திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

குலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்
டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடி
யார்எம் அடிகளே.

பொ-ரை : குலங்களைத் தரித்திருக்கின்ற நான்கு சாதிகளிலும் கீழே கீழே சென்று மிகச்சிறிய நன்மையுங்கூட இல்லாத சண்டாளர்களாகிலும், வலக்கையில் தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய பெருமையிற்சிறந்தவனான நீலமணி போன்ற நிறத்தையுடைய எம்பெருமானுக்கு அடிமை என்று நினைத்து வேறு பிரயோஜனத்தைக் கருதாதவர்களுடைய அடியார் அவர்தம் அடியார் எமக்குக் கடவுள் ஆவர். வி-கு : இப்பாசுரத்தால் சாதிகள் நான்கு உள என்பது ஆழ்வார் திருவுள்ளமாதல் காண்க. ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே,’ என்பது புறநானூறு. ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் நான்கு வருணங்களைக் கூறியிருத்தல் ஈண்டு நினைவு கூர்க. ‘நலந்தான் எத்தனை இலாத’ என மாறுக. இது, சண்டாளர்களுக்கு அடைமொழி. ‘எத்தனை’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருளது. ‘எத்தனையும்’ என்ற உம்மை தொக்கது.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமைப்பட்டவர்கள் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார்.

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து – 2முறைப்படி நடக்கும் விவாகத்தாலும் அநுலோம பிரதிலோம விவாகத்தாலும் உள்ள குலங்களைத் தரிப்பதான பிராஹ்மண வருணம் முதலான நான்கு பிறவிகளிலும் கீழே கீழே போய். எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்-அந்தச் சண்டாள ஜன்மத்துக்கு அடைத்த ஞான ஒழுக்கங்கள் இன்றியே இருப்பாருமாய், ‘சண்டாளர்’ என்றால் நாம் நோக்காமல் போமாறு போன்று அந்தச் சண்டாளர்களும் விலகிச் செல்லக் கூடியவர்களாகிலும். ‘இவர்கள் உத்தேஸ்யர் ஆகைக்கு என்ன 3வலக்குறி உண்டு?’என்ன, விருத்தவான்கள் அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல்.

வலம் தாங்கு சக்கரத்து மணிவண்ணன் அண்ணற்கு – 1‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்றவர், ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும் மேற் பாசுரத்திலே ‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார். வலப்பக்கத்தே தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப் போக்குகின்ற வடிவழகையுடைய அறப்பெரியவனுக்கு. ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே – 2‘சொரூப ஞானம் முன்பாக ‘அடிமை செய்கையே பிரயோஜனம்’ என்று இருக்குமவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார். 3விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும் இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!

கையும் திரு ஆழி அழகில் தோற்று –
நாலு ஜாதி கீழிலும் சண்டாள பஞ்சம ஜாதி
பிரதி லோபம் -அநு லோபம்
தகப்பனார் சந்ததி –
சண்டாளர் களுக்கு சண்டாளர் -ஆகிலும் –
சண்டாளர் என்றல் நோக்காது இருக்குமா போலே –
உத்தேச்யர் வலக்குறி –
கையும் திரு ஆழி
திருமார்பன் சொல்லி வல ம் தாங்கு சக்கரம் இங்கு
சக்கரத்துக்கு ஏற்ற திரு மேனி மணி வண்ணன்
அடிமை செய்கையே பிரயோஜனம்
வ்ருத்தவான் -அனுஷ்டனாம் உடையவன்
சக்கராயுதம் வட்டமான ஆழி உடையவன்
அபிமானத்தில் ஒதுங்கி
அவரே உத்தேச்யர்
அடியார் அடியார் –அடிகள் ஸ்வாமிகள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading