ஸ்ரீ திருவரங்கம் பெரிய மண்டபம் – அமுது படிகள் விவரம் —

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்
சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம்.
ஆகம சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.

அழகிய மணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க
விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம்

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

யார் இந்த பரமன்?

எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?

பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம்.
எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது.
அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.
பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.
இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும்
நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார்.
கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை.
இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள்
(தங்க சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:

1) தீபாவளி

2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர்.
அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து
ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

———–

அரங்கனின் ஒன்பது தீர்த்தங்கள்
திருவரங்கம் தான் பிரம்மத்தின் சரீரம்(உடல்) என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்க மஹாத்மியம் தசாத்யாயி (பிரம்மானந்த புராணம்) மற்றும் ஷதாத்யாயி ஆகிய புராணங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரபிரம்மம் ஸ்ரீமன்நாராயனனின் சரீரம் ஸ்ரீரங்கம்

தலை – பிரணவாகார விமானம் (ஸ்ரீரங்க விமானம்)

இரண்டு கைகள் – வடத்திருக்காவிரி மற்றும் தென்திருக்காவிரி

ஹ்ருதயம் – சந்திர புஷ்கரனி

பிரம்மத்தின் திருவடிகள் தான் எட்டு திசைகளில் உள்ள எட்டு புஷ்கரனிகள்.

திருவரங்கத்திர்க்கும் தீர்த்தத்திர்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆழ்வார்களின் பாசுரங்களிலும் நீர்நிலைகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

திருசந்தவிருத்தம் (பாடல் 50) – திருமழிசை பிரான்

வெண் திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன்ஓர்நாள்
தின் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் உளர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டிரைத்த சோலைவேல் மன்னுசீர் அரங்கமே.

எட்டு திசைகளிலும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தமாடுகிற (குளிக்கிற) எட்டு புஷ்கரனியை குறித்தும்
அதனால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்று குறிப்பிடுகின்றார்.

நடுவே அமைந்திருக்கும் சந்திர புஷ்கரனி அனைத்து பாவங்களையும் போக்க வல்லது.
சந்திரனின் ஷகவரோக பாவத்தை தவம் செய்து போக்கிக் கொண்டார்.ஆகையால் அவரது பெயரிலேயே இந்த புஷ்கரணி உள்ளது.

எட்டு புஷ்கரணிகளின் பெயர்:

கிழக்கு – பில்வ தீர்த்தம்
தென்கிழக்கு – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
தெற்கு – அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம்
தென்மேற்கு – பலாச தீர்த்தம்
மேற்கு – புன்னாக தீர்த்தம்
வடமேற்கு – வகுள தீர்த்தம்
வடக்கு – கதம்ப தீர்த்தம்
வடகிழக்கு – ஆம்ர தீர்த்தம்

தீர்த்தவாரி நடைபெறுவது இரண்டு வகை உண்டு. ஒன்று தீர்த்த பேரருக்கு தீர்த்தவாரி நடக்கும்
மற்றொன்று ஸ்ரீசடாரிக்கு நடக்கும் தீர்த்தவாரி.

சந்திர புஷ்கரனி மற்றும் கொள்ளிடத்தில் நடக்கும் தீர்த்தவாரிகள் தீர்த்த பேரருக்கு நடக்கும்.
மற்ற அனைத்து இடங்களிலும் நடக்கும் தீர்த்தவாரி ஸ்ரீசடாரிக்கு நடக்கும்.

இந்த தீர்த்த பேரர் மூல ஸ்தானத்தில் நம்பெருமாளுக்கு அருகே எழுந்தருளியிருப்பார்.
இவரை செல்வர் என்றும் அழைப்பது உண்டு. இவரே தற்போது தினமும் இரவு தாயார் சன்னதிக்கு பள்ளியறை செல்லும் பெருமாள்.

ஒரு தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு தீர்த்தங்கள் போலவும் அதன் நடுப்பகுதி சந்திர புஷ்கரனி போலவும் அமைத்துள்ளது.
இந்த தீர்த்தங்கள் எங்கு உள்ளது என்றும், அதன் சிறப்புகளும், தீர்த்தமாடினால் போக்கும் பாவங்களும்,
பெருமாள் என்று அங்கெல்லாம் எழுந்தருள்வார் என்றும் விரிவாக காண்போம்.

1) திக்கு – கிழக்கு

தீர்த்தம் – பில்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – இந்த தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

சரித்திரம்– வாமன அவதாரத்தின் போது, அசுர குரு சுக்ராச்சாரியர் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுக்கும் போது தடுத்தார்.
அப்போது அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அதைப் போக்கிக் கொள்ள இந்த பில்வ தீர்த்த கரையில் தவம் செய்து தோஷத்தை நீக்கிக் கொண்டார்.

பெருமாள் நாமம் – ஸ்ரீனிவாசன்
மரம் – பில்வ வ்ருக்ஷம்
இன்றைய நிலை: இந்த குளம் எல்லை கரை மண்டபம் அருகே இருக்கிறது
(திருச்சி-சென்னை புறவழிச்சாலை கொள்ளிடம் பாலம் முன்பு)
30 ஆண்டுகள் முன்னர் வரை பெருமாள் இங்கு சென்று தீர்த்தவாரி நடந்தது.
தற்போது இந்த தீர்த்தவாரி எல்லை கரை ஆஸ்தான மண்டபத்தில் நடந்து வருகிறது.

2) திக்கு – தென்கிழக்கு

தீர்த்தம் – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
இருக்கும் இடம் – திருவானைக்கோவில் மூன்றாம் பிரகாரம்
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் –
சரித்திரம் – சிவன் தவம் செய்து அவருடைய மோக சாஸ்திரத்தினால் ஏற்பட்ட தோஷத்தை போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – அச்சுதன்
மரம் – ஜம்பு வ்ருக்ஷம்
இன்றைய நிலை: கிபி1400 பின்னர் சைவ வைணவ சண்டைகளால் பெருமாள் இங்கு செல்வதில்லை.
ஆனால் பங்குனி எட்டாம் திருநாள் வெங்கடேசா தியேட்டர் அருகே ரோட்டில் இந்த தீர்த்தவாரி நடக்கிறது.

3) திக்கு – தெற்கு

தீர்த்தம் – அஸ்வத்த தீர்த்தம்/அஸ்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – பங்கஜம் மருத்துவமனை அருகே ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் , வித்யா மெடிக்கல் எதிரே இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – வெபிசார தோஷம்
சரித்திரம் – இந்திரன் அகல்யையிடம் தவறு செய்து அவள் ராமனின் பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றாள்.
இந்திரன் இந்த குளத்தில் நீராடி தவம் செய்து தகாத சேர்க்கையின் பாவ விமோசனம் பெற்றான்.
பெருமாள் நாமம் – அனந்தன்
மரம் – அஷ்வத்த மரம்
இன்றைய நிலை – பெருமாள் எழுந்தருளி ஸ்ரீசடாரி தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

4) திக்கு – தென்மேற்கு

தீர்த்தம் – பலாச தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி கரூர் ரோட்டில் இருக்கும் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தின் எதிரே இருக்கும் தீர்த்தம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – சம்சர்க தோஷம், கூடாச்சேர்க்கை
சரித்திரம் – முருகன் தவம் செய்து இங்கு தான் வேலை வரமாக பெற்றார்
பெருமாள் நாமம் – கோவிந்தன்
மரம் – பலாச மரம்
இன்றைய நிலை – பெருமாள் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளும் முன் தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

5) திக்கு – மேற்கு

தீர்த்தம் – புன்னாக தீர்த்தம்
இருக்கும் இடம் – மேலூர் கிராமம். மேலூரில் இருந்து பட்டர்ஃப்ளை பார்க் செல்லும் ரோட்டில் இருக்கும் வ்ருக்ஷி மண்டபம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்– பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பரஸ்த்ரிகமன தோஷம்
சரித்திரம் – அக்னி கிருத்திகா தேவியிடம் அபச்சார பட்டார்.அந்த குற்றத்தை இந்த குளத்தில் நீராடி தவம் செய்து போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – ஸ்ரீபதி
மரம் – புன்னாக மரம்
இன்றைய நிலை – பங்குனி மாதம் 3ஆம் திருநாள் ஜீயபுரம் செல்லும் வழியில் இந்த தீர்த்ததிற்கு எழுந்தருளி
தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது

6) திக்கு – வடமேற்கு

தீர்த்தம் – வகுள தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பசுவதம் / ஸ்தீரி வதம் இதனால் வரும் தோஷம்
பெருமாள் நாமம் – மாதவன்
மரம் – வகுள மரம்
இன்றைய நிலை – 1994வது வருடத்திற்கு பின்னர் பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது
கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்வது நின்று விட்டது.
அது முதல் இந்த தீர்த்தவாரி நடப்பதில்லை. தற்போது குளம் உள்ளது.

7) திக்கு – வடக்கு

தீர்த்தம் – கதம்ப தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலையில்ஏ உத்தமர் கோயில் திவ்யதேசத்தின் அருகே இந்த குளம் உள்ளது.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – தானம் வாங்கியதால் வரும் தோஷங்கள் நீங்கும்
சரித்திரம் – ஜனகர் இங்கு தான் யாகம் செய்து கர்ம யோகத்தை பெற்றார்.
பெருமாள் நாமம் – உத்தமர்
மரம் – கதம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
இந்த தீர்த்தவாரி தாளக்குடி மண்டபத்திற்கு செல்லும் வழியில் நடந்து வந்ததால் இப்போது நின்று விட்டது.
இந்த குளத்தில் தற்போதும் உத்தமர் கோயில் புருஷோத்தமர் சித்திரை பிரம்மோற்சவத்தில் தேர் முடிந்து
தீர்த்தவாரி கண்டருளிகிறார்

8) திக்கு – வடகிழக்கு

தீர்த்தம் – ஆம்ர தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி – லால்குடி சாலையில் தாளக்குடி எனும் கிராமம் உள்ளது.
இங்கு பெருமாள் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அதற்கு அருகில் இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி மாதம் 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பித்ரு தோஷம் ஏதும் தாக்கியிருந்தால் போக்கும்
பெருமாள் நாமம் – ருஷிகேஷன்
மரம் – ஆம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
ஆனால் குளம் உள்ளது.

———-

திருவரங்கநாதனுக்கு தினப்படி 3 வேளை திருவாராதனம் & 6 வேளை அமுது படிகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

காலை முதல் பிரசாதம்:
கோதுமை ரொட்டி(பெருமாளுக்கு 11, தாயாருக்கு 6), வெண்ணை, கும்மாயம் (குழைந்த பாசிப்பருப்பு),
பச்சைப் பால் (2 லிட்டர்).
ரொட்டியும் & பருப்பும் வடநாட்டு உணவு. துலுக்க நாச்சியாருக்காக முதல் அமுதாக நடைபெறுகிறது.

ரொட்டி செய்யப்படும் முறை:

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு பிசையணும்.
வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு எடுக்கணும்.

இந்த அமுது படிகள் முடிந்த பின்னர் காலை திருவாராதனம் நடைபெறும்.

காலை இரண்டாவது பிரசாதம்:
பொங்கல், வடிசல் (சாதம்), தோசை, புத்துருக்கு நெய் (தினமும் புதிதாக மண் பானையில் காய்ச்சப் பட்டது)
கூட்டு, கறியமுது, ஊறுகாய் & ஜீரண மருந்து – சுக்கு, வெல்லம், சீரகம் & ஏலக்காய். இதுதவிர சில அதிகப்படி தளிகைகள்.
வெண் பொங்கல் – பாசிப்பருப்பு, பச்சரிசி & நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்.
பச்சரிசி உளுந்து தோசை – பெருமான் அமுது செய்யும் தோசை சற்று தடிமனாக இருக்கும்.

காலை தணிக்கைகள் அமுது செய்யப் படும் நேரம்: 7.45 – 9.15

மதியம் பெரிய அவசரம் அதனுடன் திருவாராதனம்:
வடிசல் (சாதம் – 18 படி ) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்),
திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால் & வெல்லம்) மற்றும் அதிரசம்-11

கோயிலோ பெரிய கோயில்!

பெருமாளோ பெரிய பெருமாள்!

தளிகையோ பெரிய அவசரம்!!

பெரிய அவசரத்தில் 50 ஆண்டுகள் முன்னர் வரை கூட்டு, கரியமுது என்பது
செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போதைய காலங்களில் ஒரு கறியமுது மற்றும் ஒரு கூட்டு என்று குறைந்திருப்பதை நாம் அறிகிறோம்.

கொடியில் காய்க்கும் காய் கறிகள் – அவரை, புடலை, பூசணி, பாகற்காய், வெள்ளரிக்காய்.
செடியில் காய்க்கும் காய்கறிகள் – கொத்தவரை, வாழைக்காய் & கிழங்கு வகைகள்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே, அமைந்துள்ள,”மதுரகவி திருநந்தவனத்தில்” இருந்து
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவை நடந்து வருகிறது.
பெருமாளுக்குத் தினமும் 10 எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு 5 எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாலை ஷீராண்ணம் தளிகை:
ஷீராண்ணம் (அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல்), கறியமுது, திருமால் வடை, அப்பம்,
தேன்குழல், தோசை மற்றும் அதிகப்படி தளிகைகள்

பெருமாளுக்கு அமுது செய்யப்படும் பணியாரங்கள் –
பெரிய அப்பம் (6), பெரிய வடை (11) & பெரிய தேன்குழல் (6) ஆகியவை எண்ணிக்கை குறைவு தான்.

தாயாருக்கு மட்டும் ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மாலையில் அமுது செய்யப்படும்.

இரவு செலவு சம்பா திருவாராதனம்: வடிசல் (சாதம்) மற்றும் பாசிப்பருப்பு.
இந்த திருவாராதனத்தில் செல்வர் எழுந்தருளி பலி சாதித்து வருவதால் இதற்கு செல்வர் சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.
காலப்போக்கில் இதுவே செலவு சம்பா என்று மருவியது.

இரவு கடைசி தளிகை – அரவணை & சுண்டக் காய்ச்சிய பசும்பால்
அரவணை (ஒருவிதமான சக்கரை பொங்கல்), கறியமுது மற்றும் காய்ச்சிய பால்.
இரவு 10 முதல் 11 மணி ஆகும். (ஜீயபுரம் செல்லும் நாளில் மட்டும் மாலை 6 மணிக்கு அமுது செய்வார்).

தாயார் சன்னதியில் அரவணையுடன் கீரை சேர்த்து செய்யப்படும்

இந்தப் பால் காய்ச்சப்படும் முறை ஒரு சிறப்பான முறை. அதாவது மண்பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சி
அதன் மூலம் பானை சற்று இறுகிவிடும். அதன் பின்னர் பச்சை பாலை சுண்டக் காய்ச்சி அதனை சூடு போக ஆறவைத்து
அதற்குப் பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் & வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும்.

உடையவரும் கஷாயமும்:

ஸ்வாமி ராமானுஜர் ஒருமுறை பெருமாளின் முகம் வாடி இருப்பது கண்டு,
முதலியாண்டானை பார்த்து பெருமானுக்கு என்ன அமுது செய்யப் பட்டது என்று கேட்டார்.
அதற்கு தயிர்சாதமும் & நாவல் பழமும் என்று முதலியாண்டான் சொன்னாராம்.
உடையவர் உடனே அரங்கன் ஒரு குழந்தை போல! அவருக்கு ஜலதோஷம் வந்து விடும் என்று சொல்லி
அதற்காக கஷாயம் தன்வந்திரி சன்னதியிலிருந்து தயார் செய்து பெருமாளுக்கு அமுது படைக்க சொன்னாராம்.
இதுவே உடையவருக்கு இருந்த பரிவை நமக்குக் காட்டுகின்றது.

முன்னர் அரவணையுடன் கஷாயம் அமுது நடந்ததாகவும் அது தன்வந்திரி சந்நிதியில் இருந்து வந்ததாகவும் செய்தி உண்டு.

திருவரங்கநாதனுக்கு தளிகை செய்வது தினமும் புது மண்பானையில் தான்.
மற்ற கோவில்களை போல் இங்கு பாத்திரங்களைக் கொண்டு தயார் செய்யப் படுவதில்லை.

வெள்ளிக்கிழமை புனுகாப்பு புளியோதரை:
பெரிய பெருமாளுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திருமார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு புனுகு தைலம் சாத்தப்படும்.
இந்த தைலம் சாற்றிய பின் விசேஷத் தளிகையாக புளியோதரை அமுது செய்வார்.
உத்ஸவங்கள் இருப்பின் இந்த வைபவம் நடைபெறாது.

பூச்சாற்று உற்சவத்தில் பானகம்
பூச்சாற்று உற்சவத்தில் தினமும், பூச்சூடிய பின் 5 பானைகளில் சிறப்பு பிரசாதமாக பானகம் மற்றும்
வடை பருப்பு (பயத்தம் பருப்பு) அமுது செய்யப்படும்.
அதன் பின்னர் இந்த பானகம் கோஷ்டி பிரசாதமாக விநியோகம் செய்யப்படும்.

வசந்த உற்சவ சாற்றுமுறை பால் மாங்காய்
வசந்த உற்சவ சாற்றுமுறை நாளன்று பாலில் மாங்காய் மற்றும் சில பழங்கள், சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு வகையான பிரசாதம்.
இதை ராக்ஷச கறியமுது என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பொதுவாக இது வைகாசி விசாகத்தன்று வரும்.

ஆனி ஜேஷ்டாபிஷேக பெரிய திருப்பாவாடை
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் (ஜேஷ்டா) தினத்தன்று ஆண்டுதோறும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும்.
உற்சவர் நம்பெருமாளுக்கு கவசங்கள் கழற்றி திருமஞ்சனமும் பெரிய பெருமாளுக்கு திருமேனி முழுவதும் தைலம் சாத்தும் வைபவம் நடைபெறும்.

இதற்கு அடுத்த நாள் அன்னகூட உற்சவம் என்று அழைக்கப்படும் பெரிய திருப்பாவாடை அமுது செய்யப்படும்.
108 படி அன்னம் தயார் செய்யப்பட்டு, பெருமானுக்கு முன்னே சேர்க்கப்பட்டு அமுது செய்யப்படும்.

ஆகமங்களின் படி தினசரி நித்தியப்படி அமுதுபடிகளில் ஏதேனும் குறை இருந்தால்,
அதனை நிறைவு செய்வதற்காக நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் என்ற குறிப்பும் உண்டு.

மார்கழி பெரிய திருநாள் சிறப்பு அமுது படிகள் –
சம்பார தோசை, செல்வரப்பம் மற்றும் உருப்படி
சம்பார தோசை – பெரிய திருநாளில் தினம் பெருமாளுக்கு சம்பார தோசை எனும் தடிமனான பெரிய தோசை அமுது செய்யப்படும்.
அரைக்கால் தோசையை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!

செல்வரப்பம் – மார்கழி பெரிய திருநாளில் தினமும் இந்த செல்வரப்பம் அமுது செய்வார்.
தட்டை போல் சிறிய வட்டமாக இருக்கும்.

உருப்படி – மார்கழி பெரிய திருநாளின் கடைசி நாள் சாற்றுமுறை அன்று உருப்படி என்னும் சிறப்பு பணியாரம் அமுது செய்வார்.
இது தட்டையை விட தடிமனாகவும், சிறிய அளவில் இருக்கும்.

சாற்றுமறை அன்று இந்த பணியாரங்கள் நூற்றுக்கணக்கில் அமுது செய்வார்.

தை, பங்குனி & சித்திரை உற்சவம் கொடியேற்ற தின அப்பம்
தை பங்குனி மற்றும் சித்திரை கொடியேற்றம் நடைபெறும் அன்று காலை சிறப்பு அமுதாக பெருமாள் அப்பம் அமுது செய்வார்.
இந்த கொடியேற்றப்பம் பெருமாள் ஏளப்பண்ணும் வேற்று ஆட்களுக்கு கிடைக்கும் பிரசாதம்.

வாகன வடை
உற்சவ காலங்களில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளும் போது அரிசி மாவு வடை சிறிதாக இருக்கும்.
இந்த வடை வாகனத்தில் எழுந்தருளிய உடன் அமுது செய்வார்.

மாசி வெள்ளி கருடன் – கொழுக்கட்டை பிரசாதம்
மாசி மாதம் தெப்ப உற்சவம் நாலாம் திருநாளன்று வெள்ளி கருட வாகனம் நடைபெறும்.
அன்று பெருமாள் வீதி எழுந்தருளி வாகன மண்டபம் அடைந்த பின்னர் சிறப்பு பிரசாதமாக பெரிய கொழுக்கட்டை அமுது செய்வார்.

மாசி தெப்பம் சிறப்பு பிரசாதம்
தெப்பத்தன்று பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் முன்னர் சர்க்கரைப் பொங்கல், சீயம் போன்ற அமுது படிகளை அமைத்து செய்வார்.
இவை முன் காலங்களில் தெப்பத்தில் எழுந்தருளிய பின்னர் நடுவே இருக்கும் மைய மண்டபத்தில் அமுது செய்யப்பட்டதாக செவிவழிச் செய்தி.

பங்குனி மாத சேர்த்தி உற்சவம் அக்காரவடிசல்
உறையூர் நாச்சியார் சேர்த்தி மற்றும் பெரிய பிராட்டியார் பங்குனி உத்திர சேர்த்தி நடைபெறும் இரண்டு நாட்களிலும்,
பெருமாள- தாயார் ஏகாந்தம் முடிந்து அமுது செய்யப்படும். பலரும் அதிகப்படி தளிகையாக அக்கார அடிசல் சமர்பிப்பார்கள்.

வாகனங்களுக்கு அமுது
பெருமாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா முடிந்து நான்முகன் கோட்டைவாசல் நுழைந்த பின்னர்
கூரத்தாழ்வான் சன்னதி முன்னர் இரண்டு நிமிடங்கள் நிற்பார்.
அப்போது வாகனங்களுக்கு ஏற்றார்போல் அமுது படிகள் சமர்ப்பிக்கப்படும்.
உதாரணமாக சேஷ வாகனம், அம்ச வாகனம் & கற்பக விருட்சம் போன்றவற்றுக்கு
பால், குதிரை வாகனத்திற்கு கொள்ளு, கருடனுக்கு கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் வாகனங்களுக்கு அமுது செய்யப்படும்.

வழிநடை உபயங்கள்
வழிநடை உபயங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று பானகம் & வடை பருப்பு (பயத்தம் பருப்பு).
பெருமாள் எழுந்தருளி பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் , புளியோதரை போன்ற விதவிதமான பிரசாதங்கள் அமுது செய்வார்.

கோவிலுக்கு உள்ளே நடைபெறும் வசந்த உற்சவம், பவித்திர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் பூச்சாற்று உற்சவம்
ஆகிய உற்சவங்களில், பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளியபின் சிறப்பு தளிகை அமுது செய்வார்.

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading