தேவரிஷியான நாரதர் வீணாபாணி. அவருடைய வீணை அவருக்கு நித்யஸஹசரீ; நித்யமாக ஸஹதர்மசரீ.
பகவத் குணங்களைப் பரவசமாகப் பாடி ஆனந்திப்பதே அவருடைய காலக்ஷேபம்; அவர் தர்மம்.
அந்தத் தர்மத்தில் ‘வல்லகீ’ என்னும் அவர் வீணை ஸஹசரீ. ஆத்மயாகம் செய்யும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு
‘ச்ரத்தை பத்நீ’ என்று சரணாகதியை விஸ்தாரமாக விவரிக்கும் வேதம் ஓதுகிறது.
நாரதருடைய வீணை அவருக்குப் பத்நி போல் ஸஹ தர்ம சரீ. அப்படியே நம்பாணனுக்கு அவர் யாழ் ஸஹதர்மசரீ.
ஆழ்வார்கள் ரிஷிகள், த்ரமிடவேத த்ரஷ்டாக்கள்; வேதோபப்ருஹ்மணம் செய்தார்கள்.
அந்த ரிஷிகளில் நம் பாணர் நாரதரைப் போன்ற காயக தேவ ரிஷி. பாட்டினால் பகவானை ஸாக்ஷாத்கரிப்பவர் நாரதர்.
பாட்டினால் பரமாத்மாவினிடம் லயிப்பது ஸுலபம். ‘வீணாவாதந தத்வத்தையறிந்த, ச்ருதி ஜாதிகளில் நிபுணராய்,
தாள ஞான முடையவர் அப்ராயேஸந(எளிதில்) மோக்ஷவழியை அறிவார் – அடைவார்’ என்பர்.
நம் பாணர் இப்படி ஸுலபமாய் பரமாத்மா வினிடம் லயித்துப் பரவசமாகுபவர். பாட்டினால் கண்டு வாழ்பவர் நாரதர்.
இருவரும் பாட்டினால் கண்டு வாழ்கிறவரே. பாணர் துதி பாடுவர்.
(பண–ஸ்துதௌ) (விபந்யவ) (பாணிணி தாதுபாடம்) என்று பாடும் நித்யஸூரிகளைப் போல இவர் அரங்கனைப் பாடியே போந்தார்.
இவர் வீணாபாணி. யாழ்ப் பாணி. ( தனியன் சுலோகம்) என்றபடி பாணி என்றும் திருநாமம்.
வாத்யத்தோடு பாடிய ஆழ்வார் இவரொருவரே.
வேணு கானம் பண்ணின க்ருஷ்ணன் ஒருவரே அவதாரங்களில வாத்யத்தோடு காயகர். வேதாந்தத்தையும் கீதையாகப் பாடினார்.
மற்றைய அவதாரங்களில் பாடவில்லை. வராஹரான ஞானப் பிரான் மூக்கினால் “குரு குரு” என்று சப்தித்துக் குருவானார்.
(குருபிர்கோணாரவைர் குர்குரை). அபிநவதசாவ தாரமான பத்து அவதாரங்களில் இவரொருவரே
கண்ணனைப் போல வாத்யம் வாசித்த காயகர்.
“வீணையும் கையுமாய் ஸேவிக்கிற விவர்க்குச் சேமமுடை நாரதனாரும் ஒருவகைக்கு ஒப்பாவர்” என்று பிள்ளைலோகம் ஜீயர்.
அஷ்டாங்க யோகத்தில் ஸமாதியென்னும் லயத்தை அடைவதுண்டு. அந்த ஸமாதியில் கிடைக்கும் தர்சநம்,
தர்சந ஸமாநாகாரமே யொழிய முழு தர்சநமல்ல, தர்சநம் போன்ற மிக்க தெளிவான ஞானம்.
பாட்டினால் வரும் லயமும் ப்ராயேண அப்படியே. மோக்ஷத்தில் அடைவது உபய விபூதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்மத்தின் காட்சி
இவர் அரங்கன் முன் அமலனாதி பிரான் பாடி அரங்கனருளால் அக்காட்சியைப் பெற்று முக்தரானார்.
இவர் அரங்கன் முன் பாடியதற்கு் தத் க்ஷணமே பரம புருஷார்த்த முத்தியே அரங்கன் அளித்த பரிசு.
(விசதே ததநந்தரம்) என்றபடி பரமாத்மாவிற்குள் நுழைந்து முக்திப் பேரின்பம் பெற்றார்.
இவர் முதலில் அரங்கனைப் பாட்டாலும் யோகத்தாலும் லயித்து் கண்டது தர்சந ஸமாநாகாரமான தெளிந்த ஞானம்.
அந்தக் காட்சிக்கும், அரங்கனை நேரில் காணும் காட்சிக்கும் பேதமுண்டு.
அரங்கனுடைய தர்சநம் இவருக்கு அரங்கனருளால் தான் கிடைத்தது என்பதை ஒருவரும் மறுக்கவொண்ணாது.
இவர் வளர்ந்த குலம் அரங்கனருகில் செல்லக் கிடைக்கக்கூடிய குலமல்ல.
(யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்) என்று
கடவல்லியும் முண்டகமும் ஓதிவைத்தன. இந்த இரண்டு உபநிஷத்துகளும் இதே மந்த்ரத்தை ஓதின.
“வேத புருஷன் இதை அபேக்ஷித்தான்” என்பது ஸ்ரீவசன பூஷணம். இந்த ச்ருதிக்கு நம் பாணநாதன் நேர் நிதர்சநம்.
அரங்கனே இவரைக் காட்சிதர வரித்துத் தனதருகே வருவித்துத் தன் காட்சியைப் பரிபூர்ணமாகத் தந்தான்.
தன் ஸ்வரூப விவரணம் செய்தான். அவன் “உவந்த உள்ளத்தனாய்” இவருக்கு விவரணம் செய்த திருமேனியை
(தநுவை) இவர் உலகத்திற்குத் தன் பாடல்களால் விவரணம் செய்து இன்புற்று இன்பம் பயந்தார்.
(அனுபூய ஹரிசயானம்) (நாதமுனிகள் சாதித்த பாணன் தனியன் ச்லோகம்) என்றபடி
தாம் அனுபவித்த இன்பத்தை உலகத்திற்குத் தம் பாடல்களால் சாச்வதமாக பயந்தார்.
“காட்டவே கண்ட” என்ற நம்பிகள் பாசுரத்தில் “பெருமாள் அருளால் வரித்து அவராகக் காட்டினதால் தான் கண்டார்”
என்று (யமேவைஷ) ச்ருதியின் பொருள் ஸூசிக்கப் பட்டது.
“ஆதி” என்பதற்கு “வலுவில் தாமாகவே முதலில் அழைத்தான்” என்னும் பொருளுரைக்கப் பட்டது. தான் முந்திக் கொண்டான்.
“தம்மை விஷயீகரிக்கைக்கு அடியானான்”, “என் பேற்றுக்கு முற்பாடானானவன்” என்று பிள்ளையும் நாயனாரும் பணித்தார்.
“நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்”(திருமாலை) என்று
பாடிய திருவரங்கம் காட்டும் அருள் இவர் வளர்ந்த குலத்திற்கு எட்டுவதல்ல.
அரங்கன் அருளி பலாத்காரம் செய்யாவிடில் ஸந்நிதியில் கர்ப்பக்ருஹத்தில் ப்ரவேசம் இவருக்கு அக்காலத்தில் கிடைப்பது ஸாத்தியமோ?
மநுஷ்ய யத்னத்தில் அஸாத்யமென்பது நிச்சயம். நந்தனாருக்குக் கிடைத்ததுபோல் இதுவும் கேவலம் தைவ யத்னம்.
பரமாத்மா தானே தன் காட்சியைத் தருகிறா னென்பதை அரங்கன் தானே வற்புறுத்தி இவரை அழைத்துத் தந்து
ஸர்வலோக ஸாக்ஷிகமாய் மூதலிப்பித்து அருளினார். இந்த ச்ருதியில் காட்டியபடி பரம புருஷன் தம்மை ப்ரியதமனாக
வரித்துத் தம் திருமேனியைக் காட்டித் தந்தானென்பதை “என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்” என்று ஸூசித்தார்
வாரம் = வரணீய வஸ்து.
“காட்டவே கண்ட” (பாணன் தனியன்) என்று முதலடியில் கூறியது அரங்கன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ரஹக் காட்சி.
(மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதியஞ்சோதியோடு அபேதமாய் அனுபவம்.
பர, விபவ, ஹார்த்த அர்ச்சாமூர்த்திகளை ஒன்றாக அனுபவம். பெரிய பெருமாள் திருமேனியிலே திருமலை
முதலாகக் கோவில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும், ராம க்ருஷ்ண வாமன வடபத்ர சயனாதிகளிலுமுள்ள
போக்யதையெல்லாம் சேர அனுபவித்து என்பது முனிவாஹன போகம்.
உபய விபூதி விசிஷ்டனாக ஜகஜ் ஜந்மாதி காரணமாக அனுபவம். உபய லிங்கானுபவம்.
நிர்த்தோஷ கல்யாண குணாகரத்வ, ஆதி காரணத்வ, ரக்ஷகத்வாதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்மமாக அமலனாதிபிரானில் அனுபவம்.
பாட்டுக்கள் காட்சி அனுபவத்தின் பரீவாஹம். யோகமென்னும் லயத்திற்கு ஸாதகம். விரோதியல்ல.
உபய விபூதி விசிஷ்டாநு பவத்தில்
(முண்டகம் 2,3,9) (பித்யதே ஹ்ருதயக்ரந்திச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா: க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்ருஷ்டே பராவரே)
என்றபடிக்கும் (யத்ர நாந்யத்பச்யதி) (சாந்தோகியம் — பூமமித்யை) என்றபடிக்கும்,
பரிபூர்ண ப்ரஹ்ம தர்சநம் கிடைத்துப் பாரமாய பழவினை பற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் கண்டு வாழும்” என்றது, முக்தி தந்தருளின உபய விபூதி விசிஷ்ட பரிபூர்ண
ப்ரஹ்ம தர்சனக் காட்சி. முதல் பாதத்தில் “கண்ட” என்றது அரங்கன் திருமேனிக் காட்சி.
நம் பாணநாதர் யோகி ஸார்வபௌமர்: பாட்டினாலும் யோகத்தினாலும் தர்சன ஸமாநா காரணமான காட்சி போன்ற
தெளிந்த அறிவாகிய ஸமாதியை அடிக்கடி ஏறுபவர். பல்கால் யோகாரூடர்.
யோகாரோஹமே இவருக்குப் பொழுது போக்காய் இருந்தது.
கடைசியில் இவருக்குப் பெருமாள் நியமனத்தால் கிடைத்தது யோக்யாரோஹம் முனியேறினது.
யோகாரூடராக நெடுகிலும் இருந்து வந்தவர் கடைசியில் யோக்யாரூடரானார். எந்த யோகிக்கும் இந்த ஏற்ற மில்லை.
நம்பிகளும் இதை “முனியேறி” என்று ரஸமாக வ்யஞ்ஜனம் செய்தார். யோகமேறுவது யோகிமாத்ர ஸாதாரணம்.
ஆழ்வார்களெல்லாரும் யோகாரூடர்கள்: யோகமேறினவர்கள்.
(பச்யந் யோகீ பரம்) என்று முதல் திருவாய்மொழியின் ஸங்க்ரஹ ச்லோகத்திலேயே,
தாத்பர்ய ரத்னாவளீ சடகோப முனியை யோகி என்றது. முநித்வம் மட்டிலும் எல்லாருக்கும் ஸாதாரணம்.
முனியேறின முனி இவரொருவரே.
யோகம் அஷ்டாங்கம்: எட்டு அங்கங்களுடையது. ஆனால் எட்டாவது அங்கமாகிய ஸமாதியே அங்கி.
யம நியமாதிகளான அங்கங்கள் ஸாதகனுடைய ப்ரயத்னங்கள். திவ்யமங்கள விக்ரஹம் யோகத்திற்கு ஆலம்பநமாகும்.
ஸாலம்பநமாகச் செய்யும் பகவத் ஸ்வரூப த்யானத்தில் திவ்யமங்கள விக்ரஹம் சுபாச்ரயமான ஆலம்பநம்.
அந்த யோகாலம்பநத்தைப் பாணயோகி எட்டு அங்கங்களாக வகுத்து, அந்த த்யானத்தை அஷ்டாங்கமாக வகுத்தார்.
“பாதகமலம், நல்லாடை, உந்தி, உதரபந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், கண்கள், என்பன எட்டு அங்கங்கள்.
முதல் எட்டுப் பாட்டுக்களிலும் இந்த எட்டு அங்கங்களின் அநுபவம்.
ஒவ்வொன்றிலும் விக்ரஹியின் ஸ்வரூபாநுபவமும் கலந்தது. அங்கவிசிஷ்ட ஸ்வரூபாநுபவம்.
ஸ்வரூபாநுபவத்தில் குண க்ரியாத் யநுபவமும் சேர்ந்தது. “நல்லாடை” என்பது திருத்துடை முதலியவற்றின் ஆவரணம்.
( வஸ்த்ரப்ராவ்ருதஜாநு) ந்யாயத்தை நினைக்க வேணும். ஜங்காஜாநு, ஊருக்களுக்கும் நல்லாடை உபலக்ஷணம்.
இப்படி ஓர் விலக்ஷணமான அஷ்டாங்க த்யாநாநுபவம் பண்ணி,
ஒன்பதாம் பாசுரத்தில் அகண்டமாகத் திருமேனி முழுவதையும் அனுபவிக்கிறார்.
இப்படி விசித்திரமான ஓர் அஷ்டாங்க த்யான முறையைக் காட்டுகிறார்.
அஷ்டாங்கங்களையும் அனுபவித்து, அகண்டமான திருமேனியை அனுபவித்து,
உபயவிபூதி விசிஷ்ட ப்ரஹ்மத்தை அரங்கனாகக் கண்டு,
பூம வித்யையில் கூறிய பரிபூர்ண ஸுகாநுபவம் வந்து மோக்ஷம் பெற்றார்.
ஆத்மாவில் ஜாதிபேதமில்லை. ஆத்ம ஸ்வரூபம் ஜ்ஞாநைகாகாரம்: ப்ரத்யஸ்தமித பேதம்.
சுத்தமான ஞான மயமான இவரது ஆத்ம ஸ்வரூபம் அரங்கனுக்குள் ப்ரவேசித்தது யுக்தமே.
பீஷ்மர் கண்ணனைத் துதித்துக் கொண்டே அவருக்கு ஸம்பந்நராகும்போது
(ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸம்யுதம்) என்று வர்ணித்தபடி பீஷ்மருடைய ஆத்மஜ்யோதிஸ்
ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிபக்தமாக “இனி மீள்வதென்பதுண்டோ!” என்று சாச்வதமாகக் கலந்தது.
அவருடைய திருமேனி மட்டும் நின்றுவிட்டது. அதற்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்யப்பட்டது.
சிசுபாலனுடைய ஆத்ம ஜ்யோதிஸ்ஸும் அப்படியே கண்ணனுக்குள் கலந்தது.
“சிசுபாலனுடைய தேஹத்திலிருந்து ஒரு தேஜோக்னி கிளம்பி, தாமரைக் கண்ணனாகிய க்ருஷ்ணனை நமஸ்கரித்து,
அவருக்குள் நுழைந்த அத்புதத்தை எல்லா ராஜாக்களும் கண்டார்கள்” என்று பாரதம்.
“எல்லோர் முன்னே சிசுபால னுடைய தேஹத்திலிருந்து கிளம்பிய ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவனுக்குள் நுழைந்தது.
த்யானம் செய்துகொண்டே தந்மயத்வத்தை அடைந்தான்” என்று பாகவதம்.
அங்கும் தேஹம் கண்ணனுக்குள் நுழையவில்லை. இங்கு நம் பாணர் தம் திருமேனியோடு அரங்கனுக்குள் நுழைந்து கலந்தார்.
பாணனுடைய திருமேனியும் பகவதவதாரத் திருமேனிகளைப்போல அப்ராக்ருதமாகவே இருந்திருக்க வேண்டும்.
சுத்த ஸத்வமயமான திவ்ய திருமேனி சுத்த ஸத்வமயத் திருமேனிக்குள் ப்ரவேசித்துக் கலந்தது.
இதனால் அவர் தேஹமும் ப்ராக்ருதமல்ல என்று தெளிவாக ஏற்படுகிறது.
—————
அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமல னின்மல னீதிவானவ னீண்ம திளரங்கத்தம்மான் றிருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே. (1)
(1) அமலன் – தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து பெருமாளை யணுகுவதால் பெருமாளுக்கு என்ன அவத்யம்
விளையுமோ வென்று மிகக் கவலை. நம் ஞானத் தெளிவினால் அக் கவலையை நிவர்த்திக்கிறார்.
பெருமாளுக்கு ஒன்றும் ஹேயமில்லை. எல்லாம் அவருக்கு அனுகூலமே. அவர் உபயலிங்கர். அகில ஹேய ப்ரத்யநீகர்.
அவர் ஸ்வபாவத்தாலேயே அமலர். யாதொரு மலமும் தன்னைத் தீண்ட முடியாத ஸ்வபாவமுடையவர்.
அவர் எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக ஓர் விக்ரஹத்தோடு வஸிப்பவர்.
(ந ததே விஜிகுப்ஸதே) அவர் எவர் நெஞ்சினுள்ளும் நெருங்கி உட்புகுந்து வஸிக்கக் கூசுவதில்லை.
இந்த அற்புதமான ஸ்வபாவத்தைத் திரும்பவும் திரும்பவும் நினைந்து பேசுவதும், தம்மால் வரக்கூடிய அவத்யத்திற்குப் பயந்தே.
“அமலன்”, “நிமலன்”, “விமலன்”, “நின்மலன்’ “அரங்கத்தமலன்” என்று இச்சிறு கிரந்தத்தில்
ஐந்து தடவை “மலமற்றவன்”, “மலம் நெருங்கக்கூடாத ஸ்வபாவ சக்தி யுடையவன்” என்கிறார்.
“வளவேழுலகில்” போல் பயந்து உடனே பரிஹரித்துக் கொள்கிறார்.
பெருமாள் திருமுன் நிற்பதே இவருக்கு ஸங்கோச மாயிருக்கிறது.
மிகவும் விரைவாகத் தம் ப்ரபந்தத்தை முடித்துவிட ஆசைப்படுகிறார்.
பெருமாள் நிர்ப்பந்தத்தை எத்தனை நாழிகை தான் இவர் ஸஹிப்பார்?
நீண்டதொரு க்ரந்தம் செய்யத் தெரியாதவரல்லர்.
ஒரே தசகம் பாடி உடனே மோக்ஷத்தைப் பெறுவதால் அகன்று போவதற்கும் போதில்லை.
2) ஆதி என்று காரணத்வத்தைத் தொடக்கத்திலேயே அனுஸந்தித்துப் பேசுகிறார்.
சில வித்யைகளில் காரணத்வத் தையும் சேர்த்து அனுஸந்திப்பதில் ருசி.
(காரணம் து தயேய:) (அதர்வ சிரஸு) என்றபடி த்யானத்திற்கு விஷயமான பொருள் ஆதி காரணமே.
ஆகிலும் காரணத்வத்தை சேர்த்தும் சேர்க்காமலும் உபாஸிக்கலாம்.
இவர் காரணத்வத்தைச் சேர்த்து உபாஸிப்பதில் ருசியுள்ளவர்.
உலகத்திற்குக் காரணமாவதில், விகாரம் அசுத்தி ஸம்பந்தம், ஸாவயவத்வம் ஜடத்வம் முதலிய பல தோஷங்கள் வரக்கூடும்.
அந்த தோஷங்கள் ஒன்றும் வருவதில்லை, ப்ரஹ்மம் காரணமாகவிருந்தும் தன் சுத்தியைக் கொஞ்சமேனும் விடுவதில்லை,
அசுத்தியென்பது தீண்டுவதேயில்லை என்று சோதக வாக்கியங்கள் நமக்குத் தெளிவிக்கின்றன.
காரணத்வத்தை “ஆதி” என்று சொல்லுவதற்கு முன்பே,
இவர் “அமலன்” என்று அசுத்தி ப்ரஸங்கத்தை வாரணம் செய்கிறார்.
ஸத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்கள் ஸர்வ வித்யைகளிலும் உபாஸ்யம்.
இந்த குணங்களின் அறிவில்லாமல் ப்ரஹ்மத்தின் அறிவே சித்திக்காது.
(ஸத்யம் ஞான மனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி)
“அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம், அதீர்க்கம்” (ப்ருஹ தாரண்யகம் – அக்ஷரவித்யை),
“அசப்தமஸ்பர்சம்” (கடவல்லி), முதலிய சோதக வாக்யங்கள்
“அமலன்” என்பதால் தொடக்கத்திலேயே ஸூசிக்கப் படுகிற அழகு மிக ரஸிக்கத் தக்கது.
தைத்திரீயத்திலும் (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி) என்று முதலில் சோதக வாக்கியத்தைப் படித்து,
பிறகு (தஸ்மாத்வா ஏதஸ்மா தாத்மந ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசத்வாயு:) என்று காரண வாக்யத்தைப் படித்தது.
(ஆனந்தாதய: ப்ரதானஸ்ய) என்ற ஸூத்திரத்தில் ஆநந்தத்வம், ஸத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம் என்ற
குணங்களை எல்லா வித்யாநிஷ்டரும் உபாஸித்தே தீர வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
இங்கே “அமலன்” என்றது அந்த நாலுக்கும் உபலக்ஷணம். நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யம்.
ஆகையால் அதை முதலில் பேசி மற்ற நான்கையும் உபலக்ஷண முறையாக ஸூசிக்கிறார்.
இங்கே ஸூசிக்கும் ஆனந்தத்வத்தை “என் அமுதினை” என்று முடிவில் ஸ்பஷ்டமாகக் கூறுகிறார்.
ஆனந்தத்தோடு முடிக்கிறார்.
(ஏதம் ஆனந்த மயமாத்மாநம் உபஸம்க்ரம்ய) என்றபடிக்கு (யத்ர நாந்யத் பச்யதி) என்று நிரதிசய ஸுகத்தையும்
விளக்கும் பூமவித்யைப் படிக்கும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத,
அதீதமான ஆனந்த ப்ரஹ்ம ப்ராப்தியோடு முடித்துத் தாமும் பேரின்ப முடிவு பெற்றார்.
3) அமலத்வமென்பதை ஆனந்தாத்யதிகரணத்தில் நான்கொடு ஐந்தாவதாக ஸூத்ரகாரர் ஸூசித்திருப்பதுமன்றி,
அக்ஷரத்யதி கரணத்தில் அதை மறுபடியும் தனியாக வற்புறுத்துகிறார்.
அமலத்வம் என்கிற நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யமென்பது ஸூத்ரகாரர் திருவுள்ளம்.
அது காரணம்பற்றி முதலிலேயே “அமலன்” என்று அனுஸந்திப்பது.
4) ஆதியஞ்சோதியான பரவாஸுதேவ விக்ரஹமும், மற்ற விபவ (அவதார) மூர்த்திகளும்,
அந்தர்யாமி மூர்த்திகளும், அர்ச்சாமூர்த்திகளும் ஒன்றென்றே சொல்லலாம்.
ஆதியஞ்சோதியிலிருந்து மற்றவை எல்லாம் உதித்து, முடிவில் அதிலேயே லயிக்கும்.
பெருமாள் உலகத்திற்கு ஆதிகாரணமாவது போல், மற்ற திவ்ய விக்ரஹங்களுக்குப் பர விக்ரஹமான
ஆதிமூர்த்தி காரணம். “ஆதி” என்று அதையும் ஸூசிக்கிறார்.
ஆதிமறை யென வோங்கு மரங்கத் துள்ளே
யருளாருங் கடலைக் கண்டவன் நம் பாணன் (அமிருதாஸ்வாதினி) என்பதையும் நினைக்கவேணும்.
5) “அமலன்” என்பதால் “விஜ்ஞானம்” என்றும் ஏற்பட்டது.
விஜ்ஞானமும் ஆதியுமான பரவாஸுதேவன் ரூபங்களே மற்ற வ்யூஹ ரூபங்களும் என்று சொல்லும்
விஜ்ஞாநாதிபாவ ஸூத்ரத்தை “அமலன் ஆதி” என்று ஸூசித்து,
பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தை ஸூத்ரகாரர் ஸ்தாபித்ததை ஸூசிக்கிறார்.
அதைக் கொண்டு அர்ச்சாதிகளுக்கு திவ்ய மங்கள விக்ரஹத் தன்மையை ஸ்தாபிக்க வேண்டும்.
6)(நிர்வாணமய ஏவாயம் ஆத்மாஞானமயோ அமல:) என்றபடி ஜீவ ஸ்வரூபமும் அமலம்.
ப்ரக்ருதி மலத்தைப் போக்கி விட்டால், அமலமான ஜீவாத்ம ஸ்வரூப அமலமான பரமாத்ம ஸ்வரூபத்திற்
புகுந்து பிரியாக் கலவி பெறுகிறது. நம்முடைய அமல ஸ்வரூபாதிகளையும் அனுஸந்தானம் செய்ய வேண்டும்.
அமலனென்று அதன் நினைவும் சேரும்.
“ஆதி” மூல காரணப் பொருள். அத்தாவான ஸம்ஹரிக்கும் பொருள்.
அமலத்வம் இருவருக்கும் ஒருவாறு கூடுவதாகச் சங்கித்தாலும் ஆதி காரணத்வம் பரனுக்கேயுள்ளது.
“அமலன்” என்று மட்டும் சொன்னால், ஜீவனுக்கும் ஒரு விதத்தில் அது பொருந்தி விடுமென்று சங்கை வரும்.
ஆதி காரணத்வம் ஈச்வர லக்ஷணம். “ஆதி” என்பதற்கு முற்பாடன் என்றும்,
“ஆதீயதே” – எல்லோராலும் பரிவுடன் போற்றப்படும்படி ஸ்ப்ருஹணீயன் என்றும் பிள்ளை அருளிய ரஸம்.
பிரான் – ரக்ஷகன் ஸ்திதி காரணத்வத்தைத் தனியே நிரூபிக்கிறார். ஸ்வாமித்வத்தையும் கூறுகிறார்.
‘ அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் ‘-
அடியரான லோக ஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்க,
அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படிப் பொருந்துமென்று சங்கை வரலாம்.
இவ் விஷயத்தை ஊன்றி ஆராய வேண்டும். நடந்த வ்ருத்தாந்தத்திற்கு இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப்
பொருந்தும்படி பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமா யிருந்தாலும்,
இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு முக்ய லக்ஷணம்.
‘என் தோள் மேலேறு’ என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும், அந்தச் சொல்லைக் கேட்க வேண்டும்.
தன்னிஷ்டம் என்பதை அடியோடு தள்ளி ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும்.
ராம தாஸரான பரதர் கைகேயி ‘ராஜந்’ என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந்துதம்.
(தாஸ பூதோபவிஷ்யாமி) [‘ நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் ‘] என்று
தாயாரிடம் சபதம் செய்தார் ; அப்படியே தாஸரானார். ‘ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்’ என்று
இவரை ராமன் திருப்பி விடுகையில், அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார்.
ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததே தான் அவர் ராஜ்யம் ஆண்டதற்குக் காரணம்.
திருப்பாணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் துணியாதவர். ஸ்ரீரங்க த்வீபத்தை மிதிக்க ஸம்மதியாதவரும்,
அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர், விப்ரரான முனியின் தோளை மிதிக்க ஸம்மதிப்பரோ?
அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால்தான், அவர் சொல்வது இவருக்குக் கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார் .
அவரிடத்தில் தாஸ்ய காஷ்டையைப் பற்றியது தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே.
‘அரங்கம் சென்றதற்குக் காரணம். ‘உலகறிய……. உலோக சாரங்க மா முனி தோள் தனிலே வந்து’ என்பது ப்ரபந்த ஸாரம்.
அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.
2) ப்ருகுமஹர்ஷியின் அடிபதிந்தது திருமார்பில்.
ஸ்ரீவத்ஸரான இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகுவென்னுமடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடி யாருக்காட்பட்டவர்.
(3) தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார்.
அரங்கனைத் தவிர ‘மற்றுமோர் தெய்வமுண்டோ ‘ என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று
துணிந்து அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க்காட்பட்டு,
தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.
(4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து க்ருபையால்
பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார்.
தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய ப்ரபுக்கள் ஸஹியார்.
இவர் விலக்ஷணமான ப்ரபுவென்று ஆச்சரியப் படுகிறார்.
(5) ‘மலம்’ என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும்.
அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன்புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது.
அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம் கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.
“விண்ணவர்கோன்” காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்’ என்றும்,
‘கோவலனும் கோமானுமான வந்நாள் குரவை புணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து ‘ என்றும்
முநி வாஹந போகப் பாசுரங்களின்படி, கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக் காதல் மிகுதி.
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெயுண்ட வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால்
இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து, இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷ லயம் கிடைத்தது.
விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக் கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் ‘கோன்’ என்றே அநுபவம்.
விரையார் பொழில் வேங்கடவன் :-
(1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து, அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார்.
சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார் முழுகுகிறார்.
வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி (சமாகமம்) நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள்.
அரங்கத்தரவணையான் கர்ப்ப க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம்.
ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம் என்பர். சந்தியில் ஏற்படுவது ‘சந்த்யம்’
ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படத் தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் (சந்தி).
மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம் ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல்
வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு, மெய்ம் மறந்து, ச்ரமமற்று சுகப்படும் சமயம்.
ப்ரஹ்மத்தோடு நேரும் அந்த சந்தியில் ஜாதி பேதம், துஷ்டர் ஸாது முதலிய பேதமொன்றுமில்லை.
ப்ரஹ்மத்தால் கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில்
‘திருடன் திருடனல்ல;’ ‘பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ‘ என்று உபநிஷத்து கூறுகிறது.
பெருமாள் தன்னைத் தருவித்துத் தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப் படும் இவ்வாழ்வார்
திரும்பவும் திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார்.
வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். ‘வானவர்கள் சந்தி செய்ய நின்றான்’ என்று அங்கு
மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது சந்தி செய்யுமிடம் ;
அரங்கன் ஆடையும் அந்தி போல் நிறம் ‘ – அந்தி ஓர் சந்தி.
“உந்தி” நடு மேனியிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது.
(தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ் சாவ தீர்ணை: ஸத்வோமேஷாத் வ்யபகதமிதஸ் தாரதம்யாதி பேதை : என்று
ஹம்ஸ சந்தேசத்தில் வட வேங்கட மா மலையில் வானவர் இறங்கி வந்தும், மண்ணோர் ஏறி வந்தும்
சந்தி செய்து சத்வம் தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.
2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் (தம் ப்ரம்மகந்த: ப்ரவிசதி (கௌஷீதகி உபநிஷத்து) என்றது
போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம்.
(வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம் (பகவத்தியான ஸோபாநம்) என்றது போல ஸர்வ கந்தனுடைய கந்தம்
அலைத்து வீசுகிற அனுபவம் பரம பதத்திலிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட
வேங்கடப் பொழில்களில் அமர்ந்து “கடியார் பொழிலரங்கத்தில்” அமர்ந்தது.
ஸர்வ கந்தனுடைய திருமேனியிலிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது.
”துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் ” என்று திருமுடி வாசனை அநுபவம்.
(3)(வஹதே வாஸநாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்.
(4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன்,
‘விரையார் திருவேங்கடவா’ என்று பாடியதும் இதையொத்தது. “வேயேய் பூம்பொழில் – சூழ்.’
நிமலன் நின்மலன்:–
திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது.
உடனுக்குடன் ஹேய ப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக் கொள்ளுகிறார்-
இந்த சங்கை ‘அரங்கத்தமலன் ‘ என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம்.
‘தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம்
புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு
அமலன் என்கிறார்’ என்று நாயனார்.
நீதி வானவன் —
விண்ணவர் கோனே நீண் மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளி யிருப்பதால் வானாட்டு நீதியை
இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி.
அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய்
பாவிக்கிறானோ வென்று ரஸமாய் உபபத்தி செய்யப் பார்க்கிறார்.
நீண் மதிளரங்கத் தம்மான்–
அரங்கத்தின் மதிள் நீண்டது போல் அரங்கத்தம்மான் பாத கமலமும் நீண்டதே என்று ரஸம்.
அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம்.
இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து ‘அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன்’
என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த)
திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிச் செய்த பின்பாகாதே
திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ‘ என்று நாயனார்.
(ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநு தோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.
திருக்கமலபாதம் வந்து –
தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர்.
சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம்.
திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது.
சயனத்திலிருந்த திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும்.
‘திரு’ என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டி யாருக்கும் உபலக்ஷணம்.
(லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம் போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம்.
தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ‘ என்று அநுபவம்-
‘பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்’ என்று பிள்ளை.
என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே –
தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநா காரமான
பிம்ப தர்ஸந மேற்பட்டு வந்தது. ‘கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது
போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்று கொண்டிருந்தது.
பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது.
யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது
தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார்.
யோகாநுபவ உறுதியால் என் கண்ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில்
ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.
2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய்,
கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார்.
இப்படியே மேலும் ‘சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே’ என்று பேசுகிறார்.
தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன;
நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார்.
அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது.
அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது.
இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை.
2-ம் பாசுரத்தில் ‘சென்றதாம் என் சிந்தனை’ என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை.
‘உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின் னுயிரே’ என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.
3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே
மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை.
அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீ சஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்’ என்று
இரண்டு விதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம்.
‘கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி
நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ‘ என்றும் அருளியுள்ளார்.
————-
துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்
அண்டரண்ட பகிரண்டத்தொருமா நில மெழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண்டீ ரடியேனை யுய்யக் கொண்டதே. (6)
துண்டம் — ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான):
வெண் பிறையன் –வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய:
துயர்–(பிச்சை எடுத்துத் திரிந்த) பாதகத்தை:
தீர்த்தவன் – போக்கினவனும்:
அம் சிறைய வண்டு …. அழகிய சிறகையுடைய வண்டுகள்:
வாழ் – வாழ்தற்கிடமான
பொழில் சூழ் — சோலைகள் சூழப் பெற்ற:
அரங்கம் நகர்—திருவரங்கப் பெரு நகரிலே:
மேய .. பொருந்தியிரா நின்ற:
அப்பன் …. ஸ்வாமியுமான ஸ்ரீரங்க நாதனுடைய்.:
அண்டர் –அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம் … அண்டங்களையும் பகிரண்டம் –அண்டாவரணங்களையும்:
ஒரு மாநிலம் — ஒப்பற்ற மஹாப்ருதிவியையும்:
ஏழுமால் வரை …… எழு குலபர்வதங்களையும்:
முற்றும் — சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்:
உண்ட – அமுதுசெய்த:
கண்டம் கண்டீர் – திருக்கழுத்துக்கிடீர்:
அடியேனை — தாஸனான என்னை:
உய்யக் கொண்டது……. உஜ்ஜீவிப்பித்தது.-
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் :-
(1) இங்கே கண்டத்தின் அநுபவம். நீலகண்டருடைய கண்டம் உயர்ந்ததென்பர்.
ஜநங்களை நாசம், செய்யவந்த கால கோடி விஷத்தைப் பாநம் செய்து உலகத்தைக் காப்பாற்றித் தம் கண்டத்திற்குள்
விஷத்தையடக்கியதால் பொன் வர்ணமாயிருந்த கண்டம் நீலமாய்க் கறுத்ததென்பர்.
அவர் பெருமைக்கும் மேற்பட்ட பெருமையைக் காட்டுகிறார். அவருக்கேற்பட்ட குரு பாதகத்தைத் தீர்த்தவரென்கிறார்.
பாதகம் விஷத்திலும் கொடியவிஷம்.
(2) காலகோடி விஷத்தையுண்டதால் நீலகண்டர் கண்டம் பெருமை பெற்றது.
அவர் கண்டத்தையும், அவரையும், உலகத்திலுள்ள ஸகல விஷங்களையும் அண்ட பஹிரண்டத்து ஒரு மாநில
மெழுமால்வரையும் முற்று முண்ட கண்டம் எத்தனை பெருமையுடயதென்று நீரே காண்பீரென்கிறார்.
3) விஷத்தால் கண்டம் நீலமாயிற்று. இவர் திருமேனி முழுவதும் ஸ்வபாவ மாகவே நீலம்.
‘முடிவில்லதோ ரெழில் நீலமேனி ஐயோ ‘ என்று மேலே பாடுகிறார்.
(4) பாரமாய என் பழவினை யறுப்பவர் மட்டுமல்ல. நீல கண்டருக்கும் வினைத் துயர் தீர்த்தவரென்கிறார்.
5) அயனைப் படைத்ததோரெழில் என்று உந்தியை வர்ணித்து அயனிலும் பெரியார் என்றார்.
இங்கு துண்ட வெண் பிறையாரிலும் பெரியாரென்கிறார்.
(6) சந்த்ரன் பகவானுடைய மனத்திலுதித்தவர். பிறையைச் சூடுவதால், பகவானுடைய மனத்தில் உதிக்கும்
திருவுள்ளத்தைத் தலையால் தாங்குகிறார் என்றும் த்வநிக்கிறது. தலையில் வெண் சந்த்ரன், அக்நி வர்ணமான செஞ்சடை,
கங்கை நீர்ச்சுழல், கண்டம் நீலம், பொன்னார் திருமேனி என்றிப்படிப் பலவர்ணங்கள்.
பெருமாள். திருமேனி முழுதும் கருமேக வண்ணம், அதிலும் கேசம் மைவண்ணம்.
7) ‘ பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே, கபாலனன் மோக்கத்துக் கண்டு கொண்மிண்’
என்ற திருவாய் மொழியில் பரத்வ நிர்ணய ப்ரகரணத்தில் அநுபவம். .
அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர்மேய அப்பன்:-
(1) அவன் கருமைபோல் அவனைப் பாடும் வண்டுகளும் கரிய; அப்பெருமாள் பாடகரும் பெருமாள் போன்ற வண்ணத்தவர்.
(2) அரங்க நகரில் பாடும் வண்டுகள் வாழ் வண்டுகள்; வாழாட்பட்டு நின்றவை.
(3) மதுகரர் ஸந்யாஸிகள்; திருவடித்தாமரைத் தேனைப் பருகி இன்புறுமவர்;
ஞாந கர்மங்களாகிய இரண்டு சிறகுகளை உடையவர். (ஸாரங்காநாம் பதாம்புஜம்) என்று திருவவடித்தாமரைத் தேனை
யருந்தி இன்புறுவர் பக்தரென்றார் சுகப்ரஹ்மரிஷி (பாகவதம்1,11,26) ‘ ஸாரங்கம் ‘ என்று வண்டுக்குப் பெயர் ;
ஸார ப்ரஹ்மத்தைப் பாடும் பக்தருக்கும் அப் பெயரென்றார் ஸ்ரீதரஸ்வாமி. -ஸாரம் காயந்தீதி ஸாரங்கா
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்று முண்ட கண்டம் –
எழுமால் வரையில் கிரீசர் வஸிக்கும் வெள்ளி மலையும் அடங்கியது. நீலகண்டருடைய கண்டத்தினும் மஹத்தான கண்டம்.
கண்டீர் – நீங்களே பாருங்கள்.
அடியேனை உய்யக் கொண்டதே–
அஹமந்நம் அஹமந்தம் அஹமந்தம்’ என்றபடி என்னை அவருண்டு அவருக்கு நான் போக்கியனாகிறேன். –
அண்டரண்ட பஹிரண்டங்களை உண்டதிலும் திருப்தி யடையாமல்,
மலைகளை (குல பர்வதங்களை) யுண்டும் திருப்தியடையாமல், அணுவாகிய என்னை ஆசை யுடன் உண்கிறான்;
நீங்களே பாருங்கள். உண்ணப்படும் வஸ்து ஜீர்ணமாகி விடும் என்பர். உண்ணப்படும் நான் அதனாலேயே உஜ்ஜீவித்து
இன்புறுகிறேனென்னும் விந்தையையும் பாருங்கள். இந்த அற்புதக் காட்சியை நீங்களே கண்கூடாகக் காணுங்கள்.
ப்ரஹ்மஹத்யா என்பது பெரும் பாதகம். ப்ராஹ்மண ஜாதி ஸாமாந்யரின் ஹத்தியையே பாதகமென்பர்.
ப்ரஹ்மாவின் தலையையே கிள்ளியெறிந்தது பெரும் பாதகம் , குருபாதகம். கிள்ளின கையிலேயே அந்தப் பாதகம் ஒட்டிக்கொண்டது.
எந்த அவயவம் பாபம் செய்ததோ அங்கே அது கெட்டி யாய் ஒட்டிக்கொண்டு விட்டது.
இதனால்,ஈச்வரனாயினும் ஒரு பாபம் செய்தால் அது கழற்ற முடியாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டு
அவரையே பாதிக்கும் என்று ருஜுவாகிறது. ஈச்வரன் வலிமையினும் பாபத்தின் வலிமை அதிகம்.
இந்த உண்மை ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்தச் சரித்ரத்தால் விளக்கப் பட்டது. தலையில் பிறை சூடி என்ன?
கையில் கபாலம் விடாமல் ஒட்டிக் கொண்டு விட்டதே! உலகத்திற்கெல்லாம் க்ஷேமம் செய்யும் சங்கரராயினும்,
ஈச்வரனென்று ஐச்வர்யம் பெற்றவராயினும், பாபம் செய்தால் அது விடாமல் ஒட்டிக் கொள்ளும்.
ஸர்வேச்வரன் க்ருபையால் தான் அது கழியுமென்று இந்த விருத்தாந்தம் உலகமறியக் காட்டுவது.
‘மாநுஷ ஜந்மம் பெற்றும், ஊமையும் செவிடுமில்லா மலிருந்தும், வாயிலிருந்தும், நமோ நாரணாவென்றோவாது
உரைக்கும் உரையிருந்தும், பகவந்நாமத்தைச் செவியுறக் காதிருந்தும், எவன் ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கு
சுலபமான வழிகளைத் தேடுகிறதில்லையோ அவன் ப்ரஹ்மஹத்யைக்காரன்’ என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
ப்ரஹ்மமாசைப் பட்டு ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கென்று கொடுத்த மநுஷ்ய ஜந்மத்தை வீணாக்குகிறவன்
ப்ரஹ்மத்தை பக்னாசமாக்கிக் கொலை செய்தவன் போலாகிறான்.
எல்லாவித ப்ரஹ்மாக்களையும் அபஹதபாப்மர்களாக்குவது ப்ரஹ்மம். மாத்ஸ்ய வசநத்தை நாயனார் உதாஹரித்தார்.
(தத்ர நாராயண : ஸ்ரீமான் மயா பிக்ஷாம் ப்ரயாசித:) என்றார் சங்கரர்.
முன் பாட்டில் திருவாரமார்பை ஸேவித்ததும், ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வேச்வரத்வத்தையும்,
எல்லையற்ற கருணையையும் இங்கே பாடுகிறார். கபாலம் ஆயிரம் துண்டமாய் உடைந்தது.
வெண்பிறைச் சந்த்ரனுக்கும் ராஜயக்ஷ்மாவான பாபரோகம் போக்கப்பட்டதையும் பிள்ளை உரைத்தார்.
‘உண்ட கண்டம் (அத்தா சராசர க்ரஹாணாத்) என்று ஸூத்ரத்தை நாயனார் உதாஹரித்தார்.
கண்டம் யாவற்றையும் உண்டு வயிற்றில் சேர்த்தது “ஆதி” என்பதும், கண்டத்திலொட்டுமென்று ரஸம்.
“ஆதி”, “அத்தா” என்று உபநிஷத் பாஷ்யம்.
——————–
பரிய னாகிவந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்
கரிய வாதிப்பிரானரங் கத்தமலன் முகத்துக்
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி
நீண்டவப்பெரிய வாயகண்களென்னைப் பேதமை செய்தனவே.
பரியன் ஆகி … மிகவும் ஸ்தூலமான வடிவையுடையனாய்க் கொண்டு;
வந்த … (ப்ரஹ்லாதனை நலிய) வந்த:
அவுணன் – அஸுரனான இரணிய னுடைய :
உடல் – சரீரத்தை:
கீண்ட – கிழித்துப் பொகட்டவனும்:
அமார்க்கு – பிரமன் முதலிய தேவர்கட்கும்,:
அரிய – அணுகமுடியாதவனும்:
ஆதி – ஜகத்காரண பூதனும்:
பிரான் – மஹோபகாரகனும்:
அரங்கத்து – கோயிலில் எழுந்தருளியிருக்கிற:
அமலன் – பரமபாவனனுமாகிய எம்பெருமானுடைய:
முகத்து – திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி – கறுத்த நிறமுடையவையாய்:
புடைபரந்து — விசாலங்களாய்:
மிளிர்ந்து –பிரகாசமுடையவை யாய்:
செவ்வரி ஓடி — செவ்வரி படர்ந்திருப்பனவாய்:
நீண்ட — காதுவரை நீண்டிருப்பனவாய்:
பெரிய ஆய — பெருமை பொருந்தியவையுமான:
அக்கண்கள்— அந்தத் திருக்கண்களானவை:
என்னை –அடியேனை:
பேதமை — உந்மத்தனாகச் செய்து விட்டன.
பரியனாகி வந்த :-
(1) திருக்கண்ணை வர்ணிக்கையில், சீற்றத்தோடு கூடிய திருமுகத்தில் அருள் மயமாய் ப்ரஹ்லாத சிசுவைக்
குளிரக் கடாக்ஷித்த ந்ருஸிம்ஹன் திருக்கண்களை அநுபவிக்கிறார்.
ந்ருஸிம்ஹாவதாரத்தில் சிங்க நாதம் செய்யும் பயங்கரமான திருமுகத்தில் மேல் பாகத்தில்
அக்நி வர்ணமாய்க் கோரமான கேசங்களாலும் புருவ நொடிப்புகளாலும், கீழ் பாகத்தில் கோரமான சிங்கப் பற்களாலும்
அண்ட கடாஹத்தைப் பிளக்கும் – சிங்கநாதத்தாலும் — சூழப்பட்ட திருக்கண்களில் தயை பூர்ணமாய்ப் பூரித்துக்
குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்து ஸ்நேஹ ப்ரசுரமாய்ப் பால் கொடுப்பதுபோல வாத்ஸல்யத்தை
ஆவிஷ்கரித்ததென்று தயாசதகத்தில் அநுபவம்.
‘சீற்றத் தோடருள் பெற்றவன்’ என்று இந்த அகடிதகடனாரசத்தில் ஆழ்வார் ஈடுபட்டார்.
திருக்கண்களின் அநுபவத்தோடு அவயவங்களின் அநுபவம் முடிகிறது.
(2) சேராத விரோதங்களையெல்லாம் சேர்த்து ஸந்தி செய்த அவதாரம்;
அத்புதங்களை கடிப்பித்த அவதார விசேஷம்.
இந்தளத்தில் தாமரை போலே, சீற்றம் நிரம்பிய திருமுகத்தில் தயாமயமான திருக்கண்கள் குழந்தையைக்
கடாக்ஷித்ததிலும் அகடிதகடதையுண்டோ ?
ஸந்தி ரசத்தை அநுபவிக்கும் இப் பிரபந்தத்தில் நரசிங்கனை அனுபவிக்காம லிருக்கக்கூடுமோ?
வாநர நர ஸந்தியே பிராட்டிக்கு அத்புதமாயிற்று; நரஸிம்ஹ ஸந்தி அத்யத்புதமே.
(3) ப்ரஹ்ம மென்பது நிரதிசய ப்ருஹத் என்பர். ‘என்னிலும் பரியனுண்டோ ?
நானல்லவோ நிரதிசய ப்ருஹத்தான ப்ரஹ்மம் என்று மார்பு தட்டி வந்தான் அவுணன்.
தன்னை யொத்தாரும் மிக்காரும் இல்லை யென்று அஹங்கரித்தான்.
மந்தபாக்யோக்தோ மதக்யோ ஜகதீச்வர: என்னிலும் வேறான ஒர் ஜகதீச்வர னுண்டென்று வீணே பேசுகிறாயே;
ஜகதேக ஈச்வரனான என் வயிற்றில் பிறந்தும் இப்படிப் பாக்யஹீனனானாயே’ என்றும் ப்ரஹ்லாதரிடம் பேசினவன்.
4) பகவத் த்வேஷமே பூரித்த பரிய உடல், உடல் பரியது; த்வேஷம் அதனிலும் பரியது.
(ஸுதம் மஹாபாகவதம் மஹாஸுர:)’ என்றார் சுகர் நாரத முகமாக. பரியனான அவுணன் புத்ரனும் பரியனானவன்;
ஆயின் – அவன் தெய்வத் தன்மையால் பரியன் ; சிறிய சிசுவாயினும் அத்தன்மையால் பரியன்.
(ரஹிதாஸுரோசுர:) என்றபடி அவுணத் தன்மையே இல்லாத அஸுர சிசு..
(5) (பரமேஸ்வர ஸம்ஞோஞ கிமன்யோ மய்யவஸ்திதே ) என்று பிள்ளையைக் கேட்டான்.
பரமம் மஹேச்வரம் என்று நீ புகழும் பரமேச்வரன் நானே. நானிருக்கையில் என்னிலும் வேறுளரோ?
நீ அஜ்ஞன், அநீசன்; நானே ஜ்ஞன், ஈசன்; உலகத்திற்கு ஒரு பரமேச்வரன் உண்டென்பது உண்மையே;
ஆனால் அப்பரமேச்வரன் நானே.
(6) ( க்ருத்தஸ்ய யஸ்ய கம்பந்தே த்ரயோ லோகா: ஸஹேச்வரா) ‘ எவன் சீற்றமுற்றால் ஈச்வரர்களோடு கூடிய
மூவுலகங்களும் நடுங்குமோ, அந்தப் பரமேஸ்வரனாகிய என்னுடைய கட்டளையை எந்த பலத்தைக் கொண்டு மீறினாய்?’
என்று பிள்ளையைக் கோபித்துக் கேட்டவன்;
(கம்பநாத்) என்று ஸூத்ரகாரர் காட்டிய ப்ரஹ்ம லிங்கம் தனக்கே உளது,
தானே ப்ரஹ்மம், தானே பரியன் என்று அஹங்கரித்தவன்.
(7) (ப்ருஹ வ்ருத்தௌ -பரிபீருடம் ஸர்வத) (யாசகர் நிருத்தம்) நிரதிசயமாகப் பரியனாயுளது ப்ரஹ்மம்.
ப்ரஹ்மத்தோடு போட்டி போட யார் அர்ஹர்?’ என ச்ருதி கேட்டது.
‘நானே ப்ரஹ்மத்தோடு ஸ்பர்த்திக்க அர்ஹன்’ என்று மார்பு தட்டுபவன்.
(8)’ எங்குமுளன் கண்ணன் ‘ என்று மகன் பேசினால்
‘ நானல்லவோ எங்கும் பரந்த பரியன் ‘ என்று பேசுபவன்.
(9) உடலும் அஹங்காரமும் பரியதாயின ; ஆத்மாவோ உடலுக்குள் முழுகி உள்ளிருப்பதே தெரியாமலிருந்தது.
‘ ஸர்வ லோகத்திலுமுள்ள தபஸ்ஸெல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாற்போல அதிஸ்தூலனாய்
மஹா மேரு நடந்தாற் போலே எதிர்த்து வந்த ‘ என்று போகம். ஹிரண்யன் ‘ என்ற நாமமும், –
(ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:) (சாந்தோக்யம் – அந்தராதித்ய பித்யை) என்ற ஹிரண்மய ப்ரஹ்ம புருஷனுக்கு எதிர்த்தட்டு.
‘மஹாமேரு என்றதனால் ஸ்வாமி அதை வ்யஞ்ஐநம் செய்கிறார்.
(ஏவம் லப்தவரோதைத்யோ பிப்ரத்தேம மயம் வபு:) (பாகவதம் -7, 4. 4-4) என்றும் சுகரும் இவன் வரம் பெற்றதும்
பொன் மேனியனானான் என்று இதைக் காட்டினார். விஷ்ணுவினிடம் தான் அவனுக்கு த்வேஷம்.
செம்பொன்னாகத் தவுணனுடல் கீண்டவன்’,
(10) (பாகவதம் 7-3-1) (ஆதிமானமப்ரதி த்வந்த்வம் மேகராஜம் வ்யதித்ஸத, ஏகமே வாத்விதீயம்) என்ற
பரஹ்மத்தைப் போல தான் அத்விதீயனாய் ஏக ராஜாவாய் இருப்பதற்காகத் தவம் செய்து வரங்கள் பெற்றான் ;.
பெற்றதும் வரம் கொடுத்தவரை மறந்தான்.
வந்த:-
(1) குழந்தை நம்முடையவன் ; தொண்டக் குலத்தில் ஸர்வோத்தமன்.
(வந்தனம் தாஸ்யம் ஸக்யமாத்ம நிவேதனம்) என்று ஆத்ம ஸ்மர்ப்பண பர்யந்தமான பக்திபர்வங்களை
தோழச் சிறுவருக்கு உபதேசித்தவன்.
(மஹீயபஸாம் பாதரஜோயிஷேகம் நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத்)
(நிஷ்கிஞ்சநரான பெரியோர் திருவடி ரஜஸ்ஸினால் அபிஷேகத்தை விரும்பி வரிக்காதவரையில்
த்ரிவிக்ரமன் தாளிணை ஸ்பர்சம் கிடையாது) என்று உபதேசிப்பவன் ,
இச் செல்வக் குழந்தையை அம் மஹாஸுரன், அதி பலன், கத்தியை உருவிக் கொண்டு ஸிம்ஹாசனத்தில்
இருந்து குதித்தோடி வந்து தன் முஷ்டியினால் ஸ்தம்பத்தைத் தட்டினான்.
‘உன் உடலிலிருந்து உன் தலையைப் பிடுங்குகிறேன் ‘ என்று இம் மகனை ரோஷமாய் விரட்டிக் கொண்டு வந்தான்.
‘வந்த’ என்பதால் இவற்றையெல்லாம் ஸுசிப்பிக்கிறார்.
அவுணனுடல் கீண்ட :-
(1). அவனும் ஸ்வத:விஷ்ணு பார்ஷதனே. சாப விசேஷத்தால் அசுராவேசம் வந்து கொடியனானான்.
அவனுக்கு அவுணக்ரஹம், அசுர க்ரஹம்; மகனுக்கு க்ருஷ்ண க்ரஹம்.
(க்ருஷ்ண க்ரஹக்ருஹீதாத்மா ந வேத ஜகதீ த்ருஶாம்) நிற்கின்றதெல்லாம் நெடுமா லென்றே மகன் பார்வை.
நெடுமாலென்பவரே இல்லையென்பவன் அவுணன்.
2.ஏரகாம் கடக்ருத்யதா) (கோரைப் பாய் பின்னுபவன் கோரையைக் கிழிப்பது போல)
(ந காம் குரோத்பாடித ஹ்ருத்ஸரோருஹம்) தாமரைப் பூவைக் கிழிப்பது போல் அவுணன்
ஹ்ருதய புண்டரீகத்தைக் கிழித்தார் என்று பிள்ளை.
உலர்ந்த தாழை நாரைக் கிழிக்குமாப் போல இரண்டு கூறு செய்தவனாய் என்று போகம்.
( கிள்ளிக் களைந்தானை ‘ என்றாள் ஒரு பெண் குழந்தை.
தன் பூந்தோட்டத்திலே ஒரு பூக்கிள்ளுவது போல என்று அவ்ள் கருத்து.
ஆத்மா அச்சேத்யன். கீண்டது உடலை மட்டும்.(பித்யதே ஹ்ருதயக்ரந்தி:) என்றபடி
இங்கே ஆழ்வார் தம் ஹ்ருதயம் பிளக்க வேண்டிய ஸமயத்தையும் நினைப்பதாகும். முக்தி பெறும் அவஸரம். –
அமரர்க்கு அரிய:–
(1)(ந மே விதுஸ்ஸுரகணர் ப்ரபவம் – ந மஹர்ஷய: அஹமாதிர்ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச:) என்று கீதை.
எல்லோருக்கும் ஆதியான என்னைத் தேவர்களு மறியார் மஹர்ஷிகளுமறியார் ‘
‘தன்னாலே ஸ்ருஷ்டமாய் உபக்ருதமான் – தேவர்கள் தான் காரண பூதனாய் உபகாரகனாய் நிற்கிற நிலையை
அறிய மாட்டாமையாலே ப்ரஹ்லாதர் அணுகி அநுபவித்தாற் போலே அணுகவும் அனுபவிக்கவு மரியனாயிருக்கிற ‘ என்று போகம்.
‘ப்ரபாவத்தை யறியவில்லை’ என்று கீதை. ஸௌலப்ய ப்ரபாவத்தையு மறியவில்லை;
அந்த ப்ரபாவத்தை யறிந்தால் விலகமாட்டார்.; அணுகவே அணுகுவார்.
(ராமாயணம் – ஸம்க்ஷேபம்) (கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே) என்றபடி அச்சமு முறுவாரமரர்.
(க்வாஹம் ரஜ:ப்ரக்ருதி:) என்று ப்ரஹ்லாத ஸ்தோத்ர ச்லோகத்தைப் பிள்ளையும் நாயனாரும் உதாகரித்தார்கள். –
அங்கே (ரஜ, ப்ரக்ருதி:, பத்மகரப்ரக்ருதி ) என்ற ப்ராசீனப் பாடங்களைக் காண்கிறோம்.—
(ரஜ:ப்ரபவ:) என்றும் (பத்மகர: * ப்ரஸாத:) என்றும் இப்போது ஸார்வத்ரிக பாடம்.
ப்ராசீந பாடங்களில் கொஞ்சம் ரஸம் தொக்கி நிற்கின்றது.
இவ்வஸுரகுலத்தில் பிறந்த ஆஸுர ப்ரக்ருதியான நானெங்கே? உம்முடைய தயா குண மெங்கே?
என் சிரஸ்ஸில் வைக்கப்பட்ட தாமரை ஹஸ்த ப்ரஸாதம் ப்ரஹ்மாவுக்கு மில்லை; சிவனுக்குமில்லை,
(இப்பொழுது) லக்ஷ்மிக்குமில்லை.’
3) ( த்வத்வீர்ய காயன மஹாக்ருதமக்ன சித்த:): என்று பாட்டாய் பல பாடும் இன்பக்கடலினிலாழும்
ப்ரஹ்லாதாழ்வாரை நினைப்பது உசிதம். ஆழ்வார்கள் பரஸ்பர ஸஜாதீயர்.
பிறர்களுக்கு அரிய ‘ என்றதால் பத்துடையடியவர்க் கெளியவன்’ என்பது தானே ஸித்திக்கிறது.
அமரர்க்கரியனைத் தமர்கட் கெளியானை ‘ அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே. ”
ஆதிப் பிரான்-
(1) ஆதி –(அஹமாதிர்ஹி பூதாநாம்) என்று கீதை. ஆதி காரணப் பொருள் என்று பயந்து அகன்றார்கள்.
நாம் அணுகுவதற்கு முன்பே தானே வலுவில் முதலில் மேல் விழுந்து உள் நுழைந்து நமக்கு
ஸத்தையை உண்டாக்கும் ‘ஆதி’ என்றறியவில்லை. (பூர்வ பாஷீ ச ராகவ:)
‘என்னின் முன்னம் பாரித்துத்தான் என்னை முற்றப்பருகினான்’ என்று பாடிய ஆதிப் பிரான்
திருவருள் பெற்ற ஆழ்வாரையும், அவர் ஒன்றும் தேவில் பரத்வ நிர்ணயம் செய்த ஆதிப் பிரானையும் நினைக்கிறார்.
திவ்ய தேசத்து எம்பெருமான்களில் ஆதிப்பிரான் ‘அரங்கன்’ என்பர்.
(3) அவதார வேஷங்கள் அரங்கத்திலேற்படுவது உசிதம்.
(ரங்கதாம் யாதி ரங்கம்) அவதார நாடகங்கள் அரங்கத்திலாட்டம். எல்லா அவதார வேஷங்களுக்கும் ஆதி அரங்கம்.
தசாவதார நாடகங்களும் அரங்கத்திலாட்ட மென்று தசாவதார ஸ்தோத்ர பூமிக ச்லோகம்.
(ரங்கேதாமநி லப்தநிர்பரரஸைரத்யக்ஷிதோ பாவுகை) இவ்வாழ்வாரும் அந்த நாடகங்களைப் பார்த்து ரஸிக்கும் ஓர் பாவுகர்.
அரங்கத்து அமலன் ;–
(1) ந்ருஸிம்ஹாவதாரம் சில க்ஷண காலமே. உக்ரம் என்றும் பீஷணம் என்றும் முதலில் அநுஸந்தாநம்.
‘பயக்ருத் பயநாசம் என்னுமிடத்தில் முன்பு ‘பயக்ருத்’ என்று ஆபாதபிரதீதி.
‘பத்ரர் ‘ என்பதே ஸஹஜத்வம். – பயநாசந: ‘ – என்பது ஸாமாந்யமாக.
ந்ருஸிம்ஹன்: ம்ருத்யு ம்ருத்யுவாகிறவர். ம்ருத்யு பயத்தையும் ஹரிப்பவர்.
உக்ரரும் பீஷணருமா யிருப்பதும், ஆச்ரித விரோதி விஷயத்திலும். ஆஸ்ரிதருக்கு வரும் ம்ருத்யு பய விஷயத்திலும்,
அரங்கத்தமலனிடம் பய ப்ரஸக்தியே இல்லை. ‘ஆராத வருளமுதம் பொதிந்த கோயில்.’
(2) ப்ரஹலாதனொருவனுக்கே , ஸ்வல்ப க்ஷணங்கள் மட்டுமே என்றபடியல்லாத
ஓர் விலக்ஷண சுத்தியாகுமென்று பிள்ளைபும் நாயனாரும் பணித்த படி.
(3) (காந்தம் வக்த்ரம், சந்த்ரகாந்தானனம் ராமம்) என்றதுபோல.
‘சந்த்ரனும் தாமரையும் ஒன்றினாற்போலே யிருக்கிற திருமுகத்தில்’ என்று போகம்.-
கரியவாகி :-
(1) ‘நிகரில்லாத நீல ரத்நம் போலே இருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய்’ என்று போகம்.
திருமேனியின் நிறத்தை யொத்தது கருவிழி யென்னும் தாரகை. சந்த்ர முகத்தில் தாரகை யென்னும்
நக்ஷத்ராநுபவம் சப்த மாத்ரத்தால் ஸ்புரிப்பது. சந்த்ரனுக்கும் – நீலோத்பலங் களுக்கும் மைத்ரீ.
பின்பு அரவிந்த மென்னும் விரோதியும் விரோதத்தை விட்டு உவமையாய்ச் சேருகிறது.
(2) ‘விடாய்த்தவர் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போலே யிருக்கை’ என்று பிள்ளை.
‘கண்ணனைக் கண்டபோதே தாபத்ரய தப்தருடைய ஸகல தாபங்களும் போம்படி குளிர்ந்திருக்கு மென்னுதல்’ என்றும்,
‘புண்டரீகம் போலே வெளுத்திருக்கிற திருக் கண்களுக்குப் பரபாகமாகும் படி இரண்டு கருவிழி யுடைத்தாய்’ என்றும் நாயனார்.
புடை பரந்து :–
(1) ‘ஆச்ரித தர்சந ப்ரீதியாக அன்றலர்ந்த தாமரைப் பூப்போலே அதி விகஸிதங்களாய்’ என்று போகம்
(2) கடலைத் தடாகமாக்கினாற்போலே இடமுடைத்தாயிருக்கை ‘ என்று பிள்ளை –
(தயாசிசிரிதாசயா ஜலதிடிம்ப டம்பஸ்ப்ருச:). என்று அபீதிஸ்தவ வர்ணநம்.
திருமேனி ஓர் குட்டிக் கடலாக அநுபவம். – திருக்கண்களே ஓர் தயாபூர்ணமான குட்டி ஸமுத்ர மென்று பிள்ளையின் கருத்து.
மிளிர்ந்து :–
[1] ஆஸந்நரானா ரெல்லார் பக்கலிலும் ஆதரம் தோன்றும் படியான உல்லாஸத்தை யுடையவையாய்’ என்று போகம்.
அதி நீசரான என் பேரிலும் விழுந்து என்னைப் பருகுவது என்பது கருத்து. (லோசநாப்யா பிபந்நிவ]
[2] க்ருபா பரிதமாயிருக்கையாலே கரையருக்கும் வழிபோக வொண்ணாதபடி திரைவீசுகை.
கண்களின் தவரையைச் சொல்லுகிறது என்று நாயனார். குட்டிக் கடல் அநுபவமும் அதில் அலைய நுபவமும் ஓடுகிறது.
செவ்வரி ஓடி. –
[1] அநந்யர் பக்கல் அநூராகத்திற்குக் கீற்றெடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே –
வ்யாப்தங்களாய்’ – என்று போகம்
(2)ஸ்ரீய:பதித்வத்தாலும் – வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கை” என்று பிள்ளை .
[3] ஜிதந்தே புண்டரீகாக்ஷ) என்று ஓர் மங்களப் பாட்டு.
நீண்ட :-
(1) ஸ்வபாவ ஸித்தமான ஆயாமத்தை உடைய’ என்று போகம்.
(2)’செவியௗவும் அலையறிகை’ என்று பிள்ளை தம்மளவும் கடாக்ஷம் தந்து விஷயீகரித்த படியும்’ என்று நாயனார்.
2) முதல் பாசுரத்தில் திருக் கமலபாதம் தம் கண் வரையில் நீண்டு வந்ததை அநுபவித்தார்.
இங்கே ப்ரத்யேக அவயவங்களின் அநுபவம் திருமுகத்துத் திருக்கண்களோடு முடிகிறது.
கடாக்ஷங்கள் க்ருபா ப்ரேமைகளோடு நீண்டலைத்துத் தம்மீது – மோதுவதை அநுபவிக்கிறார்.
(தூரதக்தாபி முக்யம்) யார் வருகிறாரென்று வெகுதூரம் நீண்டு பார்த்துக் காத்திருக்கும் ஸ்வபாவம்.
அப் பெரியவாய கண்கள் :-
(1) ப்ரஹ்மத்தின் கண்கள் மிக விஸ்தாரமாகின்றன. ப்ரும்ஹத்திலும் ப்ருஹத்தானவை.
இக் கண்களின் பெருமை சொல்லிலடங்காத தென்பதை அப்பெரிய’ என்பதால் விளக்குகிறார்.
(2) ப்ரஹ்மத்தின் கண்கள் ப்ரும்ஹிதமாகின்றன. கண்கள் – க்ருபை வெள்ளத்தால் உடம்பெல்லாம்
கண்ணாகச் செய்யப் பார்க்கின்றன’ என்று பட்டர் ஸ்தவம். (ஸகலாங்கம் கில ஸர்வதோக்ஷி நேத்ரே)
என்னைப் பேதைமை செய்தனவே –
என் நீசத்தன்மயை நினைத்து நானெத்தனை ஓதுங்கப் பார்த்தும், என்னைப் பலாத்கரித்து
என் நெஞ்சையே யழித்து, என்னை மூர்ச்சிதன் போல நினைவு சக்தி முதலியனவற்றவனாக்கி விட்டன.
ஆநந்த மூர்ச்சை (ஆனந்தநேன ஜடதாமாதனோதி) – சுகவெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்கச் சூழ்ந்தது.’
————
ஆலமாமரத்தி னிலைமேலோரு பாலகனாய்
ஞாலமேழுமுண்டா னரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்ல தோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்ட தென்நெஞ்சினையே. .9.
மா – பெரிதான;
ஆலமரத்தின் – ஆலமரத்தினுடைய;
இலைமேல் – (சிறிய) இலையிலே;
ஒரு பாலகனாய் – ஒரு சிறு பிள்ளையாகி;
ஞாலம் ஏழும் உண்டான் – ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்;
அரங்கத்து – கோயிலிலே;
அரவு இன் அணையான் – திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருளுபவனுமான ஸ்ரீரங்கநாதனுடைய;
கோலம் – அழகிய;
மா – சிறந்த;
மணி ஆரமும் – ரத்னங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்;
முத்துத் தாமமும் – முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.
ஆலமாமரத்தின் இலையின்மேல் ஒரு பாலகனாய்:–திருவடி முதல் திருமுகம் வரையில்
ஆபாதசூடம் அவயங்களை அனுபவித்து, அரங்கத்தமலன் முகத்துத் திருக்கண்களின் குளிர்ந்த கடாக்ஷங்களைப் பெற்று அனுபவித்தார்.
‘அமலன்’ என்று த்யானத்தைத் தொடங்கினவர் அமலனாகவே ஸுமுகமாய்க் குளிரக் கடாக்ஷிக்கப் பெற்றார்.
அமலனென்று தொடங்கிய த்யானத்திற்கு அமலன் முகத்துக் கடாக்ஷம் பலம். தத்க்ரது ந்யாயம், யதோபாஸனம் ப்ராப்தி.
அவய வர்ணனப் பாசுரங்களில் உபக்ரமப்படியே உபஸம்ஹாரம். அமலனென்று தொடங்கி அமலனென்று அவய வர்ணனையில் ஸமாப்தி.
(2)(காரணம் துத்யேய என்றபடி , காரணமாக அரங்க ப்ரும்மத்தை த்யானம் செய்கையில், காரணத்வத்தை
விஸ்தாரமாக விளக்கும் சாந்தோக்ய ஸத்வித்தையில் கூறிய ஆலமாமர த்ருஷ்டாந்தத்தை
‘ஆலமாமரத்தின்’ என்பதால் வ்யஞ்சனம் செய்கிறார்.
மஹாந்யக்ரோதாஸ்திஷ்டதி –‘இதோ இங்கே ஆலமரம் நிற்கிறதே ஆலம்பழமொன்று எடுத்து வா’ என்றார்
தகப்பனார் மகன் ச்வேதகேதுவைப் பார்த்து. அவன் கொணர்ந்ததும் அதை உடைத்து ஒரு விதையை எடுக்கச் செய்து,
அதனைக் கிழிப்பித்து, ‘உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டார். ‘ஒன்றையும் காணேன்’ என்றான் மகன்.
‘இந்த நுண்ணிய விதையிலிருந்து இவ்வாலமரம் விரிந்தது.
இதுபோல ஸத் என்னும் ஸூக்ஷ்ம ஸூக்ஷ்மமான அணிமையிலிருந்து புவனம் விரிந்தது. அதிலேயே நிற்கிறது.
அதிலேயே மறுபடியும் லயிக்கிறது என்று தகப்பன் மகனுக்கு விளக்கினார்.
ஒன்றுமில்லை என்று சொல்லலாம்படி நுண்ணிய ப்ரஹ்மத்திடமிருந்து புவனப் பரப்பெல்லாம் விரிந்து முடிவில்
அதனுள்ளே லயித்துக் கிடக்கிறதென்று காட்டும் ஆல மாமர த்ருஷ்டாந்தத்தின் வ்யஞ்ஜனத்தால்
வடதள சிசு லீலைக்காட்சி என்ன அதிசயமென்று கைமுத்ய வ்யஞ்ஜனத்தில் கருத்து.
‘ஒரு பாலகன் அளவான உருத்தான் வேண்டுமோ என்று வ்யஞ்ஜனம்.
(3) ஆலமாமரத்தின் –
பெரிய மரத்தின் பேரில் சயனிக்கலாகாதா? அதையும் ப்ரளயம் செய்து ஒரு சிற்றிலையின் பேரில் தான் சயனிக்க வேண்டுமோ?
அகடிதகடனக் காட்சி ஸேவையில் நோக்கு. குழந்தைக்கு ஏற்ற விளையாட்டில் கருத்து.
பள்ளியாலிலை ஏழுலகும் கொள்ளும்’
‘பாரனாயேழுலகுமுண்டு பிரிவின்றி ஆலிலையன்ன வசஞ்செய்யு மண்ணலார்’
‘அடியார்ந்த வையமுண்டு ஆலினைத் துயின்றவாழியான்’
(4) மார்க்கண்டேயன் கரியே.
சிரஞ்ஜீவியாயிருந்து ப்ரளயத்தில் திருவடிகளை சிரஸால் க்ரஹித்து,
‘அன்று ப்ரளயத்தில் நான் நமஸ்கரித்தவரே இக்கண்ணன்’ என்று பாண்டவர்களிடம் ஸாக்ஷ்யத்தை அறுதியிட்டார்.
ஸோயம் தேவ: என்று ப்ரத்யபிஜ்ஞா ஸாக்ஷ்யம். ஒன்றும் தேவில்,
“புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை நக்கபிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணனருளே”
என்பதை நினைப்பூட்டுகிறது.
(5) “ஆதி” என்று தொடக்கத்தில் ப்ரளய காரணத்வத்தை ஸூத்ரம்போல ஸூசித்ததை இங்கே விளக்குகிறார்.
(6) ஸ்ரீபாகவதத்தின் கடைசி ஸ்கந்தத்தில் மூன்று அத்யாயங்களால் மார்க்கண்டேயர் ப்ரளயத்தில்
பகவானுடைய பரத்வத்தை ஸாக்ஷாத் த்ரஷ்டாவாகக் கண்டு ஸாக்ஷி சொல்வது விஸ்தரித்துள்ளது.
இப்பிரபந்தமும் ஓர் ஸம்க்ஷேப பாகவதம்.
வடபத்ர புடே தோகம் சயாநம் த்வேகமத்புதம் என்று மார்க்கண்டேயர் நேரில் கண்ட ப்ரளயக் காட்சியைச் சொல்லி பாகவதம் முடிவு பெற்றது.
பகவதவதாரமான நர நாராயணர் இருவரும் மார்க்கண்டேயருக்கு ஸேவை ஸாதித்து,
அவருக்குத் தத்வோபதேசம் செய்தார்கள். அர்ஜுனன் ப்ரார்த்தித்து விச்வரூபக்காட்சி பெற்றான். அது ப்ரளயக் காட்சி அல்ல.
ஸ்திதியில் விச்வரூபக் காட்சி. ப்ரளயத்தில் விச்வம் அரூபமாய் அஸத் வ்யபதே சார்ஹமாய் பகவானுக்குள் ஒன்றியிருக்கும்.
மார்க்கண்டேயர் ப்ரளயக் காட்சியை விரும்பிப் பெற்று ஸேவித்தார்.
(சயாநம் பர்ணபுடகேக்ரஸந்தம் ப்ரபயா தம:| மஹாமரகத ஸ்யாமம் ஸ்ரீமத் வதநபங்கஜம்
பத்மகர்பாருணாபாங்கம் ஹ்ருத்ய ஹாஸாவ லோகனம்) என்று சுகர் வர்ணித்த மார்க்கண்டேயாநுபவம்
இவ்வாழ்வார் நெஞ்சில் ஓடுகிறது.
(மஹாமரகத ச்யாமம்) என்று சுகர் வர்ணித்ததை “முடிவில்லாதோரெழில் நீலமேனி ஐயோ” என்கிறார்.
மார்க்கண்டேயர் நெஞ்சினை நிறைகொண்ட நீலமேனி என் நெஞ்சினை நிறைகொண்ட தென்கிறார்.
ப்ரளாயவஸரத்தில் சிதசித் புவனமான சரீரம் இல்லாததுபோல லயித்துக் கிடக்கிறது.
பகவானுடைய திவ்யமங்கள நீலமேனியான சரீரம் மட்டும் ஸேவை. மற்றொன்றின் காட்சியேயில்லை.
திவ்யமங்கள விக்ரஹாம்ருதத்தோடு கூடிய அமுதொன்றே காணும் அவஸரம்,
ஸம்ஸார பந்தத்தின் ப்ரளயமான மோக்ஷம் இவ்வாழ்வாருக்கு ஸித்திக்கும் அவஸரமிது.
(ஸ்ரீமத் வதநபங்கஜம் பத்மகர்பாருணா பாங்கம் ஹ்ருத்ய ஹாஸாவ லோகனம்) என்றபடி
முன்பாசுரத்தில் திருமுகத்தையும் ஹ்ருத்ய கடாக்ஷங்களையும் அனுபவித்தார்.
(ப்ரஹ்ருஷ்டரோமாsத்புத பாவஶங்கிதம் ப்ரஷ்டும் புரஸ்தம் ப்ரஸார பாலகம்”
“யதா புராமுஹ்யததீவ விஸ்மித:”
”தோகம் ச தத்ப்ரேம ஸுதாஸ் மிதேந நிரீக்ஷிதோ பாங்கநிரீக்ஷணேந”
“அத தம் பாலகம் வீக்ஷ்ய நேத்ராப்யாம் திஷ்டிதம் ஹ்ருதி) என்று சுக வர்ணந ச்லோகங்கள்
இவ்விரண்டு பாசுரங்களிலும் ஆழ்வார் நெஞ்சில் ஓடுகின்றன.
“பாலகனாய்” என்று சுகர் ச்லோக ஸமாரணம். (தமத்புதம் பாலகம்) என்ற கோவலன் அவதார ச்லோகத்திற்கும் ஸ்மரணம்.
(7) சிறு குழவிக்கேற்ப ஒரு சிறு தளிர்.
“நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏராரிளந்துளிர்மேல் துயிலெந்தாய்”
ஞாலமேழும் உண்டு —
(அத்தா சராசர க்ரஹணாத்) என்ற சூத்ரத்தை நினைக்கிறார். ஸம்ஹரிக்கப்படும் உலக முழுவதும்
ஓதனம், சோறு என்று ச்ருதி ஸூத்திரங்கள் பேசுவதை அனுஸரிக்கிறார்.
இக்குழந்தைக்கு ஏழுலகும் செவ்வெண்ணெய் போலும்.
ஏழுலகமும் உண்ண இந்தச் சிசு வேஷம்தான் வேணுமோ?
சயனத்திற்கு ஓர் ஆலந்துளிர்தான் வேணுமோ?
அவன் ஆச்சர்ய ஸங்கல்பமான மாயையை யார் அறியவல்லார்?
அரங்கத்தரவினணையான் –
ஓரக்ஷரமான ப்ரணவத்திற்குள் விச்வமும் அடங்கியுளதென்பர்.
ப்ரணவ விமானத்திற்குள்
அரவணையில் பள்ளி கொண்டவனுக்குள் விச்வம் அடங்கியிருப்பதில் ஐயமில்லை
என்பதை விளக்க வடபத்ர சயன சிசு வ்ருத்தாந்தத்தை எடுத்தது.
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் –
கௌஸ்துபம் போன்ற நித்ய முக்தரெல்லாருக்கும் ஸ்தானம் திருமார்பு. இவ்வாழ்வாருக்குத் திருமார்பு நித்யஸ்தானம்.
அவதார கார்யம் முடிகிறது. தம் ஸ்தானமாகிய திருமார்பில் கண் போகிறது.
மாமணி கௌஸ்துபம் ஜீவாபிமானியான நித்யர்.
முத்துத் தாமமென்பது முக்தர்களின் கோவையை நினைப்பூட்டுகிறது.
நித்ய முக்தர்கள் வாழும் திருமார்பின் அனுபவம்.
இந்த அவதார விக்ரஹத்தைவிட்டு ஸித்தி பெறும் அவஸரத்தில் இதன் பொருத்தம் ரஸிக்கத்தக்கது.
நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே –
பெருமாள் திருமேனியிலேயே இவருக்கு நித்யவாஸம். திருமேனி இவரையும் இவர் நெஞ்சையும் உட்கொண்டு,
இவரையும் இவர் நெஞ்சையும் ப்ரும்ஹணம் செய்கிறது. பெருமாளைப்போல இவர் திவ்யமேனியும் ப்ரஹ்மம்.
(மூர்தம் ப்ரம்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்) பெருமாளுக்குள்ள லக்ஷணம் திருமேனிக்குமுண்டு.
“பகவான் எப்படியோ , அப்படியே அவர் வ்யக்தியும்” ப்ரஹ்ம தன்மையும், ப்ரஹ்மணத் தன்மையும் அதற்கும் உண்டு.
முக்தராவாரை ப்ரஹ்மணம் செய்வது திருமேனியோடு கூடிய பகவான். ஞானதர்மத்தின் பூரண விகாஸம்தான் ப்ரஹ்மணம்.
“நிறை கொண்டது என் நெஞ்சினையே” என்று தர்மபூத ஞானத்தின் நிரதிஸய விகாஸமான பூர்ணதை பெறுவதைப் பேசுகிறார்.
(ஸம்பத்ய ஆவிர்பாவ:) “முடிவில்லதோரெழில்”
(அத்யர்காநல தீப்யமாநஜ்யோதிரனுபவம்) யதத் பராதிவோ ஜ்யோதிர்தீப்யதே) (த்ரிபாதஸ்யாம்ருதம் திவி) என்ற
அனுபவங்கள் கிடைக்கின்றன.
‘ஐயோ’ என்பது ‘ஹாவு ஹாவு ஹாவு’ என்கிற முக்தர் ஸாமகானத்தையும் ஸூசிக்கிறது.
“நிறைகொண்டது” – என் அடக்கத்தை யழித்ததென்று, என் நெஞ்சைக் கொள்ளை கொண்டதென்று பொருளுரை.
என் நெஞ்சு நிறையப் புகுந்து தன்மயமாக்கி விட்டது. நெஞ்சை அதன் வசமாக்கி விட்டது. நிறை = நிறைவு.
முன் பாசுரங்களில் அவயவங்களின் சோபையின் அனுபவம். இங்கே ஸமுதாய சோபையின் அனுபவம்.
அகண்டத் திருமேனியின் அனுபவம். (பாதாம்போஜம்ஸ்ப்ருசதி) என்று சோபானத்தில் முடிவில் அகண்டானுபவம்.
ஸர்வாவய சோபைகளோடும் கூடின ஸமுதாய சோபையாலே பூர்ணமாய் என்று ஆழ்வார் நெஞ்சை போகம் வர்ணித்தது.
இங்கே சொல்லும் ப்ரளயம் அவாந்தர ப்ரளயம்.
‘ஓர் இலையிலே தாயும் தந்தையு மில்லாததொரு தனிக்குழவியாய்’ என்று போகம்.
கர்ணனைத் தாய் ஒரு சிறு பெட்டியில் வைத்துக் கங்கையில் மிதக்கவிட்டாள்.
“அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி ஸர்வ லோகங்களையும் திருவயிற்றில் வைத்தவன்” என்று
போகம் மார்க்கண்டேயர் அனுபவம் ஆழ்வார் நெஞ்சில் உள்ளதைக் காட்டிற்று.
‘பாலகன்’ என்பதில் “க” என்னும் விகுதி சிறுமையைக் காட்டும்.
“யசோதை குழந்தையும் பெரியதென்னும்படி அத்விதீயனான பாலனாய்” என்று பிள்ளை.
சிறு ப்ரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலிடுமாப் போலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம்.
ப்ரளயத்தில் தன் அகடிதகடனாதோ டொக்குமென்னை அகப்படுத்தினபடியும் என்று நாயனார்.
“மருளேயின்றி உன்னை என் நெஞ்சகத் திருத்துந் தெருளே தரும்”,
“திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்”,
“என்னைமுற்று முயிருண்டு” என்று பரமபதம் செல்லும் அவஸரத்தனுபவங்கள்.
“அந்நீலமேனி”, “நீலவரை” என்று திருவாய் மொழி முடிவிலனுபவம்.
“நீலக்கடல் கடைந்தாய்” என்று அந்நீலமேனி ஒளியாலே திருப்பாற்கடலே நீலக்கடலெனலாம்படி ஆயிற்று.
“அம்ருத மதன ஸமய சடுலதர மரகதமணி ச்யாமள திவ்ய மங்கள விக்ரஹ கிரணவாஹிநீ பரம்பரானுஷகத்தாலே
அவிரளோந்மீளதபிநவ குவலய ஜால பாரம்பரீ பரி மண்டிதா போகமானாற்போலே ஸர்வதோ நீலமான க்ஷீரார்ணவத்தை”
என்று ஸாக்ஷாத் ஸ்வாமி உரை. –
முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்