ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –
என்னுடைய சகல பிரதிபந்தகங்களையும் போக்கின ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீ காரத்தை ஸூ பிரசித்தம் ஆக்குவேன் என்கிறார் –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–
கண்டு கொண்டு என்னை
இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத்தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-(பெருமாள் -அந்யோன்யம் அபிவிஷணை மஹாராஜர் போலே-மூவர் அனுபவம் – )
காரி மாறப் பிரான்
பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்னுமா போலே இவரும் காரி மாறப் பிரான் என்கிறார் -பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ப்ரவாஹ அநாதி யாகையாலே அடி காண வல்லார் இல்லை
அந்தவத்தாகையாலே அடி யுண்டு என்று அனுபவிக்கும் இத்தனை இ றே
பிராயச்சித்த விநாச்யம் அன்று கர்மம் -அனுபவ விநாச்யம் என்கிற பிரமாணத்துக்கும் அவ்வருகாய்க் காணும் இருப்பது
கரிய கோலத் திருவுருக் காண்பன் என்னும் அத்தையும் தவிர்த்தாப் போலே காணும் ஆழ்வார்
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே
மதி நலம் அருளினான் என்று தலை சீய்த்தார் ஆழ்வார்
இவரும் நமக்கு உபகரித்த இடத்தை அருளினான் என்கிறார் –
எண் திசையும் அறிய இயம்புகேன்-
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –
ஒண் தமிழ்
ஒள்ளிய தமிழ்
பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –
சடகோபன் அருளையே-
மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –
—————————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
ஆழ்வார் தம் பக்கல் நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த விஷயீ காரத்தைக் கண்டு இத்தை நாட்டார் அறியாதே-அனர்த்தப் படுகிற படியைப் பார்த்து இத்தை எல்லாரும் அறியும் படி கூப்பிடுவேன் என்கிறார் –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
கண்டு கொண்டு –
கிட்டினவாறே தம்மைப் பெறுகைக்கு எதிர் சூழல் புக்குத் திரிந்தார் இவர் என்று தோற்றி இருந்து
என்னை –
இந்த நிர்ஹேதுக விஷயீ காரத்தை பிரதிபத்தி பண்ணவும் மாட்டாதே இருக்கிற வென்னை
காரி மாறப் பிரான்
உபகார ச்ம்ருதியாலே பிரான் என்கிறார்
காரி மாறன் என்கிற விசேஷணத்தாலே ஆழ்வாருக்கு உபகாரகனான ஈஸ்வரன் அளவிலே போகாமைக்காகச் சொல்லுகிறார் –
பண்டை வல்வினை –
அநாதி காலம் சஞ்சிதமான இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான பாபம் –
ஸூ ர்ப்பணகியைப் போலே வழி எல்லா வழியே பற்றுகைக்கு ஈடான ருசி -பிரதம அவதியான பகவத் விஷயத் தளவிலே
பிறந்த புருஷார்த்த புத்தி -இவை அடங்கலும்
வல்வினை –
பிராயச்சித்த சாத்யமும் அன்றிக்கே அனுபவ விநாச்யமும் அன்றிக்கே இருக்கை
பாற்றி யருளினான்
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடியும் அன்றிக்கே உருமாய்ந்து போம்படி பண்ணினான் –
எண் திசையும் அறிய இயம்புகேன்
விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு எல்லாரும் அறியும்படி சொல்லுகிறேன்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
மயர்வற மதி நலம் அருளின அருள் போல் அன்று இவருடைய அருள்
அவ்வருளுக்கும் கூடத் தப்பின எனக்கு அருளின வருள் இ றே
ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் –
————————————————————————–
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
கீழ் மூன்றாம் பாட்டிலே தம்முடைய புன்மையைக் கண்டு பெரியவர்களும் தம்மை இகழ்ந்த படி சொல்லி
இவனுக்கு நம்மை ஒழிய இனிக் கதி இல்லை என்று ஆழ்வார் மாதா பிதாவே நின்று தம்மளவிலே அபிமானித்த படியையும் சொல்லி
அநந்தரம் பாட்டிலே அந்தப் புன்மை தான் ஏது -ஆழ்வார் தம்மை நீர் கிட்டின வழி என் என்று கேட்க -அவற்றுக்கு உத்தரம் சொல்லி
கீழில் பாட்டிலே இப்போது கைக்கொண்ட ஆழ்வார் உம்முடைய குற்றம் கண்டு இன்னும் இகழில் செய்வது என் என்ன -இன்று தொடங்கி
கால தத்வம் உள்ளதனையும் என்னை இகழாதே தம்முடைய குண ஸ்துதியே கால யாத்ரையாம் படி பண்ணினார்
ஆனபின்பு என் குற்றம் மேலிடுமோ -மேலிட்டாலும் பரிபூர்ணர் ஆனவர் என்னை நெகிழப் புகுகிறாரோ என்றார் –
இதில் ஆழ்வார் என்னை அங்கீ கரிக்கிற போதே என்னுடைய துர்க்கதி கண்டு இவன் பக்கல் இவை கிட்டக் கடவது அல்ல
என்று பழையதாய் வலியதான பாபங்களைப் பாறிப் போம்படி பண்ணி யன்றோ கிருபை பண்ணிற்று –
இனி இவற்றுக்கு உயிர் உண்டோ என்று கீழ் உக்த்தத்தைப் பரிஹரித்துக் கொண்டு தன் புகழ் ஏத்த அருளினான் என்று
ஆழ்வாருடைய கிருபை கீழே ப்ரஸ்துதம் ஆகையாலே அவருடைய க்ருபா பிரபாவத்தை திகந்தரங்கள் தோறும் வெளியிடக் கடவேன் என்கிறார் –
குரும் பிரகாசயேந்நித்யம்-என்கிற வித்தய நுஷ்டானம் பண்ணக் கடவேன் என்கிறார்
இனி ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலே-1- பரத்வ புத்தி -2-தேவ தாந்தரங்களிலே பரத்வ புத்தி நிவ்ருத்தி -3-அப்பர வஸ்துவின் பக்கல் ததீய சேஷத்வ பர்யந்தை யான சேஷத்வ புத்தி –4-விஷயாந்தர விரக்தி-5- பகவத் விஷயத்தை விச்லேஷிக்கில் தரைப் படும்படியான ப்ராவண்யாதிசயம் -6-அவன் கை விடில் தமக்குப் புறம்பு போக்கில்லை என்னும் படியான விஸ்வாச அதிசயம் -7-சம்சார பீதி- 8-புருஷார்த்த லாபத்தில் அதிசயித்தவரை-அர்ச்சாவதாரங்களில் உண்டான ப்ராவண்யம் -என்றாப் போலே சொல்லுகிற ஆத்ம குணங்களில் காட்டில்
வீடு மின் முற்றவும் என்று தொடங்கி கண்ணன் கழலிணை ஈறாக பல இடங்களிலும்
சம்சாரி சேதனர் உடைய துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாமே உபதேசிக்கைக்கு அடி கிருபை யாகையாலே-அந்த க்ருபா பிரபாவத்தை அனுசந்தித்து அத்தை எல்லாரும் அறியும் படி வெளியிடக் கடவேன் என்கிறார்
ஈஸ்வரன் நிரதிசய க்ருபாவானாய் இருந்தானே யாகிலும் ஸ்வாதந்த்ர்யா விசிஷ்டன் ஆகையாலே தோஷ தர்சனத்தாலே-உபேஷிப்பதும் ஒரு புடை யுண்டு- ஆழ்வார் அப்படி அன்றிக்கே பற்றினாரை இகழாதவர் ஆயிற்று –
கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்-எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்று இவர் சொல்லக் கேட்டவர்கள் நீர் ஏத்துகிற படி தான் என்ன -ஆழ்வாருடைய கிருபை யன்றோ -என்கிறார் –
ஆழ்வாருக்கு ஞானம் பக்தி விரக்தி கிருபை என்று சில குணங்கள் உண்டு
அதில் ஞானம் -சித் அசித் ஈஸ்வர ரூபமான தத்வ த்ரய விஷயமாய் இருக்கும்
பக்தி -ஈஸ்வர ஏக விஷயமாய் இருக்கும்
விரக்தி தத்வத்ய விஷயமாய் இருக்கும்
ஞானம் த்யாஜ்ய உபாதேய விவேக விஷயமாய் இருக்கும்
பக்தி உபாதேயைக விஷயம்
விரக்தி த்யாஜ்யைக விஷயம்
கிருபை துர்க்கதி விஷயமாய் இருக்கும்
அதில்- ஞானம் -தத்வ ஞானம் -சாஷாத்கார ஞானம் –(தத்வ ஞானம் என்றது – சாஸ்திர ஜன்ய ஞானம் /பிரத்யக்ஷ சாமான்யகார சாஷாத்காரம் -முக்த தசையில் சாஷாத்காரம் –விஷய பேதங்கள் -உண்டே -அத்தை மேலே -)அதில் பகவத் ஸ்வரூப விஷயம் -குண விஷயம் -விபூத் விஷயம் -விக்ரஹ விஷயம்-என்றாப் போலே பல கப்புகளை உடைத்தாய் இருக்கும்
பக்தியும் -காதல் கடல் புரைய விளைவித்த -(பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்க காதல் -5-3-/ -5-4-/-5-5-)-காதல் கடலின் மிகப் பெரிதால் -மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்–அதனில் பெரிய என்னவா -என்னும்படி அநேக பர்வையாய் இருக்கும்
விரக்தியும் -பிரக்ருத ப்ராக்ருத விரக்தி -தேவதாந்திர விரக்தி -தேவதாந்தர பரர் பக்கல் விரக்தி -சப்தாதி விஷய விரக்தி -ஆத்மானுபவ விரக்தி–பகவத் அனுபவத்தில் எனக்கு என்னுமத்தில் விரக்தி இப்படி பஹூ விதையாய் இருக்கும் –
இவை எல்லாவற்றிலும் விஞ்சியாய்த்து க்ருபா குணம் இருப்பது -ஈஸ்வரனுடைய ஜ்ஞான சக்த்யாதிகளும் சம்சாரிகளுடைய-ரஷண சேஷம் ஆகாமல் பாதன சேஷமாக அவற்றை ரஷணத்திலே புரிப்பித்துத் தருவது கிருபை யாய்த்து –
அந்த ஈஸ்வர கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபையினுடைய தன்னேற்றத்தை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –
கண்டு கொண்டு என்னை
தம்முடைய துர்க்கதியைச் சொல்லுகிறார்
என்னைக் கண்டு
சத்துக்களாலே அசமீஷ்யனான என்னைக் கூசாதே கடாஷித்து
என்னைக் கண்டு
இவருடைய யம் பச்யேத்-என்கிற பிரதம கடாஷம் இருக்கிற படி
கொண்டு
தோஷம் பட்டவாறே காற்கடைக் கொள்ளாதே கைக்கொண்டார்
என்னைக்கண்டு -என்னைக் கொண்டு-
பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்
எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக்கொண்டார்
இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதே
காரி மாறப் பிரான்-
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழு பிறப்பும் மேவும் தன்மையமாக்கின ஆழ்வார் உடைய பிரான் அன்று-அபிஜாதரான ஆழ்வார்
காரி மாறப் பிரான் –
அக்குடியிலே பிறந்து எனக்கு உபகரித்தவர்
காரி மாறப் பிரான்
தான் பிறந்து என் பிறவியை அறுத்தவர்-(ஜனக தசரத வாசு தேவ குலங்களுக்கு –மூத்த பெண் -புகழ் ஆக்கிய சீதா / நடுவில் பிள்ளை -பரதன் ஆக்கமும் ஆக்கி பரதந்த்ரன் முறை அறிவித்து / கடைக்குட்டி கண்ணன் அஞ்சிறை அறுத்தார் -போலே இல்லாமல் நமக்கு -பிரபன்ன ஜன கூடஸ்தர் புகழை ஆக்கி -பாரதந்தர்யம் அறுதி ஈட்டி -அஞ்சிறை அறுத்தார் -சம்சாரம் இங்கு அங்கு கால் விலங்கு தாய் தந்தைக்கு மட்டும் _
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
ஸ்வரூப அனுபந்தியோ என்னும் படி இவ்வாத்மாவோடே பழகிப் போந்த பாபம்
அநாதி சித்தமுமாய் அனுபவ விநாச்யமும் இல்லாத பாபம்
வல்வினை
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான ஈஸ்வரன் சௌஹார்த்தைப் பொகட்டு -ஷிபாமி என்னும் படியான பாபம்
வல்வினை
ஆழ்வார் ஒரு கடாஷம் நேர வேண்டும்படியான பாபம்
பாற்றி
அத்தைப் பாறப் பண்ணி -ஈஸ்வரனைப் போலே மோஷயிஷ்யாமி பண்ணி விடுகை அன்றிக்கே பாறு பாறாம் படி பண்ணினார்
எந்தத் தூற்றிலே புக்கது என்று தேடும்படி பாற்றினார்
என்னைக் கொண்டு பண்டை வல் வினை பாற்றி அருளினான்
ஈஸ்வரனைப் போலே மாமேகம் சரணம் வ்ரஜ மோஷயிஷ்யாமி என்கை அன்றிக்கே தாமே என்னை சுவீகரித்து என் பாப பந்தத்தையும் பாற்றி அருளினார்
அருளினான்
தம்முடைய புகழை ஏத்தும் படி அருளினார்-விரோதி நிவ்ருத்தியையும் பண்ணி அபிமத பிரதானமும் பண்ணினார்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
அநாதி சித்தமான பாபத்தைப் போக்கி தம்முடைய குண ஸ்துதியே எனக்கு யாத்ரையாம் படி பண்ணினார் –
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே-
ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்
மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்
ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன்
என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையே
தெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்
தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று
ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே
அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்
இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்
அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படி
அங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்
இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply