ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு–

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு : ஒரு முன்னுரை

கொண்டல் வண்ணனைக் குழவியாய்க் கண்டு குதூகலித்துப் பாடிய
விட்டு சித்தரின் மகள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள்.
குழல் இனிது, யாழ் இனிது, மழழைச் சொல் அமுதினிது என்று இறைவனைப் பிள்ளையாய்க் கண்டு
ஆனந்தித்துப் பாடிய பெரியாழ்வாழ்வருக்கு – உண்மையான தூண்டுதல் (inspiration)
ஆண்டாள் என்ற இளம் சிட்டிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்.

பழந்தமிழ்நூல் வெளியீடுகளுள் பத்துப்பாட்டு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய நூற்பதிப்புகளுக்கு
ஆழ்வார்திருநகரி ஏட்டுப் பிரதிகள் மிகவும் உபயோகமாயிருந்தன என்பது உ.வே.சாவின் கூற்று.
அத்தகைய ஆழ்வார்திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், “கோதை நாச்சியார் தாலாட்டு”.
ஏடுகளில் கண்டபடி 1928-ல் ஆழ்வர்திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

வைணவம் என்பதின் மறு பெயர் அன்பு, பரிவு, காதல் என்பவை.
முதல் மூவருக்கிடையில் இடித்துப் பழகும் தோழனாக நாராணன் இடையில் புகுந்தான்.
வாள் கொண்டு போர் செய்யும் வேல் மாந்தர் கள்ளத் தொழில் செய்த போது, மறைமகன் திருடனாக வந்து வழி மறைத்தான்,
பறைமகன் ஒருவன் பரம் பொருளைத் தொழத்தடையான போது மறை சொல்லும் நூலார் தலை மேல்
தூக்க வைத்தான் நம் பெருமாளான, “நீதி வானவன்!”,
கள்ளமற்ற விட்டு சித்தர் உள்ளம் கவர்ந்து வெண்ணெய் உண்ட வாயனாக வளைய வந்தான்
வீட்டு முற்றத்தில் மணிவண்ணன்,

ஆனால், அவர் மகள்கோதைக்கோ, “மானிடற்கு மணமென்ற பேச்சுப் படின் மரித்திடுவேன்” எனப்
பேச வைத்து மணவாளனாக வந்து உய்யக் கொண்டான்.
இப்படி வீட்டுக் கொல்லையில் வளைய வரும் கன்று போல், கை கொண்டு நெருடும் அன்பர்க்கு கழுத்தை தரும்
பசும் கன்று போல் அன்று முதல் இன்றுவரை வளைய, வளைய வருகிறான்,

“பண்டமெல்லாம் சேர்த்து வைத்துப் பால் வாங்கி மோர் வாங்கிப்,
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து,
நண்பனாய்,மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்”

வளைய, வளைய வருகிறான் மாதவன்.
இத்தனைச் சுகம் தரும் வைணவத்தின் மறுபெயர் அன்பு, காதல், பரிவு என்றால் மிகையோ?

எனவே பரிவுடன் வரும் தாலாட்டில் வைணவத்தின் மெல்லிசை, குழல் போல் ஒலிப்பது தவறோ? தவறில்லை
என்று சொல்லித் தாலாட்டுப் பாடினர் முன்னைய மாந்தர்.
கண்ணனுக்குத் தாலாட்டு பலபாடி வைத்து விட்டார் புதுவைப் பட்டர் என்று சொல்லி,
கோதைக்குத் தாலாட்டுப்பாடினர் கொங்கைப் பெண்டிர்!

இத்தாலாட்டு பல வைபவங்கள் கொண்டது.
புதுவை நகர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு முதலில் சொல்லப்படுகிறது.

கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கக்
கரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க 20

மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ளத்
தேன் கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் 21

புன்னையும் பூக்கப் புறத்தே கிளி கூவ
அன்னமும் பேசும் அழகான தென் புதுவை 26

கன்னல் தமிழர் வாழ்வுடன் இணைந்த ஒரு பயிர். கன்னல் மொழிப் பெண்டிர் நிறைந்த தமிழ் மண்ணில்
கன்னல் “கல, கலவென”ப் பேசுவதாகச் சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!
கண்ணன் ஊரில் கரும்புகள் குழல் ஊதுவதும் இயல்பான ஒன்றே!
கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்ற பெருமிதத்தில்
தேன் கூடுகள் கூட நெஞ்சு விம்மி தேன் பாய்ச்சுவது கவிச் சுவையின் உச்சம்!!

அடுத்து, கோதை நாச்சியாரின் திரு அவதாரம்!
கிரேக்க, ரோம பழம் தொன்மங்களை விஞ்சும் தொன்மங்கள் (myth) தமிழில் உண்டு என்பதற்கு
கோதையின் கதை நல்ல உதாரணம். பூமி விண்டு கோதை பிறக்கிறாள். மண்ணின் மாது அவள்.
அப்போது விஷ்ணுசித்தன்

அலர்மகளைத் தானெடுத்துச்செப்பமுடன்
“கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்”!! 35

“அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும்,
மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்றார்!!! 36

சீதை போல் பூமியின் புதல்வியான கோதை,
கண்விழித்துச் சொல்லும் முதற் சொல்,
“மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி” என்பது!

இவள் துளசியின் புதல்வி! காளிதாசன் சொல்லாத கவி நயம் ஒரு எளிய தமிழ்த் தாலாட்டில் கிடைப்பது,
நாம் செய்த பாக்கியம்! வைணவத் தொன்மங்களில், குரு பரம்பரைக் கதைகளில் மிகச் சாதாரணமாக
பக்தனுக்கும், பரம்பொருளுக்கும் உரையாடல் நடக்கும்.
இது, இந்த நூற்றாண்டு “கோபல்ல கிராமம்” வரை கடைபிடிக்கப் படுகிறது
(கோபல்ல கிராமத்தின் மூத்த குடிகள் பரம வைஷ்ணவர்கள்).
அதனால் தான், திருவரங்கத்துயில் பரம்பொருள், “நம் பெருமாள்” என்றழைக்கப் படுகிறார்.
நம் பெருமாள், நம்மாழ்வார், நம் ஜீயர், எம்பெருமானார் என்று இவர்கள் கொண்டாடும் பந்தம் பக்தனைப் பிச்சேற்றுவது!!
அந்தச் சம்பிரதாயம் மாறாமல் விட்டு சித்தர் பெருமாளிடம் போய் பெண்வந்த காரணம் கேட்டுபேரும் வைத்து வருகிறார்.

பெண் கொணர்ந்த விஷ்ணு சித்தன் பெருமாளைத் தானோக்கிப்
‘பெண் வந்த காரணமென் பெருமாளே சொல்லு” மென்றார் 39

அப்போது மணிவண்ணன்

‘அழகான பெண்ணுனக்குச்செப்பமுடன்
வந்த திருக்கோதை நாயகியார் 40

என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை
உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்’ என்றார். 41

விட்டு சித்தர், கண்ணனுக்குப் பாடிய வரிகளை ஒரு வைணவ உரிமையுடன் கோதைக்குப் பாடுவதாகச் சொல்வது,
“தொண்டீர்! எல்லீரும் வாரீர், தொழுது, தொழுது நின்றார்த்தும்!” என்ற நம்மாழ்வாரின் எட்டாம் நூற்றாண்டு
வைணவ அறைகூவல் (an address of Vaishnava congress) இன்றளவும் கேட்பதன் அறிகுறியென்றே
கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அவரே சொல்வது போல்,

“தடங்கடல் பள்ளிப்பெருமான், தன்னுடைப் பூதங்களேயாய் (பூதம்=பக்தன்)
கிடந்தும், இருந்தும், எழுந்தும், கீதம் பலபலபாடி, நடந்தும், பரந்தும், குனித்தும் நாடகம் செய்கின்றனவே” –
கடல் வண்ணனே, பக்தர்கள் உருவில்வந்து நாடகம் ஆடுவதாகச் சொல்வதால், கண்ணனுக்குப் பாடிய சொல்
கோதைக்கும் பொருந்துவது இயல்பானதே. அந்த உரிமையின் குரல் இத்தாலாட்டு முழுவதும் கேட்கிறது.

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் 44

பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, 45

ஒரே பாட்டில் ஒரு பிரபஞ்ச பந்தத்தைக் காட்ட முடியுமெனில் அது தாலாட்டில் தான் முடியும் என்பதற்கு
கீழ்க்காணும் வரிகளே சான்று;

அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ. 46

பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, 47

இப்படிப் பாசமுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லதொரு தமிழ்க் குடியாக வராமல் பின் என்ன செய்யும்?
கம்பனும், வள்ளுவனும், பாரதியும் அணி செய்த தமிழுக்குப் பெண்மை மணம் தந்தவள் ஆண்டாள்.
அவள் இல்லையேல் இன்று மார்கழி நோன்பு இல்லை. ஒரு அழகிய திருப்பாவையில்லை.
நாச்சியார்மொழியில் இல்லாத பெண்மையை வேறெங்கு காணமுடியும்?
கோதை தந்த தமிழுக்கு, தமிழ்சொல்லும் தாலாட்டுதான், இத்தாலாட்டு :

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, 58

“பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே”!! 59

அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, 60

பிஞ்சிலே பழுத்த தமிழ் புலவர்கள் இருவர். ஒருவர் கந்தனின் பெண் தோழி! அதாவது ஒளவை!!
இரண்டாவது கண்ணனின் பெண் தோழி ஆண்டாள். இளமையிலேயே மெய்ஞானம் எய்தியவர்கள்.
முன்னவர் உடல் மாற்றம் வேண்டிப் பெற்றார். இரண்டாமவர் எந்த மாற்றமுமின்றி இளமையுடன் அரங்கனுடன் கலந்தார்.
ஒளவை, காரைக்கால் அம்மையார், அக்கம்மா தேவியார் இவர்கள் பெண்ணின் உடல் ஆன்மீகத்திற்குத் தடை
(ஆண் பார்வை தோஷத்தால் 🙂 என்று கருதி பெளதீக உடல் மாற்றம் வேண்டி நின்றனர்.
ஆண்டாளோ, சிங்கத்திற்கு வைத்த உணவை சிறு குறு நரி கொண்டு செல்ல முடியுமோ வென்ற மனோதிடத்தில்,
பாரதி சொல்லிய”ரெளத்திரம் பழகி” அக்கினிக் குஞ்சு போல் வாழ்ந்து நினைத்தை சாதித்தவள்.

வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று.”
உய்யும் பெருமாள் உயர் சோலை மலையழகர் 95

இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!!
அவர்கள்* தம் பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் 96*

மணம் கேட்டு வந்தவர்கள் மானிடர்க்குப் பதி என்பவன் இறைவன் ஒருவன்தான்.
நாம் எல்லோரும் அவன் தோட்டத்துக் கோபியர்கள் என்னும் தத்துவத்தை விளம்பும் வரிகள் இவை.
சூடிக் கொடுக்கும் திடம் தமிழ் வரலாற்றில் ஆண்டாள் ஒருவளுக்குக்குத் தான் இருந்திருக்கிறது.
ஒரு பக்தை சூடிக் கொடுத்த மாலையைப் பரிவுடன் ஏற்கிறான் பரந்தாமன்.
இது பக்தியின் சக்தியை அவனிக்குச் சொன்ன முக்தி இரகசியமாகும்.
இது காட்டுத்தீ போல் இந்தியா முழுதும் பரவி, உலக மாந்தரை உய்யக் கொண்டுள்ளது.

அடுத்து மார்கழி நோன்பு பற்றிப் பேசுகிறது தாலாட்டு.

“தூயோமாய் வந்தோம்” என்னும்படிஉள்ளத் தூய்மைக்கு வித்திடுவது நோன்பு ஆகும்.
நோன்பு கழித்த பின் தான் இறைத் தரிசனம் சாத்தியமாகிறது.
அது “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்னும் விரதம் மட்டுமன்று,
“செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்” என்பதும் அடங்கும்.
உடலையும்,மனதையும் சுத்தப் படுத்தும் போது இறையொளி சாத்தியப் படுகிறது.

அடுத்து, கோதைக் கல்யாண வைபவம் பேசப்படுகிறது.
எளிமையின் மறு உருவான விட்டு சித்தரின் வாழ்வு பல திருப்பங்கள் கொண்டது.
பூவின் இனம் காணும் பட்டரின் வாய் வழியாய் கவிதையில் இனம் காண வைக்கிறான் பரந்தாமன்.
பிள்ளைத் தமிழை தமிழுக்குத் தரும் உள நோக்குடன்!! பிள்ளைத் தமிழ் பாடினால் போதாது என்று
பர தத்துவம் பேச வைத்து பொற்கிழி கொண்ட பிரானாக்கி,
‘ நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்பது போல்
கூடல் சனம் அத்தனைக்கும் அன்று வைகுந்த தரிசனம் அளிக்கிறான் இறைவன்.
பின் பிள்ளையற்ற பட்டருக்கு பிள்ளை விடாய் தீர்க்க ஆண்டாளைத் தந்துய்வித்தான்.
கொடுத்த பெண்ணை மணம் பெரும் வயதில் மறைத்து வைத்து,

ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர்சென்றெங்களய்யர்
திருவடியைத் தான்தொழுவார்!

ஆக, யசோதையின் பாவத்தில் பாடிய பட்டர்பிரானை உண்மையான தாயென்றே கருதி
அய்யரவர் திருவடியைத் திருவரங்கன் தொழுகின்றான்.
பாகவதன் திருப்பாதத் தூளியில் சுகம் காணும் பாகவதப் பிரியனான கீதாசிரியன்,
அத்தோடு நில்லாமல் அவர் தம் திருமகள் பாத மலரையும் தொடுகின்றான்.
முன்பு வந்து எல்லோர்க்கும் அருளியது போதாது என்று பட்டர் பிரான் சம்மந்தமுடைய அனைவருக்கும்
மணவாளனாக வந்து மீண்டுமொரு முறை காட்சி யளிக்கின்றான். (வைணவ சம்மந்தம் பரமுக்தி யளிக்கும் என்பது வாக்கு)

நம்மை யுடையவன் நாராயணன் நம்பி 159

செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி
அம்மி மிதித்து அருந்ததியும்தான்பார்த்து 160

அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப்
பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை…………

நாராணனுக்குப் பெருமை “நம்மை உடைத்தல்” என்று சொல்லும் வரிகளை வேறு எந்த நெறியிலும் காணப்பெறோம்?

செம்மையுடைய திருக்கையால் அம்மிமிதித்து, அங்கைமேல் கைவைத்து பொரி முகர்ந்த சேதி வேறு எங்கேணும் உண்டோ?

பரம் பொருளை “தாழ்த்தி அம்மி மிதி”க்க வைத்த திறம் தமிழுக்கு உண்டு ஆரியத்திற்கு உண்டோ?

“அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது.”

என்று சொல்வதாகப் பேசுகிறது கோதை தாலாட்டு. இதுதான் எவ்வளவு உண்மை!!

ஆண்டாள், “வாரணமாயிரம்” என்று தொடங்கும் பாடல்களில் திருமண வைபவத்தைப் பதிவு செய்கிறாள்.
அதில் விட்டுப் போன சில சேதிகள் (details) இத்தாலாட்டில் இடம் பெறுகிறது.
தாயின் சொல் அமுது என்பது இப்பாட்டில் தெரிகிறது. செந்தமிழ், தாய் சொல் பட்டு மென்மையாகிப் போகிறது.

சீராரு மெங்கள் விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில்
ஏராருந் துளசி முல்லை யேகமாய்த் தானும்வச்சு 31

வச்ச பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய் துகந்திருக்கும் வேளையிலே; 32

என்று கிராமத்து மக்கள் மொழியில் தாலாட்டு போகிறது.

மேலும் சில உதாரணங்கள்:

நோம்பு (நோன்பு);
நோன்பு நேத்தியாய் (நேர்த்தியாய்);
மாயவனைப் போத்தி (போற்றி)ஆரு மனுப்பாமல் (யாரும் அனுப்பாமல்);
மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் (வைத்திருந்தால்)
கைத்தலம் பத்திக் கலந்து (கைத்தலம் பற்றி);
சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க.- தாமசம்? தாமதம்!!
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓத !!

நாட்டுப் பாடல்களுக்கான தனி மொழி இத்தாலாட்டிலும் ஒலிக்கிறது.

“ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!”

என்று விட்டு சித்தர் அன்று கதறியது இத்தாலாட்டின் வாயிலாக இன்று நம் நெஞ்சைக்கலக்குகிறது.
“அய்யர் இணையடியைத்” என்று சொல்வதிலிருந்து இப் பாடல் இயற்றப் பட்டகாலத்தில்
ஐயங்கார் என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது.
இல்லையெனில் பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை ஐயங்கார் என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும்.

1928-ல் பதிப்பிக்கப் பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001).
இவ்வோலைச் சுவடிபதிப்பிக்கப் பட்ட காலம் புத்தகத்தில் இல்லை.
ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர்காலத்தில் உருவானது என்று சொல்வர்.
அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?

“ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தான் வாழி
கோதையரும் வாழி கோயில்களும் தான் வாழி
சீதையரும் வாழி செக முழுதும் தான் வாழி.

————–

கோதை நாய்ச்சியார் தாலாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின்
வளர்ப்பு புதல்வியான ஆண்டாள் என்று அழைக்கப்படும் கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள்
எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
காப்புச் செய்யுள் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது.
இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்பு

சீரார்ந்த கோதையர் மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழ நிதம் பாடவே வேணுமென்று
காராந்த தென் புதுவைக் கண்ணன் திருக் கோயில்
ஏரார்ந்த சேனையர் கோன் இணையடியுங் காப்பாமே.

தென் புதுவை விட்டு சித்தன் திருவடியை நான் தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான் கூறத்
தெங்கமுகு மாவாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணி மகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான் செய்த பொற் கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத் தேரும்
ஆராதனத் தழகும் அம் மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான் துதிக்கக்
கச்சு முலை மாதர் கவிகள் பலர் பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனி விளங்கத்
தித்தியுடன் வீணை செக முழுதுந் தான் கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான் பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாடச் 25

செண்பகப்பூ வாசனைகள் திருக் கோயில் தான் வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர் தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம் போடக்
குன்று மணி மாடங்கள் கோபுரங்கள் தான் துலங்கச்
சென்று நெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடைபயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலை சொரியச் செங்குவளை தான் மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர் விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில் விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதி கொள்ள 35

தேன் குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந் நெல் விளையச் செக முழுதும் தான் செழிக்கக்
கன்னல் விளையக் கமுக மரம் தான் செழிக்க
வெம் புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும் மாரி பெய்து முழுச் சம்பாத் தான் விளையக்
கம்மாய்கள் தாம் பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழை யிடை பழுத்து வருக்கைப் பலாப் பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான் சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளிகூவ 45

அன்னமும் பேசும் அழகான தென் புதுவை
தலை யருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக் குளமும்
மலை யருவி பாயும் வயல் சூழ்ந்த தென் புதுவைப்
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும்
தவளமொளி முத்துத் தான் கொழிக்கும் தென் புதுவை 50

காவணங்கள் மேவிக் கதிரோன் தனை மறைக்கும்
பூவணங்கள் சூழ்ந்து புதுமை மணங்கமழும்
தென்னை மடல் விரியச் செங்கரும்பு முத்தீனப்
புன்னை முகிழ் விரியப் புதுவை வனந்தனிலே
சீராரு மெங்கள் விட்டு சித்தர் நந்தவனமதனில் 55

இளந்துளசி முல்லை ஏகமாய்த் தானும் வைத்து
வைத்த பயிர்களுக்கு வளரவே நீர் பாய்ச்சி
உச்சிதமாய்ப் பயிர்கள் செய்து உவந்திருக்கும் வேளையிலே
பூமிவிண்டு கேட்கப் புகழ் பெருகு விட்டுசித்தன்
பூமிவிண்ட தலம் பார்த்துப் போனார் காண் அவ்வேளை 60

ஆடித் திருப் பூரத்தில் அழகான துளசியின் கீழ்
நாடி யுதித்த நாயகியைச் சொன்னாரார்
அப்போது விட்டு சித்தன் அலர் மகளைத் தானெடுத்துச்
செப்பமுடன் கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்
அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கு 65

மெய்யார்ந்த தாயார் மேன்மைத் துளசி என்றாள்
அப் பேச்சுக் கேட்டு அவரும் பரவசமாய்ச்
செப்பமுடன் பெண்ணேந்தித் திருக் கோயில் தான் புகுந்து
புகுந்து மணிவண்ணன் பொன்னடிக் கீழ்ப் பெண்ணை விட்டு
ஊர்ந்து விளையாடி உலாவியே தான் திரிய 70

பெண் கொணர்ந்த விட்டுசித்தன் பெம்மானைத் தானோக்கி
பெண் வந்த காரணமென் பெம்மானே சொல்லுமென்றார்
அப்போது மணி வண்ணன் அழகான பெண்ணுனக்குச்
செப்பமுடன் வந்த திருக் கோதை நாயகியார்
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை 75

உந்தன் மனைக்கே உவந்து தான் செல்லுமென்றார்
சொன்ன மொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக்
கன்னல் மொழி விரசைக் கையிலே தான் கொடுக்க
அப்போது விரசையரும் அமுது முலை தான் கொடுக்கச்
செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு 80

மாணிக்கங் கட்டி வயிரமிடை கட்டி
ஆணிப் பொன் னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையே தாலேலோ
அன்னமே தேனே அழகே அருமயிலே 85

சொர்னமே! மானே! தோகையரே தாலேலோ
பொன்னே! புனமயிலே! பூங்குயிலே! மான்றுளிரே!
மின்னே! விளக்கொளியே! வேதமே! தாலேலோ,
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார் தம்மாவல்
பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ! 90

மலடி விரசை யென்று வையகத்தோர் சொன்ன
மலடுதனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ!
பூவனங்கள் சூழும் புதுவைப் புரிதனிலே
காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார்
கண்ணே யென் கண்மணியே! கற்பகமே தெள்ளமுதே! 95

பெண்ணே! திருமகளே! பேதையரே! தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனாபி டேகமே! தெள்ளமுதே!
வானோர் பணியும் மரகதமே! மா மகளே!
என் இடுக்கண் நீங்க ஈங்கு வந்த தெள்ளமுதே! 100

பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில் 105

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க ளோதி வென்று வந்த ஆழ்வார்க்குச்
சீதை போல் வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ! 110

பாமாலை யிட்டீர் பரமர்க்கு என்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதே!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்துப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தை தந்தை யென்று யியம்பும் பெரி யாழ்வார்க்கு 115

வந்து விடாய் தீர்த்தாய் மாதே நீ தாலேலோ!
பொய்கை முத லாழ்வார்க்குப் பூ மகளாய் வந்துதித்த
மை விழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாயன் உகந்து மணம் புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ! 120

சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச்
செல்வப் பெண்ணாய் வந்த திருமகளைச் சொன்னாரார்
நாரணனை விட்டுவென்று நம்புமெங்க ளாழ்வார்க்குக்
காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் 125

பிள்ளை விடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ!
பாகவத வர்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத்
தாக விடாய் தீர்த்த தங்கமே தாலேலோ!
தென் புதுவை வாழுந் திருவிட்டு சித்தனுக்கு
அன்புடனே வந்துதித்த அன்னமே! தாலேலோ! 130

சாத்திரங்கள் ஓதும் சத் புருட ராழ்வார்க்குத்
தோத்திரங்கள் செய்து துலங்க வந்த கண் மணியே!
வாழைகளுஞ் சூழ் புதுவை வாழு மெங்க ளாழ்வார்க்கு
ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே! தாலேலோ!
கன்னல்களுஞ் சூழ் புதுவை காக்கு மெங்க ளாழ்வார்க்குப் 135

பன்னு தமிழ் என்னாளும் பாட நல்ல நாயகமோ!
பல்லாண்டு பாடும் பட்டர் பிரா னாழ்வார்க்கு
நன்றாக வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்
எந்தாகந் தீர்த்து வேழேழு தலை முறைக்கும்
வந்தருளுஞ் செல்வ மங்கையரே தாலேலோ! 140

என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே
அன்றொருநாள் விட்டு சித்தன் அமுதுமலர் தொடுத்து வைக்கத்
தொடுத்து வைத்த மலரதனைச் சூடியே நிழல் பார்த்து
விடுத்து வைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய
அப்போது விட்டு சித்தர் அநுட்டான முதல் செய்து 145

எப்போதும் போல் கோவிலுக் கேகவே வேணுமென்று
தொடுத்து வைத்த மாலை தன்னைச் சுவாமிக்கே சாத்தவென்று
எடுத்துமே வாழ்வாரும் நோக்கையில் கிலேசங்கொண்டு
என்னரசி கோதை குழல் போல யிருக்குதென்று
கண்ணாலே கோதையரைக் கட்டியே தானதுக்கிப் 150

பின்பு வனம் புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து
அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச் சாத்த
அப்போது மணவாள ஆழ்வாரைத் தான் பார்த்து
எப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே!
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையுந் தான் கூப்பித் 155

துன்றி வளர் கோதையரும் சூட்டியே தானும் வைத்தாள்
அம் மாலை தள்ளி அழகான பூக் கொணர்ந்து
நன் மாலை கொண்டு நாமுமக்குச் சாத்த வந்தேன்
என்று சொல்ல, மணி வண்ணன் இன்பமாய்த் தான் கேட்டு,
நன்றாக வாழ்வாரே நானுமக்குச் சொல்லுகின்றேன் 160

உன் மகளும் பூச்சூடி ஒருக் கால் நிழல் பார்த்து
பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள்
அம்மாலை தன்னை ஆழ்வார் நீ ரெடுத்து வந்து
இம் மாலை சாத்தி யிருந்தீ ரிது வரைக்கும்
இன்று முதல் பூலோக மெல்லாருந் தாமறிய 165

அன்று மலர் கொய்து அழகாகத் தான் தொடுத்துக்
கோதை குழல் சூடிக் கொணர்வீர் நமக்கு நிதம்
கீத மேளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும்
இன்று முதல் சூடிக் கொடுத்தா ளிவள் பேரும்
நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான் பெறுவீர்! 170

என்றுரைக்க மணி வண்ண னேகினர் காண் ஆழ்வாரும்
சென்று வந்த மாளிகையில் சிறப்பா யிருந்து நிதம்
நீராட்டி மயிர் முடித்து நெடு வேற் கண் மை யெழுதிச்
சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் 175

சீரான வாழ்வாரைச் சிறப்பாகப் பெண் கேட்க
அப்போது விட்டு சித்தன் அன்பான கோதையரைச்
செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலை தான் கொடுத்து
உனக்குகந்த பிள்ளைக்கு உகந்தே மலர் சூடி
மனைக்கா வலனென்று மகிழ்ந்தேத்தி வாழும் என்றார் 180

அவ் வார்த்தை கேட்டு அழகான கோதையரும்
செவ்வான வார்த்தை யென்று திரும்பியே தானுரைப்பாள்
வையம் புகழய்யா மானிடவர் பதியென்று!
உய்யும் பெருமாள் உயர் சோலை மலை யழகர்
இவர்கள் பதி யன்றி இரண்டாம் பதியில்லை 185

அவர்கள் தமைத் தாமும் அனுப்பியே வையுமென்றார்
இவ் வார்த்தை கேட்டு இனத்தோர்க ளெல்லோரும்
செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள்
போனவுடன் விட்டுசித்தன் புன்னை புன மயிலே
ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார் 190

ஒப்பில்லா நோன்பு உகந்துதா னேற்கவென்று
மணி வண்ணனைத் தேடி மனக் கருத்தை யவர்க்குரைத்துப்
பணி செய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான் கேட்க
மகிழ்ந்து மணி வண்ணன் மகிழ்ந்து மறையோர்க்குப்
புகழ்ந்து தான் உத்தரவு பிரியமாய்த் தான் கொடுக்க 195

உத்தரவு வாங்கி உலகெல்லாந் தான் நிறைய
நித்தமோர் நோன்பு நேர்த்தியாய்த் தான் குளித்து
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து
மாயவனைப் போற்றி மணம் புணர வேணுமென்று
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை 200

சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான் பாடி
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூ மாலை
சூடிக் கொடுத்து தொழுது நினைந்திருக்க
மாயவனும் வாரார் மலர் மாலைகளுந் தாராமல்
ஆயன் முகங் காட்டாமல் ஆருமனுப்பாமல் 205

இப்படிச் செய்த பிழையே தென்று நானறியேன்
செப்புங்கள் தோழியரே! திங்கள் முகக் கன்னியரே,
தோழியருந் தாமுரைப்பார் துய்யவட வேங்கடவன்
ஆழியுடன் வந்து அழகாய் மணம் புணர்வான்
என்று சொல்லக் கோதையரு மிதயங் குழைந்து நிதம் 210

அன்றில் குயில் மேகங்கள் அரங்கருக்குத் தூது விட்டார்,
தூதுவிட்டு[ம்] வாராமல் துய்ய வட வேங்கடவன்
எதிரிருந்து கொண்டார் இனி மேல் மனஞ்சகியேன்
என்று மனம் நொந்து இருக்க நிதங் கோதையரும்
சென்று வந்து தோழியர்கள் செப்பவே யாழ்வார்க்கு 215

அச்சேதி கேட்டு ஆழ்வார் நடு நடுங்கிச்
சென்று வந்து பிள்ளை விடாய் தீர்த்த திருமகட்கு
மன்றலுஞ் செய்யாமல் வைத்திருந்தால் மோசம் வரும்
என்று திருமகளை எடுத்துச் சிவிகை வைத்துச்
சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று 220

நல்ல நாள் பார்த்து நடந்து திருவரங்கம்
எல்லையுங் கிட்டி இருந்து தென் காவிரியில்
நீராட்டஞ் செய்து நொடிப் போதில் செபமுஞ்செய்து
சீராட்ட வந்து திரு மகளைத் தான்தேட
பல்லக்கில் காணாமல் பைந்தொடியுங் காணாமல் 225

எல்லோருங் காணாமல் என் மகளை யாரெடுத்தார்
நின்று மனம் நொந்து நாற்றிசையும் தான் தேடிச்
சென்று திருவரங்கந் திருக் கோயில் தான் புகுந்து
ஒரு மனையா ளுடனேயே உலகளந்த மாயவனும்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய் 230

என்று சொல்ல வாழ்வாரு மிரங்கித் திருவரங்கர்
சென்றுங்களையர் திருவடியைத் தான் தொழுவீர்
அப்போது கோதையரும் அரங்கர் மடியை விட்டு
எப்போது மைய ரிணை யடியைத் தான் தொழுவார்
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள் தனக்கும் 235

வாழ்த்தி யெடுத்து மகிழ்ந்து வரங்கருக்கும்
வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி நீர் வண்ண அழகாய் மணம் புணர்வாய்
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் அரங்கர் தமை
மன்றல் செய்ய வாருமையா மணவாளா வென்றுரைத்தார் 240

பங்குனி மாதம் பவர்ணமையில் உத்திரத்தில்
அங்குரஞ் செய்து அழகாய் மணம் புணர
வாருமையா வென்று மகிழ்ந்தேத்தி யரங்கரையும்
சீரணிந்த கோதையையுஞ் சிறப்பாகத் தானழைக்க
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடை கொடுத்து 245

தப்பாமல் நான் வருவேன் சீர் கோதை தன்னோடும்
என்று சொல்ல ஆழ்வாரும் ஏகினார் வில்லிபுத்தூர்
சென்று திரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து
கோதையர்க்கு மன்றல் கோலமாய்ச் செய்ய வென்று
சீதையர்க்கு மன்றல் சிறப்பாகச் செய்ய வென்று 250

ஓலை யெழுதி உலகெல்லா மாளனுப்பி
கரும்பினால் கால் நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்டு
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்க விட்டு
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான் போட்டு
மாங் கனிகள் தூக்கி வருக்கைப் பலா தூக்கித் 255

தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து
மேளமுடன் மத்தளமு முரசமுந் தானடிக்கக்
காளமுடன் நாதசுரம் கலந்து பரிமாற
வானவர்கள் மலர் தூவி வந்து அடி பணியக்
கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த, 260

இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர் தூவச்
சந்திரனுஞ் சூரியனும் சாமரைகள் தாம் போட
இரத்னமணி யாசனமும் இரத்தினக் கம்பளியும்
சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும்,
ஆழ்வார் கிளையும் அயலோர் கிளை யெல்லோரும் 265

ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்ற வந்தார்
தூபங் கமழத் தொண்டர்களுந் தாம் பாட
தீபந் துலங்கத் திருவைண வோரிருக்க
வேதந் துலங்க மேன் மேலுஞ் சாத்திரங்கள்
கீத முரைக்கக் கீர்த்தனங்கள் தாமுழங்க, 270

வாத்தியார் புல்லெடுத்து மறைகள் பல வோதிப்,
பூரண கும்பமுதல் பொற்கலசந் தானும் வைத்து
நாரணனைப் போற்றி நான் மறைகள் தாமோத
இப்படிக்கு வாழ்வாரு மெல்லோருங் காத்திருந்தார்
சற்புருடர் வாராமல் தாமதமாய்த் தாமிருக்க, 275

கொற்றப்புள் ளேறிரங்கர் கொடிய வனங்கடந்து
வெற்றிச் சங்கு ஊதி வில்லிபுத்தூர் தன்னில் வந்து
மணவாள ராகி மணவறையில் தானிருந்து
மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தனங்கொடுத்தார்
ஆடைமுத லாபரணம் அணிமுலைப் பாற்பசுக்கள் 280

குடைமுதல் தானங் கொடுத்து நிறைந்த பின்பு
மந்திரக் கோடி யுடுத்து மணமாலை
அந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தலின் கீழ் 285

கைத்தலம் பற்றிக் கலந்து பெருமாளும்
ஆழ்வாரும் நீர்வார்க்க அழகான கையேந்தி
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம்
கன்றலு முண்டு கழித்துமே வாங்கிருந்தார் 290

அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பஞ்சிலை நாணல் படுத்து பரிதிவைத்து
ஓமங்கள் செய்து ஒருக்காலும் நீர்தூவி
காசு பணங்கள் கலந்துதா னங் கொடுத்து 295

தீவலஞ் செய்து திரும்பி மனையில் வந்து
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பர்த்தாவாய்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதித்து அருந்ததியுந் தான் பார்த்து 300

அரிமுதல் அச்சுதன் அங்கை மேலும் கை வைத்துப்
பொரி முகந்து பம்ப போற்றி மறையோரை
அட்சதைகள் வாங்கி அரங்கர் மணவறையில்
பட்சமுடனிருந்து பாக்கிலையுந் தான் போட்டுக்
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் 305

சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார்
அச்சேதி கேட்டு ஆழ்வார் மன மகிழ்ந்து
இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது
என்று பெரியாழ்வார் இளகி மன மகிழ்ந்து
குன்று குடை யெடுத்த கோனை மகிழ்ந்துநிதம், 310

வாழி முதல் பாடி மங்களமுந் தான் பாடி
ஆழி முதல் பாடி ஆழ்வாரும் போற்றி நின்றார்
வாழும் புதுவை நகர் மாமறையோர் தாம் வாழி!
ஆழி நிறை வண்ணன் முதல் ஆழ்வார்கள் தாம்வாழி!
கோதையரும் வாழி! கோயில்களும் தாம்வாழி! 315

சீதையரும் வாழி! செகமுழுதும் தாம்வாழி!

ஸ்ரீ கோதை நாச்சியார் தாலாட்டு முற்றிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading