ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் ஸ்ரீ கீதாஶ்லோகார்த்த ஸாரம்

ஸ்ரீ ஆளவந்தாரருளிச்செய்த கீதார்த்த ஸங்க்ரஹம்,
ஸ்ரீ வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் அருளிச் செய்த “பகவத் கீதை வெண்பா” மற்றும்
ஸ்ரீ. உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் “ஸ்ரீமத் பகவத் கீதை” விவரணத்திலிருந்து.

ஸ்ரீ எம்பெருமானாரருளிச்செய்த ஆளவந்தார் தனியன்

யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

பாயிரம்:
1. கண்ணா நீ பார்த்தர்க்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறபருளுஞ் சீர் கீதை – யெண்ணாரு
நன் பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.

2. மாதவன் மாமாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடிக்ண் – மீதருள
வுச்சி மேற் கொண்டே யுயர் கீதை மெய்ப் பொருளை
நச் சிமேற் கொண்டுரைப்பன் நான்.

3. நாத னருள்புரியு நற்கீ தைன்படியை
வேதம் வகுத்த வியன்முனிவன் – பூதலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டோத் தும்பகர்வன்
சீர்த்தழைத்த வெண்பாத் தெரிந்து.

4. வேதப் பொருளை விசயர்க்குத் தேர்மீது
போதப் புயன்ற புகழ்மாயன் – கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள்விரிப்ப னந்தமிழாற் றேர்ந்து.

5. தேயத்தோ ருய்யத் திருமா லருள்கீதை
நேயத்தோ ரெண்ணெய் நிறைவித்துத் – தூய
தெருணூல தேபெரிய தீபத்தை நெஞ்சி
லிருணூற வேற்றுகேன் யான்.

—–

1) ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம்ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: – தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும்,
ஞானயோகத்தாலும், இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான,
நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான்.

6. சுத்தியாற் னெஞ்சிற்றந் தொல்கரும ஞானத்தா
லத்தியா தொன்றை யறந்துறந்தோர் – பத்தியா
னண்ணும் பரமனா நாரணனே நற்கீதைக்
கெண்ணும் பொருளா மிசைந்து.

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில்,
ஒன்றை அ(ர்)த்தியாது – (பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற்கூறிய கர்மஜ்ஞாநவைராக்யங்களாலே உண்டான) பக்தியோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பரப்ரஹ்மமாகிற,
நாரணனே – நாராயணனே,
நற்கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

——–

பூர்வ ஷட்கம்:

2) ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே யோகலக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிஶேஷங்களாலே) நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞானயோகமும், கர்மயோகமும்,
யோகலக்ஷ்யே – (ஆத்மஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும், சோதிதே – விதிக்கப்பட்டன.

7. ஞானங் கரும நலஞ்சேர் நிலையதனை
யான மனயோகத் தாராய்ந்திங் – கூனமறத்
தன்னா ருயிருணருந் தன்மையினை நற்கீதை
முன்னாறோத் தோதும் முயன்று.

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞானயோகத்தையும், கர்மயோகத்தையும்,
ஆன மனயோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச்சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

——–

மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத்தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாநகர்மாபி நிர்வர்த்யோ பக்தியோக:ப்ரகீர்த்தித:

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தியோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

8. உள்ளபடி யிறையை யுற்றெய்த முற்றறஞ்சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி – வெள்ள
நடையாடும் யோகத்தை நாதனருள் கீதை
யிடையாறோத் தோது மெடுத்து.

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்மயோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்திவெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்திவெள்ளம் பெருகி வரும் பக்தியோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

——–

அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

9. கருமமறி வன்பிவற்றின் கண்ணார் தெளிவில்
வருஞ்சித் தசிதிறையோன் மாட்சி – யருமையற
வென்னாதன் றந்த வெழிற்கீதை வேதாந்தப்
பின்னாறோத் தோதும் பெயர்ந்து.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூலரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என்ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம்பிரித லைவேள்வி
யனமுத லாறு மறமிறைவற் – கேநயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்மயோ கத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐவேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம்செய்தல்,
பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக்கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்மயோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடியிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தியோகத்தின் படி – பக்தியோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித்தம் புத்தியினிற் செம்மை
யலம்புரிவார்க் குற்றவுயிர் மாட்சி – நலம்புனைந்து
மானயோ கத்திறையை மன்னுநிலை காண்பதே
ஞானயோ கத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம்புரிவார்க்கு – நேர்மைக்குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோகமுறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞானயோகத்தின் நலம் – ஞானயோகத்தின் ஸ்வரூபமாகும்.

——–

13. இந்த வகையமைந்த யோகங்க ளிம்மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம்மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளையுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித்தனிசேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித்தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

—————-

1: அர்ஜுன விஷாத யோகம்:

5) அஸ்தாநஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்

அஸ்தாந ஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்மபுத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வதர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப்போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

————

2: ஸாங்க்ய யோகம்:

6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்மதத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீலக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்யயோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந்மோஹஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மாமாயன் – பேராச்சிரியமான ஸ்வரூபரூபகுண விபூதிகளையுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால்,
மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

————

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம்:
முதலத்தியாயமும், இரண்டாமத்தியாயத்தில் பத்துஶ்லோகங்கள் முடியவும்
சாஸ்திரம் அவதரித்த சந்தர்ப்பத்தைக்கூறும் அவதாரிகையாகிறது.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்பதுன்பம் முதலானவற்றைப் பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீரவேண்டிய ஜந்மமரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்மநித்யத்வப்ரஸம்ஸை.
30: ஆத்மநித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமேயொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு. (இதுவரையில் அஸ்தானஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது. இனி, தர்மவிஷயமான உபதேசம்.)
38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்பதுன்பங்கள் முதலானவற்றில் ஸமபுத்தியுடன் போரிடவேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பலத்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை அநுஷ்டிப்பதாகிற கர்மயோகம் மோக்ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்மயோகத்தின் பலம் ஞானயோகம். ஞானயோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்மஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்திதப்ரஜ்ஞநிலை எனப்படும்ஜ்ஞானயோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.

59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்யமங்கள விக்ரஹத்தோடு கூடிய பரமபுருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞானயோகத்தின் பலமான ஆத்மதர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்றுவிதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——

3: கர்ம யோகம்:

7) அஸக்த்யா லோகரக்ஷாயை குணேஷ்வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ்யோக்தாத்ருதீயே கர்மகார்யதா

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வரஜஸ்தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில் அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்துவிட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்மகார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞானயோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக்கொள்ளத்தக்கதாயிருப்பது கருமயோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்மயோகம் ஆத்மதர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாநயோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞானயோகமே சிறந்ததாயிருக்க கர்மயோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.
3-8 எளிதாகச் செய்யத்தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததாயிருக்கை, விடமுடியாததாயிருக்கை முதலான காரணங்களால் கர்மயோகம் ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் சிறந்தது.
9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப்படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமேயொழிய இவனைக் கட்டுப்படுத்தாது.
17-19 ஆத்மதர்ஶனம் கைவரப்பெற்ற முக்தனான கைவல்யநிஷ்டனே வர்ணாஶ்ரமதர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்மயோகத்தை அனுஷ்டித்தே ஆத்மதர்ஶனத்தைப் பெறவேணும்.
20 ஜனகர் முதலானோர் கர்மயோகத்தாலேயே ஆத்மதர்ஶனத்தைப் பெற்றனர்.
20-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞானயோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்மயோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதிகுணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்மயோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞானயோகத்தையிடையிடாமல் அதுவே நேரே ஆத்மதர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞானயோகத்தைவிடத் தாழ்ந்ததல்ல.
31-32 கர்மயோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.
33-43 எத்தகைய சிறந்த ஞாநயோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காமக்ரோதங்களும் ஜ்ஞாநயோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதிவாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்மயோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத்தக்கது.

——–

4: ஜ்ஞான யோகம்:

8) ப்ரஸங்காத்ஸ்வஸ்வபாவோக்தி: கர்மணோகர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞானயோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-3: கர்மயோகம் ஶுத்தபரம்பராப்ராப்தம்.
4: அர்ஜுனனின் கேள்வி.
5-11: அவதார ரஹஸ்யம்.
12-24: கர்மயோகம்ஜ்ஞாநாகாரமாயிருப்பதை நிரூபிப்பது.
25-30: கர்மயோக வகைகள்.
30-32: கர்மயோகிகளுக்கு நித்யநைமித்திக கர்மங்கள் அநுஷ்டிக்க வேண்டியவையே. அவர்களிடையே பலபேதம் கிடையாது.
33-40: கர்மயோகத்தில் அடங்கியஜ்ஞாநாம்ஶத்தின்ப்ராதாந்யம்.
41-42: முடிவுரை.

———-

5 – கர்மஸந்யாஸ யோகம்:

9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்மயோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக,
தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரியப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பலத்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது; இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸமதர்ஶநநிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவைப்ரக்ருதியின் செயல்களென எண்ணியிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர். இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————

6 – அத்யாத்ம யோகம்:

10) யோகாப்யாஸவிதிர் யோகீ சதுர்த்தா யோகஸாதநம்
யோகஸித்தி:ஸ்வயோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே

யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோகஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோகஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வயோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

அத்த னருள்கீதை யாறாமோத் தாற்கருமத்
தொத்த தெளிவைத் தெரிந்துரைக்கு
— — — —
— — — — (லுப்தம்)

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலுவகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸுப்ரஸித்தமான பக்தியோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.
29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.
33-34 யோகஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோகஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ்ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோகமாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

——–

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்திசெலுத்துவதாகிற பக்தியோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும்,
கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யம ஷட்கத்தில் கூறுகிறது.

ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.

ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

————–

7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வயாதாத்ம்யம்ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்தபேத:ப்ரபுத்தஸ்யஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்தபேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்; அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன். அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டுவிதமான அசேதன ஸமஷ்டிப்பொருளும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
5 அசேதநப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதநஸமஷ்டியும் பரமபுருஷபரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
*7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7* அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக்காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்யப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவைபோலே, ராஜஸதாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும், அவ்வப்பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.
II 13-*14 பரமபுருஷனைப்பற்றிய முற்கூறிய உண்மையறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.
III 14* ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.
IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலுவகை பக்தர்கள் பரமபுருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)
V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும், எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்; எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்; ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான். இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸதாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்திஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ, பரமபுருஷனையோ பெறவிரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்தவிஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச்சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும் பொதுவாக அறியவேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

———

8 – அப்யாஸ யோகம்:

12) ஐஶ்வர்யாக்ஷரயாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம்
வேத்யோபாதேயபாவாநாம் அஷ்டமே பேத உச்யதே

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய
ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக,
முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேகநிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான கண்ணன்
அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள்,
சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2
1.கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2.ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திமஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் – ‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக்காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந்நினைவுதானே அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்துவிடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும் செய்யவேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திமஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸனபேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸனமுறையும், அதையொட்டி ஏற்படும் அந்திமஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன். ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும், பரிபூர்ணப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷநிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னிவித்யாநிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள் ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்மபூமிக்கே திரும்பிவருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய், ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள் அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் – என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

———

9 – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்:

13) ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்திரூப:ப்ரகீர்த்தித:

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்மஜ்ஞானயோகங்களைக் காட்டிலும் பக்தியோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தையின்மையால் பக்தியோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடை யாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தியோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரமபுருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய், படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டிவ்யஷ்டிரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுரஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம்ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதநபக்திநிஷ்டர்களான உபாஸகஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்யநிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும், அவற்றின் ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த்தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோகக்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும், அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தியோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச் செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது, உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

——

10 – விபூதி யோகம்:

14) ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதிதேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச்சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன்ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும், அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச் சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் – அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை முதலான கல்யாணகுணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை மற்ற பொருள்க ளோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-*39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39* தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இதுவரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்யவிபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி ப்ரகரணத்தை நிறைவுபடுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

——-

11 – விஶ்வரூப தர்சனம்:

15) ஏகாதஶேஸ்வயாதாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம்
தத்தமுக்தம் விதிப்ராப்த்யோர் பக்த்யேகோபாயதாததா

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதிப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது.

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும்படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டிவைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ணபக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்யசக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும் திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

———–

12 – பக்தியோகம்:

16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்திரஶக்தஸ்யாத்ம நிஷ்டதா
தத்ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர் பக்தேத்வாதஶ உச்யதே

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸ னமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்தி தரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தியறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக்கொள்ளவேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தியோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்? என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’ என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லையாகில் என் கல்யான குணங்களை அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியையடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால் விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தியோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான கர்மயோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றிநிற்பவன் கைக்கொள்ளவேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

———–

மத்யமஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்மயோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பதுபோன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆங்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம் பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்திநலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப்பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்மஜ்ஞான பக்தியோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

—————

13 – க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

17) தேஹஸ்வரூபமாத்மாப்திஹேது ஆத்மவிஶோதநம்
பந்தஹேதுர்விவேகஶ்சத்ரயோதஶ உதீர்யதே

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது.

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப்படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மையறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ்வறிவு ஸகலப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மையறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்மஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதிகுணங்களால் உண்டாகும் இன்பதுன்பங்களில் பற்றேயாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேகஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்மப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

————-

14 – குணத்ரய விபாகயோகம்:

18) குணபந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந்நிவர்த்தநம்
கதித்ரயஸ்வமூலத்வம் சதுர்த்தஶ உதீர்யதே

குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸாரபந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந்நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதித்ரயஸ்வமூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம்ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும் தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும் அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கியிருப்பதால் அதன் விளைவுகளே அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கியிருக்கும்போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல். (இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று, மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி? என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

———–

15 – புருஷோத்தம யோகம்:

19) அசிந்மிஶ்ராத்விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத்பரணாத்ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சதஶோதித:

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டான்.

மன்னு மசித்தின் மருவியமர் சித்தினுமா
றுன்னு முயிர்வகையி லுத்தமனா – மன்னியவை
மீதுள் பரந்து பரித்திறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதிகாலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
*3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும், அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3*-*4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி, ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4* எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை, ஆத்மஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை, இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்யபாபரூபமான விலங்குகளாலே வலியக்கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத்துன்பங்களையெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே. இவன் தன்ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே. இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணையுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன்ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும், பூமியின் தாரணஶக்தியும், சந்திரனின் போஷணஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும் இதுபோல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும் எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன் அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன. எல்லா வேதவாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷரபுருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷரபுருஷனாகிற முக்தன் என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரிஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று, நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தமபுருஷன் முற்கூறிய க்ஷராக்ஷரபுருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதிஸ்ம்ருதிகளில் “புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான். பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன். இதை அறிந்து அறியவேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும் செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

—-

16 – தேவாசுரஸம்பத் விபாக யோகம்:

20) தேவாஸுரவிபாகோக்திபூர்விகா ஶாஸ்த்ரவஶ்யதா
தத்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே ஷோடஶ உச்யதே

தத்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இரு பிரிவுகள்
இருப்பதை முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ரவஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும் தன்மையையும்,
உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்மஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்லவழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹாயஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப்பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கைவிடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கியிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப்படாமை,
21. (தீயவர்களால்) வெல்லவொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்யவேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோவாக்காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தியாகிற அனுஷ்டானத் தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற்செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.
4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப்பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத்தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.
*5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும், எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது. அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7
1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக்ஷஸாதனமாகவும் இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.
8
1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலைநிற்பது, ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்லை.
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால்
உலகனைத்தும் காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.
9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய், உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம் ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளையுடையவர்களாய், காமாநுபவத் தையே பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12
1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17
1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)
அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

———–

17 – ஶ்ரத்தாத்ரய விபாக யோகம்:

21) அஶாஸ்த்ரமாஸுரம்க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ரஸித்தஸ்யத்ரிதா ஸப்ததஶோதிதம்

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ரஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களையிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ரவிதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப்பயனையும் விளைப்பதில்லை என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வரஜஸ்தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டும் என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும், மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி; மோக்ஷஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி; ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தையொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம் “அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

———–

18 – மோக்ஷோபதேச யோகம்:

22) ஈஶ்வரே கர்த்ருதாபுத்திஸ்ஸத்வோபாதேயதாந்திமே
ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்த்த உச்யதே

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்திப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய்கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய்கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது.
கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.

கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப்பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்மயோகஸ்தபஸ்தீர்த்ததாநயஜ்ஞாதிஸேவநம்
ஜ்ஞாநயோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநிஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்தயாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில் இடைவிடாது ஈடுபடுதலேயாகும்.
ஜ்ஞாநயோக: – ஜ்ஞாநயோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநிஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்.

24) பக்தியோக: பரைகாந்தப்ரீத்யாத்யாநாதிஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம்த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்தப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயண னிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலேயாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்யநைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்மத்ருஷ்டேஸ்த்ரயோப்யேதே யோகத்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்யநைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும், (த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோகத்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்மத்ருஷ்டே – ஆத்மஸாக்ஷாத்காரத்திற்கு, ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப்பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன்ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை, ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தியோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீசேத்த்ரயோப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,

ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில், தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத்யேஷாம் ஸமாநமதிகாரிணாம்
யாவத்ப்ராப்தி பரார்த்தீசேத் ததேவாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத்ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரமப்ராப்யமான பரமபுருஷனின் திருவடிகளை அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான். (உபாஸகஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில், அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத்ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுகது:க்கஸ்ததேகதீ:

பரமைகாந்தீஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வையுடையவனாய்,
தத்ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுகது:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும், அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

30) பகவத்த்யாந யோகோக்தி வந்தநஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தீந்த்ரியக்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திருநாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

31) நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத்ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்யந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

அத்தியாயங்களின் ஸாரப்பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என நினைத்துக் கலங்கிச் சரணடைன்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக கீதாஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.
2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும் ஜ்ஞாநயோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப்படுகிறது.
3 ஜ்ஞாநயோகத்தை அநுஷ்டிக்க ஶக்தியில்லாதவனும், ஶக்தியிருந்தபோதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும், தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற கர்த்ருத்வத்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற (ஞானத்தோடு கூடிய) கர்மயோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்மஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.
4 1. அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞானயோகமாகவேயுள்ளது.
3. கர்மயோகஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.
5 1. கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும்

விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீரஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமா யிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்மயோகியின் நிலை.
6 1. ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2. ஆத்மஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ்வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்

(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப்பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் காலக்ரமத்தில் ஸித்தியடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தியோகம் முற்கூறிய ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.
7 1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2. அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
3. பரமபுருஷனை ஶரணமடைவதால் அம்மறைவு நீங்கும்.
4. பக்தர்களில் நாலு வகை.
5. இந்நால்வரில் ஞானியின் சிறப்பு.
8 ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரமபுருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறியவேண்டியவைகளும், கைக்கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரகபோஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலேயே மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)
9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை, (3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.
10 ஸாதநபக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாணகுணங்கள் அளவற்றவை என்றும், எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.
11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.
12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.
13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல், (4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.
14 (1) ஸத்வம்முதலான மூன்றுகுணங்கள் ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.
15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும், (அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.
16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக, (மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கியபின் மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.
17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம் (அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.
18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த கீதாஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

—————-

கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத்பதமாப்நுயாத்
தத்ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத்பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத்ப்ரதாநம் – சேதனனைப் பரமைகாந்தியாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன், அவனிடம் ஸ்வயம்ப்ரயோஜன
பக்தி செய்யும் பரமைகாந்திக்கு எம்பெருமான் பரமமோக்ஷத்தை நிர்ஹேதுகமாக அருளுகிறான்;
கர்மயோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமைகாந்திகளை உருவாக்கும் வழிகளே.

கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading