ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ அழகர் பிள்ளைத் தமிழ்–ஆசிரியர்: ஸ்ரீ கவி காளருத்திரர்–

May 6, 2021

ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழ்
இது மதுரை தமிழ்ச் சங்கத்துச் “செந்தமிழ்” பத்திராதிபர்
ஸ்ரீ திரு. நாராயணையங்காரால் பரிசோதிக்கப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.

முகவுரை

அமிழ்தினுமினிய தமிழ்மொழியகத்தே, அன்பும், இன்பும், அறனும், மறனும் சான்ற அகத்திணை புறத்திணை
தழுவிய துறைவகைகளில் தொன்றுதொட்ட வழக்காயுள்ள பனுவல்கள் எத்துணையோ பலவுள்ளன;
அவற்றுள் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் பிரபந்தவகையுமொன்று.

‘பிள்ளைத்தமிழ்’என்பது, பெறலருஞ் சிறப்புவாய்ந்த மக்கட் குழவியைப் பாராட்டிப்பாடும் இனிய பாடல்களாலாகிய பிரபந்தம் என்று பொருள்படும்.
இங்கு ‘தமிழ்’ என்னுஞ் சொல் பிரபந்தத்தை யுணர்த்துமென்பதை, இந்நூலாசிரியர் தம் ஞானாசிரியர் வணக்கத்துள்,
‘வேதப்பாட்டிற்றருந் தமிழ்’ என்று திவ்யப்பிரபந்தங்களை வழங்குதலாலும்,
இயலிசைநாடக நூல்களை இயற் றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் எனவும், முத்தமிழ் எனவும் வழங்குதலாலுமறிக.

இப்பிரபந்தம், புறப்பொருள் வகையாகிய பாடாண் திணையில் ‘குழவிமருங்கினுங் கிழவதாகும்’ என்ற
தொல்காப்பியச் சூத்திரத்தாற் கொள்ளப்பட்ட *காமப் பகுதியின் பாற்பாட்டு மக்கட் குழவிக்குரித்தாக வழங்கப்படுமாயினும்,
ஒரோவழி, தெய்வத் தோற்றமாகிய மக்கட் குழவியின் பருவத்தை ஆரோபித்தலால், அக்குழவியோ டொற்றுமையுடைய
தெய்வத்துக்கும் உரியதாக வழங்கப்படும். இச்சூத்திரத்தில், கிளப்பதாகும் என்னாது ‘கிழவதாகும்’ என்ற குறிப்பால்
குழவிப்பருவங்கழிந்த முதியரை அவரது குழவிப்பருவம்பற்றிப் பாராட்டிப்பாடினும்,
அப்பாட்டில், அம்முதியரோ-டொற்றுமையுடைய அக்குழவிக்கு உரிமையுடைமையால் அது வழுவாகாதென்று கொள்ளப்படும்.

இப்பனுவலைப் பன்னிருபாட்டியலுடையார் பிள்ளைப்பாட்டென வழங்கி, இலக்கணம் பல தர மியம்பியும்,
ஆன்றோர் கூறிய சில இலக்கணங்களை யெடுத்துக்காட்டியும் போந்தனர்;
வெண்பா மாலை யுடையார் ‘இளமைந்தர் நலம்வேட்ட வளமங்கையர் வகையுரைத்தல்’ என்னும்
குழவிக்கட்டோன்றிய காமப்பகுதியின் பாற்படுப்பர்.

———–

(இளமைந்தர் நலம் வேட்ட வளமங்கையர் வகையுரைத்தலாவது) கண்ணபிரானது இளமைப்பருவ விளையாட்டின்பத்தை
விரும்பிய யசோதைப்பிராட்டியும் இடைப்பெண்களும் பாராட்டியபடியைப் பெரியாழ்வார் அனுகரித்தல் போல்வது.

‘வழக்கொடு சிவணியவகைமையான’ என்ற தொல்காப்பியச் சூத்திரத்துள்,
‘சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்தி வந்த பகுதிக் கண்ணேயான பொருள்களுள்’
குழவிமருங்கினுங் கிழவதாகிய பிள்ளைப்பாட்டுப் பொருள்களையும் அகப்படுத்துக் கூறியிருத்தலால்
இப்பிரபந்தவகை தொல்காபியர்காலத்துக்கு முற்பட்ட சான்றோராற் செய்துபோந்த பழையவழக்குடையதென விளங்குகின்றது.
இதற்கு தாரணமாகப் பெரியாழ்வார் திருமொழியுட் பலவேறு பொருள் வகைகளாலும் பிள்ளைப்பாட்டுப் பாடப் பெற்றிருப்பது காணத்தகும்.
அதன்கண், தால், சப்பாணி, செங்கீரை முதலியவற்றுடன் இக்காலப் பிள்ளைத்தமிழி லில்லாத பிறப்பின் உவகை,
பாதாதிகேசக்காட்சி, தளர் நடை, அச்சோவச்சோ, புறம்புல்கல் அப்பூச்சிகாட்டல், நீராட்டல், பூச்சூடல், காப்பிடல்,
அம்மமூட்டல், முதலிய பலவேறு பொருள் பற்றிய பாராட்டல்கள் உள்ளன.

இங்ஙனம் பல பொருள்களிருப்பவும், ஒருபொருள்பற்றிப் பாராட்டும் பாட்டுப் தனித்தனி பதிகமாகவும்,
பிரபந்தமுழுதும் சதகமாகவும் ஓரளவுடையதாக முடிக்க வேண்டிக் காப்புமுதற் சிறுதேரிறுதியான பத்துப்பொருள்களை
இப்பிரபந்தத்துக்-குரியனவாகப் பிற்காலத்தார் தெரிந்தெடுத்து நியமித்துப் போந்தனர்போலும்.

இங்ஙனம் பழமையும் அருமையும் வாய்ந்த பிரபந்தவகையிற் சேர்ந்த பிள்ளைத்தமிழ்களிற் சிறந்தவற்றுள்
இத் திருமாலிருஞ் சோலை மலை அழகர் பிள்ளைத் தமிழும் ஒன்றென்றெண்ணத் தக்கது.

இவ்வழகர் பிள்ளைத்தமிழ், காப்புமுதற் சிறுதேரிறுதியாகப் பத்துப் பருவப் பாராட்டலையு முடையதாய்ப் பலவேறு சந்தப் பாடல்களாற் சிறந்தது.
காவியங்கற்பார்க்கு, இலக்கிய விலக்கண வழக்கு வகை பலவுமெளிதுனுணர்த்திச் சொற்பொருளுணர்ச்சியைத் திட்பமுறச் செயயுந் திறமையுடையது;
செய்யுட் செய்வார்க்கு விடயமில்லாவிடத்தும் பொருத்தமுள்ள விசேடணங்களை வருத்தமின்றித் தொடுத்துப் பொருளை விசேடித்துப்
பலபடியாகச் செய்யுளை யழகுபெறச்செய்து முடிக்குமாற்றலையளிக்கவல்லது, ஐந்திணை மயக்கம், நானிலவருணனை, கற்பனை,
அலங்காரமுதலிய பலநயங்களமைந்தது. திருமாலினவதாரமாக வந்த கண்ணபிரானது குழவிப்பருவத்தை ஒற்றுமைபற்றி அழகர் மேல்வைத்து,
அக்கண்ணபிரானது இளமைநலம்வேட்ட யசோதைப் பிராட்டியுமிடைப் பெண்களுமாகிய “வளமங்கையர்” படியை அத்தியவசித்து
மிகவும் பாராட்டிப் பாடப்பெற்றுள்ளது.

இப்பிரபந்தத்தின் பாயிரச்செய்யுளில் ‘வள்ளைத்தமிழ்கூர் வேம்பத்தூர் வருமாண்புலவோர்வகுத்தது’ என்று
சொல்லப்பட்டிருத்தலால் இதனையியற்றியவர் பிறந்தவூர் வேம்பத்தூர் என வெளியாகிறது.
இவ்வூரின்கட் டொன்றுதொட்டே ஆசு, மதுர, சித்ர, விஸ்தார கவிகளும், பிரபந்தங்களு மியற்றிப்போந்த பலபுலவர்களிருந்து
வந்திருக்கின்றனரென்பதை, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பின் முகவுரையில் மஹாமஹோபாத்தியாய
பிரும்மஸ்ரீ வெ. சாமிநாதையரவர்களெழுதி-யிருப்பதால் அறியலாம்.
இப்பாயிரச்செய்யுளில் “புலவோர்வகுத்தது” என்ற பன்மைக்கிணங்க வேம்பத்தூர்ச் சங்கப்புலவர்
பலர்கூடி இப்பிரபந்தத்தை யியற்றினரென்று சிலர் ஓர் ஐதிகம் சொல்வது முண்டு.

பழிச்சினர்ப்பரவலின் பன்னிரண்டாம் செய்யுளிலே “பேசுபய வேதாந்ததேசிகன் றாடொழுவல் பேரழகனூறழையலே” என்று
தொழுவலென்னும் ஒருமையால் அழகனூலாகிய இப்பிரபந்தமுழுதும் தழைதற்கு மங்களங்கூறியிருத்தலாலும் மற்றும்
சில பாடல்களிலும் மங்களங்கூறியவிடங்களிலெல்லாம் இவர் இப்பிரபந்தத்தை “என்கவி” என்று தாமே கூறியிருத்தலாலும்,
இப்பிரபந்தம் ஒரேபுலவராற் பாடப் பெற்றிருக்கலாமென்று தோன்றுகின்றது.

இதற்கனுகுணமாகவே சேதுசமஸ்தானவித்வான் ஸ்ரீமத் ரா. ராகவையங்காரவர்கள் அரிதின் ஆராய்ச்சிசெய்தெழுதிச்
“செந்தமிழில்” வெளியிட்ட சேதுநாடும் தமிழும்* என்ற வியாசத்தில் இந்நூலியற்றியவரது பெயர், சாமிகவிகாளருத்திரர் என்று எழுதியுள்ளார்கள்.
கவிகாளருத்ரர் என்பது பிறரால் வெல்லப்படாத ஆற்றல்பற்றி வழங்கும் “கவிராக்ஷஸன்” என்பதுபோல
இவரது கவித்திறமைபற்றிப் பின்பு வந்த சிறப்புப்பெயராயிருக்க வேண்டுமாதலால்,
அப்பெயர்க்குமுற்பட்டு “மாந்தரக் கொங்கேனாகி” என்பழிப்போலப் பண்புத்தொகை நிலைமொழியாய்நின்ற சாமி என்னும் பெயரே
இவரது இயற்பெயராயிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.

பழிச்சினார்ப்பரவலின் பதினான்காம்பாட்டில் இவர் தாம் அழகர் கோவிற் புரோகித நிர்வாகம் பெற்றிருந்த
தோழப்பர் என்னும் ஸ்ரீவைஷணவரால் “தொண்டர்குழுவாகிய அத்தியாபககோஷ்டியிற் சேர்க்கப்பட்டவரென்று கூறியிருத்தலால்,
இவர் பஞ்சசமஸ்காரம் பெற்றுத் திவ்யப் பிரபந்தங்களோதிச் சாத்தினவரென்பதும்
“வேதப்பாட்டிற்றருந் தமிழுமிருநாலெழுத்தும்”……”அலங்காரர் படிவும் என்னெஞ்சகத்துள்நாட்டி” என்றமையால்
பகவத்விபாதிகிரந்தஎங்களும், திருமந்த்ரார்த்த வியாக்யானமும், அர்த்தபஞ்சகாதி ரஹஸ்யங்களும் தோழப்பரிடம் அதிகரித்தவரென்பதும்
“நற்றமிழ்ச்சீர்பதிப்போன் ” என்றதனால் அரிய தமிழிலக்கிய விலக்கணங்களையும் அத்தோழப்பரிடமேகேட்டு நெஞ்சிற் பதியக்
கொண்டவரென்பதும் விளங்குகின்றன. இதனால் இவரது காலம் இற்றைக்குச் சற்றேறத்தாழ நூற்றைம்பது வருடங்கற்குமுன்பு
திருமாலை யாண்டார் சந்ததியாருள் ஒருவர்க்கு மாதுலராய்வந்து அழகர் கோவிற்புரோஹித நிர்வாஹம் பெற்றிருந்த
தோழப்பர்கால மென்றறியத்தக்கது.

இவர் வேதாந்ததேசிகரையும் மணவாளமாமுனிகளையும் வழிபடும் பாசுரங்களால் வடகலை தென்கலையென்னு
முபயவேதாந்தங்களுக்கும் முறையே பிரவர்த்தர்களான அவ்விருவரையும் வழிபாடுபுரியும்
தென்கலை வைஷ்ணவரென அறியலாம்.

————-

இந்நூலிலுள்ள பலபாடல்களையும் பார்க்கும்போது, சங்கநூல்முதலிய பழைய தமிழ்நூற் பயிற்சியிற் றேர்ச்சியுற்ற
பெரும்புலவரென்பதும், பலரும் சொல்லாத வண்ணச் சந்தங்களைக் கற்பித்துக்கொண்டு சொல்லின்பமும் பொருளின்பமும்
சுவையும் அலங்காரமு மிலங்கக் கௌடவிருத்தியிலும் கவிகளியற்று மாற்றலுடையவரென்பதும் விளங்கும்.

இவர் வைஷ்ணவத்தில் மிக்க ஊற்றமுடையராயிருப்பினும் காப்புப் பருவப்பாராட்டிற் பரவுதற்குரியரென விதிக்கப்பட்ட
சிவபெருமான், விநாயகர், முருகவேள் முதலியோரையும் நன்கு பரவுதலால் விதிமுறைதவறாதொழுகு மியல்புடையவரென்பதும் விளங்கும்.

இந்நூல் சிலபத்தாண்டுகளுக்கு முன்னரே ஒருவாறச்சிடப் பட்டிருப்பினும் இப்பொழுது அச்சுப்புத்தகம் எங்கும் கிடைக்காமையால்
இதனை அச்சிட்டாற் காவியங் கற்பார்பலர்க்கும் மிகப்பயன்படுமென்று கருதி மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்த
இரண்டு குறைப்பிரதிகளையாம் ஓரச்சுப் புத்தகத்தையும் வைத்துப் பரிசோதித்துச் “செந்தமிழ்” வாயிலாக வெளியிடலாயிற்று.

இந்நூற் பரிசோதனைக்குக்கிடைத்த இரண்டொரு பிரதிகளும் பிழைமலிந்திருந்தமையால் அவற்றுள் தெரிந்தவற்றைத்
திருத்தித் தெரியாதவற்றை யிருந்தபடியே வைத்துப் பதிப்பிக்கலாயிற்று.
ஆதலாற் செந்தமிழ்ப்பயிற்சியிற் றேர்ச்சியடைந்த பெரியோரிதனைக் கண்ணுற்று, சுத்தப்பிரதிகொண்டு,
திருத்தவேண்டுமவற்றைத் திருத்தி எனது தவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இதனை அச்சிடுதற்குத் தமிழ்ச்சங்கக் கலாசாலை யுபாத்தியாயர் நல்லசிவன்பிள்ளை பிரதி எடுத்துக்கொடுத்தும்,
அச்சுச் சேர்க்கையை ஒப்பு நோக்கித் திருத்தியும் உதவிபுரிந்தது பாராட்டற்பாலது.

திரு. நாராயணையங்கார்.

————-

திருமாலிருஞ்சோலை மலை அழகர் பிள்ளைத்தமிழ்

பாயிரம்

துதிகவி

அருசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

வெள்ளைத்தமிழ்கொடுலகினிற்பல்புலவர் விருப்பால்விளம்பேனைப்
பிள்ளைத்தமிழ்பிள்ளைத்தமிழேபெருமானலங்காரன்பொருட்டால்
வள்ளைத்தமிழ்கூர்வேம்பத்தூர்வருமாண்புலவோர்வகுத்ததனைப்
பிள்ளைத்தமிழேயெனுஞ்சிறுமைபெருமைபெரியதமிழெனுமால்.

காப்பு

நேரிசைவெண்பா.

செய்யாடிருமார்பன் செங்கமலக் கண்ணினான்
மையா ரழகன் மலர்த்தாளின்-மெய்யாகச்
செப்புபிள் ளைத்தமிழ்க்குச் சிந்துரமுன் வந்தளித்த
துப்பனைய பாதந் துணை.

அவையடக்கம்

நீரறா மானதப பெருவாவி பூத்ததொளை
நெடுநாள* முளரியேறி
நீறுபடு பொற்சுண்ண மாடிமது வுண்டு
#மகிழ் நிலவுதெரி தூவியன்னம்.
ஆரறா யுகளவும் புனலறு கருஞ்சேற்றி
னடைவாடு புல்லிதழ்ப்பூ
வாம்பலின் மணந்தது கடுக்குமறை யொருநான்
கரற்றுநெடு மாலாயிரம்
பேரறா தோதுநா வீறுபெறு குருகைமுனி
பிரமன் பாதசரன்முதற்
பெற்றமுனி முதலாம் வரத்தினர் முகத்தினிற்
பெரு(1)விழவு கொண்டிருக்கும்
வாரறா தண்ணாந் தெழுந்ததுணை முலைவாணி
மதிதவழ வமுதுபாயும்
மாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை
வழுத்துமென் னாவாழ்ந்ததே. (1)

—————–

ஆகத் திளந்தென்ற றைவரச் செந்தழ
லரும்பிலைச் சூதத்தின்வாழ்
அஞ்சிறைய யாழிசை மிடற்று(2)குயி லோசையென்
னமிர்தமிசை யுண்டசெவிகள்
காகத்தின் வெம்புலாற் பகுவாய் திறந்தலறு
கடியகுர லாயதீய
கடுவூண் மிசைந்தது நிகர்க்குமருண் மாலையிற்
கதிரொளி பரப்பு(3) மங்கண்
மாகத்து மீன்கண நறுந்துண ரொளிப்பவிசை
வண்டுழு படப்பைமுதலின்
வாவியலை கரை(4)தாவி மீனொளிக் கும்புதுவை
வல்லிதமிழ் கேட்டுநாக
போகத்து வெண்டிரைப் பாற்கடலின் விழிதுஞ்சு
பூந்துழாய்க் கொண்டல்சோலைப்
பொருப்புறையு மாயவன் மாலலங் காரனென்
புன்கவிச் சொற்கொண்டதே. (2)

1) விழைவு-பி-ம்
2) குயில்கூவுமின்னமிர்தமொழி பி-ம்
3) பரப்பியங்கண்.பி-ம்
4) தூவ பி-ம்

————

வழியும் பசுந்தேன் பெருக்கா றெடுத்தோட
மலர்விண்ட முள்ளரைத்தாள்
மரகதத் தண்பா சடைக்கமல வீட்டுறையு
மறைய*வன் சென்னிமுதல்பா
இழியுங் குலத்தினவர் கழிமுடைத் தலைகடை
யிரந்துமண் கொள்ளமறைநான்
கிருக்குந் துணைத்தாள் பதித்தது நிகாக்குமட
விளையநில வேறுகண்டற்
கழியும் புனற்*சுழியும் வலையுழுஞ் சோலைமலை
காவலன் றுளவநெடுமால்
கண்ணகன் கோநகர்ப் புதுவைகுடி வாழிளங்
கன்னியுந் தாய்முலைக்கண்
பொழியும் பசும்பாலுறாமழலை மாறன்+முதல்
புலவர்பதின் மரும்வழுத்திப்
புனையுந் தமிழ்ப்பாடல் கொண்டதோ ளடியென்மொழி
புன்கவித் தொடைகொண்டதே. (3)

விரவுந் திரைப்புனற் கங்கையங் கடவுணதி
வெள்ளம் பரந்திருப்ப
வினைபுரி குறுந்தொழுவர் தருமிழி கலந்துநீர்
விதுரனின் றாள்சொரிந்தெட்
டரவுங் குலக்கிரியு மணையும்வண் கடல்வேலி
யவனிதிரு வயிறிருப்ப
அவன்மனைப் புன்சுவைச் சிற்றடிசி லன்றுனக்
கவனளித் ததுநிகர்க்கும்
குரவும் ப*கந்துளவு மணநாறு கொந்தவக்
கொடியிடைப் புதுவைவாழும்
கோதையுஞ் சங்கணி துறைக்குருகை மாநகர்க்
குழவிமுத லவாபதின்மரும்
பரவும் பழம்பாடன் மறைமொழிச் செந்தமிழ்ப்
பாமாலை கொண்டதோளிற்
பழவடியென் வழுவுடைச் சொன்மாலை சூட்டியது
பைந்துழாய் மலையழகனே. (4)

அவையடக்கமுற்றும்.

—–

*மறையயன். பி.ம். +முதல்புலவர்-வினைத்தொகை.

பழிச்சினர்ப்பரவல்.
முதலாழ்வார் மூவர்.

*தெங் களைந்தடிய ருயிரொடு மணப்புற்ற
விருவினை தணப்பவோரேழ்
இசைமுறை பழுத்தவந் தாகிகொடு நெடியமா
லிருசரண மேததுபொய்கை
பூதந் தவங்கொள்பே யாழ்வா ரிமூவரைப் போதி*ச‌ண்
**டி*மை வழுத்திப்
பூந்தா மரைத்தாள் வணங்குவென் றெய்வப்
புரந்தர னுலோகபாரி*
சாதங் கொணர்ந்தெழிற் பின்னைக்கு விளையாடு
தளையவிழ் படப்பையாக்கத்
தாழ்சிறைப் புட்கபூத் தேறிமணி வாய்வைத்த
சங்கவெண் மிடறுகக்கும்
நாதங் கொழித்தமரா* கூட்டங்கள் சிதறவவர்
நாட்டங்கள் கூட்டுவித்த
நாரணனை மாலலங் காரனை வழுத்துமென்
னாத்தருஞ் சொற்றழையவே. (1)

பெரியாழ்வார்.

மறுத்தலை துடைத்தமதி மலர்*முகத் தேனுடன்
வண்டுவ*வ மதுமாலையும்
மாயவன் றிருமார்பு பொற்பக் கொடுத்துவள
மதுரையிற் *றாங்குகிழிதான்
அறுத்தலைச் செய்திப வெறுத்தத் துலாப்புரிந்
தாரணந் தமிழ்படுத்தி
ஆழி*மா லிருபதமும் வாழிபா டும்புதுவை*
யந்தணன் றாடுதிப்பென்
கருத்தலை நெடும்புணரி யேழ்விசும் பேறியிரு
சபையழிந் தொழுகிநின்ற
கன்மாரி காப்பப் பசுந்தா மரைச்சிறிய
கைக்கொண்ட வரையேழுநாள்
பொறுத்தலைச் செய்திடையர் சுற்றமுங் கன்றும்
புனிற்றாவு நின்றளித்த
பொங்கர்த் தடஞ்சோலை மலையலங் காரனைப்
புகழுமென் கவிதழையவே. (2)

நம்மாழ்வார்.

மறைவாக் குரைத்தபொரு ளுள்ளவை யடங்கலும்
வைத்துநா மணிமுறத்தில்
வழுவறத் தெள்ளியவை கோதற வடித்திரதம்
வாய்ப்பவள நாறுதமிழின்
துறைவாக் கெனுங்கலன் பெய்தன்பு நீரிற்
றுழாய்மணப் பதநோக்கிமால்
தொண்டர்க ளருந்தவிய லமுதினை வடித்தமுனி
துணையடி துதிப்பென்மதுவோர்
முறைவாக்கி வைத்தபைங் கழைநிறைத் திலவென்று
முதுகுடுமி யிடறியொழுகும்
முழுமதியி னமுதமுங் குறவர்மட மகளிரொரு
முறையாக்கி வழியவார்த்து
நிறைவாக்கி விளையாடு மலையலங் காரர்பத
நித்தலும் வழுத்தியேத்த
நிறைவாக்கு நாளும் பெருக்கா றெடுத்தோடி
நிலைபெற்று வாழ்வதற்கே. (3)

குலசேகராழ்வார்.

கெடப்பா யொளிச்செக்கர் மணியார நறவுபாய்
கிளைதுழாய்க் கொண்டலடியார்
கேண்மைகொள் பவர்ருகு மணுகாத வுரைசெவிக்
கேற்பதன்றென்று பகுவாய்க்
குடப்பால் விடப்பெரும் பாந்தள்வாய் கையிட்ட
கோவேந்த னரசரேறு
கோப்பெருஞ் சேரமா னடியிணை வழுத்துவென்
குழுமிவா னுலவுதெய்வ
மடப்பாவை மார்பொய்தல் வண்டலாட் டயரவுகை
மணிபூச லாடமேலை
மங்குல்வாய் நெஞ்சம் பிளக்கவுயர் சிமயத்து
மதிவந்து போனவழியே
நடப்பாக வந்துசதி ரிளமாதர் தம்மோடு
நாளும்விளை யாடுமலைவாழ்
நாரணனை மாலலங் காரனை வழுத்துமென்
னன்கவிதை வாழ்கவென்றே. 4

திருமங்கையாழ்வார்.

பொருமட னெடுஞ்சுடர்ப் போராழி மால்கரப்
பொன்னாழி கொளவந்தமால்
புட்பிடர் வரக்கண்டு மெய்ஞ்ஞான வெள்ளம்
புறம்பொங்க வுட்களித்துத்
திருமடனெடுந்தாண்டகங்குறுந் தாண்டகச்
செய்யுண்முதல் பலவுரைக்கும்
திருமங்கை முனிகலிய னாற்கவிக் கொண்டல்பூஞ்
சேவடி துதிப்பென்முந்நீர்
இருமடங் கூறுங் கடாங்கவுட் டூங்கவிழி
யிருகடையும் வடவைதூங்க‌
இருசெவித் தலைகடைத் தாறூங்க மாமன்விடு
மிகல்கரி மருப்புவாங்கி
வ‌ருமடங் கற்குருளை மாலிருஞ்சோலமலை
மாலலங் காரர்பச்சை
வண்டுழாய் மணநாறு மிருதோள் மிருதாளும்
வாழ்த்துமென் கவிதழையவே. 5

திருமழிசையாழ்வார்.

சூட்டுநா கப்பணப் பள்ளிப் பெரும்பாய்
சுருட்டித் தமிழ்க்கச்சியிற்
றுளவக் கருங்கட னடைப்பக் குடைந்தையிற்
றுயிலுமுகி றலையணப்பப்
பாட்டுநா வுரைசெயுந் திருமழிசை வேந்தன்
பரந்துலாஞ் சிந்தைபொறியின்
பாலணு குறாவகை நிறுத்துமுனி தாமரைப்
பாதந் துதிப்பென்மலர்பூ
வீட்டுநான் முகமுனியு நாட்டமா யிரமுடைய
வேந்தனும் விபுதர்குழுவும்
வெட்சியந் தெரியல்புனை வேளும்வா ரணமுகனும்
வெள்ளிவெண் கோடுகூடாக்
கோட்டுநா கிளமதிக் கண்ணியங் கடவுளுங்
கூண்டுவலம் வந்திறைஞ்சும்
குலமலைத் தலையறையு மாமலங் காரனைக்
கூறுமென் கவிதழையவே. (6)

தொண்டரடிப்பொடியாழ்வார்.

இருமாலை யாகப் பரந்தபூங் காவிரி
யிரண்டிடைச் சூட்டுநெற்றி
யெரிமணிப் பாம்பணைத் துயில்கொள்ளு மொருமாலை
யிசைமுறை பழுத்தசெஞ்சொற்
றிருமாலை சூட்டுபவர் தொண்டர்த மடிப்பொடித்
தெய்வமுனி யறிவின்வடிவாம்
செந்தா மரைத்தா ளுளத்தா மரைத்தலஞ்
சேர்த்துவென் றன்னைமுன்னாட்
டருமாலை யப்புணரி நீத்திளந் தெய்வமான்
றருணமணி யாரமார்பிற்
றார்பட்ட தண்டுழாய்க் காட்டுள்விளை யாடமகிழ்
சங்கேந்து கொண்டல்கன்னற்
பொருமாலை விண்டசா றோடமத வேழம்
புழைக்கர மெடுத்துநீந்தும்
பொங்கர்மலி யிடபகிரி மாலலங் காரனைப்
புகழுமென் கவிதழையவே. (7)

திருப்பாணாழ்வார்.

விழித்தா மரைத்துணையின் வேறுநோக் கலமென்று
விரிதிரைப் பொன்னிநாப்பண்
விழிதுயில் கருங்கொண் டலைப்பரவி யானந்த‌
வெள்ளத்து மூழ்கியியலின்
மொழித்தாம மொருபத்து மிருதோ ளணிந்தந்த‌
முகிலின்வடி வுட்கரந்த‌
முனிவன் றுணைப்பதம் வழுத்துவென் கொல்லையம்
முல்லைப் புலத்துலாவித்
தெழித்தா மழக்கன்று தேடிமுலை யமுதந்
தெருத்தலை நனைப்பவோடிச்
செல்லமருண் மாலையிற் பின்செலுங் கண்ணனைத்
திசைமுக னிருக்குமுந்திச்
சுழித்தா மரைக்கடவுண் மாலலங் காரனைச்
சோலைமலை வீற்றிருக்கும்
சுந்தரத் தோளனைத் தொண்டனேனுரை செயுஞ்
சொற்பாடல் வளர்வதற்கே. (8)

சூடிக்கொடுத்தநாச்சியார்.

பாடற் *கரும்புழு துழாய்வாட வெயினின்று
பவளவா யீரமாறாப்
பச்சைப் பசுஞ்சொற் புதுப்பாட லுஞ்சுருள்
பனிக்குழன் முடித்துதி*ர்க்கும்
வாடற் பழஞ்சருகும் வேட்டரங் கேசனும்
மலைகுனிய நின்றமுகிலும்
மாலலங் காரனு மிரப்பவருள் புதுவைவரு
வல்லியிரு தாடுதிப்பென்
*சேடற் பெரும்பள்ளி விழிதுஞ்சு பாற்கடற்
சேர்ப்பற்கு மணிவரன்றிச்
சிலம்பாறு பாயுஞ் சிலம்பற்கு வெள்ளவொளி
தேங்கியலை வைகுந்தவா
னாடற்கு முல்லைப் புலத்தா நிரைப்பின்
னடந்ததா ளண்ணலுக்கு
நான்மறைப் பொருளாய வழகற் குரைக்குமென்
னன்கவிதை வாழவென்றே. (9)

* சேடற்பெரும்பள்ளி – ஒன்றியற்கிழமைக்கண்வந்த ஆறாம்வேற்றுமைத்
தொகை, றகரம், வலித்தல் விகாரம்.

————

மதுரகவியாழ்வார்.

மட்டோ லிடுந்தொங்கல் வகுளமண நா றுதோண்
மாறன்வண் டமிழ்படுத்தி
வனசவீட் டுறையுமுனி தன்னுலு மெழுதொணா
மறைநாலு மெழுதுவிக்கப்
பட்டோலை யெழுதியாங் கவனையீ ரைந்துகவி
பாடிநெடு மாறன்னையும்
பாடாத மதுரகவி யிருதா டுதிக்குவென்
பைங்குவளை மென்றுமேதி
நெட்டோடை யுட்புகச் சுரிசங்கு துண்ணென்
நிலாமணிக் கருமுதிர்ந்து
நெடுவரம் புந்தவழந் தேறிவிளை வயல்புகுத
நெற்குலை யரிந்தமன்*வர்
கட்டோடு தலைமீதி லாகியுதிர் நெலலுடன்
கதிர்மணி யுகுக்கும்யாணர்க்
காமலையின் மாலலங் காரனைப் பாடுமென்
கவிதழைத் தோங்கவென்றே. 10

எம்பெருமானார்.

மறைமயக் கெவரும் புலப்பட வுணர்ந்தறிய
வாய்மைபெறு பொருளுரைத்து
மாறுபடு சமயங்கள் வாக்கினால் வென்றுதிரை
வாரிதி வளாகத்தின்வாய்
இறைமயக் கந்தவிர்த் தியாவர்க்கும் யாவைக்கு
மேபிரா னாழிசங்கம்
ஏந்துமா லென்றுறுதி யாக்கிரா மானுசன்
னிருசரண நெஞ்சுள்வைப்பென்
பிறைமயக் குங்குறு நுதற்கோவி மார்குழிசி
பெய்தவளை யெற்றுபந்து
பிறழொளி மணிக்கழங் கிவைகொண்டு நாளும்
பெருங்கலக மிட்டுமுடனே
குறைமயக் குங்கண் பிசைந்தழு தசோதைதன்
கோபந் தணிப்பமணிவாய்க்
+ குறுநகை விரித்தமுகின் மாலலங் காரனைக்
கூறமென் கவிதழையவே. (11)

வேதாந்ததேசிகர்.

திருமாற் பயோதகி*த திருமந்*த்ர வமுதினைத்
திருமகட் குயின்முகந்து
சேனைமுத லிக்கோப் பெயக்காரி *ரேய்ச்சுனைத்
தேங்கிநா தமுனி யாகும்
அருமாற் சடம்வார்ந் துயக்கொண்ட வள்ளன்மடு
வார்ந்துசீ ராமரென்வா
யால்வழீஇ யாமுனா ரியவுந்தி யூர்ந*துபூர்
ணாரியக் காலினொழுகிக்
கருமாற் றிராமா னுசக்குளங் கழுமியெழு
பானான்கு தூம்புகாலக்
காசினிப் பாணையுயிரக் கூழ்வளர வயன்மதக்
காராக்சண் மேயந்தடாது
பெருமாற்கு விளையுள்வீ டடையப் புற*நதுரும்
பெருவேலி யாமெம்பிரான்
பேக*பய வேதாந்த தேசிகன் றாடொழுவல்
பேரழக னுறழையவே. (12)

+ கோபம் – பி-ம்.

————-

மணவாளமாமுனிகள்

குணவா யதித்தெற்று வேலைஞா லத்திருட்
கொள்ளைவெயில் சீத்தகற்றும்
கோகனக மணவாள னெனவடியர் தொல்லைநாட்
கொண்டவினை யிருளகற்றும்
மணவாள மாமுனிவன் மகிழ்வுடன் கருணைபொழி
மலர்விழியி னெம்மைநோக்கி
வயிறுபசி யாமனா வறளாம னாளுமறை
வாய்த்தவிரு நாலெ ழுத்தே
உணவாக நஞ்செவியி லிருபுறமும் வழியவார்த்
துயிர்தளிர்ப் பித்தவெங்கோன்
ஒளியீட்டு திருநாட்டு வழிகாட்டு தாட்கமல
முளமீது வைப்பனெட்டைப்
பணவா ளராவுலக முடைநாறு வெண்ணெய்பேய்ப்
பாவைதன் முலையுளமுதம்
பருகிச் செவந்தவாய் மாலலங் காரனைப்
பாடுமென் கவிதழையவே. (13)

ஞானாசாரியர்.

ஒட்டிக் கடிந்துநெடு நாடொட்டு வருதீய
வூழ்வினைக டம்வயத்தில்
ஒடுமைம் புலனையு மனத்தோடு நெறியினின்
றொருவழிப் படநிறுத்திக்
கூட்டித் தடஞ்சோலை மலைநிழன் மலர்கரங்
கோத்துவலம் வந்துகண்ணீர்
கொழிப்பமெய்ம் மயிர்பொடித் துளமுருகு தொண்டர்தங்
குழுவுடன் கூட்டிவேதப்
பாட்டிற் றருந்தமிழு மிருநா லெழுத்தும்
பசுந்தேன் பெருக்கெடுக்கும்
பைந்துழாய்ப் பள்ளியந் தாமத் தலங்காரர்
படிவுமென் னெஞ்சகத்துள்
நாட்டித் தளிர்ப்பித்த திருவாளர் தோழப்பர்
நற்றமிழ்ச் சீர்பதிப்போன்
நலமருவு மழகன் பரோகிதன் புனிதபத
நாண்மலர் வழுத்துவேனே. (14)

அடியார்கள்.

அண்டர்க்கு நான்முகக் கடவுட்கும் வானநீ
ராறுபாய் சடிலருக்கும்
ஐரா வதப்பெரும் பாகற்கு மெட்டாத
வாழிமால் பதமிலையுநற்
றொண்டர்க்கு மன்புபுரி தொண்டர்தந் தொண்டர்க
டுணைத்தா டுதிப்பெனலைவாய்ச்*
*சுரிசங்க மூசலா டுங்கடற் பள்ளநீர்*ச்
சூற்கொண்டு திங்கணிறையும்
கொண்டற் குலஞ்சொரியு முத்துங் கழைக்கண்
கொழிக்கின்ற முத்தும்வேழக்
கோடுசொரி முத்தமும் பூகத்தின் முத்தமுங்
குறமகளிர் பொய்தல*யரும்
வண்டற் குரற்புகா வரிசியா கர*சந்த
மதுமலர்க் கறியமைக்கும்
மாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை
வழுத்துமென் னாவாழ்வதே. (15)

பாயிரம் முற்றும்.

——————-

1. காப்புப்பருவம்.

திருமால்.

நீர்கொண்ட நெடுந்தாரை குறுங்கை தோய
நேமிவரைப் பெருவேலி சூழு மேழு
பார்கொண்ட தாளாள னோங்குஞ் சோலைப்
பருப்பதத்த னலங்காரன் றமிழைக் காக்க
கார்கொண்ட காரொன்று கட லிரண்டோர்
காலத்துத் தலைமணந்த தென வசோதை
ஏர்கொண்ட கண்ணினிழல் பாயக் கைம்மீ
தேந்துமலர்ச் செந்துவர்வா யிளைய மாலே. (1)

திருமகள்.
வேறு.

வளர்க்கும் பசுங்கிளிக் கமுதமும் பூவைக்கு
வரிமிடற் றளியலம்பும்
வளர்தருச் சோலையும் புறவுக்கு நிழலுமிழ்
மணிததூது மானுக்குவான்
விளக்குங் கலைத்திங்க ளும்பெடை யனத்துக்கு
விரிபொகுட் டருகுகுக்கும்
விளைநறைக் கமலமுங் கொண்டுவெண் டிரையின்வரு
மெல்லிய லளிக்கமேருத்
துளங்குங் கடுங்கான் முகந்திறைக் குஞ்சிறைத்
துகள்பம்பி யுத்திகண்டச்
சுழன்றிமை கரிக்கக் கடைக்கண் டழற்கற்றை
*தாண்டர் சினத்தபுள்வாய்
பிளக்கும் பிரானிசை முரன்றிதழ் குடைந்தூது
பிள்ளைவண் டாடுதுளபப்
பிரசமெறி சுந்தரத் தோளாவன் மறைமுதற்
பேராள னிசைதழையவே. (2)

பிரமதேவர்

ஆட்டுந் திரைக்குண்டு நீரக ழிலங்கைக்கு
ளாறுகால் பாயநறவம்
ஆறுபாய் தாமரைக் குலமாதை யுங்கடவு
வாழியங் கதிரோனையும்
கூட்டுங் கடுங்கார் முகக்கொண்ட லைத்தழைக்
கொய்துழாய்ச் சாச*னமேருக்
குவடுபடு சுந்தரத் தோளனைத் திருமங்கை
கொண்கனைக் காத்தளிப்பான்
*ஈட்டும் பிழம்பனற் குளியா துலைக்கொல்ல
னில்லம் புகாதரத்தால்
எறியுணா தொலிபொங்க வடியுணா துயர்தட்டி
லேறாது கூர்மழுங்கா
தூட்டுந் துகிற்றலையி னெய்யுணா துறைபுகா
துடல்கறை படாதிருந்தும்
உடற்றும் பெரும்படை தொலைக்கும்வாக் காயுதத்
தொருகமல மறைமுனிவனே. (3)

சிவபெருமான்
வேறு.

அருமறைமொழியு நூலினைநறிய கமலக்கரங்கள் யாப்பவும்
அளியுளர்பதும மாளிகைமுனிவன் வதுவைச்சடங்கு காட்டவும்
அருள்விளையிமய மாதுலனொழுகு புனலைத்தடங்கை வார்க்கவும்
அடைபொதிதுளவ நாரணன்வெளிய பொரியைக்கொணர்ந்து தூற்றவும்
இருவருநறுநெய் தூவியவெளிய வலனிற்சுழன்று போற்றவும்
இருகரமுளரி நாண்மலர்சிலையின் மயில்பொற்பதங்க ளேற்றவும்
எழுகதிருலவு வான்வடதிசையி லுடுமுற்றம்வந்து காட்டவும்
இடுதுகின்முகப டாமுலைபுணர வுமையைப்பரிந்து வேட்டவர்
மருமலர்பொதுளி வானுழைவளர மருதைத்தவழ்ந்து சாய்த்திடை
மடவியரிழுது தோய்முடைவிரவு துகிலைக்குருந்து சேர்த்துளம்
மகிழ்வருகுரவை நாடகமயர விரலைத்தெரிந்து கோத்திலை
மனைநடுவுறியின் வாயளைகளவு கொளவற்றநின்று பார்த்தலை
பெருகமுதுகொள வானிரைவயிறு நிறையப்பசும்புன் மேய்த்தரை
பிணையணைகயிறு நார்முடைபடலு மடையப்பிணைந்து தூக்கிய
பிடவணைபடலை யாயனைவிபுல வெளிதொட்டணைந்த கோட்டயல்
பிறைதவழிடப மால்வரையுறையு முகிலைப்பரிந்து காக்கவே. (4)

தேவேந்திரன்

வேறு.

நறைகமழ் $ காழகில்சுட்டபுனமுழப்
பதம்வாய்ப்பமதனெழுசீயப்போத்துகள்
நடையடிகானவரொற்றிநடவையிற்
சுவடேய்ப்பவிடைபறழ்நாலத்தாய்க்கலை
நனைவிளை தாழ்சினைதத்தி * முழைமுடக்
குடில்சாய்ப்பமடமயில்கூடிக்கூத்தெழ
நரையுருமேறுசிலைப்பமுடிவிதிர்த்
தரவாற்றல்கெடவிடர்தேடிப்போய்ப்புக
உறைநுகர்சாதகம்விக்கல்விடவிடைக்
குலமாக்கள்படன்முடையோலைக்கீழ்ப்புக
ஒளியெழுகோபநிரைப்பநிலவுபுட்
சிறையாட்டி மகிழ்பெடைமூடிச்சேக்கையில்
உறைதரவோசனைபட்டமணமுதைப்
புனம்வீக்கமுனிவரர்சாலைப்பாட்டிள
வுழைகலையோடுதெவிட்டவனசமொட்
டிருள்சீக்குமிளவெயில்காணற்கேக்கற
அறைகடனீர்விளையிப்பிவிழுமழைத்
துளியேற்றுநிலவுமிழாச்சக**சூற்கொள
அகன்மடல்கோடல்விரிப்பவெயிறுநட்
டுளை காற்றிநெடுமயிரேனச்சாத்துழ
அகழ்படுகூவல்கொழிக்குமமுதுவெப்
பெழமாத்துவதிகுயில்வாயைத்தாட்கொள
அகமகிழ்கேள்வர் தமக்குமரிவையர்க்
குளமூட்டுமளவறுகாமத்தீச்சுட
மறைமொழியாளர்வழுத்தியனலொழுக்
கவியேற்றுவலம்வருமோதைக்கார்ப்புயல்
மலர்நிலமாதுகுளிப்பமழைகொழித்
தெழநோக்குசுரர்பதிதாளைப்போற்றுதும்
மணிநிரைமேயவெடுத்தகழைமிடற்
றிசையூற்றிமலர்புரைதாளூட்சேப்புற
வனநடுவோடியிளைத்தவழகனைப்
பொழில்வாய்த்தகுலமலைமாலைக்காக்கவே. (5)

$ காரகில் பி-ம் * யுறைமுடக் பி-ம்

————-

ஆதித்தன்
வேறு
பரியரை யுரற்பிறை நகப்பிண ரடிக்கைப்
பருப்பதந் தண்டுறைதொறும்
படியமடை படுகரட வாய்திறந் திழிமதம்
பாயமணி யமுனைதோயும்
முரிதிரைப் பகிரதி கடுக்குஞ் சிலம்பாற்று
முதல்வனைக் கடவுள்வேத
முறையிடுந்தாமரைத் தாளானை வண்டுழாய்
முகிலைப் புரக்கவெள்ளைப்
புரிமுக வலம்புரி முழங்கச் சகோரவெண்
புட்கிரை யளிக்கும்வானம்
பூத்தமதி கரமொழிய விளைஞரைக் காமன்
பொருள்கணை துறப்பவெழுபண்
தெரிவண்டு சிறைவிட் டுவப்பக் குணாதுவளர்
திக்குவெள் ளணியெடுப்பத்
தேமுளரி தளைவிடப் புவியிரவு விடவலைத்
திருவவ தரித்தசுடரே. (6)

விநாயகக்கடவுள்

ஊற்றும் பசுந்தே னகிற்கா டெறிந்தெயின
ருழுபுனந் தினைவிதைப்ப
ஊட்டழ லிடுஞ்சாரன் மலைமுதுகு பொதிவெப்ப
முடைதிரைத் திவலைதூற்றி
ஆற்றும் புனற்சிலம் பாற்றருகு விளையாடி
யாயிரம் பொங்கர்தங்கி
யாயிரம் குண்டுநீர் மடுவுட் படிந்துவரு
மானையைக் காக்ககங்கை
தூற்றுந் தரங்கவொலி யிற்றுஞ்சி யறுகிவந்
தோட்டிணர்* விழைந்து செங்கைத்
$ துணைச்சிறு பறைக்குர லெ*திர்ந்திதழி நெடுவனஞ்
சூழ்ந்துடலி னிலவுவெள்ளம்
காற்றும் பொடிப்பூழி கால்சீத் தெறிந்திறைவி
கழைசெ*டுந் தோள்வரிக்கும்
கரும்பினிற் கைவைத்து வெள்ளிப் பொருப்பெந்தை
களிகூரவரும் வேழமே. (7)

*வனைந்து. பி-ம் $ தொளை. பி-ம்

————-

முருகவேள்

வள்ளைகா னீக்கிச் செழுங்குவளை மென்றுகய
வாயெருமை குழவியுள்ளி
மடிவளஞ் சொரியமுது மடுநிறைப் பக்கமல
மண்டபத் தரசவன்னப்
பிள்ளையா லும்புன றுறந்தமு தருந்திவெண்
பேட்டினந் தாயெகினம்வாய்
பெய்யிரை தெவிட்டுமகன் மாலிருஞ் சோலைப்
பிறங்கன்முகி லைப்புரக்க
கள்ளையூ றுந்தருத் தறியுணா மற்றேவ
கன்னியர் களஞ்சூழுநாண்
கழலாம லைரா வதப்பெரும் பகடழற்
கானம் புகாமலமுதம்
கொள்ளைபோ காமற் புரந்தரன் படுசிறைக்
கூடம் புகாமல்வெந்தீக்
கொளுந்தாம லகனெடும் பொன்னக ரளிக்கின்ற
கோழிப் பதாகையானே. (8)

வைரவன்

வேறு.

புடைவள ராரப் பரியரை பேரப்
புதறலை சாயத் துடிபட விருகரை
புகர்மணி வாரிக் குனிதிரைவீசிப்
புனலுமிழ்வாவிக் குருகெழநடுவுயர்
திடரகழாய்நெட் டகழ்திடராகச்
சிறைபொரும்யாணர்ப் பரிபுரநதிவரு
சினைவளர்சோலைத் திருமலைவாழ்கைச்
சிலைமுகில்காவற் புரவலன்வெளிபொதி
கடையிருள்வேர்விட் டெழுமுழுமேனிக்
கடல்விடுசோரிப் புலவெழுவடிபுரி
கவைபடுசூலப் படைதொடுபாணிக்
கனலபிழிவேணிச் சுடாமணிநிறைவிரி
படமுடிநாகப் புரியுபவீதப்
பலிகொள்கபாலப் புயலுருமெறிகுரல்
படுசுருடோகைக் கழலவிழி ஞாளிப்
பணைமுதுகேறித் திரிதருமிறைவனே. (9)

சத்தமாதர்.

வேறு.

வருபுனலவனி புதைப்பக்கோட்டின்
முழுகிநிமிர வலைவறவெடுத்தவள்
மதமழைகரட முடைத்துச்சாய்க்கும்
வெளியகரியின் முதுபிடர்புரப்பவள்
மரகதவளறு திரட்டிக்கோட்டு
நெடியபசிய களமயிலுகைப்பவள்
மலர்பொதுளிதழி தழைப்பப்பூக்கு
மமுதமொழுகு மதிவகிர்முடிப்பவள்

இருகடைவிழியு நெருப்பைக்காற்று
மலகைசுழல வருபிணனுகைப்பவள்
இமையவர்வயிறு நிறைப்பத்தேக்கு
மமுதகருணை கடைவிழிபழுத்தவள்
எறிவளியுதறு சிறைக்கொத்தேற்றை
யெகினநடவு மறைமொழிமிடற்றினள்
எனவிவருலகு துதித்துப்போற்று
மெழுவர்முளரி யடிமுடியிருத்துதும்

அரன்முதலெவரு நினைத்துப்பார்த்து
மறியவரிய விழைபெருமயக்கனை
அகிலமுமுதர மடுக்கடபூத்த
கமலநறிய நறைவழிபொகுட்டனை
அழகியகுரவை நடத்துக்கேற்ப
வொருகைநடுவ ணலமருகுடத்தனை
அலைகடலமலை யுதித்துத்தோற்ற
வுருவுவிளையு மளவறுகளிப்பனை

விரியொளியுததி கொழித்துக்கோத்த
வழிவில்பரம பதமுதுபுரத்தனை
விடையுரமுழுத மருப்புக்கீற்றி
லிடையர்மகளி ருழுமுலைமுகட்டனை
விரிதலையருவி தெழித்துத்தாக்கு
மெழிலிதவழ நிலவியபொருப்பனை
விளையிளநறவு சுழித்துத்தூற்று
துளவமுகிலை யழகனையளிக்கவே. (10)

முப்பத்துமூவர்

வேறு.

விரிதடமத்தகத் துச்சிதாழ்சுழிக்கடல்
விளைகடம்விட்டொழுக் கெட்டுவாரணத்தினர்
விரியுளை நெற்றியிற் கொட்டும்வாலெழிற்குரம்
விரைபெரிபெற்றிரட் டித்தவான்மருத்துவர்.

இருகடையுட்குழைத் தொற்றைமேருவிற்றொடும்
இறையவர் பத்தொடொற் றித்தவேறுகைப்பவர்
இருபதிலெட்டொழிப் பித்ததேர்துரப்பவர்
எனவிவர்தொக்களித் தற்கியாம்வழுத்துதும்.

சொரிபருமுத்திணர்க் கக்குபூகநெட்டிலை
தொடுசடைநெற்குலைக் குப்பைநாவளைத்துழு
கரிவளைமட்கரைப் பற்றிமேதியுட்குளி
தொடுகுளமுக்குளித் தெற்றுநீரொலிப்பெழ

மரையுயர்பொற்பறக் கொட்டைபாழ்படச்சிறை
மடவனம்விட்டெழப் பெட்டவாளைசெய்ப்புகும்
மலர்வதிபுட்குலக் கத்தறாததொத்தளி
வளர்பொழில்வெற்பினிற் பச்சைமாறழைக்கவே. (11)

காப்புப்பருவம் முற்றும்

———–

இரண்டாவது – செங்கீரைப்பருவம்

சுருள்விரிமுழுமுதல் வாழைக்கூனற்
குலையினின்மிடறுடை பூகப்பாளைத்
தலையினிலறைநடு விண்டாழுஞசீதச்

சுனையினின்முகைநெகிழ் காவித்தாழிப்
புடையினினெடுமணல் வாரித்தூதைக்
கலனணிமகளிர்க ரங்கோலுஞ்சாலைச்

சுவரினிலலமரு மூசற்காலிற்
படுவினிலொழுகிய சோனைத்தேனிற்
சுழல்படுமளிகள்கு டைந்தாடுங்காவிற்

சொரியுமுளுடல்பொதி யோலைததாழைப்
பரியரையினின்மறி நாகைத்தேடிக்
கவரிகண்முலையில்வ ழிந்தூறும்பாலிற்

கரைதவழ்முரிதிரை பாய்நெட்டோடைச்
சுழியினில்வழியினி னீர்குத்தோதைச்
சிறையினின்மளவர லம்பாயுஞ்சாலிற்

கழனியிலரைதிரள் காய்நெற்சோலைத்
தலைவளைகுலையரி தூரிற்றூமக்
குழலிடைமடவியர் வண்டோடுஞ்சூடிக்

கடையினிலுதறிய தாரீற்றாவிப்
புலவெழுமுதுசுற வாளைப்பாயசுற
றகழியிலருமழை கண்சூழும்பானுக்

கதிரெழுபுரிசையி லூரிற்போரிற்
றெளியினினடவினில் யாணாக்கானற்
றுறையினின்மதரம்வி ளைந்தோடும்பாகிற்

பொருபுனலெழுவரி வாளைப்பூசற்
படவிடுபெருமடை வாயிற்சாதித்
தொடரிணர்நறுவழை சிந்தாரம்போலும்

பொதிமுகையவிழ்மலர் வேரிப்பாயற்
றுணைவிழிதுயில்வதி மேதிப்பாழிச்
சுவலினில்வனச முகங்காலுந்தாதிற்

புழைபடுநெடுநிலை நாளப்பானற்
கழியினின்மதனடு சாபக்கானிற்
சரிகயலணவியெ ழுந்தேறுஞ்சாரிற்

புதல்படுதுகிர்கொடி மூடித்தீகக்
கடவியிலிளவெயி றோய்பொற்பூழித்
தெருவினிலிளைஞர்க ணின்றூருந்தேரிற்

றிருவளர்கடிமனை மாடத்தேணிப்
பழுவினினிலவுமிழ் தூவிப்பேடைக்
குருகெழுநதியலை சென்றேறுங்கூலத்

தினில்விளைபுனவிதண் மீதிற்கால்பட்
டுடலுளைமணிபொதி சூலைக்காலச்
சுரிமுகவரிவளை வந்தூருஞ்சாரற்

றிருமலையழகர்த டாகத்தோடைப்
புகர்முகமதகரி கூவச்சேனப்
பிடர்வருமழைமுகில் செங்கோசெங்கீரை

திருமடமகண்மகிழ் கூரப்பாடக்
குருமணியிடறிய மார்பிற்பீடத்
தினையிடுமழைமுகில் செங்கோசெங்கீரை (1)

வேறு.

தொளைபடுகரட மூற்றெழத்தேங்கி
வழிமதம் வண்டோடுஞ்சாயச்
சுழல்வருபெடையெ னாக்கரத்தூர்ந்த
புயறொடல் கண்டூடுங்காதற்

களிவருபிடித ழீப்பணைச்சார்ந்த
கறையடி மென்றார்வங்கூரக்
கவுளுழைசெருகி நாட்பிறைப்போன்ற
நகநுதி மண்சீவுந்தூளைக்

குளிர்புனலலைய வாட்டுடற்பாங்கர்
வழியவெ றிந்தாரந்தூவக்
குளிறியவருவி நீர்க்குரற்கேன்று
கரிநிரை கண்சாயுஞ்சாரற்

றெளிமதுவொழுகு காக்கிரித்தோன்று
மழைமுகில் செங்கோசெங்கீரை
திருமலையழக வாக்கிசைக்காம்ப
மழைமுகில் செங்கோசெங்கீரை. (2)

வேறு

இருவிழிசெவந்து கயலொடுமயங்க
வெறியுமாநீ ரோடைகுடைந்தா*யு
இடைவெளிநுடங்க விருபுறம்விழுந்த
கயிறுகால்பூ ணூசலுதைந்தாடி

ஒருமுறையகங்கை யொருமுறைபுறங்கை
யறையவோவா நால்வருபந்தாடி
யொருபதமகண்ட நிலவு* புகழ்கொண்ட
முதன்மைபாடா வேழுகழங்காடி

வருகுறவர்தந்த மடமகளிர்வண்டல
விழவுமாறா நீர்பொதிமஞ்சாடு
மதியுழவழிந்த வமுதநதிபொங்க
வருடைகாலாழ் வேரலிளஞ்சாரல்

அருவிவரைநின்ற வழகவிதழ்பம்பு
துளவமாலே யாடுகசெங்கீரை
அருமறைவிரிஞ்ச னிமயமயிலகொண்க
னமரர்கோவே யாடுகசெங்கீரை (3)

*(வெளி பி-ம்)

————

முலையமுதலம்பி விழநெடுவரம்பு
குறியகாலாழ் மேதிகயம்பாய
முருகிதழ்பொதிந்த குவளைகண்மயங்க
விடறிவாலால் வாளைவெருண்டோடி

இலைதலைவிரிந்த கமுகமடல்விண்ட
மிடறுவாய்சூழ் பாளைபிளந்தேகி
இமையவரருந்து மதியமுதகும்ப
முடையநீர்மேய் மேக$விகம்பூறி

மலையுடல்குளிர்ந்து விடவெளியெழுந்து
முழுகுதீயா டாலைநறும்பாகு
வழியும்வயன்மஞ்ச ளிலைமிசைவிழுந்து
களிறுபோலே சாரன்மணந்தோதை

அலையருவிதுஞ்சு மிடபமலைநின்ற
துளவமாலே யாடுகசெங்கீரை
அருமறைவிரிஞ்ச னிமயமயில் கொண்க
னமரர்கோவே யாடுகசெங்கீரை (4)

$ (மேகமசும்பூறி, பி-ம்.)

————

வேறு

இருகுழைமதர்விழிகிழிப்ப வலமருமகிழ்குரவை
தொட்ட பொதுவிய ரோதிபுறந்தாழ
இளநிலவுமிழ்மதிபகுத்த சிறுநுதல்குறுவெயர்முளைப்ப
வமைபொரு தோள்புளகங்கூர

மரகதவரையகலமுற்ற தினிவருசுரர்பதிவருத்தம்
இலையென வார்வம்விளைந்தோடு
வரைவெளிகுழுமிநடமிட்ட தெனவொசிகொடியிடையொளிப்ப
இளையப யோதரநின்றாட

விரியுலகமுமுலகொடுக்கு முதரமுமசையவலர்செக்கர்
மலர்புரை தாள்கள்செவந்தேற
விரைகெழுதுளவு நறைகக்க வொருகரமிசைகுடமுருட்டி
இசைவழி யாடுபரந்தாம

அருவினைபுறமிடவெருட்டி யடியவரளவினருள்வைத்த
மழைமுகி லாடுகசெங்கீரை
அளியுழுபொழில்புடையுடுத்த வுடுபதிதவழிடபவெற்பின்
மழைமுகி லாடுகசெங்கீரை. (5)

வேறு.

முளைக்குந் திருப்பாற் கடற்பெருஞ் சூன்முலை
முகக்கண் கறாமல்வட்ட
முகமதி வெளுப்புறா மற்பச்சை மரகதம்
முகடிளகி யொழுகுபாடம்

விளைக்குங் குழம்புதோய்த் தெற்றுபல நூலென்ன
மெய்ப்பசு நரம்பெடாமல்
வேய்நெடுந் தோள்கண்மெலி யாமலா லிலைவயிறு
வீங்காமன் மனைமதிற்பால்

வளைக்கும் புகைப்படலை மண்டொடா மற்சால
வயவுநோய் கூராமனாள்
வளர்திங்கள் பத்தும் புகாமற் பெருந்தூணம்
வாய்த்தகோ ளரிகளித்துத்

திளைக்கும் பெடைக்குருகு சூழ்சிலம் பாற்றிறைவ
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (6)

சாய்க்குங்* கடும்புனல் பரந்தோட வுரகனற்
றருணமணி யணவுசூட்டுத்
தாழ்கடம் பிற்குதித் தாடலுங் கொங்கையந்
தடநெடுங் கிரிசுமந்து

மாய்க்குமெ னுசு*ப்பிளங் கோவியர் வளைக்கர
மலர்த்துணை பிணைத்தாடலும்
வட்டவாய் முடைபடுங் குழிசியிற் றீயாடி
வழியுமின் பால்பதத்திற்

றோய்க்குந் தயிர்த்தலையின் மத்தெறியு மிழுதுணத்
துளவோடு கரியமேனி
துவளநின் றாடனும் முன்புள்ள விப்போது
தொண்டர்தம் வினையிரண்டும்

தேய்க்குந் திருத்தாள் குனித்துநின் றழகனே
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (7)

* (பெரும், பி-ம்)

————-

முருகுண்டு நாகிளம் பெடைவண் டியாழினிசை
முரலவளி தடவவாடும்
முகைமுக முறுக்குடைந் தவிழ்தரும் பூவைகிரி
முதுகுவலம் வந்துவீழ்ந்து

கருகுந் திரைப்பரவை மேய்ந்தகல் விசும்பாடு
கருவிமழை யாடுகொள்ளைக்
கண்ணகன் பொய்கைக் கருங்காவி யாடிளங்
கருவிளந் தொகுதிபிள்ளைக்

குருகுஞ் சலஞ்சலமும் விழிதுஞ்சு துஞ்சாக்
கொழுந்திரை கொழித்ததிவலைக்
குளிர்புனல் பரந்தாடு காளிந்தி யெனவலை
கொதிப்பக் கடுங்கார்முகம்

செருகுங் கணைக்குரிசி றிருமேனி துவளநீ
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (8)

கறைபாய்ந்த குலிசப் படைப்பாக சாதனக்
கடவுளும் விபுதர்குழுவுங்
கடும்பொடு கடும்பசி கெடுத்தருந் தப்பணக்
கட்செவிப் பாப்பெயிற்றுப்

பிறைவாய்ந்து காந்துங் கடுங்காள கூடவெம்
பேழ்வாய் திறந்துறுத்துப்
பிடித்துக் குதட்டியுமிழ் மிச்சிலும் போகமலர்
பிரசங் கொழித்திறைக்கும்

அறைபாய்ந்த நீருடற் கழுவிநெடு வெண்ணிலா
வமுதுணா மதியளிக்கும்
ஆடுதலை யருவிபாய் திசைநான்கும் வெளியின்றி
யளிகோடி புடையலைக்கும்

சிறைபாய்ந்த வளிதருஞ் சோலைமலை யழகனே
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (9)

ஈற்றுவண் டறுகால் குடைந்தாடு பொங்கர்விளை
யிளநறாத் துளிதூங்கியும்
இறாலுடன் முரக்கலை குதிப்பப் பசுந்தே
னிழிந்துமதி தவழநடுவு

தூற்றுவெண் டிரையமுது சுழியெறிந் துந்திரைத்
தொடுகடற் புனன்முகந்து
சூற்கொண்ட கருவிமுகி லிடறியுந் நாளத்
தொளைக்கைப் பொருப்புந்தியை

ஊற்றுவெங் கடநீர் கொழித்துமக விதழ்நெரிந்
துடையும்வண் டுளவமாலை
யொழியாது மதுவோட வுனதுசெந் திருவின்முலை
யுழுதலா லிளகுகளபச்

சேற்றுறு புயம்போ லசும்பறா மலைவாண
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (10)

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங்
கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ்
குரகதந் தூண்டுமுட்கோல்

கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட‌
கடுஞ்சிறை கிடந்தகூடக்
கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமல‌மகள் விழியினுளவாய்

உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்பிலத்
துள்வீழ் நான்மறைக்கும்
ஊன்றுகோ லாகமுடி பத்துடைய கள்வன்மே
லொருகோ லெடுத்துமுகிலைத்

திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே. (11)

செங்கீரைப்பருவ முற்றும்.

————-

மூன்றாவது – தாலேலோ பருவம்.

உடலியலவுண னாட்டியநெடிய தூணாவேசாநால்
உகம்வருமளவு தோறியவீருண நானாரூபாநாள்
முடியிடைமுதலி லாத்தனியுறையு மூவாமூதாளா
முனிமகமுடிவு காத்திடுசரண சாலாகார்வானா
மடிநிரைபுரவு மேய்ததுழலிளைய கோபாலேசாவான்
மகிதலநிறைவு காட்டியகரிய மாயாமாகாயா
அடியிணைகருதி யேத்திடுமழக தாலோ தாலேலோ
அரவணையுததி மேற்றுயிலழக தாலோ தாலேலோ. (1)

அடியவரளவி னோக்கியகருணை யாசாபாசாபூ
வயனொடுவயிறு சூற்கொளுமுதிய லோகாலோகாதே
மடழவிழ்கமல வீட்டுறைவனிதை லீலாகாராநேர்
வருசக‌டுடைய நீட்டியசிறிய தாளாதாள்சூடா
முடியுடையவுண ரோட்டெழநடவு சேனாரூடாபாண்
முரலளிநறவு வாக்கியதுளவு தோடோயாமோதர‌
உடுபதியிடறு காக்கிரியழக தாலேதாலேலோ
உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ. 2

வெருவரநிய மூட்டியகொடிய தீவாய்வீழாதே
விழைவுறுமடியர் வீட்டுறநயமில் கோதாய்வேதாநால‌
அருமறைமுதன்மை கீழ்ப்படவமுத மாராவாயாலே
அருள்குடமுனிவ னாத்தமிழ்புனையு நூலாலோவாதே
இருபுயம்வகுள நாற்றியமதலை மாறாபாடாய்நீ
யெமையெனவழுதி நாட்டுளகுருகை மூதூராழ்வார்பால்
உருகெழுசிறுக னீர்ததிடநடவு தாளாதாலேலோ
உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ 3

தொடுகடலலையின் மோத்துறுமுதிய கோண்மீன்மேயாமே
துகள்வெளிவயிறு போய்ப்புகநிலவு தீயேழ்நாமேயா
அடுபசிதணிய வேற்றெறிவளியி னாவாயோடாமே
அரிதுகிர்பொரிய மோட்டுடல‌லகை யூர்த்தேரோடாநீர்
இடுமணல்சுழல வார்த்திரநிவக மேகாவாய்காவாய்
இருநிலம்விடவெ டாச்சிலைவலிய கால்பூணான்வாயே
விடுமடல்புனைவி ழாப்பொலிசயில நாடாதாலேலோ
விரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 4

ம‌ழைபடிகடலு லாத்திரிபடவு சூழ்பாய்மீதேபோய்
மடமயிலகவி யாட்டெழவளைகள் கால்சூறூதாயா
அழகியபுறவு கூட்டுணவரிகொள் போர்மேல்வாமானேர்
அடிவிழவுகள வீற்றுளவிளைய சேதாவாய்பாய்பால்
எழுதினைகவர வேட்டுவர்வலைகள் பீறாவாலாலே
எறிசுறவறைய நாட்டிதணடுவு சூழ்கால்கீழ்மேலாய்
விழநிலம்விரவு கரப்பயில்சயில நாடாதாலேலோ
விரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 5

வேறு

முடக்குந் திரைப்பா லாழிநெடு
முகட்டிற்றுயில விருசெவியில்
மூல மென்னுங் குரல்புகுமுன்
முளரிப் பொகுட்டு வீட்டிலொற்றை

வடக்குங் கமச்சேற் றிருகொங்கை
மங்கை விளைந்த தெதுவென்று
மலர்க்கை நெரிப்ப வரவர*க
வணங்க வுதறி விசும்பிமைப்பிற்

கடக்குங் குடகாற் றெறிசிறையக்
கலழச் சேவற் பருமபிடர்க்
கழுத்தின் மேற்கொண் டப்புள்ளைக்
கால்கொண் டணைத்து விண்பறந்து
தடக்குஞ் சரத்தின் முன்சென்ற
தலைவா தாலோ தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (6)

எடுக்கு மிழுதோ டழுதோடி
யேகத் தொடரு மசோதைகரத்
தெட்டப் படவு மொருவருக்கு
மெட்டப் படாத புயல்புயலைக்

கடுக்குந் திருமே னியினடிபுக்குங்
கைம்மா றிருப்பப் பின்னுதவும்
கைம்மா றிலாத கடலபசிய
கனக வுடுக்கைத் திருமங்கை

உடுக்கும் பாசங் கிடப்பவுளத்
தொன்றின் பாச மிலாதபச்சை
யோங்க லென்று மறைநாலு
முரைப்ப விரவி யுருட்டாழி

தடுக்குந் திருமா லிருஞ்சோலைச்
சயிலப் புயலே தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (7)

யாழுங் குழலும் பழித்தமொழி
யிடையர் மகளிர் குழைகிழிய
வெறிந்து செவந்த விழிவாளி
யிருக்கும் பகுவாய்த் தூணியலை

சூழுங் கடலீன் றளித்தமணி
தூற்றுங் கதிர்வெப் பொழியநிலத்
தோகை முகத்து மகரந்தந்
துளிக்குஞ் சிவிறி திருமார்பில்

வாழுங் கமலப் பொகுட்டுமயின்
மலர்த்தாட் டுணையிற் பொதிந்ததுகள்
மாற்றும் பசும்பட் டாடையென
வரைத்தோள் கிடக்கு மளிப்படலம்

தாழுந் துளபத் திருப்பள்ளித்
தாமப் புயலே தாலேலோ
சங்கத் தழகா விடபகிரித்
தலைவா தாலோ தாலேலோ. (8)

நறைக்கட் பொகுட்டு மலர்குவிய
நளினந் திகைப்ப முகைக்குமுதம்
நாட்பூ வெடிப்பத் திகைப்பவெறி
நளிநீர்க் கயத்து ளுறைநேமிச்

சிறைப்புட் பேடை யுடல்பிரியத்
திகைப்பச் சகோர நிலவேட்கத்
திகைப்ப விலங்கு வதிதேடத்
திகைக்கப் பறவை பார்ப்புள்ளிப்

பறப்பத் திகைப்ப நறைப்பொழில்கள்
படியத் திகைப்ப வேள்சிலையிற்
பாணங் கொளுவத் திகைப்பவெயில்
பம்புஞ் சுடரை யெல்லெனவான்

மறைப்பத் திகிரி தொடுஞ்சோலை
மலையிற் புயலே தாலேலோ
மந்தா கினியும் பரிபுரமும்
வளரும் பதத்தாய் தாலேலோ. (9)

வேறு.

மகரங் குளிறுங் கனைகடன் மேய்ந்துயர் மலையின் றலைதுஞ்சும்
மழைமுகி லென்றெக் காலமுமிதழி மலர்ந்தலர் பொன்றூற்றச்
சிகரந் தொறுமட மயினட மாடச் செக்கர்க் கோபமெழச்
சினைவளர் காயா வகமட லூழ்ப்பச் சிதறுந் தளிபகுவாய்
நுகருஞ் சாதக மவத்தளவந் நுனைமுகை விடமின்போல்
நுண்ணிடை துவளச் சதிரிள மங்கையர் நுரைவிரி சுனைகுடையத்
தகரங் கமழும் குலமலை தங்குந் தலைவா தாலேலோ
சங்கந் தவழும் பரிபுர நதியின் றலைவா தாலேலோ. (10)

வேறு.

அளிக்குந் தரைக்கங் காந்தவுண
னகங்கை நிறைந்த நீர்வார்க்க
ஆழிப் பொருப்பு வேலியுல
கடிக்கொண் டோங்கி மழைக்கருணை

துளிக்குங் கமல மிரண்டுமறை
தோயுங் கமல மொன்றுமொளி
தூற்றுஞ் செக்கர்த் துகிருமிரு
சுடருஞ் சுரும்பி னிரைபரந்து

களிக்குந் தோட்டு நறைத்துளவக்
கானுஞ் சுமந்து வெளிவளரும்
கரிய பூவை மதிதவழ்ந்து
காலு மமுதப் பெருக்கிலுடல்

குளிக்குஞ் சிமய விடபநெடுங்
குவட்டுக் குரிசி றாலேலோ
குன்ற மெடுத்து மழைதடுத்த
கோவே தாலோ தாலேலோ (11)

தாற்பருவமுற்றும்

———–

நான்காவது – சப்பாணிப்பருவம்

ஒருமுறையுனது வயிற்றுமலர்க்கு ளுத்தவனப்பாகன்
உமைமடமயிலை யிடத்திலிருத்தி யிருக்கும்வலப்பாகன்
உடலியலவுண ருடற்கறைகக்க வழுத்துமுகிர்ச்சேனம்
உததியினடுவு துயிற்சுவைமுற்றிய வட்டவணைச்சேடன்

இருள்புறமிரிய நிரைக்கதிர்விட்ட வலக்கண்வெயிற்பானு
இதழ்பொதிகுமுத மலர்த்துமிடக்க ணொழுக்கமுதப்பானு
எழுதுதலரிய மறைத்தமிழ்முற்ற வடித்தவிசைப்பாணன்
இழுதெழுமுடைகமழ் கொச்சையிடைச்சியர் பெற்றகுலப்பூவை

முருகுடைகமல மலர்த்தவிசுச்சி யிருக்குமனைத்தீபம்
முகின்முதுகிடறு கடற்றலைவட்ட மளிக்கும்வெதிர்க்கோலன்
முகைநெகிழ்தொடையன் முடித்துதறித்தரு சொற்புதுவைக்கோ
முதுகிடவிபுதர் மிடற்றுமுழக்கு குரற்கடவுட்கோடு

குருகுலநிருப ரமர்க்கணிருட்டை யழைத்தபகட்டாழி
குரைகழலடியை வழுத்தியுளத்தின் மகிழ்ச்சியுறப்பாடு
குனிதிரையெறியரு விக்குலவெற்பிறை கொட்டுகசப்பாணி
குவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (1)

விழிதுயில்பெறமணி நெற்றிகுயிற்றிய தொட்டிலலைத்தேமும்
விரைகெழுபுழுகுநெய் பொத்திமுகத்தலை பித்தைமுடித்தேமும்
எழுகதிர்விழுபொழு துப்பிலைசுற்றி யனற்றலையிட்டேமும்
இளநிலவுமழ்மதி சுட்டுமுனக்கெதிர் முற்றமழைத்தேமும்

அழுகுரறணிய மருட்டியணைத்தொசி யொக்கலைவைத்தேமும்
அடிதொழுமிமையவர் வர்க்கமுமொப்ப வுவப்பமுடத்தாழை
கொழுமடனகவளி புக்குழுவெற்பிறை கொட்டுகசப்பாணி
குவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (2)

திருவயிறமைவர வைத்தருள்வைத்த வளப்பிலுயிர்ப்பால
திரைவிரிபுனல்வெளி பொத்துவடத்திலை முற்றுதுயிற்பால
வரிசிலைகடைகுழை யக்கடல்சுட்ட விழிக்கடையுட்கோப
மழைமுகிலெறிதுளி தட்டுமலைக்குடை யிட்டநிரைக்கோப

முருகெழுமிளநறை கக்குபசுத்தபு னத்துளபத்தாம
முடைகமழிடைமகள் கட்டவொடுக்கிய சிற்றுதரத்தர்ம
குருகுகடலையரு வித்துயில்வெற்பிறை கொட்டுகசப்பாணி
குளிர்மதிதவழ்பொழில் கற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி (3)

திருமகடழுவிய பச்சையுடற்புற முத்தவெயர்ப்பேறத்
திரைதருமமுதென லுற்றிதழிற்றுளி சுற்றுதரத்தாரக்
கருகியசுரிகுழ லுச்சிமுடிப்பிணி விட்டுமுகத்தாடக்
கதிரிளவெயிலெழு முச்சிமிலைச்சிய சுட்டிநுதற்றாழப்

பெருகிளநிலவுமிழ் கொத்துவளைக்குல மிட்டபுயத்தாலப்
பிணிநெகிழ்நறைபிழி செக்கமலத்துணை யுட்கைசெவப்பூறக்
குரைமதுவொழுகு தொடைத்துளபப்புயல் கொட்டுகசப்பாணி
குளிர்மதிதவழ்பொழில் சுற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி. (4)

வேறு.

இடைதடுமாறக் குழல்புறமலைய மெய்ப்பூணொலிப்பவொலியா
இருகுழையூசற் றெழில்வரநிலவு முத்தாரமொப்பமுலைமேல்

முடைகமழ்தாழிப் புறமெறிதிவலை தொத்தாவெளுப்பமதிபோல்
முகம்வியர்வாடக் கயிறுடல்வரியு மத்தாலுழக்கியுறைபால்

கடையுமசோதைக் கருள்வரவிழிகள் பொத்தாமயக்கியுடனே
கரமலர்கோலித் தடவினிலிழுது தொட்டோடுபச்சைமுகிலே

தடமலிசோலைத் திருமலையழகா சப்பாணிகொட்டியருளே
தழையவிழ்தாமத் துளவணியழகா சப்பாணிகொட்டியருளே. (5)

வேறு

வாராட்டு கொங்கைக் குறுங்கண் டிறந்தூறி
வழியுமின் பாலருத்த
மலர்விழிக் கஞ்சனங் குவளையெழில் படவெழுத
வரிகுழற் புழுகுபெய்ய

நீராட்ட மஞ்சட் பசும்பொற் பொடித்திமிர
நிரைவளை கரந்தொடுப்ப
நிலவொழுகு* வேண்ணீறு பிறைநுதல் விரிப்பவெயி
னிழன்மணித் தொட்டிலாட்டிப்

பாராட்ட வெவருமற் றண்டகோ ளகைவிண்டு
பாய்பெரும் புனலிலாலம்
பாசிலைப் பள்ளியிற் றுயில்பசுங் குழவியேழ்
பாட்டளி சிறைக்காற்றினால்

தாராட்ட வண்டுளவு தேனொழுகு மணிமார்ப
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (6)

——————–
*வெண்ணீறு-புழுதிக்காப்பு. இது “சீரார்செழும்புழுதிக்காப்பு: என்று தமிழ்மறை நுதலியது.

பாட்டா யிரஞ்சுரும் பறைபொழிற் புதுவையிற்
பாவைகுழல் சூடியுதறும்
பனிமலர்ச் சருகுதே டிக்குப்பை நாடொறும்
பயிலாம லவள்புனைந்த

தோட்டா ரிதழ்ச்செல்வி மாலைதரு வேமணிச்
சூட்டரா வணைசுருட்டிச்
சொற்றமிழ்ப் பின்புசெல் லாமல்வண் டமிழ்மாலை
சூட்டுபதின் மரையழைப்பேம்

கோட்டா வெருத்துகட் குடிலில்வெண் ணெய்க்கிளங்
கோவிமார் கன்றுகட்டும்
குறுங்கயிற் றணையுண்டு நில்லாம லாயிரங்
குடவெண்ணெய் கொள்ளையிடுவேம்

தாட்டாழை வேலித் தடஞ்சோலை மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (7)

பூக்கும் பொலன்றா மரைத்தாளின் முன்பொத்து
புவியடங் கலுமுந்தியின்
புடைவைத்த தொப்பல வழைக்கைக் கெனப்பழம்
புனிதமறை யாளனாட்டத்

தேக்குந் திரைக்கங்கை நீராடு தண்டையஞ்
சீரடி யெடுத்துமழலைச்
செய்யவா யிதழ்பெரு விரற்றலை சுவைத்துவெண்
டெண்ணிலா மூரல்கான்று

கோக்குந் தழைக்கூரை முடையாடை யிற்றுயிற்
கொண்டமுகி லுழவரோட்டும்
கூனுட லலம்பாய வெளிதாவு பகுவாய்க்
குறுங்கண்ண வாளைவாலால்

தாக்குண்ட சூன்மேகம் விழிதுஞ்சு மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (8)

திங்கட் புகுந்துபெற் றுவகைமலி தாய்தந்தை
தீஞ்சுவைச் சோறளிப்போர்
செங்கதிர்ப் பொன்கொடுத் துத்தொண்டு கொண்டவர்
செழும்புகைப் படலைவானில்

பொங்கக் கிளைத்தெழு கடுந்தழ னெடுங்குப்பை
புயலுறு முடன்பகைத்துப்
பொருகுரற் பகுவாய ஞமலிநள் ளிருளுடற்
பொசிகழுது கடையுருட்டு

வெங்கட் குறுங்கா னரிக்கொள்ளை குடவள்ளி
விரைந்தெடுத் தெழவிறைக்கும்
விரிசிறைப் புட்குல மெமக்கெமக் கென்னுமுடன்
மீளவு மெடாம‌லடியார்

தங்கட்கினருள்சுரந் தெழுபிறப்ப‌டருமுகில்
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே 9

எட்டுவகை யோகத் தினிற்பிரம ரந்திர‌
மெழுந்தங்கி யங்கடவுணாள்
ஈரைந்தொ டைந்துவெண் ணிறவைகல் வடவயன‌
மீரிரண் டோடிரண்டு

பட்டுவளர் திங்கள்வரு டம்பவனனாதவன்
பனிமதி தடித்துவருணன்
பாகசா தனன்மறைக் கடவுள்வழி காட்டநீர்
பாய்ந்தாடு விரசைபுக்கு

விட்டுமூ துடலமா ன‌ன்றீண்ட வாதனையும்
விட்டழிவின் மெய்படைத்து
வெண்சங்கு மாழியுங் கைக்கொண்டு பரமபத‌
மேவுநின் றொண்டர்மீளல்

தட்டுமணி மண்டபத் துடனுறைய வைக்குமுகில்
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே 10

அகையுந துணர்த்தழைக் குடிலிருந் தந்தணர்க‌
ளரியகட வுளரைவேள்வி
அவியமுது கொள்ளப் பழம்பாடன் மறைகொண்
டழைக்குங் குரற்கற்றுநாள்

முகையுண்டு வண்டறை பொதும்பரி னிளங்கிள்ளை
முகமலர்ந் தெழவிளிப்ப
மும்மைமூ துலகமும் பாழ்படத் தேவரும்
முனிவரும் வந்துபம்பிப்

புகையுந் தழற்குழியும் யூபமுஞ் *சா**யம்*
பொரியிடுங் கலனுநெய்வான்
பொங்கிவழி குழிசியுங் காணாம லலமரும்
புணரியெழு மிரவிபொற்றேர்

தகையுந் தடங்குடுமி யிடபநெடு மலைவாண
சப்பாணி கொட்டியருளே
தரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்
சப்பாணி கொட்டியருளே. (11)

சப்பாணிப்பருவ முற்றும்.
———

ஐந்தாவது – முத்தப்பருவம்.

முருகொழுகிறாலி னறவுகுதிபாய மழுவறுத்தகவட்டகில்
முருடுசுடுவாச மெழுபுகைவியோம வுடல்புதைப்பமதுத்துளி
முகிழநெகிழ்சாதி மலர்குளவிமூடு புதலருக்குபுனத்திடை
முகடுபுதைபூழி யெழவெயினர்மூரி யெருதுறப்பிவிடப்புனம்

அரவரசுசூடு குருமணிநிகாய மெனவுடுப்பமுகக்கொழு
அயின்முழுகுகூன னுதியின்மணியேற வலனுழைத்துமுழுத்திடா
அவல்வயிறுதூர நிரவிமுளைநாறு விதைபிடித்துவிதைத்திள
அளிவிளரிபாடு மடைபொதுள்படீர முதறறித்துவணக்கிய

கரியகுரலேனல் புரவுபெறவேலி புறனிரைத்துநிரைக்கிளி
கடிகவணிலேன மிரியமணியார ம்ந்றியமத்தவிபக்கிளை
கதழெரியலாத மெனவெருவியோட விழைபுனிற்றுமடப்பிடி
சுயமுனியைநாடி நடவையெதிர்மீள வரவொருத்தல்குழித்தலை

சரிகரையையோடி யுயர்கரையிலேற விடவழுத்துகுறத்தியர்
தமதுகுலம்வாழ வுனதுபுகழ்பாடி மடையளிப்பமதிக்குறை
தவளவளமேவு மிடபமலைவாண தவளமுத்தமளிக்கவே
தபனவெயிலேறு பவளவிதழூறு தவளமுத்தமளிக்கவே. (1)

வேறு.

வருமதபொருப்பு நடுவளைமருப்பு வயிறுதருமுத்த
மொளிகளைத்த பழுப்புறும்
வரைமுளியமுற்று மனலெழுவனத்து வளரும்வெதிர்முத்த
முடல்கொதிப்ப வெதுப்பெழும்
வரியளியிசைக்கு மனமுருகிமொட்டு மலர்வனசமுத்த
நிலவுசெக்கர் முகத்தெழும்
மகிணர்கரமுற்ற கலவியிலிறுக்கு மகளிர்களமுத்த
முருளுமுச்சி யதுக்குணும்

உருகெழவெளுத்த பிறைபுரையெயிற்ற வுரகமணிமுத்தம்
விடவழற்பொடி பட்டிடும்
உலகுடலிருட்டு முகிறுளிதுவற்ற வுடனொழுகுமுத்த
மொழுகிருட்டொளி யுட்படும்
உடைதிரையுடைப்ப வுவரிவிளையிப்பி யுமிழுமணிமுத்த
நெடியவெக்கர் மணற்படும்
ஒழுகமடைபட்ட மதுமடலுடைக்கு முயர்கமுகமுத்த
மரகதத்த பசுப்பெழும்

வெருவிவலைகட்ட வணவியலைதத்தி விழுசுறவமுத்த
மயினுதித்தலை முட்படும்
மிடறொலியெடுப்ப வெழும்வளியுலர்த்த வெளியவளைமுத்த
மறவெறித்தெழு நெய்ப்பறும்
விளைகழனிநெற்கண் விரவுபருமுத்த முலவியவெருத்த
கவையடிப்பட விட்புணும்
விரிகதிர்பரப்ப விலைதழையுமிக்கு விளையுமுழுமுத்த
முரலரைப்ப விழைப்புணும்

இருநிலமடுத்து முகமுழுகளிற்றி னெயிருசொரிமுத்த
முருபரற்க ணறுப்புறும்
இவைதவிரமுத்த மணிசிலவிரட்டை படுமொளிமறுக்கு
மெனவனைத்து முவக்கிலெம்
எறிபுனலுடுத்த தலையருவிசுற்று மிடபநெடுவெற்ப
விதழின்முத்த மளிக்கவே
இளமதியொழுக்கு மமுதருவிசுற்று மிடபநெடுவெற்ப
விதழின்முத்த மளிக்கவே. (2)

வேறு.

உலகைகரிவெப்பு வனமடைகுழைப்ப வெதிரிசையழைத்தும்விடவாய்
உரகனைவரித்த கொடிநிருபனுட்க வரிவளை குறித்துமுரிதோய்

கலனுதரமெத்த விடைமகளிர்வைத்த முடையளைகுடித்துமவர்தாழ்
கயிறரையிறுக்கி யுரலுடனணைப்ப வழுதிதழ்நெளித்துமனையாம்

அலகையுயிரொக்க வமுதொடுகுடிப்ப முலைதலைசுவைத்துமெறிநீர்
அலைசலதிவட்ட மகிதரைமடுத்து மகவிதழ்செத்ததுவர்வாய்

மலரெமர்பொருட்டு மொருமுறைசெவப்ப மழலைமணிமுத்தமருளே
மதியமுதொழுக்கு மிடபநெடுவெற்ப மழலைமணிமுத்தமருளே. (3)

வேறு.

ஆகத்து ணீங்கியுயிர் யாதனை யுடற்புக்
கனற்புகை யிருண்டகங்குல்
ஆரிருட் பக்கமறு திங்கடெற் கயனநில
வலர்திங்கள் வழிகாட்டமீ

மாகத்து நரகம் புகீஇப்பயன் றுய்த்தொழியும்
வழிநாளி லந்தவுருவம்
மாயமூ தாவியொடு தபனகிர ணத்திமைய
வரையிமத் துடனடைந்து

மேகத் துவந்துகும் பெயலினிற் பாரிடன்
வீழ்ந்துநளி புனலோடுநா
விழையும் பொருட்டொறு மணைந்துபல் லுடறொறும்
மேவியிங் ஙனமளவினாள்

போகத் திரிந்துவர விளையாடல் புரியுமுகில்
பூங்குமுத முத்தமருளே
பொறிவண்டு கண்படுக் குஞ்சோலைசூழும்
பொருப்பமணி முத்தமருளே 4

ஈட்டும் பெருந்தவ முனிப்புனித னென்புடல‌
மிரலையுட லதளுடுப்ப‌
வெரிவிழிப் பிணருடற் பிலவாய் நெடும்பே
யிபத்தோ லுடுப்பமுனிவன்

மூட்டுந் தழற்குழியினெய்சொரிய நரியுதர‌
மூளெரிக் குழியிலுட‌லம்
முழுகுநிண நெய்விடத் தவமுனி தருப்பையடி
முறைப்படுப் பக்குடற்கோத்

தாட்டுஞ் சிறைப்பருந் தடிபடுப் பத்தவத்
தரியமுனி கடவுள்யாவும்
அழைப்பவெங் காகங் கரைந்தின மழைப்பமுனி
யனன்மகங் காத்தெடுப்பக்

கோட்டுஞ் சிலைக்கணையி னிருதரைக் காய்ந்தமுகில்
குழைபவள முத்தமருளே
கூராழி கைக்கொண்ட வாயிரம் பேராள‌
குழைபவள முத்தமருளே. 5

வரையெடுத் தேழுநா ணின்றநீ கோபால‌
மகளிர்சிறு சோற்றினுக்கு
மடிமண லெடுத்ததா லுடலிளைத் தும்வானின்
மந்தார மலர்கொய்தநீ

விரையெடுத் தெறிபூங் கறிக்குமல ரெட்டாமல்
விரல்குந்தி யடிகன்றியும்
வேழவெண் கோட்டைப் பிடுங்குநீ வண்டன்மனை
விளையாடு பாவைக்குவெண்

திரையெடுத் தெறிபுணற் காய்பிடுங் கிக்கரஞ்
சேந்துமுன னொந்தவென்று
செய்கின்ற மாயங்க ளறிகிலேங் குறமகளிர்
செங்கணிழல் குருகுநோக்கி

இரையெடுத் தல்லாமையாலழியு மருவிமலை
யிறைவமணி முத்தமருளே
யெற்றுந் திரைச்சிலம் பாறுசூ ழிடபகிரி
யிறைவமணி முத்தமருளே 6

மட்பாவை தோயுந் துழாய்ப்பள்ளி யந்தாம‌
மார்பின்கண் வாய்த்தவந்த‌
மதியத்து மார்பினு மிருந்தா னெனப்பருதி
வருபுலத் தொருநான்குதோட்

புட்பாக னும்மறலி யுறைபுலம் வெண்ணிறப்
புனிதனும் வருணராசன்
புலத்தினிற் பச்சுடற் றேவும்வெள் ளிதழ்நறும்
பூங்குமுத பதிபுலத்தில்

கட்பா சடைப்பற் பராகவொளி கான்றமெய்க்
கடவு முடன்விதிக்கில்
காவல்பூண் செயமங்கை பூதம்வெம் புலிகொடுங்
கனைகுரற் சீயம்நிற்ப‌

விட்பால் வருந்திங்க ளுருவுகொள் விமானத்தின்
மேவுமுகின் முத்தமருளே
வெண்ணிலா மதிதுஞ்சு தண்ணிலா வாரம‌
வெற்பமணி முத்தமருளே. 7

வேறு

படைத்துத் திருவைத் தருந்தேவர்
பாக சாலை சுட்டிலங்கைப்
பாடி தொலைத்துக் கரும்பேய்க்குப்
பாக சாலை யளித்தறத்தைப்

புடைத்துத் தருக்கு மரக்கர்குழுப்
போக நரக வழிதிறந்து
புலவுச் சுடர்வெம் மழுப்படைக்கைப்
புனிதன் போக நரகவழி

அடைத்து முதன்மை முறைமாற்றி
யடைவு கெடுக்குந் தனிப்பகழி
ஆடற் சிலையி னாண்கொழிக்கு
மழுக்குப் போகக் கொடிவிசும்பைத்

துடைத்துத் திவளு மலையிறைவ‌
துவர்வாய் முத்த மளித்தருளே
தோணான் கைந்து படைசுமக்குந்
தோன்றன் முத்த மளித்தருளே. 8

வேறு

தாள்பற்றி யேத்தப் புரந்தரன் கரிமுகன்
சதுமுகப் பதுமயோனி
தண்ணறுஞ் செச்சையந் தார்முருக னிமையவர்
தடஞ்சுறாக் கொடியுயர்க்கும்

வேள்பற்று தீயிற் குளிப்ப*நு/துத னாப்பண்
விழித்தகட் சூலிசெம்பொன்
வெயின்முடிச் சேனைநா தன்பிரம் படிதாக்க‌
மீதிலெழு மணிகடொத்திக்

கோள்பற்று வடபுலக் குன்றெனப் பத்துமுன்
கொண்டவெண் படிமணந்த‌
கொண்டறுஞ் செழுநிலத் திருவாசல் பொலிநங்கள்
குன்றின் றுழாய்ப்படப்பைத்

தோள்பற்று சுந்தரத் தோகையொடு வாழுமுகி
றுகிரில்விளை முத்தமருளே
தொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்
றுகிரில்விளை முத்தமருளே. 9

சேடற் கெருத்துளுக் கக்கடற் பள்ளத்
திரைத்தலை வரைத்தலையனைத்
தெசமுகக் கபடனை வெகுண்டெழும் வானரச்
சேனா பராகமண்ட

கூடத் தெழுந்துவான் கங்கைக்கு மண்கட்டு
கூலம் பசுந்தகட்டுக்
கொய்துணர்த் தருவினுக் காலவா லஞ்சங்கு
கொட்டுமா னதவாவியல்

பாடற் சுரும்பூது முவரிநெடு நாளமுதல்
பதிகொள்ள வள்ளறெய்வப்
பாவையரை யமரர்புரி வதுவைக்கு முளைநாறு
பாலிகைப் பூழியாக

ஆடற் கருஞ்சிலையி னிருகடை குனித்தவன்
னம்பவள முத்தமருளே
அருள்பெருகி யலையெறுயு மரவிந்த லோசனன்
னம்பவள முத்தமருளே. (10)

உடைக்குந் திரைக்கொ ளராவணைத் துயில்கொளு
முனைக்கடு தொடற்கஞ்சியே
ஒழுகுமளை முடைநாறு மணையாடை பலகாலு
முதறிப் படுத்துமீளப்

படைக்கும் பெரும்புவன மீரேழு முண்டநின்
பண்டிக்கு மலைகுடிக்கும்
பால்செறித் தற்குப் பசும்பரைத் தூட்டியும்
பைம்பொற் பொருப்புநீறாப்

புடைக்குஞ் சிறப்புட்க டாய்வரு முனக்குமொரு
புட்டோடம் வந்ததென்று
புனல்சொரிந் தும்பொதுவர் மங்கையர் மயக்குறப்
பொதுவினின் மயக்கியிழிவைத்

துடைக்குந் துணிர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்
துகிரில்விளை முத்தமருளே
தொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்
துகிரில்விளை முத்தமருளே. (11)

முத்தப்பருவமுற்றும்.
——

ஆறாவது – வாரானைப்பருவம்.

மடலவிழ்பொழின் முதன்மேற்பட நிமிர்தலைகவிழ்ந்து
பார்பூப்பவெறியுமகில்சுடு
மணமெழுபுனம்விளைகாய்த்தினை கவரமழகன்று
நாநீட்டவகவியலம்வரும்
மடமயிலுகள்விடையேற்றிமி னெடுமுகடிருந்து
தாள்பேர்ப்பவிளையகுறவர்தம்
மடவியர்விழுகிளியோச்சிய விதண்முதல்பறிந்து
கீழ்நாற்றநடுவுதுறுமிய

விடரகம்வெறுவயிறாய்ப்பெரு வெளிபடமுழங்கு
கோளேற்றையுழுவையரிவிழ
விரிபொரியவிர்தலைதூக்கர வருணமணிதுன்று
வாய்காற்றவிருளுமுகமுசு*
வெளியினில்விழுகிசிறுபார்ப்பினை விசையுறவெழுந்து
தாயேற்பவமுதநதிபடி
விடுமடிநிரைகடைவாய்ப்புற** மிசையுறுபசும்பு
லீயோட்டவெயினர்தறியணை

கடகரிகுனியிருகோட்டிள நுதியுழவிழந்து
கார்காட்டவயிரம்வெயில்விடு
கதிர்மணிமரகதமீர்த்திழி யருவிகள்பரந்து
வீழ்நாட்டவெறியும்வளிதரு
கருகியசிறுசிறையீக்கண மலமறவழிந்தி
றாறூற்றுநறவம்விழவிரு
கரைதவழ்மறிதிரையாட்டிய புனல்சுனைமறிந்து
வாய்சா *ய்ப்பநறியகுவளைகள்

புடைவிடுமடன்மதுவூற்றெழ வகன்மழைபொழிந்து
நீராட்டமகரமலையொடு
பொருகடல்கவர்புயலீட்டிய புறன்மழைதடிந்து
தோடூழ்த்தமுளரிநடுவுயர்
பொகுடெனவரையெழுநாட்பொழு தொருசிறுபசுங்கை
மீதேறறகுரிசில்வருகவே
புகர்முகமதமலை நூற்றுவர் கெடவிசயனின்ற
தேரோட்டுமழகன்வருகவே. (1)
——————-
** (அசையிடு, பி-ம்)

வேறு.

முடையுறிபொறுத்த சுவலினர்வெளுத்த நறியதளவிள
முகையெனு*மெயிற்றின் வழுவிரவுகொச்சை யுடையமொழியினர்
முடலைபடுநெட்டை யுடலினரழுக்கு முறுகுமறுவையர்
முருகொழுகுவெட்சி யிதழிநறைகக்கு பிடவமதுமலர்
இடைவிரவியிட்ட குழையினர்குலத்தின் முதன்மையறன்வழி
எமதுமகள்சுற்க மிதுவெனவிதிப்ப முதலுமொருபகல்
இமின்முகடசைத்து விழியெரிபரப்பி யுதறியுடலினை
இடியெதிர்சிலைத்து நிமிர்செவிகுவித்து நெடியகவைபடும்

அடிகொடுதுகைத்த துகள்வெளிபரப்பி யறவியறுமுகன்
அயிலொருபுறத்து மழுவொருபுறத்து முறையிலிருபுறம்
அலைவறவிருத்தி வடிபுரி மருப்பின் வயிரநுதியினின்
அறுபதினிரட்டி யிடையர்கள்புயத்து முரீ*ணும்விடையெழு

தொடைமணியெருத்த நெரிபடவுழக்கி யருணமணிபொதி
சுறவெறிமழைக்க ணிடைமகள்களித்து மகிழவடமிடு
துணைமுலையுழக்க வதுவைசெய்புயத்தி னழகன்வருகவே
துணர்சினைவிரித்த பொழில்வளர்பொருப்பி னழகன்வருகவே. (2)
———
*(மெயிற்றா பி-ம்)

வேறு.

மணிபொதியுமோலி புனையுமுடிதாழ விழுதுவிட்டவிர்சடைமுடி
வனையவொளிர்பீத வுடையினையுடாது திருவரைப்புறன்மரவுரி

அணியமலர்மாது கரம்வருடநாணி யுடல்சிறுப்பெழுமலர்புரை
அடிகருகவான மழைபருவமாறு மயினுதிப்பரலடவியின்

உணர்வுவறிதாய வறம்வழுவும்வாய்மை யுடையசிற்றவைவிடைதர
உவகையொடுபோன வருமயிலைநாளு முலையளித்துனதருள்பெறும்

பணிவிடை செய்தாய ரெமதுரைமறாது பழமறைப்பொருள்வருகவே
பருவமழையாடு குடுமிமலைமேவு பழமறைப்பொருள்வருகவே (3)

வேறு

வினைபுரியுங் கடியவிடப மழல்கடை
விழியுதறுங் கொடியகுருகு வெளியுழு
சினையிணர்பம் புபயமருது புடையுருள்
திகிரிதொடும் பரியசகடு முலைதர
அனையெனவந் தடருமலகை யிவையிவை
யவுணன்விடும் பணியில்வருமுன் விரைவினில்
நனைபொதியுந் துளவனழகன் வருகவே
நமதுபுறந் தழுவவழகன் வருகவே. (4)

தடவமுதம் புகையின்முழுகு மனைமுலை
தறிபயில்கன்றலகு செருகு நிரையுடன்
அடவிபுகும் பொதுவன்வருவ னவனுடன்
அரியவிருந் துவகைபொழியு மழன்முகம்
இடுமிழுதின் பதமுமுறுகு மிலைமனை
யிடைதமியன் புகுமுன்முலையி லமுதுண
மடல்பொதுளுந் துளவவழகன் வருகவே
மறைகதறுங் கடவுளழகன் வருகவே. (5)

இணைவிழியும் பொலிவுவரவு மடியர்தம்
எழிலுடலம் புளகம்வரவு முகபடம்
மணிமுலைபொங் கமுதம்வரவு நிறைமதி
வதனமலர்ந் துவகைவரவு முனதரை
அணிமணிபம் பரவம்வரவு மொருமுறை
அடியிணைநொந் தருணம்வரவு முயர்கண
பணவுரகந் துயிலுமழகன் வருகவே
பழமறையின் கடவுளழகன் வருகவே. (6)

எமதுகருங் குழிசியமுத முறைதயிர்
எமதுபொலன் குயிலெமரிய குழமகன்
எமதிடுமண் புனையுமணிய டிசில்கறி
எமதெறிபந் திழுதுமுறையி னிறைதுகில்
எமதுகழங் குனதுமதலை திருடினன்
எனவெவரும் பொதுவர்மகளிர் குழுமினர்
அமையுமிடுங் கலகம‌ழகன் வருகவே
அமலைபழங் கொழுநனழகன் வருகவே. (7)

வேறு

திருநாட்டு வந்தெவரு மருள்பெறற் கரிதெனத்
தெண்டிரைப் பாற்கடற்கட்
டெய்வநா கணயினிற் றுயில்கொண்டு மீன்முதற்
றிருவுருப் பத்தெடுத்தும்

பெருநாட் டுளங்குநீ ருலகிற் படாதன‌
பிறந்துபட் டுங்குருதிநீர்
பெய்யும் புலாற்கூட்டை யிழிவெனா தணுவொளி
பிறங்கவுட் டாமரைப்பால்

உருநாட்டி யும்நமது பேரூர் மற‌ந்தானு
மொருகா லுரைப்பர்கொலெனா
உபயகா வேரிநீ ராற்றினும் வேங்கடத்
துச்சியினு மடியர்தங்கள்

கருநாட்ட மறவிடப மலைமீது நின்றறாக்
கருணைபொழி முகில்வருகவே
கங்கையுந் தொல்லைப் பழம்பாடன் மறையுங்
கறங்குதாண் முகில்வருகவே. (8)

தொழக்களி வருந்தொண்டர் பாசவெம் புரசைசுவல்
சூழவைம் புலனடக்கும்
தோட்டிவென் றெழுமதம் பயின்மனக் கரிநிரை
தொடர்ந்துசிற் றடியைமுற்ற‌

மழக்களிற் றினமும் புனிற்றிளம் பிடிகளும்
வழியருவி யோதைவீங்க‌
மழைமதந் தூங்குங் கவுட்கரி யொருத்தலும்
வந்தரு குலாவவிண்ட‌

பழக்களி தீஞ்சுளைப் பலவுசொரி தேனாறு
பாயுஞ் சிலம்பாற்றயற்
பாசடைத் தாமரைப் பள்ளநீ ரள்ளலிற்
பாயுமேற் றெருமையேய்ப்ப‌

உழக்களிப் பூந்துணர்ச் சினையபுத் திரதீப‌
முறையுமா ளரிவருகவே
உபயசர ணம்பரவு மடியருக் கிருவினை
யொழிக்குமழை முகில்வருகவே. 9

வேறு

தளவு காட்டும் வெண்முறுவ‌
றவழுந் துவர்வா யசோதைபச்சைத்
தழைக்கூ ரையினின் முடைப்பகுவாய்த்
தடவுத் தாழி நெட்டுறியின்

அளவு காட்ட நிமிர்ந்துவெண்ணெ
யருந்து மளவி லவளதுகண்
டடிக்குந் தாம்புக் கஞ்சியழு
தரையி லார்க்கு மணிபொத்தித்

துளவு காட்டுந் திருமேனி
துவளத் திருத்தாண் முன்செல்லத்
துணைக்கட் கமலம் பின்கிடப்பத்
துண்ணென் றோடுஞ் சிறுவாவுன்

களவு காட்டே மெம்மிரண்டு
கண்ணுங் களிக்க வருகவே
கருணை சுரந்து மடைதிறந்த‌
கண்ணா வருக வருகவே. 10

வேறு.

கோட்டிற் பகுத்தமதி வைத்தனைய குறுநுதற்
கோற்றொடி யசோதைவாழைக்
குறங்கிற் குடங்கையி னெடுத்தணைத் துச்சிறிய‌
கொடிபட்ட நுண்மருங்குல்

வாட்டிப் பணைத்தமுது சூற்கொண்டு வெச்சென்ற‌
வனமுலைக் கண்டிறந்து
வழியுமின் பான்முதற் றரையூற்றி வெண்சங்கு
வார்த்துவ யிதழதுக்கி

ஊட்டித் தலைப்புறஞ் சங்குமும் முறைசுற்றி
யொருமுறை நிலங்கவிழ்த்தி
உடலங் குலுக்கிப் பசும்பொடி திமிர்ந்துதிரை
யூடெற்று தண்டுளிநனீர்

ஆட்டிப் பொலன்றொட்டின் மீதுவைத் தாட்டவள‌
ராயர்குல முதல்வருகவே
அருள்பெருகி ய‌லையெறியு மரவிந்த லோசனன்
னழகன்மா தவன் வருகவே. 11

வாரானைப்பருவ முற்றும்.
—————-

ஏழாவது – அம்புலிப்பருவம்.

விடங்கலு ழெயிற்றரா வாலிலைப் பள்ளியுள்
விழித்துணை முகிழ்த்தடங்கா
வெளிமூடு வெள்ளத்து மலர்மண்ட பத்தயனும்
வேதமுங் கடவுணதியும்

கடங்கலுழ் புழைக்கரக் களிறெட்டு மெட்டுக்
களிற்றுப் பெரும்பாகரும்
காளகூடக்களத் திறைவர்பதி னொருவருங்
கதிரவர்கள் பன்னிருவரும்
மடங்கலும் வெண்டிரையும் வெண்டிரை வளாகமும்
வானுமெறி வளியுமனலும்
மன்னுயிர்ப் பன்மையும் வகுத்தளித் துப்பின்னர்
மாய்க்கும் மயக்கவிளையாட்

டடங்கலு மொழிந்துன்கண் விளையாடல் கருதினா
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே (1)

பொங்குவா லுளையேழு பரிமாத் தொடக்குபொற்
றேருகைத் திருளொதுங்கப்
பொழிகதிர்த் தபனமண் டலமூ டறுத்துநீ
போதுதற் குண்மயங்கில்

வெங்கண்மால் கூரலை கருங்கடற் குண்டுநீர்
விரிதிரை யிலங்கைமூதூர்
விட்டுப் பெருங்கிளைக் குழுவொடும் பொருசேனை
வெள்ளத்தி னொடுநிறைந்த

திங்கணான் மாலைவெண் குடையவுணன் வானமீச்
செல்லவத் தபனனாகம்
திறந்தெழும் பெருநடவை யூடிழிந் தின்றுநீ
சேணொடு விசும்புகைவிட்

டங்கண்மா நிலமுந்தி பூத்தவன் றன்னுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே (2)

முளைக்குங் கலாநிலா வமுதநிறை மண்டலம்
முழுகுதர மறைகிடக்கும்
முடக்கும் பகட்டுட னிமிர்ந்துவெம் புகையரா
முள்ளெயிறு நட்டமுத்தித்

தொளைக்கும் பெரும்பாழி வாய்கக்கு நஞ்சினித்
துண்டப் படைக்கொடிப்புட்
டூவியஞ் சேவற் கிரிந்துபோ மயிர்பொறித்
துள்ளுமான் பிள்ளைமற்றோள்

வளைக்குங் கருங்கார் முகங்கண் டெழத்தாவும்
வல்லிருட் பொசிவானின்வாய்
வட்டவா ழிப்படை வெயிற்பட வொதுங்குமேழ்
மண்ணுக்கு மத்துழக்கும்

அளைக்குந் திருப்பவள மங்காக்கு மாலுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (3)

வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில்
வண்டோ டிரண்டுபாடும்
மழைபாய் கடாக்கரிக் கண்கொடுத் தும்பச்சை
மரகதத் துச்சிபூத்த

ஒளிநான்ற நற்படிவ மலயப்பெருந்துவச
னுட்களிப் புறவளித்தும்
ஒருஞான்று பேரடிசில் வாய்மடுப் பச்செம்பொ
னுடைநெகிழ்த் தும்மலைத்தேன்

துளிநான்ற வாலவாய் வேப்பிணர்த் தென்னர்முன்
றொடைநறுங் குழல்விரித்தும்
தொல்லைநாள் செய்தவையி னரியதன் றேயிருட்
டோய்ந்தநின் மறுவொழித்தல்

அளிநான்ற பூந்துழாய் மணிமார்ப னிவனுடன்
னம்புலீ யாடவவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (4)

கறைபட்ட முக்கவைச் சூலவே லெறிபடைக்
கடவுள்சடி லத்திருந்து
கண்டத்தி லூற்றெழு விடத்தா லுணங்கியுங்
கங்கைப் பெருக்கெடுத்துத்

துறைபட்ட வெண்டலைத் திரையினடு வுடலந்
துளங்கியுந் நுதல்கிழித்துத்
தூற்றுங் கடுந்தழற் சூடுண்டும் வளைபிறைத்
தொளையெயிற் றரவுகண்டும்

குறைபட்ட வட்டவுட னிறையா திருந்துங்
கொதிக்கும் வெதுப்புமாறக்
கொய்துழாய்ச் சோலைநிழல் குடிபுக்கு வாழலாங்
கோதிலா வேதநான்கும்

அறைபட்ட தாட்கமல மலையலங் காரனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (5)

கோலுந் திரைப்புணரி யுதரத்தி னுடன்வந்த
கொத்தளிப் பத்திலக்கம்
குடைந்தாடு பொற்றருக் கிளைகிளர் படப்பைசெங்
கொள்ளைவெயில் புடைததும்பக்

காலுங் கதிர்கடவுண் மணிவண்டல் படுகலவை
கமழு*மணி மார்பிலாரம்
கள்ளுடைத் தொழுகங்க மடல்விண்ட பைந்துளவு
கடிமலர்த் தாமம்வேலும்

சேலுங் கெடுத்தவிழி மலர்மண்ட பந்தருந்
திருமாது தேவிவெள்ளைத்
தெண்ணிலா வுமிழ்கின்ற நீயுமிவண் மைத்துனன்
சினைவரா லுகளவெகினம்

ஆலும் புனற்சிலம் பாற்றலங் காரனுட‌
ன‌ம்புலீ யாடவாவே.
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
அம்புலீ யாடவாவே. 6
————-
*வரை (பி-ம்)

உடைதிரைக் கடன்முளைத் துலகுவலம் வருமொற்றை
யுருள்பெருந் திகிரியிரவி
யுடனுறையி னென்றவனு வொளிமாழ்கு மிளநறவ‌
முமிழமடல் விண்டதுளபத்

தொடைகமழ் திருப்புயத் தாயிரந் தேரிரவி
சொரிகதிர்க் குப்பைகக்கித்
தூற்றுஞ் சுடர்ப்பாழி யாழியெதிர் யான்வரத்
துணியுமா றெங்ஙனென்னில்

புடையுமிழு மாயிரம் மணிவெண் ணிலாக்கற்றை
பொங்குவெண் கதிருடுக்கும்
புரிமுகக் கடவுட் டனிச்சங்க முண்டுநீ
போதுதற் கஞ்சறகுவர்

அடையவிரி யச்சங்கம வாய்வைத்த வாயனுட‌
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
அம்புலீ யாடவாவே. 7

மாலைவாய் நறவுபாய் கொந்தளச் சதிரிள‌
மடந்தையர் முகத்தையொத்து
மலைதல்கொண் டிடபகிரி யருகுவரி லீயீட்டி
வளரிறா லென்றழித்தும்

சூலைவாய் வளைகதறு நூபுர நதிப்புகிற்
றுவளுநுரை யென்றுடைத்தும்
சூழல்வாய் வரிலிளைய வெள்ளையம் புயமென்று
சூழ்ந்துகொய் துங்கிளிக்குப்

பாலைவாய் விடவெள்ளி வெண்கிண்ண மென்றுகைப்
பற்றியுங் கதிர்ததும்பப்
பார்க்கின்ற பேராடி யென்றெடுத் தும்பகை
விளைப்பரென் றஞ்சறுஞ்சா

ஆலைவா யொழுகுபா காறுபாய் மலையனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாணவே. (8)

காயுங் கடுங்கதிர் விரித்தொற்றை யாழியங்
கடவுளலை தலைபிளந்து
கனைகடற் பெருவயி றுதித்தெழக் கனியவிளை
கனியென்று புகவிழுங்கப்

பாயுங்கவிக்குலத் தொண்டர்நா யகனைநின்
பால்வர விடுப்பனன்றேற்
பாழிவா யங்காந்து கவ்வியிரு கவுளுட்
படுத்துக் குதட்டவாலம்

தோயும் பிறப்பற் சுருட்டுடற் பாயல்வெஞ்
சூட்டரா வினைவிடுப்பன்
துளபத் துணர்க்கண்ணி யெந்தைகீழ் நின்றுநாற்
சுருதிதொழு தாள்செவப்ப

ஆயுந் தமிழ்ச்சங்க மீதிருந் தானுடன்
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன்
னிவனுடன் அம்புலீ யாடவாவே. (9)

துள்ளக் குறுந்திவலை வெள்ளிவெண் டிரையாடு
தொடுகடற் றலைதுயின்றும்
தொளைக்குங் கழைக்குழ லெடுத்திசை யெழுப்பியுந்
தொல்லைமா ஞாலமேழும்

கொள்ளப் பரந்துமறை மழலைவாய் நான்முகக்
குழவியைப் பெற்றெடுத்தும்
கொடியா டிலங்கையிற் பேயாட விற்கடை
குழைத்தும் பரந்துபூக்கும்

வெள்ளத் தடங்கமலம் யானருகு வரின்முருகு
விரிமுகங் குவியுமென்று
வெருவர லிவன்கரிய கடவுண்மே கத்துடலம்
விளைகமல வனமனஞ்சூழ்

அள்ளற் பெரும்பள்ளம் வந்ததன் றிவனுடன்
னம்புலீயாயவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (10)

விரியுங் கதிர்க்கற்றை யமுதூற நீவந்த
வேலைப் பெரும்பள்ளநீர்
வெஞ்சிலை குழைத்திவன் கணைதொட வறண்டது
விழைந்துநீ யரசுநாளும்

புரியும் பகட்டுவெளி யிவன் மலர்த் தாமரைப்
பொற்றா ளெடுத்துநீட்டப்
பொலனுடல் பிளந்ததட லிரவியொடு நீயரும்
புகலென்ன வடையும்வெற்பு

சொரியும் புயற்றலை தடுக்கைக்கி வன்னகந*
தொடவடி பறிந்ததிவனைத்
தொண்டையங் குதலைவாய் மதலையென் றெண்ணலஞ்
சூற்கமுகு வெண்பாளைவாய்

அரியும் பசுந்தே னரும்புமலை வாணனுட
னம்புலீ யாடவாவே
ஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்
னம்புலீ யாடவாவே. (11)

அம்புலிப்பருவமுற்றும்.
——

எட்டாவது – சிற்றிற்பருவம்.

ஏட்டிற் பொறிச்செஞ் சுரும்பறுகால்
எறிய நறைபாய் செழுங்கமலத்
திறைவன் முதலா மிமையவர்கள்
இறைஞ்சு மெளலி யேந்துதலை

ஒட்டிற் பொறித்து வலனாழி
ஒருங்க வடிமை கொண்டதுபோல்
உனது மலர்த்தா ளுட்கிடக்கும்
ஒற்றைக் கடவுட் சங்குவண்டல்

வீட்டிற் பொறித்தின் றெங்களையும்
விழைந்தாட் கொள்ள நடந்ததிரு
விளையாட் டிதுநன் றன்றலைபாய்
வேலை யுதித்த திருவின்முலைக்

கோட்டிற் பொறித்த சுவடெழுதோட்
கொண்டல் சிற்றில் சிதையேலே
கொண்ட லுரங்குஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே. (1)

கொழித்துக் கிரணஞ் சொரிகழற்காற்
கோக னகத்தி லுறைகங்கை
குதித்துத் திரைநீர்ப் பெருக்கெடுத்துக்
கோட்டும் வண்டற் பாவையினை

அழித்துச் சமைத்த மலர்க்கறியை
அரித்துத் தூதைக் கலத்துமணல்
அடுஞ்சோ றெடுத்து மணிப்பந்தும்
ஆடுங் கழங்கு மம்மனையும்

சுழித்துப் பசும்பொற் குழமகவைச்
சுழியிற் படுத்துச் சிற்றடியேம்
துயர முறவே நடுவுடலம்
சுருட்டுங் கடவுட் பாம்பணையின்

விழித்துத் துயிலு முகின்முன்றின்
மிதித்துச் சிற்றில் சிதையேலே
விதுரன் மனைக்கு மிதிலைக்கும்
விருந்தன் சிற்றில் சிதையேலே. (2)

வாழி யெடுத்து நிற்பரவு
மறைநான் கரற்று நான்குமுகன்
வடிவு மெடுத்துப் படைத்துநிறை
மதியங் கொழிக்கு நிலாவென்னப்

பூழி யெடுத்த திருமேனிப்
புலவுக் கவைவேன் மழுப்படைக்கைப்
புனித னுருக்கொண் டழித்துவலம்
புரியு முகச்சங் குடன்வட்ட

ஆழி யெடுத்த வுருவெடுத்தால்
அளித்துப் பயிலுந் திருவிளையாட்
டன்றி யழித்த லியல்பன்றே
அணக்குங் குடுமித் தலைத்துயில்கான்

கோழி யெழுப்புஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே
கொண்ட லுறங்குஞ் சோலைமலைக்
கோமான் சிற்றில் சிதையேலே (3)

இளைத்துத் துவளு மிடைமடவார்
எண்ணில் பதினா றாயிரவர்
இழைக்குங் குமத்தோ டமைநெருக்கி
இலவத் துவர்வா யமுதருந்தித்

திளைத்துக் கெஞ்சிப் பெரும்புலவி
திருத்தித் தேய்ந்தும் மகளிர்முலை
தீண்டி யறியே னென்றுபொய்யே
தேவர் தெளிய முன்னையுயிர்

முளைத்துத் தழைப்பக் கரிக்கட்டை
முதுகு மிதித்தாய் சிற்றடியேம்
முன்றிற் புறத்தி லெதுதெளிய
முளரித் தாளான் மிதிப்பதுதேன்

வளைத்துச் சுழிக்குந் துழாய்ப்புயல்யாம்
வகுத்குஞ் சிற்றில் சிதையேலே
வானம் பிளக்குஞ் சோலைமலை
மன்னன் சிற்றில் சிதையேலே. (4)

அலம்பாய் விளைநெற் பழனத்தில்
அள்ளன் மடுவிற் றுள்ளுகயல்
ஆடுந் தரங்கக் கருங்கழியில்
அறையுஞ் சிறகர்ப் பேட்டெகினக்

குலம்பாய் குவளைக் கோட்டகத்திற்
குண்டு சுனையிற் றொட்டநெடுங்
குளத்திற் குறுந்தாட் கருமேதிக்
குழியி லுனது பேர்யாணர்ச்

சிலம்பாற் றயலி லாயிரநீர்த்
தெய்வத் தடத்தி னன்றிமுன்றிற்
றெள்ளிப் பரப்பு மணற்குவையிற்
செக்கர்க் கமல மலராது

வலம்பாய் திகிரி முகின்மித்து
வளைக்குஞ் சிற்றில் சிதையேலே
வாரி மகட்கு நிலமகட்கும்
மன்னன் சிற்றில் சிதையலே (5)

கோவை மணிப்பந் தெறிந்தாடும்
கொடிபொற் கழங்கு பனல்வாவி
கொட்குங் கிரணச் செய்குன்று
கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்

பாவை யுகைக்கும் பொன்னூசல்
பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
படப்பை குதிக்கு மான்கன்று
பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்

பூவை யிவையுன் பதத்தூளி
பொதியப் பெருவீ டுறிலடியேம்
பொய்த லொழியு மலர்வனசப்
பொகுட்டி லிருக்கு நான்குமுகத்

தேவைத் திரவுந் தியிலளித்த
சிறுவன் சிற்றில் சிதையேலே
தெள்ளுந் தரங்கப் பாலாழிச்
சேர்ப்பன் சிற்றில் சிதையேலே. (6)

வேறு

கொள்ளைநீர்க் குவளைக் கோட்டக மறந்தும்
குழந்தைவெண் மதிக்கோட்டுக்
குன்றொடுங் குயில்போற் கூவுதன் மறந்தும்
கூருகி ரிளங்கிள்ளைப்

பிள்ளையை மறந்து மயினட மறந்தும்
பேட்டிளம் புறவோடும்
பிணையினை மறந்தும் ஊசலை மறந்தும்
பிள்ளைவண் டிதழுந்தக்

கள்ளைவா யொழுக்கும் வெள்ளிவெண் ணிலவு
காற்றிள முகைமுல்லைக்
கன்றினை மறந்து மிழைத்தயாம் வருந்தக்
கன்னியர் மனைவாயின்

வளளையா லனங்கண் டுயின்மலைக் கிறைவன்
மணற்சிற்றில் சிதையேலே
வண்டமர் துளவன் மாலலங்காரன்
மணற்சிற்றில் சிதையேலே (7)

சுழித்தெறி தரங்கத் திருச்சிலம் பாற்றுத்
தூற்றிய திரை யீட்டும்
சொரிநிலாக் கிளைக்கும் வெண்மணற் குப்பைச்
சுட்பொலன் முறத்திட்டுக்

கொழித்துவெண் டுகிலிற் றலைமடிக் கொட்டிக்
குவித்ததோ ழியரோடும்
குருமணி முன்றிற் பரப்பிமெய் துவளக்
கோல்வளைக் குரலேங்கக்

கழித்தடங் கமலத் துணைக்கரஞ் சேப்பக்
கலைமதி முகம்வேர்ப்பக்
கண்ணிமைப் புறாம லிழைத்தயாம் வருந்தக்
கடைவளை யலம்பாயும்

வழித்தலை மலர்த்தேன் சொரிமலைக் கிறைவன்
மணற்சிற்றில் சிதையேலே
மாலிருஞ் சோலை மலையலங் காரன்
மணற்சிற்றில் சிதையேலே (8)

வேறு

வரியுங் கடுங்கார் முகங்கண்டு
வளர்க்கும் பிணைக்கன் றகலுமது
மடற்பூந் துளபத் திருமேனி
மழைக்கார் காட்டக் குயிற்பிள்ளை

இரியும் வள்வாய் நெடுந்திகிரி
எறிக்கும் வெயிலை முதுவேனில்
என்று கலாவ முள்ளொடுக்கி
இளைய மயிற்பே டெம்மைவிட்டுப்

பிரியுந் தவளத் தரளமணி
பிறழு நிலவுப் பெருவெள்ளம்
பெருகு முன்றிற் றலைவந்து
பெய்யும் பசும்பொ னொளிபரந்து

சொரியுங் கழற்காற் றுணைக்கமலம்
துவளச் சிற்றில் சிதையேலே
சோலை மலைக்கு நான்மறைக்கும்
தோன்றல் சிற்றில் சிதையேலே. 9

ஒடுங் கலுழி விடப்பாந்தள்
உட‌லங் கிழியத் தூண்டுசக‌
டுச்சி மிதிப்பப் பேரரக்கன்
உருவ மெடுத்த தெழுந்துபுகை

ஆடுந் தழன்மெய்க் கரிக்கட்டை
அகல மிதிப்பக் குருகுலத்தில்
அரச ரிளங்கோ வானததர்
அருங்கான் படர்கற் றலைமிதிப்பத்

தோடுஞ் சுரும்புந் ததும*புகுழற்
றோகை யுருவ மெடுத்ததொளி
சொரியுந் தவளத் திருமுன்றிற்
றுவைக்கின் முன்னை வடிவிழக்கும்

பாடு மறைநான் குடுத்தபதம்
பதித்துச் சிற்றில் சிதையேலே
பார்த்தன் றேர்க்கும் புள்ளிற்கும்
பாகன் சிற்றில் சிதையேலே. 10

முடங்காப் புரண்டு நிமிருரகன்
முடியிற் கிடக்கும் புவியேழும்
முந்நீ ரேழும் வரையேழும்
முழங்கு மருவிப் பெருக்கெடுப்பக்

கடங்காற் றியமா திரமெட்டும்
கனகக் குடுமிப் பொலன்வரையும்
ககன மேழு முட்கிடப்ப‌க்
கமலத் திருத்தாள் பொத்தியநாள்

அடங்காப் புவியோ குற்றேவல்
அடியோ மாரை யயர்முன்றில்
அளக்க விற்றைக் கடிவைப்ப‌
தலைநீ ருடலந் தழல்பரப்பத்

தடங்கார்ச் சிலையிற் பகழிதொடும்
தலைவன் சிற்றில் சிதையேலே
சங்கத் தழக னிடபகிரித்
தலைவன் சிற்றில் சிதையேலே. 11

சிற்றிற்பருவமுற்றும்.
—————

ஒன்பதாவது – சிறுபறைப்பருவம்.

மறுதலையரக்க ருயிரயில்குடிப்ப‌
வமரரையளித்த நெடுவேள்
மதனழியவெற்*று சிறுவயிறலைத்து
மயில்வரைபறப்ப வனல்போய்
மறிதிரைவயிற்றின் முழுகிமுதுவெப்பு
முமிழுடல்குளிர்ப்ப வரிதா
வடதிசைபுரக்கு மகள்புறமளிப்ப‌
மழைதுளிமறுத்த வனமீ

தெறுழ்வலியிருப்பு நெடுநுதிமருப்பு
முதுகலைதெறிப்ப வடல்வாய்
எறிபடைபிடித்த கரம்விடவுடுத்த‌
புலியதணிலத்து விழலான்
இடிபடவரற்று தமருகம்வெடித்த
குரலவியநெட்டை யரவூர்
எரிவிழுதுவிட்ட சடைபிணிநெகிழ்ப்ப
மரகதம்விரித்த விலைசூழ்

அறுகிதழிகொக்கி னிறகுதிரவட்ட
மதியின்வகிர்பட்ட நுதன்மீ
தலையும்வெயர்நெற்றி விழியழலவிப்ப
வமரநதியெற்றி விழுநீர்
அறைதிரைகொழிப்ப வுடல்பொதிவெளுத்த
பொடிகழுவவொற்றை ரதமூர்
அருணவெயில்கக்கு பழையவொளிகட்ப
வரன்முதுகளிப்ப முதனாள்

தெறுமுனைமுகத்தி லவுணனெழுவொத்த
திரள்புயமதுற்ற கறைநீர்
சிகரவரைவிட்ட வுவியைநிகர்ப்ப
வெரிதிகிரிவிட்ட மதிதோய்
திருமலைபுரக்கு மழககுணிலெற்று
சிறுபறைமுழக்கியருளே
திருவரைவணங்கி யழககுண்லெற்று
சிறுபறைமுழக்கி ருளே. (1)

வேறு,

ஒளிபெருகித்துளும்பு பரமபதத்திறைவா
உகளமுதைச்சுரந்த வெளியகடற்றுறைவா
அளியுழுபற்பவுந்தி யெழுதரணிப்புரவா
அயனுமைவைத்தபங்கன் விபுதகுலக்குரவா
விளைநகையுட்டதும்பு திகிரிசெலுத்துழவா
விழுநகைகக்குபொங்க ரிடபமலைக்கிழவா
குளிரமலர்க்கைகொண்டு சிறுபறைகொட்டுகவே
குணிறலையெற்றிநின்று செறுபறைகொட்டுகவே (2)

வேறு

செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
செற்றிய தழலெனவே
திக்குள சுறவகை நெற்குலை சடைபடு
செய்த்தலை விழவருசேல்

மொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை
முத்திட வளைதவழா
முக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை
முற்பயில் வெளியெனவால்

எக்கரி னிலவிய வுச்சியி லிளமல
ரிற்புற மளவிருகால்
எட்டடி யிடவிழை பெட்டையி னொடுதிரை
யெற்றிய முதுபுனல்வாழ்

குக்குட மலமரு வெற்புறை மழைமுகில்
கொட்டுக சிறுபறையே
கொத்தளி நிரையுழு மைத்துள வணிமுகில்
கொட்டுக சிறுபறையே. (3)

வேறு

வெண்டிரைப் பாற்கடல் விடப்பாம் புடற்றாம்பு
வெற்புமத் தெரிமுழக்கும்
விண்கிழிக் குங்குடுமி நொச்சிசூழ் மிதிலைவாய்
வின்முடக் கியமுழக்கும்

புண்டிரைக் குருதிநீ ராறுபட வாடகன்
பொன்மார்பி லுகிரழுத்தப்
புடைக்கும் பெருந்தூண் பிளந்தெழுமுழக்கமும்
பொங்கர்மது வாய்மடுத்து

வண்டிரைத் திதழ்குதட் டுந்துணர்த் தருவூழ்த்த
மலர்கொணர்ந் தமரரறிய
வாய்வைத்த வெள்வளை முழக்கமும் கேட்டுளம்
வாழ்ந்தயா மின்றுமகிழத்

தெண்டிரைப் பரிபுர நதித்தலைவ குணிலெற்று
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கியருளே. (4)

வேறு.

புள்ளுந் திரையும் பொருபுனல் குடையும்
பூந்தொடி மங்கையர்தேம்
பொதிவண் டலையுங் குமுதத்திளநகை
பொங்கொளி சொரிநிலவும்

கள்ளுண் சிறைவண் டினமும் பரவுங்
கற்றைக் குழல்செருகும்
கடிகமழ் பித்திகை விடுமலர் தூற்றுங்
கலைநில வும்மிடையைத்

தள்ளுங் கொங்கைகத் தரளக் குவைசொரி
தண்ணில வும்பருகிச்
சற்றும் படுபசி தணியா திளைய
சகோரக் குலமுலவும்

தெள்ளும் புனனூ புரநதி யிறைவன்
சிறுபறை கொட்டுகவே
செம்பொற் சாரற் குலமலை யிறைவன்
சிறுபறை கொட்டுகவே. (5)

வேறு.

கரைகடந் திறைக்கு நீத்தநீர்க் குழியிற்
கால்விழ மருப்பேற்றும்
கழித்தலைக் குமுத வாயிதழ் மடுத்துங்
கட்செவி கிடவாமல்

விரைகமழ் துளவப் பொதும்பரி னீழல்
வெப்பறப் புயம்வைத்தும்
விடுமடற் கமல வுந்தியிற் பூத்தும்
விண்ணுட றொடுமெட்டு.

வரையரா விருத்து நூற்றுவர் கூற்றின்
வாய்புகச் சுமைதீர்த்தும்
மலர்ப்பதந் தாவி யளந்துகைக் கொண்டு
மற்றொரு பொதுநீங்கக்

குரைகடல் வளாக மெமதெனக் குரிசில்
கொட்டுக சிறு பறையே
குலமலை வாணன் மாலலங் காரன்
கொட்டுக சிறுபறையே. 6

காட்டியுமுடலந் துண்ணெனப் புரிந்து
கண்களைத் திசைவைத்தும்
கரத்தினான் மீளப் புடைத்தெழுங் குரற்குக்
காந்தளஞ் செவிதாழ்த்தும்

நீட்டியுந் திரைத்து மெதுவென நகைத்து
நெஞ்சயர்ந் தலமந்தும்
நின்றுலாங் குரிசில் புறவினிற் பரப்பி
நிரையினைக் கழையூதிக்

கூட்டியும் யமுனைக் கரைவருங் களிறு
கொட்டுக சிறுபறையே
குலமலை வாணன் மாலலங் காரன்
கொட்டுக சிறுபறையே. . 7

வேறு

விழுத்தலை வடித்தநெட் டூசிநட் டுங்குப்பை
வெந்தீப் பிழம்பிலிட்டும்
வெண்ணிணத் தீந்தடி யரிந்துசெம் புண்னின்வாய்
வெள்ளுப்பு நீரிறைத்தும்

சுழித்தலை பரந்தாடு முதிரநீத் தத்தினிற்
றுயருழப் பத்தள்ளியும்
சுடர்வா ளிலைக்கள்ளி மீதெறிந் துந்நாசி
தூண்டுமூச் சுள்ளடங்கக்

குழித்தலை தலைக்கீ ழுறப்புதைத் தும்புலாற்
குருதியுடல் போட்டுநாயின்
கோள்வாய்ப் புகுந்துமா தண்டமயர் மறலிபதி
குறுகாம லடியருக்காத்

தெழித்தலை யறாவருவி மலைவந்து நின்றமுகில்
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறைமுழக்கியருளே. 8

பாந்தளிற் பஃறலைச் செம்மணிக் குப்பையிற்
படர்வெயிற் குடல்வெதும்பிப்
பாண்சுரும் பறுகால் கிளைக்கும் பசுந்துழாய்ப்
பள்ளியந் தாமநீழற்

சாந்தள றெடுத்துக் கொழிக்கும் பணைப்புயந்
தவிசுநடு வீற்றிருக்கும்
தரைமகள் விரும்பியெக் காலமுந் நிலவெழுந்
தவளவொண் சங்குடுக்கும்

காந்தளங் கையேந்து பாவையிப் பறையொலி
கறங்கமெலி யசுணமல்லள்
கனிவாயின் மொழிகற்று வளர்கிளிப் பிள்ளைசூற்
கருவிமுகில் கண்படுப்பத்

தேந்தழைப் பாயலரு ணற்சோலை மலைவாண‌
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கியருளே. 9

துளிகொண்ட வெள்ளமிர்த மிடையறா தொழுகிவிளை
துகிர்பழுத் தனையசெய்ய
தூயவா யூறலு முகத்தலை குழற்றலை
துவற்றிவிழு புழுகுநெய்யும்
அளிகொண்ட தண்டுழாய்ப் பள்ளித் திருத்தொங்க
லகவிதழ் வரிந்தோடுதேன்
அலையும் புனற்படத் தட்பமுற் றெழுகுர
லவிந்ததே னருகுபாயும்

ஒலிகொண்ட கடவுட் கவுத்துவச் செக்கர் மணி
யுச்சியிற் கற்றைவெயில்வாய்
ஒலிபொங்க வென்றதள் வெதுப்புங் கருங்கொண்ட
லுடுபதிக் குழவிதவழும்
தெளிகொண்ட தலையருவி துஞ்சுகுல மலைவாண
சிறுபறை முழக்கியருளே
செகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்
சிறுபறை முழக்கிஇருளே. (10)

சிறுபறைப்பருவ முற்றும்
—————–

பத்தாவது – சிறுதேர்ப்பருவம்

இருகரமுஞ்செவப்ப வலனோடிளைத்துவிளைதேன்
எழுதளவம்பதித்த கொடிவேரொதுக்கிமலரால்
மருவெழுபந்தரிட்டு வெயில்வான் மறைத்துமலிதூள்
மடியமுகந்துகொட்டி யிறைநீர்மழைக்கண்மடவார்

நிறையளகங்குலைப்ப விழுதாதொதுக்கியடியேம்
நிலவியமுன்றில்வட்ட நடுவேநிறுத்திமரைவாழ்
திருவுறைபொங்கர்வெற்ப சிறுதேருருட்டியருளே
திகிரியிணைநதணைத்த சிறுதேருருட்டியருளே. (1)

பொறையுடலம்பிளப்ப வுழுசாறுவைத்தும் வருசேல்
பொருகதவந்திறக்கு மடைவாயடைத்துநுரைபாய்
அறைபுனல்பொங்கியெற்று நிறைகாலுடைத்தும்வயறோய்
அளறுபெறுங்குருத்து முளைநாறழித்துமணியால்

மறையவரம்புமுற்று முதுசூலுகுத்தும்வளையேர்
மளவருடன்பகைத்த புனனாடுடுத்தவளிசூழ்
சிறையெறிபொங்கர்வெற்ப சிறுதேருருட்டியருளே
திருவளரும்புயத்த சிறுதேருருட்டியருளே. (2)

வேறு

புழுதியளைந்து தெருத்தலையின்
புறம்போ யறையின் மணியசைத்தும்
புனிற்றா வந்த தெனவுரைத்தும்
பொங்க லெனச்சே றடியிழுக்கும்

தொழுவி லுரலைப் பிணிப்பொழித்தும்
துள்ளுங் குழக்கன் றெருத்தணைத்தும்
தொடர்பாய்ந் தறுத்த தெனவுரைத்து
சொரியும் விழிநீர் மெய்போர்**

அழுது பொருமி நின்றுபொய்யே
அடித்தா ரென்று மிலைமனையில்
அசோதை பதறி யோடிவர
அழைத்து நகைக்கு மழலைமுகில்

கொழுது மளிதோய் சோலைமலைக்
கோமான் சிறுதே ருருட்டுகவே
குளிருஞ் சிலம்பா றுடையமறைக்
கோமான் சிறுதே ருருட்டுகவே. (3)

மீன்கோட் டலைக்கும் பெருவாரி
வெள்ளத் தெழுந்த வெற்பும்வட
வெற்பு மழுந்த முன்னாளில்
வெள்ளை வராகப் பெரும்போத்துக

கூன்கோட் டிரட்டை நுதிமடுத்துக்
குழியில் வீழு நிலமகளைக்
கொண்டு நிமிர நாற்புறமும்
கொழிக்குந் தரங்கப் புனல்போல

வான்கோட் டிளைய மதியமுது
வழிக்கு மிரத நெடுஞ்சிகர
மருங்கு தொடுக்கு மிறால்பிளக்க
வழியுங் கடவா ரணங்குத்தித்

தேன்கோட் டிழிய வருஞ்சோலைச்
சிலம்பன் சிறுதே ருருட்டுகவே
தெள்ளுந் தரங்கப் பாலாழிச்
சேர்ப்பன் சிறுதே ருருட்டுகவே. (4)

அண்ட ருவலைக் குடிற்படல்வாய்
அனைத்துந் திறந்து தோற்றவுறி
அலைந்து தோற்ற வுரன்மிதித்த
அடியின் சுவடு தோற்றமுதிர்

வண்ட லளைபா னிறைந்ததடா
வயிறு குறைந்து தோற்றவிடை
மகளிர் துவர்வா பலர்தோற்ற
வதனம் வெகுளி தோற்றவிளந்

துண்ட மதிவா ணுதற்பவளத்
துவர்வா யசோதை கைமாறு
தோற்ற வுடனே யருடோற்றத்
துணைக்கண் மைநீர் தோற்றவளை

உண்ட களவு தோற்றாமல்
உலக மேழு முண்டதிரு
உதரங் குழைய வழுதமுகில்
ஒட்டுஞ் சிறுதே ருருட்டுகவே. (5)

வேறு

களிக்கக் குலப்பொதுவ ரெண்ணிலா யிரவராங்
கன்னியரி லொருவரைமலர்க
கண்ணருள் புரிந்துமலர் மணிமுடியி லொருவரிரு
கால்வைத்து மொருவர்முலைதோள்

குளித்துக்களிப்பக் கலந்துமலர் கற்பகக்
கொடியொருவர் கொங்கைமுற்றக்
கோட்டியு முரக்களப வள்ளல்லா யொருவரிடு
குறியொருவர் காண்குறாமல்

ஒளித்துப் பெருந்துளி யொழித்துமய லொருவருட
னூடியும் பகலொன்றின்வாய்
உவலையக் குடிலடங் கத்திரியு மிளையமுகி
லொழுகுமொளி மணியரைத்துத்

தெளித்துக் குழைத்தனைய மழலைவா யழகனே
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (6)

பூநறா வாறுபாய் சந்தனக் கொம்பர்ப்
புறத்துங் கடற்பிறந்து
பொன்பரப் புந்துணர்க் கற்பகக் கொம்பர்ப்
புறத்தும் வடந்துவக்கி

மீனறா வொழுகுமணி நூபுர நதிக்குவளை
விண்டபொற் றாதின்வெள்ளி
வெண்டிரைக் கங்கையின் பொற்றா மரைத்தாதின்
வேரியங் கால்கொழிப்பக்

கானறா வண்டுமுரல் கொந்தளக குற**க்
கன்னியரும் வானநாட்டுக்
கன்னியரு மிருமருங் காட்டிடச் சதிரிளங்
கன்னியர்க ளூசலாடும்

தேனறா வினையிறா னாலறா மலைவாண
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (7)

அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற
வறைபுனல் வறண்டுநெட்டை
ஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு
ளாதவன் றேர்ககடாவக்

கொலையெடுக் கும்படை யரக்கருடல் வெய்யபுட்
குலமேற வுயிர்விமானக்
கொடுஞ்சிப் பொலந்தே ருகைப்பவா னவமாதர்
குங்குமச் சேதகத்து

மலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்
மாறா விழாவெடுப்ப
மாரவே டென்றலந் தேரூர மாதலி
மணித்தேர் நடாத்திவெற்றிச்

சிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்
சிறுதே ருருட்டியருளே
சிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே
சிறுதே ருருட்டியருளே. (8)

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயணையங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கவி காளருத்திரர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமாலிருஞ் சோலைமலை அழகர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

(ஸ்ரீ கொல்லா மாக்கோல் — ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்–

May 6, 2021

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–திருவாய்மொழி -3-2-3-

கொல்லா–கொல்லுகைக்குக் கருவி யல்லாமல்
மா–குதிரையை நடத்துவதான
கோல்–சாட்டையே கருவியாக
கொலை செய்து–(எதிரிகளை) முடித்து
பாரதம் போர்–பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்–(பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து–இப் பெரிய பூமியில்
அவித்த–தொலைத்த
எந்தாய்–ஸ்வாமியே!
பொல்லா–துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்–சரீரத்தினுடைய
புணர்வினை–சம்பந்தத்தை
அறுக்கல் அறா–அறுக்க எண்ணினாலும் அது அறு படாது:
யான்–(இதிலே அகப்பட்ட) நான்
உன்னை–(ஸர்வ சக்தனான) உன்னை
சார்வது–கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி–ஒரு உபாயத்தை
சொல்லாய்–சொல்லி யருள்-

கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது,
அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார்.
கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார்.
கண்ணபிரானது கையிலிருந்த கோல் எதிரிகளின் கொலைக்கு உபகரணமன்றியே
குதிரையை நடத்துகிற கோலாகவே யிருந்ததென்று இங்கு ஆழ்வார் அருளிச் செய்தாராயிற்று.

கொல்லா மாக்கோல் கொலை செய்து –
துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில் படைத்துணை வேண்டி வந்து,
துரியோதனன் திருமுடிப் பக்கத்தே யிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலே யிருந்தான்;
பள்ளி யுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,
‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று,
அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன,
‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன,
‘ஆகில், நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, –
அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக,
வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன,
அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன,
‘அப்படியே யாகிறது’ என்று சொல்லி விட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு முடித்துப் போகட்டான்.

———

நம் அழகனின் கையில் விதம்விதமான கோல்கள்- செங்கோல் முதற்கொண்டு பலவிதமான கோல்கள் உள்ளனவே
என ஒரு புலவரின் கற்பனை எழுகிறது; அழகான கவிதை ஒன்று விரிகிறது;
படிப்போர் உள்ளம் பரவசத்தில் புள்ளெனச் சிறகடிக்கின்றது.

கடலாகிய ஆடையை உடுத்த உலகினைக் காவல் பூண்டு அரசிளங்கோமகன் இராமனாகிக் கையிலெடுத்த செங்கோல் ஒன்று!

இலங்கை மாநகரில் சூரியன் இராவணனுக்கு அஞ்சி வாழ்ந்தானாம்; அழகர் இராமாவதாரம் எடுத்தபோழ்தில்,
இராவணனை வதம்செய்து, சூரியனை அச்சமின்றி இயங்கச் செய்தார்.
ஆகவே அவனுடைய ஏழுபரிதிகள் (குரகதம்) பூட்டிய தேரை அஞ்சாது செலுத்தும்வகையில் அவன்,
குதிரைகளைத் தூண்டும் ஒரு முட்கோல் இரண்டாவது கோலாயிற்று.

ஐராவதம் எனும் யானையைச் செலுத்துபவனாகிய தேவேந்திரனை அவன் அடைபட்டிருந்த சிறையினின்று விடுதலை செய்வதற்காக
அச்சிறையின் கபாடங்களை (கதவுகளை) திறக்கும் திறவுகோல் மூன்றாவது கோல்!
இந்திரனைச் சிறைவீடு செய்தவர் அழகர்.

தேனொழுகும் (நறவொழுகு) செந்தாமரையில் வீற்றிருப்பவள் கமலமகளான திருமகள்.
அவள் தனது கண்களுக்குத் தீட்டி அழகு செய்துகொள்ளும் அஞ்சனத்தைத் தீட்டும் அஞ்சனக்கோல் அழகரின் நான்காம்கோல்.

பிலம் எனும் பாதாளத்தில் வீழ்ந்து வழக்கொழிந்துபோன வேதங்களை, நான்மறைகளைத் திரும்ப
நடமாடவிடுத்த ஊன்றுகோல் இன்னொருகோல்.

மறைந்துகிடந்த நான்மறைகள் அழகர் அருளால் விளக்கம் பெற்றன என்பது உட்கருத்து.
இது ஐந்தாம்கோல்.

கள்வனான இராவணன் சீதையைத் திருடிச்சென்றான். அவனுடைய பத்து தலைகளையும் தாக்கி வீழ்த்திய
தண்டிக்கும் கோல் ஒப்பற்ற – நிகரற்ற, வலிமை பொருந்திய -ஆறாவதுகோல்.

இவ்வாறு பலவிதமான கோல்களைக் கைக்கொண்டு பூஞ்சோலைகள் நிரம்பிய இடபகிரியெனும் அழகர்மலையில் இருப்பவனே!
செங்கீரையாடியருளுக! தேவருக்கும், தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் நாயகனே!
செங்கீரையாடியருளுக! எனப்பாடல் அமைகின்றது.

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங் கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ் குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட கடுஞ்சிறை கிடந்தகூடக் கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய் உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்
பிலத்துள்வீழ் நான்மறைக்கும் ஊன்றுகோ லாக
முடி பத்துடைய கள்வன்மே லொருகோ லெடுத்து
முகிலைத் திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்ற முகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன் செங்கீரை யாடியருளே.
(அழகர் பிள்ளைத் தமிழ்- செங்கீரைப் பருவம்:- கவி காளருத்திரர் இயற்றியது)

இப்பாடலில் ‘கோல்’ எனும் சொல்லைப் பலபொருட்களில் எடுத்தாண்டு வியக்கத்தக்க முறையில்
பலவித நயங்களையும் தொன்மங்களையும் இணைத்துப் பாடியுள்ளது ரசிக்கத்தக்கது.
பிள்ளைத்தமிழ் நூல்களின் இனிமைக்கு இத்தகைய யாப்புகளும் ஒரு காரணமாகும்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கீர்த்தனைகள் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–என்று போற்றப்படுகின்றது
1650 குண்டூர் அருகில் காஜா கிராமத்தில் தோன்றியவர்

12 தரங்கங்கள் கொண்டு இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இதன் அமைப்பின் படி ஒவ்வொரு தரங்கத்திலும்
பல சுலோகங்களும் அவற்றையடுத்து கீதங்கள், என்ற கீர்த்தனைகளும் தொடர்ச்சிக்காக சில வசனப்பகுதிகளும் வருகின்றன.
இது ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல், பாகவதத்தின் தசமஸ்கந்தத்தின் 1 முதல் 58 வரையிலுள்ள
அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணன் பிறப்பிலிருந்து ருக்மிணி கல்யாணம் முடிய கண்ணனது கதையை
தேனென இனிக்கும் இன்னிசைப் பாடல்களாக தந்திருக்கிறார் நாராயண தீர்த்தர்.

தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து
மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது.
மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில்
அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றிப் பாடிய பில்வமங்களர் எனும் மகான், இடைச் சிறுவனான கிருஷ்ணனைப் பற்றிய
இன்னொரு அழகிய காட்சியைக் கண் முன் நிறுத்துகிறார்:
சூரியன் அஸ்தமிக்கும் பொன் மாலைப் பொழுது. இடையர்கள் எல்லாரும் மேய்ச்சலிலிருந்து திரும்புகின்றனர்.
மாடுகள் எல்லாம் வயிறு நிரம்பிய ஆனந்தத்தில் மடிகனத்து நிற்க, கன்றுகள் தாய்ப் பசுக்களின் மடியை அருந்தும் ஆசையில் துள்ள,
அவர்கள் தம் வீடுகளை அடைகின்றனர். அவரவர்கள் வீட்டுத் தொழுவங்களில் மாடுகன்றுகளைக் கட்டுகின்றனர்.
தன்னைத் தொடர்ந்துவரும் நூற்றுக் கணக்கான இடைச் சிறுவர்களுக்கெல்லாம் (கோபால-பாலக-சதை) தலைவன் நமது கிருஷ்ண சந்திரன்.
அவனும் வீடுவீடாகப்போய் பசுக்களைக்கட்ட உதவுகிறான் (பசுபந்தனார்த்தம்). பின் என்ன?
அவற்றின் பாலையும் அதனைத் தோய்த்த தயிரையும், அதிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயையும் வீடுவீடாகப்புகுந்து தின்றவனாயிற்றே!
தானும் இந்தச் சிறு உதவிகளைச் செய்யலாமே எனச் செய்கிறான் குழந்தை! ஏழெட்டு வயது இளம்பிள்ளை!
பசுக்கூட்டங்களினிடையே கன்றுகளுடன் விளையாடியபடி நடந்துவந்ததனால் அவற்றின் குளம்படிகள் எழுப்பிய
அத்தனை புழுதியும் (கோதூலி)இவன்மேல் அப்பிக்கிடக்கின்றது. ஏற்கெனவே கருமைநிறம் கொண்ட கடல்வண்ணன்.
இப்போது புழுதியும் அப்பிப் பார்க்க எப்படி இருந்தானாம்? அழுக்காகவா? இல்லவே இல்லை!
அதுவும் ஒரு அழகாக, அவனுக்கே அமைந்த சிறப்பாகப் பொலிகிறானம் இந்தக்குட்டன்!-
இது அவன் பூண்டுள்ள மாடுமேய்க்கும் அலங்காரம்- கோபவேஷம்!

கோதூலி- தூஸரித- கோமல- கோபவேஷம்
கோபால-பாலகசதை-ரனுகம்யமானம்
ஸாயந்தனே ப்ரதிக்ருஹம் பசுபந்தனார்த்தம்
கச்சந்த- மச்யுதசிசும் ப்ரணதோஸ்மி நித்யம்–(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.44)

அட! இந்த இளம்பிள்ளை மாட்டையெல்லாம் தொழுவில்கட்டி, இவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே எனவெல்லாம்
எண்ணிக் கொண்டுவிட வேண்டாம்! இவன், இந்தக் கள்ளக்கிருஷ்ணன் தனது விளையாட்டுகளை இன்னும்
விட்டொழித்தபாடில்லை எனத்தான் தென்படுகின்றது!

ஒரு இடைப்பெண்ணின் வீட்டில் நுழைந்து தனது வெண்ணெய்த்திருட்டினை நடத்திக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டும் விட்டான். அவளிடம் குட்டனின் உரையாடலைக் கேட்போமா?
பெண்: குழந்தாய்! நீ யாரப்பா?
கிருஷ்ணன்: நான் பலராமனுடைய தம்பி.
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக் கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக் கொள்ளாதீர்கள்!

கஸ்த்வம் பாலா பலானுஜ: கிமிஹ தே
மன்மந்திராசங்கயா
யுக்தம் தந்நவநீத- பாத்ரவிவரே
ஹஸ்தம் கிமர்த்தம் ந்யஸே:
மாத: கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மாகா விஷாதம் க்ஷணா-
தித்யேவம் வரவல்லவீ-ப்ரதிவச:
க்ருஷ்ணஸ்ய புஷ்ணாது ந: (ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.81)

———

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம் ப்ரயாகே
காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே
திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே
ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே
ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே
யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே
வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே
ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே
ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே
ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம்
தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம்
யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா
பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே
ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண
தத் காரனே ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே
சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே–இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச தரங்கம்–

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயாகே காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே –
அலஹாபாத் பக்கத்துல ப்ரயாகை இருக்கு. திரிவேணி சங்கமம். இவர் நாராயண தீர்த்தர் சொல்றார்,
ராம கிருஷ்ண கோவிந்த அப்படீன்ன்னு இந்த மூணு நாமங்கள் இருக்கே இதோட சேர்க்கையே சர்வோத்தம ப்ரயாகை.
இதுல ஆனந்தமா எப்ப வேணும்னாலும் ஸ்னானம் பண்ணுவோம் அப்படீங்கறார்.

திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே –
இந்த ஸ்னானம் பண்றதுக்கு தேசமா, காலமோ, திக்கோ எதுவும் condition கிடையாது.
எப்ப வேணும்னா, எங்க வேணும்னா, எப்படி வேணும்னா இந்த ராம கிருஷ்ண கோவிந்த அப்படீங்கற நாமங்களை ஜபிக்கலாம்.
ஸர்வ சுலபே – எல்லாருக்கும் சுலபமானது, இதுக்கு பண்டிதனான இருக்கணும், ஆணாக இருக்கணும், பெண்ணாக இருக்கணும்
எந்த condition-ணும் கிடையாது. நாக்கு இருந்தா போதும் இந்த நாமங்களை ஜபிக்கலாம்.
ஒரு நதினா கடல்ல போய் சேருமே, அதுமாதிரி இந்த த்ரிவேணி சங்கமம் எங்க கூட்டிண்டு போகும்னா,

ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே –
ஸத்குருவுடைய க்ருபா ஸமுத்ரம் அப்படீங்கற அந்த சங்கத்துல கொண்டு விட்டுடும் அப்படீங்கறார்.

ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே –
ராம-ங்கற நாமம் தான் கங்கை,
கிருஷ்ண-ங்கற நாமம்தான் யமுனை
கோவிந்த நாம சரஸ்வதி ப்ரதீதே – கோவிந்த நாமம் தான் சரஸ்வதி, இந்த மூணும் சேர்ந்த ப்ரயாகை இது

யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே –
ஒரு ஜலம்ன்னா ஹம்ஸங்கள் இருக்கணும் இல்லையா,
இங்க இந்த நாமத்துல பரம ஹம்சர்களுடைய மனம் குதூகலிக்கறது.

வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே –
ஒரு நதியின்னா அதுல அலைகள் இருக்கும், வாகீச ர்னா ப்ரம்மா, விஷ்ணு ருத்ரர் இவாள் இந்த நாமங்களை ஜபிக்கறா.
அந்த அழகான அலைகள் தான் இந்த ப்ரயாகைல இருக்கு.

ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே –
இந்த உலகம், மேல் உலகம் இங்க இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் இந்த நாம ஜபம் பூர்த்தி பண்ணும்.

நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே –
இந்த உலக ஆசைகள் மட்டும் அல்ல, நித்யானந்தமான மோக்ஷ லாபத்தையும் கொடுக்கும்.

ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே –
ருக் யஜு சாமம் என்கின்ற வேதங்களின் சாகையிலும் இருக்கு, மூலத்திலும் இருக்கு.
வேதங்களுக்கு மூலமே இந்த நாமங்கள் தான் என்கிறார்.

ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே –
ராகம், லோபம், ஸந்தாபம் இதெல்லாம் போக்கக் கூடிய மஹா மந்த்ரம்.

ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே –
இந்த நாமங்களை ஜபிக்கறதுக்கு ஒருத்தன் ஸ்னானம் பண்ணியிருக்கணும், சந்தியாவந்தனம் பண்ணியிருக்கணும்,
ஜபங்கள் பண்ணியிருக்கணும், ஹோமங்கள் பண்ணியிருக்கணும், தர்ப்பணம் பண்ணியிருக்கணும்
என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,

ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே –
இது அகண்டமான பேரானந்தத்தை கொடுக்கும். அந்த பேரானந்தம் குறையவோ, அதிகமோ ஆகாத ஒரு சந்தோஷம்.
எந்த ஒரு சந்தோஷம் ஆனாலும் அது குறையும், ஜாஸ்தி ஆகும். அப்படி ஆகாத சுகம்,
இந்த நாம ஜபம் கொடுக்கக்கூடிய இந்த ஆனந்தம், அப்படியே இருக்கும். infinite அகண்டமான ஒரு சுகத்தை கொடுக்க கூடியது.

ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம் –
மனசுல இந்த நாமங்களை ஸ்மரணம் பண்றது தான் மானசீகமான ஸ்னானம்.
வாசனிகம் கீர்த்தனம் – வாயால பண்ணக் கூடிய கீர்த்தனம் தான் இந்த வாய்க்கு ஸ்னானம்,

தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம் –
இந்த ராம கிருஷ்ண கோவிந்த நாமங்களை பாடிண்டு அதுக்கு நர்த்தனம் ஆடறது தான் உடம்புக்கு பண்ணக் கூடிய ஒரு ஸ்னானம்
இப்படி உடம்பு, மனசு, வாக்கு இப்படி எல்லாத்தையும் தூய்மை படுத்தக்கூடியது.

யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா –
இந்த நாம ஜபம் பண்றதுக்கு நீங்கள் யாகம், யோகம், மூச்சை அடக்கித்தான் நாம ஜபம் பண்ணணும் அப்படியெல்லாம் கிடையாது.
ராகம், பகவான் கிட்ட பக்தி இருக்கணும், ராகம் இருக்கணும், போகம், த்யாகம் இல்ல நீங்க பகவானுக்காக தியாகம் பண்ணணும்,
எதுவுமே எதிர் பார்க்காமல்.

பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே –
இந்த நாம ஜபம் பண்ணிண்டே இருந்தாலே பக்தியும் வரும், விரக்தியும் வரும், ஞானமும் வரும்,
முக்தியையும் கொடுக்கும்

ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண தத் காரனே –
ப்ரஹ்ம வித்யை கொடுக்கும், கோரமான சம்சாரத்தை தாண்ட வைக்கும்.

ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே –
கடுமையான பாபங்கள் என்ற இருட்டிற்கு இது ஸூர்ய மண்டலத்தை போன்ற வெளிச்சத்தை கொண்டு வந்து,
பாபங்கள் எல்லாத்தையும் போக்கிடும்.

சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே –
நாராயண தீர்த்தர் சொல்றார் – தூய்மைப் படுத்தக் கூடிய எல்லா தீர்த்தங்களிலும்,
இந்த ராம கிருஷ்ண கோவிந்த என்ற இந்த சர்வோத்தம ப்ரயாகை தான் தீர்த்த ராஜா –
இப்படி நாம பக்திக்கு ஒரு அற்புதமான ஒரு கீர்த்தனை.

————–

பில்வ மங்களரின் ஒரு அழகிய ஸ்லோகம் இது போலவே ஒரு நிகழ்வை யசோதை-கிருஷ்ணனிடையே நிகழும் உரையாடலாக்கி,
படிக்கும் நம்மைப் புன்னகைபுரிந்து சிலிர்க்க வைக்கிறது.
யசோதை சொல்கிறாள்: “கிருஷ்ணா! உன் அண்ணன் பலராமன் யமுனையாற்றின் மணல் குன்றுகளிடையே விளையாடப் போயிருக்கிறான்;
உனக்கு நான் பொற்கிண்ணத்தில் பால் வைத்திருக்கிறேன் பார்!
அவன் திரும்பிவருவதற்குள் நீ அதனை சமர்த்தாகக் குடித்து விடவேண்டும். தெரியுமா?”
கிருஷ்ணன், “ஏனம்மா?” எனக்கேட்க, யசோதை சொல்கிறாள்:
“அப்போதுதான் உனக்கு குடுமி வளரும் (சிகா வர்த்திஷ்யதே).”
குழந்தை கிருஷ்ணன் பாவம், நம்பி விடுகிறான்.
கிண்ணத்துப்பாலை ஒரே மூச்சில் பாதி குடித்துவிட்டு, தனது குட்டிக் குடுமியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு ,
“அடடா, இத்தனை வளர்ந்துவிட்டதா?” என மகிழ்ச்சி கொள்ளுகிறானாம்.
நாமும் இந்த ஸ்லோகத்தைப் படித்து மகிழ்கிறோம்.

காளிந்தீ- புலினோதரேஷு முஸலீ
யாவத்கத: கேலிதும்
தாவத்கார்ப்பரிகம் பய: பிப ஹரே
வர்த்திஷ்யதே தே சிகா
இத்தம் பாலதயா ப்ரதாரணபரா:
ச்ருத்வா யசோதா-கிர:
பாயாந்ந: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித:
க்ஷீரேர்த்தபீதே ஹரி:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.60)

நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை
பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் –
அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

இளம் குழந்தைகள் அன்னை சொல்வது அத்தனையையும் நம்பி விடுகின்றனர்.
ஆகவே கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாகிவிடுகின்றது!

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ மார்கழி நீராட்ட உத்ஸவம்–

May 6, 2021

ஆண்டாள் திருப்பாவை முதல் பாசுரத்திலேயே ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ரகசியத்தை அடியவர்களுக்கு உபதேசித்து விடுகிறாள்.
நான்கு செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

• 1. துயிலெழும் போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். (‘உத்திஷ்ட சிந்தய ஹரிம்’)
• 2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். (‘வ்ரஜன் சிந்தய கேசவம்’)
• 3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். (‘புஞ்சன் சிந்தய கோவிந்தம்’)
• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும். (‘ஸ்வபன் சிந்தய மாதவம்’) .

இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது.
மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தய காலத்தில் தவறாமல்
செய்துவந்தனர் என்பதை விளக்குமாப் போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.
1. துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக் கொண்டு
”முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ” (பாசுரம் – 6) என்கிறார்.
2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலோ நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் கேசவனைப் பாடுதல் உன் காதில் விழவில்லையா?”கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?” (பாசுரம் – 7)
3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள். (பாசுரம் – 27)
4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண்.
ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மா மாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.(பாசுரம் – 9)

———-

சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும்.
சூரியன் தனுர் இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்.
வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
குளிர் காலத்தின் துவக்கமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மார்கழி மாதத்தை “பீடுடை மாதம்” என்று அழைப்பார்கள்.
இந்த சொல் நாளடைவில் திரிந்து ‘பீடை மாதம்’ என்று வழக்கில் வந்துவிட்டது.
பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமை வாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள்.

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி [ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 10; ஸ்லோகம் – 35]
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கீதையில் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் தான் காணப்படுகிறது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து
உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறுவர்.

————

கிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீஆண்டாள் கோயிலின் முதல் மண்டபமாகிய கொட்டகை போல கல்லாலே கட்டப்பட்ட பந்தல்
அமைப்புடைய பந்தல் மண்டபம், மற்றும் திருமலை நாயக்கரின் அத்தையும்,
இரகுவீரமுத்து விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் மகளுமான சிங்கம்மாள் கட்டிய குறடு உள்ளது.
இவர் பெயரால் சிங்கம்மாள் புரம் தெரு (சிங்க மாடத் தெரு) என்னும் அக்கிரகாரமும் இவ்வூரில் உள்ளது.
“சிங்கம்மாள் குறடு” என்னும் மண்டபம் தாண்டி, பங்குனி உத்திர திருக் கல்யாண மண்டபம் உள்ளது.
இம் மண்டபத்தின் உட்புற உச்சியில் இராமாயணக் கதை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது.
இம் மண்டபத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம், ஶ்ரீஆண்டாள் திருக் கல்யாண மகோத்ஸவம் நடைபெறுகிறது.

—————–

ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ மார்கழி நீராட்ட உற்ஸவம்–

இவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி
வடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் “பிரியாவிடை” நடைபெறுகிறது.
ஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார்.
பின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள். ஆண்டாளுக்கும்,வடபெருங்கோயிலுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும்.
பின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம்.
பின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும்
அமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார்.
பின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர்.
ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்.

நீராடல் உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில்
ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். அதாவது,
ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.

மறுநாள் காலையில், ஶ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கிலே எழுந்தருளி பெரிய கோபுர வாசலை அடைகிறாள். அன்று
நாட்பாட்டு ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம்.
இந்தப் பாடல், “ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்” என்று முடிவுறும்.
சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆகும்.
‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள்.
அரையர் நாள் பாசுரம் சேவித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பல விடையாத்து மண்டபங்களை முடித்துக்கொண்டு
திருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறாள்.
இவ்வாறு பல்லக்கிலே எழுந்தருளும் போது ஶ்ரீஆண்டாள் தினமும் ஒரு திருக் கோலத்துடன் விளங்குவார்.

ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்
2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.
3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரிய பெருமாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
7ஆம் நாள் தங்க கவச சேவை
என தரிசனம் தருவது சிறப்பு.

திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.
அழகான தோற்றத்துடன் சௌரிக் கொண்டையுடனும், சர்வ ஆபரணங்களுடனும், ஶ்ரீஆண்டாள் அமர்ந்தபடி இருக்க
அர்ச்சகர்களும், பரிசாரகர்களும் இணைந்து அனைத்து உபசாரங்களுடன் எண்ணெய் காப்பு சாற்றுதல் என்னும் வைபவத்தை தொடங்குகிறார்கள்.
முதலில் ஶ்ரீஆண்டாளின் திருவடிகளை விளக்கி, கைகளை விளக்கி அர்க்யம், பாத்யம் முதலியவைகளை சமர்ப்பிக்கிறார்கள்.
பின்பு ஶ்ரீஆண்டாளின் தலை யலங்காரமாக உள்ள சூரிய-சந்திரன், நெற்றிச்சரம், துராய் இழுப்புச் சங்கிலி,
தங்க மல்லிகை மொட்டு, தங்க கமலம், ரத்ன ராக்கொடி, ரத்னஜடை, முதலான தலையணிகளையும்,
காசு மாலை, பவளமாலை, வைரப்பதக்க மாலை முதலிய ஆபரணங்களையும் படி களைந்து,
பின் ஶ்ரீகோதையின் சௌரிக் கொண்டையை அவிழ்த்துக் கோதி விட்டு சிடுக்கு நீக்கி, சீப்பினால் தலை வாரி,
மூலிகைகளால் காய்ச்சப்பட்ட தைலத்தை சாற்றுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது.
ஒரு மஹாராணிக்கு செய்யும் சகல உபசாரங்களும் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாளுக்கு செய்கிறார்கள்.
(பக்தர்களுக்கு தைலம் ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.)

பின்னர் பத்தி உலாத்தல் முடிந்து திருமஞ்சன குறட்டிற்கு எழுந்தருளுகிறாள்.
அங்கு நவகலசத்தினால், வேதகோஷங்கள், முழங்க, வாத்ய கோஷங்களுடன் ஶ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
பிரபல நாடகக் கலைஞரான கன்னையா நாயுடு அவர்களால் சமர்பிக்கப்பட்ட தங்கக் குடம் இதில் பிரதான கலசமாகும்.
பின்னர் தினம் ஒரு வாகனத்தில் சௌரிக் கொண்டையுடன் திருவீதி வலம் வந்து வடபெருங்கோயிலை அடைகிறாள்.
அங்கு நாள் பாட்டு நடைபெறும்.

அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,
அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்துள்ளார் என்பதையும்,
நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக, இந்த வைரமூக்குத்தியை வைத்து ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடல்
தை மாதப்பிறப்பன்று, ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக எண்ணெய் காப்பு உற்சவத்தின் நிறைவுத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
எண்ணெய்க் காப்பு, நீராட்டம் முடிந்து பல்லக்கிலே வடபெருங் கோயிலுக்கு ஶ்ரீஆண்டாள் எழுந்தருளி நாள்பாட்டு முடிந்தவுடன்
கவிச் சக்ரவர்த்தி கம்பர் சார்பாக “கம்பன் கொச்சு” என்னும் கம்பன் குஞ்சலம் சாற்றப்படுகிறது.
பின்பு மணவாள மா முனிகள் சந்நிதியை அடைகிறாள். மா முனிகள் எழுந்தருளி வந்து ஶ்ரீஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.

———–

“வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை…” திருப்பாவையின் முப்பதாவது பாசுரம்.
திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீகண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி,
பரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற ‘பலஸ்ருதி ‘ பாசுரம் இது வாகும்.
இப்பாடலில் தான் தன்னை யாரென்று “பட்டர்பிரான் கோதை” ஆண்டாள் அறிவிக்கிறாள்.
முதல் பாசுரத்திலும் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று நூற்பயனைச் சொல்லுகிறாள்.
அதற்கு இறைவனாம் கண்ணனின் கார்மேனி, கதிர்மதிய முகத்தை தியானிக்கச் சொல்லுகிறாள்.
இந்தக் கடைசி பாசுரத்திலும் ” செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை” எண்ணி தியானித்து வணங்கி
சரணம் செய்பவர்கள், “எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.

தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக்
கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு
உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி ‘மாதவன்’ என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.

முக்கண்ணன்,சிவனோ நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக
‘ஶ்ரீபராசர பட்டர்’ விளக்கம் தருகிறார்.
உண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.
(கேசவனை)சுருள் முடி கொண்டவனை.
கேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா?
அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவனை.

(திங்கள் திருமுகத்து சேய்இழையார்) பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர்.
ஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வநலங்களை அடைந்த
அழகிய திங்கள் முகம் அந்த ஆயர் குலப் பெண்களுக்கு !
27 ஆம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடகம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா?
ஆகவே “சேயிழையார்” என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.

(சென்று இறைஞ்சி) 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி
அங்கு (அப் பறை கொண்ட ஆற்றை) கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை. அங்கு
(அப்பறை ) ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு,
அவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப் பறை,
அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை. அப்பேர்பட்ட பறை.

(அணிபுதுவைப் பட்டர்பிரான் கோதை) இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த
விஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள்.
ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.

(பைங்கமலத் தண்தெரியல்) குளிர்ச்சி பொருந்திய தாமரை மாலை அணிந்தவள்.
அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார்,தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல்
இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை.
இப்போது அது “ஆண்டாள் மாலை”யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.

(சங்கத் தமிழ்மாலை) வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும்,
அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,
தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே ‘ஶ்ரீஆண்டாள்’ தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.
சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.
தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு
விளக்கம் பெற்று, ஏற்றுக் கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப் புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.
வேறொரு விதத்தில் கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக பாராயணம் செய்யப்பட்ட
“திருப்பாவை என்னும் தோத்திர மாலை” என்று கொள்ளலாம் என்பர்

(முப்பதும் தப்பாமே) ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா?
ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும்.
முப்பதையும் இல்லாவிட்டாலும் 29 ஆவது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.

(இங்குஇப் பரிசுரைப்பார்) – இம்மண்ணுலகிலேயே ஓதிவர, இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை.
அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதை யளித்தத் திருப்பாவையினை ஓதினால் போதுமே!
நாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ,
அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ , ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ
இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.

(ஈரிரண்டு மால்வரைதோள்) வரை = மலை போன்ற பெரிதான நான்கு தோளுடைய. செங்கண் திருமுகத்துச்
(செல்வத் திருமாலால்)- செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்
(எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்) எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர்.
செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால் !
இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.

(சேயிழையார்) ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத் தொண்டு
செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர் !

கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு.
கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே – தா- என்றால் தருவது என்று கொண்டால்,
கோதா – அத்தகைய “உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்” என்று பொருள்.
திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.

(பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன) பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும்,
செந்தாமரை மாலையும் அணிந்து, ஒரு வைணவன் பரமனையும், தாயாரையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்ற
உண்மையினை ஒரு குருவாய் , தந்தையாய் கோதைக்கு உபதேசம் செய்தவர் ஶ்ரீபெரியாழ்வார்.

ஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் ஆண்டாளின் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே !
இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள்.
ஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே,
ஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள்.
இதுவே திவ்வியபிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.

(ஈரிரண்டு மால்வரைதோள்) சங்கும் சக்கரமும் தாங்கும் இருகரங்கள், அபயமும் வரமும் அருளும் இருகரங்கள்
என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.

(செல்வத் திருமாலால்) இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு,
முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால் என்று உறுதியிடப் படுகிறது.

திருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்ய பூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகக் கொள்ளுமவர்கள்
தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து,
“பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச்செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த
எம்பெருமானைப் பொருளாகக் கொள்க.
திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள்
இங்ஙனே பொருள் காண்க:− “நிர்மத்த்ய ஸ்ருதி ஸாகராத்” என்றும்
“நாமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும்
திருநாவின் மந்த்ரத்தால் கடைந்து “வஸஸ்ஸுதாம் வஸுமநஸோ பௌம: பிபந்த்வந்வஹம்” என்று ஸ்வாமி
தாமே அருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி.

(மாதவனை) மா- மஹத்தான; தவனை- தவத்தையுடையவரை; மஹாதவத்தையுடைய எம்பெருமானாரை என கொள்க.

(இங்கு இப்பரிசுரைப்பார்) இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும்
அணி புதுவை பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ளமுகந்ததேயென்று,
கொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத் துரைக்குமவர்கள்.

(செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்)
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” [பெரியாழ். திரு.5-2-8] என்ற பெரியாழ்வாரின் அருளிச் செயலின்படியும்,
“ஸா மூர்த்திர் முரமர்த நஸ்ய ஜயதி” என்ற யதிராச ஸப்ததி [ஸ்லோ:63] யின்படியும்,
ஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று
“அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்” என்று தலைக் கட்டி யாயிற்று.

‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்த யுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருத ஸாகராந்தர்
நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரம போக்யமான திருவடித் தாமரைகளை தன் தலையில்
வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக் கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும்
உடையவனாய்க் கொண்டு ஸுகமாக இருக்கக் கடவன்) என்று
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் ஸ்வாமி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமந்நாராயணன் விஷயத்தில் அருளிச்செய்தார்.

————–

ஶ்ரீவில்லிபுத்தூர் மங்களாசாசன பாசுரங்கள் —

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே–[பெரியாழ்வார் திருமொழி: 2-2-6]

மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்!–[நாச்சியார் திருமொழி:5-5]

ஶ்ரீதேசிகன் பிரபந்தம் – ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

ஸ்வாமி ஸ்ரீமணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ( 22,23,24 ) ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

[ஶ்ரீஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள்]

ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே|
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||

மாத்ருசா (அ)கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே|
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே|
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம்||

நல்ல திருமல்லி நாடியார்க்கு மங்களம்!
நால் திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!
மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!
மாலை சூடிக் கொடுத்தாள் மலர் தாள்களுக்கு மங்களமே!!

[ பெரியாழ்வார் வாழித்திருநாமம் ]

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே !
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே !
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே !
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே !
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே !
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே !
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே !
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!.

[ ஆண்டாள் வாழித்திருநாமம் ]

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

[ வாழி வாழி மதிள ரங்கேசனார்
வாழி வாழி மலை அலங்காரனார்
வாழி வாழி வட வேங்கடவனார்
வாழி வாழி வடபெருங் கோயிலான்
வாழி வாழி மருவாரும் மன்னனார்
வாழி வாழி வளர்கோதை வாண்முகம்
வாழி வாழி மருங்காரும் கொய்சகம்
வாழி வாழி வளர் குங்குமக் கொங்கை
வாழி வாழி மலர் தாள்கள் இரண்டுமே.]

[ஶ்ரீ உடையவர் வாழித் திருநாமம் ]

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி!
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி!
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி!
இலங்கிய முந்நூல் வாழி! இணைத் தோள்கள் வாழி!
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி!
தூ முறுவல் வாழி! துணை மலர்க் கண்கள் வாழி!
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி!
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே!

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே!
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே!
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே!
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே!

ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே|
ஶ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஶ்ரீ நித்ய மங்களம்||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–4—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 6, 2021

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி யொற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக் குறிப்பே–5-4-1-

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?

விளக்க உரை

எம்பெருமானே! நெடுநாளாய் உன் திறத்தில் விமுகனாய் விஷயாந் தரங்களை நச்சி அங்குமிங்கும் அலைந்து திரிந்த அடியேனை,
உனது திவ்ய கல்யாண குணகணங்களைக்காட்டி வசப்படுத்திக்கொண்டு, ஆத்மாத்மீயங்களை யெல்லாம் உனக்கே
சேஷப்படுத்திவிட்டு உன் அருளையே புருஷார்த்தமாகப் பிரதிபத்தி பண்ணிக் கொண்டிருக்கும் படியான நிலைமையயும்
அடியேனுக்கு அமைத்தருலினாய், இதனால் உன் அபேக்ஷிதமும், தலைக்கட்டிற்று என் அபேக்ஷிதமும் தலைக்கட்டிற்று;
இனிச் செய்ய வேண்டுவதொன்றில்லை; இன்னும் என் செய்ய வேணுமென்ற உன் திருவுள்ளத்தில் ஓடுகிறது என்று கேட்கிறபடி.

திருவேங்கடத்துக்குத் தண்மை – ஸம்ஸார தாபங்களை ஆற்றவற்றாயிருக்கை.
உடையாய்- உடையான் என்பதன் ஈறு திரிந்த விளி. வாழ – பிறவினையில் வந்த தன்வினை;
‘உலகு தன்னை’ என்பதை உருபு மயக்கமாகக் கொண்டால், உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம்.
தாமோதரன் -கண்ணி நுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனாதலால், அத்தாம்பின் தழும்பு
திரு வயிற்றில் தோன்றப் பெறவனென்றபடி. சதிர் – ருஜுவாயிருக்குந் தன்மை.
கீழ் திருப்பல்லாண்டில், “தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின், கோயிற் பொறியாலே யொற்றுண்டு நின்று” என்றதை-,
இப் பாட்டில் மூன்றாமடியால் விவரிக்கிறார். ஆத்துமாவுக்குச் சக்கரப்பொறி யொற்றுகையாவது – அநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞாநத்தைப் பிறப்பிக்கை.
அது பிறந்தமை தோற்றவிறே தோளுக்குத் திருவிலச்சினை யிடுவது.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது – உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றபடி. …

————-

பறவை யேறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின்
பிறவி யென்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை யென்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே–5-4-2-

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது.

விளக்க உரை

கீழ்பாட்டில், “இனியென் திருக்குறிப்பே” என்று எனக்குச் செய்ய வேண்டுவதெல்லாம் செய்து தலைக் கட்டின
பின்பு இனிப்பதறுவானென்? என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
“ஆழ்வீர்! நீர் எல்லாம் பெற்றீரோ? உம்மை நெடு நாளாகப் பற்றிக் கிடக்கிற கருமங்கள் கிடக்கின்றவே;
ப்ராப்திக்கு உறுப்பான பரம பக்தி பிறக்க வில்லையே” என்ன;
இவை யித்தனையும் தமக்குப் பிறந்தபடியை அருளிச் செய்கிறார் – நீ பொருளல்லாத வெள்ளைப் பொருளாக்கின பிறகு
ஸம்ஸார ஸாகரமானது நிச் சேஷமாக வற்றிப் போனமையால், அடியோர் பெருத்த பாக்கியம் பண்ணினேனாகிறேன்;
இந்த ஸம்ஸாரத்துக்கு மூலமான பாப ராசிகளும் தீயினிற் பட்ட தூசு போல இவை யெல்லாம் இங்ஙனொழிந்தமையால்
ஞானம் குறைவற்ற வளரப்பெற்றது என்றவாறு.

எம்பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போவதாகப் பெரிய திருவடியின்
மேலேறிக் கொண்டு வந்து தோன்றினனாதலால் “பறவையேறு பாம்புருடா” என விளிக்கின்றார்.
‘பெரும்பதமாகின்றது’ என்பதற்கு முன், எனக்கு என வருவிக்க வேணும்; பெரிய பதவியை யான் பெறா நின்றேன் என்றபடி.
இன்றளவும் பிறவிக் கடலில் ஆழங்காற்பட்டுக் கிடந்தமையால் நிஹீந பதவியிலிருந்த நான்,
இன்று அதனை வென்றமையால் உத்தம பதவியைச் சேர்ந்தேன் என விரிக்க.

ஆல் இரண்டும் மகிழ்ச்சிக் குறிப்பிடைச் சொல். தீக்கொளீஇ – தீக்கொண்டு; சொல்லிசையளபெடை ?
“போய பிழையும் புகு தருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்” என்ற திருப் பாவை இங்கு நினைக்கத்தக்கது.
அறிவை என்ற சொல்லில், ஐ -சாரியை. இவ் விடத்தில் அறிவை யென்று பரம பக்தியைச் சொல்லுகிறதென்பர்.
பிறவிக் கடலில் ஆழ்ந்திருந்த நான், அதனை வென்று வெளிக் கிளம்பி நின்றால், ஞானமாகிற ஒரு அமுதவாறு
வாயையும் தலையும் சொல் நயத்தாற் போதருமென்க. தலைப்பற்றி வாய் கொள்ளுதல் -மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்.

——————-

எம்மனா என் குல தெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ் வுலகினில் ஆர் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே-5-4-3-

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன.

விளக்க உரை

கீழ் “பிறவியென்னுங் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால், இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்” என்ற
தம்முடைய விரோதிகள் ஒழிந்தமையையும் அபேக்ஷிதம் தலைக் கட்டிமையையும் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
“ஆழ்வீர்! நீரொருவர் மாத்திரம் பேறு பெற்றால் அது என்னாகும்? உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கும் விரோதி கழிந்தலாலன்றோ?
நீர் பேறு பெற்றீராவது” என்ன, அதற்கு ஆழ்வார், “என் நாயகனே! நான் உன்னுடைய பொருளாக வாய்ந்த பின்பு
என்னைப் போல் நன்மை பெற்றார் இவ் வுலகில் யாரேனுமுண்டோ? என்னுடைய விரோதிகள் கழிந்ததன்றி என்னோடு
ஸம்பந்தம் பெற்றாருடைய விரோதிகள் கழிந்தது மன்றி, இந் நாட்டிலுள்ள ரனைவருடையவும் விரோதிகளுமன்றோ கழிந்தன;
இதற்கு மேற் படவும் ஒரு நன்மை யுண்டோ?” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

எம்மனா – எம் மன்னா; தொகுத்தல்; ‘மன்னன்’ என்ற சொல்லின் ஈறுதிரிந்த விளி.
“எம்மனாயென் குலதெய்வமே” என்றும் ஒரு பாடம். அப்போது ‘எம் அனாய்’ எனப் பிரியும்.
அனாய்-அன்னை என்பதன்விளி; தொகுத்தல் ; எனக்குத் தாய் போலப் பிரியமே நடத்துமவனே! என்றபடி.

குலதெய்வம் – வடமொழித் தொடர். “நம்மன்போல வீழ்த்தமுக்கும்” என்று – பாவங்களின் கொடுமையைக் கூறியவாறு.
“நாட்டுள பாவமெல்லாம்” என்றும் பாடமுண்டென்பர். (சும்மெனாதே) ‘கப் சிப், வாயைத் திறவாமல் ஓடிப் போய் விட்டான்’ என்பதுபோல ;
போவது பிறர்க்குத் தெரியாதபடி போயினவென்க.
(தூறுகள் பாய்ந்தன) “வனோ மறிகடலோ மாருதமோத தீயகமோ, நானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்-
ஆனீன்ற, கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்ததார். தாள் பணிந்தோம், வன்துயரை யாவாமருங்கு” என்றார் நம்மாழ்வார்.

“இவ் விடத்தில், தூறு என்கிறது ஸம்ஸாரிகளை” என்றருளிச் செய்வாராம் திருக்கோட்டியூர் நம்பி.
தூறென்று செடியாய், கிளை விட்டுக் கிடக்கிற ஸம்ஸாரத்தைச் சொல்லக் கடவதிறே.
“முற்ற விம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றிற் புக்கு” என்ற திருவாய்மொழி காண்க.

————

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற் போல்
உடலுருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கர பாணீ சார்ங்க விற் சேவகனே–5-4-4-

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்.

விளக்க உரை

கடலைக் கடைந்தெடுத்த அமுதத்தைக் கலசத்தினுள் நிறைத்த வாறுபோல, உன்னை நான் என்னுள்ளே
நிறைத்துக் கொண்டேன் என்கிறார் முன்னடிகளால், ஸம்ஸாரமாகிய கடலினுள் ஈச்வரனாகிற அமுதத்தைத் தேர்ந்தெடுத்து
ஆத்மாவாகிற கலசத்தில் ஆழ்வார் நிறைத்துக்காண்டனரென்க. கலசம் -வடசொல்; பாத்திரமென்று பொருள் –
நிறைந்தாப்போல் = நிறைத்த, ஆ, போல், எனப் பிரியும்; ஆற என்ற சொல்: ஆ எனக் குறைந்து கிடக்கிறது;
ஆறு – பிரகாரம். நிறைத்த+ஆ, நிறைத்தலா எனச் சந்தியாக வேண்டுமிடத்து, அங்ஙனாகாதது, தொகுத்தல் விகாரம்.

(உடலுருகி இத்யாதி) பகவதநுபவாதிசயத்தினால் ஆத்துமா வெள்ளக் கேடு படாமைக்காக இட்ட கரை போன்ற சரீரமும் உருகப்பெற்றது.
எனவே, இவ் வாழ்வார்க்குப் பகவத் விஷயத்திலுள்ள அவகாஹம் அற்புதமென்பது போதரும்.
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சே இடிந்து உகும்” என்று உருவற்ற நெஞ்சே உருகுகிறதென்றால்
உடலுருகச் சொல்லவேணுமோ?
“ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே, நீராயலைந்து கரையவுருக்குகின்ற நெடுமாலே!” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

‘உடலும் நெஞ்சுமுருகப் பெற்றதாகில், பின்னை இவ் வமுதத்தைத் தேக்கிக் கொள்வது எங்ஙனமே?” என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க;
‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன்’ என்பராதலால், அவ்வமுதம் வியாபித்த விடமெங்கும் திருவுள்ளம்
வியாபிக்குமெனக் கொள்வீர் என்று பட்டர் அருளிச் செய்தனராம்.

(கொடுமை செய்யும் இத்தியாதி) கீழ்ப்பாட்டில், “என்னுடைய பாவங்கள் கழிந்தவளவே யன்றி, நாட்டிலுள்ளா ரெல்லாருடைய
பாவங்களும் கழித்தன” என்றார்; இதில், என்னுடைய ஆணை செல்லு மிடங்களில் யமனுங்கூட அணுக வல்லவனல்லன்’ என்கிறார்.
‘கூற்றமும் –குறுகப்பெறாது’ என்ன வேண்டியிருக்க அங்ஙனக் கூறாது; ‘குறுகப் பெறா’ என்க கூறியது பொருந்துமோ?” எனின்;
‘குறுகப்பெறாது’ என்பதன் கடைக் குறையாகக் கொள்க;
“கூற்றமுஞ் சாரா” என்றவிடத்திற்போல. (குறுகப் பெறா -பலவின்பாலெதிர் மறைவினைமுற்று).
கூற்றம் -உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவனென்று காரணப் பெயராம் .
கோலாடி – ஆஜ்ஞை செல்லுமிடம். கோல் – செங்கோல்.

—————

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ வுரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பா என் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே–5-4-5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருத த்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ண த்ருஷ்டாந்தங் கூறுகின்றனர்.
உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரை கல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்;
அதுபோல், பொன் போன்ற உன்னை, அற்ப சாரங்களில் மண்டின என் நாக்காகிற உரை கல்லில் இட்டு உரைத்தேன்;
நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவது போல்,
நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப் பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து.
உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்;
நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று;
பொல்லாப் பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே;
உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரை கல்லில் நிறம் பார்க்கவிறே உரைப்பது.
ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள் கொள்க.
‘உன்னைக் கொண்டு’ இத்யாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம்.
ஒருவராலும் துதிக்க வொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பது போலாகுமே யன்றி,
பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார்.
இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ள வேணும்.
“மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக் கொண்டு நின்றேன்.
நல்ல பொன்னை நல்ல கல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப் போலே,
உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்;
பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது.

இப்படி அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்து வந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை;
‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந் நன்றிகளை நீர் தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்;
இப்படி நான் உம்மைப் பரம பாவநராக்கி யிருக்கச் செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து,
என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை!
உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன;
அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ் வெம்பெருமான் திருவடிகளில் ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்;
“நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற் போல
நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும்.

—————–

உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான் இனி யெங்குப் போகின்றதே–5-4-6-

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராமநம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
எம்பெருமான்–எமக்குத் தலைவனே!
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “உன்னைக் கொண் டென்னுள் வைத்தேன்” என்றார்; இப்பாட்டில், வைத்த ப்ரகாரத்தைச் சொல்லுகிறார்.
முதற் பாட்டில் “மல்லாண்ட திண்டோன் மணிவண்ணா” என்று தொடங்கினமையால்,
அந்த மல்ல வதம் முதலிய சிறுச் சேவகங்களை யெல்லாம் என் நெஞ்சில் நன்கு அமைத்தேன் என்கிறாரென்க.
“உன்னுடைய விக்கிரமம் எல்லாம்” என்னுமளவே போதுமாயிருக்க, “ஒன்றொழியாமல்” என்று விசேஷித்துக் கூறினமைக்குக்
கருத்து என்னவெனில்; வியாஸர், வான்மீகி முதலிய முனிவர்கட்கும் விஷயமாகாத விக்கிரமங்கள்
தமக்கு விஷயமானபடியைக் குறித்தவாறு;
கீழ் இரண்டாம் பந்தில் ஏழாந்திருமொழியில் “சீமாலிக னவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய்,
சாமாறவனை நீ பெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்” என்றருளிச் செய்த விருத்தாந்தமும்,
மூன்றாம்பத்தில் பத்தாந்திருமொழியில், “எல்லியம்போ தினிதிருத்த லிருந்தோ ரிடவகையில், மல்லிகைமா மாலை
கொண்டங்கார்த்தது மோரடையானம்” என்றருளிச்செய்த விருத்தாந்தமும்
மற்ற முனிவர்கட்கன்றி இவ்வாழ்வார் ஒருவர் தமக்கே ஞானவிஷய மாயினவாறு காண்க.

விக்கிரம் – வினா : என்ற வடசொற்றிரிபு. (சுவர் வழி எழுதிக்கொண்டேன்) சுவரில் சித்திரமெழுதினால் அது
கண்ணுக்குத் தோற்றுவது போல, உன் விக்கிரமங்களாகிற சித்திரங்களை எனது நெஞ்சென்னுஞ் சுவரில்
அமைத்து விளக்கிக்கொண்டே னென்றபடி.
ஆழ்வார் எம்பெருமானால் மயர்வற மதிநல மருளப்பெற்றமையால்,
அவனுடைய விக்கிரமங்க ளனைத்தையும் குறையறக்கண்டு அநுபவித்தன ரென்றுணர்க.

“மண் நடுங்க” என்றும் ஓதுவர். எம்பெருமானே! நீ பரசுராமனா யவதரித்தபோது
“இருபத்தோர்கா லாசுகளைகட்ட, வென்றி நீண்மழுவா” என்றபடி க்ஷத்ரிய குல மடங்கலும் பாழ்பட்டவாறு போல,
உனது விக்கிரமங்களை ஸாக்ஷத்கரிக்கப்பெற்ற என்னுடைய ஊழ்வினைகளடங்கலும் பாழ்த்துப்போயின என்பது மூன்றாமடியின் உட்கருத்து.
ஆழ்வார் திருவுள்ளத்தில் குடியிருந்து நாம் செய்ய வேண்டிய காரியம் செய்து தலைக்கட்டினமையால்
இனி இங்கு நின்றும் பெயர்ந்து செல்வோம் என்ற எம்பெருமான் கருதியதாகக் கொண்டு,
அங்ஙனம் போகவொண்ணாதென்று வளைத்துத் தடுக்கிறார். நான்காமடியால்
“மன்னஞ்சு வாயிரந்தோள் மழுவில் துணிந்த மைந்தா, என்நெஞ்சத்திலிருந்து இங்கினிப் போய்ப் பிறரொருவர்.
என்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்து வைத்தேன்” என்று தடுத்தாரிறே திருமங்கையாழ்வாரும்.
போகின்றது- தொழிற்பெயர்.

“ஆக, இப்பாட்டால், அவள் வந்து புகுந்த ப்ரகாரத்தையும்,
அவன் போனால் தாம் முடியும்படியான அவஸ்தை பிறந்தபடியையும்,
அவனுக்குப் போக்கின்றிக்கே நிற்கிற நிலையையும் நிர்ஹேதுகமாக விஷயிகரித்து ப்ரகாரத்தையுஞ் சொல்லுகிறது”
என்ற வியாக்கியானவாக்கிய மறியத்தக்கது.

————-

பருப் பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
மருப் பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித் தாக்கினையே-5-4-7-

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர கேதுவை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும் (இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், “உன்னுடைய விக்கிரமமொன் றொழியாமலெல்லாம், என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி
யெழுதிக்கொண்டேன்” என்றது எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையினால் என்பதை இப்பாட்டாலருளிச் செய்கிறார்.
பரமபதத்தை இருப்பிடமாகவுடைய எம்பெருமான் அங்கு நின்றும் இவர் பக்கலிலே வருமளவு முண்டான பாவக் காடுகளைப் பாழாக்கியும்,
விரோதிகளைப் போக்கியும், இவருடைய சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தருளினமைக்கு
ஒரு த்ருஷ்டாந்தல் காட்டுகிறார். முதலடியில்,
பாண்டியகுலத்துத் தலைவனாயிருந்த மலயத்வஜ ராஜன் தனது நாட்டில் நின்றும் மஹா மேரு கிரியளவும் வழியிலுள்ள
காடுகளைக் களைந்து பகைவர்களைக் காப்பாற்றித் தனக்கும் தனது பரிஜனங்களுக்கும் கடை எளிதாம்படி
பெரு வழியாக்கிக்கொண்டு சென்று, தனது வெற்றி தோற்றும்படி அம்மேருகிரியின் சிகரத்தில் தனது மதுரகேதுவை
நாட்டிப்போயினனென்று வரலாறு அறிக.
பாண்டியர்குலபதி கயல்பொறித்த இடமாகிய, பருப்பதத்தை இங்கு உவமை கூறியதனால்,
பெறுதற்கரிய இப்பேற்றைப் பெறுவதற்காகத் தாம் ஒரு முயற்சியும் செய்திலர் என்பது போகரும்.
பருப்பதம்-வடசொல்; உருப்பசி எனத் திரிவதாக்கும்.
கயல்- மீன்; இது, மன்மதனுக்குக் கேது வானதுபோல, பாண்டியர் குலபதிக்கும் கேதுவாயிருந்ததென்க.
சே அடி- ருஜுவான திருவடி என்றுமாம்; செம்மை + அடி, சேவடி. செம்மை- செந்நிறமுமாம்; ருஜுவாயிருக்குத் தன்மையுமாம்.
பொறித்தாய், ஒசித்தாய், அடர்த்தாய் என்ற மூன்றும் விளி.
‘உருப்பொலிந்த’ என்று- எம்பெருமானைத் துதிப்பதனால் நாவுக்குப் பிறந்த புகர்ப்பைக் கூறியவாறுமாம்.
“(உருப்பொலிந்த நாவினேனை.) செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாபோலே விபரீத லக்ஷணை;
இதர விஷயங்களிலேயிறே என் நாக்கு உருப் பொலிந்தது” என்பது ஆன்றோர் வாக்கியம்.

பகவத் ஸந்நிதிகளில் ஸ்ரீசடகோபன் ஸாதிக்கும் போது இப் பாசுரத்தை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

———–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அகம் பொழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே–5-4-8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்

விளக்க உரை

எம்பெருமான் தனது அந்தரங்க சிங்கார்களான நித்யஸூரியள் அனைவரிடத்தும் அன்பைக் குறைத்து,
அவ்வன்பு முழுவதையும் தம்மொருவர் பக்கலில் அமைந்தருளின பரமோபகாரத்தைப் பேசுகின்றார், இப்பாட்டில்
“சென்றால் குடையாம்” என்றபடி பலவகைப் பணிவிடைகளையுஞ் செய்யவல்ல திருவனந்தாழ்வானிடத்தும்,
உவந்து தேறுதைக்குரிய பெரிய திருவடியினிடத்துமே அன்பு குறைந்ததென்றால், மற்றையோரிடத்துக் குறைவுற்றது.
கைமுதிக நியாயத்தாற் பெறலாகுமென்க
ஐது எனினும், நொய்து எனினும் அற்பமென்றே பொருள்; இங்கு ஒருபொருட் பன்மொழியாய், ‘மிகவும் அற்பமாக’ என்று பொருள்படும்.

இப்படி ‘வாழச்செய்தாய் எம்பிரான்!’ என்ற ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான்,
“ஆழ்வீர்! இன்று வாழ்ந்ததாகக் கூறுகின்ற நீர் நெடுநாளாக இவ்விருள் தருமா ஞாலத்தில் தட்டித்திரிந்து
அலமந்து மிகவும் இளைத்தீரே” என்ன; அதற்கு
ஆழ்வார், “ஐயனே! உன்னை இன்று நெஞ்சார நினைத்து, பிறகு ‘நெஞ்சுழியும்’ என்றபடி மனஸ் சைதில்யமும் பெற்று,
கண்களும் நீர் மல்கப் பெற்று, பிறகு இவ்வாறாக பரிபாகங்கள் பிறக்கைக்கடியாக நீ செய்தருளின நன்றிகளை
மநநம் பண்ணிக் கொண்டே ஸகல தாபங்களும் தவிரப் பெற்றேனாகையால், என் சிரமத்தைப்பற்றி உனக்குச் சிந்திக்க
வேண்டிய கடமையில்லை” என்கிறார். பின்னடிகளில்.
அசும்பு – கண்ணீர்; வடசொல் திரிபு
சிரமம் – வடசொல் திரிபு. கையும் திருவாழியுமான அழகைக் கண்ட பின்பும் இளைப்பாறக் கேட்கவேணுமோ
என்பார் ‘நேமி நெடியவனே!’ என விளிக்கின்றார்

————–

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே தனி யுலகே என்றென்று
உனக்கிடமா யிருக்க என்னை உனக்கு உரித் தாக்கினையே–5-4-9-

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சந்தியையுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இலை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)

விளக்க உரை

எம்பெருமான், தன்னை அநுபவிக்குமவர்களான நித்திய ஸூரிகளை உபேக்ஷித்து விட்டு, என்னிடத்து அன்பு பூண்டு,
என்னையே போக்தாவாகக் கொண்டு வந்தான் என்றார், கீழ்ப்பாட்டில்;
இப் பாட்டில், அவ்வெம்பெருமான் தன்னுடைய போக ஸ்தாநங்களையும் உபேக்ஷித்து விட்டு வந்து என் நெஞ்சையே
தனக்கு உரிய இடமாக அங்கீகரித்தருளின் என்கிறார்.

(வரதராஜபஞ்சாசத்) தூப்புற்பிள்ளையினருளிச் செயல், இப் பாசுரத்தை ஒரு புடை அடியொற்றிய தென்றுணர்க.
“பள்ளி கோள்“ என்றவிடத்து, கோள் – முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.
பழகவிட்டு-பழகும்படிவிட்டு, அதாவது – ‘எம்பெருமானுக்குப் பனிக்கடலில் பள்ளி கொள்ளுதல் எப்போதோ
பழைய காலத்தில் இருந்த சங்கதி‘ என்னும்படியாகவிட்டு என்றபடி, பழகுதல் – பிராசீநமாதல்.
மனத்தைக் கடலாகக் கூறியது – குளிர்ச்சி. இடமுடைமை முதலிய தன்மைகளின் ஒற்றுமைபற்றி–
எம்பெருமான் ஸூர்ய மண்டலத்தை இருப்பிடமாக்க் கொண்டவனென்பது அறியற்பாற்று.

—————–

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே-5-4-10-

பதவுரை

தடவரைவாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இடவகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்;
ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல,
எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின்,
அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு,
அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க.
‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில் நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில்,
பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும்.
அவன்றானே அவளிடத்துச் சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்;
அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்தி பூர்வமாக
இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து.

பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல,
என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று
எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில்.
மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்-வடசொல் திரிபு.
இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும்,
முறையே, திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் எனப் பொருள் வாசி காண்க.
மூன்றாமடியில், வடதடமென்பதை, வட மென்னும் வட சொல்லின் விகாரமாகக் கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்;
இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல்
என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே!
இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக் கூட்டி உயர்யஸிக்க.

“உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே
விழுந்து கூப்பிட இவரை யெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார்.
“அதனிற் பெரிய என் அவா ” என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம்,
இப் பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத் திருமொழி” என்ற ஆன்றோர் உரையில் அருளிச் செயல் இங்கு அறியற்பாலது.

—————

வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை
ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தமமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே–5-4-11-

பதவுரை

வேயர் தங்கள்–வேயர்களுடைய
குலத்து–வம்சத்து
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்.

விளக்க உரை

இப்பாட்டால், இத்திருமொழி கற்பவர்களுக்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார்.
விஷ்ணுசித்தர் என்கிற ஆழ்வார் திருநாமத்திற்கு வ்யுதபத்தி இப்பாடல் விசுதமாகும்.
‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்ற அத் திருநாமத்தின் பொருள் ஒன்றரை யடிகளால் விரிக்கப்பட்டது.

(வேயர் இத்தியாதி) பெரியாழ்வாருடைய திருவம்சத்திற்கு வேயர்குலமென்று திருநாம மென்பர்;
“முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன் என்று- இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்த
திருவரங்கமுதனார் மூங்கிற்குடியர் என்றதுபோல, இவர் வேயர்குடியர் என்கிறது.

எம்பெருமான் இடைக் குலத்திற் பிறந்து அனைவர்க்கும் எளியனானது போல ஆழ்வார் தமக்கும் எளியனான படியைக்
கோவலனை யென்பது குறிக்குமென்க. எம்பெருமான் ஆழ்வார் நெஞ்சிற் புகுந்த பின்பு,
விலக்ஷணமானதொரு புகரைப் பெற்றன னென்பதைப் பெறுவிக்கும், “கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்பது.
கொழுமை- செழுமை. எம்பெருமானுடைய ஔதார்யத்திற்கு முகிலை உவமை கூறினானென்றுங் கொள்வர்.
ஆயரேறு- இடைக்குலத்திற் பிறக்கப்பெற்றோமென்னும் மகிழ்ச்சியினால் காளை போலச் செருக்குற்றிருப்பவன்.
ஆழ்வார் திருவுள்ளததிற் புகழ் பெற்ற மகிழ்ச்சியினாலும் அங்ஙனமே செருக்குற்றானென்க.
அந்தணர்- ஆசிரியர்; நச்சினார்க்கினியர் “அந்தத்தை அணவுபவர்” (வேதாந்தத்தைச் சார்பவர்) என விரித்துக் காரணப் பொருளுரைத்தனர்;
“அணவுபவர்” என்றது அணர் என விகாரப்பட்டது. “ஆரணத்தின் சிரமீதுறை” என்ற சடகோரந்தாதிச் சிறப்பாயிரச் செய்யுளின் ஈற்றடியில்
“கார் அணனைக் கம்பனை நினைவாம்” என்றவிடம் நோக்கத்தக்கது. அந்தம் + அணர், அந்தணர்; தொகுத்தல்.
இனி, ‘அம் தம் ஆர்’ னஎப் பிரித்துப்பலவாறகப் பொருள்கௌள்வாரு முளர்.
“அந்தனரென்போ ரறவோர் மற்றெப்பொருட்ருஞ், செந்தண்மை பூண்டொழுகலான்” என்ற திருவள்ளுவர் திருக்குறளும்,
அவ்விடத்துப் பரிமேழைகருரையும் நோக்கத்தக்கது.
“நூலே காகம் மூக்கோல்மனையே, ஆயுதங்காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தில் கருத்தை நோக்கினால்,
அந்தணரென்ற சொல் யதிகளைக் குறிக்குமென்பது தெற்றென விளங்கும்.

அமுதத்தினை- அத்து, இன் என்ற இரண்டும் சாரியை; ‘அந்தணர்கள் அமுதை’ என்றபடி; உவமையாகுபெயர்.
சுவையின் மிகுதி பற்றியும் பெறற்கருமை பற்றியும் போக்யமாயிருக்குந் தன்மை பற்றியும்,
பருகினவர்களை மயக்குந்தன்மை பற்றியும் எம்பெருமானை அமுதமாகக் கூறுதல் ஏற்குமென்க.

ஈற்றடியில் ஒரு ஐதிஹ்யம்- பண்டு எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியைத் திருவடி தொழுவதற்கென்று அங்கு
எழுந்தருளின காலத்தில், சிலர் எம்பார் என்ற ஆசிரியரிடம் வந்து “சாயைப்போலப் பாடவல்லர்’ என்ற
அடியின் கருத்தை அருளிச் செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க,
எம்பார், “எம் பெருமானாரிடத்தில் இதன் பொருளை நான் கேட்டுணர்ந்ததில்லை; இப்போது அவரைக் கேட்டு உங்களுக்குச்
சொல்லுவோமென்று பார்த்தால், அவர் திருக்கோட்டியூர்க்கு எழுந்தருளியிருக்கிறார்;
ஆகிலும் நான் உங்களுக்கு இப்போதே சொன்னேனாகவேணும்” என்று , எம்பெருமானாருடைய திருவடி நிலைகளை யெடுத்துத்
தம் திருமுடியின்மீது வைத்துக் கொண்டு,‘இப்போது உடையவர் எனக்கு அருளிச்செய்தார். சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று,
“அந்தணர்தம் அமுதத்தினைப் பாடவல்லார் சாயைப்போல அணுக்கர்கள்” என அவ்வயித்துப் பொருள் கொள்ளுங்கள்’ என்றருளிச் செய்தனராம்.
தம்முடைய நிழல் தம்மை விட்டு அகலாதவாறு போல, எம்பெருமானைப் பாடுமவர்கள் அவ்வெம் பெருமானைவிட்டு
இறையும் அகலாது அவன்றனக்கே அந்தாணிச் சேவகராப் பெறுபவர் என்றவாறு,
இனி, ‘சாயைபோல- குளிர்த்தி உண்டாம்படி, பாட வல்லார் தாம் அணுக்கர்கள்’ என்றும் சிலர் உரைப்பர் என்ப,

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–3—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 6, 2021

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

இரண்டாமடியில், “கண்டு கொண்டேன்” என்ற விடத்துள் ஏன் விகுதியைப் பிரித்து,
முதாலடியிறுதியிலுள்ள ‘பறித்து’ என்பதனோடு கூட்டி யுரைக்கப்பட்டது.
இனி இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலும் ஒருவாறு ஒக்குமென்க.

பரத்துவம், அந்தர்யாமித்துவம், வியூஹம், விபலம், அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படுவனவும்,
உன்னுடைய பிரவேசமுள்ளனவுமான விடங்களிலெல்லாம் தட்டித் தரிந்து உன்னை ஸேவித்து, பலவைத் துன்பங்களுக்கு
இடமான இச்சரீரத்தில் விருப்பை ஒழித்துக்கொண்ட அடியேன் இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டகலகில்லேன் என்கிறார். முன்னடிகளால்,
சுழலை- சுழன்று சுழன்று வருகிற ஆறு. துக்கங்கள் இச்சரீரத்தைச் சூழவளைந்துகொண்டிருப்பதனால்,
அவற்றைச் சுழலையாக உருவகப்படுத்தினர்.
அன்றி, ‘சுழலையை’ என்ற விடத்துள்ள இரண்டனுருபைத் துக்கம் என்பதனோடு கூட்டி, ‘சுழலையை’ என உரைத்தலுமொன்று.
‘சூழ்ந்து கிடந்த’ என்பதைச் சூழ்ந்து கிடந்த என வலிக்க;
பிற வினையில் வந்த தன் வினை வலை என்ற சொல் ஆகு பெயரால் உடலை உணர்த்திற்று.
‘வலை என்கிறது, தப்ப வொண்ணாமையைப் பற்ற;
வலையாவது கயிறுமணியுமாயிருப்பதொன்று; இதுவும் நரம்பு மெலும்புமாயிருப்பதொன்றிறே” என்ற வியாக்கியாகவாக்கியமிங்கு அறியத்தக்கது.
இனி, ‘துக்கச் சுழலை’ என்று- துக்கங்கள் சுழல்வதற்கு இடமடான ஆத்துமாவை சொல்லிற்றாய்.
அதைச் சூழ்ந்துகிடந்தவலை என்று- அவித்யாகர்ம வாஸாநாருசிகளைச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம்.
புக்கினில்- ‘புத்தகங்களில்’ என்பதன் மருஉ. பாத்வ, அந்தர்யாமித்வ, வியூஹ, விபவ, அம்சாவதாரங்களளவாகப்
புக்குக் காண்கையாவது- அந்த அந்த நிலைகளைப் பிரத்யக்ஷமாகாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தினால்
அநுபவித்துப்பாடுவகை
கல்லிடை மோத- கல்மேல அறைய என்றபடி.

————

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு ஆணை–உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை.

விளக்க உரை

ஏழையாயிருப்பவர் செல்வர் மாளிகை வாசலைப் பற்றிக் கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னை விடமாட்டோம்’
என்ற உறுதியுடன் அவர்களை வளைத்துக் கொண்டிருப்பது போலவும்,
பரதாழ்வான் சித்திரகூடந்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற்போலவும் நான் உன்னை வளைத்துக்கொண்டேன்;
உன்னால் தப்பிப் போக வொண்ணாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய;
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்; என் மாயையில் உலக முழுவதையும் பிணிப்புண்டிருக்கச் செய்யவல்ல யான்,
உம்முடைய வளைப்பில் நின்றும் என்னைத் தப்ப வைத்துக் கொள்ள வல்லேனல்லனோ” என்ன;
அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின்மேலாணை; நீ தப்பிப்போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட;
எம்பெருமான், “ஆழ்வீர்! இது என் காணும்? ஆணையிடுவதற்கு இப்போது என்ன பிரஸத்தி?” என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! (அடியார்களை ஒருபடியாலும் கைவிடமாட்டேன்) என்று நீ ஓதி வைத்ததெல்லாம்
பொய்யாய்த் தலைக்கட்ட நேரிட்டதே என்று ஆணையிடுகிறேன்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டின் முன்னடி.

“என்னெஞ்சத் துள்ளித்திங்கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் வளைத்து வைத்தேன்” என்ற
கலியனருளிச்செயல், முதல் அரையடியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
இந்த்ரஜாலம்- கண்கட்டுவித்தை. ஒளித்திடில் – நீ மறைந்தாயாகில் என்றபடி.
(நின்திருவாணைகண்டாய்.) “மாயஞ்செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை, வாசஞ்செய் பூங்குழலாள்,
திருவாணை நின்னாணை கண்டாய்” என்ற திருவாய்மொழி அறிக.
ஆணையிட்டால் அதை மறுக்கமுடியாதென்று கருத்து.
(நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை.) “கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக் கடைக் கணித்தாங்கே ஒருத்திதன்பால்,
மருவினம்வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒரு பேதைக்குப் பொய்குறித்துப் புரிகுழன்மங்கை யொருத்தி
தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாயுன் வளர்த்தியோடே
வளர்கின்றதாலுன்றன் மாயைதானே” என்ற பெருமாள் திருமொழியை நினைக்க.
அல்லை – முன்னிலையொருமை வினைமுற்று.

பின்னடிகளின் கருத்து: – உலகத்தாரனைவருந் திரண்டு, தம்முடைய பாவங்களையெல்லாம் தொலைத்துக் கொள்ள
விரும்பிப் பேராரவாரஞ் செய்துகொண்டு திருமாலிருஞ்சோலையிலுள்ள சிலம்பாறுமுதலிய பல தீர்த்த விசேஷங்களைப்
பிரதக்ஷிணம் செய்வதைக் கூறியவாறு.
வலஞ்செய்தலைக் கூறியது – மற்றுள்ள வழிபாடுகளுக்கெல்லாம் உபலக்ஷணமென்க.
இனி வலஞ்செய்வதற்கு உரியதும், தீர்த்த விசேஷங்களை யுடையதுமான திருமாலிருஞ்சொலைமலையென்று பொருள் கொள்ளிலுமாம்;
அப்பொருளில் “வலஞ்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை, வலஞ்செய்துநாளும் மருவுதல் வழக்கே” என்ற
திருவாய்மொழி நினைக்கத்தக்கது.
பின்னடிகளுக்கு வேறு வகையாகவும் பொருளவருளிச் செய்வர் பெரிய வாச்சான் பிள்ளை.

————-

உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக் குறவர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-3-

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?

விளக்க உரை

மகரந்தமமர்ந்த அரவிந்தத்தின் சுவையறிந்த வண்டு மீண்டொரு முள்ளிப்பூவைத்தேடி ஓடாதவாறுபோல,
உன்னுடைய கைங்கரியாஸமறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத்தேடி ஓடமாட்டேன்;
அப்படி என்னை நீ ஓடவிட்டால் அது உன்றன் மேன்மைக்கே குறையாமுத்தனை;
ஆதலால் அடியேனை நெறிகாட்டி நீக்காது திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்ற பிரார்த்திக்கின்றமை முன்னடிகளிற் போதருமென்க.
ஒருவன் றனக்குப் பணிந்து – ஒருவன் தன்னைப் பணிந்து என்றவாறு; உருபு மயக்கம்.
கடை – வாசல்; தலை – ஏழனுருபு. வாசலிலே என்றபடி.
சாயை தேஜஸ்ஸு; அதாவது – ஸர்வாதிகத்வம். ஷாயா என்ற வடசொல் திரிந்தது.

கீழ் நான்காம்பத்தில், இரண்டாந்திருமொழியில், இரண்டாம் பாட்டில்
“எல்லாவிடத்திலு மெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ் சீர்த்தென்றிருமாலிருஞ் சோலையே”
என்றதை விவரிக்கின்றன, பின்னடிகள்.
இத்திருமலையிலுள்ள குறவர்கள் கொல்லைகளில் வளர்ந்துள்ள தினைக் கதிர்களைப் பறித்து அவற்றைப் பரிஷ்கரித்து
எம்பெருமானுக்கு அமுது செய்வித்து, ‘தாங்கள் அநந்யப்ரயோஜகர்’ என்னுமிடம் வெளியாம்படி
“உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு” என்று மங்களாசாஸநம் செய்துகொண்டு, அந்தப் புதிய தினைமாவை உண்பாராம்.
தினை – ஓர் சாமை. இதனை மாவாக்கி உண்பது குறவர் முதலியோரது சாதியியல்பு.
தமக்கு ஏற்ற உணவையே எம்பெருமானுக்கும் இட்டனரென்க. குஹப்பெருமாளுடைய அனுட்டானமும் அறியத்தக்கது.
இங்குத் தினை என்ற சொல், அதன் கதிர்களைக் குறிக்கும்; பொருளாகுபெயர்.
“புனைத்தினைகிள்ளி” என்ற பாடம் சிறக்குமென்க. அவி- வடசொல் விகாரம்; தேவருணவு என்பது பொருள்;
அவிக்காட்டி என்றது – எம்பெருமானுக்குப் போஜ்யமாம்படி காட்டி என்றபடி.
வாழ்க – வியங்கோள் வினைமுற்று. இனம் – கூட்டம். புதியதுண்கை – கல்யாணச் சாப்பாடாக உண்கை என்றுமாம்.

————

காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்
பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4-

பதவுரை

குரு-குருவம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(காபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்புஇடம்–ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை.

விளக்க உரை

“இலங்கதிமற்றொன்று –நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாமே” என்ற திருவாய்மொழியை ஒக்கும் முன்னடிகள்.
இந்த ஸம்ஸார பூமிக்குள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் எட்டினவிடம் எத்தனை யோஜனை தூரமுண்டோ, அவ்வளவும்
அடியேன் தட்டித்திரிந்தாயிற்று; ஓரிடத்திலும் ஒதுங்க ஒருநிழல் பெற்றிலேன்; குடிக்கத் துளிதண்ணீரும் பெற்றிலேன்.
(லௌகிகர்கள் ஒதுங்குகிற நிழலும், அவர்கள் பருகும் நீரும் அடியேனுக்கு விஷ வ்ருக்ஷத்தின் நிழலாகவும் நச்சுநீராகவும் தோற்றியிராநின்றன.)
ஆதலால் உனது திருவடி நிழலைத் தவிர்த்து மற்றொன்றை நான் ப்ராணதாரகஸ்தலமாக நெஞ்சிற்கொண்டிலேன்,
கண்ணிலுங் காண்கின்றிலேன் என்கிறார்.
திரிந்து உழன்றேற்கு – உழன்று திரிந்தேற்கு என விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம்.
உழல்தல் – ஆயாஸப்படுதல். . உயிர்ப்பு- மூச்சுவிடுதல்.

கீழ்பாட்டில், “இனிப்போ யொருவன்றனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயையழிவுகண்டாய்” என்று
ஆழ்வாரருளிச் செய்தவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி,
“ஆழ்வீர்! நீ புறம்புபோய் நிற்பது என் சாயைக்கு அழிவானால் ஆகட்டும்;
அப்படி நிற்கும்படியாகப் புறம்பே ஓரிடமும் உமக்கு உளதோ?” என்றுகேட்க;
வேறு ஓரிடமுங் கிடையாதென்கிறார், இப்பாட்டால்.

(தூதுசென்றாய் இத்யாதி.) “உறவு சுற்றமென்றொன்றிலா வொருவன்” என்கிறபடி ஒருவகைச் சுற்றமுமற்றவனான
கண்ணபிரான் பாண்டவர் பக்கலில் பந்துத்துவம் பாராட்டியது- “இன்புற மிவ் விளையாட்டுடையான்” என்றதற்கேற்ப
லீலாநுகுணமாக ஆரோபிதாகாரமாதலால் “பொய்ச்சொற்றம்” எனப்பட்டது.
‘பேசிச்சென்று’ என்றது – வார்த்தைப்பாடாய், பாராட்டி என்றபடியென்பர்.
இனி, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப்பிரதியென்று” என்றொரு வாக்கியங் காணப்படுதலால் அ
தற்கேற்பப் பொருள் கொள்ளுதலும் ஒன்று; ஆனால், கண்ணபிரான் துரியோதநாதியரை நோக்கி,
“எனக்கு உங்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் ஒரு நிகரான பக்ஷபாதமே உள்ளது” என்றருளிச் செய்ததாகச்
சொல்லப்படுகிற விருத்தாந்தம் பாரதம் முதலிய முதனூற்களிற் காணப்படுகின்றதா என்பது ஆராயத்தக்கது.
கண்ணபிரான் தூதுசெல்லும்போது வழியிடையில் விதுரர் திருமாளிகையில் அமுது செய்துவிட்டு வந்தமைகண்ட துரியோதனன்,
‘புண்டரீகாக்ஷனே! பீஷ்மரையும் துரோணரையும் என்னையும் ஒரு பொருளாக மதியாமல் ஏதுக்காகப்
பள்ளிப் பயலிட்ட சோற்றை உண்டனை?’ என்று கேட்டதற்கு, கண்ணபிரான்,
‘எனக்கு உயிர்நிலையாயிராநின்றுள்ள பாண்டவர்கள் திறந்து நீ பகைமைபூண்டிருக்கின்றமையால் எனக்கும் பகைவனாயினை;
பகைவனது சோற்றையுண்பது உரிய தாகுமோ? என்று உத்தரங் கூறினதாக மஹாபாரதத்தில் காணப்படுகின்றமையால்,
அதற்கு விருத்தமாக இங்ஙனே பொய்ச்சுற்றம் பேசினதாகக் கூறப்படுமோ?
ஒருகாற் பேசியிருந்தாலும் துரியோதநாதியர் அப்பேச்சை ஏற்றுக் கொள்வரோ?
‘ஒரு க்ஷணத்திற்குமுன் எம்மை நீ பகைவராகப் பேசினாயே’ என்று மடிபிடித்துக் கொள்ளார்களோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;
அதற்குப் பரிஹாரம் வருமாறு:- கண்ணபிரான் துரியோதநாதியரைப் பகைவராகக் கூறியது முதல்முதலாக
அவர்களைக் கண்டபோது; பொய்ச்சுற்றம் பேசியது- பிறகு ஸமாதாநம் பேசுங்காலத்தில்;
முன்பு பகைவராகச் சொன்ன பேச்சைத் துரியோதநன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வல்லவனல்லன்;
“உன் முகம் மாய மந்திரந்தான்கொலோ” என்றபடி கண்ணபிரானது முகவழகில் மயங்காதாரில்லை ஆதலால்,
துரியோதனனும் அதில் மயங்கி, முந்தியபேச்சை மறந்துவிடுவான்;
கண்ணழகில் மயங்கித் தோற்று விளித்தவனிறே துரியோதநனென்பவன். இனி, பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
பேதம் செய்து – ‘பிணங்காதொழியப்பெறில் எங்களுக்கு ஒரூரமையும்’ என்ற பாண்டவர்களை பத்தூர் கேட்கும்படிபண்ணி,
அதுவே ஹேதுவாக இரண்டு வகுப்பினர்க்கும் வைரத்தை வளர்த்து அவர்கள் உறவைக் குலைத்து என்றவாறு.
அன்றி, ஆச்ரிதரென்றும் அநாச்ரிதரென்றும் இங்ஙனமே ஒரு வாசியைக்கற்பித்து என்று முரைப்பர். பேதம்-வடசொல் திரிபு.
எங்கும்- கண்ணாற் கண்டவிடமெங்கும் என்றுமாம்.
“கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தவெந்தாய்” என்ற
திருவாய்மொழி இங்க நோக்கத்தக்கது
பிணம் – சவம்

————

காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா
மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்.

விளக்க உரை

மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்”
என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால்
தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை;
ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை;
மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும்
வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது.

வீழ்வொழியா என்பதற்கு “நிர்விகாரமாய்” என்றிவ்வளவே பெரிய வாச்சான்பிள்ளை பொருளுரைத் தக்கதாக
அச்சுப் பிரதிகளிற் காண்கிறது; அது பொருத்தமற்றது; “நிர்வ்யாபாரமாம்” என்றிருந்ததை, “நிர்விகாரமாய்” என மயங்கி அச்சிடுவித்தனர் போலும்.
வீழ்வு-சோர்வு; அது ஒழியாமையாவது -எப்போதும் சோர்வுற்றிருக்கை. அதாகிறது – நிர்வ்யாபாரத்வம்.
இனி “நிர்விகாரமாம்” என்ற அச்சுப்பிரதிப் பாடத்தை, “நிர்விகாரமாம்”எனத் திருத்திக் கொண்டு,
“நிர்வ்யாபாரமாம்” என்ற பாடத்தின் பொருளையே அதற்குக் கொள்ளுதல் பொருந்துமென்னவுமாம்.
மனமே என்றவிடத்து, ஏகாரம் இசைநிறை.

————-

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருது கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இ பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
மா மணி வண்ணா–நீலமணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உன்னைவாழத் தலைப்பெய்திட்டேன்” என்ற ஆழ்வார் களித்துக் கூறியதைக்கேட்டு எம்பெருமான்,
“ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் மாறி மாறி நடக்கும்;
இப்படியே ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிக் கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல்
ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும்
பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை
உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம்.

எருது+கொடி, எருத்துக்கொடி. மருத்துவன்-வைத்தியன்; இங்க, ஆசாரியன் என்பது உள்ளுறை.
எம்பெருமான் மருந்துமாவன், மருத்துவனமாவன்;
“மருந்தும் பொருளு மமுதமுமந்தானே”
“அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே”
“மருந்தே நங்கள் போகமகிழ்ச்சிக்கென்று, பெருந்தேவர் குழாங்கள் பிதற்றும் பிரனன்”
“அருமருந்தாவதறியாய்” என்ற அருளிச் செயல்களை அறிக.
உலகத்தில் நோய்க்கு மருந்து வேறு, வைத்தியன் வேறு; அடியாருடைய பிறவி நோய்க்கு மருந்தும் பலகால் கொள்ளப்படவேணும்;
வேறுவகை மருந்துகளின் ஸம்பந்தத்தையும் அது ஸஹிக்கும்; பலன் கொடுப்பதில் ஸந்தேஹமும் அதற்குண்டு;
இம் மருந்து அங்ஙனன்றியே, ஸக்ருத்ஸேவ்யம்; தன்னைப்போன்ற வேறொரு மருந்தையும் உடைத்தாகாகதது;
பல ப்ரதாகநத்தில் திண்ணியதுமாம். அந்த மருந்துகள் மலைமேல் வளர்வதுபோல், இதுவும் (திருமாலிருஞ்சோலை) மலையில் வளருவதாம்.

(கோயில் கடைப்புகப்பேய்) “உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பர்” என்றவிடத்திற்கு உதாஹரணமாகக் காட்டப்பட்ட
திருக் கண்ணமங்கை யாண்டான் நிலைமையை அடியேனுக்கு அருள்செய்யவேணும் என்கிறார்.
“திருக்கண்ணமங்கை யாண்டான், ஒரு ஸம்ஸாரி தன் வாசலைப்பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டித்
தானுங் குத்திக்கொண்டபடியைக் கண்டு, ஒரு தேஹாத்மாபிமாநியின் அளவு இதுவானால், பரமசேதநனான ஈச்வரன்
நம்மை மயாதிகள் கையில் காட்டிக்கொடானென்று திருவாசலைப்பற்றிக் கிடந்தாரிறே” என்ற திருமாலை வியாக்கியானம் காண்க.
பெய்- முன்னிலையொருமை வினைமுற்று.

————-

அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்.

விளக்க உரை

*இளைத்திருந்தேனை என்ற விடத்துள்ள இரண்டனுருபைப் பிரித்து, ஏறி என்ற விளையெச்சதோடு கூட்டியுரைத்தோம்.
இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலுமொன்று. ஸம்ஸார ஸாகரத்தில் ஆழ்ந்துகிடந்து அலமருகைக்கீடான
அஜ்ஞாநத்தை நீக்கி ஞானத்தைப் பிறப்பித்தருளியவாறுபோல, உன்திருவடியோடே சேர்த்தியையும் பண்ணியருளவேணும் என்று வேண்டுகின்றார்.
இப்பாட்டால் அக்கரை என்று பாபத்துக்குப் பெயராதலால், கருவியாகு பெயரால் ஸம்ஸாரத்தை உணர்த்திற்று;
(கருவியாகு பெயராவது- காரணத்தின் பெயர் காரியத்துக்கு ஆகுவது; இங்கு, காரணம் பாபம்; காரியம் ஸம்ஸாரம்)
அனர்த்தம் – அபாயம்–வடசொல் திரிந்தது. இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையை அறிக.
இக்கரையேறி – பிறவிக் கடலினின்றும் வெளிப்பட்டு என்றவாறு. ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய் போல்
பிறவிக்கடலுள் நின்று துளங்கின அடியேன் உனது நிர்ஹேதுக கிருபையினால் அக்கடலைக் கடந்தேனாகிலும்,
நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தைச் சிக்கனப் பிடித்தாலன்றி என் அச்சம் தீராதாகையால்,
‘ஸ்வதந்திரனான ஈச்வரன் மீண்டும் நம்மை ஸம்ஸாரக்கடலில் தள்ளினாற் செய்வதென்?’ என்று மிகவும் பயப்படா நின்றேனாகையால்,
இவ்வச்சந்தீரும்படி அபயப்ரதாநம் பண்ணியருளவேணுமென்றவாறு.
இதனால், ஸம்ஸாரதசை என்றும், ஸம்ஸாராதுத்தீர்ணதசை என்றும், பரமபத ப்ராப்தி தசை யென்றும் மூன்று தசைகள் உண்டென்பதும்,
அவற்றுள் இப்போது ஆழ்வார்க்குள்ள தசை மத்யமதசையென்னும் பெறுவிக்கப்பட்டதாகும்.

(அஞ்சேலென்று கைகவியாய்.) அர்ஜுநனை நோக்கி அருளிச்செய்தபடி அடியேனையும் நோக்கி அருளவேணுமென்கிறாரெனக்கொள்க.
பரதன் கூறிய அபயமுத்ராலக்ஷண ச்லோகத்தில், கைவிரல்கள் மேல் முகமாக விரிந்திருக்க வேண்டுவது
அபயமுத்திரையின் இலக்கணமாகத் தெரிதலால், இங்குக் கைகவியாய் என்கிற விதனை அதற்குச்சேர ஒருவாறு
ஔபசாரிகமாக நிர்வஹித்துக்கொள்ள வேணும், அஞ்சே லென்று கைகவியாய் – அபயமுத்திரையைக் காட்டியருளாய் என்று
இங்ஙனே திரண்டபொருள் கொள்வது ஏற்குமென்க, அன்றி வேறுவகை உண்டேல் உற்றுணர்க.
அஞ்சேல் என்னும்போதைக்கு அச்சம் இன்றியமையாத்தாகையால்,
அவ்வச்சமாவது – “மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சி“
“(கொள்ளக்குறையாத இடும்மைக்குழியில் தள்ளிப்புகப் பெய்திகொலென்றதற்கஞ்சி“ என்றிப்புடைகளிலே
திருமங்கையாழ்வார்க்குப் பிறந்த அச்சம் போன்ற அச்சம் எனக் கொள்க.

(சக்கரமும் இத்யாதி) செவ்வானம்போற் செந்நிறமுடைய ஜ்யோதிஸ்ஸையுடையதான திருவாழியாழ்வானையும்,
(செந்தாமரை போல்) சிவந்த திருக்கை, திருக்கண்களையும், (இவற்றுக்கெல்லாம் நிறத்தைத் தரவல்ல)
பீதாம்பரத்தையும் உடையவனே! என விளித்தவாறு.

————-

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளை யென்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின் பாலதறிதி யன்றே திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-8-

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின்பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?

விளக்க உரை

இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், நேற்றைக்கென்றும் இப்படி சொல்லிக்கொண்டு கழித்தகாலம் முழுவதையும் பாழே போக்கினேன்;
ஏதோ சிறிது ஸுக்ருத விசேஷத்தினால் இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னை விட்டுப் புறம்புபோகப் புக்கால்,
அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன்; எனக்கு உன் திறத்து இவ்வகை அபிநிவேசம் பிறக்கைக்கீடாக,
என் நெஞ்சு உன்னை விட்டு மற்றொன்றை நினைப்பதே யில்லை யென்னுமிடத்தை ஸர்வஜ்ஞனான நீ அறியாநின்றாயன்றோ? என்கிறார்.
“பழுதே பல பகலும் போயின வென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு தொழுதேன்” என்ற
பொய்கையார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

(இன்றொடு நாளையென்றே) ‘நேற்றுப்போனேன், இன்று வந்தேன், நாளைக்குப் போகப்போகிறேன்’ என்றிப்படி
வ்யவஹரித்துக்கொண்டு கழிக்குங் காலத்திற்குக் கணக்கில்லையிறே.
“கிறியே மாயம்” என்ற நிகண்டின்படி, கிறி என்ற சொல் மாயப்பொருளதாகையால்,
‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது ஒக்கும்;
ஸம்ஸாரம் எம்பெருமானது மாயையிறே–என்ற கீதை காண்க.

நூற்றுவர் – தொகைக் குறிப்பு. அறிதி – முன்னிலை யொருமை வினைமுற்று. அன்றே -என்றபடி.

————–

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9-

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.

விளக்க உரை

(பத்நீ ஸம்ச்லேஷத்தில் வேண்டின படி பாரித்துக் கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப் பெற்றால் ஒரு நொடிப்பொழுதும்
விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்ப வாஸம் பண்ணிக் கொண்டிருந்த போதே உனக்குப் பணி செய்ய வேணுமென்று
பேரவாக் கொண்டிருந்து, பிறந்த பின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தில் ஈடு பாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-,
விஷயாந்தர பரனாய்க் கண்ட விடங்களிலுந் தட்டித் திரிந்து கொண்டு வரும் போது தைவ வசமாக இன்று இத் திருமாலிருஞ்சோலையைக் கிட்டி
இங்க உன்னைக் காணப் பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார்.
அடிமை செய்யல் உற்றிருப்பன் – கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி.
‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமை செய்ய விரும்புவதில் ஸம்சய லேசமுமில்லை யென்பது போதரும்.

————-

சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10-

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத்திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில்,
“இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே
பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது – ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’
என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் …. விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது.
தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்;
ஆயாஸமில்லாம லென்றபடி–

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–2—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 6, 2021

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1-

பதவுரை

நெய்க் குடத்தை–நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி–பற்றிக் கொண்டு
ஏறும்–(அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்–எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்–என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு–(என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்–வியாதிகளே!
காலம்பெற–விரைவாக
உய்ய –(நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்–(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்–(பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட–பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து — எழுந்தருளி
மெய்–(எனது) சரீரத்தை
கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்–(என் சரீரத்தை கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
(என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்–(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று–பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு (அவனால்) காக்கப் பெற்றது.

விளக்க உரை

அக்நி ஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி
ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை
ஆக்கிரமித்துக்கொண்டு, நான் உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு
சாச்வத ப்ரதிஷ்டையாக நின்று இருக்கும் நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று;
இத்தனை நாளும் போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளி கொண்டிருக்குமிடமாயிற்று
இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை;
இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,
இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள்.

“பாம்பனையோடும் வந்து புகுந்து கிடந்தார்” என்றதனால், நித்ய வாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும்.
பட்டினம்- வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.

———

சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன்
பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2-

பதவுரை

சித்திர குத்தன்–சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்–தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி–மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த–(தான்) எழுதிவைத்த
இலச்சினை–குறிப்புச் சீட்டை
தூதுவர்–யம கிங்கரர்கள்
மாற்றி–கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்–கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து–முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை–அலைகளை யுடைய
கடல்–கடலில்
சேர்ப்பன–கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்–முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்–தலைவனும்,
பத்தர்க்கு–அடியார்களுக்கு
அமுதன்–அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன் (யான்) தாஸனாயினேன்;
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல்குறுகச் சென்றாலெற்றி நமன்றமர்பற்றும்போது,
நில்லுமினென்னுமுபாயமில்லை” என்ற குறைதீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச் செய்கிறார்,
இப்பாட்டில் யம லோகத்தில், இவ்வுலகத்தின் கணுள்ள ஸர்வாத்மாக்களினுடையவும் பாபங்களைக் கணக்கிட்டு
எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தனென்னுங் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத் தன்மையால்
ஸூரியன் சந்திரன் வாயு அக்நி ஆகாசம் பூமி வருணன் ஹ்ருதயம் யமன் பகல் இரவு காலை மாலை தருமம் என்ற
பதினான்குபேர் ஸாக்ஷியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையு மெழுதிவைப்பது போல ஒரு சுவடியில்
என் தீவினைகளையுமெல்லா மெழுதி, அதன்மேல் யமனுடைய மேலெழுத்தையுமிடுவித்து அதனைப் பாதுகவாலாய் வைத்திருக்க,
அதனை யம தூதர்கள் எடுத்துச் சுட்டுப்போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; இதற்கு அடி என்னெனில்;
அயர்வறுமமாக்கனதிபதிக்கு நான் அடிமைப்பட்டதேயாகும். அது காரணமாக எனது ஆத்துமா அவ்வெம்பெருமானுடைய
பாதுகாப்பை பெற்றிருக்கின்றபடியால் அவ்யமதூதர்கட்கு என்னை அணுகும்வழி என்னவே மென்றவாறு.

“தரணியில் பண்ணியயனார் தனித் தனிக் காத்த பிரான்
கருணை யெலுங்கா அடித் திருமங்கையாள்வார் நற்பின்
திரணரகெண்ணிய சித்திரகுத்தன் தெரித்து வைத்த
கருணையிலெறிய சூர்வினை முற்றுந் துரந்தனமே–(தேசிகப்ரபந்தம்) என்ற பாசுரமிங்கு நினைக்கத்தக்கது.

புலம் என்று திசைக்கும் பெயர். இலச்சினை – வடசொல்விகாரம்.
(தூதுவராடி யொளித்தார்.) “வள்ளலே! உன் தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்போல“
“நமன்றமாராலாராயப் பட்டறியர் கண்டீர் அரவனை மேற் பேராயற் காட்பட்டார் பேர்“ என்ற அருளி செயல்களுமறிக.

————–

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி
கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3-

பதவுரை
(வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.)
எயிற்றிடை–(தனது) கோரப் பல் மேல்
மண்–பூமியை
கொண்ட–தாங்கி யருள
எந்தை–எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை–வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து–கழித்தருளியும்
புலம்–இந்திரியங்களால்
வல் சேவை–கடுயைமான ரிஷபங்களை
அதக்கி-(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிறும்–நரம்புகளும்
அக்கு–எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி–சரீரத்தில் (ஆசையை)
கழித்து–ஒழித்தருளியும்
பாசம்–(யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி–காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்–இரவும் பகலும்
ஓதுவித்து–நல்லறிவைப் போதித்து
பயிற்றி–(கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய–நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்–அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “பக்தர்க்கமுதடியேன்” என்று எம்பெருமானுக்கு தம்மை அடிமைப்பட்டவராக அருளிச் செய்து,
இப்பாட்டில் அவ்வெம்பெருமான் தம்மை அடிமை கொண்ட ப்ரகாரங்களை அருளிச் செய்கிறார்.
அவன் செய்தருளின உபகார பரம்பரைகளைக் கூறுகின்றவாறு.
(வயிற்றில் இத்யாதி.) இனி யான் கருவிருத்தக் குழியில் விழாதபடி செய்தருளினான்;
அப்படி கர்ப்பவாஸம் நேராøமைக் குடலாக,இந்திரியங்களாகிய காளைகளைப் பட்டி மேய்த்து திரிய வொட்டாமல் பாதுகாத்தருளினான்;
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ்சீயும் நரம்புஞ் செறிதரையும் வேண்டாநாற்ற மிருமுடலில் விருப்பமொழியும்படி செய்தருளினான்;
இப்படியெல்லாம் அருள் செய்கையினால், யமபடக் கையும் பாசமுமாய் வந்து புகுந்து பாசங்களைக் காலிலே துவக்கி
முழங்கீழ்படத்தள்ளி இழுத்து கலிகையாகிற பரலோகஹிம்ஸைகளுக்கும் ஆளாகாதபடி அருளினவாயாயிற்று;
இவ்வகை அருள்களைச் செய்தபடி எங்ஙனே எனனில்?
இரவும் பகலும் ஓய்வின்றி என் நெஞ்சிற் குடிகொண்டிருந்து ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து,
அதன் பிறகு அறிந்தபடியே அனுட்டிக்கும்படியாகவுங் கற்பித்து,
அநவரதம் அடியேன் தனது திருவடிகளின் கீழ் அடிமைகளையே செய்து உய்யும்படி செய்தருளினானாதலால்
இவ்வகை நன்மைகள் எனக்கு வாய்த்தன என்பதாக விரித்த கருத்தறிக.

குற்றஞ் செய்தவர்களைத் தொழுமரத்தில் அடைப்பதும் விலங்கிடுகையேயாதலாலும்,
வயிற்றிற்கிடப்பது விலங்கிடுவதைப் போல்லதனாலும், கர்ப்பவாஸத்தை “வயிற்றில் தொழு” என்றனரென்க.
இரண்டாமடியில் எதுகை நயம்நோக்கி “கயிற்றும்” என வலித்துக் கிடக்கிற தென்க.
கயிறு- நரம்பு; அக்கு- எலும்பு, ஆணி- சரீரத்துக்குப் பெயர். ஆணி கழித்தல்- சரீரத்தில் தசையை ஒழித்தல்.
“காலிடைப் பாசங்கழற்றி’ என்பதற்கு நான்கு வகையாகப் பொருள் கூறுவர்;
அவற்றுள் ஒன்று பதவுரையிற் கூறப்பட்டது.
இனி இரண்டாவது பொருள்- கால் என்று காற்றாய், அதனால் பிராண வாயுவைச் சொன்னபடியாய்,
பாசம் என்று ஆத்துமாவைக் கட்டிக் கொண்டிருக்கிற ஸூக்ஷம சரீரத்தை சொல்லுகிறதாய்,
பஞ்சவ்ருத்தி ப்ராணனாலே ப்ரேரிதமான ஸூக்ஷ்மசரீரத்தில் நகையறுத்தபடி சொல்லுகிறது;
எனவே, கீழ் ‘கயிற்றுமக்காணி கழித்து’ என்றது- ஸ்தூலசரீரத்தில் நசையறுத்தபடியைச் சொல்லியவாறாம்
இனி மூன்றாவது பொருள்:- காற்கட்டான புத்ரதாரக்ருஹ க்ஷேத்ராதிகளிலுள்ள பற்றைப் போக்கின்படி சொல்லுகிறது.
இனி, நான்காவது பொருள்:-உலகமுழுவதையும் மயக்கக்கூடியதும் இரண்டு காலினிடையிலுள்ளதுமான
ஹேயஸ்தாநத்தின் விருப்பத்தை ஒழித்தபடி சொல்லுகிறது;
உலகத்தை மோஹத்தினாற் கட்டுண்டதுபோலச் செய்கின்ற அதனைப் பாசமென்றால் பொருந்தத் தட்டில்லையே.

—————-

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4-

பதவுரை

மங்கிய–(ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை–வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்–வியாதிகளே
உமக்கும்–உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை–ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே)
கண்டீர்–(இன்று) பாருஙக்ள்
இங்கு–இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்– வர வேண்டா, வர வேண்டா
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)
எளிது அன்று சுலபமான கரியமன்று;
புகேன்மின்–ஆகையால் இனி இங்கு வர வேண்டா
(என் ஆத்துமா)
எம்மான் அவன்–எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சேரும்–எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘–திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத–பரிபவப் படாமல்
உய்யபோமின்–பிழைத்துப் போங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பு

விளக்க உரை

வியாதிகளின் அநுபவத்திற்கு ஊழ்வினைகள் ஹேதுவதலால் அவ்வூழ்வினைகளை விளித்து,
‘மிருத்யுவுக்கும் மிருத்யுவந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு விலை வந்தது.
இனி நீங்கள் உறைப்பான காவல்பெற்ற என்னிடம் தங்க முடியாது; தங்கினால் பரிபவமே பலிக்கம்;
வேறிடந்தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார்.
மங்கிய வல்லினை- வேறுபடுத்த வொண்ணாதபடி உருத்தெரியாமல் ஆத்துமாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகாள்! என்னவுமாம்;
“சார்ந்தவிரு இல்வினைகள்” என்றது காண்க.
புகேன்மின் புகேன்மின்’ என்ற அடுக்குத்தொடர் விரைவ பற்றியது;
“அசை நிலை பொருள் நிலை இசைநிறைக்கொரு சொல், இரண்டு மூன்று நான்கெல்லைமுறை அடுக்கும்’ என்பது நன்னூல்.

————

மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5-

பதவுரை

மாணி–பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு–வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்–மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை–ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி–ஆசைப் பட்டு
கொணர்ந்து–எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே–என் நெஞ்சினுள்ளே
புகுத–புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி–வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்–அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்–மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்–(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா–தாமதிக்க வேண்டியதில்லை,
பண்டு அன்று பட்டினம் காப்பு,

விளக்க உரை

தேவேந்திரனுடைய வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டுக் குறட்பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி
அரசு வாங்கி ஓங்கியுலகளக்கும்போது, அநபேக்ஷிகள் தலையிலும் திருவடியை வைத்தருளின பரமகாருணிக ஸ்வபாவனும்,
தனது நிர்ஹேதுக கிருபையினாலன்றிப் பெறுதற்கரியனும், மாயச் செயல்களில் வல்லவனுமான எம்பெருமானை
நான் இன்று எனது ஹ்ருதயத்தில் நிலை நிறுத்தினேனாதலால், பொல்லாத இந்திரியங்களே!
இனி நீங்கள் இங்கு நசை வைத்திட வேண்டியதில்லை என்கிறார்.
இந்திரியங்கள் அசேதனங்களாயினும் கொடுமைபுரிவதிற் சேதநகரில் விஞ்சியிருத்தலால்
“குறும்பர்களுள்ளீர்” என உயர்திணையாகக் கூறினரென்க.
“உண்ணிலாவிய ஐவரால்”
“கோவாய் ஐவர் என் மெய்குடியேறி” என்பன காண்க.
இந்திரியங்களை வேறிடந்தேடி ஓடச்சொன்னது- கூறை சோறிவைதாவென்று குமைக்கையாகிற
உங்கள் தொழில்களைச் செய்யாதொழியுங்கள் என்றவாறு, வலிவல் – மீமிசைச் சொல்.
(உள்ளீர்) எம்பெருமான் எனது நெஞ்சில் வந்து குடி கொண்டவுடனே நீங்கள் ஓடிப்போக வேண்டியது ப்ராப்தம்;
அப்படியன்றி இன்னும் ஓடாதிருந்தீர்களாகில் என்பது சமத்காரப் பொருள்.

மாணி- அழகுக்கும் பெயர்; ‘பிரமசாரி’ என்றபடியுமாம். உரு – வடிவு.
பிறிது இன்றி- இரண்டு பொருளாகத் தோற்றாமல், ஏகவஸ்து என்னலாம்படி பொருந்தச் செய்து என்றபடி
எம்பெருமானை மாணிக்க பண்டார மென்றது- அதுபோல் பெறுதற்கரியவன் என்றவாறு -வடசொல் திரிபு.

————-

உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6-

பதவுரை

உற்ற–நெடு நாளாக இருக்கிற
உறு பிணி–மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்–நோய்களே!
உமக்கு–உங்களுக்கு
ஒன்று–ஒரு வார்த்தை
சொல்லுகேன்–சொல்லுகிறேன்:
கேண்மின்–கேளுங்கள்;
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்–பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்–திருக் கோயிலாயிற்று;
கண்டீர்–முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்–(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்–ஓ கொடுமைகளே!
இன்னம்–மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்–அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு–உங்களுக்கு
இங்கு–இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை–ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்–(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்ப

விளக்க உரை

யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய் நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள
அன்பு கொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி,
பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்:
அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடி புகுந்ததனால் காவல் பெற்றிருக்கின்றது;
ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய் விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்.

———–

கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7-

பதவுரை

சிறு வரை–சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்–முலைகளாகிற
பொதும்பினில்–பொந்தில்
வழுக்கி வீழ்ந்து–வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு–(நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த–(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை–(திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின–தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்–கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி–போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்–பரிபவப் படாதபடி
செய்தான்–செய்தருளினான்;
பண்டு அல்லது பட்டினம் காப்பு.

விளக்க உரை

“வாணிலாமுறுவல் சிறுநூதல் பெருந்தோள் மாதாரர் வனமுலைப் பயனே பேணினேன்” என்றபடி
விஷயாந்தரங்களில் ஆழங்காற்படுத்திப் பின்பு அதற்குப் பலாமக நகரங்களிலுங் கொண்டுபோய் அழுத்தக் கடவனவான
எனது கருமங்களையெல்லாம் எம்பெருமான் ஒழித்தருளி, பரிபவங்களுக்கு ஆளாகாதபடி செய்தருளிப் பாதுகாத்தருளினனென்கிறார்.

மலைபோற் கிளர்ந்துள்ள கொம்மைமுலையைப் ‘பொதும்பு’ (பொந்து) என்னலாமோ? எனின்;
தன்னிடத்து அழங்காற் படுத்திக்கொள்ளுந் தன்மையின் ஒற்றுமைபற்றி அங்ஙனங் கூறினரென்க.
இனி, “கொங்கைச் சிறுவரை யென்றும்” என்று பாடமாகிய, “சிறுவரை” என்பதை, சிறு அரை எனப் பிரித்து,
‘கொங்கை என்றும், சிறு அரை என்றும்’ என இயைத்து, இதொரு முலையிருந்தபடியே! என்றும்,
இதொரு சிற்றிடையிருந்தபடியே! என்றும் (மயங்கிச்)சொல்லிக்கொண்டு (விஷயாந்தரத்தில் மூண்டு)
ஹேயஸ்தாநமாகிய பொந்தில் விழுக்கி வீழ்ந்து எனப் பொருள் கொள்ளலாமென்பர்.
முழை என்று குஹைக்குப் பெயர்; அதுபோல் பயங்கரமான நரகத்தைச் சொல்லுகிறது
இங்கு. உழல்வேனை- எதிர்காலம்; நிகழ்காலமன்று.
இவ்விடத்தில் இப்போது கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வழுக்கி வீழ்கிறதற்குப் பலனாக,
பின்பு நரகத்திற்புகுந்து அங்கு உழலப்போகிற என்னுடைய என்றவாறு
(“வங்கக்கடல்வண்ணன்” தன் திருமேனியினழகை எனக்குக் காட்டியருளின மாத்திரத்தினால்
ஊழ்வினைகளெல்லாம் தன்னுடையே ஒழிந்தன என்பது உள்ளுறை.
பங்கப்படாவண்ணம்- தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து, பின்னும்
வன்கயிற்றாற் பிணித்தெற்றிப் பின் முன்னாக விழுக்கை முதலிய பரிபவச் செயல்களுக்குப் பாத்திரமாகாதபடி என்கை.

————–

ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8-

பதவுரை

பீதக ஆடை பிரானர்–திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து–ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்–அறிவுக்கு இருப்பிடானதும்
அல்–அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்–ஹ்ருதய கமலத்தினுள்
புகுந்து–பிரவேசித்து
என் னுள்ளே–எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்–தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து–நீக்கி
என்–என்னுடைய
சென்னித் திடரில்–தலையினிது
பாத விலச்சினை–ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்–ஏறி யருளப் பண்ணினான்
பண்டு அன்று பட்டினம் காப்பு.

விளக்க உரை

ஸர்வேச்வரத்வத்திற்கும் புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப்பீதாம்பரத்தைத் திருவரையில் அணிந்துள்ள
ஸர்வேச்வரன் ஞானோபதேசம் பண்றுகிற ஆசாரியாக என் நெஞ்சினுள் வந்து புகுந்து
தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியபுத்தி, அய்யகேஷாதபுத்தி, ஸ்லரக்ஷண பரத்வம், ஸ்வப்ரயோஜகபாத்யா முதலிய
மனக் குற்றங்களை ஒழித்து அவ்வளவிலும் பர்யாப்தி பெறாமல் தனது திருவடிகளை இலச்சினை படும்படி
என் தலை மேல் அமைத்து இவ்வாறு பரமோகபாரம் பண்ணியருளினனாதலால்,
இவ்வாத்துமா பண்டு போலன்றி இப்போது குறைவற்ற காப்பை அடைந்திரா நின்ற தென்கிறார்.

இறங்கலிடுவித்து – (தான் இருந்த இடத்தில் நின்றும்) இறங்கச்செய்து என்றபடி.
பிரமகுரு – பிரமம் என்ற இங்க ஞனாத்தைச் சொல்லுகிறது-
மூன்றாமடியில், போது -வடசொற் சிதைவு. திடர் – மேடு. திருவடிகள் ஏற வொண்ணாத மேட்டில் அத்
திருவடிகளை ஏற்றியருளினான் என்ற சமத்காரந்தோற்றச் “சென்னித்திடரில்” என்றனரென்க.
(பாதவிலச்சினை வைத்தார்) தோளுக்குத் திருவாழி யிலச்சினை யிட்டதுபோலத் தலைக்குத் திருவடியிலச்சினை யிட்டனனென்க.
இனி, திருவாழியிலச்சினை தலையிலுமுண்டென்க;
‘ஒரு காலிற்சங் கொருகாலிற்சக்கர முள்ளடிபொறித்தமைந்த , இருகாலுங் கொண்டங்கங் கெழுதினாற்
போலிலச்சினை படநடந்து” என்றதும் அறியத்தக்கது.

—————

உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே
அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9-

பதவுரை

ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே–திருவாழி யாழ்வானே!
எறி–(எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!–நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே–அழகு பொருந்திய சார்ங்கமே–சார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே–(கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த–(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்–அஷ்ட திக்குப் பாலகர்களே!
இறவு படாமல்–தப்பிப் போகாமல்
சங்கே–ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற–(ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்–உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்;
பறவை அரையா–பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே!
உறகல்–உறங்காதிரு;
(நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது)
பள்ளி அறை–(எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை
குறிக் கொள்மின்–நோக்கிக் காத்திடுங்கள்.

விளக்க உரை

இவ்வாழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என் வருகிறதோ’ இதுவரை தம்மை எம்பெருமானால்
காக்கப்பட்டவராக அநுஸந்தித்துப் போந்தவிலர், அவனுக்குங் காவல் தேடுகிறார், இப்பாட்டில்,
எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாஹநத்தையும் விளித்து,
நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கைப்பற்றை
நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார்.

உறகல்- உறங்க வேண்டா என்று பொருளையுடைய உறங்கேல் என்னும் எதிர்மறை வியங்கோள் வினைமுற்றின் சிதைவு.
‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத்தொடர், அச்சம் பற்றியது.
‘இறவு படாமல் உறகல்’ என இயையும்; அன்றி, ‘இறவுபடாமல் இருந்த’ என அடைவே இயைத்து,
என்றும் இறவாமல் வாழ்கின்ற என்று பொருள் கொள்வாருமுளர் .
(எண்ம ருலோக பாலீர்காள்.) “இந்திரனங்கி யாமனிருதி வருணன், வந்தவாயு குபேரனீசாநன், என்ன வெண்டிசை யுலோகபாலகர்”
என்பது திவாகரம்.

————–

அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10-

பதவுரை

அரவத்து அமளியினோடும்–திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அழகிய பால் கடலோடும்–அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்–செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து– எழுந்து அருளி
அகம்படி–(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து–பிரவேசித்து,
பரவை–(அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திசை–பல அலைகள்
மோத–தளும்ப
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை–உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே- ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்–போற்றுகின்றார்.

விளக்க உரை

‘பைம்கொண்ட பாம்பனையோடும்- மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று உபக்ரமத்தில்
அருளிச்செய்த படியே நிகமித்தருளுகிறார்- எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும் திருவனந்தாழ்வானிடத்தும்
மிக்க அன்பாதலால் அவற்றைவிட்டுப் பிரிந்து வரமாட்டாமல் அவற்றையும் உடன்கொண்டு எழுந்தருளினனென்க.
இது மற்றுமுள்ள நித்ய ஸூரிகளோடுங்கூட எழுந்தருளிமைக்கு உபலக்ஷணமென்பர்.
அமளி- – படுக்கை. அரவிந்தம் – வடசொல் பாவை- உவமையாகுபெயர்.
அகம்படி வந்து புகுந்து- அந்தரங்க பரிஜகங்களோடுகூட வந்து புகுந்து என்று முரைப்பர்.
பரவை- கடல்; எம்பெருமான் அழைத்துக் கொண்டு வந்த திருப்பாற்கடல்,
“பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்”- (இப்படி) ஆத்துமாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுகின்றான் என்றபடி.

இத் திருமொழி ஸ்வயமே இனியதாயிருத்தலால் இதற்குப் பயன் கூறாதொழிந்தன ரென்க.

————–

அடிவரவு நெய் சித்திர வயிற்றில் மங்கிய மாணி உற்ற கொங்கை ஏதம் உறகல் அரவத்துக்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5–1—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 5, 2021

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா உன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை யல்லால் அறியாது நான தஞ்சுவன் என் வச மன்று
மூர்க்குப் பேசுகின்றானிவ னென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே–5-1-1-

பதவுரை

மாதவா–ச்ரிய: பதியானவனே!
நாரணா–(உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்–பெரிய திருவடியை
கொடியானே–த்வஜமாக வுடையவனே!
வாக்கு–(என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே–பரி சுத்தி இல்லாமையால்
உன்னை–(ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்–வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)
நாக்கு–(ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்–உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது–(வாய்க் கொள்ள) அறியாது;
அது–அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்–நான் அஞ்சுகின்றேன்;
(அது) அந்த நாக்கானது
என் வசம் அன்று–எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று–“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்–நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்–என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்–காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை–நற் சொல்லாக
கொள்வர்–(அறிவுடையார்) கொள்ளுவார்கள்.

விளக்க உரை

“எம்பெருமான் ஸந்நிதியிற் பொய் சொல்லுகை, க்ஷுத்ர ப்ரயோஜநங்களை விரும்புகை, க்ஷுத்ரர்களைப் புகழ்கை
முதலியவையாகிற அசுத்திகள் என்னுடைய வாய்மொழிக்கு அளவற்றிருப்பதனால், அவ் வாய்மொழிகொண்டு
உன் பெருமைகளைப் புகழுகைக்கு நான் அர்ஹனல்லதென்று ஒழித்தாலும், நாக்கு ரஸமறிந்ததாகையால்,
உன்னைத் தவிர்த்து மற்றொருவரை வாயிற்கொள்ள அறியமாட்டாது” என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்ய;
அது கேட்டு எம்பெருமான், ‘ஆழ்வீர்! ஆகில் நீரம் அந்த நாக்குடன் கூடிச்சொல்லும்” என்று நியமிக்க!
அதற்கு ஆழ்வார், “நாக்கின் தோஷத்தை நினைத்து நான் அஞ்சாநின்றேனே” என்ன;
அதற்கு எம்பெருமான், ‘ஆழ்வீர்! நாக்கு ரஸமறிந்ததாகையாலே மேல்விழா நின்றது, அதன் தோஷத்தை அறிந்துள்ள நீர்
அது மேல் விழாதபடி அதை உமக்கு வசப்படுத்தி நியமித்துக் கொள்ளும்” என்ன;
அதுகேட்டு ஆழ்வார், “அந்த நாக்கு எனக்கு வரப்பட்டிருந்தாவன்றோ அதை நான் நியமிக்கவல்லேன்’ அதுதான் உனக்கு வசப்பட்டு விட்டதே” என்ன;
அதற்கு பெருமாள், “ஆழ்வீர்! சால அழகிதாயிருந்தது; ‘உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்’ என்கிறீர்,
‘நாக்கு நின்னையல்லாலறியாது’ என்கிறீர், ‘நான் தஞ்சுவன் என் வசமன்று’ என்கிறீர்;
இவ்வாக்கியங்கள் ஒன்றோடொன்று சேருவது எங்ஙனே? ஆராய்ந்து பார்த்தால் நீர் பேசும் பேச்சுக்களெல்லாம்
மூர்க்கர் பேசும் பேச்சாயிரா நின்றன! என்ன;
ஆழ்வார், “அது உண்மையே; என்னுடைய பேச்சுக்கள் மூர்க்கப் பேச்சுகளாகத் தோற்றம்; அதனால் உனக்குச் சீற்றமும் பிறக்கும்;
ஆகிலும் அச்சிந்தத்தை ஒருவாறு என்னால் ஸஹிக்க முடியும்; இந்நாக்குப்படுத்துகிற பாடு அப்பப்ப! ஸஹிக்கவே முடியவில்லையே” என்ன;
அதற்கு எம்பெருமான், “அந் நாக்கைக் கொண்டு என்னை நீர் புகழத் தொடங்கீனராகில், அது எனக்கு அவத்யாவஹமாய்த் தலைக்கட்டுமே!” என்ன;
அதற்கு ஆழ்வார் “எம்பெருமானே” மூர்க்கர் பேசும் பாசுரங்கள் அறிவுடையார்க்குக் குற்றமாகத் தோற்றதவளவேயன்றிக் குணமாகவுந் தோற்றும்;
காக்கை ஓரிடத்திலிருந்துகொண்டு தனக்குத் தோன்றினபடி கத்திவிட்டுப்போனாலும், அதனை அறிவுடையார் கேட்டு,
‘இது நமக்கு (உறவினர் வரவாகிற) நன்மையைச் சொல்லாநின்றது’ என்று கொள்ளக் காண்கின்றோம்;
அதுபோல அடியேன் நாவினுக்கு ஆற்றமாட்டாமல் வாய் வந்தபடி சிலவற்றைப் பிதற்றினாலும்
அவற்றை நீ நற்றமாகவே கொள்ள வேணும்” என்றருளிச் செய்ய;
எம்பெருமான், “ஆழ்வீர்! அப்படியாகிலும் குற்றத்தை நற்றமாகக் கொள்ள வேண்டிய கடமை எனக்கு என்ன உண்டு?” என்று கேட்க;
(காரணா) அது கேட்டு ஆழ்வார், “அப்படியா! நன்று சொன்னாய்; உலகங்களை யெல்லாம் படைத்தவனல்லையோ நீ?
ரக்ஷிக்கிறேனென்று கொடிகட்டிக் கிடக்கிறாயில்லையோ நீ?” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு.

மூர்க்கு –வடசொல்லடியாப் பிறந்தது, மூடத்தனம் என்பது பொருள். முனிதல் – கோபித்தல்
“நா வினுக்கு ஆற்றேன்“ என்றது – நாவினுடைய பதற்றத்துக்கு ஆற்றேன் என்றபடி.
காக்கைவாயிலும் – காக்கையில் நின்றும், ஐந்தாம் வேற்றுமை.
கட்டுரை- ஏற்றச்சொல், பொருளுள்ள சொல். கருளன் – வடசொல் விகாரம்.

———-

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையானே
பிழைப்ப ராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி யேழுலகுண் டுமிழ்ந்தானே–5-1-2-

பதவுரை

சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி–பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு–பொல்லாத நாக்கினால்
புன் கவி–அற்பமான பாசுரங்களை
சொன்னேன்–நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும் (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்–தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்–சொல்லை.
பொறுப்பது–பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே–பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்–உன்னுடைய கடாஷம் அல்லால் வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
(அன்றியும்)
வேறு ஒருவரோடு–மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்–என் நெஞ்சானது
பற்றாது–பொருந்த மாட்டாது
உழைக்கு–புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்–ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?

விளக்க உரை

எம்பெருமானே! நீ கையுந்திருவாழியுமாயிருக்கிற இருப்புக் கண்ட நான் உன்னைக் கவி பாடாதிருக்க மாட்டாமல்
எனது பொல்லாத நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்ய;
அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும்
உமக்கு யோக்யதைவுண்டோ?” என்ன;
அதற்கு ஆழ்வார், “அநந்யார்ஹ சேஷ பூதர்கள் பேசும் பாசுரம் அவத்யாவஹமாயிருந்தாலும் அதனைப் பொறுக்க வேண்டிய
கடமை பெரியோர்க்கு உளதன்றோ?” என்-
அது கேட்டு எம்பெருமான், ஆழ்வீர்! அப்படி நான் பொறுக்கும்படி அடியார் சேஷ பூத்ரோ என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷமொழிய மற்றொருவருடைய கடாக்ஷத்தையும் நான் ஒரு பொருளாக மதிப்பவனல்லேன்;
உன்னைப் போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும்,உன்னிடததில் எனக்குள்ள தாஸ்யம்
குணமடியாகப் பிறந்ததன்றி ஸ்வரூப ப்ரயுக்தமானதனால், அவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்ன;
அதற்கு எம்பெருமான் “உமக்குப் புறம்பு போத்தில்லையாகில் ஆயிடுக; பல குற்றங்களுக்குக் கொள்கலமாக உம்மை
கைப்பற்றினால் அது எனக்கு அவத்யாவஹமாகாதோ?” என்ன;
அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே! புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என்? குறைந்தால் என்?
எல்லா உயிர்களுடையவும் அபராதங்களைப் பொறுப்பதற்கென்றே காப்புக் கட்டிக் கொண்டிருக்கிற உனக்கு
என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுத்தருளுகை அவத்யாவஹமாய் விடப் போகிறதோ?” என்ன;
அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித்த விடம் உண்டோ?” என்று கேட்க;
ஆழ்வார், ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் பண்ணதிருப்பார் யாரேனுமுண்டோ? அவர்களது அபராதங்களைப் பாராதே
அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்தருளினவனல்லையோ?
அப்படியே அடியேனையும் அங்கீகரித்தருள வேணும் என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

(உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய்) உடம்பு முழுவதும் புள்ளி மயமாயிருக்கிற மானுக்கு ஆரோபிதமாக
ஒரு புள்ளி ஏறி அதிகமாகத் தோற்றினால், அதனால் அந்த மானுக்கு ஒரு குற்றமுமில்லை;
அதுபோல, அபராத ஸஹத்வமே வடிவாயிருக்கிற உனக்கு என்னொருவனுடைய அபராதத்தைப் பொறுப்பதனால்
ஒரு குற்றமும் வாராது என்றவாறு.
இவ்வகைப் பொருளில், உழையின் ஸ்தானத்தில் எம்பெருமான் நின்றதாகப் பெறலாகம்;
அன்றி,
அந்த ஸ்தானத்தில் ஆழ்வாரோ நின்றதாகவுங் கொள்ளலாம்; புள்ளிமானுக்கு ஒரு புள்ளி அதிகமானால் அதனால்
அதற்கொரு குற்றமில்லாதவாறு போல, அபராதமயனா அடியேனுக்கு ஒரு அபராதமேறினால்,
அதனால் என்னுடைய அங்கீகாரத்திற்கு ஒரு குறையுமில்லைகாண் என்றவாறாம்.
முன்னர் உரைத்தபடியே வியாக்கியானப் போக்குக்கு ஒக்குமென்க.
மிகை – குற்றத்துக்கும் பெயர்; “மிகையே குற்யமுங் கேடுங் துன்பமும், மிகுதியும் வருத்தமுமைமபொருட்டாகம்” என்பது நிகண்டு.
இனி, இங்க மிகை என்பதற்கு கேடு என்று பொருள் கொள்ளுதலும் பொருந்துமென்க.

————-

நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே–5-1-3-

பதவுரை

திருமாலே–ச்ரிய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்–‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்–(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்–அறிகிறேனில்லை.
புன்மையால்–(எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத் தனத்தினால்
உன்னை–உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி–வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்–புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை–உன்னை
உண்ணும் ஆறு–இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்–ஒரு வழியையும்
அறியேன்–அறிந்தேனில்லை;
ஓவாறே–(ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன–நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது–அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்–உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
கண்டாய்–முன்னிலை யசைச் சொல்

விளக்க உரை

“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற
இதொன்னை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமஞ் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ,
அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் றிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்ய;
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமஞ் சொல்லா நின்றீர்?
பிரயோஜநாந்தர பாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க,
அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று
சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன் காண்” என்ன;
அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில்,
மோக்ஷமாகிகற பரம புருஷார்த்தத்தை விரும்பி, அது பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப் பாரீர்” என்ன;
அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்குடலாக நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி
அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப் பொழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்;
ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற;
அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில்
ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்;
இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன;
அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி
உன் கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான
மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு,
நன்மை- ஸ்வரூபாநுரூபம். தீமை- அவத்யாவஹம். புள்ளுவம்- வஞ்சகம். வைட்டணவன்- வடசொல் விகாரம்
வன்மை- திண்ணியதான அத்யவஸாய மென்றும் கொள்க.

————

நெடுமையால் உலகேழு மளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவ தில்லை
அடிமை யென்னு மக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத் தானே–5-1-4-

பதவுரை

நெடுமையால்–(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–அளந்தருளினவனே!
நின்மலா–பரிசுத்தமானவனே!
நெடியாய்–(அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை–கொடிய கம்ஸனை
கொன்று–உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே–உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில்
பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை–(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
அடிமை கொள்வதற்கு–கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா–ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை–இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை–(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்–அடிமை யென்ற
அ கோயின்மையாலே–அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அவை–அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு–அவ்வவ் விடங்களில்
போதரும்–(தாமாகவே) கிடைக்கும்
(கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)

விளக்க உரை

நெடுக வளர்ந்த திருவடியினால் அளந்தாய் என்னாமல், “நெடுமையால் அளந்தாய்” என்றது- ஒருவகை சமத்காரமென்க.
அவிகார ஸ்வரூபனான தன்னைச் சிறியனாகவும் பெரியனகாவும் ஆக்கிக் கொண்ட விதனால் தனக்கொரு
கொத்தையுமில்லை யென்பார், நின்மலா! என்று விளிக்கின்றார்.
ஐச்வரியத்தை விரும்பின தேவேந்திரனது வேண்டுகோளாற் செய்த உலகளப்பையிட்டு விளித்தது ‘
அவ்விந்திரனைப்போல் நான் ஐச்வரியத்தை விரும்பி வேண்டுகிறேனில்லை’ என்று ஸ்வஸ்வரூபத்தின் வாசியைத் தெரிவித்தவாறாம்.
அன்றி, உனது திருவடி ஸ்பர்சத்தில் விருப்பமற்றிருந்தார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ,
உன் திருவடியையே பரம ப்ராப்யமாக ப்ரதிபத்தி பண்ணியிருக்கிற ஆட்படுத்திக் கொள்ளாதொழிவது
தகுதி யன்றென்று உணர்த்துகிறவாறுமாம்.

“திரிவிக்கிரமாபதாநத்தில் அனைவரையு மடிமைகொண்ட நீ அடியேனையுமடிமை கொள்ளவேணும்” என்று ஆழ்வார் பிரார்ததிக்க;
அதற்கு எம்பெருமான், “உம்முடைய ஸ்வரூபத்தின் உண்மை எனக்கு விளங்கவில்லையே” என்ன;
அதற்கு ஆழ்வார, “அடியேனுக்கு ஸ்வாதந்திரியமும் ஸ்வ ப்ரயோஜாபாத்யமும் உண்டென்று நீ ஸந்தேஹக்கவே
(வேண்டியதில்லை அடியேன் அநந்ய ப்ரயோஜனன்” என்று அது கேட்டு
எம்பெருமான் “நீர் அநந்ய ப்ரயோஜநம் என்றால், அதை நான் ஏற்றுக் கொள்வேன், நீர் தேஹமுடையவரன்றோ?
அத்தேஹத்திற்குத் தாரகமாயுள்ளவற்றில் உமக்கு விருப்பமின்றி யொழியுமோ?“ என்ன,
அதற்கு ஆழ்வார், “தேஹ தாரகமாக சோறு கூறை முதலியவற்றை நான் உன்னிடத்துப் பெற விரும்புகிறிலேன்“ என்ன,
“ஆகில் அவை பெறுவதற்காகச் சில அரகர்களைத் தேடி ஓடுகிறீரோ? என்று எம்பெருமான் கேட்க,
அதற்கு ஆழ்வார், “அவற்றை நான் அபேக்ஷித்துப் பெற வேண்டிய அருமையில்லை,
அவற்றுக்காக்க் குக்கர்களைத் தேடித்தான் ஓடவேண்டியதில்லை, உனக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிற சிறப்பு
என்னிடத்துள்ளதாலலால் ஆங்காங்கு அவரவர்கள் தாமாகவே என்னை அழைத்து அவற்றைத் தந்திடுவர்கள்;
ஆகையால் நான் பிரயோஜந்தரத்தை நச்சித் திரிபவனல்லன்; அநந்யப்ரயோஜனனே;
இனி அடியேனை அடிமை கொண்டருள வேணும்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டு.

இனி, “கூறை சோறிவை வேண்டுவதில்லை. என்பதற்கு
‘உண்டியே உடையே உகந்தோடுகின்ற இம்மண்டலத்தவர்களால் விரும்பப்படுகிற கூறையும் சோறும் எனக்குத்
தாரங்களல்லாமையாலே, இவை எனக்கு வேண்டியதில்லை என்று மூன்றாமடிக்கு வேறு வகையாப் பொருள்கொள்ள வேணும்;
அதாவது;- அடிமை என்னும் அக்கோயின்மையாலே- அங்கு அங்கு- அந்த அந்தக் கைங்கரியங்களுக்குள்ளே,
அவை- அக்கூறை சோறுகள், போதரும்- அந்தர்ப்பவிக்கும்; என்று. இதன் கருத்து;
ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்தையே எனக்கும்
கூறை யுடுக்கையும் சோறு உண்மைகயு மென்கிறார் என்பதாம்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” என்றது இங்கு நினைக்கத்தக்கது.

ஆழ்வார் தம்மை அடிமை கொள்ளுகையாவது- பிரகிருதி ஸம்பந்தத்தையும்- ஊழ்வினைத் தொடர்களையும்
ஒழித்தருளுகையே யென்பதை, ஈற்றடியிலுள்ள இரண்டு ஸம்போதக வாக்கியங்களினால் ஸூசிப்பிக்கிறார்;
கஞ்சனைக் கொன்றது போலப் பிரகிருதி ஸம்பந்தத்தைக் கொல்லவேணும்;
தந்தை காலில் விலங்கை யறுத்ததுபோல ஊழ்வினைத் தொடர்களை அறுக்க வேணுமென்றவாறு.

தாதை கோத்தவன்றளைக்கோள் விடுத்தது முன்னும், கஞ்சனைக்கொன்றது பின்னுமாயிருக்க, மாறுபடக்கூறியது-
சிரமவிவக்ஷை யில்லாமையாலாம்;
அன்றி,
கண்ணபிரான் திருவவதரிதத்ருளினவன்றே கம்ஸன் ஜீவச்சீவமானமையால் அங்ஙன் கூறக்குறையில்லையெனிலுமாம்.
தாதை- தாத:- இங்குத் தாதையென்றது, தாய்க்கு முபலக்ஷணம்.
கோள்- முதனிலை திரிந்த தொழிற்பெயர். “வன்றனைகோள்விடுத்தானே” என்றும் ஓதுவர்.

தேவகியினுடைய அஷ்டமனிப்பம் தனக்கு விநாசகமென்றறிந்த கம்ஸனால் விலங்கிட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்த
தேவகி வஸுதேவர்களுடைய கால் விலங்குகள் கண்ணபிரான் அவதரித்தவுடனே இற்று முறிந்தொழிந்தனம் அறிக.

———–

தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம்
வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5-

பதவுரை

கேழல் ஒன்று ஆகி–ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு–(தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட–பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே–கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்–(குவலயாபீடமென்ற) யானையானது
வீழ–முடியும்படி
கொம்பு–(அதன்) தந்தத்தை
ஓசித்தானே–முறித்தெறிந்தவனே!
தோட்டம்–தோட்டமும்
இல்லவள்–மனைவியும்
ஆ–பசுக்களும்
தொழு–மாட்டுத் தொழுவமும்
ஓடை-குளமும்
துடவையும்–விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்–கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி–குறைவில்லாமல்
அடியேன்
உன் பொன் அடி கீழே–உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்–திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு–(எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு–நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது–(ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்–பல பேர்
நச்சுவார்–(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்

விளக்க உரை

கீழ்ப் பாட்டில், தாரக பதார்த்தம் (-சோறு) கைங்கர்ய ரஸத்தில் அந்தர்ப்பூதமென்றார்;
இப்பாட்டில், போஷக பதார்த்தங்களும் உன் திருவடிகளை அநுபவிக்கையாகிற ரஸத்தில் அந்தர்ப் பூதங்ளென்கிறார்.

தோட்டம் முதலிய போஷக வஸ்துக்களனைத்தும் உன் திருவடிகளே யெனள்று அறுதியிட்டிரா நின்றேன் என்பது
முன்னடிகளின் தேர்ந்த கருத்து.
இல்லவள் – வடமொழியில் -என்ற சொல்லின் பொருள் கொண்டது.
துடவை – ஸுக்ஷேத்ரம் . வளைப்ப+அகம், வளைப்பகம் ; தொகுத்தல் விகாரம்.
தோட்டம் முதலியவற்றைப் பொன்னடிக் கீழ் வளைப்ப வகுத்துக் கொண்டிருக்கையாவது-
எம்பெருமான் திருவடியை ஏழு வகுப்பாகப் பிரித்து,
ஒருவகுப்பைத் தோட்டமாகவும், மற்றொரு வகுப்பை இல்லவளாகவும்,
மற்றொரு வகுப்பைக் கிணறாகவும் பிரதிபத்தி பண்ணுகையோயாம்.
எம்பெருமானது திருவடியையொழிய வேறொன்றைப் போஷகமாக மதிப்பதில்லை யென்றவாறு.

இனி முன்னடிகளுக்கு வேறுவகையாகவும் பொருள் கொள்ளத்தக்கதாகும்; அதாவது;-
தோட்டம் ….. கிணறுமாகிய இவையெல்லாதம், வளைப்பு அகம்- சூழ்ந்திருக்குமிடம்,
உன் பொன் அடிக்கீழ் – உனது திருவடிநிழலிலே (என்று), வகுத்துக் கொண்டிருந்தேன்.
(என்நெஞ்சினால் அத் திருவடியைச்) சூழ்ந்து கொள்ளா நின்றேன், என்பதாம்.
உன் திருவடி நிழலையே எல்லாப் பொருளுமாக ப்ரதிபத்தி பண்ணி, அத் திருவடியை நெஞ்சினால் வளைத்துக் கொண்டேன் என்பது கருத்து.
“உன் பாத நிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன்” என்று மேல் அருளிச் செய்வது காண்க.
இப்பொருளில், அகம் என்பதற்கு, ‘இருப்பிடம்’ என்று பொருள். (தொகுத்தல் விகாரமுமில்லை.)

இங்ஙனருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆகில் இனி உமக்கு ஒரு குறையுமில்லையே” என்று கேட்க;
அதற்கு ஆழ்வார், “என் அப்பனே! பிறர் பொருள் தார மென்றிவற்றை நம்பி அலைந்தோடுகின்ற பிராகிதர்களின் நடுவே
எனக்கு இருக்க முடியவில்லை. இவ்விருப்பை ஒழித்தருளவேணும்” என்று வேண்ட;
அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் இங்ஙனமே வேண்டலாகாது, இவ்வுலகவிருப்பை வேண்டுவார் எத்தனை பேருளர் பாரீர்
அவர்களொடொக்க நீரும் இவ்விபூதியிலேயே இருந்தால்குறையென்?” என்ன;
அதற்கு ஆழ்வார்; பலர் இவ்விருப்பை விரும்பினார்களாகிலும், எனக்குப் பாம்போடொரு கூறையிலே பயின்றார் போலிராநின்றது;
ஆகையால் இவ் விருப்பை ஒழித்தே யருள வேணும்” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாசுரம்.

ஸம்ஸார ஸாகரத்தினின்றும் அடியேனை எடுத்து, ஸ்வ ஸ்தானமான உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவல்ல வல்லமையும்,
அச் சேர்த்திக்கு விரோதியான கருமங்களை யொழித்தருள வல்ல வல்லமையும் உனக்கு உண்டென்பார்,
“கேழலொன்றாகிக் கோட்டுமண்கொண்ட கொள்கையினானே” என்றும்,
“குஞ்சரம்வீழக் கொம்போசிந்தானை” என்றும் விளிக்கின்றார்.
ஹிரண்யாக்ஷனால் பாயாகச் சுட்டிக் கடலினுள் கொண்டு போகப்பட்ட பூமியைத் “தானத்தே வைத்தானால்” என்கிறபடியே
இப்பிறவிக்கடலினின்று மெடுத்து ஸ்வஸ்தாநமாகிய உன் திருவடிகளில் வைத்தருள வேணும்;
கம்ஸனுடைய ஏற்பாட்டுக்கிணங்க வஞ்சனை வகையாற் கொல்ல நினைத்தெதிர்ந்த குவலயாபீடத்தைக் கொன்றருளியவாறுபோல,
எனது ஊழ்வினைகளையும் கொல்ல வேணுமென வேண்டியவாறு,
குஞ்சரம்- வடசொல். “சாவு” என்னாமல், வீழ என்றது- மங்கல வழக்கு; துஞ்ச என்பது போல.

————-

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே–5-1-6-

பதவுரை

காரணா–(லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை–பிரமனை
படைத்தானே–(உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா–கண்ணபிரானே!
கரியாய்–காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் (உனக்கு) சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்–உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை–பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே–இடைவிடாமல்
நமோ நாராயணா என்று–‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்–அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்–ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு–அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்–உன் திருவடிகளை
நண்ணா நான்–கிட்டப் பெறாத நாள்களும்
அவை–(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை–அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்–தட்டுப்படுமாகில்
அன்று–அந்த நாளானது
எனக்கு–எனக்கு
பட்டினி நாள்–உண்ணாதொழிந்த நாளாகும்.

விளக்க உரை

தராக போஷகங்களெல்லாம் எம்பெருமான் திருவடிகளே” என்று கீழ் அருளிச் செய்ததை இப் பாட்டில் விசதமாக்கி நிகமித்தருளுகிறார்.
இவ்வுலகத்திலுள்ளாரனைவரும் ஒரு பொழுது உண்ணாதொழிந்தால், பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவார்கள்;
அடியேனுடைய இயல்பு அங்ஙனெத்ததன்று; திருமந்திரத்தை அநுஸந்திக்கப் பெறாத நாளும், தொழுது முப்போது முன்னடி வணங்கித்
தக்ஷமலர் தூய்த்தொழுது ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணா நாள்;
இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற நாள் உண்டநாள், அப்படி நிரப்பாத நாள் பட்டினிநாள்’ என்கிற வயஸஸ்தை என்னிடத்தில்லை;
நான் வயிறார உண்ட போதிலும், திருமந்ராதுஸந்தாகமும் ஸ்ரீபாத ஸேவையும் தட்டுப் பட்டதாகில், அந்நாள் எனக்குப் பட்டினிநாளே என்றவாறு.

இருக்கேசுச் சாமவேதம் – வடமொழித் தொடரின் விகாரம். தத்துறதல்- வாய்க்கப்பெறா தொழிதல் –

அவை- அந்த நாள்கள், தத்துவமாகில- நேரிடுமானால், என்றுமுரைக்கலாம். கருத்து ஒன்றே

————-

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே–5-1-7-

பதவுரை

வெள்ளை–பால் மயமான
வெள்ளத்தின் மேல்–பெருக்கிலே
ஒரு பாம்பை–ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து–படுக்கையாக விரித்து
அதன் மேலே–அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்–(நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே–காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர–நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி–மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்–(உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்–கண்ணீர்
அணை–படுக்கையில்
துயில் கொள்ளேன்–உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்–(இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை–உன்னை
தத்துறும் ஆறு–கிட்டும்வழியை
சொல்லாய்–அருளிச் செய்ய வேணும்.

விளக்க உரை

பிராக்ருதமான உறக்கம் அடியேனுக்கில்லை என்றாற்போல, உறக்கமுமில்லை யென்கிறார், இப்பாட்டில்
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு யோக நித்திரை செய்தருளுங் கிரமத்தை
ஸாக்ஷாத்கரிக்கப்பெறலாமோ வென்னுமாவல்கொண்டு,
(“பாலாழி நீ கிடக்கும் பண்பையாங் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்கிறபடியே)
அவ்வநுஸன்தாநகமடியாக நெஞ்சு அழியப்பெற்று, ப்ரீத்யதிசயத்தினால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச வொண்ணாதபடி ஏங்கி
உடம்பெல்லாம் ரோமாஞ்சிதமாகப் பெற்று, ‘நமது மநோரதம் தலைக்கட்டவில்லையே’ என்ற அவஸாதத்தினால்
கண்ணீர் துளிதுளியாகச் சோரப்பெறுகையால் இதுவே சிந்தையாய்ப் படுக்கையிற் சாய்ந்தால்
கண்ணுறங்கப் பெறாத அடியேன் உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்யாய் என்கிறார்.

எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்கின்றனனாதலால், கள்ள நித்திரை எனப்பட்டது.
உரோமகூபம் -வடமொழித்தொடர் விகாரப்பட்டது. ரோமம் – மயிர்; கூபம் -குழி.
தத்துறுதல் என்பதற்குக் கீழ்ப்பாட்டில் “தட்டுப்படுதல்” என்று பொருள் கூறப்பட்டது;
இப்பாட்டில், அச்சொல்லுக்கே கிட்டுதல் என்று பொருள் கூறப்படுகின்றது. ஒரு சொல்லுக்கு பல பொருள் கொள்ளக்கூடுமிறே.
அன்றி, கீழ்ப்பாட்டிற் போலவே இப்பாட்டிலும் தந்துறுதல் என்று மாறுபாட்டையே சொல்லிற்றாய்,
கிட்டுதல் என்பது தாத்பரியப் பொருளாகவுமாம்; உள்ளஞ்சோர்தலும், உகர்தெதிர் விம்முகையும் கண்ணநீர்துள்ளஞ் சோர்தலும்,
துயிலணை கொள்ளாமையும் மாறுபடுவதே எம்பெருமானைக் கிட்டுகை என்று கருத்து.
இனி, உண்மைப் பொருளை வல்லார் வாயக் கேட்டுணர்க.

—————–

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8-

பதவுரை

காரணா–(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே–(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது சூதா–மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே–கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!
வண்ணம்–அழகிய
மால்–பெரிய
வரை–கோவர்த்தன மலை
குடை ஆக–குடையாக (அமைய)
மாரி–மழையினின்றும்
காத்தவனே–(பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு–(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட–முடித்த
பிரானே–உபகாரகனே!
ஏத்த அரு பெரு கீர்த்தியினானே–துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே–எமக்குத் தலைவனே!
நான்–அடியேன்
உன்னை–உன்னை
நாள் தொறும்–தினந்தோறும்
நண்ணி–ஆச்ரயித்து
ஏத்தும் நன்மை–துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்–அருள் செய்ய வேணும்.

விளக்க உரை

அட்ட – அடு என்ற குறிலினைப் பகுதியாகப் பிறந்த பெயரெச்சம். ஏத்த+அரு, ஏத்தரு; தொகுத்தல் விகாரம்
“நன்மையே அருள் செய்யும் பிரானே” என்றம் பாடமுண்டு; “அருள் செய்யும்” என்பதற்குப் பொருளதுவே:
“பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையிற், சொல்லாதாகுஞ் செய்யுமென முற்றே” என்ற இலக்கணத்தின்படி
‘நீர் செய்யும்’ என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் ஒவ்வாதாயினும், இது புதியன புகுதலெனக் கொள்க.

————–

நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9-

பதவுரை

நம்பனே–(ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே–(ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்–நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்-நித்ய ஸூரிகளுக்கு
கோன்–தலைவனே!
உலகு ஏழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்–காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்–முன்னே
ஆழி–திருவாழி யாழ்வானை
ஏத்தி–(திருக் கையில்) ஏந்திக் கொண்டு
(எழுந்தருளி)
மா கம்பம்–மிக்க நடுக்கத்தை அடைந்த
கரி–கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்–சிறையை
விடுத்தானே–விடுத்தருளினவனே!
காரணா–ஜகத் காரண பூதனே!
கடலை–(திருப்பாற்) கடலை
கடைந்தானே–(தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்–எம்பிரானே!
என்னை–அடியேனை
ஆளுடை–ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே–தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்–(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை–துன்பத்தை
களையாய்–களைந்தருள வேணும்.

விளக்க உரை

உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான பாபங்களைப் போக்கியருள வேணுமென்று
எம்பெருமானை இரக்கிறார். ‘நரசிங்கம்தானாய்’ என்பது- எம்பெருமானைத் தவிர மற்றையோரை நம்பக் கூடாமைக்கும்
அன்பு கொண்டு ஏத்துமவர்களைக் காக்கின்ற பெருமானது தலைமைக்கும் உதாரணமாகும்.
“உம்பர்கோ னுலகேழுமளந்தாய்” என்பதை ஒரு வாக்கியமாகவே அந்வயித்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையு மளந்தவனே! என்றும்,
பிரமனது ஏழுலகங்களையு மளந்தவனே! என்று முரைக்கலாம்

————-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை
சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும்
நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10-

பதவுரை

காமர் தாதை–மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்–(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும்
காண–ஸேவிப்பதற்கு
இனிய–அழகாயிருக்கிற
கரு குழல் குட்டன்–கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்–வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்–எனக்குத் தலைவனும்
மரகத வண்ணன்–மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும்
மாதவன்–பிராட்டிக்குக் கண்வனும்
மதுசூதனன் தன்னை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்–க்ஷேமமானது
நன்கு–நன்றாக (குறைவின்றி)
அமரும்–அமைந்திருக்கப் பெற்ற
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தன்–பெரியாழ்வாரது
வியன் தமிழ் பத்தும்–பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று–(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி
நவின்று–அன்பு கொண்டு
உரைப்பார்கள்–ஓதுமவவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–கிட்டப் பெறுவர்கள்.

விளக்க உரை

மற்றைத் திருமொழிகளிற் காட்டில் இத்திருமொழியில் எம்பெருமானுடைய திருநாமங்கள் விசேஷமாக அருளிச்
செய்யப்பட்டிருப்பதனால், இத் திருமொழியை ஸஹஸ்ர நாமத்யாயத்தோடொக்கப் பிரதிபத்தி பண்ணுதல் எற்குமென்க.
(காமர் தாதை) ருக்மிணிப் பிராட்டியினிடத்து மந்மதனுடைய அம்சமாகப் பிறந்த பிரத்யும்நனுக்குக் கண்ணபிரான் தந்தையாதல் அறிக.
மரதகவண்ணன்- வடசொற்றொடர்த்திரிபு. ‘மதுசூதன்றன்னை” என்றும் ஓதுவர்.
சேமம் நன்று அமருகையாவது – எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதில் மிக்க ஆவல் கொண்டிருக்கை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-10—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 5, 2021

துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்துத் துணை யாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-1-

பதவுரை

அரங்கத்து–திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே–பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது–(அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
எல்லாம் சோர்வு இடத்து–‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே–தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?
ஒப்பு இலேன் ஆகிலும்–(இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர் திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்–தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
(அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று)
நின் அடைந்தேன்–தேவரைச் சரணம் புகுந்தேன்
எய்ப்பு–(வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை–அடியேனை
வந்து நலியும் போது–கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு–அந்த சரம தசையில்
நான்–அடியேன்
உன்னை–தேவரீரை
ஏதும்–க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்–நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே–(கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்–(என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்

விளக்க உரை

“துப்புடையாயை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவை யென்றே” என்று முன்னிலையாகக் கூ றவேண்டியிருக்க;
அங்ஙனங் கூறாது படர்க்கையாகக் கூறியது, இடவழுவமைதியின் பாய்படும்: முன்னிலைப் படர்க்கை என்க;
“ஓரிடம்பிற இடந்தழுவலுமுளவே” என்பது நன்னூல்.
காத்தல் தொழிலில் வல்லமை எம்பெருமானுக்கன்றி மற்ற ஆர்க்கேனும் அமையாதென்பது – ப்ரபந்ந்பரித்ராணம் முதலிய
பிரபந்தங்களிளால் அறுதியடப் பட்டதாதலின், படர்க்கைப் பொருள் பொருந்தாதென்றுணர்க.
“உடையாரை: துணையாவர்” என்ற பன்மை – பூஜையிற் போந்ததாம்.

ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, “திருமாலே! ரக்ஷணத்தில் ஸமர்ப்பனான உன்னை அடியேன் ஆசரயிப்பது,
‘செவி வாய் கண் மூக்கு முதலியவையெல்லாம் தளர்ச்சிபெற்று ஒரு காரியத்திற்கும் உதவப் பெறாதகாலத்தில் நீ துணையாவாய்’
என்ற நிச்சயத்தினாலன்றோ” என்றருளிச்செய்ய அதற்கு
எம்பெருமான் “ஆழ்வீர்! விஷய பூதர்களான அதிகாரிகளுக்கு நீர் ஒப்போ?” என்று கேட்க;
ஆழ்வார், “அப்படிப்பட்ட அதிகாரிகளோடு எனக்கு ஒப்பு இல்லையாயினும், உனது நிர்ஹேதக க்ருபையையே கணிசித்து
என்னுடைய துக்கம் பொறுக்கமாட்டாமல் உன்னை அடைந்தேன்” என்ன;
இப்படி நான் ஆரை ரக்ஷித்தது கண்டு என்னை நீர் அடைந்தது? ” என்று எம்பெருமான் கேட்க
“ஆர்த்தியும் அநந்யகதித்வமு மொழிய வேறொரு யோக்யதை யில்லாத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு நீ அருள்
புரிந்து பிரஸித்தமன்றோ” என்று ஆழ்வார் அருளிச்செய்ய, அதுகேட்ட எம்பெருமான், “ஆனால் அந்த ஸ்ரீகஜேந்திராழ்வானைப்போல்
நீர் உமக்குத் தளர்த்தி வந்தபோது நினைத்தீராகில் அப்போது வந்து ரக்ஷிக்கிறோம்” என்ன;
ஆழ்வாரும் அது கேட்டு, “வாதம், பித்தம், கிலேக்ஷ்மம் என்ற மூன்று தோஷங்களும் ப்ரபலப்பட்டு வருத்துவதனாலுண்டாகும்
இளைப்பானது என்னை நலியுங்காலத்தில் உன்னை நான் நினைப்பது எப்படி கூடும்?” என்று கேட்க;
ஆழ்வார், “சரம காலத்துக்காக இப்போதே சொல்லி வைக்க முடியும்; அதைத்தான் சொல்லி வைத்தேன்” என்ன;
“இப்படி நீர் சொல்லிவைத்தால் இதை நான் நினைத்திருந்து உம்மை ரக்ஷிக்கவேண்டிய நிர்ப்பந்தமென்ன?” என்று எம்பெருமான் கேட்க
அதற்கு ஆழ்வார், “அப்படியா? ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் கோயிலில் வந்து பள்ளி கொண்டருளினது
இதற்காகவன்றோ” என்பதாய்ச் செல்லுகிறது இப் பாசுரம்.

————

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-2-

பதவுரை

சங்கொடு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்–ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே–திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா–பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து–இழுத்துக் கொண்டு போம் போது
(என்னுடைய நெஞ்சானது)
உன் திறத்து–உன் விஷயத்தில்
எத்தனையும்–சிறிதாயினும்
புகா வண்ணம்–அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை–மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்–யம படர்கள்
நா மடித்து–(மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை–(மஹா பாபியான) அடியேனை
(ஆதலால்)
ஆம் இடத்தே–ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று–“சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத) அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை–உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்–விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.

விளக்க உரை

“ஆமிடத்தே – சாமிடத்தென்னைக் குறிக்கொள் கண்டாய் (என்று) உன்னைச் சொல்லி வைத்தேன்” என்று இயையும்.
கீழ்ப்பாட்டில் “எல்லாஞ் சோர்விடத்து” என்றதை விவரிக்கிறது – “சாமிடத்து” என்று.

எம்பெருமானே! எனது உயிர் உடலை விட்டு நீங்கின பிறகு, யம கிங்கரர் வந்து மிக்க சீற்றங்கொண்டு நாக்கை மடித்துப்
பல வகைத் துன்பங்களைச் செய்வதற்காக யம லோகத்திற்கு இழுத்துக் கொண்டு போகும் போது, என் நெஞ்சினால் உன்னை
நினைக்க முடியாதபடி உன்னை உன் நெஞ்சுக்கு விஷயமாக்காமல் மறைத்துக் கொள்ளும்படியான மாயச் செயல்களில் நீ
வல்லவனாதல் பற்றி அக் காலத்தில் உன்னை நினைக்கை அரிதென்று, இந்திரியங்கள் ஸ்வாதீன்மாயிருக்கப் பெற்ற இப்போதே,
“சரம ஸமயத்தில் அடியேன் நலிவு படா வண்ணம் திருவுள்ளம் பற்றி யருள வேணும்” என்று
உன் திருவடிகளில் விண்ணப்பஞ் செய்து கொண்டேன் என்கிறார்.

அநேக தண்டம் – வடசொல் தொடர். செய்வதா – செய்வதாக. நிற்பர் – முற்றெச்சம்; நின்று என்றபடி;
செய்வதா நின்று- செய்வதாக மனத்திற்கொண்டு என்பது தேர்ந்த பொருள்.
அன்றி, நிற்பர் என்பதை வினை முற்றாகக் கொள்ளுதலும் ஒன்று.

———–

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதே உன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-3-

பதவுரை

நேமியும்–திருவாழியையும்
சங்கமும்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே–கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்–(யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்–யம கிங்கரர்கள்
ஏற்றி–அடித்து
பற்றும் போது–பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்–“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை–ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே–வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
எல்லையில்–(அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்–உன்னுடைய
நாமம் எல்லாம்–திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்–சொன்னேன்;
என்னை–அடியேனை
குறிக் கொண்டு–திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்–எப்போதும்
அல்லல் படா வண்ணம்–அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்–ரக்ஷித்தருள வேணும்.

விளக்க உரை

எல்லை என்று – மரண தசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லை யாதலால்.
வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் – அடித்தல்.
உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர்.

எம்பெருமானே! நான் சரம தசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின் வழியே சென்றால் அங்க யம கிங்கரர்கள் வந்து
என்னை அடித்துப் பிடிக்கும் போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது:
ஆதலால், அப்படிப்பட்ட அநர்த்தம் அடியேனுக்கு விளைய வொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன்
திரு நாமங்களை யெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ
திரு வுள்ளத்தில் கொண்டு காத்தருள வேணுமென்றவாறு

————

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-4-

பதவுரை

ஒற்றை விடையனும்–ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்–ப்ரஹ்மாவும்
உன்னை–உன்னை
அறியா–(உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே–பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்–யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி–இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்-ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி–நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய–மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே–ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.
அஞ்ச–(பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு–பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்.

விளக்க உரை

சிவபிரான் மற்றவர்களைப் போலன்றி, ப்ரஹ்ம பாவனை தலை யெடுத்த போது, “நுண்ணுணர்வின் நீலார் கண்டத்தமமானும்”
என்னும்படி தத்துவத்தை உண்மையாக உணருகைக்கீடான ஸூக்ஷ்மஞான முடையனாதலால், ஒற்றை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனன்.
ஒன்று + விடையன், ஒற்றை விடையன்; “ஐயீற்றுடைக் குற்றுகரமுமுளவே” என்பது நன்னூல்.
இனி, ஒற்றை என்பதை விடைக்கு அடைமொழியாக்கலுமாம். முதலடியில், உன்னை என்றது வார்த்ததைப்பாடு விஷ்ணுவினுடைய
ப்ரஹ்மமான ஸ்வரூபத்தைப் பிரமனாகிய தானும் சிவனும் மற்றமுள்ள தேவர் முனிவர்களும் அறியார்களென்னுமிடத்தைப்
பிரமன்றானே சொல்லிவைத்தான் காண்மின்.
(முற்றவுலகெல்லாம் நீயே யாகி.) எம்பெருமானுக்குத் தன்னை யொதீந்த ஸமஸ்த வஸ்துக்கம் ப்ரகார பூதங்கள்;
எம்பெருமான் அவற்றுக்கு ப்ரகாரி என்றபடி-

(மூன்றெழுத்தாய). அகார, உகார, மகாரங்களாகிற (ஓம்) பிரணவத்துக்கு அர்த்தமாயிருப்பவன் என்க.
இம் மூன்றெழுத்துக்களில் முதலாவதான அகாரத்தின் ப்ரக்ருத்யர்த்தமான ஸர்வ காரணத்வத்தைச் சொல்லுகிறது – முதல்வனே! என்று.
ஓ, என்று இரக்கக் குறிப்புமாம் (மூன்றாமடியில்), இவன்+கு, இவற்கு, இடையில் உகரச் சாரியைபெறில், இவனுக்கு என்றாகும்.
அற்றைக்கு -அப்போதைக்கு.

—————

பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5-

பதவுரை

பால்கடலுள்–திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை–(பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பரம மூர்த்தி–பரம சேஷியானவனே !
உய்ய–(எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு–லோகங்களை
படைக்க வேண்டி–ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்–திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை–பிரமனை
தோற்றினாய்–தோற்று வித்தவனே!
வையம்–பூமியிலுள்ள
மனிசர்–மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி–(நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய்
நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்–யமனையும்
உடனே–கூடவே
படைத்தாய்–ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய–பரம பந்துலானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
இவர் என்னை காக்க வேண்டும்

விளக்க உரை

(பரமமூர்த்தி) “மூர்த்தி சப்தம்- ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்ய வாசகமாய்க் கொண்டு,
சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற வியாக்கியாக வாக்கிய மறியத்தக்கது.
மூன்றாமடியில், மணிசரை என்றவிடத்து, ஐ- அசை;
அன்றி, உருபுமயக்கமுமாக “பொய்யை” என்கிறவித்தைப் பொய் என்று குறைந்துக் கிடக்கிறது என்றபடி தனது கட்டளையான
சாஸ்த்ரங்களை மீறி ஸ்வேச்சையாகக் கபட நடைகளில் ஒழுகுபவர்கள் இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான்
திருவுள்ளத்திற்கொண்டு, அவ்வக்காலங்களில் அவரவர்கள் செய்யும் பாபங்களுக்கீடாகத தண்டம் நடத்தியாகிலும்
இவ்வுலகைக் காக்க வேணுமென்ற கருணையினால், சிக்ஷைக்குக் கடவனான யமனையும் படைத்தருளினமை மூன்றாமடியில் விளங்கும்.
காலன்- வடசொல். தோற்றினாய், படைத்தாய்- விளிகள்.

————–

தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6-

பதவுரை

மண்ணொடு–பூமியும்
நீரும்– ஜலமும்
எரியும்–தேஜஸ்ஸும்
காலும்–வாயுவும்
ஆகாசமும்–ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)
மற்றும் ஆகி நின்றாய்–மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
அண்ணலே–ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை–இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால–மிகவும்
கொடுமைகள்–கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்–பண்ணுவர்கள்;
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.)
எண்ணலாம் போதே–அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்–உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்–அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை–அடியேனை
நீ–நீ
குறிக் கொண்டு–நினைவுள்ளத்தில் கொண்டு
என்றும்–எப்போதும்
காக்க வேண்டும்–காத்தருள வேணும்

விளக்க உரை

தண்னானவு குளிர்ச்சி, ‘தண்ணேன’ என்றனுக் கருதி ஈர நெஞ்சு அற்றவர்களென்றவாறு .
அன்றி
‘தண்ணனவு’ என்று கணிதலைச் சொல்லிற்றாய் ( தணிகள்-ஓய்தல்) கவிதையில் ஒழிவில்லாமையைக் கூறியவாறுமாய்
சால-உரிச்சொல். (மண்ணோடு இந்தியாகி.) இவ் வொற்றுமை ப்ரகார ப்காரியான நிபந்தம்

————-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா
வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7-

பதவுரை

செம் சொல்–ருஜுவான சொற்களை யுடைய
மறை–வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற–அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்–நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே–தலைவனுமானவனே!
எம்மானே–எம்பெருமானே!
எஞ்சல் இல்–குறை வற்ற
இன்–பரம போக்யமான
உன்னுடை அமுதே–எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்–உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா–எனக்கு உபகாரகனானவனே!
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;
வஞ்சம்–வஞ்சனை பொருந்திய
உருவின்–ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
என்னை–அடியேனை
வலிந்து–பலாத்கரித்து
நலிந்து–ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது–பிடிக்கும் போது
அஞ்சல் என்று ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்

விளக்க உரை

(செஞ்சொல் மறைப்பொருளாகி நின்ற.) காண்க. அமுதத்திற்கு எஞ்சலில்லாமையாவது-
‘அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்றபடி அநுபவிக்க அநுபவிக்க குறைவின்றிப் பணைக்கை,
வஞ்சவுருவின் நமன்றமர்கள் தங்கள் வரவு ஒருவற்குத் தெரியாதபடி ரூபத்தை மறைத்துக்கொண்டு வரும் யமபடர்கள் என்றபடி,
அஞ்சல்- அஞ்சு என்ற வினைப் பகுதியாப் பிறந்த எதிர்மறை

—————

நான் ஏதும் உன் மாய மொன்ற றியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே யென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-8-

பதவுரை

வான் ஏய்–பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்–நித்ய முக்தர்களுக்கு
ஈசா–தலைவனே!
மதுரை–திரு வட மதுரையில்
பிறந்த–அவதரித்த
மா மாயனே–மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்–(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
நான்–அடியேன்
உன் மாயம்–உன் மாயைகளில்
ஏது ஒன்றும்–யாதொன்றையும்
அறியேன்–அறிய மாட்டேன்;
நமன் தமர்–யம கிங்கரர்கள்
பற்றி–(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு–(இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று–‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது–அடிக்கும் போது
அங்கு–அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்.

விளக்க உரை

அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்” என்றும் பாடமுண்டு
“நானே துமுன்மாய மொன்றறியேன்” என்றவிடத்தில், (கீழ் இரண்டாம் பாட்டில்)
‘போமிடத்துன் திறத்தெத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை” என்றதை நினைக்க.
இந்த ஊன்- விட்ட சரீரததிற்காட்டில் பிரவேசிக்கிற சரீரத்தின் கொடுமையைச் சுட்டிக் காட்டுகிறது.
நரகத்தில் அதி தீவ்ரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நாசரீரம்” என்று பெயர் அறிக.
ஊனே. புகே ஏ இரண்டும் இசை நிறை என்னலாம்.

————-

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்றறுதியாக ஆதியஞ் சோதி மறந்தறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது
அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-9-

பதவுரை

குன்று–கோவர்த்தந மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரஷித்தருளின
ஆயா–ஆயனே (கோபாலானே!)
கோ நிரை–மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே–மேய்த்தருளினவனே!
எம்மானே–எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அன்று முதல்–(உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக–இன்றளவாக
ஆகி–ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி–விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்–(அடியேன்) மறந்ததில்லை
நன்றும் கொடிய–மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்–யம கிங்காரர்கள்
என்னை–என்னை
நலிந்து–ஹிம்ஸித்து
வலிந்து–பலாத்கரித்து
பற்றும் போது அன்று–பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு–அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்

விளக்க உரை

அன்று முதல்- கர்ப்ப வாஸம் முதலான என்றும் கொளா அறுதி முடிவு.
“அன்றமுதலின்றறுதியா” என்ற பாடம் செய்யுளின்பத்துக்கு மாறுபாடாம்.
அன்று முதல் இன்றளவாக ஆதியஞ்சோதியை மறந்தறியேன் என்னா நின்று கொண்டு–என்றால் விருத்தமன்றோலென்னில்;
அதி சங்கா மூலமாக கலக்கத்தினால் வந்த அச்சத்தாலே இங்கனே வேண்டுகிறபடி.
(இத் திருமொழியின் அவதாரிகையில் இது விரியும்.) “பற்றும் போது அங்கு என்னைக் காக்க வேண்டும்” என்றிவ்வளவே
போதுமாயிருக்க, அன்று என்று அதிகமாக ஒரு சொல் சொன்னது அவ் வவஸ்தையின் கொடுமையைக் கருதியாமென்க.

——-

மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும்
ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை
பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10-

பதவுரை

மாயவனை–ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை–மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை–பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்–வைதிகர்கள்
ஏத்தும்–துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை–இடையர்களுக்குத் தலைவனும்
அச்சுதனை–(அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து–கோயிலில்
அரவு அணை–சேஷ சயநத்தில்
பள்ளியானை–கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்–தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்–புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்- நிர்வாஹருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையான
பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி–நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
வல்லார் தாம்–ஓத வல்லார்கள்
தூய மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்–அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)

விளக்க உரை

இப்பாடல், இத்திருமொழி கற்பார்க்கப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார்.
மேன்மைக்கு “அமரரேறு” என்பதுபோல, நீர்மைக்கு “ஆயர்களேறு” என்பதாம்.
நம் பூருவாசாரியர்கள் பெரியபெருமானைக் கிருஷ்ணாவதாரமாக அநுஸந்தித்துப் போருவர்கள்;
“ கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங் கவர்ந்தானை,
அண்டர்கோ னணியாங்கள் என்னமுதிலே” என்றார் திருப்பாணாழவார்.
திருபவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் என்றருளிச் செய்வர்.
யசோதைப்பிராட்டி பிள்ளைப் பணியாகச் சாத்தின திருவாபரணம் இப்போதும் பெரிய பெருமாள் திருக்கழுத்திற்
கிடக்கிறதென்று நேரில் கண்டநுபவித்து அருளிச் செய்தார் பட்டரும்.

தூயமனத்தனராகி வல்லார்- அநந்யப்ரயோஜநராக ஓதவல்லர்கள் என்றபடி;
இதனால், சோறு கூறைகளையே முக்கிய பிரயோஜநமாக நச்சி ஓதுமவர்களை வியாவர்த்திக்கின்ற தென்க.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-8—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 5, 2021

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே.

பதவுரை

மறி–அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்–கடலிற் புகுந்து
மாண்டானை–முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்–மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா–(ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே–(அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்–(கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதியாவது;
தோதவத்தி–பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்–நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை–காவேரித் துறைகளில்
படிய–அவகாஹிக்க (அதனால்)
எங்கும்–அக் காவேரி முழுதும்
துளும்பி–அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய)
போதில்–(அந்தப்) பூக்களில்
வைத்த–இரா நின்றுள்ள
தேன்–தேனானது
சொரியும்–பெருகப் பெற்ற
புனல்–நீரை யுடைய
அரங்கம் என்பது–திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.

விளக்க உரை

கண்ணபிரான் ஸாந்தீபிநி யென்னும் ப்ராஹ்மணோத்தமம் பக்கல் ஸகல சாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம்
குருக்ஷிணைகொடுக்கத் தேடுகின்றவளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷசேஷ்டிதங்களை அறிந்தவராகையாலே,
‘பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு ப்ரபான தீர்த்தக்கட்டதிற் கடலில் முழுகி இறந்துபோன என் புத்திரனைக்
கொணடுவந்து தர வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, ‘அப்படியே செய்கிறேன்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன சங்கின்
உருவம்தரித்துச் சமுத்திரத்தில் வாஸஞ் செய்கின்ற பஞ்சஜகன் என்ற அஸுரனைக் கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி,
அங்கு யாதனையிற்கிடந்த அக்குமாரனைப் பூர்வதேஹத்தில் ஒன்றும் விசேஷமறக் கொணர்ந்து கொடுத்தருளிய வரலாறு முன்னடிகளிற் கூறியது.
‘மாண்டானை” என்ற விடத்துள்ள இரண்டனுருபு, “புத்திரன்” என்ற பெயரோடு கூட்டியுரைக்கப்பட்டது.
தக்கணை- தக்ஷிணா என்ற வடசொல்லிகாரம்.

பின்னடிகளின் கருத்து:- கங்கையிற் புனிதமாய காவிரியில் பெரிய பெருமாளுடைய திருக்கண்நோக்கான திருமுகத்துறை
முதலான பலதுறைகளில் ஆசாரபரரான வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் திரள் திரளாக வந்து குடைந்து நீராட
அதனால் அக்காவேரியடங்கலும் அலைமோதப்பெற்று, அவ்வலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட,
அதனால் அப்பூக்களினின்றும் தேன் பெருக, அத்துடன் சொந்த தீர்த்தத்தையுடைய திருவரங்கமென்பதாம்.
தோதவத்தி- வடசொல்லிகாரம்.

————–

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே–4-8-2-

பதவுரை

பிறப்பு அகத்தே–ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த–இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்–புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்-ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து–(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து–மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த–(இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்–சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–தீருப்பதியாவது:
மறை–வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பொருந்தி–சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்–(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு–(தத்தம் திருமாலிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை–அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்–ஆதரித்துப்வோருமவர்களும்
சிறப்பு உடைய–(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்–வைதிகர்கள்
வாழ்–வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே….

விளக்க உரை

இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்ய வுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின்
உரையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகு பெயரால் விருந்தினரை உணர்த்துகிறது

————-

மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர்
திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3-

பதவுரை

மருமகன் தன்–மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை–புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு–மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்–மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு–சரீரமானது
மகத்து–(பாரதயத்தமாகிற) நரமேதத்திலே
வீழாமே–விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்–ஆசார்ய ரூபியாய்
(ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்–ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய
ஊர்–திருப்பதியாவது:
செம் கமலம்–செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்–(பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை–நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்–திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று–(ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்-நீர்வளத்தையுடைய
புனல்–நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது

விளக்க உரை

பண்டு பாரதப்போரில், அர்ஜுனன் மகனான அபிமந்யுவின் மனைவியாகிய உத்தரை என்பவருடைய கருவை நோக்கி
அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட அபாண்ட வாஸ்திரத்தினால் அக்கருவிலிருந்த சிசு (பரிக்ஷித்) நீறாயொழிய,
அச்சிசுவை மீண்டும் உயிர் பெறுத்த வேணுமென்று ஸுபத்திரையினால் பிரார்த்திக்கப்பட்ட கண்ணபிரான்
தனது செந்தாமரை மலர்போன்ற திருவடியினால் அச்சிசுவை உயிர்பெற்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டது.
இவ்வரலாறு மஹாபாரதத்தில் ஆச்வமேதிகபர்வத்துக்கு உள்ளீடான அநுகீதாபர்வத்தில் அத்தியாயங்களிற் பரக்கக் காணத்தாக்கது.
அபிமந்யு என்பவன் கண்ணபிரானுக்கு உடன் பிறந்தவளான ஸுபத்தையின் மகனாதலால் மருமகனாயினன். சந்ததி- வடசொல்லிகாரம்.

(மைத்துனன்மார் இத்யாதி.) பஞ்சபாண்டவர்களுக்கு தான் துணையாய் நின்று, கௌரவர்களால் அவர்கட்கு ஒரு நலிவு நேராதபடி
பலவகைகளாயல் காத்தருளிமமையைக் கூறியவாறு.
இரண்டாமடியில், “மகத்தே” என்றவிடத்து, மகம்- வேமென்ற வடசொல் விகாரம்: யாகமென்பது பொருள்;
சந்தர்ப்பம் நோக்கி, நரமேதயாகமென்று உரைக்கப்பட்டது; மநுஷ்யர்களைப் பலிகொடுத்து நடைபெறும் யாகம்- நரமேதயாகமெனப்படும்.
“எல்லாச்சேனையு பிருநிலத்தவித்த” என்றபடி உபய ஸேனையிலும் பூமிக்குச் சுமையாயிருப்பவர்களையெல்லாம் ஒழிப்பதாக நடத்தப்பட்டதும்,
*மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தவனுடைய திருவுள்ளத்திற்கு உகப்பாயிருப்பதுமான பாரத யுத்தத்தை
நரமேதயாகமாகக் கூறுவது ஏற்குமென்ப. பகவத்கீதை முதலியவற்றால் ஆசார்யத்வம் தோற்ற ஹிதோபதேசம்
பண்ணினபடியைப் பற்றிக் “குருமுகமாய்க் காத்தான்” என்றருளிச் செய்தனரென்க.

பின்னடிகளின் கருத்து- திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகாநின்ற காவிரி நீரில், பெரிய பெருமானது திருமுகம் போன்ற செந்தாமரை மலர்களும்,
அவரது திருமேனி நிறம்போன்ற கரு நெய்தல் பூக்களும் பரபாகத்தாலே ஒன்றுக் கொன்று எதிர்பொருகிற முகத்தை யுடைத்தாய்க் கொண்டு
விகஸிக்குமென்று நீர்வளஞ் சொல்லியவாறு.
(பொருமுகமாய்) குவளையும் கமலமும் எம்பெருமானது திருநிறத்தோடும் திருமுகத்தோடும்

—————

கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்க மென்பதுவே–4-8-4-

பதவுரை

கூன்–கூனைவுடைய
தொழுத்தை–வேலைக்காரியாகிய மந்தரை யானவள்
சிதகு–(ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப–சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்–மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்–வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு–கடினமான சொல்லைக் கேட்டு
ஈன்று எடுத்து தாயாரையும்–(தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய–கைவிட்டு
தொழத்தை–அடிமைப் பெண்
தாயார்–பூஜையிற்பன்மை
கண்டகர்–முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி–காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை–(முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்–நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்–தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை–சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது.

விளக்க உரை

தண்டகாரணியத்தில் ஜையந்தமென்ற பட்டணத்தில் வஸிப்பவனும் திமித்வஜன் என்று மறுபெயருள்ளவனும் இந்திரனை
வென்றவனுமான சம்பரராஸுரனை இந்திரனது வேண்டுகோளின்படி வெல்லுதற் பொருட்டுக் கைகேயியுடன் சென்ற
தசரதச்சக்கரவர்த்தி அவ்வஸுரனை எதிர்த்துச் செய்த பெரும்போரில் அவனால் விரணப்பட்டு மூர்ச்சையடைந்த பொழுது,
அச்சக்கரவர்த்தியை அசுரர்கள் வதை செய்யாதபடி கைகேயி போர்க்களத்திலிருந்து எடுத்துச்சென்று பாதுகாக்க,
மூர்ச்சை தெளிந்தவுடன் தசரதன் தனனக்கு கைகேயி செய்த உயிருதவிக்காக அகமகிழ்ந்து தான் அவட்கு அவள் வேண்டும்
இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்கு அளிக்க, அவள் அவற்றை பின்பு தனக்கு வேண்டும்பொழுது
கேட்டுப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள்; அவவ்வரங்களில் ஒன்றாகப் பரதனது பட்டாபிஷேகத்தையும்,
மற்றொன்றாக இராமபிரானது வநவாஸத்தையும் கேட்கும்படி ஞாபகப்படுத்தி உபாயங்கூறித் தூண்டின கூனியின் சொற்படி
தன்னைக்காட்டு கெழுந்தருளச் சொன்ன கைகேயியின் நியமநத்தின்படி ராஜ்யம் முதலியவற்றையெல்லாம் துறந்து
இராமபிரான் தண்டகராணியத்திற்சென்று புகுந்து அங்கு ஜகஸ்தாநத்தில் இருந்து கொண்டு ஸாதுக்களை நலிந்து
திரிந்த அரக்கர்களை அழித்தருளினமை அறிக.

—————-

பெரு வரங்களவை பற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்து இவ் வுலகினைக் கண் பெறுத்தானூர்
குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்க மென்பதுவே என் திருமால் சேர்விடமே–4-8-5-

பதவுரை

குரவு–குரவ மரங்களானவை
அரும்ப–அரும்பு விடா நிற்க
கோங்கு–கோங்கு மரங்களானவை
அலரா–அலரா நிற்க.
குயில்–குயில்களானவை
கூவும்–(களித்துக்) கூவும்படியான
குளிர் பொழில் சூழ்–குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது–திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு–பெருமை பொருந்திய
அவை வரங்களை
பற்றி–பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய–(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை–இராவணனுடைய
உரு–உடலானது
மங்க–சிந்நபிந்நமாம்படி
பொருது அழித்து–போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை–இந்த லோகத்தை
கண் பெறுத்தான்–காத்தருளினவனும்
என்–எனக்குத் தலைவனும்
திருமால்–ச்ரிய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்–சேருமிடாகிய
ஊர்–திருப்பதியாம்

விளக்க உரை

பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து,
நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம்
படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின
எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம்.
வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.

————-

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6-

பதவுரை

கீழலகில்–பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை–அஸுரர்களை
கிழக்க இருந்து–அடக்கிடந்து
கிளராமே–கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய–அவ் வசுரர்களுடைய
கரு–கர்ப்பந்தமாக
அழித்த–அழித்தருளினதாலும்
அழிப்பன்–சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது:
யாழ்–(வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை–இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்–வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு–(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி–உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி–(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து–உடம்படங்கலும் அணிந்து கொண்டு
அந்தக் களிப்பிலே
ஆளம் வைக்கும்–தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்–திருவரங்கம்

விளக்க உரை

பாம்புகளானவை புற்றுக்களில் பாங்காகக் கிடந்து வஸிப்பதுபோல, அசுரர்களும் பாதாளலோகத்தில் பாங்காகக் கிடந்து
சிலசில காலங்களில் அங்குநின்றம் போந்து தேவர்களை அடர்த்துப் போர் செய்வார்கள்; அப்போது எம்பெருமான்
அத்தேவர்களுக்குத் துணையாய்நின்று அவ்வசுரர்களை அழித்தொழித்தருள்வன்; இவ்வாறு அவ்வசுரர்கள் பலகால் போர்புரிய
வருவதையும் அவ்வப்போதுகளிலெல்லாம் தான் அவர்களை ஒழிக்க வேண்டிய வருத்தத்தையும் நோக்கி,
அவ்வசுரரைக் கிழங்கோடு களையவேணுமெனத் திருவுள்ளம் பற்றித் தனது திருவாழியைச் செலுத்தி
அங்ஙனமே நிறைவேற்றிக் கொண்டானென்பன, முன்னடிகள்.
(கிழக்கு இருந்து கிளராமே.) மரத்தின் வேரை மாத்திரம் நிறுத்திவிட்டு மற்றபாகத்தை வெட்டினால்,அவ்வேரடியாக
மீண்டும் அம்மரம் செழிப்புற்றோங்கி வளரும்; அவ்வேர்தன்னையு மொழித்திட்டால் பின்பு ஒன்றுமின்றி யொழியும்;
இவ்வாறே எம்பெருமான் அசுரர்களை ஸமூலோந்மூலகம் பண்ணியருளினானென்க.
கிழங்கு – வேரானது: இருந்து- மிகுந்திருந்து கிளராமே- மறுபடியும் முன்போல முளைக்க வொட்டாதபடியென்க.
கரு—இதனால் மூலத்தைச் சொல்லியவாறு.

செவிக்கினிய ஸ்வரத்தையுடைய வண்டுகள் திரள்திரளாகக்கூடி, விசாஸோங்முகமான தாழை மடலினுள் வருந்திப் புகுந்து
அங்குப்புரண்டு அதிலுள்ள வெண்ணிறக் கண்ணங்களைத் தம் உடலில் அணிந்து கொண்டு, தென, தென என்று ஆளத்தி
வைத்துப் பாடும்படியைக் கூறுவன- பின்னடிகள்.
(உரிஞ்சி) நெருக்கமானத்வாரத்தில் நுழைய வேண்டுபோது உடம்பு உராய்தல், இயல்பு. உறிஞ்சுதல் – ஊராய்தல்;
தவள வண்ணம்- வடசொல் விகாரம். தாழை மடலினுள் வெளுத்தபொடிகள் உள்ளமை அறிக.

யாழின் , இசை. என்று பிரிப்பதும் ஒக்கும். ஆளம் வைத்தல் – அநக்ஷாரஸமாக இசைத்தல்; ஆலாபனை எனப்படும்.

—————-

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7-

பதவுரை

கொழுப்பு உடைய–கொழுப்பை யுடையதும்
செழு–செழுமை தங்கியதுமான
குருதி–ரத்தமானது
கொழித்து–ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து–நிலத்தில் பரவி
குமிழ்ந்து–குமிழி கிளம்பி
பிழக்கு உடைய–(பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை–அஸுரர்களை
பிணம் படுத்த–பிணமாக்கி யருளின
பெருமான்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியானது:
தழுப்பு அரிய–(ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்–சந்தந மரங்களை
தடவரைவாய்–பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு–(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
(இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)
தெழிப்பு உடைய–இரைச்சலை யுடைய
காவிரி-திருக்காவேரி நதியானது
அடி தொழும்–(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்–சீர்மையைப் பெற்ற
அரங்கம்–திருவரங்க நகராம்.

விளக்க உரை

ஊட்டுப் பன்றிபோல நிணங்கொழுக்கும்படி போஷகவஸ்துக்களை உட்கொண்டு உடலை வளரச் செய்து திரிகையாலே
கொழுப்புடைத்தாயும் அழகியதாயுமிருக்கிற ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்ததுபோலே
நிலத்திலே யிழிந்து குமிழிகிளம்பி அலையெறியும்படியாக உலகங்களையெல்லாம் கலிந்துதிரியும் பிழைகளையுடையரான
அசுரர்களை நிரந்வய விநாசமாக்கிவிட்டவாறு கூறுவன முன்னடிகள்.

(தழுப்பரிய இதயாதி.) மலையினிடத்து வளர்ந்துள்ள பெருப்பெருத்த கந்தகவிருஷங்களை வேரோடு கிளப்பி
இழுத்துக்கொண்டு இவற்றைக் கைக் கொண்டருள வேணும் என்று இருப்பதுபோல காவேரியானது தான் கொணர்ந்த
சாத்துப்பாடியைப் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தொழ நிற்கும்படியாக கூறியவாறு.

தழும்பரிய- சந்தன மரம் சிறிதாயிந்தால் ஓருவரிருவரால் தழுவமுடியும். அளவிட்டுக்காடட் கெவாண்ணாதபடி மிகவும்
ஸ்தூலமாக யிருப்பதனால் தழுவ முடியாமை கூறப்பட்டது. தழுவுகள்- கைகளால் அணைத்துக் கொள்ளுதல்

———-

வல் லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே–4-8-8-

பதவுரை

வல் எயிறு கேழலும் ஆய்–வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்–ஒளியையுடைய பற்களையுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்–ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதியாவது
இரு சிறை வண்டு–பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது–அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி–பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்–மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதில்–திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது-

விளக்க உரை

ஹிரண்யாக்ஷரணையும், ஹிரண்யனையும் ஸம்ஹரித்தபடியைக் கூறுவன முன்னடிகள்.
வல்லெயிற்றுத் தரணியை இடந்தான், வாளெயிற்றுச் சீயமாய் அவுணனை இடந்தான் என இயையும்;
எனவே, நிரனிறைப் பொருள்கோளாம். இவ்வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
வராஹத்தின் எயிற்றுக்குப் பூமியை கீண்டெடுக்கும்படியான வன்மை இன்றியமையாதானது பற்றி “வல்லெயிற்றுக் கேழல்” என்றார்;
நரஸிம்ஹத்தின் எயிறுகள் அழகுக்குறுப்பாதல் பற்றி “வாளெயிற்றாச்சீயம்” என்றார்.
தரணிக்கு எல்லையில்லாமையானது கடல்களும் தீவுகளும் போலன்றி, எல்லாம் தன்னுள்ளேயாம்படி
*பஞ்சாகத்கோடி விஸ்தீர்ணையாயிருக்கை அவுணனுக்கு எல்லை யில்லாமையாவது நான் பெற்ற வரங்களுக்கீடாக
எல்லையில்லாத தபஸ்ஸுகளை யுடையவனாயிருக்கை.

வண்டுகள் அந்நியம்போதில் எம்பெருமான் குணங்களைப் பாடிக்கொண்டு திரிதலைக் கூறுவது, மூன்றாமடி.
கீழ் திருமாலிருஞ் சோலையைப் பாடும்போது “அறுகால் வரி வண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லிச், சிறுகாலைப்பாடும்” என்றார்;
இங்கு ‘எல்லியம்போது’ என்கிறார்; இதனால், திவ்யதேசங்களிலுள்ள வண்டுகள் காலத்துக்கேற்பப் பண்களால்
பகவத்குணங்களை நியதமாகப் பாடும்படியைக் கூறியவாறு.

(மல்லிகை இத்யாதி.) ஸாயங்கால புஷ்பமான மல்லிகைப் பூவில் வண்டுகளிலிருந்து ஊதும்போது அந்தப்பூவானது
அலருவதுக்கு முன்பு தலைகுவிந்து மேல்பருத்துக் காம்படிநேர்ந்து வெளுத்த நிறத்தையுடைத்தாய் சங்கைப் போன்றிருத்தலால்
வெண்சங்கை ஊதுவது போல்வது பற்றி இங்ஙனருளிச் செய்தாரென்க

————–

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9-

பதவுரை

குன்று ஆடு–மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்–நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்–கரு நெய்தல் பூப்போலவும்
குரை–ஒலி செய்யா நின்ற
கடல்போல்–கடல்போலவும்
நின்று ஆடு–(களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்–மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய–வடிவழகை யுடையவனான
நெடுமால்–எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தென்றல்–தென்றல் காற்றானது
குன்று–(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு–சோலைகளினிடையிலே
அழைத்து–அழைத்து
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)
கொடி இடையார்–கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை–(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி–வியாபித்து
(அந்தப் பரிமளத்துடனே)
மன்றூடு–நாற்சந்திகளினூடே
உலாம்–உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது

விளக்க உரை

நிறம் என்று திருமேனி நிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு –
நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும்,
புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமை கூறுவதாக நிறமித்துக் கொள்ள வேணும்.
எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.

—————–

பரு வரங்களவை பற்றிப் படையாலித் தெழுந்தானை
செரு வரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்கத் தமிழ் மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்த வல்லா ரடியோமே-4-8-10-

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி–பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை–யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு–யுத்தத்திலே
அரங்க–ஒழியும்படி
பொருது–போர் செய்து
அழித்த–ஒழித்தருளின
திருவாளன்–(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்–(திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு–(பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய
தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை–(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்
(திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்–துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்–அடிமை செய்யக்கடவோம்.

விளக்க உரை

“தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று-
தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல,
இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார்.

வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர்.
ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் – அழிதல்.
(இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க.
தமிழ் மாலை கொண்டு வந்த வல்லார்” என இபையும்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-7—ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

May 4, 2021

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை
கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1-

பதவுரை

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே–கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால்
என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கடு வினை–கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்–ஒழிக்கவல்ல
கரை மேல்–கரையிலே
கை தொழ நின்ற–(பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்–‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை–(இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்–மூக்கையும்
தமையனை–அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்–தலையையும்
எங்கும்–நாட்டெங்கும்
தன் புகழ்–தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து–பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட–ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்–எமக்குத் தலைவனுமான
தாசரதி–இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
எமது இருக்கை–வாஸஸ்தாநமாம்.

விளக்க உரை

தங்கை மூக்கைத் தடிந்த விவரணமும், அதன்மேல் தோன்றும் ஆக்ஷேபத்திற்குப் பரிகாரமும்,
கீழ்- என்னாதன் தேவியில் எட்டாம்பாட்டினுரையில் கூறப்பட்டது.
தாசரதி- வடமொழித் தத்திதாந்தநாம்-
புருடோத்தமன்- திருக் கண்டங்கடி நகரில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம்.
இருக்கை- தொழிலாகுபெயர்.

பின்னடிகளின் கருத்து;- ஏதேனுமொரு குளத்தில் நீராடுமவர்கள் அந்த நீரைக் கங்கையாக நினைத்து,
‘கங்கை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பெருப் பெருத்த பாபங்களையெல்லா மொழிக்கும்படியான
பெருமை பொருந்திய கங்கையின் கரையிலுள்ள கண்டமென்கிற நகரவிசேஷமென்பதாம்.

திருகண்டங்கடிநகர்- வடநாட்டுத் திருப்பதிகள் 12- னுள் ஒன்று; கண்டம் என்னுமிவ்வளவே இத்திருப்பதியின் பெயர்;
கடி. என்னுஞ்சொல் இங்குச் சிறப்புப் பொருளது.
“மத்தாற் கடல் கடைந்து வானோர்க்கமுதளித்த அத்தா வெனகுன்னடிப்போதில்- புத்தமுதைக்,
கங்கைக் கரை சேருங் கண்டத்தாய் புண்டரிக, மங்கைக் கரசே வழங்கு” என்ற ஐயங்கார் பாடலில்
“கண்டத்தாய்” என்ற விளி நோக்கத்தக்கது.

—————

சலம் பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண வுருவின் மால் புரு டோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டமென்னும் கடி நகரே–4-7-2-

பதவுரை

நலம் திகழ்–(எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்–ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி–தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்–(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்–(அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்–திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து–சேர்ந்து
இழி–ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்–ஜலத்தினால்
புகர் படு–விளங்கா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்
சலம்–ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்–வடிவை யுடைய
சந்திரன்–சந்திரனும்
தழல்–நெருப்பை
உமிழ்–உமிழா நின்றுள்ள
பேழ்–பெரிய
வாய்–கிரணங்களை யுடையவனாய்
வெம்–வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்–ஸூர்யனும்
அஞ்ச–அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து–மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு–(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்–(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமன்
வாழ்வு–வாழுமிடம்

விளக்க உரை

எம்பெருமான் மாவலி கையில நீரேற்றுப் பெற்று உலகளக்கத் தொடங்கி ஓங்கி யுயர்ந்த போது சந்த்ர ஸூர்யர்கள்
இதுவென் புகுந்த்திங்கந்தோ என்றாற்போல அஞ்சினராம்; அப்படி அவர்கள் அஞ்சும்படி விம்மி வளர்ந்த எம்பெருமான்
பொருந்தி யெழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னும் கடிநகரென்க.
சந்திரன் அம்ருத மயமான கிரணங்களை யுடையவனாதலால், சலம்பொதி யுடம்பினனாகக் கூறப்படுதல்.
பேழ்-பெருமை. “சலம்பொதியுடம்பிற் சந்திரன், தழலுமிழ்பேழ்வாய் வெங்கதிர்” என இயைந்துரைக்கப்பட்டது.

பின் யடிகளால், கங்கையை வருணிக்கின்றார். இக்கங்கை முதலில் எம்பெருமானது திருவடியினின்றும் பெருகிப்
பின்பு சங்கரன் சடையினில் தங்கி, ஆகாசத்தில் நின்றும் நிலவுலகத்தில் பிரவஹித்தமையால்,
எம்பெருமானுடைய பாதத் துழாய்மலரோடும் சிவபிரானுடைய முடிக் கொன்றை மலரோடுங்கலந்து
பசுமைநிறமும் செந்நிறமுமாகத் தோற்றுகின்ற நீர்ப்பெருக்கினால் விலுக்ஷணமானதொரு புகரைப்பெறுமென்க.
“கலந்திடும்” என்பதைச் சடையோடும் இயைக்கலாம், சடையனோடும் இயக்கலாம்.
எம்பெருமானுடைய ஸ்ரீபாதத் தீர்த்தத்தைத் தனக்குத் தூய்மை விளைக்குமதாக ப்ரதி பத்தி பண்ணித் தலையால்
தரிக்கைக்கு மேற்பட்ட நன்மையில்லையிறே சடையானுக்கு.

————-

அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3-

பதவுரை
(எம் பெருமானுடைய திருவடியை விளக்குகிற போது.)

சதுமுகன் கையில்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்–சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்–சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி–தங்கி,
கதிர்–ஒளியுடையனவும்
மணி–ரத்னங்களை
கொண்டு–கொழித்துக் கொண்டு
இழி–இழிகிற
புனல்–தீர்த்தத்தை யுடைய
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;
அங்கு–உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய–முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி–திருப் பவளத்தில் வைத்து ஊதியு“
அழலுமிழ்–நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து–திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்–(போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்–அஸுரர்களுடைய
தலைகளை–தலைகளை
இடறும்–உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை–எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்.

விளக்க உரை

திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்ய லோகத்திற் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல
தீர்த்தத்தாற் கழுவி விலக்க, அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாய கங்கை நதியை,
ஸூர்யகுலத்துப் பகிருத சக்ரவர்த்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத் தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய்
நற்கதியிழந்த தனது மூதாதையரான ஸகா புத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறுவிக்கும் பொருட்டு
நெடுங்காலந் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்கு கொணர்கையில், அவனது வேண்டுகோளாற் சிவபிரான்
அந் நதியை முடியின் மேல் ஏற்றுச் சிறிது சிறிதாக பூமியில் விட்டனன் என்ற வரலாறு அறியத்தக்கது.

ஓங்கி உலகளந்தருளும்போது நமுசி முதலிய அசுரர்கள் “என்னிதுமாயமென்னப்பனறிந்திலன், முன்னை வண்ணமே கொண்டவளவாய்”
என்று தடை செய்ய, அப்போது சங்கை முழங்கியும், ஆழியை எறிந்தும் அவர்களைத் தொலைத்தருளினமை முன்னடிகளில் கூறியது.
“குமிழ்த்தி” “எறிந்து” என்ற வினையெச்சமிரண்டும், “இடம்” என்ற பெயரெச்சத்தோடு இயையும்,
இம்முன்னடிகளிற் கூறிய வரலாறு, ஸாதாரணாமகத் தேவாஸுரயுதத்த காலங்களில் நடந்ததாகக் கொள்ளவுங்கூடும்.
“தலைகளையிடறும்” என்றது அவர்களைத் தொலைத்தமையைக் கூறியவாறு

————-

இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இரு கரை உல கிரைத்தாட
கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-4-

பதவுரை

இமவந்தம் தொடங்கி–இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்–பெரிய கடல் வரைக்கும்
இரு கரை–இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து–ஆரவாரித்துக் கொண்டு
ஆட–நீராட
கமை உடை பெருமை–(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;
இமையவர்–(இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து–அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள–ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை–துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம் யமலோகத்தை
நணுக–கிட்டுகைக்காகவும்
நாந்தகம்–நந்தகமென்னும் வாளை
விசிறும்–வீசா நிற்குமவனும்
நம்–நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்–நகரமாகும்.

விளக்க உரை

அரசுரர்களு மரக்கர்களும் இந்திரன் முதலிய தேவர்களைக் குடியிருக்க ஓட்டாதபடி அனைத்து அடர்ந்து எதிர்த்து போர் புரியப் புக,
அப்போது எம்பெருõமன் இந்திராதிகளுக்குப் பக்ஷபாதிபதியாயிருந்து அவர்களை இடையூறின்றி அரசாளவிக்குமாறு
அவ் வசுரர்மீது தனது கந்தக வாளை வீசி யெறிந்து அவர்களைப் பொழிந்தமை முன்னடிகளிற்கூறியது.
இறுமாந்திருக்கையாவது கண்டவாற்றால் தனதே யுலகென நின்றானை என்றாற்போல வீற்றிருக்கை.
ஏற்றுவந்து என்று வந்து அஹங்கரித்து வந்து, நாந்தகம் நீட்டல் விகாரம், நகர்தான் – தான் அசை.

இமவந்தக தொடங்கியிருங்கடலளவும் – ஹிமகத்பர்வத்த்தின் உச்சி தொடங்கி பெரியகடலளவும் ள்ள லோகத்தாருந் திரண்டு
ஆரவாரித்துக்கொண்டு வந்து நீராட, அவர்களுடைய பரபங்களையெல்லாம் பொறுத்து அவர்களைத் தூயரக்கும்
பெருமையை வுடையது கங்கையென்க
கமை – வடசொல்திரியு, “கமை பெருமை உடை“ எனமாற்றி இயைத்து,
(பாவங்களை) க்ஷமிக்கையாகிற பெருமையை யுடைய என்றுரைப்பாருமுளர்.

—————–

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-5-

பதவுரை

எழுமையும்–ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட–சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்–பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்–க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்–போக்கி விடும்படியான
பெருமை–பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;
உழுவது ஓர் படையும்–உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்–உலக்கையையும்
வில்லும்–ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்–திரு வாழியையும்
சங்கும–ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு–கோடாலியையும்
வாளும்–நந்தக வாளையும்
படைக்கலம் உடைய–ஆயுதமாக வுடையவனும்
மால்–ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளியிருக்குமிடம்

விளக்க உரை

கலப்பையும் உலக்கையும்- பலராமாவதாரத்திலும், மழு- பரசுராமாவதாரத்திலும் கொள்ளப்பட்ட ஆயுதங்களென்க.
படைக்கலமுடைய= படைகலம், உடைய என்று பிரித்து, (இவற்றை) ஆயுதமாகவும் ஆபரணாமகவுமுடைய என்று முரைக்கலாம்.

அநேக ஜந்ம ஸஞ்சிதமான பாவங்களைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் கழித்து விடும்படியான
பெருமையை யுடையது கங்கை யென்பது பின்னடி. கழுவிடும்- கழுவியிடும்

———-

தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு
மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப் புடைத் திரை வாய் அருந் தவமுனிவர் அவபிரதம் குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-6-

பதவுரை

அரு தவம் முனிவர்–அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை–அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்–அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட–அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்–(யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்
கண்டம் என்னும் கடி நகர் ;
சலம்–(கடலிலுள்ள) ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்–மேகங்களானவை
தலைப்பெய்து–திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி–கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட–சள சள வென்று மழை பொழிய
கண்டு–(அதைக்) கண்டு
மலை–கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்–பெரிய குடையாலே
மறுத்தவன்–(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை–திரு வடமதுரையில்
மால்–விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்–ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளி யிருக்குமிடம்.

விளக்க உரை

முன்னடிகளில் கூறிய கோவர்த்தநோத்தரண வரலாறு கீழ்ப் பல விடங்களில் விரித்துரைக்கப்பட்டது.
சலசல – ஒலிக்குறிப்பு. மறைத்தவன் என்றும் பாடமுண்டென்பர்.

பின்னடிகளின் கருத்து; – தபஸ்விகளான மஹர்ஷிகள் பகவத் ஸமாராதந ரூபங்களான யாகங்களைக் குறையற அனுட்டித்து,
அத்திம திநத்தில் அவப்ருத ஸ்நாநம் செய்ய, அநந்தரம் பெருக்காறாப் பெருக்கி யாக பூமிலுள்ள கலப்பை முதலிய
உபகரணங்கள ளெல்லாவற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்குமதான கங்கைக்கரையிலுள்ள கண்டமென்னும் நடிகர் என்பதாம்.
அவபிரதம்- வேள்வியின் முடிவிற் செய்யவேண்டிய ஸ்நாநம்-

——————-

விற் பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி
மற் பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால் புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம்படிய ரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-7-

பதவுரை

அற்புதம் உடைய–ஆச்சர்யமான
ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்–மத நீரும்,
அவர்–அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்–இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்–(அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து–ஒன்று சேர்ந்து
இழீ–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து–(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
வேழத்தை–(குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி–பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்–(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை–தலையை
சாடி–சிதறப் புடைத்தும்
மல்–(சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது–போர் செய்தும்
அரயைனை–உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த–அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்க

விளக்க உரை

எவ்வகையினாலாவது கண்ணபிரானை கலிய நினைத்த கம்ஸன் தான் ஒரு தநுர் யாகஞ் செய்வதாக அதற்கு
அப் பிரானை உறவு முறையாமையால் அழைக்க, அவ்வண்ணமே கண்ணபிரான்
அங்கேற எழுந்தருளிச் செய்த செயல்களைக் கூறுவது, முன்னடி

————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு
நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8-

பதவுரை

நெடியன–நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்–(பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக–திரள் திரளாக
நிரந்தரம்–இடை விடாமல்
ஒழுங்கு விட்டு–நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை -இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்–யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;
திரை பொரு–அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்–கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்–திண்மையான மதிள்களை யுடைய
துவரை–த்வாரகைக்கு
வேந்து–தலைவனும்
தன்–தன்னுடைய
மைத்துனன் மார்க்கு–மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்–பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய–துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை–ராஜ்யத்தை
அருளும்–(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி–(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு–பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்

விளக்க உரை

முன்னடிகளிற் குறித்த வரலாற கீழ் “மெச்சூது சங்கமிடத்தான்” என்ற பாட்டின் உரையிற் காணத்தக்கது.
அரி -ஹரி. கங்கையிற் பற்பல யூபஸ்தம்பங்கள் இடைவிடாது நெடுக அடித்துக்கொண்டு ஓடுமென்பது மூன்றாமடி.
பூபம் – யாகப்பசுவைக் கட்டுந்தறி; வடசொல். நிரந்தரம்- வடசொல்,
இரண்டு கரைபொரு – இரண்டு கரைகளும் ஒருபடிப்பட; இரண்டு கரைகளிலும் என்றாவது

————-

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை
தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9-

பதவுரை

தட வரை–(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர–சலிக்கும் படியாகவும்
காணி–பூமியானது
விண்டு இடிய–பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி–(மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி
கரை–கரையிலுள்ள
மரம்–மரங்களை
சாடி–மோதி முறித்தும்
இடம் உடை–இடமுடையத்தான் (விசாலமான)
கடல்–(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க–கலக்கும்படி
கடுத்து–வேகங்கொண்டு
இழி–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;
வட திசை–வடக்கிலுள்ள
மதுரை–ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்–ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டமும்
துவரை–ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி–திருவயோத்தையும்
இடம் உடை–இடமுடைத்தான (விசாலமான)
வதரி–ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய–வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை-

விளக்க உரை

பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது
வந்திழிகிற வேகத்தைச் சொல்லுவன பின்னடிகள். கடுத்து=கடுமை-வேகம்.

————-

மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன் றெழுத்தை
ஏன்று கொண் டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம் புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-10-

பதவுரை

கான்–கறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட–பெரிய
பொழில்–சோலைகளினால்
சூழ்–சூழப் பெற்ற
கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை–அகார, உகார, மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்– (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷராமன பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
மூன்று எழுத்து ஆகி–(மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை–(அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு–(தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய–சிறந்த கருணையையுடையவனும்
மூன்று அடி நிமிர்த்து–அந்த பிரணவத்தை நம பத்தோடும் நாராயண பத்தோடும் நாராயண பத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்–(அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி–(ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்==அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்–(காணும்) சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை

விளக்க உரை

ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் அடைவே, பூ:புவ , ஸுவ: என்ற மூன்று வயாஹ்ருதிகளையும் தோன்றுவித்து,
பொன்வாணியன் பொன்னைப் புடபாகம் வைப்பதுபோல எம்பெருõமன் தனது ஸங்கல்பத்தினால் அவற்றை ஓடவைத்து,
அவற்றில் நின்றும் அகார உகார மகாரங்களாகிற மூன்று அக்ஷரங்களைத் தோன்றுவித்து,
அம்மூன்றையும் ஸந்தி கிராமத்தில் ‘ஓம்’ என்று ஏகாக்ஷரமாக்கி இப்படி ஏகாக்ஷரமாக்கப்பட்ட மூன்றக்ஷமாகிய
பிரணவத்தை நிருத்திக்ரமத்தினால் (அதாவது- ப்ரக்ரியை பண்ணும் மூன்றுபதமாய் மூன்று அர்த்தங்களுக்கு வாசகமாயிருக்கும்
அகார உகார மகாரங்களாகிய மூன்றெழுத்தாகப் பிரித்து
அவற்றுள் அகாரம் ஜீவாத்துமாவுக்குள் பகவச்சேஷத்துவத்தைக் கூறுகையாலும்,
உகரம் அவதாரணாத்தத்தைக்கூறி, அதனால் கீழ்ச்சொன்ன சேஷத்துவம் ஸ்ரீமந்நாராணன் பக்கலிலன்றி வேறுடத்து
வஹிக்கத்தகாதது என்று மிடத்தைத் தெளிவிக்கையாலும்,
மகாரம் “மக-ஜ்ஞாநே” என்கிற தாதுவினின்றும் பிறந்து ஞாலத்தைக் கூறுமதாயும்,
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கா ஆசரயமான ஆத்துமா தேஹம் முதலியவற்றிற்காட்டில் விலக்ஷணன் என்று புலப்படுத்துமதாயு மிருப்பதாலும்,
இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து அநுஸந்திருக்குமலர் பக்கலில் பரமகிருபையைச் செய்தருள்பவனும்,
அந்தப்ரணவத்தை நம பத நாராண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, அம்மூன்று பதங்களிலும்
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களையும் தோன்றுவித்து,
அவ்வாகாரங்களுக்கு எதிர்த்தட்டாகத்தான் சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்பயத்வம் என்கிற மூன்று ஆகாரங்களையுடையது
எம்பெருமாள் எழுந்தருளியிருக்குமிடம் கண்டமென்னுங் கடிநகராம்.

மூன்றெழுத்தனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி” – பிரித்துப் பார்த்தால் மூன்றெழுத்தாகத் தோன்றும்படியாய்,
ஸ்தூலதர்சநத்தில் ஏகாக்ஷமாகத் தோற்றும்படியாயுள்ள ‘ஓம்’ என்கிற பிரணவத்தை நிர்வாசக்ரமத்தினால்
மூன்றெழுத்தாகப் பிரித்து என்றபடி.
அக்ஷாத்ரயாத்மகமானது பற்றி ‘மூன்றெழுத்ததனால்’ என்றாரென்க.
நிருக்தம்- வேதாங்கங்கள் ஆறனுள் ஒன்று. மூன்றாமடியில், தோன்றி- பிறவினையில் வந்த தன்வினை.

———–

பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11-

பதவுரை

பொங்கு–நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும்
ஒலி–கோபத்தை உடையதுமான
கங்கை கரை–கங்கைக் கரையிலுள்ளதும்
மலி–எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து–திருக் கண்டங் கடி நகரில்
புருடோத்தமன்–புருஷோத்தப் பெருமானுடைய
அடி மேல்–திருவடிகளில்,
வெம்கலி நலியா–கொடிய கலியினால் நலியப் பெறாத
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விருப்புற்ற–ஆசைப் படல்
தங்கிய அன்பால்–நிலை நின்ற பக்தியினால்
செய்–அருளிச் செய்த
தமிழ் மாலை
தங்கிய–நிலை நின்றிருக்கப்பெற்ற
நா உடையார்க்கு–நாக்கை உடையவர்களுக்கு
கங்கையில்–கங்காநதியில்
குளித்து–நீராடி
திருமால்–ஸ்ரீயபதியினுடைய
இணை–ஒன்றொடொன்றொத்த
கழல் கீழே–திருவடிகளின் கீழே
இருந்த கணக்கு ஆம்–நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும்.

விளக்க உரை

இதனால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. நலிவு- துன்பம்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –