Archive for the ‘Srirengam’ Category

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -21-40-

February 17, 2022

பின்னைக்கு இனிய பெருமாள் அரங்கர் பெறாது பெற்ற
முன்னைப் பிரமனை வாழ்விக்க வேண்டி முன் நாள் கவர்ந்த
அன்னம் திரு உரு உள்ளே வளர்ந்ததற்கு ஓர் அண்டம் ஆம்
என்னச் சிறந்தது மூதண்டம் யாம் என் இயம்புவதே –21-

(இ – ள்.) பின்னைக்கு – நப்பின்னைப்பிராட்டிக்கு,
இனிய – பிரியமுள்ள கொழுநரான,
பெருமாள் அரங்கர் – திருவரங்கநாதராகிய நம் பெரிய பெருமாள்,
முன்னை – முன்பு (கற்பத்தொடக்கத்தில்),
பெறாது பெற்ற -அருமையாகப் பெற்ற மகனான, பிரமனை -,
வாழ்விக்க வேண்டி – உய்வித் தற்பொருட்டு,
முன் நாள் கவர்ந்த – முன்பு ஒரு காலத்திற் கொண்ட,
அன்னம் திரு உரு – சிறந்த அன்னப்பறவைவடிவம்,
உள்ளே வளர்ந்ததற்கு -,
ஓர் அண்டம் ஆம் – ஒரு முட்டையாகும்,
என்ன – என்று சொல்லும்படி,
மூது அண்டம் – பழமையான அண்டகோளம்,
சிறந்தது – சிறப்படைந்தது;
(என்றால்), யாம் என் இயம்புவது – (அவ்வன்னத் திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) நாம் யாதுசொல்வது! (எ – று.)

(“மன்னுமாநிலனும் மலைகளுங் கடலும் வானமுந் தானவருலகுந்,
துன்னுமாயிருளாய்த் துலங்கொளிசுருங்கித் தொல்லைநான்மறைகளும் மறையப்,
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெடவொருநாள்,
அன்னமா யன்றங்கருமறைபயந்தா னரங்கமாநக ரமர்ந்தானே,” “முன்னுலகங்களேழுமிருள்மண்டியுண்ணமுதலோடுவீடுமறி யாது, என்னிதுவந்ததென்றன் விமையோர் திசைப்ப

வெழில்வேத மின்றி மறையப், பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள்தீர்ந்திவ்வைய மகிழ,
அன்னமதாயிருந்தங்கறநூலுரைத்த வதுநம்மையாளுமரசே,”

“முன்னிவ்வேழுலகுணர்வின்றியிருள்மிக வும்பர்கள் தொழுதேத்த,
அன்னமாகி யன்றருமறைபயந்தவனே” என்றார் திருமங்கையாழ்வார்.)

பாலும் நீரும் கலந்தவிடத்து அவற்றைப்பகுத்து நீரையொழித்துப்பாலை யுட்கொள்ளுந் திறம், வெண்ணிறம்,
பறவைகளிற்சிறத்தல், அழகியவடிவம், நடையழகு, சேற்றில் வெறுப்பு, தாமரைமலரில் வீற்றிருத்தல்
என்னு மிவற்றையுடைய அன்னப்பறவை – ஸாராஸாரங்களைப் பகுத்துணர்ந்து அஸாரத்தைத் தள்ளி
ஸாரத்தைக் கொள்ளுமியல்பு, சுத்தஸத்வகுணபூர்த்தி, மற்றையோரினும்மேம்பாடு, விலக்ஷணமானதன்மை,
நல்நடக்கை, கலக்கத்தில் விருப்பமின்மை, பத்மாஸநத்திலிருப்பு என்னு மிவற்றையுடைய நல்லாசிரியர்க்கு ஏற்ற
உவமையாகச் சிறத்தலால், எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை யுபதேசிக்கும் பரம குருவாவதற்கு
அன்ன பறவையுருவத்தை ஏற்ற வடிவமாகக் கொண்டன னென்னலாம்.

“அசுரர்களோடேகலந்து உருமாய்ந்து போன வேதத்தைப் பிரிக்கைக்கு உடலாக,
நீரையும் பாலையும் பிரிக்கவல்ல அன்னத்தின் வடிவைக் கொண்டு” என்றார் பெரியாரும்.

“அண்டம்” என்ற வடசொல்லுக்கு – உலகவுருண்டையென்றும், முட்டையென்றும் பொருள்க ளுண்டு.
பறவைகள், முட்டையினின்று பிறப்பன வாதலால், அண்டஜ மெனப்படும்.
திருமால்கொண்ட ஹம்ஸரூபம் உள்ளே வளர்வதற்கு அண்டகோளம் அண்டமாய் (முட்டையாய்)ச் சிறந்த தென்று,
அண்டமென்ற சொல்லின் நயம்பற்றிக் கற்பனைகூறினர்.
உருண்டைவடிவமான முட்டையில் அன்னப்பறவை வளர்ந்து எழுமாறுபோல,
திருமாலின் ஹம்ஸரூபம் அண்டகோளத்தில் வளர்ந்து தோன்றிற்று என ஒப்புமை யமையும்.

“யாம் என் இயம்புவது” என்றது, எம்மாற்சொல்லமுடியா தென்றபடி,
“யாம்” என்றது, கவிகட்குஉரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மை;
மற்றை யோரையுங் கூட்டிய உளப்பாட்டுத்தன்மைப்பன்மையுமாம்.
முன்னைப் பெற்ற என இயையும்.
“முன்னைப் பிரமன்” என்றே எடுத்து, (மற்றைத் தேவர் முதலியோர்க்கு) முதல்வனாகிய பிரம னென்றலுமாம்.
“பெறாப் பேறு” என்றாற் போல, அருமைவிளங்க “பெறாதுபெற்ற பிரமன்” என்றார்.
இந்த அடைமொழி, இயல்பாய் மைந்தனிடத்துத் தந்தைக்குஉள்ள பேரன்பை விளக்கும்.
எல்லாப் பிராணிகளுக்கும் பரமபிதாவான எம்பெருமான்.

தனது முதற்படைப்பான பிரமனிடத்துக் கொண்ட வாத்ஸல்யத்தால், அம்மைந்தனை வாழ்விக்க வேண்டி,
தன் மேன்மையையும் சிரமத்தையும் பாராமலே, அதற்கேற்றதொரு பக்ஷிரூபத்தைக் கொண்டனனென்க.
இனி, திருமால் பிரமனைப்படைக்கவேண்டு மென்னும் பிரயத்தின பூர்வகமான செய்கை சிறிதுமில்லாதிருக்கையிலே
அப்பெருமானது திருநாபித்தாமரை மலர்ந்தமாத்திரத்திற் பிரமன் அதிலிருந்து தானே பிறந்தமை தோன்ற,
“பெறாது பெற்ற பிரமன்” என்றாருமாம்; கீழ் 19 – ஆஞ் செய்யுளை நோக்குக.

பின்னை – நப்பின்னை; ஸ்ரீகிருஷ்ணனது மனைவியரில் தலைமையுடையவள்:
கும்ப னென்னும் இடையர்தலைவனது மகள். இவளை மணஞ்செய்து கொள்ளுதற்காக, இவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும்அடங்காத அசுராவேசம்பெற்ற ஏழுஎருதுகளையும் கண்ணபிரான் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித்
தழுவின னென்று நூல்கள் கூறும்; இங்ஙனம் இவள்பக்கல் பெருமான் மிக்ககாதல்கொண் டருளியமைபற்றி,
“பின்னைக்கு இனிய பெருமாள்” என்றார்;

(“பின்னைமணாளன்,”
“அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுட், கொம்பினார்பின்னை கோலங் கூடுதற் கேறுகொன்றான்,”
“பின்னைநெடும்பணைத்தோள்மகிழ்பீடுடை, முன்னையமரர்முழுமுதல் தானே,”
“பின்னைதன்காதலன்” என்றார் ஆழ்வார்களும்.
“கிருஷ்ணாவதாரத்து ப்ரதாநமஹிஷி இவளாகையாலே, நப்பின்னைப்பிராட்டியை முன்னிடுகிறார்கள்,”
“இவ்வவதாரத்துக்கு ப்ரதாநமஹிஷி இவளிறே. மேன்மைக்கு ஸ்ரீய:பதியென்னுமாபோலேயிறே,
நீர்மைக்கு இவளுக்குவல்லபனென்கிறதும்” என்ற வியாக்கியானவாக்கியங் களும் அறியத்தக்கன.)

இவள் கண்ணபிரானிடத்து மிக்ககாதல்கொண்டிருந் தமையும், “பின்னைக்கினிய பெருமாள்” என்ற தொடரில் தோன்றும்;
“நப்பின்னையாம், விரகதத்தைக்குவிடையேழ்தழுவின வேங்கடவன்,
குரகதத்தைப் பிளந்தான் தோள்களாகிய குன்றங்களே” என்பர் திருவேங்கடத் தந்தாதியிலும்.
இவள், திருமாலின் தேவியருள் நீளாதேவியின் அம்ச மெனப்படுவள்.
இனி, திருப்பாற்கடல்கடைந்தபோது அக்கடலினின்று முன்னே மூதேவி தோன்றப் பின்னே இலக்குமி தோன்றின ளாதலால்,
இலக்குமிக்கு “பின்னை” என்று ஒருபெயர் வழங்கும்; பின்பிறந்தவளென்க:
அத்திருமகளுக்கு இனியபெருமா ளென்ற பொருளில் “பின்னைக்கினிய பெருமாள்” என்றன ரென்றலு மொன்று.

ப்ரஹ்மா, ஹம்ஸம், ரூபம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வேண்டி – விரும்பி யென்க.
இனி, அன்னத்திருவுருவத்தினுள்ளே வளர்ந்து அதற்கு ஓர் அண்டமாம் (அவ்வன்னத்திற்கு ஒருமுட்டையாம்)
என்னும்படி சிறந்தது மூதண்ட மென்று உரைப்பாரு முளர்.

————-

சூழிக் களிறு வெவ்வாய் முதலை துனித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்ப வன்தன்
ஊழிப் பொழுது ஒரு சேல் ஆய் ஒரு செல் வுள் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே –22–

(இ – ள்.) சூழி – தடாகத்தில் இறங்கிய,
களிறு – யானை (கஜேந்திராழ்வான்),
உய்ய – பிழைக்கும்படி,
வெவ் வாய் முதலை துணித்த – கொடிய வாயையுடைய முதலையைத் துண்டுபடுத்திய,
உக்ரம் – பயங்கரமான,
பாழி – வலிமையுள்ள,
திகிரி படை – சக்கராயுதத்தையுடைய,
அரங்க ஈசர் – ரங்கநாதர் –
படைப்பவன்தன் ஊழி பொழுது – சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமனது தினமான ஒருகற்பத்தின் முடிவில்,
ஒரு சேல் ஆய் – ஒப்பற்றதொரு மீன்வடிவமாகி, –
ஒரு செலு உள் கரந்த ஆழி பெரும் புனல் – (தனது) ஒருபுறமுள்ளினகத்தே யடங்குகின்ற பெரிய கடல்வெள்ளத்தில்,
காணாது – (வேதங்களையும் அவற்றைக்கவர்ந்துசென்ற சோமுகாசுரனையுங்) காணாமல்,
அ இடத்து தேடுவர் – அந்தஇடத்திலே (அவற்றைத்) தேடுபவராயினர்.

“தேவுடைய மீனமாயாமையாயேனமா யரியாய்க் குறளாய், மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பான் கோயில்” என்றபடி முக்கியமான தசாவதாரங்களின் மகிமைகளை இதுமுதற் கூறுகின்றார்.

(“நிலையிடமெங்குமின்றிநெடுவெள்ளமும்பர்வளநாடுமூட விமையோர்,
தலையிடமற்றெமக்கொர்சரணில்லையென்னவரணாவனென்னு மருளா,
லலை கடல்நீர் குழம்பவகடாடவோடி யகல்வானுரிஞ்சமுதுகில்,
மலைகளைமீது கொண்டுவருமீனைமாலை மறவாதிறைஞ்சென்மனனே,”

“வானோரளவும் முதுமுந்நீர்வளர்ந்தகாலம் வலியுருவின்,
மீனாய்வந்துவியந்துய்யக்கொண்டதண் டாமரைக்கண்ணன்” என்பன, பெரியதிருமொழி.

“தேவர்களெல்லையளவுஞ் செல்லக்கடல்வெள்ளம் பரந்தநாள், அத்தையடையத் தன்னுடை ஒருசெலுவிலே அடக்கவல்ல
மிடுக்கையுடைய மத்ஸ்யமாய் வந்து” என்ற வியாக்யாந வாக்கியமும் நோக்கத்தக்கது.

“அருமறையா ரிருக் கெசுர் சாமத்தினோடு மதர்வணமாகியசதுர்வேதங்கள்தம்மைத்,
திருடியெடுத்துக்கொண்டேயுததி சேருந்தீயனுக்காமச்சாவதாரமாய் நீ, ஒருசெலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே
வைத்துச்சிரத்தாற்சோமுகாசுரனைக்கொன்றிட், டிருளறவேவிதிபடைக் கவவ்வேதத்தை யிரங்கி
யளித்தனை யரியே யெம்பிரானே” என்றார் பின் னோரும்.)

செலு – மீனின்உடற்புறத்தேயுள்ள முள்; செதிள் எனவும்படும்: செலு உள் – அவ்வகைமுட்களின் இடையே குழிந்துள்ள இடம்.
இனி, செலு – மீன் செட்டை யெனப்படும் மீன்சிறகு என்றுங் கொள்வர்.

“மானயோசனையள வொழிமெய்யுருவாய்ந்த, மீனமாயின னெடுங்கடற்பரவையின்வீழ்ந்து,
கானவெண்டிரைக்கருங்கடலளறெழக்கலக்கிப், “போனவாளெயிற்றசுரனைத்தட வுறும்புகுந்து” (கந்தபுராணம் – உபதேசகாண்டம்),

“பரமன், உரைசெயற் கரியபருமநீளத்தோ, டொப்பிலாவகுலியாயடைந்தான்” (மகாபாகவதம்) என்றபடி,
எம்பெருமான் எண்ணிடற்கரிய மிகப்பலயோஜனை நீளமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்த பெருமீனான போது
அந்தமற்சியத்தின் ஒருசெலு வினகத்தே கடல்வெள்ளம்முழுவதும்ஒடுங்கும்படியிருந்ததென அதன்பெருமையைக் கொண்டாடுவார்

“ஒருசெலுவுட்கரந்த ஆழிப்பெரும்புனல்” என்றும், இங்ஙனம் தான் கொண்ட பெருமீன்வடிவைப்பார்க்கிலும்
கடல் மிகச்சிறிதாயிருக்கவும் அதில் வேதங்களையும் அசுரனையுங் காணாதவர்போலத் தேடினது
பாவனையாற்கொண்ட விளையாட்டே யெனக்கருதி அந்தத் திவ்வியலீலலையில் ஈடுபடுவார்
“காணாது தேடுவ ரவ்விடத்தே” என்றுங் கூறினார்.
“காணாது தேடுவர்” என்றதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டது.

இனி, திருமால் ஒருபெருமீன்வடிவானபோது அதனது ஒருசெலுவினகத்தே அவாந்தரப்பிரளயவெள்ளம்முழுவதும் அடங்கினதாக
அப்பெரும்புனலைக்காணாது வியந்து ஸப்தரிஷிகள் முதலியோர் அங்குத் தேடுவாராயின ரென உரைத்தலு மொன்று;

“முடங்குதெண்டிரையபௌவ முற்றுமோர்செலுவுட்சென்று, மடங்கியதுணரகில்லார் மயர்ந்தனர்
நேடியன்னோ, ரொடுங்கினரேத்தி நின்றா ருயர்வொப்பிலாதமேலோன், தடங் கொள்
சேலுருவின்மாண்பியாவரேசாற்றுநீரார்” என்ற ஸ்ரீபாகவதத்தைக் காண்க:
இவ்வுரைக்கு, ஏற்றஎழுவாய்வருவித்தல்வேண்டும். ஆய் = ஆக என எச்சத்திரிபாம்.
இனி, எழுவாய்செயப்படுபொருள்கள் வருவித்தலின்றி, அரங்கேசர் ஊழிப்பொழுதில் ஒருசேலாகித் தனது
ஒருசெலுவினகத்தே கரந்த ஆழிப்பெரும்புனலைக் காணாமல் அவ்விடத்துத்தேடுவாராயின ரென உரைத்தலும் அமையும்;
(இது, இந்நூலாசிரியரது ஆசார்யரான ஸ்ரீபராசரபட் டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
“பக்ஷநிகீர்ணோத்கீர்ண மஹாப்தி ஸ்தல ஜல விஹரண ரத கதி ரசத:” என்றதை ஒருசார்உட்கொண்ட தாம்.)
இனி, ஆழிப்பெரும்புனலை ஒருசெலுவினகத்தே கரந்த (மிகப்பெரிய) ஒருசேலா யென்று அந்வயித்து உரைத்தலுமாம்.

களிறுய்யமுதலைதுணித்த வரலாறு, உயர்திணையோடு அஃறிணையோடு பேதமற அடிமைப்பட்ட உயிர்களை
அன்போடு துயர்தீர்த்துப் பாதுகாத்தருள்கின்ற எம்பெருமானது கருணைமிகுதியைக் காட்டும்.
அங்ஙனம் தனது அடிமையான பிராணியினிடத்து அருளினால் அதற்குத்துன்பஞ்செய்தபிராணியின் விஷயமாகப்
பெருமான் தனது குளிர்ந்ததிருவுள்ளத்திலே கொடிய கோபத்தைக்கொண்டருளிய மகாகுணத்தில் ஈடுபட்டு இதனை யெடுத்துக் கூறினர்.

கஜேந்திராழ்வானை முதலைவாயினின்று காத்தருளுதற்பொருட்டு அதுகூப்பிட்டபின்பு மடுவின் கரைதேடிஓடிவந்ததுபோல
வரவேண்டாமல் நம்மை ஐம்பொறிவாயினின்று உடனேபாதுகாத்தற்பொருட்டு நாமிருக்கிற இந்த நிலவுலகத்திலே
கோயில்கொண்டருளின னென்பது தோன்ற,
“களிறுய்ய வெவ்வாய்முதலைதுணித்த வுக்ரபாழித்திகிரிப்படை யரங்கேசர்” என்றார்.
“முதலையும் மூர்க்கனுங் கொண்டதுவிடா” என்றபடி வாயினாற்பிடித்தபிடிவிடாத கொடியஇயல்பினதாதலால்,
“வெவ்வாய்முதலை” எனப்பட்டது;
யானையின் காலையேயன்றி அதற்கு இறைவனான எம்பெருமானது மனத்தையும் புண்படுத்திய கொடிய வாயையுடைய தென்றவாறுமாம்:
“கொடியவாய்விலங்கு” என்றார் திருமங்கையாழ்வாரும்.
இவ்வகையான கொடியபிராணியை எளிதிற்கொல்லுதற்கேற்ற மிகக்கொடிய வலிய படைக்கல மென்பது விளங்க,
“உக்ர பாழித் திகிரிப்படை” எனப்பட்டது.
“உய்ய” என்றது, இம்மையில் உயர்வாழ்தலையேயன்றி மறுமையில் வீடுபெற்றுவாழ்தலையும் உணர்த்தும்.

சூழி – குளம், நீர்நிலை. “சூழிக் களிறு” என்பதற்கு – முகபடாத்தை யணிந்த யானை யென்றுஉரைக்கலாகாது,
காடுமலைகளில் யதேச்சையாய்த்திரிந்துகொண்டிருந்த யானை யாதலால். அன்றி, முகபடாத்தையணிதற் கேற்ற
யானை யென இயற்கையடைமொழி கொண்டதுமாம்.
இனி, தன் இனமாகிய பல பெண்யானைகளினாற் சூழப்பட்டிருந்ததான ஆண்யானை யென்றலு மொன்று.
“உக்கிர” எனத் திரியாது “உக்ர” எனவே கொண்டது, செய்யுளோசைநோக்கி. உக்ரபாழி – நிலைமொழி வடமொழி யாதலின்,
அதன் முன் வருமொழிமுதல்வலி இயல்பாயிற்று. படுக்குங்கருவி; படுத்தல் – அழித்தல்; ஐ – கருவிப்பொருள்விகுதி.
படைப்பவன் – படைத்தற்றொழிற்கடவுள். படைப்பவன்தன் ஊழிப்பொழுது – பிரமனது பகலெனப்படுகின்ற கல்பத்தின் முடிவில்
நேர்ந்த அவாந்தரப்பிரளய காலத்தில்; இதுவே நைமித்திகப்பிரளய மெனப்படுவதும்

——–

(இதுமுதல் மூன்று கவிகள் – ஸ்ரீகூர்மாவதார வைபவம்.)

பாட்டுக்கும் முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவை குழல்
சூட்டுக்கும் நல்லவர் தென் அரங்கேசர் தொடு கடல் வாய்
மோட்டுக் கமடத் திரு உருவாகி முது முதுகில்
கோட்டுச் சயிலம் உழுவது என்னாத் துயில் கொண்டனரே –23-

(இ – ள்.) முத் தமிழ் – (இயல் இசை நாடகம்) என மூன்று வகைப்பட்ட தமிழும் வழங்குகின்ற,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூரில்,
வரும் – (பெரியாழ்வார் திருமகளாராய்) வந்து திருவவதரித்த,
பாவை – ஆண்டாளுடைய,
பாட்டுக்கும் – பாமாலைக்கும்,
குழல் சூட்டுக்கும் – (அவள்) தன்திருக்கூந்தலிலே சூடிக் கொடுத்த பூமாலைக்கும்,
நல்லவர் – திருவுள்ளமுகந்தவராகிய,
தென் அரங்க ஈசர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற தலைவரான நம்பெருமாள், –
தொடு கடல்வாய் – கடையப்படுகின்ற திருப்பாற்கடலில்,
மோடு கமடம் திரு உரு ஆகி – உயர்ந்த சிறந்த ஆமைவடிவமாகி,
முது முதுகில் கோடு சயிலம் உழுவது என்னா – வலிய (தனது) முதுகிலே சிகரங்களையுடைய மந்தரபர்வதம் தினவுசொறிவ தென்றெண்ணி,
துயில்கொண்டனர் – யோகநித்திரை கொண்டருளினர்; (எ – று.)

பாற்கடல்கடைந்தபொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள்வேண்டுகோளினால் திருமால்
பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின்கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம் படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பது பிரசித்தம்.
(“அந்தரத்துறையமரரு மசுரருங் கடையும், மந்தரத்தினை மறுகுமவ்வாரிதி மருவிச்,
சுந்தரப்பெருங்கமடமாய் முதுகினிற் சுமந்தான், சுந்தரத்தினிற்கவுத்துவங்கவினிய கண்ணன்” என்றது, பாகவதம்;

“மந்தரமத்தமிழ்ந்தாமற் பாற்கடற்குள் வளர்ந் தாதிகூருமமாய் மலையைத்தாங்கிச்,
சுந்தரவாசுகியை வடமாகச் சுற்றிச் சுராசுரர் நின் றமிர்தங் கடைந்த வந்நாள்” என்றார் பின்னோரும்.

அங்ஙனமிருக்கும்போது, விசைபடக்கடைகையில், பெரிய வலிய மந்தரகிரி தன்முதுகின் பரப்பெல்லாங் கொண்டு சுழன்றுவர,
அதனைத் தினவுசொறிகின்றவாறுபோலக் கொண்டு, துடைகுத்த உறங்குவார்போல, ஸ்ரீமகாகூர்மரூபியான பகவான்
இனிது துயின்றனனென, அப்பரமனது ஆற்றலையும் இளைப்பின்மையையும் எடுத்துக்காட்டினர்.

“செருமிகு வாளெயிற்ற வர வொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே,
வெருவரவெள்ளைவெள்ளமுழுதுங்குழம்பவிமையோர்கள் நின்று கடையப்,
பருவரையொன்றுநின்றுமுதுகிற்பரந்துசுழலக் கிடந்து துயிலும்,
அருவரையன்னதன்மையடலாமையான திருமால் நமக்கொரரணே” என்ற பெரியதிருமொழிப்பாசுரத்தின் கருத்தையுட்கொண்டது, இச்செய்யுள்.

“அழியும்பணிவெண்டிரைபுரட்டு மாழிவயிறுகிடங்கெழுந்து,
கிழிய நெடுமால்வரைதுளங்கிக் கீழ்வீழ்ந்திடலுந் தனிநின்று,
சுழலும்பசும் பொற்கிரிமுதுகுசொறிந்தாங்கணிதினிளநறவ,
முழுகுந்துளவோன்மோட் டாமையுருவமெடுத்துந்தாங்கினனால்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“இயல்புடைக்கமடம் வெரினிடைத்தினவங்கொழிந்தில ததனிலை யெளிதோ” என்றது, மகாபாகவதம்.

எப்படிப்பட்ட பெரிய பாரத்தையும் மிகஎளிதிற் பரிக்கவல்லவன் எம்பெருமா னென்பது இதிற் போதரும்.
உழுதலாவது – பூமியைக் கீறுதல்; இங்கே, இலக்கணையாய், தினவுசொறிதலைக் குறித்தது.
கலப்பை கொண்டுஉழுதலாற் பூமி வருந்தாதவாறு போல மலைதிரிதலாற் பெருமான் வருந்தாதிருந்தன னென்பதும்,
“உழுவது” என்றசொல்லினது ஆற்றலால் விளங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூராண்டாள் தனதுகூந்தலிற்சூடிக்கொடுத்த பூமாலைகளையும் பாமாலைகளையும் திருமால் திருவுள்ளமுகந்து
ஏற்றுக்கொண்டதனால், “வில்லிபுத்தூர்வரும் பாவை பாட்டுக்கும் குழற்சூட்டுக்கும் நல்லவர்” என்றார்.
“அன்னவயற்புதுவையாண்டா ளரங்கற்குப், பன்னு திருப்பா வைப்பல்பதியம் இன்னிசையாற்,
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை, சூடிக்கொடுத்தாளைச் சொல்லு” என்ற பெரியாரருளிச்செயலும்,
அதன் வியாக்கியானத்தில் “பெரியபெருமாளுக்கு வாசிக காயிக ரூப மாலாப்ரதையாய்” என்றதும் காணத்தக்கன.

வில்லிபுத்தூர் – பாண்டியநாட்டுத் திவ்வியதேசங்கள் பதினெட்டில் ஒன்று. மத்திமதீபமாக, “ஸ்ரீவில்லிபுத்தூர்வரும்பாவை” என்றதை,
முன்நின்ற பாட்டுக்கு என்றதனோடுங் கூட்டுக. இனி, பாட்டுக்கு – (அடியார்கள் பாடும்) பாடல்களுக்கு எனப் பொதுப்படக் கொள்ளுதலுமாம்.
பாடுவது, பாட்டு, சூடுதற்குரியது, சூட்டு. அகத்தியமுனிவரும் பாண்டியராசர்களும் சங்கப் புலவர்களும்
தமிழ்ப்பாஷையைத்தழைத்தோங்கச்செய்ததேசமான பாண்டி வளநாட்டிலுள்ள ஊராதலாலும்,
சங்கத்தமிழ்மாலைமுப்பதுந்தப்பாமே சொன்ன ஆண்டாளுக்கும் தமிழின்னிசைமாலைக ளுரைத்த பெரியாழ்வார்க்கும்
திருவவதாரஸ்தல மாதலாலும், “முத்தமிழ் வில்லிபுத்தூர்” எனப்பட்டது;
“செந்தமிழ்த்தென்புதுவை” என்றார் பெரியாழ்வாரும். முத்தமிழ்ப் பாட்டு என்று கூட்டவுமாம்.
பாவை – சித்திரப்பதுமைே்பா லழகியவள்; கண் மணிப்பாவைே்பா லருமையானவள்; உவமையாகுபெயர்.
நல்லவர் – இனியவர். தொடுகடல் – ஆழ்ந்த கடல் எனினுமாம்.

“மோட்டுக் கமடம்” என்றது, முதுகின் உயர்வுபற்றி. கமடம் – வடசொல். கமடத்திருவுரு = ஸ்ரீகூர்ம ரூபம்.
சயிலம் – ஸைல மென்ற வடசொல்லின் விகாரம்; கல்மயமான தென்பது காரணப்பொருள். என்னா – உடன்பாட்டெச்சம்.
துயில் – முதனிலைத்தொழிற்பெயர். முது முதுகு – முதிர்ந்த முதுகு.
“சயிலம் உழுவது என்னா” என்பதற்கு – மலை தன்முதுகின்மேல் ஊர்வ தென்றேனும் எண்ணாமல் என்று உரைத்தலுமாம்;
இப்பொருளில், “என்னா” என்பது – ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமாம்.

எம்பெருமானது பேரருளுடைமையும், வரம்பிலாற்றலுடைமையும் இதிற் கூறப்பட்டன.

———–

திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமைத் திரு உரு ஆய்
பரிக்கின்றதில் பெரும் பாரம் உண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தம் திருமேனியின் மேல்
தரிக்கின்றது மகரக் கடல் ஆடைத் தரா தலமே –24-

(இ – ள்.) மகரம் கடல் ஆடை தராதலமே – சுறாமீன்களையுடைய கடலை (உடுக்கும்) ஆடையாகக் கொண்ட (கடலாற் சூழப்பட்டதான) இந்தப் பூலோகம்முழுவதுமே,
பண்டு – பழமையாய் (அநாதிகாலமாய்),
நால்மறை நூல் விரிக்கின்ற உந்தி அரங்கேசர் – நான்குவகைப்பட்ட வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் விரிவாகப்புகழ்ந்துகூறப்படுகின்ற திருநாபியையுடைய திருவரங்கநாதர், தம் திருமேனியின்மேல் தரிக்கின்றது – (ஆதிகூர்மரூபியான) தமது திருமேனியின்மீது கொண்டு தாங்கப்பெறுகின்றது;
(என்றால், இப்பொழுது),
திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமை திருஉரு ஆய் பரிக்கின்றதில் – கடைந்துக கடையறப்படுகின்ற பொன்மயமான மந்தரமலை (கடலில்) அழுந்திவிடாதபூமியினை கூர்மரூபியாய் (அதனை)ச் சுமப்பதில்,
பெரும் பாரம் உண்டே – அதிகபாரம் உண்டோ ? (இல்லையென்றபடி).

கீழேழுலகங்களுக்கும் கீழே அஷ்டதிக்கஜங்களும் அஷ்டமகாநாகங்களும் நாகராஜனான ஆதிசேஷனும் இருந்து உலகங்களைத் தாங்க,
அவ்விடத்திற்குக்கீழே திருமால் ஆதிகூர்மரூபியாய் எழுந்தருளியிருந்து அவையனைத்தையும் எளிதில் ஒருமலரைப்போலவும்
அணுவைப்போலவும் தன்முதுகின் மீது கொண்டு தாங்குகின்றன னென்பது, நூற்கொள்கை;
மேல் 12 – ஆஞ் செய்யுளில் “தொல்லைக்கமடத்தல நவகண்டந் தொடுகடல்நீர்” என்பதுங் காண்க.
அங்ஙனம்ஈரேழுலகங்களையும் அவற்றைத்தாங்கும் பலவற்றையும் ஆதிகூர்மரூபியாய் எப்பொழுதும் எளிதில்தாங்குகின்ற
ஸ்ரீமந்நாராயணனது வரம்பிலாற்றலுக்கு, அப்பதினான்குஉலகங்களுள்ஒன்றான நிலவுலகத்திலே யுள்ள பலமலைகளில் ஒன்றாகிய
மந்தரகிரி யொன்றைக் கடலில் அழுந்தாதபடி கூர்மரூபங்கொண்டு சிறிதுபொழுது தாங்குதல் ஒருபொருளாமோ? என்பது கருத்து.
அதனைப்பரித்தவனுக்கு இது எவ்வளவு? எனத் தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி தொனிக்கின்றது.

பொன் குன்று – பொன்னையுடைய மலை; அழகிய மலை யெனினுமாம். பாரம், மகரம், தராதலம் – வடசொற்கள்.
பண்டு தரிக்கின்றது என இயையும். உண்டே, ஏகாரம் – எதிர்மறை. மறை நூல் – உம்மைத் தொகை;
மறையாகிய நூல் என இருபெயரொட்டுப்பண்புத்தொகையுமாம்.
“கடல் வாழ் சுறவு” என்றபடி மகரமீன் கடலிலேயே வாழு மியல்பின தாதலால், “மகரக்கடல்” என்றார்.
பூமியைச் சூழ்ந்துள்ளதான கடலை, பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாக வருணித்தல், கவிசமயம்.

———–

ஓர் உரு வெற்பைத் தரித்தது -தானவர் உம்பர் உள்ளாய்
ஈர் உரு நின்று கடைந்தது வேலை -இதனுடை ஓர்
பேர் உரு இன் அமுதோடு பிறந்தது பெண்மை கொண்டு ஓர்
நார் உரு நின்றது அரங்கா இது என்ன நல் தவமே –25-

(இ – ள்.) அரங்கா – ரங்கநாதனே! (திருப்பாற்கடல்கடைகின்ற காலத்தில்),
ஓர் உரு – (உனது) வடிவமொன்று,
வெற்பை தரித்தது – மந்தரமலையைத் தாங்கியது;
ஈர் உரு – (உனது) இரண்டு வடிவங்கள்,
தானவர் உம்பர் உள் ஆய் நின்று – அசுரர்களுள்ளும் தேவர்களுள்ளும் பொருந்தி நின்று,
கடைந்தது – (அக்கடலைக்) கடைந்தன;
ஓர் பேர் உரு – (உனது) மற்றொரு பெரிய வடிவம்,
வேலையிதன் இடை – அக்கடலின்நடுவில்,
இன் அமுதோடே – இனிய அமிருதத்துடனே,
பிறந்தது – தோன்றியது;
ஓர் நார் உரு – அன்புசெய்யத்தக்க (உனது) மற்றொருவடிவம்,
பெண்மை கொண்டு நின்றது – பெண் தன்மையைக்கொண்டு நின்றது;
இதுஎன்ன நல்தவம் – இப்படி நீ ஒருகாலத்திற் பலவடிவங்களைக்கொண்டு அநுக்கிரகித்தது என்ன நல்ல தவத்தின் பயனோ! (எ – று.)

பாற்கடல்கடைகின்றபோது ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மகாகூர்மரூபத்தைத் தரித்து
மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்ததனால் “ஓருரு வெற்பைத்தரித்தது” என்றும்,
அப்பொழுது வாசுகியின்வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய
இருதிறத்தாரும் அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையற்றவராய் நிற்க அதுநோக்கி
அத்திருமால் தான்ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள்பக்கத்திலேயும்
வேறொருதிருமேனி யைத்தரித்து அசுரர்கள்பக்கத்திலேயும் நின்று வாசுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்ததனால், ‘தானவரும்பருள்ளாய் ஈருரு நின்றுகடைந்தது” என்றும்,
அப்பால் அந்தஸ்ரீமகாவிஷ்ணு தந்வந்திரியென்னுந் தேவரூபத்தைத் தரித்து அமிருதபூர்ணமான கமண்டலத்தைக்
கையிலெடுத்துக்கொண்டு அந்த க்ஷீரசமுத்திரத்திலிருந்து உதயமானதனால் “வேலையிதனிடை ஓர் பேருரு இன்னமுதோடே பிறந்தது” என்றும்,
அப்பொழுது அசுரர்கள் தந்வந்திரியின்கையிலிருந்த அமிருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்ள
அந்த எம்பெருமான் ஜகந் மோஹநகரமான ஒருஸ்திரீரூபத்தைத் தரித்து அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக்
கைக்கொண்டு அமரர்கட்குப் பிரசாதித்ததனால் “பெண்மை கொண்டு ஓர்நாருரு நின்றது” என்றுங் கூறினர்.

“அரங்கா இதுஎன்ன நல்தவம்” என்றது, இப்படி நீ ஏககாலத்தில் அநேகரூபங்களைக்கொண்டுசேவை
சாதித்துப் பலவாறுஉதவும்படி அத்தேவர்கள் என்னநல்தவஞ்செய்திருந் தார்களோ வென வியந்தவாறாம்.
இவ்வரலாற்றால், தன்சிரமம் சிறிதும்பா ராட்டாமலே சமயோசிதமானரூபங்களைக்கொண்டு
தன்னைச்சரணமடைந்த வரைப் பரிபாலிக்கும் பகவானது கருணை வெளியாம்.

தாநவரென்ற வடசொல் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். உம்பர் என்ற மேலிடத்தின்பெயர் – இடவாகுபெயராய், மேலுலகத்தில் வசிக்கின்றவர்களான தேவர்களைக் குறிக்கும்.
“ஈருரு கடைந்தது” என்றது, பன்மையொ ருமை மயக்கம்; “இரண்டுகண்ணுஞ் சிவந்தது” என்றாற்போல; (தனித்தனி) கடைந்த தென்க.
“வேலையிதனிடை” என்றதில் “இது” என்றது – பகுதிப் பொருள்விகுதியாய் நின்றது; அன் – சாரியை.
இனி, வேலைகடைந்தது என்று இயைத்துவிட்டு, இதனிடை என்று எடுத்தலுமாம், நார் – அன்பு.

—————

இது முதல் 3 பாசுரங்கள் ஸ்ரீ வராக அவதார வைபவம் –

ஆருக்கு இவரை அளவிடல் ஆம் -தென் அரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக பழிப்பு இல் பெரும்
சீர் உற்ற செங்கண் கரும்பன்றி ஆகி திருக் குலம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே –26-

(இ – ள்.) தென் அரங்கர் – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப் பவரான எம்பெருமான், –
தலைநாளில் – முன்னொருகாலத்திலே,
இந்த பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்குஆக – இந்தப்பூமிக்குஉண்டாகிய துன்பத்தை யொழிப்பதற்காக,
பழிப்பு இல்பெருஞ் சீர் உற்ற செம் கண் கரும் பன்றி ஆகி – குற்றமில்லாத மிக்க சிறப்புப் பொருந்தியதும் சிவந்த கண்களையுடையதும் கருநிறமுள்ளது மான வராகாவதாரமாய், திரு குளம்பில் மேரு கணகணம்ஆ – தமது திருவடிக்குளம்பின்கீழே மகாமேருகிரி மிகவுஞ் சிறியதொருபொருளாகும்படி,
வினோதிப்பர் – விளையாடியருளினர்;
(ஆதலால்), இவரை அளவுஇடல் ஆருக்கு ஆம் – இவருடைய பெருமையை அளவிட்டுச்சொல்லுதல் யார்க்குக்கூடும்?
(இவர் பெருமையை உள்ளபடி மதித்துச் சொல்லுதல் எத்துணை வல்லவர்க்கும் அரிய தென்றபடி); (எ – று.)

பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துப்போன இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடிவிரிப்பதற்காகவும்,
பூமிக்குநேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காகவும் எடுத்த திருவவதார மாதலால்,
“பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக” என்றார்.
இழிந்தபிறப்பென்னுங் குற்றம் இந்தத் திவ்வியவராகமூர்த்திக்கு இல்லை யென்பது விளங்க, “பழிப்பில் பெருஞ்சீருற்ற” எனப்பட்டது.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிற்குதித்துக் குழந்தையையெடுக்குந் தாய்போலப் பூமி கடலினுட்புக்க வளவிலே
நீருக்குஞ்சேற்றுக்கும்பின்வாங்காத வராகரூபமாய்க் கடலினுட் புக்குப் பூமியை மேலேயெடுத்து நிறுத்திய
மகோபகாரகனே பிறவிப்பெ ருங்கடலினின்று உயிர்களை ஈடேற்றுதற்குத் தஞ்சமாகத்தக்கவ னென்றது இங்குத் தொனிக்கும்;

“ஏனத்துருவா யுலகிடந்த வூழியான் பாதம் மருவாதார்க் குண்டாமோ வான்”,
“வராகத், தணியுருவன் பாதம் பணியு மவர் கண்டீர், மணியுருவங் காண்பார் மகிழ்ந்து,”
“எறிதிரைவையமுற்றும், எனத்துருவாயிடந்தபிரா னிருங்கற்பகஞ்சேர், வானத்தவர்க்கு மல்லாதவர் க்கு
மற்றெல்லாயவர்க்கும், ஞானப்பிரானை யல்லா லில்லை நான்கண்ட நல்லதுவே” என்றார் ஆழ்வார்களும்.
கொடிய அசுரன்மீது கோபத்தாற் கண்கள்சிவந்தன வென்க. புண்டரீகாக்ஷனான திருமாலின் அவதார மாதலால்,
செந்தாமரைமலர்போன்ற கண்க ளென்னவுமாம்.
“மலர்ந்தசெந்தா மரைமலரை யொத்த திருக்கண்களுடையவனும், கருநெய்தற்பூவையொத்து விளங்குந்
திருமேனியுடையவனுமான மகாவராகரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன் கோட்டுநுனியாலே பூமியைஉயரவெடுத்து
மகாநீலமலைபோலப் பாதாளத்தினின்றும் எழுந்தருளினான்” என்றது, விஷ்ணுபுராணம்.

“நீலவரை யிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட வெந்தாய்” என்று
ஆழ்வார்அருளிச்செய்த படி, நீலவராக மாதலால், “கரும்பன்றி” எனப்பட்டது.
சிவ புராணங்களிற் கூறியபடி சுவேதவராகத்தைக் குறிப்பதாயின், கருமை – பெருமை யென் னலாம். குளம்பு – குரம்.
“திருக்குளம்பில் மேரு கணகணம்ஆ” என்பதற்கு – காற்குளம்பின்கீழே மேருகிரி
(அகப்பட்டுச் சிலம்பென்னுங் காலணியினுள்ளே யிடப்பட்ட சிறிய பருக்கைக்கற்கள் போலக்)
கணகணவென்று ஒலிக்கும்படி யென்றும் உரைக்கலாம்; கணகணத்தல் – ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம்.
“சூரமத்யகதோ யஸ்ய – மேரு: கணகணாயதே,”
“சிலம்பி னிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத் திருவாகாரங், குலுங்க
நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடைவைத்தரு ளிய வென்கோமான் கண்டீர்,”
“தீதறுதிங்கள் பொங்குசுட ரும்ப ரும்ப ருலகேழினோடு முடனே, மாதிர மண்சுமந்த வடகுன்று நின்ற மலையாறு மேழுகடலும்,
பரதமர்சூழ்குளம்பி னகமண்டலத்தி னொருபா லொடுங்க வளர்சே, ராதிமுனேனமாகி யரணாய மூர்த்தியது நம்மையாளுமரசே” என்பன காண்க.

ஆருக்கு ஆம் எனஇயையும். ஆருக்கு அளவிடல் எனஇயைத்து, இவரை(த் திருவுருவத்தின்பெருமையில்)
யார்க்கு ஒப்புச்சொல்லலாகு மென்னவுமாம். பார் – பார்க்கப்படுவது என்றாவது பருமையுடையதென்றாவது பொருள்படும் காரணக்குறி.
“செங்கட்கரும்பன்றி” என்றவிடத்துத் தொடைமுரண் காண்க. “தலைநாளில் வினோதிப்பர்” என்றது, இயல்பினால் வந்த காலவழுவமைதி;
“இறப்பே யெதிர்வே யாயிருகாலமுஞ், சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி” என்ற தொல்காப்பியச்சூத்திரத்தின் உரையில்
“இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர்” என்பது உதாரணங் காட்டப்பட்டுள்ளது.

——–

மருமலர்க் கோயில் மடமான் விரும்பும் மதில் அரங்கர்
பெருமையை பேசுவது எப்படி நாம் பிறைவாள் எயிற்றுக்
கரு முகில் கோலப் பெரும் பன்றி ஆய களேபரத்தின்
ஒரு மயிர்க்காலடி யூடே கடல் புக்கு ஒளிந்தனவே –27-

(இ – ள்.) பிறை – பிறைச்சந்திரன்போன்ற,
வாள் எயிறு – ஒளியுள்ள பற்களையும்,
கரு முகில் – காளமேகம்போன்ற (கருநிறமுள்ள),
கோலம் – திருமேனியையு முடைய,
பெரும் பன்றி ஆய – மகாவராகமாகிய,
களேபர த்தின் – திருமேனியினது,
ஒரு மயிர்க்கால் அடிஊடே – ஒருமயிர்க்காலினது அடியிடத்திலேயே,
கடல் புக்கு ஒளித்தன – (ஏழு) கடல்களும் பிரவேசித்து மறைந்தன; (என்றால்), –
மரு மலர் – வாசனையுடைய செந்தாமரைமலரை,
கோயில் – இருப்பிடமாகவுடைய,
மட மான் – மடப்பத்தையுடைய மான் போன்றவளாகிய திருமகள்,
விரும்பும் – விரும்பப்பெற்ற,
மதில் அரங்கர் – மதில்கள்சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானு டைய,
பெருமையை – மகிமையை,
நாம் பேசுவது எப்படி – நாம் புகழ்ந்து சொல்வது எவ்வாறு? (எ – று.)

மகாவராகமூர்த்தியின் பெருமை நம்மால் அளவிட்டுச் சொல்லுதற்கரிது என்பதாம்.
பிறை – வளைந்த வடிவிலும், வெண்மையான ஒளியிலும் வக்கிர தந்தத்திற்கு உவமை;
“நீலவரையிரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்பக், கோல வராகமொன்றாய்” என்றது காண்க.
வாள் எயிறு – வாள்போலக் கூரிதாய் விளங்கும் பல் லெனினுமாம். களேபரம் – வடசொல்.
மயிர்க்கால் – ரோமத்வாரம், ரோமகூபம், மடமை – இளமையும், பேதைமையுமாம். மான் – உவமையாகுபெயர்.
மருண்டநோக்கில் மகளிர்க்கு மான் உவமை கூறப்படும். மான்விரும்பும் அரங்கர் எனஇயையும்:
திருமகளால் விரும்பப்படும் அரங்கர்; திருமகளை விரும்பும் அரங்கர் எனினுமாம்.
எப்படி – வினா, எதிர்மறைகுறித்தது; முன்செய்யுளிலும், பின்செய்யுள்களிரண்டிலுங்காண்க;
“செம்பொன் மதி லேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்கிறபடி ஸப்தப்ரகாரங்கள்சூழ்ந்த தென்பது தோன்ற,
மதிலரங்க மெனப்பட்டது. அடியூடே, ஏ – இழிவுசிறப்பு.
கடல் – பால்பகா அஃறிணைப்பெயராய் இங்குப்பன்மைகுறித்தலால், “ஒளித்தன” என்னும் பன்மைமுற்றைக் கொண்டது.

————

நிறக்கும் செழும் சுடர்க் கோடும் இப்பாரும் நிசா முகத்துச்
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக் குஞ்சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகம் அது ஆயப்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –28-

(இ – ள்.) நிறக்கும் – நிறங்கொண்ட,
செழுஞ் சுடர் – மிக்க ஒளியையுடைய,
கோடும் – (ஸ்ரீவராகமூர்த்தியினது) வக்கிரதந்தமும்,
இ பாரும் – (அதனாற் குத்தியெடுக்கப்பட்ட) இந்தப்பூமியும், (முறையே),
நிசாமுகத்து சிறக்கும் பிறையும் – இராப்பொழுதின்தொடக்கமாகிய மாலைப்பொழுதிலே சிறப்பாய் விளங்குகிற பிறைச்சந்திரனையும்,
களங்கமும் – (அதனிடத்துள்ள) மறுவையும்,
போலும் – ஒக்கும்:
எனின் – என்றால், –
சிறு கண் – சிறிய கண்களையும்,
மறம் – வலிமையையுமுடைய,
குஞ்சரம் – (குவலயாபீடமென்னும்) யானையை,
செற்ற – கொன்ற,
மாயோன் – கண்ணபிரானாகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
வராகம்அது ஆய் பிறக்கும் – பன்றிவடிவமாகத் தோன்றிய,
பிறப்பின் – திருவவதாரத்தின்,
பெருமை – பெருமையை,
இனி பேசுவது எ ஆறு – இனி (நாம்) சொல்லுவது எப்படி? (இயலா தென்றபடி); (எ – று.)

இந்நூலாசிரியர்தம் ஆசாரியரான பராசரபட்டரது திருத்தந்தையாராகிய ஸ்ரீகூரத்தாழ்வான் அருளிச்செய்த ஸுந்தரபாஹுஸ்தவத்தில்
“புராவராஹஸ்ய தவேயமுர்வரா தம்ஷ்ட்ராஹ்வயேந்தோ: கில லக்ஷ்ம லக்ஷிதா” என்றதை அடியொற்றியது இச்செய்யுளென்னலாம்;

“கிளரகன்புனலுணின்றரி யொர்கேழலாய், இளையெனுந் திருவினை யெய்தினானரோ,
உளைவரும் பெருமையோரெயிற்றினுட்புரை, வளரிளம்பிறையிடை மறுவிற் றோன்றவே” என்ற கம்பராமாயணமுங் காண்க.
வக்கிர தந்தத்தாற் குத்தியெடுக் கப்பட்டதான பெரிய பூமி அதிலே பிறையினிடத்துக்களங்கம்போல மிகச் சிறிதாய்க் காணப்பட்ட தென,
அந்தமகாவராகரூபத்தின் பருமையை விளக்கியவாறாம்;

“பன்றியாய்ப் படியெடுத்த பாழியா யென்ப ரது, வென்றி யாருனதெயிற்றின் மென்றுகள் போன் றிருந்ததால்”
என்பர் திருவரங்கக் கலம்பகத்தில்:
“ஏனமொன்றாய் மண்துகளாடி” என்றது, திருவிருத்தம்;
“மஹாவராஹத்தினுடைய திருவெயிற்றுக்கு, ப்ரளயார்ணவகதையான பூமி, ஒருகஸ்தூரிபிந்துவாலே
அலங்காரமிட்டாற்போலே யிருக்கை” என்றது, அதன் வியாக்கியானம்.

“சுறவமெறிகடல்வலயமுழுவது மோர்நுண்டுகளிற் றுலங்குகோட்டி, னுறைவதனைத் தனிநோக்கி” என்ற கூர்மபுராணத்தையும்,
“கருமையிற் றவழக் கலையினிற்றெறிசேதகமெனக் காசினி கோட்டின்,
மருவ வாண்டிருணியாகியபரம னெழுந்து தான் வருகின்றவெல்லை” என்ற மகாபாகவதத்தையும்,

“செய்யதாமரைநான்முகன்செய்தருள், வையம் யர்வு மருப்பிற் றுகளென, வெய்துகொண்டு விரிக்கு மொராயிரம்,
பையரா முடியுச்சி பதித்ததால்” என்ற கந்தபுராணத்து உபதேசகாண்டத்தையுங் காண்க.
“கோடும் பாரும், பிறையுங் களங்கமும் போலும்” என்றது, உவமையணி.
கோடு பிறையையும், பார் களங்கத்தையும் போலும் என முறையே சென்று இயைதலால் முறைநிரனிறைப்பொருள்கோள்;
நிரனிறையணி யெனவும்படும்: க்ரமாலங்கார மென்பர் வடநூலார்.

நிஸாமுகம், களங்கம், குஞ்ஜரம், வராஹம் – வடசொற்கள். கண்சிறுத் திருத்தல், யானைக்கு உத்தமவிலக்கணம்;
“தீயுமிழ் சிறுகணூஞ் செம்புகரு முடைத்தாய்” என்ற அரசயானையிலக்கணத்தைக் காண்க. மறம் – கோபமும், கொலையுமாம்.
குஞ்சரம் என்பது – காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்ப தென்றும், துதிக்கையையுடையதென்றும் காரணப்பொருள்படும்;
குஞ்சம் – புதரும், துதிக்கையும். மாயோன் – மாயையையுடையவன்; மாயையாவது – செய்தற்கு அரியன செய்யுந்திறம்:
பிரபஞ்சகாரணமான மூலப்பிரகிருதியுமாம்; ஆச்சரியகரமான குணங்களுஞ் செயல்களு மென்னலுமாம்.
“வராகமது” என்றதில், “அது” என்பது – பகுதிப்பொருள்விகுதி.

—————

இது முதல் நான்கு பாசுரங்கள் ஸ்ரீ நரசிம்மாவதார வைபவம் –

ஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா
நீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்
ஊடும் புறத்தினும் உண்மை எவ்வாறு இவ்வுலகு அறியும்
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே –29-

(இ – ள்.) ஆடும் – படமெடுத்து ஆடுகின்ற,
அரவில் – ஆதிசேஷனிடத் தில்,
துயில் – யோகநித்திரைசெய்தருள்கின்ற,
அரங்கஈசன் – ரங்கநாதன்,
அரு மகற்கு ஆ – (பெறுதற்கு) அரிய மகனாகிய பிரகலாதனுக்காக,
நீடும் தறியில் உதித்திலன் ஏல் – நீண்ட தூணினின்று (நரசிங்காவதாரமாய்த்) தோன்றியிலனானால், –
ஈடும் எடுப்பும் இல்லா ஒரு தெய்வம் இவன் என – (தனக்கு) ஒப்பானபொருளும் (தன்னிலும்) மேம்பட்டபொருளு மில்லாத ஒன்றான கடவு ளிவனே யென்று (எல்லாரும்) நிச்சயிக்கும்படி,
நிகிலம் பொருள்கள் ஊடும் புறத்தினும் உண்மை – எல்லாவஸ்துக்களினுடைய உள் ளிலும் வெளியிலும் (அத்திருமால்) உளனாந்தன்மையை,
இ உலகு எ ஆறு அறியும் – இந்தஉலகம் எப்படி அறியும்? (அறியா தென்றபடி); (எ – று.)

(“அளந்திட்ட துணை யவன்தட்ட வாங்கே, வளர்ந்திட்ட வாளுகிர்ச் சிங்க வுருவாய்,
உளந்தொட் டிரணிய னொண்மார்பகலம், பிளந்திட்ட கைகள்,”
“எங்கு முளன் கண்ணனென்ற மகனைக் காய்ந், திங்கில்லையா லென்றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே யவன் வீயத் தோன்றிய வென், சிங்கப்பிரான் பெருமை யாராயுஞ் சீரமைத்தே” என்றார் ஆழ்வார்களும்.)

வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால் “முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது”
என்று சங்கிக்கக் கூடுமாதலால் அதற்கு இடமில்லாதபடி அவ்விரணியன்தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து
அளந்து நாட்டின அவன் வாயில் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றின னென்பதும்,
வேறுயா ரேனும் கையால்தட்ட அத்தட்டியஇடத்திலிருந்து தோன்றினால்
“அவர் தம்கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டுவந்து தூணிலே பாய்ச்சினர்” என்று சொல்லக்கூடு மாதலால்
அதற்குஇடமில்லாதபடி அவ்விரணியன் தானே தன்கையால் தட்டியவளவில் திருமால் தோன்றின னென்பதும்,
அவன் ஓரிடத்தில்தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் “எங்கும்உளன்” என்று பிரகலாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி
“நீ சொல்லுகிறவன் இங்கு இல்லை” என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்கு மாதலால் அதற்கு இடமில்லாதபடி
அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால்தோன்றி னனென்பதும்,
அவன் தட்டினபின்பு சிறிது நேரங்கழித்து நரசிங்கம் தோன்றினால் “நான் தட்டினபொழுது திருமால் அங்கு இல்லை” என்று
அவன் சொல்லித் திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கின்ற உண்மை
நிலையை மறுக்கக்கூடு மாதலால் அதற்குமிட மில்லாதபடி கர்ப்பம் கருமுதிர்தல் பிரஸவம் முதலியனவும்
குழந்தையாய்ப் பிறத்தல் பிறகு நாளடைவில்வளர்தல் என்பனவும் இல்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த
வடிவையுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும், அங்ஙனம் தோன்றியவிடத்தும் இரணியன் வெல்லவும்
நரசிங்கமூர்த்திதோற்கவுமானால் “எங்கும்உளன்” என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியாமற்போய்விடுதல்பற்றி
அதனினும் தோன்றாதிருத்தலே நலமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாதுஅழித்தன னென்பதும்,
தேவர் மனிதர் விலங்கு தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களி லுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும்
தனித்தனி சாகாதபடியும் பிரமசிருஷ்டிக்குஉட்பட்ட எந்தப்பிராணியினாலும் சாகாதபடியும் அவன் பிரமருத்திராதிகளிடத்துப் பெற்ற
பெருவரம் பழுதுபடாதிருத்தல் வேண்டி நரங்கலந்த சிங்கமாய்த் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றின னென்பதும்,
அஸ்திரசஸ்திரங்களில்ஒன்றினாலும் சாகாதபடியும் ஈர முள்ளதனாலும் ஈரமில்லதனாலும் இறவாதபடியும் பெற்ற வரம்
வீண்போகாதவாறு நகங்களினாற்கீண்டு கொன்றனனென்பதும், பகலிலும்இரவிலும் சாகாதபடி பெற்ற வரம் பொய்படாதவாறு
அப்பகலிரவுகளின்சந்தியாகிய மாலைப்பொழுதிற் கொன்றனனென்பதும், பூமியிலும் வானத்திலும்சாகாத படி பெற்ற வரத்தை
ஒதுக்குமாறு தன்மடிமீதுவைத்துக் கொன்றனனென்பதும், வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதபடி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாயிற்படியின்மீதுவைத்துக்கொண்டுகொன்றன னென்பதும் முதலியன – அருமையாகக் கருதத்தக்க விஷயங்கள்.

“சுர ரசுரர் முனிவர் நரர் கையிற் பாரிற் சுடர்வானிற் பக லிரவி லுள் புறம்பிற், பெரும் படையிற் றான்
சாகாவிரண்யன்றனைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்; நரகரியாய்ப்பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்
துயர்வாசற்படிமீதேறி, இரணியனைத்தொடைமிசைவைத் துகிரினாலே யிருபிளவாக்கினை யரியே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.

ஸர்வவ்யாபியான பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனே யென்ற உண்மை இத்திருவவதாரத்தின் செயல்களால்
நன்குவிளங்கியதை இப்பாசுரத்தில் எடுத்துக்காட்டினர்.
கடவு ளுண் டென்பதும், அக்கடவுள் திருமாலே என்பதும் இவ்வவதாரத்தினாற் சாதிக்கப்பட்டமை வெளிப்படை.
உயிர்கள் உய்தற்பொருட்டு இவ்வுண்மையைப் பிரதியக்ஷமாக்கியருளினன் எம்பெரு மான்.
அங்ஙனந்தோன்றாமற்போனால் இறைவன் தா னென்பது ஒழியு மென்க.

(“நாரணப்பெயரினா னவையிலாதொளிர்செகற், பூரணச்செயலி னைப்பொலிவுசெய்தருள்வதோர்,
காரணத்தினி னெடுங்கதிர்மணித்தறியில் வந், தாரணத்தினை வளர்த் தவுணனைக்கொன்ற நாள்” என்னும்
இருசமய விளக்கத்தையுங் காண்க.)

“அருமகன்” என்றது, தந்தைக்கு மைந்தனிடம் இயல்பாக இருத்தற்கு உரிய அன்புவிசேடத்தைக் காட்டும்;
அன்றி, “எங்குமுளன் கண்ணன்” என்ற அருமையான பரமார்த்தத்தை எளிதில்வெளியிட்ட மகோபகாரகனான
புதல்வ னென்ற பொருளில் “அருமகன்” என்றாருமாம்.
தனது இளமைப்பருவ முடையகுழந்தை அசங்கதமானதொருவார்த்தையைச் சொன்னாலும் அந்த மழலைச் சொல்லைச்
செவிக்கின்பமாகக்கேட்டு மகிழ்தலும், அவ்விளமகன் தானே தக்கதொருவார்த்தையைக்கூறினால் அதற்கு
மிகமகிழ்ந்து மகனைப் பாராட்டுதலு மாகிய தந்தையியல்பிற்கு மாறாக
இரணியன் பிரகலாதனைப் பகவந்நாமஞ்சொன்ன துவே ஏதுவாக “இவன் என்புத்திர னன்று” என்று கைவிட்டிருக்கவும்,
எம்பெருமானுக்கு அந்தப் பிரகலாதன்பக்கல் உண்டான புத்திரவாத்ஸல்யமும், பகவந்நாமஞ்சொன்னவர்களைத்
தமக்கு எல்லாவகை யுறவினராகவுங் கொள்ளுகின்ற தமதுஇயல்பும்பற்றி, ‘அருமகன்’என்றன ரென்னலாம்.
அவன் தாய்வயிற்றிலிருக்கும்பொழுதேதொடங்கித் தன்சித்தத்தை எம்பெருமான்பக்கல் வைத்த
மகாபாகவதோத்தம னாத லாலும் இங்ஙனங் கூறத்தகும்.

ஈடு மெடுப்பு மில்லா வொருதெய்வம் – “ஒத்தார் மிக்காவை யிலையாய மாமாயா” என்றார் திருவாய்மொழியிலும்.
திருவாய்மொழியில் “ஈடு மெடுப்பு மி லீசன்” என்றதற்கு – சிலரைத் தாழ்ந்தவரென்று உபேக்ஷித்து இட்டு வைக்கையும்
வேறு சிலரை உயர்ந்தவரென்று அங்கீகரித்து எடுத்துக்கொள்ளுதலு மில்லாமல் எல்லார்க்கும் ஸமாநனான
நடுவு நிலைமையுடையவ னென்று பொருள்செய்திருத்தலால், அங்ஙனங் கொள்ளவுந் தகும்.
“உலகு” என்றது, உலகத்துஉயிர்களை; அறிதற்குரியன அவையே யாதலால். புறத்தின், இன் – ஏழனுருபு,
நரசிங்கமூர்த்தியாகிய சூரியன் தோன்றுதற்குத் தூண் உதயபர்வதமாயிருந்த தென்ற கற்பனை, “உதித்திலன்” என்ற சொல் லாற்ற லாற் போதரும்.

————

மறந்த மறையும் மழுங்கிய மந்திரமும் மகமும்
இறந்த தெய்வங்களும் எல்லாம் முன் எங்கு உறைந்து எங்கு இயன்ற
அறம் தரும் கோயில் அரங்கன் அவ் ஆள் அரிக்கு ஆளரியாய்ப்
பிறந்த பின் அன்றோ பிறந்து பெருகிப் பிறங்கியதே –30-

(இ – ள்.) மறந்த மறையும் – மறக்கப்பட்ட வேதங்களும்,
மழுங்கிய மந்திரமும் – விளங்காமற்போன மந்திரங்களும்,
மகமும் – யாகங்களும்,
இறந்த தெய்வங்களும் – ஒழிந்துபோன தெய்வங்களும்,
எல்லாம் – ஆகிய இவையெல்லாம்,
முன் – முன்பு,
எங்கு உறைந்து எங்கு இயன்ற – எங்குத் தங்கி எவ்விடத்திற் சஞ்சரித்தன!
அறம் தரும் கோயில் அரங்கன் – தருமத் தை நிலைநிறுத்துகின்ற திருவரங்கம்பெரியகோயிலிலெழுந்தருளியிருப்பவனான எம்பெருமான்,
அ ஆள் அரிக்கு ஆள் அரி அய் – அந்தப் பராக்கிரமத் தையுடைய பகைவனான இரணியனை யழிப்பதற்காக நரசிங்கவடிவமாய்,
பிறந்த பின் அன்றோ – திருவவதரித்தபின்பன்றோ,
பிறந்து பெருகி பிறங் கியது – (அதெல்லாம்) தோன்றிப் பெருக்கமடைந்து விளங்கிற்று!! (எ – று.)

இரணியன் பிறந்து வளர்ந்து அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுத் தலையெடுத்துச் செருக்கி உலகத்திலே எவரும்
பழையகிரமப்படி வேத மோதவும் மந்திரஜபங்கள்செய்யவும் யாகங்கள்புரியவும் தெய்வங்களை வழி படவுங் கூடா தென்றும்,
தன்னையே கடவுளாகக் கொண்டு அனைவரும் துதித்து வந்தித்து வழிபடவேண்டு மென்றும் கட்டளையிட்டு
அவ்வாணையை எங்குந் தவறாமற் செலுத்திவந்தகாலத்தில் வேதமுதலியன யாவும் இருக்கின்ற இடமும்தெரியாதபடி மறைந்திருந்ததையும்,
இப்படிசிலகாலம்கழி ந்த பின்னர் எம்பெருமான் நரசிங்காவதாரஞ்செய்து இரணியனைத்தொலைக்க அதன்பிறகு
அவ்வேதமுதலியவனைத்தும் தலையெடுத்ததையும் எடுத்துக் காட்டி,
“துஷ்டநிக்கிரகஞ்செய்து வேதங்களையும்வைதிக கருமங்களையும் நிலை நிறுத்திச்சகலதேவர்களையும் வாழ்விப்பவன்
எம்பெருமானே யென்ற உண்மையை உணர்த்தினார்.

“முக்கணானெண்கணானுமுளரியாயிரங்கணானுந்,
திக்கணாந்தேவரோடு முனிவரும் பிறருந் தேடிப்,
புக்கநாடறிகுறாமற்றிரிகின் றார் புகுந்துமொய்த்தார்,
எக்கணாற்காண்டுமெந்தையுருவமென்றிரங்கிநின்றார்” என்ற கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலம் இங்குநோக்கத் தக்கது.
மறந்த மறை – அத்தியயனமில்லாமையால் மறந்துபோனவேதங்கள்.

“மழுங்கிய” என்பதனை மகத்துக்குங் கூட்டுக; செய்பவரெவருமில்லா மையால் மழுங்கிப்போன யாகங்கள்.
பிழைத்திருத்தல் தெரியாமையால், “இறந்த தெய்வங்கள்” எனப்பட்டன.
(“தரையின்மீதுபோய் மாயவனுரு வெனச்சாற்றும், அரியவேள்வியேமுதலியவறங்களையழித்துப்,
புரியுமந்த ணர்ப்பொன்றுறப்புரிமினோ புரியின், கரியவன்வலிகெடு முலப்பார்கடவுள ரே,”
“என்னவோதலுஞ் சம்பரன்முதலினோரேகித், துன்னும்வேள்வியே முதலியவறங்களைத்தொலைத்து,
மன்னுயிர்க்குழுமாயநன்மனையெரி யூட்டிப், பொன்னினாட்டினும் புலவரைப்புடைத்தனர்புகுந்தே” என்ற ஸ்ரீபாகவ தம், இங்கு நோக்கத்தக்கது.
“அமரரை வதைத்து நீங்கள் விரிவுறுவேதமெல்லாமழிய வேள்வியைச்சிதைத்துத்,
தரையினின்முனிவரெல்லாந்தவஞ்செ யாதியற்று மென்றான்” என்பர் மகாபாகவதத்திலும்.)

இனி, “இரணியன், அநேக வரங்களைப் பெற்று, கர்விதனாகி, திரிலோகங்களையும், ஸ்வாதீநமாக்கிக்கொண்டு,
இந்திரன் சூரியன் வாயு அக்கினி வருணன் சந்திரன் யமன் முதலானார் செய்கிற அதிகாரங்களைத் தானே செய்துகொண்டு,
யாகங்களிலே அவர்களுக்கான அவிர்ப்பாகங்களைத் தானே கைக்கொண்டு, மூன்று லோகங்களையும் ஏகாதிகாரமாய்த்
தானே ஆண்டுகொண்டிருந்தான்; அப்போது, இந்திராதிதேவதைகள், அந்தமகாசூரனுக்குப் பயந்து சுவர்க்க லோகத்தை விட்டு,
மனிதவேஷம்பூண்டு பூமியிற் சஞ்சரித்துக்கொண்டிருந் தார்கள்” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணம் கூறுதலாலும், இங்ஙனங்கூறத்தகும்.

மந்த்ரம், மகம் தைவம் – வடசொற்கள். மந்திரமும்மகமும், மகரவொற்று – விரித்தல்விகாரம். இழிவுதோன்ற,
தெய்வங்களை அஃறிணையாக்கினர். முன் – காலமுன்; இரணியன்வாழ்ந்தநாளில் என்க.
இயன்ற – “அன்” சாரியைபெறாத பலவின்பால்முற்று. தொகுதியொருமையால், “பிறங்கியது” என்றார்;
“பிறங்கிய” எனப் பன்மையாகப் பாடமோதுவாரும் உளர். ஆள் அரி – ஆண் மையையுடைய பகைவன்.
அரி – வடசொல். ஆள் அரி – நரங்கலந்த சிங் கம். அரி – ஹரி என்ற வடசொல்லின் சிதைவு;
(யானை முதலிய பெரியபிராணிகளையும்) அழிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“அந்தியம்போதி லரியுருவாகி யரியையழித்தவனை” என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியதனை அடியொற்றி
“ஆளரிக்கு ஆளரியாய்” என்றார்
வாள் அரி என்று எடுத்து, வாள்போலக்கொடிய பகைவனென்றும், வாளாயுதத்தையேந்திய பகைவனென்றும்,
(பொன்னிறமான வடிவையுடைமையால் இரணியனென்று பெயர்பெற்ற) ஒளியையுடைய பகைவ னென்றுங் கொள்ளவுமாம்.
அறம்தரும் அரங்கன் என இயையும். அறம் தரும் – தொலைந்துபோன தருமத்தைக் கொணர்ந்துகொடுக்கின்ற என்க.
இங்கு “அறந்தரும்” என்றது – ஸாபிப்ராயவிசேஷண மாதலால், கருத்துடையடைமொழியணி.

————

அடிக்கண்டிலர் அதலத்தவர் ஐம்முகனோடு அமரர்
கடி கண்டிலர் மலை வான் இவர்ந்ததும் கமலத்து அயனார்
முடி கண்டிலர் அண்ட மா முகடு ஏறியும் மூதுணர்ந்தோர்
படி கண்டிலர் அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே –31-

(இ – ள்.) அரங்க ஈசர் – ரங்கநாதர்,
கொள் – கொண்ட,
சிங்கம் படி தனக்கு – நரசிங்கவுருவத்திற்கு,
அதலத்தவர் – கீழுலகத்திலுள்ளவர்,
அடி கண்டிலர் – திருவடிகளைக் கண்டாரில்லை;
ஐம்முகனோடு அமரர் – சிவனும் (மற்றைத்) தேவர்களும்,
மலை வான் இவர்ந்தும் – (முறையே) கைலாசகிரி யின்மேலும் சுவர்க்கலோகத்திலும் உயரவிருந்தும்,
கடி கண்டிலர் – திருவரை யைக் கண்டாரில்லை;
கமலத்து அயனார் – (அத்திருமாலின்திருநாபித்) தாமரை மலரில் தோன்றிய பிரமதேவர்,
அண்டம் மா முகடு ஏறியும் – அண்ட கோளத்தினது மிகவுயர்ந்த உச்சியிடத்தில் ஏறியிருந்தும்,
முடி கண்டிலர் – திருமுடியைக் கண்டாரில்லை;
முது உணர்ந்தோர் – (பலவற்றையும் அறிந்த) பழைய பெரியோரும்,
படி கண்டிலர் – அளவைக் கண்டாரில்லை; (எ – று.)

நரசிங்கமூர்த்தி கொண்ட விசுவரூபத்தின் பெருமையைக் கூறியது, இப்பாசுரம்.
அதனை, கம்பராமாயணத்து இரணியன்வதைப்படலத்திலும்
“பிளந்ததுதூணு மாங்கேபிறந்ததுசீயம்பின்னை,
வளர்ந்ததுதிசைகளெட்டும் பகிரண்டமுதலமற்று,
மளந்த தப்புறத்துச்செய்கையாரறிந்தறையகிற்பார்,
கிளர்ந்ததுககனமுட்டை கிழிந்ததுகீழுமேலும்,”

“மன்றலந்துளபமாலைமா னுடமடங்கல் வானிற்,
சென்றது தெரிதல்தேற்றாம் சேவடிபடியிற்றீண்ட,
நின்றதோர்பொழுதி னண்ட நெடுமுகட்டிருந்தமுன்னோன்,
அன்றவனுந்தி வந்தானாமெனத்தோன்றினானால்,”

“நோக்கினார்நோக்கினார் முன்னோக்குறு முகமுங்கையும்,
யாக்கையுந்தாளுமாகியெங்கணுந்தானேயாகி,
வாக்கினான் மனத்தினான்மற்றறிவினா வளக்கவாரா,
மேக்குயர்சீயந்தன்னைக்கண்டனர் வெருவுகின்றார்” எனக் காண்க.

“விண்டிடுதூணினெழுந்தெழிலார்நரமீளி வளர்ந்தசெய,
லெண்டவராலு முணர்ந்தறிதற்கரி தென்றிடில் யாரறிவார்,
அண்டமுகட்டின்வயங்கியமர்ந்திடுமாதியிவ்வரியினொளிர்,
முண்டக வுந்தியின் வந்தது போன்றனன் மூடிவறைதற்கெளிதோ” என்பர் மகா பாகவதத்திலும்.

ஈற்றிலுள்ள “சிங்கப்படிதனக்கு” என்பதை எல்லாவாக்கியங்களிலுங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
அடி – பாதம், கண்டிலர் – எதிர்மறைப்பலர் பாலிறந்தகாலமுற்று. அதலம் – கீழேழுலகங்களிலொன்று;
இங்கு, கீழுலகமென்ற மாத்திரமாய் நின்றது.
ஐம்முகன் – ஐந்துமுகங்களையுடையவன்; சதாசிவ மூர்த்தியாகிய சிவபிரானுக்கு ஐந்து முகங்க ளுண்டு:
ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்று அவற்றிற்குப் பெயர்கூறுவர்; ஒடு – எண்ணுப்பொருளது.
ஐம்முகன் மலையிலும், அமரர் வானிலும் இவர்ந்தும் என முறையேசென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
உயர்ந்த இடங்களில் இருந்துங் கண்டாரில்லை யென்றற்கு இதுகூறினார்.
அவர்கட்குக் கைலாசகிரியும் வானுலகமும் உறைவிட மென்பது, வெளிப்படை. இவர்தல் – ஏறுதல்.
“வானிவந்தும்” என்ற பாடத்திற்கு, வான் நிவந்து என்று பிரிந்து இப்பொருளேபடும். நிவத்தல் – உயர்தல்.
கடி – இடை; வடசொல். அயன் – அஜனென்றவடசொல்லின் விகாரம்; திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்;
அ – விஷ்ணு; “அகாரார்த்தோ விஷ்ணு:” ஆர் என்றபலர்பால்விகுதி, உயர்த்தற்பொருளில்வந்தது,
முடி – சிரசு. “அண்டமாமுகடு” என்றது, மேலேழுலகங்களுள்ளும் மேலதான சத்தியலோகத்தை. அது, பிரமன்வாழுமிடம்.
பிரமனது ஆதிசிருஷ்டியில் உண்டானவர்களும் தத்துவஞானமுடையவர்களுமான ஸநகர்முதலிய யோகிகள், “மூது ணர்ந்தோர்” எனப்பட்டனர்.
படி – ஒப்பும், தன்மையுமாம். சிங்கம் – ஸிம்ஹமென்ற வடசொல்லின் விகாரம்;
(யானைமுதலிய பெரியபிராணிகளையும்) ஹிம்ஸிக்கவல்ல தென்பது காரணப்பொருள்.
“படிதனக்கு” என்பதைப் படியினது என உருபுமயக்க மாக்கியும் உரைக்கலாம்.

———–

அறியின் அரங்கர் முன் ஆளரி ஆகிய அப்பொழுது
கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ
தறியின் வயிற்றின் தகுவன் நெஞ்சும் சரபத்து உடலும்
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ தணிந்தது நீள் சினமே –32-

(இ – ள்.) அறியின் – ஆராய்ந்து அறியுமிடத்து, –
அரங்கர் – ரங்கநாதர்,
முன் – முன்பு,
ஆள் அரி ஆகிய அ பொழுது – நரசிங்கமாக அவதரித்த அப்பொழுது,
கொறியின் அவுணர்தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ – ஆடுகள்போன்ற அசுரர்களுடைய கோடிவெள்ளங்களையும் கொன்றதனாலோ,
(நீள் சினம் தணிந்தது) – (அந்தநரசிங்கமூர்த்தியினுடைய) மிக்ககோபம் ஆறிற்று
(அவ்வளவினால் ஆறவில்லையென்றபடி); (பின்னை எப்பொழுது ஆறிற் றென்றால், -)
தறியின் வயிறின் – (தான்தோன்றிய) தூணினது நடுவிடத்தை (ப் பிளந்தாற்) போலவே,
தகுவன் நெஞ்சும் – அசுரனான இரணியனது மார்பையும்,
சரபத்து உடலும் – (சிவபிரானாகிய) சரபத்தினது உடம்பையும்,
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ – முறையே பிளந்தபின்பன்றோ,
நீள் சினம் தணிந்தது – (அச்சிங்க பிரானது) மிக்ககோபம் தணிந்திட்டது; (எ – று.)

நரசிங்கமூர்த்தி இரணியன் கட்டுத் தூணைப்பிளந்துகொண்டு அதிலிரு ந்துதோன்றியவுடனே,
இரணியன் சபையிலிருந்தவர்களும் அவனைச்சார் ந்தவர்களுமானமிகப்பலகோடிக்கணக்காகிய கொடிய அசுரர்களையெல்லாங்
கொன்று அதன்பின்பு இரணியனை வதைத்தனனென்பதும்;
மூவுலகத்திற்கும் பெருந்தீங்கு செய்துவந்த இரணியனை அழித்தற்குத் தேவர்கள்வேண்டு கோளினால் தோன்றிய
திருமாலின் அவதாரமான அச்சிங்கப்பிரான் இரணியனை மார்புகீண்டு அழித்தபின்பும் கோபந்தணியாமல் உக்கிரம் மேலிட்டிருக்க,
அந்தப்பெருங்கோபத்தைக்கண்டு அதனால்உலகமழியுமென்று மயங்கி அஞ்சிய தேவர்கள் ஓடிச் சிவபிரானைச் சரணமடைதலும்,
அக்கடவுள் அவர்கட்கு அபயமளித்து மிகப்பெரியதொரு சரபவடிவங்கொண்டு மிகஆரவாரித்து நரசிங்கத்தை எதிர்த்துவர,
நரசிங்கப்பெருமான் அச்சிவசரபத்தையும் இரணியனைப்போலவே பலவாறு சின்னபின்னப்படுத்தி யழித்து,
பிறகு பிரகலாதன் பணிந்து பிரார்த்தித்ததனாலும், தேவர்கள் துதித்ததனாலும்,
இலக்குமி சமீபித்ததனாலும் சினந்தணிந்தன னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

(“வாழ்குமரன்மேற் கனகவஞ்சகன்மே லோர்முகத்தே,
சூழ்கருணையும் முனிவுந் தோன்றியவாற் –
கேழ்கிளரும், அங்கவேள்குன்ற வழல்சரபத்தைப்பிளந்த, சிங்கவேள்குன்றத்தினார்க்கு” என்று நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்,

“புக்ககருடனை யோர்புன்மசகம்வென்றதிற, மொக்குங் கனகனுரங்கீண்ட –
மிக்கதிற, லாளரியைப் பொன்னுக்காயஞ்சிக்கிடந்த சிவன், கோள்விளைத்தா னென்னுங் குறி,”

“பொன்னனுரங்கீண்டதனாற் பொங்குசினமாறிற்றோ, துன்னுசிவசரபஞ்சோரவுயிர் –
அன்னதனைப், பற்றி வகிர்ந்தபின்னர்ப் பாழிநரமடங்க, லுற்றசினந் தணிந்த தூங்கு” என்று பர ப்ரஹ்மவிவேகத்திலுங் கூறுவர்.)

“தன்னைக்கொல்லவந்த சிவசரபத்தை நர சிங்கப்பிரான் இரணியனைப்போலவே நகங்களாற்பிளந்திட்டனன்” என்றும்,
“யாதொரு நரசிங்கமூர்த்தியினுடைய கோபாக்கினியிலே சிவனுருவமான சரபம் சலபமாயிற்றோ” என்றும்
வடமொழிப்புராணங்களில் வருதலும் காண்க; (ஸலபம் – விட்டில், விளக்குப்பூச்சி.)

(இருசமயவிளக்கத்தில் “அன்னவன்சேனையாமவுணர்பல்கோடிபேர், துன்னுவெஞ்செருவிடைத் துகள்படுத்தருளினான்,
பின்னையும்பின்னையும் பெருகுகோபானலம், முன்னையின்பொழுதினும் மும்மடங்காயதால்,”
“வடவையைத்தின்றிடும் வளைகுலக்கிரிகளைப், பொடிபடப்பிசையு மம்புதி களைப் பருகும் வான்,
வெடிபடக்குரல்விடும் விழிநெருப்பெரியு மக், கடையு கத்திடியெனக்கடியபற்கதுவுமால்” என்று பிரமருத்திரேந்திராதி சரபாவ தாரப்பரிச்சேதத்திலும், “அச்செருத்தொடர்விடத்தழல்விழிச்சரபமங், கெய் ச்சிரைத்திடவெடுத்தெற்றியெற்றிப்பெரு,
வச்சிரத்துகிர்களான்மருவவங்கந் தொறும், பச்சிரத்தம்படப் பரிபவம்பண்ணியே,”
“ஈண்டுமாளரிவெகுண் டிரணியன்றனதுடல், கீண்டவாகீண்டு மெய்கிளர்கையாயிரமுறப்,
பூண்டு சுற்றிப்பெரும்பொன்வரைப்புறனுறத், தூண்டினானென்புடன்றோலும் வேறாகவே,”
“கரமுறிந் தேகுதிண்கான்முறிந் தெரிமுகச், சிரமுறிந் திருவகை ச்சிறைகளின்றிறமுறிந்,
துரமுறிந் துடன்முறிந் துக்கதா லென்றுமுப், புர முறிந்தெரிபுகப்பொருதவன்சரபமே” என்று சரபசங்காரப்பரிச்சேதத்திலும் வருவனவுங் காண்க.

இச்சரித்திரத்திற்கு மேற்கோள் -ழுஇத்திறத் தால்விரித்தியானிசைத்தனவெலாம், மைத்தடங்கண்ணினாய்வாமனீயத்து மா,
தித்தியந்தன்னிலுந் தெளிவுறச்செப்பிடும், பத்தியா லின்னமும்பகர்புரா ணங்கள்கேள்,”
“ஒத்தகாருடமிரண்டென்னுநூறாயசீ, ரத்தியாயத்திலே யறையு மாக்கினியமும்,
சுத்தமாநாற்பதிற்சொல்லு நீணாரசிங், கத்துடன் பற்பபாகவதமும்பகருமே” என அந்நூலிலேயே கூறப்பட்டுள்ளது)

சரபம் – இரண்டு தலைகளையும், சிறகுகளையும், கூரியநகமுள்ள எட்டுக் கால்களையும், மேல்நோக்கிய
கண்களையு முடையதொரு மிருகவிசேஷம்; இதனைப் பறவையென்றலு முண்டு. இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந்திறமுடையது.
வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும், ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலையுடைய புருஷோத்தமனது
அவதாரமான திவ்விய ஸிம்ஹ மாதலாலும், சரபத்தைக் கொன்றிட்டது.

நல்லன தீயன பகுத்துணராமையும், ஒன்றுபோனவழியேஎல்லாம்போ தலும், உடனே தமக்குவரும்
பெருந்தீங்கையறியாதுமகிழ்ந்திருத்தலு மாகிய ஒப்புமைபற்றி. “கொறியி னவுணர்” என்றார். இன் – ஐந்தனுருபு, ஒப்பு.
வெள்ளம் – ஒரு பெருந்தொகை. “கோடியும்” என்ற உம்மை – முற்றுப்பொ ருளது.
கொன்றதில், இல் – ஐந்தனுருபு, ஏது. தறியின், இன் – சாரியை. வயிறு – இலக்கணையாய், நடுவிடத்தைக் குறித்தது;
“கள்ளிவயிற்றி னகில் பிறக்கும்” என்றவிடத்துப்போல. மேலே நெஞ்சு உடல்களைக் கூறுதலால்,
அவற்றோடுஇயையுமாறு “வயிறு” என்ற சொல்லாற் குறித்தனர்; இவ்வாறு வருவது – ரத்நாவளியலங்காரத்தின்பாற்படும்: கவிசமத்காரம்.
இவற்றை “நெறியின்” என்றதனோடு சேர்த்து நயங் காண்க. இன் – ஐந்தனுருபு, ஒப்பு .
“வயிறின்” எனச் சிறுபான்மை உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின் றகர வொற்று இரட்டாதுநின்றது;
“கறைமிட றணியலு மணிந்தன்று” என்ற விடத்திற் போல. “வயிற்றின்” என்று பாடமோதுவாரு முளர்.
தகுவன் – அசுரன். ஸரபம் – வடசொல். நெறியின் வகிர்தல் – ஒன்றன்பின் ஒன்றாக (கிரமமாய்)ப் பிளத்தல்.
அன்றோ – தேற்றம். முதலடி – முற்றுமோனை. முன்நாள் அரியாகிய என்று பிரித்து உரைத்தலுங் கூடும்.
நெஞ்சு மார்புக் குத் தானியாகுபெயர். சிங்கத்திற்கு ஆடுகளைக்கொல்லுதல் மிகஎளிதாதல் போல,
சிங்கப்பிரானுக்கு அசுரர்களைக் கொல்லுதல் மிகஎளிதாயிருந்த தென்பது, இரண்டாமடியிற் போதரும்;
ஆடுகளைக்கொல்வதுபோல அசுர வெள்ளங்கள்கோடியையுங் கொன்றன னென்க.
“தணிந்தது நீள்சினம்” என்பது, முந்தினவாக்கியத்திலுங் கூட்டப்பட்டது.
தறியின்வயிற்றோடு தகுவன்நெஞ்சோடு சரபத்து உடலோடு வாசியில்லை சிங்கப்பிரானால் எளிதில் வகிரப்படுதலி லென்க.

இப்பாசுரத்தில், எம்பெருமானது பரத்வம், வெளியிடப்பட்டது.

————

இது முதல் ஐந்து கவிகள் திருவிக்ரமான வாமன திருவவதார வைபவம் அருளுகிறார் –

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீர் ஏற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம்பொன் முடிக்
கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க
நீர் ஏற்ற வண் திருக் குறள் ஆகி நிமிர்ந்த அன்றே -33-

(இ – ள்.) வள் திரு குறள் ஆகி – வளத்தையுடைய ஸ்ரீவாமநமூர்த்தி யாகி,
நிமிர்ந்த அன்று – (உடனே திரிவிக்கிரமனாய்) நிமிர்ந்துஉயர்ந்த அந் நாளில், –
தார் ஏற்ற வெள் குடை மாவலி வார்க்கவும் – வெற்றிமாலையைத் தரித்தவனும் ஒற்றைவெண்கொற்றக்குடையையுடையவனுமான மகாபலி சக்கரவர்த்தி (நீர்த்தாரையை) வார்த்துத் தத்தஞ்செய்துகொடுக்கவும்,
தாமரை மேல் சீர் ஏற்ற தொல் நால்முகத்தோன் விளக்கவும் – (திருமாலினது திருநாபித்) தாமரைமலரில் தோன்றியவனும் சிறப்புப்பொருந்தியவனு மாகிய பழமையான பிரமன் (தன்கையிலுள்ள கமண்டலத்தின் தீர்த்தத்தாற்) கழுவிவிளக்கவும்,
செம் பொன் முடி கார் ஏற்ற மேனி அரங்கஈசர் – சிவந்த (மாற்றுயர்ந்த) பொன்மயமான கிரீடத்தையும் காளமேகத்தையொத்த திரு மேனியையுமுடைய ரங்கநாதரது,
கையும் – திருக்கையும்,
கழலும் – திரு வடியும்,
ஒக்க நீர் ஏற்றன – சமகாலத்திலே நீரையேற்றன; (எ – று.)

(“தன்னுருவ மாரு மறியாமல் தானங்கோர், மன்னுங் குறளுருவின் மாணியாய் மாவலிதன்,
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர், மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தருகென்று வாய்திறப்ப மற்ற வனும்,
என்னால் தரப்பட்ட தென்றலுமே யத்துணைக்கண், மின்னார் மணி முடிபோய் விண்தடவ மேலெடுத்த,
பொன்னார் கனைகழற்கா லேழுலகும் போய்க்கடந்தங், கொன்னா வசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிட த்தை மாவலியை வஞ்சித்துத், தன்னுலக மாக்குவித்த தாளானை” என்ற ஆழ்வார் அருளிச்செயல் அறியத்தக்கது.)

வாமநமூர்த்தி மகாபலியினிடஞ் சென்று தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூன்றடியிடம் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து
அவன் தத்தஞ்செய்த நீரைக் கையில்ஏற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தையளாவி வளர்ந்தபொழுது,
மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க.
அந்த ஸ்ரீபாததீர்த்தமாகக் கங்காநதி பெருகியதும், இங்கு அறியத்தக்கது. பிரமன் திரிவிக்கிரமமூர்த்தியின் திருவடியை விளக்கியது,
தனது இருப்பிடத்திற்கு வந்த பெரியோர்க்குச் செய்ய வேண்டிய ஷோடஸ (பதினாறுவகை) உபசாரங்களிற் பாத்யமென்னும் உபசாரமாம்;
அது, நீர்கொண்டு கால்கழுவுதல்.

கையில் தானஜலத்தை யேற்றவுடனே சிறிதுங்காலதாமமின்றி அதி விரைவில் மேலுலகைத் தாவியளந்து
காலில் நீரையேற்றன னென்னுங் கருத்து நன்குவிளங்க, “கையும் கழலும் ஒக்க நீரேற்றன” என்றார்; ஒக்க – ஒருங்கு.
கைநீரேற்றலாகிய காரணமும், கழல்நீரேற்றலாகிய காரியமும் ஒரேகாலத்தில் நிகழ்ந்தனவாகச் சொல்லுதலால்,
முறையிலுயர்வுநவிற்சியணி; அக்ரமாதிசயோக்தி யென்பர் வடநூலார்.
“காலமொன்றிற் காரண காரியம், நிகழத் தொடுத்தல் முறையிலி யென்ப” என அதன்இலக்கணங் காண்க.
இதில், காரணத்திற்கும் காரியத்திற்கும் முன்பின்தோன்றுகைத் தன்மையில், ஒருகாலத்து உண்டாகுகை கற்பிக்கப்பட்டது.
இது, காரிய விரைவை யுணர்த்துவது.

“மண்தாவெனவிரந்து மாவலியை – ஒண்தாரை, நீரங்கைதோயநிமிர்ந்திலையே நீள்விசும்பி, லாரங்கைதோயவடுத்து” என்ற
பொய்கையாழ்வாரருளிச்செயலின் பொருளை அடியொற்றியது இச்செய்யு ளென்னலாம்:
அதன் உரையில் “உதகஜலமும் திருவடிவிளக்கின ஜலமும் ஏகோதகமாம்படி வளர்ந்திலையோ?” என்றதுங் காண்க.

இங்ஙனம் விரைந்தது, அவன் மனம்மாறாத முன்னம் அளந்துகொள்ளவேண்டுமென்னுங் கருத்தினா லென்பர்.
“அளியினான்மூவடியளந்துகோடியென், றொளிகொளு மா வலியுதகம்பண்ணவே,
களைகணா யுலகினைக் காக்கும் வித்தகன், கிளர்முடி யுயரண்டங்கிழிய வோங்கினான்” என்ற மகாபாகவதத்தைக் காண்க.

மாவலி வார்க்கக் கைநீரேற்றது, நான்முகத்தோன் விளக்க கழல்நீரேற்றது என முறையே சென்று இயைதல், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.
குறளுக்கு வண்மை – “ஆலமர் வித்தி னருங்குற ளானான்” என்றபடி
மூவுலகத்தையும் ஈரடியிலே அளக்கவல்ல பேருருவைத் தன்னுள் அடக்கிக்கொ ண்டிருத்தல்;
எல்லாவுயிர்களின் முடியிலும் தானாக அடிவைத்து அவற்றை ஆட்கொண்டருளும் உதாரகுணமுமாம்.
நான்முகத்தோனாற் கழல் விளக்கப்படும் மகிமையை யுடையவன் தன்னைச்சரணமடைந்த இந்திரனது குறையைத் தீர்த்தற்காகத்
தான் இரவலனாகி உலகங்களைப்பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை இந்திரனுக்குக் கொடுத்தருளின னென
இச் செய்யுளில் எம்பெருமானது பரத்வமும் ஸௌலப்யமும் தந்திரமும் வண்மையும் விளங்குதல் காண்க.

மாவலி – மஹாபலி என்ற வடசொல்லின் விகாரம். “தாரேற்ற,” “வெண்குடை”, “மா” என்ற மூன்றும் – பலிக்கும்,
“தாமரைமேல்”, “சீரேற்ற,” “தொல்” என்ற மூன்றும் – நான்முகத்தோனுக்கும்,
“முடி,” “மேனி” என்ற இரண்டும் – அரங்கேசர்க்கும் அடைமொழிகள். தார் – இங்கு வாகைப்பூமாலை.
முடி, தான் எல்லாவற்றிற்கும் இறைவனென்பதை விளக்குதற்கு அணிந்தது.
“காரேற்ற மேனி” என்றவிடத்து, “ஏற்ற” என்றது – உவமவாசகம்; மேகத்தின் தன்மையைக் கொண்டமேனி யென்றலுமாம். குறள் – குறுகியவடிவம்.

————–

தேமிக்க பச்சைத் துழாய் அரங்கேசர் திருக் குறள் ஆயத்
தாம் இப்புவனம் கிடந்த அந்நாள் மணல் சாகரம் சூழ்
பூமிப் புடை அளவிட்ட பொற்றாமரைப் பூம் கழற்கு
நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே –34-

இ – ள்.) தேன் மிக்க – மிகுதியான தேனையுடைய,
பச்சை துழாய் – பசுநிறமான திருத்துழாய்மாலையை யணிந்த,
அரங்க ஈசர் – ரங்கநாதர்,
திரு குறள் ஆய் – ஸ்ரீவாமநமூர்த்தியாகி,
இ புவனம் கடந்த அ நாள் – இந்த உலகங்களை அளந்த அப்பொழுது,
மணல் சாகரம் சூழ் பூமி புடை அளவிட்ட – மணலையுடைய கடலினாற் சூழப்பட்ட பூமியினிடத்தை யளந்த,
பொன் தாமரை பூ கழற்கு – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிக்கு,
நேமி சிலம்பு – (பூமியைச்சூழ்ந்த கடலைச் சுற்றி யுள்ளதாகிய) சக்கரவாள பருவதமானது,
திரு சிலம்பு ஆகி நிலைபெற்றது – அழகிய சிலம்பென்னும் அணியாகி நிற்றலைப் பெற்றது; (எ – று.) – தாம் – அசை.

எம்பெருமான் உலகமளந்தபொழுது “மண்ணொடுங்கத் தானளந்த மன்”,
“நின்றகால் மண்ணெலாம்நிரப்பி யப்புறஞ், சென்றுபாவிற்றிலை சிறிதுபாரெனா”,
“அகலகங்காலினுக் கவனிபோந்தில, ககனமுள்ளடியினிற் கமலத்தாயின, சகலலோகங்களுந் தாளிரண்டினிற்,
புகுதவே நிவந்தனன் புயல்கொண்மேனியான்” என்றபடி பூமியினளவினும்பரந்துவளர்ந்து அதனை யளந்துநின்ற
ஒருதிருவடிக்கு, அப்பூமியைச்சூழ்ந்த கடலைச்சுற்றியுள்ளதான சக்கரவாளகிரி சிலம்பென்னும் அணிபோலிருந்த தெனக் கற்பனை கூறினார்.

பதினாயிரம்யோஜனையுயரமும் பதினாயிரம்யோஜனைபரப்புமுள்ள சக்கரவாள பருவதம் அத்திருவடிக்குச் சிலம்பென்னும் அணி
போன்ற தென்றதனால், அத்திருவடியின் வளர்ச்சி நன்குவிளங்கும்.
“சிலம்பு” என்ற சொல் மலை யென்றும் நூபுரமென்றுங் காலணியென்றும் பொருள்படுதலால், அச்சொல் நயம்பற்றி,
“சிலம்பு சிலம்பாகி நிலைபெற்றது” என்றார்;
முன் (21) “அண்ட மாமென்னச்சிறந்தது மூதண்டம்” என்றாற் போல: சொற்பின்வருநிலை
யணியும் உவமையணியுஞ் சேர்ந்துவந்த சேர்வையணி. ஆகி – உவமவுருபு – காலணியென்ற பொருளில்,
சிலம்புவது சிலம்பு எனக் காரணக்குறி; சிலம்புதல் – ஒலித்தல்.

தேன் + மிக்க = தேமிக்க: “தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை, மேவி னிறுதியழிவும்” என்றார் நன்னூலார்.
தேம் மிக்க என்று எடுத்து, வாசனை மிக்க என்றலுமாம். புவநம், ஸாகரம், பூமி – வடசொற்கள்.
ஸாகரம் – ஸகரசக்கரவர்த்தியினது புத்திரர்களால் தோண்டப்பட்டது; வடமொழித்தத்திதாந்தநாமம்.
சூரியகுலத்துச் சகரமகாராஜன் அசுவமேத யாகஞ்செய்தபொழுது பூமிப்பிரதக்ஷிணத்திற்காகச்செலுத்திய குதிரையை,
பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்துக்கொண்டு சென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த
கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க, அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர்
பூமிமுழுதுந்தேடிக்காணாது, பாதாளலோகத்திற்குப் போதற்பொருட்டுப் பெருவழியாகப் பரதகண்டத்தில்
வடகிழக்குப்பக்கத்தில் தோண்டிச் சென்ற பெரும்பள்ளமே, பின்பு கங்கை முதலியவற்றின்நீரினால் நிறைந்து
ஸாகரமென்னும் பெயர்பெற்றுக் கடலோடு கூடித்தானும் கடலின்பாற்பட்ட தென்பது வரலாறு.
இது, இங்கு, பொதுப்படக் கடலென்றமாத்திரமாய்நின்றது; சிறப்புப்பெயர் பொதுப்பொருளின்மேலும்,
பொதுப்பெயர் சிறப்புப்பொருளின்மேலும் நிற்றல் பாஷைநடை.
“சகரர்தொட்டலாற் சாகரமெனப் பெயர்தழைப்ப, மகரவாரிதி சிறந்தது” என்றது, கம்பராமாயணம்.

————

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலாங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –35-

(இ – ள்.) பூ மரு – பொலிவு பொருந்திய (அல்லது மலர்கள்நிறைந்த),
பொங்கர் – சோலைகள்,
புடை சூழ் – எல்லாப்பக்கங்களிலுஞ் சூழ்ந்திருக்கப் பெற்ற,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமான்,
பொலம் கழலால் – அழகிய திருவடிகளினால்,
பா மரு மூ உலகும் கொண்ட போது – பரப்புப் பொருந்திய மூன்றுஉலகங்களையும் அளந்து தமதாக்கிக்கொண்டபொழுது, –
செம் சுடர் – சிவந்த கிரணங்களையுடைய தான சூரியமண்டலமானது, (முதலில் அப்பெருமானுக்கு),
பழிப்பு இல் – குற்றமில்லாத,
பெரு – பெரிய,
காமரு – அழகிய,
மோலி – முடியிலுள்ள,
சிகாமணி ஆகி – சிரோரத்தினம் போன்றிருந்து, (அதன்பின்),
கவுத்துவம் ஆய் – (திருமார்பிலணிந்த) ஸ்ரீகௌஸ்துபரத்தினம் போன்று, (பிறகு),
தேன் மரு நாபி அம் தாமரை ஆனது – தேன்பொருந்திய அழகிய திருநாபித்தாமரைமலர் போன்றது; (எ – று.)

வாமநமூர்த்தியாகிய திருமால் திரிவிக்கிரமனாக வானத்தையளாவி மேன்மேலோங்கிவளர்ந்தபொழுது,
சூரியன் வரவரக்கீழ்ப்பட்டுப் பலவாறு உவமைகூறுதற்கு உரியனாயின னென்க.
எம்பெருமான் திரிவிக்கிரமனாக நிமிரத்தொடங்கியபொழுது சூரியன் முதலில் திருமுடிமணிபோன்றும்,
இன்னும்சற்றுநிமிர்ந்தவளவில் திருமார்பின்மணியான கௌத்துவம்போன்றும், மற்றும்சற்றுநிமிரவே
திருவுந்தித்தாமரைமலர்போன்று மிருந்தன னென்பது கருத்து.

“மலருந்திமேல்விழமெய்நெரித்தான் வையமேழுந் துஞ்சா,
மலருந்தினா னரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாள்,
மலருந் திவாக்கதிர் வண்குடையாய் முடிமாமணியாய்,
மலருந்தியாய்த் திருத்தாள் விரலாழிமணியொத்ததே” என்பர் திருவரங்கத்தந்தாதியிலும்,

தண்டியலங் காரவுரையில் உபமாதீபகவணிக்குஉதாரணமாகக்காட்டிய
“முன்னங்குடை போல் முடிநாயகமணிபோல், மன்னுந்திலகம்போல் வாளிரவி –
பொன்ன கலந், தங்குகவுத்துவம்போ லுந்தித்தடமலர்போ, லங்கணுலகளந்தாற்காம்” என்ற செய்யுளிலும் இக்கருத்து நிகழ்தல் காண்க.

“கவிகையாய் மவுலி யாய்க் கவின்கொண்மார்பினி, லவிர்மலிகவுத்துவமாகியே மருங்,
குவிலுறு நாண்மணியாகிக் கோதிலா, வுவமையிலலரிகீழொளிரவோங்கினான்” என்ற மகாபாகவதமுங் காண்க.

“சேயொளிபரப்பிவையத்திருளறச்சிதைக்குந்தெய்வக், காய்கதிர்க்கடவுள் மற்றோர்கவுத்துவநிகர்ப்பதம்மா” என்றது,
கந்த புராணத்து உபதேசகாண்டமும். உவமையணி.
செந்நிறமான ஆயிரங்கிரண ங்களோடு மலர்ந்து விளங்குஞ் சூரியமண்டலம்,
ஆயிரம் இதழ்களையுடைய செந்தாமரைமலரையொக்கும். மற்றையுவமைகட்கு, வட்டவடிவமும் விளக்கமும் பொதுத்தன்மைகள்.
மோலிச் சிகாமணி – கிரீடத்திலுள்ள நடுநாயக ரத்தினம்.

“மூவுலகு” என்றது, மேல் கீழ் நடு என்ற நோக்கத்தால். மண்ணுலகத் தையளந்ததில் அதன்கீழுலகமும் அடங்குதலால்,
மூவுலகத்தையும் அளந்ததாம். எம்பெருமானுக்கு உரியனவான உலகங்களைத் தன்னுடையன வென்று அபிமானித்த
மகாபலியினது மமகாரம் நீங்கப் பெருமான் அவற்றைத் தமதுஅடியின்பாற்படுத்துத் தம்முடையனவாக்கிக்கொண்டு காட்டியமை தோன்ற,
“கழலால் மூவுலகுங் கொண்டபோது” என்றார்.
மௌலி, சிகாமணி, கௌஸ்துபம், நாபி – வடசொற்கள். கவுத்துவம் – முதற்போலி: இது,
திருமால்மார்பில்அணியும் திவ்வியரத்தினம்; திருப்பாற் கடல்கடைந்தபொழுது அதனினின்றுதோன்றியது.
மரு – மருவு என்பதன் விகாரம். பொங்கர் – (நெடுந்தூரத்திலுள்ளாருங் காணும்படி) உயர்ந்து விளங்குவதென்று காரணப்பொருள்படும்;
அர் – பெயர்விகுதி. ஆகி, ஆய், ஆனது – உவமவாசகங்கள். செஞ் சுடர் – பண்புத்தொகை யன்மொழி யென்றாவது,
அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது கொள்ளத்தக்கது.

————

ஓதப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உலகு அளந்த
பாதத்து நீர் விண் படி பிலம் மூன்றிலும் பால் புரை வெண்
சீதத் தரங்க மந்தாகினி ஆகி செழும் கங்கை ஆய்
மேதக்க போகவதி ஆகி நாளும் விழுகின்றதே –36-

(இ – ள்.) ஓதம் புனல் – வெள்ளமாகிய நீரையுடைய,
பொன்னி – திருக் காவேரிநதியினது,
நல் நீர் – நல்ல நீரினாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவரான எம்பெருமானுடைய,
உலகு அளந்த பாதத்து – மேலுலகத்தையளந்த திருவடியினின்று பெருகிய,
நீர் – தீர்த்தமானது, – விண் படி பிலம் மூன்றிலும் – சுவர்க்கலோகம் பூலோகம் பாதாளலோகம் என்ற மூன்றுஇடங்களிலும்,
(முறையே), பால் புரை வெள் சீதம் தரங்கம் மந்தாகினி ஆகி – பால்போன்ற வெண்ணிறமான குளிர்ந்த அலைகளையுடைய மந்தாகினியாகியும்,
செழுங் கங்கை ஆய் – செழிப்புள்ள கங்கை யாகியும்,
மேதக்க போகவதி ஆகி – மேன்மைபொருந்திய போகவதியாகியும்,
நாளும் – எந்நாளும், விழுகின்றது-; (எ – று.)

திருமாலின் மேலுலகளந்ததிருவடியைப் பிரமன் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்கிய ஸ்ரீபாததீர்த்தம்
சுவர்க்கலோகத்திற்பாய்வதற்கு மந்தாகினியென்றும், பூலோகத்திற்பாய்வதற்குக் கங்கையென்றும்,
பாதாளலோகம்நோக்கிப்பாய்வதற்குப் போகவதியென்றும் பெயரென உணர்க;

“பரமன டிப்புன லுலகைப் பாவனஞ்செய்திடும்பொருட்டுப் பண்டைமேரு,
சிரமதனி லளகநந்தையெனவிழுந் திவ்வுலகு கங்காதேவியாகித்,
தரமதனின்மிகுதேவ ருலகினின்மந்தாகினியாய்ச் சக்ரிநேமிப்,
புரமதனிற்போகவதியெனப்பொ லிந்த திந்தநதி’ பின்னுங்கேட்டி” என்றது, பாத்மோத்தரபுராணம்.

சூரிய குலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின்கோபத்தீக்கு இலக்காகி உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த
தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரைநற்கதிபெறுவித்தற்பொருட்டு, நெடுங்காலந் தவஞ்செய்து,
தேவகங்காநதியை மேலுலகத்திலிருந்து பூமிக்குக் கொணர்ந்து, பாதாளலோகத்திற்கும் கொண்டுபோயின னாதலால்,
மூவுலகத்திலும் அத்தீர்த்தம் உளதாயிற்று. பிரமன் ஸ்ரீபாததீர்த்தஞ்சேர்த்த நீர் சிலநாள் தேவலோகத்துத் தங்கியிருந்து
பின்னர்ப் பகீரதன்கொணர்கின்றபோது கீழுலகங்கட்கும் வந்ததென்க. விண்ணில் மந்தாகினியாகி, படியிற் கங்கையாய்,
பிலத்திற் போகவதியாகி என முறையே சென்றுஇயைதலால், முறைநிரல்நிறைப்பொருள்கோள்.

“ஓதப்புனல்” என்றது, பொன்னிக்கு இயற்கையடைமொழியாய் நின்றது. ஓதம் – குளிர்ச்சியும், அலையும், பெருக்குமாம்.
ஓதம் புனல் – கடலை நோக்கிச்சென்றுசேரும் நீ ரெனினுமாம்.
“மலைத்தலைய கடற்காவிரி, புனல் பரந்து பொன்கொழிக்கும்” என்றபடி தான்பெருகும்பொழுது பொன்னைக்
கொழித்துக்கொண்டுவருதலால், காவேரிக்கு “பொன்னி” என்று பெயர்;
இ – உடைமைப்பொருள் காட்டும் பெண்பால்விகுதி. பாதம், பிலம், சீதம், தரங்கம், மந்தாகிநீ, கங்கா, போகவதீ – வடசொற்கள்.
புரை – உவம வாசகம். கங்கை, வெண்ணிறமான நீரை யுடையது. நாளும், உம்மை – தொறுப்பொருளது.
கங்கைக்குச் செழுமை – நீர்மிகுதியும்,
“எழுமையுங்கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும் பெருமைக் கங்கை” என்றபடி
தன்னிடத்து நீராடுபவர்க்குத் தீவினைதீர்த்து நற்கதியருளுதலும்; இச்சொல்லுக்கு – அழகென்ற பொருளும் உண்டு.

———–

ஓலப் புனல் அரங்கேசர் பொற்றாள் பட்டு உடைந்த அண்ட
மேலக் காடாகத் தொளை வழியாக விழும் புனல் போய்
கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் குரம் பட்டு உடைந்த
மூலக் கடாகத் தொளையால் விழுந்தது முன் புனற்கே –37-

(இ – ள்.) ஓலம் புனல் அரங்கஈசர் – ஆரவாரத்தைச்செய்கிற (காவேரி) நீரினாற் சூழப்பட்ட திருவரங்கத்தின் தலைவரான எம்பெருமானது,
பொன் தாள் – (திரிவிக்கிரமாவதாரத்தில் மேலுலகத்தையளந்துசென்ற) அழகிய திருவடி,
பட்டு – பட்டதனால், உடைந்த -,
அண்டம் மேலக் கடாகம் – அண்டகோளத்தினது மேற்பக்கத்துமூடியில் உண்டான,
தொளை வழி ஆக – துளையின் வழியாக,
விழும் – (பெரும்புறக்கடலினின்று) உள்ளேவிழுந்த,
புனல் – நீரானது, –
கோலம் திரு உரு கொண்ட அ நாள் – (அப்பெருமான்) ஸ்ரீவராகரூபத்தைக் கொண்ட அக்காலத்தில்,
குரம் பட்டு – (அந்த வராகநாயனாரது) திருக்குளம்பு பட்டதனால்,
உடைந்த -, மூலம் கடாகம் – (அண்டகோளத்தினது) அடிப்பக்கத்து மூடியின்,
தொளையால் – துளைவழியாக,
போய் – சென்று,
முன் புனற்கே விழுந்தது – பழமையான அக்கடலிலேயே விழுந்திட்டது; (எ – று.)

“பலிசக்கரவர்த்தியின்யாகத்தில் திரிவிக்கிரமவடிவங்கொண்டு உலகத் தையளந்த விஷ்ணுபகவானுடைய
வாமபாதத்தினது கட்டைவிரல்நுனி யாற் பிளக்கப்பட்ட மேற்பாகத்தையுடைய அண்டகடாகத்தின் தொளை வழியாய் உள்ளே
பிரவேசித்த புறக்கடலின்நீர்ப்பெருக்கு” என்று ஸ்ரீபாக வதத்திலும்,

“ஸ்ரீயஜ்ஞவராகமூர்த்தியினுடைய குளம்பு தாக்கினதனாலே பிளந்த அண்டகடாகத்தினுள்ளே” என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும் வருதல் காண்க.

“பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த, நீரளவுஞ் செல்ல நிமிர்ந்ததே” என்று பொய்கையாழ்வாரருளிச்செய்ததும் காணத்தக்கது.

“அண்டம் மோழை யெழ முடிபாதமெழ வப்ப, னூழியெழ வுலகங் கொண்டவாறே” என்றார் நம்மாழ்வாரும்.

“நண்ணுபொற்றுகளெனநாகர் நாட்டொடு, மண்ணகம்பொதிந்த தோர்பத மற்றோர்பதம்,
விண்ணகங்கட ந்துபோய் விரிஞ்சனாடுறீஇ, ஒண்ணிறவண்டமு முடைய நீண்டதே,”

“செங் கண்மால்மலர்ப்பதஞ் சென்றமோழையிற், றுங்கவண்டத்தினைச்சூழ்ந்தநீள் கடற்,
பொங்கவிழ்ந்தொழுகிய புனலை யன்றுகொல், கங்கையென்றின்ன முங் கழறுகின்றதே” என்ற கூர்மபுராணச் செய்யுள்களையும் காண்க.

புனல் – ஆவரணஜலம். பொன் தாள் – பொன்மயமான வீரக்கழலை யணிந்த திருவடி யென்றுமாம்;
“மேலெடுத்த, பொன்னார்கனைகழற்கா லேழு லகும்போய்க் கடந்து” என்றார் திருமங்கையாழ்வாரும்:
அடியார்களைப் பாதுகாத்தற்கென்று கட்டிய கழ லென்க; இவ்வுரைக்கு, பொன் – கருவி யாகுபெயர்.
முன்புனல் – முன்கூறிய புனல் எனினுமாம். அந் நாள் – பூர்வ காலத்தி லென்றபடி.

கீழ்க் கூறிப்போந்த வராகாவதாரத்தின் வைபவத்தோடு சேர்த்துத் திரிவிக்கிரமாவதாரவைபவத்தைக் கொண்டாடியது, இப்பாசுரம்;
உலகத்தை எடுத்தும் அளந்தும் ஆண்ட அவதாரங்கட்கு ஒற்றுமை யுண்டிறே. மேலக்கடாகம், அ – சாரியை.
கடாஹம், கோலம், குரம், மூலம் – வடசொற் கள். கடாகம் – ஓடு;
விளாஞ்சதையை விளாவோடுபோலவும் தேங்காயைத் தேங்காயோடுபோலவும் பதினான்குஉலகங்களையும்
மேலும் கீழும் பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்ற அண்டகபாலம்; அண்டகோளத்தின் ஓடு,
அண்டமேலக்கடாகம் – அண்டகடாகத்தில் மேலிடம். மூலக் கடாகம் – அதிற்கீழி டம்.
கோலம் – பன்றி. புனற்கு = புனலில்; உருபுமயக்கம். பட்டு – படுத லால்: காரணப்பொருட்செயவெனெச்சமாகிய பட என்றதன்திரிபு.

———-

ஸ்ரீ பரசுராம அவதார வைபவம் –

மறிக்கும் கயல் கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்
பறிக்கும் கபடன் பணிப் புயமோ அவன் பைங்கடகம்
செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண் புயமோ அவற்றைத்
தறிக்கும் திறல் மழுவோ அரங்கா சயத்தார் உடைத்தே –38-

(இ – ள்.) அரங்கா – திருவரங்கனே!
மறிக்கும் – பிறழ்கின்ற,
கயல் – கயல்மீன்போன்ற,
கண்ணி – கண்களையுடையவளான அம்பிகையை,
பங்கு ஆளன் – (தனது இடப்) பக்கத்திலுடையவனான சிவபிரான்,
வாழ் – வசிக்கின்ற,
மால் – பெரிய,
வெள்ளிவரையை – வெள்ளிமயமான மலையாகிய கைலாசத்தை,
பறிக்கும் – அடியோடு பெயர்த்தெடுத்த,
கபடன் – வஞ்சகனான இராவணனது,
பணை புயமோ – பருத்த (இருபது) கைகளோ, –
அவன் – அவ்விராவண னுடைய,
பைங் கடகம் செறிக்கும் புயம் – பசும்பொன்னாலாகிய கடகமென் னும்வளையை யணிந்த கைகளை,
செற்ற – வலியழித்து நெருக்கிக் கட்டிய,
திண் – வலிய,
ஆயிரம் புயமோ – (கார்த்தவீரியார்ச்சுனனது) ஆயிரங் கைகளோ,
அவற்றை தறிக்கும் – அவ்வாயிரங்கைகளையும் வெட்டித் தள்ளிய,
திறம் மழுவோ – (பார்க்கவராமனாகிய நினது) வலிமையையுடைய கோடா லிப்படையோ, –
சயம் தார் உடைத்து – (இவற்றில் எது) வெற்றிமாலையை யுடையது? (எ – று.)

மழுவே வெற்றிமாலையையுடைய தென்பதாம்.
சிவபிரானது கைலாச கிரியைப் பெயர்த்தெடுத்த இராவணன் மிகவலியவனென்றும்,
அவனிலும் கார்த்தவீரியன் வலியவ னென்றும்,
அவனிலும் பரசுராமன் வலியவ னென் றும் கூறியதாயிற்று.

விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேருவில்வளைத்துத் திரிபுரமெரித்து மன்மதனைத்தகித்து யமனையுதைத்து
அழித்தல் தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்கிரமூர்த்தியாவான் உருத்திர னென்பது பிரசித்தம்.
அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைலாசகிரியை இராவணன் வேரோடுபெயர்த்தன னென்பதும்,
அங்ஙனம் மிகவலியனாய்த் திக்கு விசயஞ்செய்து திக்கஜங்களையும் வென்ற இராவணனைக்
கார்த்த வீரியார்ச்சுனன் கட்டிச் சிறையிலிட்டன னென்பதும்,
அவ்வருச்சுனனைப் பரசுராமபிரான் தோள்துணித்துத் தொலைத்திட்டன னென்பதும்,
இதிகாசபுராணங்களால் விளங்குகின்றன: ஆகவே, பரசுராமபிரானது வலிமையும் வெற்றியும்
மிகமேம்பட்டன வென்பது நன்குவிளங்கும்;
ஆனதுபற்றி, இங்ஙனம் வினாவுகின்றவகையால் அப்பெருமானது மகிமையை வெளியிட்டார்.
இருபதைவென்ற ஆயிரத்தைத் துணித்த ஒன்று மிகமேம்பட்ட தென நயங் காண்க.
மேல்மேல் ஒன்றினும்ஒன்றுஉயர்ந்ததைச் சொல்லுதலால், மேன்மேலுயர்ச்சியணி; இதனை வடநூலார் ஸாராலங்கார மென்பர்.

“திசையுறுகரிகளைச்செற்றுத் தேவனும், வசையுறக்கயிலையைமறித்து வானெலா,
மசையுறப்புரந்தரனடர்த்ததோள்களி, னிசையினைத் தும்புருவிசையினேத்தவே,”
“ஈசனாண்டிருந்தபேரிலங்குமால்வரை, ஊசிவேரொடும் பறித்தெடுக்கு மூற்றத்தான்,”
“அரண்தருதிண்டோள்சாலவுளவெனி னாற்றலுண்டோ,
கரண்டநீரிலங்கைவேந்தைச் சிறைவைத்த கழற்கால்வீரன்,
திரண்டதோள்வனத்தையெல்லாஞ்சிறியதோர் பருவந்தன்னி,
லிரண்டுதோ ளொருவனன்றோ மழுவினாலெறிந்தா னென்றாள்” என்ற கம்பராமாயணம் இங்கு நோக்கத்தக்கது.

மகளிர்கண்ணுக்குக் கயல் – பிறழ்ச்சியில் உவமம். கயற்கண்ணி – மீநாக்ஷி.
“கயற்கண்ணிபங்காளன் வாழ் வெள்ளிமால்வரையைப் பறிக்குங் கபடன்” என்றதனால்,
பக்கத்திலுள்ள அம்பிகை அஞ்சி மருண்டுநோக்கிச் சிவபிரானைத் தழுவிக்கொள்ளும்படி
இராவணன் கைலாசகிரியைப் பெயர்த்தன னென்பதைக் குறிப்பித்தவாறாம்;
(“அருவியங்குன்றமரக்கன் பெயர்ப்ப, வெருவியவெ ற்பரையன்பாவை – பெருமா, னணியாகமாரத்தழுவினாள்” என்பது காண்க.)
வெள்ளி – வெண்ணிறமுடையது; காரணக்குறி: இ – பெயர்விகுதி.
“எட்டினாற் குடுமியைப்பிடிப்பது, எட்டாவிட்டாற் காலைப்பிடிப்பது” என்பதாக, முன்னும் பின்னும் சிவபிரானை வணங்கிப்
பிரார்த்தித்துப் பற்பலவரங்கள்பெறுப வனாயிருந்தும் இடையில் நன்றி கெட்டவனாய்ச் செருக்கி
அப்பெருமான் வாழ்கின்ற இடத்தைக் களையத்தொடங்கின துரோகி யென்பார். “கபடன்” என்றார்;
சீதாபிராட்டியை வஞ்சனையாற் கவர்பவ னாதல்பற்றி இங்ஙனங் கூறினாரு மாம்.
கபடம், புஜம், கடகம், ஜயம் – வடசொற்கள்.
கடகம் – ஒருவகைக் கைவளை. பைங் கடகம் – பொன்னின் பசுமை, கடகத்தின்மேலேற் றப்பட்டது.
செறித்தல் – சேர்த்தல். அணிந்த கடகம் புயத்தின்வளர்ச்சியால் அழுந்தப்பெற்ற வெனக் கொள்ளலுமாம்;
நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக அவன்புயங்கள் கொழுத்துச் செழித்துப் பருக்கின்றன வென்க.

“வெள்ளிமால்வரையைப்பறிக்குங் கபடன்” என்றதனால் “இராவணன்” என்பதும்,
“அவன்புயஞ்செற்ற ஆயிரம்புயம்” என்றதனால் “கார்த்தவீரிய னது” என்பதும்,
“அவற்றைத்தறிக்கும் மழு” என்றதனால் “பரசுராமனது” என்பதும் விளங்கின.
சயத் தார் – வெற்றிக்கு அறிகுறியான வாகைப்பூ மாலை; “போர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகையாம்” என்பது காண்க.
‘திறம’ சயத்தாருடைத்துழு – “வென்றிமாமழுவேந்தி,”
“செரு நுதலூடுபோகி யவராவி மங்க மழுவாளின் வென்ற திறலோன்” என்றார் திருமங்கையாழ்வாரும்.

இராவணன் – பிரமபுத்திரரான புலஸ்தியமகாமுனிவரது குமாரராகிய விச்சிரவ முனிவருடைய மகன்;
குபேரனுக்குத் தம்பிமுறையானவன்; கேகசியென்னும் இராக்கதமாதினிடம் பிறந்தவன்;
பத்துத்தலைகளையும் இருபதுகைகளையும் உடையவன்; இலங்கைநகரத்தில் வாழ்ந்த ராக்ஷஸராஜன்;
அரியபெரியதவத்தைச்செய்து பெருவரங்கள் பெற்றுச் செருக்கியவன்; திரிலோகாதிபதியான இந்திரனையுமுட்பட வென்று அடக்கி ஆண்டவன்.

கார்த்தவீரியார்ச்சுனன் – சந்திரவம்சத்து யயாதிமகாராசனது மூத்த குமாரனாகிய யதுவினது குலத்தவனாகிற கிருதவீரியனுடைய குமாரன்;
பலபராக்கிரமங்களிற் சிறந்தவன்; நாராயணாம்சமாய் அத்திரிகுமாரராய் விளங்குகின்ற தத்தாத்திரேயமகாமுனிவரை ஆராதித்து
அவருடைய அநுக் கிரகத்தினால் ஆயிரந்தோள்களுடைமை, போரில் வெற்றி, பூமியை முறைப்படி பாதுகாத்தல்,
பகைவர்களால் அவமானப்படாமை, சகலலோகங்களுங் கொண்டாடும்படியான மகாபுருஷனால் மரணம் முதலிய பல வரங்களைப் பெற்று,
அநேக யாகங்களைச் செய்து, மாகிஷ்மதிநகரத்திற் பலகாலம் அர சாட்சிசெய்தவன்.
இவனிடம் விஷ்ணுவினுடைய சக்தி ஆவேசித்திருந்தது. (அதுபற்றிய விவரம் அடுத்தசெய்யுளுரையிற் காண்க.)

பரசுராமன் – உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத் துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற்பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்கினிமுனிவரது மனைவியான
ரேணுகையினிடம் இராமனாய்த் திருவவதரித்து, பரசுஎன்னுங் கோடாலிப் படையை ஆயுதமாகக்கொண்டு,
அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்றுத் தனது தந்தையின் ஓமதேனுவைக் கவர்ந்து அவனைக்கொன்றிட்டது
காரண மாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும் அவனதுகுமாரர்களையுங் கொன்று அத னாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது ஒழித்திட்டான்;
ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் இவன்.

————

இது முதல் எட்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதார வைபவம்

மாதண்டம் மேவும் கரத்தர் அரங்கர் வடமிதிலைக்
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது குவட்டு வெள்ளி
வேதண்டம் மேய மழுவாளி நாணினன் வென்றி கண்டு
மூதண்டம் அஞ்சும் மழுவாளி கோபம் முதிர்ந்ததுவே –39-

(இ – ள்.) மா தண்டம் மேவும் கரத்தார் – பெரிய (கௌமோதகி யென்னுங்) கதாயுதம் பொருந்திய திருக்கையை யுடையவராகிய,
அரங்கர் – திருவரங்கநாதர்,
வட மிதிலை – வடக்கிலுள்ள மிதிலாபுரியிலே,
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது – வில்லை வளைத்து முறித்து அதிலிருந்து உக்கிரமான ஓசையை யுண்டாக்கியபொழுது, –
குவடு வெள்ளி வேதண்டம் மேய மழு ஆளி நாணினன் – சிகரத்தையுடைய வெள்ளிமலையாகிய கைலாசத்திற் பொருந்திவாழ்கின்ற மழுவென்னும்ஆயுதத்தையுடையவனான சிவபிரான் வெள்கினான்;
வென்றி கண்டு – (ஸ்ரீராமபிரானது) அவ்வெற்றியை நோக்கி,
முது அண்டம் அஞ்சும் மழுஆளி கோபம் முதிர்ந்தது – பழமையான அண்ட கோளத்திலுள்ளவரனைவரும் அஞ்சும்படியான கோடாலிப்படையையுடை யவனாகிய பரசுராமனது கோபம் மிக்கது; (எ – று.)

விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனது குலத்துப்பூர்விகராஜனான தேவராதனிடம்
சிவபிரானால் வைக்கப்பட்டிருந்த தொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்த மகளான
சீதையைக் கல்யாணஞ்செய்துகொடுப்ப தென்று கந்யாசுல்கம் வைத்திருக்க,
வேள்விமுடித்த விசுவாமித்திரமுனிவனுடனே மிதிலைக்குச்சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில்,
அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற் சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு
சீதையை இராமனுக்கு மணம்புரியலாயின னென்பதும்;
சீதாகல்யாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச் சென்று இராமபிரானை யெதிர்த்து
“முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப் போன சிவதநுசை முறித்த திறத்தை யறிந்தேன்; அதுபற்றிச் செருக்க டையவேண்டா:
வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்” என்று அலக்ஷ்யமாகச்சொல்லித்
தான்கையிற்கொணர்ந்த வில்லைத் தசரதராமன் கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி
எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து “இந்தப்பாணத்திற்கு இலக்கு யாது?” என்று வினாவ,
பரசுராமன் அதற்குஇலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க,
அவன் க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேத வித்தும் தவவிரதம்பூண்டவனுமாயிருத்தல்பற்றி
அவனைக்கொல்லாமல் அவ னதுதவத்தைக்கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதும், இங்கு அறியவேண்டியவை.

விஷ்ணுவின் தசாவதாரங்களுள் ஆறாம்அவதாரமான பரசுராமன் ஏழாம்அவதாரமான தசரதராமன்மீது கோபித்தலும்,
இவ்விருவரும் ஒருவ ரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லு தலும் பொருந்துமோ வெனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்திவிசேஷம் அக்காரியம்முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அம்சா வதாரமான தசரதராமனாற் கவர்ந்து
கொள்ளப்பட்ட தாதலிற் பொருந்து மென்க. இதனால், ஆவேசாவதாரத்தினும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

ஸ்ரீமந்நாராயணனது விபவாவதாரங்கள் அளவற்றன. அவை, முக்கியம், அமுக்கியம் என இருவகைப்படும்.
இவற்றில், முந்தியது – சிறந்தது; பிந்தியது – அதனிலும் தாழ்ந்தது.
முக்கியமாவது – ஸாக்ஷாதவதாரம். அமுக் கியமாவது – ஆவேசாவதாரம்.
ஆவேசந்தான், ஸ்வரூபாவேசமென்றும் சக்தி யாவேசமென்றும் இருவகையதாம்.
ஸ்வரூபாவேசமாவது – சேதகருடைய சரீரங்களில் எம்பெருமான் தன்னுடையரூபத்துடன் ஆவேசித்து நிற்றல்;
பரசுராமன், பலராமன் போல்வார் இத்திறத்தவர்.
சக்தியாவேசமாவது – சேதநர்பக்கல் காரியகாலத்திலே எம்பெருமான் சக்திமாத்திரத்தால் தோன்றி விளங்குதல்;
கார்த்தவீரியார்ச்சுனன், அருச்சுனன், வியாசர் போல்வார் இத்திறத்தவர்.

இவற்றிற் சக்தியாவேசத்தினும் ஸ்வரூபாவேசம் பிரபலம். இவற்றின் உண்மை நிலையை விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
முதலிய ஸ்ரீபாஞ்சரா த்ரஸம்ஹிதைகளிலும், தத்வத்ரயத்திலும், அதன் வியாக்கியானத்திலும் பரக்கக் காணலாம்.
தசாவதாரங்களுள் பரசுராமாவதாரமும் பலராமா தாரமும் – ஸ்வரூபாவேசாவதாரங்கள். மற்றவை – ஸாக்ஷாதவதாரங்கள்.
வில் லுங் கையுமாய் உலகத்தை நன்றாய்ஆளுகைக்காகக் கார்த்தவீரியார்ச்சுன னிடம் திருமாலின்சக்தி சிறிது ஆவேசித்திருந்தது.
துஷ்ட க்ஷத்ரியநிரஸநார் த்தமாகப் பரசுராமரிடம் திருமால்தானேசக்திவிசேஷத்தால் ஆவேசித்திரு ந்தான்.
தசரதராமாவதாரம் – ராவணவதத்தின் பொருட்டுத் திருமால்தானே நேராய் அவதரித்தது.
(இவற்றில் முந்தினஇரண்டும் – அஹங்காரயுக்தஜீவர் களை அதிஷ்டித்துநின்றவை.)
இவற்றில் ஒன்றைக்காட்டிலும் ஒன்றற்குஉள்ள உயர்வை, கார்த்தவீரியனைப் பரசுராமன் கொல்ல,
அப்பரசுராமனைத் தசரத ராமன் வென்றதனால் நன்கு விளங்கக் காணலாம்.

(“ஸ்வரூபாவேசாவதார மாய்த் தசாவதாரமத்யே ஸஹபடிதனாய்ப்போருகிற அப்பரசுராமன்தான் நிரஸ்தனானபடி எங்ஙனே யென்னில், –
ஸ்வரூபாவேசத்திலும் ஸாக்ஷாதவ தாரம் ப்ரபலமாகையாலே, அத்யுத்கடத்வமுண்டானபோது இதனாலே அது நிரஸ்தமாகக் குறையில்லை.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமான வோபாதி, ஸ்வரூபாவேசத்தில் ஸாக்ஷாதவதாரம் ப்ரபலமாகத் தட்டில்லை யிறே.
சக்த்யாவேசத்தில் ஸ்வரூபாவேசம் ப்ரபலமாகையாலேயிறே, ஸஹ ஸ்ரபாஹ்வர்ஜுநன் பரசுராமனாலே நிரஸ்த னாய்த்து”
என்ற வியாக்கியான வாக்கியங்கள் காணத்தக்கன.)

சிவபிரான் தான் அருமையாகக் கைக்கொண்டு ஆண்டு பகைவென்று வந்த மிகவலிய வில்லை ஸ்ரீராமன்
வெகுஅலக்ஷ்யமாக இடக்கையாலெடுத்து நிறுத்தி வளைத்து முறித்தமைபற்றி நாணின னென்க.
ஸ்ரீராமன் அவ்வில்லில் நாணேற்றி அந்நாணியைத்தெறித்துச் சத்தமுண்டுபண்ணி இழுக்கும் பொழுது அவ்வில் முறிகையில்,
அதிலிருந்து பேரிடிமுழக்கம்போலவும் மலை பிளந்தாற்போலவும் அண்டகோளம் அதிரும்படி பெரியசத்தம் எழுந்துபரவி யதை
“கோதண்டவேகம்பிறப்பித்தல்” என்றார். க்ஷத்ரியவம்சநாசகரனான பரசுராமன் அவ்வோசையைக்கேட்டவுடனே
க்ஷத்ரியவம்சந்தளிர்ப்பதைக் குறித்துப்பெருங்கோபங்கொண்டு ஓடிவந்ததனால் “வென்றிகண்டு மழுவாளி கோபமுதிர்ந்தது” எனப்பட்டது. (“சரியில்மன்னிறுத்தவல்வில்லொலியினை ச்சகியமென்னும், வரைமிசையதனிற்கேட்டு மனமுறுசினத்தினோடும்,
பரசு ராமன்றா னெய்திப் பழிப்பிலாவிராமன் றன்னோ, டுருமெனவுலகமஞ்சவுரு த்திவையுரைத்தானம்மா” என்ற
மகாபாகவதம் இங்கே நோக்கத்தக்கது.)

மஹாதண்டம், கரம், மிதிலா, கோதண்டவேகம், வேதண்டம், கோபம் – வடசொற்கள்.
மிதிலை எவ்விடத்திலுள்ள தென்றால், வடக்கி லுள்ளதென வேண்டுதலின், அதனை ‘வடமிதிலை’ என விளங்கக்கூறினார்;
“வடவேங்க டந் தென்குமரி” என்றாற்போல. எனவே, இங்கு ‘வடக்கு’ – இனம்விலக்க வந்த அடைமொழியன் றென்க.
மிதிலை யென்பதற்கு – மிதியென்பவனால் ஏற்படுத்தப்பட்ட நகரமென்பது பொருள்.
மிதியென்பது, ஜநககுலத்தலை வனான ஓரரசனுக்குப் பெயர்; கடைந்ததனாலுண்டானமைபற்றியது.
வேத ண்டம் -மலை. மழு ஆளி – மழுவை ஆள்பவன்: வாளி – மழுவாகிய படைக் கலத்தையுடையவன்.
மழு – எரியிரும்புப்படையும், கோடாலியும்: இதனை வலக்கையிற் கொண்டுள்ளார்.
“வென்றிகண்டு” என்பதை, மத்திமதீபமாக, முன்வாக்கியத்தோடும் கூட்டலாம்; மேம்பாட்டைநோக்கி யென்க.
இனி, மூதண்டம் வென்றிகண்டு அஞ்சும் மழுவாளி யென்னவுமாம். இருபத்தொருமுறை உலகைச்சுற்றிவந்து
க்ஷத்திரியசங்காரஞ்செய்தவ னாதலால், “அண்டமஞ்சும் மழுவாளி” எனப்பட்டான்.
தண்டம் ஏவும் எனப்பிரித்து, கதாயுதத்தைப் (பகைவெல்லுமாறு) பிரயோகிக்கின்ற என்றலு மொன்று. அண்டம் – இடவாகுபெயர்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது பேராற்றலும், பரத்வமும் கூறப்பட்டன.

————–

மாகம் பிலம் திக்கு இமையோர் உலகம் மழுவுடையோன்
நாகம் நல் நாடு அளவாக பல் நாகம் நடுங்க அம்பு
வேகம் கொடு தொடர பறந்து ஓடியும் மீண்டு வந்து
காகம் சரண் என்ன நம் பெருமாள் உயிர் காத்தனரே –40-

(இ – ள்.) காகம் – காகாசுரன்,
பல் நாகம் நடுங்க அம்பு வேகம் கொடு தொடர – பலதிசைகளிலுள்ள பிராணிகளும் அஞ்சி நடுங்கும்படி (இராம பிரானது) பாணம் வேகங்கொண்டு (தன்னைத்) தொடர்ந்துவருதலால்,
மாகம் – பெரிய ஆகாயமும்,
பிலம் – பாதாளலோகமும்,
திக்கு – திசைகளும்,
இமையோர் உலகம் – தேவலோகமும்,
மழுஉடையோன் நாகம் – மழுவென் னும்ஆயுதத்தையேந்தியவனான சிவபிரானது (கைலாச) கிரியும்,
நல் நாடு – நல்ல இந்தப்பூலோகமும்,
அளவு ஆக – ஆகிய இவற்றின் எல்லையுள்ளவரையிலும்,
பறந்து ஓடியும் – பறந்து ஓடிப்போய்ப் பார்த்தும், (தனக்குப்புக லிட மொன்றும் வாய்க்காமையால்),
மீண்டு வந்து – திரும்பி வந்து,
சரண் என்ன – “(உனது திருவடியே) சரணம்” என்று அடைக்கலம்புக,
நம்பெருமாள் உயிர் காத்தனர் – ஸ்ரீரங்கநாதனாகியஅவ்விராமபிரான்தானே (அந்தக் காகாசுரனது) உயிரைப் பாதுகாத்தருளினர்; (எ – று.)

“சித்திரகூடத் திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமேகொண் டெறிய வனைத்துலகுந் திரிந்தோடி,
வித்தகனே யிராமாவோ நின்னபய மென்றழைப்ப,
அத்திரமே யதன்கண்ணை யறுத்தது மோரடையாளம்” என்ற பெரியாழ்வார்திருமொழி, இங்கே நோக்கத்தக்கது.

(அதன் வியாக் கியானத்தில் “முந்துறப் பித்ருக்ருஹத்திலே சென்றவளவில் பிதாவாலும் மாதாவாலும் கைவிடப்பட்டு,
பந்துக்களானவர்கள் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில் அவர்களாலும் பரித்யக்தனாய்,
ஆந்ருஸம்ஸ்யப்ரதாநரான ருஷிகள்தான் கைக்கொள்ளுவர்களோ வென்று அவர்கள்பக்கலிலே சென்றவளவில்
அவர்களும் கைவிடுகையாலே, திறந்து கிடந்த வாசல்கள்தோறும் ஒருகால்நுழைந்தாற்போலே
ஒன்பதின்கால் நுழைந்து மூன்று லோகங்களையும்வளைய ஓடித்திரிந்தவிடத்திலும் ஒருவரும் கைக்கொள்ளாமையாலே
“தமேவ ஸரணம் கத:” என்கிறபடியே “சீறி னாலும் காலைக்கட்டிக்கொள்ளலாம்படியிருக்கும் க்ருபாவா னாகையாலே
விஸ்மயநீயனாய் எல்லாரையும் குணத்தாலே ரமிப்பிக்கவல்லவனே!” என்று சரண்யரான பெருமாள் குணத்தைச் சொல்லி
ஓ!” என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக்கொண்டு “உனக்கு அபயம்” என்று ஸரணாகத னானமை தோற்றக் கூப்பிட,
இப்படி ஸரணம்புகுகையாலே,…….க்ருபையாலே பெருமாள் ரக்ஷித்தருளுகிறவளவில்,
காகத்துக்கு ப்ராணப்ரதா நம்பண்ணி, அஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவு கற்பிக்கையாலே,
முன்பு தலை யறுப்பதாகத்தொடர்ந்த அஸ்த்ரம்தானே அதனுடைய ஒருகண்ணை அறுத்து விட்டது” என்றதும் காண்க.)

“அங்கதஞ்சிநடுங்கி யயன்பதியண்மி, இங்குநின்வரவென்ன வெனக்கனல்வெய்த,
மங்கைபங்கனொடெண்டிசை யுஞ்செல மற்றோர், தங்கள் தங்களிடங்கள் மறுத்தமை தைப்பாய்” என்ற கம்பராமாயணத்தாலும்,
அக்காகம் எங்கும்சரண்பெறாமை விளங்கும்.
பெருமாளுடைய கோபத்திற்கு இலக்கான இதனை ஏற்றுக்கொண்டால் நமக்கு முட்பட என்வருமோ வென்னும் அச்சத்தாலும்,
ஆற்றலில்லாமையாலும், எவரும் அதற்குப் புகலிடமாகவில்லை யென்க. பெருமான் கிருபையாலே மந்தகதியாகச் செலுத்த
அங்ஙனமே மெதுவானநடையுடன் காகத்தை அஸ்திரம் பின்தொடர்ந்து சென்றிருக்கவும்
“அம்பு வேகங்கொடு தொடர” என்றது, அஞ்சியோடுவதும் இயல்பில் விரைந்த நடையில்லாததுமான
காக த்தின் கருத்தாலே யென்க;
“காகமொன்றை முனிந் தயல்கல்லெழு புல் லால், வேகவெம்படைவிட்டது” என்றார் கம்பராமாயணத்திலும்.
இனி, வேகம் – உக்கிரத்தன்மையுமாம்.

மாகம் – மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். திக், நாகம், வேகம், காகம் – வடசொற்கள்.
நாகம் – மலை யென்ற பொருளில், இடம்விட்டுப் பெயராத தென்று காரணப்பொருள்பெறும்.
சுவர்க்கத்தை யடைகின்றவர்களுக்கும் மோக்ஷத்தை யடைகின்றவர்களுக்கும் பிரவிருத்தி நிவிருத்தி கர்ம ஸாதநபூமி
இதுவே யாதலால், “நல்நாடு” என்றார். ‘மாகம்’ என்றது, புவர் லோகத்தை.
“இமையோருலகம்” என்றது, ஸுவர்லோகம் முதலியவற்றை. “நல்நாடு” என்றது, பிரமனது சத்தியலோகத்தையு மாகலாம்.
இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும்பெயர்: எதிர் மறையாகாரம் புணர்ந்துகெட்டது:
விகுதி முதல் ஆகாரம் ஓகாரமாயிற்று. மாகம் – திசை: திசைகளிலுள்ள பிராணிகளுக்கு இடவாகுபெயர்.
இனி, மலையென்றுங் கொள்ளலாம். நடுங்குதல் – அச்சத்தால் உள்ளமும் உடலும் நடுங்குதல்.
காகம் – காஎன்று கத்துவதெனப் பொருள்படுங் காரணக்குறி.
சரண் – ஸரண மென்ற வடசொல்லின் விகாரம்; பாதுகாப்பவ னென்பது பொருள்.

இப்பாசுரத்தால், ஸ்ரீராமபிரானது ஆற்றலும், அருளும், சரணாகதரக்ஷ கத்வமும், பரத்வமும் கூறப்பட்டன.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவரங்கத்து மாலை. – -1-20-

February 16, 2022

ஸ்ரீ திருவரங்கத்து மாலை நூலின் புறமாக முதலிற்கூறிய காப்புச்செய்யு ளொன்றும்,
இறுதியிற் கூறும் தற் சிறப்புப் பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக
நூற்றுப் பதினொரு செய்யு ளுடையது,
இந்நூல், கட்டளைக் கலித்துறையினால் அமைந்தது.

சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –

மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –

மணவாளர் தம் – அழகிய மணவாள தாசருடைய,
மாலையின் – திருவரங்கத்து மாலையினது,
உள் – உள்ளே யமைந்திருக்கின்ற,
பொருள் – பொருளானது, –
மறை பொருளோ – வேதங்களின் பொருளேயோ?
அ சிரம் பொருளோ – அவ்வேத முடிவுகளின் பொருளேயோ?
மனுவே முதல் ஆம் – மநு ஸ்மிருதி முதலான,
முறை – தரும சாஸ்திரங்களின்,
பொருளோ – பொருளேயோ?
இதிகாச புராணம் முது பொருளோ – இதிகாசங்கள் புராணங்கள் என்னு மிவற்றினது தேர்ந்த பொருளேயோ?
இறை பொருள் ஆம் – பரதத்துவமாகிய,
நம் பெருமாளுடை – நம்பெருமாளுடைய,
திரு எட்டு எழுத்து – ஸ்ரீஅஷ்டாக்ஷரமந்திரத்தினது,
உள்உறை – உட் கருத்தாகிய,
பொருளோ – பொருளேயோ? (என்றவாறு.) – ஏகாரம் – ஈற்றசை.

இங்ஙனம் ஐயந்தோன்றப் பலவாறு விகற்பித்துக் கூறினாராயினும்,
வேதம் வேதாந்தம் தரும சாஸ்திரம் இதிகாசம் புராணம் அஷ்டாக்ஷரம் என்னும் இவை யெல்லாவற்றினது பொருளும்
இத்திருவரங்கத்துமாலையில் அடங்கியிருக்கின்றன வென்பது கருத்தாம்.
எனவே, இவ்வாறு பலவகையாக ஐயப்பட்டது, இன்னதென்று ஒன்றன்மையாலே வரை யறுத்துச் சொல்லத் தெரிந்திலே னென்ற தல்லது,
தேர்ந்து தெளியாமையாற் சொன்ன தன்றென்று அறிக.

புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ –
திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ –
இகழ்வில் இவை யனைத்தும் என்கோ –என்றால் போலே ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு

இதனால், இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது வேத சாஸ்திர பாண்டித்திய விசேஷத்தையும் விளக்கியவாறாம்.
மறைப்பொருள் முதலிய யாவும் இந்நூலில் இருத்தலை வெளிப்படையாகக் காணலாம்;
குறிப்பால் நுண்ணிதின் உய்த்து உணரத்தக்க இடங்களும் உண்டு.

(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல் பற்றி, மறையென்று பெயர்; மறு – பகுதி, ஐ – செயப்படுபொருள் விகுதி.
இனி, இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப் பொருள் கூறவுமாம்.
அவ்வேதந்தான், ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என நான்கு வகையது.
பொருள் – அர்த்தம். வேதத்தின் பிரிவு இரண்டனுள், யாகாதி கிரியைகளைக் கூறுவதும் கர்ம காண்டமெனப்படுவதுமான
பூர்வ பாகத்தின் பொருளை “மறைப்பொருள்” என்றும்,
பகவானைக் குறித்ததும் உபநிஷத்தென்றும் வேதாந்தமென்றும் பிரம காண்டமென்றுங் கூறப்படுவதும்
வேதத்தின் தேர்ந்த கருத்துமான உத்தர பாகத்தின் பொருளை “அச்சிரப்பொருள்” என்றுங் கூறினர்.
அச்சிரம் – வேதசிரம் என்றபடி.

செய்யா மொழியாதலாற் சிறந்த பிரமாணமாகிற வேதத்தின் பொருளை ஐயந்திரிபற நிச்சயிப்பதற்கு உரிய ஸாதநங்கள்,
ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களுமாம். ஆதலால், அவை வேதத்திற்கு உப ப்ரும்ஹணங்க ளெனப்படும்;
அவற்றுள், பெரும்பாலும் வேதத்தினது பூர்வ பாகத்தின் அர்த்தம் ஸ்மிருதிகளாலும்,
உத்தர பாகத்தின் அர்த்தம் இதிகாச புராணங்களாலும் நிச்சயிக்கத் தக்கது;
இதிகாசபுராணங்களுட் புராணங்களினும் இதிகாசம் பிரபலமான பிரமாணமாம் என்பது உணர்க.
இதுவே, மறைப்பொருள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்திய முறைமைக்குக் காரணம்.

(“வேதார்த்தம் அறுதியிடுவது, ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களாலே; ஸ்ம்ருதியாலே, பூர்வபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது;
மற்றையிரண்டாலும், உத்தரபாகத்திலர்த்தம் அறுதியிடக்கடவது. இவையிரண்டிலும் வைத்துக்கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்;
அத்தாலே, அது முற்பட்டது” என்ற ஸ்ரீவசநபூஷண வாக்கியங்களும், அவற்றின் வியாக்கியானங்களும் இங்கு நோக்கத்தக்கன.)

வேதத்தின் பொருளை நினைத்துச் செய்யப்பட்டன வாதலால் ஸ்ம்ருதிகளென்று பெயர் பெற்றனவும்,
ஆப்தர்களான மநு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஞ வல்க்யர் பராசரர் முதலானவர்களாற் சொல்லப்பட்டனவுமான
தரும சாஸ்திரங்கள், “மனுவே முதலாம் முறை” எனப்பட்டன;
அவை, பதினெட்டு. அவையெல்லாவற்றினுள்ளும் மநுஸ்ம்ருதியே மிகச்சிறத்தலால், “மனுவே முதலாம்” என்று
அதனையே தலைமையாக எடுத்துக்கூறினர்;

(எல்லா ருஷிகளும் ஒருதட்டும், மநு ஒரு தட்டுமாம்” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு மாறாக மற்றைப் பதினேழு ஸ்ம்ருதிகளும் ஒரேவாக்காய்ச் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று” என்றும்,
“மநுஸ்ம்ருதிக்கு விரோதமான ஸ்ம்ருதி புகழையடையாது” என்றும் பல இடங்களில் அந்நூலின் சிறப்புக் கொண்டாடப்பட்டிருத்தல் காணலாம்.)

இதிஹாஸங்களாவன – பூர்வசரித்திரத்தைக் கூறுவனவான ஸ்ரீராமாயணம், மகாபாரதம் முதலியன.
புராணங்களாவன – ஸ்ருஷ்டிக்கிரமம் முதலிய ஐந்துலக்ஷணங்களுடன் கூடியவையான பிராம்மம் பாத்மம் வைஷ்ணவம் முதலிய பதினெட்டாம்.

(புராணத்திற் காட்டில் இதிஹாஸத்துக்கு ப்ராபல்யம் – பரிக்ரஹாதிசயம், மத்யஸ்தசை, கர்த்துராப்ததமத்வம் ஆகிற இவற்றாலே” என்பர் ஆன்றோர்;
இதன் விவரத்தை, தத்வ நிர்ணயம், ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யம், ஸ்ரீவசநபூஷண வியாக்கியானம் முதலியவற்றிற்
கண்டும், கற்றுங் கேட்டு முணர்ந்த ஆன்றோர்பக்கல் கேட்டும் உணர்க; இங்கு விரிப்பிற் பெருகும்.)

இறைப் பொருள் – தலைமையாகிய பொருள். “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்றபடி
எம்பெருமான் தேவாதி தேவனும் ஸர்வேச்வரனு மாதலால், “இறைப்பொருளாம் நம்பெருமாள்” என்றார்.
“இறைப்பொருளாம்” என்றதைத் திருவெட்டெழுத்திற்கு அடைமொழியாகவுங் கொள்ளலாம்.
எட்டுத்திருவக்ஷரமாய் மூன்றுபதமாயிருப்பதும் நாராயணநாமத்தையுட் கொண்டதுமான பெரியதிருமந்திரம்
ஸகலவேதாந்ததாத்பர்யமாய் எல்லாமந்திரங்களினும் பிரதான மாதலால், “இறைப்பொருளாம் திருவெட்டெழுத்து” எனத்தகும்.

“ஸகலதைவங்களிலும் ஸர்வேஸ்வரன் ப்ரதாநனாகிறாப்போலே, ஸகலமந்த்ரங்களிலும் இம்மந்த்ர விசேஷம் ப்ரதாநமாயிருப்ப தொன்று”
என்று ஆன்றோர் அருளிச் செய்திருப்பதை நோக்குமிடத்து “இறைப்பொருளாம்” என்றதை
நம்பெருமாள், திருவெட்டெழுத்து என்ற இரண்டனோடுஞ் சேர்த்தல் இனிதாம்.

நம்பெருமாள். ஸ்ரீரங்கநாதன். இத்திருநாமம், உயர்ச்சியைவிளக்கும்;
“நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள்”
என்ற உபதேசரத்தினமாலையைக் காண்க.
பதரிகாச்சிரமத்தி லெழுந்தருளியிருக்கின்ற நாராயணனது திருவெட்டெழுத்தை “நம்பெருமாளுடைத்திருவெட்டெழுத்து” என்றது,
திவ்வியதேசத்து எம்பெருமான்களில் நம்பெருமாளுக்கு உள்ள தலைமைபற்றி யென்க.
ஸ்ரீரங்கதிவ்வியதேசத்து மூலமூர்த்தியைப் பெரியபெருமாளென்றும், உத்ஸவமூர்த்தியை நம்பெருமாளென்றும் வழங்குவது, ஸம்பிரதாயம்;
இருவர்க்கும் பொதுப்படக் கூறுதலும், “எம்பெருமான்” என்றாற்போல நமதுகடவுளென்றபொருளில் திருமாலை “நம்பெருமாள்” என்றலும் உண்டு.

“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வர கைங்கர்யத்தையும் இழந்து இழந்தோமென்கிற இழவு மின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேச்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னை யறிந்து
கரைமரஞ்சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்”
ஆதலால், “நம்பெருமாளுடைத் திருவெட்டெழுத்து” எனப்பட்டது.
இங்கு, ஆறாம் வேற்றுமையுருபு செய்யுட்கிழமைப் பொருளின்பாற்படும்.
ஆதியில் பதரிகாச்சிரமத்திலே நாராயணனால் நரனுக்கு உபதேசிக்கப்பட்ட திருமந்திர மென்க.
இனி, விஷயமாக வுடைமையை ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய கம்பந்த மெனக் கொண்டு, நம்பெருமாள் விஷயமான
அதாவது ஸ்ரீமந் நாராயணனை யுணர்த்துகின்ற திருமந்திர மென்றலு மாம்.

திருவெட்டெழுத்துள்ளுறைப்பொருள் – பரமாத்மஸ்வரூபம், ஜீவாத்மஸ்வரூபம், இவ்விருவர்க்குமுள்ள ஸம்பந்தத்தின் ஸ்வரூபம் முதலியன.
(“இத்தால், ஈச்வரன் ஆத்மாக்களுக்குப் பதியாய் நின்று ரக்ஷிக்கு மென்கிறது.
ஆக, திருமந்த்ரத்தால், எம்பெருமானுக்கே யுரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே யொழிய வேணும்;
ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா வடிமைகளுஞ் செய்யப் பெறுவேனாக வேணு மென்ற தாய்த்து” என்ற முழுக்ஷுப்படியைக் காண்க.)

ஓகாரங்கள் – ஐயப்பொருளன. ஸிரஸ், மநு, இதிஹாஸ புராணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இங்கு “மனு” என்றது – சுவாயம் புவமநுவினாற் செய்யப்பட்ட நூலைக் குறித்தது; கருத்தாவாகுபெயர்:
“திருவள்ளுவர்” என்றாற் போல. ஏகாரம் – உயர்வுசிறப்பு; அசையுமாம்.
முறையை (ஒழுக்கத்தை) யுணர்த்தும் நூலை “முறை” என்றது, காரிய வாகுபெயரின் பாற்படும்.
முறையென்ற சொல்லுக்கு நூலென்ற பொருளும் உண்டு.

இதிகாச புராணங்களைச் சேர்த்துக்கூறியதன் காரணம், இரண்டும் வேதாந்தப் பொருளைத் தெளிவிப்பனவாதல்.
“இதிஹாஸபுராணம்” என்னும் உம்மைத் தொகை, வடநூல் முடிபு.
“குறைந்த உயிரெழுத்துக்களையுடைய சொல்லாவது சிறப்புடைய சொல்லாவது உம்மைத் தொகையில் முந்திநிற்பதாதல் வேண்டும்” என்ற
வடமொழி வியாகரணநூலார் கொள்கையில் முதல் வகையின்படி “புராணேதிஹாஸம்” என்ன வேண்டி யிருக்க
அங்ஙனங்கூறாது “இதிஹாஸபுராணம்” என அதிக உயிரெழுத்துக்களையுடைய இதிஹாஸ பதத்தை முன்நிறுத்தியது,
அதன் சிறப்பினா லென்க.
“இதிகாச புராண முழுப்பொருளோ” என்ற பாடத்திற்கு – இதிகாசபுராணங்களின் பூர்ணமான அர்த்தமோ வென்பது பொருள்.

மூன்றாமடியின் முதலில் “இறைப்பொருளோ” என்று பாடமாயின்,
இவையெல்லாவற்றிலுஞ் சிறந்ததொரு பொருளோ வென்று உரைக்க.
நம் பெருமாள் – நமது தலைவர். இங்கு “நம்” என்ற தன்மைப் பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது.
பெருமாள் = பெருமான்: பெருமையை யுடையவன். இதில், பெருமை யென்ற பண்புப்பகுதி
ஈற்று ஐகாரம்மாத்திரங் கெட்டு “பெரும்” என நின்றது; ஆன் என்ற ஆண்பால் விகுதி, “ஆள்” என ஈறுதிரிந்தது:
ஆள் என்ற பெண்பால் விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்த தென்றலும் ஒன்று.
அன்றி, பெருமையை ஆள்பவனெனக் கொண்டால், ஆள் என்ற வினைப்பகுதி கருத்தாப் பொருள் விகுதி புணர்ந்துகெட்ட தெனவேண்டும்.

(பெருமாள் என்பதன் பெண்பால், பெருமாட்டி.) “உடைய” என்னும் ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு ஈறு தொக்கு “உடை” என நின்றது.
எட்டு எழுத்து – பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய், அத்தனை யெழுத்துக்களை யுடைய மந்திரத்தைக் குறித்தது.

உள் உறைப் பொருள் – உள்ளே உறுவதாகிய பொருள். உறை – உறு – பகுதி, ஐ – கருத்தாப் பொருள் விகுதி.
உள்ளுறையெனினும், உட்கிடையெனினும் ஒக்கும். முதுப்பொருள். இறைப்பொருள், உள்ளுறைப்பொருள் – பண்புத்தொகைகள்.
இனி, உள்ளே உறைதலையுடைய பொருளென்றுங் கொள்ளலாம்; இப் பொருளில், உறை – முதனிலைத்தொழிற்பெயர்.
இரண்டாம்வேற்றுமையுரு பும்பயனுந்தொக்கதொகை.
ஒரு பெயரின் ஒரு பகுப்பைக் கொண்டு அப் பெயர்முழுவதையுங் குறிப்பதொரு மரபு பற்றி, அழகியமணவாளதாசரை “மணவாளர்” என்றார்;
(இதனை, வடநூலார், “நாமைகதேஸே நாமக்ரஹணம்” என்பர்.)

தம் – அசை. “மணவாளர் தம் மாலை” என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமையுருபு – செய்யுட்கிழமைப்பொருளது;
கூர்மபுராணம், கபிலரகவல், கம்பராமாயணம், “பற்றற்றான்பற்று” என்றவற்றிற் போல:
அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட மாலை யென்க.
இனி, விஷ்ணு புராணம், விநாயகரகவல், சீவகசிந்தாமணி என்றாற் போல, “மணவாளர்தம் மாலை” என்றதை
அழகியமணவாளனென்று திருநாமமுடைய ஸ்ரீரங்கநாதன் விஷயமான மாலையென்றுங் கொள்ளலாம்;
திருவரங்கத்துமாலை யென்ற நூற்பெயரின் பரியாய நாமமாம்.
“கோயிலில் வந்த வந்த, மணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையென, மணவாளர் சூடும்” மாலை யாதலால்,
இருவகையும் ஏற்கும். “மணவாளர்” என்ற பன்மை, உயர்வு பற்றியது. “மாலையினுள்” என்றவிடத்து, உள் – ஏழுனுருபுமாம்.

இச்செய்யுளில் “மணவாளர்” என ஆக்கியோன் பெயரும், “மணவாளர் தம் மாலை” என நூற்பெயரும்,
நுதலிய பொருளும், “மறைப்பொருளோ” என்பது முதலாக விகற்பித்துக் கூறியவாற்றால் நுதலிய பொருளும்,
இவ்வொரு நூலுணர்ந்தவர் அப் பல நூற் பொருள்களையும் ஒருங்கே யுணர்வரென நூற்பயனும்,
அம்மறை முதலியவற்றின் வழி நூலிதுவென நூல்வந்த வழியும், பரந்து கிடந்த அந்நூற்பொருள்கள்
பலவற்றைத் தொகுத்துக் கூறிய நூலிதுவெனத் தொகுத்தலாகிய நூல் யாப்பும்,
அம்மறைப்பொருள் முதலியவற்றை யுணரும் விருப்பமுடையார் பலரும் இந்நூல் கேட்டற்குரிய அதிகாரிகளெனக் கேட்போரும்,
அப்பொருள்கள் பலவற்றையும் சில் வாழ் நாட் பல் பிணிச் சிற்றறிவினராகிய மனிதர்கள் எளிதில் உணர்ந்து உய்யும்படி
ஒருங்கே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் வேண்டுமென்று ஆசிரியர் கொண்ட அருளே
இந்நூல் செய்ததற்கு ஏது வெனக் காரணமும் பெறப்பட்டன.

“ஆக்கியோன் பெயரேவழியேஎல்லை, நூற்பெயர் யாப்பேநுதலியபொருளே,
கேட்போர் பயனோடு ஆயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே,”

“காலங் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே” என்ற
சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிக்கப் படுவன உய்த்துணர்ந்துகொள்க

இக்கவி, அபியுக்தரி லொருவர் செய்தது. இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் “தனியன்” எனப்படும்;
(நூலினுட்சேராது) தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர்.
உயர்திணை யாண்பால் விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும்வருதலை, கடுவன், கோட்டான், தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க;
நாலடியார், சிவஞான சித்தியார் என்ற இடங்களில் “ஆர்” விகுதி போல இங்கு “அன்” விகுதி உயர்வுகுறிப்ப தென்றலுமாம்.

———

காப்பு -திருவரங்க நாதனது திருமேனி திவ்ய அவயவங்களும் திவ்ய பஞ்சாயுதங்களும் –

காப்பு – காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை நிறைவேற்ற வல்ல
தலைமைப் பொருளின் விஷயமாக உயர்ந்தோர் வழக்கத்தின் படி செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும் துணைவருமே தனியேனை வளைந்து கொண்டே –

பெரியபெருமாள் அரங்கர் – பெரியபெருமாளென்று ஒரு திருநாமமுடையவரான ஸ்ரீரங்கநாதருடைய,
நகை முகமும் – மலர்ச்சியை யுடைய திருமுகமும்,
தோளும் – திருத் தோள்களும்,
என்னை தொடர்ந்து ஆளும் விழியும் – என்னை விடாது தொடர்ந்து அடிமை கொள்ளக் கடாக்ஷிக்கின்ற திருக்கண்களும்,
துழாய் மணக்கும் தாளும் – திருத்துழாய் மணம் வீசுகின்ற திருவடிகளும்,
கரமும் – திருக்கைகளும்,
கரத்தில் – அக் கைகளில் ஏந்துகின்ற,
சங்கு ஆழியும் – சங்க சக்கரங்களும்,
தண்டும் – கதையும்,
வில்லும் – தனுசும்,
வாளும் -,
தமியேனை வளைந்து கொண்டு – வேறு துணையுங் கதியுமில்லாத என்னைச் சூழ்ந்து கொண்டு,
நாளும் – தினந்தோறும் (எந்நாளும்),
துணை வரும் – துணையாக வரும்; (எ – று.) – வருமே என்பதில், ஏகாரம் – தேற்றம். ஈற்றுஏகாரம் – அசை.

இங்ஙனம், தமது வழிபடு கடவுளும், எடுத்துக் கொண்ட இப் பிரபந்தத்திற்கு ஏற்புடைக் கடவுளுமாகிய திருவரங்க நாதனது
திருவவயவங்களையும் ஐம்படையையும் தமக்கு நீங்காத துணையாகக் கொண்டமை கூறியதனால்,
எடுத்துக் கொண்ட இந்நூல் இடையூறின்றி இனிது முடியுமென்பது கருத்து.

திருவரங்கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்கு எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் பெரிய பெருமாளென்றும் திருநாமங்கள் வழங்கும்,
பெருமாள் – இராமபிரான்; (இளையபெருமாள் – லக்ஷ்மணன்:) இராம பிரானால் முன்பு திருவாராதநஞ் செய்யப் பெற்றமை பற்றி,
ஸ்ரீரங்கநாதனுக்கு “பெரியபெருமாள்” என்று திருநாமம். அரங்கர் – ரங்கமென்னும் விமானத்தில் எழுந்தருளியிருப்பவர்.
நகை முகம் – புன்சிரிப்பையுடைய முக மென்றும், ஒளியையுடைய முகமென்றுங் கொள்ளலாம்.
தொடர்தல் – தேடிப்பின் தொடர்தலுமாம்.

துழாய் மணக்குந்தாள் – அடியார்கள் அருச்சித்த திருத்துழாயின் வாசனை வீசப்பெற்ற திருவடி;
இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின்மேற் சார்த்தப்பட்டது. அன்றி,
துழாயினால் மணக்குந் தா ளென்றும், துழாயோடு இயற்கைநறுமணம்வீசுந் தா ளென்றும் கூறலாம்.
இனி, திருத்துழாய் வாசனை வீசுதற்குக் காரணமான திருவடி யென்றல் சிறக்கும். இப்பொருளில், பெயரெச்சம் – காரியப்பொருளது:
“நோய் தீரும் மருந்து” என்றாற் போல, “ஸர்வகந்தன்” என்று பெயர் பெறும்படி
இயற்கைத் திவ்விய பரிமளமுடைய கடவுளாதலால், இங்ஙனங்கூறுதல் ஏற்கும்.
திருத்துழாய் அங்குரித்தது முதல் என்றும் மாறாத நறுமணமுடைய தாதலால்,
என்றும் மாறாத இயற்கை நறுமணமுடைய திருமாலுக்கு உரியதாய்ச் சிறக்கும்.

திருமாலின் சங்கம் – பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் – சுதர்சந மென்றும், கதை – கௌமோதகீ யென்றும்,
வில் – சார்ங்க மென்றும், வாள் – நந்தக மென்றும் பெயர்பெறும்.
இவை துஷ்டநிக்கிரகஞ்செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைத் தமது இடையூறு தவிர்க்குங் காப்பாகக் கொண்டார்;
அன்றியும், இவை, எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்யும் பரிஜனங்களாய் எப்பொழுதும் அவனருகில் விடாது நின்று
அவனது திருவுள்ளக் கருத்தின்படி தொழில் செய்யும்:

திருவரங்கத்தந்தாதிக்காப்பில்
அரங்கர் காராழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கில் —-
கூராழி சங்கம் திருக்கதை நாந்தகம் கோதண்டமே–என்றதுங் காண்க.

நகைமுகம் முதலியவற்றைக் காப்பாகக்கொண்டது, அவை சிஷ்டபரிபாலனஞ்செய்தற்கு உறுப்பாதலால்.
ஒரு திருக்கை திருச்சங்கையும், அதற்கேற்ற மற்றொரு திருக்கை திருவாழியையுந் தரித்தல் இயல்பாதலால்,
அவற்றை “சங்காழி” எனச் சேர்த்துக்கூறினர்.

“நாளும்” என்ற உம்மை, தொறுப்பொருளது. மற்றை உம்மைகள் – எண்ணுப் பொருளன.
அரங்கர் – உயர்வுப்பன்மை. முகம், கரம் – வடசொற்கள். சங்கு, தண்டு – ஸங்கம், தண்டம் என்ற வடசொற்களின் விகாரம்.
நகை.. நகுத லென “ஐ” விகுதி பெற்ற தொழிற்பெயராகவேனும், நகைத்தலென முதனிலைத்தொழிற்பெயராகவேனுங் கொள்ளத்தக்கது.
துழாய் – துளஸீ என்னும் வடசொல்லின் சிதைவு.
சங்காழி – பன்மைவிகுதி பெறாத அஃறிணையும்மைத்தொகை. ஆழி – வட்டவடிவமாக வுள்ளது;
(அசுரர் முதலிய கொடியவர்களை) அழிப்பதென்று இதற்குக் காரணப் பொருள் கூறவுமாம்.
வரும் – செய்யுமென்முற்று; இது நிகழ்காலமுணர்த்துதலை
“பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச், செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா”
என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் நோக்கி யுணர்க.

அரங்கரது நகைமுகம் முதலியன தமக்குத் துணையாய் வருதல் முக்காலத்தினும் உளதாதலால், நிகழ் காலத்தாற் கூறப்பட்டது.
“முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் “நிகழுங்காலத்து மெய்ந்நிலைப்பொதுச்சொல்” என்றதற்கு
“நிகழ்காலத்திற்கு உரித்தாய் நின்றும் ஏனைக்காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருள் நிலைமையினை யுடைய செய்யுமென்னுஞ் சொல்”
என்று பொருள்கூறி, “மலை நிற்கும், தீச்சுடும், ஞாயிறு இயங்கும், திங்களியங்கும்” என்றவற்றை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர்;
சேனாவரையர்கருத்தும் இதுவே.

தமியேன் – தனித்துள்ள யான்;
இது, தனிமைப்பொருள் குறித்த தமியென்னும் வினைப்பகுதியடியாப்பிறந்து பணிவையுணர்த்துந் தன்மையொருமைப் பெயர்.
“வளைந்துகொண்டு” என்பது, ஒருசொல்நீர்மைத்து; “என்றுகொண்டினையகூறி” என்றவிடத்துப் போல;
“கிளந்தவல்ல வேறுபிற தோன்றினுங், கிளந்தவற்றியலா னுணர்ந்தனர்கொளலே” என்னுந் தொல்காப்பியத்து
இடைச்சொல்லியற் புறனடைச்சூத்திரத்தால் “கொண்டு” என்னும் அசை கொள்ளலும் அமையும்.

———-

திருவாழி சங்கு திரு ஆழி வாழி சிறந்த கொண்டல்
உரு வாழி யோகத் திருத் துயில் வாழி உலகு அளந்த
மரு ஆர் மது மலர்த் தாள் வாழி வாழி வணங்கும் அன்பர்
பெரு வாழி அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே –1-

திரு – ஸ்ரீமகாலக்ஷ்மி,
வாழி – வாழக் கடவன்;
சங்கு திரு ஆழி – ஸ்ரீ சங்க சக்கரங்கள்,
வாழி – வாழக் கடவன;
சிறந்த கொண்டல் உரு – சிறந்த காளமேகம் போன்ற (திருமாலின்) திருமேனி,
வாழி – வாழக் கடவது;
திரு யோகம் துயில் – (அப்பெருமானது) சிறந்த யோக நித்திரை,
வாழி – வாழக் கடவது;
உலகு அளந்த – உலகங்களை (இரண்டு அடியாக) அளவிட்ட,
மரு ஆழ் மது மலர் தாள் – வாசனை நிறைந்த தேனை யுடைய தாமரை மலர் போன்ற திருவடிகள்,
வாழி – வாழக் கடவன;
வணங்கும் அன்பர் பெரு வாழ்வு அனைய – நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்கட்குப் பெரிய வாழ்க்கை போன்ற,
பெருமாள் – பெரிய பெருமாளுடைய,
அரங்கம் பெருஞ் செல்வம் – ஸ்ரீரங்கத்துப் பெரிய ஐசுவரியம்,
வாழி – வாழக் கடவது; (எ – று.)

எம்பெருமானது தரிசனத்தைப் பெற்ற போது, அந்தத் தேவாதிதேவனுடைய முற்றுணர்வு, வரம்பிலாற்றல்,
யாவரையும் பாதுகாக்குந் திறம், அழியா வியல்பு முதலிய திவ்விய குணங்களைக் கருதுதற்கு முன்னே அப்பெருமானது
திவ்விய சௌந்தரியத்திற் கண் செலுத்தி அதனையே சேவித்து அதில் ஈடுபட்டு ஆழ்ந்து பக்தி பரவசராகி,
அதனால் தம் நிலையையும் எம்பெருமான் நிலையையும் மறந்து,
“காலாதீதமான வைகுண்டத்திலே யிருக்கின்ற இந்த அரும் பொருள் காலம் நடையாடப் பெற்ற இவ்வுலகத்திலே
கண்ணுக்கு இலக்காகுதலால், திருஷ்டி தோஷங்காரணமாக இதற்கு என்ன தீங்கு வருமோ! என்று தமக்கு உள்ள ஆதராதிசயத்தால்
அநாவசியமாக அதிக பயசங்கை கொண்டு
“இத்திருமேனிக்கு எவ்வாற்றாலும் ஒருகுறையும் வராதிருக்க வேணும்” என்று வாழ்த்துபவராய்
“திருப்பல்லாண்டு” என்னுந் திவ்வியப்பிர பந்தம் பாடி, இங்ஙனம் பொங்கும் பரிவுடையரானதனாற் பெரியாழ்வாரென்று
பெயர்பெற்ற விஷ்ணுசித்தர் போலவே, இந்த அழகியமணவாள தாசரும் திருவரங்கநாதனைச் சேவித்தவுடனே முதலில் வாழ்த்துக் கூறலானார்.

இதனால், இவரது அன்பின்மிகுதி விளங்கும். எம்பெருமானைக் கண்டவளவிலே அடிமைத் தொழில்கள் செய்து
தமக்கு வேண்டுவனவற்றை வேண்டிப்பெற நினையாமல் அவனது வாழ்வையே தமக்குப்
பரம புருஷார்த்தமாக நினைத்தலின் அருமை பெருமைகளை உணர்க.

பெரியபெருமாளைக் கண்ணெதிரிலே காணும் போது, அப்பெருமானைச் சார்ந்துள்ள செம்பொன்னிறத்தவளான
பெரியபிராட்டியினது திருமேனியொளி காளமேகத்திற் கொடிமின்னல் போலக் கண்களைக் கவரும்படி மிக விளங்குதலால்,
“பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாக்களுக்கும் ஸர்வமங்களங்களை யுஞ்செய்பவளான இத்திருமகளது சேர்க்கை நித்யமாயிக்கவேணும்” என்று
மங்களாசாஸநஞ்செய்பவராய், முதலில் “திருவாழி” என்றார்.

பொய்கையாழ்வார் சூரியதீபத்தையேற்றியும் பூதத்தாழ்வார் ஞானதீபத்தையேற்றியுங் காட்ட
எம்பெருமானைக் காண்கின்ற பேயாழ்வார் முதலில் “திருக்கண்டேன்” என்றமை காணத்தக்கது.

ஒருவன் எம்பெருமானை ஆசிரயிக்கப்புக்கால் அப்பொழுது அவன் குற்றம் பாராமல் அவனைத் தன்நிழலிலே வைத்துச்
சமயமறிந்து எம்பெருமான்திருமுன்பே கொண்டுவிட்டு இவன்குற்றத்தைப் பொறுப்பிப்பதற்குப் பிராட்டியின் புருஷகாரம்
இன்றியமையா தாதலால்
“அந்தமில்சீர்ப், பொற்பாவை தன்னருளாற் பொன்னரங்கர் தாள் பணிந்து, நற்பாலடைந்துய்ந்தேன்நான்” என்றபடி
பிராட்டிமுன்னாகப் பெருமாளையடைய வேண்டியதாதல்பற்றியும் அவளை முதலில்வாழ்த்துதல் ஏற்கும்.

அநந்தரம் சற்று உற்று நோக்குமிடத்து, சந்திரசூரியமண்டலங்கள்போல விளங்குகின்றனவாய் முறையே
அவனது இடத்திருக்கையிலும் வலத்திருக் கையிலுமுள்ள சங்கசக்கரங்களின் சோதி காணப்படுதலால்,
“எம்பெருமானது திருமேனிக்குக் காவலாய்த் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்துக்கு உறுப்பாக வுள்ள
இத் திவ்வியாயுதங்கள் என்றும் அழிவின்றி வாழவேண்டும்” என்று ஆசாஸிப்பவராய் “சங்கு திருவாழி வாழி” என்றனர்.

மற்றும்ஊன்றிப் பார்க்கையில், அப்பரமனது முடிவில்லதோரெழில் நீலமேனியும் அத்திருமேனி பள்ளிகொண்டிருக்கிற கிடையும்
கட்புலனாதலால், அவற்றை வாழ்த்தலாயிற்று. எம்பெருமான்திருமேனி நீர்கொண்ட மேகம்போலக் காண்பவர் கண்களைக் குளிரச்செய்து
அவர்கள்தாபந்தவிர்த்து அவர்களை உய்விப்பதாதலால் அதற்கும்,
அந்த அமலனது யோகநித்திரை எல்லாவுயிர்களும் உய்யும்வகையைச் சிந்திப்ப தாதலால் அதற்கும் வாழ்த்துக்கூறல் வேண்டிற்று.

திருமேனியைக் கண்ணுற்றபின்னர் அந்தஆதிமூர்த்தியைத் திருப்பாணாழ்வார்போலத் திருவடிமுதல் திருமுடியீறாகச் சேவித்து
அநுபவித்து ஆனந்தமடையத் தொடங்குகின்றா ராதலால், “தாள்வாழி” என்றார்.
இவ்வளவு அநுபவத்திற்குங் காரணம் கோயில்வாசமென்பது கொண்டு, ஈற்றில் “அரங்கப்பெருஞ்செல்வம்” வாழ்த்தப்பட்டது.

“சங்குதிருவாழி” என்று சேர்த்துக்கூறியதன் காரணம் காப்புச்செய்யு ளுரையிற் கூறப்பட்டது.
யோகநித்திரை – எல்லாவற்றையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணசிந்தையுடனே தூங்குகின்றது போலப்
பிறர்க்குத் தோன்றவைக்கும் நிலை; இது – அறிதுயில், விழிதுயில், துயிலாத்துயில், பொய்த்துயில், மாயத்துயில் எனவும்படும்.
“மருவார்” என்றது – மலர்க்கும் தாளுக்கும், “வணங்குமன்பர்பெருவாழ்வனைய” என்றது –
பெருமாளுக்கும் அரங்கத்திற்கும் அடைமொழியாகத்தக்கது.

திருவாழி சங்குதிருவாழி வாழி –
“வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார்சோதிவலத்துறையுஞ்சுடராழியும் பல்லாண்டு,
படைபோர்க்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்றார் திருப்பல்லாண்டில்,
தாள்வாழி –
“உன்செவ்வடிசெவ்விதிருக்கா ப்பு” என்றது திருப்பல்லாண்டு.
வாழி பெருமாளரங்கப்பெருஞ்செல்வம் – “ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்” என்ற வடமொழி மேற்கோளைக் காண்க.

திரு – பெரியபிராட்டியார். வாழிய என்னும் வியங்கோள்வினை முற்று, ஈற்று யகரவுயிர்மெய் கெட்டு “வாழி” என நின்றது.
அதன்முன் வருமொழி முதல்வலி இயல்பாம்: வியங்கோள் ஐம்பால்மூவிடங்கட்கும் பொதுவாத லுணர்க.
“சங்கு திருவாழி” என்ற தொடரின் இடையிலுள்ள “திரு” என்ற அடைமொழியை, மத்திமதீபமாக,
முன்நின்ற “சங்கு” என்றதனோடுங் கூட்டுக;
இவை ஆயுதகோடியில்மாத்திரமன்றி ஆபரண கோடியிலுஞ் சேர்தலால், அழகிய சங்கசக்கரங்க ளெனவுந் தகும்.
“சிறந்த” என்ற விசேஷணம், உபமானமாகிய கொண்டலோடும், உபமேயமாகிய உருவோடும் இயையும்.

கொண்டலுக்குச் சிறப்பு – உலகமும் அதற்குஉறுதி யாகிய அறம்பொருளின்பங்களும் நடத்தற்கு ஏதுவாதலும்,
குளிர்ந்தவடி வுடைமைபற்றிக் கண்டோரால் விரும்பப்படுதலும்.
உருவிற்குச் சிறப்பு –
“அண்டர்கோ னணியரங்க னென்னமுதினைக், கண்ட கண்கள் மற்றொன் றினைக்காணாவே” என்றபடி
கண்டவர் கண்களைக் கவர்தலும், அவரது பிறவிப் பெருங்கடலைப் போக்குதலும்.

உரு – வடிவும், நிறமுமாம். ஆர்மலர் – வினைத்தொகை: மரு வார் என்று எடுத்து, வாசனைநீண்ட என்றலு மொன்று;
நெடுந்தூரமளவும் வாசனைவீசுகின்ற என்று கருத்து.
தாளுக்கு, மது – இனிமை மிகுதி. (“அம்ருதஸ்யந்திநிபாதபங்கஜே” என்பது காண்க.)
அடைமொழி கொடாமல் “மலர்” என்றால், அது, எல்லாமலர்களினுஞ் சிறந்ததாகிய தாமரைமலரைக் குறிக்கும்.
அது – திருவடிகட்கு, செம்மை மென்மை அழகுகளில் உவமம்.

அன்பர் – அன்பையுடையவர்; பக்தர். அவர்கட்கு எல்லாநன்மைகளும் திருவரங்கநாதனாலும் ஸ்ரீரங்கம்கிமையாலும் உண்டாதல்பற்றி,
“அன்பர் பெருவாழ்வனைய பெருமாளரங்கப் பெருஞ்செல்வம்” எனப்பட்டது.
கொண்டல் – நீர்கொண்ட மேகத்திற்குத் தொழிலாகுபெயர்; கொள் – பகுதி, தல் – விகுதி, ளகரதகரங்கள் ணகரடகரங்களானது – சந்தி.
உரு – ரூபமென்ற வடசொல்லின் சிதைவு. யோகம், மது – வடசொற்கள்.

“பெருமாள்” என்பதை, திரு, சங்கு திருவாழி, உரு, துயில், தாள் என்றவற்றோடுங் கூட்டுக.
“பெருமாள் அரங்கப்பெருஞ்செல்வம்” என்பதற்கு – பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கத்திலுள்ள பெருஞ்செல்வ மென்றலும் அமையும்;

“உங்கள் பூர்வர்கள் தேடிவைத்த மஹாநிதி இதுகாணும்” என்றுசொல்லி ஆளவந்தார்க்கு மணக்கால்நம்பி
பெரியபெருமாளைச் சுட்டிக்காட்டிய வரலாற்றை யுணர்க;
“ஸ்ரீரங்கமங்களநிதி.” “பெருவாழ்வு” என்றது, அழியாத முத்தியுலகத்துப் பேரின்பவாழ்வுமாம்.

இச்செய்யுள் – தண்டியாசிரியர் கொள்கைப்படி “வாழ்த்து” என்னும் அலங்காரமாம்;
“இன்னார்க் கின்னதியைக வென்று தாம், முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப” என அதனிலக்கண முணர்க.
முதலிடை கடைகளில் மங்கலவாழ்த்தையுடைய காப்பியம் அழிவின்றி நின்று சிறப்புறு மென்பது
ஆன்றோர்கொள்கை யாதலால், முதலில் வாழ்த்துக்கூறினர்;

“ஆதியு மந்தமு நடுவு மங்கலம், ஓதிய முறைமையி னுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக் கிழத்தி யின்புற,
நீதியம் பனுவல்கள் நிலவு மென்பவே” என்பது காண்க.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது மரபாதலால், “திரு” என்று தொடங்கினார்;
“வழிபடு தெய்வவணக்கஞ் செய்து, மங்கலமொழி முதல்வகுத், தெடுத்துக்கொண்ட விலக்கண விலக்கியம்,
இடுக்க ணின்றி யினிது முடியும்,”

“சீர் மணி பரிதி யானை திரு நிலம் உலகு திங்கள், கார் மலை சொல் எழுத்துக் கங்கை
நீர் கடல் பூத் தேர் பொன், ஏருறு மிவை மூவாறும் இதன் பரியாயப்பேரும்,
ஆரு மங்கலச் சொல் செய்யு ளாய்ந்து முன்வைக்க நன்றாம்” என்பன நோக்குக.

————-

படுப்பவரைப் பணி மெல் அணையாகப் பரு வரையால்
தடுப்பவரைப் பண்டு மண்டு கல் மாரி தரணி இடந்து
எடுப்பவரைத் தம் அடியார் இடும் பச்சிலைக்கு முத்தி
கொடுப்பவரை செம் பொற் கோயிலுள்ளே கண்டு கொண்டனனே –2-

பணி – திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்),
மெல் அணை ஆக – மெத்தென்ற படுக்கை யாக,
படுப்பவரை – (அதன்மேற்) பள்ளிகொண்டருள்பவரும், –
பண்டு – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில்),
மண்டு கல்மாரி – (இந்திரன்பெய்வித்த) மிகுதியான கல்மழையை,
பரு வரையால் – பருத்த (கோவர்த்தனமென்னும்) மலையைக்கொண்டு,
தடுப்பவரை – தடுத்தருளியவரும், –
தரணி – (ஹிரண்யாக்ஷனாற் கவர்ந்துகொள்ளப்பட்ட) பூமியை,
இடந்து எடுப்பவரை – (வராகாவதாரமாகிக்) கோட்டினாற்குத்தி யெடுத்தருளியவரும், –
தம் அடியார் இடும் பசுஇலைக்கு – தமதுதிருவடிகளைச்சரணமடைந்த மெய்யடியார்கள் (அத்திருவடிகளில்)
அருச்சிக்கின்ற பசுமையான திருத்துழாய்த்தளத்திற்காக,
முத்தி கொடுப்பவரை – (அவ்வடியார்கட்குத் தமது) பெருவீட்டைக் கொடுத்தருள்பவருமான பெரியபெருமாளை, –
செம்பொன் கோயிலுள்ளே – சிவந்தபொன்மயமான திருவரங்கம் பெரியகோயிலினுள்ளே,
கண்டுகொண்டனன் – தரிசிக்கப்பெற்றேன்; (எ – று.)

எம்பெருமானுக்குச் சகலவித கைங்கரியங்களையுஞ் செய்கின்றவனும் நித்தியர்களிலொருவனும் சர்ப்பராஜனுமான ஆதிசேஷன்,
“புல்கும்அணை யாந் திருமாற்கு அரவு” என்றபடி, அப்பெருமான் சயனிக்கத்திருவுளங் கொண்டபோது
அவனது மென்மைக்குஏற்ற புஷ்பசயனம்போன்ற திருப் பள்ளிமெத்தையாக, அதில் அப்பரமன் பள்ளிகொண்டருளுதலால்,
“பணி மெல்லணையாகப் படுப்பவரை” என்றார்.

“இருளிரியச்சுடர்மணிகளிமைக்கு நெற்றியினத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த,
அரவரசப்பெருஞ் சோதியனந்தனென்னு மணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவித்,
திருவரங்கப்பெரு நகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடிவருடப் பள்ளிகொள்ளுங்,
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண் டென்கண்ணிணைக ளென்று கொலோ களிக்கு நாளே” என்று
பெரியார் பலகாலுங் காணவிரும்பிய திருமூர்த்தி யாதலால்,
அந்தத்திவ்வியமங்களவிக்கிரகத்தைத் தாம் காணப்பெற்ற பேற்றை
“பணிமெல்லணையாகப்படுப்பவரை….. செம்பொற்கோயிலுள்ளே கண்டுகொண்டனன்” என்று வெளியிட்டார்.

தமக்குக்கட்புலனான வடிவமாதலால் “படுப்பவரைப் பணிமெல்லணையாக” என்று அர்ச்சாவதாரத்தை முதலிலும்,
விபவாவதாரங்களுள் வராகாவதாரம் கிருஷ்ணாவதார த்துக்குமுந்தியதாயினும்
தமக்கு ஸந்நிஹிதமானதுபற்றிக் கிருஷ்ணாவதாரத்தை முதலிலும், அதற்குமுற்பட்ட வராகாவதாரத்தை அதன்பின்னும்,
அடியவர்க்கெளியனாகின்ற ஸௌலப்யமாகிற பொதுநிலையை அதன்பின்னு மாகக் கூறின ரென்க.

“பருவரையாற் பண்டு மண்டு கன்மாரி தடுப்பவர்” “தரணியிடந்தெடுப்பவர்” என்ற இரண்டு விசேஷணங்களும்,
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீல ரென்பதை விளக்கின.
“வாதாசநம்” என்று ஒரு பெயர் பெறும்படி காற்றைஉணவாகக்கொள்வதான பாம்பு அக்காற்றை உச்சுவாசநிச்சு வாசங்களினால்
உட்கொள்ளும்போதும் வெளிவிடும்போதும் உடற்பூரிப்பையும் உடல்தளர்ச்சியையுங் கொள்வதாய்க் காற்றடைத்தமெத்தைபோன்று
இனிதுபள்ளிகொள்ளுதற்குப் பாங்காதல் தோன்ற, “பணி மெல்லணையாக” எனப்பட்டது;

“அடலாயிரவாய்ப்பொருந்து வந்தார் பணிப் பாயார்” என்பர் அழகரந்தாதியிலும்.

(“மகரத்திற்சூரியன்வந்துதித்தகாலில் வந்திக்க விந்திரனைநோக்கிப் பொங்கல்,
மிகவிட்டுக்கயிலைமலைபோலேவைக்க விளையாட்டா யத்தனையு நீயேயுண்ணக்,
ககனத்திலிந்திரனும் வந்துபார்த்துக் கன்மழையை நிரை மீதில் விடுத்தமட்டில்,
இகபரத்திற்கிறையவனே நிரைக்காக் குன்றையெடு த்துமழைதடுத்தனையே யெம்பிரானே” என்பது காண்க.)

திரிலோகாதிபதி யென்று பேர்படைத்தவனான தேவேந்திரன் தானே அவ்வுலகத்தில் ஒரு சார் நிரபராதியாயுள்ள சில
உயிர்கட்கு நலிவுசெய்யப்புக் கவிடத்து எம்பெருமான் தான் அருள்கொண்டு பாதுகாத்தன னென்பதை விளக்கும்,
இவ்வரலாறு; “நாம் கோவர்த்தனமலையை ஆராதித்தோம்: அதனால்நேர்ந்த தீங்கைப் போக்கிக் கண்ணன் காத்தருளினான்” என்று
இடையர்கள் நினைக்க வொண்ணாதெனக் கருதி, அவர்கள் ஆராதித்த மலையைக்கொண்டே காத்தருளின னென்க.
இந்திரன் கல்மழை பொழிந்திட்டதனால், அதனைக் கற்கொண்டுதடுத்தான்;
அன்றி நீர் மழையையே பொழிந்திருப்பானாயின் அதனை நீரைக்கொண்டே தடுக்கவல்ல
ஸர்வசக்த னென்பது தோன்ற, “வரையாற் கல்மாரிதடுப்பவர்” என்றார்.

“கன்மாரியாகையாலே, கல்லையெடுத்து ரக்ஷித்தான்; நீர்மாரியாகில், கடலையெடுத்து ரக்ஷிக்குங்காணும்” என்று
பட்டர் அருளிச்செய்வர்; இத்தால், இன்னதைக்கொண்டு இன்னகார்யஞ் செய்யக் கடவோமென்னும்நியதியில்லை:
ஸர்வசக்தனென்கை” என்ற வியாக்கியான வாக்கியம், இங்கு அறியத்தக்கது.

(“புண்ணியந்தெய்வதமுஞ் சேர்பூலோகத்தைப் புற்பாய்போற்சுருட்டிக் கொண்டே பாதாளம்,
நண்ணிரணியாட்சனைப் பின் தொடர்ந்தே யேகி நலமுடனே யாதிவராகத்தேவாகி,
மண்ணுலகமனைத்துமிடந்தெடுத் தோர் கோட்டில்வைத்துவர வவன்மறிக்க வதைத்துத் தேவ,
ரெண்ணவுலகீ ரேழும்படியப்பண்ணா யிறைவாநாராயணனே யெம்பிரானே” என்பர் பின்னோரும்.)

இப்பொழுதுநடக்கிற சுவேதவராக கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து
ஸ்ரீவராகாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை யெடுத்து வந்தனனென்ற வரலாறும் உண்டு.

இயல்பிலே தமக்கு அடிமையான எல்லாவுயிர்களிடத்துங் காரண மின்றியெழுங் கருணையையுடையவனான கடவுள்
அவர்கட்குத் தனது பேரின்பப்பெருவீட்டையளித்தருளுதற்கு ஒருவியாஜமாக அவர்களிடுவதொரு துளஸீதளத்தை
யெதிர்நோக்குகின்றனனென்பது விளங்க, “தம் அடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்றார்.
பயனாகிய அந்தப் பரமபதத்தின் பெருமைக்கு இவர்களிடும் பச்சிலை ஏற்றஸாதநமன்றாதலை நோக்குமிடத்து,
அவனது திருவருள் காரணமின்றியெழுந்ததாத லுணர்க.

“பத்திரத்தையும் புஷ்பத்தையும் பழத்தையும் ஜலத்தையும் எவன் எனக்குப் பக்தியுடன் கொடுக்கின்றானோ,
சுத்தமான மனத்தையுடையனான அவனது பக்தியினாற் கொடுக்கப்பட்டதாகிய அதனை நான் அங்கீகரிக்கின்றேன்” என்று
ஸ்ரீகீதையிற் கண்ணபிரான் தானே அருளிச்செய்திருத்தல் இங்கு உணரத்தக்கது;

“அச்சுத நின்மெய்யடியாருகந்தேயிட்டதணுவெனினுமக மேருவாகக்கொள்வாய்,
நிச்சயமாயுனைநம்பியெண்ணாமூடர்நினைத்திடிலோ நூற்றையொன்றாவுங்கொள்ளாயால்” எனப் பின்னோர் கூறியதுங் காண்க.

“தம்மடியாரிடும் பச்சிலைக்கு முத்திகொடுப்பவர்” என்ற தொடரில், சிறியதைப் பெற்றுக் கொண்டு பெரியதைக் கொடுத்தலாகிய
பரிவர்த்தநாலங்காரந் தோன்றுதல் காண்க;
அதனிலக்கணத்தை, தண்டியலங்காரத்தில் “பொருள்பரிமாறுதல் பரிவருத்தனையே” எனக் காணலாம்;
இது, மாற்றலணி என்றுஞ் சொல்லப்படும்.
“இலைக்கும்” எனப் பிரித்து இழிவுசிறப்பும்மையாகக்கொள்ளுதலு மொன்று. அடியார்கள் எம்பெருமானை வசப்படுத்தும்
பச்சிலையாகின்றது திருத்துழா யென்பதும் இங்குத் தோன்றும்;
ஆகவே, அதனால் அவர்கள்வசப்பட்டு அவர்கட்குப் பெருவீடுதந்திடுகின்றன னென்க.

படுப்பவர் கொடுப்பவர் என்றவற்றில், பகரவொற்றிடைநிலை – எதிர்கால முணர்த்தாமல் தன்மையுணர்த்திற்று;
படுக்குமியல்பினர் கொடுக்குமியல்பினர் என்று பொருள்.
“பண்டு தடுப்பவர்” என்றது, இயல்பினால் இறந்த காலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி,
“யாம் பண்டு விளையாடுவது இச்சோலை” என்றாற் போல. “பண்டு” என்பதை, “எடுப்பவர்” என்பதனோடுங் கூட்டுக;
அதுவும் அவ்வகைக் காலவழுவமைதியே. படுப்பவரை, தடுப்பவரை, எடுப்பவரை, கொடுப்பவரை என்றவை –
ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்;
இவை, “கண்டுகொண்டனன்” என்னும் ஒருவினையைக் கொண்டன.
விசேஷணச்சொற்கள், விசேஷ்யச் சொல் இவையனைத்திலும் வேற்றுமையுருபு விரியவைப்பது, வடமொழி நடை.
இங்கே “படுப்பவரை” என்றதை விசேஷ்யமாகவும், மற்றைமூன்றையும் விசேஷணமாகவுங் கொள்ளுதல் சாலும்.
பணம் – படம்; அதனை யுடையது பணீ யென வடமொழிக்காரணக்குறி; அது ஈறுகுறுகிற்று. மெல் அணை – பண்புத்தொகை.

“வரையால்” என்பதில், “ஆல்” உருபு – கருவிப் பொருளது. கல்மாரி – சிலாவர்ஷம்; ஆலாங்கட்டிமழை. தரணி – வடசொல்;
(பொருள்களைத்) தரிப்ப தென்றறு காரணப்பொருள்படும். இடந்து,இட – பகுதி. அடியார் – அடிமை யென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்.
பசுமை + இலை = பச்சிலை: பண்புப்பெயர், ஈறுபோய்த் தன்ஒற்றுஇரட்டிற்று.

முக்தி என்ற வடசொல்லுக்கு – (பற்றுக்களை) விட்டு அடையு மிடமென்பது உறுப்புப்பொருள்;
வீடு என்ற தமிழ்ப்பெயரும் இப்பொருள் கொண்டதே.
செம்பொன் – மாற்றுயர்ந்த பொன். கோயில் = கோவில்: இலக்கணப்போலி; கோ இல் – இறைவனது இடம், தலைமையான இடம்;
இது தேவாலயங்கட்கெல்லாம் பொதுப்பெயராயினும், நூற்றெட்டுத்திருமால் திருப்பதிகளுள் திருவரங்கம் தலைமைபெற்ற தாதலால்,
அதனை “கோயில்” எனச் சிறப்பாகவழங்குவது, வைஷ்ணவசம்பிரதாயம்;
இது, காரணவிடுகுறி யின்பாற்படும். கண்டுகொண்டனன் – “அன்” விகுதி, தன்மையொருமைக்கு வந்தது.

———-

ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து அரவணை மேல்
காள அசலம் எனக் கண்டு கொண்டேன் -மறை காண ஒண்ணாத்
தாள் ஆயிரம் செம்பொன் மா முடி ஆயிரம் தாம நெடும்
தோள் ஆயிரம் திருக் கண் ஆயிரம் கொண்ட சோதியையே –3-

மறை காண ஒண்ணா – வேதங்களாலும் அறியமுடியாத,
தாள் ஆயிரம் – ஆயிரம் திருவடிகளையும்,
செம் பொன் மா முடி ஆயிரம் -சிவந்த பொன்மயமான அழகிய கிரீடத்தைத் தரித்த ஆயிரம்திருமுடிகளையும்,
தாமம் நெடுந் தோள் ஆயிரம் – மாலையைத்தரித்த பெரிய ஆயிரம் திருத்தோள்களையும்,
திரு கண் ஆயிரம் – ஆயிரம் திருக்கண்களையும்,
கொண்ட – தன்னிடத்திற் கொண்ட,
சோதியை – ஒளிவடிவமான ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை,
ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து – அடியார்கள் (கண்டு) கண் களிப்பு மிகுதற்குக் காரணமான திருவரங்கம் பெரிய கோயிலில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல்,
காள அசலம் என கண்டு கொண்டேன் – கருநிறமுள்ளதொரு மலை (கிடந்தாற்) போல(ச் சயனத் திருக்கோலமாயிருக்க)க் காணப்பெற்றேன்; (எ – று.)

எல்லாப்பொருள்களையும் உள்ளபடி உணர்ந்து உரைக்கின்ற வேதங்களாலுங் காணமுடியாத பரஞ்சோதி ஸ்வரூபமான
பரமாத்மாவை இந்நிலவுலகத்திலே திருவரங்கத்திருப்பதியில் திருவனந்தாழ்வானாகிய திருப்பள்ளி மெத்தையில்
“பச்சைமாமலைபோல்மேனி பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா” என்றபடி ஒருநீலமலைபோலே
பள்ளிகொண்டிருக்கக் காணப் பெற்றேன் என்று, பிறர்களுக்கு அரியவித்தகனான எம்பெருமான்
பத்துடையடியவர்க்கு எளியனாகின்ற இயல்பையும், தமது பாக்கியவிசேஷத்தையும்,
கீழ்ச்செய்யுள்போலவே இச்செய்யுளும் கொண்டாடிக்கூறியதாம்.

“மறை காணவொண்ணா” என்றது, சோதியோடு இயையும்;
பரப்ரஹ்மஸ்வரூபத்தைத் தான் முழுவதுங் காணமாட்டாமையை, வேதம் தானே கூறுகின்றது.
தேஜோரூபி யாதலால், “சோதி” என்றார்; அடுத்தசெய்யுளில் “ஒண்சுடர்” என்பதுங் காண்க.

ஆள் ஆனவர் – அடிமைப்பட்டவர்.
கண்களிகூர் – கண்களாற்காணுத லால் மனம்களிகூர்தல், அக்கண்களின்மேல் ஏற்றிக்கூறப்பட்டது; ஒருவகை உபசாரவழக்கு.
ஆளானவர்கண்களிகூர் அரங்கம் – “கூர்” என்ற வினைத்தொகை – காரியப்பொருளதாய், காரணப்பெயரைக் கொண்டது.
கூர் – மிகுதிகுறிக்கும் உரிச்சொல். அரவணை – ஸர்ப்பசயநம். அர அணை என்றும் பிரிக்கலாம்.
அரா என்னும் குறியதன்கீழ் ஆகாரம், குறுகியும் அதனோடு உகரமேற்றும் நிற்கும்.
காள + அசலம் = காளாசலம்: தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பண்புத்தொகை.
காளம் – கருநிறமானது. அசலம் – சலியாதது என மலைக்குக் காரணக்குறி. காளாசலம் – நீலகிரி:
காளமேகம்படிந்ததொரு பெருமலையென்றுங் கொள்ளலாம். என – உவமவுருபு.
காளாசலம் – நிறத்திற்கும், கம்பீரமாகிய தோற்றத்திற்கும் உவமையாம்.
ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ; ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.
“செம்பொன்மாமுடி” என்றதை அன்மொழித்தொகையாகவாவது அடையடுத்தஆகுபெயராகவாவது கொள்ளவே, சிரசை யுணர்த்தும்.
“செம்பொன்” என்பதை அதனாலாகிய கிரீடத்துக்குக் கருவியாகுபெய ரெனக் கொண்டு, முடி – சிரசு என்றலுமாம்.
மா முடி – பெரிய கிரீடமுமாம். தாமம் – வடசொல்; திருத்துழாய்மாலை, மலர்மாலைகள், பொன்மணிகளாலாகிய ஆரங்கள்,
வனமாலை யென்னுந்திவ்வியமாலை இவைகளையெல்லாங் குறிக்கும்.
தாமம் எனக்கொண்டு, ஒளியென்னவுமாம். “திரு” என்ற அடைமொழியை, தாள் முடி தோள் என்றவற்றிற்குங் கூட்டலாம்.

இங்கே “ஆயிரம்” என்றது, அளவில்லாததென்னும் பொருளது. அங்ஙனங்கொள்ளாவிடின்,
தாளாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம். ஆகவே, அளவற்ற பாதம் முதலிய சகல அங்கங்களையு முடையவ னென்பதாம்.
அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகாஞானமும் மகாசக்தியு முள்ளவன் எம்பெருமான் என்பது, தேர்ந்தபொருள்.
பெருமான் சகல இந்திரியங்களாலே யாதல் ஓர் இந்திரியத்தாலேயாதல் திருமேனியாலேயாதல்
திவ்யாத்மஸ்வரூபத்தாலேயாதல் எல்லாவற்றையும் எப்போதும் எல்லா விதத்திலும்
அறிகின்றவனும் செய்கின்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து.
இங்ஙனமேயன்றி, அநேகம் திருமுடிகள் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலாகிய அவயவங்களாற்
செறிந்திருக்கின்றான் பகவா னென்பது கருத்தன்று.
அளவில்லாத கண் முதலியவற்றை யுடையவன் எப்படி அளவில்லாத காட்சி முதலானவற்றை யுடையனாயிருப் பனோ
அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டினபடியாம்.
மற்றும், விசுவரூபங்காட்டுகிற சமயங்களில்மாத்திரம் எம்பெருமான் பல அவயவங்களைக் கொள்ளுதலும் உண்டு.
இங்கு, சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூப மாதலால் உலகத்திலுள்ளோருடைய முடி புயம்
முதலியவையெல்லாம் அவனுடையவையா மெனக் கருத்துக்கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தா தென அறிக.
இது, திவ்யாத்மஸ்வரூபம் கூறியபடி.

—–

பூங்கா விரிப்புனற் கோயிலுள்ளே மிக்க போகம் எல்லாம்
யாம் காண யோகத்துயில் கொண்டவாறு எள்ளும் எண்ணெய் யும் போல்
நீங்காது உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி நியாமகன் ஆய்
ஓங்காரம் ஆய் அதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே –4-

(இ – ள்.) எள்ளும் எண்ணெயும் போல் -,
நீங்காது – இடையறாமல்,
உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி – உலகத்திலுள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த ராத்மாவாகியும்,
நியாமகன் ஆய் – (அந்த ஜீவாத்மாக்களுக்கெல்லாம்) தலைவனாகியும்,
ஓங்காரம் ஆய் – பிரணவமந்திரஸ்வரூபியாகியும்,
அதன் உள் பொருள் ஆய் – அம்மந்திரத்தினது உள்ளேயடங்கிய பொருளாகியும்,
நின்ற – (எந்நாளும் அழிவின்றி ஒரேதன்மையதாய்) நிலைபெற்ற,
ஒள் சுடர் – பிரகாசிக்கின்ற சோதியானது,
பூ காவேரி புனல் கோயிலுள்ளே – அழகிய காவேரி நதியின் நீரினாற் சூழப்பெற்ற திருவரங்கம் பெரியகோயிலினகத்தே,
மிக்க போகம் எல்லாம் யாம் காண – மிகுதியான போகங்க ளெல்லாவற்றையும் நாம் காணும்படி,
யோகம் துயில் கொண்ட ஆறு – யோகநித்திரையைக் கொண்டிருக்கின்ற விதம், (என்ன ஆச்சரியம்!) (எ – று.)

உடலினுள்ளே உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாயச் சேஷியாய்த் தங்கியிருத்தல்போலப்
பரமாத்மா ஜீவாத்மாக்களினுள்ளே அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான் தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய்
விடாது வீற்றிருத்தலால், “நீங்காது உலகத்து உயிர்க்குஉயிராகி நியாமகனாய்” என்றார்.
“எள்ளும் எண்ணெயும் போல்” என்றா ராயினும், எள்ளினுள் எண்ணெய் போ லென்பது கருத்து;
அது பிரிந்து காட்டாமல் எங்கும் பரந்து மறைந்துநிற்றற்கு உவமை.
எள் – ஜீவாத்மாவுக்கும், எண்ணெய் – பரமாத்மாவுக்கும் உபமானம். “எள்ளுமெண்ணெயும்போல்” என்றதனால்,
எல்லாம் தானாகியும் அல்லதுமாகியும் இறைவன் நிற்கின்ற நிலையைத் தோன்றவைத்தன ரென்னலாம்.

“உலகம்” என்றது, அசித்துக்களை. “உயிர்” என்றது, சித்துக்களை. “உயிர்க்குஉயிர்” என்றது, ஈசுவரனை.
“உலகத்து உயிர்க்கு உயிராகி நியாமகனாய்” என்றதனால், சித்துக்களுக்குப்போலவே அசித்துக்களுக்கும்
பரமாத்மா தாரகனும் நியாமகனும் சேஷியு மாதல் தோன்றும்.
சித் அசித் ஈச்வரன் – தத்துவத்திரயம். இதுவே, விசிஷ்டாத்வைத சித்தாந்தம் எனப்படும்.

“கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும்பரந்துறையும், ஒரு தனிநாயக மென்றா லுன்புகழ்க்கு வரம்பாமோ”
என்பர் திருவரங்கக் கலம்பகத்திலும்.
(“திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசைப், படர்பொருள்முழுவதுமா யவையவைதொறும்,
உடன்மிசையுயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன்,”
“பரந்ததண்பரவையுள்நீர் தொறும்பரந்துளன், பரந்த வண்டமிதென நிலவிசும் பொழிவறக்,
கரந்தசிலிடந்தொறு மிடந்திகழ் பொருடொறுங், கரந்தெங்கும்பரந்துளன்” என்றார் நம்மாழ்வாரும்.)

“எள்ளு மெண்ணெயும் போல் நீங்கா துலகத்துயிர்க் குயிராகி” –
“எண்ணுமெண்ணெயுமியைய மற்றெப்பொருளகத்தும், நண்ணுநாரணன்” என்ற பாகவதத்தையும் காண்க.

“ஓங்காரமா யதனுட்பொருளாய் நின்ற வொண்சுடர்” –
“எப்பொழுதும் தியானஞ்செய்துகொண் டிருக்கின்ற யோகிகள், தங்களுடைய பாபபுண்யரூபமான கர்மங்கள் நசித்தவுடனே,
எந்தச் சொரூபத்தைப் பிரணவப்பொருளாகக் காண்கின்றார்களோ,”
“உன்னுடைய ஆராதநரூபமான யாகங்களும், வஷட்காராதிகளும், சகலவேத மூலமான பிரணவமும் நீயே” என்றது விஷ்ணுபுராணம்.
தாரகன் – தாங் குபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

சொல்லும் பொருளும் ஆகிய இரண்டுமாய் நிற்பவன் எம்பெருமானே யாதலால்,
“ஓங்காரமாய் அதனுட்பொருளாய் நின்ற” என்றார்; “ஓங்காரோ பகவாந் விஷ்ணு:” என்றது காண்க.
“ஓங்காரம்” என்றதில், “காரம்” என்பது – சாரியை;
அகாரம், ஆகாரம் என்றவற்றிற் போல. பிரணவம், அகார உகார மகாரங்க ளாகிய
மூன்று ஓரெழுத்தொருமொழிகள் கூடிய தோ ரெழுத்தாம்.
அது ஸகலவேதகாரணமும், ஸகலவேதஸங்க்ரஹமும், ஸகலவேதஸாரமு மாதலால், தலைமைபற்றி எடுத்துக் கூறப்பட்டது.
அதன் பொருள், ஸர்வரக்ஷகனான திருமாலுக்கே உரியபொருள் ஜீவாத்மா என்பது;
இதில், பகவானுக்கே பிராதானியந் தோன்றுதலால், பகவான் பிரணவத்தின் பொருளாவன்:
“ப்ரணவோ பகவத்வாசீ ப்ராதாந்யாதர்த்தஸம்பவாத்” என்பது காண்க.

ஒண்சுடர் – சூரிய சந்திர அக்கினிகளாகிய முச்சுடர்களின் ஒளியினும் மேம்பட்ட பேரொளி;
புறவிருளையே போக்குகின்ற அவ்வொளி களினுஞ்சிறக்குமாறு அகவிருளையும் அகற்றும் ஞானவொளி;
தோற்றக்கேடுகளும் மிகுதிகுறைவுகளுமின்றி என்றும் ஒருபடிப்பட விளங்கும்ஒளி.
இப்படி சேதநாசேதநங்களுக்கு வியாபகனும் அந்தர்யாமியும் மந்த்ரார்த்தஸ்வரூபியும் தேஜோரூபியுமான பரமாத்மா
சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நாமெல்லாம் எளிதிற்சேவித்து ஈடேறுமாறு இவ்வுலகத்தில்
திருவரங்கம் பெரிய கோயிலிலே பள்ளிகொண்ட திருக்கோலமாய்க் காட்சிதந்தருள்கின்ற
திருவருட்பெருமை என்னே! என்று கொண்டாடியவாறாம். முடிக்குஞ்சொல், வருலித்து உரைக்கப்பட்டது.
விதத்தை யுணர்த்துகின்ற “ஆறு” என்ற சொல் வருமிடங்களில் முடிக்குஞ்சொல் கூறப்படாது எஞ்சிநிற்பதை
இலக்கியங்களிற் பலவிடத்துங் காணலாம்; இது, இசையெச்சம்.
இப்படி “ஆறு” என்ற சொல் முடிபின்றி வியப்புவிளக்குதலை,
“வெள்ளைவாகனக்குரிசில்வின்மை வல்லப மிருந்தவாறே” என்ற வில்லபுத்தூரார் பாரதத்திலுங் காண்க.

“பூங்காவிரிப்புனல்” என்ற அடைமொழி, “தெளிவிலாக்கலங்கல்நீர் சூழ் திருவரங்கம்” என்றபடி தலத்தின் நீர்வளவாய்ப்பைக் காட்டும்.
திருவரங்கம் போகமண்டபமெனப்படுதலின், “மிக்கபோகமெல்லாம் யாம்காண யோகத்துயில்கொண்ட ஆறு” எனப்பட்டது;
மூன்னும் “பெருமா ளரங் கப்பெருஞ்செல்வம்” என்றார். போகம் – வைபவம்: செல்வமும், சுகானுபவமும்.
அங்கு எம்பெருமானுக்கு எல்லா ஐசுவரியங்களும் குறைவறவிருத்தலும்,
அப்பெருமான் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையாலடி வருட இனிது பள்ளிகொள்ளுதலுங் காண்க.
இனி, “மிக்கபோகமெல்லாம் யாம்காண” என்பதற்கு – (எம்பெருமானைச் சேவித்ததன்பயனாக இம்மைமறுமைவீடுகளில்)
மகாபாக்கியங்களையெல்லாம் நாம் அனுபவிக்கும்படி யென்றும் பொருள் கொள்ளலாம்.
மிக்கபோகம் – வரம்பிலின்ப மெனப்படும் நிரதிசயசுகாநுபவ மென்றலுமாம்.

காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்; அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
போகம், யோகம், நியாமகன். ஓங்காரம் – வடசொற்கள். தம்மைப்போன்ற அடியார்களையுஞ் சேர்த்துக்கொண்டு,
உளப்பாட்டுத்தன்மைப்பன்மையாக, “யாம்” என்றார்; கவிகளுக்கு உரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மையுமாம்.
எண்ணெய் – எள் நெய்: எள்ளின் சாரம். ஒள் – ஒண்மை யென்ற பண்பின் அடி.
ஒள் + சுடர் = ஒண்சுடர்: பண்படிகளின் லகார ளகாரங்கள் வலிவர னகார ணகாரங் களாம்.
போகம், யோகம், நியாகுபவன், வாழச்செய்பவன். நியாமகன் – நியமிப்பவன், நடத்துபவன். சேஷி – தலைவன், உடையவன்.

———-

கறங்கு ஆழி நாள் எட்டு இலக்கம் இயோசனைகட்செவியின்
பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை பேர் உலகில்
இறங்கு ஆழி மேகம் எனவே அரங்கத்தில் எந்தை அதில்
உறங்கு ஆகம் நீளம் ஐந்து ஐம்பதினாயிரம் ஒசனையே–5–

(இ – ள்.) கறங்கு – ஆரவாரிக்கின்ற,
ஆழி – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்;
கட்செவியின் – (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய,
பிறங்கு ஆகம் – விளங்குகின்ற திருவுடம்பினது,
(நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே – பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல,
அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான்
அந்தத் திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற,
ஆகம் – திருமேனியினது,
நீளம் -நீட்சி,
ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை – இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ – று.)

எம்பெருமானுக்கு உரிய பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்ற
ஐவகைநிலைகளுள் வியூகநிலை, இதிற் குறிக்கப்பட்டது.
பிரமன் முதலியதேவர்கள் வணங்கி வழிபடுந்தெய்வமாய் எல்லா அவதாரங்களுக்கும் முதலாய்ப்
படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களுக்குக் கர்த்தாவாய்த் திருப்பாற்கடலிலே வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய
நான்கு ரூபத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலை, வியூக மெனப்படும்.
அந்த நான்குமூர்த்திகளுட் பிரதானமாகிய வாசுதேவமூர்த்தியின் திருமேனிவளத்தைக் கூறுபவராய்,
அதற்கு அங்கமாகப் பாற்கடலின் நீளமே தொடங்கிக் கூறலானார்.

“ஆழி” என்று பொதுப்படக்கூறினாரேனும், சந்தர்ப்பத்தால், பாற்கடலைக் குறித்தது. நாலெட்டு – பண்புத்தொகை.
“ஆசறவயங்குஞ் சாகநற்றீவி னகல நாலெட்டிலக்கத்தி, னோசனையனந்தன்மிசை யரியுறும்பாலுவரியு மன்னதேயாம்” என்ற
மகாபாகவதத்தாலும் பாற்கடற் பரப்பின் எல்லையை உணரலாம்.
இதனால், “நாலெட்டு” என்பதற்கு – உம்மைத்தொகையாக, பன்னிரண்டுஎனப் பொருள்கொள்ளுதல் பொருந்தாமை, வெளிப்படை.
யோசனை – நான்குகுரோசங் கொண்டது; அவ்வளவை,
“அங்குலமறுநான் கெய்தினதுகரம் கரமோர்நான்கு, தங்குதல் தனுவென்றாகும் தனுவிரண்டது வோர்தண்டம்,
இங்குறுதண்டமானவிராயிரங்குரோ சத்தெல்லை, பங்கமில்குரோசநான் கோரியோசனைப்பாலதாமே” என்பதனாற் காண்க.
யோசனை, சற்று ஏறக்குறையக் காதவளவாம்.

கறங்காழி – வினைத்தொகை; கறங்குதல் – ஒலித்தல். ஆழ்ந்துள்ளது ஆழி யெனக் காரணக்குறி;
இ – கருத்தாப்பொருள்விகுதி. இலக்கம் – லக்ஷமென்ற வடசொல்லின் விகாரம். இலக்கம் – நூறாயிரம்.
யோசனை, ஓசனை – யோஜநா என்ற வடசொல்லின் விகாரங்கள். இலக்கம் + யோசனை = இலக்கமியோசனை:
தன்னொழிமெய்ம்முன் யகரம்வர இகரம் தோன்றிற்று;
இனி, இலக்கம் இயோசனை என்றுபிரித்து, இகரத்தை “யவ்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
யகரத்தை முதலிலேயுடைய வடமொழியின்முன் வந்ததாகக் கொள்ளுதலும் ஒன்று.
கட்செவி – கண்செவி: கண்களாகிய காதுகளையுடையது; பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த. அன்மொழித்தொகை:
கண்களையே காதுகளாகவு முடைய தென்று கருத்து;
பாம்புகட்குக் கண்ணாகிய பொறியொன்றிலேயே காணுதலுங் கேட்டலுமாகிய புலனறிவிரண்டும் அமைந்திருத்தல் காண்க:
இதுபற்றி, வடநூலார் பாம்புக்கு “சக்ஷுஸ்ரவஸ்” என்று ஒருபெயர் கூறுவர்; “கோகனநாகம்” என்றார் வில்லிப்புத்தூராரும்.
“தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம்பொருப்பன்” என்றவிடத்துப்போல,
இங்கு “மும்மை” என்பது – மூன்றின் தன்மையை யுணர்த்தாமல் மூன்றென்னும் எண்ணையே உணர்த்தியது:
“இருமைவகை தெரிந் தீண் டறம் பூண்டார்” என்ற திருக்குறளில் “இருமை” என்றதும் இத்திறத்ததே:
இதில், “மை” விகுதி – தன்மையை யுணர்த்தாமல் தன்மையையுடைய பொருளையே உணர்த்தியதனால், பகுதிப்பொருள்விகுதியாம்;
இதனை வடநூலார் ஸ்வார்த்தபாவதத்திதப்ரத்யய மென்பர்.

எம்பெருமானது திருமேனிக்கு மேகம் – நிறத்திலும், கண்டவர் கண் குளிரச்செய்யுந்திறத்திலும்,
அடுத்தவரிளைப்புத்தவிர்த்தலிலும் உவமை.
சக்கராயுதத்தைக் கையிலுடைய திருமாலுக்கு உவமையாதற்பொருட்டு “ஆழி மேகம்” என்றார்; அது – இல்பொருளுவமை.
திருப்பாற்கடல் இந்நிலவுலகத்திலுள்ள தாதலால், மேகத்திற்கு “பேருலகிலிறங்கு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
மேகம் – வடசொல். ஏ – தேற்றம். எந்தை – எமது பரமபிதா: யாம் என்ற பகுதி, “எம்” என விகாரப்பட்டது;
தை – விகுதி. எந்தை = நம்பெருமாள். நீளம் – நெடுமை.
ஐந்தைம்பதினாயிரம் – பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; இருநூற்றைம்பதினாயிரம்.
கடலிற் படிந்து அதன்நீரை யுட்கொண்டு கருவுற்ற நீலமேக மென்ற பொருளில் “ஆழி மேகம்” என்றாருமாம்.
இனி, “ஆழி மேகம்” என்றதைப் பன்மைவிகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை யென்று கொண்டு,
கடலும் மேகமும் போலவென்று தனித்தனி உவமையாக உரைப்பர் ஒருசாரார்.
பேருலகில் ஆழிஇறங்கு மேகம் என மொழிமாற்றி, பெரிய இவ்வுலகத்திலே அப்பாற்கடலிலிறங்கிப் படிந்ததொரு
மேகம்போல வென்று பொருள்கொள்ளுதலும் அமையும். “நீளம்” என்றதனைப் பிறவற்றிற்குங் கூட்டுக; கடைநிலைத்தீவகம்.
“யோசனை” என்றது, பெயர்ப்பயனிலையாய் நின்றது.

—————

பாற் கடல் நாள் எட்டு இலக்கம் இயோசனை பாற் கடலுள்
மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து வான் அளவும்
தீற்கம் ஓர் ஏழ் திகழ் பணி மூன்று சிறந்த அகலம்
ஏல்கவின் ஒன்றரை உத்தமர் நீளம் இரண்டரையே –6-

(இ – ள்.) பால் கடல் – திருப்பாற்கடலினது,
(நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை – முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனையாம்;
பால் கடலுள் – அந்தத் திருப்பாற்கடலினிடையே,
மால் கவி கோயில் – திருமாலை வளைந்துகொண்டிருக்கின்ற திருக்கோயிலினது,
அகலமும் -, ஈர்ஐந்து (இலக்கம் யோசனை) – பத்துலக்ஷம் யோஜனையாம்;
வான் அளவும் தீற்கம் – ஆகாயத்தை யளாவுகின்ற (அத்திருக்கோயிலின்) உயரம்,
ஒர் ஏழு (இலக்கம் யோசனை) – ஏழுலக்ஷம் யோஜனையாம்;
திகழ் பணி – விளங்குகின்ற திரு வனந்தாழ்வானது,
(நீளம்) -. மூன்று (இலக்கம் யோசனை) – மூன்றுலக்ஷம் யோஜனையாம்;
சிறந்த அகலம் – மேன்மையுற்ற (அத்திருவனந்தாழ்வானது) அகலம்,
ஏல் கவின் ஒன்றுஅரை (இலக்கம் யோசனை) – பொருந்திய அழகையுடைய ஒன்றரைலக்ஷம் யோஜனையாம்;
உத்தமர் – (அதிற்பள்ளி கொண்டருள்கின்ற) புருஷோத்தமரான எம்பெருமானுடைய,
நீளம் – (திருமேனியின்) நீட்சி, இரண்டரை (இலக்கம் யோசனை) – இரண்டரைலக்ஷம் யோஜனையாம்; (எ – று.)

“அகலம்” “தீற்கம்” என்ற சொற்க ளில்லாத இடங்கட்கெல்லாம், “நீளம்” என்பது, தகுதிபற்றி,
முந்தினசெய்யுளிற்போல எடுத்துக்கூட்டப் பட்டது.
“தீற்கம்” என்பதை “பாற்கடல்,” “பணி” என்றவற்றோடுங்கூட்டி, அதற்கு அவ்விடங்களில் நீளமென்று பொருள் கொள்ளுதலுமாம்.
“இலக்கம்,” “யோசனை” என்ற சொற்கள் எடுத்து எல்லா வாக்கியங்களிலுங் கூட்டப் பட்டன; முதனிலைத்தீவகம்.

“பாற்கடல் நாலெட்டிலக்கமியோசனை, “திகழ் பணி மூன்று,” “உத்தமர்நீள மிரண்டரை” என்ற
மூன்று விஷயங்கள் கீழ்ச் செய்யுளிற் கூறியனவே யானாலும்,
“பாற்கடலுள்மாற்கவிகோயிலகலமு மீரைந்து,” “வானளவுந்தீற்க மொரேழு”, “சிறந்தகல மேற்கவினொன்றரை” என்ற
மூன்றுவிஷயங்கள் புதியன வாதலால், இச்செய்யுள் கூறியதுகூற லென்னுங் குற்றத்தின்பாற்படா தென்க.
முன்சொன்ன மூன்று விஷயங்களை இங்கு மீளவுஞ்சொன்னது, அவற்றைச்சார்ந்த விஷயங்களனைத்தையும்
ஒருங்கே தொகுத்துணர்த்தவேண்டு மென்னுங் கருத்தினா லென்க;
“கூறியது கூறினுங் குற்றமில்லை, வேறொரு பொருளை விளைக்கு மாயின்” என்பது காண்க.
வெவ்வேறு நூல்களிற் கூறியவற்றின் மொழிபெயர்ப்பாக இங்ஙனம் தனித்தனி கூறினர்போலும்.

மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன்;
தன்னையடைந்தவர்க்குத் தன்பக்கல் மோகத்தை விளைப்பவ னென்றும் பொருள்கொள்ளலாம்.
மாற் கவி – இரண்டாம்வேற்றுமைத்தொகை யாதலின், உயர்திணைப்பெயரீறு திரிந்தது, “இயல்பின் விகாரம்”,
உம்மை – எச்சப்பொருளது, ஈரைந்து – பண்புத்தொகை. அளவும் – அளாவும் என்பதன் விகாரம்.
இனி, “வான் அளவும்” என்பதற்கு – ஆகாயம்வரையிலும் என்று உரைத்தல் சிறப்பன்று.
“தீர்க்கம்” என்ற வடசொல் எதுகைநோக்கி, “தீற்கம்” என்று விகாரப்பட்டது.
சிறந்தகலம் – சிறந்தஅகலம் என்றதன் தொகுத்தல்.
“ஏல் கவின்” என்ற வினைத்தொகையில், லகரம் திரிந்தது, எதுகைநயம்நோக்கி யென்க.
இனி, ஏல் என்பதை முதனிலைத்தொழிற்பெயரென்று கொண்டு, இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுந் தொக்கதொகை யாக்கி,
ஏற்றலையுடைய அழகென்றலு மொன்று.
நீளத்துக்குஏற்ற அகலமாய் அமைந்து அழகுசெய்து சிறப்ப தென்பது தோன்ற, “சிறந்தகலம்” என்றும், “ஏற்கவின்” என்றுங் கூறின ரென்க.
உத்தமர் – சிறந்தவர்; உத்தமபுருஷர்.
“மால் கவி” என்பதற்கு – மேகங்கள் படிகின்ற வென்று உரைப்பாரு முளர்; பெருமையோடு கவிந்த வென்பர் ஒருசாரார்.

இனி, இச்செய்யுளை ஊன்றி நோக்குமிடத்து, இது இந்நூலாசிரியர் செய்ததன்றி வேறியாரோ செய்து
இந்நூலினிடையே சொருகுகவியாகச் சேர்த்ததென்று சொல்லவும் இடமுண்டு; இத்தன்மையதை வடநூலார் “ப்ரக்ஷிப்தம்” என்பர்.
இங்ஙனம் ஊகித்தற்குஉரிய காரணங்கள்: –
(1) இவ்வகைப் பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன் பெயரையேனும் தலப் பெயரையேனுங் கூறும்
மரபிற்கு மாறாக “உத்தமர்” என்ற பொதுப்பெயரைக் கூறுதல்.
(2) கீழ்ச்செய்யுளோடு இச்செய்யுள் ஒருசார் கூறியது கூறலாதல்.
(3) இப்பிரபந்தச்செய்யுள்களின்தொகை 110 என முழுத்தொகையாகாது, இச்செய்யுளைச்சேர்க்குமிடத்து 111 – எனச் சொச்சத்தொகை கொள்ளுதல்.
(4) “நீளம்” என்ற சொல்லைக் கடைநிலைத் தீபகமாக முன்வாக்கியங்களிலும்
“தீற்கம்” என்பதை இடைநிலைத்தீபகமாக முன்பின்வாக்கியங்களிலுங் கூட்டுதற்கு இடமின்றி
“அகலம்” என்ற சொல் இடையிடையேவந்துநின்று “பாற்கடல்,” “பணி” என்றவற்றிற்கு இன்ன அளவென விளங்கவொட்டாமை.
(5) “மாற்கவி” என்ற சொற்றொடரும் “தீற்கம்” என்ற சொற்பிரயோகமும் சிறவாமை.
(6) அவற்றோடு, “சிறந்தகலம்,” “ஏற்கவின்” என்ற தொடர்கள் சொல்லமைப்பிலும் பொருள்வளத்திலுஞ் சிறப்பின்றித்
திவ்வியகவியான ஐயங்காரது செய்யுள்நடையழகிற்கு ஏலாமை.
(7) “வானளவும்” என்றது பயனின்றிநிற்றல்.
இவை முதலாக “குன்றக்கூறல், மிகைபடக்கூறல், கூறியதுகூறல், வழூஉச்சொற்புணர்த்தல், மயங்கவைத்தல்,
வெற்றெனத்தொடுத்தல், நின்றுபயனின்மை” என்ற நூற்குற்றங்களும், பிறவும் உய்த்துணர்ந்து கொள்க.
ஐயங்காரது செய்யுள்களின் சொற்பொருள்வளங்கள்
“தேனையு மமுதையு மனைய தீஞ்சொலோர்ந், தானையின்கன்றென வமைக்கும் பாடலான்,
ஏனைய பாட லொன்றேனு மோதிலான், பூனைபோல்வஞ்சனைப் புந்திகொண்டிலான்” என்று கொண்டாடும்படியிருத்தல், பிரசித்தம்.

———-

அடித்தலம் அந்த அதலம் பொரு திரை ஆழி வையம்
கடித்தலம் நேமிக்கிரி உடை ஆடை கபாலி முன் நாள்
மிடித்து அலமந்தது ஒழித்தான் அரங்கன் விழி இரு கோள்
முடித்தலம் அண்ட முகடு இனி யாம் என் மொழிவதுவே –7-

(இ – ள்.) முன்நாள் – முற்காலத்தில்,
கபாலி – (பிரமனது) தலையோட்டை(க் கையிலே) யுடையவனாகிய சிவன்,
மிடித்து – (அப்பிரமதேவனது சாபத்தால்) வறுமையுற்று,
அலமந்தது – (கண்டஇடமெங்கும் இரந்து) திரிந்து வருந்தியதை,
ஒழித்தான் -போக்கியருளியவனான,
அரங்கன் – திருவரங்க நாதனுக்கு, –
அடி தலம் – திருவடிக ளிருக்குமிடம்,
அந்த அதலம் – அந்த (கீழுலகமாகிய) அதலலோகமாம்:
கடி தலம் – திருவரை யிருக்குமிடம்,
பொரு திரை ஆழி வையம் – மோதுகின்ற அலைகளையுடைய கடலாற் சூழப் பட்ட பூலோகமாம்;
உடை ஆடை – (அத்திருவரையில்) உடுக்கப்படுவதாகிய வஸ்திரம்,
நேமி கிரி – (அப்பூலோகத்தைச் சூழ்ந்திருக்கின்ற) சக்கரவாள பர்வதமாம்;
விழி – திருக்கண்கள்,
இரு கோள் – சூரிய சந்திரர்களாம்;
முடி தலம் – திருமுடி யிருக்குமிடம்,
அண்டம் முகடு – அண்டகோளத்தின் உச்சியாம்; (என்றால்),
இனி யாம் மொழிவது என் – (அப்பெருமானது திருவுருவத்தின் பெருமையைக் குறித்து) இனி நாம் சொல்லத்தக்கது யாதுஉளது!

எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் அல்லது விசுவரூபத்தின் மகத்துவத்தைச் சிறிதுஎடுத்துக்காட்டி,
அது முழுவதுங்கூறுதற்கரிதென்று அதன் அருமைபெருமைகளை விளக்கியது,
இது. சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்துவத்தை வெளியிட்டவாறு.

அதலம் – கீழேழுலகங்களி லொன்று; இங்கே, கீழுலகமென்றமாத்திர மாய்நின்றது.
“அந்த” என்று சேய்மைச்சுட்டாற் குறித்தனர், அது பலயோ சனைதூரங்கட்கு அப்பாலுள்ளதனால்; உலகறிசுட்டுமாம்.
வையம் – (பொருள்களை) வைக்குமிட மெனக் காரணப்பொருள்படும்.
நேமிக் கிரி – ஏழுமகா த்வீபங்களைச் சூழ்ந்திருக்கின்ற ஏழு பெருங்கடல்களுக்கும் அப்பாற் கோட்டைமதில்போலச் சூழ்ந்துள்ளதொரு பெருமலை.
சக்ராகாரமாக (வட்டமாக) ப்பூமியைச் சூழ்ந்திருத்தல்பற்றி, அதற்குச் சக்ரவாளமென்று பெயர். அதன் பரியாயநாமமாக “நேமிக்கிரி” என்றார்.
நேமி – சக்கரம், கிரி – மலை. உடை, உடு – பகுதி: ஐ – செயப்படுபொருள்விகுதி.
அலமந்தது – இறந்தகாலத்தொழிற்பெயர்; அலமா – பகுதி; ஈறுகுறுகிற்று. ஒழித்தான் – பெயர்.
கோள் – க்ரஹமென்ற வடமொழிப்பெயர்க்கு ஏற்ற தமிழ்ச்சொல்.
இருசுடரிற் சூரியன் வலக்கண்ணும், சந்திரன் இடக்கண்ணுமாம். தலம், கடி, நேமி, கிரி, கபாலீ, அதலம், அண்டம் – வடசொற்கள்.

————

திண் சுடர் ஆழி அரங்கேசர் திக்கு திருச் செவியில்
மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந்தரணி கண்ணில்
ஒண் கனல் இந்திரன் வாழ் முகப் போதில் உதித்தனரே –8-

(இ – ள்.) திண் சுடர் ஆழி அரங்கேசர் – வலிமையையும் ஒளியையு முடைய சக்கராயுதத்தை யேந்திய திருவரங்க நாதரது,
திரு செவியில் – அழகிய காதிலிருந்து,
திக்கு – திக்குக்களும்,
கழலில் – திருவடிகளிலிருந்து,
மண் – பூமியும்,
சிரத்தில் – திருமுடியிலிருந்து,
சத்யலோகம் – சத்தியலோகமும்,
உயிரில் – உயிரிலிருந்து,
மருத்து – வாயுவும்,
உள்ளத்தில் – மனத்திலிருந்து,
தண் கதிர் – குளிர்ச்சியான கிரணங்களையுடைய சந்திரனும்,
உந்தியில் – திருநாபியிலிருந்து,
வான் – ஆகாயமும்,
கண்ணில் – திருக்கண்ணிலிருந்து,
செம் தரணி – செந்நிறமுள்ள சூரியனும்,
வாழ் முகம் போதில் – சிறப்புற்ற தாமரைமலர்போன்ற திருமுகத்திலிருந்து,
ஒள் கனல் இந்திரன் – ஒளியுள்ள அக்கினியும் இந்திரனும்,
உதித்தனர் – (ஆதியில்) தோன்றினார்கள்; (எ – று.)

இது – புருஷஸூக்தத்திற் கூறிய விஷயம்; ‘மறைப்பொருள்.’ அங்குக் கூறிய முறை –
“தண்கதிர் உள்ளத்தில், கண்ணில் தரணி, முகத்தில் இந்திரன் கனல், உயிரில் மருத்து, உந்தியில் வான்,
சிரத்திற் சத்யலோகம், கழல்களில் மண், திக்குக்கள் திருச்செவியில்” என்றுஉள்ளது.
இவ்விஷயம், இதிஹாஸபுராணாதிகளிலும் காணப்படுகின்றது.
“கண்ணிலே சூரியனும், மனத்திலே சந்திரனும், பிராணனிலே வாயுவும், முகத்திலே அக்கினியும், நாபியிலே அந்தரிக்ஷமும்,
சிரத்திலே மேலுலகமும், கர்ணத்திலே திசையும், பாதங்களிலே பூமியும் உண்டாயின” என்றது, விஷ்ணுபுராணம்.
பிறவும் இங்ஙனம் கண்டுகொள்க; விரிப்பிற் பெருகும்.

திக்கு, மண், சத்யலோகம், மருத்து, தண்கதிர், வான், தரணி, கனல், இந்திரன் என
அஃறிணையும் உயர்திணையும் கலந்து எண்ணி, மிகுதியால், ‘உதித்தனர்’ என உயர்திணைப்பன்மைமுடிபைப் பெற்றன;
“பார்ப்பா ரறவோர் பசுப்பத்தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி யெனுமிவரை” என்றவிடத்துப் போல,
திக்கு மண் சத்யலோகம் வான் என அஃறிணைப்பொருள் நான்காக,
மருத்து தண்கதிர் தரணி கனல் இந்திரன் என உயர்திணைப் பொருள் ஐந்தாதலால், மிகுதி யெனப்பட்டது;
அன்றி அஃறிணையும் உயர்திணையும் விரவிச் சிறப்புப்பற்றி உயர்திணையால் முடிந்தன வெனினும் அமையும்;
“பொன்னனும் குதிரையும் வந்தார்கள்” என்றாற் போல: அஃறிணையினும் உயர்திணை சிறந்ததென்பது வெளிப்படை.
இத்திணைவழுவமைதியை “திணை பால்பொருள் பல விரவின சிறப்பினும், மிகவினும் இழிபினும் ஒருமுடிபினவே” எனக் கூறினர் நன்னூலார்.
மருத்து, தண்கதிர், தரணி, கனல் என்ற சொற்கள் – தேவர்களைக் குறித்தலால், உயர்திணையாம்;
ஆகவே, “உதித்தனர்” என்ற பாடம் வழு வென்று கொண்டு ‘உதித்தன’ என்று திருத்துதல் குற்சிதமாத லுணர்க.
இனி, ப்ரத்யேகாந்வயமாக, “உதித்தனர்” என்ற முற்றை அதற்கு ஏற்ப ‘உதித்தன’, ‘உதித்தது’, ‘உதித்தனன்’
என மாற்றித் தனித்தனிகூட்டிமுடித்தலும் இலக்கணமே.

ரங்கேஸர், திக், ஸத்யலோகம், ஸிரஸ், மருத், தரணி, இந்த்ரன், முகம் – வடசொற்கள்.
ரங்க + ஈசர் = ரங்கேசர்: வடமொழிப்புணர்ச்சி, குணசந்தி: அ ஆ முன் இ ஈ வரின், அவ்விரண்டுங் கெட ஓர்ஏகாரம் தோன்றும்.
“செவியில்” முதலியவற்றில், இல் – ஐந்தனுருபு, நீக்கப்பொருளது. திருவை மற்றைத்திருவவயவங்களுக்குங் கூட்டுக.
சத்யலோகம் – மேலேழுலகங்களுள் மேலது; அதுவே பிரமலோகம்.
தண் கதிர் – பண்புத்தொகை யன்மொழி.
கனல் இந்திரன் – உம்மை தொக்குப் பன்மை விகுதி பெறாது வந்ததனால், உயர்திணைப் பெயர்ச்செவ்வெண்.
வாழ்தல் – மேம்படுதல், முகப்போது – முன் பின்னாகத்தொக்க உவமைத்தொகை.
“வாழ்” என்பதைப் போதிற்கு அடை மொழியாக்கி, இங்கே போதிற்கு வாழ்வு – காலபேதத்தால் வாடுதலும் குவிதலும் இன்றி
எப்பொழுதும் மலர்ந்தபடியே விளங்குத லென்னலாம்.
அங்ஙனம் ஒருமல ருண்டானால் அதுவே எம்பெருமானது திருமுகத்திற்கு உவமையாகு மென இல்பொருளுவமை கூறியவாறாம்.
அரங்கரது நகை முகத்திற்கு உவமையாதற்கு ஏற்ப “வாழ்போது” என்றன ரென்க.
இனி, “வாழ்” என்ற வினைத்தொகையைக் காரணப்பொருளதாக்கி முகத்தோடு இயைத்து,
(அடியவர்) பேரின்பவாழ்வடைதற்குக் காரணமான முக மென்றலுமாம்.
திண்மை – ஆழிக்கு அடைமொழி. ஆழிக்குத் திண்மை – எவ்வளவு வலிமையையுடைய கொடியவரையும் தவறாது அழித்தல் முதலியன.
ஆழிக்குச் சுடர் – ஆயிரங்கோடி திவாகரன்போ லொளிர்தல்.
இனி, திண்சுடர் – மிக்கவொளி யென்னவுமாம். தரணிக்குச் செம்மை – இனம்விலக்க வந்ததல்லாத இயற்கையடைமொழி.
இந்த்ரன் என்பது – பரமைசுவரிய முடையவ னென்று பொருள்படும்.
செய்யுளோசையின் பொருட்டு, “சத்தியலோகம்” என்னாது “சத்யலோகம்” என்றார்.

———-

புரம் ஆயிரம் திருக் கண் மலர் ஆயிரம் புண்டரிகக்
கரம் ஆயிரம் கழற் கால் மலர் ஆயிரம் கண்ணி முடிச்
சிரம் ஆயிரம் திரு நாமமும் ஆயிரம் செய்ய கையில்
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே–9–

(இ – ள்.) செய்ய கையில் – சிவந்த (வலத்) திருக்கையிலே,
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி – ஆயிரம்அரங்களைக்கொண்ட மிக்கவலிமையையுடைய சக்கராயுதத்தை யேந்திய,
அரங்கருக்கு – திருவரங்கநாதர்க்கு, –
புரம் ஆயிரம் – திருமேனி ஆயிரமாம்;
திரு கண் மலர் ஆயிரம் – செந்தாமரைமலர் போன்ற திருக்கண்கள் ஆயிரமாம்;
புண்டரிகம் கரம் ஆயிரம் – செந்தாமரைமலர்போன்ற திருக்கைகள் ஆயிரமாம்;
கழல் கால் மலர் ஆயிரம் – வீரக்கழலையணிந்த செந்தாமரைமலர்போன்ற திருவடிகள் ஆயிரமாம்;
கண்ணி முடி சிரம் ஆயிரம் – மலர்மாலையையும் கிரீடத்தையுந் தரித்த திருமுடிகள் ஆயிரமாம்;
திருநாமமும் ஆயிரம் – திருப்பெயர்களும் ஆயிரமாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க்கண்களாயி ரத்தாய்,
தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய் தமியனேன்பெரியவப்பனே” என்றார் நம்மாழ்வார்.

“வேதஞ்செப்பும், பேராயிரந் திண்பெரும்புயமாயிரம் பெய்துளவத், தாரார்முடியாயிரம்” என்றார் கம்பரும்.
இதன் கருத்து, மூன்றாஞ்செய்யுளினுரையிற் கூறப்பட்டது.

*”நமோஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே, ஸஹஸ்ரபாதாக்ஷிசிரோ ருபாஹவே,
ஸஹஸ்ரநாம்நே புருஷாய” என்ற வடநூல்மேற்கோளையுங் காண்க.

புரம், புண்டரீகம், கரம், நாமம், அரம் – வடசொற்கள்.
கண்மலர், கான்மலர் – முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகைகள்.
புண்டரீகமென்பது வெண்டாமரைக்குப் பெயராக நிகண்டுகளிற் கூறப்பட்டிருப்பினும், “புண்டரீகாக்ஷன்” என்ற இடத்திற் போல,
இங்கே, செந்தாமரையைக் குறித்தது; கொடியின் பெயர், இங்கு, மலர்க்கு இலக்கணை.
கழல் – வீரர் தமது வீரத்திற்கு அறிகுறியாகக் காலிலணிவது; வள்ளல்கள் தமது கொடைக்கு அறிகுறியாக அணிவது முண்டு.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனங்களைத் தான் செய்தருளுதல் விளங்க,
எம்பெருமான் திருவடியிற்கழல்கட்டிக் கொண்டிருக்கின்றன னென்க.
இனி, கான்மலர் – நறுமணத்தையுடைய மலர் போன்ற, கழல் – திருவடி யென்றலுமாம்.
கண்ணி – முடியிற்சூடும் மாலை. நாமமுமாயிரம் – இறந்தது தழுவிய எச்சவும்மை யாதலால், இறுதியில் வைக்கப்பட்டது.
அரம் – சக்கரத்தின் ஆர். திண், திறல் – ஒருபொருட்பன்மொழி.
ஆழிக்குத் திண்திறலாவது – அசுரர் அரக்கர் முதலிய கொடியவ ரனைவரையும் கருதியமனத்தினுங்
கடுகச்சென்று கருவறுத்து உயிர்கவரும் ஆற்றல்.
திண் திறல் – வலிய போர்செய்யவல்ல என்றலு மொன்று. கண்ணி – திருத் துழாய்மாலையுமாம்.

———–

முன் நாள் விசும்பும் புவியும் திசையும் முறை வகுத்த
அன் நான்முகன் தனது ஆவி எல்லாம் மலர் ஆசனை ஆம்
மின் ஆர் மழை முகில் நல் நாகம் மீதில் விழி துயில் கூர்
எம் நாதனுக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே –10-

(இ – ள்.) முன் நாள் – முற்காலத்தில் (மகாப்பிரளயம் நீங்கியவுடனே தான் எம்பெருமானது திருநாபிக் கமலத்திலிருந்து தோன்றிய காலத்தில்),
விசும்பும் – ஆகாயத்தையும்,
புவியும் – பூமியையும்,
திசையும் – மற்றை யெட்டுத் திக்குகளையும்,
முறை வகுத்த – (அந்தஎம்பெருமானது திருவயிற்றினுள்ளே தான்கண்ட) கிரமத்தின்படி வகைப்படுத்துச் சிருஷ்டித்த,
அ நான் முகன்தனது – நான்குமுகங்களையுடையவனான அந்தப்பிரமனது,
ஆவிஎல்லாம் – உயிர்முழுவதும் (வாழ்நாளெல்லாம்), –
மலர் ஆசனை ஆம் – செந்தாமரைமலரை (த் தான்வீற்றிருக்கும்) பீடமாகவுடையவளான திருமகளாகிற,
மின் – மின்னல்,
ஆர் – பொருந்திய,
மழை முகில் -கார்காலத்து மேகம் (நீலமேகம்) போன்ற திருமேனியையுடையவனான,
நல் நாகம்மீதில் விழிதுயில் கூர் எம் நாதனுக்கு – சிறந்த ஆதிசேஷன்மேல் திருக்கண்வளர்ந்த ருள்கின்ற நம்பெருமாளுக்கு,
ஒரு மூச்சு – ஓர்உயிர்ப்பாம் (ஒரு சுவாசமாம்),
என்று -, வேதம் இசைக்கின்றது – வேதம் சொல்லுகின்றது; (எ – று.)

பத்துத்திக்குகளுள் மேலை “விசும்பு” என்றும், கீழை “புவி” என்றும், மற்றையெட்டையும் “திசை” என்றுங் குறித்தார்.
ஐம்பெரும்பூதங்களுள் முதலதாகிய விசும்பையும், ஈற்றதாகிய புவியையுங் கூறவே, மற்றைப் பூதங்களையுங் கூறியவாறாயிற்று.
இவற்றைக் கூறியது, மற்றைச் சராசரப்பொருள்களுக்கும் உபலஷணம். அகரச்சுட்டு, பிரசித்தி பற்றியது.
மிகவிளங்குகின்ற மெல்லிய வடிவுபற்றி, திருமகளை மின்ன லென்றார்.
மார்பில் திருமகளையுடைய நீலநிறமுள்ளதிருமால், மின்னல்பொருந்திய நீர்கொண்டகாளமேகம் போல்வன்.
ஆதிசேஷனுக்கு நன்மை – எப்பொழுதும் பலவகைக் கைங்கரியங்களைச் செய்தலும், அழிவில்லாமையும் முதலியன.
இனி, நல்ல பாம்பென்னும் வழக்குப்பற்றி, “நன்னாகம்” என்றாருமாம்.
ஆவியெல்லாம் ஒருமூச்சு – பிரமனது உயிர்வாழ்க்கைநாளெல்லாம் எம்பெருமானுக்கு ஒரு மூச்சுவிடுங் கால மென்க.
இதனால், மிகநீண்டஆயுளையுடையவனென்று பிரசித்தனான பிரமதேவனது ஆயுளெல்லை காலவரையறைக்கு உட்படாத
திருமாலுக்கு ஒருமூச்சுவிடுங்காலவளவே யென்று எம்பெருமானது மேன்மையை விளக்கியதாம்.
படைப்புக்குள்ளான பிரமன் முதலிய ஜீவகோடிகளெல்லாம் காலவசப்பட்டனவே யென்பதும்,
காலவசப்படாதவன் எம்பெருமான் ஒருவனேயென்பதும் விளங்க, இதுகூறினார்.
கற்பங்கழிவதனால், எம்பெருமானது ஆயுள் கழிவதில்லையென்க. “ஒருமூச்சு” என்றதும் உபசார வழக்கே.

“கருடவாகனனுக் குலப்பிலாப்பிரமர் கழியும்நாள் கணத்துக்கும் பற்றா,”
“கமலரெண்ணிலர்க ளமர்ந்திடும் பதத்தைக் கழிந்திடுங்காலத்தைக் கடக்கும், விமலன்” என்ற மகாபாகவதமும்,
“ஓரிருபரார்த்தங் கழியுமேல் மலர்வீட்டுறைதரு நான்முக னுலக்கும், ஏர்கெழுபரார்த்த மிரண்டு வெண்டரங்கமெடுத்தெறி
தடங்கடன்முகட்டிற், கார்முகில்கமலக்காடுபூத்துறங்கு காட்சிபோற்கண்வளர் துளவத்,
தாரவன்றனக் கோரிமையென வுரைப்பர் சாற்று மவ்வுரை யுபசாரம்” என்ற ஸ்ரீபாகவதமும், காணத்தக்கன.

புவி, திஸா, நாகம், நாதன், வேதம் – வடசொற்கள். புவியென்பது வடமொழியில் ஏழாம்வேற்றுமைவிரி யாயினும்,
தமிழிற் பெயர்மாத்திரமாய் நிற்கும்.
வேதம் என்பது – (அறியவேண்டியவைகளையெல்லாம்) அறிவிப்பது என்று காரணப்பொருள்பெறும்.
“எந்நாதன்” என்றது, நம்பெருமாளென்ற திருநாமத்தின் பரியாயநாமமாய் நின்றது;
ஆகவே, பிரபந்தவிலக்கணப்படி இச்செய்யுளிற் பிரபந்தத்தலைவனதுபெயர் கூறியதாம்.
முதலடியிலும் மூன்றாமடியிலும் சிறப்புனகரமாகவும், இரண்டாமடியிலும் நான் காமடியிலும் பொதுநகரமாகவும் எதுகையமைத்தன ரென்க;
இவ்வாறு அமைத்தல், ஒருவகைநயம். இதனைப் பலவிடங்களிற் காணலாம்.
இனி, “என்னாதன்” என்ற பாடமும், என் நாதன் என்று பிரிந்து, எனக்குத் தலைவனென அத்திருவரங்கநாதனையே குறிக்கும்;
மந்நாதனென்பது, இதற்கு ஏற்ற வடமொழித்திருநாமமாம்.

—————-

எண்ணில் திகிரிப் பிறப்பிடம் ஆனதும் எண்ணுமவர்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நாசம் இல்லா
விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் விண்ணவர் தம்
கண்ணில் சிறந்ததும் -மா நீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே -11–

(இ – ள்.) எண்ணில் – ஆராய்ந்துபார்க்குமிடத்து, –
திகிரி பிறப்பு இடம் ஆனதும் – சூரியனுக்குப் பிறந்த இடமாகியதும்,
எண்ணுமவர் நண்ணி சிறக்க இருப்புஇடம் ஆனதும் – (தன்னைத்) தியானஞ்செய்யும் அடியார்கள் பொருந்தி மேன்மைப்படுதற்குக் காரணமானதும்,
நாசம் இல்லா விண்ணின் பதிக்கு கடைத்தலை ஆனதும் – (எக்காலத்தும்) அழிதலில்லாத பரம பதத்திற்குச் செல்லும் வழிக்குத் தலைவாயிலாகியதும்,
விண்ணவர்தம் கண்ணின் சிறந்ததும் – தேவர்களுடைய கண்களைக்காட்டிலும் மேன்மைப்பட்டதும்,
மா நீர் அரங்கர்தம் கண்ணில் ஒன்றே சிறந்த காவேரிதீர்த்தத்தாற் சூழப்பட்ட திருவரங்கத்திலே யெழுந்தருளியிருக்கின்றவரான
நம்பெருமாளுடைய திருக்கண்களுள் ஒன்றேயாம் (வலக்கண்ணாம்); (எ – று.)

புருஷஹூக்தம் முதலியவற்றிற் கூறியபடி சூரியன் எம்பெருமானது திருக்கண்ணிலிருந்து ஆதியில் உண்டானதனால்,
“திகிரிப்பிறப்பிடமானது அரங்கர்தங்கண்ணிலொன்று” என்றார்;
முன்னும் (8) “செந்தரணி கண்ணில்” என்றமை காண்க.
(7) “அரங்கன்விழி யிருகோள்,”
“சந்த்ர ஸூர்யௌச நேத்ரே” என்றபடி எம்பெருமானுக்கு வலக்கண் சூரிய னென்பது பற்றி, மற்றை மூன்று விஷயங்கள் கூறுகின்றார்.
சூரியனைத் தியானித்தல் முதலியன செய்பவர். இம்மை மறுமைகளிற் பலவகைநன்மைகளையடைந்து மேம்படுதல்பற்றி,
“எண்ணுமவர் நண்ணிச் சிறக்க இருப்பிடமானது” எனப்பட்டது;
சூரியபகவானுக்கு அவ்வகைமகிமையிருத்தல், “ஆதித்யஹ்ருதயம்” முதலியவற்றால் விளங்கும்.
இருப்பிடம்” என்றது, காரண மென்ற பொருளில் வந்தது; இலக்கணைவழக்கு.
விருப்பு இடம் என்று எடுத்து, விரும்பப் படுவதாகிய விஷய மென்று பொருள்கொள்ளலுமாம்.

“உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகா நெறி” என்றபடி பலவும் அழியுங் கற்பாந்தகாலங்களிலும்
பரமபதம் அழியாது நித்தியமாயிருத்தலால், “நாசமில்லா விண்” என்றார்; “கலங்காப்பெருநகரம்” எனப் பெரியாரும் பணித்தார்.
ஜீவாத்மாக்கள் அர்ச்சிராதிகதியாகிற மார்க்கத்தாற் பரமபதத்திற்குச் செல்லும்பொழுது சூரியமண்டலத்தைப் பிளந்துகொண்டு
அதன்நடுவினாற் செல்லுதலால், “நாசமில்லா விண்ணிற்பதிக்குக் கடைத் தலையானது” எனப்பட்டது;

(“இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூடேற்றி வைத் தேணிவாங்கி,
அருள்கொடுத்திட் டடியவரையாட்கொள்வா னமருமூ ரணியரங்கமே,”
“வெங்கதிர்ப் பரிதிவட்டத் தூடுபோய் விளங்குவாரே,”
“காரார் புரவியேழ் பூண்ட தனியாழித், தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக்கீண்டுபுக்,
காராவமுத மங்கெய்தி யதினின்றும், வாரா தொழிவதொன் றுண்டே,”
“மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தி னன்னடுவு, ளன்னதோ ரில்லியி னூடுபோய் வீடென்னுந்,
தொன்னெறிக்கட் சென்றார்” என்ற ஆழ்வாரருளிச்செயல்களைக் காண்க.)

“அந்தச்சூரியபகவான் தான், இராப்பகல்களின் ஏற்பாட்டிற்குக் காரணமாயும், யோகிகளுக்குச் சகலகிலேசங்களும்
விடுபட்டுப்போகுங்காலமாகிய முடிவுகாலத்தில் தேவயாநமார்க்கமாயு மிருக்கின்றான்” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

தேவயாநமெனினும், அர்ச்சிராதிமார்க்கமெனினும் ஒக்கும்;
அதாவது – முதலில் அக்கினி, பின்பு முறையே பகல், பூர்வபக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன்,
சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களுடைய எல்லைகளாம்;
மோக்ஷமடைபவர்கள் போகும் வழி இது. இதன் விவரத்தை, ஸ்ரீபிள்ளைலோகாசாரியர் அருளிச்செய்த
அர்ச்சிராதி யென்னும் ரஹஸ்யக்ரந்தம் முதலியவற்றிற் பரக்கக்காணலாம்.
சூரியமண்டலத்தைக் கீண்டு புக்கு ஊடுருவி அப்பாற்செல்லுதல் அண்டகடாகத்தைப்பேதித்துப் புறப்படுவதற்கு முற்பட்ட தாகையால்,
சூரியனை முக்திமார்க்கத்திற்குத்தலைவாயி லென்றார். கடைத்தலை = தலைக்கடை: முன்பின்னாகச்சொல்நிலை மாறியது, இலக்கணப்போலி,
முதலிலேயுள்ள வாயில் அல்லது முதலாகிய வாயில் என்க. தலை – முதல், கடை – வாயில்.

தேவாதிதேவனாகிய எம்பெருமானுக்கு வலக்கண்ணாகிற சூரியன் அப் பெருமானுக்கு அடிமையாகிற தேவர்களுடைய
கண்களினும் மிகப்பலமட ங்குசிறத்தலால், ‘விண்ணவர்தங் கண்ணிற் சிறந்தது’ எனப்பட்டது.
மற்றும், “கண்ணாவா னென்றும், மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே,”
“சக்ஷுர்மித்ரஸ்ய வருணஸ்யாக்நே:” என்றபடி.
மண்ணுலகத்தவர்க்கேயன்றி விண்ணுலகத்தவரான சூரியன் முதலிய தேவர்கட்கும் கண்போன்றவனான எம்பெருமானுக்கு
“கண்ணிற் சிறந்த வுறுப் பில்லை”, “ஸர்வேந்த்ரியாணாம் நயநம் ப்ரதாநம்” என்றபடி
சிறந்த கண்ணென்னும் உறுப்பாகின்ற சூரியனை அவ்விண்ணவர்களுடைய கண்ணினுங் சிறந்ததென்று சொல்லுதல் ஏற்கும்.

அன்றியும், “ஜகச்சக்ஷு:” என்றபடி உலகத்து உயிர்கட்கெல்லாங் கண்ணாயிருக்குந்தன்மை சூரியனுக்குஉளதே யன்றி
மற்றைத்தேவர்களுடைய கண்களுக்கு இல்லை யாகையால், அரங்கர் தங்கண்ணிலொன்றாகிய சூரியன்
விண்ணவர்தங்கண்ணிற் சிறந்ததெனத்தகுவன்.

“புரவியே ழொருகா லுடைய தேரிலே திருச்சக்கரமொத்துக் காலசக்கரச்செங்கோல்நடாவி
ஜ்யோதிஸ்சக்ரவொளிசுருக்கி அக்நீஷோ மீயதேஜோம்ருதத்துக்குஊற்றும் மந்தேஹர்க்குச்செந்தீயும்
முக்திமார்க்கத் தலைவாசலும் கண்ணாவான் கண்ணிற்பிறந்த கண்மணியும் த்ரயீமயமுமான மண்டலத்திலே”
என்ற ஆசார்யஹ்ருதயும் இங்கு நோக்கத்தக்கது.

திகிரி – வட்டம், வட்டவடிவமான சூரியனுக்கு, வடிவுப்பண்பாகுபெயர். நாஸம் – வடசொல்.
“நாசமில்லா விண்” எனவே, பரமபத மென நன்கு விளங்கிற்று; சுவர்க்கலோகம்முதலியன கற்பந்தோறும்அழியு மென அறிக.
“விண்” என்று தேவலோகமாகிய சுவர்க்கத்திற்கும் பெயருண்டாதலால், அதனை விலக்குதற்கு “நாசமில்லா” என்ற
அடைமொழி கொடுக்கவேண்டிய தாயிற் றென்க. விண் – ஆகாயம்: இங்கே, பரமாகாசம்;
இன் – சாரியை. பதி – வழி. விண்ணிற்பதி – நான்கனுருபும்பயனுந்தொக்கதொகை.
இனி, “விண்ணிற்பதி” என்றதை இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகக் கொண்டு, பரமபதமாகிய நகர மென்றலுமாம்;
பதி – ஊர். இன் அல்லது இல் – ஏழனுருபு எனக் கொண்டு, பரமபதமென்ற திவ்வியலோகத்தி லுள்ள
ஸ்ரீ வைகுண்டநகர மென வகுத்துரைத்தலும் அமையும்.
விண்ணவர்தம் – தம். சாரியை. கண்ணின், இன் – ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.
காவேரிதீர் த்தத்திற்குச் சிறப்பு – தன்னில்நீராடியவர்க்கும் தன்கரைகளில்வாழ்பவர்க் கும் மாத்திரமே யன்றித்
தனதுதீர்த்தத்திற் பரிசித்த காற்றுச் செல்லுமிட மவ்வளவும் உள்ளார்க்கும் முத்திதரவல்ல மகிமை.
இருப்பிடம் – உறையு மிடம் என்றுகொண்டு, சூரியனைத் தியானித்தவர் அந்தத் தியானத்தின் பயனாகச்
சூரிய லோகத்தையடைவ ரென்னும் பொருளைக் கூறியதாக்கலு மொன்று.
மா நீர் – அரங்கத்திற்கு அடைமொழி. அரங்கர்க்கு அடைமொழியாக்கி சிறந்த தன்மையையுடைய
(திருக் கல்யாண குணங்களை யுடைய) ரங்கநாத ரென்னவுமாம்: இப்பொருளில், நீர் – நீர்மை யென்ற பண்பின் அடி,

————

புறக்கன்று புல் இதழ் முந்நீர் பிரசம் பொரு இல் செம்பொன்
நிறக்குன்று கன்னிகை எண் கிரி தாது நிலம் அதனுள்
பிறக்கும் துகள் முது மாசுணம் நாளம் பிரமன் வண்டு
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே –12-

(இ – ள்.) சிறக்கும் – மேன்மையுற்ற,
திகிரி – சக்கராயுதத்தை யேந்திய,
அரங்க ஈசர் – திருவரங்கநாதரது,
உந்தி – திருநாபியில் தோன்றிய,
செழுமலர்க்கு – செழுமையான தாமரைமலர்க்கு, –
புறம் குன்று – (பூமியைச்சூழ்ந்த கடலுக்கு) அப்பால் (மதில்போலச்) சூழ்ந்திருக்கின்ற சக்கரவாளபர்வதம்,
புல் இதழ் – புறவிதழாம்;
முந்நீர் – கடல்,
பிரசம் – தேனாம்;
பொருவு இல் – ஒப்பில்லாத,
செம் பொன் – சிவந்த பொன்மயமான,
நிறம் குன்று – ஒளியையுடைய மகாமேருபர்வதம்,
கன்னிகை – கொட்டையாம்;
எண் கிரி – அஷ்ட குலபர்வதங்கள்,
தாது – அகவிதழ்களாம்;
நிலம் – பூமி,
அதனுள் பிறக்கும் துகள் – அம்மலரினுள்ளே தோன்றும் மகரந்தப்பொடியாம்;
முது மாசுணம் – பழமையான பெரும்பாம்பு (ஆதிசேஷன்),
நாளம் – தண்டாம்;
பிரமன் – பிரமதேவன்,
வண்டு – வண்டாவன்; (எ – று.)

இதிற் கூறிய உவமை, தோற்றங் காரணமாகக் கற்பித்தது; மெய்யுவமை.
திருமாலின் திருநாபியினின்று பிரமனுடன் தோன்றிய அண்டகோ ளத்தையே நாபித் தாமரைமலராகக் கொண்டு கற்பனை கூறலாயினர்.

“எல்லாத்தீவுகட்கும் நடுவிலுள்ளதான ஜம்பூத்வீபத்திற்கு நடுவில், மேருவென்கிற சுவர்ணபர்வதமானது –
எண்பத்துநாலாயிரம்யோஜனை உயரமுள்ளதும், பதினாறாயிரம்யோஜனை பூமிக்குள்ளே உருவியதும்,
முப்பத்தீராயிரம்யோஜனை தலையில்விரிந்ததும், பதினாறாயிரம்யோஜனை அடியில்விரிந்ததுமாகி,
பூமியென்னுந் தாமரைமலர்க்குக் கர்ணிகைபோல விளங்குகின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

(“கமலமென்பொகுட்டின், நடுவுறை மேருவெனும்வரை யுடைத்தாய் நாவலந்தீவு வாய்த்திடுமே” என்ற ஸ்ரீபாகவதத்தையும்,
“பூமியென்னுங் கமலத்தின் பொகுட்டுப் போலும் பொலங்கிரி” என்ற மகாபாகவதத்தையும்,
“விண்ணுயர் சம்புத்தீவி னடுவுநின்ற மேருவரை செங்கமலப்பொகுட்டுப்போல, நண்ணும்” என்ற கந்தபுராணத்தையும் காண்க.)
புல் இதழ் – (மலரின் வெளியே) புல்லுகின்ற (சார்ந்துள்ள) இதழ் என வினைத்தொகை; புல்லுதல் – சார்தல்.
இனி, (நிறம் மணம் மென்மை அழகு இவற்றில் அகவிதழ்போலச் சிறப்புறாமையாற்) புல்லிதாகிய இதழ் எனப் பண்புத்தொகையுமாம்;
புல்லிது – புன்மையுடையது: இப்பொருளில், புல் – புன்மை யென்ற பண்பின் அடி; புன்மை – சிறுமை.
அண்டத்திற் பூமி கடல்களுக்குப் புறத்தேயுள்ள குன்றைப் புறவிதழென்றும்,
அவற்றினகத்திலுள்ள குன்றுகளை அகவிதழென்றுங் கூறினார்.

கடல், திரவபதார்த்தமாதலால், இங்கே தேனெனப்பட்டது.
மகாமேருவைக் கொட்டையென்றது, நிறமும், “பரந்தும்பர்நிமிர்ந்திடு பைம்பொன்வரை” என்றபடி உயர்ந்து தலை விரிந்த வடிவமும்பற்றி.
எண்கிரி – மால்யவாந், கந்தமாதநம், நிஷதம், ஹேமகூடம், இமயம், நீலம், சுவேதம், சிருங்கம் என்பன;
சிறிது வேறுபடக் கூறுதலு முண்டு.

பூமி, துகள்மயமாதலால், இங்கே பூந்துக ளெனப்பட்டது.
இனி, தாது – கேஸரமென்றும் கிஞ்ஜல்கமென்றுங் கூறப்பட்டு இதழ்களின் உட்புறத்திலே கர்ணிகையைச் சுற்றி
மெல்லிய கம்பிகள்போலவும் பட்டு நூல்கள்போலவுமுள்ள பூந்தாது என்றும்,
அத்தாதிற்பிறக்குந்துகள் – புஷ்ப தூளியெனப்படும் மகரந்தப்பொடியென்றும் உரைப்பாரும் உளர்.
தேன் – மலரினுள்ளே யுள்ளது. மகாமேருவைச் சார்ந்துள்ள மலைகளைக் கேஸர பர்வத மென வழங்குதலுங் காண்க.

ஆதிசேஷனை நாளமென்றது, உள் துளையுள்ள நீண்ட வடிவுபற்றி;
(“தண்ணந்தாமரைத்தாளெனத் தடக்கை யாற் பிலத்தில், நண்ணுஞ் சேடனையெடுத்து” என்றார் நைடதத்திலும்.)
கீழே யிருந்து உலகத்தைத்தாங்குகின்ற ஆதிசேஷன், உலகமாகிய தாமரை மலர்க்குக் காம்பாவன்.
இத்தாமரைமலர்க்கு மேலிடமெனத்தக்க சத்திய லோகத்தில் வாழ்தலாலும்,
எப்பொழுதும் வேதகீதஞ்செய்துகொண்டிருத்த லாலும், பிரமனை வண்டெனலாயிற்று;
“வண்டா யய னான்மறை பாட மலர்ந்த தொரு தாமரைப்போது,
பண்டாலிலையின்மிசைக்கிடந்து பாரு நீரும்பசித்தான்போ, லுண்டா னுந்திக்கடல் பூத்தது” என்றார் கம்பரும்.

திருமாலின் திருநாபியை, இவ்வகைப்பெருந்தாமரைமலரைப்பூத்ததொரு பெருநீர்நிலையாகக் கொள்க.
வண்டுக்கு ரீங்காரம்போல, பிரமனுக்கு வேதங்களை முகங்களாற் பாடுதல். மலரின்மேலிடத்தில் ஏகே்தசத்தில்
வண்டு மொய்த்தல்போல, அரங்கேசருந்திச்செழுமலரின்மேலே ஏகதேசத்திற் பிரமன் அடங்கிக்கிடக்கின்றா னென,
திருமாலினது திருநாபிக்கமலத்தின் பெருமையைத் தெரிவித்தார்.

முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மைகளை யுடையது;
அல்லது, ஆற்றுநீர் ஊற்றுநீர் மழைநீர் என்னும் மூன்றுவகை நீரை யுடையது; பண்புத்தொகை யன்மொழி.
கன்னிகை – பொகுட்டு; கர்ணிகா என்ற வடசொல்லின் சிதைவு. கிரி. நாளம், ப்ரஹ்மா – வடசொற்கள்.
ஆதிசேஷன் பிறப்பிறப்பில்லாத நித்ய னாதலால், “முதுமாசுணம்” என்றார்; தொன்று தொட்டுள்ள மகாநாக மென்க.

————-

இரு கூலமும் பொரு மா நீர் அரங்கத்தில் எந்தை அம் தண்
முருகு ஊர் கமல முனி ஆய் வகுக்கும் முறையினால்
புரு கூதனுக்குத் திருத் தம்பி ஆகி புரக்கும் உமை
ஒரு கூறு கொண்ட அரன் ஆய அழிக்கும் உகாந்தத்திலே –13-

(இ – ள்.) இரு கூலமும் – இரண்டு பக்கத்துக் கரைகளையும்,
பொரு -மோதி யுடைக்கின்ற,
மா நீர் – மிகுதியான (காவேரி) நீர்ப்பெருக்கினாற் சூழப்பட்ட,
அரங்கத்தில் – திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கின்ற,
எந்தை – எம்பெருமான் (நம்பெருமாள்), –
அம் – அழகிய,
தண் – குளிர்ச்சியான,
முருகு ஊர் – வாசனை வீசுகின்ற,
கமலம் – தாமரை மலரில் தோன்றிய,
முனி ஆய் – பிரமனாகி,
முறைமையினால் வகுக்கும் – கிரமப்படி (உலகங்களையும் அவற்றிலுள்ள சராசரங்களையும்) படைத்தருள்வன்;
புருகூதனுக்கு திரு தம்பி ஆகி – தேவேந்திரனுக்குச் சிறந்த தம்பியாய்த் தோன்றி (உபேந்திர மூர்த்தியாகி),
புரக்கும் – காத்தருள்வன்;
உமை ஒரு கூறு கொண்ட அரன் ஆய் – பார்வதியை ஒருபாகத்திலே (தனது உடம்பின் இடப்பக்கத்திலே) வைத்துக்கொண்ட சிவனாகி,
உக அந்தத்தில் – யுகமுடிவுகாலத்தில் (கற்பாந்தகாலத்தில்),
அழிக்கும் – அழித்தருள்வன்; (எ – று.)

“ஆக்குமா றயனா முதலாக்கியவுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங்கடலாம்,
வீக்குமா றரனா மவைவீந்தநாண் மீளப், பூக்கு மாமுத லெவ னவன்பொன்னடி போற்றி” என்ற
வில்லிபுத்தூரார்பாரதம், இங்கு நோக்கத்தக்கது.

பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தராத்மாவாய் நின்று ஸ்ரீமந் நாராயணன் தானே படைப்புஅழிப்புக்களைச் செய்வ னென்க.
இந்த ஒற்றுமைநயம்பற்றியே, ஆழ்வாரும் “சிவனா யயனானாய்” என்றும்,
“முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும்,
“தாமோதரனுருவாகிய சிவற்குந் திசைமுகற்கும்” என்றும்,
“அரனயனென வுலகழித்தமைத்துளனே” என்றும் அருளிச்செய்தார்.

இவர்கள் எம்பெருமானுக்குச் சரீரஸ்தாநமாக, அவன் தான் ஆத்மாவாக நின்று தொழில்செய்யு மென்க.
(“இருந்துபடைக்கும் ஆஸநத்தோபாதி ப்ரஹ்மா” என்றது, நம்பிள்ளையீடு.)

திரிலோகாதிபதியான இந்திரன் ஆதியில் அசுரர்கள்நலிதலால் வருந்தித் தேவர்களுடனே திருமாலைச் சரணமடைந்து
“நீ எப்பொழுதும் என்னுலகத்தில் எழுந்தருளியிருந்து என்பகைதவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்” என்று வேண்ட,
அதற்கு இணங்கிய ஸ்ரீமகாவிஷ்ணு, காசியபமுனிவனது மனைவியாகிய அதிதி தேவியின் வயிற்றில்
அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஓர் அவதார மெடுத்துத் தோன்றி உபேந்திரனெனப் பெயர்கொண்டு
தேவலோகத்தில் அவ்விந்திரனருகிலேநின்று அவனது துயரத்தைத் தீர்த்து அனைத்துயிரையும்
பாதுகாத் தருளலாயினனென்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

“ஆக்குந்தொழிற்கு விரிஞ்சியைவைத் தழிக்குந்தொழிற்குச் சிவனைவைத்துக்,
காக்குத்தொழில் தான் கைக்கொ ளருட்கடவுள்” என்றபடி
தானானநிலையில்நின்று காத்தலையும், பிரமருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் நின்று படைத்தல் அழித்தல்களையுஞ் செய்தலால்,
“உலகம்யாவையுந்தா முளவாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலாவிளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே” என்னும்படி முத்தொழிலும் எம்பெருமானுக்கு உரியதாம்.

உபேந்திராவதாரத்தைச் சொன்னது, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபால நங்களாற் காத்தல்தொழில்நிகழ்த்துதற்பொருட்டு
அப்பெருமான்கொண் டருளும் மூர்த்திகளுக்கெல்லாம் உபலக்ஷணம்.

“இப்படிபிறந்தபிரமாண்டத்தில், பிரகிருதிஸ்வரூபனும், மக தகங்கார தந்மாத்ரா மகாபூத சரீரகனும்,
ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவன் சதுர்முகசொரூபனாய்த் தானே அவதரித்தான்”,
“அந்த அண்டத்தில், விசுவேசுவரனான நாராயணன் பிரமரூபியாகி ராஜோகுணப்ரதாநனாய்த்
தேவ அசுர கந்தர்வ மநுஷ்ய பசு பக்ஷி தாவரங்களைச் சிருஷ்டித்துக்கொண்டு,
அப்ரமேயபராக்ரமனும் ஷட்குணைச்வர்யஸம் பந்நனுமான தானே ஸாத்விககுணப்ரதாநனாய் லீலார்த்தமாக
யுகங்கள் தோறும் நாநாவிதமான திவ்யாவதாரங்கள் செய்து கல்பாந்தபர்யந்தமும் ஜகத்தைப் பரிபாலநம்
பண்ணிக்கொண்டும், பிரளயகாலத்தில் தாமஸகுண ப்ரதாநனான ருத்ரரூபியாகியிருந்து அதிகபயங்கரனாய்ச்
சராசரங்களான அகிலபூதங்களையும் விழுங்கி, மூன்றுலோகங்களையும் ஏகார்ணவமாகப் பண்ணி,
ஸஹஸ்ரபணாமண்டலமண்டிதனான ஆதிசேஷனாகிய படுக்கையிலே சயனித்துக்கொண்டு,
அப்பால் பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாய் முன்போலவே பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தருள்வன்

ஷட்குணைச்வர்யஸம்பந்நனான ஜநார்த்தநனொருவனே அந்தந்தச்சொரூபங் களில்நின்று
சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால், பிரமா விஷ்ணு ருத்ரன் என்கிற திருநாமங்களையடைகின்றான்”,
“சகலபூதங்களுக்கும் ஆத்மா வாய் எல்லாவற்றையும் தனக்குச்சரீரமாக வுடையவனாகையாலே,
கை கால் முதலான சரீரத்தின் செய்கை சரீரியான ஆத்மாவுக்கு உபகாரகமாவதுபோல்
பிரமாதிகள்செய்யுஞ் சிருஷ்டிமுதலானவையெல்லாம் அவனுக்கு உதவியாக விருக்கும்,”

“தான்ஸர்வசக்தனாயிருக்கப் பிரமாதிகளை இடையில்வைப்பது ஏனெனின், –
அவர்களுக்கு இப்படி வரங்கொடுத்திருக்கின்றா னாகையால்” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவாக்கியங்கள், இச்செய்யுட்கு மேற்கோளாகலாம்.

கூலம், கமலம், முநி, புருஹூதன், உமா, ஹரன், யுகாந்தம் – வடசொற்கள்.
கமலம் – இங்கே, திருநாபித்தாமரை. முநி – மநநசீலன்: லோக ஸ்ருஷ்டியைக்குறித்து எப்பொழுதும் சிந்தனைகொண்டவன்.
“முறைமையினாற் புருகூதனுக்குத் திருத்தம்பியாகி” என்று இயைத்து,
தான் தேவாதிதேவனேயாயிருக்கவும் ஓர்அவதாரவிசேஷத்திலே ஏறிட்டுக்கொண்ட உறவுமுறைமையினால்
இந்திரனுக்குத்தம்பியாகி யென்றுஉரைப்பினும் அமையும்.
புருஹூத னென்பதற்கு – (யாகங்களில்) மிகுதியாக அழைக்கப்படுதலை யுடையவ னென்பது காரணப்பொருள்;
புரு – மிகுதி, ஹூதம் – அழைக்கப்படுதல். “இருகூலமும்” என்ற உம்மை – இனைத்தென்று அறி பொருளில் வந்த முற்றும்மை.
எந்தை வகுக்கும், புரக்கும், அழிக்கும் – செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலுக்கு வந்தன.
முருகு ஊர்தல் – நறுமணம் மிக்குப் பரவுதல்; தேன் நிறைந்து பெருகுதலுமாம்.
யுக + அந்தம் = யுகாந்தம்: தீர்க்கசந்தி. இங்கே, யுகமென்றது – இலக்கணையாய், பிரமனது தினமாகிய கற்பத்தையும்,
அவனது ஆயுளாகிய மகாகற்பத்தையுங் குறிக்கும்:
அவ்விரண்டின்இறுதியிலேதான் பிரளயம்உண்டு என்றும், ஒவ்வொரு யுகத்தின்முடிவிலேயாவது
ஒவ்வொருசதுர்யுகத்தின் முடிவிலேயாவது பிரளயமில்லையென்றும் உணர்க:
ஆகவே, யுகாந்தமென்பதிலுள்ள யுகமென்பது, கல்ப மகாகல்பங்களின் ஈற்றி லுள்ள சதுர்யுகத்திற் கடைசி யுகத்தை யென்றலுமாம்.
ஹரன் – (பிரளயகாலத்தில் எல்லாவற்றையும்) அழிப்பவன்; சங்காரக்கடவுள்.
“முறைமையினால்” என்றதில், “ஆல்” என்ற மூன்றனுருபு – அடைமொழிப்பொருளது.

————

வாரித்தலமும் குல பூதரங்களும் வானும் உள்ளே
பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் படைக்க முன் நாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமிழ்கள் போலே முளைத்தனவே –14-

(இ – ள்.) வாரி தலமும் – கடல்சூழ்ந்த உலகங்களையும்,
குல பூதரங்களும் – குலபருவதங்களையும்,
வானும் – ஆகாயத்தையும்,
உள்ளே பாரித்து வைத்த – (தமது) அகத்திலே பரப்பிவைத்துள்ள,
இ அண்டங்கள் யாவும் – இந்த அண்டங்க ளெல்லாம், –
முன் நாள் – ஆதிகாலத்திலே,
படைக்க – (எம்பெருமான்) சிருஷ்டிக்கும் போது, –
வேரி பசுந் தண்துழாய் அரங்க ஈசர் விபூதியிலே – தேனை யுடைய பசுநிறமான குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த அத்திருவரங்கநாதரது லீலாவிபூதியில்,
மூரி புனலில் குமிழிகள் போல முளைத்தன – பெரு வெள்ளத்திற் (குமிழ்த்த) நீர்க் குமிழிகள் போலத் தோன்றின; (எ – று.)

“அண்டங்கள்தாம், அநேகங்களாய், பதினாலுலோகங்களோடே கூடி, ஒன்றுக்கொன்று பதிற்றுமடங்கான
ஏழாவரணங்களாலுஞ் சூழப்பட்டு, ஈச்வரனுக்கு க்ரீடா கந்துக ஸ்தாநீயங்களாய், ஜலபுத்புதம்போலே
ஏககாலத்திலே ஸ்ருஷ்டங்களாயிருக்கும்” என்றது, தத்வத்ரயம்.

“நிற்குநெடுநீத்த நீரின்முளைத்தெழுந்த, மொக்குளேபோல முரணிற்றவண்டங்க, ளொக்க வுயர்ந்துனுளே
தோன்றி யொளிக்கின்ற, பக்கமறிதற்கெளிதோ பரம்பரனே” என்பது, கம்பராமாயணம்.
“வான்புனலி, னுருவமுறு குமிழி போற் பிரமாண்டமா யுதிக்கும்” என்றார், கூர்மபுராணத்திலும்.
“இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அண்டம், நீர்க்குமிழிபோலே ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றே யல்லாமல்,
கிரமக்கிரமமாக அபிவிருத்தியாகவில்லை” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசனமுங் காண்க.

அண்டங்கள் பல வென்பதும், அவைகளெல்லாம் ஒரேவகையா யிருக்கு மென்பதும்,
அவையாவும் ஒரேகாலத்தில் முழுமொத்தமாய் உற்பத்தியாயின வென்பதும் இதனால் விளங்கும்.
விபூதி – செல்வம்: வடசொல். அது – லீலாவிபூதியெனவும், த்ரிபாத்விபூதி யெனவும் இருவகைய தெனப்படும்.
அவற்றில், லீலாவிபூதி – விளையாட்டுக்கு உரிய செல்வம்;
எம்பெருமானுக்குத் திருவிளையாடலெனப்படுகிற படைப்புக் காப்பு அழிப்புக்கு உரிய பொருள்: பிரபஞ்சம்.
த்ரிபாத்விபூதி – எம்பெருமானது செல்வங்களுள் முக்காற்பங்காகவுள்ளது; முத்தியுலகம்.
மற்றைக்காற்பங்காகவுள்ளது, லீலாவிபூதி. லீலாவிபூதியினும் மும்மடங்குகொண்டது த்ரிபாத்விபூதி யென்க.
இச்செய்யுளிற் குறித்த விபூதி – லீலாவிபூதி யென்னலாம்.

“வாரித்தலம்” என்றது, உவர்நீர் கருப்பஞ்சாறு கள் நெய் தயிர் பால் நன்னீர் என்கின்ற ஏழு சமுத்திரங்களால்
முறையே சூழப்பட்டிருக்கின்ற ஜம்பூ பிலக்ஷம் சால்மலம் குசம் கிரௌஞ்சம் சாகம் புஷ்கரம் என்ற ஏழு தீவுகளையும்.
குலபூதரங்கள் எட்டு, 12 – ஆஞ் செய்யுளி னுரையிற் கூறப்பட்டன.
இங்கே, “குலம்” என்றது, சிறப்பை யுணர்த்தும். பூதரம் என்ற வடசொல் – பூமியைத் தரிப்ப தென்று பொருள்படும்;
பூமிக்கு மேலும் கீழும் நின்று அதனை நிலைநிறுத்துதலாலும், நதிகளின் உற்பத்திக்கு இடமாகி நின்று
அதுகொண்டு நிலவுலகத்துஉயிர்களைப் பாதுகாத்தலாலும், மலைகள் பூதரமென்று பெயர்பெறும்.
அண்டத்தையும் அண்டகாரணங்களையும் எம்பெருமான் தானே உண்டாக்குவன்;
அண்டத்திற்கு உட்பட்ட பொருள்களைப் பிரமன் முதலியோர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்குவன்:
இவற்றில், முந்தியது – ஸமஷ்டிஸ்ருஷ்டி யெனவும், பிந்தியது – வ்யஷ்டிஸ்ருஷ்டி யெனவும் படும்;
இச்செய்யுளிற் கூறியது, ஸமஷ்டிஸ்ருஷ்டி. முந்தினசெய்யுளிற் கூறியது, வ்யஷ்டிஸ்ருஷ்டி.
ஆகவே, கீழ்ச்செய்யுளில் “எந்தை யந்தண்முருகூர்கமலமுனியாய்வகுக்கும்” என்றதனோடு,
இச்செய்யுளில் “அண்டங்கள்யாவும் படைக்க முன்னாள்…… முளைத்தன” என்றது மாறுகொளக்கூறலாகாமை உணர்க.

வாரி – நீர்: வடசொல்; கடலுக்கு இலக்க ணை. யா – அஃறிணைப்பன் மைவினாப்பெயர்; இதில் ‘வை’ விகுதி புணர்ந்துகெட்டது.
இங்கு, வினா -எஞ்சாமைப்பொருளது. உம்மை – முற்று. துழாய் – துளஸீ என்ற வடசொல்லின் சிதைவு.
அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர். மூரி – பெருமை. வேரி – வாசனையும், பசுமை – வாடாமையுமாம்.
குமிழ்ப்பது குமிழி யெனக் காரணப்பெயர்; இ – கருத்தாப்பொருள்விகுதி:
இனி, முகுள மென்ற வடசொல் குமிழி யெனச் சிதைந்த தென்னவுமாம்; மொக்கு ளென்பது, அதன் பொருள்: அது, நீர்க்குமிழிக்கும் பெயராம்.

———–

நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே –15-

(இ – ள்.) நிற்றலும் – நாள்தோறும்,
நெடுங் கடல் நிற்பதும் – பெரிய கடல் (மேன்மேற்பொங்கியெழாமல்) ஒருநிலையில்அடங்கிநிற்பதும்,
நாயிறு காய்வதும் – சூரியன் (தவறாமல்வந்து) வெயில்காய்வதும்,
கால் ஒடுங்கி நடப்பதும் – காற்று (உலகம்பொறுக்கும்படி) அடங்கிவீசுவதும்,
தண் கார் பொழிவதும் – குளிர்ச்சியான மேகங்கள் (காலத்தில் வந்து) மழைபொழிவதும்,
ஊழிதனில் சுடும் கனல் பற்றி சுடாதே இருப்பதும் – கற்பாந்தகாலத்தில் (உலகத்தைச்) சுட்டெரிக்கின்ற படபாமுகாக்கினி
(அதற்குமுன்பு உலகத்திற்) பற்றிக் கொண்டு (அதனைச் சுட்டெரித்தழியாமல் கடலினிடையே அடங்கி) இருப்பதும்,
(ஆகிய இவையெல்லாம்),
தும்பை புனைந்து – தும்பைப்பூமாலையைச் சூட்டிக்கொண்டு,
அடும் – (அசுரர் முதலிய கொடியவர்களை) அழிக்கின்ற,
கனல் ஆழி – அக்கினிபோலச் சுவாலைகளைவீசுகின்ற சக்ராயுதத்தையேந்திய,
அரங்கேசர்தம் – திருவரங்கநாதரது,
திரு ஆணையினே – சிறந்த கட்டளையினாலேயாம்; (எ – று.)

சமுத்திரராஜன் முதலியோர் தம்தமக்கு எம்பெருமான் கட்டளையிட்ட தொழிலைத் தாம் சரிவரச்செய்யாவிட்டால்
அப்பெருமான் சீறித் தம்மைத் தண்டிப்பனோ வென்று மிகவும் அஞ்சித் தம்தம்தொழிலில்
ஜாக்கிரதை யுள்ளவரா யொழுகுகின்றன ரென்பது, கருத்து. இது, மற்றைத்தேவர்கட்கும் உபலக்ஷணம்.
ஆதலால், எம்பெருமானது ஸர்வேச்வரத்வம் கூறியவாறாம்; ஸர்வநியாமக னிவனென்க.
இதனால், எம்பெருமானது வரம்பிலாற்றல் கூறப்பட்டது.

“கூரெயிற்றாடலங்கூற்றங்கொல்வதுங், கார்மழை பொழிவதுங் கதிரெறிப்பதும்,
மாருதமுளர்வதும் வாரிநிற்பதும், ஆரழல் சுடலு மென்னாணை யாகுமால்” என்ற ஸ்ரீபாகவதமும்,

“சகலதேவ தைதமக்கியான்றலைவன் சத்தியமே, நிகரில் சாகரங் கரைகடவாததும் நிவருங்,
ககனமேகங்கள் சொரிவதுங் கடல்வடவைத்தீ, வெகுவிலாதது மென்னுடைவினோதவாக்கினையே” என்ற மகாபாகவதமுங் காண்க.

இவ்விஷயம், தைத்திரீயோபநிஷத்திலும் வருகின்றது.
“ஊழிதனிற்சுடுங்கனல் பற்றிச்சுடாதேயிருப்பதும்” என்றதை உபலக்ஷணமாகக் கொண்டு,
மற்றையவற்றிற்கும், கற்பாந்தகாலத்தில் தம்தம்ஆற்றலை மிகுதியாகக்காட்டி அதுகொண்டு
உலகத்தையழிக்குந் தன்மையனவான கடலும் நாயிறும் காலும் காரும் அதற்குமுன்பு அவ்வாறு அழியாமல் அடங்கிநிற்பது மெனக் கொள்க.

இனி, அவை கற்பாந்தகாலத்தில் மிகுதியாகப் பொங்கிப் பரந்தும் அதியுக்கிரமான வெயிலை யெறித்தும்
மிகுதியாகவீசியும் மிகுதியான மழையைப் பொழிந்தும் எங்கும்பற்றியும் உலகங்களையழிப்பதும்
அவர்கட் டளையினாலேயே யென்பது, அருத்தாபத்தியாற் போதரும்.

“தும்பை புனைந்தடுங்கனலாழியரங்கேசர்தந் திருவாணையினே” என்ற சொற்சேர்த்தி யால்,
அவை அங்ஙனம் அஞ்சி அடங்கி நிற்பது அப்பெருமானது திருச்சக்கரத்தையும் ஆஜ்ஞாசக்கரத்தையும் நோக்கி யென்பதுந் தோன்றும்.

“அருளார் திருச்சக்கரத்தா லகல்விசும்புந் நிலனும், இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” என்ற திருவிருத்தத்தையும்,
“செய்யேல் தீவினை யென் றருள்செய்யு மென்கையார் சக்கரக் கண்ணபிரான்” என்ற திருவாய்மொழியையுங் காண்க.

அண்டத்தின் அகத்திலுள்ள ஏழு கடல்களே யன்றி அண்டத்தின்புறத்திலுள்ள பெரும்புறக்கடலும் அடங்க, “நெடுங்கடல்” என்றார்.
நிற்றல் – நித்யம் என்ற வடசொல்லின் சிதைவு; உம்மை – தொறுப்பொருளது.
இனி, நிற்றல் என்பதை நில்என்றபகுதியின் தொழிற்பெயராகவும் உம்மையை எண்ணுப்பொருளதாகவுங் கொண்டு,
சூரியன் காய்வதும் (ஒருபடிப்பட ஆகாயத்தே) நிற்பது மென்று உரைத்தலுமாம்.

தும்பை யென்ற செடியின்பெயர், அதன் மலர்களினாலாகிய மாலைக்கு இருமடியாகுபெயராம்;
இம்மலர்மாலை, போருக்குரிய அடையாளப்பூமாலையாம்; “அதிரப்பொருவது தும்பையாம்” என்றார் பிறரும்.
இதனைப் போர் செய்யும்வீரர் தாம்தரிப்பதேயன்றித் தமது ஆயுதங்கட்குஞ்சூட்டுவது மரபாதலால், “தும்பைபுனைந்தடுங் கனலாழி” எனப்பட்டது.
ஆணை – ஆஜ்ஞா என்ற வடசொல்லின் சிதைவு; இன் – ஐந்துனுருபு, ஏதுப்பொருளது: ஈற்று ஏகாரம் – பிரிநிலை.
நிற்பது, காய்வது, நடப்பது, பொழிவது, இருப்பது என்ற தொழிற்பெயர்களில்,
இடைநிலை – எதிர்காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திநின்றது. “ஆகும்” என வினைமுற்று வருவித்துமுடிக்க.
“கனல்ஆழி” என்பதற்கு – கோபாக்கினியையுடைய சக்கர மென்று உரைப்பாரு முளர்.

————–

ஓலைப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உகம் திரியும்
காலத்தினில் கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு காமர் பசும்
கோலக் குழவி வுருவாய் அகண்டமும் கோத்த வெள்ளத்து
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே –16-

(இ – ள்.) ஓலம் – ஆரவாரத்தைச் செய்கின்ற,
புனல் – நீர்ப்பெருக்கையுடைய,
பொன்னி – காவேரியினது,
நல் நீர் – திவ்விய தீர்த்தத்தாற் சூழப்பட்ட,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான நம்பெருமாள்,
உகம் திரியும் காலத்தினில் – கற்பம் மாறுங் காலத்தில்,
கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு – மிகுதியான அண்டகோளங்களையெல்லாம் புசித்து (திருவயிற்றில்வைத்துஅடக்கியருளி),
காமர் கோலம் பசுங்குழவி உரு ஆய் – (கண்டவர்) விரும்பத்தக்க அழகையுடைய இளங்குழந்தைவடிவமாய்,
அகண்டமும் கோத்த வெள்ளத்து – எல்லாவிடங்களிலும் இடைவிடாதுபரவிய அந்தப் பிரளயவெள்ளத்தில்,
ஆலத்து இலையின் புடைக்கே – ஆலிலையினிடத்திலே,
அகம் மகிழ்ந்து – திருவுள்ளமுவந்து,
துயில்வார் யோகநித்திரை செய்தருள்வர்; (எ – று.)

பிரமன்முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்து போகின்ற கல்பாந்தகாலத்திலே, ஸ்ரீமகாவிஷ்ணு,
அண்டங்களையெல்லாம் தன்வயிற் றில் வைத்துக்கொண்டு, சிறுகுழந்தைவடிவமாய், பிரளயப்பெருங்கடலிலே
ஆதிசேஷனது அம்சமானதோ ராலிலையின்மீது பள்ளிகொண்டு அறிதுயில் செய்தருள்கின்றன னென்பது, நூற்கொள்கை.
இது – எம்பெருமானது செயற்கரியனசெய்யும் விசித்திரசக்தியையும், பரத்துவத்தையும், பேரரு ளுடைமையையுங் காட்டும்.

புனல் – நீர்; ஆறு எனக் கொண்டு, பொன்னி புனல் – காவேரிநதியி னது, நல் நீர் -நல்ல நீரினாற் சூழப்பட்ட என்றலுமாம்.
இனி, பொன்னி – காவேரியாற் சூழப்பட்ட, நல் நீர் – சிறந்ததன்மையையுடைய,
அரங்கர் – திரு வரங்கத்தி லுள்ளவர் என்றலும் அமையும்;
அரங்கத்திற்கு நல்ல நீர்மையாவது – ஒருமாத்திரைப்பொழுது தன்னிடத்தில்வசித்தவரையும் பரிசுத்தராக்கி
வீடுபேற்றிற்கு உரியராகும்படி செய்யும் மகிமை. உகம் – இங்கே, கற்பம்; (13) “உகாந்தம்” என்றதிற் போல.
உகம் திரியும் காலத்தினில் – ஒருகல்பம்முடிந்து மற்றொருகல்பம்வரவேண்டிய சமயத்தி லென்க; கல்பாந்தத்தி லென்றதாம்.
உண்டு = உட்கொண்டு. காமர் – காமமருவு என்பதன் விகாரம். காமர், கோலம் என்பன – ஒரு பொருட்பன்மொழி யென்றலு மொன்று.
பசுமை – இங்கு இளமைமேலது; நீலநிறத்தைக் குறிப்பதாகவுங் கொள்ளலாம். குழவி – இளமையையுடைய தெனக் காரணப்பொருள்படும்;
குழ – இளமை குறிக்கும் உரிச்சொல்: பகுதி; இ – பெயர்பகுதி. அகண்டம் – வடசொல். ஆலத்து, அத்து – சாரியை.
புடைக்கே = புடையிலே: உருபு மயக்கம். அகம் – அகத்துறுப்பு, அந்த:கரணம்.
அகண்டமுங் கோத்த வெள்ளம் – எல்லாப்பொருள்களையுந் தன்வசத்தில் அடக்கிக்கொண்ட பிரளயநீர்ப்பெருக்கு.
தான் என்று மழிவில்லாதநித்தியனென்பது தோன்றப் பள்ளிகொண்டிருப்பனென்பார், “அகமகிழ்ந்து துயில்வர்” என்றார்.

———-

தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்
காற்றுப் புலரும்படி முதல் வீசும் கறைக்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் கார் ஆழித் தீச்சுடும் நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே –17-

(இ – ள்.) அந்தத்திலே – கல்பாந்தகாலத்திலே, –
தாறு கமுக வனம் சூழ் அரங்கர் – குலைகளையுடைய பாக்குமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமானுடைய,
சயனம் – படுக்கையாகிய ஆதிசேஷனது,
முகம் – (ஆயிரம்) முகங்களினின்றும் எழுகின்ற,
காற்று – காற்றானது,
முதல் – முதலில்,
புலரும்படி வீசும் – (எல்லாப்பொருள்களும்) உலர்ந்துபோகும்படி நெடிதாய் வீசும்;
(பிறகு அந்த முகக்காற்றிலிருந்து),
கறை – களத்தன் – நஞ்சுண்டு கறுத்த கண்டத் தையுடையவனான ருத்திரமூர்த்தி,
நீற்று சிவந்து எழும் – (எல்லாப்பொருள் களையும்) எரித்துநீறாக்கிக்கொண்டு கோபித்துத் தோன்றுவன்;
கார் ஆழி தீ சுடும் – (திருவரங்கநாதர் பள்ளிகொள்ளுகின்ற) கரிய கடலிலே யுள்ள பட பாமுகாக்கினி (உலகத்தை) எரிக்கும்;
நீள் கழலின் ஆறு பெரும் பெருக்கு – (அத்திருமாலினது) நீண்ட திருவடி பட்டதனா லாகிய துளைவழியாற் பெருகிய பெரும்புறக்கடல்வெள்ளம்,
அண்டம் எல்லாம் கொள்ளும் – அண்ட கோளம் முழுவதையும் தன்னிடத்தில்அகப்படும்படி கவர்ந்து கொள்ளும்.

கீழேழுலகங்களுள்ளும்கீழதான பாதாளலோகத்தின்கீழே முப்பத்தினா யிரம்யோஜனையுள்ளஇடத்தில்,
ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஸம்ஹாரத்திருமேனி யாய் விளங்குகின்றவரும் அத்திருமாலுக்குப்
படுக்கை குடை சிங்காசனம் மரவடி முதலிய பல வடிவமாகிப் பலவகைகைங்கரியஞ்செய்கின்ற வருமான ஆதிசேஷன்
எழுந்தருளியிருந்து உலகங்களைத் தாங்கிக்கொண் டிருக்கின்றனர்;

பிரளயகாலத்திலே, முதலில், அந்தஆதிசேஷனுடைய ஆயி ரம்முகங்களினின்றும் மிகப்பெரிய மூச்சுக்காற்று எழுந்து
நெடுநேரம் நெடுந்தூரம் வீசி, உலகங்களையும் உலகத்துப் பிராணிவர்க்கங்களையும் உலரச் செய்யும்;
பின்பு, அந்தச் சுவாசத்திலிருந்து விஷாக்கனிச்சுவாலைகளோடு கூடின அழித்தற்றொழிற்கடவுளான காலாக்கினி
ருத்திரமூர்த்தி உண்டாகிக் கோபாவேசத்தோடு அதியுக்கிரமாய்க் கீழுலகங்களையெல்லாம் தகித்துக்கொண்டு பூமிக்கும்வந்து
அதையும் கொளுத்தி மேலுலகங்களையும் எரித்திடுவர்;

மற்றும், கடலிடையேயுள்ளதான படபாமுகாக்கினியும் அச்சமயத்தில் வெளிக்கிளம்பி உலகங்களை ஒருபுறம் எரிக்கும்;
பிறகு, அண்டகடாகத்திற்கு வெளியேயுள்ளதான பெரும்புறக்கடல்வெள்ளம் பிரவேசித்து உலகங்களையெல்லாம்
ஜலமயமாக்கி அழிக்கின்றது என்பது, நூற்கொள்கை.
மேல் (86 – ஆஞ் செய்யுள்)
“ஓலாழிசூழ்புவியுச்சியிலேந்து முகக்கடையிற் காலான நற்குணமூர்த்தியைக் காலு மக்காலமெல்லாம்,
மேலாவிளங்கும் புவிமீதீ லென்றன் விழுத்துணையாம், மாலா மரங்கமணவாளர் கண்டுயில் மாசுணமே” என்பதுங்காண்க.
“சேடனானனத் துக்கிரவுதாசனன்றான் சினமுறு முருத்திரனுடனே, மூடிமூவுலகமெரித்திட,”
“சேடன், சீர்தரு முகத்தின்தீயாற் சேர்பொருள்யாவுந் தீய, ஓர்தருமண்டந்தானு முலந்து நீறாகுமன்றே,”
“விடந்திகழ்தீயி னண்டம் வேமியல் விளம்பின் வெய்ய, கொடுந்தழல்பட்டு நீறாங் கோமயபிண்டம்போலாம்,
அடைந்திடும்பருவநூறாங்கதிர் நெடுங்காற்றக்காற்றா, லுடைந்துமுன்னீறாகண்டமுற்றிடு மணுக்களாயே” என்றது, பாகவதம்.
பிறவும் கண்டுகொள்க.

“அரங்கர்” என்பதை, “சயனம்,” “ஆழி,” “கழல்” என்ற மூன்றனோடுங் கூட்டுக.
எம்பெருமான் கடல்கள்தோறுங் கண்வளர்ந்தருள்வ னென்று ஒரு பிரமாணஸித்தி யுண்டாகையாலே,
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்” என்றபடி
“அரங்கர் காராழி” எனப்பட்டது. “அண்டத்தைக்கவிந்து ஒன்றிலும்ஒன்று பத்துமடங்கு மிகுதியான ஜலம்
அக்கினி வாயு ஆகாசம் அகங்காரம் மகத்தத்துவம் பிரகிருதிதத்துவம் ஆகிய ஏழு ஆவரணங்க ளிருக்கின்றன;
தேங்காயானது எப்படி நார்மட்டைகளினாற் கவியப்பட்டிருக் கின்றதோ,
அப்படி பிரமாண்டம் ஸப்தாவரணங்களினாற் கவியப்பட்டிருக் கின்றது” என்றது, ஸ்ரீவிஷ்ணுபுராணம்.
இப்படி அண்டகடாகத்தைச் சூழ்ந்திருக்கின்ற முதல் ஆவரணமும், அண்டத்தின் அளவினும் பத்துமடங்குமிக்கதுமான
ஜலமே பெரும்புறக்கட லெனப்படுவது. மகாபலி்சக்கரவர்த்தியின் செருக்கை யடக்குதற்பொருட்டு வாமநாவதாரங்கொண்டு சென்று
அம்மாவலிபக்கல் மூவடிவேண்டிய திருமால் திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூமிமுழுவதையும் அளந்து
மற்றோரடியால் மேலுலகத்தை யளத்தற்காக அவ்வடியை நீட்டி மேலேசெலுத்த, அத்திருவடி பட்டதனால்
அண்டகடாகத்தின் மேலிடம் சிறிது உடைபட, அத்தொளை வழியாகப் பெரும்புறக்கடலின்நீர்
அண்டகோளத்தினுள்ளே விழுந்திடலாயிற்று என்பதை,
மேல் 37 – ஆஞ் செய்யுளில் “அரங்கேசர்பொற்றாள்பட்டுடைந்த வண்ட மேலக்கடாகத் தொளைவழியாகவிழும் புனல்” என்பதனாலும் உணர்க.

இவ்வாறு திருமாலினது மேலேநீண்ட திருவடி பட்டதனாலாகிய வழியினாற் பெருகும் பெரும்புறக்கடல்வெள்ளத்தை
“நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்றார்.
இங்கு, ‘ஆறு’ – வழி; நதியன்று. பிரளய காலத்திற் பெரும்புறக்கடற்பெருக்கினால் அண்டம் அழிவதை,
“இந்தப்பிர பஞ்சத்தை மூடிக்கொண்டிருக்கிற அண்டரூபமான பிருதிவியானது, அதைச் சூழ்ந்த அப்பில் லயமாகின்றது” என்று
ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் பிராகிருத பிரளயங் கூறுமிடத்துக் கூறியதனா லுணர்க.
பெரும்புறக்கடலின் நீரை “நீள்கழலின் ஆற்றுப்பெரும்பெருக்கு” என்று வேறுவகையாற்கூறியது, பிறிதினவிற்சியணி.
இனி, திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை அங்கேயுள்ள
பிரமன் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்தஸ்ரீபாததீர்த்தமாகப் பெருகிய பெருக்கே கங்காநதியாதலும்,
சகரசக்கரவர்த்தியின் குமாரர்கள் அறுபதினாயிரவரும் பாதாளலோகத்திற்குச் செல்லும்பொருட்டு நகங்களாலும் ஆயுதங்களாலும்
தோண்டிய பெரும்பள்ளமே பிறகு பகீரதன் மிகமுயன்று கொண்டுவந்த கங்காநதியின் தீர்த்தத்தால் நிரம்பிக் கடலாகிச்
சாகரமென்று பெயர்பெற்றதும், மகா பிரளயகாலத்திற் கடல் பொங்கியெழுந்து உலகத்தை யழித்தலு மாகிய
தன்மைகளைக் கருதி “நீள்கழலின் ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டமெல்லாங் கொள்ளும்” என்றதாகவுங் கொள்ளலாம்:
நீண்ட திருவடியினின்று தோன்றிய கங்காநதியின் பெரிய வெள்ளமென்க; இவ்வுரையில், ஆறு – நதி.

க்ரமுகவநம், ஸயநம், முகம், களம், அண்டம், அந்தம் – வடசொற்கள். வனம் – இங்கு, ஊரைச்சூழ்ந்த சோலை.
சயனமானது முகக்காற்றைப் புலரும்படி முதல்வீசும் என்றும் உரைக்கலாம்.
பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்த அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிய தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விஷத்தைச் சிவபிரான்
அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தியதனால் அக்கழுத்துக் கறுத்தமைபற்றி, சிவபிரானுக்கு விஷகண்டனென்றும்
நீலகண்டனென்றும் காளகண்டனென்றும் பெயர்களாயின; அக்கருத்தமைய ‘கறைக்களத்தன்’ என்றார்:
கறை – கறுப்பு, விஷம். நீற்றுதல் – எரித்துச் சாம்பலாக்குதல்.
இங்கு ‘நீற்று’ என்ற வினைப் பகுதிதானே நீற்றியென வினையெச்சப் பொருள்பட்டது;
இதில் விகுதி முதலியன புணர்ந்துகெட்டன வென்க: “வரிப்புனை பந்து” என்றவிடத்து ‘வரி’ என்றதிற் போல:
“வினைபுனைநல்லிலினைகூஉக் கேட்பவும்” என்றவிடத்து ‘இனை’ என்பதும் அது.
செம்மை யென்னும் பண்பின் அடி, “சிவ” என்று விகாரப்படும்;
அது உரிச்சொல்லாய்க் கோபத்தையும் உணர்த்துதலை “கறுப்புஞ்சிவப்பும் வெகுளிப்பொருள” என்ற தொல்காப்பியத்தால் அறிக.
இங்கு “எல்லாம்” என்றது, எஞ்சாமைப்பொருள் குறித்தது. “நீற்றிச் சிவந்தெழும்” என்று பாடம்ஓதாதது,
எதுகைநயம் நோக்கி யென்க. இனி, கார் ஆழி சிவந்துஎழும் தீ கறைக்களத்தன் நீறு சுடும் என்று மொழிமாற்றி,
கரியகடலிற் சிவந்தெழுகின்ற வடவைத்தீயானது (எல்லாப் பொருள்களையும்) சிவபிரானணியும் வெண்ணீறுபோலாம்படி யெரிக்கு மென்று உரைப்பாரு முளர்.

லோகஸம்ஹாரங்கூறுவார், அத்தொழில் எம்பெருமானுடைய அங்க உபாங்கங்களினா லாகுமென்று அவ்விறைவனது மகிமையை வெளியிட்டார்.

————

சின்னூல் பல பல வாயால் இழைத்து சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவது போலே அரங்கர் அண்டம்
பல் நூறு கோடி படைத்து அவை யாவும் பழம் படியே
மன் ஊழி தன்னில் விழுங்குவர் போத மனம் மகிழ்ந்தே –18-

(இ – ள்.) சிலம்பி – சிலந்திப்பூச்சியானது,
பல பல சில் நூல் – பலபல சிறிய (மெல்லிய) நூல்களை,
வாயால் இழைத்து – வாயினால் நூற்று,
பின்னும் – பின்பு,
அ நூல் அருந்திவிடுவது போல – அந்தநூலை (த் தானே) உட்கொண்டிடுவது போல, –
அரங்கர் -திருவரங்கநாதர்,
பல் நூறு கோடி அண்டம் – பல நூற்றுக்கோடிக்கணக்கான அண்டங்களை,
படைத்து – சிருஷ்டித்து,
மன்னூழிதன்னில் – மகாபிறளய காலத்தில்
அவை யாவும் -அந்த அண்டங்க ளெல்லாவற்றையும்,
போத மனம் மகிழ்ந்து – மிகவும் திருவுள்ளமுவந்து,
பழம் படியே – முன்போலவே (தம்வயிற்றில்தங்கும்படி),
விழுங்குவர் – உட்கொண்டருள்வர்; (எ – று.)

ஸ்வரூபவிகாரமில்லாம லிருந்துகொண்டே சிலவற்றையுண்டாக்குதலும் அங்ஙனமுண்டாக்கினவற்றை யுட்கொள்ளுதலும்
அல்பசக்தியை யுடைய சிலந்திப்பூச்சிக்குஇயல்பாகும்போது, ஸ்வரூபத்திற்குவிகாரமில்லாம லிருந்து கொண்டே
அண்டங்களைப்படைத்தலும் விழுங்குதலுமாகியஇயல்பு ஸர்வசக்திகனான எம்பெருமானுக்குக் கூடுத லரிதோ வென்னுங் கருத்து.

“யதோர்ணநாபிஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச, ”
“ஊர்ணநாபிர் யதா ஸ்ருஷ்ட்வா, ஸ்வயம் தத் க்ரஸதே புந:-
ததா ஸ்ருஷ்ட்வேதமகிலம், ஸ்வயம் தத் க்ரஸதே ஹரி:.

அமைய இவ்வுவமைகூறின ரென்னலாம்;
“ஒருசிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் ஸர்வசக்திக்குக் கூடாதொழியாதிறே” என்ற தத்வத்ரயத்தையுங் காண்க.
உவமையணி. பரம்பொருளான எம்பெருமானுக்கு அற்பஜந்துவான சிலந்திப்பூச்சியை உவமைகூறியது
இழிவுவமைக்குற்றத்தின்பாற்படாதோ வெனின், படாது; தன்வாயால்வெளிப்படுத்தியதைத் தானே யுட்கொள்ளு தற்குச்
சிலந்தியுவமை சிறத்தலாற் குணம் மிக்கதெனக் கொள்ளப்பட்டது.
“மிகுதலுங் குறைதலுந் தாழ்தலு முயர்தலும், பால்மாறுபடுதலும் பாகுபா டுடைய” என்ற தண்டியலங்காரசூத்திரத்தினாலும்,
அதன் உரையினாலும், உயர்ந்தபொருளை இழிந்தபொருளோடு உவமித்தல்
புன்புலவர்புணர்க்குங் கால் வெறுக்கப்படுவதோர் சிறப்பின்மை தெரிந்து ஆன்றோராற் குற்றமென்று தள்ளப்படுதலும்,
அதுவே நன்புலவர்புணர்க்குங்கால் விரும்பப்படுவதோர் சிறப்புடைமை தெரிந்து ஆன்றோராற் குணமென்றுகொள்ளப்படுதலுங் காண்க.

இவ்வாறே ‘வேம்பின்பு’ வேம்பன்றியுண்ணா தடியேன், நான்பின்னுமுன்சேவடியன்றிநயவேன்,”
“மெல்லியலாக்கைக்கிரிமி குரு வின்மிளிர்தந் தாங்கே, செல்லியசெல்கைத் துலகை யென்காணு மென்னாலுந் தன்னைச்,
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன், பல்லியின் சொல்லுஞ் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டுபண்டே,”
“நாயனையார் கேண்மை கெழீஇக்கொளல் வேண்டும்,”
“குடப்பாற் சில்லுறை போலப், படைக்கு நேரெல்லாந் தானாயினனே” என நல்லிசைப் புலவர்செய்யுள்களில் வருவன கண்டுகொள்க.
“மிகுதல் குறைதல் தாழ்தல் உயர்தல் பால்மாறுபடுதல் முதலியன குற்றமேனும் குணம்மிக்குழிக் கொள்க” என்பர்.
இவ்வுவமை, ஸ்ரீபாகவதத்திலும், ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலும் கூறப்பட்டுள்ளது.

இங்கே, சின்மை – சிறுமையின்மேலது; நுண்மையின்மேலதுமாம்.
அருந்திவிடுவது என்பதில், விடு என்பது – துணிவுணர்த்தும்.
அண்டம் – உலகவுருண்டை. கோடி – நூறுலக்ஷம். மிகப்பல வென்றற்கு, “பன்னூறுகோடி” என்றார்.அண்டம் பன்னூறுகோடி –
“அம்பெரும்புவிக்குத்தானோராயிர கோடியண்ட, மொப்பிலவென்னவுண்டால்,”
“அங்கண்மாஞாலத்தண்ட மாயிர கோடிதன்னில்” என்றது கந்தபுராணம்.
மன் – பெருமை: உரிச்சொல். பழம்படியே போத எனஇயைத்து, முன்போலவே தம்வயிற்றினுட்படும்படி விழுங்குவ ரென்றலுமாம்;
போத – புகுத என்றதன் மரூஉ. வெளியிலிருத்தலோடு திருவயிற்றினுள்ளேயிருத்தலோடு வாசியில்லை யென்னுங் கருத்தால்
“முன்போலவேயிருக்க” என்றாருமாம்.
பிரளயாபத்து நேர்கிற காலத்தில் எல்லாவற்றையும் தமதுதிருவயிற்றினுள்ளே வைத்துக்கொண்டு அவை கெடாதபடி
தாய்போலப் பாதுகாக்கும் எம்பெருமானது இயற்கைப்பேரருளும், வரம்பிலாற்றலும் இங்கு வெளியாம்.
“வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி யுய்யக்கொண்ட, கொற்றப்போராழியான்,”
“பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும்வண்ணமே யும்மைத்
தன்வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்” என்றார் திருமங்கையாழ்வாரும்.
“தன்னுள்” என்ற பாடத்திற்கு, மன் ஊழி – பெரிய கற்பாந்தகாலத்தில், தன் உள் போத – தனது வயிற்றி னுள்ளே புகும்படி,
விழுங்குவ ரென்னலாம்; அப்பொழுது, “அரங்கர்” என்றதற்கு ஏற்ப “தம்முள்” என்னாது “தன்னுள்” என்றது, பன்மையொருமை மயக்கத்தின்பாற்படும்.

சிருஷ்டி சங்காரங்கள், இதனாற் கூறப்பட்டன.
னகரத்திற்கும், நகரத்திற்கும், வரிவடிவில் வேறுபாடிருப்பினும் ஒலி வடிவில் மிக்கவேறுபாடில்லாமையால்,
அவை, விரவி, எதுகையில் அமைக் கப்பட்டன.

———-

பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –19-

(இ – ள்.) பந்தி – வரிசையான,
கமலம் – தாமரைமலர்களையுடைய,
தடம் – தடாகங்கள்,
சூழ் – சூழ்ந்த,
அரங்கர் – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான எம்பெருமான்,
படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை – சிருஷ்டி சங்காரங்களை நெஞ்சினால்நினைப்பதும் இல்லை;
(மற்று என்னெனில்), –
அ திசைமுகனோடு – அப்பிரமனுடனே,
உந்தி கமலம் விரிந்தால் – (எம்பெருமானது) திருநாபித்தாமரைமலர் (முன்னே) மலர்ந்தால்,
இ முது அண்டம் – பழமையான இந்த அண்டங்கள்,
விரியும் – (உடனே) தோன்றும்;
உகம் கடையில் – கற்பாந்தகாலத்தில்,
முந்தி குவியில் – முன்னே (அத்தாமரைமலர் பிரமனுடன்) மூடினால்,
உடனே -, குவியும் – (இந்த அண்டங்களும்) ஒடுங்கிவிடும்; (எ – று.)

“இருபது மந்தரத்தோளு மிலங்கைக்கிறைவன் சென்னி, யொருபது மந்தரத்தே யறுத்தோ னப்பனுந்தி முன்னாள்,
தரு பதுமந்தர வந்தன நான் முகன்றான் முதலா, வருபது மந்தரமொத்தபல்சீவனும் வையமுமே,”

“ஒரு நாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்ப ரதுன், திருநாபி மலர்ந்ததல்லால் திருவுளத்திலுணராயால்,”

“வெண்டிரைக்கனைகடல் நெடுவேலிமூதுலக, முண்டுபைத்தலைநாகபோகத்தினிலுறங்குந்,
தண்டுழாய்முகி லுந்தியந்தடத் தினிற் றுளைத்தாட், புண்டரீகமொன்றலர்ந்தது புவியெலாம்பூப்ப,”

“நீல மால்வரைநெற்றியிற்பொடித்தசெங்கதிரே, போலவான்சுடர்பொழிதருமு ளரியம்பொகுட்டின்,
மேலதாகவந்தெழுந்தது வெயில்விரிபசும்பொற், கோல மேவியகுலமறைமழலைவாய்க்குழவி” என்பன இங்கு நோக்கத்தக்கன.

“திசைமுகனோடு”, “உந்திக்கமலம்,” “முந்தி” என்பவற்றை “விரிந் தால்”, “குவியில்” என்னும் இரண்டனோடும்,
“உடனே”, “இம்மூதண்டம்” என்பவற்றை “விரியும்”, “குவியும்” என்னும் இரண்டனோடுங் கூட்டுக.
திசைமுகனோடு அண்டம் விரியும், திசைமுகனோடு அண்டம் குவியும் என்று கூட்டி யுரைக்கவுமாம்.
திசைமுகன் = நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களை யுடையவன். “அத்திசைமுகன்” என்று சுட்டியது, பிரசித்திபற்றி; உலகறிசுட்டு.
உந்தி – கொப்பூழ். கமலம் – தற்சமவடசொல். “உகக்கடையிற் குவியில்” என்பதற்கு ஏற்ப, கற்பத்தின் தொடக்கத்தில் விரிந்தால் என்க.
முதுமை + அண்டம் = மூதண்டம்: பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டது.
கற்பந்தோறும் அண்டம் ஒரு தன்மையதாயிருத்தல் தோன்ற, “மூதண்டம்” எனப்பட்டது.
அண்டம் பிரவாகம்போல நித்தியமாயிருத்தல் பற்றியும், “மூதண்டம்” எனத்தகும்.
பந்தி – பங்க்தி என்ற வடசொல்லின் விகாரம். கமலத்தடம் – திருக்காவேரியின் மடுக்களாகவுமாம்.
உம்மை – இழிவுசிறப்பு. “கண்டீர்” என்ற முன்னிலைப்பன்மையிறந்தகாலமுற்று, இயல்பு பற்றிய காலவழுவமைதியாய்க்
காண்பீரென்றபொருளில் வரும்; தெளிவு பற்றிய காலவழுவமைதியுமாம்.
இச்சொல் இடைச்சொல்தன்மைப்பட்டு முன்னிலையசையாயும் தேற்றப்பொருள்தருவதாயும் நிற்கும்.
உலகத்தாரை நோக்கி “இந்த உண்மையையும் வியப்பையும் எம்பெருமானது மகிமையையும் அறிவீராக” என்றவாறுமாம்.

——-

அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து அரவணை மேல்
கிடந்தனர் துங்கக் கிரிமிசை நின்றனர் கேழல் ஒன்றாய்
இடந்தனர் மீள விழுங்கினர் கான்றன ஈரடியால்
கடந்தனர் கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே –20-

(இ – ள்.) அடந்தை நடந்தை வனம் சூழ் – அடந்தை நடந்தை யென்ற சோலைகள் சூழ்ந்த,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
அரவு அணைமேல் – ஆதிசேஷனாகிய சயனத்தில்,
கிடந்தனர் – பள்ளிகொண்டருளினர்;
துங்கம் கிரிமிசை – உயர்ந்த திருவேங்கடமலையின்மேல்,
நின்றனர் – நின்றருளினர்;
கேழல் ஒன்று ஆய் – ஒப்பற்றதொரு வராகாவதாரமாகி,
இடந்தனர் – கோட்டாற் குத்தியெடுத்தருளினர்;
மீள – பின்பு,
விழுங்கினர் – (கற்பாந்தகாலத்தில்) விழுங்கியருளினர்;
கான்றனர் – (கற்பத்தொடக்கத்தில்) உமிழ்ந்து வெளிப்படுத்தியருளினர்;
ஈர் அடியால் கடந்தனர் – (ஸ்ரீராமாவதாரத்தில்) இரண்டுதிருவடிகளால் நடந்து கடந்தருளினர்;
(ஆகவே), காரணர்க்கு – (எல்லாவற்றிற்குங்) காரணராகிய எம்பெருமானுக்கு,
இந்த மண் – இந்தப்பூமி,
கை வழி மண் ஆனது – (மட்கலம்வனையுங்குயவன்) கைகளால்வழிக்கும் மண் போல ஸ்வாதீனமாயுள்ளது; (எ – று.)

எம்பெருமான் இந்நிலவுலகத்தில் திருவரங்கத்திலே பள்ளிகொண்ட திருக்கோலமாயும்,
திருமலையில் நின்ற திருக்கோலமாயும் எழுந்தருளியிருக்கின்றனர்;
மற்றும், கேழலாய்ப் பூமியை இடந்தும், இறுதியில் விழுங்கியும், பிறகு உமிழ்ந்தும், ஈரடியாற் கடந்தும் அருளினர்:
ஆதலால், ஜகத்காரணரான அப்பெருமானுக்கு, இந்தப் பூமி, குயவன்கைகளால் வழிக்கும்மண்போல,
ஸ்வாதீனமாயும், நினைத்தபடியெல்லாம் முடிவதாயும், எளியதாயும் இருக்கின்ற தென்பதாம்.

இங்கே, “தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி, வேட்கோச்சிறா அர் தேர்க்கால் வைத்த,
பசுமட் குரூஉத்திரள் போல வவன், கொண்ட குடுமித் தித்தண்பணைநாடே” என்ற புறநானூறு, ஒப்பு நோக்கத்தக்கது.

“கிடந் திருந்து நின் றளந்து கேழலாய்க் கீழ்புக்கு, இடந்திடும் தன்னுள்கர க்கும் உமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும்பாரென்னுமடந்தையை, மால் செய்கின்ற மா லார்காண்பாரே” என்ற திருவாய்மொழியையும்,
அதன் ஆறாயிரப்படிவியாக்கியானத்தில் “எம்பெருமான்தனக்கு இந்தஜகத்தானது இஷ்டஸர்வசேஷ்டாவிஷயமா யிருக்கையாலே
அவனுக்கே சேஷ மென்கிறார்” என்றதையும்,

“கோட்டுமண்கொண்டிடந் துகுடங்கையின் மண்கொண்டளந்து, மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்,”
“படைத்தபாரிடந்தளந் ததுண் டுமிழ்ந்து”,
“பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்”,
“இதுநீ, படைத் திடந் துண் டுமிழ்ந்த பார்” முதலிய மற்றையாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

எளிமைகுறித்தற்குக் கைகளினின்றுவழித்தெறியும்மண்ணை உவமைகூறும் உலகவழக்கும் இங்குக் கொள்ளத்தக்கதாம்.

அடைமொழிகொடாமற் சொல்லப்படுஞ் சொல் அவ்வகுப்பிற் சிறந்த பொருளின் மேல்நிற்றல் இயல்பாதலால்,
“கிரி” என்பதற்கு – சிறந்தமலையாகிய திருவேங்கட மென்று பொருள்கொள்ளப்பட்டது;
“கோயில்” என்றது சிறப்பினால் திருவரங்கத்தைக் குறித்தல் போல, “திருமலை” என்பது சிறப்பினால் திருவேங்கடத்தைக் குறித்தலை யுணர்க.
அன்றியும், “கோயில் திருமலை பெருமாள்கோயில்” என்ற சேர்க்கைபற்றியும்
“அரங்கத்தரவணைமேற் கிடந்தனர்” என்றதை அடுத்துநின்ற “துங்கக்கிரி” என்பதற்கு – திருவேங்கடமென்று பொருள்கொள்ளத் தகும்.
இனி, திருவேங்கடம் திருமாலிருஞ்சோலை என்ற இரண்டுமலைகளையுங் கொள்ளலுமாம்;
“இடவமலைக்கும் புயங்கமலைக்கும் ……. இறைவ” என்பர் திருவரங்கத்தந்தாதியில்.
“மீள” என்றதை “கான்றனர்” என்பதனோடு கூட்டலுமாம். ஈரடி – உபயபாதம். கான்றனர். கால் – பகுதி.
அடந்தை, நடந்தை என்பன – ஸ்ரீரங்கத்தில் தொண்டரடிப்பொடியாழ்வார் வைத்து வளர்த்துப் புஷ்பகைங்கரியஞ் செய்து
வந்த இடமாகிய பூஞ்சோலைக ளென்பர்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -81-100-

January 25, 2022

சங்கத் தமரர் குழாத்தொடு மூழ்வினை தான் விலங்கச்
சங்கத் தமரன்ப ராயிருப்ப பீர்கடறானவர் தே
சங்கத் தமரம் படவெய்த சார்ங்கத் தனுவரங்கன்
சங்கத் தமரன் சரணே சரண் என்று தாழ்ந்து இருமே –81-

கடல் – சமுத்திரமும்,
தானவர் தேசம் – அசுரர்களுடைய நாடும்,
கத்த – தவித்துக்கதறவும்,
மரம் பட – (ஏழு) மராமரங்கள் அழியவும்,
எய்த – அம்பு எய்த
சார்ங்கம் தனு – சார்ங்கமென்னும் வில்லை யுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
சங்கம் தமரன் – (பாஞ்சஜந்யமென்ற) சங்கத்தின் முழக்கத்தை யுடையவனு மாகிய திருமாலினது,
சரணே – திருவடிகளே,
சரண் – ரக்ஷகம்,
என்று – என்று கொண்டு,
தாழ்ந்திரும் – (அவற்றை) வணங்கி யிருங்கள்; (அங்ஙனமிருப்பீராயின்),
ஊழ்வினை தான் விலங்க – (உங்கள்) கருமமுழுதுந் தொலைய,
சங்கத்து அமரர் குழாத்தொடும் – (எம்பெருமான் பக்கல்) மனம் பற்றுதலை யுடைய நித்திய ஸூரிகள் வர்க்கத்தோடு ஒப்ப,
சங்கத்து அமர் – (அவர்களுடைய) கூட்டத்திற் பொருந்திய,
அன்பர் ஆய் – அடியார்களாய் (முக்தர்களாய்),
இருப்பீர் – (பரமபதத்தில்) வாழ்ந்திருப்பீர்கள்; (எ – று.)

திருவரங்கனது திருவடியே தஞ்சமென்று சரண் புகுந்திருப்பீராயின், பரம பதத்தில் நித்ய ஸூரிகள் சமூகத்தில்
அவர்களோடொப்ப இருக்கப் பெறுவீரென உலகத்தார்க்கு உபதேசித்ததாம்.
முதலடியில், சங்கம் = ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் = ஸங்கம்; நான்காமடியில், சங்கம் = சங்கம்.
அமரர் மரணமில்லாதவர்; “அயர்வறு மமரர்களதிபதி யவனவன்” என்றவிடத்துப் போல,
“அமரர்” என்பது – இங்கு, முத்தி யுலகத்து நிரதிசய வின்பமனுபவிக்கிற நித்திய ஸூரிகளைக் குறித்தது.

இராமபிரான் ஆக்கினேயாஸ்திரம் பிரயோகித்துக் கடலை வற்றுவிக்கத் தொடங்கிய போது தாபமடைந்து
அஞ்சிக் கதறியோடி வந்து சரண் புகுந்து ஒடுங்கி நின்று தன் பிழையைப் பொறுக்குமாறு பிரார்த்தித்த
வருணனுக்கு அபயமளித்து அவனை நோக்கி “எனது அம்பு வீண் போகாதாதலால், அதற்கு இலக்கு ஏன்?” என்ன,
நீர்க்கடவுள் “மரு காந்தாரமென்ற தீவில் நூறு கோடிக்கும் மேலாக வாழ்கிற அசுரர்கள் மிகக் கொடியராய் உலகத்தை வருத்துதலால்,
அவர்கள் மேல் இந்த அனலம்பை விடுத்தருள்க” என்று சொல்ல,
இராம மூர்த்தி அங்ஙனமே அதனை விடுத்து அவ்வசுரர்களனைவரையும் எரித்தொழித்தன னென்ற வரலாற்றை யுட்கொண்டு,
“கடல் தானவர் தேசங் கத்த வெய்த” என்றார்.
இராமனம்பினாற் பீடிக்கப்பட்டு அம்மருகாந்தார பூமி அலறிற்றென்று ஸ்ரீவால்மீகி பகவான் கூறியிருத்தலுங் காண்க.
கடல் தானவர் தேசம் – கடலிடையேயுள்ள அசுரர் நாடுமாம்.
சார்ங்கமென்பது – திருமால் வில்லின் பெயர்.
திருமாலின் அம்சமான இராமபிரானது வில் அவ் விஷ்ணு தநுசின் அம்சமுடைய தென்பார், இங்கு “சார்ங்கத்தனு” என்றார்.

சரண் – சரண மென்ற வட சொல்லின் விகாரம்; ஏ – பிரிநிலை.
“சார்ங்கத்தன் றண்ணரங்கன்” என்றும், “என்று சார்ந்திருமே” என்றும் பாடமுண்டு.
கடல் தானவர் தேசம் – கடல்போன்ற (பெரு வெள்ளமாகத் திரண்ட) அசுரர்களுடைய நாடுகளை,
கத்து அமர் – ஆரவாரிக்கின்ற போரிலே, அம்பு அட – தனது அம்புகள் அழிக்கும்படி,
எய்த – பிரயோகித்த என்று உரைப்பாரு முளர்.
சங்கத்து அமரர் என்பதற்கு – சங்கமென்னுந்தொகை யளவினரான அமரர்க ளென்று உரைத்தலு மொன்று;
கீழ் “தாமரை மாத்திரை வானவர்” என்றாற்போல:
சங்கம் – ஓர் பெருந் தொகை; நூறு பதுமங் கொண்டது. ஈற்றடி – முற்றுமோனை.

———-

இருந்தே னுகமுட வன்வரை நோக்கி யிருப்பது போல்
இருந்தே னுகந்துனை வைகுண்ட நோக்கி யெதிர் பொருந்கேள்
இரும்தே னுகனும் படவதைத் தாய் வெண்ணை யாமத் தொளித்து
இருந்தே னுகரரங் காகாணு நாளினி யென்றருளே–82-

எதிர் பொரும் – எதிரில் வந்து போர் செய்த,
தேனுகனும் – தேநுகாசுரனும்,
கேளிரும் – அவ்வினத்தாரான மற்றும் பல அசுரர்களும்,
பட – அழியும்படி,
வதைத்தாய் – (அவர்களைச்) சங்கரித்தவனே!
யாமத்து – இராத்திரி காலத்தில்,
ஒளித்திருந்தே – (ஆயர் மனையில்) மறைந்திருந்து கொண்டே,
வெண்ணெய் நுகர் – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை (க் களவுசெய்து) உண்ட,
அரங்கா – ! –
இருந்தேன் உக – பெருமையுள்ள (சுவை மிக்க) தேன் (தனது நாவிலே) சிந்த வேண்டு மென்று கருதி
முடவன் – முடவனொருவன்,
வரை நோக்கி இருப்பது போல் – (அத் தேன் கூட்டை யுடைய) மலையை (ஆசையோடு அண்ணாந்து) பார்த்திருந்தாற்போல,
உனை உகந்து வைகுந்தம் நோக்கி இருந்தேன் – உன்னை யடைய விரும்பிப் பரம பதம் சேர்தலை நெடு நாளாக எதிர் நோக்கி யிருக்கிறேன்;
காணும் நாள் – (அப் பரம பதத்தை நான்) அடைந்து உன்னைத் தரிசிக்குங்காலம்,
இனி என்று – இனி எப்போதோ!
அருள் – அருளிச் செய்வாய்; (எ – று.)

யாதொரு முயற்சியுஞ் செய்ய மாட்டாத முடவன் தனக்குக் கிடைத்தற்கு அரிய தென்று ஆராய்ந்துணராது
கொம்புத் தேனுக்கு ஆசை யுற்றிருந்தாற் போல, அதிகார பூர்த்தி யில்லாத யான் பெறுதற்கு அரிதென்று கருதாமல்
பரம பதத்தில் உன்னை யடைய நெடுநாளாக அவா வுற்றிருக்கிறேன்;
அடியேனுக்கு விரைவில் அருள் புரிய வேண்டு மென்பதாம்.
காணும் நாள் இனி என்று அருள் – அந்நாள் இந்நாளென்று சொன்னாலும் அதனை
எதிர்பார்த்துக் கொண்டு ஆறி யிருப்பேனென்பது, குறிப்பு.

கேளிர் என்றது, மற்றும் கண்ணனைக் கொல்லும்படி கம்சனா லேவப் பட்ட பிரலம்பன், கேசி, பூதனை,
அரிஷ்டன், கபித்தன், வத்ஸன் முதலிய அசுர வர்க்கத்தாரைக் குறிக்கும்;
இனி, தனது உறவினரென்று கொண்டு, சிசுபாலன் முதல் நாராயண கோபாலர் ஈறாகத் தனது நெருங்கிய
உறவினர் பலரைத் தான் நேராகவும் அருச்சுனனைக் கொண்டுங் கொன்ற செய்தியைக் குறித்ததாகவுங் கொள்ளலாம்.

கேளிர் – (யோக க்ஷேமங்களைக்) கேட்குந் தன்மையை யுடையவர்; எனவே, உறவினரும் நண்பரு மாவர்:
இதனை, கேண்மை யென்ற பண்பினடியாப் பிறந்த தென்னலாம்: இர் – பலர்பால் விகுதி.
யாமம் – ஏழரை நாழி கைகொண்ட பொழுது, மூன்று யாமங்களை யுடையதான இரவுக்கு ஆகு பெயர்;
“த்ரியாமா” என்பது, இரவினொருபெயர். “இல்லிலொளித்து” என்றும், “ஆளுநாள்” என்றும் பாட முண்டு.
“வெண்ணெய்யாமத்து ஒளித்திருந்தே நுகர்” என்றதனால், இவ் வுடம்பாகிய உறியிலே கட்டுப் பட்டுள்ள
வெண்ணெய் போலச் சாரமான ஆத்மாவை விரும்பி எவரும் அறியாதபடி கைக் கொண்டு அநுபவிப்பவன்
எம்பெருமானென்பது தோன்று மென்பர்.
“ஒளித்திருந்து” என்றவிடத்து, “இருந்து” என்பது – துணைவினை: “எழுந்திருந்து” என்ற விடத்துப் போல.
“நுகர்” என்றதன் நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப் பட்டது, யமகத்தின்பொருட்டு.
வெண்ணெய் + யாமம் = வெண்ணெ யாமம்; தனிக் குறிலைச் சாராத யகரம், யகரம் வரக் கெட்டது.

————–

அரும்பாகவ தரிக்கும் பெயராய் புள்ளரசி னுக்கோர்
அரும்பாகவ தரத்துப் பனை யாயரங்கா வென வுண்
அரும் பாகவதர் பத தீர்த்தம் கொள்ளாதடிகள் கொப்புள்
அரும்பாகவதர் தொலைப்பார் கல்லார் கங்கை யாடுதற்கே –83-

கல்லார் – அறிவில்லாதவர்கள், –
“அரும் பாகு அவதரிக்கும் பெயராய் – (துதிப்பவர் நாவிலே) மேன்மையான கருப்பஞ் சாற்றுப் பாகு போன்ற
இனிமை யூறும்படியான திரு நாமங்களை யுடையவனே!
புள் அரசினுக்கு ஓர் அரும் பாக – பக்ஷி ராஜனான கருடனுக்கு ஓர் அருமையான பாகனே!
(கருடனை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனே!),
அதரம் துப்பு அனையாய் – வாயிதழ் பவழம் போலச் சிவந்தவனே!
அரங்கா – திருவரங்கனே!
என உணரும் – என்று (எம்பெருமானை) அறிந்து துதிக்கின்ற,
பாகவதர் – ஸ்ரீவைஷ்ணவர்களுடைய,
பத தீர்த்தம் – ஸ்ரீபாததீர்த்தத்தை,
கொள்ளாது – ஏற்று உட் கொள்ளாமல், –
கங்கை ஆடுதற்கு – கங்கா ஸ்நாநஞ் செய்தற் பொருட்டு,
அடிகள் கொப்புள் அரும்பு ஆக அதர் தொலைப்பார் – (நடந்து யாத்திரைசெய்வதனால்) உள்ளங் கால்களிற்
கொப்புளங்கள் அரும்பு போலுண்டாக அரு நெறிகளைக் கடந்து கழிப்பார்கள்; (எ – று.)

திருமாலின் மெய்யடியார்களுடைய ஸ்ரீபாத தீர்த்தங் கொள்ளாமல் கங்கா ஸ்நாநஞ்செய்தலினால் என்னபயன்? என்பதாம்.
பகவத் பாத தீர்த்தமாகிய கங்கையினும் பாகவத பாத தீர்த்தம் மேம்பட்ட தென்பது, குறிப்பு.
பாகவதர் – பகவானுடைய பக்தர்; வடமொழித்தத்திதாந்தநாமம்.
“ராமநாமமே கற்கண்டு” என்றாற்போல, “அரும்பாகு அவதரிக்கும்பெயராய்” என்றார்.
அதரம் – வடசொல். முதலடியில், அருமை – மேன்மை; (ஒப்பு) இல்லாமையுமாம்.

————

ஆடு முன் னீர்முதற் றீர்த்தத்தி னாலரு மாதவத்தால்
ஆடுமுன் னீர் மறை வேள்வியி னாலண்ட ராயுடன் மாறு
ஆடுமுன் னீரது மாயையி னால் என்று அரங்கனைக் கொண்ட
ஆடுமுன் னீர் செய்த பாவமும் போய் முத்தராம் வண்ணமே -84-

ஆடும் முந்நீர் முதல் தீர்த்தத்தினால் – நீராடுகிற கடல் முதலிய புண்ணிய தீர்த்தங்களினாலும்
(புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்),
அரு மா தவத்தால் – (செய்தற்கு) அரிய பெருந் தவத்தைச் செய்தலினாலும்,
ஆடு முன் ஈர் மறை வேள்வியினால் – ஆடு முதலியவற்றை அறுக்கிற வேத விதிப்படி செய்யும் யாகங்களினாலும்,
அண்டர் ஆய் உடல் மாறாடும் – (மனித சன்மம் நீங்கித்) தேவ சன்மமாக உடம்பு மாறும்:
அது, அங்ஙனம் வேற்றுமை யடைவது தானும்,
மாயையினால் – (திருமாலினது) மாயையினாலேயே,
என்று முன்னீர் – என்று எண்ணுங்கள்:
முன் நீர் செய்த பாவமும் போய் முத்தர் ஆம் வண்ணம் – முற் பிறப்புக்களில் நீங்கள் செய்த தீ வினைகளும் தீர்ந்து
முத்தி பெற்றவராகும்படி, அரங்கனை கொண்டாடும் – ஸ்ரீரங்கநாதனைத் துதியுங்கள்; (எ – று.)

தீர்த்த யாத்திரை, தவம், யாகம் என்பன செய்தலாற் சுவர்க்கம் பெறலாம்;
அங்ஙனம் பெறுதலில், மனித சன்மம் ஒழிந்து தேவ சன்மம் நேரும்: அதுவும் கரும வசப்பட்டதே யாதலால்,
அங்ஙனம் பிறவி மாறுதலிற் பயனென்னே!
எம்பெருமானைத் துதித்தால் தான் பிறப்பு ஒழிய மாயையைக் கடந்து முத்தி பெறலாம் என்பது, கருத்து.
தேவர்கள் நல் வினைப் பயனால் இன்ப நுகர்வரேனும் உயிரைப் பந்தப் படுத்துவதில் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலப்
புண்ணிய சன்மமும் பாவ சன்மமும் சமமே யாதலாலும், அத்தேவர்களும் நல்வினை முடிந்தவுடனே அவ்வுடம்பு ஒழிய மீளவும்
இவ் வுலகத்திற் கரும வசத்திற்கு ஏற்ப வேறு பிறவி கொள்வராதலாலும், சுவர்க்கப் பேறு வீடு பேறு போலச் சிறந்ததாகாதென்க.
தேவ சன்மம் எழுவகைப் பிறப்புக்களிலும் நால் வகைக் கதிகளிலும் ஒன்றாதல் காண்க.

முந்நீர் என்பது, முன்னீர் என னகரம் திரித்துக் கொள்ளப்பட்டது யமகத்தின் பொருட்டு;
முன்னீர் என்றே கொண்டு, பழமையான நீரெனக் கடலைக் குறிக்கலாமாயினும்,
நான்காமடியில் முன் என்பது – முற்காலத்திலென்ற பொருளில் வருதலால், அங்ஙனங்கொள்ளுதல் சிறவாது.
ஆடு – ஆட்டை, முன் – எதிரிலே, ஈர் – அறுக்கிற என்றும் பொருள்படும்; முன் – இடமுன்.
ஈர் வேள்வி – வினைத் தொகை; ஈர்தல் – அரிதல். அண்டம் – வானம்: அதிலுள்ளவர், அண்டர்.
முன்னீர் – ஏவற்பன்மைமுற்று; முன்னிலை யெதிர்மறைப் பன்மை முற்றாகக் கொண்டு, நினைக்க மாட்டீ ரென்றலு மொன்று;
உன்னீர் என்று எடுப்பினும், இப் பொருள்கள் படும்.

———-

வண்ணங் கலிவஞ்சி வெண்பா வகவல் வகை தொடுத்தோர்
வண்ணங் கலிகெட வேண்டுமென் றேமக்கண் மாட்டுரையேன்
வண்ணங் கலிகடல் போல் வானரங்கன் வகுளச் செல்வன்
வண்ணங் கலி யன் புகழ் தாள் எனக்கென்று மா நிதியே –85-

ஓர் வண்ணம் கலி கெட வேண்டும் என்றே – (ஏதேனும்) ஒரு விதமாக வறுமை யொழிய வேண்டுமென்றே கருதி
(எவ்வாற்றாலாயினும் பொருளீட்டுதலையே முக்கியமாகக் கொண்டு),
மக்கள் மாட்டு – மனிதர்கள் பக்கல் (மனிதர்கள் விஷயமாக),
வண்ணம் கலி வஞ்சி வெண்பா அகவல் வகை தொடுத்து உரையேன் – அழகிய கலிப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவும்
ஆசிரியப்பாவும் அவற்றின் இனமுமான செய்யுள்களைப் புனைந்து கவி பாடேன்;
வண்ணம் கலி கடல் போல்வான் – திருமேனி நிறம் ஒலிக்கின்ற கடல் போன்றவனாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
வகுளம் செல்வன் வள் நம் கலியன் புகழ் தாள் – மகிழ மலர் மாலையை யுடைய ஞானச் செல்வரான நம்மாழ்வாரும்
ஞான வளத்தையுடைய நமது திருமங்கையாழ்வாரும் துதி செய்த திருவடிகளே,
எனக்கு என்றும் மா நிதி – அடியேனுக்கு எப்பொழுதும் பெரிய செல்வமாம்; (எ – று.)

வண்ணம் என்பதற்கு – வண்ணமென்னும் உறுப்புக்கு இடமான என்றும் பொருள் கொள்ளலாம்:
செய்யுளுறுப்புக்களிலொன்றாகிய வண்ணமாவது – ஒரு பாவின் கண் நிகழும் ஓசை விகற்பம்;
அது, வல்லெழுத்துமிக்கு வருதலாகிய வல்லிசை வண்ணமும்,
மெல்லெழுத்து மிக்குவருதலாகிய மெல்லிசை வண்ணமும்,
இடையெழுத்துமிக்குவருதலாகிய இயைபு வண்ணமும்,
நெட்டெழுத்துப் பயின்று வருதலாகிய நெடுஞ்சீர் வண்ணமும்,
குற்றெழுத்துப் பயின்று வருதலாகிய குறுஞ்சீர் வண்ணமும்,
நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் சமமாக விரவி வருதலாகிய சித்திர வண்ணமும்,
ஓசையான் ஒழுகி நடப்பதாகிய ஒழுகு வண்ணமும் முதலாகப் பலவகைப்படும்.

கலிப்பா முதலிய நால் வகைப் பாக்களில் ஒவ்வொன்றன் இனமும், தாழிசை துறை விருத்தம் என்று மூன்று வகைப்படும்.
மக்கள் மாட்டு, மாட்டு – ஏழனுருபு: நான்கனுருபின் பொருளில் வந்தது.
வண்ணம் – வர்ண மென்ற வடசொல்லின் விகாரம்.
கலி கடல் – வினைத்தொகை. கலி – கடலுக்கு இயற்கையடை மொழி. அரங்கன்தாளென இயையும்.

வகுளம், நிதி – வடசொற்கள்.
தம் பக்கல் திருவுள்ளமுவந்து திருக் குறுகூர்ப் பொலிந்து நின்ற பிரான் பிரசாதித்த மகிழ மலர் மாலையைத் தரித்ததனால்,
நம்மாழ்வார்க்கு, வகுளாபரண ரென்று ஒரு திருநாமம் வழங்கும்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் திருவாய்மொழிப் பிரபந்தம் முதலிய நான்கு தமிழ் வேதங்களையும் அருளிச் செய்தவரான நம்மாழ்வாரையும்,
பெரிய திருமொழி முதலிய ஆறு அங்கங்களையும் அருளிச் செய்தவரான திருமங்கை யாழ்வாரையும் எடுத்துக் கூறியது,
மற்றைப் பதின்மர்க்கும் உபலக்ஷணம்.

எம் பெருமான் திருவடிகள், வேண்டும் பொருள்களை யெல்லாந் தந்து தாமும் குறையாமையால், “மாநிதி” எனப்பட்டன.
அத் திருவடியாகிய பெரு நிதியைப் பெற்றுள்ளேனாதலால், ஒருவாறு வறுமை கெட வேண்டுமென்று உரையேனென்றார்.
ஓர் வண்ணம் தொடுத்து என இயைத்தலுமொன்று.

————-

மானா கவரு நிருதன்புன் மாயையின் மங்கை யென்னு
மானா கவரு மணியை முன்நீங்கினான் மாயன் என்பார்
மானா கவரும் பலர் சோலை சூழ மதிலரங்கா
மானா கவரு மமுதே யதுவு நின் மாயமன்றே –86-

மால் – பெரிய,
நாகம் – புன்னை மரத்தினது,
அரும்பு – அரும்புகள்,
அலர் – மலரப் பெற்ற,
சோலை – சோலைகள்,
சூழும் – சூழ்ந்த,
மதில் அரங்கா – மதில்களை யுடைய திருவரங்கத்தி லுள்ளவனே!
மால் நா கவரும் – ஆசையுடன் (அடியார்களால்) நாவிற் கொண்டு நுகரப்படுகிற,
அமுதே – அமிருதம் போன்றுள்ளவனே! –
மாயன் – ஆச்சரியகரமான குணஞ் செயல்களை யுடையவனாகிய இராமபிரன்,
மான் ஆக வரும் நிருதன் புல் மாயையின் – மான் வடிவமாக வந்த மாரீசனென்ற அரக்கனது அற்பமான மாயையினால்,
மங்கை என்னும் – தனது மனைவியாகிய,
மால் நாகம் அரு மணி யை – (விஷத்தினால்) மயக்கத்தைச் செய்யுந் தன்மையதான சர்ப்பத்தினது பெறுதற்கு அரிய மாணிக்கத்தை,
முன் – முன்பு,
நீங்கினன் – பிரிந்தான்,
என்பார் – என்று சொல்வார்கள்:
அதுவும் – அங்ஙனம் மயங்கியதும்,
நின் மாயம் அன்றே – நீகாட்டிய மாயை யன்றோ; (எ – று.) – அன்றே – தேற்றம்.

நினது சங்கல்பத்தினாற் கொண்ட மநுஷ்ய பாவனையினாலேயே அங்ஙனம் மாயைக்கு உட்பட்டவன் போன்று காட்டினா யென்றபடி.

நாகமணி – நாகரத்நம்; கிடைத்தற்கு அருமையும் ஒளியும் பற்றி, அது பிராட்டிக்கு உவமை கூறப்பட்டது.
நாவினால் துதித்தற்கு இனிய னென்பது, “நா கவரும் அமுது” என்பதன் கருத்து

——————

மாயா தவர் தலை வாவரங் காவட மா மதுரை
மாயா தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிர
மாயா தவர்செய்வர் முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணமொப்ப
மாயா தாவரத் தனைக் குடர் கோத்ததுன் வாணகமே –87-

மா யாதவர் தலைவா – பெருமையை யுடைய யது குலத்தார்க்குத் தலைவனே!
அரங்கா – !
வட மா மதுரை மாயா – வடதிசையிலுள்ள பெரிய மதுரையிற் கண்ணனாக அவதரித்த மாயவனே! –
தவர் – முனிவர்களும்,
அண்டர் – தேவர்களும்,
வந்து அடைந்தால் – (கொடிய பகைவர்க்கு அஞ்சி) வந்து சரணமடைந்தால்,
மழு ஆளி – சிவனும்,
பிரமா – பிரமனும் ஆகிய,
அவர் – அவ்விரு மூர்த்திகளும்,
யாது செய்வர் – என்ன செய்ய மாட்டுவர்! (ஒன்றுஞ்செய்யத் திறமில்லாரென்றபடி);
உன் வாள் நகமே – உனது வாள் போற் கூரிய நகமே,
முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணம் ஒப்ப – (நினது மார்பில் விளங்கிய வெண்ணிறமான) முப்புரி நூல் சிவந்த நூலை
வடமாக அணிந்தவிதத்தை யொக்கும்படி,
மாயாத வரத்தனை குடல் கோத்தது – (பலவாற்றாலும்) அழியாத வரத்தைப் பெற்றவனாகிய இரணியனது
குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தது; (எ – று.) –
ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு, சிறப்பு.

“முந்நூல் செந்நூல் கொண்ட வண்ண மொப்ப” என்றது –

கூருகிர் நுதியில் பைந்தேன் பொழி மலர் அலங்கன் மார்பம் போழ்ந்து
செங்குருதி யூறி வழி பசுங்குடர் மென் கண்ணி யாளரி வளைந்ததன்றே –
என்றபடி நரசிங்க மூர்த்தி இரணியனது மார்பைத் தனது கைந்நகங்களினாற் பிளந்து குடலைப் பறித்து மாலையாகத்
தரித்துக் கொண்ட போது அக்குடலினின்று வழிந்த இரத்தப் பெருக்கின் சம்பந்தத்தால் வெண்புரிநூல் செந்நூல்போலாயிற் றென்றும்,
இரத்தமூறுதலாற் செந்நிறமான அக்குடலானது செந்நூலினாலானதோ
ருபவீதத்தை நிவீதமாக (கழுத்தில் மாலை போலத் தொங்கும்படி) அணிந்தது போலுமென்றுங் கருத்துப்படும்.

இரணியன், தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும்
பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்குமரணமில்லாதபடி வரம்பெற்றவனாதலால்,
“மாயாதவரத்தன்” எனப் பட்டான்.
பிரம ருத்திரர்கள் தம்மைக் குறித்துத் தவம் புரிந்து துதித்துப் பிரார்த்திக்கின்ற அசுரர் முதலிய கொடியவர்கட்கு அவர்கள்
வேண்டியபடி யெல்லாம் பெரு வரங்களைக் கொடுத்திடுதலும், அவற்றால் அவர்கள் மிகச் செருக்கி உலகங்களைப் பலவாறு
வருத்திய காலத்தில் தேவர்களும் இருடிகளும் முதலிற் சிவபிரானைப் போயடுக்க
அப்பெருமான் தன்னா லொன்றுமாகாமற் பிரமனை யடுக்க
அத்தேவனும் அங்ஙனமே விஷ்ணுவைச் சரணமடைய
அப்பரமன் அங்ஙனமே அவர்கட்கு அபயமளித்து அவ்வசுரர்களை உரிய சூழ்ச்சி பல செய்து அழித்தலுமாகிய
வழக்கத்துக்கு இரணியன் செய்தி ஓருதாரணமாதலை இச்செய்யுளில் விளக்கினார்.

சந்திரகுலத்து யது வென்னும் அரசனது மரபில் திருமால் கண்ணனாகத் திருவவதரித்துச் சிறப்புற்றதனால் “மா யாதவர்தலைவா” என்றும்,
அக்கண்ணன் மதுரையில் திருவவதரித்து முதலிற்செய்த மாயங்கள் அநந்தமாதலால் “வடமாமதுரைமாயா” என்றும் விளித்தார்.

மழுஆளி – மழுவென்னும் ஆயுதத்தை யாள்பவன்; இ – ஆண்பாற்பெயர்விகுதி.
வடமும், வடத்திற் புரியும், புரியிலிழையும் மூன்றாகவுள்ளதனால், உபவீதத்துக்கு, முந்நூ லென்று பெயர்.
முந்நூல், செந்நூல் – பண்புத்தொகைகள்.
மாயாத வரத்தனைக் குடல் கோத்தது உண் வாணகமே –
மேருகிரி யுடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே யறிந்தது யல்லால் கோவே நீ அறியாயால் -என்பரே

———-

நகமுண் டகந்தரித் தாற்கருண் மாயற்கு ஞால முந்நீர்
நகமுண் டகமகிழ்ந் தாற்கடியே மென்மி னற்கதிவா
நகமுண் டகம்பர னென்னா தரங்கனை நாடிலயன்
நகமுண் டகமலர் தான்குவி யாது நடுக்குளத்தே –88-

நக – (கண்டவரனைவரும்) பரிகாசமாகச் சிரிக்கும்படி,
முண்ட கம் தரித்தாற்கு – முண்டமாகிய தலையை (பிரம கபாலத்தை)க் கையிற் கொண்டவனான சிவபிரானுக்கு,
அருள் – கருணைசெய்த,
மாயற்கு – ஆச்சரிய சக்தியை யுடையவனும்,
ஞாலம் – பூமியையும்,
முந்நீர் – கடல்களையும்,
நகம் – மலைகளையும்,
உண்டு – (பிரளய காலத்திலே) திருவயிற்றினுட் கொண்டு,
அகம் மகிழ்ந்தாற்கு – மனமகிழ்ந்தவனுமான திருமாலுக்கு,
அடியேம் – தொண்டர்களாயினோம் (யாம்),
என்மின் – என்று எண்ணுங்கள்; (அங்ஙனம் எண்ணினமாத்திரத்தால்),
நல் கதி வானகம் உண்டு – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் (உங்கட்குச்) சித்திக்கும்: (மற்றும்),
அகம் பரன் என்னாது அரங்கனை நாடில் – நானே தலைவனென்று அகங்காரங் கொள்ளாமல் ரங்கநாதனை விரும்பிச் சரணமடைந்தால், –
அயன் – பிரமனது,
நகம் முண்டக மலர் – நகங்களையுடைய தாமரை மலர் போன்ற கையானது,
உம் நடு குளத்தே குவியாது – உங்கள் நடுத் தலையிலே (மீண்டும் பிறக்குமாறு விதித்தெழுதுதற்குக்) குவியாது; (எ – று.) – தான் – அசை.

அகம் பரன் என்னாது அடியேம் என்மின், –அயனது நகமுண்டகமலர் உம்நடுக்குளத்துக் குவியாது, நற்கதிவானகம் உண்டு
என்று இயைத்தும் கருத்துக் கொள்ளலாம்.
யானென்னுஞ் செருக்கை யறுத்து, ஆபத்காலத் திலே சிவனுக்கும் அருள்செய்தவனும்
நித்தியனு மாகிய மாயவனுக்குத் தொண்டு பூணுங்கள்;
அங்ஙனம் அடிமை பூண்டவளவிலே கருமமனைத்துந் தொலைதலால், பிரமன் கையைக் குவித்து உங்கள் தலையில்
மறுபடி பிறக்க விதித்துஎழுதான்; ஆகவே, உங்கட்கு முத்தி கைகூடும் எனக் காண்க.

நால்வகை நகையுள் இங்குக்குறித்த நகை, இகழ்ச்சி பற்றியது.
முண்டகம் – உடலினின்று கிள்ளியெடுக்கப்பட்ட தலை. முண்டம் – உடற்குறையென்ற படி.
இனி, நகமுண்டகம் தரித்தான் என்பதற்கு –
தாருக வன முனிவர் ஏவிய நகு வெண்டலையைச் சிரத்திலணிந்த சிவபிரானென்றும் பொருள்கொள்ள லாம்;
முண்டகம் – தலைமாத்திரமாகிய உடற்குறை,
நக – (தன்னை யழித்தற் பொருட்டுச்) சிரித்துக் கொண்டு வர,
தரித்தாற்கு – (அதனைக் கைப்பற்றிச் சிரத்தின் மீது) அணிந்து அடக்கினவனுக்கு என்று பதவுரை காண்க:

“சீற்றமா முனிவர் வேள்வித்தீயில் வெண்டலைதானொன்று,
தோற்றியே யுலகம்யாவுந் தொலைய நக்கெழுந்ததன்றே,”

“நக்கெழுசிரத்தை யன்னோர் நாதன் மேல் விடுத்தலோடும்,
அக்கணமணுக வற்றா லகிலமதிறவா வண்ணம்,
முக்கணன ருள்செய்தந்தமுண்ட முண்டகக்கைபற்றிச்,
செக்கரஞ்சடைமேற்கொண்டுன் செயவினைப் புரிதி யென்றான்” என்பன, இங்கு நோக்கத்தக்கன.

இனி, நக – விளங்க, முண்டகம் – சிரமாலையை, தரித்தாற்கு – தரித்த உருத்திர மூர்த்திக்கு என்று உரைப்பாரு முளர்.

நகம் – மலை யென்ற பொருளில், புடைபெயராத தென்று காரணப் பொருள்படும் வடசொல்.
வானகம் என்றதன் னகரத்தை நகரமாகத் திரித்துக்கொண்டது, யமகத்தின்பொருட்டு.
அஹம், பரன், நகம் – வடசொற்கள்.
அயனகமுண்டகமலர் என்று சந்திசேர்க்காமல் அயன் நகமுண்டக மலர் என்று சந்தி பிரித்தபடியே கொண்டதும், யமகத்தின்பொருட்டே.
“சிலவிகாரமா முயர்திணை” என்றபடி அயன் என்ற நிலைமொழியின் ஈற்றுனகரத்தை யொழித்து
“அயநகமுண்டகமலர்” என்ற பாடங் கொள்ளினும் இழுக்காது.
நகம்முண்டகமலர் – நகத்தையுடைய தாமரைமலர்: எனவே, கையென்றதாயிற்று; இது, யானையை “கைம்மலை” என்றல் போலும்.
குளம் – நெற்றி: இங்குத் தலையென்ற பொருளில் வந்தது; இலக்கணை:
சிறப்புப்பெயர் பொதுப்பொருளின் மேலது, கருமகதியைத் தலைவிதியென்றும், தலையெழுத்தென்றுங் கூறுதல், மரபு.
சிறுபான்மை “லலாடலிபி” என்றவழக்கும் இருத்தல் பற்றி, குளம் – நெற்றி யென்றே கொள்ளினுமாம்.
பிரமன் உங்களை மீண்டும் பிறப்பெடுக்கச் செய்யான் என்ற பொருளை வேறு வகையாகக் கூறிவிளக்கியது, பிறிதினவிற்சியணி.
எழுதும் பொழுது எழுது கருவி பிடித்தற்குக் கைகுவிதலாகிய இயல்பு, இங்குக் கருதற்பாலது.

———-

குளப்படி நெய்யடி சிற்கொத்த தோ கொள்ளப் பற்றிய தோ
குளப்படி யிற்றிங்கள் சேரரங்கா கோல மாய வன்றுன்
குளப்படி காட்டும் பிறை மறுப் போலொரு கோட்டிருந்து
குளப்படி யின்னகத் துட்பரல் போன்ற குவலயமே –89-

குளம் படியில் திங்கள் சேர் அரங்கா – குளத்தின் (சந்திர புஷ்கரிணியின்) படியிலே சந்திரன்
(தன்குறை தீர்த்தற் பொருட்டுத் தவஞ் செய்யுமாறு), சேர்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே! –
கோலம் ஆய அன்று – (நீ) மகா வராக ரூபமாகிய அந் நாளில்,
உன் குளம் படி காட்டும் பிறை மறு போல் – உனது நெற்றியினுருவத்தைக் காட்டுகின்ற பிறைச் சந்திரனிடத்து விளங்குங் களங்கம் போல,
ஒரு கோடு இருந்து – (உனது) ஒரு மருப்பிலே தங்கி,
குளம்பு அடியின் அகத்துள் பரல் போன்ற – காற் குளம்பின் கீழ்ப் பருக்கைக் கல்லை நிகர்த்து அடங்கிய,
குவலயம் – பூமண்டலமானது, (பிரளய காலத்தில் நீ உண்ட பொழுது),
குளம் படி நெய் அடிசிற்கு ஒத்ததோ – வெல்லமும் படி யளவு கொண்ட நெய்யுங் கலந்த உணவுக்கு ஒப்பாயிருந்ததோ!
கொள்ள பற்றியதோ – அமுது செய்தற்குப் போதுமானதாயிருந்ததோ! (எ – று.)

உனது பெரு வடிவுக்கு முன் மிகச் சிறியதாகிய மண்ணுலகம், நீ உண்ணுங் காலத்தில் உனக்கு ஒரு கவளத்துக்கேனும் போதுமோ!
அன்றி, மண்ணை யுண்டது அதன் இனிமைபற்றியோ! என வியந்து கூறியவாறு.

அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ உண்டு அருளும் காலத்தில் ஒரு தூற்றுக்கு ஆற்றாவால் –
என்பதுங் காண்க.

ஒவ்வாது பற்றா தென்பதே துணிவு;
நீ உண்டது நினது திருவிளையாட்டே: உயிர்களைக் காப்பது கருதியே அங்ஙனஞ்செய்தாய் என்பது, குறிப்பு.

நாண் மன்னு வெண் திங்கள் கொல்-நயந்தார்க்கு நச்சிலை கொல் –
சேண் மன்னு நாள் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே –

இரு நாள் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்
பெரு நாணில் பின் அவன் நெற்றி பெற்றிதாக பெறு மன்னோ –
நிறக்கும் செழும் சுடர்க் கோடு இப்பாரு நிசா முகத்து
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக்கும் சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகமதாய்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –திருவரங்கத்து மாலை-என்றபடி

எம்பெருமானது திரு நெற்றி பிறைச் சந்திரன் போலுதலால், “உன் குளப்படி காட்டும்” என்ற அடைமொழி பிறைக்குக் கொடுக்கப்பட்டது.

பிறை மறுப்போற் குவலயம் உன் ஒருகோட்டிருந்து – வளைந்த வெண்ணிறமான கோரதந்தத்துக்குப் பிறையும்,
அவ்வளை மருப்பிற் குத்தியெடுத்த பூமிக்குப் பிறையிலுள்ள களங்கமும் உவமையாம்;

“நிறக்குஞ் செழுஞ் சுடர்க்கோடு மிப்பாரு நிசாமுகத்துச்,
சிறக்கும் பிறையுங் களங்கமும் போலு மெனிற்சிறுகண்,
மறக்குஞ்சரஞ்செற்றமாயோ னரங்கன் வராகமதாய்ப்,
பிறக்கும் பிறப்பின் பெருமை யெவ்வா றினிப்பேசுவதே” என்பர் திருவரங்கத்து மாலையிலும்:

பன்றியாய் படியெடுத்த பாழியான் என்பரது வென்றியார் உனது எயிற்றின்
மென்றுகள் போன்று இருந்ததால் —
குளப்படி யின்னகத்துட் பரல் போன்ற குவலயம்

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு
ஏழின் உடன் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும்
ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் கமண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க
வளர் சேராதி முன் ஏனமாகி யாரானாய மூர்த்தியது நம்மை யாளும் அரசே

எனப் பெரியார் பணித்தது பார்க்கத் தக்கது.
குளப்படி நெய்யடிசில் – சர்க்கரைப்பொங்கல்.

பின்னிரண்டடி – உவமையணி.. கோலம் – பன்றி. குளம்பு + அடி = குளப்படி; மென்றொடர் வன்றொடராயிற்று.
அடியின்னகத்து, னகரமெய் – விரித்தல். நெற்றிக்குப் பிறை யுவமை – வளைந்த வடிவிலும், ஒளியிலும்.

———–

குவலையஞ் சூழ்கடல் காயா மரகதம் கொண்ட னெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவ ரென்றார் கொற்ற வாணற்குவா
குவலைய நேமிதொட் டாயரங் காகொடும் பல் பிறப்பா
குவலையங்க கற்றுனைக் காணிலென் னாங்கொல் குறிப்பவர்க்கே –90-

கொற்றம் வாணற்கு – வெற்றியை யுடைய பாணாசுரனுக்கு,
வாகு அலைய – தோள்கள் (துணிப்புண்டு) துடிக்கும்படி,
நேமி தொட்டாய் – சக்கராயுதத்தைப் பிரயோகித்தவனே!
அரங்கா – ! –
அன்பர் – (நினது) அடியார்கள்,
குவலையம் சூழ் கடல் – பூமண்டலத்தை வளைந்திருக்கிற சமுத்திரத்தையும்,
காயா – காயாம்பூவையும்,
மரகதம் – மரகதரத்தினத்தையும்,
கொண்டல் – நீர் கொண்ட மேகத்தையும்,
நெய்தல் – கரு நெய்தல் மலரையும்,
குவலையம் – கருங்குவளைமலரையும்,
கண்டு – பார்த்து,
நைவர் – (அவை நினது வடிவத்தை நினைப்பூட்டுதலால்) மனமுருகுவார்கள், என்றால் – , –
கொடும் பல் பிறப்பு ஆகு வலை அற்று அங்கு உனை காணில் – கொடிய பலவகைப்பட்ட பிறப்புக்களாகிய வலைகளின்
தொடர்பு ஒழிந்து அப்பரமபதத்திலே நினது திருமேனியைப் பிரதியக்ஷமாகத் தரிசித்தால்,
அவர்க்கு குறிப்பு என் ஆம் கொல் – அவர்கள் கருத்து மற்றும் யாதாகுமோ! (எ – று.)

பலவகைக் கலக்கத்துக்கு இடமான இவ்வுலகத்துப் பிறவியி லிருக்கை யிலேயே நினது உருவத்துக்குப் போலியாமவற்றைக்
கண்டவளவிலே மன முருகும் மெய்யடியார் பிறப்புநீங்கிப் பரமபதத்தில் உன்னையே நேரிற்கண்டால் எவ்வளவு ஆனந்த மடையார் என்றபடி;
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடல்முதலியன எம்பெருமானது திருமேனிநிறத்திற்கு உவமையாகுதலை,

கடலோ மழையோ முழு நீலக் கல்லோ காயா நறும் போதோ
படர் பூம் குவளை நாண் மலரோ நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மட்வாருயிர் உண்பதியாதோ வென்று தளர்வாள்-

பூவையும் காயாவும் நீளமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –

கருநெய்தலும் கருங்குவளையும் – சாதிபேதம்.
நெய்தல் குவலையம் என்பதற்கு – நெய்தல் நிலத்துத் தோன்றும் நீலோற்பல மென்று உரைப்பாரு முளர்.
தொட்டாய் என்ற சொல்லின் ஆற்றலினால், நீ படைக்கலத்தைத் தொட்டமாத்திரமே துஷ்ட நிக்கிரகத்துக்குப் போதும் என்ற குறிப்பு விளங்கும்;

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டான் –

வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர் சிந்தியோட நேமி தொட்ட திருவரங்க ராசரே –

குவலயம், மரகதம், பாணன், பாஹு, நேமி – வடசொற்கள்.
வாகு வலைய – வாகு என்பது வடமொழித் திரிபாதலால், அதன் குற்றியலுகரம் உயிர்வரக் கெடவில்லை.
முதலிரண்டடிகளில் குவலையம் என்றது, இடைப்போலி. பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துவதால், வலை யெனப்பட்டது.
காயா என்ற செடியின் பெயரும், நெய்தல் குவலயம் என்ற நீர்ப்பூங் கொடிகளின் பெயரும் – அதனதன்மலர்க்கு முதலாகுபெயராம்.
மரகதம் – பச்சையிரத்தினம். அங்கு – சேய்மைச்சுட்டு.

——–

குறியானைச் செங்கன் நெடியானை வானவர் கோனைச் சங்கக்
குறியானை வித்த திருவரங்கே சனைக் கூவி நின்று
குறியானை காத்தவனைப் பாடினேன் கொடி கூப்பிடினும்
குறியானை யப்பவர் போற் கொடியேன் சொலும் கொள்வன் என்றே –91-

குறியானை – குறுகிய வடிவமுடைய வாமனாவதாரஞ் செய்தவனும்,
செம் கண் நெடியானை – சிவந்த திருக் கண்களை யுடைய திரிவிக்கிரமனாய் நீண்டு வளர்ந்தவனும்,
வானவர் கோவை சங்கம் குறியால் நைவித்த திருவரங்கேசனை – தேவராஜனான இந்திரனை (த் தனது பாஞ்சஜந்யமென் னுஞ்)
சங்கத்தின் முழக்கத்தால் (பாரிஜாதாபஹரண காலத்திலே) மூர்ச்சித்து விழச் செய்த ஸ்ரீரங்கநாதனும்,
கூவி நின்று குறி யானை காத்தவனை – (“ஆதிமூலமே!” என்று தன்னைக்) கூவியழைத்துத் தியானித்த
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனு மாகிய திருமாலைக்குறித்து, –
கொடி கூப்பிடினும் குறி ஆ நயப்பவர் போல் கொடியேன் சொலும் கொள்வன் என்று – காக்கை (இயல்பாகக்) கத்தினாலும்
(அதனை ஒரு) நல்ல நிமித்தமாக விரும்பி உலகத்தார் கொள்வது போலக் கொடியவனான யான் வாய்க்கு வந்தபடி
சொல்லுஞ் சொல்லையும் நன்மையாக (அப்பெருமான்) ஏற்றுக்கொள்வ னென்று நினைத்து,
பாடினேன் – வாய்விட்டுக் கவிபாடினேன்; (எ – று.)

அற்ப ஜந்துவாகிய காக்கை தன்னடைவிலே செய்யுஞ் சத்தத்தையும் விருந்து வருதல் முதலியவற்றைக் குறிக்கும்
நற் குறியாக நிமித்தமுணர்ந்த பெரியோர் கொள்ளுதல் போல, எளியவனான யான் வாயில் வந்தபடி சொல்லுஞ் சொல்லையும்
எம்பெருமான் குற்றமாகக் கொள்ளாது குணமாகக் கொள்வ னென்றெண்ணியே யான்,
அப்பரமனது பெருமையையும் எனது சிறுமையையுங் கருதாது அவனைக் குறித்து வாய்விட்டுக் கவிபாடலானே னென்றன ரென்க.

நாக்கு நின்னை யல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -பெரியாழ்வார்

என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும்,
அதன் வியாக்கியானத்தில்
“அறிவுடையார் குற்றமாகாதவளவன்றிக்கே குணமாகவுங் கொள்வர்கள்; அது ஓரிடத்தே யிருந்து தனக்கு வேண்டினது
பிதற்றிப் போகவும் அத்தை அறிவுடையார் “நமக்கு நன்மைசொல்லுகிறது” என்று கொள்ளுவர்களிறே” என்றதையும் காண்க.

இது, திருமாலவன் கவி யாது கற்றேன் பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே —
என்றதனோடு ஒப்பு நோக்கத்தக்கது.

“குறியானைச் செங்கணெடியானை” என்றவிடத்து, முரண்தொடை காண்க.
செங்கண் – செந்தாமரைக் கண்ணென்ற குறிப்பு.
குறி – ஒலி. நைவித்தல் – வருந்தச்செய்தல். குறி யானை – வினைத்தொகை; குறித்தல் – கருதுதல்.
ஆ – விகாரம். “நயப்பவர்” என்பது, யமகத்துக்கு ஏற்பப் போலி விகாரங்களேற்றி “னையப்பவர்” என்று கொள்ளப்பட்டது.
உம்மை இரண்டும் – இழிவுசிறப்பு.

———-

வனத்திற் சிலம்பி விடு நூலுட் பட்டு மசக மெய்த்த
வனத்திற் சிலம்பின போற் பிணி வாய்ப்பட்டென் வாய் புலம்பின்
வனத்திற் சிலம்பின் குரலன்னம் வாழு மரங்கனிப்பு
வனத்திற் சிலம்பினின்றான் கேட்கு மோவும்பர் வாழ்த்தை விட்டே –92–

மசகம் – கொசுகானது,
வனத்தில் சிலம்பி விடு நூலுள் பட்டு – காட்டிலே சிலந்திப்பூச்சி வாய்விட்டு இழைத்த நூலினிடையே சிக்கிக் கொண்டு,
மெய் தவனத்தின் சிலம்பின போல் – உடல்தவிப்பினால் அரற்றியது போல,
பிணி வாய் பட்டு என் வாய் புலம்பின் – (யான்) நோயின்கண் அகப்பட்டு எனது வாய்விட்டு அரற்றினால், (அந்த அரற்றொலியை), –
சிலம்பின் குரல் அன்னம் வனத்தில் வாழும் அரங்கன் இ புவனத்தில் சிலம்பில் நின்றான் – சிலம்பென்னுங் காலணியினொலி போன்ற
குரலையுடைய அன்னப் பறவைகள் நீரிலே வாழ்தற்கிடமான திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருப்பவனும்
இந்த உலகத்திலே (திருவேங்கடமென்னும்) மலையில் நின்றருள் பவனுமான எம்பெருமான்,
உம்பர் வாழ்த்தை விட்டு கேட்குமோ – (பரம பதத்தில் வாழும்) நித்ய முக்தர்களுடைய மங்கலவாழ்த் தொலியை விட்டுக் கேட்டருள்வனோ? (எ – று.)

ரங்கநாதன் நித்தியசூரிகளுடைய மங்கல வாழ்த்தை விட்டு எனது புலம்பலொலியைக் கேட்பனோ வென்று இரங்கின ரென்க.

மசகம் – வடசொல், தவனம் – தபநமென்ற வடசொல்லின் திரிபு.
சிலம்பின் – சிலம்பினது என்பதன் தொகுத்தல்.
வனம் என்பது – காடு நீர் என்ற இருபொருளிலும், வநம் என்ற வடசொல் திரிந்ததாம்.
அன்னத்தின் குரலுக்குச் சிலம்பினொலி உவமையாதலை, “மின்னார்சிலம்பிற் சிலம்புங் குர வன்னம்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
புவநம் – வடசொல்.
மலையின் பெயரான சிலம்பு என்பது – இங்குச் சிறப்பாய், மலைகளிற் சிறந்த தான திருவேங்கடத்தை யுணர்த்திற்று;
அதற்கு “திருமலை” என ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
“கோயில் திருமலை” என்று சேர்த்துச் சொல்லுதல் தோன்ற, “அரங்கன் சிலம்பினின்றான்” என்றார்.
நான்கடியிலும் “வனத்து” என்ற பாடமும் உண்டு.

————-

விடத்தேரை மன்னும் வனப் பாழும் கிணற்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத்தேரை வாய் வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடு போய்
விடத்தேரையில் வெங்கட் கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கை எல்லாம்
விடத்தேரை யூரரங்கன்று இருந்தாளில் விழு நெஞ்சமே –93-

நெஞ்சமே – மனமே! –
விடத்தேரை மன்னும் – விடத்தேரை யென்னும்மரம் பொருந்திய,
வனம் – காட்டிலேயுள்ள,
பாழ் கிணற்றுள் – பாழடைந்த கிணற்றிலே,
வெம் பாம்பு பற்றும் – கொடிய பாம்பினாற் கௌவிக் கொள்ளப்பட்ட,
விடம் தேரை – நஞ்சுஏறிய தவளையினது,
வாய் – வாயிலேயகப்பட்டுள்ள,
வண்டு – வண்டானது,
தேன் வேட்டல் போல் – தேனை விரும்புதல்போல,
விசித்து கொடு போய்விட தேர் ஐயில் வெங் கண் கூற்றை எண்ணாது எண்ணும் – (உயிரை உடம்பினின்று பாசத்தாற்)
கட்டியிழுத்துக் கொண்டுபோய்விட எண்ணுகிற வேற்படையையும் கொடுந்தன்மையையு முடைய யமனை
(ப் பின்புறத்திலேயே யிருக்கிறா னென்று) எண்ணாமல் (நீ மேன் மேல்) எண்ணுகின்ற,
வேட்கை எல்லாம் – ஆசைகள்யாவும்,
விட – ஒழிய,
தேரை ஊர் அரங்கன் திரு தாளில் விழு – (அருச்சுனனுக்குத்) தேரையோட்டிய ரங்கநாதனது திருவடிகளிற் சேர்வாய்; (எ – று.)

துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையிலிருந்து கொண்டே தனக்கு உடனே வரக் கடவதாகிய துன்பத்தைச் சிறிதும்
நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு,
கொடிய விருக் ஷவர்க்கத்தை யுடைய வெய்ய கானத்தில் நீரற்றபாழ்ங்கிணற்றிலே பாம்பின்வாய்ப்பட்டு நஞ்சுலைதக்கேறிய
தேரையின் வாயி லகப்பட்டதொரு வண்டு தேனைவிரும் புதலை உவமை கூறினார்.

“வண்டு நஞ்சுபொருந்தின தவளையின் வாயிலுள்ள தேனை விரும்புவதுபோலத் தகுதியில்லாத பலவற்றை
அவாவுகிற ஆசைகளை யெல்லாம் விடு, அந்தத்தேரையூர்கிற அரங்கனது திருத்தாளில் விழு” என்று உரைப்பாருளர்;
‘அத்தேர்’ எனச் சுட்டுதல், கதையை உட்கொண்டு மனம் திருத்தாளில் விழுதலாவது – திருவடியையே இடைவிடாது தியானித்தல்.
அடியவர்க்கு எளியவ னென்பார், “தேரையூ ரரங்கன்” என்றார்.
இனி, “தேரையூ ரரங்கன்” என்பதற்கு – திருவிழாக்களிலே திருத்தேருத்ஸவங் கண்டருளுகிற நம்பெருமா ளென்றும் பொருள்கொள்ளலாம்;
கீழ் 83 – ஆஞ் செய்யுளில் “கரி யாடற்பரி தேர் நடத்து எந்தை” என்றது காண்க.
கொடியகருவியும் கல்நெஞ்சுமுடையா னென்பார், “அயில் வெங்கட் கூற்று” என்றார்.
அயில் – இங்கு, முத்தலைவேல்: சூலம். வெங்கண் – அஞ்சாமை, அஞ்சுவித்தல், கண்ணோட்டமின்மை; அச்சந்தருங் கண்களுமாம்.

பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு: அல்வழியிற் சிறுபான்மை இனமெலி மிக்கது; பாழாகியகிணறு. என்க.
வேட்டல், வேட்கை – தொழிற்பெயர்கள்; தல், கை – விகுதிகள். கொடு – தொகுத்தல். போய்விட, விடு – துணிவுணர்த்தும்.
தேர்கூற்று – வினைத்தொகை. ஐயில் = அயில்: முதற்போலி.

————–

விழுங்கூன் றசைச் சுவர் நீர் மலங் கோழை வெம் பித்தொடுங்க
விழுங்கூ னரம்புறி யென்பேணி தோற்சட்டை வீழ்ந்து நொந்த
விழுங்கூந்த லாரழப் பாடையில் போய் சுடும் வெய்ய செந்தீ
விழுங்கூன நோய்க் குடில் வேண்டேன் அரங்க விமானத்தானே –94-

அரங்கவிமானத்தனே – ஸ்ரீரங்கவிமானத்திற் பள்ளிகொண் டிருப்பவனே! –
கூன் விழும் – கூன்விழு மியல்புள்ள,
தசை சுவர் – தசை யினாலாகிய சுவரும், –
நீர் – ஜலமும்,
மலம் – மலமும்,
கோழை – கோழையும்,
வெம் பித்தொடும் – கொடிய பித்தமும் ஆகிய இவற்றுடனே,
கவிழும் – கவிழ்கிற,
கூன் – பாத்திரமும், –
நரம்பு உறி – நரம்புகளினாலமைக்கப்பட்டதொரு சிக்கமும், –
என்பு ஏணி – எலும்புகளினாலாகியதோ ரேணியும், –
தோல் சட்டை – தோலினாலாகியதொரு சட்டையும், –
அவிழும் கூந்தலார் – விரிந்த கூந்தலையுடையவர்களான மாதர்கள்,
நொந்து – வருந்தி,
வீழ்ந்து – கீழ்விழுந்து,
அழ – புலம்ப,
பாடையில் போய் – பாடைமேற் கொண்டு போய்,
சுடும் வெய்ய செம் தீ விழுங்கு – சுடுகிற கொடிய சிவந்த தீயினால் விழுங்கப்படுகிற (எரிக்கப்படுகிற),
ஊனம் நோய் குடில் – துன் பந்தரும்நோய்கள் வசிக்கிற குடிசையு மாகிய உடம்பை,
வேண்டேன் – விரும்பேன்; (எ – று.)

“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்” என்பதை அடியொற்றியது இச்செய்யுள்.

உடம்பின் பலவகையிழிவுகளையும் எடுத்து உரைத்து, இங்ஙனந் தூயதல்லாத உடம்பை வேண்டே னென்றார்.
இப் பிறப்பையொழித்துத் திவ்வியதேஜோமயமான வடிவத்துடன் பரமபதத்து நிரதிசயவின்பநுகரும் பேற்றை அளித்தருளவேண்டு மென்பது, குறிப்பு.
இவ்வுடம்பை வேண்டே னென்றதனால், உடம்பின்சம்பந்தமான இவ்வுலக வின்பங்களை வேண்டாமை தானே பெறப்படும்.
உடம்பாகிய ஒருபொருளை “தசைச்சுவர்” என்பது முதலாகப் பலவாறுபுனைந்துரைத்ததனால், புலபடப் புனைவணி.
இச்செய்யுள், அருவருப்புத்தோன்றக் கூறினமையால், பீபத்ஸ மென்னும் இழிப்புச்சுவைக்கு உதாரணமாம்.

கூன்விழுதல் – முதுகு வளைதல். தசை = சதை: எழுத்துநிலைமாறுதல், இலக்கணப்போலி.
கூன் என்பது மட்கலங்களில் ஒருவகையாதலை,
“கூனையுங் குடமுங் குண்டுசட்டியும், பானையும் வனையு – மங்குசப்பையல் யான்” என்ற விடத்துங் காண்க.
ஜலம் மலம் முதலியன வெளிப்படுதலால், அவற்றோடு கவிழுங் கூ னெனப்பட்டது. சட்டை – அங்கி.

“ஏற்புச் சட்டகம், முடைக்குரம்பை, புழுப்பிண்டம், பைம்மறியாநோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து,
ஐயும் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திரபுரீடங்களும் என்றிவற்றது இயைபு” என
உடம்பின் தூய தன்மையை விளக்கும் இறையனாரகப் பொருளுரை வாக்கியம் இங்கு நோக்கத்தக்கது.

———–

மானத் துவண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையாளராயினு மால் வளர் வி
மானத் துவண்டல மா மரங்கம் வழி யாவரினு
மானத் துவண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே –95-

மால் நத்து – பெரிய நத்தையானது,
வண்டல் உழ – சேற்றிலே ஊர்ந்து செல்ல,
ஓர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான – (அவ்வூர்தலாலாகிய வரையானது தற்செயலாய்)
ஓர் அக்ஷரத்தினது வடிவமாக அமைந்த சிறப்புப் போல, –
துவண்ட வினையாளர் ஆயினும் – வருந்துதற்குக் காரணமான ஊழ்வினையை யுடையவர்களே யானாலும், (அவர்கள்),
மால் வளர் விமானத்து வள் தலம் ஆம் அரங்கம் வழி ஆ வரினும் – திருமால் கண்வளர்ந் தருளுகிற (பிரணவாகார)
விமானத்தையுடைய சிறந்ததலமாகிய ஸ்ரீரங்கத்தின் மார்க்கமாய்த் தன்னடைவிலே வந்தாலும்,
அங்கே – அவ்வரவினாலே,
மானத்து வண்டு அமர் தார் அண்டர் ஆம் பதம் வாய்க்கும் – பெருமையையும் வண்டுகள் மொய்க்கும்
மாலையையுமுடைய முக்தர்களாகும் பதவி சித்திக்கும்; (எ – று.)

ஒருவனுக்குப் பக்தி முதலியன இல்லாதிருக்கையில் அபுத்தி பூர்வமாய் ஸ்ரீரங்க மார்க்கமாக யாத்திரை நேர்ந்தாலும்
அதுவே வியாஜமாக எம்பெரு மானருளால் அவனுக்குத் தீவினைகள் நீங்கி நிரதிசய வின்ப நுகரும்படியான முக்தி பதம் சித்திக்கு மென்பதாம்;

இதற்கு, வண்டலிலே நத்து ஊர்ந்து செல்லுதலாலாகிய கோடு ஒரோ சமயத்து ஓரெழுத்து வடிவமாகத் தன்னடைவிலே
அமைகிற குணாக்ஷர நியாயத்தை ஒப்புமை கூறினார்: உவமையணி. மான – உவமவுருபு.

துவண்ட வினை – பெயரெச்சம், காரணப்பொருளது; “நோய்தீர்ந்த மருந்து” என்றவிடத்துப் போல, வினையாளர் – கர்மிகள்,
அண்டம் – பரமபதம்; அதில் வாழ்பவர், அண்டர். “தேவர்கள் மாலையில் வண்டு மொய்க்காது” என்ற விலக்கு
அருளிற் சிறந்தவரான முக்தர்க்கு இல்லை யென்பது தோன்ற, “வண்டமர்தாரண்டர்” என்றார்.

————-

அங்காக்கைக் கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்கு வாய்
அங்காக்கைக் கே பசித்தான் நிற்க வே முத்தி யாக்கித் துயர்
அங்காக்கைக் கே சிலர் வேறே தொழுவரருந்திரவிய்
அங்காக்கைக் கே தனத் தாடரு மோதிரு வன்றியிலே –96-

அம் – அழகிய,
கா – சோலையை (இந்திரனது கற்பகச் சோலையிலுள்ள பாரிஜாத தருவை),
மங்கைக்கு – தன் மனைவியான சத்திய பாமைக்கு,
கைக்கே ஈந்தான் – கையிலே கொடுத்தவனும் (கைவசமாக்கித் தந்தவனும்),
அவனிக்கு – உலகத்தை யுண்பதற்கு,
வாய் அங்காக்கைக்கே – (தனது) வாயைத் திறக்குமவ்வளவாகவே,
பசித்தான் – பசியுற்றவனும் (வாய்திறந்து உலகத்தையுட்கொள்ள அவாக்கொண்டவனும்) ஆகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
நிற்கவே – இருக்கையிலே, (அவனை விட்டு),
முத்தி ஆக்கி துயரம் காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் – (தமக்கு) மோக்ஷத்தைக் கொடுத்துத் துன்பங்கள் வாராதபடி
(தம்மைக்) காப்பதற்காகவே வேறு தெய்வங்களைச் சிலர் வணங்குவார்கள்;
அருந் திரவியம் – அருமையான செல்வப்பொருளை,
திரு அன்றியிலே – திருமகள் கொடுப்பளேயல்லாமல்,
காக்கை கேதனத்தாள் தருமோ – காக்கை வடிவ மெழுதிய துவசத்தை யுடையவளான மூதேவி கொடுக்க மாட்டுவளோ? (எ – று.)

பொருட்செல்வத்தை அதற்கு அதிதேவதையான இலக்குமி கொடுக்க வல்லளே யன்றி அதற்கு மாறான தன்மையுள்ள
மூதேவி கொடுக்கவல்லளல்ல ளென்ற உபமான வாக்கியந் தானே,
பிறவித் துன்பத்தையொழித்து முத்திச் செல்வத்தை அதற்கு உரியதலைவனான திருமால் கொடுத்தருள்வனே யன்றி
அதற்கு உரியரல்லாத பிறதேவர்கள் கொடுக்கத்தரமுடையரல்ல ரென்ற உபமேயக் கருத்தை விளக்குதலால், பிறிதினவிற்சியணி.

முத்தியளித்துத் துயர்தீர்க்கும் எம்பெருமானி ருக்க அவனைத்தொழாது சிலர் தேவதாந்தரங்களைத் தொழுதல்,
செல்வந்தருந் திருமக ளிருக்க அவளைவழிபடாது மூதேவியைவழிபடுதல்போலப் பெரும்பேதைமையா மென்பது, குறிப்பு.

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர் காள் கெருட வாகனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -என்ற திருமாலைப் பாசுரம் இங்கு உணரத்தக்கது.

கைக்கே, ஏ – அசைநிலை. அங்காக்கைக்கே, ஏ – பிரிநிலை. காக்கைக்கே, ஏ – தேற்றம். தருமோ, ஓ – எதிர்மறை.
அன்றியிலே, ஏ – ஈற்றசை; இல் – சாரியை. அங்காக்கை, காக்கை – தொழிற்பெயர்கள்:
அங்கா, கா – பகுதி, கை – விகுதி. முக்தி, த்ரவ்யம், கேதநம் – வடசொற்கள். காக்கை காக மென்ற வடசொல்லின் சிதைவு:
கா என்று கத்துவது எனக் காரணப் பொருள்படும். துயரம், அம் – சாரியை. “அன்றியுமே” என்பதும் பாடம்.

———–

அன்றே யடைய யுனக்கே யடிமை என்றாய்ந்து உணர்ந்தார்
அன்றே யடையப் படுவாருனை யரங்கா வனத்திய்
அன்றே யடையை யயில்வோரு மீதறி யாரறிஞர்
அன்றே யடையைம் புலனாலு நன்கில்லை யாங்கவர்க்கே –97-

அரங்கா – ! – “அடைய – (உயிர்கள்) யாவும்,
அன்றே – அந்நாளிலேயே (தொன்றுதொட்டே யென்றபடி),
உனக்கே அடிமை – உனக்கே அடிமைப்பட்டவை,” என்று -,
ஆய்ந்து உணர்ந்தார் அன்றே – ஆராய்ந்து அறிந்தவர்களன்றோ,
உனை அடைய படுவார் – உன்னைச் சேர்தற்கு உரியர்;
வனத்து இயன்றே அடையை அயில்வோரும் – காட்டில் வசித்துக் கொண்டே இலையைப் புசிப்பவர்களான முனிவர்களும்,
ஈது அறியார் – இந்த உண்மையை யுணரா ராயின்,
அறிஞர் அன்றே – அறிவுடையார்க ளல்லர்;
அவர்க்கு – அவர்கட்கு,
ஆங்கு அடை ஐம்புலனாலும் நன்கு இல்லை – அவ்வனத்திலிருந்து அடைக்கப்பட்ட (அடக்கியாளப்பட்ட)
பஞ்சேந்திரியங்களாலும் நற்பயனில்லை; (எ – று.)

எல்லாச் சேதநாசேதநங்களும் உன்னுடைமையாமென்னும் உண்மை யறிவுள்ளவரே பரமபதத்தில் உன்னைச் சேர்வர்;
அஃதில்லாதவர் வனவாசஞ் செய்து இலை முதலியன புசித்துப் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்தாலும் பயனில்லை யென்பதாம்.

முதலடியில், அன்று – காலமுணர்த்துஞ் சுட்டிடைச்சொல். அடைய என்றது – எஞ்சாமைப்பொருளுணர்த்தும்.
இதற்கு, தாமும் தமதுடைமையு மாகிய எல்லாம் என்று பொருள்கொள்ளுதலு மொன்று.
இரண்டாமடியில், அன்றே – தேற்றம். அடையப்படுவார் = அடையத்தகுவார்.
மூன்றாமடியில், இயன்று ஏய் அடை என்று பிரித்து, ஏய் என்பதற்கு – (அவ்விடத்திற்) பொருந்திய என்று உரைப்பாரு முளர்; வினைத்தொகை.
நான்காமடியில், “அன்று” என்ற எதிர்மறைக்குறிப்பு முற்றுப் பலர்பாலுக்கு வந்தது; ஏ – தேற்றம். அடை புலன் – வினைத்தொகை. ஆங்கு அசையுமாம்.

————

ஆங்கார மாமின்னைத் தோய்மார் பரங்கனளை வெண்ணெயுண்டு
ஆங்கார மாநில முண்டாற்குத் தொண்டனிவ் வண்டத் தப்பால்
ஆங்கார மான்பகு திப்புறம் போயமு தாற்றிர் படிந்து
ஆங்கார மானடி காண்பே னவன்ற னருள் சிந்தித்தே –98-

கார் – மேகத்தில்,
ஆம் – உண்டாகின்ற,
அம் – அழகிய,
மின் – மின்னல் போன்றவளான,
மாவை – இலக்குமியை,
தோய் – தழுவுகிற,
மார்பு – மார்பையுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
அளையிணை உண்டு ஆங்கு – வெண்ணெயை யுண்டாற்போலவே,
ஆர – நிரம்ப,
மா நிலம் உண்டாற்கு – பெரிய உலகத்தை உட்கொண்டவனுமான திருமாலுக்கு,
தொண்டன் – அடியன் (யான்); (ஆதலால்),
அவன்தன் அருள் சிந்தித்து – அப்பெருமானுடைய கருணையைத் தியானித்து, –
இ அண்டத்து அப்பால் – இந்த அண்ட கடாஹத்துக்கு அப்புறத்திலே,
ஆங்காரம் மான் பகுதி புறம் போய் – அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஆவரணங்களைக் கடந்து மேற்சென்று,
அமுது ஆற்றில் படிந்து – அம்ருதமயமான விரஜாநதியில் நீராடி,
ஆங்கு ஆர் அ(ம்)மான் அடி காண்பேன் – அவ்விடத்தில் (பரமபதத்தில்) எழுந்தருளி யிருக்கின்ற
ஸ்வாமியினுடைய திருவடியைத் தரிசிப்பேன்; (எ – று.)

திருவரங்கனுக்குத் தொண்டனான நான் அவனருளாற் பரமபதத்திற் சென்று அவனைத் தரிசிப்பே னென்பதாம்.
எம்பெருமானது நீலமேனிக்குக் காளமேகமும் அதிலுறையுந் திருமகளுக்குக் காளமேகத்தில் விளங்கும்
மின்னலும் உவமை யென்பது தோன்ற, “ஆங்காரமாமின்னைத்தோய்மார் பரங்கன்” என்றார்.
அளையினையுண்டாங்கு ஆர மாநிலமுண்டான் – எம் பெருமான் விரும்பி யுண்ணும் உணவாதலில்
வெண்ணெயோடு உலகோடு வாசியில்லை யென்பது குறிப்பு. ஆங்கு – உவமவுருபு.
பதினான்கு லோகங்க ளும் அடங்கிய அண்ட கடாஹம் முறையே ஒன்றுக்கு ஒன்று பதிற்று மடங்கான
ஜலம் அக்நி வாயு ஆகாசம் அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஏழு ஆவரணங்களாலுஞ் சூழப்பட்டுள்ள தென்பதையும்,
இப்படிப்பட்ட அநந்த கோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால்
ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கும் பரமபதம் உள்ள தென்பதையும் தத்துவ நூல்களால் விளங்க உணர்க.

முதலடியில், “ஆம் கார் அம் மா மின் ஐ” என்ற பதப்பிரிவில்,
“ஐ” என்னும் இரண்டனுருபை “மா” என்றதனோடு கூட்டிப் பொருள் காண்க.
அஹங்காரம், மஹாந், ப்ரக்ருதி என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
அம்மான் என்பது, “அமான்” எனத் தொக்கது.
“அவன்ற னருள் சிந்தித்தே” – அவனருள் சிந்தித்தலல்லது, வீடுபேற்றுக்கு வேறுஉபாய மில்லை யென்றபடி.

————

சிந்தாகுல முய்யக் குன்றெடுத்தாய் தென்னரங்க சுற்றும்
சிந்தா குலகம் படைத்து அளித்தாய் நிலம் சென்று இரந்த
சிந்தா குலவு செல்வந்தந்தை தாய் குரு தெய்வமு நீ
சிந்தா குலமடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்து அருளே –99-

சிந்து – (இந்திரனேவிய மேகங்கள் விடாப் பெரு மழை) பொழிதலால் வருந்திச் சிதறிய,
ஆ குலம் – பசுக்கூட்டம்,
உய்ய – உயிர் பிழைக்கும்படி,
குன்று எடுத்தாய் – கோவர்த்தன மலையை யெடுத்துக் குடையாகப் பிடித்தவனே!
தென் அரங்க – அழகிய திருவரங்கத்தை யுடையவனே!
சுற்றும் சிந்து ஆகு – சுற்றிலும் கடல் அமையப் பெற்ற,
உலகம் – உலகத்தை,
படைத்து – சிருஷ்டித்து,
அளித்தாய் – ரக்ஷித்தவனே!
சென்று – (மகா பலிசக்கரவர்த்தி யினிடத்துப்) போய்,
நிலம் இரந்த – மூன்றடி நிலத்தை யாசித்த,
சிந்தா – வாமன மூர்த்தியே! –
குலவு – சிறப்புற்று விளங்குகின்ற,
செல்வம் – செல்வமும்,
தந்தை – தந்தையும்,
தாய் – தாயும்,
குரு – ஆசாரியனும்,
தெய்வமும் – கடவுளும், (ஆகிய எல்லாம்),
நீ – (எனக்கு) நீயே;
சிந்தா ஆகுலம் அடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்தருள் – (பிறப்புத் துன்பத்தைக் குறித்து) மனக் கலக்க
மடைந்துள்ளவனான அடியேனுடைய பிறப்பை யொழித்துக் கருணை செய்வாய்; (எ – று.)

சிந்துஆ, ஆகுஉலகம் – வினைத்தொகைகள். யமகத்தின்பொருட்டு, “ஆக்குலம்” என வலிமிகவில்லை.
இரண்டாமடியில், சிந்து – ஹிந்து என்ற வட சொல்லின் விகாரம்.
மூன்றாமடியில், சிந்தா – சிந்தன் என்பதன் விளி.
சிந்தன் = குறளன்: இரண்டடியுயரமுள்ளவனை “குறளன்” என்றும்,
மூன்றடி யுயரமுள்ளவனை “சிந்தன்” என்றும் குறிக்கிற சிறிது வேறுபாட்டை இங்குக் கருதாமல், பரியாய நாமமாகக் கொண்டு கூறினார்;
அன்றியும், வாமன மூர்த்தியின் வளருந்தன்மையைக் கருதி “சிந்தன்” என்றா ரெனக் கொள்ளினுமாம்.
சிந்தாகுலம் – தீர்க்க சந்தி பெற்ற வடமொழித் தொடர். தெய்வமும் என்ற இறந்தது தழுவிய எச்சவும்மை,
பெயர்ச் செவ்வெண்ணினீற்றில் வந்தது.

———

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-

“அத்தர் அங்க – தலைவர்களான பிரமருத்திரர்களைத் (தனது) திருமேனியிற் கொண்டருள்பவனே!
அபயம் – அடைக்கலம்”,
என்று – என்று ஓலமிடுவது போன்று,
ஆர்க்கும் – ஆரவாரிக்கின்ற,
திரை – அலைகளை யுடைய,
பொன்னி – காவேரியாறு,
சூழ் – சூழ்ந்த,
தீரத்து – வரம்பை யுடைய,
அரங்கன் – திருவரங்கத்தை யுடையவனான எம்பெருமானது,
சிலம்பு ஆர்ந்த செய்ய திரு அடி – சிலம்பென்னும் ஆபரணம் பொருந்திய சிவந்த சீர்பாதம்,
தரங்கம் பவம் நோய் தீர துடைத்து – அலை போல மாறி மாறி வந்து வருத்துகின்ற (எனது) பிறப்புத் துன்பத்தை யொழியுமாறு நீக்கி,
என்னை – அடியேனை,
தேவரொடும் – நித்திய ஸூரிகளோடும்,
தீரத்தர் (ஒடும்) – ஞானிகளாய் வீடு பெற்றவர்களான முக்தர்களோடும்,
அங்கு – அவ்விடத்தில் (பரம பதத்தில்),
அ பணி – (எம்பெருமானுக்குச் செய்யும்) அந்தக் கைங்கரியங்களை,
காப்ப – காத்திருந்து தவறாமற் செய்யுமாறு,
வைத்த -, செயல் என்பது – செய்கையை,
ஓர்தீர் – அறியுங்கள்; (எ – று.)

திருவரங்கனுடைய திருவடிகள், என்னைப் பிறப்பொழித்து பரமபதத்தில் நிச்சிய முக்தர்களுடனிருந்து பலவகையான
பகவத் கைங்கரியங்களைப் புரியச் செய்தன; ஆதலால், உலகத்தீர்! நீவிரும் அவன் திருவடிகளை யடைந்து உய்யுங்க ளென்பதாம்.
திருவடியடைந்தேன் பரமபதத்துக்கு உரியனானே னென்பது, குறிப்பு.
எம்பெருமான் தன்னடியார்க்குத் தவறாது பரமபதந் தந்தருள்வ னென்னும் நம்பிக்கை கொள்ளுதல் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மாதலால்,
பரமபதம் பெறுவே னென்னாது தெளிவு பற்றிப் பெற்றேனென் பார், “பணிகாப்ப வைத்த செயல்” என்றார்:
நம்மாழ்வார் “அவாவற்று வீடுபெற்ற” என்றாற் போல.
“அயர்வறு மமரர்கள்” என்ற இடத்தில் “அமரர்கள்” என்றது போல, இங்கு “தேவர்” என்றது – நித்திய ஸூரிகளைக் குறித்தது.
தீரர் என்ற சொல்லுக்கு ஞானிகள் என்ற பொருள், வேதத்திலும் வந்துள்ளது; இங்கு, அப்பெயர், முக்தர்களைக் குறித்தது.
நித்யராவார் – பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெருமான் போலவே என்றும் ஒரு படிப்படப் பரமபதத்தில்
வாழ்கிற அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.

முக்தராவார் – இவ்வுலகங்களிற் கரும வசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பை யொழித்து முத்தி பெற்றவர்.
“ஏறாளுமிறையோனுந் திசை முகனுந் திருமகளுங் கூறாளுந் தனியுடம்பன்” என்ற அருளிச் செயலின் பொரு ளமைய, “அத்தரங்க” என்றார்.
அபயமென்றது – அஞ்சாதேயென்று என்னைப் பாதுகாத்தற்கு உரியவன் நீ யென்றும்,
அஞ்சாதே யென்று உன்னாற் பாதுகாக்கப்படுதற்கு உரியன் யானென்றும் கருத்துப்படும்.
“அத்தரங்க அபயமென்று ஆர்க்கும் திரைப்பொன்னி” என்றது – தற்குறிப்பேற்றவணி.

பவம், தீரம் – வடசொற்கள். தேவரொடும் என்ற வும்மை, தீரத்தார் என்பதனோடும் எடுத்துக் கூட்டப்பட்டது.
பணி – பணிவிடை, செயலென்பது என்றவிடத்து, ‘என்பது’ – பகுதிப் பொருள் விகுதி, ஒர்தீர் – ஏவற்பன்மை முற்று; ஈர – விகுதி.

—————

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —

நீள் நிலம் மேல் – நீண்ட நிலவுலகத்திலே, –
குணம் ஆளர் ஆம் பட்டர்க்கு – உத்தம குணங்களை யுடையவரான பட்டரென்னும் ஆசாரி யர்க்கு,
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான் – பதினான்கு தலை முறைகளிலும் (தொன்று தொட்டுப்) பரம்பரையாக அடியவனான,
மணவாளதாசன் – அழகிய மணவாளதாசன், – யமகம் அந்தாதி வனைந்தனன் – யமகவந்தாதிப்பாமாலையைத் தொடுத்து, –
பரிதி – சக்கரமும், வளை – சங்கமும், நிணம் வாள் (பகைவர்களின்) கொழுப்புத் தோய்ந்த வாளும்,
அம் சார்ங்கம் – அழகிய சார்ங்க மென்ற வில்லும், கதை – கதையும் ஆகிய பஞ்சாயுதங்களையும்
தோளின் – (தமது) திருக்கைகளிற் கொள்பவரான,
பணம் வாள் அரவின் அரங்கஈசர் – படத்தை யுடைய ஒள்ளிய திருவனந்தாழ்வானைச் சயனமாக வுடைய ஸ்ரீரங்கநாதரது,
தாளில் – திருவடியிலே,
சாத்தினன் – சமர்ப்பித்தான்; (எ – று.)

செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் “மாட்டு” என்னும் உறுப்புப் பற்றி, பொருட் பொருத்தத்துக்கு ஏற்பச்
சொற்கள் எடுத்துக் கூட்டப்பட்டன; கொண்டுகூட்டுப்பொருள்கோள்.
தோள் = கை: “தோளுற்றொர்தெய்வந் துணையாய்” என்ற விடத்துப் போல்.
“பரிதி வளை நிணவாளஞ்சார்ங்கம் கதை தோளின் அரங்கேசர்” என்றதனை,
“தொனி தக்க சங்கந் திருச் சக் கரஞ் சுடர் வாண் முசலங், குனி தக்க சார்ங்கந் தரித்தா ரரங்கர்” என்பத னோடு ஒப்பிடுக.

ஸ்ரீ திருவரங்கத்தந்தாதி முற்றிற்று

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -61-80-

January 25, 2022

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாதம்பத் துக்கெதிர் மார்பா வரங்கத்து வாழ் பரந்தா
மாதம்பத் துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே –61-

பூ மாது அம்பத்துக்கு எதிர் மார்பா – தாமரை மலரில் வீற் றிருக்கிற திருமகளாரது கண்களுக்கு இலக்காய்
விளங்குகின்ற திருமார்பினழகை யுடையவனே!
அரங்கத்து வாழ் பரந்தாமா – திருவரங்கத்தில் நித்திய வாசஞ்செய்கின்ற பரந்தாமனே!
மா தம்பத்து – பெரிய தூணிலே,
கொங்கையும் – தனங்களும்,
அல்குல் தேரும் – தேர்த் தட்டுப் போன்ற அல்குலும்,
வயிறும் -, இல்லை -; மாதம் பத்து குறியும் கண்டிலேம் – (கர்ப்ப காலமாகிய) பத்து மாசத்துக்கு முரிய கர்ப்ப
சின்னங்களையும் (அத்தூணிலிருந்தனவாகக்) கண்டோமில்லை; (அங்ஙனமிருக்கவும்),
வந்துதோன்றினை – (தூணிலிருந்து நரசிங்கமூர்த்தியாக) வந்து அவதரித்தாய்; (இந்நுட்பத்தை யுணராமல்),
தம் கருத்து பத்து இல்லார் – தமது கருத்திலே (உன்விஷயமான) பக்தி யில்லாதவர்கள்,
வையகத்து பிறப்பு என்பர் – பூமியிலே (உனக்குக் கரும வசத்தால் நேர்ந்த) பிறப்பென்று (அதனைச்) சொல்வார்கள்; (எ – று.)

சாதாரணமான பிறப்புக்கு உரிய சின்ன மொன்று மில்லாமல் உனது நரசிங்காவதாரம் விலக்ஷணமாயிருக்கவும்
அதனையுமுட்படப் பிறப்பென்று இகழ்வது, உன்பக்கல் பக்தி யில்லாதவர்கள் அவதார ரகசிய ஞான மில்லாமையாற்
சொல்லும் பேதைமைச் சொல்லேயென்பது கருத்து.
“மண்ணும் விண்ணுமுய்ய, மூதண்டத்தானத்தவதரித்தானெனின் முத்தி வினைத்,
தீதண்டத் தானத்தனுவெடுத்தானெனிற் றீநரகே”,

“மாயன் தராதலத்து, மீனவதாரம் முதலானவை வினை யின்றி
இச்சை, யானவ தாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் பிற பிரபந்தங்களிலும்.

ஜீவாத்மாக்கள் தேவதிர் யங்மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கரும வசத்தினாலன்றி,
பரமாத்மா மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள் செய்வது துஷ்ட நிக்ரக சிஷ்ட பரி பாலநத்தின்பொருட்டுத் தான் கொண்ட
இச்சையினாலேயே யாகுமென்ற இவ் வுண்மையை யுணர்தல், அவதார ரஹஸ்ய ஞ்ஜாநம் எனப்படும்.

பத்து மாதக் குறி – மசக்கை நோய், உடல் விளர்த்தல், வயிறு பருத்தல், முலைக் கண் கறுத்தல் முதலியன.

“பீரமலர்ந்த வயாவுநோய் நிலையாது, வளைகாய்விட்டபுளியருந்தாது, செவ்வாய் திரிந்து வெள்வாய்பயவாது,
மனை புகையுண்டகருமணிடந்து, பவளவாயிற் சுவைகாணாது, பொற்குடமுகட்டுக் கருமணியமைத்தெனக்,
குங்குமக்கொங்கையுந் தலைக்கண்கறாது, மலர வவிழ்ந்த தாமரைக் கயலென, வரிகொடு மதர்த்த கண் குழியாது,
குறிபடு திங்களொருபதும் புகாது, தூணம் பயந்த மாணமர் குழவி” என்ற கல்லாடம், இங்குக் காணத்தக்கது.

பரந்தாமன் என்ற வடசொல் – மேலான இடத்தையுடையவ னென்றும், சிறந்த சோதிவடிவமானவ னென்றும் பொருள்படும்.
பக்தி என்ற வடசொல் ‘பத்து’ என்று விகாரப்படுதலை, “பத்துடையடியவர்க் கெளியவன்” என்ற திருவாய்மொழியிலுங் காண்க.
மஹா, ஸ்தம்பம், மாஸம், அம்பகம் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. கொங்கையும் மல்குல், மகரவொற்று – விரித்தல்

———–

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை
வைகுந்த மேற்கொண்டு இருந்தார் வடிவைந்தின் வாழுமிடம்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே–62-

வை – கூர்மையான,
குந்தர் – குந்தமென்னும் ஆயுதத்தை யுடையவரும்,
தாமரை போல் பாதர் – செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை யுடையவரும்,
மாதர் புடைவை – கோப ஸ்திரீகளுடைய சேலைகளை,
நாகத்து – புன்னை மரத்தின் மேலும்,
குந்தம் மேல் – குருந்த மரத்தின் மேலும்,
கொண்டு இருந்தோர் – கவர்ந்து கொண்டு சென்று ஏறி யிருந்தவருமாகிய திருமால்,
வடிவு ஐந்தின் – ஐந்து வடிவத்தோடும்,
வாழும் – வாழ்கிற,
இடம் – இடங்களாவன, (முறையே),
வைகுந்தம் – பரமபதமும்,
பால் கடல் – திருப்பாற்கடலும்,
மா நீர் அயோத்தி வள் பூ துவரை – மிக்க நீர் வளமுள்ள அயோத்தி வளப்பமுள்ள அழகிய துவாரகை ஆகிய நகரங்களும்,
வைகும் தம் அன்பர் மனம் – (சஞ்சலப்படாது) நிலை நிற்கிற தமது அடியார்களுடைய மனமும்,
சீர் அரங்கம் வடமலை – ஸ்ரீரங்கம் வடக்கிலுள்ள திரு வேங்கடமலை என்னுந் திவ்வியதேசங்களுமாம்; (எ – று.)

வடிவு ஐந்து என்றது – பரத்வம் வியூகம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சை என்ற ஐவகை நிலைகளை.
இவற்றில், பரத்வமாவது – பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் நிலை.
வியூகமாவது – வாசுதேவ சங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன் திருப்பாற்கடலில் எழுந்தருளியிருக்கும் நிலை.
விபவம் – ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம் – சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்து வசித்தல்;
அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும் இதில் அடங்கும்.
அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.

வலனோங்கு பரமபத மா மணி மண்டபத்தில் அமர்
நலனோங்கு பரம் பொருளாய் நான்கு வியூகமும் ஆனாய்
உபயகிரிப்புய ராமனொடு கண்ணன் முதலான விபவ வுருவமும் எடுத்து
வீறும் உயிர் தொறும் குடிகொள் அந்தர்யாமியுமான தமையாமே எளிதாக
இந்த நெடு வேங்கடத்தில் எல்லாரும் தொழ நின்றோய்–என்பது இங்கு நோக்கத்தக்கது.

அப்பொழுது கண்ணபிரான் ஏறினது புன்னைமர மென்றும், குருந்த மர மென்றும் இருவகையாகக் கூறுத லுளதாதலால்,
காலபேதத்தால் இரண்டையுங் கொண்டு கூறின ரிவ ரென்க.
இனி, ‘வைகுந்தந்தாமரை போற்பாதர்’ என்று பாடங்கொண்டு,
நாகத்து – (காளியனென்னும்) பாம்பின்மேல், வை – வைத்த, குந்து – குந்துகிற (சிறிதுதூக்கியெடுத்து நட னஞ்செய்கிற),
அம் தாமரை போல் பாதர் – அழகிய தாமரைமலர்போன்ற திருவடிகளையுடையவர் என்று உரைத்தலும் அமையும்;
குந்துபாதம் = குஞ்சிதபாதம்:
‘வைகுந்தந் தாமரைபோற் பாதர் நாகத்து’ –
“பாதமாம் போதைப் படத்துவைத்தார்” என்றாற் போலக் கொள்க; என்றது,
காளியன் முடியில் தமதுதிருவடி பதிந்த தழும்பு என்றும் நிலையாகவிருக்கும்படி அழுந்தவைத்தவ ரென்ற பொருளை விளக்கும்;

‘ஓ சர்ப்பராசனே! நீ கருடனுக்கு அஞ்ச வேண்டாம்; உன்சிரசில் என்திருவடி பொறித்த வடு இருத்தலைக் கண்டு
உன்னை அவன் ஒன்றுஞ் செய்யமாட்டான்’ என்று கண்ணன் காளியனுக்கு வரமளித்தமை காண்க.

வை – உரிச்சொல்; “வையே கூர்மை” என்பது, தொல்காப்பியம். குந்தம் – ஈட்டியென்ற ஆயுதம்;
இது, மற்றைப்படைக்கலங்கட்கும் உபலக்ஷணம்.
எம்பெருமான் விசுவ ரூபத்தில் மிகப் பல கைகளுடையனாய் அவற்றில் ஏந்தும் ஆயுதங்களிற் குந்தமும் ஒன்றாம்.

“வடிநுதிக்குந்தம் வலமிடம் வாங்குவ”,
“வெங்கணை யத்திரள் குந்தநிறப்படை வெம்புமுலக்கைகள் போர்,……
தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே” என்பன காண்க.

குந்தம், தாமரஸம், பாதம், நாகம், வைகுண்டம், அயோத்யா, த்வாரகா, ஸ்ரீ – வடசொற்கள்.
திருமாலின் திருப்பதிகளுள் தலைமை பெற்றனவான கோயில் திருமலைகளைக் கூறினது, பிறவற்றிற்கும் உபலக்ஷணமாம்.

————–

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வடமலை கொங்கைத் திருவோடிருப்புவை குந்தங்கர
வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே –63-

மால் – திருமால்,
நிற்பது – நின்ற திருக்கோலமாக எழுந் தருளியிருக்குமிடம்,
வடமலை தென்மலை கச்சி குறுங்குடி – வடக்குத் திருமலையாகிய திருவேங்கடமும்
தெற்குத் திருமலையாகிய திருமாலிருஞ்சோலை மலையும் திருக் கச்சி யத்திகிரியும் திருக் குறுங்குடியுமாம்;
வளரும் இடம் -(அப்பெருமான்) பள்ளி கொண்டு திருக் கண் வளர்ந்தருளுமிடம்,
வடம் அலை வேலை அரங்கம் குடந்தை – ஆலிலையும் அலைகளை யுடைய திருப்பாற் கடலும் ஸ்ரீரங்கமும் திருக்குடந்தையுமாம்;
வடம் அலை கொங்கை திருவோடு இருப்பு – ஆரங்கள் அசையப் பெற்ற தனங்களை யுடைய திருமகளுடன்
வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருக்கு மிடம்,
வைகுந்தம் – பரமபத மாம்;
நடை – நடந்து சென்று சேரு மிடம்,
கரவடம் மலை அன்பர் உளம் – கபடத்தை யொழித்த அடியார்களுடைய மனமாம்;
ஆட்டம் – திருவுள்ள முகந்து நடனஞ்செய்யுமிடம்,
மறை அந்தம் – வேதாந்தமாகிய உபநிஷத் துக்களாம்; (எ – று.)

முதல்வாக்கியத்திலுள்ள ‘மால்’ என்பதை மற்றை வாக்கியங்களிலுங் கூட்டுக; முதனிலைத்தீவகம்.
திருவேங்கடம் – நூற்றெட்டுத் திவ்வியதேசங் களுள் வடநாட்டுத்திருப்பதி பன்னிரண்டில் ஒன்று.
திருமாலிருஞ்சோலை மலையும், திருக்குறுங்குடியும் – பாண்டியநாட்டுத்திருப்பதி பதினெட்டிற் சேர்ந்தவை.
கச்சி – தொண்டைநாட்டுத்திருப்பதி இருபத்திரண்டில் ஒன்று; பெருமாள்கோவில் என்று சிறப்பாக வழங்கும்.
அரங்கமும், குடந்தையும் – சோழநாட்டுத்திருப்பதி நாற்பதிற் சேர்ந்தவை.
ஆலிலையிற் பள்ளிகொள்ளுதல், பிரளயப்பெருங்கடலில். வேதாந்தம் எம்பெருமானது சொரூபத்தையும்
குணஞ் செயல்களையும் மகிமையையுமே எடுத்துப்பாராட்டிக் கூறுதலால்,
அதில் அப்பெருமான் மிக்ககுதூகலத்துடன் நிற்கின்றன னென்பார், ‘ஆட்டம் மறையந்தம்’ என்றார்.
கச்சி – காஞ்சீ என்ற வடசொல் லின் விகாரம்.
மால் – பெருமை, அடியார்களிடத்து அன்பு, திருமகள்பக்கல் மிக்க காதல், மாயை இவற்றை யுடையவன்.
நிற்பது – வினையாலணை யும்பெயர்.
வடம் – வடசொல்; இந்த ஆலமரத்தின்பெயர், முதலாகுபெய ராய், அதன் இலையை உணர்த்திற்று. வடம் = வடபத்திரம்.
இருப்பு, நடை, ஆட்டம் – தொழிலாகுபெயர்கள்.
நிற்பது முதலியவற்றிற்குப் பிறபல தலங்களும் உள்ளனவாயினும், இச்செய்யுளிற் சிலவற்றையே எடுத்துக் கூறினார்.
மலை அன்பருளம் – வினைத்தொகை.

—————-

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின்
அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் னாழ் தடங்கல்
அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே –64-

ராச லங்கா புரியார்க்கு – தலைமை பெற்ற இலங்காபுரி யில் வாழ்ந்த (இராவணன் முதலிய) அரக்கர்களுக்கு,
அந்தக – யமனானவனே!
அரங்கா – ரங்கநாதனே!
மறையின் அந்த – வேதாந்தத்தில் எடுத்துக் கூறப்படுபவனே!
கரஅசலம் கூக்குரல் ஓயும்முன் – கஜேந்திராழ்வான் (ஆதிமூலமேயென்று உன்னைக்) கூவியழைத்து முறையிட்ட ஓலம் அடங்குதற்கு முன்னமே,
ஆழ் தடம் கலந்த கரா சலத்தே துஞ்ச நேமி அறுக்க – ஆழ்ந்த தடாகத்திற் பொருந்திய முதலையானது
அந்நீரிலே யிறக்குமாறு (நீ பிரயோகித்த) சக்கராயுதம் (அதனைத்) துணிக்க,
கண்டு – பார்த்தும்,
அந்தகர் – ஞானக் கண் குருடரான பேதையர்கள்,
சலம் வந்தால் – (தங்கட்குத்) துன்பம் நேர்ந்த காலத்து,
உனை அழையாதிருப்பார் – (அதனைத் தீர்க்குமாறு) உன்னை அழையாமலிருப்பார்கள்;
ஆ – அந்தோ! (எ – று.)

ஆ – இரக்கக்குறிப்பிடைச்சொல்; அவர்களுடைய பேதைமையையும் வினைப்பயனையுங் குறித்து இரங்கியவாறு. ”

வேங்கடத்தாரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கடத்தாரை புனைந்து யேத்திலீர் சிறியீர் பிறவி
தாங்கடத்தாரைக் கடத்தும் என்று யேத்துதீர் தாழ் கயத்து
ளாம் கடத்தாரை விலங்குமன்றோ சொல்லிற்றைய மற்றே –திருவேங்கடத்து அந்தாதி

அந்தகர், சலம், அந்தகன், ராஜலங்காபுரீ, அந்தம், கராசலம், ஜலம், நேமி – வடசொற்கள்.
கரா – க்ராஹ மென்ற வடசொல்லின் சிதைவு. (பிராணிகளை) விடாது பிடித்துக்கொள்வது என்று காரணப்பொருள்படும்.
ராஜலங்காபுரியார் – லங்காபுரிராசர் எனினுமாம்.
கர அசலம் – துதிக்கை யையுடைய மலை: எனவே, யானையாயிற்று; வலிமை பருமைகளிலே மலைபோன்ற தென்க: தீர்க்கசந்தி.
துஞ்சுதல் – தூங்குதல்; இறத்தலைத் துஞ்சுத லென்பது – மங்கலவழக்கு: மீண்டும் எழுந்திராத பெருந்தூக்க மென்க.
அழையாதிருப்பார் என்பதில், இரு – துணைவினை. அழையாது – இருப்பார் என்று பிரித்து,
அழையாமல் அத்துன்பத்திலேயே உழன்றி ருப்பார்கள் என்று உரைத்தலுமொன்று.
‘கண்டு’ என்பதில் உயர்வு சிறப் பும்மை விகாரத்தால் தொக்கது;
கண்டும் அதன் பயனாகிய அழைத்தலைச் செய்யாமை பற்றி, குருட ரென்றார்.

————-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க்கிழ மாகியையள்
அறுகு தலைச் செய்து வீழ்காய் தாநென்னுமாரிருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே –65-

கு – பூமியை,
தலை – முடியின் மேல்,
கொள் – கொண்டு சுமக்கின்ற,
பணி – ஆதிசேஷனிடத்துப் பள்ளிகொண்டருள்கின்ற,
அரங்கா – ரங்கநாதனே!
அறுகு தலை பெய் பனி போன்ற – அறுகம்புல்லின் நுனியில் வீழும் பனிபோலச் சிறிய,
தாது – இந்திரியம்,
உரு ஆய் – மனிதவடிவ மாகப் பரிணமித்து,
பிறந்து – (பின்பு) ஜனித்து, (பிறகு),
அலறு – அழுகிற,
குதலை பிள்ளை ஆய் – மழலைச்சொற்களையுடைய பாலனாகி,
காளை ஆய் – (அதன்பின்னர்) யௌவநபருவமுடையவனாய்,
கிழம் ஆகி – (அப்பால்) மூப்படைந்து,
ஐ அளறு உகுதலை செய்து – கோழையாகிய சேறு சிந்துதலைச் செய்து,
வீழ் – இறக்கிற,
காயம் – உடம்பை,
நான் என்னும் – நான் என்று நினைத்து அபிமானிக்கிற அகங்காரமாகிய,
ஆர் இருளை – போக்குதற்கு அரிய (எனது)மனவிருளை,
அறு – நீக்கு:
நின்கண் ஆசை தந்து – உன் பக்கல் பக்தியை (எனக்கு) உண்டாக்கி; (எ – று.)

நின் கண் ஆசைதந்து, காயம் நானென்னும் ஆரிருளீ அறு என இயைத்து முடிக்க.

காயம் நானென்னும் ஆரிருள் – தானல்லாத உடம்பை யானென்று கருதி அதனிடத்துப் பற்றுச்செய்யும் மயக்கம்;
இது, அகப்பற்று எனப்படும்.
ஆர்இருள் – பண்புத்தொகை; வினைத்தொகையாய், நிறைந்தஇரு ளெனினுமாம்.
ஆரிருள் – முச்சுடர்களினொளி முதலியவற்றாற் போக்கு தற்குஅரிய அகவிருள்: அஜ்ஞாநாந்தகாரம்;
சரீரத்தை ஆத்மாவென்று மாறு படக்கருதும் விபரீதஞானம்.

முதல்மூன்றடிகளில் யாக்கையினியற்கையை யெடுத்துக்கூறினார்;
(இதனை, “ஒளிகொள்நித்திலமொண்பவளச்செறு, விளைய வித்திய தென்ன நல்வீரியம்,
தளிர்நிறத்தெழுதாய் கருவிற்பனித் துளியிற்சென்றுபொருந்தித்துளக்குறும்” என்பது முதலாகப் பாகவதத்திற் பரக்கக்காணலாம்.)

தாது, காயம், கு, பணீ, ஆசா – வடசொற்கள்.
குதலை – நிரம்பாமென் சொல். காளை – இளவெருது: அதுபோலக் கொழுத்த பருவமுடையானுக்கு இலக்கணை.

———–

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்பூ
ஆசுக விக்கு வில் வேள் வடிவா வறி வாலகத்திய
ஆசுக விக்கு வலய மன்னா வென்ற ரற்றி யிரந்து
ஆசுக விக்கும் புலவீர் புகழ்மின் அரங்கனையே –66-

ஆசு கவிக்கு எனக்கு நிகர் இல்லை என்று – ஆசு கவிபாடுதலில் எனக்கு ஒப்பாவார் எவருமில்லை யென்று காட்டுபவராய்,
அற்பரை – புல்லர்கள் பலரை,
‘பூ ஆசுகம் இக்கு வில் வேள் வடிவா – மலர்களாகிய அம்புகளையும் கரும்பாகிய வில்லையுமுடைய மன்மதன் போலழகிய வடிவ முடையவனே!
அறிவால் அகத்தியா சுக – ஞானத்தினால் அகத்தியனையும் சுகனையும் போன்றவனே!
இ குவலயம் மன்னா – இந்தப் பூமண்டலத்துக்கு அரசனே!’
என்று அரற்றி – என்று தனித்தனி புகழ்ந்து விளித்துப் பிதற்றிக் கவி பாடி,
இரந்து – (அவர்களைக் கூறை சோறு முதலியன) வேண்டி,
ஆசு கவிக்கும் – குற்றங்களால் மூடப்படுகிற,
புலவீர் – புலவர்களே! –
அரங்கனை புகழ்மின் – நம்பெருமாளைப் புகழுங்கள்; (எ – று.)

பந்தத்துக்கு ஏதுவான நர ஸ்துதி செய்து கெடுவதை விட்டு மோக்ஷத்துக்கு ஏதுவான திருவரங்க நாதனைத் துதி செய்து
உய்யுங்களென்று உபதேசஞ் செய்தார்.

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -ஆழ்வார்

ஆசுகவிக்கு – உருபுமயக்கம். ஆசுகவி – வடமொழித்தொடர். ஆசுகவி – நால்வகைக்கவிகளுள் ஒருவகை; அதாவது

மூச்சு விடு முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சு என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம்மென்னு முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடினது எழு நூறே –நிமிஷக் கவிராயர் -என்னும்படி) விரைவிற் பாடுங் கவி.
(மற்றவை – மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி.)

தாமரைமலர் அசோகமலர் மாமலர் முல்லைமலர் நீலோற்பலமலர் என்ற ஐந்தும் – மன்மதனுக்கு அம்பாம்.
அகத்தியன் -தமிழ்ப் பாஷையை வளர்த்த முனிவன். சுகன் – வியாச முனிவனது குமாரன்:
அவனினும் மேம்பட்ட அறிவொழுக்கங்களை யுடையவன். தென்மொழி யுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்கு அகத்தியனே யென்றும்,
வடமொழியுணர்வு மிகுதி யுடைமையைக் குறித்தற்குச் சுகனே யென்றும் விளிப்பரென்க.
இங்குக் குறித்த விளிகள் நான்கும், வடிவழகு அறிவு ஒழுக்கம் செல்வம் இவற்றின் சிறப்பைக் காட்டு மென்றுங் கொள்ளலாம்.

அல்பர், ஆசுகம், இக்ஷு, அகஸ்த்யன், சுகன், குவலயம் – வடசொற் கள்.
அகஸ்த்யன் என்ற பெயர் – (விந்திய) மலையை அடக்கியவ னென்று பொருள்படும்; அகம் – மலை.
மூன்றாமடியில், சுகம் என்று எடுத்து, மன்னனுக்கு அடைமொழியாக்கி, இன்பத்தை யனுபவிக்கிற அரசனே யென்றலு மொன்று.
நான்காமடியில், ஆசு உகவிக்கும் என்று பதம் பிரித்து, குற்ற முண்டாக மகிழ்விக்கிற என்று பொருள் கொள்ளலுமாம்.

———–

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென் கால் பெற்றவா
கனகவி மானற் கருடப் புள்ளூர்த்தியைக் கான்மலர்கோ
கனகவி மானம் புவிமான் றடவரக் கண் வளரும்
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே –67-

கால் பெற்ற – வாயு பகவான் ஈன்ற,
வாகன கவி – வாகன மாயமைந்த குரங்காகிய அநுமானையும்,
மால் நல் கருடன் புள் – பெருமையை யுடைய அழகிய கருடப் பறவையையும்,
ஊர்தியை – ஏறி நடத்துபவனும்,
கோகனக விமான் – தாமரை மலரில் வாழும் திருமகளும்
அம் புவி மான் – அழகிய பூமி தேவியும்,
கால் மலர் தவர – (தனது) திருவடித் தாமரைகளைத் தடவ,
கண் வளரும் – அறிதுயிலமர்கிற,
கனக விமானத்து – சுவர்ண மயமான விமாநத்தை யுடைய,
அரங்கனை -ரங்கநாதனுமாகிய எம்பெருமானை,
நா சொல்ல கற்ற பின் – (எனது) நாவினாற் புகழ்ந்து சொல்லப் பயின்ற பின்பு,
கனம் கவி – பெருமை பொருந்திய பாடல்களை,
மானம் அற்று – மானங்கெட்டு,
ஈனர்க்கு உரைக்கிலென் – அற்பர்கள் விஷயமாக (யான்) பாடேன்; (எ – று.)

‘நர ஸ்துதியாகக் கவி பாடலாகாதென்று பரோபதேசஞ் செய்யத் தலைப் பட்டீரே,
நீர் அங்ஙனம் நர ஸ்துதி செய்ததில்லையோ?’ என்று புலவர்கள் தம்மைக் குறித்து ஆசங்கித்ததாகக் கொண்டு,
‘யான் அரங்கனைத் துதிக்கக் கற்ற பின் ஈனர்க்குக் கவி யுரைக்கிலேன்’ என்றாரென்க.
அதற்கு முன்பு அறியாப் பருவத்தில் ஒருகால் மனிதரைப் பாடியிருந்தால் அது ”
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” –என்றபடி அமையு மென்பது, உட்கோள்.

சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னாதெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே-

சீர் பூத்த செழும் கமல திருத் தவிசின் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடிவருட –அறி துயில் இனிதமர்ந்தோய்–திருவரங்க கலம்பகம் –

கால் பெற்ற வாகன கவி மானற் கருடப் புள்ளூர்தி – சிறிய திருவடியை இராமாவதாரத்திலும்
பெரிய திருவடியை மற்றை எப்பொழுதிலும் வாகனமாகக் கொண்டு அவர்கள் தோள் மேலேறி வருபவன்,
கோகனகவிமான் அம்புவிமான் கான்மலர் தடவரக் கண் வளரும் –

கநகவி, மாநம், ஹீநர், வாஹநகபி, கோகநதம், புலி, கநகவிமாநம் என்ற வட சொற்கள் விகாரப்பட்டன.
கால் மலர் – மலர் போன்ற கால் : முன் பின்னாகத்தொக்க உவமத்தொகை.
கோகநதம் என்ற வடசொல் – கோகமென்னும் நதியில் ஆதியிலுண்டானதென்றும்,
சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து மகிழ்ந்து விளையாடப் பெற்றதென்றும் காரணப் பொருள் கூறப்பெறும்.
வி – வீ என்பதன் குறுக்கல்; வீ – மலர். மான் – மான் போன்ற பார்வையை யுடைய பெண்ணுக்கு உவமையாகுபெயர்.
தடவர, வா – துணை வினை. தடவு வா என்ற இரண்டு வினைப் பகுதி சேர்ந்து ஒரு சொல் தன்மைப் பட்டு விகாரமடைந்து தடவா என நின்றதென்க.
கண் வளர்தல் – கண்மூடித் துயிலுதற்கு இலக்கணை.
உரைக்கிலென், கு – சாரியை, இல் – எதிர்மறை யிடை நிலை. உரைக்கில் என் என்று பதம் பிரித்து,
(எல்லாப் புருஷார்த்தங்களையும் பெருமையோடு பெறுமாறு) அரங்கனைப் புகழக் கற்ற பின்பு மானமிழந்து
ஈனர் மேற் கவி பாடுதலால் என்ன பயனென்று உரைத்தலு மொன்று. “நான் சொல்ல” என்றும் பாட முண்டு.

———–

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினைவ
கற்றின மாயமு நீ கன்று காளையராகிப் பல்ப
கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே –68–

அரங்கா – ! –
கன்று இனம் ஆயவை – கன்றுகளின் கூட்டங்களும்,
காளையர் – (இடையர் சாதிச்) சிறு பிள்ளைகளும்,
வான் கண்டு மீள் நினைவு அகற்றின – தாம் வானத்தை யடைந்து மீண்டமை பற்றிய ஞாபகத்தை யொழித்த,
மாயமும் – அற்புதமும், –
நீ -,
கன்று காளையர் ஆகி – அக் கன்றுகளும் ஆயச் சிறுவர்களுமாக வடிவு கொண்டு,
பல் பகல் – வெகு காலமளவும்,
தினம் – நாள் தோறும்,
ஆயர் பரிவு உற சேரி கலந்தமையும் – (தம் தமக்கு உரிய) இடையர்கள் கண்டு (தம் பக்கல் முன்னினும்)
அன்பு மிகுமாறு இடைச்சேரியிற் சேர்ந்து வந்த விசித்திரமும், –
செம் கமலற்கும் – சிவந்த (உனது நாபித்) தாமரை மலரில் தோன்றியவனான பிரம தேவனுக்கும்,
இனம் கற்று ஆய ஒண்ணா – இன்னமும் ஆராய்ந்து அறிய முடியாதனவா யிருக்கின்றன; (எ – று.)

வான் கண்டது பிரமன் மாயையினாலாயினும், வான் கண்டு மீண்டமை பற்றிய நினைவு சற்றுமில்லாதபடி அகற்றியது மாயவனது மாயை யென்க.
மெய்ச் சிறுவரின் மேலும் மெய்க் கன்றுகளின் மேலும் உள்ள பரிவினும் மிக்க பரிவு போலிச் சிறுவரின் மேலும்
போலிக் கன்றுகளின் மேலும் உண்டானது, எம்பெருமான் கொண்ட வடிவமாதலினாலென்பர்.
கமலற்கும், உம் – உயர்வு சிறப்பு; உனது எதிரில் மாயை செய்ய வந்தவனுக்கும் உனது பெருமாயைகள் அறியப்படா என்றபடி.
எல்லா மாயைக்கும் மேம்பட்ட மாயை செய்ய வல்லாய் நீ யென்பது குறிப்பு.
கன்று + இனம் = கற்றினம்; வேற்றுமையில் மென் றொடர் வன் றொடராயிற்று.
ஆயவை – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
பகல் – நாளுக்கு இலக்கணை. தினம் என்றதில், தொறுப் பொருளதாகிய உம்மை விகாரத்தால் தொக்கது,
உற – மிகுதி யுணர்த்தும் உறு என்ற உரிச் சொல்லின் மேற் பிறந்த செயவெனெச்சம்.
சேரி – இங்குத் திருவாய்ப்பாடி. கற்று ஆய – ஆய்ந்து கற்க என விகுதி பிரித்துக் கூட்டுக.
இனம் – இன்னம் என்பதன் தொகுத்தல். ஒண்ணா – ஒன்றா என்பதன் மரூஉ.

————-

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர் புனல் கா
கமலங் குவளை விளையாடரங்கன் விண் காற்றுக் கனல்
கமலங் குவளையுண் டான்றொண்ட ராயுய்ம்மின் காம மற்றே –69-

மடவார் – மாதர்களுடைய,
தனம் கண்கள் – கொங்கைகளையும் கண்களையும்,
கமலம் குவளை என்று உரைத்து – (முறையே) தாமரை மொட்டும் நீலோற் பலமலருமா மென்று புனைந்துரைத்து,
மலங்கு வளை முதுகு ஆகியும் அகம் கரைவீர் – வருந்துகிற கூன் முதுகான பின்பும் (முற்ற மூத்த பிறகும்)
(மகளிர் பக்கல் ஆசையால்) மனமுருகுகின்றவர்களே! –
(நீங்கள்),
காமம் அற்று – (இத் தன்மையதான) பெண்ணாசையை யொழித்து,
விண் காற்று கனல் கமலம் கு அளை உண்டான் – ஆகாசம் வாயு அக்நி ஜலம் பூமி ஆகிய பஞ்ச பூதங்களையும்
வெண்ணெயையும் அமுது செய்தவனும்,
புனல் காகம் மலங்கு வளை விளையாடு அரங்கன் – நீர்க் காக்கைகளும் மலங்கு என்ற சாதி மீன்களும் சங்குகளும் விளையாடுகிற
(நீர் வளம் மிக்க) ஸ்ரீரங்கத்திலெழுந் தருளியிருப்பவனுமான நம் பெருமாளுக்கு,
தொண்டர் ஆய் – அடியார்களாகி,
உய்ம்மின் – உஜ்ஜீவியுங்கள்; (எ – று.)

தீ வினைக்குக் காரணமான பெண்ணாசையை யொழித்து, வீடு பெறுமாறு எம்பெருமானுக்கு அடியார்களாகி ஈடேறுங்கள் என்பதாம்.
சிற்றின்பத்தால் உய்யீர், பேரின்பம் பெற்று உய்யப் பாரும் என்பது, குறிப்பு.
முதலடியில், கமலம் தனம் குவளை கண் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப் பொருள்கோள்; வடிவுவமை.
ஐம்பெரும்பூதங்களை யுட்கொள்ளுதல், மகா பிரளய காலத்தில். வெண்ணெ யுண்டது,
கிருஷ்ணாவதாரத்தில். விண் காற்று கனல் கமலம் கு என்ற ஐம்பூத முறைமை, உற்பத்தி கிரமம் பற்றியது.
கமலம், குவளை – முதலாகு பெயர்கள். ஓசை நயத்தின் பொருட்டு, காற்றுக் கனல் என வலி மிக வில்லை.

————

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சார்க்கு இரங்
கா மனத்தான ளக்கும் கடல் பார் கலம் போன்றது மீ
கானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –70 –

கா மன் – கற்பகச் சோலைக்குத் தலைவனான இந்திரன்,
நத்தால் விழ – பாஞ்ச ஜந்யத்தின் ஓசையினால் மூர்ச்சித்துக் கீழ் விழும்படி,
ஊதி – (அந்தத் தனது திவ்விய சங்கத்தை) ஊதி முழக்கி,
அ காவை கவர் – அச்சோலையிலுள்ள பஞ்ச தருக்களுள் ஒன்றான பாரிஜாத தருவைக் கவர்ந்து கொண்டு வந்த,
அரங்கன் – ரங்கநாதனும்,
காமன் அத்தா என்று நைவார்க்கு அமுதன் – “மன்மதனது தந்தையே!” என்று சொல்லி விளித்து(த் தன் பக்கல்)
மனமுருகும் அடியவர்க்கு அமிருதம் போலினியனாகின்றவனும்,
கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – (அங்ஙனமுருகாது தன் திறத்திற்) கல்லுப் போல வலிய
நெஞ்சை யுடையராயிருப்பார் பக்கல் தானும் மனத்துக் கருணை கொள்ளாதவனுமான எம்பெருமான்,
அளக்கும் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்தருளிய,
கடல் பார் – கடல் சூழ்ந்த பூமியானது,
கலம் போன்றது – (அக்கடலில் மிதக்கும்) மரக் கலம் போன்றது;
அ தாமரையோன் – அந்த (மேலுலகமாகிய சத்திய லோகத்திலே வசிக்கின்ற) பிரமதேவன்,
மீகாமன் – மாலுமி போன்றனன்;
கால் மலர் – (மேல் நோக்கிச் சென்ற திருமாலினது) தாமரை மலர் போன்ற திருவடியானது,
மரம் – பாய் மரம் போன்றது;
கங்கை – (அத் திருவடி யினின்று பெருகிய) கங்கா நதியானது,
பாய் – (அம் மரத்திற் கட்டிய) பாய் போன்றது; (எ – று.)

பூமியை மரக்கலத்தோடும், பிரமனை மாலுமியோடும், கங்கையைப் பாயோடும், திருவடியைப் பாய் மரத்தோடும் உவமித்தார்;
இயைபுவமையணி.
விரி கடல் சூழ் மேதினி நான் முகன் மீகானாச் சுர நதி பா யுச்சி தொடுத்த –வரி திருத்தாள் கூம்பாக வெப்பொருளும் கொண்ட
பெரு நாவாய் யாம் பொலிவுற்றாயினதால் அன்று – என்றதனோடு இதனை ஒப்பிடுக. ”
போன்றது” என்ற முற்றை உரிய படி மற்றை வாக்கியங்களிலுங் கூட்டி யமைக்க.

கண்ணனது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான உருக்குமிணிப் பிராட்டியினிடம் மன்மதன்
பிரத்யும்நனென்னுங் குமாரனாகத் தோன்றினானென்ற வரலாறு பற்றி, திருமால் “காமன்தந்தை” எனப்படுவன்.
இங்கு “காம னத்தா” என்றது, காமனுக்கு நியாமகனே யென்றபடி.
நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சர்க்கு இரங்கா மனத்தான் – நல்லார்க்கு நல்லானும் பொல்லார்க்குப் பொல்லானுமாய் ஒழுகுபவனென்க.

———–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மலருந்தினான் அரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாண்
மலருந்தி வாக்கதிர் வண் குடையாய் முடி மா மணியாய்
மலருந்தி யாய்த் திருத்தாள் விரலாழி மணி யொத்ததே –71–

மலர் – மல்லர்கள்,
உந்தி மேல் விழ – தள்ளித் தன் மேல் வந்து விழ,
மெய் நெரித்தான் – அவர்களுடலை நொருக்கி யழித்தவனும்,
வையம் ஏழும் துஞ்சாமல் அருந்தினான் – ஏழு வகை யுலகங்களையும் அழியாதபடி யுட் கொண்டவனுமான,
அரங்கன் -,
குறள் ஆய் – (முதலில்) வாமன மூர்த்தியாய்ச் சென்று,
மண் அளந்த அநாள் – (உடனே பெரு வடிவாய் வளர்ந்து) உலகத்தை அளந்து கொண்ட அந்தக் காலத்திலே,
மலரும் திவாக் கதிர் – பரவி விளங்குந் தன்மையதான சூரிய மண்டலமானது, –
(அப்பெருமானுக்கு),
வள் குடை ஆய் – (முதலில்) அழகிய குடை போன்றிருந்து,
முடி மா மணி ஆய் – (உடனே) கிரீடத்திலுள்ள நடு நாயக மணி

போன்று, மலர் உந்தி ஆய் – (பிறகு) நாபித் தாமரை மலர் போன்று,
திருதாள் விரல் ஆழி மணி ஒத்தது – (அதன் பின்பு) திருவடி விரலிலணியும் மோதிரத்திற் பதித்த மாணிக்கத்தைப் போன்றது; (எ – று.)

இதுவும், கீழ்ச் செய்யுள் போலத் திரிவிக்கிர மாவதாரவைபவங் கூறியது. திருமால் திரிவிக்கிர மாவதாரத்தில் வானத்தை
யளாவி ஓங்கி வளர் கையிற் சூரியன் வரவரக் கீழ்ப் பட்டுப் பலவாறு உவமை கூறுதற்கு உரியனாயின னென்க.

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல்
மன்னும் திலகம் போல் வாள் இரவி
பொன்னகலம் தங்கு கௌத்துவம் போலும்
உந்தித் தட மலர் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்-என்ற செய்யுளிலும் இவ்வகைக்கருத்து நிகழ்தல் காண்க

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –திருவரங்கத்து மாலை -35

மல்லரென்பது, “மலர்” எனத் தொக்கது. திவாக் கதிர் – பகலிற்குஉரிய சுடர். ஆய் – உவமவுருபு. தாள்விரலாழி – காலாழி.

———

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச் சிந்தா
மணி வா சவனென வாழ்ந்திருப்பார் பின்னை மாதிருக்கு
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித் திரு
மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –72-

மணி – ஆராய்ச்சி மணி,
வாசல் தூங்க – அரண்மனை வாயிலிலே தொங்க,
ஒரு குடை கீழ் – ஒற்றை வெண் கொற்றக் குடையின் கீழ்,
வையம் காத்து – உலகத்தை யரசாண்டு,
சிந்தாமணி வாசவன் என வாழ்ந்திருப்போர் – சிந்தாமணி யென்னுந் தெய்வ ரத்தினத்துக்கு உரிய
இந்திரன் போல இனிது வாழ்ந்திருப்பவர்கள்,
பின்னை மாது இருக்கும் – திருமகள் வீற்றிருக்கின்ற,
மணி – அழகிய,
வாசம் மார்பு – திவ்விய பரிமளமுள்ள மார்பை யுடைய,
அரங்கா – ரங்கநாதனே!
கேசவா – கேசவனே! என்று வாழ்த்தி – என்று விளித்துத் துதித்து,
இ வாசகம் கொண்டு – இந்தக் கேசவாதி நாமங்களை யுச்சரித்துக் கொண்டு,
திருமண் அணிவார் – திருமண் காப்பைத் தரித்துக் கொள்ளும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
அடியை – திருவடிகளை,
வணங்கினரே – நமஸ்கரித்தவர்களே; (எ – று.)

“ஈராறு நாம முரை செய்து மண் கொ டிடுவார்கள்” என்றபடி
கேசவன் நாராயணன் மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதநன் திரிவிக்கிரமன் வாமநன் ஸ்ரீதரன்
ஹ்ருஷீகேசன் பத்மநாபன் தாமோதரன் என்ற திருமாலின் துவாதச நாமங்களை முறையே சொல்லி
உடம்பிற் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக் கொள்ளுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்கினவர்களே
அந் நல் வினையின் பயனால் உலக முழுவதும் ஒரு குடைக்கீழாளுஞ் சக்கரவர்த்தி பதவி யெய்திச் சகல
ஐசுவரியங்களையு மனுபவித்து மேம்பட்டு வாழ்வோரென்று, பாகவதர்க்கு அடிமை பூணுதலின் மகிமையை வெளியிட்டவாறாம்.
அவ்வரசர் பெருமையினும் பாகவதர் பெருமையை பெருமை யென்பது, குறிப்பு.

ஆராய்ச்சிமணி – அரண்மனை வாயிலிற் கட்டி வைப்பதொரு மணி:
எவரேனும் அரசனிடத்துத் தமது குறையைக் கூற வேண்டின் இம் மணியை யடித்தலும், அவ்வொலி கேட்ட மாத்தி ரத்திலே
அரசன் விரைந்து போந்து வாயிலை யடைந்து அங்குள்ளாரை வினாவி அவர் குறையை யறிந்து அதனைத் தீர்த்தலும் இயல்பு.

சிந்தாமணி – கருதிய பொருளைத் தருந் தேவமணி. திருப்பாற்கடல் கடைந்த காலத்தில் மூதேவி முன்னர்ப் பிறக்க
அதன் பின்னர்ப் பிறந்த திருமகளுக்குப் பின்னை யென்றும் இளையாளென்றும் பெயர்கள் நிகழ்ந்தன.
பன்னிரு நாமத்துள் முதலான கேசவ நாமத்தைக் கூறியது, மற்றவற்றிற்கும் உப லக்ஷணம்.

வாசல் – வாயில் என்பதன் மரூஉ. தூங்குதல் – தொங்குதலாதலை “தூங்கு சிறை வாவல்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
கேசவன் என்ற திருநாமம் – பிரமனையும் உருத்திரனையும் தன் அங்கத்திற் கொண்டவனென்றும் (க – பிரமன், ஈசன் – சிவன்),
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனென்றும், மயிர் முடியழகுடையவனன்றும் பொருள் பெறும்.
இவ் வாசகம் என்பது “இவாசகம்” எனத் தொக்கது. வாசகம் – சொல்: வடமொழி. ஈற்று ஏகாரம் – பிரிநிலையோடு தேற்றம்.

————

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ வாளரவு
வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை வானவர்க்கும்
வணங்கரி யான் அன்றிக் காப்பாரில்லாமை விண் மண் அறியும்
வணங்கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –73-

வணம் கரியான் “திருமேனி நிறம் கருமையாயுள்ளவனும்,
அடியார் தொழ – தொண்டர்கள் சேவிக்க,
வாள் அரசு உவணம் கரி ஆடல் பரி தேர் நடத்து – ஒளியையுடைய ஆதிசேஷனும் கருடனும் யானையும்
ஆட்டக் குதிரையும் தேரு மாகிய வாகனங்களி லெழுந்தருளித் திருவீதி யுத்ஸவங் கண்டருள்கிற,
எந்தை – எமது தலைவனும்,
வானவர்க்கும் வணங்கு அரியான் – தேவர்கட்கும் தரிசித்து நமஸ்கரித்தற்கு அருமையானவனும் ஆகிய,
அரங்கன் அன்றி – ரங்க நாதனே யல்லாமல்,
காப்பார் இல்லாமை – (சரணமடைந்தவர்களைத் துயர் தீர்த்து வேண்டுவன அளித்துப்) பாதுகாப்பவர்
மற்று எவருமில்லாதிருக்கிற உண்மையை,
விண் மண் அறியும் வணம் – வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் அறியும்படி,
கரி ஆனவர் – சாக்ஷியானவர்கள், (யாவரெனில்), –
வாணன் கண்டாகன மார்க்கண்டனே – பாணாசுரனும் கண்டா கர்ணனும் மார்க்கண்டேயனு மாவர்; (எ – று.)

இம் மூவரும் முதலிற் சிவபிரானை யடுத்து அவனால் தமது குறைகள் தீரவும் வேண்டுவனயாவும் பெறவும் மாட்டாமல்
பின்பு திருமாலருள் பெற்றுப் பேறு பெற்று உய்ந்தமை அவரவர் சரித்திரத்தால் நன்கு விளங்குதல் பற்றி, இங்ஙனங் கூறினார்.
சாக்ஷியாதற்கு ஏது – வாணாசுரனுடைய கைகளைக் கண்ணன் சக்கராயுதத்தால் அறுக்கிற போது அவனுக்கு ரக்ஷகனாய் நின்ற
சிவபிரான் ஒன்றும் எதிர் செய்ய மாட்டாது அப் பெருமானை இரக்க, அதற்கு இரங்கி அவன் நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருள,
அவ் வசுரன் பின்பு ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி உறவு பூண்டு உய்ந்ததும்; கண்டா கர்ணன் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்து பின்பு சிவனால் முத்தி பெற மாட்டாது கண்ணபிரானாற் பெற்றதும்;
மார்க்கண்டேயன் மகா பிரளய காலத்தில் திருமாலையே யன்றி மற்றைத் தேவரெவரையும் பிழைத்திருக்கக் காணாது
அப் பெருமானது திருவயிற்றினுள்ளே அனைவரையுங் கண்டது மன்றி, முன்பு சிவபிரானருளால்
நீண்ட ஆயுளை மாத்திரமே பெற்ற தான் பின்பு பரகதிக்குத் திருமாலையே வேண்டினமையுமாம்.

வர்ணம் என்ற வடசொல்லின் விகாரமான வண்ணம் என்பது, வணம் எனத் தொக்கது.
அரங்கன்னடியார், னகரவொற்று – விரித்தல். வாள் அரவு – கொடிய பாம்புமாம்.
உவணம் – ஸுபர்ணம் என்ற வடசொல்லின் சிதைவு.
ஆடல் பரி – வெற்றியையுடைய குதிரை யெனினுமாம். விண், மண் – இடவாகுபெயர்கள்.

—————–

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம் கவிரிதல் சொல்
கண்ட லங்கா ர முலையிள நீர் என்று கன்னியர் சீர்
கண்ட லங் காரங்கமருளேன் புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –74-

புனல் – நீரிலுள்ள,
கயல் – கயல்மீன்கள்,
கொக்கு என்று அஞ்ச – “கொக்கு” என்று நினைத்துப் பயப்படும்படி,
கண்டல் – தாழைகள்,
அங்கு – அந்நீரின்பக்கங்களில்,
ஆர மலர் – மிகுதியாக மலரப் பெற்ற,
அரங்கம் – திருவரங்கத்துக்கு,
ஈசர்க்கு – தலைவரான நம்பெருமாளுக்கு,
காதலன் – அன்பு பூண்டவனான யான், –
கன்னியர் – இளமங்கையரது,
கண் தலம் கார் அளகம் – கண்களும் கரிய கூந்தலும்,
கெண்டை மேகம் – (முறையே) கெண்டை மீனையும் காள மேகத்தையும் போலும்:
இதழ் – (அவர்களுடைய) அதரம்,
கவிர் – முருக்க மலர் போலும்:
சொல் – பேச்சு,
கண்டு – கற்கண்டு போலும்:
அலங்கு ஆரம் முலை – அசைகிற ஹாரங்களை யுடைய தனங்கள்,
இளநீர் – இளநீர் போலும்,
என்று -,
சீர் கண்டு அலங்காரம் மருளேன் – (அவர்களுடைய) சிறப்பைக் குறித்து அவர்கள் புனை கோலத்தால் மதி மயங்கேன். (எ – று)

திருவரங்கர்க்கு அன்பனாயினே னாதலால், பெண்ணாசை மயக்கத்தி லாழே னென்பதாம்.
பேரின்பத்துக்கு இடமான பெருமானிடத்துக் காதல் செலுத்தினால், சிற்றின்பத்திற்கு இடமான மகளிர் பக்கல் மோகம் தீருமென்பது, குறிப்பு.

கண்தலம் – கண்ணாகிய இடம்.
முதலடியில் கண்தலம் கெண்டை, காரளகம் மேகம் என முறையே சென்று இயைதல், முறைநிரனிறைப்பொருள் கோள்.
இளநீர் – தெங்கினிளங்காய். கயல்மீன் வெண்டாழைமலரைக் கொக்கென்று கருதி அஞ்சிய தென்றது, மயக்கவணி;

“அருகு கைதை மலரக் கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” என்ற ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது இந்த வருணனை.

கொக்கு மீன் குத்திப் பறவை யாதலால், அதற்கு மீன் அஞ்சும்.
இதழுக்கு முருக்கம்பூ செந்நிறத்திலுவமம்.

————

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு காட்டியரங்
காதலை வா கழற் குள்ளாக்கி னாய்கரப் பெங்கெனவே
காதலை வார் குழை வைதேகியை நின் கருத்துருக்குங்
காதலை வானரரத் தேட விட்டாயிது கைதவமே –75–

அரங்கா-! தலைவா – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனே!-
காது – மோதுகின்ற,
அலை – அலைகளையுடைய,
வாரி – கடலினாற்சூழப்பட்ட,
மண் – பூமியை,
வெள் கோட்டில் வைத்து – (வராகாவதாரத்திலே) வெண்ணிறமான மருப்பிற் குத்தியெடுத்து,
உண்டு – (பிரளயகாலத்திலே) வயிற்றி னுட்கொண்டு,
காட்டி – (அந்தப் பிரளயம் நீங்கினவாறே) வெளிநாடு காண உமிழ்ந்து,
கழற்கு உள் ஆக்கினாய் – (திரிவிக்கிரமாவதாரத்திலே) ஓரடிக்குள் ஒடுங்கச் செய்தாய்;
(அங்ஙனம் நிலவுலகமுழுதையும் ஸ்வாதீனமாக நடத்திய நீ),
நின் கருத்து உருக்கும் காதலை – உனது மனத்தை யுருகச் செய்கிற ஆசை மயமானவளாகிய,
காது அலை வார் குழை வைதேகியை – காதுகளி லசைகிற பெரிய குழை யென்னும் அணிகலத்தையுடைய ஜாநகிப் பிராட்டியை,
கரப்பு எங்கு என வானரர் தேட விட்டாய் – (இந் நிலவுலகத்தில் இராவணன்) ஒளித்து வைத்தது எவ்விடத்தென்று
தேடிப் பார்த்தறியும்படி (அநுமான் முதலிய) வாந ரவீரர்களை (நாற்றிசைக்கும்) அனுப்பினாய்;
இது கைதவமே – இது (உனது) மாயையேயாம்; (எ – று.)

இரணியாக்ஷனாற் பூமி முழுதும் ஒளிக்கப்பட்ட போது அது இருந்த இடத்தை நாடிக் கண்டு அதனை யெடுத்து வந்தவனும்
அந்தப்பூலோகமுட்பட எல்லா வுலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனும்
பூமிமுழுவதையும் ஓரடிக்கு உள்ளாக்கினவனு மாகிய நீ.
அந்நிலவுலகத்தில் இராவணனாற் கவரப்பட்ட சீதை யிருக்குமிடத்தை அறியாய் போன்று வாநரரைத் தேடவிட்டது,
மாயச் செய்கையே யென்பதாம். எல்லாம் உன்திருவிளையாடலே யென்பது, குறிப்பு.

காது அலை – வினைத்தொகை. கரப்பு – தொழிற்பெயர்.
வைதேஹீ – வடமொழித் தத்திதாந்தநாமம்: விதேகராஜனது குலத்திற் பிறந்தவள்.
காதல் = காதலி. கைதவம் – வடசொல். ஏ – அசை.

———

தவராக வக்கணை யொன்றாற் கடற்றெய் வந்தான் என்றிருந்
தவராகந் தீர்த்துத் தொழக் கண்ட நீ தர்ப்பை மேற் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய் தண் அரங்கத்துமா
தவராக வாகண் ணனே எண் ஒண்ணா வவதாரத்தானே –76-

தண் – குளிர்ச்சியான,
அரங்கத்து – திருவரங்கத்தி லெழுந் தருளியிருக்கின்ற,
மாதவ – திருமகள் கொழுநனே!
ராகவா – இராமனாகத் திருவவதரித்தவனே!
கண்ணனே – கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனே!
எண் ஒணா அவதாரத்தனே – மற்றும் கணக்கிடமுடியாத (மிகப்பல) திரு வவதாரங்களையுடையவனே!
தவர் – வில்லினின்று எய்யப்பட்ட,
ஆகவம் கணை ஒன்றால் – போர்க்கு உரிய அம்பு ஒன்றினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
கடல் தெய்வம் தான் என்று இருந்த அ ராகம் தீர்த்து தொழ கண்ட – கடலுக்கு அதி தேவதையான வருணன் தான் (ஸ்வதந்த்ரன்)
என்று செருக்கியிருந்த அந்த அபிமானத்தை யொழித்து (உன்னை) வணங்கும்படி (பின்பு) செய்த வல்லமையை யுடைய, நீ-, (
முதலில்), தர்ப்பைமேல் கிடந்து – தருப்பசயனத்திற் படுத்து,
தவர் ஆக பாவித்து – விரதாநுட்டானஞ்செய்பவர் போலப் பாவனை காட்டி,
என்னோ தொழுதாய் – ஏன் (அத்தேவனை) வணங்கினையோ? (எ – று.)

வருணனைச் செருக்கடக்கித் தொழும்படி செய்யும் வல்லமையுடைய நீ முதலில் வல்லமையில்லாதவன்போல அவனைத்தொழுது
வரங்கிடந்தது உனதுமாயையினாற் செய்த திருவிளையாடல்போலு மென்பது குறிப்பு.
முன்பு மாநுடபாவனையைக் காட்டிப் பின்பு பரத்வத்தை வெளியிடத் தொடங்கின னென்க.

ஆஹவம், தைவம், ராகம், தர்ப்பம், மாதவன், அவதாரம் – வடசொற் கள்.
தான் என்று இருந்த அராகம் – தான் இராமபிரானுக்கு அடங்கினவ னல்ல னென்று கருதி உபேக்ஷித்திருந்த அகங்காரம்.
அ ராகம் எனச் சுட்டியது, கதையை உட்கொண்டு.
இனி, அராகம் என்பதன் முதல் அகரத்தை “ரவ்விற்கு அம்முதலா முக்குறிலும்,……. மொழிமுதலாகி முன்வருமே” என்றபடி
ராகம் என்ற வடசொல்லின் முதலில் வந்த குறிலாகவுங் கொள்ளலாம்.
தவர் என்றதில், “தவம்” என்றது, பிராயோபவேசத்தை.

மத்ஸ்யம் கூர்மம் முதலிய தசாவதாரங்களேயன்றி நாரதன் நரநாராயணர் கபிலன் தத்தாத்ரேயன் பிருது தந்வந்திரி
வியாசன் புத்தன் அருச்சுனன் முதலாகச் சமயோசிதமாக எம்பெருமான் தனது திவ்வியசங்கல்பத்தினாற் கொண்ட
திருவவதாரங்கள் பற்பலவாகப் புராணங்களிற் கூறப்படுதல் பற்றி, “எண்ணொணாவவதாரத்தனே” என்றார்.

—————

தாரா கணமண் ணளந்த வந்நாளன்பர் சாத்தும் துழாய்த்
தாரா கணம் புயம் போலரங்காதல மேழுக்குமா
தாரா கண மங்கை யாயும்பர் தூவிய தா ண் மலர் வீழ
தாரா கணமு நில்லா காற்றிற் சூழ் வளந்தான் ஒக்குமே –77-

அன்பர் – அடியார்கள்,
சாத்தும் – சமர்ப்பித்த,
துழாய் தாரா — திருத்துழாய் மாலையை யுடையவனே!
கண் அம்புயம் போல் – கண்கள் தாமரை மலர் போலிருக்கப் பெற்ற,
அரங்கா-!
தலம் ஏழுக்கும் ஆதாரா – ஏழுவகை யுலகங்கட்கும் ஆதாரமாயிருப்பவனே!
கண மங்கையாய் – திருக் கண்ணமங்கை யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே! –
மண் அளந்த அ நாள் – (நீ) உலகமளந்த அக் காலத்தில்,
தாரா கணம் – (வானத்திற் சுற்றுகின்ற) நக்ஷத்திர மண்டலம் (எப்படியிருந்த தென்றால்),
உம்பர் தூவிய தண் மலர் – தேவர்கள் (அக் காலத்தில் உன் மீது) சொரிந்த குளிர்ந்த மலர்கள்,
வீழ் தாரா – பூமியில் விழாதனவாயும்,
கணமும் நில்லா – ஒருகணப் பொழுதேனும் (வானத்தில் ஓரிடத்தில்) நிலையுற்றி ராதனவாயும்,
காற்றில் சூழ் – வாயு மண்டலத்தில் அகப்பட்டுச் சுழல்கின்ற,
வளம் – மாட்சிமையை,
ஒக்கும் – போன்றிருந்தது; (எ – று.) – தான் – அசை.

உனது பெருவடிவத்துக்கு முன் நக்ஷத்திரங்கள் மலர்கள் போலச் சிறி யனவாயின வென்பது, குறிப்பு.
பற்பல நிறமுடையனவாய் விளங்கும் நக்ஷத்திரங்கள், பற்பலநிறமுள்ள மலர்கள்போலும்.
இடையிற் பெருவடிவ மாய் எழுந்த எம்பெருமானைச் சுற்றிலும் நக்ஷத்திரங்கள் வானத்தில் திரிந் ததற்கு,
மலர்கள் காற்றிலகப்பட்டுக் கீழ்விழாமலும் ஓரிடத்துநிலையுறாமலும் சுழலுதலை ஒப்புமைகூறினார்; உவமையணி.
தேவர்கட்குப் பகைவனாய் அவர்களை வென்று அடக்கிய மாவலியைச் செருக்கடக்குதற்குத் திருமால் திரிவிக்கிரமனாய் வளர்ந்த
சமயத்தில் அதுகண்ட களிப்பினால் தேவர்கள் மேலுலகத்தினின்று மலர்மாரி சொரிந்தன ரென்க.

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி முறை முறையின் தாதிலகு பூத்தொளித்தால் ஒவ்வாதே
தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன் -ஆழ்வாரருளிச் செயலை அடியொற்றியது, இச்செய்யுள்.

கண் அம்புயம் போல் அரங்கன் – புண்டரீகாக்ஷன். எல்லாவுலகங்கட் குங் கீழே எம்பெருமான் ஆதி கூர்ம ரூபியாயிருந்து
கொண்டு அவற்றையெல் லாந் தாங்குதலும், பிரளய காலத்தில் அனைத்துலகத்தையும் வயிற்றில் வைத்திருத்தலும்,
பகவானது திவ்விய சக்தியின் உதவியினாலன்றி யாதொரு பொருளும் எங்கும் நிலைபெறாமையும் பற்றி, “தலமேழுக்கும் ஆதாரா” என்றார்.

திருக்கண்ணமங்கை – சோழநாட்டுத் திருப்பதிகளி லொன்று. உம்பர் – இடவாகுபெயர்.
மலர் – பால்பகாஅஃறிணைப்பெயர்; இங்குப் பன்மையின் மேலது. வீழ்தாரா, நில்லா – எதிர்மறைப் பலவின்பால் முற்றுக்கள் எச்சமாய் நின்றன;
ஆதலால், “அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா” என்றபடி இவற்றின் முன் வலி இயல்பாயிற்று.
வீழ்தாரா = வீழா; தா – துணைவினை, ர் – விரித்தல். தாரா கணம் – வடமொழித்தொடர்.

——–

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி
தானந் தியாகந் தருமிழி பாயின தண்ணரங்கத்
தானந் தியாகப் பகன் மறைத்தான் பெயர் தந்திடும்வே
தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே –78 –

தானம் – தானஞ்செய்தலும்,
தியாகம் – தியாகமளித்தலும்,
தவம் – தவஞ்செய்தலும்,
கல்வி – நூல்களை யோதுதலும்,
தீர்த்தம் – புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலும்,
தழலில் அவி நந்து யாகம் – அக்கினியிலே ஹவிஸ் பக்குவமாகப் பெறுகின்ற யாகமும், (என்னும் இவையெல்லாம்)
இழிபு ஆயின தரும் – இழிவான பதவிகளையே (தம்மை யுடையார்க்குக்) கொடுக்கும்;
அந்தி ஆக பகல் மறைத்தான் – மாலைப் பொழுது உண்டாம்படி சூரியனை (ச் சக்கரத்தால்) மறைத்தவனான,
தண் அரங்கத்தான் – குளிர்ந்த திருவரங்க நகருடையானது,
பெயர் – திருநாமமோ,
வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமத்தை தந்திடும் – (தன்னைக் கருதினவர்க்குப்) பிரமனும் சிவனும் இந்திரனும்
அறிய மாட்டாத பரம பதத்தைக் கொடுத்திடும்) (எ – று.) – இரண்டாமடியில், தான் – அசை.

ஆதலால், அவன் திருநாமத்தைக் கூறிப் பரமபதமடையுங்க ளென்பது, குறிப்பு.
நற்கதி பெறுதற்குஉரிய உபாயமென்று கொள்ளப்படுகிற தானம் முதலிய அனைத்தினும் பகவந் நாம ஸ்மரணத்துக்கு
உள்ள மகிமையை வெளி யிட்டார்.
மற்றவையெல்லாம், அழியுந் தன்மையனவான இழிந்த இந்திரன் முதலிய இறையவர் பதங்களையே கொடுக்க மாட்டும்;
நாமஸ்மரணமோ, அந்தமி லின்பத்து அழிவில் வீட்டைத் தரும் என வேறுபாடு விளக்கப்பட்டது.

இங்குத் தானம் முதலியனவாகக் கூறினது, சுவர்க்கம் முதலிய சிற்றின் பங்களை உத்தேசித்துச் செய்யும் காமியகருமங்களை;
முத்தி யுலகத்து நிரதிசய வின்பத்தைப் பெறுதற்கு உபயோகமாகச் செய்யும் நிஷ்காம்ய கருமங்களை யன்றென் றறிக.

தானம் – சற் பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும்,
தியாகம் – வரையறை யின்றிப் பொதுப்படக் கொடுத்தல் என்றும் வேற்றுமை யுணர்க;
முன்னது – புண்ணியக் கொடை யென்றும், பின்னது – புகழ்க் கொடை யென்றுங் கூறப்படும்.

தாநம், த்யாகம், தபஸ், தீர்த்தம், ஹவிஸ், யாகம், வேதா, நந்தீ, ஆகண் டலன், பரந்தாமம் – வடசொற்கள்.
அவி – வைதிகாக்கினியில் மந்திர பூர்வமாக ஓமஞ்செய்யப்படும் நெய்ம் முதலிய தேவருணவு.
நந்துதல் – கெடுதல்; இங்கு, நன்றாகப்பசநமாதல். நந்துயாகம் – வினைத்தொகை.
நந்தியாகம் என்பதில் இகரத்தை, “யவ்வரி னிய்யாம்” என்றபடி நிலை மொழி யீற்றுக் குற்றியலுகரம் திரிந்த தென்றாவது,
“யவ்விற்கு, இய்யும் மொழி முதலாகி முன் வருமே” என்றபடி வருமொழி வடசொல்லின் யகரத்துக்கு முன் வந்த இகர மென்றாவது கொள்க.
ஆகண்டலன் – (பகைவரை) நன்றாகக் கண்டிப்பவன். பரந்தாமம் – மேலான இடம். தரும் – முற்று. இழிபாயின – பெயர்; செயப்படுபொருள்.
தந்திடும் என்றதில் இடு – துணிவுணர்த்தும். பகல் – சூரியனுக்கு இலக்கணை.
நந்தி என்றதன் நகரம், யமகத்தின் பொருட்டு னகரமாகப் கொள்ளப்பட்டது.

————-

தாமரை மாத்திரை மூப்பற்ற வானவர் தண்ணறும் செந்
தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க
தாமரை மாத்திரை போல்வளைந் தேற்றுத் தருப் பொருட்டால்
தாமரை மாத்திரைக் கேசங்கி னோசையிற் சாய்ந்தனரே –79-

தாமரை மாத்திரை – பதுமமென்னுந் தொகை யளவுள்ளவர்களான,
மூப்பு அற்ற வானவர் – முதுமை யில்லாத இயல்பை யுடைய தேவர்கள்,
தரு பொருட்டால் – பாரிஜாத தருவின் நிமித்தமாக,
திரை தண் நறுஞ் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை – திருப் பாற்கடலிற் குளிர்ந்த பரிமளமுள்ள
சிவந்த தாமரை மலரின் மீது தோன்றினவளான திருமகளினது கணவரும் குளிர்ந்த ஸ்ரீரங்கத்தை இடமாகக் கொண்டவருமாகிய நம்பெருமாளை,
மா திரை போல் வளைந்து ஏற்று – பெரிய திரைச் சீலை போலச் சூழ்ந்து எதிர்த்து,
சங்கின் ஓசையின் – (அப் பெருமான் ஊதி முழக்கிய) சங்கத்தினோசையினால்,
தாம் -,
அரை மாத்திரைக்கே – அரை மாத்திரைப் பொழுதிலே,
சாய்ந்தனர் – மூர்ச்சித்து வீழ்ந்தனர்.

பதுமமென்பது, ஒருபெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி.
இங்குப் பதுமமென்ற அத்தொகையை அதற்கு ஒருபரியாயநாமமாகிற “தாமரை” என்ற சொல்லினாற் குறித்தது. லக்ஷிதலக்ஷணை.
மாத்ரா என்ற வடசொல் விகாரப்பட்டது.
தா – வருத்தம் மிக்க,
மரை – மரணமும்,
மா – மிகுந்த,
திரை – தோற்சுருக்கமும்,
மூப்பு – முதுமையும்,
அற்ற வானவ ரென்று உரைப்பாரு முளர். திருப் பாற்கடல் கடைந்த போது, அதனினின்று மலர்ந்த செந்தாமரை மலரை
ஆசனமாகக் கொண்டு திருமகள் திருவவதரித்தனளென்று புராணம் கூறும்.

முதலடியிலும் இரண்டாமடியிலும் வந்த “தாமரை” என்ற சொல்லுக்குப் பொருள் வெவ்வேறாதலால், யமக விலக்கணம் சிதைந்ததாகாது.
மா – இலக்குமியைக் குறிக்கையில், வடசொல். திரை – அலை; கடலுக்குச் சினையாகுபெயர்.
பொருட்டு – நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு; ஆல் – அசை.
மாத்திரை – கண்ணிமைப் பொழுது, அல்லது கைந் நொடிப் பொழுது.
திரைச் சீலை யுவமை – பிறர் காண வொண்ணாதபடி சூழ்ந்து கொள்வதற்கு.

———-

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் தண் புனல் அரங்கே
சாகைக்குந் தத்துப் படையாழி யேந்த றமர்கள் வெய்யோர்
சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே–80-

சாகை – கிளைகளை யுடைய,
குந்தத்து – குருந்த மரத்தின் மேல்,
துகில் தூக்கி – (கோப ஸ்திரீகளுடைய) சேலைகளை எடுத்துப் போய் வைத்துக் கொண்டு,
மாதர் தமை நகைத்தாய் – அந்த இடைப் பெண்களை நோக்கிப் பரிகாசமாகச் சிரித்தவனே!
சாகைக்கும் தத்துவங்கட்கும் எட்டாய் – வேதங்களுக்கும் தத்துவங்களுக்கும் எட்டாதவனே!
தண் புனல் அரங்கம் ஈசா – குளிர்ச்சியான நீர் வளத்தை யுடைய ஸ்ரீரங்கத்துக்குத் தலைவனே! –
கை – (நினது) திருக் கைகளில்,
குந்தத்து – குந்தமென்னும் ஆயுதத்தோடு,
புடை ஆழி – பகை யழிக்க வல்ல சக்கரத்தையும்,
ஏந்தல் – தரித்திருத்தல்,
வெய்யோர் சாகைக்கும் தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும் – துஷ்டர்கள் அழியுமாறும்
அடியார்கள் துன்பம் நீங்குமாறும் நீகொண்ட கருத்தினாற் போலும்; (எ – று.)

“போலும்” என்பது – ஒப்பில்போலி: அதாவது – உவமைப் பொருள் தராத “போல்” என்னுஞ் சொல்;
“ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்” என்ற தொல்காப்பியத்தால்,
அச் சொல் உரையசைப் பொருளதாகி வாக்கியாலங்காரமாய் நிற்கு மென்று விளங்குதலால்,
எம்பெருமான் திருக்கைகளிற் சிறந்த படைக்கலங்களைக் கொண்டிருத்தல் துஷ்ட நிக்கிரகஞ் செய்து சிஷ்ட பரிபாலனம்
பண்ணுஞ் சங்கல்பத்தினாலேயே யாமென்ற கருத்து அமையும்.
சாகை – வேதத்தின் பகுப்பு; வேதத்துக்குச் சினையாகு பெயர்.
தத்துவங்கள் – ஐம்பொறி, ஐம்புலன், ஐம்பூதம், ஐந்துகருமேந்திரியம், பிரகிருதி, மஹாந், அகங்காரம், மநஸ் என்பன.
எட்டுதல் – புலனாதல். இனி, வேதங்கட்கும் மற்றைத் தத்துவ நூல்கட்கும் சிறிதளவே யன்றி
முழுவதுஞ் சொல்ல முடியாதவனே யென்று உரைப்பினும் அமையும்;
இப் பொருளில், தத்துவமென்பது – அதனை யுணர்த்தும் நூலுக்கு ஆகு பெயராம். தமர் – தம்மைச் சேர்ந்தவர்.

சாகா, தத்வம், ஸங்கல்பம் – வடசொற்கள்.
கை குந்த துப்பு உடை ஆழி ஏந்தல் என்று பதம் பிரித்து, கை – கையில், குந்த – இருக்க,
துப்பு உடை ஆழி ஏந்தல் – வலிமையை யுடைய சக்கரத்தைத் தரித்தல் என்று உரைத்தலு மொன்று.

“தமர்கள் வெய்யோர் சாகைக்கும் தத்துத் தவிர்கைக்கும்” என்ற தொடரில்,
“தமர்கள்” என்பது “தத்துத் தவிர்கை” என்பனோடும்,
“வெய்யோர்” என்பது “சாகைக்கும்” என்பதனோடுமாக மாறிச் சென்று இயைதல், எதிர் நிரனிறைப் பொருள்கோள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -41-60-

January 24, 2022

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள் இலைக்
கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக்
கலக் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே –41-

கலக்கு – (மனத்தைக்) கலங்கிச் செய்கிற,
ஊழை – ஊழ் வினையை,
கைக்கும் – வெறுத்து ஒழிக்க வேண்டு மென்னும்,
கருத்து உடையீர் -எண்ணத்தை யுடையவர்களே! (நீங்கள்),
அரங்கத்துள் – ஸ்ரீரங்கத்திலே, –
காது – (பகைவரை) மோத வல்ல,
படைக் கலம் – ஆயுதங்களை யுடைய,
கூழை கைக்குள் – படை வகுப்பின் ஒழுங்கினிடையிலே,
வரு – (போர்க்கு) வந்த,
வாணனை – பாணாசுரனை,
கண் நுதலும் விட்டு அகல – (தன்னைச் சரண மடைந்தது பற்றிப் பாதுகாப்பதாக உடன் பட்ட) நெருப்புக் கண்ணை
நெற்றியிலுடையவனான சிவபிரானும் (பாதுகாக்கமாட்டாமற்) கைவிட்டு விலக,
கூழை கை குப்பை கண்டானை – (அவ் வாணனது) குறைபட்ட கைகளின் குவியலைக் கண்டவனை
(அவன் கைகளைத் துணித்து வீழ்த்திக் குவியல் செய்தவனான எம்பெருமானை),
வீதியில் கண்டு – திருவீதியிலே உத்ஸவங்கண்டருளத் தரிசித்து,
உவந்து – மன மகிழ்ந்து,
இலை கலம் கூழை கைக்கும் கறி இட்டு துய்த்தும் இரும் – இலையாகிய பாத்திரத்திலே கூழாகிய
இழிந்த வுணவைக் கசக்கின்ற கறிகளைச் சேர்த்து உண்டு கொண்டாயினும் வசித்திருங்கள்; (எ – று.)

வறுமையினால் வருந்தியாயினும் நம்பெருமாளைச் சேவித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திலே வசித்தல் கொடிய பழவினையை
யொழித்து முத்தி பெறுவித்தற்குச் சாதனமாகு மென்று சனங்களுக்கு உபதேசித்தவாறாம்.
அரங்கத்துள் கண்டு உவந்து இரும் என இயையும்.

இரண்டாமடியில், கலம் – உண்கலம், கைக்கும் – இனியதல்லாத என்றபடி.
கறி – கறிக்கப்படுவது; கறித்தல் – கடித்துத் தின்னுதல். இட்டுந் துய்த்து என்றவிடத்து உம்மை மாற்றப்பட்டது.
காது படைக்கலம் – வினைத்தொகை. படைக்கலம் – போர்க்கருவி.
கண்ணுதல் – வேற்றுமைத் தொகை யன்மொழி. கை – படைவகுப்பினது, கூழைக்குள் – பின்னணிக்குள்ளே,
வரு – வருகின்ற என்று உரைப்பாரு முளர்.
நான்காமடியில், கைக்குப்பை – கைகளின் தொகுதியை, கூழைகண்டான் – குறை செய்தவனென்று இயைத்து உரைப்பினுமாம்.

————-

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய் காலன் என்னும்
கண்ணா கனாவி கவர்வதுவே மெய்கதி நல்கேனக்
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள் காரங்கற்
கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –42-

யாவும் – (செல்வம் இளமை முதலிய) எல்லாப் பொருள்களும்,
கனாவின் கண்ட பொருள் போல பொய் – சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப் பொய்யாகும்
(சிறிதும்நிலைபேறின்றி அழியு மென்றபடி);
காலன் என்னும் கண்டகன் ஆவி கவர்வதுவே மெய் – யம னென்கிற கொடியவன் (பிராணிகளின்) உயிரை
(உடம்பினின்று) கவர்ந்து கொள்ளுதலே உண்மை: (ஆதலால்),
கதி நல்கு – (எனக்கு) உயர்ந்தகதி யாகிய பரமபதத்தை. அளித்தருள்வாய்,’
என – என்று (கண்டாகர்ணன்) பிரார்ததி்க்க,
கண்டகனா இ பொழுதே செல்க என்று அருள் – ‘கண்டா கர்ணனே! இப்பொழுதே (பரமபதத்திற்குச்)
சென்று சேர்வாயாக’ என்று சொல்லி அருள் செய்த,
கார் அரங்கன் – (கைம்மாறு கருதாத கொடையிலும் கரிய திருநிறத்திலும் குளிர்ச்சியிலும் காளமேகம்) போன்றவனான ஸ்ரீரங்கநாதனை,
கடிது – விரைவில்,
கண் தக கண்டு – கண்கள் தகுதி பெறுமாறு தரி சித்தும்,
நா இன்புஉற வாழ்த்தி – நாக்கு இனிமை யடையுமாறு துதித்தும்,
உய்ம்மின் – ஈடேறுங்கள்; (எ – று.)

காலன் – பிராணிகளின் ஆயுட் காலத்தைக் கணக்கிடுபவன். கண்டகம் – முள்;
அதுபோலப் பிராணிகளை வருத்துபவன், கண்டகன்.
மூன்றாமடியில் ‘கண்டகனா’ என்பது – வடமொழிச்சிதைவு.
செல்கென்று – தொகுத்தல்.
கண் தக நா இன்புற கண்டு வாழ்த்தி – முறைநிரனிறைப்பொருள்கோள்.
கண் தக – கண் படைத்த பயன் பெற என்றபடி.
அரங்கற்கண்டகநா வின்புறக்கண்டு என்றவிடத்து, உயர்திணையில் இரண்டனுருபு தொக்கது:
உயர்திணைப்பெயரீற்று னகரமெய் பொதுவிதிப்படி வலிவர இயல்பாகாது றகரமாத் திரிந்தது,
இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால்;
‘இயல் பின் விகாரம்.’ நாவின்புற என்றவிடத்து, நகரவேறுபாடு, யமகநயத்தின் பொருட்டுக் கொண்டது.

————-

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் தீங்கு நன்காகும் பராக்
கடிக்கும் பணியலர் தாழ்வார் கல்லாமையும் கற்றமையாம்
கடிக்கும் பணி யறம் எல்லாம் அரங்கர் பைம் கன்னித் துழாய்க்
கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே –43-

அரங்கர் – ரங்கநாதரது,
பைங் கன்னி துழாய் கடிக்கும் – பசிய இளமையான திருத்துழாய் மணம் வீசப் பெற்றனவும்,
பணி ஒளிக்கும் – ஆபரணங்கள் விளங்கப் பெற்றனவமான,
நல்ல பாதம் – அழகிய திருவடிகளை
கருதினர்க்கு – தியானித்தவர்கட்கு,
கடிக்கும் பணி நஞ்சு அமுது ஆகும் – கடிக்கிற பாம்பின் விஷமும் அமிருதமாகும்;
தீங்கும் நன்கு ஆகும் – (பிறர் செய்யுந்) தீமையும் நன்மையாய் முடியும்;
பராக்கு அடிக்கும் பணியலர் தாழ்வார் – பராமுகஞ் செய்து அவமதிக்கிற பகைவர்களும் கீழ்ப் படிந்து வணங்குவார்கள்;
கல்லாமையும் கற்றமை ஆம் – பயின்றறியாத பொருள்களும் பயின்றன போல விளங்கும்;
பணி அறம் எல்லாம் கடிக்கும் – (சாஸ்திரங்களிற்) சொல்லப்பட்ட தருமங்களெல்லாம் சித்திக்கும்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளை மநநஞ் செய்பவர்க்கு நேர்கிற இஷ்டப் பிராப்தியும், அநிஷ்ட நிவிருத்தியும் இச் செய்யுளிற் கூறப்பட்டன.

பணம் – படம்; அதனையுடையது, பணீ எனப் பாம்புக்குக் காரணக் குறி: அவ்வடசொல், பணியென ஈயீறு இகரமாயிற்று.
பராக்கடித்தல் – முகங்கொடாது அசட்டை செய்தல்; ஏமாற்றுதலுமாம்.
பணியலர் – வணங்காதவர்; எனவே, பகைவராயிற்று: எதிர்மறைப் பலர் பால் வினையாலணையும் பெயர்.

மூன்றாமடியில், கடித்தல் – கிடைத்தல். பணியறம் – வினைத்தொகை; இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொண்டு,
கைங்கரிய ரூபமான நல்வினைப் பயன்களெல்லாம் கை கூடு மெனினுமாம்.

நான்காமடியில், கடிக்கும் என்பது – கடி என்ற உரிச்சொல்லின் மேற் பிறந்த எதிர்காலப் பெயரெச்சம்.
ஒளித்தல் – ஒளி செய்தல். ‘கடிக்கும்’, ‘ஒளிக்கும்’ என்ற தெரிநிலைப் பெயரெச்சங்களும்,
‘நல்ல’ என்ற குறிப்புப்பெயரெச்சமும், அடுக்கி, ‘பாதம்’ என்ற பெயரைக் கொண்டன.
முதலிரண்டடிகளில் முரண்தொடை காண்க.
கடிக்கும் பணி நஞ்சு அமுதாதல் முதலியவற்றைப் பரம பாகவத னான பிரகலாதன் முதலாயினாரிடம் காணலாம்.
ஒளிக்குந்நல்ல, நகர மெய் -விரித்தல்.

————-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும் விண் மீ
தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும் சென்றெதிர் மோ
தினகரனாருயிர் செற்றார் அரங்கர் திகிரி சங்கேந்து
தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –44-

தினகரன் – சூரியனும்,
ஆர்கலி – கடலும்,
தீ – அக்கினியும்,
காற்று – வாயுவும், (ஆகிய இவைகளெல்லாம்),
ஒடுங்கும் செயலும் – தம் தம் வரம்பு கடவாது ஓரெல்லைக்கு உட்பட்டு அடங்கி யிருக்குஞ்செயலும்,
விண் மீதில் நகரனார் கொண்டல் ஏழ் செருக்காமையும் – வானத்தில் (அமராவதி யென்னும்) நகரத்தை யுடையவனான
இந்திரனாற் செலுத்தப்படுகிற ஏழு மேகங்களும் செருக்கி அளவிறந்த மழை பொழிந்து உலகங்களை யழித்திடாமையும்,
(என்னும் இவை யாதுகாரணத்தா லெனின்),
சென்று எதிர் மோதின கரன் ஆர் உயிர் செற்றார் – எதிராக வந்து பொருத கரனென்னும் அரக்கனது அருமையான உயிரை யொழித்தவரும்,
திகிரி. சங்கு ஏந்தின கரனார் – சங்க சக்கரங்களைத் தரித்த திருக்கைகளை யுடையவரும்,
நம்பெருமாள் – நம்பெருமாளென்று திருநாம முடையவருமான,
அரங்கர் – ரங்கநாதப்பிரான்,
அமைத்த – நில்லென்று குறித்து வைத்த,
திரு கை – திருக்கையை,
கண்டே – பார்த்தேயாம்; (எ – று.)

திநகரன் முதலியன அமைந்து நடப்பது திருவரங்கர் திருக்கை கொண்டு குறிப்பித்த திருவாணையைக் கண்டேயாமென
அப்பெருமானது ஸர்வ நியாமகத்வம் இதிற் கூறப்பட்டது.

நெடும் கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதுவும்-ஊழிதனில்
சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி யரங்கேசர் தம் திருவாணையினே-திருவரங்கத்து மாலை

திநகரன் – பகலைச்செய்பவன்: வடசொல்.
ஆர்கலி – நிறைந்த ஓசையையுடையது; வினைத்தொகையன்மொழி.
விண்மீதினகரனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – உயர்வுப்பொருளது.
கொண்டல் – நீர்கொண்ட மேகம்; தொழிலாகுபெயர்.
கொண்டலேழ் – ஸம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.
இந்திரன் மேகவாகன னாதலால், ‘விண்மீதினகரனார்கொண்டலேழ்’ எனப்பட்டது.
ஆர்கொண்டல் என்றெடுத்து, ஒலிக்கின்ற மேகம் எனப் பொருள்கொள்ளினுமாம்.
ஆர்உயிர் – பண்புத்தொகை.
‘நம்பெருமாளமைத்த திருக்கை’ என்றது, அபயஹஸ்தமாயமைந்த வலத்திருக்கையை.
கரன் என்ற வடசொல் – கொடியவனென்று பொருள்படும்; இவன் இராவணனுக்குத் தம்பி முறையில் நிற்கின்ற ஓரரக்கன்;
தண்ட காரணியத்திலே சூர்ப்பணகை வசிப்பதற்கென்று குறிப்பிட்ட ஜனஸ்தானமென்ற விடத்தில் அவட்குப்
பாதுகாவலாக இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய அரக்கர் சேனைக்கு முதல் தலைவன்.

————

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திரு கா விரிக்கும் – அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற,
யமுனைக்கும் – யமுனா நதிக்கும்,
கங்கைக்கும் – கங்கா நதிக்கும்,
தெள் அமுது ஆம் திரு காவிரிக்கும் – தெளிவான அமிருதம் போலினிய தாகிற மேன்மை யுள்ள காவேரி நதிக்கும்,
கடற்கும் – சமுத்திரத்துக்கும்,
பிரான் – தலைவனான எம்பெருமானது,
தென் அரங்கம் – அழகிய திருவரங்கம்,
என்ன – என்று (ஒருதரமேனும் வாயினாற்) சொல்ல,
அன்பு உய்த்து இருக்கா – அன்பு செலுத்தியிராமல்,
திருக்கு ஆவிர் – மாறுபடுவீர்கள்;
இக்கு மொழியார்க்கு – கருப்பஞ்சாறு போலினிய சொற்களை யுடைய மகளிர் திறத்திலோ,
தீ மெழுகு ஆவிர் – தீப்பட்ட மெழுகு போலக் கரைந்து உருகுவீர்கள்; (இவ்வாறு ஆக),
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமாது எ ஆறு – அப்பெருமான் உங்களுடைய பிறப்பை யொழிப்பது எங்ஙனம் நிகழும்? (எ – று.)

திருவரங்கமென்று வாயினாற் சொல்லுதலுஞ் செய்யாமல் விஷயாந்த ரங்களில் ஊன்றி நிற்கின்றீர்களே,
அவன் உங்கள் ஜந்மத்தை எங்ஙனம் ஒழிப்பான்? என்று, நல்வழிச் செல்லாதவர்களைக் குறித்து இரங்கிக் கூறினர்.
‘திருக் காவிரிக்கும்’ என்ற அடைமொழியைக் கங்கை காவிரிகட்குங் கூட்டலாம்.
யமுனைக்குப் பிரான் என்றது, யமுநாநதிதீரத்திற் கிருஷ்ணாவதாரஞ் செய்து பல திருவிளையாடல்களை நிகழ்த்தி யருளியதனால்.
கங்கைக்குப் பிரான் என்றது, அந்நதி திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமாதலால்.
காவிரிக்குப் பிரான் என்றது உபயகாவேரி மத்தியிற் பள்ளி கொண்டருளுதலால்.
கடற்குப் பிரான் என்றது, கடலை உறைவிடமாகக் கொண்டிருத்தலால்.
யமுனை கங்கை முதலிய புண்ணியநதிகளின் தீர்த்தத்தினும் காவேரி தீர்த்தத்திற்கு உள்ள இனிமை மிகுதி தோன்ற,
அதற்கு ‘தெள்ளமுதாம்’ என்ற அடைமொழி கொடுத்தார்.

யமுநா என்ற வடமொழி – யமனுடன் பிறந்தவன் என்று பொருள்படும். யமனும் யமுனையும் சூரியன் மக்க ளென்றறிக.
காவிரி – காவேரீ என்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் – கவேரனென்ற அரசனது மகள் என்று பொருள்படும்.
இக்ஷு, ஜந்மம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இருக்கா = இராமல்; ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சம்;
கு – சாரியை; உடன்பாட்டு இறந்த கால வினை யெச்சமாக ‘இருந்து’ எனப் பொருள் கொண்டு,
‘தீமெழுகாவிர்’ என்றதனோடு இயைப்பினும் அமையும்.

———–

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு
சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்மந் தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கஞ்
சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே –46-

சென்மம் – (மாறி மாறி வருந் தன்மை யனவான) பிறப்புக்கள்,
தரங்கம் – (மாறி மாறி வரும்) அலைகளை யுடைய கடலாகும்;
கருமம் – (உயிர்களைப் பிறப்பிலே சுழலச் செய்வதான) ஊழ்வினை,
சுழி – (அகப்பட்ட பொருள்களைத் தன்னில் உழலச்செய்வதான) நீர்ச் சுழியாகும்;
பிணி – (பிறந்த உயிர்களை வருத்துகின்ற) தேக வியாதிகளும் மநோ வியாதிகளும்,
சேல் – (நீரி லிழிந்தாரைக் குத்தி வருத்துகிற) மீன்களாகும்;
குசென் – அங்காரகனும்,
மந்தர் – சனியும்,
அம் கதிர் – அழகிய சூரிய சந்திரர்களும்,
பொன் – பிருகஸ்பதியும்,
கோள்கள் – மற்றைய கிரகங்களும்,
மாரி – மழையும்,
திண் கூற்று – (பிராணிகளைத் தவறாது அழிக்கும்) வலிமையுடைய யமனும்,
அசனி – இடியும்,
(ஆகிய ஆதி தைவிகத் துன்பங்கட்குக் காரணமான தேவ வர்க்கங்கள்),
இனம் – (அம் மீனின்) இனமாய்ப் பிராணிகளை வருத்துகிற நீர் வாழ் ஜந்துக் களாகும்;
அவற்றுள் செல் மந்தர் – அப் பிறப்புக்களிலே (கரும வசத்தாற்) சென்று அகப்பட்டுக் கொண்ட அற்ப பாக்கியமுடைய மனிதர்கள்,
அங்கு விழுவோர் – அக் கடலில் விழுந்து வருந்துபவர்களாகும்;
செல் மந்தரம் கவின் தோளார் அரங்கர் திரு பதமே – மேகந் தவழும் மந்தர கிரி போன்ற அழகிய தோள்களையுடையவரான ரங்கநாதரது திருவடியே,
கரை சேர்க்கும் வங்கம் – (அப்பிறவிக் கடலினின்று) முத்திக் கரை சேர்க்கும் மரக்கலமாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – பிரிநிலை.

அவயவி அவயவம் முதலிய அனைத்தையும் இங்ஙனம் உருவகஞ்செய்து உரைத்தது. முற்றுருவகவணி;
வடநூலார் ஸகலரூபக மென்பர்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா, ரிறைவனடி சேராதார்,”
“அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற், பிறவாழி நீந்த லரிது” என்பவாதலால்,
‘சென்மம்தரங்கம் செல் மந்த ரங்கு அவற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கம் அரங்கர் திருப்பதமே’ என்றார்.

‘செல்மந்தரம்’ என்றது, மந்தரத்தின் உயர்வு தோன்றக் கூறியதாம். அஷ்ட குல பர்வதங்களி லொன்றாகிய
மந்தரமலை போல ஓங்கி வளர்ந்த தோளென்க;
பாற்கடலைக் கலக்கிய மந்தரம் போலப் போர்க் கடலைக் கலக்குந் தோளென்றுங் கொள்க.

செல்வது செல் என மேகத்துக்குக் காரணக்குறி. கவின் – உவம வுருபுமாம்.
ஜந்மம், தரங்கம், கர்மம், குஜன், மந்தர், அசநி, பதம் – வடசொற்கள்.
தரங்கம் – கடலுக்குச் சினையாகுபெயர்.
குஜன் என்ற பெயர் – பூமியினின்று பிறந்தவ னென்றும்,
மந்தன் என்ற பெயர் – (நொண்டியாதலால்) மெதுவாக நடப்பவ னென்றும் பொருள்படும்.
குசென் என்றது, யமகநோக்கிய விகாரம்.

இரண்டாமடியில் ‘மந்தர்’ என்ற பன்மை – இழிவுணர்த்தும்.
செல் மந்தரம் கவின் தோளார் என்பதற்கு – மேகமும் மந்தர கிரியும் போன்ற திருமேனி யழகையும்
தோள்களை யுமுடையவ ரென்று உரைத்தலு மொன்று;
மேகம் போன்ற அழகிய மேனியும், மந்தரம் போன்ற தோளுமென முறைநிரனிறை.

மூன்றாமடியில், மந்தர் – மந்த புத்தி யுடையாருமாம்.

————-

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம லங்க ளறுசீ ரரங்க பகட்டயிரா
பதக்கம லங்கரித் தூர்வோன் சிவனையன் பார்க்கவந்துன்
பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே –47-

பதக்கம் – பதக்கமென்னும் அணிகலத்தையும்,
அலங்கல் – (பலவகை) ஆரங்களையும்,
அணி – அணிந்த,
மார்ப – திருமார்பையுடையவனே!
இமையோர் – தேவர்கள்,
பொன்னி படிந்து – திருக்காவேரி தீர்த்தத்தில் நீராடி,
பதக்கம் மலங்கள் அறு – தீவினைகளாகிய அசுத்தம் நீங்கப் பெறுதற்கிடமான,
சீர் அரங்க – ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
பகடு அயிராபதம் கம் அலங்கரித்து ஊர்வோன் – பெருமையை யுடைய ஐராவதமென்ற யானையின்
மத்தகத்தைச் சிங்காரித்து ஏறி நடத்துபவனான இந்திரனும்,
சிவன் – சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
பார்க்க -, வந்து (நீ) எழுந்தருளி,
உன் பதம் கமலங்கள் அடியேன் தலைக்கு பாலிப்பது – உனது திருவடித் தாமரை மலர்களை அடியேனுடைய
முடியில் வைத்து அருள்செய்வது, என்று – எந்நாளோ! (எ – று.)

அலங்கல் – தொங்கியசைதல்; மாலைக்குத் தொழிலாகுபெயர்.
இமையோர் – கண் இமையாதவர்.
யமகத்தின்பொருட்டு, பாதகம் என்ற வடசொல் குறுக்கலும் விரித்தலு மாகிய விகாரங்களைப் பெற்றுப் பதக்கம் என நின்றது.
அயிராபதம் – ஐராவதம் என்ற வடசொல்லின் போலிவிகாரம்.
கம், சிவன், பதம், கமலம் – வடசொற்கள். கம் – தலை. சிவம் – சுபம்; அதனை(த் தன் அடியார்க்கு)ச் செய்பவன், சிவன்.
அயிராபதப்பகடு என்று மாற்றி, ஐராவதமென்னும் ஆண்யானை யென்றும் உரைக்கலாம்:
பகடு – யானையின் ஆண்மைப்பெயர். கமலம் என்ற பெயர் – நீரை யலங்கரிப்பது என்று காரணப் பொருள்படும்.

——————

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு மாதர்பால் போகத்தையும்
பாலனம் செய்ய விருப்பதி லையம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே –48-

பால் அனம் – வெண்ணிறமான அன்னப் பறவைகள்,
செய் – கழனிகளில்,
அமர் – பொருந்தி வசிக்கப் பெற்ற,
நாடு – தேசத்தை,
ஆண்டு – அரசாட்சி செய்து,
பூணொடு பட்டு அணிந்து – ஆபரணங்களையும் பட்டாடையையும் தரித்து,
செய்ய கலத்து பால் அனம் உண்டு – சிவந்த (செம் பொன் மயமான) பாத்திரத்திற் பாற்சோற்றைப் புசித்து,
மாதர் பல் போகத்தையும் பாலனம் செய்ய இருப்பதில் – மகளிர் சேர்க்கையாலாகும் பல வகையின்பங்களையும் பரிபாலித்து வீற்றிருப்பதனினும்,
ஐயம் பருகி – இரந்து பெற்ற கூழைக் குடித்தாயினும்,
நந்தன் பாலன் அம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை – நந்தகோபனது குமாரனும் அழகிய
திரு மகளின் கணவனுமான திருமாலினது ஸ்ரீரங்கத்திலே வாசஞ்செய்தல், நன்று – நல்லது; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

அனம் – ஹம்ஸம் என்ற வடசொல்லின் சிதைவான அன்ன மென்ப தன் தொகுத்தல்.
நீர்வளமிகுதியால் தாமரை முதலிய நீர்ப்பூக்க ளுள்ள விடத்திலே சென்று விரும்பி வாழ்தல் அன்னப்பறவையின் இயல்பாதலால்,
‘பாலனஞ்செய்யமர்’ என்ற அடைமொழி நாட்டின்வளத்தை யுணர்த்தும்.
அணிதல் – பொதுவினை. அனம் = அந்நம்.
பசும் பொன்னினாலாகிய பூணை ‘பைம்பூண்’ என்றல் போல, செம் பொன்னினாலாகிய கலத்தை ‘செய்யகலம்’ என்றார்.
கலம் – உண்கலம். பாலனஞ்செய்தல் – தவறாமல் நுகர்தல்.
செய்ய = செய்து: எச்சத் திரிபு.
தமக்கு உரிய பலவகைப் போகங்களையும் மாதர்கள், பாலனம் செய்ய – தவறாது நடக்கும்படி பாதுகாக்க என்று உரைப்பினும் அமையும்.
இருப்பதில் – ஐந்தனுருபு எல்லைப் பொருளது.

நந்தன் – கண்ணனை வளர்த்த தந்தை. வசுதேவனும் தேவகியும் நகம் சனாற் சிறையிலிருத்தப்பட்டு
வடமதுரையில் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில் கண்ணனாய் அவதரிக்க,
அக் குழந்தையைக் கம்சன் கொல்லக் கூடு மென்ற அச்சத்தால், தாய் தந்தையர் அத் தெய்வக் குழவியின் அநுமதி பெற்று
அந்தச்சிசுவை அதுபிறந்தநாடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாந்தலைவனான
நந்தகோபனது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு, அங்கு அப்பொழுது அவன் மனைவியான யசோதைக்கு
மாயையின்அம்ச மாய்ப் பிறந்திருந்த தொரு பெண்குழந்தையை எடுத்துக்கொண்டுவந்து விட,
அதுமுதற் கம்சனைக் கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோ குலத்திலேயே
நந்தகோபன்குமரனாய் யசோதைவளர்க்க வளர்ந்தருளின னென்று உணர்க.
செய்யவள் – செவ்வியையுடையவள். கோமான், மான் – பெயர்விகுதி. பையில்கை = பயில்கை;
இப்போலி, அடுத்த யமகச்செய்யுளின் அந்தாதித் தொடர்ச்சி நோக்கிக் கொள்ளப்பட்டது.
‘பருகி’ என்ற வினையை நோக்கி, ‘ஐயம்’ என்றது – கூழ் எனப்பட்டது. போகம்,, பாலநம், பாலன் – வடசொற்கள்.
நம் செய்யவள் கோமான் என்று எடுத்துரைத்தலுமொன்று.

————

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம் பரந்த குரம்
பையிலத்தி யுள்விளை பாண்டமென்னாமல் புன்பாவையர் தோல்
பையிலகத்தி செய்து நரகெய்து வீருய்யப் பற்றுமினோ
பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே –49-

பையில் – (ஒன்றோடொன்று) பொருந்தி யிருக்கின்ற,
அத்தி – எலும்பும்,
மூளை – மூளையும்,
நரம்பு – நரம்பும்,
ஊன் – தசையும்,
உதிரம் – இரத்தமும்,
பரந்த – பரவிய,
குரம்பை – (உயிர் சிலநாள் தங்குஞ்) சிறு குடிசை (இது):
இலத்தி உள் விளை பாண்டம் – மலம் அகத்திலே மேன்மேலுண்டாகப்பெறும் பாத்திரம் (இது)’,
என்னாமல் – என்று (உடம்பின் அசுத்தத் தன்மையைக்) கருதாமல்,
புல் பாவையர் தோல் பையில் அத்தி செய்து – இழிகுணமுடைய மகளிரது உடம்பினிடத்து ஆசை வைத்து,
நரகு எய்துவீர் – நரகத்தை யடைபவர்களே! – (நீங்கள்),
உய்ய – ஈடேறுமாறு,
அத்திபையில் மேவி துயில் கூர் அரங்கர் பொன் பாதத்தை பற்றுமினோ – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனது) படத்தின் கீழ்த்
திருவுள்ளமுவந்து யோக நித்திரை செய்தருளுகிற ஸ்ரீரங்கநாதருடைய அழகிய திருவடிகளைச் சரணமடையுங்கள்; (எ – று.)

அத்தி என்பது – எலும்பு என்ற பொருளில் அஸ்தி என்ற வடசொல்லும், ஆசை என்ற பொருளில் அர்த்தி என்ற வடசொல்லும்,
கடல் என்ற பொருளில் அப்தி என்ற வடசொல்லும் சிதைந்ததாம்.
பையில் = பயில்; முதற்போலி, ருதிரம், பாண்டம், நரகம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
தோற்பை – தோலினாலாகிய பை. அத்தி செய்தல் – அர்த்தித்தல்: வேண்டுதல்.
பற்றுமினோ என்ற ஓகாரம் – கழிவிரக்கத்தைக் காட்டும்.

“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலும் – இடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்றுள், எத் திறத்தா ளீர்ங்கோதையாள்”,
“ஊறி யுவர்த்தக்க வொன்பதுவாய்ப்புலனுங், கோதிக் குழம்பலைக்குங் கும்பம்,”
“தோற்போர்வை மேலுந் துளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும், மீப்போர்வை மாட்சித் துடம்பானால் –
மீப்போர்வை, பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப், பைம்மறியாப் பார்க்கப்படும்” என்ற
நாலடியார்ப் பாடல்கள் உடம்பின் அசுத்தியை நன்கு விளக்கும்.

இச் செய்யுளில் அடிதோறும் முதலிலுள்ள ஐகாரம் குறுக்கமாதலால், அதனைத் தனியே நேரசையாகக் கொள்ளாது
அடுத்த குறிலோடு சேர்த்து நிரையசையாகக் கொள்ள வேண்டும்;
இல்லாவிடின், “நேர்பதினாறே நிரை பதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்றது
முதலிய கட்டளைக் கலித்துறை யிலக்கணம் சிதையும்.
கீழ்ச்செய்யுளின் ஈற்றடியில் வந்த “பையில்கை” என்றவிடத்தும் இங்ஙனமே காண்க.

———–

பாதகங் கைக்கு மரங்கர் பல்பேய் பண் டிராவணனுற்
பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார் படிக்கேற்ற திருப்
பாதகங் கைக்குள் விழு முன்னமே பங்கயன் விளக்கும்
பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –50-

பாதகம் – (அடியார்களுடைய) பாவங்களை,
கைக்கும் – வெறுத்தொழிக்கின்ற,
அரங்கர் – ரங்கநாதரும், பல் பேய் – பலபேய்கள்,
பண்டு. முன்னாளில்
இராவணன் உற்பாதம் கம் கைக்கும் என்று எள்ள – இராவணனுடைய உற்பாதமான தலைகள் கசக்குமென்று இகழுமாறு,
கொய்தார் – (அத்தலைகளைத்) துணித்தவருமான திருமால்,
படிக்கு – (தாம் மாவலி பக்கல் வேண்டிய) மூவடி நிலத்தைத் தவறாது பெறுதற்காக,
ஏற்ற – வாங்குதற்கு உடன்பட்ட,
திருப்பாத கம் – (கொடுப்பதைத்) திருப்பக் கூடாத ஜலம்
(வாக்கு தத்தத்தோடு மகாபலி சக்ரவர்த்தி தாரை வார்த்துக் கொடுக்கிற நீர்),
கைக்குள் விழும் முன்னமே – (அப்பெருமானது) அகங்கையில் விழுதற்கு முன்னமே, –
பங்கயன் விளக்கும் பாதம் கங்கை குளிர் நீர் – பிரமன் திருமஞ்சனஞ் செய்த திருவடியின் தீர்த்தமாகிய குளிர்ந்த கங்கா ஜலமானது,
ஈசன் படர் சடைக்கே வீழ்ந்தது – சிவபிரானது பரவிய சடையிலே விழுந்திட்டது; (எ – று.)

மாவலி பக்கல் மூவடி மண் வேண்டிப் பெற்று உலகனைத்தையும் தனது உடைமை யாக்கி அவனைச் செருக்கடக்குதற்கென்று
திருமால் கொண்ட திருவவதாரமாகிய வாமன மூர்த்தியின் கையில் மகாபலி தாரை வார்த்துக் கொடுத்த நீர் விழுவதன் முன்,
அவ் வாமனன் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகமளக்க மேலே சத்திய லோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியை
அங்குப் பிரமன் தன் கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகிய
கங்காநதி சிவபிரானது சடையில் வீழ்ந்தது என்றார்.

விரைவுமிகுதி தோன்ற; இங்ஙனம் காரணத்தின் முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறுதல், மிகையுயர்வுநவிற்சியணி.

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீரேற்ற தொன்னான் முகத்தோன் விளக்கவும்
செம்போன் முடிக் காரேற்ற யரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன
வண் திருக் குறளாகி நிமிர்ந்த வன்றே -திருவரங்கத்து மாலை

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னியின் மேல்
ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு

உத்பாதம் – வடசொல்: பின்நிகழுங் தீமைக்கு அறிகுறியாக முன்னர்த் தோன்றுந் தீ நிமித்தம்;
இராவணனது பத்துத் தலைகளை உலகத்தின் தீமைக்கு அறிகுறி யென்றும் இனியன வல்லவென்றும்
பிணம் பிடுங்கித் தின்னும் இயல்பினவான பேய்களும் இகழ்வதாகக் கூறியது, அவனது மிக்க இகழற் பாட்டை விளக்கும்.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது: வடசொல்; தாமரைக்குக் காரண விடுகுறி: அதில் தோன்றியவன், பங்கயன்.
ஈசன் – ஐசுவரியமுடையவன். சடைக்கு – உருபுமயக்கம்.

————–

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
பட நாகத் தந்தம் பறித்தோன் புகழைப் பரவுமின்க
பட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன் முற்பல்
பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே –51-

அந்தரம் மீது – பரம பதத்தில்,
படம் நாகத்து – படங்களை யுடைய திருவனந்தாழ்வான்மீது,
இருப்பான் – வீற்றிருப்பவனும்,
எம் பரன் – எமது இறைவனும்,
நாகம் தந்தம் பட பறித்தோன் – (கம்சனேவிய குவலயாபீடமென்னும்) யானையினது தந்தத்தை (அவ்வானை) அழியுமாறு பறித்துக் கொண்டவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
புகழை – கீர்த்தியை,
பரவுமின் – கொண்டாடித் துதியுங்கள்;
(அங்ஙனம் அனைவரும் புகழுமாறு அப்பெருமான் யாதுசெய்தா னெனின்), –
கபடன் – வஞ்சகனும்,
ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் – உடம்பின் அகத்துறுப்பான மனம் தீயவனுமாகிய,
சிசுபாலன் – சிசுபாலனென்பவன்,
முன் – முன்பு,
பல் பட – பலவாறாக,
நா கத்து – நாவினாற் பிதற்றின,
அந்த வசைக்கும் – அப்படிப்பட்ட (மிகக்கொடிய) நிந்தனைச் சொற்களுக்கும்,
தொல் பரகதி தந்தான் – அநாதியான பரமபதத்தைக் கொடுத்தருளினான்; (எ – று.)

சிசுபாலன் எம்பெருமானை இகழ்ந்ததற்குப் பயனாகப் பரகதியைப் பெற்றன னென்றால்,
அப்பெருமானைப் புகழ்வதற்குப் பயன் பரகதி யென்பது கூறாமலே யமையு மென்ற கருத்து, இதில் தொனிக்கும்.
சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு அத்தையும்
சேதி தேசத்தரசனான தமகோஷனுக்குப் பத்தினியுமாகிய சுருதசிரவையென்பவ ளுடைய மகன்.
திருமாலின் துவாரபாலகராகிய ஜயவிஜயர்கள் ஒருசமயத்தில் விஷ்ணுலோகத்தினுட் செல்லவந்த ஸநகாதியோகிகளைத்
தடுத்தமை பற்றி அவர்கள் வெகுண்டுகூறிய சாபமொழியால் மூன்றுபிறப்புத் திருமாலுக்குப் பகைவராய்ப் பூமியிற் சனித்து
அத்திருமாலின்கையா லிறப்பவ ராகி, முதலில் இரணிய இரணியாக்ஷராகவும், அதன்பின் இராவண கும்பகர்ணராகவும்,
அப்பால் சிசுபால தந்தவக்கிரராகவுந் தோன்றின ரென அறிக.

எம்பெருமான் பக்தியோடு தன்னைத் தியானிப்பவர்க்குத் திருவுள்ள முவந்து மோக்ஷமளிப்பதுபோலவே,
விரோதத்தினாலாகிலும் தன்னைஇடைவிடாது நினைந்திருந்தவர்க்கும் சிறுபான்மை தனது பரம
கிருபையால் அந்த முக்தியை யளிக்கின்றன னென்பது நூற்கொள்கை.

அந்தரம் – வானம், பரமாகாசம். மூன்றாமடியில் ‘கபடநாகத்து’ என்ற விடத்து, னகரவேறுபாடு யமகநயம்பற்றியது.
வசைக்கும், உம் – இழிவு சிறப்பு. பர கதி – உயர்ந்த கதி

————

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன நிரு
பறவையில் மேகலை ஈந்தான் அரங்கன் பணிந்து இமையோர்
பரவையிலாழிப் பிரான் அடிக்கீழுற் பவித்து அழியும்
பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–52-

பரவு – விசாலித்த,
ஐயில் அன்ன கண் – வேலைப்போன்ற (கூரிய) கண்களை யுடைய,
பாஞ்சாலி – திரௌபதி,
நின் பரம் என்ன – ‘(என்னைக் காப்பது) உனது பாரம்’ என்று சொல்லி முறையிட்டுச் சரணமடைய,
நிருபர் அவையில் – அரசர்கள் கூடிய சபையிலே,
மேகலை ஈந்தான் – (அவட்கு) ஆடையை யளித்தவனும்,
இமையோர் பணிந்து பரவு – தேவர்கள் வணங்கித் துதிக்கப்பெற்ற,
ஐயில் ஆழி பிரான் – கூரிய சக்கராயுதத்தை யேந்திய இறைவனுமான,
அரங்கன் – திருவரங்கநாதனது,
அடிக்கீழ் – திருவடியில்,
பரவையில் மொக்குளை போல் – கடலில் தோன்றும் நீர்க் குமிழிகள் போல,
பல கோடி பகிரண்டம் – அநேக கோடிக் கணக்காகிய அண்ட கோளங்கள்,
உற்பவித்து – தோன்றி,
அழியும் – (சிலகாலம் கழிந்தவாறே) மாய்ந்துபோம்; (எ – று.)

வாரித்தலமும் குல பூதரங்களும் வானு முள்ளே –
பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க முன்னாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமுழிகள் போலே முளைத்தனவே -திருவரங்கத்து மாலை

பாஞ்சாலீ – வடமொழித்தத்திதாந்தநாமம். பாஞ்சாலதேசத்து அரசனது மகள்; பஞ்சபாண்டவரது பத்தினி.
மேகலை யென்ற எண்கோவை யிடையணியின் பெயர், ஆடைக்கு இலக்கணை.
மேவு கலை என வினைத் தொகை நிலைத் தொடராக எடுத்து,
விரும்பப்படுகின்ற ஆடை யென்றும், பொருந்திய ஆடை யென்றும் பொருள் கொள்ளலாம்.
ஐயில் = அயில். பஹி ரண்டம் – வெளியண்டம்; இங்கு, அண்டமென்ற மாத்திரமாய் நின்றது. யமகநயத்தின்பொருட்டு,
‘நிருபரவையின் மேகலை’, ‘பரவையின் மொக் குளை’ என்று சந்தி புணர்க்காமல் லகரவீறாகவே நிறுத்திக் கொண்டார்.

————-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –53-

அம் – அழகிய,
பொன் – பொன்னையும்,
முத்து – முத்துக் களையும் கொழிக்கின்ற,
அலை – அலைகள்,
வான் அண்ட – மேக மண்டலத்தை யளாவி யுயர,
மடங்கலை ஈர்த்து ஓடும் – சிங்கங்களை யிழுத்துக் கொண்டு ஓடி வருகிற,
பொன்னி – காவேரி நதியினாற் சூழப்பட்ட,
அரங்கன் – திருவரங்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பெருமான்,
அண்டம் அடங்கலையும் – அண்ட கோளங்களெல்லாவற்றையும்,
தந்து – படைத்து,
காத்து – பாதுகாத்து,
அவை அந்தம் தன்பால் அண்ட மடங்கலை செய் – அவ்வண்டங்களெல்லாம் கற்பாந்த காலத்திலே மீண்டும்
தன் பக்கல் ஒடுங்கும்படி அழிவு செய்கின்ற, காரணம் – ஏது, (யாதெனில்),
காரண்டம் புள் அடங்கு அலை முந்நீர் மகள் உகப்பு ஆக என்றே – நீர்க் காக்கையாகிய பறவைகள் தம்மிலடங்கப் பெற்ற
அலைகளை யுடைய திருப்பாற் கடலினின்று தோன்றிய திருமகள் (கண்டு) களிப்படைதற்கு என்றேயாம்; (எ – று.)

எம்பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலை யுஞ் செய்வது பெரியபிராட்டியாரின் மனத்தை
மகிழ்விக்குந் திருவிளையாட லேயா மென்பது, கருத்து.
இரட்டுறமொழித லென்னும் உத்தியால், ‘முந் நீர்மக ளுகப்பாக’ என்பதற்கு –
(அண்டங்கட்கெல்லாம் அதிஷ்டாந தேவதையான) கடலாடை சூழ்ந்த பூமிப்பிராட்டி மகிழ்ச்சி யடைய வென்றும் பொருள் கொள்ளலாம்.

அண்டமடங்கலையுந் தந்து காத்து அவை அந்தந் தன்பால் அண்ட மடங்கலைச்செய் –
தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருமழிசைப் பிரான் –

அடங்கல் என்றது, எஞ்சாமைப் பொருளைக் காட்டும்; உம்மை – முற்றும்மை, அந்தம் அண்ட – அழிவை யடைய,
மடங்கலைச்செய் – ஊழிக்காலத் தைச் செய்கிற வென்றுரைத்தலு மொன்று.
பொன்னும் முத்தும் சிங்கங்களும் – மலையிலுள்ளவை. மலையில் முத்து, யானைத் தந்தம் முதலியவற்றினின்று தோன்றியவை யென்க.
மடங்கல் – (பிடரி மயிர்) மடங்குதலை யுடைய தென ஆண் சிங்கத்துக்குக் காரணக் குறி.
காரண்டவம் – வடசொல். உகப்பு – தொழிற்பெயர்.

———–

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆக மதிக்கு நவநீதக் கள்வ வவனி கொள்வார்
ஆக மதிக் குளம் சேர் ரங்கா வுன்னை யன்றித் தெய்வம்
ஆக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே –54-

ஆகமம் – (காமிகம் முதலிய) ஆகமங்களைக் கூறிய,
திக்கு முகம் மேல் முகம் உடையான் – நான்கு முகங்களுக்கு மேலும் ஒருமுகத்தை (ஐந்து முகங்களை) யுடையவனான சிவபிரானும்,
அயன் – பிரமனும்,
வாழ் – இனிது வசிக்கின்ற,
ஆக – திருமேனியை யுடையவனே!
மதிக்கும் நவநீதம் கள்வ – கடைந்தெடுத்த வெண்ணெயை (க் கிருஷ்ணாவதாரத்திற்) களவு செய்துண்டவனே!
அவனி கொள் வாராக – பூமியைக் கோட்டினாற் குத்தி யெடுத்துக் கொண்டு வந்த வராக மூர்த்தியானவனே!
மதி குளம் சேர் அரங்கா – சந்திர புஷ்கரிணி பொருந்திய ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
அடியேன் – (உனது) அடியவனான நான்,
உன்னை அன்றி பிறர் ஆரையும் தெய்வம் ஆக மதிக்குள் எண்ணேன் – உன்னை யல்லாமல் வேறு எவரையும்
கடவுளாக மனத்திற் கருதுதலுஞ் செய்யேன்; (எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி பர தேவதையாகிய ஸ்ரீமந்நாராயணனையே யன்றி அவனது திருமேனியிலடங்கிய
அபரதேவதை களைச் சிறிதும் பொருள் செய்யாமையில் தமக்கு உள்ள உறுதியை இங்ஙனம் வெளியிட்டார்.

திருமாலின் திருநாபியிற் பிரமனும், வலப் பக்கத்திற் சிவ பிரானும் அடங்கியுறைதலை,
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன்– என்ற அருளிச்செயல்கொ ண்டும் உணர்க.

இங்கு ‘ஆகமம்’ என்றது, காமிகம் முதல் வாதுளம் ஈறாகச் சொல்லப் படும் இருபத்தெட்டுச் சிவாகமங்களை.
சிவபூசை செய்யுந்திறம் சிவ ஸ்வரூபம் முதலியவற்றைச் சொல்லுகிற இந்தச் சைவாகமங்கள் அச்சிவபிரானாலேயே சொல்லப்பட்டவை.

திக்கு என்பது – இலக்கணையால், அதன்தொகையாகிய நான்கென்னும் எண்ணின் மேல் நின்ற தென்க.
சிவபிரான் நான்கு திசையையும் நோக்கிய நான்கு முகங்களோடு மேல் நோக்கிய ஊர்த்துவமுக மொன்றுமாக
ஐந்துமுகங்களையுடையா னென்ற விவரம் விளங்க,
‘திக்கு முகமேல் முகமுடையான்’ என்றன ரென்றுங் கொள்ளலாம்.

சதாசிவமூர்த் தியினுடைய ஐந்து முகங்களுள்ளும்
சத்தியோசாதமென்னும் முகத்தினின்று காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
வாமமென்னும் முகத்தினின்று தீப்தம் சூக்குமம் சகத்திரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
அகோரமென்னும் முகத்தினின்று விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்நேயம் வீரம் என்னும் ஐந்துஆகமங்களும்,
தத்புருஷமென்னும் முகத்தினின்று ரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் விம்பம் என்னும் ஐந்து ஆகமங்களும்,
ஈசாநமென்னும் முகத்தினின்று புரோற்கீதம் லளிதம் சித்தம் சந்தாநம் சர்வோக்தம் பாரமேசுவரம் கிரணம் வாதுளம் என்னும்
எட்டு ஆகமங்களும் தோன்றின வென்று அறிக.

நவநீதம் என்ற வடசொல் – புதிதாக ஈட்டப்பட்டது என்றும், அவநி என்ற வடசொல் – காத்தற்கு உரியது என்றும் காரணப் பொருள்படும்.
கள்வன், வ் – பெயரிடைநிலை. சந்திரபுஷ்கரிணி – க்ஷயரோகமடைந்து அழியும் படி தக்ஷப் பிரஜாபதியினாற் சாபமடைந்த
சந்திரன் தவஞ்செய்து அச் சாப நிவிருத்தி பெற்ற குளம்.
மதி – நன்குமதிக்கப்படுபவன். மதி – அறிவு; வடசொல். ‘மதிக்குள் வையேன்’ என்றும் பாடம்.

———–

ஆரத் தநந்தருந் தாய்தந்தை யா நந்த மாவரிகழ்
ஆரத் தநந்தனன் றீமை கண்டாலங்கவுத் துவ பூண்
ஆரத் தநந்த சயனா வணியரங்கா திகிரி
ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –55-

அத்த – (எனது) தந்தையே!
அம் கவுத்துவ – அழகிய கௌஸ்துபமென்னும் இரத்தினத்தைத் (திருமார்பில்) தரித்துள்ளவனே!
பூண் ஆரத்து – அணிந்த ஹாரங்களையுடைய,
அநந்தசயனா – ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனே!
அணி அரங்கா – அழகிய திருவரங்கத்துக்குத் தலைவனே!
திகிரி ஆர் அத்த – சக்கராயுதம் பொருந்திய திருக்கையை யுடையவனே!
நந்தன் மதலாய் – நந்தகோபன் வளர்த்த குமாரனே! –
ஆர தநம் தரும் தாய் – (தான் பெற்ற பிள்ளைக்குக்) குடிக்க முலைப் பாலைக் கொடுக்கிற தாயும்,
தந்தை – தந்தையும்,
நந்தனன் தீமை கண்டால் – தமது புதல்வன் (இளமையில் தம்மை உதைத்தல் ஏசுதல் முதலிய) தீங்குகள் செய்தலைக் கண்டால்,
ஆநந்தம் ஆவர் – மகிழ்ச்சி யடைவரே யன்றி,
இகழார் – வெறுப்புக் கொள்ளார்: –
என் தீங்கு உனக்கு அ தன்மைத்தே – (அறிவிற் சிறியேனான) எனது பிழையும் (எந்தையான) உனக்கு அத் தன்மையதேயாம்; (எ – று.)

அன்பிற் சிறந்த தாய் தந்தையர் தம் மக்கள் இளமையிற் செய்கிற சிறு குறும்புகளைப் பொருள் செய்யாது
அவற்றைக் கண்டு களித்து நிற்றல் போல, அருளிற் சிறந்த எம்பெருமானும் தனது அடியாரது பிழைகளைப் பாராட்டாது
“என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்” என்னும்படி
அவற்றையே குணமாகப் பாவித்துப் போக்யமாகக் கொண்டு அருள் செய்வ னென்பதாம்.

“திருவரங்கத்துள்ளோங்கு, மொளியுளார் தாமே யன்றே தந்தையுந் தாயு மாவார்” என்ற திருமாலை இங்கு உணரத்தக்கது.

இக்கருத்துக்கு, இரண்டாமடியில் ‘அத்த’ என்றதைத் தந்தையை யழைக்கும் விளியாகக் கொண்டமை இனிது பொருந்தும்;

“அணியார் பொழில் சூழரங்க நக ரப்பா” என்றார் பெரியாரும்.

இனி, அத்தம் என்று பிரித்து அர்த்தம் என்ற வடசொல்லின் விகார மென்று கொண்டு,
அத்த நந்தனன் – செல்வப் புதல்வன் என்று உரைப்பாரும்,
அதம் நந்தனன் என்று பிரித்து அந்தத் தமது புதல்வ னென்று உரைப்பாருமுளர்.

இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆரத் தநந் தரும்’ என்பதற்கு –
(தனது மகனுக்குத்) தனது செல்வத்தை முழுவதுங் கொடுக்கின்ற என்று உரைத்து,
அந்த அடைமொழியைத் தந்தைக்குங் கூட்டலாம்; (ஆர – நிரம்ப; தநம் – செல்வம்.)
நந்தநன் என்ற பெயர் – (தாய் தந்தையர்க்கு) ஆநந்தத்தைச் செய்பவனென்று காரணப் பொருள்படும்.
‘என் தீங்கு’ என்றது; வணங்காமை புகழாமை முதலியவற்றை. தீங்கு – சாதி யொருமை.

ஸ்தநம், தநம், ஆநந்தம், நந்தநன், கௌஸ்துபம் ஹாரம், அநந்தசயநன், ஹஸ்தம் – வடசொற்கள்.
கௌஸ்துபரத்தினம், திருப்பாற்கடலினின்று தோன்றியது.
ஹாரம் – மார்பின்மாலை.
‘பூணாரத்து’ என்றது, அநந்த சயநனுக்கு அடைமொழி.
மதலாய் – மதலை யென்பதன் ஈறுதிரிந்த விளி.
தாய் தந்தை – பன்மை விகுதி பெறாத பொதுத்திணை யும்மைத் தொகை.

————–

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயைவீர்
அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்
அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே –56-

அத்தனும் – தந்தையும்,
அன்பு உள அன்னையும் – (மக்களிடத்து) மிக்க அன்பையுடைய தாயும்,
பேரும் – பெயரும்,
அனந்தம் அது ஆம் – எல்லை யில்லாததாகப் பெற்ற,
அ தனு – அந்தந்த உடலில் (பலவகைப் பிறப்புக்களில்),
மன் – பொருந்தி வருகிற,
பு(ல்)லன் – எளியவன் யான்:
ஆதலின் – ஆகையால்,
அம்புயை – இலக்குமி யென்றும்,
வீரத்து அனுமன் புயம் மீது ஏறு – பராக்கிரமத்தை யுடைய அநுமானை (இராமாவதாரத்தில்) வாகனமாகக் கொண்டு
அச் சிறிய திருவடியின் தோள்களின் மேலேறிய,
அரங்கன் – ரங்கநாதனாகிய,
அம் சார்ங்கம் வயிரம் தனு மன் – அழகிய சார்ங்க மென்னும் உறுதியான வில்லை யுடைய பெருமா னென்றும்,
புகல் – சொல்லப்படுகிற,
பேர் இருவீர்க்கும் – உங்களிரண்டு பேர்க்கும்,
அடியன் என்று – அடியவனாக என்னைக் கொண்டு,
ஆண்டு அருள் – பாதுகாத்தருள்வாய்; (எ – று.)

ஒவ்வொரு பிறப்புக்கு ஒவ்வொரு தந்தையும் தாயும் பெயருமாக எத்தனையோ பிறப்புக்களில் எத்தனையோ
தந்தை தாயர்களையும் பெயர்களையுங் கொண்டு உழன்று வருகிறவன் யானென்று தனது சிறுமையை விண்ணப்பித்து,
இனியாயினும் பரம பிதாமாதாக்களாகிய நீயும் பெரிய பிராட்டியாரும் என்னை ஆட் கொண்டு உங்கட்கு அடியனென்ற
பெயரையிட்டுப் பிராகிருத பிதாமாதாக்களின் தொடர்பையும் பிராகிருத நாமத்தையும் போக்கி எனக்கு
முத்தி யளித்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தபடி.
“தாயொக்கு மன்பின்” என்னும்படி மக்களிடத்துத் தந்தையினன்பினும் தாயினன்பு மிகுதலால்,
அன்னைக்கு ‘அன்புள’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது;
இனி, அதனை மத்திம தீபமாகக் கொண்டு அத்தனுக்கும் இயைத்தலு மொன்று.

உள்ள, புல்லன் என்பவை – உள, புலன் என்று தொகுத்தல் விகாரமமடைந்தன.
‘தனு’ என்றது – உடம்பைக் குறிக்கையில் தநு என்ற வட சொல்லின் விகாரமும்,
வில்லைக் குறிக்கையில் தநுஸ் என்ற வட சொல்லின் விகாரமுமாம்.
மன்புலன் – வினைத் தொகை.
அம்புயை – அம்புஜா என்ற வட சொல்லின் விகாரம்; தாமரை மலரில் வாழ்பவ ளென்று பொருள்.
நான்காமடியில், மன் – மன்னன்; பண்பாகுபெயர். இருவீர் – முன்னிலைப் பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.

————

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடியவராக வரங்கருக்கு ஆட்செய ருட்கதையால்
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே –57-

அடியவர் ஆகவும் – (ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாகிய தமக்குத்) தொண்டர்களாகுமாறும்,
ஆள் கொள்ளவும் – (அங்ஙனம் தொண்ட ரானவர்களைத் தாம்) அடிமை கொள்ளுமாறும்,
எண்ணி – திருவுள்ளங்கொண்டு,
அவர் – அப்பெருமான்,
அடி – ஆதிகாலத்தில் (சிருஷ்டிகாலத் தில்),
ஆர் உயிர்கட்கு ஆகம் படைத்தமையால் – நிறைந்த உயிர்கட்குச் சரீரத்தைக் கொடுத்ததனால்,
அகமே – மனமே!
பெரிய அடிய வராகம் அரங்கருக்கு ஆள் செய் – பெரிய கால்களை யுடைய வராக மூர்த்தியாக அவ தரித்த ஸ்ரீரங்கநாதர்க்கு (நீ) அடிமையாவை;
(அங்ஙனமாகி),
அருள் கதையால் – (அவருடைய) கருணையாகிய தண்டாயுதத்தைப் பெற்று,
அது கொண்டு,
அவம் ராகம் செய் மாரனுக்கு ஆள் செயும் ஐவரை அடி – கெட்ட ஆசையை விளைக்கிற மன்மதனுக்கு அடிமை செய்யும்
பஞ்சேந்திரியங்களாகிய ஐந்து உட் பகைவர்களையும் தாக்கி வலி யடக்குவாய்; (எ – று.)

உபயவிபூதி நாயகனான சர்வேசுரன், த்ரிபாத் விபூதியாகிய பரமபதத்திலுள்ளார் எப்பொழுதும் பரமானந்தத்தையே
நுகர்ந்து வருதல் போலவே, உரைமெழுக்கிற் பொன் போல் மூலப் பிரகிருதியிலழுந்திக் கிடக்கிற உயிர்களும்
தம் தம் முயற்சியால் அப் பெரும் பதவியை யடைந்து இன்புற்று வாழலாம்படி,
அவ்வுயிர்கள் தன்னைத் தரிசித்தல் தொழுதல் சேர்தல் தியானித்தல் துதித்தல் முதலிய பணி விடைகளைப் புரிதற்கு உபயோகமாக,
கண் கை கால் மனம் வாய் முதலிய உறுப்புக்களோடு கூடிய உடம்பை அவ்வுயிர்கட்கு ஆதியில் அளித்தருளினனாதலால்,
நீ அப் பரம கருணாநிதியின் பக்கலிலேயே அடிமை பூண்டு, அவனருளாற் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்து
வீடு பெறுவை யென்று தம் மனத்துக்கு நல்லறிவுணர்த்தினார்.

‘அருட்கதை யாலைவரை யடி’ என்றது –
“யானு மென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் வல் வினையைக், கானும் மலையும் புகக்கடிவான் –
தானோர், இருளன்ன மா மேனி யெம்மிறையார் தந்த, அருளென்னுந் தண்டா லடித்து” என்ற அருளிச் செயலின் கருத்தைக் கொண்டது.

அவராகஞ்செய்மாரனுக்குஆட்செயும் ஐவர் –
“மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும், பாரினார்” என்றார் பெரியாரும்.

அடி – அடிநாளில். ‘அவர்’ என்ற சுட்டுப்பெயர் முன்வந்தது,
செய்யுளாதலின்: ‘செய்யுட் கேற்புழி’ என்றார் நன்னூலாரும்.
அடியவர் என்று எடுத்து, ஆதிகாரணமானவ ரென்று உரைப்பாரு முளர்.

“சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கண கணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய வெங்கோமான்” என்றபடி
பெரிய கால்களையுடைய மகா வராக ரூபமாகத் திருவவதரித்ததனால், ‘பெரிய அடிய வராக வரங்கர்’ என்றார்.

ஆர்உயிர் – அருமையான உயி ரெனினுமாம்; முக்தி பெறுதற்கு உரிய தென்றபடி.
மாரன் என்ற வடசொல் – (ஆசை நோயால்) மரண வேதனைப் படுத்துபவனென்று காரணப் பொருள்படும்.
‘அகமே’ என்ற விடத்து, ‘அறிவே’ என்றும் பாட முண்டு.
அரங்கர்க்கு ஆட் செய்தால் ஐவரை யடிக்கலாம்; அடித்தால் உய்யலாம் என்பது குறிப்பு.

————–

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –

வரையாழி வண்ணர் அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூக நாணு மதியுஞ் செங்கை
வரையாழி யும் வளையும் மிழந்தாள் என் மடமகளே –58-

வரை ஆழி வண்ணர் – (கண்டவர் மனத்தைக்) கவர்ந்து கொள்ளும் கடல் போன்ற கரிய திரு நிறத்தை யுடையவரும்,
ஈசன் முன் வாணன் திண் தோள் வரை ஆழியார் – (பாதுகாப்பதாக ஏற்றுக் கொண்ட) சிவபிரானது முன்னிலையிலே
பாணாசுரனுடைய வலிய தோள்களைத் துணித் தொழித்த சக்கராயுதத்தை யுடையவருமான,
அரங்க ஈசர் – திருவரங்கநாதர்,
புள்ளின் வாகனத்தே வந்த நாள்தொடு – கருட வாகனத்திலேறிப் பவனி வந்த நாள் தொடங்கி,
இற்றை வரை – இன்றைநாளளவும்,
என் மட மகள் – எனது மடமைக் குணமுடைய மகள்,
ஆழிய துயர் ஆய் – ஆழ்ந்த மனக் கலக்க முடையவளாய்,
தூசும் – ஆடையையும்,
நாணும் – நாணத்தையும்,
மதியும் – அறிவையும்,
செம் கை வரை ஆழியும் வளையும் – சிவந்த கைகளி லணிந்துள்ள மோதிரத்தையும் வளையல்களையும்,
இழந்தாள் – இழந்து விட்டாள்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய சில வகைகளால் தலைவியைக் களவிற் கூடிய தலைவன் பிரிந்த பின்பு அப் பிரிவாற்றாமைத்
துயரத்தால் உளமழிந்து உடல் மெலிந்து கை வளையும் விரலாழியும் நெகிழ்ந்து கீழ் விழ ஆடை சோர நாணங்குலைந்து
அறிவிழந்து நிலைமாறி நிற்கிற தலைவியின் துயர்க் காரணத்தைத் தோழியாலறிந்த செவிலித்தாய்,
அத்தலைவனைத் தலைவிக்கு வெளிப்படையாக மணம் புரிவித்துத் துயர் நீக்கக் கருதியவளாய்,
அத்தலைமளின் நிலைமையை நற்றாய்க்கு உரியவற்றாலுணர்த்திய துறை, இச்செய்யுளி லடங்கியது.

தியானநிலையில் நின்ற ஐயங்காரது அகக் கண்ணுக்கு எம்பெருமான் கருடாரூடனாய்ப் புலனாகி மறைந்த வளவிலே,
அப்பெருமானது ஸதாஸாந்நித்யத்தை அபேக்ஷித்துப் பிரிவாற்றாமையால் வருந்துகிற ஐயங்காருடைய துயரத்தை
நோக்கிய ஞானிகள் அவர் பக்கல் தம்மினும் மிக்க ஆதரத்தை யுடைய பேரறிவாளர்க்கு
ஐயங்காரது நிலைமையை யெடுத்துக் கூறுதல், இதற்கு உள்ளுறைபொருள்;

தன்னைச் சரணமடைந்தவன் பரிபவப் படுவதைப் பார்த்தும் ஒன்றும் பரிகாரஞ்செய்யமாட்டாதொழிய வென்பார், ‘ஈசன்முன்’ என்றார்.
தொட்டு என்பது ‘தொடு’ எனத் தொகுத்தல் விகாரப்பட்டது.
இன்று + வரை = இற்றைவரை; மென்றொடர் வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.
ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்: ‘இன்’ என்ற இடைநிலை ஈறுதொக்கது.
வளையும்மிழந்தாள், மகரவொற்று – விரித்தல். மடமை – பேதைமை; இளமையுமாம். வரைதல் – கவர்தல், நீக்குதல், கொள்ளுதல்.

————

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்

மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்திதி தன்
மகரந்த காதலை வானிலுள் ளோர்க்கு மண்னோர்க்கு வட்டா
மகரந்த காதலை வார் குழை யாய் வளர் சீரங்க தா
மகரந்த காதலை வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –59-

மகரம் – (கடலிலேயே வாழுமியல்பினவான) சுறா மீன்களும்,
அலை வாழ்வு தகாது என்ன – கடலில் வாழ்தல் இனிக் கூடாதென்று தவிததுக் கூறும்படி,
வாரி சுட்டாய் – கடலை (ஆக்நேயாஸ்திரத்தால்) எரிக்கத் தொடங்கியவனே!
திதி தன் மகர் அந்தகா – திதியென்பவளுடைய புதல்வர்களான அசுரர்கட்கு யமனானவனே!
வானின் உள்ளோர்க்கு தலை – மேலுலகத்திலுள்ளவர்களான தேவர்கட்குத் தலைவனே!
மண்ணோர்க்கு உவட்டா மகரந்த – நில வுலகத்து வாழும் மனிதர்கட்குத் தெவிட்டாத தேன் போலினியவனே!
காது அலை வார் குழையாய் – காதுகளில் அசைகிற பெரிய குண்டலங்களை யுடையவனே!
வளர் சீரங்க தாம – ஸ்ரீரங்கத்தைக் கண் வளருமிடமாகக் கொண்டவனே!
கரந்த காதலை – (உன் மேல் எனக்கு) அந்தரங்கமாக வுள்ள மோகத்தை,
மடவார் எதிரே வாக்கின் சொல்லேன் – (தோழியர் முதலிய) மகளிரின் முன்னிலையிலே
பகிரங்கமாக வாயினாற் சொல்லுந் தரமுடையேனல்லேன்; (எ – று.)

இயற்கைப் புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற் கூடி நின்ற தலைவன்
அங்குப் பழி யெழுந்த தென்று தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள்
ஒருவழிப் பிரிந்துறைதல், ஒருவழித்தணத்த லெனப்படும்; அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில்,
அப்பிரிவை யாற்றாது வருந்துகிற தலைவி, தனது நினைப்பு மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கின்றவாறு போலப் பாவித்து,
அங்ஙனம் உருவெளித் தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப் படுத்திக் கூறியது, இது.
ஒருவழித்தணந்துவந்த தலைவன் சிறைப்புறமாக, அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்
கூறியதென்று இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன் பக்கல் தமக்கு உண்டான
வியாமோகத்தை அப்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

கரந்தகாதலை வாக்கிற் சொல்லேன் மடவாரெதிரே – எனது அந்தரங்க பக்திமிகுதியைப் பேதையரான
உலகத்தார் முன்னிலையிலே வாயினாற்சொல்லேன் என்க.

‘மகரம் தகாது அலைவாழ் வென்ன வாரிசுட்டாய்’ என விளித்தது,
பிரிந்த ஒரு தலைவியை மீளவுங்கூடுதற்காக அரிய பெரிய முயற்சி செய்த நீ இங்ஙனம்
என் பக்கல் உபேக்ஷைசெய்வது தகுதியோ வென்ற குறிப்பு.
‘காதலை வார்குழையாய்’ என்றது, காதும் குண்டலமும் சேர்ந்த சேர்த்தி யாலாகிய செயற்கை யழகைக்
கண்டு அதிலீடுபட்டுக் கூறியது. மற்றைவிளிகள்,
அப்பெருமானது பராக்கிரமம், துஷ்டநிக்கிரகம், பரத்வம், இனிமை, இனிய இடமுடைமை முதலியவற்றில் ஈடுபாடு.
மகரமென்னும் மீன் கடலிலேயே வாழ்வதாதலை ‘மகராலயம்’ என்ற கடலின் பெயர் கொண்டும்,
“கடல்வாழ் சுறவு” என்ற தொல்காப்பியங்கொண்டும் உணர்க. இது கடலில் வாழுமியல்பினதாய்ச் சிறத்தல் பற்றியே,
இதனைத் தலைமையாக எடுத்துக் கூறினார்: இது, மற்றை நீர்வாழுயிர்கட்கும் உபலக்ஷணமாம்.

வாரி – நீர்: வடசொல்: கடலுக்கு இலக்கணை.
அந்தகன் – அந்தத்தைச் செய்பவன்: அந்தம் – அழிவு திதிதன் மகரந்தகா – காசியப முனிவரது மனைவியருள்
திதியென்பவளது புதல்வராதலால் தைத்யரெனப்படுகிற அசுரர்களை அழித்தவனே யென்றபடி.
மகர் – மகன் என்பதன் பன்மை: மகார் என்றும் வழங்கும்.
தலை – தலைவனுக்குப் பண்பாகுபெயர்: உவமையாகுபெயராக,
உத்தம அங்கமாகிய தலைபோலச் சிறந்தவனே யென்றும் பொருள்கொள்ளலாம்: அண்மைவிளி யாதலின், இயல்பு.

ரங்கநாதன் நிலவுலகத்தில் எழுந்தருளி யிருந்து அவ்வுலகத்தார்க்குக் காட்சிக் கினியனாதல் பற்றி,
‘மண்ணோர்க்கு உவட்டா மகரந்த’ என்றார்.
இனி, தலைமை பெற்ற வானிலுள்ளார்க்கும் மண் ணுலகத்தார்க்கும் தெவிட்டாத தேனே யென்று உரைப்பாரு முளர்.

உவட்டா மகரந்த’ என்றதை “ஆராவமுதே” என்றாற்போலக் கொள்க. தாமம் – வடசொல்: இடம்.
இனி, ‘வளர் சீரங்க தாம’ என்பதற்கு –
ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து விளங்குகிற ஒளிவடிவமானவனே யென்று உரைத்தலும் அமையும்:
தாமம் – ஒளி. கரந்த காதல் – உயிர்ப் பாங்கிக்கும் ஒளித்த வேட்கை யென்றபடி.

————

இதுவும் அது –தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்-

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனு மட
வாராக வாதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –60-

வாராக – வராகாவதாரஞ்செய்தவனே!
வாமனனே – வாமந மூர்த்தியானவனே!
அரங்கா – ஸ்ரீரங்கநாதனே!
வட்டம் நேமி வலவா – வட்டவடிவமான சக்கராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே!
ராகவா – ரகுகுலராமனாகத் திருவவதரித்தவனே!
உன் வடிவு கண்டால் – நினது திருமேனியழகைப் பார்த்தால்,
மன்மதனும் மடவார் ஆக ஆதரம் செய்வன் – (எல்லாராலும் காமிக்கப்படுங் கட்டழகுடையவனான) மன்மதனும் (
தான் உன்னைக் கூடுதற்கு) மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன்: என்றால்,
வார் ஆகம் வாசம் முலையேனை போல் உள்ள மாதருக்கு உய்யும் வண்ணம் எங்கே – கச்சணிந்தனவும் மார்பிலெழுந்தனவும்
நறுமணப்பூச்சுடையனவுமான தனங்களை யுடையளாகிய என்னைப்போல விருக்கிற மகளிர்க்கு
(உன் வடிவழகு கண்ட பின்பு) பிழைத்திருக்கும்வகை எவ்வாறோ! (எ – று.)

அழகிற் சிறந்த ஆண் பாலான மன்மதனும் புருஷோத்தமனான நினது வடிவைக் கண்டு தான் பெண்ணுருக் கொண்டு
உனது அழகின் நலத்தை யனுபவிக்க. எண்ணுவனாயின், பெண்பாலான என் போன்ற மடமங்கை யர்க்குப்
பிழைக்கும் வழி என்னே யென்பதாம்.
கீழ் 24 – ஆஞ் செய்யுளின் விசேடவுரையிற் கூறிய விஷயங்கள், இங்கும் நோக்கத்தக்கன.

‘வாராக’ என்று விளித்தது, நினது காதலியரில் ஒருத்தியினது (பூமிதேவியினது) துயரத்தை நீக்குதற்குப்
பெரு முயற்சி செய்து அவளை யெடுத்துக்கொண்டு வந்து கூடி யருளியவனே யென்ற குறிப்பு.
‘வாமனனே’ என்றது – சௌலப் பியத்தையும்,
‘அரங்கா’ என்றது – இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற இனிய விடத்தில் வசித்தலையும்,
‘வட்டநேமிவலவா’ என்றது – பகையழிக்க வல்ல படைக்கலத்திற் கைதேர்ந்தவனாதலையும்,
‘ராகவா’ என்றது – உயர்குடிப் பிறப்பையும் உணர்த்தும்.

தண்டகாரணியவாசிகளான முனிவர்கள் கண்டு காமுற்று ஆண்மை மாறிப் பெண்மை பெறவிரும்பும் படியான
சௌந்தரியாதிசயத் தையுடையா யென்ற கருத்தும், ‘ராகவா’ என்ற விளியில் தொனிக்கும்.

மன்மதன் தான் கொண்ட ஆசை மிகுதியால் தானொருவனே பலமகளிராக வடிவு கொண்டு உத்தம புருஷனான எம்பெருமானை
அநுபவிக்க விரும்புவ னென்பது, ‘மடவாராக’ எனப் பன்மையாற் கூறியவதனால் தோன்றும்.

‘வாராகவாசமுலையேன்’ என்றது, போகாநுபவத்துக்கேற்ற பருவம் நிரம்பியவ ளென்றவாறு.
‘நேமிவலவா’ என்பதற்கு – சக்கராயுதத்தை வலக் கையிலுடையவனே யென்று உரைப்பினும் அமையும்;
இவ்வுரைக்கு, ‘நேமி வலவா’ என்றதைக் கீழ் 35 – ஆஞ் செய்யுளில் “சங்கஇடவ” என்றாற் போலக் கொள்க;
வலவன், இடவன் என்பன – வலம், இடம் என்றவற்றின்மேற் பிறந்த பெயர்க ளென்க.

வாராக – வராஹ என்ற வடசொல்லின் விகாரம்.
வட்டம் – வ்ருத்த மென்ற வடசொல்லின் சிதைவு.
மந்மதன் என்ற வடமொழிப்பெயர் – (ஆசை நோயால்) மனத்தைக் கலக்குபவ னென்று பொருள்படும்;
உம் – உயர்வு சிறப்பு. வாமநன், நேமி, ராகவன், ஆதரம், வாஸம் – வடசொற்கள்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி – -21-40-

January 23, 2022

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

———

நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சுமே ———-21–

நரகு – நரகம்,
அந்தரம் – சுவர்க்கம்,
புவி – பூமி,
இ மூன்று இடத்தும் – என்கிற இந்த மூன்றுஉலகங்களிலும்,
நனி மருவுநர் – மிகுதியாகப் பொருந்தியுள்ள சனங்களெல்லாம்,
அகம் தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் – மனம் அலைந்து கொடிய யமனுக்குப் பயப்படுவார்கள்;
நாயக வாநர கந்தரம் புள் பிடர் ஏறு அரங்கர் – சிறந்த குரங்கான அநுமானுடைய கழுத்தின் மேலும்
(பக்ஷி ராஜனான) கருடனுடைய பிடரியின் மேலும் ஏறுகிற திருவரங்கரும்,
நல் ஆய்க்குலத்து இநர் – சிறந்த இடையர் குலத்தில் (வளர்ந்து அதனை விளக்கின) சூரியன் போன்றவரும்,
தரங்கம் அகம் உற்றார் – திருப்பாற் கடலை வசிக்குமிடமாகக் கொண்டு அங்கு வாழ்பவருமான நம்பெருமாளுடைய,
அடியார்க்கு – தொண்டர்கட்கு,
நமன் அஞ்சும் – அந்த யமன் பயப்படுவான்.

மூன்று உலகங்களிலுள்ளாரும் யமனுக்கு அஞ்சுவர்;
அந்த யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன் என்று அடியார்களின் பெருமையை விளக்கியவாறாயிற்று,
ஆதலால், அனைவரும் எம்பெருமானுக்கு அடியராய் உய்யக் கடவரென்பது, குறிப்பெச்சம்.
இங்ஙனம் இவர்கள் அஞ்சுதற்கும், அவன் அஞ்சுதற்கும் காரணம் – முறையே மூவுலகத்தாரும் தீராவினையை யுடைமையும்,
திருமாலடியார் வினை தொலைத்திருத்தலு மென்க.

அடியார்க்கு நமன் அஞ்சுதலை,
“திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன்னாமம், மறந்தும்புறந் தொழாமாந்த ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்ற அருளிச் செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில் பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன் சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து
“ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில் ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு;
நான் மற்றவர்களுக்குப் பிரபுவேயல்லது வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன் ………
“கமலநயான! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அச்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டே யிருப்பார்களோ, அப்படிப்பட்டமகாபரிசுத்தபுருஷரை ஓ படனே!
நீ கண்ணெடுத்துப் பாராமல் தூரமாய் ஓடிப்போ; விகாரநாசாதிகளில்லாமல் சத்திய ஞாநாநந்த மயனாய்ப் பிரகாசிக்கின்ற
அந்த எம்பெருமான் எவனுடைய இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம்
பிரசரிக்கு மிடங்களிலெல்லாம் நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்;
பதறிச்சென்றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின் தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்;
அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்’ என்று கூறினன்’ என்ற வரலாற்றை
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக்காணலாம்.

ஸ்வர்க்க மத்திய பாதாள மென்று மூன்றாகப்பகுக்கப்படுகிற பதினான்குஉலகங்களிலு முள்ள பிராணிகளெல்லாம்
இயல்பில் கர்மபந்தமுடையவர்க ளாதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனைக் குறித்து அஞ்சுவ ரென்க.

நரகு – நரகம்; இது, கீழுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
அந்தரம் – வானம்; இது, மேலுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
மருவுநர், ந் – பெயரிடைநிலை. அகம் – அகத்து உறுப்பு, அந்த:கரணம்; அகம் – உள்.
காலன் – பிராணிகளின் ஆயுளைக் கணக்கிடுபவன்.

பெருமான் இராமாவதாரத்தில் அநுமானையும், எப்பொழுதும் கருடனையும் வாகனமாகக் கொண்டு அவர்கள் பிடரியில் ஏறியருள்வன்;
அதுபற்றி, அவர்கள் முறையே திருவடியென்றும், பெரிய திருவடியென்றும் பெயர் பெறுவர்.
கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்பது: கம் – தலை. பிடர் – கழுத்தின் பின்புறம்.

இநன் – சூரியன்; வடசொல். “உலகங்களாகிய தாமரைகளெல்லாம் மலரும்பொருட்டு, தேவகியாகிய கிழக்குச் சந்தியில்
அச்சுதபாநு (திருமாலாகிய சூரியன்) உதித்தருளினான்” என்று கண்ணனைச் சூரியனாகக் கூறியுள்ளதனால்,
‘ஆய்க்குலத்துஇநர்’ என்றார். அக்குலத்துக்கு நன்மை, தேவாதி தேவனான திருமால் மனிதனாய் எழுந்தருளிக்
குழந்தைப் பருவத்தில் வளர்ந்தருளப் பெற்ற பேறுடைமை.

அகம் – இடம், வீடு. நமன் அஞ்சும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.
ஆய்க்குலத்திநர் அகம் தரங்கம் உற்றார் என்று எடுத்து,
இடைச் சாதியாருடைய வீட்டிலும், பாற்கடலிலும் பொருந்தியவ ரென்றும், ஆயர் குலத்தில் வளர்ந்தவரும்
பாற்கடலினிடத்துப் பொருந்திய வருமானவரென்றும் உரைப்பாரு முளர்.

———–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் அஞ்சிறைய
அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே
அஞ்ச கரத்தலை செய்து பித்து ஏக அருள் அரங்கன்
அம் சக்கரத் தலைவன் தாள் அலால் மற்று அரண் இலையே–22–

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் ஏற்றலும் – பஞ்சாக்ஷர மந்திரத்துக்கு உரியவனும் தலையிற் கங்கா நதியைத்
தரித்தவனு மான சிவபிரான் (தன்பக்கல் வந்து) இரந்தவளவிலே,
அம் சிறைய அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே கரத்தலை செய்து அஞ்ச – அழகிய இறகுகளையுடைய
ஹம்ஸவாகனத்தையும் கையிற்கமண்டலத்தையு முடையனான பிரமனது கபாலமானது (அச்சிவபிரானுடைய)
உள்ளங்கையை நீங்கி மறைதலைச்செய்து விலகவும்,
பித்து ஏக – (அச்சிவபிரான் கொண்டிருந்த) திகைப்பு ஒழியவும்,
அருள் – கருணைசெய்த,
அம் சக்கரம் தலைவன் அரங்கன் – அழகிய சக்கராயுதத்தையுடைய இறைவனான ரங்கநாதனுடைய,
தாள் அலால் – திருவடியே யல்லாமல்,
மற்று அரண் இலை – வேறு ரக்ஷகம் (எவ்வுயிர்க்கும்) இல்லை; (எ – று.)

மும்மூர்த்தியில் ஒருமூர்த்தியான சிவபிரான் பிரமகபாலத்தால் தனக்கு நேர்ந்த சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள
வேறுவகையில்லாமற் கலங்கி எம் பெருமானைச் சரணமடைய, அப்பெருமான் எளிதில் அதனைத் தீர்த்தருளின னென்ற
வரலாற்று முகத்தால், நம்பெருமாளுடைய பரத்வத்தை வெளியிட்டு, அப்படிப்பட்ட சர்வேசுவரனல்லாமல்
வேறுபுகலிடமில்லையென்று ஜீவாத்மாக்களின் அநந்யகதித்வத்தை விளக்கினார்.

பித்தேகவருளரங்கன் –
“சிரந்தடிவா னிவனோ வென் றயன் வெய்ய தீய சொல்லக்,
கரந்தடிவான் தலைகவ்வப் பித்தேறலிற் கண்ணுதலோன்,
இரந்தடிவீழத் துயர்தீர்த்த வேங்கடத்தெந்தை” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.

ஐந்து – அஞ்சு; முழுப்போலி.
அக்ஷரம், கங்கா, ஹம்ஸம், பித்தம், சக்கரம், சரணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சிறைய – குறிப்புப் பெயரெச்சம்.
கரத்தலை, தலை – ஏழனுருபு; கரம் – வடசொல்.
வைதிகர் கையிலே எப்போதும் ஜலபாத்திரங்கொண்டிருத்தல், பரிசுத்தியின்பொருட்டென்க.
அகம் + கை = அங்கை; “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்றார் நன்னூலார்.
விட்டே, ஏ – அசை. அஞ்ச = விலக, காரியப் பொருளைக் காரணச் சொல்லாற் குறித்தார், உபசார வழக்கால்.
மூன்றாமடியில் உள்ள ‘கரத்தலை’ என்பது – கரத்தல் என்ற தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமை விரி.
சக்கரத் தலைவன் – ஆழிப் பிரான்.

————

இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே–23–

இலங்கு அயில் ஆதரன் – விளங்குகின்ற வேலாயுதத்தினிடத்து விருப்பமுடையவனான சுப்பிரமணியனும்,
ஐங் கரன் – (நான்கு கைகளோடு துதிக்கையுமாகிய) ஐந்துகைகளையுடையவனான விநாயகனும்,
மோடி – துர்க்கையும்,
எரி – அக்கினியும்,
சுரத்தோன் – ஜ்வர தேவதையும்,
இலம் கயிலாதமலை ஆன ஈசன் – வசிக்குமிடம் கைலாச கிரியாகப்பெற்ற இறைவனான சிவனும்,
இரிய – அஞ்சி நிலைகெட்டு ஓட,
வெம்போரில் – உக்கிரமான யுத்தத்தில்,
அம் கை இலாதபடி வாணனை செற்ற – அழகிய (ஆயிரம்) கைகள் இல்லாமற்போம் வண்ணம் பாணாசுரனை அழித்திட்ட,
என் அரங்கன் – எனது திருவரங்கனும்,
இலங்கையில் ஆதவன் போக கண்டான் – இலங்காபுரியிற் சூரியன் போகும்படி செய்தவனுமான திருமால்,
என் இதயத்தன் – எனது இருதயகமலத்தி லுள்ளான்; (எ – று.)

துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும், அங்ஙனம் நல்லோரைக்காத்தற் பொருட்டுத் தீயோரையழிக்குமிடத்துச்
சர்வசங்காரமூர்த்தியே வந்து தடுத்தாலும் தடுக்கவொண்ணாத பேராற்றலுடையவனு மான பெருமான்
எனது மனத்தில் எழுந்தருளியிருக்கும்படி அவனை நான் எப்பொழுதும் மனத்திலே நிலை நிறுத்தித் தியானித்து வருகின்றே னென்பதாம்.

“மோடியோட வங்கி வெப்பு மங்கியோடவைங்கரன்,
முடுகியோடமுருக னோடமுக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தி
யோட நேமிதொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவரங்கக்கலம் பகத்திலும்.

“இருணன்காசற வெழுகதிரவனிற்கவென்றும், அருணன் கண்களுங் கண்டிலா விலங்கை” என்றபடி
இராவணனிடத்து அச்சத்தால் சூரியன் சென்றறியாத இலங்கையிலே அவ்விராவணனைக் கொன்றதனால்
சூரியன் தனது சஞ்சாரரீதியின்படி அங்குத் தடையின்றி இனிதுசெல்லும்படி செய்தனன் இராமபிரானென்பது,
‘இலங்கையிலாதவன் போகக்கண்டான்’ என்பதன் கருத்து.

இலங்கையரசனாய்த் தேவர்கட்கு இடையூறு செய்து வந்த இராவணனைச் சங்கரித்துத் தேவர்கட்கு நன்மைசெய்தவனென்ற
பொருளை ‘இலங்கையி லாதவன் போகக்கண்டான்’ என வேறுவகையாற்சொன்னது, பிறிதினவிற்சியணி.
காணுதல் – செய்தலென்னும் பொருளில் வருதலை, ‘திருநகரங்கண்ட படலம்’ என்றவிடத்திலுங் காண்க.

முருகன் வேற்படையில் விருப்பமுடையனாதல், ‘வேலன்’ என்ற அவன் பெயரினாலும் விளங்கும். இவன், சிவபிரானது இளையகுமாரன்.
விநாயகன் யானைமுகமுடையனாதலால், ஐங்கரனாவன்; இவன், சிவபிரானது மூத்தகுமாரன்.
துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
அயில் என்பது – ஐயில் எனவும் கைலாஸம் என்ற வடசொல்லின் திரிபான கயிலாதம் என்பது கையிலாதம் எனவும்
யமகவமைப்பின் பொருட்டு முதற்போலியால் அகரத்துக்கு ஐகாரம் பெற்றன;
“அ ஐ முத லிடையொக்கும் சஞயமுன்” என்றார் நன்னூலார்.
ஜ்வரம், பாணன், ஆதபன், ஹ்ருதயம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இலம் – இல்லம் என்றதன் தொகுத்தல்; அம் – சாரியை. ஈசன் – ஐசுவரியமுடையவன்.
யமகநயத்தின்பொருட்டு ‘போரில்’ என்ற ஏழாம்வேற்றுமை விரி, போர் இல் என உருபுபிரிக்கப்பட்டது;
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும், பொருள்நோக்குமிடத்துச் சேர்த்துப் படித்துக் கொள்க.
ஆயிரங்கைகளிற் பெரும்பாலன ஒழிந்ததனால், ‘கையிலாதபடி’ எனப்பட்டது.
காலில் விழுந்தபின் கண்ணபிரானால் துணியாது விடப்பட்ட நான்கு கைகளும் பொலிவிழந்தன வென்பதும் தொனிக்க,
‘அங்கையிலாதபடி’ என்றன ரென்னலாம். செற்ற, செறு – பகுதி.
ஆதவன் – ஆதபன் என்ற வடசொல்லின் விகாரம்; நன்றாகத் தபிப்பவன் என்று பொருள்.

—————

அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை ஐம்படை சேர்
அத்தனை வேதனை வாய் வைத்த மாயனை ஆர் அணங்கு ஓர்
அத்தனை வேதனை தீர்த்தானைச் சேர்க்கிலள் ஆயிரம் சால்
அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —-24–

அத்தனை – எப்பொருட்கும் இறைவனும்,
வேதனை ஈன்ற அரங்கனை – பிரமனைப் பெற்ற திருவரங்கனும்,
ஐம்படை சேர் அத்தனை – பஞ்சாயுதங்கள் பொருந்திய திருக் கைகளை யுடையவனும்,
வேதனை வாய் வைத்த மாயனை – (கிருஷ்ணாவதாரத்தில்) வேய்ங்குழலைத் திருவாயில் வைத்து ஊதிய மாயவனும்,
ஆர் அணங்கு ஓர் அத்தனை வேதனை தீர்த்தானை – அருமையான (பார்வதியென்னுஞ் சிறந்த) தெய்வ மகளைத்
தனது உடம்பில் ஒருபாதியிலுடையவனான சிவபிரானைத் துயர் தீர்த்தருளியவனும் ஆன அழகிய மணவாளனை,
சேர்க்கிலள் – (என்னுடன்; சேரச் செய்யாள்;
அனை – (என்னுடைய) தாய், (பின்னை என் செய்வளென்றால்,-)
சாந்து என்று அனல் அரைத்து – சந்தனக்குழம்பென்று நெருப்பை யரைத்து,
ஆயிரம் சால் அத்தனை வேது அப்புவள் – ஆயிரஞ்சாலவ்வளவு வெப்பத்தை (என்னுடம்பிற்பூசி) நிரப்புவள். (எ – று)

கீழ் 23 – பாசுரங்களில் எம்பெருமானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அவனது உத்தம புருஷத் தன்மையைக்
கருதியதனாலே, அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை யுண்டாய்,
அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமான தன்மை யழிந்து ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்;

ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்:

தண்டகாரணியவாசிகளான முனிவர் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்மையைப் பெற விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே, யாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள்,”
“வாண் மதர் மழைக்கணோக்கி, ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)

அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையையே யன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒரு பிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக முழுதும் பெண் தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது சுவாதந்திரிய மின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால்
இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமாரோடொக்கச் சொல்லத் தட்டில்லை.

தோழி நிலைமையும் தாயார் நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனே யென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙன மாகுமென்க.
சிருங்கார ரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளைத் தோத்திரப் பிரபந்தரூபமான ஞானநூலாகிய
இதிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச், சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.

ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால் தோழியர் பிரிய அக் கன்னிகை அங்குத் தனித்து நின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப் புருஷன் அங்கு வந்து சேர,
இருவரும் ஊழ்வினை வசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவ விவாகக் கிராமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு அப்பிரிவினாலாகிய தாபத்தால் வருந்தி அரிதில் மீண்டு
வந்த அத்தலைமகளைக் கண்ட செவிலித் தாய் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்று அறியாளாய்
அப்பொழுது நிகழ்கிற வேனிற் காலத்தினாலாகிய தென்று கருதி அதனைத் தணித்தற் பொருட்டுச் சந்தனக் குழம்பை
அம் மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ் செய்ய, காலதாப மல்லாததால் அதனைத் தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு கலவிக் காலத்தில் இன்பஞ்செய்யும் பொருள்களுள் ஒன்றாதலால் பிரிவுக் காலத்தில் காம தாபத்தை
மிகுவிப்பதாய் மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய தலைமகள் தோழியின் முன்னிலையில் அத்தாய் செயலைக்
குறித்து வெறுத்துக்கூறியது இது.

அழகியமணவாளன் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுது அவனைக்கிட்டி
முத்தியின்ப மனுபவிக்கும்படியான ஆசைகொண்டவரான இவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக் கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவ் வருத்தத்தின் காரணத்தை இன்னதென்று அறியாத
அவரிடம் அன்புள்ள ஞானிகள் அவர்க்குச் செய்த உபசாரங்கள் அவர் வருத்தத்தைத் தணிவிக்க மாட்டாது
அதனை மிகுவிக்கிற நிலையிலே ஐயங்கார் அவர்களது திறத்தைத் தமது நண்பரை நோக்கி உரைத்தவாறாகும்
இது வென்று இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளும் காண்க.

வேதன் – வேதம் வல்லவன்; நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை யும் பாராயணஞ்செய்கின்றவன்;
வேதா என்னும் வடசொல்லின் திரிபெனக் கொண்டால், விதிப்பவன் (படைத்தற்கடவுள்) என்று பொருள்படும்.

இரண்டாமடியில் ஹஸ்தம் என்ற வடசொல் அத்தம் என்றும்,
மூன்றாமடியில் அர்த்தம் என்ற வடசொல் அத்தம் என்றும் விகாரப்பட்டன.

வே – மூங்கில்; வேய் என்பதன் விகாரம்: அதனாலாகிய புள்ளாங்குழலுக்குக் கருவியாகு பெயர்;
தன் – சாரியை. பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டும்,
அவற்றைமகிழ்வித்தற்பொருட்டும் கண்ணன் வேணுகானஞ்செய்தனன்.

மாயன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செயற்குஅரியன செய்யுந் திறம்;
ஆச்சரியகரமான குணங்களும் செயல்களுமாம்; பிரபஞ்ச காரணமான பிரகிருதியுமாம்.
வேதனை, பிரமகபாலம் கை விடாமையால் நேர்ந்தது.

‘ஆயிரஞ்சால்’ என்றது, மிகுதியை விளக்கக் கூறியது; சால் – பெரியபாத்திரம்.
வேது – வெவ்வியது. அனை – அன்னை; தொகுத்தல். வேதநா, சந்தநம் என்ற வடசொற்கள் – வேதனை, சந்து என்று விகாரப்பட்டன.
ஆர் அணங்கு ஓரத்தன் நை வேதனை எனப் பிரித்து, நிறைந்த அழகுடையளான அம்பிகையைப் பக்கத்திலுடையனான
சிவபிரான் வருந்திய வருத்தமென்று உரைப்பாரு முளர். நை – வினைத்தொகை,

————-

அரைக்கலை வேலை யுடுத்த மண் பல் பகலாண்டு பற்றல்
அரைக்கலை வேலை யுடை வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு நெஞ்சே
அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே———25–

நெஞ்சே – (என்) மனமே!
அரைக்கு – அரையினிடத்து,
அலை வேலை உடுத்த – அலைகளை யுடைய கடலை (ஆடையாக)த்தரித்த,
மண் – பூமியை,
பல் பகல் ஆண்டு – பலநாளளவும் அரசாண்டு,
பற்றலரை கலை வேலை உடை – பகைவர்களை நிலை குலைந்தோடச் செய்கிற வேலாயுதத்தை யுடைய,
வேந்தர் – அரசர்களது,
வாழ்வு – (நிலையற்ற) வாழ்க்கையை,
எண்ணல் – ஒரு பொருளாகக் கருதாதே:
ஐவரையும் – பஞ்சேந்திரியங்களையும்,
அரைக் கலை – நீ அடக்க மாட்டாமல்,
அவர்க்கே வேலை புரிவை என்றாலும் – அவ்விந்திரியங்கட்கே வசப்பட்டு (அவை செல்லும் வழியிலேயே நின்று அவற்றிற்குப்)
பணி விடை செய்வாயாயினும்,
அரை கலை வேலை – அரைக் கணப் பொழுதாயினும்,
அரங்கனுக்கு ஆட்பட ஆதரி – ஸ்ரீரங்கநாதனுக்கு அடிமை செய்ய விரும்புவாய்.

இவ் வுலகத்தில் எதிரற்ற தனியரசாட்சி கிடைப்பதாயினும், அது முத்திப் பெருஞ்செல்வத்தை நோக்கப் பெரிதும் அற்பமாதலால்,
அதனை விரும்பாதே; பெரும்பாலும் காலத்தை யெல்லாம் ஐம்பொறிகளின் வழியிலேயே செலுத்துவையாயினும்,
அவப் பொழுதிலும் தவப் பொழுது’ என்றபடி மிகச் சிறிது பொழுதேனும் நம் பெருமாளுக்கு அடிமை செய்ய விரும்புவையாயின்,
பஞ்சேந்திரிய மூலமாக வுண்டாகிற சகல கருமங்களையும் போக்கி எல்லாச் செல்வங்களினும் மேலான முத்திப் பேற்றைத்
தவறாமலடைதல் கூடும் என்று தன் நெஞ்சத்தைத் தானே விளித்து அறிவுறுத்தினார்.

அரை – பாதி; உடம்பின் நடுவுறுப்பான இடைக்கு ஆகுபெயர். அரைக்கு = அரையில்; உருபுமயக்கம்.
அலை வேலை – இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகை;
அலை யலைக்கிற வேலை யெனக் கொண்டால், வினைத்தொகையாம்.
இனி, அரை – இடையில், கலை – ஆடையாக, வேலை – கடலை, உடுத்த என்று பதவுரை கூறினுமாம்.
கலை – மேகலை யென்னும் இடையணியுமாம்.

பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாகவும் அப் பெண் இடையிலணியும்
அணியாகவும் கூறுதலும், அரசனாளப் படுகின்ற பூமியை அக் கணவனாலளப்படும் மனைவியாகக் கூறுதலும் கவிசமயம்.
பகல் – நாளுக்கு இலக்கணை. ஆண்டு உடை என இயையும்.
பற்றலர் – விரும்பாதவர், சேராதவர்: எதிர்மறை வினையாலணையும் பெயர்.
கலை வேல் – வினைத்தொகை. எண்ணல் – எதிர்மறை யொருமை யேவல்.

அடக்குதற்கு அரிய உட்பகைவ ரென்ற கருத்து
‘ஐவர்’ என்ற உயர் திணைத் தொகைக் குறிப்புப் பெயரில் தோன்றுதல் காண்க;
உம் – முற்று அரைக் கலை – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம்:
கு – சாரியை, அல் – எதிர்மறை யிடை நிலை. ஏ – பிரிநிலை. உம் – இழிவு சிறப்பு.
கலை -கால நுட்பம்: ‘கண்ணிமைப் பொழுது பதினெட்டுக் கூடினால், ஒரு காஷ்டை;
முப்பது காஷ்டைகள் கூடினால், ஒரு கலை’ என்ற கால வளவையை யுணர்க.

—————

ஆதவன் அந்தரம் தோன்றாமல் கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆ தவனம் தர வெற்பு எடுத்தான் அடியார் பிழை பார்
ஆதவன் அம் தரங்கத்தான் அரங்கன் அடியன் என்று உள்
ஆத அனந்தரம் கண்டீர் வினை வந்து அடைவதுவே——–26–

ஆதவன் – சூரியன்,
அந்தரம் – வானத்திலே,
தோன்றாமல் – கட்புலனாகாதபடி,
கல் மழை – ஆலாங்கட்டியைப் பொழிகின்ற மேகங்கள்,
ஆர்த்து எழு நாள் – ஆரவாரித்துக் கொண்டு எழுந்த காலத்தில்,
ஆ – பசுக்கள்,
தவனம்தர – தவிப்பை யடைய,
வெற்பு எடுத்தான் – (அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுக்) கோவர்த்தந கிரியை (க்குடையாக) எடுத்துப் பிடித்தவனும்,
அடியார் பிழை பாராதவன் – தன் அடியார்களுடைய குற்றத்தைப் பொருள் செய்யாது அவர்கட்கு அருள் செய்பவனும்,
அம் தரங்கத்தான் – அழகிய அலைகளை யுடைய கடலிற் பள்ளி கொள்பவனும் ஆகிய,
அரங்கன் – ஸ்ரீரங்கநாதனுக்கு,
அடியன் தொண்டன்
யான், என்று உள்ளாத அனந்தரம் கண்டீர் – என்று (ஒருவன் தன்னைக்) கருதாத பின்பன்றோ,
வினை வந்து அடைவது – (முன்பு அவன் செய்த) கருமம் (தன் பயனை விளைத்தற்கு அவனிடம்) வந்து சேர்வது; (எ – று.)

பிறப்பு அநாதியாய் வருதலின் ஒருவன் முற் பிறப்புக்களில் எவ்வளவு கருமம் செய்திருப்பினும்,
அவன் தன்னைத் திருவரங்கநாதனது அடியவனென்று கருதுதல் மாத்திரஞ் செய்வனாயின்,
அவனது பழவினை யனைத்தும், விளக்கின் முன் இருள் போலவும், காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய்போலவும்
இருந்த விடமுந் தெரியாதபடி விரைவில் அழிந்திடு மென்பதாம்.

கண்டீர் என்ற முன்னிலைப் பன்மை யிறந்த கால வினை முற்று,
இடைச் சொல் தன்மைப்பட்டுத் தேற்றப் பொருள் குறித்து நிற்கும்.
அந்தரம் ஆர்த்து என்று இயைத்து, வானத்தை யுடைத்துக் கொண்டு எனினுமாம்.
எழு நாள் – வினைத்தொகை; பண்புத் தொகையாய், ஏழுநா ளென்றும் பொருள்படும்.
மேகங்களின் மிக்க மழை பசுக்களுக்கு வருத்தத்தை விளைத்ததோடு, அவற்றின் மிக்க பேரிடிகளினோசையும்
அச்சத்தால் ஆநிரையை மிகவருத்தின தென்பது, ‘கல்மழை யார்த் தெழுநாள் ஆதவனந்தர’ என்பதில் தோன்றும்.
ஆதவநம்தர என்பதற்கு – பசுக்கள் (அம்மழை மிகுதியைப் பொறுக்கு மாற்றலின்றி நிலை நிற்க மாட்டாமல்)
ஓடத்தொடங்க என்று உரைத்தலு முண்டு.

இந்திரன் கல்மழைபொழிவித்ததனால் அதனைக் கல்மலைகொண்டே தடுத்திட்டனன்,
அவன் நீர்மழைபொழிவித்திருந்தால் அதனை நீர்கொண்டே தடுத்திருப்பன்,
அகடித கடநாசாமர்த்தியமுடைய எம்பெருமான் என்ற தாற்பரியம்,
‘கன்மழைக்காக வெற்பெடுத்தான்’ என்ற சொற்போக்கில் தோன்று மென்பர் ஆன்றோர்.

அடியார் பிழை பாராதவன் – “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிவிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க்கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே” என்ற பெரியாழ்வாரருளிச்செயலைக் காண்க.

அம் – உரிச்சொல். தரங்கம் – அலை.
‘அம் தரங்கம்’ என்பதை அடையடுத்த சினையாகுபெயரென்றாவது, பண்புத் தொகை யன்மொழியென்றாவது கொள்ள வேண்டும்.
அடியார் அந்தரங்கத்தான் என்றும் எடுத்து, “மலர்மிசை யேகினான்” என்றபடி
அன்பால் நினைக்கின்ற அடியார்களுடைய இதயத்தில் அவர் நினைந்த வடிவோடு சென்று வீற்றிருப்பவன் என வுரைப்பினும் அமையும்.
அடியன் – தன்மையொருமை. உள்ளாதவன் அந்தரம் என்று பதம் பிரித்து,
உள்ளாதவன் – கருகாதவனுக்கு, அந்தரம் – முடிவில், வினை வந்து அடைவது என்று உரைப்பாரு முளர்.

அந்தரம், தபநம், தவநம், தரங்கம், அந்தரங்கம், அநந்தரம் – வடசொற்கள்.
அடைவதுவே – குற்றியலுகரம் சிறுபான்மை கெடாது பொது விதியால் வகர வுடம்படு மெய் பெற்றது.

—————

அடையப்பன் னாகம் கடிவா யமுதுக வங்கி குளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்று குன்றால்
அடையப்பன் னாக மிசை தாங்கப் பாலர்க்கு அருள் செய்ததால்
அடையப்பன் னாகம் கரியான் அரங்கன் எட்டக்கரமே –27-

ஆல் அடை – (பிரளயப்பெருங்கடலிலே) ஆலிலையிற் பள்ளி கொண்டருள்கிற,
அப்பன் – (யாவர்க்குந்) தலைவனும்,
ஆகம் கரியான் – திருமேனி கறுத்திருப்பவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
எட்டு அக்கரம் – திருவஷ்டாக்ஷரமந்திரமானது, –
பல் நாகம் அடைய கடி வாய் அமுது உக – விஷப் பற்களினாற் சர்ப்பங்கள் (உடம்பு) முழுவதிலும் கடித்த வாயினிடமாக அமிருதம் சிந்தவும்,
அங்கி குளிர் அடைய – நெருப்புக் குளிர்ச்சியை யடையவும்,
பல் நாகம் மருப்பு ஆயுதம் இற – பல யானைகளின் தந்தங்களாகிய ஆயுதங்கள் ஒடியவும்,
குன்றால் அடை அப்பு அ நாகம் மிசை தாங்க – மலையோடு அடுத்தலை யுடையதான ஜலம் (கடல்) அந்த மலையின்மீது ஏந்தவும்,
பாலற்கு – சிறுவனான பிரகலாதனுக்கு,
அன்று – அந்நாளில் (இரணியன் பலவாறு வருத்தத் தொடங்கிய காலத்தில்),
அருள் செய்தது – கருணை புரிந்தது; (எ – று.)

தனித்தனி எல்லாப்பிராணிகளாலும் இறவாதபடி வரம் பெற்றவனும் மூவுலகையும் வென்று தன்னையே கடவுளாக
அனைவரும் வணங்கும்படி செய்துவருகின்றவனுமான இரணியாசுரன்
தன்மகனான பிரகலாதனுக்கு அசுர குருவாகிய சுக்கிராசாரியரைக்கொண்டு அக்ஷராப்பியாசஞ் செய்விக்கிறபொழுது,
அக்காலவழக்கத்தின்படி அவ்வாசிரியன் ‘இரணியாயநம:’ என்று முதலிற் சொல்லிக் கல்வி கற்பிக்க,
பிரகலாதன் அங்ஙனஞ்சொல்லிக் கல்விகற்க உடன்படாது நாராயண நாமத்தை யுட்கொண்ட அஷ்டாக்ஷர மகாமந்திரத்தைச் சொல்ல,
அதனை யுணர்ந்த இரணியன் மைந்தனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறுமுயன்றும்
அவன் வழிப்படாது விடாப்பிடியையுடையனானமை கண்டு கடுங்கோபங்கொண்டு,
தன்னைச் சார்ந்த அசுரர்களை யழைத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டனன்;

அதற்கு இசைந்த அவர்கள் தக்ஷகன் முதலிய கொடிய அஷ்டமகாநாகங்களைக் கொண்டுவந்து அக்குமாரன்மீது கடிக்கவிட,
அந்தப்பெரும்பாம்புகள் காளி காளாத்திரி யமன் யமதூதி என்ற விஷப்பற்கள் கொண்டு
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடித்து உக்கிரமான விஷங்களைக் கக்க,
அவன் இடைவிடாது நாராயணநாமோச்சாரணஞ் செய்துவந்ததுபற்றி அவன்பக்க லெழுந்த திருமாலருளால்,
அக்கடித்தவாய்களினின்று சொரிந்த விஷமே அமிருதமயமாக, அந்தப்பரமபாகவதன் சிறிதும் ஊறுபாடின்றி யிருந்தனன்;

அசுரர்கள் அவனை நெருப்பிலே போகட, அத்தீயும் குளிர்ந்து அவனை எரிக்கமாட்டாதாயிற்று;
இரணியன் கட்டளையால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தங்கள் வலியதந்தங்களாற் பாய்ந்து இடித்தபோது,
திருவருள்வலிமைபெற்ற அவனது மார்பிற் பட்டதனால் அத்திசையானைகளின் தந்தங்கள் முறிந்து போய்விட்டன;

அசுரர்கள் அவனைப் பெரியமலையுடன் சேர்த்து நாகபாசங்களினாற் கட்டிக் கடலிலே போகட,
அச்சமுத்திரத்திலே அம்மலையானது பிரகலாதன் தன்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய்மிதந்தது:
நாகபாசந் தானே விடுபட்டதனாற் பிரகலாதன் இனிது பிழைத்துக் கரைசேர்ந்தனன்;

இங்ஙனம் பலவாறாகத் துன்பந்தீர்த்துப் பக்தனைப் பாதுகாத்தது எனப் பெரியதிரு மந்திரத்தின் பிரபாவத்தை வெளியிட்டார்.

நாகம் மருப்பு ஆயுதம் இற என்பதற்கு –
யானைத்தந்தங்களும் ஆயுதங்களும் ஒடிபட வென்று உரைத்தலுமாம்;
அசுரர்கள் ஒருங்குசேர்ந்து பலவகைப்படைக்கலங்களைக் கொண்டு பிரகலாதனை வதைக்கத்தொடங்க
அவ்வாயுதங்களெல்லாம் அவனுடம்பிற் பட்டமாத்திரத்தில் ஒடிந்துபோய்விட
அவன் அவற்றாற் சிறிதும்வேதனையுறாது விளங்கின னென்பதும் உணர்க,

நம்பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணி வாள்
வெம்படை மாசுணம் மாமத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –திருவரங்கத்து மாலை –81

நாகம் என்ற வடசொல் – யானையையும் பாம்பையும் குறிக்கும்போது, நகத்தில் வாழ்வது எனக் காரணப்பொருள்படும்:
தத்திதாந்தநாமம்; (நகம் – மலையும், மரமும்) அங்கி – அக்நி என்ற வடசொல்லின் சிதைவு.
குளிர் – முதனிலைத்தொழிற்பெயர்.

மூன்றாமடியில், அடை – அடுத்தல்; தொழிற் பெயர்: அடு – பகுதி, ஐ – விகுதி,
குன்றால் அடை அப்பு என்பதற்கு – மலைகளினாலே யடைக்கப்பட்ட சமுத்திர மெனினும் அமையும்;
நாகபா சத்தினாற்கட்டிக் கடலிலேயிடப்பட்ட பிரகலாதன்மேல் இரணியன்கட்ட ளைப்படி அசுரர்கள் அனேகமலைகளைக்
கொண்டுபோய்ப் போகட்டு அழுத்து வாராயின ரென்று புராணங் கூறும்.
‘அன்றுகுன்றாலடையப்பு’ என்று எடுத்து, அக்காலத்தில் (இராமாவதாரத்தில்) மலைகளைக்கொண்டு திருவணை
கட்டியமைக்கப்பட்ட கட லென்று இயற்கையடைமொழி புணர்ந்ததாகப் பொருளுரைத்தல் சிறப்பன்று.
‘நாகம்’ – மலையையுணர்த்தும்போது, நக மென்ற வடசொல்லின் நீட்டல்.
ஆயுதம், அப், பாலன் – வடசொற்கள். அப்பன் – ஸர்வஸ்வாமி. ஈற்றடியில், ன் – விரித்தல்.

முன்றாமடியில், ‘அந்நாகம்’ என்பது, ‘அன்னாகம்’ என்று கொள்ளப் பட்டது, யமகநயத்தின்பொருட் டென்க.

—————-

அக்கர வம்புனைந் தாரய னாரிடை யாயிரு நால்
அக்கர வம்பு மலராள் கொழுநன் அரங்கன் செங்கோல்
அக்கர வம்புயன்றான் மூலம் என்ப தறிவித்திடான்
அக்கர வம்புவி மேல் வேழ மே வெளி யாக்கியதே –28-

இரு நால் அக்கரம் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவனான,
வம்பு மலராள் கொழுநன் – வாசனையையுடைய தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்குக் கணவனும்,
செம் கோலம் கரம் அம்புயன் – சிவந்த அழகிய தாமரைமலர்போன்ற திருக்கைகளையுடையவனுமாகிய,
அரங்கன் ரங்கநாதன், –
அக்கு அரவம் புனைந்தார் அயனார் இடை ஆய் – எலும்பையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த
சிவபிரானுக்கும் பிரமதேவருக்கும் நடுவிலே தானிருந்து கொண்டு,
தான் மூலம் என்பது அறிவித்திடான் – தானே (எல்லார்க்கும்) ஆதிமூலப்பொருள் என்கிற உண்மையை வெளிப்படுத்தான்;
அ கரவு – அந்த ஒளிப்பை,
அம் புவிமேல் வேழமே வெளியாக்கியது – அழகிய நிலவுலகத்தில் (கஜேந்திரனாகிய) யானையே பகிரங்கப்படுத்தி விட்டது; (எ – று.)

படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் முறையே செய்பவராதலாற் பிரம விஷ்ணு ருத்திர ரென்று
முறைப்படுத்திக் கூறப் படுகின்ற திரிமூர்த்திகளுள் இடைப்பட்டவனான திருமால்
முன்னும் பின்னு முள்ளமற்றையிருவர்க்கும் ஸமனானவன்போன்றிருத்தலால்,
‘அவனே அம் மூவரில் மற்றையிருவர்க்கும் முதற்பொருள்’ என்கிற மெய்ம்மை அறிதற்கு அரிதாயிருந்தது;
அந்த மறைபொருள், கஜேந்திராழ்வான் ஸ்ரீமந்நாராயணனை மற்றைப்பெயர்களாற் குறியாமல் ‘ஆதிமூலமே’ என்று குறித்து
விளித்ததனால் இனிது வெளியாயிற்று என்பதாம்.
“உன்னொக்க வைத்த விருவர்க்கு மொத்தி யொருவர்க்கு முண்மையுரையாய்” என்றது,
முதன் மூன்றடிகட்கு மேற்கோளாகத்தக்கது.
கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது, எம்பெருமானல்லாத பிறதேவரெல்லாரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
திருமால் தானே வந்து அருள்செய்தன னாதலால், இரகசியார்த்தம் வெளியாயிற் றென்க.

அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம். கரவு – கள்ளம். வேழமே, ஏ – இழிவு சிறப்பு;
“விலங்குமன்றோ சொல்லிற்று ஐயமற்றே” என்பர் திருவேங்க டத்தந்தாதியிலும்.

————–

ஆக்கு வித்தார் குழலால ரங்கே சரன் பால் விதுரன்
ஆக்குவித்தார வடிசில் உண்டார் கடலாடையகல்
ஆக்குவித்தாரறி வற்றேனைத் தம்மடி யார்க்கடிமை
ஆக்குவித்தாரடியே யடியேன்று ய்க்குமாரமுதே–29-

குழலால் – வேய்ங்குழலினிசையால்,
ஆ குவித்தார் – பசுக்களை (ஓரிடத்துத் திரளாக)க் கூட்டினவரும்,
விதுரன் ஆக்கு வித்தாரம் அடிசில் – விதுரன் சித்தஞ்செய்த விசேஷ போஜநத்தை,
அன்பால் உண்டார் – அன்பினாற் புசித்தருளியவரும்,
கடல் ஆடை அகலா – சமுத்திரமாகிய ஆடையை நீங்காத,
கு – பூமியின் உற்பத்திக்கு,
வித்தார் – விதை போலக் காரணமானவரும்,
அறிவு அற்றேனை தம் அடியார்க்கு அடிமை ஆக்குவித்தார் – அறிவற்ற என்னைத் தமது அடியார்கட்கு
அடியவனாகும்படி அருள்செய்தவருமாகிய,
அரங்கஈசர் – ரங்கநாதருடைய,
அடியே – திருவடிகளே,
அடியேன் துய்க்கும் ஆர் அமுது – தாசனாகிய யான் அனுபவிக்கும் அருமையான அமிருதமாம்.

அமிருதத்தை நுகர்ந்து ஆனந்தமடைவார்போல அடியேன் எம்பெரு மானுடைய திருவடிகளைத் தியானித்தல் துதித்தல் பூசித்தல்
முதலியன செய்து பேரானந்தமடையவே னென்பதாம்.
பலவிடங்களிற் பரவி மேய்கிற பசுக் கூட்டங்களை ஒருங்கு சேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற் பொருட்டும்,
கண்ணன் இனிமையாக வேணு காநஞ் செய்வன்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி முறையாகிறவன்;
விசித்திர வீரியனது மனைவியாகிய அம்பிகையினால் ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்;
பாண்டவர்க்குந் துரியோதனாதியர்க்குஞ் சிற்றப்பன். கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது பேசுபவனாய்
அத்தினாபுரிக்குச் சென்ற போது அங்கு வேறு யாருடைய வீட்டிற்குஞ் செல்லாமல் ஞான பக்திகளிற் சிறந்த
விதுரனுடைய திருமாளிகையினுட் புக்குத் தங்கி அங்கு அவனால் மிக்க அன்புடனமைக்கப்பட்ட
விருந்துணவை அமுதுசெய்தருளின னென்பது, பிரசித்தம்.

குழல் – அதனொலிக்கு, முதலாகுபெயர். அன்பால் உண்டார் என இயையும்; அன்பால் ஆக்கு என்றும் இயைக்கலாம்.
வித்தாரவடிசில் – பல வகைச் சுவைப் பண்டங்களோடு கூடிய உணவு, விஸ்தாரம், கு – வடசொற்கள்.
அகலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அடியே, ஏ – பிரிநிலை.
அடியே அடியேன் துய்க்கும் ஆரமுது – “உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங்,
கண்ண னெம்பெருமான்” என்றார் நம்மாழ் வாரும். அரங்கேசர் – குணசந்தி.

————-

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன்றிரு
ஆரா தனம் செய்வன் வேதா வென்றாலடியேன் புகழ்கைக்கு
ஆராதனம் செய்ய போதாந்திரு மகளாக பல் பூண்
ஆராதனம் செயன்பாகா வரங்கத் தமர்ந்தவனே –30-

செய்ய போது – செந்தாமரை மலர்,
ஆதனம் ஆம் – வீற்றிருக்குமிடமாகப் பெற்ற,
திருமகள் இலக்குமியை, ஆக – மார்பிலுடைய வனே!
பல் பூண் ஆரா – ஆரத்தையும் மற்றும் பலவகை யாபரணங்களையுந் தரித்தவனே!
தனஞ்செயன் பாகா – அருச்சுனனுக்குச் சாரதியானவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
ஆராத நஞ்சு எய்து கண்டன் – உண்ணத் தகாத விஷம் பொருந்திய கழுத்தை யுடையவனான சிவபிரான்,
நின் கீர்த்தி அறைவன் – உனது புகழை யெடுத்துச் சொல்லித் துதித்துப் பாடுவன்;
வேதா – பிரமதேவன்,
திரு ஆராதனம் செய்வன் – (உனக்குப்) பூசனை புரிவன்;
என்றால் -, அடியேன் புகழ்கைக்கு ஆர் – நான் (உன்னைத்) துதித்தற்கு என்ன தகுதியுடையேன்!

திரிமூர்த்திகளுள் மற்றை யிருவரும் புகழ்ந்து பூசனை புரியுஞ் சிறப்பை யுடைய உனது புகழ் எளியனான என்னால்
எடுத்துச் சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.
‘ஆராதநஞ்செய்துகண்டன்’ என்றது – மகா பாகவதனான உருத்திரனுடைய செயற்கரியன செய்யுந் திவ்விய சக்தியையும்,
‘வேதா’ என்ற பெயர் – விதித்தற் கடவுளான பிரமனது பெருமையையும் விளக்கும்.

திருமாலின் கட்டளைப்படி தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில், அதனினின்று எழுந்த
அதி பயங்கரமானதொரு பெரு விஷத்தைக் கண்ட மாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல்
அஞ்சி யோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளால் அவ்விஷத்தைச் சிவபிரான் அமுது செய்து
கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்பது வரலாறு;

பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் தோன்றத் திருமால் அவற்றில்
விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச் செய்தன ரென்றும் வரலாறு கூறப்படும்.
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரத யுத்தத்தில் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து
அதனாற் பார்த்தசாரதி யென்று ஒரு திருநாமம் பெற்றமை பிரசித்தம்.

முதலடியில் ‘னஞ்செய்து’ என்றவிடத்து நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப்பட்டது. யமகநயத்தின்பொருட் டென்க.
கண்டம், கீர்த்தி, ஆராதநம், வேதா, ஆஸநம், ஹாரம், தநஜ்ஞ்யன் – வடசொற்கள்.

மூன்றாமடியில், ஆர் – யார் என்பதன் மரூஉ. திருமகளாக – திருமகளாகன் என்ற பெயரின் ஈறுகெட்டவிளி.
ஹாரம் – பொன்னாலும் முத்தினாலும் மற்றையிரத்தினங்களாலும் மலரினாலு மாகிய மார்பின் மாலை.
தருமபுத்திரன் இராஜ சூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அருச்சுனன் வடக்கிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால், அவனுக்கு ‘தநஞ்ஜயன்’ என்று ஒருபெயராயிற்று;
இனி, இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும் ஒருபொருள் கொள்ளலாம்.
அடியேன் ஆர் என்றவிடத்து, யார் என்ற வினாவினைக்குறிப்புமுற்று – தன்மையொருமைக்கு வந்தது.

இரண்டாமடியிறுதியில், வருமொழி முதலுயிர்வரக் குற்றியலுகரக்கேடு கொள்ளாமலும், பொது விதிப்படி வகரவுடம்படுமெய்த்
தோற்றத்தையேனும் ஏற்காமலும் சந்திபிரித்து நிறுத்தினது, யமகவமைப்பின் பொருட்டு.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருக்கிற இடங்களிலெல்லாம், கட்டளைக்கலித்துறையிலக்கணவமைதியை நோக்குமிடத்து,
குற்றிய லுகரம் அலகுபெறவில்லை யென்று கொள்ளவேண்டும்;
இல்லாவிடின், “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே
நிரைபதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்ற கட்டளைக் கலித்துறை யிலக்கணம் அமையாது.
இங்ஙனம் கொள்ள வேண்டிய விடங்களிலெல்லாம் மூலத்தில் இப்பதிப்பில் (+) இக்குறி இடப்பட்டிருக்கிறது.

—————

அமர வரம்பையி னல்லார் பலரந்திக் காப்பெடுப்ப
அமர வரம்பையில் வேல் வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்
அமர வரம்பையில் கான்போயிறந்தன ராதலில் வீடு
அமர வரம்பையின் மஞ்சா ரரங்கருக் காட் படுமே –31–

அமர அரம்பையின் நல்லார் பலர் அந்திக் காப்பு எடுப்ப – தேவசாதியாகிய ரம்பை யென்னும் அப்ஸர ஸ்திரீயைக் காட்டிலும்
அழகிய வர்களான மகளிர் பலர் திருவந்திக்காப்பு எடுக்கவும்,
அமர அரம் பையில் வேல் வேந்தர் சூழ – போர்க்கு உரியதும் அரமென்னும் வாள் விசேடத்தால் அராவப்பட்டதுமான
வேலாயுதத்தை யேந்திய அரசர்கள் பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும்,
மண் ஆண்டு இருந்தோர் அமர – நிலவுலகத்தை யர சாண்டிருந்தவர்க ளெல்லாரும்,
(பின்பு),
வரம்பை இல் கான் போய் இறந்தனர் – எல்லையை யுடையதாகாத வனத்திற்குச் சென்று மாய்ந்தார்கள்:
ஆதலில் – ஆகையால்,
வீடு அமர – (நீங்கள்) பரமபதமடைதற்பொருட்டு,
அரம்பையில் மஞ்சு ஆர் அரங்கருக்கு ஆள்படும் – வாழை மரத்தின் மீது மேகங்கள் தங்கப்பெற்ற ஸ்ரீரங்கத்தில்
எழுந்தருளியிருக்கிற நம்பெருமாளுக்கு அடிமைப்படுங்கள்; (எ – று.)

செல்வம் யாக்கை இவற்றின் நிலை யில்லாமையை முதல் வாக்கியத்தில் எடுத்துக் காட்டி,
இரண்டாம் வாக்கியத்தில், அரங்கனுக்கு ஆட்பட்டால் அழியாச் செல்வமாகிய முத்தி சித்திக்கு மென்றார்.
அரசர்கள் தமது ஆயுளிற் பெரும்பான்மை அரசாண்டு முதுமை வந்த பின்பு அவ்வரசாட்சியைத் தமது மைந்தர்க்கு அளித்து
வனம் புகுந்து மறுமைப் பேற்றின் பொருட்டுச் சில காலம் தவஞ்செய்தலு முளதாயினும், அச்சில நாளைத் தவத்தால்
வீடு பேறு கிடைக்கு மென்ற நிச்சய மில்லை யென்பதும் இதிற் போதரும்.
‘வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்’ என்றதனால், சக்கரவர்த்திக ளென்றதாயிற்று.

அரம்பை – ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்; இன் – ஐந்தனுருபு, எல்லைப் பொருளது;
இங்ஙனம் உபமான உபமேயங்களினிடையே வரும் எல்லைப் பொருளை உறழ்பொரு வென்பர்.
அந்திக் காப்பு எடுத்தல் – பவனி வருதலாகிய திருவிழாவின் முடிவிலே கண்ணெச்சில் கழித்தற் பொருட்டு ஆரதி யேந்துதல்;
அந்திக் காப்பு – அந்தி மாலைப் பொழுதில் திருஷ்டி தோஷ பரிகாரத்திற்காக ஆரதியேந்துதலுமாம்.

இரண்டாமடியில், அமரம் – ஸமரம் என்ற வடசொல்லின் விகாரம்;
அமர என்று எடுத்து, அமர் என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்ச மெனினுமாம்.
பயில் என்பது பையில் எனப் போலியாய் நின்றது, யமகத்தின்பொருட்டு.
அரம்பயில்வேல்- கீழ் ‘அரங்காதுவார்கணை’ என்றதனோடு ஒப்பிடுக.

மூன்றாமடியில், அமர என்பது – ‘அடைய’ என்பது போல எஞ்சாமைப் பொருள் காட்டி நின்றது;
அம் மரம் என்று எடுத்து, அழகிய மரங்களையுடைய வென்று உரைப்பாரு முளர்.
வரம்பையில் என்றவிடத்து, இல் என்பது – செயப்படுபொருள் குன்றாததாய் நின்றது.
அரம்பையில் மஞ்சுஆர் அரங்கம் – வாழை மரங்களின் உயர்ச்சி வளத்தை விளக்க வந்த தொடர்புயர்வுநவிற்சி யணி.
ஆட்படும் – உம்ஈற்று ஏவற்பன்மை.

—————

ஆளாக வந்த வடியேற் கருள்பரி யானை திண் டேர்
ஆளாக வந்தனிற் செற்றிலங்கே சனை யட்டவல்வில்
ஆளாக வந்தன் புயந்துணித் தாயரங் காமுளரி
ஆளாக வந்தமி லுன்னடி யார்க்கன்ப னாவதற்கே –32-

ஆகவந்தனில் – போரிலே,
பரி – குதிரைகளையும்,
யானை – யானைகளையும்,
திண் தேர் – வலிய தேர்களையும்,
ஆள் – காலாள்களையும்,
செற்று – அழித்து,
இலங்கா ஈசனை அட்ட – இலங்கையரசனான இராவணனைக் கொன்ற,
வல்வில் ஆளா – வலிய வில்லை யாள்கிற வீரனே!
கவந்தன் புயம் துணித்தாய் – கபந்தனென்ற அரக்கனது தோள்களை யறுத்திட்டவனே!
அரங்கா – ரங்கநாதனே!
முளரியாள் ஆக – தாமரை மலரில் வாழ்பவளான திருமகளை மார்பிற் கொண்டவனே!
ஆள் ஆக வந்த அடியேற்கு – அடிமை யென்று வந்து உன்னைச் சரணமடைந்த எனக்கு,
அந்தம் இல் உன் அடியார்க்கு அன்பன் ஆவதற்கு அருள் – எல்லை யில்லாத உனது அடியார்கட்கு
அடியவனாகுமாறு கருணை செய்வாய்; (எ – று.)

எம்பெருமானுக்குத் தொண்டனாவதனோடு அப்பெருமானடியார்கட்கு அடிமை பூண்டொழுகுதலில்
தமக்கு உள்ள அபேக்ஷையைக் கூறினார்.

பரியானை தேர் ஆள் – சதுரங்க சேனை. குதிரை, ஓரங்கமாதலோடு மற்றோரங்கமான
தேரைச் செலுத்துவது மாதலால், முன்நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து யானையை நிறுத்தினது, அது சேனைக்கு அலங்காரமாதலும் வீரர்க்கு வாகனமாய் நிற்றலோடு
தானும் போர்செய்து பகையழிப்பதாதலும் பற்றியென்க.
ஆஹவம், லங்கேசன், அந்தம் – வடசொற்கள். லங்கேசன் – குணசந்தி.
முளரி – முட்களை யுடைய அரியையுடையது: வேற்றுமைத் தொகையன்மொழி; அரி = அரை: தண்டின் சுற்றுப்புறம்.

————-

ஆவா கனத்த ரடியார் மனத்துட் புள்ளான வொப்பில்
ஆவா கனத்த ரரங்கர் பொற்றாளுக்கு அடிமைப் படார்
ஆவா கனத்த வழுக்குடல் பேணி யறி வழிந்தவ்
ஆவா கனத்த ரிருந்தென் னிராமலென் னம்புவிக்கே–33-

அடியார் மனத்துள் ஆவாகனத்தர் – அடியார்களுடைய இதய கமலத்தில் வந்து வீற்றிருத்தலை யுடையவரும்,
புள் ஆன ஒப்பு இலா வாகனத்தர் – கருடப் பறவையாகிய ஒப்பற்ற வாகனத்தை யுடையவருமாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதருடைய,
பொன் தாளுக்கு – அழகிய திருவடிகளுக்கு,
அடிமைப்படார் – ஆட்படமாட்டார்கள் (சிலர்):
ஆ ஆ – அந்தோ!
கனத்த அழுக்கு உடல் பேணி – பாரமாயுள்ள அசுத்தமான தம் உடம்பைப் பாதுகாத்துக் கொண்டு,
அறிவு இழந்து – மதி கெட்டு,
அவா ஆகு – (சிற் றின்பத்தில்) ஆசை கொள்ளுகிற,
அனத்தர் – பயனற்ற அவர்கள்,
அம் புவிக்கு – அழகிய இந்நில வுலகத்தில்,
இருந்து என் – உயிர் வாழ்ந்திருத்தலால் என்ன லாபம்?
இராமல் என் – இராதொழிதலால் என்ன நஷ்டம்? (எ – று.)

அரங்கர்க்கு ஆட்படாதவர் இருந்தென்ன? போயென்ன? என்றபடி;
எனவே, இவ்வுலகத்தில் மானுடப் பிறப்பெடுத்தலின் பயன் அரங்கர்க்கு ஆட்பட்டு உய்தலே யென்பது, தேர்ந்தகருத்து.
‘மலர்மிசை யேகினான்’ என்றபடி அன்போடு தியானிக்கின்ற அடியார்களுடைய இதய கமலத்தில் எம்பெருமான்
அவர் நினைந்த வடிவத்தோடு வந்து வீற்றிருத்தலால், ‘ஆவாகனத்த ரடியார்மனத்துள்’ என்றார்.
ஆவாகனத்தர் – தம்மைத்தாமே அங்கு நிலைநிறுத்துபவ ரென்க.

ஆவாஹநம், மநஸ், வாஹநம், கநம், அநர்த்தம், புவி – வடசொற்கள்.
“நேமி சேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமிபாரங்கள்” என்றபடி
பகவத் பக்தரல்லாதவரது உடல் பூமிக்குப் பாரமாதலால், ‘கனத்த வுடல்’ எனப்பட்டது.
ஆ ஆ – இரக்கக் குறிப்பிடைச் சொல்லின் அடுக்கு.

————-

அம்பு விலங்கை நகர் பாழ் படச் சங்கு மாழியும் விட்டு
அம்பு விலங்கை கொண்டாயரங்கா வன்றிடங்கர் பற்றும்
அம்பு விலங்கை யளித்தா யினியென்னை யாசை யென்றிவ்
அம்பு விலங்கையிட் டேசம் சிறையி லடைத் திடலே –34-

அம் – அழகிய,
புவி – பூமியில்,
லங்கை நகர் பாழ்பட – இலங்காபுரியிலுள்ள அரக்கர்கள் அழியும்படி,
சங்கும் ஆழியும் விட்டு அம்பு வில் அம் கை கொண்டாய் – சங்க சக்கரங்களைக் கைவிட்டு
(வந்து இராமனா கத்திருவவதரித்து) அம்பையும் வில்லையும் அழகியகைகளிற் கொண்டவனே!
அரங்கா!
அன்று – அந்நாளில்,
அம்பு – ஜலத்திலே,
இடங்கர் பற்றும் – முதலையினாற் பிடித்துக் கொள்ளப்பட்ட,
விலங்கை – மிருக ஜாதியான கஜேந்திராழ்வானை,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே! –
இனி -, என்னை -,
ஆசை என்று இயம்பு விலங்கை இட்டு – ஆசை யென்று சொல்லப் படுகிற (ஆசையாகிய) விலங்கைப் பூட்டி,
ஏசும் சிறையில் அடைத்திடல் – இகழப்படுகிற (பிறப்பாகிய) சிறைச் சாலையில் அடைக்காதே; (எ – று.)

உனக்கு ஆட்பட்ட அடியேனது காமம் முதலிய குற்றங்களைப் போக்கி இனிப் பிறப்பில்லாதபடி
முத்தி யளித்தருள வேண்டு மென வேண்டியபடி.
பெருமாள் இலங்கை யரசனான இராவணன் முதலிய இராக்கதர்களை யழிக்கக் கருதி வனவாசஞ்செல்லுங்காலத்தில்
சங்க சக்கராம்சமான பரத சத்துருக்கனர்களை உடன் கொண்டு செல்லாது நகரத்திலேயே விட்டுச் சென் றமையும்,
‘சங்கும் ஆழியும் விட்டு’ என்றதில் அடங்கும்.

ஒருவிலங்கினாலே மற்றொரு விலங்கிற்கு நேர்ந்த துன்பத்தையும் பொறாமல் தனது பேரருளினால்
அரை குலையத் தலை குலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகா குணத்தி லீடுபட்டு,
‘அன்று இடங்கர் பற்றும் விலங்கையளித்தாய்’ என்றார்.
விலங்கு – திர்யக்ஜாதி. ‘விலங்கையிட்டேசஞ்சிறையில்’ என்று பாடமோதி,
விலங்கை யிட்டே, சம் – ஜந்மமாகிய, சிறையில் – சிறைக்கூடத்தில் என்று உரைப்பாரு முளர்;
சம் = ஜம்: ஜநநம், பிறப்பு. ஏசு அம் சிறை என்று எடுத்து, அம் – சாரியை எனினும் இழுக்காது.
உயிரைப்பந்தப்படுத்துதலால், பிறப்பு ‘சிறை’ எனப்பட்டது.
“அவாவென்ப எல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றது கொண்டு,
அவாவை ‘விலங்கு’ என்றதன் காரணத்தை உணர்ந்து கொள்க.

லங்கை நகர் – இடவாகுபெயர். மூன்றாமடியில், அம்பு – வடசொல்.
அடைத்திடல் – எதிர்மறை யொருமை யேவல்; எதிர்மறைவியங்கோளுமாம்.

————-

இடவ மலைக்கும் புயங்க மலைக்கு மிலங்குமால்
இடவ மலைக்கு மிருங்க மலைக்கு மிறை வசங்க
இடவ மலைக்கும் புனல் அரங்கா வெய்த்த மார்க் கண்டன் கண்டு
இடவ மலைக்கு முலகழி யாதுள் ளிருந்த தென்னே –35–

இடவ மலைக்கும் – ருஷப கிரியாகிய திருமாலிருஞ்சோலை மலைக்கும்,
புயங்க மலைக்கும் – சேஷ கிரியாகிய திருவேங்கட மலைக்கும்,
இலங்கும் அகல் இடம் அமலைக்கும் -விளங்குகின்ற விசாலமான நிலவுலகத்துக்கு உரிய அதி தேவதையான பூமி தேவிக்கும்,
இருங் கமலைக்கும் – பெரிய செந்தாமரை மலரில் வாழ்பவளான ஸ்ரீதேவிக்கும்,
இறைவ – தலைவனே!
சங்கம் இடவ – சங்கத்தை இடக்கையிலுடையவனே!
மலைக்கும் புனல் அரங்கா – (கரையை) மோதுகின்ற காவிரி நீர்ப் பெருக்குப் பாயுந் திருவரங்கத்தி லெழுந்தருளியிருப்பவனே!
எய்த்த மார்க்கண்டன் கண்டிட – (பிரளயத்தி லலைபட்டு) மெலிவடைந்த மார்க்கண்டேய முனிவன்
(நினது திருவயிற்றினுட் சென்று) காணுமாறு,
அம் அலைக்கும் உலகு அழியாது உள் இருந்தது – (பிரளய வெள்ள) நீரினால் அழிக்கப்பட்ட உலகங்களெல்லாம்
அழியாமல் நினது திருவயிற்றினுள்ளே யிருந்த விதம்,
என்னே – என்ன விசித்திரமோ!

ருஷபம் தவஞ்செய்து பேறுபெற்ற மலையாதலால் தென்திருமலைக்கு ‘ருஷபகிரி’ என்றும்,
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பல வகைக் கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே
அப்பெருமான் இனிது எழுந்தருளி யிருத்தற்கு மலை வடிவமானதனாலும்
மேரு மலையினிடமிருந்து ஆதிசேஷனுடணே வாயுவினாற் கொணரப்பட்ட மலையாதலாலும்
வடதிரு மலைக்கு ‘சேஷகிரி’ என்றும் பெயர்கள் வாய்த்தன.

இடவம் – ருஷபம் என்ற வடசொல்லின் விகாரம்.
புஜங்கமலை யென்பது – ‘சேஷகிரி’ என்பதன் பரியாயநாமமாக நின்றது. புஜங்கம் என்பது, புயங்கம் என்று விகாரப்பட்டது.
அமலா, கமலா என்ற வடசொற்கள் – ஆவீறு ஐயாயின. அமலை – குற்றமில்லாதவள்.
இறைவன் – இறைமை என்ற பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
மலைத்தல் – பொருதல். எய்த்தல் – மெலிதல்.
மார்க்கண்டன் – மிருகண்டுவினது குமாரன்; வடமொழித் தத்திதாந்தநாமம். அம் – நீர்; வடசொல்.

காலகதியைக் கடந்து என்றும் பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்க்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம் புரிந்து நரநாராயணரது தரிசனத்தைப்பெற்று
‘யான் பிரளயக்காட்சியைக் காணு மாறு அருள்புரியவேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அநுக் கிரகித்துச்
சென்றபின்பு மாயவன் மாயையால் மகாபிரளயந் தோன்ற, அப் பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு
வருந்திய மார்க்கண்டேயன், அவ்வெள்ளத்தில் ஆலிலையின் மீது ஒருகுழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற
ஸ்ரீமந்நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட் புக்கு, அங்கிருந்த உலகங்களையும் எல்லாச்
சராசரங்களையும் கண்டு பெரு வியப்புக் கொண்டன னென்பது, இங்குக் குறித்த விஷயம்.

—————–

இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலு நிம்பத்து
இருந்தை யிலந்தித்தி யாதவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து
இருந்தை யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் வெண்ணெ யில்லி லொளித்து
இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–36-

என் செய்தாலும் – என்ன உபாயஞ்செய்தாலும்,
இருந்தை – கரியானது,
இலங்க – விளங்கத் தக்கதாக,
வெளிறு படாது – வெண்ணிற மடையாது;
(என்செய்தாலும்) -,
நிம்பத்து இருந் தையிலம் தித்தியாது – சிறந்த வேப்பெண்ணெய் இன்சுவை பெறாது;
அவை போல் -, –
புல்லர் – அற்பகுணமுடையரான கீழ்மக்கள்,
யாவும் கற்று ஆய்ந்து இருந்து – சகல சாஸ்திரங்களையும் பயின்று ஆராய்ந்திருந்தும்,
ஐயில் அம்பு அன்ன கண் ணார்க்கு அல்லால் – கூரிய அம்பு போன்ற கண்களை யுடைய மகளிர்க்கு அன்பாயிருப்பரேயல்லாமல்,
இல்லில் ஒளித்து இருந்து வெண்ணெய் ஐயில் அம் கை அரங்கர்க்கு அன்பு ஆகி இருக்கிலர் – (ஆய்ச்சியருடைய) கிருகத்தில்
(அவரறியாதபடி) ஒளித்து வீற்றிருந்து வெண்ணெயை எடுத்து உண்ட அழகிய கையை யுடைய ரங்கநாதர்
விஷயமாக அன்பு கொண்டிருக்க மாட்டார்கள்; (எ – று.)

என்றது, புல்லறிவாளரியல்புக்கு இரங்கியவாறாம். உவமையணி.
‘என் செய்தாலும்’ என்பதை மத்யதீபமாக முன் பின் வாக்கியமிரண்டற்கும் கூட்டுக.
வெண்ணெயை ஒளித்திருந்து உண்டது, கிருஷ்ணாவதாரத்தில்.
நிம்பம், தைலம் – வடசொற்கள்.
இரண்டாமடியில் ‘தையிலம்’ என்பதும், மூன்று நான்கா மடிகளில் ‘ஐயில்’ என்பதும் – யமகத்தின் பொருட்டுக் கொண்ட போலிகள்.
தைலம் – எண்ணெய்; திலம் – எள்: அதன் சம்பந்தமானது. இங்கு இச்சொல் நெய் என்ற மாத்திரமாய் நின்றது.
வேப்பெண்ணெய்க்கு ‘இரும்’ என அடைமொழி கொடுத்தது, இகழ்ச்சிக்குறிப்பு; கைப்பிற் பெரிய என்று பொருள்கொள்ளினுமாம்.
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்பது – துணைவினை:
நான்காமடியில், ‘இருந்து’ என்பதற்கு – உட்கார்ந்து என்பது பொருள்;
ஆகவே, ஒரு சொல் வந்த பொருளில் வாராமை காண்க.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்றதன் பின் உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
ஐயில் அம்பு அன்ன – வேலையும் அம்பையும் போன்ற எனினுமாம்.

————

இருக்குமந் தத்தி லாரியா வரங்கன் மண் ஏழுக்குந்தய்
இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான் எட்டு எழுத்தைக் குறி
இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் கை போய்
இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–37-

இருக்கும் அந்தத்தில் அறியா அரங்கன் – வேதமும் தனது முடிவில் (வேதாந்தமாகிய உபநிஷத்துக்களில்) அறிய மாட்டாது நின்ற ரங்கநாதனும்,
மண் ஏழ் உண்டும் தயிருக்கும் அந்த திரு வாய் மலர்ந்தான் – ஏழு வகைப்பட்ட உலகங்களை யெல்லாம் புசித்தும்
(வயிறு நிரம்பாமற் கிருஷ்ணாவதாரத்திலே) தயிரை உண்ணும்பொருட்டாகவும் அந்த அழகிய வாயைத் திறந்தவனு மான திருமாலினது,
எட்டு எழுத்தை – திருவஷ்டா க்ஷரமந்திரத்தை,
குறியிருக்கும் – சிந்தியாத உங்களுக்கும்,
மந்தம் புத்தி ஈர்த்து நல் வீடு எய்தல் ஆகும் – கூர்மையற்ற அறிவை யொழித்து (தத்துவ ஜ்ஞாநம் பெற்று)ச் சிறந்த முக்தியை அடைதல் கூடும்:
கை போய் இருக்கும் அந்தன் செவிடு ஊமன் முந்நீர் கடந்து ஏறிடில் – கைகளில்லாத முடவனும் குருடனும் செவிடனும் ஊமையுமான
ஒருவன் கடலைக் கடந்து அக்கரையேறுவனானால்; (எ – று.)

ஏறிடில் எய்தலாகும் என இயையும். முடம், குருடு, செவிடு, ஊமை என்ற உறுப்புக் குறைகளை யெல்லாமுடைய ஒருவன்
கடல் கடந்து கரையேறுவது உண்டானால், எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தைச் சிந்தியாத உங்கட்கும்
பிறவிக் கடல் கடந்து முத்திக் கரை சேர்தல் உளதாம் என்றார்; என்றது, அஸம்பாவித மென்றபடியாம்:
இது, பொய்த்தற்குறிப்பணி; வட நூலார் மித்யாத்யவஸிதியலங்கார மென்பர்: இதன் இலக்கணம் –
ஒரு பொருளைப் பொய்யென்று நிரூபித்தற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல்.
நீந்த மாட்டாமைக்கு முடமும், கரை இன்னதிசை யிலுள்ளது எனக் காண மாட்டாமைக்குக் குருடும்,
அதனைக் குறித்துப் பிறரை உசாவியுணர மாட்டாமைக்கு ஊமையும், பிறர் சொல்லக் கேட்டறியமாட்டாமைக்குச் செவிடும் சேர்க்கப்பட்டன.

ருக், அந்தம், மந்தம், புத்தி, அந்தன் – வடசொற்கள்.
இருக்கும், உம் – உயர்வுசிறப்பு; பகவானது சொரூபத்தை யுணர்ந்து உரைத்தற்கென்றே யமைந்ததும் என்றபடி,
மண் ஏழ் – ஈரேழுலகம். மண்ணேழுண்டும், தயிருக்கும் என்ற உம்மைகள் – முறையே, உயர்வு சிறப்பு இழிவு சிறப்புப் பொருளன.
அந்தத் திருவாய் – உலகமுண்ட பெருவாய். குறியிர் – முன்னிலைப் பன்மை யெதிர்மறை வினையாலணையும்பெயர்;
இர் – விகுதி: எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. உம் – இழிவுசிறப்பு. எய்தல், எய்து – பகுதி.
முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மை யுடையது; நீர்மை – தன்மை:
ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுநீரையுடையது என்றலு முண்டு; பண்புத்தொகையன்மொழி.

—————

ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்
ஏறும் கரி மறை யாதலினால் ஐயாம் யாதுகுமக்கீடு
ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி
ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே –38-

‘ஏறும் – எருதையும்,
கரியும் – யானையையும்,
பரியும் – குதிரையையும்,
செற்றான் – வென்றவனான திருமால் தானே,
பரன் – (யாவர்க்கும்) மேலான இறைவன்,’
என்று – என்று ஐயந் திரிபறத் தெரிவித்து,
மன்றுள் ஏறும் – அவை யேறுகிற (நியாய சபையாராற் சரி யென்று ஏற்றுக் கொள்ளப்படுகிற),
கரி – சாட்சி,
மறை – வேதமாகும்:
ஆதலினால் – ஆதலால்,
உமக்கு – உங்கட்கு,
ஐயம் யாது – (திருமாலே பரம் பொரு ளென்கிற விஷயத்திற்) சந்தேக மென்ன?
(சிறிதும் சங்கைகொள்ளவேண்டா என்றபடி):
கரிய அரங்கர்க்கு அன்பு ஆய் – கரிய திருநிறமுடைய ரங்கநாதருக்கு (நீங்கள்) அன்புள்ள அடியார்களாகி,
ஈடேறும் – உய்வு பெறுங்கள்: (அங்ஙனம் நீங்கள் அன்பரானால்),
வினை என்னும் இடி ஏறும் கரியும் – (தொன்று தொட்டு வருகிற உங்கள்) கருமமாகிய பேரிடியும் கரிந்தொழியும்:
இனிமேல் பிறவி இடர் இல்லை – (உங்கட்கு) வரும் பிறப்புத் துன்பமும் இல்லையாம்; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.

இது, உலகத்தார்க்கு நல்லறிவுணர்த்தியது.
அரங்கர்க்கு அன்புபூண்டு ஒழுகினால், அப்பரமனதருளால், மூவகைக் கருமங்களில் சஞ்சிதம் ஆகாமியம் என்ற இரண்டும் ஒழிய,
பிராரப்தகருமமும் வலியொடுங்கியிடுமென்க.
(சஞ்சிதம் – பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்கள்.
பிராரப்தம் – அவ்வினைப் பயன்களுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த உடம்பால் முகந்து நின்றவை.
ஆகாமியம் – இப் பிறப்பில் ஈட்டப்பட்டுப் பின் அனுபவிக்கக் கடவன.)

வேதம் அனைவராலும் தடையின்றி ஒப்புக் கொள்ளப்படும் மூலப் பிரமா ணமென்பார், ‘மன்றுளேறுங் கரி மறை’ என்றார்.
வினைப் பயன் தவறாது விளைந்து வருத்துதலால், ‘இடியேறு’ எனப்பட்டது.
ஏறு – ஆண்பாற்பெயர்; சிறந்ததையும் பெரியதையும் ‘ஏறு’ என்றல், மரபு.

————–

இடராக வந்தெனைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மா நாகம் என் செயும் யான் வெருவி
இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும் வில்
இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–39-

வில் – வில்லை,
இடம் – இடக்கையிலேந்திய,
ராகவன் – ரகுகுலத்தி லவதரித்தவனான,
அரங்கன் – ரங்கநாதனது,
திரு தாள் – திருவடி,
என் இதயத்தது – அடியேனது மனத்தி லுள்ளது: (ஆதலால்),
புல் சிறு தெய்வங்கள் – இழி குணமுடைய அற்ப தேவதைகள்,
என்னை – இடர்,
ஆக வந்து என் செயும் – துன்பம் விளைப்பனவாக வந்து நெருங்கி யாது செய்ய மாட்டும்?
மானிடர் ஆகம் வல் பிணி மா நாகம் – மனித சரீரத்துக்கு உரிய கொடிய நோய்களாகிய பெரும் பாம்புகள்,
என் செயும் -?
ராகம் வன்னி – செந்நிறமுடைய தீயும்,
புனல் – நீரும்,
இடி – இடியும்,
கோள் – (நவ)கிரகங் களும்,
மற்றும் – இன்னும் தீங்கு விளைப்பன யாவும்,
யான் வெருவியிட என் செயும் – நான் அஞ்சும்படி என்ன செய்ய மாட்டும்? (எ – று.)

“வேண்டுதல் வேண்டாமை யில்லானடி சேர்ந்தார்க்,கி யாண்டு மிடும்பையில” என்றபடி
தன்னைப் பற்றி வருவனவும், பிற வுயிர்களைப் பற்றி வரு வனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால்
வரும் பிறவித் துன்பங்கள்யாவும் எம்பெருமானது திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு உளவாகா என்பதாம்.
(தன்னைப் பற்றி வருவன – உடம்பைப் பற்றி வருந் தலைநோய் முதலியனவும், மனத்தைப் பற்றிய காமம் கோபம் முதலியனவும்;
இவை, ஆத்யாத்மிகம் எனப்படும்.
பிற வுயிர்களைப் பற்றி வருவன – மிருக பக்ஷி மநுஷ்ய பிசாச சர்ப்ப ராக்ஷ ஸாதிகளால் உண்டாவன; இவை, ஆதிபௌதிகம் எனப்படும்.
தெய்வத்தைப் பற்றி வருவன – குளிர் காற்று மழை இடி வெயில் முதலியவற்றால் நேர்பவை; இவை, ஆதிதைவிகம் எனப்படும்.
(இவற்றை வடநூலார் தாபத்ரய மென்பர்.)

மானிடர் – மாநுஷர் என்ற வடசொல்லின் விகாரம்.
ராகவஹ்நி என்ற வடமொழித் தொடர், விகாரப்பட்டது.
ராகவன் – வடமொழித்தத்திதாந்த நாமம்.
இதயம் – வடசொற்சிதைவு. தாள் – சாதி யொருமை. ராகவன்னரங்கன், னகரமெய் – விரித்தல்.

—————–

அத்திரங்கா யாமென வுணரேன் எனதாசையுன்கை
அத்திரங்கா யத்தியிற் பெரிதானாரை யாகிப்பல் வீழ்
அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே –40–

அரங்கா – ! –
காயம் – உடம்பு,
அத்திரம் – நிலையற்றது,
என உணரேன் – என்று அறியும் மெய்யுணர்வுடையனல்லேன் யான்;
எனது ஆசை – என்னுடைய அவாவோ,
உன் கை அத்திரம் காய் அத்தியின் பெரிது – உனது கையினால் எய்யப்பட்ட ஆக்கிநேயாஸ்திரத்தினால்
தவிப்படைந்த கடலினும் பெரியது;
நரை ஆகி – கிழத்தனம் முதிர்ந்து,
பல் வீழ – பற்கள் விழ,
திரங்கா – தோல் திரைந்து,
யந்திரம் போல் பொறி ஐந்து அழியும் அ காலத்து – யந்திரம் போல இடையீடின்றித் தொழில் செய்கிற
பஞ்ச இந்திரியங்களும் அழியும் மரண காலத்தில்,
இரங்காய் – இரக்கங் கொண்டு (அடியேனுக்கு) அருள் செய்வாய்;
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனது தாசனாகச் சரண்புகுந்தேன்; (எ – று.) – ஆல் – அசை.

“எய்ப் பென்னை வந்து நலியும் போ தங்கேது நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத்தரவணைப் பள்ளியானே” என்ற பெரியாழ்வாரருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

அஸ்திரம், காயம், ஆசா, அஸ்த்ரம், அப்தி, யந்த்ரம், காலம் – வட சொற்கள்.
அப்தி – நீர்தங்குமிடம்; அப் – ஜலம். ‘உன்கையத்திரங்காய்’ என்றது, கடலுக்கு அடைமொழியாய் நின்றது.
திரங்கா – உடன்பாட் டெச்சம்.
யந்திரம்போற் பொறியைந்து அழியும் என்பதற்கு – (சூத்திர மற்ற) மரப்பாவை போலப் பஞ்சேந்திரியங்களும்
அழியு மென்று உரைத்தலு மொன்று.
பொறியைந்து என்பதில், இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்