ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆழ்வார்களுக்கு திருப்பள்ளி எழுச்சி —

முதலில் பிள்ளாய் எழுந்திராய்! (திரு-6) என்று ஆரம்பித்து
நாயகப் பெண் பிள்ளாய் ! (திரு-7),
கோதுகலம் உடைய பாவாய்! (திரு-8),
மாமான் மகளே! (திரு-9),
அம்மனாய்! ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே! (திரு-10),
பொற்கொடியே! புனமயிலே! செல்வப் பெண்டாட்டி! (திரு-11),
நற்செல்வன் நங்காய்!(12),
போதரிக் கண்ணினாய்! பாவாய்!(திரு-13),
நங்காய்! ( திரு-14),
இளங்கிளியே!(திரு-15) என்று வரிசையாக எழுப்புகிறாள்.

புண்ணிய நதிகளில் நீராட ஆண்டாள் ஏன் தன் தோழிகளை அழைக்கிறாள் ?
பக்தி என்ற சிறு விதையை நம் மனதில் விதைக்க, அது முளைவிட்டுக் கொடியாக வளர ஆரம்பிக்கும் போது
அதற்குத் தடங்களாகப் பாவங்களால் பல இடையூறுகள் வரலாம்
இந்த முளைவிட்ட பக்தி செடியைப் பாதுகாத்துப் படரவிட, சான்றோர்களின் நட்பு என்ற ஆதரவு குச்சியை அதனுடன் பிணைக்க வேண்டும்.
அதற்குப் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்ல வேண்டும்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரை இல்லினுள்ளே உறங்குகின்ற
பெண் பிள்ளைகளை எழுப்புவதுபோல் அமைந்துள்ளன.
பாசுரங்களுக்கு மேல் பூச்சான பொருளை நோக்கினால் பெண்களை எழுப்புவது போல் தோன்றினாலும்,
மறைமுகமான ஆழ்ந்த பொருளை நுணுகிப் பார்த்தால் ஒவ்வோர் ஆழ்வாரையும் எழுப்பி
அவர்களின் அருள் வேண்டுவதை நாம் உணரலாம்.

”புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்[து] அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”

இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம்.
பிள்ளாய்! என்பது இதில் விளி. அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.
எம்பெருமானுடைய ஸர்வ ரக்ஷகத்வம் முதலிய திருக் குணங்களை மறந்தே இவ்வாழ்வார்;
மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர்.
“ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை யெல்லாம் அடிக் கழஞ்சு பெறும்” என்ற
ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.

இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயே போது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய
‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.

புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார்
பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள
விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்வாருடைய திருவாக்கில் தோன்றியது.
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.)
அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.

(பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில்
பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது.
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-என்றது காண்க.

மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார்.
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடிப் போய்
வாள் கொள் வளை எயிறு ஆர் உயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11—என்ற பாசுரங் காண்க.
அதற்குப் பொருந்த இங்கு
“பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது.

“வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும்
அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்”
“பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ஸூசிதம்.

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5 4-9 –

இது ஆறாம் பாசுரமாகும். இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக பறவைகள் எழுந்து ஒலி எழுப்புவது “புள்ளும் சிலம்பின காண்” என்று காட்டப்பட்டுள்ளது.
பறவைகள் பெரும்பாலும் செடி கொடிகள், மரங்கள் நிறைந்த சோலைகள், நந்தவனங்கள் ஆகியவற்றில் தான் குடியிருக்கும்.
பெரியாழ்வாரும் அரங்கனுக்குப் பூமாலை சூட்டுவதற்காகப் பூக்கள் பறிக்க எப்பொழுதும் நந்தவனத்திலேயேதான் இருப்பார்.

“பிள்ளாய் எழுந்திராய்” எனும் சொற்றொடரில் உள்ள ‘பிள்ளாய்’ என்பதும் பெரியாழ்வாரையே குறிக்கிறது.
பிள்ளைகள் என்பவர்கள் ஒன்றும் அறியாதவர்கள்.
நாச்சியாரும் பின்னால் “அறியாத பிள்ளைகளோம்” என்று அருளுவார்.
உயர்வு, தாழ்வு, நல்லது, கெட்டது என்பன அறியாத பருவம்தான் பிள்ளைப் பருவம்.
பெரியாழ்வாரும் பிள்ளைக் குணம் கொண்டு பகவானின் உயர்வையே மறந்து விடுகிறார்!

அவர் மதுரை மாநகரில் பொற்கிழி யறுத்து, நாராயணனின் பரதத்துவத்தை நிலை நாட்டினார்.
அதனால் மனம் மகிழ்ந்த மன்னன் பெரியாழ்வாரைத் தன் பட்டத்து யானை மீது இருத்திப் பவனி வரச் செய்தான்.
அதை காணப் பகவானே வைகுந்தத்திலிருந்து வந்து விட்டார்.
அவரின் திருக்கோலத்தைக் கண்ட பெரியாழ்வார் அப்பகவானுக்குக் கண் எச்சில் பட்டுவிடப் போகிறதே என்று
எண்ணிப் “பல்லாண்டு பல்லாண்டு” என்று
தன்னை மறந்துப்
பகவானின் உயர்வையும் மறந்து
பிள்ளைக் குணத்தால் மங்களாசாசனம் செய்தார். எனவே ’பிள்ளாய்’ என்பது பெரியாழ்வாரையே குறிக்கிறது.

’புள்ளரையன் கோயில்’ என்பது பக்ஷிராஜனான கருடனின் திருக்கோயிலைக் குறிக்கும்.
பெரியாழ்வார் ’பெரிய திருவடி’ என்று போற்றப்படும் கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில் ”வெள்ளை விளி சங்கு” என்று அருளுகிறார்.
பாண்டிய பட்டர் பெரியாழ்வாரைக் கொண்டாடும் போது,
“பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கம் எடுத்தூத……….”என்று காட்டுவார்.
அப்படிப் பெரியாழ்வார் ஈண்டிய சங்கம் எடுத்தூதியதைத்தான் ’வெள்ளை விரிசங்கம்’ என்று இப்பாசுரமும் காட்டுகிறது.

மேலும் இப்பாசுரத்தில், “பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி” என்று
பூதனா வதமும், சகடாசூர வதமும் காட்டப்படுகின்றன.
பெரியாழ்வார் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் ஈடுபட்டுத் தம் பாசுரங்களில் இந்த விருத்தாந்தங்களை அனுபவிப்பவர்.
பெரியாழ்வார் திருமொழியில் முதன்முதலில் வருவது ‘பிறங்கிய பேச்சியை சுவைத்திட்டு’ என்பதாகும்.

இப்பாசுரத்தில் உள்ள ‘வெள்ளத்தரவில்’ என்பதைப் பெரியாழ்வார் அருளியுள்ள
‘அரவத்தமளியோடு’ என்பதோடு ஒப்பிட்டுச் சுவைத்து மகிழலாம்.

‘முனிவர்களும் யோகிகளும்’ என்பதும் பெரியாழ்வாரைத்தான் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஏனெனில், முனிவர்கள் மற்றும் யோகிகள் ஆகியோர் பற்றற்றவர்கள். பகவானிடம் எதையும் விரும்பிக் கேட்க மாட்டார்கள்.
பெரியாழ்வாரும் பெருமாளிடம் எதையும் விரும்பிக் கேட்கவில்லை.
பெரியாழ்வார் திருமொழியின் சாராம்சமான கடைசிப் பாசுரத்தில் கூட அவர் எதையும் வேண்டிப் பிரார்த்திக்கவில்லை.

ஆக, ஆறாம் பாசுரத்தில் இப்படிப் பெரியாழ்வார் எழுப்பப்படுகிறார் என்பது தெரிகிறது.

————-

பேய்ப் பெண்ணை எழுப்புதல்-அடுத்துள்ள ஏழாம் பாசுரத்தில், குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கீசு கீசென்[று] எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்”

இது; பெரியாழ்வார்க்கு அடுத்த முந்தினவரான குலசேகராழ்வாரை யுணர்த்தும் பாசுரம்,
‘பேய்ப்பெண்ணே!, நாயகப் பெண்பிள்ளாய்?, தேசமுடையாய்!, என்ற மூன்று விளிகளும்
குலசேகராழ்வாரை வற்புறுத்துவன.
பெருமாள் திருமொழியில் மெய்யில் வாழ்க்கையை என்றவொரு பதிகத்தினால்
தம்மைப் பெரும் பேயராகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

ஏர் மலர்ப்பூங்குழல், ஆலை நீள் கரும்பு, மன்னுபுகழ்க் கௌசலைதன் என்ற பதிகங்களில்
பல பெண்களின் தன்மையை யடைந்து பேசினாருமிவர்.

“கொல்லி காவலன் கூடல் நாயகன்” என்று அரசரான தன்மை தோற்றப் பேசினராதலால்
நாயகப் பெண் பிள்ளாய் என்றது.
அன்றியும், ஒரு ஹாரத்தில் நட்ட நடுவிலுள்ள மணியை ‘நாயகக்கல்’ என்பதுண்டு.
குரு பரம்பரையில் எம்பெருமானாரை நடுநாயகமென்று யதிராஜ ஸப்ததியில் தேசிகன் கூறினர்;
யதிராஜேந நிபத்த நாயக ஸ்ரீ: மஹதீ குரபங்க்தி ஹாசயஷ்டி:” என்கிறார்
அதுபோலவே ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாக வுள்ளவர்.
பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசையர் மாறன் என முன்னே ஐவர்;
பட்டநாதன் கோதை தொண்டரடிப்பொடிகள் பாண்பெருமாள் கலியன் எனப்பின்னே ஐவர்;
நடுவே குலசேகரர்.
ஆகவே இதுபற்றயும் நாயகப்பெண்பிள்ளாய் என்ற பிறி நன்கு பொருந்தும்.

(தேசமுடையாய்!)
பகவத் கீதையில் (18-43) (சௌர்யம் தேஜோத்ருதிர் தாக்ஷ்யம் — க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்.)
என்று தேஜஸ்ஸு க்ஷத்திரிய தர்மமாகச் சொல்லப்பட்டிருப்பதற்கிணங்க இந்த விளி
இவ்வாழ்பாருடைய க்ஷத்திரியத்வத்தைத் தெரிவிக்கும்.
அன்றியும்,
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜன்மமும் இழுக்கென்பார்க்குப்
பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸுக்தியின்படியும்,
அதற்கு மூலமான “மண்ணாட்டிலாராகியெவ்விழிவிற்றானாலும்;, ஆழியங்கைப் பேராயற்கு
ஆளாம் பிறப்பு – உண்ணாட்டுத் தேசன்றே” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தின்படியும்
பகவத் சேஷத்வத்திற்கு அநுகூலமான பிறப்பே தேஜஸ்ஸென்று நிர்ணயிக்கப்படுகிறது;
அப்படிப்பட்ட பிறப்பை ஊனேறு செல்வத்து என்ற பதிகத்தில் பாசுரந்தோறும் ஓரோ விதமாக விரும்பினவர்
இவ்வாழ்வாரேயாதலால் தேசமுடையார் இவரேயாகத்தகும்.

இப்பாட்டில் “ஆனைச்சாத்தன்” என்ற பதப்பிரயோகம் கவனிக்கத் தக்கது.
இச்சொல் மலையாள பாஷையிலிருந்து திசைச் சொல்லாகத் தமிழில் வழங்குவதென்பர்.
(ஆன சாதம்) என்று மலைநாடர் வலியனென்னும் பறவையை வழங்குவராம்.
இவ்வாழ்வார் மலைநாட்டில் திருவவதாரித்தவராதலால் அத்திசைச்சொல் இங்குட் பரவசமாகவே அமைந்தது போலும்.

காசும் பிறப்பும் என்று ஆபரண விசேஷங்களைப் பற்றின ப்ரஸ்தாவமிருப்பது இவ்வாழ்வாருடைய சரிதையில்
ஆபரண ப்ரஸ்தாவமுள்ளவாற்றை ஒருவாறு நினைப்பூட்டும்.
“ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே வாரங்கொடு குடப்பாம்பில் கையிட்டவன்” என்ற தனியனும் ஸ்மரிப்பது.

“வாசநறுங் குழ லாய்ச்சியர் மத்தின லோசைபடுத்த தயிரரவம்” என்றது பெருமாள் திருமொழியில்
“கெண்டை யொண்கணை மடவாளொருத்தி கீழையகத்துத் தயிர் கடையக்கண்டு…..
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ….. தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்” என்ற பாசுரத்துச் சொற் சுவைகளை நன்கு நினைப்பூட்டும்.

(நாராணயன் மூர்த்தி கேசவனைப் பாடவும்) திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.
இவ்வாழ்வார் தமது திருமொழியில் முதன் முதலாக இந்த வரலாற்றையே பேசியநுபவித்தார்
மாவினை வாய் பிளந் துகந்தமாலை என்று.
ஸ்வ ப்ரபந்தத்தை “நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே” என்று நாராயணனைப் பாடித் தலைக் காட்டினார்.

(கேட்டே கிடத்தியோ) இவ்வாழ்வார் நாடோறும் அந்தணர்களைக் கொண்டு ஸ்ரீராமாயண பாராயணஞ் செய்வித்துத்
தாம் கேட்டவர்.
கேட்டு, இருந்தவிடத்திலிராமல் படையெடுத்துஞ்சென்றவர்.

—————

இதில் குலசேகர ஆழ்வார் எழுப்பப்படுகிறார்.
பொழுது விடிந்ததற்கு அடையாளமாக ஆனைச்சாத்தன் என்ற குருவி எழுந்து பேசுவது, அதாவது ஒலிப்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனைச்சாத்தன் என்பது ‘வலியன்’ என்று வழங்கப்படும் ‘பரத்வாஜப் பக்ஷி’யாகும்.
இக்குருவி மலையாள மொழியில் ‘ஆனை சாதம்’ என்று வழங்கப்படும்.
ஆனைச்சாத்தன் என்பது மலையாள மொழிச் சொல்லின் திரிபாகும். குலசேகர ஆழ்வாரும் மலையாள தேசத்தைச் சார்ந்தவர்.
அவர் மலையாள நாட்டில் உள்ள வஞ்சிக்களம் எனும் ஊரில் அவதரித்தவர் ஆவர்.

’பேய்ப்பெண்ணே!” என்பதும் குலசேகர ஆழ்வாரைக் குறிப்பதாகும்.
அவர்
“பேயரே யெனக்கி யாவரும், யானுமோர் பேயனே யெவர்க்கும் இது பேசியென்,
’ஆய னே!அரங்கா! என்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” [பெருமாள் திருமொழி 3.8]
என்பது அவர் அருளிச் செயலாகும்.
எனவே நாச்சியார் அவரை ‘பேய்ப்பெண்ணே!’ என்றழைக்கிறார்.

குலசேகராழ்வாரின் அரண்மனையில் எப்பொழுதும் ஸ்ரீவைஷ்ணவர்களே நிறைந்திருப்பார்கள்.
அதை மந்திரிகள் விரும்பவில்லை. எனவே அவர்கள் பெருமாளின் ஆபரணங்களைத் திருடி மறைத்துவிட்டு
அப்பழியைப் பாகவதர்கள் மேல் போட்டுவிட்டார்கள்.
“என்னடியார் அது செய்யார்; பாகவதர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்” என்று கூறி அதற்காகச் சத்தியம் செய்ய
குலசேகராழ்வார் பாம்புள்ள குடத்திலே கையைவிட்டார். பாம்பு அவரைத் தீண்டாமல் வெளியே வந்து தலையை ஆட்டி
மூன்று முறை சத்தியம் செய்து போயிற்று. பிறகு நகையை மறைத்தவர்கள் மன்னிப்பு கேட்டு நகையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
இந்த வரலாற்றை நினவூட்டும் விதமாகத்தான் இப்பாசுரத்தில் ‘காசும் பிறப்பும்’ எனும் சொற்றொடர் அமைந்துள்ளது.

காசு மற்றும் பிறப்பு என்பவை ஆயர் பெண்கள் அணிகின்ற அச்சுத்தாலி ஆமைத்தாலி ஆகியவற்றைக் குறிக்கின்றன.
இப்படி ஆபரணங்கள் பேசப்படுவதன் மூலம் குலசேகர ஆழ்வாரே காட்டப்படுகிறார்.
மேலும் ’பிறப்பு’ என்பது குலசேகரர் ‘ஊனேறு செல்வத்து’ பதிகத்தில் திருமலையின் மேல் ஏதேனும் ஒரு பிறப்பை வேண்டியதையும் குறிக்கிறது.

‘நாயகப் பெண்பிள்ளாய்’ எனும் சொற்றொடரும் குலசேகர ஆழ்வாரையே காட்டும்.
ஆழ்வார்கள் வரிசையைப் பார்த்தால் குலசேகர ஆழ்வார் நடு நாயகமாக விளங்கிறார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் என முன்னால் ஐந்து ஆழ்வார்களும்,
ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் எனப்
பின்னால் ஐந்து ஆழ்வார்களும் இருக்க நடுநாயகமாய் குலசேகராழ்வார் விளங்குகிறார்.

‘பெண்பிள்ளாய்’ என்பதும் இவரையே காட்டும். குலசேகராழ்வார்
‘ஏர்மலர்ப் பூங்குழல்’, ‘ஆலை நீள்கரும்பு’, மற்றும் ‘மன்னுபுகழ் கோசலை’ பதிகங்களில்
தம்மைப் பெண்ணாக வைத்தே அருளிச் செய்திருக்கிறார்.

பெருமானுக்குக் ‘கேசவன்’ எனும் திருநாமம் குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அரக்கனை அழித்ததால் ஏற்பட்டது.
அத்தகைய கேசி வதத்தை முதன்முதல் பேசியவர் குலசேகர ஆழ்வாரே ஆவார்.

“கேட்டே கிடத்தியோ” என்பதும் குலசேகர ஆழ்வாரையே காட்டுகிறது.
ஒரு சமயம் இராமாயண உபன்யாசத்தில் ஸ்ரீஇராமன் கர தூஷணரோடு தனியாய் யுத்தம் செய்கிறான் என்று சொன்னதைக் கேட்ட
குலசேகரர் உடனே அமைச்சரை அழைத்து, “இராமபிரானுக்குத் துணையாய் நம் சைன்யத்தைத் திரட்டு” என ஆணையிட்டார்.
அப்படி ஓடியவரே இப்போது கேட்டுகொண்டு கிடக்கலாமா? என்று அவர் எழுப்பப்படுகிறார்.

அடுத்து இப்பாசுரத்தில் “தேசமுடையாய்” என்று காட்டப்படுகிறது.
தேசம் என்பது தேஜஸ், பலம், வீர்யம் பொலிவு, போன்ற பொருள்களைத் தரும் இக்குணங்கள் எல்லாம் க்ஷத்திரியருக்கே உரியன.
குலசேகரர் மன்னர். அதுவும் க்ஷத்திரியர் என்பதால் அதுவும் இவருக்கே பொருந்துகிறது.
ஆக ஏழாம் பாசுரத்தில் குலசேகராழ்வார் எழுப்பப்படுகிறார் என்பதை உணர முடிகிறது.

————

”கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்) குலசேகரர்க்கு அடுத்த முந்தினவரான நம்மாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
கோதுகலமுடைய பாவாய்! என்றவிளி நம்மாழ்வாரை வற்புறுத்தும்.
கோதுகுலமுடைய என்று வழங்கிவரும் பாடம் பரமக்ருபையுடன் மறக்கத்தக்கது.
அப்பாடம் நெடுநாளாகவே நாடெங்கும் பரவியதனாலாய அநர்த்தம் பெரிதுமுண்டு.
ஸ்ரீ பரகாலஸ்வாமி வியாக்கியானம் செய்தருளுமிடத்து குலம் குலமாக வுனக்குப் பரிசர்யை பண்ணும்படி என்றுரைத்திட்டார்.
அது, கோதுகலமுடைய என்கிற (தவறுதலான) பாடத்தில் அபிநிவேசத்தினால் போலும்.
வஸ்துதஸ்து, வடமொழியில் கௌதூஹலம் என்ற சொல் தமிழில் கோதுகலமெனத் திரீந்தது.
இதில் குகரம் நுழைய ப்ரஸக்தியில்லை.
கோதுகலம் உடைக்குட்டனேயோ என்றார் பெரியாழ்வாரும்.)

கோதுகலமாவது ஆசை; ஆசையையுடைய என்றது.-எம்பெருமானிடத்தில் ஆசையையுடைய,
அல்லது எம்பெருமானுடைய ஆசையைத் தன்னிடத்திலே கொண்டுள்ள என்று இருவகையாகவும் பொருள்படும்.

பட்டர் நம்மாழ்வாரைப் பற்றிப் பேசும்போது ரீஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் என்று
க்ருஷ்ண குதூஹலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்றார்.
க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை என இருவகையாகவும் விரியும்.
இதனால் தேறின பொருளை
கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே
என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார்; தாமே வெளியிட்டருளினர்.
ப்ரியோ ஹி ஜ்ஞாநிதோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய: என்றபடி.
நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன்,
அவனும் என்னிடத்துக் குதூஹலங் கொண்டான் என்றருளிச் செய்தவர் நம்மாழ்வார்.

பாவாய்! என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும்.
திருவாய் மொழியில் சூழ்வினை யாட்டியேன் பாவையே என்றும்
என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே என்றும்
பலவிடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

எழுந்திராய் என்ற சொல்லாற்றல் நன்கு நோக்கத்தக்கது;
உட்கார்ந்திருப்பவரையன்றோ எழுந்திரா யென்பது.
மற்றையாழ்வார்களெல்லாரும் அர்ச்சையில் நின்ற திருக் கோலமாகவேயுள்ளார்;
நம்மாழ்வாரொருவரே வீற்றிருந்த திருக்கோலம்.
புத்மாஸநோபவிஷ்டம் என்கிற பூர்வாசார்ய ச்லோக ரத்னமும் இங்கு அநுஸந்தேயம்.

(கீழ்வானம் வெள்ளென்று.) உதயகாலத்தில் கிழக்குவெளுக்கும்.
இங்கும் வகுளுபூஷண பாஸ்கரோதய மாதலாலும்,
அதுதானும் கலியுகத்தின் உதயகாலத்திலாதலாலும் கிழக்கு வெறுத்ததாகச் சொல்லிற்று.

கீழ்வானமென்றபோதே மேல்வானம் நினைவுக்கு வரும்.
நி த்தியவிபூதி மேல் வானமாகும். லீலாவிபூதியானது நம்மாழ்வாருடைய திருவாய்மொழி யவதாரத்தாலே
வையம் மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே இத்யாதிப்படியே தானே பரமபதமாயிற்று.
ஆகவே கீழ்வானமான இவ்விபூதி வெள்ளென்றது.

(எருமை சிறுவீடு மேய்வான்) வீடு என்று மோக்ஷம்; சிறு வீடு என்று கைவல்ய மோக்ஷம்.
இந்த ஸங்கேதமிட்டருளினவர் நம்மாழ்வார்;
திருவாய்மொழியில் (4-1-10) குறுக மிகவுணர்வத்தொடு நோக்கி என்ற பாசுரத்தின் பொருள் கொண்டு இஃது அறியத்தக்கது.

எருமையென்பது தாமஸப்ரக்ருதிகளை.
நம்மாழ்வார் திருவவதாரம் செய்தருள்வதற்கு முன்னே பலரும் தாமஸ ப்ரக்ருதிகளாய் நல்வீடு செல்லாது
சிறுவீடு முதலியவற்றிற் சென்று பாழாயினர் என்பது இங்கு ஸுசிதம்.

(மிக்குள்ள பிள்ளைகளுமித்யாதி.) மற்றைப் பிள்ளைகளையும் போகவொட்டாமல் தடுத்து
இப்பிள்ளை வாசலில் வந்துதுவள்வதனால் இவருக்குண்டான விலக்ஷணமான ஏற்றம் தோற்றுவதுபோல,
மற்றை யாழ்வார்களிற் காட்டில் நம்மாழ்வார்க்குண்டான ப்ரபந்நஜந கூடல்தத்வமாகிற ஏற்றம் தோற்றுவிக்கப் பட்டது.

போவான் போகின்றாரை என்ற பிரயோகம் வெகு ஆச்சரியமானது.
போவதற்காகப் போகிறவர்கள் என்று சொல்லுவதுண்டோ? இல்லை. அப்படியிருக்க ஏன் சொல்லிற்று?
போவதுதானே ஸ்வயம் ப்ரயோஜனமென்று காட்டுவதற்காகவே சொல்லிற்று.
இத்தகைய பிரயோகம் முதன் முதலாக நம்மாழ்வார் திருவாக்கில் தான் வந்தது;
திருவிருத்தத்தில் போவான் வழிக்கொண்ட மேகங்களே! என்றார்.

(உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்.) கூவிக்கொள்ளும் காலமின்னங் குறுகாதோ
என்னைக் கூவியருளாய் கண்ணனே கூவிக்கொள்ளாய் வந்தந்தோ என்று
பலகாலும் விரும்பினபடியே கூவுவான் வந்து நின்றோமென்கிறாள்,

(மாவாய் பிளந்த தேவாதிதேவனை) இப்போது ஆண்டாள் நோற்பதுபோல
நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்;
வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் ஏற்ற நோற்றேற்கு என்று முதலிலும்
வண்டமிழ் நூற்க நோற்றேன் என்று முடிவிலும் வருவது காண்க.
அங்ஙனம் நோற்ற திருவாய்மொழியில் தேவாதி தேவனை அநுபவிக்கின்ற ஆழ்வார்
மாவாய் பிளந்தானென்ற விசேஷணத்தையே முதற்பாட்டில் இட்டருளினர்;
வெம்மாபிறந்தான் தன்னை என்றது காண்க.

ப்ரதமப்ரபந்தத்தில் இமையோர் தலைவா! என்றும்;
சரமப்ரபந்தத்தில் அயர்வறுமமரர்களதிபதி என்றும்
தேவாதி தேவனையே முந்துற முன்னம் சேவித்தாராழ்வார்.

(சென்று நாம் சேவித்தால்) வான நாயகனே! அடியேன் தொழவந்தருளே என்று
தேவாதி தேவனை நீர் உம்மிடம் வருமாறு அழைத்தீர்;
அங்ஙனமல்லாமல் அவனிடம் நாம் சென்று சேவிக்கலாம் வாரும் என்றழைக்கிறாள் போலும்.

(ஆவாவென்று) ஆவாவென விரங்கார் அந்தோவலிதே கொல், மாவாய் பிளந்தார் மனம் என்றும்;,
அடியேற்கு ஆவாவென்னாயே என்றும்
நீர் விரும்பினபடியே மாவாய்பிளந்த பெருமான் உமக்கு ஆவாவென்பன் என்று காட்டுகிறபடி

(ஆராய்ந்து) ஆரென்னையாராய்வார் என்ற உம்முடைய குறையும் தீரும் என்று காட்டியபடி.

இது திருப்பாவையின் எட்டாம் பாசுரமாகும். இதன் உள்ளர்த்தத்தை ஆராய்ந்தால் நம்மாழ்வாரை எழுப்புவதை உணர முடிகிறது.
‘கீழ்வானம் வெள்ளென்று’ என்று முதலில் கிழக்கு வெளுத்ததை இப்பாசுரம் காட்டுகிறது.
நம்மாழ்வார் அவதரித்ததை ‘வகுள பூஷண பாஸ்கரோதயம்’ என்பார்கள்.
சூரியன் உதித்து இருள் அகல்வது போல, நம்மாழ்வர் அவதரித்து அஞ்ஞான இருள் அகன்றது இங்கே கூறப்படுகிறது.

‘எருமை சிறுவீடு’ என்று கூறுகிறது பாசுரம். சிறு வீடு என்று ஒன்று இருந்தால் பெருவீடும் இருக்கும்.
சிறு வீடு என்பதைக் கைவல்யானந்தம் என்றும், பெருவீடு என்பதை மோக்ஷம் என்றும் பொருள் கூறுவார்கள்.
ஆத்மாவை அறிந்து ஆனந்தப்பட்டு அங்கேயே நின்றுவிடக் கூடாது;
அதற்கும் மேலே மோக்ஷம் என்ற பெருவீடு ஒன்று இருக்கிறது என்று காட்டியவர் நம்மாழ்வார்.
மேலும் எம்பெருமானிடத்தில்தான் பரமானந்தம். எனவே, பெருவீட்டை ஆலோசிக்க வேண்டும்;
எம்பெருமானைப் பற்றி நிற்க வேண்டும் என்று நம்மாழ்வார் ‘சூழ்ந்த’ [3775] எனும் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

“போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்பதும்
நம்மாழ்வாரைக் காட்டி எழுப்புவது போலிருக்கிறது.
வடதேசத்தில் யாத்திரை போய்க்கொண்டிருந்த மதுரகவி ஆழ்வாரைப் போகாமல் காத்துக் குருகூருக்கு
வரவழைத்தது நம்மாழ்வாரின் திருவுளம் அன்றோ?

“அடுத்துக் கூவுவான்” என்பதுவும் நம்மாழ்வாரையே காட்டும்.
நம்மாழ்வாரைக் கூவுவதற்காகவே அதாவது எழுப்புவதற்காகவே மதுரகவி ஆழ்வார் வந்தார்.

மேலும், “கூவிக் கொள்ளும் காலமின்னும் குறுகாதோ?” [3323] என்றும்,
“கூவிக்கொள்ளாய் வந்தந்தோ! [3767] என்றும் கூவுதல் எனும் சொல்லை மிகுதியும் சொன்னவர் நம்மாழ்வாரே ஆவார்.

‘கோதுகலமுடையாய்’ என்பதும் நம்மாழ்வாரையே காட்டுகிறது.
ஏனெனில் கிருஷ்ண குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது.
நானும் அவனிடம் அவனிடம் குதூகலம் கொண்டேன்; அவனும் என்னிடம் குதூகலம் கொண்டான் என்பார் நம்மாழ்வார்.

‘பாவாய்’ என்பதன் உள்பொருளை நோக்கினால் நம்மாழ்வார் தம்மைப் பாவையாய்ச் சொன்னது விளங்கும்.
“சூழ் வினையாட்டியேன் பாவையே” என்றும்,
“என் பாவை போய் இனித் திருக்கோளூர்க்கே” என அருளியவர் நம்மாழ்வார்.

’எழுந்திராய்’ என்று நம்மாழ்வாரைத்தான் எழுப்புகிறர்கள். உட்கார்ந்திருப்பவரைத்தானே எழுப்புவார்கள்.
ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வார் மட்டுமே அமர்ந்த கோலத்தில் இருப்பவர். எனவே அவர் எழுப்பப்படுகிறார்.

’தேவாதிதேவன்’ என்பதற்கு நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் முதலிலேயே
“உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்” என்பது காட்டப்படுகிறது.

“ஆவாவென்று ஆராய்ந்து”—
நம்மாழ்வார் “ஆர் என்னை ஆராய்வார்” [திருவாய்மொழி—5-4-5] என்று சொன்னவர்.
“தன்னை ஆராய வேண்டும்; பகவானை ஆராய வேண்டும்; அவனை அடையும் வழியை ஆராய வேண்டும்;
அடைந்தபின் ஏற்படும் பயனை ஆராய வேண்டும்; அவனை அடையவிடாமல் தடுக்கும் தடைகளை ஆராய வேண்டும்”
என்ற அர்த்த பஞ்சக ஞானத்தைத் தான் நம்மாழ்வாரின் பாசுரங்கள் அருளுகின்றன.

——————

ஒன்பதாம் பாசுரத்தில் எழுப்பப்படுபவர் திருமழிசை ஆழ்வார் ஆவார்.
“தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!
மாமீர் அவளை எழுப்பீரோ! உன்மகள்தான்
ஊமையோ! அன்றிச் செவிடோ! அனந்தலோ!
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்).
நம்மாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரமிது.
இதில் மாமான் மகளே! என்ற விளி ஒருவகையான தேஹ ஸம்பந்த்தில் நோக்குடையது.
ஆண்டாளுக்கும் திருமழிசை யாழ்வார்க்கும் ஒரு வகையான தேஹஸம்பந்தமுண்டு :
அதாவது – ஸ்ரீதேசிகன் கோதாஸ்துதியில்
“கமலாமிவாந்யாம் கோதாம்” என்றும்
“ஸந்த : பயோதி துஹிதுஸ் ஸஹஜாம் விதுல் த்வாம்” என்றும் அருளிச் செய்தபடியே
ஆண்டாள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியாவள்

“பார்க்கவீ லோகஜநநீ க்ஷ்ரஸாகரஸம்பவா” என்ற அமரகோசத்தின் படியும் இதிஹாஸ புராண வரலாற்றின் படியும்
லக்ஷ்மி (ஆண்டாள்) ப்ருகு குலத்தில் தோன்றியவள்.
திருமழிசைப்பிரானும் ப்ருகு குலத்தில் தோன்றியவரென்பது சரித்திர ஸித்தம்.
இத்தகைய ஸமாந குலஸம்பந்தம் இங்கு நோக்கத்தக்கது.
ரிஷி குலத்திலே பிறந்து பிரம்பன் குடியிலேயானார் அவர்.
ப்ராஹமண குலத்திலே பிறந்து கோபாலர் குலத்திலேயானாள் இவள். இதுவும் ஒற்றுமை நயம்.

(தூமணி மாடத்து) சிறந்த மாணிக்கக் குப்பியினுள்ளேயுள்ளது வெளியில் நிழலிட்டுத் தோன்றும்.
திருமழிசைப்பிரான் “உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று வேண்டிக் கொண்டபடியே
உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் பொசிந்து காட்சி தந்தமையால் இவர் தூமணிமாட மென்னத் தகுதியுடையார்.

(சுற்றும் விளக்கெரிய) விளக்காவது ஞானவொளி.
“சாக்கியங் கற்றோஞ் சமண்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்றபடி
இவ்வாழ்வார் ஸகல மதங்களிலும் புக்கு ஸர்வதோமுகமான ஞான விளக்கம் பெற்றவராதலால்
சுற்றும் விளக்கெரிதல் இவர்க்கு அஸாதாரணம்.

“யானறிந்தவாறு – ஆரறிவார்” என்றும்
“என் மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை” என்றும் இவரது பாசுரங்களினாலும் இது ஸித்தம்.

(தூபம் கமழ) சிறந்த ஞானமிருத்தல் மாத்திரம் பயன்படாது; அது நன்கு பரிமளிக்கவேண்டும்.
எம்பெருமானையன்றி வேறொரு தெய்வத்தைத் தொழாதிருத்தலே ஞானத்திற்குப் பரிமளம்.
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்பது இவ்வாழ்வாருடைய திருவாக்காகும்.

(துயிலணை மேல் கண்வளரும்) இவ்வாழ்வாருடைய திருக்கண் செல்வது
சயனத்திருக்கோலமான எம்பெருமான்களின் மீது தான்.
கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது.
சயனத் திருப்பதிகளையே ஒரு கோர்வையாக வெடுத்துப் பாசுரம் பாடினவரும் இவ்வாழ்வார்;
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் –
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்” என்றது காண்க.

(துயிலணை மேல் கண்வளரும் மாமானுடைய மகளே!)
மகள் என்றதனால் விதேயத்வம் சொன்னபடி.
மகள் சொற்படி தந்தை கேட்பதும் தந்தை சொற்படி மகள் கேட்பதும் வழக்கம்.
மாமான் என்றது மஹா மஹான் என்றபடி.
துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி யெம்பெருமான்;
அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர்;
‘கணிகண்ணன் போகின்றான் – நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது
அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்;
“உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே.

இனி, துயிலணைமேற் கண்வளரும் மாமான் – ஆராவமுதன்;
அப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற
இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்திருந்தவர் என்பது ப்ரஸித்தம்.

(உன் மகள் தான் ஊமையோ)
வாய் திறவாமலே ஹஸ்த சேஷ்டை முதலியவற்றால் காரியம் செய்வது ஊமைகளின் பணி.
இவ்வாழ்வாரும் யாத்திரை யடைவில் பெரும்புலியூரென்னும் கிராமத்தில் ஒரு வேதியன் வீட்டு வாசல்
திண்ணையில் சிறிது பொழுது எழுந்தருளியிருக்க அங்கு வேதமோதிக்கொண்டிருந்த அந்தணர்கள்
நீறுபூத்த நெறுப்புப்போலுள்ள ஆழ்வாருடைய மஹிமையைத் தெரிந்துகொள்ளாமல்
அவரைக் கீழ்ச்சாதியராக வெண்ணி வேதாத்யயனம் அவருடைய காதிற்படலாகாது என்று கருதி ஓத்துத் தவிர்ந்திருக்க,
அக்குறிப்பை யறிந்த ஆழ்வார் அவ்விடத்தை விட்டுத் தூரத்திற் சென்று வேறோரகத்து மேடையில் வீற்றிருக்கையில்
அந்த வேதியர்கள் மீண்டும் வேதமோதத் தொடங்கி, விட்ட வாக்கியம் தோன்றாது மயங்கி நிற்க,
ஆழ்வார் அது கண்டு கறுப்பு தெற்களைக் கையுகிராலே இடந்துபோட,
அப்பொருளுள்ள வேதவாக்கியம் அவர்கட்குத்தோன்றிற்று:
அதாவது – “க்ருஷ்ணானாம் வ்ரித்றீணாம் நகநிர்பிந்நம்” என்பது.

உடனே அவர்கள் ப்ரதக்ஷ்ண ப்ரணாமாதிகளால் இவரை உபசரித்து க்ரதார்த்தராயினர் என்பது சரித்திர வரலாறு.
இங்ஙனமாக வாய் திறவாமலே, இங்கிதத்தினால் காட்டினது பற்றி ஊமையோ என்றது.
சொன்ன சொற்களைச் செவி யேற்காதவர் செவிடர்: அந்தச் செவிடும் இவரது சரிதையில ப்ரஸித்தம்:
முன் சொன்ன பெரும்புலியூரில் அந்தணரடிகள் யாகஞ் செய்து கொண்டிருந்த விடத்தில்
இவ்வாழ்வாரை எழுந்தருள்வித்துக் கொண்டு போய்ச் சில மஹான்கள் இவர்க்கு அக்ர மொழிகளை வர்ஷிக்க,
அவற்றை இவ்வாழ்வார் செவியேற்காதிருந்தனர் என்ற வரலாறு காண்க.

(அனந்தலோ) தூக்கமோ என்றபடி, பரமைகாந்திகட்குத் தூக்கமாவது பாஹ்ய விஷயங்களிற் சிறிதும்
நெஞ்சு செல்லாதிருக்கப் பெறுதலே.
“உன்னைத் தெரித்தெழுதி வர்சித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினென் போது” என்றும்
“தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாமமேத்தப் பொழுதெனக்கு மற்றதுவே போதும்” என்று மருளிச்
செய்யு மிவ்வாழ்வார்க்கு இந்த நிலைமையே அனந்தலாகும்.

(ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
மற்றையாழ்வார்களிற் காட்டிலும் இவ்வாழ்வாருடைய பரமைகாந்தித்வம் மிக விலக்ஷணம் என்பது இங்கு அறியத்தக்கது.
“பிதிரு மனமிலேன் பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன், அவனெனக்கு நேரான்” என்னும் படியான
திரு நாவீறு இவர்க்கே அஸாதாரணமன்றோ!
இது தான் பெருந்துயில், எம்பெருமானை யொழிந்த மற்றையோரைக் கண்கொண்டு பாராமையிற் பெருமை.

(மாமாயன்)
“மாயமென்ன மாயமே” என்றும்,
“மாயமாய மாக்கிகனாய் உன்மாயமுற்று மாயமே” என்றும் பலகாலும் எம்பெருமானது மாமாயங்களைப் பேசுகிறவர் இவ்வாழ்வார்.

(மாதவன்) “மாதவனை ஏத்தாதார் ஈனவரே” என்றவரும் இவ்வாழ்வாரே,
“திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” என்றதுங் காணலாம்.

(வைகுந்தன்)
“வைகுந்தச் செல்வனார் சேவடிமேல் பாட்டு” என்றவர் இவ்வாழ்வாரே.
வைகுந்தனது சேவடிமேல் தாம் பாசுரம் பாடினவராகச் சொல்லிக்கொண்டார்.

ஆகவே, மாமாயன், மாதவன், வைகுந்தனென்ற திருநாமங்கள் இவ்வாழ்வார்க்குப் பரம போக்யங்களென்பது ஸூசிதம்.

தூமணி மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிகின்றன. ஒரே பிரகாசமாய் இருக்கிறது.
திருமழிசை ஆழ்வார் உள்ளத்தில் பகவான் பிரகாசமாய் வீற்றிருக்கிறான்.

திருப்பெரும்புலியூர் அக்ரகாரத்தில் ஒரு யாகம் நடக்கிறது. அந்த யாகத்தில் அக்ர பூஜையை திருமழிசையாழ்வாருக்கு அளிக்கும்போது
அனைவரும் எள்ளி நகையாடினர். தம் பெருமையை எல்லாம் அவர் மறைத்துக் கொண்டு இருந்ததால்
அவர் பெருமை யாருக்கும் தெரியவில்லை. அவர் மிகவும் சாமான்யமாக இருந்ததால் அவரைப் பற்றித் தப்பாகப் பேசினார்கள்.
உடனே திருமழிசையாழ்வார் தம் உள்ளே குடிகொண்டிருந்த பரமாத்மாவைக் காட்டினார்.

‘சுற்றும் விளக்கெரிய’ என்பது சாக்கியம், சைவம், சமணம் எல்லாம் சென்று பின்னர் ஸ்ரீவைஷ்ணவமே பெரிது என்று
இந்த ஆழ்வார் ஞான விளக்கம் பெற்றதைக் குறிக்கும்.
திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாளின் சயனக் கோலத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அதைத்தான் இங்கு ‘துயிலணை மேல் கண் வளர’ என்று காட்டுகிறார்கள்.
அவன் படுத்திருக்கும் திவ்ய தேசங்கள் எல்லாவற்றையும் இவர் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.

“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்—நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்”-[நான்முகன் திருவந்தாதி—36]

‘மாமான் மகளே’ என்பது திருமழிசையாழ்வாருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் உள்ள திருமேனி சம்பந்தம் சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் உறவுமுறை உண்டு. மகாலட்சுமியின் திருஉருவமே ஆண்டாள் ஆவார். மகாலட்சுமி பிருகு வம்சத்தில் தோன்றியவர்;
இந்த ஆழ்வாரும் பிருகு வம்சத்தவர். எனவே இருவருக்கும் உள்ள உறவு முறை இங்கு மறைமுகமாய்க் காட்டப்பட்டுள்ளது.

ஊமைகள் சைகைகளால் சாடை காட்டிப் பேசிக் கொள்வார்கள். திருமழிசையாழ்வாரும் ஒருமுறை சைகையாலே கருத்தறிவித்தார்.
அதாவது திருப்பெரும்புலியூரில் வேதபாராயணம் நடக்கும்போது இந்த ஆழ்வார் அங்கு வந்தார்.
உடனே அவர்கள் பாராயணத்தை நிறுத்தி விட்டார்கள். ஆழ்வாரை வரவேற்ற பிறகு தொடர நிறுத்திய இடம் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை.
உடனே ஆழ்வார் கீழே கிடந்த கருகிய நெல்லை எடுத்து நகத்தால் கிள்ளிக் காண்பித்தார்.
உடன் அவர்கள் முதல் காண்டத்தில் “க்ருஷ்ணாநாம் வ்ரீஹீணாம்” என வருவதை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.
இப்படி வாயால் பேசாமல் ஊமைபோல சைகையால் காண்பித்ததால் ‘ஊமையோ’ என்பது திருமழைசையாழ்வார்ருக்குப் பொருந்தும்.

மேலும் அந்தப் பெரும்புலியூரில் ஆழ்வாரை அனைவரும் ஏசினார்கள்.
ஆனால் திருமழிசையாழ்வாரோ காதில் ஏச்சினை விடாத செவிடாய் எதையுமே செவி மடுக்கவில்லை.
எனவே ’செவிடோ’ என்பது இவரையே குறிக்கும்.

‘அனந்தலோ’ என்பது தூக்கத்தை அதாவது பிற விஷயங்களில் நெஞ்சு செல்லாமல் இருப்பதைக் காட்டும்.
திருமழிசையாழ்வாரும்,
“தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்திப் பொழுது எனக்கு மற்றவை போதும்” என்று வாழ்ந்தவர்.
எனவே ஒன்பதாம் பாசுரத்தில் திருமழிசையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

———

அடுத்துப் பத்தாவது பாசுரம்:

”நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
ஓடித் திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த
பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான்
ஒரு பெரு மழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடை கழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.

இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து
“மன்னிய போpருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.
பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றியிருளையகற்ற,
இவ் வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.
ஆவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.

நோற்று –
மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.

சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.
“யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.

“வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.
திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்;
பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.
பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.
இப் பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.
ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.

(நாற்றத்துழாய்முடி நாராயணன்)
இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.
திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.
அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.
முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.
இடையிலும் பல பாசுரங்கள் காண்க.

ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்)
நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார். இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.

“காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடி யிருக்க மாட்டாமையைச்
சொல்லிக் கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள்
பண்டோருநாளென்று தொடங்கி.

இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது
பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும்
“எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச் செய்தமைக்கு நன்கு ஒக்கும்.

திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.
இப் பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது –
மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று
ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.
ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில்
கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமை காந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.

(அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத் பாத்ரமே ! என்றபடி.
பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற
பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.

(தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்;
பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

இப்பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
“மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்” என்பதன் மறைமுக விளக்கமே பேயாழ்வாராகும்.

திருக்கோவிலூர் திவ்யதேசத்தில் சிறியதோர் இடத்தில் மழையின் பொருட்டு பொய்கையாழ்வார் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
பின்னர் பூதத்தாழ்வார் வந்து கதவைத் தட்டப் பொய்கையாழ்வார் திறந்தார். அடுத்துப் பேயாழ்வார் வந்து தட்டினார்.
பூதத்தாழ்வார் திறந்தார். பின்னர் யாரும் வரவில்லை; கதவைத் தட்டவில்லை.
யாருக்கும் கதவைத் தட்ட வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே வாசல்திறவாதார் ஆகிறார் பேயாழ்வார்.

‘நாற்றத் துழாய்’ எனப்படும் திருத்துழாய் மீது அதிகமான பாசுரங்கள் அருளிச் செய்தவர் பேயாழ்வாரே ஆவார்.
“இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய்”[மூன்றாந்திருவந்தாதி—2]

“மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்”[மூன்றாந்திருவந்தாதி—3]

என்பன அவர் அருளிச் செயல்களாகும்.

முந்தைய பாசுரத்தில் ‘அனந்தலோ’ என்று திருமழிசையாழ்வார் எழுப்பப்பட்டார்.
இதில் ‘ஆற்ற அனந்தலுடையாய்’ என்பது திருமழிசை ஆழ்வாரின் ஆச்சாரியரான பேயாழ்வாரைக் குறிக்கிறது.

திருமழிசையாழ்வார் பகவானின் பெருமை உணராமல் மனம் போன போக்கில் சுற்றி வந்தார்.
அப்போது பேயாழ்வார் ஒரு செடியை வெளியில் வேர் தெரியும்படி நுனிப்பாகத்தைப் பூமியில் நட்டார்.
அதுவும் இல்லாமல் ஓட்டைக் குடத்தைக் கயிற்றில் கட்டிக் கிணற்றில் நீர் எடுத்தார்.
இதைக் கண்ட பேயாழ்வார் “இது என்ன பைத்தியக் காரத்தனம்?” என்று கேட்க,
“பெருமாளின் பெருமை உணராத நீயன்றோ பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்” என்று அவரைத் திருத்தினார் பேயாழ்வார்.

கும்பகருணன் இப்பாசுரத்தில் பேசப்படுகிறான். ’கும்ப’ என்பது கலசத்தைக் குறிக்கும்; ‘கரணம்’ என்பது காரணமாகும்.
கலசத்தைக் காரணமாகக் கொண்டு பிறந்தவர் அகத்திய முனிவர் ஆவார்.
அகத்திய முனியே தோற்றுப் போகும்படியான நாவன்மை, புலமை கொண்டவர் பேயாழ்வார்.
எனவே அகத்தியர் தோற்று உனக்குத் தன் தமிழ்ப் புலமையைத் தந்துவிட்டாரோ என்றும் பொருள் கொள்ளப்பட்டு
அதுவும் பேயாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

”தேற்றமாய் வந்து கதவைத் திற” என்று வேண்டப்படுகிறது.
அதாவது, ‘அழகாய் வா’ என்றழைக்கிறது.
உன் பெயரே பேயாழ்வார் என்பதால் அச்சப்படப் போகிறார்கள். ‘அழகாய் வா’ என்று பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.
இவ்வாறு பத்தாவது பாசுரத்தில் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.

——————–

அடுத்த பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பேயார்க்கு அடுத்த முந்தினவரான பூதத்தாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்ற விளி பூதத்தார்க்கு நன்கு பொருந்தும்.
பல பொருள்களை யுடையதான கோ என்னும் சொல் கோதா என்ற விடத்திற்போல ஸ்ரீ ஸூக்தியைச் சொல்கிறதிங்கு.
கோவலர் – ஸ்ரீ ஸூக்திகளை யருளவல்லவர்களான ஆழ்வார்கள்.
குற்றமொன்றில்லாத என்ற விசேடணம் முதலாழ்வார்கள் மூவர்க்கே பொருந்தும்;
யோநிஜத்வமாகிற வொருகுற்றம் மற்றையாழ்வார்களுக்குண்டு;
அக்குற்ற மொன்றும் இல்லாத கோவலர் முதலாழ்வார்கள்

அவர்களுள் பொற்கொடியே!
கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால்தேடி யோடும் மனம் என்கிற பாசுரத்தினால்
தம்மை ஒரு கொடியாகச் சொல்லிக்கொண்டவர் பூதத்தாழ்வாரே யாவர்.
எம்பெருமானாகிற உபத்நத்தைத் தேடிச் செல்லுகின்ற கொடி போல்வேன் நான் என்றவர் இவரேயிறே.
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்பது முதலாழ்வார் மூவர்க்கும் பொதுவான வாசகம்.

கற்றுக் கறவை கன்றாகிய கறவை. (கறவை யென்பதனால் ஸ்ரீ ஸூக்தி விவஸ்த்ம்)
மற்றை யாழ்வார்கள் பெரிய பாசுரங்கைள யளித்தார்கள்.
முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.
பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;
பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;
பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.
க்ரமேண ஏகவசந த்விவசந பஹுவசநங்கள் இணங்கின அழகு காண்க

(செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்)
தேசமெங்கும் திரிந்து பகவத விரோதிகளை நிரஸிக்க வேணுமென்கிற அர்த்தத்தை
எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடை யான் பேரோதிப் பேதைகாள்!
தீர்த்தகரராமின திரிந்து என்ற பாசுரத்தினால் வெளியிட்டவர் இவ்வாழ்வாரே.

புற்றரவல்குல் என்பது இடையழகை வருணிப்பதாகும்.
ஸ்வாப தேசத்தில் இடையழகாவது பக்தியின் பெருமை.
ஞானம் பக்தி விரக்தி என்ற மூன்றில் பக்தியானது இடைப்பட்டதாதலால் இடையழகென்பது பக்தியின் அழகேயாகும்.
இவ்வாழ்வார் தம்முடைய திருந்தாதியை முடிக்குமிடத்து
என்றனளவன்றால் யானுடையவன்பு என்றே முடித்தார். இதனால் இவரது இடையழகு நன்கு வெளிப்பட்டதாயிற்று.
அன்பிலே தொடங்கி அன்பிலே தலைக்காட்டினார்.

புனமயிலே! என்ற விளியும் இவர்க்கு அழகாகப் பொருந்தும்.
பொழிலிடத்தே வாழும் மயில்; இவ்வாழ்வார் தோன்றிய தலமோ திருக்கடல்மல்லை;
அதனைப் பாடின கலியன் கடி பொழில் சூழ்கடன் மல்லை என்றே பன்முறையும் பாடினர்.
மயில் மேகத்தைக் காண்பதிலே மிகக் குதூஹல முடைத்தாதலால்,
மேகம் நீர்பருக வருமிடமான கடற் கரையிலே மயில்கள் மகிழ்ந்து நிற்கும்.
இவ்வாழ்வார் நின்றவிடமும் கடற கரையிலேயிறே.

(சுற்றுத்துத் தோழிமாரித்யாதி.) இவர்க்குப் பொய்கையாரும் பேயாரும் சுற்றத்தவர்கள்;
மற்றையாழ்வார்கள் தோழிமார்.

(முகில் வண்ணன் பேர் பாட.)
முந்துற முன்னம் முகில் வண்ணன் பேர் பாடினவர் இவ்வாழ்வாரேயாவர்;
உலகேழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ஏத்துமென்னெஞ்சு என்ற இவர் பாசுரம் காண்க
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்.

இப்பாசுரத்தில் “பொற்கொடியே” என்று பூதத்தாழ்வார் குறிப்பிடப்படுகிறார்.
அவர்தான் தம்மைப் பொற்கொடியாகக் கூறிக் கொள்வார்.
“கோல்தேடி ஓடும் கொழுந்து அதே போன்றதே மால்தேடி ஓடும் மனம்” என்பது அவர் அருள் வாக்காகும்.

மேலும் ‘புனமயிலே’ என்பதும் பூதத்தாழ்வாரையே காட்டும்;
பூதத்தாழ்வார் கடற்கரையில் இருக்கும் திருக்கடல்மல்லை [மகாபலிபுரம்] என்னும் திவ்யதேசத்தில் அவதரித்தவர்.
கடற்கரையில் சோலைகள் இருக்கும். “கடிபொழில்சூழ் கடல் மல்லை” என்பது அருள்வாக்கு.
சோலைகளில் மயில் குடியிருக்கும். மேலும் மயில் மேகத்தைக் கண்டால் தோகை விரித்து ஆடும்.
மேகம் நீர் முகந்து கொள்ள கடலுக்குத்தான் வரும். அப்போதும் மயில் ஆடும்.
எனவே ‘புனமயிலே’ என்பது பூதத்தாழ்வாரையே காட்டும்.

மற்றும் பூதத்தாழ்வார் மேக வண்ணன் என்று பெருமானைக் காட்டுவார்.
“உலகேழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணன் ஏத்தும் என் நெஞ்சு” என்பது அவர் அருளிச் செயலாகும்.
இப்பாசுரத்திலும் முகில்வண்ணன் எனும் திருநாமம் கூறப்படுகிறது.

“சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்” என்பதன் மூலம் பேயாழ்வார் காட்டப்படுகிறார்.
எப்படியெனில்,
பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் இவருக்குச் சுற்றமாவார்கள்;
மற்ற ஆழ்வார்கள் எல்லாரும் தோழிகள் ஆவர்.
இவ்வாறு பதினோராவது பாசுரத்தில் பூதத்தாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
பூதத்தாழ்வார்க்கு அடுத்து முந்தினவரான பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
தங்காய்! என்ற விளி இவர்க்கு நன்கு பொருந்தும்
உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள்.
‘சேட்டை தம்மடி யகத்து’ என்ற திருமலைப் பாசுரத்தில், தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்டா என்ற சொல்லால்
மூதேவியைக் குறித்தமை காண்க.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரிற் பிறந்தவள்.
‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர்
இந்த வொற்றுமைநயம் பற்றி தங்காய்! என விளிக்கத் தகுதியுடையாரிவ் வாழ்வார்.

“நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.
ராவணவதாநந்தரம் திருவயோத்திக்கு மீண்டு எழுந்தருளாநின்ற பெருமாளை நோக்கி பரத்வாஜ மஹர்ஷி
“பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதிக்ஷதே” என்றார்.
இங்கு பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது?
இரவும் பகலும் நிச்சலும் அழுதழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.
“வண்பொன்னின் பேராறுபோல் வருங் கண்ண நீர்கொண்டு
அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர்” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அவ்வண்ணமாகவே பொய்கை யாழ்வாரும்
“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே
அழுதவராதலால் நினைத்தில்லஞ் சேறாக்கின ரென்க.

(கனைத்து)
முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு.
பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை.
இவரே முதன் முதலாகப்பேசத் தொடங்கினவரென்பது இவ்வினையெச்சத்தினால் தோற்றுவிக்கப்படும்.

(இளங்கற்றெருமை) எருமை என்றால் மஹிஷீ;
லக்ஷித லக்ஷணாக்ரமத்தால் தேவ தேவ திவ்ய மஹிஷீ என்றவாறு.
எம்பெருமானுக்கு திவ்ய மஹிஷியான பிராட்டியை யொப்பவர் இவ்வாழ்வார் என்பது ஸூரனை.
“இளங் கன்றுகளையுடைய” என்று விசேஷணமிட்டதனால், மற்றை யாழ்வார்களனைவரும் இவர்க்கு
வத்ஸ ஸ்தாநீயாகளாய் இவர் மாத்ரு ஸ்தாநீயர் என்று காட்டினபடி. ஆழ்வார்களுள் முதல்வரிறே யிவர்.

(கன்றுக்கிரங்கி) இவர் ஸ்ரீ ஸூக்தி யருளிச் செய்யத் தொடங்கினது கன்றுகளான நம் போல்வார்
பக்கலிலுள்ள பரம க்ருபையா லென்கை.

(நினைத்து முலைவழியே நின்று பால்சோர.)
பகவத் குணங்களை நினைத்தவாறே அந்த நினைவு தானே ஊற்றாகப் பால் போன்ற ஸ்ரீ ஸூக்திகள் பெருகப்புக்கன என்ற படி.

(பனித்தலை வீழ நின்வாசல் கடைபற்றி)
இவர் பொய்கையில் தோன்றினவராதலால் இவரது வாசற்கடையைப் பற்றுவார்க்குப் பணித்தலை வீழ ப்ராப்தமே யாகுமிறே.

(சினத்தினா இத்யாதி.)
இது ஸ்ரீராம குண கீர்த்தனம். மஹர்ஷிகளின் ஞானக் கண்ணுக்கும் இலக்காகாத வொரு ஸ்ரீராம சரிதம்
இவ்வாழ்வாருடைய அகக்கண்ணுக்கு இலக்கானமை
“பூமேய மாதவத் தோன்தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தா லெண்ணினான் பண்பு.” என்ற
இவரது பாசுரத்திற் பொலியும்.
அதில் “நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே!” என்றதற்குப்பொருந்த “மனத்துக் கினியானை” என்றாள். (

இனித் தானெழுந்திராய்) “பழுதே பல பகலும்” என்கிற பாசுரம் பேசின பிறகுங்கூட உறங்கலாமோ? என்கை.

முழுக்ஷப்படியில் ‘பழுதே பல பகலும் போயின வென்று இறந்த நாளைக்குக் கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை”
என்ற ஸ்ரீ ஸூக்தியும் இங்கு அநுஸந்தேயம்.

(அனைத்தில்லத்தாரு மறிந்து) “அறியுமுலகெல்லாம் யானேயு மல்லேன்” என்ற இவ்வாழ்வாரது பாசுரத்தை
அழகாக நினைப்பூட்டுகிறபடி காண்மின்.

இப்பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை யெல்லாம் உணர்த்திற்றாயிற்று.
“ஆழ்வார்கள் பன்னிருவர்” என்றுமுள்ள ஸம்ப்ர தாயப்படிக்கு ஸ்ரீ மதுர கவிகளும் ஆண்டாளும்
ஆழ்வார் கோஷ்டியில் சேராதவர்களாதலால் இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே அறியக் கிடக்கிறது.
எங்ஙனே யென்னில்;
நற்செல்வன் தங்காய்! என்றது நற்செல்வன் தங்கையே! என்று பொருள்படுதலால்
நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே! என்றபடியாகும்.
இங்கு நற்செல்வ னென்பது நம்மாழ்வாரை, அவர் திருவாய்மொழி அருளிச் செய்கையில்
மதுரகவிகள் அவருடைய சையின் ஸ்தாநீயராயிருந்து பட்டோலை கொண்டாராதலால் இந்த விளி மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லிற்றாகி
அவருடைய தங்கையென்று ஆண்டாளையுஞ் சொல்லக் குறையில்லை
“கோதற்ற ஞானத் திருப்பாவை பாடியபாவை தங்கை” என்றும்,
“பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று முள்ளவை காண்க.
ஆண்டாள் தன்னைத் தானே உணர்த்திக் கொள்ளுகை பொருந்துமோவென்று விரஸமாக வினவுவார்க்கு
நாம் விடையளிக்க வல்லோமல்லோம்.
சொற்சுவை அமைந்திருக்கு மழகை அநுபவித்துப் போருகிறோ மத்தனை.

இப்பாசுரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வாராகக் கருதப்படும் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.
ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு முதல் பாசுரம் பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரமே ஆகும்.

‘கனைத்து’ என்ற சொல்லின் மூலம் இங்கு பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.
முதலில் பேசத் தொடங்கும் முன்னர் தொண்டையைக் கனைப்பது வழக்கமன்றோ?
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் திவ்யதேசத்தில் உள்ள பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர்.
“வாசமலர்க்கருவதனில் வந்த மைந்தா வாழியே” என்பது இவரின் வாழித் திருநாமங்களில் ஒன்றாகும்.
தாயார் மகாலட்சுமி தோன்றியதும் தாமரை மலரில்தானே?
எனவே மகாலட்சுமி ஆழ்வாருக்குத் தங்கை முறையாகிறார்.
எனவேதான் நற்செல்வன் தங்காய் என்று அழைப்பதன் மூலம் பொய்கையாழ்வார் காட்டப்படுகிறார்.

இவர் பொய்கையில் அவதரித்தார். பனி போன்று குளிர்ச்சியானது பொய்கை.
‘பனித்தலை வீழ’ என்று காட்டிப் பொய்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

‘இளங்கற்றெருமை’ என்று இப்பாசுரத்தில் பேசப்படுகிறது. இளமையான கன்று என இதற்குப் பொருள் ஆகும்.
இந்த ஆழ்வார் ஆழ்வார்களுக்குள் முதல்வர், இளையவர் என்பது இங்கு இந்தச் சொல் மூலம் கூறப்படுகிறது.
இவ்வாறு பன்னிரண்டாவது பாசுரத்தில் பொய்கையாழ்வார் எழுப்பப் படுகிறார்.

—————-

அடுத்தப் பதின்மூன்றாவது பாசுரத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளை களெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்”

ஸ்வாபதேசம்.)
இது ஆண்டாளுக்கு அடுத்த தொண்டரடிப்பொடி யாழ்வாரை யுணர்த்தும் பாசுரம்.

(போது அரிக் கண்ணினாய்!)
புஷ்பங்களை ஹரிப்பதிலேயே திருஷ்டியைச் செலுத்துபவரே! என்றபடி. புஷ்ப கைங்கரிய பராpறே இவ்வாழ்வார்.
“துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி”
“தொடை யொத்த துளவமுங் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றவை காண்க.

பாவய்! என்ற விளியும் இவர்க்கு நன்கு பொருந்தும். பதிவ்ரதா சிரோமணியைப் பாவை யென்பர்.
இவ்வாழ்வார் அரங்கனொருவ னுக்கே வாழ்க்கைப்பட்டு வேறொருதிருப்பதி யெம்பெருமானை
நெஞ்சிலும் நினையாதவராதலால் கற்புச் சிறப்பு குறிக்கொள்ளத்தக்கது.
திருவேங்கடமுடையா னெதிரே ஒருவர் “பதின்மர் பாடும் பெருமாள்!” என்று ஏத்த,
அதைக்கேட்ட பெரிய கேள்விஜீயர், ‘சோழியன் கெடுத்தான் காணும்;
அந்த ஏற்றம் நம் பெருமாளுக்கில்லையே; நம்பெருமாளொருவர்க்கே’ என்றார் என்ற ஐதிஹ்யமும் இங்கு நினைக்கத் தக்கது.

(நன்னாளால்)
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்ற திருவாக்கிலேயே இச்சொல்லும் வருகின்றது.
தொண்டடிப்பொடிகள் திருவவதரித்தது மார்கழித் திங்களேயாதலால் நன்னாளென்னத் தட்டுண்டோ?

(கள்ளந் தவிர்ந்து)
‘சூதனாய்க் கள்வனாகி’ என்றும்;
‘கள்ளமேகாதல் செய்து’ என்றும்;
‘கள்ளத்தேனானுந் தொண்டாய்’ என்றும் பலகாலும் தமது கள்ளத்தைப் பேசிக்கொண்டாரிவ்வாழ்பார்.
இவரது சரிதையிலும் பொன்வட்டில் விஷயமான கள்ளம் அடிபட்டுக் கிடக்கிறது.
அது தவிர்ந்து பகவத் பாகவத கோஷ்டியில் கலந்த படியை ஈற்றடி தெரிவிக்கின்றது.

பெரியாழ்வார் போலவே இவ்வாழ்வாரும் பெரும்பாலும் பூம்பொழில்வாஸ முடையவராதலால்
அவ்விடத்து அடையாளமாகப் புள்ளும் சிலம்பினகான் என்பது இப்பாட்டிலும் புகுந்தது.

(குள்ளக் குளிரவித்யாதி.) நீராட்டம் முதலிய நித்ய கர்மாநுஷடானங்களையும் தவிர்த்து
சிலகாலம் பள்ளிக்கிடந்தமை இவ்வாழ்வாரது சரிதையிற்காணத்தக்கது.

புள்ளின்வாய் கீண்டானை யென்று தொடங்கிக் கண்ணபிரானுடையவும் இராமபிரானுடையவும்
கீர்த்திமை பாடினபடி சொல்லுகிறது. இவ்வாழ்வர் திருமாலையின் முடிவில்
‘வள வெழுந்தவளமாட மதுரைமா நகரந்தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலை’ என்று
கண்ணபிரானுடைய கீர்த்திமையையும்,
திருப்பள்ளி யெழுச்சியில் ‘மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே யரங்கத்தம்மா!’ என்று
இராமபிரானுடைய கீர்த்தியையும் பாடினமையுணர்க.

‘பிள்ளைகளெல்லாரும்’ என்றது ஆண்டாள் தனக்கு முந்தின ஆழ்வார்களெல்லாரையும் சொன்னபடி.

இப்பாசுரத்தின் முதல் அடி கண்ணனையும், அடுத்த அடி இராமபிரானையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
தொண்டரடிப்பொடியாழ்வாரும் ‘திருமாலை’ முடிவில்,
“வளவெழுந்த வளமாட மதுரைமா நகரந்தன்னுள்
கவளமால் யானைகொன்ற கண்ணனை அரங்கமாலை” என்று கண்ணனைக் காட்டினார்.

அடுத்து திருப்பள்ளியெழுச்சியில்,
“மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய
வடுதிறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா” என்று இராமபிரானையும் போற்றுகிறார்.

“வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று” என்பதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,
“கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனைரு ளகன்றது காலையம் பொழுதால்”
என்று காட்டியுள்ளார்.

“புள்ளும் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஒலி காட்டப்பட்டுள்ளது.
இவரும் பறவைகள் வாழும் சோலைகளிலேயே தங்கி பூப்பறித்து வந்தார்.

‘பாவாய்’ எனும் சொல் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் குறிப்பதாகும்.
“பாவாய்” என்பதற்குப் பரம ஏகாந்தி என்பது பொருளாகும். இவர் மட்டுமே ஆழ்வார்களில் ஏகாந்தியாவார்.
வேறு தேசத்துப் பெருமாள் எவரையும் பாடாததால் பரம ஏகாந்தியாவார்.
அதாவது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள அரங்கனைத் தவிர வேறு எந்தத் திவ்ய தேசத்துப் பெருமாளையும்
இவர் மங்களாசாசனம் செய்யவில்லை.

இப்பாசுரத்தில் வரும் “நன்னாளால்” எனும் சொல் முதல் பாசுரத்தில்
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்” என்று ஆளப்பட்டிருக்கும்.
மார்கழிதான் தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த மாதமாகும்.

”பள்ளிக் கிடத்தியோ” என்பதும் இந்த ஆழ்வாருக்குப் பொருத்தமே.
இவர் சில காலம் தேவதேவி எனும் தாசியிடம் மயங்கி நீராட்டம், விரதம் மறந்து பள்ளிக்கிடந்தார்.
இவ்வாறு இப்பாசுரத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் எழுப்பப்படுகிறார்.

————-

அடுத்துப் பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணாழ்வார் எழுப்பப்படுகிறார்.

”உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்பவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கன்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்)
தொண்டரடிப் பொடிகளுக்கு அடுத்த திருப்பாணாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இதில், நங்காய்! நாணாதாய்! நாவுடையாய்! என்ற மூன்று விளிகளும் பாண் பெருமாளுக்கு நன்கு பொருந்தும்,

நங்கை யென்பது குணபூர்த்தியைச் சொல்லுகிறது.
லோக ஸாரங்க மஹாமுனிகள் வந்து என் தோளின்மீது ஏறிக்கொள்ளுமென்ன,
அத்யந்த பார தந்திரிய ஸ்வரூபத்தை நினைத்து அதற்கு உடன் பட்டமை குணபூர்த்தி,
அங்ஙனம் அந்தணர் தலைவரது தோளின்மீது ஏறியீருக்கச்செய்தேயும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல்
‘அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்றே பேசினவராதலால் நாணாதவர். (நாண் – அஹங்காரம்)
‘பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்’ என்று தேசிகன் பணித்தபடி
ஸகல வேதார்த்தங்களையும் பத்துப் பாசுரத்திலே அடக்கிப் பேசின பரம சதுரராதலால் நாவுடைடயார்

“கையினார் சுரிசங்கனலாழியர்” என்று சங்கொடு சக்கர மேந்தின வழகை யநுபவித்தமை பற்றியும்
‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்’ என்று
கண்ணழகில் ஈடுபட்டும் பேசினமை பற்றியும் ‘சங்கொடு சக்கரமேந்துந் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாட என்றாள்.

இவ்வாழ்வார் தமது சாதி நிலைமைக்கு ஏற்ப வாழ்ந்த விடத்தைக்கருதி உங்கள் புழைக்கடை யித்யாதி அருளிச் செய்யப்பட்டது.

இவரது சரிதையில் ஸம்பந்தப்பட்ட லோகஸாரங்க மஹாமுனிகளின் தன்மையைக் காட்டுவது போலுள்ளது
செங்கற் பொடிக்கூறை யித்யாதி.

‘எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய்’ என்பதில் ஒரு அழகிய பொருள் தொனிக்கும்.
(அதாவது-) எழுப்புவதாவது – தூக்கிக் கொள்வது. எங்களை என்றது பாகவதர்களை யென்றபடி.
பாண்பெருமாளே! உம்முடைய முதற் பாசுரத்தில் ‘அடியார்க் கென்னையாட்படுத்தவிமலன்’ என்ற
சொல் நயத்தை நோக்குங்கால் பாகவதர்களை நீர் தோளில் தூக்கிக் கொண்டாடுபவர் போலத் தெரிகின்றது.
உமது கதையோ அப்படியில்லை. மஹாபாகவதரான லோகஸாரங்க மஹா முனியின் தோளின் மீதேறி நீர் இருந்ததாகவுள்ளது.
ஆகவே, முந்துறமுன்னம் பாகவத சேஷத்வத்தை நீர் சொல்லிக்கொண்டது வாய்பேசு மத்தனையே போலும் என்று விநோதமாகக் கூறுகிறபடி.

‘நங்காய்’ என்பதற்குச் சிறந்த குணம் உடையவள் என்பது பொருளாகும்.
இவரும் உலோக சாரங்க முனிவர் மேல் ஏறி வர உடன்பட்ட குணபூர்த்தி உடையவர்.

‘நாணாதாய்’ என்பதற்கு வெட்கமில்லையா? என்று பொருள்.
ஏனெனில் திருப்பாணாழ்வார் அடியார்க்கு என்னை ஆட்படுத்தவேண்டும் என்று வேண்டியவர்.
“உம்மைப் போய் அடியவர்க்கு ஆட்படுத்தக் கேட்கிறீர்களே? வெட்கமில்லையா” என்று கேட்பது போன்றதாகும்.
மேலும் ஒரு தவ முனிவரின் தோள்கள் மேல் ஏறி வர வெட்கம் இல்லையா என்றும் பொருளாகும்.

அடுத்து ‘நாவுடையாய்’. இதற்கு நாவன்மை படைத்தவர்; சிறந்த நாவீறு மிக்கவர் என்பது பொருள்.
திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தாம் அருளிச் செய்துள்ளார்.
ஆனால் இவற்றை ஒரு தட்டில் வைத்து, மீதி ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தால்
இவர் பாசுரங்கள்தாம் கனமாக இருக்கும்.
“பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்து பழமறையின் பொருளென்று பரவுமின்கள்” என்பார் தேசிகன்.

‘சங்கொடு சக்கரம் ஏந்தும்’ என்பதில்
‘கையினார் சுரி சங்கனல்’ என்பதான ஆழ்வார் பாசுரத்தையே நினைவுபடுத்தி ஆண்டாள் இவரை எழுப்புகிறார்.

’பங்கயக் கண்ணானை’ என்பதன் மூலம் இந்த ஆழ்வார்தாம் எம்பெருமானின் கண்ணழகில் அதிகமாக ஈடுபட்டுப் பாடியது காட்டப்படுகிறது.
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே”-என்பது அவர் அருளிச் செயலாகும்.

‘செங்கல்பொடிக் கூறை’ என்பது முனிவர்களைக் குறிப்பாக இந்த ஆழ்வாரைத்
தம் தோளில் ஏற்றிய சாரங்க முனிவரைக் காட்டுகிறது.

’எங்களை முன்னம் எழுப்புவான்’ என்பது
“அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்” என்று பாடியதால் நீர் பாகவதரைத் தோளில் ஏற்றிவருவீர் என எண்ணினோம்.
ஆனால், நீர் முனிவர் தோள் மீது வருகிறீர் முன்பு சொன்னது என்னவாயிற்று” என வினவுவது போல் உள்ளது.
இவ்விதமாக பதினான்காவது பாசுரத்தில் திருப்பாணழ்வார் எழுப்பப்படுகிறார்.

————————-

அடுத்துப் பதினைந்தாவது பாசுரத்தில் திருமங்கையாழ்வார் எழுப்பப்படுகிறார்.

“எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்ற ழையேன்மின் நங்கையீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்”

(ஸ்வாபதேசம்.)
பாண் பெருமாளுக்கு அடுத்தவரும் ஸாவக நிஷ்டருமான திருமங்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.
இவ்வாழ்வார் இரண்டு ஆய்ச்சிகளுக்குப் பரஸ்பர ஸம்வாதமாக
*மானமரு மென்னொக்கி* என்றொரு பதிகம் அருளிச்செய்தவராதலால் இவரை யுணர்த்தும் பாசுரம்
பரஸ்பர ஸம்வாத ரூபமாகவே அமைக்கப்பட்டது.

“கிளிபோல் மிழற்றி நடந்து” மென்கிளிபோல் மிக மிழற்று மென்பேதையே என்று பல பாசுரங்களில்
இவர் தம்மைக் கிளியாகச் சொல்லிக் கொண்டவராதலால் கிளியே! என்ற விளி இவர்க்குப் பொருந்தும்;
அன்றியும்,
சொல்லிற்றையே சொல்லுவது கிளியின் இயல்பு.
அதுபோல இவர் ‘மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற’ என்றபடி
நம்மாழ்வார் ஸ்ரீஸூக்திகளை யநுசரித்தே அருளிச் செய்பவராதலாலும் கிளியென்றது.

இரண்டாமடி திருமங்கையாழ்வாருடைய விடையளிப்பு. (வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும்.)
இது கலியனை நோக்கி ஆண்டாள் கூறுமது. ‘வாசிவல்லீரிந்தரிர்! வாழ்ந்தேபோம் நீரே’ என்று நீர்
மிகக் கடினமாகப் பேச வல்லீரென்பது எனக்கு,

(பண்டே – நீர் அவதரித்துப் பாசுரம் பேசுவதற்கு முன்னமே) தெரியுங்காணும் என்றாள்.

அதுகேட்ட கலியன் வல்லீர்கள் நீங்களே
‘கொள்ளும் பயனென்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்,
அள்ளிப்பறித்திட்டவன் மார்பிலெறிந்து என்னழலைத் தீர்வேனே’ என்று அற வெட்டிதாகச் சொன்ன
உன் பேச்சு கடினமா? என் பேச்சு கடினமா? நீயே பார்க்கலாம் – என்றார்.

என்றவுடனே *நண்ணாதவாளவுணர் *கண்சோர வெங்குறுதி* முதலிய திருமொழிகளில் தாம் அநுஸந்தித்த
பாகவத சேஷத்வ காஷ்டையை நினைத்து *நானே தானாயிடுக* என்றார்.

“உனக்கென்ன வேறுடையை” என்றது திருமங்கை யாழ்வார்க்கு அஸாதாரணமான
திருமடல் திவ்யப்ரபந்த வக்த்ருவத்தை யுளப்படுத்தியதாகும்.

(எல்லாரும் போந்தராரோ இத்யாதி.) கலியனுக்கு முன்னமே மற்றுமுள்ள ஆழ்வார்கள் அவதரித்து,
பன்னிருவர் என்கிற ஸங்கியை இவரோடு நிரம்பிற்று என்று தெரிவிக்கப்பட்டது.

(வல் ஆனை கொன்றானை – மாயனைப் பாட.)
ஆனையைக் கொன்ற விஷயத்தை ஒரு ஆச்சரியமாக எடுத்துப் பேசினவர் கலியன்.
“ஆவரிவை செய்தறிவார் அஞ்சன மாமலை போலே” என்ற பெரிய திருமொழி காண்க.

அடிக்கடி கலியன் வாய் வெருவுவதும் வல்லானை. கொன்ற வரலாற்றையே;
“கவள யானைகொம் பொசித்த கண்ணனென்னும்” இத்யாதிகள் காண்க.

(மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட) எம்பெருமான் தன் திறத்தில்; மாறு செய்பவர்களது செருக்கை
வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரிதைகளுள் கோவர்த்தநோத்தாரண கதை மிகச் சிறந்தது.
மாறுசெய்த இந்திரனுக்கு ஒரு தீங்குமிழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை யடக்கினனிறே.
இக்கதையிலே கலியன் மிக்க வூற்றமுடையவர்;
பெரிய திருமொழியை முடிக்கும் போதும் “குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை” என்றார்;
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தை முடிக்கும்போதும் “குன்றெடுத்த தோளினானை” என்றே தலைக் கட்டினார்.

இப்பாசுரம் இருவர் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கை மன்னனும் இதேபோல் பாசுரங்கள் அமைத்துள்ளார்.
“மானமரு மென்னோக்கி” என்று தொடங்கும் திருச்சாழல் பாசுரங்கள் பாசுரங்களில் இதைப் பார்க்கலாம்.

‘இளங்கிளியே’ எனும் சொல் இந்த ஆழ்வாரைத்தான் குறிக்கிறது. ஆழ்வார்களில் இவர்தான் கடைகோடி. இளமையானவர்.
மேலும் இவர் தம்மைக் கிளி என்றே சொல்லிக் கொள்வார்.
“மென்கிளி போல மிக மிழற்றுமென் பேதையே” என்பது அவர் வாக்கு.
’கிளி போல் மிழற்றி நடந்து’ என்றும் பாடி உள்ளார்.

கிளியானது பிறர் சொன்னதையே தானும் சொல்லும்.
திருமங்கை ஆழ்வாரும் இவருக்கு முன்னால் நம்மாழ்வார் சொன்னதையே சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வார் நான்கு மறைகளை நான்கு பிரபந்தங்களில் அருளிச் செய்திருக்கிறார்.
அந்த நான்கு பிரபந்தங்களையும் திருமங்கையாழ்வார் ஆறு அங்கங்களாகப் பாடியுள்ளார்.
“மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற” என்பது நினைவு கூறத்தக்கது.

“எல்லாரும் போந்தாரோ?” என்பது நோன்பு நோற்க எல்லாரும் போய்விட்டார்களா? எனப் பொருள் தரும்.
ஆனால் எல்லா ஆழ்வார்களும் போய்விட்டார்களா என்று கேட்டால்,
ஆமாம் இவர்தான் கடைசியில் எழுப்பப்படுகிறார் என்பதுதான் விடையாகும்.

”மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” என்பது செருக்கழித்தலைக் காட்டும்.
ஆழ்வாரும் இந்திரன் செருக்கழித்தலைப் பாடுவார்.
“குன்றமெடுத்து ஆநிரை காத்தவன்” என்பது அவர் அருளிச் செயலாகும்.
திருநெடுந்தாண்டகம் நிறைவுபெறுகையில், ”குன்றெடுத்த தோளினான்” என்பார்.

இவர் வாக்கில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஆண்டாள் நாச்சியார் “வல்லீர்கள் நீங்களே” என்கிறார்.
திருமங்கைஆழ்வார் நாவன்மை படைத்தவர்.
“உனக்கென்ன வேறுடையை” என்பது இந்த ஆழ்வார் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதைக் கேட்கிறது.
இவர் மட்டுமே மடல் பாடியவர். மேலும் இவர் நீர் மேல் நடப்பது போன்ற பல விசித்திரங்கள் செய்து காட்டியவர்.
எனவேதான் ‘எல்லே’ (என்ன ஆச்சரியம் !) என்று நாச்சியார் வியந்து பாடுகிறர்.

———-

இவ்வாறு ஆறாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையில் உள்ளே இருக்கும் பாடல்கள்
பெண்களை எழுப்புவதுபோல் தோன்றினாலும்,
ஆழ்வார் பெரு மக்கள்தாம் எழுப்பப்பட்டு அவர்களின் அருள் வேண்டப்படுகிறது எனக் கூறலாம்.

————–———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading