ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -61-80-

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாதம்பத் துக்கெதிர் மார்பா வரங்கத்து வாழ் பரந்தா
மாதம்பத் துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே –61-

பூ மாது அம்பத்துக்கு எதிர் மார்பா – தாமரை மலரில் வீற் றிருக்கிற திருமகளாரது கண்களுக்கு இலக்காய்
விளங்குகின்ற திருமார்பினழகை யுடையவனே!
அரங்கத்து வாழ் பரந்தாமா – திருவரங்கத்தில் நித்திய வாசஞ்செய்கின்ற பரந்தாமனே!
மா தம்பத்து – பெரிய தூணிலே,
கொங்கையும் – தனங்களும்,
அல்குல் தேரும் – தேர்த் தட்டுப் போன்ற அல்குலும்,
வயிறும் -, இல்லை -; மாதம் பத்து குறியும் கண்டிலேம் – (கர்ப்ப காலமாகிய) பத்து மாசத்துக்கு முரிய கர்ப்ப
சின்னங்களையும் (அத்தூணிலிருந்தனவாகக்) கண்டோமில்லை; (அங்ஙனமிருக்கவும்),
வந்துதோன்றினை – (தூணிலிருந்து நரசிங்கமூர்த்தியாக) வந்து அவதரித்தாய்; (இந்நுட்பத்தை யுணராமல்),
தம் கருத்து பத்து இல்லார் – தமது கருத்திலே (உன்விஷயமான) பக்தி யில்லாதவர்கள்,
வையகத்து பிறப்பு என்பர் – பூமியிலே (உனக்குக் கரும வசத்தால் நேர்ந்த) பிறப்பென்று (அதனைச்) சொல்வார்கள்; (எ – று.)

சாதாரணமான பிறப்புக்கு உரிய சின்ன மொன்று மில்லாமல் உனது நரசிங்காவதாரம் விலக்ஷணமாயிருக்கவும்
அதனையுமுட்படப் பிறப்பென்று இகழ்வது, உன்பக்கல் பக்தி யில்லாதவர்கள் அவதார ரகசிய ஞான மில்லாமையாற்
சொல்லும் பேதைமைச் சொல்லேயென்பது கருத்து.
“மண்ணும் விண்ணுமுய்ய, மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்,
தீதண்டத் தானத்தனுவெடுத்தானெனிற் றீநரகே”,

“மாயன் தராதலத்து, மீனவதாரம் முதலானவை வினை யின்றி
இச்சை, யானவ தாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் பிற பிரபந்தங்களிலும்.

ஜீவாத்மாக்கள் தேவதிர் யங்மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கரும வசத்தினாலன்றி,
பரமாத்மா மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் செய்வது துஷ்ட நிக்ரக சிஷ்ட பரி பாலநத்தின்பொருட்டுத் தான் கொண்ட
இச்சையினாலேயே யாகுமென்ற இவ் வுண்மையை யுணர்தல், அவதார ரஹஸ்ய ஞ்ஜாநம் எனப்படும்.

பத்து மாதக் குறி – மசக்கை நோய், உடல் விளர்த்தல், வயிறு பருத்தல், முலைக் கண் கறுத்தல் முதலியன.

“பீரமலர்ந்த வயாவுநோய் நிலையாது, வளைகாய்விட்டபுளியருந்தாது, செவ்வாய் திரிந்து வெள்வாய்பயவாது,
மனை புகையுண்டகருமணிடந்து, பவளவாயிற் சுவைகாணாது, பொற்குடமுகட்டுக் கருமணியமைத்தெனக்,
குங்குமக்கொங்கையுந் தலைக்கண்கறாது, மலர வவிழ்ந்த தாமரைக் கயலென, வரிகொடு மதர்த்த கண் குழியாது,
குறிபடு திங்களொருபதும் புகாது, தூணம் பயந்த மாணமர் குழவி” என்ற கல்லாடம், இங்குக் காணத்தக்கது.

பரந்தாமன் என்ற வடசொல் – மேலான இடத்தையுடையவ னென்றும், சிறந்த சோதிவடிவமானவ னென்றும் பொருள்படும்.
பக்தி என்ற வடசொல் ‘பத்து’ என்று விகாரப்படுதலை, “பத்துடையடியவர்க் கெளியவன்” என்ற திருவாய்மொழியிலுங் காண்க.
மஹா, ஸ்தம்பம், மாஸம், அம்பகம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. கொங்கையும் மல்குல், மகரவொற்று – விரித்தல்

———–

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை
வைகுந்த மேற்கொண்டு இருந்தார் வடிவைந்தின் வாழுமிடம்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே–62-

வை – கூர்மையான,
குந்தர் – குந்தமென்னும் ஆயுதத்தை யுடையவரும்,
தாமரை போல் பாதர் – செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவரும்,
மாதர் புடைவை – கோப ஸ்திரீகளுடைய சேலைகளை,
நாகத்து – புன்னை மரத்தின் மேலும்,
குந்தம் மேல் – குருந்த மரத்தின் மேலும்,
கொண்டு இருந்தோர் – கவர்ந்து கொண்டு சென்று ஏறி யிருந்தவருமாகிய திருமால்,
வடிவு ஐந்தின் – ஐந்து வடிவத்தோடும்,
வாழும் – வாழ்கிற,
இடம் – இடங்களாவன, (முறையே),
வைகுந்தம் – பரமபதமும்,
பால் கடல் – திருப்பாற்கடலும்,
மா நீர் அயோத்தி வள் பூ துவரை – மிக்க நீர் வளமுள்ள அயோத்தி வளப்பமுள்ள அழகிய துவாரகை ஆகிய நகரங்களும்,
வைகும் தம் அன்பர் மனம் – (சஞ்சலப்படாது) நிலை நிற்கிற தமது அடியார்களுடைய மனமும்,
சீர் அரங்கம் வடமலை – ஸ்ரீரங்கம் வடக்கிலுள்ள திரு வேங்கடமலை என்னுந் திவ்வியதேசங்களுமாம்; (எ – று.)

வடிவு ஐந்து என்றது – பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐவகை நிலைகளை.
இவற்றில், பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை.
வியூகமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவம் – ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம் – சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்து வசித்தல்;
அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும் இதில் அடங்கும்.
அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.

வலனோங்கு பரமபத மா மணி மண்டபத்தில் அமர்
நலனோங்கு பரம் பொருளாய் நான்கு வியூகமும் ஆனாய்
உபயகிரிப்புய ராமனொடு கண்ணன் முதலான விபவ வுருவமும் எடுத்து
வீறும் உயிர் தொறும் குடிகொள் அந்தர்யாமியுமான தமையாமே எளிதாக
இந்த நெடு வேங்கடத்தில் எல்லாரும் தொழ நின்றோய்–என்பது இங்கு நோக்கத்தக்கது.

அப்பொழுது கண்ணபிரான் ஏறினது புன்னைமர மென்றும், குருந்த மர மென்றும் இருவகையாகக் கூறுத லுளதாதலால்,
காலபேதத்தால் இரண்டையுங் கொண்டு கூறின ரிவ ரென்க.
இனி, ‘வைகுந்தந்தாமரை போற்பாதர்’ என்று பாடங்கொண்டு,
நாகத்து – (காளியனென்னும்) பாம்பின்மேல், வை – வைத்த, குந்து – குந்துகிற (சிறிதுதூக்கியெடுத்து நட னஞ்செய்கிற),
அம் தாமரை போல் பாதர் – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிகளையுடையவர் என்று உரைத்தலும் அமையும்;
குந்துபாதம் = குஞ்சிதபாதம்:
‘வைகுந்தந் தாமரைபோற் பாதர் நாகத்து’ –
“பாதமாம் போதைப் படத்துவைத்தார்” என்றாற் போலக் கொள்க; என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடி பதிந்த தழும்பு என்றும் நிலையாகவிருக்கும்படி அழுந்தவைத்தவ ரென்ற பொருளை விளக்கும்;

‘ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்கு அஞ்ச வேண்டாம்; உன்சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்’ என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

வை – உரிச்சொல்; “வையே கூர்மை” என்பது, தொல்காப்பியம். குந்தம் – ஈட்டியென்ற ஆயுதம்;
இது, மற்றைப்படைக்கலங்கட்கும் உபலக்ஷணம்.
எம்பெருமான் விசுவ ரூபத்தில் மிகப் பல கைகளுடையனாய் அவற்றில் ஏந்தும் ஆயுதங்களிற் குந்தமும் ஒன்றாம்.

“வடிநுதிக்குந்தம் வலமிடம் வாங்குவ”,
“வெங்கணை யத்திரள் குந்தநிறப்படை வெம்புமுலக்கைகள் போர்,……
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே” என்பன காண்க.

குந்தம், தாமரஸம், பாதம், நாகம், வைகுண்டம், அயோத்யா, த்வாரகா, ஸ்ரீ – வடசொற்கள்.
திருமாலின் திருப்பதிகளுள் தலைமை பெற்றனவான கோயில் திருமலைகளைக் கூறினது, பிறவற்றிற்கும் உபலக்ஷணமாம்.

————–

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வடமலை கொங்கைத் திருவோடிருப்புவை குந்தங்கர
வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே –63-

மால் – திருமால்,
நிற்பது – நின்ற திருக்கோலமாக எழுந் தருளியிருக்குமிடம்,
வடமலை தென்மலை கச்சி குறுங்குடி – வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும்
தெற்குத் திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும் திருக் கச்சி யத்திகிரியும் திருக் குறுங்குடியுமாம்;
வளரும் இடம் -(அப்பெருமான்) பள்ளி கொண்டு திருக் கண் வளர்ந்தருளுமிடம்,
வடம் அலை வேலை அரங்கம் குடந்தை – ஆலிலையும் அலைகளை யுடைய திருப்பாற் கடலும் ஸ்ரீரங்கமும் திருக்குடந்தையுமாம்;
வடம் அலை கொங்கை திருவோடு இருப்பு – ஆரங்கள் அசையப் பெற்ற தனங்களை யுடைய திருமகளுடன்
வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருக்கு மிடம்,
வைகுந்தம் – பரமபத மாம்;
நடை – நடந்து சென்று சேரு மிடம்,
கரவடம் மலை அன்பர் உளம் – கபடத்தை யொழித்த அடியார்களுடைய மனமாம்;
ஆட்டம் – திருவுள்ள முகந்து நடனஞ்செய்யுமிடம்,
மறை அந்தம் – வேதாந்தமாகிய உபநிஷத் துக்களாம்; (எ – று.)

முதல்வாக்கியத்திலுள்ள ‘மால்’ என்பதை மற்றை வாக்கியங்களிலுங் கூட்டுக; முதனிலைத்தீவகம்.
திருவேங்கடம் – நூற்றெட்டுத் திவ்வியதேசங் களுள் வடநாட்டுத்திருப்பதி பன்னிரண்டில் ஒன்று.
திருமாலிருஞ்சோலை மலையும், திருக்குறுங்குடியும் – பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டிற் சேர்ந்தவை.
கச்சி – தொண்டைநாட்டுத்திருப்பதி இருபத்திரண்டில் ஒன்று; பெருமாள்கோவில் என்று சிறப்பாக வழங்கும்.
அரங்கமும், குடந்தையும் – சோழநாட்டுத்திருப்பதி நாற்பதிற் சேர்ந்தவை.
ஆலிலையிற் பள்ளிகொள்ளுதல், பிரளயப்பெருங்கடலில். வேதாந்தம் எம்பெருமானது சொரூபத்தையும்
குணஞ் செயல்களையும் மகிமையையுமே எடுத்துப்பாராட்டிக் கூறுதலால்,
அதில் அப்பெருமான் மிக்ககுதூகலத்துடன் நிற்கின்றன னென்பார், ‘ஆட்டம் மறையந்தம்’ என்றார்.
கச்சி – காஞ்சீ என்ற வடசொல் லின் விகாரம்.
மால் – பெருமை, அடியார்களிடத்து அன்பு, திருமகள்பக்கல் மிக்க காதல், மாயை இவற்றை யுடையவன்.
நிற்பது – வினையாலணை யும்பெயர்.
வடம் – வடசொல்; இந்த ஆலமரத்தின்பெயர், முதலாகுபெய ராய், அதன் இலையை உணர்த்திற்று. வடம் = வடபத்திரம்.
இருப்பு, நடை, ஆட்டம் – தொழிலாகுபெயர்கள்.
நிற்பது முதலியவற்றிற்குப் பிறபல தலங்களும் உள்ளனவாயினும், இச்செய்யுளிற் சிலவற்றையே எடுத்துக் கூறினார்.
மலை அன்பருளம் – வினைத்தொகை.

—————-

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின்
அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் னாழ் தடங்கல்
அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே –64-

ராச லங்கா புரியார்க்கு – தலைமை பெற்ற இலங்காபுரி யில் வாழ்ந்த (இராவணன் முதலிய) அரக்கர்களுக்கு,
அந்தக – யமனானவனே!
அரங்கா – ரங்கநாதனே!
மறையின் அந்த – வேதாந்தத்தில் எடுத்துக் கூறப்படுபவனே!
கரஅசலம் கூக்குரல் ஓயும்முன் – கஜேந்திராழ்வான் (ஆதிமூலமேயென்று உன்னைக்) கூவியழைத்து முறையிட்ட ஓலம் அடங்குதற்கு முன்னமே,
ஆழ் தடம் கலந்த கரா சலத்தே துஞ்ச நேமி அறுக்க – ஆழ்ந்த தடாகத்திற் பொருந்திய முதலையானது
அந்நீரிலே யிறக்குமாறு (நீ பிரயோகித்த) சக்கராயுதம் (அதனைத்) துணிக்க,
கண்டு – பார்த்தும்,
அந்தகர் – ஞானக் கண் குருடரான பேதையர்கள்,
சலம் வந்தால் – (தங்கட்குத்) துன்பம் நேர்ந்த காலத்து,
உனை அழையாதிருப்பார் – (அதனைத் தீர்க்குமாறு) உன்னை அழையாமலிருப்பார்கள்;
ஆ – அந்தோ! (எ – று.)

ஆ – இரக்கக்குறிப்பிடைச்சொல்; அவர்களுடைய பேதைமையையும் வினைப்பயனையுங் குறித்து இரங்கியவாறு. ”

வேங்கடத்தாரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கடத்தாரை புனைந்து யேத்திலீர் சிறியீர் பிறவி
தாங்கடத்தாரைக் கடத்தும் என்று யேத்துதீர் தாழ் கயத்து
ளாம் கடத்தாரை விலங்குமன்றோ சொல்லிற்றைய மற்றே –திருவேங்கடத்து அந்தாதி

அந்தகர், சலம், அந்தகன், ராஜலங்காபுரீ, அந்தம், கராசலம், ஜலம், நேமி – வடசொற்கள்.
கரா – க்ராஹ மென்ற வடசொல்லின் சிதைவு. (பிராணிகளை) விடாது பிடித்துக்கொள்வது என்று காரணப்பொருள்படும்.
ராஜலங்காபுரியார் – லங்காபுரிராசர் எனினுமாம்.
கர அசலம் – துதிக்கை யையுடைய மலை: எனவே, யானையாயிற்று; வலிமை பருமைகளிலே மலைபோன்ற தென்க: தீர்க்கசந்தி.
துஞ்சுதல் – தூங்குதல்; இறத்தலைத் துஞ்சுத லென்பது – மங்கலவழக்கு: மீண்டும் எழுந்திராத பெருந்தூக்க மென்க.
அழையாதிருப்பார் என்பதில், இரு – துணைவினை. அழையாது – இருப்பார் என்று பிரித்து,
அழையாமல் அத்துன்பத்திலேயே உழன்றி ருப்பார்கள் என்று உரைத்தலுமொன்று.
‘கண்டு’ என்பதில் உயர்வு சிறப் பும்மை விகாரத்தால் தொக்கது;
கண்டும் அதன் பயனாகிய அழைத்தலைச் செய்யாமை பற்றி, குருட ரென்றார்.

————-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க்கிழ மாகியையள்
அறுகு தலைச் செய்து வீழ்காய் தாநென்னுமாரிருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே –65-

கு – பூமியை,
தலை – முடியின் மேல்,
கொள் – கொண்டு சுமக்கின்ற,
பணி – ஆதிசேஷனிடத்துப் பள்ளிகொண்டருள்கின்ற,
அரங்கா – ரங்கநாதனே!
அறுகு தலை பெய் பனி போன்ற – அறுகம்புல்லின் நுனியில் வீழும் பனிபோலச் சிறிய,
தாது – இந்திரியம்,
உரு ஆய் – மனிதவடிவ மாகப் பரிணமித்து,
பிறந்து – (பின்பு) ஜனித்து, (பிறகு),
அலறு – அழுகிற,
குதலை பிள்ளை ஆய் – மழலைச்சொற்களையுடைய பாலனாகி,
காளை ஆய் – (அதன்பின்னர்) யௌவநபருவமுடையவனாய்,
கிழம் ஆகி – (அப்பால்) மூப்படைந்து,
ஐ அளறு உகுதலை செய்து – கோழையாகிய சேறு சிந்துதலைச் செய்து,
வீழ் – இறக்கிற,
காயம் – உடம்பை,
நான் என்னும் – நான் என்று நினைத்து அபிமானிக்கிற அகங்காரமாகிய,
ஆர் இருளை – போக்குதற்கு அரிய (எனது)மனவிருளை,
அறு – நீக்கு:
நின்கண் ஆசை தந்து – உன் பக்கல் பக்தியை (எனக்கு) உண்டாக்கி; (எ – று.)

நின் கண் ஆசைதந்து, காயம் நானென்னும் ஆரிருளீ அறு என இயைத்து முடிக்க.

காயம் நானென்னும் ஆரிருள் – தானல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்யும் மயக்கம்;
இது, அகப்பற்று எனப்படும்.
ஆர்இருள் – பண்புத்தொகை; வினைத்தொகையாய், நிறைந்தஇரு ளெனினுமாம்.
ஆரிருள் – முச்சுடர்களினொளி முதலியவற்றாற் போக்கு தற்குஅரிய அகவிருள்: அஜ்ஞாநாந்தகாரம்;
சரீரத்தை ஆத்மாவென்று மாறு படக்கருதும் விபரீதஞானம்.

முதல்மூன்றடிகளில் யாக்கையினியற்கையை யெடுத்துக்கூறினார்;
(இதனை, “ஒளிகொள்நித்திலமொண்பவளச்செறு, விளைய வித்திய தென்ன நல்வீரியம்,
தளிர்நிறத்தெழுதாய் கருவிற்பனித் துளியிற்சென்றுபொருந்தித்துளக்குறும்” என்பது முதலாகப் பாகவதத்திற் பரக்கக்காணலாம்.)

தாது, காயம், கு, பணீ, ஆசா – வடசொற்கள்.
குதலை – நிரம்பாமென் சொல். காளை – இளவெருது: அதுபோலக் கொழுத்த பருவமுடையானுக்கு இலக்கணை.

———–

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்பூ
ஆசுக விக்கு வில் வேள் வடிவா வறி வாலகத்திய
ஆசுக விக்கு வலய மன்னா வென்ற ரற்றி யிரந்து
ஆசுக விக்கும் புலவீர் புகழ்மின் அரங்கனையே –66-

ஆசு கவிக்கு எனக்கு நிகர் இல்லை என்று – ஆசு கவிபாடுதலில் எனக்கு ஒப்பாவார் எவருமில்லை யென்று காட்டுபவராய்,
அற்பரை – புல்லர்கள் பலரை,
‘பூ ஆசுகம் இக்கு வில் வேள் வடிவா – மலர்களாகிய அம்புகளையும் கரும்பாகிய வில்லையுமுடைய மன்மதன் போலழகிய வடிவ முடையவனே!
அறிவால் அகத்தியா சுக – ஞானத்தினால் அகத்தியனையும் சுகனையும் போன்றவனே!
இ குவலயம் மன்னா – இந்தப் பூமண்டலத்துக்கு அரசனே!’
என்று அரற்றி – என்று தனித்தனி புகழ்ந்து விளித்துப் பிதற்றிக் கவி பாடி,
இரந்து – (அவர்களைக் கூறை சோறு முதலியன) வேண்டி,
ஆசு கவிக்கும் – குற்றங்களால் மூடப்படுகிற,
புலவீர் – புலவர்களே! –
அரங்கனை புகழ்மின் – நம்பெருமாளைப் புகழுங்கள்; (எ – று.)

பந்தத்துக்கு ஏதுவான நர ஸ்துதி செய்து கெடுவதை விட்டு மோக்ஷத்துக்கு ஏதுவான திருவரங்க நாதனைத் துதி செய்து
உய்யுங்களென்று உபதேசஞ் செய்தார்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -ஆழ்வார்

ஆசுகவிக்கு – உருபுமயக்கம். ஆசுகவி – வடமொழித்தொடர். ஆசுகவி – நால்வகைக்கவிகளுள் ஒருவகை; அதாவது

மூச்சு விடு முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சு என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம்மென்னு முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடினது எழு நூறே –நிமிஷக் கவிராயர் -என்னும்படி) விரைவிற் பாடுங் கவி.
(மற்றவை – மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி.)

தாமரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்ற ஐந்தும் – மன்மதனுக்கு அம்பாம்.
அகத்தியன் -தமிழ்ப் பாஷையை வளர்த்த முனிவன். சுகன் – வியாச முனிவனது குமாரன்:
அவனினும் மேம்பட்ட அறிவொழுக்கங்களை யுடையவன். தென்மொழி யுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்கு அகத்தியனே யென்றும்,
வடமொழியுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்குச் சுகனே யென்றும் விளிப்பரென்க.
இங்குக் குறித்த விளிகள் நான்கும், வடிவழகு அறிவு ஒழுக்கம் செல்வம் இவற்றின் சிறப்பைக் காட்டு மென்றுங் கொள்ளலாம்.

அல்பர், ஆசுகம், இக்ஷு, அகஸ்த்யன், சுகன், குவலயம் – வடசொற் கள்.
அகஸ்த்யன் என்ற பெயர் – (விந்திய) மலையை அடக்கியவ னென்று பொருள்படும்; அகம் – மலை.
மூன்றாமடியில், சுகம் என்று எடுத்து, மன்னனுக்கு அடைமொழியாக்கி, இன்பத்தை யனுபவிக்கிற அரசனே யென்றலு மொன்று.
நான்காமடியில், ஆசு உகவிக்கும் என்று பதம் பிரித்து, குற்ற முண்டாக மகிழ்விக்கிற என்று பொருள் கொள்ளலுமாம்.

———–

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென் கால் பெற்றவா
கனகவி மானற் கருடப் புள்ளூர்த்தியைக் கான்மலர்கோ
கனகவி மானம் புவிமான் றடவரக் கண் வளரும்
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே –67-

கால் பெற்ற – வாயு பகவான் ஈன்ற,
வாகன கவி – வாகன மாயமைந்த குரங்காகிய அநுமானையும்,
மால் நல் கருடன் புள் – பெருமையை யுடைய அழகிய கருடப் பறவையையும்,
ஊர்தியை – ஏறி நடத்துபவனும்,
கோகனக விமான் – தாமரை மலரில் வாழும் திருமகளும்
அம் புவி மான் – அழகிய பூமி தேவியும்,
கால் மலர் தவர – (தனது) திருவடித் தாமரைகளைத் தடவ,
கண் வளரும் – அறிதுயிலமர்கிற,
கனக விமானத்து – சுவர்ண மயமான விமாநத்தை யுடைய,
அரங்கனை -ரங்கநாதனுமாகிய எம்பெருமானை,
நா சொல்ல கற்ற பின் – (எனது) நாவினாற் புகழ்ந்து சொல்லப் பயின்ற பின்பு,
கனம் கவி – பெருமை பொருந்திய பாடல்களை,
மானம் அற்று – மானங்கெட்டு,
ஈனர்க்கு உரைக்கிலென் – அற்பர்கள் விஷயமாக (யான்) பாடேன்; (எ – று.)

‘நர ஸ்துதியாகக் கவி பாடலாகாதென்று பரோபதேசஞ் செய்யத் தலைப் பட்டீரே,
நீர் அங்ஙனம் நர ஸ்துதி செய்ததில்லையோ?’ என்று புலவர்கள் தம்மைக் குறித்து ஆசங்கித்ததாகக் கொண்டு,
‘யான் அரங்கனைத் துதிக்கக் கற்ற பின் ஈனர்க்குக் கவி யுரைக்கிலேன்’ என்றாரென்க.
அதற்கு முன்பு அறியாப் பருவத்தில் ஒருகால் மனிதரைப் பாடியிருந்தால் அது ”
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” –என்றபடி அமையு மென்பது, உட்கோள்.

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னாதெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே-

சீர் பூத்த செழும் கமல திருத் தவிசின் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடிவருட –அறி துயில் இனிதமர்ந்தோய்–திருவரங்க கலம்பகம் –

கால் பெற்ற வாகன கவி மானற் கருடப் புள்ளூர்தி – சிறிய திருவடியை இராமாவதாரத்திலும்
பெரிய திருவடியை மற்றை எப்பொழுதிலும் வாகனமாகக் கொண்டு அவர்கள் தோள் மேலேறி வருபவன்,
கோகனகவிமான் அம்புவிமான் கான்மலர் தடவரக் கண் வளரும் –

கநகவி, மாநம், ஹீநர், வாஹநகபி, கோகநதம், புலி, கநகவிமாநம் என்ற வட சொற்கள் விகாரப்பட்டன.
கால் மலர் – மலர் போன்ற கால் : முன் பின்னாகத்தொக்க உவமத்தொகை.
கோகநதம் என்ற வடசொல் – கோகமென்னும் நதியில் ஆதியிலுண்டானதென்றும்,
சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து மகிழ்ந்து விளையாடப் பெற்றதென்றும் காரணப் பொருள் கூறப்பெறும்.
வி – வீ என்பதன் குறுக்கல்; வீ – மலர். மான் – மான் போன்ற பார்வையை யுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயர்.
தடவர, வா – துணை வினை. தடவு வா என்ற இரண்டு வினைப் பகுதி சேர்ந்து ஒரு சொல் தன்மைப் பட்டு விகாரமடைந்து தடவா என நின்றதென்க.
கண் வளர்தல் – கண்மூடித் துயிலுதற்கு இலக்கணை.
உரைக்கிலென், கு – சாரியை, இல் – எதிர்மறை யிடை நிலை. உரைக்கில் என் என்று பதம் பிரித்து,
(எல்லாப் புருஷார்த்தங்களையும் பெருமையோடு பெறுமாறு) அரங்கனைப் புகழக் கற்ற பின்பு மானமிழந்து
ஈனர் மேற் கவி பாடுதலால் என்ன பயனென்று உரைத்தலு மொன்று. “நான் சொல்ல” என்றும் பாட முண்டு.

———–

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினைவ
கற்றின மாயமு நீ கன்று காளையராகிப் பல்ப
கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே –68–

அரங்கா – ! –
கன்று இனம் ஆயவை – கன்றுகளின் கூட்டங்களும்,
காளையர் – (இடையர் சாதிச்) சிறு பிள்ளைகளும்,
வான் கண்டு மீள் நினைவு அகற்றின – தாம் வானத்தை யடைந்து மீண்டமை பற்றிய ஞாபகத்தை யொழித்த,
மாயமும் – அற்புதமும், –
நீ -,
கன்று காளையர் ஆகி – அக் கன்றுகளும் ஆயச் சிறுவர்களுமாக வடிவு கொண்டு,
பல் பகல் – வெகு காலமளவும்,
தினம் – நாள் தோறும்,
ஆயர் பரிவு உற சேரி கலந்தமையும் – (தம் தமக்கு உரிய) இடையர்கள் கண்டு (தம் பக்கல் முன்னினும்)
அன்பு மிகுமாறு இடைச்சேரியிற் சேர்ந்து வந்த விசித்திரமும், –
செம் கமலற்கும் – சிவந்த (உனது நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரம தேவனுக்கும்,
இனம் கற்று ஆய ஒண்ணா – இன்னமும் ஆராய்ந்து அறிய முடியாதனவா யிருக்கின்றன; (எ – று.)

வான் கண்டது பிரமன் மாயையினாலாயினும், வான் கண்டு மீண்டமை பற்றிய நினைவு சற்றுமில்லாதபடி அகற்றியது மாயவனது மாயை யென்க.
மெய்ச் சிறுவரின் மேலும் மெய்க் கன்றுகளின் மேலும் உள்ள பரிவினும் மிக்க பரிவு போலிச் சிறுவரின் மேலும்
போலிக் கன்றுகளின் மேலும் உண்டானது, எம்பெருமான் கொண்ட வடிவமாதலினாலென்பர்.
கமலற்கும், உம் – உயர்வு சிறப்பு; உனது எதிரில் மாயை செய்ய வந்தவனுக்கும் உனது பெருமாயைகள் அறியப்படா என்றபடி.
எல்லா மாயைக்கும் மேம்பட்ட மாயை செய்ய வல்லாய் நீ யென்பது குறிப்பு.
கன்று + இனம் = கற்றினம்; வேற்றுமையில் மென் றொடர் வன் றொடராயிற்று.
ஆயவை – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
பகல் – நாளுக்கு இலக்கணை. தினம் என்றதில், தொறுப் பொருளதாகிய உம்மை விகாரத்தால் தொக்கது,
உற – மிகுதி யுணர்த்தும் உறு என்ற உரிச் சொல்லின் மேற் பிறந்த செயவெனெச்சம்.
சேரி – இங்குத் திருவாய்ப்பாடி. கற்று ஆய – ஆய்ந்து கற்க என விகுதி பிரித்துக் கூட்டுக.
இனம் – இன்னம் என்பதன் தொகுத்தல். ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ.

————-

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர் புனல் கா
கமலங் குவளை விளையாடரங்கன் விண் காற்றுக் கனல்
கமலங் குவளையுண் டான்றொண்ட ராயுய்ம்மின் காம மற்றே –69-

மடவார் – மாதர்களுடைய,
தனம் கண்கள் – கொங்கைகளையும் கண்களையும்,
கமலம் குவளை என்று உரைத்து – (முறையே) தாமரை மொட்டும் நீலோற் பலமலருமா மென்று புனைந்துரைத்து,
மலங்கு வளை முதுகு ஆகியும் அகம் கரைவீர் – வருந்துகிற கூன் முதுகான பின்பும் (முற்ற மூத்த பிறகும்)
(மகளிர் பக்கல் ஆசையால்) மனமுருகுகின்றவர்களே! –
(நீங்கள்),
காமம் அற்று – (இத் தன்மையதான) பெண்ணாசையை யொழித்து,
விண் காற்று கனல் கமலம் கு அளை உண்டான் – ஆகாசம் வாயு அக்நி ஜலம் பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும்
வெண்ணெயையும் அமுது செய்தவனும்,
புனல் காகம் மலங்கு வளை விளையாடு அரங்கன் – நீர்க் காக்கைகளும் மலங்கு என்ற சாதி மீன்களும் சங்குகளும் விளையாடுகிற
(நீர் வளம் மிக்க) ஸ்ரீரங்கத்திலெழுந் தருளியிருப்பவனுமான நம் பெருமாளுக்கு,
தொண்டர் ஆய் – அடியார்களாகி,
உய்ம்மின் – உஜ்ஜீவியுங்கள்; (எ – று.)

தீ வினைக்குக் காரணமான பெண்ணாசையை யொழித்து, வீடு பெறுமாறு எம்பெருமானுக்கு அடியார்களாகி ஈடேறுங்கள் என்பதாம்.
சிற்றின்பத்தால் உய்யீர், பேரின்பம் பெற்று உய்யப் பாரும் என்பது, குறிப்பு.
முதலடியில், கமலம் தனம் குவளை கண் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப் பொருள்கோள்; வடிவுவமை.
ஐம்பெரும்பூதங்களை யுட்கொள்ளுதல், மகா பிரளய காலத்தில். வெண்ணெ யுண்டது,
கிருஷ்ணாவதாரத்தில். விண் காற்று கனல் கமலம் கு என்ற ஐம்பூத முறைமை, உற்பத்தி கிரமம் பற்றியது.
கமலம், குவளை – முதலாகு பெயர்கள். ஓசை நயத்தின் பொருட்டு, காற்றுக் கனல் என வலி மிக வில்லை.

————

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சார்க்கு இரங்
கா மனத்தான ளக்கும் கடல் பார் கலம் போன்றது மீ
கானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –70 –

கா மன் – கற்பகச் சோலைக்குத் தலைவனான இந்திரன்,
நத்தால் விழ – பாஞ்ச ஜந்யத்தின் ஓசையினால் மூர்ச்சித்துக் கீழ் விழும்படி,
ஊதி – (அந்தத் தனது திவ்விய சங்கத்தை) ஊதி முழக்கி,
அ காவை கவர் – அச்சோலையிலுள்ள பஞ்ச தருக்களுள் ஒன்றான பாரிஜாத தருவைக் கவர்ந்து கொண்டு வந்த,
அரங்கன் – ரங்கநாதனும்,
காமன் அத்தா என்று நைவார்க்கு அமுதன் – “மன்மதனது தந்தையே!” என்று சொல்லி விளித்து(த் தன் பக்கல்)
மனமுருகும் அடியவர்க்கு அமிருதம் போலினியனாகின்றவனும்,
கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – (அங்ஙனமுருகாது தன் திறத்திற்) கல்லுப் போல வலிய
நெஞ்சை யுடையராயிருப்பார் பக்கல் தானும் மனத்துக் கருணை கொள்ளாதவனுமான எம்பெருமான்,
அளக்கும் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளிய,
கடல் பார் – கடல் சூழ்ந்த பூமியானது,
கலம் போன்றது – (அக்கடலில் மிதக்கும்) மரக் கலம் போன்றது;
அ தாமரையோன் – அந்த (மேலுலகமாகிய சத்திய லோகத்திலே வசிக்கின்ற) பிரமதேவன்,
மீகாமன் – மாலுமி போன்றனன்;
கால் மலர் – (மேல் நோக்கிச் சென்ற திருமாலினது) தாமரை மலர் போன்ற திருவடியானது,
மரம் – பாய் மரம் போன்றது;
கங்கை – (அத் திருவடி யினின்று பெருகிய) கங்கா நதியானது,
பாய் – (அம் மரத்திற் கட்டிய) பாய் போன்றது; (எ – று.)

பூமியை மரக்கலத்தோடும், பிரமனை மாலுமியோடும், கங்கையைப் பாயோடும், திருவடியைப் பாய் மரத்தோடும் உவமித்தார்;
இயைபுவமையணி.
விரி கடல் சூழ் மேதினி நான் முகன் மீகானாச் சுர நதி பா யுச்சி தொடுத்த –வரி திருத்தாள் கூம்பாக வெப்பொருளும் கொண்ட
பெரு நாவாய் யாம் பொலிவுற்றாயினதால் அன்று – என்றதனோடு இதனை ஒப்பிடுக. ”
போன்றது” என்ற முற்றை உரிய படி மற்றை வாக்கியங்களிலுங் கூட்டி யமைக்க.

கண்ணனது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான உருக்குமிணிப் பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென்ற வரலாறு பற்றி, திருமால் “காமன்தந்தை” எனப்படுவன்.
இங்கு “காம னத்தா” என்றது, காமனுக்கு நியாமகனே யென்றபடி.
நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – நல்லார்க்கு நல்லானும் பொல்லார்க்குப் பொல்லானுமாய் ஒழுகுபவனென்க.

———–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மலருந்தினான் அரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாண்
மலருந்தி வாக்கதிர் வண் குடையாய் முடி மா மணியாய்
மலருந்தி யாய்த் திருத்தாள் விரலாழி மணி யொத்ததே –71–

மலர் – மல்லர்கள்,
உந்தி மேல் விழ – தள்ளித் தன் மேல் வந்து விழ,
மெய் நெரித்தான் – அவர்களுடலை நொருக்கி யழித்தவனும்,
வையம் ஏழும் துஞ்சாமல் அருந்தினான் – ஏழு வகை யுலகங்களையும் அழியாதபடி யுட் கொண்டவனுமான,
அரங்கன் -,
குறள் ஆய் – (முதலில்) வாமன மூர்த்தியாய்ச் சென்று,
மண் அளந்த அநாள் – (உடனே பெரு வடிவாய் வளர்ந்து) உலகத்தை அளந்து கொண்ட அந்தக் காலத்திலே,
மலரும் திவாக் கதிர் – பரவி விளங்குந் தன்மையதான சூரிய மண்டலமானது, –
(அப்பெருமானுக்கு),
வள் குடை ஆய் – (முதலில்) அழகிய குடை போன்றிருந்து,
முடி மா மணி ஆய் – (உடனே) கிரீடத்திலுள்ள நடு நாயக மணி

போன்று, மலர் உந்தி ஆய் – (பிறகு) நாபித் தாமரை மலர் போன்று,
திருதாள் விரல் ஆழி மணி ஒத்தது – (அதன் பின்பு) திருவடி விரலிலணியும் மோதிரத்திற் பதித்த மாணிக்கத்தைப் போன்றது; (எ – று.)

இதுவும், கீழ்ச் செய்யுள் போலத் திரிவிக்கிர மாவதாரவைபவங் கூறியது. திருமால் திரிவிக்கிர மாவதாரத்தில் வானத்தை
யளாவி ஓங்கி வளர் கையிற் சூரியன் வரவரக் கீழ்ப் பட்டுப் பலவாறு உவமை கூறுதற்கு உரியனாயின னென்க.

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல்
மன்னும் திலகம் போல் வாள் இரவி
பொன்னகலம் தங்கு கௌத்துவம் போலும்
உந்தித் தட மலர் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்-என்ற செய்யுளிலும் இவ்வகைக்கருத்து நிகழ்தல் காண்க

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –திருவரங்கத்து மாலை -35

மல்லரென்பது, “மலர்” எனத் தொக்கது. திவாக் கதிர் – பகலிற்குஉரிய சுடர். ஆய் – உவமவுருபு. தாள்விரலாழி – காலாழி.

———

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச் சிந்தா
மணி வா சவனென வாழ்ந்திருப்பார் பின்னை மாதிருக்கு
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித் திரு
மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –72-

மணி – ஆராய்ச்சி மணி,
வாசல் தூங்க – அரண்மனை வாயிலிலே தொங்க,
ஒரு குடை கீழ் – ஒற்றை வெண் கொற்றக் குடையின் கீழ்,
வையம் காத்து – உலகத்தை யரசாண்டு,
சிந்தாமணி வாசவன் என வாழ்ந்திருப்போர் – சிந்தாமணி யென்னுந் தெய்வ ரத்தினத்துக்கு உரிய
இந்திரன் போல இனிது வாழ்ந்திருப்பவர்கள்,
பின்னை மாது இருக்கும் – திருமகள் வீற்றிருக்கின்ற,
மணி – அழகிய,
வாசம் மார்பு – திவ்விய பரிமளமுள்ள மார்பை யுடைய,
அரங்கா – ரங்கநாதனே!
கேசவா – கேசவனே! என்று வாழ்த்தி – என்று விளித்துத் துதித்து,
இ வாசகம் கொண்டு – இந்தக் கேசவாதி நாமங்களை யுச்சரித்துக் கொண்டு,
திருமண் அணிவார் – திருமண் காப்பைத் தரித்துக் கொள்ளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
அடியை – திருவடிகளை,
வணங்கினரே – நமஸ்கரித்தவர்களே; (எ – று.)

“ஈராறு நாம முரை செய்து மண் கொ டிடுவார்கள்” என்றபடி
கேசவன் நாராயணன் மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதநன் திரிவிக்கிரமன் வாமநன் ஸ்ரீதரன்
ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன் என்ற திருமாலின் துவாதச நாமங்களை முறையே சொல்லி
உடம்பிற் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக் கொள்ளுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்கினவர்களே
அந் நல் வினையின் பயனால் உலக முழுவதும் ஒரு குடைக்கீழாளுஞ் சக்கரவர்த்தி பதவி யெய்திச் சகல
ஐசுவரியங்களையு மனுபவித்து மேம்பட்டு வாழ்வோரென்று, பாகவதர்க்கு அடிமை பூணுதலின் மகிமையை வெளியிட்டவாறாம்.
அவ்வரசர் பெருமையினும் பாகவதர் பெருமையை பெருமை யென்பது, குறிப்பு.

ஆராய்ச்சிமணி – அரண்மனை வாயிலிற் கட்டி வைப்பதொரு மணி:
எவரேனும் அரசனிடத்துத் தமது குறையைக் கூற வேண்டின் இம் மணியை யடித்தலும், அவ்வொலி கேட்ட மாத்தி ரத்திலே
அரசன் விரைந்து போந்து வாயிலை யடைந்து அங்குள்ளாரை வினாவி அவர் குறையை யறிந்து அதனைத் தீர்த்தலும் இயல்பு.

சிந்தாமணி – கருதிய பொருளைத் தருந் தேவமணி. திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் மூதேவி முன்னர்ப் பிறக்க
அதன் பின்னர்ப் பிறந்த திருமகளுக்குப் பின்னை யென்றும் இளையாளென்றும் பெயர்கள் நிகழ்ந்தன.
பன்னிரு நாமத்துள் முதலான கேசவ நாமத்தைக் கூறியது, மற்றவற்றிற்கும் உப லக்ஷணம்.

வாசல் – வாயில் என்பதன் மரூஉ. தூங்குதல் – தொங்குதலாதலை “தூங்கு சிறை வாவல்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
கேசவன் என்ற திருநாமம் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் (க – பிரமன், ஈசன் – சிவன்),
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனென்றும், மயிர் முடியழகுடையவனன்றும் பொருள் பெறும்.
இவ் வாசகம் என்பது “இவாசகம்” எனத் தொக்கது. வாசகம் – சொல்: வடமொழி. ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

————

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ வாளரவு
வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை வானவர்க்கும்
வணங்கரி யான் அன்றிக் காப்பாரில்லாமை விண் மண் அறியும்
வணங்கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –73-

வணம் கரியான் “திருமேனி நிறம் கருமையாயுள்ளவனும்,
அடியார் தொழ – தொண்டர்கள் சேவிக்க,
வாள் அரசு உவணம் கரி ஆடல் பரி தேர் நடத்து – ஒளியையுடைய ஆதிசேஷனும் கருடனும் யானையும்
ஆட்டக் குதிரையும் தேரு மாகிய வாகனங்களி லெழுந்தருளித் திருவீதி யுத்ஸவங் கண்டருள்கிற,
எந்தை – எமது தலைவனும்,
வானவர்க்கும் வணங்கு அரியான் – தேவர்கட்கும் தரிசித்து நமஸ்கரித்தற்கு அருமையானவனும் ஆகிய,
அரங்கன் அன்றி – ரங்க நாதனே யல்லாமல்,
காப்பார் இல்லாமை – (சரணமடைந்தவர்களைத் துயர் தீர்த்து வேண்டுவன அளித்துப்) பாதுகாப்பவர்
மற்று எவருமில்லாதிருக்கிற உண்மையை,
விண் மண் அறியும் வணம் – வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் அறியும்படி,
கரி ஆனவர் – சாக்ஷியானவர்கள், (யாவரெனில்), –
வாணன் கண்டாகன மார்க்கண்டனே – பாணாசுரனும் கண்டா கர்ணனும் மார்க்கண்டேயனு மாவர்; (எ – று.)

இம் மூவரும் முதலிற் சிவபிரானை யடுத்து அவனால் தமது குறைகள் தீரவும் வேண்டுவனயாவும் பெறவும் மாட்டாமல்
பின்பு திருமாலருள் பெற்றுப் பேறு பெற்று உய்ந்தமை அவரவர் சரித்திரத்தால் நன்கு விளங்குதல் பற்றி, இங்ஙனங் கூறினார்.
சாக்ஷியாதற்கு ஏது – வாணாசுரனுடைய கைகளைக் கண்ணன் சக்கராயுதத்தால் அறுக்கிற போது அவனுக்கு ரக்ஷகனாய் நின்ற
சிவபிரான் ஒன்றும் எதிர் செய்ய மாட்டாது அப் பெருமானை இரக்க, அதற்கு இரங்கி அவன் நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருள,
அவ் வசுரன் பின்பு ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி உறவு பூண்டு உய்ந்ததும்; கண்டா கர்ணன் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்து பின்பு சிவனால் முத்தி பெற மாட்டாது கண்ணபிரானாற் பெற்றதும்;
மார்க்கண்டேயன் மகா பிரளய காலத்தில் திருமாலையே யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாது
அப் பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டது மன்றி, முன்பு சிவபிரானருளால்
நீண்ட ஆயுளை மாத்திரமே பெற்ற தான் பின்பு பரகதிக்குத் திருமாலையே வேண்டினமையுமாம்.

வர்ணம் என்ற வடசொல்லின் விகாரமான வண்ணம் என்பது, வணம் எனத் தொக்கது.
அரங்கன்னடியார், னகரவொற்று – விரித்தல். வாள் அரவு – கொடிய பாம்புமாம்.
உவணம் – ஸுபர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு.
ஆடல் பரி – வெற்றியையுடைய குதிரை யெனினுமாம். விண், மண் – இடவாகுபெயர்கள்.

—————–

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம் கவிரிதல் சொல்
கண்ட லங்கா ர முலையிள நீர் என்று கன்னியர் சீர்
கண்ட லங் காரங்கமருளேன் புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –74-

புனல் – நீரிலுள்ள,
கயல் – கயல்மீன்கள்,
கொக்கு என்று அஞ்ச – “கொக்கு” என்று நினைத்துப் பயப்படும்படி,
கண்டல் – தாழைகள்,
அங்கு – அந்நீரின்பக்கங்களில்,
ஆர மலர் – மிகுதியாக மலரப் பெற்ற,
அரங்கம் – திருவரங்கத்துக்கு,
ஈசர்க்கு – தலைவரான நம்பெருமாளுக்கு,
காதலன் – அன்பு பூண்டவனான யான், –
கன்னியர் – இளமங்கையரது,
கண் தலம் கார் அளகம் – கண்களும் கரிய கூந்தலும்,
கெண்டை மேகம் – (முறையே) கெண்டை மீனையும் காள மேகத்தையும் போலும்:
இதழ் – (அவர்களுடைய) அதரம்,
கவிர் – முருக்க மலர் போலும்:
சொல் – பேச்சு,
கண்டு – கற்கண்டு போலும்:
அலங்கு ஆரம் முலை – அசைகிற ஹாரங்களை யுடைய தனங்கள்,
இளநீர் – இளநீர் போலும்,
என்று -,
சீர் கண்டு அலங்காரம் மருளேன் – (அவர்களுடைய) சிறப்பைக் குறித்து அவர்கள் புனை கோலத்தால் மதி மயங்கேன். (எ – று)

திருவரங்கர்க்கு அன்பனாயினே னாதலால், பெண்ணாசை மயக்கத்தி லாழே னென்பதாம்.
பேரின்பத்துக்கு இடமான பெருமானிடத்துக் காதல் செலுத்தினால், சிற்றின்பத்திற்கு இடமான மகளிர் பக்கல் மோகம் தீருமென்பது, குறிப்பு.

கண்தலம் – கண்ணாகிய இடம்.
முதலடியில் கண்தலம் கெண்டை, காரளகம் மேகம் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள் கோள்.
இளநீர் – தெங்கினிளங்காய். கயல்மீன் வெண்டாழைமலரைக் கொக்கென்று கருதி அஞ்சிய தென்றது, மயக்கவணி;

“அருகு கைதை மலரக் கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” என்ற ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது இந்த வருணனை.

கொக்கு மீன் குத்திப் பறவை யாதலால், அதற்கு மீன் அஞ்சும்.
இதழுக்கு முருக்கம்பூ செந்நிறத்திலுவமம்.

————

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு காட்டியரங்
காதலை வா கழற் குள்ளாக்கி னாய்கரப் பெங்கெனவே
காதலை வார் குழை வைதேகியை நின் கருத்துருக்குங்
காதலை வானரரத் தேட விட்டாயிது கைதவமே –75–

அரங்கா-! தலைவா – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனே!-
காது – மோதுகின்ற,
அலை – அலைகளையுடைய,
வாரி – கடலினாற்சூழப்பட்ட,
மண் – பூமியை,
வெள் கோட்டில் வைத்து – (வராகாவதாரத்திலே) வெண்ணிறமான மருப்பிற் குத்தியெடுத்து,
உண்டு – (பிரளயகாலத்திலே) வயிற்றி னுட்கொண்டு,
காட்டி – (அந்தப் பிரளயம் நீங்கினவாறே) வெளிநாடு காண உமிழ்ந்து,
கழற்கு உள் ஆக்கினாய் – (திரிவிக்கிரமாவதாரத்திலே) ஓரடிக்குள் ஒடுங்கச் செய்தாய்;
(அங்ஙனம் நிலவுலகமுழுதையும் ஸ்வாதீனமாக நடத்திய நீ),
நின் கருத்து உருக்கும் காதலை – உனது மனத்தை யுருகச் செய்கிற ஆசை மயமானவளாகிய,
காது அலை வார் குழை வைதேகியை – காதுகளி லசைகிற பெரிய குழை யென்னும் அணிகலத்தையுடைய ஜாநகிப் பிராட்டியை,
கரப்பு எங்கு என வானரர் தேட விட்டாய் – (இந் நிலவுலகத்தில் இராவணன்) ஒளித்து வைத்தது எவ்விடத்தென்று
தேடிப் பார்த்தறியும்படி (அநுமான் முதலிய) வாந ரவீரர்களை (நாற்றிசைக்கும்) அனுப்பினாய்;
இது கைதவமே – இது (உனது) மாயையேயாம்; (எ – று.)

இரணியாக்ஷனாற் பூமி முழுதும் ஒளிக்கப்பட்ட போது அது இருந்த இடத்தை நாடிக் கண்டு அதனை யெடுத்து வந்தவனும்
அந்தப்பூலோகமுட்பட எல்லா வுலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனும்
பூமிமுழுவதையும் ஓரடிக்கு உள்ளாக்கினவனு மாகிய நீ.
அந்நிலவுலகத்தில் இராவணனாற் கவரப்பட்ட சீதை யிருக்குமிடத்தை அறியாய் போன்று வாநரரைத் தேடவிட்டது,
மாயச் செய்கையே யென்பதாம். எல்லாம் உன்திருவிளையாடலே யென்பது, குறிப்பு.

காது அலை – வினைத்தொகை. கரப்பு – தொழிற்பெயர்.
வைதேஹீ – வடமொழித் தத்திதாந்தநாமம்: விதேகராஜனது குலத்திற் பிறந்தவள்.
காதல் = காதலி. கைதவம் – வடசொல். ஏ – அசை.

———

தவராக வக்கணை யொன்றாற் கடற்றெய் வந்தான் என்றிருந்
தவராகந் தீர்த்துத் தொழக் கண்ட நீ தர்ப்பை மேற் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய் தண் அரங்கத்துமா
தவராக வாகண் ணனே எண் ஒண்ணா வவதாரத்தானே –76-

தண் – குளிர்ச்சியான,
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந் தருளியிருக்கின்ற,
மாதவ – திருமகள் கொழுநனே!
ராகவா – இராமனாகத் திருவவதரித்தவனே!
கண்ணனே – கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனே!
எண் ஒணா அவதாரத்தனே – மற்றும் கணக்கிடமுடியாத (மிகப்பல) திரு வவதாரங்களையுடையவனே!
தவர் – வில்லினின்று எய்யப்பட்ட,
ஆகவம் கணை ஒன்றால் – போர்க்கு உரிய அம்பு ஒன்றினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
கடல் தெய்வம் தான் என்று இருந்த அ ராகம் தீர்த்து தொழ கண்ட – கடலுக்கு அதி தேவதையான வருணன் தான் (ஸ்வதந்த்ரன்)
என்று செருக்கியிருந்த அந்த அபிமானத்தை யொழித்து (உன்னை) வணங்கும்படி (பின்பு) செய்த வல்லமையை யுடைய, நீ-, (
முதலில்), தர்ப்பைமேல் கிடந்து – தருப்பசயனத்திற் படுத்து,
தவர் ஆக பாவித்து – விரதாநுட்டானஞ்செய்பவர் போலப் பாவனை காட்டி,
என்னோ தொழுதாய் – ஏன் (அத்தேவனை) வணங்கினையோ? (எ – று.)

வருணனைச் செருக்கடக்கித் தொழும்படி செய்யும் வல்லமையுடைய நீ முதலில் வல்லமையில்லாதவன்போல அவனைத்தொழுது
வரங்கிடந்தது உனதுமாயையினாற் செய்த திருவிளையாடல்போலு மென்பது குறிப்பு.
முன்பு மாநுடபாவனையைக் காட்டிப் பின்பு பரத்வத்தை வெளியிடத் தொடங்கின னென்க.

ஆஹவம், தைவம், ராகம், தர்ப்பம், மாதவன், அவதாரம் – வடசொற் கள்.
தான் என்று இருந்த அராகம் – தான் இராமபிரானுக்கு அடங்கினவ னல்ல னென்று கருதி உபேக்ஷித்திருந்த அகங்காரம்.
அ ராகம் எனச் சுட்டியது, கதையை உட்கொண்டு.
இனி, அராகம் என்பதன் முதல் அகரத்தை “ரவ்விற்கு அம்முதலா முக்குறிலும்,……. மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
ராகம் என்ற வடசொல்லின் முதலில் வந்த குறிலாகவுங் கொள்ளலாம்.
தவர் என்றதில், “தவம்” என்றது, பிராயோபவேசத்தை.

மத்ஸ்யம் கூர்மம் முதலிய தசாவதாரங்களேயன்றி நாரதன் நரநாராயணர் கபிலன் தத்தாத்ரேயன் பிருது தந்வந்திரி
வியாசன் புத்தன் அருச்சுனன் முதலாகச் சமயோசிதமாக எம்பெருமான் தனது திவ்வியசங்கல்பத்தினாற் கொண்ட
திருவவதாரங்கள் பற்பலவாகப் புராணங்களிற் கூறப்படுதல் பற்றி, “எண்ணொணாவவதாரத்தனே” என்றார்.

—————

தாரா கணமண் ணளந்த வந்நாளன்பர் சாத்தும் துழாய்த்
தாரா கணம் புயம் போலரங்காதல மேழுக்குமா
தாரா கண மங்கை யாயும்பர் தூவிய தா ண் மலர் வீழ
தாரா கணமு நில்லா காற்றிற் சூழ் வளந்தான் ஒக்குமே –77-

அன்பர் – அடியார்கள்,
சாத்தும் – சமர்ப்பித்த,
துழாய் தாரா — திருத்துழாய் மாலையை யுடையவனே!
கண் அம்புயம் போல் – கண்கள் தாமரை மலர் போலிருக்கப் பெற்ற,
அரங்கா-!
தலம் ஏழுக்கும் ஆதாரா – ஏழுவகை யுலகங்கட்கும் ஆதாரமாயிருப்பவனே!
கண மங்கையாய் – திருக் கண்ணமங்கை யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே! –
மண் அளந்த அ நாள் – (நீ) உலகமளந்த அக் காலத்தில்,
தாரா கணம் – (வானத்திற் சுற்றுகின்ற) நக்ஷத்திர மண்டலம் (எப்படியிருந்த தென்றால்),
உம்பர் தூவிய தண் மலர் – தேவர்கள் (அக் காலத்தில் உன் மீது) சொரிந்த குளிர்ந்த மலர்கள்,
வீழ் தாரா – பூமியில் விழாதனவாயும்,
கணமும் நில்லா – ஒருகணப் பொழுதேனும் (வானத்தில் ஓரிடத்தில்) நிலையுற்றி ராதனவாயும்,
காற்றில் சூழ் – வாயு மண்டலத்தில் அகப்பட்டுச் சுழல்கின்ற,
வளம் – மாட்சிமையை,
ஒக்கும் – போன்றிருந்தது; (எ – று.) – தான் – அசை.

உனது பெருவடிவத்துக்கு முன் நக்ஷத்திரங்கள் மலர்கள் போலச் சிறி யனவாயின வென்பது, குறிப்பு.
பற்பல நிறமுடையனவாய் விளங்கும் நக்ஷத்திரங்கள், பற்பலநிறமுள்ள மலர்கள்போலும்.
இடையிற் பெருவடிவ மாய் எழுந்த எம்பெருமானைச் சுற்றிலும் நக்ஷத்திரங்கள் வானத்தில் திரிந் ததற்கு,
மலர்கள் காற்றிலகப்பட்டுக் கீழ்விழாமலும் ஓரிடத்துநிலையுறாமலும் சுழலுதலை ஒப்புமைகூறினார்; உவமையணி.
தேவர்கட்குப் பகைவனாய் அவர்களை வென்று அடக்கிய மாவலியைச் செருக்கடக்குதற்குத் திருமால் திரிவிக்கிரமனாய் வளர்ந்த
சமயத்தில் அதுகண்ட களிப்பினால் தேவர்கள் மேலுலகத்தினின்று மலர்மாரி சொரிந்தன ரென்க.

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி முறை முறையின் தாதிலகு பூத்தொளித்தால் ஒவ்வாதே
தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன் -ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது, இச்செய்யுள்.

கண் அம்புயம் போல் அரங்கன் – புண்டரீகாக்ஷன். எல்லாவுலகங்கட் குங் கீழே எம்பெருமான் ஆதி கூர்ம ரூபியாயிருந்து
கொண்டு அவற்றையெல் லாந் தாங்குதலும், பிரளய காலத்தில் அனைத்துலகத்தையும் வயிற்றில் வைத்திருத்தலும்,
பகவானது திவ்விய சக்தியின் உதவியினாலன்றி யாதொரு பொருளும் எங்கும் நிலைபெறாமையும் பற்றி, “தலமேழுக்கும் ஆதாரா” என்றார்.

திருக்கண்ணமங்கை – சோழநாட்டுத் திருப்பதிகளி லொன்று. உம்பர் – இடவாகுபெயர்.
மலர் – பால்பகாஅஃறிணைப்பெயர்; இங்குப் பன்மையின் மேலது. வீழ்தாரா, நில்லா – எதிர்மறைப் பலவின்பால் முற்றுக்கள் எச்சமாய் நின்றன;
ஆதலால், “அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா” என்றபடி இவற்றின் முன் வலி இயல்பாயிற்று.
வீழ்தாரா = வீழா; தா – துணைவினை, ர் – விரித்தல். தாரா கணம் – வடமொழித்தொடர்.

——–

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி
தானந் தியாகந் தருமிழி பாயின தண்ணரங்கத்
தானந் தியாகப் பகன் மறைத்தான் பெயர் தந்திடும்வே
தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே –78 –

தானம் – தானஞ்செய்தலும்,
தியாகம் – தியாகமளித்தலும்,
தவம் – தவஞ்செய்தலும்,
கல்வி – நூல்களை யோதுதலும்,
தீர்த்தம் – புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலும்,
தழலில் அவி நந்து யாகம் – அக்கினியிலே ஹவிஸ் பக்குவமாகப் பெறுகின்ற யாகமும், (என்னும் இவையெல்லாம்)
இழிபு ஆயின தரும் – இழிவான பதவிகளையே (தம்மை யுடையார்க்குக்) கொடுக்கும்;
அந்தி ஆக பகல் மறைத்தான் – மாலைப் பொழுது உண்டாம்படி சூரியனை (ச் சக்கரத்தால்) மறைத்தவனான,
தண் அரங்கத்தான் – குளிர்ந்த திருவரங்க நகருடையானது,
பெயர் – திருநாமமோ,
வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமத்தை தந்திடும் – (தன்னைக் கருதினவர்க்குப்) பிரமனும் சிவனும் இந்திரனும்
அறிய மாட்டாத பரம பதத்தைக் கொடுத்திடும்) (எ – று.) – இரண்டாமடியில், தான் – அசை.

ஆதலால், அவன் திருநாமத்தைக் கூறிப் பரமபதமடையுங்க ளென்பது, குறிப்பு.
நற்கதி பெறுதற்குஉரிய உபாயமென்று கொள்ளப்படுகிற தானம் முதலிய அனைத்தினும் பகவந் நாம ஸ்மரணத்துக்கு
உள்ள மகிமையை வெளி யிட்டார்.
மற்றவையெல்லாம், அழியுந் தன்மையனவான இழிந்த இந்திரன் முதலிய இறையவர் பதங்களையே கொடுக்க மாட்டும்;
நாமஸ்மரணமோ, அந்தமி லின்பத்து அழிவில் வீட்டைத் தரும் என வேறுபாடு விளக்கப்பட்டது.

இங்குத் தானம் முதலியனவாகக் கூறினது, சுவர்க்கம் முதலிய சிற்றின் பங்களை உத்தேசித்துச் செய்யும் காமியகருமங்களை;
முத்தி யுலகத்து நிரதிசய வின்பத்தைப் பெறுதற்கு உபயோகமாகச் செய்யும் நிஷ்காம்ய கருமங்களை யன்றென் றறிக.

தானம் – சற் பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும்,
தியாகம் – வரையறை யின்றிப் பொதுப்படக் கொடுத்தல் என்றும் வேற்றுமை யுணர்க;
முன்னது – புண்ணியக் கொடை யென்றும், பின்னது – புகழ்க் கொடை யென்றுங் கூறப்படும்.

தாநம், த்யாகம், தபஸ், தீர்த்தம், ஹவிஸ், யாகம், வேதா, நந்தீ, ஆகண் டலன், பரந்தாமம் – வடசொற்கள்.
அவி – வைதிகாக்கினியில் மந்திர பூர்வமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம் முதலிய தேவருணவு.
நந்துதல் – கெடுதல்; இங்கு, நன்றாகப்பசநமாதல். நந்துயாகம் – வினைத்தொகை.
நந்தியாகம் என்பதில் இகரத்தை, “யவ்வரி னிய்யாம்” என்றபடி நிலை மொழி யீற்றுக் குற்றியலுகரம் திரிந்த தென்றாவது,
“யவ்விற்கு, இய்யும் மொழி முதலாகி முன் வருமே” என்றபடி வருமொழி வடசொல்லின் யகரத்துக்கு முன் வந்த இகர மென்றாவது கொள்க.
ஆகண்டலன் – (பகைவரை) நன்றாகக் கண்டிப்பவன். பரந்தாமம் – மேலான இடம். தரும் – முற்று. இழிபாயின – பெயர்; செயப்படுபொருள்.
தந்திடும் என்றதில் இடு – துணிவுணர்த்தும். பகல் – சூரியனுக்கு இலக்கணை.
நந்தி என்றதன் நகரம், யமகத்தின் பொருட்டு னகரமாகப் கொள்ளப்பட்டது.

————-

தாமரை மாத்திரை மூப்பற்ற வானவர் தண்ணறும் செந்
தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க
தாமரை மாத்திரை போல்வளைந் தேற்றுத் தருப் பொருட்டால்
தாமரை மாத்திரைக் கேசங்கி னோசையிற் சாய்ந்தனரே –79-

தாமரை மாத்திரை – பதுமமென்னுந் தொகை யளவுள்ளவர்களான,
மூப்பு அற்ற வானவர் – முதுமை யில்லாத இயல்பை யுடைய தேவர்கள்,
தரு பொருட்டால் – பாரிஜாத தருவின் நிமித்தமாக,
திரை தண் நறுஞ் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை – திருப் பாற்கடலிற் குளிர்ந்த பரிமளமுள்ள
சிவந்த தாமரை மலரின் மீது தோன்றினவளான திருமகளினது கணவரும் குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை இடமாகக் கொண்டவருமாகிய நம்பெருமாளை,
மா திரை போல் வளைந்து ஏற்று – பெரிய திரைச் சீலை போலச் சூழ்ந்து எதிர்த்து,
சங்கின் ஓசையின் – (அப் பெருமான் ஊதி முழக்கிய) சங்கத்தினோசையினால்,
தாம் -,
அரை மாத்திரைக்கே – அரை மாத்திரைப் பொழுதிலே,
சாய்ந்தனர் – மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

பதுமமென்பது, ஒருபெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி.
இங்குப் பதுமமென்ற அத்தொகையை அதற்கு ஒருபரியாயநாமமாகிற “தாமரை” என்ற சொல்லினாற் குறித்தது. லக்ஷிதலக்ஷணை.
மாத்ரா என்ற வடசொல் விகாரப்பட்டது.
தா – வருத்தம் மிக்க,
மரை – மரணமும்,
மா – மிகுந்த,
திரை – தோற்சுருக்கமும்,
மூப்பு – முதுமையும்,
அற்ற வானவ ரென்று உரைப்பாரு முளர். திருப் பாற்கடல் கடைந்த போது, அதனினின்று மலர்ந்த செந்தாமரை மலரை
ஆசனமாகக் கொண்டு திருமகள் திருவவதரித்தனளென்று புராணம் கூறும்.

முதலடியிலும் இரண்டாமடியிலும் வந்த “தாமரை” என்ற சொல்லுக்குப் பொருள் வெவ்வேறாதலால், யமக விலக்கணம் சிதைந்ததாகாது.
மா – இலக்குமியைக் குறிக்கையில், வடசொல். திரை – அலை; கடலுக்குச் சினையாகுபெயர்.
பொருட்டு – நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு; ஆல் – அசை.
மாத்திரை – கண்ணிமைப் பொழுது, அல்லது கைந் நொடிப் பொழுது.
திரைச் சீலை யுவமை – பிறர் காண வொண்ணாதபடி சூழ்ந்து கொள்வதற்கு.

———-

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் தண் புனல் அரங்கே
சாகைக்குந் தத்துப் படையாழி யேந்த றமர்கள் வெய்யோர்
சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே–80-

சாகை – கிளைகளை யுடைய,
குந்தத்து – குருந்த மரத்தின் மேல்,
துகில் தூக்கி – (கோப ஸ்திரீகளுடைய) சேலைகளை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு,
மாதர் தமை நகைத்தாய் – அந்த இடைப் பெண்களை நோக்கிப் பரிகாசமாகச் சிரித்தவனே!
சாகைக்கும் தத்துவங்கட்கும் எட்டாய் – வேதங்களுக்கும் தத்துவங்களுக்கும் எட்டாதவனே!
தண் புனல் அரங்கம் ஈசா – குளிர்ச்சியான நீர் வளத்தை யுடைய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவனே! –
கை – (நினது) திருக் கைகளில்,
குந்தத்து – குந்தமென்னும் ஆயுதத்தோடு,
புடை ஆழி – பகை யழிக்க வல்ல சக்கரத்தையும்,
ஏந்தல் – தரித்திருத்தல்,
வெய்யோர் சாகைக்கும் தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும் – துஷ்டர்கள் அழியுமாறும்
அடியார்கள் துன்பம் நீங்குமாறும் நீகொண்ட கருத்தினாற் போலும்; (எ – று.)

“போலும்” என்பது – ஒப்பில்போலி: அதாவது – உவமைப் பொருள் தராத “போல்” என்னுஞ் சொல்;
“ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்” என்ற தொல்காப்பியத்தால்,
அச் சொல் உரையசைப் பொருளதாகி வாக்கியாலங்காரமாய் நிற்கு மென்று விளங்குதலால்,
எம்பெருமான் திருக்கைகளிற் சிறந்த படைக்கலங்களைக் கொண்டிருத்தல் துஷ்ட நிக்கிரகஞ் செய்து சிஷ்ட பரிபாலனம்
பண்ணுஞ் சங்கல்பத்தினாலேயே யாமென்ற கருத்து அமையும்.
சாகை – வேதத்தின் பகுப்பு; வேதத்துக்குச் சினையாகு பெயர்.
தத்துவங்கள் – ஐம்பொறி, ஐம்புலன், ஐம்பூதம், ஐந்துகருமேந்திரியம், பிரகிருதி, மஹாந், அகங்காரம், மநஸ் என்பன.
எட்டுதல் – புலனாதல். இனி, வேதங்கட்கும் மற்றைத் தத்துவ நூல்கட்கும் சிறிதளவே யன்றி
முழுவதுஞ் சொல்ல முடியாதவனே யென்று உரைப்பினும் அமையும்;
இப் பொருளில், தத்துவமென்பது – அதனை யுணர்த்தும் நூலுக்கு ஆகு பெயராம். தமர் – தம்மைச் சேர்ந்தவர்.

சாகா, தத்வம், ஸங்கல்பம் – வடசொற்கள்.
கை குந்த துப்பு உடை ஆழி ஏந்தல் என்று பதம் பிரித்து, கை – கையில், குந்த – இருக்க,
துப்பு உடை ஆழி ஏந்தல் – வலிமையை யுடைய சக்கரத்தைத் தரித்தல் என்று உரைத்தலு மொன்று.

“தமர்கள் வெய்யோர் சாகைக்கும் தத்துத் தவிர்கைக்கும்” என்ற தொடரில்,
“தமர்கள்” என்பது “தத்துத் தவிர்கை” என்பனோடும்,
“வெய்யோர்” என்பது “சாகைக்கும்” என்பதனோடுமாக மாறிச் சென்று இயைதல், எதிர் நிரனிறைப் பொருள்கோள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading