ஸ்ரீ மணவாள மா முனிகள் தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல் -ஸ்ரீ ரெங்க திவ்ய தேச மஹிமை -ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ மாமுனிகளுக்கு பின்னுள்ள ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்கள் திருவவதாரம் —

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

———

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரம புருஷன். இதில் ஐயமில்லை.

————

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரை யெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல் -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-

————

மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ண பக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

அவர் வசித்து வந்த திருமலை யாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.

சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான காவிரியின்
நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.

ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

நான்கு உத்திர வீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷ ஸூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.

திருமஞ்சனம் முடிந்து திருவொற்று வாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்த பின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.

திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.

த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர்.
காந்தி வீசும் விசாலமான நெற்றியில் விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீ ஸூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.

ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர்.
அனைத்து ஸ்ரீவைணவர்களும்‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்!
இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.

‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசி முறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.

உத்தம நம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதக வாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.

மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்து சேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.

கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.

திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.

பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவி வண்ண ப்ரபன்ன பாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,

பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் –
கைங்கர்யத்திற்காகவென்ற சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.

அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பக விமானம் ஊர்ந்தது.

பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது.
‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;” என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற,
ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதிஸம்ஸ்கார விதியடங்க திருப்பள்ளிப் படுத்துகின்றனர்.

பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.

சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?

என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலை யாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.

நானெதென்னும் நரகத்திடை யழுந்திப்
போன விந்த காலமெல்லாம் போதாதோ? – கான மலர்
மாலை யணி திண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்

புண்ணாராக்கை தன்னுள் புக் குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால் வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே

என்று மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.

பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய்,
ஜீயர் நாயனாரை பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்

மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.– -எறும்பியப்பா.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்.

———–

நான் முகன் கோபுரம் நுழைந்தவுடன் இடதுபுரம் சுவற்றில் 4(நான்கு) பளிங்கு கல் வெட்டுகள்
பதிக்கப் பெற்றுள்ளதில் குறிக்கப்பெற்றுள்ளன.

எல்லாமே இங்கு பெரியது தான்

1. பெரிய கோவில்
2. பெரிய பெருமாள்,
3. பெரிய பிராட்டியார்
4. பெருமாளுக்கு ஆண்டாளை தந்த மாமனார் – பெரியாழ்வார்,
5. பெரிய திருவடி,
6. பெருமாளின் புகழ் மேலோன்ற தமிழ் மறைகள்,
7.பெருமாள் பகவத் விஷயம் கேட்பதற்குத் தாமே தேர்தெடுத்த ஆசிரியர் – பெரிய ஜீயர்

கோவினுள் 51 சுற்றுக் கோவில்களையும் 108 மண்டபங்களையும் தன்ணகத்தே கொண்டது.

ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே சுவர் ஓவியம் கருடன் ஆகம விதிப்படி வரையப்பட்டது கண்டு மகிழலாம்.

ஊஞ்சல் மண்டபத்திற்கு கிழக்கே நெய் கிணறு உள்ளது. இப்பொழுது அங்கு நெய் இருப்பதில்லை.

அடுத்த ரெங்க விமானத்தை மிக அருகே காண மாடிப்படிகள் உள்ளன.
இங்குள்ள மண்டபத்திற்கு அணி அரங்கன் திருமுற்றம் என அழகிய பெயர் உள்ளது.

நடுவே பொன் முலாம் பூசிய துவஜஸ்தலம் பலிபீடம் கண்டு இந்த பொன் முலாம் பூசிய துவஜ ஸதம்பம் (கொடிமரம்)
முன்பாக நமக்கு இடப்புரமாக ஓர் அழகிய பறவை விளக்குச்சிலை இருப்பதையும்
எப்பொழுதும் தீபம் எறிந்து கொண்டே இருப்பதையும் காணலாம்,
இது மிகவும் சிறந்த வேலைப்பாடுடன் கூடிய திருவிளக்கு இதன் தலை அலங்காரத்தையும் சடைபின்னலையும்
ஆடை அணிகலன் களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தோளின் மீதி ஓர் கிளி அமர்ந்துள்ளது

சேனை முதலியார் சந்நிதியில் சேனை முதலியார், ஆஞ்சநேயர் விபீடணன் உள்ளனர்.

அடுத்து அரங்கன் ஸ்ரீபாதம் தனிசந்நதி கிழக்கே அர்ச்சுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் இவருக்கு மேற்கில்
கோகுல வல்லி தாயார் சந்நதிகள் உள்ளன.

கிளி மண்டபம் இம் மண்டபத்திற்கு வடக்கே ரேவதி மண்டபம் அதாவது அர்ச்சன மண்டபத்திற்கும் கிளிமண்டபத்திற்கும்
இடையில் ரேவதி மண்டபம் உள்ளது.

அடுத்து கிருஷ்ணன் சந்நதி இங்கே கிருஷ்ணன் கையில் சங்கு வைத்திருப்பதைக் காணலாம்.

அடுத்து நிலைக்கண்ணாடி.

அடுத்து இவருக்குக் கிழக்கே சுவற்றில் திருகுறும்பறுத்த நம்பிகள் படம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

திரு அணுக்கன் திருவாசல் வழியாக வெள்ளிக் கதவுகள் தாண்டி காயத்ரி மண்டபம் இதில் 24 தூண்கள் கொண்டது.
சுற்றி வந்து சேவிக்கிறோம். பட்டர் சுவாமிகள் கற்பூர ஆரத்தி ஜோதியில் சிரம் முதல் பாதம் வரியில் சேவையாகிறது
அங்கு தீர்த்தம் துளவம் சடகோபம் சார்த்தப்படுகிறது.

உற்சவர்கள் மூவர் உள்ளனர். ஒருவர் உலா வருவார் மற்றவர் யாக சாலையிலேயே இருப்பார். இன்னொருவர் கர்பக் கிரகத்திலேயே இருப்பர்

ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம்

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும்
21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள
மதுரகவி நந்த வனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.
பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு
ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு)
உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் “ஆடிப் பெருக்கு’ உற்சவம் கொண்டாடப் படுகிறது

கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை
ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார்.
அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார்.
இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும்
துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம்
மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர்.
தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது.
தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர்.
சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.

முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று,
2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று,
3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று,
4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று,
5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று,
6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று(உத்திர வீதி),
7வது சுற்று கலியுக ராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும்,வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது).
இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும்
8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.

நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர்.
இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து
மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்து பரமபதவாசலை பார்ப்பது என்பது ஒரு வழக்கமாகும்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதி இங்கு திருமால் அறுகோணத்தின் நடுவே சக்கர வடிவினறாய் எட்டுகரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.
இங்கே விஜயவல்லித்தாயாரும் உள்ளே இருக்கிறார். பிரதஷணம் வரும் பொழுது திருவரங்க அமுதனார் சந்நதி உள்ளது.
சக்கரத்தாழ்வர் பின்புறம் யோகநரசிம்மரைக் காணாலாம்,
இந்த சக்கரதாழ்வார் சந்நதியில் ஹொய்சள தளபதிகள் திருப்பணி செய்துள்ளனர்.
இதற்கு சான்று சந்நதி முகப்புவாயிலிலும் பின்புறமும் வரிசைக்கு 4 தூண்களாக ஆக எட்டு தூண்கள் வித்யாசமான தூண்களாக பகிர்கின்றன.
இந்த தூண்கள் அமர்ந்த நிலையில் உள்ள யாளியின் சிரசில் தாங்குவதாக அமைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாலயதிலுள்ள எல்லா தூண்களும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன

கருட மண்டபத்தில் இடதுபுறம் நம்மாழ்வர், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மூவருக்கும் தனிச் சந்நதி உள்ளன.

ஆர்யபடாள் கோபுரத்தினுள் நுழைகிறோம். இடது பக்கம் பவித்ரோத்சவ மண்டபம்.
இம்மண்டபத்திற்கு பின்புறம் ஹயக்ரீவர் சன்னதியும், சரஸ்வதி சன்னதியும், தசமூர்த்திகள் சன்னதியும் உள்ளன.
இதன் கிழக்கே ஊஞ்சல் மண்டபம். இங்கு பெருமாள் ஊஞ்சல் விழா கண்டருளுவார்.

திருக்கொட்டாரத்தின்னுள்ளே பெருமாளுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பாத அணிகள் {செருப்புகள்} வைக்கப்பட்டுள்ளன.
பெருமாளின் பாத அணிகள் சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று உள்ளதைக் கண்டு வியக்கின்றோம்.
ஒவ்வொரு செருப்புகளும் சுமார் 2-3 அடி நீள கொண்டுள்ளது.
ரெங்கநாதருக்கு ஆண்டிற்கு ஒரு தடவை அருந்ததியார்(செருப்பு தைக்கும் தொழிலாளர்) பாதரஷை
ஒன்று மட்டும் தயாரித்து வழங்குவது உண்டு
அவர்கள் அந்த நாளில் ஆலயம் வந்து பாதரஷையினை கொடுத்து விட்டு தீர்த்தப் பிரசாதம் பெற்று
மாலை மரியாதைப் பெற்றுத் திரும்புவர். அந்த பாதரஷை திருக்கொட்டாரத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு சம்பந்தப்பட்ட அருந்ததியார் குடும்பத்தாருக்கு பெருமாள் கனவில் தோன்றி மணலில் அளவுக்காட்டி மறைவதாகவும்
அதனை ஏற்று பாதரஷை செய்து கொண்டு வந்து அளிப்பார்களாம்.

திருகொட்டாரத்திற்கு அருகிலேயே ஸ்ரீ மஹாலட்சுமி சன்னதி, ஸ்ரீ செங்கமல நாச்சியார், ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ ராமர் சன்னதி ஆகியன உள்ளன.

1000 கால் மண்டபம் ஹொய்சாள தளபதிகள் நிர்மானித்ததாக அறியப்படுகிறது
வைகுண்ட ஏகாதசி விழா சமயம் தான் பிரவேசம் அனுமதிக்கப்படும்.
எதிரே சேஷராயர் மண்டபம் காண வேண்டிய ஒன்று வெளிநாட்டவர் கண்டு வியத்தகு அற்புத சிலைகளை கொண்டது.

மொட்டை கோபுரம்-விஜயநகர மன்னர்கள் வரிசையில் வந்த அச்சுதராயன் (1530-1542) எனும் மன்னனால் முற்று பெறாத நிலையில்
முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும்.
1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக
மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளால்
அவருடைய நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது.
இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட)
உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது.
இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள்
இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள்
மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக் கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது.

கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது.
6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு. 10.5 அடி உயரம் கொண்டது
கலசங்கள் ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg,
இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்)
இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்)
இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன.
கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன.
மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும்.
அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட திருப்பணி நிறைவுற்றது.

முதல்நாள்;-
கொடியேற்றம் நடைபெரும் மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் வீதி வலம் வருவார்.
பின் யாகசாலை சென்று திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சேர்தல்.

இரண்டாம் நாள் :-
காலை வீதி வலம் வந்து உபயதார் மண்டபம் செல்வது. பின் கற்பக விருகூத்தில் புறப்பட்டு கண்ணாடு அறை சேர்தல்.

மூன்றாம் நாள்
சிம்ம வாகனத்தில் புறப்பாடு உபயதாரர் மண்டபம் அடைதல் பின் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு
இரட்டை பிரபையில் வீதி வலம் உபயதார் மண்டபம் சேர்தல். பின்னர் மாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் புறப்பாடு வீதிவலம்.

ஆறாம் நாள்:-
காலை ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வந்து பின் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி
உபயதார் மண்டபம் சேர்தல் பிறகு தோளுக்கினியனில் பட்டு யானை வாகன மண்டபம் சேர்ந்து
யானை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருவார்
உள் ஆண்டாள் சந்நதியில் மாலை மற்றி கண்ணாடி அறையில் பொதுஜனசேவை மாலையில் நம்பெருமாள்
உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல் அளவு கண்டு வீதிவலம் வருதல் இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல்.
இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான்.

எட்டாம் திருநாள்:-
காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து
மாலையில் தங்கக் குதிரை வகனதில் புறப்பட்டு வீதிவலம் வருதல் தேரடியில் வையாளிகண்டருளல் கண்ணாடி அரைசேர்தல்

ஒன்பதாம் திருநாள்:
திருத்தேருக்குப் புறப்படுவது ஏதோற்சவம் முடிந்து பிறகு ரதம் சென்றபாதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக
உலாவருவதாக ஒரு ஐதீகம் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்களும் சித்திரை மாதம் நடக்கும் ஏதோற்சவதிற்கு சம்பந்தப்பட்டது.

ஏகாதசி திருவிழா சமயம் முலவருக்கு விலைமதிப்பற்ற முத்துக்களால் வெல்வெட் துணியில் தயாரிக்கப்பட்ட முத்தங்கி சாத்தப்படும்
இதணை செய்தளித்தவர் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர். முத்துக்கள் பதித்த மேலாடை முத்தாங்கியாகும்.

சித்திரை மாதம்:
விருப்பன் திருநாள் என்ற பெயரில் சித்திரை தேர்விழா.
ரதோற்சவதற்கு முன் தினம் எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேரடியில் வையாளி , கோணவையாளி
அதாவது குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடுவது போன்று நடை காண்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
இம்மாதம் சித்ரா பௌர்ணமி அன்று பெருமாள் காவிரி அம்மா மண்டபம் படித்துறை அடைந்து திருமஞ்சனம் கண்டருளி கஜேந்திர மோஷம் நடக்கும்.

வைகாசி மாதம் :
வசந்தோற்சவம். 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வடக்கே உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

ஆனி மாதம்:
ஜ்யேஷ்டாபிஷேகம். அன்றைய தினம் உற்சவர் அங்கி (பொன் அங்கி) கழற்றப்பட்டு ஆலய அதிகாரிகள் முன்னிலையில்
சுத்தி செய்யப்பட்டு மறுபடியும் சாத்தப்படும்.
இது போல தாயார் சந்நதியிலும் ரெங்கநாயகி தாயார் அங்கியும் கழற்றப்பட்டு சுத்தி செய்யப்பட்டு சாத்தப்படும்,
பின்னர் வெவ்வேறு நாட்களில் 1008 கலசங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து தனித்தனியே திருப்பாவாடை அன்று 1808படி அரிசி அளவில் சாதம் (அன்னம்) பொது ஜனங்களுக்கு
விநியோகிக்கப்படும். இவ்வமுதில் பல் வகை பழங்களும் இடம் பெறுவது உண்டு.

அன்றைய தினம் மூலவருக்கு புணு சட்டம் சாத்தப்படும். தாயார் சந்நதியில் திருப்பாவாடை அன்று 1008 படி அரிசி
அளவு சாதம் அமுது செய்விக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஆவணி மாதம்:
இம்மாத சுக்லபஷ ஏகாதசியன்று பவித்ரோத்சவம். பவித்ரோத்சவ மண்டபத்தில் நடக்கும்.
மணி நூல்களாகக்கட்டி மந்திரங்களால் உருஏற்றி யாகபூசையில் வைத்து பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது,
அன்று அரங்கர் ஸ்ரீபண்டார மண்டபம் சென்று திருமஞ்சனம் கண்டருளுவார்.
மறுநாள் தெற்கு வீதி பாதாள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் உரியடி விழா கொண்டாடப்படும்.

புரட்டாசி மாதம்:
இம்மாதம் தாயார் சந்நதியில் நவராத்திரி உற்சவம் நடக்கும்(இது மகரநவமி விழா) நாள் முடிவில்
கோவில் யானை நொண்டியடித்துக் கொண்டு “ரெங்கா ரெங்கா” எனப் பிளிரி ஆலய அதிகாரியிடமிருந்து பழங்கள் பெற்றுச் செல்வதைக் காணலாம்.
இம்மாதம் விஜயதசமி அன்று எம்பெருமான் காட்டழகிய சிங்கர் கோவில் சென்று மாலையில்
வன்னிய அசுரனை சம்ஹாரம் செய்வதான ஐதீகத்தில் வன்னி மரத்தில் பெருமாள் அம்பு எய்வதைக் காணலாம்.

ஐப்பசி மாதம்:
இம்மாதம் முதலிலிருந்தே தினமும் பொற்குடத்தில் திருமஞ்சனத்திற்கு காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது.
சந்நதியில் இம்மாதம் பூராவும் பொற்கலசங்கள் தான் உபயோகத்திலிருக்கும். டோலோத்சவம் (ஊஞ்சல்) விழாவும் இம்மாதத்தில் தான்
தீபாவளி நாளன்று அரங்கன் திருமஞ்சனம் கண்டருளி மாலையில் ஆழ்வார்களுக்கும் புத்தாடைகள் அளிப்பார்.
இம்மாதம் பூராவும் உற்சவர் சாளக்கிராமமாலை சாத்தியிருப்பார்.

கார்த்திகை மாதம்:
இம்மாதம் சொக்கப்பனை கொளுத்துவது நடைபெறும்
குறிப்பிட்ட நாளில் கார்த்திகை கோபுரவாசலுக்கு முன்பு 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகள் கொண்டு சுடலை அமைத்து,
அதைக் கொளுத்துபவர், வாய்கரிசி பெற்று தீ பந்தத்துடன் ஊடே சென்று மேலே நான்கு திசைகளிலும்
தீ பற்ற வைத்துவிட்டு இறங்கி விடுவார். இதனை பெருமாள் அன்று நீலோத்பவமலர் மாலை அணிந்து பார்வையிடுவார்.
பின்னர் எம்பெருமான் கர்ப்பக்கிரகம் செல்லும் பொழுது கைத்தலமாக எடுத்துச் செல்லப்படுவார்.
திருக்கார்த்திகை நாளில் ஆலயம் பூராவும் ஆயிரக்கணக்கில் மாலையில் அகல் விளக்குகள் பிரகாசிப்பதைக் காணலாம்.

மார்கழி மாதம்:
குளிர்காலம் 22 நாட்கள் விழா நடப்பதுண்டு நாலாயிர திவ்யபிரபந்தம் பூராவும் எம்பெருமானுக்கு முன்பு, அரையர்கள் சாற்றுவார்கள்.
இது இத்தலத்திக்கே உரிய தனிச்சிறப்பு சேவையாகும். அரையர் அபிநயம் காணவேண்டிய ஓன்று.
அரையர் சேவை ஆரம்பம் முதல் முடிவு வரை காணவேண்டும்.
இவ்விழாவில் எம்பெருமான் 10ம் நாள் மோகினி அலங்காரம் காணக்கிடைக்கப் பெற்ற காட்சியாக அமையும்.
அன்று பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் பெண் உருவில் வெண்பட்டாடை உடுத்தி காட்சியளிப்பார்.

அதற்கு அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி விழாநாள். அன்று விடியற்காலை எம்பெருமாள் நம்பெருமாளாக சொர்க்கவாசல்
வழியாக கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக இடையில் அமைந்த மண்டபங்களில் நின்று
அப்படியும் இப்படியும் அசைந்து சேவை சாதித்து ஆயிரங்கால் மண்டபம் அடைவார்.
இதற்கு முன் ஆயிரங்கால் மண்டப முன் அலங்காரக் கொட்டகையில் ஆழ்வார்களுக்கு சேவை சாதிப்பதும் பத்தி உலாவுவதும் நடக்கும்.

அன்று நம்பெருமாள் ரத்னங்கி அணிந்து மிகப்பிரகாசமாக காட்சியளிப்பார். நம்பெருமாளை முன்புரம் பார்த்து விட்டால் மற்றும் போதாது.
பக்தர்கள் அவசியம் பின் அழகையும் கண்டு தரிசிக்க வேண்டும். முன்புரம் பெருமாள் மாலை அதாவது கிளி மாலை சாத்தியிருப்பார்.
பக்கத்திற்கு மூன்று கிளிகள் ஒய்யாரமாக அமர்ந்து பெருமாளை நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
பக்தர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து நீங்க மனமின்றி திரும்புவர்.
ஆனால் அக் கிளிகளோ அன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கும்.
அக்கிளிகளின் அமைப்பு மிக அழகாக பச்சை கலைகளினாலும் செவந்திபூவினால் வடிக்கப் பெற்றுள்ளதைக் காணலாம்.
மாலைகாரரின் கைவண்ணத்தை அங்கு காணலாம். இவைகள் கண் நிறைந்த காட்சியாக அமையும். கண்டவர் அநுபவிக்கலாம்.
பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற ஆவல் மேலிடும்.

விழா இறுதிநாள் ஆழ்வார் மோஷம். அன்று அதிகாலை திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு,
சிறப்பாக தயாரிக்கப்பட்ட திண்பண்டங்களை அனைத்தும் வைக்கப்படும். பின்னர் நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல்.
இந்த விழா சமயம் ம் நாள் நம்மாழ்வார் நாயகி கோலத்தில் அமர்ந்திருப்பார்
சர்வ அலங்காரத்துடன் அணிமணிகள் துலங்க கிளிமாலையுடன் காணப்படுவார் இவருக்கு நம்பெருமாள் காணுவார்.

நடைபெறும் அது பொழ்து நம்மாழ்வார் ஆடை அணிகலங்கள் களையப்பெற்று நம்பெருமாள் திருவடிக்கீழ்
சரண்புகுவது போல் கிடத்தப்படுவார். அவருக்கு அருள் பாவிப்பது போன்று துளவம் மாலை மலையாக சாத்தப்பெறும்.
இவையாவும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும். இதற்கு முன்தினம் நம்பெருமாளை தோளுக்கிளியனில்
கண்டவர்கள் பிரதம பட்டர் சுவாமிகள் அவர்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு
எல்லாருக்கும் சேவை சாதிப்பது சிறப்பு சேவையாகும் கைத்தல சேவை எனப்படும்.

தை மாதம்:
பூபதி திருநாள் எனக் கூறுவதுண்டு. விழாவின் 9ம் நாள் தைத்தேர் உற்சவம் இது உத்திரவீதியில் நடைபெறும்.
தை மாதம் (ரதோத்ஸவம்) மூன்றாம் நாள் விழா சமயம் பெருமாள் காலை தாயார் சன்னதிக்குக் கிழக்கே அமைந்துள்ள
கருத்துரை மண்டபத்திற்கு எழுந்தருளுவார் சேவை நடக்கும்.
இதில் ஓர் விசேடம் பெருமானை சேர்ந்தாள் ரெங்கநாயகி தாயார் சென்று சேவிக்கும் பொழுது எதிரே
பெருமானையும் அர்சித்திருந்தபடியே எதிர் எதிர் சேவிக்களாம் இதை பட்டர் அறிவிக்கிறார்.
அடுத்தமாதம் பெருமானையும் தாயாரையும் சேர்த்து சேத்திமண்டபத்தில் சேவிக்களாம்.
இவ்விரு சேவைகளும் மனதிற்கு நிறைவையளிப்பவையாக அமைவதாகும்.

மாசி மாதம்:
நம்பெருமாளை தெப்பத்தில் வைத்து சுற்றி வரச் செய்து சேவை செய்யலாம் திரும்பும் சமயம் வழி
நடை உபயங்களை கண்டருளி யதாஸ்தானம் சேர்வார்.
மறுநாள் மாலையில் பந்தக்காட்சி அநேக தீப்பந்தங்கள் தீவட்டிகள் கொளுத்தப்பட்டு
அவைகளின் ஒளியில் நம்பெருமானை சேவிக்கலாம். இது சித்திரை வீதியில் உலா வருவார்.

பங்குனி மாதம்:
ஆதி பிரம்மோத்சவம் எம்மாதம் ரெங்கநாதர் உறையூர் சென்று கமல ர்ல்லி நாச்சியாருடன் சேர்த்தியிலிருந்து பிறகு
திருவரங்கம் அடைந்து ரெங்கநாயகி தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டு சமாதானமாகி சேத்தி இருந்து
சேவை சாதித்து திருமஞ்சனம் கண்டருளி சித்திரை வீதியில் கோரதத்தில் உலாவருவார்.

———-

ஸ்ரீ ஆழ்வார்கள் அவதாரம்
ஸ்ரீ ஆழ்வார்கள்
கலியுக வருஷம்
ஆங்கில வருடம் BCE
காலம்

ஸ்ரீ பொய்கையாழ்வார்
த்வாபரயுகம்-8,60,900, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, திருவோணம்
6202 – 3077
3125

ஸ்ரீ பூதத்தாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, அவிட்டம்
6202 – 3077
3125

ஸ்ரீ பேயாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, சதயம்
6202 – 3077
3125

ஸ்ரீ திருமழிசையாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, தை௴, மகம்
5200 – 2900
2300

ஸ்ரீ நம்மாழ்வார்
ப்ரமாதி௵, வைகாசி௴, விசாகம்
3102 – 3067
35

ஸ்ரீ மதுரகவியாழ்வார்
த்வாபரயுகம்-8,63,100 விக்ரம௵, சித்திரை௴, சித்திரை
4002 – 3187
815

ஸ்ரீ குலஶேகராழ்வார்
28-ப்ரபாவ௵, மாசி௴, புனர்பூஶம்
3074 – 3007
67

ஸ்ரீ பெரியாழ்வார்
47-க்ரோதன௵, ஆனி௴, ஸ்வாதி
3055 – 2970
85

ஸ்ரீ ஆண்டாள்
97-ஆடி௴, பூரம்
3005 – 2999
6

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார்
108-ப்ரபவ௵, மார்கழி௴, கேட்டை
2994 – 2889
105

ஸ்ரீ திருப்பாணாழ்வார்
120-துர்மதி௵, கார்த்திகை௴, ரோஹிணி
2982 – 2932
50

ஸ்ரீ திருமங்கையாழ்வார்
207-நள௵, கார்த்திகை௴, கார்த்திகை
2985 – 2880
105

ஸ்ரீ முதலாழ்வார்கள் மூவர் மற்றும் திருமழிசையாழ்வார் யுகாந்தரத்தில் அவதரித்தவர்கள் என்பது ஜகத்ப்ரஸித்₃த₄ம்.
அவர்கள் யோக மஹிமையினால் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றறிக.

———–

ஸ்ரீ ஆசார்ய கு₃ருபரம்பரை
ஓராண்வழி ஸ்ரீ ஆசார்யர்களும், ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்களும்
கலியுக வருஷம்
ஆங்கில வருடம் CE
காலம்
ஶ்ரீமந்நாதமுனிகள்:
3124-சோபக்ருது௵, ஆனி௴, அநுஷம்
823 – 917

ஸ்ரீ உய்யக்கொண்டார்
3027-ப்ரபாவ௵, சித்திரை௴, கார்த்திகை
886 – 975

ஸ்ரீ குருகைகாவலப்பன்
தை௴, விசாகம்

ஸ்ரீ மணக்கால்நம்பிகள்
3900-விரோதி௵, மாசி௴, மகம்
929 – 1006

ஸ்ரீ ஆளவந்தார்
4007-தாது௵, ஆடி௴, உத்திராடம்
916 – 1042

ஸ்ரீ பெரிய நம்பிகள்
ஹேவிளம்பி௵, மார்கழி௴, கேட்டை
997 – 1087

ஸ்ரீ பெரிய திருமலை நம்பிகள்
சித்திரை௴, ஸ்வாதி

ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள்
ஸர்வஜித்௵, வைகாசி௴, ரோஹிணி
987 – 1077

ஸ்ரீ திருமாலையாண்டான்
ஸர்வதாரி௵, மாசி௴, மகம்
988 – 1078

ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர்
பிங்கள௵, வைகாசி௴, கேட்டை
1017 – 1097

ஸ்ரீ மாறனேர் நம்பிகள்
ஆடி௴, ஆயில்யம்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்
ஶோபக்ருத்௵, மாசி௴, மிருகசீர்ஷம்
1009 – 1100

ஸ்ரீ எம்பெருமானார்
4119-பிங்கள௵, சித்திரை௴, திருவாதிரை
1017– 1137

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸௌம்ய௵, தை௴, ஹஸ்தம்
1009 – 1127

ஸ்ரீ முதலியாண்டான்
ப்ரபவ௵, சித்திரை௴, புனர்பூசம்
1027– 1132

ஸ்ரீ எம்பார்
துர்மதி௵, தை௴, புனர்பூசம்
1021 – 1140

ஸ்ரீ கந்தாடையாண்டான்
ஸ்வபானு௵, மாசி௴, புனர்பூசம்
1104 – 1209

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார்
பங்குனி௴, ஹஸ்தம்

ஶ்ரீபராசரபட்டர்
சுபக்ருத்௵, வைகாசி௴, அநுஷம்
1122 – 1174

ஸ்ரீ நஞ்சீயர்
விஜய௵, பங்குனி௴, உத்தரம்
1113 – 1208

ஸ்ரீ நம்பிள்ளை
ப்ரபவ௵, கார்த்திகை௴, கார்த்திகை
1147 – 1252

ஸ்ரீ வடக்குத் திருவீதிப்பிள்ளை
ஸர்வஜித்௵, ஆனி௴, ஸ்வாதி
1167 – 1264

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
ஸர்வஜித்௵, ஆவணி௴, ரோஹிணி
1167 – 1262

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர்
க்ரோதன௵, ஐப்பசி௴, திருவோணம்
1205 – 1311

ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் நாயனார்
மார்கழி௴, அவிட்டம்
1207 – 1309

ஸ்ரீ நாயனாராச்சான்பிள்ளை
ஆவணி௴, ரோஹிணி
1227 – 1327

ஸ்ரீ வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்
ஆனி௴, ஸ்வாதி
1242 – 1350

ஸ்ரீ கூரகுலோத்தமதாஸர்
ஐப்பசி௴, திருவாதிரை
1265 – 1365

ஸ்ரீ வேதாந்ததேசிகர்
விபவ௵, புரட்டாசி௴, திருவோணம்
1268 – 1369

ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை
விக்ருதி௵, வைகாசி௴, விசாகம்
1290 – 1410

ஸ்ரீ மணவாளமாமுனிகள்
4371-ஸாதாரண௵, ஐப்பசி௴, திருமூலம்
1370 – 1443

———-

ஸ்ரீ மாமுனிகளுக்கு பின்னுள்ள ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர்
ரக்தாக்ஷி௵, புரட்டாசி௴, புனர்பூசம்–1384 – 1482

ஸ்ரீ ஏட்டூர் சிங்கராசார்யர் (பெரிய ஜீயரின் சிஷ்யர்)
ஆடி௴, உத்திரட்டாதி

ஸ்ரீ திருக்கோவலூர் ஒன்றான ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்
ஶ்ரீமுக௵, தை௴, மிருகசீரிஷம்
1452 – 1569

ஶ்ரீமத் பிள்ளைலோகஞ் சீயர்
சித்திரை௴, திருவோணம்
1550 – 1650

ஸ்ரீ திருழிசை உ.வே. ஶ்ரீஅண்ணாவப்பங்கார் ஸ்வாமி
வ்யயநாம௵, ஆனி௴, அவிட்டம்
1766 – 1817

ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீபெரும்பூதூர் எம்பார் ஜீயர்
ஜய௵, ஆவணி௴, ரோஹிணி
1834 – 1893

ஶ்ரீ காஞ்சீ உ.வே. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி
விக்ருதி௵, பங்குனி௴, விசாகம்
1891 – 1983

புத்தூர் உ.வே. ஶ்ரீ க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
1924 – 2011

வேளுக்குடி உ.வே. ஶ்ரீ க்ருஷ்ணன் ஸ்வாமி
1961

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading