ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
—————————————————————————————————————
இது தான் ஆறுபதமாய்-பத்து அர்த்தம் அனுசந்தேயமாய் இருக்கும் –
ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று சமஸ்த பதம் —
நாலிரண்டு அர்த்தம் சேர்ந்து இருக்குமது சமச பதம் –
இது தன்னில் முதல் பதம் பிரகிருதி பிரத்யயங்களாய் இருக்கும் –
ஸ்ரீ என்றவிடம் பிரகிருதி–மத்-என்றவிடம் ப்ரத்யயம் –
ஸ்ரீ என்கிற திருநாமத்துக்கு -ஸ்ரீ ஞ்-சேவாயாம் -என்கிற தாதுவிலே முடிக்கையாலே சேவ்யமானை என்கிறது –
ஆராலே சேவிக்கப்படும் ஆரை சேவிக்கும்-என்னும் அபேஷையிலே –
ஸ்ரீ யத இதி ஸ்ரீ -என்றும்
ஸ்ரயத இதி ஸ்ரீ -என்றும் வ்யுத்பத்தியாய்
இதில் ஸ்ரீ யதே என்று தன்னை ஒழிந்த த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் ஆஸ்ரயிக்கப் படுமவள் என்கிறது –
ஸ்ரயதே என்கையாலே இவள் தான் எம்பெருமானை ஆஸ்ரியா நின்றாள் என்று
ஸ்ரீ என்னும் திருநாமத்தை உடையவளாய் இருக்கும் –
இத்தால் தன்னை ஒழிந்த த்ரிவித சேதனருடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்
இவளுடைய கடாஷாதீனமாய் இருக்கும் என்னும் இடத்தையும்
இவள் தன்னுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவனுடைய கடாஷாதீனமாய் இருக்கும்
என்னும் இடத்தையும் சொல்லுகிறது –
ஆக இவர்களைக் குறித்து தான் ஸ்வாமிநியாய் –
அவனைக் குறித்து தான் பரதந்த்ரையாய் இருக்கையையே
இவள் திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்திதி என்னும் இடத்தைச் சொல்லிற்று –
இத்திருநாமம் தான் புருஷகாரத்தைக் காட்டுகிறது –
தன்னை ஒழிந்தார்க்குத் தான் ஸ்வாமிநியாய் -அவனைக் குறித்து பரதந்த்ரை என்னும் காட்டில்
புருஷகாரத்தைக் காட்டுமோ
இச்சப்தம் -என்னில் புருஷகாரமாவாருடைய லஷணம் இதுக்கு உண்டாகையாலே –
புருஷகாரமாவார்க்கு இரண்டு இடத்திலும் குடல் துவக்கு உண்டாக வேணும் –
தன்னை ஒழிந்தாரோடு தனக்கு குடல் துடக்கு இல்லையாகில் கார்யம் தீரக் கழியச் செய்யக் கூடாது –
கார்யம் கொள்ளும் இடத்தில் தனக்கு பிராப்தி இல்லையாகில் கார்யம் வாய்க்கச் செய்விக்கக் கூடாது –
ஆக இரண்டு இடத்தில் பிராப்தியும் புருஷகாரமாவர்க்கு அபேஷிதமாகையாலே இத்திரு நாமம் தான் புருஷகாரத்தைச் சொல்லிற்று –
இன்னமும் நிருத்தத்திலே இவ்வர்த்தம் தன்னை முக்த கண்டமாகச் சொல்லிற்று என்று
நஞ்சீயர் அருளிச் செய்வது ஒன்றுண்டு –
அதாவது ஸ்ருணோதீதி-ஸ்ரீ என்றும் ஸ்ராவயதீதி ஸ்ரீ என்னும் வ்யுத்பத்தியாலும் –
அதில் -ஸ்ருணோதீதி-ஸ்ரீ -என்று சம்சார பயபீதரான சேதனர்கள்
தந்தாமுடைய ஆர்த்தியையும் அபராதத்தையும் ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யர்த்தையும் அனுசந்தித்து
இப்படி இருக்கிற எங்களை அவன் திருவடிகளிலே சேர்க்க வேணும் என்று திரு முன்பே விண்ணப்பம் செய்தால்
ஆபிமுக்யம் பண்ணிச் செவி தாழ்த்துக் கேட்கும் என்னும் இடத்தையும்
ஸ்ராவயதீதி ஸ்ரீ என்று தான் கேட்ட வார்த்தையை அவன் செவியில் படுத்திப் பொறுப்பித்துச் சேர்க்கும்
இடத்தையும் சொல்லுகிறது என்பர்கள்-
இவ்வர்த்தம் வ்யுத்பத்தி சித்தமே யன்று -பிரமாண சித்தமும் –
ஹரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-என்றும்
அச்யேசாநா ஜகத-என்று ஜகத்துக்கு ஈசனை என்கையாலே
இவர்களைக் குறித்து ஸ்வாமிநி என்னும் இடத்தைச் சொல்லிற்று –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயி நீ -என்றும்
விஷ்ணு பத்நீ என்றும் சொல்லுகையாலே அவனைக் குறித்து பரதந்த்ரை என்னும் இடம் சொல்லிற்று
இப்படி ஒழிய சேதனரோடு சமானை என்னுதல் ஈச்வரனோடு சமானை என்னுதல் சொல்லுவது சேராது –
ஆனால் பும்ப்ரதா நேச்வரேச்வரீம்-என்று அவனிலும் இவளுக்கு ஆதிக்யம் சொல்லுகிற
பிரமாணங்கள் சேருகிறபடி எங்கனே என்னில்
அவளுடைய போக்யதையில் உண்டான வைபவத்தைப் பற்ற அவனுக்கு உண்டான
பிரணயித்வ பாரதந்த்ர்யமாம் இத்தனை –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் –
மலராள் தனத்துள்ளான் -என்றும்
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும் சொல்லுகையாலே
தனது போக்யதையாலே அவன் நெஞ்சைத் துவக்கிக் கொண்டாய்த்து இருப்பது –
அவன் ஸ்வரூபம் எல்லை காண ஒண்ணாத வைபவம் போலே இவளுடைய ஸ்வரூபம் அணுவாய் இருக்கச் செய்தே
இவளுடைய போக்யதையில் உண்டான வைபவம் சொல்லிற்றாகக் கடவது –
அவன் ஸ்வரூபம் எல்லை காணிலும் காண ஒண்ணாது காணும் இவளுடைய போக்யதையில் ஏற்றம் இருக்கும் படி –
இவளுடைய ஸ்வரூபம் அணுவாய் இருக்கச் செய்தே போக்யதையாலே ஆவணத்தில் இவள் ஸ்வரூபத்துக்கு
வைபவம் சொல்லலாமோ என்னில் –
முருக்கம் பூவுக்கும் செங்கழுநீர் பூவுக்கும் நிறம் ஒத்து இருக்கச் செய்தே
தனக்கு விசேஷணமான பரிமளத்தாலே செங்கழுநீர் பெரு விலையனாய்த்து என்றால்
வேறொன்றால் வந்த உத்கர்ஷம் ஆகாது இறே-
அப்படி இவள் ஸ்வரூபமும் அவனுக்கு சேஷமாய் இருக்கச் செய்தேயும் அவனிலும் இவளுக்கு ஏற்றம் சொல்லிற்று
என்றால் வேறோன்றாலே வந்த ஏற்றம் ஆகாது இ –
ஆகையால் ஜகத்து இருவருக்கும் சேஷமாயிருக்கையாலே ஜகத்துக்கு பூஜ்யையாய் இருக்கும் –
ஸ்வரூபேண பிரணயித்வத்தாலே அவனுக்குப் பூஜ்யையாய் இருக்கும் –
த்ரயாணாம் பரதாதீ நாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -என்றும்–
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபஷா சமன்வித சப்தோஸ்அயம் -என்றும்
பூஜ்ய வாசகமாய் இருக்கையாலே பூஜ்யை என்கிறது –
இது பிரமாண சித்தமே யன்று -லோக சித்தம் எங்கனே என்னில்
பிரஜைகளைக் குறித்து தாய் ஸ்வாமிநியாய் பர்த்தாவைக் குறித்து பரதந்த்ரையாய் இருக்கச் செய்தே –
இவள் போக்யதைப் பற்ற அவன் பரதந்த்ரனானான் என்ன அவளுடைய ஸ்வா தந்த்ர்யம் சொல்லாது இறே –
இவன் பிரணயித்வமாம் அத்தனை இறே –
இப்பிரணயித்வத்தாலே பிரஜைகளுக்கு ரஷணமாய்த் தலைக் கட்டுகிறது -எங்கனே என்னில்
தாச தாசிகள் பணி செய்கைக்காகவும் புத்ராதிகளுடைய வ்யுத்பத்திக்காகவும் பிதாவானவள் நியமித்தால்
மாதாவின் நிழலிலே ஒதுங்கி நின்று அவன்
இவளுக்கும் உதவியவனான அளவிலே இவற்றின் குற்றத்தைப் பார்க்கக் கடவதோ -என்று
இவள் காட்டிக் கொடுக்கக் காணா நின்றோம் இறே
ஆகையாலே புருஷகாரமும் லோக சித்தம் -ஆக இப்பதத்தால் புருஷகாரம் சொல்லிற்று –
ஆக இங்குத்தை ஸ்ரீ மத் பதத்துக்கு அவனில் இவளுக்கு ஏற்றம் என் என்னில் –
பிராப்தி இருவருக்கும் ஒத்து இருக்கச் செய்தே
இவை தன்னுடைய அபராதங்களைப் பொறுப்பித்து-அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் ஏற்றம் சொல்லிற்று –
இனி மேல் பிரத்யயம்–
ஸ்ரயதே என்கிற வர்த்தமானத்தை வியாக்யானம் பண்ணுகிறது –மன் -என்று மதுப்பைச் சொல்லுகிறது –
நித்ய யோகேமதுப் என்னக் கடவது இறே –
இறையும் அகலகில்லேன் -என்றும்
நித்ய அநபாயி நீ -என்றும் சொல்லுகிறபடியே ஒருகாலும் பிரியாது இருக்கும் என்கிறது –
இத்தால் பலித்தது என் என்னில்
புருஷகார பூதையான இவள் நித்ய வாசம் பண்ணுகையாலே ஆஸ்ரயிப்பார்க்கு காலம் பார்க்க வேண்டா என்கிறது –
அதாவது -ஈஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் தம்தாமுடைய சம்சாரித்வத்தையும் அனுசந்தித்துக்
கை வாங்க வேண்டாதபடி இருக்கை-
அவனுடைய சர்வஜ்ஞத்வத்தையும் தம்தாமுடைய சாபராதத்வத்தையும் அனுசந்தித்து இழக்க வேண்டாத படி இருக்கை –
ஆகையாலே அவனும் சர்வ காலமும் ஆஸ்ரயணீயனுமாய் இருக்கும் –
இவளுடைய சந்நிதியாலே சர்வகாலமும் ஆஸ்ரயிக்கலாய் இருக்கும்
ஏதேனும் காலமும் ஏதேனும் அதிகாரமுமாம் –
ருசி பிறந்த போதே இவர்களை அவன் திருவடிகளிலே சேர்ப்பிக்கும் பாசுரம் என் என்னில்
ஒரு தலை ஜன்மம் ஒரு தலை மரணம் நடுவே காம குரோத லோப மோஹ மத மாத்சர்யங்கள் –
தேவர் பெருமை இது அவற்றின் சிறுமை இது
உமக்கு சத்ருசமான பச்சை இவர்களால் இடப் போகாது –
இவர்கள் இடம் பச்சை கொண்டு வயிறு நிறையும் சாபேஷர் அல்லர் நீர் –
ஆன பின்பு இவர்களைப் பார்த்தால் உம்மை வந்து கிட்ட ஒண்ணாது –
உம்மைப் பார்த்தாலும் உம்மைக் கிட்ட ஒண்ணாது –
நாமே இவற்றுக்கு விலக்கடிகளைப் பண்ணி வைத்து இவர்களைக் கை விடுகையாவது
உம்முடைய நாராயணத்வம் ஒருவாயாய் உம்முடைய ரஷண ஸ்வரூபத்தையும் இழக்கும் இத்தனை காணும்
உம்முடைய ஸ்வரூப சித்த்யர்த்தமாக இவர்களைக் கைக்கொள்ள வேணும் காணும் –
உம்முடைய பேற்றுக்கு நான் காலைக் கட்டி இரக்க வேண்டிற்றோ-என்று இவள் சொன்னால்
அவன் சொல்லுமது ஏது என்னில் –
அதண்ட்யான் தண்ட்யன் ராஜா -என்கிறபடியே சாபராதரை தண்டிக்கச் சொல்லுகிற சாஸ்திரம்
ஜீவியாத படியோ நம் ஸ்வரூபம் சம்பாவிப்பது என்னும் –
ஆனால் சாஸ்திரம் ஜீவிக்க வேணுமாகில் உம்முடைய கிருபை ஜீவிக்கும் படி என் அத்தைச் சொல்லிக் காணும் -என்னும் இவள் –
ஆனாலும் சாஸ்திர அனுவர்த்தனம் பண்ண வேணும் காண்-என்னும் அவன் –
ஆனால் உம்முடைய கிருபையும் ஜீவித்து சாஸ்திரமும் ஜீவிக்கும் படி வழியிட்டுத் தருகிறேன் –
அத்தைச் செய்யப் பாரும் என்னும் இவள்
ஆனால் சொல்லிக் காண் என்னும் அவன் –
உம்முடைய பக்கலிலே வைமுக்யத்தைப் பண்ணி விஷய பிரவணராய் இருக்கிறவர்கள் பக்கலிலே
தண்டிக்கச் சொல்லுகிற சாஸ்ரத்தை விநியோகம் கொள்வது —
உம்முடைய பக்கலிலே ஆபிமுக்யத்தைப் பண்ணி என்னைப் புருஷகாரமாகக் கொண்டு உம்மை
ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே உம்முடைய கிருபையை விநியோகம் கொள்வது -என்று அவனைக் கேட்பித்துச் சேர விடும் –
இப்படி காரியப்பாடாகச் சொல்லி புருஷகாரமாகைக்காகவே நித்யவாசம் பண்ணுகிறது
அவனுக்கு போக ரூபமாக வன்றோ என்னில் -ஆம்
போக ரூபமாகை எங்கனே என்னில் அவளோட்டை சம்ச்லேஷத்தாலே அவனுக்குப் பிறந்த ஹர்ஷத்துக்குப் போக்குவீடாக
இவளுக்கு என்ன உபகாரத்தைப் பண்ணுவோம் என்று தடுமாறுவதொரு தடுமாற்றம் உண்டு –
அதுதான் பிரணய கலஹத்தில் பரிமாறும் பரிமாற்றத்திலே என்றும் தோற்றுமோபாதி இவன் தடுமாறி நோக்கும்
அந்நோக்கு இவன் கண்ணிலே தோற்றும் –
அப்போதைத் தடுமாற்றத்துக்குப் போக்கடி காட்டாத போது அவனுடைய ஆஸ்ரயம் இழக்க வரும் என்னும் அத்தாலே
இவற்றினுடைய அபராதத்தை பொறுத்துக் கைக் கொள்ளீர் -என்று தன் திருப்புருவத்தாலே ஒரு நெளி நெளிக்கும் –
இவன் அவள் புருவம் நெளிந்தவிடத்திலே குடிநீர் வழிக்குமவன் ஆகையாலே இவற்றையும் ரஷித்துத் தானும் உளனாம் –
இது காணும் இவளுக்கும் இவனுக்கும் உண்டான உண்டான சேர்த்தி இருந்தபடி –
ஆகையால் இரண்டு வகைக்கும் பிரணயித்வம் செல்லா நிற்கச் செய்தே
இருவருடைய ஹர்ஷமும் வழிந்து புறப்பட்டுச் சேதனருடைய ரஷணமாய்த் தலைக்கட்டும் –
ஆனால் இருவர்க்கும் பிரணய ரசம் உண்டான போது இவற்றின் உடைய ரஷணமாய் அல்லாத போது
ரஷணம் குறைந்தோ இருப்பது என்னில்
இவளோட்டை சம்ச்லேஷம் நித்யமாகையாலே அனுபவம் நித்யமாய் இருக்கும் –
அனுபவம் நித்யமாகையாலே ஹர்ஷமும் நித்யமாய் இருக்கும் –
ஹர்ஷமும் நித்யமாகையாலே ஹர்ஷத்தால் வந்த நோக்கும் நித்யமாய் இருக்கும் –
அந்த நோக்கு நித்யமாகையாலே ரஷணமும் நித்யமாய் இருக்கும் –
இந்நித்ய ரஷணம் மதுப்பில் நித்ய யோகத்தாலே வந்த ரஷணத்தில் ஏற்றம் -எங்கனே என்னில்
இது இறே சர்வாத்மாக்களுக்கும் பற்றாசு –
அங்கன் அன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் தன் ஸ்வரூப அநுரூப குண விபூதிகளாலே அனுபவித்துச் செல்லா நிற்கச் செய்தே
ஜகத் ரஷணமும் திரு உள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக் கொண்டு போருகிறாப் போலே –
இவளும் அவனுடைய போக்யதையை விளாக்குலை கொண்டு அனுபவியா நிற்கச் செய்தேயும்
பிரஜைகள் உடைய ரஷணமும் திரு உள்ளத்திலே பட்டு நிர்வஹித்துக் கொண்டு போரக் கடவதாய்த்து
வஸ்து ஸ்வ பாவம் இருக்கும் படி –
பிரஜைகள் விஷயத்தில் தான் தேவ தேவ திவ்ய மஹிஷீம் என்கிற மேன்மை அனுவர்த்தியாது –
பிராப்தி இறே அனுவர்த்திப்பது எல்லார்க்கும் ஒக்க வரையாதே தாயாய் இருக்கும் –
பூர்வ அவஸ்தையைப் பார்த்து அஞ்ச வேண்டாதபடி மடியிலே சென்று அணுகலாய் இருக்கும் –
அசரண்ய சரண்யை இ றே –
பகவத் விஷயத்திலும் புறம் புகலார்க்கும் புகலாய் இருக்கும் –
அந்த சர்வ சாதாரணமான ப்ராப்தி இன்றியே விசேஷ சம்பந்தம் உண்டு –
செய்தாரேல் நன்று செய்தார் -என்கிறவனுடைய கையும் வில்லுமாய்ச் சீறினாலும் இவள் திருவடிகளிலே புகலாய் இருக்கும்
ஆகையாலே ஜன்ம வ்ருத்தங்களில் உத்க்ருஷ்டரோடே அபக்ருஷ்டரோடு வாசியற நின்ற நிலையிலே
பகவத் சமாஸ்ரயணம் பண்ணலாவது
அவளோட்டை சம்பந்தத்தாலும் இவள் திரு மார்பிலே நித்ய வாசம் பண்ணுகையாலும் இறே
ஆகையாலே சர்வாதிகாரம் ஸூசிப்பிக்குமது இப்பதத்திலேயாய் இருக்கும் –
ஆக
இப்பதத்தாலே புருஷகாரம் சொல்லி
மதுப்பாலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத புருஷகாரத்தினுடைய நித்ய யோகம் சொல்லிற்று –
—————————–
இப்படி புருஷகார பூதையாய் இருக்கிற இவள் தான் ஒரு குறை சொல்லும் போதும் –
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்
வாத்சல்யாதிசயத்தை யுடையவன் ஆகையாலே மேல்
நாராயணன் -என்கிறது
தன்னடியார் திறத்தகத்து-
அவன் தன்னடியார் என்கைக்கும் இவள் சிதகுரைக்கைக்கும் ஒரு சேர்த்தி இல்லை இறே –
பெற்ற தாய் நஞ்சிடக் கூடாது இறே –
இனி இவள் அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தையும் இவற்றினுடைய சாபராதத்தையும் அனுசந்தித்து
இவற்றின் பக்கலில் என்னாய் விளைகிறதோ -என்று அதிசங்கை பண்ணி இவனைச் சோதிக்கிறாள் இறே
அவன் இவளுடைய மார்த்த்வத்தையும் ஔதார்யத்தையும் அனுசந்தித்து
இனி இவள் இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ என்று இவளை அதிசங்கை பண்ணுமவன்-
தன் அபேஷைக்காக இவர்கள் ரஷணம் பண்ணுகிறானோ-
தன் அபேஷை இல்லாத போது ரஷணம் திரு உள்ளத்தில் உண்டோ இல்லையோ என்று சோதிக்கிறாள் ஆகவுமாம்-
ஆக இப்படி ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் நோக்கும்
இவருடைய நிழலையும் பற்றி இறே உபய விபூதியும் கிடக்கிறது –
தன்னைப் புருஷகாரமாகக் கொண்டு அவனை உபாயமாகப் பற்றின அநந்ய பிரயோஜனரை
ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் படி இறே –
இனி இவள் அவனை அதி சங்கை பண்ணிச் சிதகுரைக்கும் அன்று நம்மைப் பற்றினார்க்கு
அக்குறை இல்லை காண் என்று அவளோடும் கூட மன்றாடும் குணாதிக்யம் சொல்லுகிறது –
அக் குற்றம் -என்கிறான் இறே –
இவள் சொன்ன குற்றம் தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே
இல்லை நான் இப்போது கண்டேன் -என்று சாஷி பூர்வகமாகக் காட்டிக் கொடுத்தாலும்
ஆனால் அவர்கள் தான் தர்மா தர்மங்களும் ஒரு பரலோகமும்
ஒரு பர தேவதையும் இல்லை என்று செய்கிறார்களோ —
ப்ராமாதிகத்துக்கு நாம் உளோம் என்று அன்றோ செய்கிறது –
ஆன பின்பு கூட்டுகை உங்கள் தேவையாம் இத்தனை போக்கி ஒரு மிதுனத்துக்கு இவர்கள் குழைச்சரக்காய்
இருக்கப் பிரிக்கை உங்கள் தேவையோ என்று
கூட்டின ஸ்ரீ வைஷ்ணவர்களோடும் கூட்டின பிராட்டியோடும் மறுதலித்து நோக்கும் குணா திக்யம் சொல்லுகிறது –
நாராயண –
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்ய ஸ்வாமித்வங்கள்-இவை நாராயண சப்தார்த்தம் -ஆனாலும்
இந்நாராயண சப்தத்துக்கு சௌலப்யத்திலே நோக்கு –
வாத்சல்யம் ஆவது
வத்சத்தின் பக்கல் தாய் இருக்கும் இருப்பை ஈஸ்வரன் ஆ ஸ்ரீ தர் பக்கலிலே இருக்கும் என்கிறது -அதாவது
சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு தன் கடையாலே புறப்பட்ட கன்றினுடைய தோஷத்தைத் தன் வாயாலே
தழும்பற நக்கித் தன் முலைப் பாலாலே தரிப்பிக்குமா போலே
ஆ ஸ்ரீ தருடைய தோஷங்களைத் தனக்கு போக்யமாக விரும்பித் தன் கல்யாண குணங்களாலே
அவர்களை தரிப்பிக்கை -எங்கே கண்டோம் என்னில்
தஸ்ய தோஷ -அவனுடைய தோஷம் அன்றோ -சரணாகதனுடைய தோஷம் அன்றோ –
அது நமக்கு அபிமத விஷயத்தில் அழுக்கு அன்றோ -என்று மேல் விழுந்து விரும்பும் படி இ றே வாத்சல்யம் இருப்பது —
தமக்குப் பரிவரான மஹா ராஜரையும் தம்பால் சக்தியான பிராட்டியையும் விட்டு அவன் தோஷம்
ஏதேனுமாகிலும் இன்று வந்த சரணாகதனை விடில் நாம் உளோம் என்று அனுகூலரோடேயும்
மலைந்து ரஷிக்கும் படி இறே வாத்சல்ய குணம் இருப்பது –
சீலம் ஹி நாம மஹதோ மனதைஸ் சஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வ பாவத்வம் சீலம் -அதாகிறது
சிறியவனோடே பெரியவன் வந்து கலவா நின்றால்
தன் பெருமை இவன் நெஞ்சில் படாமே நம்மோட்டையாவன் ஒருவன் என்று புரையறக் கலக்கலாம் படி இருக்கை –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாய் அப்ராக்ருதனாய்
உபய விபூதி யோகத்தாலும் பெரிய ஏற்றத்தை யுடையனாய் அவன் எவ்விடத்தான் -என்னும்படி இருக்கிறவன்
நித்ய சம்சாரிகளுக்கும் அவ்வருகே கழியப் போனான் -என்னும் இவனோடு வந்து கலவா நின்றால்
இவன் அஞ்சி இறாய்க்க வேண்டாத படி தானே மேல் விழுந்து புரையறக் கலக்கை சீல குணமாவது –
இப்படி கலக்கப் பெற்றது இவனுக்கு கார்யம் செய்ததாக வன்றியே அது தன் பேறாக நினைத்து
இருக்கை ஸூ சீலம் –
ஸ்வாமி த்வமாவது-
கர்ஷகன் பயிர்த் தலையிலே குடில் கட்டி நோக்குமா போலே உடைமை உனக்கல்லேன் என்று முடித்துக் கொண்ட வன்றும்
தன்னுடைமையானது தோற்றுத் தான் இவற்றை விட மாட்டாதே இவற்றினுடைய ரஷண சிந்தை பண்ணி இருக்கிற இருப்பு –
அதாவது
இவனுக்குத் தன் சௌஹார்த்தத்தாலே
யாத்ருச்சிக ஸூக்ருதத்தை யுண்டாக்கி
அதடியாக அத்வேஷத்தை உண்டாக்கி
அதடியாக ஆபிமுக்யம் உண்டாக்கி –
அதடியாக ருசியை உண்டாக்கி —
அதடியாக சத் சம்பாஷணத்தை உண்டாக்கி –
அதடியாக ஆச்சார்ய சமாஸ்ரயணத்தை யுண்டாக்கி –
சம்யக் ஜ்ஞானத்தைப் பிறப்பித்து –
சித்த சாதனத்திலே நிஷ்டையைப் பிறப்பித்து
கண் அழிவற்ற ப்ராப்யத்திலே ருசியைப் பிறப்பித்து
விரோதி நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்து
அர்ச்சிராதி மார்க்க பிரவேசத்தை யுண்டாக்கி
லோக ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து
ஸ்வரூப பிரகாசத்தைப் பிறப்பித்து
பரபக்தி பரஜ்ஞான பரம பக்தியையும் பிறப்பித்து
இவை தொடக்கமான பகவத அனுபவத்தையும்
இவ்வனுபவ ஜனிதமான ப்ரீதியாலே பண்ணப் படுவதான நித்ய கைங்கர்யத்தை ஏவிக் கொள்வதாக வந்து
இப்படிக்குப் பரம சேஷித்வம் ஸ்வாமி த்வமாவது –
சௌலப்யம் ஆவது
அதீந்த்ரியமான பரம வஸ்து இந்த்ரிய கோசரமாம் படி எளிய சம்சாரிகளுக்கும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
தன்னை எளியனாக்கிக் கொடுக்கை –
அதாகிறது -மாம் -என்று கொண்டு –
சேநா தூளியும்-கையும் உழவு கோலுமாய் சாரதியாய் நிற்கிற நிலையை இறே உபாயமாகப் பற்று என்று விதி வாக்யத்தில் சொல்லிற்று –
அந்த சௌலப்யத்தை யாய்த்து இங்குச் சொல்லுகிறது –
அதுதான் பரத்வம் என்னலாம் படி இறே இங்குத்தை நாராயண சப்தத்தில் சௌலப்யம் –
எங்கனே என்னில் –
அங்கு மய்யாசக்தம நா பார்த்த -என்று கொண்டு
தன் பக்கலிலே ஆசக்தமான மனசை யுடைய அர்ஜுனன் ஒருவனையும் நோக்கி இறே ஸூலபனாய்த்து
இங்கு எல்லார்க்கும் ஒக்க ஸூலபனாய் இருக்கும் -அங்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை
நாம் அறியாத நாளிலும் உண்டாய்
நாம் அறிந்த நாளிலும் உண்டாய் இருக்கிற ஏற்றம் இந்த சௌலப்யம் –
இக்குணங்கள் உண்டானாலும் கண்ணுக்கு விஷயமானால் அல்லது போக்கி இக்குணங்கள் ஜீவியாமையாலே
சௌலப்யம் பிரதானம் ஆகிறது –
இக்குணங்கள் உபாயமாம் இடத்தில் –
சௌலப்யம் -எளியனான இவன் அளவிலே தன்னை எளியனாக்குகையாலே இவனே உபாயம் என்கிறது –
ஸூசீலம் -இப்படி கலக்கிற இது தன் பேறாகக் கலக்கையாலே அவனே உபாயம் என்கிறது –
ஸ்வாமித்வம் சம்சாரி சேதனனை நித்ய ஸூரிகள் கோவையிலே கொண்டு போய் வைத்தால்
நிவாரகர் இல்லாத நிரந்குச ஸ்வாமி த்வம் உபாயம் என்கிறது –
ஆக இங்குச் சொன்ன
நாலு குணங்களும் பற்றுகைக்குப் பற்றாசானவோபாதி
ஜ்ஞான சக்த்யாதி குணங்களும் மோஷ பிரதத்வத்திலே விநியோகம் -எங்கனே என்னில்
இவனும் விடுமது அறிந்து விடுகைக்கும் பற்றுமது அறிந்து பற்றுகைக்கும் சர்வஜ்ஞனாக வேணும் –
ஜ்ஞானம் உண்டானாலும் பிரயோஜனம் இல்லை சக்தன் அன்றாகில் –
அது அநாதி காலார்ஜிதமான பாபங்களைத் துணித்துத் தாவி அக்கரைப் படுத்தும் போது சர்வ சக்தியாக வேணும் –
சக்தனானாலும் பிரயோஜனம் இல்லை இறே நிரபேஷனன்றாகில்-
நிரபேஷனாகிலும் பிரயோஜனம் இல்லை இறே பிராப்தி இல்லையாகில் –
ஆக
சர்வஜ்ஞத்வமும் -சர்வசக்தித்வமும் -அவாப்த சமஸ்த காமத்வமும் சர்வ சேஷித்வமும் இவை நாலு குணமும்
சர்வ சாதாரணமான ரஷணத்துக்கு உடலாய் இருக்கும் –
ஓரளவிலே ஆ ஸ்ரீ தகத மோஷ பிரதத்வத்துக்கும் உடலாய் இருக்கும் –
சஹாயாந்தர நிரபேஷமாகப் பலப்ரதன் அவனாகில்
இவர்களுக்கும் அவனுக்கும் பிராப்தி ஒத்து இருந்ததாகில்
புருஷகார அபேஷை என் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
வாரீர் ஜீயரே -அவள் சந்நிதிக்கும் அவன் சந்நிதிக்கும் உள்ள வாசி
அந்வய வ்யதி ரேகங்களில் கண்டு கொள்ளீர் -என்று அருளிச் செய்தார் –
அதாவது ஜனனி பக்கல் அபராதம் காகத்துக்கும் ராவணனுக்கும் ஒத்து இருக்கச் செய்தே அவள் சந்நிதி யுண்டாகையாலே
அபராதத்தில் கை தொடனான காகம் பிரபன்னர் பெரும் பேற்றைப் பெற்றுப் போய்த்து-
அத்தனை அபராதம் இன்றிக்கே கடக்க நின்று கதறிப் போந்த ராவணன் அவள் சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்டான் –
இனித்தான் மாத்ரு சந்நிதியிலே பிரஜைகளை அழிக்க மாட்டாமையும் ஓன்று உண்டு இறே பிதாவுக்கு
இனி தமேவ சரணம் கத -என்றதும் –
ந நமேயம் என்றதும் அபிரயோஜகம் -எங்கனே என்னில் காகத்துக்கு உதவுகிற போது அகவாயில் நினைவு அது விறே
இல்லையாகில் ஸ்வ கமாலயம் ஜகாம-என்று போகப் பொறானே-செயல் மாட்சியாலே விழுந்தது இத்தனை இறே
இம்மாத்ரம் ராவணனுக்கும் உண்டாய் இருக்க அது கார்யமாய்த்து இல்லை இறே இவள் சந்நிதி இல்லாமையாலே –
இது காணும் அவள் சந்நிதிக்கும் அவன் சந்நிதிக்கும் வாசி என்று அருளிச் செய்தார் –
மற்றும் பற்றினாரையடைய ஆராய்ந்து பார்த்தவாறே இவள் முன்னாகவாய் இருக்கும் –
மஹா ராஜர் உள்ளிட்ட முதலிகளும் ஆச்சார்யர்களும் இவள் முன்னாகவாய்த்துப் பற்றிற்று –
அந்வய வ்யதிரேகங்களில் பலா பலங்கள் இன்றியே ஆஸ்ரயித்து ஏற்றம் உண்டு -எங்கனே என்னில் –
அவனுடைய சீலாதி குணங்களோடு ஹேய குணங்கள் கலசி இருக்குமா போலே யல்ல வாய்த்து
இவளுடைய சீலாதி குணங்கள் இருப்பது –
அவனுடைய நிரங்குச ஸ்வாதந்த்ர்யமும் –
குரோத மாஹாரயத் தீவரம் என்று அழித்துக் கார்யம் கொள்ளலாய் இருப்பன சிலவும் உண்டு இறே-
அதுவும் இல்லை இறே இவளுக்கு -அது உண்டாகில் இவளுக்கும் ஒரு புருஷகார அபேஷை வேண்டி இருக்கும் இறே –
அது இல்லாமையாலே இவள் புருஷகாரமாக வேணும் -இல்லையாகில் பல சித்தி இல்லை -எங்கே கண்டோம் என்னில் –
ராவண கோஷ்டியிலே ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று பிராட்டிக்காக பரிந்தும்
தூதரை ஹிம்சிக்கலாகாது என்று திருவடிக்காகப் பரிந்தும் வார்த்தை சொன்னவனைப் துறந்து –
த்வாம் துதிக் குல பாம்சனம் -என்று புறப்பட விட ராவண பவனத்தில் நின்றும் புறப்பட்டு வந்து
வாக் காயங்கள் மூன்றாலும் சரணம் புகுந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து –
ந த்யஜேயம் கதஞ்சன -என்று ரஷித்த நீர்மை இறே பெருமாளுக்கு உள்ளது –
இவளுக்கு அங்கன் அன்று – மநோ வாக் காயம் மூன்றிலும் ராவணாப ஜெயத்தையும் ஸ்வப்னம் கண்டோம்
என்று புறப்பட்டு த்ரிஜடை விண்ணப்பம் செய்ய அவளும்
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மகாதோ பாத் -என்றும்
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்றும்
நம்மாலே நலிவு படுகிற இவள் தானே நம்மை ரஷிக்கும் காணுங்கோள்-என்று சொல்லியும் –
இவ்வுக்தியே அன்றியே பிராட்டி தானும் இவர்கள் நடுவே இருந்து பவேயம் சரணம் ஹி வ -என்று
நானுளளாக நீங்கள் அஞ்ச வேண்டா என்று அருளிச் செய்தும்
இவ்வுக்தி மாத்ரமாய்ப் போகை யன்றியே ராமவிஜயம் உண்டாய் ராவணனும் பட்டான்
மஹா ராஜர் உள்ளிட்ட முதலிகளுக்கும் ஒரு குறையில்லை என்று நம் மைதிலிக்குச் சொல்லிவா என்று திருவடியை வரவிட
அவன் வந்து விண்ணப்பம் செய்ய
இதைக் கேட்டருளி ஹர்ஷத்தாலே இவனுக்கு என்ன உபகாரத்தைப் பண்ணுவோம் -என்று தடுமாறுகிற அளவில்
எனக்குப் பண்ணும் உபகாரம் ஆகிறது தேவர் விஷயத்தில் நலிந்த இவர்களை விட்டுக் காட்டித் தருகையே என்ன
அதைக் கேட்ட பின்பு அவன் பண்ணின உபகார பரம்பரைகளையும் பார்த்திலள் –
இவர்கள் இப்போது நிற்கிற ஆர்த்தியே திரு உள்ளத்திலே பட்டு –
க குப்யேத் வானரோத்தம -என்றும்
ந கச்சின் ந அபராத்யதி -என்றும்
பெருமாளுக்கு அந்தரங்க பரிகரமான திருவடியோடே மறுதலித்து ரஷித்த இவள்
நம்முடைய குற்றங்களைத் தன் சொல் வழி வரும் பெருமாளைப் பொறுப்பித்து
ரஷிப்பிக்கச் சொல்ல வேணுமோ இது இறே இவள் நீர்மை இருந்த படி –
இதுவே யன்று -தன் பக்கலிலே அபராதத்தைப் பண்ணின ராவணனைக் குறித்து
மித்ர மௌபயிகம் கர்த்தும் -என்றும் –
தேன மைத்ரி பவது தே-என்றும்
அவனுக்கு மாசூச என்னும் வார்த்தை சொன்னவள் இறே –
ஆகையாலே நித்ய சாபராத ஜந்துக்களுக்கு நித்ய சஹவாசம் பண்ணுமிவள் புருஷகாரமாக வேணும் –
கல்யாண குண விசிஷ்டனுமாய் இருக்கிற ஈஸ்வரன் உபாயமாம் இடத்தில்
இப்புருஷகார பூதையான இவள் இவனுடைய ஆபரணங்களோ பாதி அனன்யார்ஹ சேஷை பூதையாகில்
இவள் புருஷகாரம் ஆனால் அல்லது பல சித்தி இல்லை –
பலத்துப் பூர்வ ஷண வர்த்தியாய் இருக்குமதிலே இறே உபாய பாவம் இருப்பது –
ஆனால் இப்புருஷகாரத்துக்கு உபாய சரீரத்திலே அந்தர்பாவம் உண்டாக வேண்டாவோ என்னில்
குணங்களும் விக்ரஹங்களும் அசேதனம் ஆகையாலே உபாய ஸ்வரூபத்தில் அந்தர்பாவம் உண்டு
குணா நாம ஆஸ்ரய ஸ்வரூபம் ஆகையாலே இவளுக்கும் ஸ்வரூப அனுபந்தித்வம் உண்டேயாகிலும்
இவள் சேதநாந்தர கோசரை யாகையாலே உபாய சரீரத்தில் இவளுக்கு அந்தர்பாவம் இல்லை –
இவள் புருஷகாரத்திலே சாதன பாவம் கிடையாதே யாகிலும் இவள் சந்நிதியை அபேஷித்துக் கொண்டு யாய்த்து உபாயம் ஜீவிப்பது –
ஆகையால் இவள் பக்கல் சாதன பாவம் கிடையாது
எங்கனே என்னில் –
ராஜ மகிஷியை புருஷகாரமாகக் கொண்டு ராஜாவின் பக்கலிலே பல சித்தி உண்டாம் என்று சென்றால்
அவன் பக்கல் இரக்கம் இல்லாத போது புருஷகாரத்துக்கு பல பிரதான சக்தி இல்லாமையாலே
இப்புருஷகாரத்தில் சாதன பாவம் கிடையாது –
அந்ய நிரபேஷமாகப் பல பிரதன் ஆகையாலே அவனே உபாயம்
—————–
சரனௌ-என்று
மாம் என்கிற இடத்தில் சாரத்திய வேஷத்தோடு நிற்கிற விக்ரஹமும் இப்பதத்திலே அனுசந்தேயம் –
சரனௌ என்கிற இது திருவடிகள் இரண்டையும் -என்றபடி –
ஸ்தநந்த்ய பிரஜைக்கு ஸ்தநம் போலே அடிமையிலே அதிகரித்தவனுக்கு திருவடிகளினுடைய உத்தேச்யதையைச் சொல்லுகிறது –
சேஷபூதன் சேஷி பக்கல் கணிசிப்பது திருவடிகள் இரண்டையும் இறே –
மாதாவினுடைய சர்வ அவயவங்களிலும் பிரஜைக்கு ப்ராப்தி உண்டாய் இருக்க
விசேஷித்து உத்தேச்ய ப்ராப்தி ஸ்தநங்களிலே யுண்டாகிறது-தனக்கு தாரகமான பாலை மாறாமல் உபகரிக்கையால் இறே
அப்படி சேஷபூதனுக்கும் சேஷியினுடைய சர்வ அவயவங்களிலும் பிராப்தி யுண்டாய் இருக்க
விசேஷித்துத் திருவடிகளில் உத்தேச்ய பிராப்தி இவனுக்கு தாரகமான கைங்கர்யத்தை மாறாமல் கொடுத்துப் போருகை இறே –
இத்தால் திவ்ய மங்கள விக்ரஹ சத்பாவம் சொல்லிற்று –
கீழ்ச் சொன்ன புருஷகாரமும் குணங்களும் இல்லையே யாகிலும் விக்ரஹம் தானே போரும் உபாயமாகைக்கு –
எங்கே கண்டோம் என்னில் –
சிந்தயந்தி தன் ஸ்வரூப அனுசந்தானத்தைப் பண்ணி யன்று இறே முடிந்தாள்-
கிருஷ்ணனுடைய ஸ்வரூப குணங்களில் அகப்பட்டவள் அன்று –
காமுகை யாகையாலே அவன் விக்ரஹத்தில் அகப்பட்டாள்-
அவ்வடிவு அழகு தானே அவள் விரோதியையும் போக்கி அவ்வருகே மோஷத்தையும் கொடுத்தது இறே –
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வ ரூபிணம்-நிருச்ச்வாசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-என்கிறபடியே
ஸ்வரூப ஸ்வ பாவங்கள் அறியாத சிந்தயந்தி யாகையாலே
விக்ரஹம் தானே ஸ்வரூப குணங்களுக்கும் பிரகாசகமுமாய் –
சம்சாரிகளுக்கு ருசி ஜனகமுமாய் –
முமுஷூக்களுக்கு ஸூ பாஸ்ரயமுமாய் –
நித்யருக்கும் முக்தருக்கும் போக ரூபமாயும் இருக்கும் -எங்கே கண்டோம் என்னில்
ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ -என்று நெஞ்சு பறியுண்டு அகப்பட்டது விக்ரஹத்திலே-
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமத -என்று தான் மதித்தார்க்குப் பரிசிலாகக் கொடுப்பது விக்ரஹத்தை –
அங்குள்ளார் சதா பச்யந்தி இறே –
——————
ஆக இவ் வுபேத்துக்கும் உறுப்பாய் இருக்கையாலே அவற்றை ஒதுக்கிக் கூற்றறுத்து
உபாயத்திலே நோக்கும் என்னும் இடம் தோற்றச் சொல்லுகிறது
இச்சரண சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம்-வர்த்ததே சிஸ உபாயார்த்தைக வாசக -என்கிறபடியே
இச் சரண சப்தம் உபாயத்தையும் க்ருஹத்தையும் ரஷிதாவையும் சொல்லுகிறது –
ரஷகம் என்றும் உபாயம் என்றும் பர்யாயம் என்று சொல்லிப் போருவர்கள் –
அங்கன் அன்றியே ரஷகனும் வேறே இப்பிரமாணத்தால்-
ரஷகன் என்றால் சாதாரண ரஷணத்துக்கு உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் பொதுவாய் இருக்கும் –
உபாயம் என்று விசேஷிததால் பிரபன்னனுக்கு உகவாய் இருக்கும்
எவ் வுபேயத்துக்காக என்னில்
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் தப்பாத உபாயம் –
அநிஷ்டமாவது அபிமானம் தொடக்கமாக கைங்கர்யத்தில் அஹங்கார கர்ப்பம் ஈறாக நடுவுண்டான விரோதியான பாபங்கள் –
அவையாவன -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் –
இவற்றின் கார்யமான கர்ப்பம் ஜன்மம் பால்யம் யௌவனம் ஜரை மரணம் நரகம்
இவற்றோடு ஒக்க அனுவர்த்தித்துப் போருகிற தாப த்ரயங்கள் –
இவற்றுக்குக் காரணமான அவித்யை –
இவற்றினுடைய ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில் –
அவித்யை யாகிறது அஜ்ஞ்ஞானம் -அதாகிறது அனாத்மன யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும் –
அவையாகிறன தான் அல்லாததைத் தன்னது என்கையும்
ஈஸ்வரனை யுடைத்தான தன்னை அபஹரித்தும் விபூதியை அபஹரித்துக் கொண்டு இருக்கையும் –
இதுக்கு உள்ளே எல்லா விரோதியும் பிடிபடும் –
இது தன்னை உபதேசத்தில் நீர் நுமது என்றார் -எங்கனே என்னில்
அவித்யா வாசனை கர்ம வாசனை தேக வாசனை அவித்யா ருசி கர்ம ருசி தேக ருசி யதாஜ்ஞானம்
பிறந்தவாறே அவித்யை நசிக்கும் –
புண்ய பாபங்கள் பிரக்ருத் யனுகூலமாய் இருக்கையாலே அனுகூலங்கள் கண்டவாறே அவை நசிக்கும் –
அனுகூலமாவது பகவத் பக்தியாகவுமாம் திரு நாமம் சொல்லவுமாம்-
அன்றிக்கே அவன் தானே உபாயம் ஆகவுமாம் –
இனி இவற்றுக்கு அடியான பிரகிருதி யாகிறது –
இந்த சரீரம் நரகாத் யனுபவத்துக்கு வரும் யாதநா சரீரம்
ஸ்வர்க்காத் யனுபவத்துக்கு வரும் புண்ய சரீரம் –
இவற்றுக்கு கிழங்கான ஸூஷ்ம சரீரமும்
இவை இத்தனையும் நசிக்கை அநிஷ்ட நிவ்ருத்தி யாவது –
இனி இஷ்ட பிராப்தியாவது ப்ராபியாதத்தை ப்ராபிக்கை -அதாவது
பர ஹிம்சா நிவ்ருத்தி பூர்வகமாகக் கைங்கர்யம் எல்லையாக ஸ்வரூப அனுரூபமாக
இவ்வதிகாரிக்கு அவன் பிறப்பிக்கும் பர்வங்கள் -அவையாவன –
தேஹாத்மா அபிமானத்தைப் போக்கி
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானத்தை பிறப்பித்து
லோக பிராப்தியைப் பண்ணிக் கொடுத்து
ஸ்வரூப பிரகாசத்தையும் பிறப்பித்து
பரபக்தி பரஜ்ஞான பரமபக்தியையும் பிறப்பித்து இவை பூர்வகமாக
பகவத் அனுபவத்தையும் பிறப்பித்து
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுத்து விடுகை –
இவன் பற்றின உபாயத்தின் கிருத்யம்-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கிறது இவற்றிலே அந்தர்க்கதம் –
அபஹத பாப்மத்வாதி குண சாம்யமும் போக சாம்யமும் -இவை இறே சாம்யாபத்திகள் —
பரஞ்ஜ்யோதி ரூப சம்பத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
கைங்கர்யமும் அபஹத பாப்மத்வாதி குணங்களும்
பரபக்த்யாதி குணங்களும் ஸ்வரூப ப்ராப்திகளிலே அந்தர்கதமாய் பிரகாசிக்குமவை-
இனி பரபக்தி பரஜ்ஞான பரமபக்திகளும் நித்தியமாய் இருக்கும் -ஸ்வரூபத்தோடே சஹஜமாய் இருக்கையாலே –
ஆனால் இவை நித்யமாகிற படி எங்கனே என்னில்
ஒருகால் அனுபவித்த குணங்கள் ஒரு கால் அனுபவியா நின்றால் நித்யாபூர்வமாய் வருகையாலே
பரபக்த்யாதி குணங்கள் நித்தியமாய் இருக்கும் –
சாலோக்ய சாரூப்ய சாயுஜ்யமானவை கைங்கர்ய உபயோகி யாகையாலே கைங்கர்யத்திலே அந்தர்கதம் –
அபஹத பாபமா-விஜரோ-விம்ருத்யுர் விஜகத்ஸோ அபிபாசஸ் சத்யகாமஸ் சத்ய சங்கல்ப –
அபஹத பாபமா -என்றது போக்கப்பட்ட பாபத்தை யுடையவன் –
விஜர-விடப்பட்ட ஜரயை யுடையவன் –
விம்ருத்யு -விடப்பட்ட ம்ருத்யுவை யுடையவன் –
விசோக -விடப்பட்ட சோகத்தை யுடையவன் –
விஜிகத்ச போக்கப்பட்ட பசியை யுடையவன்
அபிபாச -போக்கப்பட்ட பிபாசை யுடையவன் –
சத்யகாம -நினைத்தவை அப்போதே யுண்டாய் இருக்கை-
சத்ய சங்கல்ப -உண்டானவற்றைக் கார்யம் கொள்ளுமா போலே இல்லாதவற்றை உண்டாக்க வல்லனாகை –
இவை தான் ஸ்வத அன்றிக்கே இருக்கிற விஷயத்தைச் சொல்லுவான் என் என்னில்
கர்ம வச்யனுக்கு உள்ளது அகர்மவச்யனான ஈஸ்வரனுக்கு இல்லை என்று
இவனுக்கு ஜ்ஞானம் பிறக்கைக்காக-
குணங்கள் தான் சேஷ பூதனான சேதனனுக்கும் உண்டாய் அவனுக்கும் உண்டாய் இருக்கும் –
இவை எட்டு குணமும் சேதனனுக்கு உபாயகதம்
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் இல்லை என்கை-
அவனுக்கு விநியோகம் ரஷணத்திலே –
சேதனனுக்கு சத்ய சங்கல்பங்கள் ஆகிறது அவன் நினைத்த கைங்கர்யம் உண்டாய் இருக்கை –
இனி ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் அவனுக்கு ஜகத் ரஷணத்திலே இவனுக்கு கைங்கர்யத்திலே –
அவனுக்கு ஜ்ஞானமாவது யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண -என்கிறபடியே எல்லாவற்றையும்
அறிந்து கொண்டு இருக்குமா போலே
இவன் செய்யக் கடவ கைங்கர்யங்களை ஒரு போகியாக அறிய வல்லனாய் இருக்கும் –
பலமாவது -அவன் இத்தை தரித்து ரஷிக்குமாகில் இவன் கைங்கர்யத்துக்கு தாரண சாமர்த்தியத்தை யுடையனாய் இருக்கும் –
ஐஸ்வர்யம் ஆவது அவன் ஸ்வ வ்யதிரிக்தங்களை நியமித்துக் கொண்டு இருக்குமாகில்
அவனுக்கு கரணங்களை நியமித்துக் கொண்டு அடிமை செய்ய வல்லனாய் இருக்கும் –
அதாவது கைங்கர்யத்துக்கு அனுரூபமாக அநேக சரீர பரிக்ரஹங்கள் நியமிக்க வல்லனாய் இருக்கை –
வீர்யமாவது அவன் இவற்றை ரஷிக்கும் இடத்தில் விகார ரஹிதனாய் ரஷிக்குமாகில்
இவனும் கைங்கர்யங்களைச் செய்யா நின்றால் ஒரு விகாரம் இன்றிக்கே இருக்கை –
சக்தியாவது அவன் சேராதவற்றைச் சேர்ப்பித்து ரஷிக்குமாகில்
இவனும் அநேகம் அடிமைகளை எக்காலத்திலும் செய்யவல்ல அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையனாகை
தேஜஸ்சாவது அவன் அநபிபவநீயனாய் இருக்குமாகில்
இவனும் கைங்கர்யங்களை ஒரு போகியாகச் செய்கிற தேஜஸ்சை யுடையனாய் இருக்கும்
இனி விக்ரஹத்தில் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
குணங்களும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
ஜ்ஞான சக்த்யாதிகளும் அவனுக்கும் இவனுக்கும் ஒக்கும் –
ஆகையாலே பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் என்கிறது –
சேஷித்வ சேஷத்வங்கள் கிடக்கச் செய்தே சாம்யா பத்தியும் உண்டாகிறது –
சஜாதீயம் கலந்தால் அல்லது ரச விசேஷம் உண்டாகாது –
இரண்டு தலைக்கும் போக்கியம் பிறக்கைக்காக சாம்யா பத்தி உண்டாய்த்து என்றால்
சேஷ சேஷித்வங்கள் என்கிற முறை மாறாது -எங்கனே -என்னில் –
இவனைக் கிஞ்சித் கரிப்பித்துக் கொண்டு அவனுக்கு சேஷித்வம் –
அவனுக்கு கைங்கர்யத்தைப் பண்ணிக் கொண்டு இவனுக்கு சேஷத்வம்
இருவர்க்கும் இரண்டும் வ்யவச்திதம் -அவனோடு சமம் என்ன ஒண்ணாது –
இஷ்ட பிராப்தி பண்ணிக் கொடுக்கை யாவது இவன் ஸ்வீகரித்த உபாயத்தில் நிலை நின்றவனுடைய
அதிகார அனுகுணமாக அவன் பண்ணிக் கொடுக்குமவை-
ஆக
இந்த சரண சப்தம் உபாய பாவத்தைச் சொல்லுகையாலே
கீழ்ச் சொன்ன நாராயண சப்தம் தொடங்கி இவ்வளவும் உபாய பரமாக அனுசந்தேயம் –
இவனுடைய உஜ்ஜீவன அர்த்தம் ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் அனுசந்தேயம் –
————————————————————
இப்படி உபாயம் சித்தமாய் இருக்க அநாதி காலம் பலியாது ஒழிந்தது இவனுடைய பிரபத்தி இல்லாமை இறே-
அந்த பிரபத்தியைச் சொல்லுகிறது மேல் –
பிரபத்யே -என்கையாலே –
பிரபத்யே -என்றது அடைகிறேன் -என்றபடி -அதாவது அங்குத்தை வ்ரஜ வினுடைய அனுஷ்டானம்
கத்யர்த்தா புத்த்யர்த்தா என்கிறபடியே அத்யவசாயமான ஜ்ஞான விசேஷத்தைச் சொல்லுகிறது –
பிரபத்யே –
இப்பிரபத்தி தான் மானசமோ வாசிகமோ காயிகமோ என்னில் மூன்றுமாம் -ஒன்றுமாம் –
ஓன்று அமையுமாகில் இரண்டும் இல்லை
மூன்றும் வேணுமாகில் ஓன்று போராது-ஆனால் என் சொல்லுகிறது என்னில்
ஓன்று உள்ள இடத்திலும் பல சித்தி கண்டோம் -மூன்று உள்ள இடத்திலும் பல சித்தி கண்டோம் –
ஆகையாலே இவற்றில் ஒரு நிர்பந்தம் பெரிசன்று –
ஒன்றிலும் சாதன பாவம் இல்லை -மூன்றிலும் சாதன பாவம் இல்லை –
அவனுடைய அனுக்ரஹமே ஹேதுவாம் இத்தனை –
ஜ்ஞானான் மோஷம் ஆகையாலே மானசமாகக் கொள்ளக் கடவோம் –
ஆனால் பலத்துக்கு சாதனம் அன்றாகில் இவை வேண்டுகிறது என் என்னில்
இவ்வதிகாரி முமுஷு என்று அறியும் போது-சம்சாரிகளில் வ்யாவ்ருத்தி வேணும் –
சேதனன் என்று அறியும் போது அசித் வ்யாவ்ருத்தி வேணும் –
இனி அசித் வ்யாவ்ருத்தமான ஜ்ஞானம் சேதன தர்மம் ஆகையாலே ஸ்வரூபமாம் அத்தனை –
ஸ்வரூபாதிரேகியான ஈஸ்வரன் பக்கலிலே உபாய பாவம் கிடக்கும் அத்தனை –
பிரபத்யே என்கிற பதம் மானசத்தைக் காட்டுமோ என்னில் –
பத்லு கதௌ-என்கிற தாதுவிலே ஒரு கதி விசேஷமாய் கத்யர்த்தமாய் புத்த்யர்த்தம் ஆகிறது –
புத்தியாகிறது வ்யவசாயாத்மிகா புத்தி என்றும் -புத்திரத்யவசாயி நீ -என்றும் சொல்லுகையாலே
மநோ வியாபாரமான அத்யவசாயத்தைச் சொல்லுகையாலே பிரபத்திக்கு மானசமே அர்த்தம் –
இம்மானச ஜ்ஞானம் இருக்கும் படி என் என்னில்
க்ரியாரூபமான கர்மமாதல் –
கர்மத்தாலே ஷீண பாபனாய்ப் பிறக்கும் ஜ்ஞானமாதல்
கர்ம ஜ்ஞான சஹக்ருதையான அனவரத பாவனா ரூபியான பக்தியாதல் –
இவை மூன்றும் கைங்கர்யத்துக்கும் உபயோகியாய் சாதன தயா விஹிதமாய் இருக்கையாலே
இவற்றில் உபாய புத்தி த்யாக பூர்வகமாய் –
தான் உபாயம் இன்றியிலே சித்தோபாய ச்வீகாரமுமாய்-அதிகாரிக்கு விசேஷணமுமாய்-
அத்யவசாயாத் மகமுமாய் இருப்பதொரு ஜ்ஞான விசேஷம் பிரபத்தி யாகிறது –
பிரபத்யே என்கிற வர்த்தமானம்
போஜன சய நாதிகளிலே அந்ய பரனான போது ஒழிய -சரீரமும் பாங்காய் சத்வோத்தரனாய் முமுஷுவாகையாலே
அவனை விஸ்மரித்து இருக்கும் போது இல்லை இறே
ஆகையாலே தான் உணர்ந்து இருந்த போது அவனே உபாயம் என்று இருக்கிற நினைவு மாறாது இருக்கும் இறே –
அத்தைச் சொல்லுகிறது –
சம்சார பயமும் ப்ராப்ய ருசியும் கனக்கக் கனக்க-
த்வமேவோபாயபூதோ மே பவேதி பிரார்த்தனா மதி -என்கிற லஷண வாக்யத்துக்கு உறுப்பாய்
பிரார்த்தனை உருவச் செல்ல வேணும் –
நினைக்கிறது அவனையாகையாலே நெஞ்சு விட்டுப் போம் படியாம் –
பரத்வம் எட்டாது -வ்யூஹம் கால்கடியார்க்கு -அவதாரம் அக்காலத்தில் உதவினார்க்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களிலே புக்க போது திருவடிகளைப் பிடித்துக் கொண்டு கிடக்கவும் போகாதே –
இனி இவனுக்கு எங்கும் ஒக்க செய்யலாவது ஜ்ஞான அனுசந்தானம் இறே –
அத்தைச் சொல்லுகிறது வர்த்தமானம் –
இதுவும் அப்படியே அனுவர்த்தனம் ஆகிறதாகில்
பல சித்தி யளவும் செல்ல அனுவர்த்திக்கிற உபாசனத்தில் காட்டில் இதுக்கு வாசி என் என்னில்
ரூபத்தில் பேதிக்கலாவது ஒன்றில்லை -ஹேதுவை விசேஷிக்கும் அத்தனை
நிதித்யாசிதவ்ய என்று விதி பரமாய் வருவதொன்று அது -இவ்வனுசந்தானம் ராக ப்ராப்தம் –
அது சாதன தயா விஹிதம் ஆகையாலே அனுசந்தான விச்சேதம் பிறந்தால் பல விச்சேதம் பிறக்கும் –
ராக அனுவர்த்தனம் ஆகையாலே அனுசந்தான விச்சேதம் பிறந்தால் பல விச்சேதம் இல்லை பிரபன்னனுக்கு –
சாதனம் அவனாகையாலே –
இதுக்கு வேதாந்தத்தில் ஞாயம் கோசரிக்கிறவிடம் எங்கனே என்னில் –
சம்போக ப்ராப்திரிதி சேன்ன வைசேஷ்யாத்-என்று ஜீவாத்மாவோபாதி பரமாத்மாவுக்கும்
அசித் வ்யாவ்ருத்தி ஒத்து இருக்கச் செய்தே –
இத்தோட்டை சம்சர்க்கத்தாலே வரும் துக்க ஸூகாத்யனுபவங்கள் அவனுக்கு வாராது –
ஸ்பர்சம் ஒத்து இருக்கச் செய்தே வாராது ஒழிவான் என் என்னில்
உபாயம் தன்னில் ராகம் பிறக்கிறது விஷய வைலஷண்யத்தாலே இறே
அவ்வோபாதி இந்த சாதனம் தானே
லஷ்மீ பதியாய்
குணா திகமுமாய்
விக்ரஹோபேதமுமாய்
சித்த ரூபமுமாய் இருப்பது ஒன்றாகையாலே
அசேதன க்ரியாகலாபமாய் இருக்கிற சாதனத்தில் காட்டில் இதிலே ராகம் பிறக்கச் சொல்ல வேணுமோ –
திரைமேல் திரையான மிறுக்குகள் மேல் வந்து குலைக்கப் பார்த்தாலும்
பிரமாணங்கள் வந்து குலைக்கப் பார்த்தாலும் –
அவள்
அவன் தானே வந்து குலைக்கப் பார்த்தாலும்
குலைக்க ஒண்ணாத படி யான நிஷ்டையைச் சொல்லுகிறது க்ரியா பதம் -பிள்ளை திரு நறையூர் அரையரைப் போலே
ஆக பூர்வார்த்தம் உபாயத்தைச் சொல்லுகிறது என்றதாய்த்து –
பூர்வ வாக்கியம் முற்றிற்று –
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply