ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -41-60-

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள் இலைக்
கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக்
கலக் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே –41-

கலக்கு – (மனத்தைக்) கலங்கிச் செய்கிற,
ஊழை – ஊழ் வினையை,
கைக்கும் – வெறுத்து ஒழிக்க வேண்டு மென்னும்,
கருத்து உடையீர் -எண்ணத்தை யுடையவர்களே! (நீங்கள்),
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்திலே, –
காது – (பகைவரை) மோத வல்ல,
படைக் கலம் – ஆயுதங்களை யுடைய,
கூழை கைக்குள் – படை வகுப்பின் ஒழுங்கினிடையிலே,
வரு – (போர்க்கு) வந்த,
வாணனை – பாணாசுரனை,
கண் நுதலும் விட்டு அகல – (தன்னைச் சரண மடைந்தது பற்றிப் பாதுகாப்பதாக உடன் பட்ட) நெருப்புக் கண்ணை
நெற்றியிலுடையவனான சிவபிரானும் (பாதுகாக்கமாட்டாமற்) கைவிட்டு விலக,
கூழை கை குப்பை கண்டானை – (அவ் வாணனது) குறைபட்ட கைகளின் குவியலைக் கண்டவனை
(அவன் கைகளைத் துணித்து வீழ்த்திக் குவியல் செய்தவனான எம்பெருமானை),
வீதியில் கண்டு – திருவீதியிலே உத்ஸவங்கண்டருளத் தரிசித்து,
உவந்து – மன மகிழ்ந்து,
இலை கலம் கூழை கைக்கும் கறி இட்டு துய்த்தும் இரும் – இலையாகிய பாத்திரத்திலே கூழாகிய
இழிந்த வுணவைக் கசக்கின்ற கறிகளைச் சேர்த்து உண்டு கொண்டாயினும் வசித்திருங்கள்; (எ – று.)

வறுமையினால் வருந்தியாயினும் நம்பெருமாளைச் சேவித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திலே வசித்தல் கொடிய பழவினையை
யொழித்து முத்தி பெறுவித்தற்குச் சாதனமாகு மென்று சனங்களுக்கு உபதேசித்தவாறாம்.
அரங்கத்துள் கண்டு உவந்து இரும் என இயையும்.

இரண்டாமடியில், கலம் – உண்கலம், கைக்கும் – இனியதல்லாத என்றபடி.
கறி – கறிக்கப்படுவது; கறித்தல் – கடித்துத் தின்னுதல். இட்டுந் துய்த்து என்றவிடத்து உம்மை மாற்றப்பட்டது.
காது படைக்கலம் – வினைத்தொகை. படைக்கலம் – போர்க்கருவி.
கண்ணுதல் – வேற்றுமைத் தொகை யன்மொழி. கை – படைவகுப்பினது, கூழைக்குள் – பின்னணிக்குள்ளே,
வரு – வருகின்ற என்று உரைப்பாரு முளர்.
நான்காமடியில், கைக்குப்பை – கைகளின் தொகுதியை, கூழைகண்டான் – குறை செய்தவனென்று இயைத்து உரைப்பினுமாம்.

————-

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய் காலன் என்னும்
கண்ணா கனாவி கவர்வதுவே மெய்கதி நல்கேனக்
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள் காரங்கற்
கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –42-

யாவும் – (செல்வம் இளமை முதலிய) எல்லாப் பொருள்களும்,
கனாவின் கண்ட பொருள் போல பொய் – சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப் பொய்யாகும்
(சிறிதும்நிலைபேறின்றி அழியு மென்றபடி);
காலன் என்னும் கண்டகன் ஆவி கவர்வதுவே மெய் – யம னென்கிற கொடியவன் (பிராணிகளின்) உயிரை
(உடம்பினின்று) கவர்ந்து கொள்ளுதலே உண்மை: (ஆதலால்),
கதி நல்கு – (எனக்கு) உயர்ந்தகதி யாகிய பரமபதத்தை. அளித்தருள்வாய்,’
என – என்று (கண்டாகர்ணன்) பிரார்ததி்க்க,
கண்டகனா இ பொழுதே செல்க என்று அருள் – ‘கண்டா கர்ணனே! இப்பொழுதே (பரமபதத்திற்குச்)
சென்று சேர்வாயாக’ என்று சொல்லி அருள் செய்த,
கார் அரங்கன் – (கைம்மாறு கருதாத கொடையிலும் கரிய திருநிறத்திலும் குளிர்ச்சியிலும் காளமேகம்) போன்றவனான ஸ்ரீரங்கநாதனை,
கடிது – விரைவில்,
கண் தக கண்டு – கண்கள் தகுதி பெறுமாறு தரி சித்தும்,
நா இன்புஉற வாழ்த்தி – நாக்கு இனிமை யடையுமாறு துதித்தும்,
உய்ம்மின் – ஈடேறுங்கள்; (எ – று.)

காலன் – பிராணிகளின் ஆயுட் காலத்தைக் கணக்கிடுபவன். கண்டகம் – முள்;
அதுபோலப் பிராணிகளை வருத்துபவன், கண்டகன்.
மூன்றாமடியில் ‘கண்டகனா’ என்பது – வடமொழிச்சிதைவு.
செல்கென்று – தொகுத்தல்.
கண் தக நா இன்புற கண்டு வாழ்த்தி – முறைநிரனிறைப்பொருள்கோள்.
கண் தக – கண் படைத்த பயன் பெற என்றபடி.
அரங்கற்கண்டகநா வின்புறக்கண்டு என்றவிடத்து, உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது:
உயர்திணைப்பெயரீற்று னகரமெய் பொதுவிதிப்படி வலிவர இயல்பாகாது றகரமாத் திரிந்தது,
இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால்;
‘இயல் பின் விகாரம்.’ நாவின்புற என்றவிடத்து, நகரவேறுபாடு, யமகநயத்தின் பொருட்டுக் கொண்டது.

————-

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் தீங்கு நன்காகும் பராக்
கடிக்கும் பணியலர் தாழ்வார் கல்லாமையும் கற்றமையாம்
கடிக்கும் பணி யறம் எல்லாம் அரங்கர் பைம் கன்னித் துழாய்க்
கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே –43-

அரங்கர் – ரங்கநாதரது,
பைங் கன்னி துழாய் கடிக்கும் – பசிய இளமையான திருத்துழாய் மணம் வீசப் பெற்றனவும்,
பணி ஒளிக்கும் – ஆபரணங்கள் விளங்கப் பெற்றனவமான,
நல்ல பாதம் – அழகிய திருவடிகளை
கருதினர்க்கு – தியானித்தவர்கட்கு,
கடிக்கும் பணி நஞ்சு அமுது ஆகும் – கடிக்கிற பாம்பின் விஷமும் அமிருதமாகும்;
தீங்கும் நன்கு ஆகும் – (பிறர் செய்யுந்) தீமையும் நன்மையாய் முடியும்;
பராக்கு அடிக்கும் பணியலர் தாழ்வார் – பராமுகஞ் செய்து அவமதிக்கிற பகைவர்களும் கீழ்ப் படிந்து வணங்குவார்கள்;
கல்லாமையும் கற்றமை ஆம் – பயின்றறியாத பொருள்களும் பயின்றன போல விளங்கும்;
பணி அறம் எல்லாம் கடிக்கும் – (சாஸ்திரங்களிற்) சொல்லப்பட்ட தருமங்களெல்லாம் சித்திக்கும்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளை மநநஞ் செய்பவர்க்கு நேர்கிற இஷ்டப் பிராப்தியும், அநிஷ்ட நிவிருத்தியும் இச் செய்யுளிற் கூறப்பட்டன.

பணம் – படம்; அதனையுடையது, பணீ எனப் பாம்புக்குக் காரணக் குறி: அவ்வடசொல், பணியென ஈயீறு இகரமாயிற்று.
பராக்கடித்தல் – முகங்கொடாது அசட்டை செய்தல்; ஏமாற்றுதலுமாம்.
பணியலர் – வணங்காதவர்; எனவே, பகைவராயிற்று: எதிர்மறைப் பலர் பால் வினையாலணையும் பெயர்.

மூன்றாமடியில், கடித்தல் – கிடைத்தல். பணியறம் – வினைத்தொகை; இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொண்டு,
கைங்கரிய ரூபமான நல்வினைப் பயன்களெல்லாம் கை கூடு மெனினுமாம்.

நான்காமடியில், கடிக்கும் என்பது – கடி என்ற உரிச்சொல்லின் மேற் பிறந்த எதிர்காலப் பெயரெச்சம்.
ஒளித்தல் – ஒளி செய்தல். ‘கடிக்கும்’, ‘ஒளிக்கும்’ என்ற தெரிநிலைப் பெயரெச்சங்களும்,
‘நல்ல’ என்ற குறிப்புப்பெயரெச்சமும், அடுக்கி, ‘பாதம்’ என்ற பெயரைக் கொண்டன.
முதலிரண்டடிகளில் முரண்தொடை காண்க.
கடிக்கும் பணி நஞ்சு அமுதாதல் முதலியவற்றைப் பரம பாகவத னான பிரகலாதன் முதலாயினாரிடம் காணலாம்.
ஒளிக்குந்நல்ல, நகர மெய் -விரித்தல்.

————-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும் விண் மீ
தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும் சென்றெதிர் மோ
தினகரனாருயிர் செற்றார் அரங்கர் திகிரி சங்கேந்து
தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –44-

தினகரன் – சூரியனும்,
ஆர்கலி – கடலும்,
தீ – அக்கினியும்,
காற்று – வாயுவும், (ஆகிய இவைகளெல்லாம்),
ஒடுங்கும் செயலும் – தம் தம் வரம்பு கடவாது ஓரெல்லைக்கு உட்பட்டு அடங்கி யிருக்குஞ்செயலும்,
விண் மீதில் நகரனார் கொண்டல் ஏழ் செருக்காமையும் – வானத்தில் (அமராவதி யென்னும்) நகரத்தை யுடையவனான
இந்திரனாற் செலுத்தப்படுகிற ஏழு மேகங்களும் செருக்கி அளவிறந்த மழை பொழிந்து உலகங்களை யழித்திடாமையும்,
(என்னும் இவை யாதுகாரணத்தா லெனின்),
சென்று எதிர் மோதின கரன் ஆர் உயிர் செற்றார் – எதிராக வந்து பொருத கரனென்னும் அரக்கனது அருமையான உயிரை யொழித்தவரும்,
திகிரி. சங்கு ஏந்தின கரனார் – சங்க சக்கரங்களைத் தரித்த திருக்கைகளை யுடையவரும்,
நம்பெருமாள் – நம்பெருமாளென்று திருநாம முடையவருமான,
அரங்கர் – ரங்கநாதப்பிரான்,
அமைத்த – நில்லென்று குறித்து வைத்த,
திரு கை – திருக்கையை,
கண்டே – பார்த்தேயாம்; (எ – று.)

திநகரன் முதலியன அமைந்து நடப்பது திருவரங்கர் திருக்கை கொண்டு குறிப்பித்த திருவாணையைக் கண்டேயாமென
அப்பெருமானது ஸர்வ நியாமகத்வம் இதிற் கூறப்பட்டது.

நெடும் கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதுவும்-ஊழிதனில்
சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி யரங்கேசர் தம் திருவாணையினே-திருவரங்கத்து மாலை

திநகரன் – பகலைச்செய்பவன்: வடசொல்.
ஆர்கலி – நிறைந்த ஓசையையுடையது; வினைத்தொகையன்மொழி.
விண்மீதினகரனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – உயர்வுப்பொருளது.
கொண்டல் – நீர்கொண்ட மேகம்; தொழிலாகுபெயர்.
கொண்டலேழ் – ஸம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
இந்திரன் மேகவாகன னாதலால், ‘விண்மீதினகரனார்கொண்டலேழ்’ எனப்பட்டது.
ஆர்கொண்டல் என்றெடுத்து, ஒலிக்கின்ற மேகம் எனப் பொருள்கொள்ளினுமாம்.
ஆர்உயிர் – பண்புத்தொகை.
‘நம்பெருமாளமைத்த திருக்கை’ என்றது, அபயஹஸ்தமாயமைந்த வலத்திருக்கையை.
கரன் என்ற வடசொல் – கொடியவனென்று பொருள்படும்; இவன் இராவணனுக்குத் தம்பி முறையில் நிற்கின்ற ஓரரக்கன்;
தண்ட காரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறிப்பிட்ட ஜனஸ்தானமென்ற விடத்தில் அவட்குப்
பாதுகாவலாக இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர் சேனைக்கு முதல் தலைவன்.

————

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திரு கா விரிக்கும் – அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற,
யமுனைக்கும் – யமுனா நதிக்கும்,
கங்கைக்கும் – கங்கா நதிக்கும்,
தெள் அமுது ஆம் திரு காவிரிக்கும் – தெளிவான அமிருதம் போலினிய தாகிற மேன்மை யுள்ள காவேரி நதிக்கும்,
கடற்கும் – சமுத்திரத்துக்கும்,
பிரான் – தலைவனான எம்பெருமானது,
தென் அரங்கம் – அழகிய திருவரங்கம்,
என்ன – என்று (ஒருதரமேனும் வாயினாற்) சொல்ல,
அன்பு உய்த்து இருக்கா – அன்பு செலுத்தியிராமல்,
திருக்கு ஆவிர் – மாறுபடுவீர்கள்;
இக்கு மொழியார்க்கு – கருப்பஞ்சாறு போலினிய சொற்களை யுடைய மகளிர் திறத்திலோ,
தீ மெழுகு ஆவிர் – தீப்பட்ட மெழுகு போலக் கரைந்து உருகுவீர்கள்; (இவ்வாறு ஆக),
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமாது எ ஆறு – அப்பெருமான் உங்களுடைய பிறப்பை யொழிப்பது எங்ஙனம் நிகழும்? (எ – று.)

திருவரங்கமென்று வாயினாற் சொல்லுதலுஞ் செய்யாமல் விஷயாந்த ரங்களில் ஊன்றி நிற்கின்றீர்களே,
அவன் உங்கள் ஜந்மத்தை எங்ஙனம் ஒழிப்பான்? என்று, நல்வழிச் செல்லாதவர்களைக் குறித்து இரங்கிக் கூறினர்.
‘திருக் காவிரிக்கும்’ என்ற அடைமொழியைக் கங்கை காவிரிகட்குங் கூட்டலாம்.
யமுனைக்குப் பிரான் என்றது, யமுநாநதிதீரத்திற் கிருஷ்ணாவதாரஞ் செய்து பல திருவிளையாடல்களை நிகழ்த்தி யருளியதனால்.
கங்கைக்குப் பிரான் என்றது, அந்நதி திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமாதலால்.
காவிரிக்குப் பிரான் என்றது உபயகாவேரி மத்தியிற் பள்ளி கொண்டருளுதலால்.
கடற்குப் பிரான் என்றது, கடலை உறைவிடமாகக் கொண்டிருத்தலால்.
யமுனை கங்கை முதலிய புண்ணியநதிகளின் தீர்த்தத்தினும் காவேரி தீர்த்தத்திற்கு உள்ள இனிமை மிகுதி தோன்ற,
அதற்கு ‘தெள்ளமுதாம்’ என்ற அடைமொழி கொடுத்தார்.

யமுநா என்ற வடமொழி – யமனுடன் பிறந்தவன் என்று பொருள்படும். யமனும் யமுனையும் சூரியன் மக்க ளென்றறிக.
காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
இக்ஷு, ஜந்மம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இருக்கா = இராமல்; ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சம்;
கு – சாரியை; உடன்பாட்டு இறந்த கால வினை யெச்சமாக ‘இருந்து’ எனப் பொருள் கொண்டு,
‘தீமெழுகாவிர்’ என்றதனோடு இயைப்பினும் அமையும்.

———–

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு
சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்மந் தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கஞ்
சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே –46-

சென்மம் – (மாறி மாறி வருந் தன்மை யனவான) பிறப்புக்கள்,
தரங்கம் – (மாறி மாறி வரும்) அலைகளை யுடைய கடலாகும்;
கருமம் – (உயிர்களைப் பிறப்பிலே சுழலச் செய்வதான) ஊழ்வினை,
சுழி – (அகப்பட்ட பொருள்களைத் தன்னில் உழலச்செய்வதான) நீர்ச் சுழியாகும்;
பிணி – (பிறந்த உயிர்களை வருத்துகின்ற) தேக வியாதிகளும் மநோ வியாதிகளும்,
சேல் – (நீரி லிழிந்தாரைக் குத்தி வருத்துகிற) மீன்களாகும்;
குசென் – அங்காரகனும்,
மந்தர் – சனியும்,
அம் கதிர் – அழகிய சூரிய சந்திரர்களும்,
பொன் – பிருகஸ்பதியும்,
கோள்கள் – மற்றைய கிரகங்களும்,
மாரி – மழையும்,
திண் கூற்று – (பிராணிகளைத் தவறாது அழிக்கும்) வலிமையுடைய யமனும்,
அசனி – இடியும்,
(ஆகிய ஆதி தைவிகத் துன்பங்கட்குக் காரணமான தேவ வர்க்கங்கள்),
இனம் – (அம் மீனின்) இனமாய்ப் பிராணிகளை வருத்துகிற நீர் வாழ் ஜந்துக் களாகும்;
அவற்றுள் செல் மந்தர் – அப் பிறப்புக்களிலே (கரும வசத்தாற்) சென்று அகப்பட்டுக் கொண்ட அற்ப பாக்கியமுடைய மனிதர்கள்,
அங்கு விழுவோர் – அக் கடலில் விழுந்து வருந்துபவர்களாகும்;
செல் மந்தரம் கவின் தோளார் அரங்கர் திரு பதமே – மேகந் தவழும் மந்தர கிரி போன்ற அழகிய தோள்களையுடையவரான ரங்கநாதரது திருவடியே,
கரை சேர்க்கும் வங்கம் – (அப்பிறவிக் கடலினின்று) முத்திக் கரை சேர்க்கும் மரக்கலமாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலை.

அவயவி அவயவம் முதலிய அனைத்தையும் இங்ஙனம் உருவகஞ்செய்து உரைத்தது. முற்றுருவகவணி;
வடநூலார் ஸகலரூபக மென்பர்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்,”
“அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” என்பவாதலால்,
‘சென்மம்தரங்கம் செல் மந்த ரங்கு அவற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கம் அரங்கர் திருப்பதமே’ என்றார்.

‘செல்மந்தரம்’ என்றது, மந்தரத்தின் உயர்வு தோன்றக் கூறியதாம். அஷ்ட குல பர்வதங்களி லொன்றாகிய
மந்தரமலை போல ஓங்கி வளர்ந்த தோளென்க;
பாற்கடலைக் கலக்கிய மந்தரம் போலப் போர்க் கடலைக் கலக்குந் தோளென்றுங் கொள்க.

செல்வது செல் என மேகத்துக்குக் காரணக்குறி. கவின் – உவம வுருபுமாம்.
ஜந்மம், தரங்கம், கர்மம், குஜன், மந்தர், அசநி, பதம் – வடசொற்கள்.
தரங்கம் – கடலுக்குச் சினையாகுபெயர்.
குஜன் என்ற பெயர் – பூமியினின்று பிறந்தவ னென்றும்,
மந்தன் என்ற பெயர் – (நொண்டியாதலால்) மெதுவாக நடப்பவ னென்றும் பொருள்படும்.
குசென் என்றது, யமகநோக்கிய விகாரம்.

இரண்டாமடியில் ‘மந்தர்’ என்ற பன்மை – இழிவுணர்த்தும்.
செல் மந்தரம் கவின் தோளார் என்பதற்கு – மேகமும் மந்தர கிரியும் போன்ற திருமேனி யழகையும்
தோள்களை யுமுடையவ ரென்று உரைத்தலு மொன்று;
மேகம் போன்ற அழகிய மேனியும், மந்தரம் போன்ற தோளுமென முறைநிரனிறை.

மூன்றாமடியில், மந்தர் – மந்த புத்தி யுடையாருமாம்.

————-

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம லங்க ளறுசீ ரரங்க பகட்டயிரா
பதக்கம லங்கரித் தூர்வோன் சிவனையன் பார்க்கவந்துன்
பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே –47-

பதக்கம் – பதக்கமென்னும் அணிகலத்தையும்,
அலங்கல் – (பலவகை) ஆரங்களையும்,
அணி – அணிந்த,
மார்ப – திருமார்பையுடையவனே!
இமையோர் – தேவர்கள்,
பொன்னி படிந்து – திருக்காவேரி தீர்த்தத்தில் நீராடி,
பதக்கம் மலங்கள் அறு – தீவினைகளாகிய அசுத்தம் நீங்கப் பெறுதற்கிடமான,
சீர் அரங்க – ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
பகடு அயிராபதம் கம் அலங்கரித்து ஊர்வோன் – பெருமையை யுடைய ஐராவதமென்ற யானையின்
மத்தகத்தைச் சிங்காரித்து ஏறி நடத்துபவனான இந்திரனும்,
சிவன் – சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
பார்க்க -, வந்து (நீ) எழுந்தருளி,
உன் பதம் கமலங்கள் அடியேன் தலைக்கு பாலிப்பது – உனது திருவடித் தாமரை மலர்களை அடியேனுடைய
முடியில் வைத்து அருள்செய்வது, என்று – எந்நாளோ! (எ – று.)

அலங்கல் – தொங்கியசைதல்; மாலைக்குத் தொழிலாகுபெயர்.
இமையோர் – கண் இமையாதவர்.
யமகத்தின்பொருட்டு, பாதகம் என்ற வடசொல் குறுக்கலும் விரித்தலு மாகிய விகாரங்களைப் பெற்றுப் பதக்கம் என நின்றது.
அயிராபதம் – ஐராவதம் என்ற வடசொல்லின் போலிவிகாரம்.
கம், சிவன், பதம், கமலம் – வடசொற்கள். கம் – தலை. சிவம் – சுபம்; அதனை(த் தன் அடியார்க்கு)ச் செய்பவன், சிவன்.
அயிராபதப்பகடு என்று மாற்றி, ஐராவதமென்னும் ஆண்யானை யென்றும் உரைக்கலாம்:
பகடு – யானையின் ஆண்மைப்பெயர். கமலம் என்ற பெயர் – நீரை யலங்கரிப்பது என்று காரணப் பொருள்படும்.

——————

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு மாதர்பால் போகத்தையும்
பாலனம் செய்ய விருப்பதி லையம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே –48-

பால் அனம் – வெண்ணிறமான அன்னப் பறவைகள்,
செய் – கழனிகளில்,
அமர் – பொருந்தி வசிக்கப் பெற்ற,
நாடு – தேசத்தை,
ஆண்டு – அரசாட்சி செய்து,
பூணொடு பட்டு அணிந்து – ஆபரணங்களையும் பட்டாடையையும் தரித்து,
செய்ய கலத்து பால் அனம் உண்டு – சிவந்த (செம் பொன் மயமான) பாத்திரத்திற் பாற்சோற்றைப் புசித்து,
மாதர் பல் போகத்தையும் பாலனம் செய்ய இருப்பதில் – மகளிர் சேர்க்கையாலாகும் பல வகையின்பங்களையும் பரிபாலித்து வீற்றிருப்பதனினும்,
ஐயம் பருகி – இரந்து பெற்ற கூழைக் குடித்தாயினும்,
நந்தன் பாலன் அம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை – நந்தகோபனது குமாரனும் அழகிய
திரு மகளின் கணவனுமான திருமாலினது ஸ்ரீரங்கத்திலே வாசஞ்செய்தல், நன்று – நல்லது; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

அனம் – ஹம்ஸம் என்ற வடசொல்லின் சிதைவான அன்ன மென்ப தன் தொகுத்தல்.
நீர்வளமிகுதியால் தாமரை முதலிய நீர்ப்பூக்க ளுள்ள விடத்திலே சென்று விரும்பி வாழ்தல் அன்னப்பறவையின் இயல்பாதலால்,
‘பாலனஞ்செய்யமர்’ என்ற அடைமொழி நாட்டின்வளத்தை யுணர்த்தும்.
அணிதல் – பொதுவினை. அனம் = அந்நம்.
பசும் பொன்னினாலாகிய பூணை ‘பைம்பூண்’ என்றல் போல, செம் பொன்னினாலாகிய கலத்தை ‘செய்யகலம்’ என்றார்.
கலம் – உண்கலம். பாலனஞ்செய்தல் – தவறாமல் நுகர்தல்.
செய்ய = செய்து: எச்சத் திரிபு.
தமக்கு உரிய பலவகைப் போகங்களையும் மாதர்கள், பாலனம் செய்ய – தவறாது நடக்கும்படி பாதுகாக்க என்று உரைப்பினும் அமையும்.
இருப்பதில் – ஐந்தனுருபு எல்லைப் பொருளது.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் நகம் சனாற் சிறையிலிருத்தப்பட்டு
வடமதுரையில் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில் கண்ணனாய் அவதரிக்க,
அக் குழந்தையைக் கம்சன் கொல்லக் கூடு மென்ற அச்சத்தால், தாய் தந்தையர் அத் தெய்வக் குழவியின் அநுமதி பெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநாடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவனான
நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவன் மனைவியான யசோதைக்கு
மாயையின்அம்ச மாய்ப் பிறந்திருந்த தொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்து விட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே
நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.
செய்யவள் – செவ்வியையுடையவள். கோமான், மான் – பெயர்விகுதி. பையில்கை = பயில்கை;
இப்போலி, அடுத்த யமகச்செய்யுளின் அந்தாதித் தொடர்ச்சி நோக்கிக் கொள்ளப்பட்டது.
‘பருகி’ என்ற வினையை நோக்கி, ‘ஐயம்’ என்றது – கூழ் எனப்பட்டது. போகம்,, பாலநம், பாலன் – வடசொற்கள்.
நம் செய்யவள் கோமான் என்று எடுத்துரைத்தலுமொன்று.

————

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம் பரந்த குரம்
பையிலத்தி யுள்விளை பாண்டமென்னாமல் புன்பாவையர் தோல்
பையிலகத்தி செய்து நரகெய்து வீருய்யப் பற்றுமினோ
பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே –49-

பையில் – (ஒன்றோடொன்று) பொருந்தி யிருக்கின்ற,
அத்தி – எலும்பும்,
மூளை – மூளையும்,
நரம்பு – நரம்பும்,
ஊன் – தசையும்,
உதிரம் – இரத்தமும்,
பரந்த – பரவிய,
குரம்பை – (உயிர் சிலநாள் தங்குஞ்) சிறு குடிசை (இது):
இலத்தி உள் விளை பாண்டம் – மலம் அகத்திலே மேன்மேலுண்டாகப்பெறும் பாத்திரம் (இது)’,
என்னாமல் – என்று (உடம்பின் அசுத்தத் தன்மையைக்) கருதாமல்,
புல் பாவையர் தோல் பையில் அத்தி செய்து – இழிகுணமுடைய மகளிரது உடம்பினிடத்து ஆசை வைத்து,
நரகு எய்துவீர் – நரகத்தை யடைபவர்களே! – (நீங்கள்),
உய்ய – ஈடேறுமாறு,
அத்திபையில் மேவி துயில் கூர் அரங்கர் பொன் பாதத்தை பற்றுமினோ – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனது) படத்தின் கீழ்த்
திருவுள்ளமுவந்து யோக நித்திரை செய்தருளுகிற ஸ்ரீரங்கநாதருடைய அழகிய திருவடிகளைச் சரணமடையுங்கள்; (எ – று.)

அத்தி என்பது – எலும்பு என்ற பொருளில் அஸ்தி என்ற வடசொல்லும், ஆசை என்ற பொருளில் அர்த்தி என்ற வடசொல்லும்,
கடல் என்ற பொருளில் அப்தி என்ற வடசொல்லும் சிதைந்ததாம்.
பையில் = பயில்; முதற்போலி, ருதிரம், பாண்டம், நரகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
தோற்பை – தோலினாலாகிய பை. அத்தி செய்தல் – அர்த்தித்தல்: வேண்டுதல்.
பற்றுமினோ என்ற ஓகாரம் – கழிவிரக்கத்தைக் காட்டும்.

“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்றுள், எத் திறத்தா ளீர்ங்கோதையாள்”,
“ஊறி யுவர்த்தக்க வொன்பதுவாய்ப்புலனுங், கோதிக் குழம்பலைக்குங் கும்பம்,”
“தோற்போர்வை மேலுந் துளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும், மீப்போர்வை மாட்சித் துடம்பானால் –
மீப்போர்வை, பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப், பைம்மறியாப் பார்க்கப்படும்” என்ற
நாலடியார்ப் பாடல்கள் உடம்பின் அசுத்தியை நன்கு விளக்கும்.

இச் செய்யுளில் அடிதோறும் முதலிலுள்ள ஐகாரம் குறுக்கமாதலால், அதனைத் தனியே நேரசையாகக் கொள்ளாது
அடுத்த குறிலோடு சேர்த்து நிரையசையாகக் கொள்ள வேண்டும்;
இல்லாவிடின், “நேர்பதினாறே நிரை பதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்றது
முதலிய கட்டளைக் கலித்துறை யிலக்கணம் சிதையும்.
கீழ்ச்செய்யுளின் ஈற்றடியில் வந்த “பையில்கை” என்றவிடத்தும் இங்ஙனமே காண்க.

———–

பாதகங் கைக்கு மரங்கர் பல்பேய் பண் டிராவணனுற்
பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார் படிக்கேற்ற திருப்
பாதகங் கைக்குள் விழு முன்னமே பங்கயன் விளக்கும்
பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –50-

பாதகம் – (அடியார்களுடைய) பாவங்களை,
கைக்கும் – வெறுத்தொழிக்கின்ற,
அரங்கர் – ரங்கநாதரும், பல் பேய் – பலபேய்கள்,
பண்டு. முன்னாளில்
இராவணன் உற்பாதம் கம் கைக்கும் என்று எள்ள – இராவணனுடைய உற்பாதமான தலைகள் கசக்குமென்று இகழுமாறு,
கொய்தார் – (அத்தலைகளைத்) துணித்தவருமான திருமால்,
படிக்கு – (தாம் மாவலி பக்கல் வேண்டிய) மூவடி நிலத்தைத் தவறாது பெறுதற்காக,
ஏற்ற – வாங்குதற்கு உடன்பட்ட,
திருப்பாத கம் – (கொடுப்பதைத்) திருப்பக் கூடாத ஜலம்
(வாக்கு தத்தத்தோடு மகாபலி சக்ரவர்த்தி தாரை வார்த்துக் கொடுக்கிற நீர்),
கைக்குள் விழும் முன்னமே – (அப்பெருமானது) அகங்கையில் விழுதற்கு முன்னமே, –
பங்கயன் விளக்கும் பாதம் கங்கை குளிர் நீர் – பிரமன் திருமஞ்சனஞ் செய்த திருவடியின் தீர்த்தமாகிய குளிர்ந்த கங்கா ஜலமானது,
ஈசன் படர் சடைக்கே வீழ்ந்தது – சிவபிரானது பரவிய சடையிலே விழுந்திட்டது; (எ – று.)

மாவலி பக்கல் மூவடி மண் வேண்டிப் பெற்று உலகனைத்தையும் தனது உடைமை யாக்கி அவனைச் செருக்கடக்குதற்கென்று
திருமால் கொண்ட திருவவதாரமாகிய வாமன மூர்த்தியின் கையில் மகாபலி தாரை வார்த்துக் கொடுத்த நீர் விழுவதன் முன்,
அவ் வாமனன் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகமளக்க மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை
அங்குப் பிரமன் தன் கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகிய
கங்காநதி சிவபிரானது சடையில் வீழ்ந்தது என்றார்.

விரைவுமிகுதி தோன்ற; இங்ஙனம் காரணத்தின் முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறுதல், மிகையுயர்வுநவிற்சியணி.

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீரேற்ற தொன்னான் முகத்தோன் விளக்கவும்
செம்போன் முடிக் காரேற்ற யரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன
வண் திருக் குறளாகி நிமிர்ந்த வன்றே -திருவரங்கத்து மாலை

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னியின் மேல்
ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு

உத்பாதம் – வடசொல்: பின்நிகழுங் தீமைக்கு அறிகுறியாக முன்னர்த் தோன்றுந் தீ நிமித்தம்;
இராவணனது பத்துத் தலைகளை உலகத்தின் தீமைக்கு அறிகுறி யென்றும் இனியன வல்லவென்றும்
பிணம் பிடுங்கித் தின்னும் இயல்பினவான பேய்களும் இகழ்வதாகக் கூறியது, அவனது மிக்க இகழற் பாட்டை விளக்கும்.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது: வடசொல்; தாமரைக்குக் காரண விடுகுறி: அதில் தோன்றியவன், பங்கயன்.
ஈசன் – ஐசுவரியமுடையவன். சடைக்கு – உருபுமயக்கம்.

————–

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
பட நாகத் தந்தம் பறித்தோன் புகழைப் பரவுமின்க
பட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன் முற்பல்
பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே –51-

அந்தரம் மீது – பரம பதத்தில்,
படம் நாகத்து – படங்களை யுடைய திருவனந்தாழ்வான்மீது,
இருப்பான் – வீற்றிருப்பவனும்,
எம் பரன் – எமது இறைவனும்,
நாகம் தந்தம் பட பறித்தோன் – (கம்சனேவிய குவலயாபீடமென்னும்) யானையினது தந்தத்தை (அவ்வானை) அழியுமாறு பறித்துக் கொண்டவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
புகழை – கீர்த்தியை,
பரவுமின் – கொண்டாடித் துதியுங்கள்;
(அங்ஙனம் அனைவரும் புகழுமாறு அப்பெருமான் யாதுசெய்தா னெனின்), –
கபடன் – வஞ்சகனும்,
ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் – உடம்பின் அகத்துறுப்பான மனம் தீயவனுமாகிய,
சிசுபாலன் – சிசுபாலனென்பவன்,
முன் – முன்பு,
பல் பட – பலவாறாக,
நா கத்து – நாவினாற் பிதற்றின,
அந்த வசைக்கும் – அப்படிப்பட்ட (மிகக்கொடிய) நிந்தனைச் சொற்களுக்கும்,
தொல் பரகதி தந்தான் – அநாதியான பரமபதத்தைக் கொடுத்தருளினான்; (எ – று.)

சிசுபாலன் எம்பெருமானை இகழ்ந்ததற்குப் பயனாகப் பரகதியைப் பெற்றன னென்றால்,
அப்பெருமானைப் புகழ்வதற்குப் பயன் பரகதி யென்பது கூறாமலே யமையு மென்ற கருத்து, இதில் தொனிக்கும்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு அத்தையும்
சேதி தேசத்தரசனான தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசிரவையென்பவ ளுடைய மகன்.
திருமாலின் துவாரபாலகராகிய ஜயவிஜயர்கள் ஒருசமயத்தில் விஷ்ணுலோகத்தினுட் செல்லவந்த ஸநகாதியோகிகளைத்
தடுத்தமை பற்றி அவர்கள் வெகுண்டுகூறிய சாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப் பகைவராய்ப் பூமியிற் சனித்து
அத்திருமாலின்கையா லிறப்பவ ராகி, முதலில் இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின் இராவண கும்பகர்ணராகவும்,
அப்பால் சிசுபால தந்தவக்கிரராகவுந் தோன்றின ரென அறிக.

எம்பெருமான் பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்க்குத் திருவுள்ள முவந்து மோக்ஷமளிப்பதுபோலவே,
விரோதத்தினாலாகிலும் தன்னைஇடைவிடாது நினைந்திருந்தவர்க்கும் சிறுபான்மை தனது பரம
கிருபையால் அந்த முக்தியை யளிக்கின்றன னென்பது நூற்கொள்கை.

அந்தரம் – வானம், பரமாகாசம். மூன்றாமடியில் ‘கபடநாகத்து’ என்ற விடத்து, னகரவேறுபாடு யமகநயம்பற்றியது.
வசைக்கும், உம் – இழிவு சிறப்பு. பர கதி – உயர்ந்த கதி

————

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன நிரு
பறவையில் மேகலை ஈந்தான் அரங்கன் பணிந்து இமையோர்
பரவையிலாழிப் பிரான் அடிக்கீழுற் பவித்து அழியும்
பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–52-

பரவு – விசாலித்த,
ஐயில் அன்ன கண் – வேலைப்போன்ற (கூரிய) கண்களை யுடைய,
பாஞ்சாலி – திரௌபதி,
நின் பரம் என்ன – ‘(என்னைக் காப்பது) உனது பாரம்’ என்று சொல்லி முறையிட்டுச் சரணமடைய,
நிருபர் அவையில் – அரசர்கள் கூடிய சபையிலே,
மேகலை ஈந்தான் – (அவட்கு) ஆடையை யளித்தவனும்,
இமையோர் பணிந்து பரவு – தேவர்கள் வணங்கித் துதிக்கப்பெற்ற,
ஐயில் ஆழி பிரான் – கூரிய சக்கராயுதத்தை யேந்திய இறைவனுமான,
அரங்கன் – திருவரங்கநாதனது,
அடிக்கீழ் – திருவடியில்,
பரவையில் மொக்குளை போல் – கடலில் தோன்றும் நீர்க் குமிழிகள் போல,
பல கோடி பகிரண்டம் – அநேக கோடிக் கணக்காகிய அண்ட கோளங்கள்,
உற்பவித்து – தோன்றி,
அழியும் – (சிலகாலம் கழிந்தவாறே) மாய்ந்துபோம்; (எ – று.)

வாரித்தலமும் குல பூதரங்களும் வானு முள்ளே –
பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க முன்னாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமுழிகள் போலே முளைத்தனவே -திருவரங்கத்து மாலை

பாஞ்சாலீ – வடமொழித்தத்திதாந்தநாமம். பாஞ்சாலதேசத்து அரசனது மகள்; பஞ்சபாண்டவரது பத்தினி.
மேகலை யென்ற எண்கோவை யிடையணியின் பெயர், ஆடைக்கு இலக்கணை.
மேவு கலை என வினைத் தொகை நிலைத் தொடராக எடுத்து,
விரும்பப்படுகின்ற ஆடை யென்றும், பொருந்திய ஆடை யென்றும் பொருள் கொள்ளலாம்.
ஐயில் = அயில். பஹி ரண்டம் – வெளியண்டம்; இங்கு, அண்டமென்ற மாத்திரமாய் நின்றது. யமகநயத்தின்பொருட்டு,
‘நிருபரவையின் மேகலை’, ‘பரவையின் மொக் குளை’ என்று சந்தி புணர்க்காமல் லகரவீறாகவே நிறுத்திக் கொண்டார்.

————-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –53-

அம் – அழகிய,
பொன் – பொன்னையும்,
முத்து – முத்துக் களையும் கொழிக்கின்ற,
அலை – அலைகள்,
வான் அண்ட – மேக மண்டலத்தை யளாவி யுயர,
மடங்கலை ஈர்த்து ஓடும் – சிங்கங்களை யிழுத்துக் கொண்டு ஓடி வருகிற,
பொன்னி – காவேரி நதியினாற் சூழப்பட்ட,
அரங்கன் – திருவரங்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பெருமான்,
அண்டம் அடங்கலையும் – அண்ட கோளங்களெல்லாவற்றையும்,
தந்து – படைத்து,
காத்து – பாதுகாத்து,
அவை அந்தம் தன்பால் அண்ட மடங்கலை செய் – அவ்வண்டங்களெல்லாம் கற்பாந்த காலத்திலே மீண்டும்
தன் பக்கல் ஒடுங்கும்படி அழிவு செய்கின்ற, காரணம் – ஏது, (யாதெனில்),
காரண்டம் புள் அடங்கு அலை முந்நீர் மகள் உகப்பு ஆக என்றே – நீர்க் காக்கையாகிய பறவைகள் தம்மிலடங்கப் பெற்ற
அலைகளை யுடைய திருப்பாற் கடலினின்று தோன்றிய திருமகள் (கண்டு) களிப்படைதற்கு என்றேயாம்; (எ – று.)

எம்பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலை யுஞ் செய்வது பெரியபிராட்டியாரின் மனத்தை
மகிழ்விக்குந் திருவிளையாட லேயா மென்பது, கருத்து.
இரட்டுறமொழித லென்னும் உத்தியால், ‘முந் நீர்மக ளுகப்பாக’ என்பதற்கு –
(அண்டங்கட்கெல்லாம் அதிஷ்டாந தேவதையான) கடலாடை சூழ்ந்த பூமிப்பிராட்டி மகிழ்ச்சி யடைய வென்றும் பொருள் கொள்ளலாம்.

அண்டமடங்கலையுந் தந்து காத்து அவை அந்தந் தன்பால் அண்ட மடங்கலைச்செய் –
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருமழிசைப் பிரான் –

அடங்கல் என்றது, எஞ்சாமைப் பொருளைக் காட்டும்; உம்மை – முற்றும்மை, அந்தம் அண்ட – அழிவை யடைய,
மடங்கலைச்செய் – ஊழிக்காலத் தைச் செய்கிற வென்றுரைத்தலு மொன்று.
பொன்னும் முத்தும் சிங்கங்களும் – மலையிலுள்ளவை. மலையில் முத்து, யானைத் தந்தம் முதலியவற்றினின்று தோன்றியவை யென்க.
மடங்கல் – (பிடரி மயிர்) மடங்குதலை யுடைய தென ஆண் சிங்கத்துக்குக் காரணக் குறி.
காரண்டவம் – வடசொல். உகப்பு – தொழிற்பெயர்.

———–

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆக மதிக்கு நவநீதக் கள்வ வவனி கொள்வார்
ஆக மதிக் குளம் சேர் ரங்கா வுன்னை யன்றித் தெய்வம்
ஆக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே –54-

ஆகமம் – (காமிகம் முதலிய) ஆகமங்களைக் கூறிய,
திக்கு முகம் மேல் முகம் உடையான் – நான்கு முகங்களுக்கு மேலும் ஒருமுகத்தை (ஐந்து முகங்களை) யுடையவனான சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
வாழ் – இனிது வசிக்கின்ற,
ஆக – திருமேனியை யுடையவனே!
மதிக்கும் நவநீதம் கள்வ – கடைந்தெடுத்த வெண்ணெயை (க் கிருஷ்ணாவதாரத்திற்) களவு செய்துண்டவனே!
அவனி கொள் வாராக – பூமியைக் கோட்டினாற் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த வராக மூர்த்தியானவனே!
மதி குளம் சேர் அரங்கா – சந்திர புஷ்கரிணி பொருந்திய ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
அடியேன் – (உனது) அடியவனான நான்,
உன்னை அன்றி பிறர் ஆரையும் தெய்வம் ஆக மதிக்குள் எண்ணேன் – உன்னை யல்லாமல் வேறு எவரையும்
கடவுளாக மனத்திற் கருதுதலுஞ் செய்யேன்; (எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி பர தேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையே யன்றி அவனது திருமேனியிலடங்கிய
அபரதேவதை களைச் சிறிதும் பொருள் செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியை இங்ஙனம் வெளியிட்டார்.

திருமாலின் திருநாபியிற் பிரமனும், வலப் பக்கத்திற் சிவ பிரானும் அடங்கியுறைதலை,
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன்– என்ற அருளிச்செயல்கொ ண்டும் உணர்க.

இங்கு ‘ஆகமம்’ என்றது, காமிகம் முதல் வாதுளம் ஈறாகச் சொல்லப் படும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை.
சிவபூசை செய்யுந்திறம் சிவ ஸ்வரூபம் முதலியவற்றைச் சொல்லுகிற இந்தச் சைவாகமங்கள் அச்சிவபிரானாலேயே சொல்லப்பட்டவை.

திக்கு என்பது – இலக்கணையால், அதன்தொகையாகிய நான்கென்னும் எண்ணின் மேல் நின்ற தென்க.
சிவபிரான் நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களோடு மேல் நோக்கிய ஊர்த்துவமுக மொன்றுமாக
ஐந்துமுகங்களையுடையா னென்ற விவரம் விளங்க,
‘திக்கு முகமேல் முகமுடையான்’ என்றன ரென்றுங் கொள்ளலாம்.

சதாசிவமூர்த் தியினுடைய ஐந்து முகங்களுள்ளும்
சத்தியோசாதமென்னும் முகத்தினின்று காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
வாமமென்னும் முகத்தினின்று தீப்தம் சூக்குமம் சகத்திரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
அகோரமென்னும் முகத்தினின்று விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்நேயம் வீரம் என்னும் ஐந்துஆகமங்களும்,
தத்புருஷமென்னும் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் விம்பம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
ஈசாநமென்னும் முகத்தினின்று புரோற்கீதம் லளிதம் சித்தம் சந்தாநம் சர்வோக்தம் பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்னும்
எட்டு ஆகமங்களும் தோன்றின வென்று அறிக.

நவநீதம் என்ற வடசொல் – புதிதாக ஈட்டப்பட்டது என்றும், அவநி என்ற வடசொல் – காத்தற்கு உரியது என்றும் காரணப் பொருள்படும்.
கள்வன், வ் – பெயரிடைநிலை. சந்திரபுஷ்கரிணி – க்ஷயரோகமடைந்து அழியும் படி தக்ஷப் பிரஜாபதியினாற் சாபமடைந்த
சந்திரன் தவஞ்செய்து அச் சாப நிவிருத்தி பெற்ற குளம்.
மதி – நன்குமதிக்கப்படுபவன். மதி – அறிவு; வடசொல். ‘மதிக்குள் வையேன்’ என்றும் பாடம்.

———–

ஆரத் தநந்தருந் தாய்தந்தை யா நந்த மாவரிகழ்
ஆரத் தநந்தனன் றீமை கண்டாலங்கவுத் துவ பூண்
ஆரத் தநந்த சயனா வணியரங்கா திகிரி
ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –55-

அத்த – (எனது) தந்தையே!
அம் கவுத்துவ – அழகிய கௌஸ்துபமென்னும் இரத்தினத்தைத் (திருமார்பில்) தரித்துள்ளவனே!
பூண் ஆரத்து – அணிந்த ஹாரங்களையுடைய,
அநந்தசயனா – ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனே!
அணி அரங்கா – அழகிய திருவரங்கத்துக்குத் தலைவனே!
திகிரி ஆர் அத்த – சக்கராயுதம் பொருந்திய திருக்கையை யுடையவனே!
நந்தன் மதலாய் – நந்தகோபன் வளர்த்த குமாரனே! –
ஆர தநம் தரும் தாய் – (தான் பெற்ற பிள்ளைக்குக்) குடிக்க முலைப் பாலைக் கொடுக்கிற தாயும்,
தந்தை – தந்தையும்,
நந்தனன் தீமை கண்டால் – தமது புதல்வன் (இளமையில் தம்மை உதைத்தல் ஏசுதல் முதலிய) தீங்குகள் செய்தலைக் கண்டால்,
ஆநந்தம் ஆவர் – மகிழ்ச்சி யடைவரே யன்றி,
இகழார் – வெறுப்புக் கொள்ளார்: –
என் தீங்கு உனக்கு அ தன்மைத்தே – (அறிவிற் சிறியேனான) எனது பிழையும் (எந்தையான) உனக்கு அத் தன்மையதேயாம்; (எ – று.)

அன்பிற் சிறந்த தாய் தந்தையர் தம் மக்கள் இளமையிற் செய்கிற சிறு குறும்புகளைப் பொருள் செய்யாது
அவற்றைக் கண்டு களித்து நிற்றல் போல, அருளிற் சிறந்த எம்பெருமானும் தனது அடியாரது பிழைகளைப் பாராட்டாது
“என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்” என்னும்படி
அவற்றையே குணமாகப் பாவித்துப் போக்யமாகக் கொண்டு அருள் செய்வ னென்பதாம்.

“திருவரங்கத்துள்ளோங்கு, மொளியுளார் தாமே யன்றே தந்தையுந் தாயு மாவார்” என்ற திருமாலை இங்கு உணரத்தக்கது.

இக்கருத்துக்கு, இரண்டாமடியில் ‘அத்த’ என்றதைத் தந்தையை யழைக்கும் விளியாகக் கொண்டமை இனிது பொருந்தும்;

“அணியார் பொழில் சூழரங்க நக ரப்பா” என்றார் பெரியாரும்.

இனி, அத்தம் என்று பிரித்து அர்த்தம் என்ற வடசொல்லின் விகார மென்று கொண்டு,
அத்த நந்தனன் – செல்வப் புதல்வன் என்று உரைப்பாரும்,
அதம் நந்தனன் என்று பிரித்து அந்தத் தமது புதல்வ னென்று உரைப்பாருமுளர்.

இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆரத் தநந் தரும்’ என்பதற்கு –
(தனது மகனுக்குத்) தனது செல்வத்தை முழுவதுங் கொடுக்கின்ற என்று உரைத்து,
அந்த அடைமொழியைத் தந்தைக்குங் கூட்டலாம்; (ஆர – நிரம்ப; தநம் – செல்வம்.)
நந்தநன் என்ற பெயர் – (தாய் தந்தையர்க்கு) ஆநந்தத்தைச் செய்பவனென்று காரணப் பொருள்படும்.
‘என் தீங்கு’ என்றது; வணங்காமை புகழாமை முதலியவற்றை. தீங்கு – சாதி யொருமை.

ஸ்தநம், தநம், ஆநந்தம், நந்தநன், கௌஸ்துபம் ஹாரம், அநந்தசயநன், ஹஸ்தம் – வடசொற்கள்.
கௌஸ்துபரத்தினம், திருப்பாற்கடலினின்று தோன்றியது.
ஹாரம் – மார்பின்மாலை.
‘பூணாரத்து’ என்றது, அநந்த சயநனுக்கு அடைமொழி.
மதலாய் – மதலை யென்பதன் ஈறுதிரிந்த விளி.
தாய் தந்தை – பன்மை விகுதி பெறாத பொதுத்திணை யும்மைத் தொகை.

————–

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயைவீர்
அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்
அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே –56-

அத்தனும் – தந்தையும்,
அன்பு உள அன்னையும் – (மக்களிடத்து) மிக்க அன்பையுடைய தாயும்,
பேரும் – பெயரும்,
அனந்தம் அது ஆம் – எல்லை யில்லாததாகப் பெற்ற,
அ தனு – அந்தந்த உடலில் (பலவகைப் பிறப்புக்களில்),
மன் – பொருந்தி வருகிற,
பு(ல்)லன் – எளியவன் யான்:
ஆதலின் – ஆகையால்,
அம்புயை – இலக்குமி யென்றும்,
வீரத்து அனுமன் புயம் மீது ஏறு – பராக்கிரமத்தை யுடைய அநுமானை (இராமாவதாரத்தில்) வாகனமாகக் கொண்டு
அச் சிறிய திருவடியின் தோள்களின் மேலேறிய,
அரங்கன் – ரங்கநாதனாகிய,
அம் சார்ங்கம் வயிரம் தனு மன் – அழகிய சார்ங்க மென்னும் உறுதியான வில்லை யுடைய பெருமா னென்றும்,
புகல் – சொல்லப்படுகிற,
பேர் இருவீர்க்கும் – உங்களிரண்டு பேர்க்கும்,
அடியன் என்று – அடியவனாக என்னைக் கொண்டு,
ஆண்டு அருள் – பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

ஒவ்வொரு பிறப்புக்கு ஒவ்வொரு தந்தையும் தாயும் பெயருமாக எத்தனையோ பிறப்புக்களில் எத்தனையோ
தந்தை தாயர்களையும் பெயர்களையுங் கொண்டு உழன்று வருகிறவன் யானென்று தனது சிறுமையை விண்ணப்பித்து,
இனியாயினும் பரம பிதாமாதாக்களாகிய நீயும் பெரிய பிராட்டியாரும் என்னை ஆட் கொண்டு உங்கட்கு அடியனென்ற
பெயரையிட்டுப் பிராகிருத பிதாமாதாக்களின் தொடர்பையும் பிராகிருத நாமத்தையும் போக்கி எனக்கு
முத்தி யளித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தபடி.
“தாயொக்கு மன்பின்” என்னும்படி மக்களிடத்துத் தந்தையினன்பினும் தாயினன்பு மிகுதலால்,
அன்னைக்கு ‘அன்புள’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது;
இனி, அதனை மத்திம தீபமாகக் கொண்டு அத்தனுக்கும் இயைத்தலு மொன்று.

உள்ள, புல்லன் என்பவை – உள, புலன் என்று தொகுத்தல் விகாரமமடைந்தன.
‘தனு’ என்றது – உடம்பைக் குறிக்கையில் தநு என்ற வட சொல்லின் விகாரமும்,
வில்லைக் குறிக்கையில் தநுஸ் என்ற வட சொல்லின் விகாரமுமாம்.
மன்புலன் – வினைத் தொகை.
அம்புயை – அம்புஜா என்ற வட சொல்லின் விகாரம்; தாமரை மலரில் வாழ்பவ ளென்று பொருள்.
நான்காமடியில், மன் – மன்னன்; பண்பாகுபெயர். இருவீர் – முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.

————

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடியவராக வரங்கருக்கு ஆட்செய ருட்கதையால்
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே –57-

அடியவர் ஆகவும் – (ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாகிய தமக்குத்) தொண்டர்களாகுமாறும்,
ஆள் கொள்ளவும் – (அங்ஙனம் தொண்ட ரானவர்களைத் தாம்) அடிமை கொள்ளுமாறும்,
எண்ணி – திருவுள்ளங்கொண்டு,
அவர் – அப்பெருமான்,
அடி – ஆதிகாலத்தில் (சிருஷ்டிகாலத் தில்),
ஆர் உயிர்கட்கு ஆகம் படைத்தமையால் – நிறைந்த உயிர்கட்குச் சரீரத்தைக் கொடுத்ததனால்,
அகமே – மனமே!
பெரிய அடிய வராகம் அரங்கருக்கு ஆள் செய் – பெரிய கால்களை யுடைய வராக மூர்த்தியாக அவ தரித்த ஸ்ரீரங்கநாதர்க்கு (நீ) அடிமையாவை;
(அங்ஙனமாகி),
அருள் கதையால் – (அவருடைய) கருணையாகிய தண்டாயுதத்தைப் பெற்று,
அது கொண்டு,
அவம் ராகம் செய் மாரனுக்கு ஆள் செயும் ஐவரை அடி – கெட்ட ஆசையை விளைக்கிற மன்மதனுக்கு அடிமை செய்யும்
பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து உட் பகைவர்களையும் தாக்கி வலி யடக்குவாய்; (எ – று.)

உபயவிபூதி நாயகனான சர்வேசுரன், த்ரிபாத் விபூதியாகிய பரமபதத்திலுள்ளார் எப்பொழுதும் பரமானந்தத்தையே
நுகர்ந்து வருதல் போலவே, உரைமெழுக்கிற் பொன் போல் மூலப் பிரகிருதியிலழுந்திக் கிடக்கிற உயிர்களும்
தம் தம் முயற்சியால் அப் பெரும் பதவியை யடைந்து இன்புற்று வாழலாம்படி,
அவ்வுயிர்கள் தன்னைத் தரிசித்தல் தொழுதல் சேர்தல் தியானித்தல் துதித்தல் முதலிய பணி விடைகளைப் புரிதற்கு உபயோகமாக,
கண் கை கால் மனம் வாய் முதலிய உறுப்புக்களோடு கூடிய உடம்பை அவ்வுயிர்கட்கு ஆதியில் அளித்தருளினனாதலால்,
நீ அப் பரம கருணாநிதியின் பக்கலிலேயே அடிமை பூண்டு, அவனருளாற் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்து
வீடு பெறுவை யென்று தம் மனத்துக்கு நல்லறிவுணர்த்தினார்.

‘அருட்கதை யாலைவரை யடி’ என்றது –
“யானு மென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் வல் வினையைக், கானும் மலையும் புகக்கடிவான் –
தானோர், இருளன்ன மா மேனி யெம்மிறையார் தந்த, அருளென்னுந் தண்டா லடித்து” என்ற அருளிச் செயலின் கருத்தைக் கொண்டது.

அவராகஞ்செய்மாரனுக்குஆட்செயும் ஐவர் –
“மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும், பாரினார்” என்றார் பெரியாரும்.

அடி – அடிநாளில். ‘அவர்’ என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது,
செய்யுளாதலின்: ‘செய்யுட் கேற்புழி’ என்றார் நன்னூலாரும்.
அடியவர் என்று எடுத்து, ஆதிகாரணமானவ ரென்று உரைப்பாரு முளர்.

“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கண கணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெங்கோமான்” என்றபடி
பெரிய கால்களையுடைய மகா வராக ரூபமாகத் திருவவதரித்ததனால், ‘பெரிய அடிய வராக வரங்கர்’ என்றார்.

ஆர்உயிர் – அருமையான உயி ரெனினுமாம்; முக்தி பெறுதற்கு உரிய தென்றபடி.
மாரன் என்ற வடசொல் – (ஆசை நோயால்) மரண வேதனைப் படுத்துபவனென்று காரணப் பொருள்படும்.
‘அகமே’ என்ற விடத்து, ‘அறிவே’ என்றும் பாட முண்டு.
அரங்கர்க்கு ஆட் செய்தால் ஐவரை யடிக்கலாம்; அடித்தால் உய்யலாம் என்பது குறிப்பு.

————–

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –

வரையாழி வண்ணர் அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூக நாணு மதியுஞ் செங்கை
வரையாழி யும் வளையும் மிழந்தாள் என் மடமகளே –58-

வரை ஆழி வண்ணர் – (கண்டவர் மனத்தைக்) கவர்ந்து கொள்ளும் கடல் போன்ற கரிய திரு நிறத்தை யுடையவரும்,
ஈசன் முன் வாணன் திண் தோள் வரை ஆழியார் – (பாதுகாப்பதாக ஏற்றுக் கொண்ட) சிவபிரானது முன்னிலையிலே
பாணாசுரனுடைய வலிய தோள்களைத் துணித் தொழித்த சக்கராயுதத்தை யுடையவருமான,
அரங்க ஈசர் – திருவரங்கநாதர்,
புள்ளின் வாகனத்தே வந்த நாள்தொடு – கருட வாகனத்திலேறிப் பவனி வந்த நாள் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
என் மட மகள் – எனது மடமைக் குணமுடைய மகள்,
ஆழிய துயர் ஆய் – ஆழ்ந்த மனக் கலக்க முடையவளாய்,
தூசும் – ஆடையையும்,
நாணும் – நாணத்தையும்,
மதியும் – அறிவையும்,
செம் கை வரை ஆழியும் வளையும் – சிவந்த கைகளி லணிந்துள்ள மோதிரத்தையும் வளையல்களையும்,
இழந்தாள் – இழந்து விட்டாள்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய சில வகைகளால் தலைவியைக் களவிற் கூடிய தலைவன் பிரிந்த பின்பு அப் பிரிவாற்றாமைத்
துயரத்தால் உளமழிந்து உடல் மெலிந்து கை வளையும் விரலாழியும் நெகிழ்ந்து கீழ் விழ ஆடை சோர நாணங்குலைந்து
அறிவிழந்து நிலைமாறி நிற்கிற தலைவியின் துயர்க் காரணத்தைத் தோழியாலறிந்த செவிலித்தாய்,
அத்தலைவனைத் தலைவிக்கு வெளிப்படையாக மணம் புரிவித்துத் துயர் நீக்கக் கருதியவளாய்,
அத்தலைமளின் நிலைமையை நற்றாய்க்கு உரியவற்றாலுணர்த்திய துறை, இச்செய்யுளி லடங்கியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக் கண்ணுக்கு எம்பெருமான் கருடாரூடனாய்ப் புலனாகி மறைந்த வளவிலே,
அப்பெருமானது ஸதாஸாந்நித்யத்தை அபேக்ஷித்துப் பிரிவாற்றாமையால் வருந்துகிற ஐயங்காருடைய துயரத்தை
நோக்கிய ஞானிகள் அவர் பக்கல் தம்மினும் மிக்க ஆதரத்தை யுடைய பேரறிவாளர்க்கு
ஐயங்காரது நிலைமையை யெடுத்துக் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;

தன்னைச் சரணமடைந்தவன் பரிபவப் படுவதைப் பார்த்தும் ஒன்றும் பரிகாரஞ்செய்யமாட்டாதொழிய வென்பார், ‘ஈசன்முன்’ என்றார்.
தொட்டு என்பது ‘தொடு’ எனத் தொகுத்தல் விகாரப்பட்டது.
இன்று + வரை = இற்றைவரை; மென்றொடர் வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.
ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்: ‘இன்’ என்ற இடைநிலை ஈறுதொக்கது.
வளையும்மிழந்தாள், மகரவொற்று – விரித்தல். மடமை – பேதைமை; இளமையுமாம். வரைதல் – கவர்தல், நீக்குதல், கொள்ளுதல்.

————

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்

மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்திதி தன்
மகரந்த காதலை வானிலுள் ளோர்க்கு மண்னோர்க்கு வட்டா
மகரந்த காதலை வார் குழை யாய் வளர் சீரங்க தா
மகரந்த காதலை வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –59-

மகரம் – (கடலிலேயே வாழுமியல்பினவான) சுறா மீன்களும்,
அலை வாழ்வு தகாது என்ன – கடலில் வாழ்தல் இனிக் கூடாதென்று தவிததுக் கூறும்படி,
வாரி சுட்டாய் – கடலை (ஆக்நேயாஸ்திரத்தால்) எரிக்கத் தொடங்கியவனே!
திதி தன் மகர் அந்தகா – திதியென்பவளுடைய புதல்வர்களான அசுரர்கட்கு யமனானவனே!
வானின் உள்ளோர்க்கு தலை – மேலுலகத்திலுள்ளவர்களான தேவர்கட்குத் தலைவனே!
மண்ணோர்க்கு உவட்டா மகரந்த – நில வுலகத்து வாழும் மனிதர்கட்குத் தெவிட்டாத தேன் போலினியவனே!
காது அலை வார் குழையாய் – காதுகளில் அசைகிற பெரிய குண்டலங்களை யுடையவனே!
வளர் சீரங்க தாம – ஸ்ரீரங்கத்தைக் கண் வளருமிடமாகக் கொண்டவனே!
கரந்த காதலை – (உன் மேல் எனக்கு) அந்தரங்கமாக வுள்ள மோகத்தை,
மடவார் எதிரே வாக்கின் சொல்லேன் – (தோழியர் முதலிய) மகளிரின் முன்னிலையிலே
பகிரங்கமாக வாயினாற் சொல்லுந் தரமுடையேனல்லேன்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற் கூடி நின்ற தலைவன்
அங்குப் பழி யெழுந்த தென்று தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள்
ஒருவழிப் பிரிந்துறைதல், ஒருவழித்தணத்த லெனப்படும்; அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில்,
அப்பிரிவை யாற்றாது வருந்துகிற தலைவி, தனது நினைப்பு மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கின்றவாறு போலப் பாவித்து,
அங்ஙனம் உருவெளித் தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப் படுத்திக் கூறியது, இது.
ஒருவழித்தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்
கூறியதென்று இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன் பக்கல் தமக்கு உண்டான
வியாமோகத்தை அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

கரந்தகாதலை வாக்கிற் சொல்லேன் மடவாரெதிரே – எனது அந்தரங்க பக்திமிகுதியைப் பேதையரான
உலகத்தார் முன்னிலையிலே வாயினாற்சொல்லேன் என்க.

‘மகரம் தகாது அலைவாழ் வென்ன வாரிசுட்டாய்’ என விளித்தது,
பிரிந்த ஒரு தலைவியை மீளவுங்கூடுதற்காக அரிய பெரிய முயற்சி செய்த நீ இங்ஙனம்
என் பக்கல் உபேக்ஷைசெய்வது தகுதியோ வென்ற குறிப்பு.
‘காதலை வார்குழையாய்’ என்றது, காதும் குண்டலமும் சேர்ந்த சேர்த்தி யாலாகிய செயற்கை யழகைக்
கண்டு அதிலீடுபட்டுக் கூறியது. மற்றைவிளிகள்,
அப்பெருமானது பராக்கிரமம், துஷ்டநிக்கிரகம், பரத்வம், இனிமை, இனிய இடமுடைமை முதலியவற்றில் ஈடுபாடு.
மகரமென்னும் மீன் கடலிலேயே வாழ்வதாதலை ‘மகராலயம்’ என்ற கடலின் பெயர் கொண்டும்,
“கடல்வாழ் சுறவு” என்ற தொல்காப்பியங்கொண்டும் உணர்க. இது கடலில் வாழுமியல்பினதாய்ச் சிறத்தல் பற்றியே,
இதனைத் தலைமையாக எடுத்துக் கூறினார்: இது, மற்றை நீர்வாழுயிர்கட்கும் உபலக்ஷணமாம்.

வாரி – நீர்: வடசொல்: கடலுக்கு இலக்கணை.
அந்தகன் – அந்தத்தைச் செய்பவன்: அந்தம் – அழிவு திதிதன் மகரந்தகா – காசியப முனிவரது மனைவியருள்
திதியென்பவளது புதல்வராதலால் தைத்யரெனப்படுகிற அசுரர்களை அழித்தவனே யென்றபடி.
மகர் – மகன் என்பதன் பன்மை: மகார் என்றும் வழங்கும்.
தலை – தலைவனுக்குப் பண்பாகுபெயர்: உவமையாகுபெயராக,
உத்தம அங்கமாகிய தலைபோலச் சிறந்தவனே யென்றும் பொருள்கொள்ளலாம்: அண்மைவிளி யாதலின், இயல்பு.

ரங்கநாதன் நிலவுலகத்தில் எழுந்தருளி யிருந்து அவ்வுலகத்தார்க்குக் காட்சிக் கினியனாதல் பற்றி,
‘மண்ணோர்க்கு உவட்டா மகரந்த’ என்றார்.
இனி, தலைமை பெற்ற வானிலுள்ளார்க்கும் மண் ணுலகத்தார்க்கும் தெவிட்டாத தேனே யென்று உரைப்பாரு முளர்.

உவட்டா மகரந்த’ என்றதை “ஆராவமுதே” என்றாற்போலக் கொள்க. தாமம் – வடசொல்: இடம்.
இனி, ‘வளர் சீரங்க தாம’ என்பதற்கு –
ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து விளங்குகிற ஒளிவடிவமானவனே யென்று உரைத்தலும் அமையும்:
தாமம் – ஒளி. கரந்த காதல் – உயிர்ப் பாங்கிக்கும் ஒளித்த வேட்கை யென்றபடி.

————

இதுவும் அது –தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்-

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனு மட
வாராக வாதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –60-

வாராக – வராகாவதாரஞ்செய்தவனே!
வாமனனே – வாமந மூர்த்தியானவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே!
வட்டம் நேமி வலவா – வட்டவடிவமான சக்கராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே!
ராகவா – ரகுகுலராமனாகத் திருவவதரித்தவனே!
உன் வடிவு கண்டால் – நினது திருமேனியழகைப் பார்த்தால்,
மன்மதனும் மடவார் ஆக ஆதரம் செய்வன் – (எல்லாராலும் காமிக்கப்படுங் கட்டழகுடையவனான) மன்மதனும் (
தான் உன்னைக் கூடுதற்கு) மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன்: என்றால்,
வார் ஆகம் வாசம் முலையேனை போல் உள்ள மாதருக்கு உய்யும் வண்ணம் எங்கே – கச்சணிந்தனவும் மார்பிலெழுந்தனவும்
நறுமணப்பூச்சுடையனவுமான தனங்களை யுடையளாகிய என்னைப்போல விருக்கிற மகளிர்க்கு
(உன் வடிவழகு கண்ட பின்பு) பிழைத்திருக்கும்வகை எவ்வாறோ! (எ – று.)

அழகிற் சிறந்த ஆண் பாலான மன்மதனும் புருஷோத்தமனான நினது வடிவைக் கண்டு தான் பெண்ணுருக் கொண்டு
உனது அழகின் நலத்தை யனுபவிக்க. எண்ணுவனாயின், பெண்பாலான என் போன்ற மடமங்கை யர்க்குப்
பிழைக்கும் வழி என்னே யென்பதாம்.
கீழ் 24 – ஆஞ் செய்யுளின் விசேடவுரையிற் கூறிய விஷயங்கள், இங்கும் நோக்கத்தக்கன.

‘வாராக’ என்று விளித்தது, நினது காதலியரில் ஒருத்தியினது (பூமிதேவியினது) துயரத்தை நீக்குதற்குப்
பெரு முயற்சி செய்து அவளை யெடுத்துக்கொண்டு வந்து கூடி யருளியவனே யென்ற குறிப்பு.
‘வாமனனே’ என்றது – சௌலப் பியத்தையும்,
‘அரங்கா’ என்றது – இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற இனிய விடத்தில் வசித்தலையும்,
‘வட்டநேமிவலவா’ என்றது – பகையழிக்க வல்ல படைக்கலத்திற் கைதேர்ந்தவனாதலையும்,
‘ராகவா’ என்றது – உயர்குடிப் பிறப்பையும் உணர்த்தும்.

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் கண்டு காமுற்று ஆண்மை மாறிப் பெண்மை பெறவிரும்பும் படியான
சௌந்தரியாதிசயத் தையுடையா யென்ற கருத்தும், ‘ராகவா’ என்ற விளியில் தொனிக்கும்.

மன்மதன் தான் கொண்ட ஆசை மிகுதியால் தானொருவனே பலமகளிராக வடிவு கொண்டு உத்தம புருஷனான எம்பெருமானை
அநுபவிக்க விரும்புவ னென்பது, ‘மடவாராக’ எனப் பன்மையாற் கூறியவதனால் தோன்றும்.

‘வாராகவாசமுலையேன்’ என்றது, போகாநுபவத்துக்கேற்ற பருவம் நிரம்பியவ ளென்றவாறு.
‘நேமிவலவா’ என்பதற்கு – சக்கராயுதத்தை வலக் கையிலுடையவனே யென்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, ‘நேமி வலவா’ என்றதைக் கீழ் 35 – ஆஞ் செய்யுளில் “சங்கஇடவ” என்றாற் போலக் கொள்க;
வலவன், இடவன் என்பன – வலம், இடம் என்றவற்றின்மேற் பிறந்த பெயர்க ளென்க.

வாராக – வராஹ என்ற வடசொல்லின் விகாரம்.
வட்டம் – வ்ருத்த மென்ற வடசொல்லின் சிதைவு.
மந்மதன் என்ற வடமொழிப்பெயர் – (ஆசை நோயால்) மனத்தைக் கலக்குபவ னென்று பொருள்படும்;
உம் – உயர்வு சிறப்பு. வாமநன், நேமி, ராகவன், ஆதரம், வாஸம் – வடசொற்கள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading