ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு–

ஸ்ரீ பிள்ளைப்பெருமாளையங்கார் வரலாறு

*அழகிய மணவாளதாச ரென்கிற திவ்வியகவி பிள்ளைப் பெருமாளை யங்கார்,
(கிருஷ்ணனுடைய குழந்தைத் திருநாமமாகிய பிள்ளைப் பெருமாளென்னும் பெயரை இடப் பெற்ற ஐயங்கா ரென்று
இப்பெயர்க்குப் பொருள் கூறுவர். ஐயங்காரென்பது, ஸ்ரீவைஷ்ணவப் பிராமணர்க்குக் குறியாக வழங்கும்.
அழகிய மணவாளனென்பது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி யிருக்கின்ற திருமாலின் திருநாமம்;
அப்பெருமானுக்கே அடியவராயிருந்ததனால், இவர் அழகிய மணவாளதாச ரெனப் பெயர் பெற்றனர்.)
சோழநாட்டில் திருமங்கை யென்னுந் திருப்பதியில் பிராமணவரு ணத்தில் ஸ்ரீவைஷ்ணவ சமயத்தில் அவதரித்து,
நல்லாசிரியர்பக்கல் தென் மொழியில் தொல்காப்பியம் முதலிய அரிய பெரிய இலக்கண நூல்களையும்
பழைய சங்கச் செய்யுள்களையும் அக்காலத்து வழங்கிய மற்றை நூல்களையும் ஐயந்திரிபற ஓதி உணர்ந்து,
இங்ஙனமே வடமொழியிலும் வேதம் வேதாங்கம் வேதாந்தம் முதலிய சகல கலைகளிலும் வல்லவராகி,
மற்றும் தமது ஸ்ரீவைஷ்ணவ சமயத்திற்கு உரிய சம்பிரதாயக் கிரந்தங்க ளெல்லாவற்றையுங் கற்று அவற்றிலும் அதிநிபுணராய்,
அடக்கம் முதலிய நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமையப் பெற்று, ஆழ்வார்களருளிச் செயல்களில் ஆழ்ந்து ஈடுபடுபவராய்,
திருவரங்கம் பெரியகோயிலி லெழுந்தருளி யிருக்கின்ற நம் பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகட்கு
மிக்க பக்திப் பேரன்புபூண்டு ஒழுகுமவராய் அமர்ந்திருந்தனர்.
(இவரை ‘தென்கலை வைணவர்’ என்பர், புலவர் புராண நூலுடையார் )

அந்நாளில், அந் நாட்டில் ஆண்டு கொண்டிருந்த அரசன்,
(இவ்வரசனைப் பெரிய திருமலை நாயக னென்பர் ஒரு சாரார்; அது, காலக் கணக்குக்கு ஒத்துவராது)
அவரது நற் குணங்களனைத்தையும் அறிந்து,
‘இக்குணங்களெல்லாம் ஒருங்கு அமைவது அருமை அருமை!’ என வியந்து, அவரைத் தனது சம்ஸ்தானத்திற்கு வரவழைத்து
அவர்க்குத் தனது இராஜாங்க காரியங்களிற் சிறந்ததோர் உத்தியோகங் கொடுத்து, அவரைத் தன் சமீபத்தில் வைத்துக் கொண்டனன்.
அவர் உத்தியோகத்தை மேற்கொண்டிருந்தபோதும் விஷ்ணு பக்தி விஞ்சி நின்றார்.

அப்பொழுது ஒருநாள், இராஜ சம்ஸ்தானத்தில் உத்தியோகம் நடத்து கின்றவர்களின் நடுவே தாமும் உடனிருந்து
காரியஞ்செய்துவருகிற அவர், தமது தோளி லணிந்த உத்தரீயத்தை இரண்டு கையிலுங்கொண்டு ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தனர்.
அது கண்ட பலரும் ‘ஐயங்காரே! நீர் நுமது உத்தரீயத்தை இங்ஙனம் ஏன் செய்தீர்?’ என வினவ,
அவர், ‘திருவரங்கம் பெரியகோயிலில் நம்பெருமாள் திருத்தேரி லெழுந்தருளித் திருவீதியிலுத்ஸவங்கண்டருளுகிறபோது
அருகு பிடித்த கைப்பந்தத்தின் சுவாலை தாவியதனாற் பற்றி யெரிகின்ற திருத்திரையை அவித்தேன்’ என்றார்.

அது கேட்டு அவர்கள் ‘கோயிலில் நம்பெருமாள் திருத்தேருத்ஸவங் கண்டருளு கிறது உமக்கு இங்ஙன் எங்ஙனே தெரிந்தது?’
என்று நகைத்து ‘ஏதோ இவர்க்கு இவ்வாறு திகைப்பு உண்டாயிருக்கிறது: இது இராஜ சேவைக்கு மிக விரோதமாகுமே!’ என்று
அவர் விஷயத்தில் இரக்கமுற்றவர்களாய், நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். இது நிற்க;

கோயிலில் திருத் தேரிலே திருத் திரையிற் பந்தத்தின் சுவாலை தாவி யெரியும் போது அருகிற் பெருமாளைச் சேவித்து நின்ற
ஐயங்கார் கைகளால் திரையைத் தேய்த்துத் தீயை அவித்திட்டதாக அர்ச்சகர் முதலிய சந்நிதி கைங்கரியபரர்கள் கண்டு
உடனே தோஷ பரிகாரஞ்செய்து திருத் தேருத்ஸவத்தை நடத்தினார்கள்.

பின்பு இவ்வரலாறுகளைச் செவி யுற்றறிந்த அரசன் ஆச்சரிய பரவசனாய் ஐயங்காரை நோக்கி
‘திருத்தேருத்ஸவத்திற்கு எங்ஙனே போயினீர்!’ என்ன,
ஐயங்கார் ‘எனக்கு மாநஸாநுபவமே யல்லது கோயிலுக்குப் போனதில்லை’ என,
அரசன் ‘ரதோத்ஸவத்தினன்றுநீர் அங்கு இருந்ததாகப் பலர் சொல்வது பொய்யோ?’ என்ன,
அப்போது இவர் இங்கிருந்தபடியே உத்தரீயத்தை ‘கிருஷ்ண கிருஷ்ண’ என்று தேய்த்தது கண்ட சிலர்
‘இவர் அப்பொழுது இங்கே தான் இருந்தனர்’ என்று உண்மை கூற,

அரசன் ‘நன்று!’ என்று அத் தெய்விகத் திருவருட் செயலைக் குறித்து ஆச்சரியப்பட்டது மன்றி அன்றை யிரவு நித்திரையில்
தான் நம்பெருமாள் சந்நிதிக்குப் போனதாகவும், தென் திருக்காவேரியில் ஐயங்கார் நீராட்டஞ்செய்து நிற்கக் கண்டு
அவருடனே சந்நிதிக்குப் போய்ப் பெரிய பெருமாளைச் சேவித்து மீளும் போது ஐயங்காரைக் காணாது மயங்கியதாகவுங் கனாக் கண்டு,
கண் விழித்து, பொழுது விடிந்தவுடனே ஐயங்காரை வருவித்து,
‘நீர் மகாநுபாவரும் நம் பெருமாளுக்கு அந்தரங்க பக்தருமாக இருக்கின்றதனால், இனி என்னிடம்
உத்தியோகஞ்செய்தற்குச் சிறிதுந்தக்கவரல்லீர்; அடியேன் இதுவரையிலுந் தேவரீர் பெருமையை அறியாது செய்த அபராதங்களை
யெல்லாம் பொறுத்து, அடியேன் செய்யவேண்டும் பணிவிடையை நியமித்தருளவேண்டும்’ என்று வேண்ட,
ஐயங்கார் ‘பெரியகோயிலில் எனக்கு நிரந்தரவாசங்கிடைக்கும்படி செய்யவேண்டும்’ என்ன,
அரசன் அன்றுதொடங்கிக் கோயிலில் அவர்க்கு ஓர் இருப்பிடம் அமைப்பித்து,
தளிகைப் பிரசாதமும் அவர்க்குக் கிடைக்குமாறு செய்து அனுப்பி விட்டனன்.

அவரும், அவ்வாறே எழுந்தருளியிருந்து, திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திருவரங்கக்கலம்பகம்,
ஸ்ரீ ரங்கநாயகரூசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி என்னும்
எட்டு நூல்களையும் (இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார்பிரபந்தம்’ எனவும் வழங்கும் )
பரப் பிரஹ்ம விவேகம் முதலிய பல நூல்களையும் அருளிச்செய்து, பலநாள் வாழ்ந்திருந்தனர்.

இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு வரலாறு வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப் பெருமானை யன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந்தொழாத மனவுறுதியுடையவராய்,
அப் பரமன் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடிய பொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன்
இவரது கனவில் தோன்றி ‘வேங்கடத்தின் விஷயமாகச் சிலபிரபந்தம்பாடுக’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் ‘அரங்கனைப் பாடிய வாயாற் *குரங்கனைப் பாடேன்’ என்றுகூறி மறுக்க,
(திருவேங்கடமுடையானைக் குரங்கனென்றது, குரங்குகளுடன் மலையில் வாழ்தலால்;
“மந்தியாய் வடவேங்கடமாமலை,” “வானரமும் வேடுமுடை வேங்கடம்” என்றார் ஆழ்வார்களும்.
குரங்குகள் தங்களுக்கு என்று வசிக்கும் இடம் இல்லாமல் கிளைக்கு கிளை தாவுவது போல்
ஆஸ்ரிதர்களைப் பிடிக்க முயன்று அவர்கள் திரு உள்ளம் தேடி திரிபவன் இவனே என்றவாறு )

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேத புத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிக வருந்திய இவர் அதன்காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம்
தீருமாறு உடனே திருவேங்கடமாலை திருவேங்கடத்தந்தாதி என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,
அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
(திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவை சாதித்த இடம் – கோயிலில் சலவைக் கல்மண்டபப் பிராகாரமென்கிற
உட் பிரகாரத்தில் தென் கிழக்குப்பக்கத்தில் என்பர் )
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக
அழகரந்தாதி பாடி, அப்பால் தமது பேத புத்தி யொழிந்தமை நன்கு விளங்க நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி பாடினர்.

பரமத நிரஸநம் பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ் செய்தற் பொருட்டு இவர் பாடிய பாடல்களின் தொகுதியே,
பரப் பிரஹ்ம விவேக மெனப்படுவது.

விசுவரூப தரிசந பசு சம்வாதமென்னும் மறுபெயரை யுடைய பரப்ரஹ்ம விவேக மென்னும் நூலின் உரைத் தொடக்கத்தில்
அந்நூலின் வரலாற்றைக் குறித்து எழுதியுள்ள விவரத்தை அடியிற் காண்க:-

“திருவரங்கத்தமுதனார் திருப் பேரனாராகிய அழகிய மணவாளதாச ரென்கிற திவ்விய கவி பிள்ளைப் பெருமாளை யங்கார்
நம் பெருமாள் முதலிய சில திவ்விய தேசப்பெருமாள் களின் மீது தமிழ்ப் பிரபந்தங்கள் பல செய்தருளுங்காலத்தில்,
தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுவல்ல சிறந்த புலவர்கள் பலரும் இவருடைய கவிகளிற்
சொல் நோக்கு பொருள் நோக்கு முதலியவற்றைக் கண்டுங் கேட்டுங் கொண்டாடுவதை ஆனைக் காவிலிருக்கும்
ஆகமவாதிகள் கேள்விப்பட்டு ‘இப் படிப்பட்ட வித்துவானால் நம்முடைய ஜம்புகேசுவரச் சிவபெருமான்
மீது ஒரு பிரபந்தம் பாடுவித்துக்கொள்ளவேண்டும்’ என்னுங் கருத்துடையவர்களாய்
ஒருநாள் இவருடைய திருமாளிகையில் வந்து தங்கள்கருத்தை வெளியிட, அதுகேட்டருளி,

திரிகரணத்தாலுந் தேவ தாந்தரத்தைப் பற்றற விட்ட சுத்த சத்துவ தொண்டக் குல ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியாகிய ஐயங்கார்
புன்னகை கொண்டு ‘யாம் அரங்கனைப்பாடின வாயினால் மற்றொரு *குருங்கனைப் பாடுவதில்லையே’ எனத்
திருவாய் மலர்ந்தருள,

(குரங்கம் – மான்: வடசொல்; அதனை இடக்கையிலேந்தியுள்ளவன், குரங்கன்: எனவே, சிவபிரானாம்.
அன்றி, குரங்குமுகமுள்ள நந்திகேசுரனை அடிமையாகவுடையனாதல்பற்றியும்,
அநுமானாக அவதரித்தவ னாதல்பற்றியும், சிவபிரானைக் குரங்க னென்றன ரென்னலாம்.
கு – குற்சிதமான, ரங்கன் – அம்பலத்தையுடையான் என்றுங் கூறுவர்)

கேட்டு, ‘குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுமவரைப் போல நம்முடைய பரமசிவத்தின் மீது
பாடல் பெற்றுக் கொள்ள வந்து குரங்கனென்னுஞ் சொல்லைப் பெற்றுக் கொண்டோமே’ என்று மனம் பொறாதவர்களாய்ச்
சடக்கென எழுந்திருந்து, ‘எவ்வகையினாலாவது உம்முடைய வாக்கினால் எங்கள் பரம சிவத்தின் மீது
ஒரு பாடலாவது பெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று சபதங்கூறித் தங்களிருப்பிடத்திற்குப் போய் அதற்கு வகை தேடிக் கொண்டிருந்தனர்கள்.

இப்படியிருக்கச் செய்தே, கோயிலில் உதயத்தில் திருக் காப்பு நீக்கி நம்பெருமாளுக்குச் செய்யுங் கைங்கர்யமாகிய
விசுவ ரூபதரிசநஞ் செய்விக்கப் போகிற சமயத்திற் கொண்டு போய் அர்ச்சகர் சமர்ப்பிக்கிற பொருள்களில் ஒன்றாகிய
கபிலை யென்கிற பசுவானது ஒருநாள் ஆனைக்காவைச் சார்ந்த ஒருபுலத்தில் மேய அதை மேற்கூறிய ஆகமவாதிகள் பிடித்து
இதனால் தாங்கள் கொண்டகருத்தை ஈடேற்றுவித்துக் கொள்ளலாமென நினைத்துக் கட்டி வைத்தனர்கள்.

அன்று இராத்திரி கோயிலில் அர்ச்சகர் முதலாயினோர் விசுவரூப தரிசந பசுவைக் காணாமல் தேடிக் கொண்டு போகையில்,
ஆனைக்காவி லிருக்கக் கண்டு ஆகமவாதியர்களைப் பசுவைக் கொடுக்கும்படி கேட்க,
அவர்கள் ‘உங்களுடைய பிள்ளைப் பெருமாளையங்கார் வந்து கேட்டால் தருகிறோம்’ என்று சொல்ல,
அதுகேட்டு, விசுவரூப தரிசநத்துக்கு ப்ராதக் காலத்தில் வேண்டுமே யென்னும் எண்ணத்தினால்
அதை மறுத்து ஒன்றும் பேசாமல் ஒத்துக் கொண்டு, பரபரப்புடன் சென்று ஐயங்காரிடத்தில் விண்ணப்பஞ்செய்ய,

“மறந்தும்புறந்தொழாமாந்தர்” என்கிறபடியே அந்தப் பிரபந்நநிஷ்டாநுபவராகிய வைதிக வைஷ்ணவரானவர் அதுகேட்டருளி,
‘துஷ்கர்ம காலம் தவிர மற்றைக் காலத்தில் ருத்திர பூமியில் அடிவைப்பது கூடுமோ?
அன்றியும், அவ்வாலயத்திற் பிரவேசிப்பது வைதிக வைஷ்ணவனுக்குத் தக்கதன்று:
‘ஆனை துரத்தி வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே என்கிற பழமொழியையேனும் கேட்டதில்லையோ?
ஆதலால், அந்த ஆகமவாதியர்களைக் கோயிலிடத்தில் அழைத்துவாருங்கள்’ எனச் சொல்லினர்.

அவ்வாறே அந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆனைக்காவிற் சென்று அவர்களுக்குச் சொல்ல, எவ்வகையாலாயினும்
ஐயங்காரால் ஒருபாடல் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவர்களும்,
‘நம்முடைய எண்ணம் நிறைவேறுங் காலம் இதுதான்’ என்று அதற்கு ஒத்துக்கொண்டு,
அதிக சந்தோஷத்தோடு அக் கபிலையையும் ஓட்டிக்கொண்டு, ஜயவிஜயர்கள் எழுந்தருளியிருக்கும்
சந்தநு மகாராஜமண்டபத்தில் வந்து சேர்ந்தனர்கள்.

ஐயங்காரும் அவ்விடத்தில் எழுந்தருளி, ‘கபிலையை விடுவதற்கு உங்களுடைய கருத்து ஏது?’ என்று கேட்டருள,
அவர்கள் ‘உம்முடைய வாக்கால் ஜம்புகேசுரச்சிவபெருமானாகிய எங்கள் தெய்வத்தின் மீது ஒருபாடல் பாடித் தருவீரேல்,
விசுவரூப தரிசனப் பசுவை நாங்கள் விடுவதற்கு யாதோராடங்கமு மில்லை’ என்று சொல்லினர்.
“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்” என்கிற குறளின்படி
அவர்கள் சொன்னதற்கு இணங்கினவரைப் போல நடித்து ஐயங்கார்
‘நம்பெருமாளுக்கு விசுவரூப தரிசனத்திற்கு மற்றாநாள் பிராதக் காலத்தில் ஆடங்கமாகிறபடியால்,
அப்பசுவை விடுவீர்களாகில், உடனே யாம் பாடுகிறோம்’ என,
‘எங்கள் சிவபெருமான்விஷயமாக நீர்பாடுவது யதார்த்தமாகில், அப்பாட்டில் இரண்டொரு சீரையேனும் முன்னே,
சொல்லுவீராகில் பசுவை விடுகிறோம்’ என்று அவர்கள் சொல்ல,
ஐயங்காரும் புன்னகைகொண்டு அவ்வாறே “மங்கை பாகன்” என்று முதலிரண்டு சீரை அருளிச் செய்த மாத்திரத்தில்,
அப்பசுவை விட்டனர்கள்.

உடனே ஐயங்காரும் முன் தாம் சொன்ன சீரைத் தொடங்கி,

“மங்கைபாகன் சடையில்வைத்த கங்கை யார்பதத்துநீர்
வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
செங்கையா லிரந்தவன் கபால மாரகற்றினார்
செய்யதாளின்மல ரரன்சிரத்தி லான தில்லையோ
வெங்கண்வேழ மூலமென்ன வந்த துங்கள்தேவனோ
வீறுவாணனமரி லன்று விறலழிந்த தில்லையோ
அங்கண்ஞால முண்டபோது வெள்ளிவெற்பகன்றதோ
ஆதலா லரங்கனன்றி வேறுதெய்வ மில்லையே.

ஆதலால், சீவகோடியிற் சார்ந்தவரேயொழிய உங்கள் தேவதை பரமாத்மா வல்லர்” என்று இச்செய்யுளைச் சொல்லி
‘உலகத்துக்குப் பலதெய்வங்கள் உண்டோ? ஒரு தெய்வமேயாம்; அத்தெய்வம் திருவரங்கனே யல்லாமல் வேறில்லை’ என,

அது கேட்டு அவ்வாகமவாதியர்கள் ‘கிணறுவெட்டப்பூதம் புறப்பட்டாற்போல் இது என்ன விபரீதமாய் முடிந்ததே!’ என்று
சினங்கொண்டு அந்த ஆகமவாதிகளுக்குட் சிறந்த நிஷ்டாநுபவர்களாகிய சிலவித்வான்கள் வேதவிருத்தமாகிய
ஆகமபுராணங்களைக்கொண்டு புலவர் பெருமானாகிய ஐயங்காரோடு வாதுசெய்யத் தொடங்கினர்கள்.

அவ்வாதி சைவவித்வான்கள் கேட்ட வினாவுக்கு விடை சொல்லியருளிய உத்தரங்களைப் பின்னுள்ளோரும் தெரிந்துகொள்ளும்படி
பரமகாருணிகராகிய ஐயங்கார் வெள்ளைப்பாவாற் கூறினார்.
ஆதிசைவசமயநிஷ்டாநுபவர்களாகிய வித்துவான்கள் சொல்லிக் கொண்டுவந்த பிரச்நைகளுக்கு
வடமொழியிலும் தென்மொழியிலும் தெய்வப்புலமையுள்ள வீரவைஷ்ணவசிகாமணியாகிய ஐயங்கார் அருளிச்செய்த
விடைகளை மறுத்துச்சொல்ல ஒன்றுந் தோன்றாமல் அவ்வாதியர்கள் ‘ஓம்’ என்று தங்கள்தங்களிருப்பிடத்துக்குச் சென்றனர்கள்.”

‘திருநறையூர் நம்பி மேக விடு தூது’ என்றநூலும் இவர்செய்த தென்பர்.

இவர்செய்தனவாகத் தனிப்பாடல்களும் சில வழங்குகின்றன.

பின்பு இவர் ஒருநாள் தமது திருவடிகளிற் சம்பந்த முடையவர்களை நோக்கி
‘நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்’ என்று சொல்லி அப்படியே சக்கரவர்த்தித் திருமகனைச் சேவித்துக்கொண்டு
ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழ,
அது விழுந்ததனாலாகிய துன்பத்துடனே இவர்

“துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
அளவி னெடுமூச்சு மாச்சே – முளரிக்
கரங்கால் குளிர்ந்ததே கண்ணும் பஞ்சாச்சே
இரங்கா யரங்கா வினி ”

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப் பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்;
இது, இவர் செய்துள்ள நூல்களால் இனிது விளங்கும்:
அன்றியும், ‘திவ்வியகவி’ என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும்.
இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம் – வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும்,
விருத்தம்பாட வல்ல கம்பரும், அந்தாதிக்கு எடுத்த ஒட்டக்கூத்தரும்,
கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும்,
சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினை யுடையது.

இங்ஙன மிருக்க, ஒருசாரார் ‘ஐயங்கார் அம்மானையில் அடி சறுக்கினார்’ என்று குறை கூறுவது,
சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள “தேனமருஞ்சோலை” என்ற தொடக்கத்து அம்மானைச் செய்யுளினது ஈற்றடியின்
பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப் பொருள் நயத்தையும் சரித்திர வமைப்பையும் ஆழ்ந்த கருத்தையும் ஊன்றி நோக்குமிடத்து,
அங்ஙனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையே யா மென்பது தெற்றென விளங்கும்:

அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினா லாகியதேபோலும;
அந்த அம்மானைச் செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும்.
இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களெல்லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய
ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும்,
நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மாத்திரமேயன்றி,
“சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய” மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்ணவவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீ பகவத்ராமாநுஜாசார்யரென்கிற
ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய ஸ்ரீபராசரபட்டரது சிஷ்ய ராதலாலும்,
அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும்,
இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்ன ராகின்றது;
(இப்பொழுது நிகழ்கிற சாலிசகம் – 1836.)
இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்தி லாசிரயித்தவர்களுட் பிரதானரும்,
இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும்
திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில் வருகிற புலவர்புராணச் செய்யுள்கள் இங்குநோக்கத் தக்கவை:-

(1) ” தென்கலைவயிணவன் செகமெலாம்புக
ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம்
நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான்.

(2) மருவழகியமணவாளதாசனென்
றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற்
பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.

(3) செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா
தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான்.

(4) தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து
ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
ஏனையபாடலொன்றேனுமோதிலான்
பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். ”

இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர் புராணமுடையார்
கூறும் சமாதானத்தை அடியில் வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:-

(15) “சிவனைநிந்தனைசெய்தவனேயென
இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார்
அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று
உவந்துபாடியபாக்களுமுள்ளவே.

(16) என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே
நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
அன்றென்றோதவொண்ணாததனாலவன்
குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே.

(17) சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை
வைவதொப்ப வயிணவரிற்சிலர்
மைவனக்களவள்ளலைநிந்தனை
செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால்.

(23) திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம்
அரியின்மேற்கவிபாடிடுமந்தணன்
கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும்
பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே.

(24) வளங்குலாந் துறைமங்கலவாசன்போல்
உளங்கனன்றரியன்பரொருவரும்
களங்கறுத்தவராயிரர்க்காதுதல்
விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. ”

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading