ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்–
என்ற சொற்தொடருக்கு ஏற்ப,
எல்லோரும், தொண்டரடிப் பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற
திவ்ய ப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று
நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
நம் ஆச்சார்யர்கள், இந்த ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும்படி,
“தொண்டரடிபொடி எம்பெருமானை எப்போதும் பேசு” என்று சொன்னார்கள்.
பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களுக்கு(பிரதம பர்வம்) பெருமாள், பெருமான் ஆவது போல்,
பெருமாளின் அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு (சரம பர்வம்), இவர் பெருமான் ஆவார் என்று கூறுவார்கள்.
நாம் முன்பே பார்த்ததுபோல், இந்த ஆழ்வார், திருமந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு,
இந்த உலக சுகங்களில் ஆசை கொள்ளாமல், பெருமாளிடம் பக்தி கொண்டு, ஸ்ரீரங்கம் சென்று பெரிய பெருமாளை சேவிக்க,
அவர் தம் வடிவழகை காட்டி, ஆழ்வாரை எப்போதும் தனது அருகிலேயே இருக்கும் படி செய்தார்.
அதனால், இந்த ஆழ்வார், பரமாத்மாவின் ஐந்து நிலைகளில்,
பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி என்ற நான்கு நிலைகளையும் விலக்கி
மற்றும் அர்ச்சைகளில் உள்ள மற்ற எல்லா திவ்யதேசங்களையும் விலக்கி,
வைஷ்ணவர்களுக்கு வேர்ப் பற்றான திரு அரங்க திவ்ய தேசத்தை மட்டுமே பாடி, பெருமை பெற்றார்.
ஆகையால், ஆழ்வார், நமக்கு உதவி செய்யும் பொருட்டு, தெளிவாக, மற்ற எல்லா குழப்பங்களையும் நீக்கி,
திருவரங்கனை மட்டுமே, திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி முழுவதும் பாடி நமக்கு ஒரு நல்வழி காட்டி உள்ளார்.
இந்த ஆழ்வாரின் மற்றொரு சிறப்பு, நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை
திருமாலை என்கின்ற இந்த திவ்ய ப்ரபந்தத்தில் விளக்கியது.
நம் கர்ம பலன்களாகிய பாப, புண்ணியங்களை துறந்து பிரம்மத்தை அடைந்து, நித்யஸூரிகளைப் போல்,
பரமாத்மாவிற்கு சேவை செய்து, ஆனந்தம் அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக
இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன.
அதற்கு நாம் அருகதை உடையவர்கள் ஆனாலும், அதை நாம் செய்யாது, மீண்டும் மீண்டும் பிறந்து (இறந்தும்),
இந்த சம்சாரத்திலேயே வாழ்ந்து அவதியுறுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல்,
ஸ்ரீவைகுந்ததில், மஹாலக்ஷ்மி தாயார், பெருமாளை வேண்ட, பெருமாள் இந்த ஆழ்வாரின் மூலம்,
தீவினைகள் மிகுந்த கலியுகத்தில் பரமாத்மாவை அடைவதற்கான எளிய வழியாகிய
நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமையை, சொல்லிக் கொடுக்க, அதையே திருமாலை என்ற
இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.
இந்த பிரபந்தம், எட்டெழுத்து மந்திரம் “அஷ்டாட்சர மந்திரம்‘ ) போல் மிக்க சுருக்கமும் இல்லாமல்,
இருபத்தினான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட இராமாயணம் அல்லது ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகங்கள்
கொண்ட மஹாபாரதம் போல் மிக்க நீண்டதாகவும் இல்லாமல், நாற்பத்தி ஐந்தே பாசுரங்களுடன்,
பரம்பொருளை தெளிவாக விளக்குவதால் தனிப்பெருமை உடையதாயிற்று.
இதனை அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அளந்து பேசும் திருவடி,
அனுமனின் சொல்லுக்கு ஒப்புமை கூறுவதும் ஒரு சிறப்பு.
திருமாலை அமைப்பு
திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்தை ஆழ்வார் கீழ்கண்ட தொகுப்புகளாக சொல்லி
தொடர்ச்சியை கையாண்டு இருக்கிறார்.
முதல் மூன்று பாசுரங்கள் –
ஆழ்வார் பெருமாள் தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார்.
நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்கள் –
தன்னுடைய அனுபவத்தை கொண்டு நமக்கு உபதேசம் செய்கிறார்
பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் –
உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த
நன்மைகளை – உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்
இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.
முப்பத்தி ஐந்து முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு என்ற மூன்று பாசுரங்களும்
பெருமாள் ஆழ்வாருக்கு சமாதானம் சொல்லி, தன்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது.
முப்பத்தி யெட்டாம் பாசுரம் –
இந்த பிரபந்தத்தின் முக்கிய பாசுரம் –
த்வய மஹா மந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வார் நமக்கு விளக்குதல்
முப்பத்தி ஒன்பதாம் பாசுரம் முதல் நாற்பதினான்காம் பாசுரம் வரை ஆறு பாசுரங்கள் –
த்வய மஹா மந்திரத்தை நன்றாக புரிந்து கொண்ட ஜீவாத்மாவின்
குண நலன்களை ஆழ்வார் நமக்கு சொல்லுதல்
நாற்பத்தி ஐந்தாவது பாசுரம் –
இந்த பிரபந்தத்தை படிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை சொல்வது –
பல ஸ்ருதி பாசுரம்
——-
பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் –
உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த
நன்மைகளை – உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்
மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல,
பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான்,
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை,
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15
உண்மையாக பக்தி கொண்டவர்களிடம் உண்மையாகவும், பொய்யுடன் பக்தி உள்ளவர்களிடம் பொய்யாகவும்,
கருட கொடியுடைய பெருமாள், முக்தி அடையவேண்டும் என்ற ஆசை உடையவர்களுக்கு
அவர்களுடைய சந்தேங்களை தீர்த்து அழகாக இருக்கும் பெருமாள் உள்ள இடம்
திரு அரங்கம் என்பது இந்த பாடலின் மேல் எழுந்தவாரியான கருத்து ஆகும்.
இதில், நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள், உண்மையான பக்தி என்று பெருமாள் எதை எதிர்பார்க்கிறார்,
பொய்யான பக்தி என்பது பெருமாள் பார்வையில் என்ன, இப்படிப்பட்ட பக்தியை வெளிப்படுத்தும் நம் போன்ற
ஜீவாத்மாக்களுக்கு பெருமாள் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த பாடலின் முழுமையான கருத்தாகவும்
உரையாசிரியர்களின் கருத்தாகவும் அமையும். இனி அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம்.
கருடனை கொடியாக கொண்ட பெருமாள், நெடும் காலமாக பகவத் விஷயம் கிடைக்காமல் இருந்த
ஆழ்வாரைப் போன்று பெருமாள் மேல் வெறுப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு தன் ஸ்வரூபத்தை உள்ளபடி காட்டி கொடுத்தும்,
பகவானைத் தவிர மற்ற விஷயங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களுக்கு, தன்னை காட்டிக்கொள்ளாமலும் இருப்பான் என்றும்,
பெருமாள் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொண்ட பின்பும், அவனை அடையவேண்டும் என்று
ஆசை கொண்ட பின்பும் அவர்களது சந்தேங்களை போக்கி, அழகுடன் காட்சி அளிக்கின்றவனாக விளங்கும் ஊர்
திருவரங்கம் என்பதே பாடலின் தெளிவுரைப் பொருளாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஆழ்வார், நன்றி உள்ளவர்கள் செய்யும் காரியமாகிய, நமக்கு நல்லது செய்தவர்களின் பெருமை கூறுவது
என்ற செயலை இந்த பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.
நம் போன்று சம்சாரியாக இருந்த ஆழ்வாரை நம் போன்றவர்களுக்கு உபதேசிக்கும் அளவிற்கு உயர்த்தி,
ஆழ்வாரின் சந்தேகங்களை தீர்த்து, பக்தி, பரபக்தி, பரமபக்தி என்று பல படிகளில் ஏற்றிச் சென்ற
பெருமாளின் பெருமையும் அழகையும் சொல்லும் பாடல் இது.
இதே போல் என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நம்மாழ்வாரின்
திருவாய்மொழி பாசுரம் (2.7.8), “என்னைத் தீமனங் கெடுத்தாய்” என்பதாகும்.
இதற்கான ஈட்டு ஸ்ரீஸூக்தி; “அமிர்தத்தையும், விஷத்தையும் ஒன்றாக விரும்புவாரைப் போல உன்னையும் உகந்து,
மற்ற எல்லா விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்”.
அதாவது பெருமாளை மட்டும் உகக்கும் நெஞ்சத்தை தமக்குக் கொடுத்ததற்காக ஆழ்வார் நன்றி கூறுகிறார்.
மெய்யர்க்கே மெய்யனாகும்-இதில் வரும் மெய்யர்க்கே என்பது நம் போன்ற ஜீவாத்மாக்களைக் குறிக்கும்.
மெய்யானாகும் என்பது பரமாத்மாவாகிய பெருமாளின் செய்கைகளைக் குறிக்கும்.
இதே போல் அடுத்து வரும் பதங்களான ‘பொய்யர்க்கே பொய்யனாகும்’ என்பதில் வரும்
பொய்யர்க்கே என்பது ஜீவாத்மாக்களையும் பொய்யனாகும் என்பது பரமாத்மாவின் செய்கைகளையும் குறிக்கும்.
மெய்யர்க்கே
முதலில், பக்தி என்பதில் உள்ள பல நிலைகளை பார்க்கலாம்.
நாதிக்கவாதம் என்பது கடவுள் இல்லை அல்லது கடவுள் நம்பிக்கைகளை மறுப்பது போன்ற நிலை.
அதற்கு அடுத்த நிலை கடவுள் பக்திக்கு மறுப்பின்மை அல்லது கடவுளிடம் வெறுப்பின்மை.
இந்த நிலையில் உள்ளவர்கள் பெரியதாக ஒன்றும் சொல்லும் அளவிற்கு கடவுள் பக்தியில் திளைப்பதில்லை,
ஆனால் அதே சமயம் கடவுளுக்கோ அல்லது அந்த நம்பிக்கைகளுக்கோ எந்த வித எதிர்ப்பையும் காண்பிப்பதில்லை.
அடுத்த நிலை என்பது கடவுள் அல்லது அந்த நம்பிக்கைகளில் ஒரு ஆர்வம் வருவது.
இப்படி அந்த ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் போது வரும் நிலைகள், பக்தி, பரபக்தி , பர ஞானம் மற்றும் பரமபக்தி என்று போகும்.
ஜீவாத்மாக்கள் ஒவ்வொருவரும் ஒரு சமயத்தில் இந்த நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருப்பார்கள்.
ஆக, வெறுப்பின்மை என்பது இந்த பக்தி என்ற பாதையில் உள்ள முதல் படி என்று நாம் கொள்வோம்.
‘மெய்யர்’ என்றால் இங்கு உண்மையானவன் என்பது பொருள்.
மெய்யர்க்கே என்பதில் ஆழ்வார் சொல்லும் பக்தியின் நிலை பெருமாளிடத்தில் வெறுப்பின்மை என்ற நிலை மட்டுமே.
தனக்காகவே மட்டும் வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரமான பலனை தராததால் அது பொய் என்று கூறப்படுகிறது.
பெருமாளுக்காக வாழ்கின்ற வாழ்க்கையை தொடங்கி விட்டால், அது நிரந்தர பலன்களை தரும் என்பதால்
அதுவே மெய் எனப்படுகிறது. இப்படி பக்தியின் முதல் படி வெறுப்பின்மை என்பதில் தான் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் இருந்தாலே, பெருமாள் அந்த ஜீவாத்மாவை மெய்யர் என்று கருதுகிறார்.
மெய்யனாகும்
நித்யஸூரிகள், நிஜமாகவே முற்றிலும் மெய்யர்கள், ஏன் என்றால் நித்யஸூரிகள் அவனுக்காகவே மட்டும் எப்போதும் இருப்பவர்கள்.
நித்யஸூரிகளுக்காக பெருமாள் மனம், மொழி, செயல்கள் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் செய்வான்.
நித்யஸூரிகளுக்கு, என்னவெல்லாம் செய்வானோ , அவைகளை, மேலே மெய்யர்க்கே என்பதில் சொன்ன வெறுப்பின்மை
என்ற முதல் படியில் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும் பெருமாள் செய்கிறான்.
மெய்யர்க்கே மெய்யனாகும், என்பதில் வரும் மெய் என்ற வார்த்தை,
இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் வருவதை, உரையாசிரியர் நியாயப்படுத்தும் காரணங்கள்:
திருமாலையில் இந்த பகுதி, பெருமாளின் குண நலன்களை கூறுவதால், பெருமாளின் ஒருங்கிணைந்த
மனம், மொழி, செயல்களை ஒன்றாக காட்டும் பெருமாளின் குணத்தை,
ஆழ்வார் மெய்யானாகும் என்பதில் உள்ள மெய்யில் சொல்கிறார்.
எல்லா சிறந்த குணங்களையும் உடைய பெருமாளுக்கு வெறுப்பின்மை என்பது பொருத்தமாக இருக்காது,
அதனால் இரண்டு மெய்களுக்கும் வெறுப்பின்மை என்ற ஒரு பொருள் கூற இயலாது.
பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாக்களாகிய நமக்கும் நவவித (ஒன்பது) சம்பந்தம் உண்டு என்பது நம் முன்னோர்களின் வாக்கு.
அதில் ஒன்று தந்தை- மகன் சம்பந்தம்.
அதன்படி வெறுப்பின்மை என்ற ஒன்று இருந்தால் கூட பெருமாள் நமக்கு அருள் செய்து காப்பாற்ற வருகிறார்.
அவன் எல்லாவற்றையும் பெற்றவன் ஆதலால், அவன் இதற்கு மேல் எதிர்பார்ப்பது இல்லை.
பொய் வாழ்க்கையில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு உடனே பக்தி, பரபக்தி பரஞானம் பரமபக்தி போன்ற நிலைகள் ஏற்படக் கூடியதில்லை.
வெறுப்பின்மை மட்டுமே கொண்டு ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது பெருமாளுக்கு பெருமையே தவிர குறையில்லை.
மேலும் குற்றமற்ற மெய்யர்களாய் இருப்பது நித்யஸூரி போன்றவர்களுக்கு மட்டுமே கூடுமாகையால்,
நம் போன்ற ஜீவாத்மாக்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதும் நமக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டியதும் அவனுக்கு தெரியும்.
இதையே, யுத்த காண்டத்தில், இராவணனின் தம்பியாகிய விபீஷண சரணாகதியின் போது,
(இராமாயணம், யுத்த காண்டம், 18,3) யார் ஒருவன் நண்பன் என்று வேஷம் போட்டு வந்தாலும்,
அவனை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று இராமபிரானே சொல்லி இருப்பதால்,
வெறுப்பின்மையோடு நாம் சென்றாலும், அவன் ஒருங்கிணைந்த மனம், மொழி, செயல்களை காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.
இப்படி நமக்கு பலன்கள் கிடைப்பதால், வெறுப்பின்மையை மோக்ஷத்திற்கு வழியாக எடுத்துக்கொள்ள முடியுமா
என்று கேட்டுக்கொண்டு, உரையாசிரியர் கீழ்கண்டவாறு மறுக்கிறார்.
ஜீவாத்மாக்களுக்கு தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காகவே வாழ வேண்டும் என்ற ஆசையும் உள்ளூர இருக்கும்.
அதற்காகவே அவர்களை ‘மெய்யர்‘ என்று ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், சாதனம் என்பது அடைய வேண்டிய இடத்தை அடையும் வரையில் மட்டுமே வேண்டும்,
வந்து சேர்ந்த பின் தேவை இல்லை.
ஆனால் பரமபதத்தில் வெறுப்பின்மை வேண்டும், பெருமாளுக்காகவே வாழ வேண்டிய இடம் ஆதலால்
வெறுப்பின்மையை தாண்டி மேலும் பல பக்தி நிலைகளையும் இந்த முக்தாத்மாக்கள் அடைய வேண்டும்.
எனவே வெறுப்பின்மை மோக்ஷ சாதனம் ஆகாது. (மோட்ஷம் அடைந்த ஜீவாத்மாக்கள், முக்தாத்மாக்கள் என்று அழைக்கப்படுவர்).
பொய்யர்க்கே பொய்யனாகும்
அடுத்து, பொய்யர்க்கே பொய்யனாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
இனிமேல், வெறுப்பின்மை என்ற முதல் நிலைகூட , இந்த ஜீவாத்மாவிற்கு வரவே வாராது என்று தெரிந்தபின்,
மிக வருத்தத்துடன் அந்த ஜீவாத்மாவை, பரமாத்மா கைவிடுகிறான்.
இதற்கு நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி, 5.1.1 பாசுரத்தில்,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமேயாடி என்ற பதங்களை பார்க்க வேண்டும்.
ஆழ்வார், பகவத்விஷயங்களில் ஈடுபட்டவர் போல் நடித்து, பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன்களைத்
தான் பெற்று விட்டதாக அவர் சொல்லும் பாசுரம்.
இப்படி, உண்மை என்று கொள்ளலாம் என்று சொல்லும் படியான பொய்யை கூட இந்த ஜீவாத்மா இனி சொல்லி -செய்து,
வெறுப்பின்மை என்ற முதல் நிலையை அடையாது என்று பெருமாள் உணர்ந்த பின்பே
அந்த ஜீவாத்மாவை கை விடுவதாக கொள்ள வேண்டும்.
மெய்யர்க்கே, என்பதில் உள்ள ஏகாரம்
‘வெறுப்பின்மை என்ற பக்தியின் முதல் நிலையினை’ மட்டுமே சொல்வது;
இதனை குறைந்த பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம்; பொய்யர்க்கே என்பதில், உள்ள ஏகாரம்
‘உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யை’ மட்டுமே குறிப்பது.
இதனை பக்தியின்மை அல்லது பொய்யான பக்தியின் அதிக பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம்.
இந்த அளவு கூட வரவில்லை என்றால் மட்டுமே பெருமாள் கை விடுகிறான்.
மெய் என்பது ஆஸ்திக புத்தியையும், பொய் என்பது நாஸ்திக புத்தியையும் இங்கு சொல்கிறது.
பகவானை தவிர மற்ற விஷயங்கள் நிரந்தர பலனை தராததால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவற்றை பொய் என்கிறார்.
மெய்யர் அல்லது ஆஸ்திகர்களுக்கு, மெய்யனாவான் அதாவது நித்யஸூரிகளுக்கு செய்யும் அத்தனையும் செய்கிறான்.
பொய்யர் அல்லது நாஸ்திகர்களுக்கு பொய்யனாவான், அதாவது கைவிட்டுவிடுவான் என்பதே இதன் தேர்ந்த கருத்து.
விதியிலா என்னைப் போல
ஆழ்வாரே ‘மெய்யர்க்கே மெய்யனாகும் ‘ என்பதையும் ,
பொய்யர்க்கே பொய்யனாகும் தன்னிடத்திலேயே கண்டதாகவும் சொல்வதை,
விதியிலா என்னைப் போல, என்று குறிப்பிடுகிறார். விதி என்பது பாக்கியத்தை குறிப்பது.
இவ்வளவு நாட்கள் வீணே கழித்து விட்டேனே என்று ஆழ்வார் புலம்புகிறார்.
இப்போது கிடைத்து பெரும் பகவத் இன்பத்தை விட அது கிடைக்காமல் இழந்த துன்பத்தை பெரியதாக நினைக்கும்
பொய்கை ஆழ்வாரின், ‘பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி அழுதேன்‘ என்ற
முதல் திருவந்தாதியில் 16 பாசுரத்தை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம்.
இராமாயணத்தில், வால்மீகி, எவன் ஒருவன் இராமனை காணவில்லையோ அல்லது எவன் ஒருவனுக்கு
ராமனின் அருள் இல்லையோ அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்
(அயோத்தியா காண்டம், 17.14) என்று கூறுவதையும் இங்கே நினைவு கூறலாம்.
விதியிலா என்னைப் போல என்பதை ஆழ்வார் ஒரு மத்திய நிலையாக கொள்கிறார்.
அதாவது பொய்யர்க்கும், மெய்யர்க்கும் இடையே உள்ள பக்தி நிலை.
எப்படி ஒரு தீபம் முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதை போல், பெருமாள் இந்த மத்திய நிலைமையில்
உள்ளவர்களையும் காத்து வருகிறான், ஆனால் தன்னை காட்டிக்கொள்ள மாட்டான்.
அந்த நிலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் இருந்ததாக சொல்வதை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம்.
இப்போது விடுபட்ட இரண்டு நிலைகளை சேர்க்கலாம்.
ஒன்று மெய் என்று கொள்ளும்படி பொய் சொல்லும் -செய்யும் நிலை,
இரண்டாவது ஆஸ்திகத்திலும் இல்லாமல், நாஸ்திகஸ்த்திலும் இல்லாமல் உள்ள நடுநிலைமை.
நாம் எங்கு இருக்கிறோம் என்று தெரியாவிட்டாலும், இன்னும் அடையவேண்டிய நிலைகள் பல உள்ளன
என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்வோம்.
புட்கொடி உடைய கோமான்
இப்படி மெய் என்று பெயர் சொல்லும்படி உள்ள பொய்யை கூறும் ஜீவாத்மாக்களுக்கு, ஆள் கிடைக்காததால் தான்,
பெருமாள் அருளுகிறாரோ என்றால், இல்லை என்று “புட்கொடி உடைய கோமான்‘ என்ற வாசகத்தினால் மறுக்கிறார்.
கருட கொடியை தனக்கு அடையாளமாக கொண்டவர் என்று சொல்லி, அவர்க்கு சேவை செய்ய
பல நித்ய ஸூரிகள் இருப்பதை சொல்கிறார். கருடன் என்று சொன்னது ஒரு உதாரணமே.
கருடன் செய்யும் சேவைகளை ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்தோத்ர ரத்ன மாலை
என்ற நூலில் இருந்து 41 பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
வேதங்களை தமக்கு அங்கங்கள் ஆக கொண்டவர் கருடன்
பெருமாளுக்கு அடியவன், நண்பன்,
பெருமாளுக்கு வாஹனம், சிம்மாசனம், கொடி, மேல்தட்டு, சாமரம்
இப்படி பற்பல சேவைகளை உண்மையாகவே செய்யும் ஒரு நித்யஸூரி. அதாவது,
பற்பல நித்யஸூரிகள் செய்யும் வேலைகளை தனியொரு நித்யஸூரியாக செய்யும் கருடன்.
இதே போல் பற்பல சேவைகளை செய்யும் ஆதிசேஷன் என்ற இன்னொரு நித்யஸூரி. அவர் செய்யும் பணிவிடைகளாவன:
பெருமாள் எழுந்தருளி இருக்கும் திரு மாளிகை
பெருமாள் கண் மலர்ந்து அருளும் படுக்கை
பெருமாள் அமரும் ஸிம்மாஸனம்
பாதுகை, திருப்பரியட்டம், அணை மற்றும் குடை
இவ்வாறு பற்பல நித்ய ஸூரிகள் செய்ய கூடிய சேவைகளை செய்ய வல்ல பற்பல நித்ய ஸூரிகளை கொண்டவன் அவன்.
அப்படிப் பட்டவன் அவன் ஒருவனே. அதனால் அவன், அவனுக்கு ஆள் இல்லாமல் நம் வெறுப்பின்மையை ஏற்கவில்லை.
இந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் அவனுடைய உடமைப் பொருள்- சொத்து,
அதில் ஒன்று கூட விடாமல் கிடைப்பதற்காவே மிக குறைந்த தேர்ச்சி அளவை வைத்து,
ஆளில்லாதவன் தேடுவது போல் தேடி, அவன் நம்மை கரை ஏற்றுகிறான்.
இங்கு கோமான் என்று சொன்னதற்கு அயர்வரும் அமரர்கள் அதிபதி என்ற மேற்கோள் காட்டப்படுகிறது.
உய்யப்போம் உணர்வினார்கட்கு
இதுவரை இருந்த நிலையில்லாத பொய் வாழ்க்கையில் இருந்து, மாறி உய்ய வேண்டும் என்ற
உணர்வு உள்ளவர்களுக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது
இந்த நிலையில் இருந்து மாற என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு வருவதை குறிக்கும்.
இந்த உணர்வு வராதவர்கள் முடியப்போம் என்று உணர்வு உள்ளவர்கள் ஆவர்.
பகவத்கீதையில், (2-63), கிருஷ்ணன் சொன்னபடி நினைவு மழுங்குவதனால் புத்தி நாசம் அடைந்து,
அதனால் உலகவாழ்க்கை என்ற சக்கரத்தில் உழல்கின்றான்.
ஓருவன் என்று உணர்ந்த பின்னை
ஓருவன் என்று உணர்ந்த பின்னை, என்பது ஈஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்ற அறிவு வருவதைக் குறிக்கும்.
உடல் என்பது வேறு, அதனை விட உயர்ந்ததான ஆத்மா என்ற ஒன்று உண்டு என்றும்
அதனை வழிநடத்தி செல்பவனான பரமாத்மா அல்லது ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்று
அறிவு வந்த பிறகு என்பது இதன் பொருள்.
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
முதலில் நம் சம்பிரதாயத்தின் 26 தத்துவங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
திருவாய்மொழியில், பெருமாள் நம்மாழ்வாருக்கு “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து ” (8.8) என்ற
பதிகத்தில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.
பஞ்ச பூதங்கள் ஐந்து (நிலம், நீர், தீ, காற்று, வானம்)
ஞான இந்திரியங்கள் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)
கர்ம இந்திரியங்கள் ஐந்து (வாய், கை, கால், கழிவு துவாரங்கள் இரண்டு)
தன்மாத்திரை (ஐம்பொறிகளின் மூலம்) ஐந்து (சுவை, ஒளி, தொடுஉணர்ச்சி, ஓசை, வாசம்)
மனம்
அகங்காரம்
மஹான்(அறிவுத்தத்துவம்)
அவ்யக்தம்(சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் தோன்றுவதற்கு உள்ள மூலம் ) என்னும் இருபத்திநான்கு தத்துவங்கள்
ஜீவாத்மா (25)
பரமாத்மா (26)
ஜீவாத்மா என்ற 25 தத்துவங்களை ஒப்புக்கொண்ட பலர் பரமாத்மா என்ற 26வது தத்துவத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவதில்லை.
அதனால் சர்வேஸ்வரன் என்ற 26 தத்துவத்தில், ஐயம் அல்லது சந்தேகம் ஏற்படுகிறது.
பகவத் கீதையில் (2-7) சரணடைந்த அர்ஜுனனுக்கு சந்தேகங்களை கிருஷ்ணன் தீர்த்து வைக்கிறான்.
அவ்வளவு ஞான சிறப்பு இல்லாதவர்களுக்கு பெருமாள் தன் அழகை கொண்டு தீர்த்து விடுகிறார்.
பார்த்தவுடனே இவன் தான் பரமாத்மா என்ற பரம்பொருள் என்று புரியவைக்கும் அவன் அழகு.
அழகனூர் அரங்கம் அன்றே
திருவாய்மொழியில் சுவாமி நம்மாழ்வார் இவ்வடிவழகை பிரிந்தால் உயிர் தரிக்க முடியாது என்ற தொனியில், 9.7.3 பாடலில்,
“செக்கமலர்த்தவர் போலும், கண் கை கால் செங்கனிவாய அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கே” பாடுகிறார்.
இதற்கு ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில்,
“தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலாந்தூதுக்கு விஷயம்” என்று
அவருடைய அழகை – சௌந்தர்யத்தை சிறப்பித்து சொல்லும்.
அதே போல், திருவாய்மொழி, 4.5.10 “கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,” என்ற
பாடலையும் நினைவில் கொள்ளலாம்.
இந்த அழகினை காண்பதற்கு பரமபதம் செல்ல வேண்டுமோ என்ற சந்தேகத்தை (ஐயப்பாடு), எழுப்பி
“அழகனூர் அரங்கம் அன்றே ” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தீர்த்து வைக்கிறார்(அறுத்து தோன்றும்).
பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும்
அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும் சொல்லி
உரையாசிரியர் இந்த பாசுரத்தின் விளக்கத்தை முடிக்கிறார்.
———–
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்,
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை,
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்,
ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே. (திருமாலை 16)
பெருமாளும் இல்லை, தர்ம அதர்மங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டும்,
பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைத்துக் கொண்டு உலக விஷயங்களில்
லயித்துக் கொண்டு இருப்பவருடன் சேர்ந்துகொண்டு இருந்த காலத்தில், மீன்களை போன்ற கண்களை உடைய
பெண்களின் வலைகளில் சிக்கி மூழ்கி கிடந்த ஆழ்வாரை, அவன் தன் பக்கம் வா என்று கூப்பிட்டு,
ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்த
வடிவழகு உள்ள பெருமாள் உறையுமிடம் திருவரங்கம் ஆகும்.
எம்பெருமானால் தாம் பெற்ற பேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார்.
முதல் இரண்டு வரிகளில் தான் முன்பு இருந்த நிலை கூறிய ஆழ்வார், பின் இரண்டு வரிகளால்
தான் பெற்ற நன்மையை சொல்கிறார்.
அடைய வேண்டிய பொருளும், அதற்கான வழியும் நானே என்று சந்தேகங்களை சென்ற பாடலில்
சந்தேகங்களைத் தீர்த்த பெருமாள் இந்த பாடலில், தன்மீது அன்பு வெள்ளம் பெருகும்படி செய்தார் என்கிறார் ஆழ்வார்.
சூதனாய்க் கள்வனாகி
இங்கு ஆழ்வார் தான் முன்னால் இருந்த காலத்தை நினைத்து பார்க்கிறார். ஒருவன் உலக விஷயங்களில் ஈடுபடும் போது
அதற்கு செலவு செய்ய நிறைய பொருள் தேவைப்படும்.
அதனை பெற களவிலும், அந்த பொருள் மேன்மேலும் வளர சூதிலும் ஈடுபடுவான்.
ஒருவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மற்றவரின் பொருளை எடுத்து செல்வது சூது எனப்படும்.
பிறருடைய பொருளை தன்னுடைய பொருளாக நினைப்பதை களவு என்று சொல்லப்படும்.
இப்படி சூதையும் களவையும் தனியாகவும் பின்னர் இன்னும் சிலரை சேர்த்துக் கொண்டு கூட்டமாகவும் செய்வார்கள்.
இதனால் பெண்கள் வீசும் கண் வலைகளிலும் விழுந்து முழுகுவார்கள்.
இத்தனையும் தனக்கு உண்டானதாக ஆழ்வார் முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார்.
இங்கு பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைப்பதை களவு என்று ஆழ்வார் சொல்கிறார்.
அதே போல், வேதங்களும் மற்றைய தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகளை
(ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு அடிமை; எம்பெருமானுக்கு உகந்தது புண்ணியம்; எம்பெருமானுக்கு பிடிக்காதது பாவம்) மறுத்து,
தன் போலவே இன்னும் சிலரையும் நாஸ்திகர்கள் ஆக்குவது சூது என்று ஆழ்வார் சொல்கிறார்.
களவிற்கு கொடுக்கப்படும், தண்டனை, திருடப்படும் பொருளாலும், திருட்டு கொடுப்பவரின் தன்மையாலும்
வேறுபடும் என்ற காரணத்தினால், இந்த சூதும் களவும் உலகில் சாதாரணமாக சொல்லப்படும்
சூது மற்றும் களவை விட மிக அதிகமானவைகளாக கருதப்படும் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
காட்டில் உள்ள ஒரு குச்சியை திருடியவனை காட்டிலும், ஒரு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்ததை திருடியவனுக்கு,
திருடப்பட்ட பொருளின் உயர்வினால், தண்டனை அதிகம்.
அதே போல், ஒரு பொருளை ஒரு அரசனிடமோ, உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து திருடியவனுக்கு,
அதே பொருளை சாதாரண மக்களிடம் இருந்து திருடுவதைக் காட்டிலும், திருட்டு கொடுப்பவரின் நிலையை கொண்டு
அதிக தண்டனை தருவது உலக நியதி என்கிறார்.
இங்கு திருடப்பட்டதோ மிக உயர்ந்த பொருளான ஜீவாத்மா,
பெருமாளின் மார்பில் உள்ள கௌஸ்துப மணி அளவிற்கு மதிப்பு உடையது,
பொருளின் உரிமையாளரோ மிகமிக உயர்ந்த பரமாத்மா ஆவார்.
அதனால் மிக பெரிய குற்றம் புரிந்தவனாக இருந்தவன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்லிக் கொள்கிறார்.
தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் தான் சூதனாகவும் கள்வனாகவும் இருந்ததை சொல்கிறார்.
மதுரகவி ஆழ்வார் இதே போன்ற கருத்தினை தன்னுடைய குருவாகிய -ஆச்சார்யனான சுவாமி நம்மாழ்வாரிடம் முறையிடுகிறார்.
“நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” (கண்ணிநுண் சிறு தாம்பு, 5) என்று சொல்லும் போது,
நன்பொருள் என்று ஆத்மாவை குறிப்பிடுகிறார். நம்பினேன் என்பது விரும்பினேன் என்ற பொருளில் வருகிறது.
தூர்த்தரோடு இசைந்த காலம்
இப்படி மனதார குற்றம் செய்தவர்கள் அவைகளை வளர்ப்பவர்களுடன் தான் கூட்டு சேர்வார்கள் என்பதை,
‘தூர்த்தரோடு இசைந்த காலம்’ என்று ஆழ்வார் சொல்கிறார்.
இசைந்த என்று சொல்வதற்கு காரணம், அப்படிப்பட்டவர்களுடன் மிக நன்றாக பொருந்தி வாழ்ந்ததாக சொல்வது.
காலம் என்பது நேரம் என்ற குறுகிய காலத்தைக் குறிக்காமல், நீண்ட காலத்தை குறிப்பதாகவும்,
அல்லது அப்படிப்பட்ட நேரம் ஆழ்வார்க்கு மிக நீண்ட நேரமாக தோன்றுவதாகவும் கொள்ளலாம்.
பக்தர்களோடு சேர்ந்து இருப்பது பகவானுடன் சேர்ந்து இருப்பது மாதிரி;
ஆனால் தூர்த்தர்களோடு இருப்பது இன்னும் உலக விஷயங்களில் தம்மை அழுத்துவது என்கிறார்.
முதல் திருவந்தாதியில் (16) பொய்கையாழ்வார்
“பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி அழுதேன்” என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
உலக விஷயங்களில் ஈடுபட்டவன், மீன்போன்ற கண்களை உடைய பெண் என்று தான் நோக்குவானே தவிர,
அந்த பெண்ணின் குணம், மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை ஆராய மாட்டான்.
வலை வைத்து பிடிக்கும் விலங்கினை போல் மனிதரை அகப்படுத்தும் வலை என்று பெண்களின் கண்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
வலை உள் பட்டு என்பதால்
உள்ளே சென்று திரும்ப முடியாதபடி இருப்பதை இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
வலையுள் என்பதால், –
துன்பமே இருக்கும் என்றும், இன்பம் இல்லை என்றும் சொல்கிறார்.
அழுந்துவேனை என்றது,
இந்த துன்பத்தை, இன்பமாக நினைத்து மயங்கி இருப்பதை சொல்கிறார்.
மறுபடியும் மதுரகவி ஆழ்வாரின் கண்ணி நுண் சிறுதாம்பில் இருந்து அதே ஐந்தாம் பாசுரம்.
தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் சொன்னது போல்,
“நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது
பிற மாந்தரை தான் முன்பு விரும்பியதை நம்மாழ்வாரிடம் சொல்வது போன்ற பாசுரம்.
திருப்பாணாழ்வாருக்கு பெரிய பெருமாள் தன்னுடைய திருமேனி அழகினை காட்டிய பிறகு அதில் மயங்கிய
திருப்பாணாழ்வார் இந்த உலகில் வேறு எதையும் பார்க்க விருப்பம் இல்லை என்பதை
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” (அமலனாதிபிரான் 10) என்று பாடினார்.
எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக் கொண்டான் என்பதும்,
அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பதும் நம் ஸம்ப்ரதாயம்.
திருப்பாணாழ்வார் பெரியபெருமாளின் கண்ணழகை
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப் பெரியவாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே” (அமலனாதிபிரான் 8), என்று பாடி உள்ளார்.
அடுத்தது, பிள்ளை உறங்காவில்லிதாஸர் என்பவரின் சரித்திரம்.
ஒரு முறை சுவாமி ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வந்து கொண்டு இருந்தபோது தாஸர் தன் மனைவிக்கு
குடை பிடித்துக்கொண்டு வந்தார்.
சுவாமி ராமானுஜர் கேட்டதற்கு, தாஸர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன்;
மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கவே அப்படி செய்தேன் என்றும் கூறினார்.
இதைக் கேட்ட இராமானுஜர் தாஸரிடம் அந்த கண்களைவிட வேறு அழகான கண்களைக் காண்பித்தால்
அதற்கு அடிமையாகி விடுவீரா என்று கேட்க தாஸரும் ஒப்புக்கொண்டார்.
எம்பெருமானாரும் தாஸரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துக் கொண்டு சென்று , எம்பெருமான் திருப்பாணாழ்வாருக்குத்
தாம் காட்டியருளிய அழகிய கண்களை தாஸருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார்.
எம்பெருமானும் தம்முடைய அழகிய கண்களைக் காட்டியருள, தாஸரும் எம்பெருமானாரிடம் சரணடைந்து
தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார்.
இதுவும் கண்களைப் பற்றியது, ஆனால், பெரிய பெருமாளை பற்றியது அல்ல.
நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுஜரைக் கைது செய்ய ஆணையிட்டான்.
கூரத்தாழ்வார், இராமானுஜர் போல் வேடம் தரித்துக் கொண்டு அரசனிடம் சென்றார்.
முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன.
கூரத்தாழ்வார், இராமானுஜருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்.
சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க
காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்டினார்.
கூரத்தாழ்வான் அப்போதும் தனக்கு பார்வை வேண்டியது கூட தன் ஆச்சார்யரான இராமானுஜரையும் பெருமாளையும்
சேவிக்கவே என்பதால் தான் என்று கூறுவார்கள் உண்டு. வரதராஜப் பெருமாளும் அவருக்கு அருளினார்.
போதரே என்று சொல்லி
இப்படி அழுந்தி துன்பப்பட்டு இருந்த தன்னைப் பெரிய பெருமாள் தான் திருந்த வழி காட்டியதை
அடுத்த இரண்டு வரிகள் சொல்கின்றன.
மாதரார் கண்ணழகில் மயங்கி கிடந்த தன்னை, பெரியபெருமாள் தன்னுடைய மேற்கூறிய கண்ணழகை காட்டி
திருத்துவதாக ஆழ்வார் சொல்கிறார். இங்கு உரையாசிரியர் சொல்வது அருமை.
பெரியபெருமாள் எதை பார்த்து இப்படி மாதரிடம் மயங்கி கிடந்தீர் என்று ஆழ்வாரிடம் கேட்க,
அதற்கு ஆழ்வார், தன்னுடைய ரசிகத் தன்மையினால் பெண்களின் கண்ணழகினில் மயங்கியதாகவும்,
அதைவிட சிறந்த தார்மீகமான கண்ணழகினை காட்டினால், அதிலே மகிழ்ந்து இருப்பேன் என்று
பதில் உரைத்ததாகவும் சொல்கிறார்.
பெரியபெருமாளும் தன்னுடைய திருத்திரையை விலக்கி ஆழ்வாருக்கு தன்னுடைய அழகிய திருமுகத்தை காட்டி
அவரை திருத்தியதாக உரையாசிரியர் கூறுகிறார்.
திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி 7.1.9 பாசுரத்தை இங்கு நினைவு கூர்ந்து,
“தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா” , அதாவது,
தாய் போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனே
என்று திரு கண்களின் பெருமையை கூறுகிறார்.
அனுமன் சீதையிடம், இராமனின் கண்ணழகை பற்றி கூறியதை இராமாயணத்தில் இருந்து இங்கே பார்ப்போம்.
இராமபிரானின் திரு கண்கள், தாமரை இதழை ஒத்ததாக இருந்தது என்றும்,
அவை, தன் போன்ற எல்லா பிராணிகளின் மனங்களையும் கவர்ந்து செல்ல வல்லன என்றும் கூறுகிறார்.
அனுமன் மேலும், வடிவழகு போன்ற பார்வைக்கு தெரியும் குணங்களையும்,
தாக்ஷண்யம் போன்ற ஆத்ம குணங்களையும் பெற்றவர் என்று இராமனை புகழ்கிறார்.
புந்தியில் புகுந்து
புந்தி என்பது நினைவினை குறிக்கும். இங்கு நினைவின் தொடக்கமாக உள்ள நெஞ்சத்தையும்,
நெஞ்சத்தில் உறைகின்ற அந்தர்யாமியாக புகுந்து என்றும் பொருள் கொள்ளலாம்.
இவ்வளவு காலமாக பெருமாளிடம் இருந்து ஆழ்வார் விலகி இருந்ததற்கு காரணமாக இருந்த நெஞ்சத்தினுள் நுழைந்து,
அது இனி விலகி செல்ல முடியாதபடி பெருமாள் ஆழ்வாரின் நெஞ்சத்தினுள் புகுந்தான்.
இனி ஆழ்வார் தன்னை விட்டு விலகக்கூடாது என்று விஷேசமான சங்கல்பத்துடன்
பெருமாள் இருந்ததாக உரையாசிரியர் சொல்கிறார்.
ஜீவாத்மா தனக்கே ஆக வாழ்வது, பெருமாள் என்ற நினைவினை விலக்கி விடும்.
ஆதலால் பெருமாள், ஆழ்வார் தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காக வாழ ஆரம்பித்ததை
பற்றாகக் கொண்டு இனி எப்போதும் இப்படியே ஆழ்வார் இருக்க வேண்டும் என்று ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்தான்.
இன்னும் ஒரு முறை கண்ணி நுண் சிறு தாம்பு, இந்த முறை பாசுரம் 9.
“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது,
நம்மாழ்வார் திருவாய்மொழி பாடி, நன்றாக வேதம் படித்தவர்கள் சொல்லும் உள்ளுறை கருத்துகளை
தன்னுடைய நெஞ்சுனுள் நன்றாக பதியவைத்ததாக சொல்வது
‘புந்தியில் புகுந்து‘ என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வது போன்று உள்ளது என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள்.
ஆதரம் பெருக வைத்த
பெருமாள், ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்து என்ன செய்தான் என்றால்,
இத்தனை காலம் வேறு எங்கோ செலுத்திய அன்பையெல்லாம், தன் பால் திருப்பி விட்டான்.
தரிசு நிலங்களில் பாய்கின்ற நீரை, பயிர் நிலங்களில் பாய விட்டு பயன் அடைவித்ததை போல்
பெருமாள் செய்தார் என்று ‘ஆதரம் ‘ என்பதற்கு உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார்.
‘பெருக ‘ என்பதற்கு உரையாசிரியர் எடுத்து கொள்ளும் மேற்கோள், திருவாய்மொழி பாசுரம் 10.10.10, ல்
வரும் “அதனில் பெரிய ” என்பதாகும்.
சித், அசித் என்ற தத்துவங்களைக் காட்டிலும் பெரியதாக உள்ள, அனுபவிக்கத்தக்கதான ஈஸ்வர தத்துவத்துவமாகிய
தன்னைக் காட்டிலும் பெரியதாக ஆழ்வாரின் அன்பை பெருக செய்தான் என்கிறார்.
பெருமாள் எதற்காக இப்படி அன்பை பெருக வைத்தான் என்று பார்த்தால் ஒரு காரணமும் இல்லாததால்
ஏதோ தண்ணீர் பந்தல் வைத்தாற்போல் என்று சொல்கிறார்.
தண்ணீர்பந்தல் எப்படி ஜீவாத்மாக்களுக்கு உபயோகமாக இருக்குமோ அதே போல் இவை,
ஆழ்வாருக்கும், அவர் மூலம் நமக்கும் மிகப்பயன் உள்ளதாக ஆகிறது.
அழகனூர் அரங்க மன்றே
எதைக் காட்டி இப்படி ஆதரம் பெருக வைத்தான் என்று கேட்டுக் கொண்டு,
தன்னுடைய திருமேனி அழகைக் காட்டியே ஆதரம் பெருக வைத்தான் என்று சொல்கிறார்.
இதற்கான மேற்கொள், திருவாய்மொழியில் 5.3.4 என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் கூறும்,
“பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த, காரமர் மேனி நம் கண்ணன்” என்பதாகும்.
நம்மாழ்வாருக்கு பெருமாள் மேல் காதல்; அதைப்பற்றி யாருக்கும் தெரியாத போது,
ஊரார்கள், ஏதோ ஒருமுறை இடும் உரம் போல், ஒரு பூசல் செய்து எல்லோருக்கும் தெரிய வைத்தார்கள்.
தாயார் தொடர்ந்து அந்த காதலைப் பற்றி பேசி, தினமும் நீர் பாய்ச்சுவதை போல் வளர்த்தாள்.
பெருமாளும் தன்பங்கிற்கு, மேகத்தில் இருந்து பெய்யும் மழை நீரையும் கொண்டு
அந்த காதலை வளர்த்ததாக ஆழ்வார் பாடுகிறார்.
அப்படி வளரும் காதலுக்கு நாயகியாகிய நம்மாழ்வார் சொல்லும் காரணம், நம் கண்ணனின் திருமேனி அழகே என்பதாகும்.
கர்ம ஞான வழியை பற்றி செல்பவர்களுக்கு, அவை அவர்களை பக்தி யோகத்திற்கு அழைத்து செல்லும்.
இங்கு எம்பெருமானின் திருமேனி அழகு, அந்த கர்ம ஞான ஸ்தானத்தில் இருந்து கொண்டு,
ஜீவாத்மாக்களை பக்தி யோகத்திற்கு அழைத்து செல்லும் என்பது கருத்து.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்,
பெருமாள், நாம் மோக்ஷம் அடைவதற்கான வழியை, தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு
மேலும் எளிதாக்கியதால் ஆழ்வார், பெருமாளின் கருணையை மேலும் போற்றுகிறார்.
சென்ற பாசுரத்தில், ‘ ஐயப்பாட்டை அறுத்து தோன்றும் அழகன்’ என்று கூறிய ஆழ்வார்
இந்த பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ என்று சொல்லி,
எம்பெருமானின் திருமேனி அழகே ஆழ்வாருக்கு பக்தி வளர்வதற்கு சாதனமாக இருந்தது என்று சொல்கிறார்.
ஆழ்வார் நெஞ்சத்திற்குள் புகுவதற்கு சமயம் பார்த்து இருந்த எம்பெருமான்
வாழுமிடம் திருவரங்கம் ஆகும் என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும்
அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும்
முன் பாசுரத்தின் விளக்கத்தில் சொன்னபடி, இங்கும் அதனை சொல்லி,
பரம பதத்தை போல் அடைய முடியாததாக இல்லாமல், பக்தர்கள் ஆசை ஏற்பட்டவுடன் சென்று அனுபவிக்கும் இடம்
திரு வரங்கமே என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
—————-
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்,
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்கு மாறே. (திருமாலை 17)
ஆதரத்துடன் பெருமாளை வாயினால் துதி பாடி வணங்க மாட்டேன் என்றும்,
கைகூப்புதல் போன்ற காரியங்களையும் செய்தது இல்லை என்றும்,
ஈஸ்வரன் என்று ஒருவன் இருக்கிறான் என்று மனது நினைக்கவில்லை என்றும்,
இருந்த தன்னுடைய இரும்பு போன்ற கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்த,
வண்டுகள் அதிகம் உள்ள சோலைகள் சூழுந்த திருவரங்கத்தில் கோயில்கொண்ட எம்பெருமானை பார்த்து
தன் கண்கள் களிக்கின்றனவே என்று ஆழ்வார் ஆச்சர்யப்படும் பாசுரம்.
மிகவும் ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு தினமும் விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அதுபோல்
ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அழகிய மணவாளனின் சேவையும் அருளையும் கிடைத்ததை எண்ணி மகிழும் பாடல்.
சென்ற பாசுரத்தில், நெஞ்சினுள் அன்புபெருகவைத்ததை ஆதரம் என்று ஆழ்வார் சொன்னார்.
நெஞ்சினுள் அன்பு பெருகி உருகினாலும், அது உடம்பில் தெரியாதபடி, அது கட்டு அழியாமல்,
கடினமாக இருக்கும் மக்களை போல் இல்லாமல், தன்னுடைய கண்கள் போன்ற புலன்கள் கூட
பெருமாளை கண்டு களிக்கின்றன என்று சொல்லும் பாடல்.
எப்பவும் ஆத்மா தான் உணர்வுகளை அனுபவிக்கும்,
ஆனால் இங்கு ஆழ்வார், புலன்களே மகிழ்ச்சி அடைகின்றன என்று சொல்கிறார்.
விரும்பி நின்ற ஏத்த மாட்டேன்
இந்த வார்த்தைகளால் மனம், உடல், வாக்கு என்ற தன்னுடைய முக்கரணங்களும் கடந்த காலத்தில்
இருந்த நிலையை ஆழ்வார் தெரிவிக்கின்றார்.
இந்த முக்கரணங்களை, ஆண்டாள்
தூமலர் தூவி (கை) தொழுது , வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, (திருப்பாவை, 5) என்று சொல்லி இருக்கிறார்.
ஆண்டாள் நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியதை தான் முன்பு செய்யவில்லை என்று
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தின் முதலில் கூறுகிறார்.
நித்யஸூரிகளுக்கும் தலைவனாகிய பெருமாளை துதிப்பதற்கும் அர்ச்சிப்பதற்கும் சக்தி இல்லாதவனாக இருப்பதால்
அவனிடமே தயை கேட்பது என்று விஷ்ணுபுராணத்தில்(5.7.70) குறிப்பிடப்பட்டுள்ளது போல்
மற்ற விஷயங்களை பேசுவதற்கு நாக்கிற்கு சக்தி இருந்தாலும் பெருமாளை பற்றி பேசுவதற்கு சக்தி இல்லாதவனாக
இருந்ததாக “விரும்பி நின்று ஏத்த மாட்டேன்” என்ற இந்த வார்த்தைகளால் ஆழ்வார் கூறுகிறார்.
விதி இலேன்
அமர கோசம் என்ற காவியத்தில், “விதிர் விதானே‘ என்று சொல்லும்போது விதி என்பது உடம்பினால் செய்யும்
காரியங்கள் என்ற கருத்தில் சொல்லப்படுகிறது.
பெருமாளை கருதி கை போன்ற அவயங்களால் தான் எந்த பக்தியான காரியங்களையும் பல காலங்களாக
செய்யவில்லை என்று ஆழ்வார் கூறுவது விதி இலேன் என்பதால் தெரிகிறது.
மதி ஒன்று இல்லை
விஷ்ணு தர்மம் என்ற நூலில்,
எந்த நாக்கு விஷ்ணுவை போற்றுகிறதோ அதுவே நாக்கு;
எந்த நெஞ்சு விஷ்ணுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறதோ அதுவே நெஞ்சு.
எந்த கைகள் அவனுக்கு பூஜை செய்கின்றனவோ அவையே சிறந்த கைகள் என்று சொல்லியிருந்தபடி
தான் முன் காலத்தில் நெஞ்சினால் கூட நினைத்தது இல்லை என்றும்,
ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்ற புத்தியும் இருந்தது இல்லை என்பதை மதி ஒன்று இல்லை என்று சொல்கிறார்.
நம் வேதங்களிலும், உபநிஷத்களிலும், எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை பற்றி அறிகின்றானோ அவனே சத் புருஷன் என்றும்
அதை அறியாதவன் இல்லாதவன் ஆகிறான் என்றும் சொல்லப்படுகிறது.
எந்த வித்தை, முக்திக்கு காரணமோ, அதுவே வித்தை, மற்றதெல்லாம் வீண், என்று ஸ்ரீ பராசரர் என்ற மாமுனிவர்
விஷ்ணு புராணத்தில் சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
இவையே அறிவு என்பதால், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு மதி ஒன்று இல்லை என்று இந்த பாடலில் கூறுகிறார்.
இரும்பு போல் வலிய நெஞ்சம்
இப்படி மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களால் தன்பக்கம் திரும்பாத ஆழ்வாரை,
இவைகளில் முக்கியமான மனதைத் திருத்தி பெருமாள் அவரை தனக்காக மாற்றினார் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.
இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று சொல்லி தன்னுடைய முந்திய நிலையை ஆழ்வார் சொல்கிறார்.
இரும்பு போல் என்று கடினமான நெஞ்சம் என்று சொல்லி,
தன் மனது, அதையும் விட கடினமானது என்பதை வலிய என்பதால் குறிப்பிடுகிறார்.
இரும்பினைத் தீ கொண்டு உருக்கி விடலாம்,
ஆனால் தன மனதை மாற்றுவது அவனால் மட்டுமே முடியும் என்ற கருத்தினைத் தெரிவிக்கின்றார்.
இப்படி யாராலும் செய்யமுடியாததைச் செய்பவன் என்று பெருமாளின் பெருமையைக் கூட்டுகிறார்.
இரும்பை விடக் கடினமான தன் நெஞ்சத்தை தண்ணீரே காணாத கடினமான நிலத்திற்கு ஒப்பு சொல்லி,
அங்கே எவ்வளவு மழை பெய்தால், அந்த நிலம் தளர்ந்து சேறாக மாறுமோ
அது போல் பெரியபெருமாள் தன்னிடம் கருணை மழை பொழிந்தான் என்கிறார்.
வைரத்தை, வைரம் கொண்டே அறுக்கமுடியம் என்பது போல், மற்ற உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டதால்
வைரம் போன்று இறுகிய தன்னுடைய நெஞ்சத்தை, பெரிய பெருமாள் விலையுயர்ந்த வைரமாகிய
அவரின் அழகினை காட்டி அறுத்தார் என்று ஆழ்வார் சொல்வதை பின்னால் பார்ப்போம்.
இறை இறை உருகும் வண்ணம்
ஆண்டாள் ‘செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ‘ என்று திருப்பாவையில் (22) பாடியது போல்
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கியதாக ஆழ்வார் கூறுகிறார்.
திடீரென்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்பதை கருத்தில் கொண்டு
பெரிய பெருமாள் இவ்வாறு செய்ததாக ஆழ்வார் இங்கு தெரிவிக்கின்றார்.
அவர் சிறுசிறிதே விழித்ததால், ஆழ்வார் மெதுமெதுவாக உருகினார்.
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
வண்டுகள் பொருந்தி இருக்கின்ற சோலை என்று பொருள்.
அமர் என்று சொல்வதால் அங்கேயே பிறந்து, அங்கேயே எப்போதும் இருக்கின்ற வண்டுகள் என்று கொள்ள வேண்டும்.
வண்டுகள் பறந்து வேறு இடம் செல்லாதா என்று கேட்டுக்கொண்டு, அந்த சோலைகளில் தேன் வற்றாததால்,
திருவரங்கத்தில் எப்போதும் வசந்த காலமே, அதனால் வண்டுகளும் வேறு இடம் செல்ல காரணம் இல்லை.
எப்படி பூக்களின் வாசம், அந்த சோலையில் உள்ள பூக்களில் இருந்து பிறந்து, அங்கேயே வளர்ந்து.
அங்கேயே இருப்பது போலே, ஸ்ரீரங்கத்து வண்டுகள் அந்த சோலையிலேயே பிறந்து வளர்ந்து இருக்கின்றன என்று சொல்கிறார்.
இங்கு நாம் மணவாள மாமுனிகளின் யதிராஜவிம்சதி என்ற நூலில் இருந்து இரண்டாம் பாசுரத்தில் உள்ள ஒரு கருத்தையும் பார்க்கலாம்.
“ ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ரு ங்கராஜம்” என்று சொல்லும்போது,
சுவாமி ராமானுஜர் எப்போதும் நம்மாழ்வாரின் பாத கமலங்களில் நீங்காது இருக்கும் வண்டு என்று சொல்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்பது ராமானுஜருக்கு என்றும் மாறாத சுவையுடைய தேன் என்பதால்
அவர் எப்போதும் நம்மாழ்வாரின் திருவடிகளை விட்டு அகலாமல் இருக்கிறார்.
சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஅரங்கம் என்று சொல்லிவிட்டு, திருவரங்கத்தின் இனிமை,
சோலையின் இனிமையைவிட அதிகம் என்பதை ‘மா’ கோயில் என்பதைக்கொண்டு விளக்குகிறார்.
திருவரங்க நகரின் இனிமையை கனிக்கு ஒப்பிட்டால், சோலைகளின் இனிமையை புறத் தோலுக்கு ஒப்பிடலாம்படி உள்ளது என்கிறார்.
மேலும் திருவரங்கத்தை, பரமபதம் போல் சிறந்த கோவிலாக உள்ளதையும் இது தெரிவிக்கிறது.
கரும்பினை
இங்கு ஆழ்வார், பெரிய பெருமாளை கரும்பு என்கிறார்.
கரும்பு என்று சொல்வதால், இயற்கையாகவே இனிமையாக இருக்கும்;
தைத்ரீய உபநிஷத்தில் சொன்னது போல் அவன் ஆனந்த ஸ்வரூபன்,
அவனை அடைந்து ஜீவாத்மா ஆனந்தம் அடைகிறான் என்பதில் பரமாத்மா இயற்கையில் இனிமையானவர் என்று கிடைக்கிறது.
வைரம் போன்று இறுகிய ஆழ்வார் நெஞ்சத்தை, வைரம் கொண்டு அறுத்தார் என்று மேலே சொன்னதை,
வைரம் போன்ற ஆழ்வாரின் நெஞ்சத்தை, கரும்பு போன்ற மென்மையான, இனிமையான, இயற்கையான
தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு மாற்றினார் என்று கொள்ளலாம்.
கண்டு கொண்டு
ராமாயணம் யுத்தகாண்டம், 19.7 ல் சொன்னது போல்,
விபிஷணனை கண்களால் இராமன் பருகியதை போல் இங்கு,
பெரிய பெருமாள் கண்களால் பருகக்கூடிய கரும்பு என்று சொல்கிறார்.
என் கண் இணைக் களிக்குமாறே
மற்ற விஷயங்களில் லயித்த ஆழ்வாரின் கண்கள் பெரியபெருமாளை தரிசித்ததும் அவரை கண்டு களிக்கின்றன
என்று ஆழ்வார் ஆச்சர்யம் கொள்கிறார்.
‘இணை’ என்றது வலது கண்ணின் மகிழ்ச்சிக்கு இணை இடது கண் என்று தன்னுடைய இரண்டு கண்களை
மட்டுமே இணையாக ஆழ்வார் காண்கிறார்.
முன்பு சொன்னது போல் கண்கள், இந்திரியங்கள் என்ற நிலையை தாண்டி தானே ஒரு ஆத்மாவைப் போல் ரசிக்கின்றன.
மேல் சொன்னது, கண்கள் தாமாகவே இன்பம் கொள்ளும் காட்சி. கண்கள் தானாகவே துயரப்பட்ட காட்சியை
இராமாயணத்தில் காணலாம்.
இராமனைக் காட்டிற்கு அனுப்பியபின், தயரதன் தன்னுடைய கண்கள் இராமன் பின் போயின என்றும்,
கௌ ஸல்யையைப் பார்க்க முடியவில்லை என்றும் தன்னை தொட்டுப்பார்த்து தொடு உணர்ச்சி உள்ளதா என்றும்
கேட்கும் ராமாயண சுலோகத்தை (அயோத்தியாகாண்டம் 42.34) மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
தயரதன் தன் கண்கள் தன்னிடம் சொல்லாமல் தன்னிச்சையாக சென்றதை சொல்வது மேல் சொன்ன சுலோகம்.
இதே நிலையை தாம் அடைந்ததாக நம்மாழ்வார் சொல்லும் பதிகம்,
‘முடியானே’ என்னும் 3.8 திருவாய்மொழி ஆகும்.
இதில்
3.8.1ல், தனது மனதானது பெருமாளை காண வேண்டும் என்று உருகிக் கிடக்கின்றது என்றும்,
3.8.2ல், தனது வாக்கானது, நெஞ்சுக்கு அருள் செய்தது போல் தனக்கும் அருள் செய்ய வேண்டும் என்று பெருமாளிடம் சொன்னது என்றும்,
3.8.3ல் தனது கைகளானவை, வாக்கு மட்டுமே உங்களை போற்றி பாட வேண்டுமா, நாங்களும் பாட வேண்டுமே என்று அவனிடம் கோரிக்கை வைத்தன என்றும்,
3.8.4ல் தனது கண்களானவை, கைகளைப்போல் தொழவேண்டும் என்று ஆசைகொண்டன என்றும்
3.8.5ல் தனது செவிகளானவை, காணவும் கேட்கவும் வேண்டும் என்று ஆசை கொண்டன என்றும்,
3.8.6ல் தனது பிராணன்(ஆவி), ஆனது செவியைப்போல் கேட்கவேண்டும் என்று ஆசைகொண்டது என்றும்,
3.8.7ல் தனது மனம் ஆனது பெருமாளின் வடிவழகை காண பலகாலமாக ஆசை கொண்டது என்றும், அது இதுநாள் வரை கிடைக்கவில்லை என்றும்,
3.8.8 ல் தனது மனம் பெருமாளின் வடிவழகை எப்போது கண்டுகளிக்கும் என்றும்,
பரதாழ்வானுக்கு நாளிட்டுக் கொடுத்தாப்போலே தனக்கும் ஒருநாள் குறிப்பிட வேணும் என்றும்,
3.8.9 ல் தான் (ஆத்மா) எப்பொழுது அவனை அடைவது என்றும்,
3.8.10 ல் அவனுடைய திருவடிகளை காணப்பெறாமல் எத்தனை நாள் துயர் கொள்வது என்றும் சொல்லி
தன்னுடைய புலன்களின் நிர்வாகம் தன்னிடத்தில் இல்லை என்று பத்து பாசுரங்களில் சொல்லி இருக்கிறார்.
3.8.11 ல் ஆழ்வார் நலங்கொள் சீர் என்று சொல்வது மிக சிறப்பானது.
ஒரு புலனில் ஆசைப்பட்டதில் இருந்து மற்றொரு புலனுக்குப் பாய்ந்து அங்கேயே தங்கிவிடாமல்
இப்படி எல்லா புலன்களையும் தாண்டி, அவை எல்லாவற்றையும் விட மிக பெரிய விஷயமான
பரமாத்மாவிடம் லயிக்கும்படி சொல்லி இருப்பது மிகமிக சிறப்பாகும்.
———-
சென்ற பாசுரத்தில், ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.
அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க,
பெருமாளை முழுமையாக ரசிக்க முடியவில்லையே என்று இந்த பாடலில் ஏங்குகிறார்.
ஆழ்வார்கள் பொதுவாகத் தங்களைப் பாவிகளாக, அதிகமாக பாவம் செய்ததாகவும்,
அதனால் தான் பரமபதம் அடையமுடியவில்லை என்றும் என்று சோகமாக பாடுவார்கள்,
ஆனால் இந்த பாடல் அப்படி இல்லை.
இந்த பாசுரத்தில், ஆழ்வார், எம்பெருமானை தரிசிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த போது,
அந்த ஆனந்தம் அளவிற்கு அதிகமாக போனதால், அதன் அடையாளமாக ஆனந்தக் கண்ணீர் பெருக,
ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று
கவலையுற்று கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாது போன்ற ஒரு பெரிய பாவத்தை எண்ணி தன்னையே வெறுத்துக் கொள்ளும் பாடல்.
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே,
தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்,
கனி யிருந்து அனைய செவ்வாய், கண்ணனைக் கண்ட கண்கள்,
பனி அரும்பு உதிருமாலோ, என் செய்கேன் பாவியேனே. (திருமாலை 18)
இனிமையான அலைகளில் இருந்து வரும் நீர்த்துளிகள் அடிக்க,
அந்த குளிர்ந்த அலைகளை உடைய கடல் போன்ற காவிரியின் மேல், தனி ஒருவனாய் கண் வளர்ந்து அருளி,
அரசு செலுத்தும் செந்தாமரை கண்ணனும், தனக்கு ஸ்வாமியுமான, கொவ்வை கனி போன்று சிவந்த வாயினையுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை கண்ட கண்கள் குளிர்ந்த ஆனந்த கண்ணீரை பெருக விடுவதால், நன்றாக சேவிக்க முடியாத
பாவியாகிய தான் என்ன செய்வேன் என்று ஆழ்வார் சொல்வது போல் உள்ளது இந்த பாடலின் பொருள்.
இனி திரைத் திவலை மோத
இனிது என்பதில் கடைசி எழுத்து குறைந்து இனி திரை என்று வந்துள்ளது.
இதுபோல், ஒண்சங்கதைவாளாழியான் (திருவாய்மொழி 8.8.1) ஒண் சங்கு கதை வாள் ஆழியான் என்று உள்ளது.
இனிமையான சிறு துளிகள், பெரும் அலைகளில் இருந்து சிதறி
(அங்கு சயனித்து இருக்கும் பெரிய பெருமாளின் திருமேனியை) தொட்டு என்பதே இதன் பொருளாக கொள்ள வேண்டும்.
மோத என்று சொல்லியதால், பெரிய பெருமாளின் திருமேனியின் மென்மையை சொல்கிறார்.
சிறு துளி தான், மெதுவாகத்தான் பெருமாளை தொட்டது, இருந்தாலும், பெரியபெருமாளின் மென்மையை பார்க்கும் போது,
அது மோதுவது போல் இருந்தாக ஆழ்வார் சொல்கிறார்.
முன்பு (திருமாலை, 11) அரக்கர்கோனை செற்ற நம் சேவகனார் என்று பெரிய பெருமாள்
நம்மை காக்கும் போது, சக்தியை சொன்னார்.
இங்கு பெரிய பெருமாளை அனுபவிக்கும்போது மென்மையை சொல்கிறார்.
எறியும் தண் பரவை மீதே
பெருமாளின் களைப்பை போக்கும் விதமாக குளிர்ந்த அலைகளை கொண்ட கடலின் மீது சயனித்து இருக்கும்
பெருமாளை போல் இங்கு காவிரியின் மேல் கண்வளர்ந்து அருளுகின்ற பெரிய பெருமாளை ஆழ்வார் சொல்கிறார்.
பரப்பாலும் நீர்பெருக்காலும் காவிரி கடலை ஒத்து உள்ளது என்றும் கொள்ளலாம்.
தனிக் கிடந்து
தனி என்பது ஒப்புமை இல்லாதவர் என்று கொள்ளலாம்.
நினைவு அறிந்து அவனுக்கு மட்டுமே சேவை செய்ய காத்திருக்கும் நித்திய ஸூரிகளும், முக்தாத்மாக்களும் நிறைந்த
பரமபதத்தை விட்டு திருவரங்கத்திற்கு வந்து, இங்குள்ள பக்தர்களின் மேல் உள்ள ஆசையினால்,
யாராவது ஒருவராவது தன்னை வந்து சேர மாட்டார்களா என்று தனியாகக் காத்துகொண்டு இருப்பதாகவும் கொள்ளலாம்.
முக்தி பெறுவதற்கான காரியங்களை செய்யாமல், இந்த உலக வாழ்க்கையில் தங்கள் நேரத்தை செலவழித்து,
அதையே பெரிய இன்பமாக நினைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த பூவுலகில்,
தனியேன் வாழ் முதலே(திருவாய்மொழி, 2.3.5) என்று பிரார்த்திக்கும் நம்மாழ்வார் போன்ற,
தனி ஒருவனைப் பெறுவோமா என்ற ஆசையினால் அன்றோ,
தனியாக வந்து சயனித்து இருப்பது என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.
நம்மாழ்வார், திருவாய்மொழி (10.10.1)ல், மறுபடியும் “தனியேன் ஆருயிரே” என்று சொல்லி,
தான் சாதாரண உலகத்தாருடன் பொருந்த வில்லை என்பதை தெரிவிக்கின்றார்.
அரசு செய்யும்
‘நீ என்னுடையவன்’ என்று பரமாத்மா -பெருமாள் சொன்னால், அதனை மறுத்து,
‘நான் எனக்கே உரியவன்” என்று சொல்லும் ஜீவாத்மாக்கள் இருந்தால் அது ஈரரசு (இரண்டு அரசு);
அத்தகைய ஈரரசினை தவிர்த்து தனியாக ஒரு அரசாக மாற்றி, ஜீவாத்மாக்கள்
‘நமஹ ‘ (நான் எனக்கு உரியவன் அல்லன்) என்று சொல்லும்படி மாற்றி ஆட்சி செய்வதே இங்கு அரசு எனப்படுகிறது.
மஹாபாரதத்தில் (சாந்தி 344.45) கூறியதுபோல் நித்யஸூரிகள் எப்போதும் அஞ்சலி செய்துகொண்டும்,
நமஹ என்று சொல்லிக்கொண்டும் அதில் ஆனந்தப்பட்டு கொண்டும் இருப்பதைப்போல்,
இந்த உலகத்தில் உள்ளவர்களையும் அகங்காரம், மமகாராம் இவற்றை தொலைக்க வைத்து
ஆட்சி செய்கிறான் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
தாமரைக் கண்ணன் அம்மான்
இந்த உலகத்தில் உள்ளவர்களின், அகங்காரம், மமகாராம் முதலியவற்றை எதை கொண்டு அழிக்கிறான்
என்று கேட்டுக் கொண்டு, தன்னுடைய கண் அழகினை காட்டி மயக்குகிறான் என்பதையே இந்த பதங்கள் சொல்கின்றன.
கையில் பிரம்மாஸ்திரம் இருக்கும் போது அதை கொண்டு வெல்லமுடியாத எதிரிகளே கிடையாது அல்லவா,
அதைபோல் தன்னுடைய தாமரை கண்களை கொண்டு பரமபதத்தில் உள்ளவர்களை வென்றதை போல்,
இவ்வுலகத்தில் உள்ளவர்களை வெல்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
நித்யஸூரிகள் இந்த தாமரைக்கண்களுக்கு தோற்று இருப்பார் என்பதை
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை”, (திருவாய்மொழி 2.6.3) என்று
நம்மாழ்வார் கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
இப்படி கண் அழகினால் மயங்கியவர் யார் என கேட்டுக்கொண்டு, இவ்வுலத்தாரில் மிகவும் கடைப்பட்டவனாக இருக்கும்
தன்னை தோற்கடித்தபின், இவரால் வெல்ல முடியாதவர் யாரும் இல்லை என்றும்,
தானே அப்படி அடிமைப்பட்டவர் என்பதையும் சேர்த்து ‘அம்மான்’ என்று சொல்லி இருக்கிறார்.
கனியிருந்து அனைய செவ்வாய்
இப்படி அகங்காரம் அறுக்கப்பட்டவர் அனுபவிக்கும் விஷயம், கனி போன்று இனிமையாகவும் அழகாகவும் இருக்கும்
பெரியபெருமாளின் திரு பவளவாய் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கனி என்று நேரிடையாக கூறாமல், கனி இருந்து அனைய என்று சொன்னதால், நாள் செல்லச் செல்ல
இந்த பவள செவ்வாய் என்ற கனி, மற்ற கனிகளை போல் அன்றி, புதுமை குறையாமல் அப்படியே இருக்கும் என்கிறார்.
விஷ்ணு புராணத்தில் பராசர முனிவர் கூறிய ‘அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே” (1.2.1) என்பதை குறிப்பிடலாம்.
கண்ணனை
பராசர பட்டர் என்னும் ஆச்சார்யர் பெரியபெருமாளே கண்ணன் என்றும்,
நம்பெருமாள் ஸ்ரீராமன் என்று கூறுவதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
கிருஷ்ணாவதார காலத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற காரணத்தோடு திருவரங்கத்தில்
பள்ளி கொண்டு இருக்கின்ற பெரியபெருமாள் என்றும்
குழந்தை கிருஷ்ணன் ரொம்பவும் அதிகமாக விளையாட்டு காட்டினாலும் (துஷ்டத்தனமான), அவற்றைப் பொறுத்துக் கொண்டு
அவனுக்கு மென்மேலும் வெண்ணெய் மற்றும் தயிர் கொடுத்து வளர்த்த தோற்றம் தெரியும்படி உள்ள பெரியபெருமாள் என்றும்
திருவரங்க மூலவரைப் பற்றி பராசர பட்டர் கூறுவார்.
அதேபோல், எப்போதும் வசிஷ்டர் போன்ற அறிவார்ந்த முனிவர்களுடன் பழகியதால் உண்டான அடக்கம்
கண்களில் தெரியும்படி உள்ள நம்பெருமாள் என்று உற்சவ மூர்த்தியைப் பற்றியும் பராசர பட்டர் கூறுவது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ட கண்கள்
பலகாலங்களாக பெரிய பெருமாளை சேவிக்காத இழப்பை சரி செய்து, தற்பொழுது
அந்த பாக்கியத்தைப் பெற்ற கண்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.
பனி அரும்பு உதிருமாலோ
கண்டு அனுபவிக்கின்ற காரணத்தால், ஆழ்வாரின் கண்களில், ஆனந்த கண்ணீர் வெள்ளம் போல் பெருகி வருகின்றது.
அது குளிர்ந்து இருந்ததாக சொல்லி இருப்பதும், வறுத்த பயிறு முளைக்கும்படி இருந்ததாக சொல்லி இருப்பதும்,
விரக தாபத்தில் இருந்தால் அந்த கண்ணீர் சுடும் என்றும் விளக்கம் கொடுத்து இருப்பது சுவாரஸ்யமே.
ஆலோ என்று சொல்வது
பின்னால் சொல்லப் போகும் வருத்தத்தின் மிகுதியை சொல்வது.
என் செய்கேன் பாவி யேனே
கண்ணீர் அருவி போல் பெருகி வருவதால் அது சுவர் போல் இருந்து பெரிய பெருமாளை சேவிக்க முடியாமல் மறைப்பதால்,
என் செய்வேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
காண்பதற்கு அரிய விஷயத்தை காணக் கிடைத்து இருந்தும்,
தொடர்ந்து தரிசிக்க முடியாமல் கண்ணீர் சுவர் போல் மறைத்து இருப்பதை நினைத்து, தான் பாவி என்று வருந்துகிறார்.
பெரிய பெருமாளின் பெருமைகள் அளவிடமுடியாதவை; அதனால் அவரை தரிசிக்கும் போது கிடைக்கும் இன்பமும்,
அதனால் வரும் கண்ணீரும் அளவிட முடியாதவைகளே.
கண்ணீர் வரும் போது இடைவெளி இருந்தால், அப்போதாவது பெரிய பெருமாளை காணப் பெறலாம்,
ஆனால் தொடர்ந்து கண்ணீர் வருவதால், அவரை காண முடிய வில்லையே என்று ஆழ்வார் மேலும்
வருந்துவதாக பாடல் அமைந்துள்ளது.
இப்படி ஆழ்வாரின் அனுபவம், தண்ணீரால் வரும் வெள்ளக் கேடும், வறட்சி கேடும் ஒருங்கே
அமைந்தது போல் உள்ளது என்று சொல்லி உரையாசிரியர் இந்த பாடலை நிறைவு செய்கிறார்.
———–
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்னார்,
இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே,
என்ன செய்வேன் என்று கடைசி இரண்டு அடிகளில் சொல்கிறார்.
முதல் இரண்டு அடிகளில் தம்மை உருக்கியது எது என்று சொல்கிறார்.
குடதிசை முடியை வைத்துக் குணதிசைப் பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு,
உடல் எனக்கு உருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே. (திருமாலை 19 )
பெருமாள், புண்ணியங்கள் நிறைய செய்த தேவர்களுக்காக வானுலகத்தை (மேல் உலகம்) படைத்தார்.
புண்ணியங்களும், பாவங்களும் கலந்து செய்யும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்காக
பூமியை (கீழ் உலகம்) படைத்தார். இப்படி மேல் கீழ் என்ற இரு திசைகளுக்கு பயன் உள்ளதை ஆழ்வார் உணர்ந்தார்.
ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு போன்ற நான்கு திசைகளுக்கும் ஒரு பயனும் இல்லை என்று நினைத்தார்.
இந்த பாடலுக்குப் பிறகு அவைகளின் பயனை உணர்ந்து கொண்டார்.
மனிதர்களுக்கு படைத்த இந்த உலகத்தில், அவர்களை உய்விப்பதற்கும் உதவ வேண்டும் என்று இந்த திசைகளை படைத்து,
அவை ஒவ்வொன்றிலும் தன்னுடைய ஒவ்வொரு அவயவங்களை வைத்து
அவர்கள் அதன் அழகினைப் பார்த்து பலன் பெறட்டும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
குட திசை முடியை வைத்து
மேற்கு திசையில் (குடதிசை) உள்ளவர்கள் வாழும்படி அதாவது, அங்குள்ளவர்கள் பயன் அடையும்படியும்,
தானே இந்த பூலோகத்திற்கு (உபயவிபூதி ) நாயகன் அல்லது தலைமை வகிப்பவன் அல்லது ஸ்வாமியாக இருக்கும்
தன்மை உடையவன் என்று சொல்லும்படியாகவும் தன்னுடைய திரு அபிஷேகத்தை (கீரிடம்) உடைய திருமுடியை
மேற்கு பக்கம் வைத்து உள்ளான் என்று ஆழ்வார் பாடுகிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி 3.8.1 ல், எல்லா உலகுக்கும் தனிக்கோல் செலுத்துபவன் என்று
சொல்லும்படி கிடக்கிறான் என்பதை (முடியானே … என்று கிடக்கும் ) இங்கு நினைவில் கொள்ளலாம்.
குண திசை பாதம் நீட்டி
அதே திருவாய்மொழி பாடலில் (3.8.1), ‘மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியானே,’ என்று நம்மாழ்வார் சொன்னபடி,
எல்லா உலகங்களும் வாழ்ச்சி பெறுவதற்கு விஷயமான தனது திருவடிகளை கிழக்குப் பக்கம் (குணதிசை)
நீட்டிவைத்து உள்ளார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
நீட்டி என்று சொன்னதால், திருவடிகளை கிழக்குப் பக்கம் உள்ள ஆழ்வாரின் ஊரான மண்டங்குடி வரை நீட்டி
தன்னை வசீகரித்ததைச் சொல்கிறார்.
இதையே அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தின் முதல் பாடலில், திருப்பாணாழ்வார்,
“திருக் கமல பாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே‘ என்று சொன்னதும்,
அந்த ஆழ்வார் இருந்த உறையூர் வரை திருப்பாதங்கள் நீண்டன என்ற பொருளிலே சொல்லப்படுகிறது.
பெருமாள், குணமுள்ளவர்களை வாழ்விப்பது, குணமற்றவர்களை கைவிடுவது என்ற கொள்கை இல்லாதவர் ஆகையால்,
குணவான்களோடு, துஷ்டர்களும் வந்து பணிந்து போற்றக்கூடிய திருவடிகளை பெற்றவர் என்பது சிறப்பு.
“பொய்யர்க்கே பொய்யனாகும்” என்று மேலே, பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்று
சொன்னது கூட, இந்த பிறவியில், அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தி,
அவர்களுக்கும் நன்மையே செய்து விடுவது என்பதை இங்கு கருத்தில் கொள்ளலாம்.
ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் எப்பொழுதும் கிழக்கு பக்கம் எழுந்தருளி, எம்பெருமானின் திருவடி பக்கமே,
பெரியபெருமாளை சேவிப்பார் என்றும், பெருமாளின் திருமுடி இருக்கும் மேற்கு திசையை
துரியோதனன் பக்கம் என்று சொல்லி தவிர்ப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
திருவடிகளின் பெருமையைப் பற்றி பேசும் போது, வேதாந்த தேசிகன் என்ற இன்னொரு ஆச்சாரியார்,
தன்னுடைய பாதுகா சஹஸ்ரம் என்ற நூலில், கூறியதை பார்ப்போம்.
இராமன், மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்களை போல் தான் ஒருவனாகவே அவதரித்து எல்லாம் செய்து இருக்கலாம்.
ஆனால், தானே, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனாக தன் கூடவே அவதரிக்க காரணம்,
எல்லோரும் விரும்பும் தன்னுடைய திருவடிகளை தானும் விரும்பி ஆராதனம் செய்ய விரும்பினார்;
ஆனால் இந்த உலகம் பரிகசிக்குமே என்று தானே பரதனாக அவதரித்து அதனை செய்தார் என்று கூறுகிறார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளே, சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஆவார்;
இக்ஷ்வாகு குலத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளும் அவரே ஆவார்.
பட்டாபிஷேக சமயத்தில் விபீஷணனுக்கு பரிசளிக்கப்பட்டவரும் அவரே ஆவார்.
ஆக, ஸ்ரீ ராமன், ஸ்ரீரங்கம் பெருமாளான அரங்கநாதன், ஆகியவர்கள் எல்லோருமே ஸ்ரீமன் நாரயணனே.
இப்படி, தன்னை தானே ஆராதித்துக்கொள்வது சரியா என்று கேட்டால்,
அதற்கு, தன்னுடைய பெருமை தனக்கு மட்டுமே தெரியும் என்பதாலும்,
அது மற்றவர்க்கு உரிய நிலமில்லை என்பதாலும்,
அதற்கு என்று தனியாக ஆள் வைக்காமல் தானே ஆராதனை செய்கிறார் என்று பட்டர் சொல்கிறார்.
இவைகளை போல், அவரே தன்னுடைய அழகையும் ரசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் சொல்கிறார்.
வட திசை பின்பு காட்டி
வடமொழி வல்லுநர்கள் நிறைந்த பகுதியாதலால் அங்கு ஆழ்வார்களின் கருணை நிறைந்த பாசுரங்கள் தெரியாதவர்கள் ஆகையால்,
அவர்களை திருத்துவதற்கு, தன்னுடைய முன்னழகை விட சிறந்ததான பின்னழகை
பெரிய பெருமாள் காட்டுகிறார் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பிள்ளை பெருமாள் அய்யங்கார் எழுதிய கோவிலந்தாதி என்ற நூலில், அழகிய மணவாளன் என்னும் ரங்கநாதனுக்கு
முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு என்று சொல்கிறார்.
உத்சவ மூர்த்தியான நம்பெருமாள்,
தன் முன்னழகையும், முன்னிலும் பின்னழகிய பெருமாள் என்று ஏத்தும்படி உள்ள தன் பின்னழகையும்,
எதிரே வீற்று இருக்கும் பெரியதிருவடியின் (கருடன்) வடிவத்தையும்,
இரண்டு பக்கங்களில் உள்ள உபய நாச்சிமார்களின் வடிவங்களையும்,
பின்னால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெரிய பெருமாளின் அழகினையும் கண்டு ரசித்தும்
அதில் திருப்தி கொள்ளாதவராக உள்ளார் என்ற பட்டர் சொற்களையும் நாம் இங்கு ஞாபகம் கொள்ளலாம்.
இப்படி தன்னுடைய அழகை மேலும் மேலும் மெருகூட்டி கொள்வது, மேலும் அதிகமான அடியார்களை கவர்வதற்கே ஆகும்.
நம்முடைய ஆச்சார்யார்களில் ஒருவரான, நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் என்று ஒருவர் உண்டு.
இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார்.
எம்பெருமானின் (திருஅரங்கம் நம்பெருமாள்) பின்னழகுக்கு அடிமை ஆகி தன் பெயரை இப்படி மாற்றிக் கொண்டதாக வரலாறு.
அவர் குருபரம்பரை என்று நம்முடைய ஆழ்வார் ஆசார்யர்களின் சரித்திர விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
எப்படி நம்ஜீயர் என்ற சன்யாசம் பெற்ற ஆச்சார்யார் பட்டர் என்ற ஆச்சார்யாருக்கு கைங்கர்யங்கள் செய்தாரோ
அது போன்று சன்யாசியான பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை என்ற ஆச்சார்யார்க்கு கைங்கர்யங்கள் செய்தார்.
ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு முழுப் பற்றுதல் இருக்க வேண்டும் என்ற
உயர்ந்த கருத்தை வெளிப்படுத்திய சிஷ்யர் ஆவார். பட்டர், நம்பிள்ளை இருவரும் க்ரஹஸ்தர்கள்.
அதேபோல், மற்ற திசைகளுக்கு இல்லாமல், வடக்கு திசைக்கு மட்டும், காட்டி என்று சொன்னதற்கு உரையாசிரியர்,
வடக்கு பக்கம் வாழ்பவர்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளார், மற்ற திசைகளை சொல்லும் போது,
அந்தந்த திசையை மட்டும் சொல்லி, அங்கு உள்ளவர்களுக்கு என்று உரையாசிரியர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இது மற்ற திசைகளை வாழ்பவர்களை விட இவர்கள் கடினமானவர்கள் என்ற கருத்தால் இருக்கலாம்.
தென் திசை இலங்கை நோக்கி
மற்ற மூன்று திசைகளிலும் அவயங்களை வைத்ததிற்கு காரணம்,
அந்த திசைகளின் பயனில்லாமையை நீக்குவதற்காக என்று சொன்ன ஆழ்வார்,
தெற்கு திசையை நோக்கி பார்ப்பது மட்டும் பெருமாள், தன்னுடைய குறை நீங்குவதற்காக என்று சொல்கிறார்.
மற்ற மூன்று திசைகளுக்கும் தன்னுடைய கருணையின் காரணமாகப் பிறர்க்கு செய்த உதவி என்றும்,
தெற்கு திசையில் செய்வது மட்டும், தான் விபீஷ்ணனுடன் இலங்கை செல்லாமையைக் கருதி
பெருமாள் தானே தனக்கு செய்துகொண்ட உதவி என்று ஆழ்வார் கூறுகிறார்.
தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வதை
நினைவில் கொண்டால் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் திசையை நோக்கி கண்வளர்ந்து அருளுவதின் காரணம் தெரியும்.
பெரியாழ்வார் திருமொழியில் (4.9.2), விபீஷ்ணற்காகவே பெரியபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார் என்பதை பற்றி
பெரியாழ்வார் சொன்ன வார்த்தைகள்
“மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த, என்னுடைய திருவரங்கர் “.
விபீஷ்ணனின் விரோதியை ஒழித்து, இலங்கை ராஜ்யத்தை அவனுக்கு கொடுத்து அதை அவன் நன்றாக
ஆட்சி செய்வதைப் பார்த்தபடி பெரியபெருமாள் கண்வளர்ந்து இருப்பதை பெரியாழ்வார் சொல்கிறார்.
குழந்தைக்கு பால் கொடுத்தபடி, படுத்துக்கொண்டு அதன் முக மலர்ச்சியை கண்டு மகிழும்
தாயைப் போலே இருக்கிறது என்று உரையாசிரியர் சொல்வது சிறப்பு.
அடுத்தது, திருமங்கையாழ்வார். அதற்கு முன், நாம் இராமனுக்கு சுக்ரீவன் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்க்க வேண்டும்.
யுத்த காண்டத்தில், சுக்ரீவன், இராமரின் தலையில் கீரிடம் இல்லாமல் இருப்பதை பார்த்தும்,
அதே சமயத்தில் இராவணனின் பத்து தலைகளிலும் பத்து கிரீடங்கள் இருப்பதைக்கண்டு பொறுக்காமலும்,
உடனே எதையும் சிந்தனை செய்யாமல், பாய்ந்து இராவணனின் தலைகளில் உள்ள அத்தனை கீரிடங்களையும் பறித்து
இராமனின் காலடியில் கொண்டு சமர்ப்பித்தான். அதற்கு இராமன், சுக்ரீவனைப் பார்த்து கவலையுடன்,
இப்படி ஆபத்தான காரியங்கள் செய்யும் போது, அவனுக்கு ஏதாவது நடந்து இருந்தால், தான் என்ன செய்வது,
தனக்கு சீதா, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்று பலர் இருந்து என்ன பயன் என்று வருந்துவது
வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 41.4) சொல்லப்படுகிறது.
இவர்களுக்கு இணையாக சுக்ரீவனும் சொல்லப்படுவதே இராமனின் சுக்ரீவனிடத்தில் இருந்த பேரன்புக்கு எடுத்துக்காட்டு.
இப்போது இராமனுக்கு விபீஷ்ணனின் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்ப்போம்.
விபீஷ்ணன் இலங்கையை விட்டு விலகி, இராமனிடம் சரணாகதி அடைய வரும்போது,
முதலில் சுக்ரீவன் அவர்களை தடுத்து வைத்து, இராமனிடம், அவர்கள் எதிரிகளிடம் இருந்து வந்தவர்கள்,
அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று வாதிடுகிறான்.
அதற்கு இராமன் மறுப்பு தெரிவித்தபோது, சுக்ரீவன் அவர்களை சேர்த்தாலே, தானும் தன் படைகளான வானர சேனையும்
இராமனை விட்டு விலகிவிடுவோம் என்று சுக்ரீவன் சொன்னான்.
இராமன், விபீஷ்ணனை அன்று ஈன்ற கன்று போல கொண்டு, வானர சேனையும், சுக்ரீவனும் தன்னை விட்டு விலகினாலும்,
தாம் ஒருபோதும் விபீஷ்ணனை கைவிடமாட்டோம் என்று, முன்பு ஈன்ற கன்று போல உள்ள சுக்ரீவனிடம் சொன்னார்.
சுக்ரீவனும் மனம் மாறி இராமன் சொன்னதை ஆதரித்தான் என்பது சரித்திரத்தின் தொடர்ச்சி.
பெரியபெருமாள் இவ்வளவு பரிவு கொண்ட விபீஷ்ணன் என்பதை திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில், (6.8.5)
“செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை” என்றார்.
அத்தகைய விபீஷ்ணனனை நோக்கி கண்வளர்ந்து அருளுகிறார் என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாடலில் சொன்னது.
மேற்கு திசையில் (குட ) முடியை வைத்து என்றும், கிழக்கு திசையில் (குண) பாதம் நீட்டி என்றும்
வடக்கு திசையில் பின்பு காட்டி என்றும் சொன்ன ஆழ்வார் தெற்கு திசையில் மட்டும் நோக்கி என்று
பெருமானுடைய விருப்பமாக சொல்கிறார்.
அதாவது, வைத்து, நீட்டி மற்றும் காட்டி என்பவை ஒருமுறை செய்தால் போதுமானது,
ஆனால், நோக்கி என்பது தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் என்ற பொருளைத் தருவது.
நோக்கி என்பதன் மூலமும் எம்பெருமானுக்கு விபீஷ்ணன் மேல் உள்ள பரிவு தெரிகிறது.
இவ்வுலகத்தில் உள்ள 106 திவ்யதேசங்களில் தெற்கு நோக்கிய திருமுகம் 7 திவ்ய தேசங்கள் மட்டுமே.
அவை
ஸ்ரீரங்கம்,
திருமெய்யம்,
திருசிறுபுலியூர்,
திருநீரகம்,
திருகாரகம்,
திருவித்துவக்கோடு,
திருக்காட்கரை.
கடல் நிற கடவுள்
நித்யஸூரிகள் எப்பொழுதும் ஆசைப்படும் வடிவு பரமாத்மா ஆகும்.
அப்படிப்பட்ட பரமாத்மா, ஏதாவது ஒரு ஜீவாத்மா கிடைப்பானா என்று காத்துகொண்டு இருப்பதை ஆழ்வார் இங்கு கூறுகிறார்.
கடல், தன்னைக் கண்டவர்கள் களைப்பை போக்கும் தன்மை உள்ளது.
அதேபோல், பெருமாளின் திருமேனியும் கண்டுகளிப்பவர்களின் களைப்பை போக்குவதால், ஆழ்வார், கடல் நிறக் கடவுள் என்கிறார்.
கடலை , நிறத்திற்கு ஒப்பாக கூறலாமே அன்றி, பெருமாள் திருமேனி, அதையெல்லாம் கடந்து இருப்பதால்,
கடவுள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
எந்தை
இந்த வடிவழகைக் காட்டி ஆட்கொண்ட பெருமான் என்பதை, எந்தை என்று சொன்னார்.
புதிய கிணறு சரியாக உள்ள நிலையில் பழைய கிணறை தூர் வார்வது எதற்காக என்று ஆழ்வார் கேட்கிறார்.
புதிய கிணறு என்று ஆழ்வார், பெருமான் தன்னை தன்னுடைய வடிவழகை காட்டி ஆட்கொண்டதை சொல்கிறார்.
பழைய கிணறு என்று ஆழ்வார், நித்யஸூரிகளை பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி ஏற்றுக்கொண்டதை சொல்வது.
தாழ்வுக்கு எல்லையாக உள்ள தன்னை பெருமாள் அழகை காட்டி திருத்திய பின்,
வேறு ஒருவரையும் சொல்ல வேண்டாம் என்பது ஆழ்வாரின் கருத்து.
நம்மாழ்வார் சொன்ன திருவாய்மொழியில் (3.3.4)
“ஈசன் வானவர்க்கு என்பான், என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு,
நீசனேன் நிறைவொன்றும் இல்லேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே” என்ற பாடல்
இங்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.
அரவணைத் துயிலுமா கண்டு
மிக சிறந்த இரத்தினத்தை மிக விலை உயர்ந்த தங்க கட்டிலில் பொருத்தினால் எப்படி இருக்குமோ
அது போல் பெரியபெருமான் வடிவழகு ஆதிசேஷன் மேல் சாய்ந்த பின் மேலும் ஒப்பற்றதாகிறது.
உடல் எனக்கு உருகு மாலோ
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு இருக்கும் அரங்கனின் அழகை ரசிக்க ஞானம் உள்ள ஜீவாத்மாக்களுக்கு
உடலும் உள்ளமும் உருகினால் அதில் ஆச்சர்யம் இல்லை என்றும்,
அதை அனுபவிக்க ஞானம் இல்லாத தான் கூட உருகுவதுதான் ஆச்சர்யம் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வாருடன் கூட வந்தவர்கள் தாங்கள் உருக வில்லையே என்று சொன்ன போது, தான் உருகுகிறேன் (எனக்கு) என்றுசொல்லி உள்ளார்.
இராமானுஜர் சரணாகதி கத்யத்தில் “பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்” என்று (12) சொல்வது,
பரமாத்மாவின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஜீவாத்மாவின் உடலானது,
அதை கண்டால், கட்டுக்குலைகிறது அல்லது உருகுகிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆன்மாவின் ஸ்வரூபத்தை நாம் அறிய முடியாமல் இருப்பதற்கு காரணம், ஆன்மா இந்த தேகத்துடன் சேர்ந்து
இருப்பது தான் என்பது பிரம்மசூத்திரத்தில் (3.2.5) சொல்லப்பட்டுள்ளது.
அப்படியான ஞானத்தை மறைக்கும் உடல் அல்லது உடலில் உள்ள கண்கள், அந்த ஆன்மாவை கண்டவுடன்
மறைக்காமல் இருந்து மொத்த உடலையும் உருக செய்வது ஆச்சர்யமாக உள்ளது.
என் செய்கேன் உலகத்தீரே
ஆற்றில் வெள்ளம் கரையை கடந்து, அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள்,
கைவிட்டுக் ஆற்றைக் கடக்க உதவி வேண்டி கூப்பிடுவதை போலே,
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு நம்மை போன்ற சம்சாரிகளை கூப்பிடுகிறார்.
பெரிய பெருமாளின் அழகை சேவித்தும் கொஞ்சம் கூட கலங்காமல் புறப்படுகிற ஸம்ஸாரிகளைப் பார்த்து
அவர்களை போலே தன் உடலும் உருகாமல் கல்போன்று இருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ என்று கேட்கிறார்.
தம்மை ஒத்த மற்றைய ஆழ்வார்களை கேட்கலாம் என்றால், ஓட்டை ஓடத்தோடு சேர்ந்த ஒழுகல் ஓடம்போல்,
அவர்கள் முன்னமே உருகி இருந்தார்கள். என் செய்கேன் பெருமாளே என்று பெருமாளிடம் கேட்கலாம் என்றால்
தன்னை உருகவிட்டதை நினைத்து, எதிர் தலையை உருக்கவிட்டது தன்னுடைய பெருமை ஆகும் என்று
பெருமாள் கர்வம் கொண்டு விடுவார், அதற்கு தான் காரணம் ஆக கூடாது என்று ஆழ்வார் அவரிடம் கேட்கவில்லை.
ஆகவே, பெருமாளை சேவித்து விட்டு வந்த பின்பும் உடம்பை இப்படி கெட்டியாக வைத்துக் கொண்டு உள்ள சம்சாரிகளிடம்
இப்படி இருப்பதற்கு காரணமாக உள்ள மருந்தை தனக்கு ஒரு கை அளவாவது கொடுக்க வேண்டுகிறார்.
————
சென்ற பாசுரத்தில், ஆழ்வார், தான் பெரிய பெருமாளை தரிசித்தவுடன் தனக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் உருகுகிறதே,
ஆனால் அப்படி உருகாத சம்சாரிகளைப் பார்த்து தனக்கு அவர்கள் உபயோகிக்கும் மருந்தினை கொடுக்குமாறு கேட்டார்.
அதற்கு சம்சாரிகள், தங்களை போல் பகவத் விஷயத்தில் இருந்து வந்து விடுமாறு ஆழ்வாரைச் சொல்கிறார்கள்.
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும் போது,
அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப் போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று
ஆழ்வார் பதில் உரைக்கும் பாசுரம் ஆகும்.
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே. (திருமாலை 20)
இந்த பாசுரத்தில் பெரியபெருமாளின் அழகினை ஆழ்வார் விவரிக்க முயற்சிக்கிறார்.
காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்திலே திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிற
ஆச்சர்யமான செயல்களை உடைய எம்பெருமானுடைய, பிராட்டி வாழ்கின்ற மிக சிறந்த திருமார்பும்,
மரகதமணி போன்ற திருமேனி நிறமும், திருத்தோள்களும், பரிசுத்தமான தாமரை மலரைப் போன்ற திருக்கண்களும்,
சிவந்த திருஅதரங்களும், பவளம் போன்ற திருவாயும், வெகுகாலமாக மேன்மையுடைய திருமுடியும்,
இவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே ஆகும்.
இவற்றை அடியவர்கள் இழக்கலாமோ என்று ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
இந்த பாசுரத்தினால் எம்பெருமானின் வடிவழகும் அதில் ஆழ்வாருக்கு இருக்கும் ஈடுபாடும் நன்றாக தெரியவரும்.
பாயும் நீர் அரங்கம்
அணைகட்டி நீர் ஏற்றும்படி இல்லாமல், பாய்கின்ற நீருக்கு ஏற்ற பள்ளமாக இருக்கும் திருவரங்கம் என்பது ஒரு பொருள்.
நீரைப்போல், சுத்தப்படுத்துவதும் தெளிவாகவுள்ளதும் ஆன மற்ற பொருள்களையும் குறிக்கும்.
அத்தகைய பொருள்கள் வந்து சேரும் இடம் திருவரங்கம் ஆகும் என்பது இன்னொரு பொருள்.
ஆழ்வார்கள் பதின்மரும் ஆச்சார்யர்கள் அனைவரும் வந்து சேர்ந்த இடம் அன்றோ இந்த பெரியகோயில்.
வால்மீகி ராமாயண ஸ்லோகம் (1.2.5) இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.
“பரத்வாஜனே, சேறு அற்றதாகவும், அழகியதாகவும், நல்லவர்களின் மனதைப்போல் தெளிந்த நீரை உடையதாகவும்
விளங்கும் இந்த நீரினை காண்பாயாக” என்று சொல்லும் போது,
இங்கு சொல்வதைப் போலவே, நீர், நல்லவர்களுக்கு உபமானமாக சொல்வதை காணலாம்.
பாம்பணை பள்ளி கொண்ட
எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏடுகளில் உள்ளது என்று எண்ணிவிடாமல்,
திருவரங்கத்தில், திருவனந்தாழ்வான்மீது
“தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” (திருவாய்மொழி 8.10.8) என்றபடி
எல்லா அவயங்களின் அழகும் நன்கு விளங்கும்படி சாய்ந்து அருள்கின்ற தேஜஸை கண்டவர்களின்
கால்கள் அங்கிருந்து விலகுமோ என்று ஆழ்வார் வினவுகிறார்.
எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தை “தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி” என்று
விளக்கம் சொல்லியிருப்பதை மேலும் சில பாடல்களில் இங்கு காணலாம்.
பூவிலும் மென்மையான தன் திருமேனியை கடல் நீர் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் மீது
சயனித்து இருக்கும் எம்பெருமான் என்று சொல்வதை, பெரியாழ்வாரின்,
“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற’ (பெரியாழ்வார் திருமொழி 5.1.7)
பாடல் மேற்கோளாக காட்டப்படுகிறது.
பள்ளி கொண்ட மாயனார்
பள்ளிகொண்ட என்ற பதம், பாம்பணை பள்ளி கொண்ட என்றும் ‘பள்ளிகொண்ட மாயனார்” என்றும்
சேர்க்கப்பட்டு அர்த்தம் சொல்லப்படுகிறது. மாயம் என்பது ஆச்சர்யம் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்த பட்டு உள்ளது.
பள்ளி கொண்டு இருக்கும் போதே மாயங்கள் அல்லது ஆச்சர்யங்கள் நடத்தும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம்.
திருவிளக்குப் பிச்சனுடன் பெரியபெருமாள், நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை கேட்க விழைந்த போது பேசியது அப்படி ஒரு ஆச்சர்யமே.
பள்ளிகொண்டு இருக்கும் அழகு ஆச்சர்யப்பட வைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
பள்ளிகொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை
யுத்த காண்டத்தில் (38.25) காணலாம். ( ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ )
காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும்,
எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
அப்படிப்பட்ட அழகிய ராமன், ஆராதித்த பெருமாள் திருவரங்கன்;
அதனால் அந்த அரங்கநாதனின் சயன திருக்கோல அழகை கண்டு மகிழ்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார்
இந்த பாசுரத்தில் கூறுவது ஆச்சர்யமில்லை.
அதே போல் கண்ணனை துயில் எழுப்பியவர் ஆண்டாள் ஆவார். (நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் ).
நின்ற திருக்கோலத்தில் இருந்தாலும், அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தாலும் அகலலாம்,
ஆனால் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அகல இயலாது என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி (5.8.1) “ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!” என்ற பாடலும்,
குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி (7.2), “ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் ”
(ஆனை கிடப்பதை போல் பள்ளி கொண்டு அருளும் அழகை சொல்கிறார்) என்ற பாடலும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.
எம்பெருமானுடைய நீண்ட கைகளுக்கும் எட்டாமல் ஓடினேன் ஓடி என்று சம்சாரத்தினுள் வெகு தூரம் ஓடி கொண்டு இருந்த
தன்னை பிடித்து இழுத்துக்கொண்ட ஆச்சர்யத்தால் மாயனார் என்று
தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுவதுவதாக உரையாசிரியர் தெரிவிக்கிறார்.
திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (7) என்ற பிரபந்தத்தில்,
“அரவு இன் அணை மிசை மேய மாயனார் ” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
திருநன் மார்வும்
பிராட்டி எப்போதும் அகலமாட்டேன் என்று வாழ்கின்ற மார்பு என்பதால், எம்பெருமானின் திருமார்பிற்கு சிறப்பு என்பது ஒரு அர்த்தம்.
அதாவது பிராட்டி வாழ்வதால் சிறப்பு பெரும் மார்பு என்று பொருள்.
நம்மாழ்வாரின் அகலகில்லேன் இறையும் என்ற திருவாய்மொழி (6.10.10) அந்த சிறப்புக்கு அர்த்தம் கூறும்.
பிராட்டி அணிந்த செம்பஞ்சுக்குழம்பும் (மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக்கலவை),
பிராட்டி அணிந்த மாலைகளும் எம்பெருமானின் திருமார்பில் இருப்பதைக்கண்டு உபநிஷத்துக்கள் இவனே
பரம்பொருள் என்று முடிவு செய்கின்றன என்று பராசர பட்டர் சொல்கிறார். (ஸ்ரீ குணரத்ன கோஸம் 4).
நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்று
திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து
ஒன்றோடு ஒன்று மேலும் மேலும் அழகு சேர்த்துக்கொள்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
மரகத உருவும் தோளும்
நீர் வெள்ளத்தை திறந்து விட்டால், அது எப்படி காண்பவர்கள் கண்கள் குளிரும்படி உள்ளதோ,
அதேபோல் எம்பெருமான், ஒளிரும் மரகத பச்சை நிற வடிவு கொண்டவர்.
இதே ஆழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.
மார்பிற்கு சிறப்பு சேர்க்க திரு, நன் என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டன;
உருவிற்கு சிறப்பு சேர்க்க மரகத ஒளி சேர்க்கப்பட்டது. அப்படி எந்த சிறப்பும் சேர வேண்டிய அவசியம் இல்லாத
இயற்கையிலேயே சிறப்பு உள்ள தோள்கள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இந்த நீரோட்டத்தில் நீந்த விழைபவர்களுக்கு தெப்பம் போல் உள்ள தோள்கள் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
தூய தாமரைக் கண்களும்
பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்கள் என்பது நேரிடையான பொருள்.
இந்த திருக்கண்களால் கடாக்ஷிக்க பெற்றவர்கள் பரிசுத்தம் அடைவதால், அதற்கு காரண உறுப்பான
திருக்கண்களுக்கு ‘தூய‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது.
பிராட்டியாக இருந்தாலும் சரி, ஹிரண்யன் போன்ற அசுரர்கள் ஆனாலும் சரி, எல்லோரையும், குளிர நோக்குகின்ற கண்கள்;
நோக்கு ஏன் தூய்மை என்றால், எம்பெருமான் எந்த ஒரு காரணமும் இல்லாமல்,
தன்னுடைய விருப்பத்தினால் மட்டுமே பார்ப்பதால், அதில் பாரபட்சம் இருப்பதில்லை.
நண்பன், பகைவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பன்
அன்றோ எம்பெருமான். (பகவத் கீதை 5.29).
ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் (1.2), விஷ்ணு பக்தி உடையவர்களுக்கும், பகவத் பக்தி அற்றவர்களுக்கும்
எப்போதும் சமானமாக பற்றலாம்படி இருக்கும் அவனுடைய திருவடிகளை உபாயமாக நிச்சயிக்கிறேன்
என்று சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.
அதாவது எல்லோருக்கும் சமமாக இருப்பது அவனது உறவு.
பார்வை ஒன்றாக இருக்கும்போது, அசுரர்களுக்கு மட்டும் ஏன் கெடுதல் விளைகின்றது என்று கேட்டுக் கொண்டு,
அவை அசுரர்களின் தோஷத்தினால் வந்தது என்று பதில் உரைக்கிறார்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தென்றல், தாமரையை மட்டும் உலர்த்தி விடுவதைபோல் இதுவும் என்கிறார்.
தூய தாமரை என்று சொல்லும் போது, குளிர்ச்சிக்கும், நறுமணதிற்கும், மேன்மைக்கும் மட்டுமே எம்பெருமானுடைய
திருக் கண்களுக்கு தாமரை ஒப்பிடப் படுகிறது; திருக் கண்களில் வழியும் கருணைக்குத்
தாமரையை ஒப்பிடமுடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
துவரிதழ் பவள வாயும்
சிவந்த திருவதரங்களையும் (உதடுகளையும்), பவளம் போல் இருக்கும் பல்வரிசை உடைய வாயும் என்று சொல்லிவிட்டு,
உதடுகளின் சிவப்பு பிரதிபலிப்பதால் பல்வரிசையும் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்.
ஒருவரிடமும் பேசாமல், ஒரு வஸ்துவினுடனும் ஆதரம் இல்லாமல், மிக உயரிய நிலையில், இருக்கும் பரமாத்மா,
அத்தகைய காம்பீர்யத்தை குலைத்துக்கொண்டு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்
வார்த்தைகளை கூறுகிறார் என்றபடி இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.
அதேபோல், தங்களுடைய குறைகளை நினைத்து, அவனை அணுகுவதற்கு அஞ்சும் அடியவர்களை பார்த்து
அஞ்சேல் என்று சொல்வது போல் புன்சிரிப்போடு இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.
ஆயசீர் முடியும்
ஆய என்பது, எப்பொழுதும் அழகாகவும், சித்தமாகவும் இருக்கும் என்பதை சொல்கிறது.
ஆயம் என்பது தங்கத்தைக் குறிக்கும் என்பதால் ஆயம் என்பதில் உள்ள கடைசி எழுத்து குறைந்து
ஆய சீர் முடி என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தாலே செய்தாற்போல் உள்ள திருமுடி என்றும் கொள்ளலாம்.
சீர் என்பது செல்வ சிறப்பை காட்டுகிறது.
தேசும்
தேசும் என்பது தேஜஸ் என்பதின் மருவு. திருமேனி முழுவதும் தேஜஸ் மிளிர்கிறது.
மேலே சொன்ன ஒவ்வொரு அவயத்தில் இருந்தும் தேஜஸ் ஜொலிக்கிறது.
திருநன்மார்பு, மரகத உரு, தோள், தூய தாமரை கண்கள், துவர் இதழ், பவளவாய், ஆயசீர்முடி என்று
ஒவ்வொரு அவயங்களையும் சொல்லிய, ஆழ்வார் இந்த ஒரு வார்த்தையினால்,
எம்பெருமானின் திருமேனியின் முழு உருவத்தின் அழகையும் உணர்த்துகிறார்.
மரகத உரு என்பது, அவயவ விளக்கமே தவிர அது முழு வடிவம் ஆகாது,
ஏன் எனில், எம்பெருமானின் திருமேனியில், எல்லா அவயங்களும் மரகத பச்சை நிறமாக இருப்பது இல்லை.
ஒவ்வொரு அவயவமாக சொல்வது சௌந்தர்யம் என்றும் முழுவதுமாக சொல்வது லாவண்யம் என்று சொல்வதுண்டு.
திவ்யதேசங்களில் சௌந்தர்யத்திற்கு நாகை சௌந்தர்ராஜ பெருமாளும்,
லாவண்யத்திற்கு திருக்குறுங்குடி நம்பியும் சொல்வது இங்கே குறிப்பிடலாம்.
அடியரோர்க்கு அகலலாமே
பெரிய பெருமாளின் இத்தகைய வடிவழகின் பெருமையை கண்டால், ஸ்வரூப ஞானம் உள்ள எங்களால் அகல முடியாது,
அதை அனுபவிக்க தெரியாத, நான், என்னது என்று அகங்காரம் மற்றும் மமகாராம் உள்ளவர்களால் மட்டுமே
அகல முடியும் என்று ஆழ்வார் கேட்டுக் கொண்டு அதற்கு சம்சாரிகள் சம்மதம் தெரிவிப்பது போல்,
‘ஆமே‘ என்று இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
——-
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வாரிடம் அவரது நெஞ்சம்,
அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்று சொன்னதும்,
“கரும்பினைக் கண்டுகொண்டு” (17) என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” (19) என்றும் சொன்ன ஆழ்வாருக்கு, அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான்
“என்செய்கேன்!(18)
என் செய்கேன்!!(19)” என்று ஆழ்வார் தவிக்கிறார் என்றும்,
ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும்,
சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப் பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது,
இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
பணிவினால் மனம் அது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்,
அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்,
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே (திருமாலை 21)
வெகு காலமாக பகவான் பற்றிய ஞானத்தை இழந்து, துணிவுடன் வாழ மாட்டாத நெஞ்சே,
பவளம் போன்ற திரு அதரங்களை உடைய திருஅரங்கன் விஷயத்தில், பணிவாக இருந்து, மனதை அந்த விஷயத்தில் பொருத்தி,
முழுமையான அழகுடன், சிவந்த பொன்னால் செய்யப்பட்ட, சிறந்த மேரு மலையை போன்ற, கோயிலிலே,
நீல ரத்னம் போன்ற எம்பெருமான், கண் வளர்ந்து அருளுகிற அழகை நெஞ்சினால் நினைக்க முடியுமோ என்று
நீயே சொல் என்று தன நெஞ்சத்தைப் பார்த்து கேட்கிறார்.
இங்கு துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதல் ஆகும்.
பணிவினால் மனம் அது ஒன்றி
பெரிய பெருமாளைப் பணிவோம் என்று உறுதி பூண்டு, மற்ற விஷயங்களில் இருந்து விலகி,
இவ் விஷயத்தில் ஊன்றி ஈடுபடுவது என்ற கருத்து.
இந்த உறுதியின் தொடக்கமே இங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.
மனம் ஒன்றி என்று சொல்லாமல், மனம் அது ஒன்றி என்று சொல்வது, மனதைச் சொல்லாமல்,
மனதின் செயல்பாடான சிந்தனையைச் சொல்வது.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4.3.1) “பூசும் சாந்து என் நெஞ்சமே” என்று சொல்லும் போதும்,
நெஞ்சத்தின் செயல்பாடான சிந்தனையை சொல்வதே ஆகும்.
திருவாய்மொழி (2.10.9) “தொழ கருதுவதே துணிவது சூதே” என்ற பாசுரத்திலும் சொல்லும் விஷயம் அதுவே.
திருமாலிருஞ்சோலையை அடைந்து தொழ வேண்டும் என்ற சிந்தனையை எப்போதும் மனதில் நிறுத்துவதே
இந்த உலக வாழ்க்கையை வெல்வதற்கு வழி என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்வோம்.
எம்பெருமானை தவிர, மற்றவர்களிடம், முழுவதுமாக பணிந்து இருந்தாலும்
அவர்கள் மனம் இரங்குவார்களா என்பது நிச்சயம் இல்லை.
மனம் இரங்கினாலும் அதனால் நல்ல பலன் கிடைக்குமா என்று தெரியாது.
ஆனால் எம்பெருமானிடம் பிறக்கும் கருணையும் இரக்கமும் சொல்லி அளவிட முடியாது.
இராமாயணத்தில், இராவணன் தான் இரண்டாக பிளக்கப்பட்டாலும் இராமனிடம் பணிய மாட்டேன் என்று
சத்தியம் செய்து உள்ளதாக சொன்னான்; (இராமாயணம், யுத்தகாண்டம் 36.11).
அப்படிப்பட்ட இராவணன் தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வதாக சொன்னால் போதும்,
அவதாரம் முதலிய பெரிய பெரிய காரியங்களையும் செய்யவல்ல எம்பெருமானுக்கு, அவனிடம் இரக்கம் பிறக்கும்.
ஆக, சர்வேஸ்வரனிடம் நம் ஈடுபாட்டை காண்பித்தாலே போதுமானது, முழுதும் பணிவது என்பது தேவையில்லாது என்பது ஒரு கருத்து.
நாம் பணிவது என்பது பலன் தராது; சர்வேஸ்வரனின் இரக்கமே பலன் தர வல்லது என்பது மற்றொரு கருத்து.
எப்படி ஒருவன் மற்றொருவனை அடிக்க கையை தூக்கியதே , அவன் ஆயுள் முழுவதும் அடிபட்டது போல்
அவமானப்பட்டதற்கு காரணம் ஆகிறதோ அதே போல், இங்கும் எம்பெருமானிடம் பணியவேண்டும் என்பதற்கு
தொடக்கமான நினைவும், அஞ்சலி செய்ய தொடங்குவதுமே சர்வேஸ்வரனிடம் இரக்கம் பிறக்க செய்து
பலன் கிடைக்க வழிசெய்கிறது.
இதையே ஆளவந்தார் என்ற ஆச்சாரியர் ஸ்தோத்திர ரத்னம்(28) சுலோகத்தில் சொல்கிறார்.
எவனொருவன், எப்போதாவது, எம்மாதிரியாவது சர்வேஸ்வரனுடைய திருவடியை எண்ணி, ஒரு அஞ்சலி செய்கிறானோ,
அது பாவங்களை குறைத்து, நன்மையை அதிகரிக்கச்செய்து, ஒரு சமயத்திலும் குறையாமல் அவனை காப்பாற்றுகிறது
என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது.
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..
த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||–ஸ்தோத்திர ரத்னம்–ஶ்லோகம் 28 –
காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.
அடுத்தது, மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் (46.163) கிருஷ்ணன் சொல்வது.
ஒருவன் எம்பெருமானுக்கு சரியாக செய்யும் அஞ்சலியானது, பத்து அஸ்வமேத யாகத்திற்கு மேலானது என்றும்,
சமம் என்றும் சொல்லமுடியாது என்றும் கூறுகிறார். ஏனென்றால்,
அஸ்வமேத யாகம் செய்தவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்;
ஆனால் கிருஷ்ணனை வணங்கியவனோ பிறவா வரம் பெற்று பரமபதம் அடைகிறான்.
கருட புராணத்தில் (11.26), அஞ்சலி செய்வது எம்பெருமானை மிக சீக்கிரம் சந்தோஷப்பட செய்வது என்று சொல்கிறது.
பவள வாய் அரங்கனார்க்கு
இப்படி ஈடுபாட்டின் தொடக்கத்தை உடைய ஒருவன் கிடைத்து விட்டால், அவன் இத்தனை காலமாக இழந்த இழப்பை
நினைத்து வருந்தாமல் இருக்க ஆறுதல் கூறும்,
பவளத் திருவாய் உடையவர், திருவரங்கன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஈடுபாடு ஏற்பட்டு, அவன் நம்மை நினைக்கும் போது ரொம்ப தொலைவில் இருக்க கூடாது என்று
திருவரங்கத்தில், அருகிலேயே இருப்பவர்.
துணிவினால் வாழ மாட்டா
முன்பு சொன்ன பணிவும், இப்போது சொல்லப்படும் துணிவும் கூட ஜீவாத்மாவால் ஆரம்பிக்க பட்டது இல்லை,
அரங்கனின் அழகே பணிவையும், துணிவையும் உண்டாக்கி,
அனுபவம் என்ற உன்னத வாழ்க்கையும் அடையச் செய்கிறது என்பது அர்த்தம்.
துணிவு இல்லாததால் அனுபவத்திற்கு முயற்சி செய்தது இல்லை;
அதற்கான துணிவுதனை இப்போது வேண்டுவது ஆழ்வாரின் வார்த்தைகள்.
மஹாபாரதம் சாந்தி பர்வத்தில், (334.47),
கிருஷ்ணர், மனதில் நிச்சயம் இல்லாதவன் பரமாத்மாவை அடைய மாட்டான் என்று கூறுகிறார்.
ஜனகன், பரமபதம் அடைவதற்கான வழிக்கு துணிவு ஒன்றே பழுதுபடாத சாதனம் என்பதில்,
தன்னுடைய ஆச்சார்யரான வேத வ்யாஸரை விட, தெளிவாக இருந்தான்.
இப்படி எல்லா இடத்திலும் துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதலே ஆகும்.
தொல்லை நெஞ்சே
இந்த துணிவு இல்லாததால் இத்தனை காலமாக எம்பெருமானின் அனுபவத்தை இழந்து விட்டதாக
தன் நெஞ்சத்திடம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
நீ சொல்லாய்
இப்படி அனுபவிக்காமல், இத்தனை காலம் அறிவுகெட்டு கிடந்த நெஞ்சைப்பார்த்து,
இந்த அனுபவத்தை அளவிடமுடியும் என்று நெஞ்சு சொல்வதும் அறிவு இல்லாத கூற்றே என்று ஆழ்வார் சொல்கிறார்.
அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்
அழகு மிகுந்து இருப்பதும், செம் பொன்னில் செய்யப்பட்டதும் மேரு மலையை ஒத்து இருப்பதாகவும் உள்ள
திருவரங்கம் பெரிய கோவில், இந்த பூமண்டலத்திற்கு ஆபரணம் போல் விளங்குவதால் ‘அணியினார் ‘ என்பது மிக பொருத்தம்.
அதேபோல், மலை போல் நிலையாய் உலகுக்கு எல்லாம் ஆதாரமாய் இருப்பதால்,
திருவரங்கம் பெரிய கோவிலை ‘அருவரை அனைய ‘ என்று சொல்வதும் பொருத்தமே.
மணியனார் கிடந்தவாற்றை
அப்படி மேரு மலையை ஒத்து இருக்கும் மலையின் நடுவில் ஒரு உயர்ந்த நீல ரத்தினத்தை வைத்து
அழுத்தியத்தைப் போல் பெரியபெருமாள், ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவே பள்ளிகொண்டு இருப்பது என்கிறார் ஆழ்வார்.
மனத்தினால் நினைக்கலாமே
இப்படி கண் வளர்ந்து அருளுகின்ற பெரிய பெருமாளின் அழகை அளவிட்டு அனுபவிக்க முடியுமோ என்று
தன் நெஞ்சிடம் ஆழ்வார் கேட்கிறார்.
அவருடைய கல்யாண குண நலன்களையும், திருவிளையாடல்களையும் அளவிட்டு விடலாம்,
ஆனால், திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார்.
மனதின் செயல்பாடு, நினைப்பது; வேறு ஒரு அவயம் எப்படி நினைக்க முடியாதோ
அதேபோல், மனத்தினாலும் திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்பது கருத்து.
———-
சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று
சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல,
மனதினால் முழுமையாக உட்கொள்ள முடியாத விஷயத்தை எப்படி பேசி தீர்ப்பது என்று ஆழ்வார் கேட்கும் பாடல்.
தைத்ரீய ஸ்ம்ஹிதை 7.5.3 ன் படி, முதலில் மனது, பிறகுதான் பேச்சு என்பது வரிசை.
அதாவது மனது நினைப்பதைத் தான் வாய் பேச முடியும்.
மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்து விட முடியாது என்பது கருத்து–
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரலாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன்,
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பதல்லால்,
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் (திருமாலை 22)
ஆழ்வார் தன் மனத்திடம்,
“அறிவில்லாத மனமே, வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர,
குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது,
அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவன் அறியமுடியாதவனாக இருப்பவன்.
அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை பாசுரம் எழுதி பேச முடியுமா” என்று கேட்கிறார்.
பேசிற்றே பேசல் அல்லால்
மனத்தால் நினைக்க முடியாவிட்டால், மற்ற விஷயங்களை வாய் பேசுவது போல்,
பகவத் விஷயத்தையும் வாயால் பேசலாமே என்றதற்கு, மற்ற விஷயங்கள் அளவிற்கு உட்பட்டவை,
அதனால் வாய் பேசமுடியும், ஆனால் இதுவோ, அளவிடமுடியாதது, அதனால் வாய் பேசி முடிக்க முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார்.
விஷ்ணு தர்மத்தில் சொன்னபடி,
எது விஷ்ணுவை பற்றி பேசுகிறதோ அது நாக்கு, எது விஷ்ணுவை நினைக்கிறதோ அது நெஞ்சு என்பது போல்,
பகவத் விஷயங்களை மட்டும் பேசி மற்ற விஷயங்களைப் பேசாமல் இருந்து விடவேண்டியது தானோ என்று
ஆழ்வாரிடம் சொன்னதற்கு, ஆழ்வார், முன்பு வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும்
பேசிய பரமாத்மாவின் பெருமைகளையும் விஷயங்களையும் பேச முடியுமே தவிர,
வேறு ஒன்றும் நாம் பேசமுடியாது என்கிறார்.
மணவாள மாமுனிகள், இதனை
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு, பின்னோர்ந்து தாம் அதனை பேசாமல்
தம் நெஞ்சில் தோன்றினதே” பேசுபவர் மூர்க்கர் என்று உபதேச ரத்னமாலை (71) என்ற நூலில் கூறுகிறார்.
வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய விஷயங்களுக்கு சில உதாரணங்கள் :
நாராயணவல்லி –
அந்த இதயக்கமலத்தின் நடுவில், சிறியதும், மேல்நோக்கி இருப்பதும் பரமாத்மாவின்
திவ்ய மங்கள விக்ரகம், அது நீல மேகம் கொண்ட மின்னல் போல் பிரகாசமாக காட்சி அளிக்கிறது
நீலமுண்ட மின்னன்ன மேனி (திருவிருத்தம், 29) –
மின்னல் கொடியை நடுவில் கொண்ட நீல மேகம் போன்ற
திருமேனி என்ற பொருளில், வருகிறது. மின்னல் என்பது திருமார்பில் உள்ள நாச்சியாரையும்,
எம்பெருமானின் மேனி என்று இரண்டினையும் குறிக்கும்.
மஹாபாரதம், சாந்தி பர்வத்தில் (46.118) சொல்வது,
அடியவர்களை நழுவ விடாதவனும், காயாம்பூவை போன்றவனும், பீதாம்பரத்தை உடையவனுமான
கோவிந்தனை நமஸ்கரிப்பவர்களுக்கு எங்கும் பயமில்லை.
சூரியனுக்கு நடுவில், தங்கம் போன்று அழகிய உருவுடன் உள்ள இந்த பரமபுருஷன்,
தங்கம் போன்ற மீசையும், கேசத்தையும், நகம் முதலான எல்லா அவயங்களுடன் சூரியனால் மலரும்
தாமரையைப்போல் இரண்டு கண்களும் உடையவன் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் (1.6.6) (Chandogya Upanishad) சொல்லப்படுவது,
மநு ஸ்ம்ருதி (12.122) சொல்வது, எல்லாவற்றையும் நியமிப்பவனான பரமாத்மாவை,
உருக்கிய தங்கம் போல் ஒளி விடுபவனான அந்த பரமபுருஷனை, ஆச்சரியமான கனவில் வரும் ஞானத்தால்
அறியப்படவேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது சாதாரண ஞானத்தால் அவனை அறியமுடியாது என்பதே இதன் பொருள்.
திருவாய்மொழி 3.1.2 சொல்வது,
“சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது”, அதாவது, நெருப்பில் இட்டு சுட்டு,
உரைக்கல்லில் பட்டை தீட்டப்பட்ட நல்ல உயர்ந்த பொன்னானது எம்பெருமானின் திவ்யமங்கள விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பு ஆகாது.
நீலமேக ஸ்யாமளனான எம்பெருமானை எதற்கு பொன்னுடன் ஒப்பிடுவது என்று கேட்டால்,
“பொன்னிவர்மேனி மரகதத்தின் ” (பெரிய திருமொழி 9.2.1) என்றும்,
“கணபுரத்து பொன்மலை போல் நின்றவன்” (பெரிய திருமடல் 91), என்றும் சொன்னது போல்
இங்கும் பொன்னிறமாகவே விளங்குகிறது.
மேலும், “ருக்மாபம் ” என்றும் “
ஹிரண்மய புருஷோத்ருச்யதே” என்றும் கூறப்படுவதால்
பொன்மயமான தாயாரின் ஒளி சேர்க்கையால் எம்பெருமானும் அவ்வாறே தோன்றுகிறான் என்று சொல்வதும் உண்டு.
கண் முதலிய உறுப்புகளுக்கு புலப்படாதவற்றை விளக்க, இந்த உலகத்தில் உள்ள, கண்களுக்கு தெரியக்கூடிய
சில உதாரணங்களை கொண்டு வெளிப்படுத்து உலக வழக்கம்.
அதனால், விவரிக்கமுடியாத உயர்ந்த பகவத் விஷயமான திரு உருவத்திற்கு, தாழ்வான சிலவற்றை உதாரணமாக கூறியதால்.
எம்பெருமானை பற்றி முழுவதும் தெரிவித்து விட்டோம் என்று சொல்ல முடியாது.
தைத்ரிய உபநிஷத் – ஆனந்தவல்லி 9.1 –
எவன் ஒருவனின் மனம், ப்ரம்மத்திடம் சென்று அதனை வாக்கினால் (வார்த்தைகளால்) அளவிடமுடியாது என்று திரும்புகிறதோ,
அவன் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் என்றும் அவன் எதற்கும் பயப்படமாட்டான் என்றும் கூறுகிறது.
இதனால் பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேசி முடிக்க முடியாத விஷயம் என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவாக வாக்கினால் சொல்ல முடையாததை கூட மனம் உணரமுடியும்.
ஆனால் இங்கே மனதினால் கூட அளவிடமுடியாது என்று திரும்புவதை கவனிக்க வேண்டும்.
இராமாயணத்தில், வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும்,
மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச, ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச. அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச,
க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) –
“நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர்,
உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள்.
இதில் நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.
பெருமை ஒன்று உணரலாகாது
பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேச முடியாத விஷயம் என்று சொல்வதை ஏன் ஏற்க வேண்டும் என்றால்,
ஒரு உதாரணம் சொல்லும்போது உபமானம் எப்போதும் உபமேயத்தை விட உயர்ந்ததாகவே இருக்கும்.
ஆனால் எம்பெருமானுக்கு உபமானமாக எதைச் சொன்னாலும் அவை தாழ்ந்தவையாகவே இருக்கின்றன.
இங்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம், குணம், செல்வம், திவ்யமங்கள விக்கிரகம் என்று எதையும் அளவிடமுடியாது
என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது மேலே சொன்ன ஸ்வரூபம் முதலிய
எந்த ஒன்றினுடைய பெருமையையும் முழுவதாக சொல்ல முடியாது என்பதையே “ஒன்று” குறிப்பிடுகிறது.
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன்
அப்படி என்றால் யாராலும் அறிந்துகொள்ளவே முடியாததா என்று கேட்டு அதற்கு ஆழ்வார் சொல்வது,
மற்ற உபாயங்களை விட்டு, எம்பெருமானையே உபாயமாக கொண்டவர்களால் மட்டுமே அறியப்படுபவன்,
மற்றவர்களால் அறியமுடியாது என்பதே ஆகும்.
இதையே கீதையில் (7.3), கிருஷ்ணன்,
“பல்லாயிரமானவர்களில் ஒருவரே என்னை உள்ளபடி புரிந்து கொள்கிறார் என்று சொல்கிறார்.
இந்த வரியில் உள்ள “ஆசு” என்ற சொல்லும்,
அடுத்த வரியில் வரும் “மாசு” என்பதும் குற்றம் என்ற ஒரே அர்த்தத்தை சொன்னாலும்,
ஆழ்வார் இரண்டு விதமான குற்றங்களை சொல்கிறார். மேலே சொன்ன எம்பெருமான் தவிர,
மற்ற உபாயங்களை (கர்ம, பக்தி, ஞானம்), கொண்டு தங்களுடைய முயற்சியால்
அவனை அடைய நினைப்பவர்களின் மனதில் உள்ள அகங்காரத்தை ஆசு என்று குறிப்பிடுகிறார்.
அப்படி அவனை அடைந்தபின், அவனிடம் அவனை கேட்காமல் மற்றவற்றை கேட்பதை மற்றொரு குற்றமான மாசு என்கிறார்.
மாசு அற்றார்
மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.
இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்
பரமனையே வேண்டும் பகவன்லாபார்த்திகள்
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை வேண்டும் கைவல்யார்த்திகள்
இதில் நாம் அடையவேண்டியது பரமனையே;
ஐஸ்வர்யமும் கைவல்யமும் நாம் அடையவேண்டியவே என்று ஜீவாத்மா நினைத்தால் அது மனதின் இன்னொரு குற்றம் ஆகும்.
இதே ஆழ்வார் மாசு என்று இந்த பாசுரத்தில் கூறுகிறார்.
அவனை உபாயமாக கொண்டு, அவனிடம் கைவல்யம், மற்றும் ஐஸ்வரியம் வேண்டாம் என்று நிராகரித்து,
அவனையே வேண்டுபவர்களை ஆழ்வார் மாசு அற்றார் என்று இங்கு கூறுகிறார்.
மனத்து உள்ளானை
இப்படி உபாயங்களையும், மற்ற அடையத்தக்கவைகளையும் விலக்கி, இந்த சம்சார வாழ்க்கையை விட்டு,
பரமபதத்தில் எப்பொழுதும் எம்பெருமானையே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு,
எல்லா பொறுப்புகளையும் அவனிடத்தில் விட்டு, அதாவது மாசு அற்றவர் ஆகவும், ஆசு அற்றவர் ஆகவும் உள்ள
அடியவர்களின் இதய கமலத்தில், என்றும் வாழ்பவன் என்பதை மனத்து உள்ளானை என்று ஆழ்வார் கூறுகிறார்.
எப்படி காட்டு தீயை எந்த ஜீவராசியும் தாங்கிக் கொள்ள முடியாதோ, எப்படி மீன் முதலிய ஜீவராசிகள்
தண்ணீரை விட்டு வெளிய வந்தால் தாங்கிக்கொள்ள முடியாதோ அது போல் எம்பெருமானாலும்
மாசு, ஆசு உள்ள நெஞ்சகளில் இருப்பது என்பது தரிக்க முடியாதது என்றும் ஆழ்வார் கூறுவது போல் ஆயிற்று.
ஆசு, மாசு அற்றவர்களை கண்டுகொண்டு அவர்களின் நெஞ்சத்தில் நித்யவாஸம் செய்ய வேண்டியே,
எம்பெருமான் திவ்யதேசங்களில் கண்வளர்ந்து அருளுகிறார்.
ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு சிறப்பு இருப்பது என்பதும்
திருமழிசைஆழ்வார் எம்பெருமானின் ஐந்து நிலைகளில் ஒன்றான, அந்தர்யாமியில் மிகவும் ஆழ்ந்து இருப்பார்
அவருடைய திருச்சந்தவிருத்த பாடல்கள் 64 மற்றும் 65, உரையாசிரியரின் உரையில்
மனத்து உள்ளானை என்பதற்கு இடம் பெற்று உள்ளன.
வணங்கி நாம் இருப்பதல்லால்
அவன் அடியார்களின் நெஞ்சத்தைவிட்டு அகலாதவனான பின், நாம் செய்ய வேண்டியது
அவனை அனுபவிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
இங்கு வணங்கி என்று சொல்வது, மனம், உடல், மொழி ஆகிய முக்கரணங்களாலும், எல்லா காலங்களிலும்,
எல்லா தேசங்களிலும், எல்லாவிதமான பகவத் அனுபவங்களையும் உள்ளடக்கியது.
பேசத்தான் ஆவது உண்டோ
அவனுடைய பெருமைகளை நினைத்து பார்க்கையில், அவற்றை பாசுரமிட்டு பேச முடியுமோ என்று கேட்டுக் கொண்டு,
முடியாது என்று அர்த்தத்தில் ஆழ்வார் முடிக்கிறார்.
பேதை நெஞ்சே நீ சொல்லாய்
பல காலங்களாக தாழ்ந்த விஷயங்களையே பேசி வந்த நெஞ்சே, இவ்வளவு பெருமைகள் பெற்ற விஷயத்தை
பேசி விடலாம் என்று உன்னுடைய அறிவின்மையாலே நினைக்கிறாயோ,
அளவிட்டு விடலாம் என்று பேச ஆசைப்படும் நீ சொல்வாயாக என்று ஆழ்வார்
தன் நெஞ்சத்திடம் கேட்பதுடன் இந்த பாசுரம் நிறைவடைகிறது.
—————-
நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவது தானே என்று
ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்ன போது,
அரங்கனின் சயனத் திருக் கோலத்தை திருஅரங்கத்தில் கண்டு ரசித்த பின்
அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்வது கங்கையில் புனிதமாய – என்று சொல்லும் பாசுரம்.
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)
கங்கையில் புனிதமாய காவிரி
அழகாலும், நீரின் இனிமையாலும் கங்கையை காட்டிலும் சிறந்த காவிரி,
பிறரை புனிதப்படுத்துவதிலும் கங்கையை விடச் சிறப்பான காவிரி ஆறு என்று
இந்த பாசுரத்தை ஆழ்வார் தொடங்குகிறார்.
ஸ்ரீரங்க மஹாத்மியம் என்ற நூலில்,
ப்ரஹ்மாவிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தபின்,
காவிரி, ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின்,
கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாகக் கூறுகிறது.
ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில்,
விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும்,
அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது,
தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார்.
அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால்
தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.
அதனால் கங்கைக்கு சிவன் (ருத்ர) சம்பந்தம் கொண்டது என்ற ஒரு குற்றமும் உண்டு.
ருத்ர சம்பந்தம் கொண்டதால், அவனுடைய மாலை மற்றும் பிரசாதங்களை, ‘நிர்மால்யம்’ என்று
அவனுடைய பக்தர்களும் தொடத்தக்கதாக கொள்ளவில்லை.
ருத்ர சம்பந்தம் என்பது, ரஜோ தமோ குணங்களுடன் தொடர்பு உள்ளது.
திருவெழு கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தில் திருமங்கைஆழ்வார்,
“முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவு அருந் தன்மைப் பெருமையுள் நின்றனை” என்று
கூறியபடி, கங்கைக்கு சிவனின் சடையின், சிடுக்கு நாற்றமும், மயிர் தொடர்பும் உள்ளது.
இருந்தாலும், இப்படிபட்ட கங்கைக்கு, விஷ்ணுவின் ஸ்ரீபாத சம்பந்தம் ஒரே ஒரு முறை ஏற்பட்டு இருந்ததால்,
கங்கைக்கு புனித தன்மையே இறுதியில் இருக்கும்.
இதே போல், பொய்கை ஆழ்வாரும், முதல் திருவந்தாதியில்(97),
“உன்றன் அடிசேர்ந்து அருள் பெற்றாள் அன்றே, பொடிசேர் அனற்கு அம் கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்” சொல்லியது,
சிவபெருமானின் சடைமேல் பாய்ந்த நீரை புனிதமாக அருள் செய்தது விஷ்ணுவின் திருவடி சேர்ந்ததாலே என்று கூறுவது.
இதையே பராசர பட்டர் எனும் ஆச்சார்யர், ரங்கராஜஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் (22),
ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கை என்கிறார்.
திருவரங்கன் புறப்பாடு முன் திருவரங்கத் தெருக்களைச் சுத்தம் செய்வது, திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் தருவது,
எப்போதும் பெரியபெருமாளின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து சேவை செய்வது போன்ற செய்கைகளால்
கங்கையை விடச் சிறந்தவள் அன்றோ காவிரி என்று கூறுகிறார்.
தீர்த்தம் என்று பெயர் பெற்ற எல்லா புண்ணிய நதிகளும், ஐப்பசி மாதத்தில் காவிரிக்கு வந்து,
பாவிகளான மக்களைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்வதாக
துலா காவிரி மஹாத்மியத்தில் காவிரியின் பெருமை கூறப்பட்டு உள்ளது.
ஆக கங்கைக்கு ருத்ர சம்பந்தம் என்ற குறை உண்டு. மேலும் விஷ்ணுவின் சம்பந்தம் ஒரே ஒரு முறை மட்டுமே.
ஆனால், காவிரிக்குக் குறை எதுவும் இல்லை, மேலும் அப்படிப்பட்ட திருவடிகளைக் கொண்ட திருவரங்கன்
இந்த காவிரி கரையில் இருக்க வேண்டும் என்று இங்கு வந்து இருப்பதால்,
திருவரங்கனின் திருவடித் தொடர்பு காவிரிக்கு எப்போதும் உண்டு.
அதனால் தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையில் புனிதமாய காவிரி என்று பாடி உள்ளார்.
நடுவு பாட்டு
வட திருக்காவிரி மற்றும் தென் திருக்காவிரி இரண்டுக்கும் நடுவே திருவரங்கம் இருப்பதை இப்படி ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
கண்ணன் எம்பெருமான் யசோதை பிராட்டியின் மடியினில் சாய்ந்து இருப்பது போல்,
காவிரியின் நடுவில் பள்ளிகொண்டு திருவரங்கன் அருள்கிறான் என்கிறார்.
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படும்.
இவைகளில் தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை நிரந்தரமானவை என்றும்,
காமம் மற்றும் அர்த்தம், தற்காலிகமானவை என்றும் சொல்வதுண்டு.
தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை எப்பொழுதும் பரமாத்மாவிற்கு நெருங்கியவை.
திருவரங்கத்தில் வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற வட திருக்காவிரி மற்றும் காவேரி என்ற தென் திருக்காவிரியும் ஓடுகின்றன.
ஆக, திருஅரங்கம் நான்கு காவிரிக் கரைகளை கொண்டது.
பெரிய பெருமாளுக்கு அருகில் உள்ள காவிரி கரைகள் மோக்ஷமாகவும், தர்மமாகவும் உள்ளன என்று சொல்வதுண்டு.
திரு அரங்கத்திற்கு வெளிப் பக்கம் உள்ள மற்ற இரண்டு காவிரிக் கரைகள், அர்த்தம் மற்றும் காமம் என்றும் சொல்லப்படும்.
வட திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை “காமம்” என்றும், தெற்கு பக்கக் கரையை ‘தர்மம்’ என்றும்,
தென் திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை ‘மோக்ஷம்’ என்றும்,
தெற்குக் பக்க கரையை ‘அர்த்தம்’ என்று சொல்லப் படுகின்றன.
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில்
காவிரி ஒரு அமைதியான நதியை போல் இல்லாமல், இருகரைகளையும் அடித்துக் கொண்டு செல்கிறது.
அதிகமான நீர் வருவதாலும், பெரிய பெருமாளை காண வருகிறோம் என்ற மகிழ்ச்சியினாலும்
அலைகளை எறிந்து கொண்டு கலங்கி கொண்டு வருகிறது என்று பராசரபட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் (22) குறிப்பிடுகிறார்.
காவிரிக்கு, பெரியபெருமாள், மாப்பிளை ஆனபடியால், திருவரங்கம் வருவதற்கு முன்பு, ஒருவித கவலையோடு வருமாம்,
திருவரங்கத்தைக் கடந்தபின், இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்துடன் விலகுமாம்,
அதனால் எப்போதும் அது கலக்கத்துடன் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
காவிரியின் நீர் பெருக்கால், திருவரங்கத்துச் சோலைகள் எப்போதும் பூத்து குலுங்கிக் கொண்டு
என்றும் வசந்த காலமாகவே இருக்கும்.
அதனால் எல்லோருக்கும் களைப்பினை போக்கும் தேசமாக திருவரங்கம் உள்ளது என்கிறார்.
கங்கையில் புனிதமாய என்பதால், புனிதம் மற்றும் தூய்மையும்,
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் என்பதால், இனிமையும் காவிரிக்குச் சொல்லப் படுகின்றன.
எங்கள் மால் இறைவன் ஈசன்
மால், இறைவன், ஈசன் என்ற மூன்று சொற்களுமே அரங்கனையே குறிக்கின்றன.
மால் என்பதற்கு பித்துபிடித்து என்று ஒரு அர்த்தம் உண்டு.
மால் என்றால் அரங்கன் அடியார்கள் மேல் பித்து பிடித்து இருக்கிறான் என்று கொள்ளலாம்.
அடியார்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு உடையவன் என்றும் கூறலாம்.
பெரிய பெருமாளிடம் தங்களை காக்கும் பொறுப்பை விட்டிருக்கும் மற்ற ஆழ்வார்களையும் இவர் சேர்த்துக் கொண்டதால்,
‘எங்கள்’ மால் என்று அழைக்கிறார்.
மேலே சொன்ன புனிதத் தன்மையாலும், இனிமையினாலும் பெரிய பெருமாள், திருவரங்கத்தில்
எழுந்தருளி உள்ளார் என்பது போல் தோன்றும்,
ஆனால், ஆழ்ந்து பார்த்தால், அடியவர்களிடம் கொண்ட அன்பினால் தான்
இங்கு எழுந்தருளி உள்ளான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.
இறைவன் என்பதற்கு எல்லாவற்றிற்கும் தலைவன், மற்றும் உரிமை உள்ளவன் என்பது பொருள்.
இறைவனாக இருப்பதால் அடியார்கள் மேல் அன்பு கொண்டு உள்ளான்.
ஈசன் என்பதற்கு தலைமைக்கு தகுந்தபடி ஆளத் திறமை உள்ளவன் அல்லது எல்லாவற்றையும்
நடத்தி செல்பவன் அல்லது நடத்தி செல்ல வல்லவன் என்று பொருள்.
இப்படி இந்த மூன்று பதங்களால் அன்பு உடையவன், நல்வழி காட்டி, நடத்தி செல்ல வல்ல, தலைவன் என்று கூறுகிறார்.
நம் சம்ப்ரதாயம், அன்பு உடையவன் என்பதற்கு வாத்ஸல்யம்(பரிவு) , சௌலப்யம்(எளிமை)
மற்றும் சௌசீல்யம் (நீர்மை) என்ற பதங்களால் சொல்லும்;
நியந்த்ருத்வம் என்பது நல்வழி காட்டி நடத்தி செல்ல வல்லவன் என்பதை சொல்லும்;
ஸ்வாமித்துவம் என்பது தலைமையும் உணர்த்தும்.
அடியவர்கள், உலகில் உள்ள பொருட்களின் மேல், தங்களுடைய சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற
முக்குணங்களால் கவரப்படுவதைத் தடுத்து, அவர்களை எப்போதும் அனுபவிக்கவல்ல பரமபதத்திற்கு
அழைத்துச் செல்ல எண்ணி, அவர்கள்மேல் உள்ள பாசத்தால் தூண்டப்பட்டு, தன் உடைமையை,
தன் இஷ்டத்திற்கு, தனதாக்கி கொள்வதற்காக, இங்கு வந்து காத்து கிடக்கிறான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.
கிடந்தது ஓர் கிடக்கை
ஆழ்வார் பெரிய பெருமாளின் திவ்ய குணங்களை ஒரு கணம் தள்ளி வைத்து விட்டு, அவன் கிடந்த
திருக் கோலத்தில் தான் அகப்பட்டுக்கொண்டதை சொல்கிறார்.
ஒப்பற்ற என்ற பொருளில், கிடந்த திருக்கோலத்தின் சிறப்பை ஓர் என்று சொல்கிறார்.
நின்ற அல்லது அமர்ந்த திருக்கோலமாக இருந்தால் ஒருவேளை மறந்து இருக்கலாம்,
கிடந்த திருக்கோலத்தை மறக்க முடியாது என்பதை ஓர் என்ற வார்த்தையால் சொல்கிறார்.
மற்றவர்கள் படுத்துக்கொண்டு இருந்தால், அழகின்மையே மிகுந்து இருக்கும்,
ஆனால் பெரியபெருமாள் சயனித்து இருக்கும், அழகு மிகுந்து இருக்கிறது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
பாயும் நீர் அரங்கம் தன்னில் என்ற பாசுரத்தின் விளக்கத்தில்,
“பள்ளி கொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை
யுத்த காண்டத்தில் (38.25) (ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ )
காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும்,
எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார்” என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
ஆழ்வார்களை பொறுத்தவரையில் எம்பெருமான் நின்ற நிலையாய் இருந்தாலும்,
அமர்ந்த நிலையாய் இருந்தாலும் சயனித்து இருந்தாலும், அவற்றை உயர்வாகவே சொல்வார்கள்.
உதாரணமாக, பெரிய திருமொழியில், (6.9.5)
“நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே”, திருமங்கை ஆழ்வார் எம்பெருமான், திருநறையூரில்,
மிகவும் பொருந்தி, நிலையாக நின்றான், என்று நின்ற நிலையின் பெருமையை கூறுகிறார்.
அதேபோல், திருவாய்மொழியில் (6.5.5), “பிரான் இருந்தமை காட்டினீர்” என்று
திருத் தொலை வில்லி மங்கலத்தில் எம்பெருமான் அமர்ந்த திருக்கோல பெருமையை நம்மாழ்வார் கூறுகிறார்.
இந்த பாசுரத்தில், ஆழ்வார் முதலில் கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி,
பிறகு கிடந்ததோர் கிடக்கை என்று சொல்கிறார்.
ஆனால் அரங்கனின் திருவடிகளை வருடிச் சொல்வதாலேயே கங்கையை விட புனிதமான நிலையை
காவிரி அடைவதாக மேலே பார்த்தோம்.
ஆக, கிடந்ததோர் கிடக்கையை முதலில் சொல்லிவிட்டு,
பிறகு கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், ஆழ்வார்களுக்கு திவ்ய தம்பதிகளை காட்டிக் கொடுத்த திவ்ய தேசத்தின் மேல்
கொஞ்சம் அதிக ஈடுபாடு ஆனதால், இந்த வரிசையில் சொல்கிறார்.
கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன்
காணாமல் இருந்தால், மறந்து வாழலாம், பெரியபெருமாளின் சயன திருக்கோலத்தைக் கண்டு அனுபவித்தபின்
எப்படி மறந்து வாழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
சுவாமி நம்மாழ்வாரின் “எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?,
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், (திருவாய்மொழி, 5.5.1) என்ற வார்த்தைகள்,
இதனையே பிரதிபலிக்கின்றன. இந்த விஷயத்தை அனுபவித்தபின் மறக்க முடியாது,
அப்படியே மறந்தாலும், மற்ற விஷயங்களைக்கொண்டு வாழ முடியாது என்று பொருள்.
ஏழையேன் ஏழையேனே
ஆழ்வார் பகவத் விஷயத்தில் தான் ஏழை அல்லது வறுமை உள்ளவன் என்கிறார்.
தான் இந்த விஷயத்தை அனுபவிக்க பேராசையுடன் இருந்தாலும், முன்னே சொன்னது போல்,
முழுவதும் அனுபவித்து முடிக்க முடியாத விஷயம் ஆகையால், ஏழையேன் என்று சொல்கிறார்.
அதைப் பிரிந்தால், வாழ முடியாதவன் ஆவதால், ஏழையேன் என்கிறார்.
ஏழைமை என்பதற்கு தளர்ச்சி என்று ஒரு பொருள் உள்ளது.
பல காலமாக கர்மா வினை பயன்களால் தளர்ச்சியடைந்த ஆழ்வார், இப்போது அளவிட்டு முடிக்கமுடியாத
பகவத் விஷயத்தை கண்டு தளர்ச்சி அடைந்தவராக உள்ளார் என்பதால்,
ஏழையான தான் மீண்டும் ஏழையாகிவிட்டேன் என்பதை ஏழையேன் ஏழையேனே என்றும் கொள்ளலாம்.
———-
எம்பெருமான் தனக்கு செய்த உதவிகளை பேசுதல் என்ற இந்த உபபகுதியின் இறுதி பாடல்
ஆழ்வார், முந்திய பாசுரங்களில், மனத்தினால் நினைக்கலாமே என்றும்,
‘பேசித்தான் ஆவதுண்டோ என்றும் எங்கனம் மறந்து வாழ்கேன் என்றும்
தன்னுடைய அன்பினை காட்டியதற்கு பதிலுக்கு
பெரிய பெருமாள், ஆழ்வார் மேல் தமக்குள்ள உள்ள அன்பினைக் காட்ட,
அதனை பார்க்கும் போது தனது அன்பு மிகவும் தாழ்ந்தது என்று ஆழ்வார் உணர்ந்து,
பைத்தியம் பிடித்தவனுக்கு ஒரு சமயம் வரும் தெளிவு போல் உள்ள தன்னுடைய பக்தியை
கள்ளத்தனம் என்று பாடும் பாடல்.
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள்,
கள்ளனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்,
உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. (திருமாலை 24)
வெள்ளநீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம்
பொங்குநீர் பரந்து பாயும் என்று சென்ற பாசுரத்தில் பாடியது இன்னும் ஆழ்வார் நினைவில் இருக்க,
இங்கே தொடர்ந்து “வெள்ளநீர் பரந்து பாயும்” என்று காவிரியின் பெருமையில் இந்த பாசுரத்தையும் தொடர்கிறார்.
காவிரி, தன் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்தே திருவரங்கம் வர வேண்டும் என்று நோக்கோடு வருவதால்,
ஆர்வம் வெளியே தெரியும்படி, பெருவெள்ளமாக நீரை கொண்டு எவராலும் அணைகட்டி தடுக்க முடியாதபடி
எல்லா பக்கங்களிலும் பாய்ந்து செல்லும்.
ஆற்றின் ஆர்வத்திற்கு முடிவு இல்லாததால், ஆழ்வார் பாய்ந்தது என்று இறந்த காலத்தில் சொல்லாமல்,
பாயும் என்று நிகழ் காலத்தில் கூறி உள்ளார்.
காவிரியின் வெள்ளநீர் எங்கும் பாய்வதால், சோலைகளும் எல்லா இடங்களிலும் பரவுகிறது.
அரங்கம் தன்னுள், கள்ளனார்
கள்ளமில்லாத நித்ய ஸூரிகளுடன் பரம பதத்தில் நேர்மையோடு இருப்பதை விட்டு,
திரு வரங்கத்தில் கண் வளர்ந்து இருப்பது, இங்குள்ள கள்ளத்தனம் உள்ள சம்சாரிகளைத்
தன் கள்ளத் தனம் கொண்டு, வலைவீசி, கவர்ந்து கொள்வதற்காக என்பதால்
ஆழ்வார் ‘கள்ளனார்’ அல்லது ‘கள்வனார்‘ என்று கூறுகிறார்.
பலவகை துர் எண்ணங்களுடன் கோவிலுக்குள் செல்லும் மக்களை தன் வடிவழகு போன்றவற்றை கொண்டு திருத்தி,
அவர்களை அடியவர்கள் என்று மாற்றும் எம்பெருமானை கள்வனார் என்று ஆழ்வார் சொல்வது பொருத்தமே.
மிகப் பெரிய தீவட்டித் திருடன் என்பதால் ‘கள்வன்’ என்று சொல்லாமல்
‘கள்வனார்’ என்று சொன்னதற்கு காரணம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவைத் தன்னது என்று உரிமை கொண்டாடும் ஜீவாத்மாக்களைக் கவரும் போது,
அதை சொல்லிக் கொண்டு வந்தால் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், கள்வனாக கிடக்கிறார்.
மேலே சொன்ன நீர்வளத்தையும் சோலைகளின் வனப்பையும் கொண்டு எம்பெருமான்
இங்கு வந்து பள்ளி கொண்டு உள்ளான் என்று நினைக்க தோன்றினாலும்
உண்மையில் ஜீவாத்மாக்களை கவரவே என்பதால் கள்வன் என்று சொல்லலாம்.
நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை திவ்யதேச எம்பெருமானை பாடும்போது,
“செஞ்சொற் கவி காள், உயிர் காத்து ஆட் செய்மின்” என்று பாடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
திருப்பாணாழ்வார், பெரியபெருமாளை அருகில் சேவித்தபோது அவரது திருமுக மண்டலத்தில்
ஒரு கள்ளத்தனம் தோன்றி இருப்பதால் தானோ, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் (7),
‘செய்ய வாய் ஐயோ ! என் சிந்தை கவர்ந்ததுவே‘ என்று சொல்கிறார்.
அதாவது எதோ ஒரு காரணத்தினால் தன்னை அணுகுகிறவர்களின் ஆத்மாவை திருடி தன் சட்டைப்பைக்குள்
வைத்து கொள்வார் அல்லது அவர்களை தன்னுடைய அந்தரங்கர்கள் ஆக்கி கொள்வார்.
எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவை தன்னது என்று பலகாலமாக நினைத்து கொண்டு இருக்கும்
ஜீவாத்மாவிடம் இருந்து அது அறியாத வண்ணம், எம்பெருமான் சேர்த்துக் கொள்வதால் கள்வனார் என்கிறார்.
இதை ஜிதந்தே ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகத்திலேயே
‘செந்தாமரை கண்ணா, உன்னால் இந்த ஆத்மா ஜெயிக்கப்பட்டது, இந்த ஆத்மா என்னுடையது அல்ல, உன்னுடையது,
உலகையெல்லாம் உண்டாக்கினவனே, இந்திரியங்களை நியமிப்பவனே, கொடுப்பதில் சிறந்தவனே,
முற்பாடானாக பிறப்பவனே, இந்த ஆத்மா எனக்காக இல்லாமல் உனக்காகவே ஆகவேண்டும்” என்றபடி
எம்பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி இந்த ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்.
பற்பல காலமாக ஜீவாத்மா, இந்த ஆத்மாவை தன்னதாகவே நினைத்துக் கொண்டு இருப்பதால்,
இப்பொழுது பரமாத்மா தனக்கு சொந்தமான ஆத்மாவை எடுத்துக் கொண்டாலும் அது,
ஆயர்பாடியில் கண்ணன் வெண்ணையை திருடியது போல், கள்ளத்தனமாகவே தெரிகிறது, என்று உரையாசிரியர் சொல்கிறார்.
எம்பெருமானுடைய உலகங்களையெல்லாம் அவனுக்கே மாவலி தானம் கொடுத்தது போல்,
நாமே இந்த ஆத்மாவை அவனுக்கு சமர்ப்பித்தாலும் அதுவும் ஒரு கள்ளத் தனமே.
கிடந்தவாறும்
ஆழ்வார் தன்னை வசப்படுத்தியது, எம்பெருமானின் எளிமை மற்றும் பற்பல திருக் குணங்கள் அல்ல என்றும்,
கண் முதலிய அவயங்களின் தனிப்பட்ட அழகு இல்லை என்றும்,
“கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை 23) என்ற பெரிய பெருமாள் திருமேனியின் முழுவதுமான
அழகே (சமுதாய சோபை) என்றும் கூறுகிறார்.
கமல நன் முகமும்
தாமரை, எம்பெருமானின் திருமுகத்துடன் ஒப்பிடப்படுகிறது. மலர்ச்சி, நறுமணம், குளிர்ச்சி, புதுமை என்ற
குணங்களால் ஓரளவு ஒன்றாக இருந்தாலும், நன்முகம் என்று சொன்னதால், முற்றிலும் சமமானது என்று சொல்லமுடியாது.
சுத்த சத்வ மயமானதாலும் ஜோதிமயம் ஆனதாலும் தாமரை போன்ற ஒரு ஜட பொருளுக்கு எம்பெருமானின்
திருமுக மண்டலத்தை ஒப்பிட முடியாது.
ஆதித்தனை கண்டு மலரும் தாமரைக்கு அடியார்களை கண்டு மலரும் எம்பெருமானின் திருமுகத்திற்கு
ஒப்பு ஆகாது என்பது ஆழ்வாரின் கருத்து.
எல்லா உலகங்களிலும், எம்பெருமானின் திருமுகம் மட்டுமே மிக குளிர்ச்சியான முகம் என்றும்
மற்றவை கடுமையானவை என்பதை ‘நன்முகம் ‘ என்ற சொல்லால் உணர்த்துகிறார்.
இதே உரையாசிரியர், வங்கக்கடல் கடைந்த பாசுர விளக்கத்தில் ஆண்டாள், பெரியாழ்வாரை புகழும் போது,
‘தண் தெரியல் பட்டர் பிரான்‘ என்று சொன்னது, பெரியாழ்வார் குளிர்ச்சியான மாலையை அணிந்து கொண்டு உள்ளார்,
எம்பெருமான் உட்பட மற்றவர்கள் சூடானவற்றை அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானையும் விட இன்னும் சாத்விகர்களாக
இருப்பார்கள் என்பதால் உரையாசிரியர்,
ஆழ்வார்கள் தவிர மற்றவர்களை பார்க்கும் போது எம்பெருமான் குளிர்ச்சியாகவும்,
ஆழ்வார்களை பார்க்கும் போது ஆழ்வார்கள் எம்பெருமானை விடவும் குளிர்ச்சியாகவும் இருப்பர் என்று சொல்வது போல் தெரிகிறது.
கண்டும், உள்ளமே வலியைப் போலும்
எம்பெருமான் கண் வளர்ந்து அருளும் அழகினை சேவித்த பிறகும், ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனதை
பார்த்து ஆழ்வார் அதன் வலிமையை கண்டு வியக்கிறார்.
இதற்கு முந்தைய பாசுரங்களில்
கண்ணினை களிக்குமாறே (17),
பனிஅரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று மனது கேட்ட போது,
ஆழ்வார், எம்பெருமான் பெருமைகளைப் பார்க்கும்போது, ஆழ்வார் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களாக
மேலே சொன்னவை, மிக சிறியவையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஒருவன் என்று உணர மாட்டாய்
ஆழ்வார் மேலும், எம்பெருமான் தன்னிகர் இல்லாதவன் அல்லது ஒப்பற்றவன் என்று
உணராத நெஞ்சம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.
அப்படி உணர்ந்தால், எம்பெருமானின் பெருமைகளும், குணங்களையும் உள்ளபடி உணரவேண்டும்.
அதற்கு ஏற்ப ஈடுபாடும் பிறக்க வேண்டும். அது பிறக்காததால், நெஞ்சை வன்மை உள்ளது என்று கூறுகிறார்.
கள்ளமே காதல் செய்து
கண்ணினை களிக்குமாறே (17),
பனிஅரும்பு உதிருமாலோ (18),
உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னது மற்ற உலக விஷயங்களில் எப்படி கள்ளத்தனமாக
நடக்கிறோமோ அதே போல் பகவத் விஷயத்திலும் கள்ளத்தனமாக நடந்து கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
உன் கள்ளத்தே கழிக்கின்றாயே
ஆழ்வார், மேலும் நெஞ்சத்திடம் உலக விஷயத்தில் செய்த கள்ளத்தனம், பற்பல காலங்களாக, பற்பல பிறவிகளாக
செய்து வருவதால், இந்த பகவத் விஷயத்திலும் பொய்யான அன்பை நன்றாக காட்டிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
மெய்யான அன்பு செலுத்தவில்லை என்றும் இந்த விஷயத்திற்கு ஏற்ற உண்மை அன்பை, பக்தியை
செலுத்தவில்லை என்று தன் மனத்திடம் சொல்லி, இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
எம்பெருமானின் திருமுகத்தை தரிசித்த பின்னும் ஆழ்வாரின் வலிமையான நெஞ்சம்,
அவரிடம் பொய்யான பக்தியை காண்பித்ததாகவும், அதனால் தன்னிடம் சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் இல்லை
என்று தன்னை எம்பெருமான் சரணாகதிக்கு தயார் செய்ததை, ஆழ்வார்க்கு செய்த உபகாரமாக இந்த பாசுரம் சொல்கிறது.
இதே போல், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில், (5.2.8),
“ஏதங்களாயின எல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே, பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து,
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே”, என்று
சொல்லி எம்பெருமான் தன்னுடைய வலிமையான நெஞ்சத்தில் உள்ள பாவங்களை விலக்கி விட்டு,
அதனுள் புகுந்து அவனுடைய திருவடிகளை ஆழ்வாரின் தலையில் வைத்து உபகாரம் செய்ததை சொல்லி உள்ளார்.
இத்துடன் ஆழ்வார், எம்பெருமான் தனக்கு செய்த உதவிகள் என்ற தலைப்பில் சொன்ன தொகுப்பு முடிகின்றது.
அடுத்து ஆழ்வார், நிரந்தர இன்பம் அளிக்கும் பரமபத்திற்கான உபாயங்களை கடைபிடிக்க
தமக்கு ஒரு தகுதியும் இல்லை என்ற தொகுப்பில் 25 முதல் 34 வரை சொன்ன பத்து பாசுரங்கள்–
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்