சிறப்புப் பாசுரம் –
ஆழ்வார் முன் பின்னவருக்கு மா மறை தந்தார் தமிழில்
வாழ்வார் மணவாளர் மாண்பவருள் –தாழ்வாரும்
எம் போலியர்க்கும் இரங்கி அரங்கக் கலம்ப
கம் போத நல்கவைத்தார் காண் –
(இதன் பொருள்.)
முன் – முற்காலத்தில்,
ஆழ்வார் – நம்மாழ்வார், –
பின்னவர்க்கு – பிற்காலத்திலுள்ளார்க்கு,
(போதம் நல்க) – நல்லறிவைக் கொடுக்குமாறு,
(இரங்கி) – திருவுளமிரங்கி,
மா மறை – சிறந்த (வடமொழி) வேதத்தை,
தமிழால் – தமிழ்ப்பாஷையினால்,
தந்தார் – திருவாய்மலர்ந் தருளினார்;
(பின்) – பிற்காலத்தில்,
மாண்பவருள் – மாட்சிமையையுடைய வர்களுள்,
வாழ்வார் – வாழ்பவராகிய,
மணவாளர் – அழகிய மணவாள தாசர்,
தாழ்வு ஆரும் – கீழ்மைபொருந்திய,
எம்போலியர்க்கும் – எம்மைப் போன்றவர்களுக்கும்,
போதம் நல்க -, இரங்கி -,
அரங்கக்கலம்பகம் – திருவரங்கக்கலம்பக மென்னுந் திவ்வியப் பிரபந்தத்தை, (தமிழால்) -,
வைத்தார் – பாடி வைத்தார்; (என்றவாறு.)
ஆழ்வார் – பகவானுடைய மங்களகுணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவர்;
இது, இங்கே, அல்லாத ஆழ்வார்களிற்காட்டிலுஞ் சிறந்து அவர்களுக்கு அவயவியாகிய நம்மாழ்வாரை உணர்த்திற்று.
“பின்னவர்” என்றது – ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆள வந்தார், ஸ்ரீபாஷ்யகாரர் தொடக்கமான ஆசாரியர்களை –
(ஓதலாகாதென்று சிலர்க்கு) மறுக்கப்படுதல்பற்றி, மறை யென்று பெயர்; மறு – பகுதி, ஐ – செயப்படுபொருள் விகுதி.
இனி – இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாத படி) மறைந்துள்ள பொருள்களையுடைய தென்று காரணப்பொருள் கூறவுமாம்.
யாகம் முதலிய கிரியைகளைக் குறிக்கிற கர்மகாண்டத்தையும் பகவானைக் குறிக்கிற பிரமகாண்டத்தையும் தன்னுள்
அடக்கிக்கொண்டிருத்தல் பற்றி, இதற்கு “மா” என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.
நான்கு வேதங்களையும் முறையே திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரியதிருவந்தாதி என்னும்
நான்கு திவ்வியப்பிரபந்தங்களாக ஸ்திரீசூத்திரருமுட்பட அனைவர்க்கும் அதிகரிக்கலாம்படி தமிழால் அருளிச்செய்கையால்,
“மறைதந்தார் தமிழால்” என்றார்.
முற்காலத்தில் ஆழ்வார் தாழ்வுயாதுமில்குரவராகிய ஸ்ரீமந்நாதமுனி கள் தொடக்கமானார்க்கு ஏற்ப வடமொழி மறைப்பொருளையே தமிழால்
தந்தார்; அதுபோல, பிற்காலத்தில் அழகியமணவாளதாசரோ தாழ்வாரும் எம்போலியர்க்கு ஏற்பத் தமிழ்மறைகளின் சாரமாக
விசித்திரமான கவ னங்களைக்கொண்ட திருவரங்கக்கலம்பகத்தைச் செய்தருளினா ரென்பதாம். இது, எடுத்துக்காட்டுவமையணி;
இதனை வடநூலார் திருஷ்டாந்தாலங்கார மென்பர். தாழ்வாவது – பகவத்கதை சிறிதுமில்லாத நூல்களாற் பொழுது போக்குகை.
ஸ்ரீமந்நாதமுனிகள் முதலானார் தாழ்வியாதுமில் குரவ ராதலால், தம்மை ‘தாழ்வாரு மெம்போலியர்’ என்றார்.
போதம் நல்குதல் – கல்வியாலாகிய அறிவோடு உண்மையறிவையும் உதவுதல். ‘முன்’ என வந்ததனால், “பின்” என வருவிக்கப்பட்டது.
உபமேயவாக்கியத்திலுள்ள ‘போதநல்க’ ‘இரங்கி’ என்பவை – உபமான வாக்கியத்திலும், ‘தமிழால்’ என்பது, – உபமேய வாக்கியத்திலுங் கூட்டப்பட்டன.
அழகிய மணவாள ரென்னும் நம்பெருமாள் பெயரைக் கவிக்கு இட்டு வழங்கியது, ஆகுபெயர்.
“எம்” என்பது – தனித்தன்மைப்பன்மை. “போலி யர்க்கும்” என்ற உம்மை – இழிவுசிறப்பு; அது, சின்னாட் பல்பிணிச் சிற்றறி வுடைய சிறியேமென்ற இழிவுப்பொருளுணர்த்திற்று. “போதம்” – வட சொல். காண் – முன்னிலையசை; தேற்றப்பொருளதாகவுமாம்.
இது, இருவிகற்பத்தால் வந்து நாளென்னும் வாய்பாட்டான் முடிந்த நேரிசைவெண்பா.
“மணவாளர்” எனவே ஆக்கியோன்பெயரும், “ஆழ்வார் முன் பின்ன வர்க்கு மாமறை தந்தார்” என்னும் உபமானத்தால்
அத்திவ்வியப்பிரபந்தங்களின் சாரமிதுவென வழியும், “தமிழால்” எனவே அத்தமிழினது எல்லையாகிய கீழ்கடல்
தென்குமரி மேல்கடல் வடவேங்கடமாகிய எல்லையும், “அரங்கக்கலம்பகம்” எனவே நூற்பெயரும், நுதலியபொருளும்,
“எம்போலியர்” எனவே கேட்போரும், “போதநல்க” எனவே பயனும், “இரங்கி” எனவே காரணமும் பெறப்பட்டன;
மற்றையவற்றுட் குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்து கொள்க.
இக்கவி, அபியுக்தரில் ஒருவர் செய்தது; இது, ஸ்ரீவைஷ்ணவசம்பிராத யத்தில் தனியனெனப்படும்: (நூலினுட் சேராது)
தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர். உயர்திணையாண்பால்விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும் வருதலை,
கடுவன் கோட்டான் தோளுக்கினியான் என்ற விடங்களிற் காண்க; நாலடியார் சிவஞானசித்தியார் என்ற இடங்களில்
“ஆர்” விகுதிபோல இங்கு “அன்” விகுதி உயர்வு குறிப்பதென்றலுமாம். மேலிற்கவியும் இவ்வாறே.
———————-
சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் துறையின் நோக்கோடு
என்நோக்கும் காண இலக்கியம் ஆவது அன்றி
நல் நோக்கும் புத்தியும் பத்தியும் பெறுவர் முக்தி உண்டாம் நான் என் சொல்கேன்
பல் நோக்கு மணவாளர் பகர் அரங்கக் கலம்பகத்தைப் பாரீர் பாரீர் –2-
(இ – ள்.) (இந்நூலானது), –
சொல் நோக்கும் – சொல்லழகும்,
பொருள் நோக்கும் – பொருளழகும்,
தொடை நோக்கும் – தொடையழகும்
நடை நோக்கும் – நடையழகும்,
துறையின் நோக்கோடு – துறையினழகும் (ஆகிய இவைமுதலிய),
எ நோக்கும் – எல்லாவழகையும்,
காண – காணுமாறு,
இலக்கியம் ஆவது அன்றி – இலக்கியமாயிருத்தல்மாத்திரை யேயன்றி, –
இதில் – இந்நூலில்,
ஈடுபட்டோர் – அன்புடன் மிகப்பயின்றவர்,
நல் நோக்கும் – நல்ல ஒழுக்கத்தையும்,
(நல்) புத்தியும் – நல்ல அறிவையும்,
(நல்) பத்தியும் – நல்ல பக்தியையும்,
பெறுவர் – அடைவர்; (அவர்களுக்கு),
முத்தி – பரம பதம்,
உண்டாம் – உண்டாகும்; (ஆகையால் ). –
பல் நோக்கு மணவாளர் – பலவகை ஞானத்தையுடைய அழகியமணவாளதாசர்,
பகர் – திருவாய்மலர்ந்தருளிய,
அரங்கக் கலம்பகத்தை – திருவரங்கக்கலம்பகத்தின் சிறப்பை,
நான் என் சொல்கேன் – யான் என்னவென்று எடுத்துச் சொல்லுவேன்!
பாரீர் பாரீர் – ஆராய்ந்து நோக்குங்கள் நோக்குங்கள்; (எ – று.)
சொன்னோக்கு – மடக்கு முதலிய சொல்லணிகளால் வரும் அழகு.
பொருணோக்கு – உவமை முதலிய பொருளணிகளால் வரும் அழகு,
தொடை நோக்கு – மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்கிற ஐந்திலும் அடிமோனை முதலாக
ஓரொன்றிலே எவ்வெட்டுத்தொடையாக நாற்பதும், அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடை என்கிற மூன்றும்
ஆக நாற்பத்துமூன்று தொடைகளால் வரும்அழகு.
நடைநோக்கு – வைதருப்பம், கௌடம் முதலாகக் கூறப்படுகின்ற நடைகளால் வரும் அழகு.
துறை நோக்கு – காட்சி, ஐயம், தெளிதல் முதலிய கிளவித்துறைகளால் வரும் அழகு.
“எந்நோக்கும்” என்றதனால் விளங்கவைத்தல் நவின்றோர்க்கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசையழகு
ஆழ்ந்தபொருளுடைமை முதலானவையுங் கொள்க.
“நல்நோக்கு” என்பதில் உள்ள நன்மையை “புத்தி”, “பத்தி” என்பவற்றோடுங் கூட்டுக.
“உரைத்த தமிழ்வரைந்த ஏட்டைப், பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும்
பரிந்த ஏட்டைத், தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னாலும் வாய்மணக்கும்
துய்ய சேற்றில், நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந் தானே” என்று சிறப்பித்துக் கூறுமாறு
இந்நூலின்நடை மிகப்பிரசித்தி பெற்றது என்பதாம்.
“பக்தி”, “முத்தி” என்பவை – முறையே “பக்தி”, “முக்தி” என்பவற்றின் விகாரங்கள். முத்தி – வீடு:
சரீர இந்திரியங்களிலிருந்து ஜீவாத்மா விடுபடுவ தென்று பொருள்.
“என்சொல்கேன்” என்றது, இவ்வளவென்று ஓரளவின்மையாலே சொல்லத்தெரிந்திலே னென்றபடி.
“சொல்கேன்”, ககரவொற்று – எதிர்கால இடைநிலை. இலக்கியம் லக்ஷ்ய மென்பதன் திரிபு.
“பாரீர் பாரீர்” – உவகையில் வந்த இருமுறையடுக்கு; இனி, பாரீர் – உலகத்தவரே! பாரீர் –
(இவ்வாறு பலவகையழகும் நிரம்பியிருத்தலால் கவனித்துப்) பாருங்கள் எனினுமாம்.
இது – முதல் நான்குங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம்.
———-
திரு என்பதற்கு – மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் – பண்புத்தொகையும்,
மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையுமாம்.
அரங்கக்கலம்பக மென்ற தொடர் – அரங்கத்தினது சம்பந்தமான கலம்பக மென்று விரித்து
அரங்கத்தின் விஷயமான பிரபந்தமென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும்,
அரங்கத்தைப்பற்றிய கலம்பகமென்றுவிரித்துப் பொருள் கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்
பொருளுந்தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது;
அரங்கத்தின்மேற் பாடிய கலம்பக மென்று விரித்துப் பொருள்கொண்டு ஏழனுருபும்பயனுந்தொக்கதொகை யென்பாரும் உளர்.
திருவரங்கம் என்ற தொடரில், வகரவொற்று – உடம்படுமெய்.
கலம்பகமாவது – ஒருபோகும் வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முதலிற்கூறி,
புயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக்கிளை
தூது வண்டு தழை ஊசல் என்னும் பதினெட்டு உறுப்புக்களும் இயையுமாறு,
மருட்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம் கலித்தாழிசை கலிநிலைத்துறை
வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை ஆசிரியத் துறை வெண்டுறை முதலியவற்றால்,
இடையிடையே வெண்பாவும் கலித் துறையும் விரவிவர, மடக்குடைச்செய்யுளும் வண்ணம் சந்தம் முதலியனவும் பொருந்த,
அந்தாதித்தொடையால் முற்றுற, இறுதியும் முதலும் மண்டலி த்துப்பாடுங்கால்
தேவர்க்கு நூறும் அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணூறும் அமைச்சர்க்கு எழுபதும்
வணிகர்க்கு ஐம்பதும் வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடுவதொரு பிரபந்தம்;
இக்கலம்பகவிலக்க ணத்தைப் பன்னிருபாட்டியல், வச்சணந்திமாலை, இலக்கணவிளக்கம் முத லியவற்றிற் காண்க.
“களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல் கொண் டடியிணை பணிவா னமரர்கள்
புகுந்தன ராதலி லம்மா” என்னும் பெரியார் பாசுரத்தில் பலவகை மலர்களைக்கொண்டு தொடுக்கப்பட்டுள்ள மாலை,
“கலம்பகம்புனைந்ததொடையல்” எனக் கூறப்பட்டுள்ளதனால், அப் பூமாலைபோலப் பலவகைப்பாக்களைக்கொண்டு
அமைக்கப்பட்ட பாமாலை யைக் கலம்பக மெனப் பெரியோர் பெயரிட்டுவழங்கின ரென்பர்;
இதற்கு இவ்வாறு பொருள்கொள்ளும்போது, இது – கதம்ப மென்னும் வடமொழியின் திரிபுபோலும்:
இனி, கலப்பு அகம் எனப் பிரித்து, மெலித்தல்விகாரம் பெற்றதாக்கி, பலவுறுப்புக்களுங்கலத்தலைத் தன்னிடத்தேயுடைய
தென அன்மொழித்தொகைக் காரணக்குறியாகவும்கொள்ளலாம்;
இனி, ஒருசாரார் பன்னிரண்டுமரக்காலென்னும் பொருளுள்ள “கலம்” என்னுஞ் சொல்லும் கடவுளது
ஆறுகுணங்களைக் குறிக்கும் “பகம்” என்னுஞ் சொல்லும் குறிப்பாய்ப் பன்னிரண்டு ஆறு என்னுந் தொகையை
மாத்திரம் உணர்த்தி உம்மைத்தொகையாகப் புணர்ந்து பதினெட்டு உறுப்புக்களையுடைய பிரபந்தத் துக்கு ஏதுப்பெயராயிற் றென்றும் உரைப்பர்.
(அந்தாதி – அந்தத்தை ஆதியாகவுடையது; அந்தாதியாவது – முன் நின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும்
அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது;
இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும்.
சொற்றொடர்நிலைச் செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகையில்
இது, சொற் றொடர்நிலை; “செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே” என்றார் தண்டிய லங்காரத்தும்.)
“முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்,
இடுகுறியானும் நூற்குஎய்தும் பெயரே” என்று கூறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள்
நுதலியபொருளினாலும் தன்மையி னாலும் பெயர்பெற்றது இந்நூலென அறிக;
(நுதலியபொருள் – நூலிற் கூறப்பட்ட விஷயம். தன்மை – நூலின் இயல்பு.)
இங்கு “அரங்கம்” என்பது – அத்திருப்பதியில்எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை.
இனி, “திருவாளன்திருப்பதிமேல், திருவரங்கத்தமிழ்மாலை விட்டு சித்தன்விரித்தன” என்று
பெரியாழ்வார் திருமொழியிற் கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடையாதல்பற்றி “திருவரங்கக்கலம்பகம்” எனவும் தகும்;
(மேற்காட்டிய அருளிச்செயலின் வியாக்கியானத்தில் “தேஸ்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலேயாய்,
அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்” என்றது காண்க.)
எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்தமென்பது பொருளும்,
திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக்குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து மாகலாம்.
“கோயிற்கலம்பகம்” என்பதற்கும் இங்ஙனமே கொள்க.
ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் “விருந்தே தானும், புது வது கிளந்த யாப்பின் மேற்றே” என்பதனால்,
“விருந்துதானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம்வேண்டியவாற்றால் தொடுக்கப்படுந் தொடர் நிலைமேலது” என்று
கூறினமையின். இந்தக்கலம்பகம், அங்ஙனங்கூறிய விருந்தா மென்று உணர்க.
அச்சூத்திரவுரையில் அந்தாதியும் கலம்பகமும் முதலாயின உதாரணங்காட்டப்பட்டுள்ளவாறுங் காண்க.
இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார். இப்பிரபந்தம், தோத்திர ரூபமானது.
நூலின் புறமாக முதலிற்கூறிய சிறப்புப்பாயிரச்செய்யு ளிரண்டும், காப்புச்செய்யுள் நான்கும்,
நூலின்இறுதியிற்கூறும் தற்சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றும் நீங்கலாக நூறுசெய்யு ளுடையது, இந்நூல்.
தலத்தின் பெயர் – ரங்கம், ஸ்ரீரங்கம், திருவரங்கம், பெரியகோயில் கோயில் என்பன.
பூலோகவைகுண்டம், போகமண்டபம், ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம் என்பவை, விசேஷநாமங்களாம்.
இது, ஸ்வயம்வயக்தக்ஷேத்ரம் எட்டில் ஒன்று.
இத்திருப்பதியின் எம்பெருமானது திருநாமம் – ஸ்ரீரங்கநாதன், பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன்.
கோலம் – பள்ளிகொண்ட திருக்கோலம்; சேஷசயனம்.
சந்நிதி – தெற்குநோக்கியது.
நாச்சியார் – ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கநாச்சியார்.
விமானம் – பிரணவாகாரவிமானம், வேதசிருங்கம்.
நதி – உபயகாவேரி (தென்திருக்காவேரியும், வடதிருக்காவேரியும் [கொள்ளடம்.])
தீர்த்தம் – சந்திரபுஷ்கரிணி முதலிய நவதீர்த்தங்கள்.
தலவிருக்ஷம் – புன்னைமரம்.
பிரதியக்ஷம் – தர்மவர்மா, ரவிதர்மன், சந்திரன், காவேரி முதலான வர்களுக்குப் பிரதியக்ஷம்.
பாடல் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழி சையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார்,
பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என்கிற ஆழ்வார்கள் பதின்மர்,
ஆண்டாள் இவர்கள் மங்களாசாஸநம்.
பஞ்சகாவியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இந்தத்திவ்விய தேசமும் இதிலெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானும்
“நீலமேக நெடும்பொற் குன்றத்துப், பால்விரிந் தகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற், பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த,
விரிதிரைக்காவிரி வியன்பெருந் துருத்தி, திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்……….
என் கண் காட்டென் றென்னுளங் கவற்ற, வந்தேன்” என்று பாராட்டிக்கூறப் பட்டிருத்தலுங் காண்க.
—————————————–
காப்பு செய்யுள்கள்
ஆழ்வார்கள் பன்னிருவரின் வணக்கம்
வேதம் தொகுத்துத் தமிழ்ப் பாடல் செய்த விமலன் பொய்கை
பூதன் மயிலையர் கோன் புகழ்ச் சேரன் புத்தூரன் தொண்டர்
பாதம் தரும் துகள் மா மழிசைக்கு மன் பாணன் மங்கை
நாதன் மதுரகவி கோதை பாதங்கள் நண்ணுதுமே–
(இ – ள்.) வேதம் – வேதங்களின் பொருளை,
தொகுத்து – சுருக்கமாக அடக்கி,
தமிழ் பாடல் செய்த – தமிழ்ப்பாசுரங்களாக அருளிச்செய்த,
விமலன் – நம்மாழ்வாரும்,
பொய்கை – பொய்கையாழ்வாரும், –
பூதன் – பூதத்தாழ்வாரும், –
மயிலையர் கோன் – பேயாழ்வாரும், –
மாமழிசைக்குமன் – பெருமைபொருந்திய திருமழிசையாழ்வாரும், –
புகழ் சேரன் – புகழினை யுடைய குலசேகராழ்வாரும், –
புத்தூரன் – பெரியாழ்வாரும், –
தொண்டர் பாதம் தரும் துகள் – தொண்டரடிப் பொடியாழ்வாரும், –
பாணன் – திருப்பாணாழ்வாரும், –
மங்கைநாதன் – திருமங்கையாழ்வாரும், –
மதுரகவி – மதுர கவியாழ்வாரும், –
கோதை – ஆண்டாளும் என்னும் ஆழ்வார்கள் பன்னிருவர்களது,
பாதங்கள் – திருவடிகளை,
நண்ணுதுல் – சேருவோம்; (எ – று.)
ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற
மூவகைமங்களங்களுள் இது, வணக் கத்தின்பாற்படும். எப்பொழுதும் எம்பெருமானது குணங்களில் ஈடுபட்டுப் பாடல்பாடித்துதிக்கும்
ஆழ்வார்கள் அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் கலம்பகத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்கிப்
பாதுகாப்ப ரென்று கொண்டு அவர்களை இங்கு வணங்குகின்றார்.
ஸ்ரீவைஷ்ணவசமயத் தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், அந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவினது
தொண்டர்களாகிய ஆழ்வார்களைக் குறித்த தாதலால், வழிபடு கடவுள் வணக்கம், ஏற்புடைக் கடவுள் வணக்கம்
என்ற வகை யிரண்டில் வழிபடுகடவுள்வணக்கமாம். அடுத்த மூன்று செய்யுள்களும் இவ்வாறே.
தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளி னடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படு மென்க.
எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது பெரு மரபாதலின், காப்புச்செய்யுளின் முதலில்
“வேதம்” என்று தொடங்கினார். மேல் நூல்தொடக்கத்தில் “சீர்” என்னுஞ் சொல்லை வைத்தவாறுங் காண்க.
பாடலென்னுந் தொழிற்பெயர் – அதனைப்பொருந்திய கவிக்காதலால், தொழிலாகுபெயர்.
விமலனென்பதற்கு – குற்றமற்றவனென்று பொருள்; இது, பிறந்தபொழுது பரிசித்தமாத்திரத்தில் அஞ்ஞானமயமாக்குகிற
ஸடமென்னும் வாயுவைத் தம்மீது படவொட்டாமற் கோபித்துப் போக்கி யருளியவ ரென்னும் பொருளதாகிய
ஸடகோபனென்னுந் திருநாமத்தின் பொருளை உட்கொண்டது.
நம்மாழ்வாரை முதலிற் கூறியது, அவயவியாய்த் திருத்துழாய் அங்குரிக்கும்போதே பரிமளத்தோடு தோற்றுதல்போல
ஞானத்துடனேயே திருவவதரித்து மற்றையாழ்வார்களினும் மேம்படுதலா லென்க. செய்யுளாதலின் முறைபிறழ வைத்தாரேனும்,
பாடக்ரமாபேக்ஷ யா அர்த்தக்ரமஸ்ய பலீயஸ்தவம் (சொல்நிற்கும் முறையைவிடப் பொருள் நிற்கும்நிலையே வலியுடைத்து)
என்ற முறைமைபற்றி, மயிலையர்கோன் என்ற சொற்குப்பின் “மாமழிசைக்குமன்” என்பதனைக் கூட்டுக.
பொய்கை – குளம்; பொய்கையில் திருவவதரித்தவரைப் பொய்கையென்றது, இடவாகுபெயர்: இனி, உவமவாகுபெயராய்,
ஊர்நடுவேயுள்ள ஊருணிபோல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம்.
பூதன் – “கடல்வண்ணன் பூதம்,” “மறுத்திருமார்பனவன்றன்பூதம்” என்றவாறு எம்பெருமானை யறிதலாலே தமது உளனாகையை யுடையவர்.
மயிலையர்கோன் – திருமயிலையிலுள்ளார்க்குத் தலைவர், கோன், னகரமெய் – சாரியை.
புகழாவது – இம்மைப்பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்குங் கீர்த்தி.
சேரன் – சேரகுலத்தில் திருவவதரித்தவர். புத்தூரன் – வில்லிபுத்தூரில் திருவவதரித்தவர்.
தொண்டர்பாதந்தருந்துகள் – ஸ்ரீபாததூளியாயிருப்பவர்; உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு இத்திருநாமம்.
மாமழிசைக்குமன் – மஹீஸாரக்ஷேத்ரமென்கிற பெருமையையுடைய திருமழிசைக்குத் தலைவர்;
“இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன்” என்றார். அமுதனாரும்.
பாணன் – வீணாபாணியாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண்ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு; அதனையுடையவன், பாணன்: “பாட்டினாற்கண்டுவாழும் பாணர்” என்பர்.
மங்கைநாதன் – திருமங்கையென்னுந் திருப்பதிக்குத் தலைவர். மதுரகவி – இனிமையான பாடலைப் பாடுபவர்.
கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல நிரதிசயபோக்கியையாயிருப்பவள்;
அன்றிக்கே, பாமாலையையும் பூமாலையையுஞ் சூடிக்கொடுத்தவள்.
நண்ணுதல் – இடைவிடாது நினைத்தல்; “மலர்மிசை யேகினான்மாணடி சேர்ந்தார்” என்பதில்
“சேர்தல்ழுபோல. நண்ணுதும் – தன்மைப்பன்மைமுற்று; ஈண்டு ஒருவரைக்கூறும் பன்மை; தும்மீறு எதிர்காலமுணர்த்திற்று.
யாமென்னும் பயனிலைகுறைந்துநின்றது; இனி, யாமென்பது தோன்றா எழுவாயெனக் கொண்டு நண்ணுதுமென்னும்
வினைப்பயனிலை கொண்டதெனினும் அமையும். இது கடவுள்வணக்க மாதலால் “நான்முகற்றொழுது நன்கியம்புவன்”,
“பந்த மடி தொடை பாவினங் கூறுவன்” என்றாற்போல ஒருமையாற்கூறித்தாழ்த்தாமற் பன்மையாற்கூறித்
தன்னை உயர்த்தியபின் இதில் வணக்க மென்னெனின்;- அங்ஙனம் உயர்த்திக் கூறுதல் பிறவிடங்களில் உண்டெனினும் இவ்விடத்தில் உயர்த்தியதன்று; தன்மைப்பன்மையென்பது தன்னொடு சார்ந்தாரையுங் கூட்டியல்லது தனித்து இயலாமையால் தானொருவன்
கடவுளை அறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் அடைதலினுஞ் சிருட்டி தொடங்கித் தன் கோத்திரத்தாரையுந்
தன்னோடு கூட்டி வணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதிச் சான்றோரெல்லாம்
தொன்றுதொட்டு இவ்வாறு கூறிவருவதோர் மரபாமென்க; என்னெனின்; –
“ஏகதந்த னிணையடி பணிவாம்”, “ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே”, “சரண வாரிசமலர் தலைக்கொள் வாமரோ” என
இவ்வாறுகூறியவை அளவிலவென்க. நூல்செய்தவர்க்கு மாத்திரையேயன்றி, இந்நூலைப் படிக்கத்தொடங்குவோர் முதலியோர்க்கும்
யாதோரிடையூறுமின்றி இந்நூல் முற்றப்போதற்கு அவர்களையும் உளப்படுத்திய தன்மைப்பன்மையெனினு மமையும்.
யாமென்னுந் தோன்றா எழுவாயை முதலிற்கூட்டி நண்ணுது மென முடிப்பினும், இச்செய்யுளில் நின்றாங்கே
யாமென்பதனை இறுதியிலே கூட்டி முடிப்பினும் நேராகச் சென்று பொருள் முடிதலால், யாற்றுநீர்ப்பொருள்கோள் . ஏகாரம் – ஈற்றசை.
இங்ஙனம் வணங்கியதனால், எடுத்த கருமம் இனிது முடியுமென்று கருத்து.
இது, நேரசை முதலாய் ஒற்றொழித்துப் பதினாறெழுத்துப் பெற்று வந்த கட்டளைக்கலித்துறை.
———————
நம்மாழ்வார் துதி
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –
(இ – ள்.) மறை – வேதமாகிய,
பால்கடலை – திருப்பாற்கடலை,
திருநாவின் – (தமது) சிறந்த நாக்காகிய,
மந்தரத்தால் – மந்தரபருவதத்தால்,
கடைந்து -,
துறை பால் படுத்தி – துறைகளின் வகைகளோடு பொருந்தச்செய்து,
தமிழ் ஆயிரத்து – ஆயிரந் தமிழ்ப்பாசுரங்களாகிய,
இன் சுவை அமிர்தம் – இனிய சுவையினையுடைய அமிருதத்தை,
கறை பாம்பு அணை பள்ளியான் – நஞ்சினையுடைய திருவநந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளி கொள்ளுதலையுடைய திருமாலினது,
அன்பர் – தொண்டர்களது,
ஈட்டம் – கூட்டம்,
களித்து – மனமகிழ்ந்து,
அருந்த உண்ணும்படி,
நிறைப்பான் – நிறைந்தருளிய நம்மாழ்வாரது,
கழல் அன்றி – திருவடிகளேயல்லாமல்,
சன்மம் விடாய்க்கு – பிறவித்துன்பமாகிய தாபத்திற்கு,
நிழல் – வேறுநிழலாவது,
இல்லை -; (எ – று.)
அளத்தற்கரிய பரப்புடைமைபற்றியும், இன்சுவையுடைமைபற்றியும், எம்பெருமானுக்கு உறைவிடமாதல்பற்றியும்,
மறையைப் பாற்கடலாக உருவகப்படுத்தினார். திரு – வேறொன்றற்கில்லாத மேன்மை;
“திருநாவீறுடைய பிரான்” என்னுந் திருநாமத்தின்பொருளை நோக்குக. தமிழ் – தமிழ்ப்பாடலுக்கு ஆகுபெயர்.
தமிழாயிரம் – திருவாய்மொழி. கறை – புள்ளி யென்றுமாம். அணை – சயநம். பள்ளி யோகநித்திரை.
அன்பரீட்டங்களித்தருந்துதல் – “தொண்டர்க்கமுதுண்ணச்சொன்மாலைகள் சொன்னேன்” என்றதனானுமுணர்க.
ஈட்டம் – தொழிற்பெயர்; ஈண்டு – முதனிலை. களிப்பு – பெறலரிய இப்பேறு பெற்றோமே யென்பதனா லுண்டாவது
சன்மம் – ஜந்மம். பிறவித்துன்பங்களெல்லாந் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு இல்லையாதலின்,
ஸம்ஸாரதாபத்தை நீக்குதற்கு நிழலாமென்பார், “சன்மவிடாய்க்கு நிழலில்லை” என்றார்.
இது, உருவகவணி; இதில், விண்ணுலகத்திலுள்ள தேவர்க்குத் திருப்பாற்கடலமிருதம்போல மண்ணுலகத்திலுள்ள
மானிடர்க்கு இத்திருவாய் மொழியமிருதம் அமையுமென்னும் உவமையணி தொனிக்கின்றது.
இங்கு “இன்சுவையமிர்தம்” என்று சிறப்பித்துக் கூறியிருத்தலால், மரணத்தைமாத்திரம் தவிர்க்கும் அந்தத்தேவாமிருதத்தினும்,
பலவகைப்பிறப் பிறப்புக்களைத் தவிர்த்து முத்தியளிக்கும் ஆற்றலையுடைய இந்தத் திருவாய்மொழி யமிருதம்
சிறந்ததென்பது தெற்றென விளங்கும்.
“அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கன் றமுத மீந்த,
தம்பிரா னென்னந் தானுந் தமிழிலே தாலை நாட்டிக்,
கம்பநா டுடைய வள்ளல் கவிச்சக்ர வர்த்தி பார்மே,
னம்புபா மாலை யாலே நரருக்கின் றமுத மீந்தான்” என்பதனோடு இக்கவியை ஒப்பிட்டு உணர்க.
“திருநாவென் மந்தரத்தால்” என்றும் பாடமுண்டு.
இது, நிரையசைமுதலாய்ப் பதினேழெழுத்துப்பெற்று வந்த கட்டளைக் கலித்துறை; மேவிற்கவியும் இது
————-
எம்பெருமானார் துதி
பிடிக்கும் பர சமயக் குல வேழம் பிளிற வெகுண்டு
இடிக்கும் குரல் சிங்க ஏறு அனையான் எழு பாரும் உய்யப் படிக்கும்
புகழ் எம் இராமானுச முனி பல் குணமும்
வடிக்கும் கருத்தினார்க்கே திரு மா மணி மண்டபமே –
(இ – ள்.) பிடிக்கும் – (தந்தமது சமயமே சிறந்ததாக) மேற்கொள்ளுகின்ற,
பர சமயம் – வேறுமதத்தினராகிய,
குலம்வேழம் – சிறந்தயானைகள்,
பிளிற – அலறும்படி,
வெகுண்டு – கோபித்து,
இடிக்கும் – கர்ச்சிக்கின்ற,
குரல் – ஒலியையுடைய,
சிங்கம் ஏறு – ஆண்சிங்கத்தை,
அனையான் – போன்றவராகிய,
எழு பாரும் – ஏழுலகத்தவரும்,
உய்ய – நற்கதியடையும்படி,
படிக்கும் – பாராயணஞ்செய்கின்ற,
புகழ் – கீர்த்தியையுடைய,
எம் இரா மாநுசமுனி – எம்பெருமானாரது,
பல் குணமும் – பலகுணங்களையும்,
வடிக்கும் – (சாரமாகத் தெளிந்தெடுத்துத்) தியானிக்கின்ற,
கருத்தினர்க்கே – மனத்தையுடையவர்களுக்கே,
திரு மா மணி மண்டபம் – (பரமபதத்திலுள்ள) முக்திமண்டபம், (பெறலாம்); (எ – று.) – பயனிலை வருவிக்கப் பட்டது.
மற்றையோர்கீர்த்திபோலாகாமல், எம்பெருமானாரதுகீர்த்தி ஏழுலக த்தவரும் படித்து ஈடேறும்படியான
பெருமை வாய்ந்த தென்பதை விளக்க, “எழுபாருமுய்ய” என்ற அடைமொழி கொடுத்துக்கூறினர்;
“அனைத்துலகும் வாழப் பிறந்தவன்” என்னக்கடவதிறே, பிரமோபாசநத்தை விதிக்கிற வேதாந்தசாஸ்திரங்களில்
ஐயமுழுதும்அகலும்படி இவர் ஸ்ரீபாஷ்ய முகமாகச் சகலஅர்த்தங்களையும் பிரசாதித்து மண்ணுலகத்தாரை வாழ்வித்தமையும்,
இவர் சாரதாபீடத்துக்கு எழுந்தருளியபோது தேவர்கட்கெல்லாந் தலைவனான பிரமதேவனது மகிஷியாகிய சரசுவதியானவள்
இவர்பக்கல் தனதுஐயங்களையெல்லாம் தீர்த்துக்கொண்டதன்றி இவர்செய்தருளின ஸ்ரீபாஷ்யத்தைச் சிரசினால்வகித்தமையும் எங்கும் பிரசித்தம்;
இவ்வரலாறுகளால், மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் இந்த எம்பெருமானாரால் ஈடேறியமை அறிக.
இனி, எழுபார் என்பதற்கு – ஏழுத்வீபங்களிலுள்ளவர்க ளென்றுங் கூறலாம்.
எம்பெருமானார் திருவடிகளே சரண மென்று இருப்பவர்க்குத்தான் மோக்ஷலோகம் ஸித்திக்கு மென்பதாம்.
இவ்வாறு கூறியதற்குக் காரணம் – அஜ்ஞாநிகளாய் நித்யஸம்ஸாரிகளாய்ப் போருகிற நமக்குக் கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி
என்ற சதுர்வித உபாயங்களில் எதனிலும் அந்வயித்தற்கு ஏற்ற யோக்கியதை யில்லாமையாலும்,
எம்பெருமானார்திறத்து “உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூத்யைஸ்வர்யமுந் தந்தோம்” என்று எம்பெருமான் அநுக்கிரகித்திருத்தலாலும்,
அவ்வெம்பெருமானார் ஸம்பந்தத்தைக் கொண்டே நற்கதி பெறவேண்டியிருத்தலாலுமா மென்க.
“எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே, திவ்யதேசங்களெல்லாம் திருவடி தொழுதானாகக்கடவன்;
உடையவரை ஆராதித்து அமுதுசெய்யப் பண்ணவே, எல்லாத்திவ்ய தேசங்களி லெம்பெருமான்களையும் ஆராதித்து
அமுதுசெய்யப் பண்ணினானாகக்கடவன்;
“கர்மமும் உபாயமன்று, ஜ்ஞாநமும் உபாயமன்று, பக்தியும் உபாயமன்று, ப்ரபத்தியும் உபாயமன்று,
எம்பெருமானார் திருவடிகளே உபாயோபேயம்” என்கையாலே, எம்பெருமானாரைப் பற்றுகையே ப்ரபத்தி,
ராமாநுஜ னென்கிற சதுரக்ஷரியே திருமந்திரம்; அவர்திருவடிகளிலே பண்ணுங் கைங்கரியமே பரமபுருஷார்த்தம்;
இதுவே நிச்சிதார்த்தமான ஸித்தாந்தம்” என்ற வாக்கியங்கள் இங்கு நினைக்கத்தக்கன.
இராமாநுசனென்னுஞ்சொல்லுக்கு – இராமன் தம்பியென்று பொருள்; ஆதிசேஷனது அம்சமாகிய லக்ஷ்மணனது அம்சமாதலால்,
உடையவருக்கு இப்பெயர். ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத ஸ்தாபநாசாரியரான ஸ்ரீபாஷ்யகாரர்க்கு,
ஸர்வலக்ஷண ஸம்பந்நராயிருத்தல் பற்றி, லக்ஷ்மணரது திருநாமமான “இராமாநுசன்” என்னும் திருநாமம்
பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்போது பெரிய நம்பியால் இடப்பட்டது ; பிறகு இவர் ஸந்யாஸம் பெற்றபோது திருக்கச்சியத்திகிரிப்
பேரருளாளப்பெருமாள் “ராமாநுஜமுநி” என்று இவர்க்குத் திருநாமம் சாற்றியருளினர்.
குலவேழம் – உயர்ந்த குலத்தில் தோன்றிய யானை; இனி, வேழக்குலமென மாற்றி, யானைக்கூட்ட மென்றுமாம்.
சிங்கம் – ஸிம்ஹம்; யானை முதலிய பெரிய விலங்குகளையும் ஹிம்ஸிப்பதென்று பொருள்.
திருமாமணி மண்டபம் – அழகிய பெரிய இரத்தினமயமான மண்டபம்;
இது, அந்தமில் பேரின்பத்தையுடைய நித்திய விபூதியாகிய பரமபதத்தி லுள்ளது.
“தற்கச்சமணருஞ் சாக்கியப் பேய்களுந் தாழ்சடையோன், சொற் கற்ற சோம்பருஞ் சூனியவாதரு நான்மறையும்,
நிற்கக் குறும்புநெய்நீசரு மாண்டனர் நீணிலத்தே, பொற்கற்பகம் எம் மிராமாநுசமுனி போந்தபின்னே”,
“சாருவாகமத நீறுசெய்து சமணர் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக்கடலை வற்றுவித்து மிகுசாங்கியக்கிரிமுறித்திட,
மாறுசெய்திடு கணாதவாதியர்கள் வாய்தகர்த்தற மிகுத்துவேல் வந்தபாசுபதர் சிந்தியோடும் வகை வாதுசெய்த வெதிராசனார்,
கூறுமா குருமதத்தொ டோங்கிய குமாரி லன் மதமவற்றின்மேல் கொடியதர்க்கசரம் விட்டபின் குறுகிமாய வாதி யரை வென்றிட,
மீறிவாதில் வரு பாற்கரன் மதவிலக்கடிக் கொடியெறிந்து போய் மிக்கயாதவமதத்தை மாய்த்தபெருவீரர்நாளுமிகவாழியே” என்னும்
பெரியார் பாசுரங்கள் முன்னிரண்டடிக்கு மேறே்காளாகத்தக்கன.
————–
பட்டர் துதி
வான் இட்ட கீர்த்தி வளர் கூரத் தாழ்வான் மகிழ வந்த
தேன் இட்ட தார் நம் பெருமாள் குமாரர் சிவனை அயன்
தான் இட்ட சாபம் துடைத்து ஆள் அரங்கர் சங்கு ஆழி புயம்
நான் இட்டான் என்று அருள் பட்டர் பொற்றாள் கதி நந்தமக்கே
(இ – ள்.) வான் இட்ட – தேவலோகத்திலும் பரவிய,
கீர்த்தி – புகழா னது,
வளர் – (மேன்மேல் மிக்கு) வளரப்பெற்ற,
கூரத்தாழ்வான் – கூரத் தாழ்வானென்னும் ஆசாரியர்,
மகிழ – திருவுள்ளமுவக்கும்படி,
வந்த – (அவரது திருக்குமாரராய்த்) திருவவதரித்த,
தேன் இட்ட தார் – தேன் துளிக்கின்ற மாலையையுடைய,
நம்பெருமான் – திருவரங்கநாதரது,
குமாரர் – திருக்குமாரரும், –
சிவனை – சிவனுக்கு,
அயன் – பிரமன்,
இட்ட – கொ டுத்த,
சாபம் – சாபத்தை,
துடைத்து – போக்கி,
ஆள் – காத்தருளிய,
அரங்கர் – ரங்கநாதரது (சின்னமாகிய),
சங்கு ஆழி – சங்க சக்கரங்களை,
புயம் – (என்னுடைய) தோள்களில்,
நான் இட்டன் என்று – அடியேனையும் ஒரு அன்பனாகக்கொண்டு,
அருள் – (திருவிலச்சினையிட்டு) அருளியவருமான,
பட்டர் – ஸ்ரீபராசரபட்டரது,
பொன் தாள் – அழகிய திருவடிகள்,
நந்தமக்கு – நமக்கு,
கதி – அடைக்கலமாகும்; (எ – று.)
சங்கசக்கரங்களாகிய திருவிலச்சினையை அடியேனுக்குப் பிரசாதித்த ஸ்ரீபராசரபட்டரது திருவடித்தாமரைகளே
அடியேனுக்குத் தஞ்ச மென்பதாம். இங்குத் திருவிலச்சினையாகிய தாபத்தைக் கூறியது –
புண்ட்ரம் நாமம் மந்த்ரம் திருவாராதநம் என்னும் மற்றை ஸம்ஸ்காரங்கட்கும் உபலக்ஷணம்.
“ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடைய னான குருவை யடைந்தக் கால் – மானிலத்தீர்,
தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானேவைகுந் தந்தரும்” என்ப வாதலால், இவ்வாறுகூறினரென்க.
கீர்த்தி வானுலகத்திற் பரவியமை கூறவே, இவ்வுலகத்துப் பரவியமை தானே பெறப்படும்.
கூரத்தாழ்வான் – கூரமென்னும் ஊரில் திருவவதரித்தவர். வந்த பட்டர், குமாரராகிய பட்டர், அருள் பட்டர் என இயையும்.
தேனிட்ட தார் -வண்டுகள் இடைவிடாது மொய்க்கின்ற மாலை யென்றுமாம். நம்பெருமாள் என்றது, சிறப்புச்சொல்;
“நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால்” என்றார் பெரியாரும்.
நம்பெருமானது திருவருளாற் கூரத்தாழ்வான் திருக்குமாரராய்த் திருவவதரித்ததுபற்றியும்,
ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப்பருவத்திலேயே பட்டரைத் தமதுபுத்திரனாக அங்கீகரித்துத் தம்முடையசன்னிதியிலே
திருமணத்தூணினருகே தொட்டிலிடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டிவளர்க்க வள ர்ந்தவராதல் பற்றியும்,
பட்டர்க்கு “நம்பெருமாள்குமாரர்” என்று திருநாமம்.
பண்டிதரைக்குறிக்கின்ற “பட்டர்” என்ற பொதுப்பெயர், சிறப்பாக இவர்க்கு இட்டுவழங்கப்பெற்றது; வடசொல்.
“பொருளல்லாத வென்னைப் பொருளாக்கியடிமைகொண்டாய்” என்றாற்போல, “நானிட்டனென்றருள் பட்டர்” என்றார்.
இனி, நானிட்டனென்பதற்கு – நான் உனக்கு இஷ்ட னென்று சொல்லி யென்றும், நான் இட்டேனென் றென்றுங் கொள்ளலாம்.
கதி – புகலிடம். சாபம் – வெகுண்டு கூறிய மொழி;
இங்கே பிரமகபாலம் கையிலொட்டிக்கொண்டு பலவிடங்களிலும் பலியேற்றுத்திரிய நேர்ந்தமை.
சங்கு – வடசொல்விகாரம். ஆழி – வட்டம்; சக்கரத்துக்கு வடிவுப் பண்பாகுபெயர்:
அன்றிக்கே, அசுரர் முதலிய பகைவரை அழித்தலை யுடையது. புயம் – புஜம்.
இது, நேரசைமுதலதாகிய கட்டளைக்கலித்துறை.
————
நூல் –
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடி வருட
சிறைப்பறவை புறம் காப்ப சேனையர் கோன் பணி கேட்ப
நறைப் பாடலைத் துழாய் மார்பில் நாயிறு போல் மணி விளங்க
அரிய தானவர்க் கடிந்த ஐம்படையும் புடை தயங்க
கரிய மால் வரை முளரிக்காடு என்று கிடந்தாங்கு
பாயிர நான் மறை பரவ பாற் கடலில் பருமணிச் சூட்டு
ஆயிர வாய்ப் பாம்பு அணை மேல் அறி துயிலின் இனிது அமர்ந்தோய் –
(இ – ள்.) சீர் பூத்த – சிறப்பு மிக்க,
செழு – செழுமையான,
கமலம் – செந்தாமரை மலராகிய,
திரு தவிசின் – சிறந்த ஆசனத்தில்,
வீற்றிருக்கும் – எழுந்தருளி யிருப்பவளும்,
நீர் பூத்த – திருப்பாற்கடலில் திருவவதரித்தவளுமான,
திரு மகளும் – பெரியபிராட்டியாரும்,
(நீர் பூத்த-) கடலாற்சூழப்பட்ட,
நிலம் மகளும் – பூமிப்பிராட்டியாரும்,
அடி வருட – (தமது திருக்கைகளால் நினது) திருவடிகளைத் தடவவும், –
சிறை பறவை – சிறகுகளையுடைய பெரியதிருவடி (கருடன்),
புறம் காப்ப – (நினது) பக்கத்தே பாதுகாத்திருக்கவும், –
சேனையர் கோன் – சேனைமுதலியார்,
பணிகேட்ப – ஏவல் கேட்கவும்,
நறை – வாசனையை யுடைய,
துழாய் படலை – திருத்துழாய்மாலையையுடைய,
மார்பின் – திருமார்பிலே,
மணி – (கௌஸ்துப) ரத்தினம்,
நாயிறு போல் – சூரியன்போல,
விளங்க – பிரகாசிக்கவும், –
அரிய – வெல்லுதற்கரிய,
தானவர் – அசுரர்களை,
கடிந்த – அழித்தருளிய,
ஐம் படையும் – பஞ்சாயுதங்களும்,
புடை தயங்க – இருபக்கங்களிலும் நின்று விளங்கவும், –
பாயிரம் நால் மறை – முகவுரை யையுடைய நான்குவேதங்களும்,
பரவ – புகழவும், –
பால் கடலுள் – திருப்பாற்கடலின்நடுவிலே,
பரு மணி – பருத்த மாணிக்கத்தையுடைய,
சூட்டு – உச்சியையுடைய,
ஆயிரம் வாய் – ஆயிரந் தலைகளையுடைய,
பாம்பு அணை மேல் – ஆதிசேஷசயநத்தில்,
கரிய மால் வரை – கரிய பெரிய ஒரு மலை,
முளரி காடு ஈன்று – தாமரைக்காடு பூக்கப்பெற்று,
கிடந்தாங்கு – படுத்திருந்தாற் போல,
அறி துயிலின் – யோகநித்திரையில்,
இனிது அமர்ந்தோய் – இனிதாகப் பொருந்தி யிருக்கின்றவனே! – (எ – று.)
வீற்றிருத்தல் – வேறொன்றற்கில்லாத சிறப்போடு இருத்தல்.
“நீர்பூத்த” என்பது இரட்டுறமொழிதலாக, திருமகளோடும் நிலமகளோடுஞ் சேர்க்கப்பட்டது.
நீர் – கடலுக்கு ஆகுபெயர் (இலக்கணை.) இங்கே சந்தர்ப்பம் நோக்கி நீரென்பதற்குப் பாற்கடலெனப் பொருள் கொள்ளப்பட்டது.
பொதுப்பெயர் சிறப்புப்பொருளின் மேலது; “தாழி தரையாகத் தண்டயிர் நீராகத் தடவரையே மத்தாக” என்பதிற்போல;
இனி, திருமகளுக்கு அடைமொழியாம்போது பெண்களுக்குஉரிய குணங்கள் நிறைந்த வென்றும்,
நிலமகளுக்கு அடைமொழியாம்போது நீரினின்றுந்தோன்றிய வென்றுங் கொள்ளினும் அமையும்.
திருமகள் – திருவாகிய மகள், ஸ்ரீதேவி. நில மகள் – நிலமாகிய மகள், பூதேவி.
சேனையர்கோன் – பரமபதத்திலுள்ள நித்தியமுக்தர்களுக்குத் தலைவர். நறை – தேனுமாம்.
படலை – மார்பின் மாலை. ஐம்படை – சக்கரம், சங்கு, கதை, வில் – வாள்;
இவற்றிற்கு முறையே சுதரிசநம், பாஞ்சசந்நியம், கௌமோதகி, சார்ங்கம், நந்தகம் என்று பெயர்.
தாமரைத்தொகுதியைத் தாமரைக்கா டென்றார்.
பெருங்கருமலை – எம்பெருமானது திருமேனிக்கும், தாமரைக்காடு – வாய் கண் கை கால் முதலிய அவயவங்களுக்கும் உவமை;
இதனை மேல் எழுபத்துமூன்றாம் பாட்டில் விவரமாகக் காண்க. கிடந்து – எச்சத்திரிபு. ஆங்கு – உவமவுருபு.
பாயிரம் – ப்ரணவம். அறிதுயில் – அறியாநின்று செய்யுந் துயில்.
“கோலார்ந்த நெடுஞ்சார்ங் கங் கூனற்சங்கங் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற லொள்வாள்,
காலார்ந்த கதிக்கருடனென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ் சூழ் காப்ப” என்ற
பெரியார் பாசுரம் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
————————
மண்ணகம் துயர் நீங்க வானகம் தொழுது ஏத்த
கண் அகன் சோணாட்டுக் காவிரி வாய்ப் புளினத்து
பம்புகதிர் விசும்பு இரவி பசும் புரவி வழி விலங்கு
செம்பொன் மதில் ஏழ் உடுத்த திரு அரங்கப் பெரும் கோயில்
ஆணிப் பொன் தகடு உறிஞ்சும் அணிக்கதவ நீர் வாயில்
மாணிக்க வெயில் பரப்பும் வயிர மணி விமானத்துள்
மின் இலங்கு தொடி வலய வியன் வலக்கை கீழ் கொடுத்து
தென் இலங்கைத் திசை நோக்கி திரு நயனம் துயில்வோய் கேள் –2-
(இ – ள்.) மண்ணகம் – மண்ணுல கத்திலுள்ளாரும்,
வானகம் – விண்ணுலகத்திலுள்ளாரும்,
துயர் நீங்க – (தத்தம் இம்மை மறுமைத்) துன்பங்கள் நீங்குமாறு,
தொழுது ஏத்த – வணங்கித் துதிசெய்யாநிற்க,
கண் அகல் சோணாடு – இடமகன்ற சோழ நாட்டில்,
காவிரிவாய் – திருக்காவேரிநதியின்நடுவிலே,
புளினத்து – மணற் றிட்டையிலே, –
பம்பு கதிர் – நெருங்கிய கிரணங்களையுடைய,
விசும்பு -ஆகாயத்தே செல்லுகின்ற,
இரவி – சூரியனது,
பசும் புரவி – பச்சை நிறத்தையுடைய குதிரை,
வழிவிலங்கு – (தான்செல்லும்) வழியினின்று விலகிப்போவதற்குக் காரணமாகிய (அச்சூரியமண்டலத்தினும் உயர்ந்துநின்ற),
செம்பொன் – சிவந்தபொன்மயமான,
மதில் ஏழ் – ஏழுதிருமதில்களை,
உடுத்த – சுற்றிலும் உடைய,
திருவரங்கப்பெருங்கோயில் – திருவரங்கம்பெரியகோயிலில், –
ஆணி பொன் தகடு உரிஞ்சும் – சிறந்த பொன்தகடு பதித்த,
அணி கதவம் – அழகிய கதவுகளையுடைய,
நீர் வாயில் – நீண்ட திருவாயிலையுடைய, மாணிக்கம்
வெயில் பரப்பும் – மாணிக்கங்களி னொளியை வீசுகின்ற,
வயிரம் மணி – வயிரக்கற்க ளிழைத்த,
விமானத்துள் – பிரணவாகார விமானத்தினுள்ளே, –
மின் இலங்கு – ஒளி விளங்குகின்ற,
தொடி வலயம் – தொடியென்னும் வளையையுடைய,
வியல் – பெரிய,
வலக்கை – வலத் திருக்கையை,
கீழ்கொடுத்து – (உனது திருமுடியின்) கீழே வைத்துக் கொண்டு,
தென் இலங்கை திசை நோக்கி – தெற்குத் திக்கிலுள்ள இலங்காபுரியை நோக்கி,
திரு நயனம் துயில்வோய் – திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! –
கேள் – (அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக்) கேட்டருள்வாயாக; (எ – று.)
வானகம்- தேவர்கள்; நித்தியசூரிகளுமாம். அகல் சோணாடு – அகன் சோணாடு; புணர்ச்சியில் விகாரம்.
சோணாடு – மரூஉமொழி. மதிலுக்கும் இரவிக்குஞ் சம்பந்தமில்லாமலிருக்கச் சம்பந்தத்தைக் கற்பித்தலால், தொடர்புயர்வு நவிற்சியணி;
இதனை வடநூலார் ஸம்பந்தாதிசயோக்தி யென்பர்: இதனால், மதிலினது மிக்க உயர்வு தொனிக்கின்றது.
திருவரங் கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்கு எழுந்தருளியிருக்கின்ற எம்பெரு மானுக்குப் பெரியபெருமாளென்றுந் திருநாமம்.
கோயில் – கோவில், தேவா லயம்; வகரம் யகரமானது, இலக்கணப்போலி.
ஆணிப் பொன் – மாற்றுயர் ந்த பொன். வைரம் – வஜ்ரம்.
‘வியன்வலக்கை’ – உத்தமபுருஷலக்ஷணமாய் முழந்தாளளவும் நீண்ட கையென்க.
தாய் குழந்தைக்கு முலைகொடுத்து அதன் முகமலர்ச்சி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாறுபோல,
ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு இராச்சியத்தைக் கொடுத்து அவரது பொலிவைப் பார்த்துக்கொண்டே கண்வளர்ந்தருளுகின்றபடியால்,
“தென்னிலங்கைத் திசை நோக்கித் திருநயனந் துயில்வோய்” என்றார்;
“மன்னுடைய விபீடணற் காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண் வைத்த, வென்னுடைய திருவரங்கர்க்கு,”
“வன்பெரு வானக முய்ய வமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகின் மனிசருய்யத்,
துன்பமிகு துயரகல வயர்வொன் றில்லாச் சுகம் வளர வக மகிழுந் தொண்டர் வாழ,
வன்பொடு தென்றிசை நோக்கிப் பள்ளி கொள்ளு மணியரங்கன்,”
“குடதிசை முடியைவைத்துக் குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்புகாட்டித் தென்திசை யிலங்கை நோக்கி” என்றார்களிறே ஆழ்வார்களும்.
இவையிரண்டும் – எட்டடித் தரவுகள்.
———-
1-தேவராய் தேவர்க்கும் தெரியாத ஒளி உருவாய்
மூவராய் மூவர்க்குள் முதல்வனாய் நின்றோய் நீ –
(இ – ள்.) நீ -, தேவர் ஆய் – (இந்திரன் முதலிய) தேவர்களது சொரூபியாய்,
தேவர்க்கும் – அந்தத்தேவர்களுக்கும்,
தெரியாத – அறியக்கூடாத,
ஒளி உரு ஆய் – தேஜோரூபியாய்,
மூவர்ஆய் – (அயன் அரி அரன் என்னுந்) திரிமூர்த்திகளாய்,
மூவர்க்குள் – அந்த மும்மூர்த்திகளுள்ளும்,
முதல்வன்ஆய் – தலைவனாய்,
நின்றோய் – நின்ற தன்மையையுடையை; (எ – று.)
எம்பெருமான் தானே இந்திரன் முதலிய தேவர்களாகவும், திரிமூர்த்திகளாவும்,
அவர்கள் யாவர்க்குந் தலைவனாகவும் நின்று சிறப்புறுவன் என்பதாம்–மூவர் – தொகைக்குறிப்பு.
முதலாவார் மூவரே யம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன்
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
ஒளியுரு – உலகத்தில் ஒளிவடிவமாயுள்ளவையும் அதனால் “ஜ்யோதி” என்று சொல்லப்படுபவையுமான
ஆத்துமாக்களெல்லாவற்றுக்குந் தலைவனாகிய பரமாத்துமா என்றபடி; இவனை “பரஞ்சோதி” என்று வேதம் கூறும்
ஆதிப் பிரமனும் நீ யாதிப் பரமனும் நீ யோதியுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினும் நீ –
சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற வேத முறை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கம்பர்
—————–
2-போற்றுவார் போற்றுவது உன் புகழ்ப் பொருளே ஆதலினால்
வேற்று வாசகம் அடியேன் விளம்புமாறு அறியேனால்-
போற்றுவார் – துதிப்பவர்கள்,
போற்றுவது – துதிப்பது,
உன் – உனது,
புகழ் பொருளே – புகழாகிய பொருளையே;
ஆதலினால் -,
அடியேன் -,
வேறு வாசகம் – (அப்புகழையேயன்றி) வேறுவார்த்தையை,
விளம்பும் ஆறு – சொல்லுந்தன் மையை,
அறியேன் – அறியாதவனா யிருக்கின்றேன்; (எ – று.)
இதுவரையில் மற்றையோர் யாவரும் உன்னைக்குறித்துப் புகழ்ந்து கூறும் பழையதொரு மரபின்படி கூறத் தெரியுமே
யன்றிப் புதுமையாக நினது திருவுள்ளத்தில் ஒருவியப்புத் தோன்றுமாறு புகழ்ந்துகூறத் தெரிந்திலே னென்பதாம்.
வானத்தினின்றும் பெய்கின்ற மழைநீர் முழுவதும் முடிவிற் கடலையே அடைவதுபோல, எந்தத்தேவரைக்
குறித்துச் செய்யப்படுந் தோத்திரமும் ஸர்வேஸ்வரனாகிய ஸ்ரீமந்நாராயணனையே சேர்வதென்பதுபற்றி
போற்றுவார் போற்றுவ துன் புகழ்ப்பொருளே” என்றார்.
வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை அறுவகைப் பொருளென்றாற்போல,
ஈண்டுப் புகழ் பொருளெனப்பட்டது;
இறைமைக் குணங்க ளிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் ஒருபொருளல்ல வாகலின்,
அவைமுற்றவுமுடைய எம்பெருமானது புகழே பொருளெனப்பட்ட தென்றுங் கொள்க
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் மொழி
இது. அடியேன் – அடிமையென்னும் அடியிற் பிறந்து தாழ்வுப் பொருள் தந்து நின்ற தன்மை யொருமைச் சொல். ஆல் – ஈற்றசை.
———————————
3-பணித் தடங்காது இமையவர்க்கும் பங்கயத்தோன் முதலோர்க்கும்
பணித்து அடங்காப் புகழ் அடியேன் பணித்து அடங்கற் பாலதோ
பணி தடம் காது-பாம்பைக் குழையாக அணிந்த பெரிய காதுகளை உடைய -நாகாபரணன்
பங்கயத்தோன் -பிரமன் -திரு உந்தித் தாமரையில் தோன்றினவன்-என்றவாறு
பணித்து அடங்கா -சொல்லி முடியாத பணி – பாம்பைக் குழையாக அணிந்த,
தட காது – பெரிய காதுகளையுடைய,
இமையவற்கும் – பரம சிவனுக்கும்,
பங்கயத்தோன் முதலோர்க்கும் – பிரமன்முதலிய தேவர்களு க்கும்,
பணித்து அடங்கா – சொல்லி முடியாத,
புகழ் – (உனது) திருப்புகழ்,
அடியேன் -,
பணித்து – சொல்லி,
அடங்கல் பாலதோ – முடியத் தக்க தன்மை யையுடையதோ? (அன்றென்றபடி); (எ – று.) – ஓகாரம் – எதிர்மறை.
திரிமூர்த்திகளுள் மற்றையிருமூர்த்திகளும் புகழ்ந்துகூறிமுடியாத பெ ருஞ்சிறப்புடைய உனது புகழ்
எளியனான என்னால் எடுத்துச்சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.
ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன் றிரு ஆராதனம் செய்வன் வேதா என்றால்
அடியேன் புகழ்கைக்கு யார் -திருவரங்கத்து அந்தாதி
நாகாபரண னாதலால், “பணி த்தடங்காதிமையவன்” என்றார். காது – மற்றை அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.
இமையவற்கும், முதலோர்க்கும் என்பவற்றிலுள்ள உம்மைகள் – எண்ணுப்பொருளோடு, உயர்வு சிறப்பும் உணர்த்தி நின்றன.
பங்கயத்தோன் – திருமாலினது திருவுந்தித்தாமரைமலரில் தோன்றியவன்.
“பணித் தடங்காது” என்ற சொற்றொடரில் யமகம் என்னுஞ் சொல்லணி காண்க.
————————————
4- யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பு ஆமோ —
யாம் – நாமே,
கடவுள் -பரதெய்வம்,
என்று – என்றெண்ணி,
இருக்கும் – இறுமாந்திருக்கின்ற,
எ உலகில் – எல்லாவுலகத்திலுமுள்ள,
கடவுளர்க்கும் – தெய்வங்களுக்கெல்லாம்,
ஆம் – தலைமையாகிய,
கடவுள் -,
நீ என்றால் – நீயென்றுசொல்லிப் புகழ்ந்தால்,
அஃது – அது, உனக்கு -,
வியப்பு ஆமோ – ஒரு அதிசயமாகுமோ? (ஆகாது என்றபடி); (எ – று.)
உண்மையில் எல்லாத்தேவர்கட்கும் இறைவன் ஸ்ரீரங்கநாதனே யாத லால் அவ்வெம்பெருமானை எல்லாத்தேவர்கட்கும்
தலைவனென்று கூறின் அஃது இயற்கையைக் கூறுவதாவதல்லது அதனில் வியக்கத்தக்க பொருளின்மையை யறிக.
யாம் கடவுள் என்று இருக்கும் கடவுளர் – “நாயகராத்திரி யுஞ் சிலதேவர்” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
இனி, பலசமயத்தோரும் தம்தம் தெய்வமே நன்றென்று கொண்டு தந்தம் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும்
வழிபாடுகளையெல்லாம் நீயே பெற்றுக்கொண்டு அவரவர்க்குத் தக்கபடி பயன்களை யளிக்கின்றா யாதலால்,
அவ்வத்தேவர்களால் யாது பயன்? என்றும் இதற்குக் கருத்துக் கூறுவர்.
யாம் – உயர்வுப்பன்மை. கடவுள் – எல்லாவற்றையுங் கடந்து நிற்பவன்; தொழிலாகுபெயர்.
“எவ்வுலகு”, எகரவினா – எஞ்சாமைப் பொருளது.
“உனக்கு வியப்பாமோ” என்றது, உன்பெருமையைக் குறிக்கத்தக்கதொரு அதிசயமாகா தென்றபடி.
——————————-
5-அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்து அளித்து துடைப்பது நீ
நினைத்த விளையாட்டு என்றால் நின் பெருமைக்கு அளவு ஆமோ
5.அனைத்து உலகும் – எல்லாவுலகங்களையும்,
அனைத்துஉயிரும் – (அவற்றிலுள்ள சராசரங்களாகிய) எல்லாவுயிர்களையும்,
அமைத்து – படைத்து,
அளித்து – காத்து,
துடைப்பது – அழிப்பது, நீ -,
நினைத்த – எண்ணியமாத்திரத்திற் செய்கிற,
விளையாட்டு – திருவிளையாடலாகும், என்றால் -, (அது),
நின்பெருமைக்கு – நினது மகிமைக்கு, அளவு ஆமோ – ஒரு வரையறையாகுமோ? (எ – று.)
உலகம் ஆவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் -கம்பர்
அயனாயிருந்து படைத்து, தானான தன்மையிலே நின்று காத்து, அரனாயிருந்து அழிப்பன் திருமாலென்க.
ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரனுடைய பெருமைக்குப் படைத்தல் முதலியன ஒரு பெருந்தொழிலல்ல வென்பதாம்.
——————————————-
6-கருதரிய உயிர்க்கு உயிராய்க் கலந்து -கரந்து- எங்கும் உறையும்
ஒரு தனி நாயகம் என்றால் உன் புகழ்க்கு வரம்பு ஆமோ
(இ – ள்.) (நீ), கருதரிய – நினைத்தற்கும் அருமையான,
உயிர்க்கு – எல்லாச் சீவாத்துமாக்களுக்கும்,
உயிர் ஆய் – அந்தராத்துமாவாய்,
கரந்து – மறைந்து,
எங்கும் – எல்லாவிடத்திலும் (உள்ளும் புறமும்),
பரந்து – பரவி,
உறையும் – தங்குகின்ற,
ஒரு தனி நாயகம் -ஒப்பில்லாததொரு தலைமைப்பொருளாவாய்,
என்றால் -, (அது),
உன் புகழ்க்கு – உனது பெருங்கீர்த்திக்கு,
வரம்பு ஆமோ – ஓர் எல்லையாகுமோ? (எ – று.)
எம்பெருமானுடைய திருப்புகழ்கள் அனந்த மாதலால், ஒன்றைக் கூறுவதால் அவைமுற்றும் கூறப்பட்டனவாகாவென்க.
ஆத்மாக்களை அநந்தமென்று கூறுவதல்லது இத்துணையன வென்று அளவிட்டுக்கூறுதல்
எவர்க்கும் இயலாதாகையால், “கரிதரிய வுயிர்” என்றார்.
உடலுக்குள் உயிர் அதற்குத் தாரகமாய் நியாமகமாய்ச் சேஷியாய்த் தங்கியிருத்தல் போலப் பரமாத்துமா
அச்சரீராத்துமாக்களுள் அந்தர்யாமியாய் அவற்றிற்குத் தான்
தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் விடாது வீற்றிருத்தலால், “உயிர்க்குயிராய்” என்றார்;
ஆத்மாக்களும் அநந்தம் -என்பதால் கருதரிய உயிர்
கலந்து கரந்து -உள்ளும் புறமும் வியாபித்து
எள்ளும் எண்ணெயும் போல் நீங்காது உலகத்து உயிராகி நியாமகனாய் -திருவரங்கத்து மாலை
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய்
யவை யவை தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு எழி வறக் கறந்த சில் இடம் தொறும் இடம்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -நம்மாழ்வார் –
ஒரு தனி நாயகம் – பிரமன்முதல் எறும்பு ஈறான எல்லாவுயிர்க்கும் ஈடுமெடுப்புமில்லாத தலைமைத்தேவன் எம்பெருமான் என்றபடி.
இவை யாறும் – ஈரடித் தாழிசைகள்.
——————————————————-
1-உரு என அரு என உளன் என இலன் என
அரு மறை இறுதியும் அறிவு அரு நிலைமையை –
(நீ), உரு என – உருவமுடை யவனென்றும்,
அரு என – உருவமில்லாதவ னென்றும்,
உளன் என-உள்ளவனென்றும்,
இலன் என- இல்லாதவனென்றும்.(ஒருதலையாகத் துணிந்து),
அரு மறை இறுதியும் – அறிதற்கரிய வேதாந்தங்களும்,
அறிவரு – அறிதற்கரிய,
நிலைமையை – தன்மையையுடையனா யிருக்கிறாய்; (எ – று.)
உனது மகிமைகளைக் கூறுகின்ற பிரமகாண்டமாகிய வேதாந்தங்களும் உனது மகிமைகளை உள்ளபடி
முற்றுங் கூறுங் தரத்தனவல்ல என்பதாம். உரு, அரு என்பன – ரூபம், அரூபம் என்னும் வடமொழிகளின் சிதைவுகள்.
இலனது வுடையனது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
உளன் எனில் உளன் இவ்வுருவம் அவ்வுருவுகள் இலன் எனில் இலன் அவ்வருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின் உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே-
————————————————–
2-இவர் இவர் இறையவர் என மன உறுதியொடு
அவர் அவர் தோழா அரு சமயமும் அருளினை —
(இ – ள்.) இவர் இவர் – இந்த இந்தத் தேவர்கள்,
இறையவர் – (எங்களுக்குத்) தலைவர்கள்,
என – என்று எண்ணி,
மனம் உறுதியொடு – மனத்துணிவுடனே,
அவர் அவர் – அந்தந்த மதத்தி லுள்ளவர்கள்,
தொழ – வணங்கும்படி,
அறு சமயமும் – ஆறுவகைப்பட்ட மதங்களையும்,
அருளினை – கொடுத்தருளினாய்; (எ – று.)
வணங்கும் துறைகள் பல பலவாக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி யாவை யாவை தோறும்
அணங்கும் பல பலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
அறு சமயம் -வைஷ்ணவம் -சைவம் -சாக்தம் -சௌரம்-காணபதம் -கௌமாரம் –
கபில மதம் -கணாத மதம் -பதஞ்சலி மதம் -அஷ பாத மதம் -வியாச மதம் -ஜைமினி மதம்
பௌத்தம்-ஜைனம் -பைரவம் -காளாமுகம் -லோகாயதம் -சூனிய வாதம்
என்பனவென்றேனுங் கொள்க-
——————–
3-கடு வளி கனல் புனல் ககனமொடு அகலிடம்
உடுபதி கதிரவன் உருவமும் அருளினை –
கடு வளி – கடிய காற்றும், -கடுமை-விரைவு
கனல் – நெருப்பும்,
புனல் – நீரும்,
ககனமொடு – ஆகாயமும்,
அகல்இடம் – பரந்த பூமியும்,
உடுபதி – நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாகிய சந்திரனும்,
கதிரவன் – சூரியனும்,
உருவமும் – இயமானனும், (ஆகிய இவற்றை,)
அருளினை – வகுத்தருளினாய்; (எ – று.)
பாஞ்ச பூதிகமான அண்டங்களைப் படைத்து அவற்றுக்கு ஒளியைத் தரும் சந்திர சூரியர்களை உண்டாக்கி வைத்தாய் என்றுமாம்
அஷ்ட மூர்த்திகள் இவை
நில நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலனாய ஐந்தினோடு எண் வகையாய் புணர்ந்து நின்றான் -திருவாசகம்
கடுவளி, கடுமை – விரைவு; கடியென்னும் உரிச்சொல்லின் திரிபென்றுங் கொள்ளலாம்.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழவைத்தார்.
“ககனமொடு” என்பதில் உள்ள ‘ஒடு’ வென்னும் எண்ணிடைச்சொல், நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்திற்று.
கதிரவன் – கிரகணங்களையுடையவன். இனி, உருவம் என்பதற்கு – இவர்களது உருவத்தை யெனப் பொருள்கூறி,
பாஞ்சபூதிகமான அண்டங்களைப் படைத்து, அவற்றிற்கு ஒளியைத் தருதற்காகச் சூரிய சந்திரர்களையும்
உண்டாக்கி வைத்தாய் நீ யென்றுங்கருத்துக் கூறுவர்.
—————————————————-
4-கடி மலர் அடி இணை கருதினர் பெறுகென
அடி நடு முடிவு அற அருள்பர கதியினை –
(இ – ள்.) “கடி மலர் – வாசனையை யுடைய தாமரை மலர் போன்ற,
அடி இணை – உபய திருவடிகளை,
கருதினர் – தியானஞ்செய்தவர்கள்,
பெறுக – பெறுவார்களாக,”
என – என்று,
அடி நடு முடிவு அற – முதலிடைகடையில்லாமல் – (எப்பொழுதும்),
உத்தமர் மத்யமர் அதமர் என்றுமாம் -பிறப்பு வளர்ப்பு இறப்பு இல்லாமல் என்றுமாம்
அருள் – (அவர்களுக்கு) அருளுகின்ற,
பரகதியினை – பரமபதத்தையுடையவனாயிருக்கிறாய்; (எ – று.)
இவை நான்கும் – ஈரடி அராகங்கள்.
——————————————————————-
1- ஒரு நாலு முகத்தவனோடு உலகு ஈன்றாய் என்பர் அது உன்
திரு நாபி மலர்ந்தது அல்லால் திரு வுளத்தில் உணராயால் –
(இ – ள்.) ஒரு நாலு முகத்தவனோடு – ஒப்பற்ற பிரமனுடனே,
உலகு – எல்லாவுலகங்களையும்,
ஈன்றாய் – படைத் தாய்,
என்பர் – என்று (யாவருஞ்) சொல்லுவர்; அது -,
உன் திரு நாபி – உனது அழகிய உந்தித்தாமரை,
மலர்ந்தது அல்லால் – விரிந்ததல்லாமல்,
திரு உளத்தில் – நெஞ்சில்,
உணராய் – நினைத்தாயு மில்லை; (எ – று.)
அநாயாசேன சிருஷ்டி செய்து அருளினாய் என்கிறார்
பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை கண்டீர்
அத்திசை முகனோடு உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையின்
முந்திக் குவியிலுடனே குவியும் இம்மூதண்டமே–திரு வரங்கத்து மாலை –
————————-
2-மேரு கிரி உடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன்
கூர் உகிரே அறிந்தது அல்லால் கோவே நீ அறியாயால் –
மேருகிரி – மகாமேருமலை போன்ற,
உடல் – உடம்பினையுடைய,
அவுணன் – இரணியாசுரனது,
மிடல் – வலிமையை,
மிடல் -தேக பலம் -வர பலம் முதலியன
கெடுத்தாய் – அழித்தாய், என்பர் -; அது -,
உன் கூர் உகிரே உனது கூரிய நகமே,
அறிந்தது அல்லால் -,
கோவே – இறைவனே!
நீ அறியாய் -; (எ – று.)
உனது கைந்நகத்துக்கே இவ்வளவு பேராற்ற லுள்ள போது உனது முழுவலிமை எத்திறத்ததோ வென்று வியந்தவாறு.
இவ்வரலாற்றால், சிவபிரான் முதலிய பிறதேவர்களாற் கிடைத்துள்ள பூரணவலிமைகள் உனக்கு முன்னே
பஞ்சுக் கனல் போலப் பறந்தொழியு மென்று நீயே பரதேவதை யென்பதை விளக்கினர்.
மேருகிரி – நிறத்திற்கும், வலிமைக்கும், பெருமைக்கும் உவமை.
————————————-
3-பன்றியாய் படி எடுத்த பாழியாய் என்பர் அது
வென்றி ஆர் உனது எயிற்றில் மென் துகள் போன்று இருந்ததால்
(இ – ள்.) பன்றியாய் – வராகாவதாரமாய்,
படி – பூமியை,
எடுத்த -,
பாழியாய் – வலிமையையுடையாய், என்பர் –
அது – அப்பூமி,
வென்றி ஆர் – வெற்றி பொருந்திய,
உனது -,
எயிற்றில் – கோட்டில்,
மெல் துகள் போன்று – சிறிய தூளியை ஒத்து, இருந்தது – (எ – று.)
பூமிக்கு நேர்ந்த பிரளயாபத்தைப் போக்கியருளுதற்காக எடுத்த சிறந்த திருவவதாரமாதலால், “படியெடுத்த பாழியாய்” என்றனர்.
குழந்தை கிணற்றில் விழுந்தால் உடனே அதிற்குதித்துக் குழந்தையையெடுக்குந்தாய் போலப்
பூமி கடலினுட்புக்கவளவிலே நீருக்குஞ் சேற்றுக்கும் பின்வாங்காத வராகரூபமாய்க் கடலினுட்புக்குப் பூமியை
எடுத்தற்காகக் கொண்ட அத்திருமேனியின் பெருமையை விளக்குவார், பூமியை ஒருதுகளாகக் கூறினர்.
வென்றி – இரணியாக்ஷ வதம். துகள் = தூளி; வடசொற்சிதைவு.
ஆருக்கி வரை யளவிடலான் தென்னரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்பதற்காக பழிப்பில் பெரும்
சீருற்ற செங்கண் கரும் பன்றியாகி திருக் குளம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே—திருவரங்கத்து மாலை –
————————————————————————-
4-அண்டம் எலாம் உண்மை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ
உண்டருளும் காலத்து ஒரு துற்றுக்கு ஆற்றாவால் –
அறியாதார் – (உன் திற மையை நன்றாக) அறியாதவர்கள்,
அண்டம் எலாம் – எல்லா அண்டங் களையும்,
உண்டை – புசித்தாய்;
என்பர் – என்று (ஒருபெருமையாகச்) சொல்லுவர்;
அவை – அவ்வண்டங்கள்,
நீ உண்டருளும் காலத்தில் -,
ஒரு துற்றுக்கு ஆற்றா – ஒரு கவளத்திற்கும் போதாவாம்; (எ – று.)
உலகங்களெல்லாம் ஒருகவளத்துக்கும் போதாதபடி மிகப்பேருருவ முடைய விராட் சொரூபியாகிய உன்னைப்பற்றி
உலகங்களை உண்டாய் என்று இதனை அரிய தொழில் செய்ததுபோல எடுத்துக்கூறுதல் உனது பெருமைக்குத் தகுமோ? என்பதாம்.
உண்டை- அன்சாரியைப் பெறாது முன்னிலை யொருமை யிறந்தகால வினைமுற்று.
ஆங்கு – அசை. துற்று ஒருபிடியளவு கொண்ட உணவு. “துத்துக்கு” என்றும் பாடம்.
இவை நான்கும் – பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள்.
———————————————————
1-நஞ்சமும் அமுதமும் நரகும் வீடுமாய்
வஞ்சமும் ஞானமும் மறப்பும் ஆயினை-
(இ – ள்.) நஞ்சமும் – (உயிரை முடித்தே விடுவதான) விடமும்,
அமுதமும் – (போன உயிரை மீட்கவல்லதான) அமிருதமும், –
நரகும் – (துக்க ஏதுவான) நரகமும்,
வீடும் – (பேரின்பத்துக்கு ஏதுவான) மோக்ஷமும், ஆய் -,
வஞ்சமும் – (பிறரை வஞ்சிக்கும்) வஞ்சனையும்,
ஞானமும் – (பொருள்களின் தன்மையை உள்ளபடி அறியவல்ல) அறிவும்,
மறப்பும் – (அவ்விஷயத்தில்) மறதியும்,
ஆயினை – ஆனவனாயிருக்கின்றாய்; (எ – று.)
அநிஷ்டமான விஷம் முதலானவற்றோடு இஷ்டமான அமுதம் முத லானவற்றோடு வாசியில்லாமல்
அந்தந்த உருவங்களாலே எம்பெருமான் யா வர்க்கும் உத்தேச்யமாயிருப்ப னென்பது கருத்து.
இவ்வாறு ஒன்றிற்கொன்று எதிரான பொருள்களாகப் பரிணமிக்கும் எம்பெருமானை -விருத்த விபூதியன் அன்றோ
விடமும் அமுதமுமாய் -நரகும் ச்வர்க்கமுமாய் -ஞானமும் மூடமுமாய் -நம்மாழ்வார் –
———————————————-
2- இருவினைப் பகுதியும் இன்ப துன்பமும்
கருணையும் வெகுளியும் கருத்தும் ஆயினை
(இ – ள்.) இரு வினை பகுதியும் – (சுகசாதனமான) நல்வினை (துக்கசாதனமான) தீவினையின் பிரிவுகளும், –
இன்ப துன்பமும் – (அவற்றாலுண்டாகுஞ்) சுகதுக்கங்களும், –
கருணையும் – (தேற்றமடியாக வரும்) அருளும்,
வெகுளியும் – (கலக்கமடியாக வரும்) கோ பமும்,
கருத்தும் – எண்ணமும்,
ஆயினை -; (எ – று.)
புண்ணியம் பாவம் என்று இவையாய்–
கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் தண்டமும் தண்மையும் -நம்மாழ்வார் –
இவை யிரண்டும் – நாற்சீர் ஈரடி அம்போதரங்கங்கள்.
——————————————————–
1-அலை கடல் வயிறு கலக்கினை
(இ – ள்.) அலை கடல் – அலைகின்ற கடலினது,
வயிறு – நடுவிடத்தை,
கலக்கினை – கலங்கச்செய்தாய்; (எ – று.)
கூர்மாவதாரத்தில் ஷீராப்தி மதன காலத்திலும் -ஸ்ரீ ராமாவதாரத்தில் வருணனை வழி வேண்டிய பொழுதும்
—
2-அவுணரை மதுகை யடக்கினை
(இ – ள்.) அவுணரை – அசுரர்களை,
மதுகை அடக்கினை – வலிமை கெடச் செய்தாய்; (எ – று.)
இது, துஷ்டநிக்கிரகஞ்செய்யுமாறு எம்பெருமான் எடுத்த பலஅவதார ங்களிலும் நிகழ்ந்ததென்க.
இனி, இரண்டு செயப்படுபொருள் வந்த வினையாக் கொண்டு அவுணரை வலியை யடக்கினாயென்றும்,
உருபு மயக்கமாய் அவுணரது வலியை யடக்கினா யென்றுங் கொள்ளலாம்.
—-
3-மலை கட களிறு வதைத்தனை
மலை – எதிர்த்துப் போர்செய்யவந்த,
கட களிறு – (குவலயாபீட மென்னும்) மதயானையை,
வதைத்தனை – கொன்றாய்; (எ – று.)
———
4-மலை தலை கவிழ எடுத்தனை
இ – ள்.) மலை – கோவர்த்தனகிரியை,
தலை கவிழ – தலைகீழாம் படி,
எடுத்தனை – (குடையாக) எடுத்துப் பிடித்தாய்; (எ – று.)
மலையெடுத்தது – கிருஷ்ணாவதாரத்தில் திருவாய்ப்பாடியில் ஆயர்க ளெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக
இந்திரனை ஆராதித்தற்கென்று சமைத்த சோற்றை அவனுக்கிடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு
இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபமாய் அமுது செய்தருள, அவ்விந் திரன் பசிக்கோபத்தாலே
புஷ்கலாவர்த்தகம் முதலிய மேகங்களை ஏவித் தான்விரும்பி மேய்த்துக்கொண்டுபோகின்ற
கன்றுகளுக்கும் பசுக்களுக்குந் தனக்கு அபிமதரான ஆயர்க்கும் ஆய்ச்சிமார்க்குந் தீங்குதரும்படி கன்மழையை
ஏழுநாள் விடாது பெய்வித்தபொழுதென அறிக.
பசுக்கள் எட்டிமேய்ந்துநிற்கலாம்படி தலைகீழாக எடுத்துப்பிடிக்கப்பட்ட தாதலால், “மலை தலை கவிழ எடுத்தனை” என்றார்.
மதுசூதனன் எடுத்து மறித்த மலை –
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்துக் கவித்தமலை –
இவை நான்கும் – முச்சீரோரடி அப்போதரங்கங்கள்.
————————————–
1-மண்ணை விண்டனை
2-வெண்ணெய் உண்டனை
3-மருது இடந்தனை
இது, நாரதமுனிவரது சாபத்தால் மருதமரங்களாகப்பிறந்திருந்த குபேர புத்திரர்களது
சாபவிமோசனத்தின் பொருட்டுக் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்ததென்க.
4-எருது அடர்ந்தனை
5-உள் நிறைந்தனை-அந்தர்யாமித்வ வைபவம்
6-எண் இறந்தனை-எண்ணத்தையும் கடந்து –மனத்தை கூறினது மொழி மெய்களுக்கும் உப லஷணம்
7-ஒருமை ஆயினை-அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
8-பெருமை மேயினை-
இவை எட்டும் – இருசீ ரோரடி அம்போதரங்கங்கள்.
—————————————————
என வாங்கு- – அசைநிலை. இது, தனிச்சொல்.
1-மலர்தலை உலகத்து புலமை சான்ற
பதின்மரும் பணித்த பாடல் ஒதையொடு
முதுமறை கறங்க முரசம் ஆர்ப்பு
வலம்புரி பிளிரும் பொலம் புரி கோயில்
ஆழி அம் செல்வ ஆதி அம் பரம
வாழி வாழி மாயோய் வாழி
நெடியோய் வாழி நின் மாட்டு ஒன்றே
அடியேன் வேண்டுவது அது நீ மறுக்கேல்
பூவரும் அயன் முதல் யாவரும் போற்ற
மூவுலகு அளந்த நின் சேவடி வாழ்த்தித்
தொழுத கைத் தொண்டர் தம் தொண்டருள் சேர்க்காது
எழுவகைத் தோற்றத்து இன்னாப் பிறப்பில்
என்பு ஒழி யாக்கையுள் சேர்ப்பினும் அவர் பால்
அன்பு ஒழியாமை அருண் மதி எனக்கே –1-
(இ – ள்.) மலர் தலை – பரந்த இடத்தையுடைய,
உலகத்து – நிலவுலகத்திலே,
புலமைசான்ற – அறிவு மிகுந்த,
பதின்மரும் – ஆழ்வார்கள் பத்துப்பேரும்,
பணித்த – திருவாய்மலர்ந்தருளிய,
பாடல் – பாசுரங்களாகிய தமிழ்வேதங்களினது,
ஓதையொடு – கோஷத்துடனே,
முதுமறை – பழைய வடமொழி வேதங்களும்,
கறங்க – உத்கோஷிக்கவும், –
முரசம் – பேரிகைகள்,
ஆர்ப்ப – ஆரவாரஞ் செய்யவும், –
வலம் புரி பிளிறும் – வலம்புரிச்சங்குகள் ஒலிக்கின்ற,
பொலம் புரி – பொன்னாலாகிய,
கோயில் – திருவரங்கம் பெரியகோயிலிலே எழுந்தருளி யிருக்கின்ற,
ஆழி அம் செல்வ – திருவாழியுந் திருக்கையுஞ் சேர்ந்த சேர்த்தியா லுண்டான அழகைச் செல்வமாகவுடையவனே! –
ஆதி அம் பரம – ஆதிமூலமாகிய பரம் பொருளானவனே! –
வாழி வாழி – வாழ்வாயாக வாழ்வாயாக;
மாயோய் – மாயவனே!
வாழி-;
நெடியோய் – நீண்டு வளர்ந்தவனே! வாழி-;
நின் மாட்டு – உன்னிடத்தில்,
அடியேன் -,
வேண்டுவது – வேண்டிக் கேட்பது,
ஒன்றே – ஒருவரமேயாகும்;
அஃது – அதனை, நீ -,
மறுக்கேல் – மறுக்காதே; (அது யாதெனில்), –
பூ வரும் அயன் முதல் – (நினதுநாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமன் முதலாக,
யாவரும் – எல்லாத் தேவர்களும்,
அறியா – அறிய முடியாத,
மூ உலகுஅளந்த – மூன்றுலோகங்களையும் அளத்தல்செய்த,
நின் சேவடி – உனது சிவந்த திருவடிகளை,
வாழ்த்தி -,
தொழு தகை – வணங்குகின்ற தன்மையையுடைய,
தொண்டர்தம் – அடியார்களது,
தொண்டருள் – அடியார்களுள்,
சேர்க்காது – (அடியேனையும் ஒருவனாகச்) சேர்த்திடாமல்,
எழு வகை தோற்றத்து – எழுவகைப்பட்ட தோன்றற்பாட்டையுடைய,
இன்னா பிறப்பின் – துன்பந் தருவதாகிய பிறவிகளுள்,
என்பு ஒழி யாக்கையுள் – எலும்பில்லாத புழுவுடம்பிலே,
சேர்ப்பினும் – சேர்ந்து பிறக்கச் செய்தாலும்,
அவர்பால் – அவ்வடியாரடியார்பக்கல்,
அன்பு – பக்தி,
ஒழியாமை – நீங்காதபடி, எனக்கு -,
அருள் – கருணை செய்வாயாக, (என்பதேயாம்); (எ – று.)
பதின்மர் – கீழ் முதற்காப்புச்செய்யுளிற் கூறிய பன்னிருவருள் மதுர கவியுங் கோதையுந் தவிர்ந்த மற்றையவர்.
வேதங்கள் கடவுளைப்போல நித்தியமாதலால், “முதுமறை” எனப்பட்டன. வலம்புரி – வலமாக உட்சுழிந்த சங்கு.
அடுக்கு – உவகை பற்றியது. மாயோன் – மாயையையுடையவன்;
மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்குந் திறம்: அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்:
ஆச்சரியகரமான குணங்களையுஞ் செயல்களையு முடையவ னென்றுமாம்; கருநிற முடையோ னென்றுங் கொள்ளலாம்.
மாட்டு, பால் – ஏழனுருபுகள். அறியாச் சேவடியென இயையும், தொழுத கை என்றும் பிரிக்கலாம்.
எழுவகைத் தோற்றத்துள்ளும் இன்னாத பிறப்பாகிய என்பொழியாக்கை யென்றுமாம்.
தேவர் மனிதர் புள் விலங்கு ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்பன எழுவகைத்தோற்றங்கள்.
யாக்கை – எழுவகைத் தாதுக்களால் யாக்கப்படுவது; யாத்தல் – கட்டுதல். சேர்ப்பினும் என்ற உம்மை,
நீ சிறிதும் அருளின்றி அவ்வாறு சேர்க்கமாட்டாயென்னுந் துணிவு தோன்ற நின்றது. மதி – முன்னிலையசைச்சொல்;
“உரைமதி வாழியோ வலவ” என்பதிற்போல. இனி, அன்பொழியாதபடி மதியை (அறிவை) அரு ளென்றுமாம்.
அடியவர் மீது அன்பு ஒழியாதபடி மதியை அருள்வாய் என்றபடி
இது, பதினான்கடி நிலைமண்டில ஆசிரியச் சுரிதகம்.
இப்பாட்டு, தரவும், தாழிசையும், அராகமும், பெயர்த்துந்தாழிசையும், அம்போதரங்கங்களும், தனிச்சொல்லும்,
சுரிதகமும் பெற்றுவந்த மயங்கிசைக் சொச்சகக் கலிப்பா.
————————————————–
2-எனக்கே திருவரங்கனே பிரான் எம்மான்
தனக்கே அடிமை தமியேன் புனக்கேழ்
மருத்துளவோன் மேலன்றி மற்றொருவர் மேல் என்
கருத்துளவோ ஆராயுங்கால் –2-
(இ – ள்.) ஆராயுங்கால் – ஆராய்ந்துபார்க்குமளவில், – எனக்கு -,
திரு அரங்கனே – ஸ்ரீரங்கநாதனே,
பிரான் – தலைவன்;
எம்மான் தனக்கே – அவ்வெம்பெருமானுக்கே,
தமியேன் – தனியனாகிய யான்,
அடிமை – அடியவன்; (ஆகையால்),
என் கருத்து – எனது எண்ணம்,
புனம் – வனத்திலுள்ள,
கேழ் – ஒளியையும்,
மரு – வாசனையையுமுடைய,
துளவோன்மேல் அன்றி – திருத்துழாய் மாலையையுடைய அவ்வெம்பெருமான் மேலல்லாமல்
மற்றுஒருவர்மேல் – வேறொரு தேவர்மேல்,
உளவோ – உள்ளனவாமோ? (ஆகா வென்றபடி); (எ – று.)
எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள ஸ்வஸ்வாமிபாவ (எம்பெருமான் தலைவன்;
நாம் அவனது உடைமை என்ற) சம்பந்தத்தைத் தாம் நன்கு உணர்ந்ததனால் இனித் தேவதாந்தரங்கட்குத் தொண்டு
பூண்டொழுகேனென்று தாம் அந்யசேஷத்தினின்று தவிர்ந்தமையை இதனாற் கவி வெளியிடுகின்றனரென்க.
“கருத்து உளவோ” என்ற குறிப்பால், எனதுவாய் அவனையன்றிப் பிறரை வாழ்த்தாது என்றும்,
எனதுஉடல் அவனையன்றிப் பிறர்க்குப் பணி விடைசெய்யாது என்றுங் கூறியபடியாம்.
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணர்ந்து தேவதாந்திர பஜனம் தவிர்ந்தேன் என்கிறார்
பிரான் – ப்ரபு; மான் – மஹான் ஏகாரங்கள் – தேற்றப்பொருளன.
இது, நாளென்னும்வாய்பாட்டான் முடிந்த இருவிகற்பநேரிசைவெண்பா.
——————————————————————-
3-கால் ஆயிரம் முடி ஆயிரம் ஆயிரம் கை பரப்பி
மேல் ஆயிரம் தலை நாகம் கவிப்ப விண் பூத்த கஞ்சம்
போல் ஆயிரம் கண் வளரும் பிரான் பொன்னரங்கன் என்றே
மாலாய் இரங்க வல்லார்க்கு எய்தலாம் திரு வைகுந்தமே –3-
(இ – ள்.) கால் ஆயிரம் – ஆயிரந் திருவடிகளையும்,
முடி ஆயிரம் – ஆயிரந் திருமுடிகளையும்,
ஆயிரம் கை – ஆயிரந் திருக்கைகளையும்,
பரப்பி – பரப்பிக்கொண்டு,
ஆயிரம் தலை நாகம் – ஆயிரந் தலைகளையுடைய திருவநந்தாழ்வான்,
மேல் கவிப்ப – மேலே கவிந்திருப்ப,
விண் பூத்த கஞ்சம்போல் – (கரிய) ஆகாயத்தே மலர்ந்த (செந்) தாமரை மலர்போல,
ஆயிரம் கண் வளரும் – ஆயிரந்திருக்கண்கள் அறிதுயில் செய்யப்பெற்ற,
பிரான் – எம்பெருமான்,
பொன் அரங்கன் – அழகிய அரங்கநாதன்,
என்று – என்று எண்ணி,
மால் ஆய் – அன்புடையர்களாய்,
இரங்க வல்லார்க்கு – நெஞ்சுருகவல்லவர்கட்கு,
திருவைகுந்தம் – வைகுண்டத்தை,
எய்தலாம் – (எளிதில்) அடையலாம்.
அபரிமித அத்புத மகா ஞானம் மகா சக்தி யுடையவன் -திவ்யாத்மா ஸ்வரூபம் சொல்லியபடி
திருவரங்கநாதனை அன்போடு தியானித்து உருகுபவர்க்கு முத்தி சித்திக்கு மென்பதாம்.
இங்கே ஆயிரமென்பது, அளவில்லாததென்னும் பொருளது; அங்ஙனங்கொள்ளாவிடின் காலாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம்.
ஆகவே, அளவற்ற பாதம் முதலான சகல அங்கங்களையுமுடையவன் எம்பெருமான் என்பதாம்:
இதனால், அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகா ஞானமும் மகாசக்தியுமுள்ளவன் எம்பெருமான் என்பது தேர்ந்தபொருள்;
இவ்வெம்பெருமான் சகலஇந்திரியங்களாலேயாதல், ஓரிந்திரியத்தாலேயாதல்,
ஒருவிஷயத்திற்குரிய இந்திரியத்தை மற்றொன்றற்கு மாற்றியாதல், திருமேனியாலேயாதல்,
திவ்வியாத்துமசுவரூபத்தாலேயாதல் எல்லாவற் றையும் எப்போதும் எல்லாவிதத்திலும் மேலாக
அறிகின்றவனுஞ் செய்கி ன்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து:
இங்ஙனமன்றி முள்ளம்பன்றி தேகமுழுவதிலும் முட்களாலே செறிந்திருப்பதுபோல அநேகந் திருவடிகள் திருமுடிகள் திருக்கைகள்
திருக்கண்கள் முதலான அவயவங்களாற் செறிந்து கோரரூபமுள்ளவனாயிருக்கின்றான் பகவானென்பது கருத்தன்று;
அளவில்லாத கண் முதலியவைகளையுடையவன் எப்படி அளவில்லாத காட்சி முதலானவற்றை யுடையவனாயிருப்பனோ
அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டியவாறாம்:
இங்குச் சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூபமாதலாலே உலகத்திலுள்ளோருடைய சிரம் கண் முதலானவையெல்லாம்
அவனுடையவையா மெனக் கருத்துக் கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தாதென அறிக. இது, திவ்வியாத்துமசுவரூபங் கூறியபடி.
நாக மென்னுஞ் சொல்லுக்கு – நகத்தி லுள்ளதென்று பொருள்; நகம் – மலை, அல்லது சந்தன மரம்:
இச்சொல்லுக்கு நடவாததென்று பொருள். விண் – ஆகுபெயராய் மேகமென்றுமாம். கஞ்சம் – நீரில் முளைப்பது.
விண்பூத்த கஞ்சம் – இல்பொருளுவமை. “அரங்கம்” என்றும் பாடம். இரங்க வல்லாரென்பது, அங்ஙனம் இரங்குதலின் அருமை விளக்கிநின்றது.
இது, நேரசை முதலாகிய கட்டளைக்கலித்துறை.
————————————————————
4- வை கலந்த மூவிலை மேல் ஈசற்கும் வாசவற்கும் வாசப் பூ மேல்
மெய் கலந்த நால் வேத விரிஞ்சனுக்கும் மேலா வீற்று இருப்பர் மாதோ
பை கலந்த பாம்பணை மேல் திருவரங்கப் பெரு நகருள் பள்ளி கொள்ளும்
கை கலந்த நேமியான் திரு நாமத்து ஒரு நாமம் கற்றார் தாமே –4-
திரு அரங்கப் பெரு நகருள் – திருவரங்கம் பெரியகோயிலில்,
பை கலந்த – படம் பொருந்திய,
பாம்பு அணைமேல்- சேஷசயனத்தின் மீது,
பள்ளி கொள்ளும் – பள்ளிகொண்டருளுகின்ற,
கை கலந்த நேமியான் – கையிற் பொருந்திய திருவாழியையுடைய எம்பெருமானது,
திரு நாமத்து – (ஆயிரந்) திருநாமங்களுள்,
ஒரு நாமம் – ஒரு திருநாமத்தை,
கற்றார் – உச்சரித்தவர்கள், –
வை கலந்த – கூர்மை பொருந்திய,
மூ இலை – மூன்று இலைவடிவமான தலையையுடைய,
வேல் – சூலாயுதத்தையுடைய,
ஈசற்கும் – பரமசிவனுக்கும்,
வாசவற்கும் – தேவேந்திரனுக்கும்,
வாசம் – பூமேல் – வாசனையையுடைய தாமரைமலரில் தோன்றிய,
மெய் கலந்த – உண்மை பொருந்திய,
நால் வேதம் – நான்கு வேதங்களையுமுடைய,
விரிஞ்சனுக்கும் – பிரமதேவனுக்கும்,
மேல்ஆ – மேன்மையாக,
வீற்றிருப்பர் – (பரமபதத்தில்) மகிழ்ந்திருப்பார்கள்; (எ – று.)
எம்பெருமானது திருநாமத்தின் மகிமை கூறியவாறு. எம்பெருமானது திருநாமத்தைக் கற்றார்க்கு நித்தியவிபூதியாகிய
பரமபதங் கிடைத்தல் திண்ணமாதலால், லீலாவிபூதிக்கு ளடங்கிய ஈசன் முதலானார்க்கும் உயர்ந்த பதவியில் வீற்றிருப்பர் அன்னாரென்க.
பள்ளிகொள்ளுதல் – யோக நித்திரை செய்தல். மூவிலைவேல் – முத்தலைச்சூலம்.
கைகலந்த நேமியான் – “கைகலந்தவாழியான்” என்பர் நம்மாழ்வார்.
கைகலந்தநேமி – “திருக்கையிலே வேர்விழுந்த திருவாழி”
மெய்கலந்த நால் வேதம் – யாவர்க்கும் சிறந்த பிரமாணமான நூல் என்றபடி.
இது, முதல் நான்குங் காய்ச்சீரும், மற்றவை மாச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தம்.
—————————————————————
5- கற்றார் எனினும் பதினாலு உலகும் கண்டார் எனினும் தண்டாமிகு பற்று
அற்றார் எனினும் திருமால் அடியார் அல்லாதவர் வீடில்லாதவரே
பொற்றாமரையாள் கணவன் துயிலும் பொற் கோயிலையே புகழ்வார் பணிவார்
மாற்றார் எனினும் பெற்றார் அவரே வானோர் திரு மா மணி மண்டபமே –5-
(இ – ள்.) கற்றார் எனினும் – (கற்றற்கு உரிய நூல்களையெல்லாங்) கற்றவர்களேயாயினும்,
பதினாலு உலகும் – பதினான்கு லோகங்களையும்,
கண்டார் எனினும் – கண்டவர்களேயாயினும்,
தண்டா – நீங்குதலரிய,
மிகு பற்று – மிகுந்த (இருவகைப்) பற்றுக்களும்,
அற்றார் எனினும் – நீங்கியவர்களே யாயினும்,
திரு மால் அடியார் அல்லாதவர் – எம்பெருமானது அடியவர்க ளல்லாதவர்கள்,
வீடு இல்லாதவரே – மோக்ஷமில்லாதவர்களே யாவர்;
பொன் தாமரையாள் கணவன் – பொற்றாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளது கணவனாகிய அவ்வெம்பெருமான்,
துயிலும் – பள்ளிகொண்டருளுகின்ற,
பொன் கோயிலையே – அழகிய திருவரங்கத்தையே,
புகழ்வார் பணிவார் – துதித்து வணங்குபவர்கள்,
மற்றார் எனினும் – மற்றவர்களே யாயினும் (கீழ்க்கூறிய கற்றல் காணுதல் அறுதல்முதலிய குணங்கள் இல்லாதவ ரேயாயினும்) அவரே -,
வானோர் – நித்தியசூரிக ளுறையுமிடமான,
திருமா மணி மண்டபம் – முத்திமண்டபத்தை,
பெற்றார் – அடைந்தவராவர். (எ – று.)
மிதுனமே பிராப்யம் –
நூல்களைக்கற்றல் முதலிய சிறப்புக்களையுடையராயினும் திருமாலுக்கு அடிமைப்படாதார் முத்தியடையார்;
அவையில்லாதவராயினும் திருவரங்கம் பெரியகோயிலைப் புகழ்தல் பணிதல் செய்தவரே முத்தியடைவ ரென்பதாம்.
திருமால் – திருமகளையுடைய மால்: ஸ்ரீய:பதி; மால் – விஷ்ணு;
அன்றிக்கே, திருமகளிடத்தே மால் (வேட்கை) கொண்டவன்.
“திருமால்” என்றது, புருஷகார பூதையாகிய பெரியபிராட்டியோடு கூடிய சேர்த்தியே உத்தேச்ய மென்றவாறு;
“இஷ்டா நிஷ்டப்ராப்தி பரிஹாரங்கள் இரண்டும் பண்ணுவான் ஈஸ்வரனே யாயிருக்க,
பெரியபிராட்டியாராலே இவனுக்குப் பேறாகையாகிறது – இவனுடைய அபராதத்தைப் பாராதே ரக்ஷிக்கும்படி
இவள் புருஷகாரமானாலொழிய ஈஸ்வரன் இவன்காரியஞ் செய்யான் என்றபடி”,
“இவள் ஸந்நிதியாலே காகம் தலைபெற்றது, அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்” என்னும்
ஆன்றோர் வாக்கியங்கள் நோக்கத்தக்கன.
இருவகைப்பற்று – தானல்லாத உடம்பை யானென்றுந் தன்னோடியை பில்லாத பொருளை எனதென்றுங் கருதுகின்ற
அகங்கார மமகாரங்கள். அவை அறுதல் – ஆசிரியர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயி ற்சியானும்.
பதினாலுலகம் – கீழேழு மேலேழு ஆக உலகம் பதினான்கு.
பதினான்கு உலகங்களையுங் காணுதல் – தாம் இருந்த விடத்தி லிருந்தே யோகப் பயிற்சியினாலுண்டான அறிவு விசேடத்தால் அறிதல்;
அன்றி, அணிமா முதலிய சித்திமகிமையால் தாம் நினைத்தவிடங்களிற் சென்று அறிதல் என்க.
திருமாமணி மண்டபம் – “நாநாரத்நங்களாலே சமைந்த ஸ்தலங்களை யுடைத்தாய், அநேகமாயிரம் ரத்நஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய்,
உபயவிபூதியி லுள்ளாரும் ஒருமூலையிலே அடங்கும்படி இடமுடைத்தாய்” ஸ்ரீவைகுண்ட நாட்டிலேயுள்ளது
மற்று ஆர் என்றும் பிரிக்கலாம். பெற்றார் – காலவழுவமைதி;
தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாய்ச் சொல்லப்பட்டது; நிச்சயமாகப் பெறுவரென்க.
இது, எல்லாச் சீர்களும் மாச்சீர்களாகிய எண்சீராசிரிய விருத்தம்.
———————————-
6-மண் தலமும் விண் தலமும் நின் வட குன்றமும் வளைந்த மலையும் கடலும் மூ
தண்டமும் அகண்டமும் அயின்றவர் துயின்றருள் அரும்பதி விரும்பி வினவின்
கொண்டல் குமுறும் குடகு இழிந்து மதகு உந்தி அகில் கொண்டு நுரை மண்டி வருநீர்
தெண் திரை தொறும் தரளமும் கனகமும் சிதறு தென் திரு அரங்க நகரே –6-
(இ – ள்.) மண் தலமும் – மண்ணுலகத்தையும்,
விண் தலமும் – விண் ணுலகத்தையும்,
நின்ற – (மண்ணுலகத்தினிடையே) நின்ற,
வடகுன்றமும் – மகாமேருமலையையும்,
வளைந்த மலையும் – (அதனைச்) சூழ்ந்துநின்ற மற்றை மலைகளையும்,
கடலும் – கடல்களையும்,
முது அண்டமும் – (இவையெல்லா வற்றையுந் தன்னுள் அடக்கிய) பழைய அண்டங்களையும்,
அகண்டமும் (அவற்றிலுள்ள சரசசரங்கள் எல்லாவற்றையும்,
அயின்றவர் – (பிரளயகாலத்தில்) அமுது செய்தருளிய எம்பெருமான்,
துயின்றருள் – பள்ளிகொண்டருளுகின்ற,
அரு பதி – அடைதற்கரிய திவ்வியதேசம் (எதுவென்றுஅறிய),
விரும்பி – வினவின் – கேட்டால், –
கொண்டல் குமுறும் – மேகங்கள் படிந்து முழங்கப் பெற்ற,
குடகு – குடகுமலையினின்று,
இழிந்து – பெருகி,
மதகு – நீர் மதகுகளை
உந்தி – தள்ளிக்கொண்டு,
அகில் கொண்டு – அகிற்கட்டைகளை வாரிக் கொண்டு
நுரை மண்டி – நுரைமிகுந்து,
வரும் – வருகின்ற,
நீர் – காவேரிநீரானது,
தென்திரை தொறும் – தெளிந்த அலைகள்தோறும்,
தரளமும் – முத்துக்களையும்
கனகமும் – பொன்னையும்,
சிதறு – சிந்துகின்ற,
தென் திருஅரங்கம் நகரே – அழகிய ஸ்ரீரங்கமென்னும் நகரமே யாகும்; (எ – று.)
வளைந்த மலை – பூமியைக் கோட்டைபோலச் சூழ்ந்துநின்ற சக்கரவாள கிரி யென்றும்,
கடல் – பெரும்புறக்கடலென்றுங் கொள்ளலாம்.
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம். குடகு – ஸஹ்யகிரி.
அகில் – மற்றைமலைப் பொருள்களுக்கும் உபலக்ஷணம். இதில் ப்ராஸ மென்னுஞ் சொல்லணி காண்க.
இது, முதலைந்துங் கூவிளங்காய்ச்சீர்களும்,
ஆறாவது தேமாச்சீரும் ஏழாவது புளிமாச்சீருமாகிய எழுசீராசிரியச்சந்தவிருத்தம்.
தந்ததன ததன தந்ததன தந்ததன தந்ததன தந்த தனன எனச் சந்தக்குழிப்பு காண்க.
——————————————————-
புயவகுப்பு-
(முதலடி)
7-நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவ மணி குயின்ற தொடி அணி அணிந்து
ககனவில் இடு நீல வெற்பு ஒத்து இருந்தன -நறிய புது மன்றல் திசை முழுதும் மண்ட
நறவு குதி கொண்ட துளவு அணி அலங்கல் மதுகரம் ஒரு கோடி சுற்றப் புனைந்தன
நளின மட மங்கை குவலைய மடந்தை சனகனது அணங்கு பொதுவர்மகள் என்றிவ்
வனிதையர் தனபாரம் மொத்தக் குழைந்தன நதிபதி சுழன்று கதறி நுரை சிந்த
அரவு அகடு உறிஞ்சி அலற அலமந்து வடவரை உடல் தேய நட்டுக் கடைந்தன –
(இ – ள்.) நகு கதிர் வழங்கு – விளங்குகின்ற ஒளியை வீசுகின்ற,
செம் பொன் படு தகடு – செம்பொன்மயமான தகட்டினாற் (செய்யப்பட்டு),
நவமணி குயின்ற – நவரத்தினங்களும் இழைத்துள்ள,
தொடி அணி – தொடியென்னும் ஆபரணத்தை,
அணிந்து – தரித்து,
ககனம் வில் இடும் – ஆகாயத்தே தோன்றுகின்ற இந்திரவில் இடப்பட்ட,
நீல வெற்பு – கரியமலைகளை, ஒத்து இருந்தன-;
நறிய புது மன்றல் – நல்ல புதிய வாசனையானது,
திரை முழுதும் – திக்குக்களிலெல்லாம்,
அண்ட – சேர்ந்து பரவும்படி,
நறவு குதி கொண்ட – தேன்பெருகுதலைத் தன்னிடத்தே கொண்ட,
துளவு – திருத் துழாயினாலாகிய,
அணி அலங்கல் – அழகிய மாலையை,
ஒரு கோடி மதுகரம் கற்ற – ஒருகோடி (மிகப்பல) வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும்படி,
புனைந்தன – சூடின;
நளினம் மட மங்கை – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற அழகிய பெரிய பிராட்டியும்,
குவலயம் மடந்தை – பூமிப்பிராட்டியும்,
சனகனது அணங்கு – ஜாநகிப்பிராட்டியும்,
பொதுவர்மகள் – நப்பின்னைப்பிராட்டியும்,
என்ற – என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற,
இ வனிதையர் – இந்தத்தேவியரது,
தனபாரம் – பருத்த கொங்கைகள்,
மொத்த – (தம்மேல்) நெருக்குதலால்,
குழைந்தன – நெகிழ்ந்தன;
நதி பதி – திருப்பாற்கடலானது,
சுழன்று – சுழற்சியடைந்து,
கதறி – பேரொலிசெய்து,
நுரை சிந்த – நுரைகளைச் சிந்தவும், –
அரவு – வாசுகியானது,
அகடு உரிஞ்சி – உடல் தேய்ந்து,
அலற – கசறவும், –
வட வரை – மந்தரமலை,
அல மந்து – வருந்தி,
உடல் தேய – உடம்பு தேய்வடையவும்,
நட்டு – (அம்மலையை மத்தாக) நாட்டி, கடைந்தன-;
—–
இரண்டாம் அடி
இகலி இரு குன்றில் இரு சுடர் எழுந்து பொருவது எனவிம்ப மதி முகம் இலங்க
இரு குழை இருபாடு அலைப்பச் சிறந்தன இணை அற நிமிர்ந்து வலியொடு திரண்டு
புகழொடு பரந்த புழுகொடும் அளைந்து கலவையின் அணி சேறு துற்றுக் கமழ்ந்தன
யெதிர் ஒருவர் இன்றி அகில உலகும் தன் அடி தொழ இருந்த இரணியன் மடங்க
முரணிய வரை மார்பம் ஒற்றிப் பிளந்தன எறிகடல் கலங்கி முறையிட வெகுண்டு
நிசிசரர் இலங்கை அரசொடு மலங்க ஒரு சிலை இரு கால் வளைத்துச் சிவந்தன –
இரு சுடர் – சந்திர சூரியர்கள்,
இகலி – தம்முள்ளே மாறுபட்டு,
இரு குன்றில் – இரண்டு மலைகளில்,
எழுந்து – தோன்றி,
பொருவது என – போர்செய்வது போல,
விம்பம் மதி முகம் இலங்கும் – சந்திர பிம்பம் போன்ற முகத்தின் இருபக்கங்களிலும் விளங்குகின்ற,
இரு குழை – இரண்டு குண்டலங்களும்,
இரு பாடு அலைப்ப – இரண்டுபக்கங்களில் அசையும்படி, சிறந்தன -;
இணை அற – (தனக்குத் தானேயன்றி வேறு) ஒப்பில்லாமல்,
நிமிர்ந்து – உயர்ந்து,
வலியொடு – வலிமையுடனே,
திரண்டு – திரட்சிபெற்று,
புகழொடு – கீர்த்தியுடனே,
பரந்து – பரவி,
புழுகொடும் – புழுகுடனே,
அளைந்து – கலந்து,
கலவையின் அணி சேறு துற்று – அழகிய கலவைச்சந்தனச் சேறு மிகுதியாகப் பூசப்பெற்று,
கமழ்ந்தன – நறுமணம் வீசின;
எதிர் ஒருவர் இன்றி – (தனக்கு) ஒருவரும் எதிரில்லாமல்,
அகில உலகும் – எல்லா வுலகங்களும்,
தன் அடி தொழ – தனது பாதங்களையே வணங்கும்படி,
இருந்த – இறுமாந்திருந்த,
இரணியன் – இரணியாசுரன்,
மடங்க – அழியும்படி,
முரணிய வரை மார்பம் – (அவனது) வலிய மலைபோலும் மார்பை,
ஒற்றி பிளந்தன – (நகங்களினால்) இடந்து கீண்டன;
எறி கடல் – அலையெறிகின்ற கடல், கலங்கி -,
முறை யிட – முறையிடவும், –
நிசிசரர் – இராக்கதர்கள்,
இலங்கை அரசொடு – இலங்கைக்குத்தலைவனாகிய இராவணனுடனே,
மலங்க – கலங்கவும்,
வெகுண்டு – கோபித்து,
ஒரு சிலை – ஒப்பற்ற கோதண்டத்தை,
இரு கால் – இரண்டு தரம்,
வளைத்து -, சிவந்தன -;
——–
மூன்றாம் அடி
மிகு களவின் நின்ற விளைவு கனி சிந்தி மடிய விடுகன்று குணில் என எறிந்து
பறைவையின் அகல்வாய் கிழித்துப் பகிர்ந்தன வெறிபடு குருந்தை முறிபட அடர்ந்து
குட நடம் மகிழ்ந்து குரவைகள் பிணைந்து பொரு தொழில் எருது ஏழு செற்றுத் தணிந்தன
வெடிபட முழங்கி எழு முகிலும் அண்ட ரொடு நிரை தியங்க எறி திவலை கண்டு
தடவரை குடையா எடுத்துச் சுமந்தன விழி வடவை பொங்க எதிர் பொர நடந்த
களிறு உளம் வெகுண்டு பிளிறிட முனிந்து புகர் முக இரு கோடு பற்றிப் பிடுங்கின –
மிகு களவின் – மிக்கவஞ்சனையுடனே,
நின்ற – (தன்னைக்) கொல்லும்படி நின்ற,
விளவு – விளாமரமானது,
கனி சிந்தி – (தனது) பழங்களைச் சிதறி,
மடிய – மடிந்துவிழும்படி,
விடு கன்று – (கம்சனால்) ஏவப்பட்ட மாயக் கன்றை,
குணில் என – குறுந்தடியாகக் கொண்டு,
எறிந்து – (அதன்மேல்) வீசி,
பறவையின் – பகாசுரனது,
அகல் வாய் – அகன்ற வாயை,
கிழித்து பகிர்ந்தன – (இரண்டு படும்படி) கிழித்துப் பிளந்தன;
வெறி படு குருந்தை – வாசனைவீசுகின்ற (மலர்களையுடைய) குருந்தமரத்தை,
முறி பட – முறிந்துவிழும்படி,
அடர்ந்து – அழித்து,
குடநடம் மகிழ்ந்து – மனமகிழ்ந்து குடக் கூத்தாடி, –
குரவைகள் பிணைந்து – குரவைக் கூத்தாடி, –
பொரு தொழில் – போர்செய்கின்ற தொழிலையுடைய,
எருது ஏழு – ஏழெருதுகளை,
செற்று – தழுவி யழித்து,
தணிந்தன – சினந் தணிந்தன;
எழு முகிலும் – ஏழுமேகங்களும்,
வெடிபட – பேரொலியுண்டாக,
முழங்கி – இடித்து,
நிரை அண்டரொடு தியங்க – பசுக்களும் (அவற்றைக் காக்கின்ற) இடையர்களுந் திகைக்கும்படி,
எறி – வீசிப்பெய்த,
திவலை – நீர்த்துளிகளை, கண்டு -,
தடவரை – பெரிய கோவர்த்தனகிரியை,
குடை ஆ – கொற்றக் குடையாக, எடுத்து -,
சுமந்தன – தரித்தன;
விழி – கண்களில்,
வடவை பொங்க – படபாமுகாக்கினிபோலுந் தீப்பொறி பறக்கும்படி,
எதிர் – எதிரில்,
பொர நடந்த – (தன்னோடு) பொருதற்கு வந்த,
களிறு – (குவலயாபீட மென்னும் கம்சனது) பட்டத்துயானை,
உளம் வெகுண்டு – மனங் கோபித்து,
பிளிறிட – பேரொலி செய்ய,
முனிந்து – கோபித்து,
புகர் முகம் இரு கோடு – செம்புள்ளிகளையுடைய (அதனது) முகத்தின் கண்ணேயுள்ள இரண்டுதந்தங்களையும்,
பற்றி பிடுங்கின – பிடித்துப் பறித்தன;
—-
நான்காம் அடி
அகலிடமும் உம்பர் உலகமும் நடுங்கி அபயம் அடியெங்கள் அபயம் என வந்து
விழு தொறும் இடையூறு அகற்றிப் புரந்தன அருகுற விளங்கும் எறிதிகிரி சங்கம்
வெயில் ஒரு மருங்கும் நிலவு ஒரு மருங்கும் எதிர் எதிர் கதிர் வீச விட்டுப் பொலிந்தன
அரு மறை துணிந்த பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகு கின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அரவணை விரும்பி அறி துயில் அமர்ந்த
அணி திரு அரங்கர் மணி திகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே —7-
அகல் இடமும் – அகன்ற நிலவுலகத்தவரும்,
உம்பர் உலகமும் – தேவலோகத்தவரும்,
நடுங்கி – பயந்து,
“அடியெங்கள் – அடியவராகிய யாங்கள்,
அபயம் அபயம் – அடைக்கலம் அடைக்கலம்”,
என – என்று சொல்லி,
வந்து விழுதொறும் – வந்து விழுந்து வணங்கும்பொழுதெல்லாம்,
இடையூறு அகற்றி – (அவர்களது) துன்பத்தைப் போக்கி,
புரந்தன – (அவர்களைப்) பாதுகாத்தன;
அருகு உற விளங்கும் – (இரண்டு) பக்கங்களிலும் மிக்கு விளங்குகின்ற,
எறி திகிரி சங்கம் – (பகைவர்மீது) வீசியெறியப்படுகின்ற சக்கரமுஞ் சங்கமும்,
வெயில் ஒரு மருங்கும் – வெயில் ஒரு பக்கத்திலும்,
நிலவு ஒரு மருங்கும் – நிலவு ஒருபக்கத்திலுமாக,
எதிர் எதிர் – எதிருக்கெதிரே,
கதிர் வீச – ஒளியை வீசும்படி,
விட்டு பொலிந்தன – ஒளிவிட்டு விளங்கின;
அரு மறை – அறிதற்கரிய வடமொழி வேதங்களில்,
துணிந்த – நிச்சயித்துச் சொல்லப்பட்ட,
பொருள் முடிவை – தத்துவார்த்தங்களின் சித்தாந்தத்தை,
இன் சொல் – இனிய சொற்களையுடைய,
அமுது ஒழுகுகின்ற – அமிருதம்போன்ற இனிமை மிக்க,
தமிழினில் – செந்தமிழ்ப்பாஷையில் விளம்பி அருளிய – திருவாய்மலர்ந்தருளிய,
சடகோபர் – நம்மாழ்வாரது,
சொல் – பாசுரங்களை,
பெற்று -, உயர்ந்தன -; (எவையென்றால்), –
அர அணை – ஆதிசேஷசயனத்தில், விரும்பி -,
அறிதுயில் அமர்ந்த – யோகநித்திரை செய்தருளுகின்ற,
அணி திரு அரங்கர் – அழகிய ஸ்ரீரங்கநாதரும்,
மணி திகழ் முகுந்தர் – நீலமணிபோலவிளங்குகின்ற முகுந்தனென்னுந் திருநாமமுடையவருமாகிய,
அழகியமணவாளர் – அழகிய மணவாளரது,
கொற்றம் புயங்கள் – வெற்றியையுடைய திருத்தோள்களாம். (எ – று.)
பிரபந்தத்தலைவனது தோள்களைப் பலபடியாக வருணித்துக் கூறுதல், புயவகுப்பாம்.
தொடி – தோள்வளை.
பலநிறமுடைய இந்திர தனுசு – பன்னிறமணிகள் பதித்த தொடியணிக்கும்,
நீலவெற்பு – கரியபெரியதிருத்தோள்களுக்கும் உவமை.
நீல வெற்பு – இந்திரநீலரத்தினமயமான மலை யென்றுமாம்.
அலங்கல் – தொங்குவது; தொங்கியசையும் மார்பின்மாலைக்குத் தொழிலாகு பெயர்.
மதுகரம் – தேனைச்சேர்ப்பது.
குவலயம் – பூமண்டலம்.
சனகனது அணங்கு – ஜநகராஜன் வளர்த்த மகள்.
பொதுவர் மகள் – ஆயர் மகள். பொதுவர் – குறிஞ்சிநிலத்துக்கும் மருதநிலத்துக்கும் நடுவிடமான முல்லைநிலத்தில் உள்ளவர்;
“இடையர்” என்னும் பெயர்க்குங் காரணம் இதுவே.
நதிபதி – நதிகளுக்குத் தலைவன். அகடு – நடுவுடல்.
மந்தரம் எங் குள்ளதென்றால், வடக்கிலுள்ளதென வேண்டுதலின், அதனை “வடவரை” என்றார்.
இரண்டுகாதுகளிலும் அணிந்துள்ள குண்டலங்கட்கு – இரண்டுமலைக ளின்மீது ஏககாலத்தில் எழுந்து போர்செய்யும்
சூரியசந்திரரை உவமை கூறியது. இல்பொருளுவமை.
புழுகு – கஸ்தூரி; புனுகுமாம். கலவை – பலவகை வாசனைப்பண்டங்களுங் கலந்த சந்தனம்.
எதிர் – ஒப்பும், பகை மையும். இரணியன் – ஹிரண்யன்; பொன்னிறமானவன்,
இராமபிரான் வாநரசேனையோடு செல்லுகையில் கடலிற் செல்லும்படி வருணன் வழி விடாமையால் கடலை
ஆக்நேயாஸ்திரத்தினால் வற்றச்செய்து விடுவதாகச் சினந்து வில்வளைத்தமையும்,
பிறகு இலங்கையிற் சென்று இராவணனை வம்சநாசமாம்படி கொல்வதற்காக வில்வளைத்தமையும் பற்றி,
“எறிகடல் கலங்கி முறையிட நிசிசரர் இலங்கையரசொடுமலங்க ஒருசிலை இருகால் வளைத்துச் சிவந்தன” என்றார்.
இனி, ஒருசிலை இருகால் வளைத்து – ஒப்பற்ற தமது கோதண்டத்தை இரண்டு கோடியையும்
ஒன்றுசேரும்படி நன்றாக வளைத்து எனினுமாம்.
நிசிசரர் – இரவிற் சஞ்சரிப்பவ ரென இராக்கதர்க்குக் காரணக்குறி.
இலங்கையரசு – லங்காராஜன். சிலை – கோ தண்டம். “ஏற்றிப்பிளந்தன” என்றும் பாடம்.
குடநடம் – குடமெடுத்தாடுங் கூத்து; இது, பிராமணர் ஐசுவரியம் விஞ்சினால் யாகாதிகள் பண்ணுமாறுபோல
இடையர்க்கு ஐசுவரியம் மிகுந்தால் செருக்குக்குப் போக்குவிட்டாடுவதொரு கூத்து;
அதாவது – தலையிலே அடுக்குக்குடங்களிருக்க, இரண்டு தோள்களிலும் குடங்களிருக்க,
இரண்டு கைகளிலும் குடங்களை யேந்தி ஆகாயத்தில் ஏறிடுவதும் ஏற்பதுமாய் ஆடுவதொரு கூத்தாகும்.
குரவை – கைகோத்தாடுவது; “குரவைக் கூத்தே கை கோத்தாடல்” என்பது, திவாகரம்;
இதற்கு வடமொழியில் “ராஸம்” என்று பெயர்: பல நாட்டியப்பெண்கள் வட்டமாக நின்று சித்திரமான தாளலயங்களுடன்
மெதுவாகவும் உன்னதமாகவுங் கூத்தாடுதல்,
இதன் இலக்கணம். “குரவை யென்பது – காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும்
எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது;
“குரவையென்பது கூறுங்காலைச், செய்தோர் செய்த காமமும் விறலு, மெய்தக்கூறு மியல்பிற் றென்ப” எனவும்,
“குரவையென்ப தெழுவர்மங்கையர், செந்நிலைமண்டலக் கடகக்கைகோத்து,
அந்நிலைகொட்ப நின்றாடலாகும்” எனவும் சொன்னாராதலின்” என்பது – சிலப்பதிக்காரத்து அடியார்க்கு நல்லாருரை.
எழுமுகில் – சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பன,
வடவை யென்பது – கடலிடத்துள்ள படபையென்னும் பெண்குதிரையின் முகத்தில் தோன்றி மழை
முதலியவற்றால் மிக்குவரும் நீரை வற்றச்செய்வதொரு தீ. களிறு – ஆண்யானை; “வேழக் குரித்தே விதந்து களிறென்றல். ”
அபயம் – அஞ்சவேண்டாவென்று சொல்லிக் காக்கத்தக்க பொருள்; அச்சத்தால் இருமுறை அடுக்கிற்று,
நடுங்குதற்குக் காரணம் – அரக்கர் அசுரர் முதலிய பகைவர்கள் செய்யுந் துன்பங்களும், பிறவித்துன்பங்களும்,
திகிரி சங்க மென்றதற் கேற்ப, வெயிலையும் நிலவையும் முறையே கூறியது, முறைநிரனிறையணி.
திகிரி வெயிலையும் சங்கம் நிலவையும் எதிரெதிராக வீசுமென்க.
மணிதிகழ் – கௌஸ்துபமணி விளங்குகின்ற வென்றுமாம்.
முகுந்தர் – (தமது அடியார்க்கு) முத்தியின்பத்தையும், இவ்வுலக வின்பத்தையுங் கொடுப்பவர்.
இது, ஒன்று மூன்று ஐந்து ஏழு ஒன்பது பன்னிரண்டாஞ் சீர்கள் கருவிளச்சீர்களும்,
இரண்டு நான்கு ஆறு எட்டாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், பத்தாஞ்சீர் புளிமாங்காய்ச்சீரும், பதினோராஞ்சீர் தேமாச்சீருமாக வந்தது
காலடியாகவும், அஃது நான்குபெற்றது ஓர் அடியாகவும் வந்த கழிநெடிலடி
நான்கு கொண்ட நாற்பத்தெண்சீராசிரியவண்ணவிருத்தம்.
“தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன தனந்த தனதன தனதான தத்தத் தனந்த” என்பது சந்தக்குழிப்பாம்.
குற்றெழுத்து மிக்குப்பயிலுதலால், இது – குறுஞ்சீர்வண்ணமாம்; “குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப்பயிலும்” என்றது காண்க.
—————————————————-
8-புயம் நான்கு உடையானை பொன் அரங்கத் தானை
அயன் ஆம் திரு உந்தி யானை வியன் ஆம்
பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்
நரகதிக்குக் காணாமல் நான் -8-
(இ – ள்.) புயம் நான்கு உடையானை – நான்கு திருக்கைகளை யுடையவனும்,
அயன் ஆம் திரு உந்தியானை – பிரமதேவன்தோன்றிய அழகிய நாபியையுடையவனுமாகிய,
பொன் அரங்கத்தானை – அழகிய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனை-,
வியன் ஆம் – பெருமை பொருந்திய,
பர கதிக்கு – பரமபதத்தை அடைவதற்கு,
காதல் ஆய் – விருப்பங்கொண்டு,
நரக திக்கு காணாமல் – நரகத்தின் திசையையுங் காணவொண்ணாதபடி, நான்-,
பாடினேன் – பாடல்பாடித் துதித்தேன்; (எ – று.)
யான் பாடல் பாடித் துதித்ததனால், நரகத்தையடையாமல் பரமபதஞ் சேர்வே னென்பது திண்ண மென்றவாறு.
அயன் – அஜன்; திருமாலி னிடத்தினின்று தோன்றியவன்; (அ – திருமால்.)
பரகதி – மற்றெல்லாப் பதவிகளினும் உயர்ந்த பதவி. கண்டீர் – அசை; தேற்றப்பொருளதாகவுமாம்.
திக்கு – பக்கம். பின்னிரண்டடிகளில் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டு இரண்டு மூன்று முதலிய
சில எழுத்துக்கள் ஒன்றுபட்டு நிற்கப் பொருள் வேறுபட்டு வந்தது, திரிபு என்னுஞ் சொல்லணியாம்.
இது, முற்கூறியது போன்ற இருவிகற்பநேரிசைவெண்பா.
—————————-
9-நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து இன்றி
ஈனம் தவாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோன் நந்தன் மைந்தனை நான்முகன் தந்தையை கோயில் அச்சு
தானந்தனை எனக்கு ஆரா அமுதை அரங்கனையே –9-
(இ – ள்.) கோன் நந்தம் மைந்தனை – (இடையர்) தலைவராகிய நந்தகோபரது திருமகனும்,
நான்முகன் தந்தையை – பிரமதேவனது தாதையும்,
கோயில் – திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற,
அச்சுத அனந்தனை – அச்யுதன் அநந்தன் என்னுந் திருநாமங்களை யுடையவனும்,
எனக்கு -,
ஆரா அமுதை – தெவிட்டாத அமிருதம் போன்றவனுமாகிய,
அரங்கனை -,
யான் அடைந்தேன் – யான் வேறு புகலிடமின்றித் தஞ்சமாக அடைந்தேன்;
(இனி), நான் -, அந்த வைகுந்தநாடு – அந்த ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
எய்தி – அடைந்து,
வாழில் – வாழ்ந்துபேரின்பமடைந்தால்,
என் – என்ன?
ஞாலத்து அன்றி – இவ்வுலகத்திலே யல்லாமல்,
ஈனம் தவாத – இழிவு நீங்காத (மிக்க இழிவுடைய),
நிரயத்து – நரகலோகத்தில்,
வீழில் – விழுந்து பெருந்துன்பமடைந்தால்,
என் – என்ன? (எ – று.)
தேவாதிதேவனான சருவேசுவரனைச் சரணமடைந்தேன்; இனி எனக்குப் பேராநந்தமுடைய முத்திப்பேறு கிடைத்தா லென்ன?
எல்லையில்லாத பெருந்துன்பமுடைய தீக்கதிகள்பலவும் வந்து தப்பவொண்ணாதபடி வளைத்துக்கொண்டா லென்ன?
இவற்றை ஒன்றாக நினைப்பேனோ வென்று தமது மனவுறுதியை எடுத்துக்கூறியவாறு.
அந்த – சுட்டு, உலகறிபொருளின் மேலது. ஈனந் தவாத நிரய மெனவே, பலவகை யிழிவும் நிறைந்த நரக மென்றபடி.
அச்சுதன் – வடசொற்றிரிபு, அச்யுதனென்பதற்கு – அழிவில்லாதவனென்றும் தன்னைச் சரணமாகப் பற்றினவரை
நழுவ விடாமற் காப்பவனென்றும் அநந்தனென்பதற்கு – திருக்கல்யாணகுணங்களுக்கு ஓர்எல்லையில்லாதவ னென்றும்,
அழிவில்லா தவனென்றும் பொருள். அச்சுதாநந்தன் – வடமொழிப்புணர்ச்சி, தீர்க்கசந்தி.
ஆராமை – மிக நுகர்ந்தவளவிலும் வெறுப்புத்தாராது இன்னும் வேண்டும் படியாயிருத்தல்.
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என்
தொல் உலகின் மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த வன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –
——————————–
10-அரவில் நடித்தானும் உரவில் ஓடித்தானும் அடவி கடந்தானும் புடவி இடந்தானும்
குரவை பிணைந்தானும் பரவை அணைத்தானும் கோசலை பெற்றானும் வீசு அலை உற்றானும்
முரனை அறுத்தானும் கரனை ஒறுத்தானும் முத்தி அளித்தானும் அத்தி விளித்தானும்
பரம பதத்தானும் சரம விதத்தானும் பாயல் வடத்தானும் கோயில் இடத்தானே –10-
அரவில் நடித்தானும் -காளியன் மேல் நர்த்தனம் செய்தவனும்
உரவில் ஓடித்தானும் -வலிமை பொருந்திய சிவனது வில்லை ஓடித்தவனும்
அடவி கடந்தானும் -காட்டை நடந்து கடந்தவனும்
புடவி இடந்தானும் -பூமியை கோட்டால் குத்தி எடுத்தவனும்
குரவை பிணைந்தானும்
பரவை அணைத்தானும் -கடலை அணை கட்டியவனும்
கோசலை பெற்றானும்
வீசு அலை உற்றானும் -வீசுகின்ற திருப் பாற் கடலின் அலை யில் பொருந்தினவனும்
முரனை அறுத்தானும்
கரனை ஒறுத்தானும்
முத்தி அளித்தானும்
அத்தி விளித்தானும் -கஜேந்திர ஆழ்வானால்-ஆதி மூலமே என்று கூவி அழைக்கப் பட்டவனும்
ஹஸ்தம் -துதிக்கை உடைய -அத்தி -வேழம் -என்றபடி
பரம பதத்தானும்
சரம விதத்தானும் -சரம உபாயத்தை -பிரபத்தியை தன்னை அடையும் வழியாக உடையவனும் –
பாயல் வடத்தானும்-ஆலிலை யைச் சயனமாகக் கொண்டவனும்
கோயில் இடத்தானே –திருவரங்கத்தை வாசஸ் ஸ்தானமாகக் கொண்டவன் –
அரவினடித்ததும், குரவைபிணைத்ததும், முரனையறுத்ததும் – கிருஷ்ணாவதாரத்தி லெனவும்;
உரவிலொடித்ததும், அடவிகடந்ததும், பரவையணைத்ததும், கோசலைபெற்றதும், கரனையொறுத்ததும் – ராமாவதாரத்திலெனவும்;
புடவியிடந்தது – வராகாவதாரத்தி லெனவும்; வீசலையுற்றது – வியூகநிலையிலெனவும்;
அத்தி விளித்தது – கஜேந்திரமோக்ஷத்திலெனவும்; பரமபதத்தானென்றது – பரத்துவநிலையி லெனவும்;
பாயல்வடத்தா னென்றது – பிரளய காலத்திலெனவும்; கோயிலிடத்தானென்றது – அர்ச்சாவதாரத்திலெனவும்;
முத்தியளித்தலும், சரமவிதத்தானாதலும் – எல்லாநிலையி லெனவும் அறிக.
பரவை – பரந்திருப்பது; ஐ – வினைமுதற்பொருள்விகுதி.
கோசலை – வடசொற்றிரிபு; (உத்தர) கோசலதேசத்தரசன்மகளென்று பொருள்.
அன்பால் நினைவார்க்கு விரைந்து முத்தி யருளுதலால், அளித்தானென இறந்தகா லத்தாற் கூறினார்.
அத்தி – ஹஸ்தி; ஹஸ்தத்தையுடையது: ஹஸ்தம் – கை, துதிக்கை. வடமென்னும் மரத்தின்பெயர்,
அதன் இலைக்கு முதலாகுபெயர். இச்செய்யுளில் மடக்கு என்னுஞ் சொல்லணி காண்க.
இது, ஒன்று மூன்று ஐந்து ஏழு – மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டு – புளிமாங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.
——————————-
11- தானே தனக்கு ஒத்த தாள் தாமரைக்குச் சரண் புகுந்து ஆள்
ஆனேன் இனி உன் அருள் அறியேன் எனது ஆருயிரே
தேனே என் தீ வினைக்கு ஓர் மருந்தே பெரும் தேவர்க்கு எல்லாம்
கோனே அரங்கத்து அரவணை மேல் பள்ளி கொண்டவனே –11-
(இ – ள்.) எனது -, அரு உயிரே – அரிய உயிருக்கொப்பானவனே!
தேனே – தேனுக்கொப்பானவனே!
என் தீவினைக்கு – எனதுபாவத்தைப் போக்குவதற்கு,
ஓர் மருந்தே – ஒரு மருந்துபோல்பவனே!
பெருந் தேவர்க்கு எல்லாம் – பெரியதேவர்களுக்கெல்லாம்,
கோனே – தலைவனே!
அரங்கத்து அரவணைமேல் பள்ளிகொண்டவனே-! (யான்), –
தானே தனக்கு ஒத்த -(வேறுஉவமையில்லாமையால்) தனக்குத் தானே நிகராகிய,
தாள் தாமரைக்கு – (உனது) திருவடித் தாமரைகளுக்கு,
சரண் புகுந்து – அடைக்கல மடைந்து,
ஆள் ஆனேன் – அடிமையாயினேன்;
இனி – இனிமேல்,
உன் அருள் – உனது திருவருள் இருந்து நடத்தும்படியை,
அறியேன் – (இன்ன தென்று) அறிகின்றிலேன்; (எ – று.)
உயிர்க்கும் உயிராயிருத்தலால் “ஆருயிரே” என்றும், அழியாவின்பந் தருதலால் “தேனே” என்றும்,
தீவினையை வேரோடறுத்தலால் “தீவினைக் கோர்மருந்தே” என்றும்,
தேவாதிதேவனாதலால் “பெருந்தேவர்க்கெல்லாங்கோனே” என்றுங் கூறினார்.
“பெருந்தேவர்” என்றது, பிரமருத்திரேந் திராதியரை.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி உன் திருக் குறிப்பே -பெரியாழ்வார் –
———————————
மேக விடு தூது
12-கொண்டல் காள் உம்மைக் குறித்தே தொழுகின்றேன்
அண்டர் காணா அரங்கத் தம்மானைக் கண்டு
மனத்துள் அவத்தைப் படும் என்மையல் எல்லாம் சொல்லி
புனத் துளவத்தைக் கொணரீர் போய் –12-
இ – ள்.) கொண்டல்காள் – (நீர் கொண்ட) காளமேகங்களே! –
உம்மைக் குறித்தே -, தொழுகின்றேன் – வணங்குகின்றேன்;
அண்டர் காணா – தேவர்களுங் காணுதற்கரிய,
அரங்கத்து – திருவரங்கத்தில்,
போய் -, அம்மானை – எம்பெருமானை,
கண்டு -,
மனத்துள் – மனத்தில்,
அவத்தைப்படும் – துன்பப்படுகின்ற,
என் – எனது,
மையல் எல்லாம் – வேட்கை மயக்கத்தை யெல்லாம்,
சொல்லி -,
புனம் துளவத்தை – வனத்தில் வளர்கின்ற திருத் துழாய்மாலையை,
கொணரீர் – வாங்கிக்கொண்டு வாருங்கள்; (எ – று.)
ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர்உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ் வொருநிமித்தத்தால் தோழியர் பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே,
ஒவ்வொருநிமித்தத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவ னாய் அப்புருஷன் அங்குவந்துசேர,
இருவரும்ஊழ்வினை வசத்தால் இங்ங னம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரையொருவர் கண்டு
காதல் கொண்டு காந்தருலவிவாகக்கிரமத்தினாற் கூடி உடனே பிரிய,
பின்பு மற்றுஞ் சில களவுப்புணர்ச்சிக்கு உரிய வகைகளால் அத்தலைமகளது கூட்டுறவைப் பெற்ற தலைமகன்,
பின்பு அவளை வெளிப்படையாகத் தான் மணஞ் செய்துகொள்ளுதலின் நிமித்தம் பொருள்தேடி வருதற் பொருட்டுக்
கார்கால த்தில்மீண்டுவருவதாகக் காலங்குறித்துச்செல்ல, அத்தலைவனைப் பிரிந்த தலைவி,
அப்பிரிவுத்துயரை யாற்றமாட்டாது பலவாறு வருந்தும்போது, இன்னது செய்வதென்று அறியாது திகைத்து
“வானமேநோக்கும் மை யாக்கும்” என்றபடி அண்ணாந்து வானத்தைநோக்குமளவிலே,
அங்குச் செல்லுகின்ற மேகங்கள் கட்புலனாக, அவற்றைப் பார்க்குமிடத்து அவை நிறம் முதலியவற்றால்
எம்பெருமானுக்குப் போலியாய் விளங்கக் கண்டு இவை நமக்கும் நமதுதலைவர்க்கும் இனியனவாமென்று கொண்டு
அவற்றை நோக்கி “எனது நிலைமைகளை எனது தலைவரான திருவரங்கநாதன்பக்கல் சொல்லி
அதற்கு அவர் அருளிச்செய்கின்ற திருத்துழாய்மாலையை வாங்கி மீண்டுவந்து எனக்குத் தருமாறு நீங்கள் தூதாகவேண்டும்” என வேண்டுகின்றாள்.
“சூட்டோதிமஞ் சென்று சொல்லாதென்காதலைத் தும்பியிசைப்பாட்டோதி மங்கையரும் பணியார்
பண்டுகன்மழைக்காக, கோட்டோதிம மெடுத்தார் சோலைமாமலைக்கோவலனார்,
மாட்டோதிமஞ்சினங்காளுரைப் பீர்மறுவாசகமே” என்பர் அழகரந்தாதியிலும்.
“இயம்புகின்ற காலத்து எகினம் கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி – நயந்தகுயில்,
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதுக்கு உரியவை இன்னவையெனக் காண்க.
பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அவன் வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று ஆற்றாமைமிகுதி.
நீங்கள் அவ்வாறு தூதுசென்று தலைவரது திருத்துழாய்மாலையை வாங்கிவருமளவும் ஆறியிருப்பே னென்பது குறிப்பு.
தன்னாலியன்றவளவும் வெளிப்புலப்படாது அடக்கினமை தோன்ற, “மனத்துளவத்தைப்படு மென்மையல்” என்றாள்.
தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட்கிளவித்துறைகளை இடை யிடையே கூறுதல் கவிசமயமாதலை இலக்கியங்கள் கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப்பிரபந்தங்களிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச் சிற்றின்பங்கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.
இங்ஙனம் வெளிப்படைப் பொருளால் அந்யாபதேசமாகக் கூறுகின்ற சிற்றின்பத்துறைச் செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாபதேசமாகப் பேரின்பத்தின்பாற்படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும் இங்குக்கூறியது, உலகவாழ்க்கைச் சிற்றின்பமன்று; எம்பெருமானைச் சேரவேண்டுமென்று
அவன்பக்கலிலே யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது. லோகநாயகனுடைய சேர்க்கையை அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதலானது,
வேதாந்த நிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய விடத்தில் அன்புசெலுத்தியதாதலால், சிற்றின்பக்காதல் போலன்றி,
சகலபாப நிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம்.
கண்ணபிரான்பக்கல் கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்திபெற்றனரென்று புராணங்கூறுதலுங் காண்க.
ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனது நிரந்தராநுபவத்தைப் பெற விரும்பிய ஐயங்கார்,
தமது நிலைமையை அப்பெருமான் சன்னிதியில் விண்ணப்பஞ்செய்து அவளளிக்குந் திருத்துழாய்மாலையைத் தம்மிடம்கொண்டுவந்து
கொடுக்கும்படி குணஞ் செயல்களில் அவனோடொத்தவரான பாகவதர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்,
உரியகாலத்தில் எம்பெருமானது குணக்கடலிலே படிந்து அதில் நீர்மையை உட்கொண்டு ஸாரூப்யத்தால்
அவன்திரு மேனியையொக்கும் வடிவுபெற்று உயிர்களை உய்வித்தற்காகப் பலவிடங்களிற் சஞ்சாரம்பண்ணி
ஆங்காங்குக் கைம்மாறுகருதாதே கருணைமழை பொழிந்து நன்மைவிளைத்துப் பிறரைவாழ்வித்தலே பேறாக ஒழுகி
உலகமும் உறுதிப்பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாமைபெற்று விஷ்ணுபதத்தைச்சார்ந்து
தென்திருவரங்கத்திற் சென்றுசேர்தற்குப் பிரயாணப்பட்ட பாகவதர்களை, உரியகாலத்திற் கடலிலே படிந்து
அதன்நீரை உட்கொண்டு மின்னலோடு கூடிய நீலநிறத்தால் திருமகளை மார்பிற்கொண்ட திருமாலின் திருமேனியை ஒத்து
உயிர்களை உய்விக்குமாறு பலவிடங்களில் திரிந்து கைம்மாறு கருதாது மழைபொழிந்து பயன்விளைத்து உலகத்தை
வாழ்வித்தலே பேறாக ஒழுகி வான்சிறப்பிற்கூறியபடி உலகமும் உறுதிப் பொருள்களும் நடத்தற்கு ஏதுவாய் இன்றியமையாததாகி,
விஷ்ணுபத மெனப்படுகிற வானத்தைச் சார்ந்து திருவரங்கத்தைக்குறித்துச் செல்லும் மேகங்க ளெனத்தகும்.
இவ்வாறே மற்றை அகப்பொருட்கிளவித்துறைச் செய்யுள்கட்கும் ஏற்றபடி உள்ளுறை பொருள்களை உய்த்துணர்ந்துகொள்க. விரிப்பிற் பெருகும்.
அம்மான் – தலைவன். அவத்தை – அவஸ்தா, துளவம் – துளஸீ; வட சொற் சிதைவுகள். பின்னிரண்டடி – திரிபணியாம்.
இது, முன்னர்க் கூறியது போன்ற நேரிசைவெண்பா.
பிறரை வாழ்வித்தலே தமது பேறாக கருதும் பாகவதர்களை பிரார்த்தித்து –
மேகம் -போன்றவர்கள் -இவர்கள் -குறித்து அருளுகிறார் உள்ளுறை பொருள்
————————————————————————————–
13-போய் அவனியில் சில புறச் சமயம் நாடும்
பேய் அறிவை விட்டு எழு பிறப்பையும் அறுப்பீர்
ஆயனை அனந்தனை அனந்த சயனத்து எம்
மாயனை அரங்கனை வணங்கி மருவீரே –13-
ஆயனை – திருவாய்ப்பாடியில் இடையர்மனையில் வளர்ந்தவனும்,
அனந்தனை – அநந்தனென்னுந் திருநாமமுடையவனும்,
அனந்த சயனத்து – திருவனந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளிகொண்டருளுகின்ற,
எம் மாயனை – எமது மாயவனுமாகிய அரங்கனை ஸ்ரீரங்கநாதனை,
வணங்கி மருவீர் – சேர்ந்து வணங்குங்கள்; (அங்ஙனம் வணங்குவீராயின்), –
அவனியில் – உலகத்தில்,
போய் -,
சில புறச்சமயம் – வேறு சிலமதங்களை,
நாடும் – தேடித்திரிகின்ற,
பேய் அறிவை – பேய்த்தன்மையான (கெட்ட) அறிவை, விட்டு -,
எழு பிறப்பையும் – எழுவகைப்பிறவிகளையும்,
அறுப்பீர் – போக்குவீர்; (எ – று.)
இது, திருவரங்கநாதனைத் திருவடிதொழுத மாத்திரத்தில் தற்சமயம் இன்னதென்று உண்மையறியாது தடுமாறுகின்ற
திரிபுணர்ச்சி யொழிந்து வினைப்பயன் தொடரும் எழுவகைப்பிறப்புக்களும் அற்று
முத்தி பெறுவீ ரென்று உலகத்தார்க்கு நல்லறிவு கூறியது.
புறச்சமயம் – தேவதாந்தரங்களை உண்மைத்தெய்வமாகநம்பின வேதத்துக்குப் புறம்பாகிய சமயங்கள்.
எழுபிறப்பாவன – “மக்கள் விலங்கு பறவை யூர்வன, நீருட் டிரிவன பருப்பதம் பாதவ, மெனவிவை யெழுபிறப் பாகுமென்ப.”
ஆயன் – இடைச்சாதியில் வளர்ந்தவன். அநந்தன் – தேசம்காலம் பொருள் என்னும் மூவகையிலும் எல்லையில்லாதவன்;
அதாவது – எல்லாத் தேசங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் இருப்பவனென்பது கருத்து.
மாயன் – மாயையையுடையவன்; மாயையாவது – கூடாததையுங் கூட்டுவிக்குந் திறம்.
தற்சமயமாகிய ஸ்ரீவைஷ்ணவசமயமன்றி மற்றைச்சமயங்களைப் பற்றிச் செல்லும் அறிவு உண்மையுணர்தற்கு
இடமற்றதாதலின், அதனை, “பேயறிவு” என்றார்.
இது, முதல்மூன்றுங் கூவிளங்காய்ச்சீர்களும், ஈற்றது தேமாச்சீருமாகிய கலிவிருத்தம்.
————————————————————-
14-மருவு தந்தையும் குருவும் எந்தையும் மருள் கெடுப்பதும் அருள் கொடுப்பதும்
உருகு நெஞ்சமும் பெருகு தஞ்சமும் உரிய ஞானமும் பெரிய வானமும்
திரு அரங்கனார் இருவர் அங்கனார் செங்கண் மாயனார் எங்கள் ஆயனார்
அருள் முகுந்தனார் திருவை குந்தனர் அமல நாதனார் கமலா பாதமே –14-
(இ – ள்.) மருவு – விரும்பிவளர்க்கின்ற,
தந்தையும் -,
குருவும் -ஆசிரியனும்,
எந்தையும் – எமதுதெய்வமும்,
மருள் கெடுப்பதும் – அஞ்ஞானத்தைக் கெடுக்குந்தன்மையுடையதும்,
அருள் கொடுப்பதும் – கருணையை அளிக்குந்தன்மையுடையதும்,
உருகு நெஞ்சமும் – (அன்பினாற்) கரைந்து உருகுகின்ற மனமும்,
பெருகு தஞ்சமும் – சிறந்ததாகிய பற்றுக்கோடும்,
உரிய ஞானமும் – (பேரின்பமடைதற்கு) உரிய தத்துவஞானமும்,
பெரிய வானமும் – சிறந்த பரமபதமும், (எல்லாம்), –
இருவர் அங்கனார் – பிரமருத்திரர்களைத் தமது அங்கத்தி லுடையவரும்,
செங் கண் மாயனார் – சிவந்த திருக்கண்களையுடைய மாயவரும்,
எங்கள் ஆயனார் – எங்களது ஆயனாரும்,
அருள் முகுந்தனார் – அருளையுடைய முகுந்தனென்னுந் திருநாமமுடையவரும்,
திரு வைகுந்தனார் – ஸ்ரீவைகுண்டநாதரும்,
அமலம் நாதனார் – குற்ற மற்ற தலைவருமாகிய,
திரு அரங்கனார் – ஸ்ரீரங்கநாதரது,
கமலம் பாதமே – தாமரைமலர்போலுந் திருவடிகளே; (எ – று.)
எம்பெருமானது திருவடிகளே தமக்கு எல்லாவகைச் சுற்றமுமா மென்று தமதுகருத்தை வெளியிட்டனர்;
“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையு மவரேயினியாவாரே” என்றார் நம்மாழ்வாரும்,
மருவுதந்தை – கர்மங்கட்குத் தக்கபடி எடுக்கும் பிறவிகள் தோறும் உடம்பெடுத்தற்குக் காரணமான பிதா.
எந்தை – பரமபிதா. குரு – அஞ்ஞானவிருளைப் போக்குபவன்; ‘கு’ – இருள்.
தஞ்சம் – கதியற்றவராற் சரணமாக அடையப்படுபொருள். ஆர்விகுதி, சிறப்புப்பொருளது.
கேசவ னென்னுந் திருநாமத்தின் பொருள்பற்றி, ‘இருவரங்கனார்’ என்றார்:
“பிறைதங்குசடையானை வலத்தே வைத்துப் பிரமனைத் தன்னுந்தியிலே தோற்றுவித்து” என்றது காண்க.
இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமான எண்சீராசிரியவிருத்தம்.
————————————————————–
15-பாதியாய் அழுகிய கால் கையரேனும் பழி தொழிலும் இழி குலம் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பர் ஆகில் அவர் அன்றோ யாம் வணங்கும் அடிகள் ஆவார்
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும் சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான் முகன் பணியப் பள்ளி கொள்வான் பொன் அரங்கம் போற்றாதார் புலையர் தாமே –15-
(இ – ள்.) பாதியாய் – பாதியளவினதாய்க் குறைந்து,
அழுகிய – அழுகிப்போன,
கால் கையர் ஏனும் – கால்களையுங் கைகளையும் உடையவரே யாயினும்,
பழி தொழிலும் – பழிக்கப்படுகின்ற செய்கைகளையும்,
இழி குலமும் – இழிந்த குலத்தையும்,
படைத்தார் ஏனும் – உடையவர்களேயாயினும், –
ஆதியாய் – (எல்லாப்பொருளுக்கும்) முதன்மையானவனே!
அரவணையாய் – சேஷசயனமுடையவனே!
என்பர் ஆகில் – என்று (ஒருகால்சொல்லித்) துதிப்பராயின்,
அவர் அன்றோ -. அவர்களன்றே,
யாம் வணங்கும் – யாமெல்லாம் வணங்குந்தன்மையையுடைய,
அடிகள் ஆவார் – பெரியோராவர்;
சாதியால் – குலத்தாலும்,
ஒழுக்கத்தால் – (அக்குலத்துக்கு உரிய) நல்லொழுக்கங்களாலும்,
மிக்கோர் ஏனும் – உயர்ந்தவரேயாயினும்,
சதுர் மறையால் – நான்குவேதங்களாலும்,
வேள்வியால் – யாகங்களாலும்,
தக்கோர் ஏனும் – சிறந்தவரேயாயினும்,
போதில் நான்முகன் – தாமரை மலரில் தோன்றிய பிரமன்,
பணிய – வணங்கும்படி,
பள்ளிக்கொள்வான் – கண்வளர்ந்தருளுபவனது,
பொன் அரங்கம் – திருவரங்கத்தை,
போற்றாதார் – வணங்கித் துதியாதவர்கள்,
புலையர்தாமே – (கர்ம) சண்டாளரேயாவர்; (எ – று.)
எம்பெருமான்பக்கல் தொண்டுபூண்டொழுகுவதே மேன்மைக்குக் காரணம்; உயர்குலப்பிறப்பன்று:
அவ்வாறு தொண்டு பூண்டொழுகாமல் நிற்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பன்று.
ஆகையால், ஜந்மவ்ருத்தாதிகளைச் (பிறவியையும் ஒழுக்கத்தையும்) சிறிதும் பாராட்ட வேண்டா என்பதாம்.
“பழுதிலாலொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள், இழிகுலத்தவர்களேலு மெம்மடியார்களாகில்,
தொழுமி னீர் கொடுமின் கொண்மி னென்று நின்னோடு மொக்க, வழிபடவருளினாய்போல் மதிள்திரு வரங்கத்தானே,”
“அமரவோரங்கமாறும் வேதமோர்நான்கு மோதித், தமர் களிற்றலைவராய சாதியந்தணர்களேனும்,
நுமர்களைப்பழிப்பராகில் நொடி ப்பதோரளவி லாங்கே, யவர்கள்தாம் புலையர்போலு மரங்கமாநகருளானே”
என்பவை தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரம்.
“இதுதனக்கு (பாகவதாபசாரத்துக்கு) அதிகாரிநியம மில்லை; “தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேனும்” என்கையாலே.
இவ்விடத்திலே வைநதேய வ்ருத்தாந்தத்தையும் பிள்ளைப்பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது.
ஜ்ஞாநாநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே யமைகிறாப்போலே
அவையுண் டானாலும் இழவுக்கு அவர்கள்பக்கல் அபசாரமே போரும்; இதில் ஜந்ம வ்ருத்தாதி நியம மில்லை.
இந்த அர்த்தம் கைஸிக வ்ருத்தாந்தத்திலும் உபரிசரவஸு வ்ருத்தாந்தத்திலும் பரக்கக்காணலாம்.
பிராஹ்மண்யம் விலைச்செல்லுகிறது – வேதாத்யயநமுகத்தாலே பகவல்லாபஹேது வென்று;
அதுதானே இழவுக்கு உறுப்பாகில் த்யாஜ்யமாமிறே.
ஜந்மவ்ருத்தங் களினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் அப்ரயோஜகம்;
ப்ரயோஜகம் பகவத்ஸம்பந்தமும், தஸம்பந்தமும்” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்யங்கள் இங்கு அறியத்தக்கன.
அடிகளென்பது, அடியென்னும் அடியாப்பிறந்து உயர்வுப்பொருளுணர்த்தி நின்றதோர் சொல்.
ஆதியிற் பிரமனது திருவாராதனையிலிருந்ததனால், “நான்முகன்பணியப் பள்ளி கொள்வான்” என்றார்;
“அரங்கமென்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே” என்பர் திருமழிசைப்பிரானும்.
இது, முதல் இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மூன்று நான்கு ஏ” எட்டாஞ்சீர்கள் மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.
——————————————————–
16-புலையாம் பிறவி பிறந்து என் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திரு அரங்கத்து எம்பிரான் நமது அன்னை யொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடம் தோறும் புல்லாய்
சிலையாய் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே –16-
நெஞ்சமே – மனமே! –
புலை ஆம் – இழிகுணமுடையதா கிய,
பிறவி – இப்பிறப்பில்,
பிறந்து – தோன்றி,
என் செய்தோம் – யாது பய னடைந்தோம்?
பொன்னி – காவேரிநதி,
பொன் கொழிக்கும் – பொன்னை அலைத்துத் தள்ளுகின்ற,
அலை – அலைகள்,
ஆர் – வந்துபுரளுகின்ற,
திருஅரங்கத்து – ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள,
எம் பிரான் – நம்பெருமாள், (ஸ்ரீராமாவதாரகாலத்தில்),
நமது அன்னையொடும் – நமது தாயாகிய சீதாபிராட்டியுடனே,
தொலையாத – கடப்பதற்கரிய,
கானம் – காட்டை,
கடந்த அ நாள் – நடந்து கடந்த அப்பொழுது,
தடம்தோறும் – அக்காட்டுவழிகளி லெல்லாம்,
கழல் தீண்டுகைக்கு – (அவரது) திருவடிகள் மேற்படும் படி,
புல் ஆய் – புல்லாகியும்,
சிலை ஆய் – கல்லாகியும்,
கிடந்திலமே – கிடவாமற்போனோமே! (எ – று.)
என்றது, அப்பிரானது திருவடிதீண்டும் எப்பொருளாகவாவது நான் பிறந்திருந்தால் அத்திருவடிகளின் பரிசத்தால்
பலபிறப்பெடுத்துத் தாபத் திரயத்தால் அலையாதபடி அப்பொழுதே முத்திப்பேறுவாய்த்திருக்குமென் பது குறிப்பு.
கழல் தீண்டப்பெற்றார்க்கு மீண்டும் பிறவிநேராதென்ற துணிபுபற்றி, இவ்வாறு கூறுகின்றார்.
“செம்பவள வாயான் றிருவேங்கட மென்னு, மெம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே” என்றார் குலசேகரனாரும்.
நமது அன்னை – லோகமாதாவாகிய சீதாபிராட்டி.
இது நிரையசை முதலான கட்டளைக்கலித்துறை.
——————————————————————–
17-தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நிணமும் செறி தசையும்
வேண்டா நாற்றம் மிகும் உடலை வீணே சுமந்து மெலிவேனோ
நீண்டாய் தூண்டா விளக்கு ஒளியாய் நின்றாய் ஒன்றாய் அடியாரை
ஆண்டாய் காண்டா வனம் எரித்த அரங்கா அடியேற்கு இரங்காயே –17-
(இ – ள்.) தீண்டா – தொடப்படாத (அருவருப்பைத் தருவதாய் அசு த்தமான),
வழும்பும் – நிணமும்,
செந்நீரும் – இரத்தமும்,
சீயும் -, நரம்பும் -,
செறி தசையும் – (இடையிடையே) நெருங்கிய சதையும்,
வேண்டா நாற்றம் – விரும்பப்படாத துர்க்கந்தமும்,
மிகும் – மிகுந்திருக்கின்ற;
உடலை – இக்கடைப்பட்ட உடலை,
வீணே – பயனில்லாமல்,
சுமந்து – தரித்து,
மெலிவேனோ – வருந்துவேனோ?
நீண்டாய் – (திரிவிக்கிரமாவதாரத்தில்) உயர்ந்து வளர்ந்தவனே!
தூண்டா விளக்கு ஒளியாய் – தூண்டுதல் வேண்டாமல் தானேயெரிகின்ற தீபத்தினது ஒளிபோன்றவனே!
ஒன்றாய நின்றாய் – ஒப்பற்றதொரு பரம்பொருளாய் (அத்விதீயமாய்) நின்றவனே!
அடியாரை – தொண்டர்களை,
ஆண்டாய் – அடிமைகொண்டவனே!
காண்டாவனம் எரித்த – காண்டவவனத்தை எரிக்கச்செய்த, அரங்கா -!-
அடியேற்கு – அடியேனுக்கு,
இரங்காய் – திருவுள்ளமிரங்கியருளவேண்டும்.
மிகவும்இழிவாகிய பிறவியை ஒழித்து முத்தியளிக்கவேண்டுமென்று வேண்டியவாறு, முன்னிரண்டடி,
உடலின் அருவருத்தற்குஉரிய தாழ்வை விளக்கும். இங்குக்கூறப்பட்ட வழும்பு முதலியவற்றா லாகியதே உடம்பாத லால்,
இவற்றுள் ஒன்றாயினும் சுத்தமுடைய பொருள் உண்டோ? என்பது கருத்து.
(“குடருங் கொழுவுங் குருதியு மென்புந், தொடரு நரம்பொடு தோலு – மிடையிடையே, வைத்த
தடியும் வழும்புமா மற்றிவற்று, ளெத்திறத்தா னீர்ங்கோதையாள்”,
“என்பினைநரம்பிற்பின்னி யுதிரந்தோய்த் திறைச்சிமெத்திப்;
புன்புறந்தோலைப்போர்த்து மயிர்புறம்பொலியவேய்ந்திட்,
டொன்பதுவாயிலாக்கி யூன்பயில்குரம்பை செய்தான்,
மன்பெருந்தச்ச னல்லன்மயங்கிர்மருளவென்றான்” என்பன, உடலின் இழிவைவிளக்குவன.)
நாற்றமென்பது இருவகைக்கும் பொதுவாதலால், தீநாற்றத்தை வேண்டாநாற்றம் என்றார்.
“தூண்டாவிளக்கொளியாய்” என்றது – நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் ஸ்வரூபமாகவும்
உடையவனே யென்றபடி; “நந்தா விளக்கே யளத்தற்கரியாய்” என்றார் திருமங்கை யாழ்வாரும்.
கிருஷ்ணனும் அருச்சுனனும் பூம்பந்தேறிட்டு விளையாடச் செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து
இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடியா யிருக்கின்ற காண்டவவன மென்னும்பூந் தோப்பை
எனக்கு விருந்திடவேண்டுமென்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள் அங்கேபுக் கொதுங்கியிருக்கின்ற அசுரர்
முதலியவர்களை அழித்தருளவேண்டுமென்னும்நோக்கத்தால் நீ அதனைப்புசியென்றுஇசைந்து அளித்தனராதலால்,