ஸ்ரீ பரமத பங்கம்-ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

திரு வயிந்திர புரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் அருள் பெற்ற பின்பு ஸ்ரீ தேவ நாயக பஞ்சா சதா முதலியவற்றுடன் அருளிச் செய்த ரஹஸ்ய கிரந்தம் –
முந்தை மறை மொய்ய வழி மொழி நீ என்று முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேனே யானே -என்ற நியமனம் பெற்ற பின்பு –
ஸ்ரீ சத தூஷிணிக்கு பின்பு அருளிச் செய்யப் பட்டதாகும்
கருட தண்டகம் -கருட பஞ்சசாத் -ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அச்யுத சதகம் ரகுவீர கத்யம் போன்ற ஸ்ரீ கிரந்தங்கள் உடன் இத்தை அருளிச் செய்தார் என்பர் –
அஹீ நத்ர நகரே -என்று முதலிலும் -பொன் அயி நதை நகரில் முன்னாள் புணராத பர மத பபேரா பூரித தோமே – என்றும் அனுசந்தித்து உள்ளார் –
இதில் 24 அதிகாரங்கள் -முதல் நான்கால் விசிஷ்டாத்வைத சித்தாந்த படித்த தத்வ நிரூபணமும்
-அடுத்து ஐந்தாவதில் பர மத சமுதாய தோஷங்கள் -மேலே 15 அத்யாயங்களில்
லோகாதியாக –மாத்யாமிக –யோகாசார –சௌததிராநதிக -வைபாஷிக –பிரசன்ன பௌத்த–ஜைன –பாஸ்கரீய -யாதவ ப்ரகாசீய -யையாகரண-வைசேஷிக
– -நையாயிக -கௌமாரில –பரபாகர –காபில -ஹைரண்யகாப்ய பாசுபத –யுக்திகளை பூர்வபஷமாகச் சொல்லி நிராகரணம் செய்து அருளுகிறார்
மேலே பாஞ்ச ராத்ர விஷய சங்கைகளை நிரூபித்து பரிஹாரம் செய்து அருளுகிறார்
மேலே பர மதங்களில் சொல்லும் உபாய பலன்கள் தூஷணமும் அருளி கடைசி அத்யாயத்தில் நிகமித்து அருளுகிறார்
சில விசேஷார்த்தங்கள் —
1- ஆசார்யனே உபய விபூதியிலும் உத்தேச்யர் –
அத்ரபரத்ரசாபி நிதயம யாதிய சரனௌ சரணம் மதியம் -ஆளவந்தார்
தேவவசாய துபாசய-நியாச விம்சதி
சர்வ உபநிஷத சார உபதேஷ்டாரம் –குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குலபதி தந்த குறிப்பில் வைத்தனர் –
குலம் திகழும் குறிப்பில் அடி சூடி மன்னும் குற்றேவல் அடியவர் தம் குழாங்கள் கூடி –
நாறு துழாய் முடி நாதனை நண்ணி நம் கூருகவாநத குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ் மாறுதல் இன்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே -ரஹச்ய த்ரய சாரம்
2- சர்வேஸ்வரன் பெருமை வாசா மகோசரம் –
நான்மறைகள் தேடிக் காண மாட்டாச் செல்லுமே
ஐவர்க்கு அன்று ஓதி தூதுவனாய ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனியோடி –
உயர்வற உயர்நலம் உடையவன்
3- திருவாழி ஆழ்வார் -இரண்டு ரூபங்கள் -எட்டு திவ்ய ஆயுதங்கள்-முதல் பாட்டிலும் /16 திவ்ய ஆயுதங்கள் தாங்கி சேவை சாதிப்பார் -இறுதி அதிகாரத்திலும் –
4–ஜீவன் பர ப்ரஹ்மத்தை விட வேறுபட்டவன் –
ஐக்கியம் இல்லை நதிகள் கடலில் கலப்பது போலே -இரும்புண்ட நீர் போலே -சூஷ்மமாய்க் கிடக்கும் –

முதலாவது பர சதாவன அதிகாரம்
இதில் இஷ்ட தேவதா நமஸ்காரமும் -மங்கள ஸ்லோகமும் -ஸ்வ பஷ ஸ்தானமும் -பர பஷ ப்ரதிக்ஷேபமும் –
நல்ல சாஸ்திரீய ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற வேண்டும் என்றும் -நம்மாழ்வார் அருளிச் செய்த உபகார விசேஷமும் அருளிச் செய்யப் படுகின்றன
ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாத்தை தத்வ கிரந்த மங்கள ஸ்லோகத்தில் -யோ வேததி யுக பத சாவம பரதய ஷேண சதா சவத–பர மத நிரசனம் அருளிச் செய்தது போலே
ஆளவந்தாரும் சித்தி த்ரயத்தில் நாராயண தவயி ந மருஷயதி வைதிக க -என்று நாராயண பரதெய்வம் –
சங்கல்ப சூர்யோதயத்தில் அருளிச் செய்தது போலே எம்பெருமானார் நியமனத்தை தாம் தம் ஆச்சார்யர் மூலம் பெற்று பரமத நிரசனத்தில் இழிகிறார்-

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை உந்திப்
பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்ந்திடினும்
நா வில் பிரிவின்றி நா மங்கை வாழினும் நான் மறையில்
பாவித்தது அன்றி உரைப்பது பாறும் பததா திரளே –
இரண்டாவது ஜீவ தத்வ அதிகாரம் / மூன்றாவது அசித் தத்வ அதிகாரம் /நாலாவது பரதத்வ அதிகாரம்
மாலைப் பெற வழி காட்டிய தேசிக வாசகமே ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உளது எழுது மினே-
வெள்ளைப் பரிமுகா தேசிகராய விரகால் அடியோம் உள்ளது எழுதியது ஓலையில் இட்டணம்-ஒரு எண் தானும் இன்றியே -நிர்ஹேதுகமாக அருளுபவர் அன்றோ
ஐந்தாவது -சமுதாய தோஷ -பங்க அதிகாரம் –
நின் மாட்டாய மலர் புரையும் திரு உருவம் மனம் வைக்க மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய் —
கள்ள வேடத்தைக் கொண்டு –பேதம் செய்திட்டு –வெள்ளியார் பிண்டியார் –ஓதுகின்ற கள்ள நூல் -ஆறாவது லோகாயதிக பங்காதி காரம் /
ஏழாவது மாத்யமிக பங்க அதிகாரம் —ஸர்வதா அநு பாபதேசச -உளன் எனில் உளன்-உளன் அலன் எனிலும் உளன் /
எட்டாவது -யோகாசார பங்க அதிகாரம் /ஒன்பதாவது ஸு தரன அதிகார பங்க அதிகாரம் -/ பத்தாவது –வைபாஷிக பங்க அதிகாரம் /
-11-பிரசன்ன புத்த பங்க அதிகாரம் /-12-ஜைன பங்க அதிகாரம் /-13-பாஸ்கர பங்க அதிகாரம் –யானும் தானாய் ஒழிந்தான்/
-14-வையாகரண பங்க அதிகாரம் -சாத்விக புராணங்கள் உபாதேயம்-பிரமாணம் ஆகும் /
-15-வைசேஷிக பங்க அதிகாரம் -மலிந்து வாது செய்வீர்களும் -சமணரும் –சாக்கியரும் / -16-நியாய விஸ்தார விரோத நிசதார அதிகாரம் -/
-17-நிரீஸ்வர மீமாம்சக பங்க அதிகாரம் /-18-நிரீஸ்வர சாங்க்ய பங்க அதிகாரம் /
-19-யோக சித்தாந்த பங்க அதிகாரம் –ஸ்ரீ பாஷ்யத்தில் யோக பரதயுக்தி அதிகாரம் -நான்முகன் பர ப்ரஹ்மம் ஆக மாட்டான் –
/-20-பாசுபத பஹிஷ்கார அதிகாரம் /-21-பகவத் சாஸ்த்ர விரோதி பங்க அதிகாரம் -பாஞ்சராத்மமும் வைகானச ஆகம சாஸ்த்ரங்களும் உபாதேயம் /
–22-பரோகத உபாய பங்க அதிகாரம் /-23-பரோகத பிரயோஜன பங்க அதிகாரம் – இதில் -சங்க்ரஹ பாட்டில்
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் அடியவர் தம் குழாங்கள் உடன் கூடி
வலம் திகழும் திரு மகளும் மற்றிடத்தே மன்னிய மன் மகளாறும் நீளையாறும்
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடிவு என நண்ணினமே -என்று அருளிச் செய்கிறார்
-24- நிகமன அதிகாரம் -இதில் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வார் -16-ஆயுதங்கள் உடன் இருக்கும் பிரகாரம் அருளிச் செய்கிறார்

————————————
இஷ்ட தேவதா நமஸ்காரம் –அபாசயது தம புமஸாமநபாய ப்ரபாநவித -அஹீந்த்ர நகரே நிதய முதிதோ யமஹஸகர –1-

அநபாய பரபா -நாசம் -பிரிவு -இல்லாத காந்தி யுடன் -அதாவது பெரிய பிராட்டியார் உடன்
அநவித -சேர்ந்தவராயும்
-அஹீந்த்ர நகரே –நித்யம் உதித -எப்பொழுதும் உதித்தவராய் இருக்கிற
அயம அஹஸகர -இந்த ஸூ ர்யன்
தம புமஸாம –சேதனர்களுடனுய தமஸ் -அஞ்ஞான அந்தகார இருட்டை
அபாசயது–நிவ்ருத்தி செய்து அருளட்டும் –

————————-

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–1–

எழில் ஆழி இறையவனே—உஜ்ஜவலமாக நிற்கும் ஸ்ரீ ஸூ தர்சன -ஸ்ரீ ஹேதி ராஜன்
எண் தல அம்புயத்துள் இலங்கும்–எட்டு இதழ்களை உடைய தாமரை புஷபத்திலே பிரகாசிக்கும்
அறு கோண மிசை-ஆறு கோணம் உடைய சக்கரத்தின் மேலே
வண் பணிலம் திகிரி -வெளுத்த ஸூந்தர ஸ்ரீ சங்கம் -சக்கரம் –
வளைவில் வளைவாய் முசலம்-வளைந்ததான -நுனியை யுடைய பரசு -உலக்கை
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்-சிலாக்கியமாய் பிரகாசிக்கும் கதை -செந்தாமரை புஷ்பம் பத்மாயுதம் –
எண் படை ஏந்தி நின்றான்-ஆகிய எட்டு ஆயுதங்களை தரித்து சேவை சாதிக்கிறார்

———————————–

விடு நெறி யஞ்சி விடத் தொடக்கிய விதியர் அடைந்து தொழ தழைத்து எழு
அருள் விழி தந்து விலக்கு அடிக் களை விரகில் இயம்பி விலக்கி வைத்தனர்
கொடு வினை என்பதனைத் தினைத் தனை கொணர்தல் இகந்த குணத்தனத்தினர்
குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குல பதி தந்த குறிப்பில் வைத்தனர்
கடு நரகு அன்பு கழற்றி மற்றொரு கதி பெரும் அன்பில் எம்மைப் பொருத்தினர்
கமலை யுகந்த கடல் கிடைக் கடல் கருணை யுயர்ந்த திடர்க்கு ஒருக்கினர்
படு முதல் இன்றி வளர்த்த நல் கலை பல பல வொன்ற வெமக்கு உரைத்தனர்
பழ மறை யந்தி நடைக்கு இடைச் சுவர் பரமதம் என்று அது இடித்த பத்தரே -2-ஆச்சார்யர்கள் அருளும் மஹா உபகாரம் –

பழ மறை யந்தி நடைக்கு இடைச் சுவர் பரமதம் என்று அது இடித்த பத்தரே–பிற மாதங்கள் பழமையான வேதாந்த மார்க்கத்திற்கு நடுவேயுள்ள
சுவர் போல் தடையாயுள்ளன என்று நினைத்து அந்த மதங்களாகிய சுவரை இடித்து ஒழித்த பகவத் பக்தர்களான எம் ஆச்சார்யர்கள் –
விடு நெறி யஞ்சி விடத் தொடக்கிய விதியர் அடைந்து தொழ தழைத்து எழு -நீக்கத் தக்க தீய வழியில் செல்லப் பயந்து –
அவ்வழியை விட்டு விலகத் தொடங்கிய பாக்யமுள்ள நாம் மேன்மேலும் விருத்தியாகப் பெருகுகின்ற
அருள் விழி தந்து விலக்கு அடிக் களை விரகில் இயம்பி விலக்கி வைத்தனர் -கிருபையுடன் கூடிய திவ்ய கடாக்ஷத்தை அருளி -உயர்ந்த பலன்களை
பெற முடியாமல் விலக்குவதற்குக் காரணமான களை போன்ற பாபங்களை எமக்கு எடுத்து அருளிச் செய்து அப்பாபச் செயல்களில் நின்றும் விலக்கி
எம் சக்திக்குத் தக்க உபாயத்திலே முயல்வித்து நிலை நிறுத்தி அருளினார் –
கொடு வினை என்பதனைத் தினைத் தனை –
கொணர்தல் இகந்த குணத்தனத்தினர் -அவ்வாச்சார்யர்கள் கொடிய கர்மங்கள் என்று சொல்லப்படுமவற்றை சிறுது அளவும்
சேர ஒட்டாது கழித்து அருளிய நாள் குணமாகிய செல்வத்தை யுடையர்
குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய குல பதி தந்த குறிப்பில் வைத்தனர் –திருக் குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில்
திரு வவதரித்து பிற மதஸ்தர்களின் கர்வத்தை தம் சேரி ஸூக்திகளின் மூலம் அடக்கி அருளிய பிரபன்ன குல கூடஸ்தரான
நம்மாழ்வார் அருளிச் செய்த ஸூ ஷ் மாமா கருத்தினில் எம்மை நிலை நாட்டி அருளினார்
கடு நரகு அன்பு கழற்றி மற்றொரு கதி பெரும் அன்பில் எம்மைப் பொருத்தினர் -கொடிய நரகத்தை தரும் கர்மங்களில் நின்றும் எமக்கு இருந்த
அன்பைப் போக்கி அருளி சிறந்த கதியாகிய மோக்ஷத்தைப் பெறுவதில் உள்ள ஆசையில் எம்மை ஓன்று சேர்த்து அருளினர்
கமலை யுகந்த கடல் கிடைக் கடல் கருணை யுயர்ந்த திடர்க்கு ஒருக்கினர்-பிராட்டியின் அன்புக்கு உரிய திருப் பாற் கடலில் திருப் பள்ளி கொண்டு அருளும்
நீலக் கடல் போன்ற எம்பெருமானுடைய உயர்ந்த கருணையாகிய மேட்டில் எம்மை ஓன்று சேர்த்து அருளினர்
படு முதல் இன்றி வளர்த்த நல் கலை பல பல வொன்ற வெமக்கு உரைத்தனர் –அழியும் காரணம் இல்லாமல் சர்வேஸ்வரனாலும் மஹரிஷிகளாலும்
வ்ருத்தி செய்து அருள பெற்ற பற்பல சிறந்த வித்யைகள் எம்மிடம் ஓன்று கூடும்படி எங்களுக்கு உபதேசித்து அருளினர் –

—————————–

போமுரைக்கும் பொருள் யாம் அறியோம் பொருளார் மறையில்
தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரமுடையார்
ஆம் உரைக்கு என்று இவை யாய்நது எடுத்து ஆரண நூல் வழியே
நாம் உரைக்கும் வகை நல்லருள் ஏந்தி நவின்றனரே -3—ஆச்சார்யர்கள் சாராத்தங்களையே உபதேசித்து அருளுதல் –

போமுரைக்கும் பொருள் யாம் அறியோம் பொருளார் மறையில் –உண்மைக்கு கருத்து நிறைந்துள்ள வேதத்தில் தகாது என்று நீக்கக் கூடியதும்
தக்கது என்று சொல்லக் கூடியதுமான த்யாஜ்ய உபாதேய விஷயங்களை ஆச்சார்ய உபதேசத்துக்கு முன்பு யாம் அறிய மாட்டோம் –
தாம் உரைக்கின்றன தாமே அறியும் தரமுடையார் -தம்மால் உபதேசிக்கப்படும் விஷயங்களை தாமே நேரில் கண்டு அறியும் படியான பெருமையையுடைய நம் பூர்வாச்சார்யர்கள்
ஆம் உரைக்கு என்று இவை யாய்ந்து எடுத்து ஆரண நூல் வழியே -இவ்விஷயங்களை உபதேசிக்கத் தக்கனவாகும் என்று
வேதக் கடலில் இருந்தும் தேர்ந்து எடுத்து -வேத மார்க்கத்தை தழுவியே
நாம் உரைக்கும் வகை நல்லருள் ஏந்தி நவின்றனரே -நாம் இந்த கிரந்தத்தில் விளக்கும் படி நமக்கு உபதேசித்து அருளினர் –

———————————————–

சித்தும் அசித்தும் இறையும் எனத் தெளிவுற்று நின்ற
தத்துவம் மூன்றும் தனித் தனி காட்டும் தனி மறையால்
முத்தி வழிக்கு இது மூலம் எனத் துணிவார்களையும்
கத்தி மயக்கும் கதகரை நாம் கடிக்கின்றனமே -4-விவேகிகளையும் மயக்கும் பிற மதத்தினரைக் கண்டித்தால் -இதுவும் அடுத்த பாசுரமும் ஜீவ தத்வ அதிகாரம் –

சித்தும் அசித்தும் இறையும் எனத் தெளிவுற்று நின்ற –சேதனமும் அசேதனமும் ஈஸ்வரனும் என்று தெளியப் பெற்று நின்ற
தத்துவம் மூன்றும் தனித் தனி காட்டும் தனி மறையால்–தத்வ த்ரயங்கள் மூன்றையும் -அவ்வவற்றின்
ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் தனித் தனியே பிரித்து வெளியிட்டு அருளும் ஒப்பற்ற வேதத்தால்
முத்தி வழிக்கு இது மூலம் எனத் துணிவார்களையும் -இந்த தத்வத்ரய ஞானம் மோக்ஷ மார்க்கத்துக்கு காரணமாகும் என்று நிச்சயித்து அறிபவர்களையும்
கத்தி மயக்கும் கதகரை நாம் கடிக்கின்றனமே –ஆரவாரத்தால் மயக்குகின்ற பிரதிவாதிகளை ஆச்சார்ய உபதேசம் பெற்ற நாம் இவ்வதிகாரத்தில் கண்டிக்கின்றோம் –

—————————————————-

முத்தின் வடங்கள் என முகுந்தன் புனை மூ வகையாம்
சித்தில் யரும் சுருதிச் செவ்வை மாறிய சிந்தைகளால்
பத்தில் இரண்டு மெய்க்க பகட்டும் பர வாதியர் தம்
கத்தில் விழுந்து அடைந்த அழுக்கு இன்று கழற்றினமே -5-மூவகை ஜீவர்களைப் பற்றிய கலக்கம் நீக்குதல் —

முத்தின் வடங்கள் என முகுந்தன் புனை மூ வகையாம் சித்தில் -முத்துக்களின் ஹாரங்கள் என்னும்படி எம்பெருமான் தரித்த
பத்த முக்த நித்ய ஸூரி களாகிய மூன்று வகைப் பட்ட சேதனர் விஷயத்தில்
யரும் சுருதிச் செவ்வை மாறிய சிந்தைகளால் -அறிவதற்கு அருமையான வேதத்தின் நேர்மையை அழித்துப் பேசுகின்ற நினைவுகளால்
பத்தில் இரண்டு மெய்க்க பகட்டும் பர வாதியர் தம் -தாம் கூறும் பத்து விஷயங்களில் இரண்டாவது மெய்யாக மயக்குகின்ற பிரதிவாதிகளுடைய
கத்தில் விழுந்து அடைந்த அழுக்கு இன்று கழற்றினமே–வீண் பிதற்றலில் மயங்கி அதனால் பெற்ற களங்கத்தை -குற்றத்தை –
இவ்வதிகாரத்தை எழுதிய இன்று நீக்கி விட்டோம்

—————————————-

நாக்கு இயலும் வகை நம்மை யளித்தவர் நல்லருளால்
பாக்கியம் ஏந்திப் பரனடியார் திறம் பார்த்ததற் பின்
தாக்கியர் தங்கள் தலை மிசை தாக்கித் தனி மறை தான்
போக்கியம் என்றதனில் பொய்ம் மதங்களைப் போக்குவமே -6-அசேதன தத்வ விளக்கம் -கலக்கத்தை நீக்குதல் இதுவும் அடுத்த பாசுரமும் அசித் தத்வ அதிகாரம் –

நாக்கு இயலும் வகை நம்மை யளித்தவர் நல்லருளால் –அறிவற்று இருந்த நம்மை நாவினால் நன்றாகக் பேசும்படி அருள் புரிந்த பூர்வாச்சார்யர்களுடைய சிறந்த கிருபையினால்
பாக்கியம் ஏந்திப் பரனடியார் திறம் பார்த்ததற் பின் -நல்ல ஞானத்தை பெரும் பாக்யத்தைப் பெற்று சர்வேஸ்வரனுடைய சேஷ பூதங்களான
ஜீவர்களுடைய ஸ்வரூபத்தை முன் அதிகாரத்தில் ஆராய்ந்ததின் பின்
தாக்கியர் தங்கள் தலை மிசை தாக்கித் தனி மறை தான் -ஆபாச யுக்திகளைக் கொண்டே விஷயத்தை சாதிக்க முப்படுகின்ற யுக்திவாதிகளுடைய
தலையிலே மோதி ஒப்பற்ற வேதம்
போக்கியம் என்றதனில் பொய்ம் மதங்களைப் போக்குவமே -ஆத்மாவினால் அனுபவிக்கப்படும் வஸ்து எனக் கூறிய அசேதன தத்துவத்தைப் பற்றி
வருகின்ற விபரீதகி கொள்கைகளை இவ்வதிகாரத்தில் நாம் ஒழித்திடுவோம்
போக்தா போக்யம் ப்ரேரிதா-உபநிஷத் வாக்கியம் –

—————————————–

தீ வகை மாற்றி அன்று ஓர் தேரில் ஆரணம் பாடிய நம்
தேவகி சீர் மகனார் திறம்பா வருள் சூடிய நாம்
மூவகையாம் அறியாத் தத்துவத்தின் முகம் அறிவார்
நா வகையே நடத்துக் நடை பார்த்து நடந்தனமே -7- அசேதனம் -ஆச்சார்யர்கள் உபதேசித்து அருளினை படியே விளக்கம் –

தீ வகை மாற்றி அன்று ஓர் தேரில் ஆரணம் பாடிய –ஜீவர்கள் இடமுள்ள தீய பிரகாரங்களை நீக்கி -ஒழிக்கக் கருதி -அன்று பாரத யுத்த காலத்தில்
ஒப்பற்ற அர்ஜுனனுடைய தேர்பாகனாய் இருந் வேதாரத்தை ஸ்ரீ கீதா வாயிலாக அருளிச் செய்தவரும்
நம் தேவகி சீர் மகனார் திறம்பா வருள் சூடிய நாம் –தேவகியின் சிறந்த புத்ரருமான நம் ஸ்ரீ கண்ணபிரானுடைய நீங்காத கிருபையை பெற்ற நாம்
மூவகையாம் அறியாத் தத்துவத்தின் முகம் அறிவார் -பிரகிருதி காலம் சுத்த சத்வம் என்று மூவகைப் பட்ட அசேதனங்களுடைய பிரகாரங்களை
நன்கு அறிந்த பராசரர் வியாசர் ஆழ்வார் முதலியவர்களுடைய
நா வகையே நடத்துக் நடை பார்த்து நடந்தனமே -உபதேசத்தின் வழியாகவே நம் ஆச்சார்யர்கள் நடத்துகின்ற பிரகாரத்தை
ஆராய்ந்து நடந்தோம் – இவ்வதிகாரத்தில் வெளியிட்டோம் –

————————————————————

வேலைப் புறம் அகம் காண்பது போல் வேத நன்னெறி சேர்
நூலைப் புறம் அகம் காண்டலில் நுண் அறிவு இன்றி நின்றீர்
மாலைப் பெற வழி காட்டிய தேசிகர் வாசகமே
ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உள் எழுதுமினே -8-ஆச்சார்ய உபதேசத்தின் படி ஈஸ்வர தத்வ விளக்கம்-இதுவும் அடுத்த பாசுரமும் -பரதத்வ அதிகாரம் –

வேலைப் புறம் அகம் காண்பது போல் -சமுத்திரத்தின் வெளியிலும் உள்ளும் முழுதும் காண்பதில் போல்
வேத நன்னெறி சேர் நூலைப் புறம் அகம் காண்டலில்-வேதத்தின் சிறந்த மார்க்கங்களைப் போதிக்கும் சாஸ்திரங்களை
மேலே தோன்றும் அர்த்தத்தையும் உட்கருத்தையும் அறிவதில்
நுண் அறிவு இன்றி நின்றீர்-ஸூஷ்ம புத்தி இல்லாம நின்றவர்கள்
மாலைப் பெற வழி காட்டிய தேசிகர் வாசகமே -எம்பெருமானை நாம் அனுபவிப்பதற்கு உபாயத்தை நமக்கு
காட்டிக் கொடுத்து அருளிய பூர்வாச்சார்யர்களின் உபதேசத்தின் சாரத்தையே
ஓலைப் புறத்தில் எழுதுகின்றோம் உள் எழுதுமினே -இவ்வோலையின் மேல் எழுதுகின்றோம் –இதை உங்கள் மனத்துள் பதிவித்துக் கொள்வீர்களாக —

———————————————–

சிறை நிலையாம் பவத்தில் சிறு தேன் இன்பம் உண்டு உழல்வார்
மறை நிலை கண்டறியா மயல் மாற்றிய மன்னருளால்
துறை நிலை பாரம் எனத் துளங்கா அமுதக் கடலாம்
இறை நிலை யாம் உரைத்தோம் எம் குருக்கள் இயம்பினவே -9-ஈஸ்வர தத்வ விளக்கம் கலக்கம் நீங்கல்-

சிறை நிலையாம் பவத்தில் சிறு தேன் இன்பம் உண்டு உழல்வார் -சிறையின் தன்மையுள்ள சம்சாரத்தில் ஒரு துளி தேன் போலே
அல்ப மான சுகத்தை அனுபவித்து அதிலேயே மண்டி இருப்பவர்களுடையதும்
மறை நிலை கண்டறியா மயல் மாற்றிய மன்னருளால் -வேதத்தின் தாத்பர்யத்தை தெளிந்து அறிய முடியாதபடி செய்வதுமான
அஞ்ஞானத்தைப் போக்கி அருளிய வலிய கிருபையினால்
எம் குருக்கள் இயம்பினவே -எங்கள் பூர்வாச்சார்யர்கள் உபதேசித்து அருளினை படி
துறை நிலை பாரம் எனத் துளங்கா அமுதக் கடலாம் –ஆனந்தக் கடலில் இறங்கும் துறையும் நிலையான நிற்கும் இடமும்
-சம்சாரத்தின் அக்கரையும் என்று கூறும் படி நிலை கலங்காத அம்ருத மயமான சமுத்ரமாகிய
இறை நிலை யாம் உரைத்தோம் -எம்பெருமானுடைய பிரகாரத்தை-ஸ்வரூப ஸ்வபாவங்களை யாம் இந்த அதிகாரத்தில் வெளியிட்டோம் –

————————————————————–

வெறியார் துளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார்
குறியார் நெடியவர் என்று ஒரு குற்றம் பிறர்க்கு உரையார்
அறியார் திறத்தில் அருள் புரிந்து ஆரண நன்னெறியால்
சிறியார் வழிகள் அழிப்பதும் தீங்கு கழிப்பதற்கே -10-பிற மதங்களைக் கண்டிப்பதின் பயன் -இதுவும் அடுத்த பாசுரமும் -சமுதாய தோஷ அதிகாரம் –

வெறியார் துளவுடை வித்தகன் தன்மையின் மெய்யறிவார் –வாசனை மிகுந்த திருத் துழாயை யுடையவனும்
அதிசய சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமானுடைய -ஸ்வரூப ஸ்வபாவங்களின் உண்மையை அறிந்த பூர்வாச்சார்யர்கள்
குறியார் நெடியவர் என்று ஒரு குற்றம் பிறர்க்கு உரையார் –பிறர் விஷயத்தில் குள்ளமானவர் உயரமானவர் என்றால் போன்ற
அல்பமான ஒரு தோஷத்தையும் சொல்ல மாட்டார்கள் –
அப்படியாயினும்
ஆரண நன்னெறியால் -வேதத்தை தழுவிய சிறந்த மார்க்கத்தைக் கொண்டு
சிறியார் வழிகள் அழிப்பதும் –பிற மதத்தாருடைய ஸித்தாந்தத்தைக் கண்டிப்பதும்
எதற்க்காக என்றால்
அறியார் திறத்தில் அருள் புரிந்து -நம் சித்தாந்தத்தை அறிந்து கொள்ளாத பாமரர் விஷயத்தில் கிருபையை வைத்து அருளி
தீங்கு கழிப்பதற்கே–பிற மதபங்களின் தோஷம் தெரியாததால் அவர்கள் வலையில் விழுந்து அவர்களுக்கு வரும் கெடுதியை நீக்குவதற்கே அன்றி வேறு இல்லை –

———————————————

மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார்
கண்டதற்கு விபரீதம் கத்துகின்றார் காணாத குறை மறையில் காட்ட நிற்பார்
பண்டு ஒருத்தன் கண்டுரைத்தேன் நானே என்னப் பல வகையில் உபாதிகளால் படிந்து வீழ்வார்
கொண்டல் ஒக்கும் திருமேனி மாயக் கூத்தன் குரை கழல் சேர் விதி வகையில் கூடாதாரே -11-பிற மாதங்களில் பொதுப் படத் தோஷம் கூறுதல் –

மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே -மேன்மேலும் விதண்டா வாதம் பேசுவதற்கு இடம் கொடுக்கின்ற குயுக்திகளை மாத்திரம் கொண்டு
வேண்டுங்கால் வேண்டுவதே விளம்புகின்றார் -தமக்கு வேண்டிய சமயத்தில் இஷ்டமான விஷயத்தை தோன்றிய படியே கூறுகின்றவரான
கணாத -கௌதம -வையாகரண-மீமாம்சகரும்
கண்டதற்கு விபரீதம் கத்துகின்றார் -தாம் நேரில் கண்டதற்கு மாறுபட்ட விஷயங்களை ஆரவாரமாகப் பேசுகின்றவர்களான பாஸ்கர யாதவ அத்வைதிகளும்
காணாத குறை மறையில் காட்ட நிற்பார் –அபவ்ருஷேயமான வேதத்தில் காண முடியாத பவ்ருஷேயம் என்னும் குற்றத்தை எடுத்துக் கூற நிற்பவரான சார்வாக பவ்த்த ஜைனரும்-
பண்டு ஒருத்தன் கண்டுரைத்தேன் நானே என்னப்–முன்பு கபிலர் ப்ரஹ்மா பசுபதி ஆகியவர்களில் நானே இந்த மதத்தை யோகத்தால்
கண்டு பிடித்து உபதேசித்தேன் என்று கூற பல வகையில் உபாதிகளால் படிந்து வீழ்வார் -பலவகைப் பட்ட -பொருளாசை அகார சவ்கர்யம்-முதலிய
காரணங்களால் அந்த அந்த மதத்தில் ஈடுபட்டு அழிந்து போகின்றவர்களான சாங்க்ய யோக சைவர்களும்
ஆகிய நான்கு வகையினரும்
கொண்டல் ஒக்கும் திருமேனி மாயக் கூத்தன் குரை கழல் சேர் விதி வகையில் கூடாதாரே -மேகத்தை போன்ற திருமேனி ஸ்வபாவம் யுடைய
அதிசய சேஷ்டிதங்களை யுடைய ஒலிக்கின்ற கழல் -பூண்ட திருவடிகள் -சேருவதற்கு யுரிய பாக்ய விசேஷம் கிடைக்கப் பெறாதவர் ஆவர் –

—————————————————–

கண்டது மெய் எனில் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டது அலாதது இலது எனில் கண்டிலம் குற்றம் இதில்
கண்டது போல் மறை காட்டுவதும் கண்டது ஒத்ததனால்
உண்டது கேட்க்கும் உலோகாயதர் என்று மீறுவதே -12-சார்வாக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் லோகாயதிக பங்க அதிகாரம் –

கண்டது மெய் எனில் காணும் மறையில் அறிவு கண்டோம் –பிரத்யக்ஷத்தால் கண்ட வஸ்து உண்மையானதாகும் என்று கொள்வதாயின்
பிரத்யக்ஷத்தால் அறியப் படுகின்ற வேதத்தால் பிரத்யக்ஷமாக ஞானம் உண்டாவதைக் காண்கிறோம்
கண்டது அலாதது- இலது எனில்- கண்டிலம் குற்றம் இதில் -மேலும் ப்ரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து உண்மையன்று என்று கூறுவதாயின் –
வேதத்தால் உண்டாகும் இந்த ஞானத்தில் ஒரு தோஷத்தையும் காணவில்லை
கண்டது போல் மறை காட்டுவதும் கண்டது ஒத்ததனால் –பிரத்யக்ஷத்தை பிரமாணமாக ஏற்றுக் கொள்வதை போலே
வேதத்தால் உண்டாகும் ஞானமும் பிரத்யக்ஷம் என்னும் பிரமானத்தையே ஒத்து இருப்பதால்
உண்டது கேட்க்கும் உலோகாயதர் என்று மீறுவதே -தாம் உண்டதையே பிறரைக் கேட்டுத் தெரிந்து கொள்பவரைப் போன்றவர்களான
சார்வாக மதத்தினர் எப்பொழுது இவற்றை மீறிப் பேச முடியும் –

———————————————————–

கண்டதனால் காணாதது அனுமிக்கின்றார் கண்டு ஒருத்தன் உரைத்ததனைக் கவருகின்றார்
உண்டு பசி கெடும் என்றே உணர்ந்து உண்கின்றார் ஒன்றாலே ஒன்றைத் தாம் சாதிக்கின்றார்
பண்டு முலை யுண்டதனால் முலை யுண்கின்றார் பார்க்கின்றார் பல வல்லாத் தம்மை மற்றும்
கண்டு மதி கெட்ட நிலை காணகில்லார் காணாதது இலது என்று கலங்குவாரே -13-சார்வாகரின் கொள்கையும் செய்கையும் முரண் படுதல்-

காணாதது இலது என்று கலங்குவாரே -ப்ரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து -முயல் கொம்பு போல் சூன்யம் என்று மனக் கலக்கம் உள்ள சார்வாகர்-
கண்டதனால் காணாதது அனுமிக்கின்றார் -பிரத்யக்ஷத்தால் அறிந்த வஸ்துவைக் கொண்டு -பிரத்யக்ஷத்தால் அறியப் படாத வஸ்து
இருப்பதை ஊகித்து அறிகின்றனர் -புகையைக் கண்டு காணாத அக்னி இருப்பதை அறிவது போலே –
ஒருத்தன் கண்டு உரைத்ததனைக் கவருகின்றார் -வேறு ஒருவன் பிரத்யக்ஷத்தால் அறிந்து கூறிய விஷயத்தை ஏற்றுக் கொள்கின்றனர்
இப்படி அனுமானத்தையும் சப்தத்தையும் பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறார்கள்
உண்டு பசி கெடும் என்றே உணர்ந்து உண்கின்றார் -உண்ட பிறகு பசி தொலைந்து போம் என்றே அறிந்து உண்கின்றனர்
ஒன்றாலே ஒன்றைத் தாம் சாதிக்கின்றார் -ஒரு ஸ்தானத்தாலே ஒரு வஸ்துவை தங்கள் சாதித்துக் கொள்கின்றனர்
பண்டு முலை யுண்டதனால் முலை யுண்கின்றார் -முன் ஜென்மத்தில் தாய்ப் பாலைப் பருகி அந்த வாசனையால் இந்த ஜென்மத்திலும் தாய்ப் பாலைப் பருகுகின்றனர்
பார்க்கின்றார் பல வல்லாத் தம்மை மற்றும் -மேலும் காய் கால் முதலிய பல அவயவங்களைக் காட்டிலும் வேறுபட்டு நிற்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை –
இது ஏன் சரீரம் இது ஏன் காய் என்ற முறையில் பிரத்யக்ஷத்தாலேயே அறிகின்றனர்
கண்டும் மதி கெட்ட நிலை காணகில்லார் -இப்படித் தம் சித்தாந்தத்திற்கு விரோதமான விஷயங்களை அறிந்தும்
புத்தி கெட்டுத் தாம் பிதற்றும் நிலையை தங்கள் அறிந்து கொள்ள வில்லை –

—————————————

காணாதது இலது எனும் கல்வியினாரைக் கடிந்ததற்பின்
கோணார் குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களில்
நாணாது அனைத்தும் இலது என்று நால்வகை யன்று இது என்றும்
வாழ் நாள் அறுக்கின்ற மத்திமத்தான் வழி மாற்றுவமே -13-மாத்யமிகரைக் கண்டித்தால் -இதுவும் அடுத்த பாசுரமும் மாத்யமிக பங்க அதிகாரம் –

காணாதது இலது எனும் கல்வியினாரைக் கடிந்ததற்பின் -பிரத்யக்ஷத்தால் காணப் படாத வஸ்து கிடையாது என்ற சித்தாந்தமுடைய சார்வாகரை கண்டித்த பின்
கோணார் குதர்க்கங்கள் கொண்டே குழப்பும் பவுத்தர்களில் -வக்ரத் தன்மை நிறைந்த குயுக்திகளை -சாதனமாகக் கொண்டே உலகத்தை கலக்கும் புத்தர்கள் நால்வரில்
நாணாது அனைத்தும் இலது என்று நால்வகை யன்று இது என்றும் -வெட்கமடையாது சகல வஸ்துக்களுக்கும் இல்லை என்றும்
இந்த பிரபஞ்சம் நான்கு வகையிலும் அடங்காது என்றும் கொண்டு -சர்வம் சூன்யம் என்று –
சத்தாகவோ அசத்தாகவோ சத் அசத் என்றும் -சத் அசத் விலக்ஷணம் என்றும் நான்கு வகைகளும் இல்லை
வாழ் நாள் அறுக்கின்ற மத்திமத்தான் வழி மாற்றுவமே-கணவன் வாழும் நாளிலேயே தாலி அறுக்கின்ற ஸ்த்ரீயைப் போன்ற மாத்யமிகனுடைய ஸித்தாந்தத்தை கண்டிப்போம் –
சகல லோக நாத்தனாய் பிரகாசிக்கின்ற சர்வேஸ்வரனையும் அவனுக்கு உரிய பிரபஞ்ச வஸ்துக்களையும் இல்லையாக்கி
அவன் அருளால் பெரும் பலன்களையும் இழந்தவன் அன்றோ இவன் –

——————————————————

மானம் இலை மேயம் இலை என்று மற்றோர் வாத நெறி இலை என்றும் வாது பூண்ட
தானும் இலை தன்னுரையும் பொருளும் இல்லை என்றும் தத்துவத்தின் உணர்த்தி சயம் இல்லை என்றும்
வானவரும் மானவரும் மனமும் வெள்க வளம் பேசு மதிகேடன் மத்திமத்தான்
தேன நெறி கொண்டு அனைத்தும் திருடா வண்ணம் செழு மதி போல் எழும் மதியால் சேமித்தோமே -15-உலகத்தை மாத்யமிகன் கொள்ளையிடாதபடி காத்தல் –

வானவரும் மானவரும் மனமும் வெள்க -தேவர்களும் மநுஷ்யர்களும் தன் மனமும் கூசும்படி -அவன் மனமும் பரிஹஸிக்கும் படி -அன்றோ இவன் கொள்கை –
மானம் இலை மேயம் இலை என்று மற்றோர் வாத நெறி இலை என்றும்-பிரமாணம் ஒன்றும் இல்லை என்றும்-பிரமானத்தால் அறியப் படும் பொருளும் இல்லை என்றும் –
வேறு ஓர் வாத மார்க்கமும் இல்லை என்றும் –
வாது பூண்ட தானும் இலை தன்னுரையும் பொருளும் இல்லை என்றும் –வாதம் புரியும் தானும் இல்லை என்றும் தன வாக்கியமும் அதன் அர்த்தமும் இல்லை என்றும்
தத்துவத்தின் உணர்த்தி சயம் இல்லை என்றும் -தத்துவத்தின் அறிவும் வாதத்தில் ஐயமும் இலை என்றும் -இப்படி சர்வம் சூன்யம் என்று கூறி
வளம் பேசு மதிகேடன் மத்திமத்தான் -தன் மதத்தின் பெருமையைப் பேசுகின்ற அறிவு கெட்டவனாகிய மாத்யமிகன்
தேன நெறி கொண்டு அனைத்தும் திருடா வண்ணம் செழு மதி போல் எழும் மதியால் சேமித்தோமே -திருட்டு வழியைக் கொண்டு சகல தத்துவங்களையும்
இல்லையாக்காத படி பூர்ண சந்திரனைப் போலே வ்ருத்தி யடைகின்ற ஞானத்தால் உலகத்தை அவன் இடம் இருந்து ரஷித்தோம்-

—————————————————————–

முற்றும் சகத்து இலது என்றே புகட்டிய முத்தரை நாம்
சுற்றும் துறந்து துறையில் நின்றே துகளாக்கிய பின்
மற்று ஓன்று இலது மதி பல உண்டு என்று வஞ்சனையால்
சற்றும் துறந்த யோகாசாரனைச் சதிக்கின்றனமே–16-யோகாசார மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் யோகாசார பங்க அதிகாரம் –

முற்றும் சகத்து இலது என்றே புகட்டிய முத்தரை நாம் -உலகம் முழுதும் இல்லையென்றே மயக்கிய மூடரான மாத்யமிகரை நாம்
சுற்றும் துறந்து துறையில் நின்றே துகளாக்கிய பின் -வேதாந்த மார்க்கத்தில் நிலை பெற்று நின்றே முழுதும் ஒழித்து பொடியாக்கிய பிறகு
மற்று ஓன்று இலது மதி பல உண்டு என்று வஞ்சனையால் பலவிதமான ஞானம் உண்டு –ஞானத்தை தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை என்று கூறி–
அறிவு ஒன்றே மெய்யான பொருள் அது பலவகைப்படும் -அதைத் தவிர அறிபவனும் அறியப் படும் பொருள்களும் இல்லை-என்று கூறி – வஞ்சிக்கக் கருதியதால்
சற்றும் துறந்த யோகாசாரனைச் சதிக்கின்றனமே–அறிபவனான தன்னையும் அனுபவிக்கப்படும் வஸ்துக்களையும் இல்லையாக்கியதால்
இம்மையிலும் மறுமையிலும் அல்ப பலனையும் இழந்த யோகாசாரனைக் கண்டிப்போம் –

—————————————-

உளக் கதியை நாம் உள்ளி யுள்ளம் தேறி யுலகத்தார் யுகந்து இசைய யுலகு யுண்டு என்றோம்
இளக்க வரிதாகிய நல் தருக்கம் சேர்ந்த எழில் மறையில் ஈசனுடன் எம்மைக் கண்டோம்
விளக்கு நிரை போல் மதிகள் வேறாய் வேறு ஓன்று அறியாதே விளங்கும் என விளம்புகின்ற
களக் கருத்தன் கண்ணிரண்டும் அழித்தோம் நாணாக் காகம் போல் திரிந்து அவன் கதறுமாறே -17-யோகாசாரன் இல்லையாக்கிய உலகை ஸ்தாபித்தல் –

உளக் கதியை நாம் உள்ளி யுள்ளம் தேறி யுலகத்தார் -நாம் பிரமாணங்களை அனுசரித்து நம் மனம் செல்லுகின்ற முறையை ஆராய்ந்து மனம் தெளிந்து உலகில் உள்ளோர்
யுகந்து இசைய யுலகு யுண்டு என்றோம் -மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் படி உலகத்தை உண்மை என்று விளக்கினோம்
இளக்க வரிதாகிய நல் தருக்கம் சேர்ந்த எழில் மறையில் ஈசனுடன் எம்மைக் கண்டோம் -அசைப்பதற்கு முடியாத -சிறந்த யுக்திகளுடன் கூடிய பெருமையுள்ள வேதத்தில்
ஈஸ்வரனையும் ஜீவர்களாகிய எங்களையும் வகுத்து அறிந்தோம் -தத்வத்ரய ஞானம் பெற்றோம் -என்றவாறு –
விளக்கு நிரை போல் மதிகள் வேறாய் வேறு ஓன்று அறியாதே விளங்கும் என விளம்புகின்ற –ஞானங்கள் தீபத்தின் ஜ்வாலைகளின் வரிசை போலே
வெவ்வேறாக இருந்து தம்மைத் தவிர வேறு ஒரு வஸ்துவையும் அறியாது பிரகாசிக்கும் என்று கூறுகின்ற –
க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் ஞானங்களின் சந்ததியே ஆத்மா எனப்படுகிறது என்பர் இவர்கள் –
இப்படி யாயின் ஆத்மா அநித்தியம் என்று ஏற்படுமே -அதே ஆத்மா என்று உண்டாகும் ஞானத்தாலோ ஆத்மா ஸ்திரம் என்று தெரிகின்றதே –
இப்படி முரண் படுகிறதே என்ன ஜ்வாலை க்ஷணம் தோறும் வெவ்வேறாக இருந்தும் அதே தீப ஜ்வாலை என்ற அறிவு யுண்டாவது போல்
ஞானமும் ஒரே விதமாய் உண்டாவதால் அதே ஆத்மா என்ற அறிவு யுண்டாகின்றது -உண்மையில் ஆத்மா அநித்யமே என்பதாகும் இவன் சித்தாந்தத்தில்
களக் கருத்தன் கண்ணிரண்டும் அழித்தோம் நாணாக் காகம் போல் திரிந்து அவன் கதறுமாறே -கள்ளக் கருத்தை யுடைய யோகாசாரனுடைய
இரண்டு கண் போல் முக்கியமான அறிபவன் பொய்-அறியப்படும் வஸ்துவும் பொய் என்ற அம்சங்களையும் ஒருவரும் இசையாமல் ஒழித்தோம்-
அந்த யோகாசாரன் வெட்கமற்ற காகனைப் போல் அலைந்து கதறும் விதம் எத்தகையது —

—————————————————————————–

பொருள் ஓன்று இலது என்று போதம் ஒன்றும் கொண்ட பொய்யரை நாம்
தெருள் கொண்டு தீர்த்த பின் காண ஒண்ணாப் பொருள் தேடுகின்ற
மருள் கொண்ட சூது யுரைக்கும் சவ்த்திராந்திகன் வண்ணிக்கை நாம்
இருள் கொண்ட பாழும் கிணறு என்று இகழ்ந்து ஓட வியம்புவமே -18-சவ்த்திராந்திக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் சவ்த்திராந்திக பங்க அதிகாரம் –

பொருள் ஓன்று இலது என்று போதம் ஒன்றும் கொண்ட பொய்யரை நாம் -வெளிப்படையான வஸ்து ஒன்றும் இல்லக்கை என்று நிச்சயித்து
ஞானம் என்ற ஒரே வஸ்துவைக் கொண்ட பொய்யே பேசும் யோகாசரர்களை நாம்
தெருள் கொண்டு தீர்த்த பின் காண ஒண்ணாப் பொருள் தேடுகின்ற -சிறந்த ஞானத்தைக் கொண்டு கண்டித்த பின் ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாத
வஸ்துவை உண்டு என்று அங்கீகரித்து அனுமானத்தாலே சாதிக்க முற்படுகின்றவனும் –
மருள் கொண்ட சூது யுரைக்கும் சவ்த்திராந்திகன் வண்ணிக்கை நாம் -அஞ்ஞானத்தால் கைக் கொண்ட கபட யுக்திகளைப் பேசுகின்றவனுமான
சவ்த்திராந்திகனுடைய மத வர்ண பிரகாரத்தை
இருள் கொண்ட பாழும் கிணறு என்று இகழ்ந்து ஓட வியம்புவமே -இருள் நிறைந்த பாழும் கிணறு என்று ஜனங்கள்
நினைத்து வெறுத்து விலகும்படி நாம் கண்டித்துப் பேசுவோம் —

————————————————

நிலையில்லாப் பொருள் மதியை விளைத்துத் தான் சேர் நிறம் கொடுத்துத் தான் அழியும் தன்னால் வந்த
நிலையில்லா மதி தன்னிறத்தைக் காணும் இது காணும் பொருள் காண்கை என்ற நீசன்
முலையில்லாத் தாய் கொடுத்த முலைப் பால் யுண்ணும் முகமில்லா மொழி எனவே மொழிந்த வார்த்தை
தலையில்லாத் தாள் ஊரும் கணக்காய் நின்ற கட்டளை நாம் கண்டு இன்று காட்டினோமே-19-சவ்த்ராந்திகனின் முரண்பாடு –

நிலையில்லாப் பொருள் மதியை விளைத்துத் தான் சேர் நிறம் கொடுத்துத் தான் அழியும் –நிலையற்ற க்ஷணிகமான வஸ்துவானது ஞானத்தை யுண்டாக்கி
தான் அடைந்த நீலம் மஞ்சள் முதலிய நிறங்களை அந்த ஞானத்தால் கொடுத்து வஸ்துவாகிய தான் அழிந்து போம்
தன்னால் வந்த – நிலையில்லா மதி தன்னிறத்தைக் காணும் –வஸ்துவாகிய தான் அழிந்து போம் அநித்யமான ஞானமானது தன்னிடத்தில் நீலம் மஞ்சள் முதலிய
நிறங்களை சாஷாத்கரிக்கும்
இது காணும் பொருள் காண்கை என்ற நீசன் -இப்படி தன்னிடத்து நிறங்களைக் காண்பதுவே வஸ்து சாஷாத்காரம் ஆகும் என்ற சித்தாந்தம் கொண்டவனும்
முலையில்லாத் தாய் கொடுத்த முலைப் பால் யுண்ணும் -ஸ்தனம் இல்லாத தாயினால் கொடுக்கப் பட்ட ஸ்தன்யத்தைப் பருகுமவன் போன்றவனுமான
அல்பனான சவ்த் ராந்திகனாலே
முகமில்லா மொழி எனவே மொழிந்த வார்த்தை -வாய் இல்லாமல் பேசுகிற வார்த்தை என்று கூறும்படி கூறப்பட்ட தன் சித்தாந்த வாக்யமானது –
வெளிப்படைப் பொருள்கள் பாஹ்ய வஸ்துக்கள் ஞானத்தை உண்டாக்கி அந்த பொருள்களின் நிறங்களை அந்த ஞானத்திடம் கொடுத்து தாம் அழிந்து விடுகின்றன –
ஆதலால் அழிவதே தன்மையாய் யுள்ள அந்த பொருள்களை இந்த்ரியங்களால் அறிய முடியாது -பொருள்கள் அழிந்தாலும் ஞானத்தில் கொடுத்த நிறங்களைக் கொண்டு
அனுமானம் செய்து அப்பொருள்களை அறியலாம் -அந்த பொருள்களால் உண்டாக்கப்பட்ட ஞானமும் ஒரே க்ஷணம் இருந்து நசிக்கின்றது –
இந்த ஞானமே ஆத்மா எனப்படும் -நிறங்களை அனுபவிக்கும் இந்த அனுபவமே வஸ்து சாஷாத்காரம் எனப்படும் என்பதே இவர்கள் சித்தாந்தம் –
தலையில்லாத் தாள் ஊரும் கணக்காய் நின்ற கட்டளை நாம் கண்டு இன்று காட்டினோமே-தலையில்லாத பாதங்கள் நடக்கின்ற ரீதியிலே
நிற்கின்ற பிரகாரத்தை நாம் அறிந்து இன்று வெளியிட்டோம் –

———————————————

காண்கின்றவன் இலை காட்சியும் கண்டதும் யுண்டு அவை தாம்
ஏண் கொண்டன அன்று இவற்றில் குணமும் நிலையும் இலை
சேண் கொண்ட சந்ததியால் சேர்ந்தும் ஓன்று என நிற்கும் என்ற
கோண் கொண்ட கோளுரை வைபாடிகன் குறை கூறுவமே-20-வைபாஷிக மத கண்டனம்-இதுவும் அடுத்த பாசுரமும்-வைபாஷிக பங்க அதிகாரம் –

காண்கின்றவன் இலை காட்சியும் கண்டதும் யுண்டு அவை தாம் -வஸ்துக்களை அறிபவனாகிய ஜீவன் என்பவன் இல்லை -அறிதல் என்னும் செய்கையும்
அறியப் படுகின்ற வஸ்துவும் உண்மையாய் உள்ளவை -அந்த அறிகையும் அறியப்படும் வஸ்துவும்
ஏண் கொண்டன அன்று இவற்றில் குணமும் நிலையும் இலை -எண்ணிக்கைக்கு அடங்கியன வல்ல -இந்த அறிகையிலும் அறியப் படுமவற்றிலும்
ஒரு குணமும் நிலைத்து நிற்கும் தன்மையும் இல்லை -க்ஷணம் காலமே இருந்து அழிபவை-
சேண் கொண்ட சந்ததியால் சேர்ந்தும் ஓன்று என நிற்கும் என்ற -நெடும் காலம் வாழ்வைக் கொண்ட வரிசையினால் பரமாணுக்கள் ஓன்று கூடியும்
ஓன்று என்று கூறும்படி நிற்கும் என்று கூறிய
கோண் கொண்ட கோளுரை வைபாடிகன் குறை கூறுவமே-வக்ரத் தன்மை கொண்ட குறளை மொழி பேசுகின்ற வைபாஷிகனிடம் உள்ள தோஷங்களை விளக்குவோம் –

——————————————

கும்பிடுவார் ஆர் என்று தேடுகின்றார் குணங்களையும் தங்களுக்குக் கூறுகின்றார்
தம் படியைத் தமர்க்கு உரைத்துப் படிவிக்கின்றார் தமக்கு இனி மேல் வீடு என்று சாதிக்கின்றார்
தம் புடவை உணல் குறித்து நெடிது எண்கின்றார் சந்ததிக்குத் தவம் பலிக்கத் தாம் போகின்றார்
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச் சேவகப் பற்றுடனே நாம் செகுத்துட்டோமே -21-வைபாஷிக மதம்- கொள்கை -செய்கை- முரண்பாடு –

கும்பிடுவார் ஆர் என்று தேடுகின்றார் குணங்களையும் தங்களுக்குக் கூறுகின்றார் -தம்மை வணங்குகின்ற சீடர்கள் யாவர் என்று தேடிக் கொண்டே இருப்பவர்களும்
தங்களுக்கு அஹிம்சை வைராக்யம் முதலிய குணங்கள் இருப்பனவாகவும் கூறிக் கொள்பவர்களும்
தம் படியைத் தமர்க்கு உரைத்துப் படிவிக்கின்றார் தமக்கு இனி மேல் வீடு என்று சாதிக்கின்றார் -தம்முடைய மதக் கொள்கையை தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்து
அவர்களையும் அதில் ஈடுபடச் செய்பவர்களும் இனி மேல் தங்களுக்கு மோக்ஷம் கிடைப்பது நிச்சயம் என்று உறுதி கூறுபவர்களும்
தம் புடவை உணல் குறித்து நெடிது எண்கின்றார் -தங்களுக்கு வேண்டிய ஆடையையும் ஆஹாரத்தையும் குறித்து அதிகமாகக் கவலை அடைபவர்களும்
சந்ததிக்குத் தவம் பலிக்கத் தாம் போகின்றார் -தம் சந்ததியாருக்குப் பலன் கிடைப்பதற்காக தங்கள் தவம் புரிபவர்களுக்கு
செம்படவர் செய்கின்ற சிற்றினிப்பைச் சேவகப் பற்றுடனே நாம் செகுத்துட்டோமே–வலை போட்டு மீன்களைப் பிடிக்கும் -செம்படவரை ஒத்தவர்களுமான —
குயுக்திகளை வீசி ஜனங்களை கவர்ந்து -காஷாயமும் அணிந்து – வைபாஷிகர்கள் கைக் கொண்ட கேட்க்கும் போது மாத்ரம் இனியனவாகத் தோற்றுகின்ற
அல்பராசமான வாதங்களை அவர்களது வீரச் செருக்குடன் நாம் ஒழித்திட்டோம் –

————————————-

வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்னூல்
பாதங்களான பதினாறில் ஈசன் படி மறைத்துப்
பேதங்கள் இல்லை என்று ஓர் பிரமப் பிச்சு இயம்புகின்ற
போதம் கழிந்தவனைப் புத்தர் மாட்டுடன் பூட்டுவமே -22-அத்வைத மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-பிரசன்ன புத்த பங்க அதிகாரம் –

வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்னூல் -வேதங்களின் முடியாகிய வேதாந்த சாஸ்திரம் பிரகாசிக்கும் படி
ஸ்ரீ வேத வியாச முனிவரால் விளக்கி அருளப் பட்ட சிறந்த ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரங்களின்
பாதங்களான பதினாறில் ஈசன் படி மறைத்துப் -நான்கு அத்தியாயங்களில் உள்ள பதினாறு பாதங்களில் நிச்சயிக்கப்பட்ட
எம்பெருமானுடைய குணம் திருமேனி முதலிய பிரகாரங்களை இல்லையாக்கி
பேதங்கள் இல்லை என்று ஓர் பிரமப் பிச்சு இயம்புகின்ற-பேதங்களே இல்லை என்று கொண்டு நிகரற்ற ப்ரஹ்மத்துக்கு பிரமத்தை- அஞ்ஞானத்தை -கற்பித்து கூறுகின்ற
போதம் கழிந்தவனைப் புத்தர் மாட்டுடன் பூட்டுவமே -தத்துவ ஞானம் நீங்கியவனை புத்த மதத்தினராகிய மாட்டுடன் ஓன்று சேர்த்து விடுவோம் –

—————————————–

பிரிவில்லா இருள் ஓன்று பிணக்கு ஓன்று இல்லாப் பெரு வெயிலை மறைத்து உலகம் காட்டும் என்ன
அறிவு இல்லா அறிவு ஒன்றை அவித்தை மூடி யகம் புறம் என்று இவை யனைத்தும் அமைக்கும் என்பார்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்து கெட்டார் சீவனையும் ஈசனையும் சிதைக்கப் பார்த்தார்
நெறியில்லா நேர் வழியும் தானே ஆனான் நெடுநாளாய் நாம் அடைந்து நிலை பெற்றோமே -23-ப்ரஹ்மத்துக்கு அவித்யையின் சம்பந்த கண்டனம் –

பிரிவில்லா இருள் ஓன்று பிணக்கு ஓன்று இல்லாப் பெரு வெயிலை மறைத்து உலகம் காட்டும் என்ன -வேறுபடுதல் இல்லாத ஓர் இருளானது
விரோதம் ஒன்றும் இல்லாத மறைக்க முடியாத பெரிய வெளிச்சத்தை மறைத்து விட்டு உலகத்தைப் பிரகாசிக்கும் என்று கூறுவது போலே
அறிவு இல்லா அறிவு ஒன்றை அவித்தை மூடி யகம் புறம் என்று இவை யனைத்தும் அமைக்கும் என்பார் -அவித்யையானது ஞானம் என்ற குணம் இல்லாத
ஞான ஸ்வரூபமான ஒரு ப்ரஹ்மத்தை மறைத்து ஆத்மா முதலிய உள்ளேயுள்ள வஸ்துக்கள் -ஐந்து பூதங்களும் அவற்றால் யாகியவனவுமாகிய வெளிப்படையான
வஸ்துக்கள் என்று சொல்லப் படுகின்ற இந்த உலக வஸ்துக்கள் முழுவதையும் ஸ்ருஷ்டிக்கும் என்று கூறும் அத்வைதிகள்
செறிவில்லாப் புத்தருடன் சேர்ந்து கெட்டார் சீவனையும் ஈசனையும் சிதைக்கப் பார்த்தார் –வைதிகருடன் சேரத் தகாத புத்த மதத்தோருடன் மத விஷயங்கள்
சிலவற்றில் ஒத்து இருந்து கெட்டவர்களாகி ஜீவாத்மாவையும் ஈஸ்வரனையும் -அவர்களின் பேதத்தை இசையாது கெடுக்க முற்பட்டார்கள்
நெறியில்லா நேர் வழியும் தானே ஆனான் நெடுநாளாய் நாம் அடைந்து நிலை பெற்றோமே –அம்மாதத்தில் சேராத நாம் தன்னை அடைதற்கு வேறோர்
உபாயம் இல்லாத நேரிய உபாயமாகவும் தானே ஆகி நிற்பவனான எம்பெருமானை சரணமாக அடைந்து நம் ஸ்வரூபம் உஜ்ஜீவிக்கப் பெற்றோம் –

——————————————–

சோதனை விட்டு ஒருத்தன் சொல மெய்யெனச் சோகதரைச்
சேதனை யற்றவர் என்று சிதைத்த பின் சீவர்கட்க்கு ஓர்
வேதனை செய்கை வெறும் மறம் என்று விளம்பி வைத்தே
மா தவம் என்று மயிர் பறிப்பார் மையல் மாற்றுவமே -24-ஜைன மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-ஜைன பங்க அதிகாரம் –

சோதனை விட்டு ஒருத்தன் சொல மெய்யெனச் சோகதரைச் –அபவ்ருஷேயமான வேத விதியைக் கை விட்டு புத்தன் என்னும் ஒருவன் உபதேசிக்க
அவனது உபதேசத்தை சத்யம் என்று கொண்ட புத்தர்களை
சேதனை யற்றவர் என்று சிதைத்த பின் சீவர்கட்க்கு ஓர் -ஞானம் இல்லாதவர் என்று விளக்கி அவர்கள் மதத்தைக் கண்டித்த பின் ஜீவர்க்கு
வேதனை செய்கை வெறும் மறம் என்று விளம்பி வைத்தே -ஒரு துன்பத்தை செய்கை வீணான பாபம் என்று கூறிக் கொண்டே
மா தவம் என்று மயிர் பறிப்பார் மையல் மாற்றுவமே -பெரிய தவம் என்று நினைத்து தங்கள் மயிரைப் பறிப்பவர்களான ஜைனர்களின் அஞ்ஞானத்தைப் போக்குவோம் –

—————————————

சொன்னார் தாம் சொன்னது எலாம் துறவோம் என்றும் சொன்னதுவே சொன்னது அலது ஆகும் என்றும்
தின்னாதும் தின்னுமதும் ஏகம் என்றும் சிறியனுமாம் பெரியனுமாம் சீவன் என்றும்
மன்னாது மன்னுமதும் ஒன்றே என்றும் வையம் எலாம் விழுகின்றது என்றும் என்றும்
தென்னாடும் வடநாடும் சிரிக்கப் பேசும் சின நெறியார் சினம் எல்லாம் சிதைத்திட்டோமே -25-ஜைன மத முரண்பட்ட கொள்கை –

சொன்னார் தாம் சொன்னது எலாம் துறவோம் என்றும் -அந்த அந்த மதத்தை ப்ரவர்த்தித்தவர் சொல்லிய விஷயங்களை எல்லாம் விலக்க மாட்டோம் என்றும்
சொன்னதுவே சொன்னது அலது ஆகும் என்றும் –சொல்லப் பட்ட விஷயமே சொல்லப் படாத விஷயமாக ஆகும் என்றும்
தின்னாதும் தின்னுமதும் ஏகம் என்றும் சிறியனுமாம் பெரியனுமாம் சீவன் என்று -உண்ணக் கூடாத பதார்த்தமும் உண்ணக் கூடிய பதார்த்தமும் ஓன்று தான் என்றும்
ஜீவாத்மா சிறியனாகவும் ஆகும் பெரியனாகவும் ஆகும் என்றும்
மன்னாது மன்னுமதும் ஒன்றே என்றும் வையம் எலாம் விழுகின்றது என்றும் என்றும் -அநித்ய வஸ்துவும் நித்ய வஸ்துவும் ஓன்று தான் என்றும்
பூமி முழுதும் எப்பொழுதும் கீழே விழுகின்றது என்றும் -இப்படி ஒன்றுக்கு ஓன்று விரோதமாக
தென்னாடும் வடநாடும் சிரிக்கப் பேசும் சின நெறியார் சினம் எல்லாம் சிதைத்திட்டோமே -தென் தேசமும் வடதேசமும் பரிகாசம் செய்யும்படி
பேசுகின்ற ஜைன மதத்தினருடைய கோபத்துடன் கூறும் வாதத்தை எல்லாம் ஒழித்திட்டோம் —

———————

ஏகாந்திகம் ஒன்றும் இல்லை என்று ஆசையைத் தாம் உடுப்பார்
சோகாந்தமாக துறப்புண்ட பின் தொழில் வைதிகம் என்று
ஏகாந்திகள் சொன்ன ஈசன் படியில் விகற்பம் எண்ணும்
லோகாந்த வீணர் தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே-26—பாஸ்கர யாதவ மத கண்டனம் இதுவும் அடுத்த பாசுரமும்-பாஸ்கராதி பங்க அதிகாரம்–

ஏகாந்திகம் ஒன்றும் இல்லை என்று ஆசையைத் தாம் உடுப்பார் -திசையையே ஆடையாக உடுப்பவரான ஜைனர்கள் ஒரு வஸ்துவும் ஒரே விதமான
ஸ்வபாவத்தை யுடையது அன்று என்று கூறிக் கொண்டு இருந்து
சோகாந்தமாக துறப்புண்ட பின் தொழில் வைதிகம் என்று –சோர்வையே முடிவாகப் பெற்று நம்மால் கண்டித்து விலக்கப் பட்ட பின் வேத விசாரமே
தமது தொழில் என்று உறுதி கொண்டு
ஏகாந்திகள் சொன்ன ஈசன் படியில் விகற்பம் எண்ணும்–ப்ரஹ்மத்தை ஏக ரூபமாகக் கண்ட ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ பராசரர் முதலிய வர்களால் விளக்கப் பட்ட
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில் பேதம் அபேதம் எண்ணும் முரண்பட்ட அம்சங்களைக் கல்பிக்குமவர்களாய்
லோகாந்த வீணர் தம் வேதாந்த வார்த்தை விலக்குவமே-உலகத்தில் அறிவு அற்றவர்களாய்ப் பயன் அற்றவர்களான பாஸ்கர யாதவர்களுடைய
வேதாந்தத்தைத் தழுவியனவாக அவர்கள் கூறும் வாக்கியங்களைகே கண்டிப்போம் –
பேதமும் அபேதமும் இருளும் ஒளியும் போல் ஒன்றுக்கு ஓன்று முரண்பட்டு நிற்பதை அறியாது குருடர்களாகி
சகல பலன்களையும் இழந்த இவர்கள் லோகாந்த வீணர் எனப்பட்டனர் –

——————————————-

ஓன்று எனவும் பல வெனவும் தோற்றுகின்ற யுலகு எல்லாம் ஒரு பிரமம் தானேயாக்கி
நன்று எனவும் தீ எனவும் பிரிந்த வெல்லாம் நன்று அன்று தீது அன்று என நவின்றார்
கன்றும் அலராகி பசுவும் அலராகி நின்றே கன்றாகிப் பசுவாகி நின்ற வண்ணம்
இன்று மறை மாட்டுக்கு ஓர் இடையனான ஏகாந்தி இசைந்திட நாம் இயம்பினோமே -27-பாஸ்கர -யாதவ மதம் -பேத அபேதத்தைக் கண்டித்தல்-

ஓன்று எனவும் பல வெனவும் தோற்றுகின்ற யுலகு எல்லாம் ஒரு பிரமம் தானேயாக்கி-ஒரே வஸ்து என்னும்படியாகவும் பல வஸ்துக்கள் என்னும்படியாகவும்
பிரகாசிக்கின்ற உலகம் முழுவதையும் ஒரு ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே கல்பித்து
நன்று எனவும் தீ எனவும் பிரிந்த வெல்லாம் நன்று அன்று தீது அன்று என நவின்றார் -கைக் கொள்ளத் தக்கவை என்றும் விலக்கத் தக்கவை என்றும்
சாஸ்திரங்களில் பிரித்துக் கூறப்பட்ட வஸ்துக்களை எல்லாம் சிறந்தன வல்ல கெட்டனவும் அல்ல என்று தம் மதத்தை பாஸ்கரர்களும் யாதவர்களும் கூறினார்கள்
கன்றும் அலராகி பசுவும் அலராகி நின்றே கன்றாகிப் பசுவாகி நின்ற வண்ணம் -கன்றாகவும் ஆகாமல் பசுவாகவும் ஆகாமல் இருந்தே
கன்றாகவும் பசுவாகவும் ஆகி நின்ற பிரகாரத்தை
இன்று மறை மாட்டுக்கு ஓர் இடையனான ஏகாந்தி இசைந்திட நாம் இயம்பினோமே -வேதமாகிய பசுவுக்கு ஒப்பற்ற இடையனான ஒரே நிலையில் உள்ள
எம்பெருமான் திரு உள்ளம் உகக்கும்படி இன்று நாம் வெளியிட்டோம் –
ஏகாந்தி -ப்ரஹ்ம ஸ்வரூபம் சேதன அசேதனங்களாக மாறுபடும் தன்மை உள்ளதாக கூறுவதை கண்டிக்க ஏகாந்தி என்னும் பிரயோகம் –
அபேதம் இயற்க்கை -பேதம் உபாதியால்-என்பர் பாஸ்கரர் – அசேதனத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள பேதம் அபேதம் இரண்டுமே
இயற்க்கை என்பர் யாவர் -ஜாதி ஒரே விதம்–கடத்வம் போலே என்றும் வியக்தி ஒவ் ஒரு வஸ்துவையும் குறிக்கும் /
காரணத்வமும் கார்யத்வமும் ஒவ் ஓர் வஸ்துவிலும் உண்டு -ஜாதி காரணம் நிலையில் அபேதமும் வியக்தி கார்யம் நிலையில் பேதமும் ஆகின்றது என்பர் –
இப்படி உலகம் முழுவதும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றது -என்பர்
நாம் சரீராத்மா பாவத்தால் ப்ர ப்ரஹ்மம் சகல வஸ்து விலக்ஷணம் -என்று கண்ணன் இடையனாய் ஸ்ரீ கீதை என்னும் பால் அமுதை ஈந்து –
அவன் திரு உள்ளம் உகக்குமாறு ஸித்தாந்தம் வேதாந்தம் படி கொண்டுள்ளோம் –

————————————-

சாயா மறைகளில் சத்தம் தெளிந்திடச் சாற்றுதலால்
தூயார் இவர் என்று தோன்ற நின்றே பல சூதுகளால்
மாயா மதமும் மறு சின வாதும் பவுத்தமும் சேர்
வையாகரணர் சொல்லும் மறு மாற்றங்கள் மாற்றுவமே -28-வையா கரண மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் வையா கரண பங்க அதிகாரம் –

சாயா மறைகளில் சத்தம் தெளிந்திடச் சாற்றுதலால் -ஸ்வரமும் அக்ஷரமும் மாத்திரை அளவும் தவறாமல் உச்சரிக்க வேண்டிய வேதங்களில் உள்ள
பதங்கள் நன்கு விளங்கும் படி வியாகரண சாஸ்திரத்தின் உதவியால் ஸ்தாபித்த படியால்
தூயார் இவர் என்று தோன்ற நின்றே பல சூதுகளால்-இந்த வையா கரணர் பரிசுத்தர் என்று உலகுக்குத் தோன்றும்படி இருந்தே பல கபடங்களால்
மாயா மதமும் மறு சின வாதும் பவுத்தமும் சேர் -மாயையைக் கொள்கின்ற அத்வைத மதத்தையும் வேறு ஒரு ஜைன மதம் என்னும்படி யுள்ள
பாஸ்கர யாதவ மதத்தையும் புத்த மதத்தையும் -பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் விவர்த்தம் என்பதில் அத்வைதிகள் போலேயும்-பரிணாம விஷயத்தில்
பாஸ்கர யாதவ மதம் போலேயும் பிரதீபை ஞானத்தால் புத்த மதம் போலேயும் வையா கரண வாதம் -உண்டு
வையாகரணர் சொல்லும் மறு மாற்றங்கள் மாற்றுவமே -வையா கரண மதத்தோரால் சொல்லப்படுகின்ற எதிர்வாதங்களை ஒழித்து விடுவோம் —

———————————————————–

கலகத்தில் கலங்கி வரும் காணிக்கு எல்லாம் கண்ணாறு சதிர வழி காட்டுவார் போல்
உலகத்தில் மறை சேர்ந்த யுரைகள் தம்மால் ஒரு பிழையும் சேராமல் உபகரித்தார்
பல கத்தும் பவுத்தர் முதலான பண்டைப் பகற் கள்ளர் பகட்டு அழிக்கப் பரவும் பொய்யாம்
சில கற்றுச் ஸித்தாந்தம் அறிய கில்லாச் சிறுவர் இனி மயங்காமல் சேமித்தோமே -29-வையா கரணர் பிற மதத்தினரால் மயங்கியமை –

கலகத்தில் கலங்கி வரும் காணிக்கு எல்லாம் கண்ணாறு சதிர வழி காட்டுவார் போல் –நில விஷயமான வழக்கில் இன்னாருடையது என்று
நிச்சயிக்க முடியாமல் ஸந்தேஹத்திற்கு இடமான நிலங்களுக்கு எல்லாம்
கண்ணாறு என்று சொல்லப்படுகின்ற எல்லையை ஏற்படுத்தி வழக்கைத் தீர்க்கும் மத்யஸ்தர்களைப் போலே வையா கரணர்
உலகத்தில் மறை சேர்ந்த யுரைகள் தம்மால் ஒரு பிழையும் சேராமல் உபகரித்தார் -வேதத்தில் உள்ள வாக்யங்களால் இவ்வுலகத்தில்
விபரீதமான அர்த்தம் கொடுத்தலாகிய ஒரு தவறும் நேரிடாதவாறு உதவி செய்தனர் –
பல கத்தும் பவுத்தர் முதலான பண்டைப் பகற் கள்ளர் பகட்டு அழிக்கப் பரவும் பொய்யாம் சில கற்றுச்-பல விஷயங்களைப் பிதற்றுகின்ற பவுத்தர் முதலான
பழைமையான பகல் திருடர்களின் ஆடம்பரம் -விவேகத்தை -ஒழிக்க -அதனால் ஆதரிக்கப் படுகின்ற பொய்யான சில விஷயங்களைக் கற்றுக் கொண்டு
வேதாந்தங்கள் தத்துவ அர்த்தங்களை விளக்கிக் கொண்டே இருக்கும் போதே புத்தர் முதலியோர் அவற்றை இல்லை யாக்குவது பற்றிப் பகற் கள்ளர் எனப் பட்டனர் –
ஸித்தாந்தம் அறிய கில்லாச் சிறுவர் இனி மயங்காமல் சேமித்தோமே -வேதாந்திகளான நம் சித்தாந்தத்தை அறிய மாட்டாத அல்ப ஞானம் யுடையவர்களான
வையா கரணர்கள் இனிக் கலக்கமுறாத படி தத்துவ அர்த்தங்களை விளக்கி அவர்களைக் காப்பாற்றினோம் –

———————————————–

கண்டது அலாதன காட்டுதலால் கண்ட விட்டதனால்
பண்டுளதான மறைக்குப் பழைமையை மாற்றுதலால்
கொண்டதும் ஈசனைக் கொள்ளா வகையென்று கூறுதலால்
கண்டகராய் நின்ற கணாதர் வாதம் கழற்றுவமே -30-காணாத மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் வைசேஷிக பங்க அதிகாரம் –

கண்டது அலாதன காட்டுதலால் கண்ட விட்டதனால் -பிரத்யக்ஷம் முதலியவற்றால் காணாத வஸ்துக்களை கல்பிக்கையாலும்-அவயவங்களைக் காட்டிலும்
வேறுபட்ட அவயவி சாமான்யம் விசேஷம் சமவாயம் அபாவம் போன்றவற்றை கலப்பிப்பார்கள்
-வேதத்தில் காணும் அம்சங்களை-பிரகிருதி மஹான் முதலிய தத்துவங்களை – அங்கீ கரியாமல் விட்ட படியாலும்
பண்டுளதான மறைக்குப் பழைமையை மாற்றுதலால் -நெடு நாட்களாய் -நித்தியமாய் -உள்ள வேதத்திற்கு அநாதியாம் தன்மையை மாற்றிக் கூறுவதாலும் –
வேதத்தை ஈஸ்வரனால் இயற்றப் பட்டதாக கொண்டு பவ்ருஷேயம் என்று நா கூசாது பிதற்றுகின்றனர்
கொண்டதும் ஈசனைக் கொள்ளா வகையென்று கூறுதலால் -தங்கள் ஈஸ்வரனை அங்கீ கரித்ததும் நாம் அங்கீ கரிக்கத் தகாத –
அனுமானம் -என்ற வழியிலே -தான் என்று சொல்வ தாலும்
கண்டகராய் நின்ற கணாதர் வாதம் கழற்றுவமே -நல்ல வழிக்கு முள்ளாய் நின்ற வைசேஷிக மதத்தினருடைய வாதத்தை ஒழித்திடுவோம்-

—————————————–

ஆகமத்தை யனுமானம் என்கையாலும் அழியாத மறை யழிக்க நினைத்தலாலும்
போகம் அற்று ஒரு உபலம் போல் கிடக்கை தானே புண்ணியர்க்கு வீடு என்று புணர்த்தலாலும்
மாகம் ஒத்த மணி வண்ணன் படியை மாற்றி மற்றவனுக்கு ஒரு படியை வகுத்தலாலும்
காகம் ஒத்த கணாதன் கண்ணை வாங்கிக் காக்கைக்கு ஆர் என்று அலற்ற காட்டினோமே -31- கணாத மதம் -ஈஸ்வரன் மோக்ஷம் இவற்றில் விபரீதக் கொள்கை –

ஆகமத்தை யனுமானம் என்கையாலும் அழியாத மறை யழிக்க நினைத்தலாலும் -சப்தம் என்னும் பிரமாணத்தை அனுமானம் என்னும் பிரமாணத்தில்
அடங்கியது என்று கூறுவதாலும் -நித்தியமான வேதத்தை அழித்து அநித்யமாக்க எண்ணியதாலும்
போகம் அற்று ஒரு உபலம் போல் கிடக்கை தானே புண்ணியர்க்கு வீடு என்று புணர்த்தலாலும் -எவ்வித அனுபவமும் இல்லாத ஒரு கல்லை போலே
கிடப்பதுவே புண்யசாலிகளுக்கு யுள்ள மோக்ஷம் என்று கற்ப்பித்த படியாலும்
மாகம் ஒத்த மணி வண்ணன் படியை மாற்றி மற்றவனுக்கு ஒரு படியை வகுத்தலாலும் -ஆகாசத்தைப் போல் தோஷம் அற்றவனும் நீல ரத்னத்தின் தன்மை யுள்ளவனுமான சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபம் குணம் முதலிய பிரகாரத்தை மாற்றி அவ்வீஸ்வரனுக்கு வேத விருத்தமாய் வேறு ஒரு பிரகாரத்தைக் கல்பித்து பிரித்துக் கூறியதாலும்
ஈஸ்வரன் குயவன் போலே நிமித்த காரணமே அன்றி மண்ணைப் போலே உபாதான காரணம் ஆகமாட்டான் என்பர் –
சுத்த சத்வ திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனை சரீரம் இல்லாதவன் சோகம் இல்லாதவன் என்பர் –
காகம் ஒத்த கணாதன் கண்ணை வாங்கிக் காக்கைக்கு ஆர் என்று அலற்ற காட்டினோமே –காகனைப் போன்ற பகவத் அபராதியான கணாதனுடைய
கண்ணைப் பறித்து -என்னை ரஷிக்க எவர் உளர் என்று கதறும்படி அவன் மதத்தைக் கண்டித்து உலகுக்கு காட்டினோம் –

———————————————————–

கோதம நூல்களைக் குற்றமிலா வகை கூட்டலுமாம்
கோது கழித்து ஒரு கூற்றில் குணங்களைக் கொள்ளவுமாம்
யாதும் இகந்து ஒரு நீதியை யாமே வகுக்கவுமாம்
வேதியர் நன்னய வித்தரம் என்பது மெய்யுளதே-32-கௌதம -நியாய -மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் நியாய விஸ்தர விரோத நிஸ்தர அதிகாரம் –

கோதம நூல்களைக் குற்றமிலா வகை கூட்டலுமாம் -கௌதமருடைய நியாய ஸூத்ரங்களை-வேத விரோதம் என்னும் குற்றம் இல்லாதபடி கூட்டவும் முடியும்
கோது கழித்து ஒரு கூற்றில் குணங்களைக் கொள்ளவுமாம்–வேத விரோதம் என்னும் குற்றமுள்ள பாகத்தைக் கழித்து ஒரு பாகத்தில் குணங்களை ஏற்றுக் கொள்வதும் முடியும்
யாதும் இகந்து ஒரு நீதியை யாமே வகுக்கவுமாம் -நியாய ஸூத்ரம் முழுவதையுமே கழித்து விட்டு ஒரு நியாய கிரந்தத்தை நாமே புதிதாய் இயற்றவும் முடியும் -ஆதலின்
வேதியர் நன்னய வித்தரம் என்பது மெய்யுளதே-வேதாந்தங்களை நன்கு அறிந்த மனு முதலிய மஹர்ஷிகளால் சிறந்த நியாய விஸ்தரம்
எனக் கூறப்படும் வித்யா ஸ்தானம் சத்யமாகவே இருக்கின்றது –

—————————————————

நான்மறைக்குத் துணையாக நல்லோர் எண்ணும் நாலிரண்டில் ஒன்றான நயநூல் தன்னில்
கூன் மறைத்தல் கோது உளது கழித்தல் மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல் அன்றி
ஊன் மறைத்த யுயிர் ஒளி போல் ஒத்தது ஒவ்வாது உயிர் இல்லாக் காணாதம் உரைத்த எல்லாம்
வான் மறைக்க மடி கோலும் வண்ணம் என்றோம் மற்று இதற்கு ஆர் மறு மாற்றம் பேசுவாரே–32-கௌதம மதம் மூன்று வகைகளால் அனுகூலம் ஆக்குதல் –

நான்மறைக்குத் துணையாக நல்லோர் எண்ணும் -நான்கு
வேதங்களின் அர்த்தத்தை நிச்சயிப்பதற்கு ஸஹாயமாக சிறந்த மனு முதலியவரால் குறிக்கப் பட்ட
நாலிரண்டில் ஒன்றான நயநூல் தன்னில் -எட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றாகிய நியாய விஸ்தரத்தில்
வித்யா ஸ்தானங்கள் -14-அதாவது நான்கு வேதங்கள் -சிஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்னும் ஆறு அங்கங்கள் –
மீமாம்சை நியாய விஸ்தரம் புராணம் தர்ம சாஸ்திரம் -ஆக இந்த -14-/
இவற்றுள் நான்கு வேதங்களில் சொன்னவற்றை மற்ற -10-விளக்கும் -அவற்றுள் புராணமும் தர்ம சாஸ்திரமும் வேத அர்த்தங்களையே
ஒரு வகையில் கூறுவதால் அவை இரண்டையும் விட்டு மீது உள்ள -8-என்பர் –
அல்லது -நியாய சாஸ்திரம் சுருக்கமாகவும் மீமாம்சை விரிவாகவும் பிரமாணங்களை வஸ்துக்களையும் ஆராய்ந்து விளக்கும் -என்பதால் இவை இரண்டையும்
ஒரு வகுப்பாக்கி -கர்ம பாகத்தை தர்ம சாஸ்திரம் விளக்கி ப்ரஹ்ம பாகத்தை புராணங்கள் விளக்கும் -என்று கொண்டு இவை இரண்டையும் ஒரு வகுப்பாக்கி
இவ்வாறு பத்தையும் எட்டு வித்யா ஸ்தானங்கள் என்று முதலடியில் கூறுகிறது என்றும் கொள்வர்
கூன் மறைத்தல் -உள்ள தோஷத்தை மறைத்து உரிய அர்த்தத்தில் பொருந்தச் செய்தல் –வேதம் ஸ்ம்ருதி ப்ரஹ்ம ஸூத்ரம் இவற்றுக்கு
சில இடங்களில் முரண் பட்டனவாய் வெளிக்குத் தோற்றினாலும் அவற்றைக் கொஞ்சம் சிரமத்துடன் வேதம் முதலிய பிரமாணங்களைத் தழுவிப் பொருள் படுத்திக்
கௌதம பஷத்தை ஏற்றுக் கொள்வது -என்றவாறு
கோது உளது கழித்தல்-முழுதும் ஏற்றுக் கொள்ளாமலும் முழுதும் கழித்து விடாமலும் விரோதமுள்ள இடங்களைத் தள்ளி நேரிய விஷயங்களை ஏற்றுக் கொள்ளல் -என்றவாறு –
மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல் அன்றி -வேறு ஒரு நேர்மையான குற்றமற்ற வழியை ஏற்படுத்தலாகிய -ப்ரஹ்ம ஸூத்ரகாரர் உதறித் தள்ளியதை அடி ஒற்றி
முழுதையும் கழித்து விட்டு வேதாந்த சாஸ்த்ரங்களுக்கு ஏற்பப் புதிய ஸூத்ரங்களைப் படைத்துக் கொள்ளல் என்றவாறு –
இம்முறைகளைக் கைக் கொண்டால் அன்றி
ஊன் மறைத்த யுயிர் ஒளி போல் –சரீரத்தால் மறைக்கப் பட்ட -பத்த ஜீவனுடைய தர்ம பூத ஞானம் -முக்தர்களும் நித்ய ஸூ ரிகளுமான
இவர்களுடைய தர்ம பூத ஞானத்திற்கு சமமாகாதது போலே
ஒத்தது ஒவ்வாது -வேதத்தின் அர்த்தத்தை விளக்குதற்குத் தகுதி பெற்றுள்ள மற்ற வித்யா ஸ்தானத்தோடு நியாய விஸ்தாரம் சமமாக மாட்டாது
உயிர் இல்லாக் காணாதம் உரைத்த எல்லாம்–உயிர் போன்ற முக்கியமான விஷயங்களைக் கை விட்ட கணாத மதம் வெளியிட்ட விஷயங்கள் எல்லாம்
வான் மறைக்க மடி கோலும் வண்ணம் என்றோம் மற்று இதற்கு ஆர் மறு மாற்றம் பேசுவாரே–ஆகாயத்தை மறைப்பதற்கு துணியை விரிக்கும் முறையை ஒத்தவை
என்று முன்பே விளக்கினோம் -மேலும் நாம் கூறிய இவ்விஷயத்திற்கு எதிர்வார்த்தையை யார் பேச வல்லர்–இவ்வாறு கௌதம மதத்தை மூன்று வகைகளால்
1–கூன் மறைத்தல்/-2- கோது உளது கழித்தல்/-3- மற்று ஓர் கோணாத கோதில் வழி வகுத்தல்-இப்படி மூன்று கதிகளால் அனுகூலமாகவும்
கணாத மதத்தை விபரீதமாகவும் கொண்ட முறைக்கு மாறுபடப் பேசுபவர் யாவர் உளர் -என்றவாறு –

————————-

ஈசனும் மற்று அங்கும் இலது என்று எழில் நான்மறையில்
பேசிய நல்வினையால் பெரும் பாழுக்கு நீர் இறைக்கும்
நீசரை நீதிகளால் நிகமாந்தத்தின் நூல் வழியே
மாசில் மனம் கொடுத்து மறு மாற்றங்கள் மாற்றுவமே -34-மீமாம்சக மதத்தைக் கண்டித்தல் -இதுவும் அடுத்த பாசுரமும் மீமாம்ச பங்க அதிகாரம் –

ஈசனும் மற்று அங்கும் இலது என்று –சர்வேஸ்வரனாகிய பரம் பொருளும் பிற தெய்வமும் இல்லை என்ற கொள்கையைக் கொண்டு –
கர்மங்களால் அபூர்வம் உண்டாகி அதுவே கர்மபலன்களைக் கொடுக்கும் என்பர் இவர் –
எழில் நான்மறையில் பேசிய நல்வினையால் -அழகிய நான்கு வேதங்களில் வெளியிட்ட நல்ல கர்மங்களால்
பெரும் பாழுக்கு நீர் இறைக்கும் -பெரிய பாழ் நிலத்துக்கு ஜலம் பாய்ச்சுவர் போன்ற
நீசரை நீதிகளால் நிகமாந்தத்தின் நூல் வழியே -அற்பர்களான மீமாம்சகரை நியாயங்கள் உதவியால் வேதாந்த சாஸ்திரங்களின் வழியே
மாசில் மனம் கொடுத்து மறு மாற்றங்கள் மாற்றுவமே -குற்றமற்ற மனத்தைக் கொடுத்து எதிர்வாதங்களை கண்டித்திடுவோம் —

—————————————–

கனை கடல் போல் ஒரு நீராம் ஸூத்திரத்தைக் கவந்தனையும் இராகுவையும் போலக் கண்டு
நினைவுடனே நிலைத் தருமம் இகந்து நிற்கும் நீசர் நிலை நிலை நாடா வண்ணம் எண்ணி
வினை பரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகால் கோத்த
முனையுடைய முழு மதி நம் முனிவர் சொன்ன மொழி வழியே வழி என்று முயன்றிட்டோமே -35-பூர்வ உத்தர மீமாம்ஸைகள் ஒரே சாஸ்திரம் –

கனை கடல் போல் ஒரு நீராம் ஸூத்திரத்தைக் -சப்திக்கின்ற கடலைப் போலே ஒரே நிலையில் யுள்ள மீமாம்ச ஸூத் ரங்களை -கீழ்க் கடல் மேல் கடல் போலே இவை இரண்டும் –
கவந்தனையும் இராகுவையும் போலக் கண்டு –கபந்தனையும் ராகுவையும் போலே இரண்டு வெவ்வேறு சாஸ்திரமாகக் கண்டு
பிரதானமான ஈஸ்வரனை இல்லையாக்கிக் கர்மத்தையே கொள்ளும் பூர்வ மீம்ஸை தலையில்லா முண்டம்
கர்மத்தைப் பேசாது ஈஸ்வரனை மாத்ரம் பேசும் உத்தர மீமாம்சை உடல் இல்லாத தலை -என்பதால் கபந்தனையும் இராகுவையும் போலே -என்னலாயிற்று-
நினைவுடனே நிலைத் தருமம் இகந்து நிற்கும் நீசர் நிலை நிலை நாடா வண்ணம் எண்ணி -அறிவுடனே ஸ்திரமான தர்மமாகிய ஈஸ்வரனை இல்லை என்று
விட்டு நிற்கின்ற நீசரான மீமாம்சகருடைய ஸித்தாந்தம் நிலை பெற்று நிற்காதவாறு நினைந்து
வினை பரவு சைமினியார் வேத நூலை வேதாந்த நூலுடனே விரகால் கோத்த -கர்மங்களையே புகழ்கின்ற ஜைமினி முனிவரால் இயற்றப்பட்ட
வேத வியாக்கியானமான ஸூத்ரத்தை ப்ரஹ்ம ஸூத்ரத்துடனே சாமர்த்தியத்தால் சேர்த்து ஒரே சாஸ்திரமாகச் செய்த
முனையுடைய முழு மதி நம் முனிவர் சொன்ன மொழி வழியே வழி என்று முயன்றிட்டோமே -கூர்மையுள்ள நிறைந்த ஞானத்தையுடைய
நம் போதாயனர் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆகிய முனிவர்கள் வெளியிட்டு அருளிய ஸ்ரீ ஸூக்தி மார்க்கமே சிறந்த வழி என்று நினைத்து அவ்வழியிலே ப்ரவர்த்தித்தோம் —

————————————————-

முக்குணமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு அழியா
அக்குணம் அற்ற அரு துணை மற்று அதற்கு ஈசன் இலை
இக்கணனைப் படி ஐ ஐந்தும் எண்ணில் முன் முத்தி என்னும்
பக்கண வீணர் பலம் பகட்டைப் பழுதாக்குவமே -36-சாங்க்ய மத கண்டனம் –இதுவும் அடுத்த பாசுரமும் நிரீஸ்வர சாங்க்ய நிராகரண அதிகாரம் –

முக்குணமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு –சத்துவம் ரஜஸ் தாமஸ் என்னும் மூன்று குண ஸ்வரூபமாய் நின்ற மூலப் பிரக்ருதிக்கு
அழியா அக்குணம் அற்ற அரு துணை மற்று அதற்கு ஈசன் இலை –அழியாததும் அந்த மூன்று குணங்கள் இல்லாததுமான ஜீவன் ஸஹாயமாகும் –
அந்த மூல ப்ரக்ருதிக்கு ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை
மற்று -அசை நிலை
இக்கணனைப் படி ஐ ஐந்தும் எண்ணில் முன் முத்தி என்னும் -இந்த மதத்தின் கணக்கின் படி இருபத்தைந்து தத்துவங்களையும் -அவற்றின்
ஸ்வரூப ஸ்வபாவங்களோடு நன்கு ஆராய்ந்து அறிந்தால் மோக்ஷம் மரணத்திற்கு முன்பே கிடைப்பதாகும் என்று கூறுகின்ற
பக்கண வீணர் பலம் பகட்டைப் பழுதாக்குவமே -வேடச் சேரியில் யுள்ள வேடர் போலே பாமரர்களாய் வீணே பிதற்றுமவர்களான சாங்க்யர்களின்
நெடு நாளைய ஆடம்பரத்தை வீணாக்கி விடுவோம் —
பிரகிருதி ஜீவன் என்று இரண்டே தத்வங்கள் ஈஸ்வரன் இல்லை என்பர் சாங்க்யர்-மூல பிரக்ருதியே அனைத்துக்கும் முதல் காரணம் –
நொண்டியின் உதவியால் குருடன் நடப்பது போலே ஞான ஸ்வரூபனான ஜீவனுடைய துணையால் செய்யும் சக்தியுள்ள பிரகிருதி தன் காரியத்தைச் செய்கிறது என்பர் —
25-தத்துவங்களை அறிந்தால் மரணத்திற்கு முன்பே மோக்ஷம் என்பர் -இப்படி வீணாக பிதற்றுவார்கள் –

————————————————-

ஈசன் இலன் என்பதால் என்றும் சீவர் எங்கும் உளர் இலர் உணர்வை என்றவத்தால்
பாசம் எனும் பிரகிருதி தன்னால் என்றும் பலமும் இலை வீடும் இலை என்னும் பண்பால்
காசினி நீர் முதலான காரியங்கள் கச்சபத்தின் கால் கை போல் என்னும் கத்தால்
நாசம் அலது இலை காணும் ஞாலத்து உள்ளீர் நாம் இசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே -37-சாங்க்ய மதத்தின் முரண்பாடு -அழிதலே பலன் —

ஞாலத்து உள்ளீர் ஈசன் இலன் என்பதால் என்றும் சீவர் எங்கும் உளர் –உலகத்தில் உள்ளோர்களே ஈஸ்வரன் இல்லை என்பதனாலும் ஜீவர் என்றைக்கும் எல்லா இடத்திலும் இருப்பவர்
இலர் உணர்வை என்றவத்தால் -ஞானம் இல்லாதவர் என்று கூறுவதாலும் -இப்படி வேத விரோதமாய் ஜீவனை விபு என்றும் அறிவற்றவன் என்றும் பிதற்றுவர் –
பாசம் எனும் பிரகிருதி தன்னால் என்றும் பலமும் இலை வீடும் இலை என்னும் பண்பால் –பாசம் எனப்படுகின்ற மூல பிரக்ருதியினால் எப்பொழுதும் சம்சாரமாகிய பலனும் இல்லை -மோக்ஷமும் இல்லை என்று சொல்லுகிற முறையினாலும்
காசினி நீர் முதலான காரியங்கள் கச்சபத்தின் கால் கை போல் என்னும் கத்தால்-பூமி ஜலம் முதலிய காரியப் பொருள்கள் உண்டாவதும் அழிவதும்
ஆமையின் கால் கைகள் நீளுவதும் சுருங்குவதும் போல் என்று பிதற்றுவதாலும்
நாசம் அலது இலை காணும் நாம் இசையாச் சாங்கியத்தை நாடுவார்க்கே -இவ்வளவு தோஷம் இருப்பதால் நாம் அங்கீ கரிக்க முடியாத
சாங்க்ய மதத்தை பற்றுமவர்க்கு அழிந்து போவது தவிர வேறு பலன் இல்லை என்று அறிவீர்களாக —

——————————————

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை யுந்திப்
பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்த்திடினும்
நாவில் பிரிவின்றி நா மங்கை வாழினும் நான்மறையில்
பாவித்தது அன்றி யுரைப்பது பாரும் பதர்த் திரளே -38-யோக மத கண்டனம் -இதுவும் அடுத்த பாசுரமும் யோக ஸித்தாந்த பங்க அதிகாரம் –

தாவிப் புவனங்கள் தாளிணை சூட்டிய தந்தை -த்ரிவிக்ரம அவதாரத்தில் சகல லோகங்களையும் கடந்து நின்று திருவடிகள் இரண்டையும்
தலையில் வைத்து அலங்கரித்த தந்தையான எம்பெருமானுடைய
யுந்திப் பூவில் பிறக்கினும் பூதங்கள் எல்லாம் புணர்த்திடினும் -திரு நாபிக் கமலத்தில் பிறந்த பெருமை யுடையவனாயினும் -சகல பூதங்களையும்
படைத்தவனாய் இருப்பினும்
நாவில் பிரிவின்றி நா மங்கை வாழினும் -நாக்கில் சரஸ்வதி தேவி பிரிவின்றி வாழ்ந்து கொண்டு இருப்பினும்
நான்மறையில் பாவித்தது அன்றி யுரைப்பது பாரும் பதர்த் திரளே -நான்கு வேதங்களிலும் அனுசந்திக்கப் பட்ட விஷயத்தைத் தவிர நான்முகனால்
பிரவர்த்திக்கப் பட்ட யோக மாதத்தில் கூறும் விஷயம் அழிந்து போகக் கூடிய பதர்க் கூட்டம் போலே பயன் அற்றதாகும்-

————————————————–

காரணனாய் யுலகு அளிக்கும் கண்ணன் தேசைக் கண்ணாடி நிழல் போலக் காண்கையாலும்
தாரணையின் முடிவான சமாதி தன்னைத் தனக்கேற்றும் விளக்கு என்று தனிக்கையாலும்
காரணமாம் அது தனக்குப் பயனாம் சீவன் கை வலிய நிலை என்று கணிக்கையாலும்
கோரணியின் கோலம் எனக் குறிக்கலாகும் கோகனகத்து அயன் கூறும் சமயக் கூற்றே –39-யோக மதம் -தத்வ ஹித புருஷார்த்தங்களில் மாறுபாடு –

காரணனாய் யுலகு அளிக்கும் கண்ணன் தேசைக் –சகல காரணனாய் உலகங்களைக் காக்கின்ற எம்பெருமானுடைய தேஜஸை
கண்ணாடி நிழல் போலக் காண்கையாலும்-கண்ணாடியில் தெரிகின்ற நிழலைப் போலே கண்டு அறிவித்தாலும்
சகல கல்யாண குணங்கள் இயற்கையாக இருந்தும் கண்ணாடி நிழல் போலே -என்பர்
தாரணையின் முடிவான சமாதி தன்னைத் தனக்கேற்றும் விளக்கு என்று தனிக்கையாலும்-தாரணையின் முடிவு நிலையாகிய சமாதி எனப்படும்
பக்தி யோகத்தை ஜீவாத்மாவாகிய தன்னை அறிவதற்காக யேற்றப் படுகின்ற தீபம் என்று தனித்துக் கூறுவதாலும்
காரணமாம் அது தனக்குப் பயனாம் சீவன் கை வலிய நிலை என்று கணிக்கையாலும் -பலனைப் பெறகாரணமான -பக்தி யோகம் என்னும்
உபாயத்துக்கு ஜீவனுடைய கைவல்ய நிலைமையே பலனாகும் என்று நினைப்பதாலும்
கோரணியின் கோலம் எனக் குறிக்கலாகும் கோகனகத்து அயன் கூறும் சமயக் கூற்றே –எம்பெருமானுடைய திரு நாபிக் கமலத்தில் உதித்த
ப்ரஹ்மா வெளியிட்ட யோக மதத்தின் மொழி கோமாளிக் கூத்து என்றே குறிப்பிடலாம் –

——————————————————

சாது சனங்கள் எலாம் சச்சை என்னும் சலம் புணர்த்தார்
கோதம சாபம் ஒன்றால் கொடும் கோலங்கள் கொண்டு உலகில்
பூத பதிக்கு அடியார் என நின்று அவன் பொய்யுரையால்
வேதம் அகற்றி நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே–40-பாசுபத -சைவ மத கண்டனம் -இதுவும் அடுத்த இரண்டு பாசுரங்களும் -பாசுபத மத பகிஷ்கார அதிகாரம் –

சாது சனங்கள் எலாம் சச்சை என்னும் சலம் புணர்த்தார் –சாது ஜனங்கள் எல்லோரும் ஆசாரம் என்று கழிக்கின்ற சலம் என்னும் தோஷத்தை கைக் கொண்டவர்களாயும்
சலம் -பிறருடைய உள்ளக கருத்தை உணராது அவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தல் -கௌதமர் மீது அவரால் காக்கப்பட்ட அந்தணர் பசுக்கொலை என்னும்
பொய்க் குற்றம் சுமத்தியது பற்றிச் சலம் புணர்த்தார் என்னலாயிற்று
கோதம சாபம் ஒன்றால் கொடும் கோலங்கள் கொண்டு உலகில் -கௌதம முனிவருடைய ஒரு சாபத்தினால் உலகத்தில் பயங்கரமான வேஷங்களை அணிந்து கொண்டு
பூத பதிக்கு அடியார் என நின்று அவன் பொய்யுரையால் –பூதங்களின் நாயகனான சிவனுக்கு அடியார்கள் என்னும்படி நின்று
அந்தச் சிவனுடைய பொய் மொழியாகிய பாசுபத நூல்களால்
வேதம் அகற்றி நிற்பார் விகற்பங்கள் விலக்குவமே–வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாமல் விலக்கி வைத்து நிற்பவர்களான
பாசுபதர்களின் பலவகைப்பட்ட மத விஷயங்களை கண்டித்திடுவோம் –

——————————————————

மாதவனே பரன் என்று வையம் காண மழுவேந்தி மயல் தீர்க்க வல்ல தேவன்
கைதவம் ஓன்று உகந்தவரைக் கட்டிய சாபம் கதுவியதால் அதன் பலத்தைக் கருதிப் பண்டை
வேத நெறி யணுகாது விலங்கு தாவி வேறாக விரித்துரைக்க விகற்பம் எல்லாம்
ஓதுவது சூத்திரத்துக்கு என்று உரைத்தான் தான் ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே -41-சிவன் கண்ட பாசுபத மதம் -அல்ப பலனுக்கேயானமை –

ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே-பிறர் இடம் அத்யயனம் செய்யாமலேயே பிறருக்கு உபதேசிப்பவனான ஒப்பற்ற எம்பெருமான்
மாதவனே பரன் என்று வையம் காண மழுவேந்தி மயல் தீர்க்க வல்ல தேவன் –ஸ்ரீ மன் நாராயணனே சர்வோத்தமன் என்று உலகம் முழுதும் அறியும்படி
மழுவைக் கையிலே ஏந்தி அஞ்ஞானத்தை ஒழிக்க வல்லவனான மஹேஸ்வரன்
கைதவம் ஓன்று உகந்தவரைக் கட்டிய சாபம் கதுவியதால் அதன் பலத்தைக் கருதிப் -ஒரு கபடத்தை மகிழ்ந்து கைக் கொண்டு கௌதமர் இடம் குற்றம் செய்தவர்களாக
ப்ராஹ்மணர்களை கௌதமருடைய கொடிய சாபம் பற்றிக் கொண்டதால் அந்த சாபத்தின் பலனைக் கொடுக்க நினைத்து
பண்டை வேத நெறி யணுகாது விலங்கு தாவி வேறாக விரித்துரைக்க விகற்பம் எல்லாம் -அனாதையான வேத மார்க்கத்தை அனுசரியாமல் குறுக்கு வழியில் குதித்து
புதிதாகக் கண்டு விளக்கி வெளியிட்ட பலவகைப் பட்ட சைவ சித்தாந்தங்களை எல்லாம்
ஓதுவது சூத்திரத்துக்கு என்று உரைத்தான் தான் –கற்பது அற்ப பலனைப் பெறுவதற்கே என்று உபதேசித்தான் -தான் -அசை நிலை –
கௌதமர் கடும் தவத்தை மெச்சி ப்ரஹ்மா குறைவு படாத நிறைந்த தான்யம் இருக்கும் வரம் கொடுக்க –
சதச்ருங்கம் என்னும் இடத்தில் ஓர் ஆஸ்ரமத்தை உண்டாக்கி வசித்து வர
-4000-அந்தணர்களுக்கு உணவு வழங்க -பொறாமை கொண்டு விடை பெறாமல் அவர் மீது பொய்க் குற்றம் சாற்றி –
மாயையினால் ஒரு பசுவைப் படைத்து ஆஸ்ரமத்தில் விட அது தழைத்த பயிர்களை அழிக்க கௌதமர் கமண்டல நீர் தெளிக்க அதனால் பசு விழுந்து இறக்க
பசுஹத்தி தோஷம் நீங்கும் வரை உணவு கொள்ளோம் என்று கூறி அந்தணர்கள் புறப்பட
கௌதமர் கடும் தவம் புரிந்து சிவன் ஜாடையில் உள்ள கங்கா தீர்த்தத்தை தெளிக்க பசு உயிர் பெற்றது
கௌதமர் ஞான த்ருஷ்டியால் அந்தணர்கள் மாயையின் செயல் என்று உணர்ந்து கடும் சினம் கொண்டு அவர்கள் சிவனைப் போலே பயங்கர வேஷம் தரித்து
வேத விரோதிகளாய் வேத விருத்தமான கர்மங்களை செய்துகொண்டு பாஷண்டிகளாய் அழிந்து போக சாபம் இட்டார்
அதை மெய்ப்பிக்க மஹேஸ்வரர் பாசுபதம் ஆகம சாஸ்திரத்தை பிரவர்த்திப்பிக்க அதன் மூலம் விபரீத அனுஷ்டானத்தை விதித்தார்
-அம்மதத்தை கைக் கொண்டவர்கள் பாசுபதார் -சைவர் -எனப்படுவர் –

—————————————-

கந்தமலர் மகள் மின்னும் காரார் மேனிக் கருணை முகில் கண்ட கண்கள் மயிலாய் ஆலும்
அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடே யடிமை எனும் பேர் அமுதம் அருந்தி வாழத்
தந்த மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர்
சந்த நெறி நேர் அறிவார் சரணம் சேர்ந்து சங்கேதத்து அவன் முனிவீர் தவிர்மினீரே-42-பாசுபதர்க்கு உய்யும் வழி கூறுதல் –

கந்தமலர் மகள் மின்னும் காரார் மேனிக் கருணை முகில் கண்ட கண்கள் மயிலாய் ஆலும்-பரிமலமுள்ள மலரில் திருவதரித்த பிராட்டி மின்னல் போல் பிரகாசிக்கும்
இடமாகிய கருமை நிறம் நிறைந்த திருமேனியையுடைய கருணையாகிய நீரைப் பொழியும் பரமபத நாத்தனாகிய மேகத்தை சேவித்த கண்கள் மயிலாய் நின்று ஆடுமிடமாகிய
அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடே யடிமை எனும் பேர் அமுதம் அருந்தி வாழத் -முடிவற்ற பெரிய ஆனந்த ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரி களும் முக்தர்களுமாகிய பாகவதர்களுடன் கைங்கர்யம் எனப்படும் பெரிய அம்ருதத்தை அனுபவித்து உஜ்ஜீவிக்கும்படி
தந்த மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறித் தளர்ந்து வீழ்ந்தீர் -எம்பெருமான் கொடுத்து அருளிய ஞானத்தை இழந்து சிவனுடைய
பாசுபத மதத்திலே பிரவேசித்து அக்னி போலே தீமையைத் தரும் வழியிலே சென்று சேரும் இடம் அறியாதே மனம் தளர்ந்து வீழ்ந்தவர்களே
சந்த நெறி நேர் அறிவார் சரணம் சேர்ந்து சங்கேதத்து அவன் முனிவீர் தவிர்மினீரே-வேதாந்த மார்க்கத்தை நேர்மையான அறிந்த பூர்வாச்சார்யர்களுடைய
திருவடிகளை சார்ந்து பாசுபத மதக் கட்டுப்பாட்டின் குற்றங்களை வெறுப்பவர்களாகி நீங்கள் மதக் கொள்கைகளை ஒழித்திடுவீராக-

——————————————–

யாதுமிலாத வன்றும் யவர்க்கும் நன்றி எண்ணிய நம்
மாதவனார் வதனத்து அமுது உண்ணும் வலம்புரி போல்
வாதிகளால் அழியா மறை மௌலியின் வான் பொருளே
ஓதிய பஞ்சாத்திரம் உகவாரை ஒழுக்குவமே -43-ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரா விளக்கம் -இதுவும் அடுத்த பாசுரமும் பகவத் சாஸ்த்ர விரோத பங்க அதிகாரம் –

யாதுமிலாத வன்றும் யவர்க்கும் நன்றி எண்ணிய –ஒரு வஸ்துவும் இல்லாது அழிகின்ற மஹா பிரளய காலத்திலும் -தான் அழியாது நின்று
சகல ஜீவர்களுக்கு நன்மையே அருள சங்கல்பித்த
நம் மாதவனார் வதனத்து அமுது உண்ணும் வலம்புரி போல் -நம் பிராட்டியின் நாயகனான எம்பெருமானுடைய திரு முக மண்டலத்தில் உள்ள
அம்ருதத்தைப் பருகுகின்ற ஸ்ரீ வலம்புரி சங்காழ்வானைப் போலே
வாதிகளால் அழியா மறை மௌலியின் வான் பொருளே -பிரதிவாதிகள் வாதங்களால் அழியாத வேதாந்தத்தின் சிறந்த அர்த்தங்களையே
ஓதிய பஞ்சாத்திரம் உகவாரை ஒழுக்குவமே –வெளியிடுகின்ற ஸ்ரீபாஞ்ச ராத்ர சாஸ்திரத்தை பிரமாணமாக ஏற்றுக் கொள்ளாது
வெறுப்பவரை நம் வழியே நடக்குமாறு செய்வோம் —

————————————————-

பூ வலரும் திரு யுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்து இருவர் போற்ற நின்ற
நா வலரும் கலைகள் எலாம் தன்னை நாட நாடாத நன்னிதியா நணுகும் நாதன்
கோவலனாய் நிரையளித்த நிறை போல் வேதம் கோவாகக் கோமானாய் அதன்பால் சேர்த்துக்
காவலிது நல்லுயிர்க்கு என்று காட்டும் கார்த்த யுகக் கதி கண்டோம் கரை கண்டோமே –44-ஸ்ரீ பாஞ்ச சாஸ்திரம் -பகவான் நேரில் கண்ட சாஸ்திரம் —

பூ வலரும் திரு யுந்திப் புனிதன் வையம் பொன்னடியால் அளந்து இருவர் போற்ற நின்ற –தாமரைப் பூ மலர்கின்ற எம்பெருமான் திரு நாபியில் தோன்றிய
பரிசுத்தனான லோகமாகிய சத்யலோகம் வரையுள்ள மேல் உலகங்களை திரிவிக்ரம திரு வவதாரத்தில் அழகிய திருவடியால் அளந்து
பிரம்மாவும் சிவனுமாகிய இருவர் ஸ்தோத்ரம் செய்ய–ஒருவன் திருமஞ்சனம் செய்ய அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஒருவன் தன் முடியில் தாங்க- உயர்ந்து நின்றவனும்
நா வலரும் கலைகள் எலாம் தன்னை நாட நாடாத நன்னிதியா -நாவினிடத்து விரிகின்ற வேதம் முதலிய சாஸ்திரங்கள் முழுதும்
தன் ஸ்வரூபத்தை அறியத் தேடி நிற்க தேட வேண்டாத எளிதில் அடையத் தக்க சிறந்த சேம நிதியாய் இருந்து –
நணுகும் நாதன் –சேதன அசேதனங்களுள் ஒன்றிக் கலப்பவனுமாகிய எம்பெருமான்
கோவலனாய் நிரையளித்த நிறை போல் வேதம் கோவாகக் கோமானாய் அதன் பால் சேர்த்துக் முன் கோபாலனாய்ப் பசு மந்தையைக் காத்த பெருமை போலே
வேதம் பசுவாய் நிற்க தான் பசுவைக் கறக்கும் இடையனாகி அந்த வேதமாகிய பசுவின் பாலை -சாரத்தைச் சேர்த்து –
காவலிது நல்லுயிர்க்கு என்று காட்டும் கார்த்த யுகக் கதி கண்டோம் கரை கண்டோமே –இந்த சாரம் -சேதனருக்கு சிறந்த ரக்ஷகமாகும் என்று வெளியிட்டு அருளிய
கிருதயுக தர்மங்களை போதிக்கும் பாஞ்ச ராத்ர சாஸ்திரத்தை நன்கு அறிந்தோம் -சம்சார சமுத்திரத்தின் கரையை அடைந்தோம் –

————————————————

நமக்கார் துணை என நாம் என்று அருள் தரும் நாரணார்
உமக்கு ஆறு இவை என்று அடியிணை காட்ட யுணர்ந்து யடையும்
எமக்கோர் பரம் இனி யில்லாது இருவினை மாற்றுதலில்
தமக்கே பரம் என்று தாம் முயலும் தரம் சாற்றுவமே -45-ஸ்ரீ மன் நாராயணன் தன் திருவடிகளை உபாயமாகக் காட்டல் –பாரா யுக்த உபாய பங்க அதிகாரம் -இதுவும் அடுத்த இரண்டு பாசுரங்களால் பிற மதத்தினர் கூறும் உபாயத்தை ஸ்வரூபத்தைக் கண்டித்து தம் சித்தாந்தப்படி உபாயத்தை ஸ்வரூபத்தையும் மேன்மையையும் பேசுகிறார் –

நமக்கார் துணை என நாம் என்று அருள் தரும் நாரணார்-சம்சாரத்தில் கிடைக்கும் நமக்கு சகாயம் யார் என்று கலங்கி நிற்க
நாமே ஸஹாயமாக நிற்போம் என்று கூறி நம்மீது அருள் புரிகின்ற ஸ்ரீ மன் நாராயணனார்
உமக்கு ஆறு இவை என்று அடியிணை காட்ட யுணர்ந்து யடையும் -சம்சாரிகளான உமக்கு இவை உபாயம் என்று தம் திருவடி இணைகளை
நமக்குக் காட்டி அருள -அவ்வாறு அறிந்து அவற்றைச் சரணமாக அடைகின்ற
எமக்கோர் பரம் இனி யில்லாது இருவினை மாற்றுதலில்-எமக்கு இனி ஒரு பொறுப்பும் இல்லாமல் புண்ய பாபங்களாகிய இரண்டு கர்மங்களையும் ஒழிப்பதில்
தமக்கே பரம் என்று தாம் முயலும் தரம் சாற்றுவமே -பொறுப்பு தம்முடையதே என்று நினைந்து மற்ற உபாயங்கள் ஸ்தானத்தில்
தாமே நின்று பலன் கொடுக்கத் தாம் முயல்கின்ற பெருமையை இவ்வதிகாரத்தில் கூறுவோம் —

——————————–

பலத்தில் ஒரு துவக்கு அற்ற பதவி காட்டிப் பல்லுயிரும் தடுமாறப் பண்ணுகின்ற
கலித் திரளின் கடும் கழுதைக் காத்து மாற்றிக் கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம்
வலத்திலகும் மறு ஒன்றால் மறு ஓன்று இல்லா மா மணியாய் மலர் மாதர் ஒளியாம் அந்
நலத்தில் ஒரு நிகரில்லா நாதன் பாத நல் வழியாம் அல் வழக்கார் நடத்துவார் -46-ஸ்ரீ மன் நாராயணன் திருவடியே உபாயம் –

பலத்தில் ஒரு துவக்கு அற்ற பதவி காட்டிப் பல்லுயிரும் தடுமாறப் பண்ணுகின்ற –பலத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாத -அதாவது ஒரு பலனையும் கொடுக்காத
வீணான உபாயத்தை வெளியிட்டு -அதைக் கைக் கொண்ட பல சேதனர்களையும் பலன் பெறாது தவிக்கும் படி செய்த
கலித் திரளின் கடும் கழுதைக் காத்து மாற்றிக் –பிற மதத்தினராகிய கலி புருஷரது கூட்டத்தின் கொடிய கழுதை கூவிளி போன்ற ஆரவாரக் கூப்பாட்டை ஒழித்து
கண்ணுடையார் கண்டுரைத்த கதியைச் சொன்னோம் –சிறந்த ஞானக் கண்களை யுடையவர்களான பூர்வாச்சார்யர்கள் தாம் கண்டு
நமக்கு உபதேசித்து அருளிய உபாயத்தை ஸ்வரூபத்தை வெளியிட்டோம் -அவ்வுபாயமாவது
வலத்திலகும் மறு ஒன்றால் மறு ஓன்று இல்லா மா மணியாய் மலர் மாதர் ஒளியாம் –திரு மார்பில் வலப் பக்கத்தில் யுள்ள ஸ்ரீ வத்ஸம் என்னும்
ஒரு மறுவினோடு வேறு ஒரு மறு குற்றம் ஒன்றும் இல்லாத பெரிய நீல ரத்னமாகி தாமரை மலரில் யுள்ள பிராட்டி மணியாகிய தனக்கு பிரகாசம் என்னலாம் படி உள்ளவனும் –
மறுவுடைமையும் மறுவற்றாமையும் கூறிய சுவை காண்க –
அந் நலத்தில் ஒரு நிகரில்லா நாதன் பாத நல் வழியாம் அல் வழக்கார் நடத்துவார்–அந்தச் சிறந்த பரிபூர்ண ஆனந்தத்தில் -சமமான ஒரு வஸ்து இல்லாதவனுமான
எம்பெருமானுடைய திருவடியே சிறந்த உபாயமாகும் -இவ்விஷயத்தில் தகாத விஷயங்களை யார் நடத்த முடியும் –

————————————————

எல்லார்க்கும் எளிதான ஏற்றத்தாலும் இனி யுரைக்கை மிகையான விரக்கத்தாலும்
சொல் ஆர்க்கும் அளவாலும் அமைதலாலும் துணிவரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும் கண்ணனுரை முடி சூடி முடித்தலாலும்
நல்லாருக்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம் நாரணற்கே யடைக்கலமாய் நணுகுவீரே -47-பிரபத்தியில் யுள்ள ஸுகர்யமும் சிறப்பும் –

எல்லார்க்கும் எளிதான ஏற்றத்தாலும் இனி யுரைக்கை மிகையான விரக்கத்தாலும்–சகல சேதனருக்கும் அனுஷ்ட்டிக்க எளிதாய் இருக்கையாகிய பெருமையாலும்
ஒரு முறை அனுஷ்டித்த பின் மறுபடி அதே பலனுக்காக பிரபத்தி வாக்கியத்தை உச்சரிக்கை ப்ரஹ்மாஸ்த்ர நியாயத்தாலே அதிகம் என்னும்படியான கருணையை
எம்பெருமானுக்கு உண்டாக்குவதாலும்
சொல் ஆர்க்கும் அளவாலும் அமைதலாலும் –பிரபத்தி வாக்கியம் -பூர்ணமாக உச்சரிக்கப் பட்ட மாத்திரத்தாலும் -பலன் கொடுக்கப் போதுமாகையாலும்
துணிவரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும் -மஹா விச்வாஸம் என்னும் பிரபத்தியின் அங்கம் அனுஷ்ட்டிக்கக் கடினமாயினும் அதிலும் கடினமான
ஞான யோகம் கர்ம யோகம் முதலிய அங்கங்களை விட்டு விடுகையாகிய ஸுகர்யத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும் கண்ணனுரை முடி சூடி முடித்தலாலும் –ஞானம் இல்லாத சாதாரண அதிகாரிகளுக்கும் விசேஷ ஞானம் உள்ள
பூர்வாச்சார்யர்கள் அநுஸந்திக்கும் பிரபத்தி வாக்கியம் பலனைக் கொண்டு இருத்தலாலும்-ஸ்ரீ கண்ணபிரானுடைய திவ்ய ஸ்ரீ ஸூக்தி யாகிய
ஸ்ரீ கீதையின் சிகரமாய் விளங்கும் சரம ஸ்லோகத்தில் விவரிக்கப் பெற்று ஸ்ரீ கீதையைத் தலைக் கட்டியபடியாலும்
நல்லாருக்கும் தீயார்க்கும் இதுவே நன்றாம் நாரணற்கே யடைக்கலமாய் நணுகுவீரே -புண்ய சாலிகளுக்கும் பாபிகளுக்கும் இந்த பிரபத்தியே சிறந்த உபாயமாகும் –
ஆதலின் -ஸ்ரீ மன் நாராயணனுக்கே ரக்ஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக இருந்து அவனைச் சரணமாக அடையுங்கள் —

——————————————————-

பண்டை மறைக்குப் பகை என நின்ற பர மதங்கள்
கொண்டவர் கொள்ளும் பயன் ஓன்று இலது எனும் கூர் மதியால்
வண் துவரைக்கு அரசாணை நம் மாயனை வானுலகில்
கண்டு களிப்பது எனும் காதல் ஒன்றைக் கருதுவமே-48-பிற மதத்தினர் கூறும் பலனுடைய ஸ்வரூபத்தைக் கண்டித்தல்
-இதுவும் அடுத்த பாசுரமும் பர யுக்த ப்ரயோஜன பங்க அதிகாரம் –

பண்டை மறைக்குப் பகை என நின்ற பர மதங்கள் கொண்டவர் கொள்ளும் –அநாதியான வேதத்திற்கு விரோதி என்னும்படி நின்ற பிற மதங்களை
கைக் கொண்டவரால் அடைய படுகின்ற
பயன் ஓன்று இலது எனும் கூர் மதியால் -பலன் ஒன்றும் இல்லை என்று அறிந்து கூறும்படியான ஸூஷ்மமான புத்தியோடு
வண் துவரைக்கு அரசாணை நம் மாயனை வானுலகில் -அழகிய ஸ்ரீ தவறாக நகரத்தின் நாயகனான அதிசய சேஷ்டிதங்களை யுடைய நம் ஸ்ரீ கண்ணபிரானை பரமபதத்தில்
கண்டு களிப்பது எனும் காதல் ஒன்றைக் கருதுவமே-சேவித்து ஆனந்தித்து என்ற ஆவல் ஒன்றையே எண்ணுவோம் —
பகவத் ப்ரீதி காரித்த கைங்கர்யமாகிய பரம புருஷார்த்த சிந்தனையே அமையும் —

—————————————-

கலந்து இகழும் போகங்கள் கண்டு வெள்கிக் காரியமும் காரணமும் கடந்து நாம் போய்க்
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் வடியவர் தம் குழாங்கள் கூடி
வலம் திகழும் திருமகளும் மற்றிடத்தே மன்னிய மண்மகளாரும் நீளை யாரும்
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடி என்ன நண்ணினோமே -49-சித்தாந்தத்தின் படி பலனுடைய ஸ்வரூபம் –

கலந்து இகழும் போகங்கள் கண்டு வெள்கிக் விஷம் கலந்த தேன் போல் துக்கத்துடன் கலந்து இருந்து அதனால் இகழப் படுகின்ற
உலக ஸூகங்களைப் பார்த்து வெட்கமடைந்து -உபாயத்தை அனுஷ்ட்டித்து
காரியமும் காரணமும் கடந்து நாம் போய்க் –மஹான் அஹங்காரம் அல்லது சரீரம் இந்திரியம் முதலிய காரியங்களையும் –
காரணமான மூல பிரக்ருதியையும் தாண்டி நாம் ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சென்று
குலம் திகழும் குருக்கள் அடி சூடி மன்னும் குற்றேவல் வடியவர் தம் குழாங்கள் கூடி -அங்கே கூட்டமாய் பிரகாசிக்கின்ற நமது பூர்வாச்சார்யர்களின்
திருவடியை நம் தலையில் சூடி நிலையான கைங்கர்யத்தைச் செய்கின்ற நித்ய ஸூரிகளும் முக்தர்களுமாகிய பாகவதர்களின் கோஷ்டிகளிலே கூடி இருந்து –
வலம் திகழும் திருமகளும் மற்றிடத்தே மன்னிய மண்மகளாரும் நீளை யாரும் -வலப்பக்கத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ மஹா லஷ்மியுடனும்
இடப்பக்கத்தில் நித்ய வாசம் செய்கின்ற பூமிப் பிராட்டியுடனும் நீளா தேவியுடனும் -மற்று -அசை
நலம் திகழ வீற்று இருந்த நாதன் பாதம் நமக்கு இதுவே முடி என்ன நண்ணினோமே -ஆனந்தம் மிகும்படி எழுந்து அருளி இருந்த
எம்பெருமானுடைய திருவடியை நமக்கு இதுவே கிரீடமாகும் என்னும்படி பொருந்தி நின்றோம் –

—————————————————–

மானங்கள் இன்றி வகுத்து உரைக்கின்ற மதங்கள் எலாம்
தானங்கள் அன்று தரும நெறிக்கு என்று சாற்றிய பின்
வானம் கவர்ந்து மறை முடி சூடிய மா தவத்தோர்
ஞானங்கள் ஒன்ற நடக்கின்ற நல் வழி நாடுவமே -50-இது முதல் முடிவு-54-பாசுரம் – வரை நிகமன அதிகாரம் –

மானங்கள் இன்றி வகுத்து உரைக்கின்ற மதங்கள் எலாம்–வேதம் முதலிய பிரமாணங்களைக் கொள்ளாமல் தோன்றியவாறு பிரித்து விளக்குகின்ற மதங்கள் அனைத்தும்
தானங்கள் அன்று தரும நெறிக்கு என்று சாற்றிய பின் –தர்ம மார்க்கத்திற்கு இடங்களாக மாட்டா என்று ஸ்தாபித்த பின்பு
வானம் கவர்ந்து மறை முடி சூடிய மா தவத்தோர் -பரமபதத்தை ஆசைப்பட்டு வேதாந்தத்தில் முடி சூடி நிற்பவரும் பெரிய தவமாகிய
பிரபத்தியை அனுஷ்டித்தவருமான நம் பூர்வாச்சார்யர்கள்
ஞானங்கள் ஒன்ற நடக்கின்ற நல் வழி நாடுவமே -சாஸ்திரங்கள் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லாது ஒரு முகமாய்ச் சேரும்படி நடக்கின்ற சிறந்த மார்க்கத்தைப் பற்றுவோம் –

—————————————–

தன்னடிக் கீழ் உலகு ஏழையும் வைத்த தனித் திருமால்
பொன்னடிக்கு ஏற்கின்ற புண்ணியர் கேண்மின் புகலறிவார்
முன்னடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப்
பின்னடி பார்த்து நடந்து பெரும் பதம் ஏறுவமே-51-முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதல் –

தன்னடிக் கீழ் உலகு ஏழையும் வைத்த தனித் திருமால் –தனது திருவடியின் கீழ் ஏழு உலகத்தையும் நிறுத்தி ஆள்கின்ற ஒப்பற்ற எம்பெருமானுடைய
பொன்னடிக்கு ஏற்கின்ற புண்ணியர் கேண்மின் -அழகிய திருவடிகளை பெற்று அனுபவிப்பதற்கு தகுதியுள்ள புண்ணியசாலிகளே
நமக்கு நன்மையானது ஒன்றைக் கூறுகின்றேன் -கேட்பீராக –
புகலறிவார் முன்னடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் -உபாயங்களின் ஸ்வரூபத்தை அறிந்த நம் பூர்வாச்சார்யர்கள்
தங்கள் பெரியோர் அடிச்சுவட்டைக் கவனித்து அதன்படியே நடக்க முயலுதலால் –
அவர் பின் சாயை என அடி பார்த்து நடந்து பெரும் பதம் ஏறுவமே-நாமும் அவர் பின் நிழல் என்னும்படி அவர்கள் அடிச்சுவட்டை கவனித்து
அவ்வாறே நடந்து மிக உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைவோம் –

————————————-

வையம் எலாம் இருள் நீக்கும் மணி விளக்காய் மன்னிய நான்மறை மௌலி மதியே கொண்டு
மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல் வழியே விரைந்து செல்வீர்
ஐயமற அறுசமயக் குறும்பு அறுத்தோம் அணி யரங்கர் அடியவர்க்கே அடிமை செய்தோம்
மைய கடல் வட்டத்துள் மற்றும் தோற்றும் வாதியர் தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே-52-ஸ்ரீ வியாச பகவான் காட்டியதே நல்வழி –

ஐயமற அறுசமயக் குறும்பு அறுத்தோம் அணி யரங்கர் அடியவர்க்கே அடிமை செய்தோம் -சந்தேகம் இல்லாமல் ஆறு மதங்களின் வலிமையை ஒழித்து விட்டோம் –
அழகிய ஸ்ரீ ரெங்கநாதனுடைய சேஷ பூதர்களுக்கே கைங்கர்யம் செய்யப் பெற்றோம்
மைய கடல் வட்டத்துள் மற்றும் தோற்றும் வாதியர் தம் வாய்ப்பகட்டை மாற்றினோமே-கருமையான கடல் சூழ்ந்த பூமியுள் இன்னும் ஏற்பட்டுள்ள
வாதிகளுடைய வாய்ப்பேச்சின் ஆடம்பரத்தை ஒழித்தோம்-
ஆதலால் இனி
வையம் எலாம் இருள் நீக்கும் மணி விளக்காய் மன்னிய நான்மறை மௌலி மதியே கொண்டு -உலகம் முழுதும் உள்ள அஞ்ஞானமாகிய
இருளைப் போக்குகின்ற ரத்ன தீபமாய் -பொருந்திய நான்கு வேதாந்தங்களின்ஞானத்தையே சாதனமாகக் கொண்டு
மெய்யலது விளம்பாத வியாசன் காட்டும் விலக்கில்லா நல் வழியே விரைந்து செல்வீர் -சாத்தியமான விஷயம் தவிர வேறு பேசாத ஸ்ரீ வியாச பகவான் –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தின் வழியாக காட்டி அருளிய வேத விரோதம் இல்லாத சிறந்த மார்க்கத்திலேயே வேகத்துடன் செல்வீர்களாக –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத் ரத்தத்தில் பக்தியும் பிரபத்தியும் இரண்டு வகை உபாயங்களாக கூறப் பட்டுள்ளன –
விளம்பித்து சிலருக்கே பலன் தரக் கூடிய பக்தி யோகத்தை விட்டு அனைவருக்கும் உரிய -விலக்கு இல்லாத பிரபத்தி மார்க்கத்தைக் கைக் கொண்டு
விரைவில் பலன் பெறுவீர் –என்ற கருத்தையே விலக்கில்லா -என்றும் விரைந்து -என்றும் பாதங்கள் பிரயோகம் –

———————————————–

கோது அவம் ஓன்று இல்லாத தகவே கொண்ட கொண்டல் என வந்து உலகில் ஐவருக்கு அன்று ஓர்
தூதுவனாய் ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனி ஓடித் துயரம் தீர்த்த
மாதவனார் வட கொங்கில் வாணி யாற்றில் வண்ணிகை நன்னடம் கண்டு மகிழ்ந்து வாழும்
போதிவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாள் புணராத பர மதப் போர் பூரித்தோமே -53-இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டிய வகை கூறுதல் –

கோது அவம் ஓன்று இல்லாத தகவே கொண்ட கொண்டல் என வந்து உலகில் ஐவருக்கு அன்று ஓர் தூதுவனாய்-குற்றமும் கேடும் ஒன்றும் இல்லாத
கருணையே நீராகக் கொண்ட மேகம் என்னும்படி இவ்வுலகிலே திருவவதரித்து அக்காலத்தில் பஞ்ச பாண்டவர்க்கு நிகரற்ற தூதுவனாய்
ஒரு கோடி மறைகள் எல்லாம் தொடர்ந்து ஓடத் தனி ஓடித் துயரம் தீர்த்த மாதவனார் -ஒப்பற்ற கோடிக் கணக்கான வேதங்கள் எல்லாம்
தன் பெருமையைப் புகழ்ந்து தொடர்ந்து ஓடி வர அதற்கு அகப்படாமல் தானே தனியாகச் சென்று உலகினுடைய துக்கத்தைப் போக்கிய எம்பெருமான்
இவை நாம் பொன்னயிந்தை நகரில் -இந்த பர மத பங்கை ஸூக்தியை-அழகிய திருவயிந்த்ர புரத்தில் ஸ்ரீ தெய்வ நாயகனாக திருவவதரித்து
வட கொங்கில் வாணி யாற்றில் வண்ணிகை நன்னடம் கண்டு மகிழ்ந்து வாழும் போது –வட புறத்தில் பெருகுகிற கருட நதியின்
புகழத் தகுந்த சிறந்த நடனத்தைக் கண்டு சந்தோஷித்து எழுந்து அருளி இருந்த போது
முன்னாள் புணராத பர மதப் போர் பூரித்தோமே-முன்பு செய்யப் படாத இந்தப் பரமத பங்கை ஸூக்தியை நாம் தலைக் கட்டினோம்
அவனைக் கண்ணாரக் கண்டு களித்து இந்த பிரபந்தம் அருளிச் செய்தொம் என்றவாறு –
அன்றிக்கே
கொங்கு நாட்டின் வட புரத்தில் பவானி நதிக் கரையின் கண் ஸ்ரீ கிருஷ்ணருடைய சிறந்த நடனத்தை சேவித்துக் கொண்டு நாம் மகிழ்ச்சியுடன் வசிக்கும் காலத்தில்
அழகிய திருவயிந்த்ர புரம் என்னும் நகரத்தில் முன்பு ஆரம்பிக்கப் பட்டுக் கூடி வரப் பெறாத இந்த பிரபந்தத்தை தலைக் கட்டினோம் என்றுமாம் –
கலாபம் முதலிய இடையூறுகளால் பூர்த்தி செய்யாமல் பின்பு கொங்கு நாட்டில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும் என்றும் சொல்வர்
அன்றிக்கே
வடக்கே யுள்ளதும் பரிமளம் மிகுந்ததுமான சிறந்த யமுனா நதிக்கரையில் கண் ஸ்ரீ கண்ணபிரான் செய்து அருளிய ராசக்க்ரீடை முதலிய திரு விளையாடல்களை
அழகிய திருவயிந்த்ர புரத்தில் நாம் சேவித்துக் கொண்டு மகிழ்ந்து வசிக்கும் காலத்தில் இதற்கு முன்பு அமையாத இந்த கிரந்தத்தை முற்றுவித்தோம் -என்றுமாம்
அன்றிக்கே
அழகிய திருவயிந்த்ர புரத்தில் அடியவர்க்கு மெய்யன் –கொங்கு நாட்டின் வடபுறத்தில் உற்பத்தியாகின்ற பெண்ணையாற்றின் லயத்தோடு கூடிய
அழகிய நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்து விலக்ஷணமான இந்த ஸ்ரீ ஸூ க்திகளை நாம் பூர்த்தி செய்தோம் என்றுமாம் –
தாய் மாத ஐந்தாம் நாள் உத்சவத்தில் ஜைனர்களை வாதத்தில் தோற்பித்து இந்த பிரபந்தம் அமைத்து அருளினார் என்றும் சொல்வர் –

——————————–

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே -54- திருவாழி யாழ்வானுடைய திருக்கைகளின் பெருமை –

பரமதங்களைக் கண்டிக்கும் போது திருவாழி யாழ்வானது திரு வருள் பெறுவதற்காக
இப்பிரபந்தத்தில் உபக்ரமத்திலும் உப சம்ஹாரத்திலும் அவர் பெருமையையே பேசப்படுகிறது –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும் –திருச் சக்கரமும் மழுவும் மேன்மை பொருந்திய ஈட்டியும்
தண்டாயுதமும் மாவெட்டியும் தீப் பொறிகளை சிதறுகின்ற சத்தமுக அக்னியும் வாளும் வேலும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பொருந்திய இடமும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்-திரிசூலம் திசூலம் என்று மருவியுள்ளது ஒலிக்கின்ற சங்கமும்
வில்லும் பாசமும் கலப்பையும் சிவந்த வஜ்ராயுதமும் செழுமையான கதையும் உலக்கையும் திரிசூலமும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பிரகாசிக்கும் இடமும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும் –சகல லோகங்களும் ஒரு மாலையில் மணிகளாய்
முழுவதும் வரிசையாக பிரகாசிக்கும்படி குற்றம் இல்லாது நின்ற இடமும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும் -திருவடிநிலை -திருப் பாதுகையும்
பக்கத்தே சாய்ந்து கொள்ளும் அணையுமாகின்ற ஆதிசேஷன் போல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர் என்னும்படி நின்று திருவடிகளை சரணம் அடையும்
பாகவதர்களை அவர்கள் இடம் உள்ள அன்பினால் அஞ்ச வேண்டாம் என்று அபாய பிரதானம் செய்வனவும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் -மகிழ்வுள்ள தேவர் கூட்டங்களின் ஸ்வர்க்க லோகத்தைக்
கொள்ளையிடுவதற்காக ஓன்று குடித்த திரண்ட அசுரர்கள் செய்த மாய்ச செய்கைகளை ஒழித்தனவும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும் -நிறைந்துள்ள திவ்ய ஆபரணங்களில் உள்ள
ரத்தினங்கள் பிரகாசிக்க -அந்த பிரகாசத்தால் ஆகாசம் செவ்வானம் கொண்டால் போலேயாக வேதம் வகை வகையாகப் போற்றி வணங்கி நிற்க
பகைவர் மீதமின்றி ஜெயித்தனவும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும் –அக்னியையும் சூரியனையும் சந்திரனையும்
கக்குகின்ற தேஜஸை வீசி எறிதலால் எட்டுத் திக்குகளிலும் அடர்ந்த அஞ்ஞானம் ஒழியும்படி செய்ய மனம் கொண்டு உலகிற்கு ஷேமங்களைச் செய்தனவும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே–பிரகாசிக்கின்ற ஆதிசேஷனாகிய படுக்கையையுடைய
ஸ்ரீ ரெங்கநாதருடைய தேஜஸ் வடிவு எடுத்து வந்தது என்னும்படி சித்திரமாய் இருந்து சுழல்கின்ற
திருவாழி வாழ்வானுடைய சிவந்த பதினாறு திருக்கைகளும் ஆகும்
அவற்றின் பெருமை பேசற்பாலது அன்று என்றவாறு —

ஸ்ரீ பரமத பங்க பிரபந்தம் முற்றிற்று –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: