரு ஆய்ச்சி யின்கையிலகப்பட்டு அடிபட்டதும்
அப்பெருமானது திருவுள்ளமே யென்க.
மற்றையோருடைய உடம்பில் அடிபட்டாலோ, அவ்வுணர்ச்சி அவரது உடம்புமாத்திரத்தோடு நிற்கும்;
பகவானுக்கோ சேதநாசேதநங்கள்யா வும் சரீர மாதலால், அப்படிப்பட்டசரீரத்தில் ஓரடி படும்போது
அதனுணர்ச்சி அந்தச் சேதநாசேதங்களெல்லாவற்றுக்கும் உண்டாதல் இயற்கையே யாம்.
இதனால், எல்லாப்பொருள்கட்கும் உயிராயுள்ள எம்பெருமானது ஜகத்சரீரத்துவம் கூறப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணபகவானை அடிக்கவேண்டு மென்று விரும்பிய ஆய்ச்சி தன்னைத்தானே யடித்துக்கொண்டவளாதலுங் காண்க.
(இதனை, “வேதமடியுண்டன விரிந்தபலவாகமவிதங்களடியுண்டன வொரைம்,
பூதமடியுண்டன விநாழிகைமுதற்புகல்செய்பொழுதுதொடுசலிப் பில்பொருளின்,
பேதமடியுண்டன பிறப்பிலியிறப்பிலிபிறங்கலரசன்றன் மகளார்,
நாதனமலன்சமரவேதவடிவங்கொடு நரன்கையடியுண்டபொழுதே” என்ற செய்யுளோடு ஒப்பிடுக.)

நறைகமழ்பால் – சுவைமிக்க பால். களவு – தொழிற்பெயர்; கள் – முதனிலை. கோபி – கோபனென்பதன் பெண்பால்;
இனி, இதனுட் கோபத்தை யுடையவளென்னும் பொருளுந் தோன்றுமாறு அறிக.
காளி, காளாத்திரி, யமன், யமதூதி எனப் பாம்பிற்கு விஷப்பற்கள் நான்கு என்பர்.

———–

ஆரம் தரும் பொன்னி சூழ் அரங்கா உன் தன் ஆய்ச்சி வெகு
தூர நெடும் கயிறு எல்லாம் மிசை சேர்த்து வைத்தும் அவை
ஈர மருங்கின் குறைந்திட கண் பிசைந்து எங்கும் அவள்
வேர் அம்புய முகம் கண்டு அளவு ஆன விநோதம் என்னே –52-

(இ – ள்.) ஆரம் தரும் – மாலையை யொக்கின்ற,
பொன்னி – காவேரியால்,
சூழ் – சூழப்பட்ட,
அரங்கா – திருவரங்கத்துநாதனே! –
ஆய்ச்சி – யசோதை,
வெகு தூரம் நெடுங் கயிறு எல்லாம் – மிகவும் நீண்ட கயிறெல்லாவற்றையும்,
மிசை சொத்து வைத்தும் – மேன்மேற் சேர்த்துச் சுற்றிவைத்தும்,
அவை – அக்கயிறுகள்,
உன்தன் – உன்னுடைய,
ஈரம் மருங்கின் – அழகிய இடையினளவினும்,
குறைந்திட – போதாமற் குறைந்துவிடுதலால்,
கண் பிசைந்துஏங்கும் – கண்களைப் பிசைந்து கொண்டு இரங்குகின்ற
அவள் – அவளது,
வேர் – வேர்வையையுடைய,
அம்புயம் முகம் – தாமரைமலர்போன்ற முகத்தை,
கண்டு – பார்த்து, (உடனே நீ),
அளவு ஆன – அக்கயிற்றினளவாகத் திருமேனிசுருங்கிக் காட்டிய, விநோதம்-,
என்னே – யாதோ! (எ – று.)

ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணபகவான் யசோதைப்பிராட்டி சேர்த்துவைத்திரு ந்தமோர்களையெல்லாம் கீழேகொட்டிவிட்டு,
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன் மேலேறித் தித்தித்தபாலையும் தடாலினில் வெண்ணெயையும் விழுங்கிக்கொ ண்டிருந்தானாக,
அதனைக்கண்ட அவ்யசோதை “இவனை இஷ்டப்படி போக விடலாகாது; கட்டியே போகடவேணும்” என்று எண்ணி
அவனைப்பிடித்து அதட்டி ஓர் உரலோடு கட்டுவதற்காகத் தாம்புக்கயிற்றைக் கொணர்ந்து முடிந்து முயன்று பார்த்தும்
அவைகளும் போதாதனவேயாக, முடிவில் அப்பிராட்டி இளைத்துச் சோர்ந்து வருந்துகையில்,
ஸ்ரீகிருஷ்ணபகவான் முடிச்சுள்ள ஒருசிறுகயிற்றினாற் கட்டும்படி தானே ஆயினனென்க.

“கண்ணி நுண்சிறுத்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்ழுகண்ணியாற்
குறுங்கயிற்றாற் கட்ட வெட்டென்றிருந்தான்” என்பன பெரியார் பாசுரங்கள்.
(“பெரியவுரலுருட்டியவன்முன்னர்வைத்துப் பிரமனுடனுலகுதந்த பெரியோன்றன்னை,
யரியதவஞ்செய்துமகிழசோதை நங்கை யழகியநற்கயிற்றை யவன்மருங்கிற்சேர்ப்ப,
விருவிரல்மாத்திரம் போதாதாகப் பின்னரிடை யர்மனைத்தாம்பெல்லாமெடுத்துக்கட்டத்,
திருமகன்றனிடைக்கதுவும் போதாதாகத் திகைத்தனள் வந்துரோகிணியுஞ் சிரித்துநின்றாள்,”
“அரிவை யர்கள்மிகநகைக்கவசோதைநங்கை யாயர்மனைத்தாம்பெல்லாமுடிந்தொன் றாக்கிக்,
கரியவனைக்கட்டுதலும் போதாதாகிக் கைசலித்துமெய்வேர்வுசொரி யக்கண்டு,
வரையினமர்யோகிகட்கும் மறைநாலுக்கும் வானவர்க்கும் வாசவற்கு மலரின்வந்த,
பிரமனுக்கு மகப்படாப் பெரியோன் தாய்கைத்தாம்பினா லுலூகலத்திற்பிணிப்புண்டானால்” என்றார் பிறரும்.)
இவ்வாறுநிகழ்ந்தது, அப்பெருமானது அகடிதகடநாஸாமர்த்தியத்தா (கூடாததையுங் கூட்டுவிக்குந் திறமையா) லென்க.

ஆரந்தரும் – மலையினின்றும் முத்துக்களைக் கொணர்ந் தெறிகின்ற என்றும், சந்தனமரத்தை யடித்துக்
கொண்டுவருகின்ற என்றும் உரைக்கலாம். உன்தன் மருங்கு என்க. வெகு – பஹு என்னும் வடசொல்லின் விகாரம்.
வேர் – முகத்துக்கு அடை; இனி, வேரியென்பதன் விகாரமாய், வாசனையையுடைய தாமரை யென்னவுமாம்.
அம்புயம் – அம்புஜம்; நீரில்முளைப்பது: இது – காரணவிடுகுறிப்பெயர். சொத்து – திசைச்சொல் போலும்.
“சேர்த்துவைத்து” என்றும், “சுற்றிவைத்து” என்றும் பாட முண்டு.

———–

சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய் இல்லை வந்து இரு போதும் மொய்ம்மா மலர்ப்பூம்
பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நாள் முத்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே –53-

(இ – ள்.) மொய் – நெருங்கிய,
மா – பெரிய,
மலர் – பூக்களையுடைய,
பூ – அழகிய,
பந்தி – வரிசையாகிய,
தடம் – தடாகங்கள்,
புடை சூழ் – பக்கங்களிற் சூழப்பெற்ற,
அரங்கா – திருவரங்கத்து நாதனே! –
சிந்திக்க – (உன்னைத்) தியானிக்க,
நெஞ்சு இல்லை -:
நாமங்கள் செப்ப – (உனது) திருநாமங்களை உச்சரிக்க,
நா இல்லை – ;
இரு போதும் – காலை மாலை யிரண்டுபொழுதிலும்,
வந்து -,
நின்னை வந்திக்க – உன்னை வணங்க,
மெய் இல்லை – (கை கால் முதலிய அவயவங்களையுடைய) உடம்பு இல்லை; (அங்ஙனமிருக்கவும்),
ததிபாண்டன் உன்னை சந்தித்த நாள் – ததிபாண்டனென்பவன் உன்னையடைந்து முத்திபெற்றபொழுது,
(அவனுடன்), தயிர்த் தாழியும் – (அவனது) தயிர்க்குடமும்,
முத்தி பெற்றது – மோக்ஷலோகமடைந்தது, என்னோ – எவ்வாறோ?

எம்பெருமானைச் சிந்திப்பவர்க்கும் அவனது திருநாமசங்கீர்த்தநஞ் செய்பவர்க்கும் அப்பெருமானை இருசந்திகளிலுஞ்
சென்று சேவிப்பவர்க்கும் மோக்ஷமுண்டாதல் ஸஹஜம்;
இவ்வாறுசெய்தற்கு வேண்டிய கருவிக ளிலொன்று மில்லாத தயிர்த்தாழி முத்திபெற்றது என்ன அதிசயந்தான்! என்றவாறு.
தாழிக்கு முத்தி கொடுத்தலாவது – தாழியிலுள்ள உயிர்க்கு முத்தி கொடுத்தல்:
உலகத்தில் பெயர் சொல்லுதற்குஉரிய எல்லாவஸ்துக்களுக்கும் உயிருண்டென்பது, வேதாந்திகளின் கொள்கை.
ஆனால், அசேதநப்பொருள்கள்பலவற்றில் உயிருண்டென்று சொல்வதற்குக் கூடாதபடியிருத்தல்,
அங்குள்ள உயிர் மிக்கபாபத்தால் ஜ்ஞாநவிகாஸஞ் சிறிதுமில்லாதிருக்கப்பெறுதலா லென்பர்.
இச்செய்யுளில், முத்திபெறுதற்குஉரிய காரணம் தாழியினி டத்தில் இல்லாதிருக்கவும், அது காரியத்தைப் பெற்றதாகக் கூறியது –
விபாவநாலங்காரத்தின்பாற்படும். வந்திக்க மெய்யில்லை – வந்திப்பதற்கு ஏற்ற உடம்பு இல்லை.
ததிபாண்டன் – தயிர்க்கலமுடையவன். தாழியும், உம்மை – இழிவுசிறப்பு.

———

குன்றா விளைவுடன் வண்மை பருவம் குணங்கள் இவை
பொன்றாது இருந்த கண் மாயம் என்னோ -பொன்னி சூழ் அரங்கா
அன்று ஆயர் தம் குல மைந்தர்களாயும் அலகு இல் இளம்
கன்றாயும் நாள் தொறும் சென்று வந்து ஆடிய காலத்திலே -54-

(இ – ள்.) பொன்னி சூழ் அரங்கா – காவேரிநதியாற் சூழப்பட்ட திரு வரங்கத்து நாதனே! – (நீ),
அன்று – கிருஷ்ணாவதாரத்தில்,
அலகு இல் – அளவில்லாத,
ஆயர்தம் குலம் – இடையர்சாதியில் தோன்றிய,
மைந்தர்கள் ஆயும் – பிள்ளைகளாகியும்,
இள கன்று ஆயும் – சிறு பசுவின்கன்றுகளாகியும்,
நாள்தொறும் சென்று வந்து -,
ஆடிய காலத்தில் – விளையாடியபொழுது, – (அப்பிள்ளைகளும் கன்றுகளும்),
குன்றா விளைவுடன் – குறையாத வளர்ச்சியும்,
வண்மை – வளமும்,
பருவம் – பிராயமும்,
குணங்கள் – குணங்களும்,
இவை -, பொன்றாது இருந்த – குறையப்பெறாமலிருந்த,
கண்மாயம் – ஜாலவித்தை, என்னோ – ? (எ – று.)

திரிமூர்த்திகளில் ஒருவனான பிரமனும் எம்பெருமானது திருவிளையா டல்களைக் காணமுடியாமற்போன தன்மையில்
ஈடுபட்டுக் கூறியவாறு. மெய்ச்சிறுவர்களின்மேலும் மெய்க்கன்றுகளின்மேலும் உள்ள பரிவினும் மிக்கபரிவு
போலிச்சிறுவர்களின் மேலும் போலிக்கன்றுகளின் மேலும் ஆயர்களுக்கு உண்டானது
எம்பெருமான் கொண்ட வடிவ மாதலினா லென்பர். எல்லாமாயைகட்கும் மேம்பட்ட மாயை செய்யவல்லாய் நீ யென்பது குறிப்பு.
“என்னோ” என்ற வியப்பு, உனது எதிரில் மாயைசெய்ய வந்தவனுக்கும் உனதுபெருமாயைகள் அறியப்படமாட்டாமற்
போயினவே யென்பதைச் சுட்டும்.
“கற்றின மாயவை காளையர் வான்கண்டு மீணினைவ, கற்றினமாயமு நீ கன்றுகாளையராகிப் பல்ப,
கற்றின மாயர் பரிவுறச்சேரி கலந்தமையுங், கற்றின மாயவொண்ணா வரங்கா செங்கமலற்குமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்,
வண்மை – அழகுமாம். கண்மாயம் – கண்ணை மறைத்து ஒன்றை வேறாகத் தோற்றுவிக்கும் மாயவித்தை.

———–

நெடும் கான் நிலத்து உடன் கோவலர் தாம் மிக நின்று நெஞ்சம்
நடுங்காது இமைத்திடும் கண்கள் எல்லாம் என்று நண்ணவர் மேல்
விடும் கால நேமி அம்கை அரங்கா கண் விழிக்கு முன்னே
சுடும் கான நல் அனல் துற்ற அம்மாயம் என் சொல்லுகவே –55–

(இ – ள்.) நண்ணலர்மேல் – பகைவர்மேல்,
விடும் – பிரயோகிக்கின்ற,
காலநேமி – (அவர்க்கு) யமனையொத்த சக்கரத்தையேந்திய,
அம்கை – அழகிய திருக்கையையுடைய, அரங்கா – ! –
நெடு கான் நிலத்து – பெரியகாட்டினிடத்தில்,
கோவலர் உடன் மிக – இடையர்கள் மிகத்திரண்டிருக்க,
நின்று – (நீ அவர்கள் நடுவே) நின்று, (அவர்களை நோக்கி),
நெஞ்சம் நடுங்காது – மனம் அஞ்சாமல்,
கண்கள் எல்லாம் இமைத்திடும் – கண்களையெல்லாம் மூடிக்கொள்ளுங்கள்;
என்று – என்றுகூறி, (அவர்கள் அவ்வாறே தங்கள்கண்களை மூடிக் கொண்டு),
கண்விழிக்கும் முன்னே – (அவர்கள்) கண்களைத் திறப்பதற்குமுன்பே,
சுடும் – வெப்பம் பொருந்திய,
கானம் நல் அனல் – பெருங்காட்டுத்தீயை,
துற்ற – முழுதும்விழுங்கியருளிய,
அ மாயம் – அந்த மாயத்தை,
என் சொல்லுக – என்னவென்று சொல்லுக? (எ – று.)

“நெஞ்சம் நடுங்காது கண்கள் இமைத்திடும்” என்ற தொடரில் – நீங்கள் கண்களை மூடாதிருந்தால்,
இக்கனலைப்பார்க்கும்போது அச்சமுண்டாகுமா தலால் அப்படி அச்சமுண்டாகாதவாறு கண்களை மூடிக்கொள்ளுங்க ளென்றும்,
இப்போது யான்கொள்ளும் விராட்ஸ்வரூபத்தைக் கண்டால் நீங்கள் நெஞ்சம்நடுங்குவீர்க ளாதலால் அவ்வண்ணம்
நேராதபடி கண்களைமூடிக் கொள்ளுங்களென்றும் ஸ்ரீகிருஷ்ணன் தந்திரமாகக் கூறின னென்பது தோன்றும்.
இவ்வரலாற்றால், அடுத்தவர்களை யாதரிக்கும் கண்ணனது அற்புத சக்திவெளியாம்.
கோவலர் – கோபாலரென்னும் வடசொல்லின் சிதைவு: பசுக்களைக் காப்பவரென்பது பொருள்; கோ – பசு.
இனி, கோவைக்காத்த லில்வல்லவ ரென்றுமாம். நண்ணலர் – தன்னை விரும்பாதவர். தாம் – அசை.

————-

வானாடரில் சிலர் சென்று கண்டாரில்லை மற்று அதனில்
போனாரில் மீளப் புவியில் வந்தாரில்லை பூவின் மங்கை
ஆனாத செல்வத் திரு அரங்கா கொச்சை ஆயர் எல்லாம்
மேனாள் பரம பதத்தினில் போய் எங்கன் மீண்டதுவே –56-

(இ – ள்.) பூவின் மங்கை – தாமரைமலரில்தோன்றிய திருமகளது,
ஆனாத செல்வம் – நீங்காத செல்வத்தையுடைய,
திரு அரங்கா – !
வான் நாடரில் – தேவலோகத்தவர்களுள்,
சிலர் – சிலரும், (பரமபதத்தை),
சென்று கண்டார் இல்லை – போய்ப் பார்த்தவர் இலர்;
அதனில் போனாரில் – அந்தப்பரமபதத்துச் சென்றவர்களுள்,
மீள – திரும்பவும்,
புவியில் – பூமியில்,
வந்தார் – திரும்பிவந்தவர்,
இல்லை – ஒருவரும் இலர்; (அங்ஙனமிருக்கவும்),
கொச்சை ஆயர் எல்லாம் – கீழ்மையையுடைய இடையரெல்லாரும்,
மேல் நாள் – முற்காலத்தில், பரமபதத்தினில் போய் -,
மீண்டது – மறுபடியுந் திரும்பிவந்தது,
எங்ஙன் – எவ்வாறு! (எ – று.)

என்றது, யமுனையில் தீர்த்தமாடுகின்றசமயத்தில் ஓரசுரனால் வருண லோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை,
ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டுவந்தபொழுது, தன்னைப் பூஜித்து உத்தம கதியை யடைய விரும்பிய
சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தமது திவ்வியதேஜோமயமான ஸ்வரூபத்தையும்,
பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி கண்ணன் அருளிய வரலாற்றை உட்கொண்டு.

விலங்குகட்கும் மனிதர்கட்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடு உண்டு, தேவர்கட்கும் மனிதர்கட்கும்;
இப்படி ஜீவாத்மாக்களுள் மிகவும் உயர்ச்சிபெற்ற தேவர்களும் கண்டறியமுடியாத பரமபதத்தை விலங்கோடொத்த
ஆயர்கள் கண்டதே ஓராச்சரியம்: பரமபதத்தைப் போய்க் கண்டறிந்தவர்கள் “நசபுநராவர்த்ததே (மீண்டுந்திரும்புவதில்லை)” என்று
சாஸ்திரத்தில் விதித்திருக்கவும், அந்தப் பரமபதத்தைக் காண்பதற்குஒருசிறிதும் ஸ்வரூபயோக்யதையில்லாத
அந்த இடையர்கள் அதனைக் கண்டதோடு நில்லாமல் சாஸ்திரத்திற்கும் மாறாக அங்குநின்றும் மீண்டுவந்தன ரென்றால்,
இவ்வாறெல்லாம் செய்வித்த உனதுநிலைமையைப் பற்றி எவ்வாற்றானும் பேசமுடியா தென்பதாம்.
சாஸ்திரங்களெல்லாம் எம்பெருமானது ஆஜ்ஞாரூபமே யாதலால், ஸ்வதந்த்ரனான அப்பெருமானே ஒன்றைச்
செய்கையில் அதுவே சாஸ்திரத்தோடு மாறுபட்டதாகா தென்க.
“பூவின்மங்கை யானாதசெல்வம்” என்பதனைத் திருவரங்கத்துக்கு அடைமொழியாகக் கொள்ளலு மொன்று.
கொச்சை – திருந்தாத மழலைச் சொற்களாகவுமாம்.
“கொச்சையாயர்” என்றது, இடங்கை வலங்கை யறியாத அவர்களது தகுதி யின்மையைச் சுட்டுதற்கு.
பரமபதம் – மிகவும் மேலான ஸ்தாநம், மோக்ஷம்; “மீளாவுலகம்” எனப்படுவது. மற்று – வினைமாற்று. எங்ஙன் – எங்ஙன மென்பதன் விகாரம்.

————–

கூன் நந்து உலாவயல் கோயில் உள்ளே பள்ளி கொள்ளும் எங்கள்
ஆனந்த வாரி திருக் குழல் ஊத அறத்தடிந்த
கானம் தழைத்தன கால் வரை நெக்கன கார் முகில் தோய்
வானம் அயர்த்தன வையம் எல்லாம் மெய்ம் மறந்தனவே –57-

(இ – ள்.) கூன் நந்து உலா வயல் – வளைவாகிய சங்கங்கள் உலாவுகிற கழனிகளையுடைய,
கோயிலுள்ளே – திருவரங்கம் பெரிய கோயிலில்,
பள்ளி கொள்ளும் – (ஆதிசேஷசயனத்தின்மீது) பள்ளிகொண்டுயோகநித்திரைசெய் தருளுகின்ற,
எங்கள் ஆனந்தம் வாரி – எங்களது பேரின்பக்கடலாகிய கண்ணபிரான்,
திரு குழல் ஊத – அழகிய வேய்ங்குழலை ஊதும்பொழுது, –
அற தடிந்த கானம் – முற்றவும் (வேரோடு) உலர்ந்த காடுகள்,
தழைத்தன -;
கால் வரை – சாரல்களையுடைய மலைகள்,
நெக்கன – உருகின;
கார் முகில் தோய் – கரிய மேகங்க ளுலாவுகின்ற,
வானம் – வானுலகம்,
அயர்த்தன – சோர்ந்தன;
வையம் எல்லாம் – நிலவுலகமுழுதும்,
மெய் மறந்தன – பரவச மாயின; (எ – று.)

ஸ்ரீ கிருஷ்ணபகவான் வேணுகாநஞ்செய்கையில் சேதநாசேதநங்கள் யாவும் அந்த வேய்ங்குழலின் இன்னிசையி லீடுபட்டன வென்பதாம்.
சங்கீத சாஸ்திரலக்ஷணத்துக்கு நன்குபொருத்தமான மிக இனிய இசைப்பாட்டைக் கேட்டமாத்திரத்தில் பட்டுப்போன
மரங்களும் தளிர்த்துப் பூத்துக் காய்த்துப் பழுத்தலும், கருங்கல்லும் நெகிழ்ந்து கரைந்து உருகுதலும் இயல்பு;
“கலைத்தொழில்படவெழீஇப் பாடினாள் கனிந், திலைப்பொழில் குரங்கின வீன்ற தூண்டளிர்,”
“உருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடுகின்றான்” என்றார் சிந்தாமணியார்:
“ஆயர், தறித்த மரமத்தனையுந் தழைத்தலர்ந்து பழுத்துதவ,….. கருங்கற்றான்
வெண்ணெயெனக் கரைந்தோட……. தொனித்தகுழ லிசைத்தோய் கேள்” என்பது அழகர்கலம்பகம்.
“படுமரன்களு நறிய பசிய தண்டளிர் தழைய, வடைவுறுங் கழையி னிசை யமுதமுஞ் செவிநிறைய”
“நின்றுயர்வரையுமுருக” என்பர் பாகவதத்தும்.

இச்செய்யுள் – கிருஷ்ணபகவானது வேய்ங்குழலின் இன்னிசையைப் பற்றி உள்ளபடி இனிதாக வருணித்தலால்,
தன்மைநவிற்சியணியாம். ஆநந்தமயாதிகாரத்தில் பரப்பிரமத்தை ஆநந்தமயமென்று கூறியிருத்தலால்,
அந்தப் பரப்பிரமத்தின் சொரூபமான திருவரங்கனை “ஆநந்தவாரி” என்றார். வாரி – நீர்; இங்குக் கடலுக்கு இலக்கணை.
அறத்தடிந்த கானம் என்பதற்கு – நன்றாக வெட்டப்பட்டுப் பட்டுப்போன காடு என்றும் பொருள்கூறுவர்.
கால் – மலையைச்சுற்றிலு மிருக்கின்ற குன்றுகள்: அவற்றிற்கு வடமொழியிற் பாத மென்று பெயர்.
கால்வரை = பாதசைலம். வானம் – அங்குள்ள உலகத்துக்கு ஆகுபெயர்.

———-

ஊரும் திரைப் பொன்னி நல் நீர் அரங்கா உருப்பல ஆய்
காரும் தடித்தும் கலந்தது போல் இடைக் கன்னியர்கள்
யாரும் களிக்க இடையிடையே கலந்து இன்ப நலம்
கூரும் திரு நடம் ஆடிய மாயம் என் கூறுகவே –58-

(இ – ள்.) ஊரும் – மேன்மேல்வருகின்ற,
திரை – அலைகளையுடைய,
பொன்னி – காவேரியினது,
நல் நீர் – நல்லநீராற் சூழப்பட்ட,
அரங்க – திருவரங்கத்துநாதனே! – (நீ கிருஷ்ணாவதாரத்தில்),
இடை கன்னியர்கள் யாரும் களிக்க – இளமையான இடைப்பெண்கள் யாவரும் மகிழும்படி,
பல உரு ஆய் – பலதிருவுருவங்கொண்டு,
இடை இடையே – (அவர்களது) நடுநடுவே,
காரும் தடித்தும் கலந்தது போல் – மேகமும் மின்னலும் ஒருசேரக் கலந்து தோன்றியதுபோல, கலந்து – ,
இன்பம் நலம் கூரும் – சிறந்தஇன்பமிகுகின்ற,
திருநடம் – திருநடநத்தை, ஆடிய -,
மாயம் – மாயையை, என் கூறுக – என்னவென்று சொல்லுக! (எ – று.)

கார் – கண்ணனுக்கும், தடித்து – இடைக்கன்னியருக்கும் உவமை. திரு நடமாடியமாய மென்றது.
கோபஸ்திரீகள்யாவரும் வட்டமாய்நின்றுசெய்த ராஸக்கிரீடையில் அவர் யாவருந் தன்பக்கத்திலேயே நிற்க
மனமுள்ளவராய்த் தன்பக்கத்தை விடாதிருந்ததனால், கண்ணன் யாவர்க்கும் பக்கத்திலிருந் தவன்போலக் காணப்பட்டதனை.
அப்பொழுது ஒவ்வொருத்தியது இவ்விரு கைகளிலுந் தன்கைபொருந்தும்படி அவ்வவரது இருபக்கங்களிலும்
நின்று நின்று சுற்றி வந்ததனால், “இடையிடையே கலந்து” என்றார்.
இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆடிய கூத்து, தமிழ்மொழியில் “குரவைக்கூத்து” எனப் பெயர்பெறும்;
“குரவைக்கூத்தே கைகோத்தாடல்” என்பது, திவாகரம்; இதனை, வடமொழியில் “ராஸம்” என்பர்.
பல நாட்டியப்பெண்கள் வட்டமாக நின்று சித்திரமான தாளலயங்களுடன் மெதுவாகவும் உன்னதமாகவுங் கூத்தாடுதல், இதன் இலக்கணம்;
“குரவையென்பது – காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்து ஆடுவது”,
“குரவையென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும், எய்தக் கூறு மியல்பிற் றென்ப” என்பவற்றை இங்கே அறிக.

———-

மின் போல் இடை இடை மாதர் எல்லாம் உன் தன் மெய் தழுவி
நன் போக சாகரத்துள்ளே முழுகவும் நாள் மலராள்
தன் போகமே மகிழ்ந்தார் அரங்கா அண்டர் தாம் அவரை
அன்போடு அணைத்துத் துயின்றது எம்மாயம் அறிந்திலமே –59-

(இ – ள்.) நாள்மலராள் தன் – எந்நாளும் மலர்ந்ததாமரை மலரிலெழுந்தருளி யிருக்கிற திருமகளது,
போகமே – இன்பத்தையே,
மகிழ் – மகிழ்கின்ற,
தார் – திருமாலையையுடைய, அரங்கா – ! –
மின் போல் இடை – மின்னல்போன்ற இடையினையுடைய,
இடை மாதர் எல்லாம் கோபகன்னிகைகள் யாவரும்,
உன்தன்மெய்தழுவி – உன்னுடைய திருமேனியை ஆலிங்கனஞ்செய்துகொண்டு,
நல் போகம் சாகரத்துள்ளே – சிறந்த இன்பமாகிய கடலிலே,
முழுகவும் – அழுந்திக்கிடக்கவும், –
அண்டர் – (அவர்களது கொழுநரான) இடையர்கள்,
அவரை அன்போடு அணைத்து – (அம்மங்கையரிடத்துச் சிறிதும் குற்றம்பா ராட்டாமல்) அவர்களை விருப்பத்தோடு ஆலிங்கனஞ் செய்துகொண்டு,
துயின்றது – தூங்கியது,
எ மாயம் – என்ன மாயை?
அறிந்திலம் – (அதனையாம்) தெரிந்தோமில்லை; (எ – று.)

திருமால் ஸ்ரீராமாவதாரஞ் செய்கையில் அவனது திருமேனியைத் தழுவுதற்குவிரும்பிய தண்டகாரணியமுனிவர் முதலிய
யாவர்க்கும் ஏகபத்நீ வ்ரதங்கொண்டுள்ள தான் வேறொரு திருவவதாரத்தில் தனது ஆலிங்கனத்தைத் தருவதாக
வாக்களித்திருந்தன னாதலால், அதற்கேற்பக் கோபகன் னிகைகளாய்ப் பிறந்த அவர்கட்கெல்லாம்
ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்த தான் தனது வாக்கின்படியே செய்தன னல்லது போகத்தில் இச்சையினால்
அவர்களைத்தழுவினனல்ல னென்பது, இங்குக் கருதத்தக்கது.
தருமத்தை ஸ்தாபிக்க அவதரித்த எம்பெருமான் தருமவிரோதமாக இங்ஙனஞ்செய்வது ஒக்குமோ?
அக்கன்னிகைகளுக்கும் இதனால் பாதக முண்டாகாதோ? எனின், –
அப்பெருமான் தன்னைச்சேர்ந்தவர்களுடைய சகலபாபங்களையும் போக்கடிக்கும்படியான பரிசுத்தியுடையவ னாதலாலும்,
வேதாந்தநிர்ண யத்தின்படி அன்புசெலுத்தவேண்டு மிடத்திலேயே அக்கன்னியர் அன்பு செலுத்தினார்க ளாகையாலும்,
அவர்கட்குச் சகலபாபநிவிருத்தியேயல்லது பாவமுண்டாவதில்லை.
எம்பெருமானுக்கோ, ஜீவாத்மாவுக்கு உண்டாவது போலே பாபபந்தம் உண்டாகாது; ஏனெனில் : –
ப்ருதிவி அப்பு தேயுவாயு ஆகாசம் என்கிற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப்பிராணிகளிலும் வியாபித்திருக்குமோ,
அப்படியே, ஸ்வாமி அந்தப்பெண்களினிடத்தும் அவர்களது கணவர்களிடத்தும் மற்றுமுள்ள ஆத்மகோடிகளிலும்
வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையாலே, அவனுக்குப் புதிதாக ஒருசம்பந்தம் வந்ததில்லை யென்க.
மேலும், ஸ்ரீகிருஷ்ணபகவான் தன்னைப் பாவஞ்சாராத எழு பிராயத்திற்குள் உபநயநமாதற்கு முந்தித்
திருவாய்ப்பாடியி லிருந்தபொழுது இங்ஙனம் கோபகன்னிகைகளுடன் கலந்திருந்தானே யன்றி உபநயமானபின்பு
அக்கன்னிகைகளைக் கண்ணெடுத்துப்பார்த்தலுஞ் செய்தில னென்பதும் இங்கு உணரத்தக்கது.
இன்னும் பலவகையாகவும் ஏற்றசமாதானம் ஆன்றோராற் கூறப்பட்டு வழங்கும்.

————-

நீரில் புகும் கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்திய பொன்
தேரில் தொழும் பின்னை நீரினில் காணும் சிறந்த பச்சைக்
காரின் திற மெய் அரங்கனும் சேடனும் கஞ்ச வஞ்சன்
ஊரில் செல உடன் போம் அக்குரூரன் தன் உள் மகிழ்ந்தே –60-

(இ – ள்.) சிறந்த -, பச்சை காரின் – நீலமேகம் போன்ற,
திறம் – தன்மையையுடைய,
மெய் – திருமேனியையுடைய,
அரங்கனும் – கண்ணபிரானும்,
சேடனும் – ஆதிசேஷனது அவதாரமாகிய பலராமபிரானும்,
வஞ்சன் கஞ்சன் – வஞ்சகனாகிய கம்ஸனுடைய,
ஊரின் – ஊராகிய வடமதுரைநகரத்துக்கு,
செல – எழுந்தருளினபொழுது, –
உடன் போம் – கூட (அவர்களை அழைத்துக்கொண்டு) போகின்ற,
அக்குரூரன் – அக்குரூரரென்னும் யாதவபாகவதர், –
நீரில் – (வழியிலுள்ள யமுநாநதியின்) தீர்த்தத்துக்குள்ளே,
புகும் – (மாத்தியாந் நிக ஆராதனத்திற்காகப்) போய் நீராடுவர்;
கண்டு – (அங்குப் பலராமனையுங் கண்ணனையும்) பார்த்து,
தேரினை பார்க்கும் – (அங்கிருந்து உடனே ஓடிக் கரைக்குவந்து) திருத்தேரைப்பார்ப்பர்;
நிறுத்திய பொன் தேரில் (கண்டு) – (கரையிலே) நிறுத்தப்பட்ட பொன்மயமான அந்தத் தேரிலே (அவர்கள்) எழுந்தருளியிருக்கக் கண்டு,
தன் உள் மகிழ்ந்து தொழும் – தான் மன மகிழ்ந்து (அவர்களை) வணங்குவர்;
பின்னை – மறுபடியும் (நீரிலேபோய் முழுகிநிற்க),
நீரினில் காணும் – (அவர்களை) அச்சலத்தினுள்ளே பார்ப்பர்.

கிருஷ்ணபலராமர்களை எப்படியாவது கொல்லவேண்டுமென்று பல அசுரர்களை யேவிப் பார்த்தும் தான்
கருதியசெயல் நிறைவேறாததனால், கம்சன் முடிவில் வில்விழாவென்று ஒருவியாஜம் வைத்து அதற்கு
ஸ்ரீராம கிருஷ்ணர்களை அன்போடு அழைக்கிற பாவனையாக அக்குரூரரைத் திருவாய்ப்பாடிக்குத் தூதனுப்ப,
அவ்வக்குரூரரால் அழைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனுடனே பிரயாணப்பட்டுப் போகையில்
அக்குரூரர் மத்தியான்னக் கடனைமுடிப்பதற்காக வழியிலெதிர்ப்பட்ட காளியமடுவின் கரையில்
கிருஷ்ணபலராமர்களை யேற்றிவந்த தேரை நிறுத்திவிட்டு அம்மடுவில் இறங்கி ஸநாநஞ்செய்கையில்
அந்நீரினுள்ளே ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கண்டு “தேரிலிருக்கின்றவர்கள் இங்கு எப்படி வந்தார்கள்?” என்று
சங்கித்துக் கரையேறிச் சென்று தேரைப்பார்த்தனராக, அங்கும் அவர்களைக் கண்டு,
இவ்வாறு மீண்டும் மீண்டும் நீரிலும் தேரிலுங் கண்டு முடிவில் எம்பெருமானது செயலை வியந்து வாயாரவாழ்த்தின ரென்பதாம்.

கஞ்சன் – கம்ஸன் என்பதன் சிதைவு. ஸ்ரீராமகிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்துவரும்படி
அக்குரூரருக்குக் கட்டளையிட்டவனா தலால், வஞ்சனெனப்பட்டான். அக்ரூரன் – கொடுந்தன்மையில்லாதவன், யாதவபாகவதன்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading