ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -2-10–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

அவதாரிகை –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் –
ஸூலபனாய் –
ஸூரி போக்யனான ஈஸ்வரன் –
திருவடிகளில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு
விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை

ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு
வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்

இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்
இமையோர் தலைவா என்றும்
சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

முழுநீர் முகில் வண்ணன்
கடலைக் கழுத்து அளவாகப் பருகின காளமேகம் போன்ற நிறத்தை யுடையவன்

கண்ணன்
அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய்
எட்டாதே இருக்கை இன்றிக்கே
பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் தொழுநீர் இணையடிக்கே
பூர்வே என்றும்
ப்ரதம ஜா என்றும்
சொல்லுகிறபடி முற்பாடராய்
பரமபதத்துக்கு நிலத்து ஆளிகளான அநந்த கருட விஷ்வக் ஸேனாதிகளான நித்ய ஸூரிகள்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
நிரந்தர கைங்கர்யம் பண்ணும் படியான ஸ்வ பாவத்தை யுடைய
பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளிலே –

அன்பு சூட்டிய சூழ் குழற்கே —
தன்னுடைய ப்ராவண்யத்தை சூட்டின செறிந்த குழலை உடையவளுக்கு

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை யுடைத்தான தடாகத்தில் கயலானது இடம் வலம் கொண்டால் போல

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
சிவந்த அரியை யுடைத்தான கண்கள் ப்ரேமத்தால் அழுத நீர் துளும்ப
ஆற்றாமையால் நின்ற இடத்திலே நில்லாமல் அலமருகின்றன

வாழியரோ
இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே
நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்
அன்றியே
இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று

(மீன் வாசஸ்தானம் செழும் நீர் தடாகம் ஆதாரம்
இவர் ஞானத்துக்கு அடி மயர்வற மதிநலம் அருளின-அவனே ஹேது ஆதாரம் )

சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே
அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

அழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே
அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது
(அன்பு ஆர்வம் அபிநிவேசம் -அன்பே தகளி -ஆர்வமே நெய் )

முழு நீர் முகில் வண்ணன் என்று
ப்ரேம விஷயம் பூர்ணமாய் –
தர்ச நீயமாய்
உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று

கண்ணன் என்று
இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே
விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே
அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று

அன்பு சூட்டிய என்கையாலே
இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே
அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது

வாழியரோ -என்கையாலே
இப்பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று –
(அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )

இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

——-

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–————

அவதாரிகை –

இப்படி பார்ஸ் வஸ்த்ரான ஸூஹ்ருத்துக்களும் கண்டு விஸ்மிதாராம் படி ப்ரேம பரவசரானவர்
இந்தப் பாரவஸ்யத்துக்கு மூலமான பகவத் விஷயத்திலே ப்ராமண புரஸ்சரமாக
(பிரமாணம் வேதம் -பிரமேயம் காட்டும் புள் -வேத மயன் )
நெஞ்சு சென்ற பிரகாரத்தை
பிரிந்து போன தலைமகன் பின் சென்ற நெஞ்சை நோக்கித்
தலைவி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல் போல் சினத்த–பி ள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு
குழலை நிரூபகமாக உடையவராகையாலே
அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான
கோப குலத்திலே பிறக்கையாலே
தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய்
மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்

சாயை போலே அனுவர்த்திக்கிற படியைக் கண்டு

நிற்கும் கொல் மீளும் கொல்
இவர்கள் அப்ருதக் ஸ்திதைகள் ஆனால் போலே
நமக்கு அபிமானியான நாயகிக்கும் செறியக் குறை இல்லையே -என்று நிற்குமோ
இவர்களும் அனுவர்த்திக்கும்படியான அவனைக் கிட்டல் அரிது என்று மீளுமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து அழகியதான திருத் துழாயையும்
ஆஸ்ரித விரோதிகளை அக்னி போலே பஸ்ம ஸாத்தாக்கும் திருவாழியையும் யுடையவனாகையாலே
ஸ்வாமி யானவன்

விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன
ப்ரஹ்ம ருத்ராதிகள் சேஷத்வ ப்ரகாசிகையான வ்ருத்தியைப் பண்ண
ஆஸ்ரித ஸம் ரக்ஷணார்த்தமாக
அதி த்வரையுடன் நடத்தப்படுவானாய்

பரிகர பூதனான ஆழ்வானிலும்
பரிகரவானான ஈஸ்வரனிலும்
விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான
மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள
பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தனி நெஞ்சமே
பின்னையும் விட்டு
அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட நெஞ்சம்
ஸ்வ தந்திரமான நெஞ்சம் என்றுமாம்

முகம் பெறும் அளவும் நிற்குமோ
மீண்டு போருமோ என்றுமாம்

குழல் என்று
இவள் தன் மயிர் முடி ஆகவுமாம் –

இத்தால்
இவ்வாழ்வார் தம் திரு உள்ளம்
வேத மயனான புள்ளின் பின் போனமை சொல்லுகையாலே
பிராமண அநு சாரித்த்வம் சொல்லிற்று

அப்புள் -என்கையாலே
ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

கடவும் என்கையாலே
காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி
பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று

விண்ணோர் தொழ -என்கையாலே
விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது
ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே
1-போக்யத்வமும்
2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
3-ஸ்வாமித்வமும்
ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம் என்று தோற்றிற்று

நிழற் போல்வனர்-என்கையாலே
ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே
இப்படி மஹிஷீ
பூஷண
பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு
வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ-
விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

இப் பாட்டு
தலைவன் பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழித்து உரைத்தது

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை
போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே
தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –

அப் புள்ளின் பின் போன-என்று
நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

———

ப்ராப்ய விஷயத்திலே பிராமண அதீனமாக நெஞ்சு பற்றி
அத்தால்
ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும்
அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த்
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்
என்னோடு உறவற்று நீங்கிய நெஞ்சத்தை

முன்னவர் புள்ளே கவர்ந்தது
முன்பு அவரோட்டை சம்பந்தத்தால் உண்டான
ராஜ குலத்தாலே
பெரிய திருவடியே அபஹரித்தான்

நெஞ்சம் புள்ளே கவர்ந்தது
பருந்து இறாஞ்சிக் கொண்டது

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
குளிர்ந்து அழகிய திருத் துழாய்க்கு இனி இங்குக் கவருகைக்கு நாம் நெஞ்சுடையோம் அல்லோம்

நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில்
திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே )
அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம்
நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து
(பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிந்து வஞ்சகத்தை உடையளான பேய் மகளுடைய முலையைப் பசையறச் சுவைத்த
(விஷம் கலந்து ரஸ்யம் சுவை -பராசரர் விஷ்ணு புராணத்தில் )
கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே
அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும்
கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய் முலை சுவைத்தான்
வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே
உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே
(ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )

பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று
பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு

அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது

முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்

பனி நஞ்ச மாருதமே
திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

எம்ம தாவி பனிப்பியல்வே
தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –
(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது
மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை
(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

முன் என்றது
பிரதமத்திலே சித்தாந்த அவகாஹி யாகை

அவர் புள்ளே என்றது
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று
ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )

புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக
ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் )
வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்

(உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே
தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்
வேதமே பெரிய திருவடி வடிவம் )

கவர்ந்தது என்று
வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் -என்று
இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில்
அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

(அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர
ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே )

இனி கவர்வது யாமிலம் -என்று
ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு
ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

நீ நடுவே என்று
ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய
சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே
ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி

(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து –
காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே
ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும் என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்
தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்
ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே
அத்தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து –

(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -)

———

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே
என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

————-

அவதாரிகை
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு
ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி
பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு
தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை

இக் காலம் இவ் ஊர்
இக் காலத்திலும் இவ் வூரிலும்
காலாந்தரத்திலும் இல்லை
தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்

இவளுக்கு என்னாதே
இவ்வூருக்கு என்றது
இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு

எரி வீசும்
வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று
தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது

வீசும்
ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

அம் தண் அம் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு )
இந்த நெருப்பை ஆற்றலாவது
அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள்
ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்
(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே
நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக
வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன்
குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்
வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை

ஒரு நான்று தடாவியதே
ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது

பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்
செவ்வையே ஸ்வ பாவமான இது
இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை -என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் -என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு
அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு
இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே
ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே
பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி
நேர் அறிவு கலங்கின படி

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும்
ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி
அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே
ஆர்த்தியினுடைய அதிசயம் –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க

அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத் துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

———————–

அவதாரிகை
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட
அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை
தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
வளைந்த அம்பையும்
முரி போன சிலைகளையும் தவிர்ந்து

கடாயின கொண்டொல்கும்
தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்

வல்லி ஈதேனும்
இது ஒரு கொடி என்று சொல்லும்படி
ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து
அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –

அம்பும் -என்றது
ஜாதி ஏக வசனம்

சிலைகள் என்று
முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்

பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய கூற்றம்
மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே
உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்

ஞாலத்துள்ளே–
இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று
உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
அம்பு என்று
லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது

சிலை என்று
ப்ரேரகமாகையாலே
க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –

இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது
அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே
அப்ராப்த விஷய அவகாஹநம்

சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை

(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல்
ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர்
மதி நலம் அருளப்பெற்றவர் )

ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு
கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்

அதாவது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட
நித்யத்வ
அபவ்ருஷேயத்வ
ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே
அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு
ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே
மதன செங்கோல் நடாவிய
நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான

கூற்றம்
பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே
ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்

இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்

ஞாலத்துள்ளே–
ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 )
ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று

பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் –
என்று அந்வயிக்கவுமாம் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

——

அவதாரிகை

ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்
அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை
ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக்
கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் எல்லாம் நடுங்கும்படி தன்னில் தான் நெருங்கி

நன்னீரிட்டு
ஸ்வ கதமான ஜலத்தை இட்டு

பனிப்ப நன்னீர் இட்டு -என்று
நனையும்படி நன்றாக நீர் இட்டு என்றுமாம் –

கால் சிதைந்து-
மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை
ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைய ஏறு என்று
மேகத்தை மயக்கி உரைக்கிறாள் –

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை

கால் சிதைந்து பொரா நின்ற -என்று
மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்

அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும்
ஸ்யாமளமான நிறத்தாலும்
ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத்
தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்து
அழகிய
கார் காலம் தானோ

வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-
உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான்
காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன்
தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –

இத்தால்
இவ்வாழ்வாருடைய அனுபவ யோக்ய காலத்தில்
விளம்ப அஷமத்வத்தாலே
அவி விவேக கன அநந்த திங் முகமாய்
பஹுதா சந்தத துக்க வர்ஷியான பவ துர் தினத்திலே (ஸ்தோத்ர ரத்னம் -49 )
அகப்பட்டோம் என்று ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே
இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி

நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து
(நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )

நீல வல்லேறு
நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்
ஏறு என்று
செறுக்கு சொல்லுகையாலே
ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்

பொரா நின்ற
ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற

வானமிது -என்கையாலே
இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –

இத்தால்
ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ
பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –

அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள்
ஸ்ரீ யபதியைப் பாவித்துத்
தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே
இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று
கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று

(ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும்
உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )

இங்கு வினையாட்டியேன் என்றது
பாரதந்தர்யத்தாலே
ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல்
அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல்
செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி –

—–

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை
ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————-

அவதாரிகை

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர்
பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை
அறிந்து அருளின இவர் –
அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி
தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்

பிரியலுற்ற அன்பரை நோக்கி
இவ்வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால்
அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன்
தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு
இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே
இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்

பாண்
பாண்மையாய் இரா நின்றது

குன்ற நாடர்
மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து

பயில்கின்றன
பல படியும்
செய்வது
சொல்வது ஆகிறன

இதெல்லாம்
இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்

அறிந்தோம்
ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து
கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய்
குளிர்த்தியை யுடைத்தாய்
பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே

மாட்சிமை -நன்மை

மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய்
குன்றம் ஏந்தியுமானவன் என்று
வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி

பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு
ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே
பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்

(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –
நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்
உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி
ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –

இவ்விடத்தே
குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி

(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————–

அவதாரிகை

அன்புடையாரை அகல மாட்டாத இவருடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தாலும்
ஞான வை லக்ஷண்யத்தாலும்
பிரிய மாட்டாமையால் அன்பர் சொன்ன பாசுரத்தை
பிரிவு அறிந்த தலைவி எழிலும் வேறுபாடும் கண்டு
பிரிய மாட்டாத தலைவனுடைய கோளான வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர்
திண்மையையும்
புகர் யுடைமையையும்
ஒளியையும்
‘கூர்மையையும்
உடைய திருவாழியோடே உண்டான சேர்த்தி அழகையும் உடையராய்
ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே
வைகுண்ட பர லோக -லிங்க புராண ஸ்லோகம்
பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ மானுடைய
(அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அம்மானுக்கு–ஆழி இத்யாதி
அங்கும் உண்டே -தாமம் ஸ்ரீ வைகுண்டம் )

விண்ணாடனைய
பரமபதம் போலே
நிரதிசய ஆனந்தா வஹையான

வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான கொடி போன்றவளை
(பூ மலர்ந்த கொடி )

யாரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையோ கண்
கண்ணாய் இருக்கிறானோ

பூங்கமலம்
அழகிய கமலமானது

கருஞ்சுடராடி
அஞ்ஐனத்தின் ஒளியை அணிந்து

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்கள் ஆகிற
வெளுத்த முத்தை அரும்பி

வண் பூங்குவளை
உதாரமாய்
அழகிதான
செங்கழு நீரினுடைய

மடமான் விழிக்கின்ற
மடப்பத்தை யுடைய
மானின் நோக்கை யுடைத்தாகா நின்ற

மாயிதழே–
பெரிய இதழை யுடைத்து என்னலான
இவை கண்ணாய் இருக்கின்றனவோ

இக் கொடிக்கு வண்ணம் சிறப்புடைய பூ என்னும் அத்தனை
ஆதலால் ஆரே பிரிபவர் என்று கருத்து
இது நீங்கல் அருமை கூறல்

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இத்தால்
இவ்வாழ்வாரைப் பிரிய நினைத்த அன்பரான பாகவதர்
பரத்வ ப்ரகாசகமான திருவாழியோடு உண்டான சேர்த்தியாலே
தர்ச நீயனான ஸ்ரீ மானுடைய பரமபதம் போலே
ஆனந்தாவஹமாய்

உதாரமாய் –
போக்யமாய் –
அத் யுஜ்ஜ்வலமாய் –
உபக்ந அபேக்ஷமான கொடி போலே –
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஸ்வரூபத்தை யுடைய இவரை
ஸ்வரூப ஞானம் பிறந்தாரில் விடுவார் யுண்டோ –

(வண் பூ மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல -நாயனார்
வல்லி கொடி -தேக ஆத்ம குணங்கள் )

அது நிற்க
இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு
பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

(கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்
இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்
ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்
திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்
பூம் கமலம் -அவள்
கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று

(இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே
ராகம் கலந்த ஞானம் )

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ
என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——-

தாத்பர்யம்

முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள்
தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க
அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்டா நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை
நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

சவுந்தர்யம்
லாவண்யம்
மார்த்தவம் –
சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை
ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான
வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே –
போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே

உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும்
கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து
மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய
உன்னைக் கண்டார் பிரிவாரோ
ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்
பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு

—————

அவதாரிகை

இப்படிப் பிரிய மாட்டாத அன்பரான பாகவதர்
இவ்வாழ்வாருடைய அவயவ சோபையிலும்
அருளிச் செய்த வசன வ்யக்திகளிலும்
ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தையை
தோழியும் தலைமகளும் இருந்த கானல் புனத்து எதிர்ப்பட்ட தலைவன்
மதியுடன் படுத்தலுற்றுக்
குறை யற யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய
ஸர்வேஸ்வரனதான

வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
வட எல்லையான திருமலையை நாடாக யுடைய
வல்லி போன்று இருந்த பெண்காள்

இங்குக் கொடி என்று
கொடிச்சியாய்
குற மகள் ஆகவுமாம்

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
உங்கள் முன்னே நின்று ஈடுபட்ட என்னுடைய நோய் காணாத அளவன்றியே
சொல்லவும் கேட்க்கிறீலீர்
ஸ்வர அவஸாதமும் செவிப்படுகிறது இல்லை

ஓ என்று
ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல்
உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி

நுமது வாயோ
உங்கள் விகசிதமான வாய் அழகோ

அதுவன்றி
அவ்வளவு இன்றியே

வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ
கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும்
சிதிலராம்படி
ஆய விடுகிற மிடற்று ஓசையோ

தொண்டையோ
அக்காலத்தில் தொண்டைப்பழம் போலே சிவந்த
அதர சோபையோ

அடும்
என்னை உயிர்க் கொலை செய்யா நிற்கும்

இது அறிவது அரிதே
இவற்றில் ஏதோ நலிகின்றது என்று அறிய அரிதாய் இரா நின்றது

உரையீர் அறை
நீங்கள் சொல்ல வல்லீராகில் சொல்லுங்கோள்
இவர்கள் வார்த்தை கேட்க்கையில் விருப்பத்தாலே கருத்து அறிவித்த
தலைமகன் மேலிட்டு உரைத்த பாசுரம்
குறை நயந்த தலைவன் கருத்து அறிவித்தல்

மாயோன் வட திருவேங்கட நாட
இத்தால்
பிரிய மாட்டாத அன்பர்கள்
மாயோன் இத்யாதியாலே
அபரிச்சின்ன போக்யதையாலே ஆச்சார்யாவஹனுடைய ஸர்வ உத்தரமான
திருமலையிலே நாட்டத்தை யுடைய -என்றபடி

வல்லிக் கொடிகாள்-என்று
பகவத் அனுபவ ரஸ அபேக்ஷமான பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது
பன்மை -கௌரவத்தைக் காட்டுகிறது

ஆக
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே
மானஸ அனுபவம் நடந்து
அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –

உரையீர்
இது அருளிச் செய்ய வேணும்

நுமது வாயோ
அனுபவ பரிவாஹ ரூபமான பிரபந்த நிர்மாண தசையில் முக விகாஸமோ

அதுவன்றி
அவ்வளவு அன்றியே

வல்வினையேனும்
உம்மைப் பிரிந்து போகாதபடி துவக்குவதான வலிய வினையை யுடைய நானும்

இவ்விடத்தில் வினை என்பது
பாவ பந்தத்தை

கிளியும் -என்று
பசுஞ்சாம நிறத்தாலும்
அவ்வதரத்தில் பழுப்பாலும்
வசன மாதுர்யத்தாலும்
போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது

எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற
இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று

(தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார்
அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் )

ஆயோ -என்று
வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி

தொண்டையோ -என்று
தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி

அடும்-என்கையாலே
இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி

அறையோ விதறிவரிதே—என்கையாலே
வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி

உரையீர் -என்று
நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading