ஸ்ரீ திருக்கண்ணபுரம் திவ்ய தேச மஹாத்ம்யம் -ஸ்ரீசௌரி ராஜ ஸ்தவம்–ஸ்ரீ திருப் பாத கேச வர்ணனை —

ஸ்ரீ திருக்கண்ணபுரமும் ஸ்ரீ பாத்ம புராணமும்

ஸ்ரீ பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில்
இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது.

விரைந்து மோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க,
அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார்.

வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான்.
ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட
இம் மன்னனின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர்.

போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு
(“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க,
அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய,
முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய
அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி
அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ
அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன்,
பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவ மன்னிப்பு வேண்டினான்.

என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால்
இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர்.
உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள,
தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க,
மாயவனும் அதற்கிசைந்து அவ் வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம்
உத்பாலவதாக விமானம்
காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.

முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம்
இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள்

இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார்.
இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில்
கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம்
சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி
க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள்.
75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

இவ்விடத்தில் பெருமாள் மும் மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும்,
இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும்,
அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க,
கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம்.
இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம்.
இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது.
கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட
இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம்.
இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க,
இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க
கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து
இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான்.
அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து
உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க,
பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி,
மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார்.

கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து
பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க,
சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி
அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க,
சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன.

அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும்
இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து
தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை
சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு.
பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான்.
அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்ய யாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன்
இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று
பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று,
தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார்.
அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப,
அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க,
மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான்
அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து,
இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும்
சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும்.
இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர்
“பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று
தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார்.
இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம்.

மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தை யழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும்
இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து…

செங்கமலக் காவிலுள்ள சீராரிளங் கோதை
அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு
என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன
உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள்
தென்னன் குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி
ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி
மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி
பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து
திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து
ஓம் நம: என்னும் உமியைத் தூவி
திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி
திருமாமணிக் கூடத்தில் இறக்கி வைத்து
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து
அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து
கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந்நோய் தீருமம்மா

ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ :

இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்?
இது ஊரில் இல்லாத மருந்து
உலகோர் அறியாத மருந்து
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து
இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து
பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து
நாராயணனே நமக்கே பறைதருவானென்று பாடிப் பறை கொள்ளும் மருந்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து
எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து
நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து
அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து
தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில் பட வொட்டாத மருந்து
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து
உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவே உகந்த மருந்தம்மா –

திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும்
திருவாரூர் தேரழகு,
மன்னார்குடி மதிலழகு,
வடுவூர் சிலையழகு என்று
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.

இந்த வடுவூர் சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை,
ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார்.
அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார்.
அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள்.
அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள்.
இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார்.
ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள்.
இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்.

பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும்
தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள்.
கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர்
ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி,
தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார்.
சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார்.
அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.
அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார்.
சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார்.
இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள்.
மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார்.
அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது.
(இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்).
சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி
இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.
மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது.
இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார்.
இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

——————

ஸ்ரீ திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாத கேசம் திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம்
உபய வேதாந்த வித்வான் ஸ்ரீ டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய
ஸ்ரீசௌரி ராஜ ஸ்தவத்தின் பகுதி

ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாத கேசம்

உத்பலா வதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்!
சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸூந்தரம்!!

பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்!
பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

திருமேனி
ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்!
ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!!

அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி,
பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச் சக்கரம்,
ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

2. யாவர்க்கும் அரியன்
தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்!
ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸூரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!!

தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும்,
மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக் கொண்ட திருமார்பை உடையவனும்,
நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும்,
திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

3. திருமேனி அழகு–ஒளி
நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா!
ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீல வர்ண இவ ஸாநுமாந் புவி!!

பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன்.
ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய்,
சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுலகில் விளங்குகிறாய்.

4. திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல்
நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர் கணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி!
ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தர ஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபிர் அஹோ ப்ரவிபாதி தீப்தா!!

நீல பர்வதத்தின் கொடு முடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த
நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தர ஹாரம், ஸ்ரீகௌஸ்துபம்
முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

5. திருவடிகள்
யத் பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீ ஸூதாஸ் ஸதயம் ஸ கோதா:
ஸம்வாஹ யந்தி ஸூகுமாரதரை: கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!!

ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸூவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸூகுமாரமான
தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர்.
ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

6. திருவடிகள்
யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்!
சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!!

காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர்.
சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து
எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருள வேணும்.

7 திருவடிகள்
யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத் வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:!
யச் சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பத யுகம் தவ தந் நதாஸ்ம:!!

உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தை யுடையவனாவன்,
(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர்.
உன்னையே சரணாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத் திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர்.
அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

8.திருப் பாதுகைகள்
சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே!
ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!!

ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன.
தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

9.பாத பத்ம பீடம்
சௌரே!! ஸூகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந!
தத்தே கிமப்ஜம், பத பத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!!

ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரை மலர்,
(உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

10. திருவடிகளின் சோதி
யத் வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:!
புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!!

ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு,
அலர்ந்த தாமரையின் வடிவம் போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

11. திருவடி நகங்கள்
சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:
ஜ்யோத்ஸ்நாஸ் த்ரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும்
புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணும் வனவுமான நகங்களிலிருந்து வெளி வருகிறது சந்திரிகையாகிய ஒளி:
இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின்
வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

12. திருத்தொடைகள்
சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!!

ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக் கவர வல்லன.
உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

13. அரை (கடி), இடை
தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே!
அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற் குன்றுகளை அவமதிக்கின்றன;
உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

14. இடது திருக்கை
வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்!
ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சய வஸிஹ தேவ!!

தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை
உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும்.
(அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

15. வலது திருக்கை
நநு வதாந்ய தமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீ கரணோத்யதாம்!
ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!!

பெருமானே! மிகச் சிறந்த கொடை வள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும்
ஸ்வாதீனமாக வாங்கிக் கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ
இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடு கூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

16. வலது திருக்கை
உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே!
வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!!

ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன் போல்
வலது திருக்கையைக் குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

17. வலது திருக்கை
ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீ புத்ர்யவேக்ஷ்ய!
அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்க யேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!!

ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக் கொள்ள விரும்புவது போல் நீ உனது வலது திருக் கரத்தை நீட்டிக்
குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய்.
அதை வஸூவின் திருமகளான பத்மிநி தேவி நன்கு பார்த்து,
‘நம் போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்து கொள்ளப் போகிறாரா?’ என்ற சங்கையால்
உனது ஸமீபத்தை ஒரு பொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

18. திருநாபி
தவத்-திவ்ய-ஸூந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே!
ஸங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம்,
ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க் கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய்
விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

19. திருநாபி மலர்
த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந் நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய!
தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக் கண்,வலக் கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற
உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதி மூடியும் உள்ள நிலையில் உள்ளது.
ஸ்ரீலக்ஷ்மி தேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்கு தானோ
இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம்.
சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

20. திருநாபி மலர்
த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்!
த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம் ஹி சௌரே!!

ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ர ஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர்.
அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது
எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது;
இதனால் து -ஹி ஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

21. திரு வயிறு
த்வயா நிகீர்ணம் ப்ரளயேப் யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:!
குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!!

ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை
உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு,
மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக் கொள்ள விரும்புகிறதா, என்ன?

22. அரை வடம்
உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:!
கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ் பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள்,
நீ அண்டங்களை விழுங்கிய போது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ
என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

23. திருவரை
கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந!
தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிக விசித்ர இவாத்ய சௌரே!!

ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக் கட்டிச் சுற்றி
நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ,
நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த
தாதுப் பொருட்களால் விளங்குவது போல் பிரகாசிக்கிறாய்!

24. திருக்கைகள்
ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:!
இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரச யந்தி தியம் ந:!!

உழல் தடி போல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும்,
செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

25. திருமார்பில் பிராட்டி
ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநக ப்ரபா!
கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரிய தமா இவ சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறை போல் விளங்குகின்றது உனது திருமார்பு.
அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமி தேவி.
உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்)
உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

26. திருமார்பில் பிராட்டி
கமலாலயா ஹி கலிதா வஸதா ருசிரம் கடவாட- ஸீத் ருடம் விபுலம்!
ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!!

தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவு போல் மிகத் திண்ணியதும் விசாலமுமான
ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை.
அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

27. ஸ்ரீகௌஸ்துபம்
வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி-
தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:?

ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான
உன் திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத் தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான
கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி)
தரித்துக் கொண்டிருக்கிறாயா,என்ன?

28. திருமார்பில் முத்து வடங்கள்
நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர  மௌக்திக-ஹாரா:!
தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!!

கறுப்பான மணிப் பாறை போல் விளங்கும் உன் திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்து வடங்கள்
மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலை யருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

29. திருப் பூணுல்
த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து
சௌரே த்வத்-யஜ்ஞ ஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந் த்வலோக-த்ருப்தா:!

ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன் திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு
திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக் கொண்டு,
மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

30.வன மாலை
ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா!
கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!!

ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிற மலர்கள் வாய்ந்ததும்
உனது திருக் கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக
உன்னைச் செய்து கொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத் தான் கவர்வதில்லை.

31. பாஞ்ச சந்நியம்
சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்!
பரிஹஸதீவா க்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!!

ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக் கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும்
பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும்
அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வது போல் இருக்கிறது.

32. சக்ராயுதம்
த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ!
சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!!

தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க
விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான
ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

33.ப்ரயோக சக்கரம்
ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய!
ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ண புரேச!!

திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான்.
எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோக நிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய்.
ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது
உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

34. பாஞ்ச சந்நியம்
ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ண புரீச!
ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப்ய சங்க ஏவ லஸ தீவ கராப்ஜே!!

திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே.
உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

35. திரு வதரம்
குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத் ஸ்மிதாதஹஹ! பக்த கோசராத்!
பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!!

பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு),
பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக).
இது உனது புன்முறுவலால், குந்த மலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய்
இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்.

36.புன் முறுவல்
த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:!
பீஜ பூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்பு போலே வெளுப்பானவை உன் பற்கள்.
நீ புன்முறுவல் செய்யும் போது உன் அதரத்தின் சிவப்பால் இப் பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப் போல்
அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

37. திருச் செவிகள்
ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே!
ஸ புஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதி பிம்ப்ய மாநே!!

கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ் பாகத்தில் குண்டலங்கள் அணிந்த
உன் திருச் செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

38. திருக் கண்கள்
சபர-ஸ்புரிதாபி பாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ!
மம பாப ததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபி வர்ஷணாத்!!

உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன.
இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

39. திருப் புருவங்கள்
அநீகபஸ் தே கலு கார்ய ஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய!
தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!!

உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார்.
அப் புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

40. திரு நெற்றி
தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:!
தாப த்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திரு நெற்றியிலிருந்து வெளி வருகின்றது
காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம்.
தாப த்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

41. திலகம்
புவி சந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்!
இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!!

தேவனே! இப் புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில்
நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய்.
பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காகக இதை தரித்திருக்கிறாயா, என்ன?

42. திரு முக மண்டலம்
பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே!
லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!!

ஸ்ரீசௌரிராஜனே! இளம் பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது,
உனது திருமுக மண்டலத்தைப் பூர்ண சந்திரனாக மதித்து, பயத்தினால்,
உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

43. திவ்ய கிரீடம்
அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகே நார்யமகோடி- பாஸா!
ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம்.
அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது,
இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

44. திருக் குழல்
சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே!
தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் தம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!!

ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப் பட்டையிலிருந்து வெளி வந்த நுõல்கள் எவையோ,
கறுத்துத் திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப் பட்டவை யாகித் தலைக் கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே-
உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!!

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ .வே .ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading