Archive for the ‘Vishnu Sahasranama Stotrams’ Category

பேரும் ஓர் ஆயிரம் பீடுடையான் —

August 30, 2022

ஸ்ரீ ஸ்ருதிகளில் ஸ்ரீ பகவத் ஸ்தோத்ர மஹிமை

1-யஸ் பூர் வ்யாய நவீயஸே -ருக் வேதம் -1-156-2-முன்னோர்களில் முன்னவனாய் உள்ளவனும் -ஸ்ருஷ்டியாதிகளைச் செய்பவனும் -ஸ்தோத்ரம் செய்யப்படுபவனுமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு

2-தமு ஸ்தோதாரஸ் பூர்வ்யம் யதாவித -ருக் வேதம் -1-156-3-அந்த மஹா விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்பவரே அவனை உள்ளது உள்ளபடி அறிந்தவராவார்

3-காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே –சாந்தி பாட மந்த்ரம் -யஜ்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவை யாகத்துக்குத் தலைவனான ஸ்ரீ மன் நாராயணனை
ஸ்துதித்துப் பாடுவதற்கு மங்களகரமான வாக்கு எங்களுக்கு ஏற்படட்டும் –

4- த்ரேதோருகாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -எல்லாராலும் அதிகமாக்க கானம் செய்யப்படுபவராகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவானவர் மூன்று அடி வைத்தார்

5- விஷ்ணுஸ் தவதே வீர்யாய –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -நமக்கு வீர்யம் அளிக்கும் பொருட்டு ஸ்ரீ விஷ்ணுவானவர் ஸ்துதிக்கப் படுகிறார்

6-த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இந்த விஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்யும் மக்கள் நிலையான பரமபதத்தை இருப்பிடமாகக் கொள்வர்-

7- த்வேஷம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –ஸ்ரீ விஷ்ணு ஸூ க்தம் –இம்மாதிரிப் ப்ரகாஸமான அந்த முதியோனாகிய விஷ்ணுவின் திரு நாமங்கள்

8-விபன்யவோ ஜாக்ருவாம்ச -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் –ஸூரிகள் என்றும் விழிப்புடன் எப்போதும் ஸ்துதித்க்கொண்டே பரமபதத்தில் ஸ்ரீ விஷ்ணுவின் அருளி உள்ளனர் –

ஸ்ரீ மஹாபாரதத்தில் நிர்வசன அத்தியாயத்தில் திரு நாராயணீயம் என்கிறபெயரில் ஸ்ரீ வேத வ்யாஸரே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களுக்கு பாஷ்யம் அருளி உள்ளார்
இதே போல் ஸ்ரீ வாமன புராணம் ஸ்ரீ வராஹ புராணம் முதலியவற்றிலும் பகவத் நாமங்களுக்கு விளக்கம் கூறும் ஸ்லோகங்கள் உள்ளன
இவற்றை முன்னோர் பல இடங்களில் ப்ரமாணமாகக் காட்டி உள்ளனர் –
சாமவேதத்தில் விஷ்ணு நமக பாகத்திலும் பல நாமங்கள் விளக்கம் உள்ளன –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 391-421-திரு நாமங்கள்–

May 9, 2022

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)

391. பரர்த்தயே நமஹ:(Pararddhaye namaha)

ஸ்ரீராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் ஆகி, ராமராஜ்ஜியம் நடைபெற்று வந்த சமயம். தமசா நதிக்கரையில் உள்ள
வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு நாரத முனிவர் வந்தார். அப்போது நாரதரை அடிபணிந்த வால்மீகி,
அவரிடம், “பூமியில் இப்போது வாழ்பவர்களுக்குள் அனைத்து மங்கல குணங்களும் நிரம்பப்பெற்றவர் யார்?” என்று கேட்டார்.

ராமனின் ஆட்சியில் வாழும் வால்மீகி பகவானுக்கு, ராமனே பரமாத்மா என்பதும்,
ராமன் அனைத்து விதமான மங்கல குணங்களும் நிறைந்தவன் என்பதும் நன்றாகவே தெரியும்.
ஆனாலும் இறை வனைப் பற்றி நாமாக அறிந்துகொள்வதை விட, குருவின் மூலம் அறிந்துகொள்வதே விசேஷம் ஆகும்.
அதனால் தான் நற்குருவுக்கு உரிய இலக்கணங்கள் அனைத்தும் நிறைந்த நாரதரிடம் பணிவோடு தனது கேள்வியை முன்வைத்தார் வால்மீகி.

அதற்கு விடையளித்த நாரதர்,
“இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ச்ருத:
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமான் வசீ”-(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-8)
என்று தொடங்கி, “இட்சுவாகு குலத்தில் அவதரித்த ராமன் என்பவனே அனைத்து விதமான மங்கல குணங்களும் பரிபூரணமாக நிறைந்தவன்!”
என்று சொல்லி ராமனுடைய குணங்களையும் அவற்றின் பெருமையையும் பட்டியலிடுகிறார்.

“ஸ ச ஸர்வகுண உபேத: கௌஸல்யா ஆனந்த வர்த்தன:
ஸமுத்ர: இவ காம்பீர்யே தைர்யேண ஹிமவான் இவ”–(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-17)

“கௌசல்யா தேவியின் மகனாக அவதரித்த திருமாலாகிய ராமனே வேதாந்தங்கள் போற்றும் அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.
அவனே பரமாத்மா ஆவான். இவ்வுலகில் பெருமை மிக்க பொருள்கள் அனைத்தும் தத்தம் பெருமைகளை அவனிடம் இருந்துதான் பெற்றிருக்கின்றன.
கடல் தனக்குள் முத்து, ரத்தினங்கள் போன்ற பல விலை உயர்ந்த பொருள்களை வைத்திருந்தாலும் அவற்றை வெளியே காட்டாது.
அதுபோல் தானே இறைவன் என்பதை ராமன் நன்கு அறிந்திருந்தாலும், தனது இறைத்தன்மையை அவன் வெளியே
காட்டிக் கொள்ளாமல் மனிதனைப் போல நடிப்பான். எத்தனை துக்கங்கள் வந்தாலும்,
தன் நிலை மாறாமல் இருப்பதிலே மலையைப் போன்றவன் ராமன்.”

“விஷ்ணுனா ஸத்ருசோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன:
காலாக்னி ஸத்ருச: க்ரோதே க்ஷமயா ப்ருதிவீ ஸம:”(வால்மீகி ராமாயணம் பால காண்டம் 1-18)

“வீரத்தில் திருமாலைப் போன்றவன். அமுதைப் பொழிந்து மகிழ்விப்பதில் நிலவைப் போன்றவன். அடியார்களைத் துன்
புறுத்துவோர் மீது கோபம் கொள்ளுகையில் ஊழிக் கால நெருப்பைப் போன்றவன். பொறுமையிலே பூமியைப் போன்றவன்.”

“தனதேன ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம: இவாபர:
தம் ஏவம் குணஸம்பன்னம் ராமம் ஸத்ய பராக்ரமம்”(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் 1-19)

“தியாகம் செய்வதில் குபேரனைப் போன்றவன். ‘த்யாகே ச தனதோ யதா’ என்று குபேரனைப் பற்றிப் பழமொழி பிரசித்தமாக உண்டு.
சத்தியத்தில் நிலை நிற்பதில் தரும தேவதையைப் போன்றவன். அவனே அனைத்து வித நற்குணங்களும் நிறைந்த பரம்பொருள் ஆவான்.
அவனது குணங்கள் என்றுமே மாறாமல் அவனிடம் நிறைந்திருக்கும்.”
இவ்வாறெல்லாம் பலபடிகளில் ராமனின் குணத்தை நாரதர் வால்மீகிக்கு விவரித்ததால் தான்,
அந்தக் குணங்களால் ஈர்க்கப்பட்ட வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை ஒரு காவியமாக எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அதன்பின், பிரம்மாவின் நியமனப்படி, நாரதர் கூறிய வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீராமாயணத்தை இயற்றினார்
வால்மீகி பகவான் என்பது வாசகர்கள் அறிந்த செய்தியே.

இப்படி பால காண்டத்தில், வால்மீகிக்கு நாரதர் வர்ணித்த படி, பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால்,
அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.
பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

————

392. பரம ஸ்பஷ்டாய நமஹ:(Parama Spashtaaya namaha)

(வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 114-ம் சர்க்கம்) ராம பாணத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் இறந்துகிடந்த
ராவணனின் சடலத்தைக் கண்ட அவனது மனைவி மந்தோதரி, அவன்மேல் விழுந்து புலம்பி அழுதாள்.
அப்போது ராவணனின் சடலத்தைப் பார்த்து, “மூவுலகையும் ஆக்கிரமித்து, தேவர்களையும் வீழ்த்திய உங்களை
ஒரு சாதாரண மனிதன் வென்று விட்டாரா? பற்பல வரம் பெற்ற உங்களை, ஒரு மனிதனின் சரம் அழித்துவிடுமா?”
என்று சிந்தித்துக் கூறத் தொடங்கினாள் மந்தோதரி.

“ஜனஸ்தானத்தில் பல அரக்கர்களுடன் கூடியிருந்த உங்கள் தம்பி
கரனை இந்த ராமன் முன்பே தனி ஒருவராக இருந்து அழித்திருக்கிறார். எனவே இவர் நிச்சயமாக மனிதராக இருக்க முடியாது.
தேவர்களாலும் புக முடியாத இலங்கைக்குள்ளே அநுமன் என்ற தூதுவனை அனுப்பி நுழைய வைத்த ஸ்ரீராமன்,
நிச்சயம் சாதாரண மனிதர் அல்லர்.
கடலில் அணைகட்டி ஒருவர் இலங்கைத் தீவுக்கு வந்திருக்கிறார் என்னும் போதே அவர் சாதாரண மானிடராக இருக்க முடியாது என்று நான் எண்ணினேன்.
உங்களை அழிக்க நினைத்த யமன், சீதை என்ற அழகான பெண்ணை உருவாக்கி, உங்களை மயக்கி,
அந்த யமனே ராமனாக வடிவம் கொண்டு வந்து உங்கள் உயிரைப் பறித்துச் சென்று விட்டாரோ? இல்லை,
ராமன் யமனாக இருக்க முடியாது. யமன் இலங்கைக்குள் நுழையவே அஞ்சுவாரே!

அல்லது, உங்களால் வீழ்த்தப்பட்ட இந்திரன் உங்களைப் பழிவாங்குவதற்காக ராமன் என்ற மனிதனாக வேடமிட்டு
வந்து அழித்து விட்டானோ? சாத்தியமில்லை! உங்களைப் பார்க்கும் சக்திகூட அந்த இந்திரனுக்குக் கிடையாதே!
இந்த ராமன் பரமாத்மாவான திருமாலாகத் தான் இருக்கவேண்டும்.

“வ்யக்தம் ஏஷ மஹாயோகீ பரமாத்மா ஸநாதன:
அநாதி மத்ய நிதன: மஹத: பரமோ மஹான்”
இவர் திருமால் என்பது அடியேனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. உலகைக் காக்க வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவரும்,
பரமாத்மாவும், உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவரும், தொடக்கம் நடு முடிவு இல்லாதவரும்,
இந்திரன் பிரம்மா உள்ளிட்ட தேவர்களை விட உயர்ந்தவருமான திருமாலே இவர் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன்.

“தமஸ: பரமோ தாதா சங்க சக்ர கதாதர:
ஸ்ரீவத்ஸ வக்ஷா: நித்யஸ்ரீ: அஜய்ய: சாச்வதோ த்ருவ:”

சம்சார மண்டலத்துக்கு அப்பாற்பட்ட வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பவரும், உலகைப் போஷிப்பவரும்,
காப்பதற்கு உறுப்பாக சங்கு சக்கரம் கதை ஏந்தியவரும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவைக் கொண்டவரும்,
திருமகளோடு எப்போதும் இணைந்திருப்பவரும், திருமகளோடு இணைந்திருப்பதால் எப்போதும் வெல்பவரும்,
எக்காலத்திலும் இருப்பவரும், மாறுதலற்றவருமான திருமாலே இவர்.

அந்தத் திருமால்தான் உலகுக்கு நன்மை செய்வதற்காகவும், தீயசக்திகளை அழிப்பதற்காகவும், மனிதனாக அவதாரம் செய்து வந்துள்ளார்.
வானவர்கள் அவருக்கு உதவி செய்வதற்காக வானரர்களாக வந்துள்ளார்கள். உலகைக் காக்கும் திருமால்,
உலகுக்குத் தீங்கிழைத்த உங்களை உங்களது பரிவாரங்களோடு அழித்துவிட்டார்!” என்று சொல்லிப் புலம்பினாள் மந்தோதரி.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், ராமன் பொதுவாகத் தனது இறைத்தன்மையை வெளியிடாமல் இருந்தாலும்,
மந்தோதரி, தாரை போன்ற கற்புக்கரசிகளுக்கும், அநுமன் போன்ற பக்தர்களுக்கும் தனது சொரூபத்தை
அவரே தனது கருணையால் நன்றாக வெளிப்படுத்திவிடுவார்.
அல்லது, தனது நடவடிக்கைகளால் தானே பரம்பொருள் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்துவிடுவார்.

இப்படிச் சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால்,
ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.
தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.
“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————-

393. துஷ்டாய நமஹ:(Thushtaaya namaha)

ராவண வதம் ஆனபின், குபேரன், யமன், இந்திரன், வருணன், சிவன், பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் அனைவரும்
வானில் கூடி ராமபிரானைத் துதித்தார்கள்.
“த்ரயாணாம் த்வம் ஹி லோகானாம் ஆதிகர்த்தா ஸ்வயம் ப்ரபு:”
“பிரம்மதேவர் உட்பட அத்தனை உயிர்களையும் உலகங்களையும் படைக்கும் ஆதி கர்த்தாவாக, ஊழி முதல்வனாகத் திகழ்பவர் நீங்கள்.
ஆனால் உங்களைப் படைத்தவர் என்று யாரும் இல்லை.”
“அந்தே ச ஆதௌ ச லோகானாம் த்ருச்யஸே த்வம் பரந்தப”
“உலகங்கள் படைக்கப்படுவதற்கு முன்னும் நீங்கள் இருந்தீர்கள். உலகங்கள் யாவும் ஊழிக்காலத்தில் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்கள்.
”இப்படி எல்லாம் பிரம்மாவும் மற்ற தேவர்கள் ராமனைப் பார்த்துத் துதி செய்தவாறே, அவர்களைத் தடுத்து ராமன்
கீழ்க்கண்ட வாக்கியத்தைச் சொன்னான்:

“ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்” (வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 120-11)
பொதுவாக இவ்வாக்கியத்துக்குப் பொருள் உரைப்பவர்கள், ராமன் தன்னை இறைவன் என்று அறியவில்லை,
அதனால் தேவர்கள் கூறும் பெருமைகளை எல்லாம் மறுத்துப் பேசி, “நான் வெறும் தசரதன் மகன் தானே ஒழிய
நீங்கள் சொல்லும் பெருமைகள் ஏதும் எனக்கு இல்லை!” என்று சொல்வதாகக் கூறுவார்கள்.
ஆனால் வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ராமாநுஜருக்கு அவரது தாய்மாமாவான திருமலை நம்பிகள்
கீழத் திருப்பதியில் ஒரு புளிய மரத்தடியில் உபதேசம் செய்தார்.
திருமலை நம்பிகள் ராமனின் இந்தக் கூற்றில் ஒரு விசேஷ அர்த்தம் இருப்பதாக விளக்கினார்.

அது என்ன விசேஷ அர்த்தம்?
ராமனின் வாக்கியத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள் –

1. ஆத்மானம் மானுஷம் மன்யே, 2. ராமம், 3. தசரதாத்மஜம்.
ராமன் சொல்கிறான், “1. ஆத்மானம் மானுஷம் மன்யே – தேவர்களே! நீங்கள் என்னைத் துதிக்கும் போது
நானே உலகுக்கு மூலக் காரணம் என்றும், பிரம்மாவைப் படைத்தவனும் நானே என்றும் இப்படிப் பலவாறாக
எனது பெருமைகளை எல்லாம் சொல்லித் துதி செய்துவிட்டீர்கள்.
ஆனால் இந்தப் பெருமைகள் எல்லாம் ஏற்கனவே வேதங்களில் சொல்லப்பட்டு விட்டனவே!
தேவர்களான உங்களுக்கு அருள்புரியத் தானே மனிதனாக எளிமையோடு அவதரித்தேன்?
அந்த எளிமையைச் சொல்லி என்னைத் துதி செய்யலாமே! என் பெருமையைச் சொல்லித் துதிப்பதை விட
என் எளிமையைச் சொல்லித் துதிப்பதையே நான் பெரிதாகக் கருதுகிறேன்.

2. ராமன் – அவ்வாறு எளிமையைச் சொல்லித் துதிக்கும் போதும், நாராயணன், வாசுதேவன், வைகுண்டநாதன் போன்ற
எனது பெயர்களைச் சொல்லித் துதிக்காமல், நான் எளிமையோடு பூமியில் அவதாரம் செய்தமைக்கு அடையாளமான
ராமன் என்ற திருப்பெயரைச் சொல்லி அழைத்துத் துதிசெய்யுங்கள்.

3. தசரத ஆத்மஜம் – ராமன் என்று என்னை அழைப்பதை விட, சக்கரவர்த்தி தசரதனின் மகன் என்று
என்னை நீங்கள் அழைத்தால் மேலும் மகிழ்வேன்.”
ராமன் கூறவரும் கருத்து – மற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி அவனைத் துதிப்பதைக் காட்டிலும்,
தசரதனின் மகன் என்று அழைத்துத் துதி செய்தால் அதுவே ராமனுக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

ஏன் அப்படி? வைகுண்டத்திலேயே திருமால் இருந்தால், பக்தர்களால் அவரை அணுகவே முடியாது.
அங்கிருந்து இறங்கி வந்து தசரதன் மகனாக அவதாரம் செய்தபடியால் தான், எல்லா பக்தர்களாலும்
அந்த இறைவனை எளிதில் அணுக முடிந்தது. தனது தந்தையைத் தானே தேர்ந்தெடுக்க வல்ல அந்த இறைவன்,
ராமாவதாரத்துக்குத் தந்தையாகத் தசரதனைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு மகனாக வந்து பிறந்து,
தனது எளிமையை அடியார்களுக்கு நன்கு வெளிப்படுத்திக் காட்டினார்.

‘தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்.
அதனால் தான் இன்றளவும் வைணவ நெறியில் ஸ்ரீராமன் என்று சொல்லாமல் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே சொல்வார்கள்.
மூதறிஞர் ராஜாஜி ராமாயண வரலாற்றை எழுதிய போது, அந்நூலுக்குச் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்றே பெயர் சூட்டினார்.

இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,
மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.
“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————-

————-

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
{398-வது திருநாமம் ‘விரதோ மார்க:’ என்றும் ‘விரஜோ மார்க:’ என்றும் இருவிதமாக ஓதப்படுகிறது.
இரண்டுமே ஆழ்ந்த பொருள் கொண்டு இருப்பதால், உரையாசிரியரான பராசர பட்டர் இரண்டு விதமான பாடங்களையும் ஏற்று
இந்த ஒரு திருநாமத்துக்கு இரு விதமாக விளக்கவுரை அருளியுள்ளார்.
அதன் அடிப்படையில், ‘விரதோ மார்க:’ என்ற முதல் பாடத்தின் அடிப்படையில் இத்திருநாம விளக்கத்தை இப்போது காண்போம்.
அடுத்த கட்டுரையில், ‘விரஜோ மார்க:’ என்ற பாடத்தின் அடிப்படையில் திருநாம விளக்கத்தைக் காண்போம்.}

398 (அ). விரதாய மார்காய நமஹ:
(Virathaaya Maargaaya namaha)
ராமனுக்கு மன்னன்முடி சூட்டப்போகிறார்கள் என்று அயோத்தி நகரமே குதூகலித்திருக்க, பட்டாபிஷேகத்தன்று காலை
ராமனைத் தனது அரண்மனைக்கு வரவழைத்தாள் கைகேயி.
ராமனைப் பார்த்து, “உன் தந்தை இரண்டு வரங்கள் எனக்கு அளித்துள்ளார். அவற்றை நீ நிறைவேற்ற வேண்டும்!” என்று தொடங்கி,

“ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன்!”–என்று ராமனுக்குக் கட்டளை இட்டாள் கைகேயி.

“கடல்சூழ்ந்த இந்த நிலவுலகம் முழுவதும் பரதன் ஒருவனே ஆள வேண்டும். நீ ஜடாமுடி தரித்துக்கொண்டு காட்டில் தவம் புரிந்து,
புண்ணிய தீர்த்தங்களிலே நீராடிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்துத் திரும்பலாம். இது மன்னருடைய கட்டளை!” என்றாள் கைகேயி.

நேற்று இரவு வரை எனக்குப் பட்டாபிஷேகம் என்று சொல்லப்பட்டது, இப்போது திடீரென எனக்கு வனவாசமா என்று
ராமன் வருத்தம் கொள்ளவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகேயியைப் பார்த்து,
“மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ? என்பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?”
“தாயே! இதை மன்னர்தான் சொல்ல வேண்டுமா? நீங்கள் சொன்னாலே அடியேன் அதை அடிபணிந்து நடக்க மாட்டேனோ?
என் தம்பி முடிசூடினால், அடியேன் சூடியதாகவே அதைக் கருதுகிறேன்!” என்று சொல்லிக் காட்டுக்குப் புறப்படுகிறான்.

அப்போது ராமனின் முகம் எப்படி இருந்தது?
“அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா!” என்கிறார் கம்பர்.
இதற்கு வால்மீகியும் அழகான ஓர் உவமை கூறுகிறார்.
“ந சாஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்யநாச: அபகர்ஷதி
லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீதரச்மே:இவ க்ஷபா”

உனக்கு ராஜ்ஜியம் கிடையாது என்று கைகேயி சொன்னபோதும் கூட, ராமன் முகத்தில் இருந்த
பொலிவோ அழகோ அணுவளவும் குறையவில்லை.
உலகுக்கெல்லாம் குளிர்ச்சியும் ஒளியும் தரும் சந்திரனின் ஒளியை இருளால் மறைக்க முடியுமா?
அதுபோலத்தான் ஆயிரம் துயரங்கள் வந்தாலும், ராஜ்ஜியம், செல்வம் போன்றவற்றில் ஆசை இல்லாத ராமனின்
அழகைக் குலைக்க முடியாது என்கிறார் வால்மீகி. ஆசை இல்லா மனிதர் தம்மைத் துன்பம் எங்கே நெருங்கும்?

இப்படி உலகியல் விஷயங்களில் விருப்பமோ நாட்டமோ கொள்ளாதவனாக ராமன் திகழ்ந்தபடியால், ‘விரத:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘விரத:’ என்றால் பற்றில்லாதவர் என்று பொருள்.
அத்துடன் ‘மார்க:’ என்ற பதமும் சேர்ந்து ‘விரதோ மார்க:’ என்று இத்திருநாமம் வருகிறதே!
‘மார்க:’ என்றால் என்ன? ‘மார்க:’ என்றால் (இவ்விடத்தில்) விரும்பப்படுபவர் என்று பொருள்.
பரத்வாஜர், விசுவாமித்ரர் போன்ற பற்றில்லாத முனிவர்களால் விரும்பப்படுகிறான் ராமன். அதனால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”–என்றார் வள்ளுவர்.

அந்த வகையில், பற்றில்லாத முனிவர்கள் ராமனின் திருவடி களைப் பற்றிக் கொண்டு உய்வடைகிறார்கள்.
அத்தகைய பக்தர்களிடம் ராமனும் பற்று வைக்கிறான்.
உலகியல் செல்வங்களில் தான் அவன் பற்றில்லாமல் இருக்கிறானே ஒழிய, அடியார்கள் மேல்
மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருக்கிறான் அந்த ஸ்ரீராமன்.அதனால்தான் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘விரத:’ என்றால் உலகியல் விஷயங்களில் ஆசையற்றவர், ‘மார்க:’ என்றால் முனிவர்களாலும் விரும்பப் படுபவர்.
உலகியல் பற்றற்றவனாகவும், முனிவர்களால் வணங்கப்படுபவனாகவும் விளங்கும் ராமன் ‘விரதோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 398-வது திருநாமம்.“விரதாய மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களுக்குத் தாழ்ந்த விஷயங்களில் உள்ள பற்று நீங்கி, இறைவனிடத்தில் பேரன்பு உண்டாகும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

————

399 (ஆ). விரஜாய மார்காய நமஹ:
(Virajaaya Maargaaya namaha)
பஞ்சவடி பர்ணசாலையில் சீதையைக் காணாமல் தேடிக் கொண்டு வந்த ராமனும் லட்சுமணனும், வழியில் ஒரு கழுகு
ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்கள். “சீதையை உண்டுவிட்டு யாரோ அரக்கன் படுத்திருக்கிறான் போலும்!” என்று
சொல்லிக் கொண்டே அந்தக் கழுகை நோக்கி வேகமாகச் சென்றான் ராமன்.

அந்தக் கழுகு ராமனைப் பார்த்து,
“யாம் ஓஷதிம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்”

“ராமா! நீ நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும்! நீ இக்காட்டில் எந்த சீதையைத் தேடிக் கொண்டு வருகிறாயோ,
அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்று விட்டான்!” என்று சொன்னது.
அருகில் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அக்கழுகு ஜடாயு என்பதை ராமனும் லட்சுமணனும் உணர்ந்து கொண்டார்கள்.
மேலும் ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா! சீதையை அபகரித்துச் சென்ற ராவணனைத் தடுத்து அவனோடு போரிட்டேன்.
அவன் தனது வாளால் எனது சிறகு களை வெட்டிவிட்டான்! தன்னை அபகரித்துச் சென்றவன் ராவணன் என்பதை
உனக்கு எப்படியாவது தெரிவிக்க வேண்டும் என்று சீதை கெஞ்சினாள்.
எனவே அந்தச் செய்தியை உன்னிடம் சொல்வதற்காகவே உயிரை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்!” என்று சொன்னார்.
ராமனின் கண்கள் குளமாயின.

நெஞ்சில் துன்பச் சுமை ஏறியது. ஜடாயு மேல் விழுந்தான் ராமன்.
“தம் தாதையரைத் தனயர் கொலை செய்தார்
முந்தாரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன்
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அருங்கூற்றம் ஆனேனே”

“நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்துவிட்டார்.
காட்டில் ஒரு தந்தை எனக்கு உதவி செய்யப்போய் இறக்கப் போகிறாரே! நாட்டில் ஒரு
தந்தையும் காட்டில் ஒரு தந்தையும் மரணம் அடைய இந்த மகன் காரணமாகி விட்டேனே!” என்று புலம்பினான் ராமன்.

ஜடாயு, “ராமா! நீ துயரத்தையும் கோபத்தையும் விட்டு, அடுத்து நடக்க வேண்டியதைப் பார்.
சீதையை மீட்டு அவளது துயரத்தைத் தீர்த்து, ராவணனை வதம் செய்து தேவ காரியத்தை நிறைவேற்று! நீ நீடூழி வாழ்க!” என்றார்.
ராமன், “ராவணன் சீதையோடு எங்கே போனான்?” என்று கேட்டான்.
மிகுந்த தளர்ச்சியால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வருந்தினார் ஜடாயு. அந்த வருத்தத்தோடே ஜடாயுவின் உயிர் பிரிந்தது.

அப்போது ராமன் ஜடாயுவைப் பார்த்து,
“யா கதிர் யஜ்ஞசீலானாம் ஆஹிதாக்னேச்ச யா கதி:
அபராவர்த்தினாம் யா ச யா ச பூமிப்ரதாயினாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்
க்ருத்ர ராஜ மஹாஸத்த்வம் ஸம்ஸ்க்ரு தச்ச மயா வ்ரஜ”

“வேள்வி செய்பவர்கள், தவம் புரிபவர்கள், துறவிகள், தானம் செய்பவர்கள் உள்ளிட்ட சான்றோர்கள் எல்லோரும் பெறுகின்ற
மிக உயர்ந்த இலக்காகிய வைகுண்டத்தை நீங்கள் அடைவீர்கள். நான் ஆணையிடுகிறேன்.
எனது ஆணைப்படி வைகுண்டத்தை நோக்கிய பாதையான அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணித்து நீங்கள் முக்தி அடைவீராக!” என்றான்.
அவ்வாறே ஜடாயுவின் ஆத்மாவும் அர்ச்சிராதி மார்க்கத்திலே பயணித்து வைகுண்ட லோகத்தை அடைந்தது.

இப்படி முக்தியை நோக்கிய தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுவதால், ராமன் ‘விரஜோ மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் பாதை. ‘விரஜ:’ என்றால் மாசில்லாத, தூய என்று பொருள்.
‘விரஜோ மார்க:’ என்றால் தூய பாதையை அடியார்களுக்குக் காட்டுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.
“விரஜோ மார்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச்சிறந்த பாதையை ஸ்ரீராமன் காட்டியருள்வான்.

———–

399. நேயாய நமஹ:(Neyaaya namaha)
(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421[பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீ ராமனின் சரித்திரம்)

சரபங்கருக்கு முக்தி அளித்த பின், சரபங்க ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு, லட்சுமணனோடும் சீதையோடும்
தண்டகாரண்ய வனத்தினுள் செல்லத் தயாரானான் ராமன். அச்சமயம் ராமனைத் தேடிப் பல முனிவர்கள் அங்கே வந்தார்கள்.
அம்முனிவர்கள் யாவரும் வெவ்வேறு விதமான முறைகளில் தவத்தில் ஈடுபடுபவர்கள்.
சிலர் சூரிய, சந்திரர்களின் ஒளியை மட்டுமே உண்பார்கள். சிலர் கல்லில் படுத்து உடலை வருத்திக் கொள்வார்கள்.
சிலர் இலைகளை மட்டுமே புசிப்பார்கள். சிலர் அரைக்காத தானியங்களையே உண்பார்கள்.

சிலர் கழுத்தளவு நீரில் தவம் புரிபவர்கள். சிலர் வெட்ட வெளியில் தவம் புரிவார்கள். சிலர் ஈர ஆடை மட்டுமே அணிவார்கள்.
சிலர் தண்ணீரை மட்டும் உண்பார்கள். சிலர் காற்றை மட்டும் உண்பார்கள்.
இத்தகைய பல குழுக்களாக இணைந்து வந்த முனிவர்கள் மொத்தமாக ராமன் திருவடிகளிலே சரணாகதி செய்து
தங்களது பிரார்த்தனையை ராமனிடம் முன் வைத்தார்கள்.

“ஸோயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ வானப்ரஸ்த கணோ மஹான்
த்வந்நாத: அநாதவத் ராம ராக்ஷஸை: வத்யதே ப்ருசம்”
“ஸ்ரீ ராமா! காட்டில் வசிக்கும் முனிவர்களான நாங்கள் அரக்கர்களாலே மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம்.
ராவணனைச் சேர்ந்த அரக்கர்கள் பல முனிவர்களைக் கொன்று விட்டார்கள்.
உனது தொண்டர்களான நாங்கள் இன்று அநாதைகளைப் போல் இருக்கிறோம்.”

“பரா த்வத்தோ கதிர் வீர ப்ருதிவ்யாம் நோபப்தயதே
பரிபாலய நஸ் ஸர்வான் ராக்ஷஸேப்யோ ந்ருபாத்மஜ”
“ராமா! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை.
ஆகையினால் அந்த அரக்கர்களிடம் இருந்து எங்கள் அத்தனை பேரையும் நீ தான் காத்தருள வேண்டும்!”
என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள்.

“இருளிடை வைகினேம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார்”–என்று இக் காட்சியைப் பாடுகிறார் கம்பர்.
“ராமா! நாங்கள் இருளில் வாடி இருந்த நேரத்தில் கதிரவன் போல் நீ தோன்றி இருக்கிறாய்.
துயராகிய இருளைப் போக்கி, ஒளிதந்து எங்களுக்கு நீ அபயம் நல்க வேண்டும்!” என்று முனிவர்கள் ராமனிடம் கோரினார்கள்.

அப்போது ராமன் அவர்களைப் பார்த்து, “ஏன் என்னிடம் வந்து பிரார்த்தனை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“நைவம் அர்ஹத மாம் வக்தும் ஆஜ்ஞாப்யோஹம் தபஸ்வினாம்”
“முனிவர்களே! அடியேன் உங்களின் தொண்டன். நீங்கள் ஆணையிட்டால், அதை நடத்துபவன் நான்.
அடியேனுக்கு ஆணையிடாமல், நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கட்டளை இடுங்கள்!
உங்களைத் துன்புறுத்தும் அத்தனை அரக்கர்களையும் நான் அழிப்பேன்! இது உறுதி!”

“பிதுஸ்து நிர்தேசகர: ப்ரவிஷ்டோஹம் இதம் வனம்
பவதாம் அர்த்தஸித்யர்த்தம் ஆகதோஹம் யத்ருச்சயா
தஸ்ய மேயம் வனே வாஸோ பவிஷ்யதி மஹாபல:”

“நான் என் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காகக் காட்டுக்கு வரவில்லை.
அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, நல்லோர்களான உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே காட்டுக்கு வந்துள்ளேன்.
உங்களுக்குத் தீங்கு செய்யும் அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன்.
எனது வீரத்தையும் எனது தம்பியின் பராக்கிரமத்தையும் விரைவில் நீங்கள் காண்பீர்கள்.
எப்போது நீங்கள் கட்டளை இட்டு விட்டீர்களோ, இனி அதை அப்படியே நிறைவேற்றாமல் நான் ஓய மாட்டேன். வருந்தாதீர்கள்!”
என்று சொல்லி முனிவர்களைத் தேற்றினான் ராமன்.

இதிலிருந்து பக்தர்களும் நல்லோர்களும் இடும் கட்டளையைப் பின்பற்றி நடப்பவனாக ராமன் இருக்கிறான்
என்பதை நாம் அறிய முடிகிறதல்லவா?
‘நேய:’ என்றால் வழிநடத்தப்படுபவர் என்று பொருள். பக்தர்களுக்கு வசப்பட்டு, அவர்களின் சொல்படி நடந்து,
அந்த பக்தர்களாலேயே வழிநடத்தப் படுவதால், ஸ்ரீ ராமன் ‘நேய:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 399-வது திருநாமம்.
“நேயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நற்காரியங்களை ராமன் நடத்தி முடித்துத் தருவான்.

———

400. நயாய நமஹ: (Nayaaya namaha)
ஆரண்ய காண்டத்தின் முதல் சர்க்கம் சீதையோடும் லட்சுமணனோடும் தண்ட காரண்யம் என்னும் காட்டுக்குள்ளே
ராமன் நுழைந்த விதத்தை வர்ணிக்கிறது.
“ப்ரவிச்ய து மஹாரண்யம் தண்டகாரண்யம் ஆத்மவான்
ததர்ச ராமோ துர்தர்ஷஸ் தாபஸாச்ரம மண்டலம்”–என்கிறார் வால்மீகி.

அந்த தண்டகாரண்யத்தில் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் புற்கள், மரவுரிகள் போன்றவை இருந்தன.
வேத ஒலி அங்கே ஒலித்துக் கொண்டே இருந்தது.
துஷ்ட மிருகங்கள் கூட பரஸ்பரம் துவேஷம் காட்டாமல் ஒற்றுமையாக அங்கே வாழ்ந்துவந்தன.
முனிவர்கள் உண்ணும் காய் கிழங்குகளையும், இனிய பழங்களையும் கொடுக்கும் பற்பல மரங்கள் அங்கே இருந்தன.
அங்கு வாழ்ந்துவந்த முனிவர்கள் யாவரும் ராமனின் அவதார ரகசியத்தை நன்கு அறிந்தவர்கள்.
அவர்கள் ராமன் வந்திருப்பதை அறிந்து, ராமன் சீதை லட்சுமணன் ஆகிய மூவரையும் எதிர்கொண்டு அழைத்து வரவேற்றார்கள்.
அப்போது ராமனின் திருமேனி அழகினாலே அத்தனை முனிவர்களும் ஈர்க்கப்பட்டு, வைத்த கண் வாங்காமல்
ராமனையே பார்த்துக்கொண்டு இருந்தார்களாம். அதை வால்மீகி,

“ரூபஸம்ஹனனம் லக்ஷ்மீம் ஸௌகுமார்யம் ஸுவேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:”–என்கிறார்.

இதில் முனிவர்களை ஈர்த்த ராமனின் அழகைப் பல கோணங்களில் வர்ணித்துக் காட்டியுள்ளார் வால்மீகி பகவான்.

*ரூப ஸம்ஹனனம் – ராமனுக்கு அருகில் வந்து, அவனது ஒவ்வோர் அவயவமாகப் பார்த்தால்,
திருமேனியின் ஒவ்வோர் அங்கமும் முழுமையான அழகோடு விளங்கும் தன்மை.
*லக்ஷ்மீம் – தூரத்தில் இருந்து ராமனைத் தரிசித்தால், மொத்த திருமேனியும் அழகு நிறைந்து திகழும் தன்மை.
*ஸௌகுமார்யம் – மென்மை.
*ஸுவேஷதாம் – ராமன் நாட்டில் இருந்தவரை பற்பல ஆபரணங்களாலே அவனது திருமேனி அழகு மறைக்கப்பட்டு விட்டது.
இப்போது அந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெறும் மரவுரியோடு ராமன் காட்டுக்கு வந்ததால்,
அவனது திருமேனி அழகு இப்போதுதான் நன்றாகப் பிரகாசிக்கிறது.
*தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாஸின:- பற்றுகளைத் துறந்த முனிவர்களே ராமனின் இத்தகைய அழகில் மயங்கி,
ஈடுபட்டு, ராமன் மீது யாருடைய கண் எச்சிலும் படக்கூடாதே என்று பல்லாண்டு பாடத் தொடங்கினார்கள்.

அதன்பின், ராமன், சீதை, லட்சுமணனைத் தங்களது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று இளைப்பாறச் செய்த முனிவர்கள்,
ராமனிடம் தங்களது பிரார்த்தனையை முன்வைத்தார்கள். “ராமா! நீ தர்மத்தைக் காப்பவன்! துன்பப்படும் முனிவர்களுக்கு ஒரே புகலிடம்!
எங்களுக்கு வணங்கத்தக்க தெய்வமும் நீயே! போற்றத்தக்க மன்னனும் நீயே! உனது அடியார்களான எங்களை
இந்த தண்டகாரண்யத்தில் வாழும் கொடிய அரக்கர்களிடம் இருந்து நீயே காத்தருள வேண்டும்!” என்று ராமனிடம் முனிவர்கள் பிரார்த்தித்தார்கள்.
(குறிப்பு: சரபங்க ஆசிரமத்தில் இருந்து ராமன் புறப்படும்போது ராமனிடம் சரணாகதி செய்த முனிவர்கள் வேறு.
ராமன் முதன் முதலில் தண்டகாரண்யத்துள் நுழையும் போது சரணாகதி செய்த முனிவர்கள் வேறு.)

“ரக்ஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்யபூதாஸ் தபோதனா:”

“உங்களது தவ வலிமையால் நீங்களே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொல்லி விடாதே ராமா!
நாங்கள் புலன்களை அடக்கிக் கடுந்தவம் புரிபவர்கள்! தவக்கேடு நேராமல் இருக்கக் கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பவர்கள்!
எனவே நாங்கள் அரக்கர்களுக்குச் சாபம் கொடுப்பதில்லை. நீதான் எங்களைக் காத்தருள வேண்டும்!” என்றும் அவர்கள் வேண்டினார்கள்.

“அஞ்ச வேண்டாம்! அரக்கர்களை அழித்து உங்களைக் காப்பேன்!” என்று அவர்களுக்கு உறுதி அளித்தான் ராமன்.
“வேறு ஏதாவது பிராத்தனை உள்ளதா?” என்று ராமன் கேட்க, “உன்னை ஆரத் தழுவிக் கொள்ள விரும்புகிறோம்!” என்றார்கள் முனிவர்கள்.

“இப்போது உங்களை நான் தழுவிக் கொள்வது பொருத்தமாக இருக்காது. அடியார்களோடு ஒருநீராகக் கலந்து பரிமாறவே
அடுத்து கண்ணனாக நான் அவதரிக்கப் போகிறேன். நீங்கள் அத்தனை பேரும் ஆயர்பாடியில் ஆயர்குலப் பெண்களாக வந்து பிறப்பீர்களாக!
நான் கண்ணனாக வந்து உங்களைத் தழுவிக்கொள்கிறேன்!” என்று அவர்களிடம் சொன்னான் ராமன்.

உலகப் பற்றுகளை எல்லாம் விட்ட முனிவர்களுக்குக் கூட ராமனின் அழகைக் காணும் போது அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும்
என்கிற அவா வருகிறதல்லவா? ‘நய:’ என்றால் தன்பால் இழுத்துக் கொள்பவர் என்று பொருள்.
தனது அழகாலும் குணங்களாலும் முனிவர்கள் உட்பட அத்தனை மக்களின் மனங்களையும் தன்னிடம் ஈர்த்துக் கொள்வதால்,
ராமன் ‘நய:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 400-வது திருநாமம்.
“நயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீராமன் தன்பால் ஈர்த்துக்கொள்வான்.

——–

401. அநயாய நமஹ:(Anayaaya namaha)

ராம ராவணப் போரின் இரண்டாம் நாள். ராவணனுக்கும் லட்சுமணனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
அப்போது பிரம்மா தந்த பாணத்தால் லட்சுமணனின் நெற்றியில் அடித்தான் ராவணன்.
அதனால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தான் லட்சுமணன். ஆனால் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த லட்சுமணன்,
தனது பாணங்களால் ராவணனின் பத்து வில்லையும் முறித்து, மேலும் மூன்று பாணங்களை ராவணன் மேல் வீசினான்.
லட்சுமணனின் பாணங்களால் தாக்கப்பட்டு ராவணன் மயங்கிக் கீழே விழுந்தான்.
சிறிது நேரம் கழித்து ரத்தத்தில் குளித்தவன் போல் எழுந்த ராவணன்,
பிரம்மா தந்த சக்தி ஆயுதத்தை லட்சுமணனின் மார்பை நோக்கி எய்தான்.

லட்சுமணன் அதைத் தடுப்பதற்காகப் பல பாணங்களை எய்த போதும், அந்தச் சக்தி ஆயுதத்தைத் தடுக்க முடியவில்லை.
அது நேராக லட்சுமணனின் மார்பில் பாய்ந்துவிட்டது. மயங்கிக் கிடந்த லட்சுமணனைப் பார்த்த ராவணன்,
“இவன் மிகப் பெரிய வீரனாகவும் பலசாலியாகவும் இருக்கிறான். இவன் மீண்டும் எழுந்து வந்தால்
நம்மையும் நமது சேனையையும் அழித்து விடுவான். எனவே மயங்கி இருக்கும் நிலையிலேயே இவனைச் சிறை
பிடித்துக் கொண்டு சென்று விடுவோம்!” என்று முடிவெடுத்தான்.

தனது இருபது கைகளாலும் லட்சுமணனைத் தூக்கப் பார்த்தான் ராவணன். என்ன ஆயிற்று?
வால்மீகி மற்றும் கம்பரின் வார்த்தைகளைக் கொண்டு அதை அனுபவிப்போம்:

“ஹிமவான் மந்தரோ மேருஸ் த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:”–என்கிறார் வால்மீகி.

இமயமலை, மந்தரமலை, மேருமலை ஆகிய மலைகளையும், மூன்று உலகங்களையும், ஒட்டு மொத்த தேவர்
களையும் தூக்கவல்ல ராவணனுடைய கரங்களால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை.

இதை அப்படியே கம்பர்,
“தொடுத்த எண்வகை மூர்த்தியைத் தூக்கி வெண்பொருப்பொடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையோன்”–என்று பாடுகிறார்.

ஏன் ராவணனால் லட்சுமணனைத் தூக்க முடியவில்லை?
“சக்த்யா ப்ராஹ்ம்யாபி ஸௌமித்ரிர் நாடிதஸ்து ஸ்தனாந்தரே
விஷ்ணோர் அசிந்த்யம் ஸ்வம் பாகம் ஆத்மானம் ப்ரத்யநுஸ்மரத்”–என்று வால்மீகியும்,

“அடுத்த நல்லுணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே!”–என்று கம்பரும்
இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

லட்சுமணன் ராவணனால் தாக்கப்பட்டு விழுந்து கிடப்பது வெறும் நாடகமே ஆகும்.
மனித சுவபாவத்தை அனுசரித்து அவதாரம் செய்திருப்பதால், மனித இயல்பை ஒட்டி மயங்கி இருப்பது போல் நடிக்கிறான் லட்சுமணன்.
உண்மையில் அவனது உள்ளுணர்வும் நல்லறிவும் நீங்கவில்லை. எனவே ராவணன் லட்சுமணனைத் தூக்க வரும் போது,
தானும் ராமனுடைய ஒரு பகுதியே என்று தியானித்தானாம் லட்சுமணன்.

தசரதன் செய்த வேள்வியில் கிடைத்த பாயசம் சாட்சாத் திருமாலின் வடிவம்.
அந்தப் பாயசத்தின் கால் பகுதியிலிருந்து தோன்றியவன் லட்சுமணன். அதனால் அவனுக்குள் திருமாலின் அம்சமும் உண்டு.
ஆதிசேஷன், திருமால் ஆகிய இருவரும் சேர்ந்த அவதாரமே லட்சுமணன். எனவே ராவணன் தன்னைத் தூக்கப் பார்த்த போது,
தன்னை ராமனின் ஒரு பகுதியாக நினைத்துக் கொண்டான் லட்சுமணன்.
அதனால் ராவணனால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. தீய சக்திகளாலும், ராவணனைப் போன்ற
அரக்கர்களாலும் ராமனை அசைக்கவே முடியாது என்பது தாத்பரியம்.

‘நய’ என்றால் இழுத்துக் கொள்ளுதல். ‘அநய:’ என்று இழுத்துக் கொள்ள முடியாதவர்.
தீய சக்திகளால் இழுக்க முடியாதவனாக, அசைக்க முடியாதவனாக ஸ்ரீ ராமன் திகழ்வதால், ‘அநய:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 401-வது திருநாமம்.“அநயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்,
என்றுமே தீய சக்திகளுக்கு வசப்படாமல் நல்வழியில் வாழ்வதற்கு ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

———

402. வீராய நமஹ:(Veeraaya namaha)

இரண்டாம் நாள் போரில், மாலைப் பொழுதில் நிராயுதபாணியாக நின்ற ராவணனைப் பார்த்து,
“இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்று ராமன் சொன்னவாறே, தலைகுனிந்த நிலையில் ராவணன்
போர்க் களத்தில் இருந்து தனது அரண்மனையை நோக்கி நடந்தான்.

“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டு போனான்”–என்று கம்பர் இக்காட்சியைப் பாடுகிறார்.

திக் கஜங்களாகிய எட்டு யானைகளை வென்ற ராவணனின் மார்பு, அனுமனால் தாக்கப்பட்டு வலிமை இழந்திருந்தது.
கைலாசத்தை ஆட்டிய ராவணனின் தோள்கள் லட்சுமணனைத் தூக்க முடியாமல் அவமானப்பட்டன.
நாரதருக்கு இணையாக வீணை வாசித்து, சாமகானம் செய்த ராவணனின் நாவால்,
இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்று ராமன் சொன்ன போது பதில் பேச முடியவில்லை.
ராவணனின் கர்வத்துக்கு அடையாளமாய் இருக்கும் பத்துக் கிரீடங்களும் ராம பாணங்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்து விட்டன.
சிவபெருமான் தந்த வாளையும் ராமன் பாணத்தால் உடைத்து விடுவானோ என அஞ்சி வாளையே ஒளித்து வைத்து விட்டான் ராவணன்.

இப்படி மார்பின் வலிமை, தோள் வலிமை, நா வன்மை, கிரீடங்கள், வாள் மட்டுமின்றி வீரத்தையும் போர்க்களத்திலே
விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் சென்றான் ராவணன்.
தேரில் ஏறிப் போர்க்களத்துக்கு வந்தவன் இப்போது தரையில் நடந்தபடித் திரும்புகிறான்.
திசைகளை எல்லாம் செருக்கோடு பார்த்தபடிப் போருக்கு வந்தவன், நிலத்தைப் பார்த்தபடி இலங்கை திரும்புகிறான்.
ராவணனின் பாட்டனான மால்யவான் என்ன ஆயிற்று என்று கேட்க,

அதற்கு ராவணன்,
“முப்புரம் முருக்கச் சுட்ட மூரி வெஞ்சிலையும் வீரன்
அற்புத வில்லுக்கு ஐய அம்பெனக் கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒருபொருள் இல்லை வேதம்
தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா!” என்று பதில் சொன்னான்.

“ஏதோ கூனி முதுகில் மண் உருண்டை எய்வது போல் அநாயாசமாகப் பாணங்களைத் தொடுத்து என்மீது எய்தான் ராமன்.
முப்புரங்களை எரிக்கப் பரமசிவன் பயன்படுத்திய வில்லைக் காட்டிலும் ராமனின் வில் வலிமை மிக்கது.
வேதமே பொய்த்தாலும், ராமனின் வில் பொய்க்காது. அவனது கரவேகமும் சரவேகமும் என் கண்ணில் நிற்கின்றன!” என்றான் ராவணன்.
அன்று இரவு முழுவதும் ராமனின் பாணங்களைப் பற்றிய எண்ணம் ராவணனை வாட்டியதாக வால்மீகி வர்ணிக்கிறார்.

“மாதங்க இவ ஸிம்ஹேன கருடேனேவ பன்னக:
அபிபூத: அபவத் ராஜா ராகவேண மஹாத் மனா”

சிங்கத்தால் தாக்கப்பட்ட யானை போலவும், கருடனால் தாக்கப்பட்ட பாம்பு போலவும்,
ராமனால் தாக்கப்பட்ட ராவணன் கொட்டம் அடக்கப்பட்டவன் ஆனான்.

“ப்ரஹ்மதண்ட ப்ரகாசானாம் வித்யுத் ஸத்ருச வர்சஸாம்ஸ்மரன் ராகவ பாணானாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:”

முனிவர்களின் சாபம் போல் தப்பாது பலன் தருவதும், வசிஷ்டரின் தண்டம் போல் மகிமை கொண்டதும்,
மின்னலைப் போல் ஒளிவீசுவதும், ஊழிக் கால நெருப்பு போல் வெப்பம் மிக்கதுமான ராம பாணத்தை நினைத்து நினைத்து,
மனம் வெம்பி மிகவும் வருந்தினான்.
அதன் பின்னர் தான், கும்பகர்ணனை எழுப்பிப் போருக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு வந்தான் ராவணன்.

இப்படி அரக்கர்களுக்கு அச்சத்தையும் நடுக்கத்தையும் தரக்கூடிய வீரம் மிக்கவனாக
ராமன் திகழ்வதால் ‘வீர:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘வீர:’ என்றால் அரக்கர்களுக்கு பயம் உண்டாக்கக் கூடிய வீரம் மிக்கவர் என்று பராசர பட்டர் விளக்கவுரை வழங்கியுள்ளார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 402-வது திருநாமம்.“வீராய நம:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்கள் வாழ்வில் வீரம் மிக்கவர்களாக விளங்கும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

————-

403. சக்தி மதாம் ச்ரேஷ்டாய நமஹ:(Shakthimathaam Sreshtaaya namaha)

சிவ தனுஸ்ஸை முறித்துச் சீதா தேவியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, அயோத்தி நோக்கி
ராமன் திரும்பி வந்த போது, அந்தப் பிரம்மாண்டமான கல்யாண ஊர்வலத்தைப் பரசுராமர் வழிமறித்தார்.
“ராமா! நீ சிவபெருமானின் வில்லை முறித்த செய்தியைக் கேட்டு மகேந்திர மலையில் இருந்து உன்னைத் தேடி வந்துள்ளேன்!
உன்னுடைய வலிமையைப் பரிசோதிக்க விழைகிறேன்! இதோ என்னிடம் உள்ள விஷ்ணுதனுஸ்ஸை வாங்கி நாண் ஏற்றிக் காட்டு!
அவ்வாறு நாண் ஏற்றினால் உன்னை வீரன் என ஏற்கிறேன்.
அதன்பின் நாம் இருவரும் மல்யுத்தம் செய்து யார் பலசாலி என்று முடிவு செய்து கொள்ளலாம்!
முதலில் என்னோடு மோத உனக்குத் தகுதி உள்ளதா இல்லையா என்பதை இந்த வில்லில் நாண் ஏற்றுவதன் மூலம் காட்டுக!”
என்று ராமனை நோக்கி முழங்கினார் பரசுராமர்.

பரசுராமர் முகத்தில் தீப்பிழம்பு போல் பொங்கி வரும் கோபத்தைக் கவனித்த தசரதன், நெஞ்சுருகிக் கைகூப்பி,
“முனிவர் பெருமானே! ராமன் தான் எனது உயிர்! அவன் இல்லாவிடில் நாங்கள் யாருமே வாழமாட்டோம்!
அவனைப் போய்ப் போருக்கெல்லாம் அழைக்காதீர்கள்!” என்று மன்றாடினான்.

ஆனால் பரசுராமர் அதைப் பொருட்படுத்தாமல், “ராமா! இந்த வில்லில் நீ நாண் ஏற்றினாயானால்,
என்னோடு மோதும் தகுதி உனக்கு உள்ளது என்று பொருள். அதன்பின் நாம் மோதலாம்!” என்றார்.

ராமன் தனது தந்தை தசரதனை வணங்கி விட்டு, பரசுராமரைப் பார்த்து, மெல்லிய குரலில்,
“நான் வீரம், ஆற்றல் இல்லாதவன் என எண்ணி ஏதேதோ பேசி விட்டீர்கள்.
எனது தேஜஸ்ஸையும் பராக்கிரமத்தையும் இப்போது காண்பீர்கள்!” என்று சொல்லிப் பரசுராமர் கையில் இருந்து
வில்லை வாங்கிக் கொண்டான்.அனாயாசமாக அதில் நாண் ஏற்றிய ராமன், அந்த வில்லில் அம்பையும் பூட்டி,
“பரசுராமரே! இந்த ராமன் ஒரு பாணத்தைப் பூட்டிவிட்டால், அது வீணாகக் கீழே விழுந்ததில்லை.
இப்போது நீங்கள் தந்த விஷ்ணு தனுஸ்ஸில் அம்பைப் பூட்டிவிட்டேன். இதை எய்வதற்கு ஓர் இலக்கு தாருங்கள்.
நீங்கள் எனது குருவான விச்வாமித்ர முனிவருக்கு உறவினர், வேதம் கற்றவர், தவம் புரிந்து உயர்ந்த முனிவர்.
உங்கள் மீது பாணம் போட எனக்கு விருப்பமில்லை. அதனால் பாணத்துக்கு வேறோர் இலக்கு தாருங்கள்!” என்று பரசுராமரிடம் சொன்னான்.

ராமனது சாகசத்தைக் கண்ட பரசுராமர், தனது பொலிவு, வீரியம், கர்வம் அனைத்தையும் இழந்தவராய்,
“ராமா! எனது தவ வலிமையையே இலக்காகத் தருகிறேன்!
உன் பாணத்தால் என் தவ வலிமையைத் தாக்கி எடுத்துக் கொள்!” என்றார். ராமனும் அவ்வாறே செய்தான்.
அதன்பின் ராமனிடம் இருந்து விடைபெறும் முன், பரசுராமர் ராமனைப் பார்த்து,
“ராமா! உன்னிடம் தோற்றதை அவமானமாக நான் எண்ணவில்லை. நீ பரமாத்மாவாகிய திருமாலின் பூரண அவதாரம்.
நான் அந்த இறைவனுடைய ஒரு சக்தியைக் குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெற்று வந்த ஆவேச அவதாரமே ஆவேன்.
பூரண அவதாரமான உன் முன்னே ஆவேச அவதாரமான என்னால் நிற்க முடியாது.

இந்த வில்லின் நாணை நீ ஏற்றியதன் மூலம் நீயே பரமாத்மா, திருமால் என்பதை உணர்ந்தேன்.
உனக்கு மங்கலம் உண்டாகுக.
வலிமை மிக்க தேவர்கள் அத்தனை பேரும் மொத்தமாக இணைந்து வந்தாலும் கூட உன்னை வெல்ல முடியாது.
இதோ தேவர்கள் கூடி வந்து உனது வீரத்தை வியந்து துதிக்கிறார்கள், பார்!
உனக்கு நிகரான வரும் இல்லை, உன்னை விட மேம்பட்டவரும் இல்லை!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

இதை வர்ணிக்கும் வால்மீகியின் சுலோகங்கள்:

“அக்ஷயம் மதுஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸுரோத்தமம்”
“ஏதே ஸுரகணாஸ் ஸர்வே நிரீக்ஷந்தே ஸமாகதா:
த்வாம் அப்ரதிம கர்மாணம் அப்ரதி த்வந்த்வம் ஆஹவே”

ஆக, வலிமை மிக்கவர்கள் என்று சொல்லப்படும் தேவர்களாலும் போற்றப் படுபவனாக,
வலிமை மிக்கவர்கள் அனைவரை விடவும் உயர்ந்த வலிமை மிக்கவனாக ராமன் விளங்குவதால்,
‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்று அழைக்கப் படுகிறான். ‘சக்திமான்’ என்றால் சக்தி மிக்கவன்.
‘சக்திமதாம்’ என்றால் சக்தி மிக்கவர்களுக்கு எல்லாம். ‘ச்ரேஷ்ட:’ என்றால் மிகப்பெரியவர், உயர்ந்தவர்.
‘சக்திமதாம் ச்ரேஷ்ட:’ என்றால் சக்திமான்களை விடவும் உயர்ந்த சக்தி மிக்கவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 403-வது திருநாமம்.
“சக்திமதாம் ச்ரேஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்ரீ ராமன் சக்தி கொடுத்தருள்வான்.

—————

404. தர்மாய நமஹ:(Dharmaaya namaha)

ஒரு வார காலம் நடைபெற்ற ராம ராவணப் போரின் ஐந்தாம் நாளில்,
லட்சுமணனுக்கும் ராவணனின் மகனான இந்திரஜித்துக்கும் கடும் போர் நடந்தது.
விபீஷணன் லட்சுமணனுக்கு உறுதுணையாக இருந்து, அவ்வப்போது இந்திரஜித் செய்யும் மாயங்களைப் பற்றிய
குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“இரவுப் பொழுது வந்து விட்டால் இந்திரஜித் பல மாயங்கள் செய்யத் தொடங்கி விடுவான்!
இப்போது பகல் வேளை! சூரியன் இருக்கும் போதே இவனை விரைந்து அழித்து விடுங்கள்!” என்று
லட்சுமணனுக்கு விபீஷணன் ஆலோசனை சொன்னான்.

அடுத்த நொடியே லட்சுமணனின் வில்லில் இருந்து பாணங்கள் மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து
இந்திரஜித்தின் சேனை, தேர்ப்பாகன், தேர், குதிரைகள் ஆகியவற்றை அழித்தன.
தேரை இழந்த இந்திரஜித், திடீரென வானில் மறைந்தான். மறைந்திருந்தபடி லட்சுமணன் மீது கல்மழை பொழியத் தொடங்கினான்.
இந்திரஜித் எங்கே ஒளிந்திருக்கிறான் என அறிய முனைந்த லட்சுமணன்,
வானில் அனைத்துத் திசைகளையும் நோக்கி அம்புகளைத் தொடுத்தான்.
ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமப் பெருமாளின் திருவடிகள் எப்படி அனைத்துத் திசைகளையும் வியாபித்ததனவோ,
அது போல் லக்ஷ்மணனின் பாணங்கள் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன.

வானில் ஒளிந்து கொண்டிருந்த இந்திரஜித்தை அந்த பாணங்கள் தாக்கியதால், அவனது உடலிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து வந்தது.
இருண்ட மேகத்துக்கு நடுவே செவ்வானம் தெரிவது போல், லட்சுமணன் வானில் வீசிய பாணங்களுக்கு மத்தியிலே
இந்திரஜித்தின் சிவந்த ரத்தம் சிந்துவதைக் கண்டான் லட்சுமணன்.

இதைக் கம்பர்,
“மறைந்தன திசைகள் எங்கும் மாறுபோய் மலையும் ஆற்றல்
குறைந்தனன் இருண்ட மேகக் குழாத்திடைக் குருதி கொள் மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான் காணா இனையதோர் நினைவதானான்”என்று பாடுகிறார்.

சிவந்த ரத்தம் வானில் இருந்து சிந்துவதைக் கொண்டு இந்திரஜித் ஒளிந்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான் லட்சுமணன்.
இந்திரஜித்தின் வில்லை முறிக்க நினைத்தான் லட்சுமணன்.
ஆனால் விபீஷணனோ, “இவன் சிவபெருமான் தந்த வில்லை ஏந்தி இருக்கிறான். அதை உடைப்பது கடினம்!”
என்று லட்சுமணனிடம் சொன்னான்.
அதைக் கேட்ட லட்சுமணன், வில்லைப் பிடித்திருந்த இந்திரஜித்தின் கையையே தனது பாணத்தால் அறுத்தெறிந்தான்.

கையிழந்த பின்னும் இந்திரஜித், “உன்னை அழிக்காமல் நான் மடியமாட்டேன்!” என்று லட்சுமணனை நோக்கிச் சபதம் செய்து,
காற்று, இடி, மின்னல் போல வடிவங்கள் கொண்டு மாயப் போர் புரிந்தான்.
அப்போது லட்சுமணன் தனது வில்லில் பாணத்தைப் பூட்டி, ஐந்த்ராஸ்திரத்துக்குரிய மந்திரத்தை ஜபித்து,

“தர்மாத்மா ஸத்யஸந்தச்ச ராமோ தாசரதிர் யதி
பௌருஷே சாப்ரதி த்வந்த்வ: சரைனம் ஜஹி ராவணிம்”
என்று சொல்லி அதை இந்திரஜித் மேல் ஏவினான்.

இதன் பொருள் – “தசரதனின் மகனான ஸ்ரீ ராமன், தருமமே வடிவெடுத்தவராகவும், வாய்மையைக் கடைபிடிப்பவராகவும்,
வீரத்தில் ஒப்பற்றவராகவும் இருப்பது உண்மையானால், ஏ பாணமே! நீ இந்திரஜித்தை அழித்துவிடு!

”ராமன் தர்மாத்மா என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியுமா லட்சுமணன் சொன்னபடியே அந்த பாணம் இந்திரஜித்தின் தலையை
அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. இங்கே ராமனை தர்மாத்மா என்று இரண்டு காரணங்களால் குறிப்பிட்டிருக்கிறான் லட்சுமணன். ஒன்று,
தர்மாத்மா என்றால் அறநெறியே வடிவெடுத் தவர் என்று பொருள்.
மற்றொரு பொருள் என்னவென்றால், வடமொழி இலக்கணப்படி ‘தாரணாத் தர்ம:’ என்று சொல்வார்கள்.
எல்லாவற்றையும் எது தாங்கி நிற்கிறதோ அதற்குத் தருமம் என்று பெயர்.
(தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – அறத்தைத் தாங்குவோரை அறம் தாங்கும் என்ற ரீதியில் தான் அறநெறியும் தர்மம் என்றழைக்கப்படுகிறது.)
செல்வச் செழிப்பு முதல் முக்தி வரை அனைத்து நன்மைகளையும் தந்து அனைவரையும் தாங்கி நிற்பவன் ஸ்ரீ ராமன்.
அந்தக் காரணத்தாலும் அவனை தர்மாத்மா என்று இங்கே லட்சுமணன் சொல்லி இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் செல்வச் செழிப்பு, முக்தி உள்ளிட்ட அனைத்து வித நன்மைகளையும் அருளி,
அனைவரையும் தாங்கி நிற்பதால், (‘தாரணாத் தர்ம:’ – தாங்கி நிற்பவர்க்கு தர்மம் என்று பெயர்)
ராமன் ‘தர்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘தர்ம:’ என்றால் (இவ்விடத்தில்) தாங்கி நிற்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 404-வது திருநாமம்.
(ராமன் அறநெறிகளைக் கடைப்பிடித்ததால், தர்ம: என்று அழைக்கப்படுவதாக இங்கே பொருள் உரைக்கலாமே என ஐயம் எழலாம்.
ஆனால் ராமன் அறநெறி வழுவாது இருக்கும் பண்பு அடுத்த திருநாமத்தில் சொல்லப் படுகிறது.)
‘‘தர்மாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஸ்ரீ ராமன் என்றென்றும் தாங்கி நிற்பான்.

————–

405. தர்மவித்-உத்தமாய நமஹ: (Dharmavidh-uthamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
இலங்கை அசோக வனத்தில் சீதா தேவியைத் தரிசித்த அனுமன், தன்னை ராமதூதன் என்று
அடையாளப் படுத்திக்கொள்ளும் பொருட்டு, முதலில் ராமனின் வரலாற்றைப் பாடினார்.
அதைத் தொடர்ந்து, ராமனுடைய அங்க அடையாளங்களைச் சொன்னார்.
பின், சீதைக்கும் ராமனுக்கும் மட்டுமே தெரிந்த சில ஏகாந்தமான குறிப்புகளைத் தெரிவித்தார்.

அதன்பின் ராமபிரானுக்கே விசேஷமாக இருக்கும் பெருமைகளைப் பட்டியலிட்டார்.
ராமன், மொத்த உலகங்களையும் காப்பவர். தன்னைச் சார்ந்தவர்களையும் நன்கு காப்பவர்.
தமது கடமையையும், அறத்தையும் என்றும் விடாமல் காப்பவர். தீயவர்களான எதிரிகளை அழிப்பவர்.
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் நியாயத்துக்கும் தருமத்துக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி செய்பவர் ஸ்ரீராமன்.
அவர் ஒளிமிக்கவர், அனைவராலும் பூஜிக்கத் தக்கவர். மனதையும் புலன்களையும் நன்றாக அடக்கி வைப்பதில் உறுதி மிக்கவர்.
நல்லோர்களுக்கு உதவியாளர். எல்லாவிதச் செயல்களையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் மிக்கவர். ராஜநீதியில் வல்லவர்,
வேதம் வல்லார்களைப் போற்றித் துதிப்பவர். சாஸ்திரங்கள் கூறும் கருத்துகளைக் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்.
அடக்கம் மிக்கவர். அதே நேரம், மக்களுக்கு ஆபத்து வரும்போது போர் புரிந்து எதிரிகளை வீழ்த்தும் வீரமும் ஆற்றலும் கொண்டவர்.

“யஜுர்வேத வினீதச்ச வேதவித்பிஸ் ஸுபூஜித:
தனுர்வேதே ச வேதேஷு வேதாங்கேஷு ச நிஷ்டித:”

அனைத்து வேதங்களிலும், வேத அங்கங்களிலும், வில் வித்யையிலும் வல்லவராக இருக்கும் ஸ்ரீராமனை வேதங்களைக் கற்றுணர்ந்த
எல்லாப் பெரியோர்களும், தருமம் அறிந்த நல்லோர்களும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.
இப்படிப்பட்ட பல அடையாளங்களை உரைத்த பின், ராமனின் முத்திரை மோதிரத்தை முக்கிய அடையாளமாக
அனுமன் சீதையிடம் காட்டித் தான் ராமதூதன் என்பதை நிரூபித்தார்.
இங்கே, அனுமன் ராமனுக்குரிய பெருமைகளைச் சொல்லும் போது, அதன் முக்கியப் பகுதியாக ‘
வேதம் அறிந்தோர்களும், தருமம் அறிந்தோர்களும் ராமனைப் பூஜிப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே வால்மீகி ராமாயணத்தின் தொடக்கத்திலும், நாரதர்ராமனின் குணங்களை வால்மீகிக்கு எடுத்துரைக்கும்போது,

“ஸர்வதாபிகதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி:” என்கிறார்.
நதிகள் எல்லாம் எப்படிக் கடலை நோக்கிப் போகின்றனவோ, அதுபோல், சான்றோர்கள் அனைவரும் தருமத்தின்
நுட்பங்களைக் கேட்டு அறிவதற்காக ராமனை நாடி வருவார்கள் என்பது இதன் பொருளாகும்.
கிஷ்கிந்தா காண்டத்திலும் ராமபாணத்தால் தாக்கப்பட்டுக் குத்துயிரும் கொலை
யுயிருமாக விழுந்து கிடந்த வாலியைக் காண வந்த வாலியின் மனைவி தாரை, ராமனைத் தரிசித்தவாறே,
மனத்தூய்மை பெற்று ராமனைத் துதித்தாள்:

“த்வம் அப்ரமேயச்ச துராஸதச்ச
ஜிதேந்த்ரியச்ச உத்தம தார்மிகச்ச
அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச்ச
க்ஷிதிக்ஷமாவான் க்ஷதஜோபமாக்ஷ”

இதிலும் ‘உத்த தார்மிக:’ என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் தாரை. உத்தம தார்மிக: என்றால்
தர்மம் அறிந்தவர்களுள் உயர்ந்தவர் என்று பொருள். “ஒருபுறம் சரணடைந்த சுக்ரீவனுக்கும் நன்மை செய்தீர்கள்.
மறுபுறம் என் கணவர் வாலியின் மீது பாணம் எய்தி, அதனால் அவரது பாபங்களைப் போக்கி அவருக்கும் நற்கதி தந்து விட்டீர்கள்.
இப்படி தருமப்படி அவரவருக்குச் சேர வேண்டியதைச் சரியாகத் தந்த உத்தம தார்மிகர் நீங்கள்!” என்று ராமனிடம் சொல்கிறாள் தாரை.

இப்படி அறநெறிகளை நன்றாக அறிந்து பின்பற்றிய ராமன், அறத்தின் வழி வாழ நினைப்போர்க்கு முன்மாதிரியாகவும்,
அறத்தை அறிந்த சான்றோர்களால் போற்றப்படுபவனாகவும் விளங்குவதால், ராமன் ‘தர்மவித் உத்தம:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘தர்மவித்’ என்றால் தர்மம் அறிந்தவர் என்று பொருள்.
‘உத்தம:’ என்றால் (இவ்விடத்தில்) தலைவர். (தர்மவித்+உத்தம:)
‘தர்மவிதுத்தம:’ என்றால் தர்மம் அறிந்தவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 405-வது திருநாமம்.
“தர்மவிதுத்தமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும்
அறவழியில் நிலைத்திருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

—————

406. வைகுண்டாய நமஹ:(Vaikuntaaya namaha)

ராமன் வனவாசத்துக்காக அயோத்தியை விட்டுப் புறப்பட்ட போது, அயோத்தியில் உள்ள மக்கள் எல்லோரும்
எல்லையில்லாத் துயரத்தில் மூழ்கினார்கள். சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமன் அயோத்தியை விட்டு நீங்கும்
அக்காட்சியைக் காணும் போது, உயிரை இழந்த உடல்போல் மொத்த அயோத்தி நகரும் வாடிக் கிடந்தது என்கிறார் கம்பர்.
“ஓவில் நல்லுயிர் உயிர்ப்பினோடு உடல்பதைத்து உலைய மேவு தொல்லழகு
எழில்கெட விம்மல் நோய் விம்ம தாவில் ஐம்பொறி மறுகுறத் தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அவ்வயோத்தி மாநகரம்”
கன்றை விட்டுப் பிரிந்த தாய்ப்பசு கதறி அழுவது போல் அயோத்தியில் உள்ள பெண்களெல்லாம் கதறி அழுதார்கள்.

வேதியர்கள் அக்னிஹோத்ரம் போன்ற வைதிகச் சடங்குகளைச் செய்யவில்லை.
எந்த வீட்டிலும் உணவு சமைக்கப் படவில்லை. சூரியன் கூட ராமன் வனம் செல்வதைக் காண மனமில்லாமல் மறைந்து விட்டான்.
மாலைப்பொழுது வந்ததை வால்மீகியும் கம்பரும் தற்குறிப்பேற்ற அணியால் இப்படித் தெரிவித்துள்ளார்கள்.
மனிதர்கள் மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே ராமனைப் பிரிந்து வாடியதாக
வால்மீகி பகவான் தெரிவிக்கிறார்.

“வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்
புத்ரம் ப்ரதமஜம் லப்த்வா ஜனனீ நாப்யனந்தத”

பாம்புகள், தாங்கள் உண்ட உணவை வெளியே கக்கி விட்டன. பசுக்கள் கூடத் தங்கள் கன்றுகளுக்குப் பாலூட்டவில்லை.
முதல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் கூட அக்குழந்தையைப் பார்த்து மகிழவில்லை.
மேலும், “கோசல தேசம் கைகேயியுடையதாக ஆகி விட்டதால், இனி இதில் வாழ வேண்டாம்!
ஒன்று காட்டில் ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்து அவனது திருவடிவாரத்தில் வாழ்வோம்!
இல்லாவிட்டால் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வோம்!” என்று மக்கள் பேசிக் கொண்டதாக வால்மீகி கூறுகிறார்.

“தே விஷம் பிபதாலோட்ய க்ஷீணபுண்யாஸ் ஸுதுர்கதா:
ராகவம் வா அனுகச்சத்வம் அச்ருதிம் வாபி கச்சத”

இப்படி மக்கள் கதறி அழுது கொண்டிருக்க அயோத்தி மாநகரம் நீரில்லாத கடல்போல் ஆனது.
ஆடல், பாடல், வாத்தியம், திருவிழா ஏதுமில்லாமல் வெறிச்சோடிப் போனது.
இச்சம்பவங்களில் இருந்து அயோத்தி மக்கள் ராமபிரான் மேல் எவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்கள்
என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா?
இத்தகைய அடியார்கள் தன்னை விட்டுப் பிரிந்து தவிப்பதைப் பார்த்து ராமனும் பொறுத்திருக்க மாட்டான்.

தேவகாரியமான ராவண வதத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால்,
ராமன் வனவாசம் மேற்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேநேரம், நாட்டில் தன்னைப் பிரிந்து வாடும் பக்தர்களைத் தேற்ற வேண்டும் என்றும் கருதிய ராமன்,
தனது பிரதிநிதியாகத் தன் பாதுகையைப் பரதனிடம் தந்து அனுப்பி வைத்தான்.
அந்தப் பாதுகா தேவி பட்டாபிஷேகம் செய்து அயோத்தியை ஆள்கையில்,
ராம ராஜ்ஜியத்தில் இருப்பது போன்ற உணர்வு அயோத்தி மக்களுக்கு ஏற்பட்டது.

பாதுகையைத் தந்ததோடு அயோத்தி மக்களை ராமன் அப்படியே கைவிடவும் இல்லை.
தேவ காரியமான ராவண வதம் ஆனபின், மக்கள் விரும்பிய படியே அயோத்திக்குத் திரும்பி வந்த ராமன்
சீதையோடு சேர்ந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டு சிம்மாசனத்திலே வீற்றிருந்து
அவர்கள் விரும்பிய ராமராஜ்ஜியத்தை அருளினான்.

‘குடி’ என்றால் தடை என்று பொருள், இங்கே இறைவனை அடைவதற்குத் தடையாக இருப்பவற்றை ‘குடி’ என்ற சொல் குறிக்கிறது.
அடியார்கள் தன்னை அடைய விடாமல் தடுக்கும் தடைகளாகிய ‘குடி’களைத் தனது பாதுகை மூலமாகவும்,
ஸ்ரீசீதா ராம பட்டாபிஷேகம் மூலமாகவும் தகர்க்கும் ராமன்,
தன் அடியார்களை ‘விகுண்ட:’ – ‘குடி’ (தடை) இல்லாதவராக – ஆக்கி விடுகிறான்.
இறையநுபவத்தில் தடையில்லாத அந்த விகுண்டர்களின் தலைவனான ராமன் ‘வைகுண்ட:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘வைகுண்ட:’ என்றால் தன் அடியார்கள் தன்னை அடையவிடாது தடுக்கும் தடைகளைத் தகர்ப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 406- வது திருநாமம்.
“வைகுண்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஏற்படும் தடைகளை ஸ்ரீராமன் தகர்த்தெறிவான்.

————–

407. புருஷாய நமஹ: (Paravhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
ராஜா, ராமனாக அயோத்தியை ராமன் ஆண்டு வந்த காலம். ஒருமுறை ராமனைச் சந்தித்த தேவர்கள்,
“அகத்திய முனிவரின் தபோவனத்தைத் தரிசிப்பதற்காக நாங்கள் எல்லோரும் செல்கின்றோம்.
பன்னிரண்டு வருட காலம் தண்ணீருக்குள்ளே தவம் செய்து வந்த அகத்திய முனிவர், தனது தவத்தை நிறைவு செய்து விட்டார்.
அவரைத் தரிசிக்க நீங்களும் வாருங்கள்!” என்று அழைத்தார்கள்.

அதை ஏற்ற ராமன், புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு அகத்தியரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றான்.
தேவர்கள் பலவித விமானங்களில் ராமனைப் பின் தொடர்ந்து அகத்தியரின் ஆசிரமம் நோக்கிச் சென்றார்கள்.
ராமனையும் தேவர்களையும் அகத்திய முனிவர் வரவேற்றார். அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்களை எல்லாம் செய்தார்.
அகத்தியரை வணங்கி விட்டு தேவர்கள் எல்லோரும் தங்கள் தேவலோகத்துக்குத் திரும்பி விட்டார்கள்.
அதன்பின் ராமன், தனியாக அகத்தியரை அடிபணிந்தார்.

அகத்தியர் ராமனைப் பார்த்து, “புருஷோத்தமா! நீ இங்கே எழுந்தருளியது அடியேனுக்கு மிகப்பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன்.
எண்ணிலடங்காத மங்கல குணங்கள் நிறைந்த உன்னை எப்போதும் என் உள்ளத்தில் வைத்து ஆராதித்து வருகிறேன்.
தேவர்கள் சென்று விட்டார்கள், ராமா! நீ இப்போது செல்ல வேண்டாம்!
இன்று இரவு என்னுடன் இங்கே தங்கி விட்டு நாளை போகலாம்!” என்றார்.
மேலும், விஸ்வகர்மா தயாரித்த மிக உயர்ந்த ஓர் ஆபரணத்தை ராமனுக்குப் பரிசாக வழங்கினார் அகத்தியர்.
அதன்பின் அகத்தியருடன் ராமனும், மாலை செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தைச் செய்தான்.
பல விதக் காய், கிழங்குகள், கீரை வகைகள் நிறைந்த விருந்தை ராமனுக்கு அளித்தார் அகத்தியர்.
அதைத் தேவாமிருதமாகக் கருதி அமுது செய்த ராமன், அன்றிரவு அகத்தியரின் ஆசிரமத்திலேயே பள்ளி கொண்டார்.

காலை எழுந்து நீராடி, சந்தியாவந்தனம் உள்ளிட்ட கடமைகளை நிறைவு செய்த ராமன், அகத்தியரிடம் இருந்து
விடைபெற்றுக் கொண்டு புறப்பட எண்ணினான். அகத்தியரை அடிபணிந்து, “உங்களது தரிசனத்தால் அடியேன் தன்யன் ஆனேன்!
மீண்டும் உங்களைத் தரிசிக்க விழைகிறேன்! இப்போது அடியேன் எனது நகரத்துக்குப் போக அனுமதி
அளித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.
இதைக் கேட்ட அகத்தியர்,“அத்யத்புதம் இதம் வாக்யம் தவ ராம சுபாக்ஷரம்பாவனஸ் ஸர்வபூதானாம் த்வம் ஏவ ரகுநந்தன”
(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-9)“ராமா! என்ன விசித்திரமான வார்த்தையைப் பேசுகிறாய்?
அடியேனைத் தரிசிப்பது உனக்கு பாக்கியமா? நீ சாட்சாத் திருமால் என்பதை அடியேன் அறிவேன்.
உனது எளிமையால் உன்னைத் தாழ விட்டுக் கொண்டுஎங்களுடன் நீ கலந்து பழகுகிறாய்.
உண்மையில், அனைத்து உயிர்களுக்கும் தூய்மை அளிப்பவன் நீயே!”

“ஈத்ருசஸ்த்வம் ரகுச்ரேஷ்ட பாவனம் ஸர்வ தேஹினாம்
புவி த்வாம் கதயந்தோபி ஸித்திம் ஏஷ்யந்தி ராகவ”
(வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் 82-12)

“நீ அனைவரையும் தூய்மையாக்குபவனாக இருப்பதால் தான், உனது கதையை ஒருமுறை கேட்பவர் கூட
அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபட்டு, தூயவராகி முக்தி அடைந்து விடுகிறார்.
நீ அடியேனின் குடிலுக்கு வந்தது அடியேனின் பாக்கியம். மீண்டும் மீண்டும் வருகை தந்து அடியேனைத் தூய்மை
ஆக்கி அருள்புரிய வேண்டும்!” என்று ராமனிடம் பிரார்த்தித்து அவனுக்கு விடைகொடுத்தார்.
அகத்தியர் கூறிய படி, தூய்மையானவனாகவும், தன்னைச் சார்ந்தோரைத் தூய்மை ஆக்குபவனாகவும்
ஸ்ரீராமன் திகழ்வதால், ஸ்ரீராமன் ‘புருஷ:’ என்றழைக்கப்படுகிறான்.

‘புருஷ:’ என்பதற்கு (இவ்விடத்தில்) பாபங்களால் தீண்டப்படாது, தூய்மையாக இருந்து
பிறரையும் தூய்மை ஆக்குபவர் என்று பராசர பட்டர் பொருள் உரைத்துள்ளார் –
‘ஸ யத் பூர்வோஸ்மாத் ஸர்வஸ்மாத் பாப்மன: ஓஷ: தஸ்மாத் புருஷ:’
‘புருஷ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 407-வது திருநாமம்.“புருஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் பாபங்களைப் போக்கி அவர்கள் என்றும் தூய்மையாக இருக்கும்படி ராமன் அருள்புரிவான்.

—————

408. ப்ராணாய நமஹ:(Praanaaya namaha)
தசரதனுடைய அரண்மனைக்கு வந்த விஷ்வாமித்ர முனிவர், “மன்னா! நான் சித்தாசிரமத்தில் ஒரு வேள்வி செய்யப் போகிறேன்.
அதற்கு மாரீசன், சுபாகு என்னும் இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட உள்ளது.
எனவே, அவர்களைத் தடுத்து என் வேள்வியைக் காக்கும் பொருட்டு உன் மகன் ராமனை
என்னோடு அனுப்பி வைப்பாயாக!” என்று தசரதனைப் பார்த்துச் சொன்னார்.

அதைக் கேட்டவாறே நடுங்கிப் போன தசரதச் சக்கரவர்த்தி, “முனிவரே! தங்களுக்கு எல்லாப் பணிவிடைகளும்
செய்யக் காத்திருக்கும் தொண்டன் அடியேன். உங்கள் வேள்வியைப் பாதுகாக்க என் மொத்த சேனையோடு நானே வருகிறேன்.
ஆனால், என் ராமனைக் கேட்காதீர்கள்! அவன் பதினாறு வயது கூட நிரம்பாத சிறு குழந்தை!
அவனுக்கு அரக்கர்களுடன் போரிடத் தெரியாது!” என்று கெஞ்சினான்.
மேலும், “ராமன் தான் எனது உயிர். என் உயிரையே கேட்டாலும் தந்து விடுகிறேன்.
ஆனால், ராமனை மட்டும் என்னால் கொடுக்க முடியாது!” என்று கதறி மூர்ச்சையானான்.

தசரதன் தெளிந்து எழுந்தவாறே விஷ்வாமித்ரர், “மன்னா! ராமனின் பெருமையை நீ அறிய மாட்டாய்! நான் தான் அறிவேன்!
ராமன் மஹாத்மா, மாறாத பராக்கிரமம் கொண்டவன். தசரதா! உன் குருவான வசிஷ்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்!
நான் சொன்னது சரி என்று அவரும் ஏற்பார்!” என்று கூறினார்.
வசிஷ்டரும் தசரதனிடம், “உன் மகனின் நன்மைக்காகத் தான் அவர் அழைக்கிறார்.

நீ நிச்சயமாக ராமனை, அவரோடு அனுப்பி வைக்கலாம். ராமனுக்கு அவரால் பல நன்மைகள் நடக்கப் போகின்றன!” என்றார்.
குருவின் வாக்கை மீறலாகாது என்பதால், தசரதன் ராமனை விஷ்வாமித்ரரோடு அனுப்பச் சம்மதித்தான்.
லக்ஷ்மணன் ராமனை விட்டுப் பிரியாதவன் என்பதால், அவனும் ராமனைப் பின்தொடர்ந்து சென்றான்.
இப்படி விஷ்வாமித்ரரோடும், லக்ஷ்மணனோடும் தன்னை விட்டு ராமன் பிரிந்து செல்லும் காட்சியைக் கண்ட தசரதன்,
தன் உயிர் தன் உடலை விட்டுப் பிரிந்து செல்வதைத் தானே தன் கண்ணால் பார்ப்பது போல் உணர்ந்தானாம்.

இதைக் கம்பர்,
“அன்ன தம்பியும் தானும் ஐயனாம்
மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டால் என
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல்
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்”
என்று பாடுகிறார்.

காவியக் கவிஞர் திரு.வாலி அவர்கள், சமீபத்தில் ஒரு பேட்டியில், கம்பரின் இப்பாடலைத் தழுவியே,
“தன் உயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை – நான் என் உயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்”
என்ற பாடலைத் தான் இயற்றியதாகக் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

அவ்வாறே ராமன் சீதையோடும், லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் செல்லும் வேளையிலும்,
அக்காட்சியைக் கண்ட தசரதன்,
“ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி ந நிவர்ததே
ந த்வா பச்யாமி கௌஸல்யே ஸாது மா பாணினா ஸ்ப்ருச”

“கௌசல்யா! என் கண் ராமனைப் பின் தொடர்ந்து சென்று விட்டது! என் உயிரும், அவனைப் பின்
தொடர்ந்து செல்வதாகவே உணர்கிறேன். ராமன், பின் சென்ற என் கண்ணும், உயிரும் என்னிடம் திரும்ப வரவில்லை!” என்று
புலம்புவதாக வால்மீகி, அயோத்தியா காண்டத்தில் வர்ணித்துள்ளார்.
இவ்வாறு தசரதன் போல் தன்னிடம் அன்பு பூண்டவர்கள் எல்லோர்க்கும் ராமன் தானே உயிர்மூச்சாக இருப்பதால்,
ஸ்ரீராமன் ‘ப்ராண:’ என்று அழைக்கப்படுகிறான். ‘ப்ராண:’ என்றால் உயிர்மூச்சாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 408-வது திருநாமம். “ப்ராணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
ராமனே உயிர்மூச்சாக இருந்து அவர்களைக் காத்தருள்வான்.

—————-

409. ப்ராணதாய நமஹ:(Praanadhaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
வடமொழியில், வால்மீகி பகவான் இயற்றிய 24,000 சுலோகங்கள் கொண்ட மத் ராமாயணத்தின் அடிப்படையில்,
தமிழில் 10,000 பாடல்கள் கொண்ட ராமாவதாரம் என்னும் நூலைக் கம்பர் இயற்றினார்.
நாம் இன்று கம்ப ராமாயணம் என்று குறிப்பிட்டாலும், நூலாசிரியரான கம்பர், ராமாவதாரம் என்று இந்நூலுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.
கம்பர் தாம் இயற்றிய ராமாயணத்தை ராமனால் பூஜிக்கப்பட்ட, ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளியிருக்கும் திருவரங்கத்தில்
அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதனால், திருவரங்கத்தில் உள்ள குருமார்களை அண்டினார்.
அந்த குருமார்கள், “கவியே! தமிழகத்தில் இப்போது ரங்கம், சிதம்பரம் என இரண்டு பெரும் தலங்கள் உள்ளன.
சைவத்துக்குச் சிதம்பரம், வைணவத்துக்கு ஸ்ரீரங்கம். முதலில், சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்து
அவர்களுக்கு நீங்கள் எழுதிய காவியத்தை வாசித்துக் காட்டி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று வந்தால்,
மேற்கொண்டு ரங்கத்தில் இக்காவியத்தை அரங்கேற்றம் செய்ய ஆவன செய்வோம்!” என்றார்கள்.

அதனால், தனது காவிய ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார் கம்பர்.
அங்கே ஆறு மாதங்கள் தங்கிப் பல முயற்சிகள் எடுத்த போதும், கம்பரால் அங்குள்ள மூவாயிரம் தீட்சிதர்களைச் சந்தித்துத்
தனது காவியத்தை வாசித்துக் காட்டி அங்கீகாரம் பெற முடியவில்லை. மிகவும் மனம் வெறுத்துப் போன கம்பர்,
ஒருநாள் மாலை தில்லை கோவிந்த ராஜப் பெருமாளைத் தரிசித்து, “கோவிந்தராஜா! இதே தில்லை நகர்த் திருச்சித்திரகூடத்தைப்
பாடும் போது தான் ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள், பத்தே பாடல்களில் உன் ராமாவதார வரலாற்றை அமுதத் தமிழில் வடித்தார்.
அதைத் தழுவியே பத்தாயிரம் பாடல்களாக உன் வரலாற்றைத் தமிழில் பாடியுள்ளேன். இது அரங்கேற வேண்டும் என்று நினைத்தால்,
நாளைக்குள் ஆவன செய்வாயாக! இல்லாவிடில் இந்த ஓலைச் சுவடிகளைத் தீயில் போட்டு நானும் தீக்குளிப்பேன்!” என்றார் கம்பர்.

மறுநாள் விடியற்காலை கம்பர் கனவில், சுடுகாட்டில் பிணம் எரியும் காட்சி தெரிந்தது.
இறைவன் நம்மை அங்கீகரிக்கவில்லை போலும் என்று கருதிய கம்பர், தன் நூலை எரித்து விட்டுத் தானும்
தீக்குளிக்கச் சுடுகாட்டை நோக்கி ஓடினார். அங்கே பார்த்தால் ஆச்சரியம்! மூவாயிரம் தீட்சிதர்களும் சுடுகாட்டில் கூடி இருக்கிறார்கள்!
அவர்களுள் ஒருவரின் ஐந்து வயது சிறுவன் பாம்பு தீண்டி இறந்து விட்டதால், துக்கம் தாளாமல் பிரிந்திருந்த அத்தனை பேரும்
ஒரே இடத்தில் சுடுகாட்டில் கூடிவிட்டார்கள். இதுவே சந்தர்ப்பம் என்று கருதிய கம்பர்,
ஸ்ரீராமாயணத்தை வாசித்துக் காட்ட அனுமதி கோரினார். துக்கத்தில் இருந்த அவர்கள், கோபம் கொண்டு, “
என்ன பெரிய ராமாயணம் எழுதியுள்ளாய்? இதைப் பாடினால் இறந்த குழந்தை எழுந்தா வரப்போகிறது?” என்று கேட்டார்கள்.
கவிஞனுக்கே உரிய கருவத்தோடு கம்பர், “நிச்சயம் எழும்!” என்றார். பாடுங்கள் என்றார்கள் தீட்சிதர்கள்.

கம்பர் பாடத் தொடங்கினார். பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம்
நிறை வடைந்து யுத்த காண்டம் வந்தது. இந்திரஜித்தின் நாகபாசத்தால் கட்டப்பட்டு கம்ப ராமாயணத்தின் படி
லக்ஷ்மணனும் மொத்த வானர சேனையும் விழுந்து கிடக்கிறார்கள்.
அப்போது, வானிலே பொன் மலை இறக்கை கட்டி வருவது போல் கருடன் தோன்றினார்.

கருடனின் திருமேனி ஒளிபட்டவாறே, நாக பாசங்கள் அனைத்தும் நீங்கி, விழுந்தவர்கள் அத்தனை பேரும் எழுந்தார்கள்.
இதை வர்ணிக்கும் விதமாக,
“வாசம் கலந்த மறைநாள நூலின் வகை என்பது என்னை மழையென்று
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சரராமன் வெண்ணை அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம்முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் என்று பாடினார் கம்பர்.
சடையப்ப வள்ளல் வீட்டு வாசலில் வந்து நிற்போரின் பசி பறந்தோடுவது போல், கருடனின் ஒளிபட்டு
நாகபாசம் பறந்தோடியது என்று உவமை கூறுகிறார்.

இப்பாடலைப் பாடியவாறே, அந்தச் சிறுவனைப் பிடித்திருந்த நாகபாசம் விலகியது, அவன் மீண்டெழுந்தான்.
ஸ்ரீ ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து தீட்சிதர்களும் அங்கீகரித்தார்கள். பின் திருவரங்கத்தில் வாழ்ந்த குருமார்களின்
அங்கீகாரமும் பெற்றுக் கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்ததாக வரலாறு.
பாம்பு தீண்டி இறந்த அச்சிறுவனுக்கு உயிர்தந்தது போலவே, இறந்தவருக்கும் உயிரளிக்கும் தெய்வமாக
ஸ்ரீராமன் திகழ்வதால், ‘ப்ராணத:’ என்று ஸ்ரீ ராமன் அழைக்கப்படுகிறான்.
‘ப்ராணத:’ என்றால் உயிர் தந்து காப்பவர் என்று பொருள். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 409-வது திருநாமம்.
“ப்ராணதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை உயிர்காக்கும் தெய்வமான
ஸ்ரீ ராமன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வான்.

——-

410. ப்ரணமாய நமஹ: (Pranamaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ராமனின் சரித்திரம்)

ராமனைக் காட்டுக்குப் போகாதே என்று சொல்லிப் பலவாறு தடுத்துப் பார்த்தாள் கௌசல்யா தேவி.
ஆனால், தந்தையின் வாக்கை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதிலே ராமன் உறுதியாக இருப்பதை
நன்கு உணர்ந்து கொண்ட அவள், ராமபிரானுக்கு மங்கலம் பாடி வழியனுப்பி வைக்கிறாள்.
அதை வால்மீகி பகவான் மத் ராமாயணத்தின் அயோத்தியா காண்டம் 25ம் சர்கத்தில் வர்ணித்துள்ளார்.

ராமா! எந்த தர்மத்தை நீ இத்தனை நாட்களாகக் காத்து வருகிறாயோ,அந்த தர்மம் துணைநின்று உன்னைக் காக்கட்டும்.
வேள்விச் சாலைகளில் நீ எந்தெந்த முனிவர்களை எல்லாம் வணங்கி இருக்கிறாயோ, அந்த முனிவர்கள் காட்டில் உனக்குத் துணை நிற்கட்டும்.
விச்வாமித்ரர் அருளிய தெய்வீகமான படைக்கலங்கள் உனக்குத் துணையாக இருக்கட்டும்.
பெற்றோர் மனம் கோணாத படி நீ செய்த பணிவிடைகள் உன்னைக் காக்கட்டும்.நீ காத்து வரும் சத்தியம் உன்னைக் காக்கட்டும்.

அரக்கர்கள், பிசாசுகள், குரங்குகள், கொசுக்கள், காட்டு ஈக்கள், மலைப் பாம்புகள், புழுக்கள், யானைகள், சிங்கங்கள்,
புலிகள், காட்டு எருமைகள், பேய் பிசாசுகள் உனக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.
மங்கலம் பகவான் விஷ்ணுர் மங்கலம் மதுஸூதன, மங்கலம் புண்டரீகாக்ஷோ மங்கலம் கருடத்வஜ:- திருமால் உனக்கு அனைத்து
வித மங்கலங்களையும் தந்து காத்தருளட்டும்.
இவ்வாறு ராமனுக்கு ஆசீர்வாதம் செய்து, விசல்யகரணி என்ற மூலிகையை ராமன் கையில் ரட்சையாகக் கட்டி வழியனுப்பினாள் கௌசல்யா தேவி.

மேலே சீதையிடம் செய்தி சொல்லி விட்டுக் காட்டுக்குப் புறப்படலாம் என்ற திருவுள்ளத்தோடு கௌசல்யாவின்
மாளிகையை விட்டு வெளியேறினான் ராமன். ராமன் வனவாசம் செல்லப் போகிறான் என்ற செய்தி
அதற்குள் ஊர் முழுதும் பரவியிருந்த படியால், ராமன் வெளியே வந்தவாறே ஊர்மக்கள் அத்தனை பேரும்
ராமனை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். கண்களில் நீர்மல்க, முகம் வாட, உடல்சோர பட்டுப் போன மரம் போல்
மக்கள் ராமனைச் சுற்றி நின்றிருந்தார்கள், ராமனை விழுந்து வணங்கினார்கள்.

கௌசல்யாவின் மாளிகையில் இருந்து சீதையின் மாளிகையை நோக்கி ராமன் செல்ல, மக்களும் செய்வதறியாது
ராமனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள்.
இந்த மக்கள் ராமன் மீது இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்துள்ளமைக்கு எது காரணம்?
வால்மீகி பகவான் அயோத்தியா காண்டம் 26ம் சர்கம் 2ம் ஸ்லோகத்தில் காரணம் சொல்கிறார்:

“விராஜயன் ராஜஸுதோ ராஜமார்கம் நரைர்வ்ருதம்
ஹ்ருதயானி மமந்தேவ ஜனஸ்ய குணவத்தயா”

ராஜவீதிக்குத் தன் திருமேனி ஒளியால் ஒளி சேர்த்தபடி ராமன் செல்ல, மக்கள் எல்லாரும் பின் தொடர்ந்து சென்றார்கள். ஏன்?
தனது குணங்களால் அனைத்து மக்களின் உள்ளங்களையும் கடைந்து எடுத்துக் கொள்ளை கொண்டு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல், மக்கள் மனங்களைத் தன் குணங்களால் கடைந்து
அவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறான் ராமன். அதனால் தான் எந்த ஒருவருமே ராமனைக் கண்ட மாத்திரத்தில்
தம்மை அறியாமல் விழுந்து நமஸ்கரித்து விடுவார்களாம்.
ஏனெனில், ராமனைத் தரிசித்த மாத்திரத்தில், அவனது குணங்கள் நமது உள்ளத்தைக் கடைந்து ஈர்த்து விடும்.

இப்படித் தன் குணங்களால் எல்லோரையும் கவர்ந்து எல்லோராலும் வணங்கப்படுபவனாக ராமன் திகழ்வதால்,
‘ப்ரணம:’ என்று ராமன் அழைக்கப்படுகிறான்.
‘ப்ரணம:’ என்றால் எல்லோரையும் வணங்க வைப்பவர் என்று பொருள்.
ராமனைப் பொறுத்த வரை, அவன் தனது இறைத்தன்மையைக் காட்டிப் பிறர் தன்னை வணங்கும்படிச் செய்வதில்லை.
மாறாகத் தன் குணங்களால் அனைவரையும் ஈர்த்து அவர்கள் தன்னைவணங்கும்படிச் செய்து விடுகிறான்.
இவ்வாறு அனைவராலும் வணங்கப்படும் ராமன் ‘ப்ரணம:’ – அது தான் ஸஹஸ்ரநாமத்தின் 410-வது திருநாமம்.
“ப்ரணமாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், உரிய இடத்தில் உரிய நேரத்தில்
உரிய மரியாதைகளைப் பெற்று விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

———–

411. ப்ருதவே நமஹ: (Pruthave namaha)
ராமனுடன் நட்பு பூண்ட சுக்ரீவன், ராமனின் உதவியோடு வாலியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றான்.
ராம லக்ஷ்மணர்களையும் தனது வானர அமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு வாலியின் இருப்பிடமான
கிஷ்கிந்தையை அடைந்தான் சுக்ரீவன். “அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று உரத்த குரலில் வாலியைப் போருக்கு அழைத்தான்.

கடும் கோபத்துடன் போருக்கு வந்த வாலி, சுக்ரீவனைப் பலவாறு தாக்கினான். ஒரு மரத்தின் பின் மறைந்திருந்து
வாலி மேல் பாணம் எய்வதாகச் சுக்ரீவனிடம் சொல்லி இருந்த ராமன், வாலி மீது பாணத்தை எய்யவில்லை.
குத்துயிரும் கொலையுயிருமாக அடிபட்டு ரத்தம் கக்கியபடி திரும்பி வந்தான் சுக்ரீவன்.
நூலிழையில் உயிர் பிழைத்து வந்த சுக்ரீவனைப் பார்த்து ராமன், “சுக்ரீவா! நீயும் வாலியும் உருவத்தில்
ஒத்தவர்களாக இருக்கிறீர்கள். அதனால் யார் வாலி, யார் சுக்ரீவன் என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.

இதோ! என் தம்பி லக்ஷ்மணன் உன் கழுத்தில் கஜபுஷ்பி என்னும் மலர்மாலையை அணிவிப்பான்.
இதைக் கொண்டு நான் உன்னை அடையாளம் கண்டுகொள்வேன். இப்போது போருக்குச் செல்!” என்றான் ராமன்.
லக்ஷ்மணன் அணிவித்த கஜபுஷ்பி மாலையுடன் மீண்டும் போருக்கு வந்தான் சுக்ரீவன்.
“அடேய் வாலி! போருக்கு வாடா!” என்று மீண்டும் அழைத்தான்.
அந்தக் குரலைக் கேட்டவாறே, வாலியின் குடிமயக்கம் நீங்கியது. கடும் கோபம் முளைத்தெழுந்தது.

தான், எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியாலும் பூமி நடுங்கும்படி சுக்ரீவனை நோக்கி நடக்கத் தொடங்கினான் வாலி.
அப்போது வாலியின் மனைவியான தாரை, வாலியைத் தடுத்தாள். “சுவாமி! இப்போது தான் உங்களால் புடைக்கப்பட்டுத்
தோல்வி அடைந்து உயிர்பிச்சை வாங்கிக் கொண்டு ஓடி இருக்கிறான் சுக்ரீவன்.
அவன் மறுபடியும் போர் புரிய அழைக்கிறான் என்றால் நாம் சற்று யோசிக்க வேண்டும்.
அவன் ஏதோ ஒரு பெரிய துணையோடு வந்திருக்க வேண்டும்.
நம் மகன் அங்கதன் அவனது நண்பர்கள் மூலம் ஒரு செய்தி அறிந்து வந்து என்னிடம் சொன்னான்.

இட்சுவாகு குலத்தில் உதித்த அயோத்தி மன்னரின் புதல்வர்களான ராம லக்ஷ்மணர்களோடு சுக்ரீவன் நட்பு கொண்டிருக்கிறானாம்.
அதிலும் ராமர் உலகப் பிரசித்தி பெற்ற தலைசிறந்த வீரர் ஆவார். போரில் அவரது பராக்கிரமத்துக்கு எல்லையே இல்லை.
ஊழிக் காலத் தீ போல் எதிரியின் ஆற்றலை மொத்தமாக அழிக்க வல்லவர் அவர். நல்லவர்களைக் காக்கும்
கற்பக மரம் போன்றவர் அவர். இடருற்றவர்கள் அத்தனை பேருக்கும் மேலான புகலிடம் அவர். திக்கற்றவர்களுக்குச் சிறந்த காவலர் அவர்.
புகழுக்கு உரிய பாத்திரமாகத் திகழ்பவர். இதைத் தெரிவிக்கும் வால்மீகியின் ஸ்லோகம்:

“நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூனாம் ஆபந்நானாம் பரா கதி:
ஆர்த்தானாம் ஸம்ச்ரயச்சைவ யசஸச்சைக பாஜனம்”

எப்போது அந்த ராமர் சுக்ரீவனோடு நட்பு கொண்டிருக்கிறாரோ, அவன் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று பொருள்.
ராமர் இருக்கும் பக்கம் தான் வெற்றியும் இருக்கும்.
எனவே ராமனிடம் நட்பு கொண்ட சுக்ரீவனை எதிர்த்து இப்போது போர் புரியச் செல்லாதீர்கள்.
அந்த ராமரோடு நீங்களும் நட்பு கொண்டு விடுங்கள். ராமனைச் சரணடைவதே உங்களுக்குச் சிறந்த நன்மையைத் தரும்!”
என்றெல்லாம் பலவாறு அறிவுரை சொன்னாள். அவற்றை மீறிப் போருக்குச் சென்ற வாலி தனது முடிவைச் சந்தித்ததை நாம் அறிவோம்.

இங்கே ராமனைத் தாரை குறிப்பிடும்போது, “யசஸச்சைக பாஜனம்” என்று குறிப்பிடுவதாக வால்மீகி காட்டுகிறார்.
“யசஸச்சைக பாஜனம்” என்றால் புகழுக்கு உரிய ஒரே பாத்திரமாக இருப்பவர் என்று பொருள்.
அயோத்தியில் எழுந்தருளியிருந்த ராமனின் பெருமைகள் கிஷ்கிந்தையில் வாழும் வானரப் பெண்ணான தாரை வரை,
அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறதல்லவா?
அப்படி எல்லோராலும் நன்கு அறியப்பட்ட புகழோடு ராமன் விளங்குவதால் தான் ராமன் ‘ப்ருது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ப்ருது:’ என்றால் புகழால் உயர்ந்து நிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 411-வது திருநாமம்.
“ப்ருதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பேரோடும் புகழோடும் பெருமை பெற்று விளங்கும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

———–

412. ஹிரண்யகர்ப்பாய நமஹ: (Hiranyagarbhaaya namaha)

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப் பிரம்மம் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள்,
ராமபிரான் மீது அபார பக்தி கொண்டிருந்தார். அவர் திருப்பதியில் இருந்து திருவொற்றியூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தார்.
அவரது சீடர்கள் அவரைப் பல்லக்கில் சுமந்தபடி அழைத்துச் சென்றார்கள்.
கோவூர் சுந்தர முதலியார் என்னும் பெரியவர், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தியாகராஜ சுவாமிகள் எந்தச் செல்வத்தையும் ஏற்க மாட்டார் என்பதால், தியாகராஜரின் சீடர்களிடம்
சில தங்கக் காசுகளைக் கொடுத்து அனுப்பி இருந்தார் அவர்.
தியாகராஜரைப் பல்லக்கில் சுமந்தபடி சீடர்கள் செல்லும்போது, காட்டுப் பாதை வழியே பயணிக்க வேண்டிய சூழல் வந்தது.
காட்டுக்குள் நுழையச் சீடர்கள் அஞ்சினார்கள். அப்போது தியாகராஜர்,
“மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? நம்மிடம் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்றார்.

சீடர்களும் கோவூர் சுந்தர முதலியார் கொடுத்த செல்வத்தைப் பற்றி, அதுவரை தியாகராஜரிடம் தெரிவிக்கவில்லை.
இறைவன் மீது பாரத்தைப் போட்டு விட்டுக் காட்டுப் பாதையில் செல்லத் தொடங்கினார்கள்.
நடுக் காட்டில் அவர்கள் பயணிக்கும் போது சில திருடர்கள் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள்.
திருடர்களைக் கண்டு அஞ்சிய சீடர்கள், தியாகராஜ சுவாமிகளிடம்,
“குருவே! திருடர்கள் நம் பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள்!” என்று சொன்னார்கள்.
“நம்மிடம் தான் எந்தச் செல்வமும் இல்லையே! நாம் ஏன் அஞ்ச வேண்டும்?” என்று கேட்டார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது வேறு வழியில்லாமல் உண்மையைச் சொன்னார்கள் சீடர்கள். அதற்கும் தியாகராஜர் கலங்கவில்லை.
“இந்தச் செல்வத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. ராமனுக்காகத் தானே பயன்படுத்தப் போகிறோம்?
அப்படியானால் இது ராமனுடைய செல்வம்!அவனது செல்வத்தைக் காத்துக் கொள்ள அவனுக்குத் தெரியும்!
நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம்!” என்றார். அந்த நடுக்காட்டில்,
திருடர்களால் சூழப்பட்ட நிலையில், ‘முந்து வேனுக…’ என்று தொடங்கும் ஒரு கீர்த்தனையை தர்பார் ராகத்தில்
ஸ்ரீராமனைக் குறித்து இயற்றிப் பாடினார் தியாகராஜர். அவர் பாடிய அளவில், அந்தத் திருடர்கள் அத்தனை பேரும்
தியாகராஜ சுவாமிகளின் பாதங்களில் வந்து விழுந்து விட்டார்கள்.
“என்ன ஆயிற்று?” என்று திருடர்களைப் பார்த்துக் கேட்டார் தியாகராஜர்.
“சுவாமி! இரண்டு இளைஞர்கள் கையில் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டு உங்கள் பல்லக்கைச் சுற்றிச் சுற்றி
வருவதை நாங்கள் கண்டோம். அந்த இருவரும் எங்களைத் தாக்க முற்பட்டார்கள்.
அவர்களின் கால்களில் நாங்கள் போய் விழுந்தோம். உங்கள் காலில் விழுந்தால் உயிர் பிழைக்கலாம் என்று
அந்த வில் பிடித்த இளைஞர்கள் கூறினார்கள். அதனால் தான் உங்கள் கால்களில் வந்து விழுந்து விட்டோம்!” என்று சொன்னார்கள் திருடர்கள்.

தன்னைக் காப்பதற்காக, வில்லும் அம்பும் கையில் ஏந்தி சாட்சாத் ராமனும் லக்ஷ்மணனுமே வந்திருக்கிறார்கள் என்பதை
உணர்ந்து பக்திப் பரவசத்தில் பூரிப்படைந்தார் தியாகராஜ சுவாமிகள். ராமனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
இதன்மூலம் நாம் அறியும் செய்தி என்னவென்றால், ராமனின் அவதாரக் காலம் மட்டுமின்றி,
அதற்குப் பிற்பட்டவர்கள் ராமனைத் தியானித்து வணங்கினாலும், அவர்களையும் தேடி வந்து அருள்புரிபவனாக
ஸ்ரீராமன் விளங்குகிறான். அதனால் தான் ராமனுக்கு ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று திருநாமம்.

இங்கே, ‘ஹிரண்ய’ என்பது இனிமையான இதயத்தைக் குறிக்கிறது, அதாவது, ராம பக்தர்களின் இனிய இதயங்கள்.
அந்த இதயங்களிலே மனத்துக்கு இனியவனாக எப்போதும் ஸ்ரீராமன் குடியிருப்பதால், ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘கர்ப்ப’ என்றால் உள்ளே வசிப்பவர். இனிய இதயங்களுக்குள்ளே வசிப்பவர்
‘ஹிரண்யகர்ப்ப:’; அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 412-வது திருநாமம்.
“ஹிரண்யகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம் மனங்களிலும் ராமன் வந்து குடிகொண்டு ஆனந்தம் தருவான்.

—–

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமாவதாரத்தின் மூலம் ஸ்ரீராமன்
நமக்கு உணர்த்தும் வேதாந்த தத்துவத்தை சுவாமி வேதாந்த தேசிகன்,
சங்கல்ப சூரியோதயம் என்னும் காவியத்தில் தெரிவிக்கிறார்:

“தர்ப்போதக்ர தசேந்த்ரியானன மனோ நக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மின் பவஸிந்துனா பரிகதே தீனாம் தசாம் ஆஸ்தித:
அத்யத்வே ஹநுமத் ஸமேன குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்
லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேன லாலப்யதே”

ராமன் தான் பரமாத்மா.
மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி பிறவிப் பிணியில் சுழலும் ஜீவாத்மாவின் பாத்திரத்தை ஏறிட்டுக்கொள்கிறாள்.
கடல்சூழ்ந்த இலங்கையே பிறவிப் பெருங்கடல். அசோக வனமே நம் உடல்.
சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவிடம் இருந்து பிரித்து,
பிறவிப் பிணியாகிய இலங்கையில் உடலாகிய அசோகவனத்தில் ராவணன் சிறைவைத்துள்ளான்.
இந்த ராவணன்தான் நம் மனமும் பத்து இந்திரியங்களும்
மனதுக்குப் பத்து இந்திரியங்கள் தலைபோன்றவை.
மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, கை, கால், மலத்துவாரம், ஜலத்துவாரம் ஆகிய பத்து இந்திரியங்களோடு
கூடிய மனமே பத்து தலைகொண்ட ராவணன் ஆவான்.
இந்த மனமும் புலன்களும் சேர்ந்து தான் ஜீவாத்மாவைப் பிறவித்துயரில் அழுத்தி
இறைவனை அடையவிடாமல் தடுக்கின்றன. இந்த மனம், புலன்களை மூன்று குணங்கள் பாதிக்கின்றன.

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவையே அந்த மூன்று குணங்கள்.
சத்துவ குணமே சாந்தமான விபீஷணன். ரஜோகுணம் தான் காமம், கோபம் நிறைந்த சூர்ப்பணகை.
தமோ குணம் தான் சோம்பலில் ஆழ்ந்த கும்பகர்ணன். ராவணன் என்னும் மனமும் புலன்களும் விபீஷணனாகிய
சத்துவ குணத்தை விரட்டிவிட்டு, சூர்ப்பணகை கும்பகர்ணனாகிய ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றைத்
தன்னுடன் வைத்துக்கொள்வதாலே, ஜீவாத்மாவாகிய சீதை மேலும் துன்புறுகிறது.

இந்நிலையில், பரமாத்மாவாகிய ராமனை அடைய வேண்டும் என்று ஜீவாத்மாவாகிய சீதை தவிக்கும்போது,
பரமாத்மாவான ராமன், ஆஞ்ஜநேயரை அனுப்பி வைக்கிறார். அந்த ஆஞ்ஜநேயர் தான் குரு,
ஆசார்யன். இறைவன் எல்லாச் சமயங்களிலும் நேராக வருவதில்லை, குருவை அனுப்பிவைத்து,
குருவருளின் மூலம் திருவருள் நமக்குக் கிட்டும்படிச் செய்கிறான்.
ஆஞ்ஜநேயர் சீதையைக் கண்டுபிடித்து, ராமாயணம் பாடியது போல்,
ஆசார்யன் ஜீவாத்மாவுக்கு இறைவனின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.

ஆஞ்ஜநேயர், ராமனின் முத்திரை மோதிரத்தைச் சீதைக்கு வழங்கியது போல்,
ஆசார்யன் சீடனாகிய ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளைத் தோளில் பொறிக்கிறார்.
நிறைவாக, அனுமன் இலங்கையை எரித்தது போல், பிறவிப் பிணியையே எரிக்கிறார் ஆசார்யன்.
அதன்பின் ராமனைத் தன் தோளில் சுமந்தபடி இலங்கைக்கு அனுமன் அழைத்து வந்ததுபோல்,
நம்மைக் காக்கும் பொருட்டு இறையருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் ஆசார்யன்.

அனுமனின் துணையோடு ராமன் இலங்கையில் உள்ள மொத்த அரக்கர்களையும் அழித்தது போல்,
ஆசார்யன் துணையோடு இறைவன் ஞானம் என்னும் அம்பை எய்து நமது மொத்தப் பாபங்களையும் அழித்து விடுகிறான்.
அனுமன் சீதா-ராமர்களை இணைத்து வைத்தது போல், ஆசார்யன் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார்.

இதே கருத்தை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையில் உள்ளது.

“தசேந்த்ரியானனம் கோரம் யோ மனோ ரஜனீசரம்
விவேக சர ஜாலேன சமம் நயதி யோகினாம்”-என்ற ஸ்லோகம் தெரிவிக்கிறது.

இப்படி ஆத்மாவுக்கு எதிரிகளாக இருக்கும் பாபங்களையும், தறிகெட்டு ஓடும் புலன்களையும்
ஞானம் என்னும் அம்பால் வீழ்த்தி வெல்வதால், ஸ்ரீராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சத்ருக்ன:’ என்றால் எதிரிகளை அழிப்பவர்.
தறிகெட்டு ஓடும் மனம், புலன்கள் மற்றும் பாபங்களாகிய எதிரிகளை அழிப்பதால் ராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 413-வது திருநாமம்.
[ராமனின் தம்பிக்கு சத்ருக்னன் என்ற திருப்பெயர் இருப்பதற்கான காரணம் வேறு, அதை இத்துடன் குழப்பிக் கொள்ளலாகாது.]
“சத்ருக் னாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பாபங்களையும் ஸ்ரீராமன் போக்கி அருள்வான்.

—————

414. வ்யாப்தாய நமஹ: (Vyaapthaaya namaha)

ராமனைப் பலரும் பலவிதமாக அழைப்பார்கள். தந்தை தசரதன் “ராமா!” என்று வாயார அழைப்பார்.
‘ராம:’ என்றால் மனத்துக்கு இனியவன் என்று பொருள்.

தசரதனின் மனத்துக்கு இனிய குழந்தையாக ராமன் விளங்கியபடியால் “ராமா!” என்று அழைப்பார் தசரதன்.

அன்னை கௌசல்யா தேவி, “ராமபத்ரா!” என்று ராமனை அழைப்பாளாம். பத்ரம் என்றால் மங்கலம்.
உனக்கு என்றென்றும் மங்கலம் உண்டாகட்டும் என்று ராமபிரானை வாழ்த்தும் த்வனியில் “ராமபத்ரா!” என்றழைப்பாள் கௌசல்யை.

சிற்றன்னை கைகேயி “ராமச்சந்திரா!” என்று ராமனை அழைப்பாளாம்.
ராமனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த கைகேயிக்குக் குளிர்நிலவாக ராமன் ஒளிவீசியதால்,
அந்த அழகை ஆசையோடு அனுபவித்து, “ராமச்சந்திரா!” என்பாள் அவள்.

குருவான வசிஷ்டர் ராமனை “வேத:” என்று அழைப்பாராம்.
‘வேதஸ்’ என்றால் அனைத்து வேதங்களிலும் வல்லவர் என்று பொருள்.
திருமாலின் அவதாரமான ராமன் இயல்பாகவே அத்தனை வேதங்களின் விழுப்பொருளையும் அறிந்திருந்தபடியால்,
அதை உணர்ந்துகொண்ட வசிஷ்டரும் “வேத:!” என்று ராமனை அழைப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

அயோத்தி மக்கள் ராமனை “ரகுநாதா!” என்று அழைப்பார்கள்.
ரகு குலத்துக்கு நாதனாக, ரகு குலத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராமன் அவதரித்தான் அல்லவா?
அதைக் கொண்டாடும் பொருட்டு, “ரகுநாதா!” என்று அயோத்தி மக்கள் அழைப்பது வழக்கம்.

சீதா தேவியோ, “நாதா!” என்று ராமனை அழைப்பாள்.
தான் ராமன்மேல் வைத்திருக்கும் அன்பு, காதல், பக்தி, மரியாதை, அக்கறை அனைத்தும் கலந்த குரலில்
“நாதா!” என்று சீதை அழைக்கையில் இருவரும் பரஸ்பரம் கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தை உணர முடியும்.

மிதிலை தேசத்து மக்கள் ராமனைக் குறிப்பிடுகையில், “சீதாபதி” என்று குறிப்பிடுவார்களாம்.

தங்கள் தேசத்தில் தோன்றிய சீதையை மணந்து கொண்டு மிதிலைக்கு மாப்பிள்ளை ஆனவர்
என்பதை உணர்த்தும் வகையில் சீதாபதி என்பார்கள். இவற்றை இணைத்துத்தான்,

“ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா பதயே நமஹ:”

என்று ஒரு ஸ்லோகம் ராமனைக் குறித்துப் பிரசித்தமாகச் சொல்வார்கள்.

கௌசல்யாவின் அரண்மனையில் பணிபுரிந்து வந்த வயதான காவலாளி ஒருவர்,
கௌசல்யாவைப் போலவே “ராமபத்ரா!” என்று ராமனை அவனது இளம் பிராயத்தில் அழைத்து வந்தார்.
பின்னாளில் ராமன் பட்டாபிஷேகம் செய்துகொண்ட பின், ராமனை அவர் பார்த்த போது,
“சக்கரவர்த்திக்கு வணக்கம்!” என்று சொன்னார். அதைக் கேட்டு ராமன் கோபித்துக்கொண்டான்.

“பெரியவரே! நீங்கள் முன்பு போல் ஆசையுடன் ராமபத்ரா என்று என்னை அழைத்தால் தான் எனக்கு மகிழ்ச்சி.
ஊராருக்கு வேண்டுமானால் நான் சக்கரவர்த்தியாக இருக்கலாம்.
உங்களுக்கு என்றுமே உங்கள் ராமபத்ரன்தான் நான்!” என்று ராமன் சொல்ல,
அவரும் “ராமபத்ரா!” என்றே ஆசையுடன் ராமனை அழைத்தாராம்.

ஆக, சக்கரவர்த்தியாக விளங்கும்போது கூட உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழை-பணக்காரர், கற்றவர்-கல்லாதவர்,
இளையவர்-முதியவர் என எந்த வேறுபாடும் பாராது அத்தனை பேரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டி,
அயோத்தியில் வாழும் ஒவ்வொருவருமே எங்கள் வீட்டுப் பிள்ளை என்று
ராமனை அபிமானிக்கும் படி ராமன் வாழ்ந்தான் என்பதற்கு இது ஒரு சான்று.

இவ்வாறு எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரிடமும் அன்பு காட்டி, அன்பு நிறைந்தவனாக ராமன் திகழ்ந்தபடியால்,
ஸ்ரீராமன் ‘வ்யாப்த:’ என்று அழைக்கப்படுகிறான். ‘வ்யாப்த:’ என்றால் நிறைந்தவர்.
அன்பர்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் நிறைந்திருப்பதால் ராமன் ‘வ்யாப்த:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 414-வது திருநாமம்.
“வ்யாப்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ராமன் தனது அன்பு மழையால் நனைப்பான்.

—————

415. வாயவே நமஹ: (Vaayave namaha)

சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற நிலையில், அவளைத் தேடிக்கொண்டு வந்த ராமனும், லக்ஷ்மணனும்
வழியில் கபந்தன் என்ற அரக்கனை வதைத்தார்கள்.
ராமனின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற கபந்தன், கந்தர்வ வடிவம் பெற்று ராமனைத் துதித்தான்.
தனது இறைத்தன்மையை வெளிக்காட்ட விரும்பாத ராமன், மனித சுவபாவத்தை அனுசரித்து,
கபந்தனிடம், “சீதையைத் தேடுவதற்கு ஏதாவது வழிகூற வேண்டும்!” என்று கேட்டான்.
சற்று ஆலோசித்த கபந்தன், ரிஷ்யமுக மலையில் வாழும் சுக்ரீவன் மற்றும்
அவனைச் சார்ந்த வானரர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தினான்.

மேலும், ரிச்யமூக மலைக்குச் செல்லும் வழியை அறிவதற்கு, மதங்க முனிவருடைய ஆசிரமத்தில் வசிக்கும்
சபரி என்ற வேடுவப் பெண்ணின் உதவியை நாடுமாறும் கூறினான்.
இவ்வாறு சொல்லிவிட்டுத் தேவலோகம் சென்றான் கபந்தன்.
அவன் சொன்னபடி மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தவம்புரிந்து கொண்டிருந்த சபரியைத் தேடி வந்தான் ராமன்.
ராம லக்ஷ்மணர்களைத் தரிசித்த சபரி ஆனந்தத்தின் எல்லையை அடைந்தாள்.

“ஆண்டவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவிக் கண்ணள்
மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்”–என்று அந்த ஆனந்தத்தைக் கம்பர்வர்ணிக்கிறார்.

இரு கண்களில் இருந்தும் அருவி போல் கண்ணீர் பெருகி வர, ராமனைப் பார்த்து,
“எனது பிறவித் தளை இன்றோடு நீங்கி விட்டது. இத்தனை நாட்கள் அடியேன் புரிந்த தவத்தின் பலன்
குருவின் அருளால் இன்று கிட்டிவிட்டது!” என்று ராமனை நோக்கிச் சொன்னாள்.

“நீ என்ன தவம் புரிந்தாய்? அதற்கு என்ன பலன் கிடைத்தது?” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் ராமன்.
அதற்கு சபரி, “இங்கே வாழ்ந்து வந்த மதங்கர் உள்ளிட்ட முனிவர்களுக்கு அடியேன் பணிவிடைகள் செய்து வந்தேன்.
அந்த முனிவர்கள் அடியேனுக்கு ராம நாமத்தை உபதேசம் செய்து அதை ஜபிக்கச் சொன்னார்கள்.
இந்த ராம நாமத்தின் பொருள் என்ன என்று அடியேன் கேட்ட போது,
இதை நீ ஜபித்துக் கொண்டே இருந்தால் இதன் பொருள் உன்னைத் தேடி வரும் என்று சொன்னார்கள்.

இப்போது அந்த ராம நாமத்தின் பொருளான நீயே அடியேனைத் தேடி வந்து
விட்டாயே! அடியேன் உன்னை நாடி வரும்படி வைக்காமல் நீயே என்னைத் தேடி
வந்தாயே! இதுவல்லவோ உன் கருணையின் சிறப்பு!” என்று ராமனைக் கொண்டாடினாள்.

அதன்பின் ராமனுக்குச் சமர்ப்பிப்பதற்காகத் தான் ஆசையோடு சேகரித்து வைத்திருந்த பழங்களை
ராமனுக்குச் சமர்ப்பித்தாள் சபரி. அதை ஆசையோடு வாங்கி ராமன் அமுதுசெய்து மகிழ்ந்ததை,

“மாங்கனி தாழையின்காய் வாழையின் கனிகளோடும்
ஆங்கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன்
பாங்கினில் அமுது செய்மின் என்றவள் பரிவில் நல்கும்
தேங்கனி இனிதின் உண்டு திருவுளம் மகிழ்ந்த வீரன்”–என்று கம்பர் பாடுகிறார்.

அதன்பின் சபரி காட்டிய வழியில் சுக்ரீவனை நோக்கிப் பயணித்தான் ராமன்.
ஆக, குகன், சபரி, சுக்ரீவன் போன்ற அடியார்கள் யாருமே தன்னைத் தேடி வர வேண்டாதபடி
அவர்களைத் தானே தேடிச் சென்று அருள்புரிகிறான் ராமன் என்று ராமாயணத்தில் காண்கிறோம் அல்லவா?
அதனால்தான் ராமன் ‘வாயு:’ என்று அழைக்கப்படுகிறான்.

‘வாயு:’ என்றால் பயணிப்பவர் என்று பொருள்.
எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பதால், காற்றுக்கும் ‘வாயு:’ என்று பெயர்.
ராமன் தனது அடியார்களின் இருப்பிடத்தைத் தேடிப் பயணிப்பதால்,
(அடியார்களின் இருப்பிடத்தைத் தேடி அவனே வந்துவிடுவதால்) ‘வாயு:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 415-வது திருநாமம்.
“வாயவே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களைத் தேடிச் சீதாராமன் நிச்சயம் வருவான்.

—————

416. அதோக்‌ஷாஜாய நமஹ: (Adhokshajaaya namaha)

ராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு, பெரும் ஊர்வலமாக மிதிலையிலிருந்து
அயோத்திக்குத் திரும்பி வரும் வேளையில், சில சுப நிமித்தங்களும் சில அசுப நிமித்தங்களும் தென்பட்டன.
அவற்றைக் கவனித்த தசரதன், வசிஷ்டரிடம் அவை குறித்து வினவினான்.
அதற்கு வசிஷ்டர், “மன்னா! பறவைகள் வானில் பயங்கரமாகக் கூவுவதால், ஏதோ அசுபம் நடக்கப் போகிறது.
ஆனால் பூமியில் மிருகங்கள் நம்மை வலம் வருவதால், அந்த அசுபம் விரைவில் விலகப் போகிறது!” என்று சொன்னார்.

அப்போது பெருங்காற்று வீசியது, நிலம் நடுங்கியது, மரங்கள் சாய்ந்தன. சூரியனை இருள் சூழ்ந்தது.
திசை எங்கும் புழுதி பரவியது. தசரதன், தசரதனின் மகன்கள், வசிஷ்டர், சில முனிவர்களைத் தவிர
மீதமுள்ளோர் எல்லோரும் மயங்கி விழுந்துவிட்டார்கள்.

தோளில் கோடாரியோடும் கையில் வில் அம்போடும் பரசுராமர் அங்கே தோன்றினார்.
ரிஷிகள் எல்லோரும் அவரை வணங்கி நிற்க, ராமனைப் பார்த்துப் பரசுராமர்,
“ராமா! நீ சிவ தனுஸ்ஸை முறித்து விட்டுப் பெரிய வீரன் என்று உன்னைக் கருதுகிறாய்.
இதோ என் கையில் உள்ள விஷ்ணு தனுஸ்ஸை வாங்கி நாண் ஏற்றிக் காட்டு.
நீ அவ்வாறு நாண் ஏற்றினால், என்னுடன் போரிட உனக்குத் தகுதி இருக்கிறது என்று பொருள்.
அதன்பின் நாம் மல்யுத்தம் புரிவோம்!” என்றார்.

தசரதன் பரசுராமரின் பாதங்களில் விழுந்து, ராமனை ஒன்றும் செய்யாதீர்கள் என மன்றாடினான்.
ஆனால், அவனைப் பரசுராமர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ராமன் தன் தந்தையை வணங்கி விட்டு, எந்த ஆரவாரமும் இல்லாமல் பரசுராமரிடம் இருந்து
அந்த வில்லை வாங்கிக் கொண்டான். அனாயாசமாக அதில் நாண் ஏற்றி, அம்பைப் பூட்டிய ராமன்,
“பரசுராமரே! நீங்கள் வேதம் வல்லவர். என் குருவான விஷ்வாமித்ரரின் உறவினர்.
உங்கள் மீது பாணம் போட எனக்கு விருப்பமில்லை.

அதனால், இந்த அம்புக்கு ஓர் இலக்கைக் கூறுங்கள்!” என்றான்.
தனது கர்வத்தை மொத்தமாக இழந்த பரசுராமர், “என் தவ வலிமையையே இந்த அம்புக்கு இலக்காக்குக!” என்று
ராமனிடம் சொல்ல, அவ்வாறே அந்த பாணத்தால் பரசுராமரின் தவத்தைத் தாக்கினான் ராமன்.
அதன்பின் ராமனிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ள விரும்பிய பரசுராமர், ராமனைப் பார்த்து,
“அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸுரோத்தமம்”என்றார்.

“ராமா! நீ குறைவில்லாதவன், என்றும் நிறைவோடு இருப்பவன்.
முன்பு, மது என்னும் அசுரனை அழித்த திருமால்தான் நீ. நீயே தேவாதி தேவன் என்பதை அறிந்து கொண்டேன்.
எப்போதுமே முழுமையானவனாக, நிறைவுபெற்றவனாக, குறையொன்றும் இல்லாதவனாக இருக்கும் உன்னை வீழ்த்த முடியுமா?
நான் மட்டும் அல்லன், உலகில் யாருமே உன்னை வீழ்த்த வல்லவர்கள் அல்லர்!” என்று
ராமனைப் போற்றி விட்டுப் பிரதட்சிணமும் செய்து விட்டுப் புறப்பட்டார்.

அதன்பின் திசைகள் இருள் நீங்கின. மயங்கி விழுந்தவர்கள் அத்தனை பேரும், மயக்கம் தெளிந்து மீண்டும் எழுந்தார்கள்.
தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து ராமனைக் கொண்டாடினார்கள்.
பரசுராமர் அளித்த விஷ்ணு தனுஸை வருணனிடம் கொடுத்து வைத்தான் ராமன்.
பின்னாளில் அதே விஷ்ணு தனுஸைத் தான் வருணன், அகத்திய முனிவர் மூலம்
ராமனுக்கு அளித்தான் என்கிறது வால்மீகி ராமாயணம்.
குருவான வசிஷ்டரையும், தந்தை தசரதனையும் வணங்கிவிட்டு அயோத்தி நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான் ராமன்.
இந்தப் பரசுராமன் – ராமன் சந்திப்பில் பரசுராமர் சொன்னபடி, ராமன் என்றுமே எந்தக் குறையும் இல்லாதவனாக,
நிறைவு மிக்கவனாக இருக்கிறான். அவனுக்குத் தோல்வியோ, வீழ்ச்சியோ, குறைபாடோ எதுவுமே நேருவதில்லை.
எனவேதான் ராமன் ‘அதோக்ஷஜ:’ என்று அழைக்கப்படுகிறான்.

அமுதக் கடலில் இருந்து எவ்வளவு அமுதைப் பருகினாலும் அது எப்படிக் குறையாமல் இருக்குமோ,
அதுபோல் எத்தனை பேர் ராமனை அனுபவித்தாலும், அல்லது எத்தனை பேர் அவனை எதிர்த்தாலும் கூட,
அதனால் எந்தக் குறையும் நேராதபடி தன் நிலையில் என்றும் நிறைவோடு இருக்கிறான் ராமன்.
‘அதோக்ஷஜ:’ என்றால் குறைவில்லாமல் நிறைந்திருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 416-வது திருநாமம்.
“அதோக்ஷஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
குறையொன்றும் ஏற்படாதபடி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

————–

417. ரிதவே நமஹ: (Rithave namaha)

தசரதன் ஒருமுறை தனது மந்திரியான சுமந்திரனை அழைத்து,
“ராமனை உடனடியாக நான் பார்க்க வேண்டும்! உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
சுமந்திரனும் ராமனின் இருப்பிடத்துக்குச் சென்று,
“சக்கரவர்த்தி தங்களை உடனே காண வேண்டும் என்று அழைக்கிறார்!” என்று சொன்னார்.
அருகிலிருந்த சீதாதேவி, “சுவாமி! ஏதோ முக்கியமான விஷயமாகத் தந்தை அழைக்கிறார் போலும்! சீக்கிரம் புறப்படுங்கள்!” என்றாள்.

ராமனும் விரைவாகப் புறப்பட்டுச் சுமந்திரனோடு தசரதனின் அரண்மனைக்குச் சென்றான்.
ராமன் வருவதைக் கண்ட தசரதன் மிகவும் மனம் மகிழ்ந்து “வா ராமா! வா ராமா!” என்று உல்லாசத்தோடு வரவேற்றான்.
தந்தையின் பாதங்களை வணங்கிய ராமன், தந்தையின் உத்தரவுக்காகக் கைகூப்பிய படி நின்று கொண்டிருந்தான்.
ராமனின் அழகையே கண்களால் பருகிக் கொண்டிருந்த தசரதன் எதுவுமே பேசவில்லை.
சற்று நேரம் கழித்துத் தந்தையிடம் ராமன், “தந்தையே! என்ன விஷயமாக அடியேனை அழைத்தீர்கள்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை ராமா! சும்மாதான் அழைத்தேன், நீ சென்று வா!” என்று சொல்லிவிட்டான் தசரதன்.
“சரி தந்தையே!” என்று சொல்லி ராமன் புறப்பட்டுத் தசரதனின் அரண்மனைக்கு வெளியே வந்தான்.
மீண்டும் சுமந்திரனை அனுப்பி ராமனை அழைத்து வரச் சொன்னான் தசரதன்.
சுமந்திரன் போய் ராமனை அழைத்து வந்தான்.
தந்தையை நமஸ்கரித்தான் ராமன். “என்ன விஷயம் தந்தையே?” என்று பணிவோடு கேட்டான் ராமன்.
“ஒன்றுமில்லை ராமா! சென்று வா!” என்றான் தசரதன். மீண்டும் அரண்மனையை விட்டு வெளியேறினான் ராமன்.
மீண்டும் சுமந்திரனிடம் ராமனை அழைத்து வருமாறு கூறினான் தசரதன்.
ராமன் வந்தவாறே, “ஒன்றுமில்லை ராமா! சென்று வா!” என்றான் தசரதன்.

இதைக் குலசேகரப்பெருமாள் பெருமாள் திருமொழியில்,
“வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்தோள் இதன்பொருட்ட விடையோன் தன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே!”–என்ற பாசுரத்தில் பாடுகிறார்.

எந்த ஒரு விஷயமுமே இல்லாமல் தசரதன் ஏன் ராமனை இத்தனை முறை
‘வா…போ’ ‘வா…போ’ என்று நடக்க வைக்க வேண்டும்?
இதற்கான காரணத்தை வால்மீகி பகவான் அயோத்யா காண்டம் 3ம் ஸர்கம் 39-ம் ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்:

“தர்மாபிதப்தா: பர்ஜன்யம் ஹ்லாதயந்தம் இவ ப்ரஜா:”-என்கிறார் வால்மீகி.

ராமனுடைய குணங்கள் அனைத்தும் காண்பவர், மனங்களுக்கு மிக உயர்ந்த ஆனந்தத்தைத் தரவல்லவை.
நீண்ட நாள் வெயிலிலும் பஞ்சத்திலும் வாடியவர்களுக்குக் கார்மேகத்தைப் பார்த்தால் எப்படிப்பட்ட மகிழ்ச்சியும்
மன நிறைவும் ஏற்படுமோ, அவ்வாறே ராமனின் அழகையும் குணங்களையும் காண்போர்,
மனங்களில் அத்தகைய மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்.
அந்த வகையில், ராமனின் நடையழகு தசரதனுக்கு மிகவும் பிடிக்கும். ராமனை வா… என்று அழைத்து,
அவனது நடையழகை முன்னே இருந்து ரசிப்பான் தசரதன். போ… என்று சொல்லி,
அவனது நடையழகைப் பின்னே இருந்து ரசிப்பான் தசரதன்.

இவ்வாறு முன்னும் பின்னும் அவனது நடையழகைக் கண்டு ரசிக்கவே வா…போ…வா…போ… என்று
ராமனை நடக்கச் சொல்வானாம் தசரதன்.இப்படித் தன் குணங்களால் அடியார்களின் மனங்களை மகிழ்வித்து,
அவர்களின் மனங்களைச் சென்று அடைவதால், ராமன் ‘ரிது:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘ரிது:’ என்று சென்று அடைபவர் என்று பொருள்.
இங்கே அடியார்களை மகிழ்விக்க வல்ல குணங்களாலே அவர்களின் மனங்களைச் சென்று அடைவதால்
ராமன் ‘ரிது:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 417-வது திருநாமம்.
“ரிதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வருவோரின் உள்ளங்களில் ராமன் வந்து குடிகொள்வான்.

————

418. ஸுதர்சனாய நமஹ (Sudharshanaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)

சிவதனுஸ்ஸை ராமன் முறித்த செய்தியை அயோத்தியில் உள்ள தசரதனுக்குத் தூதர்கள் மூலம் சொல்லி அனுப்பினார் ஜனகர்.
சீதா ராமனின் திருமணத்தை நிச்சயிப்பதற்காகத் தனது பரிவாரத்துடன் தசரதன் புறப்பட்டு மிதிலை தேசத்துக்கு வந்தார்.
ஜனகரும் ராம லட்சுமணர்களும் தசரதனையும் அவரோடு வந்திருக்கும் அன்னையர்கள், தம்பிமார்களையும் எதிர்கொண்டு வரவேற்றார்கள்.

நகரின் எல்லையிலிருந்து அவர்களை ஜனகரின் அரண்மனைக்கு ராமன் அழைத்துச் செல்லுகையில்,
மிதிலையில் உள்ள மக்கள் எல்லோரும் ராமனின் அழகைக் கண்டு மெய்ம்மறந்து நின்றார்களாம்.
ராமனின் அழகை அவர்கள் அநுபவித்த விதத்தை உலாவியல் படலம் என்னும்
ஒரு தனிப் படலமாகக் கம்பர் பாடியுள்ளார்.

“வீதிவாய்ச் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோன் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்”–என்கிறார் கம்பர்.

குதிரை பூட்டிய தேரில் பயணம் செய்வது போல், மிதிலையில் வாழும் மக்களின் கண்களிலே ராமன் பயணித்துக் கொண்டிருந்தான்.
கண்ணன் என்றால் கண்ணில் நிற்பவன் என்று ஒரு பொருள் உண்டு.
காண்போர் கண்களில் நன்றாக நிலைபெற்று, அதன் மூலம் கண்ணன் என்ற திருப்பெயர் தனக்குக் காரணப்
பெயராகவும் இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டான் ராமன் என்பது இப்பாடலின் கருத்து.
அந்த அளவுக்குக் கண்ணுக்கு இனிதாக இருக்கும் தன் அழகினாலே, மிதிலை மக்களின் கண்களை
எல்லாம் கட்டிப்போட்டுவிட்டான் ராமன்.

அதை கம்பர்,

“தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்”–என்று பாடுகிறார்.

தாடகையை வதைத்த ராமனின் தோள் அழகைக் கண்டவர்கள் அந்தத் தோள் அழகி லேயே
ஈடுபட்டு வைத்தகண் வாங்காமல் அத்தோள்களையே பார்த்து வந்தார்கள்.
ராமனின் மற்ற அவயவங்களைக் காணவில்லை.
அகல்யாவின் சாபத்தைப் போக்கிய ராமனின் திருவடிகளின் அழகைக் கண்டவர்கள்
அந்தத் திருவடிகளின் அழகிலேயே ஈடுபட்டு வைத்த கண் வாங்காமல் அத்திருவடிகளையே பார்த்து வந்தார்கள்.
மற்ற அவயவங்களைக் காணவில்லை.
சிவ தனுஸை முறித்த ராமனின் திருக்கரத்தின் அழகைக் கண்டவர்கள் அதையே பார்த்தார்கள்,
மற்ற அங்கங்களைக் காணவில்லை.
ஒருவேளை மிதிலை மக்களுக்குப் பார்வையில் குறைபாடு உள்ளதோ?
அதனால் தான் நீண்ட நேரம் பார்க்கிறார்களோ? இல்லை, இல்லை.
அவர்கள் வாள்போல் கூர்மையான கண் கொண்டவர்கள்தான்.
ஆனால் ராமனின் ஒவ்வோர் அங்கமும் அத்தனை அழகாக இருப்பதால், வேறு அங்கத்தை நாடி அவர்களின் பார்வை செல்லவில்லை.
முதலில் எந்த அங்கத்தைப் பார்த்தார்களோ, அதையே முடிவு வரை பார்த்தபடி உள்ளார்கள்.

இதற்கு ஓர் உவமை சொல்கிறார் கம்பர். (ஆசாரியர்கள் அருளிய உரையின் அடிப்படையிலான விளக்கம் இது)
பரமாத்மாவான திருமாலுக்கு அங்கங்களாக இருக்கும் தேவர்களை வணங்குபவர்கள்,
திருமாலின் ஓர் ஓர் அங்கமாக இருக்கும் குறிப்பிட்ட சில தேவர்களையே வணங்கி நிற்பார்களே ஒழிய,
முழுமையான திருமாலை வழிபடுவதில்லை.
அதுபோல்தான் இங்கே ராமனின் குறிப்பிட்ட ஓர் ஓர் அங்கங்களை மட்டுமே கண்டு
அதில் மயங்கிய மிதிலை மக்கள் முழுமையாக ராமனின் திருமேனி அழகைக் காணவில்லை.

இப்படிக் காண்போரின் கண்ணுக்கு இனிதாக இருக்கும் திருமேனி அழகோடு திகழ்வதால்,
ராமன் ‘ஸுதர்சன:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தர்சன’ என்றால் பார்வை. ‘ஸுதர்சன:’ என்றால் பார்வைக்கு இனியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 418-வது திருநாமம்.
“ஸுதர்சனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புறக்கண், அகக்கண் ஆகிய
இரண்டுமே சிறந்து விளங்கும்படி ராமன் அருள்புரிவான்.

—————

419. காலாய நமஹ (Kaalaaya namaha)

கோதாவரிக் கரையில் உள்ள பஞ்சவடி என்னும் இடத்தில், லட்சுமணன் அமைத்த பர்ண சாலையில்
சீதையோடு ஆனந்தமாக எழுந்தருளி இருந்தான் ராமன்.
அச்சமயம் அங்கே ராவணனின் சகோதரியான சூர்ப்பணகை வந்தாள்.
பர்ணசாலையில் விளங்கும் ராமனின் அழகைக் கண்டாள். அடுத்த நொடியே ராமன் மீது மையல் கொண்டாள்.
“இவன் மன்மதனோ? ஆனால் மன்மதனின் உடலைப் பரமசிவன் எரித்துவிட்டாரே!
மன்மதனுக்கு உடலே கிடையாதே! எனவே இவன் மன்மதனாக இருக்க வாய்ப்பில்லை!

இவன் இந்திரனாக இருப்பானோ? ஆனால் இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உண்டு!
இவன் இரண்டு கண்களோடுதானே இருக்கிறான்?அல்லது, சிவபெருமானாக இருப்பானோ?
ஆனால் அவருக்கு நெற்றிக்கண் ஒன்று இருக்குமே! அது இவனிடம் இல்லை!
அல்லது, திருமாலாக இருப்பானோ? ஆனால் திருமாலுக்கு நான்கு தோள்கள் உண்டு!
இவன் இரண்டு தோள்களோடுதானே விளங்குகிறான்?” என்று இப்படிப் பலவாறு ராமனைக் குறித்துச்
சிந்திக்கத் தொடங்கினாள் சூர்ப்பணகை.

இதைக் கம்பர்,

“சிந்தையின் உறைபவர்க்கு உருவம் தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிர நயனம் ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர்மூன்று நான்குதோள்
உந்தியின் உலகளித்தார்க்கு என்று உன்னுவாள்” என்று பாடுகிறார்.

ராமனின் அழகில் மிகவும் ஈடுபட்ட சூர்ப்பணகை அவனது கையழகு, தோள் அழகு, மார்பழகு, முக அழகு,
திருவடி அழகு, திருமேனி ஒளி, திருவாய் எழில், முடியழகு, இடையழகு, நடையழகு,
முழு மெய்யழகு என ஒவ்வொன்றிலும் ஈடுபட்டு அதை எல்லாம் வர்ணித்துக் கவிபாடத் தொடங்கிவிட்டாள்.
சூர்ப்பணகையைக் கூட

கவியாக்க வல்லது ராமனின் அழகு.
கம்ப ராமாயணத்திலிருந்து ஓர் உதாரணத்தை மட்டும் எடுத்துக்காட்டுகிறேன்:

“உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர்
பொடித்தன போலும் இப் புல் என்று உன்னுவாள்”–என்கிறாளாம் சூர்ப்பணகை.

பூமியில் ஏன் புற்கள் முளைத்திருக்கின்றன தெரியுமா? அவை புல் கிடையாது!
ராமன் பூமியின் மேல் திருவடி வைத்ததால், பூமிதேவி மிகவும் மகிழ்ந்தாள்.
அந்த மகிழ்ச்சியில் பூமிதேவியின் ரோமங்கள் எல்லாம் எழுந்து நின்று விட்டன.
எழுந்து நின்ற பூமியின் ரோமங்களே புற்களாகக் காட்சி அளிக்கின்றன என்பது இப்பாடலின் கருத்து.

இவ்விடத்தில் வால்மீகி ராமாயணத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் இடையே ஒரு சிறு வேறுபாட்டைக் காணமுடிகிறது.
சூர்ப்பணகை தனது கொடிய அரக்கி வடிவத்துடனேயே ராமனிடம் வந்ததாக வால்மீகி தெரிவித்தார்.
கம்பரோ, மனோதத்துவ ரீதியில்,
“நாம் இத்தகைய கோர வடிவத்துடன் ராமன் முன்னே போய் நின்றால் ராமன் ஏற்பானோ மாட்டானோ!” என்று
அஞ்சிய சூர்ப்பணகை, மந்திரத்தால் தன் வடிவை அழகிய பெண்ணின் வடிவமாக மாற்றிக்கொண்டு
ராமனிடம் வந்தாள் என்று தெரிவிக்கிறார்.

சூர்ப்பணகை ராமன் மீது காதல் கொண்டதில் தவறில்லை. ஏனெனில் இறைவனின் அழகைப் பார்க்கும்போது
எல்லா உயிர்களுக்கும் அவன்மீது காதல் வருவது இயற்கை.
ஆனால் ராமனைத் தான் அடைவதற்குத் தடையாக இருப்பவள் சீதை என்று எண்ணிச் சீதையை அழிக்கப் பார்த்தாள் சூர்ப்பணகை.
அதற்குத் தண்டனையாகத் தனது காதையும் மூக்கையும் இழந்தாள் என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

இப்படி ரஜோகுணம் மிகுந்த சூர்ப்பணகையைக் கூடத் தன் பால் ஈர்க்கும் அளவுக்குப் பேரழகு மிக்கவனாக ராமன் திகழ்வதால்,
ஸ்ரீ ராமன் ‘கால:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘கலனம்’ என்றால் ஈர்த்தல் என்று பொருள்.
‘கால:’ என்றால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 419-வது திருநாமம்.
“காலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வருவோரின் மனங்களை ராமன் கொள்ளை கொள்வான்.

————–

420. பரமேஷ்டினே நமஹ (Parameshtine namaha)

ராமன் தனது அவதாரத்தை நிறைவு செய்யும் கட்டம் வந்தது. காலதேவன் மூலமாக
பிரம்மதேவர் ராமனுக்கு அவதாரம் நிறைவடையும் காலம் வந்ததை நினைவூட்டினார்.
எனவே அவதாரப் பூர்த்தியின் முதல்படியாக வைகுண்டம் நோக்கிய தனது பயணத்தை லட்சுமணன் தொடங்கினான்.
சரயூ நதியில் நீராடிய லட்சுமணன், உள்ளத்தில் திருமாலைத் தியானித்தபடி, பிராணாயாமம் செய்து தனது பிராணனை விட்டான்.
இந்திரன் லட்சுமணனை அந்த உடலோடு அப்படியே தேவலோகத்துக்கு அழைத்துச் சென்றான்.
தேவரிஷிகள் அங்கே லட்சுமணனுக்குப் பூஜைகள் செய்தார்கள்.

“ததோ விஷ்ணோச் சதுர்பாகம் ஆகதம் ஸுரஸத்தமா:
த்ருஷ்ட்வா ப்ரமுதிதாஸ் ஸர்வே பூஜயந்தி ஸ்ம ராகவம்”-என்கிறார் வால்மீகி பகவான்.

குசாவதி, ச்ராவஸ்தி என்ற இரு நகரங்களை உருவாக்கிய ராமன் முறையே
குசனையும் லவனையும் அப்பகுதிகளின் மன்னர்களாக முடிசூட்டினான்.
தனது வைகுண்டப் பயணத்தைத் தொடங்கத் தயாரானான் ஸ்ரீ ராமன்.
சுக்கிரீவனும் அங்கதனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு ஸ்ரீ ராமனைத் தேடி வந்தான்.

விபீஷணன் ஸ்ரீ ராமனை நாடி வந்து, தானும் ஸ்ரீ ராமனுடன் வர விரும்புவதாகத் தெரிவித்த நிலையில்,
ஸ்ரீ ராமன், “விபீஷணா! நம் குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதனை ஆராதித்துக்கொண்டு,
பூமியில் எவ்வளவு காலம் ஜனங்கள் உள்ளார்களோ அவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டு
அதன்பின் என்னை வந்து என்னை அடைவாயாக!” என்று சொன்னான்.

அவ்வாறே அனுமனைப் பார்த்து,

“மத்கதா ப்ரசரிஷ்யந்தி யாவத் லோகே ஹரீச்வர
தாவத் ரமஸ்வ ஸுப்ரீதோ மத்வாக்யம் அநுபாலயன்”

“இந்த உலகில் ராமாயண வரலாறு எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் வரை நீ பூமியிலே
சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு எனது நாமங்களையும் கதைகளையும் பாடிக் கொண்டு திகழ்வாயாக!” என்று கூறினான் ஸ்ரீ ராமன்.
ஜாம்பவான், மைந்தன், துவிவிதன் ஆகியோரும் கலியுகம் நிறைவடையும்வரை பூமியிலே வாழ்வார்கள் என்று
சொல்லிவிட்டு மறுநாள் விடியற்காலை தனது ஸ்ரீ வைகுண்டப் பயணத்தைத் தொடங்கினான் ஸ்ரீ ராமன்.

மெல்லிய பீதாம்பரம் அணிந்தபடி, வாயில் பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, கையில் தர்ப்பை அணிந்து,
அரண்மனையிலிருந்து வெளியேறினான் ஸ்ரீ ராமன்.
அவனது வலப்புறத்தில் ஸ்ரீ தேவியும் இடப்புறத்தில் பூதேவியும் தோன்றினார்கள்.
வேதங்கள் வேதியர் வடிவில் ராமனைப் பின்தொடர்ந்தன.
ஸ்ரீ வைகுண்ட வாசல் திறந்ததை அறிந்து ரிஷிகளும் ராமனைப் பின்தொடர்ந்தார்கள்.
பரதன், சத்ருக்நன் அயோத்தியில் உள்ள மனிதர்கள், பறவைகள், பசுக்கள் என அனைவரும்
ஸ்ரீ ராமனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

சரயூநதியில் இறங்கிய ஸ்ரீ ராமன், திருமாலுக்குரிய திருமேனியில்கலந்தான். தேவலோகத்தில் காத்திருந்த
ஸ்ரீ லட்சுமணன் ஸ்ரீ ஆதிசேஷன் திருமேனியில் கலந்தான்.
(ஸ்ரீ வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் – ஸ்ரீ திருமலை நம்பிகள் ஸ்ரீ ராமாநுஜருக்குச் சொன்ன ரகசிய விளக்கத்தின் அடிப்படையில்)
பரதன் கருடனின் திருமேனியில் கலந்தான்.
சத்ருக்நன் விஷ்வக்சேனரின் திருமேனியில் கலந்தான்.
தன்னைப் பின்தொடர்ந்து வந்து உயிரினங்களோடு ஸ்ரீ விஷ்ணு லோகத்தை அடைந்தான் ஸ்ரீ ராமன்.

(கம்ப ராமாயணத்தின்படிபரதன் சக்கரத்தின் அம்சம், சத்ருக்நன் சங்கின் அம்சம்)
இப்படிப் பூமியில் தனது அவதாரச் செயல்களை நிறைவு செய்து விட்டுப் பரமபதமாகிய
ஸ்ரீ வைகுண்டத்திலே போய் எழுந்தருளியதால், ஸ்ரீ ராமன் ‘பரமேஷ்டீ’ என்று அழைக்கப்படுகிறான்.
‘பரமேஷ்டீ’ என்றால் ஸ்ரீ பரம பதத்தில் (ஸ்ரீ வைகுண்டத்தில்) உறைபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 420-வது திருநாமம்.
“பரமேஷ்டினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
மிகப்பெரிய பதவிகளை எட்டும்படி ஸ்ரீ ராமன் அருள்புரிவான்.

————–

421. பரிக்ரஹாய நமஹ (Parigrahaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை – இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)
ராமன் தனது அவதாரத்தை நிறைவு செய்துகொண்டு வைகுண்டத்தை நோக்கிப் புறப்பட்ட அளவில்,
அயோத்தியில் உள்ள அனைத்து உயிர்களும் ராமனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கின.
வேதங்கள் வேதியர் வடிவில் ராமனைப் பின்தொடர்ந்தன. காயத்திரி உள்ளிட்ட வேதமந்திரங்களும் ராமனைப் பின்தொடர்ந்தன.
முனிவர்கள் பின்தொடர்ந்தார்கள். அயோத்தியில் வாழும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்மணிகள் என
அனைத்துத் தரப்பு மக்களும் பின்தொடர்ந்தார்கள். பட்சிகள், பசுக்கள் உள்ளிட்ட பிராணிகளும் ராமனைப் பின்தொடர்ந்தன.

அச்சமயம் அந்த உயிர்கள் அனைத்தும் தன்மீது வைத்திருக்கும் அன்பை நினைத்துப் பார்த்தான் ராமபிரான்.
ஏற்கனவே ராமன் வனவாசம் புறப்பட்டுச் சென்ற சமயத்தில் அயோத்தியில் உள்ள மரங்கள், பொய்கைகள்
உட்பட சராசரங்கள் அனைத்தும் ராமனைப் பிரிந்த துயரத்தால் வாடின.

“விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்சிதா:
அபி வ்ருக்ஷா: பரிம்லானா: ஸபுஷ்பாங்குர கோரகா:”-என்று இதை வால்மீகியும் வர்ணித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை அத்தகைய பிரிவுத்துயரை அனுபவிக்கும் நிலை அயோத்தியில் உள்ள உயிர்களுக்கு ஏற்படக்கூடாது என்று கருதினான் ராமன்.
அதனால், அயோத்தியில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தையும் தன்னோடு அழைத்துச் சென்று
சாந்தானிக லோகம் என்னும் உலகில் அவர்களைச் சேர்த்துவிடலாம் என்று தீர்மானித்தான்.
சாந்தானிக லோகம் என்பது பிரம்மாவின் சத்திய லோகத்துக்கும் மேலே இருக்கும் உலகம்.

அதை அடைந்தவர்கள், அங்கிருந்தபடி எளிதில் பக்தியோகமோ சரணாகதியோ செய்து விரைவாக வைகுண்டலோகத்தை அடைந்துவிடமுடியும்.
பின், வைகுண்டத்தில் நிரந்தரமாக இறைவனுடன் கூடியிருந்து இறையனுபவத்தில் ஈடுபடலாம்.
ராமனை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த சிலர் கூடத் தங்களை மறந்து ராமனைப் பின்தொடரத் தொடங்கினார்கள்.
சரயுநதியிலே இறங்கிய ராமன் ஸ்ரீமந்நாராயணனின் திருமேனியில் சேர்ந்தான்.

பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வானில் தோன்றித் திருமாலைப் பூஜித்தார்கள்.
அப்போது நாராயணனின் திருமேனியில் சேர்ந்த ராமன் பிரம்மாவிடம், “நீங்கள் வழித்துணையாக இருந்து
என்னைப் பின்தொடர்ந்து வந்த இந்த உயிர்கள் மட்டுமின்றி, அயோத்தியில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்
அனைத்தையும் சாந்தானிக லோகத்தில் சேர்த்து விட வேண்டும். அங்கிருந்து அவர்கள்
வைகுண்ட லோகத்தையும், காலக்கிரமத்தில் அடைவார்கள்!” என்று சொன்னான்.

“அத்தனை பேருக்கும் முக்தியா?” என்று கேட்டார் பிரம்மா.
அதற்கு ராமன், “நான் இல்லாவிட்டால் எப்படி என் இளவல் லக்ஷ்மணன் மூச்சு விட மாட்டானோ,
அவ்வாறே நான் இல்லாமல் இங்கே அயோத்தியில் அஃறிணைப் பொருட்கள் கூட இராது.
எனவே அயோத்தியின் சராசரங்கள் அனைத்தையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் இப்போதே
சாந்தானிக லோகத்தில் சேர்க்கவும்!” என்று ராமன் சொன்னான். அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார் பிரம்மா.

இவ்வரலாற்றைக் குலசேகரப் பெருமாளும்,
“அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னை”
என்று பாடுகிறார்.

இப்படி அயோத்தியில் உள்ள அனைத்து அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள், அனைத்து ஜீவராசிகள்,
அவர்களைச் சார்ந்தவர்கள் என அத்தனை பேரையும் தன்னோடு அழைத்துச் சென்றதால், ராமன் ‘பரிக்ரஹ:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘பரிக்ரஹ:’ என்றால் அனைத்தையும் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்பவர் என்று பொருள்.
அதுவே சஹஸ்ரநாமத்தின் 421-வது திருநாமம்.
“பரிக்ரஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை அபிமானத்தோடு தன்னுடன் இணைத்துக் கொள்வான் ராமன்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்–ஸ்ரீரங்கம் மோகனரங்கன்–

February 24, 2022

ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு
இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதைச்
சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும்.
( ‘விஷ்ணும் ஸஹஸ்ரமூர்தானம் சராசரபதிம் விபும் | ஸ்துவந் நாமஸஹஸ்ரேண ஜ்வராந் ஸர்வாந் அபோஹதி ||’ –
சரக ஸம்ஹிதா, சிகித்ஸா ஸ்தானம், ஜ்வர சிகித்ஸா). மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள்,
பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.
உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு?
அறியாமை இருளை விடப் பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்?
இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு Aufrecht அவர்களின் கணக்குப்படி 15 வியாக்கியானங்கள்
பட்டியலிடப்படுகின்றன என்று தகவல் தருகிறார் ஸ்ரீ அநந்தகிருஷ்ண சாஸ்திரியார். அவை –

1) ப்ருஹத் பாஷ்யம்
2) விஷ்ணு வல்லபம்
3) ஆநந்த தீர்த்தரின் உரை
4) கிருஷ்ணாநந்தரின் உரை
5) கங்காதர யோகீந்திரரின் உரை
6) பாரசர பட்டரின் பாஷ்யம்
7) மஹாதேவ வேதாந்தியின் உரை
8) ரங்கநாதாசாரியரின் உரை
9) ராமாநந்த தீர்த்தரின் உரை
10) ஸ்ரீராமாநுஜரின் உரை
11) வித்யாரண்ய தீர்த்தரின் உரை
12) பிரஹ்மாநந்த பாரதியின் உரை
13) ஸ்ரீ சங்கராசாரியரின் உரை
14) சுதர்சன பட்டரின் உரை
15) கோவிந்த பட்டரின் உரை

இவையும் சிலவே. இவை தவிர சுலோக ரூபத்தில் நாமங்களை விளக்கிக் காரிகைகளாகச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு.

—-

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தநாத்||

தர்மங்கள் அனைத்தினும் உயர்ந்த தர்மம் என நீர் கருதும் தர்மம் எது?
பிறவிச் சுழற்சியெனும் பெருந்தளையினின்றும் எதை ஜபிப்பதால் மானிடர் விடுபடல் ஆகும்?

இவ்வாறு யுதிஷ்டிரன் கேட்க பீஷ்மன் உரைத்த பதில்தான் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.
இதில் ஜந்து என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா? இதில் ஒரு விசேஷம் இருக்கிறது.
அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடிப் பிறந்த உயிர் அனைத்தும் குறிக்கப்படுகிறது.
இந்த விசேஷத்தைக் காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஜந்து: என்றால் பிறவியெடுத்த அனைத்து உயிரும் என்ற பொருளில்
ஜந்து: – ஜனன தர்மா: என்கிறார். அது மட்டுமின்றி இன்னும் விளக்கமாக
‘அநேந ஜந்து சப்தேந ஜப அர்ச்சன ஸ்தவநாதிஷு யதாயோக்யம் ஸர்வப்ராணிநாம் அதிகாரம் ஸூசயதி’ என்று விளக்கம் அளிக்கிறார்.

பொருள் – இந்த ஜந்து சப்தத்தால் ஜபம், அர்ச்சனை, ஸ்தவம் ஆகியன செய்ய முடிந்த அனைத்து உயிர்களுக்கும்
அதிகாரம் இருப்பது குறிப்பிடப்படுகிறது. ஆண், பெண், இளையர், முதியோர், குழந்தைகள் என்று அனைவருக்குமான வழி இஃது.

ஸ்ரீ பராசர பட்டரும் இந்த ஜந்து எனும் சொல்லுக்கு அப்படியே
ஜனன தர்மா: பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்றுதான் பொருள் எழுதுகிறார்.

ஆறு கேள்விகள் கேட்டான் தருமன்.
மிக்குயர்ந்த பெருந்தெய்வம் எது?
அறுதியான இறுதி நிலையம் உயிர்களுக்கு எது?
சுபம் அடைய யாரைத் துதிப்பது?
யாரைப் பூஜை செய்வது?
தர்மங்களில் சிறந்த தர்மம் உங்கள் கருத்துப்படி எது?
எந்த ஜபத்தால் உயிர்கள் முத்தி அடைகின்றன?

ஆறாவது கேள்வி. ‘எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?’
அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். —
“நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்;
இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல்
அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்”

பராசர பட்டரின் உரை பேசுகிறது —
“திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்;
அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல் தன்மை கொண்டவன்;
அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்.”

இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள்.
வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி.
பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்குச் சந்தஸ்.
தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு.
பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது.
தேவகீநந்தன: என்பது சக்தி.
திரிஸாமா என்பது இதயம்.
அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம்.
பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியைத் தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும்,
போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்.
எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.’ என்கிறான் பீஷ்மன். மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி அவன் சொன்னவை இவை.

‘பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்கள் அடங்கிய அனுஷ்டுப் என்னும் சந்தஸில் இந்த ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.’

அவனுக்கு, அந்த முழுமைக்கு, அந்த நாராயண பரஞ்சோதிக்கு, நாராயண பரந்தாமத்திற்கு,
நாராயண பர தத்துவத்திற்கு ஓர் உருவம் தந்து பார்க்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
அவனுடைய பாதங்கள் இந்தப் பூமி.
விண்ணுலகம் அவன் சிரம்.
இடைப்பட்ட வானம் அவனுடைய நாபி.
ஞாயிறு அவன் கண்.
வாயு அவன் நாசி.
திசைகள் அவன் செவிகள்.
சந்திரன் அவன் மனம்.
மாயை அவன் முறுவல்
மரங்கள் அவன் ரோமங்கள்
மேகங்கள் அவன் குழல் கற்றை
அவன் மார்பில் இருக்கும் கௌஸ்துபம் சுத்த ஜீவ சைதன்யம்

இப்பொழுது நாம் யார்? எங்கிருக்கிறோம்? என்று தெரிகிறதா? அவன் மார்பில் திகழும் கௌஸ்துபம் நாம். ஜீவர்கள்.
ஜீவர்களின் கூட்டத் திகழ்ச்சி ஸ்ரீவத்ஸம்
வனமாலை மாயையின் விசித்ர குணங்கள்
அவனுடைய மஞ்சள் ஆடை வேதம்
அவன் அணிந்த முப்புரி நூல் மூன்று அக்ஷரங்கள் கொண்ட பிரணவம்.
அநந்தனாகிய ஆதிசேஷன் அவ்யாக்ருதம்.
அவன் அமரும் பத்மம், தர்மம் ஞானம் என்ற இதழ்கள் உடைய சுத்த ஸத்வம்
பிராணன் கதையாகிய கௌமோதகி
அப்பு தத்துவம் பாஞ்சஜன்யம்
அக்னி தத்துவம் சுதர்சனம்

அந்த முழுமையில் தான் அமிழ்ந்து போகும் போதுதான் கரையேற முடிகிறது.
வெறும் கடலில் விழுந்து அமிழ்ந்து போனால் கரை ஏறமுடியாது.
ஆனால் இந்தப் ‘பெரும் புறக்கடலில்’, ‘கிருபா சமுத்திரத்தில்’ அமிழ்ந்து போனால் தான் வாழ்வு.
அப்படி அமிழக் கற்றவர்கள்தாம் ஆழ்வார்கள்.

அந்தத் தத்துவத்தை அன்றோ தியானித்து இங்கே ஸ்ரீமஹாவிஷ்ணு என்று ஆயிர நாமங்களால்
ரீங்காரம் இட்டுலவும் வண்டாக ஆகச் சொல்கிறது பீஷ்மனின் ஜீவ நாதம்.
தியாயந் ஸ்துவந் நமஸ்யம்ச –தியானம் செய், தோற்றுப் போ!
துதி செய், தோற்றுப் போ! –அந்தத் தோல்விக்கு வெற்றிவாகை பாடு! –அதுதான் நமஸ்காரம்.

அரங்கன் திருமுற்றத்தில் உங்களை இடுகிறது தியான ச்லோகம். இப்படி ஓர் திருவின் மணாளன் வீற்ற கோலம்,
அந்த முகுந்தன் யார்? அவர் எப்படி இருப்பார்? அவரா?
அவருக்கு இந்த பூமிதான் பாதங்கள்.
அவருக்கு இந்த வானம் நாபி.
வாயு பிராணன்
சந்திரன் சூரியன் இருகண்கள்
திக்குகள் காதுகள்
திய: என்னும் விண்ணுலகு தலை
அக்கினி வாய்
சமுத்திரம் அடிவயிறு
எந்த வயிற்றில் தேவர், மனிதர், பறவைகள், மிருகங்கள்,
நாகர், கந்தருவர், அசுரர் என என என விரிந்த உலகு
விசித்திரமாக விளையாடிக் களிக்கிறதோ
அந்த மூவுலக வடிவினர்தாம் ஈசராகிய
இந்த விஷ்ணு
இந்த விஷ்ணுவாகிய ஈசரை நமஸ்கரிக்கிறேன்.
அந்தப் பரமாத்மாவாகிய வாஸுதேவருக்கு நமஸ்காரம்

———

விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன: ||–1-

விச்வம் – அனைத்தும் ஆனவர்
விஷ்ணு: — அனைத்தின் உள்ளும் உயிரானவர்
வஷட்கார: — அனைத்தையும் தன்பால் வசீகரிப்பவர்
பூத பவ்ய பவத் ப்ரபு: — சென்றது நின்றது வருவது அனைத்தின் பிரபுவும் அவரே
பூதக்ருத் – அனைத்தையும் உருவுடையதாய் ஆக்குபவர் அவரே
பூதப்ருத் — உண்டான அனைத்தையும் தாங்குபவர் அவரே
பாவ: — இருப்பது என்பதே அவர்தான்
பூதாத்மா — உயிர்களின் உள்ளுயிராய் இருப்பவர்
பூதபாவன: — உயிர்களை உருவு கொண்டவையாய் இலங்கச் செய்பவர்

———-

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ்ஸாக்ஷீ க்ஷேத்ரக்ஞோSக்ஷர ஏவ ச || –2-

பூதாத்மா — உள்ளுயிராயிருந்தும் உடல்களுடைய களங்கம் தொடாத தூயர்
பரமாத்மா ச — தமக்கு உள்ளுயிராய்ப் பிறிதொன்று இல்லாது தாமே அனைத்தின் உயிராய் நிற்பவர்
முக்தானாம் பரமா கதி: — முக்தர்களுக்கான அறுதியான கதி அவர்
அவ்யய: — தாம் மாறாதவர், தம்மை அடைந்தாரையும் மாறாநிலையில் உய்ப்பவர்
புருஷ: – தம்மை அடைந்தாரை என்றும் புதிதாய் ஆனந்திப்பவர்
சாக்ஷீ – முக்தர்களின் ஆனந்தத்திற்கு சாக்ஷியாய் என்றும் ஆனந்திப்பவர்
க்ஷேத்ரக்ஞ: — அறிவுக்கு அறிவாய் நின்று உயர்நிலையை அறிபவர்
அக்ஷர: — மாற்றமும் எல்லையும் அற்றவர்
ஏவ ச — இவ்வண்ணமே என்றும் இருப்பவர்.

———-

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாநபுருஷேச்வர: |
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமாந் கேசவ: புருஷோத்தம: || -3-

யோக: — தம்மை அடையத் தாமே வழியானவர்
யோகவிதாம் நேதா — தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர்
ப்ரதாநபுருஷேச்வர: — உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர்
நார‌ஸிம்ஹவபு: — நரம் கலந்த சிங்கமாய் அடியார்களைக் காப்பாற்றுபவர்
ஸ்ரீமாந் — திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர்
கேசவ: — அழகிய கேசம் திகழும் உருவம்
புருஷோத்தம: — ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர்

———-

ஸர்வச்சர்வச்சிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபு: ஈச்வர: || –4-

ஸர்வ: — ஒவ்வொன்றும் அவரே
சர்வ: — பாபம் அனைத்தையும் அழிப்பவர்
சிவ: — மங்களம் அனைத்தின் உறைவிடம்
ஸ்தாணு: — நிலையாக நமக்கு மங்களத்தை அருள்பவர்
பூதாதி: — பூதங்கள் அனைத்தின் முதல்
நிதிரவ்யய: — அழியாப் பெருநிதியம்
ஸம்பவ: — அவதாரங்கள் எடுத்து அருள்பவர்
பாவன: — சாதுக்களைக் காப்பவர்
பர்த்தா — அனைத்தையும் தாங்கி வளர்ப்பவர்
ப்ரபவ: — ஒளிமிகும் பிறப்பு உடையவர்
ப்ரபு: — மனிதராய்ப் பிறந்தும் முக்தி தரும் பிரபு அவர்
ஈச்வர: — அவதாரத்தால் மிகுந்து விளங்கும் ஈச்வரர் அவரே

———

ஸ்வயம்பூச் சம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதிநிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || –5-

ஸ்வயம்பூ: — கருணையால் பிறந்து அருள்பவர்
சம்பு: — ஆனந்தம் அளிப்பவர்
ஆதித்ய: – ஸூர்ய மண்டலத்தில் உறைபவர்
புஷ்கராக்ஷ: — மலர்ந்த தாமரைக் கண்ணினர்
மஹாஸ்வன: — வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர்
அநாதிநிதந: — அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர்
தாதா — இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான்
விதாதா — உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர்
தாதுருத்தம: — படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர்

———–

அப்ரமேயோ ஹ்ருஷீகேச: பத்மநாபோSமரப்ரபு: |
விச்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ்ஸ்தவிரோ த்ருவ: || –6-

அப்ரமேய: — அறிவதற்கு அரியர்
ஹ்ருஷீகேச: — புலன்களுக்குப் புகலிடமானவர்
பத்மநாப: — படைப்பு மலரும் நாபியை உடையவர்
அமரப்ரபு: — அமரர்க்கெல்லாம் அவரே ப்ரபு
விச்வகர்மா — நான்முகன் தோன்றுவதற்கு முன்னமே தத்துவங்களைப் படைப்பவர்
மனு: — படைப்பைக் குறித்துச் சிந்திப்பவர்
த்வஷ்டா — படைப்பு நிகழும் சூழலைப் படைப்பவர்
ஸ்தவிஷ்ட: — அனைத்திற்கும் அற உயர்ந்த பெரியோன்
ஸ்தவிர: — எல்லாக் காலத்திலும் இருப்பவர்
த்ருவ: — ஏது நிகழினும் எந்த மாற்றமும் அண்டாதவர்

———–

அக்ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |
ப்ரபூத: த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||–7-

அக்ராஹ்ய: – எவ்விதத்திலும் எந்தக் கரணத்தினாலும் சிக்காதவர் என்னும்படி அனைத்துக்கும் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பவர்.
சாச்வத: – மாறி மாறி வரும் படைப்பு ஒடுக்கம் ஆகியவைகளில் ஓய்வின்றி ஒரே படித்தாய் இருப்பவர்.
க்ருஷ்ண: – தம் லீலையாகிய சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளில் மாறாத ஆனந்த மூர்த்தியாய் இருப்பவர்.
லோஹிதாக்ஷ: – தம் மாறாத மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் செந்தாமரை நிறமான கண்களைப் படைத்தவர்.
ப்ரதர்தன: – பிரளயகாலத்தில் அனைத்தையும் நாம ரூபங்களை நீக்கி ஸம்ஹரிப்பவர்.
ப்ரபூத: – பிரபஞ்சத்தில் அனைத்தும் ஸம்ஹரிக்கப்பட்டாலும் மாற்றமும் அளவும் அற்ற போக ஸ்தானமாகப் பரமபதத்தை உடையவர்.
த்ரிககுப்தாமா – மும்மடங்கு பிரபஞ்சத்தினும் பெரிது என்னும் அளவிலாத பெருக்கம் உடைய த்ரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவர்.
பவித்ரம் – தோஷங்கள் அனைத்துக்கும் எதிர்த்தட்டான பரிசுத்த ஸ்வரூபம் உடையவர்.
மங்களம்பரம் – தம்மைத் தியானிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளும் பரம்பொருளாய் இருப்பவர்.

—————-

ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || –8-

ஈசான: — அனைத்தையும் உள்ளிருந்து ஆண்டு நடத்துபவர்.
ப்ராணத: — அடியார் தம்மை நோக்கி வருவதற்கான வலுவையும் தாமே அளிப்பவர்.
ப்ராண: – அடியார்க்கு உயிரினும் மேலான உயிராய் இருப்பவர்.
ஜ்யேஷ்ட: – பழமைக்கும் பழமையான பரம்பொருள்.
ச்ரேஷ்ட: — எத்தனை புகழினும் அதற்கும் எட்டாது சிறந்தவர்.
ப்ரஜாபதி: — அயர்வறும் அமரர்கள் அதிபதி.
ஹிரண்யகர்ப்ப: — சத்வமே உருவான பொன்னுலகின் ஆருயிர்.
பூகர்ப்ப: — பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை.
மாதவ: — திருவுக்கும் திருவாகிய செல்வர்.
மதுஸூதந: — மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி.

————

ஈச்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதக்ஞ: க்ருதிராத்மவாந் || -9-

ஈச்வர: — உலகை ஆள்வதைப் போல முக்தியிலும் ஆளும் ஈச்வரர்
விக்ரமீ — தடைப்படாத சங்கல்பம் உடையவர்
தந்வீ – குறித்த இலக்கைத் தவறாது எய்யும் வில் உடையவர்
மேதாவீ — பல அறிவுகளையும் ஒரே நேரத்தில் கிரகிப்பவர்
விக்ரம: — வேதவடிவான கருடன் மீது எங்கும் தடையின்றிச் செல்பவர்
க்ரம: — எதையும் அளந்து அகப்படுத்தும் விரிவுடையவர்
அநுத்தம: — உயர்வற உயர்ந்தவர்
துராதர்ஷ: — எதனாலும் எட்டாத நிலையுடையவர்
க்ருதக்ஞ: — அடியார் செய்யும் மிகச்சிறு முனைப்பையும் மிகவும் போற்றுபவர்
க்ருதி: — நாம் செய்யும் எந்த நற்செயலும் அவர் செய்ய வைப்பதுவே
ஆத்மவாந் — நற்செயல் புரிபவரைத் தம் உயிர்போல் கருதுபவர்

———-

ஸுரேச: சரணம் சர்ம விச்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ்ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யயஸ்ஸர்வதர்சந: || –10-

ஸுரேச: — தேவர்கள் அதிபதி
சரணம் — அனைவர்க்கும் உற்ற புகலும் காப்பும் ஆனவர்
சர்ம — புகலடைந்தோர்க்குப் பொன்றா பேரின்பம்
விச்வரேதா: — அனைத்திற்கும் அனைத்து காரணமுமாய் ஆனவர்
ப்ரஜாபவ: — உயிர்க்குல முழுமைக்கும் உற்ற நிலையம்
அஹ: — இருளேயற்ற ஒரு பெரும் பகலாய் ஒளிர்பவர்
ஸம்வத்ஸர: — கால வடிவாய் உயிர்களுக்குள் இருந்து கைதூக்கி விடுபவர்
வ்யால: — பக்தியுடன் உற்றோரை ஒரு பொழுதும் விலக்காது அணைத்துக் கொள்ளும் பரந்த அருள் கைகளை உடையவர்
ப்ரத்யய: — உணர்வும் நம்பிக்கையும் ஆனவர்
ஸர்வதர்சந: — பக்தர்களுக்குத் தம் மகிமை அனைத்தையும் ஒளிக்காது காட்டுபவர்

———–

அஜஸ்ஸர்வேச்வரஸ்ஸித்த: ஸித்திஸ்ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநிஸ்ருத: || –11-

அஜ: — கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர்.
அடியார்களின் பிறவித் துன்பத்தை நீக்குபவர்.
ஸர்வேச்வர: — அனைத்துத் தடைகளையும் அகற்றி அடியார்களுக்கு அருள்பாலிப்பவர்.
ஸித்த: — அடியார்க்கு அருள எப்பொழுதும் சித்தமாக இருப்பவர்
ஸித்தி: — அடைய வேண்டிய லட்சியமாய் இருப்பவர்
ஸர்வாதி: — அனைத்து பலன்களையும் அருளும் மூலமாக இருப்பவர்
அச்யுத: — அடியார்களை என்றும் நழுவ விடாதவர்
வ்ருஷாகபி: — தர்மத்தின் உருவான கோல வராஹர்
அமேயாத்மா — அளக்கலாகா பெருமையும் அருளும் கொண்டவர்
ஸர்வயோக விநிஸ்ருத: — அனைத்து வழிகளையும் அவரே நடத்துவதால் எந்த யோகத்தாலும் அடையப்படக் கூடியவர்

————-

வஸுர்வஸுமநாஸ்ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || –12-

வஸு: — ஆனந்தபூர்ணமாக இருப்பவர், அடியார்களுடன் என்றும் ஆனந்திப்பவர்
வஸுமநா: — பெரும் நிதி போல் பக்தர்களிடம் பெரும்பற்று உடையவர்
ஸத்ய: — அடியார்க்கு என்றும் பொய்க்காது நன்மையே புரிபவர்
ஸமாத்மா — வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்
ஸம்மித: — பத்தியுடையவர்க்கு எளிமையானவர்
ஸம: — அடியார்களை உயர்வு தாழ்வு, புதியவர் பழையவர் என்ற எந்தப் பிரிவினையும் கொள்ளாமல் ஒரே போன்று நோக்குபவர்
அமோக: — பிரார்த்தனைகளைத் தவறாமல் அருளும் தயாளர்
புண்டரீகாக்ஷ: — பரமபதத்தில் உள்ளவர்களின் கண்ணாக இருப்பவர்
வ்ருஷகர்மா — அறவழியில் நிற்கும் நல்லவர்களின் நன்மையை என்றும் அருள்பவர்
வ்ருஷாக்ருதி: — அறத்தின் உருவானவர்

————

ருத்ரோ பஹுசிரா பப்ரு: விச்வயோநி: சுசிச்ரவா: |
அம்ருதஸ் சாச்வதஸ் ஸ்தாணு: வராரோஹோ மஹாதபா: || -13-

ருத்ர: — தமது அழகாலும், கல்யாண குணங்களாலும், அருட்செயல்களாலும் பக்தர்களை ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்பவர்.
பஹுசிரா: — ஆயிரம் தலைகளால் படைப்பைத் தாங்குபவர்
பப்ரு: — பிரபஞ்சத்தின் ஆதாரமாய் இருப்பவர்
விச்வயோநி: — பக்தகோடிகள் அனைவரோடும் ஒன்றுறக் கலக்கும் சீலர்
சுசிச்ரவா: — பக்தர்களின் வாய்மொழியை அமுதம் என உவப்பவர்
அம்ருத: — பக்தர்களுக்கு என்றும் பேரமுதமாய் இருப்பவர்
சாச்வதஸ்ஸ்தாணு: – நிலைத்த அமுதம், மாறாத அமுதம் அவரே
வராரோஹ: — அடைய வேண்டிய உயர்வற உயர்ந்த இலட்சியம் அவரே
மஹாதபா: — உயர்வற உயர்ந்த இலட்சியமாய் இருப்பதோடு அதை அடைவிக்கும் மிக்குயர்ந்த தவமாகவும் தானே இருப்பவர்

———-

ஸர்வக: ஸர்வவித்பாநு: விஷ்வக்ஸேநோ ஜநார்த்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || –14–

ஸர்வக: – அனைத்திலும் ஊடுகலந்து தாங்குபவர்
ஸர்வவித்பாநு: – அனைத்தையும் அறிவதும் உண்டாக்குவதுமான பேரொளி அவர்
விஷ்வக்ஸேந: – எங்கும் பரவி நின்று காக்கும் பெரும் படையாய் இருப்பவர்
ஜநார்த்தந: – பக்தர்களின் நன்மைக்கு இடையூறான தீமையை அழிப்பவர்
வேத: – உலகிற்கு வேதம் என்னும் பெருவிளக்கைத் தருபவர்
வேதவித் – வேதப்பொருளாய் நிற்பவர்
அவ்யங்க: – வேதப் பொருளுணரத் துணையாய் நிற்பவர்
வேதாங்க: – வேதமே தம் திருமேனியாய் நிற்பவர்
வேதவித் – வேதப் பொருள் எங்கும் விளக்கமுறச் செய்பவர்
கவி: – வேதத்தைக் காணும் ரிஷியும் அவரே

———-

லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷ: தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹ: சதுர்தம்ஷ்ட்ர: சதுர்புஜ: || –15-

லோகாத்யக்ஷ: – உலகை நேரடியாகத் தாமே கண்காணிப்பவர்
ஸுராத்யக்ஷ: – தேவர்களையும் அவரே கண்காணிக்கிறார்
தர்மாத்யக்ஷ: – தர்மத்தையும் அவரே கவனிக்கின்றார்
க்ருதாக்ருத: – ஆக்கலும் அழித்தலும், செய்கையும் பலனும் அவரே
சதுராத்மா சதுர்வ்யூஹ: – நால்விதமான இயல்பாகியும் நான்கு வியூஹமூர்த்திகளாகவும் இருப்பவர்
சதுர்தம்ஷ்ட்ர: – நரம் கலந்த சிங்கமாய் இருப்பவர்
சதுர்புஜ: – சங்கம் சக்ரம் கதை சார்ங்கம் என்று நான்கு படை தரிக்கும் கரங்கள் நான்குடையவர்

———-

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணு: ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விச்வயோநி: புநர்வஸு: || –16-

ப்ராஜிஷ்ணு: — எங்கும் நிறைந்த பேரொளியாய், தம்மை தியானிக்கும் பக்தர்களுக்குத் தன்னைக் காணச் செய்பவர்
போஜனம் — பக்தர்களுக்குத் தாமே உண்ணும் உணவாய் இருப்பவர்
போக்தா — பக்தர்களின் அன்பைத் துய்ப்பவர்
ஸஹிஷ்ணு: — அடியார்களின் தவறுகளை சகித்துக் கொள்ளும் இயல்புடையவர்
ஜகதாதிஜ: — உலகைக் காக்க வேண்டித் தாமே முதன்முன்னம் அவதாரம் எடுப்பவர்
அநக: — அவதாரம் எடுத்துப் பிறப்பினும் பிறவியின் தீங்கு அண்டமுடியாதவர்
விஜய: — பிரபஞ்சத்தில் எப்பொழுதும் வெற்றியாய் நிற்பவர்
ஜேதா — அனைவரையும் வென்று தம்முள் அடக்குபவர்
விச்வயோநி: — அனைத்திற்கும் தாமே ஆதியான காரணம்
புநர்வஸு: — ஒவ்வோருயிரிலும் அந்தராத்மாவாய் இருப்பவர்

———

உபேந்த்ரோ வாமன: ப்ராம்சு: அமோகச்சுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ்ஸங்க்ரஹஸ்ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || –17-

உபேந்த்ர: — இந்திரனுக்கு இளவல்; இந்திரர்க்கும் மேற்பட்டவர்
(முன் நாமம் புநர்வஸு: ராமனைக் குறிக்கும், உபேந்திரன் கிருஷ்ணனைக் குறிக்கும்.- ஸ்ரீ பட்டர்)
வாமன: — இந்திரனுக்காக் குறள் வாமனனாய்ச் சென்று இரந்தவர்
ப்ராம்சு: — நின்றளந்த நெடுமாலாய் வளர்ந்த திருவிக்கிரமர்
அமோக: — தாம் செய்வதனைத்தும் நல்லவர்க்கு மங்களமாய் அமையும் பெற்றியர்
சுசி: — தம்மை தியானிப்பார்க்குத் தூய்மை நல்குபவர்; தாம் எதுவும் எவரிடத்தும் வேண்டாத தூயர்
ஊர்ஜித: — எவரையும் வென்றடக்கும் விறலுடையோர்
அதீந்த்ர: — இந்திரர்க்கும் பிரபுவாய் ஆனவர்
ஸங்க்ரஹ: — பக்தியால் தம்மை எய்தும், கட்டவும் ஆனவர்
ஸர்க்க: — படைப்பனைத்தின் மீதும் தம் பாத அடையாளம் பதித்து உறவை நிலைநாட்டியவர்
த்ருதாத்மா — ஆத்மாக்கள் அனைத்திற்கும் இருப்பு நல்கும் பேருயிர்
நியம: — அனைத்து உயிர்களையும் நியமிப்பவர்
யம: — இதயத்தில் வீற்று உயிரனைத்தையும் ஆள்பவர்

———-

வேத்யோ வைத்யஸ்ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || –18-

வேத்ய: — இந்த உயிர்கள் தம்மை அறியவேண்டி அவதாரங்கள் எடுப்பவர்
வைத்ய: — பவநோய் என்னும் உலக ஆசையாம் பிணியை அகற்றும் வைத்தியர்
ஸதாயோகீ — அடியார்களின் நலனுக்காக என்றும் விழிப்புடன் முனைபவர்
வீரஹா — ஆற்றல் மிக்க அசுரரை அழிப்பவர்
மாதவ: — உயர்ந்த ஞானத்தின் தலைவர்
மது: — ஞானியர் களிக்கும் தேனாக இருப்பவர்
அதீந்த்ரிய: — புலன்களுக்கெட்டாப் பேரமுதாய் இருப்பவர்
மஹாமாய: — எங்கும் இருப்பினும் இந்திரியங்களுக்குப் புலனாகாத மாயை வாய்ந்தவர்
மஹோத்ஸாஹ: — படைத்தல் காத்தல் ஒடுக்கல் என்பதில் என்றும் உத்ஸாகம் நிறைந்தவர்
மஹாபல: — பிரபஞ்சத்தையே இலகுவாகத் தாங்கும் பெரும்பலம் கொண்டவர்

———

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேச்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத் || -19-

மஹாபுத்தி: — அனைத்தையும் அறியும் மகாபுத்தியுடையவர்
மஹாவீர்ய: — எந்த மாற்றங்கள் நிகழினும் தம்மில் எந்த மாற்றமும் ஏற்படாத பெரும் வீரியம் கொண்டவர்
மஹாசக்தி: — ஆக்கும் ஆற்றலும் ஆக்கப்படும் பொருளுமாய் இருக்கும் மஹாசக்தி ஆனவர்
மஹாத்யுதி: — அளவிறந்த பேரொளி அவர்
அநிர்தேச்யவபு: — அறுதியிட ஒண்ணா வடிவினர்
ஸ்ரீமான் — திருமகள் கேள்வர்
அமேயாத்மா — அளவிலாப் பெருமையர்
மஹாத்ரித்ருத் — பெருமலைகளையும் தாங்கும் ஆதாரம் அவரே

———-

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ்ஸதாம் கதி: |
அநிருத்த: ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || –20-

மஹேஷ்வாஸ: — அம்பு பொய்க்காத பெருவில் வீரர்
மஹீபர்த்தா — உலகத்தை உவப்புடன் தாங்கி நிற்கும் வராஹர்
ஸ்ரீநிவாஸ: — திருமகள் அகலகில்லேன் என்றுறை மார்பினர்
ஸதாம் கதி: — வேண்டியதனைத்தும் வழங்கும் நல்கதி அவரே
அநிருத்த: — மனிதர்க்கு நன்மையே ஆற்றும் அநிருத்தர்
ஸுராநந்த: — தேவர்க்கு இடர் போக்கி மகிழ்ச்சி நல்கும் பெம்மான்
கோவிந்த: — ஆயர்தேவு, உலகு புரக்கும் கோலவராகன், வேதவாக்கின் நாயகன்
கோவிதாம்பதி: — வேதமுணர் ஞானியர்தம் தலைவன்

———-

மரீசிர் தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || -21-

மரீசி: — எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாலும் மங்காத வளரொளி மிக்கோன்
தமன: — ஸம்ஸார வெப்பத்தைத் தணிக்கும் தண்ணழகு வடிவினர்
ஹம்ஸ: — இயக்கம் எல்லாவற்றுக்கும் மூலமாய் இலகும் அருளுருவினர்
ஸுபர்ண: — பவக்கடலில் உயிர்களைக்கரையேற்றும் அழகிய சிறகுகள் உடையோன்
புஜகோத்தம: — ஆதிசேஷனின் நாதனாய் இருப்பவர்
ஹிரண்யநாப: — பொற்க்கொப்பூழில் பூணழகர்
ஸுதபா: — ஞானமாம் நல்தவ வடிவினர்
பத்மநாப: — கொப்பூழில் எழுகமலப் பூவழகர்
ப்ரஜாபதி: — உலகெலாம் படைத்துக் காத்துப் புரக்கும் எந்தை

———

அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமாந் ஸ்திர: |
அஜோதுர்மர்ஷணச்சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || –22-

அம்ருத்யு: — அழிவோ மறைவோ எக்காலமும் இல்லாதவர்
ஸர்வத்ருக் — அனைத்தையும் ஒவ்வொன்றையும் பார்ப்பவர்
ஸிம்ஹ: — அடியார்க்கு வரும் அழிவையும் தீமையையும் நீக்கும் நரசிம்ஹர்
ஸந்தாதா — பக்தர்களுக்குக் கோரிய பலன்களை அருள்பவர்
ஸந்திமாந் — தம்மை வந்தடைந்த பக்தர்களை விட்டு என்றும் நீங்காதவர்
ஸ்திர: — தம்பால் சரணடைந்த பக்தர்களிடம் குறைகள் இருப்பினும் அதனால் சிறிதும் மாறாத அருளுள்ளம் கொண்டவர்
அஜ: — அவதாரங்கள் பல எடுப்பினும் அவர் என்றும் பிறவிக்கு உட்படாதவர்
துர்மர்ஷண: — அடியாரைப் பகைப்போர்க்கு ஆற்றொணா கடுமை உடையவர்
சாஸ்தா — தர்மத்தினின்று பிறழ்வோரைத் தண்டித்துத் திருத்துபவர்
விச்ருதாத்மா – சுருதிகளால் என்றும் புகழப்படுபவர்
ஸுராரிஹா — தேவர்களின் எதிரிகளை அழிப்பவர்

———-

குருர்குருதமோ தாம ஸத்யஸ்ஸத்ய பராக்ரம: |
நிமிஷோSநிமிஷஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:|| –23-

குரு: குருதம: – உபதேசிக்கும் குரு தத்துவமாய் நான்முகர்க்கே உபதேசித்த உத்தம ஆதிகுருவும் ஆனவர்
தாம: – உபதேசிக்கும் குரு மட்டுமன்றி உற்றடையும் உன்னத நிலையாகவும் இருப்பவர்
ஸத்ய: – ஸாதுக்களின் நன்மையாய்த் திகழ்பவர்
ஸத்ய பராக்ரம: — ஸாதுக்களோடு என்றும் மெய்யாய்த் திகழ்பவர்
நிமிஷ: — யோகநித்ரையில் அரைக்கண் மூடியும், சாதுக்களுக்குத் தீமை செய்வோரிடம் அருள்நோக்கு அற்றவராயும் இருப்பவர்
அநிமிஷ: — சாதுக்களைக் காப்பதில் இமைக்காமல் விழிப்புடன் இருப்பவர்
ஸ்ரக்வீ — படைப்பில் பூதங்கள், தன்மாத்ரைகள் என்னும் தத்துவத்தை வனமாலையாய்ப் பூண்டவர்
வாசஸ்பதி: உதாரதீ: — அனைத்து வித்யைகளின் உறைவிடமும் தலைவரும் அவரே. அனைத்தையும் அறியும் நன்மதியும் அவரே.

———

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்தா விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் || -24-

அக்ரணீ: — மயர்வற மதிநலம் தந்து உயர்வற உயர்ந்த நிலைக்கு உயர்த்துபவர்
க்ராமணீ: — பரம நிலைக்குத் தாமே சாதுக்களை அழைத்துச் செல்பவர்
ஸ்ரீமான் — அகலகில்லேன் என்று திருமகள் குலவும் தாமரைக்கண்ணர்
ந்யாய: — பக்தர்களிடம் என்றும் தவறாத நியாயம் உள்ளவர்
நேதா — பக்தர்களை ஸம்ஸார வட்டத்தில் சிக்காவண்ணம் வழிநடத்திச் செல்பவர்
ஸமீரண: — பக்தர்கள் விழையும் பலன்களை நடத்திக் கொடுப்பவர்
ஸஹஸ்ரமூர்தா — ஆயிரம் தலையுடன் திகழ்பவர்
விச்வாத்மா — அனைத்தினுள்ளும் உறையும் உயிர் அவரே
ஸஹஸ்ராக்ஷ: — ஆயிரம் அருட்கண்களால் திருநோக்கு கொள்பவர்
ஸஹஸ்ரபாத் — ஆயிரம் அடிகளால் அகிலம் நிறைந்தவர்

———

ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்தன: |
அஹ: ஸம்வர்தக்ோ வஹ்நி: அநிலோ தரணீதர: ||–25-

ஆவர்தன: – ஸம்ஸாரச் சக்கிரம் நில்லாமல் உயர்வதும் தாழ்வதுமாய் வெளிப்படுவதும் மறைவதுமாய் இருக்கும்படிச் சுழற்றும் தத்துவமாக இருப்பவர் ஆகையாலே ஆவர்தன:
நிவ்ருத்தாத்மா – சுழலும் பிரபஞ்சம் தம் முழுமையில் ஏதோ ஒரு மீச்சிறு பிரதேசம் என்னலாம்படி மாறாமல் நிலைத்த ஸ்வரூபர் ஆகையாலே நிவ்ருத்தாத்மா
ஸம்வ்ருத: – தமஸினால் தம் அறிவைக் கைக்கொள்ளாதவருக்குத் தம்மைப் பிரகாசிக்காமல் மூடிக்கொள்பவர் ஆகையாலே ஸம்வ்ருத:
ஸம்ப்ரமர்தன: – அந்த தமஸ் நீங்க வேண்டும் என்று தம்மையே ப்ரார்த்திப்பவருக்கு அந்த இருளை முழுவதும் அழித்துத் தம்மைக் காட்டுபவர் ஆகையாலே ஸம்ப்ரமர்தன:
அஹஸ்ஸம்வர்த்தக: – உலகியலில் தோய்ந்தவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும், தம்முடைய பக்தியில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பகல் இரவுகளையும் நன்கு சுழட்டுபவர் ஆகையாலே அஹஸ்ஸம்வர்த்தக:
வஹ்நி: – அனைத்து பொருட்களும் இருப்பதற்கேற்ற வகையில் அனைத்தையும் தாங்குபவர் ஆகையாலே வஹ்நி:
அநில: – யாவரும் உஜ்ஜீவிக்கும்படிச் செய்யும் ஆதார சக்தியாய் இருப்பவர் ஆகையாலே அநில:
தரணீதர: – அனைத்தையும் தாங்கி நிற்பது பூமி என்றால் பூமியையும் தாங்கி நிற்கும் பரம் தத்துவம் ஆகையாலே தரணீதர:

———-

ஸுப்ரஸாத: ப்ரஸந்நாத்மா விச்வத்ருக் விச்வபுக் விபு: |
ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாதுர்ஜஹ்நுர் நாராயணோ நர: ||–26-

ஸுப்ரஸாத: – தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அநந்தமான பலன்களைத் தந்து மிக்க அருளைச் செய்கிறவர் ஆகையாலே ஸுப்ரஸாத:
ப்ரஸந்நாத்மா – வேண்டுதல் வேண்டாமை இலாததால் கலக்கம் அற்ற தன்மை கொண்டவர் ஆகையாலெ ப்ரஸந்நாத்மா
விச்வத்ருக் – (விச்வச்ருக்) – ஜீவர்கள் உய்வதற்காகவே சிருஷ்டியை உண்டாக்குபவர்; உலகத்தை அநாயாசமாகத் தாங்குபவர்;
விச்வபுக்விபு: – படைத்த உலகனைத்தையும் பிரளய காலத்தில் தம் திருவயிற்றில் வைத்து போஷிப்பவர். உலகங்களையெல்லாம் வியாபிப்பதன் மூலம் அவற்றைக் காப்பாற்றுபவர்.
ஸத்கர்த்தா – ஸாதுக்களை என்றும் பூஜிப்பவர்
ஸத்க்ருத: – சாதுக்கள் தம்மைப் பூஜிக்கும் இடத்து மிகச் சிறிய பொருளாயினும் பெரும் கௌரதையோடு அபிமானிப்பவர்.
ஸாது; – பக்தர்களின் ஏவல்களையெல்லாம் மிக்க ஆனந்தத்துடன் செய்பவர்.
ஜஹ்நு: – பக்தர்கள் அல்லாதார்க்குத் தம்மை முற்றிலும் மறைத்து விடுபவர்.

நாராயண: –
ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் –
1) நரன் என்னப்படும் ஆத்மாவினிடம் உண்டான நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய காரிய வர்க்கங்களில்
காரண ரூபியாக வியாபித்திருப்பதால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்
2) நரர்கள் என்னும் ஜீவர்களுக்குப் பிரளயகாலத்தில் ஆதாரமாய் இருப்பவர்
3) நாரம் என்னப்படும் பிரளயஜலத்தில் சயனிப்பவர்
4) ‘விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற சந்யாஸிகள் சம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு
உரியதாகிய ‘நாராயணாய நம;’ என்னும் இந்த சத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான்
கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் சபதமிட்டுச் சொல்கிறேன்’ என்று
நரஸிம்ம புராணம் கூறுவதால் முக்கியத்துவம் நன்கு விளங்குவது நாராயண நாமம்.

ஸ்ரீபராசர பட்டர் –
அழியாத நித்ய வஸ்துக்களாகிய ஆத்மாக்களின் கூட்டத்திற்கு சேருமிடமாக, அந்தர்யாமியாக இருப்பவர் ஆகையாலே நாராயண;
நர: – சேதனம் அசேதனம் ஆகிய நித்ய வச்துக்களின் திரளை நடத்துபவர்

———

அஸங்க்யேயோSப்ரமேயாத்மா விசிஷ்ட: சிஷ்டக்ருச்சுசி: |
ஸித்தார்த்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதந: ||–27-

அஸங்க்யேய: – எண்ணிக்கையால் அளவிடப்படும் தன்மை இல்லாதவர் என்பதால் அஸங்க்யேய:
அப்ரமேயாத்மா – இன்னதென்று பிரித்தறியும் அறிவால் அறிந்து புரிந்து கொள்ள முடியாத ஆத்ம ஸ்வரூபர் ஆகியாலே அப்ரமேயாத்மா
விசிஷ்ட: – அறியப்படு பொருள் அனைத்திலும் தனிப்பட்டுத் தனிச்சிறப்போடு இருப்பவர் ஆகையாலே விசிஷ்ட:
சிஷ்டக்ருத் – தம்மைப் புகலாக அடைந்தவர்களைத் தம்மை அடையத்தக்க ஆன்மிக குணங்கள் நிறைந்தவராக ஆக்கும் தன்மையார் ஆகையாலே சிஷ்டக்ருத்
சுசி:- பிறிதொன்றால் பிரகாசப்படுத்தத் தேவையின்றி அனைத்திற்கும் பிரகாசம் நல்கும்படி சுயம் ஒளியாக இருப்பவர் ஆகையாலே சுசி:
ஸித்தார்த்த: – அடைய வேண்டியதெல்லாம் முன்னரே தம்மிடம் பூரணமாக அமையப் பெற்றவர் ஆகையாலே ஸித்தார்த்த:
ஸித்தஸங்கல்ப: – தமது சங்கலபங்களுக்கும் அடைய வேண்டியதற்கும் கால வித்யாசம் அற்றவர் ஆகையாலே ஸித்தஸங்கல்ப:
ஸித்தித: – அனைத்து விதமான மிகை ஆற்றல்களையும் தருபவர் ஆகையாலே ஸித்தித:
ஸித்திஸாதந: – அவரை அடைய வேண்டும் என்ற இலட்சியமும், அந்த இலட்சியத்தை அடைவிக்கும் வழியான சாதநமும் வேறு வேறாக இல்லாமல் அடையப்பட வேண்டியவரான அவரே, அதாவது ஸித்தியே, அடைவிக்கும் ஸாதநமாக இருப்பவர் ஆகையாலே ஸித்திஸாதந:

————-

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்தனோ வர்தமானச்ச விவிக்த: ச்ருதிஸாகர: ||–28-

வ்ருஷாஹீ – அவரை அடையும் தினமே அனைத்து மங்களங்களுக்கும் வித்தாக விளங்க தர்மமே பகலாக ஒளிர்பவர் ஆகையாலே வ்ருஷாஹீ
வ்ருஷப: – ஸம்ஸாரமென்னும் தீயினால் வெந்த ஜீவர்களுக்கு புத்துயிரூட்டும் அமுதமாய் அருள் பொழிபவர் ஆகையாலே வ்ருஷப:
விஷ்ணு: – பல விதமாக அருள் செய்தும் தாம் பக்தர்களை என்றும் பிரியாமல் கூடவே இருப்பவர் ஆகையால் விஷ்ணு:
வ்ருஷபர்வா – தர்மத்தையே தம்மை அடையும் படிக்கட்டாக உடையவர் ஆகையாலே வ்ருஷபர்வா
வ்ருஷோதர: – அனைத்து உலகங்களையும் தர்மம் என்னும் தம் வயிற்றினுள் வைத்துக் காப்பவர் ஆகையாலே வ்ருஷோதர:
வர்தந: – தம்மைச் சரணடைந்தோரைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் ஆகையாலே வர்தந:
வர்த்தமாந: – உயிர்களைக் கருணையினால் வளர்ப்பதில் தாம் பெரும் மகிழ்வு கொண்டு வளர்பவர் ஆகையாலே வர்த்தமாந:
விவிக்த: – அனைத்திலும் விலக்ஷணமான சிறந்த சரித்திரங்களை உடையவர் ஆகையாலே விவிக்த:
ச்ருதிஸாகர: – தம்முடைய குணங்களையும் அற்புத சரித்திரங்களையும் கூறும் வேதங்கள் கணக்கற்றவை கொண்டவர் ஆகையாலே ச்ருதிஸாகர:

—————

ஸுபு4ஜோ து3ர்த4ரோ வாக்3மீ மஹேந்த்3ரோ வஸுதோ3 வஸு: |
நைகரூபோ ப்3ருஹத்3ரூப; சிபிவிஷ்ட: ப்ரகாசந: || –29-

ஸுபுஜ: – சரணாகதி அடைந்தவர்களைக் கரையேற்றுவதிலும், காத்து ரக்ஷிப்பதிலும் மும்முரமாகவும், தவறாமலும் இருக்கும் கைகளை உடையவர் ஆதலாலே ஸுபுஜ:
துர்தர: – அவ்வாறு கரையேற்றும் போதும், காக்கும் போதும் எதனாலும், சரணாகதி அடைந்தவர்களாலுமே மீற முடியாத திருக்கரங்கள் ஆகையாலே துர்தர:
வாக்மீ – அவ்வாறு தம்மைச் சரணடைந்தவர்களைத் தவறாமல் காப்பாற்றுவேன் என்று அவதாரங்கள் தோறும் ஜீவர்களுக்கு நிச்சயமான வாக்கு தந்திருப்பவர் ஆகையாலே வாக்மீ
மஹேந்த்ர: – சர்வ உலகங்களும் சேர்ந்தாலும் ஒரு சிறு பிடி என்னும் அளவிற்கு அளவிலா ஐஸ்வரியம் உடையவர் ஆகையாலே மஹேந்த்ர:
வஸுத: – அல்பம், அஸ்திரமான செல்வங்களைக் கேட்பவர்களுக்கு அவற்றைத் தருபவர் ஆயினும், அருஞ்செல்வம் ஆகிய தம் தாளிணைகளையே வேண்டுபவர்க்கு அந்த மிக்க பெரும் செல்வத்தை மிக உவந்து தருபவர் ஆகையாலே வஸுத:
வஸு: – உவந்து தரும் அரும் பெரும் செல்வமும் தாமேவாக இருப்பதால் அவரே வஸு:

இனி விச்வரூபம் சொல்லப் படுகிறது –

நைகரூப: – அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர்க்கு அருள்பாலிக்க வேண்டி பல ரூபங்களை எடுப்பவர் ஆகையாலே நைகரூப:
ப்ருஹத்ரூப: – தாம் எவ்வுருவம் எடுப்பினும் அதுவே அனைத்துமாக ஆகும் வண்ணம் விரிந்த ரூபம் ஆகையாலே ப்ருஹத்ரூப:
சிபிவிஷ்ட: – யக்ஞ மயமாகவே தாம் இருப்பதாலும், ஒளியின் கிரணங்களாகிய தம்மிடமிருந்து கிரணங்களாக வெளிப்போந்த ஜீவர்கள், பொருட்கள் அனைத்திலும் உள் புகுந்து நிலவும் மூர்த்தி ஆகையாலே சிபிவிஷ்ட:
ப்ரகாசந: – இவ்வாறு ஒளியுருவாய் உலவும் மூர்த்தி ஆயினும் அவரே காட்டினாலன்றி காண இயலா பேரொளி உருவர் ஆகையாலே, பக்தர்கள் விரும்பிக் கேட்கில் தம் உண்மை உருவைக் காட்டுபவர் ஆகையாலே ப்ரகாசந:

———-

ஓஜஸ்தேஜோ த்3யுதித4ர: ப்ரகாசாத்மா ப்ரதாபந: |
ருத்3த4: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்சந்த்3ராம்சுர் பா4ஸ்கரத்3யுதி: || –30-

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விச்வரூபத்தைப் பற்றிய திருநாமங்கள் தொடர்கின்றன.
பொருட்களை விளங்கச் செய்வது ஒளி என்று சாத்திரங்கள் கூறும். புறப்பொருட்களையும்,
மனத்தில் இருக்கும் பொருட்களையும் அவ்வவ்வொளிகள் விளக்கும்.
அனைத்து ஒளிகளாகவும் திகழ்வதோ நாராயண: பரோ ஜ்யோதி: என்னும் ஸ்ரீமந்நாராயணனே என்று
காட்ட வேண்டி பீஷ்மாசாரியார் ஒளியின் திகழ்ச்சிகளைக் கூறுகிறார்.

ஓஜஸ்தேஜோத்யுதிதர: – ஒளியின் திகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று தன் சொந்த இயல்பில் பொருந்தி நிற்பது. அவ்வாறு சுயநிலை நிற்கும் ஆற்றல் ஓஜஸ்;
சுயநிலையினின்றும் பிறழச் செய்யும் வேகங்களைத் தடுத்து விலக்கல் தேஜ:
தன்னிலையில் நின்று தன்னியல்பில் ஒளிர்தல் த்யுதி. த்யுதியை தரித்து நிற்பவர் த்யுதிதர:
இத்தகைய முத்திறன்கள் விளங்கும் இடமெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சாந்நித்யம் ஆகும்.
எனவே அவருக்கு ஓஜஸ்தேஜோத்யுதிதர: என்றே திருநாமம்.
ப்ரகாசாத்மா – அனைவருக்கும் பொதுவாக விளக்கம் தரும் பேரொளியாவது ஆத்ம ஒளி. எனவே ப்ரகாசாத்மா.
ப்ரதாபந: – பிரகாசத்தை விரும்பாமல் வெறுக்கும் அவற்றைத் தபித்து வற்றச் செய்யும் காரணத்தால் ப்ரதாபந:
ருத்த: – அனைத்து கல்யாண குணங்களும் கடல் போன்று நிரம்பி நிறைவாக இருப்பவர் ஆதலால் ருத்த:
ஸ்பஷ்டாக்ஷர: – எழுத்தும் சொல்லும் பத சக்தியினால் விளக்கம் தரும் ஒளிகளாம். சொற்களில் மிக்குயர்ந்த சொல்லான வேதங்கள் பரம்பொருளை விளக்கும் ஆகையாலே ஸ்பஷ்டாக்ஷர:
மந்த்ர: – தம்மை விளக்கும் மந்த்ரங்களை தியானிப்போருக்கு காப்பாக இருப்பவர் ஆகையாலே மந்த்ர:
சந்த்ராம்சு: – தியானத்தில் ஜீவனுக்குக் குளிர்த்தியைத் தரும் நிலவொளியாய் இருப்பவர் ஆகையாலே சந்த்ராம்சு:
பாஸ்கரத்யுதி: – பக்தியால் துய்ப்போருக்கு நிலவொளியாய் மகிழ்விக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஞானத்தால் உணருங்கால் பகலொளியாய், ஞாயிறாக நின்று அறிவுப் பகல் செய்பவர் ஆகையாலே பாஸ்கரத்யுதி:

———

அம்ருதாம்சூத்3ப4வோ பா4நு: சசபி3ந்து: ஸுரேச்வர: |
ஔஷத4ம் ஜகத: ஸேது: ஸத்யத4ர்மபராக்ரம: || –31-

அம்ருதாம்சூத்பவ: – இறப்பை நீக்கி அமரத் தன்மையைத் தரும் உன்னத நிலவொளியாக இருப்பவர் ஆகையாலே அம்ருதாம்சூத்பவ:
பாநு: – எதற்கும் விலகாத உள்ளிருளைப் போக்கும் ஞான ஒளியாக இருப்பவர் ஆகையாலே பாநு:
சசபிந்து: – அஞ்ஞானத்தால் தீய வழியில் போவோரைக் கடிந்து நல்வழிக்கு உய்க்கும் தண்ணொளியாக இருப்பவர் ஆகையாலே சசபிந்து:
ஸுரேச்வர: – நல்வழியில் செல்பவர்களே தேவர்கள் என்னும்படி, அவர்களை மிக உயர்ந்த பேறான தம்முடைய உலகை அடையும் படிச் செய்பவர் ஆகையாலே ஸுரேச்வர:
ஔஷதம் – ஸம்ஸாரம் என்னும் கொடிய பிணிக்கு மருந்தாய் இருப்பவர் ஆகையாலே ஔஷதம்
ஜகதஸ்ஸேது: – கடக்கலாகா கொடிய ஸம்ஸாரக் கடலில் கடந்து நற்கதிக்கு உய்க்கும் அணையாக இருப்பவர் ஆகையாலே ஜகதஸ்ஸேது:
ஸத்யதர்மபராக்ரம: – ஜீவர்கள் தம் அஞ்ஞானத்தால் நன்மையினின்றும் விலகி ஓடுபவர்கள் ஆகையாலே அவர்களாலும் கடத்தற்கரிய குணங்களும், தவறாமல் அவர்களைக் கரையேற்றும் அவதார பராக்ரமங்களும் உடையவர் ஆகையாலே ஸத்யதர்மபராக்ரம:

———

பூ4தப4வ்ய ப4வந்நாத2: பவன: பாவனோSநல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத3: ப்ரபு4: || -32-

பூதபவ்யபவந்நாத: – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தும் உள்ள அனைத்துக்கும் நாதர் ஆகையாலே பூதபவ்யபவந்நாத:
பவந: – எங்கும் சென்று தூய்மையை உண்டாக்குபவர் ஆகையாலே பவந:
பாவந: – தம்மால் தூய்மை அடைந்தோர் தாம் பிறரைத் தூய்மைப் படுத்தும் அளவிற்குச் செய்பவர் ஆகையாலே பாவந:
அநல: – தம் பக்தர்களுக்கு எத்தனை அருள் செய்த போதும் போதாமையால் பரபரப்பு கொண்டவர் ஆகையாலே அநல:
காமஹா – தம்மிலும், தம் குணங்களிலும் ஈடுபட்டவர்களை மற்றை காமங்கள் அனைத்தையும் அறவே மாற்றும் இயல்பினர் ஆகையாலே காமஹா
காந்த: – ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தம் வடிவழகைக் காட்டியே உய்யக் கொள்கிறவர் ஆகையாலே காந்த:
காம: – விரும்பப் படும் அனைத்தினும் சிறந்த காமமாக, குணங்கள் நிறைந்தவர் ஆகையாலே காம:
காமப்ரத: – தம்மை அண்டினோர் வேண்டுவன தந்தருளும், தம்மை வேண்டுவோருக்குத் தம்மையே தந்தருளும் இயல்பினர் ஆகையாலெ காமப்ரத:
ப்ரபு: – அவ்வாறு தம்மையே தந்து அவர்களைத் தமக்கே எழுதி வாங்கிக் கொள்பவர் ஆகையாலே ப்ரபு:

———-

யுகா3தி3க்ருத் யுகா3வர்தோ நைகமாயோ மஹாசந: |
அத்3ருச்யோSவ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜித் அநந்தஜித் || –33-

ஆலிலைமேல் மாயனின் ஆச்சரியமான ரூபம் தியானிக்கப் படுகிறது.
யுகாதிக்ருத் – பிரளயத்தில் அனைத்தும் முடிந்து அதனால் ஒரு நஷ்டமும் நேராதபடி மீண்டும் யுகங்களைத் தொடங்கி நடத்துகிறவர் ஆகையால் யுகாதிக்ருத்
யுகாவர்த்த: – யுகங்கள் அவற்றின் கால க்ரமங்கள், தன்மைகள் எதுவும் முறையாகத் தொடரும்படி சுழற்றுகிறவர் ஆகையால் யுகாவர்த்த:
நைகமாய: – ஆலிலைமேல் வளரும் குழந்தையாய் அநேகமான மாயைகளையும், அற்புதங்களையும் உடையவர்
மஹாசந: – பெருந்தீனிக்காரர். இவரை விட பெருந்தீனி உண்பவர்கள் இருக்க முடியாது என்னும் படி பிரளயத்தில் உலகனைத்தையும் தம் வயிற்றில் ஒடுக்குபவர்.
அத்ருச்ய: – உலகெலாம் அழிந்த பிறகு பிரளய ஜலத்தில் ஓர் ஆலிலையும், அதன் மேல் ஒரு குழந்தையும் மட்டும் எப்படி இருக்க முடியும் என்று மார்க்கண்டேயர் போன்ற மகரிஷிகளுக்கும் உண்மை புலப்படாதவர்.
வ்யக்தரூப: – ‘காயம்பூ நிறமும் திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் அடையாளமும் கொண்டு திருமகள் உறையும் திருமார்பனாக எப்பொழுதும் காட்சி தருகிறார்’ என்று மார்கண்டேயரே சொல்லும் அளவிற்கு திவ்ய மங்கள திருமேனி கொண்டவர். யோகிகளுக்குப் புலப்படும் இதயவெளி உருவர்.
ஸஹஸ்ரஜித் – அளவற்ற விதங்களில் வெற்றி திகழ்பவர்
அநந்தஜித் – எல்லையற்ற வெற்றி உருவராய்த் திகழ்பவர்

———-

இஷ்டோSவிசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிக2ண்டீ நஹுஷோ வ்ருஷ: |
க்ரோத4ஹா க்ரோத4க்ருத் கர்த்தா விச்வபா3ஹுர் மஹீத4ர: || –34-

இஷ்டோSவிசிஷ்ட: – பிரளயகாலத்தில் ஏதொன்றும் பிதிர்கதிர்படாமல் தம் வயிற்றில் வைத்துக் காக்கும் அளவிற்கு அனைத்திலும் தாய் போல் ஒத்த அன்புடையவர் ஆகையாலே இஷ்டோSவிசிஷ்ட:
சிஷ்டேஷ்ட: – மார்கண்டேயர் முதலிய மஹரிஷிகளாலும் மிகவும் விருப்பமுடன் போற்றப்படுபவர் ஆகையாலே சிஷ்டேஷ்ட:
சிகண்டீ – அளவிலாத அனைத்தினும் உயர்ந்த ஐஸ்வர்யமாகிற மகிமையைத் தமது தலையில் மயிலிறகாய் அணிபவர் ஆகையாலே சிகண்டீ
நஹுஷ: – தமது மாயையால் ஜீவர்களைக் கட்டுகிறவர் ஆகையாலே நஹுஷ: (ணஹ் பந்தனே – இலக்கணக் குறிப்பு)
வ்ருஷ: – தர்மத்தின் உருவமாகி மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்பவர் ஆகையாலும், ஸம்ஸாரக் கடலில் அலைந்து வருந்தும் சாதுக்களின் வருத்தத்தை நீக்கி பரமானந்தத்தை ஏற்படுத்தும் மழையாக இருப்பவர் ஆதலாலும் வ்ருஷ:
க்ரோதஹா – சாதுக்களுக்கு நேரும் தீமையை அழித்த பின்பே தம் குரோதம் நீங்குபவர்
க்ரோதக்ருத் – தீமையை எதிர்த்து எழும் நியாயமான குரோதத்தைச் செய்பவர்
கர்த்தா – தீமைக்குத் தக்க தண்டனைகளை வழங்குபவர்
விச்வபாஹு: – தீமைக்கு எதிராக உயர்த்தும் தர்மத்தின் கைகள் உலகமெங்கும் முளைத்தது போன்று எழும் அளவற்ற தோள்கள் உடையவர். (தோள்கள் ஆயிரத்தாய் – ஆழ்வார்)
மஹீதர: – உலகத்தைத் தாங்கும் உன்னத ஆதாரமாய் இருப்பவர்.

———

அச்யுத: ப்ரதி2த: ப்ராண: ப்ராணதோ3 வாஸவாநுஜ: |
அபாம் நிதி4ரதி4ஷ்டாநம் அப்ரமத்த; ப்ரதிஷ்டித: || –35-

அச்யுத: – எவ்வித விகாரங்களும் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருக்கும் பெற்றியர்
ப்ரதித: – எதனிலும் மிக்க புகழ் கொண்டவர் ஆகையாலே ப்ரதித:
ப்ராண: – ஜீவகோடிகளுக்கு உயிரூட்டும் காரணமாய் இருப்பவர்
ப்ராணத: – உயிர்கொண்டுலவும் ஜீவர்கள் முக்திக்கு முயல்வதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து வாழ்வு தருபவர்
வாஸவாநுஜ: – அழியாமையாகிய அமுதத்தில் பெருவிருப்புள்ள இந்திரர்க்கு அதனை அளிக்க வேண்டி பின் பிறந்தவர்
அபாம்நிதி: – உயிர்க்கு இன்றியமையாத நீரின் நிறை செல்வமாக இருப்பவர்
அதிஷ்டாநம் – உலகம் நிலை நிற்றலுக்கான ஆதாரமாய் நின்று அருள்பவர்
அப்ரமத்த: – உயிர்களுக்கான கர்ம கதியில் சிறிதும் தவறுதலின்றி அவற்றைப் பயிற்றி முன்னேற்றிச் செல்பவர்
ப்ரதிஷ்டித: – ஏதொன்றையும் சார்ந்திராமல் தம் மகிமையிலேயே என்றும் நிலைத்திருப்பவர்

——–

ஸ்கந்த3: ஸ்கந்த3த4ரோ து4ர்யோ வரதோ3 வாயுவாஹன: |
வாஸுதே3வோ ப்3ருஹத்3பா4னு: ஆதி3தே3வ: புரந்த3ர: || –36-

ஸ்கந்த: – நற்பேற்றிற்கு எதிரான அசுர சக்திகளை வலிமை வற்றச் செய்பவர்
ஸ்கந்ததர: – அவ்வாறு தீய சக்திகளை வலியிழக்கச் செய்யும் ஆற்றல்கள் அத்தனையையும் தாங்குபவர்
துர்ய: – உலகனைத்தையும் தாங்குபவர்
வரத: – ஆற்றல் மிகுந்த தேவர்க்கும் அவர்களுக்கு உரிய சக்தியை வரமாக அளிப்பவர்
வாயுவாஹன: – வாழ்வின் அடிப்படையான உயிர்க்காற்றையும் நடத்துபவர்
வாஸுதேவ: – உயிர்கள் அனைத்தையும் மூடிக் காத்து, தம்முள் அடக்கி ரக்ஷித்து அவற்றுள் அந்தர்யாமியாக நின்று நடத்தும் பெரும் தாய்மை உடையவர் ஆதலால் வாஸுதேவ:
ப்ருஹத்பானு: – உலகினும் பலமடங்கு பெரியதான நித்ய விபூதியில் பேரொளியாய்த் திகழும் சூரியனாக இருப்பவர்
ஆதிதேவ: – ஒளிதிகழும் அனைத்துக்கும் ஒளி தரும் தம் முதன்மைப் பேரொளியாய்த் திகழ்பவர்; இவ்வுலகைப் படைத்து லீலாவிபூதியை நடத்துபவர்
புரந்தர: – ஒளியை மறைக்கும் மாயையின் கூடுகள் ஆகிய புரங்களை என்றும் அழிக்கும் வண்ணம் இருப்பவர்

————

அசோகஸ்தாரணஸ்தார: சூர: சௌரி: ஜநேச்வர: |
அநுகூல: சதாவர்த்த: பத்3மீ பத்3மநிபே4க்ஷண: || -37-

அசோக: – சோகம், மோஹம், ஜரை, ம்ருத்யு, க்ஷுத், பிபாஸை என்னும் சோகம், மோகம், மூப்பு, சாவு, பசி, தாகம்,
என்ற ஆறு ஊர்மிகள் (அலைகள்) ஸம்ஸார சாகரத்தின் வேகங்களாய் ஜீவர்களை நலியும் குற்றங்கள் ஆகின்றன.
இந்த ஆறுக்கும் உபலக்ஷணமாகச் சொல்வது சோகம். இந்த ஆறும் இல்லாதவன் மட்டுமன்று,
தம்மை அண்டியவர்களுக்கு இவை இல்லாமல் ஆக்குபவர் என்பதால் அசோக:
தாரண: – ஸம்ஸார சாகரத்தைத் தாண்டுவதற்கு உதவும் பெருநல் உதவியாக இருப்பவர்
தார: – பவக்கடலினின்றும் சரணடைந்தவர்களை பயமில்லாமல் அக்கரையாகிய மோக்ஷத்திற்குக் கடத்துபவர்.
சூர: – எத்தகைய இடர்ப்பாட்டிலும் தாமே மீட்பவர் ஆகையாலே சூர:
சௌரி: – பக்தர்களை இடர்ப்பாட்டினின்றும் மீட்பதற்காகத் தாமே அவர்களை நாடிச் செல்பவர்.
ஜநேச்வர: – உயிர்கள் அனைத்தையும் வியாபிக்கும் சீலத்தால் ஜநேச்வரர்
அனுகூல: – அனைத்துப் பொருட்களிலும் தாமே உள்ளே ஆத்மாவாக இருப்பதால் அனுகூலமாக இருப்பவர்.
சதாவர்த்த: – வீழ்ச்சிக்குப் பல சுழல்கள் உடைய பவக்கடல் போல் அன்றிக்கே தம்மிடம் பக்தியால் அகப்பட்டவர்கள் தாமே கருதினாலும் மீள முடியாத அளவிற்கு வாழ்ச்சிக்கு ஆன சுழல்கள் அளவிறந்து உடையவர்.
பத்மீ – கையில் லீலையாகிய காலப்பதுமத்தை உடையவர்
பத்ம நிபேக்ஷண: – அன்றலர்ந்த தாமரை மலரைப் போன்ற மலர்ச்சியும், குளிர்ச்சியும் கொண்ட கடாக்ஷம் கொண்டவர்.

———

பத்மநாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: சரீரப்ருத் |
மஹர்த்திர்ரித்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || -38-

பத்மநாப: — படைப்பின் கேந்த்ரமான நாபிக்கமலம் அழகியவர்
அரவிந்தாக்ஷ: — தாமரைக் கண்ணழகர்
பத்மகர்ப: — இதயகமலத்தின் உள்ளே தஹராகாசத்தில் விளங்குபவர்
சரீரப்ருத் — உடல்மிசை உயிரென உயிர்களைத் தம் உடலாய்த் தாங்குபவர்
மஹர்த்தி: — அனைத்துவித ஐஸ்வர்யங்களையும் உலக க்ஷேமத்திற்காகப் பாதுகாப்பவர்
ருத்த: — தம் ஐஸ்வர்யங்களைத் தம் குழந்தைகள் குதூகலிப்பதைக் கண்டு மகிழ்பவர்
வ்ருத்தாத்மா — பிரபஞ்சம் அனைத்தும் அடங்கியும் அடங்காது பொலியும் தன் தன்மை மிக்கவர்
மஹாக்ஷ: — அழகிய பெரிய திருக்கண்கள் உடையவர்; வேதவடிவாம் கருடனை வாகனமாய்க் கொண்டவர்
கருடத்வஜ: — வேதவடிவாம் கருடனைத் தம் கொடியிலும் கொண்டவர்

———-

அதுல: சரபோ பீம: ஸமயக்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || –39-

அதுல: — ஸமம் என்று யாரும் எவையும் இல்லாதவர்
சரப: — எல்லா சரீரங்களிலும் அந்தராத்மாவாய் இருப்பவர் (ஸ்ரீஆதிசங்கரர்)
நெறி தவறுவோரைத் தண்டித்து நல்வழிக்குக் கொணர்பவர் (ஸ்ரீபட்டர்)
பீம: — தம்மீதுள்ள பயத்தால் தேவர்கள் அனைவரும் முறைதிறம்பாமல் இருக்கும்படித் திகழ்பவர்
ஸமஜக்ஞ: — அனைவரையும் ஸமமாகக் கருதுதலாகிய உயர்ந்த பூஜையை விரும்புபவர்
ஹவிர்ஹரி: — யக்ஞத்தில் படைக்கப்படும் ஹவிஸ் ரூபமானவர்; பக்தர்களின் பாபங்களைப் போக்கும் ஹரி ஆனவர்.
ஸர்வலக்ஷணலக்ஷண்ய: — அறியப்படுகின்ற, அனுபவத்திற்கு வருகின்ற அனைத்தின் தன்மைகளும் அவரையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அனைத்து அறிவும் அனுபவமும் சென்று முடியும் நிலை அவரே
லக்ஷ்மீவாந் — அகலகில்லேன் என்று திருமகள் உறையும் மார்பர்; நித்யயோகமாக அவருடன் அன்னையாகிய ஸ்ரீ திகழ்கிறாள்
ஸமிதிஞ்ஜய: — ஜீவனுக்கும் அவருக்கும் உண்டாகும் வழக்கில் ஸ்ரீ இருவருக்கும் இடையில் திகழ்ந்து தயாரூபமாய் பகவானுக்கே வெற்றியைத் தருகிறாள்

————

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ்ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவாநமிதாசந: ||–40-

விக்ஷர: — தம் பக்தர்களிடத்தில் எத்துணையும் குறையாத அன்புடையவர்
ரோஹித: — தம் பக்தர்களை ஸம்ஸாரத்திலிருந்து காப்பாற்றியதும் மகிழ்ச்சியில் சிவக்கும் திருமுகம் கொண்டவர்
மார்க: — அடியார்களால் உயர்வுக்கான மார்க்கமாய் விரும்பப்படும் பாதையானவர்
ஹேது: — அத்தகைய பக்தி மார்க்கத்திற்கான அடிப்படை ஹேதுவாகவும் அமைந்திருப்பவர்
தாமோதர: — கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய திருவயிறு உடையவர்
ஸஹ: — ஆய்ச்சிக் கைத்தாம்பிற்கும், கோபியரின் ஏச்சுக்கும் மகிழ்ச்சியுடன் சகிக்கும் பண்பினர்
மஹீதர: — உலகத்தைத் தாங்கும் உத்தமர்
மஹாபாக: — ஆயர் குவித்த பேரன்னத்தை விரும்பி உண்டவர்; நாயகிபாவத்தில் பக்தர்களைத் துய்க்கும் நாயகர்
வேகவாந் — அதிவேகத்தில் சாகசங்களை இயற்றும் அவதார மஹிமை கொண்டவர்
அமிதாசந: — உலகையுண்டும் அமையாது ஆயர் குவித்த அன்னமலையையும் உண்ட ஆச்சரியர்

———

உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேச்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: || -41-

உத்பவ: — பவக்கடலில் இருந்து பக்தர்களை விடுவிப்பவர்; அவருடைய அவதார லீலைகளை நினைப்பதால் ஸம்ஸாரபந்தம் விடுபடுகிறது.
க்ஷோபண: — நல்வழியில் செல்லாதோரை நடுங்கச் செய்பவர்; படைப்பிற்கு முன்னர் இருந்த ப்ரக்ருதியைக் கலக்கிச் சிருஷ்டியை வெளிப்படச் செய்பவர்
தேவ: — அனைத்தின் உள்ளுயிராய் ஒளிர்பவர்; மாயையில் ஜீவர்களைக் கட்டி விளையாடுபவர்
ஸ்ரீகர்ப: — படைப்பின் எந்நேரத்திலும் தம்மோடு பிரியாமல் திருமகள் திகழ நிற்பவர்
பரமேச்வர: — உயர்வற உயர்நலம் உடையவராய்த் திகழும் திருமால் அவரே
கரணம் — தம்மை அடையத் தாமே தகுந்த துணையாக இருப்பவர்
காரணம் — அனைத்துவித காரணமாகவும் அவரே திகழ்பவர்
கர்த்தா — காரணம் கொண்டு இயற்றும் ஆக்குவோனாகவும் அவரே திகழ்கிறார்
விகர்த்தா — விசித்திரமான படைப்பை இயற்றுபவர்; பக்தர்களின் ஆனந்தம், துயரங்களைத் தம்முடையதாகக் கருதுபவர்
கஹந: — நம் புலனுக்கும் கருத்திற்கும் புலப்படா மஹிமை உடையவர்; பக்தர்களிடம் அவர் கொள்ளும் அன்பை நம்மால் புரிந்துகொள்ள இயலாது இருப்பவர்
குஹ: — ஜீவர்களிடத்தில் அவர்களே அறியாமல் அவர்தம் இதய குகையில் வீற்றுக் காப்பவர்

———–

வ்யவஸாயோ வ்யவஸ்தாந: ஸம்ஸ்தாந: ஸ்தாநதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்ட: துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || -42-

வ்யவஸாய: — முக்தியை நோக்கி ஜீவர்களைப் பரிணமிக்கச் செய்வதில் அயராது முனைபவர்;
துருவன் என்ற குழந்தையிடம் பக்தியை ஊட்டிப் பெருநிலைக்கு உய்த்தவர்
வ்யவஸ்தாந: — தம் அருளில் அனைத்தும் இயல்பாகவே ஒழுங்கில் இயங்கும்படி அமைப்பவர்.
துருவனை நக்ஷத்திர நிலையாக்கி அண்டத்தையே அதனைச் சுற்றி முறையாகச் சுழலச் செய்பவர்
ஸம்ஸ்தாந: — உயிர்க்குலம் அனைத்தும் அடைய வேண்டிய முக்திப் பெருநிலையாய்த் திகழ்பவர்
ஸ்தாநத: — துருவன் போன்ற பக்தர்களுக்கு மிகச் சிறந்த ஸ்தாநம் தருபவர்
த்ருவ: — தாம் மாறாமல் என்றும் நிலைத்தவர்; உயர்ந்த ஸ்தானமாகிய த்ருவ ஸ்தானமாய்த் தாமே இருப்பவர்
பரர்த்தி: — உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர்
பரமஸ்பஷ்ட: — மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்
துஷ்ட: – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்
புஷ்ட: — குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்
சுபேக்ஷண: — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,
பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,
முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,
அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்

————

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோSநய: |
வீரச்சக்திமதாம் ச்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || –43-

ராம: — நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான கல்யாண குணங்களால் பக்தர்களின் மனத்தை மகிழ்விக்கும் ராமர்
விராம: — யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரமபுருஷர்
விரத: — வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர்
மார்க: — முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர்
நேய: — வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர்
நய: — வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர்
(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும்,
பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்)
அநய: — தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர்
வீர: — அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர்
சக்திமதாம்ச்ரேஷ்ட: — ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர்
தர்ம: — சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர்
தர்மவிதுத்தம: — தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர்

———

வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்பச் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: || -44-

வைகுண்ட: — குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்
புருஷ: — அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர்
ப்ராண: — மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர்
ப்ராணத: — சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர்
ப்ரணவ: — வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர்
ப்ருது: — எல்லையற்று விரியும் மஹிமையுடையவர்
ஹிரண்யகர்ப: — திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர்
சத்ருக்ந: — இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர்
வ்யாப்த: — அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர்
வாயு; — காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர்
அதோக்ஷஜ: — ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர்

—————

ருதுஸ்ஸுதர்சந: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ: |
உக்ரஸ்ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்ராமோ விச்வதக்ஷிண: || -45-

ருது: — பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர்
ஸுதர்சந: — தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர்
கால: — காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர்
பரமேஷ்டீ — பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர்
பரிக்ரஹ: — தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர்
உக்ர: — ஜீவர்களின் நலனுக்கு வேண்டி பிரளயத்தைக் கடுமையுடன் நடத்துபவர்
ஸம்வத்ஸர: — ஸ்ருஷ்டியின் சுழற்சியை மாறாத கடும் நியமத்துடன் நடத்துபவர்
தக்ஷ: — செயல் திறமையே வடிவானவர்
விச்ராம: — பவநோயால் நலிந்தோர்க்கு உய்வும் ஓய்வும் நல்குபவர்
விச்வதக்ஷிண: — அனைத்திற்கும், அனைவருக்கும் உரிய திருப்தியை அளிப்பவர்

———–

விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு; ப்ரமாணம் பீஜமவ்யயம் |
அர்தோSநர்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந: || -46-

விஸ்தார: — பிரபஞ்ச விரிவனைத்தும் தம்முள் அடங்க இருப்பவர்; வையம் உய்ய வேதப் பொருள் விரிப்பவர்
ஸ்தாவரஸ்தாணு: — அசையாமல் நிலைத்து நிற்கும் பெரும் தத்துவம்; வேத வழியை நன்கு ஸ்தாபித்துத் திடப்படுத்துபவர்
ப்ரமாணம் — அனைத்தையும் உணரும் சைதன்யத்திற்கும் அடிப்படைத் தத்துவமாய் இருப்பவர்; நல்லது தீயது ஜீவர்களுக்காகத் தாமே நன்கு பிரித்துக் காப்பவர்
பீஜமவ்யயம் — அனைத்திற்கும் ஆதிகாரணமாய் இருந்தும் எந்தவித மாற்றமும் அற்றவர்
அர்த்த: — அனைவராலும் விரும்பப்படும் உறுதிப்பொருள் அவர்
அநர்த்த: — உலகியலில் முழுகியவர்களால் பொருட்படுத்தப் படாமல் இருப்பவர்
மஹாகோச: — தீராத பல செல்வங்களையும், ஐஸ்வர்யங்களையும் உடையவர்; ஐந்து கோசங்களுக்கும் தாண்டி நிற்பவர்
மஹாபோக: — அத்தனை விதமான ஜீவர்களும் விரும்பும் போகங்களைத் தம்முள் கொண்டவர்
மஹாதந: — ஞானம், தர்மம் முதலிய அத்தனை விதமான தனங்களையும் உடையவர்

———–

அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர்நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ்ஸமீஹந: || -47-

அநிர்விண்ண: — ஜீவர்கள், தம் முயற்சியை எத்தனை தோற்பித்தாலும் அதனால் சிறிதும் அயர்வின்றி, அவர்களைக் கடைத்தேற்ற முனைந்திருக்கும் தன்மையர்
ஸ்தவிஷ்ட: — சிம்சுமாராக்ருதியில் விவரிப்பது போல் பிரபஞ்சமே தம் சரீரமாகக் காட்சியளிப்பவர்
அபூ: (பூ: ) — பிரபஞ்ச உருவாகக் காட்சியளிக்கும் அவரே பூமியாக நின்று உயிர்களைத் தாங்குகிறார்
தர்மயூப: — அனைத்தும் நெறி பிறழாதபடி அவரிடம் கட்டி வைக்கப் பட்டிருப்பதால் அவர் தர்ம யூபர்
மஹாமக: — யக்ஞங்களைத் தம் அங்கங்களாகக் கொண்டு திகழும் யக்ஞமூர்த்தி
நக்ஷத்ரநேமி: — நக்ஷத்ரவடிவான பிரபஞ்ச சரீரத்திற்கு இதயம் போன்றவர்
நக்ஷத்ரீ — சிம்சுமார வடிவான பிரபஞ்ச வடிவினுள் திகழும் நாராயணர்
க்ஷம: — சிறிதும் வருத்தமே இன்றி அனைத்து உலகங்களையும் தாங்கிப் பொறுப்பவர்
க்ஷாம: — அவாந்தரப் பிரளயத்தின் போது அனைத்து நக்ஷத்திரங்களும் அழிந்துபடத் தாம் மட்டுமே இருப்பவர்
ஸமீஹந: — பிரபஞ்சத் தோற்றத்தில் அனைத்து சக்திகளையும் உந்திச் செயலாற்ற வைப்பவர்

———–

யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரதுஸ்ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்சீ நிவ்ருத்தாத்மா ஸர்வக்ஞோ ஜ்நானமுத்தமம் || -48-

யக்ஞ: — வேள்வி ரூபமாய் இருப்பவர்
இஜ்ய: — யாரைக் குறித்து வேள்வி செய்யினும் தாமே அஃது சென்று அடையும் இலட்சியமாய் இருப்பவர்
மஹேஜ்ய: — யாதொரு பலத்தையும் கருதாது தமக்கே அர்ப்பணமாக வேள்வி புரிவோர்க்கு மோக்ஷபலத்தை அருள்பவர்
க்ரது: — க்ரதுவே தம் ஸ்வரூபமாய் இருப்பவர்; அக்னிஷ்டோமங்களுக்கு இலட்சியமாய் இருப்பவர்
ஸத்ரம் — வேள்விகள் அனைத்தும் நிலைபெறும் இடமாய் இருப்பவர்
ஸதாங்கதி: — ஸத்துக்களின் ஒரே புகலாய் இருப்பவர்
ஸர்வதர்சீ — அனைத்திற்கும் சாக்ஷியாய்ப் பார்த்துக் கொண்டிருப்பவர்
நிவ்ருத்தாத்மா — நிவ்ருத்தி மார்க்கத்தின் பரம இலட்சியமாய் இருப்பவர்; பதரியில் நிவ்ருத்தி மார்க்கத்தை உபதேசித்தவர்
ஸர்வக்ஞ: — அனைத்தையும் பூர்ணமாக அறிவதே இயல்பாகக் கொண்டவர்
ஜ்நானமுத்தமம் — உத்தம ஞானங்கள் அத்தனையாகவும், உத்தம ஞானங்கள அனைத்தையும் வழங்குபவராகவும் இருப்பவர்.

————

ஸுவ்ரத: ஸுமுகஸ்ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |
மநோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹு: விதாரண: || –49-

ஸுவ்ரத: — உறவுகளுக்காக, ஒரு சமயம் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஆனால் அனைத்து ஜீவர்களையும்,
தம்மைச் சரணடைந்தாரைக் காப்பதையே நித்யமான விரதமாகக் கொண்டவர்
ஸுமுக: — விரதத்தினால் முகம் மேலும் மேலும் மகிழ்ச்சியும், இனிமையும் கூடியிருப்பவர்
ஸூக்ஷ்ம: — உபாதிகள் ஏதுமற்ற சமாதி நிலையில் உணரப்படும் சூக்ஷ்ம ரூபம் உடையவர்
ஸுகோஷ: — உபநிஷதங்களால் கோஷிக்கப்படுபவர்
ஸுகத: — தவறாமல் நன்னெறியில் நிற்போருக்கு உயர்ந்த ஆனந்தம் தருபவர்
ஸுஹ்ருத் — அனைவருக்கும் உபகாரம் செய்ய விழையும் நல்லிதயம் ஆனவர்
மநோஹர: — தம் கனிவால் அனைவருடைய மனத்தையும் கவர்பவர்
ஜிதக்ரோத: — குரோதமே அற்ற இயல்பானவர்
வீரபாஹு: — அழகிய பல தடந்தோள் வீரர்
விதாரண: — அதர்மத்தில் ஈடுபட்டோரை அறுத்துவிடுபவர்

—————

ஸ்வாபநஸ்ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்போ தநேச்வர: || –50-

ஸ்வாபந: — தம் சௌந்தர்யத்தால் ஜீவர்களைக் கவர்ந்து நல்வழியில் நடத்துபவர்; அறிதுயில் அழகர்
ஸ்வவச: — என்றும் தம் நிலையில் பெயராதவர்
வ்யாபீ — அனைத்திலும் அந்தர்யாமியாய் நீக்கமற வியாபித்தவர்
நைகாத்மா — அனைத்து ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாய் விளங்கும் பரமாத்மா அவரே
நைககர்மக்ருத் — பிரபஞ்சத்தின் பல செயல்களையும் தாம் செய்தவண்ணம் இருப்பவர்
வத்ஸர: — ஜீவர்களின் இதயத்தில் மேவியுறைந்து அவர்களை உயர்ந்த இலட்சியத்தின்பால் உய்ப்பவர்
வத்ஸல: — சரணடைந்தோரைக் கன்றைத் தாய்ப்பசு காப்பதைப் போலக் கனிந்து காப்பவர்
வத்ஸீ — அத்தனை உயிர்களையும் தம் கன்றுகள் போல் கருதுபவர்
ரத்நகர்ப: — அனைத்து உயிர்களுக்கும் அனைத்து வளங்களையும் இடையறாது கொடுக்கும் பெருவளம் மிக்கவர்
தநேச்வர: — தம் குழந்தைகளுக்கு ஐஸ்வர்யங்களை விரைந்து அருளும் தந்தை அவரே

————

தர்மகுப்தர்மக்ருத் தர்மீ ஸதக்ஷரமஸத்க்ஷரம் |
அவிக்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண: || -51-

தர்மகுப் — தர்மவழியில் நிற்பவரைப் போற்றிக் காப்பவர்
தர்மக்ருத் — தமது அருளால் நல்லவர்களை தர்மவழியில் நிலைக்கச் செய்பவர்
தர்மீ — தர்மத்தையே தம் படையாகக் கொண்டவர்
ஸத் — எப்பொழுதும் தர்மமே வடிவாக நிற்பவர்
அக்ஷரம் — எப்பொழுதும் கல்யாண குணங்களே நிறைந்தவர்
அஸத் — நல்லோர் அல்லாதார்க்கு அவர் புகலாக இருப்பதில்லை
க்ஷரம் — தீயவர்களுக்கு அழிவாக இருக்கின்றவர்
அவிக்ஞாதா — பக்தர்களிடம் ஏற்படும் அறியாத் தவறுகளைக் கவனத்தில் கொள்ளாதவர்
ஸஹஸ்ராம்சு: — எல்லையற்ற ஞானக்கதிர்கள் அவரிடம் வீசும்படி இருப்பவர்
விதாதா — பக்தர்களின் விதியைத் தாமே நிர்வஹிப்பவர், எமனும் தலையிட முடியாதவாறு.
க்ருதலக்ஷண: — அனைத்து சாத்திரங்களும் ஜநார்த்தனனிடமிருந்தே வருகின்றன என்றவாறு இருப்பவர்

———–

கபஸ்திநேமி: ஸத்வஸ்த: ஸிம்ஹோபூத மஹேச்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு: || -52-

கபஸ்திநேமி: — ஒளிகளில் பேரொளியானவர்; சுதர்சன சக்கரத்தை உடையவர்
ஸத்வஸ்த: — பக்தர்களின் இதயத்தில் எப்பொழுதும் வீற்றிருந்து தீமை அண்டாதவாறு காப்பவர்
ஸிம்ஹ: — பக்தர்களுக்கு வரும் அல்லல்களை நீக்குவதில் சிம்மம் போன்றவர்
பூதமஹேச்வர: — அனைத்து தேவர்களுக்கும் தலைவர் அவரே
ஆதிதேவ: — தேவர்கள் அனைவருக்கும் மூலம் அவரே
மஹாதேவ: — தேவர்கள் உள்ளடக்கிய படைப்பனைத்தையும் லீலையாகக் கொண்டவர்
தேவேச: — தேவர்களின் உள்நின்று நியமிப்பவர்
தேவப்ருத்குரு: — தேவர்களைத் தாங்கி நின்று அவர்களுக்குக் குருவாகவும் இருப்பவர்

———–

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்நாநகம்ய: புராதந: |
சரீரபூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || –53-

உத்தர: — இழந்ததை மீட்டுக் கொடுப்பவர்; பிரம்மாவிற்கு வேதத்தையும், ஜீவர்களுக்கு முக்தியையும் கொடுப்பவர்
கோபதி: — கோ என்னும் வேதவாக்குகளைக் காப்பவர்
கோப்தா — அனைத்து வித்யைகளையும் போற்றிக் காப்பவர்
ஜ்நாநகம்ய: — வேதஞானத்தால் அடையப்படுபவர்
புராதந: — கல்பம்தோறும் அவரே ஞானத்தை அனைவருக்கும் அளிக்கின்றார்
சரீரபூதப்ருத் — சித் அசித் அனைத்தும் தம் சரீரமாய்க் கொண்டிருப்பவர் எப்பொழுதும்
போக்தா: — அவரே அத்தனை யக்ஞ பலன்களின் பயன்களையும் துய்ப்பவராய் இருந்து அதில் ஜீவர்களுக்குப் பங்களிப்பவர், ஜீவர்களின் நலனுக்காக.
கபீந்த்ர: — உலகம் உய்ய வேண்டி வானரர்களாக வந்த தேவர்களின் தலைவர்
பூரிதக்ஷிண: — யக்ஞங்களில் அளவற்ற நலன்கள் பெருகுமாறுச் செய்பவர்

—————-

ஸோமபோSம்ருதப: ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜய: ஸத்யஸந்தோ தாசார்ஹ ஸாத்வதாம் பதி: || -54-

ஸோமப: — அனைத்து வழிபாடுகளின் ரஸமான பகுதி அவரால் அருந்தப்படுகிறது
அம்ருதப: — வேள்விகளில் மந்திரங்களால் அளிக்கப்படும் ஹவிஸ் அனைத்தும் அம்ருதம் ஆகி அவருக்கே சேருகிறது
ஸோம: — நிலவுபோல் காண்பதற்கு இனியராய் உயிர்களைப் போஷிக்கின்றவர்
புருஜித் — அனைத்தையும் பலவழிகளாலும் வெற்றி கொள்பவர்
புருஸத்தம: — ஹனுமான் போன்ற உத்தம சாதுக்களிடம் எப்பொழுதும் நீங்காமல் உறைபவர்
விநய: — தீமை செய்வோரைத் தண்டிப்பவர்
ஜய: — தம்மிடம் தூய பக்தி கொண்டவர்களிடம் என்றும் தோற்று இருப்பவர்
ஸத்யஸந்த: — பொய்யாகாத சங்கல்பங்களைக் கொண்டவர்
தாசார்ஹ: — பக்தர்கள் தம்மை அர்ப்பணிக்கும் புகலாகவும், பக்தர்களுக்குத் தம்மையே தந்துவிடும் அருள்மிக்கவராகவும் இருப்பவர்
ஸாத்வதாம்பதி: — ஸாத்வத ஸம்ஹிதையைத் தந்து பக்தர்களைக் காப்பவர்

———-

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோSமிதவிக்ரம: |
அம்போநிதிரநந்தாத்மா மஹோததிசயோSந்தக: || -55-

ஜீவ: — ஜீவர்களை ரக்ஷித்துத் தம்முடைய சேஷத்வத்தை உணர்ந்து தம்மிடம் கைங்கரியத்திலே ஊக்கம் கொள்ளச் செய்பவர்
விநயிதாஸாக்ஷீ — ஜீவர்களை ரக்ஷிக்கும் போதும் அவர்களை ராஜகுமாரர்கள் போல் நயத்துடன் நடத்தி நல்வழியில் கண்ணும் கருத்துமாய் நடத்துபவர்
முகுந்த: — மோக்ஷம் தரவேண்டி ஜீவர்களின் இதயத்திலேயே எப்பொழுதும் உறைபவர்
அமிதவிக்ரம: — தமது அளவற்ற ஆற்றலால் பக்தர்கள் உய்ய வேண்டி பல வடிவங்களைக் கொள்பவர்
அம்போநிதி: — ஆழத்தில் நீர்வளமாக நின்று தாங்கும் கூர்மம் அவர்
அநந்தாத்மா — காலம், தேசம், வஸ்து ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து ஆதிசேஷ உருவினர்
மஹோததிசய: — பெருங்கடல் வடிவில் பள்ளிகொள்ளும் பரமர்
அந்தக: — உலகனைத்தையும் தம்முள் ஒடுக்கும் முடிவே வடிவானவர்

————

அஜோமஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர; ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || -56-

அஜ: — உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து அனைத்துக்கும் அடிப்படையாய், முதன்முன்னம் தானே தோன்றும் அகாரம் போன்று,
வடமொழி எழுத்துக்களை வரிசையாக எழுதினால் முதல் 24 எழுத்துக்களால் குறிக்கப்படும் பிரகிருதி தத்துவங்களுக்குள்ளும்,
பின்னர் 25 ஆவது எழுத்தான மகாரத்தால் குறிப்பிடப்படும் ஜீவதத்துவத்திற்குள்ளும் உள்ளுயிராய் நின்று காப்பதால்,
அகாரத்தின் பொருளாக நமக்குக் காட்சியளிப்பதால் அவர் அஜ:
மஹார்ஹ: — ஜீவர்கள் தம்மை அர்ப்பணிக்கத் தகுந்த புகல் அவரே
ஸ்வாபாவ்ய: — ஜீவர்களால் தமக்கு மிகவும் இயல்பாக உரிமை பூண்ட பிரபுவாகப் பக்தி செலுத்தத் தகுந்தவர்
ஜிதாமித்ர: — தம்மைச் சரணடைந்தோரைக் காமம் முதலிய அகப்பகையை வெல்லுபடிச் செய்பவர்
ப்ரமோதந: — தம்மிடம் பக்தி செலுத்தும் அடியார்களின் ஆத்ம சாதனத்தில் பெரும் ஆநந்தத்தைப் பெருகச் செய்பவர்
ஆநந்த: — கபிலாவதாரம் போன்று ஆநந்தமே வடிவானவர்
நந்தந: — பிரம்மானந்தத்தைத் தருபவர்
நந்த: — நித்யவிபூதியில் வந்தடைந்த ஜீவர்களுக்கு அளவிலா ஆனந்தம் அளிப்பதால் பெருகும் ஆநந்தம் மிகுபவர்
ஸத்யதர்ம: — மாறாத நிலைத்த ஞானம், ஆனந்தமே நிலையான ஸ்வரூபமாகக் கொண்டு பக்தர்களின் உண்மையான பக்திக்கு என்றும் உறுதுணையாய் நிற்பவர்
த்ரிவிக்ரம: — த்ரி என்பதே மூன்று வேதங்களையும் குறிக்கும் ஒரே பெயராகவும் ரிஷிகள் கூறுவதின்படி வேதத்தின் ஊடு எங்கும் தாத்பர்யமாகப் பரவி நிற்பவர்

———

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதக்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ்த்ரிதசாத்யக்ஷோ மஹாச்ருங்க: க்ருதாந்தக்ருத் || -57-

மஹர்ஷி: கபிலாசார்ய: — வேதங்கள் அனைத்தையும் முழுவதும் உணர்ந்து தூய ஆத்ம ஞானத்தையே உபதேசித்த கபில மஹர்ஷி என்னும் ஆசார்யர்
க்ருதக்ஞ: — தம் ஆத்மாவைப் போல் பிறரையும் உணர்வதால் சினம் போன்று தோன்றினும் அருளே நிறைந்தவர்
மேதிநீபதி: — கபிலரின் உருவில் பூமியைக் காப்பாற்றும் அருள்வடிவம் அவர்
த்ரிபத: – சித் அசித் ஈச்வரன் என்று தத்வத்ரயமாகத் தாம் ஆனவர்; பிரணவத்தின் மூன்று எழுத்துக்கள் ஆனவர்
த்ரிதசாத்யக்ஷ: — முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பவர்; மூன்று அவஸ்தைகளிலும் நிலைத்தவர்
மஹாச்ருங்க: — உலகத்தைத் தன் ஒரு கோட்டிடைக் கொண்டு காத்த கோலவராகர்
க்ருதாந்தக்ருத் — அழிவையும் அழித்த அழகு வராகர்

———-

மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ |
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தச்சக்ர கததர: || –58-

மஹாவராஹ: — அமிழ்ந்துபோன பூமியைக் கோட்டிடைக் கொண்டெழுந்த பெரும்வராகர்
கோவிந்த: — கோ என்னும் பூமியை மீட்டதால் கோவிந்தர்; கோ என்னும் வாக்கிற்குத் தலைவர் ஆகையால் கோவிந்தர்;
கோ என்னும் வேதாந்த சூத்ரங்களின் ஸாரதமமான பொருளாக இருப்பவர் ஆகையாலே கோவிந்தர்.
ஸுஷேண: — தேவகணங்களையும், பக்தகோடிகளையும் என்றும் தம்மைப் புடைசூழ இருப்பவர் ஆகையாலே ஸுஷேணர்
கனகாங்கதீ — பொன்னாரணிகள் கணக்கில பூண்டவர்
குஹ்ய: — இரகசியங்கள் எனப்படும் உபநிஷதங்களால் விளக்கப்படுபவர்; இதய குகையில் என்றும் இருப்பவர்
கபீர: — உலக அறிவால் என்றும் அறியவியலாத, எல்லையற்ற, என்றும் உபநிஷதங்கள் மூலமாகவே அறியக் கூடிய கல்யாண குணங்களை உடையவர்
கஹந: — ஆழம் காண இயலாத் தன்மையர்; மூன்று அவஸ்தைகளிலும் அளவுபடாமல் இருப்பவர்
குப்த: — மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத இயல்பை உடையவர்
சக்ரகதாதர: — மனம், புத்தி ஆகியவற்றிற்கு எட்டாதவர் ஆயினும் மனம், புத்தி ஆகிய தத்துவங்களையே
சக்ரம், கதை என்னும் ஆயுதங்களாகத் தரிப்பவர்

———-

வேதா: ஸ்வாங்கோSஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோSச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || -59-

வேதா: — பிரபஞ்சம் அனைத்தையும் அளிக்கும் பிரான்
ஸ்வாங்க: — படைத்தளிப்பதில் பிற உதவி எதுவும் இன்றி அளிப்பவன்
அஜித: — ஸ்ரீவைகுண்டமென்னும் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட நித்யவிபூதியில் உறைபவன்
க்ருஷ்ண: — கண்ணன் என்னும் கருந்தெய்வம்
த்ருட: — பக்தர்கள் கண்டு பழகித் தொட்டுணரும்படி அவதார வடிவுகள் எடுப்பவன்
ஸங்கர்ஷண: அச்யுத: — சித் அசித் என்னும் அனைத்தையும் தன்னுள் அடக்குபவன்; எந்தப் பிரளயத்தும் மாறாமல் நிலைத்து இருப்பவன்
வருண: — பிரபஞ்சத்தை முழுவதும் தன்னுள் அடங்க மூடியிருக்கும் பெரும் தத்துவம் அவனே
வாருண: — வருணன் என்னும் ஜலதத்துவத்தின் மீது கருணை கொண்டு சயனித்திருப்பவன்
வ்ருக்ஷ: — பக்தர்களுக்கு ஞானமும், பக்தியும், முத்தியும் ஆகிய பழங்களையும், ஸம்ஸார தாபத்தைப் போக்கிப்
பகவானிடம் ஈடுபாடு ஆகிய நிழலையும் தரும் வாசுதேவன் என்னும் பெரும் மரம் அவன்
புஷ்கராக்ஷ: — திருக்கண் நோக்கால் தெய்விக நன்மைகளைப் பொழிபவன்
மஹாமநா: — பக்தர்களுக்கு எத்தனை தான் அருளினும் போதாது என்று மேலும் மேலும் அருளும் பெரும் மனம் கொண்டவன்

————-

பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: || -60-

பகவாந் — அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர்
பகஹா — ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர்
நந்தீ — ஆனந்தவடிவானவர்; சங்கர்ஷணனாக வடிவெடுத்தவர்
வநமாலீ — ஸூக்ஷ்ம பூததத்துவங்களை வனமாலை என்னும் மாலையாகத் தரித்தவர்
ஹலாயுத: — உழவின் தொடக்கத்தில் தொழப்படும் தெய்வமாகக் கலப்பையை உடையவர்
ஆதித்ய: — அதிதியின் மகனான வாமனர்; ஆ என்னும் அக்ஷரத்தால் நினைக்கத் தகுந்த பொருளாய் இருப்பவர்
ஜ்யோதிராதித்ய: — ஒளிகளிலெல்லாம் வேறுபட்ட சிறந்த பேரொளியாக இருக்கும் நாராயணர்
ஸஹிஷ்ணு: — யாஎ செய்த பிழையையும் பொறுப்பவர்
கதிஸத்தம: — முக்திக்கான உயர்ந்த கதியான ஆசைகளைத் துறத்தலைப் போதித்தவர்

———–

ஸுதந்வா கண்டபரசுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக்ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: || -61-

ஸுதந்வா — அஹங்கார தத்வத்தை ஸுதந்வா என்னும் வில்லாகக் கொண்டவர்
கண்டபரசு: — எதிரிகளால் ஒரு நாளும் வெல்ல முடியாத பரசு (கோடரி) என்னும் ஆயுதம் தரித்தவர்
தாருண: — பக்தர்களுக்குத் தீங்கிழைக்கும் புறப்பகையையும், அகப்பகையையும் கடிபவர்
த்ரவிணப்ரத: — உயர்ந்த செல்வமான சாத்திரங்களையும், அதன் ஆழ்பொருட்களையும் ஒரு சேரத் தரும் வியாசராக அவதரித்தவர்
திவிஸ்ப்ருக் — மிகச்சிறந்த பிரம்ம வித்யையின் மூலமாகப் பரமபதத்தின் சிறந்த பொருளைத் தொட்டுக் காட்டுபவர்
ஸர்வத்ருக்வ்யாஸ: — பரம்பொருளின் ரூபம், குணம், விபவம், விபூதி ஆகிய அனைத்து தத்வார்த்தங்களையும்
உள்ளபடிக் கண்டு, சாத்திரங்களை நன்கு விளக்கமுறப் பகுத்துத் தந்தவர்
வாசஸ்பதி: அயோநிஜ: — வாக் என்னும் வித்யைகளுக்குத் தலைவர்; தம் இயல்பினால் என்றும் பிறவாதவர்.

————

த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்யாஸக்ருச்சம: சாந்தோ நிஷ்டா சாந்தி: பராயணம் || -62-

த்ரிஸாமா — மூன்றுவித ஸாமவேத மந்திரங்களால் துதிக்கப்படுபவர்
ஸாமக: — ஸாமகானத்தைப் பாடுபவர்
ஸாம: — ஸாமவேதமே வடிவாய் இருப்பவர்; தம்மைக் குறித்துப் பாடுவோரின் பாபங்களைப் போக்குபவர்
நிர்வாணம் — பாபங்களைப் போக்கி மயர்வற மதிநலம் தந்து உயர்ந்த ஆனந்தத்தைத் தருபவர்
பேஷஜம் — ஸம்ஸாரம் ஆகிய கொடிய நோய்க்கு உற்ற மருந்து அவர்
பிஷக் — ஸம்ஸாரம் என்னும் நோயை அகற்றும் பிரம்ம வித்யையை அளித்த மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன்
ஸந்யாஸக்ருத் — பிரபுவிடம் அனைத்து பாரங்களையும் அர்ப்பணித்துவிடுதலாகிய பரந்யாஸம் என்னும்
பிரபத்திக்குப் பெயரே ஸந்யாஸம் என்பது. அந்த ஸந்யாஸம் ஆகிய சரணாகதியைத் தந்தருள்பவர்
சம: — காம கோப தாபங்களை அடக்கி அமைதி எய்தும் வழியை போதிப்பவர்
சாந்த: — சாந்தமே வடிவாக இருப்பவர்
நிஷ்டா — சிறந்த யோகிகளின் ஆழ்ந்த நிஷ்டைக்குரிய வடிவம் கொண்டவர்
சாந்தி: — அவரிடமே மனத்தைச் செலுத்தி பக்தி புரிபவர்கள் அவரிடமே தாமும், தம்முடைய அனைத்தும் லயித்துவிடுவதான சாந்தியை அடைகிறார்கள்
பராயணம் — மிகச்சிறந்த இலட்சியமாகவும், அதை அடைவிக்கும் மிகச்சிறந்த வழியாகவும் தாமே இருப்பவர்

———–

சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேசய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || -63-

சுபாங்க: — பக்தர்களும், யோகிகளும் தம்மிடம் ஈடுபட்டு மனம் லயிக்க வேண்டி உயர்ந்த மங்களமான வடிவங்களைத் தரிப்பவர்
சாந்தித: — பக்தி யோகத்தால் ஸாயுஜ்யமாகிய உயர்நிலை தந்து சாந்தி அருள்பவர்
ஸ்ரஷ்டா — பக்குவமாகிய ஜீவர்களுக்கு மோக்ஷம் தந்துவிட்டு மீண்டும் பக்குவமடையாத ஜீவர்கள் மோக்ஷத்திற்கான பக்குவம் பெறவேண்டி ஸ்ருஷ்டியைச் செய்பவர்
குமுத: — புவியைப் படைத்து அதில் உயிர்கள் பக்குவத்தால் பரிணமிப்பது கண்டு மகிழ்பவர்
குவலேசய: — தமக்குத் தாமே யஜமானர்கள் என்று நினைத்துப் பொல்லாவழிகளில் போகும் ஜீவர்களையும் அடக்கியாண்டு அவர்களை மோக்ஷவழியில் செலுத்துபவர்
கோஹித: — ஜீவர்கள் முத்திக்கு முனையவேண்டிய இடமாகிய பூமி என்னும் கோ என்பதற்கு என்றும் நன்மையே செய்பவர்
கோபதி: — புண்ணியங்களை அனுபவிக்கும் இடமாகிய சுவர்க்கம் என்னும் கோ என்பதற்கும் அவரே தலைவர்
கோப்தா — ஜீவர்கள் பக்குவம் அடைந்து முக்தி அடையவேண்டி ஸம்ஸாரச் சக்கரத்தை நன்கு காப்பவர்
வ்ருஷபாக்க்ஷ: — வ்ருஷப: என்னும் தர்மத்தின் நாபியாக (அக்ஷ: ) இருப்பவர்
வ்ருஷப்ரிய: — ஜீவர்கள் பின்பற்றும் அனைத்து தர்மங்களையும் கண்டு மகிழ்ந்து அதற்கான பலன்களைத் தருபவர்

————-

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: || -64-

அநிவர்த்தீ — உலகப் பலன்களை விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்களை அந்தப் பலன்களை அடைந்து
அவர்களே அது அல்பம், நிலையில்லாதது என்று உணரும்வரை அவர்களை அந்த வழியிலிருந்து திருப்புவதில்லை
நிவ்ருத்தாத்மா — உலகப் பலன்களை விரும்பாது பகவானுக்கே அர்ப்பணமாகக் கர்மங்கள் புரிவோரைத் தம் பக்தர்களாகக் கொண்டவர்
ஸங்க்ஷேப்தா — உலகியல் வழியான பிரவிருத்தி மார்க்கத்தில் போவோரின் ஞானம் சுருங்கிவிடும் வகையில் அமைத்திருப்பவர்
க்ஷேமக்ருத் — நிவ்ருத்தி மார்க்கமான மோக்ஷவழியில் போவோர்க்கு ஞானம் விரிவடையுமாறு அமைத்திருக்கின்றவர்
சிவ: — பிரவிருத்தியோ, நிவிருத்தியோ எந்த மார்க்கத்தில் போவோருக்கும் அவரவர்க்கு வேண்டிய வளத்தை அருள்பவர்
ஸ்ரீவத்ஸவக்ஷா: — சிவம் என்றால் மங்களம் என்பதற்கேற்பத் தமது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மங்களமான மறுவுடையவர்
ஸ்ரீவாஸ; — அகல்கில்லேன் என்று திருமகள் விரும்பியுறையும் மார்பினர்
ஸ்ரீபதி: — திருமகள் கேள்வர்
ஸ்ரீமதாம்வர: — திரு நிறைந்த பெற்றியரில் தலை சிறந்தவர்

————-

ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமாந் லோகத்ரயாச்ரய: || -65-

ஸ்ரீத: – திருவனைத்தும் அருளும் திருமால்
ஸ்ரீச: — திருவுக்கும் திருவாகிய செல்வர்
ஸ்ரீநிவாஸ: – அகல்கில்லேன் என்று திருமகள் மருவும் திருமால்
ஸ்ரீநிதி: — திரு பொருந்தி உறைகின்ற பிரான்
ஸ்ரீவிபாவந: — ஜீவர்களின் கர்மங்கள் பலவாய் இருப்பினும் அனைவரும் பகவானை அடையச் செய்யும் அன்னையின் தயையை ஏற்பவர்
ஸ்ரீதர: — அனைத்து ஜீவர்களுக்கும் உற்ற தாயான ஸ்ரீயை என்றும் தமது மார்பில் தரித்தவர்
ஸ்ரீகர: — துதித்தல், நினைத்தல், அர்ச்சனை செய்தல், பூஜித்தல் முதலிய பல வழிகளிலும் ஜீவர்களுக்கு மங்களம்
பெருகும்படிச் செய்பவளான ஸ்ரீ என்றும் அனைத்து அவதாரங்களிலும் தம்மைத் தொடர்ந்து இருக்கும்படிச் செய்து கொள்பவர்
ச்ரேய: ஸ்ரீமாந் — அனைவருக்கும் உய்யவேண்டிப் புகலாக இருக்கும் அன்னையை என்றும் தன்னை விட்டுப் பிரியாத நித்ய யோகத்தை உடையவர்
லோகத்ரயாச்ரய: — விட்டுப் பிரியாத திருமகள் கேள்வனாகிய திருமாலை மூவுலகத்து உயிர்களும் சரணடைந்து உய்வு பெறும்.

————-

ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதாநந்தோ நந்திர்ஜ்யோதிர்கணேச்வர: |
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திர்சிந்நஸம்சய: || -66-

ஸ்வக்ஷ: — அருள்நோக்கில் அன்னையின் கண்களையே தம் கண்களாம் எனும்படிக் கொண்டவர்
ஸ்வங்க: — அகலகில்லேன் என்று அலர்மகள் விரும்பியுறைகின்ற திருமேனி திகழ்பவர்
சதாநந்த: — எப்பொழுதும் ஆனந்தம் பெருகும் திருமால்
நந்தி: — திருமகள் கேள்வனாய் என்றும் இணையிலா ஆநந்தம் கொண்டவர்
ஜ்யோதி: கணேச்வர: — சுடரும் அயர்வறும் அமரர் கணங்களின் அதிபதி
விஜிதாத்மா — பத்துடை அடியவர்க்கு எளியவர்
விதேயாத்மா — தூதுபோதல் போன்று பக்தர்கள் தம்மைக் கட்டளையிட்டு அதற்குப் பணிந்து நடத்தலைத் தம் மகிழ்வாய்க் கருதுபவர்
ஸத்கீர்த்தி: — அவருடைய எளிமைக் குணத்தால் தலைமைக் குணம் மிக்க புகழ் பெற இருப்பவர்
சிந்நஸம்சய: — அவர் அணுகுவதற்கு அரியரோ என்று பக்தர்கள் கொள்ளும் ஐயங்கள் எல்லாம் தம்முடைய எளிமைக் குணத்தால் நீங்கும்படி இருப்பவர்.

—————-

உதீர்ண: ஸர்வதச்சக்ஷுரநீச: சாச்வதஸ்ஸ்திர: |
பூசயோ பூஷணோ பூதி: அசோக: சோகநாசந: || -67-

உதீர்ண: — தம் எளிவரும் இயல்பினாலும், எல்லையில்லாக் கருணையினாலும் பக்தர்களுக்குக் கட்கண்ணால் காணவும் தம்மை வெளிப்படுத்துகிறார்
ஸர்வதச்சக்ஷு: — அவருடைய அளவிலாக் கருணையால் அனைவரும் காணலாம்படி கோவில்களில் அர்ச்சா மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
(மிக உயர்ந்த பரம்பொருளை எப்படி நாம் அணுகுவது என்ற பக்தர்களின் சந்தேகத்தை முற்றிலும் நீக்குகிறார்
என்ற திருநாமமான சின்னஸம்சய: என்பதற்கு விளக்கம் இந்த நாமம். கண்ணுக்கு விஷயமாகும் ஒன்றில் ஐயங்களே ஏற்பட முடியாதன்றோ!)
அநீச: — அவ்வாறு கோவில்களில் காட்சி தரும்பொழுது தம்முடைய ஈச்வரத் தன்மையை முற்றிலும் அடக்கிக்கொண்டு
பக்தர்களின் இஷ்டத்திற்கு முற்றிலும் சார்ந்தவராய்த் தம்மை வைத்துக் கொள்கிறார்
சாச்வதஸ்ஸ்திர: — கோவில்களிலும் அர்ச்சா மூர்த்திகளில் பக்தர்களைச் சார்ந்தவண்ணம் தம்மை அவர் நிறுத்திக் கொண்டாலும்,
நித்யவிபூதியில் என்ன ஸ்வரூபத்தோடு எழுந்தருளியுள்ளாரோ அந்த ஸ்வரூபத்தில் சிறிதும் மாற்றமின்றியே நிலையாக எழுந்தருளியுள்ளார்
பூசய: — தரிசனம் தந்து மறைந்துவிடும் சமாதிநிலை போலன்றி, கண்காணச் சிலகாலம் இருந்து பின் மறைந்துவிடும் அவதாரம் போலன்றி, இருப்பதையே காணமுடியாத பரத்துவ நிலை போலன்றி, இருந்தாலும் ஒளிந்துகொண்டிருக்கும் அந்தர்யாமி நிலை போலன்றி என்றென்றும் மாறாது, மறையாது காட்சிதரும் அர்ச்சாமூர்த்தியாக இருப்பவர். அதுவும் என்றும் உங்களை விட்டுப் பிரியேன் என்று சொல்வது போல் கோவில்களில் படுத்த திருக்கோலத்தில் காட்சி தருபவர்
பூஷண: — தம் அவதாரங்களால் புவிக்கு அணிகலனாய் இருப்பவர்; அர்ச்சா மூர்த்தியாய் எழுந்தருளிப் பக்தர்கள் தரும் அணிகளையும் ஏற்றுக் காட்சி தருபவர்.
பூதி: — நிதியினைப் பவளத் தூணை என்றபடிப் பக்தர்களுக்கு அனைத்துவிதச் செல்வமாகவும் இருப்பவர்
அசோக: — கதியற்றவர்களைக் காப்பவர் ஆகையால் சோகமே அண்டாதவராய் இருக்கிறார்
சோகநாசந: — தம்மைக் காணாது துயருறுவோர் யாராயினும் அவர்தம் சோகத்தைத் தவறாமல் போக்கியருள்பவர்

———-

அர்சிஷ்மாநர்சித: கும்போ விசுத்தாத்மா விசோதந: |
அநிருத்தோSப்ரதிரத: ப்ரத்யும்நோSமிதவிக்ரம: || -68-

அர்சிஷ்மாந் — பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் போது அவர்களால் கண்டு மகிழ அழகிய வடிவில் தோன்றுகிறார்
அர்சித: — பின்னானார் வணங்கும் சோதியாகக் கோயில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்
கும்ப: — காதல் உள்ளத்தோடு பக்தர்களால் பக்தி செய்யப்படுகிறார்
விசுத்தாத்மா — தூயதிலும் தூய ஆத்மாவாக இருப்பவர்
விசோதந: — கோயில்களில் எழுந்தருளி பக்தர்களின் பாபங்களைப் போக்கி அருள் செய்கிறார்
அநிருத்த: — அநிருத்தர் என்னும் வியூஹ மூர்த்தியாய்க் காட்சியளிக்கிறார்
அப்ரதிரத: — எதிர்த்து நிற்க எவரும் இல்லாதவர்
ப்ரத்யும்ந: — மயர்வற மதிநலம் அருள்பவர்; சதுர்வ்யூஹ மூர்த்திகளாக இருப்பவர்
அமிதவிக்ரம: — மூவடி கேட்டு ஈரடியால் உலகளந்த திருவிக்கிரமர்

————

காலநேமிநிஹா சௌரி: சூர: சூரஜநேச்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி: || -69-

காலநேமிநிஹா — அர்ச்சாவதாரமாகக் கோயிலில் எழுந்தருளிப் பக்தர்களின் காலதோஷத்தாலும், அறியாமையினாலும் ஏற்படும் தோஷங்களைப் போக்குகிறார்
சூர: சௌரி: — ராமரும் கிருஷ்ணருமாக வந்தவர்
சூரஜநேச்வர: — சூரர்களின் கூட்டங்களுக்குத் தலைவர்
த்ரிலோகாத்மா — பக்தர்களுக்கு அருள்பாலிக்க மூவுலகிலும் உள்ளுயிராய்ச் சஞ்சரிப்பவர்
த்ரிலோகேச: — மூவுலகங்களையும் நியமித்தபடி இருக்கும் ஈச்வரர்
கேசவ: — க என்னும் பிரம்மனையும், ஈச: என்னும் சிவனையும் தம் சரீரமாகவே கொண்டு காட்சி தருபவர்
கேசிஹா — கேசி என்னும் அசுரனைக் கொன்றவர்
ஹரி: — கோவர்த்தன மலையில் அழகிய வண்ணத்துடன் அமர்ந்து பக்தர்களின் பாபங்களைப் போக்கி அவர்களின் பூஜையை ஏற்று அருள்பவர்

——–

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேச்யவபுர்விஷ்ணு: வீரோSநந்தோ தநஞ்ஜய: || –70-

காமதேவ: — ஜீவர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கும் தேவர் அவரே
காமபால: — ஜீவர்களை அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த நல்வழிகளில் காப்பாற்றிச் செலுத்துபவரும் அவரே
காமீ — நல்லதை விழைபவருக்கு அவர்கள் கேட்டதினும் மிக அதிகமாகத்ஹ் தருவதில் ஆசை மிக்கவர்
காந்த: — பூர்ண பக்தியுடன் தீவிரமாக விரும்பத் தக்கவர் அவரே
க்ருதாகம: — சக்திக்கெல்லாம் நாதர் ஆகையாலே அனைத்து ஆகமங்களுக்கும் அவரிடமிருந்தே ஆகும்
அநிர்தேச்யவபு: — குணைங்களைக் கடந்தவர் ஆகையாலே இவ்வாறு என்று அறியவொண்ணாதவர்
விஷ்ணு: — தமது சக்தியால் பிரபஞ்சம் அனைத்தையும் வியாபித்திருப்பவர்
வீர: — எல்லையற்ற சக்தியால் நினைத்துப் பார்க்கவும் ஒண்ணாத வேகத்தில் செய்லகளைச் செய்பவர்
அநந்த: — எல்லையற்ற ஆற்றலும் பெருமையும் மிக்கவர்
தநஞ்ஜய: — வாழ்க்கையில் அனைத்து ஜீவர்களும் ஈட்ட வேண்டிய ஒரே பெரும் நிதி அவரே

———-

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மக்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || -71-

ப்ரஹ்மண்ய: — ப்ரஹ்மா என்னும் சொல்லின் பொருளாக வருவன வேதம், தவம், ஞானம், ஜீவாத்மா, பிரகிருதி
போன்று பலபொருள் உடைய சொல் ப்ரஹ்மா என்பது. இவை அத்தனைக்கும் உள்ளிருந்து நன்மை செய்பவர்
ஆகையாலே அவர் ப்ரஹ்மண்யர் எனப்படுகிறார்.
ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா — நான்முகனுக்குள் அந்தர்யாமியாக இருந்து இவையனைத்தையும் படைத்தான்.
ப்ரஹ்ம: — உயர்வற உயர்நலம் உடையவர்; மயர்வற மதிநலம் தருபவர்
ப்ரஹ்மவிவர்த்தந: — ப்ரஹ்மா என்னும் பதத்தால் குறிக்கப்படும் வேதம், தவம், ஞானம் ஆகியவற்றை மேலும் மேலும் வளர்ப்பவர்
ப்ரஹ்மவித் — வேதங்கள் அநந்தம் ஆகையால் அவை அனைத்தையும் அறிந்தவர் அவர் ஒருவரே
ப்ராஹ்மண: — வேதப் பொருள் விரிக்க வேண்டித் தத்தாத்ரேயராக அவதாரம் செய்தவர்
ப்ரஹ்மீ — அறியப்பட வேண்டியதும், அறிவதற்கான வழியும் அவரே
ப்ரஹ்மக்ஞ: — வேதத்தின் அர்த்தம் தாமாகவே இருப்பதால் அவரே உள்ளபடி ப்ரம்மஞானம் ஆனவர்
ப்ராஹ்மணப்ரிய: — ப்ரம்மஞானம் அடைந்த ஞானிகளுக்குப் பிரியமானவர்; அத்தகைய ஞானிகளிடத்துத் தாமும் எல்லையற்ற பிரியம் கொண்டவர்.

————

மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || -72-

மஹாக்ரம: — உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவர்களைப் படிப்படியாக ஆத்ம குணங்களை உண்டாக்கிப்
பகவத் பக்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்தி உயர்ந்த முக்திக்கு அழைத்துச் செல்லும் பெரிய கிரமத்தில் அருள் செய்பவர்
மஹாகர்ம: — உலகியலில் மூழ்கிக் கடவுள் என்ற விருப்பமே இல்லாமல் இருக்கும் ஜீவனை மிக உயர்ந்த
ஞான நிலையான முக்திக்கு அழைத்துச் செல்லும் மகத்தான செயலைச் செய்பவர்
மஹாதேஜ: — தாமே மிக உன்னதமான பூர்ண ஞானத்தின் ஒளியாக இருப்பதால் ஜீவனின் அஞ்ஞான இருளைப் போக்கி அருள்பவர்
மஹோரக: — இந்த மகத்தான கர்மத்தை அவர் ஜீவனின் இதயத்தில் ஆதிமுதலே வீற்றிருந்து பரிபாகம் வரச்செய்கிறார்
மஹாக்ரது: — கிரது என்னும் யக்ஞத்திற்கெல்லாம் யக்ஞம் என்று கொண்டாடப்படும் ஜபம் ஆகிய யக்ஞத்தால் திருப்தியடைபவர்
மஹாயஜ்வா — ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகிய பெரும் வேள்வியைத் தாமே விடாது இயற்றிக்கொண்டிருப்பவர்
மஹாயக்ஞ: — சரணாகத உள்ளத்தோடு கைகூப்பும் செய்கையைக் கூடப் பெரும் யக்ஞமாகக் கருதுபவர்
மஹாஹவி: — சரணாகதி என்பதில் ஜீவன் தன்னையே பரமாத்மாவிற்கு ஹவிஸாக அர்ப்பணித்து விடுவதால் அந்த மஹா ஹவிஸை ஏற்பவர் அவரே

———–

ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துத: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: || -73-

ஸ்தவ்ய: — வாக்கினால் செய்யப்படும் கைங்கரியமான துதி என்பதற்கு முற்றிலும், எக்காலத்தும், மாறாத நல்ல இலக்கு அவரே
ஸ்தவப்ரிய: — பக்தர்களின் உண்மையான உள்ளத்தைப் பார்க்கின்ற காரணத்தால் எவ்வளவு எளியோர் துதித்தாலும் அதில் உவப்பு கொள்கின்றவர்
ஸ்தோத்ரம் — உலகில் கருத்திழந்து உலழும் ஜீவர்களுக்குத் தம்மைத் துதிக்கும் எண்ணத்தையும் தந்து அந்தத் துதியாகவும் தாமே இருக்கிறார்
ஸ்துத: — என்றென்றும் அவரே துதிகப்படுகின்றவராக இருக்கின்றார்
ஸ்தோதா — தம்மைத் துதிப்பவரை உலகில் துதிகப்படுகின்றவராகவும், மெய்ப்புகழ் வாய்ந்தவராகவும் ஆக்குகின்றார்
ரணப்ரிய: — உலகில் நன்மைக்கு எதிரான தீமையையும், பக்தர்களுக்குத் தீமை புரிபவரையும் எதிர்க்கும் போரைத் துதியைப் போலவே என்றும் விரும்புகின்றார்
பூர்ண: — தாம் என்றும் நிறைந்தவரும், எதையும் வேண்டாதவருமாக இருந்தாலும் பக்தர்கள் உள்ளம் உருகிச் செய்யும் துதியை விரும்புகிறார்
பூரயிதா — அவ்வாறு பூர்ணராக இருந்தாலும் பக்தர்களின் துதிகளை விரும்பும் காரணம் அவர்களுடைய பிரார்த்தனைகளை பூர்த்தி ஆக்குவதற்கேயாம்
புண்ய: — பாபிகளும் அவரைத் துதிப்பதால் பாபம் நீங்கிப் புண்யம் வாய்ந்தவராய் ஆகின்றனர்
புண்யகீர்த்தி: — பாபத்தை நீக்கிப் புண்யத்தைத் தரும் கீர்த்தியுடையவை அவருடைய நாமங்கள்
அநாமய: — மிகக் கொடிய வியாதியானதும், ஞானத்தையே போக்கிவிடுவதுமான உலகியல் என்பதையே நீக்குவது நாவால் அவருடைய திருநாமத்தைத் தீண்டலே ஆகும்

——-

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்வஸுமநா ஹவி: || -74-

மநோஜவ: — மனத்தினும் வேகம் மிக்குப் பக்தர்களுக்கு அருள்செய்பவர்
தீர்த்தகர: — உயர்ந்த தீர்த்தங்கள் என்று சொல்லப்படும் சாத்திரங்கள், வித்யைகள் என்று அனைத்தையும் ஜீவர்கள் தூய்மை பெறவேண்டி அருள்செய்திருப்பவர்
வஸுரேத: — ஒளிதிகழ் பிறப்பாய் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர்
வஸுப்ரத: — வஸுதேவர்க்கும், தேவகிக்கும் வரமாய் வந்து அவதரித்தவர்; இவ்வுலகத்திற்கான நன்மையைத் தருபவர்
வஸுப்ரத: — அழியாத கீர்த்தியைப் பெற்றோர்க்குத் தந்து பிறந்தவர்; மோக்ஷம் என்னும் அவ்வுலகச் சிறப்பையும் தருபவர் அவரே
வாஸுதேவ: — பாற்கடல் விட்டு வசுதேவர்க்கு நன்மகவாய் அவதரித்தவர்
வஸு: — ஜீவர்களின் அழைப்புக் குரல் கேட்க என்றும் பாற்கடலில் பள்ளிகொள்பவர்; ஜீவர்களின் இதயத்தில் என்றும் இருப்பவர்
வஸுமநா: — திருவுக்கும் திருவாகிய செல்வராகப் பாற்கடலில் இருப்பினும் என்றும் வஸுதேவரை மனத்தில் நினைப்பவர் ஆகையால் வஸுமநா:
ஹவி: — ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம ஹவி: என்று சுருதி வசனத்திற்கேற்ப வஸுதேவரும், தேவகியும் தாம்
பெற்றும் பேணி வளர்க்கும் பேற்றைத் துறந்து நந்தகோபர்க்கும், யசோதைக்கும் உரியவராய் ஹவிஸாக அளிக்க வளர்ந்தவர்

———

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |
சூரஸேநோ யதுச்ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || –75-

ஸத்கதி: — மயர்வற மதிநலம் அளித்து அடியார்களை உயர்ந்த பேற்றை அடையச் செய்பவர்
ஸத்க்ருதி: — பக்தர்கள் நினைத்து மகிழ்ந்து உய்வடைய வேண்டி அவதாரங்கள் எடுத்துப் பல தெய்விகச் செயல்களைச் செய்பவர்
ஸத்தா — அனைத்து உயிர்களுக்கும் உயிர்நிலையாயும், சாதுக்களுக்குத் தாங்கி நிற்கும் உயிராகவும் இருப்பவர்
ஸத்பூதி: — பக்தர்களுக்குத் தாயாய்த் தந்தையாய் உறவாய்ச் சுற்றமாய் நட்பாய் எல்லாமும் ஆனவர்
ஸத்பராயண: — தெளிந்த ஞானிகளுக்கு உற்ற பெரும் புகலாய் இருப்பவர்
சூரஸேந: — தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்ட தீரர்களைத் தம்மைச் சூழ உடையவர்
யதுச்ரேஷ்ட: — யதுகுலத்தில் உலகுய்யப் பிறந்த ஸ்ரீகிருஷ்ணர்
ஸந்நிவாஸ: — ஞானியர்க்கு என்றும் உற்ற நிலையாய் இருப்பவர்
ஸுயாமுன: — யமுனை நதிக்கரையில் விண்ணகத்தை மண்ணகத்தில் நட்டது போல் திகழச் செய்தவர்

———–

பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோSநல: |
தர்பஹா தர்பதோSத்ருப்தோ துர்தரோSதாபராஜித: || -76-

பூதாவாஸ: — தம்மிடத்திலேயே அனைத்து உயிர்களும் இருந்து வாழ்ந்து இலயிக்கும்படியாக இருப்பவர்
வாஸுதேவ: — அனைத்து உலகையும் தம் மாயையால் மூடியிருப்பவர்; விசித்ரமான மாயையால் வஸுதேவர்க்கு நன்மகவாய்த் தோன்றியவர்
ஸார்வாஸுநிலய: — அனைத்துப் பிராணன்களுக்கும் உயிராய் இருப்பவர்; கோகுலத்தில் ஆயர்களால் தங்கள் உயிராகக் கொண்டு அன்பு செலுத்தப்பட்டவர்
அநல: — பக்தர்களுக்கு அருள்வதில் போதும் என்ற மனம் ஏற்படாதவர்
தர்பஹா — தேவர்களும் தங்களைத் தாங்களே தருக்கிக் கொண்டு வரும்பொழுது அதை அடக்குபவர்
தர்பத: — பக்தர்களுக்கு அன்பின் உரிமையால் ஏற்படும் கர்வத்தைக் கண்டு இரசிப்பவர்
த்ருப்த: — உலகியலில் மூழ்கிப் போகும் ஒரு ஜீவன் அதனின்றும் விலகித் தன்னை வந்து சரணடையும் போது அதில் மிகவும் மகிழ்ந்து பெருமிதமும், கர்வமும் கொள்பவர்
துர்தர: — மனம் வாக்குக்கு எட்டா மறைபொருளாய் இருந்தாலும் பக்தியுடன் தியானிக்கும் யோகியர்க்குத் தம்மைத் தியானத்தில் உணரும்படி வைப்பவர்; ஆயர்பாடியில் யார் கையிலும் சிக்காத குழந்தையாக லீலைகள் புரிந்தாலும் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயர்
அபராஜித: – தம்மைப் பக்தியுடன் போற்றும் அடியார்க்கு உட்பகையாலோ வெளிப்பகையாலோ வெல்லமுடியாத நிலையைத் தருபவர்

———-

விச்வமூர்த்திர் மஹாமூர்த்தி: தீப்தமூர்த்திரமூர்த்திமாந் |
அநேகமூர்த்திரவ்யக்த: சதமூர்த்தி: சதாநந: || -77-

விச்வமூர்த்தி: — அவர் ஏன் அபராஜிதர் என்றால், எதனாலும் எவராலும் வெல்லப்பட முடியாதவர் என்றால், அவர் விச்வம் அனைத்தையும் தம் சரீரமாகக் கொண்டிருக்கிறார்.
மஹாமூர்த்தி: — விச்வம் அனைத்தையும் தம் சரீரத்தில் காணுமாறு அர்ஜுனனுக்குக் காட்சியளித்த விச்வரூபர்
தீப்தமூர்த்தி: — ஒளிகொண்டு திகழும் அத்தனை வடிவும் சிறப்பும் அவரிடமிருந்தே தம் ஒளியைப் பெறுகின்றன என்னும் அளவிற்கு ஒளியாம் வடிவினர்
அமூர்த்திமாந் — அவரன்றித் தம் அளவில் வடிவின்றி, அசித் சித் என்னும் வேறுபாடு அறியவொண்ணாது
கலசிக் கிடக்கும் உயிர்களையும், பிரகிருதியையும் தம் சரீரமாக உடையவர்
அநேகமூர்த்தி: — உலகின் நன்மைக்காகப் பல அவதாரங்களிலும் பலவித வடிவங்களைத் தரிக்கின்றார்
அவ்யக்த: — எத்தனை வடிவம் தரிப்பினும், விச்வ ரூபம் காட்டினும் அத்தனையும் மனித வடிவில் மறைந்திருக்கக் காட்சி தருபவர்
சதமூர்த்தி: — நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்கள் உடையவர். (திவ்ய தேசங்கள் நூற்றியெட்டிலும் திகழும் வடிவினர் என்றும் பொருள் கொள்ளலாம் அன்றோ!)
சதாநந: — நூற்றுக்கணக்கான முகங்கள் கொண்டவர்

———-

ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பதமநுத்தமம் |
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || –78-

ஏக: — ஒத்தாரும் மிக்காரும் இல்லாத ஒருவன்
நைக: — அவன் ஒருவனே எனினும் பல்கிய உயிர்களிலும் பொருட்களிலும் உள்ளே உள்ளுயிராய்ப் பரந்து நிற்பவனும் அவனே
ஸவ: — மானிடமாய் வந்து ஸ்ரீகிருஷ்ணனாய்க் குழந்தைகளும் உரிமை கொண்டாடத் திரிந்தவன் அவனே;
உடல்மிசை உயிரென உயிர்கள் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் என்றும் இருப்பவனும் அவனே (ஸ;, வ: )
க: — ஒளிவளர் ஆனந்தமாய் எங்கும் நிறைந்தவன் (அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி)
கிம் — எவனைத் தேட வேண்டும், எவனையே அறிய வேண்டும் என்று மறை புகலுமோ அவன்
யத் — ஜீவர்கள் அஞ்ஞான இருளில் முழுகிக் கிடந்த காலத்தே தொடங்கி அவர்கள் முக்திக்காக எவன் முனைந்தவண்னம் இருக்கின்றானோ அவன்
தத் — மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
பதம் அநுத்தமம் — உயர்வற உயர்நலம் என்றும், பரமம் பதம் என்றும் மறைகள் புகலும் மிக்குயர் பேறு அவன்
லோகபந்து: — உயிர்களுக்கு உறவுகள் அனைத்துமாய் ஆனவன்
லோகநாத: — உயிர்களை உடையோனும், உயிர்களை வழிநடத்துவோனும் அவனே
மாதவ: — தண்ணளி பூண்டு உயிர்களுக்கு இரங்கும் திருவின் மணாளன்
பக்தவத்ஸல: — தானீன்ற கன்றின் அழுக்குகக்கும் பசு போன்று ஜீவர்கள் பால் தாய்மை மிக்கவன்

————-

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச் சந்தநாங்கதீ |
வீரஹா விஷம: சூன்யோ க்ருதாசீரசலச்சல: || -79-

ஸுவர்ணவர்ண: — பொன்னெழில் பூக்கும் நிறத்தன்
ஹேமாங்க: — பொன்னொளிரும் திருமேனியன்
வராங்க: — திவ்விய மங்கள வடிவுடையவன்
சந்தநாங்கதீ — பொன்னெழில் அணிகள் பூண்டவன்
வீரஹா — நன்மைக்கு எதிரான அசுரர்கள் எத்தனை வலிமையரேனும் அவர்களை அழிப்பவன்
விஷம: — உற்றார்க்குத் தண்ணளி காட்டிச் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
சூன்ய: — நிர்விசேஷன் ஆகையாலே சூன்யன் (சங்கரர்); தோஷம் சிறிதுமற்ற குணபூர்ணனாகிய ஸ்ரீகிருஷ்ணன்
க்ருதாசீ — ஆயர்பாடியில் வெண்ணையை விரும்பியுண்பவன்
அசல: — சிறிதும் மாறாத பெருங்குணத்தன்
சல: — பக்தர்களுக்கு ஒரு கெடுதல் என்றால் எதுவும் பொருட்டில்லை என்று வேகப்படுபவன்

———-

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருத் |
ஸுமேதா மேதஜோ தந்ய: ஸத்யமேதா தராதர: || -80-

அமாநீ — உயிர்களுக்கு உள்ளுயிராய் அவரே இருப்பதால் தம் சரீரமாக இருக்கும் ஜீவர்களின்
துயர் துடைக்க மானாபிமானம் பார்க்காமல் தம் அக்கறையாகக் கொண்டு அருள்பவர்
மாநத: — தம் பக்தர்களை, தம்மை நாடி வந்த ஜீவர்களை மிகவும் கௌரவிப்பவர்
மாந்ய: — பக்தர்கள் தம்மிடம் உரிமை எடுத்துக்கொண்டு தம்மிடம் சொல்வதையும், அவர்களுக்காகத் தாம்
இறங்கி வந்து செய்யும் எளிமையான இயல்பையும் தம்முடைய பெருமையாகக் கருதுபவர்
லோகஸ்வாமீ — அவ்வாறு எளிவரும் இயல்பினராகப் பக்தர்களின் வேண்டுக்கோளை நிறைவேற்றச் சுலபராய்
வருபவர் யார் எனில் அனைத்து உலகங்களுக்கும் உடைமையாளரும், படைத்தவரும், தலைவரும் ஆவார்.
த்ரிலோகத்ருத் — அவர் ஏன் இவ்வாறு இவ்வளவு எளிமையாக இறங்கி வரவேண்டும் என்றால் அவர் வெறுமனே
புறத்தே அனைத்துக்கும் சொந்தக்காரராக இல்லாமல் மூவுலகத்தையும் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் நின்று தாங்குவதால் அன்றோ!
ஸுமேதா — அவர் எப்பொழுதும் தம் பக்தர்களிடம் கனிந்த உள்ளம் கொண்டவராக இருக்கிறார்
மேதஜ: — தயையின் காரணமாகவே அவர் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவர்களின் தீவிர
வேண்டுதல் என்னும் வேள்வியின் பயனாகப் புவியில் அவதாரம் எடுக்கிறார்.
தந்ய: — அவ்வாறு அவதாரம் எடுக்கும் பொழுது இன்னாரின் குழந்தை என்று சொல்லப்படுவதை பெரும் பேறு போன்று கருதுகிறார்
ஸத்யமேத: — அவ்வாறு உறவினால் உரிமை கொண்டாடுவதை ஓர் அலங்காரமாகக் கருதாமல் ஆர்வத்துடன் சத்யமாகவே அவ்வாறு கருதுபவர் ஆகிறார்
தராதர: — உலகைத் தாங்குவது மட்டுமின்றி அவதாரம் எடுக்கும் காலங்களில் கோவர்த்தன மலையைத்
தாங்கிப் பல்லுயிர்களைக் காப்பது போன்ற அதிசயச் செயல்களைச் செய்கிறார்

———–

தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகச்ருங்கோ கதாக்ரஜ: ||–81-

தேஜோவ்ருஷ: — காரணமற்றுப் பெருகும் அவருடைய அருளால் அடியார்களைக் காத்துப் பல நன்மைகளைப் பொழிகின்றார்
த்யுதிதர: — மானுட அதீதமான பொலிவும் கீர்த்தியும் தம்மிடத்தில் திகழ இருப்பவர்
ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: — பல்வித ஆயுதங்களைக் கையாளும் சூரர்களில் மிகச் சிறந்தவர்
ப்ரக்ரஹ: — புறத்தில் பார்த்தால் அர்ஜுனனின் தேருக்குச் சாரதி போன்று இருந்தாலும் அர்ஜுனன் உள்ளிட்ட
உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாக நின்று நியமிப்பவர் அவரே
நிக்ரஹ: — தமது சங்கல்பத்தாலேயே எதிரிகளை அழிக்கவல்லவராய் இருக்கிறார்
வ்யக்ர: — அடியார்களின் குறை முடிக்கத் தாமே முனைந்து பொருபவராகவும் இருக்கிறார்
நைகச்ருங்க: — பல வழிகளிலும் பாண்டவர்க்குத் துணையாக இருப்பவர்; நான்கு கொம்புகள் உள்ள வேதமாகிய விருஷபத்தின் வடிவாய் இருப்பவர்
கதாக்ரஜ: — நிகதம் என்னும் மந்திரங்களின் முன்னால் தோன்றுபவர்; கதனுக்கு முன் பிறந்தவர்

———–

சதுர்மூர்த்திர்சதுர்பாஹுச் சதுர்வ்யூஹச் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்பாவச்சதுர்வேத விதேகபாத் || –82-

சதுர்மூர்த்தி: — விராட், ஸூத்ராத்மா, அவ்யாக்ருதர், துரீயர் என்னும் நான்கு வடிவினர்;
வாஸுதேவனாகிய தாம், பலராமர், ருக்மிணியின் புதல்வராகிய ப்ரத்யும்னர், ப்ரத்யும்னரின் குமாரனாகிய அரவிந்தன்
என்ற நான்கு பேர்களால் நான்கு வியூஹங்களை உணர்த்தி நிற்பவர்;
வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருநீலம் என்னும் வண்ணங்களால் சுட்டப்படுபவர்
சதுர்பாஹு: — நான்கு தோளும் திகழ அவதரித்த ஸ்ரீகிருஷ்ணர்
சதுர்வ்யூஹ: — நான்கு வ்யூஹ அவதாரங்களாகத் திகழ்பவர்
சதுர்கதி: — நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பதற்கான நான்கு வழிகளாகவும்,
இந்த்ரபதம், ப்ரம்மாபதம், கைவல்யம், மோக்ஷம் என்னும் நான்கு விதப் பலன்களை உத்தேசித்து அமையும் வழிகள் நான்காகவும் தாமே அமைந்தவர்
சதுராத்மா — விழிப்பு, கனவு, துயில், துரியம் என்னும் நான்கு நிலைகளிலும் ஸ்தூலமாகவும், சூக்ஷ்மமாகவும் உள்ளுயிராய் இருப்பவர்
சதுர்பாவ: — நான்கு வியூஹங்களில் நான்கு வித பாவங்களோடு உலகைக் காப்பவர்
சதுர்வேதவித் — நான்கு வேதங்களின் தாத்பர்யமாகவும் இருப்பவர்
ஏகபாத் — ஜீவர்களால் சரணடையத் தக்க ஒரே புகலாக இருப்பவர்

———–

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்க்கோ துராவாஸோ துராரிஹா || –83-

ஸமாவர்த்த: — மீண்டும் மீண்டும் நன்மையை நிலைநாட்ட வேண்டியும், பக்தர்களின் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யவும் அவதாரங்களை நிகழ்த்துபவர்
நிவ்ருத்தாத்மா — அவதாரம் செய்யும் பொழுது அவருடைய மனம் முழுவதும் நிவ்ருத்தியிலேயே நிலைநிற்கிறது என்பதால் நிவ்ருத்தாத்மா
துர்ஜய: — தம் முயற்சியால் யாவருக்கும் காண ஒண்ணா இயல்பினர்
துரதிக்ரம: — ஆயினும் அவருடைய பாதங்களைச் சரணடைந்து பற்றிக்கொண்டால் அந்தப் பக்தியைக் கடக்க அவராலும் இயலாத தன்மையர்
துர்லப: — தூய பக்தியாலன்றி வேறு எதனாலும் அடைய ஒண்ணாதவர்
துர்கம: — மேதையாலோ, பலவித அறிவுகளாலோ, தவத்தாலோ ஒரு நாளும் அடைய முடியாதவர்
துர்க்க: — அறியாமையால் மூடுண்ட மதியினரால் ஒரு நாளும் அண்ட முடியாதவர்
துராவாஸ: — யோகிகளின் இதயத்தில் திகழ்பவர்; யாராலும் எட்டவொண்ணாத பரமபதத்தைத் தம் இடமாகக் கொண்டவர்
துராரிஹா — மிகக் கொடிய பகை அசுரசக்திகளையும் அழிப்பவர் (அதனால் அவரால்தான் அந்தப் பரமபதத்தை அருளமுடியும்)

———-

சுபாங்கோ லோகஸாரங்கஸ் ஸுதந்துஸ்தந்துவர்த்தந 😐
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம :|| –84-

சுபாங்க: — தியானத்தில் மனம் தானாகக் குவிந்து லயிக்கும் படியான மிகவும் சுபமயமான அங்கங்களை உடையவர் என்பதால் சுபாங்கர்
லோகஸாரங்க: – லோகஸார: என்று பிரணவத்திற்குப் பெயர். பிரணவத்தினால் அடையப்படுபவராக இருப்பதால் ஸ்ரீவிஷ்ணுவானவர் லோகஸாரங்க: என்று சொல்லப்படுகிறார்.
ஸுதந்து: – சிலந்தி எப்படித் தன் உடம்பிலிருந்தே நூலை உண்டாக்கி வலை பின்னுமோ அப்படி அழகிய
நூல் வலையாகிய பிரபஞ்சத்தைத் தம்மிலிருந்து உண்டாக்கிப் பின்னுபவர் ஆகையாலே ஸுதந்து: என்று அழைக்கப்படுகிறார்
தந்து வர்த்தன: – சிலந்தி நூலை மேலும் மேலும் உண்டாக்கும், தன்னுள் இழுத்தும் கொள்ளும்.
அது போல் இந்தப் பிரபஞ்ச வலையை வளர்க்கவும், பின்னர் தன்னுள் ஒடுக்கவும் வல்லவர் ஆகையால் அவர் தந்து வர்த்தனர் ஆகிறார்
இந்த்ர கர்மா – இவ்வாறு ஒவ்வொன்றும் பரஸ்பரம் தொடர்பில் இருக்கும் வண்ணம், வலை போல் பின்னுவதால்
அவர் இந்த்ர ஜாலம் ஆகிய (ஜாலம் – வலை) கர்மாவைச் செய்பவர் என்பதால் இந்த்ர கர்மா என்று சொல்லப்படுகிறார்
மஹாகர்மா – உலகக் கர்மங்கள் அனைத்தும் பஞ்ச மஹா பூதங்களை அடிப்படையாகக் கொண்டவை.
அந்தப் பஞ்ச மஹா பூதங்களையே சிருட்டி செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீவிஷ்ணுவானவர் மஹாகர்மா என்று அழைக்கப்படுகிறார்
க்ருதகர்மா – இவ்வாறு கர்மங்கள் செய்வதால் அவருக்கு ஏதோ புதிதாகப் பயன் உண்டு என்று இல்லை.
ஏனெனில் அனைத்து கர்மங்களாலும் ஆக வேண்டிய பயன் அவரிடத்தில் பூரணமாக எப்பொழுதும் இருக்கிறது. எனவே அவர் க்ருதகர்மா எனப்படுகிறார்.
க்ருதாகம: – மனிதர்கள் பலவித கர்ம வினைப் பயன்களில் இழுப்புண்டு பின்னர் தம் விடுதலைக்கு ஏங்குங்கால்,
அவரை அடைதலாகிய வீடு பேறு என்பதை அடைவிக்கும் வழிகளைக் கூறுவது ஆகமம்.
அனைத்து ஆகமங்களையும் அவரவர் பரிபக்குவத்திற்குத் தக்க வண்ணம் செய்தவர் ஸ்ரீவிஷ்ணு ஆகையாலே
அவர் க்ருதாகமர் என்று அழைக்கப் படுகிறார்

————-

உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்கோ வாஜஸநிச் ச்ருங்கீ ஜயந்த: ஸர்வ விஜ்ஜயீ || –85-

உத்பவ: – அவருடைய பிறப்புகள் கர்மத்தின் காரணமாக இன்றி, கருணையின் காரணமாக இருப்பதால் மிகச் சிறந்தவை.
அவ்வாறு சிறந்த அவதாரங்களைச் செய்பவர் ஆகையாலே அவர் உத்பவர் ஆகிறார்
ஸுந்தர: – மன்னுயிர்க்காக, மன்னுயிர் காக்க அவதரிக்கும் கருணை மிகுந்த ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர்,
பேரழகு மயமாகவும் திகழ்கிறார் என்பதால் அவருடைய திருநாமம் ஸுந்தர: என்று சொல்லப்படுகிறது
ஸுந்த: – பேரழகு என்பதனோடு சேர்த்து பெருந் தயையே வடிவானவர் ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதால் அவர் ஸுந்த: என்று சொல்லப் படுகிறார்
ரத்ந நாப: – தயையே உருவானவர் ஆகையால் உலகத்தைப் படைத்து, உயிர்கள் வீடு பேற்றிற்கு முன்னேறுவதற்காக,
முதன்முன்னம் உலகைப் படைக்க என்று பிரமனைப் படைத்து, அதற்கு முன்னர் பிரமனுக்கு இருப்பிடமான
நாபி கமலத்தை வெளியிட்ட அருஞ்செல்வம் அன்ன ரத்நம் போன்ற நாபியை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ரத்ந நாப: என்று சொல்லப் படுகிறார்.
ஸுலோசந: – லோசநம் என்பது காண்பது என்னும் பொருளில் கண்ணையும், ஞானத்தையும் குறிப்பதால் நன்கு அழகிய திருக்கண்களையும்,
செம்மையான அக அழகு பொலியும் ஞானத்தையும் உடையவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுலோசந: என்று அழைக்கப் படுகிறார்
அர்க: – மிகப்பெரும் தெய்வங்களாலும் துதிக்கப்படுபவர் ஆகையாலே துதி என்பதற்கு இலக்காக இருப்பவர்
என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அர்க: என்று அழைக்கப் படுகிறார்.
வாஜஸநி: – உணவை உண்மையில் பிரம்மம் என்று அறிய வேண்டும் என்னும் மறைமொழிக்கு இணங்க, அனைத்து உயிர்க்கும் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவாகவும், அதற்கு உரிய பசியினால் வேண்டித் தவிப்பவர்க்கு அவ்வுணவை அளிப்பவராகவும் தாமே இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாஜஸநி என்று சொல்லப்படுகிறார்
ச்ருங்கீ – பிரளயகாலத்தில் ஒற்றைக் கொம்புள்ள மீனுரு எடுத்து உயிர்களை அடுத்த படைப்பு வரையில் பாதுகாத்தான்
ஆகையாலே ச்ருங்கீ. கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்து உயிர்களைக் காத்தான் ஆகையாலே ச்ருங்கீ.

(நம்மாழ்வார் –

மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் வான் என்னும் கேடில்லா வான் குடைக்கு தான் ஓர் மணிக்காம்பு போல்
நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்.)

ஜயந்த: – நமக்கான பகைவர்களை ஜயிப்பதில் தவறாதவர், முக்கியமாக நமக்காக நம் அகங்காரத்தை ஜயித்து
நம்மை ஆட்கொள்ள வல்லவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஜயந்தர் என்று சொல்லப் படுகிறார்

( திருமழிசையாழ்வார்;

அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய்
பொன்பாவை கேள்வா! கிளரொளி என் கேசவனே! கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆளே.)

ஸர்வவித் ஜயீ – எல்லாம் தெரிந்தவர்களையும் ஜயிப்பவர், அனைத்து அறிவின் வழிகளிலும்
ஜயிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவித்ஜயீ என்னப்படுகிறார்.

( நம்மாழ்வார்:

வாசகம் செய்வது நம் பரமே? தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
ஞாலமுற்றும் வேயகம் ஆயினும் சோராவகை இரண்டே அடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே.)

————

ஸுவர்ணபிந்து: அக்ஷோப்ய: ஸர்வவாகீச்வர: ஈச்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹாநிதி: || –86-

ஸுவர்ணபிந்து: – பொன்னினும் துலங்கும் பூர்ண அழகுடைய அவயவங்கள் உடையவர்;
நன்மையாகிய எழுத்தும் பிந்துவெனும் அநுஸ்வரமும் கூடிய பிரணவமாய் இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸுவர்ணபிந்து: எனப்படுகிறார்

( பூதத்தாழ்வார் –

கதையின் பெரும்பொருளும் கண்ணா! நின்பேரே. இதயம் இருந்து அவையே ஏத்தில்
கதையும் திருமொழியாய் நின்ற திருமாலே! உன்னைப் பருமொழியால் காணப் பணி. )

அக்ஷோப்ய: – யாவராலும் எதனாலும் கலக்கக் கூடாதவர்; காம குரோதாதிகளாலும், சப்தாதி விஷயங்களாலும்,
அசுரர்களாலும் கலக்க முடியாதவர்; ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு அக்ஷோப்ய: என்று சொல்லப் படுகிறார்.

( நம்மாழ்வார் –

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணங்கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ? எம்பிரானது எழில் திறமே. )

ஸர்வவாகீச்வரேச்வர: – சொல் என்னும் சக்திக்குத் தலைவர்களாய் உள்ள பிரம்மாதி தேவர்களுக்கும்
ஈசுவரராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸர்வவாகீச்வரேச்வர: என்னப்படுகிறார்.

( திருமங்கையாழ்வார் –

….அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை;
ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை; அறம்முதல் நான்கவையாய்
மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை..)

மஹாஹ்ரத: – யோகிகளாகிய ஆழ்வார்கள் எந்த மடுவில் முழுகி அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறார்களோ
அந்தப் பெரும் மடுவாக, தரைதட்டாத குழியாக இருப்பவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு மஹாஹ்ரத: என்று போற்றப் படுகிறார்

( நம்மாழ்வார் –

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ!
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ!
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே! )

மஹாகர்த: – அடியார்களை ஆனந்திப்பிக்கும் மடுவாக, குழியாக மட்டும் இல்லாமல், உலக மக்களை மயக்கி
உள்ளே அமிழ்த்தும் கடுங்குழியாகவும் அவன் அமைந்திருக்கிறான். உலக மயக்கம் கொண்ட மக்கள் விஷயத்தில்
எது அமிழ்த்தும் சுழல் குழியாக ஆகிறதோ அதுவே அவனுடைய உலக ரீதியான வடிவமாக
மஹாகர்த: என்று அவன் சொல்லப்பட காரணமாக ஆகிறது.

மஹாபூத: – காலத்தால் மாறாத ஸ்வரூபத்தை உடையவர், முக்காலமும் ஒரேபடித்தான ஸ்வரூபத்தைக் கொண்டவர்,
எக்காலமும் தன்னியல்பிலேயே நிலைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாபூதர் என்று அழைக்கப்படுகிறார்.

மஹாநிதி: – அனைத்துப் பொருள்களும், அனைத்து உயிர்களும் சேமக் காப்பு அடைந்து வெளிப்பட்டு வளர்ந்து
தம் இலக்காகிய அவரையே அடையத் தகுந்த ஒன்றாகத் தொடக்கம் முதல் நிறைவுவரை அவரே திகழ்வதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாநிதி என்று அழைக்கப்படுகிறார்

( பெரியாழ்வார் –

துப்பு உடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் உன்னை நான் நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! )

———

குமுத: குந்தர: குந்த: பர்ஜன்ய: பவந: அநில:|
அம்ருதாச: அம்ருதவபு: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக:|| –87-

குமுத: – எழுத்துக்குப் பொருள் என்று பார்க்கையில் கு என்னும் பூமி, மு என்னும் முத்தியைப் பற்றி வருவதால்,
முத்தி என்னும் பூமியைத் தருபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையால் அவர் குமுதர் எனப்படுகிறார்

குந்தர: – கும் எனப்படும் பாவத்தைப் போக்கி, குந்தம் என்னும் பரதத்வ ஞானத்தை அருள்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர: என்று அழைக்கப்படுகிறார்.

குந்த: – அழிக்கப்பட்ட பாவம் மீளாவகை செய்பவரும், ஞானம், வைராக்கியம் ஆகிய முதற்படிகளில் ஏறினார்க்கு
அடுத்தடுத்து பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகிய உயர்நிலைகளைத் தந்தருள்பவர் ஆகையாலும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

பர்ஜன்ய: – மழையால் உலகத்தின் புறத்துன்பம், சமுதாயத் துன்பம், உள்ளத்துத் துன்பம் என்னும் முத்துன்பங்களான
ஆதிதைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிக துன்பங்கள் அனித்தும் நீங்குவது போன்று, தம் ஸ்வரூபத்தைப்
பற்றிய ஞானத்தால் நமக்கு ஏற்படும் மூவித துன்பங்கள் அகற்றி ஆனந்தம் தருபவர் ஆகையால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்ஜன்யர் எனப்படுகிறார்.

பவந: – தூய்மைப் படுத்துபவர், அதுவும் பக்தர்கள் பால் தாமே வலியச் சென்று, அதுவும் விரைவில் சென்று
தூய்மை நல்கும் தாய்மை குணத்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பவநர் என்று சொல்லப் படுகிறார்.

அநில: – அருள் செய்வதற்கு ஒரு ஹேது வேண்டும் என்ற இயல்பு இல்லாதவன், அடியார்களின் க்ஷேமத்தில்
என்றும் விழித்திருப்பவன், பக்தியால் காதல் மீக்கூற வேண்டும் அடியார்க்கு, கண்ணுக்குப் புலனாகி அருள் செய்பவன்
என்ற இயல்புகள் பிரத்தியேகமாகத் தம் ஒருவரிடமே நிறைந்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிலர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்ருதாச: – அழிவற்ற ஆத்மானந்தமாகிய இயல்பில் சுகித்திருப்பவன், அமுதம் பிறர்க்கீந்து அவருண்ணத் தானுண்பவன்,
அடியார்க்குத் தன் குணங்களாகிற அமுதை அருந்தத் தருபவன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அம்ருதாசர் எனப்படுகிறார்.

அம்ருதவபு: – அழியாத வடிவுடையவர் ஆகையாலே அம்ருதவபு; என்று அழைக்கப் படுகிறார் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர்.

ஸர்வக்ஞ: – தாம் அனைத்தும் அறிந்தவர் என்பதோடன்றி அடியார்களின் திறமை திறமையின்மை, போதாமை, தாங்கும் சக்தி
என அனைத்தும் அவர்கள் அறியாததையும் தாம் அறிந்தவராய் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வக்ஞர் எனப்படுகிறார்.

ஸர்வதோமுக: – தம்மை அடியார்கள் வந்து அடைவதற்கும், தாம் அடியார்களைச் சென்று அடைவதற்கும் இதுதான் வழி என்று
எந்த நியதியும் இன்றி எவ்வழியும் எவ்விதத்திலும் தம்மையே வந்து சேரும்படியான பரமசத்யம்
அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வதோமுகர் எனப்படுகிறார்.

———

ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: சத்ருஜித் சத்ருதாபந: |
ந்யக்ரோத: உதும்பர: அச்வத்த: சாணூராந்த்ர நிஷூதந: || -88-

ஸுலப: – உலகத்தில் மிகச்சுலபமாகக் கிடைக்கும் பொருட்கள் என்ன என்ன உண்டோ அவற்றையெல்லாம்
விட அதி சுலபம் ஆனவர் ஆக அவர் என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுலபர் எனப்படுகிறார்.

(அய்யே அதிசுலபம் – ஆன்ம வித்தை
அய்யே அதிசுலபம் ! — ஸ்ரீரமண மஹரிஷி )

ஸுவ்ரத: – அடைவதற்குச் சுலபனாய் இருப்பவர் அடைந்தவரைக் காப்பதில் சிறிதும் கூடத் தளர்ச்சி இன்றி,
அலட்சியம் இன்றிச் சரணடைந்தாரைக் காப்பதுவே தம் உறுதியான விரதமாகக் கொண்டவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவ்ரதர் எனப்படுகிறார்.

ஸித்த: – உயிருக்கு அவர் ரக்ஷகராய் இருப்பது என்பது ஜீவன் ஏதோ சாதனத்தை அனுஷ்டித்து அதன் விளைவாக
ஏற்படும் காப்பு என்று இராமல் ஜீவனுக்கும் தமக்கும் உள்ள ஒழிக்கவியலா இயற்கையான சம்பந்தத்தால்
அவர் ஏற்கனவே ஸித்தமாக இந்த ஜீவனுக்கு ரக்ஷகராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸித்தர் என்று அழைக்கப் படுகிறார்.

’ நெறிகாட்டி நீக்குதியோ? ‘

சத்ருஜித் – பகைவர்களை வென்றவர்; சத்ருதாபந: – பகைவர்களை வாட்டுகின்றவர்

உயிரோடு பகையான உடல் வாடி நாசம் உறுகிறது என்பதைப் போல உயிருக்கு உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணுவோடு
பகைத்தவர்கள் தீராத தாபத்தால் பீடிக்கப் பட்டு, பின்னர் அவருடைய காரணமற்ற கருணையால் ஜயிக்கப்படுகிறார்கள்.
அவரைத் தம்முடைய அந்தராத்மா என்று அறியாமையால் பகைப்போருக்கு அவன் அருளும் வாழ்ச்சியே
அவர்களை ஜயிப்பது ஆகையாலே இந்த இரட்டை நாமத்தாலும் சத்ருஜித்-சத்ருதாபநர் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவே அழைக்கப்படுகிறார்.

ந்யக்ரோத; உதும்பர: – மண்ணுள்ளார் உய்ய, வன்பெரு வானகம் உய்ய எளிமையும் பெருமையும் உடையவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ந்யக்ரோத: உதும்பர: என்று அழைக்கப் படுகிறார்.

அச்வத்த: – நித்யப் பொருள்களாக மட்டும் தாம் இராமல் அநித்யப் பொருள்களாகவும், ஒரு காலத்தில்
முடிவு பெறும் அநித்யப் பதங்களாகவும், அந்தப் பதங்களுக்குரிய தேவர்களாகவும் தாமே இருப்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அச்வத்தர் எனப்படுகிறார்.

(அச்வத்தம் – மேலே வேரும் கீழே கிளைகளும் பரப்பி வளரும் உலகப் பெருமரம்.)

சாணூராந்த்ரநிஷூதந: – சாணூரன் ஆகிய அந்த்ரனை, அவன் தேவர்களுக்கும், உலகத்தினருக்கும்
துன்பம் இழைத்ததால் அந்த மல்லனை ஸம்ஹாரம் செய்தவர்.

———-

ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன:|
அமூர்த்தி: அநக: அசிந்த்ய: பயக்ருத் பயநாசன: || –89–

ஸஹஸ்ரார்ச்சி: – ஒளியும், வெப்பமும் கொண்டு உலகில் பரிணாமங்களைச் செய்வதான ஆயிரம்விதமான
ஒளிகள் தம்மிடமிருந்து வெளிப்போந்து திகழ இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸஹஸ்ரார்ச்சி; என்று அழைக்கப்படுகிறார்.

[ பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய்த் திரிவோர்க்கும்,
வேய்க்கும், அணிமுத்திவரும் வேங்கடமே
வாய்க்கு அமுது ஊர் வண்மைப்பேர் ஆயிரம் தான் மன்னினான்,
மாவலிபால் தண்மைப் பேராய் இரந்தான் சார்பு.
(திருவேங்கடமாலை, ஸ்ரீபிள்ளைப் பெருமாள் ஐயங்கார்) ]

ஸப்த ஜிஹ்வ: – ஏழு நாக்குகள் கொண்டதாகச் சொல்லப்படும் அக்னி தம் உருவமாக, அந்த அக்னியைத் தம்
வாயாகக் கொண்டு அனைத்து மக்களின் ஆஹுதிகளையும் புசிப்பவராகவும், எங்கெங்கு அக்னி உண்டோ
அவையெல்லாம் தம் உருவம் என்றும் உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தஜிஹ்வர் எனப்படுகிறார்.

ஸப்தைதா: – ஏழு விதச் சிறப்புகள், ஏழுவித வேள்விகள் என்று பிரபஞ்சத்தையே ஏழுவித உருவமாகத்தாம்
கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தைதா: என்று அழைக்கப்படுகிறார்.

ஸப்தவாஹந: – ஏழு சந்தஸ்ஸுகளுக்கும் தேவதைகளாக ஏழு குதிரைகளால் பூட்டிய தேரில் வலம் வருபவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸப்தவாஹநர் என்னப்படுகிறார்.

அமூர்த்தி: – உலகில் காண்கின்ற வகையில் இல்லாத தெய்விகமான மேனி உடையவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அமூர்த்தி என்று அழைக்கப் படுகிறார்.

அநக: – உலகில் கர்மங்கள் காரணமாகப் பிறந்து தன்னுடைய ஞானம் சுருக்கமும், பின்னர் அருளால் இயல்பான
விரிவும் அடைய நேரும் ஜீவனைப் போல் இன்றி, அந்த ஜீவர்களைக் கரையேற்றத் தாம் கருணையினால்
எத்தனை பிறவிகள் எடுப்பினும் சிறிதும் மாற்றமோ, மழுங்கலோ தன்பால் அண்டாத பூரண நல்ஞானம் என்றுமே உடையவரும்,
அதனால் ஜீவர்களின் ஞானக் கேடுகளைக் களைந்து உய்வு தரவும் செய்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநகர் என்று அழைக்கப்படுகிறார்.

அசிந்த்ய: – உலகில் காணும் இயல்புகள் அனைத்துக்கும் அப்பாற்பட்டு இருப்பவர் ஆகையாலே இத்தகையவர் என்று
சிந்தனையின் மூலம் அறுதியிட்டு அறிய முடியாதவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அசிந்த்யர் என்று சொல்லப் படுகிறார்.

பயக்ருத் – தீவழிச் செல்வோருக்குப் பயத்தை உண்டாக்குகிறவராக நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணு
வானவர் பயக்ருத் என்று அழைக்கப் படுகிறார்.

பயநாசன: – நல்வழியில் நடப்போர்க்குப் பயங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அழிக்கும் காப்பாக நிற்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயநாசநர் என்று அழைக்கப் படுகிறார்.

——-

அணுர்ப்ருஹத் க்ருச:
அணுர் ப்ருஹத் க்ருச: ஸ்தூல: குணப்ருந் நிர்குணோ மஹாந் |
அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்தந: || -90-

அணு: – இருக்கின்ற ஆகாசங்களிலெல்லாம் மிகச்சிறிய ஆகாசமான ஹ்ருதய ஆகாசத்தினுள்ளும் புகுந்து,
அதில் அணுஸ்வரூபன் என்று சொல்லப்பட்ட ஜீவனின் உள்ளும் அந்தர்யாமியாய் நின்று காக்கும்,
அணிமா என்னும் திறல்வல்லோன் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அணு என்றே அழைக்கப் படுகிறார்.

ப்ருஹத் – பெரிதினும் பெரிதான பரமபதத்தையும் தம் திருமேனியில் ஒரு பகுதியாக அடங்கும்படியாக
மிகப் பெரியவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ருஹத் என்ரு அழைக்கப்படுகிறார்.

க்ருச: – காற்றினும் லேசானவர் ஆகையாலே எங்கும் பரவி நிற்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ருசர் என்று சொல்லப் படுகிறார்.

ஸ்தூல: – இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நேரடியாகத் தொட்டுக் கொண்டிருக்கும் அளவிற்கு
பருத்திருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்தூலர் எனப்படுகிறார்.

குணப்ருத் – அனைத்துப் பொருட்களையும், அவற்றின் தன்மைகள் அனைத்தையும் தாம் தம் குணம் போலத்
தாங்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குணப்ருத் என்று சொல்லப் படுகிறார்.

நிர்குண: – நற்குணங்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவர், தாம் எவ்வித குணதோஷங்களும்
அற்றவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நிர்குணர் எனப்படுகிறார்.

மஹாந் – தோஷம் கலவாத குணங்களே நிறைந்தவர் ஆகையாலே என்றும், யாவருக்கும், எவ்விதத்திலும்,
ஒவ்வொரு கணத்திலும் மஹத்தானவராக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் மஹாந் என்று அழைக்கப்படுகிறார்.

அத்ருத: – அனைத்தையும் உள் நின்றும், தம்முள் நிலைபெறுத்தியும் தாங்குபவர் ஆகையாலே
தம்மைத் தாங்கும் எதுவும் இல்லாததால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்ருதர் என்று சொல்லப்படுகிறார்.

ஸ்வத்ருத: – எதனாலும் தாங்கப்படாமல், தாம் அனைத்தையும் தாங்குபவராய் இருப்பதோடு மட்டுமன்றித்
தம்மைத் தாமே தாங்கி நிற்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வத்ருதர் என்று சொல்லப்படுகிறார்.

ஸ்வாஸ்ய: – அன்றலர்ந்த செவ்வி மாறாது எக்கணமும் இயல்புற மிளிரும் ஆனந்தத்தில்
நிலைத்த இருப்பை உடையவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வாஸ்யர் எனப்படுகிறார்.

ப்ராக்வம்ச: – என்றும் பிற்பட்டதாக ஆகிவிடாமல் புதியதாகவே இருக்கின்ற நித்யமான தன்மையாலும்,
நித்யசூரிகள் என்னும் வம்சத்திற்கும் முந்தையரும் பெரியவரும் ஆனவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ராக்வம்சர் எனப்படுகிறார்.

வம்சவர்த்தந: – தம் வம்சமாகிய பிரபஞ்சத்தையும் நித்ய சூரிகளின் திரள் வதியும் திருநாட்டையும் பெருகி
வளரச் செய்து கொண்டேயிருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வம்சவர்த்தநர் என்று சொல்லப்படுகிறார்.

——–

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீச: ஸர்வகாமத: |
ஆச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || -91-

பாரப்ருத் – ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட நிலையில் அவர்கள் அறியாமையால் விளைந்த தம் கர்மத் தளைகளினின்றும்
விடுபட்டுத் தாங்கள் அடைய வேண்டிய பெரும் பேறான பரமாத்மாவாகிய தம்மை அடைவதாகிற மகத்தான பொறுப்பை
யார் கையிலும் ஒப்படைத்துவிடாமல் தாம் ஒருவரே முழுவதும் சுமப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பாரப்ருத் என்று போற்றப்படுகிறார்.

கதித: – போற்றப்பட்டிருப்பவர்

( வேதங்கள் அனைத்தாலும் ஒரே பரம்பொருள் தத்வம் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறவர்,
வேதப் பொருளை விளக்கும் அனைத்து இதிகாச புராண, துணை நூல்கள் அனைத்தாலும்
உயர்வற உயர்ந்த பரம்பொருள் என்று மூதலித்துக் காட்டிக் கொண்டாடப்படுபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கதிதர் என்று சொல்லப்படுகிறார்.

குறிப்பு: – இந்த நாமத்திற்கு வெறுமனே ’புகழப்பட்டவர்’ என்று அர்த்தம் சொல்லிவிட்டுப் போய்விடலாம்.
குறிப்பாக உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள் என்றெல்லாம் ஆதாரங்கள் காட்டிப் பரக்க எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அதுவும் பராசர பட்டர் எழுதினாலாவது சொல்லலாம் அவர் ஸ்ரீவைஷ்ணவர் ஆகையாலே எங்கெங்கெல்லாம் முடியுமோ
அங்கங்குத் தம் விருப்பக் கடவுளைப் புகழ்கிறார் என்று. ஆனால் பராசர பட்டர் எழுதியதை விட
இரண்டு மடங்கு நீளமாக இந்தத் திருநாமத்திற்கு எழுதியிருப்பவர் பகவத்பாதரான ஸ்ரீஆதிசங்கரர்.

அவர் தமது அத்வைத ரீதியாக ஏதாவது அர்த்தம் எழுதினால் யாரும் கேட்பாரில்லை. அது இயல்பாகவும் இருக்கும்.
அல்லது பிற்காலத்தில் அவரைப் பற்றிப் பரப்புரைகள் எழுந்தது போல் அவர் ஆறு மதங்களை நாட்டியவர் என்றால்
இந்தத் திருநாமத்திற்கு அர்த்தமாக ஆறு மதங்களிலும் அவரவர் கடவுளாகக் கொண்டாடப் படுபவர் என்று சொல்லியிருந்தாலும் யாரும் கேட்க முடியாது.

ஆனால் அவ்வாறெல்லாம் ஸ்ரீஆதிசங்கரர் எழுதாமல் வேத வேதாந்தங்களாலும், இதிகாச புராணாதிகளாலும் புகல் என்று
முடிவு கட்டப்பட்ட உயர்வற உயர்ந்த ஒரே பரம்பொருள், பரதெய்வம் என்பது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்று
இந்த நாமத்தில் திட்டவட்டமாக எழுதுகிறார். காரணம் அவர் மட்டுமன்று, அவர் நாளில் வேத வேதாந்தங்களையும்,
இதிகாச புராணங்களையும் சான்று நூல்களாகக் கொண்ட வைதிகர்கள் யாவருமே உயர்ந்த ஈசுவர தத்வம் என்றால்
அது ஸ்ரீமஹாவிஷ்ணுவே என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள் என்பதையே இஃது காட்டுகிறது.

இந்த நாமத்தில் மட்டுமன்று. பல நாமங்களிலும் பராசர பட்டரே சாதாரணமாகப் பொதுப் பொருள் எழுதும் இடத்தில்
எல்லாம் கூட ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்கள் மிக விரிவாக ஆணித்தரமாக ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஒப்புயர்வற்ற உயர்வை
எழுத்தில் பதிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வந்தோரால் ஓரொரு கால அவசியத்தை முன்னிட்டு
நிலைப்பாடுகள் மாற்றம் கண்டிருக்கலாம். அவற்றைத் தவறு என்று சொல்வதற்கில்லை.
பல வேறு மக்களின் ஈடுபாடுகளை உள்வாங்கச் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே.
ஆயினும் உண்மை நிலை ஆதிசங்கரரின் காலத்திய அவருடைய கொள்கையின் நிலைப்பாடு என்ன என்பதையும்
நாம் ஒருபக்கத்தில் தெரிந்து வைத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தத் திருநாமத்திற்கான ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் வரிகள்:

வேதாதிபி: அயம் ஏவ பரத்வேந கதித:, ஸர்வை: வேதை: கதித இதி வா கதித:, ’ஸர்வே வேதா; யத் பதம் ஆமநந்தி’,
‘வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய’, ’வேதே ராமாயணே புண்யே பாரதே பரதர்ஷப |
ஆதௌ மத்யே ததா சாந்தே விஷ்ணு: ஸர்வத்ர கீயதே’ இதி ச்ருதி ஸ்ம்ருத்யாதி வசநேப்ய:,
’ஸோSத்வந: பாரமாப்நோதி தத்விஷ்ணோ: பரமம் பதம்’ இத்யாத்யுக்தம், கிம் ததத்வநோ விஷ்ணோர்
வ்யாபநசீலஸ்ய பரமம் பதம் ஸ தத்வமித்யாகாங்க்ஷ்யாம் இந்த்ரியாதிப்ய: ஸர்வேப்ய: பரத்வேந ப்ரதிபாத்யதே ‘
இந்த்ரியேப்ய; பராஹ்யர்த்தா:’ இத்யாரப்ய, ’புருஷாந் ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பராகதி:’ இத்யந்தேந ய: கதித: ஸ: கதித: )

யோகீ – எப்பொழுதும் தத்வ ஞானத்தால் பார்க்கப்படுபவராய்க் கூடாதவற்றைக் கூட்டும் பரமகாரணராய் இருப்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகி என்று அழைக்கப்படுகிறார்

யோகீச: – யோகிகளுக்கும் யோகத்தைக் கைக்கூடச் செய்பவராய், நித்திய இயல்பான யோகம் வாய்த்தவர்களுக்கும்
அவர்களது யோகம் நிலைக்கும் காரணமாய் அமைந்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் யோகீசர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வகாமத: – அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவது என்பது தம்முடைய அருளின் வசமாக நடக்கும்
வண்ணம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வகாமதர் என்று சொல்லப்படுகிறார்.

ஆச்ரம: – ஸம்ஸாரத்தில் ஒரு கணமும் ஓய்வில்லாமல் அலைவுறும் உயிர்கள் கடைசியாக அடைந்து பட்ட சிரமம்
எல்லாம் தீர்ந்து இளைப்பாறும் நிரந்தர ஓய்விடமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆச்ரமர் என்று அழைக்கப் படுகிறார்.

ச்ரமண: – அனைத்துயிருக்கும் புகலாகத் தாமே இருப்பினும், தம்மை அவ்வண்ணம் உணரும்வரை அதற்கேற்ற பக்குவம்
பெறுவதற்காகத் தன்முனைப்புடன் கூடிய தேட்டத்தில் மூட்டிப் பயிற்றுபவராக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ச்ரமணர் என்று சொல்லப்படுகிறார்.

க்ஷாம: – அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம்மை நோக்கிய தேட்டத்தில் தம்மால் முடிக்கிவிடப்பட்டு முனைந்தோர்தம்
கர்ம பலன்கள் அவர்களைத் தகையும்போதும், அவர்களுடைய கடுமையான தவ வாழ்க்கையிலும்
அவர்களுக்குப் போதிய பொறையும், விடாமுனைப்பும் தந்தருளுபவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆகையாலே அவர் க்ஷாமர் என்று போற்றப்படுகிறார்.

ஸுபர்ண: – பக்குவம் அடைந்து வருவோரை அடுத்த அடுத்த நிலைக்கும், தன்னையே புகலும், வழியும் என்று
உணரும் பக்குவம் அடைந்தோரைப் பரமப் பிராப்யமான நிலைக்கும் சம்ஸார மண்டலத்தின் எவ்வித நலிவும்
வாட்டாமல் கடத்திச் செல்லும் ஒரு நல் துணையாக இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுபர்ணர் என்று சொல்லப்படுகிறார்.

வாயுவாஹந: – தாம் எவ்வளவு கருணையோடு அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக அணைத்து எடுத்துச் சென்றாலும்,
ஜீவர்கள் தம் சுதந்திர இச்சையால் அவருடைய காப்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டு, கீழே விழுவதற்கே
வாய்ப்பு பார்த்து விழும் போதும், அவற்றின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, விழ விட்டு, அவை விழுந்த வேகமாகிய
வாயுவே வாஹனமாக அவற்றைத் தம் பால் கொண்டு வந்து சேர்க்கும்படி அமைத்து வைத்திருப்பவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வாயுவாஹநர் என்று போற்றப்படுகிறார்.

—————

தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தம: |
அபராஜித: ஸர்வஸஹோ நியந்தா நியமோ யம: || -92-

தனுர்தர: – புகல் நாடும் உயிர்களுக்குப் பகையானவற்றின் மீது தாமே சினந்து பொருகின்ற வில்லைத்
தரிப்பவராக என்றும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தனுர்தரர் என்று போற்றப்படுகிறார்.

தனுர்வேத: – உயிர்களை நலியும் பகை கடிந்து காக்க ஏந்திய வில்லே அந்த வில்லின் வித்தை வடிவாக
இருக்கும்படியானவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தநுர்வேதர் என்று போற்றப் படுகிறார்.

தண்ட: – உயிர்கள் நல்வழியில் உய்வு அடைய ஏற்றவகையில் நெறிப்படுத்தி ஆளும் அரசனது செங்கோல்,
ஆட்சியின் நல்லாணையையும், நன்னெறியில் செலுத்தும் ஆற்றலையும் உருவகப்படுத்தி நிற்பதால்
அந்தச் செங்கோல் ஆகிய தண்டமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகையாலே அவர் தண்டர் என்று அறியப் படுகிறார்.

தமயிதா – நன்னெறியில் உய்க்கும் அரச தத்துவமாக மட்டுமின்றி, தீநெறியில் செல்வதைத் தடுக்கும்
அடக்கும் திறல் வடிவாகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமயிதா என்று சொல்லப்படுகிறார்.

(அ)தம: – உய்த்தும் உறுத்தும் செய்த அடங்கிய தகைமையாகவும் அவரே இருப்பதாலும், தாம் எதனாலும்
அடக்க இயலாத சுதந்திரம் கொண்டவர் என்பதாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தமர் என்றும் அதமர் என்றும் சொல்லப்படுகிறார்.

[கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்/ ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்}

அபராஜித: – எந்த ஒன்றும் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையானும், உள்ளிலும், புறத்திலும் எதை மீற முடியாதோ,
அது ஆக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அபராஜிதர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வஸஹ: – மிக்குயர்ந்தவர் முதல் மிகவும் கீழ்நிலையுற்றவர்வரை அனைவரும் தம்மை ஏற்றித் தொழுது
நற்கதி அடையும்வண்ணம் அனைவரையும், அனைத்து தெய்வங்களையும் தாங்கி நிற்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸர்வஸஹர் என்று சொல்லப்படுகிறார்.

நியந்தா – அனைவரையும் அவரவர் நிலை, பக்குவம், நிச்சயம் என்ற அடிப்படையில் இயக்கி, முடிவில்
தம்மை அடைவதாகிய பெருநிலையை நோக்கி முன்னேறுமாறு நடத்துபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியந்தா என்று அழைக்கப்படுகிறார்.

நியம: – ஒவ்வொரு உயிரும் வேண்டும் பலன்களை அவரவர் தெய்வங்களின் மூலமாக அவர்களுக்கு முறையாகத் தருபவரும்,
தம்மையே புகலடைந்தவருக்கு எவ்வித நியமமுமின்றி மிக்குயர்ந்த பலனைத் தருபவருமாக இருப்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நியம: (அநியம:) என்று சொல்லப்படுகிறார்.

யம: – வாழ்க்கை, மரணம், தோற்றம், கேடு, படைப்பு, ஒடுக்கம் என்று அனைத்து காரியங்களுக்குமான
அதிகாரி தேவதைகளை உண்டாக்கி, வழிநடத்துபவர் ஆகையாலே மரணமற்றவர் என்று அயம: என்றும்,
மரணத்தையும் நடத்துபவர் அவர் ஆகையால் யம: என்றும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அழைக்கப்படுகிறார்.

—————

ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யதர்மபராயண: |
அபிப்ராய: ப்ரியார்ஹோSர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்தன: || -93-

ஸத்த்வவான் – ஜீவர்கள் முக்தி பெறுவதற்கு முதலில் முக்கியமானது அவற்றினுள்ளே ஸத்வ குணம்
தலை தூக்க வேண்டும் ஆகையால், அந்த ஸத்வ குணத்தை உயிர்களுக்குத் தருபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்த்வவான் என்று கொண்டாடப்படுகிறார்.

ஸாத்த்விக: – ஸத்வ குணத்தால் ஞானம், ஆத்மகுணங்கள், தேஜஸ், வீர்யம் ஆகிய தகுதிகள் ஏற்பட்டு அதனால்
மோக்ஷ சிந்தையானது ஏற்படுவதை ஸாத்த்விகம் என்ற வார்த்தை குறிப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர்
ஸாத்த்விகர் என்று சொல்லப் படுகிறார். ( மோக்ஷம் இச்சேத் ஜநார்தனாத் )

ஸத்ய: – ஸாத்விக சாத்திரங்களால் சொல்லப்படும் மகிமை உடையவர் என்பதாலும்,
ஸத்யம் என்பதற்கு ஆதாரம் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யர் எனப்படுகிறார்.

ஸத்யதர்மபராயண: – ஸத்யத்தையே தர்மமாக உடைய நிவ்ருத்தி தர்மத்தைப் பெரிதும் உகந்து போற்றுபவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸத்யதர்மபராயணர் என்று கொண்டாடப் படுகிறார்.

அபிப்ராய: – ஸத்வ குணம் ஓங்குவதால் ஸாத்விக தர்மத்தைக் கைக்கொண்டவர்கள் அனைவரும் மாற்றுக் கருத்தே இன்றி
மோக்ஷத்திற்கான ஒரே புகலாகக் கொள்ளும் அபிப்ராய வடிவாகத் திகழ்பவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஆனதினால் அவர் அபிப்ராயர் எனப்படுகிறார்.

( ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்யச புனப்புன: |
இதம் ஏகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா ||

அனைத்து சாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் நன்கு ஆலோசித்து விசாரித்துப் பார்த்ததில் இந்த ஒன்றே
மிக நிச்சயமாகவும் தெளிவாகவும் தெரிய வருகின்றது. – நாராயணனையே எப்பொழுதும் தியானிக்க வேண்டும். (வியாசர்)

நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்!(பரிபாடல்) )

ப்ரியார்ஹ: – பிரேமையுடன் வந்தடையும் ஞானிக்கு வந்தடையத்தக்க ஒரே புகலிடமாக இருப்பவர்
ஆகையாலே ப்ரியார்ஹ: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப்படுகிறார்.

அர்ஹ: – தமக்கான காப்பு, தாம் மோக்ஷம் அடைவதற்கான நெறி, தாம் அடையும் உயர்ந்த பேறு என்று
அனைத்து விதத்திலும் பிறிதொன்றின்பால் செல்லாத சிந்தையால் பக்தியுடன் விரும்பப்படத்தக்க
ஒரே தத்துவமாக இருப்பவர் ஆகையாலே அர்ஹ:.

ப்ரியக்ருத் – ஞானிக்குத் தாம் பிரியமானவர் என்றும், ஞானி தமக்குப் பிரியமானவன் என்றும் தாமே
சொல்லியிருப்பதற்கேற்பத் தம்மை நாடிப் பக்தி செய்வோர்களைப் பிறிதொரு பலன் கருதாது தம்மையே
வேண்டும்படியான தமக்குப் பிரியமானவர்களாய் ஆக்குபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரியக்ருத் எனப்படுகிறார்.

ப்ரீதிவர்தன: – உலக விஷயங்களில் விரக்தி முழுமையாகவும், ஜீவனின் இயல்பான ஞானம் நன்கு மலர்வதால் தனக்கு,
தான் உணராத காலம் தொட்டே, நன்மையைச் செய்து வருபவர் தன்னுடைய உயிரான ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதை
உணர உணர மேன்மேலும் ப்ரீதி அளவிறந்து வளர்ந்து கொண்டே போகும்படி இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ரீதிவர்தன: என்று போற்றப் படுகிறார்.

——————

விஹாயஸகதிர் ஜ்யோதி: ஸுருசி: ஹுதபுக் விபு: |
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன:|| -94-

விஹாயஸகதி: – ஆன்மிக வழியில் நின்று முக்தி அடையும் வேட்கையில் நிலை நின்றார்கட்கு பக்தி யோகம்
கைகூடுங்கால் இதய ஆகாசம்தன்னில் நூறு நாடிகளுக்கு மேல் நூற்றியோராவது நாடியாகப் பரமபதம் செல்லும்
கதியைத் தெரியவைத்து, அவ்வழியே சுகமே நடத்திச் செல்லும் சக்தியாகவும் தாமே இருப்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விஹாயஸகதி: என்று தொழப்படுகிறார்.

ஜ்யோதி: – பக்தர்கள் பரமபதம் போகும் அர்ச்சிராதி மார்கத்தில் முதல் நிலையான ஒளியாக இருப்பவர்
என்று ஸ்ரீபராசர பட்டர் இந்தத் திருநாமத்திற்கு அர்த்தம் தருகிறார்.

( அதேபோல் ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரரும் ஒளி என்று பொருள்படும்படியாகச் சொன்னால் ஒன்றும் குறையில்லை.
ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தத் திருநாமத்திற்கு ஸ்ரீமந் நாராயணன் என்றே வியக்தமாக அர்த்தம் செய்கிறார் ஸ்ரீபகவத்பாதர்.
அதற்கு அவர் சான்று காட்டும் வேத வாக்கியம் ‘நாராயண: பரோ ஜ்யோதி:’ என்னும் உபநிஷத் வாக்கியம்.
அதாவது பகவந் நாமங்களிலேயே வேறு எந்த தெய்வத்திற்கும் அர்த்தம் வரும்படியாக வியாக்கியானம் செய்ய முடியாத
திருநாமம் ஸ்ரீமந் நாராயண நாமம். நாராயண என்றால் பொதுப்படையான கடவுள் என்ற பொருள் தராமல் குறிப்பாக
’அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறைமார்பனான’ திருமால் ஒருவரை மட்டுமே சிறப்புப் பெயராகக் குறிப்பது நாராயண நாமம்.
இங்கு வெறுமனே ஜ்யோதி: என்று பொதுவான நாமம் இருக்க அதற்கே ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் செய்யும் விளக்கம்
நாராயண நாமம் எனில், அவருடைய சகுண பிரம்ம நிஷ்டை எவ்வளவு ஏகாக்ரதை உடையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.)

ஸுருசி: – அர்ச்சிராதிகதியில் இரண்டாவது நிலையாகப் பகலன்ன பேரொளியாக நடத்துபவர் ஆகையாலே
ஸுருசி: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கொண்டாடப் படுகிறார்.

ஹுதபுக்விபு: – அனைத்திடத்திலும் நிறைந்து உயிர்கள் அனைத்தும் தொடர் யக்ஞங்களில் பெய்யும் அனைத்து
ஹோமத் திரவியங்களையும் உட்கொள்ளும் தெய்வமாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஹுதபுக்விபு: என்று சொல்லப்படுகிறார்.

ரவி: – வெப்பமாய் நின்று அனைத்தையும் உட்கொள்ளுவதோடு நில்லாமல் ஓங்கிய வான் கதிராய் நின்று
அனைத்தையும் பகலாக்குவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவி: என்று தொழப்படுகிறார்.

விரோசன: – ஸம்வத்ஸர ரூபமான, ஆண்டின் சுழற்சி உருவாகிய கதிரொளியாய் இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விரோசன; என்று போற்றப்படுகிறார்.

ஸூர்ய: – எல்லாவற்றையும் உண்டாக்குவதாலும், அருஞ்செல்வத்தை உலகமெல்லாம் தருவதாலும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸூர்ய: என்று போற்றப்படுகிறார்.

ஸவிதா – ஞாயிறால் மழைநலத்தையும் அதனால் உயிர் தழைப்பதையும் செய்யும் அருள் சக்தியாக இருக்கும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸவிதா என்று அழைக்கப் படுகிறார்.

ரவிலோசந: – கதிரவனைக் கண்களாக உடையவர் என்ற காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரவிலோசந; என்று கொண்டாடப்படுகிறார்.

(ஸ்ரீபராசர பட்டரின் பாஷ்யத்தில் ஒரு செய்தி – சூரியக் கிரணங்கள் பிரவேசிப்பதால்தான் சந்திரன் முதலியவற்றின் பிரகாசம் ஏற்படுகிறது.)

————–

அநந்த ஹுதபுக் போக்தா ஸுகதோ நைகஜோSக்ரஜ: |
அநிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாநம் அத்புத: || -95-

அநந்தஹுதபுக்போக்தா – காலத்தாலும், இடத்தாலும், பொருள் தன்மையாலும் அளவுபடுத்தப்படாதவர்,
தம்முள் அனைத்துப் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதும் வேள்வியாக நடைபெறத் தக்க வகையில் அனைத்து
முயற்சிகளையும் தாம் ஏற்று, அனைத்துப் பலன்களையும் தாமே தருபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஹுதபுக்போக்தா என்று போற்றப்படுகிறார்.

ஸுகத: – உண்மையான உயர்ந்த மோக்ஷ சுகத்தைத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சுகத: என்று போற்றப்படுகிறார்.

நைகஜ: – பக்தர்களுக்கு முக்தியை விளைவிக்கப் பல வழிகளிலும் தாம் தோன்றி அருள் பாலிப்பவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நைகஜ: என்று கொண்டாடப்படுகிறார்.

அக்ரஜ: – முக்தர்களுக்குப் பரமானந்தத்தை விளைவிப்பவராய் என்றும் முன்னின்று பிரகாசிப்பவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரஜ: என்று சொல்லப்படுகிறார்.

அநிர்விண்ண: – தம்மை அண்டிய ஜீவனைத் தாம் அந்த ஜீவன் அண்டுவதற்கு வெகுகாலம் முன்னம் இருந்தே
அதைக் கரையேற்றுவதற்காகப் பெரும் பிரயத்தனங்கள் எடுத்து, எப்பொழுது ஜீவன் தாம் செய்யும் ரக்ஷணத்தை
விலக்காமலும் வெறுக்காமலும் மனம் ஒப்பி இசையுமோ என்று காலம் பார்த்து இருந்தவர் ஆதலால்,
ஜீவன் தம்மை அண்டியவுடன் மிக விரைவாக அதைக் கரையேற்றிவிட்டுச் சிறிதும் பின்னர் தாம் கவலையின்றி இருப்பவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநிர்விண்ண: என்று கொண்டாடப் படுகிறார்.

ஸதாமர்ஷீ – தாம் அருள் செய்து உய்யக் கொண்ட பக்தர்கள் தாங்கள் செய்யும் கைங்கரியங்களில் நேரும்
தவறுகளை அன்புடன் சகித்துக் கொள்பவர் ஆகையாலே ஸதாமர்ஷீ என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சொல்லப் படுகிறார்.

லோகாதிஷ்டாநம் – உலகின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகிய அனைத்திற்கும் தாம் ஆதாரமாக இருப்பவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லோகாதிஷ்டாநம் என்று போற்றப் படுகிறார்.

அத்புத: – என்றும் இமையா நாட்டத்து நித்ய சூரிகள் கால அவதியின்றி நோக்கிக் களித்தாலும்
அவர்களுக்கும் கணம் தொறும் புதுமையாக இருப்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அத்புதர் எனப்படுகிறார்.

——————-

ஸநாத்ஸநாதனதம: கபில: கபிரவ்யய: |
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிண: || -96–

ஸநாத் – எப்பொழுதும் புதுமையாய் இருக்கும் ஒன்று, கணம் தொறும் அத்புதமாய் இருக்கும் ஒன்று
அடுத்த கணம் முடிவடைந்து போனது என்றிருப்பது போல் இல்லாமல் தம்மைத் துய்க்கும் ஒவ்வொரு கணமும்
முடிவற்ற நெடுங்காலமாய் நீளும் தகைமையர் ஆகையாலே, அநந்த கோடி ஜீவர்களுக்கும்
அவரவர் துய்ப்பில் அவ்வண்ணமே தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாத் என்று போற்றப்படுகிறார்.

ஸநாதநதம: – எப்பொழுதும் புதுமையாய் இருப்பதோடன்றி அனைத்தினும் பழையதாகவும் இருப்பது மட்டுமல்லாமல்,
பழமையானவற்றிலெல்லாம் சிறந்ததாகவும் இருப்பதனால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸநாதநதம: என்று தொழப்படுகிறார்.

கபில: – மின்னல் கொடிகளால் சூழப்பட்ட காருண்ட மேகம் போல் நித்ய விபூதியில் நித்ய சூரிகள் சூழத் தாம் இருப்பவர்
ஆகையாலும், தம்மை விட்டு அகலகில்லேன் இறையும் என்று பிரிவில்லாத தத்துவமாக விளங்கும்
ஸ்ரீயின் ஒளியால் தாம் சூழப்பட்டிருப்பவர் ஆகையாலும் கபில: என்று ஸ்ரீமஹாவிஷ்ணு போற்றப்படுகிறார்.

கபிரவ்யய: (கபிரப்யய:) – மாறுதல் அற்ற ஒளி மிகுந்த நித்ய சுகத்தைத் தம்மிடத்தில் முழுமையாக
அடங்கத் தருபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபிரவ்யய: என்று போற்றப்படுகிறார்.

ஸ்வஸ்தித: – அடியார்களுக்கு அசுபம் என்பதை நீக்கி மங்களத்தைத் தருபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தித: என்று சொல்லப்படுகிறார்.

ஸ்வஸ்திக்ருத் – அசுபம் நீங்கி மங்களம் விளைவது என்பதே பகவத் குணங்களில் ஒருவர் ஈடுபடுவதன் காரணமாக ஆகும் என்பதால்,
ஸர்வமங்களமாகிய தமது குணங்களில் ஈடுபாட்டையும் அவரே அருள்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திக்ருத் என்று போற்றப்படுகிறார்.

ஸ்வஸ்தி – தாமே ஜீவனுக்கான சுபமாக இருப்பவர் ஆதலால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்தி என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்வஸ்திபுக் – ஜீவர்களாகிய நமக்கு என்றும் சுபமானவற்றையும், மங்களமானவற்றையும் அஞ்ஞானத்தின் காரணத்தினால்
சுபாவமாக அனுபவிக்கத் தெரியாது ஆகையாலே சுபம், மங்களம், நன்மை என்பதை எப்படி விரும்ப வேண்டும் என்று
தம்முடைய பேரருளால் ஜீவனுக்குள் இருந்து கற்பிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திபுக் என்று போற்றப்படுகிறார்.

ஸ்வஸ்திதக்ஷிண: – ஜீவர்களுக்கு உயர்ந்த மங்களம் ஆவது தம்மை அடைந்து தம் அடியிணையில் செய்யும் தொண்டு
எனவே அதற்கு வேண்டிய அனைத்து நன்மைகளையும் தாமே தம்மைப் புகல் அடைந்தாருக்குத் தருபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸ்வஸ்திதக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார்.

————–

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித சாஸந: |
சப்தாதிக: சப்தஸஹ: சிசிர: சர்வரீகர: || –97-

அரௌத்ர: – ஜீவர்களின் பாபங்களை நோக்கில் மிகக் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்பு இருப்பினும்
தமது குற்றமற்ற கல்யாண குணங்களின் மிகுதியாலும், திருமகள் என்றும் தம்மை விட்டுப் பிரியாமல் நின்று ஏற்படுத்தும்
தயையாலும் கொடும் செய்கையோ, விருப்போ, குரோதமோ இன்றி இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அரௌத்ர: என்று போற்றப்படுகிறார்.

குண்டலீ – ஆதிசேஷரூபியானவர் ஆதலாலும், ஸாங்க்யம், யோகம் என்னும் இரண்டையும் தம் காதுகளில்
அழகிய குண்டலங்களாகத் தாம் அணிபவர் ஆதலாலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் குண்டலீ என்று அழைக்கப்படுகிறார்.

சக்ரீ – ‘மிகவும் அசைவதும், மிகுந்த வேகமுடன் நகர்வதுமான அந்தக்கரணமாகிய மனம் என்னும் தத்துவத்தைச்
சக்ரமாகக் கையில் கொண்டவர்’ என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் சொல்வதற்கேற்ப, மனம் என்பதையே தம் கையில்
ஆழியாகத் தரித்தவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சக்ரீ என்று தொழப்படுகிறார்.

விக்ரமீ – தாளால் உலகளந்த தாயோன் என்னும் சிறப்பு தமக்கே வாய்த்த பிரான் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விக்ரமீ என்று கொண்டாடப்படுகிறார்.

ஊர்ஜிதசாஸந: – ஊழிதோறூழி ஒன்றும் பிறழாமல், ஒருவராலும் கடக்கலாகாக் கட்டளைகள் தந்த பிரான்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஊர்ஜிதசாஸந: என்று போற்றப்படுகிறார்.

சப்தாதிக: – சப்தம் என்னும் சாத்திரங்களால் எல்லையிட்டு வரையறை செய்து கூறிவிட முடியாதவர்,
எவ்வளவு விவரித்தாலும் அதனினும் மிக்குத் திகழும் இயல்பினர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தாதிகர் எனப்படுகிறார்.

சப்தஸஹ: – யானை முதலான தெளிவான பேச்சு இல்லாத உயிரினங்களின் தீனக் குரலையும் பொறுப்புடன்
தாம் தாங்கித் துயர் துடைப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சப்தஸஹர் எனப்படுகிறார்.

சிசிர: – ஜீவர்களின் தாபக்குரல் எழுந்ததுமே விரைவு மயமாக ஆகிவிடுபவர், யானையின் அழுகுரலுக்கு விரைவாகி
வந்து தாபம் போக்கிக் குளிரச் செய்தது போல் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சிசிர: என்று போற்றப்படுகிறார்.

சர்வரீகர: – ஸம்ஸாரமாகிய கொடிய மடுவில் சிக்கி அலறும் ஜீவனைக் காக்க வேண்டி அனைத்துக் காப்புகளையும்
அனைத்து விதத்திலும் விரைவில் செய்பவர் என்பதாலும், உலக நாட்டம் கொண்டவர்க்கு இரவாகத் தெரியும்
ஆன்மிகப் பாதையைத் தம் அடி அணைந்த பக்தர்களுக்குப் பகலாக ஆக்குகிறார் என்பதாலும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சர்வரீகர: என்று தொழப்படுகிறார்.

————–

அக்ரூர: பேசலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம் வர: |
வித்வத்தமோ வீதபய: புண்யச்ரவண கீர்த்தன: || –98-

அக்ரூர: – தாம் பக்தர்களைக் காக்கும் போதும், சாதுக்களை நலியும் தீய சக்திகளை அழிக்கும் போதும்
ஒரே படித்தாக அன்பே அன்றிக் கொடிய தன்மை சிறிதும் இல்லாதவராக இருப்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அக்ரூரர் எனப்படுகிறார்.

பேசல: – எவ்வளவு விரைவாகச் செயல் புரிந்தாலும், என்ன பேசினாலும், எந்நிலையிலும் பூரண அழகு
மிளிரும்படி இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பேசல: என்று சொல்லப்படுகிறார்.

தக்ஷ: – தம்முடைய பூரண அமைதியும், நிறைந்த அழகும் சிறிதும் நலுங்காமல் இருந்தாலும் அவருடைய
செயல்கள் மிக விரைவாகவும், மிகத் துல்லியமாகவும், தவறாமலும் இருக்கும்படியான காரியத் திறன் அவரிடம்
நிறைந்து காணப் பெறுவதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தக்ஷ: என்று போற்றப்படுகிறார்.

தக்ஷிண: – காரியத் திறமையும், செயல் விரைவும் பூரணமாகத் துலங்குகிறவர் என்றாலும் தாம் தம்மைச் சரணடைந்த
ஜீவர்களுக்குத் தமக்குத் திருப்தியாகப் போதிய அளவு செய்யவில்லையே என்ற ஆற்றாமையைக் கொண்டவர் என்பதால்
அடியவர்களின் மிக்க உள்ள நெகிழ்வுக்குக் காரணம் ஆகிறார் என்பதால் அவர் தக்ஷிண: என்று கொண்டாடப் படுகிறார்.

க்ஷமிணாம்வர: – பொறுமையில் சிறந்த பூமியையும் தாம் தாங்குபவர் என்பதால் பொறுமையினும்
பொறுமை மிக்கவர் எனவே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் க்ஷமிணாம்வர: என்று சொல்லப்படுகிறார்.

வித்வத்தம: – அறிவில் எல்லாம் மிக்க அறிவாகவும், அறிபவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வித்வத்தம: என்று போற்றப்படுகிறார்.

வீதபய: – அறிவும் அறிவோனும் அவரே ஆக இருப்பதால் அவருக்கு அந்நியமாக ஒன்று இல்லாமையால்
பயம் என்ற ஒன்று இல்லாதவர் என்பதாலும் தம்மைப் புகலடைந்தோருக்குத் தம்மைப் பற்றிய நினைவாலேயே
பயத்தை இல்லாமல் செய்பவராகவும் இருப்பதால் வீதபய:

புண்யச்ரவணகீர்த்தந: – தம்மைப் பற்றிய சரித்திரங்களையும், புகழ்த்துதிகளையும் கேட்பதனாலேயே ஜீவர்களின் அசுபங்கள் நீங்கவும்,
அவ்வாறு கேட்பதுவே மிகவும் பெரிய புண்ணியமாக அமைந்தவராகவும் இருப்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணு
வானவர் புண்யச்ரவணகீர்த்தந: என்று போற்றப்படுகிறார்.

————–

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து:ஸ்வப்நநாசந: |
வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || –99-

உத்தாரண: – ஸம்ஸாரச் சுழலிலிருந்து காப்பாற்றி மேலெடுத்து மோக்ஷம் தந்து நித்ய நிலையைத் தருகிறார்
என்பதால் உத்தாரண: என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் போற்றப்படுகிறார்.

துஷ்க்ருதிஹா – நன்மையைக் காப்பது மட்டுமின்றித் தீமையைச் சிறிதும் கருணையின்றித் தவறாமல்
அழிக்கவும் செய்பவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் துஷ்க்ருதிஹா என்று சொலப்படுகிறார்.

புண்ய: – தம்மைச் சரணடைந்தோருக்குத் தாமே மிகச்சிறந்த புண்ணியமாகவும் இருப்பவர் ஆதலால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் புண்ய: என்று போற்றப்படுகிறார்.

(நன்மைசேர் போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய், நாக மூர்த்தி சயனமாய் — திருச்சந்தவிருத்தம்)

து:ஸ்வப்நநாசந: – ஸ்ரீகஜேந்திர மோக்ஷத்தில் கூறியவாறு காப்பாற்றப்பட்ட சாதுக்களையும், காப்பாற்றிய தம்மையும்
நினைப்பவர்களை நலியும் கெட்ட கனவுகளை நாசம் செய்து விடுபவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர்
து:ஸ்வப்நநாசநர் என்று தொழப்படுகிறார்.

வீரஹா – ஜீவர்களை முக்தி பெற மாட்டாமல் தடுக்கும் பல வழிகளையும் தடுத்து நற்கதி அருள்பவர் என்பதால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வீரஹா என்று போற்றப்படுகிறார்.

ரக்ஷண: – உடலால், உள்ளத்தால், உயிர்க்கு உற்ற நல் துணையால் ஆன்ற காப்புகள் அனைத்தும் சரணடைந்த
ஜீவர்களுக்குச் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ரக்ஷண: என்று போற்றப்படுகிறார்.

ஸந்த: – காப்பதோடன்றி அவர்களை ஆன்மிக உணர்விலும், அதனடியாகப் பகவானாகிய தம்மிடத்தில் ஊன்றிய பக்தியிலும்
எக்கணமும் நன்கு வளரும்படி வளர்ப்பதால் அவர்களை நன்கு இருப்பவர்களாக ஆக்குபவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸந்த: என்று கொண்டாடப்படுகிறார்.

ஜீவந: – தம்மைச் சரணடைந்தாரின் யோக க்ஷேமங்களைத் தாம் வகிப்பதோடன்றித் தம்மால் ஒறுக்கப்பட்ட
தீயோரும் நல்வழியில் வாழும்படிச் செய்கிறவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜீவந: என்று சொல்லப்படுகிறார்.

பர்யவஸ்தித: – அன்பினால் ஜீவராசிகளைச் சூழ்ந்தும், உள்நின்றும் காத்துத் திருத்தி நல்வழிப்படுத்தித் தம்மிடம்
வந்து சேரும்படிச் செய்யும் தயாமூர்த்தியாக எப்பொழுதும் நிலைநிற்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பர்யவஸ்தித: என்று தொழப்படுகிறார்.

—————

அநந்தரூபோSனந்தஸ்ரீர் ஜிதமன்யுர் பயாபஹ: |
சதுரச்ரோ கபீராத்மா விதிசோ வ்யாதிசோ திச: || –100-

அநந்தரூப: – தமது பக்தர்கள் எந்த ரூபத்தில் தம்மைக் காண வேட்கிறார்களோ அவ்வித ரூபத்தில் எல்லாம்
தாம் தோன்றி அவர்களுக்கு அருள்பாலிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தரூப: என்று கொண்டடப்படுகிறார்.

அநந்தஸ்ரீ: – தமது அடியார்களுக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் அளவில்லாது வழங்கும் தன்மையால்
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநந்தஸ்ரீ: என்று போற்றப் படுகிறார்.

ஜிதமன்யு: – தீயவர்களிடத்தும் சினம் காவாமல் அவர்களிடம் உள்ள தீய குணத்தை அகற்றி அவர்களும்
நல்வழி அடைந்து உய்யும் வழிவகைகளைச் செய்வதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜிதமன்யு: என்று அழைக்கப் படுகிறார்.

பயாபஹ: – தாம் எப்பொழுதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுடன் ஜீவர்களுக்கு ஏற்படுவதான தாங்கள்
ஒரு நாதனற்ற அநாதைகளோ என்ற பயத்தையும் நீக்கிக் காப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பயாபஹ: என்று போற்றப்படுகிறார்.

சதுரச்ர: – என்றும் எதற்கும் உசிதமானவற்றையே செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் சதுரச்ர; என்று சொல்லப்படுகிறார்.

கபீராத்மா – இவ்வளவினர் என்று யாவராலும் அறியக் கூடாத ஸ்வரூபம் உள்ளவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கபீராத்மா என்று போற்றப் படுகிறார்.

விதிச: – எவ்வளவு உயர்ந்தோராயினும் தம்மை எத்தனை காலம் எவ்வளவு முயன்று துதித்தாலும் அந்தத் துதிக்கெல்லாம்
எட்டாத சிறப்புகளும் மகிமையும் கொண்டவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் விதிச: என்று போற்றப்படுகிறார்.

வ்யாதிச: – அவரவர்க்கு உரிய சிறப்புகளை அளித்து, உரிய அதிகாரங்களைத் தந்து, அவரவர்க்கு உரிய பலன்களையும்
நியதியாகப் பெற நியமிப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் வ்யாதிச: என்று சொல்லப்படுகிறார்.

திச: – அவரவர்க்கு உரிய நிலையிலும், தகுதியிலும் நிறுத்தி உயிர்களைப் பூரணமாக மலரச் செய்கிறார்
என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் திச: என்று சொல்லப்படுகிறார்.

—————

அநாதி: பூர்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: |
ஜனனோ ஜன ஜன்மாதி: பீமோ பீமபராக்ரம: || –101-

அநாதி: – படைப்புக்கு அதிகாரி தெய்வங்களாக இருக்கும் பிரம்மா முதலியவர்களாலும் அடையவும்,
அறியவும் அரியராய் இருப்பவர் பக்தியில் திளைக்கும் எளியவர்களால் கிட்டுவதற்குச் சுலபமானவராய் இருக்கும்
காரணத்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் அநாதி: என்று சொல்லப்படுகிறார்.

பூர்புவ: – கடைத்தேறிய ஆத்மாக்களுக்குத் தாங்கும் நிலையமாகத் தாமே இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பூர்ப்புவ: என்று போற்றப்படுகிறார்.

லக்ஷ்மீ: – தம்மை அடைந்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும், சுபமும், சிறப்பும் தாமேயாக இருப்பவர் ஆகையாலே
ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ: என்று கருதப்படுகிறார்.

ஸுவீர: – தம்மைச் சரணடைந்தோருக்கு உண்டாகும் தடைகளை நீக்கி நன்மையை அடைவிக்கும் திறலாகத்
தாம் இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஸுவீர; என்று கொண்டாடப்படுகிறார்.

ருசிராங்கத: – தமது திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தமது பக்தர்கள் கண்டு அனுபவித்துத் தொழும்படியாக
அருள்செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ருசிராங்கத: என்று போற்றப்படுகிறார்.

ஜனன: – பக்தியே இல்லாதவர்களும் தன்னை உணர்ந்து பக்தி செய்யும்படியாக அவர்களை ஆக்கும்
அருள் செய்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனன: என்று கொண்டாடப்படுகிறார்.

ஜனஜன்மாதி: – பக்தியில் பிறக்கும் புதிய பிறவியைத் தருவதோடல்லாமல் அந்தப் பக்திமயமான பிறப்புக்குப்
பலனாகவும் தாமே இருந்து அருள்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஜனஜன்மாதி: என்று போற்றப்படுகிறார்.

பீம: – உயர் நிலையும், உய்வும் அடைய அக்கறை கொள்ளாமல், அவன் அருள் செய்வதையும் விலக்கியபடித் தங்கள்
உணர்ச்சிகளின்படிச் செல்வோருக்குப் பயமே உருவாக இருப்பவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீம: என்று சொல்லப்படுகிறார்.

பீமபராக்ரம: – தம்முடைய பராக்ரமத்தால் தீயோர்களுக்கு அச்சம் விளைவிக்கும் லீலைகளை உடையவர்
ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் பீமபராக்ரம: என்று சொல்லப்படுகிறார்.

————-

ஆதாரநிலயோSதாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || –102-

ஆதாரநிலய: – சாதுக்கள் இருப்பதால்தான் உலகம் நிலைபெறுகிறது. அந்தச் சாதுக்களுக்கும்
ஆதாரமாக இருப்பவர் ஆகையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ஆதாரநிலய: என்று போற்றப்படுகிறார்.

(அ)தாதா – ஆதாரமாய் இருக்கும் நெறிகளைத் தாமே உபதேசித்தும், தாமே நடத்திக் காட்டியும் தாங்குபவராயும்,
தம்மை ஒருவர் தாங்குதல் அற்றவராயும் உள்ளவர் என்பதால் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் தாதா என்னப்படுகிறார்.

புஷ்பஹாஸ: — பூவிரிவது போல் புவனம் படைப்பவன்; பூவிரிந்து மணம் பரப்புவது போல் பக்தர்களின் உள்ளத்தில் மணப்பவன்

ப்ரஜாகர: — வயலை உழவன் விழித்திருந்து நோக்குவது போல் உயிர்களை உறங்காமல் காப்பவன்

ஊர்த்வக: — உலகளந்த உத்தமனாய் இருப்பதால் உறங்காது உலகம் காக்கின்றான்

ஸத்பதாசார: — பக்தர்களை எப்பொழுதும் முக்திக்கான சாதனங்களில் முனைப்பு கொள்ளச் செய்பவன்

ப்ராணத: — உலகத் துயர்களில் உழலும் ஜீவர்களைக் காப்பாற்றி உயிர் தருபவன்

ப்ரணவ: — ப்ரணவத்தைப் போதிப்பதன் மூலம் தனக்கும் ஜீவனுக்கும் உள்ள நித்யமான உறவை உணர்த்தித்
தனக்கு என்றும் ஜீவன் சேஷமானது என்னும் ஞானத்தைத் தருபவன்; அவனும் ப்ரணவமும் ஒன்றே.

பண: — பக்தர்களிடம் சில சமயம் அவர்களைத் தனக்கு மேல் வைத்து அவர்களுக்கு அடங்கி நடப்பது போன்ற லீலைகளைச் செய்பவர்.

———-

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணத்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வவிதேகாத்மா ஜன்மம்ருத்யு ஜராதிக: || -103-

ப்ரமாணம் — அறியாமை, ஒன்றை வேறொன்றாக அறிதல், விபரீதமாக அறிதல் என்பவை அறிவதில் உண்டாகும் மூன்று குறைகள்.
இந்த மூன்று குறைகளும் அற்ற ஐயம் திரிபு இல்லாத அறிவை எது ஏற்படுத்துமோ அதற்குப் பிரமாணம் என்று பெயர்.
மயர்வற மதிநலம் தருபவர் அவர் ஆகையாலே ஸ்ரீமஹாவிஷ்ணுவே பிரமாணம் எனப்படுகிறார்

ப்ராணநிலய: — பறவைகள் தம் கூட்டில் சென்று அடைவது போன்று அவரிடமே உயிர்வர்க்கங்கள்,
ஜீவர்கள் புகலாக அடைகின்றனர்; அன்றாடம் வாழ்க்கையில் பிராணன்களும் அவரிடமே இலயம் அடைகின்றன என்பதால் ப்ராணநிலய:

ப்ராணத்ருத் — பெற்ற தாயாய்த் தந்தையாய் ஜீவர்களைத் தாங்குவதால் அவர் ப்ராணத்ருத்

ப்ராணஜீவந: — உடலில் ஜீவர்கள் தங்கி ஜீவிதம் நடைபெறப் பிராணன்களை அவரே நோக்கி நடத்துவதால் ப்ராணஜீவந:

தத்வம் — அறியப்படும் பொருளின் உள்ளது உள்ளபடியான மாறா இயல்பிற்குத் தத்வம் என்று பெயர்.
பிரபஞ்சம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை ஆகையால் மாறாத தத்வம் பரமாத்மாவே என்பதால் அவருக்குப் பெயரே தத்வம்.

தத்வவித் — அறியப்படும் பிரபஞ்சத்தின் உள்ளபடியான தத்வமாக அவர் இருப்பதுமட்டுமின்றி அறியும் சித்
என்னும் ஜீவனின் உள் தத்வமாகவும் அவரே இருக்கிறார்

ஏகாத்மா — சித், அசித் என்னும் இரண்டும் அவருக்குச் சேஷமாகவும், அவருக்குச் சரீரமாகவும் இருப்பவை
ஆதலால் அவர் ஒருவரே ஒரே ஆத்மாவாக ஏகாத்மா என்று அழைக்கப்படுகிறார்.

ஜன்மம்ருத்யுஜராதிக: — அவ்வாறு அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் அவர் இருப்பினும் ஜீவர்கள், உலகப் பொருட்கள்
ஆகியவற்றின் மாற்றங்கள், குறைகள் ஆகியவை தம்மிடம் நிழலாடாத வகையில் அவற்றைக் கடந்தவராக இருக்கிறார்

———–

பூர்புவ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: |
யக்ஞோ யக்ஞபதிர் யஜ்வா யக்ஞாங்கோ யக்ஞவாஹந: || -104-

பூர்புவ: ஸ்வஸ்தரு: — பூமி, புவர்லோகம், ஸுவர்லோகம் என்னும் மூவுலகிலும் ஜீவர்கள் தம்தம் கர்மங்களினால்
உந்தப்பட்டுப் பிறப்பு இறப்பு என்ற மாற்றங்களுக்கு ஆட்பட்டுத் திரிவது பறவைகள் கிளைக்குக் கிளை பறந்து
திரிவதைப் போன்றது ஆகும். ஜீவர்களாகிய பறவைகள் தங்கி இளைப்பாறும் தருவாக, மரமாக இருப்பவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவே.

தார: — ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பவர் ஆகையால் தார:

ஸவிதா — அனைத்து உலகங்களையும் படைத்தவர் ஆகையால் ஸவிதா

ப்ரபிதாமஹ: — பிதாமஹர் ஆகிய பிரம்மனையும் படைத்தவர் ஆகையால் ப்ரபிதாமஹ:

யக்ஞ: — தாமே யக்ஞ ரூபமாக நின்று பக்தர்களுக்குப் பலன்களைத் தருகிறார்

யக்ஞபதி: — யக்ஞத்தின் ஸ்வாமி அவரே

யஜ்வா — அவரே யக்ஞம் இயற்றுவோரின் உள்ளே அந்தர்யாமியாக இருப்பதால் அவரே யஜமானர் (யக்ஞம் இயற்றுவோர்) என்று அறியப்படுகிறார்.

யக்ஞாங்க: — யக்ஞத்தையே தம் சரீரமாகக் கொண்ட யக்ஞ வராஹர்; துணையாகச் செய்யப்படும் வேள்விகளும் தாமே ஆனவர்.

யக்ஞவாஹந: — சரீரம் நல்லபடியாக இருந்தால்தான் எந்த அறமும் இயற்ற முடியும். அதுபோல் யக்ஞங்கள், ஆத்ம சாதனங்கள்
எல்லாம் இயற்கை, ஆரோக்கியம், சூழ்நிலை என்று பலவிதமான காரணங்கள் நன்கு அமையப் பெற்றால்தான் நடைபெற்றுப்
பலன்களை அடையலாகும். அந்தக் காரணங்கள் உட்பட அனைத்திற்கும் அவர் அருள் இருந்தால்தான் நடக்கும் என்பதால்
அவரே யக்ஞத்தைச் சுமந்து செலுத்தி, நடைபெற வைத்து, பூர்த்தியாக ஆக்கிப் பலன்களையும் தருகிறார் என்பதால்
அவரே யக்ஞவாஹனம் எனப்படுகிறார்.

———-

யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ யக்ஞபுக் யக்ஞஸாதந: |
யக்ஞாந்தக்ருத் யக்ஞகுஹ்யமந்நமந்நாத ஏவ ச || -105-

யக்ஞப்ருத் — யக்ஞத்தின் முழுமையையும் பேணிக் காப்பவரும், குறைகளை நிறைவு செய்து முழுமை அடைய வைப்பவரும் அவரே

(யக்ஞம் என்பது தேவதைக்காகச் செய்யப்படும் திரவியத் தியாகம் என்று ஒரு பொருள். மேலும் ஆழ்ந்து நோக்கினால்
மனிதன் தன்னிடம் இருக்கும் கண்ணிற்குத் தெரிந்த சௌகரியங்களைக் கண்ணிற்குத் தெரியாததும் எதிர்காலத்தில்
மிகுந்த முயற்சியால் அடையப்பட வேண்டியதுமான இலட்சியங்களுக்காகத் தியாகம் செய்துதான் பெற வேண்டியிருக்கிறது.
அந்த இலட்சியங்கள் ஆரம்பத்தில் விழுமியங்கள் என்னும் வடிவில்தான் கருத்துகளாக இருக்கின்றன.
மிகச் சிறந்த இலட்சியம் கடவுளை அடைதல். ஆத்ம ஞானம் என்னும் பெருநிலை. ஆனால் அதுவோ இன்று கண்ணுக்குத் தெரிவதாக இல்லை.
இன்று கண்கண்ட சுகங்களான பொருள், இன்பம் ஆகியவற்றில் நாட்டத்தை விட்டுத்தான் அந்தப் பெரும் இலட்சியத்தை நோக்கிப்
பெரும் யக்ஞம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த யக்ஞத்தில் தியாகம் செய்யப்படுவதோ மூன்று விஷயங்கள்.
ஒன்று நான், எனது என்னும் அகங்காரத்தையும், மமகாரத்தையும் தியாகம் செய்தல்.
இரண்டு, நான் தான் செயல்களைச் செய்கிறேன் என்னும் கர்த்தா என்னும் எண்ணத்தை விடுதல்.
மூன்று பலன்களில் நாட்டத்தை விடுதல். ஆத்ம ஞானம் என்னும் இலக்கை எட்டத் தடையாய் இருப்பவை இவை.
இந்த யக்ஞத்தில் அவன் அருளே ஆரம்பம் முதல் நிறைவு வரையிலும் துணை)

யக்ஞக்ருத் — உலகில் மக்களின் நன்மைக்காக வேண்டி இந்த யக்ஞம் என்னும் முறையை அவரே ஏற்படுத்தியுள்ளார்

யக்ஞீ — யக்ஞத்தின் தலைவரும் பிரபுவும் அவரே

யக்ஞபுக் — யக்ஞத்தின் பலன்களை அனுபவிப்பவரும் அவரே

யக்ஞஸாதந: — யக்ஞம் நிறைவேறுவதற்கான துணையாக இருப்பவரும் அவரே

யக்ஞாந்தக்ருத் — பிரம்மஞானம் அடைவதே அனைத்து யக்ஞங்களின் இறுதி இலட்சியம்.
அந்தப் பிரம்ம ஞானத்தை அருள்வதன் மூலம் அவரே யக்ஞாந்தக்ருத் ஆகிறார்.

யக்ஞகுஹ்யம் — தங்களுக்குப் பிடித்த சில பலன்களுக்காகச் செய்யப்படுவது யக்ஞம் என்னும் சாதாரண கருத்துள்ளவர்களுக்குப் புரியாத கருத்து,
‘ஏன் யக்ஞத்தை மூவிதத் தியாகத்துடன் கடவுளைக் குறித்தே செய்ய வேண்டும்?’ என்பது.
யக்ஞத்தின் முழுமையாகக் கடவுள் இருப்பதால் அவரைக் குறித்து, அவருக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும் யக்ஞம்
அனைத்து நிறைவையும் இயல்பாகவே பெற்று நிற்கும். யக்ஞத்தின் இரகசியம் கடவுளே என்பதால்தான் யக்ஞகுஹ்யம் எனப்படுகிறார்.

அந்நம் — உயிரையும், உடலையும் வளர்ப்பது அன்னம். உயிர்களையும், உலகங்களையும் போஷிப்பவர் ஆகையால் திருமால் அந்நம் எனப்படுகிறார்

அந்நாத: — உணவைத் துய்ப்பவரை அந்நாதர் என்று சொல்லலாம். அனைத்துப் பலன்களையும் உள்ளுயிராய் நின்று
திருமாலே துய்ப்பவர் ஆக இருப்பதால் அவரே அந்நாத: எனப்படுகிறார்.

ஏவ ச – திருமாலே உணவும், உண்போனும் இரண்டுமாக இருக்கின்றார் என்று வலியுறுத்துகிறது.

———-

ஆத்மயோநி: ஸ்வயம்ஜாதோ வைகாந: ஸாமகாயன: |
தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந: || -106-

ஆத்மயோநி: — உலகின் அடிப்படைக் காரணமும் அவரே; பக்தர்களுடன் பாலில் இனிப்பு போல் கலந்து பழகும் பண்பினர்

ஸ்வயம்ஜாத: — உலகின் நிமித்த காரணமும் அவரே; பக்தர்களின் பிரார்த்தனைகள் இல்லாமலும் சில சமயம் அவரே அவதாரம் எடுக்கின்றார்

வைகாந: — அவர் அருளால் ஜீவன் முக்தி அடையும் பொழுது பவநோய் என்பது இருந்த சுவடே தெரியாமல் அகழ்ந்து அகற்றப்பட்டு விடுகிறது.

ஸாமகாயந: — அழுகையில் புதைந்திருந்த ஜீவர்கள் முக்தியில் ஆனந்தத்தில் முழுகிப் பாடி உகக்கும்படி ஆக்குகின்றார்

தேவகீநந்தன: — இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்த திவ்ய நாமங்கள் எல்லாம் இதோ
இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தத் தேவகீ நந்தனனைக் குறித்துத்தான் என்பதை அறிவாயாக

ஸ்ரஷ்டா — உங்கள் உறவினன் போலும், நண்பன் போலும் இருக்கும் இந்தத் தேவகீநந்தனனே உலகைப் படைத்தவன். இதுவே உண்மை.

க்ஷிதீச: — புவியின் தலைவன் இவனே. எனவேதான் பூமியின் துயர் தீர்க்க அவதரித்துள்ளான்.

பாபநாசந: — அவனை நினைத்தாலே போதும். பாபங்கள் பறந்தோடும்.

————-

சங்கப்ருந்நந்தகீ சக்ரீ சார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணிரக்ஷோப்ய: ஸர்வப்ரஹரணாயுத: ||
ஸர்வப்ரஹரணாயுத: ஓம் நம:-107

சங்கப்ருத் — பிரகிருதி தத்வத்தையே சங்கமாகக் கொண்டு தரிக்கிறார்

நந்தகீ — வித்யைகளின் முழுத்தொகுதியான நந்தகி என்னும் வாளைத் தரிப்பவர்

சக்ரீ — மனம் என்னும் தத்துவத்தையே சக்ரமாகத் தரிக்கிறார்

சார்ங்கதந்வா — இந்திரியங்கள் எல்லாம் எழுகின்ற மூலமான அகங்கார தத்துவத்தைச் சார்ங்கம் என்னும் வில்லாகத் தரிக்கிறார்

கதாதர: — புத்தி தத்துவம் என்னும் கௌமோதகீ என்னும் கதையைத் தரிக்கிறார்

ரதாங்கபாணி: — ரதத்தின் அங்கமான தேர்ச்சக்கிரத்தை அன்றோ கையிலேந்திச் சுழட்டியபடி அன்று என்னை நோக்கி வந்தார் இந்தத் தேவகீநந்தனர்!

அக்ஷோப்ய: — சரணாகதி அடைந்தவர்களைக் காத்தே தீருவது என்னும் அவருடைய தீர்மானமான உறுதியை
அவர் தம்மாலும் கூட அசைக்க முடியாது என்பதால் அவர் அக்ஷோப்யர்

ஸர்வப்ரஹரணாயுத: — இந்த ஆயுதம்தான் என்று இல்லாமல் கணக்கற்ற ஆயுதங்கள் உடையவர்.
அதுமட்டுமின்றி எதையும் எந்நேரத்தும் எவ்வாறும் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும் வல்லபர்.

மீண்டும் ஸர்வப்ரஹரணாயுத: என்னும் நாமத்தைச் சொல்வதால் மிக உயர்ந்த கிரந்தமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்
நிறைவு அடைகிறது என்பதைக் காட்டுகிறது.
ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லுவதால் ஸர்வமங்களமும் உண்டாவதைக் குறிக்கிறது.
நம: என்று சொல்லி முடிப்பதால் திருமாலைச் சரணடைந்தோம் என்பதற்கு அடையாளமாக நம்மால் செய்யலாகும்
அனுஷ்டானம் நம: என்னும் கைகூப்புச் செய்கையே என்பது உணர்த்தப் படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்திலும் நித்யசூரிகளும் கூட எப்பொழுதும் நம: நம: என்று கைகூப்பியவண்ணம்
திகைத்துப் பார்த்தவண்ணம் நிற்கின்றனர் என்று சுருதியே முழங்குகிறது.

———–

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது || 108

வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும்,
சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய
ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும்.

ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித் |
ஜன்மம்ருத்யு ஜரா வ்யாதிபயம் வாப்யுபஜாயதே ||

வாஸுதேவனின் பக்தர்கள் அசுபம் என்றால் என்ன என்றே அறியார்கள். அவர்களுக்கு பிறப்பால் பயம், இறப்பால் பயம்,
முதுமையால் பயம், வியாதியினால் பயம் என்பவை ஒரு நாளும் உண்டாகா.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாSSத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

உடலால், வாக்கால், மனத்தால், இந்திரியங்களால், புத்தியால், என்னால் நானாகவோ அல்லது பிரகிருதியின்
சுபாவத்தாலோ எதை எதைச் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே பரமாகச் சமர்ப்பித்து விடுகிறேன்.

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள்–குறை ஒன்றும் இல்லை கோவிந்தா –

January 6, 2022

“பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்” என்கிறது கருடபுராணம்

பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள் “நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே”

“வேத மூல ப்ரமாணாத்

பகவான் கட்டிப் பொன் போலே.. அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே”

“வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம் ”

அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்”

“திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்தா நாமமிறே”

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

“பத்மநாபோ, மரப்பிரபு ”.
“பத்மநாபோ, அமரப்பிரபு”
ஜ்யோதீம்ஷி விஷ்ணு:, புவனானி விஷ்ணு:, வநாணி விஷ்ணு: என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா?
(ஜ்யோதீம்ஷி = ஒளி, புவனானி = உலகங்கள், வனானி = காடுகள்)

ஸ்ரீ க்ருஷ்ணாய நம: என்பதற்கு பதில் ஸ்ரீ திருஷ்ணாய நம:
ஸ்ரீ த்ருஷ்ணாய என்றால் ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்.
ஸ்ரீ (மகாலட்சுமி) திருஷ்ணை (அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும் என்றார்.

துயிலெழும்போது “ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி” என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
“கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன”
“கேசவனைப் பாடவும், நீ கேட்டே கிடத்தியோ, தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

அவன் சொன்னது கீதை – கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
1. மகாபாரத சாரம்:
2. மகரிஷிகளாலே நன்கு, பலமுறை கானம் பண்ணப்பட்டது:
3. பகவானாலே அடையாளம் காட்டப்பட்டது:
வியாசரை வேத வியாசர் என்று சொல்கிறோம். வேதத்தை விபஜிக்கிறவர் என்று பொருள்.
4. பீஷ்மரால் உயர்ந்ததாகக் கொண்டாடப்பட்டது:
5. நோய் தீர்க்க வல்லது:நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சகஸ்ர நாமம் பாராயணம் பண்ற வழக்கம்
வைத்துக் கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் கிடையாது. சர்வ சம்பத்தும் வந்து சேரும்.
அந்நியோன்யம் வளரும். துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.
6. கீதைக்குத் துல்லியமாய் அர்த்தத்தை உடையதனாலே:

திருஷ்ட பலம்
அதிருஷ்ட பலம்
திருஷ்டாதிருஷ்ட பலம்

ஜாமி என்றால் நல்ல ஸ்த்ரீ என்று அர்த்தம். அஜாமி என்றால் அதற்கு நேர் எதிரானவர்!
அத்தகைய ஸ்த்ரீயின் சேர்க்கையுடையவனாக இருந்தான் அஜாமிளன்.
“நாராயணா”என்று அவன் தன் குழந்தையைத் தான் கூப்பிட்டான்
அஜாமிளன் சரித்திரத்தைச் சொன்னது திருஷ்ட பலம் பற்றித் தெரிஞ்சுக்கறதுக்காக.

அதிருஷ்ட பலம். திரௌபதி சரணாகதி அடைந்த பொது அவளுக்குப் புடவை சுரந்தது அதிருஷ்ட பலத்துக்கு உதாரணம்.

திருஷ்டா திருஷ்டா பலனுக்கு உதாரணம் கஜேந்திர மோக்ஷம்.

காயத்ரி மந்திரம் எல்ல மந்திரங்களுக்கும் தாய்.
கருணை வடிவான காயத்ரியின் முதல் எட்டு அக்ஷரத்தை விளக்க வந்தது
விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முதல் சுலோகத்தின் முதல் பாதம்.
அடுத்த எட்டு காயத்ரி அக்ஷரங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தின் இரண்டாவது சுலோகத்திலே விளக்கம் பெறுகின்றன.
மூன்றாவது எட்டை விளக்க வந்தது சகஸ்ர நாமத்தின் மூன்றாவது சுலோகம்.
இந்த மூன்று சுலோகங்களுக்கு சர்வ மந்திரங்களுக்கும் சாரமான காயத்ரியை எடுத்துச் சொல்லுவதால் அவற்றுக்குச் சிறப்பு அதிகம்.
இந்த முதல் மூன்று சுலோகங்களுக்குள்ளே ஓர் அவதாரம் பேசப்படுகிறது.

அந்த காயத்ரியை தேவர்கள் எப்படித் துதித்தார்கள் என்றால், “விச்வமஸி, விச்வாயு” என்று ஆரம்பித்துத் துதித்தார்கள்.
அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் நாமமாக இருக்கிறது.
விச்வம் என்கிற சப்தத்துக்குப் பூரணத்துவம் என்றும் ஒரு பொருள் உண்டு.
பகவான் எதிலும் குறைவில்லாதவன் என்று அர்த்தம். அதனால்தான் பூரணன், கொள்ளக் குறைவிலன்
கொள்ளக் கொள்ளக் குறைவிலன். கொள்ளமாளா இன்பவெள்ளம் அவன்

பிரஹலாதனுக்கும் ஹிரண்ய கசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம்,
நரசிம்ஹ அவதாரத்தை மின்சக்தி என்கிறது. பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான்.
ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான் அஸ்தி என்கிற பாஸிட்டிவ் தத்துவனும் நேதி என்கிற நெகடிவ்வும்
மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம்

நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு.
ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும்
சஹஸ்ர நாம தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ராமா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், ர வர்க்கத்திலே ரா என்பது இரண்டாவது எழுத்து.
ம என்பது ஐந்தாவது எழுத்து (வடமொழியின் ப ப ப ப ப ம வரிசை)
இரண்டை ஐந்தால் பெருக்கினால் கிடைப்பது பத்து.
ஆக ராம என்ற ஒரு சொல்லுக்குரிய எண் 10,
ராம, ராம, ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10x 10 அதாவது ஆயிரம்.
ஆக, ராம, ராம, ராம என்று மும்முறை சொல்வது ஆயிரம் திருநாமங்களுக்கு துல்யமானதுதானே.

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

பரமாத்மாதான் பரமார்த்தம்.

அவன் அந்தர்யாமியாய் இருந்து, பூரணனாய் இருந்து, பூரணமாய் ஆனந்தம் கொடுப்பதினாலேதான்
புவன சுந்தர என்று ருக்மிணீ அவனை அழைத்தாள்.
தத்வம் அஸி என்கிற மகா வாக்யத்தை ஒரே பதத்தில் சொல்லணும் என்றால் விச்வம் என்று சொல்லணும்

ஆடு மாடு மாதிரி மனிதர்களை ஓட்டுவதில்லை பகவான்.
ஜீவாத்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான இடத்திலே சுதந்தரத்தைக் கொடுக்கிறான்.
நல்லது இது – கெட்டது இதுன்னு காட்டிக் கொடுத்து அது எதைப் பிடிச்சுக்கறதுன்னு கவனிக்கிறான்.
“மனிதன் நல்லதைப் பற்றுகிறானா? தீயதைப் பற்றுகிறானா? என்று சோதித்துப் பார்ப்பது அவனுடைய லீலை.

விச்வம் என்கிற சப்தத்துக்குப் பொருள் கேட்டால், ‘ஜகத்காரண வஸ்துவாக பரமாத்மா இருக்கிறான்.
அவனே காரியமாய் இப்படிப் பரிணமிக்கிறான். விச்வத்துக்குக் காரிய காரணம் அவனே,
ஆனதனாலே விச்வம் என்கிற சப்தத்தினால் பரமாத்மா அழைக்கப்படுகிறான்’.
இதுக்கு மேலே இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
சுவாபாவிகமாக – அதாவது இயற்கையிலேயே எண்ணிறந்த திருக்கல்யாண குணங்கள் இருப்பதாலே
பகவான் என்று அழைக்கப்படுகிறான் அவன்.

விஷ்ணுதான் யக்ஜன் – யக்ஜ சாதனன், யக்ஜரூபி, யக்ஜபுருஷன்

இல்லை என்கிற சொல்லுக்கு நான்கு விதமான விளக்கம் உண்டு
பிராக பாவம்-பிரத்வம்ஸாபாவம் -அன்யோந்ய பாவம்-அத்யந்தா பாவம்-

நமக்குள்ளே எம்பெருமான் இருக்கிறான் – புரி சயநாத் புருஷ:-புருஷ சப்தத்துக்கு நான்கு பொருள்
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலே பூதாத்மான்னு ஒரு நாமம பவித்ரமான ஆத்மா, பாவனமான ஆத்மா–
பஹு தானத் புருஷ: கேட்கும் வரமெல்லாம் கொடுப்பான்.
புராணாத்வாத் புருஷ: புராணாம் என்றால் ரொம்ப பழமையானவன்
பூர்ணாத்வாத் புருஷ:

திருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.
அவற்றில் முதல் பத்து, “அவன் திருநாமத்தைச் சொல்லு” என்று உணர்த்துகின்றன.
இரண்டாவது பத்து, “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு” என்கிற பாசுரங்கள்.
மூன்றாவது பத்தோ “அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு” என்று சொல்கின்றன

திருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.
வராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.
ஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.
வேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான
எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா?
ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள்

ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.
“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த” என்றும்
“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று மறுபடியும்

ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்று ஆச்ரயித்து,
அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.

காஞ்சிபுரம் அருகே திருவேளுக்கை என்கிற ஷேத்ரம்
பகவான் தானாகவே, இஷ்டமாய் அமர்ந்திருக்கும் ஷேத்ரம். அதனால் அதற்கு காமாளிகை என்றொரு பெயர்
தபன இந்து அக்னி நயன: தாபனீய ரஹஸ்யானாம் சார:
தாபனீய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சமஸ்த ரகசியங்களின் சாரமாய் இருக்கக் கூடியவன் காமாஸிகா ஹரி:
பகவானுக்கு ஒரு பக்கம் வலது திருநேத்திரம் – சூரியனே (தபன) வலது திருநேத்ரமாக அமைந்துள்ளது.
இடது திருநேத்திரம் சந்திரன் (இந்து). இடையிலே ஒரு நேத்திரம் – அது அக்னி.
எல்லோருக்கும் நேத்திரமாய் இருக்கக் கூடிய பரமாத்மாவுக்கு, இந்த மூன்று தேவதைகள் நேத்திரமாய் இருக்கிறார்கள்.

கிருஷ்ண-யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதை என்று அந்த சம்ஹிதைக்குப் பெயர்.
(தித்திரா-என்கிற புறாவின் பெயரிலிருந்து வந்தது தைத்ரீய).
சூரியன் உபதேசம் பண்ணியதுதான் “சுக்ல யஜூர்வேதம்”.
சூரியன் ஆரோக்கியத்தை மாத்திரம் கொடுப்பவன் அல்ல-சிறந்த ஞானத்தையும் கொடுப்பவன்.
வேதத்தையே கொடுக்கக் கூடியவன்.
சத்யபாமாவினுடைய தந்தை சத்ராஜித். சூரியனை அவன் உபாசனை பண்ணி-ச்யமந்தக மணி பெற்றான்
பஞ்ச பாண்டவர்களுக்கு சூரியன் அஷ்ய பாத்திரம் கொடுக்க-
திருநேத்திரத்தினால் நம்மைக் கடாஷிக்கும்போது ஞானமும், ஐச்வர்யமும், ஆரோக்யமும், அன்னமும் நமக்கு சங்கல்பிக்கின்றன.
எனவேதான் நரசிம்ஹ தியானத்துக்குள்ளே சூரியனும் அடங்கிவிடுகிறான்.

ம்ருத்யு ம்ருத்யவே ஸ்வாஹா என்றும் நரசிம்ஹனை ஆராதிக்கிறோம்.
விச்வயோனி: விச்வாத்மா: என்றும் அவனை அழைக்கிறோம்.
நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு. முப்பத்திரண்டு அஷ்ரங்கள்.
ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது.
ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம்.
நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணிவிட்டால்
எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.

“அடித்த கை – பிடித்த பெருமாள்” என்று பெயர் அவனுக்கு! “எங்கடா”? என்று அடித்துக் கூப்பிட்டால்,
“இதோ” என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!
ஹிரண்ய சம்ஹாரத்துக்காக ஏற்பட்டது அல்ல இந்த அவதாரம்.
பிரஹலாதனை காப்பதற்காக எற்பட்டதா இந்த அவதாரம் என்றால் அதுவும் இல்லை.
அக்கினியில் தூக்கிப்போடும்போதும், மலையில் இருந்து உருட்டும் போதும், சமுத்திரத்தில் எறிந்த போதும்,
யானையைக் கொண்டு இடறச் செய்த போதும், விஷப் பாம்புகளிடையே விடப்பட்ட போதும் பிரஹலாதனை யார் காப்பாற்றினார்கள்?
அப்போதெல்லாம் அவதரிக்காத நரசிம்ஹன், பிரஹலாதனின் வார்த்தையைக் காப்பாற்றத்தான் அவதரிக்கிறான்!
“எங்குமுளன் கண்ணன், அவன் இல்லாத இடம் கிடையாது” என்று பிரஹலாதன் சொன்னபோது
அதை உண்மையாக்க பரமாத்மா அவசரத் திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தங்களிலேயும் நிறைந்தான்!
பிரஹலாதனின் வாக்கை மட்டுமின்றி பிரும்மாவின் வாக்கைக் காப்பதற்காகவும் எடுக்கப்பட்டது நரசிம்ஹ அவதாரம்.
யோசித்து எடுத்த ராமாவதாரம் போல் அன்றி, தேவதைகளின் பிரார்த்தனைகளுக்கிரங்கி தோன்றிய கிருஷ்ணாவதாரம் போல் அன்றி,
நினைத்த மாத்திரத்தில் எடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
அவசரத் திருக்கோலம் என்றாலும் அதுதான் மிகவும் அழகான அவதாரமாக அமைந்திருக்கிறது!

கிருஷ்ணாவதாரத்துக்காகவே எழுந்த பாகவத புராணத்திலே, “அற்புதமான அவதாரம்” என்று
கிருஷ்ணரைச் சொல்கிறார் வியாசர்.
ஆனால் அவரே நரசிம்ஹனைச் சொல்கிறபோது “அதியத்புத அவதாரம்” என்று விளக்குகிறார்!

ருக்மிணி பிராட்டி, கண்ணனுக்கு ஓலை எழுதுகிறாள். அதிலே ஏழு இடங்களில் பகவானை அழைக்கிறாள்.
ஓரிடத்திலே கூட “கிருஷ்ணா” என்று அவனைக் கூப்பிடவில்லை.
பொய்யில்லாத பெருமான் யாரென்றால் நரசிம்ஹன்தான்! அழைத்தவுடனே வந்து ரக்ஷிக்கக் கூடியவன்.
எனவே ருக்மிணியின் இதயம் கவர்ந்த அவதாரமாகிறது இந்த அவதாரம்

ராமாவதாரத்திலேயும் மாரீசன் ராமனை “நரசிம்ஹா” என்று அழைக்கிறான்.
ஆஞ்சநேயரும் இலங்கையிலே சீதா தேவியிடம் “அம்மா நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என் முதுகிலே ராமன் வருவான்.
நரசிம்ஹனைப் போல வருவான்” என்கிறார்.
ராமாவதாரத்திலே எங்கு தொட்டாலும் இப்படி நரசிம்ஹ பலம் தெரிகிறது.

பத்மாவதி கல்யாணத்திலே ஒரு காட்சி. தாயார் மணவறையிலே மணக்கோலத்திலே அமர்ந்திருக்கிறார்.
எல்லா உணவு வகைகளும் தயாராகி நிரம்பியிருக்கிறது. ரிஷிகள், உணவு கொள்ளக் காத்திருக்கிறார்கள்.
உணவை யாருக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பரிமாறுவது எழுகிறது.
பகவானிடமே கேட்கிறார்கள். “அஹோபில ஷேத்திரத்திலே உள்ள நரசிம்ஹனுக்கு நிவேதனம் செய்து
உணவு விநியோகிக்கப்படட்டும்” என்று சொல்கிறார் ஸ்ரீநிவாஸபெருமாள்.
அதனால்தான் ஸ்ரீநிவாஸர் நரசிம்ஹருக்குக் கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில ஷேத்திரத்திலே பார்க்கலாம்
ஸ்ரீ ராமனாலும், ஸ்ரீநிவாஸபெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே
நரசிம்ஹனை பெரிய பெரிய பெருமாள் என்று அழைக்கிறோம்.

“அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவன்” என்கிறார்.
நினைத்த இடத்தில் நினைத்த கணத்தில் தோன்றியவனின் காருண்யத்தைச் சொல்கிறார்.
“என் சிங்கப் பிரான்” என்று அவனை அழைக்கிறார். அந்தப் பாசுரத்தை பிறர் சொல்லும்போது,
அனைவருமே அவரவர் நரசிம்ஹனை அபிமானிக்கும்படியாகச் செய்து விட்டார் நம்மாழ்வார்.

தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா”? என்று கேட்டார் பராசர பட்டர்.
தூக்கம் என்பதை நமக்கு விதித்ததே இந்தப் பேருண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.
அவன் சர்வாந்தர்யாமி என்பதை உணர்த்துவதற்குத்தான்!

————-

நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார்
ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.
மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?அதனால் தான்..
ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்து இருக்கிறாள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில்
அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.
மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.
1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட
எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது.
இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .
இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று
நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்

ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்டது திவ்ய சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகம்.

1.மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2.ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3.வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4.ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5.இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6.யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7.ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
8.தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே!

தமிழாக்கம்:
1.நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2.சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;
3.அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே;
4.எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே;
5.இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே;
6.எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே;
7.நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை;
8.அதனால், நரசிம்மனே! உம்மைச் சரணடைகின்றேன்!

———

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே தீட்சணதம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்.

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் ந்ருஸிம்மம் பீக்ஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப சமுத்பவம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!

லஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஆந்த்ரமாலாதரம் சங்கசக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ஸ்மரணாத் சர்வபாபக்ணம் கத்ரூஜவிஷநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
சிம்ஹநாதேநமஹதா திக் தந்தி பயநாசனம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீ சம் தைத்தேச்வரவிதாரிணம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
க்ரூரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
வேத வேதாந்த யஞ்ஞேசம் ப்ரம்மருத்ராதி வந்திதம் ஸ்ரீ ந்ருஸிம்மம் மகாவீரம் நமாமி ருணமுக்தயே!
ய இதம் படதேந்நித்யம் ருணவிமோசன சங்கீதம் அந்ருநோஜாயதே சத்யோ தனம் சீக்ரமவாப்னுயாத்!

(ருண விமோசன ந்ருஸிம்ம ஸ்துதி பாராயணம் செய்வோருக்கு சகல கஷ்டம் நிவர்த்தியாகி வாழ்வில் வளம் சேரும்.)

———-

ஸ்ரீமத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் !–ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரம்

திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர
அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே,
கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா!
வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே,
என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.

——–

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.

———

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அஷ்டகம்

1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
பாதக தவானல பதத்ரிவர கேதோ
பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
பங்க நவகுங்கும விபங்கில மஹோர
பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ மஹாத்மன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 315-390-திரு நாமங்கள்–

December 10, 2021

(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)

————

315. க்ரோதக்னே நமஹ (Krodhaghne namaha)

ஆயிரம் தோள்கள்கொண்ட அரசனான கார்த்தவீரியார்ஜுனன், மாகிஷ்மதி என்ற பகுதியை ஆண்டுவந்தான்.
அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வேளையில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் உள்ள
காமதேனு பசுவைக் கண்டான். அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கார்த்தவீரியார்ஜுனன்,
தனது ஆட்களை அனுப்பி, காமதேனுவைப் பலவந்தமாக இழுத்து வரச் செய்தான்.
காமதேனுவை அடித்துத் துன்புறுத்தி அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள் அரசனின் ஆட்கள்.

இதைக் கண்டு கோபம்கொண்டு எழுந்த பரசுராமர், கையில் கோடாரியை ஏந்தியபடி கார்த்தவீரியார்ஜுனனோடு போர்புரிந்து,
அவனது ஆயிரம் தோள்களையும் துண்டித்தார். அவரைப் பழிவாங்க நினைத்த கார்த்தவீரியார்ஜுனனின் மகன்கள்,
பரசுராமர் இல்லாத நேரத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று,
அவரது தலையைக் கொய்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

வீடு வந்த பரசுராமர், நடந்தவற்றை அறிந்து, வெகுண்டு, அறவழி தவறி நடக்கும் அனைத்து அரசர்களையும்
அழிப்பது எனத் தீர்மானித்தார். கையில் கோடாரியை ஏந்தியபடி இருபத்தோரு தலைமுறை மன்னர்களை மொத்தமாக அழித்து விட்டார்.
உலகை ஆண்ட அனைத்து மன்னர்களையும் வென்றுவிட்டதற்கு அடையாளமாக,
பெரிய அசுவமேத வேள்வியை நடத்தினார் பரசுராமர். அந்த வேள்வியை நடத்தி வைப்பதற்குக் காசியபர்
உள்ளிட்ட பெரிய முனிவர்களை எல்லாம் வரவேற்றார். மிகச்சிறப்பான முறையிலும்
பிரம்மாண்டமாகவும் வேள்விக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

அசுவமேத வேள்விக்குரிய குதிரையை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் படி ஆட்களை அனுப்பினார் பரசுராமர்.
“அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உலகில் மீதம் இருந்தால், இந்தக் குதிரையைக் கைப்பற்றி
என்னுடன் போர் புரிய வாருங்கள்! அல்லது, நீங்கள் இங்கு வந்து என்னிடம் சரண் அடைந்து,
உங்களது அரசை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்!” என்று
எச்சரிக்கை விடுத்தார் பரசுராமர்.

எந்த அரசரும் பரசுராமரை எதிர்க்கத் துணியாத நிலையில், உலகம் அனைத்தும் பரசுராமரின்
கட்டுப்பாட்டுக்குள்ளே வந்து விட்டது. காசியபர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் நல்ல முறையில்
பரசுராமரின் அசுவமேத வேள்வியை நிறைவு செய்து கொடுத்தார்கள்.வேள்வி நிறைவடைந்தவாறே,
காசியபர், பரசுராமரைப் பார்த்து, “பரசுராமரே! இனியாவது உங்களது கோபம் தணிய வேண்டும்!
உலகுக்கு நன்மைகள் நடக்க நீங்கள் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

பரசுராமர், “காசியபரே! அரசகுலத்தை அழிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
ஆனால் வேதம் வல்ல முனிவரான என் தந்தையைக் கார்த்தவீரியார்ஜுன மன்னனின் மகன்கள் கொன்றார்கள்.
அவர்கள் மட்டுமின்றி, பூமியை ஆண்டு வந்த மேலும் பல மன்னர்களும் முனிவர்களை அவமதித்தார்கள்.
அறநெறியை மறந்தார்கள். கொடுங்கோலாட்சி புரிந்தார்கள். அவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தனை காலம் கையில் மழு ஏந்தி அந்த மன்னர்களுக்கு மரண தண்டனை கொடுத்தேன்.
இனி உலகில் அமைதி நிலவட்டும்!” என்று சொன்னார்.

அதன்பின், அசுவமேத வேள்வியை நடத்தித் தந்த காசியப முனிவரிடம் அனைத்து உலகின்
ராஜ்ஜியத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார் பரசுராமர்.
“நீங்களும் மற்ற முனிவர்களும் சேர்ந்து பூமியில் சுபிட்சம் நிலவச் செய்யுங்கள்!” என்றார் பரசுராமர்.

“தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். தாங்களும் கோபம் தணிந்தவராய், சாந்தம் அடைய வேண்டும்!” என்று
காசியபர் பிரார்த்திக்கவே, தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார் பரசுராமர்.
‘க்ரோத:’ என்றால் கோபம் என்று பொருள். ‘க்ரோதஹா’ என்றால் கோபம் தணியப்பெற்றவர் என்று பொருள்.

காசியப முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கோபம் தணியப் பெற்றவராகப் பரசுராமர் திகழ்ந்தபடியால்,
‘க்ரோதஹா’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 315-வது திருநாமம்.

“க்ரோதக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கோபம் அனைத்தும் விரைவில் தணிந்து,
மனதில் சாந்தி நிலவும்படி திருமால் அருள்புரிவார்.

————-

316. க்ரோத க்ருதே நமஹ (Krodhakruthe namaha)

அரங்கத்தை அடைந்து அரங்கனைப் பணிந்தார் வேதாந்த தேசிகன் என்ற மகான்.
அப்போது தேசிகனின் மனத்திலே ஒரு காட்சியைக் காட்டினான் திருவரங்கன்.
திருவரங்கம் என்ற திருத்தலமே ஒரு நாடக அரங்கம். அந்த அரங்கத்தில் நடிக்கும் கதாநாயகன் அரங்கநாதப் பெருமாள்.
கதாநாயகி ஸ்ரீரங்கநாயகித் தாயார். அரங்கனும் ரங்கநாயகித் தாயாரும் பத்து விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று
அந்த அரங்கத்திலே நடித்துக் காட்டுகிறார்கள்.
அரங்கன் ஏற்று நடித்த அந்தப் பத்து கதாப்பாத்திரங்களே நாம் பிரசித்தமாகப் போற்றும் தசாவதாரங்கள் ஆகும்.

இக்காட்சியை மனக்கண்ணால் கண்ட தேசிகனுக்கு, அந்த அவதாரங்களை எல்லாம் துதிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது.
அதனால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு ஸ்லோகம் வீதம் பத்து ஸ்லோகங்கள் பாடி தசாவதாரத்தையும் துதித்தார் தேசிகன்.
தசாவதார ஸ்தோத்ரம் என்று அத்துதி அழைக்கப்படுகிறது. அதைக் கேட்டு மகிழ்ந்த அரங்கன்,
“வேதாந்த தேசிகரே! பத்துப் பாடல்களால் என் பத்து அவதாரங்களைத் துதித்தீர்கள்!
இப்போது அவற்றைத் தொகுத்து ஒரே பாடலில் என் பத்து அவதாரங்களையும் பாடுவீராக!” என்றான்.
அரங்கனின் ஆணையை ஏற்று அவனருளால் ஒரு ஸ்லோகத்தை இயற்றினார் வேதாந்த தேசிகன்:

“இச்சாமீன! விஹாரகச்சப! மஹா போத்ரின்! யத்ருச்சாஹரே!
ரக்ஷாவாமன! ரோஷராம! கருணாகாகுத்ஸ்த! ஹோலாஹலின்!
க்ரீடாவல்லவ! கல்கவாஹனதசாகல்கின்! இதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புனந்தி புவனம் புண்யௌக பண்யாபணா:”
பத்து அவதாரங்களிலும் இறைவனிடம் எந்தெந்த குணங்கள் பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டனவோ,
அந்த குணங்களையே அந்தந்த அவதாரங்களுக்கு அடைமொழிகள் ஆக்கி இதில் தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சா மீன – உன் விருப்பத்தால் மீனாய் அவதரித்த பிரானே!
விஹார தச்சப – விளையாடல் புரிவதற்காக ஆமை ஆனவனே!
மஹா போத்ரின் – மாபெரும் வடிவம் கொண்ட பன்றியாய்த் தோன்றியவனே!
யத்ருச்சா ஹரே – எதிர்பாராத நேரத்தில் சடக்கெனத் தோன்றிய நரசிம்மனே!
ரக்ஷா வாமன – உலகை எல்லாம் காப்பதற்காக வாமனமூர்த்தி ஆனவனே!
ரோஷ ராம – ரோஷம் எனப்படும் கோபம் கொப்பளிக்க, பரசுராமனாகக் கையில் மழுவுடன் தோன்றியவனே!
கருணா காகுத்ஸ்த – கருணையே வடிவெடுத்த ஸ்ரீராமனே!
ஹேலா ஹலின் – கலப்பையை வைத்து விளையாடிய பலராமனே!
க்ரீடா வல்லவ – லீலைகள் செய்வதற்
காகவே அவதரித்த கண்ணனே!
கல்கவாஹன தசா கல்கின் – வெண்குதிரை யில் ஏறி பவனி வரப்போகிற கல்கியே!

“இப்படிப் பத்து அவதாரங்களின் பெயர்களையும் தினந்தோறும் வாயாரச் சொல்லி, புண்ணியத்தைச்
சம்பாதித்துக் கொண்ட மனிதர்களாலே இந்த உலகம் தூய்மை அடைகிறது!” என்று ஸ்லோகத்தை முடித்தார் தேசிகன்.

அரங்கனும் மனம் மகிழ்ந்து தன் திருவருளைப் பொழிந்தான்.இத்துதியில் ஒவ்வொரு அவதாரத்திலும்
இறைவன் காட்டிய பிரதானமான குணங்களைப் பட்டியலிடும் தேசிகன்,
பரசுராம அவதாரத்தில் ரோஷம் எனும் கோபமே பிரதானமான குணமாக இருந்ததாகக் காட்டியுள்ளார்.

கோபம் என்பது தீய குணம் அல்லவா? அதைப் போய் முக்கியக் குணமாகக் கொண்டாடலாமா? என்ற கேள்வி எழலாம்.
அதற்கு விடை யாதெனில், தீய சக்திகள் மீது இறைவனுக்கு வரும் கோபம் தீய குணம் அல்ல.
அறநெறி தவறி, தீய வழியில் ஆட்சிபுரிந்த அரசர்களை அழித்துப் பூமியில் நன்னெறியை நிலைநாட்டும் பொருட்டுப்
பரசுராமர் கோபம்கொண்டதால், அக்கோபமும் கூடப் பூமிக்கு நன்மையையே செய்தது.‘க்ரோத’: என்றால் கோபம்.

‘க்ருத்’ என்றால் செயல் செய்பவர். நன்னெறி தவறிய மன்னர்கள் மீது கோபம் (க்ரோத) கொண்டு,
அவர்களை அழிப்பதாகிய செயலைப் புரிந்த (க்ருத்) பரசுராமர் ‘க்ரோதக்ருத்’ என்றழைக்கப்படுகிறார்.
‘க்ரோதக்ருத்’ என்றால் கோபத்தைக் காட்டியவர் அல்லது கோபத்துடன் செயல்புரிந்தவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 316-வது திருநாமம்.
“க்ரோதக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களின் வாழ்வில் வரும் துயரங்கள் மீது
திருமால் கோபம் கொண்டு, அவற்றைப் போக்கி அருள்வார்.

—————

317. கர்த்ரே நமஹ (Karthre namaha)
(திருநாமங்கள் 317 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன்.
அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
அது ராவணனின் கூடாரத்தையே மூழ்கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று
திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான்.
அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

ஆயிரம் தோள் படைத்த அந்த மனிதன்தான் கார்த்த வீரியார்ஜுனன்.
நர்மதையில் வெள்ளம் வரக் காரணமானவனும் அவனே. தனது மனைவிகளோடு நர்மதையில் நீராட வந்த அவன்,
தனது ஆயிரம் கைகளையும் நதியின் குறுக்கே விரித்தான். அதனால் நதியின் நீரோட்டம் தடைப்பட்டு விட்டது.
தன் மனைவிகளோடு ஆனந்தமாக நீராடி முடித்தபின், நீரோட்டத்தை அடைத்து வைத்திருந்த ஆயிரம் கைகளையும் அங்கிருந்து எடுத்தான்.
அடுத்த நொடியே மடைதிறந்த வெள்ளமாக ஆற்றுநீர் பெருகி வந்து கரையில் இருந்த ராவணனின் கூடாரத்தை அழித்துவிட்டது.

இதை உணர்ந்துகொண்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கார்த்தவீரியார்ஜுனன் மீது பாய்ந்தான்.
இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையிலே ராவணனை எளிதில் வீழ்த்திய கார்த்த வீரியார்ஜுனன்,
அவனை ஒரு கயிற்றால் கட்டித் தன் நகருக்குள் அழைத்து வந்து, “மக்களே! இந்தப் பத்துத்தலைப் பூச்சியைப் பாருங்கள்!”
என்று ராவணனை ஏளனம் செய்தான். இதிலிருந்து கார்த்த வீரியார்ஜுனன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை நாம் அறியலாம்.

ராவணனையே எளிதில் வெல்லக் கூடிய இத்தகைய பலம் பொருந்திய கார்த்த வீரியார்ஜுனன்,
ஒருமுறை காட்டில் வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின் ஆசிரமத்துக்கு வந்தான்.
அவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் காமதேனு எனும் பசுவின் துணையோடு விருந்தளித்தார் ஜமதக்னி முனிவர்.
இதைக் கண்ட கார்த்த வீரியார்ஜுனனுக்கு அந்தக் காமதேனுவின் மீது ஆசை வந்து விட்டது.
அதை அபகரிக்கப் பார்த்தான். காமதேனுவின் திருமேனியில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள்
தோன்றிக் கார்த்தவீரியார்ஜுனனின் சேனையைத் துவம்சம் செய்தார்கள்.

ஆனால் கார்த்தவீரியார்ஜுனன், தன் வலிமையைப் பயன்படுத்திப் பலவந்தமாகக் காமதேனுவை அபகரித்துச் சென்றான்.
வனம் சென்றிருந்த பரசுராமர், ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, காமதேனுவைக் காணவில்லை.
நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கேட்டறிந்த பரசுராமர், கையில் மழு எனப்படும் கோடாரியை ஏந்திக்கொண்டு
ஆயிரம் தோள்படைத்த கார்த்த வீரியார்ஜுனனை எதிர்த்துப் போரிடச் சென்றார்.

பரசுராமர் தன்னைத் தாக்க வருவதை அறிந்துகொண்டான் கார்த்த வீரியார்ஜுனன்.
முனிவரை எதிர்த்துப் போரிடு வது மன்னனான தனக்கு இழுக்கு என்று கருதிய அவன்,
தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் பரசுராமரை எதிர்த்துப் போர் புரியச் சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் துவம்சம் செய்தார் பரசுராமர்.தன்கீழ் உள்ள சிற்றரசர்களை எல்லாம் இழந்த
கார்த்தவீரியார்ஜுனன், கர்வத்தால் மார்தட்டிக்கொண்டு, பெருத்த ஆரவாரத்துடன், தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு
வந்து பரசுராமரைத் தாக்க முயன்றான். ஆனால் அவன் செலுத்திய பாணங்கள் பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் பரசுராமரோ, அவனது மலைபோன்ற ஆயிரம் கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தி,
அவனை வதம் செய்தார். இதைத் திருமங்கை ஆழ்வார்,
“தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்!”என்று பாடுகிறார்.
அதன்பின் தனது காமதேனுவை மீண்டும் ஆசிரமத்துக்கு மீட்டு வந்தார்.
‘கர்த்தா’ என்றால் (இவ்விடத்தில்) வெட்டிச் சாய்ப்பவர் என்று பொருள்.
யாராலும் வெல்ல முடியாதவன் என்றுபுகழப்பட்டவனும், ஆயிரம் தோள்கள் கொண்டவனுமான
கார்த்த வீரியார்ஜுனனையே அனாயாசமாக வெட்டிச் சாய்த்தபடியால், பரசுராமர் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 317-வது திருநாமம்.
“கர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
வாழ்வில் ஏற்படும் தடங்கல்களை எல்லாம் திருமால் வெட்டிச் சாய்ப்பார்.

———————

318. விச்வபாஹவே நமஹ (Vishwabaahave namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள மங்கை நாடு எனப்படும் குறுநிலத்துக்கு மன்னரான மங்கை மன்னர்,
திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற தேவலோகப் பெண்ணைக் கண்டார்.
அவள் அழகிலே மையல்கொண்டு, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தார்.
குமுதவல்லியோ, “தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்திருக்கும் திருமால் அடியவரையே
நான் மணந்துகொள்வேன்! என்னை மணந்துகொள்ள விரும்பினால் நீங்களும்
அத்தகைய வைணவ அடையாளத்தோடு வாருங்கள்!” என்றாள்.

தோள்களில் சங்கு சக்கரப்பொறியை முறைப்படி குரு மூலமாகப் பெறவேண்டும்.
ஆனால் அப்போது இருந்த குருமார்கள் யாரும் மங்கை மன்னருக்கு இச்சடங்கைச் செய்ய முன்வரவில்லை.
வேறு புகலற்றவர்களுக்கு இறைவன்தானே புகலிடம்? அதனால், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும் நிவாசப் பெருமாளிடம் வந்தார் மங்கை மன்னர்.
“என் தோள்களில் சங்கு சக்கரப்பொறிகளை ஒத்தி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய நிவாசன், தன் கரங்களில் பிடித்திருக்கும் சங்கு சக்கரங்களை
அப்படியே மங்கை மன்னரின் தோள்களில் ஒத்தி, அவருக்குத் திருமால் அடியார் என்ற அங்கீகாரத்தைத் தந்தார்.
குமுதவல்லியின் நிபந்தனையை நிறைவேற்றியதால், அவளை வெற்றிகரமாக மணந்துகொண்டார் மங்கை மன்னர்.

அதன்பின், குமுதவல்லி இட்ட கட்டளைப்படி தினசரி ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம்
செய்து வந்த மங்கை மன்னர், திருமாலிடமே நேரடியாக எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்று,
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ‘திருமங்கை ஆழ்வா’ராக விளங்கினார் என்பது நாம் அறிந்த வரலாறாகும்.
திருமாலிடம் மந்திர உபதேசம் பெற்று ஆழ்வாராக ஆனபின், ஆடல்மா எனும் குதிரையில் குமுதவல்லியோடு
நாச்சியார்கோவில் திருத்தலத்துக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார்.
தனக்கு முதன்முதலில் வைணவ முத்திரைகளைத் தோளில் தந்த அந்தப் பெருமாளைப் பார்த்து,
அப்பெருமானின் பரசுராம அவதாரத்தை நினைவு கூர்ந்து,

“முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னர் உடல்துணிய
தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே!”என்ற பாடலைப் பாடினார்.
“பரசுராம முனிவராக அவதாரம் செய்து, கையில் மழு ஏந்தி, இருபத்தொரு தலைமுறை மன்னர்
களைத் தொலைத்தவன் நீயே!” என்று நாச்சியார்கோவில் நிவாசப்பெருமாளைப் பார்த்துச் சொன்னார் திருமங்கை ஆழ்வார்.
“திடீரெனப் பரசுராம அவதாரத்தைக் குறிப்பிடக் காரணம் யாதோ?” என வினவினார் ஸ்ரீநிவாசன்.

திருமங்கை ஆழ்வார், “பரசுராம அவதாரத்தில் நீ உன் கைகளால் எத்தனையோ மன்னர்களை அழித்தாய்.
ஆனால் உன் சுயநலத்துக்காக அதை நீ செய்யவில்லை. அறநெறி தவறி நடந்த அந்த மன்னர்களை அழித்து
உலகுக்கு நன்மையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நீ அவர்களை அழித்தாய்.
எனவே அந்த அவதாரத்தில் உனது வலிமையான கைகளை நீ உனக்கென்று பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உலக நன்மைக்காகப் பயன்படுத்தினாய்.அதுபோலத் தான் இங்கே ஸ்ரீநிவாசனாகக் கோவில்கொண்ட நிலையிலும்,
உன் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களாகிய ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தி,
என் தோள்களிலே சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்து, என்னை ஒரு பக்தனாக ஆக்கிவிட்டாய்!இறைவா!
பரசுராம அவதாரத்தில் உன் கரங்களை உலகின் நன்மைக்குப் பயன்படுத்தியது போல்,
இங்கே உன் ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தினாய் அல்லவா?
அதனால்தான் பரசுராமனாகவே உன்னை அநுபவித்துப் பாடினேன்!” என்றார்.
புன்னகை பூத்து அதை ஆமோதித்தார் ஸ்ரீ நிவாசப் பெருமாள்.

‘விச்வம்’ என்றால் உலகம். ‘விச்வஸ்மை’ என்றால் உலகுக்காக. ‘பாஹு:’ என்றால் கரம்.
‘விச்வஸ்மை + பாஹு: = விச்வபாஹு:’. உலகின் நன்மைக்காகவே கரத்தை உடையவனுக்கு ‘விச்வபாஹு:’ என்று பெயர்.
பரசுராமர், தனது திருக்கரங்களை உலகின் நன்மைக்கென்றே அர்ப்பணித்துப் பயன்படுத்திய படியால், ‘விச்வபாஹு:’ –
‘உலகுக்காகவே கரங்களை வைத்திருப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வபாஹு:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 318-வது திருநாமம்.
“விச்வபாஹவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவரையும் திருமால் கைகொடுத்துக் காப்பாற்றுவார்.

——————

319. மஹீதராய நமஹ (Maheedharaaya namaha)

அடியேன் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்த போது, எங்களின் கண்மருத்துவப் பேராசிரியர்
ஒருமுறை அடியேனிடம் ஒரு கேள்வி கேட்டார். “சுவிட்சர்லாண்டில் மத்திய ஐரோப்பிய அணு ஆராய்ச்சியின்
தலைமையகம் உள்ளது. அங்கே அணுத்துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, அவை
உருவாவதையும் அழிவதையும் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். அணுத்துகள்கள் பற்றிய இந்த ஆராய்ச்சியின் மூலமாக
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிய முயல்கிறார்கள்.
இத்தகைய அணுத்துகள் ஆராய்ச்சியகத்தின் வாசலில் யாருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” என்று அடியேனிடம் கேட்டார்.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓப்பன்ஹைமர், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளில் யாராவது ஒருவரின் சிலை வைக்கப்பட்டிருக்கலாம்!”
என்று அடியேன் சொன்னேன். ஆனால் பேராசிரியர், “இல்லை! இல்லை! அங்கே சிதம்பரம் நடராஜப் பெருமானின் சிலை
ஆறு அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது!” என்றார். ஒரு நிமிடம் அசந்து போனேன்.
“நடராஜர் சிலைக்கும் அணுத்துகள் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு?” என்று அடியேன் கேட்டேன்.

பேராசிரியர், “அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரிட்ஜாஃப் கேப்ரா (Fritjof Capra) என்ற விஞ்ஞானி,
‘த டாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதன் பதினொன்றாம் பக்கத்தில் சிதம்பரம் நடராஜருக்கும் அணுத்துகள் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார்:

நடராஜரின் வலக்கையில் உடுக்கை இருப்பதைக் காணலாம். அந்த உடுக்கையில் இருந்து எழும் ஒலி
அணுத்துகள்களின் படைப்பைக் குறிக்கிறது. அவரது இடக்கையில் நெருப்பு இருப்பதைக் காணலாம்.
அது அணுத்துகள்களின் அழிவைக் குறிக்கிறது. சுவிட்சர்லாண்டு ஆராய்ச்சியின்படி, எவ்வளவு அணுத்துகள்கள் உருவாகின்றனவோ,
அதே சம அளவில்தான் அணுத்துகள்கள் அழிகின்றன என்று கண்டார்கள். அதை உணர்த்தும் விதமாகவே,
நடராஜரின் வலக்கையில் உள்ள உடுக்கையும், இடக்கையில் உள்ள நெருப்பும் சம அளவில் இருப்பதைக் காணலாம்.

இந்த அணுத்துகள்களின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நடுவே நடைபெறும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமானது,
சீராக நடைபெறுகிறது அல்லவா? சீராக நடைபெறும் பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜரின் சீரான நடனமாக
வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.அணுத்துகள் விஞ்ஞானத்தைப் பாமரனும் புரிந்துகொள்வதற்கு
நமது முன்னோர்கள் தந்த வடிவமே நடராஜரின் உருவமாகும்!
சிதம்பரத்தில் நடராஜருக்கு எதிரே கோவிந்தராஜப் பெருமாள் சயனித்திருக்கிறார் அல்லவா?
அந்தத் திருமால் இந்த உலகைப் படைத்து, அதைச் சீராக நடத்திச் செல்லும் பாங்கை
அவருக்கு எதிரே நடனமாக ஆடிக் காட்டுகிறார் சிவபெருமான்!” என்று விளக்கினார்.

“ஆம்! நடனம் எப்படிச் சீராக இருக்குமோ, அவ்வாறே இந்த உலகின் இயக்கமும் சீராகவே உள்ளது.
ஒரு நாள் என்றால் இருபத்து நான்கு மணிநேரம், ஒரு வருடம் என்றால் முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்கள்
என அனைத்தும் ஒரு ‘ரிதமோடு’ (rhythm) இயங்குகிறது.
திருமால் இந்த உலகை ‘ரிதமோடு’ இயக்குவதைத்தான் ‘ரிதம்’ கொண்ட நடனமாக நடராஜர் ஆடுகிறாரோ?” என்று அடியேன் கூறினேன்.

இப்படி இந்த உலகத்தைச் சீராக நடத்திச் செல்லும் திருமால், உலகில் தருமத்துக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும்,
அப்போதெல்லாம் தானே வந்து பூமியிலே அவதரித்துத் தீயசக்திகளை அழித்து, தருமத்தை நிலைநாட்டி,
இவ்வுலகம் தொடர்ந்து அறவழியில் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், கார்த்த வீரியார்ஜுனன் உள்ளிட்ட பற்பல மன்னர்கள்
அறநெறி தவறி உலகுக்குக் கேடு விளைவித்துக்கொண்டிருந்தார்கள்.
அதனால் பூமிதேவி அவர்களின் பாரம் தாங்க முடியாமல் திண்டாடினாள்.
அந்நிலையில், பரசுராமராக அவதரித்த திருமால், கையில் மழு ஏந்தி, அந்தத் தீய மன்னர்களை அழித்து,
பூமி தேவியின் பாரத்தைப் போக்கி, உலகை நன்னெறியில் நிலைநிறுத்தினார்.

‘மஹீ’ என்றால் பூமி. ‘தர:’ என்றால் நிலைநிறுத்துபவர் அல்லது தாங்குபவர்.
பூமிக்குப் பாரமாக இருக்கும் தீயவர்களைப் போக்கி, பூமியை நன்னெறியில் நிலைநிறுத்தித் தாங்கியபடியால்,
பரசுராமருக்கு ‘மஹீதர:’ என்று திருப்பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 319-வது திருநாமம்.
“மஹீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
நல்ல நிலைக்கு உயர்ந்து நிலைநிற்கத் திருமால் துணைபுரிவார்.

————-

320. அச்யுதாய நமஹ (Achyuthaaya namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்னும் புண்ணியபூமியைப் பராந்தகன் என்ற குறுநில மன்னர் ஆண்டுவந்தார்.
அவரை வீழ்த்தித் திருநாங்கூர்ப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி,
சோழனும் பாண்டியனும் இணைந்து படையெடுத்து வந்தார்கள்.
இருபெரும் மன்னர்களை எதிர்த்துப் போர் புரியும் அளவுக்குப் பராந்தகனிடம் படைபலம் இல்லை.
என்ன செய்வதென்று மன்னர் சிந்தித்திருக்க, அவரது கனவில் திருநாங்கூரில் கோவில் கொண்டிருக்கும்
திருமணிக் கூடம் வரதராஜப் பெருமாள் தோன்றினார்.

“பராந்தகா! தில்லை மூவாயிரம் என்று சிதம்பரம் வாழ் அந்தணர்களைக் கொண்டாடுவது போல்,
நாங்கூர் நாலாயிரம் என்று நாங்கூர் வேதியர்களைக் கொண்டாடுவதுண்டு.
அந்த நாலாயிரம் வேதியர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்றார்.
“வேதம் ஓதுவதாகிய தம் தொழிலை மறந்து அந்தணர்கள் போர்புரிவது பாபம் இல்லையா?” என்று
திருமாலிடம் கேட்டார் பராந்தக மன்னர். அதற்குத் திருமால், “ஆபத்துக் காலத்தில் பாபமில்லை.
முன்னொரு சமயம் உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் அறநெறியை மறந்து தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்து,
நல்லோர்களைத் துன்புறுத்தினார்கள்.
மக்கள் நலத்தைப் பேண வேண்டும் என்பதை மறந்து கொடுங்கோல் ஆட்சிபுரிந்தார்கள்.
அப்போது ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கையில் கோடாரி ஏந்தி இருபத்தொரு தலைமுறை
மன்னர்களை அழித்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா? முனிவரின் மகனாக, அந்தணராக இருந்தபோதும்,
கையில் ஆயுதம் ஏந்திப் போர்புரிந்த பரசுராமருக்கு ஏன் எந்தவிதப் பாபமும் ஏற்படவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “இறைவா! நீயே பரசுராமராக அவதாரம் செய்தாய். நீ பாப புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவன்!
நீ தேவனாகவோ, மனிதனாகவோ எந்த அவதாரம் எடுத்தாலும், உன் மேன்மை குன்றாமல் திகழ்பவன் நீ!
எனவே உனது அவதாரமான பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை!” என்று விடையளித்தார்.
அப்போது திருமால், “பராந்தகா! பாப-புண்ணியங்கள் என்னைப் பாதிக்காது என்பது உண்மையே.
ஆனால் ராமனாகவோ, கண்ணனாகவோ நானே நேரடியாகப் பூமியில் வந்து அவதாரம் செய்தது போல் பரசுராம அவதாரம் செய்யவில்லை.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் மேல் எனது சக்தியைச் செலுத்தி, குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி அவரை நான்
ஏவினேன். எனவே பரசுராம அவதாரம் முழு அவதாரம் இல்லை, ஆவேச அவதாரம் ஆகும். எனினும் எனது சக்தியின்
ஆவேசம் அவரிடம் இருந்ததால், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தபோதும், பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை.

தன் நிலையிலிருந்து நழுவாமல், வீழாமல் அவர் திகழ்ந்தார். அதுபோல் இந்த நாங்கூரில் வாழும் வேதியர்களுக்குள்
என் சக்தியை நான் செலுத்துகிறேன். ஆபத்துக் காலத்தில் போர்புரிவதால் அவர்களுக்குப் பாபமும் நேராது!
அதே நேரத்தில் என் அருளால் அவர்கள் உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தார்.

திருமாலின் ஆணைப்படி நாலாயிரம் வேதியர்கள் திருநாங்கூர் மன்னருக்காகப் போரிட்டு, சோழ-பாண்டியர்களை
வீழ்த்திய வரலாற்றைத் திருமங்கை ஆழ்வார்,“ஒண்திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத் தானே”என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி என்ன என்றால், திருமால் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதால்,
தன் நிலையில் இருந்து என்றும் வீழ்வதில்லை. இந்திரன் போன்ற தேவர்கள் கர்மவினைகளுக்கு வசப்பட்டவர்கள்.
எனவே அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து வீழ்வதற்கு வாய்ப்புண்டு.
ஆனால் திருமால் பூமியில் வந்து அவதாரம் செய்தாலும் கூட,
மேன்மை குன்றாமல், தன்நிலையில் இருந்து நழுவி விழாதவராகவே திகழ்கிறார்.

அவர் நேரடியாகப் பரசுராமராக அவதாரம் செய்யாவிடிலும், ஜமதக்னி முனிவரின் மகன்மேல்
தனது சக்தியைச் செலுத்தியபடியால், அந்தப் பரசுராமரும் என்றுமே தன் நிலையிலிருந்து வீழாதவராகத் திகழ்ந்தார்.
‘ச்யவன’ என்றால் நழுவி விழுதல் என்று பொருள். ‘ச்யுத:’ என்றால் நழுவி விழுபவர் என்று பொருள்.
‘அச்யுத:’ என்றால் நழுவி விழாதவர் என்று பொருள். பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.

ஆனாலும் அவருக்குள் திருமாலின் ஆவேசம் இருந்ததாலும், உலகின் நன்மையைக் கருதியே
அவர் இச்செயலைச் செய்ததாலும், இத்தனை உயிர்களை அழித்த பாபம் அவருக்கு வரவில்லை.
அவர் தன்நிலையிலிருந்து நழுவி விழாமல் திகழ்ந்தார்.
எனவே அவர் ‘அச்யுத:’ – ‘என்றும் நழுவி விழாதவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 320-வது திருநாமம்.
“அச்யுதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் உயர்நிலையில் இருந்து
என்றுமே நழுவி விழாமல் இருக்கத் திருமால் அருள்புரிவார்.

—————-

321. ப்ரதிதாய நமஹ (Prathithaaya namaha)

அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து
நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால்.
அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார்.
பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.

எனவே தான் பரசுராம அவதாரத்தை ஆவேச அவதாரம் என்று சொல்வார்கள். அதாவது,
ராமன், கண்ணன் போன்ற அவதாரங்களில் வைகுண்டத்திலிருந்து நேரே இறைவன் பூமிக்கு இறங்கி வருவது போன்றதல்ல பரசுராம அவதாரம்.
திருமால் ஒரு ஜீவாத்மாவைத் தேர்ந்தெடுத்து அவர்மீது தனது சக்தியைச் செலுத்தியதே பரசுராம அவதாரம் ஆகும்.

அந்தப் பரசுராமர், தீய சக்திகளை அழிப்பதற்காகத் தனக்கு ஒரு சிறப்பான ஆயுதம் வேண்டும் என்று கருதினார்.
சிவபெருமானிடம் இருந்தே ஒரு நல்ல ஆயுதத்தை நாம் பெற்றுக் கொள்வோம் என்று எண்ணிய பரசுராமர்,
சிவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார்.
மழை, வெயில், பனி, காற்று என எதையுமே பொருட்படுத்தாமல், பல ஆண்டுகள் உணவு, உறக்கம் இன்றித் தவம் புரிந்த
பரசுராமரின் உறுதியைக் கண்டு வியந்தார் சிவபெருமான்.
அப்போது பார்வதி தேவி சிவனிடம், “மிகச் சிறந்த ஆயுதத்தை வேண்டியே பரசுராமன் தவம் புரிந்து வருகிறான்.
நாம் இருவரும் மழு கோடாரி எனும் ஆயுதம் ஏந்தி இருக்கிறோமே! அதைப் போலவே ஒரு மழுவை இவனுக்கும் தந்து விடலாமே!” என்றாள்.
அதை ஏற்ற சிவபெருமான், பரசுராமருக்குக் காட்சி தந்து, மழு எனும் ஆயுதத்தை அவரது தவத்துக்குப் பரிசாக அளித்தார்.

வடமொழியில் மழுவுக்குப் பரசு என்று பெயர். பரசுவைக் கையில் ஏந்தியிருப்பதால், அவர் பரசுராமர் என்ற பெயரைப் பெற்றார்.
சிவபெருமானே பரசுராமருக்குக் குருவாக இருந்து அந்த மழுவைப் பயன்படுத்துவது எப்படி என்பதை உபதேசித்தார்.
அதன்பின், பரசுராமர் சிவபெருமானைப் பார்த்து, “குருவே! தாங்களே கருணை கூர்ந்து எனக்கு இந்த ஆயுதப் பயிற்சி
வழங்கியமைக்குத் தலையல்லால் கைம்மாறிலேன். தாங்கள் எனக்கு மற்றொரு அருளும் புரிய வேண்டும்!” என்றார்.
என்னவென்று சிவன் கேட்க, “என் வலிமையையும் திறமையையும் சோதித்துப் பார்க்கும் விதமாகத்
தாங்களே என்னுடன் போரிட வேண்டும்!” என்று கோரினார் பரசுராமர். சிவனும் அதை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து பரசுராமருக்கும் சிவனுக்கும் நடந்த போரிலே, பரசுராமர் சிறப்பாகப் போர் புரிந்தார்.
தனது மழுவால் சிவனின் நெற்றியிலே தாக்கி விட்டார்.
ஆனால் அதற்காகக் கோபம் கொள்ளாமல், தனது சீடன் சிறப்பாகப் போர் புரிந்ததை எண்ணிப் பூரித்தார் சிவன்.
அப்போது வானில் தோன்றிய திருமால், “பரசுராமா! உன்னை யாராலும் வெல்ல முடியாது!
சிவபெருமானே உனக்குப் பயிற்சி அளித்திருப்பதால் உன்னை வெல்ல யாருமில்லை!” என்று பரசுராமரை வாழ்த்தினார்.
பரசுராமரும் கையில் மழுவேந்தித் தீய சக்திகளான மன்னர்களை அழித்தார்.

பல நூறாண்டுகள் கழித்து, ராமனாக அவதரித்த திருமால், சீதையை மணம் புரிந்து கொண்டு
மிதிலையில் இருந்து அயோத்தி நோக்கித் திரும்புகையில், அவரை வழிமறித்த பரசுராமர், தனது வில்லைக் காட்டி,
அதில் ராமனால் நாண் ஏற்ற முடியுமா என்று சவால் விட்டார். ஆனால் அனாயாசமாக அந்த வில்லை வாங்கிய ராமன்,
அதில் நாண் ஏற்றிக் காட்டிப் பரசுராமரை வீழ்த்தி விட்டான்.

ராமன் திருமாலின் அவதாரமே என அப்போது உணர்ந்துகொண்ட பரசுராமர், “திருமாலே! முன்பு சிவனை நான் போரில்
வென்ற போது என்னை யாராலும் வெல்ல முடியாது என்றீர்கள்!
இப்போது நீங்கள் என்னை வென்றுவிட்டீர்களே!” என்று கேட்டார். அப்போது அருகிலிருந்த வசிஷ்டர்,
“பரசுராமரே! நீங்கள் திருமாலின் ஆவேச அவதாரம். ராமபிரான் திருமாலின் முழு அவதாரம்.
முழு அவதாரத்தின் எதிரே ஆவேச அவதாரம் எடுபடாது.
உங்களை உள்ளிருந்து இயக்குபவனையே நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அது சாத்தியமில்லை.
அது உங்களை நீங்களே வீழ்த்திக் கொள்வதற்குச் சமம்.
மற்றபடி உலகில் உள்ள யாராலும் உங்களை வெல்லவே முடியாது என்பது உண்மையே.

திருமால் ஏற்கனவே சொன்னபடி, வெல்ல முடியாதவர் என்ற புகழோடு தான் நீங்கள் திகழ்வீர்கள்!” என்றார்.
‘ப்ரதித:’ என்றால் புகழ்பெற்றவர் என்று பொருள்.
இதற்கு முந்தைய திருநாமமான அச்யுத: (320) என்பதற்குத் தன்நிலையில் இருந்து வீழாதவர் என்று பொருள்.
அச்யுதன் (வீழாதவர்) என்று உலகெங்கிலும் புகழ்பெற்றவராகப் பரசுராமர் திகழ்வதால்
(இன்றளவும் பரசுராமர் சிரஞ்சீவியாக இருந்து வருகிறார்)
அவர் ‘ப்ரதித:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 321-வது திருநாமம்.
‘அச்யுத:’ (320-வீழாதவர்) ப்ரதித: (321-புகழ்பெற்றவர்) என அடுத்தடுத்துத் திருநாமங்கள் வருவதாலே,
அவற்றை இணைத்து வீழாதவர் எனப் புகழ்பெற்றவர் என்று உரையாசிரியர்கள் விளக்கியுள்ளார்கள்.

“ப்ரதிதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திக்கு நிறை
புகழாளர்களாகத் திகழும்படித் திருமால் அருள் புரிவார்.

——————-

322. ப்ராணாய நமஹ: (Praanaaya namaha)
(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)
நாம் கடந்த சில திருநாமங்களின் விளக்கத்தில் பார்த்து வந்தது போல், அறநெறி தவறி ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களை
அழிப்பதற்காகத் தோன்றிய பரசுராமர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.
அதன்பின், கச்யபர் உள்ளிட்ட முனிவர்களை வரவழைத்துப் பெரும் வேள்வியைச் செய்த பரசுராமர்,
மன்னர்களை வீழ்த்தித் தான் பெற்ற அனைத்து நிலங்களையும் அந்த முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டார்.

“இனி நீங்கள் எங்கே செல்வீர்கள்?” என்று முனிவர்கள் கேட்க,
“நான் எனக்கென்று புதிய நிலத்தை உருவாக்கப் போகிறேன்!” என்று சொன்னார் பரசுராமர்.
பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பரசுராமர், தன் கையில் ஏந்திய மழு எனும் ஆயுதத்தைக் கடலின் மீது வீசினார்.
உடனே, கடல் பல மைல் தூரம் பின் வாங்கிக் கொண்டு பெரும் நிலத்தைப் பரசுராமருக்கு வழங்கியது.

கடல் பின்வாங்கித் தனக்குச் சமர்ப்பித்த அப்பகுதியைப் பரசுராம க்ஷேத்திரம் என்று நிர்மாணித்தார் பரசுராமர்.
இன்றைய பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவா மாநிலத்திலிருந்து
கேரள மாநிலம் வரை பரசுராமரின் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது.
“கலியுகத்தின் முடிவில் திருமால் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து தீய சக்திகளை அழிப்பார்!
அவர் அவதரித்து வரும் வரை நான் காத்திருந்து, அவரது செயல்பாடுகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்!” என்று
முனிவர்களிடம் சொல்லி விட்டு அந்தப் பரசுராம க்ஷேத்திரத்தில் தங்கினார் பரசுராமர்.

தினமும் பொழுது விடியும் போது அங்கிருந்து புறப்பட்டு இமய மலைக்குச் செல்வார் பரசுராமர்.
பகல் முழுதும் இமய மலையில் தவம் புரிந்து விட்டு, சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் பரசுராம க்ஷேத்திரத்தை வந்து அடைவார்.
இவ்வாறு பரசுராமர் அங்கே எழுந்தருளியிருந்த நிலையில், ஒரு சமயம் மேற்குக் கடலில் ஆழிப் பேரலையும் புயலும் உண்டானது.
பரசுராம க்ஷேத்திரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் கடல் சீற்றத்தால் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பரசுராமரை அடி பணிந்து, கடல் சீற்றத்திலிருந்து தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தார்கள்.
“என்னையே நம்பி என் பகுதியில் வாழும் உங்களை வாழ வைக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் அஞ்சாமல் சென்று வாருங்கள்!” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் பரசுராமர்.
கடல் அலைகள் பொங்கி நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தனது மழுவைக் கடல்மீது ஏவினார் பரசுராமர்.
அந்த மழுவுக்குக் கட்டுப்பட்டுக் கடல் மீண்டும் தனது பழைய எல்லைக்குள் சென்று அடங்கியது.
ஆனால் உப்பு கலந்த கடல்நீர் ஊருக்குள் வந்தபடியால், அந்த நிலத்தில் பயிர்கள் ஏதும் விளையவில்லை.

மீண்டும் பரசுராமரின் உதவியை மக்கள் நாடினார்கள். நிலத்தில் உள்ள உப்பை நீக்கி விட்டால், விளைச்சல் நன்றாக ஏற்படும்
என்று கூறிய பரசுராமர், நாக லோகத்தில் வாழும் பாம்புகளை அழைத்தார்.
பரசுராம க்ஷேத்திரம் முழுவதும் உள்ள உப்பினை நீக்குமாறு அப்பாம்புகளை ஏவினார்.
பாம்புகள் தங்கள் விஷத்தினாலே நிலத்திலுள்ள உப்பைச் சராசரி அளவுக்குச் சமன் செய்தன.
அதன்பின் அந்த மண்ணில் நல்ல விளைச்சலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள் பரசுராமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.
“கடல் சீற்றத்திலிருந்தும் எங்களைக் காத்து, இங்கே பயிர்விளைச்சல் ஏற்படுவதற்கும் உதவிய உங்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு வாழ்வு அளித்தவரே நீங்கள்தான்!” என்று பரசுராமரைத் துதித்தார்கள்.

அப்போது பரசுராமர், “எனது பகுதியில் என்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் என்றுமே அஞ்ச வேண்டாம்!” என்று அவர்களுக்கு அபயம் தந்து அனுப்பி வைத்தார்.
‘ப்ராணன்’ என்று உயிர்வாயுவுக்குப் (oxygen) பெயர்.
உயிர்வாயு எப்படி நம் சுவாசத்துக்குப் பயன்பட்டு நம்மை வாழ வைக்கிறதோ, அதுபோல் தன்னை அண்டி வரும் மக்கள்
அனைவரையும் வாழ்விப்பவராகப் பரசுராமர் திகழ்வதால், அவர் ‘ப்ராண:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ப்ராண:’ என்றால் மூச்சுக்காற்று போல் இருந்து வாழ்விப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 322-வது திருநாமம்.

சுவாசம், மூச்சுக்குழாய் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் மருந்து உட்கொள்ளும் வேளையில்
“ப்ராணாய நமஹ:” என்று இத்திருநாமத்தைச் சொல்லி வந்தால், மருந்து விரைவில் வேலை செய்து,
நோய் குணமடைவதற்குத் திருமால் அருள்புரிவார்.

—————–

323. ப்ராணதாய நமஹ: (Praanaadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

சாந்தோக்கிய உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது, அசுரர்களின் கை ஓங்கத் தொடங்கியது.
தாங்கள் வெற்றிபெற நல்வழி காட்டுமாறு தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதியிடம் வேண்டினார்கள்.
“ஓம்காரம் தான் நீங்கள் வெற்றி பெறுவதற்கான ஆயுதம். ஓம்காரமாகிய பிரணவத்தை உங்கள் உடலில் உள்ள
ஒவ்வொரு அங்கமாக எண்ணித் தியானம் செய்யுங்கள்!” என்று கூறினார் பிருகஸ்பதி.

முதலில் தேவர்கள் தங்கள் மூக்கையே ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள். அசுரர்கள் பாபத்தையே ஆயுதமாகப்
பயன்படுத்தி மூக்கைத் தாக்கி விட்டார்கள்.
அதன் விளைவாகவே இன்றளவும் நமது மூக்கு நல்ல வாசனை, துர்நாற்றம் ஆகிய இரண்டையுமே நுகர்ந்து வருகிறது.
அதன்பின் தங்கள் நாவை ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள் தேவர்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, நம் நாவானது இன்றளவும் உண்மை, பொய் இரண்டையும் பேசிவருகிறது.

அதைத் தொடர்ந்து தங்கள் காதை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, அதன் விளைவாக நம் காது இன்றளவும் நல்ல செய்தி, தீயசெய்தி
இரண்டையுமே கேட்டுவருகிறது.அதன்பின் கண்ணை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் அசுரர்கள் பாபத்தைக் கொண்டு தாக்கினார்கள்.
எனவே நமது கண்கள் இன்றளவும் காணத் தக்கவை, காணத் தகாதவை ஆகிய இரண்டையும் கண்டுவருகின்றன.

தங்கள் மனத்தையே ஓம்காரமாக எண்ணி தேவர்கள் தியானம் செய்தார்கள்.
அந்த மனத்தையும் அசுரர்கள் பாபத்தால் தாக்கி விட்டார்கள்.
அதனால் தான் நல்ல எண்ணம், தீய எண்ணம் இரண்டுமே மனத்தில் உருவாகின்றன.
இறுதியாகத் தங்கள் மூச்சுக் காற்றாகிய பிராணனையே பிரணவமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அந்த மூச்சுக் காற்றை அசுரர்கள் தாக்க முற்பட்ட போது, அத்தனை அசுரர்களும் பாறைமேல் எறியப்பட்ட களிமண் போல்
தூள் தூளாகி அழிந்து போனார்கள்.

வெற்றி பெற்ற தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதிக்கு நன்றி தெரிவித்து விட்டு,
“குருவே! மூக்கு, நாக்கு, காது, கண், மனம் போன்ற அங்கங்களாக ஓம்காரத்தைத் தியானித்த போது,
அசுரர்கள் எங்களைத் தாக்கி விட்டார்கள். ஆனால் மூச்சுக் காற்றை ஓம்காரமாக எண்ணித் தியானித்த போது
அவர்கள் அழிந்து போனார்களே! என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அப்போது பிருகஸ்பதி, “தேவர்களே! மூச்சுக் காற்று என்பது வெறும் பிராண வாயு மட்டுமல்ல.
உயிர் அளிக்கும் இறைவனான திருமால் மூச்சுக் காற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு
அதை உள்ளிருந்து இயக்கி நம்மைச் சுவாசிக்க வைக்கிறார்.
திருமால்தான் அந்த உயிர்மூச்சின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் சுவாசத்தையும், உடல் வலிமையையும், சக்தியையும் கொடுத்து வருகிறார்.
இறைவன் தந்ததும், இறைவனுக்கு உடலாக இருப்பதுமான அந்த மூச்சுக் காற்றைத் தாக்கியவர்கள்
அழிவைச் சந்திப்பதில் வியப்பில்லையே!” என்று பதில் அளித்தார்.

மேலும், “தேவர்களே! முன்பு நீங்கள் பாற்கடலைக் கடைந்தீர்களே! அதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
துர்வாசரின் சாபத்தால் சக்தி இழந்து நின்ற உங்களுக்குச் சக்தி கொடுத்தவர் திருமால்.
பாற்கடல் கடைகையில் மந்தர மலையைத் தன் முதுகில் சுமந்த படி கூர்ம மூர்த்தியாக (ஆமை வடிவில்) தோன்றிய திருமால்,
உங்களுக்கு நல்ல மூச்சுக் காற்றையும், உடல் வலிமையையும் சக்தியையும் தந்து நீங்கள் பாற்கடல் கடைவதற்கு அருள்புரிந்தார்.
அதனால் தான் அந்தக் கூர்ம மூர்த்தியைக் குறித்த மந்திரத்தில் ‘அனந்த பல சக்தயே’
(எல்லை இல்லாத வலிமையும் சக்தியும் கொண்டவர்) என்று சொல்லி அப்பெருமானை வணங்குகிறார்கள்!” என்று விளக்கினார் பிருகஸ்பதி.

இவ்வாறு கூர்மாவதாரத்தில், தேவர்களுக்கு மூச்சுக்காற்றும், வலிமையும், சக்தியும் தந்து அருள்புரிந்தபடியால்,
கூர்ம மூர்த்திக்கு ‘ப்ராணத:’என்று திருநாமம். ‘ப்ராண:’ என்றால் மூச்சுக் காற்று. ‘த’என்றால் கொடுப்பவர்.
‘ப்ராணத:’என்றால் மூச்சுக்காற்றைக் கொடுப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 323-வது திருநாமம்.

காற்று மாசுபட்டு அசுத்தமாகி வரும் இச்சூழலில், சுவாசம் தொடர்பான நோய்களும் அதிகரித்து வரும் நிலையில்,
நாம் அனைவரும் இணைந்து “ப்ராணதாய நமஹ:” என்று சொல்லிக் கூர்ம மூர்த்தியை வழிபட்டால்,
நம் சுவாசத்துக்கு ஏற்ற நல்ல மூச்சுக் காற்றும், அதனடியாக நல்ல ஆரோக்கியமும் சக்தியும் நமக்குக் கிட்டும்படி அப்பெருமான் அருள்புரிவார்.

—————-

324. வாஸவாநுஜாய நமஹ: (Vaasavaanujaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
ஒருமுறை துர்வாச முனிவர் மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை இந்திரனுக்குப் பரிசாக வழங்கினார்.
ஆனால் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன், அதைத் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைத்தான்.
அந்த யானை செய்வதறியாது, அம்மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலடியில் போட்டு மிதித்து விட்டது.
இதனால் கோபம் அடைந்து துர்வாசர், “தேவேந்திரா! நீ உனது அனைத்துச் செல்வங்களையும் இழப்பாய்!” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

இந்தச் சாபத்தின் விளைவாக, அடுத்து நடந்த தேவ-அசுரப் போரில் தேவர்கள் அசுரர்களிடம் தோல்வி அடைந்தார்கள்.
மீண்டும் அசுரர்களை வீழ்த்தி, இழந்த தேவலோக சாம்ராஜ்ஜியத்தைப் பெற என்ன வழி என்று அறியாமல் தவித்த தேவர்கள்,
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைச் சரண் அடைந்து அவரது உதவியை நாடினார்கள்.

திருமால் தேவர்களைப் பார்த்து, “நீங்கள் அசுரர்களை வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நல்ல வலிமை வேண்டும்.
எனவே பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமுதத்தை எடுத்து நீங்கள் பருகினால், நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் பெறலாம்.
அதன்பின் நீங்கள் அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தால் வெற்றி உங்களுக்கே!” என்று கூறினார்.
“வலிமை இழந்து நிற்கும் எங்களால் எப்படிப் பாற்கடலைக் கடையமுடியும்?” என்று தேவர்கள் வினவியபோது,
“நீங்கள் அசுரர்களுக்கும் அமுதத்தில் பங்கு தருவ தாகச் சொல்லி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முடிவில் அமுதம் அவர்களுக்குக் கிடைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று ராஜ தந்திர ரீதியில் ஆலோசனை வழங்கினார் திருமால்.
அதன்படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தயாரானார்கள்.
அவ்வளவு பெரிய கடலைக் கடைவதற்குப் பெரிய மத்து வேண்டுமே என்று அனைவரும் சிந்தித்த நேரத்தில்,
கருட வாகனத்தில் மந்தரமலை எனும் மலையையே மத்தாகக் கொண்டு வந்து தந்தார் திருமால்.
அதில் கயிறாகச் சுற்ற வாசுகி என்னும் பாம்பைப் பயன்படுத்துமாறு திருமால் ஆலோசனை வழங்கினார்.

மந்திரத்தை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.
ஆனால் மந்தரமலை பாற்கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அதை யாராவது நிலைநிறுத்தினால் தான் மேற்கொண்டு கடைய இயலும்.
என்ன செய்வதென்று தெரியாமல், இந்திரன் தேவகுருவான பிருகஸ்பதியின் உதவியை நாடினான்.

“இந்த மலையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், பாற்கடலுக்கு அடியில் யாரேனும் ஒருவர் சென்று இந்த மலையைத் தாங்க வேண்டும்.
அது நம் போன்றவர்களுக்கு இயலாத காரியம். திருமால் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும்!” என்றார் பிருகஸ்பதி.
“ஏற்கனவே பற்பல உதவிகளை அவர் செய்துவரும் நிலையில், மலையைத் தாங்க வேண்டும் என்றும்
அவரிடமே போய்க் கேட்பது முறையா?” என்று இந்திரன் கேட்டான்.

அதற்குப் பிருகஸ்பதி, “திருமாலிடம் ஒரு பண்பு உண்டு. நீயே கதி என்று அவரது திருவடிகளை ஒருவன் பிடித்துக் கொண்டு விட்டால்,
அந்த பக்தனுக்காக எதையும் செய்வார் திருமால். அவரைச் சரண் அடை! அவர் காப்பார்!” என்றார் பிருகஸ்பதி.
இந்திரனும் திருமாலைச் சரண் அடையவே, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்தார் திருமால்.

ஆமை வடிவில் வந்த திருமால் இந்திரனைப் பார்த்து, “இந்திரா! நீ மேலே இருந்து பாற்கடலைக் கடைவாயாக!
நான் உனது தம்பியின் ஸ்தானத்தில், பாற்கடலின் அடிக்குச் சென்று என் ஓட்டில் மலையைத் தாங்கிக் கொள்கிறேன்!”
என்று சொல்லி விட்டுப் பாற்கடலின் அடியாழத்துக்குச் சென்று, தன் முதுகில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்தார்.
பாற்கடல் கடைந்து முடிக்கும் வரையில் மலையைத் தாங்கிக் கொண்டே இருந்தார்.
பின் அமுதைப் பெற்று தேவர்களும் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றை உற்று நோக்குகையில், இந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தான் என்ற ஒரே காரணத்துக்காக,
அவனைத் தனக்கு அண்ணனாக ஆக்கி, தான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு,
ஆமை வடிவுடன் பாற்கடலின் அடிக்கே சென்று, கடைந்து முடிக்கும் வரை மலையைத் தாங்கி
இவ்வளவு உதவிகளைத் திருமால் செய்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறதல்லவா?

இந்த குணத்தை விளக்குவது தான் ‘வாஸவாநுஜ:’ என்ற ஸஹஸ்ரநாமத்தின் 324-வது திருநாமம்.
‘வாஸவ:’ என்று இந்திரனுக்குப் பெயர்.
‘அநுஜ:’ என்றால் தம்பி. தன்னைச் சரணடைந்த இந்திரனைக் காப்பதற்காக அவனுக்குத் தம்பியாக,
கூர்ம மூர்த்தியாகத் திருமால் அவதரித்த படியால், அவர் ‘வாஸவாநுஜ:’ (வாஸவ: + அநுஜ:) என்றழைக்கப்படுகிறார்.
‘வாஸவாநுஜ:’ என்றால் இந்திரனின் தம்பி என்று பொருள்.

“வாஸவாநுஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் நேரும் அனைத்துத்
தடங்கல்களையும் திருமால் போக்கி, அவர்களுக்கு வேண்டியதை அருளிக் காப்பார்.

———-

325. அபாம் நிதயே நமஹ (Apaam Nidhaye namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம்
விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உ வே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
ஒருமுறை கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம் ஒரு சீடர், “சுவாமி! நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நம்மை இறைவன் தாங்குகிறான் என்றும் சொல்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று கேட்டார்.

கருணாகராச்சாரியார் சுவாமிகள், “இதைப் புரிந்துகொள்வதில் உனக்கென்ன கஷ்டம்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சீடர், “இல்லை சுவாமி! வெளியே இருக்கும் பொருள் தானே உள்ளே இருக்கும் பொருளைத் தாங்க முடியும்?
ஒரு பெட்டிக்குள் நகையை வைத்தால், பெட்டி தானே நகையைத் தாங்குகிறது?
ஒரு பைக்குள்ளே புத்தகத்தை வைத்தால், பைதானே புத்தகத்தைத் தாங்குகிறது?
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றால், நாம் இறைவனைத் தாங்குகிறோம் என்றுதானே அர்த்தம்?
இறைவன் நம்மைத் தாங்குவதாக எப்படிக் கொள்ள முடியும்? அல்லது, இறைவன் தான் நம்மைத் தாங்குகிறான் என்றால்,
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பது பொருந்தாதே!” என்று கேட்டார்.

தமக்கே உரிய புன்னகையோடு அதற்கு விடை அளிக்கத் தொடங்கினார் கருணாகராச்சாரியார் சுவாமிகள். சீடரைப் பார்த்து,
“உனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டார். “ஓட்டுவேனே!” என்றார் சீடர்.
“மிதிவண்டி ஓட்டும் போது, ஓட்டுநர் மிதிவண்டியைத் தாங்குகிறாரா
அல்லது மிதிவண்டி ஓட்டுநரைத் தாங்குகிறதா?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
“மிதிவண்டிதான் ஓட்டுநரைத் தாங்குகிறது!” என்று சொல்லப் போன சீடர் சற்றே யோசித்தார்.
“ஓட்டுநர் சமநிலையில் இல்லாவிட்டால் மிதிவண்டி விழுந்து விடுவதைப் பார்க்கிறோம்.
மிதிவண்டி எந்த நிலையில் இருந்தாலும், ஓட்டுநர் நினைத்தால் கால் ஊன்றி மிதிவண்டியைத் தாங்கிப் பிடித்து விடலாம்!” என
இவற்றை எல்லாம் சிந்தித்த சீடர், “ஓட்டுநர்தான் மிதிவண்டியைத் தாங்குகிறார்!” என்றார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமிகள், “மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஓட்டுநர் மேலே இருப்பதாகவும்,
அவரைத் தாங்கும் ஆதாரமாக மிதிவண்டி கீழே இருப்பதாகவும் நமக்குத் தோன்றினாலும்,
உண்மையில் மேலே இருக்கும் ஓட்டுநர் தானே கீழே உள்ள மிதிவண்டியையும் சேர்த்துத் தாங்குகிறார்?
அது போலத் தான் நமக்குள்ளே இருக்கும் இறைவன் ஓட்டுநரைப் போல. நாம் மிதிவண்டியைப் போல.
மேலோட்டமாகப் பார்த்தால், மிதிவண்டியான நாம் ஓட்டுநரான இறைவனைத் தாங்குவது போலத் தோன்றும்.
உண்மையில், ஓட்டுநரான இறைவன்தான் மிதிவண்டியான நம்மைச் சமநிலையில் வைத்து அழைத்துச் செல்கிறான்.

இதற்குச் சிறந்த உதாரணம்தான் திருமால் எடுத்த கூர்மாவதாரம்.
ஆமை வடிவில் பாற்கடலின் உள்ளே இருந்துகொண்டு மந்தர மலையைத் திருமால் முதுகில் தாங்கினார் அல்லவா?
ஆமையான பெருமாளைக் கடல் தாங்கியதா? அல்லது அந்தப் பெருமாள் கடலைத் தாங்கினாரா?
பொதுவாக, கடலில் உள்ள ஆமைகளைக் கடல்தான் தாங்கி இருக்கும்.
ஆனால், இங்கோ அந்தக் கடலையே ஆமை வடிவில் உள்ள கூர்ம மூர்த்தி தான் தாங்கி நிலைநிறுத்தி வைத்திருந்தார்!” என்று விளக்கினார்.

தண்ணீருக்கு வடமொழியில் ‘அப்’ என்று பெயர்.
‘நிதி:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
தண்ணீர் நிறைந்த கடலை (திருப்பாற்கடலை) ஆமை வடிவில் உள்ளிருந்து தாங்கியபடியால், கூர்ம மூர்த்திக்கு ‘அபாம் நிதி:’ என்று பெயர்.
‘அபாம் நிதி:’ என்றால் கடலுக்கு ஆதாரமாக இருந்து தாங்கியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 325-வது திருநாமம்.
“அபாம் நிதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை என்றும்
திருமால் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

————

326. அதிஷ்டானாய நமஹ (Adhishtaanaaya namaha)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற வடமொழிக் கவிச்சக்கரவர்த்தி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்,
தன் தந்தை வாங்கியிருந்த கடன்களை எல்லாம் அவரது ஒரே மகன் என்ற முறையில் தானே அடைத்துவிட்டார்.
அதன் விளைவாக, வீடு, நிலங்கள், சொத்து அனைத்தையும் விற்றுவிட்ட படியால், மிகுந்த வறுமையில் அவர் குடும்பம் வாடிவந்தது.
வேத பாடசாலையில் காவிய பாடம் போதிப்பது, சில சொற்பொழிவுகள் ஆற்றுவது என
இப்படி வரக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டு பெரிய குடும்பத்தைப் பார்த்து வந்தார் அவர்.

இந்நிலையில் ஒருநாள் ஸ்ரீநிதி சுவாமிகள் தனது வேட்டியைத் துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வேட்டி கிழிந்த நிலையில் இருப்பதைக் கண்டார். “புதிய வேட்டி வாங்குவதற்குப் பொருள் வேண்டுமே!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளாவது நமக்குக் கிடைக்கும்படி
இறைவன் அருள்புரிய மாட்டானோ?” என்ற ஏக்கத்துடன் அப்படியே அமர்ந்தார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

அப்போது பக்கத்து வீட்டு வானொலியில் ஒரு செய்தி கேட்டது.
“இந்த ஆண்டு திருப்பதி உண்டியலில் அளவு கடந்த காணிக்கை குவிந்துள்ளது!” என்பதே அந்தச் செய்தி.
அதைக் கேட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒருநொடி மனதால் திருமலையப்பனை நினைத்து,
“மலையப்பா! உன் உண்டியலில் செல்வம் நிறைந்து வழிகிறது. உன் பக்தன் நான் வேட்டிகூட கிடைக்காமல் வாடுகிறேனே!” என்று சொன்னார்.

அப்படி அவர் சொன்னதுதான் தாமதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு ஒரு கடிதம் வந்தது.
“பத்து நாட்கள் திருமலையில் வந்து நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.
அதற்குச் சம்மானமாக நாங்கள் ரூ.600 உங்களுக்கு வழங்க உள்ளோம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது.
அதைப் படித்தவுடன் ஸ்ரீநிதி சுவாமிகள் திருமலையப்பனின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.
“இறைவா! உன் உண்டியலில் பணம் வழிகிறது, உன் பக்தன் துன்பப்படுகிறேன் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்.

ஆனால் நீயோ எனக்கு எப்பேர்ப்பட்ட உதவியைச் செய்திருக்கிறாய்?” என்று பரவசத்துடன் கூறிய அவர்,
பத்து நாட்கள் திருப்பதிக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். திருமலையில் பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் போது,
பொன்னால் ஆன ஆனந்த நிலைய விமானத்தில் திகழும் வேங்கடேசனைப் பார்த்தார்.
(இந்தப் பொன்மயமான விமான வேங்கடேசப் பெருமாளை நாமும் திருமலை பிரதக்ஷிணம் வரும்போது தரிசிக்கலாம்.)
அந்தப் பெருமாளைக் குறித்து ஒரு ஸ்லோகம் இயற்றினார்.

“கார்த்தஸ்வராஸ்தி ஜனதேதி தயாரஸார்த்ர:
த்ரஷ்டும் ததச்ச பரிரக்ஷிதும் ஏஷ நாத:
கார்த்தஸ்வராக்ருதி: உபேத்ய விமான பூமிம்
ஸ்ரீஸ்வாமி தீர்த்த திசி தத்த முகோ விபாதி”

“அன்று ஒரு குளக்கரையில், கஜேந்திரன் என்ற யானை ஆபத்து என்று உன்னை அழைத்தது.
அதன் அழுகுரலைக் கேட்டு உடனே ஓடிப் போய் நீ அதைக் காப்பாற்றினாய்.
அது போல் இங்குள்ள சுவாமி புஷ்கரிணி குளக்கரையில் யாரேனும் ஆபத்து என்று அழுகுரல் கொடுத்தால்,
உடனே ஓடிப்போய் அவர்களையும் காப்பாற்றத் தயாராகப் பொன்மயமான வடிவுடன் விமான வேங்கடேசனாகக் காட்சி தருகிறாய் போலும்!

எனது அழுகுரலையும் அதனால்தான் உடனே கேட்டு எனக்கு இத்தகைய அருளைப் புரிந்திருக்கிறாய்!”
பத்து நாள் சொற்பொழிவு முடிந்தவாறே, திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ரூ.600 சம்மானமும்,
புதிய வேஷ்டியும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது.
திருமலையப்பனின் கருணையை எண்ணி உருகி வீடு திரும்பினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

வீடு திரும்பிய பின், தனது மனைவியிடம் நடந்தவற்றைச் சொன்ன ஸ்ரீநிதி சுவாமிகள்,
“நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, ‘இது என் குடும்பம் அல்ல, ஸ்ரீமந்நாராயணனின் குடும்பம்!
அவன் குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்!’ என்று? இப்போது அவன் நிரூபித்துவிட்டான்!
கூர்மாவதாரம் செய்த போது, எப்படி தேவர்கள் சுமக்க வேண்டிய பாரமான மந்தரமலை என்னும் மத்தை அவன் சுமந்து,
தேவர்களுக்கு அமுதைப் பெற்றுக் கொடுத்தானோ, அதுபோல் பக்தர்களின் பாரத்தையும் அவன் சுமந்து கொண்டு
பக்தர்களுக்கு அருள் அமுதைச் சுரந்து காக்கிறான்!” என்று சொல்லி, திருமலையப்பன் அருளிய சம்மானத்தைக் காட்டினார்.

‘அதிஷ்டானம்’ என்றால் தாங்கி நிற்பவர் என்று பொருள்.
கூர்ம அவதாரத்தில் மந்தர மலையாகிய மத்தைத் தன் முதுகில் தாங்கி நின்றதால், கூர்ம மூர்த்திக்கு ‘அதிஷ்டானம்’ என்று பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 326-வது திருநாமம்.
“அதிஷ்டானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாரத்தைத் திருமால் சுமந்து
அவர்கள் பாரமின்றி மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவார்.

————-

327. அப்ரமத்தாய நமஹ (Apramathaaya namaha)

“என்ன இந்திரா! வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறாயா?” என்று ஒரு குரல்.
அசுரர்களை வென்ற மகிழ்ச்சியில் தேவர்களுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருந்த இந்திரன் திரும்பிப் பார்த்தான்.
தேவ லோகத்துக்கு வந்த அகஸ்திய முனிவரின் குரல் தான் அது என்று புரிந்து கொண்ட இந்திரன்,
“வாரும் அகஸ்தியரே! அமுதத்தைப் பருகியதால் நாங்கள் அசுரர்களை வீழ்த்தி விட்டோம்!” என்று பதில் சொன்னான்.
அதைக் கேட்ட அகஸ்தியர், “இந்திரா! எந்த அமுதத்தால் நீ வெற்றி பெற்றாய்?” என்று கேட்டார்.

“பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து எடுக்கப்பட்ட அமுதைப் பருகினோம். அதனால் வென்றோம்!” என்றான் இந்திரன்.
“இல்லை இந்திரா! பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புச்சாறான அமுதால் நீங்கள் வெல்லவில்லை!
பாற்கடலை உங்களுக்காக கடைந்து கொடுத்தாரே ஆராவமுதமான திருமால்!
அந்தத் திருமால் என்னும் ஆராவமுதால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்றார்.
“எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இந்திரன்.

“இந்திரா! நீங்கள் துர்வாசரின் சாபத்தால் அசுரர்களிடம் தோற்று வலிமையிழந்து நின்றீர்கள்.
நீங்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால், பாற்கடலைக் கடைய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தவர் திருமால்.
அந்தப் பாற்கடலை நீங்கள் மட்டும் தனியாகக் கடைய முடியாது என்பதால் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்
என்று ராஜதந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தவர் திருமால்.
மந்தர மலையாகிய மத்தைக் கருட வாகனத்தில் கொண்டு வந்து பாற்கடலின் மத்தியில் நிலைநிறுத்தியவர் திருமால்.
அந்த மத்து அழுந்திய போது, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்து அதைத் தன் முதுகில் தாங்கிப் பிடித்து,
நீங்கள் பாற்கடல் கடைய உறுதுணையாக இருந்தவர் திருமால்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து களைப்படைந்து இருந்த நிலையில், உங்களுக்கெல்லாம் உள்ளிருந்து
சக்தியைக் கொடுத்துக் கடைய வைத்தவர் திருமால். சில காலம் கழித்து நீங்கள் கடைய முடியாமல் தவித்த போது,
பாற்கடலைக் கடைந்து கொடுத்தவர் அதே திருமால். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வந்த போது,
அதைப் பரமசிவனிடம் வழங்கி உலகைக் காக்குமாறு ஆலோசனை தந்தவர் திருமால்.
தன்வந்தரியாக அவதாரம் செய்து அமுதக் கலசத்தைக் கையில் ஏந்தி வந்தவர் திருமால்.

அது அசுரர்களுக்குக் கிடைக்காதபடி மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, தேவர்களான உங்களுக்கு மட்டும்
அமுதைப் பெற்றுக் கொடுத்தவர் திருமால். நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களை நன்கு கடாட்சிக்கும்படித்
தன் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியிடம் சொன்னவர் திருமால்.

சற்று யோசித்துப் பாருங்கள்! உங்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எப்படி எல்லாம் கவனத்துடன்
திருமால் செயல் பட்டிருக்கிறார்! ஆலோசனை, ராஜதந்திரம், மத்தைக் கொண்டு வருதல், மத்தைச் சுமத்தல், சக்தி கொடுத்தல்,
விஷத்தை முறித்தல், அமுதைக் கொணர்தல், அசுரர்களை மயக்குதல், வெற்றியை அருளுதல் என ஒவ்வொரு நிலையிலும்,
உங்களை விட அவர்தான் அதிகக் கவனம் செலுத்தி உங்களை இந்த நிலையில் இன்று வைத்திருக்கிறார்.
இப்படித் திருமகளோடு இணைந்து திருமால் புரிந்த அருளால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றார் அகஸ்தியர்.

“அடடா! நாம் அமுதைக் குடித்த மகிழ்ச்சியிலும், வெற்றி பெற்ற பெருமிதத்திலும், நம்மைக் கவனித்துக் கவனித்துக்
காத்த திருமாலை மறந்துவிட்டோமே!” என்று கருதிய தேவர்கள், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,
கும்பகோணம் ஸ்ரீசார்ங்க பாணிப் பெருமாள் திருக்கோவில் கருவறையை அடைந்து,
“த்ரிம்சத் த்ரிகோடி வஸு ருத்ர திவாகராதி
தேவாதி தேவகண ஸந்தத ஸேவ்யமானம்
அம்போஜ ஸம்பவ சதுர்முக கீயமானம்
வந்தே சயானம் இஹ போகினி சார்ங்கபாணிம்”
என்று சார்ங்கபாணிப் பெருமாளின் தியான ஸ்லோகம் சொல்வது போல், அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் சூழ்ந்திருந்து
அப்பெருமாளை வழிபட்டு, அமுதைப் பெற்றுத் தந்த ஆராவமுதுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
இப்படித் தேவர்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் கூர்ம மூர்த்தி எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்து,
எவ்வளவு கவனமாகக் காத்திருக்கிறார் என்பதை இவ்வரலாற்றின் மூலம் அறிய முடிகிறதல்லவா?
‘ப்ரமத்த:’ என்றால் கவனம் இல்லாதவர் என்று பொருள்.
‘அப்ரமத்த:’ என்றால் கவனம் மிக்கவர் என்று பொருள்.
மிகவும் கவனத்துடன் அடியார்களைக் காப்பதால், கூர்ம மூர்த்திக்கு ‘அப்ரமத்த:’ என்று பெயர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 327-வது திருநாமம்.

“அப்ரமத்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கவனக் குறைவு நீங்கி, அவர்கள் தங்கள் தொழில்
களில் நல்ல கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும்படித் திருமால் அருள் புரிவார்.

——————–

328. ப்ரதிஷ்டிதாய நமஹ (Prathishtithaaya namaha)

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் முகாம் இட்டிருந்த சமயம்.
காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள்கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.
ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால் தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது!”
என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர்.
மறுநாள் அந்த பக்தர் பூ கொண்டு வந்த போது அவரை அழைத்த பெரியவர்,
“நீ காவிரிக்கு அக்கரையில் இருந்துதானே பூ கொண்டு வருகிறாய்? வரும் வழியில் காவிரி நதியைக் கடந்து வருகிறாய் அல்லவா?
ஒரு புண்ணிய நதியைக் கடந்தால், அந்த நதியில் இறங்கி ஆசமனம் பண்ணிவிட்டுத் தான் கடக்க வேண்டும்.
அல்லது நதியில் ஒரு காசு போட வேண்டும். இவற்றில் எதையாவது நீ செய்தாயா?” என்று கேட்டார்.
அந்த பக்தர், “ஓ! எனக்குத் தெரியாத சாஸ்திரா? தினமும் நான் காவிரியில் ஆசமனம் செய்து விட்டுத்தான்
காவிரியைக் கடந்து வருகிறேன்!” என்று பதில் அளித்தார்.
பெரியவர், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆசமனம் செய்யும் போது, பூவைக் கையில் வைத்துக் கொண்டே செய்ய முடியாதே!
எச்சில் பட்டுவிடுமே! பூக்களை என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“பூக்களைப் படித்துறையில் வைத்துவிட்டு ஆசமனம் செய்வேன்!” என்று சொன்னார் பக்தர்.

“மனிதர்களின் கால் படும் தரையில் இறைவனின் பூவை வைக்கலாமா?” என்று கேட்டார் பெரியவர்.
“நான் படியை ஊதிச் சுத்தம் செய்து விட்டு அதன்பின் தான் பூவை வைப்பேன்!” என்றார் பக்தர்.
“அப்படியானால் இது எச்சில் பூ! இதைப் பூஜைக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி, பூக்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.

கர்வத்துடன் வந்த பக்தரின் முகம் வாடியதைக் கண்ட பெரியவர்,“இதோ பார்! காவிரி என்பது புண்ணிய நதி!
புண்ணிய நதியின் படித்துறை தூய்மையானது. எனவே அங்கு பூவை வைத்தாலும் தோஷம் இல்லை.
நீ வாயால் ஊதிப் படித்துறையைச் சுத்தம் செய்வதாக எண்ணுவது தான் தவறு!” என்று விளக்கம் அளித்தார்.
கர்வம் நீங்கிய அந்த பக்தர் வேறு பூக்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த அளவில், அதைப் பெற்றுக்கொண்ட காஞ்சி பெரியவர்,
அவரிடம் ஒரு கதை சொன்னார்.

“ஓர் ஊரில் ஒரு பாடகர் பெருமாள் கோவிலில் இனிய பாடல்கள் பாடி வந்தார். தன்னைப் போல் பாடுவதற்கு
உலகில் வேறு யாரும் இல்லை என்ற கர்வம் அவரிடம் இருந்தது. அவர் மெய்ம்மறந்து பெருமாளைப் பற்றிப் பாடும் போது,
சில நேரங்களில் பெருமாள் நாட்டியமே ஆடுவார். இந்நிலையில் ஒருநாள் அந்தப் பாடகர் பெருமாளிடம்,
‘எனக்கு முக்தி கொடு!’ என்று வேண்டினார்.
அதற்குப் பெருமாள், ‘நீ ஆணவத்தை விட்டுவிட்டு என்னிடம் சரணாகதி செய்தால் தான் முக்தி அளிப்பேன்.
இத்தனை ஆணவத்தோடு இருப்பவனுக்கு முக்தி தரமாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.
‘நான் இத்தனை நாள் உனக்காகப் பாடினேனே!’ என்றார் பாடகர்.
‘அதற்குத்தான் நான் நடனம் ஆடிக் காட்டிவிட்டேனே! அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் சரியாகிவிட்டது!’ என்று
பதில் சொல்லி விட்டார் பெருமாள்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? நாம் புதிதாகப் பூக்கள் கொடுத்தோ, பாட்டு பாடியோ,
பூஜை செய்தோ இறைவனுக்குப் பெருமை உண்டாக வேண்டிய தேவையே இல்லை.
இறைவன் என்றென்றும் எல்லையில்லாத மேன்மையோடுதான் இருக்கிறார்.
பக்தர்களான நமது கடமை இறைவனுக்குத் தொண்டாற்றுதல் என்பதால் நாம் தொண்டுகள் புரிகிறோமே ஒழிய,
இவற்றால் அவருக்குப் புதிய பெருமைகள் வரப்போவதில்லை. இறைவனின் கூர்மாவதார வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

மந்தர மலையையே தன் முதுகில் கூர்ம மூர்த்தி தாங்கினாரே! அந்தக் கூர்ம மூர்த்தியை யார் தாங்கினார்கள்?
இன்னொருவர் அவரைத் தாங்க வேண்டிய தேவை இல்லாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருக்கிறார் திருமால்! இதைப் புரிந்துகொள்!”
என்று அறிவுரை கூறி அந்த பக்தரை அனுப்பி வைத்தார்.
மந்தர மலையைத் தாங்கிய கூர்ம மூர்த்தி, தன்னைத் தாங்க இன்னொருவர் தேவைப்படாதபடி,
தன்னில் தானே நிலைபெற்றிருந்த படியால்,
‘ப்ரதிஷ்டித:’ என்றழைக்கப்படுகிறார்.

‘ப்ரதிஷ்டித:’ என்றால் நிலைநிற்பவர் என்று பொருள்.
இங்கே ‘ப்ரதிஷ்டித:’ என்பதற்குத் தன்நிறைவுடன் தன்னில் தானே நிலைநிற்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 328-வது திருநாமம்.
“ப்ரதிஷ்டிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வாதாரம்
சிறந்து விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

329. ஸ்கந்தாய நமஹ (Skandhaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும்
பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர்
நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச் சென்றார்.

அதே சமயம், அந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் அறநூல்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேதாந்த தேசிகன் என்ற வைணவ குரு, ராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிய
விளக்க உரைகளின் தொகுப்பான சுருதப் பிரகாசிகையைப் பாதுகாத்து எடுத்துக்கொண்டு
காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணித்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள
சத்தியா காலம் என்னும் ஊரை அடைந்தார்.

சத்தியா காலத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வழிபட்டுக் கொண்டு அங்கேயே சில காலம் தங்கி இருந்தார் தேசிகன்.
தினந்தோறும் சத்தியாகாலத்தில் காவிரிக்கரையில் நின்றபடி பழைய நிலை திரும்பாதா என்று ஏங்கித் திருவரங்கம் நோக்கிப் பார்ப்பாராம் தேசிகன்.
அதன் அடையாளமாகவே இன்றும் சத்தியாகாலம் கோயிலில் வேதாந்த தேசிகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
(மற்ற எல்லாக் கோயில்களிலும் தேசிகன் அமர்ந்த நிலையில் தான் இருப்பார்.)

இந்நிலையில், ஒருநாள் சத்தியா காலம் காவிரிக்கரையில் உள்ள ஞான அசுவத்தம் என்னும் அரச மரத்தடியில் அமர்ந்தார் தேசிகன்.
திருவரங்கத்தில் உள்ள பீதியெல்லாம் விலகி, சுபிட்சம் பெருக வேண்டும் என்று அரங்கனைப் பிரார்த்தித்து,
அபீதி ஸ்தவம் என்ற துதியை இயற்றினார் தேசிகன். அதில்,
“ஸகைடப தமோரவி: மதுபராக ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகிரி தாரண: த்ருடித காலநேமி த்ரும:
கிம் அத்ர பஹுனா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய:
த்ரிவிக்ரம பவத் க்ரம: க்ஷிபது மங்க்ஷு ரங்க த்விஷ:”

“கைடபன் என்ற அசுரன் உண்டாக்கிய இருளைச் சூரியனாய் வந்து போக்கினாய். பெருங்காற்றான ஹயக்ரீவனாக வந்து
மது என்ற அசுரனைத் தூசு போல் பறக்கச் செய்தாய். இரணியன் என்னும் மலையை நரசிங்கனாக வந்து இரண்டாகப் பிளந்தாய்.
காலநேமி என்ற அசுரனைச் செடியைக் கிள்ளி எறிவது போல் வீழ்த்தினாய். இவ்வளவு ஏன்?
பிறவிப் பெருங்கடலையே ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடிக்க வல்லவன் நீ! உலகளந்த உத்தமனே!
திருவரங்கத்தைப் பிடித்துள்ள தீய சக்திகளை நீதான் போக்கி, அபயம் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.

அன்று இரவு தேசிகனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒருவர் தோன்றி,
“நான் உங்களுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன்!” என்று சொன்னார். ஆனால் தேசிகன் அக்கனவைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலை காவிரியில் இருந்து ஓர் ஆமை தேசிகனைத் துரத்திக் கொண்டே வந்தது. தேசிகன் அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார்.

அடுத்த நாள் இரவு அவரது கனவில் திருமால் தோன்றினார். தேசிகனைப் பார்த்து,
“உனக்குத் தொண்டு செய்ய ஒரு தொண்டனை நான்தான் ஆமை வடிவில் அனுப்பி வைத்தேன்.
அவனை அசனமாக்கி அந்தக் கூர்மாசனத்தின் மேல் நீ அமர்வாயாக! ஏன் ஆமை வடிவில் அவனை அனுப்பினேன் தெரியுமா?
முன்பு அசுரர்களிடம் தேவர்கள் தோற்று, அசுர ராஜ்ஜியம் தலைதூக்கிய நிலையில், நான் ஆமையாக அவதாரம் செய்து,
பாற்கடலைக் கடைய வைத்து தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து, அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தேன் அல்லவா?
அதுபோல் படையெடுத்து வந்த அந்நிய சக்திகளை விரட்டி, திருவரங்கத்தில் நல்ல நிலைமை திரும்புவதற்கும் நான் அருள்புரிவேன்!
அதன் நினைவாகவே ஆமை வடிவில் இத்தொண்டனை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளேன்!” என்று கூறினார்.

திருமாலின் கூற்றால் மனம் உவந்த தேசிகன், அடுத்த நாள் காலை காவிரிக் கரையில் உள்ள அரச மரத்தடிக்குச் சென்றார்.
அங்கே ஆமை வடிவில் ஒரு கல் பீடம் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து வந்த தேசிகன், தனது அநுஷ்டானங்களை
அதில் அமர்ந்தபடி செய்யத் தொடங்கினார்.
கூர்ம மூர்த்தியின் திருவருளால், திருவரங்கத்தில் இருந்த தீயசக்திகள் அனைத்தும் விலகி நல்ல நிலைமை திரும்பியது.
சத்தியா காலத்தில் இன்றளவும் தேசிகன் சந்நதியில் அந்தக் கூர்மாசனம் இருப்பதைக் காணலாம்.

‘ஸ்கந்தயதி’ என்ற சொல்லுக்கு வடமொழியில் வற்றச்செய்தல், காய்ந்துபோகும்படிச் செய்தல், அழித்தல் போன்ற பொருள்கள் சொல்வதுண்டு.
அதன் அடிப்படையில், இவ்விடத்தில் ‘ஸ்கந்த:’ என்பதற்கு அழிப்பவன் என்று பொருள்.
திருவரங்கத்தைத் தாக்கித் துன்புறுத்திவந்த படைகளைப் போக்கி, அடியார்களுக்கு நன்மை அளித்தாற்போல்,
அசுர சக்திகளை அழித்து நல்லோர்களுக்கு நன்மை அளிப்பதால் கூர்ம மூர்த்தி ‘ஸ்கந்த:’ என்று அழைக்கப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 329-வது திருநாமம்.

“ஸ்கந்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
வாழ்வில் ஏற்படும் எல்லாத் தடங்கல்களும் அழியும் படிக் கூர்மமூர்த்தி அருள்புரிவார்.

—————————————-

330. ஸ்கந்ததராய நமஹ

(Skandhadharaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
அவர்களுள் சூரபத்மன், சிவனின் புதல்வனைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான்.
அவனால் மிகவும் துன்புற்ற தேவர்கள், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள்.

தேவர்களைக் காக்க விழைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின.
அந்த ஆறு தீப்பொறி களையும் அக்னிதேவன் கொண்டு போய்க் கங்கையில் சேர்த்தார்.
கங்கையில் இருந்து சரவணப் பொய்கையைச் சென்றடைந்த அந்த ஆறு பொறிகளும் அங்கிருந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். பின் பார்வதிதேவி அறுவரையும் ஆசையோடு தழுவ,
அவை இணைந்து ஒரே குழந்தையாக, ஆறுமுகனான முருகனாக உருவெடுத்தன.

அனைத்துத் தேவர்களும் முருகனிடம் வந்து சூரபத்மனை வதம் செய்து தருமாறு வேண்டினார்கள்.
அப்போது முருகன், “சூரபத்மனை வதைக்க வேண்டுமென்றால், அதற்குச் சிறப்பான ஆயுதம் ஒன்று நமக்குத் தேவை.
முன்பு தேவர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் தானே கூர்மாவதாரம் செய்து, நமக்கு உறுதுணையாக இருந்து,
அருள்புரிந்து, அமுதம் கிடைக்கும்படிச் செய்தார்! ஆகையால், இப்போது சூரபத்மனை வீழ்த்துவதற்குரிய
ஆயுதத்தைக் கூர்மாவதாரம் செய்த திருமாலிடமே கேட்டுப் பெறுகிறேன்!” என்றார் முருகன்.

இவ்வாறு சொல்லிவிட்டுத் திருவேங்கட மலையில் உள்ள குமாரதாரிகா என்ற பொய்கையின் கரையில் தவம் புரிந்தார் முருகன்.
அவருக்குத் திருமலையப்பன் காட்சி தந்து, சூரபத்மனை வெல்வதற்குரிய ஆயுதமான வேலை அளித்தார்.
இவ் வரலாறு வடமொழியில் உள்ள ஸ்கந்த புராணத்தின் இரண்டாம் கண்டம், முதல் அத்தியாயம்,
அறுபத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

“குமாரதாரிகா நாம ஸரஸீ லோக-பாவனீ யத்ர ஆஸ்தே பார்வதீஸூனு: கார்த்திகேய: அக்னி-ஸம்பவ:
தேவஸேனா-ஸமாயுக்த: ஸ்ரீநிவாஸ-அர்ச்சக: அமலே”
திருமால் கொடுத்த வேலைத் தன் தாயான பார்வதி தேவியின் கையில் கொடுத்து வாங்கிச் சென்று போரிட வேண்டும் என்று
கருதிய முருகப் பெருமான், தை மாதம் பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவியிடம் வேலைக் கொடுத்து,
அவள் கையால் அதைப் பெற்றுக்கொண்டு, தேவர்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

கடலுக்கு நடுவிலுள்ள சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை அடைந்த முருகன், முதலில் தாரகாசுரனையும் சிங்கமுகனையும் அழித்தார்.
அதன்பின் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போரிட்டார். மாமர வடிவம் கொண்டு சூரபத்மன் தப்பிக்கப் பார்த்த நிலையில்,
தனது வேலால் அம்மரத்தை இரண்டாகப் பிளந்தார் முருகன். அதில் ஒரு பாதியைத் தன் வாகனமான மயிலாகவும்,
மற்றொரு பாதியைத் தன் கொடிச்சின்னமான சேவலாகவும் ஆக்கினார்.
இவ்வாறு முருகன் சூரபத்மனை வதைத்த நாளையே கந்த சஷ்டி என்று முருக பக்தர்கள்
வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முருகன் சூரபத்மனை வீழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்த வேலைத் தந்து, தேவர்களின் படைத்தளபதியாகத் திகழ்ந்து
அவர் வெற்றி பெறுவதற்கு அருள்புரிந்ததால் திருமால் ‘ஸ்கந்ததர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்கந்த:’ என்பது முருகனைக் குறிக்கும். ‘தர:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
முருகனின் தாய்மாமனான திருமால், கூர்ம மூர்த்தியாக இருந்து அகில உலகையும் தாங்குவதோடு மட்டும் இல்லாமல்,
தன் மருமகனான முருகனுக்குச் சக்தி கொடுத்து அவரை ஆசையோடு தாங்குகிறார் என்பதை இது காட்டுகிறது.
(திருமாலைப் பார்வதியின் சகோதரராகக் குறிப்பிடுவதால், முருகனுக்குத் தாய்மாமன் ஆகிறார்.)

பகவத் கீதை பத்தாம் அத்தியாயம் இருபத்து நான்காம் ஸ்லோகத்தில் கண்ணனே இதைத் தெரிவிக்கிறான் –
ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த: – “தேவர்களின் படைத்தளபதியான ஸ்கந்தனை நான் உள்ளிருந்து தாங்குகிறேன்!” என்பது இதன் பொருள்.
ஆகவே ‘ஸ்கந்ததர:’ என்றால் தன் மருமகனான முருகனை ஆசையோடு உள்ளிருந்து தாங்குபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 330-வது திருநாமம். வடமொழி விளக்க வுரையில் பராசர பட்டரும் –
ஷடானன விதாரணாத் – ஆறுமுகனைத் தாங்குபவர் என்றே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
“ஸ்கந்ததராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் வெற்றி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

331. துர்யாய நமஹ (Dhuryaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டின் பின் பகுதி. ஆர்க்காடு பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஆங்கிலேயப் படைத்தளபதி
ராபர்ட் கிளைவ், குதிரைகளோடும் படைவீரர்களோடும் ஆயுதங்களோடும் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.
அன்று இரவு அத்தனை பேரும் தங்குவதற்குக் காஞ்சிபுரத்தில் இடம் கிடைக்குமா என்று பார்த்தார்கள்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலைக் கண்ட ராபர்ட் கிளைவ்,
“இன்று இரவு இந்தப் பெரிய கட்டிடத்தில் எல்லோரும் தங்கிக் கொள்ளலாம்!” என்று கூறினார்.
அப்போது கோயிலில் கைங்கரியம் செய்து வந்தவர்கள், “இது இறைவனுடைய கோயில்! இங்கே இப்படிப் போர்புரிய வந்த
சேனைகளைத் தங்க வைப்பது முறையல்ல! மேலும் புனிதமான இந்த இடத்தில் மலஜலங்களைக் கழிப்பது போன்றவை செய்யக்கூடாது!”
என்று பணிவுடன் ராபர்ட் கிளைவிடம் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அத்தனை சேனையையும் அங்கேயே தங்க வைத்தார் ராபர்ட் கிளைவ்.

ஆனால் அடுத்த நாள் காலை அந்தச் சேனையிலிருந்த வீரர்களாலும், குதிரைகளாலும் மலமோ ஜலமோ கழிக்க முடியவில்லை.
ராபர்ட் கிளைவ் உட்பட அத்தனை பேரும் வயிற்று வலியால் துடிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது தனது தவறை உணர்ந்த ராபர்ட் கிளைவ், அத்தி வரதப்பெருமான் முன்னே நின்று,
“உன் பெருமை தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன்! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்துவிட்டு,
தனது சேனைகளைக் கோயிலுக்கு வெளியே கொண்டு சென்றார்.

அதன்பின் ஆர்க்காட்டுக்குச் சென்று போர்புரிந்த ராபர்ட் கிளைவ் பெரும் வெற்றியைப் பெற்றார்.
அந்த வெற்றி ராபர்ட் கிளைவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அத்தி வரதர் செய்த அருளே தனது வெற்றிக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
மீண்டும் அத்தி வரதரைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, காஞ்சிபுரத்துக்கு வந்தார் ராபர்ட் கிளைவ்.
அன்று வைகாசி விசாகம். வரதராஜப் பெருமாளுக்குக் கருட சேவை வைபவம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது ராபர்ட் கிளைவின் மனத்திரையில் விசேஷ காட்சியைக் காட்டினார் வரதராஜப் பெருமாள்.

அக்காட்சியைக் கண்ட ராபர்ட் கிளைவ், “ஆஹா! என்ன விந்தை? இறைவா! கருடன் வாகனமாக இருந்து உன்னைத் தாங்கினாலும்,
அவருக்குள்ளும் நீயே இருந்து உன்னைத் தாங்கும் சக்தியைத் தந்திருக்கிறாய்! ஸ்ரீபாதம் தாங்கிகள் கருட வாகனத்தைச் சுமந்து நின்றாலும்,
உண்மையில் அவர்களையும் நீயே உள்ளிருந்து தாங்குகிறாய்! ஏன்? ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக இருந்துகொண்டு,
மொத்த உலகங்களையும் உன் முதுகில் நீயே தாங்குகிறாய்!
இப்போது நீ காட்டிய காட்சியால் இந்த உண்மையை நான் கண்டு கொண்டேன்!” என்று கூறினார்.

மேலும், “வரதா! நான் இவ்வூருக்கு வரும் முன் நானே பெரிய தலைவன் என்ற கருவத்துடன் வந்தேன்.
ஆனால் இப்போது திரும்பச் செல்லும் போது நீயே எல்லோருக்கும் தலைவன் என்ற புரிதலுடன் செல்கிறேன்.
தலைவன் என்ற பெயரில் எனக்குக் கீழே உள்ளவர்களை நான் என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திவந்தேன்.
ஆனால் உண்மையான தலைவனான நீயோ உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் தாங்கிப் பிடித்துக் காக்கிறாய்.
ஆர்க்காட்டில் இருந்து நாங்கள் கொண்டு வந்த பல ஆபரணங்களுள் முக்கியமானதான இந்த மகர கண்டியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!”
என்று கூறிச் சமர்ப்பித்தார் ராபர்ட் கிளைவ். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் கருட சேவையின் போது
இந்த மகர கண்டியை அணிந்தபடி வரதராஜப் பெருமாள் காட்சி தருகிறார்.

அப்போது வரதராஜனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர் ராபர்ட் கிளைவைப் பார்த்து,
“ஓர் உண்மையான தலைவனின் இலக்கணம் என்னவென்றால், தனது தொண்டர்களைத் தாங்கிப் பிடித்துக் காப்பதே ஆகும்!
அந்த வகையில் இந்த உலகுக்கெல்லாம் தலைவராய்த் திகழும் பெருமாள், பூமிக்குக் கீழே ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக
இருந்துகொண்டு அனைவரையும் தன் முதுகில் தாங்கி வருகிறார்!
அதை உமக்கு உணர்த்தவே இப்படி ஒரு லீலையைப் பெருமாள் புரிந்துள்ளார்!” என்று கூறினார்.

‘துர்ய:’ என்றால் தாங்கிப் பிடித்துக் காக்கும் தலைவர் என்று பொருள்.
உலகங்கள் அனைத்தையும் ஆதிசேஷன் பாதாளத்தில் இருந்து காப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆனால் அந்த ஆதிசேஷனுக்கும் கீழே இருந்துகொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து அனைத்து உலகங்களையும்
கூர்ம மூர்த்திதான் தாங்கிவருகிறார். இதன் அடையாளமாகவே அனைத்துத் திருக்கோயில்களிலும் உள்ள சேஷ வாகனத்தின் கீழே
கூர்மமூர்த்தி இருப்பதைக் காணலாம்.
இப்படி அனைத்து உலகங்களையும் கூர்மமூர்த்தி தன் முதுகில் தாங்கிப் பிடித்துக் காப்பதால் அவருக்கு ‘துர்ய:’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 331-வது திருநாமம்.
“துர்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

—————

332. வரதாய நமஹ (Varadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)“
இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று ஒருவர் வேதாந்த தேசிகனிடம் கேட்டார்.
அதற்கு தேசிகன், “வேதம்தான் ஆதாரம். வேதங்களைக் கொண்டுதான் இறைவனை அறிய முடியும்!
ஆனால் நீ அந்த வேதங்களை ஏற்கும் அளவு பக்குவம் பெறவில்லை! உனக்குப் புரியும் படி ஆதாரம் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“ம்ம் சொல்லுங்கள்!” என்றார் அந்த நபர்.

தேசிகன், “பூமி, கடல், சூரியன் ஆகிய மூன்றும் இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்களாகத் திகழ்கின்றன!” என்று கூறினார்.
“இவை எப்படி இறைவன் இருப்பதற்கு ஆதாரமாகும்?” என்று கேட்டார் அந்த நபர்.
அதற்கு, “பூமி சூரியனைச் சுற்றிச் சுழன்று வருகிறதே! அது எப்படிச் சரியாக முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்களில்
ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது? அந்த எண்ணிக்கை என்றுமே மாறுவதில்லையே! அதற்கு என்ன காரணம்?
இந்தச் சுழற்சி சீராக இயங்குகின்றது என்றாலே, அதைச் சீராக நடத்திச்செல்லும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று தானே பொருள்?
பூமியில் விதை போட்டால் முளைக்கிறதே, அதை முளைக்கச் செய்வது யார்? உள்ளிருந்து இயக்கும் இறைவன்தானே?

அடுத்து கடலுக்கு வருவோம். கடல் அலைகள் கரையில் வந்து வந்து மோதினாலும் மீண்டும் கடலுக்குள்ளேயே செல்கின்றனவே!
அவற்றைச் சீராக இயக்குவது யார்? ஆழிப்பேரலை உள்ளிட்ட அசாதாரண சூழல் வந்தாலே ஒழிய கடல்நீர் நிலத்துக்குள் வராமல் இருக்கிறதே!
அதைச் சீராக இயக்கும் இறைவன் ஒருவன் இல்லாவிட்டால் இது சாத்தியமா?
சூரியன் ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமிக்கிறதே! அதை இயக்குவது யார்?
எனவே சீராக இயங்குகின்ற பூமி, கடல், சூரியன் இவற்றைக்கொண்டே இறைவன் உள்ளான் என்பது ஒருவாறு யூகிக்கலாமே!” என்றார் தேசிகன்.

“இறைவன் இவற்றை எப்படி இயக்குகிறார்?” என்று அந்த நபர் கேட்டார்.
அதற்கு தேசிகன், “இவற்றுக்கெல்லாம் அதிபதிகளாக இந்திரன், வருணன், வாயு, சூரியதேவன், சந்திரன், ருத்ரன் போன்ற
தேவர்களைத் திருமால் நியமித்திருக்கிறார். அவர்களுக்குத் திருமாலே உள்ளிருந்து சக்தியைக் கொடுத்து
அந்தந்த பொருள்களை அவர்கள் இயக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் இறைவனைக் காண விளக்கேற்றிய பொய்கையாழ்வார்,
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக”
என்று பூமியை அகலாக்கி, கடல்நீரை நெய்யாக்கி, சூரியனைத் தீபமாக்கினார்.
பூமி, கடல், சூரியன் ஆகியவை இறைவன் உள்ளான் என்று காட்டும் விளக்காக உள்ளன.

அது மட்டுமில்லை, இவற்றை இயக்கும் தேவர்கள் எப்போது திருமாலிடம் வரம் வேண்டி வந்தாலும்,
அப்போதெல்லாம் அவர்களுக்கு அந்தந்த வரங்களை அருளி, வலிமையையும் தந்து, அந்த தேவர்கள் மூலம் உலகின் இயக்கம்
சீராக நடக்கும்படிச் செய்கிறார்.ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலிமை இழந்து நின்ற போது,
திருமால் ஆமை வடிவுடன் கூர்மாவதாரம் எடுத்து, மந்தரமலையை முதுகில் சுமந்து, பாற்கடலைக் கடைய வைத்து,
தேவர்களுக்கு அமுதத்தைப் பெற்றுக் கொடுத்து, அதன்மூலம் அவர்கள் வலிமை பெறும்படிச் செய்தார்!” என்று விளக்கினார்.

கேள்வி கேட்டவருக்கு மெல்ல மெல்ல இறைவனிடமும் வேதங்களிடமும் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிற்று.
வேதங்கள் மற்றும் குருவின் துணையோடு இறைவனை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கினார்.
‘வர:’ என்பது வரங்களைக் குறிக்கிறது. ‘த:’ என்றால் அருள்பவர்.
தேவர்கள் வரம் வேண்டும் என்று பிரார்த்திக்கும் போதெல்லாம் அவர்கள் வேண்டும் அந்தந்த வரங்களைத் தந்தருள்வதால்,
கூர்ம மூர்த்தி ‘வரத:’ (வர: + த: = வரத:) என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 332-வது திருநாமம்.
“வரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல வரங்களைத் திருமால் தந்தருள்வார்.

———–

——–

341. சூராய நமஹ: (Shooraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள்.
“இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன!
அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பதும்,
ஆட்டம் போடுவதும் கொஞ்சம் கூட நன்றாக இல்லை!” என்று கண்ணனைக் குறை சொல்லி
ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத் தம்பதியர்.

ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது.
அதனால் தன் மனைவியை அழைத்து, “இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன்.
பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின் மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான்.
அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே!
நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும்!” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
மனைவியும் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

அரை மணிநேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
“யார் அது?” என்று உள்ளிருந்து இந்தப் பெண் கேட்க, “நான் தான் வந்திருக்கிறேன்!” என்று
அவளது கணவரின் குரலில் பதில் வந்தது.
“ஆஹா! நம் கணவர் தான் திரும்ப வந்துவிட்டார்!” என்று எண்ணி அந்தப் பெண் கதவைத் திறந்தவாறே,
அவளது கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“சீக்கிரம் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டு விடுவோம்! கண்ணன் வரும் நேரம்!” என்று சொல்லிக் கொண்டே
வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுவிட்டார் அவளது கணவர்.

அதன்பின் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டினுள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று அப்பெண் கேட்க,
“நான்தான் வந்திருக்கிறேன்!” என்று மீண்டும் அவளது கணவரின் குரலிலேயே பதில் வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் தன்னுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள்.
ஊஞ்சலில் இருந்த கணவர், “இது கண்ணனின் வேலையாக இருக்கும்!
கதவைத் திறக்க வைப்பதற்காக என் குரலிலேயே பேசுகிறான்!” என்றார்.

“இப்போது என்ன செய்வது?” என்று மனைவி கேட்க, அருகிலிருந்து ஒரு முறத்தை எடுத்துக் கொடுத்த கணவர்,
“நீ கதவைத் திறந்து விட்டு வெளியே நிற்கும் கண்ணனை இந்த முறத்தால் அடித்துத் துரத்திவிடு!” என்றார்.
அவளும் கையில் முறத்தோடு போய்க் கதவைத் திறந்தாள்.
வெளியே அவளது கணவனைப் போன்ற உருவத்தோடேயே ஒருவர் நிற்பதைக் கண்டாள்.
கண்ணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என எண்ணி, வெளியே நிற்பவரை முறத்தால் அடித்தாள்.
வெளியே நின்றவரோ, “உன் கணவனான என்னை ஏன் அம்மா அடிக்கிறாய்?” என்று கதறினார்.
அவளோ, “நீ மாறு வேடத்தில் வந்தவன் என்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லி மேலும் அடித்தாள்.

“இங்கே பார்!” என்றொரு குரல் வீட்டின் உள்ளிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.
ஊஞ்சலிலே கையில் சங்கு சக்கரங் களைத் தாங்கியபடி கண்ணன் அமர்ந்திருந்தான்.
“அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவன் தான் கண்ணனா?
என்னிடம் அடி வாங்கியவர் உண்மையிலேயே என் கணவரா!” என்று உணர்ந்து திகைத்துப் போனாள் அப்பெண்.

அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்கும் அருள்புரியத் தான் இத்தகைய லீலையைச் செய்தேன்!” என்று சொல்லி,
இருவரையும் அழைத்து, அவர்களுக்கு இம்மை மறுமை அனைத்துக்குமான நலன்களையும் அருளினான்.
அன்று முதல் அந்தத் தம்பதியர் தீவிர கிருஷ்ண பக்தர்களாக மாறி விட்டார்கள்.
இப்படித் தன்னை வெறுக்கும் மனிதர்களிடம் தனது அழகு, குணங்கள், லீலைகள் ஆகியவற்றைக் காட்டி,
அவர்களையும் பக்தர்களாக மாற்றி, வென்று எடுப்பவராகத் திருமால் திகழ்வதால்
அவர் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.

“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா”என்று இவ்வாற்றலை ஆண்டாளும் பாடி இருக்கிறாள்.
நமது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்,
“ஒருவரை வீழ்த்துவது சுலபம், வெல்வதே கடினம்!” என்று கூறுவார்.
அதாவது,
தன்னை வெறுப்பவரைப் போரில் வீழ்த்துவது மிக எளிது,
ஆனால் அந்த எதிரிகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களைப் பக்தர்களாக்கி வென்றெடுப்பதே அரிது.
ஆனால் திருமாலோ அனாயாசமாக எல்லோரையும் வென்றெடுத்து விடுவதால் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சூர:’ என்றால் அனைவரையும் வெல்வதற்குரிய சாமர்த்தியம் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 341-வது திருநாமம்.
“சூராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
அனைவரின் மனங்களையும் வெல்லும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

————

342. சௌரயே நமஹ: (Shouraye namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பற்பல லீலைகள் புரிந்து அடியார்களுக்கு அருள் புரிவதற்காகவும்,
பூமிக்குப் பாரமாக உள்ள தீயவர்களை அழிப்பதற்காகவும்,
நல்லறத்தைப் பூமியில் நிலைநாட்டுவதற்காகவும் கண்ணனாகப் பூமியில் அவதரிக்கத் தீர்மானித்தார் திருமால்.
அப்போது மகாலட்சுமி திருமாலிடம், “கடந்த ராமாவதாரத்தில் தசரதரைத் தந்தையாகத் தேர்வு செய்தீர்கள்.
இந்த அவதாரத்தில் யாரைத் தந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள்.

அப்போது திருமால், “சூரர் எனப்படும் வசுதேவரை இந்த அவதாரத்தில் எனக்குத் தந்தையாகத் தேர்வு செய்துள்ளேன்!” என்றார்.
“என்ன காரணத்துக்காக அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள் மகாலட்சுமி.
அதற்குத் திருமால், “இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வசுதேவர் யது குலத்தைச் சேர்ந்தவர்,
அதாவது யது மகாராஜாவின் வம்சத்தில் தோன்றியவர்.
அக்காலத்தில் யது மகாராஜா மிகச்சிறந்த தானப் பிரபுவாகத் திகழ்ந்தார் என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றார் திருமால்.

அதற்கு மகாலட்சுமி, “ஆம் சுவாமி! தினந்தோறும் யதுவிடம் தானம் வாங்குவதற்குக் கூட்டம் கூட்டமாக
மக்கள் வந்து அவரது மாளிகை வாசலில் நின்றிருப்பார்கள்.
அந்தக் கூட்டத்தில் நிற்கும் மக்களுள் முதல் மனிதருக்குரியது தானம் செய்தாலே,
அந்த தானம் பெற்ற நபர் மீதமுள்ள அத்தனை பேருக்கும் தானம் செய்யும் அளவுக்குப் பணக்காரராக ஆகிவிடுவார்.
யதுவிடம் தானம் பெற்ற ஒருவன், அதன்பின் தானம் வேண்டும் என்று இன்னொருவரை
நாடிச் செல்ல வேண்டிய நிலையே இருக்காது.
அந்த அளவுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யது!” என்றாள்.

திருமால், “ஆம். சரியாகச் சொன்னாய். முன்பு ராமாவதாரத்தில் நான் ரகு குலத்தில் ஏன் அவதாரம் செய்தேன்?
ரகு மகாராஜா மிகச்சிறந்த தானப்பிரபுவாக இருந்தார், வறியவருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தார் என்பதனால்
தானே ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகனாகத் தோன்றினேன்?
அதே போல் இம்முறை யதுவின் தானத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரது குலத்தில் தோன்றிய
வசுதேவரின் மகனாக அவதரிக்கப் போகிறேன்!” என்று கூறினார்.

“தானம் செய்பவர்கள் உங்கள் விசேஷ அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க உள்ளீர்கள் போலும்!”
என்று சொல்லி புன்னகைத்த மகாலட்சுமி, “இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டாள்.
அதற்குத் திருமால், “முன்னொரு சமயம் சுதபஸ்-பிருச்னி என்ற தம்பதியர் என்னைக் குறித்துத்
தவம் செய்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா?” என்று மகாலட்சுமியிடம் கேட்டார்.
“ஆம் சுவாமி, அறிவேனே! அவர்களின் தவத்துக்கு உகந்து அவர்களுக்குக் காட்சி அளித்த நீங்கள்,
மூன்று முறை அவர்களின் மகனாகப் பிறக்கப் போவதாக அவ்விருவருக்கும் வரம் அளித்திருந்தீர்களே!” என்று சொன்னாள் மகாலட்சுமி.

“ஆம் தேவி! முதலில் சுதபஸ்-பிருச்னிக்கு மகனாக பிருச்னிகர்ப்பன் என்ற பெயரோடு நான் அவதாரம் செய்தேன்.
அடுத்த பிறவியில் அவர்களே கச்யப முனிவராகவும், அதிதி தேவியாகவும் பிறந்தார்கள்.
அப்போது அவர்களின் மகனான வாமன மூர்த்தியாக நான் அவதாரம் செய்தேன்.
இப்போது அந்த சுதபஸ் தான் சூரர் என்று பெயர்பெற்ற வசுதேவராகவும், பிருச்னி தான் தேவகியாகவும் பூமியில் பிறந்துள்ளார்கள்.

எனவே இப்போது அவர்களின் மகனாக, மூன்றாவது முறையாக, நான் அவதாரம் செய்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தை
முழுமையாக நிறைவேற்றப் போகிறேன்!” என்று கூறினார்.
உடனே மகாலட்சுமி, “சுவாமி! நீங்கள் அவதரிக்கும் போதெல்லாம் நானும் உடன் வருவது வழக்கம் அல்லவா?
நீங்கள் பிருச்னிகர்ப்பராகவும், வாமன மூர்த்தியாகவும் அவதரித்த சமயத்தில், உங்கள் திருமார்பிலேயே நான் இருந்தேன்.
இப்போது நீங்கள் மதுராவில் வசுதேவர் மகனாக அவதாரம் செய்ய உள்ளீர்கள்.
நான் விதர்ப்ப நாட்டில் பீஷ்மகன் மகள் ருக்மிணியாகப் பிறக்கிறேன். பூமியில் சந்திப்போம்!” என்று
சொல்லித் திருமாலை வழியனுப்பி வைத்தாள்.

இவ்வாறு வசுதேவரின் குலமுன்னோரான யதுவைக் கௌரவிக்கும் விதமாகவும்,
வசுதேவர்-தேவகி செய்த தவத்துக்கு முழுமையான பலன் அளிப்பதற்காகவும் வசுதேவர் மகன் கண்ணனாகத் திருமால் அவதரித்தார்.
வசுதேவருக்கு ‘சூர:’ என்று பெயர். சூரரின் மகனாக அவதரித்ததால், திருமால் ‘சௌரி:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சௌரி:’ என்றால் சூரரின் மகன். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 342-வது திருநாமம்.
“சௌரயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு நல்ல சந்ததி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

——————-

343. ஜனேச்வராய நமஹ:
(Janeshwaraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கோபாலார்ய மகா தேசிகன் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
வேதாந்த தேசிகரின் மறு அவதாரமாகவே போற்றப்பட்ட அவரைத் ‘திருக்குடந்தை தேசிகன்’ என்று அன்பர்கள் அழைப்பது வழக்கம்.
இல்லறத்தில் வாழ்ந்த திருக் குடந்தை தேசிகனை மூன்று சந்நியாசிகள் அடி பணிந்து அவருக்குச் சீடர்களாய் ஆனார்கள்.

இத்தகைய பெருமைகள் இருந்த போதும், துளியும் கர்வமோ அகங்காரமோ இல்லாமல், பணிவே வடிவெடுத்தவராய்த் திகழ்ந்தார்.
இதைக் கண்ட சில பண்டிதர்கள் திருக்குடந்தை தேசிகனிடம்,
“சுவாமி! பொதுவாக இல்லறத்தில் இருப்பவர்கள் துறவியரை வணங்கிப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் மூன்று துறவிகள் உங்களை வந்து அடிபணிந்து உங்களுக்குச் சீடர்களாய் ஆகி இருப்பது வியப்பைத் தருகிறது.
அதைக் காட்டிலும் அதிக வியப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், மூன்று துறவிகள் உமக்குச் சீடராக இருக்கும் நிலையிலும்,
நீங்கள் மிகுந்த பணிவோடு, அகங்காரமே இல்லாமல் இருக்கிறீர்களே! அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்குத் திருக்குடந்தை தேசிகன், “அடியேனுக்கு எப்போதெல்லாம் ஆணவம் வருவது போலத் தோன்றினாலும்,
குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளின் கிரீடத்தை நினைத்துக் கொள்வேன்.
உடனே எனது ஆணவம் எல்லாம் பறந்துபோய், மனத்திலே பணிவு குடிகொண்டுவிடும்!” என்று பதில் அளித்தார்.
அது எப்படி என்று பண்டிதர்கள் கேட்க, திருக்குடந்தை தேசிகன்,

“நானா ரத்ன ப்ரதித மஹிமா ஸ்ரீ மதாபீட நத்த:
ஸர்வேசத்வ ப்ரகடன சணோ நிர்மித: அதுல்ய ஹேம்னா
மால்யோந்நீத ஸ்திர பரிமளோ வைதிகாக்யே விமானே
வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட:”-என்ற ஸ்லோகத்தால் அதற்கு விடை சொன்னார்.

“நம் குடந்தை ஆராவமுதப் பெருமானின் கிரீடம் எப்படிப்பட்டது தெரியுமா?
நானா ரத்ன ப்ரதித மஹிமா – வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம் போன்ற
ரத்தினங்கள் பதிக்கப் பெற்றது.

ஸ்ரீ மத் ஆபீட நத்த: – அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.
நிர்மித: அதுல்ய ஹேம்னா – ஒப்பற்ற தங்கத்தாலே செய்யப்பட்டது.
மால்யோந்நீத ஸ்திர பரிமள: – பூ வைத்தாலும் வைக்காமல் போனாலும், எப்போதும் மணம் கமழக் கூடியது.
வைதிகாக்யே விமானே வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட: – வைதிக விமானத்தின் கீழே
கோவில் கொண்டிருக்கும் அப் பெருமானின் கிரீடம் என் மனத்திலும் இருக்கிறது.

ஸர்வேசத்வ ப்ரகடன சண: – அந்த இறைவனின் ஒப்பற்ற ஆளுமைக்கு அடையாளமே அந்தக் கிரீடம்.
சாதாரணமாகத் தொப்பி அணிந்திருக்கும் ஒருவர், சயனிக்கச் சென்றால் தொப்பியைக் கழற்றி வைப்பது வழக்கம் அல்லவா?
ஆனால் இங்கே குடந்தையில் ஆராவமுதப் பெருமாள், சயனிக்கும் போது கூட கிரீடத்தை அகற்றாமல் சயனித்துள்ளாரே!
இது எதை உணர்த்துகிறது?

அவரே மிகவும் உயர்ந்தவர்! கிரீடத்தை அகற்றி இன்னொருவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை!
அதனால்தான் சயனிக்கும் வேளையிலும் கிரீடத்தைத் தலையில் அவர் அணிந்துகொண்டே இருக்கிறார்!
இவ்வாறு அவரது ஆளுமைக்கு அடையாளமாக இருக்கும் அந்தக் கிரீடத்தை நினைத்த மாத்திரத்தில்,
அவர் எவ்வளவு உயர்ந்தவர், நாம் எவ்வளவு தாழ்ந்தவர் என்பது மனதில் நன்கு பதிந்து விடும்.
அதை நினைக்க நினைக்க மனதில் அகங்காரமே எழாது!” என்பதே திருக்குடந்தை தேசிகன் தந்த விளக்கம்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்னவென்றால், எப்போதும் ஒளிர்கின்ற ஆளுமையோடு கூடியவர் திருமால்,
அதன் அடையாளமாகத் தலையில் கிரீடத்துடன் திகழ்கிறார். உலகில் பொதுவாக நாம் ஆளுமை என்று சொல்லும்
நபர்களின் ஆளுமைகளை எல்லாம் திருமாலின் ஆளுமை மூழ்கடித்துவிடுகிறது.

‘ஐச்வர்யம்’ என்றால் ஆளுமை. ‘ஈச்வர:’ என்றால் ஆளுமை மிக்கவர், அல்லது ஆள்பவர்.
‘ஜன’ என்பது உலகிலுள்ள அனைத்து மக்களையும் குறிக்கும்.
உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஒப்பற்ற ஆளுமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘ஜனேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஜனேச்வர:’ என்றால் அனைவரையும் ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 343-வது திருநாமம்.
“ஜனேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் வாழ்வில்
நல்ல நிர்வாகத் திறனும் ஆளுமையும் பணிவும் ஒருங்கே பெற்றுத் திகழத் திருமால் அருள் புரிவார்.

—————-

344. அநுகூலாய நமஹ:(Anukoolaaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் தளர்நடை நடக்கத் தொடங்கிய பின்,
திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விடுவது அவன் வழக்கம். யசோதை எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.
சிறிது நேரம் கழித்து, உடலெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு எங்கிருந்தோ வருவான்.

மேலும், ஒரு நொடிப்பொழுது கூட ஓர் இடத்தில் நிற்க மாட்டான் கண்ணன்.
திடீரென மாட்டுத் தொழுவத்தில் புகுந்து தொந்தரவு செய்வான். அங்கே போய் அவனைப் பிடிக்க முயன்றால்,
கன்றுக் குட்டிகள் கட்டப்பட்ட தொழுவத்துக்கு ஓடி விடுவான்.
அப்புறம் எப்படியோ அவனைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மீண்டும் மாயமாகிவிடுவான்.

பசு மற்றும் கன்றுகளின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடுவான்.
இப்படித் துருதுரு என்று விளையாடும் கண்ணனை யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணனிடம், “நான் உன்னைப் பார்ப்பதா? வீட்டு வேலையைப் பார்ப்பதா? சிறிது நேரம் கூட ஓரிடத்தில் இருக்க மாட்டாயா?”
என்றெல்லாம் அறிவுறுத்திப் பார்த்தாள் யசோதை. ஆனாலும் கண்ணன் அதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஒருநாள் கண்ணன் அதிகமாக விஷமம் செய்யவே, யசோதை பிரம்பினால் அவனை அடிக்கப் போனாள்.
ஆனால் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்குமோ என்று அஞ்சிய யசோதை, பிரம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு,
தாம்புக் கயிற்றை எடுத்து அடிக்கப் போனாள். ஆனால் கண்ணனோ, பயந்தவன் போல் நடிக்கத் தொடங்கினான்.
அவன் உண்ட வெண்ணெய் தோய்ந்த கைகளால் யசோதையைத் தொழுதான்.
மை தீட்டிய கண்களில் இருந்து மை கரைந்து வரும்படி கண்ணீர் விட்டு அழுதான்.
அச்சத்துடன் யசோதையை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். பயத்தில் குழந்தை கண்ணனின் உதடுகள் துடித்தன.
மேனி நடுங்கியது.
பார்த்த யசோதை, “குழந்தாய்! உன்னைப் போய் அடிப்பேனா?” என்று சொல்லி அவனைத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த நொடியே, அங்கிருந்து மாயமான கண்ணன், மேலும் லீலைகள் புரியச் சென்று விட்டான்.
இவனை ஓரிடமாகக் கட்டிப்போட வேண்டும் என்று கருதிய யசோதை, இரண்டு கயிறுகளை எடுத்தாள்.
ஒரு கயிற்றை ஓர் உரலைச் சுற்றி மூன்று சுற்றுகள் சுற்றி, அதை ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
மறுபுறம் இன்னொரு கயிற்றைக் கண்ணனின் இடுப்பைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி அதையும் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
இரண்டு கயிறுகளையும் இழுத்துப் பார்த்த போது அவற்றுக்கு இடையே இரண்டு அங்குலம் இடைவெளி இருந்தது.

வேறு சில கயிறுகளைக் கொண்டு வந்து இவற்றோடு சேர்த்துக் கட்டிவிட்டுப் பார்த்தாள் யசோதை.
உரலும் நகரவில்லை, கண்ணனும் நகரவில்லை, ஆனாலும் இரண்டு அங்குலம் இடைவெளி மட்டும் அப்படியே இருக்கிறது.
வியர்த்து விறுவிறுத்துப் போன யசோதை, “கண்ணா! உன் தாயான எனக்கு உன்னைக் கட்டும் உரிமைகூட இல்லையா?” என்று கேட்டாள்.
அவளது அன்புக்கு மனம் இரங்கினான் கண்ணன்.
அதனால் அடுத்த கயிற்றை அவள் கொண்டு வந்த சேர்த்து முடிச்சு போட்ட போது, இரண்டு கயிறுகளும் இணைந்துவிட்டன.

கண்ணனை உரலோடு கட்டிவிட்டாள் யசோதை.
இப்படிக் கண்ணனைக் கட்டிய யசோதை, அவனைப் பார்த்து,
“யதி சக்னோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித!” (விஷ்ணு புராணம் 5-6-15)

“ஓரிடத்தில் நிற்க மாட்டேன் என்று விஷமம் செய்தாயே! முடிந்தால் இதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்!” என்று
சொல்லி விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள். தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே உரலோடு கட்டுண்டு கிடந்தான் கண்ணன்.
இறைவனுக்கு எத்தனையோ மேன்மைகள் இருந்தாலும், அவன் தன் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடத்தில் எளியவனாக இருக்கிறான்.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே”–என்று இப் பண்பை நம்மாழ்வார் பாடுகிறார்.
ஆக, மிகவும் உயர்ந்தவராக இருக்கும் திருமால், அத்தன்மைகளை மறைத்துக் கொண்டு,
தன் பக்தர்களிடத்தில் இனியவராக, எளியவராக, அவர்களுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பதால்,
அவர் ‘அநுகூல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘அநுகூல:’ என்றால் இனியவர், எளியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 344-வது திருநாமம்.“அநுகூலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
அனைவரிடத்திலும் திருமால் இனியவராக, எளியவராக இருந்து அருள் புரிவார்.

————-

345. சதாவர்த்தாய நமஹ (Shatha-Aavarthaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை – பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி?
அதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் தெரிவிக்கிறார்:
“அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும்
செய்எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே!”

திருமாலின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால், துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப் பாடலின் சாரமாகும்.
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –
துக்கம் என்பது சிறிதும் இல்லாத எல்லையற்ற ஆனந்தத்துடன் வைகுண்டத்தில் திகழ்கிறார் திருமால்.
அவரது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை, அதில் துக்கத்தின் கலப்பும் இல்லை.

எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் –
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் தனியாகப் பார்த்தாலும் அழகு நன்கு வெளிப்படுகிறது,
திருமேனியை மொத்தமாகப் பார்த்தாலும் அழகு திகழ்கிறது. அந்த அழகின் ஒளியானது வைகுண்ட லோகம் முழுவதும்
பரவி வெள்ளம் போலே பெருக்கெடுத்து ஓடுகிறது.

அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
தாமரை மலரின் வாசனையே ஒரு வடிவம் கொண்டது போல் திகழ்கின்ற மகாலட்சுமியுடன் ஆனந்தமாக இணைந்து
களித்து மேலும் மகிழ்பவர். அதாவது, தனக்கே உரித்தான இயற்கையான பரமானந்தம் அளவிறந்து இருக்க,
அதற்கும் மேலான பரமானந்தமாக மகாலட்சுமியுடன் சிருங்காரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்கிறார் திருமால்.

எல்லையில் ஞானத்தன் –
மகாலட்சுமியோடு இப்படி உறவாடுவதற்குத் தேவையான பேரறிவைக் கொண்டவர் திருமால்.
அவரது ஞானத்துக்கு எல்லையே இல்லை.

ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் –
அந்த ஞானத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்ய வல்லவர் திருமால். அதாவது,
மனிதர்களான நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தியே செய்ய முடியும்.
ஆனால் இந்த உலகை இயக்குதல் உட்பட அனைத்தையும் திருமால் தனது எண்ணத்தாலேயே செய்து முடித்து விடுகிறார்.

எல்லையில் மாயனை –
எல்லையில்லாத வியக்கத்தக்க செய்கைகளைக் கொண்டவர் திருமால்.

கண்ணனை –
அந்த லீலைகளை நமக்குச் செய்து காட்டும் பொருட்டுக் கண்ணனாக வந்து அவர் எளிமையுடன் அவதரித்தார்.

தாள் பற்றி –
அந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கியதால்

யான் ஓர் துக்கம் இலனே – எனக்கு வாழ்வில் ஒரு சிறிய துக்கம் கூட இல்லை, நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்கார ரசம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி, லீலைகள், எளிமை
உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்கச் சிந்திக்க, நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று
இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.
இவ்வாறு நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்க வல்ல எண்ணற்ற மேன்மைகளைத் திருமால் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.
பெரிய வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்து வைத்தால், அதில் அலைகள் சுழித்துச் சுழித்துப் பெருகும் அல்லவா?
அதுபோலத் தான் திருமாலின் எல்லையற்ற மேன்மைகளும் பெரு வெள்ளத்தில் எழும் அலைகள் போல் சுழித்துச் சுழித்துப் பெருகுகின்றன.

‘ஆவர்த்த:’ என்றால் சுழல் என்று பொருள். ‘சத’ என்றால் நூறு.
நூற்றுக் கணக்கான சுழல்களாய்ச் சுழித்துச் சுழித்துப் பெருகும் மேன்மைகளை உடையவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘சதாவர்த்த:’ (சத + ஆவர்த்த: = சதாவர்த்த:) என்றழைக்கப்படுகிறார்.
‘சதாவர்த்த:’ என்றால் நூற்றுக்கணக்கான சுழற்சிகளை உடையவர், அதாவது
சுழித்துப் பெருகும் நூற்றுக்கணக்கான மேன்மைகளைக் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 345-வது திருநாமம்.
“ஸதாவர்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் இன்பச் சுழல்கள் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————–

346. பத்மினே நமஹ (Padhmine namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
தமிழகத்தில் வாழ்ந்த ஒரு கணவனும் மனைவியும் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றார்கள்.
சுற்றுலா வந்த இடத்தில் மனைவிக்குக் குருவாயூரப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தன் விருப்பத்தைக் கணவனிடம் தெரிவித்தாள் அப்பெண்.
ஆனால் கணவனோ, “ஆனந்தமாகச் சுற்றுலா வந்த வேளையில், கோவில், பூஜை, வழிபாடு
இவற்றைச் செய்ய எனக்கு மனமில்லை!” என்று மறுத்தார். ஆனாலும் மனைவி கட்டாயப் படுத்தியதால்
குருவாயூர் கோவிலுக்கு வந்தார்.

கோவிலுக்கு வந்த போதும், “சுற்றுலாவுக்காக ஆசையாக வந்த என்னை இப்படிக் கோவிலில் கொண்டு வந்து
வரிசையில் நிறுத்தி விட்டாயே!” என்று மனைவியைப் பார்த்துப் புலம்பிக் கொண்டே இருந்தார்.
மனைவியோ, “கண்கண்ட தெய்வமாய் இருக்கும் குருவாயூரப்பனைத் தரிசிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?
அதை உணராமல் இப்படிப் பேசுகிறாரே!” என்று மனதுக்குள் வருந்தினாள்.
“குருவாயூரப்பா! நீயே நல்வழி காட்டு!” என்று வேண்டிக் கொண்டே குருவாயூரப்பன் சந்நிதியை நோக்கிச் சென்றாள்.

வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தவாறே, குருவாயூரப்பனுக்கு முன்னே வந்து அந்த தம்பதியர் நின்றார்கள்.
இறைபக்தி நிறைந்த அப்பெண் குருவாயூரப்பனின் அழகில் ஈடுபட்டு வணங்கியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் கோவிலுக்கு வருவதற்கே விருப்பம் இல்லாமல் இருந்த அவளது கணவர் குருவாயூரப்பனின்
வடிவழகைக் கண்ட மாத்திரத்தில், மனதுக்குள் இனம் புரியாத ஓர் ஆனந்தத்தை அநுபவித்தார்.

காயாம்பூவைப் போன்ற அழகிய ஓர் ஒளி. அதன் நடுவிலே ஒரு குழந்தையின் வடிவம்.
அதில் பேரின்பத்தின் சுவை ததும்புகிறது. சுருண்ட தலைமுடி பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியில் விழ,
இரு விழிகளும் அருட்கடலாய்ப் பொங்கி வந்து மனதைக் குளிர்விக்க,
இரு கன்னங்களும் இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல ஒளிவீச,
மெல்லிய புன்னகை சிவந்த உதடுகளுக்கு மேலும் அழகூட்டக் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தரும்
குருவாயூரப்பனின் அழகு அந்த நபரின் மனதை முழுமையாகக் கொள்ளை கொண்டு விட்டது.

உடனே, “இறைவா! நான் விருப்பமே இல்லாமல் தான் இந்தக் கோவிலுக்கு வந்தேன்.
ஆனால் இப்போது உன்னைத் தரிசித்தவாறே எனது எண்ணம் மாறி விட்டது. உன்னைத் தரிசித்ததால் தான்
நான் பிறவிப் பயனையே பெற்றவன் ஆனேன். உன்னைக் காணாத கண் கண் அல்ல!” என்று மனம் விட்டுக் கூறினார்.
சந்நிதியில் இருந்து வெளியே வந்ததும் அந்தப் பெண் தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அது தான் குருவாயூரப்பனின் மகிமை.
விருப்பமே இல்லாமல் கோவிலுக்கு வந்த உங்கள் மனதையும் ஈர்த்து விட்டான் பாருங்கள்!” என்றாள்.
“ஆமாம்! இனி ஒவ்வொரு வருடமும் ஒருமுறையாவது இந்தக் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனைத் தரிசித்தே தீருவேன்!”
என்று அங்கேயே உறுதி பூண்டார் அவளது கணவர்.

பக்தியே இல்லாமல் கோவிலுக்கு வந்தவர் குருவாயூரப்பனைத் தரிசித்தவுடன் பெரும் பக்தராகி விட்டாரே!
அது எப்படிச் சாத்தியம்? வேறொன்றுமில்லை. குருவாயூரப்பன் தன் அழகினால் அவரது மனதை நன்கு கட்டிப் போட்டு விட்டான்.
இறைவனின் அழகு, குணங்கள் ஆகியவற்றை நாம் நன்றாக அநுபவிக்கத் தொடங்கி விட்டால்,
நம் மனம் மற்ற அற்ப விஷயங்களில் இருந்து விலகி, முழுமையாக இறை விஷயத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது. அதுதான் இங்கே நடந்தது.

இக்கருத்தை ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் குருவாயூரப்பனைக் குறித்து எழுதிய
மணிமங்கல ஸ்தவத்தில் அழகாகப் பாடியுள்ளார்:
“நாலஸ்ய மூலம் சரணாங்குலிப்யாம் பத்மம் ப்ரஸூனம் கர பங்கஜேன க்ருண்ஹன்
க்ருஹீதம் ஹ்ருதயாம்புஜம் நு மதீயம் ஆவேதயஸீதி மன்யே”
“குருவாயூரப்பா! உன் வலது கீழ்க் கரத்தில் நீ ஏன் தாமரை ஏந்தி இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உன்னிடம் வரும் அடியார்களின் உள்ளமாகிய தாமரையை உன் கரத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுகிறாய்.
நீ பிடித்துக் கொண்டவாறே அவர்களின் உள்ளத் தாமரை உன்னிடமேயே நிலைபெற்று விடுகிறது.
அதன் பின் அவர்களின் மனம் மற்ற விஷயங்களை நாடுவதில்லை.

அடியார்களின் உள்ளத் தாமரையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை உணர்த்தவே
கையில் தாமரையை ஏந்தியபடி நீ காட்சி தருகிறாய்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

‘பத்மம்’ என்றால் தாமரை. ‘பத்மீ’ என்றால் தாமரையை ஏந்தி இருப்பவன்.
அடியார்களின் உள்ளங்களாகிய தாமரையைக் கவர்பவன் என்பதற்கு அடையாளமாகத்
தாமரையைத் திருக்கையில் ஏந்தி இருப்பதால், திருமால் ‘பத்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 346-வது திருநாமம்.
“பத்மினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களைத் திருமால் கவர்ந்து செல்வார்.

————-

347. பத்ம நிபேக்ஷணாய நமஹ (Padhma Nibhekshanaaya namaha)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவஹீந்திரபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்து
ஐம்பது ஸ்லோகங்கள் அடங்கிய தேவநாயக பஞ்சாசத் என்ற துதியை இயற்றினார் வேதாந்த தேசிகன்.
அதில் 16-வது ஸ்லோகம் முதல் 45-வது ஸ்லோகம் வரை உள்ள முப்பது ஸ்லோகங்களாலே
தெய்வநாயகப் பெருமாளின் திருமுடியிலிருந்து திருவடி வரை உள்ள ஒவ்வொரு அவயவத்தையும்
ஆழ்ந்து அநுபவித்து வர்ணித்துள்ளார் தேசிகன்.
அதில் 24 மற்றும் 25-வது ஸ்லோகங்களில் தெய்வநாயகப் பெருமாளின் கண்ணழகை
இரண்டு உவமைகளைக் கொண்டு வர்ணிக்கிறார் தேசிகன்.

“ஆலக்ஷ்ய ஸத்த்வம் அதிவேல தயோத்தரங்கம்
அப்யர்த்தினாம் அபிமத ப்ரதிபாதனார்ஹம்
ஸ்நிக்தாயதம் ப்ரதிம சாலி ஸுபர்வ நாத
துக்தாம்புதே: அநுகரோதி விலோசனம் தே” என்ற 24-வது ஸ்லோகத்தில்,
பாற்கடலோடு திருமாலின் கண்களை ஒப்பிடுகிறார் தேசிகன்.

திருப்பாற்கடல் தெய்வநாயகனின் திருக்கண்கள் எப்போதும் அலைகள் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன
கருணை அலை அலையாகக் கரை புரண்டு ஓடி வருகின்றது
ஐராவதம், காமதேனு, சந்திரன், அமுதம் என அவரவர் விரும்பிய பொருட்களை எல்லாம் தந்தது
அடியார்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் அக்கண்கள் அருளி விடுகிறது அகன்று இருக்கிறது
அடியார்களுக்கு நிறைய அருள்புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினாலே அகன்று விரிந்து காதுவரை நீண்டுள்ளது
பார்ப்பதற்கு அழகாக உள்ளதுபார்ப்பதற்கு அழகாக உள்ளது கடல்பிராணிகளுக்கு (சத்த்வம்) இருப்பிடமாகிறது
சத்துவ குணத்துக்கு (சத்த்வம்) இருப்பிடமாக உள்ளது அடுத்தபடியாக,

“விச்வ அபிரக்ஷண விஹார க்ருத க்ஷணை: தே
வைமானிக அதிப விடம்பித முக்த பத்மை:
ஆமோத வாஹிபி: அநாமய வாக்ய கர்ப்பை:
ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை: அபாங்கை:”–என்ற 25-வது ஸ்லோகத்தில்,
உலகைக் காக்க வல்ல திருமாலின் அருட்பார்வை மலர்கின்ற தாமரைப் பூவை ஒத்திருக்கின்றது என்று ஒப்பிடுகிறார் தேசிகன்.

மலரும் தாமரை தெய்வநாயகனின் அருட் பார்வை.ஆமோதம் (நறுமணம்) நிறைந்திருக்கிறது
ஆமோதம் (மகிழ்ச்சி) நிறைந்திருக்கிறது.
நம்மிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நம்மைப் பார்த்து நலமா என்று விசாரித்து,
நம்முடன் அக்கண்கள் பேசுகின்றன.தேனைப் பொழிகிறது அமுத மயமான அருளைப் பொழிகிறது.
அதில் நனைந்தால் வெப்பம் தணிந்து உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுகிறது
அதில் நனைந்தால், பிறவிப் பிணியிலுள்ள வெப்பங்கள் விலகி, ஆத்மாவுக்குக் குளிர்ச்சி உண்டாகிறது.

‘பத்ம’ என்றால் தாமரை. ‘நிப’ என்றால் போன்ற. ‘ஈக்ஷண’ என்றால் பார்வை.
‘பத்மநிபேக்ஷண:’ என்றால் தாமரை மலர்வது போன்ற பார்வையை உடையவர் என்று பொருள்.
தாமரை மொட்டு எப்படி அழகாக, நளினமாக, மென்மையாக, குளிர்ச்சியோடு மகிழ்ச்சியும் அளித்தபடி மலருமோ,
அதுபோல் இறைவன் கண்ணை மூடித் திறப்பது என்பதும் அழகாக, நளினமாக, மென்மையாக இருக்கும்;
நமது துயரங்களை எல்லாம் போக்கி மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.

அதனால் தான் திருமால் ‘பத்மநிபேக்ஷண: –
தாமரை மலர்வது போன்ற திருக்கண் பார்வையை உடையவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 347-வது திருநாமம்.
“பத்மநிபேக்ஷணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால்
தன் திருக்கண்களால் கடாட்சித்துக் குளிர்விப்பார்.

—————-

348. பத்மநாபாய நமஹ (Padhmanaabhaaya namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருமங்கை ஆழ்வாருக்குத் திருமாலிடம் இருக்கும் காதல் உச்சத்தைத் தொட்ட அளவிலே,
பரகால நாயகி என்னும் பெண் தன்மையை அடைந்தார் திருமங்கை ஆழ்வார்.
அந்தப் பரகால நாயகி அவ்வப்போது தலைவனாகிய திருமாலைச் சந்தித்து அவனோடு உறவாடுகிறாள்.
இக் காதலைப் பற்றிக் கேள்விப்படுகிறாள் நாயகியின் தாய். “பெண்ணே! இது நம் குடும்ப மானத்துக்கு ஏற்ற செயல் அல்ல!
நீ இப்படி ரகசியமாகக் காதல் கொள்வது நம் கௌரவத்துக்கே இழுக்கு!” என்று சொல்லித்
தலைவனைச் சந்திக்க விடாமல் பரகால நாயகியைத் தடுத்து விடுகிறாள் தாய்.

பரகால நாயகி தன்னைச் சந்திக்க வராதபடியால், அவளுக்கு என்ன ஆயிற்று என்று
அறிய விரும்புகிறார் தலைவனாகிய திருமால். பரகால நாயகி ஊருக்கு வெளியே உள்ள பூந்தோப்பில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள் என்ற செய்தியைத் திருமால் கேள்விப் படுகிறார்.
வேட்டைக்காரனாக வடிவம் பூண்டு, இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்பும் முதுகிலே அம்பறாத் தூணியும்
தாங்கியபடி அந்தப் பூந்தோப்புக்குள் நுழைகிறார்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள்.
அதன்பின் தலைவனாகிய திருமால், “என் ஊரான திருவரங்கத்துக்குப் போகிறேன்!” என்று
சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அதன்பின் அவளது தோழி வந்து தலைவியைச் சந்தித்து,
“தலைவன் வந்தானா? அவன் எப்படி இருந்தான்? அவனைப் பற்றி எனக்குச் சொல்!” என்று கேட்கிறாள்.
அதற்குப் பரகால நாயகி விடையளிக்கிறாள்:

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர்க் குழை இருபாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய்க்கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!”

“தோழியே! கரிய, வாசம் மிக்க, அலகலகாய் இருக்கும் குழல் கற்றைகள் பின்னே அலைந்திட,
இரு காதுகளிலும் மகரக் குண்டலங்கள் அசைந்திட, தெய்வத் தன்மை மனிதத் தன்மை இரண்டும் தோற்றிட,
கையில் வில் ஏந்திக் கொண்டு தலைவன் என் முன்னே வந்து நின்றார்.
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் தாமரையை ஒத்திருக்கும்.
அவரது திருக்கரங்கள், திருவாய், திருக்கண்கள், திருவடிகள் அனைத்துமே தாமரை போன்றவை.

கைவண்ணம் தாமரை- முதலில் தாமரை போன்ற கரங்களால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வாய்க் கமலம் போலும் – தாமரை போன்ற திருவாயினாலே இன்மொழிகள் பேசினார்.
கண் இணையும் அரவிந்தம் – தாமரை போன்ற திருக்கண்களாலேயே பேசித் தனது காதலை என்னிடம் தெரிவித்தார்.
அடியும் அஃதே – அந்தக் கண்ணழகுக்குத் தோற்ற நான் அவரது தாமரை போன்ற திருவடிகளில் விழுந்து
அவற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.

இத்தகைய இறைவன் என் முன்னே வந்து நின்று உறவாடியவாறே, அவரது பெருமையை எண்ணி அஞ்சி
நான் சற்றே விலகி நின்று விட்டேன்!” என்று நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள் பரகால நாயகி.
இத்தகைய அற்புதமான அகத்துறை பக்திப் பாசுரத்தில் வரும்
“கை வண்ணம் தாமரை, வாய்க்கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே” என்ற தொடரில்,
தாமரை, கமலம், அரவிந்தம் அனைத்துமே தாமரை மலரைக் குறிக்கும் வார்த்தைகளே. அதாவது,
திருமாலின் ஒவ்வொரு அங்கமுமே தாமரை போலே இருக்கிறது என்பதே இதன் கருத்தாகும். தாமரையில் நாம் காணக்
கூடிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் மேலும் சிறப்பாக இறைவனின் அங்கங்களில்
உள்ளன என்பது தாத்பரியம்.

அந்த வகையில், திருமாலின் உந்தியும் (கொப்பூழும்) தாமரை போலவே இருக்கிறது.
அதாவது தாமரைக்கே உரிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் ஆகிய அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறது.
தாமரை போன்ற உந்தியை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறார்.
‘பத்ம’ என்றால் தாமரை, ‘நாபீ’ என்றால் உந்தி, ‘பத்மநாப:’ என்றால் தாமரை போன்ற உந்தியை உடையவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 348-வது திருநாமம்.

(முக்கியக் குறிப்பு: 48-வது மற்றும் 198-வது திருநாமங்களாகவும் இதே ‘பத்மநாப:’ என்ற திருநாமம் வருகிறது.
அவ்விரு இடங்களிலும், உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தவர்,
உந்தியிலே தாமரையை உடையவர் என்ற ரீதியில் பொருள் உரைக்கப்பட்டது.
இங்கே 348-வது திருநாமமாக வரும் ‘பத்மநாப:’ என்பது பரவாசுதேவனைக் குறிப்பதால்,
அதற்குப் பொருத்தமாகத் தாமரை போன்ற உந்தியை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளார்கள்)“
பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவை இல்லாமல்
அளவான, ஆரோக்கியமான உடல் அமைப்புடன் திகழத் திருமால் அருள் புரிவார்.

————–

366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

திருவிண்ணகரம் எனப்படும் உப்பிலியப்பன் கோவில் 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்றாகும்.
அங்கே தவம் புரிந்த மார்க்கண்டேய முனிவருக்கு மகளாகப் பூமிதேவி அவதரித்தாள்.
திருமால் அந்தத் திருத்தலத்தில் வந்து அவதரித்துப் பூமிதேவியை மணந்து கொண்டார்.
அப்போது இளம்பெண்ணாக இருந்த பூமிதேவிக்கு உணவில் சரியான அளவு உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது
என்று மார்க்கண்டேயர் சொன்னதால், “இனி இத்தலத்தில் உப்பில்லாத பண்டங்களையே நான் அமுது செய்வேன்!” என்று
சபதம் செய்தார் திருமால். அதனால் உப்பிலியப்பன் (உப்பில்லாத பண்டங்களை அமுது செய்யும் பெருமாள்) என்றே பெயர் பெற்றார்.

அந்த உப்பிலியப்பனுக்கு நிவாசன் என்று மற்றொரு பெயரும் உண்டு. திருமாலுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி என
இரு முக்கிய தேவிகள் உண்டு. அவர்களுள் பூதேவியைத் தானே உப்பிலியப்பன் மணந்து கொண்டிருக்கிறார்?
அப்படியானால் அவர் பூநிவாசன் என்று தானே அழைக்கப்பட வேண்டும்? ஏன் ஸ்ரீ நிவாசன் என்று அழைக்கப்படுகிறார்?
அதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளதாக ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் ஸ்ரீ வசுமதி சதகம் என்ற நூலில் தெரிவிக்கிறார்.

சீதா கல்யாணத்தின் போது, சீதைக்கு அலங்காரம் செய்த பெண்கள் அத்தனை பேரும் சீதையின் அழகைக் கண்டு
மயங்கியதாகக் கம்பன் பாடுகிறான்.
இன்னொரு பெண்ணின் அழகு என்பது ஓரளவுக்கு உட்பட்டு இருந்தால் தான், மற்ற பெண்கள் பொறாமைப் பட வாய்ப்புண்டு.
ஆனால் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகாலட்சுமியின் அழகைப் பார்த்தவாறே, அந்த பெண்களுக்குப் பொறாமை வரவில்லையாம்.
மாறாக மயக்கம் தான் ஏற்பட்டதாம். இதோ கம்பனின் பாடல்:

“கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் சொல் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தஞ்சொற்கள் குழறித் தந்தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்பதொன்றே அன்றோ”

வண்டுகள் மலர்களில் இருந்து தேனைப் பருகுவது போல், அலங்காரம் செய்ய வந்த பெண்கள்
சீதை என்னும் மலரில் உள்ள அழகென்னும் தேனைப் பருகத் தொடங்கினார்கள்.
இப்படிப் பெண்களும் மயங்குவது சாத்தியமா என்றால், கம்பன் அதற்கும் பதில் சொல்கிறான்.
ஆணோ பெண்ணோ உடல்தான் வேறு, மனம் என்பது எல்லோர்க்கும் ஒன்று தானே!
இந்த அழகைப் பார்த்தால் எம்மனமும் மயங்கத்தான் செய்யும் என்கிறான்.
இது உயர்ந்த கலைக் கண்ணோட்டத்தோடு கண்டு ரசிக்க வேண்டிய கவிநயம் பொருந்திய பாடலாகும்.

அதுபோலத் தான் உப்பிலியப்பன் கோவிலில் அவதரித்த பூமிதேவியும் பேரழகியாகத் திகழ்கிறாள்.
அவளது அழகைக் கண்டு மகாலட்சுமியே மயங்கினாளாம்.
தனது சகோதரியான பூதேவியை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ தேவி (மகாலட்சுமி) விரும்பினாள்.
அதற்கு என்ன வழி என்று சிந்தித்தாள் ஸ்ரீ தேவி. உப்பிலியப்பனின் திருமார்பில் ஸ்ரீ தேவி அமர்ந்து கொண்டால்,
உப்பிலியப்பன் எப்போது பூதேவியை அணைத்துக் கொண்டாலும், மார்பிலுள்ள ஸ்ரீ தேவியும் அப்படியே
அவரோடு சேர்ந்து பூதேவியை அணைத்துக் கொள்ளலாம் அல்லவா?
அதனால் ஸ்ரீ தேவி உப்பிலியப்பனின் திருமார்பில் அமர்ந்தாள்.
இப்படி ஸ்ரீ தேவியைத் திருமார்பில் கொண்டதால், ஸ்ரீ நிவாசன் என்று உப்பிலியப்பன் பெயர் பெற்றார்.
இக் கருத்தைச் சொல்லும் விதமாக வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் அருளிய சிருங்கார ரசம் நிறைந்த ஸ்லோகம்:

“மாத: ந கேவலம் அஸௌ உரஸி த்வதீயே
பேஜே ரதிம் கடின பீட குசாபிராமே
ஏஷா ரமாபி ரமணோரஸி வாஸம் ஏதி
தத் தாத்ருச த்வத் உரஸ: பரிரம்பணேச்சு:”

(இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்கும் இந்த தெய்வீக சிருங்காரச் சுவையை நம் உலகியல் சிருங்காரத்தோடு
பொருத்திப் பார்ப்பது தவறாகும். நம் மனதைத் தூய்மையாக்கி, பக்தியை வளர்த்து,
உலகியல் பற்றுகளைப் போக்கவல்ல சிருங்காரம் இது.)
உப்பிலியப்பன் உற்சவ மூர்த்தியின் திருமார்பில் பொன்நிறம் கொண்ட ஸ்ரீ தேவி வந்து அமர்ந்த படியால்,
அவளது பொன்நிற ஒளியின் பிரதிபலிப்பு பட்டு, அதனால் பொன்போல் சிவந்தார் உற்சவர்.
பொதுவாகத் திருமால் கருநீல வண்ணம் கொண்டவர் தான். ஆனால் அன்னையின் ஒளியின் பிரதிபலிப்புப் பட்டுப்
பொன்போல் மிளிரத் தொடங்கினார்.
அதனால் தான் உப்பிலியப்பன் கோவில் உற்சவர் ‘பொன்னப்பன்’ என்றே பெயர் பெற்றார்.

நம்மாழ்வாரும்,

“பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்”–என்று பாடுகிறார்.

இவ்வாறு திருமார்பில் உள்ள மகாலட்சுமியின் பொன் நிற ஒளிபட்டு, பொன் போல் சிவந்து விளங்குவதால்,
‘ரோஹித:’ என்று திருமால் அழைக்கப் படுகிறார். ‘ரோஹித:’ என்றால் சிவந்திருப்பவர் என்று பொருள்.
இக்காலத்தில் ரோஹித் என்று சூட்டப்படும் பெயர்களெல்லாம் இதன் திரிபே ஆகும்.
‘ரோஹித:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 366-வது திருநாமம்.
“ரோஹிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பொன் போன்ற மனத்துடன்
பொன் மனச் செம்மல்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

367. மார்காய நமஹ (Margaaya namaha)
1971-ம் வருடம். அடியேனின் குருவான டாக்டர் ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி பொறியியல் படிப்பு முடித்திருந்த சமயம்.
மத்திய அரசில் பொறியாளர் பதவிக்கான தேர்வு அப்போது நடைபெற்றது. அந்தத் தேர்வை எழுதிய ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார்.அப்போது பாரத தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்து விட்டது.
அதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது.
தேர்வு முடிவு வராமல் மத்திய அரசு வேலை கிடைப்பது தாமதம் ஆக,
குடும்பத்தின் வறுமைச் சூழல் மேலும் மோசமாகிக் கொண்டே போனது.

இன்றைய சட்டீஸ்கார் மாநிலத்தில் உள்ள பிலாயில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய
நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார். ஆனால் அவர் குடுமி வைத்துக் கொண்டு
திருமண் அணிந்திருப்பதைக் காரணம் காட்டிய அந்த நிறுவனத்தினர், அவற்றை அகற்றி விட்டு வந்தால்
பணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினர். பெரியோர்களின் வழக்கத்தை மீறிப் பணியில் சேர்வதை விரும்பாமல்
அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

சென்னைக்குத் திரும்பும் வழியில் ஐதராபாத்துக்கு அருகில் உள்ள சிலுக்கூர் விஸா
ஸ்ரீ பாலாஜி கோவிலுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.
அப்போது அங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்கு முன்னே நின்ற ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
“இறைவா! எனது எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டது! என் தந்தையின் ஆணைப்படி குடுமியும் திருமண்ணும் தரித்தால்
எனக்கு வேலை கிடைக்காதா? நீ தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்!” என்று வேண்டி,
கதறி அழுது அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது அவரைத் தேற்றிய அர்ச்சகர், “பெருமாளுக்கு ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்.
எல்லாம் சரியாகி விடும்!” என்று சொல்லி, அப்போதே ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனையைச் செய்தார்.
அதன்பின் கோவிலிலேயே அமர்ந்து ஸ்ரீ மத் பாகவத புராண பாராயணமும் செய்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

பாராயணம் முடிந்தபின் அர்ச்சகர், “கருணாகரா! கவலைப் படாதே! அடியார்களால் பலவிதமான பலன்களுக்காகப்
பெருமாள் நாடப்படுகிறார். அந்தந்தப் பலன்களை அவரவர்க்குத் தரவும் செய்கிறார்.
திரௌபதி புடவை கேட்டாள், கண்ணன் கொடுத்தான். பாண்டவர்கள் ராஜ்ஜியம் கேட்டார்கள், கண்ணன் கொடுத்தான்.
விபீஷணன் கைங்கர்யத்தைக் கேட்டான், ராமன் கொடுத்தான். காகாசுரன் உயிர்பிச்சை கேட்டான், ராமன் கொடுத்தான்.
பிரகலாதன் பக்தியைக் கேட்டான், நரசிம்மன் கொடுத்தான். இந்திரன் தேவலோகப் பதவியைக் கேட்டான், வாமனன் கொடுத்தான்.
நீயும் நாடினால், உனக்குத் தேவையான வேலையை அவன் கொடுக்க மாட்டானா?” என்று சொல்லித் தேற்றினார்.

அதனால் மனவலிமை பெற்ற கருணாகராச்சாரியார் மறுநாள் காலை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்
நடந்த ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். விஸா ஸ்ரீ பாலாஜியின் அருளால் அங்கே அவருக்கு வேலை கிடைத்து விட்டது.
வேலை கிடைத்ததோடு மட்டுமின்றி, ஐதராபாத்திலேயே தங்கி, மாலை வேளைகளில் விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்குத்
தொண்டு செய்யும் பாக்கியத்தையும் அப்பெருமாள் அருளிவிட்டார்.

இவை மட்டுமா? விரைவில் போர் முடிந்தது. நிலுவையில் இருந்த மத்திய அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
அதே ஐதராபாத்தில் ஜியோலஜிக்கல் ஸர்வே ஆஃப் இந்தியாவில் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகளுக்கு
மத்திய அரசுப் பொறியாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் ஐதராபாத்தில் தங்கி இருந்து
தனக்குப் பேரருள் புரிந்த விஸா ஸ்ரீ பாலாஜிக்குப் பல கைங்கர்யங்கள் செய்து வந்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

இப்படி அடியார்கள் என்ன வரத்தை வேண்டி வந்தாலும், அவற்றைக் குறைவில்லாமல் அருளி விடுகிறார் திருமால்.
தாங்கள் வேண்டும் வரங்களைப் பெறுவதற்காக அடியார்களால் நாடப்படுவதால் திருமால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் நாடப்படுபவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 367-வது திருநாமம்.
“மார்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நாடிய பொருள்கள் கைகூடும்.

———————

368. ஹேதவே நமஹ (Hethave namaha)

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார்.
காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு
ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.
ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன். நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு
உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி,
உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை.
ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!” என்றார்.

“நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது.
எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும்.
நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள்.
எனவே நான் தோல்வி அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும்
நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!” என்று விடையளித்தார்.

வாதம் தொடங்கியது. மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம்
பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது. யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு
யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர். பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில்,
யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை.
“நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.
மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார். அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே,
யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார்.
“சுவாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு
எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார்.

அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது.
நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன்.
ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின்
அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!” என்று கூறினார்.
அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன்.
அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர். இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன்.
காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம்.
ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!” என்று கூறினார்.

தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி,
அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,
எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து,
‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.

அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.
ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம். ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம்.
அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.
“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும்
குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள் புரிவார்.

————-

369. தாமோதராய நமஹ (Dhaamodharaaya namaha)

ஸ்ரீ மத் அகோபில மடத்தின் 42-வது பீடாதிபதியான ஸ்ரீ மத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரிடம் வந்த ஒரு சீடர்,
“ஆழ்வார் ஏன் தவறாகப் பாடி விட்டார்?” என்று கேட்டார். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் அழகிய சிங்கர்.
“ஆம்! நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் முதல் பத்து, மூன்றாம் பதிகத்தின் முதல் பாடல்,

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

இப்பாடலில் கண்ணன் உரவிடை உரலோடு ஆப்புண்டான் என்று ஆழ்வார் பாடி இருக்கிறார்.
உரம் என்றால் மார்பு. யசோதை கண்ணனின் மார்பில் கயிற்றைச் சுற்றி உரலோடு கட்டிப் போட்டதாகத் தானே இதற்குப் பொருள் வரும்?
ஆனால் உண்மையில் யசோதை கண்ணனின் இடுப்பில் தானே கயிற்றைச் சுற்றினாள்? ஏன் ஆழ்வார் தவறாகப் பாடினார்?” என்று கேட்டார் சீடர்.

“தெரியவில்லை! பார்த்துத் தான் சொல்ல வேண்டும்!” என்று பதில் அளித்தார் அழகிய சிங்கர்.
அந்தச் சீடரும் மடத்திலிருந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது அந்தச் சீடரின் நண்பர் ஒருவர், “நீங்கள் குருவிடம் கேள்வி கேட்ட முறை சரியில்லை.

அதனால் தான் அவர் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஆசாரியர்களிடம் நாம் ஐயங்களை விண்ணப்பிக்கும் போது பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் அல்லவா?
திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் எங்காவது தவறாகப் பாடுவாரா?
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்பதாலேயே அதைத் தவறு எனலாமா?
நீங்கள் கேட்ட கேள்வியைச் சற்றே பணிவோடு குருவிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்.

சீடர் மீண்டும் அழகிய சிங்கரிடம் வந்து, அவரை விழுந்து நமஸ்கரித்து,
“சுவாமி! அடியேனை மன்னித்தருள வேண்டும். உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதன் காரணம்
அடியேனின் சிற்றறிவுக்குப் புரியவில்லை. தேவரீர் கருணையோடு விளக்கம் கூறி அருள வேண்டும்!” என்று கோரினார்.
அப்போது இஞ்சிமேட்டு அழகிய சிங்கர், “யசோதை கண்ணனின் இடுப்பில் தான் கயிற்றைச் சுற்றி அவனை உரலோடு கட்டினாள்.
ஆனால் உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. உதரம் என்றால் வயிறு. உதரவிடை என்பது இடைக்குறையாக உரவிடை என்று பாடலின் அமைப்புக்காக மாறி இருக்கிறது.

2. உரம் என்றே வைத்துக் கொண்டால், மார்போடு கட்டுண்டான் என்று பொருள்படும். அதிலும் ஒரு ரகசியம் உள்ளது.
திருமால் பக்தர்களுக்குக் கட்டுப்படும் போது, தான் மட்டும் தனியாகக் கட்டுப்படுவதில்லை.
தன் மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுப் படுகிறான்.
கண்ணனின் திருமார்பில் எப்போதும் இருக்கிறாள் அல்லவா மகாலட்சுமி?
யசோதை கண்ணனைக் கட்டிய போது மகாலட்சுமி என்ன செய்து கொண்டிருந்தாள்?
அவளும் கண்ணனோடு சேர்ந்து அந்த உரலுடன் கட்டுண்டு கிடந்தாள்.

இப்படிப் பெருமாளும் தாயாரும் இணைந்து பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நமக்கு உணர்த்தவே,
உரவிடை ஆப்புண்டு – மார்புடன் கட்டுண்டான் – மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுண்டான் என்று
ஆழ்வார் பாடியுள்ளார்!” என விளக்கினார்.இந்த விளக்கத்தைக் கேட்டவாறே, பரவசம் அடைந்த அந்த சீடர்,
கண்ணனின் கருணையையும் குருவின் ஞானத்தையும் எண்ணி வியந்து, அழகிய சிங்கரின் திருவடிகளில் விழுந்து
ஆசி பெற்றுக் கொண்டு, அறிவுரை சொன்ன நண்பருக்கும் நன்றி தெரிவித்து விட்டு மடத்தில் இருந்து புறப்பட்டார்.

தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு.
வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் ‘தாமோதரன்’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 369-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“தாமோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்கும் கண்ணன் கட்டுப்படுவான்.

————

————-

378. ஸ்ரீ கர்ப்பாய நமஹ (Shreegarbhaaya namaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
ராம பாணத்தால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்த வாலி, பாணத்தில் இருந்த ராம நாமத்தைக் கண்டு,
தன்னைத் தாக்கியவன் ராமன் என உணர்ந்தான்.
தன் எதிரே ராமனைக் கண்ட வாலி, பலவாறாக ராமனை ஏசினான்.
ராமனின் செய்கையைக் குறித்துப் பல கேள்விகளும் கேட்டான்.
அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே நின்ற ராமன், வாலியைப் பேச விட்டுவிட்டு,
பின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து நியாயத்தை எடுத்துச் சொன்னான்.

ராமனை நிந்தித்த போது வாலியின் கூற்றாகக் கம்பர் ஒரு பாடல் அமைத்துள்ளார்:
“கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ?
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை!”
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! –

சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு மிக்க வடிவம் கொண்ட ராமா!
கோவியல் தருமம் – அரச நீதி என்பது
உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் சூரிய குலத்தில் பிறந்த
எல்லோருக்கும் உடைமை அன்றோ? – பரம்பரை சொத்து அல்லவா?
அந்த தர்மத்தை நீ மறந்து என்னைத் தாக்கி இருக்கிறாய் என்றால், இது சீதையின் பிரிவினால்
நீ குழம்பிப் போய் செய்த காரியம் போல் தெரிகிறது.
ஆவியை – உயிரான சீதையைப் பிரிந்து வெற்று உடல் போல் நீ ஆகிவிட்டாய்.
சனகன் பெற்ற அன்னத்தை – தண்ணீர், பாலைப் பிரித்து அறியும் அன்னம் போன்ற சீதையை இழந்ததால்
தர்மம், அதர்மத்தைப் பிரித்து அறியத் தெரியாமல் என்னைத் தாக்கிவிட்டாய்.
அமிழ்தின் வந்த தேவியை – பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய மகாலட்சுமி என்னும் அமுதை இழந்தபடியால், நீ நஞ்சாக மாறிவிட்டாய்.
பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – அவளைப் பிரிந்த திகைப்பில் மனம் குழம்பி நீ செய்த செயல் இது.
சீதை உன்னோடு இருந்திருந்தால், இச்செயலை அனுமதித்திருக்க மாட்டாள்.

இவ்வாறு வாலி பேசவே, ராமன் தலை குனிந்தானாம். அவமானத்தாலா? நிச்சயமாக இல்லை!
ஆனால் ராமன் தலைகுனிந்து விட்டு மீண்டும் நிமிர்ந்தவாறே, வாலி தனது தவறை உணர்ந்து,
“ராமா! என்னை மன்னித்தருள வேண்டும்! நான் என் தம்பியின் மனைவியை அபகரித்தது என் தவறு!
அதற்கான தண்டனையை நீ எனக்குச் சரியாகத்தான் வழங்கி இருக்கிறாய்!” என்றான்.
அதெப்படி ராமன் குனிந்து நிமிர்ந்தவுடன் வாலியின் மனம் மாறும்?

ராமன் அவமானத்தால் தலைகுனியவில்லை.
“சீதையைப் பிரிந்ததால் குழம்பிப் போய் என்னைத் தாக்கினாய்!” என்று வாலி சொன்னான் அல்லவா?
“சீதை எங்கும் போகவில்லை! இதோ என் மார்பில் இருக்கிறாள் பார்!” என்று வாலிக்குக் காட்டவே
ராமன் தலை குனிந்து தனது திருமார்பைப் பார்த்தான். திருமகளும் திருமாலும் என்றும் பிரிவதே இல்லை.
சீதை ராமனைப் பிரிந்து இருப்பதெல்லாம் அவதாரத்தில் அவர்கள் செய்யும் நாடகமே என உணர்ந்தான் வாலி.

மேலும், திருமார்பில் திருமகள் இருக்கும் போது ராமன் தன்னைத் தாக்கி இருக்கிறான் என்றால்
அது நூற்றுக்கு நூறு சரியான செயலே என்றும் உணர்ந்தான் வாலி.
ஏனெனில் தவறான செயலைத் திருமால் செய்ய முற்பட்டால் திருமகள் தடுத்திருப்பாளே!
அதனால்தான் தன் தவறை உணர்ந்து ராமனிடம் மன்னிப்பும் கோரினான்.

இச்சம்பவத்தில் இருந்து, திருமகள் திருமாலை என்றுமே விட்டுப் பிரிவதில்லை என்று அறிய முடிகிறதல்லவா?
எப்போதும் மகாலட்சுமியைத் தனது திருமார்பில் கொண்டு, தனது செய்கைகளால் அவளை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார் திருமால்.
இப்படி மகாலட்சுமியைத் திருமார்பில் வைத்துக் காப்பதால் திருமால் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்ரீ ’ என்றால் மகாலட்சுமி. ‘கர்ப்ப:’ என்றால் கருவிலுள்ள குழந்தை.
மகாலட்சுமியைத் திருமார்பில் தாங்கிக் கருவில் உள்ள குழந்தையைத் தாய் காப்பது போல் அவளைத் திருமால் காப்பதால்,
அவர் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 378-வது திருநாமம்.

“ஸ்ரீ கர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இல்லங்களில் என்றென்றும்
லட்சுமி கடாட்சம் நிறையும்படித் திருமாலும் திருமகளும் அருள் புரிவார்கள்.

—————-

379. பரமேச்வராய நமஹ (Parameshvaraaya namaha)
திருக்கோவில்களில் திருமால் ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வதை நாம் கண்டிருப்போம்.
அதன் தாத்பரியம் என்ன என்பதைத் திருவரங்கக் கலம்பகம் எனும் நூலில் பிள்ளைப் பெருமாள் சுவாமி தெரிவிக்கிறார்:

“உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும்
ஊசல் ஆடுவது அடியேன் ஒழியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கிக்
கருணை எனும் ஊஞ்சலில் திருமாலுக்கு

அருகிலே திருமகள் வந்து அமர்கிறாளாம்.
திருமகளிடம் திருமால், “தேவி! நீதான் என்னை இப்போது வழி நடத்த வேண்டும்.
மனிதர்களின் மனமாகிய ஊஞ்சலில் அவர்களுக்கு அருள்புரியவே நாம் இப்போது அமர்ந்திருக்கிறோம்.
ஆனால் இவர்களின் தவறுகளைப் பார்த்துத் தண்டிப்பதா? அல்லது கருணையால் இவர்களை
மன்னித்து ஏற்பதா? என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

அதற்குத் திருமகள், “சுவாமி! உலகில் தவறு செய்யாதவர் என்று எவருமே இலர்.
தவறு செய்யாதவர்க்கு மட்டுமே அருள்புரிவது என்று நீங்கள் முடிவெடுத்தால், யாருக்குமே அருள்புரிய முடியாது.
எல்லாரையும் தண்டிப்பது என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது!” என்கிறாள்.
திருமாலோ, “அப்படியானால் எல்லாரையும் மன்னித்து விட்டுவிட்டால் அது முறையாகுமோ?” என்று கேட்கிறார்.

திருமகள், “அப்படிச் செய்ய வேண்டாம்! எல்லோரும் தவறு செய்வார்கள்.
ஆனால் அவர்களுள் யாரெல்லாம் தவறை உணர்ந்து நீங்களே கதி என்று சரணாகதி செய்கிறார்களோ,
அவர்களிடம் கருணையைக் காட்டுங்கள். தண்டிக்காதீர்கள்.
மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்து வருபவர்களைத் தண்டித்துத் திருத்தி நல்வழிப்படுத்துங்கள்!” என்கிறாள்.
இதுவே சரியான யோசனை என்று சொல்லி, மனம் திருந்திச் சரணடையும் அடியார்களிடம் கருணையைக் காட்டுவது
என்று முடிவெடுக்கிறார் திருமால்.
நம் உள்ளங்களாகிய ஊஞ்சலில் இப்படி மகாலட்சுமியோடு சேர்ந்து அமர்ந்து நம்மைக் காத்தருள்கிறார்.

இதை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வசுமதி சதகத்தில்,
“ஸ்ரீ மான் தண்டதர: ஸ்வயம் ஜகத் இதம் ப்ராய அபராதை: யுதம்
சிக்ஷ்யம் வா அத நு ரக்ஷ்யம் இதி அதிதராம் ஆரூட டோலோ ஹரி:
அந்த்யம் ஸாது ததோ விசார்ய பவதீம் அஸ்மின் ஸ்தலே ஜாக்ரதீம்
அங்கீக்ருத்ய ததோசிதாம் ப்ரணயினீம் நித்யம் க்ஷமாம் க்ரீடதி”–என்று வர்ணிக்கிறார்.

உலகை எல்லாம் ஆளும் திருமாலின் காக்கும் தொழில், மகாலட்சுமியின் ஆலோசனையைப் பெறுவதால் தான்
முழுமை பெறுகிறது என்பதை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா?
திருமாலின் ஆளுமையும் திருமகளின் அருளும் இணைந்திருப்பதால்தான் உலக நிர்வாகம் சரியாக நடைபெறுகிறது.

முன்சொன்ன திருநாமத்தின் விளக்கப்படி, ஸ்ரீ கர்ப்பனாக மகாலட்சுமியுடன் கூடி இருந்து இவ்வுலகை ஆண்டு நிர்வகிப்பதால்,
திருமால் ‘பரமேச்வர:’ என்று அழைக்கப் படுகிறார். ‘பரமேச்வர:’ என்றால் உலகை ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 379-வது திருநாமம்.
“பரமேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பிறவியெனும் ஊஞ்சலிலிருந்து திருமால் காத்தருள்வார்.

——————-

380. கரணாய நமஹ (Karanaaya namaha)

ராம தூதனாக இலங்கைக்குள் நுழைந்த அனுமன், அங்கே பற்பல இடங்களில் சீதையைத் தேடினார்.
சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு, அரக்கர்களின் வீடுகள் தோறும் சென்று சீதை இருக்கிறாளா என்று பார்த்தார்.
தேவலோகப் பெண்கள் போல் இனிமையாகப் பாடும் பல பெண்களைப் பார்த்தார்.
ராவணன் சேனையைச் சேர்ந்த பல ஏவலாட்கள் ராஜவீதியில் செல்வதைப் பார்த்தார்.

ஒற்றைக் கண்ணுடையோர், ஒற்றைக் காதுடையோர், கோணிய முகமுடையோர், வித்தியாசமான அவயவங்கள் உடையோர்,
பலவித நிறமுடையோர் இப்படிப் பலரையும் கண்டார். ராவணனின் யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட்படை
உள்ளிட்டவற்றைக் கண்டார். எத்தனையோ பெண்களைப் பார்த்தபோதும், அனுமனால் சீதையை மட்டும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

பிரகஸ்தன், கும்பகர்ணன், மகோதரன், விரூபாட்சன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன்,
சுகன், சாரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி உள்ளிட்டோரின் மாளிகைகளுக்குள் எல்லாம் சென்று தேடிப் பார்த்தார் அனுமன்.
பின் ராவணனின் அரண்மனையை அடைந்து அங்கும் தேடினார்.
அங்கிருந்து புஷ்பக விமானத்தின் உள்ளே சென்று அந்த விமானம் முழுவதும் தேடிப் பார்த்தார்.

ராவணனது அந்தப்புரத்தில் பித்ரு தேவதைகளின் பெண்கள், தைத்திய வனிதைகள், கந்தருவ சுந்தரிகள்,
ராட்சச கன்னிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் சீதை இருப்பதாகத் தெரியவில்லை.
அதன்பின், அங்கே மேலான மஞ்சத்தில் மிகவும் பேரழகி யான ஒரு பெண் துயில்கொண்டிருப்பதை அனுமன் கண்டார்.
அவள் ராவணனின் பட்டத்து அரசி மண்டோதரி.
அவளைச் சீதை என்றே எண்ணிய அனுமன் தோள்களைத் தட்டி வாலுக்கு முத்தமிட்டுக் கூத்தாடத் தொடங்கினார்.
ஆனால் வெகு விரைவிலேயே, “அடடா! என்னே என் மதி மயக்கம்! பெருமாளைப் பிரிந்த பிராட்டி
இப்படி நிம்மதியாகப் பஞ்சு மெத்தையில் உறங்குவாளோ? இவள் நிச்சயமாகச் சீதையாக இருக்கவே முடியாது!” என்று தீர்மானித்தார் அனுமன்.

இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சீதை கிடைக்காத நிலையில், அனுமன் சிந்திக்கத் தொடங்கினார்.
“ஒருவேளை ராவணன் கடத்தி வந்தபோது கடலில் அன்னை விழுந்துவிட்டாளோ?
அல்லது வழியில் வேறெங்காவது கீழே விழுந்தாளோ? ராவணன் வேறு ஊரில் அடைத்து வைத்துள்ளானோ?
ராவணன் அவளைக் கொன்று தின்றுவிட்டானோ? அல்லது அன்னையே தன் உயிரை மாய்த்துக்கொண்டாளோ?
சீதையைக் காணாமல் நான் எப்படி வானரர்களின் முகத்தில் போய் விழிப்பேன்?” என்று சிந்தித்தார் அனுமன்.

அப்போது தான் அவர் மனதில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது. “அடடா! நான் பெரும் தவறு செய்துவிட்டேன்.
சீதா தேவியை ‘நான் தேடுகிறேன், நான் கண்டுபிடிக்கப் போகிறேன்’ என்ற எண்ணத்துடன் இவ்வளவு நேரம் தேடினேன்.
அதனால்தான் அன்னையின் தரிசனம் கிட்டவில்லை.
சீதா ராமர்களே! நீங்கள் அருள்புரிந்து எனக்குத் தேவியின் தரிசனத்தை அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்து
இந்த ஸ்லோகத்தைச் சொன்னார்:

“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய நமோஸ்து தேவ்யை ஜனகாத்மஜாயை
நமோ