Archive for the ‘SRi Valimiki Raamaayanam’ Category

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–104–பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்)

ராஜன், நான் வந்த காரியம் என்ன என்பதைச் சொல்கிறேன், கேள். பிதாமகர், ப்ரும்மா தான் என்னை அனுப்பி வைத்தார்.
முன் ஜன்மத்தில் நான் தங்கள் புத்திரன். சகலத்தையும் தன்னுள் சம்ஹாரம் செய்யும் காலன்.

மாயையால் தோற்றுவிக்கப் பட்டவன். லோகபதியான பிரபு, பிதாமகர் என்று பெயர் தந்ததும் நீங்கள் தான்.
தாங்கள் தன் இருப்பிடம் திரும்பி வர காலம் வந்து விட்டது.

தேவலோகத்தை ரக்ஷிக்க தாங்கள் திரும்ப வர வேண்டும், முன்பு ஒரு சமயம், உலகங்களை
உங்கள் மாயையால் பிரளய ஜலத்தில் மூழ்கச் செய்து, அந்த பெரும் கடல் வெள்ளத்தில் தூங்குவது போல
படுத்திருந்த தாங்கள், முதலில் என்னை ஸ்ருஷ்டித்தீர்கள். போகவந்தன் என்ற நாகத்தை,
தண்ணீரில் வசிக்கும் நாகராஜாவான அனந்தனை, உங்கள் மாயையால் தோன்றச் செய்த பின், மது, கைடபன் என்ற
இரு ஜீவன்களையும் பிறப்பித்தீர்கள்.

இவர்களது உடல், தசை, எலும்பு இவற்றால், மலைகளுடன் கூடிய இந்த மேதினி, பூமி உண்டாயிற்று.
திவ்யமான தங்கள் நாபியிலிருந்து, சூரியனுக்கு சமமான பத்மத்தை வரவழைத்து, என்னையும் ஸ்ருஷ்டித்தீர்கள்.

ப்ராஜாபத்யம்- உலகில் ஸ்ருஷ்டி தொழிலை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அந்த பொறுப்பை நான் நிர்வகித்து வருகிறேன்.
ஜகத்பதே, உங்களையே நான் உபாசித்து வருகிறேன். இப்பொழுது உலகில் உள்ள ஜீவன்களை ரக்ஷிப்பதும் நீயே.

எனக்கும் தேஜஸை, சக்தியைத் தருபவன் நீயே. அதனால் இப்படி நெருங்க முடியாமல் இருக்கும் நிலையிலிருந்து,
விஷ்ணுவாக உலகை காப்பவனாக வா, என்று வேண்டிக் கொண்டேன். அதிதியிடம், வீர்யம் உள்ள மகனாக,
உடன் பிறந்தவர்களுக்கு உள் உறையும் சக்தியாக, அவர்கள் சொல்லிலும் செயலிலும், உதவியாக என்றும் இருக்கிறாய்.

ஜகத்பிரபுவே, உலகில் ஆபத்து வரும் பொழுது, ஜனங்கள், பயந்து நடுங்கும் பொழுது, நீ தான் அடைக்கலம் தருகிறாய்.
இது போல, ராவணன் மனித இனத்துக்கு இடையூறு செய்ததை நீக்க, மனிதனாக பிறக்க திருவுள்ளம் கொண்டாய்.

நூறாயிரம் வருஷங்கள், மேலும் பல நூறு ஆண்டுகள், நீங்கள் இங்கு வாசம் செய்து விட்டீர்கள்.
மனிதர்கள் கணக்கில் பூர்ண ஆயுள். நீண்ட காலம் வாழ்ந்து விட்டீர்கள்.

நரஸ்ரேஷ்டா, இதோ தங்கள் காலமும் நெருங்கி விட்டது. திரும்பி வா. பிரஜைகள் உபாசிக்க விரும்பினால்,
தாங்கள் மேலும் வசிக்க விரும்பினாலும், இங்கு தங்கியிருங்கள். அல்லது வைஷ்ணவ லோகம் திரும்பி வாருங்கள்.

இவ்வாறு பிதாமகர் சொல்லி அனுப்பினார். ராகவா, சுரலோகத்தையும் ஜயிக்க மற்ற தேவர்களோடு,
விஷ்ணுவாக தேவர்களையும் மகிழ்விக்க வா. பிதாமகர் சொன்னதை காலன் வந்து சொன்னதைக் கேட்டு ராமர் சிரித்தபடி,
சர்வ சம்ஹாரகாரனான காலனிடம், தேவதேவனுடைய அத்புதமான செய்தியைக் கேட்டேன்.

தாங்கள் செய்தி கொண்டு வந்ததும் நல்லதாயிற்று. மூன்று உலகுக்கும் நன்மை செய்யத் தான் அவதாரம் செய்கிறேன்.
உனக்கு மங்களம். நான் வந்தபடியே கிளம்புகிறேன். நீ வந்ததில் எதுவும் யோசிக்கவும் தேவையில்லை.
சர்வ சம்ஹாரனே, தேவர்களுக்கு உதவியாக ப்ரும்ம தேவர் சொன்ன செய்திக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன் என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–103–காலாகமனம் (காலன் வருதல்)–

February 7, 2021

அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்)

இவ்வாறு காலம் சென்றது. ஒரு சமயம், காலனே தாபஸ உருவம் தரித்து ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றான்.
லக்ஷ்மணனைப் பார்த்து, மிக முக்கியமான காரியம், ராமனைப் பார்க்க வேண்டும் என்றான்.

எனக்கு அனுமதி கொடு. மிகவும் பலசாலியான ஒருவரின் தூதன் நான்.
மிக அவசர காரியம் என்பதால் ராமனை நேரில் காண வந்துள்ளேன் என்றான்.

சௌமித்ரியும் உடனே அவசரமாக ராமனிடம் சென்று தபஸ்வி ஒருவர் வந்திருப்பதை தெரிவித்தான்.
ராமா, வெற்றி பெறுவாயாக. ஜயஸ்வ. யாரோ, ஒரு தேஜஸ்வியான தூதன், உன்னைக் காண வந்திருக்கிறார்.

இதைக் கேட்டு ராமர், அனுப்பி வை, யார் என்று பார்ப்போம் என்றார். சௌமித்ரியும் சரி என்று சொல்லி
அந்த முனிவரை அனுப்பி வைத்தான். காணவே கூசும் தேஜஸுடன் இருந்த அந்த முனிவர் அரசனிடம்
சென்று வாழ்க என்று வாழ்த்தி விட்டு, ராமர் அளித்த அர்க்யம் முதலிய மரியாதைகளை ஏற்றுக் கொண்ட பின்,
பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டனர். ஸ்வாகதம், மகா முனிவரே, கொண்டு வந்த செய்தியைச் சொல்லுங்கள் என்றார் ராமர்.

தங்க மயமான ஆசனத்தில் அமர்ந்து, மதுரமாக பேச ஆரம்பித்தார் வந்தவர். நான் சொல்லப் போவது இரண்டு விஷயம்.
இதில் நீ விரும்புவது எது என்று சொல். இடையில் நம்மை யாரும் பார்த்தாலோ,
நாம் பேசுவதைக் கேட்டாலோ, நீ அவர்களை வதம் செய்து விட வேண்டும். என் தலைவரின் செய்தியை
நமக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ளச் சொல்லி எனக்கு கட்டளை என்றார்.

உடனே ராமர் லக்ஷ்மணனிடம் சென்று, லக்ஷ்மணா, வாசலில் நில். மற்ற காவல் காரர்களை அனுப்பி விடு.
யார் கேட்டாலும் வதம் செய்யும்படி நேரிடும். எங்களுக்குள் நடக்கும் சம்பாஷனையை யாரும் கேட்கக் கூடாது.

எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தாலும் இதே தண்டனை தான். அதனால் சௌமித்ரே, ஜாக்கிரதை என்று
லக்ஷ்மணனை காவலுக்கு நியமித்து விட்டு, திரும்பி வந்து, முனிவரிடம், சொல்லுங்கள், என்றார்.

யார் தங்களை அனுப்பியுள்ளது. எனக்கு என்ன செய்தி? சற்றும் கவலையின்றி நிதானமாக, விவரமாக சொல்லுங்கள்.
எனக்கும் கேட்க ஆவல் அதிகமாகிறது என்று சொல்லி எதிரில் அமர்ந்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–102–அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்)-

February 7, 2021

அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்)

ஒரு சமயம், ராகவன் தன் சகோதரர்களுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தான்.
லக்ஷ்மணனைப் பார்த்து, சௌமித்ரே, உன் குமாரர்களும், கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள்.

தர்மம், நீதி முறைகளைத் தெரிந்து கொண்டு விட்டார்கள். அங்கதனும், சந்த்ர கேதுவும்,
தற்சமயம் ராஜ்யத்தை ஆளும் தகுதி பெற்று விட்டனர். இவர்களை ஒரு தேசத்தில் முடி சூட்டி அமர்த்த வேண்டும்.

தகுதியான தேசம் எது என்று தெரிந்து கொண்டு வா என்றார். இருவரும் வில்லாளிகள்.
ரமணீயமான தேசத்தில், இடையூறு இன்றி இவர்களை ஸ்தாபனம் செய்வோம்.

அரசர்களால் தொந்தரவு இல்லாத, ஆசிரமங்கள் நலமாக இருக்கும் இடமாகப் பார்த்துச் சொல்.
நாம் யாருக்கும் தொல்லை தராமல், யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்க ஏற்ற இடமாக சொல்.

லக்ஷ்மணா. பரதன் பதில் சொன்னான். இங்கு காரூபதம் என்ற ஒரு அழகிய தேசம் ஆரோக்யமாக இருக்கிறது.
அங்கு புத்திரன் அங்கதனை நியமிப்போம். சந்திர கேதுவுக்கு மற்றுமொரு ரமணீயமான தேசம்,
சந்திர காந்தம் என்ற பெயரில் உள்ளது. இதை ராமர் அப்படியே ஏற்றுக் கொண்டார்.

பரதன் சொன்னபடியே அந்த தேசத்தை தன் வசமாக்கிக் கொண்டு, அங்கதனை அரசனாக்கி முடி சூட்டிய பின்,
மல்லனான சந்திர கேதுவுக்கு, மல்லர்கள் நிரம்பிய சந்திர காந்தம் என்ற நகரில் முடி சூட்டி வைத்தார்.

அந்த நகரம் ஸ்வர்க புரி போல இருந்தது. ராமரும், பரத லக்ஷ்மணர்களும், மிகவும் திருப்தியுடன்.,
அந்த நகரம் சென்று யுத்தம் செய்தனர்.
வெற்றி வாகை சூடி இரு குமாரர்களையும் தனித் தனியாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வழி வகுத்தனர்.

அங்கதனுடன் லக்ஷ்மணனும், சந்திர கேதுவுடன் பரதனும் சென்று நிர்வாக விஷயங்களை அவர்களுக்கு பயிற்றுவித்தனர்.
ஒரு வருஷம் இவ்வாறு சென்றது. சகோதரர்கள் இருவரும்,
ராமனுக்கு சேவை செய்வதையே தங்கள் பாக்யமாக கருதி வாழ்ந்து வந்தனர்.
மூவரும் அரசு நிர்வாகத்தை ஒற்றுமையாக செய்து வந்தனர்.
பெரும் யாக குண்டத்தில் தோன்றும் மூன்று வித அக்னி போல ஒத்து வாழ்ந்தனர்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–101–தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்)–

February 7, 2021

அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்)

பரதன் சேனையுடன் வந்து சேர்ந்து விட்டதை அறிந்ததும், கேகயாதிபன், அவர்களைக் காண வந்து சேர்ந்தான்.
சீக்கிரமே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, தங்கள் படையும் கந்தர்வ நகரத்தை இணைத்து முற்றுகையிட்டனர்.

பரதனும், யுதாஜித்தும் சேர்ந்து கந்தர்வ நகரத்தை தாக்கினர். கந்தர்வ வீரர்களும் போருக்குத் தயாராக
தங்கள் வாத்யங்களை முழங்கினர். அதன் பின் பெரும் யுத்தம் நடந்தது. ஏழு இரவுகள் பயங்கரமான யுத்தம்.

இரு தரப்பிலும் வெற்றியோ, தோல்வியோ நிர்ணயிக்க முடியாமல் தொடர்ந்தது.
நதிகள் ரத்தமே நீராக பிரவகித்தன. கத்தியும், சக்தியும், வில் அம்புகளும் வெட்டி சாய்த்த உடல்கள்
அந்த நதியில் அடித்துச் செல்லப் பட்டன. பின் ராமானுஜனான பரதன், கோபத்துடன், காலாஸ்திரம், சம்வர்த்தம்
என்ற அஸ்திரத்தை கந்தர்வர்கள் மேல் பிரயோகித்தான். கால பாசம் தாக்கியதைப் போல மூன்று கோடி வீரர்களும் விழுந்தனர்.

இது போன்ற தாக்குதலை அவர்கள் கண்டதேயில்லை. நிமிஷ நேரத்தில் அவர்கள் அனைவரும் விழ,
கைகேயி புத்திரன் பரதன், அந்த வளமான பிரதேசத்தில், தன் புத்திரர்களை அரசர்களாக நியமித்தான்.

தக்ஷசிலா என்ற இடத்தில், தக்ஷனையும், புஷ்கலாவதி என்ற நகரத்தில் புஷ்கலனையும் அரசனாக முடி சூட்டினான்.
கந்தர்வர்களின் ராஜ்யமே அழகிய நகரமாக இருந்தது. செல்வம் கொழித்த வளமான கானனங்கள் நிறைய இருந்தன.

உத்யான, வன போக்குவரத்து வழிகள் செம்மையாக செய்யப்பட்டு இரு நகரங்களும் இணைக்கப் பட்டிருந்தன.
கடைகளும், கடை வீதிகளும், பெரிய மாளிகைகளும், வீடுகளும், வாசஸ்தலங்களும்,
அவைகளின் விமானங்கள் (மேற் கூரைப் பகுதி) ஒரே வர்ணத்தில் அமைந்து அழகிய காட்சி தந்தது.
தாள, தமால மரங்கள், திலக, வகுள மரங்கள், ஆங்காங்கு சோபையுடன் வளர்ந்து நிற்க,
ஐந்து வருஷங்கள் பரதன் அவர்களுடன் இருந்து ராஜ்ய நிர்வாக விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டு,
அயோத்தி திரும்பி வந்தான். ராமனை வணங்கி. கந்தர்வர்களுடன் செய்த யுத்தம்,
வெற்றியடைந்தது பற்றி விவரங்களைச் சொன்னான். ராகவனும் மகிழ்ச்சியடைந்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–100–கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை)-

February 7, 2021

அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை)

சில காலம் சென்ற பின் கேகய ராஜாவான யுதாஜித், தன் குருவை ராகவனிடத்தில் அனுப்பினார்.
மகா தேஜஸ்வியும், ஆங்கிரஸ புத்திரருமான, கார்க்யர் என்பவர் தான் அந்த குரு.

அன்பளிப்பாக அவருடன் பத்தாயிரம் அஸ்வங்கள் வந்தன. கம்பளங்களும், ரத்னங்களும், சித்ர வஸ்திரங்களும்,
உயர் வகை மற்ற பொருட்களும், சுபமான ஆபரணங்களும், ராகவனுக்காக கொடுத்து அனுப்பியிருந்தார்.

ப்ரும்ம ரிஷியான கார்க்யர் வந்திருக்கிறார், மாமன் வீட்டிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறார் என்பதையறிந்து,
தன் சகோதரர்களுடன் இரண்டு மைல் நடந்து எதிர்கொண்டு சென்று, மகா முனிவரை அழைத்து வந்தார் அரசரான ராமர்.

இந்திரன் ப்ருஹஸ்பதியை எதிர்கொண்டு அழைப்பது போல இருந்தது. அவர் கொண்டு வந்த அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டு,
அவரை வணங்கி மரியாதைகள் செய்த பின், மாமன் வீட்டு குசலம் விசாரித்தார்.

அவர் வசதியாக அமர்ந்த பின், ராகவன், மாமன் என்ன சொன்னார்.? எதற்காக பகவானான தங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்.
சாக்ஷாத் ப்ருஹஸ்பதி வந்தது போல், தங்கள் வரவு எங்கள் பாக்கியம் என்றார். மகரிஷி விஸ்தாரமாக தான் வந்த காரியத்தை விவரித்தார்.

உன் மாமன் யுதாஜித், மிகவும் அன்புடன் சொல்லியனுப்பிய விஷயத்தை சொல்கிறேன், கேள்.
இங்கு அருகில் கந்தர்வ தேசம் உள்ளது. பழங்கள், காய் கறிகள் செழிப்பாக உள்ள இடம்.

சிந்துவின் இரு கரைகளிலும் இந்த தேசம் மிகவும் சோபனமானது. அழகானது. கந்தர்வர்கள் ரக்ஷிக்கிறார்கள்.
எப்பொழுதும், ஆயுத பாணிகளாக வீரர்கள், காவல் இருப்பர்.

சைலூஷன் மகள்கள், (சைலூஷன் என்பவரின் பெண்கள், அல்லது சைலூஷ-நடனமாடுபவர், நடன, நாட்டியம் ஆடும் பெண்கள்).
மூன்று கோடி பேர். அவர்களை ஜயித்து, அந்த சுபமான, கந்தர்வ நாட்டை உன் ராஜ்யத்தோடு இணைத்துக் கொள்.

மிக அழகிய நகரம் இது. மாற்றான் கையில் இருக்கிறது. உனக்கு நன்மையைத் தான் சொல்கிறேன்.
இதைக் கேட்டு ராமர் மகிழ்ச்சியடைந்து, மாமனின் குருவான மகரிஷியைப் பாரத்து,
அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, பரதனை நோக்கினார்.

மகரிஷியிடம், இந்த குமாரர்கள், பரதனின் புத்திரர்கள். தக்ஷ:, புஷ்கலன் என்ற பெயருடைய குமாரர்கள்.
பரதன் தலைமையில் இவ்விருவரும், மாமனுடன் சேர்ந்து, படை பலத்தோடு வருவார்கள்.

இவர்கள் கந்தர்வ நகரத்தை ஜயித்து, இரண்டு நகரமாக தங்களுக்குள் பிரித்துக் கொள்ளட்டும்.
அந்த உயர்ந்த நகரில் தன் புத்திரர்களை ஸ்தாபித்து விட்டு பரதன் திரும்பி வருவான்.

இவ்வாறு சொல்லி, படை பலங்களை ஏற்பாடு செய்து, பரதனுடன் கிளம்ப கட்டளையிட்டு,
குமாரர்கள் இருவருக்கும் முடி சூட்டி ஆசிர்வாதங்கள் செய்து அனுப்பினார்.

ஆங்கிரஸரான (அங்கிரஸ் என்ற ஒருவரின் மகன் ஆங்கிரஸ்) கார்க்யர், நல்ல நேரம் பார்த்து, பரதன், அவன் புத்திரர்கள்,
மற்றும் பெரும் சேனையுடன் கிளம்பினார். ராகவன் வெகு தூரம் உடன் சென்று வழியனுப்பினான்.

மாமிசம் உண்ணும் மாமிசபக்ஷிணிகளான பல மிருகங்கள் பரதனுடன் அனுப்பப் பட்டன.
ரத்தத்தைக் குடிக்கும் வகையைச் சேர்ந்தவைகள். சிங்க, வராஹ, வ்யாக்ர போன்ற மிருகங்கள், தவிர,
ஆகாயத்தில் பறக்கும் பக்ஷிகள், ஆயிரக் கணக்காக சேனைக்கு முன் சென்றன.
பாதி மாதம் பிரயாணத்தில் செல்ல, படை ஆரோக்யமான வீரர்களுடன் கேகய நாட்டில் நுழைந்தது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–99–ஸ்ரீ கௌஸல்யாதி கால தர்ம: (ஸ்ரீ கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்)–

February 7, 2021

அத்தியாயம் 99 (636) ஸ்ரீ கௌஸல்யாதி கால தர்ம: (ஸ்ரீ கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்)

விடிந்தது, மகா முனிவரை அழைத்து, எந்த வித தடுமாற்றமும் இன்றி பாடிக் கொண்டிருந்த
புத்திரர்களையும் அழைத்து வரச் செய்தான். உள்ளே வந்து காவியத்தின் மீதி பாகங்களையும் குழந்தைகள் பாடிக் காட்டினர்.

சீதை பூதலம் சென்றதும், உலகமே சூன்யமாக இருப்பதாக உணர்ந்தார். யாக காரியங்களை கவனித்து விட்டு,
திரும்பியவரிடம் மன சாந்தி அருகில் கூட வர மறுத்தது. மிகவும் வேதனையை அனுபவித்தார்.

அரசர்களை திருப்பி அனுப்பி விட்டு, கரடிகள், வானரங்கள், ராக்ஷஸர்கள், மற்ற ஜனக் கூட்டம்,
எல்லோரையும் வழியனுப்பி வைத்தார். பிராம்மணர்களுக்கு வேண்டிய தக்ஷிணைகள் கொடுத்து
யாக காரியத்தை முடித்து விட்டு சீதை நினைவாகவே அயோத்தி திரும்பினார்.

புத்திரர்கள் இருவருடனும் மேலும் மேலும் பல யாகங்களைச் செய்தார். தங்கத்தாலான சீதை உடன் இருந்தாள்.
பத்தாயிரம் ஆண்டுகள், அஸ்வமேத யாகங்கள் செய்து, வாஜபேய, வாஜிமேத என்ற யாகங்களை
செய்வித்தவர்களுக்கு பத்து மடங்கு சுவர்ணங்கள் கொடுத்து, ஆதரித்து, இரவு பகல் அக்னி ஹோத்ரம்
செய்பவர்களுக்கு கணக்கில்லாத பசுக்களையும் பெரும் தனம் கொடுத்து திருப்தி செய்தபடி,
மற்றும் பலருக்கும் நிறைவாக தக்ஷிணைகள் கொடுத்த படி, பல யாகங்கள் செய்தார்.

மகானான ராமர், பல காலம் இவ்வாறு சிறப்பாக ராஜ்யத்தை ஆண்டார்.
அவருடைய ஆட்சியில் ருக்ஷ, வானர, ராக்ஷஸர்கள், ராமனின் அரசியல் சட்டத்தை அனுசரித்து நடந்தனர்.

காலத்தில் மழை பொழிந்தது. திசைகள் விமலமாக இருந்தன. நகரங்களும், கிராமங்களும், ஜனங்கள்
ஆரோக்யமாக வளைய வர, சந்தோஷமாக இருந்தது. யாரும் அகால மரணம் அடையவில்லை.

எந்த பிராணியும் வியாதியால் வாடவில்லை. ராமர் ராஜ்யத்தை ஆண்ட காலத்தில், எந்த வித அனர்த்தமும் நேரிடவில்லை.
வெகு காலம் சென்ற பின் பல வித தான தர்மங்கள் செய்து வாழ்ந்தவளான ராம மாதா, கால கதியடைந்தாள்.
புத்ர பௌத்ரர்கள் சூழ இருந்து காலமானாள்.

அவளைத் தொடர்ந்து சுமித்ரையும், கைகேயியும் சென்றனர். தசரத ராஜாவின் மற்ற மனைவிகளும்
ஒவ்வொருவராக அவரை ஸ்வர்கத்தில் காணச் சென்று விட்டனர்.

இவர்களுக்கான மகா தானம் முதலியவைகளை ராமர் அந்தந்த காலங்களில் செய்தார்.
தாய் மார்களுக்கான நீத்தார் கடன்களை பிராம்மணர்களைக் கொண்டு குறைவர செய்தார்.

பித்ருக்களையும், தேவர்களையும் திருப்தி செய்ய விதிக்கப் பட்டுள்ள கர்மாக்களை விடாமல் செய்தார்.
இவ்வாறாக பல வருஷ காலம் சென்றது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–98–ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்)–

February 7, 2021

அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்)

சீதை ரஸாதளம் சென்றவுடன், வானரர்களும், முனி ஜனங்களும் சாது, சாது என்று கத்தினர்.
ராமர் தான் வாயடைத்து, மிகவும் சோர்ந்து போனவராக, துக்கத்துடன் நின்றிருந்தார்.
வெகு நேரம் வாய் விட்டே அழுத பின்னும் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

க்ரோதமும், சோகமும் வாட்டியது. இதுவரை கண்டிராத வேதனை என் மனதை வாட்டுகிறது.
கூரிய ஆயுதம் கொண்டு மனதை கீறி கிழிப்பது போல தாக்குகிறது.

என் சீதை கண் எதிரில் காணாமல் போவதை பார்த்துக் கொண்டு நின்றேனே,
ஸ்ரீ போன்றவள், முன் லங்கையிலிருந்து மீட்டு வந்தது போல இப்பொழுது பாதாளத்திலிருந்து மீட்டு வரத் தெரியாதா என்ன?

தேவி, வசுதே, என் சீதையைத் திருப்பிக் கொடு. என்னை அலட்சியம் செய்யாதே.
நான் என் ரோஷத்தைக் காட்ட வேண்டி வரும். நீ எனக்கு மாமியார் அல்லவா?

உன் மடியிலிருந்து தானே ஜனக ராஜா கலப்பையால் உழும் பொழுது கண்டெடுத்தார்.
அதனால் சீதையைத் திருப்பிக் கொடு. அல்லது உன்னுடன் பள்ளத்தில் நானும் வந்து வசிக்கிறேன்.

பாதாளத்திலோ, நாகங்களோடோ நானும் அவளுடன் வசிப்பேன். பூமித் தாயே, அவளை அதே ரூபத்துடன்
திரும்ப ஒப்படைக்க முடியாவிட்டால், இந்த வனம், மலைகள், எல்லாவற்றையும் சேர்த்து உன்னை நாசம் செய்து விடுவேன்.

எங்கும் தண்ணீராக பெருகட்டும், பூமியே இல்லாது செய்கிறேன். கோபமும், வருத்தமுமாக,
பரிதாபமாக ராமர் புலம்ப ஆரம்பிக்கவும் ப்ரும்மா சமாதானம் செய்ய தேவர்கள் சூழ வந்தார்.

ராம, ராமா, ரகு நந்தனா, இப்படி வருத்தப் படாதே. சமாளித்துக் கொள் உன் இயல்பான தன்மையை நினைவு கொள்.
வீரன் நீ. சத்ருக்களை நாசம் செய்ய வல்லவன். உனக்கு நான் நினைவு படுத்த வேண்டுமா என்ன?

உன் வைஷ்ணவமான அவதாரத்தை நினைத்துப் பார். சீதா தூய்மையானவள். ஸாத்வீ.
உன்னையே அனவரதமும் நினைத்து வாழ்ந்தவள். உன்னையே ஆசிரயித்து இருந்தவள்.

தற்சமயம், தன் தவ வலிமையால் பாதாள லோகம் சென்று விட்டாள். ஸ்வர்கத்தில் நிச்சயம் உன்னுடன் சேருவாள், கவலைப் படாதே.
இந்த கூட்டத்தில் மத்தியில் நான் சொல்வதை கவனமாகக் கேள். இந்த காவியம் உத்தமமாக இருக்கப் போகிறது.

ஒரு நிகழ்ச்சியையும் விடாமல், முனிவர் விவரித்து இருக்கிறார். பிறப்பிலிருந்து வாழ்க்கையில் நீ அனுபவித்த
சுக, துக்கங்கள், வால்மீகி தன் காவியத்தில் திறம்பட எழுதி பிரபலபடுத்துவார்.

உன்னை நாயகனாக கொண்டு எழுதப் பட்ட இந்த காவியமே ஆதி காவியமாகும்.
ராகவனைத் தவிர வேறு யார் இது போன்ற காவிய நாயகனாக முடியும்.

முன்பே தேவர்கள் மூலம் கேள்விப் பட்டேன். சத்ய வாக்யமாக, தெளிவாக, திவ்யமாக, அத்புதமாக
இந்த காவியம் எழுதப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள். புருஷ சார்துர்ல, நீயும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டு முழுவதுமாக கேள்.

மீதி நடக்க இருப்பதையும் இதைக் கேட்டுத் தெரிந்து கொள். ரிஷி எழுதியது உன் பொருட்டே.
நீயன்றி வேறு யார் இதைக் கேட்டு விமரிசிக்க முடியும். இவ்வாறு சொல்லி விட்டு ப்ரும்மா,
கூடியிருந்தவர்களிடம் விடை பெற்றுச் சென்று விட்டார்.

ராகவன் வாழ்க்கையில் மீதி கதையையும் கேட்க ராகவனும், வால்மீகியிடம் ப்ரும்மா சொன்னபடியே
ராமாயணத்தை தொடர்ந்து கானம் செய்யும் படி கேட்டுக் கொண்டான்.
தான் பர்ண சாலைக்குள் சென்று விட்டான். சீதையின் நினைவாகவே இரவு கழிந்தது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–97–சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்)–

February 7, 2021

அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்)

வால்மீகி இவ்வாறு சொல்லவும் ராமர் பதிலளித்தார். கூடியிருந்த ஏராளமான ஜனங்கள் மத்தியில்,
அஞ்ஜலி செய்தபடி, அழகிய நிறமுடைய சீதையைப் பார்த்தபடி, நீங்கள் சொல்வது எனக்கும் சம்மதமே.

உங்கள் வாக்கே இவள் கல்மஷமற்றவள் என்று நிரூபிக்கப் போதுமானது.
தேவர்கள் முன்னிலையில் ஒரு பரீஷை வைத்து இவள் சபதமும் செய்தபின் தான் வீட்டில் சேர்த்துக் கொண்டேன்.

ஆனாலும், லோகாபவாதம் பலமாக எழுந்தது. ப்ரும்மன், எனக்குத் தெரியும், இவள் பாபமற்றவள் என்று.
ஊர் ஜனங்களுக்கு நம்பிக்கை வர, இவளைத் துறந்தேன். பகவானே, மன்னிக்க வேண்டுகிறேன்.

இவர்கள் இருவரும் எனக்குப் பிரியமானவர்கள் என்பதையும் இப்பொழுது தானே தெரிந்து கொள்கிறேன்.
இந்த உலகில், எனக்கு மைதிலியிடம் உள்ள ப்ரீதியும் அன்பும் நிரூபிக்கப்படட்டும்.

ராமருடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தேவர்களும், ப்ரும்மாவுடன் சாக்ஷியாக வந்து விட்டனர்.
ஆதித்யர்களும், வசுக்களும், ருத்ரனும், அஸ்வினி குமாரர்களும், மருத் கண்டகளும்,
கந்தர்வ, அப்ஸரஸ் கணங்களும், அனைவரும் கூடினர்.

உலகில் செயற்கரியன செய்தவர்களும், எல்லா தேவர்களும், பரம ரிஷிகளும், நாகர்கள், சுபர்ணர்கள்,
சித்தர்கள் எல்லோருமே மகிழ்ச்சி நிறைந்த மனதுடன், பரபரப்புடன், எதிர்பார்ப்புடன் சீதை சபதம் செய்வதைக் காண வந்து சேர்ந்தார்கள்.

தேவர்களும், மகரிஷிகளும், வந்து கூடி விட்டதைப் பார்த்து ராமர் சொன்னார்.
தேவர்களே, ரிஷி வாக்கினால், அவரது தூய்மையான வார்த்தைகளே போதும்,
சீதை தூய்மையானவள் என்பதை நிரூபிக்க. உங்கள் அனைவரின் மத்தியில் என் அன்பும் நிரூபிக்கப் படட்டும்.
(நான் அவளைத் திரும்ப பெறுவேனாக).

அந்த சமயம், திடுமென மென்மையான காற்று, சுகந்தமாக அனைவரையும் தடவிக் கொடுப்பது போல வீசியது.
கூடியிருந்தோர் அத்புதம் என்றனர். முன்பு க்ருத யுகத்தில் இருந்தது போல.

அனைத்து தேசங்களிலிருந்தும் வந்திருந்த ஜனங்கள், காஷாய வஸ்திரம் தரித்திருந்திருந்த சீதையை நோக்கினர்.
சீதை அவர்கள் அனைவரும் வந்து விட்டதை தெரிந்து கொண்டு, தன் கண்களை பூமியை விட்டு அகற்றாமல்,
தலை குனிந்தபடி, மாதவீ தேவி, (பூமித் தாயே,) நான் ராகவனைத் தவிர வேறு யாரையும் நினைக்காமல்
இருந்தது உண்மையானால், எனக்கு அடைக்கலம் கொடு. மனம், வாக்கு, காயம் செயலால்
ராமனுக்கே என்று இருந்தது உண்மையானால், பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு.

நான் சொல்வது உண்மையானால், ராமனைத் தவிர வேறு தெய்வம் என் மனதில் இல்லை என்பது சத்யமானால்,
பூமித் தாயே எனக்கு அடைக்கலம் கொடு. இப்படி சீதை சபதம் செய்து
கொண்டிருக்கும் பொழுதே அந்த அதிசயம் கண் முன்னால் நிகழ்ந்தது.

பூமியிலிருந்து உத்தமமான சிம்மாசனத்தை தலையில் தாங்கிக் கொண்டு, நாகர்கள், திவ்யமான சரீரத்துடனும்,
திவ்யமான அலங்காரத்துடனும் வெளி வந்தன. அதில் அமர்ந்து வந்த தரணி தேவி, பூமித் தாய்,
மைதிலியை கைகளைப் பிடித்து ஸ்வாகதம் சொல்லி அழைத்து, தன்னுடன் அமர்த்திக் கொண்டாள்.

அந்த ஆசனத்தில் அமர்ந்து ரஸாதளம் செல்பவளை புஷ்ப வ்ருஷ்டி, இடைவிடாமல் வாழ்த்தி அனுப்பியது.
தேவர்கள் இடை விடாமல் மலர் மாரி பொழிந்தனர். ஸாது, ஸாது என்ற வாழ்த்தொலி சபையை நிறைத்தது.

அந்தரிக்ஷத்தில் இருந்து சீலம் மிகுந்தவளே சீதே, என்று அழைத்தது கேட்டது.
சீதை ரஸாதளம் சென்று விட்டதை தேவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது
தொடர்ந்து வந்த மகிழ்ச்சி ஆரவாரத்தால் புரிந்தது.

யாகசாலையில் கூடியிருந்த ஜனங்கள் திகைத்தனர். அந்தரிக்ஷத்திலும், பூமியிலும் இருந்த
ஸ்தாவர, ஜங்கம, தானவர்கள், பெரும் சரீரம் உடைய பன்னகாதிபர்கள், பாதாளத்திலிருந்தும் யார்,
யாரோ மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது கேட்டது. சிலர் கண் மூடி தியானம் செய்தனர்.

சிலர் ராமனை கண் கொட்டாமல் பார்த்தனர். பலர் திகைப்பில், வாய் எழாமல் மௌனமாக நின்றனர்.
சிலர் பூமிக்குள் சீதை சென்ற இடத்தையே பார்த்தபடி நின்றனர்.
எதுவும் செய்ய இயலாத நிலையில் அந்த இடத்தை மௌனமே நிறைத்தது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–96-வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்)–

February 7, 2021

அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்)

அன்று இரவு நகர்ந்து பொழுது விடிந்தது. ரிஷிகள், மகா தேஜஸ்விகளான முனிவர்களை பெயர் சொல்லி
அழைத்த ராமர், வசிஷ்டரே, வாம தேவ, ஜாபாலி மற்றும் காஸ்யபரே, தீர்கமான தவ வலிமை உடைய விஸ்வாமித்திரரே,
துர்வாஸரே, புலஸ்தியரே, சக்தி மிகுந்த பார்கவரே, வாமனரே, தீர்காயுவான மார்க்கண்டேயரே,
புகழ் வாய்ந்த மௌத்கல்யரே, கர்கரே, ஸ்யவனரே, தர்மம் அறிந்த சதானந்தரே, தேஜஸ்வியான பரத்வாஜரே,
அக்னி புத்திரரே, சுப்ரப, நாரதரே, பர்வதன், கௌதமரே, காத்யாயன், சுயக்ஞரே, தவத்தின் நிதியாக விளங்கும்,

அகஸ்தியரே, மற்றும் ஆவலுடன் இங்கு கூடியிருக்கும் ஜனங்களே,
வீரர்களான வானர, ராக்ஷஸர்களும், அரச குலத்தினர், வியாபாரம் செய்யும் வைஸ்யர்கள், சூத்ரர்கள்,
பல தேசங்களிலிருந்து வந்துள்ள பிராம்மணர்களே, ஆயிரக் கணக்கில் இங்கு வந்து கூடியிருக்கும்,
புகழ் வாய்ந்த செயல் வீரர்கள், ஞானத்தில் பெரியவர்கள், யோகத்தில் சிறந்தவர்கள் என்று பலரும் கேளுங்கள்.

சீதா சபதம் செய்வதைக் காண, இவர்கள் அனைவரும் வந்துள்ளனர்.
இவ்வாறு கூடியிருக்கும் ஜனங்களிடையே, கல்லான மலையைப் போல இறுகிய முகத்துடன்,
எந்த உணர்ச்சியையும் காட்டாது, கூட்டத்தை பிளந்து கொண்டு, வால்மீகி முனிவர் சீதையுடன் வந்து சேர்ந்தார்.

பின்னால், சீதையும் குனிந்த தலை நிமிராது நின்றாள். கணவனான ராமனைப் பார்த்து அஞ்ஜலி செய்தாள்.
பிராம்மணரைத் தொடர்ந்து வேதமே உருக் கொண்டு வந்து விட்டதோ எனும் படி இருந்தவளைப் பார்த்து
ரிஷிகள் மத்தியில் சாது, சாது என்ற கோஷம் எழுந்தது. எங்கும் கல கலவென்ற சப்தம்.

எல்லோர் மனதிலும் வேதனையோடு கூடிய எதிர்பார்ப்பே இருந்தது.
சிலர் சாது என்று ராமனை, சிலர் சாது என்று சீதையைப் போற்றினர்.
கூடியிருந்தவர்கள் வால்மீகி சொல்வதைக் கேட்கத் தயாரானார்கள்.

சீதைக்கு ஒரே சகாயமாக இருந்த முனிவர் சபை நடுவில் வந்து நின்றார்.
ராமனைப் பார்த்துச் சொன்னார். தாசரதே, இந்த சீதை தர்ம சாரிணி, நன்னடத்தை உள்ளவள்.
உன்னால், தனித்து விடபட்டவள். நீ ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி என் ஆசிரமத்தின் அருகில் தியாகம் செய்து விட்டாய்.

லோகத்தில் யாரோ தவறாக பேசுகிறார்கள் என்று பயந்து விட்டாய். மகாவ்ரதனே, அனுமதி கொடு.
சீதை தன் நடத்தைக்கு சாக்ஷி சொல்வாள். கேள். இந்த இரட்டையர்கள் ஜானகியின் குழந்தைகள்.

உன் வம்சத்தை விளங்கச் செய்ய வந்த உன் மகன்கள். நான் சொல்வது சத்யமே. ராகவ நந்தனா,
நான் ப்ரசேதஸ முனிவரின் வம்சத்தில் வந்த பத்தாவது ப்ராசேதஸன் என்ற முனிவன்.

சத்யமல்லாததை நான் சொன்னதில்லை. இவர்கள் உன் குமாரர்கள். பல ஆயிர வருஷ காலம் நான் தவம்
அனுசரித்து வந்திருக்கிறேன். இப்பொழுது நான் சொல்வதுக்கு மாறாக சீதை துஷ்ட சாரிணி என்று ஆனால்,
என் தவப் பலன்கள் அனைத்தும் நஷ்டமாகட்டும்.

என் மனதால், வாக்கால், சரீரத்தால், என் நடத்தையிலும், விரதங்களிலும், எந்த குறையும் வர விட்டதேயில்லை.
இந்த மைதிலி, பாபமற்றவள், மாசற்றவள் என்றால் மட்டுமே நான் என் தவத்தின் பயனை அனுபவிப்பேனாக.

நான் அறிந்து பஞ்ச பூதங்களும், ஆறாவது என் மனமும், இவளை பரிசுத்தமானவள் என்று நம்பியதால்,
என் ஆசிரமத்தில் தனித்து நின்றவளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்திருக்கிறேன்.

பதியே தெய்வம் என்று நம்பும் அபலைப் பெண் இவள். மாசற்றவள். எண்ணத்திலும், செயலிலும் பரிசுத்தமானவள்.
நீ தான் ஏதோ அபவாதம் என்ற காரணம் சொல்லி பயந்தாய். உனக்கு சரியான சாட்சியம் சொல்வாள்.

நரவரனே, தசரதன் மகனே, நீயே அறிந்திருந்தும், மனப்பூர்வமாக உணர்ந்திருந்தும்,
உலகில் யாரோ சொன்னார்கள் என்பதற்காக தியாகம் செய்தாயே, கேள் என்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–95–ஸ்ரீ வால்மீகி தூத ப்ரேஷணம் (ஸ்ரீ வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்) —

February 7, 2021

அத்தியாயம் 95 (632) ஸ்ரீ வால்மீகி தூத ப்ரேஷணம் (ஸ்ரீ வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்)

இந்த கீதத்தினால் கவரப்பட்ட ராஜா ராமன், பலரையும் வரவழைத்து சிறுவர்களின் இசையைக் கேட்க வழி செய்தார்.
அரசர்களும், முனிவர்களும், வானரங்களும் கேட்டன.

அவர்கள் இருவரும் சீதையின் மகன்கள் தானோ என்ற எண்ணமும் வலுப் பெற்றது.
ராமர், ஆற்றலும், நன்னடத்தையும் உள்ள தூதர்களைப் பொறுக்கி எடுத்து, நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.

வால்மீகி முனிவரிடம், சீதை குற்றமற்றவளாக, அப்பழுக்கில்லாத நடத்தை உள்ளவளாக இருந்தால்,
இங்கு அழைத்து வரச் சொல். முனிவரின் விருப்பத்தையும், சீதையின் அபிப்பிராயத்தையும் தெரிந்து கொண்டு,
அவள் என்ன சாக்ஷி சொல்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றார்.

நாளைக் காலை ஜனகாத்மஜாவான மைதிலி, இந்த சபையின் முன்னால் சபதம் செய்யட்டும்.
தன்னையும் என்னையும் இந்த சிக்கலிலிருந்து விடுவிக்கட்டும். இதைக் கேட்டு தூதர்கள்,
முனிவர் இருந்த இடத்தை நோக்கி விரைவாகச் சென்றார்கள். முனிவரை வணங்கி, ராம வாக்யத்தை மதுரமாக, ம்ருதுவாக சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதை வைத்து ராமரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட முனிவர்., சற்று யோசித்து, அப்படியே செய்வோம்.
பெண்களுக்கு கணவன் தான் தெய்வம் என்றார்.

கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தன் தவ வலிமையால் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர் சொன்னதை
அப்படியே தூதர்கள் ராமரிடம் வந்து தெரிவித்தனர்.
அதன் பின் ராமர், கூடியிருந்த ரிஷி, முனிவர்கள், அரசர்கள் இவர்களைப் பார்த்து, நாளை நீங்கள் அனைவரும்,
உங்கள், சிஷ்யர்கள், காவலர்களுடன் சீதை சபதம் செய்வதைக் காண வாருங்கள் என்றார்.
விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வரலாம். இதைக் கேட்ட ரிஷி ஜனங்கள் சாது, என்று வாழ்த்தினர்.
அரசர்களும், நரஸ்ரேஷ்டா, இது உனக்கு ஏற்றதே. நீ தான் இப்படி நடந்து கொள்ளக் கூடியவன்.
வேறு யாராலும் இப்படி நினைக்கக் கூட முடியாது என்றனர்.
அவர்களை மறுநாள் வரச் சொல்லி ராஜ சிங்கமான ராமன் விடை கொடுத்து அனுப்பினார்.
மறுநாள் நடக்கப் போகும் சபதத்தை உறுதியாக நினைத்தபடி சென்றார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-