ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -1-20-

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1-

திரு – திருமகள்,
அரங்கு ஆ – தான் வசித்தற்கு உரிய இடமாக (க்கொண்டு),
உறை – வசிக்கப் பெற்ற,
மார்பா – திருமார்பை யுடையவனே!
திசைமுகன் சேவிப்ப – பிரமன் தரிசித்து வணங்கவும்,
கந்திருவர் அங்கு ஆதரித்து இன் இசை பாட – கந்தருவர்கள் அவ்வாறே (தரிசித்து வணங்கிப்) பக்தி கொண்டு
இனிமையான கீதம் பாடவும்,
திரு கண் வளர் திரு அரங்கா – திருவரங்கமென்னுந் திருப்பதியில் அழகாகப் பள்ளி கொண்டு யோக நித்திரை செய்தருள்பவனே!
உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – (யான்) உனக்கே அடிமை செய்யுமாறு வரம் பெற ஆசைப்பட்டேன்:
உன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்திரு – நினது பழமையான அடியவனாகிய எனக்குக் கருணை செய்தற்கு எழுந்திருப்பாயாக; (எ – று.)

முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி
நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் – வரம் பெற ஆசைப்பட்டேன்-

‘திரு என்பது – கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கம்: என்றது, அழகு;
இஃது என்சொல்லியவாறோ வெனின், –
யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக் கண்டவற்கு அப் பொருள்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு.
அதன் மேல் அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றற்கு இல்லாமையால்’,
‘எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று’ என்பது, திருக்கோவையார் பேராசிரியருரை.
“அகலகில்லே னிறையு மென் றலர்மேன்மங்கை யுறை மார்பா” என்றாற்போல, ‘திருவரங்காவுறைமார்பா’ என்றார்.
அரங்கு – ரங்க மென்ற வடசொல்லின் விகாரம்: இதற்கு – கூத்தாடுமிடமென்றபொருளும் உண்டு;
ஆ – ஆக என்பதன் விகாரம்.
இனி, அரங்கா – அழுந்தி யெனினுமாம்; சிறிதுபொழுதும் விட்டுநீங்காமல் நிலையாக என்றபடி:
ஒருசொல்; செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்:
அரங்கு – வினைப்பகுதி, ஆ என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும். உறை மார்பு – வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது.

“எம்மாண்பிலயன் நான்கு நாவினாலுமெடுத்தேத்தி யீரிரண்டுமுகமுங் கொண்டு,
எம்மாடுமெழிற்கண்களெட்டினோடுந் தொழுதேத்தி யினிதிறைஞ்சநின்ற செம்பொன்,
அம்மான்றன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற வணி யரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளு, மம்மான்”,

“ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோ டிசை திசை கெழுமிக்,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரு மயங்கினர் திருவடிதொழுவான்,
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே” என்ற ஆழ்வாரருளிச் செயல்களை அடியொற்றி,
‘திசைமுகன் சேவிப்பக்கந்திருவரங் காதரித்தின்னிசைபாடத் திருக்கண்வளர் திருவரங்கா எழுந்திரு’ என்றார்.

திசைமுகன் – நான்கு திசையையும் நோக்கிய நான்குமுகமுடையவன்;
எம் பெருமானைத்துதித்தல் முதலியன செய்தற்கு வேண்டிய கருவியிற் குறைவற்றவனென்பது இதில்தொனிக்கும்.
சேவிப்ப, பாட – வினைச் செவ்வெண்.
கந்தர்வர் என்ற வடமொழி, யமக நயத்தின் பொருட்டு, கந்திருவரென விகாரப்பட்டது;
பதினெண்வகைத் தேவ கணங்களுள் ஒருசாரார் இவர்: இசை பாடுதலிற் சிறந்தவர்.
அங்கு – அப்பிரமன் போலவே யென்றபடி; அவ்விடத்திலே யெனினுமாம்: அசையாகவுங் கொள்ளலாம்.

உன் பழவடியேன் –
“எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்ப னேழ் படிகால் தொடங்கி வந்து வழி வழியாட்செய்கின்றோம்” என்றபடி
வம்ச பரம்பரையாக நெடுங்காலமாய் உனக்கு அடிமைசெய்துவருகிற தொண்டக்குலத்தில் தோன்றிய நான் என்றபடி.
அழகிய மணவாள தாசர் பெரியபெருமாள் திருவடிகளிலே அடிமை செய்ய ஆசைப்பட்டு அருகிற்சென்றவளவிலே,

அர்ச்சா ரூபியான அப்பெருமான் எதிர்முகங் கொடுத்தல், திருக்கண்களாலே குளிர நோக்குதல், கைகளை நீட்டி யணைத்தல்,
குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலியன செய்யாதே பள்ளி கொண்டிருக்க, அவனைப் பள்ளி யுணர்த்தி
அவனுணர்ந் தருளும் போதை யழகு கண்டு அவன் உகந்து வாய்திறந்து ஏவுங் குற்றேவல்களைச் செய்ய வேண்டி,
அவனை ‘எழுந்திரு’ என எழுப்புகிறார். எழுந்திருத்தல் – துயிலொழிதல்.
இதில், இரு என்பது – துணைவினை.

இனி, எழுந்து இரு – நாளோலக்கமாக வீற்றிரு என்றுங் கொள்ளலாம்.
“கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசையத்,
தொடர்ந்து குற்றே வல் செய்து தொல்லடிமை வழி வருந்தொண்ட ரோர்க்கருளித்,
தடங்கொள் தா மரைக் கண் விழித்து நீயெழுந் துன் தாமரை மங்கையு நீயும்,
இடங்கொள் மூவுலகுந்தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக்கிடந்தானே” எனப்பள்ளி கொண்ட பெருமாளை
நம்மாழ்வார் துயிலுணர்த்தியெழுப்பி அடிமைசெய்யப் பரரித்தமை காண்க.

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால்,
“எற்றைக்குமேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்” என்றாற்போல,
“உன்பழவடியேன் உனக்கே தொண்டு செய்வதற்கு வரங் காதலித்தேன்” என்றார்;
ஏ – பிரிநிலை. வரம் – வேண்டுவன கொள்ளுதல்.

எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், ‘திரு’ என்று தொடங்கினார்;
“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை நீர் கடல் பூத் தேர் பொன்,
ஏருறு மிவை மூவாறும் இதிற்பரியாயப்பேரும், ஆரு மங்கலச்சொல் செய்யுளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பது காண்க.

———–

செய்யவளைக் குருவின் இன்னருளால் திருத் தாள் வணங்கி
செய்ய வளைக் குலம் சூழ் அரங்க ஈசன் சிறிது அமுது
செய்ய வளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே -2-

குரு இன் அருளால் – ஆசாரியருடைய இனிமையான கிருபா கடாக்ஷத்தினால்,
செய்யவளை திரு தாள் வணங்கி – திருமகளைத் திருவடி தொழுது, –
செய்யவளை குலம் சூழ் அரங்க ஈசன் – கழனிகளிலுள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கத்து நாதனும்,
அளைக்கும் புவிக்கும் அமுது செய்ய சிறிது அங்காந்த செம்வாய் முகுந்தன் – வெண்ணையையும் பூமியையும் உண்ணுதற்குச் சிறிது
திறந்த சிவந்த வாயை யுடைய முகுந்தனென்னும் ஒரு திருநாம முள்ளவனுமான திருமாலினது,
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் – செவ்வியை யுடைய வளைந்துள்ள சிலம்பென்னும் ஆபரணத்தை யணிந்த திருவடிகளை,
சேர்ந்தனம் – அடைந்தோம்; (எ – று.)

ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று அருளி செய்கிறார் -இத்தால்
சேர்ந்தனம் -முன்னோரும் தாமும் -பின்னோரும்
முதல் வரி செய்யவள் -செந்நிறம் உடையவள் -அவள் தாளை வணங்கி -அவளைத் தாளாலே சென்று வணங்கி
இரண்டாம் வரி -செய்ய வளை -கழனிகளில் உள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கம்
மூன்றாம் வரி -அளைக்கும் புவிக்கும் -வெண்ணெயையும் பூமியையும் உண்ண -அமுத செய்ய சிறிது அங்காந்த செவ்வாய் முகுந்தன்
நான்காம் வரி -செவ்வியை உடைய வளைந்துள்ள சிலம்பு அணிந்த திருவடிகளை சேர்ந்தனம்

செய்ய -சிலம்புக்கும் திருப் பாதத்துக்கும் அடை மொழி-

ஸதாசாரியனை யடுத்து அவனபிமானத்தை அவனருளாற்பெற்று அது மூலமாக வுண்டான பிராட்டி புருஷகார பலத்தாலே
பெருமாள் திருவடியிலே சரண் புகுந்தோ மென்றார்.
ஆக, இதனால், ஆசார்யாபிமானமே உத்தாரக மென்னும் அர்த்தம் சொல்லியதாயிற்று.
ஈற்று ஏகாரம் – தேற்றவகையால், இனி எமக்கு ஒரு குறையுமில்லை யென்ற பொருளைத் தொனிப்பிக்கும்,
சேர்ந்தனம் என்ற தன்மைப் பன்மை – தனது குலத்து முன்னோரையும் பின்னோரையும் தனது அடியார்களையும் உளப்படுத்தும்.
வணங்கிச் சேர்ந்தனம் என இயையும்.

செய்யவள் – செந்நிறமுடையவள்: செம்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
குரு என்ற வடசொல் – அஜ்ஞாநமாகிய அகவிருளை யழிப் பவனென்று அவயவப்பொருள்படும். (கு – இருள், ரு – ஒழிப்பவன்.)
இன் அருள் – பண்புத்தொகை; இன் – சாரியையெனக் கொண்டு குருவினது அருளென்றால், னகரமெய் – விரித்தல் விகாரமாம்.

செய்யவளைத் தாளை வணங்கி என இரண்டு செயப்படு பொருள் வந்த வினையாகவாவது,
செய்யவளினது தாளை வணங்கி என உருபு மயக்க மென்றாவது, செய்யவளைத் தாளிலே வணங்கி யென்றாவது கொள்க.

செய்ய என்ற சொல் – இரண்டாமடியில் செய் என்னும் பெயரின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப் பகுதியின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமும்;
மூன்றாம் அடியில், செய் என்னும் வினைப்பகுதியின் மேற் பிறந்த தெரி நிலை வினையச்சமும்
நான்காமடியில், செவ்வியை யுணர்த்தும் செம்மை யென்னும் பண்பின் மேற் பிறந்த குறிப்புப் பெயரெச்சமுமாம்;

வயலை ‘செய்’ என்பது பன்றிநகாட்டுத் திசைச் சொல்.
வளை – வளைந்துள்ளது; உட்சுழிந்துள்ளது. ‘செய்ய வளைக்குலஞ்சூழரங்கம்’ என்பது, நீர்வளமிகுதியை உணர்த்தும்.
அரங்கேசன் – குணசந்தி பெற்ற வடமொழித்தொடர்.
பெரியோர் உண்ணுதல், அமுதுசெய்தலெனப்படும்: உபசாரச்சொல்.

வெண்ணெ யுண்ண வாய் திறந்தது, கிருஷ்ணாவதாரத்திலே திருவாய்ப்பாடியில்வளர்ந்த குழந்தைப் பருவத்திலென்க.
புவி என்ற சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலதாய் உலக மென்றவாறாம்.
அதனை யுண்ண வாய்திறந்தது, பிரளயகாலத்திலென்க.
பிரமன் முதலான சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்து போகிற யுகாந்த காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை
யெல்லாம் தன் வயிற்றில் வைத்து அடக்கிக் கொண்டு பிரளயப் பெருங்கடலில் ஆதிசேஷாம்சமான தோராலிலையின் மீது
யோகநித்திரை செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
அங்காந்த, அங்கா – பகுதி.
முகுந்தன் – (தன் அடியார்க்கு), மு – முத்தியின்பத்தையும், கு – நிலவுலகவின்பத்தையும், தன் – கொடுப்பவன்.
செய்ய என்பது – சிலம்புக்கும் பாதத்துக்கும் அடைமொழியாகத் தக்கது,
சிலம்புவது, சிலம்பு எனக் காரணக் குறி; நூபுரம், பாத தண்டை.

————-

தனமாதர் அம் சொல் குதலை புதல்வர் தரணி இல்லம்
தனம் ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே தஞ்ச நீ எனப் போந்
தனம் ஆ தரங்கிக்க வெற்பு எடுத்தாய் தண் அனந்த சிங்கா
தன மாதரங்கம் உள்ளாய் அரங்கா முத்தி தந்து அருளே —-3-

ஆ பசுக்கள்,
தரங்கிக்க – (இந்திரன் பெய்வித்த மழையி னால்) நிலை கலங்க,
வெற்பு எடுத்தாய் – (அவற்றைப் பாதுகாத்தற்பொருட்டுக்) கோவர்த்தந கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவனே!
தண் அனந்த சிங்காதன – ஆதிசேஷனை மெத்தென்ற சிங்காதனமாக வுடையவனே!
மாதரங்கம் உள்ளாய் – பெரிய கடலிற் பள்ளி கொண்டுள்ளவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே! –
தனம் மாதர் – கொங்கை யெழிலை யுடைய மகளிரும்,
அம் சொல் குதலை புதல்வர் – அழகிய மழலைச் சொற்களை யுடைய பிள்ளைகளும்,
தரணி – விளை நிலமும்,
இல்லம் – வீடும்,
தனம் – செல்வமும் ஆகிய இவற்றில்,
ஆதரம் செயும் – ஆசை கொள்ளுகிற,
வாழ்வு – (நிலையற்ற இப்பிரபஞ்ச) வாழ்க்கைக்கு,
அஞ்சி – பயந்து,
நீயே தஞ்சம் என போந்தனம் – நீயே ரக்ஷகமென்று கொண்டு (வந்து உன்னைச்) சரணமடைந்தோம்;
முத்தி தந்தருள் – (அங்ஙனம் அடைந்த எமக்கு) மோட்சத்தைக் கொடுத்தருள்வாய்; (எ – று.)

தரங்கிக்க -நிலை கலங்க -இந்த்ரன் பெய்வித்த மழையினால்
மாதரங்கம் -பெரிய கடலிலே
அநந்தன் -ந அந்த -பிரளயத்திலும் அழிவில்லாதவன்
ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே-ஆசை கொள்ளுகிற நிலை யற்ற சம்சார வாழ்வுக்கு அஞ்சியே

பற்றற்று உன்பக்கல் சரணம் புக்கோம்; நீ எமக்கு நற்கதி யருளக் கடவை யென்பதாம்.
உன்னை நம்பி யடுத்துள்ள உயிர்களைச் சிரமம் பாராது துயர் நீக்கிப் பாதுகாத்தருளுந் தன்மை யுடையாய்
என்னுங்கருத்துத் தோன்ற, ‘ஆ தரங்கிக்க வெற்பெடுத்தாய்’ என விளித்தார்: கருத்துடை யடை கொளி யணி.

ஆதிசேஷன் திருமாலுக்குப் பலவகைக் கைங்கரியங்கள் புரியும் வகையை
“சென்றாற் குடையாம். இருந்தாற் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்,
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும், அணையாம் திருமாற்கு அரவு” என்றதனால் அறிக.

திருப்பாற்கடலிலும் பிரளயப் பெருங்கடலிலும் திருமால் பள்ளி கொள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
குதலை – நிரம்பாமென்சொல். “குழலினிது யாழினி தென்ப தம்மக்கள், மழலைச்சொற் கேளாதவர்,”
“மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்றபடி
தம் புதல்வருடைய மழலைச் சொல் தந்தை தாயர்க்கு மிக்க இனிமை விளைத்தலால், ‘அஞ்சொற்குதலைப் புதல்வர்’ என்றார்.
இல்லம், அம் – சாரியை. இரண்டாமடியில், ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.
தரங்கிக்க – அலைய; தரங்கம் என்னும் பெயரின் மேற்பிறந்த செயவெனெச்சம்.
தரங்கம் – அலை: வடசொல்; கடலுக்குச் சினையாகுபெயர்.
அநந்தன் என்ற வடமொழிப்பெயர், ந + அந்த என்று பிரிந்து, (பிரளயத்திலும்) அழிவில்லாதவ னென்று பொருள்படும்.
முக்தி என்ற வட சொல்லுக்கு – பற்றுக்களை விட்டு அடையும் இடமெனக் காரணப் பொருள்.

———–

தந்தமலைக்கு முன் நின்ற பிரான் எதிர் தாக்கி வெம்போர்
தந்தமலைக் குமைத்தான் அரங்கேசன் தண் பூவினிடை
தந்தமலைக்கு தலைவன் பொற் பாதம் சரண் என்று உய்யார்
தந்தமலைக்கும் வினையால் நைவார் பலர் தாரணிக்கே ——-4-

தாரணிக்கு – பூமியில்,
பலர் – அநேகர், –
தந்தம் மலைக்கு முன் நின்ற பிரான் – தந்தங்களை யுடையதொரு மலை போன்ற யானைக்கு
(கஜேந்திராழ்வானுக்கு) எதிரில் எழுந்தருளிக் காட்சி தந்த பெருமானும்,
எதிர் தாக்கி வெம் போர் தந்து ம(ல்)லை குமைத்தான் – எதிர்த்து மோதிக் கொடிய போரைச் செய்த மல்லர்களைச் சிதைத்து அழித்தவனும்,
தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் – குளிர்ச்சியான தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளும் நூல் போன்ற (மிக மெல்லிய)
இடையையுடையவளும் குற்றமற்றவளுமான திருமகளுக்குக் கொழுநனும் ஆகிய,
அரங்கேசன் – ஸ்ரீரங்கநாதனுடைய,
பொன் பாதம் – அழகிய திருவடிகளை,
சரண் என்று – சரணமாக அடைந்து,
உய்யார் – உய்வு பெறாராய்,
அலைக்கும் தம் தம் வினையால் நைவார் – வருத்துகிற தங்கள் தங்கள் பூர்வ கர்மங்களினால் வருந்துவார்கள்.

முதல் வரி -தந்த மலைக்கு முன் நின்ற பிரான் -தந்தங்களை உடைய தொரு மலை போன்ற
யானைக்கு -கஜேந்திர ஆழ்வானுக்கு எதிரில் எழுந்து அருளி காட்சி தந்த பெருமானும்
இரண்டாம் வரி -எதிர் தாக்கி வெம் போர் தந்த மல்லைக் குமைத்தான் –
மூன்றாம் வரி -தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் -குற்றமற்ற திருமகளுக்கு கொழுநன்
நான்காம் வரி -அலைக்கும் தம் தம் வினையால் நைவார்
வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே சரண் புக்க மாதரத்தில்
சரணாகதருடைய கருமங்களை ஒழித்து முக்தி தருபவன் திருவடிகள் இருக்க

வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே, சரண் புக்க மாத்திரத்தில் அச் சரணாகதருடைய
கருமங்களை யெல்லாம் ஒழித்து முத்தி தருபவையான எம்பெருமானது திருவடிகள் இருக்க
அவற்றை யடைந்து பிறவிப் பெருங்கடல் கடந்து வாழாது உலகத்திற் பேதையர் பலர்
கரும வசப்பட்டு வருந்துவது என்னே யென்று உலகை நோக்கி இரங்கிய படியாம்.

‘தந்தமலை’ எனவே, யானை யென்றாயிற்று; மலை – உவமை யாகு பெயர்: பருமை வலிமைகளால் உவமம்.
முன் – இடமுன்.
இரண்டாமடியில், மலை என்பது – தொகுத்தல். மல் – ஆயுதமின்றி உடல் வலிமை கொண்டு செய்யும் போர்;
இங்கு அப்போருடையார்க்கு ஆகு பெயர்.
இடைத்தந்து – முன் பின் னாகத் தொக்க உவமைத் தொகை; தந்து – வடசொல்.
அமலை – அமலா என்ற வடசொல் ஆவீறு ஐயாயிற்று; இப் பெயர், தூய்மை யுடைமையை உணர்த்தும்.
சரண் – சரணமென்ற வடசொல்லின் விகாரம். தாரணிக்கு – உருபு மயக்கம். தரணி என்ற வடசொல் விகாரப்பட்டது.

———–

தாரணி தானவன் பால் இரந்தான் சங்கம் வாய் வைத்து ஒன்னார்
தாரணி (தார் அணி )தான் அவம் செய்தான் அரங்கன் தமர்கள் பொருந்
தாரணி தான ( பொருந்தார் அணிது ஆன அமராவதியும் ) தரு நிழலும்
தாரணி தானம் அயிராவதமும் தருகினுமே——-5–

தானவன் பால் – அசுரனான மகாபலியினிடத்து,
தாரணி இரந்தான் – (மூன்று அடி) நிலத்தை யாசித்தவனும்,
சங்கம் வாய் வைத்து – (தான் தனது) திவ்விய சங்கத்தை வாயில் வைத்து ஊதிய மாத்திரத்தாலே,
ஒன்னார் தார் அணி அவம் செய்தான் – பகைவர்களுடைய படை வகுப்பி னொழுங்கைப் பழுது படுத்தியவனும் ஆன,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
தமர்கள் – அடியார்கள், –
அணிது ஆன அமராவதியும் – அழகியதாகிய சுவர்க்க லோகத்தையும்,
தரு நிழலும் – (அங்குள்ள) கற்பக விருக்ஷங்களின் நிழலையும்,
தார் அணி தானம் அயிராவதமும் – கிண்கிணி மாலையை யணிந்ததும் மதங்கொண்டதுமான ஐராவதமென்னுந் தெய்வ யானையையும்,
தருகினும் – (வலியக்) கொடுத்தாலும்,
பொருந்தார் – (மனமிசைந்து அவற்றைப் பெற) உடன் படார்; (எ – று.)

தாநவன் -காசியப முனிவரது மனைவி தநு என்பவளது மரபினன்-அசுரனான மகாபலியிடம் நிலத்தை யாசித்தவனும்
அணிது -அணித்து -சமீபத்தில் உள்ள -இந்திர லோகம் அமராவதி மற்றவற்றை விட அருகில் உள்ளதால் –
அணிது -எளிது என்னும் பொருளிலும் கொள்ளலாம்
பாரிஜாத தருவை கொணர்கையில் எதிர்த்த -சங்க நாதத்தினால் பங்கப் படித்தினான்
மகா பாரத யுத்தத்திலும் சங்கு ஒலியால் அச்சப் படுத்தியும் -அறிவோம்

திருமாலடியார்கள் மீளா வுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான பரமபதத்திற்குச் செல்ல இணங்குவரே யன்றிச்
சில காலம் சிற்றின்பங்களை யனுபவித்தற்கே உரிய சுவர்க்க லோகத்து இந்திர பதவியைக் கொடுத்தால்
அதனையும் சிறிதும் பொருள் செய்யார் என்பதாம்;
“ஆனாத செல்வத் தரம்பையர் கடற்சூழ, வானாளுஞ் செல்வமு மண்ணரசும் யான் வேண்டேன்” என்று
குலசேகராழ்வார் அருளிச் செய்தமை காண்க;
பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மகரிஷியைச் சத்திய லோகத்துக்கு அழைத்தபோது,
மகா விஷ்ணு பக்தரான அம் முனிவர் அம் மேலுலகையுமுட்பட இகழ்ந்து
“அற்பங்கருதேன்” என்றும்,
“மறுகாநெறி யெய்துவென்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கது.

தாநவன் – (காசியப முனிவரது மனைவிகளுள்) தநுவென்பவளது மரபினனென்று பொருள்படும்; வடமொழித் தத்திதாந்தநாமம்.
ஒன்னார் – ஒன்றார் என்பதன் மரூஉ. அவம் செய்தான் – பயனிலதாக்கியவன். தமர் – தம்மவர்: கிளைப்பெயர்.
அணிது – அண்ணிது; அதாவது – சமீபத்திலுள்ளது என்றும் உரைக்கலாம்.
எல்லா வுலகங்களினும் மேலுள்ளதான முத்தி யுலகத்தின் சேய்மையை நோக்குமிடத்து, இந்திரனது நகரமான
அமராவதி மிக அருகிலுள்ளதாதல் காண்க.
சேணுலகமாகிய முத்தியைப் பெற வல்ல பாகவதர்க்குச் சுவர்க்க லோகம் அரியதொன்றன் றாதலால்,
எளிது என்னும் பொருளில் ‘அணிது’ என்றதாகவுங் கொள்ளலாம்.
சங்கம், அமராவதி, தரு, தாநம், ஐராவதம் – வடசொற்கள். அமராவதீ என்ற பெயர் – தேவர்களை யுடையதென்று காரணப் பொருள்படும்.
சுவர்க்க லோகத்தில் பஞ்சதேவ தருக்களின் நிழல் இந்திரன் அரசு வீற்றிருக்கு மிடமாதலை,
“இன்றளிர்க் கற்பகநறுந்தே னிடைதுளிக்கு நிழலிருக்கை” என்றதனாலும் அறிக.
அயிராவதம் – முதற்போலி. இது, இந்திரனது வெள்ளை யானை; நான்கு தந்தங்களை யுடையது.
தருகின், கு – சாரியை. உம்மை – உயர்வு சிறப்பு.

கண்ணன் சத்திய பாமைக்காகப் பாரிசாத தருவைத் தேவ லோகத்தினின்று பெயர்த்துப் பூலோகத்துக் கொணர்கையில்
வந்து எதிர்த்துப் போர் செய்த சகல தேவசைநியங்களையும் தனது சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தினமையும்,
மகா பாரத யுத்தத்தில் கண்ணன் அருச்சுனனுக்குச் சாரதியாய் நிற்கையில் தனது சங்கினொலியாற்
பகைவர்களை அஞ்சுவித்து அழித்தமையும், மற்றும் பல போர்களில் இங்ஙனஞ் செய்தமையும் பற்றி,
‘சங்கம் வாய்வைத் தொன்னார் தாரணி தானவஞ்செய்தான்’ என்றார்.

“அருட்கொண்ட லன்னவரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம்,
வெருட்கொண்டிடர்படமோ கித்துவீழ்ந்தன வேகமுடன்,
தருக் கொண்டு போகப் பொறாதே தொடருஞ் சதமகனும்,
செருக் கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ் சேனையுமே,”

தருண வாள் நிருபர் மயங்கி வீழ் தர வெண் சங்கமுமுழக்கி” என்பன காண்க.

———-

தருக காவலா வென்று புல்லரைப் பாடித் தன விலை மா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்
தருக்கா அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றுமின் பத்
தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே ——–6–

தரு காவலா என்று புல்லரை பாடி – கற்பக விருக்ஷத்துக்குத் தலைவனான இந்திரனே யென்று அற்ப மனிதர்களைப் புகழ்ந்து பாடியும்,
தனம் விலை மாதருக்கு ஆவல் ஆய் மயிலே குயிலே என்று – கொங்கை யெழிலை யுடைய வேசையர்கள் பக்கல்
மோகங்கொண்டு (அவர்களை) மயிலே யென்றும் குயிலே யென்றும் கொண்டாடி விளித்தும்,
தாமதர் ஆய் – தாமத குணத்தை யுடையவர்களாய்,
தருக்கா – களிப்புக் கொண்டு,
அலா செறிக்கே திரிவீர் – நல்லதல்லாத வழியிலேயே திரிகிற புலவர்களே! –
(இனி நீவிர் அங்ஙனஞ்செய்வதை விட்டு),
பத்தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே கவி சாற்றுமின் – அடியார்கட்கு அருள் செய்யும்
பொருட்டாகப் பலராமனுக்குப் பின்னே (அவன் தம்பியாய்க் கண்ணனாய்த்) திருவவதரித்த
நம்பெருமாளுடைய உபயதிருவடிகளின் விஷயமாகவே கவிபாடித் துதியுங்கள்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலை.

தாமதராய் -தமோ குணத்தை உடையவராய்
அலாயுதன் -பலராமன்
அலா நெறி -துர் மார்க்கம்
சாற்றும் இன் பத்தருக்கு

எம்பெருமானைத் துதித்து அவனருள் பெற்று அழிவிலா வீட்டை அடைதற்கு ஏற்ற சாதனமான நாவையும் கவன சக்தியையும்
அவன் விஷயத்தில் உபயோகியாமல் தரும விரோதமாக நிலை யில்லாத பொருளையும் சிற்றின்பத்தையும் பெறுதற்கு ஆசைப்பட்டு
அவற்றிற்காக நரகவனமும் விலைமாதரை நயந்துரைத்தலுஞ் செய்யும் அற்பப் புலவர்களை நோக்கி,
‘அங்ஙனஞ் செய்ய வேண்டா: துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும் அடியவர்க்கெளியவனுமான
ரங்கநாதன் விஷயமாகக் கவி பாடித் துதித்து உய்யுங்கள்’ என உணர்த்தியவாறாம்.

செல்வ அதிகாரங்களிற் சிறப்பை விளக்குதற்கு இந்திரனே யென்றும்,
சாயலிலும் குரலிலும் உள்ள இனிமையை விளக்குதற்கு மயிலே குயிலே யென்றும் விளிப்ப ரென்க.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன்; திருமாலின் எட்டாம் அவதாரம்:
வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் முதலில் ஆறு மாசந் தங்கிப் பின்பு ரோகிணியின்
கர்ப்பத்திற் சென்று சேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன் இவன்.
ஹலாயுதன் என்ற இவன் பெயர் – ஹல ஆயுத எனப் பிரிந்து, கலப்பையை ஆயுதமாக வுடையவ னென்று பொருள்படும்; தீர்க்கசந்தி;
ஹலம் – கலப்பை. கண்ணன் – திருமாலின் ஒன்பதாம் அவதாரம்.

காவலன் – காத்தலில் வல்லவன். புல்லர் – புன்மை யுடையவர்.
விலை மாதர் – தமது இன்பத்தை விலை கொடுப்பார் யாவர்க்கும் விற்கும் மகளிர்.
ஒழுக்க வழு, காமம், நீதிவழு முதலியன தாமச குண காரியமாம்.
தருக்கா – உடன்பாட்டு இறந்த கால வினையெச்சம்.
அலாநெறி – துர் மார்க்கம், தீயொழுக்கம். நெறிக்கு – நெறியில்; உருபுமயக்கம். ஏ – பிரிநிலையோடு இழிவுசிறப்பு.
திரிவீர் – திரிவார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி.
சாற்றும் இன் பக்தருக்கு, இன்பத்தர் – இனிமையான அடியார்களென்றலு மொன்று.
பத்தர் – பக்தர் என்ற வட சொல்லின் விகாரம்; பக்தி யுடையவர்.
ஆக என்பது, ஆ என விகாரப்பட்டது.
பின் என்பது – இங்கே காலப் பொருளது.
‘கவி சாத்துமின்’ என்ற பாடத்துக்கு – கவி மாலையைச் சமர்ப்பியுங்க ளென்று பொருள்.

————

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் தாழ் மல பா
தாளத் தனத்தத்தைத் தப்ப நிற்பீர் புடை தங்கிய வே
தாளத்தன் அ தத்தை தீர்த்தான் அரங்கன் சகடு உதைத்த
தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன் பாதம் தலைக் கொண்மினே ——-7–

தாளம் தனம் தத்தை சொல்லியரால் வரும் – கைத் தாளம் போன்ற வடிவமுடைய கொங்கைகளையும்
கிளி கொஞ்சிப் பேசுவது போ லினிய சொற்களையு முடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தா லுண்டாகும்,
தாழ் மல பாதாளத்து அனத்தத்தை – ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரகத் துன்பத்தை,
தப்ப நிற்பீர் – தப்பி உய்ய வேண்டி நிற்பவர்களே! – (நீங்கள்),
புடை தங்கிய வேதாளத்தன் அதத்தை தீர்த்தான் – எல்லாப் பக்கங்களிலுஞ் சூழ்ந்து நின்ற பூத கணங்களை
யுடையவனான சிவபிரானது (பிச்சை யெடுத்த லாகிய) அந்தத் துன்பத்தைப் போக்கி யருளியவனும்,
சகடு உதைத்த தாள் அத்தன் – சகடாசுரனை உதைத்துத் தள்ளி யழித்த திருவடிகளை யுடைய இறைவனும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக் கைகளில் ஏந்தும் பஞ்சாயுதங்களை யுடையவனுமான,
அரங்கன் – ரங்கநாதனுடைய,
பாதம் – திருவடிகளை,
தலை கொண்மின் – தலை மேற் கொண்டு பணியுங்கள்; (எ – று.)

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் -கைத் தாளம் போன்ற
வடிவமுடைய கொங்கைகளையும் கிளி கொஞ்சிப் பேசுவது போலே
இனிய சொற்களையும் உடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தால் உண்டாகும்
தாழ் மல பாதாளத்து அ னத்தத்தை-ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரக துன்பத்தை தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்தன் அ தத்தை தீர்த்தான் -எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்ற
பூத கணங்களை உடையவனான சிவபிரானது -பிச்சை எடுதலாகிய -அந்த துன்பத்தை போக்கி அருளினவனும்
சகடு உதைத்த தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன்-பஞ்சாயுதங்கள் ஏந்திய திருக்கைகளை யுடையவன்
பாதம் தலைக் கொண்மினே

தத்தை – கிளி; அதன் மொழிக்கு முதலாகுபெயர். சொல்லி என்ற பெண்பாற் பெயரின் மேல்
அர் – பலர்பால் விகுதி. நரகம் கீழுலகிலுள்ளதாதலால், அதனை ‘பாதாளம்’ என்றார்; இடவாகுபெயர்.
அநர்த்தம் பேதாளம் சகடம் ஹஸ்தம் என்ற வட சொற்கள் விகாரப் பட்டன.
தாருக வனத்து முனிவரால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்து சூழ்ந்த பூத கணங்களைச் சிவபிரான் தனது
ஆற்றலால் அடக்கி அடிமை யாக்கிக் கொண்டன னாதலால், ‘புடை தங்கிய வேதாளத்தன்’ எனப்பட்டான்.
அத்தத்து என்றவிடத்து, அகரச்சுட்டு – பிரசித்தியையும் இழிவையும் விளக்கும்.
நத்தத்தை எனப் பதம் பிரித்து, கேட்டை யென்று உரைப்பாரு முளர்;
நத்தம் – நந்து என்ற வினைப் பகுதியின் தொழிற்பெயர்.

———

தலையிலங்கா புரம் செற்றான் அரங்கன் என் தாழ் சொல் புல்கு
தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் சரண் அன்றி மற்றோர்
தலை யிலங்கா நின்ற கண் இலம் காண்கைக்கு தாழுகைக்குத்
தலை யிலம் காதிலம் கேட்கைக்கு வாயிலம் சாற்றுகைக்கே ———-8–

தலை இலங்கா புரம் செற்றான் – தலைமை பெற்ற (ராக்ஷச ராஜ தானியான) இலங்கை நகரை அழித்தவனும்,
என் தாழ் சொல் புல்கு தலையில் ஆதரம் செய்த பிரான் – எனது இழிவான துதிச் சொற்களில் பொருட்சிறப்பில்லாத
(தம் மக்கள் பேசும்) மழலைச் சொற்களினிடத்தில் (தாய் தந்தையர் அன்பு வைக்குமாறு) போல விருப்பம் வைத்த பெருமானு மாகிய,
அரங்கன் – திருவரங்கனுடைய,
சரண் அன்றி – திருவடிகளே யல்லாமல்,
மற்று ஓர்தலை – வேறோரிடத்தை,
காண்கைக்கு – தரிசித்தற்கு,
இலங்கா நின்ற கண் இலம் – விளங்குகின்ற கண்களை யுடையோமல்லோம்;
தாழுகைக்கு – வணங்குதற்கு,
தலை இலம் – தலையை யுடையோமல்லோம்;
கேட்கைக்கு – கேட்பதற்கு,
காது இலம் – செவிகளை யுடையோமல்லோம்;
சாற்றுகைக்கு – துதித்துப் பேசுதற்கு,
வாய் இலம் – வாயை யுடையோமல்லோம்; (எ – று.) – இரண்டாம்அடியில், அங்கு – அசை.

தலையிலங்கா புரம் செற்றான் -தலைமை பெற்ற இலங்கை நகரை அழித்தவனும்
என் தாழ் சொல் புல்கு தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் -என் இழிவான துதிச் சொற்களில் –
பொருள் சிறப்பு இல்லாத தம் மக்கள் பேசும் மழலைச் சொற்களின் இடத்தில்
தாய் தந்தை அன்பு கொள்ளுவது போலே விருப்பம் வைத்த பெருமான்

தேவாதி தேவனான எம்பெருமான் விஷயத்தில் உபயோகித்து ஈடேறுவதற்கே உரியவையாய் அமைந்த உறுப்புக்களைத்
தேவதாந்தர விஷயத்தில் உபயோகிக்கக் கடவோமல்லோம் யாம் என்றார்,

“மறந்துபுறந்தொழாமாந்த” ராதலின்; “வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகந், தாயவனை யல்லது தாம் தொழா –
பேய் முலை நஞ்சு, ஊணாக வுண்டானுருவொடு போரல்லால், காணா கண் கேளா செவி” என்ற
ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியது இச்செய்யுள்.

இலங்கா புரத்துக்குத் தலைமை, திக் விஜயஞ்செய்து அனைவரையும் கீழப் படுத்திய ராக்ஷச ராசனான இராவணனது
இராசதானியா யிருத்தல். அதனைச் செற்றது, ஸ்ரீராமாவதாரத்தில். இராம தூதனான அநுமான் இலங்கையை எரியூட்டி யழித்ததும்,
அவ்விலங்கா நகர வாசிகளான கொடிய அரக்கர்களை யெல்லாம் இராமபிரான் அழித்திட்டதும் ஆகிய இரண்டும்
‘இலங்காபுரஞ்செற்றான்’ என்ற தொடரில் அடங்கும்.
செற்றான், செறு – பகுதி. குதலையில், இல் – ஐந்தனுருபு, ஒப்புப்பொருளது;
ஏழனுருபாகக் கொண்டு, எனது இழிவான புல்லிய குதலைச் சொல்லாகிய துதியில் எனினுமாம்.
இலங்கா நின்ற, ஆநின்று – நிகழ்கால இடை நிலை. இலம் என்ற தன்மைப் பன்மை – பிறரையும் உளப்படுத்தியது.

—————

கை குஞ்சரம் அன்று அளித்தாய் அரங்க மண் காக்கைக்குமாய்க்
கைக்குஞ்சரம் (கும் சரம் )அசரம் படைத்தாய் கடல் நீறு எழ து
கைக்குஞ்சர (கும் சர ) மகரம் குழையாய் எனைக் கைக் கொள் உடல்
கைக்குஞ்சரம (கும் சரம ) தசையில் அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே —9–

கை – துதிக்கையை யுடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்திராழ்வானை),
அன்று – (ஆதி மூலமே யென்று கூவி யழைத்த) அக் காலத்தில்,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே!
அரங்க – திருவரங்கனே!
காக்கைக்கும் – காக்கப்படுவதற்கும்,
மாய்க்கைக்கும் – அழிக்கப்படுவதற்கும் உரியனவாக,
மண் – உலகத்திலே,
சரம் அசரம் படைத்தாய் – ஜங்கமமும் ஸ்தாவரமுமான உயிர்களைப் படைத்தருளியவனே!
கடல் நீறு எழ துகைக்கும் சர – கடல் வறண்டு புழுதிபடும்படி அதனை வருத்தத் தொடங்கிய ஆக்நேயாஸ்திரத்தை யுடையவனே!
மகரம் குழையாய் – மகர குண்டலங்களை அணிந்துள்ளவனே!
உடல் கைக்கும் சரம தசையில் என் கண் முன் வந்து அஞ்சேல் என்று எனை கைக்கொள் – உடம்பை (உயிர்) வெறுத்தொழியும்படியான
(எனது) அந்திமகாலத்திலே நீ எனது கண்களினெதிரில் வந்து தோன்றிக் காட்சி கொடுத்து ‘அஞ்சாதே’ என்று அபயமளித்து
என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டருள்வாயாக; (எ – று.)

கை குஞ்சரம் அன்று அளித்தாய் -துதிக்கை உடைய யானையை -கஜேந்த்ரனை
அன்று
அரங்க மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் -ஜங்கமம் ஸ்தாவரங்கள் படைத்து
கடல் நீறு எழ துகைக்கும் சர -ஆக்நேய அஸ்த்ரத்தை வுடையவனே
மகரம் குழையாய்–எனைக் கைக் கொள் உடல் கைக்கும் சரம தசையில்-உடம்பை உயிர் வெறுத்து ஒழியும்படியான அந்திம தசையில்
அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே பிரார்தித்தவாறும்

பெரியாழ்வார் திருமொழியில் “துப்புடையாரை” என்ற தொடக்கத்துத் திருப்பதிகத்தில்
“ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்”,
“வஞ்ச வுருவின் நமன்றமர்கள் வலிந்து நலிந் தென்னைப் பற்றும் போது,
அஞ்சலமென்றென்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவனைப் பள்ளியானே” என்றவற்றின் பொருள்
இச் செய்யுளில் விளங்குதல் காண்க.

கஜேந்திராழ்வானைக் காத்தருளின வரலாற்றை யெடுத்துக் கூறினது, உயர்திணைப் பொருள்களோடு
அஃறிணைப் பொருள்களோடு பேதமற அடிமைப் பட்ட உயிர்களை அன்போடு துயர் தீர்த்துப் பாதுகாத்தருள்கிற
எம்பெருமானது கருணை மிகுதியை விளக்குதற்கு, குஞ்சரத்துக்குக் கொடுத்த ‘கை’ என்ற அவசியமில்லாத அடைமொழி,
அந்த யானை கால் முதல் உடம்பு முழுவதும் முதலையின் வாய்ப்பட்டு எம்பெருமானை யழைத்தற்குக் கைம் மாத்திரமே
வெளித் தோன்ற நின்ற தென்னுங் கருத்தைப் புலப்படுத்தும்.

“கைம்மான மதயானை யிடர் தீர்த்த கருமுகிலை,”
“கடுத்த கராங்கதுவ நிமிர் கையெடுத்து மெய் கலங்கி….. எடுத்தொரு வாரண மழைப்ப நீயோ வன்றே னென்றாய்” என்பன காண்க.

மண் சரம் அசரம் படைத்தாய் – உலகங்களையும் சராசரங்களையும் படைத்தவனே யென்றும்,
உலகங்களைச் சராசரங்களுடன் படைத்தவனே யென்றும் கொள்ளலாம்.
சரம் – சஞ்சரிப்பன, இயங்குதிணைப் பொருள். அசரம் – சஞ்சரியாதன, நிலைத்திணைப்பொருள்.

மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் –
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா, அலகிலாவிளையாட்டுடையாரவர்” என்றபடி
உலகங்களைப் படைத்தலையும் காத்தலையும் அழித்தலையும் விளையாட்டாக வுடையவனே யென்றபடி.

நீறுஎழ – எரிபட்டுச் சாம்பலாய் மேலெழ,
மகரகுண்டலம் – சுறாமீன் வடிவமமையச் செய்யப்படுவதோர் காதணி. இது, மற்றை யாபரணங்கட்கும் உப லக்ஷணம்.

குஞ்சரம் – வடசொல்; காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையுடைய தென்றும் காரணப்பொருள்படும்.
‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு.
சரம தசா – வடமொழித் தொடர்.
அஞ்சேல் – எதிர்மறை யொருமையேவல். காக்கை, மாய்க்கை – ‘கை’ விகுதி பெற்ற தொழிற்பெயர்.
சரம தசையில் எனைக் கைக்கொள் – “எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” என்றாற் போலப் பிரார்த்தித்தவாறாம்.

———–

வந்தனை ஏற்றனை என் புன் சொல் கொண்டனை வன் மனத்தே
வந்தனை ஏற்று அனை யாவையும் ஆயினை வான் தர வு
வந்தனை யேற்றனைத் தானொத்த தாளில் வைப்பாய் பலித்து
வந்தனை யேற்றனைத் தீர்த்தாய் அரங்கத்து ,மாதவனே ———–10–

ஏற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் – ருஷப வாகனமுடையனான சிவபிரானை இரத்தற்றொழிலை நீக்கி யருளியவனே!
அரங்கத்து மாதவனே – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற திருமகள் கணவனே!
(என்) – எனது,
வந்தனை – நமஸ்காரத்தை,
ஏற்றனை – ஏற்றுக்கொண்டாய்;
என் புல் சொல் கொண்டனை – எனது இழிவான துதிச் சொற்களை ஏற்றுக் கொண்டாய்;
(என்) வல் மனத்தே வந்தனை ஏற்று – எனது வலிய மனத்திலே வந்து பொருந்தி,
அனை யாவையும் ஆயினை – (எனக்குத்) தாயும் மற்றை எல்லா வுறு துணையு மாயினாய்;
வான் தர உவந்தனை ஏல் – (எனக்குப்) பரம பதம் அளிக்கத் திருவுளங்கொண்டனையானால்,
தனை தான் ஒத்த தாளில் வைப்பாய் – (வேறு ஒப்புமை யில்லாமையால்) தன்னைத் தானே ஒப்பதான (உன்)
திருவடியில் (என்னைச்) சேர்த்துக்கொண்டருள்வாய்; (எ – று.)

யேற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் -ரிஷப வாகனம் உடைய சிவ பிரான் இரத்தல் தொழிலை நீக்கி அருளினவனே
அரங்கத்து ,மாதவனே
என் வந்தனை ஏற்றனை
புன் சொல் கொண்டனை
என் வன் மனத்தே வந்தனை ஏற்று-வலிய மனத்திலே வந்து பொருந்தி
அனை யாவையும் ஆயினை-எனக்கு தாயும் மற்று எல்லா உறு துணையும் ஆயினை
வான் தர வுவந்தனை யேல்
தனை தானொத்த தாளில் வைப்பாய்-தன்னைத் தானே ஒப்பதான திருவடியில் சேர்த்து கொண்டு அருள்வாய்

எளியேன் திரி கரணங்களாலுஞ் செய்யும் வந்தனை வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு என் பக்கல் அன்பு காட்டினை யாதலால்,
அந்த அன்பை முற்றச் செலுத்தி எனக்குப் பரமபதங்கிடைக்குமாறு என்னை உன்
திருவடியிற் சேர்த்துக் கொண்டருள வேண்டுமென வேண்டியபடி.
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் எம்பெருமான் அவர் நினைந்த வடிவத்துடன் விரைந்து சென்று
வீற்றிருத்தலால், ‘மனத்தே வந்தனையேற்று’ என்றார். ‘என்’ என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.

வந்தனை – வந்தநா என்ற வடசொல்லின் விகாரம்.
ஏற்றனை என்ற முன்னிலை யொருமை யிறந்த காலமுற்றில், ஏல் – பகுதி;
ஏற்றல் – அங்கீகரித்தல், இணங்குதல், கொள்ளுதல்.
வன் மனம் . “இரும்புபோல் வலியநெஞ்சம்” “மரங்கள்போல் வலியநெஞ்சம்” என்பன காண்க.
வந்தனை – முன்னிலை யொருமை யிறந்தகால முற்றெச்சம்.
ஏற்று என்ற இறந்தகாலவினை யெச்சத்தில், ஏல் – பகுதி; ஏலுதல் – பொருந்துதல்.

அனையாவையும் ஆயினை – “அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பிரானுமாய்” என்றார் பெரியாரும்.
அனை – அன்னை யெண்பதன் தொகுத்தல்: தனையென்பதும் இவ்வாறே. ஏல் – என்னில் என்பதன் மரூஉ.

தனைத்தானொத்ததாள் – இயைபின்மையணி: ஒருபொருளையே உபமானமும் உபமேயமுமாகச் சொல்லுதல்,
இதன்இலக்கணம்; உவமையாதற்கு ஏற்ற பொருள் வேறு யாதுமில்லை யென்பதை விளக்கும்.
ஏற்றனைப் பலித்து வந்தனைத் தீர்த்தாய் – இரண்டு செயப்படுபொருள் வந்த வினை.
பலித்து வந்தனை ஏற்றனுக்குத் தீர்த்தாய் என உருபு மயக்கமுமாம்.
பலித்துவம் – ஒருசொல்; அதன்மேல், தன் – சாரியை, ஐ – இரண்டனுருபு.
பலி துவந்தனை எனத் தொடர் மொழியாக் கொண்டு பிரித்து, இரத்தலினாலாகிய துன்பத்தை எனினுமாம்;
துவந்தனை – துன்பம்; பந்தம். ஏறு – பசுவின் ஆண்பாற்பெயர்; எருது: அதனையுடையவன், ஏற்றன்.
மாதவன் – ஸ்ரீய: பதி: வடசொல்; மா – இலக்குமி, தவன் – கணவன். அரங்கத்துமா – ஸ்ரீரங்கநாயகி.
வைப்பாய் – ஏவலொருமை முற்று; விளிப் பெயராகக் கொண்டு, ஓர் உயிர்க்குப் பரமபதமளிக்கத் திருவுளங் கொண்டனை யானால்,
அவ்வுயிரையித் திருவடியிற் சேர்த்துக் கொண்டருள்பவனே யென்றலும் ஒன்று.

—————

மாதங்கத் தானை யரங்கனை வஞ்சன் இலங்கையிலே
மாதங்கத் தான் ஐ யிரு திங்கள் தாழ்த்து பின்பு வாம் பரி தேர்
மாதங்கத் தானை வலத்தானை முன் வதைத்தானைத் தன் பான்
மாதங்கத்தானை வைத்தானை வைத்தேன் என் மதி யகத்தே ——–11-

மாதங்கம் தானை அரங்கனை – சிறந்த மாற்றுயர்ந்த பொன்மயமான ஆடையையுடைய திருவரங்கனும், –
வஞ்சன் இலங்கையிலே மாதங்க – வஞ்சகனான இராவணனுடைய இலங்காபுரியிலே திருமகளின் அவதாரமான சீதாபிராட்டி தங்கியிருக்க,
தான் -, ஐ இரு திங்கள் தாழ்த்து – பத்து மாதம் கழித்து,
பின் – பின்பு,
வாம் பரி தேர் மாதங்கம் தானை வலத்தானை முன் வதைத்தானை – தாவிச் செல்லுங்குதிரைகளும் தேர்களும் யானைகளும்
காலாள்களுமாகிய சேனையின் பலத்தோடு மற்றும் பலவகை வலிமைகளை யுமுடையனான இராவணனை முற்காலத்தில் அழித்திட்டவனும்,
மாது அங்கத்தானை தன்பால் வைத்தானை – உமாதேவியை வாமபாகத்திற் கொண்டுள்ளவனான
சிவபிரானை (த் தனதுவல) ப்பக்கத்தில் அமைய வைத்துள்ளவனுமான திருமாலை,
என் மதியகத்து வைத்தேன் – எனது மனத்தினுள்ளே நிலையாக வைத்திட்டேன்; (எ – று.)

எப்பொழுதும் நம்பெருமாள்பக்கலிலே மனத்தைச்செலுத்தி அப்பெருமானையே தியானிக்கின்றேன் என்பதாம்.

தங்கத்தானை – பீதாம்பரமெனப்படும் பொற்பட்டாடை.
வஞ்சன் – எண்ணம் சொல் செயல் என்னும் திரிகரணத்தொழிலிலும் வஞ்சனைக்கொண்டவன்;
பிராட்டியை வஞ்சனையாற் கவர்ந்துசென்றவன்.
திருமால் இராமனாகத் திருவவதரித்தபோது திருமகள் சீதையாகத் திருவவதரித்ததனால், சீதையை ‘மா’ எனக் குறித்தார்.
ஐயிருதிங்கள் – பண்புத் தொகைப் பன்மொழித்தொடர்.
சாந்திரமானபக்ஷத்தில் அமாவாசைக்கு அமாவாசை ஒருமாசமெனக்கொண்டு சந்திரசம்பந்தத்தாற் கணக்கிடுதல்பற்றி,
திங்கள் என்ற சந்திரனது பெயர் இலக்கணையாய் மாதத்தை யுணர்த்தும்; ‘
மதி’ என்பதும் இவ்வாறே வருதல் காண்க.
வாம் – வாவும் என்னுஞ் செய்யுமெனெச்சவீற்றுயிர்மெய் சென்றது.
மூன்றாமடியிலுள்ள ‘மாதங்கம்’ என்ற வடசொல் மதங்க முனிவரிடத்தினின்று ஆதியில் உண்டானதென்று காரணப்பொருள்படும்.
இங்கே, வலம் – வரபலம் புஜபலம் ஆயுதபலம் மனோபலம் ஸ்தாநபலம் முதலியன,
பலம் என்ற வடசொல், வலமென விகாரப்பட்டது; வலம் – வெற்றியுமாம்.
பின், முன் என்பன – காலத்தின்மேல் நின்றன.
மாது அங்கத்தான் – அர்த்தநாரீசுவர மூர்த்தியானவன்.
மாதங்கத்தானைத் தன்பால் வைத்தான் – “பிறைதங்குசடையானை வலத்தேவைத்து,”
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்” என்பன காண்க.
மதியகத்து – அறிவிலே எனினுமாம்; அகத்து – ஏழனுருபு.
அம்பிகையை ஒருபாகத்தில் வைத்தவனைத் தனது ஒரு பாகத்தில் வைத்தவனை
எனது அகத்துறுப்பினுள்ளே வைத்தேன் யான் என ஒரு சமத்காரம் தோன்றக் கூறியவாறு.

———–

மதிக்கவலைப் புண்ட வெண்டயிர் போல மறு குறு மென்
மதிக்கவலைப் புண்டணி கின்றிலேன் மண்ணும் வானகமும்
மதிக்கவலைப் புனல் சூழ் அரங்கா நின் மனத்தருடா
மதிக்கவலைப் புன் பிறப்பினி மேலும் வரும் கொல் என்றே —–12-

மண்ணும் வானகமும் மதிக்க – மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் கொண்டாடும்படி,
அலை புனல் சூழ் – அலைகளையுடைய காவேரிதீர்த்தத்தாற்புடைசூழப்பெற்ற,
அரங்கா – திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே!
நின் மனத்து அருள் தாமதிக்க – உனது திருவுள்ளத்திலுண்டாகும் கருணை (என்பக்கல் உடனே சித்தியாமல்) காலம்நீட்டித்தலால்,
வலை புல் பிறப்பு இனிமேலும் வரும்கொல் என்று வலைபோன்ற இழிவான சன்மம் இனிமேலும் (எனக்கு) வந்துவிடுமோ வென்று சிந்தித்து,
மதிக்க அலைப்புண்டவெள் தயிர்போல மறுகுறும் என் மதி கவலை புண் தணிகின்றிலேன் – கடைதலால் அலைக்கப்பட்ட வெண்மையான
தயிர்போல (ஒருநிலை நில்லாது) சுழல்கிற எனதுமனத்தின் கவலையாகிய விரணம் ஆறப்பெற்றிலேன்; (எ – று.)

எனதுகவலை தணியுமாறு விரைவில் எனக்கு நற்கதியருளவேண்டு மென்பதாம்.
எனது கவலை தணியுமாறு எனக்கு நல் கதி அருள வேண்டும் என்பதாகும்
வலை மிருக பஷிகளைப் பந்தப்படுதுவது போலே பிறப்பு உயிரை பந்தப்படுதலால்
வலைப்புன் பிறப்பு எனப்பட்டது-

மறுகுறும், மறுகு – பகுதி, உறு – துணைவினை.
மனத்திற்குச் சுழற்சி – பலவகைச்சிந்தனையால் தடுமாற்றங்கொள்ளுதல்.
கவலை – கவற்சி; ‘ஐ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். கவலைப்புண் – மனோவியாதி.
தணிகின்றிலேன் – தன்மையொருமை யெதிர்மறை நிகழ்காலமுற்று.
மண், வானகம் – இடவாகு பெயர்கள்.
மூன்றாமடியில், மதிக்கச் சூழ் என இயையும். வலை மிருகபக்ஷிகளைப் பந்தப்படுவதுபோலப்
பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துதலால், ‘வலைப்புன்பிறப்பு’ எனப்பட்டது.
இனிமேலும் – இப்பிறப்பு ஒழிந்தபின்பும் என்றபடி.
வருங்கொல் என்றதில், கொல்என்ற இடைச்சொல் – ஐயவினாப் பொருளோடு இரக்கத்தையும் உணர்த்தும்.

————

வருந்து வரைப்பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் க
வருந்து வரைப்பட்ட வாய் அரங்கேசனை வஞ்சப்பகை
வருந்து வரைப்பட்ட வேழம் அட்டானை மறந்து உலகோர்
வருந்து வரைப்பட்ட வீப்போன் மடந்தையர் மால்வலைக்கே ——–13–

துவரை வரும் – துவாரகாபுரியில் வந்து சேர்ந்த,
பட்டம் மங்கையர் எண்மர் – பட்டத்துத் தேவிமார் எட்டுப் பேர்களுடைய,
ருக்மிணி -சத்யபாமை -ஜாம்பவதி -சத்யை -மித்ரவிந்தை -ஸு சிலை -ரோகிணி -லஷணை-என்கிற எட்டு பட்ட மகிஷிகள்
துவரை வரும் -கண்ண பிரானுக்கும் திருத் தேவிமார்களுக்கும் அடை மொழி.
மனங்களை கவரும் – (தன்பக்கல்) இழுக்கின்ற,
துவரை பட்ட வாய் – செந்நிறத்தைப் பொருந்திய வாயழகையுடைய,
அரங்க ஈசனை – ரங்கநாதனும்,
வஞ்சம் பகைவர் உந்து – வஞ்சனையை யுடைய பகைவர் (தன்னை நோக்கிச்) செலுத்திய,
வரை பட்ட வேழம் – மலையை யொத்த (குவலயாபீடமென்னும்) யானையை,
அட்டானை – கொன்றவனுமான திருமாலை,
மறந்து, உலகோர் – உலகத்துச்சனங்கள்,
ஐ பட்ட ஈ போல் – கோழையில் அகப்பட்டு (மீளவொண்ணாதபடி) சிக்கிக்கொண்டழிகிற ஈயைப்போல,
மடந்தையர் மால் வலைக்கே வருந்துவர் – மகளிர் பக்கல் கொள்ளும் மோகமாகிய வலையிலே அகப்பட்டு (மீளமாட்டாது) வருந்துவர்; (எ – று.)

ஜராசந்தனும் காலயவநனும் ஒருங்குபடை யெடுத்து வந்த காரணத்தாற் கண்ணன் மதுரையை விட்டுத் துவாரகாபுரியை
மேல்கடலிலே நிர்மாணஞ்செய்துகொண்டு அங்குச் சகலசனங்களுடனே குடிபுகுந்தமையும்,
வெவ்வேறுநாடுகளிற்பிறந்த ருக்மிணி முதலிய இளமகளிர் கண்ணனால் மணஞ்செய்துகொள்ளப்பட்டு
அவனதுவாசஸ்தாநமான துவாரகைக்கு வந்துசேர்ந்தமையும் காண்க.

அம்மனைவியரனைவர்க்கும் ஒருநிகராக மகிழ்ச்சிவிளைத்து வந்தமையை ‘மனங்களைக் கவரும்’ என்றதனால் வெளியிட்டார்.
‘எண்மர்மனங்களைக் கவருந் துவரைப்பட்டவா யரங்கேசன்’ என்றது, அதரத்தினழகில் ஈடுபாடு.
‘பகைவர்’ என்றது, கம்சனையும், அவனது பாகன் முதலிய ஏவலாளரையும்.

துவரை – வடமொழிச் சிதைவு.
பட்டமங்கையர் – பட்டமகிஷிக்கு உரிய நெற்றிப்பொற்பட்டத்தைத் தரித்துள்ள மாதர்கள்,
எண்மர் – எட்டு என்ற பகுதி எண்என விகாரப்பட்டது: ம் – பெயரிடைநிலை.
இரண்டாமடியில், துவர் ஐ பட்ட என்று பதம் பிரித்து, செந்நிறமும் அழகும் அமைந்த என்று உரைப்பாரு முளர்.
மூன்றாமடியில், பட்ட – உவமவுருபு. அட்டான், அடு – பகுதி.
அகப்பட்டவரை மீளவிடாமையால், மடந்தையரதுமால் ‘வலை’ எனப்பட்டது. வலைக்கு – உருபுமயக்கம்.

———-

எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்யாமல் விஷயாந்தரங்களில் ஆழ்ந்து அழிகிற பேதை மாந்தர்களுடைய
தன்மையைக் குறித்து இரங்கிக் கூறியவாறாம்.

மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில் வாஞ்சை வைத்து
மாலைக்கல்லாரம் புலிக்கு நையா நிற்பர் மாய்விப்பதோர்
மாலைக்கல்லாரம் புயத்தாளில் வைக்கும் மதில் அரங்க
மாலைக்கல்லார் அஞ்சலி யார் என்னே சில மானிடரே ——–14–

சில மானிடர் – (உலகத்துச்) சிலமனிதர்கள்,
மாலை கல்லாரம் மடவார் புண் ஆக்கையில் வாஞ்சை வைத்து – மாலையாகத் தொடுக்கப்பட்ட செங்கழுநீர் மலர்களைச் சூடிய
மாதர்களுடைய அசுத்தமான உடம்பினிடத்திலே விருப்பம் வைத்து, (அக்காமத்தினால்),
மாலைக்கு அல் ஆர் அம் புலிக்கு நையா நிற்பர் – (காமோத்தீபகப்பொருள்களான) அந்தி மாலைப் பொழுதுக்கும்
இரவில் விளங்குகின்ற சந்திரனுக்கும் வருந்தி நிற்பார்கள்;
மாய்விப்பது ஓர் மாலை கல்லார் – (இவ்வாறு தங்களை) அழியச் செய்வதான ஒப்பற்ற காம மயக்கத்தைக் களைந்தொழிக்க மாட்டார்கள்;
அம்புயம் தாளில் வைக்கும் – தாமரைமலர்போன்ற (தனது) திருவடிகளில் (அடியார்களை) இருத்துகிற,
மதில் அரங்கம் மாலை – (ஏழு) மதிள்கள்சூழ்ந்த திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருக்கிற திருமாலை,
கல்லார் – துதிக்கமாட்டார்கள்;
அஞ்சலியார் – கை கூப்பி வணங்க மாட்டார்கள்:
என்னே – இது என்ன பேதைமையோ?

மாலைக்கல்லாரம் – கல்லாரமாலை என முன் பின்னாக மாற்றிக்கூட்டிச் செங்கழுநீர்மலர்மாலை யென்னலாம்.
கல்ஹாரம் – வடசொல். ‘மாலைக்கல்லாரமடவார்’ என்றது, மேனி மினுக்குபவ ரென்றபடி.
மடவார் இளமையை அல்லது மகளிர்க்கு உரிய பேதைமைக் குணத்தை யுடையவர்.
வாஞ்சை – வாஞ்சா என்ற வடசொல்லின் விகாரம்.
நையா – உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

மூன்றாமடியில், மால் – பெண்மோகம். கல்லல் – கல்லுதல், வேரூன்றினதைப் பெயர்த்தொழித்தல்.
‘அம்புயத்தாளில் வைக்கும்’ என்றதனால் திருவடியே வீடாயிருக்கு மென்றபடி.
ஸ்ரீரங்கம் ஸப்தப்ராகார முடைய தாதலால், அச்சிறப்பு விளங்க, ‘மதிலரங்கம்’ எனப்பட்டது.

நான்காமடியில், கற்றல் – எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லிப் பழகுதலும்,
அவனுடைய சொரூபகுணவிபவங்களைக் கூறுகிற நூல்களைப் படித்தலும்,
அவனைப் புகழ்ந்து கூறுதலும்.

மானிடர் – மாநுஷரென்ற வடசொல்லின் திரிபு;
காசியபமுனிவரது மனைவியருள் மநுவின் சந்ததியா ரென்று காரணப்பொருள்படும்.

தாம்காதலித்த மகளிரின் சேர்க்கை நேராத விரகதசையில் அந்திப் பொழுதும், சந்திரனது நிலாத் தோற்றமும்
அத்துயரை வளர்த்து வருத்து மென்க.
புண்ணாக்கை – மாம்சசரீரம்.

————–

மானிடராக வரலரிதோர் மண்டலத்தின் நெறி
மானிடராக மிலாதவராதன் மலரயனார்
மானிடராக மத்தாலன்பராய வரங்கத்துள் எம்
மானிடராக மலரடிக்கு ஆட்படும் வாழ்வரிதே ——–15–

ஓர் மண்டலத்தின் – ஒப்பற்ற இந்தநிலவுலகத்திலே,
மானிடர் ஆக வரல் – மனிதராய்ப் பிறத்தல்,
அரிது – அருமையானது;
(அங்ஙனம் மனிதசன்மமெடுத்தாலும்),
இடர் ஆகம் இலாதவர் ஆதல் (அரிது) – துன்பம் மிக்க விகார சரீரமில்லாதவராதல் அரியது;
(அங்ஙனம் உடற்குறையில்லாதவராயினும்),
நெறிமான் (ஆதல் அரிது) – நீதி நெறியுடையவனாயிருத்தல் அருமையானது;
(அங்ஙனம் சன்மார்க்கத்தில் ஒழுகினாலும்),
மலர் அயனார் – தாமரைமலரில்தோன்றிய பிரமதேவரும்,
மான் இடர் – மானை இடக்கையிலேந்திய சிவபிரானும்,
ஆகமத்தால் – சாஸ்திரங்களிற் கூறிய முறைப்படி,
அன்பர் ஆய – தொண்டுபூண்டொழுதற்கு இடமான,
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்தில் (பள்ளிகொண்டருள்கிற),
எம்மான் – எம்பெருமானுடைய,
இடம் ராகம் மலர் அடிக்கு – பெருமை யுடைய சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளுக்கு,
ஆள்படும் – அடிமை செய்து ஒழுகுகிற,
வாழ்வு – வாழ்க்கை,
அரிதே – (பெறுதற்கு) அருமையானதே; (எ – று.)

திருவரங்கநாதனான திருமாலினது திருவடிகளுக்கு அடியவராதல் நல்வினைப் பயனாலன்றி நேராது என்பதாம்.

அரியது கேட்கின் வரிவடிவேலாய் அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின் வானவர் நாடு வழி திறந்திடுமே-

நெறிமான் என்பதில், மான் – ஆண்பாற்பெயர்விகுதி.
அயனார், மானிடர் – உயர்வுப்பன்மை.
மலர் – திருமாலின் நாபித்தாமரைமலர்.
அயன் – அஜன்; இவ்வடமொழிப்பெயர் – திருமாலினிடத்தினின்று தோன்றினவனென உறுப்புப்பொருள்படும்;
அ – விஷ்ணு. சிவபிரான் இடக்கையிலேந்திய
மான், தாருகவனமுனிவர் ஏவினது.

நான்காமடியில், மான் – மஹாந்.
இடராகம் என்பதற்கு – தன்னிடத்துச் செந்நிறத்தையுடையஎன்று உரைத்தலு மொன்று.
எம்மானிடம் – எம்பெருமானுடைய என்று உரைத்து,
இடம் என்பதை ஆறனுருபின்பொருளில்வந்த சொல்லுரு பென்பர் ஒருசாரார்.
ஈற்று ஏகாரம் – தேற்றம். ‘இலாதவனாதல்’ என்றும் பாடம்.
‘அரிது’ என்பதும், ‘ஆதல்’ என்பதும் எடுத்துப் பிறவிடத்தும் கூட்டப்பட்டன.

———–

அரி தாமரைக்கண் தோல் உடுத்தார் அயனார்கு அரியான்
அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் சன்மம்
அரி தாமரைக்கணம் தங்காது உயிர் அவனூர் வினவில்
அரி தாமரைக்கணம் ஈர்த்து ஓடும் பொன்னி யரங்கம் அன்றே ———16–

அரி – இந்திரனுக்கும்,
தாம் அரைக்கண் அம் தோல் உடுத்தார் – தாம் இடையிலே அழகிய புலித்தோலை யுடுத்துள்ளவரான சிவபிரானுக்கும்,
அயனார்க்கு – பிரமதேவர்க்கும்,
அரியான் – (அறிதற்கு) அரியவனும்,
அரி – ஹரி என்னும் ஒருதிருநாமமுடையவனும்,
தாமரை கண் அம்மான் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடைய தலைவனுமான எம்பெருமானுடைய,
திரு பாதம் – திருவடிகளை,
அடைமின் – சரணமடையுங்கள்;
(அதனையடைவதனாற் பயனென்னவெனின், -)
சன்மம் அரிது ஆம் – மீண்டும் பிறப்புஇல்லாமற்போம்:
(அது எங்ஙனமெனின், -)
உயிர் அரைக்கணம் தங்காது – (சரணமடைபவருடைய) உயிர் (முத்தி புகுமே யன்றி மறுபடி ஓருடம்பில்)
அரை க்ஷணப் பொழுதும் பொருந்தி நிற்க மாட்டாது:
அவன் ஊர் வினவில் – அப்படிப்பட்ட மகாவிபவமுடைய எம்பெருமானது திருப்பதி (யாது என்று) வினாவினால்,
அரி தாம் மரை கணம் ஈர்த்து ஓடும் பொன்னி அரங்கம் அன்றே – சிங்கங்களையும் தாவிப்பாயும் மான்களின் கூட்டத்தையும்
ஒருங்கு இழுத்துக்கொண்டு ஓடிவருகிற உபய காவேரியின் மத்தியிலுள்ள திருவரங்கமன்றோ? (எ – று.) – அன்றே – தேற்றம்.

முதலடியில், அரி – ஹரி; (பகைவரை) அழிப்பவன். தாம் – அசை. அரைக்கண், கண் – ஏழனுருபு.
அரை – பாதி; உடம்பிற் பாதியளவிலுள்ள உறுப்பான இடையைக் குறிக்கும்போது ஆகுபெயர்.

இரண்டாமடியில், அரி – ஹரி; (அடியார்களுடைய துயரத்தை) ஒழிப்பவன். தாமரைக்கண் அம்மான் – புண்டரீகாக்ஷன்.
அரி – செவ்வரிபரந்த கண் என்றலும் ஒன்று; அரி – உத்தம லக்ஷணமான சிலசிவந்தரேகைகள்.
இனி, அரி – (காண்பவர்களுடைய கண்களையும் மனத்தையும்) அபஹரிக்கிற (கவர்கிற) கண் எனினுமாம்.
அம்மான் – அப்படிப்பட்ட மகான். ஜந்மம் – வடசொல். அரிது என்பதில், அருமை – இன்மைமேலது.
கணம் – க்ஷணம்; வடமொழிவிகாரம்.

நான்காமடியில், அரி – ஹரி; யானை முதலிய விலங்குகளை அரிப்பது; அரித்தல் – அழித்தல். தாம் – தாவும் என்பதன் விகாரம்;

கீழ் 11 – ஆஞ் செய்யுளில் ‘வாம்’ என்பது போல. ஸஹ்யபருவதத்தினின்று உற்பத்தியாகிப் பெரு வெள்ளமாய்ப்
பெருகி வரும் விசையில் அக்குறிஞ்சி நிலக் கருப் பொருளாகிய சிங்கம் மான் முதலிய விலங்குகளை
அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவேரியென்க;

“மலைத்தலையகடற் காவிரி, புனல்பரந்துபொன்கொழிக்கும்” என்றபடி
தான் பெருகும் போது பொன்னைக் கொழித்துக்கொண்டு வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று பெயர்;
இ – உடைமைப் பொருள் காட்டும் பெண் பால் விகுதி.

செய்யுளடிகளினிறுதியில் சந்தி அநித்யமென்பது இலக்கண நூலார் துணி பாதலின், நின்ற அடியின் ஈற்றோடு வரும்
அடியின் முதல் சேருமிடத்துப் புணர்ச்சி கொள்ளப் பட்டிலது, யகமப்பொருத்தத்தின்பொருட்டு.
இதனை, மேல் இங்ஙனம் வருமிடங்கட்கெல்லாங் கொள்க.

————-

அரங்காதுவார் கணை கண் வள்ளை கோங்கின் அரும்பு மங்கை
அரங்காதுவார் முலை என்று ஐவர் வீழ்ந்தனர் ஆடரவின்
அரங்காதுவாரமிலா மணியே யணியார் மதில் சூழ்
அரங்காதுவாரகையாய் அடியேன் உன் அடைக்கலமே ———-17–

மங்கையர் – இளமகளிருடைய,
கண் – கண்கள்,
அரம் காதுவார் கணை – அரமென்னுங்கருவியினால் அராவப்பட்ட (கூரிய) நீண்ட அம்பு போலும்:
அம் காது வார் முலை – (அம்மாதரது) அழகிய காதுகளும் கச்சிறுக்கிய கொங்கைகளும்,
வள்ளை கோங்கின் அரும்பு – (முறையே) வள்ளை யென்னும் நீர்க்கொடியின் இலையையும் கோங்கமரத்தின் அரும்பையும் போலும்,
என்று – என்று (உவமமுகத்தாற் புனைந்து) கருதி,
ஐவர் வீழ்ந்தனர் – பஞ்சேந்திரியங்களாகிய ஐந்துபேர் (அம்மகளிர் பக்கல்) ஆசைகொண்டு (அப்பெண்மோகக்கடலில்) விரைந்து விழுந்தன்மையர்;
ஆடு அரவு இன் அரங்கா – படமெடுத்தாடுகிற (காளியனென்னும்) பாம்பை இனிய கூத்தாடுமிடமாகக் கொண்டவனே!
துவாரம் இலா மணியே – புரைசலில்லாத முழு மாணிக்கம் போன்றவனே!
அணி ஆர் மதில் சூழ் அரங்கா – அழகு நிறைந்த மதிள்களாற் சூழப்பட்ட திருவரங்க நகருடையவனே!
துவாரகையாய் – (கிருஷ்ணாவதாரத்தில்) துவாரகாபுரியில் எழுந்தருளியிருந்தவனே!
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன்; (எ – று.)

யான் உன்னையே சரணமாக அடைந்து உன்னாற் பாதுகாக்கப்படும் பொருளாயினேனாதலால்,
என்னைப் பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு அழியாதபடி பாதுகாத்தருளவேண்டு மென்பதாம்.

அரம் . வாள்விசேடம். அரங்காது வார்கணை – “வாளரந்துடைத்த வைவேல்” என்றாற்போலக் கொள்க.
காது வார் என்ற இரண்டும் – வினைத்தொகை. வார் – உரிச்சொல்லுமாம்.
வள்ளைபோலும் காது, கோங்கினரும்புபோலும் முலை என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள்கோள்.

இரண்டாமடியில், வார் – கஞ்சுகம்.
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளை ஐவர் என உயர்திணையாகக்கூறியது,
இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர்.”தாம்வந்தார் தொண்டனார்” என்பது,
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்பது, இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
வீழ்ந்தனரென இறந்தகாலத்தாற் கூறினது, விரைவை விளக்கும்.

மூன்றாமடியில், அரங்கு – ரங்கமென்ற வடசொல்லின் விகாரம். த்வாரம், த்வாரகா – வடசொற்கள்.
அனைவராலும் விரும்பியேற்றுக்கொள்ளப்படுதலும், மதித்தற்கரிய மதிப்புடைமையும், சிறப்பும் பற்றி, ‘மணியே’ என்றார்.
‘அடியேன்’ என்றது, பணிவை விளக்கும்.
‘அடியேன் உன் அடைக்கலம்’ என்றவிடத்து, தன்மையிற் படர்க்கை வந்த இடவழுவமைதியும்,
இழிப்பினால் (பணிவு பற்றி) உயர்திணை அஃறிணையாகக் கூறப்பட்ட திணைவழுவமைதியும் இருத்தல் காண்க.

கண்ணன் காளியனுடைய முடியின்மேல் ஏறி நர்த்தநஞ்செய்தருளும் போது ஐந்து தலைகளை யுடைய அந்நாகம்
எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ அந்தப்படத்தைத் துவைத்து நர்த்தனஞ்செய்து நின்று
அப்பாம்பின் வலிமையை யடக்கி அதனை மூர்ச்சையடையச் செய்கையில் பலவகை
நடனத்திறங்களைச் செய்து காட்டியமை தோன்ற, ‘ஆடரவினரங்கா’ என்றார்.

முதலடியினிறுதியில், மங்கையர் என்ற பெயர்ப்பகுபதத்தினிடையே சந்தியால் வரும் உடம்படு மெய்யாகிய
யகரத் தோற்றத்தைக் கொள்ளாது விட்டது, யமகநயத்தின்பொருட்டு.
இப்படி பகுபதத்தின் அல்லது பகாப்பதத்தினிடையிலே யுள்ள எழுத்துக்களை யமகப் பொருத்தத்தின் பொருட்டுப்
பிரித்து எழுதியுள்ள விடங்களிலெல்லாம் மூலத்தில் (-) இக்குறி இடப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும் பொருள் நோக்கும் பொழுது சேர்த்துப் படித்துக் கொள்க.

—————

அடைக்கலந் தாயத்தவர் போலுடலுறையை வரையும்
அடைக்கலந் தாவுலகம் கொண்ட தாள்களுக்கண்ட முண்டால்
அடைக்கலந் தாயரங்கா வாயர்பாடியிலன்று நெய்பால்
அடைக்கலந் தாய் வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே——–18–

அண்டம் – அண்ட கோளங்களை,
உண்டு – உட் கொண்டு,
ஆல் அடை கலந்தாய் – ஆலிலையிற் சேர்ந்து (பிரளயப் பெருங்கடலிற்) பள்ளி கொண்டவனே!
அரங்கா!
அன்று – அக் காலத்தில் (முன்பு கண்ணனாகத் திரு வவதரித்த பொழுது),
ஆயர்பாடியில் – திருவாய்ப் பாடியிலே,
நெய் – நெய்யை (எண்ணெயை),
பாலடை கலம் வைத்து – பாலடையாகிய பாத்திரத்திற் பெய்து கொண்டு,
தாய் – (உன்னை வளர்த்த) தாயாகிய யசோதைப் பிராட்டி,
வாய் நெரித்து ஊட்ட – (உனது) வாயில் வைத்து அவ் வாயை நெரித்து உண்பிக்க,
அழும் – (ஏறிட்டுக் கொண்ட மனிதப் பிறப்புக்கேற்ப எளிய சிறு குழந்தை போலவே) அழுத,
ஐயனே – இறைவனே!
தாயத்தவர் போல் – பங்காளிகள் போல,
உடல் உறை – (விலக்க வொண்ணாதவராய் எமது) உடம்பாகிய குடிசையிலே ஒருங்கு உடன் இருக்கிற,
ஐவரையும் – ஐந்து இந்திரியங்களையும்,
அடைக்கலம் – (விஷயாந்தரத்திற் செல்ல வொட்டாமல்) அடக்கி வசப்படுத்தி வைக்க வல்லமை யுடையோமல்லோம், (யாம்);
தாய் உலகம் கொண்ட தாள்களுக்கு அடைக்கலம் – தாவி உலகங்களை அளந்து கொண்ட
(உனது) திருவடிகளுக்கு அடைக்கலப் பொருளாகிறோம்; (எ – று.)

யாம் பஞ்சேந்திரிய நிக்ரக சக்தியை யுடையோமல்லோமாயினும் உனது திருவடிகளிற் சரண்
புகுந்தோ மாதலால், எங்களை நீ பாதுகாத்தருளக் கடவை யென்பதாம்.

அடைக்கலம் – தன்மைப் பன்மை யெதிர் மறைமுற்று; கு – சாரியை, அல் – எதிர்மறையிடைநிலை.
அடைத்தல் – இப்பொருளதாதலை, “ஐவரை யகத் திடை யடைத்த முனி” என்ற விடத்துங் காண்க.
தாயம் – பங்குக்கு உரிய பொருள்; அதனைப் பெறுதற்கு உரியவர், தாயத்தவர்; தாயாதிகள், ஞாதிகள்.
ஓர் இல்லத்திலே ஒருங்குவசித்தற்கு உரியவர்களான அவர்கள்,
ஓர் உடம்பிலே ஒருங்கு வசிக்கின்ற ஐம்பொறிகட்கு உவமை கூறப்பட்டனர்;
இவ்வுவமையில் ‘பங்காளியோ பகையாளியோ’ என்னும்படி தீங்கு செய்யுந்தன்மையும் விளங்கும்.
ஐவரையும், உம் – இனைத்தென்றறிபொருளில்வந்த முற்றும்மை.

தாய் என்ற தெரிநிலை வினையெச்சத்தில், தாவு என்பதன் விகாரமான தா – வினைப்பகுதி, ய் என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும்.
அண்டம் – உலக வுருண்டை. அடை என்ற சொல் – இலை யென்ற பொருளில் வருதலை,
‘அடைக்காய்’ என்றவிடத்திலுங் காண்க. ஆ – பசு; அதனையுடையவர், ஆயர்: இடையர்; ய் – எழுத்துப்பேறு. அவர்கள் வசிக்கிற ஊர்,
ஆயர்பாடி. கண்ணபிரான் வளர்ந்த இடம், கோகுலமென்னும் பெயரினது.

‘அன்று’ எனச் சுட்டினது, கதையை உட்கொண்டு. பாலடை – பால்புகட்டும் சங்கு;
பால் அடுக்கப் பெறுவதெனப் பொருள்படுங் காரணக்குறி;
கலம் – உண்கலம்.

“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரியவித்தகன்” என்றபடி
அருமையான பரத்வத்தையுடைய எம்பெருமான் அதனை இருந்தது தெரியாதபடி விட்டு
எளிமை மேற்கொண்டு பாவனைசெய்த சௌலப்பியம் விளங்க,
‘ஆயர்பாடியி லன்று செய் பாலடைக் கலந்தாய்வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே’ என்றார்.

————-

செல்வ நிலையாமையையும் சிற்றின்பத்தின் சிறுமையையும் அறிந்து அவற்றை வெறுத்து,
முற்ற மூத்த நிலையில் மனம் ஒருநிலைப்படா தாதலால், இம்மையில் வருந்தியாவது
இளமை தொடங்கியே அழகிய மணவாளனுக்குத் தாசராவீரேல்,
மறுமையில் பேரின்பமடைந்து அழிவிலாநந்தம் பெறலாமென்று உலகத்தார்க்கு உணர்த்தியவாறாம்.

ஐயமருந்திவை யுண் என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்
ஐயமருந்தினைப்போதே அவர் இன்பம் ஆதலினால்
ஐயமருந்தியக்கங் குறுகா முன் அரங்கற்கு அன்பாய்
ஐயமருந்தயும் வாழ்மின் கண் மேல் உனக்கு ஆநந்தமே ——–19–

ஐய – ஐயனே!
இவை – இவ்வுணவுகள்,
மருந்து – (இன்சுவை மிகுதியால்) தேவாமிருதம்போன்றன;
உண் – (இவற்றை) உண்ணக் கடவை,’
என்று – என்று (அன்புபாராட்டி உபசாரவார்த்தை) சொல்லி,
மாதர் – காதற்கு இடமான உரிமை மகளிர்,
அட்டு ஊட்டும் – (தாமே) சமையல் செய்து உண்பிக்கும்,
செல்வம் – ஐசுவரியம்,
ஐயம் – சந்தேகத்துக்கு இடமானது (நிலையற்றது என்றபடி);
அவர் இன்பம் – அந்த மகளிருடைய போக ரசமும்,
அருந் தினை போதே – சிறிய தினையென்னுந் தானியத்தி னளவினதான அதி சொற்ப காலத்ததே;
ஆதலினால் – ஆதலால்,
ஐ அமரும் தியக்கம் குறுகாமுன் – கோழை (கண்டத்திற்) பொருந்துகிற கலக்கம்
(அந்திமதசையில் ஆகின்ற தடுமாற்றம்) நெருங்குதற்கு முன்னமே,
ஐயம் அருந்தியும் அரங்கற்கு அன்பு ஆய் வாழ் மின்கள் – பிச்சை யெடுத்துப் புசித்தாயினும் ரங்கநாதன்
விஷயத்திற் பக்தி கொண்டு சீவியுங்கள்; (இப்படிசெய்வீராயின்),
மேல் – இனிமேல்
(இப்பிறப்பு ஒழிந்தவளவில் என்றபடி),
உமக்கு – உங்களுக்கு, ஆநந்தமே – (பரமபதத்து) நித்தியாநந்தமே உண்டாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

ஐய – ஸ்வாமீ; இவ்விளி, அன்பையும் மரியாதையையும் காட்டும்: அண்மை விளி யாதலின், ஈறு அழிந்தது.
மருந்து = சாவா மருந்து; சாவாமைக்குக் காரணமாகிய மருந்து.
‘இவை’ என்ற பன்மையால், பல்வேறு வகைப்பட்ட உண்டிகளும் சிற்றுண்டிகளுமென விளங்கும்.
ஊட்டும், உண் என்பதன் பிறவினையான ஊட்டு – பகுதி.
செல்வவானாதலால் பரிசாரகர் பலர் இருக்கையிலும் மனைவியரே சமைத்து உண்பித்தல், அன்புடைமையால் இன்பஞ்செய்தற்பொருட்டு,
‘ஊட்டும்’ என்ற சொல்லின் ஆற்றலால், தாம் கையில் வாங்கி யுண்ணாமல் மனைவியர் தாமே வாயிற் போகட உட்கொள்ளுதல் தோன்றும்.
செல்வச் செருக்கினால் சிறிதளவே உண்டு மிச்சத்தை வேண்டாவென்று விலக்குதலால்,
‘சாமி! அமிருதம் இவை உண்’ என்று உரிமை மகளிர் வேண்டலாயிற்று.
செல்வம் என்ற பெயர் தானே அதன் நிலைமை யின்மையை விளக்கும்.
செல்வம் – நிலைத்திராமல் நீங்கிச் செல்வதென்று பொருள்படுங் காரணக்குறி:
செல் – பகுதி, அம் – கருத்தாப் பொருள்விகுதி, வ் – எழுத்துப்பேறு.

“அறுசுவையுண்டி யமர்ந்தில்லா ளூட்ட, மறுசிகைநீக்கி யுண்டாரும் – வறிஞராய்ச்,
சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று, உண்டாக வைக்கற்பாற்றன்று,”

“முல்லை முகை சொரிந்தாற்போன் றினிய பாலடிசில் மகளிரேந்த, நல்ல கருணையால் நாள்வாயும்
பொற்கலத்துநயந் துண்டார்கள், அல்லலடைய அடகிடுமி னோட்டகத்தென்று அயில்வார்க்கண்டும்,
செல்வம் நமரங்காள் நினையன்மின் செய்தவமே நினைமின்கண்டீர்”,

“ஆமின்சுவை யவையாறோ டடிசிலுண்டார்ந்தபின், தூமென் மொழிமடவா ரிரக்கப் பின்னுந் துற்றுவார்,
ஈமி னெமக் கொரு துற்றென் றிடறுவ ராதலிற், கேண் மின் துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே” என்பன இங்கு நோக்கத்தக்கவை.

அருமை – சிறுமையின்மேலது. தினை – சிறுமைக்குக் காட்டுவதோ ரளவை.
போகாதே, ஏ – தேற்றத்தோடு இழிவு சிறப்பு.

செல்வ நிலையாமையையும், இன்ப நிலையாமையையும் முன்னிரண்டடியில் விளக்கினவர்,
மூன்றாமடியில் இளமை நிலையாமையையும், யாக்கை நிலையாமையையும் விளக்கினார்.
தியக்கம் – தியங்கு என்ற பகுதியின் தொழற்பெயர்; அம் – விகுதி, வலித்தல் – விகாரம்.
ஐ அமர் உந்தி அக்கம் குறுகாமுன் எனப் பதம் பிரித்து, கோழை (கண்டத்தில் வந்து சிக்கிக் கொண்டு
வெளிவருதற்பொருட்டுப்) போரைச் செலுத்தி இந்திரியங்கள் ஒடுங்காத முன்னே யென்று உரைத்தலு மொன்று.

செல்வம் இன்பம் இளமை யாக்கை நிலையாமை விளக்கி
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளம் எள்கிக்
கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி
வலம்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி

அக்கம் – அக்ஷ மென்ற வடசொல் லின்விகாரம்.
இனி, அக்கம் குறுகாமுன் – கண்பார்வை குறைதற்கு முன்னே எனினுமாம்.
அருந்தியும், உம் – இழிவுசிறப்பு. வாழ்மின்கள், கள் – விகுதிமேல் விகுதி.
மேல் ஆநந்தம் – மேன்மையான ஆநந்தத்தைத் தருவதாம் எனினுமாம்.

———–

நந்த மரங்கனை மா கடல் ஏழு நடுங்க எய்த
நந்த மரங்கனைப் பற்று நெஞ்சே வினை நையும் முன்கை
நந்த மரங்கனையார் மயல்போம் வரு நற் கதிவா
நந்த மரங்கனைவர்க்கும் எஞ்ஞான்று நரகில்லையே ———20–

நெஞ்சே – என் மனமே!
மரம் (ஏழும்) நந்த – ஏழு மராமரங்களும் அழியவும் (துளைபடவும்),
கனை மா கடல் ஏழும் நடுங்க – ஒலிக்கின்ற பெரிய ஏழு சமுத்திரங்களும் அஞ்சி நடுங்கவும்
(வெம்மையை ஆற்றாமல் கலங்கிக் குழம்பவும்),
ஏழும் -மரங்களிலும் கடல்களிலும் கூட்டிப் பொருள்
எய்த – அம்புதொடுத்த,
நம்தம் அரங்கனை – திருவரங்கத்து எம்பெருமானை (நம்பெருமாளை),
பற்று – சரணமடைவாய்; (அங்ஙனம் அடைந்தால்),
வினை நையும் – கருமங்கள் அழிந்து போம்;
முன் கை நந்து அமர் அங்கனையார் மயல் போம் – முன்னங்கைகளிற் சங்கு வளையல்கள் பொருந்திய
மாதர்கள் பக்கல் உண்டாகும் ஆசை மயக்கமும் ஒழியும்;
நல் கதி வாநம் வரும் – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் சித்திக்கும்;
தமர் அனைவர்க்கும் – (நமக்கே யன்றி) நம்மைச் சார்ந்தவரெல்லார்க்கும்,
எஞ்ஞான்றும் – எப்பொழுதும் நரகு இல்லை – நரகமடைதல் இல்லையாம்; (எ – று.) –
ஈற்று ஏகாரம் – தேற்றம். அங்கு – அசை.

உவர்நீர்க்கடலின் மேல் இராமபிரான் ஆக்நேயாஸ்த்ரந்தொடுக்கத் தொடங்கியவளவில், அதன் வெப்பத்திற்கு ஆற்றாது
ஏழு கடல்களும் கொதித்தனவென்பதை,
“அண்டமூலத்துக்கப்பாலாழியுங் கொதித்த தேழு,
தெண்டிரைக் கடலின் செய்கை செப்பி யென் தேவன் சென்னி,
பண்டைநாளிருந்த கங்கைநங்கையும் பதைத்தாள் பார்ப்பான்,
குண்டிகையிருந்தநீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்றதனால் அறிக.

“ஒற்றைச்சரஞ் சுட்ட வுட்கடல்போற் புறத்தோலமிட,
மற்றைக்கடல் வெந்த தெவ்வண்ணமோ மதமாவழைக்க,
அற்றைக்குதவுமரங்கர் வெங்கோபத்தை யஞ்சி யரன்,
கற்றைச்சடையினிடையே வெதும்பினள் கங்கையுமே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

‘ஏழும்’ என்பதை ‘மரம்’ என்பதனோடும் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
பற்றுதல் – இடைவிடாது நினைத்தல்.
நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதலால், ‘வினை’ எனப் பொதுப்படக் கூறினார்.
நைதல் – நசித்தல்.
‘முன்கை’ என்றதில், முன் என்பது – இடமுணர்த்தும்.
நந்து – சங்கு; அதனாலாகிய வளைக்குக் கருவியாகுபெயர்.
அங்கநா என்ற வடசொல், அங்கனை யென விகாரப்பட்டது; அச்சொல், அழகிய தனது அங்கங்களாற்
பிறரைத் தன்னிடம் சேர்ப்பவ ளென்று பொருள்படும்.

பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் வரிவடிவில் மிக்கவேறுபாடு இருப்பினும்,
ஒலிவடிவில் மிக்கவேறுபாடு இல்லாமைபற்றி, யமகம் திரிபு சிலேடை இவற்றில் நகரனகரங்களை
அபேதமாகக்கொண்டு அமைத்தல் மரபாதலால், ‘வானம்’ என்னவேண்டியவிடத்து ‘வாநம்’ எனப்பட்டது.
இங்ஙனம் யமகநயத்தின்பொருட்டு வரிவடிவின் வேறுபாடு கருதாது ஒலிவடிவொற்றுமையால் ஒன்றுக்குஒன்றாகக்
கொள்ளப்பட்ட எழுத்துக்கள், தடித்தவெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading