உபநிஷத்தைப்பற்றி: எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷத்து அதர்வ வேதத்தில் உள்ளது.
மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சொற்றொடர்களே உள்ளன.
இது ஓம் என்ற பிரணவ மந்திரம், பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள் [உள்ளுணர்வுகள்],
இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.
இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது.
இறுதியில் பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.
ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார்.
இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில்
கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.
ௐ இத்யேதத³க்ஷரமித³{ம்+} ஸர்வம், தஸ்யோபவ்யாக்²யானம்,
பூ⁴தம்ʼ ப⁴வத்³ ப⁴விஷ்யதி³தி ஸர்வமோங்கார ஏவ.
யச்சான்யத் த்ரிகாலாதீதம்ʼ தத³ப்யோங்கார ஏவ. (1)
ஓமெனுமிந்த அழியாததே இவை எல்லாம். அதன் விளக்கமாவதிது.
ஆனது, ஆகியிருப்பது, ஆகப்போவதென்ற எல்லாமே ஓங்காரம்தான்.
இவையன்றி முக்காலங்களைக் கடந்தததுவும் ஓங்காரமே.
பதவுரை:
ஒமிதி – ஓம் என்ற; ஏத3து – இந்தஒரு; அக்ஷரம் – அழிவற்ற ஒன்று [சொல்]; இத3ம் ஸர்வம் – இது எல்லாம்.
தஸ்ய – அதன்; உபவ்யாக்2யானம் – விளக்கமாவது; பூ4தம் – ஆனது; ப4வது3 – ஆகிவருவது; ப4விஷ்யது3 – ஆகப்போவது;
இதி ஸர்வம் – இது எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரம்தான்.
த்ரிகாலாதீதம் – [இறந்த, நிகழ், எதிர்] மூன்று காலங்களைக் கடந்த [அப்பாற்பட்ட];
யச்சான்யது – மற்ற எதுவாகிலும்; தது3 அபி ஓங்கார ஏவ – அதுவும் ஓங்காரம்தான்.
விளக்கம்: இந்த முதல் சொற்றொடரில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் விளக்கப்படுகிறது.
எழுத்தையும், சொல்லையும், பேச்சையும் வடமொழியில் அக்ஷரம் என்று சொல்கிறார்கள்.
ஷரம் என்றால் அழிவது என்று பொருள். எனவே, அக்ஷரம் என்றால் அழியாதது என்றே பொருள்கொள்ளவேண்டும். ஏன்?
மனிதன் அழியலாம், ஆனால் அவனது சொல் அழிவதில்லை;
பெரியோர் சொல்லிவைத்த சொற்கள் இன்றும் அழியாமல் நம் நினைவில் நிற்கின்றன.
ஒரு மொழி அழிந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் அழிவதில்லை.
ஆகையால் சொல் என்பது அக்ஷரம், அதாவது அழிவற்றது என்று ஆகிறது.
எனவே ஓம் எனும் அழிவற்ற இது என்று மாண்டூக்ய உபநிஷத்து துவங்குகிறது.
இது எல்லாமே என்றால், நம்மால் அறிய முடியும், முடியாத எல்லாமே என்று விளக்கமாகிறது.
இது எல்லாமே ஓம் தான் என்று சொன்னபிறகு அதன் பொருளை விவரிக்கிறது.
ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது.
பெரும் வெடிப்பு [Big Bang} நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள்.
அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடைந்துகொண்டிருக்கும் அண்டம்,
இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.
மேலும் விளக்க, நம்மால் காண முடிவது மட்டும் அல்ல, காண இயலாத, உணர இயலாத
மூன்று காலத்திலும் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் மற்றவை எல்லாமே ஓங்காரம்தான் என்னும்போது…
ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.
அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா? அதற்கு விளக்கம் அடுத்த சொற்றொடரில் பிறக்கிறது.
அதற்குமுன் முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த என்ற குறிப்பீட்டைப் பார்ப்போம்.
நமக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரம் [விண்மீன்] பிராக்சிமா சென்டாரி [Proxima Centauri]
நமது பூமியிலிருந்து நாலேகால் ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது.
அதை நாம் பார்க்கும் பொது, நாலேகால் ஆண்டுகளுக்குமுன் அது இருப்பதைத்தான் இன்று நாம் காண்கிறோம்.
எனவே நாம் காண்பது இறந்தகாலத்தைத்தான்.
அதைப்போல மிகவும் தள்ளி இருக்கும் மற்ற விண்வெளி மண்டலங்கள் இன்னும் பல நூறு/ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.
எனவே அவற்றை நமது தொலைநோக்கிகள் [telescopes] காணும்போது. அவ்வளவு பழைய காலத்தில் இருக்கும் ஒன்றையே நாம் காண்கிறோம்.
மேலும் கருந்துளைகளில் [black-holes] காலமே வளைக்கப்பட்டுவிடுகிறது என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கூற்று, முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த ஒன்று நிகழக்கூடும், நிகழுகிறது என்பதுதானே!
இதை நமது முனிவர்கள் கேட்டுணர்ந்து இருப்பதை வானியல் உறுதிசெய்கிறது.
ஓம் என்ற அழிவற்ற ஒன்றின் விளக்கம் தொடர்கிறது.
————
ஸர்வம் ஹ்யேதத்³ ப்³ரஹ்ம, அயமாத்மா ப்³ரஹ்ம,
ஸோ(அ)யமாத்மா சதுஷ்பாத். (2)
எல்லாமே அந்தப் பரம்பொருள்தான். இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான். இந்த ஆத்மன்[மா] நான்காக பகுதிகளாக இருக்கிறான்.
பதவுரை: ஏதது ஸர்வம் – இம்மாதிரியான எல்லாம்; ப்ரஹ்ம ஹி – பிரம்மம்[பரம்பொருள்]தான்;
அயம் ஆத்மா ப்ரஹ்ம – இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்; ஸ அயம் ஆத்மா – இந்த ஆத்மா என்பவனும்;
சதுஷ்யாது – நான்கு [கால்] பகுதிகளாக இருக்கிறான்.
விளக்கம்: இங்கு ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் அத்துடன் ஒங்காரத்திற்கும் உள்ள தொடர்பும் கொண்டுவரப்படுகிறது.
முதல் செய்யுளில் ஓங்காரம்தான் இங்கு இருப்பது, இருந்தது, இருக்கப்போவது எல்லாம் என்றும்,
ஓங்காரம் முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டது.
இப்பொழுது இதெல்லாம், அதாவது ஓம் குறிக்கும் எல்லாமே பரம்பொருள், பிரம்மமே என்றுரைக்கப்பட்டது.
இந்த ஒரு சொற்றோடரைக் கவனிப்போம். ஓம் என்பது காலவட்டத்திற்கு உள்பட்டது, அதற்கு அப்பாற்பட்டதும்கூட என்று சொல்லிவிட்டு,
அவை எல்லாம் பரம்பொருளே [பிரம்மமே என்றால்] இங்கு நாம் காணும், கண்ட, காணப்போகும்,
மற்றும் காலச் சக்கரத்திற்கு அப்பாற்பட்ட – அதாவது நமது அறிவுக்கு, புலனுக்குக் கட்டுப்படாத,
கண்டறிய இயலாத எல்லாமே பரம்பொருள் என்று உறுதி செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக, பரம்பொருளே ஆத்மா என்று இணைப்பு கொடுக்கப்படுகிறது.
இப்படிச் சொன்னவுடன் நம் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்?
ஓம்தான் எல்லாம் என்றும் சொல்லி, அதுவே பரம்பொருள் என்றும் சொல்லி, அதுதான் ஆத்மா என்றால்,
அந்த ஆத்மா என்பது என்ன என்பதாகத்தானே இருக்கும்?
இந்த ஆத்மா என்ற ஒன்று நம் உடலுக்குள் இருக்கிறது, அதைத்தான் நாம் என்று உணருகிறோம்.
இந்த ஆத்மாவைப் பற்றி பலவிதமான விளக்கங்களும், பலராலும் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இருந்தும் ஆத்மா என்றால் என்ன என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது.
இந்த ஆத்மா நமது உடலுக்குள் இருக்கிறது என்றால் அது என்ன செய்கிறது, அதன் இயல்புகள் என்ன என்று அறியும் ஆவல் பிறக்கிறது.
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல, ஆத்மா நான்கு பகுதிகளாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நான்கு பகுதிகள் என்றால் நான்கு கால் பகுதிகள் என்றுதானே பொருள்?
இந்த ஆத்மா என்று சுட்டப்படுகிறதே, அப்படியென்றால் இது, இந்த ஆத்மா நான்கு கால்கள் உள்ள ஒரு மிருகத்தைப்போன்றதா —
அல்லாது போனால், இரண்டுகால்களும் இரண்டு கைகளும் உள்ள மனிதனைப் போன்றதா — அல்லது
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுபோல நான்கு பக்கங்கள் உள்ள கனசதுரமா என்றும் குழப்பம் ஏற்படுகிறது.
“இந்த நான்கு பகுதிகளை எப்படி அறிந்துகொள்வது?” என்று மேலும் குழம்புகிறோம்.
அந்தக் குழப்பத்தை நீக்குவதுபோல ஆத்மாவின் நான்கு பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
————–
ஜாக³ரிதஸ்தா²னோ ப³ஹி:ப்ரஜ்ஞ: ஸப்தாங்க³ ஏகோனவிம்ʼஸ²திமுக²:
ஸ்தூ²லபு⁴க்³வைஸ்²வானர: ப்ரத²ம: பாத³: (3)
விழித்திருக்கும் நிலையில் வெளியறிவானவன், ஏழுறுப்புகளும் பத்தொன்பது வாய்களுமுள்ளவன்,
தெளிவாகப் புரிவதைச் சுகிக்கும் வைஸ்வாநரன் முதல் பகுதியாவான்.
பதவுரை: வைஸ்வாநர: வைஸ்வாநரன்; ஜாக்3ரிதஸ்தா2னோ – விழித்திருக்கும் நிலையில்;
ப3ஹிஷ்பிரக்ஞ: – வெளி[யில் நடக்கும் விஷயங்களை]அறிவுடையன்; சப்தாங்க: – ஏழு உறுப்புகள் உள்ளவன்;
ஏகோனவிம்ஸதி முக2: – பத்தொன்பது வாய்கள் உள்ளவன், ஸ்தூ2லபு4க்3 – திடப்பொருள்களை அனுபவிப்பவன்;
ப்ரத2ம: பாத3: – [அவன்] முதல் பகுதியாகிறான்.
விளக்கம்: இச்சொற்றொடர் ஆத்மனின் முதல் பகுதியைக் குறிப்பிடுகிறது. எல்லாச் சமயங்களிலும் நம் உடலுக்குள்
இருந்து கொண்டு நம்மை இயக்குவது ஆத்மா [self, soul] என்று உலகச் சமயங்கள் கூறுகின்றன.
நாம் விழித்திருக்கும் நிலை நம்மை இயக்கம் அந்த ஆத்மாவின் முதல் நிலை என்று பகரப்படுகிறது.
அந்த முதல்நிலைக்கு வைஸ்வாநரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
விஸ்வ – இவ்வண்டமான – நரன் – மனிதன். அதாவது விஸ்வ+நரன் தெய்வீக சக்தி உள்ள மனிதன் [human].
இப்பெயர் தனி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மொத்த அறிவையும்
ஒரு மனிதனிடம் கொடுத்திருப்பதாக உருவகப்படுத்தப் படுகிறது.
[The Supreme Spirit or Intellect when located in a supposed collective aggregate of gross bodies]
பரம்பொருளே ஆத்மன் என்று சொல்லிவிட்டு, அந்த ஆத்மனுக்கு நான்கு பகுதிகள் என்று சொல்லி,
அந்த ஆத்மன் விழித்திருக்கும் நிலையில் வெளிஅறிவுடன் இயங்குகிறான் என்றால் – அவனுடைய புரிதல் வெளியுலகத்தில் இருக்கிறது என்று பொருள்.
அதுதான் அவனுடைய இயக்க நிலை என்றால் — அது நம் அனைவருக்கும் பொருந்துகிறது. நமக்கு மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த அனைத்து உயிரினங்களுக்குமே.
நாம் வெளியுலகில் நடப்பதை வைத்துக்கொண்டுதான், நமக்கு வெளியில் நடப்பதின் மூலம்தான் நமது அறிவைப் பெறுகிறோம்.
அதை எப்படிப் பெறுகிறோம்? அந்த விஸ்வாநரன் எப்படிப் பெறுகிறான்?
அவனுக்கு ஏழு உறுப்புகளும், பத்தொன்பது வாய்களும் உள்ளன என்று கொடுக்கப்பட்டிருப்பதால் அவை என்னவாக இருக்க முடியும்,
அவை எப்படி வெளி அறிவைப் பெற உதவி செய்கின்றன என்பதை நோக்குவோம்.
முதலில் ஏழு உறுப்புகள் எதுவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.
விண்ணே அவனது தலை, சூரியன் கண், காற்றே உயிர்மூச்சு, வெற்றிடமே நடுப்பகுதி, தண்ணீரே அவனது சிறுநீரகம்,
நிலமே அவனது கால்கள், வேள்விக்கான நெருப்பே [அஹவனீய அக்னி – கிருஷ்ண யஜுர்வேதம்] அவனது வாய் என்று சொல்லப்படுகிறது.
இப்பொழுது 19 வாய்கள் எவை என்று நோக்கினால் அவை, நமது ஐம்புலன்கள் [கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்ச்சி உறுப்புகள்] —
ஐந்து உணர்வுகள் [பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகியவை] —
ஐந்து உயிர் காற்றுகள் [பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்;
இந்து ஐந்து வகைக் காற்றுகளும் நம் உடலில் சக்தியை நிலை நிறுத்துகின்றன.] – மனம், அறிவு, ஆணவம், உணர்ச்சிகள் ஆகியவை.
இவற்றை ஏன் வாய் என்று சொல்கிறார்கள்?
இவைதான் உயிரினங்களின் அனுபவங்களின் – பட்டறிவின் நுழைவாயில்கள்.
இவைகளின் மூலம்தான் உயிரினங்கள் தங்களது வெளி அனுபவத்தைப் பெறுகின்றன.
மேலே சொல்லப்பட்ட உறுப்புகளும், வாய்களும் வெளி உலகத்தையே பார்ப்பதால், அவற்றையே அனுபவிப்பதால்,
ஆதமனின் அப்பகுதி வைஸ்வாநரன் என்று அழிக்கப்படுகிறது.
நம்மை எடுத்துக்கொண்டாலே, நாம் உள்ளாக எதையும் உணர்வதில்லை. நமக்குத் தெரியும், நாம் பகுத்தறியும் எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதே.
நமது ஐம்புலங்களாலும், ஐந்து உணர்வுகளாலுமே கிடைக்கின்றன. நமக்குத் தெளிவாகப் புரிவதை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடிகிறது.
உடனே, நமது அறிவு ஒரு கேள்வியை எழுப்புகிறது:
“ஆத்மன்தான் பிரம்மம் என்றால், அவன்தான் ஓங்காரம் என்றால், விண் [சுவர்க்கம்], சூரியன், பூமி, தண்ணீர்,
இன்னும் மற்றவை எல்லாம் தலை, உள்ளுறுப்புகள் என்று ஏன் சொல்லப்படுகின்றன?”
இப்படி விளக்குவது பொருத்தமற்ற ஒன்று என்று எண்ணவேண்டியதில்லை. புலன்களால் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய அண்டத்தையும்,
கடவுளர்களின் இருப்பிடத்தையும் ஆத்மனை தெய்வீகமாக உருவகப்படுத்தும் ஒரு பகுதியாக [விராட்] என்று குறிப்பிடுவது
இருமை என்ற நிலையை நீக்கி எல்லாம் ஒன்றே என்று பின்னால் நிறுவுவதற்கு அடிகோலுகிறது.
இப்படி உரைப்பது — ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —
வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.
அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.
ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —
வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.
அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.
——————-
ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ஏகோநவிம்சதிமுக2: ப்ரவிவிக்தபு4க் தைஜஸோ த்3விதீய: பாத3: || — 4
கனவுநிலையில் உள்ளறிவானவன், ஏழுறுப்புகளும், பத்தொன்பது வாய்களுமுள்ளவனும்.
நுட்பப்பொருள்களை விரும்பும் தைஜஸன் இரண்டாம் பகுதியாகிறான். — 4
பதவுரை: தைஜஸ: – தைஜஸன் [என்ற]; த்3விதீய: பாத3: – இரண்டாம் பகுதியானவன்; ஸ்வப்னஸ்தான: – கனவில் நிலைபெற்றவன்; அந்த: ப்ரக்ஞ: – உள்ளுணர்வானவன்; ஸப்தாங்க: – ஏழு உறுப்புகளால் ஆனவன்; ஏகோநவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் படைத்தவன்;
ப்ரவிவிக்தபு4க் – நுண்ணுணர்வால் அறியப்படும் பொருள்களை அனுபவிப்பவன்.
விளக்கம்: ஆத்மனின் இரண்டாம் பகுதிக்கு தைஜஸன், அதாவது ஒளிமயமானவன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
ஏன் என்னும் கேள்வி எழுமுன்னரே அவன் உள்ளுணர்வானவன் என்று விடையும் கொடுக்கப்படுகிறது.
விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு போன்ற வாய்களால் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அறிகிறோம் —
நமக்குள் இருக்கும் ஆத்மன் அறிகிறான். உறங்கும்போது, வெளியுறுப்புக்கள் வேலை செய்வதில்லை.
வெளியுறுப்புக்கள் மூலம் அறிந்துகொண்ட விஷயங்கள் நுண்ணறிவாகக் கனவுலகில் காணப்படுகின்றன.
எனவே, கனவுலகில் ஆத்மன் அனுபவிப்பது எல்லாமே நுண்ணறிவால்தான்.
உதாரணமாக, கனவில் ஒருவன் பயணிக்கலாம். ஒரு வினாடிக்குள் அவன் உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சென்றுவிடலாம்.
நனவுலகில் கற்பனையாக இருக்கும் அது, கனவுகில் ஒரு நிஜம்போலத் தோற்றமளிக்கிறது.
நனவுலகில் வெளி உறுப்புகள் மூலம் உள்ளப்படும் அனைத்தும் கனவுலகில் நுண்ணுணர்வாக உள்ளப்படுகின்றன.
ஆயினும் உடல் எந்த மாற்றத்திற்கோ உட்படுவதில்லை. கனவில் நம்மை ஒரு மிருகம் கடித்துக் குதறலாம்,
ஆனால் உடலில் எந்த வலியும் ஏற்படுவதில்லை.
வெளியுலகில் நடக்கும் அனைத்தையும் ஆத்மன் கனவுலகிலும் அனுபவிக்க இயலுவதால்,
நனவுலகில் சொல்லப்பட்ட அத்தனை உறுப்புகளும், வாய்களும் தைஜஸனுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கனவில் காண்பது அனைத்தும் மனத்தாலேயே காணப்படுகிறது, கேட்கப்படுகிறது, உணரப்படுகிறது. அவை வெளி உலகத்தின் பதிவுகளே!
தைஜஸன் — அதாவது, ஒளிமயமானவன் என்று ஏன் அழைக்கப்படுகிறான்?
அவன் சாட்சியாக அனைத்தையும் அறிதல் திடப்பொருள்களாக அல்ல – ஒளிரும் வடிவங்களாகவே.
வைஸ்வாநரன் வெளியில் காணும் திடப்பொருள்களால் அறிந்தால், தைஜஸன் எண்ணங்களாகவும், பதிவுகளாகவுமே அறிகிறான்.
ஆதலால் அவனது அனுபவங்கள் நுட்பமாக, சூட்சுமமாகவே இருக்கின்றன.
ஆத்மனின் மற்ற இரண்டு நிலைகள் என்ன? அவன் எப்படி அறிகிறான்? எப்படி உணர்கிறான், எதை, எப்படி அனுபவிக்கிறான்?
———–
யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காம்யதே ந கஞ்சன ஸ்வபனம் பஸ்யதி தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தா2ன ஏகீபூ4த:
ப்ரக்ஞானக4ன ஏவாநந்த3மயோ ஹ்யானன்த3பு4க் சேதோமுக2: ப்ராக்ஞஸ்த்ரீதீய: பாத3: — 5
எங்கு தன்னறிவில்லாதவன் [உறங்குபவன்] ஒரு விருப்பத்தையும் விரும்புவதில்லையோ, ஒரு கனவையும் காண்பதில்லையோ,
அது ஆழ்ந்த உறக்கநிலை [சுஷுப்தி ஆகிறது]. ஆழ்உறக்கநிலையில் [இருக்கும் ஆத்மன்] ஒன்றாகவே ஆனவனாகவும்,
அறிவின் குவியலாகவும், ஆனந்தமே உருவாகவும், ஆனந்தத்தை அனுபவிப்பவனாகவும்,
அறிவே முகமாவும் [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக], அறிவாளியாகவும், மூன்றாம் பகுதியாகவும் இருக்கிறான்.
பதவுரை: யத்ர – எங்கு; ஸுப்த: – [ஆழ்ந்து உறங்கும்] தன் நினைவு இல்லாதவன்;
காமம் கஞ்சன ந காமயதே – ஆசைப்படு[ம் பொருள்களில்]தலில் சிறிதும் விருப்பபடுவதில்லையோ;
ஸ்வபனம் கஞ்சன ந பஸ்யதி – கனவுகள் சிறிதும் காண்பதில்லையோ; தது – அது;
ஸுஷுப்தம் – ஆழ்உறக்கநிலை [ஸுஷுப்தம் ஆகிறது]; ப்ராக்ஞ: – அறிவாளியான [ஆத்மன்];
ஸுஷுப்தஸ்தா2ன – ஆழ்உறக்கநிலையில்; ஏகீபூ4த: – ஒன்றாகவே [எதிலிருந்தும் வேறுபடாமல்] இருக்கிறான்;
ப்ரக்ஞானக4ன ஏவ; – [அனைத்து] அறிவின் குவியலாகவே; ஆநந்த3மய: ஹி – ஆனந்தத்தின் உருவமாகவே;
ஆனன்த3பு4க் – மகிழ்ச்சியைத் துய்ப்பவனாக;:
சேதோமுக2: – அறிவையையே முகமாகவும்கொண்டு [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக/கதவாக];
த்ரீதீய பாத3 – மூன்றாம் பகுதியாகிறான்.
விளக்கம்: இந்தச் செய்யுளில் ஆழ்உறக்கநிலை, அல்லது ஸுஷுப்தி விவரிக்கப்படுகிறது.
மனிதன் உறங்கும்போது இருவிதமான உறக்கநிலைகளில் இருக்கிறானென்று அறிவியல் சொல்லுகிறது.
கனவுகளுடன் கூடிய உறக்கத்தை REM (Rapid Eye Movement) sleep என்றும்,
கனவுகளில்லா உறக்கத்தை NREM (Non-Rapid Eye Movement) sleep என்றும் உறக்க வல்லுனர்கள் பிரித்திருக்கிறார்கள்.
மேலும், கனவில்லா உறக்கத்தில் எண்ணங்கள், நினைவுகள் இருக்கின்றன, ஆனால் அவை சிதறல்களாக இருக்கின்றன என்றும்
கண்டுபிடித்திருக்கிறார்கள். இதையே மாண்டூக்ய உபநிஷத்து அறிவின் குவியல் என்று குறிப்பிடுகிறது.
அதுமட்டுமா, ஆழ்ந்த உறக்கத்தில் உடல் தன்னை பண்டை நிலைமைக்குத் திரும்பக்கொணர்கிறது என்றும் அறிவியல் கூறுகிறது.
கட்டற்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கும்போது உடல்நலம் தேறுகிறது என்பதை நாம் அறிவோம்.
ஆகவே, ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருக்கும் போ து உடல் அன்றாடம் ஏற்படும் தேய்மானத்தைச் சரி செய்கிறது.
இன்னும் ஒன்று — ஆழ்உறக்க நிலையிலிருக்கும்போது ஆணவம் [ego] மறைகிறது. அங்கு ஐம்புலன்களின், ஐயுறுப்புகளின்
தொடர்பும் தாற்காலிகமாக விட்டுபோகிறது. அங்கு நாம் மறைந்துவிடுகிறோம் — நமது பெயர், நமது உள்ளறிவு,
நமது விருப்புவெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு ஏழை செல்வந்தர் என்ற நினைப்பு,
வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, — இவை எல்லாமே மறைந்துதான் போய்விடுகின்றன.
அப்படிப்பட்ட நிலையில் ஏகீபூ4த”மாக, ஒன்றிப்போன நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.
நமது துயர்கள், இடுக்கண்கள், தேவையற்ற பூசல்கள் நாம் விழித்திருக்கும்போதும்,
கனவுகாணும்போதும்தானே உண்டாகின்றன! தூங்குபவருக்கு அது ஏது!
அந்தநிலையில் நாம் துய்ப்பது ஆனந்த – மட்டற்ற மகிழ்ச்சி நிலைதானேdreamless sleep
ஆத்மனின் மூன்றாம் பகுதி சேதோமுகன் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மனின் இப்பகுதியை நம் மனத்தின்
விழிப்புநிலை — விழித்திருக்கும்போது நாம் பெறும் பட்டறிவாகத் தோன்றும் அனுபவங்கள் –
இவைதான் விழிப்புக்கும் கனவுநிலைக்கும் இடையே உள்ள கதவு என்றும் அறியலாம்.
மேலும் இந்நிலையில் இருக்கும் ஆத்மனை ஏன் சிறந்த அறிவாளி என்று கூறவேண்டும்?
விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது.
அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர்,
உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.
ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை. எல்லாமே ஒன்றுதான்.
ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது.
இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது.
இப்படி ஆழ்உறக்க நிலையில் இருக்கும் இந்த ஆத்மன் யார்?
————–
ஏஷ ஸர்வேஸ்வர: ஏஷ ஸர்வக்ஞ எஷோஅந்தர்யாம்யேஷ யோனி:
ஸர்வஸ்ய பிரப4வாப்யயௌ ஹி பூ4தானாம் || — 6
இவர் எல்லாவற்றிற்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் இவர் உள்ளில் இருப்பவர்,
உண்டானது, உண்டானவைக்கும், அழிபவைக்கும் இவரே மூலத்தானம்.
பதவுரை: ஏஷ – இவரே; ஸர்வேஸ்வர: – அனைத்துக்கும் இறைவன்; ஏஷ – இவரே; ஸர்வக்ஞ: – அனைத்தும் அறிந்தவர்;
ஏஷ – இவரே; அந்தர்யாமி – உள்ளே இருந்து இயக்குபவர்; ஏஷ – இவரே; ஸர்வஸ்ய யோனி: – அனைத்துக்கும் உற்பத்தித்தானம்;
பூ4தானாம் – உயிரினங்களுக்கேல்லாமே ; பிரபவ அப்யயௌ ஹி – தோற்றமும் முடிவுமாகவே [இருக்கிறார்].
விளக்கம்: ஆழ்உறக்கநிலையில் இருக்கும் ஆத்மனின் சிறப்பியல்புகள் இச்செய்யுளில் விளக்கப்படுகின்றன.
இவர் அனைத்துக்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் பிறப்பிடமாக இருக்கிறார்,
அதுபட்டுமன்றி, அனைத்துயிர்களின் தோற்றமும், முடிவுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் ஆத்மன் — அசைவின்றி, , தூய அறிவாக, எண்ணங்களின் குவியலாக இருக்கும் ஆத்மன்,
மேற்சொன்ன தொழில்களை எப்படிச் செய்ய இயலும் என்ற கேள்வி பிறப்பது நியாயம்தானே!
நமக்குத் தெரிந்தவரை, ஜீவாத்மாவும் – உயிர்களுக்குள், உடலுக்குள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் ஆத்மா என்று
நம்மால் உணரப்படும் ஒன்றும் — இறைவனும் [பரமாத்வாவும்] வெவ்வேறு என்றே எண்ணுகிறோம்.
இந்த உபநிஷத்தைப் பொறுத்தவரை யாவும் ஒன்றே! ஒரே சத்தியமான ஒன்றேதான் இறைவன்.
அந்த இறைவனின் ஒரு பகுதியே ஆத்மன். அந்த ஆத்மனின் ஒரு பகுதியே — மூன்றாம் நிலையில் இருக்கும்
ப்ராக்ஞனே பரம்பொருளான இறைவனின் ஒரு பகுதி என்று மாண்டூக்ய உபநிஷத்து உரைக்கிறது.
ஏனெனில் அனைத்துமே பரம்பொருள் என்று இரண்டாம் செய்யுளில் சொல்லப்பட்டது.
அப்படியானால், உயிர்கள் [ஜீவாத்மா] அனைத்துமே இறைவனிடமிருந்து பிரித்தறிய இயலாதவை ஆகின்றன.
அது எப்படி இயலும்?
கடலில் இருக்கும் நீரில் ஒரு திவலையைத் தனியாகப் பிரிததெதேடுத்தாலும்,
அதைக்கூறுபோட்டு ஒரு நீரணுவாகப் பிரித்தாலும், அது அக்கடலின் ஒரு பகுதியே!
எனவே, மாபெரும் கடலை இறைவன் என்றால், அக்கடலான இறைவனின் [பரம்பொருள் – பரப்பிரம்மம்] பிரிவுகளே
ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் கனவு நிலையில் இருக்கும் அத்மனின் ஒரு பகுதியும்,
விராட் என்று சொல்லப்படும் நனவு நிலையில் இயங்கும் ஆத்மனின் ஒரு கூறும் ஆவார்கள்.
இந்த ஈசனே அனைத்துக்கும் முதன்மையானவன். இவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறான். இவன் அறியாததொன்றும் இல்லை;
இவன் எல்லா உணர்வும்களையும் கடந்து — இருமை நிலைகளைக் கடந்து [இன்பம்-துன்பம்; மகிழ்வு-துயரம்; இனிமை-கடுமை]
ஆனந்தநிலையில் லயித்திருக்கிறான்.
இதிலிருந்து நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது. இறையறிவு பொருள்களை அறிவதால் ஏற்படுவதல்ல;
உணர்ந்து அறிவதால் ஏற்படுவதல்ல; எந்தவொரு அறிவும், உணர்வும் அனைத்தறிவு ஆகாது.
நாம் வெளியுலகில் இருக்கும் எதை அறிந்து உணர்ந்தாலும், அவற்றின் தன்மையை அறிந்துகொண்டாலும்,
அவற்றின் மீது எப்பொழுதும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டைச் செலுத்த இயலாது.
“அறிவு சக்தி” என்று சொல்லப்பட்டாலும், அது சக்தி ஆகாது. வெளி அறிவு – நமது ஐம்புலன்களினாலும் அறியப்படும் அறிவு —
நமது ஐயுணர்வுகளினாலும் அறியப்படும் அறிவு முழுச் சக்தியையும் நமக்கு வழங்குவதே இல்லை.
உயிர்கள் விழித்திருக்கும் நிலையில் இருக்கும்போது அதன் அறிவு ஐம்புலன்களினால் கிடைக்கும் ஒன்றே!
இறைவனின் அறிவு உள்ளுணர்வாகும். எனவேதான் அவர் கடவுள் — உள்ளத்தைக் கடந்தவர் என்று உள்ளப்படுகிறார்.
இறைவனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன; அவனுல்லேதான் அனைத்தும் அடங்குகின்றன.
அவனின் சக்தியில் ஒருசிறு பங்கே நமக்குக் கிடைக்கிறது. அதைத்தான் நாம் நனவுலகிலும், கனவுலகிலும் கையாளுகிறோம்.
ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.
அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை. அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.
அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.
உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா? ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன்,
ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா? அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.
இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.
அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை. அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.
அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.
உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா? ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன்,
ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா? அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.
இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…
—————-
நாந்த:ப்ரக்ஞம் ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் நோப4யத:ப்ரக்ஞம் ந ப்ரக்ஞானக4னம் ந ப்ரக்ஞம் நாப்ரக்ஞம் | அத்3ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதே3ஸ்யமேகாத்மப்ரத்யயஸாரம்
பிரபன்ஜோபஸ’மம் ஸா’ந்தம் சிவமத்3வைதம் சதுர்த்த2ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விக்ஞேய: || — 7
உள்ளறிவு உள்ளவனும் அல்ல, இடைப்பட்ட அறிவுள்ளவனும் அல்ல, அறிவுக்குவியலானவனும் அல்ல, விழிப்புணர்வு உடையவும் அல்ல,
விழிப்புணர்வு இல்லாதவனும அல்லன். காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பிடிக்கமுடியாதவன், ஊகித்தறியமுடியாதவன்,
நினைத்துப்பார்க்க இயலாதவன், விளக்கமுடியாதவன், ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன், அண்டமே அடங்கும் தன்மையன்,
அமைதியானவன், மங்களமானவன், இருமையற்றவன், நான்காவதாகக் கருதப் படுபவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன்.
பதவுரை: சதுர்த்த2ம் – நான்காம் பகுதியான [துரீயன்]; நாந்த:ப்ரக்ஞம் – உள்ளுணர்வு அற்றவன்;
ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் – வெளி உணர்வு அற்றவன்; நோப4யத:ப்ரக்ஞம் – இடைப்பட்ட நிலை உணர்வுகளும் இல்லாதவன்;
ந ப்ரக்ஞானக4னம் – அறிவுக் குவியில்களும் அல்லன்; ந ப்ரக்ஞம் – அறிபவனு அல்லன்; ந அப்ரக்ஞம் – அறியாதவனும் அல்லன்.
அத்3ருஷ்டம் – காண முடியாதவன்; அவ்யவஹார்யம் – வெளிச் செயல்களால் [அறிபவன்] அல்லன்;
அக்ராஹ்யம் – பிடியில் அடங்காத[வண்ணம் நழுவிச் செல்ப]வன்; அலக்ஷணம் – ஊகித்து அறியமுடியாத[அளவுக்கு உயர்ந்திருப்பவன்;
அசிந்த்யம் – நினைத்துப்பார்க்க முடியாதவன்; அவ்யபதே3ஸ்யம் – [சொற்களால்] விளக்க முடியாதவன்;
ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம் – ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன் பிரபஞ்ச உபஸ’மம் – அண்டத்தையே [தன்னுள் அடக்கி] ஒடுக்குபவன்;
ஸா’ந்தம் – அமைதியே உருவானவன்; சிவம் – மங்களமானவன்; அத்3வைதம் – இருமை நிலையற்றவன் [என்று];
ஸ ஆத்மா – அந்த ஆத்மன்; மந்யந்தே – கருதப்படுகிறான்; ஸ விக்ஞேய: – அவன் அறியத் தகுந்தவன்.
விளக்கம்: என்ன இப்படிக் குழப்பம் செய்யப்படுகிறது? முன்னால் ஆத்மனின் மூன்று பகுதிகள் என்று சொல்லி —
வெளி உணர்வு, உள்ளுணர்வு, எல்லாம் அறிந்தவன் என்று சொல்லிக்கொண்டே வந்து –
இப்பொழுது அதுவுமில்லை, இதுவுமில்லை, அறிவாளி, அதுவும் அல்ல, நினைத்துப் பார்க்க இயலாதவன்
காணமுடியாதவன் என்றும் சொல்லி — முன்சொல்லிய மூன்று பகுதிகளும் இல்லாத பகுதியே நான்காம் பகுதி என்று குழப்பினால் —
நாங்கள் என்ன, எப்படிப் புரிந்து கொள்வது என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும்பும் கேள்வி. அது நியாயமானதுகூட.
ஆதி சங்கரரும் இதே கேள்வியை எழுப்பியே விளக்கத்தையும் அளிக்கிறார் அதை என் புரிதலின்படி பகர்கிறேன்…
இருட்டான இடம். நாம் நடந்து செல்லும்போது எதோ ஒன்று சுருண்டு படுத்திருக்கிறது. இது இலேசாகவும் ஆடுகிறது.
உடனே நாம் அதிர்ந்து போகிறோம். இவ்வளவு பெரிய பாம்பு நமது வழியில் சுருண்டு படுத்துக்கிடப்பதோடு
மட்டுமல்லாது தலையையும் இளசாக ஆட்டுகிறதே!
நா உலர்கிறது, மதி மயங்குகிறது, அச்சம் நம்மைச் சூழ்கிறது. “பாம்பு! பாம்பு!” என்று பதறுகிறோம்.
நம் அருகில் உள்ள ஒருவர், “இல்லை, இல்லை! அது ஒரு மாலை!
நீங்கள் தலை என்று நினைப்பது மாலையின் கீழ்ப்பகுதியில் உள்ள பூப்பந்து!” என்கிறார்.
இதற்கிடையில், “பாம்பா! எங்கு?” என்றபடி வருகிறாள் ஒரு மூதாட்டி. அவள் கையில் ஒரு விளக்கு இருக்கிறது.old lady with lamp
“பா.. பா.. பாட்டி! அதோ!” என்று பாம்பு இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறோம்.
இலேசாக வீசும் காற்றில் விளக்கின் சுடர் அணைந்து போகாதவாறு பிடித்துக்கொண்டிருந்த கையை எடுக்கிறாள் மூதாட்டி. அங்கே இருப்பது..
நம்மையும் அறியாமல் நம் உதடுகள் பிரிந்து சிரிப்பு வெலிவருகிறது. அங்கு இருப்பது பாம்பல்ல! சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு.
பாம்பின் தலையென்று நாம் நினைத்து கயிற்றில் போடப்பட்டிருந்த முடிச்சு. முடிச்சு உள்ள அந்த நுனி காற்றில் ஆடவே,
அதை பாம்பு தலையை ஆட்டுகிறது என்று தவறாக எடையிட்டிருக்கிறோம், நாம்!
ஆக, மூதாட்டியின் விளக்கு ஒளி இல்லாவிட்டால், அது பாம்பாகத்தானே நம் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும்!
கயிற்றைப் பாம்பாக நினைத்தது நமது வெளி அறிவு. மூதாட்டியின் விளக்கின் ஒளி என்ற ஞானம்
நம் மன இருட்டை அகற்றியவுடன் உண்மை தெரிகிறது.
எனவே, பாம்பும், மாலையும் கயிறும் ஒன்றுதான். அதைப் பாம்பாகவும், மாலையாகவும், கயிறாகவும் பார்ப்பது
நமது பார்வையின் கோணங்களே! இன்னும் கூர்ந்து கவனித்தால், அங்கு சிதறிக்கிடக்கும்
தேங்காய் நார்களால் பின்னப்பட்டதே அந்தக் கயிறு என்றும் அறிவோம்.
அப்படியானால் தேங்காய் நாரும், கயிறும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள்தானே!
அதைத்தான் வேதமும், “தத்துவம் அஸி! அதாவது, அது நீயாக இருக்கிறாய்!” என்று எடுத்துரைக்கிறது.
துரியன் நான்காம் பகுதியில் சொல்லப்படும்படி இல்லாவிட்டால்,
வேதங்கள் சொல்வதெல்லாம் [தத்வமஸ்ஸி] என்பது பொருளற்றதாக அல்லவா ஆகிவிடும்!
கயிறு பாம்பாகவும், முடிச்சு தலையாகவும், காற்றில் அது ஆடுவது பாம்பின் அசைவுபோலத் தோற்றமளிப்பதும்,
அதுவே இன்னொருவர் கண்ணுக்கு மாலையாகத் தோன்றுவதும் அவரவர் அறிவுக்குத் தகுந்த மயக்கம்தானே!
அதுபோலத்தான் ஆத்மனும் விழிப்பு, கனவு, ஆழ்உறக்க நிலைக்குத் தகுந்தவாறு தோற்றத்தைத் தருகிறான்.
பாட்டியின் விளக்கு ஒளி இருவிதப்பட்ட தோற்றங்கள் [பாம்பு, மாலை] தானாக அழிந்தொழிந்துபோவது போல,
துரீய நிலையில் ஆத்மனின் மற்ற மூன்று தோற்றங்களும் தானாகவே மறைந்துபோகின்றன.
துரீய நிலையில் [அந்நிலையை அடைந்தவுடன்] வேறெந்த அறிவோ, முயற்சியோ தேவைப்படுவதில்லை —
ஏனெனில் அனைத்தும் தெளிவாகி விடுகிறது.
“பாம்பு, மாலை, கயிறு, தேங்காய் நார் எல்லாம் ஒன்றே என்று சொல்லிவிடலாம்;
ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அறிந்த எல்லாம் மறைந்து போகின்றனவே!
அப்படியென்றால் ஆழ் உறக்கநிலைக்கான ப்ராக்ஞனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!
ஆழ்உறக்கநிலையை யார் அறிவார்?” என்ற கேள்வி வைக்கப்படுகிறது.
இல்லவே இல்லை என்கிறார் ஆதி சங்கரர். எப்படி? ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குவோம்.
தொலைகாட்சி அலறிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் விளையாட்டில் ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டு
உரக்க ஒலி எழுப்புகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிறிருக்கிறார்கள்.
இதை எவற்றையும் பொருட்படுத்தாது கனவற்ற ஆழ்உறக்க நிலையில் ஒருவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார்.
இப்படி பேரிரைச்சலில் சோஃபாவில் உறங்குகிறாரே, படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கட்டும் என்று கரிசனத்துடன் எழுப்புகிறாள் அவரது மனைவி.
“இந்த இரைச்சலில் எப்படி உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது? படுக்கையில் போய்ப் படுங்கள்!” என்று அன்புடன் கடிந்துகொள்கிறாள்.
“நான் அசந்து, ஆனந்தமாகத் தூங்கிவிட்டேன். இகலோகமோ, பரலோகமோ, எதுவுமே எனக்குத் தெரியவில்லை.” என்று பதில் வருகிறது.
தன்னுணர்வு இல்லாவிட்டால் — தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமலும், உறங்கும்போது தான் என்ற உணர்வு
இல்லாமல் இருந்தும் — ஆழ்ந்து தூங்கினோம் என்று எப்படி உணரமுடியும்? அந்தத் தன்னுணர்வு –
ஆத்மனின் மூன்றாம் பகுதியான ப்ராக்ஞன்தானே – அந்த “ஆழ்ந்து உறங்கினேன்” என்ற முடிவை, ஒரு சாட்சியாக இருந்து கூறமுடியும்!
ஆனால் நான்காம் பகுதியான துரியனை அப்படி உணர முடியாது. அங்கு நான் என்ற உணர்வே இல்லை.
அதனால்தான் அவர் காண முடியாதவன், எண்ணங்களால், நாம் வெளியுலகில் கண்டு அறிந்து,
செயல்களால் உணர்ந்து அறியமுடியாதவன் [அவ்வியவஹார்யம்], வாதங்கள் மூலமோ, கல்வி மூலமோ அறிய இயலாதவன்.
அதே ஆத்மன்தான் விழித்திருக்கும்போது வைச்வாநரனாகவும், கனவுலகில் ஒளிபொருந்திய தைஜஸனாகவும்,
ஆழ் உறக்கத்தில் எண்ணக்குவியலான, அனைத்தையும் அறிந்த ப்ராக்ஞனாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட
துரீயனாக [ஒரே பரம்பொருளின் – பரமாத்வாவின் — பிரம்மனின் {பிரம்மா அல்ல} — பொழிப்பாக, கருத்துரையாக,
சாரமாக இருக்கிறான் [ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம்]. இது மறை கூறும்,
“அஹம் ஏவ ப்ரஹ்மன்; ப்ரஹ்ம ப்ராஹ்மைவ அஹமஸ்மி [நானே பரம்பொருள்;
பரம்பொருளுக்கும் பரம்பொருளாக நான் இருக்கிறேன்]” கூற்றை உறுதி செய்கிறது.
எல்லாவிதமான பண்புகளும், குணங்களும், கற்பிதங்களும், ஆத்மனின் மூன்று நிலைகளும்,
அவற்றின் “உணர்வுகளின் நிலைப்பாடுகளும்” துரீய நிலையில் மறுக்கப்படுவதால்,
துரீயனிடம் புலன்களால் உணரத்தக்க அனைத்தும் முடிவுறுகின்றன.
அதைத்தான் நிர்குணப் பிரம்மம் என்று ஆன்றோர் சொல்கிறார்கள்.
இந்நிலை அமைதியானது [சாந்தம்], இந்நிலை மங்கலமானது [சிவம்],
இந்நிலை உண்டு, இல்லை, இடைப்பட்டது என்ற நிலைகள் எதுவும் இல்லாததால் “இரண்டற்றது [அத்துவைதம்] என்று பகரப்படுகிறது.
அதனாலேயே இந்நிலை நான்காம் நிலை [துரீய, சதுர்த்த] என்று அறியப்படுகிறது.
இந்நிலை மற்ற மூன்று தோற்ற {தோற்றம் அளிக்கும்] நிலைகளிலிருந்து தனித்தன்மை வாய்ந்தது. இதுவே ஆத்மன் [பரமாத்மா]!
இப்படிப்பட்ட ஆத்மனை, பரம்பொருளை, பிரம்மனை அறியவேண்டும் என்று நிறைவு செய்கிறது.
—————
சேஅயமாத்மாஅத்4யக்ஷரமோங்காரோ அதி4மாத்ரம் பாதா3
மாத்ரா மாத்ராஸ்’ச பாதா3 அகார உகாரோ மகார இதி || — 8
அந்த ஆத்மனே ஒரு அழிவற்றதே [சொல்லே] ஓங்காரம், அதன் மூலப்பொருளே [தனித்தனி எழுத்துக்களே] கால்கள்;
அகாரம் உகாரம் மகாரமேன்னும் எழுத்துக்களே கால்கள். – 8
பதவுரை: அயம் – இந்த[இப்படிப்பட்ட]; ஸ: – அவன்; ஆத்மா – ஆத்மன்;
அத்4யக்ஷரம் – மேற்சொன்ன அழிவற்ற [சொல்லான]; அதி4மாத்ரம் – மேற்சொன்ன எழுத்துக்களான;
ஓங்காரம் – ஓம் என்னும் ஒலி; மாத்ரா பாதா3: – எழுத்துக்களே பாதங்கள்;
அகார உகார மகார இதி – அ, உ, ம் என்னும் ஒலிகளான ; மாத்ராஸ்’ச – எழுத்துக்களும் ; பாதா:3 – கால்கள்.
விளக்கம்: இப்பொழுது ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கும் ஆத்மனுக்கும் உள்ள தொடர்பு சுட்டப்படுகிறது.
நான்கு பகுதிகளாகத் தோன்றும், பிரிக்கவே முடியாத {அத்துவைதமான], ஆத்மாவே ஓங்காரம்,
அது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது. இந்த எழுத்துக்களே அதன் கால்கள். என்று முடிக்கிறது.om 2
அதாவது ஓம் எனப்படும், அ, உ, ம் அடங்கிய சொல்லே ஆத்மன், அதுவே பரம்பொருள் என்று ஓங்காரத்தின் நிலைப்பாட்டையும்,
அது என்ன என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறது. ஓம் எந்த எழுத்துக்களைத் தனது கால்களாகக் கொண்டிருக்கிறது என்றும் காட்டுகிறது…
… ஓம் என்னும் இந்தப் பிரணவ மந்திரத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்பதைக் கண்ணுறுவோம்.
ஓம் என்னும் இந்த மந்திரமே மற்றபிற மந்திரங்களுக்கு மூலமாகும். இதுதான் எதற்கும் தோற்றுவாய்.
இதை வடமொழியில் பீ3ஜ[விதை] மந்திரம் என்று சொல்வார்கள். இது வேதங்களாயினும், தந்திரங்களாயினும் சரி, அனைத்துக்கும் மூலமானது.
ஆன்மீகத்திற்கு வருமுன் அறிவியல்கொண்டு ஓம் ஏன் அனைத்துக்கும் மூலமாக அமைகிறது என்று எண்ணிப்பார்ப்போம்.
‘அ’ என்ற ஒலியை எழுப்புவதற்கு நமது வயிற்றிலிருந்து எழும் ‘உதானன்’ என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன்
வாய் மெல்லத் திறக்கிறது. உதானனான காற்று சிறிது வெளியேறியவுடன் ‘அ’ என்ற ஒலி பிறக்கிறது. அதுவே முதல் ஒலி.
அதைத்தான் மாண்டூக்கிய உபநிஷத்து ஓங்காரத்தின் முதல் கால் என்று இயம்புகிறது.
முயற்சியுள் அஆ அங்காப் புடைய – (நன்னூல்: பா 76)
அடுத்தபடியாக ‘உ’ என்ற ஒலியை உன்னிப்பாகக் கவனிப்போம். அதற்கும் வயிற்றிலிருந்து வரும் காற்று உதடுகள்
குவிந்து வாய் வழியாக வெளியேறுவதனால் அவ்வொலி பிறக்கிறது.
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே – (நன்னூல்: பா 78)
‘ம்’ என்ற ஒலி எழும்போது வாய் திறப்பதில்லை; மாறாக மூடிக்கொள்கிறது. தலையில் ஒருவித அதிர்வு உண்டாகிறது.
அது ஒங்காரத்தின் மூன்றாவது கால் ஆகிறது.
மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும் – (நன்னூல்: பா 81)
‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்னும் குறள் கூறுவதுபோல எந்த ஒரு மொழியை எடுத்துக் கொண்டாலும்,
அதனை ஒலிக்கும் முதல் முயற்சிக்கு நமது உயிர்க்காற்றான உதானன் நமது வயிற்றிலிருந்து வெளியேறி,
திறந்த வாயின் மூலம் வெளிவருவதாலே ‘அ’ பிறக்கிறது. ‘அ’ வுக்கும் ‘உ’வுக்கும், ‘ம்’மிற்கும் இடைப்பட்ட ஒலிகளே
எந்த ஒரு மொழியின் ஒலிகளாக இருக்க இயலும்.
‘ம்’ என்று வாயை மூடியபின் ஒலிகள் இல்லை. ஒலிகள் இல்லையேல் மொழிகள் இல்லை.
மொழிகள் இல்லையேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை. கருத்துப் பரிமாற்றம் இல்லையேல் எந்தச் செயல்பாடும் இல்லை.
இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மட்டுமல்ல, இவ்வண்டத்தில் இயங்கும் எதற்கும் பொதுவானதே.
இயந்திரங்கள் இயங்கும்போது எழும் ஒலி, சக்கரங்கள் சுழலும்போது எழும் ‘ம்’ என்ற பேரொலி,
எப்படிப்பட்ட மொழியில் இருந்து பேசினாலும் தூரத்தில் இருந்து கேட்கும்போது இரைச்சலாகக் காதில் விழும் ஒலி ‘ம்’ ஆகத்தான் இருக்கும்.
புயற்காற்று சுழற்றி அடிக்கும்போது நாம் கேட்கும் ‘உய்’ என்ற ஒளியின் முதலெழுத்து ‘உ’.
தனிமையில் அமர்ந்து நாம் நம்மைச் சுற்றிக் கேட்கும் ஒலி ஓங்காரத்தின் முடிவாகவே இருக்கும்.
அதற்கும் மேலே சென்று உள்ளினால், ஓம் என்பது ஒரு ஒலியோ, மொழிகளின் சுருக்கமான வடிவமோ,
எல்லா மந்திரங்களிக்கும் மூலமோ மட்டும் அல்ல, இதற்கும் மேலான ஒன்று. அது தனித்து நிற்பது, தானாக இருப்பது,
அது இயலுலக அண்டத்தின் அதிர்வாகும் [cosmic vibration].
நாம் எதையும், எவற்றையும், அனைத்தையும் பெயரிட்டே அழைக்கிறோம்.
இறைவனுக்கும் பலவிதமான பெயர்களைச் சூட்டியே துதித்து வழிபடுகிறோம்.
அதுபோலவே ஓம் என்னும் சொல்லும், இறைவனின் பெயரைப்போலவே, இறைவனை விளக்குகிறது.
அதன் தனித் தன்மையால் இறைவனை ஆழ்ந்து நினைக்க, தியானம் செய்ய சக்திகொடுக்கிறது.
உபநிஷத்தின் முதலில் ‘ஓம்’தான் எல்லாம் — அதுவே ஆனது, ஆக்குவது, ஆகப்போவது எல்லாமே, –
முக்காலத்தையும் கடந்தது — ஓம்தான் இறைவன் [பரம்பொருள், பிரம்மம்] என்று சொல்லப்பட்ட்டது.
எனவே ஓம் பரம்பொருளின் பெயர் என்று அறியப்பட்டது.
பின்னர் பரம்பொருளான இறைவனே ஆத்மன் என்றுரைத்து, ஆத்மன் நான்கு பகுதிகளாக இருக்கிறான் என்றும்,
அவை என்னென்னவென்றும் விளக்கப்பட்டது. ஓம்தான் ஆத்மன் என்று பொருள்கொண்டதால், ஆத்மனைப் பற்றிய விளக்கம் தரப்பட்டது.
இப்பொழுது ஓம் என்பதைச் சொல்லாக எடுத்துக் கொண்டு அந்தச் சொல்லின் வடிவம் எந்த எழுத்துக்களால் ஆகியது எனக் காட்டப்பட்டது.
மிகவும் உள்ளி அறியும் உண்மைகளை — ஒன்றன்மேல் ஒன்றாக மூடிமறைக்கும் புலனறிவாலும் நனவு, கனவு, ஆழ்உறக்க நிலைகளால்
ஏற்படும் மயக்கத்தாலும் உள்ள இயலாது என்ற காரணத்தாலேயே ஓம் என்று அழிவற்ற ஒன்றை மட்டுமே
யாவுங்கடந்த மெய்மையின் வடிவமாக உள்ளவேண்டும் என்று உரைக்கப்படுகிறது…
——————
ஜாக்ரிதஸ்தா2னோ வைஸ்’வாநரோஅகார: ப்ரத2மாமாத்ரா ஆப்தேராதி3மத்வாத்3வாப்
வாப்னோதி ஹ வை ஸர்வான் காமானாதி3ஸ்ச ப4வதி ய ஏவம் வேத || — 9
[எங்கும்] நிறைந்திருப்பதாலும், முதலிலிருப்பதாலும், விழித்திருக்கும் நிலையிலுள்ள வைஸ்வாநரனே
முதலெழுத்தான [ஒலியான] அகாரமாகிறான். எவன் இதை அறிகிறானோ
அவன் எல்லா விருப்பங்களையும் அடைந்து, முதன்மையானவன் ஆகிறான்.
பதவுரை: ஆப்தே: – [எங்கும்] நிறைந்திருப்பதாலும்;; ஆதிமத்வாது3 – முதன்மையாக இருப்பதாலும்;
ப்ரதமா மாத்ரா – முதல் ஒலியான [எழுத்தான]; அகார: – ஆகாரமாக [அ என்னும் ஒலியாக];
ஜாக்ரிதஸ்தா2ன; – விழிப்பு நிலையிலிருக்கும்; வைஸ்வாநர: – ஓவைஸ்வாநரன் [ஆகிறான்]; ய:: – எவன்;
ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஸர்வானு காமானு – அனைத்து விருப்பங்களையும்;
ஹ வை ஆப்நோதி – நிச்சயம் அடைகிறான்; ஆதி3ஸ்’ச – முதன்மையானவனும்; ப4வதி – ஆகிறான்..
விளக்கம்: ஓம் என்னும் மந்திரத்தின் முதல் ஒலியான ‘அ’வுக்கும் ஆத்மனின் முதல் பகுதிக்கும் உள்ள தொடர்பு இங்கு சொல்லப்படுகிறது.
உபநிஷத்தின் மூன்றாவது சொற்றொடரில் ஆத்மனின் முதல் பகுதியான – விழித்திருக்கும் —
அதாவது நனவு நிலையில் செயல்படும் வைஸ்வாநரனே ‘அ’ என்னும் ஒலி என்று தெரிவிக்கப்படுகிறது.
எதனால்?
a‘அ’காரம் ஓமின் முதல் எழுத்து. வைஸ்வாநரன் ஆத்மனின் முதல் பகுதி.
அதுசரி, முதல் எழுத்து, முதல் பகுதி என்பதெல்லாம் சரிதான். இதைத்தவிர வேறென்ன விளக்கம் எனற கேள்வி நமது மனத்தில் எழுகிறது.
உடனே அதற்கு விடை கொடுக்கப்படுகிறது:
எங்கும் நிறைந்திருப்பதாலும் என்பதே அது.
நாம் [ஆத்மன்] விழித்திருக்கும்போது எங்கும் நிறைந்திருக்கும் இவ்வண்டம் நமக்குப் புலப்படுகிறது.
எல்லா அறிவுகளும் நமது ஐம்பொறிகளாலும் [கண், காதும், மூக்கு, வாய், தொடும் உணர்வைத்தரும் உடற்பகுதி],
ஐம்புலன்களாலும் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்] நமக்கு வந்து சேருகின்றன.
தனி மனிதராக நம்மால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும்,
அண்டத்தில் இங்கேங்கெனாதாடி எங்கும் பரவி இருக்கும் திட, திரவ காற்றுப் பொருள்களாக இருக்கும் அனைத்தையும்,
பலகோடி, நூறுகோடி உயிரினங்களாக இருந்து அறிந்து கொள்கிறோம்.
மேலும், ஒலியே அறிவு. அந்த ஒலி மொழியாகப் பரிணமிக்கிறது. மொழி தோன்றுவதற்குக் காரணமாக
நாம் வாயைத் திறக்கும்போது முதலில் கிளம்பும் ஒலி ‘அ’ தான். அதுதான் முதல் உயிர் ஒலி, முதல் உயிரெழுத்து.
அதைத்தான் வள்ளுவர் பெருமான் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருக்குறளைத் துவங்குகிறார்.
காளிதாசனும் “சொல்லும் பொருளும்போல இணைந்திருப்பவர்கள் [வாக3ர்த்தா2விவ சம்ப்ருக்த்தௌ]” என்று
இறைவனையும், இறைவியையும் வணங்கித் தனது ரகுவம்ச மகாகாவியத்தைத் துவங்குகிறான்.
இப்படிச் சொன்னவுடனேயே இதை எவன் அறிகிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும், முதன்மை நிலையையும் அடைகிறான்
என்றும் உபநிஷத்து சொல்கிறதே, இப்பொழுது நாம் அகாரம்தான் வைஸ்வாநரன் என்று அறிந்துகொண்டோமே.
நமது விருப்பங்கள் நிறைவேறுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
இப்படிக் கேட்பதும், “நிலத்தை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும், அதை அறிபவனுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்!”.
என்று எழுதியிருப்பதைப் படித்துவிட்டு, “எங்கே செல்வம்?” என்று கேட்பதைப் போலத்தான்.
குழப்பமாக இருக்கிறதா? இதில் குழப்பம் எதுவும் இல்லை.
நிலத்தைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். எனவே, முதலில் எங்கு தோண்டினால் தண்ணீர் நிறையக் கிடைக்கும் என்று அறியவேண்டும்.
அதற்குப் பிறகு தோண்டுவது எப்படி, அதற்கு என்ன கருவிகள் தேவை, எவ்வளவு ஆழம் தோண்டவேண்டும்,
தோண்டியபிறகு கிடைக்கும் தண்ணீரை எப்படி வெளிக்கொணர்வது, அதை எப்படிச் சேமிப்பது,
அதனால் எவற்றை விளைவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
அதன் பிறகும் தண்ணீரின் இதர பல பயன்களை அறிந்து அதற்கேற்பப் பயன் படுத்தினால், பயிர்கள் விளையும்,
விடுகளைக் கட்டத் தண்ணீர் பயன்படும், நாம் உணவு சமைக்கத் தண்ணீர் உதவும் என்று பலப்பல விஷயங்களைத் தெரிந்து
அதன்படி செயல்படுத்தினால் எல்லாச் செல்வங்களையும் அடையலாம்.
அதைப்போலத்தான், அகரத்தை அறிபவன் அனைத்து விருப்பங்களையும் அடையலாம் எனபது.
நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்; எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ,
இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும். மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.
குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட. மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!
அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!
அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும்,
விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்]
விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…
நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்; எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ,
இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும். மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம். குமுகம் மட்டுமல்ல,
செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட. மொழி ஒலியாகத்தானே வெளிவருகிறது!
அந்த ஒலியின் முதல் உயிரே ‘அ’தானே!
அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும்,
விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்]
விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…
—————–
ஸ்வப்னஸ்தா2னஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது3ப4யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை
ஞானஸந்ததிம் ஸமானஸ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத3 || — 10
கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான்.
யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான். சமமானவனாகவும் ஆகிறான்.
அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார். –
பதவுரை: ஸ்வப்னஸ்தான: – கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ: – தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான];
உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்;
உபயத்வாது ஹ வை – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்; ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ;
ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ச’ – சமமானவனாகவும்; ப4வதி – ஆகிறான்;
அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்;
அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; ந ப4வதி – இருப்பதில்லை..
விளக்கம்: இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும், இடைப்பட்டவனுமான ஆத்மனின்
இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.
அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது,
அனைவருக்கும் சமமானவன் என்றும் சொல்கிறது.
சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.
சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற எதில் சமம்?
ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான்,
ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்! அதுமட்டுமா?
வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன!
அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே! எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன.
கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம். அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன. அறிவின் முன்னர் அனைத்தும் சமமே.
ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது.
நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே. இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.
ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…
சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள்,
ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்து கொள்ள வேண்டும்,
ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.
ஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை/தாய் ஆகிறார்.
எனவேதான் ஆசானைத் தந்தை/தாய் என்றும் சொல்லப்படுகிறது.
இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தை/தாயாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது
என்று தான் இன்றைய அறிவியல் வாதிக்கும்.
நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம், எனவே கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்;
அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.
அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.
இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது; எனவே, எனக்குக்
கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை.
எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு
அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும். அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater]
என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது. கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்!
அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது. ஆத்மனை அறிவின் கருவூலம் என்று
அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார். அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்;
ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார். அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.
அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே,
குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது,
அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்ற கேள்வியும் எழலாம்.
அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.mother and child
தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே! பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள்,
எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது.
அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.
இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.
மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள்
அந்த அறிவை வாழையடிவாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள. எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின்
குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்]
பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…
இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை? ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம்.
‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும்,
‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.].
அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[விஸ்வாநரன் தூலப் பொருள்களையே
[ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும்,
நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.].
இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது;
அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான்.
இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது. அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால்
ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது. அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது.
இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல
அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை.
மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.
————————————————————————————————————————————————————————————————————–
ஸுஷுப்தஸ்தா2ன: ப்ராக்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா
மிநோதி ஹ வா இதஹும் ஸர்வமபீதிஸ்ச ப4வதி ய ஏவம் வேத3 || — 11
அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில்
‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ‘ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்]
இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான். – 11
பதவுரை: ஸுஷுப்தஸ்தான: – ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ: – பிராக்ஞன் [அறிவாளி];
மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான];
மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய: : – எவன்; ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ;
இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே[அறிந்துகொண்டு]; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்;
மினோதி ஹ வா – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].
விளக்கம்: நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று
உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது. முந்தைய சொற்றொடர்களைப் போலவே,
பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.
அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்? எங்கு ஒன்றுகிறான்?
ஆழ் உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?
ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது. முதலில் விதையாக இருக்கும் அது,
தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது. பிறகு நாற்றாக இருக்கும்போது
அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது.
அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது. இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து,
பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை.
சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான். நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும்,
அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.
கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.
அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி,
ஆழ் உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞனால் அளக்கப்படுகிறார்கள்.
அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது.
மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக் கிளம்புகின்றன.
இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும்,
அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து,
ஆழ் உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடுகின்றன — மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.
எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும்
ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.
அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் —
ஒடுங்கிவிடுகிறார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…merging atmans
இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர்
இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே, ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று
அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.
இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].
ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.
ஓம் என்பது ஒரு மந்திரம். இந்த மந்திரத்தை மனதில் சொல்லும் போது, மனதை ஒருநிலைப்படுத்தும் போது –
‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது,
தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸனையோ,
பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிறார்கள்/அறிகிறார்கள். அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்
அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.
அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்ற வேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்ற வேண்டும்?
இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிறார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.
உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்; அதை நான்காகப் பிரித்து,
வெவ்வேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத் தானே தெரியும்?
முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் –
நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]
இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.
மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது. அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்]
ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான். அவனே விழிப்புநிலையில் நாம்
ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும்,
ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான்.
நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.
முதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு,
அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால்
பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும்.
இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!
இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா? இரண்டறக் கலந்ததுவிட்டபின்
அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்? தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும்.
ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள். ஆத்மன் தனித்தனி அல்லவே!
ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?
அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்]
சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது.
சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான். இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.
இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை. ஓங்காரத்தின் இறுதி
அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம: சி’வோஅத்3வைத ஏவமோங்கார
ஆத்மைவ ஸம்விஸ’த்யாத்மநாத்மானம் ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 || – 12
செயல் ஒன்றுமில்லாத, ஒலியற்றவனுமான, நான்காமவன் [துரியன்] அண்டத்தைத் முடிவுறச்செய்பவன்,
மங்கலமானவன், இருமையற்றவன், இப்படிப்பட்ட ஓங்காரம் ஆத்மன்தான். எவன் இப்படி அறிகிறானோ,
அவன் தானாகவே தன்னுள் [ஆத்மனுள்] ஒன்றுகிறான்.
பதவுரை: அவ்வியவஹார்ய: – செயல்களற்றவன்; மிதே அமாத்ர: ச – ஒலி இல்லாமல் இருப்பதாலும்;
சதுர்த்த2: : – நான்காமவன் [துரியன் ஆகிறான்]; பிரபஞ்ச உபச’ம: – அண்டத்தை [அனைத்து நிகழ்வையும்] முடிவுறச் செய்பவன்;
சி’வ: – ‘மங்கலமானவன்; அத்3வைத:: – இருமையற்றவன்; ஏவம் ஓங்கார: – இப்படிப்பட்ட ஓங்காரம்;
ஆத்ம: ஏவ – ஆத்மனே; ய: – எவன்; ஏவம் வேத3 – இவ்வாறு அறிகிறானோ; ஆத்மனா – தன்னால் [தானாகவே];
ஆத்மானம் – தன்னை [தன்னுள் இருக்கும் ஆத்மனுடன்]]; ஸம்விஸ’தி – ஒன்றுகிறான்.
விளக்கம்: இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது. அத்துடன் மட்டுமல்ல,
‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது,
அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.
அந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை. அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் –
அண்டமே — நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும்,
ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது.
ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு,
மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.
இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!
பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து
அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது-
துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?
அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே
முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.
எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமையில்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள்,
மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது — என்று அறிவியலே சொல்லும்போது,
அந்த முதலீட்டியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!
இந்த வழியிலேயே தொடர்ந்தால் —
இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
நாம் கண்ட, காணும், காணப்போகும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை
உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.
நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?
இயலவே இயலாது!
ஏனெனில், வெளியில் இருந்து நோக்கும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது.
எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி,
நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.
‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.
ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?
அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.
இந்த சகுணப் பிரம்மமே — குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.
அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின்
முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.
அந்த முதல் வரி எது?
ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்’ச பர: ஸ்ம்ருத: |
[பிரணவமான] ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே! [பிரணவமும்]ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.
கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம்.
மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்]. பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் —
அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் — ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.
தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய –
மனதை ஒருநிலைப்படுத்த இயலும். எனவேதான் அகர, உகர, மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை,
ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும். இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும்.
இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் காரண, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.
அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.
இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.
அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய: ||
முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.
முன்தோற்றமற்றது என்றால் என்ன? இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது,
இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.
தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் —
ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்?
அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா? முடியாதே! அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது.
இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா!
எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.
அது வெளியிலும் இல்லை என்றால் என்ன? எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்! எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.
அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை.
அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது. அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.
தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!
அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும்.
அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை. ஒரே அமைதிதான். படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை,
மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.
அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல.
ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது –
ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!
இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக,
ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.
இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை.
இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை.
ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற
எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில்,
ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் —
பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]! பேரின்பநிலையை எய்துகிறார்கள்.
எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு.
ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: | ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |
ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தநூபி4: வ்யசே’ம தேவஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா: | ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: | ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
தேவர்களே [தெய்வங்களே]! காதுகளால் நல்லதையே கேட்போமாக. போற்றுதலுக்கு உரியவர்களே,
கண்களால் நல்லதையே பார்ப்போமாக. உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து,
எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக. நிகரற்ற புகழுள்ள இந்திரனே
எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]! அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி!
தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி! பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி!
ஓம்! அமைதி! அமைதி!! அமைதி!!!
[நிறைவு பெறுகிறது]
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-