Archive for the ‘Puraanankal’ Category

ஸ்ரீ பகவத் குணங்கள் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

வைதிக மத ப்ரவர்த்தலரில் அக்ரேஸர் ஸ்ரீ பராசர பகவான்
அவரை உதாரர் என்று கொண்டாடுகிறார் நம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்
அவர் அருளியச் செய்த ஸ்ரீ விஷ்ணு புராணமே புராண ரத்னம் என்று கொண்டாடப்படுகிறது –
அதில் பகவச் சப்தார்த்தத்தையும்-அந்த ஸப்தம் இன்னாரைத் தான் முக்கியார்த்தமாகக் குறிக்கும் என்பதை

ஸூத்தே மஹா விபூத் யாக்யே பரே ப்ரஹ்மணி ஸப்தயதே
மைத்ரேய பகவச் ஸப்த ஸர்வ காரண காரணே
ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யஸசஸ் ஸ்ரீய
ஞான வைராக்ய யோஸ் ஸைவ ஷண்ணாம் பக இதீரணா
ஏவமேஷ மஹான் ஸப்த மைத்ரேய பகவா நிதி
பரம் ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நாந்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரி பாஷா ஸமந்வித
சப்தோயம் நோப சாரேண த்வன் யத்ர ஹ்யுபசாரத
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத
பகவச் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -என்று அருளிச் செய்துள்ளார்

பகவச் ஸப்தத்தாலே வாஸூ தேவன் உபய லிங்க விஸிஷ்டனாகக் கூறப்படுகிறான் -அதாவது
அகில ஹேய ப்ரத்யநீக னாகவும் கல்யாண குணாகரனாகவும் கூறப்படுகிறான் என்றபடி

நிகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகத் வம்ஸ உபய லிங்கம்

க்ருத்ஸ்னம் பகவத் ஸப்த வாக்யம் இதி அனுசந்தேயம்-என்று

எங்கள் ஆழ்வான் வியாக்யானம் இட்டு அருளுகிறார் –

பராசர்யரான ஸ்ரீ வேத வியாஸரும்
ந ஸ்தாந தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி -என்று சாரீரகத்தில் அருளிச் செய்தார்
ச குண நிர் குண வாக்யங்களுக்கு விரோதம் இன்மையை
ச குணம் -நித்ய கல்யாண குண விசிஷ்டம் -அபஹத பாப்மா –ஸத்ய காம ஸத்ய சங்கல்பம்
நிர்குணம் -ப்ரக்ருதி குணம் இன்மையால்
தூரே குணா தவ து சத்த் வரஜஸ் தமாம் ஸி தேந த்ரயீ நிர்குணத்வம் -ஆழ்வான்
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹோ அபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -என்று தேசிகனும் அருளிச் செய்தார்கள் இறே
கல்யாண குண ரஹிதம் ப்ரஹ்மம் என்பார்க்கு சாரீரகத்தில் உபயலிங்க பாதமும் குண உப ஸம்ஹார பாதமும் பாதகமாம்
இத்தம் ஜீவேச பூமா பஹரண குஹனா வாத மோமுஹ்யமாநான் ஷேப்தும்
ந ஸ்தானதோ அபி
இத்யதிகரணமதாரப்யதே அநேக ஸ்ருங்கம் -என்றும் அதிகரண சாராவளியிலே தேசிகன் அருளிச் செய்து உள்ளார் –

தோஷோ பதாவதி ஸமாதி சயநா சங்க்யா நிர்லேப மங்கள குணவ் கதுகா ஷடேதா
ஞான ஐஸ்வரீ சகந வீர்ய பாலார்ச்சிஷஸ் த்வாம் ரங்கேச பாச இவ ரத்ன மநர்க்க யந்தி -என்று ஸ்ரீ பராசர பட்டரும் அருளிச் செய்துள்ளார்
க குணவான் -என்று ஸ்ரீ இராமாயண உபக்ரமத்திலும்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் என்று திருவாய் மொழி உபக்ரமத்திலும் உள்ளனவே –
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் இரு கண்கள் -பகவத் விஷயமாம் பர வஸ்துவைக் காண்போர்க்கு –
ஸ்ரீ கீதை ஆறாம் அத்தியாயத்தில் பஜதே யோ மாம் -என்று அருளிச் செய்ய
மாறன் அடி பணிந்து உய்ந்த -எம்பெருமானார் கீதா பாஷ்யத்தில்
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய ஒவ்தார்ய மஹோ ததிம் ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதிம்

பகவத் கல்யாண குணங்களை பரத்வ -ஸுலப்யம் -என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்
அதவா
ஸ்வரூப நிரூபக குணங்கள் என்றும் நிரூபித ஸ்வரூப விசேஷண குணங்கள் என்றும் இரு வகைகள்
அதவா
ஸ்வரூப குணங்கள் என்றும் திருமேனி ரூப குணங்கள் என்றும் இரு வகைகள் –

ஈறில வண் புகழ் –
வண் புகழ் நாரணன்
வாழ் புகழ் நாரணன்
பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி என்று பஞ்ச பிரகாரங்கள்
அர்ச்சை நீர்மைக்கு எல்லை நிலம் -திரு ஆராதனம் செய்து பரம ஷேமத்தைப் பெறலாம் –

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ஸூ வர்ண ரஜதாதிபி -தாம் அர்ச்சயேத் தாம் ப்ரணமேத் —

விசத்ய பாஸ்த்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணிம் -ஸ்ரீ ஸுநக பகவான் அருளிச் செய்கிறார்

அர்ச்சையிலே கீழ் சொன்ன ஸமஸ்த குணங்களும் புஷ்கலம்-

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

January 22, 2022

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

கஜேந்திரனைப் பாதுகாத்த கதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்கவிஷ்ணுபக்தியுடையனாய் ஒருநாள் விஷ்ணுபூசைசெய்கையில் அகஸ்தியமகாமுனிவன் அவனிடம்எழுந்தருள, அப்பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலட்சியஞ்செய்தா னென்று கருதிக் கோபித்து “நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள், பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறித்தற்குப் போய் இறங்கினபொழுது, அங்கே முன்பு நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹூஹூஎன்னுங் கந்தருவன் அவ்வானையின் காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்குஎழுந்தருளித் தனதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனன் என்பதாம். கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதியொழிய, அதற்கு உரிய திருமால் தானே வந்து அருள்செய்தன னென நூல்கள் கூறும், ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளியதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனைப் பாராட்டிக்கூறுவர். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

ஹம்ஸாவதார கதை:-
முன்னொருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் பேரிருள்மூடி நலியாநிற்க, பிரமன்முதலியோ ரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ளமிரங்கித் திருமால் ஹயக்கிரீவனாகிக் கடலினுட் புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின னென்பதாம். இவ்வரலாறு சிறிதுவேறுபடக் கூறுதலுமுண்டு.

அண்டமுண்டு ஆலிலைகலந்த கதை:-
பிரமன்முதலிய சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்தருளுகின்றன னென்பதாம்.

கடல்கடைந்த கதை:-
முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில், துர்வாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன்பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஐராவதயானையின்மேற் பவனிவந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைந்நீட்டிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துக் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச்செருக்குற்ற நினது ஐசுவரியங்களெல்லாம் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று சபிக்க, உடனே தேவர் செல்வம்யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக்கடையலாயினர் என்பதாம்.

துருவனது வரலாறு:-
சுவாயம்புவமனுவின் மகனான உத்தான பாத மகாராஜனுக்குச் சுநீதி யென்னும் மனைவியினிடத்துப் பிறந்த துருவனென்பவன், ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருந்த தன்தகப்பனுடைய மடியிலே யுட்கார்ந்திருந்த தனது மாற்றுத்தாயான சுருதியின் மகனாகிய உத்தமனென்பவனைப் பார்த்துத் தானும் அப்படி உட்காரவேண்டு மென்று அருகிற்போக, அதுகண்ட சுருசி, செருக்குக்கொண்டு “என்வயிற்றிலே பிறவாமல் வேறொருத்தி வயிற்றிற் பிறந்த நீ இச்சிங்காசனத்திலே யிருக்க
நினைக்கின்றது அவிவேகம்; நீ அதற்குத் தகுந்தவ னல்லன்; என்மகனே அதற்குயோக்கியமானவன்’ என்று இவனை இழித்துச்சொல்ல, அதுபொறாமல் துருவன் சரேலென்று தனது தாயார் வீட்டுக்குப் போய் அவளுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு, அப்பட்டணத்திற்குச் சமீபத்திலே யிருப்பதொரு உபவனத்திலே யிருந்த ஸப்தரிஷிகளைக்கண்டு தண்டனிட்டு அவர்களால் வாசுதேவ விஷயமான ஸ்ரீதுவாதசாக்ஷர மகாமந்திரம் உபதேசிக்கப்பெற்று, மதுவனத்துக்குப்போய் ஸ்ரீவிஷ்ணுவைத் தன் இருதயகமலத்திலே இடைவிடாது தியானித்துக்கொண்டிருக்க, எம்பெருமான் அவனது தியானத்திற்குத் திருவுள்ளமுகந்து பிரதியக்ஷமாய்க் கிருபைசெய்து வரமளிக்க,அவனுடைய அநுக்கிரகத்தினாலே மூன்றுலோகங்களுக்கும்மேற்பட்டதும், சகலதாரா கிரகநக்ஷத்திரங்களுக்கும் ஆதாரபூதமும், அவர்களுடைய ஸ்தானங்களுக்கெல்லாம் அதியுன்னதமுமான திவ்வியஸ்தானத்தை யடைந்து, தனதுதாயான சுநீதியும் நக்ஷத்திரரூபமாய்த் தனது அருகிலே பிரகாசித்துக் கொண்டிருக்க, கல்பாந்த பரியந்தம் சுகமாக இருக்கின்றன னென்பதாம்.

மத்ஸ்யாவதார வரலாறு:-
முன் ஒரு கல்பத்தின் அந்தத்திற் பிரமதேவன் துயிலுகையில் அவன்முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக்கொண்டிருந்த நான்குவேதங்களையும் மகாபலசாலியும் நெடுங்காலந் தவஞ்செய்து பெருவரங்கள் பெற்றவனுமான சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு பிரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின னென்பதாம். இவ்வசுரன்பெயர் சோமகனென்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு.

கூர்மாவதார கதை:-
கடல் கடைந்தகாலத்தில் அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பதாம்.

வராகாவதார கதை:-
இரணியனது உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட் புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.நரசிங்காவதார கதை:- தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனுமான இரணியன் தேவர் முதலிய எல்லோர்க்கும் கொடுமை இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான், இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படியே அவன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்ஙனம்வழிப்படாத அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒரு நாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்குஉளன்? காட்டு’ என்ன, அப்பிள்ளை, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று சொல்ல, உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப் புடைக்க, அதினின்று திருமால் மனிதரூபமும் சிங்கவடிவமுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மடியின்மீது வைத்துக் கொண்டு தனது திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தனன் என்பதாம்.

உலகமளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:-
மகாபலியென்னும் அசுரராஜன் தன்வல்லமையால் இந்திரன்முதலிய யாவரையும் வென்று மூன்றுஉலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்ததேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு காசியபமகாமுனிவனுக்கு அதிதிதேவியினிடந் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியஅனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண் வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, தானமாகப்பெற்ற மற்றோரடி நிலத்திற்கு இடமின்றாகவே அதற்காக அவன்வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியைவைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளந்ததில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே, எல்லாவுலகங்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்குதற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்திரம் வல்லவனென்பது தோன்றும்.

வெள்ளிநாட்டங் கெடுத்த கதை:-
திருமால் வாமனவடிவங்கொண்டு மாவலியினிடஞ் சென்று மூவடிமண் வேண்டியபோது அவ்வசுரன் அங்ஙனமே கொடுக்கிறே னென்று வாக்குதத்தஞ்செய்கையில் அருகுநின்ற அசுரகுருவாகிய சுக்கிராசாரியன் “உன்னை வஞ்சனையால் அழிக்கும்பொருட்டுத்திருமால்தானே இங்ஙனம் வந்துள்ளானாதலின், அவனுக்குக் கொடாதே’ என்று சொல்லி ஈவது விலக்க, அதுகேளாமல் மகாபலி ‘என்னிடம் ஒன்றை இரப்பவன் புருஷோத்தமனாயின் அவனுக்கு நான் அதனைக்கொடுத்துப் புகழ்பெறாதுவிடுவேனோ?’ என்றுகூறித் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யும் பொழுது அவ்வசுரராசனிடத்து மிக்க அன்பையுடைய சுக்கிரன் சிறுவடிவங்கொண்டு அம்மாவலியின் கைக்குண்டிகையின் துவாரத்திலே சென்று அடைத்து நீர்விழவொட்டாது செய்ய, அப்பொழுது வாமனன் அங்ஙனம் அடைத்துக்கொண்ட பொருளை அகற்றுவான்போலத் தனது திருக்கையிற் பவித்திரமாகத் தரித்திருந்த தருப்பைப்புல்லின் நுனியினால் அந்தச்சலபாத்திரத்தின் துவாரத்தைக் குடையவே, அதுபட்டுச் சுக்கிரனது கண்ணொன்று சிதைந்த தென்பதாம்.

இராவணனைக் கார்த்தவீரியன் வென்ற கதை:-
இராவணன் திக்குவிசயஞ் செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சுனனது மாகிஷ்மதிநகரத்திற்குச் சென்று போர்செய்ய முயலுகையில், அங்குள்ளார் ‘எங்களரசன் தனக்கு உரிய மாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடைசெய்கின்றான்’ என்று சொன்னதனால், உடனே இராவணன் அங்கிருந்து நருமதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில்மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேற்கே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சுனன் தனது நீர்விளையாட்டுக்கு அந்நீர்ப்பெருக்குப் போதாதென்றகருத்தால் அந்நீரைத் தனதுஆயிரங்கைகளுள் ஐந்நூற்றினால் தடுத்து நீரைமிகுவித்து மற்றை ஐந்நூறுகைகளைக்கொண்டு பலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனது சிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுங்கோபங்கொண்டு இராக்கதசேனையுடனே சென்று அருச்சுனனை யெதிர்த்துப்போர்செய்ய, அவன் தனது ஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனது இருபதுகைகளைப் பிடித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனது ஆற்றலால் எளிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விபீஷணனால் அறிந்து அவன்பாட்டனாராகிய புலஸ்தியமகாமுனிவர் அருச்சுனனிடம்வந்து வேண்டி அவனுக்கு ‘ராவணஜித்’ என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறைவிடுவித்துச் சென்றன ரென்பதாம்.

தார்த்தவீரியனைப் பரசுராமன் கொன்ற கதை:-
அவ்வருச்சுனன் ஒரு காலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரசுராமரது தந்தையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவர்க்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்தளித்தமை கண்டு அதனிடம் ஆசை கொண்டு அப்பசுவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்ந்துபோக, அதனை யறிந்த அப்பார்க்கவராமர் பெருங்கோபங்கொண்டு சென்று கார்த்தவீரியனுடன் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணிசேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம்.

அகலிகையின் சாபவிமோசன வரலாறு:-
கௌதமமுனிவனது பத்தினியான அகலிகையினிடத்திற் பலநாளாய்க் காதல்கொண்டிருந்த, தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் அம்முனிவனாச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவதுபோலக்கூவ, அதுகேட்ட கௌதமமுனிவன் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்டதென்று கருதியெழுந்து காலைக்கடன் கழித்தற்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இந்திரன் இதுவே சமயமென்று அம்முனிவருருக்கொண்டு ஆச்சிரமத்துட்சென்று அவளிடஞ் சேர்கையில் “தன்கணவனல்லன், இந்திரன்’ என்று உணர்ந்தும் அகலிகைவிலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை ஞானக்கண்ணினால் அறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவன் அவளைக் கருங்கல் வடிவமாம்படி சபித்து, உடனே அவள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டியதற்கு இரங்கி, “ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கி நிஜவடிவம் பெறுக’ என்று அநுக்கிரகிக்க, அவ்வாறே கல்லுருவமாய்க் கிடந்த அகலிகை ஸ்ரீராமலக்ஷ்மணர் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டமாத்திரத்திலே கல்வடிவம் நீங்கி இயற்கைநல்வடிவம் அடைந்தன ளென்பதாம்.

தசரதராமன் பரசுராமனை வென்ற வரலாறு:-
விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனதுகுலத்துப் பூர்விகராசனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்தமகளான சீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாமித்திர முனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற்சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சீதையை இராமனுக்கு மணஞ்செய்து வைத்தனன். சீதாகல்யாணத்தின்பின்பு தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை யெதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தையறிந்தேன்; அதுபற்றிச் செருக்கடையவேண்டா; வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற் கொணர்ந்த வில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து ‘இந்தப் பாணத்திற்கு இலக்கு யாது?’ என்றுவினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க, அவன் க்ஷத்திரிய வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக்கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதாம்.
இராமபிரான் வனஞ்சென்ற வரலாறு: – சீதாகல்யாணத்தின்பிறகு தச ரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில் மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநரான தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யை மகனான இராமனைப் பதினான்குவருஷம் வனவாசஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பந்திக்க, அதுகேட்டு வருந்திய தசரதர் சத்தியவாதி யாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும் இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்திற்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருஷம் உன்னைக் காடேறப்போகச் சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு, அந்த மாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ருவாக்ய பரிபாலனஞ்செய்தலினிமித்தம் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாதுதொடர்ந்த சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தி யைவிட்டுப் புறப்பட்டு வனவாசஞ்சென்றன னென்பதாம்.

காகன் நயனங்கொண்ட கதை: –
வனவாசகாலத்தில் சித்திரகூடமலைச் சாரலிலே இராமபிரானும் ஜாநகிப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன்மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக்கண்டு மோகித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டுவந்து, பிராட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற்குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதிகோபங்கொண்டு ஒருதர்ப்பைப்புல்லை யெடுத்து அதிற் பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்திரத்துக்குத் தப்பி வழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமையாலே மீண்டும் இராமனையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளின னென்பதாம்.

இராவணன் மாரீசனைக்கொண்டு மாயஞ்செய்து சீதையைக்கவர்ந்த வரலாறு:-
தாடகையின் மகனும், சுபாகுவின் உடன்பிறந்தவனும், இராவணனுக்கு மாமன்முறை பூண்டவனும், இராமபிரானிடத்துப் பழம்பகைமை யுடையவனும், மாயையில் மிகவல்லவனுமான மாரீசனென்ற ராக்ஷசன், சீதையைக் கவர்ந்து செல்லக்கருதி இராவணனது தூண்டுதலின்படி மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அவள் அதனைநோக்கி அதன்பக்கல் அன்புகொண்டு அதனைப்பிடித்துத்தரும்படி இராமபிரானைப் பிரார்த்திக்க, இலக்குமணன் “இது பொய்ம்மான்’ என்றுஉண்மை கூறித்தடுக்கவும் கேளாமற் பிராட்டி மீண்டும்நிர்ப்பந்திக்கவே, இராமன் அதனைப்பிடித்தற்குத் தொடர்ந்துசென்றபோது, அந்த மான் கையிலகப்படாமற் பலவாறு ஓட்டங்காட்டி நெடுந்தூரஞ்செல்ல, அதுகண்டு இராமன் மாயமானென்று துணிந்து அதன்மேல் அம்பெய்ய, மாரீசன் அம்புபட்டுவீழ்கையில், தன் மெய்வடிவங்கொண்டு “ஹாஸீதே! லக்ஷ்மணா!’ என்று இராமன்குரலாற் சத்தமிட்டு விழுந்திறக்க, அக்குரல்கேட்டவுடனே அதனை அரக்கன்வஞ் சனையென்று உணர்ந்த இலக்குமணன் வாளாஇருக்க, அவ்வுண்மையுணராமற் சீதை இராமனுக்கு அபாயம்நேர்ந்ததென்றே கருதிக் கலங்கி அதனையுணர்ந்து பரிகரித்தற்பொருட்டு இலக்குமணனை வற்புறுத்தியனுப்பி விட, சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து இராவணன் சந்யாசிவடிவங் கொண்டுவந்து பிராட்டியை வலியக்கவர்ந்து தேரின்மேல்வைத்துச்சென்று இலங்கைசேர்ந்தன னென்பதாம்.

மராமரம் எய்த கதை:-
இராவணனால் அபகரிக்கப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு சென்ற இராமலக்ஷ்மணரை அநுமான்மூலமாகச் சிநேகித்த பிறகு, சுக்கிரீவன், தனதுபகைவனும் மகாபலசாலியுமான வாலியைக் கொல்லும் வல்லமை இராமபிரானுக்கு உண்டோ இல்லையோ வென்று ஐயமுற்று, தன்சந்தேகம்தீரும்படி “எதிரிலுள்ள ஏழுமராமரங்களையும் ஏக காலத்தில் தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று சொல்ல, உடனே இராமபிரான் ஓரம்புதொடுத்து அந்த ஸப்த ஸாலவிருக்ஷங்களை ஒருங்கு தொளைபடுத்தின னென்பதாம்.

கவிக்கு முடிகவித்த கதை: –
இராமன் இலக்குமணனுடனே சீதையைத் தேடிச்செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான் மூலமாகச் சூரிய குமாரனான சுக்கிரீவனோடு நண்புகொண்டு அவன்வேண்டுகோளின் படி அவனது தமையனும் வாநரராசனுமான வாலியைத் தந்திரமாகக் கொன்று சுக்கிரீவனுக்குக் கிஷ்கிந்தைநகரத்தில் முடிசூட்டிவைத்தனன் என்பதாம்.

சூர்ப்பணகையின் மூக்கை யறுத்த வரலாறு:-
வனவாசம் புறப்பட்ட இராமலக்ஷ்மணர் சீதையுடனே கோதாவரி நதிதீரத்திற் பஞ்சவடியாச்சிர மத்தில் வசித்தபொழுது, அவர்களைக்கண்டு மோகங்கொண்ட இராவணன் தங்கையான சூர்ப்பணகை அந்த இராகவ வீரர்களிடம் தனித்தனி வந்து தன்னை மணம் புணரும்படி பலவாறு வேண்டவும், அவர்கள் உடன்படாததனால், அவள் ‘சீதையை அகற்றிவிட்டால் இராமன் என்னை மணம்புரிதல் கூடும்’ என்று எண்ணி, தனிப்பட்ட சமயம் பார்த்துப் பிராட்டியை யெடுத்துச்செல்ல முயன்றபோது, இலக்குமணன் கண்டு ஓடிவந்து சூர்ப்ப ணகையை மறித்து அவளது மூக்கு காது முதலிய சிலவுறுப்புக்களை அறுத்து விட்டனன் என்பதாம்.
கரனைக்கொன்ற வரலாறு:- இலக்குமணனால் மூக்குமுதலியன அறுக் கப்பட்டவுடனே இராமலக்குமணரிடங் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை கரன்காலில்விழுந்து முறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங் கொண்டு மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம் படைவீரரோடும் சேனைத்தலைவர்பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும் முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குப் பாதுகாவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து அவ்வரக்க ரனைவரையுந் துணித்து வெற்றிபெற்றன னென்பதாம்.

இராமபிரான் சடாயுவுக்கு முத்தியளித்த வரலாறு:-
இராவணன் மாய மான்வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு இராமலக்குமணரைப் பிரித்துச் சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து அவளை வலியஎடுத்துத் தேரின்மேல் வைத்துச் செல்லுமளவிலே, அவள்கூக்குரலிட்டதைக் கேட்டுக் கழுகரசனும் தசரதசக்கரவர்த்திக்கு உயிர்த்தோழனாய்ப் பிராயத்தில் அவரினும் தான் மூத்தவனாதலால் தமையன்முறை பூண்டவனும் அதனால் மக்களிடத்தும் மருகி யிடத்துங் கொள்ளும் அன்பை இராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும் கொண்டு பஞ்சவடியில் அவர்கட்குக் காவலாக இருந்தவனுமான ஜடாயு ஓடிவந்து எதிர்த்துப் பெரும்போர்செய்து அவனது கொடிமுதலியவற்றைச் சிதைத்து, முடிவில், அவனெறிந்த தெய்வவாளினாற் சிறகுஅறுபட்டு வீழ, இராவணன் சீதையைக் கொண்டுபோய் இலங்கையிற் சிறைவைத்திட்டான்; பின்புவந்த இராமலக்ஷ்மணர் பர்ணசாலையிற் சீதையைக்காணாமற் கலங்கி அவளைத்தேடிச்செல்லும்வழியிற் சடாயு வீழ்ந்துகிடக்கக்கண்டு சோகிக்கையில், குற்றுயிருடனிருந்த அக்கழுகரசன் நடந்தசெய்தியைச் சிறிதுகூறி உயிர்நீப்ப, இராமபிரான் தமக்குப்பெரியதந்தைமுறையான அச்சடாயுவுக்குப் பரமபதமளித்துச் சரமகைங்கரியஞ்செய்துமுடித்தன ரென்பதாம்.

கபந்தனைக் கொன்ற வரலாறு:-
இவன், தண்டகாரணியத்தில் ஒருபக் கத்திலே இருந்து தனது நீண்டகைகளிரண்டையும் எட்டியமட்டிற் பரப்பித் துழாவி அவற்றினுள் அகப்பட்ட ஜீவராசிகளையெல்லாம் வாரி வாய்ப்பெய்து விழுங்கிக்கொண்டிருக்க, அங்குச்சென்று இவன்தோள்களினிடையே அகப்பட்ட இராமலக்ஷ்மணர் அத்தோள்களை வாள்களால் வெட்டித்தள்ளியவளவில், இவன், முன்னையசாபமும் முற்பிறப்பின் தீவினையும் தீர்ந்து இராக்கத சரீரத்தையொழித்துத் திவ்வியசொரூபம்பெற்றுப் பெருமானைப் பலவாறு துதித்து நற்கதிக்குச் சென்றன னென்பதாம்.

கடல்சுட்ட கதை:-
இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கின்ற செய்தியை அநுமான் சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான் வாநரசேனையுடனே புறப்பட்டுச் சென்று கடற்கரையை யடைந்து, கடலைக்கடக்க உபாயஞ்சொல்லவேண்டுமென்று அக்கட லரசனாகிய வருணனைப் பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக்கிடக்க, சமுத்திரராசன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, ஸ்ரீராமன் அதுகண்டு
கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை வற்றச்செய்வே னென்று ஆக்கிநேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே, அதன் உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்க, பின்பு இராமமூர்த்தி வாநரங்களைக்கொண்டு மலைகளால் சேதுபந்த நஞ் செய்தனன் என்பதாம்.

அநுமான் ஓஷதிமலைகொணர்ந்த வரலாறு:-
இராமலக்ஷ்மணர் வாநர சேனைகளுடனே கடல்கடந்து இலங்கைசேர்ந்து நடத்திய பெரும்போரில் ஒருநாள் இராவணன்மகனான இந்திரசித்து பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனால் லக்ஷ்மணனையும், வாநரராஜனான சுக்கிரீவனையும் வாநரசேனைகளையும் கட்டுப்படுத்தி அவசமாய் மூர்ச்சித்து மரணமடைந்தவர்போற் கிடக்கும்படி செய்தபொழுது, இராமபிரானும் அவர்கள் நிலைமையைக் கண்டு துக்கித்து விழுந்திட, ஜாம்பவான்சொன்னபடி அநுமான் அதிவேகமாகப் புறப்பட்டு, இமவத்பர்வதத்திற்கு வடக்கேயுள்ள ஓஷதிபர்வதத்தைச் சார்ந்து அம்மலையிலுள்ள ம்ருதஸஞ்சீவநீ, விஸல்யகரணீ, ஸாவர்ண்யகரணீ, ஸந்தாநகரணீ என்ற மூலிகைகளைத் தேடுகையில், அந்தத்திவ்வியஓஷதிகள் மறைந்தனவாக, அநுமான் அந்தமலையையே வேரோடுபெயர்த்து எடுத்துக்கொண்டு வந்துசேர, அதன்காற்றுப்பட்டமாத்திரத்தால் அனைவரும் மயக்கம்ஒழிந்து மூர்ச்சைதெளிந்து ஊறுபாடுதீர்ந்து உயிர்த்துஎழுந்தனர் என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. அப்போரில் மற்றொருசமயத்தில் இராவணன் விபீஷணன்மேல் எறிந்த தெய்வத்தன்மையுள்ள வேலாயுதத்தை அவன்மேற்பட வொட்டாமல் இலக்குமணன் தன்மார்பில் ஏற்றுக்கொண்டு அதனால் மூர்ச்சையடைகையில் மீளவும் அநுமான் அம்மலையைக்கொண்டுவந்து இலக்குமணனை உயிர்ப்பித்தன னென்பதும் உணர்க.

இராமபிரான் சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றிய வரலாறு:-
இராம பிரான் இவ்வுலகத்தை விட்டுச்செல்லத்தொடங்கிய சமயத்தில், அயோத்தியா நகரத்து உயிர்களெல்லாம் அப்பெருமானைச் சரணமடைந்து “தேவரீர் எங்குச்சென்றாலும் அடியேங்களையும் உடனழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் அவர்களுடைய அன்பின் உறுதியைக் கண்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்; அப்பொழுது, அந்நகரத்திருந்த மனிதர்களே யன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து சுவாமியின்பின் சென்றன: இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் சரயூநதியில் இறங்கித் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில்மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும், பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே புக்கவர் மீண்டுவருதலில்லாத மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தருளினர் என்பது, இங்கு அறியத்தக்கது.
பலராமன் யமுனா நதியை அடக்கிய வரலாறு:- ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுநாநதியை நோக்கி, “ஓ யமுனாய்! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அவ்யமுனை அவர் மதுபானமதத்தினால் இப்படிச்சொல்லுகின்றாரென்று அவர்வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது ஆயுதமான கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான்போகும்வழியைவிட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகிய தன்றியும், தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில்வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில்நீராடின ரென்பதாம்.

பலராமன் அஸ்தினாபுரத்தைச் சாய்த்த வரலாறு:-
அஸ்தினாபட்டணத் திலே துரியோதனன் தன்மகளான இலக்கணைக்குச் சுயம்வரங்கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீகிருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டுபோக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற்கு எழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அக்கௌரவர் யாவரும் “துஷ்டகாரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரேகட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்துபேச, பலராமர் கரையில்லாத கோபங்கொண்டு எழுந்திருந்து, “குருகுலத்தார் வாசஞ் செய்துகொண்டிருக்கின்ற இந்நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்துவிட்டு, பூமியிற் கௌரவப் பூண்டில்லாமற் செய்துவிடுவோம்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின்மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க, அதனால் அப்பட்டணமுழுவதும் அசைந்துசாயவே, அதுகண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கிச்சாம்பனை இலக்கணையோடும்பல சிறப்புக்களோடும் கொண்டு வந்து சமர்ப்பித்து வணங்கி வேண்ட, இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளின ரென்பதாம்.

கண்ணன் பேய்ச்சியூட்டிய நஞ்சை அமுதுசெய்த விவரம்:-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவ னாதலால் அக்கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்சன், தன்னைக்கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்துகொல்லும்பொருட்டுப் பலஅசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி நல்லபெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகியகுழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றியமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்புநரம்புகளின்கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

சகடுதைத்த கதை:-
நந்தகோபகிருகத்தில் ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற் கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து தன்னைக்கொல்லமுயன்றதை யறிந்து பாலுக்குஅழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள்பட அழிந்த தென்பதாம்.

ததிபாண்டன் முக்தியடைந்த வரலாறு:-
ததிபாண்டன் – தயிர்க்கல முடையவன். ஒரு நாள் கண்ணன் யசோதை முலைகொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை உடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை அடிக்கக் கோலெடுத்துவந்த அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே ஓடிமறைய, அதுகண்ட அவன் கண்ணனது திருவடித் தாமரைகளைப் பிடித்துக்கொண்டு “எனக்குமுத்தியளிக்கவேண்டும்’ என்ன கண்ணன் ‘எனதுதாய் என்னை அடிக்கவருகிறாள்; என்காலை விடு’ என்றுசொல்ல, அவன் ‘நீ எனக்கும் எனக்குவேண்டிய இருபத்தெட்டுமனையிலுள்ளோர்க்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதங்கொடாயானால், யான் உன்காலை விடாமல் உன்னை யசோதை கையிற் காட்டிக்கொடுப்பேன்’ என்று கூற, ஸ்ரீகிருஷ்ணன் உடனே அவன் வேண்டுகோளின்படியே முத்தி யருளிச்சென்றன னென்பதாம்.

நாகத்துப்பாய்ந்த கதை:-
யமுநாநதியில் ஓர்மடுவில் இருந்துகொண்டு அம்மடுமுழுவதையும் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு யோக்கியமாகாதபடி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலைநாகத்தைக் கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு, அம்மடுவிற்குச்சமீபத்தி லுள்ளதொரு கடம்பமரத்தின்மே லேறி அம்மடுவிற் குதித்து, கொடியஅந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமன்று தன்னைவணங்கிப்பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக்காளியனை உயிரோடு கடலிற் சென்று வாழும்படி விட்டருளினன் என்பதாம்.

தேநுகனை வதைத்த கதை:-
கண்ணன் பலராமனோடும் ஆயர்சிறுவர் களோடும் மாடுமேய்த்துக்கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாய்ப்பழுத்து வாசனைவீசிக்கொண்டிருந்த ஒரு பனங்காட்டை யடைந்து அப்பனம் பழங்களை விரும்பி யுதிர்த்துக் கொண்டுவருகையில், அவ்வனத்துக்குத்தலைவனும் கம்சனது பரிவாரத்தி லொருவனுமாகிய கழுதைவடிவங்கொண்ட தேநுகாசுரன் கோபமூண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின்மேலெறிந்து அழித்தன னென்பதாம்.

கூனிமருங்கு உண்டையோட்டின வரலாறு:-
ஸ்ரீகிருஷ்ணன், கம்சனால் அக்குரூரரைக்கொண்டு அழைக்கப்பட்டுப் பலராமனுடனே மதுராபுரியின்
இராசவீதியில் எழுந்தருளுகையில் சந்தனக்கிண்ணத்தைக் கையிலேந்தி வருகிற மங்கைப்பருவமுடைய ஒருகூனியைக் கண்டு, ‘நீலோற்பலம் போன்ற கண்ணுடையவளே! யாருக்கு நீ இந்தப்பூச்சுக்கொண்டுபோகிறாய்?’ என்று விலாசத்தொடு கேட்டருள, அந்தக்கூனி, இவ்வாறு காதலுடையவன் போலக் கண்ணன் அருளிச்செய்தது கேட்டு அவனது திருக் கண்களினாலே மனமிழுக்கப்பட்டவளாய், அவன்மேற் காதலுற்று ‘ஓ அழகனே! நான் நைகவக்கிரை யென்பவ ளென்றும், கம்சனாலே சந்தனாதிப் பூச்சுக்கள் சித்தஞ்செய்யும் வேலையில் வைக்கப்பட்டவளென்றும் நீ அறியாயோ?’ என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணன் “எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகுநேர்த்தியான இந்தப்பூச்சை எங்கட்குக் கொடுக்கவேண்டும்’ என்று சொன்னவுடனே அவள் ‘அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள்’ என்று மிக்க அன்போடு சமர்ப்பிக்க, அப்பூச்சைத் திருமேனியில் அணிந்து ஸ்ரீ கிருஷ்ணன் அவளிடத்து மிகவும் பிரசன்னனாய், நடுவிரலும் அதன் முன்விரலுங்கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையைப்பிடித்துத் தன் திருவடிகளினால் அவள்கால்களை அமுக்கி இழுத்துத் தூக்கிக் கோணல் நிமிர்த்து அவளை மகளிரிற் சிறந்தவுருவின ளாக்கியருளின னென்பது, இங்குக்குறித்த கதை. இனி, இராமாவதாரத்தில் மந்தரையென்னுங் கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்;இராமன் சிறுவனாயிருந்தகாலத்தில் ஒருநாள் கையிற் சிறுவில்லும் மண்ணுண்டையுங் கொண்டு விளையாடிவருகையில், ஒருகால் விற்கொண்டு எய்த உண்டை கைகேயியின் வேலைக்காரியான மந்தரையின் முதுகின்புறத்தே தற்செயலாய்த் தெறிக்க, அவள் தனதுகூனுடைமையை இராமன் இங்ஙனம்பரிகசித்தன னென்று தவறாகக்கருதி மனம்வருந்தி அவன்மேற் சினங்கொண்டு அரசன்மைந்தனாதலின் ஒன்றுஞ்செய்ய இயலாமற் சென்று தனக்கு வாய்க்குந்தருணம் நோக்கிக் கறுக்கொண்டிருந்து பின்பு கைகேயிக்குக் கலகஞ்செய்து இராமபட்டாபிஷேகத்தைத் தவிர்த்து அப்பெருமானை வனம்புகுத்தின ளென வரலாறு அறிக.

மாதர் புடைவைகளைக் கொடுத்த வரலாறு:-
திருவாய்ப்பாடியிலுள்ள கோபஸ்திரீகள் கண்ணபிரானிடங் கொண்ட வேட்கைமிகுதியால் அவன் தம்மிடம் காதல்விஞ்சுமாறு நோன்புநோற்று அந்நோன்பின் முடிவில் யமுனாநதியிலே நீராட, அப்பொழுது அவர்கள் கரையில் அவிழ்த்துவைத்து விட்டுப்போன ஆடைகளையெல்லாம் கண்ணன் வந்து எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின்மே லேறியிருந்துசிறிது பொழுது அவர்களை அலைக்கழித்துப் பின்பு அவர்கள் கைகூப்பிவணங்கி மிகவும் பிரார்த்தித்ததனால் அவர்கட்கு அத்துகில்களை அளித்தருளின னென்பதாம்.

ஏறுசெற்ற விவரம்:-
கண்ணன் நப்பின்னைப்பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழுஎருதுகளையும் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித் தழுவின னென்பதாம். கண்ணனைக்கொல் லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருதுவடி வங்கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின்மேற் கண்வைத்துக் கொம்பு களைநீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற் பிடித்து அசையவொட்டாமற்செய்து தன்காலினால் அவன்வயிற்றில் ஓரிடியிடித்து அவன்கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடையகொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை அடித்துக் கொன்றன னெனினுமாம்.

மருதிடைத்தவழ்ந்த கதை:-
கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த நத்தகோபன்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே யெழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப் பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்தவளவிலே, முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம். அந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒருகாலத்தில் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை செய்துகொண்டிருக்கையில், நாரதமகா முனிவர் அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தால் வஸ்திரமில்லாமலே யிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களையடையுஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம்பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப் போயினர் என அறிக.

கன்றால் விளவெறிந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்துகொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ண பகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின்வடி வங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டுகால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய இருவரும் சிதைந்து தமதுஅசுரவடி வத்துடனே விழுந்து இறந்தன ரென்பதாம்.

பகாசுரனைக் கொன்ற வரலாறு:-
பகனென்னும் அசுரன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணபிரானைக்கொல்வதாக நெருங்கிவர, அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இருகையாலும் பிடித்துக் கிழித்து அதனை யழித்தன னென்பதாம்.

பரிவாய் பிளந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கேசி யென்பவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சிநடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளின னென்பதாம்.

பிரமதேவன் கண்ணன்திருவிளையாடலைக் கண்டு வியந்த வரலாறு:-
கண்ணன் ஆயர்சிறுவர்களுடன் பசுவின் கன்றுகளைமேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமதேவன் எம்பெருமானது திருவிளையாட்டைக் காணவேண்டு மென்று கருதிக் கன்றுகளையுஞ் சிறார்களையுந் தன்மாயையினால் வானத்தே மறைத்துவைக்க, அச்சுதன் அஃதுணர்ந்து வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும் குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் சிறிதும் வேற்றுமையில்லாமல் தானே சிறாருங் கன்றுமாகித் தத்தம்மனைகட்குப் போய்வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டுசெல்ல, நான்முகன் அது கண்டு நாணமுற்றுச் சிறார்களையுங் கன்றுகளையுங் கொணர்ந்து சமர்ப்பித்துக் கண்ணனைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிப் பலவாறு தான்செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டன னென்பதாம்.

கண்ணன் காட்டுத்தீயை விழுங்கிய கதை:-
பிருந்தாவனத்தில் முஞ்சாரணியத்திற்பிரவேசித்தபோது தைவிகமாகத்தோன்றித் தங்களைச்சூழ்ந்த பெருங்காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு கோபாலர்களும் கோக்களும் முறையிட்டுப் பலவாறு துதிக்கக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் ‘நீங்கள்யாவரும் பயப்படாமல் உங்கள் நேத்திரங்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்று நியமித்தருளி, தனதுவிராட்ஸ்வரூபத்தை வகித்து அவ்வக்கினியைச்சுவாலையோடும் பானஞ்செய்து, அவ்வாயர்களையும் ஆநிரையையும் பாண்டீர மென்னப்பட்ட ஆலமரத்தினடியில் தனது மாயையினாற் கொண்டுவந்துசேர்த்துக் காத்தருளினன் என்பதாம்.

‘வரைக்குடையாய்’ என்ற விவரம்:-
திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படிசமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபங் கொண்டு அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம்முதலிய பலமேகங்களை யேவி, கண்ணன்விரும்பிமேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்குஇஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்மலையை யெடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்து எல்லாவுயிர்களையும் காத்தருளின னென்பதாம்.

ஆயரெல்லாம் பரமபதத்திற் சென்று மீண்ட வரலாறு:-
யமுனையில் தீர்த்தமாடுகின்ற சமயத்தில் ஓரசுரனால் வருணலோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டு வந்தபொழுது தன்னைப் பூஜித்து உத்தமகதியையடைய விரும்பிய சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தனது திவ்வியதேஜோ மயமான ஸ்வரூபத்தையும், பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி யருளினன் என்பதாம்.

கண்ணன் பாரிஜாததருவைக் கொணர்ந்த வரலாறு:-
கண்ணன் நரகா சுரனையழித்தபின்பு அவனால் முன்புகவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதி தேவியின்) குண்டலங்களை அவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோள்மேலேறித்தேவலோகத்துக்குச்செல்ல அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக் கண்டு விருப்புற்றவளாய்ச் சுவாமியைப்பார்த்து “பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத் துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்’ என்றதைக் கண்ணன் திருச்செவிசார்த்தி உடனே அந்தவிருக்ஷத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல் வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்துமறித்துப்போர்செய்த இந்திரனைச் சகலதேவ சைனியங்களுடன் சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு பாரிஜாதமரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத் தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.

கண்ணன் குமாரர்களை மீட்டுக் கொடுத்த வரலாறு:-
கண்ணன் சாந்தீபிநி யென்னும் பிராமணோத்தமர்பக்கல் கைலசாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம் குருதக்ஷிணை கொடுக்கத் தேடுகின்ற வளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை அறிந்தவ ராகையாலே, “பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு பிரபாஸதீர்த்தகட்டத்திற் கடலில் முழுகி யிறந்துபோன என்புத்திரனைக் கொண்டுவந்து தரவேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கண்ணன் ‘அப்படியேசெய்கிறோம்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன, சங்கின்ரூபந்தரித்துச் சமுத்திரஜலத்தில் வாசஞ்செய்கின்ற பஞ்சஜநன் என்கிற அசுரனைக்கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு யாதனையிற் கிடந்த அக்குமாரனைப் பூர்வதேகத்தில் ஒன்றும் விசேஷமறக் கொண்டுவந்து கொடுத்தருளினா னென்பதும்;

தேவகிதேவி கம்ஸனாற்சங்கரிக்கப்பட்ட தன்னுடைய புத்திரர்கள் அறுவரையுங் காணுமாறு அபேக்ஷித்தபொழுது, கிருஷ்ணபகவான் மாதாவின் வார்த்தைக்கிசைந்து பாதாளலோகஞ்சேர்ந்து பலிசக்கரவர்த்தியினுடைய சபைக்குச்சென்று, அங்குஇராநின்ற மரீசிப்பிரஜாபதியினுடைய புத்திரர்களும், பிரமசாபத்தால் இரணியகசிபுவின்குமாரர்களாய்ப் பிறந்தவர்களும், தனக்குமுன்பு தேவகியின்கர்ப்பத்திற் சேர்க்கப்பட்டவருமாகிய அவ்வறுவரையும் அதிசீக்கிரத்திற் கொண்டுவந்து கொடுத்தருளின னென்பதும்;

ஒருபிராமணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுமுட்பட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்திலே போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது போய்விடு கையாலே, நாலாம் பிள்ளையை ஸ்திரீ பிரசவிக்கப்போகின்ற வளவிலே அந்த அந்தணன் கண்ணபிரான்பக்கலிலே வந்து ‘இந்த ஒரு பிள்ளையை யாயினும் தேவரீர் ரக்ஷித்துத் தந்தருளல்வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கிருஷ்ணன் ‘அப்படியே செய்கிறோம்’ என்று அநுமதி செய்த பின்பு ஒரு யாகத்தில் தீக்ஷிதனானதனால் தான் எழுந்தருளக் கூடவில்லை யென்று அருச்சுனனுடன் சொல்ல, அருச்சுனன் ‘நான் போய் ரக்ஷிக்கிறேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்து, பிராமணனையுங் கூட்டிக்கொண்டுபோய்ச்
சூதிகாகிருகத்தைச் சுற்றும் காற்று முட்படப் பிரவேசிக்க வொண்ணாதபடி சரக்கூடமாகக் கட்டிக் காத்துக்கொண்டு நிற்கையிலே, பிறந்த பிள்ளையும் பிறந்தவளவிலே பழையபடியே காணவொண்ணாது போய்விடவே, பிராமணன் வந்து அருச்சுனனை மறித்து, “க்ஷத்திரியாதமா! உன்னாலேயன்றோ என்பிள்ளை போம்படி யாயிற்று; கிருஷ்ணன் எழுந்தருளிக் காப்பதை நீ யன்றோ கெடுத்தாய்’ என்று நிந்தித்துக் கிருஷ்ணன்பக்கலிலே தள்ளிக் கொண்டுவர, கண்ணபிரான் கண்டு புன்னகைகொண்டு ‘அவனை விடு; உனக்குப் பிள்ளையை நான் கொண்டுவந்து தருகிறேன்’ என்று அருளிச் செய்து பிராமணனையும் அருச்சுனனையும் கூடத் தேரிலேகொண்டு ஏறி அருச்சுனனைத் தேரை நடத்தச் சொல்லி அத்தேர்க்கும் இவர்கட்கும் திவ்விய சக்தியைத் தனது சங்கற்பத்தாற் கற்பித்து இவ்வண்டத்துக்குவெளியே நெடுந்தூரமளவும் கொண்டுபோய் அங்கே ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தித் தோஜோரூபமான பரமபதத்திலே தன்னிலமாகையாலே தானேபோய்ப் புக்கு, அங்கு நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்திரியங் காட்டு கைக்காகவும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியினது திவ்வியசௌந்தரியத்தைக் கண்டு களிக்கைக்காகவும் அழைப்பித்துவைத்த அந்தப்பிள்ளைகள் நால்வரையும் அங்குநின்றும் பூர்வரூபத்தில் ஒன்றும் குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினன் என்பதுமாம்.

குருந்தமொசித்த கதை:-
கிருஷ்ணனைக் கொல்லும்பொருட்டுக் கம்சனால் ஏவப்பட்ட பல அசுரர்களில் ஒருவன் அக்கண்ணபிரான் மலர்கொய்தற்பொருட்டு விரும்பி யேறும் பூத்த குருந்தமரமொன்றிற் பிரவேசித்து அப்பெருமான்வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக்கொல்லக் கருதியிருந்தபோது, மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைப் பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்துஅழித்தனனென்பதாம்.

நாரதமுனிவர் குடும்பத்திடும்பையனுபவித்த வரலாறு:- ஒருகாலத்தில் நாரதமுனிவர் திருமாலைத்தரிசிக்கையில் தாம் பிரமவிருடியென்றும் தத்துவ ஞானங்கைவந்தவரென்றும் செருக்குக்கொண்டு சிலவார்த்தைகூற, எம்பெருமான் தமதுமாயை எவராலுங் கடத்தற்கரிய தென்பதைப் புலப்படுத்த வேண்டு மென்று திருவுளங்கொண்டு, அங்கு அருகிலுள்ளதொரு தடாகத்தில் ஸ்நாநஞ்செய்யுமாறு முனிவர்க்குக் கட்டளையிட்டனர்; உடனே இருடி தமதுவீணையைக் கரையில்வைத்துவிட்டுக் குளத்தில் மூழ்கினமாத்திரத்தில் திவ்வியமான பெண்ணுருவ மடைந்தனர். விஷ்ணுவோ இவரது யாழைக் கைக்கொண்டு மறைந்துவிட்டார். பிறகு, தமது முன்னைய நிலைமையை மறந்த நாரதியென்னும் இப்பெண்ணைக் கண்ட ஓரரசன் தனது அரண்மனைக்கு அழைத்துச்சென்று அவளை மணந்து அவளிடம் பலபுதல்வரைப் பெற்றான். இவ்வாறு இம்மாது பலபுத்திரர்களைப்பெற்றுச் சம்சாரக்கவலை கொண்டு அலைவதைத் (இந்தமக்களை, பிரபவன் முதலிய அறுபதுபிள்ளைக ளென்றுங் கூறுவர்.) திருமால் கண்டு இவர்க்கு முன்னையநிலையைக் கொடுத்து இவரதுகவலையை நீக்கத் திருவுளங்கொண்டு ஒரு கிழவடிவங் கொண்டு சென்று அம்முனிமாதை அருகிலுள்ளதொரு பொய்கையில் முழுகிவரும் படி நியமிக்க, இவர் அவ்வாறே சென்று அமிழ்ந்து முழுகியமாத்திரத்திற் பழையபடியே முனிவடிவமடைந்து கரையேறினர். அப்பொழுது திருமால் தான் முன்பு கொண்டுசென்ற யாழைக்கொடுத்து நடந்த வரலாற்றைக் கூறி இவரதுமனத்தைத் தெளிவித்து அழைத்துச்சென்றன ரென்பதாம்.

யானையை மருப்பொசித்த கதை:-
வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணபலராமர்கள் கம்சன ரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அத்யாதவவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அவற்றால் அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளேபோயின ரென்பதாம்.

கண்ணன் உக்கிரசேனராசனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்த வரலாறு:-
கண்ணன் கம்ஸவதஞ்செய்த பின்பு, மகனிழந்தவனும் தன்மாதாமகனுமாகிய உக்கிரசேனமகாராஜனைத் தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகஞ் செய்தவுடனே வாயுவை நினைக்க, அவனும் உடனே ஸ்வாமிஸந்நிதிக்கு வந்துநிற்க, அவனை நோக்கி “ஓ வாயுவே! ஸுதர்மை யென்கிற தேவசபையானது நம்முடைய உக்கிரசேன மகாராஜாவுக்கே ஏற்றது; அதில் யதுவமிசத்தார் வீற்றிருக்கத் தகுந்திருக்கின்றது: ஆதலால், ஒப்பற்ற அந்தச்சபையை மகாராஜாவுக்கு அனுப்பிவிடு என்று இந்திரனுக்கு என்கட்டளையைத் தெரிவித்துச் சபையைக்கொண்டுவா’ என்று நியமித்த வுடனே, அதை வாயு சிரசில் வகித்துப்போய்ப் புரந்தரனுக்குத் தெரிவிக்க, அவனும் அச்சபையைச் சமீரணன் கையிற் கொடுத்துவிட, உடனே வாயு அதைக் கொண்டுவந்து சுவாமிசந்நிதியிற் சமர்ப்பிக்க, அதனைச் சுவாமி உக்கிரசேனனுக்குப் பிரசாதித்தருள, அச்சபையிலே யாதவர்யாவரும் வீற் றிருந்தார்க ளென்பதாம்.

கண்டாகர்ணனுக்கு முத்தியளித்த விவரம்:-
கைலாசகிரியிற் சிவபிரானை யடுத்துத் தொண்டுபூண்ட பூதகணத்தலைவர்களில் ஒருவன், அச்சிவபக்தியுடன் விஷ்ணுவேஷமுங் கொண்டு, விஷ்ணுநாமத்தைப் பிறர்சொல்லக் கேட்டலுமாகாதென்று தன்காதுகளில் மணிகளைக்கட்டிக்கொண்டு அவற்றை ஒலிசெய்யுமாறு எப்பொழுதும் கருத்துடன் அசைத்துக் கொண்டிருந்ததனால், கண்டாகர்ண னென்று பெயர்பெற்றான். அவன் ஒருகாலத்திற் சிவபிரானைக்குறித்து அநேகவருடம் தவம்புரிந்து, ருஷபாரூடனாய்த் தரிசனந் தந்த அக்கடவுளை நோக்கி ‘எனக்கு நித்தியமான முத்தியை அளித்தருள்க’ என்று பிரார்த்திக்க, அப்பெருமான் “அதனையளித்தற்கு உரியவன் திருமாலே. மற்றைப்பிரபஞ்சவாழ்வில் எதுவேண்டினும் யான் தரக்கடவேன்’ என்றுகூறிச் சென்றனன். அதுகேட்டவுடனே கண்டாகர்ணன் காதிற்கட்டிய மணிகளைக் கழற்றியெறிந்து, சிவபிரானுக்குநண்பனான குபேரனிடஞ் சென்று நிகழ்ந்தசெய்தியைக் கூற, அவனும் ‘அழியாப் பதத்தை அரியே அருள்வன்’ என்றுசொல்லி அஷ்டாக்ஷரமந்திரத்தையும் துவாதசாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து, அத்திருமால் கிருஷ்ணனாகத் திருவவதரித்துத் துவாரகையில்வசிக்கிற செய்தியையுஞ் சொல்லி, “எவ்வளவு தீவினை செய்தாலும் விஷ்ணுநாமத்தை உச்சரித்தமாத்திரத்திலே அவ்வினை யனைத்தும் தொலையும்’ என்றுஉணர்த்த, அவற்றையறிந்த கண்டாகர்ணன் தன்னைச்சார்ந்த பூதகணங்களுடனே புறப்பட்டு விஷ்ணுநாமங்களை வாயினாற் சொல்லிக்கொண்டே இடைவழியி லெல்லாம் பசுவதை பிராமணவதை முதலிய அளவிறந்த உயிர்க்கொலைகளைச் செய்துகொண்டு, கங்கா நதியுடன் யமுநாநதி சேருமிடமான பிரயாகையைச் சேர்ந்து அஷ்டாக்ஷரதுவாதசாக்ஷரமந்திரஜபத்துடன் நாராயணனைத் தியானித்து அப்பரமனை அகத்திற்கண்டதன்றி அங்குப் புறத்திலே கிருஷ்ணமூர்த்தியைக் கண்ணுற்றுக் களிகூர்ந்து அப்பெருமானது திருவடிகளிற் சரண்புகுந்து ‘எனக்கு அழியாப்பதத்தை அளித்தருள்க’ என்று பிரார்த்தித்தான். அதற்குக் கண்ணபிரான் ‘நீ ஆதியில் என்னிடத்திற் பகைமைகொண்டபோதிலும், இடை விடாது என்னை நினைப்பிற் கொண்டிருந்ததனாலும், பின்பு மிக்கநம்பிக்கையுடன் எனதுநாமங்கள் பலவற்றை உச்சரித்ததனாலும், பிறகு ஜபம் தியாநம் ஸ்தோத்ரம் முதலிய வழிபாடுகள் செய்ததனாலும், உனதுவினைகளெல்லாம் தொலைந்தன; இனிப் பரமபதம் அடைவாய்’ என்று அநுக்கிரகித்தான். பின்பு கண்டாகர்ணன் “அந்தஸ்ரீவைகுண்டத்தை என்தம்பியான தந்தகனுக்கும் அருள்க’ என்று வேண்ட, கண்ணன் ‘உன்னைப் போல உன்தம்பியும் என்பக்கல் அன்புடையனோ?’ என்ன, மணிகர்ணன் ‘இல்லை’ என்றான். “அஃதுஇல்லையாயினும், எனதுபக்தனான உன்னிடத்திலேனும் அன்புடையனோ? என்று வாசுதேவன் வினாவியதற்கு, ‘அதுவு மில்லை; பரதேவதையான உன்னிடத்திலும், தமையனான என்னிடத்திலும் பகைமையுடையன் அவன்’ என்ற கண்டாகர்ணனை நோக்கி ஸ்ரீகிருஷ்ணன் ‘ஆயின், என்ன இயைபுகொண்டு அவனுக்கு உயர்கதியளிப்பேன்?’ என்றான். கண்டாகர்ணன் ‘அவனுக்கு என்னிடம் அன்பில்லை யாயினும், எனக்கு அவன்மேல் அன்பு உண்டு’ என்று சொல்ல, கண்ணபிரான் அதுகேட்டு மனமகிழ்ந்து ‘ஆனால் அவனுக்கும் முத்திதந்தேன்: எனது அன்பர் எவர்பக்கல் அருள் புரிகின்றனரோ, அவரும் பேறுபெறுதற்கு உரியரே; இனி நீயும் உன்தம்பியும் விமானமேறி வீடுபெறுவீர்’ என்றுசொல்லி விடையளித்துச்செல்ல அங்ஙனமே அவ்விருவரும் பரமபதம்புக்கன ரென்பதாம்.

வாணனையழித்த கதை:-
பலிசக்கரவர்த்தியின்சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரன் ஒருகாலத்துச் சிவபிரானது நடநத்தைத் தரிசித்து அதற்குத் தனது இரண்டுகைகளால் மத்தளந்தட்ட, சிவபெருமான் அருள்கூர்ந்து அவனுக்கு ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்தவலிமையையும் மிக்க செல்வத்தையும் தான் தனது பரிவாரங்களோடு அவன்மாளிகை வாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும் தந்தருளினன்; அந்தப்பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிக்கஆசை பற்றியவளாய், தனது உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத்தெரிவித்து, அவள்மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனதுபுத்திரனுமாகிய அநிருத்த னென்று அறிந்துகொண்டு, “அவனைப்பெறுதற்கு ‘உபாயஞ்செய்யவேண்டும்’என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தைமகிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன் தன்சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாற் பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது, நாரதமகாமுனிவனால் நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரியதிருவடியை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோளின்மேல் ஏறிக்கொண்டு பலராமன்முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே, அப்பட்டணத்தின் சமீபத்திற் காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு ஜ்வரதேவதை மூன்றுகால்களும் மூன்றுதலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக்காப்பாற்றும்பொருட்டுத்தன்னோடு யுத்தஞ்செய்ய,தானும்ஒருஜ்வரத்தையுண்டாக்கி இதன்சக்தியினாலே அதனைத் துரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து, பாணாசுரனோடு போர் செய்யத் தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, சுப்பிரமணியனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அநேகமாயிரஞ்சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனதுசக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரை யாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறுபிரார்த்தித்தனால் அவ்வாணனை நான்குகைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன் பின் மீண்டுவந்தன னென்பதாம்.

சிசுபாலனைக்கொன்றவரலாறு:-
சிசுபாலன், பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான்; அப்பொழுது அனைவரும் இதுஎன்னவென்று வியக்கும்போது ஆகாயவாணி ‘யார் இவனைத் தொடுகையில் இவனதுகைகளிரண்டும் மூன்றாம்விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்’ என்றுகூறிற்று; அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன; அதனால் “இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்று அறிந்த இவன்தாய்’யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்தஅத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் “இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன்பிழையை நான் பொறுப்பேன்’ என்றுகூறியருளினன்: பின்பு, சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயேயறிந்து அதனாலும் முந்தினசன் மங்களின் தொடர்ச்சியாலும் வளர்ந்த மிக்கபகைமையைப் பாராட்டி, எப்பொழுதும் அப்பெருமானுடைய திவ்வியகுணங்களையும் திவ்வியச்செயல் களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான்; இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்திருந்த ருக்குமிணியைக் கண்ணன் வலியக்கவர்ந்து மணஞ்செய்ததுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்கவைரங்கொண்டனன்; பின்பு இந்திரப்பிரத்தநகரத்தில் நடந்த ராஜசூயயாகத்தில் தருமபுத்திரனாற் கண்ணபிரானுக்கு முதற்பூஜை செய்யப்பட்டதைக் கண்டு சிசுபாலன் மிக்க கோபங்கொண்டு அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணனது சக்கராயுதத்தால் தலைதுணிக்கப்பட்டு இறந்து தோஜோமயமான திவ்விய சரீரம்பெற்று எம்பெருமானது திருவடியை யடைந்தன னென்பதாம்.

திரௌபதிக்குத் துகிலீந்த கதை:-
துரியோதனன்சொன்னபடி துச்சாதனன் திரொளபதியைச் சபையிற்கொணர்ந்து துகிலுரியத்தொடங்கியபோது அவள் கைகளால் தன்ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே கண்ணபிரானைக் கூவியழைக்க, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்துநின்று, பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில் ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பிவணங்கித் துதித்தவுடனே ஸ்ரீகிருஷ்ணன் அவளுடைய ஆடைமேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னென்பதாம்.

மல்லரைக்கொன்ற கதை:-
கம்சனால் வலியஅழைக்கப்பட்டுக் கிருஷ்ண பலராமர்கள் அவனதுசபையிற் செல்லுகையில், அவர்களையெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெரு மல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவ்யாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பதாம். அன்றி, கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது, துரியோதனன் இரகசியமாகத் தனதுசபா மண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அநேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற் சிறந்த இரத்தினாசனமொன்றை யமைத்து அவ்வாசனத்திற் கண்ணனை வீற்றிருக்கச்சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விசுவரூபமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப் பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தன ரென்ற கதையையுங் கொள்ளலாம்.

சூரியனை மறைத்த கதை:-
மகாபாரதயுத்தத்திற் பதின்மூன்றாநாளிலே அருச்சுனகுமாரனான அபிமந்யுவைத் துரியோதனனது உடன்பிறந்தவள் கணவனான சைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன்மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாட்சூரியாஸ்தமத்திற்குள் தான்கொல்லாவிடின் தீக்குதித்து உயிர்விடுவதாக அருச்சுனன் சபதஞ்செய்ய, அதனையறிந்த பகைவர்கள் பதினான்காநாட் பகல்முழுவதும் சயத்திரதனை வெளிப்படுத்தாமற் சேனையின்நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அருச்சுனனதுசபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்துக் கண்ணன் சூரியனை அஸ்தமித்தற்குச் சிலநாழிகைக்கு முன்னமே தன்சக்கராயுதத்தால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருளடைந்ததனால், அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ் செய்தலைக் களிப்போடுகாணுதற்குத் துரியோதனாதியருடனே சயத்திரதன் வந்து எதிர்நிற்க, அச்சமயத்திற் கண்ணன் திரு வாழியை வாங்கிவிடவே, பகலாயிருந்ததனால், உடனே அருச்சுனன் சயத்திரதனைத் தலைதுணித்தன னென்பதாம்.

அசுவத்தாமன் பாண்டவர் வம்சத்தைக்கருவறுத்த விவரம்:-
அசுவத்தாமன் துரியோதனன் வேண்டுகோளின்படி பாண்டவர்வம்சத்தைக் கருவறுப்பதொரு பாணத்தைப் பிரயோகிக்கையில், அது சென்று அபிமந்யுவின் மனைவியும் கர்ப்பவதியுமான உத்தரையின் வயிற்றி லுள்ள சிசுவைக் கருகச்செய்து வெளிப்படுத்தியபோது, ‘நித்தியபிரமசாரியாயிருப்பானொருவன் பரிசித்தால் இக்கரிக்கட்டை குழந்தையாய்விடும்’ என்று கண்ணன் ஒருநிபந்தனை ஏற்படுத்தி அதற்குரியவர் ஒருவரும் இலராகவே, அப்பெருமான், ‘யானே’ நித்தியபிரமசாரி’ என்று திருவடியால் தொட்டமாத்திரத்தில் அக்கரிக்கட்டை உயிர்பெற்று எழுந்தது என்பதாம்.

கண்ணன் அறுபுரஞ் செற்ற கதை:-
முன்ஒருகால் பரமசிவன் திரிபுரசங்காரஞ்செய்தபொழுது அங்கு எரிக்கப்படாமல் மிச்சமாய்நின்ற அறுபதினாயிரம் அசுரர்கள், தங்கள்பந்துக்களது வதத்தால் மிக்க தாப மடைந்தவர்களாய் ஜம்பூ மார்க்கமென்னும் புண்ணியக்ஷேத்திரத்தைச் சேர்ந்து பிரமனைக்குறித்துப் பலநாள் தவஞ்செய்து அப்பிரமனருளாற் பூதலத்திலே அழித்தற்கரிய ஆறுபட்டணங்களைப் பெற்று மிக்க குதூகலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கையில், வசுதேவரது நண்பரும் யாஜ்ஞவல்கியரது சிஷ்யருமாகிய பிரமதத்தரென்னும் முனிவரர் மகா புண்ணிய ஸ்தலமாகிய அவ்வறுபுரத்தை யடைந்து அங்கு ஆவர்த்தை யென்னும் நதியின் தீரத்தில் அசுவமேதயாகஞ் செய்ய, அப்பொழுது வியாசாதி ருஷிகணங்களும் வசுதேவாதி ராஜ சமூகமும் அங்குச் சேர்ந்து நிற்க, நிகும்பன் முதலிய அவ்வறுபுரத்து அசுரரனைவரும் அங்கு வந்து ‘எங்களுக்கு யஜ்ஞபாகமும், உமது கன்னிகைகளும், சகல ரத்நாதி திரவியங்களுங் கொடுக்கப்பட்டாலன்றி, இங்கு வேள்விசெய்யவொண்ணாது’ என்று மறுக்க, பிரமதத்தர், அதற்கு இசைந்திலராதலின், அவர்கள் யாவரும் மற்றுமுள்ள அசுரராஜர்க ளநேகருடன் வந்து யாகசாலையைச் சூழ்ந்து நின்று கன்னிகைகளைக் கவர்ந்துகொண்டு பலவாறு இடையூறு செய்ய, வசுதேவரது விருப்பத்தின்படியே, ஸ்ரீகிருஷ்ணன், பலராமாதி யாதவசேனையோடும் வேறுபல ராஜசேனைகளோடும் புறப்பட்டுச்சென்று, எதிர்த்து வந்த அவ்வசுரர்களுடன் பொருது, தனது திருவாழியால் நிகும்பன் முதலிய அவர்களெல்லாரையுஞ் சங்கரித்து, அவர்களால் அபகரித்துக்கொண்டு போகப்பட்ட கன்னிகைகளை மீட்டுவந்து, யாகத்தை நிர்விக்கினமாக நிறைவேறச் செய்தருளின னென்பதாம்.

பாரதயுத்தத்தில் இறந்த அரசர்களைத் திருதராஷ்டிரனுக்குக் காட்டிய வரலாறு:-
துரியோதனாதியர் சைனியத்தோடும் பாரத யுத்தத்தில் மாண்ட பின்பு, புத்திரசோகவானான திருதராட்டிரன், மனைவியாகிய காந்தாரியோடும், குந்தியோடும் பாண்டவர்களோடும், மற்றும் அந்த யுத்தத்திலிறந்த அரசர்களுடைய பத்தினிகளோடும், வனத்தை யடைந்து ஆச்சிரமத்தில் வாசஞ்செய்திருந்தபொழுது, ஒருநாள், ஸ்ரீ வேதவியாசபகவான்வேறு சில மகாரிஷிகளோடும் அங்கு எழுந்தருள, யுதிஷ்டிரர் அவருக்கு வந்தனை வழிபாடுக ளியற்றிய பின்பு, திருதராட்டிரனும், காந்தாரிமுதலி யோரும், தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகள் யுத்தத்தில் இறந்து போனதற்காகப் பலவாறு சோகித்து, அவர்களை ஒருமுறை பார்க்கும் படி காட்டியருளவேண்டு மென்று வியாசமுனிவரைப் பிரார்த்திக்க, அவர் அங்ஙனமே அன்று அஸ்தமனமானபின்பு யுத்தத்தி லிறந்த அரசரனைவரையும் அவரவர் சைனியங்களுடன் கங்காஜலத்தினின்றும் எழுந்துவரக் காண்பித்தருள, அன்றிரவு முழுவதும் அவரவர்கள் தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகளோடு கூடியிருந்து மகிழ்ந்த பின்பு அவர்கள் யாவரும் அந் நதியில் முழுகிமறைந்துபோயின ரென்பதாம்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த வரலாறு:-
பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும், வைஷ்ணவ சம்பிரதாயத்திற் பிரசித்திபெற்ற ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவருமாகிய பெரியாழ்வார் ஒருநாள் தமது பூந்தோட்டத்தில் திருத்துழாய்ப்பாத்தியமைத்தற் பொருட்டு நிலத்தைக் கொத்துகையில், அங்கு ஸ்ரீதேவிபூதேவிகளின் அம்சமான ஒருமகள் தோன்றினாள்; அவளை அந்தஆழ்வார் தமது மகளாகக் கொண்டு கோதையென்று நாமகரணஞ்செய்து வளர்த்துவந்தார்; அம்மங்கை இளமைதொடங்கி எம்பெருமானிடத்திலே பக்திப்பெருங்காதல் கொண்டு அப்பெருமானையே தான் மணஞ்செய்துகொள்ளக் கருதி, தனது தந்தையார் அவ்வில்லிபுத்தூரில்வாழும் எம்பெருமானுக்குச் சாத்தும்பொருட்டுக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாதசமயம்பார்த்து எடுத்துத் தான் கூந்தலில் தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ, இல்லையோ?’ என்று தன் செயற்கையழகைக் கண்ணாடியிலேகண்டு, தந்தையார் வருதற்குமுன் அம்மலர்மாலையைக் களைந்து, முன் போலவே நலங்காமல் வைத்துவந்தாள்; இச்செய்தியையுணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய்ச் சுவாமிக்குச் சாத்திவர, பெருமானும்பிரீதியோடு ஏற்றருளினான்; இங்ஙனம் பலநாள் கழிந்தபின் ஒருநாள், வெளியிற்சென்ற ஆழ்வார் விரைவில்மீண்டுவந்தபொழுது, பூமாலையைத் தமது மகள் சூடியிருப்பதைப் பார்த்து, கோபித்து அவளைக் கண்டித்துப் புத்தி சொல்லிவிட்டு அன்று எம்பெருமானுக்கு மாலைசாத்தாமல் நின்றார். அன்றையிரவில் திருமால் ஆழ்வாரது கனவில் தோன்றி ‘உமது மகள் சூடிக் கொடுத்தமாலையே நமதுஉள்ளத்திற்கு மிகவும் உகப்பாவது’ என்று அருளிச் செய்ய, அதனால், ஆழ்வார் தம்மகளைத் திருமகளென்றேகருதி, யாவர்க்குந் தலைவி யென்ற காரணத்தால் ‘ஆண்டாள்’ என்றும், மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டபின்பு பெருமானுக்குக் கொடுத்ததனால் ‘சூடிக்கொடுத்தாள்’ என்றும் பெயரிட்டு வளர்த்துவந்தனர்: பின்பு அம்மங்கை ‘திருப்பாவை,’ ‘நாச்சியார்திருமொழி’ என்ற திவ்வியப்பிரந்தங்களைப் பாடி வாழ்ந்து, தந்தையாருடன் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று நம்பெருமாளது திருமேனியில் ஐக்கியமாயினள் என்பதாம். ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறுதிருமாலையை யமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க அதனைப் பெருமான் ‘இந்தமாலை கோதைமணம்பெறவில்லை’ என்று வெறுத்தருளின னென வரலாறுகூறுதலும் உண்டு.

இராவணன் வெள்ளிமலைபறித்த கதை:-
இராவணன் அளகாபுரிக்குச் சென்று குபேரனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன் மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாக ஆகாயமார்க்கத்திலே விரைந்து மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானம் தடைப்பட்டு நிற்க, அதற்குக் காரண மின்னதென்று அறியாது திகைக்கும்போது நந்திகேசுவரர் எதிரில்வந்து ‘சிவபிரானெழுந்தருளியிருக்குமிடமான திருக்கைலாசத்தின் பெருமை யிது’ என்றுசொல்லவும், கேளாமல் அந்தத் தசமுகன், ‘எனது பிரயாணத்திற்குத் தடையாகிய இம்மலையை இப்பொழுதே வேரோடுபறித்து எடுத்து அப்பாலெறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேன்’ என்றுகூறி விமானத்தினின்று இறங்கித் தனது இருபதுகைகளையும், அம்மலையின்கீழ்க் கொடுத்து அதனைப்பெயர்த்தன னென்பதாம்.

சிவபிரான் திரிபுரமெரித்த கதை:-
தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாராகாக்ஷன் கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப் பெற்று மற்றும்பல அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்த விடங்களிற் பறந்துசென்று பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் சிவபெருமான் பூமியைத் தேராகவும் சந்திரசூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசந்நத்தனாகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள் தத்தமது வல்லமையை நினைந்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தானே புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்.

சிவபிரான் பிறைசூடிய கதை:-
சந்திரன் தக்ஷமுனிவனதுபுத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின்வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்குமுன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்புரிந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டுங் கலைகள்வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தன னென்பதாம். திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று தோன்றிய பிறைச்சந்திரனைச் சிவபெருமான் சிரமேற்கொண்டன னென்றும் வரலாறு கூறப்படும்.
சிவபிரான் கங்கைதரித்த வரலாறு:- திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதி தேவலோகத்தி லிருக்க, சூரியகுலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனதுகண்ணின்கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து அக்கங்காநதியை மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அதனது வெகுவிசையாகப்பெருகிவரும் வெள்ளப்பெருக்கைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லாமைபற்றிச் சிவபிரானைப் பிரார்த்திக்க, அப்பகீரதனதுவேண்டுகோளின்படி பரமசிவன் அந்நதியைத் தனது முடியி லேற்றுச் சிறிதுசிறிதாகப் பூமியில் விட்டருளின னென்பதாம்.

அரவம் பூண்ட கதை:-
ஒருகாலத்திற் சிவபிரான் தன்னைமதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின் மனைவிமார்களது கற்புநிலையைப் பரிசோதிக்கவுங் கருதித் தான் ஒருவிடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடநஞ்சென்று தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்றுசெய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி யேவ, சிவபெருமான் தன்மேற்பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்காளாகவுங் கொண்டு, மானைக் கையிலேந்திய புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலால் ஊன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேல் அணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த கதை:-
ஒரு காலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என்செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்: என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’ என்றுஉரைக்க. சிவபெருமான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது, அப்பெருமான் “அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டுஅகன்றது என்பதாம். திருமால் தனது திருமார்பின் வேர்வைநீரைக் கொண்டு அக்கபாலத்தை நிறைத்து ஒழித்ததாகவும் வரலாறு உண்டு.

அஷ்டபிரபந்தத்திலடங்கிய புராண கதைகள் முற்றும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக்கண்ணபுரம் திவ்ய தேச மஹாத்ம்யம் -ஸ்ரீசௌரி ராஜ ஸ்தவம்–ஸ்ரீ திருப் பாத கேச வர்ணனை —

January 10, 2022

ஸ்ரீ திருக்கண்ணபுரமும் ஸ்ரீ புராணமும்

ஸ்ரீ பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை உள்ள அத்தியாயங்களில்
இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது.

விரைந்து மோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க,
அவர் இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார்.

வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான்.
ஒரு காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில் தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட
இம்மன்னின் உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர்.

போர் முடிந்து திரும்பிய வசு தாகவிடாய் தீர்க்க கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு
(“ஒரு விரலில் தம் உலர்ந்த சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்க,
அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய,
முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய
அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன் ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி
அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து நாராயணஸ்திரத்தை ஏவ
அது சுழன்று சுழன்று அப்பாலகனின் காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்றறிந்த வஸு மன்னன்,
பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான்.

என் பக்தர்களான மஹரிஷிகள் உலர்ந்த மாமிசத்தை உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால்
இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட எனக்கு சௌரி என்றும் திருப்பெயர்.
உமது தவறை மன்னித்தோம். நீ வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள,
தன் மகளை திருமணம் புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க,
மாயவனும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

மூலவர் நீலமேகப் பெருமாள், சௌரிராஜன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உற்சவர் சௌரி ராஜாப் பெருமாள் தாயார் கண்ணபுர நாயகி தீர்த்தம் நித்ய புஷ்கரிணி விமானம்
உத்பாலவதாக விமானம்
காட்சி கண்டவர்கள் கன்வ முனிவர், கருடன், தண்டக மஹரிஷி உபரிசரவசு.

முக்தியளிக்கும் ஸ்தலங்களான வேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், தோத்தாத்ரி, ஸாளக்கிராமம், பத்ரிகாச்ரமம். நைமிசாரண்யம்
இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாச்சரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் பெருமாள்

இவ்விடத்து திருவஷ்டாச்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார்.
இதைப்பற்றி பாத்ம புராணத்தில் 5 ஆம் காண்டத்தில் 110வது அத்தியாயத்தில் 44, 45, 46 ஆம் சுலோகங்களில்
கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிஞ்ச முஷ்ணம் தோதபர்வம் ஸாளக்கிராம புஷ்கரஞ்ச நரநாரயணச்ரமம் நைமிசம்
சேதிமே ஸ்தாநா ந்யஷ்டௌ முக்தி பரதாநிவ ரதேஷ் வஷ்டாசஷரை கை வர்ணுமுர்திர், வஸாம்யகம் திஷ்டாமி
க்ருஷ்ண சேஷத்ர புண்ய ஸ்பதக யோகத அஸ்டாச் சரஸ்யை மந்தரஸ்ய சர்வாட்ச்சர மயந்த்ஸதா.

சௌரி, சௌரி என்னும் சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்பது பொருள்.
75 சதுர்யுகங்களைக் கொண்டது. இந்த ஸ்தலம் என்றும் கூறுவர்.

இவ்விடத்தில் பெருமாள் மும் மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும்,
இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரை புஷ்ப மத்தியில் ச்ருஷ்டி நிலையில் பிரம்மாவாகவும்,
அன்றே விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் (3 3/4 மணி நேரம்) ஸம்ஹாரம் செய்யும் ருத்ரனாகவும் (சிவனாகவும்) காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு.

நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காணவேண்டும் என்று வீபிஷணர் கேட்க,
கண்ணபுரத்தில் காட்டுவோம் வாவென்ன வீடணணுக்கு நடையழகு காட்டியதாக ஐதீகம்.
இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்சியை சித்திரிக்கும் திருவிழா இங்குண்டு.

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம்.
இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாச்சர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்.

கிருஷ்ணாரண்யம் என்றும், தண்டகாரண்யம் என்றும் இத்தலம் வழங்கப்படும்.

இத்தலத்திற்கு எதிரில் இரண்டு யோஜனை தொலைவில் (ஒரு யோஜனை என்பது 10 மைல்) ஒரு மலை கடலுள் அமிழ்ந்துள்ளது.
கருடனின் வடிவங்கொண்ட இம்மலை கருடபர்வதமென்றே அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் இறக்கைகளை வெட்ட
இம்மலை மட்டும் கடலுக்குள் மூழ்கி இந்திரனுக்குத் தப்பித்து விட்டதாம்.
இவ்விதம் தப்பித்ததால் இறுமாப்புக் கொண்ட கருடன் இறுமாப்போடு இங்குமங்கும் பறக்க,
இத்தலத்தின் விமானத்தின் மீது பறக்க, இத்தலத்து பாலகர்கள் இவன் நிழலைப் பற்றியிழுக்க
கீழே விழுந்த கருடன் தன் தவறு உணர்ந்து கருட பர்வதத்தின் மீதமர்ந்து
இப்பெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி மோச்சம் பெற்றான், என்றும் இத்தலத்தைப் பற்றி புராணங்கள் கூறும்.

சித்த சரவசு என்னும் பாண்டிய மன்னன் மணலூரைத் தலநகராகக் கொண்டு ஆண்டான்.
அவன் தனது மகள் உத்தமையுடன் தாமிரபரணியில் நீராட இறங்கும் தருவாயில் திடீரென்று வெள்ளம் உயர்ந்து
உடனே வடிந்து காணாமல் போய்விட்டது. மன்னனைக் காணாது அவன் மனைவி மக்களும், மந்திரி பிரதானிகளுந் திகைத்து நிற்க,
பாண்டியனின் அவைக்கு வந்த சகல லோக சஞ்சாரியான அகத்தியரின் சீடர், மந்திரி பிரதானிகளை நோக்கி,
மன்னனும் அவன் மகள் உத்தமையும் பிரம்ம லோகத்தில் இருக்கிறார்களென்று பின்வரும் நிகழ்வைச் சொன்னார்.

கங்கை முதலான சகல தீர்த்தங்களும், தம்மிடம் பல தரப்பட்ட மக்களும் நீராடி தமது புண்ணியங் குறைந்து
பாவம் பெருக்கெடுத்துவிட்டதெனவும், இம் மாசினைப் போக்க யாதாயினுமோர் உபாயங்கூறு மென்றும் பிரம்மாவைக் கேட்க,
சகல பாவங்களையும் போக்கும் பெருமாள் எழுந்தருளியுள்ள கண்ணபுரத்தில் உள்ள நித்ய புஷ்கரணியில் நீராடி
அப்பெருமானைத் துதித்தால் எல்லாப் பாவங்களும் உடனே தீருமென்று பிரம்மா உரைக்க,
சகல தீர்த்தங்களும், இப்புஷ்கரணியில் புகுந்தன.

அப்போது தாமிரபரணி தீர்த்தமும் இந்த புஷ்கரணியில் புக அதனால் பூலோகத்தை அடைந்த பாண்டியனும் அவன் மகளும்
இப்பெருமானை வழிபாடு செய்து நிற்க, இவ்வரலாறு உணர்ந்த சோழன், பாண்டியனை எதிர் கொண்டழைத்து
தன் அரண்மனையில் விருந்தினனாய்த் தங்க வைத்து இறுதியில் பாண்டியன் மகள் உத்தமையை
சோழராஜனின் மகன் சுசாங்கனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் வரலாறுண்டு.
பாண்டி நாட்டின் வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நிகழ்ச்சி ஒரு ஆய்வுக்குரிய விஷயமாகும்.

வசு என்னும் மன்னன் (உபரிசரவஸு ) விஸ்வகர்மாவைக் கொண்டு இக்கோயிலை கட்டுவித்தான்.
அவன் புத்திரப் பேறு இன்மையால் இத்தலத்தில் அசுவமேதயாகம் செய்ய யாக குண்டலியிலிருந்து தோன்றிய ஒரு புருஷன்
இரண்டு செங்கழு நீர் மலர்களைத் தர அவற்றை முகர்ந்த வசுவன் மனைவி சுந்தரி அழகிய பெண்மகவைப் பெற்று
பத்மினி (பதுமினி) என்று பெயரிட்டழைக்க, அப்பெண்தான் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க வேண்டுமென்று,
தவமியற்ற பெருமாளும் அவ்விதமே செய்து பத்மினியைத் தம் நெஞ்சில் ஏற்றுக் கொண்டார் என்பது பாத்ம புராணம் செப்பும் செய்தியாகும்.

இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், பெருமாளுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து உண்மை பக்தராயிலங்கி வந்தார்.
அவர் பெருமாளுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு அர்த்த சாமத்தில் திரும்ப,
அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க,
மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான்
அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து,
இன்றும் அர்த்த சாமத்தில் இப்பெருமானுக்கு முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று மதில்கள் இருந்தன என்றும்
சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும்.
இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர்
“பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று
தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, பெருமாள் தமது பிரயோகச் சக்கரத்தை யேவி, மன்னனைக் கொன்றார்.
இதனால் இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டு புண்ணான “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம்.

மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

விருத்திரன் என்னும் அரக்கன் தேவலோகத்தை யழிக்க அவனைக் கொன்று இந்திரனுக்கு மீண்டும்
இந்திர போகத்தை இப்பெருமாள் அளித்தார் என்றும் புராணம் கூறும்.

ஆண்டாளும் திருக்கண்ணபுரமும் நோய் தீர மருந்து…

செங்கமலக் காவிலுள்ள சீராரிளங் கோதை
அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு
என்னுள்ளம் நோய் தீர மருந்துண்டோ சொல் தோழீ என்ன
உண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள்
தென்னன் குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும் சுக்கைத் திகழத் தட்டி
ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி
மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடி கட்டி
பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து
திருவேங்கடமென்னும் விறகை முறித்து வைத்து
ஓம் நம: என்னும் உமியைத் தூவி
திருநீர்மலை யென்னும் நெருப்பை மூட்டி
திருமாமணிக் கூடத்தில் இறக்கி வைத்து
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து
அமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து
கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால் இந்நோய் தீருமம்மா

ஆண்டாள் சொல்வது இது நல்ல மருந்து தோழீ :

இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்?
இது ஊரில் இல்லாத மருந்து
உலகோர் அறியாத மருந்து
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து
இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து
பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து
நாராயணனே நமக்கே பறைதருவானென்று பாடிப் பறை கொள்ளும் மருந்து
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் மருந்து
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து
எருதுக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் யாரும் அறியாத மருந்து
நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி வீயுமாறு செய்யும் மருந்து
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள் பகரும் மருந்து
அணியனார் செம்பொன் ஆய அறுவரை அனைய கோயில் மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்கும் மருந்து
தாயே தந்தையென்றும் தாரமே கிளை யென்றும் நோயில் பட வொட்டாத மருந்து
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம் இன்னோய்க்கும் ஈதே மருந்து
உன்னுள்ளம் நோய் தீர்வதற்கு இதுவே உகந்த மருந்தம்மா –

திருக்கண்ணபுரமும் வடுவூர் சிலை அழகும்
திருவாரூர் தேரழகு,
மன்னார்குடி மதிலழகு,
வடுவூர் சிலையழகு என்று
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள்.

இந்த வடுவூர் சிலை இங்கு வந்ததுக்கு கூறப்படும் செவி வழிக் கதை,
ஸ்ரீ ராமர் வனவாச காலத்தின் முடிவில் அயோத்திக்கு செல்ல ஆயத்தமாகிறார்.
அப்போது காட்டில் உள்ள ரிஷிகள் ராமர் மீது கொண்ட பிரியத்தால் தங்களுடனே ராமர் இருக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
அவர்களின் அன்பு கட்டளையில் சிக்குண்ட நிலையில் ராமர், தனது உருவத்தை சிலையாக வடித்து ஆசிரம வாயிலில் வைக்கிறார்.
அடுத்த நாள் அங்கு வரும் ரிஷிகள் சிலையின் அழகில் மயங்கி நிற்கிறார்கள்.
அப்போது ராமர் தங்களுடனேயே தங்க மீண்டும் வேண்டுகிறார்கள்.
இதை மறுக்க முடியாமல் தவிக்கும் ராமர், நான் வேண்டுமா? இந்த சிலை வேண்டுமா ? என்கிறார்.
ஏற்கனவே சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், சிலையை வாங்கிக் கொள்கிறார்கள்.
இதை பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்கண்ணபுரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்.

பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சிலை, இத்துடன் இருந்த சீதை, லட்சுமணர், பரதன், ஹனுமன் சிலைகளையும்
தலை ஞாயிறு என்ற ஊரில் உள்ள ஒரு ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைக்கிறார்கள்.
கால ஓட்டத்தில் இது பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி பரம்பரை மன்னர்
ஒருவர் கனவில் ராமர் வந்து, ஆலமரத்து அடியில் தான் புதையுண்டு இருக்கும் தகவலை சொல்லி,
தன்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.

திடுக்கிட்டு எழும் அந்த மன்னர், அந்த நள்ளிரவு நேரத்தில் தனது படைகளுடன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு செல்கிறார்.
சிலைகளை மண்ணில் இருந்து வெளியில் எடுக்கிறார்.
அப்போது மன்னரை சூழ்ந்து கொள்ளும் அப்பகுதி மக்கள் சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.
அவர்களை சமாதானம் செய்து, பரதன், லட்சுமணர் சிலைகளை மட்டும் அங்கே பிரதிஷ்டை செய்கிறார்.
சிலைகளைக் கொண்டு தஞ்சாவூர் செல்லும் வழியில் வடுவூரில் தங்குகிறார்.
இது பற்றி தகவல் அறிந்து இந்த ஊர் மக்கள், ராமர் சிலையை அங்கிருந்த கோபாலன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டுகிறார்கள்.
மன்னர் மறுக்கவே, பக்தர்கள் சிலர் கோயில் கோபுரத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்போம் என்றதும், மன்னர் சம்மதிக்கிறார்.
அன்று முதல் கோபாலன் கோயில் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலாக மாறியது.
(இன்றும் இதை பெருமாள் கோயில் என்றே அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்).
சிலையில் உள்ள கலை நுணுக்கம், பார்த்தவரை மயக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி
இவற்றைக் கொண்டு மேற்சொன்ன செவிவழிச் செய்தி உண்மைதான் என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.
மேலும் ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்படுகிறது. இது பெண் வடிவமாக அமைந்து விடுகிறது.
இதனால் அந்த சிலையை அருகில் அழகிய சுந்தரி அம்மன் (பிடாரி கோயில்) என்று பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர், ஹனுமன் சமேதராய் காட்சியளிக்கிறார்.
இதை கண்வ மகரிஷி, குலசேகர பெருமாள் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் தரிசித்துள்ளனர்.

——————

ஸ்ரீ திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாத கேசம் திருக்கண்ணபுரம் பண்டித ரத்நம்
உபய வேதாந்த வித்வான் ஸ்ரீ டி.எஸ். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமி(சிரோமணி) அருளிய
ஸ்ரீசௌரி ராஜ ஸ்தவத்தின் பகுதி

ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருப்பாத கேசம்

உத்பலா வதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்!
சௌரிராஜ மஹம் வந்தே ஸதா- ஸர்வாங்க-ஸூந்தரம்!!

பத்மா-பயோதர-தடீ- பாடீர- த்ரவ- ரஞ்ஜிதம்!
பாது ஸ்ரீசௌரிராஜக்யம் ஜ்யோதி: பத்ம- விலோசநம்!

திருமேனி
ப்ரபுல்ல- முக- பங்கஜம் ஸ்மித- விகாஸி- தந்த ப்ரபம் விகாஸ-நயநோஜ்வலம் விகஸித-ப்ரவாளாதரம்!
ஸமுந்நத- சதுர்புஜம் வித்ருத-சங்க-சக்ரம் மஹ: ஸஹஸ்ர- தபந-ப்ரபம் சௌரி-ஸ்ஜ்ஞம் ஹ்ருதி!!

அலர்ந்த முகமாகிற தாமரை, புன்முறுவலால் விளங்குகின்ற பற்களின் காந்தி, மலர்ந்த கண்களின் ஒளி,
பவளுமும் தோற்கும்படியான அதரம், எடுப்பான நான்கு தோள்கள், தரித்துள்ள சங்குச் சக்கரம்,
ஆயிரம் சூர்யர்களின் ஒளி இவை வாய்ந்த, சசௌரி என்ற பெயருடையதான சோதி என் மனத்தில் விளங்குக.

2. யாவர்க்கும் அரியன்
தண்டகாதி- யோகி-ப்ருந்த- வந்திதாங்க்ரி-பங்கஜம் பஞ்சபாண- பீதயேவ பத்மயாச்ரிதோரஸம்!
ஸ்ரீபராங்குசாதி- பஞ்ச-ஸீரிபிஸ் ஸமீடிதம் பாவயேய சௌரி மத்ய க்ருஷ்ணபத்த நாதிபம்!!

தண்டகரிஷி முதலிய முனிவர்களது கணங்களால் வணங்கப்படும் திருவடித் தாமரைகளை உடையவனும்,
மன்மதனால் அஞ்சுபவன் போல லட்சுமிதேவி தன் உறைவாகக் கொண்ட திருமார்பை உடையவனும்,
நம்மாழ்வார் முதலிய ஐந்து ஆழ்வார்களால் துதிக்கப்பட்டவனும்,
திருக்கண்ணபுரத்திற்கு அதிபனுமான ஸ்ரீசௌரிராஜனை இப்போது மனத்தால் நினைப்போமாக.

3. திருமேனி அழகு–ஒளி
நீரத்ந-மய-பூதராக் ருதிஸ் த்வம் ஸஹஸ்ரகர-பாஸீரார்சிஷா!
ப்ராஜஸே பவி-வரேண பாநுமாந் நீலவர்ண இவ ஸாநுமாந் புவி!!

பெருமானே! நீ நீலக்கல் மயமான மலையின் உருவை உடையவன்.
ஆயிரம் கிரணங்கள் வாய்ந்த சூர்யன் போலே ஒளிச் சுடரை உடைய சிறந்த கதாயுதத்தை உடையவனாய்,
சூர்யனோடு கூடிய கருநிறமுடைய மலைபோலே நீ இவ்வுளகில் விளங்குகிறாய்.

4. திவ்யாயுதங்களால் திருமேனி மேலும் விளங்குதல்
நீலாத்ரி-ச்ருங்க- விஹரத்-தபநேந்து- முக்யைர் ஜ்யோதிர்கணைரிவ தநுஸ் தவ பூஷணைர் ஹி!
ரம்யை:கிரிட-வர- குண்டல- சுந்தரஹார- ஸ்ரீகௌஸ்துபாதிபி ரஹோ ப்ரவிபாதி தீப்தா!!

நீல பர்வதத்தின் கொடு முடியில் உலாவுகின்ற சந்த்ர, சூர்யர்கள் முக்கியமாக வாய்ந்த
நட்சத்திரங்களின் திரள் போலே அழகியவான கிரீடம், சிறந்த குண்டலங்களை,சந்தரஹாரம், ஸ்ரீகௌஸ்துபம்
முதலான ஆபரணங்களாலே உனது திருமேனி ஒளிர்ந்து விளங்குகிறது. ஆச்சர்யம்!

5. திருவடிகள்
யத்பாத-பத்ம-யுசுளம் ம்ருதுலம் ஹி தேவ்ய: பத்மா-தரா-வஸீஸீதாஸ் ஸதயம் ஸகோதா:
ஸம்வாஹயந்தி ஸீகுமாரதரை: கரைஸ் தத் சௌரே! விதாத்ரு- விநதம் மம சேதஸி ஸ்யாத்!!

ஸ்ரீதேவி, பூமிதேவி, வஸூவின் திருமகளான பத்மிநி இவர்கள் ஆண்டாளுடன் மிகவும் ஸூகுமாரமான
தங்களது கரங்களாலே தயையுடன் மிருதுவான உனது திருவடிகள் இரண்டையும் பிடிக்கின்றனர்.
ஸ்ரீசௌரிராஜனே! ப்ரஹ்மாவால் வணங்கப்படும் அப்படிப்பட்ட அந்த இரண்டு திருவடிகளும் எனது மனத்துள்ளே உறைக.

6. திருவடிகள்
யத்-பாத-பல்லவ மிதம் தவ காம- தப்தா கோப்யோ ததுஸ் ஸ்தந-யுகே விஜஹீச் ச தாபம்!
சௌரே! விதாய மம மூர்த்தநி தந் துராபம் ஸம்ஸார தாப மபநோதய மாமகீநம்!!

காமத்தால் தாபங் கொண்ட கோபிமார்கள் உனது பாதங்களாகிய தளிரைத் தம் ஸ்தனங்களில் தரித்துத் தமது தாபம் நீங்கினர்.
சௌரிராஜனே! கிடைத்தற்கு அரிதான அந்தப் பாதங்களாகிய தளிரை நீ எனது தலையில் வைத்து
எனது ஸம்ஸார தாபத்தை நீக்கி அருளவேணும்.

7 திருவடிகள்
யத்-க்ஷாள நாம்பு-பரிபூத-சிராச் சிவோபூத் யத்வந்தநம் விதி-சிவேந்த்ர-துராப மாஹூ:!
யச்சிஹ்நிதாநி ஹி சிராம்ஸி ஸதர் ப்ரபந்நா வாஞ்சந்த்யமீ பதயுகம் தவ தந் நதாஸ்ம:!!

உனது திருவடிகளை விளக்கிய தீர்த்தத்தினால் சிவன் புனிதமான சிரத்தை யுடையவனாவன்,
(இத்) திருவடிகளை வணங்குதல் என்பது பிரம்மன், சிவன், இந்திரன் இவர்களுக்கும் பெறற்கு அரிது எனக் கூறுகின்றனர்.
உன்னையே சரணாகாக பற்றிய ப்ரபந்நர்கள் தம் சிரங்கள் இத்திருவடிகளாலே அலங்கரிக்கப்பட விரும்புகின்றனர்.
அப்படிப்பட்ட திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

8.திருப்பாதுகைகள்
சௌரே!(அ)வநம் யே (அ)குருதாம் தரித்ர்யா வதே(அ)டதஸ் தே கில பாதுகே த்வே!
ஸீவர்ண-ரத்நாதி-விபூஷிதே தே சுபே சிரச்சேகரதா முபேதாம்!!

ஸ்ரீசௌரிராஜனே! நீ (இராமபிரானால்) வனத்தில் சஞ்சாரம் செய்தபோது உனது பாதுகைகள் இரண்டும் பூமியை ரக்ஷித்தன.
தங்கத்தாலும் ரத்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவை இரண்டும் என் தலைக்கு அலங்காரமாகுக.

9.பாதபத்ம பீடம்
சௌரே!! ஸூகந்தித்வ-ம்ருதுத்வ-முக்யைர் குணைர் ஜிதம் த்வத்-பதயோர் யுகேந!
தத்தே கிமப்ஜம், பதபத்ம-பீடீ- மிஷேண தே பாத-யுகம் துராபம்!!

ஸ்ரீசௌரிராஜனே! நறுமணம், மென்மை முதலிய பண்புகளால் உன் திருவடிகள் இரண்டாலும் ஜயிக்கப்பட்ட தாமரை மலர்,
(உனது) பாதபீடம் என்ற வியாஜத்தாலே (கிடைத்தற்கரிய) உன் திருவடிகள் இரண்டையும் சுமக்கின்றவா என்ன?

10. திருவடிகளின் சோதி
யத் வாத்ர சௌரே! பவத:பதாப்யா மதோ விஸாரீ மஹதாம் ஹி ராசி:!
புல்லாரவிந்தாக்ருதி-பாக் கிலாயம் ஸ்புடாப்ஜ-பீடத்வ முபைதி நுõநம்!!

ஸ்ரீசௌரிராஜனே! அன்றியும் பூஜ்யனான உனது திருவடிகளினின்றும் கீழே பரருவுகின்ற இந்தச் சோதியின் பிழம்பு,
அலர்ந்த தாமரையின் வடிவம்போல மலர்ந்த அந்த பத்மபீடமாயிருத்தலைப் பெற்றுள்ளது; நிச்சயம்!

11. திருவடி நகங்கள்
சௌரே! தவ ப்ரபத-சும்பி-நகார்த்த-சந்த்ர- ஸம்சீதிதாயி நகரேப்ய இஹ ப்ரவ்ருத்தா:
ஜ்யோத்ஸ்நாஸ் தரிவிக்ரம-பத-ப்ரதம-ஸ்ருதாநாம் கங்காம்பஸாம் சரதியம் ரசயந்தி ஹந்த!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவடிகளின் நுனியில் உள்ள விரல்களில் விளங்குவனவும்
புதிய அஷ்டமி சந்த்ர்களோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணும் வனவுமான நகங்களிலிருந்து வெளி வருகிறது சந்திரிகையாகிய ஒளி:
இங்கு திரிவிக்ரமானாகிய பெருமானது திருவடிகளினின்றும் முதலில் பெருகிய கங்கா ஜலத்தின்
வெள்ளமோ எனகிற எண்ணத்தை (எங்களுக்கு) இது விளைவிக்கின்றது. ஆச்சரியம்!

12. திருத்தொடைகள்
சௌரே தலேஹ ஜங்க்கே மந்மத துõணீர-யுகள-கர்வமுஷீ ஊர்வோர் யுகளி சேயம் ரம்பாஸ்தம்பாதி-கம்பீரா!!

ஸ்ரீசௌரிராஜனே (இங்கு) உனது முழந்தாள்கள் இரண்டும் மன்மதனது அம்புறாப்பையின் கர்வத்தைக்கவர வல்லன.
உனது தொடைகள் இரண்டும் வாழைமரத்தின் சிறப்பை ஒத்தன.

13. அரை (கடி), இடை
தே ச்ரோணீ-பலக மேதத் காங்கம் புளிநம் திரஸ்குருதே!
அவலக்நம் சாபிக்ருசம் சௌரே! ஸ்மாரயதி நோ டக்காம்!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது இந்தக் கடிதடம் இரண்டும் கங்கையின் மணற் குன்றுகளை அவமதிக்கின்றன;
உனது மெலிந்த உள்ளடங்கிய இடை எங்களுக்கு உடுக்கையை நினைவூட்டுகின்றது.

14. இடது திருக்கை
வாமோரு- விந்யஸ்த-கரோ ஹி சௌரே! ஸத்வம் ஜநாநாம் ஸ்வபதாச்ரிதாநாம்!
ஸம்ஸார வாராம்நிதி ருருதக்ந இதீவ ஸந்தர்சயவஸிஹ தேவ!!

தேவனாகிய சௌரிராஜனே! இடது தொடையில் வைக்கபப்பட்டுள்ள உனது இடது திருக்கை
உனது திருவடிகளையே தஞ்சமாகப் பற்றும் ஜனங்களுக்கு, ஸம்ஸாரமாகிய கடல் தொடையளவே ஆகும்.
(அஞ்சவேண்டா) என்று நீ அறீவிக்கிறாய் போலும்.

15. வலது திருக்கை
நநு வதாந்யதமஸ்ய பலேர் மகே த்ரிபுவந-ஸ்வ-வசீகரணோத்யதாம்!
ப்ரகடயம் ஸ்தவ வாமநதாம் விபோ ப்ரஸ்ருத-தக்ஷிண-ஹஸ்த இஹாஸி கிம்?!!

பெருமானே! மிகச் சிறந்த கொடை வள்ளலாகிய மகாபலியின் யாகத்தில் மூன்று உலகங்களையும்
ஸ்வாதீனமாக வாங்கிக்கொள்ள முயன்ற உனது வாமனத் தன்மையை வெளியிடுபவனாய் நீ
இங்கு நீட்டிய(குவிந்த விரல்களோடு கூடிய) வலது திருக்கை உடையவனாய் இருக்கிறாயா, என்ன?

16. வலது திருக்கை
உபாயநம் பக்த-ஜநாதிஸ்ருஷ்டம் க்ரஹீது முத்யுக்த இவேஹ சௌரே!
வாமேதரம் ஹஸ்த மிஹ ப்ரஸார்ய த்வம் ப்ராஜஸே பக்த-ஜநாநுகம்பீ!!

ஸ்ரீசௌரிராஜனே! பக்த ஜனங்களால் கொடுக்கப்படும் காணிக்கைளை வாங்கிக் கொள்வதை விரும்புவன் போல்
வலது திருக்கையைக் குவித்த விரல்கள் உடையதாய் நீட்டி, நீ பக்த ஜனங்களிடம் தயவுடையவனாய் இங்கு விளங்குகிறாய்.

17. வலது திருக்கை
ஆதாது-காம இவ யத் ப்ரஸ்ருதே ஸ்வஹதம் வாமேதரம் வஹஸி தத் வஸீபுத்ர்யவேக்ஷ்ய!
அந்யாம் கிமேஷ பரிணேஷ்யதி மாத்ருசீமித்- யாசங்கயேவ ஸவிதம் ந ஜஹாதி ஸா தே!!

ஸ்ரீசௌரிராஜனே!(கொடுப்பதை) பெற்றுக்கொள்ள விரும்புவது போல் நீ உனது வலது திருக்கரத்தை நீட்டிக்
குவிந்த விரல்களுடன் விளங்குகிறாய்.
அதை வஸூவின் திருமகளான பத்மிநி தேவி நன்கு பார்த்து,
‘நம் போன்ற வேறொரு பெண்ணை இவர் மணந்து கொள்ளப் போகிறாரா?’ என்ற சங்கையால்
உனது ஸமீபத்தை ஒருபொழுதும் விட்டு அகல்வதில்லை போலும்?

18. திருநாபி
தவத்-திவ்ய-ஸூந்தர-வபு:ப்ரபவஸ்து சௌரே! காந்த்யா சர:கலு தநௌ தவ மயத்தேவே!
ஸ்ங்கோச மேத்ய விஸரந் கிமு ஸப்ரமோய மேதீதி ஹந்த திய மாதநுதே சத்ய நாப்யா!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது அழகிய திருமேனியிலிருந்து உண்டாகும் காந்தியின் வெள்ளம்,
ஒடுங்கிய உனது இடையில் குறுகியப் பாய்வதாய்க் கொண்டு உனது திருக்கொப்பூழின் சுழியோடு கூடியதாய்
விளங்குகிறதோ என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது; ஆச்சரியம்.

19. திருநாபி மலர்
த்வத் வாம-தக்ஷிண-த்ருசோர் ஹி விலோகநேந தந்நாபி-பங்கஜ மீகார்த்த-விகாஸ மேத்ய!
தத்வா பயஸ் ஸ்வ-சிசவே த்ருஹிணாய சங்கோ லக்ஷ்ம்யா விஸ்ருஷ்ட இதி ஹந்த தியம் தநோதி!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது இடக்கை,வலக்கண் இவற்றின் பார்வையாலே, உலகிற்குக் காரணம் எனப் புகழ் பெற்ற
உனது திருக்கொப்பூழின் தாமரை பாதி மலர்ந்தும் பாதிமூடியும் உள்ள நிலையில் உள்ளது.
ஸ்ரீலக்ஷ்மி தேவி தன் குழந்தையாகிய பிரம்மனுக்குப் பால் ஊட்டிக் கீழே வைத்த பாலாடைச் சங்கு தானோ
இது என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றது. ஆச்சரியம்.
சந்தர ஸூர்யென ச நேத்ரே என்பது குறிப்பு.

20. திருநாபி மலர்
த்வதீய- நேத்ரத்வ முபேயிவத்ப்யாம் ஸமம் நிசா-நாத- திநேச்வராப்யாம்!
த்வந்-நாபி-பத்மம் லபதே விகாஸ- ஸங்கோச-தௌஸ்த்யம் ஸததம்ஹி சௌரே!!

ஸ்ரீசௌரிராஜனே! சந்த்ர ஸூர்யர்கள் இருவரும் உனக்குக் கண்களாய் விளங்குவதைப் பெற்றுள்ளனர்.
அவர்களால் ஒருங்கே பார்க்கப்படும் உனது திருக்கொப்பூழ் தாமரையானது
எப்போதும் மலர்வதும் குவிவதுமாய் ஒரு நிலை பெறாது விளங்குகின்றது;
இதனால் துஸ்திதி ஒருநிலை பெறாமை பெற்றுள்ளது.

21. திருவயிறு
த்வயா நிகீர்ணம் ப்ரளயேப்யண்ட ஜாதம் த்ருத்வாபி லோயம் க்ருசதா முபேத:!
குக்ஷிர் கிமண்டாநி பஹூநி பூயோ தர்த்தும் ச வாங்சத்யவநாய தேஷாம்!!

ஸ்ரீசௌரிராஜனே! பிரளய காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட அண்டங்களின் கணங்கள் பலவற்றை
உள்ளே தரித்துக் கொண்டிருந்தாலும் வற்றுதலை அடைந்து விளங்கும் இந்த உன் திருவயிறு,
மீண்டும் பல அண்டங்களை விழுங்கி உள்ளே தரித்துக்கொள்ள விரும்புகிறதா, என்ன?

22. அரை வடம்
உபகுக்ஷிதடே கலிதா ரசநா- நவ-கிங்கிணிகா-ததி ரத்ர புந:!
கிமிஹாண்ட- ததிர் கிரணே ஸ்கலிதா லபநா திதி நோ திய மாத நுதே!!

ஸ்ரீசௌரிராஜனே! உனது திருவயிற்றின் கீழ்பாகத்தில் அணிந்துள்ள அரை வடத்தின் புதிய சிறு சதங்கைகளின் திரள்,
நீ அண்டங்களை விழுங்கியபோது முன்புறத்தில் முகத்திலிருந்து சிதறி விழுந்த அண்டங்களின் திரளோ
என்ற எண்ணத்தை இங்கு நமக்கு விளைவிக்கின்றது.

23. திருவரை
கௌசேய-புஷ்பித-கடிம் பரிவேஷ்ட்ய பட்ட பந்தேந சித்ர-பரிகர்ம-பரிஷக்குருதே ந!
தஸ்மிந் நிகாய கலு நந்தக மஞ்ஜநாத்ரிர் பாபாஸி கைரிகவிசித்ர இவாத்ய சௌரே!!

ஸ்ரீசௌரிராஜனே! பட்டு உடுத்தி, அதனாலே பூத்தாற்போன்ற உனது திருவரையில் இறுகக்கட்டிச் சுற்றி
நன்கு அலங்கரிப்பது பட்டுக் கச்சு, அதில் நாந்தகம் என்ற கத்தியைச் சொருகிக் கொண்டு நிற்கும் நீ,
நீலத்தடவரை ஒன்று (தன்னிடமுள்ள) மனச்சிலை முதலிய பல நிறங்கள் வாய்ந்த
தாதுப் பொருட்களால் விளங்குவதுபோல் பிரகாசிக்கிறாய்!

24. திருக்கைகள்
ஹந்த! கல்பக-தரோஸ் ஸமுதீர்ணாஸ் ஸ்பீததா முபகதா:கிமு சாகா:!
இத்யமீ பரிக- தைர்க்யம்- ஜூஷஸ் த்வத் பாஹவோ விரசயந்தி தியம் ந:!!

உழல் தடி போல் மிகவும் நீண்ட உன் கைகள் கற்பகத் தருவினின்றும் மேலே எழுந்தவையும்,
செழிப்பை உடையவுமான அதன் கிளைகளோ என்ற எண்ணத்தை நமக்கு விளைவிக்கின்றன; ஆச்சரியம்.

25. திருமார்பில் பிராட்டி
ரம்ய- மோக-சிலாதல-பாஸ்வத்- வக்ஷஸீஹ கமலா கநகப்ரபா!
கௌஸ்துபேந மணிநா கிமு ரக்தா பாஸதே ப்ரியதமா இவ சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அழகிய இந்திர நீலக் கல் மயமான கற்பாறைபோல் விளங்குகின்றது உனது திருமார்பு.
அதில் வீற்றிருக்கிறாள் பொன்னிறமான லட்சுமிதேவி.
உன் திருமார்பிலுள்ள கௌஸ்துபம் என்னும் ரத்தினத்தால் அவள் சிவப்புடையவளாய் (ஆசையுடையவளாய்)
உனது பிரியத்திற்கு விஷயமாக விளங்குகிறாளா, என்ன?

26. திருமார்பில் பிராட்டி
கமலாலயா ஹி கலிதாவஸதா ருசிரம் கடவாட- ஸீத்ருடம் விபுலம்!
ந ஜஹாதி ஜாத்வபி யதீய முரஸ் ஸஹி சௌரி ரத்ர லஸதீ ஹ புர:!!

தாமரை வாழ்விடமாகக் கொண்ட லட்சுமீதேவி, கதவு போல் மிகத் திண்ணியதும் விசாலமுமான
ஸ்ரீசௌரிராஜனது திருமார்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு, அதை ஒருபோதும் விடுவதில்லை.
அந்த ஸ்ரீசௌரிராஜன் திருவுறை மார்பனாக நமக்கு எதிரில் விளங்குகிறான்.

27. ஸ்ரீகௌஸ்துபம்
வக்ஷஸீஹ விபுலே தவ சௌரே! கௌஸ்துபம் மணிவரம் ருசி-
தீப்ரம் த்வம் பிபர்ஷி கமலா-ப்ரியகாமஸ் ஸோதரம் பரிஸரே கிம முஷ்யா:?

ஸ்ரீசௌரிராஜனே! நீ லட்சுமி தேவியின் விருப்பத்தைச் செய்வதில் ஆசையுடையவனாகி,மிகவும் அகலமான
உன் திருமார்பில், அவளுக்கு ஸஹோதரத்தன்மை பெற்றதும், காந்தியால் ஜ்வலிப்பதுமான
கௌஸ்துபம் என்னும் சிறந்த இரத்தினத்தை அங்கு அவளுடைய பக்கத்திலேயே (அமையும்படி)
தரித்துக்கொண்டிருக்கிறாயா,என்ன?

28. திருமார்பில் முத்து வடங்கள்
நீல-சிலாதல-பாஸ்வர- வக்ஷஸ்- ஸங்கி-மநோஹர=மௌக்திக-ஹாரா:!
தே ஹி விபாந்தி கிரேர் நிபதந்த்யஸ் ஸித-சிசிரா இவ நிர்சர-தாரா:!!

கறுப்பான மணிப் பாறை போல் விளங்கும் உன்திருமார்பில் சாத்தப்பட்டுள்ள அழகிய முத்து வடங்கள்
மலையினின்றும் கீழே விழுவதும் வெளுத்தும் குளிர்ந்துமிருக்கிற மலையருவியின் தாரைகள் போல ஒளிர்கின்றன.

29. திருப்பூணுல்
த்வத்-காந்தி-பூர-ப்ரஹதா நிவ்ருத்தா: அபீஹ ச தே பக்த- த்ருசஸ்து
சௌரே த்வத்-யஜ்ஞஸூத்ரந் த்வவலம்ய தேந பவந்தி வக்த்ரேந்த்வலோக-த்ருப்தா:!

ஸ்ரீசௌரிராஜனே! உனது பக்தர்களின் கண்கள் உன்திருமேனியின் காந்தி வெள்ளத்தாலே தள்ளுண்டு
திரும்பிய போதிலும், உனது யஜ்ஞோபவீதமாகிய ஸூத்ரத்தைப் பற்றிக்கொண்டு,
மீண்டும் மேலே சென்று உனது சந்திரன் போன்ற முகத்தைப் பார்த்து, அதனால் திருப்தி பெற்றனவாக ஆகின்றன.

30.வனமாலை
ஆப்ரபதீநா தே வநமாலா சித்ர-ஸீமா த்வத்-கண்ட முபேதா!
கல்பக-துல்யம் த்வாம் விததாநா கஸ்ய மநோ நாகர்ஷதி சௌரே?!!

ஸ்ரீசௌரிராஜனே! நுனிக்கால் வரையில் தொங்குவதும், பல நிறமலர்கள் வாய்ந்ததும்
உனது திருக்கழுத்தை அடைந்ததுமான வனமாலை, கல்பக தருவோடு சாம்யம் உள்ளவனாக
உன்னைச் செய்துகொண்டு விளங்குகின்றது. அது எவருடைய மனத்தைத் தான் கவர்வதில்லை.

31. பாஞ்ச சந்நியம்
சௌரே! சிரோதிரேஷா ஸமுந்நதா த்வத்-த்ருதம் சங்கம்!
பரிஹஸதீவாக்ருத்யா கம்பீரேணாபி கோஷேண!!

ஸ்ரீசௌரிராஜனே! உயர்ந்து எடுப்பான உனது திருக்கழுத்து, உன்னாலே கையில் தரிக்கப்படும்
பாஞ்சசந்நியம் என்ற சங்கின் வடிவாலும் கம்பீரமான ஒலியாலும்
அந்தப் பாஞ்சசந்நியத்தை பரிஹாசஞ் செய்வதுபோல் இருக்கிறது.

32. சக்ராயுதம்
த்வத்-ஸம்ச்ரிதாநாம் ஹ்யவநே விலம்பம் த்வம் ஹாதுகாம: கிமு தேவ!
சௌரே! பஞ்சாயுதீ மாபரணைர் விகல்ப்யாம் கரைர் பிபர்ஷீஹ ஸதா விநேதா!!

தேவனே! சௌரிராஜனே! ரக்ஷகனாகிய நீ உன்னைப் பற்றியவர்களது ரக்ஷணத்தில் கால விளம்பத்தை நீக்க
விருப்பமுள்ளவனாகி, ஆபரணங்கள் என்று கருதுமாறு அழகுடைய சக்கரம் முதலான
ஐந்து ஆயுதங்களையும் உனது திருக்கரங்களில் எப்போதும் ஏந்துகிறாயா, என்ன?

33.ப்ரயோக சக்கரம்
ஸம்ஹ்ருதே சபி ஸகணே விகடாக்ஷே தாநவே ச்ரித-விரோதி-நிவ்ருத்தைய!
ஹேதிராஜ மிஹ தீப்தி-விதீப்த- முத்யதம் னஹஸி க்ருஷ்ணபுரேச!!

திருக்கண்ணபுரத்தரசே! விகடாக்ஷன் என்ற அசுரன் தனது பரிவாரங்களோடு முன்பு உன்னாலே கொல்லப்பட்டான்.
எனினும் நீ எப்போதும் சக்கரத்தைப் பிரயோகநிலையில் கையில் ஏந்திக் கொண்டிருக்கிறாய்.
ஆயுதங்களுக்கு அரசாய், காந்தியால் ஜ்வலிக்கும் அந்தச் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி நிற்பது
உன்னை அண்டியவர்களது விரோதிகளை அகற்றும் பொருட்டே.

34. பாஞ்சசந்நியம்
ஸ்வாதிதாதர-ஸீதா-மதுரிம்ணச் ச்லாகநாதய தவ க்ருஷ்ணபுரீச!
ஸவ்ய-கர்ண-நிகடம் ஸமவாப் ய சங்க ஏவ லஸதீவ கராப்ஜே!!

திருக்கண்ணபுரத்தரசே! இந்தச் சங்கு, தன்னால் சுவைக்கப்பட்ட உனது அதர அமுத இனிமையை உன்னிடம் தெரிவிப்பதற்கே.
உனது இடக் காதின் பக்கத்தில் வந்தடைந்து, தாமரை போன்ற உனது இடக்கரத்தில் விளங்குகின்றது போலும்.

35. திருவதரம்
குந்த-துல்ய தர-சுப்ர-ரோசிஷஸ் த்வத்ஸ்மிதாதஹஹ! பக்தகோசராத்!
பக்வ-பிம்ப-பல-துல்ய-ரக்திமா பாடலீ பவதி தேசதர: புந:!!

பழுத்த கோவைக் கனிபோல் நல்ல சிவப்புடைய உனது திருவதரம் (கீழுதடு),
பாடல வர்ணமாகின்றது(வெளுப்பும் சிவப்பும் கலந்ததாக).
இது உனது புன்முறுவலால், குந்தமலர்கள் போல் வெளுத்த பற்களின் காந்தி உடையதாய்
இதனால் பக்தர்களை விஷயமாக்கிக் கொள்வது(அதாவது அவர்களது மனத்தைக் கவர்வது) இந்தப் புன்முறுவல்.

36.புன்முறுவல்
த்வத்-ஸ்மிதே ஹ்யதர-ரக்த- ருசைதே குந்த-குட்மல-நிபாஸ் தவ தந்தா:!
பீஜபூர-பல பீஜ-ஸமாநா பாந்தி ரம்ய-ருசய: கலு சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! குருக்கத்தி அரும்புபோலே வெளுப்பானவை உன் பற்கள்.
நீ புன்முறுவல் செய்யும் போது உன் அதரத்தின் சிவப்பால் இப்பற்கள், மாதுளம்பழத்தின் விதைகளைப்போல்
அழகிய காந்தியை உடையவனாவாய் விளங்குகின்றன.

37. திருச்செவிகள்
ஸகுண்டலே தே ச்ரவஸீ கபோல மூலே சமலே தர்பண-துல்ய- சோபே!
ஸபுஷ்ப-கல்ப-த்ரும- பல்லவாப்யாம் ஸமே விபாத: ப்ரதிபிம்ப்யமாநே!!

கண்ணாடி போன்ற சோபை உடைய உனது நிர்மலமான கன்னத்தில் கீழ்பாகத்தில் குண்டலங்கள் அணிந்த
உன் திருச்செவிகள் பிரதிபலிக்கின்றன. மலர்களோடு கூடிய கற்பகத் தருவின் தளிர்களுக்குச் சமமாக இவை பிரகாசிக்கின்றன.

38. திருக்கண்கள்
சபர-ஸ்புரிதாபிபாவுகே ஹ்யருணாபாங்க-விலோசநே தவ!
மம பாபததேர் நிபர்ஹணம் குகுதாம் த்ருஷ்டி-ஸீதாபிவர்ஷணாத்!!

உனது திருக்கண்கள் கெண்டையின் துடிப்பை அவமதிப்பன. செவ்வரி ஓடிய கடைப்பகுதி உடையன.
இவை கடாக்ஷமாகிற அம்ருதத்தைப் பொழிவதால் எனது பாவக் குவியலை நாசஞ் செய்யட்டும்.

39. திருப்புருவங்கள்
அநீகபஸ் தே கலு கார்யஜாதம் யதீய-சேஷ்டாபி ரிஹா வகத்ய!
தநோதி தே காம-சராஸ-கர்வ- முஷௌ ப்ருவௌமே லஸதாம் ஹ்ருதப்ஜே!!

உனது புருவங்களின் நெறிப்பாலே உனது காரியங்கள் யாவற்றையும் சேனை முதலியார் அறிந்து முடிக்கின்றார்.
அப்புருவங்கள் மன்மதனுடைய வில்லின் கர்வத்தை நீக்குவன; இவை எனது மனமான தாமரை மலரில் அமர்ந்து விளங்கட்டும்.

40. திரு நெற்றி
தவாஷ்டமீ- சந்த்ர- நிபோ லலாடஸ் ஸ்வநிஸ் ஸ்ருதை: காந்தி சரைஸ் ஸீதாபி:!
தாபத்ரயீ தாபித ஜீவ- வர்கா- நாந்யாயந் ஹந்த! திநோதி சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அஷ்டமி சந்திரனுக்கு நிகரான திருநெற்றியிலிருந்து வெளி வருகின்றது
காந்தியின் ப்ரவாஹங்களகிற அம்ருதம்.
தாபத்ரயத்தாலே வாட்டப்படும் ஜீவராசிகளை இந்த அம்ருதம் போஷித்துக் களிக்கச் செய்கிறது.

41. திலகம்
புவிசந்த்ர-கோடி ஸத்ருசம் ருசிரம் தவ தேவ! திவ்ய வதநம் விமலம்!
இஹ துஷ்ட-த்ருஷ்டி-விஷயம் ந பவே திதி கிம் பிபர்ஷி திலகம் த்வஸிதம்!!

தேவனே! இப்புவியில் கோடி சந்திரர்களுக்கு நிகரானதும், அழகியதும், களங்கமற்றதுமான உனது திவ்ய முகத்தில்
நெற்றியில் கறுத்த நிறமுள்ள திலகத்தை தரித்திருக்கிறாய்.
பொல்லாங்கு படைத்த கண்களால் த்ருஷ்டி தோஷம் வாராமைக்காககஇதை தரித்திருக்கிறாயா, என்ன?

42. திருமுக மண்டலம்
பாலம் கலு சந்த்ரம் த்வாந்தம் பரிபூய காடம் புவி கீர்ணம் சௌரே!
லபநம் தே! பூர்ணம் த்விஜராஜம் மத்வா கிமு பீத்யா பூத்வா தவ கைச்யம் நந்தும் ஸமுபைதி!!

ஸ்ரீசௌரிராஜனே! இளம் பிறைச் சந்திரனை அவமதித்து பூமியில் எங்கும் அடர்ந்து பரந்துள்ள இருட்டானது,
உனது திருமுக மண்டலத்தைப் பூர்ணசந்திரனாக மதித்து, பயத்தினால்,
உனது கேச சமுகமாக மாறி (அந்த முகத்தை) வணங்க வந்துள்ளதா, என்ன?

43. திவ்யபீடம்
அநேக- கோட்யண்ட-மஹாதிபத்ய ஸம்ஸூசகேநார்யமகோடி- பாஸா!
ஸர்வாங்க-ஸௌந்தர்ய-பவம் ஹி தேஜஸ் ஸஞ்சாத்யதே தே முகுடேந சௌரே!

ஸ்ரீசௌரிராஜனே! அநேக கோடி அண்டங்களுக்கும் நீ பெரிய அதிபன் என்பதை குறிப்பாகக் காட்டுகின்றது உனது கிரீடம்.
அது கோடி சூர்யர்களின் காந்தி வாய்ந்தது. உனது திருமேனியின் அங்கங்கள் எல்லாவற்றின் அழகால் உண்டாகும் ஒளியானது,
இந்தக் கிரீடத்தால் முட்டாக்கிடப்படுகிறது(மூடப்படுகிறது).

44. திருக்கழல்
சௌரே! கநீபுத-தமிஸ்ர- ஸம்ஜ்ஞ- கார்ப்பாஸிகா-புஞ்ஜ-விநிர்காத யே!
தே ஸம்யதாஸ் தந்தவ ஏவ நுõநம் த்ம்மில்லதாம் ப்ராப்ய லஸந்தி பச்சாத்!!

ஸ்ரீசௌரிராஜனே! அடர்ந்த இருளென்னும் பஞ்சுப்பட்டையிலிருந்து வெளி வந்த நுõல்கள் எவையோ,
கறுத்துத் திரண்ட அந்த நுõல்களே துõக்கிக் கட்டப் பட்டவையாகித் தலைக் கொண்டையாய் உன் பின்புறத்தில் துலங்குகின்றன.

ஸ்ரீமத்- க்ருஷ்ணபுரீ சாநா- நயநாநந்த-தாயிநே-
உத்பலாவதகேசாய சௌரிராஜாய மங்களம்!!

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ .வே .ஸ்ரீநிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீபாஞ்சராத்ரம்–ஸ்ரீ ரெங்க பங்கஜம் –ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்–

July 8, 2021

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும்,
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து
அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ர பாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.

இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன்
ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே. நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ
அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும், இவனல்லால் வேறு தெய்வமில்லை..!
இந்த பரம பருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்!
உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்! ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து,
தம் நிலை தாழ நின்று தன்னைப் பற்றினார்காக தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

பாரமேஸ்வர ஸம்ஹிதை (1,39-41) சொல்கிறது.

“அடர்ந்த இருளைப்போன்று, பஞ்சபூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் ஆகிய பிரகிருதியின்
சம்பந்தமுடைய அனைத்தும் உண்மை நிலையறியாது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டு கிடக்கின்றன.
இந்த அஞ்ஞானத்தினை அகற்றி, ஞான விளக்கேற்ற வந்த தீபமே பாஞ்சராத்ரம்“ என்கிறது.

விஸ்வாமித்ர ஸம்ஹிதை (2.3.5) சொல்கிறது

பஞ்சேந்திரியங்களினால் இயங்கும் இந்த மனிதனுக்கு “பஞ்சரா“ என்று பெயர்.
இந்த பஞ்சேந்திரியங்களினாலும் எது அறியப்படவேண்டுமோ, எது அடையப்பட வேண்டுமோ,
அதற்கான வழிமுறையை வகுத்து அவனை வழிநடத்திக் கொண்டுபோகும் சக்தி “பாஞ்சராத்ரம்“ என்கின்றது.

புருஷோத்தம ஸம்ஹிதை (1.4) சொல்கிறது

பக்தி ஒன்று மட்டுமே ஒருவனை பிறவிதனிலிருந்து விடுவிக்கக்கூடியது.
இந்த பக்தியை ஊட்டுவது, பரப்புவது பாஞ்சராத்ரம் என்கிறது.

பிள்ளைலோகாச்சாரியாரின் “முமுக்ஷுபடி“ வ்யாக்யனத்திற்கான மாமுனிகளின் அவதாரிகையில் மாமுனிகள் கூறுகின்றார்.
இவர் பாஞ்சராத்ரத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை யானாலும் இங்கு இத் தருணத்தில் நினைவுகூறத் தக்கது..

“நித்ய ஸூரிகளோ பாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரஸராய் வாழ்க்கைக்கு ப்ராப்தி உண்டாயிருக்கச் செய்தேயும்,
அத்தை இழந்து “அஸன்னேவ” என்கிறபடியே அசத் கல்பராய் கிடக்கிற ஸம்ஸாரி ஸேதனருடைய இழவை அனுசந்தித்து
அத்யந்த வ்யாகுல சித்தனாய் இவர்கள் கரண களேபரங்களை இழந்து,
இறகொடிந்த பட்சிப் போல கிடக்கிற தசையிலே, கரணாதிகளைக் கொடுத்து…….”

பகவானை அனுபவிக்க முடியாது அசக்தராய் அஞ்ஞானத்தில் உழன்று, சிறகொடிந்த பறவை போல தவிக்கின்ற ஸம்ஸாரிகளை,
நித்ய ஸூரிகளைப் போன்று நித்யம் கைங்கர்யம் செய்யும் ஆசையுண்டாகி, அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு “ப்ராப்தி“ உண்டாக,
இந்த வாழ்க்கையில் கடைத்தேற, இந்த சேதனருடைய வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற கவலையினால்
பகவான் கவலைப்பட்டுக் கொண்டே யோசித்து. அவர்கள் உய்யும் வழிக்கான ஞானத்தினை அளிக்கின்றான் என்கிறார்.

பாஞ்சராத்ரம் இந்த உலகம் உய்யும் வழிக்கான ஞானம். இந்த ஜீவன்கள் கடைத்தேற பகவானாலேயே அருளப் பெற்ற வழிமுறை.

எல்லாமுமாய் அனைத்தையும் தன்னுள் அடக்கி ஏகமாய் நிற்கும் அவனைத் தொழும் வழிக்கு,
நம்மை அழைத்துச் செல்லும் அயனம் (பாதை) – அதாவது “ஏகாயனம்”.

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

ஒரு காலத்தில் சில முக்கிய பாஞ்சராத்ர ஆகம முறைப்படியுள்ள கோவிலில் பூஜை செய்தவர்கள் அனைவருமே
ஔபகாயன, சாண்டில்ய, பாரத்வாஜ, கௌசிக, மௌஞ்யாயன ஆகிய ஐந்து கோத்ரத்தினை சேர்ந்தவர்களாக மட்டுமேயிருந்தனர்.
அது போன்று அவர்கள் சுக்ல யஜூர் வேதம், காண்வ சாகை என்ற பிரிவைச் சார்ந்தவர்களாயும் மட்டுமே இருந்தனர்.

தற்சமயம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் இந்த ஐந்து கோத்ரத்தினைச் சார்ந்தவர்கள்
மட்டுமே அர்ச்சகர்களாய் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் அருகிலுள்ள பல பாஞ்சராத்ரகோவில்களிலும் பணியாற்றியுள்ளனர்.
இப்போதும் ஸ்ரீரங்கம் கோவிலின் சில அர்ச்சகர்களுக்கு திருவெள்ளறை கோவிலில் முறைகள் உள்ளன.

வெகு வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலும், கீழ் திருப்பதி அலர்மேல் மங்காபுரத்திலும் முறைகள் இருந்து வந்தன.

மேல்கோட்டையில் செல்லப்பிள்ளைக்கு இராமானுஜர் சில காலம் திருவாராதனம் செய்து வருகையில்
கிரஹஸ்தர்கள் செய்தால் நன்றாகயிருக்குமே என்று தோன்றிமையினால் ஸ்ரீரங்கத்திலிருந்து “மௌஞ்யாயன“ கோத்திரகாரர்கள்
அனைவரையுமே மேல் கோட்டைக்கு அழைத்து சென்றதால் ஸ்ரீரங்கத்தில் இந்த கோத்திரம் விடுபட்டுப் போனதாக ஒரு செய்தி யுண்டு.

அப்படியிருக்க ஏன் ஸ்ரீரங்கத்திலும் காஞ்சிபுரத்திலும் உள்ள அர்ச்சகர்கள் வடகலை திருமண்காப்பும்,
மேல்கோட்டை அர்ச்சகர்கள் தென்கலை திருமண்காப்பும்
இட்டுக் கொள்கின்றனர்..?
இந்த அர்ச்சகர்கள் அனைவருமே வடகலை மற்றும் தென்கலை இதில் எந்த கலையும் சார்ந்தவர்கள் இல்லை..!
இந்த கலாபேதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வந்தது தான்..! திருவாய்மொழியில் ஒரு பாசுரம்..!

கரியமேனிமிசை வெளிய நீறு சிறிதேஇடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள்-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு ? இன்று தொட்டும் இனி என்றுமே–( திருவாய் மொழி 4-5-6)

“இதில் வெளிய நீறு சிறிதேஇடும்“ என்பதற்கு பன்னீராயிரப்படி திருவாய்மொழி வியாக்யானத்தில்
”கற்பூர தூளிதவளம் க்ருத்வா தேவஸ்ய விக்ரஹம்” என்று உள்ளது.

“அதாவது பச்சை கற்பூரத்தினால் பகவானிடத்து (திருமுக மண்டலத்தில் ஊர்த்வமுகமாக) தூவுதல்“ என்று பொருள்.

இந்த அர்ச்சகர்களும் இந்த விதமாகதான் திருமணைக் குழைத்து ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
காலப்போக்கில் வாரிசுகள் இல்லாது வடகலை குடும்பத்தார்களிடத்திலிருந்து ஸ்வீகாரம் நிறைய வந்தமையாலும்
மற்றுமுள்ள சூழ்நிலை காரணமாகவும் இந்த ஊர்த்வபுண்டரம் வடகலையாகவும்,
மேல்கோட்டையில் நிலவிவந்த சூழ்நிலை காரணமாக தென்கலையாகவும் மாறிப்போயிருக்கலாம்..!

இந்த அர்ச்சகர்கள் “சுயம் ஆச்சார்யர்கள்“ – இந்த அர்ச்சகர்களுக்குள்ளேயே எவர் தகுதியுள்ளவரோ அவரே ஆச்சார்யன் ஆவார்.
இவர்களுக்கு வேறு ஆச்சார்ய தனியன்கள் கிடையாது. இன்றும் திருமணப் பத்திரிக்கைகளில்
ஸ்ரீசுக்ல வேத ரிஷியான “ஸ்ரீயாக்யவல்க்ய மஹாகுரவே நம:“ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு “பரந்யாஸம்“ கிடையாது.

இன்றும் வீட்டில் நடக்கும் விசேஷங்களில் “ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும்….“ என்று தொடங்கி தான் சங்கல்ப்பம்..! ஆரம்பமாகும்.

இந்த ஏகாயன வேதமானது “ஸ்ரீமந் நாராயணனைத் தவிர இதர தெய்வங்களை நாடாதே“ என்கிறது.

“யஸ்து ஸர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தப:
வாஸூதேவைக நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:”

“ஸ்ரீவாஸூதேவனை மட்டுமே தியானி – இதர தேவதைகளை நாடவேண்டா ” என்று கூறுகின்றது.

மறந்தும் புறம் தொழா மாந்தர், என்னும் மாண்பை ஆழ்வார்களை போல் ஆகமமும் பறை சாற்றியது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பரதாயத்தின் முக்கியமான இந்த கொள்கை பாஞ்சராத்ரத்தில் ஆழமாக எடுத்துரைக்க பட்டுள்ளது.

இந்த பாஞ்சராத்ரமானது ஸ்ரீமந் நாராயணனை எப்படியெல்லாம் வழிபடுதல் வேண்டும் –
நாம் எந்த ஒரு திடமான முடிவோடுயிருக்க வேண்டும் – எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்றது.
ஆகமம் என்பதற்கு அணுகுதல் (approach) என்ற ஒரு பொருளும்,
a traditional doctorin or percept, a sacred writing or scripture, sastra, a tantra என்று பலவித பொருள் கூறுகின்றது.
சமஸ்கிருத – ஆங்கில அகராதி. இங்கு அணுகுதல் என்று கொள்ளுதல் எல்லா அர்த்தங்களைவிட சாலப் பொருந்தும்.

பகவான் ஜீவன்கள் உய்விப்பதற்கு, தன்னை வந்தடைய தானே வந்து கற்பித்ததுதான்
இந்த பாஞ்சராத்ரம் என்கின்ற அணுகுமுறை – அதாவது பாஞ்சராத்ர ஆகமம்.

மணவாள மாமுனிகள் முமுக்‌ஷூப்படியில் சொன்னார் போல, நாம் படும் இழவை அனுசந்தித்து,
அரங்கன், நாம் அவனை வந்து அடைய செய்யாத பிரயத்தனங்கள் இல்லை.
நமக்கு அறிவு வர வேண்டி பல சாத்திரங்களை கொடுத்தான். அதில் ஒன்று தான் பாஞ்சராத்ரமாகிற இந்த ஆகம சாத்திரமும்.

அவன் கொடுத்த இந்த அறிவின் பயன், அவனை அடைவதே.
அவனை அடைய, அவனே உபாயம் என்பதை அரங்கன், அழகாக வலியுறுத்தினான்.

ஆகமம் என்பது வேதத்தினை ஒரு சிலவிடங்களில் கையாண்டிருந்தாலும் அது குறிப்பாக
அந்த ஆகமம் எந்த தெய்வத்தினைப் பற்றி பிரதானமாக கூறுகின்றதோ, அந்த தெய்வத்தினைப் பற்றிய வேத குறிப்புகள்,
எப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும், விழாக்களை எங்கெங்கு- எப்படிக் கொண்டாட வேண்டும்,
பூஜை செய்பவருக்கான தீக்ஷாவிதிகள், எப்படி தீக்ஷைத் தரவேண்டும் ஆகியவற்றினைப் பற்றிதான் பரவலாகக் கூறுகின்றது.

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள், உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும்,
பொதுவாக ஆகமம் என்பது வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

ஆகமம் என்பது பொதுவில் வழிபாட்டுமுறையாகும். இது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டு முறையல்ல.
அவரவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு பலவிதமான ஆகமங்கள் உள்ளன.

இந்த ஆகமங்கள் இரண்டு வகைப்படும்.

வைதீக ஆகமம் (Vedic Agamam) இது நமது வேதங்களின் கோட்பாடுகளுடன் திகழ்வது அல்லது ஒத்துப் போவது.

அவைதீக ஆகமம் (Non-Vedic Agamam). உதாரணம் புத்த ஆகமம் மற்றும் ஜைன ஆகமம்.
இவைகள் வேதங்கள் கூறும் கருத்திற்கு மாறுபட்டு விளங்குகின்றன. புத்த வழிப்பாட்டு முறையில் மட்டும் சுமார் 72 ஆகமங்கள் உள்ளன.
மாறுப்பட்டு விளங்கும் இந்த புத்த ஆகமத்தில் சில பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள தந்தரங்களோடு ஒத்துப் போவது ஆச்சர்யமானது.

ஜைன ஆகமத்தில் சில 3வது நூற்றாண்டிலும் மற்றும் 11வது நூற்றாண்டிலும் உருவானவை.
இவை “தீர்த்தங்கரர்” என்றழைக்கப்படும் அவர்களது ஆச்சாய புருஷர்களால் பிரபலமாயிற்று.

இந்த ஆகமங்கள் அனைத்தும் குருவினால் சிஷ்யர்களுக்கு உபதேசம் மூலமாக வந்த ஒரு சாஸ்த்ரம். பல நூறு வகையான ஆகமங்கள் உள்ளன.
இதில் வைஷ்ணவ ஆகமமானது வைகாநஸம், பாஞ்சராத்ரம் என்று இரு வகை ஆகமங்களாகும்.

இதுவரை நாம் பாஞ்சராத்ரம் என்றால் என்ன..? ஆகமம் என்றால் என்ன..? என்பதனைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டோம்..!
நாம் எடுத்துக் கொண்ட சங்கல்ப்பம் ஸ்ரீபாஞ்சராத்ரம் மட்டுமே என்பதால் இனி நாம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமம் பற்றிக் காண்போம்….

பெருமாள் ஐந்து நிலைகளில் வீற்றிருக்கின்றான். அவையாவன:

பரம்
வ்யூகம்
விபவம்
அர்ச்சை
அந்தர்யாமி

விண் மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண் மீது உழல்வாய்! இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்றபுற வண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ ?– (திருவாய்மொழி 6-9-5)

விண்மீதிருப்பாய் – பரத்வம்
கடல் சேர்ப்பாய் – வ்யூஹம்
மண்மீது உழல்வாய் – விபவம்
மலைமேல் நிற்பாய் – அர்ச்சை
மறைந்துறைவாய் – அந்தர்யாமி

பரம் என்பது பரமபதம். இது நித்திய விபூதி என்றழைக்கப்படும்.

வ்யூகம் என்பது வாஸூதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தர் என்னும் எம்பெருமானின் சக்திகள் தனித்தனியேப் பிரிந்து வெளிப்படும் ஸ்வரூபங்களாம்.

விபவம் என்பது எம்பெருமானின் அவதாரங்களாம்.

அர்ச்சை என்பது இப்போது நாம் வணங்கி ஆராதித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருவுருவங்களாம்.

அந்தர்யாமி என்பது எம்பெருமானின் சக்தி எங்கும் பரந்து எல்லாவற்றிலும் சூக்கும்மாய் உறைந்திருக்கும் சக்தியாம்.

இதில் ஆழ்வார்கள் அனைவரும் மோகித்து ஆழங்கால்பட்டது அர்ச்சையில் மட்டுமே.
பாஞ்சராத்ரமும் இந்த அர்ச்சையின் ஆராதனையைதான் சொல்லித் தருகின்றது.

பாஞ்சராத்ரம், இதிஹாஸம், புராணங்கள், ஆழ்வாரின் பாடல்கள் ஆகியவற்றில் பகவானின்
ஸ்வரூபம், ரூபம், குணம், நெறி, விபூதி, லீலைகள் ஆகிய எல்லாம் சொல்லப்பட்டிருந்தாலும்,

பாஞ்சராத்ரத்திற்கு பகவானுடைய ஸ்வரூபம், குணம் -அதற்கேற்ப என்னென செய்யலாம் என்பதில் தான் கவனம்.
இதிஹாஸங்கள் அவதாரங்களைப் பற்றிச் சொல்லுவதிலும், புராணங்கள் உலகங்களின் விரிவினைச் சொல்லுவதிலும்,
ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடு.

சாமான்யர்களான நமக்கு பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி ஆகிய நிலைகளிலுள்ள எம்பெருமானை அனுபவித்தல்
என்பது இயலாத ஒரு காரியம். இந்த கலியுகத்தினுள் அர்ச்சாவதாரம் என்பது எம்பெருமானால்
நம்மை இங்கிருந்து நம்மை மீட்க எடுத்துக் கொள்ளப்பட்ட, நாம் சுலபமாக அவனை அணுக அவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு உபாயம்.

“உடைமைக்கு ஒரு முழுக்கு – உடையவனுக்கு நூறு முழுக்கு“ என்பார்கள்.

ஒரு பெரிய கிணறு. அதில் ஒரு சிறிய வெள்ளிச் சொம்பு வீழ்ந்து விட்டால் அது ஒரு முழுக்கில் அடியில் அமிழ்ந்து விடும்.
அதன் உடைமையாளன் அதனை எடுப்பதற்குள் சில சமயம் நூறு முழுக்குக் கூட போட நேரிடலாம்.

அது போன்று அவனது உடைமை நாம். இந்த ஆன்மா அவனது சொத்து.

நாம் இந்த சம்சார ஸாகரமாகின்ற கிணற்றுக்குள் அமிழ்ந்து விட்டால் நம்மை மீட்பதற்குள் அந்த பரந்தாமன்,
பரமாத்மா நூறு முழுக்குப் போட வேண்டியுள்ளது. நம்மை மீட்டு அவன் தன்னுள் வைத்துக்கொள்வதற்காக ஏற்பட்ட ஒரு உபாயம் அர்ச்சை.

அர்ச்சையில் தம்மை தாமே கூண்டில் அடைத்துக் கொள்வது போல் அவன் அடைத்துக் கொண்டும்,
ஆழ்வார்கள் தன்னுள் ஆழும்படியாகச் செய்தும், தம்மிடத்து ஆழங்கால் பட்டோரிடத்து அவர்கள் சொன்ன வண்ணம் செய்தும்,
எழுந்திருந்து பேசியும், எங்கோ யாரோ ஒரு பாட்டி தன் பேரனைக் காவிரிக் கரையில் காணாது அவனது பெயரான “ரங்கா“ என்று
கதறிய மாத்திரத்தில் தம் பெயரைச் சொல்லி கதறுவோர் மனவருத்தம் கொள்ளல் ஆகாது என்று தாம்
அவள்தம் பேரனைப் போன்று சவரம் செய்து கொண்டு, நீராடி, அந்தம்மையார் கொடுத்த பழைய சோற்றையும், மாவடுவினையும் ரசித்து உண்டும்,
“வாராய் செல்லப் பிள்ளை” என்றழைத்தவுடனேயே தளிர்நடையிட்டு உடையவர்தம் மடியில் ஏறி அமர்ந்து,
ஏதுமறியா குழந்தையைப் போன்று அவரின் கைக் குழந்தையாகவே மாறியும்.
மாமுனிகளிடத்து அர்ச்சகரின் குமாரனாய், அவரின் சிஷ்யனாய் தோன்றி ஆச்சார்ய தட்சிணையாக தமது சேஷ பீடத்தை அர்ப்பணித்தும்,
இந்த மாயவன் செய்த லீலாவினோதங்கள் சொல்லி மாளாது.

ஸ்ரீபாஞ்சராத்ரமே அர்ச்சைக்கான வழிபாட்டு முறைதான். எனவே முதலில் நாம் அர்ச்சையின் விசேஷத்தினை, அருமையினை
உணர்ந்து அதனிடத்து பேரன்பு கொள்ளுதல் வேண்டும். இவ்விதமாக அன்புடன் ஆராதிக்கும் அர்ச்சைதான் தேஜஸ்ஸோடு விளங்கும்.
ஆராதகனுக்கு முதல் தேவை –தகுதி, அவன் ஆராதிக்கும் அர்ச்சையினிடத்து அளவிலாத உள்ளன்புதான்.

– பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம்
– ஆவரண ஜலம் போலே பரத்வம்
– பாற்கடல் போலே வ்யூகம்
– பெருக்காறு போலே விபவங்கள்
– அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் – ஸ்ரீவசனபூஷணம்(40)

பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாதிருக்கும் ஜலம் போன்று அந்தர்யாமித்வம். மஹாயோகிகளுக்கு மட்டுமே சித்தி தருவது இது.

பரத்வம் இந்த அண்டத்திற்கு புறம்பாக எங்கும் சூழ்ந்திருக்கும் ஆவரண ஜலம் போன்று அதாவது கடல் நீரைப் போன்றது பரத்வம்.
இதுவும் சாமான்யர்களாகிய நம்மால் சாத்தியபடாத ஒன்று.

சென்றடையமுடியாத பாற்கடல் போன்றது வ்யூகம்.

காட்டாறு போன்றது விபவதாரங்கள். அந்த காலத்தில் இருந்தவர்களைத் தவிர யாரும் அடையத் தக்கதல்லதான அவதாரங்கள்.

அர்ச்சாவதாரம் ஆங்காங்கு தேங்கிய மடுக்கள் போன்றதாம். வேட்கைக் கொண்டவனின் தாகம் தீர பருகலாம் இங்கு.
கோயில்களிலும், வீடுகளிலும் வணங்கத்தக்கதான அர்ச்சை எல்லாரும் அணுகக்கூடியது. அடிபணிந்து வணங்கக் கூடியது.

”ஸௌலப்யத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்” – (முமுக்‌ஷுப்படி-139)

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்

மூலம் – அப்போது, நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ
ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும், யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம்
ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும் சொல்லுகிறபடியே

ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும்
ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

விளக்கம் –

அவ்விதம் கைங்கர்யம் செய்யும்போது, தனக்கும் ஸர்வேச்வரனுக்கும் உள்ள உறவுமுறைக்கு ஏற்றபடியும்,
ஸர்வேச்வரனின் எஜமானத்தன்மை மற்றும் எளிமை ஆகியவற்றுக்கு ஏற்றபடியும் செய்தல் வேண்டும்.

தன்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்ட அடியார்களுக்காக அர்ச்சை ரூபமாக வந்துள்ள ஸர்வேச்வரனுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்யவேண்டும்.

பௌஷ்கர ஸம்ஹிதை – நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –

எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும், அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை – யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர், அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை – ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) – ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின் அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும்,
இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா – என்பதன் மூலம்
அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) – ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் –
மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும் எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும்
அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு, தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவுதடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) – யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் –
என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில் என்னை அமைக்கின்றனரோ,
அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும் கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக
அவனது அர்ச்சா ரூபத்தில் உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும்.
அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) – ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) – ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய் என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) – யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ, அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.
இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் – தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

அர்ச்சாவதாரம் பகவானுடைய அளவிடமுடியாத காருண்யத்தின் பிரதிபிம்பம்.
இதில் விந்தையென்னவென்றால் அவன் நம்மை ரக்ஷிக்க எடுத்த இந்த அவதாரத்தில்,
அவனை ஒருவனால் (அர்ச்சகனால்) ரக்ஷிக்கப்படுவனாய் மாறியது தான்.

ஸர்வ சக்தி படைத்த அவன் சக்தியே யில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர்பார்த்திருப்பதுதான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே—விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது
அந்த பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும், சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என் னில்முன்னம்
பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே .—திருவாய்மொழி 9-6-10–

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்ன த்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்ய தேசத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும்,
ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும்,
காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ர பாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”–என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

பிள்ளைலோகாச்சாரியார் தமது முமுக்‌ஷுப்படியில் (136)
”புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்குங் குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம்” என்கிறார்.

சேதனர்களாகிய நாம், நாம் செய்த குற்றங்களையெல்லாம் எண்ணி, அந்தோ! இத்தனைக் குற்றங்களை நாம் செய்துள்ளோமே.?
நாம் எப்படி பெருமாளின் திருவடிகளில் சென்றடைவது..! என்று அஞ்சி அவனை விட்டு நாம் அகன்று ஓடிவிடாதபடி,
நம்மை திருத்தி பணிகொள்வதற்காகவே, வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம், ஜ்ஞானம், சக்தி
முதலான திருகல்யாண குணங்களோடு எம்பெருமான் அர்ச்சையிலே காத்திருக்கின்றான்!

வாத்ஸல்யம் – தன்னை வந்தடைந்த சேதனின் குற்றங்களைப் பாராமல், எப்படி பசு தான் ஈன்ற கன்றினிடத்து பாசமுடன் விளங்குகின்றதோ,
அதுபோன்ற அவனிடத்து இன்னருள் சுரந்து, “கதஞ்சன நத்யஜேயம்” ஒருபோதும் கைவிடுபனல்லேன் என்ற
வைராக்கியத்துடனே சேதன்னுக்கு பல நன்மைகளைச் செய்யும் இயல்புடையவனாய் விளங்குகின்றான்.

ஸ்வாமித்வம் – சேதன்ன் ஈஸ்வரனை நினையாமல் பாராமுகமாயிருந்தாலும், எம்பெருமான் இவனை விடாமல் நின்று காப்பாற்றுகின்றானே!
இந்த ஒரு பந்த விசேஷத்திற்குதான் “ஸ்வாமித்வம்“ என்று பெயர்

ஸௌசீல்யம் – தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் சிறிதுமின்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாராது
சேதன்னுடன் இரண்டற கலத்தல் ஸௌசீல்யமாகும்!

ஸௌலப்யம் – அணுகுதற்கு எளியவனாய் இருத்தல்

ஞானம் – அறிவு – சேதனனைக் காப்பாற்றி தன்னடி கீழ் சேர்க்கக் கூடிய சாமர்த்தியம்.

சக்தி – எதையும் செய்யக்கூடிய ஆற்றல். தாழ்ந்த நிலையிலுள்ள சம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒப்ப சேர்த்து வைக்கக்கூடிய ஒரு ஆற்றல்!

”குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமீத்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).

இவ்வளவு கல்யாண குணங்களோடு சேதனுக்காகக் காத்திருக்கும் அந்த எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டியது யாது?

ப்ராப்தியும்.., பூர்த்தியும்…!அப்படியென்றால்..?

ப்ராப்தி யென்றால் அடைய வேண்டியது.
பூர்த்தி யென்றால் வேண்டுவனயாவும் நிறைந்திருக்கை.
அதாவது நாம் அவனடி சரணமடையத் தேவையான குண பூர்த்தி நிறைந்திருக்கை!
ப்ரபத்தி!
இவ்விரண்டையும் சேர்த்து அதாவது ப்ரபத்தியென்றால் அவன் தம் திருவடிகள்தாம் தஞ்சமென்றிருக்கை!

சரி….! மேலேகூறிய இந்த கல்யாண
குணங்கள் அனைத்தையுமே நாம் அர்ச்சையில் காண இயலுமா..?

காணலாம்..! நான் சொல்லவில்லை! முமுக்ஷுப்படியில்(141)

பிள்ளைலோகாச்சாரியார் சொல்லுகின்றார்.

”இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

மேலும் சொல்கின்றார்

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலேயழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).

‘முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்த்துவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே! -திருவாய்மொழி (3.1.1)-

————————————

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
முதல் அத்யாயம்

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனுதினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும்,
சாங்க்ய சித்தாந்தத்தில் (இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும்,
யோக சித்தாந்தாத்தில் (இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் *
ஏற வீற்றிருந்தாய்! உன்னை எங்கெய்த கூவுவனே”—திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில்
பிரும்மாவினுடைய புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!

தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய் சாண்டில்யர் விளங்கக் கண்டார்.
அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

பொருள்
”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..!
எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.! சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித்
தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான்.
ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!) நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது.
நாரதருடன் கூட ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய எட்டு மஹரிஷிகளும்
இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது. இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.

இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!

இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!

எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!

“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!

இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன்,
இதில் சொல்லப்பட்டுள்ள மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவைஎவையென்று
இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும் கடைத்தேற வேண்டி
இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம் மட்டிலும் கொண்ட
மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யஸூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய ஞான காண்டம் மறைந்து விட்டது

1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

இந்த “க்ரியா காண்டத்தில்“ இனி அடுத்து வருவது “ஸ்நானவிதி்“..!
ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.

படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச”–என்று மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும்
(முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளேச் சொல்லக்கூடாது.
உரத்தகுரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார். புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

தற்போதுள்ள கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நமக்கு ஒத்துவரக்கூடிய செயல்கள் சிலவற்றைக் காண்போம்..!

இயற்கையோடு மனிதர்கள் ஒன்றி வாழ்ந்துள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டமையினால்
இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நமக்கு அதிசயமாக உள்ளது.

செளசம் (மலஜலங்கழித்தல்) பற்றிச் சொல்லும் போது
பகலிலும், சந்த்யாகாலங்களிலும் மலஜலங்கழிப்பதனால் வடக்கு நோக்கி அமர்ந்தும்,
இரவில் தெற்கு நோக்கி அமர்ந்தும் கழித்தல் வேண்டும்.
சௌசத்திற்கு பின் மண் இட்டுக் கொள்வதற்காக மண்ணை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மண்ணை தெய்வ அக்னியுள்ள இடம், மலை, மாட்டுக் கொட்டில், நதியிலிருந்து, மசானத்தில், புற்றில், எலிவலை,
மரத்தடி, கோவிலருகில், ஜலத்தின் நடுவில், வழிப்பாதையில் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கக் கூடாது.

அந்த மண்ணில் பிராணிகளின் எலும்புக்கூடு, உமி, சாம்பல், சிறு மரக்கட்டைகள், கரித்துண்டு ஆகியவைக் கலந்திருக்கக்கூடாது.

நதிக்கரையோரம் மேலேச் சொன்னவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல மண்ணாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜல பாத்திரத்தினை “அஸ்த்ர“ மந்த்ரம் சொல்லி எடுக்க வேண்டும்.
(இங்கு சில மந்த்ரங்களின் பெயர் மட்டும் கூறியுள்ளேன் – அவரவர் ஆச்சார்யர்களைக் கேட்டு இந்த மந்திரங்களை அறிந்து கொள்ளவும்…)
மண் எடுக்கும் போதும் அஸ்திர மந்திரம் சொல்லி சேகரித்துக் கொள்ளவும்.

வன்னித்துளிர், அத்தி, அரசம், இச்சிமரம், தர்ப்பம், மூங்கில்,
மாமொட்டு, நாயுருவி, மருதம் இதில் எது சாத்தியமோ அவற்றையெல்லாம் சேகரிக்க வேண்டும்.
இதில் சில பல் துலக்குவதற்கும், மண்இட்டுக்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்வதற்கும், வைத்துக் கொள்ளவும்.

பல் துலக்கும் குச்சியானது 12 அங்குலமுள்ளதாக இருக்கவேண்டும். அது வளைந்தோ அல்லது முடிச்சுக்களுடன் இருத்தல் கூடாது.
பல் துலக்குவதற்கு முன், கைகால்கள் அலம்பிக்கொண்டு, ஆசமனம் செய்து,
கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ பல்துலக்க வேண்டும்.

குச்சியின் மிருதுவான பாகத்தினைக் கடித்து பல்துலக்க வேண்டும். குச்சியிலிருந்து வெளிப்படும்
துவர்ப்பான அல்லது கசப்பான சாற்றினை சுவைத்தப்படி பல் துலக்கச் சொல்கின்றார்.

குச்சி கிடைக்காவிட்டாலோ அல்லது அசக்தமாய் இருந்தாலோ ஆட்காட்டி விரலினால் 12 முறை ஜலத்தினால் பல் துலக்க வேண்டும்.

நாக்கு வழிப்பதற்கு 16 அங்குல நீளமுள்ள குச்சி வேண்டும். முடிச்சுடன் கூடாது.
உயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்ட குச்சியாலும் நாக்கு வழிக்கலாம்.

சாண்டில்யர் அடுத்து “ஸ்நானம்“ பற்றிச் சொல்லும் போது, “ஒரு ஊரில் குளங்கள் இருக்கும் போது கிணற்றில் ஸ்நானம் செய்தல் கூடாது
மற்றும் எந்த குளத்தில் அதிகம் நீர் உள்ளதோ அந்த குளத்தில் குளிக்க வேண்டும் எனவும்,
அந்த ஊரில் ஓடுகின்ற நதியிருக்குமாயின் நதியில்தான் குளிக்க வேண்டும்“என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த நதிகளைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்கின்றார்.

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!

இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!

இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?

கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.

வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!

இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!

நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித் தான் பாய்கின்றது.
அதில் நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!) சதுர்வேதி மங்கலத்தில்
அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

நதியினில் நீராடுவதற்கு முன் முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு நீரில் மூழ்க வேண்டும்.
நம் சரீரம் நன்கு நனைந்த பின்பு முதலில் கோமயம் கொண்டு உடம்பை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மண் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பு அல்லது உளுந்து ஆகியவைகளின்
மாவுப்பொடியினைக் கொண்டு தேய்த்துக் கொள்ள வேண்டும். கவச மந்திரத்தினைச் சொல்லியபடியே நீராட வேண்டும்.
பின்பு ஹ்ருண் மந்த்ரத்தினை உச்சரித்தப்படியே கந்த பொடிகளைக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஒரு நெல்லிக்காய் அளவு நதியிலுள்ள ஈரமண்ணை எடுத்து இடது கை மணிக்கட்டின் அருகில் வைத்துக் கொண்டு
அஸ்த்ர மந்த்ரம் மற்றும் மூல மந்த்ரம் முதலானவற்றை உச்சரித்தப்படி அந்த மண்ணை ஸ்பர்ஸித்து,
அந்த மண்ணில் ஒரு பாகத்தினை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மீதமுள்ள ஒரு பாகத்தினை நாம் நிற்கின்ற இடத்தினில் விட வேண்டும்.
கையிலுள்ள ஒரு பாகத்தினை இரண்டாக பண்ணி இதில் ஒரு பாகத்தினை நதியினில் சேர்த்தும்,
மீதமுள்ள ஒரு பாகத்தினை உடம்பினை தேய்த்து பின்னர் நீராடுதல் வேண்டும்.
இம்மாதிரி செய்வதனால் அந்த தீர்த்தத்தினில் கங்கை, யமுனை, ப்ரயாகை, சக்ர தீர்த்தம், ப்ரபாயம், புஷ்கரம்
முதலான தீர்த்த சக்திகள் அனைத்தும் அங்கே சூக்கும ரூபத்தில் வந்து விடும்..!
மேலும் ஸ்நானத்திற்கு உண்டான இடைஞ்சல்கள் பலமற்று போய்விடும்..

மீண்டும் ஒரு நெல்லிக்காய் அளவு நதியினில் நாம் குளிக்குமிடத்திலுள்ள மண்ணை எடுத்து சூரிய கிரணங்களிடத்துக் காண்பித்து,
ஒருக்கால் சூரியகிரணங்களை மேககூட்டம் மூடி அந்த கிரணங்கள் இல்லையென்றால் மனதில் அந்த மண்ணின் மீது சூரிய கிரணங்கள்
படுவதாக மனதினால் பாவித்து, நம் உடலின் அனைத்து அங்கங்களையும் அந்த மண் கொண்டு தொட வேண்டும்.
பின்னர் கவச மந்திரம் சொல்லி நம் அங்கங்கள் மற்றும் கையிலுள்ள மண்துகள்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

பின்னர், வலது கையினால் ஒரு தர்பமுஷ்டியை எடுத்துக் கொண்டு ஒடும் ஜலத்தில் “அப்பு சூக்த“ மந்திரத்தினால்,
ஜலத்தினைச் சுற்றி பின்பு உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாய் குவித்து கும்பம் போல் வைத்துக் கொண்டு,
அப்படியே இருகைகளினாலும் ஜலம் எடுத்து தலை, காதுகள், கண்கள், முகம் மற்றுமுள்ள அங்கங்களை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஜ்யோதிர்மயமான நம் ஹ்ருதய புண்டரீகத்தில் இருக்கும் ஹரியைத் தியானம் செய்ய வேண்டும்.
புருவ மத்தியில் எம்பெருமானைத் த்யானிக்கவும்.

இது “அகமர்ஷண ஸ்நானம்“ எனப்படும். இது அனைத்து பாபங்களையும் போக்கக் கூடியது.

ப்ராணயாமம் செய்து எழுந்து சூர்யமண்டலத்தினை இரு கை விரல்களையும் கோர்த்து
(இந்த விரல்களைக் கோர்ப்பதற்கு ஒரு முறையுள்ளது. பெரியோர்களிடம் கேட்டு அறிக.!) இருகைவிரல்களுக்கும் இடையே தரிசிக்கவும்.

கரையேறி ஈரவஸ்திரத்தினைக் களைந்து மாற்று வஸ்திரம் உடுத்தி, நம் வலதுபுறமாக அனைத்து சிகையையும் தள்ளி
சிகையினைப் பிழிந்து அந்த தீர்த்தத்தினை சேகரித்து, ‘அஸ்த்ர’ மந்திரம் சொல்லி அந்த தீர்த்தத்தினை பூமியினில் ப்ரோக்ஷிக்கவும்.
இது அனைத்து தோஷங்களையும் போக்கவல்லது.

சிகையினை முடிந்து கொண்டு ஆசமனம் செய்க.
பின்னர் நித்ய தர்ப்பணம் செய்க. கட்டை விரல்கள் மூலம் ரிஷி தர்ப்பணம். மற்ற விரல்களின் மூலமாக கையை நேராக வைத்து தேவ தர்ப்பணம்,
கட்டை விரலுக்கும் இதர விரல்களுக்குமிடையே பித்ரு தர்ப்பணம் என்ற கிரமத்தில் செய்ய வேண்டும்.
ரிஷி தர்ப்பணம் முடிந்தவும் தீர்த்தம் சிறிது பருக வேண்டும். தேவ தர்ப்பணம் முடிந்தவுடன் அங்க ந்யாஸம் செய்க.
பித்ரு தர்ப்பணம் முடிந்தவுடன் தேகத்தினைத் துடைத்துக் கொள்க. இந்த தர்ப்பணாதிகளை விருப்பப்பட்டால் செய்யலாம்.

வலது கையினால் ஜலத்தினை சேகரித்து, நாசிக்கு அருகில் கொண்டுவந்து, ‘ஹ்ருண்’ மந்திரத்தினைச் சொல்லி முகர்ந்து
‘கவச’ மந்த்ரம் சொல்லி பின்பு ‘அஸ்த்ர’ மந்த்ரம் சொல்லி பூமியினில் தெளிக்கவும்.

பின்னர் இரு கைகளினாலும் தேஹ ந்யாஸம் செய்க.!

ஜலத்தினைக் கையில் அஞ்சலி செய்வது போல் எடுத்துக் கொண்டு சூர்யமண்டலத்தின் நடுவில்
எம்பெருமான் வீற்றிருப்பதாக தியானித்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆஸநத்தில் அமர்ந்து, கையில் பவித்ரம் தரித்து, ஆஸநத்தில் அமர்ந்து ஜபிக்கத் தொடங்க வேண்டும்.

யார் யாரைத் தியானித்து ஜபிக்க வேண்டும்…?

முதலில் ஆஸநத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து,

1) இந்திரன் முதல் விஷ்ணு வரையிலும்
2) வாஸூதேவன் தொடங்கி அநிருத்தன் வரையிலும்
3) கேசவன் தொடங்கி தாமோதரன் வரையிலும் (த்வாதசம்)
4) பரமாத்மா
5) ப்ருதிவ்யாதி பஞ்சபூதங்கள் (நீர் தொடங்கி ஆகாயம்வரை)
6) ரிஷிகள் வரை தியானித்து ஜபம் செய்க.
7) பித்ருக்களைத் தியானித்து தெற்கு நோக்கி அமர்ந்து எள் கொண்டு அனைவருக்கும் தாந்தரீக தர்ப்பணம் செய்யவும்.

பின்னர் பவித்ரம் விசர்ஜனம் – ஆசமனம் – திக்குகள் அனைத்திற்கும் அந்தந்த திக்கு நோக்கி நமஸ்காரம் செய்யவும்.

திக்பந்தனம் செய்து, பிராணயாமம் முடித்து, பூதசுத்தி செய்யவும்.

ஜலமத்தியில் எம்பெருமானை தியானித்து, மானஸீகமாக எல்லா உபசாரங்களையும் செய்யவும்.
முடியுமாயின் புஷ்பங்களால் மானஸீகமாய் தியானித்துள்ள எம்பெருமானிடத்து அர்ச்சிக்கவும்.

எள், ஸமித்து, பசுநெய் கொண்டு ஹோமம் செய்க.

சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்க.

இத்துடன் தீர்த்த ஸ்நானம் நிறைவுற்றது.

இவ்விதம் செய்யும் கார்யகிரமமானது, நம் குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி, நிறைவடையச் செய்யும்.

சரி..! இதுவரையில் நதிக்கரையினில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய கார்யகிரமங்கள் அனைத்தையும் பார்த்தோம்..!

இயற்கைச் சீற்றம், வெள்ளப் பெருக்கு, ஏதேனும் நதி தீரத்திற்குப் போக முடியாத அளவுக்குக்
கஷ்டங்கள் அல்லது நமக்குத் தள்ளாமை – அப்போது என்ன செய்யலாம்….?
கை மற்றும் கால்களை நன்கு அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்யவும். 10 திக்குகளிலும் (8 திக்குகள், ஆகாயம் + பூமி)
ஜலத்தில் ப்ரோக்ஷித்து சுத்தி செய்யவும்.
நடுவில் அமரவும். மூலமந்திரம் சூழ்நிலைக்கேற்ப ஜபம் செய்யவும். பின்னர் பிராணாயாமம். பிறகு பூதசுத்தி செய்யவும்.
இதற்கு மந்திர ஸ்நானம் என்று பெயர்.
சிரத்தையுடன் செய்வோமாயின், பிரயாகை முதலான தீர்த்த ஸ்நானத்தினைக் காட்டிலும் இது மிகவும் உயர்ந்தது.

தியான ஸ்நானம்

மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோ மயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல். இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

இந்த ஸ்நானம், ஆசமனம், பிராணயாமம் முதலியவைகளால் சரீரத்தின் உள்ளும், புறமும் தூய்மையானவனாய் செய்யப்படும்
கிரியைகள் அனைத்தும் நிச்சயமாக பலனைத் தரும்.

இத்துடன் இரண்டாம் அத்தியாயம் “ஸ்நானவிதி“ முடிந்தது.

—————-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

இந்த அத்யாயத்தினில் ஸ்நானத்திற்கு பிறகு செய்யவேண்டிய கர்மாக்களைப் பற்றி சாண்டில்யர் விரிவாக எடுத்துரைக்கின்றார்.

ஸ்நானம் முடிந்து சிகை முடிந்தபின், சிகையுள்ள இடத்தினில், இளம் அருகம்புல்லையோ, புஷ்பத்தினையோ அல்லது எள்ளையோ
தீர்த்தம் சிறிது சேர்த்து அஸ்த்ர மந்த்ரம் சொல்லி சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு தீர்த்தம் நிறைந்த பாத்திரத்தினை வஸ்திரம் கொண்டு மூடி கையில் எடுத்துக்கொண்டு ஜனங்கள் அதிகம் செல்லாத வழியே,
ஏகாந்தமாய், அழகானதாய், தோஷங்கள் அற்றதாய், மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கு ஏற்றதாய், சுத்தமாக இருக்கக்கூடிய
எம்பெருமானின் திருக்கோவிலை நோக்கி, ஹ்ருதயத்தினில் வீற்றிருக்கும் ஞான, ஆனந்தமயனான எம்பெருமானை
சிந்தையினில் வைத்து வேறு எந்த திக்கினையும் பாராது மௌனியாய் செல்ல வேண்டும்.

த்வாதசாக்ஷரியை ஜபம் செய்தவண்ணம் ஸந்நிதியின் உள் நுழைந்து ஸந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிராகாரத்தினை சுத்தம் செய்து,
தாம் கையில் நதிதீரத்திலிருந்து கொண்டுவந்த ஜலத்தினால் பிராகாரம் சுற்றி ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

கர்ப்பகிரஹ வாயிலில் இருந்து பலிபீடம் வரையிலும் உதவியாளர்களைக்(பரிசாரகர்கள்) கொண்டு தூய ஜலம் கொண்டு சுத்தம் செய்க.

பின்பு, ஆச்சார்யன் பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும், உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலும்
கைகால்களை சுத்தம் செய்தபின்பு ஊர்த்வபுண்டரம் இட்டுக்கொண்டு ஆசமனம் செய்க.

ஊர்த்வபுண்டரத்தோடு சந்தனம் முதலான சுகந்த வஸ்துக்களை சேர்த்து குழைத்து ஊர்த்வபுண்டரம் இட்டுக் கொள்ளவும்.

சரி…! இந்த ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வ புண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த விரலினால் இட்டுக் கொள்ளலாம். அந்த விரல்களுக்கானப் பலன்கள்…?

புஷ்டி வேண்டுமானால் … கட்டை விரல்
மோக்ஷம் வேண்டுமானல் … ஆட்காட்டி விரல்
விரும்பியதை அடைய .. மோதிர விரல்
ஆயுள் வேண்டின் … நடு விரல்

எக்காரணம் கொண்டும் நகத்தினால் இட்டுக் கொள்ளவேக் கூடாது.

நம் உடலில் எவ்வளவு ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்ளலாம்..?
நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ள வேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும்
ஊர்த்வபுண்டரம் இன்றி செய்வோமாயின் பலனற்றதாகிவிடும்.
ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்க வேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிர விரலில் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ர மோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்
அங்கு அர்ச்சகர்கள் மட்டுமல்ல அங்குள்ள உடையவரின் திவ்யமங்கள வி்க்ரஹத்திலும் உடையவர் இரு கைகளிலும் பவித்ரம் அணிந்துள்ளார் ).
பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய
தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன அலங்காரங்கள் அர்ச்சகர்கள் தமக்குச் செய்து கொள்ள வேண்டும்..?

உச்சந்தலையில் க்ஷோபன அக்ஷதைகளோடு விளங்க வேண்டும்.
தூய்மையான வ்ரதத்தினைக் கடைப்பிடிக்கவேண்டும்.
வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ள வேண்டும்.
மணம் கமழத் திகழ வேண்டும்.
தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். (கோவிலுக்குச் செல்வதற்கு முன்பே வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவிலின் எல்லைகளுக்குள் எங்கும் உமி்ழ்வதோ, துப்புவதோ கண்டிப்பாகக் கூடாது.
வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)
மாலைகள் அணிந்து கொள்ள வேண்டும்.
தூய்மையான நல்ல வெண்மையான வஸ்திரங்கள் அணிந்து கொள்ளல் வேண்டும்.
கர்ணபூஷணம் (காதுகளுக்கான கடுக்கண் போன்ற ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கழுத்துக்கு ஹாரங்கள் (ஆபரணங்கள்) அணிந்து கொள்ள வேண்டும்.
கைக்குக் கடகம்
கைவிரல்களில் மோதிரங்கள்.
இவை எதற்கும் வசதியில்லாவிடின் கைவிரலில் ஒரு மோதிரமாவது தரிக்க வேண்டும்.
தம்முடைய சுவாசக்காற்று எம்பெருமான் மேல்படாதவாறு நாசித் துவாரங்களை வஸ்திரத்தினால் மூடிக்கொள்ள வேண்டும்.
(இதனால்தான் பெரும்பாலான அர்ச்சகர் மூன்றாவது உத்தரீயமாக தமது வலதுதோளில் இன்னொரு வஸ்திரத்தினை அணிந்து கொள்கின்றனர்)

இவையனைத்தும் செய்து கொண்டுபின் அர்ச்சகர்கள் எம்பெருமானைத் திருப்பள்ளி உணர்த்த வேண்டும்.

சரி..? எப்படி திருப்பள்ளியெழுச்சிச் செய்ய வேண்டும்..?

(இங்கு நாம் சற்று சிந்திக்கவேண்டும். அர்ச்சகர்கள் இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டுமா..? என்றால்,
ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே முக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு கோவில்களுக்கு வருவதில்லை..
பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு வேண்டுகோளுடனோ அல்லது ஏதேனும் கஷ்டங்கள் நிவர்த்திக்காகவோ வருகின்றனர்.
அவர்கள் அனைவருக்குமே கடவுளிடத்தில் அவர்களது பிரார்த்தனைகளை எடுத்துச் செல்வது – சொல்வது அர்ச்சகர்கள்தாம்.
அவர்களே உடலில் துர்நாற்றம் பிடுங்க அழுக்குமூட்டையாயிருந்தால் சேவார்த்திகளிடத்து அவநம்பிக்கைத்தான் பெருகும்.
எனவே அர்ச்சகர்கள் மேற்கூறியவற்றில் எவையெவைக் கடைப்பிடிக்க முடியுமோ அவற்றை செய்தல் நன்று.
குறிப்பாக சுத்தமாயிருத்தல் மிக மிக அவசியம்.
இன்னொரு விஷயம் அர்ச்சகர்களே இவ்வளவு அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமாயின் அவன் ஆராதிக்கும் பெருமாள்
இந்த அர்ச்சகனைக் காட்டிலும் பலமடங்கு சுத்தமாகவும் பரிமளத்துடனும், தேஜஸ்ஸூடனும்
இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதனை அனைத்து அர்ச்சகர்களும் உணர்ந்து பணியாற்றுதல் வேண்டும்.)

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.
சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.
சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.
த்வாரம் அருகே சென்று தச திக் பந்தனம் (8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம், நமஸ்ஸூக்களாலே
புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக் கதவுகளைத் திறக்கவேண்டும்.

பிறகு நேத்ர மந்திரத்தினை ஜபித்தவாறு திருவிளக்கு ஏற்றி விட்டு, தீர்த்தம் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்க.

பின்பு தம் உதவியாளர்களையோ அல்லது சிஷ்யர்கள் அல்லது புத்ரர்களை ஒத்தாசைக்கு அழைத்து
முதலில் அவர்களை பாத்ரசுத்திக்கு கட்டளையிட வேண்டியது.

(ஒத்தாசைக்கு வருபவர்கள் அனைவரும் நல்ஒழுக்கம், பகவத்சிந்தனை முதலியனை உடையவர்களாகவும்,
தீர்த்தமாடியவர்களாகவும் இருத்தல் அவசியம்)

பாத்ரங்களை எதனைக் கொண்டு சுத்தம் செய்யலாம்..?

தங்கம் மற்றும் தாமிரம் – புளி கரைசல்
வெள்ளி – புகை மற்றும் கரி சாம்பல்
இரும்பு பாத்ரங்கள் – சாம்பலும் தீர்த்தமும் கொண்டு
சங்குகள் – உப்பு
மரபாத்திரங்கள் – மண்ணும், தீர்த்தமும் கொண்டு

இந்த சுத்தம் செய்யபட்ட பாத்ரங்களை, அதனை சுத்தப்படுத்த பயன்படுத்திய வாசனை நீங்கும் வண்ணம் நன்கு அலம்பவேண்டும்.

சூர்யோதயம் ஆரம்பத்திற்கு முன்பே இந்த கர்மாக்களைத் தொடங்கவேண்டும்.

ஒரு அர்ச்சகர் கோவிலே இல்லாத ஒரு இடத்திற்குச் செல்ல நேரிட்டால்…..

அந்த அர்ச்சகர் சுத்தமான ஒரு பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். மூல மந்திரத்தினைச் சொல்லிய வண்ணம்
அங்கு மனதினால் ஒரு கோவிலைக் கற்பனைச் செய்ய வேண்டும்.

மூல மந்திரத்தினைச் சொல்லி, கோடி சூர்ய பிரகாசமாயுள்ள எம்பெருமானை அங்கேத் தியானிக்க வேண்டும்.

அந்த எம்பெருமானின் ஹ்ருதயமாக “ஹ்ருண் மந்த்ரம்“
பிரும்ம நாடியாக “சிகோ மந்த்ரம்”
எம்பெருமானது க்ரியா சக்தி “கவச மந்த்ரம்“
இந்த மானஸீகக் கோவிலின் திருக்கதவுகள் மற்றும் ஜன்னல்கள் “நேத்ர மந்த்ரம்”
கர்ப்பகிரஹத்தில் ஆயிரம் அக்னிப் பொறிகள் சூழ்ந்து ஒளிமயமாகவும், அனைத்து விக்னங்களையும் போக்கக்கூடிய ஜோதியாக “ அஸ்த்ர மந்த்ரம்” —
ஆகிய இந்த மந்திரங்களைச் சொல்லி மேற்கூறிய ஸ்தானங்களைத் தியானிக்க வேண்டும்.

இந்த மானஸீக கோவிலின் த்வாரத்தினை (கர்ப்பக்கிரஹ நுழைவு வாயில்) மூன்றாக பிரித்து
அதன் நடுபாகத்தினை மீண்டும் இரண்டாக பிரித்து, பின்பு இந்த இரண்டுபாகத்தின்,
இடது பாகத்தில் மெதுவாக வலதுகாலை முன்வைத்து நுழைய வேண்டும்.

பூமியினை கொஞ்சமாக பறித்து, எம்பெருமானையும், ஆச்சார்யனையும் மனதினால் வணங்கி
அவர்களுடைய ஆக்ஞையினை சிரமேற்கொண்டு, தமக்கு விரும்பிய பலனை மனதினால் எண்ணி,
அதனை அங்குள்ள எம்பெருமானிடத்துத் தெரிவி்க்கவேண்டும். பின்பு அந்த குழி பறித்துள்ள இடத்தின் நடுவில்
நாம் தியானித்து கற்பனைச் செய்த எம்பெருமானின் விக்ரஹத்தினை மனதினால் அங்கு பொருத்தி,
தர்பத்தினால் அந்த இடத்தினைத் துடைக்கவேண்டும்.

நிறைய தீர்த்தத்தினைச் சேர்த்து, கோமயத்தினால் அந்த மூலஸ்தானத்தினை சுத்தம் செய்து,
பஞ்சகவ்யம், சந்தனம், தீர்த்தம் இவைகளை அஸ்த்ர மந்திரம் சொல்லி, அவ்விடத்தில் ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

குங்குமம், அகில், பச்சைக்கற்பூரம் ஆகிய கலவைக் கொண்டு மொழுக வேண்டும்.

தர்ப்பங்கள், அருகம்புல், அக்ஷதை ஆகியவற்றை அவ்விடத்தில் தூவவேண்டும்.

இவ்விதமாக கர்ப்பகிரஹத்தினை சுத்தம் செய்து பின்பு மௌனியாக எம்பெருமானுக்கு முன்பே அல்லது
வலதுபுறமான இருந்து, வழக்கம் போல் ஆராதனம் செய்யவேண்டும்.

சரி..! எப்போதும் கோமயம் (பசுவினுடைய சாணம்) எப்படி எடுக்கவேண்டும்..?

புதிதாக இடப்பட்ட சாணமாகயிருக்க வேண்டும்.
கொழகொழவென்றோ, புழுக்கள் உள்ளதாகவோ இருக்கக்கூடாது.

திருவாராதனம் தொடங்கும் சமயம் திரைப் போ்ட்டுக்கொள்ள வேண்டும்.
இதற்கானக் காரணத்தினையும் சொல்கின்றார் சாண்டில்யர்.
“பாபிகளும், ப்ரஷ்டர்களும் (தங்களது தர்மத்திலிருந்து நழுவியவர்கள்),
நாஸ்திகர்களும், திருவாராதனத்தினைக் காணல் ஆகாது. எனவே திரையிடுக” என்கிறார்.

பின்னர் திருமணி அடிக்க வேண்டும்..! திருமணி ஒலிக்கச் செய்வதற்கும் காரணம் சொல்கிறார்..!
”தேவர்கள் வருவதற்கும், ராட்சஸர்கள் போவதற்கும், தேவர்களை அழைப்பதற்கும் சின்னமாயுள்ள
மணியோசையை ஒலிக்கச் செய்ய வேண்டும்..”

திருமணியோசையோடு என்னென்ன ஒலித்தல் வேண்டும்..?

திருமணியோசையோடு சங்க முழக்கமும், நாதஸ்வரத்தின் மங்கல ஓலியுடன் கூட திருமணியோசை ஒலிக்க வேண்டும்.

எவ்வப்போது ‘சங்கொலி’ முழங்க வேண்டும்..?

1) ஆவாஹணம் சமயத்தில்
2) எண்ணைக் காப்பு சாற்றும் போது
3) திருமஞ்சனம் ஆரம்பத்திலும் முடிவிலும்
4) திலகமிடும் போது
5) தீபம் சமர்ப்பிக்கும் போது
6) ‘மாத்ரா’ (பச்சரிசி) நிவேதனம் போது
7) கற்பூர ஹாரத்தியின் போது
8) திரு மடப்பள்ளியிலிருந்து நைவேத்தியங்கள் கொண்டு வரும் போது
9) நைவேத்தியம் கண்டருளும் போது
10) பூர்ணாஹூதியின் போது
11) தீர்த்தம் கொண்டுவரும் போது
12) பெருமாள் வாகனங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும்.
13) திருக்கதவுகள் தாளிடும் போதும் – விலக்கும் போதும்.

மேற்கூறிய சமயங்களில் சங்கொலி முழங்க வேண்டும். எத்தனை முறைத் தெரியுமா..? – “மூன்று முறை“.

இதெல்லாம் திருவாராதன காலத்தில் செய்யவேண்டிய கிரமங்கள். சரி..! நாம் என்ன கடைப்பிடிக்க வேண்டும்..

எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யும் சமயம் ஆரம்பம் முதல் மௌனமாயிருந்து, நம் புத்தியினை அலைப்பாய விடாமல்,
எம்பெருமானிடத்தில் செலுத்தி சிரத்தையுடன் செய்யவேண்டும்.

திருவாராதன சமயத்தில் எக்காரணம் கொண்டும் பேசுதல் கூடாது.
இச்சமயத்தில் பேசுவது பலமான விரோதத்தினை ஏற்படுத்தும்.

எவ்விதமான ஜாடைகளோ, செய்கைகளோ, மூக்கினால் முனகுவதோ கூடாது. இதனை மீறினால் நமது சித்தியானது தடைப்படும்.

மௌனம் ஸர்வ சித்திகளையும் தரவல்லது.

தியான முத்ரையோடு, அஸ்த்ர மந்திரத்தினால் உள்ளங்கை, புறங்கை, விரல்கள் முதலானவற்றை அலம்பிக்கொள்ள வேண்டும்.
இந்த கரசுத்தி முடிந்தவுடன் ஸ்தான சுத்தி செய்யவேண்டும்.

சூரியனை ஒத்த ஒளியுடையவனும், ஜ்வாலை போன்று பிரகாசிக்கும் திருமுகமண்டலமுடைய எம்பெருமானை தியானித்து,
அவனாலே பிரம்மலோகம் வரையுள்ள உலகங்கள் ஒளிபொருந்தியதாய் தியானிக்க வேண்டும் –
அனைத்துத் திக்குகளும் அவனது தேஜஸ்ஸினால் ஜ்வலிப்பதாக எண்ண வேண்டும்.

மண்ணால் ஆன பாத்திரம் நெருப்பினால் சுடப்பட்டு பயன்பாட்டுக்கு உதவுவது போல, இந்த பூமியான பாத்திரம்,
எம்பெருமானாகிய நெருப்பினால் சுடப்பட்டு, அம்ருத அலைகளால் அனைத்து இடங்களும் நினைந்து, பவித்ரமானதாய் எண்ண வேண்டும்.

பின்பு திக்பந்தனம் செய்யவேண்டும்.

பிராணயாமம் செய்யவேண்டும்.

பிராணயாமம் எதற்காக செய்யவேண்டும்..? காரணம் சொல்கின்றார் சாண்டில்யர்..!

மன உளைச்சலையும், நிலையற்ற தன்மையையும் உடைய மனதினை ஒருநிலைப்படுத்துவதற்கும்,
பிராணன் முதலான வாயுக்களை ஜெயிப்பதற்கும், நம்முடைய “தமோ“ குணத்தினைப் போக்குவதற்காகவும்
பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

சரீரத்திலுள்ள நாடிகளின் அமைப்பையும், பிராணன் முதலிய வாயுக்கள் இருக்கும் இடத்தினையும்,
ப்ராணயாமத்தின் சொரூபத்தினையும் அறிந்து கொண்டு பிராணயாமத்தினைச் செய்யவேண்டும்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும் (கந்தம் = ஹ்ருதயம்..? ).
நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“
(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி
(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.
இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது.
கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம் இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.
கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை
பிங்களா – சிகப்பு
காந்தாரி – மஞ்சள்
ஹஸ்திஜிஹ்வா – கருப்பு
பூஷா – கருமஞ்சள்
யஸஸ்வினி – பச்சை
அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)
குஹூ – இளஞ் சிகப்பு
கோசினி – கருப்பு
இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்
பிங்களா – அபானன்
அலம்புஸா – சமானன்
குஹூ – வ்யானன்
சுழும்னா – உதானன்
பிங்களா – நாகன்
பூஷா – கூர்மன்
யஸஸ்வினி – க்ருகரன்
ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்
கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்
கூர்மன், அபானன் – இந்திர கோபன்
சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்
தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்
தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

(மெய்ஞானம் கொண்டு அறிந்த இந்த நாடி அறிவிற்கு ஏதும் சமமாகுமா..?
நம் மஹரிஷிகள் காட்டிச் சென்ற பாதையினை நாம் மறந்து மேலைநாட்டு விஞ்ஞானத்தில் ஆழ்ந்து
இன்று பல குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளோம்.
நாடி பார்த்து நோய் தீர்க்கும் மிகச் சிறந்த வழிமுறை மறந்து போனோம்..! )

ப்ராணாயாமம் ::

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.
சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.
வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.
உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.
இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேக வேகமாக சுவாசத்தினை உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும்
ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி நிதானமாக சுவாசிக்கின்றோமோ
ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும், ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?
இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.
இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக உங்கள்
கைவிரல்களால் ஒரு சொடுக்குப் போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம்
குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம் “அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.
அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது

::பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஆறாம் அம்சம்—-

February 28, 2021

1. கலியுக தர்மம்
2. கலியின் குணபாவம்
3. நைமித்திகப் பிரளயம்-
4. பிராகிருதப் பிரளயம்
5. ஆத்யந்திகப் பிரளயம்
6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-
7. யோக வழி-
8. நூற் பயன்-

————

1. கலியுக தர்மம்

மைத்ரேய முனிவர், பராசர மகரிஷியை நோக்கி, குரு நாதரே! உலக சிருஷ்டியையும் வமிசங்களையும் மனுவந்திரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கற்பத்தின் முடிவில் மகாப் பிரளயம் என்ற பெயரைக் கொண்ட சங்காரத்தைப் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்! என்று கேட்டார். கற்பாந்தத்திலும் பிராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன்; கேளுங்கள். நம்முடைய மாதம் பிதுர்க்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் இரண்டாயிரம் சதுர் யுகங்கள் சதுர்முகப் பிரம்மனுக்கு ஒருநாள் சதுர்யுகம் என்பது கிருதயுகம். திரேதயுகம் துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கற்பத்தின் ஆதியான கிருத யுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றையச் சதுர் யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதி கிருத யுகத்திலே பிரம்மா எப்படிப் படைக்கிறாரோ அதுபோலவே கடைசியான கலியுகத்திலே சங்காரஞ் செய்கிறார் என்று பராசரர் சொல்லி வரும்போது மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்பி, ஓ குருநாதா! நான்கு பாதங்களால் நடக்கும் தன்மையுடைய தருமம் அழிந்துவிடத் தக்கதான கலியுகத்தின் சொரூபத்தை நன்றாக விளக்கிக் கூறவேண்டும். என்று கேட்டார். பராசர மகரிஷி கூறலானார்.
மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல்கிறேன். கேளும் கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணாசிரம ஆசார நடவடிக்கைகள் இராது. அதில்லாததால், ரிக், யஜுர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இராது. கலி காலத்தில் தர்மமான திருமணங்கள் நடைபெறாது. குரு மாணவ முறையும் இராது தம்பதிகள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத்தக்க வேத வேள்வி முறைகளும் இல்லை. எந்தக் குலத்தவனாயினும் பலசாலி எவனோ, அவனே எல்லோருக்கும் அரசனாவான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே கன்னிகாதானம் செய்யத் தகுதியுடைய வனாவானேயன்றி, கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவனாக மாட்டான். பிராமணன் எந்த வழியினாலும் தீக்ஷிதனாவானே தவிர சாஸ்திர விதிப்படியாவதில்லை. கலியில் விதிக்கப்பட்டதே பிராயச்சித்தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்கப்பட்டு விடும் எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எதுவுமே தெய்வமாகக் கொண்டாடப்படும். இன்னோருக்கு இன்ன ஆசிரமம் என்பதிராது. எவனும் எந்த ஆசிரமத்திலும் பிரவேசிப்பான் ஒருவன் தான் விரும்புவது போலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும் தவஞ்செய்வதும் சாஸ்திர ரீதியான தருமமாகக் கருதப்படும். அந்தப் பொருள் இருந்தாலும், தான் தனவான், என்ற செல்வ செறுக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோலவே, பெண்களுக்குக் கூந்தல் செவ்வையாக இருந்தாலே அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும்போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர்கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனாயினும் பொருளுடையவனாக இருந்தால் அவனையே புருஷனாகத் தேடிக் கொள்வார்கள். எவன் அதிகமாகப்பொருள் கொடுப்பானோ, அவனையே ஜனங்கள் சுவாமி என்று கொள்வார்களே அன்றி, நற்குலம், நற்பிறவி முதலியவற்றைச் சுவாமி என்பதற்கு ஏதுவாகக் கொள்ள மாட்டார்கள். கலியுகத்திலே புத்திக்குப் பயன் பொருள் சம்பாதிப்பதேயன்றி, ஆன்ம ஞானம் பயனாகக் கொள்ளப்படமாட்டாது. அந்தப் பொருளும் வீடுகட்டப் பயன்படுமேயல்லாது. யாகாதி காரியங்களுக்குப் பயன்படாது. அந்த வீடும் தனது போகத்துக்கே பயன்படுமேயன்றி அதிதிகளுக்கு எவ்வளவும் பயன்படாது. மங்கையர் சளுக்கனாக இருப்பவனிடத்தில் காதல் கொண்டு உடலாலோ மனதாலோ விபசாரிகளாக இருப்பார்கள். ஆடவரோ அநியாயத்தாலாவது பணஞ் சம்பாதிப்பவரிடத்திலேயே மனம் வைத்திருப்பார்கள். எவர்களும் நண்பர்கள் வேண்டிக் கொண்டாலும் மனம் இரங்காமல், தங்கள் காரியத்தையே பெரிதாக நினைத்து அரைக்கால் பணத்திலும் ஆசை வைத்திருப்பார்கள். சூத்திராதிகள், பிராமணரைத் தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக நினைப்பார்களேயல்லாமல், சிறப்புடையவராக நினைக்க மாட்டார்கள்.
பசு மாடுகளிலும் ஜனங்களுக்குப் பால் கொடுப்பது பற்றியே உயர்வானதாகக் கருதப்படுமேயன்றி அதன் ஜாதியைப் பற்றிப் பெருமை பெறாது. இக்கொடிய காலத்தில் ஜனங்கள் யாவரும் மழையில்லாமையைப் பற்றிய அச்சமுடையவர்களாய்ப் பசிக்குப் பயந்தும், சோர்ந்தும் வானத்திலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். மனிதர்கள் தவமுனிவர்களைப்போலக் காய் கிழங்குகளைப் புசித்துக் கொண்டு மழையில்லாமை முதலியவற்றால் வருந்தித் தம்மைத் தாமே கொலை செய்து கொள்வார்கள். கலிகாலத்தார், சுகம், உல்லாசம் அற்றவராய், திரவியம் க்ஷீணித்தவராய், எப்போதும் பஞ்சத்திலும் துன்பத்திலுமே தவிப்பார்கள். கலி வளர வளர, எவரும் அக்கினி பூஜை, தேவபூஜை, அதிதிபூஜை, பிண்டோதக தானரூபமான பிருது பூஜை முதலியவற்றைச் செய்யாமல், குளிக்காமலுங்கூட உணவருந்திக் காலம் கழிப்பார்கள். ஸ்திரீகள் அதிக ஆசையும் குறுகிய உடலும் கொண்டு பேருண்டி அருந்தி பல பிள்ளைகளைப் பெற்று, செல்வமின்றி வருந்துவார்கள்; மேலும் இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்து கொண்டே, கணவன்; மாமனார்; மாமியார் முதலியோரின் கட்டளையை மிகவும் அலட்சியமாய் அவமதித்து வருவார்கள். தேக சுத்தமில்லாமல், தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈனமான எண்ணத்துடன் கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்களாக இருப்பார்கள். குலமங்கையர் தாங்கள் தீய ஒழுக்கமுடையவராகையால், அத்தகையோரிடம் நட்புக் கொண்டு, தங்கள் புருஷனுக்குப் பலவகையான தீமைகளைச் செய்து வருவார்கள். பிரமசாரிகள், விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனஞ் செய்வார்கள். இல்லறத்தானோ, சிறிதும் ஓமஞ் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் ஈயார்கள் வானப் பிரஸ்தர், ஊரில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலஞ் செய்வதை முக்கியமாக எண்ணாமல் அந்த வரி இந்த வரி என்று எதையாவது சாக்கிட்டு குடிமக்களின் பொருள்களைப் பறிப்போர்கள். எவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிறானோ, அவனவனே அரசனாவான். பலமற்றவன் சேவகனாவான்.
வைசியர்கள், பயிர் செய்தல், வாணிபஞ் செய்தல் முதலிய தமது தொழிலைவிட்டு, சூத்திரரது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள், சூத்திரரோ தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள். சூத்திரரோ சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, பிøக்ஷ வாங்கி உண்டு அநேகர் தங்களைப் பூசிக்கும் படியான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். மக்கள் பஞ்சத்திலும், வரி இறுத்தலாலும் துன்பமடைந்து கோதுமை, யவம் விளையும் நீசத்தேசங்களுக்குப் போய் விடுவார்கள். இவ்விதமாக வர்ணாசிரம தர்மங்கள் கெட்டுப்போய் வேத மார்க்கமே மறைந்து போவதால், மக்கள் பாஷாண்ட மதங்களைப் பின்பற்றி விடுவார்கள், இதனால் அதர்மம் விருத்தியாகும். அதனால் மக்கள் அதர்மமாக நடக்கத் துவங்கிவிடுவார்கள். அதனால் அதர்மம் வளர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாய்விடும்; ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான வீணான தவங்களைச் செய்வார்கள். ஆகையால் இளமையிலேயே மரணமுண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வயதுக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்து வயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமையுடைவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே நரை திரை முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இருபது வயதுக்குமேல் பிழைத்திருப்பதில்லை கலியுகத்தில் மக்கள் அற்ப ஞானமுடையவர்களாகவும் வீணான தவவேடங்களைப் பூண்டு கெட்ட நினைப்புக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் விரைவில் நசித்துப் போவார்கள்.
மைத்ரேயரே! தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி விருத்தியாயிற்று என்று புத்திசாலிகள் தெரிந்து கொள்வார்கள். மேலும் எப்போது பாஷாண்டர் அதிகமாகின்றனரோ, எப்போது வேதம் அறிந்த நல்ல மனிதனுக்குத் தீங்குகள் நேரிடுகின்றனவோ, அப்போது கலி முதிர்ந்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். எப்போது யக்ஞங்களுக்கு ஈசுவரனான புரு÷ஷாத்தமனை மக்கள் யக்ஞங்களில் ஆராதிப்பதில்லையோ, எப்போது வேத வாக்கியங்களில் நாட்டமும் பிரீதியுமின்றி, பாஷாண்ட வாக்கியங்களில் இச்சை யுண்டாகுமோ அப்போது கலி மகாபலம் பொருந்தியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கலியுகத்தில் ஜனங்கள் பாஷாண்டரால் கெடுக்கப்பட்டு, படைப்புக் கர்த்தாவாகவும் சர்வேசுவரனாகவும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள் மேலும் மக்கள் பாஷாண்டபுத்தியால் தேவதைகள் எதற்கு? வேதங்கள் ஏன்? பிராமணரால் ஆவதென்னதண்ணீர் விட்டுக்கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்? என்று ஏதேதோ பிதற்றுவார்கள். இத்தகைய அதர்மங்களாலேயே, மேகங்கள் அற்பமழையைப் பொழியும், பயிர்கள் அற்பமாகவே பலனளிக்கும். பொருள்கள் சாரங் குறைந்திருக்கும். ஆடைகள் சணற்கோணிகள் போலிருக்கும். மரங்கள், வன்னி மரங்களைப்போல அற்பமாகவே இருக்கும். ஜாதிகள் எல்லாமே சூத்திர ஜாதி போலிருக்கும். மேலும் தானியங்கள் அணுக்கள் போலவும் பால், நெய் போலவும் சந்தனப் பூச்செல்லாம் கோரைக் கிழங்குப் பூச்சைப் போலவும் ஆகிவிடும். முனிவரே! கலியுகத்தில் மக்களுக்கு மாமனார், மைத்துனர், மாமியார், ஆசாரியர், பெண்டாட்டிகள் வேண்டுமளவு தொகையுடையவராக இருப்பார்கள். மேலும் ஜனங்கள் தாய் தந்தையரிடத்தில் அன்பில்லாதவர்களாய் மாமியார் மாமனார்களையே முக்கியமான நினைத்து, தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார்? அவனவன் தத்தனது கர்மத்தையல்லவோ செய்யவேண்டும்! என்று பேசி வருவார்கள். இந்தக் கலியுகத்தில், மக்கள் அற்பப் புத்தியுடனும் மனம், வாக்கு காயம் ஆகிய மூன்றும் சுத்தமில்லாமல் தினந்தோறும் பாவத்தையே செய்து வருவார்கள். உண்மையில்லாதவர்களாகவும் சவுசம் இல்லாதவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும், துக்கப்பட்டுத் தவிப்பார்கள். இத்தகைய கலிபலத்தினால் உலகமானது, வேதாத்தியயனம் யாகம், பிதுர்பூஜை, தேவ பூஜை இவைகளினின்று, தருமத்தை ஒளியச் செய்யும் இத்தகைய கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்வானாகில், அவன் கிருத யுகத்தில், பெருந்தவஞ் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ, அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்!

——————-

2. கலியின் குணபாவம்

மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலி விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நான் உமக்குச் சொல்கிறேன்; கேளும்.
ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது எந்தக்காலத்தில், கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும்? எவர் எப்படிப்பட்ட தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்? என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த விஷயத்தைப் பற்றி சந்தேகம் நீங்கி, உண்மையை அறிந்து கொள்வதற்காக, முனிவர்கள் அனைவரும் வேத வியாச மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவியாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார்; அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் அவரை எதிர்பார்த்துக் கொண்டு கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர் முழுக்கிலிருந்து எழுந்து சூத்திரன் ஸாது; கலி ஸாது என்று அந்தச் சந்தேகம் தெளிவு பெற அவரைத் தேடிவந்த முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு, மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, ஸாது ஸாது சூத்திரா! நீ மஹா புண்ணியவானாக இருக்கிறாய்? என்று சொன்னார். மறுபடியும் மூழ்கியெழுந்த அவ்வியாசமுனிவர் பெண்களே புண்ணியவதிகள்! அவர்களைவிடப் புண்ணியமுடையவர்கள் யார்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு அவர் நன்றாக மூழ்கிக் குளித்து நீராடிவிட்டு, ஆசமனாதி சகல அனுஷ்டானங்களையும் செய்துவிட்டு, வீற்றிருந்தார். சந்தேகம் தெளிவுபெற என் மகனைத் தேடி வந்த முனிவர்கள், வேத வியாசரை வணங்கி, நின்றனர். அவர்களை வேத வியாசர் உட்காரச் சொல்லி நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் சுவாமி! நாங்கள் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவே, உங்களைத் தேடி வந்தோம். அது இருக்கட்டும் கலி ஸாது சூத்திரன் ஸாது; பெண்கள் புண்ணியவதிகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப்பற்றி நாங்கள் முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்! மறைக்க வேண்டாத பக்ஷத்தில், அதை எங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றித் தங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்றார்கள்.
வேத வியாசர் புன்னகை செய்தவண்ணம் அவர்களுக்குக் கூறலானார்; ஓ தவ முனிவர்களே! ஸாது; ஸாது என்று எதனால் சொன்னானோ அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைத் கிருத யுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ அதுவே திரேதா யுகத்தில் ஒரே ஆண்டில் சித்திக்கும். அதுவே துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத்திலோ ஒரே நாளில் பயன் வந்துவிடும். இது போலவே தவம், பிரமசரியம், ஜபம் முதலிய எதற்கும் உரிய பயனை மனிதன் மூன்று யுகங்களிலும் பெறுவதிலும் மிகவும் எளிதாகப் பெறுவதாலேயே, கலி ஸாது என்று சொன்னேன். இன்னும் கேளுங்கள். கிருத யுகத்தில் யோக நிஷ்டையிலிருந்து தியானஞ் செய்வதனாலும் திரேதா யுகத்தில் யாகஞ் செய்வதனாலும், துவாபர யுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் கேசவனுடைய நாம சங்கீர்த்தனஞ் செய்வதாலேயே கிடைத்துவிடும். தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன். இந்தக் கலியுகத்தில் சிறிதளவு சிரமத்தினாலேயே பெரும் அளவு தருமத்தை அடைவானாதலால், கலியை நான் கொண்டாடுகிறேன். இனி, சூத்திரன் ஸாது என்று நான் சொன்னதை விளக்கமாகச் சொல்கிறேன். பிராமணாதிகள் விரதம் அனுஷ்டானங்களில் தவறாமல் இருந்துகொண்டு முதலாவதாக வேதங்களை ஓதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித்த பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படிச் செய்யவேண்டும். பிராமணாதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர வீண் பேச்சுக்கள் பேசுவதும், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்காத அன்னாதிகளைப் புசிப்பதும் டம்பத்துக்கும் லாபத்துக்கும் யாகங்களைச் செய்வதும் பாதகமாகும். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு எதையும் விதிப்படிச் செய்யாமற் போனால் அது குற்றமாகும்.
போஜனாதிகளைக்கூட இஷ்டப்படிச் செய்யவொண்ணாமல் விதிப்படிச் செய்ய வேண்டியவையாக இருப்பதால், யாவுமே அவர்களுக்கு பராதீனமானவை அதனால் அவர்கள் எதையும் மிகவும் வருந்தித் தாங்களடைய வேண்டிய உலகங்களை ஜெயிக்கவேண்டும். சூத்திரனோ வேத அத்தியயனம். அக்கினி, யக்ஞம் முதலியவைகளின்றி, பாக யக்ஞாதிகாரமுடையவனாய் முந்திய பிராணா நியருக்குப் பணிவிடை செய்வதனாலேயே அத்தகைய உத்தம உலகங்களை அடைந்துவிட முடிகிறது. ஆகையால் அவனைவிடப் புண்ணியவான் யார் உண்டு? ஓ முனிவர்களே, சூத்திரனுக்கு இன்னது உண்ணத் தக்கது. இன்னது தின்னத் தகாதது. இது குடிக்கத் தக்கது. இது குடிக்கத் தகாதது என்ற நியமம் இல்லாமையால், சூத்திரன் ஸாது என்று நான் சொன்னேன், ஆடவர்கள் தத்தமக்குரிய தருமத்தினால் பொருள் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவைகளுக்குச் செலவு செய்யவேண்டும். நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைச் சம்பாதிப்பதிலும், எத்தனைப் பிரயாசைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல்ல வழியில் செலவழிப்பதிலோ, இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ்விதமான பலவகைக் கிலேசங்களினால் ஆடவர்கள் பிரஜாபத்தியம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள். பெண்களோ மனோவாக்குக் காயங்களினாலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருஷைகளைச் செய்து வந்தாலே கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள். இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல் வருந்திப் பெறும் உலகங்களைப் பெறுவதால், மூன்றாவதாக பெண்கள் ஸாதுக்கள் என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டபடி நான் சொன்னவற்றுக்குக் காரணங்களைச் சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டும். அதற்கும் நான் பதில் சொல்கிறேன் என்றார் வியாசர்.
முனி சிரேஷ்டரே! நாங்கள் கேட்க வந்த சந்தேகங்கள் இப்போது நீங்கள் கூறிய விளக்கவுரைகளிலேயே அடங்கியுள்ளன, இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை என்றார்கள் முனிவர்கள். பிறகு, அந்தக் கிருஷ்ணதுவைபாயனர் சிரித்து, நான் திவ்விய ஞானத்தால் உங்கள் காரியத்தை அறிந்து அதைக் குறித்துத்தான் கலி ஸாது, சூத்திரன் ஸாது ஸ்திரீகள் ஸாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயே கலியில் தருமம் பலிக்கிறது. தயை சாந்தி முதலிய ஆன்மீக குணங்களாகிய தண்ணீர்களினால் அவர்கள் பாவங்களாகிய மலங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். சூத்திரர் பிராமணாதியருக்குப் பணிவிடை செய்வதினாலேயே பேறுபெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணிவிடை செய்து, ஆயாசம் இல்லாமலேயே நற்கதியை அடைகிறார்கள்; ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது என் கருத்து. கிருத யுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசமுள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தேகம் தீர்ந்தது அல்லவா? இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என்ன? என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி, விடைபெற்றுச் சென்றார்கள். மைத்ரேயரே! இந்த இரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். மிகவும் துஷ்டனான கலிபுருஷனுக்கு இத்தகைய பெருங்குணமும் இருக்கிறது. நீங்கள் முதலில் லோக சம்ஹாரத்தைப் பற்றி என்னைக் கேட்டீரல்லவா? பிராகிருதம், அவாந்தரம் என்று பிரிந்திருக்கிற அந்தப் பிரளயக் கிரமத்தை இனி உமக்குச் சொல்கிறேன் கேளும்.

———————

3. நைமித்திகப் பிரளயம்-

எல்லாப் பூதங்களுக்கும் பிரளயம் மூன்று விதம். அவையாவன; நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என்பனவாம். கல்பத்தின் முடிவில் பிரம்மனால் உண்டாகும் பிரளயம் நைமித்திகம். பரம் பொருள் பிரமாணமான விரிஞ்சனுடைய ஆயுளின் முடிவில் வரும் பிரளயம் பிராகிருதம் மோக்ஷமே ஆத்தியந்திகம் எனப்படும். என்று பராசர முனிவர் கூறியதும் மைத்ரேயர், சுவாமி! பிராகிருதப் பிரளயத்தை அறிந்துகொள்வதற்காக பரார்த்தத்தை இரட்டிக்கவேண்டும் ஒழிய, அந்தப் பரார்த்தம் என்ற கணக்கை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும், என்றார். பராசர மகரிஷி கூறலானார்.
கேளும் பிராமணரே! ஏகஸ்தானம் முதல் ஒன்றுக்கு ஒன்று பதின்மடங்கு அதிகமாய் மேலுக்கு மேல் ஸ்தானங்கள் உண்டன்றோ? அவற்றில் பதினெட்டாவது இடமே பரார்த்தம் என்று வழங்கப்படுகிறது. அந்த பரார்த்தம் இரட்டித்த காலத்தில் பிராகிருதப் பிரளயம் உண்டாகும். இப்பொழுது வியக்தம் யாவும் அவியக்தத்தில் லயப்பட்டு விடும். மனிதருக்கு நிமிஷம் என்று எதுவுண்டோ, ஒரு மாத்திரை அளவுள்ளதது. ஆகையால் அது மாத்திரை என்று சொல்லப்படும். அந்த மாத்திரைகள் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டைகள் ஒருகலை. பதினைந்து கலைகள் ஒரு நாழிகை. அது பன்னிரண்டரை பல நிரையுள்ள தண்ணீரால் குறிக்கப்படும். இது மகத தேசத்தில் ஒருபடி நீரளவாம். இதை அறியும் முறையைக் கேளும். இருபது குன்றி மணி எடையுள்ள பொன்னால் நான்கு அங்குல அளவாகச் செய்த ஊசிகளைக் கொண்டு துளையிடப்பட்ட மகத தேசத்துப் படியளவான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் மூழ்த்தினால், அந்தப்பாத்திரம் எவ்வளவு காலத்தில் தண்ணீர் நிறையுமோ அத்தனைக்காலம் ஒரு நாழிகை என்று எண்ணப்படும் அல்லது, அந்தப்பாத்திரத்தில் விட்ட தண்ணீர் அதிலிருந்து வெளிப்படும் காலம் ஒரு நாழிகையாகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தம் ஒரு நாள் முப்பது நாள் ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் ஒரு வருடம் இந்த வருஷம் தேவர்களுக்கு ஒரு இராப்பகல் இத்தகைய இராப் பகல்கள் முந்நூற்றறுபது சேர, தேவமானத்தில் ஒரு வருஷமாம் அந்தவருஷம் பன்னீராயிரம் சேர்ந்தால் ஒரு சதுர்யுகமாகும். அந்தச் சதுர்யுகங்கள் ஆயிரம் ஆயின் சதுர்முகனுக்கு ஒரு தினம். அதற்குத்தான் கல்பம் என்றுபெயர். அதன் இறுதியில் வருவதுதான் பிரமசம்பந்தமான நைமித்திகப் பிரளயமாகும் மைத்ரேயரே! அதி உக்கிரமான அந்தப் பிரளயத்தின் சொரூபத்தை முன்னதாகச் சொல்லுகிறேன். பிறகு நைமித்திக பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
ஆயிரம் சதுர்யுகத்தின் முடிவில் பஞ்சம் முதலிய காரணங்களாய், பூலோகம் பெரும்பாலும் க்ஷீணித்திருக்கும்போது, மிகவும் கொடுமையாய் நூற்றாண்டு அளவு மழையே இல்லாமல் இருக்கும். அதனால் அற்ப சக்தியுள்ள ஜந்துக்கள் யாவும் மடிந்து போய்விடும். பிறகு ஸ்ரீவிஷ்ணு பகவான் சங்காரத்துக்காக உருத்திர ரூபம் தரித்தவராய் சகல பிராணிகளையும் தம்மில் லயிக்கும்படிச் செய்யும் திருவுளம் பற்றிச் சூரியனது ஏழு கிரணங்களிலிருந்து கொண்டு சகல ஜலங்களையும் பானஞ்செய்வார். இவ்விதமாகப் பிராணிகளாலும் பூமியிலும் உள்ள தண்ணீரை யெல்லாம் உறிஞ்சிப் பூமியையெல்லாம் வறளச் செய்வார். இவ்வாறு சமுத்திரங்கள், நதிகள் அருவிகள் முதலியவற்றின் தண்ணீரை யெல்லாம் அருந்தியதால் சூரிய கிரணங்கள் ஏழும் மிகவும் பெரிதாகி, ஏழு சூரியர்களாகிக் கீழும் மேலும் ஜொலித்துப் பாதாளங்கள் உட்பட மூன்று உலகங்களையும் எரித்துவிடும். இந்த ஏழு சூரியர்களாலும் எரிக்கப்படவே இந்த பூமியானது மலைகள் கடல்கள் முதலிய எவ்விடத்திலும் ஈரப் பசையென்பதேயில்லாமல் மரஞ்செடி புல் பூண்டு முதலிய யாவும் எரிந்துபோய் ஆமையோடு போலாகிவிடும். பிறகு ஆதிசேடனின் சுவாசத்திலிருந்து உண்டானகாலாக்கினியானது ருத்திரனாகிப் பாதளங்களையெல்லாம் தகித்துக் கொண்டே, பூமிக்கும் வந்து அதையும் கொளுத்திவிடும். இவ்விதமாக அந்தப் பிரளயகாலாக்கினி ஜ்வாலா சக்கரத்தோடு கூடியதாய் புவர்லோக, சுவர்லோகங்களையும் கொளுத்திக் கொண்டே, அங்கேயே சுழன்று கொண்டேயிருக்கும். அப்போது அதன் ஜ்வாலைகளால் சூழபட்ட மூவுலகமும் சராசரங்கள் நசித்ததாய் வறுக்கிற சட்டியைப்போல இருக்கும்.
பிறகு அதிகார புருஷர்களாய், புவர்லோக சுவர்லோகங்களிலிருக்கிற மனுவாதிகள் மகாதாபத்தோடு மகர்லோகஞ் செல்வார்கள். பிறகு அங்கும் பெருந்தாபமடைந்து அவ்வுலகத்தாருடன் கூட, அதற்கும் மேலான ஜனலோகத்தை அடைவார்கள். அவர்களுக்குள்ளே யார் பரப்பிரமத்தையடையநின்றவர்களோ, அத்தகையோர் மேலும் கீழும் பத்துத்தரம் சுற்றிச் சுழன்று தவலோக சத்தியலோகங்களிற் சென்று, கடைசியாகப் பரப்பிரமத்தை அடைவார்கள். பூவுலகம் முதலிய மூவுலகங்களிலுமுள்ள மற்றவர் யாரும் ஆன்மாவில் லயப்படுவார்கள். இவ்விதமாக ருத்திர ரூபியாக இருக்கிற ஸ்ரீஜனார்த்தனர்யாவற்றையும் தகித்து தம் சுவாசத்தினின்றும் அநேக மேகங்களை உண்டாக்குவார். அதனால் யானைகளின் கூட்டத்தைப் போன்று மகாபயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய பிரளயகால மேகங்கள் கவியலாகும். அவற்றில் சில கருநெய்தல் மலர் போன்றும், சில ஆம்பல்களைப் போலும்; சில கருஞ்சிவப்பாகவும் சில பொன்னிறமாயு சில கழுதை நிறமாயும், சில அரக்கு வர்ணமாயும் சில வைடூரியம் போன்றும்; சில இந்திர நீலத்துக்கு ஒப்பாயும், சில சங்கு முல்லை போலவும் சில மை நிறமாயும், சில தம்பலப் பூச்சிகள் போன்றும் வேறு சில நெருப்புப் போன்றும், சில மனோசிலை போன்றும் சில கூந்தற்பனை போன்றும் விளங்கும். அத்தகைய மாபெரும் மேகங்களின் உருவங்களில் சில பெரிய நகரங்களைப் போலவும், சில மலைகளைப் போலவும் சில தரைக்குச் சமானமாயும் இருக்கும். இத்தகைய மகாமேகங்கள் பயங்கரமாக முழங்கிக் கொண்டு; வான முழுதும் பரவி; பெருந்தாரைகளைப் பொழிந்த வண்ணம் முன்பு சொன்னதுபோல், மூன்று உலகங்களிலும் பற்றிஎரிகின்ற பெருந்தீயை அவிக்கும் அந்தத்தீயானது அவிந்த பிறகும் அம்மேகங்கள் இராப் பகல்கள் ஓயாமல் மழையைப் பொழிந்து அந்தப் பெருந்தாரைகளினாலே பூமி முழுவதையும் ஜலமயமாக்கிப் பின்பு புவர்லோகத்தையும் அப்படியே ஜலமயமாக்கி விடும். இதுபோல் அப்பெரு மேகங்கள் ஸ்தாவர ஜங்கமங்கள்யாவும் அற்று அந்தகாரஞ் சூழ்ந்த உலகில் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பெருமழையை ஓயாமல் பொழிந்து கொண்டேயிருக்கும். ஓ மைத்ரேயரே! நித்தியனாகவும் பரமாத்துமாவாகவும் இருக்கிற ஸ்ரீ வாசுதேவனுடைய மகிமையினால் கல்ப காலத்தின் முடிவில் இப்படியெல்லாம் நிகழ்கின்றன.

—————-

4. பிராகிருதப் பிரளயம்

மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத் தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமந் மகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ்செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங் காற்றாக வீசிக் கொண்டே இருக்கும். பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும். ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுதுசெய்து பிரமரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின்மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், பிரம லோகத்திலுள்ள, முமூட்சுக்களாலும் தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு வாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண் வளர்ந்தருள்வார். ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு பிரம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிரளயத்துக்கு நைமித்திகப் பிரளயம் என்று பெயர். சர்வாத்மாவான ஸ்ரீ அச்சுதன் எப்பொழுது திருக்கண் விழிப்பாரோ, அப்போது தான் இந்த உலகமும் அசைவுபெறும் யோகநித்திரை புரிவாராயின், உலகமும் கண்மூடிப்போம் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமுடைய பிரமதினம் எதுவோ; அவ்வளவு காலமே இரவுமாகும். இந்த இரவின் முடிவில் ஸ்ரீவிஷ்ணு துயில் நீங்கி விழித்துக்கொண்டு பிரமரூபத்தோடு மீண்டும் சிருஷ்டித்து அருளுகின்றான் என்று முன்பே நான் உமக்குச் சொன்னேன் அல்லவா? இந்தக் கல்பத்தின் முடிவில் செய்யும் சங்காரமே அவாந்தரப் பிரளயம் நைமித்திகப் பிரளயத்தைப் பற்றி சொன்னேன். இனிப் பிராகிருதப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
முன்பு நான் சொன்னதுபோல அனாவிருஷ்டி முதலியவைகளால், சகல உலகங்களும் பாதாளங்களும் நாசமாகி மகத்தத்துவ முதல் விசேஷம் வரையில் உள்ள யாவும் நசிக்கும்படி எம்பெருமானின் சங்கல்பத்தால் பிரளயம் சம்பவிக்க முதலாவதாக நீரானது நிலத்தின் குணமான கந்தத்தைக் கிரகிக்கிறது. கந்தம் கிரகிக்கப்பட்டவுடன்; நிலமானது லயப்படத் தக்கதாகி கந்ததன் மாத்திரை நசித்து நீராகி விடுகிறது. அந்த நீர் பெருகி மகாவேகமும் மிக முழக்கமுங்கொண்டு, எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு அலைகளுடைய பிரவாகத்தோடு, உலகங்களின் முடிவு வரையில் ஓடி நிற்கும் அந்தத் தண்ணீரின் குணமான ரசத்தைச் சோதியானது கிரகிக்கும்போது அத்தண்ணீர் ரசதன்மாத்திரையற்று, சோதியாகின்றது, இவ்விதமாக நீரானது நெருப்பாகி மகாதேஜசு சூழ்ந்ததாக எங்கும் நிறைந்து வியாபகமாகின்றது. இவ்விதமாக எத்திசையும் ஜ்வாலமயமாய்ச் சூழ்ந்துள்ள அந்த அனலின் குணமாகிய ரூபத்தைக் காற்றானது கிரகித்துக் கொள்கின்றது. ரூபதன்மாத்திரை நசித்ததினால் அனல் அற்று, காற்று மிக அதிகமாக வீசத்துவங்கி ஒளி நீங்கி, காற்றுமட்டுப் பேரிரைச்சலுடன் வானத்தைபற்றி வீசிக்கொண்டிருக்க, அதன் குணமாகிய ஸ்பரிசத்தை வானமானது கிரகித்துக் கொள்கிறது. பிறகு வாயுவானது நாசமாகி ஆகாயம் ஒன்றே ஆவரணமின்றி இருக்கும் ரூப; ரச; கந்த ஸ்பரிசங்கள் அற்றதாய் ஒலியையே இலக்கணமாகக் கொண்டதாய், அவயவமில்லாததாய் மிகப்பெரிதான அந்த ஆகாயமானது யாவையும் நிரப்பிக்கொண்டு நிற்கும் இவ்விதமாக சுற்றிலும் வட்டமாய் யாவுங் கொள்ளும் இடமாய் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள அந்த ஆகாயத்தின் குணமாகிய சப்தத்தைப் பூதாதிகள் கிரகிக்கின்றன. பூதங்களும் இந்திரியங்களும் ஒருமிக்க அந்தப் பூதாதியில் லயமடையும் அபிமான ரூபமான இந்தத் பூதாதியானது தமஸ்ஸைப் பிரதானமாகக் கொண்டதனால் தாமசம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூதாதி என்று வழங்கப்பட்ட அகங்காரத்தைப் புத்தியையே லக்ஷணமாகக் கொண்ட மகத்தானது கிரஹிக்கின்றது. அந்த அண்டத்தினுள்ளே பூமியும் மகத்தும் முதல் எல்லையும் கடைசி எல்லையுமாக இருப்பது போலவே, வெளியிலும் முதலும் கடைசியும் எல்லையாகக் கொண்டுள்ளன.
புத்திமானே! இதுபோலவே அண்டத்துக்குப் புறத்தேயுள்ள பிருதிவி முதல் மகத் ஈறாகவுள்ள ஏழு பிரகிருதிகளும் சங்கார கிரமத்திலே முன்பு உரைத்ததுபோல், தத்தமது காரணங்களிலே லயப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை மூடிக்கொண்டுள்ள அண்ட ரூபமான பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும் அந்த அப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அந்தத் தேஜசு, அதைச் சூழ்ந்த வாயுவிலும் அந்த வாயு அதனைச்சூழ்ந்த ஆகாயத்திலும் அந்த ஆகாயம் அஹங்காரத்திலும், அந்த அஹங்காரம் மகத்திலும் லயமடைகின்றன. இவற்றோடும் கூடிய அந்த மகத்தத்துவத்தைப் பிரகிருதி கிரகிக்கின்றது. குறையாமலும் மிகாமலும் முக்குணங்கள் சமமாக இருப்பதுதான் பிரகிருதியாகும். அதுதான் உலகங்களுக்குப் பிரதானமும் காரணமும் ஆகிறது. இப்படியாக, இந்தப் பிரகிருதி வியக்த ஸ்வரூபமாயும் அவ்யக்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆகவே, வியக்தம் அவ்யக்தத்தில் லயப்படுகிறது என்றும் ஒருவகைப்பட்டவனாயும் இயல்பில் தீயோனாயும் அக்ஷரனாயும் நித்தியனாயும் சூஷ்ம ரூபியாகையால் பிரகிருதியையும் வியாபிக்கத்தக்க புருஷனும், பிரகிருதியைப் போல் பரமான்மாவின் அம்சமாக இருக்கிறான். பரமான்மாவோ பெயர், இனம் முதலிய கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் இருப்பதையே இயல்பாகக் கொண்டவனாய், அறிய வேண்டியவனாய், சர்வேசுவரனாய், ஞானஸ்வரூபியாய் ஜீவான்மாவுக்கு மேம்பட்டவனாக இருப்பவன் அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவே பரப்பிரமம்! எல்லாமாக இருப்பவன் அவனே! அவனே யோகியானவன் அவனைச் சேர்ந்தவை மீண்டும் திரும்புவதில்லை! வியக்தாவியக்த சொரூபமான பிரகிருதி யாதுண்டோ, அதுவும் புருஷன் என்று சொல்லப்படும். ஜீவனும் இவ்விரண்டும் அந்தப் பரமாத்மாவிலே லயப்படுகின்றன. அந்தப் பரமாத்மாவே யாவற்றுக்கும் ஆதாரமான பிரமேசுவரன் அவன் வேதத்திலும் வேதாந்தத்திலும் விஷ்ணு முதலிய பெயர்களில் துதிக்கப்பட்டிருக்கிறான்.
பிரவிர்த்தி நிவர்த்தி என்ற இருவகை வைதிக கர்மங்களினால் தேவதா ஸ்வரூபியான ஸ்ரீவிஷ்ணுவே, ரிக், யஜுர் சாமம் என்ற பிரவிர்த்தி மார்க்கங்களிலே யக்ஞேசுவரனாகவும் யக்ஞ புருஷனாயும் ஆராதிக்கப்படுகிறான் நிவர்த்தி மார்க்கத்தில் ஞானஸ்வரூபியாகவும் ஞானமயமான திருமேனியுடையவனாயுமுள்ள ஸ்ரீவிஷ்ணுவே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவனாக ஞான யக்ஞத்தால் யோகியரால் போற்றப்படுகிறான். குறில், நெடில், அளபெடை ஆகியவற்றால் சொல்லப்படும் அசித்து யாதோ அதுவும், வாக்குக்கு விஷயமாகாத சித்தும் அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சொரூபங்களேயாகும்! வியக்தமும் அவ்யக்தமும் புருஷனும் முக்தனும் யாவும் அந்த ஸ்ரீஹரி பகவான்தான்! சகல பிரபஞ்சத்தையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குவதனால் அவை அவனுடைய சொரூபங்களேயாம்! அந்த ஸ்ரீ ஹரியிடத்தில் பிரதானமும் புருஷனும் ஒடுங்குகிறார்களல்லவா? அப்படியாக ஒடுங்குமிடமான அந்தப் பரமாத்மாவுக்கு இரண்டு பரார்த்த காலம் என்று சொன்னது ஒரு பகல் வியக்தமெல்லாம் பிரகிருதியிலும் அந்தப் பிரகிருதி புருஷனிடத்திலும் அந்தப் புருஷன் பரமாத்மாவிலும் லயமாக இருக்க, அவ்வளவு காலம் இரவாம். பிராமண உத்தமரே! நித்தியனான அந்தப் பரமாத்மாவுக்கு பகல் என்பதுமில்லை. இரவு என்பதும் இல்லை. ஆயினும் சிருஷ்டி முதலிய காரியங்களைக் கொண்டு, உபசார வழக்கால் இரவு பகல்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதமாக பிராகிருதப் பிரளயத்தின் தர்மத்தைச் சொன்னேன். இனி, ஆத்யந்திகப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

——————-

5. ஆத்யந்திகப் பிரளயம்

மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்தியாத்துமிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப்பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான், ஆத்தியாத்துமிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாம். அது சரீரத்தைப் பற்றியதும் மனத்தைப் பற்றியதும் ஆகும். தலைவலி, பீனசம், ஜ்வரம், சூலை பகந்தரம், குலமம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவைபோன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை. காமம், குரோதம், பயம்; துவேஷம்; லோபம்; மோகம்; துக்கம்; சோகம், அசூயை, பொறாமை, அவமானம்; பகை பாராட்டுதல், முதலியவை மனது சம்பந்தப்பட்டவை பலவாகும், ஆதிபவுதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக பக்ஷி, மனுஷ்ய பைசாச, சர்ப்ப, ராக்ஷஸாதிகளாலேயே உண்டாவதனால் அதுவும் பல வகைப்பட்டது. ஆதிதைவிதம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று; வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாம். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலும் மூப்பினாலும் நரகத்தாலும் உண்டாக்கப்பட்டு அநேக ஆயிரம் வகைகளாகின்றன அவற்றை விளக்குகிறேன்; கேளும்.
ஜந்துவானது மிகவும் மென்மையான உடலையுடையதாய், அநேக மலங்கள் நிறைந்த கர்ப்பத்திலே ஒருவகைத் தோலால் மூடப்பட்டு, மிக வளைந்த முதுகு, கழுத்துகளின் எலும்புகளையுடையதாக இருந்து கொண்டு, தாய் உண்ணும் புளிப்பு கசப்பு கரிப்பு, உப்பு முதலிய உறைகள் தன் மீது படும்போது அளவற்ற வேதனைகளையடைந்து தன்னுடம்பை நீட்டவும் மடக்கவும் வகையற்று மலமூத்திரங்களாகிய சேற்றிலே கிடந்து, எங்கும் துன்பமே பெற்று, மூச்சு விடமாட்டாமல் அறிவு மாத்திரமேயுள்ளதாய் கடந்த காலத்தில் அநேகப் பிறவிகளை நினைத்து, மகா விசனமடைந்ததாய், இப்படித் தன் கருமத்தால் தானே கட்டுண்டு கிடக்கின்றது. பிறகு பிறக்கும்போது பிரமதேவனால் ஏவப்பட்ட ஒருவகைக் காற்றினால் எலும்புகள் யாவும் நுறுங்கிப் போகும்படி பீடிக்கப்பட்டு, மலமூத்திரங்களாலும் சுக்கில சுரோணிதங்களாலும் பூசப்பட்ட முகத்துடன் மிகவும் பலமான பிரசவ வாயுக்களால் தலைகீழாகத் திருப்பப்பட்டு வெகு சிரமத்தோடு தாய் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது. பிறந்த பிறகு, வெளிப்புறக்காற்று ஸ்பரிசித்தவுடன் பெருமூர்ச்சையற்று முன்பு இருந்த ஞானத்தை இழக்கிறது, விழும்போது முட்களால் குத்தப்பட்டதைப் போன்றும் வாட்களால் அறுக்கப்படுவது போலவும் துர்க்கந்தமான இரணத்துக்கும் ஒப்பான யோனித்துவாரத்திலிருந்து புழுவைப் போலத் தரையில் விழுகின்றது. பின்னர் சொறிந்து கொள்வதற்கும் திரும்புவதற்கும் சக்தியற்றதாய், ஸ்நான பான ஆகாராதிகளைப் பிறரது இச்சைக்கேற்பவே பெறுகின்றது. மேலும் மூத்திராதிகளாலே அசுத்தமான படுக்கையில் படுத்துக்கிடந்து எறும்பு, கொசு முதலியவை கடித்தாலும் அவற்றைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றது. இவ்விதமாக பிறப்பின் துன்பங்களையும் அதன் பின்புண்டாகும் துக்கங்களையும் ஆதிபவுதிகம் முதலான துன்பங்களையும் மிகவும் இளமையிலேயே அடைகின்றது. பிறகு வளர்ந்து பருவம் அடையும்போது மனிதன் அஞ்ஞானமாகிய இருள் மூடியதாலே, முடனாகவே நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? எனக்கென்ன பயன்? நான் எந்தப் பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்? எதற்கு நான் கட்டுப்பட்டவன்? இதற்குக் காரணம் யாது? காரணமல்லாதது எது? செய்யத்தக்கது எது? செய்யத் தகாதது எது? சொல்லத் தக்கது எது? சொல்லத் தகாதது எது? எது தர்மம்? எது அதர்மம்? எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? இனி செய்ய வேண்டுவது எது? எது குற்றம்? எது குணமுடையது? என்று ஒன்றையும் அறியமாட்டாதவனாக இருக்கிறான். இவ்வாறு அவன் மிருகங்களைப் போல, உண்பதையும், புணர்வதையுமே முக்கியமாகக் கொண்டு, அஞ்ஞானத்தால் உண்டான அநேக துக்கங்களை அனுபவிக்கிறான். அஞ்ஞானம் என்பது தமோகுணத்தின் விகாரம். அதனாலேயே மனிதன் கெட்ட காரியங்களைச் செய்ய வேண்டி வருகிறது. ஆகவே, வைதீகக் கர்மங்கள் நடப்பதில்லை.
எனவே அஞ்ஞானிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் அதிகமாகிறது. பிறகு யவ்வனத்தைத் தாண்டி முதுமை வரும்போது உடல் மெலிந்து கட்டுத் தளர்ந்து, பற்கள் ஆடி, உதிர்ந்து திரையும் நரையும் அதிகமாகி, சற்று தூரத்தில் இருப்பதும் தெரியாதவாறு கண்ணின் கருவிழிகள் உள்ளே ஆழ்ந்து, மூக்குத் துவாரத்திலிருந்து மயிர்கள் உதர, உடல் ஒடுங்கி, எலும்புகள் எல்லாம் வெளிப்பட்டுத் தெரிய, முதுகெலும்பு வளைய தீபனம் மந்தமாவதால் உணவு நன்றாகச் செல்லாமலும் செறிக்காமலும் செயல்கள் குறுக, நடப்பதும் எழுவதும் படுப்பதும்கூட வருத்தமாக இருக்க காது கேளாமலும், கண்கள் தெரியாமலும் இருக்க வாயினின்று சாளை வாய்நீர் வடிந்து கொண்டிருக்க மனிதன் தவிக்கிறான். இவ்விதமாகச் சகல இந்திரியங்களும் அஸ்வாதீனப்பட்டு, மரணங்கிட்டும்போது முன்பு தான் அனுபவித்தவற்றை நினைத்து உருகிக் கொண்டு ஒரு வார்த்தை சொல்லக்கூட மிகவும் வருத்தங் கொண்டவனாய், சுவாசகாசம் உண்டாவதால் மிகுந்த ஆயாசமும் துக்கமின்மையும் உடையவனாய் எழுந்திருக்கவும் நடக்கவும் உட்காரவும் பிறருடைய உதவி அவசியப்படுவதாலேயே வேலைக்காரர்கள்; மனைவியர்; பிள்ளைகள் யாவரும் அவமதிக்க ஒரு சக்தியுமின்றி உண்ணவும் உலாவவும் ஆசையுள்ளவனாய்; ஊழியரும் பரிகசிக்க பந்துக்களும் வெறுப்படைய தன்னுடைய வாலிய அநுபவத்தைப் பூர்வ ஜன்மத்தின் அனுபவம்போல் நினைத்து, மனம் வெதும்பி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான், இதுபோல் மூப்பில் அவன் பற்பல துக்கங்களை அனுபவித்து மரணத்தை அடைகிறான்.
இனி அந்த மரணத்தின்போது நேரும் துன்பங்களையும் கேளும் கால், கைகள் கழுத்து இவை கட்டுவிட்டுப் பெற்று பெருநடுக்கமுள்ளவனாய் சிறிது நேரம் அறிவும் சிறிது நேரம் அறிவழிவுமுள்ளவனாய் மக்கள் மனை வீடு மாடு தனம் தானியம் ஆகிய இவையெல்லாம் இனி எப்படிப் போமோ என்று கலங்கியவனாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்க இரம்பங்கள் போன்ற மிகக் கொடிய இயமனின் அம்புகளான கொடிய பெரும் வியாதிகளால் உயிர் பெயர கண்கள் சுழல கைகால்களை உதறிக் கொண்டு நாக்கும் உதடும் உலர உதானவாயு எழும்பித் துன்புறுத்த கண்டம் அடைத்துக் குருகுருவென்ற சப்தம் செய்ய பெருந்தாபமும் பெரும் பசியும் பெருந்தாகமும் பொருந்திய நிலையில் யமகிங்கரர்களால் பீடிக்கப்பட்டு வெகு பிரயாசைப்பட்டுத் தன் தேகத்தை விட்டுக் கிளம்புகிறான். உடனே யாதனாதேகத்தை அடைகிறான்! இவையும் இவை போன்ற மேலும் பலவிதத் துன்பங்களும் மரணத்தில் உண்டாகின்றன.
இறந்த பின்னர், மனிதர்கள் நரகத்தில் படுகின்ற அவஸ்தைகளையும் சொல்கிறேன், கேளுங்கள். யமகிங்கரர்கள் முதலில் பாசத்தாற் கட்டிப் பிணைப்பதும் பிறகு தடியால் அடிப்பதும், உக்கிரமான யமனைக் காண்பதும் கொடிய வழியைக்காண்பதும் ஆகிய துன்பங்களை அனுபவித்துப் பிறகு காய்ந்த மணலிலும் அக்கினியந்திரம் கத்தி முதலியவற்றால் நரகத்திலே படும் பாடுகள் மிகவும் கொடியவையாகும். பிராமணோத்தமரே; கேளும்! மனிதன் மரணமடைந்த பிறகு யமகிங்கரர்களால் பல்வாளினால் அறுக்கப்பட்டும் மூசையிற் போட்டுக் காய்ச்சப்பட்டும், கோடாரிகளால் பிளக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், சூலங்களில் ஏற்றப்பட்டும், புலி வாயில் இடப்பட்டும், கழுகுகளால் குத்திப்பிய்க்கப்பட்டும், கொடிய மிருகங்களால் கடிக்கப்பட்டும் காயும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும் பொரிக்கப்பட்டும், உப்புச் சேற்றிலே புரட்டப்பட்டும், உயரத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டும் யந்திரங்களில் ஏற்றி வீசி எறியப்பட்டும், பாபத்தின் பயன்களாய் மனிதர்கள் நரகத்தில் படுகின்ற துன்பங்களை இவ்வளவு தான் என்று சொல்லிவிட முடியாது. இத்தகைய துக்கங்கள் நரகத்தில் மட்டுமல்ல; சுவர்க்கத்திலும் உண்டு சொர்க்கத்தில் சுகானுபவத்தை அனுபவிக்கும் போதே புண்ணியம் க்ஷயித்து, இனி நாம் வீழப்போகிறோம் என்ற நினைப்பினால் பயம் உண்டாகும்போது மனதிலே பெருந்துக்கம் உண்டாகும். இவ்விதமாக நரகத் துன்பங்களை அனுபவித்து, மீண்டும் கர்ப்பத்தில் பிரவேசித்து மனிதன் மீண்டும் பிறக்கிறான். இவ்வாறு பல முறைகள் பிறப்பதும் இறப்பதுமாய் அலைகிறான். மேலும் பிறந்தவுடனே, பால்யத்திலோ, வாலிபத்திலோ; நடுவயதிலோ; முதுமையிலோ எப்போதோ நிச்சயமாக இறக்கிறான். பிழைத்திருக்கும்போதே பலவிதமான துக்கங்களால் சூழப்படுகிறான். பஞ்சு மொய்த்திருக்கும் பருத்திக் கொட்டையைப்போல்! மேலும் பொருளைச் சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் அதன் அழிவிலும் இஷ்டமானவருக்குத் துன்பம் நேரும்போதும் அவனுக்குப் பலப்பலத் துன்பங்களே உண்டாகின்றன.
மைத்ரேயரே! எந்தெந்தப் பொருள் மனிதருக்கு இன்பமாக இருக்கிறதோ அதுவே துன்பம் என்னும் மரத்திற்கு விதையாகின்றது மனைவி, மக்கள்; நண்பர்; பொருள்; வீடு நிலம் முதலியவற்றால் எத்தனைக் துக்கம் உண்டாகிறதோ; அந்த அளவுக்கு அவற்றால் அடையும் சுகம் இருப்பதற்கில்லை. இவ்விதமாகச் சம்சாரத்தின் துக்கமாகிய வெய்யிலால் தகிக்கப்பட்டு அலையும் மனிதனுக்கு மோக்ஷம் என்ற மரத்தின் நிழலைத் தவிர, வேறு எங்கே சுகம் கிடைக்க முடியும்? ஆகவே, கர்ப்பம், பிறவி வார்த்திக்யம் முதலானவற்றால் மனிதருக்கு உண்டாகும் தாபங்கள் ஆகிய மூன்றுக்கும் மருந்து யாது என்றால், மற்றொரு சுகத்திலும் அதிசயந் தோன்றாது இருப்பதான மகாசுகரூபமாயும் துக்கத்தின் சம்பந்தமே இல்லாததாயும் நித்தியமாயும் உள்ள பகவத் பிராப்தியே என்பது எனது கருத்து ஆகையால் அறிவுடைய மனிதர் ஈனக் குணங்கள் நிறைந்தவனாகப் பகவானை அடைய முயற்சி செய்யவேண்டும்.
முனிவரே! எந்த எம்பெருமானை அடைவதற்கு ஞானமும் கர்வமும் உபாயங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அந்த ஞானம், ஆகமஜம் என்றும் விவேகஜம் என்னும் இரு வகையாகும். சாஸ்திரங்களால் உண்டாவது ஆகமஜம், யோக சிந்தனையில் உண்டாவது விவேகஜம். முந்தியதற்குச் சப்தப் பிரமம் என்றும் பிந்தியதற்குப் பரப்பிரமம் என்றும் பெயர். இந்த இரண்டு ஞானங்களுக்கும் உள்ள பேதமாவது, அஞ்ஞானம் என்ற அந்தகாரமானது பொருள்களை மறைப்பது போல், ஜீவாத்மா, பரமாத்மா, ஸ்வரூபங்களை மறைப்பதால் அது அந்தகாரம் போன்றேயுள்ளது. ஆகமஜஞானம், விளக்கமானது இருளை நீக்கிப்பொருளை விளங்கச்செய்வதுபோல் தேக, ஆன்மாதி மயக்கங்களை நீக்கி ஜீவபரஸ்வரூபங்களை ஒருவாறு விளக்குவதால் இது விளக்குப் போன்றதாகும். பரப்பிரம்மம் என்ற விவேகஜ ஞானம் சூரியனானது இருள் முழுமையும் அழித்து பொருள்கள் யாவற்றையும் தெளிவாக விளக்குவதைப் போல், அஞ்ஞானத்தையும் முழுமையாகப் போக்கி ஸ்வரூபங்களை பிரத்யக்ஷமாய் விளங்கச் செய்வதால், அது சூரியனைப் போன்றதாகும்.
இவ்விஷயத்தில் மநுவும் வேதாந்தத்தை அறிந்து சொல்லியிருப்பதைக் கேட்பீராக, சப்தப்பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் இரண்டு பிரமங்கள் உண்டு என்று அறியவேண்டும். மனிதன் சப்தப் பிரமத்தில் தேறினால் பரப் பிரம்மத்தை அடையலாம். அதர்வண வேதம் இப்படியே சொல்கிறது. அக்ஷரம் என்று சொல்லப்படும் பிரமத்தை எந்த வித்தையால் அடையலாமோ, அதற்கு பரவித்தை என்று பெயர். கர்மங்களை அறிவிக்கும் வேதாதிகள் அபரவித்தை எனப்படும், அந்தப் பரவித்தையின் விஷயமான பிரமஸ்வரூபமானது, வேதாந்தத் தாலான்றித் தோன்றாததும், தோன்றல், மறைதல், கெடுதல், வளர்தல், குறைதல் திரிதல்களாகிய விகாரமின்றியும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமலும் தேவ மனுஷ்யாதிரூபங்கள் இல்லாமலும் கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாமலும் யாவற்றையும் நியமிப்பதாகவும் எங்குமுள்ளதாகவும் பூதங்களுக்குக் காரணமாகவும் எல்லாவற்றையும் வியாபித்து ஒன்றினாலும் வியாபிக்கப்படாமலும் இருக்கிறது. ஞானிகள் எதைக் காண்கிறார்களோ, அதுவே பிரமம்! அதுதான் மேலான ஞானஜோதி! அதையே விஷ்ணுவின் உத்தம ஸ்வரூபம் என்று சுருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது. சூக்ஷúமமான அந்தப் பிரமத்தையே மோக்ஷம் பெறவேண்டுவோர் தியானிக்க வேண்டும். பகவான் என்ற சொல், எம்பெருமானின் அளவற்ற ஸ்வரூப, ரூப குண விபவங்களைக் குறையச் சொல்லத் தக்கது. பரமாத்மாவின் தத்துவம் எதனால் விளங்குமோ அத்தகைய துவாதச அக்ஷரத்தை அங்கமாகக் கொண்டேதே பரவித்தையாகும் மற்ற வேதபாகம் யாவும் அபரவித்தையாம் சகலாதாரமாயும் சகலாதேயமாயும் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவையே வாசுதேவபதம் போதிக்கிறது. முன்பு கேசித்வஜன் என்பவரைக் காண்டிக்கிய ஜனகர் வினாவ. அநந்தனான ஸ்ரீவாசுதேவனுடைய திருநாமத்தை நாம் சொன்னது போலவே, அவரும் சொல்லியிருக்கிறார். அதை உமக்குச் சொல்கிறேன்.
ஸ்ரீவாசுதேவ பகவான், இயல்பினால் குற்றங்களோடு கலவாத சகல கலியாண குண பரிபூரணன்! சகல பூதங்களையும் தனது சக்தியின் ஒரு சிறிய பங்கினால் சூழ்ந்திருப்பவன் தனது திருவுளப்படி, அந்தந்த தருணத்திற்கு வேண்டிய திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுப்பவன். அதனால் சகல உலகங்களுக்கும் நலன்களைச் சாதிப்பவன். அளவற்ற தேவை பலம் ஐசுவரியம், ஞானம், வீரியம், சக்தி முதலிய குணங்களின் ராசி போன்றவன் உயர்ந்தோரிலும் உயர்ந்தவன் ஒரு துர்க்குணமும் இல்லாதவன் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் ஈச்சுரன். இத்தகைய எம்பெருமான் வியூக விபவாதி ரூபங்களினாலே வியஷ்டி ரூபனாகவும் இந்த ரூபங்களால் விளங்குவதால் வியக்தனாகவும் யாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையிலும் ஆள்பவனாகவும், எல்லாவற்றையும் எப்போதும் தான் ஒருங்கே பிரத்யக்ஷமாய்க் காண்பவனாகவும் யாவும் பொருந்தியவனாகவும், சகல சக்திகளும் உள்ளவனாகையால் பரமேசுவரன் என்ற திருநாமத்தையுடையவனாகிறான், இவ்விதமாகச் சகல தோஷரகிதமாய், சுத்தமாய், உத்தமமாய், என்றுமே பிரகிருதிக்கு உட்படாததாய் என்றும் ஒரு படிபட்டதாயுள்ள பகவத் ஸ்வரூபமானது எதனால் அறியப்படுகிறதோ, அந்த ஆகம ஞானமும் எதனாலே காணப்படுகிறதோ அந்த விவேக ஞானமும் எதனால் அடையப்படுகிறதோ அந்தப் பக்தி ரூபமான ஞானமுமே உண்மையான ஞானம் என்று சொல்லப்படும். இதற்குப் புறம்பானதெல்லாம் அஞ்ஞானமேயாகும்!

——————–

6. கேசித்வஜ-காண்டிக்ய விவாதம்-

முன்பு சொன்னபடி, குணங்களும் விபூதிகளும் விக்கிரகமுமுள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் காணப்படுவான். இந்த இரண்டு ஞானமும் தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும். ஆகையால் பிரமம் என்று சொல்லப்படும் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் அமரவேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்தத் தத்துவ சாஸ்திரத்தை நன்றாகத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய ஸ்வாத்தியாய யோகங்கள் இரண்டும் நன்றாய்த் தேர்ந்தால் பரமாத்மா விளக்கமாகக் காணப்படும். அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திர ஞானம் ஒரு கண் யோகம் மற்றொரு மேலான கண் பரப்பிரமமான பகவான் இந்தக் கண்களால் காணக்கூடியவனே தவிர இந்த இறைச்சியாலான கண்களால் காணக்கூடியவனல்லன் என்று பராசரர் கூறியதும் மைத்ரேயர் அவரை நோக்கி, பராசர மகானே! சகல ஆதார பூதனான பரமேசுவரனை நான் எதனால் காண முடியுமோ அத்தகைய யோகத்தை நான் அறிய விரும்புகிறேன். ஆகையால் அதை அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும்! என்று கேட்டார். மைத்ரேயரே! பூர்வத்தில் மகாத்மாவான காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் சொன்ன வகையில், அந்த யோகத்தை நான் உமக்குச் சொல்கிறேன் என்றார் பராசர மகரிஷி.
பிரமமுனிவரே! காண்டிக்கியர் என்பவர் யார்? கேசித்துவஜர் யார்? யோகத்தைப் பற்றி அவர்களிடையே சம்வாதம் நேர்ந்தது எப்படி? அதைத் தாங்கள் கிருபை கூர்ந்து எனக்குச் சொல்லியருள வேண்டும் என்று கேட்க, பராசரர் சொல்லத் துவங்கினார். தருமத்வஜர் என்ற ஜனகமகா ராஜா இருந்தார். அவருக்கு மிதத்துவஜர் என்றும் கிருதத்துவஜர் என்றும் குமாரர்கள் இருவர் இருந்தார்கள். கிருதத்துவஜர் என்பவர் எப்பொழுதும் வேதாந்த விசாரணை செய்து கொண்டிருப்பார். அவருக்குச் கேசித்துவஜர் என்று புகழ்பெற்ற மைந்தர் உண்டானார். மிதத்துவஜருக்கும் காண்டிக்யஜனகர் என்ற புத்திரர் பிறந்தார். அந்தக் காண்டிக்கியர் கர்மமார்க்கத்தில் நின்று பூமியை ஆண்டு வந்தார். கேசித்துவஜரோ, ஆன்ம வித்தையில் ஊன்றியவராய் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தார். இப்படியிருக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முயன்றனர். கேசித்வஜர் காண்டிக்கியரை, இராஜ்ஜியத்திலிருந்து துரத்திவிட்டார். காண்டிக்கியர் அற்பமான சேனையுடையவராக இருந்ததால், ராஜ்யத்தை விட்டுத் தம்முடைய அமைச்சர், புரோகிதர் ஆகியோருடன் பிறர் வரக்கூடாத ஒரு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். ராஜ்ஜியத்திலிருந்த கேசித்துவஜரோ ஞானத்தைப் பற்றியவராய் பிரம வித்தையில் இருந்து கொண்டே, உபாசனைக்கு இடையூறு செய்யும் பாவங்களைப் போக்குவதற்காகப் பல யாகங்களைச் செய்து வந்தார்.
அவ்வாறு அவர் யாகஞ் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு சமயம் பிரவர்க்கியம் என்ற சடங்கில், அவிசுக்கு அவசியமான பாலைக் கொடுத்து வந்த அவரது பசுவை, காட்டில் ஒருபுலி அடித்துக்கொன்றது. அதை அந்த அரசர் கேள்விப்பட்டு, இதற்குப்பிராயச்சத்தம் என்ன? என்று ரித்துவிக்குகளைக் கேட்டார். அவர்கள் எங்களுக்குத் தெரியாது! கசேருவைக்கேளுங்கள்! என்றார்கள். அரசன் அதனால் கசேருவைக் கேட்க, அவர்பார்க்கவரைக்கேளுங்கள் என்றார். அவர் எனக்குத் தெரியாது சுனகரைக் கேளுங்கள்! என்றார். சுனகரை அரசர் கேட்க அவர்; அரசே! இந்தக் காரியம் கசேருக்கோ; எனக்கோ இந்தப்பூமியிலுள்ள மற்றொருவருக்குமோ தெரியாது. ஆனால் உன்னால் ஜயிக்கப்பட்டு உனக்குப் பகைவராக இருக்கும் காண்டிக்கிய ஜனகருக்குத்தான் இந்த விஷயம் தெரியும்! என்றார். அதைக்கேட்ட அரசன் முனிவரே! நான் இதைத் தெரிந்துகொள்வதற்காகவே; என் பகைவனிடம் செல்கிறேன். அவர் என்னைக் கொல்வாராயின் யாகபலன் எனக்கு சித்திக்கும் இல்லையென்று நான் கேட்கும் பிராயச்சித்தத்தை சொன்னால் யாகம் குறைவில்லாமல் நிறைவேற்றப்படும் என்று சொல்லி; கிருஷ்ணாஜினம் தரித்தபடி; ரதத்தில் ஏறி; காண்டிக்கியர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். காண்டிக்கியரோ; தம் பகைவர் தம்மைத் தேடி வருவதைக் கண்டு; கோபத்தால் கண்கள் சிவக்க; தம் வில்லை வளைத்து நாணேற்றிக் கொண்டு; கேசித்வஜரை நோக்கி, அடா! நீ கிருஷ்ணாஜின கவசத்தை அணிந்துகொண்டு; யோக்கியனைப் போல் இங்கு வந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாய்! நாம் கிருஷ்ணாஜினம் தரித்திருப்பதால் நம்மை அவன் அடிக்கமாட்டான் என்று எண்ணிவிட்டாய். மூடா! மான்களின் உடலில் இந்தக் கிருஷ்ணாஜின கவசம் இல்லையோ? அத்தகைய மான்களை நீயும் நானும் எத்தனை அம்புகளை எய்து கொன்றிருக்கிறோம்? ஆகையால் உன்னைப் போன்றவனை அடிக்க இந்தக் கிருஷ்ணாஜினம் தடையாகாது. நீ என் அரசைக் கைப்பற்றிய பகைவன்! ஆகையால் நீ யாகத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன். என்னிடமிருந்து நீ உயிரோடு மீள மாட்டாய்! என்றார் காண்டிக்கியர்.
அதைக் கேட்டதும் கேசித்துவஜர் அமைதியான குரலில் காண்டிக்கியரே! நான் இப்போது உம்மிடம் ஒரு தருமசந்தேகம் கேட்க வந்தேனேயன்றி உம்மைக் கொல்வதற்கு வரவில்லை. இதை நீர் யோசித்து உமது கோபத்தையாவது விட்டுவிடும்; அல்லது என்மீது உமது பாணத்தையாவது விட்டுவிடும்! என்றார். அதைக்கேட்டு காண்டிக்கியரின் அமைச்சர்; புரோகிதர் முதலியோர் இரகசியமாக; சத்துரு கைவசத்தில் வந்தவுடன் அவனைக் கொல்வது அவசியம் அந்தப் பகைவன் அழிந்தால், இந்தப் பூமி முழுவதும் நமது கைவசம் ஆகும் என்றார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்ட காண்டிக்கியர் அவர்களைப் பார்த்து, நீங்கள் சொல்வது சரிதான் பகைவனைக் கொன்றால் பூமி நமக்குச் சுவாதீனமாகும் அவனைக் கொல்லாவிட்டாலோ நமக்கு மேல் உலகம் சுவாதீனப்படும். அவனுக்கு பூமி கைவசத்தில் இருக்கும். இந்த உலக வெற்றியைவிட மேலும் வெற்றியே சிறப்புடையது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த உலக வாழ்க்கை சிறிது காலம்தான் மேல் உலக வாழ்வோ நீடித்திருப்பது ஆகையால் என் பகைவனை நான் கொல்லாமல், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதே நல்லதாகும்! என்று சொல்லிவிட்டு கேசித்துவஜரை வரவேற்று, நீர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேளும் எனக்குத் தெரிந்தவரை நான் உமக்குப் பதில் சொல்கிறேன் என்றார்.
கேசித்துவஜர், யாகத்திற்கு உபயோகமான பசு இறந்த செய்தியைச் சொல்லி, அதற்குரிய பிராயச்சித்தத்தைப் பற்றிக் கேட்டார். காண்டிக்கியரும், சாஸ்திர விதிப்படியான பிராயச்சித்தத்தைச் சொன்னார். தமது சந்தேகம் தீர்ந்தவுடன் கேசித்துவஜர்; காண்டிக்கியரிடம் விடைபெற்று; யாகசாலைக்குச் சென்றார். விதிப்படிக் கிரியைகளைச் செய்து யாகத்தை நிறைவேற்றி; அவபிரத ஸ்நானம் செய்து செய்ய வேண்டியவற்றை யெல்லாம் செய்தும் பின்வருமாறு யோசிக்கலானார். நாம் நமது யாகத்துக்கு வந்த பிராமணரையெல்லாம் பூஜித்தோம். இருத்துவிக்குகளுக்குச் சன்மானமளித்தோம். யாசகர்களுக்குத் தானம் செய்தோம். இப்படி உலகத்துக்கு ஒப்புரவான காரியத்தை நாம் தக்கபடி செய்திருந்தும் நம்முடைய மனம் ஏன் செய்ய வேண்டியதைச் செய்யாததைப் போல் குறைகொண்டிருக்கிறது? என்று சிந்தித்தார். பிறகு; ஓஹோ! தாம் எல்லாஞ் செய்தும்; நமக்குப் பிராயச்சித்தத்தை உபதேசித்த காண்டிக்கியருக்குக் குருதக்ஷிணையைக் கொடாமற் போனோம் அல்லவா? என்று நினைத்துக்கொண்டு; கேசித்துவஜர் மீண்டும் தமது தேரில் ஏறி; காண்டிக்கியர் வசிக்கும் காட்டிற்குச் சென்றார். மறுபடியும் தம்முடைய பகைவன் எதிரில் வருவதைக்கண்டதும் காண்டிக்கியர் தம்முடைய ஆயுதத்தைக் கையில் ஏந்தி நின்றார். அதைக்கண்டதும் கேசித்துவஜர்; காண்டிக்கியரை நோக்கி ஓ மகானுபவரே! நான் உமக்குத் தீங்கு செய்ய வரவில்லை. கோபிக்கவேண்டாம் உமக்குக் குருதக்ஷிணை கொடுக்கவே வந்தேன் என்றார். அதனால் காண்டிக்கிய ஜனகர் மறுபடியும் தமது அமைச்சரிடம் எதைக் கேட்கலாம்! என்று ஆலோசித்தார். அதற்கு அமைச்சர் அவனது ராஜ்யம் முழுவதையும் உமக்குக் குருதட்சணையாகக் கொடுத்துவிடும்படிக் கேளும் புத்திசாலிகள் சமயம் வாய்த்தபோது தம்முடைய சேனைகளுக்குத் துன்பமில்லாமல் ராஜ்யத்தைச் சம்பாதிப்பார்கள்! என்றார். ஆனால் காண்டிக்கியர் சிரித்துக்கொண்டே; அமைச்சரே! சிறிது காலமே நிற்கத்தக்க இராஜ்யத்தையா என்னைப் போன்றோர் விரும்புவார்கள்? நீங்கள் அனைவரும் பொருளைச் சம்பாதிக்கும் அமைச்சர்கள் அல்லவா? இந்தச் சம்சாரத்திலேபரமார்த்தம் ஏது? அது எப்படிக் கிடைக்கும் என்ற விஷயத்தில் நீங்கள் ஒன்றுமே அறியாதவர்கள்! ஆகையால் நீங்கள் சொன்னது சரி தான்! என்று அவர்களிடம் சொல்லிவிட்டுக் கேசித்துவஜரிடம் வந்து ஐயா! நீர் அவசியம் குரு தக்ஷிணை கொடுக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறீரா? என்றார். அதற்கு அவர், ஆம் என்றவுடன், அவரைப் பார்த்து, அப்படியானால் நீர் ஆன்ம ஞானவித்தையில் தேறிய வராகையால் எனக்கு நீர் குருதக்ஷிணையாக சம்சாரக் கிலேசம் போகத்தக்கதான அந்த ஞானத்தைச் சொல்ல வேண்டும்! என்றார்.

———————-

7. யோக வழி-

கேசித்துவஜர், காண்டிக்கியரை நோக்கி, காண்டியக்கியரே நீங்கள் ஏன் பகைப் பூண்டற்றதான ராஜ்யத்தை விரும்பவில்லை? க்ஷத்திரியர்களுக்கு ராஜ்யத்தைக் காட்டிலும் பிரியமானது வேறொன்றும் இராதே! என்றார். அதற்குக் காண்டிக்கியர் கேசித்துவஜரே! நான் ஏன் உம்முடைய ராஜ்யத்தை வேண்டவில்லையோ அதற்கான காரணத்தைக் கூறுகிறேன். கேளும் இந்த ராஜ்ய விஷயத்தில் விஷயமறியாதவரே ஆசைப்படுகிறார்கள் நீர் சொன்னது போலவே பிரஜைகளைக் காப்பதும் விரோதிகளைத் தர்ம யுத்தஞ் செய்து வதைப்பதும் க்ஷத்திரியருக்குத் தருமம்தான். ஆயினும் ராஜ்யத்தைக் காப்பதில் வல்லமையில்லாதவனாயும் ஆசையற்றவனாயும் இருக்கும் எனக்கு நீர் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தை விரும்பாதது குற்றமாகாது. இந்தக் கருமத்தை நடத்தச் சக்தியிருந்தும் நடத்தாமல் விடுவதே குற்றமாகும். இந்த ராஜ்யத்தில் எனக்கு ஜன்மாந்தர கர்மங்களின் பயனான போகங்களை அனுபவித்துக் கழிப்பதிலேயே ஆசையிருந்தது. இது போகத்திலுள்ள ஆசை! ஏனென்றால் இவ்வாசை பொருளை அனுசரித்திருக்கிறதே யல்லாமல் கர்மத்தை அனுசரித்திருக்கவில்லை. மேலும் க்ஷத்திரியர் யாசித்திருப்பதைத் தர்மம் என்று பெரியோர்கள் அங்கீகரிப்பதில்லை. இந்தக் காரணங்களாலேயே நான் கர்மங்களில் சேர்ந்த இந்த ராஜ்யத்தை யாசிக்கவில்லை. பொருள்களின் உண்மையை அறியாதவராய் எனது என்ற வீண் அபிமானத்தால் மனம் இழுக்கப்பெற்று நான் என்னும் அகங்காரமாகிய கொடிய கள்ளையுண்டு மனம் மயங்கியிருப்பவர்களேயல்லாமல் என் போன்றோர் ராஜ்யத்தை விரும்புவதில்லை! என்றார் காண்டிக்கியர். அதைக்கேட்டு மகிழ்ந்த கேசித்துவஜர் காண்டிக்கியரே நீர் சொன்னது எனக்கும் சரியானது! ஆனால் நான்கர்மத்தினால் யோக விரோதிகளான காமக் குரோதாதிகளைப் போக்குவதற்காக, அரசாட்சியையும் யாகங்களையும் செய்து வருகிறேன். போகங்களினால் புண்ணிய க்ஷயத்தையும் செய்து வருகிறேன். நமது குலத்தில் ஆனந்தமானவரே! உமக்கோ, அதிர்ஷ்டவசத்தால் மனம் விவேகம் என்ற ஐசுவரியத்தைப் பொருந்தியுள்ளது. ஆகையால் அவித்தையின் சொரூபத்தைச் சொல்கிறேன் கேளும்.
ஆன்மாவல்லாத தேகாதிகளில் ஆன்மா என்ற நினைப்பும், தனதல்லாத அந்தந்தப் பொருளிலே தனது என்ற நினைப்பும், இந்த இரண்டும் சம்சாரமாகிய மரத்திற்கு விதையாகின்றன. தேஹியானவன் அஞ்ஞானவிருளால் மூடப்பட்டு பஞ்சபூத மயதேகத்தில், நான் எனது என்ற புத்தியைக்கொள்கிறான். ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம் பிருதிவி என்பவைகளுக்கு வேறானதாக ஆன்மா இருக்க தேகத்தை ஆன்மா என்று எவன் நினைக்கக்கூடும்? அதுவுமின்றி நிலம், வீடு பிறந்த புத்திரர்கள் பேராதிகள் ஆகியவற்றை எப்படித் தன்னதாக நினைக்கலாம்; இப்படி நினைப்பது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தினால்தான், இந்த உடலின் போகத்துக்குரிய காரியங்களையே மனிதர்கள் செய்கிறார்களே தவிர ஆத்ம போகத்துக்காக ஒன்றும் செய்கிறார்களில்லை. ஆன்மாவுக்குத் தேகம் வேறானதால் இப்படிச் செய்ததெல்லாம் பந்தத்திற்கே காரணமாகின்றன. மண் வடிவான மாளிகை மண்ணினாலும் நீரினாலும் பூசப்படுவதைப்போலவே, பிருதிவி மயமான இந்த உடலும் அன்னபானங்களாகிய மண் நீர்களினாலே பூசப்படுகிறது. பஞ்சபூத ரூபங்களான போகப் பொருள்களினாலே பஞ்சபூத ரூபமான தேகம் திருப்தி செய்யப்படுமானால் தேகத்தின் வேறான ஆன்மாவுக்கு இந்தப் போகங்களினாலேயே உண்மையான போகம் எப்படியுண்டாகும்? மேலும் இந்த ஆன்மா அநேகவாயிரம் ஜனனங்களில் சம்சாரம் என்ற வழியில் நடந்து, வாசனை என்னும் புழுதி படிந்தவனாய் மயக்கம் என்னும் சிரமத்தை அடைகிறான். இப்படி வருந்திய ஆன்மாவுக்கு எப்பொழுது ஞானம் என்னும் வெந்நீரால் அந்தப் புழுதி கழுவப்படுமோ அப்போது அந்த மயக்க வருத்தம் தீர்ந்து போகும் அது தீர்ந்தால் புருஷனின் மனம் குணப்பட்டு, வேறு அதிசயமில்லாததும் துக்கம் இல்லாததுமான மோக்ஷத்தையடைவான். மோக்ஷபயன்காம பயனைப்போல் வேறாக வரவேண்டுவதென்று இந்த ஆன்மா நிர்மல ஞானரூபியாதலால் இயல்பிலேயே மோக்ஷசுகரூபமாகவே இருக்கிறது. துக்கமான அஞ்ஞான மயங்களான ராகாதிகள் பிரகிருதியின் தன்மைகளே அல்லாமல் கன்ம தர்மங்கள் அல்ல. அது எவ்விதமெனில் தண்ணீருக்கு இயற்கையில் வெப்பம் இல்லாதிருக்க, அக்கினியோடு சேர்ந்த பாத்திர சம்பந்தத்தினால் தண்ணீர் வெப்பம் பெற்று தொனி எழுச்சி முதலியவற்றைச் செய்வதுபோல, தாபத்திரயத்தோடு கூடிய பிரகிருதியின் சம்பந்தத்தினாலே தோஷமுள்ளவனாகி அந்தப் பிரகிருதியின் தர்மங்களான பசி தாகம் முதலியவற்றை அடைகிறான். இந்த ஆன்மாவோ, அந்தப் பிராகிருதங்களுக்கு வேறாய் விகாரமில்லாது இருப்பவன்! அவித்தையின் காரணத்தை நான் உமக்குச் சொன்னேன். இதனால் வரும் கிலேசங்களுக்கு க்ஷயமுண்டாக்குவது யோகமேயன்றி வேறில்லை! என்றார். மகா அறிஞரே! யோகம் அறிந்தவர்களில் சிறந்தவரே! அந்த மகாயோகத்தை நீர் எமக்குச் சொல்லவேண்டும். இந்த நிமி சந்ததியில் நீரே யோக சாஸ்திரப் பொருளறிந்தவராக இருக்கிறீர்! என்று காண்டிக்கியர் கேட்டார்.
கேசித்துவஜர், அவரை நோக்கி, காண்டிக்கியரே! யோக ஸ்வரூபத்தைச் சொல்கிறேன், கேட்பீராக இந்த யோகத்தில் இறங்கியவன், பிரமத்தில் லயத்தை அடைந்து மறுபடியும் திரும்பமாட்டான். மனிதர்களுக்கு மனம் விஷயங்களைப்பற்றி நின்றால், பந்தத்துக்குக் காரணமாகும். அவற்றைப் பற்றாமல் இருந்தால் அது மோக்ஷத்துக்குக் காரணமாகும், ஆகையால் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் காரணம் மனம்தான். ஆகையால் பிரகிருதி புருஷேஸ்வர ஞானமுள்ளவன், மனதை விஷயங்களிலிருந்து திருப்பி அதைக்கொண்டு பரப்பிரமமான சர்வேசுவரனை மோட்சத்துக்காகத் தியானிக்க வேண்டும். அப்படித் தியானிக்கப்பட்ட அந்தப் பிரமம் மாற்றுதலான அந்த யோகியை அயஸ்காந்தம் தன் சக்தியாலே இரும்பைத் தன்னிலைக்குக் கொண்டு வருவதைப் போலவும் அக்கினியானது அழுக்குடைய பொன்னை தனது சக்தியால் சுத்தப்படுத்தித் தன்னைப்போல் விளங்கச் செய்வது போலவும், தனது தன்மையை அடைவிக்கும் தன் முயற்சியை வேண்டிய தாய் இடைவிடாமல் நிற்றலையுடைய யாதொரு மனநிலையுண்டோ அதைப் பிரமத்திற் கூட்டுவதே யோகமாகும். இத்தகைய முமுக்ஷúவே யோகியாவான். இவன் யோகத்திலிருக்கும்போது யுஞ்சானன் அல்லது யோகயுக் என்று வழங்கப்படுவான். பிறகு பரப்பிரம்ம சாக்ஷõத்காரம் பெற்றபோது யுக்தன் அல்லது விநிஷ்பந்நஸமாதி என்று வழங்கப்படுவான். பயிற்சியிலுள்ள முந்தியவனுக்கு அந்தராயங்கள் என்ற இடையூறுகளினால் மனமானது கெடுக்கப்படுமாயின் பின்னுண்டாகும் பல பிறவிகளில் யோகம் தலைக் காட்டியபோது முக்தியுண்டாகும். யோகி மற்றொன்றையும் விரும்பாதவனாகித் தனது மனதுக்கு யோக்கியதை வருவதற்காகப் பிரமசரியம், அஹிம்சை, சத்தியம் திருடாமை ஏற்காமை வேத அத்தியயனம் சுத்தமாக இருத்தல் மகிழ்ச்சியுடனிருத்தல் தவம் செய்தல் ஆகியவற்றைச் செய்து கொண்டு பரப்பிரமத்தினிடத்திலே மனதைப் பற்றச் செய்ய வேண்டும், இயம நியமங்களாகிய இவை ஏதேனுமோர் பயனைக் கருதியவர்களுக்கு அந்தப் பயனைத் தரும் ஒன்றையும் கருதாதோருக்கு மோக்ஷத்துக்கு ஏதுவாகும். இந்த நியம, நியமாதிகளுடன் கூடிய யோகியானவன் பத்திராசனம் முதலிய ஆசனங்களில் ஏதேனும் ஓராசனத்தைக் கைக்கொண்டு பயிலல் வேண்டும். பிராணன் என்ற காற்றை பயிற்சியினாலே வயப்படுத்தவதே பிராணாயாமம் எனப்படும். இது சபீசம் என்றும் நிர்பீசம் என்றும் இருவகையாம். மூர்த்தித் தியானமந்திர ஜபங்களோடு கூடியது சபீசம்! அதற்றது நிர்ப்பீசம்! இந்தப் பிராணாயாமம் பிராணத்தினால் அபானத்தைத் தடுத்தலும் அபானத்தினால் பிராணத்தைத் தடுத்தலும் இரண்டையும் ஒருங்கே தடுத்தலுமாகிய பேதங்களால் ரேசகம் பூரகம் கும்பகம் என்று மூன்று வகைப்படும். அப்யரசியான யோகி செய்யும் சபீசம் அல்லது சரலம்பனம் என்ற பிராணாயாமத்துக்கு ஆலம்பனம் ஸ்ரீ அனந்தனுடைய ஸ்தூலரூபம் என்று அறியும் சப்தாதி விஷயங்களில் நிற்கும் இந்திரியங்களைத் தடுத்துச் சித்தத்தை இசையச் செய்வது பிரத்தியாகாரமாகும். இதனால் சஞ்சலப்படும் இந்திரியங்கள் மிகவும் வயப்படுகின்றன. அவை வசப்படாதபோது யோகியானவன் யோகத்தைச் சாதிக்கமாட்டான். இவ்விதம் பிராணாயாமத்தினால் காற்றும் பிரத்தியாகாரத்தினால் இந்திரியங்களும் வசப்பட்டபிறகு சுப ஆசிரயத்திலே மனதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கேசித்துவஜர் சொல்லி வரும்போது காண்டிக்கியர் குறுக்கிட்டு மகானே! மனதுக்கு எது சுபாசிரயமோ அதைச் சொல்ல வேண்டும்! எந்தச் சுபாசிரயத்தை பற்றிய மனமானது ராகாதி தோஷங்களால் உண்டாகும் குறைகளைப் போக்குமோ; அத்தகையதை அறிய விரும்புகிறேன் என்று கேட்டார். மனதுக்கு ஆசிரயம் பிரமம். அது மூர்த்தம், அமூர்த்தம் என்று இயல்பால் இருவகைப்படும்! மூர்த்தமாவது சரீரத்தோடு கூடியது; அது ஹிரண்ய கர்ப்பன் முதலான பந்தஸ்வரூபம் அமூர்த்தமாவது சரீரம் அற்றது. அது முக்க ஸ்வரூபம் இந்த ஸ்வரூபம் பரம் என்று சொல்லப்படும். இத்தகைய மூர்த்தா மூர்த்தமயமான பிரபஞ்சம் யாவும் பிரமபாவனை, கர்மபாவனை உபயபாவனை ஆகவுள்ளன பாவனையாவது, பொருள்களை இடைவிடாமல் நினைத்தல்! பிரமபாவனையாவது பிரமத்தைப் பாவித்தல்! கருமபாவனையாவது கர்மத்தைப் பாவித்தல் உபயபாவனையாவது இரண்டையும் பாவித்தலாகும்; சனந்தனர் முதலிய யோகிகள் பிரமபாவனையோடு கூடியவர்கள் தேவர்களாதி யோராகத் தாவரமந்தமாக உள்ளவரனைவரும் கர்மபாவனையோடு கூடியவர்கள் இரணிய கர்ப்பன் முதலியோர் போதமும் அதிகாரமும் உடையவர்களாகையால் உபயபாவனையுடையோராவர். விசேஷமான ஞானகர்மங்கள் யாவும் க்ஷயிக்காமல் இருக்கும் வரையில் முன்பு சொன்ன விஸ்வரூபமான பிரமம் இருக்கிறது. தேவ மனுஷ்யாதி பேத ஞானத்தால் ஞானம் வேறுபட்ட ஜீவர்களைக் காட்டிலும் பரம் என்ற ரூபம் வேறானதாகவுள்ளது. அது ஜாதி முதலிய சகல பேதங்களும் அற்றது. வாக்குக்கும் எட்டாததாய் குறைவு முதலிய விகாரங்களின்றி என்றுமே ஒன்றாக, சுயம் பிரகாசமாயுள்ள ஞானஸ்வ ரூபமான வஸ்து! அதுதான் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவின் அமூர்த்த ஸ்வரூபமாகும்! முன்னே சொன்ன விசுவரூபத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் மிகவும் உத்தமமாயுள்ளது! அரசே! அது யுஞ்சானாலே சிந்திக்கக்கூடாதது. ஆகையால் அந்த ஸ்ரீஹரியின் ஸ்தூலமான விசுவரூபத்தையே சிந்திக்கவேண்டும். வாசு தேவ அமிசமாய் பிரஜாபதியாக இருக்கும் இரணிய கர்ப்பனும், மருத்துக்களும், வசுக்களும்; ருத்திரர், சூரியர், நக்ஷத்திரங்கள், கிரகங்கள், கந்தர்வர், யக்ஷர், தைத்தியர் முதலியோரும் சகலமான தேவயோனி விசேஷங்களும், மனுஷ்யரும் மிருகங்களும், மலைகளும், மரங்களும், கடல்களும் நதிகளும் மற்றும் உள்ள சகல பூதங்களும் பூதங்களின் காரணங்களும் சேதனாசேதன ரூபமாய் ஏகபாதம்; துவிபாதம் அநேக பாதம் உள்ளதும் பாதமில்லாததும் சகலமும் ஸ்ரீஹரிபகவானின் மூர்த்த ஸ்வரூபமேயாகும்! இது சிந்திக்கக் கூடியது. ஆயினும் மூன்று பாவனைகள் உள்ளத்தால் சுத்தமன்று இத்தகைய இந்த உலகம் எல்லாம் பரப்பிரம சொரூபியான ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது. முன்பு சுத்த ஞான பிரமஸ்வரூபம் என்று சொன்னதே பரமான விஷ்ணு சக்தி இந்த இரண்டும் அல்லாமல் அவித்தை என்றும் கர்மம் என்றும் சொல்லப்பட்ட மூன்றாவது சக்தியும் உண்டு. இதனால் சூழப்பட்டே ÷க்ஷத்திரஞ்ஞன் என்னும் சக்தி; பரவி நிற்கிற சகல சம்சார தாபங்களையும் பெறுகிறது.
இதனால் மறைக்கப்பட்டுத்தான் தாரதம்மியமுள்ளதாய் காணப்படுகின்றது. எப்படியெனில், அசேதனங்களிலே இந்தச் சக்தி மிகவும் அற்பமாகவுள்ளது. தாவரங்களில் இது கொஞ்சம் அதிகமாகவும், ஊர்கின்ற ஜந்துக்களில் அதற்கும் அதிகமாயும் மிருகங்கள்; பறவைகள், மனிதர் பக்ஷிகள் கந்தர்வர்கள் தேவதைகள் ஆகிய இடங்களில் இந்தச் சக்தி மிகவும் இருக்கிறது. தேவதைகளிடம் இருப்பதைக் காட்டிலும் தேவேந்திரனிடம் அதிகம். பிரஜாபதியிடமோ அவனைவிட அதிகம். இரணிய கர்ப்பனிடத்தில் அதிலும் மேற்பட்டுள்ளது. அரசே! இந்தச் சகல ரூபங்களும் எம்பெருமானுடைய சரீரங்களேயாம்! இவையெல்லாம் ஆகாயத்தினால் முழுவதும் வியாபிக்கப்பட்டது போல், எம்பெருமானின் சக்தி; சங்கல்பத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறது! யோகிகளால் தியானிக்கத்தக்கப் பிரமமான அந்த விஷ்ணுவினுடைய ரூபம் வித்வான்களால் சத்து என்று சொல்லப்படும். அமூர்த்த ரூபமாகும். இந்தச் சகல சக்திகளும் நிலைப் பெற்றிருப்பதாயும், விசுவரூப விலக்ஷணமாயும்; குணாதிகளாலே பெருமை பெற்றிருப்பதான ஸ்ரீஹரியின் வேறு ரூபம் ஒன்று உண்டு. எல்லாச் சகதியுமுள்ள அந்த ஸ்வரூபம்தான், லீலா விசேஷத்தினால் தேவதைகள், திரியக்குகள், மனிதர் முதலானோருடைய செய்கைகளுள்ள அவதாரச் சிறப்புக்களைச் செய்கிறது. அப்பிரமேயனான அந்த எம்பெருமானாலே அவதார ரூப வியாபாரமானது, லோகோபகாரத்துக்காகத் திருவுள்ளம் பற்றப்பட்டதேயன்றி மற்றவர்களுக்குப் போலக் கர்மத்தைப் பற்றி அறியப்பட்டதன்று ஆகையால் இது சகல ஜாதிகளிலும் வியாபித்ததாயும் இருக்கிறது. விஸ்வரூபனாகிய அவனுடைய இந்த ரூபம் எல்லாப் பாதகங்களையும் போக்கும்படியானதினால், ஆன்மாவுக்குத் தூய்மையுண்டாகும் பொருட்டு யோகப் பயிற்சி செய்யப்புகுந்வன் இந்த ஸ்வரூபத்தையே தியானிக்க வேண்டும். அக்கினியானது எப்படிக் காற்றுடன் சேர்ந்து, மஹாச் சுவாலைகள் வளரப்பெற்று, ஒரு புதரைக் கொளுத்தி நாசஞ் செய்யவல்லதோ, அப்படியே யோகிகளின் இதயத்தில் இருந்து ஸ்ரீமகாவிஷ்ணு சமஸ்த பாதங்களையும் தகித்து அருள்வார். ஆகையால் சமஸ்த சக்திகளுக்கும் ஆதாரமான அந்தத் திவ்வியத்திருவடிவிலே மனதை நிறுத்தவேண்டும். அது தான் தூய்மையான தாரணை எனப்படும்! அரசே! எங்கும் திரிந்து அலைந்த பிறகு அந்த விஷயத்தைப்பற்றி அசையாமல் இருக்கும் மனதுக்கு மூவகைப்பட்ட பாவப் பாவனைகளைக் கடந்த அந்த ஸ்வரூபந்தான், யோகிகளுக்குரிய மோக்ஷ ஏதுவான சுபாசிரயம் என்று அறிவீராக. அரசே! மற்றும் இதயத்துக்கு ஆசிரயமான தேவாதி ஸ்வரூபம் யாவும் கருமவயப்பட்டவை. ஆகையால் அசுத்தங்களேயாம். ஆகையால் மற்றவற்றை விரும்பாமல், அந்த எம்பெருமானுடைய தூய்மையான மூர்த்தரூபத்தைத் தியானிப்பதே தாரணையாகும். சித்தத்தில் தரிப்பது ஆதாரமின்றித் தாரணை கூடாது. ஆகையால் ஸ்ரீ ஹரியினுடைய எந்தரூபம் சிந்திக்கப்பட வேண்டுமோ அந்தப் பகவத் ஸ்வரூபத்தைச் சொல்கிறேன். கேட்பீராக;
பிரசன்னமான திருமுகமும், அழகிய தாமரையிதழ் போன்ற திருவிழிகளும் சமமான திருச்செவிகளும் விசாலமான பலகை போன்ற திருநெற்றியும், அழகிய செவிகளில் தரித்த அழகிய குண்டலங்களும் வலம்புரிச் சங்கு போன்ற கண்டமும், பரந்ததும் ஸ்ரீயும் ஸ்ரீவச்சம் என்ற திருமறுவும் பொருந்தியதுமான திருமார்பும், மடிப்புகளால் மூன்று பிரிவுள்ளதும் ஆழ்ந்த கொப்பூழ் உள்ளதுமான திருவுதரமும், நீண்ட எண்புயங்களும் அல்லது நாற்புயங்களும், சமமான திருத்தொடைகளும், கணுக்கால்களும், தாமரை மலர் போன்ற திருத்தாள்களும், நிர்மலமான பீதாம்பரமும், கிரீடஹார கேயூர கடகாதி திவ்வியாபரணங்களும் விளங்குகின்ற ஸ்ரீவிஷ்ணுவாகிய பரப்பிரமத்தைத் தியானிக்க வேண்டும். மேலும் சார்ங்கம், சங்கம் கதை கட்கம் சக்கரம், அக்ஷமாலை ஆகியவற்றை திருக்கரங்களிலே தாங்கி மற்ற விகண்டில் வரஹஸ்தமும், அபய ஹஸ்தமும் விளங்கத் தியானிக்கவேண்டும். சதுர்ப் புஜமாகத் தியானிப்பதானால் சங்கு, சக்கர, கதைகளும், தாமரைமலரும் ஏந்தியுள்ளதாய்த் தியானிக்கவேண்டும். இத்தகைய திவ்விய ஸ்வரூபத்தை நிலை நின்ற மனத்தால் தாரணை உறுதிப்படும் வரையில் தியானிக்க வேண்டும். தாரணை உறுதிப்படுதலாவது நடக்கும்போதும், உட்காரும் போதும் வெறெந்தச் செய்கைசெய்யும் போதும் அந்த ஸ்வரூபம் மறையாமல் தோன்றிக் கொண்டேயிருப்பதேயாகும். அப்படியானால்தான் தாரணை சித்தியானது என்று அறியலாம். இவ்விதம் தியானம் உறுதியான பிறகு, சங்க சக்கராதி ஆயுதங்களில்லாமல் அக்ஷமாலை மட்டுமே உள்ளதாயும் மிகவும் சாந்தமாயும் அந்த ஸ்வரூபத்தைச் சிந்திக்கவேண்டும். இந்தத் தாரணையும் முந்திய தாரணையைப்போல் ஸ்திரப்பட்டவுடன், கிரீடம் முதலிய திவ்விய பூஷணங்களை ஒழித்து, அந்த ரூபத்தைத் தியானிக்க வேண்டும். இவ்விதமாக ஆயுதங்களும் ஆபரணங்களும் திருக்கை முதலிய உறுப்புக்களும் நன்றாகக் கிரகிக்கப்பட்ட பிறகு, அந்தந்த உறுப்புக்குப் பிரதானமான ஒரு திருமேனியோடு கூடியவனாக அந்த எம்பெருமானைச் சிந்திக்க வேண்டும். இவ்விதம் தாரணை செய்த பிறகு, முன்னே சொன்ன அவயவங்களையுடைய அவயவியினிடத்தே மனதைச் செலுத்த வேண்டும். அந்தத் தாரணையிலேயே சித்தம் நிலைப்பதே தியானமாகும்! இது முன்சொன்ன ஆறு அங்கங்களால் ஏற்படுத்தப்படும். அத்தகைய சொரூபத்துக்கே நாமரூபாதி கற்பனைகள் இல்லாத சொரூபத்தைத் தியானங்கொண்ட மனத்தாலே கிரகிப்பது சமாதி எனப்படும்.
காண்டிக்கியரே! அடையத் தக்கதான பரப்பிரமத்தை அடைவிப்பது இந்த விஞ்ஞானமேயாகும். இதைக்கொண்டு அடைவிக்க வேண்டியது மூன்று பாவனைகளையும் கடந்த ஆன்மா! மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபனாக இருந்த ஆன்மா, இந்தச் சாதனத்தையுடையவன். இந்த ஞானமே சாதனம். இந்த ஞானமானது அவனுக்கு மோக்ஷம் என்ற காரியத்தை உண்டாக்கிப் பிறகு திரும்பிவிடும். அதனால் இந்த ஆன்மா பரமபிரமத்தினுடைய குற்றமின்மை முதலிய தன்மைகள் உண்டாகப் பெற்றவனாய் அந்தப் பரமாத்மாவோடு வாசியற நிற்கும். அவனுக்கு முன்பு இருந்த பேதமானது அஞ்ஞானத்தால் வந்ததேயாம். ஞான ஸ்வரூபமான ஆன்மாவிலே தேவ மனுஷ்யாதி பேதத்தை உண்டாக்கும்படியான அஞ்ஞானமானது வேரற்றுப் போகுமளவில், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இல்லாத வித்தியாசத்தை எவன்தான் கற்பனை செய்ய இயலும்?
காண்டிக்கியரே! நீர் கேட்ட அஷ்டாங்க யோகத்தை நான் உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் உமக்கு நான் சொல்ல வேண்டுவதும் செய்யவேண்டுவதும் யாது? என்று கேசித்துவஜர் கேட்டார். அதற்கு காண்டிக்கியர், ஓ கேசித்துவஜரே! யோக சொரூபம் அறியும்படி நீர் செய்த உபதேசத்தால் என் சித்தத்தின் மலம் முழுவதும் அழிந்தது. அதனால் யாவும் எனக்குச் செய்யப்பட்டவையாயின. இப்போது நானும் எனக்கு என்று சொன்னதும் சரியானதல்ல, ஆயினும் பரமாத்தும சாக்ஷõத்தன்மை பெற்றவர்களுக்கும் நான் எனது என்று சொல்லாமல் பேசவே முடிவதில்லையே? நான் எனது என்பது அந்யதா ஞானமாம். இதனால்தான் ஆடு, மாடு, ஆண், பெண் முதலிய வழக்கங்கள் உண்டாகின்றன. பரமார்த்தமான ஆன்ம ஸ்வரூபமோ சொல்லுக்கு எட்டாதது. ஆகையால் சொற்களாலே சொல்லப்படாதது. இனி தேவரீர் தம் இடத்திற்குப் போகலாம் என்று சொல்லி அவருக்குத் தக்கபடி உபசாரம் செய்தார். கேசித்துவஜரும் தம் பட்டணத்துக்குப் போய்விட்டார்.
பிறகு, காண்டிக்கியர் குமாரனை அரசனாக அமர்த்திவிட்டு, ஸ்ரீகோவிந்தனிடம் மனம், வைத்து யோக சிந்தனையின் பொருட்டு, அதற்குத் தகுதியான ஒரு வனத்துக்குச் சென்று, ஒரே பிடிப்புடைய புத்தியுடன் யமாதி குணங்களுடன் கூடி நின்று நிர்மலமான ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய பிரம்மனிடத்திலே நாம ரூபகர்மங்கள் வேரோடு அற்று நிற்பதாகிய லயத்தையடைந்தார். கேசித்துவஜரும் மோக்ஷத்துக்காகத் தரும கர்மங்களையெல்லாம் போக்கும்படியான முயற்சியுடன் ராஜ்ய சம்பந்தமான விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், பயனைக் கருதாமலேயே கர்மங்களைச் செய்து, கர்ம பயன்களைக் கழித்ததால், பிரார்த்தம் யாவும் நாசமாக, சகல தாபங்களும் க்ஷயிப்பதாகிய மோக்ஷ சித்தியை அடைந்தார்.

——————-

8. நூற் பயன்-

மைத்ரேயரே! சாசுவதமான பிரமத்தோடு சேர்வதாகிய மோக்ஷம் என்று சொல்லப்படும் மூன்றாவது பிரளயம் எதுவோ, அந்த ஆத்தியந்திகப் பிரளயத்தை நான் உமக்குச் சொல்லிவிட்டேன். இவ்விதமாக, சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மனுவந்தரம், லம்சானு சரிதம் முதலியவற்றைத் தெள்ளத் தெளிவாக அறிவித்தேனல்லவா? இந்த ஸ்ரீவிஷ்ணு புராணம் எல்லாவிதமான பாதகங்களையும் நாசஞ்செய்யவல்லது. எல்லாச் சாஸ்திரங்களுக்கும் மேம்பட்டது. புருஷார்த்தங்களை நன்றாக விவரிக்கும் திறனையுடையது. நீங்கள் மிகவும் ஆதரவோடு கேட்டதால் இதை உமக்கு நன்றாகச் சொன்னேன். இன்னும் நீங்கள் கேட்க வேண்டுவது யாதாயினும் இருந்தால் கேளும். நான் அதையும் சொல்கிறேன் என்று பராசரமகரிஷி கூறியதும் மைத்திரேயர் விண்ணப்பஞ் செய்யலானார்.
சுவாமி! அடியேன் கேட்டவைகளையெல்லாம் தாங்கள் கூறியருளினீர்கள்! இனி நான் கேட்க வேண்டுவது ஒன்றுமில்லை எல்லாச் சந்தேகங்களும் நீங்கின மனம் நிர்மலமாயிற்று. தேவரீரது அனுக்கிரகத்தால் உற்பத்தி ஸ்திதி லயங்களை அறிந்தேன். இந்தப் படைப்புக்கு ஏதுவானஎம்பெருமானும் பிரம்மா தக்ஷன் விஷ்ணு மனுமுதலானவர்களும் ருத்திர காலாந்தகாதிகளான நான்கு ராசிகளையும் அறிந்தேன். மேலும் முக்யம் வியத்தம் காலம் என்ற மூன்று விஷ்ணு சத்திகளையும் பிரமபாவனை கர்மபாவனை உபயபாவனை என்ற மூன்று பாவனைகளையும் முழுமையாய் அறிந்தேன் குருநாதரே! தேவரீரது பிரசாதத்தால் முக்கியமாய் அறியவேண்டுவனவற்றை அறிந்தேன். அதாவது யாவும் ஸ்ரீவிஷ்ணுவுக்குத் திருமேனியாய் அவனியில் வேறாகாமல் இருக்கிறது என்பதேயாம். ஆகையால் அடியேன் சந்தேக விபரீதங்கள் இன்றிக் கிருதார்த்தனானேன். தேவரீரது கிருபையால் வர்ணாசிரமாதி சகல தர்மங்களையும் பிரவர்த்தி தர்மம் நிவர்த்தி தர்மம் ஆகியவற்றையும் அறிந்தேன். இனி கேட்க வேண்டியது ஒன்றுமில்லை. அடியேனிடத்தில் தாங்கள் என்றும் பிரசன்னராக எழுந்தருளியிருக்க வேண்டும். சகலார்த்தங்களையும் அருளிச் செய்யும் மகரப்பிரயாசையை அடியேனால் அனுபவித்தீர்களே! அடியேன் செய்த இந்த அபசாரத்தை மன்னித்தருள வேண்டும். பெரியோர் புத்திரனுக்கும் சிஷ்யனுக்கும் வேறுபாட்டை எண்ணமாட்டார்களல்லவா? என்று மிக்க வணக்கத்தோடு மைத்திரேயர் விண்ணப்பிக்க பராசரர் மேலும் கூறலானார்.
ஓ, பிராமண உத்தமரே! உமக்குச் சொன்ன இந்தப் புராணம் வேதத்துக்குச் சமமானது. இதைக் கேட்பதால், ராகாதிதோஷங்களால் உண்டான பாபவகைகள் நசித்துப் போகும். இதில் சொன்ன சிருஷ்டி முதலிய ஐந்து அங்கங்களில், தேவதைகள், தைத்தியர் கந்தருவர் உரகர் ராக்ஷசர் யக்ஷர் வித்தியாதரர் சித்தர் அட்சரசுகள் பிரமத் தியானிளான மாமுனிவர்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் பிராமணாதி வர்ணங்கள் நான்கும், புருஷருடைய உயர்ந்த சரிதங்களும், பூமியிலுள்ள புண்ணியமான பிரதேசங்கள், புண்ணிய நதிகள், புண்ணிய சமுத்திரங்கள், புண்ணிய மலைகள். ஞானவான்களின் சரிதங்கள், வர்ண தர்மங்கள், வேத சாஸ்திரங்கள் ஆகிய இவையெல்லாம் ஸ்மரணத்தாலேயே பாவம் நீக்கத்தக்கவை. இதுமட்டுமல்ல. ஜகத்தின் உற்பத்தி ஸ்திதி, நாசங்களுக்கு ஏதுவாயும் அவியயனாயும் சர்வ சொரூபியாகவும் யாவற்றுக்கும் ஆத்மாவாயும் ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களும் நிறைந்தவனாகவுமுள்ள ஸ்ரீஹரியும் இந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறான். யாருடைய திருநாமத்தைத் தற்செயலாய் ஒருவன் உச்சரித்தாலும், அவனுடைய சர்வ பாதகங்களும் சிங்கத்தைக் கண்ட அற்ப மிருகங்களைப்போல் விரைந்து ஓடுமோ பக்தியுடன் செய்யப்படுகின்ற எவனுடைய நாம ஸங்கீர்த்தனங்களால் சகலபாவங்களும் பெருநெருப்பில் விழுந்த தாதுக்களைப் போல லயப்பட்டுப் போகுமோ, எவனை ஒருமுறை நினைத்தவுடனேயே, அது உக்கிரமாயும் நரகதுக்கத்தைக் கொடுக்கத் தக்கதாகவும் இருக்கின்ற கலிகல்மஷமானது உடனே அழியுமோ, எவனுக்கு பிருமா, ருத்திரன், ஆதித்தர், வசுக்கள், சாத்தியர், அவிசுகள் விசுவதேவர் முதலான தேவ யோனிகளோடும் அஸ்வினி முதலிய நட்சத்திரங்களோடும், சூரியாதி சகல கிரகங்களோடும் சப்தரிஷிகளோடும் மற்றுமுள்ள அந்தந்த லோகங்களோடும் அந்தந்தலோகாதிபதிகளோடும் பிராமணாதி மனுஷ்யர்களோடும் பறவைகள் சிங்கம் முதலிய கொடிய மிருகங்களோடும் பாம்பு முதலிய ஊர்வனவற்றோடும், பலாசு முதலிய மரங்களோடும் அவற்றிலுள்ள பெருங் கடல்கள் நதிகள் பாதாளங்களோடும் அவற்றிலுள்ள ஜந்துக்களோடும் சப்தாதி விஷயங்களோடும் ஆவரணங்களோடும் கூடிய இந்தப் பிரமாண்டம் மேருவுக்கு ஓரணுப்போல எவனுக்கு ஏகதேசமாக இருக்கிறதோ யாவும் அறிந்தவனாய் எல்லாமும் உள்ளவனாய் எல்லாச் சொரூபமும் உடையவனாய் யாதொரு சொரூபமும் இல்லாதவனாய் சகல பாபநாசனாயுள்ள அந்த ஸ்ரீவிஷ்ணு பகவான் இந்தப் புராணத்தில் முக்கியமாகத்துதிக்கப் பட்டிருக்கிறார். இத்தகைய இந்தப் புராணத்தைக் கேட்பவன் அஸ்வமேதயாகத்தின் அவபிரதத்தில் ஸ்நானம் செய்தபயனை அடைவான்.
பிரயாகையிலும் புஷ்கரத்திலும் குரு ÷க்ஷத்திரத்திலும் சேதுபந்தன மகா சமுத்திரத்திலும் உபவாச விரத அனுஷ்டானஞ்செய்தவன் எந்த பயனை யடைவானோ, அந்தப்பயனை இந்தப் புராணத்தைக் கேட்டவன் அடைகிறான். மைத்ரேயரே! ஒருவன் அக்கினியை ஓராண்டுக்காலம் நன்றாக ஓமத்தால் ஆராதனை செய்துவந்தால் எந்தப் பயனை அடைவானோ அந்த நற்பயனை இதனை ஒருக்கால் கேட்டால்பெறுவான். ஒருவன் ஜ்யேஷ்டமாதத்தில் சுக்கிலபட்ச துவாதசியில் யமுனா நதியில் குளித்து நீராடி ஸ்ரீமதுராபுரியில் ஸ்ரீகிருஷ்ணனை ஆராதித்தால் உண்டாகும் பயனை கேசவனிடத்திலே மனம்வைத்து இப்புராணத்தில் ஒரு அத்தியாயத்தைக் கேட்பதனால் பெறுவான். ஜ்யேஷ்டமாதத்துச் சுக்கிலபக்ஷத் துவாதசியில் முன்னதாக உபவாசம் இருந்து யமுனையில் நீராடி மதுரையில் ஸ்ரீ மாதவனை ஆராதிப்பவனுக்கு குறைவற்ற அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். இத்தகைய புண்ணியவான்களான தங்கள் குலத்தாராலே, மேன்மையடைவிக்கப்பட்ட சிலருடைய செல்வத்தைக் கண்டு, பிதுர்க்கள் சொல்லியதாவது, நமது குலத்தில் பிறந்த எவனாவது யமுனா நதியில் நீராடி, உபவாசம் இருந்து ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியிலே மதுரையில் ஸ்ரீஜனார்த்தனனை அர்ச்சிப்பானானால் நாமும் பிறரைப் போலவே கரையேறினவர்களாய், மோக்ஷம் என்ற மேலான செல்வத்தைப் பெறுவோம். அல்லவா? ஜ்யேஷ்ட சுக்கில துவாதசியில் சுவாமியை ஆராதனை செய்து, பிதுர்க்களுக்கு யமுனையில் பிண்டத்தை எவன் போடுவான் என்றால், புண்ணியஞ் செய்தவர்களின் குலத்தில் பிறந்தவன்தான் போடுவான் என்று பிதுர்க்கள் ஆசைப்படுகின்றனர். இவ்விதமாக அந்தப்புண்ணிய தினத்திலே, யமுனா ஸ்நானம் செய்து ஸ்ரீகிருஷ்ண பகவானை ஆராதித்து, பிதுர்க்களுக்குப் பிண்டம் இடுவதனால் எந்தப்பயன் உண்டோ, அந்தப் பயனை இந்தப் புராணத்தின் அத்தியாய சிரவணத்தால் பெற்றுப் பிதுர்க்களைக் கடைத்தேற்றுவான். இந்தப்புராணம் சம்சாரத்திற்கு அஞ்சியவருக்கு ரக்ஷகமாயும் கேட்கத் தக்கவைகளில் மேம்பட்டதாயும், தூய்மையானவற்றிலெல்லாம் பரிசுத்தமாயும், தீயகனவுகளை அழிக்கவல்லதாயும் சகல தோஷங்களையும் போக்க வல்லதாயும், மக்களுக்கெல்லாம் மேலான மங்களமாயும் புத்திர சம்பத்தைத் தரத்தக்கதாகவும் விளங்குகிறது.
ஆதியில் ஸ்ரீமந் நாராயண மகாமுனிவரால் செய்யப்பட்ட இந்தப் புராணத்தை கமலோற்பவர் ருபு என்பவருக்கு உபதேசித்தார். அந்த ருபு இந்தப் புராணத்தைப் பிரியவிரதருக்குச் சொன்னார். அவர் பாகுரிக்கும் அந்தப் பாகுரி ஸ்தம்பமித்திரருக்கும் சொன்னார். அவர் ததீசருக்கும்; அவர் சாரஸ்வதிக்கும் அந்தச் சாரஸ்வதர்பிருதுவுக்கும் அவர் புருகுச்சருக்கும் அவர் நர்மதைக்கும் அவள் திருதராஷ்டிரர் விபூரணன் என்ற நாகர்களுக்கும்; அந்த இருவரும் நாகராஜனான வாசுகிக்கும் அந்த வாசுகி வச்சருக்கும் அவர் அசுவத்தாமருக்கும் அவர் கம்பளருக்கும் அவர் ஏலா புத்திரருக்கும் சொன்னார்கள். இவ்விதமாகப் பாதாள லோகத்தில் பரவியிருந்த இந்தப் புராணத்தைப் பாதாள லோகத்துக்குப் போயிருந்த வேதசிரசு என்ற முனிவர் பெற்று வந்து பூலோகத்தில் பிரமதி என்பவருக்குக் கொடுத்தார். அவர் இதனை ஜாதுகர்ணருக்குக் கொடுத்தார். அவர் இதனை அநேகப் புண்ணியசாலிகளுக்குச் சொன்னார். புலஸ்திய மாமுனிவருடைய வரப்பிரசாதத்தால் இந்தப் புராணம் எனக்கும் ஞாபகத்துக்கு வந்தது மைத்திரேயரே நானும் உமக்கு உள்ளபடி இந்தப் புராணத்தை அறிவித்தேன். நீரும் இதை இந்தக் கலியுகத்தின் முடிவிலே சினீகர் என்பவருக்குச் சொல்லுவீர்.
இந்த மகாபுராணம் பரம இரகசியமாயும் கலிதோஷ நாசனமாயும் இருப்பதை எவன் பக்தியுடன் கேட்பானோ, அவனுக்குப் பாபங்கள் யாவும் தீரும் தினந்தோறும் இந்தப் புராணத்தைக் கேட்பவனுக்குச் சகல தீர்த்த ஸ்நான பலனும் சகல தேவதா ஸ்தோத்திரப் பலனும் கிடைக்கும். இந்தப் புராணத்தில் பத்து அத்தியாயத்தைக் கேட்டவுடன் காராம் பசுவைத் தானஞ் செய்வதால் உண்டாகும் அருமையான புண்ணியம் கிடைக்கும். இதில் ஐயமில்லை எவன், சகல சரீரகனாய், சர்வ வியாபியாய் சகல லோகத்துக்கும் ஆதாரமாய் தன்னிலேதான் இருப்பவனாய், ஞானத்தினாலேயே அறியத்தக்கவனாய், ஆதியந்தம் இல்லாதவனாய்ச் சகல தேவதைகளுக்கும் இதனாயுமுள்ள ஸ்ரீ அச்சுதனை நினைத்துக்கொண்டே இந்தப் புராணத்தை முழுமையாகக் கேட்பானோ அவன் பக்தியோடு அசுவமேத யாகம் செய்த பயனை அடைவான். எந்தப் புராணத்தின் ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் சராசர குருவாயும் பிரமஞான சொரூபியாயும் சகல ஜகத்துக்கும் சிருஷ்டி, ஸ்திதி, சங்கார கர்த்தாவாகவுமுள்ள அச்சுத பகவான் துதிக்கப்பட்டிருக்கிறானோ அத்தகைய புராணத்தை முழுதும் கேட்பவனும், படிப்பவனும், சொல்பவனாயும் இருப்பவனுக்கும் வருகிற பயனை இப்படிப்பட்டதென்று சொல்வதற்கு மூவுலகத்திலும் ஒப்பில்லை ஒப்பற்ற மோக்ஷ சாம்ராஜ்யத்தைத் தரவல்ல ஸ்ரீஹரி பகவானே; பயனாகிறானன்றோ? எவனிடத்தில் மனம் வைத்தவன் நரகத்தில் புகமாட்டானோ எவனைத் தியானிக்கச் சுவர்க்கமும் இடையூறாக இருக்குமோ; எவனிடத்தில் மனம் பற்றியவர்க்கு பிரம லோகமும் அற்பமாகத் தோன்றுமோ; எவன் நிர்மல ஞானியருக்கு இதயத்தில் இருந்து கொண்டு; முக்தியை அளிக்கிறானோ அத்தகைய அச்சுதனைத் துதிப்பதனால் பாவம் தீரும் என்பது ஒரு விந்தையா? யக்ஞேசுவரனான எவனை யக்ஞமறிந்தவர்களான கர்மிகள் யக்ஞங்களினால ஆராதிக்கிறார்களோ; ஞானியர் எவனைப் பரம சொரூபியாகவும் தியானிக்கிறார்களோ; எவனை நினைப்பவன் பிறப்பு இறப்புக்களையும்; அறிவு, தேய்வு; வளர்ச்சிகளையும், காரிய காரணங்களாக இருத்தலையும் அடைவதில்லையோ; அத்தகைய ஸ்ரீஹரியைக் காட்டிலும் கேட்கத்தக்க பொருள் வேறு எதுவுண்டு?
ஆதியந்தங்கள் இல்லாதவனாய்ப் பிரபுவான எவன் பிதுர்ரூபியாக இருந்து விதிப்படி இடப்பட்ட கவியத்தையும் தேவ ரூபியாக இருந்து ஓமஞ் செய்யப்பட்ட அவியத்தையும் புசிக்கிறானோ; பிராமணமுடையவருக்கு எந்தப் பிரமாணமும் சகல சக்தி ஸ்தானமாயும் பிரமமாயும் இருக்கிற எவன் விஷயத்தில் ஒரு பரிச்சேதம் செய்யவொண்ணாதோ அத்தகைய ஸ்ரீஹரி பகவான்; காதிற்பட்டவுடன் சகல பாவத்தையும் போக்கி விடுவான் எவனுக்கு முடிவும் உற்பத்தியும் இல்லையோ; பரிணாமம் இல்லாத எவனுக்கு விருத்தி யக்ஷங்களில்லையோ; எவன் விகாரமற்ற வஸ்துவாக இருக்கிறானோ; புரு÷ஷாத்தமனாயும் துதிக்கத் தக்கவனாயுமுள்ள அந்த சர்வேசுவரனின் திருவடியைத் தொழுகிறேன். எவன் அந்தப்பரமபுருஷனுக்கு அநுகுணமானதையே அனுபவிக்கும் படியான சேஷபூதனாக இருக்கிறானோ, எவன்தேவாதி பேதங்களின்றி ஞானமே வடிவாகக்கொண்டு, ஒருவனாக இருந்தும் தேவதை முதலான தேகங்களைக்கொண்டு, அவற்றில் தான் என்னும் மயக்கமுற்றதனாலே, அநேகனாய், அசுத்தனாய் தோன்றுகிறானோ, எவன் ஞானத்தோடுங் கூடியவனாய் மஹத் முதலிய சகல தத்துவங்களையும் பரவச் செய்வதற்குக் கர்ம மூலத்தால் கர்த்தாவாக இருக்கிறானோ எப்பொழுதும் அவியயனாயுள்ள எம்பெருமானுடைய ஸ்வரூபமான அந்தப் பரம புருஷனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கின்றேன்.
எது, அறிவு பரவுதலும் அசையாது நிற்றலும் சேர்ந்து லயப்பட்ட ஸ்தானமாக இருக்கின்றதோ, எது ஆன்மாவுக்குப் பாவ புண்ணிய அனுபவயோக்கியமான தேகாதிகளைத் தரவல்லதாய் முக்குண வடிவாக இருக்கின்றதே மகத்து முதலிய அவஸ்தைகளை அடையாததாயும் சம்சார உற்பத்திக்குக் காரணமாயும் தானே உண்டானதாயும் எப்போதும் அழியாததாயும் உள்ள பிரதானமானது எது உண்டோ, எம்பெருமானுடைய ஸ்வரூபமான அதனைத் தொழுகின்றேன். வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகியவற்றின் செயல் வடிவமாயும் சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்ற விஷயங்களாகிய போக்கிய பதார்த்தங்களைக் கொடுத்து வருவதாயும் ஆன்மாவுக்கு ஞானேந்திரிய கர்மேந்திரியங்களைக் கொண்டு உபகாரஞ் செய்வதாயும் சூக்ஷ்மமும் ஸ்தூலமுமான சொரூபமும் உடையதாயுமுள்ள வியக்தம் என்கின்ற பகவானுடைய சொரூபத்தைப் பணிகிறேன். இவ்விதம் பலவகைப்பட்ட வியக்தாவியக்த பிரகிருதிகளும் அப்பிராகிருத திவ்விய மங்கள விக்கிரமும் ஆத்துமாவும் அஜனாய் எப்போதும் உள்ளவனான எவனுக்கு ஸ்வரூபமோ அந்த ஞானாதி ஐசுவரியம் உள்ள ஸ்ரீஹரி பகவான் சகல ஆன்மாக்களுக்கும் பிறப்பு இறப்பு மூப்பு முதலிய குற்றங்கள் இல்லாத மோக்ஷ சம்பத்தைத் தந்தருள வேண்டும் என்று பராசர மகரிஷி மைத்திரேய முனிவருக்கு இந்த ஸ்ரீவிஷ்ணு புராணத்தையும் சொல்லி இந்த நூற்பயனையும் சொல்லி பகவானைப் பிரார்த்தித்து இதனை அருளிச் செய்தார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் சம்பூரணம்
ஓம் நமோ ஸ்ரீவாசுதேவாய
ஆறாவது அம்சம் முடிந்தது. விஷ்ணு புராணம் முற்றிற்று.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம்——

February 28, 2021

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்
2. தேவகியைத் தேவர் போற்றுதல்
3. கிருஷ்ணாவதாரம்
4. கம்சனின் கட்டளை-
5. பூதகியின் வதம்
6. சகடயமளார்ச்சுன பங்கம்
7. காளிய மர்த்தனம்-
8. தேநுகாசுரன் வதம்-
9. பிரலம்பாசுரன் வதம்
10. கோவர்த்தன ஆராதனம்-
11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்
12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்
13. ராஸக் கிரீடை
14. அரிஷ்டாசுர வதம்
15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!
16. கேசி வதம்
17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்
18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!
19. மதுரையை அடைதல்
20. அழகான கூனியும் கம்சவதமும்
21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-
22. ஜராசந்தனை ஜெயித்தல்
23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!
24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!
25. பலராமரின் மோகமும் கோபமும்
26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்
27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்
28. கல்யாணத்தில் சூதாட்டம்
29. நரகாசுர வதம்
30. பாரிஜாத அபஹரணம்
31. பதினாறாயிரத்து நூறு கன்னியர் விளக்கம்
32. உஷையின் கனவும் காதலும்
33. உஷையின் காதல் உறவும் பாணாசுரப் போராட்டமும்
34. காசி தகனம்
35. பலராமர் சாம்பனை மீட்ட கதை
36. குரங்கனைக் கொன்ற கதை
37. பகவான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளல்

———————-

1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்

மைத்ரேயர்! பராசர முனிவரை நோக்கி, குருவே! அரசர்களின் வம்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னீர்கள்! யது குலத்தில் சர்வ வியாபகனாகிய ஸ்ரீமந் நாராயணன், பரிச்சேதப்பட்டுக் காண்பதால் அமிசம் என்று சொல்லத்தக்கதாய் எந்த அவதாரத்தைச் செய்து அருள் புரிந்தானோ, அந்த கிருஷ்ண அவதாரத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாகக் கூறவேண்டுகிறேன். புரு÷ஷாத்தமனான பகவான், இந்தப் பூவுலகில் அம்சத்திலும் அம்சம் என்று எண்ணும்படியாக அவதரித்து என்னென்னவெல்லாம் செய்தருளினானோ, அவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்து கூறியருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார். பராசர முனிவர் அருள் கூர்ந்து சொல்லலானார்.
மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போலவே, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணாவதாரத்தையும் சரிதத்தையும் சொல்கிறேன். முன்பு தேவகனின் குமாரியாகவும் தேவ கன்னியருக்கு ஒப்பானவளுமான தேவகி என்பவளை வசுதேவர் திருமணஞ்செய்து கொண்டபோது மணப்பெண்ணின் சகோதரனான கம்சன், மணமக்களைக் கல்யாண ரதத்தில் ஏற்றித் தானே அந்தத் தேரை ஓட்டி ஊர்வலமாகச் சென்றான். அப்போது, ஆகாயத்தில் ஓர் அசரீரி கம்சனைத் தான் சொல்வதைக் கேட்கும் படி விளித்து, அட மூடா! நீ எந்தத் தங்கையை அவளது புருஷனோடு தேரில் ஏற்றிச் சென்று மிகவும் பிரியமாய் நடத்துகின்றாயோ, அந்தத் தங்கையின் எட்டாவது பிள்ளையே உன் உயிரை போக்கும்! என்று கம்பீரத்தொனியில் கூறியது. அதைக் கேட்டதும் கம்சன், தன் உடைவாளை உருவித் தன் தங்கை தேவகியை கொல்லத் துணிந்தான். அப்போது தேவகியின் புத்திளம் கணவரான வசுதேவர் தம் மைத்துனனான கம்சனை நோக்கி, நீ இந்த அபலையைக் கொல்ல வேண்டாம். இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் நான் உனக்குத் தந்துவிடுகிறேன், நீ அவர்களை உன் இஷ்டப்படிச் செய்து கொள்! என்றார். அதற்கு இளகிய கம்சன், அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டு தேவகியைக் கொல்லவில்லை. அந்தக் காலத்திலே பூமிதேவியானவள் பூபாரம் தாங்கமாட்டாமல், துன்பமடைந்து மகாமேரு பருவதத்தில் கூடிய தேவசபைக்குச் சென்று, பிரமதேவன் முதலிய தேவர்களை வணங்கி முறையிடலானாள்.
தேவர்களே! பொன்னுக்குப் பிதா அக்கினி! பசுக்களுக்குச் சூரியன் தந்தை! எனக்கும் சர்வ உலகங்களுக்கும் ஸ்ரீமந் நாராயணனே பிதா! பிரஜாபதிகளுக்கெல்லாம் பதியாகவும் முந்தியோருக்கு முந்தியவராயுமுள்ள நான்முகரும், கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய ரூபமோடுதோன்றாததான காலமும், ஆதித்தர், சாத்தியர், மருத்துக்கள், உருத்திரர், வசுக்கள், அசுவினி, தேவதைகள், அக்கினிகள், இயக்கர், அரக்கர், தைத்தியர், பைசாசர், நாகர், தானவர், கந்தர்வர் என்ற யாவருக்கும் அவ்வெம் பெருமானாகிய ஸ்ரீ விஷ்ணுவின் ரூபங்களல்லவா? ஆகாயமும், தீயும், தண்ணீரும், காற்றும், நானும், சப்தம் ஸ்பரிசம், கந்தம், ரூபம், ரசம் என்ற விஷயங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியே! இவையெல்லாம் கடலில் உண்டாகும். அலைகளைப் போல் ஒன்றோடொன்று பாதிப்பனவாகவும் பாதிக்கப்படுவனவாகவும் உள்ளன. இப்போது காலநேமி முதலான அசுரர்கள் பூவுலகில் பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்புறுத்துகிறார்கள். முன்பு விஷ்ணுவினால் சங்கரிக்கப்பட்ட காலநேமி என்பவன் இப்போது உக்கிரசேனன் மகனாக, கம்சன் என்ற பெயரோடு பிறந்து விட்டான். இதுபோலவே, அரிஷ்டன், தேனுகன், கேசி, பிரலம்பன்! நரகன்! சுந்தன், பாணன் முதலியவர்களும் அரச குலங்களில் பிறந்தும் கொடுமை செய்து திரிகிறார்கள். அவர்களை எண்ணக் கூட எனக்குச் சக்தியில்லை, தேவர்களே! முன்பு கொன்ற அரக்கப் பிறவியரின் சேனைகள் மிகவும் அதிகரித்திருப்பதால் என்னால் பூபாரச் சுமையையும் பாபிகளின் சுமையையும் சுமக்க முடியவில்லை. ஆகையால் நான் மிகவும் பலவீனமடைந்து பாதாளம் போய்ச் சேராதவாறு நீங்கள் தான் என்மீது அன்பு கூர்ந்து என் சுமையைக் குறைக்க வேண்டும்! என்று பூமிதேவி இறைஞ்சினாள். அப்போது பிருமதேவன் தேவர்களே: பூமிதேவி சொன்னவை உண்மை தான் நானும் உருத்திரனும் நீங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய சரீரங்களாகவே இருக்கிறோம். பகவானின் விபூதிகள் எவையுண்டோ. அவற்றின் உயர்வும் தாழ்வும் ஒன்றையொன்று பாதிப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன. ஆகையால் நாம் திருப்பாற் கடற்கரைக்குச் சென்று, ஸ்ரீயப்பதிக்குத் தண்டம் சமர்ப்பித்து, இவற்றையெல்லாம் விண்ணப்பம் செய்வோம். அப்படிச் செய்தால் சர்வஸ்வரூபியான பகவான் பூமி நிமித்தம் சாத்வீக அவதாரஞ் செய்து தருமத்தை நிலைநாட்டி அருள்வார்! என்று சொல்லி தேவர்களை அழைத்துக் கொண்டு திருப்பாற் கடற்கரையை அடைந்தார். அங்கே யோக நிஷ்டையிலிருந்த கருடத் துவஜனான மகாவிஷ்ணுவைத் தோத்திரஞ் செய்யலானார்.
சுவாமி! வேதங்களுக்கும் எட்டாதவனே! பிரம்ம விஷயமான, விவேகத்தால் உண்டாகும் ஞானமும் நீயே! சப்தப் பிரம்ம விஷயமான ஆகமத்தில் உண்டான பரமென்று அபரம் என்றும் சொல்லப்பட்டுள்ள இரு வித்தைகளும் நீயே! உபநிஷத்துக்களில் கூறப்படுபவைகளாய், ரூபப்பட்டதும் படாததுமாக இருக்கின்ற இரண்டுபிரமம் என்று சொல்லப்பட்ட பிரகிருதி புருஷங்களும் உனது ரூபங்களேயாகும்! ஸ்தூல சூஷ்மங்களுக்கு ஆன்மாவாக இருப்பவனே! சர்வ சொரூபியே! யாவும் அறிந்தவனே! ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் சிøக்ஷ, கல்பம், நிருத்தம், சந்தம், ஜோதிடம், வியாகரணம் என்ற வேதாங்கங்களுக்கும், இதிகாச புராணங்களும், தர்க்கம், மீமாம்சை, தர்ம சாஸ்திரம் என்பவைகளும் நீயே! ஓ அதோஷஜனே! கண் முதலியவற்றால் உணரக்கூடாததும், ஒன்றிற்குச் சமமானதாகக் காட்டக்கூடாததும், இப்படிப்பட்டதென்று மனத்தால் நினைக்கக்கூடாததும், தேவாதி நாமங்களும் சுக்லாதி வர்ணங்களும், கை கால் முதலிய அவயவங்களில்லாததும் கிலேச, கர்மாதிகளற்றவையுமான முக்தஸ்வரூபம் யாதுண்டோ அது நீயே! பரம சொரூபம் என்பதும் நீயே! நீ காதின்றிக் கேட்கிறாய்! கண் இல்லாமலே பார்க்கிறாய் ரூபமில்லாமலேயே இஷ்டமான அநேக ரூபங்களையெடுத்துக் கொள்கின்றாய்! ஒருவராலும் அறியப்படாமல் யாவற்றையும் அறிந்து கொள்கிறாய்? பரமாத்மாவே அணுவுக்கு அணுவாய் காணக்கூடாத சொரூபமுள்ளவனான உன்னைக் காண்பவனுக்கு அஞ்ஞான நிவர்த்தி அதிகப்படுகின்றது. இவ்விதமான உபாசகனுடைய புத்தியானது உனது மேன்மையான ரூபத்தையன்றி மற்றொன்றையும் கிரஹிப்பதில்லை. நீயே யாவற்றுக்கும் ஆதார பூதன் நீயே உலகங்களைக் காப்பவன். சகல பூதங்களும் உனக்குள் அடங்கியுள்ளன. உண்டானதும் உண்டாவதும் எதுவோ, அணுவுக்கும் அணுவாக இருப்பது எதுவோ, பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷன் எவனோ, இவையாவும் நீ ஒருவனேயன்றி வேறல்ல. எவன் ஒருவனாக இருந்தும் நால்வகைபட்டவனாகி, உலகிற்குத் தேஜஸையும் செல்வத்தையும் அளிக்கின்றானோ, அந்த அக்கினியும் நீயே! எல்லாப் புறங்களிலும் பார்வையுடையவனும் அளவில்லாத சொரூபமுடையவனுமான பகவானே! நீ திரிவிக்கிரம அவதாரஞ்செய்து மூவுலகங்களிலும் உன் திருவடியை வைத்தாய் சுவாமி! அக்கினியானது ஒன்றாக இருந்தும் ரூபம் மாறாமலே, அநேக வஸ்துக்களில் பற்றி அநேக ரூபமாய் விளங்குவதைப்போல், நீயும் எங்கும் வியாபித்த ஒரே சொரூபியாக இருந்தும் சகல சொரூபங்களிலேயும் பற்றியவற்றைப் பெருமையாக வளர்க்கிறாய் பிரகிருதி சம்பந்தமில்லாததும் ஒப்பற்றதும் ஒன்றேயாயுமுள்ள உனது மேன்மையான சொரூபம் யாதுண்டோ, ஞானத்தினாலேயே அறியத்தக்க அந்தச் சொரூபத்தை ஞானியரே காண்கின்றனர்.
முக்காலப் பொருள்களிலும் உன்னைவிட வேறானது ஒன்றும் இல்லை, காரணகாரிய ரூபங்களாய், சமஷ்டி வியஷ்டி என்று சொல்லப்பட்ட அவியக்தமும் வியக்தமுமான சொரூபமுடையவன் நீயே! சகல வியூகாதிகளுக்கும் காரணமாய் சமஷ்டி என்று சொல்லப்பட்ட வாசுதேவ மூர்த்தியாகவும் காரியமாய் வியஷ்டி என்று சொல்லப்பட்ட சங்கர்ஷண, அதிருத்த பிரத்தியும்ன மூர்த்தியாகவும் நீயே இருக்கிறாய்! யாவையும் அறிந்தவன் நீ; எல்லாவற்றிலும் பொருந்தியவன் – நீ எல்லாஞ் செய்யவல்ல சக்தி நீ! ஞான, பலாதிசய மேன்மையுடையவன் – நீ! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவன்-நீ! ஒருவர்க்கும் உள்ளடங்காமல் சுவாதீனமாக இருப்பவன் – நீ ஆதியந்த சூனியனாகவும் யாவற்றையும் தன் வசத்தில் கொண்டவனாகவும் நீயே இருக்கின்றாய்! வாட்டம், சோம்பல், அச்சம், குரோதம், காமம் முதலிய துர்க்குணங்களுடன் நீயே கூடாமல் இருக்கின்றாய்! எம்பெருமானே! நீ யாதொரு குற்றம் இல்லாதவனாகவும், உன் கிருபையின்றி அடையக் கூடாதவனாகவும், எந்தவோர் ஆதாரம் இல்லாதவனாகவும் நித்தியனாகவும் தடையற்ற உற்சாகமுடையவனாகவும் இருப்பவன் நீயே! யாவற்றுக்கும் ஈச்வரனாயும் முக்கிய ஆதாரமாயும் தேஜசுகளுக்குத் தேஜசாக இருப்பவன் நீ! பிரகிருதி முதலிய ஆவரணங்களாலும் கர்மங்களினாலும் மூடப்படாதவனே! வேறு உபாயம் இல்லாதவராலே பாவிக்கக் கூடியவனே! திரிபாத்விபூதியில் எழுந்தருளியிருப்பவனே! புரு÷ஷாத்தமா! உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் ஓ… ஸ்ரீயப்பதியே! நீ பலவிதமாய் செய்தருளும் அவதாரங்கள் யாவும் தருமத்தை நிலைப்பிக்கும் பொருட்டு, சுயேச்சையாலே உண்டாகின்றவையே தவிர, நரகானுபவஞ் செய்பவனின் துக்கானுபவத்திற்கும் அல்ல; சொர்க்கானுபவஞ் செய்பவரின் சுகானுபவத்திற்காகவும் அல்ல! பூமியில் உள்ளவர்களின் சுகதுக்க அனுபவத்திற்காகவோ, அல்லது தர்மாதர்களால் உண்டானவைகளோ அல்ல! என்று பிரமதேவர் துதித்தார்.
பிரம்மாவின் ஸ்தோத்திரத்தை ஸ்ரீயப்பதியானவர் திருவுளம் பற்றி மகிழ்ந்து, விஸ்வரூபங்காட்டி, நான்முகனே! தேவர்களுடன் சேர்ந்து எதை என்னிடத்தில் பெறவேண்டும் என்று நீ கருதினாயோ அதைச் சொல்வாயாக அது கிடைத்ததாகவே நினைப்பாயாக! என்று கூறியருளினார், அப்போது, பிரம்மா முதலிய தேவர்கள் சுவாமியின் விசுவரூபத்தைச் சேவித்தார்கள். மீண்டும் பிரம்மதேவர் எம்பெருமானைத் துதித்தார். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும் மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள் அதற்குச் செய்ய வேண்டியதெதுவோ அதனை நியமித்து அருள் செய்யவேண்டும்! என்று பிரம்மா பிரார்த்தித்தார். அப்போது எம்பெருமான் தமது திருமேனியினின்றும் வெண்மையும் கருமையுமான ரோமங்கள் போலக்காணப்பட்ட தேஜசுகளை எடுத்து, வானவரே! இந்த எனது தேஜசுகள் பூமியில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தால் உண்டான துன்பத்தை நீக்கும் இத்தேவர்களும் தங்கள் அம்சத்தாலே; பூமியிற் பிறந்து முன் பிறந்த துஷ்ட அசுரர்களோடு நமக்கு லீலாசாதனமாகப் போர் செய்யக் கடவார்கள்! இதனால் அசுர அமிசத்தோடு பிறந்தவர்கள் நாசமடைவார்கள். இப்போது தேவர்களுக்கும் அசாத்தியமான அசுரர்கள் யாவரும் பூமியில் அழியும் காலம் ஆகும். இப்போது வசுதேவருடைய பத்தினியான தேவகி என்பவளின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிக்கும் என்னுடைய தேஜசின் கடைக்கண் பார்வையிலே அசுரர்கள் பலவீனப்பட்டு சூர்ணமாவார்கள். இதை அறிவீர்களாக என் தேஜசு அவ்வாறு அவதரித்து, கம்சனாகப் பிறந்திருக்கும் காலநேமியைச் சங்கரிக்கும்! என்று நியமித்து ஸ்ரீபகவான் மறைந்தார். மைத்ரேயரே! இவ்வாறு கூறி மறைந்துபோன எம்பெருமானுக்குத் தண்டம் சமர்ப்பித்து, அமரர்கள் அனைவரும் மேருபர் வதத்தில் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, இப்படியிருக்கப் நியமனப்படி, பூமியில் அவதரித்தார்கள். இப்படியிருக்கப் பூமியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற சுவாமியானவர் தேவகியின் எட்டாங்கர்ப்பத்தில் அவதரிக்கப்போகிறார் என்பதை நாரதமுனிவர் வந்து கம்சனுக்குத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடனேயே, கம்சன் மிகவும் சினங்கொண்டு தேவகியையும் வசுதேவரையும் சிறையில் தள்ளிப் பலமான காவலும் போட்டு விட்டான்.
எம்பெருமானோ சகல லோகங்களையும் மோகிக்கத்தக்க யோக நித்திரை என்ற தமது மாயையைப் பார்த்து ஓ, மாயா! பாதாளத்தில் இருக்கிற இரண்ய கசிபுவின் குமாரர்கள் அறுவரையும் முறையே தேவகியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக. அந்த அறுவரும் சங்கரிக்கப்பட்டவுடன் எனது அம்சமாக இருக்கும் ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் பிறப்பான். வசுதேவனின் பத்தினியான ரோகிணி என்பவள் ஒருத்தி நந்தகோபனுடைய கோகுலத்தில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் இருக்கும் வாயுரூபமான ஏழு மாதத்திய கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தேவகியின் வயிற்றில் இருக்கும் சேஷ அம்சமான ஏழு மாதத்துக் கர்ப்பத்தைக் கொண்டுபோய், ரோகிணியின் கர்ப்பத்திற் சேர்த்துவிடு! அப்போது சிறைக்காவலில் இருக்கும் பலத்தால், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று உலகம் சொல்லிக் கொள்ளும். ரோகிணியின் கர்ப்பத்தில் அவதரிக்கும் அவர் வெள்ளிமலைச் சிகரம் போல விளங்கிய வண்ணம் கர்ப்பத்தினின்றும் இழுக்கப்பட்டதால் சங்கர்ஷணன் என்னும் பெயரைப் பெறுவார். உடனே நான் தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசிப்பேன் நீயும் உடனடியாக நந்தனுடைய பத்தினியையான யசோதையின் வயிற்றில் பிரவேசிக்கவேண்டும். கேள் பெண்ணே மழைக் காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி யிரவில் தேவகியிடம் நான் அவதரிப்பேன். நீயும், அந்த இரவிலேயே நவமியில் யசோதையிடம் ஜனிப்பாயாக. அப்போது என் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் வசுதேவன் என்னை யசோதையின் படுக்கையிலும் உன்னை தேவகியின் படுக்கையிலும் கொண்டுபோய் மாற்றி வைத்து விடுவான். உடனே, தேவகியின் தமையன் கம்சன் தன்னைக் கொல்லப்போகும் குழந்தையைக் கொல்ல வருவான். வந்ததும் உன்னைப் பிடித்துத் தூக்கி, பாறாங்கல்லின்மேல் போட்டு உன்னை வெட்ட முயற்சிப்பான்.
நீயோ வானத்தில் எழும்பி நிலை பெறுவாய். அப்போது ஆயிரக் கண்ணுடைய இந்திரன் என் மீதுள்ள பெருமையால், உனக்குத் தலை வணங்கிப் பிரணாமம் செய்து உன்னைத் தன்னுடன் பிறந்தவளாக ஏற்றுக்கொள்வான். நீயும் சும்ப நிசும்பாதி அரக்கர்களை வென்று சங்கரித்து, பெருமை பெற்று, விந்தியம் ஜாலந்தரம் முதலான யோக பீடங்களின் ஆலயங்களிலே ஆவிர்ப்பவித்து அந்தந்த ஸ்தானங்களால் பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்வாய் பூதி, சன்னதி க்ஷõந்தி காந்தி (தியௌ) எனப்பட்ட வானம், பூமி, திருதி, இலச்சை, புஷ்டி, உøக்ஷ முதலிய ஸ்திரீயம்சமானவையெல்லாம் உன் ஐஸ்வரியமாக விளங்கும். எவர் உன்னை ஆரியை என்றும் துர்க்கை என்றும் வேத கர்ப்பை என்றும் அம்பிகை, பத்திரைபத்திரகாளி ÷க்ஷமதை பாக்கியதை என்றும் உன் திருப்பெயர்களைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும் மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளையெல்லாம் என் அனுக்கிரகத்தால் தப்பாமல் கைக்கூடச் செய்வேன். மேலும் மது மாமிசாதிகளினாலும், இன்னும் பலவித உணவுகளினாலும் சூத்திராதிகள் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இஷ்டமான வரங்களைக் கொடுத்து வருவாயாக. இப்பொழுது நான் சொன்ன காரியங்களெல்லாம் என் அருளால் அப்படியே முடியும்! ஆகையால் நீ சந்தேகப்படாமல் போய் நடத்துவாயாக! என்று நியமித்தருளினார்.

—————–

2. தேவகியைத் தேவர் போற்றுதல்

இவ்வாறு எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோக நித்திரையான மாயையானது அசுர அம்சமுடைய ஆறு கர்ப்பங்களையும் தேவகியின் உதரத்திற் சேர்த்துவிட்டு, ஏழாங் கர்ப்பத்தையும் இழுத்துக் கொண்டுபோய் ரோகிணியின் உதரத்திற் சேர்த்துவிட்டாள். தந்தை வசுதேவரும் முன்பு தன் மைத்துனன் கம்சனுக்கு வாக்குத் தத்தம் செய்தபடியால் தம் மனைவி தேவகியிடம் ஜனித்த ஆறு குழந்தைகளையும் கம்சனிடம் கொடுத்தார். கம்சன் அவற்றை வாங்கி வெட்டிப்போட்டான் ரோகிணியின் வயிற்றில் ஏழாவது கர்ப்பஞ்சேர்ந்தவுடன் சகல லோக ரக்ஷணார்த்தமாக ஸ்ரீஹரிபகவான் தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். சுவாமியின் நியமனப்படி யோகநித்திரையும் யசோதையின் கர்ப்பத்தில் பிரவேசித்து, அவர் அவதரித்தத் தினத்திலேயே பிறந்தான். மகா விஷ்ணுவின் அம்சம் பூவுலகத்தில் சேர்ந்தவுடனே சூரியாதி கிரகங்கள் ஆகாயத்தில் விளக்கமாய்ச் சஞ்சரித்தன. வசந்தாதி ருதுக்களும் நன்றாக விளங்கின. மிகுந்த தேஜசினால் சூழப்பட்ட தேவகியைக் கண்களால் காண யாவரும் சக்தியற்றிருந்தார்கள். ஸ்ரீபகவானைத் தரிசித்து மேலான தேஜஸோடு விளங்கிய தேவகியை தேவதைகள் அங்கிருந்த புருஷர்களும் ஸ்திரீகளும் காணாதவாறு துதித்தனர்.
எப்படியெனில் ஓ, தேவகித் தாயே! நீ பூர்வகத்தில் மகத்துவத்தைக் கருப்பத்திற்கொண்டிருந்த சூக்ஷ்மப் பிரகிருதியாக இருக்கிறாய்! பிறகு சகல வேதங்களையும் கர்ப்பத்தினுடைய பிரணவ ரூபமான லோகநாதனுடைய சூக்தியாக இருக்கிறாய். படைக்கப்படும் சொரூபங்களை கர்ப்பத்தினுடைய சிருஷ்டியாயும், யாவற்றுக்கும் காரணமாய் யக்ஞங்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும் வேதமாகவும், பயனைக் கருக்கொண்டுள்ள பூஜையாயும், அக்கினியைக் கருக்கொண்ட அரணியாயும் தேவதைகளைக் கருவில் தரித்த அதிதியாயும், அசுரரைக் கர்ப்பத்தில் தரித்த தீதீயாயும், பகலைக் கருப்பத்தில் உடைய பின் மாலையாயும் ஞானத்தையுள்ளே கொண்டுள்ள பெரியோர்களின் பணி விடையாயும், நியாயத்தை உட்கொண்ட நீதியாயும், வணக்கத்தையுடைய லஜ்ஜையாயும், ஆசைப்படத்தக்க, பொருளை உட்கொண்டுள்ள ஆசையாயும், சந்தோஷத்தை உள் வைத்திருக்கிற திருப்தியாயும், அறிவை உட்கொண்டுள்ள புத்தியாயும், சஞ்சலமின்மையை உள்ளே தரித்திருக்கும் புத்தி நிலையாயும், கிரக நட்சத்திராதிகளையுள்ளே பொதிந்து கொண்டுள்ள ஆகாசமாகவும் இருக்கிறாய்! சகலமும் உன்னுள்ளே இருக்கின்றன! நீயே சுவாகை; சுவதை! நீயே வித்தை, நீயே சுதை! நீ ஆகாயத்தில் இருக்கும் அதிதி என்ற ஜோதியல்லவா? சகல லோக ரக்ஷண்யத்துக்காகப் பூமியில் அவதரித்தாய். தாயே! நீ அடியேங்களிடத்தில் அனுக்கிரகமுடையவளாய் உலகுக்கு நன்மை செய்தருள வேண்டும். மேலும் சகலலோகங்களையும் தரித்திருக்கும் எம்பெருமானை நீ உவப்போடுதரிக்க வேண்டும்.

———————-
3. கிருஷ்ணாவதாரம்

தேவர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவகியானவள்; தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானை உலக ரக்ஷணைக்காகத் தன் கர்ப்பத்தில் தரித்திருந்தாள். பிறகு முன்பே சங்கல்பித்த விதமாக ஆவணி மாதத்தில், அமர பக்ஷத்தில், அஷ்டமி கூடிய ரோகிணியில் இரவில் உலகங்களாகிய தாமரைகள் யாவும் மலரும் பொருட்டு, சிறையிலுள்ள தேவகியிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய- சூரியன் உதித்தருளினான். சுவாமி அவதரித்தருளிய நாளானது சகல திசைகளும் நிர்மலமாகப் பெற்றதாய் சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. சுவாமி அவதரித்தருளியதால் சத்புருஷர்கள் மகிழ்ந்தனர். உக்கிரமான காற்றுகள் தணிந்தன, நதிகள் தெளிந்தன, கந்தர்வர் பாடினர். அரம்பையர் ஆடினர். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் கருநெய்தல் பூப்போன்ற திருமேனியும் நான்கு திருத்தோளும் லச்சம் என்ற மறுப்பொருந்திய திருமார்புமாக அவதரித்த ஸ்ரீயப்பதியைவசுதேவர் சேவித்தார். பிறகு கம்சனைப்பற்றிய அச்சத்தால் சுவாமி! தேவதேவாதிபதியே! அடியேனது பாக்கியவசத்தால் இங்கு அவதரித்தருளினீர்கள் ஆயினும் திருவாழி, திருச்சங்கு முதலிய திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை அடியேனிடத்தில் அனுக்கிரகத்தினாலே, மறைத்தருள வேண்டும் ஏனெனில், இந்த மாளிகையில் தேவரீர் இப்படி அவதரித்ததை அறிந்தால் கம்சன் உடனே வந்து எங்களைக் கொல்வான். ஆகையால் இந்த ஸ்வரூபத்தை மறைத்துக்கொள்ளவேண்டும் என்று வசுதேவர் விண்ணப்பஞ் செய்தார். உடனே தேவகியும் பிரார்த்திக்கலானாள். சுவாமி! முடிவில்லாத சொரூபத்தை யுடையவராகவும், சகலலோகங்களையும் ரூபமாகக் கொண்டவராகவும், என் கர்ப்பத்தில் இருக்கும்போது சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவராகவும் விளங்கும். நீங்கள் இம்மாயை என்கின்ற ஆச்சரியச்சக்தியினாலே பாலகனாய் அவதரித்தருளினீர்கள்! அடியாளுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்! என் தமையனான கம்சன் ஈவிரக்கமற்ற அசுரன், ஆதலால் அவனறியாதவண்ணம் நான்கு திருத்தோள் முதலிய லக்ஷணங்களுள்ள இந்தச் சொரூபத்தை மறைத்தருள வேண்டும், என்று தேவகியும் பிரார்த்தித்தாள். அவளை பகவான், பார்த்து, நீ பூர்வத்தில் புத்திரன் வேண்டும் என்று துதித்ததையே அதற்குப் பயனாக நான் உன் வயிற்றில் பிறந்து காட்டினேன், என்று கூறி அந்த ஸ்வரூபத்தை விட்டுச் சாதாரண பாலன் வடிவில் தோற்றமளித்தார்.
அதன் பிறகு வசுதேவர் தம்முடைய சிறைச்சாலையிலிருந்து அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். சிறைக் காவலாட்களெல்லாம் யோக நித்திரையால் மதிமயங்கிச் சும்மாயிருந்தார்கள். அப்படியே, அந்த மதுரா பட்டணத்து வாயிற்காப்போரும் மயங்கிக் கிடந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் போகும்பொழுது உண்டான மழையை திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால் தடுத்துக் கொண்டே கூட எழுந்தருளினான். அப்பொழுது சுழிந்து ஓடுகின்ற ஆழமான தண்ணீருள்ள யமுனா நதியும் குழந்தையான பகவானைத் தூக்கிச்செல்லும் வசுதேவருக்கு முழங்காலளவாக இருந்தது. அந்த யமுனைக் கரையில் கம்சனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த நந்தகோபர் முதலியோரை வசுதேவர் பார்த்தார். அந்தக் காலத்தில் நந்தருடைய பத்தினியாகிய யசோதையும் யோக நித்திரையின் அம்சமான ஒரு பெண்ணைப் பெற்றும், அந்த யோக நித்திரையால் மயக்கமுற்றுப் பிறந்த குழந்தை இன்ன குழந்தை என்று அறியாமல் இருந்தாள். அங்கிருந்த அனைவரும் அப்படியே மயங்கியிருந்தார்கள். ஆகையால், வசுதேவர் அங்கு தடையின்றிச் சென்று தமது பாலகனை யசோதையின் படுக்கையில் விட்டு, அவளது பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு தம்முடைய சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.
பிறகு யசோதையானவள், மயக்கந் தெளிந்து, தன் அருகில் இருக்கும் ஆண் குழந்தையைக் கண்டு, தனக்கு மகன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ந்தாள். மதுரையில் சிறைச்சாலைக்குத் திரும்பிவந்த வசுதேவரோ தாம் தூக்கிவந்த யசோதையின் பெண்குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடன், அது அழத் துவங்கியது. அதன் குரல் ஓசையைக் கேட்ட சிறைக் காவலர்கள் எழுந்தோடி தேவகிக்குப் பிள்ளை பிறந்தது என்று கம்சனுக்கு அறிவித்தார்கள். உடனே, கம்சனும் குரோத வெறியோடும் கொலை வெறியோடும் பரபரப்பாக ஓடிவந்தான். தேவகி துடிதுடித்து கம்சனை நோக்கி, அண்ணா! இது பெண் குழந்தையாயிற்றே! இதனால் உனக்கென்ன தீமை வரும்? ஒன்றும் வராது! இதையாவது விட்டுவிடு! கொன்றுவிடாதே! என்று கதறியழுதாள். ஆனால் தங்கை எவ்வளவுதான் அழுது கெஞ்சியும் கம்சன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி ஒரு பாறாங்கல்லின்மேல் போட்டு, வெட்டமுயன்றான். ஆனால் கல்லின் மேல் போட்டவுடனேயே பெண் குழந்தை எழும்பி வானத்திற்குப் பறந்துசென்று, ஆயுதங்களுடன் கூடிய எட்டுக் கைகளோடு ஒரு ரூபமெடுத்து வான வெளியில் நின்று, உரத்த குரலில் கோபத்துடன் சிரித்து கம்சனை நோக்கி, அடா மூடா! என்னைக் கல்லின் மேல் எறிந்து கொல்வதால் உனக்குப் பயன் என்ன? உன்னைக் கொல்பவன் பிறந்துவிட்டான். அவன் யாரென்று கேட்கிறாயா? அவன் சகல தேவதைகளுக்கும் சகல பாக்கியம் போன்ற மேன்மையாளன். அவன் தான் உன் முற்பிறப்பிலும் உனக்குப் பகைவன், இதை நீ அறிந்து, உனக்கு நன்மை எதுவோ அதைச் செய்துகொள்! என்று சொல்லிவிட்டு, சித்தர் முதலான தேவகணங்களால் பூஜிக்கப்பட்டு, கம்சனது கண்ணெதிரிலேயே ஆகாயமார்க்கமாகப் போய் மறைந்துவிட்டாள்.

—————–

4. கம்சனின் கட்டளை-

தன்னைக் கொல்ல ஒருவன் பிறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் கம்சனுக்குத் திகில் பிடித்தது. அவன் உடனே பிரலம்பன், கேசி முதலிய மகா அசுரர்களை அழைத்து, பெரும் புஜங்களைக் கொண்ட பிரலம்பனே; கேசியே தேனுகனே; அரிஷ்டனே! நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேளுங்கள். துராத்மாக்களான தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆயினும் என் பராக்கிரம அக்கினியில் வெந்திருக்கும் அவர்களை மகா வீரனாகிய நான் லக்ஷ்யம் செய்யவில்லை ஏனென்றால் தேவர்களில் தேவேந்திரனோ அற்ப வீரன்! சிவனோ தவசி! சோர்வுற்ற சமயந்தேடி அசுரரைக் கொல்லும் சூரனான விஷ்ணு தான் என்னை என்ன செய்யமுடியும்? இவர்களே இப்படியானால் இவர்களைவிடக் குறைந்த பலமுடைய ஆதித்தன், வசுக்கள் முதலியவர்களால் என்ன சாதிக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தாலும் என்ன செய்ய முடியும்? இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்; கேளுங்கள். முன்பு ஒரு சமயம் தேவர்களோடு நான் போர் செய்தபோது, அவர்களுடைய தலைவனாகிய இந்திரன், நான் எய்த அம்புகளில் ஒன்றையாகிலும் தனது மார்பினால் தாங்கமாட்டாமல், முதுகினால் தாங்கிக் கொண்டு ஓடி ஒளிந்தான்! அதை நீங்கள் அறிவீர்கள். இந்திரன் என் ராஜ்யத்தில் மழை பெய்யாமல் நிறுத்தியபோது, நான் என் பாணங்களால் மேகங்களைப் பிளந்து மழையைப் பெய்வித்தேன். இது உங்களுக்குத் தெரியாதா? என் மாமன் ஜராசந்த மகாராசனைத் தவிர, மற்றெந்த அரசர்கள் தான் எனது புஜ பலத்திற்குப் பயந்து வணங்காமல் இருக்கிறார்கள்? ஆகவே இந்தத் தேவர்கள் எனக்கு அலட்சியமாகத் தோன்றுகிறார்கள். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். அந்தப் பகைவர்களானத் தேவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அபகாரம் என்ன தெரியுமா? பூமியில் விசேஷதான சீலராகவும் யாக சீலராயும் இருப்பவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்களையெல்லாம் நாம் துன்புறுத்தி வதைக்கவேண்டும். அவ்வாறு நாம் செய்தால், விருத்தியில்லாமையால் தேவர்கள் தாமே அழிந்து போவார்கள். அசுரர்களே! இன்னும் ஒன்று சொல்கிறேன். தேவகியின் வயிற்றில் பிறந்த பெண், உனக்கு யமன், முன்னமே பிறந்துவிட்டான்? என்று சொல்லியிருக்கிறதல்லவா? ஆகையால் இந்தப் பூமியில் பிறந்திருக்கிற பாலகர் விஷயத்திலும் நாம் எத்தனஞ் செய்ய வேண்டும், அதாவது, எந்தப் பாலகனிடத்திலே விசேஷமான பலமும் சாமர்த்தியமும் காணப்படுகிறதோ; அந்தப் பாலனைத் கண்டுபிடித்து எப்படியாகிலும் அவனைக் கொன்றுவிட வேண்டும்! என்று கட்டளையிட்டுவிட்டுத் தன் அரண்மனை சென்றான்.
பிறகு அவன் தங்கை தேவகியையும் மைத்துனன் வசுதேவரையும் சிறைக் காவலிலிருந்து விடுதலை செய்து, அவர்களை நோக்கி, உங்களுடைய குழந்தைகளையெல்லாம் நான் வீணாகக் கொன்றேன். கடைசியில் எனக்கும் எமனாக எவனோ ஒருவன் எப்படியோ பிறந்து எங்கோ இருக்கிறான்! உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் போய்விட்டதே என்று நீங்கள் வருந்த வேண்டாம். குழந்தைகள் அப்படிச் சாகவேண்டும் என்று விதியிருந்து அதன்படியே நடந்தது! மேலும் உங்களுடைய பாப பயனாகவும் அக்குழந்தைகள் கொல்லப்பட்டன! என்று சமாதானம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்து, அச்சத்துடன் தன் தனிமாளிகைக்குச் சென்றான்.

——————

5. பூதகியின் வதம்

இவ்வாறு, கம்சனால் விடுதலை செய்யப்பட்ட வசுதேவர் விரைந்து சென்று இடையர் குலத்தலைவரான நந்தகோபனுடைய வண்டி வீட்டை அடைந்தார். தனக்குப் புத்திரன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நந்தகோபனை அவர் சந்தித்து, நந்தகோபா! பகவத் சங்கல்பத்தால் உமக்குப் புத்திர சந்தானம் உண்டாயிற்றே? அது பாக்கியம், மஹா பாக்கியம்! உமக்கு இந்த வார்த்திகத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பலரின் கண்ணேறு படத்தக்கது. நீங்கள் அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் எல்லாம் செலுத்திவிட்டீர்கள் அல்லவா? இனி மேல் நீங்கள் இங்கிருப்பது நல்லதல்ல. ஏனெனில் பொருள் உள்ளவர்கள் துஷ்டஅரசர்களின் அருகே இருப்பது எப்போதும் அபாயமேயாகும்! ஆகையால் நீங்கள் வந்த காரியம் முடிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கு தாமதிக்காமல் உடனடியாக உங்களுடைய கோகுலத்திற்குப் போய்ச் சேருங்கள். எனக்கு ரோகிணியின் வயிற்றில் பிறந்த குழந்தை ஒன்று அங்கே இருக்கிறது. அதை உங்கள் பிள்ளையைப் போலவே நீங்கள் பாதுகாத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தம் இருப்பிடம் சென்றார். நந்தகோபர் தம் கூட்டத்துடன் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தார்.
இதற்கிடையே அரக்கன் கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி ஒருத்தி நல்லதொரு பெண் உருவமெடுத்து, இரவிலே ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்துக் கொன்றுகொண்டே, கோகுலத்துக்கு வந்து நந்தகோபனின் மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த யசோதையின் குழந்தையான பாலகிருஷ்ணனை எடுத்து முலைப்பாலூட்டினாள். அவள் எந்தெந்தக் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவாளோ அந்தக் குழந்தைகள் உடனே ரத்த மாமிசமெல்லாம் சுண்டிப்போய் மரணமடையும் ஆனால் கிருஷ்ண பகவானான இந்தக் குழந்தையோ அந்த அரக்கியின் முலைகளைத் தன் கைகளாலே இறுகப்பிடித்து, பாலை அவளோடு உயிரோடு சேர்த்து உறிஞ்சியது. அவ்வாறு உறிஞ்சியவுடன், பூதகி தன் சுபாவமான உரத்தக் குரலில் பேரிரைச்சலிட்டுக் கதறியழுது, சுய ரூபத்தோடு தரையில் விழுந்து இறந்தாள். அந்த இரைச்சலைக் கேட்டு இடையர்கள் அனைவரும் திகைத்து எழுந்து, அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கு அந்தப் பூத அரக்கியின் மடியில் குழந்தை இருப்பதையும் அரக்கி செத்துக் கிடப்பதையும் கண்டார்கள். யசோதையும் பரபரப்போடு ஓடிவந்து குழந்தையை எடுத்துப் பசுவின் வாலைச் சுற்றி, அந்தப் பூதகியால் உண்டான பாலதோஷத்தைப் போக்கினாள். நந்தகோபரும் அங்கு வந்து, குழந்தையை வாரியெடுத்து கோமய சூரணத்தை அதன் உச்சந்தலையில் காப்பாக வைத்தார். என் அருமைக் குழந்தையே! எவனுடைய நாபீ கமலத்தினின்றும் இந்த உலகங்கள் யாவும் உண்டாயிற்றோ, அத்தகைய சகல உற்பத்திக்கும் காரண பூதனான, ஸ்ரீ ஹரி பகவான் உன்னைக் காப்பானாக! எவனது வராகக் கொம்பின் நுனியில் இந்தப் பூமியானது தாங்கப்பட்டு, சகல பிரபஞ்சத்தையும் தரித்திருக்கின்றதோ, அந்த மகாவராக ரூபமுள்ள பகைவரின் மார்பைப் பிளந்த அந்த நரசிம்ம ரூபியான ஜனார்த்தனன் எங்கும் உன்னைக் காப்பானாக! முன்பு சின்னஞ்சிறு வாமன உருவமாக இருந்து, ஒரு கணத்திலே மூவடி மூன்று காலடிகளினால் முறையே மூன்று உலகங்களையும் அளந்து ஆக்கிரமித்து, திருக்கைகளிலே அநேக திவ்ய ஆயுதங்களுடன் பிரகாசிக்கும் பகவான் உன்னை எப்போதும் பாதுகாப்பானாக உன் சிரசைக் கோவிந்தன் காக்க உன் கண்டத்தைக் கேசவன் காக்க, உன் குறியுட்பட்ட வயிற்றின் இடத்தையெல்லாம் ஸ்ரீவிஷ்ணு காக்க முழந்தாள், பாதங்கள் இவற்றை ஜனார்த்தனான் காக்க; முகத்தையும் கரங்களையும் அவற்றின் கீழ்புறங்களையும் மனத்தையும் மற்றுமுள்ள புலன்களையும் ஸ்ரீமந்நாராயணன் காக்கட்டும்! உனக்குப் பகைவராயுள்ள பிரேத கூசுமாண்ட ராக்ஷசாதிகள் சங்கு சக்கரம் கதை முதலிய திவ்விய ஆயுதங்களைத் திருக்கைகளில் ஏந்திய எம்பெருமானின் திருச்சங்கின் ஓசையினால் அதஞ் செய்யப்பட்டு, நாசமாவார்களாக! வைகுண்டநாதன் திசைகளிலே உன்னைப் பாதுகாப்பானாக! மூலைகளில் மதுசூதனன் காப்பானாக வானத்தில் ரிஷிகேசன் ரட்சிப்பானாக பூமியிலே தரணிதரன் காப்பானாக! என்று கூறி நந்தகோபர் தம் குழந்தைகளுக்கு சாந்திக் கிரியைகளைச் செய்தார். பிறகு, குழந்தையைச் சகட்டின் கீழ்ப்புறத்தில் தொட்டிலில் வளர்த்தினார் அங்கு விழுந்து கிடக்கும் பூத அரக்கியின் பெருத்த பயங்கர உடலைக் கண்டு அங்கு வந்த இடையர் அனைவரும் பயந்து, திகைத்து வியந்தார்கள்.

——————-

6. சகடயமளார்ச்சுன பங்கம்-

சகட்டின் கீழ்ப்புறத்தில் குழந்தையான கிருஷ்ண பகவான் பள்ளிகொண்டிருந்தபோது ஒரு நாள் அச்சகட்டில் அசுரன் ஒருவன் வந்து அவேசித்தான். அதையறிந்த கண்ணன் முலைப் பாலுக்கு அழுகின்ற பாவனையால், சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தான் அந்தத் திருவடிகளால் உதைபட்ட மாத்திரத்திலே சகடானது திருப்பப்பட்டு அதன் மேலிருந்த கும்பம் முதலானவைகள் உடையக் கீழே விழுந்தது. உடனே இடையர் இடைச்சியர் அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கே மல்லாந்து படுத்திருக்கும் குழந்தையையும் கீழே விழுந்து கிடந்த சகட்டையும் பார்த்து திடுக்கிட்டு யார் இந்தச் சகட்டை இப்படித் திருப்பியது? என்று கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த சிறுவர்கள் இந்தக் குழந்தைதான் அழுது கொண்டே காலைத் தூக்கியது. அதன் தாக்குதலில் இந்தச் சகடு திரும்பிக் கீழே விழுந்தது. நாங்கள் அதை எங்கள் கண்களாலேயே கண்டோம்! என்றார்கள்.
அதைக்கேட்ட யாதவர்கள் ஆச்சரியமடைந்தனர். நந்தகோபரும் வியப்போடு குழந்தையை எடுத்துக் கொண்டார். யசோதையும் சகட்டின் மேலேயிருந்து கீழே விழுந்து உடைந்த பாண்டங்களின் ஓடுகளையும் அந்தச் சகட்டையும் தயிர், மலர், அட்சதை முதலியவற்றால் பூஜித்தார்கள். வசுதேவர், கர்க்கர் என்ற தமது புரோகிதரை அழைத்து வரச் செய்தார். மகாஞானியான அம்மாமுனிவர் வந்ததும் கோகுலத்தில் யாருக்கும் தெரியாத ஏகாந்தமான ஓர் இடத்தில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகருமம் முதலிய சடங்குகளைச் செய்து ரோகிணி வயிற்றில் பிறந்த மூத்த குழந்தைக்கு ராமன் (பலராமன்) என்றும் யசோதையின் குழந்தைக்குக் கிருஷ்ணன் என்றும் திருப்பெயர் சூட்டினார்கள். மைத்ரேயரே! பிறகு அந்த இரண்டு பாலகரும் முழங்கால்களையும் கைகளையும் ஊன்றித் தவழ்ந்து விளையாடிக் கொண்டே வரும்போது கோமயம், சாம்பல் இவற்றைத் தங்கள் திருமேனியில் பூசிக்கொண்டும், ஒரு கணமாவது ஓரிடத்திலும் நிற்காமல், மாட்டுத் தொழுவிலிருந்து கன்றுத் தொழுவிற்கும், கன்றுத் தொழுவிலிருந்து மாட்டுத் தொழுவிற்கும் ஓடுவதும்; பசுவின் வால், கன்றின் வால் இவற்றை இழுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பாலகரின் விளையாட்டுக் குறும்புத் தனங்களைத் தடைப்படுத்த ரோகிணியாலும் யசோதையாலும் முடியவில்லை. இப்படி யாராலும் தடுக்கக் கூடாமல் இருந்ததால் யசோதையானவள் பாலகிருஷ்ணனின் இடுப்பிலே ஒரு கயிற்றைக் கட்டி, ஓர் உரலிலே அக்கயிற்றைப் பிணைத்து வைத்துவிட்டு குழந்தையை நோக்கி குறும்புக்காரனே! மிகச் சஞ்சலமான சேஷ்டைகளையெல்லாம் செய்யும் விஷமக்காரனே! இனிமேல் ஓடு பார்ப்போம்! என்று சொல்லிவிட்டு தனது வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.
அவ்வாறு வேறு வேலைகளில் தாய் ஈடுபட்டிருக்கும்போது குழந்தை கண்ணன் அந்த உரலை இழுத்துக் கொண்டு, அங்கேயிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே புகுந்தான். அப்போது அந்த உரல் மரத்தின் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டதால், அநேக பெருங் கிளைகளோடு கூடிய அந்த, மருத மரம்முறிந்து விழுந்தது. அது விழும்போது உண்டாகிய கடகடா என்ற பெரும் சப்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். பெரிய மரம் ஒன்று இரு பிளவாக முறிந்து விழுந்திருப்பதையும் அவற்றின் இடையே, குழந்தை கிருஷ்ணன் உரலோடு கட்டுண்ட நிலையில் தவழ்வதையும் புதிதாய் முளைத்த சிறு பற்களின் வெண்மையொளி வீசப் புன்னகை செய்வதையும் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு நின்றார்கள். இதனால் சுவாமிக்குத் தாமோதரன் என்ற திருநாமம் உண்டாயிற்று. பிறகு, நந்தகோபர் முதலியவர்கள் இத்தகைய உற்பாதங்களைக் கண்டு பயந்து திகிலடைந்து ஆலோசிக்கத் துவங்கினார்கள். பூதகி வந்து பாலூட்டிச் செத்ததும், சகடு மாறி விழுந்ததும், புயற்காற்று முதலிய உபத்திரவங்கள் இல்லாதிருக்கும்போதே பெரிய மருத மரம் முறிந்து விழுந்ததும் போன்ற உற்பாதங்கள் அநேகம் காணப்படுகின்றன. ஆகையால் நாம் இந்த இடத்தை விட்டு வேற்றிடத்துக்கு உடனே சென்றாக வேண்டும். அப்படிச் செய்யாமற் போனால் இத்தகைய பூமி சம்பந்தப்பட்ட மகோத் பாதங்களில் நமது ஆயர்சேரிக்கே தீங்குகள் ஏற்படக்கூடும். ஆகையால் நாம்இதைவிட்டுப் போகவேண்டும் என்று ஆலோசித்து நந்தகோபர் தம் கூட்டத்தினருக்குக் கட்டளையிட்டார். அந்தந்தத் தலைவர்கள் அவரவரது கூட்டத்தினரை நோக்கி, சீக்கிரம் பிரயாணத்துக்குத் தயார் ஆகுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு அந்தந்தக் கூட்டத்தார், அவரவரது வண்டிகளின்மேல் சாமக் கிரியைகளைப் போட்டுக்கொண்டு புறப்பட்டார்கள். மாடு மேய்ப்போர் மாடுகளையும் கன்று மேய்ப்போர் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு பிருந்தாவனம் என்னும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு பிருகத்வனமானது நெல் சோறு தயிர் முதலியவை சிந்தப் பெற்று, காக்கை முதலிய குரூரப் பறவைகள் நிறைந்ததாய் விகாரமாகப் பட்டுப் போயிற்று அவர்கள் புதிதாய்ப் புகுந்த பிருந்தாவனமோ நற்செயல் புரியவல்ல கண்ணனால், புதுப் பொலிவு பெற்றது. பசுக்கள் விருத்தியடைந்து செழிக்கும் வண்ணம் கண்ணன் குளிர்ந்த திருவுள்ளத்தோடு அருள்புரிந்ததால் மிகவும் கொடிய கோடையிலும் மழைக் காலத்தில் உண்டாவது போன்ற இளம் புற்கள் செழிப்புற வளரப்பெற்றிருந்தது. ஆயர்கள் எல்லாம் அந்தப் பிருந்தாவனத்தில் அரைச்சந்திர வடிவில் குடியிருப்புகளை அமைத்து அதன் ஓரமெல்லாம் வண்டிகளை நிறுத்தும் இடம் உண்டாக்கிக் கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.
சிறிது காலம் சென்றது. பலராமன் பால கிருஷ்ணன் இருவரும் கன்று மேய்க்கும் பருவத்தை அடைந்து காக பக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அக்கினி குமாரர்களான சாகன் விசாகன் என்பவர்களைப் போல் விளக்கமுற்று மயிற் பீலியை முடியிலும் காட்டு மலர்களைக் காதிலும் அணிந்துகொண்டும் இடையருக்கு உரிய புல்லாங் குழல்களினாலும் இலைகளினாலும் பல வாத்திய ஓசைகளை எழுப்பிக் கொண்டும், கைகொட்டியும் சிரித்தும் ஓடியும் ஒருவரையொருவர் சுமந்தும் கன்றுகளைமேய்த்தும் ஒருவரோ டொருவர் இணைபிரியாமல் ஓரிடத்திலேயே விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். மைத்ரேயரே இந்த மாயா லீலையைப் பார்த்தீரா சகல லோகங்களையும் காப்பவர் கன்று காலிகளைக் காப்பவரானார். இவ்வாறு அவர்கள் விளையாடித் திரிந்து வரும்போது மேகக் கூட்டங்களினால் வானம் முழுதும் மறைத்துக் கொண்டு, நீர்த்தாரைகளினால் திசைகளையெல்லாம் ஒன்றாக்குவதைப் போல் மழைக்காலம் வந்தது. அந்த மழைக் காலத்தில் புதிய புற்கள் நிறைய முளைத்திருந்ததாலும், அதன் மேல் ஆங்காங்கே தம் பலப் பூச்சிகள் வியாபித்திருந்தாலும் பூமியானது பச்சைக்கல்லினால் செய்யப்பட்டு இடையிடையே பதுமராகம் இழைத்தது போல் இருந்தது. புதிதாய்ச் செல்வம் அடைந்த காலத்தில் அடக்கமும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் மனங்கள் எப்படி யாகுமோ அதுபோல் அந்தக் காலத்தில் தண்ணீரானது வழி முறைகளை நோக்காமல் இசைந்தவாறெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. விவேகமில்லாத அரசனின் ஆசிரிய பலத்தினால் குணஹீனனான ஒருவன் ஒரு பெரும் பதவியில் நிலைபெற்றது போல குணஹீனமான இந்திர வில் ஆகாயத்தில் நிலைபெற்று இருந்தது. வான மேகங்களுக்குக் கீழே நிர் மலமான நாரைகளின் வரிசையானது அபகாரம் செய்தல் முதலிய தீயஒழுக்க முடையவனிடத்திலும் நற்குலத்தான் செய்யும் நற்செய்கையைப் போல் மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. உத்தமனிடத்திலே கெட்டவன் நட்புக் கொள்வது போல் வானத்தில் மின்னலானது தோன்றி மறைந்து நிலையற்றிருந்தது மிகவும் மூடர்கள் தாம் நினைத்த கருத்து விளங்கும்படிப் பேசத் தெரியாமல் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசும் பேச்சுக்கள் வேறு பொருளைக் காட்டி விளங்காமற் போவது போல் அக்காலத்தில் புல் பூண்டுகள் முதலிய வற்றால் பாதைகள் மூடப்பட்டு விளங்காமலிருந்தன. அத்தகைய இடத்தில் மயில்களும் மான்களும் நிறைந்திருந்தன. அங்கு ராமன் கிருஷ்ணன் இருவரும் காட்டில் இடைப் பிள்ளைகளுடன் கூடி மிகவும் மகிழ்ச்சியாகச் சஞ்சரித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு அவர்கள் நடத்திய திருவிளையாடலைக் கேளும்.
அவர்கள் ஓரிடத்தில் பசுக்களுடன் கானம் பாடிக்கொண்டும் ஓரிடத்தில் மிகவும் குளிர்ச்சியான மரநிழல்களில் உலவிக் கொண்டு மிருந்தார்கள் ஓரிடத்தில் கடப்பம் பூமாலைகளையும் மயில் தோகை மாலைகளையும் சாத்திக்கொண்டு, பலநிற மலைத்துகள்களை திருமேனியிற் பூசிக்கொண்டு ஆடினார்கள். மற்றோர் இடத்தில் தழைகளினால் படுக்கை போட்டு, அதில் படுத்து கண் அயர்ந்திருந்தார்கள். இன்னுமோரிடத்தில் சிறுவர்களுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் மயில்கள் கூவுவதைக் கேட்டு, அவை போலத்தங்கள் குழல்களையும் ஊதினார்கள். இவ்வளவு அநேகவிதமான பாவனைகளான திருவிளையாடல்களினால் ராமகிருஷ்ணர்களான அண்ணன் தம்பி இருவரும் மிகவும் நேசத்தோடும் மகிழ்ச்சியோடும் பிறரை மகிழ்வித்துத் தாமும்மகிழ்ந்து வந்தார்கள். இரவிலுங்கூடச்சிறிது நேரம்பசுக்களோடும் இடையச் சிறுவரோடும் விளையாடிவிட்டுத் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்வார்கள். மைத்ரேயரே! இவ்வாறு அக்குமாரர்கள் இருவரும், காந்தி, பலம் முதலியவற்றில் தேவாமிசம் தோன்றும்படி, நந்தகோபனது திருமாளிகையில் வளர்ந்து வந்தார்கள்.

————–

7. காளிய மர்த்தனம்-

ஒருநாள் கிருஷ்ணன் தன் அண்ணனான பலராமனை விட்டுத் தனியாகக் காட்டுக்குச் சென்று, அங்கிருந்த இடைப் பிள்ளைகளுடன் காட்டு மலர்களை அணிந்து உலாவிக்கொண்டிருந்தான். அப்போது பேரலைகளோடு பெருகிவரும், யமுனை நதியின் அருகே வந்தான். அந்நதியில் விஷாக்கினியினாய் கொதிப்படைந்த நீருடன் மிகவும் பயங்கரமாயிருந்த காளிய மடுவையும், அதன் விஷவேகத்தால் கரையிலுள்ள மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதையும், காற்றில் அகப்பட்ட நீர்த் துளிகளின் ஸ்பரிசத்தினாலே வானத்தில் பறக்கும் பறவைகளுங்கூட எரிந்து போவதையும் கண்டு, இந்த மடு கொடிய மிருத்யுவின் வாய்போல் இருக்கிறதே! பரம துஷ்டனாயும் விஷத்தையே ஆயுதமாகக் கொண்டவனுமான காளியநாதன் இந்த மடுவில் இருக்கிறான் அன்றோ? இவனை நாம் வென்றால், இந்த மடுவை விட்டு அவன் கடலுக்குப் போவான். இந்த மடுவில் காளிய சர்ப்பம் இருப்பதால், யமுனை நதியானது கடல் எட்டும்வரை கொடுக்கப்பட்டு, நீர் வேட்கையுள்ள மனிதருக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பானயோக்கிய மின்றி இருக்கிறது. ஆகையால் இந்தக் கொடிய சர்ப்பத்தைத் தண்டித்தே ஆகவேண்டும். அதனால் இந்த ஆயர்பாடியில் இருப்பவரனைவரும் பயமின்றி இந்த நதியின் நன்னீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வழி தவறிய துஷ்டர்களை நிக்கிரகிக்கத்தானே நாம் அவதரித்தோம்? ஆகவே, நதிக்கரையில் உள்ள இந்தக் கடப்ப மரத்தின்மேல் ஏறி காளிய சர்ப்பம் இருக்கும் மடுவில் குதிப்போம் என்று பாலகிருஷ்ணன் எண்ணமிட்டுத் தன் திருப்பரிவட்டத்தை நன்றாக இழுத்துக் கட்டிக்கொண்டு மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்து வேகமாய் அந்த மடுவில் குதித்தான். அப்படி சுவாமி குதித்ததால், மடுநீர் அலைந்தது. நீர் பரவியதால் தூரத்திலிருந்த மரங்கள் நனைந்தன. அம்மரங்கள் சர்ப்ப விஷாக்கினிச் சுவாலையினால், கொதித்த நீர் பட்டதுமே தீ மூட்டியது போல நாற்புறங்களிலும் சுவாலைகள் பரவி எரிந்து போயின. பாலகிருஷ்ணனோ காளியமடுவிற் குதித்தவுடனேயே தன் தோள்களைப் பலமாகத் தட்டினான். கண்ணன் தோள் தட்டிய ஓசையைக் கேட்டவுடனே காளியன் என்னும் சர்ப்பராஜன் கோபத்தினால் கண்கள் எல்லாம் சிவக்க; முகங்களில் விஷச் சுவாலைகள் மிகுந்தவனாய், மகாவிஷமுள்ள பல்வேறு பாம்புக் கூட்டங்களுடன் மடுவை விட்டு வெளியே வந்தான். அவனுடைய அநேக நாக பத்தினிகளும் அழகிய முத்து மாலைகளை அணிந்து உடம்பையசைப்பதால் காதுகளிலே அசையும் குண்டலங்கள் காந்திவீச, வெளியே வந்தனர்.
உடனே, காளியனும் மற்றையச் சர்ப்பங்களும் தங்களது உடல்களினால் கண்ணனை இறுகப்பிணைத்துக்கொண்டு கடித்தன. இவ்விதமாக அந்த மடுவில், சர்ப்பங்களினாலே சுற்றப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணனை இடைப்பிள்ளைகள் பார்த்ததும் பயந்தார்கள். அவர்கள் ஆயர்பாடிக்கு ஓடிச்சென்று ஐயோ! நம்முடைய கிருஷ்ணன் மோகத்தால் காளியமடுவில் விழுந்து மூழ்கிப் போய் காளியனால் விழுங்கப்படுகிறான், ஓடி வாருங்கள், என்று கூவினார்கள். இடி விழுந்தது போன்ற அந்தப் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த தாய் யசோதையும் மற்றுமுள்ள கோபாலர்களும் ஐயோ! கிருஷ்ணன் எங்கே? எப்படியிருக்கிறான்! என்று கதறிக்கொண்டு ஒன்றுந் தோன்றாமல் பரவசராய்க் கால்திடற, அந்த மடுவின் அருகே ஓடி வந்தார்கள். அதுபோலவே தந்தை நந்தகோபரும் தமையன் பலராமனும் பரபரப்புடன் ஓடி வந்தார்கள். யமுனை நதியில் பாம்புகளால் பிணைக்கப்பட்டு அசைய மாட்டாமற் கிடக்கும் கண்ணபிரானைப் பார்த்ததும் தம் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய எல்லோரும் கதறி யழுது கொண்டு நின்றார்கள். நந்தகோபரும் யசோதையும் கண்ணன் திருமுக மண்டலத்திலேயே கண்களை வைத்து லயித்தவர்களாய், ஒரு செயலும் இன்றி மரம்போல் அசைவற்று நின்றார்கள். கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்குவது அரிது என்ற அதைரியமும் பயமும் பற்றியவர்களாக அவர்கள் நாவுலர்ந்து வாய் குளற அழுதார்கள். அவர்கள் அழுதுகொண்டே, நாமெல்லாம் யசோதையுடன் இந்த காளியமடுவில் விழுந்து விடுவோம். இனி ஆயர்பாடிக்குப் போகக் கூடாது. ஏனெனில் சூரியனில்லாத பகல் எதற்கு? கிருஷ்ணன் இல்லாத திருவாய்ப்பாடி நமக்கு எதற்கு? ஆகையால் நாம் அங்கே மறுபடியும் போவது தகுதியன்று கண்ணனை விட்டுத் தண்ணீரில்லாத குளம் போல அழகற்றதும் சுக ஹேதுவாகாததுமான இடைச்சேரிக்குப் போக மாட்டோம். எங்கே கருநெய்தல் மலர்போன்ற கண்ணன் இல்லையோ, அது தாய்வீடானாலும் அந்த வாசத்தினால் மகிழ்ச்சி உண்டாக மாட்டாது! என்று இடையர்கள் பிரலாபித்தார்கள். தந்தை நந்தகோபரும் தாய் யசோதையும் மயங்கியிருந்தனர். அப்போது பலபத்திரனான பலராமன் தன் தம்பி கிருஷ்ணனோடு தங்களுக்குரிய சங்கேத வார்த்தகைளினால் இவ்வாறு கூறலானான்.
பிரும ருத்திராதியருக்கும் அதிபதியானவனே! சுவாமி! நீ ஏன் அனந்தனான உன் சொரூபத்தை மறந்து மனுஷியனாக இருக்குந் தன்மையைக் காட்டுகிறாய்? சக்கரத்தின் அரங்களுக்கு நடுமயம் போல் உங்களுக்கெல்லாம் நீயே ஆதாரமாக இருக்கிறாய். மேலும் படைப்பவனும் அழிப்பவனும் காப்பவனும் நீ! சிந்திக்கக் கூடாத சொரூபமுடையவனே! சகல வேத சொரூபியும் நீ! ஜகந்நாதா! நீ பூபாரத்தை நீக்குவதற்காக மனித அவதாரம் செய்தருளினாய். உனது விபூதியான நானும் உன் தமையனாகப் பிறந்தேன். பகவானே! நீ மனுஷ்ய லீலையை அனுசரித்து எழுந்தருளியிருப்பதனாலே, சகல தேவதைகளும் இங்கே அவதரித்துள்ளனர். எம்பெருமானே! உன் லீலைக்கு உபயோகமாக ஆயர்பாடியில் தெய்வப் பெண்களை முன்னதாக அவதரிக்கச் செய்து அதன் பிறகு நீ அவதரித்தாயல்லவா? இவ்விதம் அவதரித்த உமக்கும் எனக்கும் உன் சங்கல்பத்தினால் பிறந்த கோபாலரும் கோபியருமல்லவோ உறவினர் ஆகிறார்கள்? அப்படியிருக்க மிகவும் விசனமடைந்துள்ள இவர்களை ஏன் உபேக்ஷிக்கிறாய்? ஓ, கிருஷ்ணா! இதுவரை நீ மனுஷ்ய பாவனையைக் காட்டியதும் பாலகனாக இருப்பதின் லீலையைக் காட்டியதும் போதும் இனிவிரைவாக மகா துஷ்ட சொரூபமாகவுள்ள அந்தப் பாம்பை அடக்கி அருள்வாயாக! என்று பலபத்திரன் (பலராமன்) நினைப்பூட்டினான்.
பாலகிருஷ்ணன் புன்னகையுடன் காளியன் என்ற அந்தப் பாம்பை ஒரு அறை அறைந்து அதன் உடலின் பிணைப்பிலிருந்து தன்னை விடுத்துக் கொண்டான். பிறகு கண்ணன் தன் இரண்டு திருக்கைகளாலும் காளியனின் நடுத்தலையை அமுக்கி அதன்மேல் ஏறி நர்த்தனம் ஆடினான். இவ்வாறு தன் திருவடிகளால் துவைத்ததால், சர்ப்ப ராஜனின் பிராணங்கள் எல்லாம் படத்திலே வந்தன துவைக்கப்படாத மற்றொரு படத்தையும் சர்ப்பராஜன் தூக்கியெடுத்தான். அதையும் கண்ணன் தன் திருவடிகளால் வணங்கியருளினான். இதனால் நசுக்குண்ட பாம்பரசன் உதிரத்தையும் நஞ்சையும் கக்கினான் அவன் சோர்வடைந்ததைப் பார்த்ததும் அவனுடைய நாகபத்தினிகள் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகளில் சரண்புகுந்து, தேவதேவேசுவரனே! நாங்கள் உன்னை அறிந்தோம். நீ சர்வ யக்ஞனாகவும் உத்தமரில் உத்தமனாயும், மனம் வாக்குக்கு எட்டாத பரஞ்சோதியென்று சொல்லப்படும் பிரம்மத்தின் திருவவதாரமாக இருப்பவன் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதமயமான பிரபஞ்சங்கள் எல்லாம் எவனது சொரூபத்தின் அமிசத்தின் அமிசத்திலும் அமிசமோ, அப்படிப்பட்டவனை நாங்கள் எப்படித் துதிப்போம் அணுவுக்கு சூட்சும மாயும் ஸ்தூலங்களுக்கும் பெரியதாகவும் இருக்கிறஎவனுடைய பரமார்த்தமான சொரூபத்தை யோகியருங்கூட அறிய மாட்டார்களோ, அத்தகைய உன்னை நாங்கள் சரணடைகிறோம் சுவாமி! தேவரீருக்குக் கொஞ்சமேனும் கோபம் என்பதில்லை. ஆயினும் இந்தக் காளியனைத் தண்டித்தது ஏனென்றால் லோக மரியாதையை நிலை நிறுத்துவதற்குத்தான் என்பதை அறிந்தோம். இனி எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள்வீராக.
பெண்கள் திறத்திலும், பேதைகள் திறத்திலும் பெரியோர்கள் இரங்க வேண்டுமன்றோ? ஆகையால் மெலிந்து இளைத்த எங்கள் நாயகனான காளியன்மீது இரக்கம் காட்டவேண்டும். பொறுமையுடையவரில் நீர் சிறந்தவரல்லவா? சகல உலகங்களுக்கும் ஆதாரமாகிறவன் நீர்! இந்த நாகனோ அற்ப பயமுடையவன் இவன் உனது திருவடியினால் துவைக்கப்பட்டதால் அரைமுகூர்த்தத்தில் உயிரை இழப்பான் எம்பெருமானே! அற்ப வீரியனான இந்த சர்ப்பராஜன் எங்கே? உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீர் எங்கே? எங்களுக்குப் பதிப்பிøக்ஷ தந்தருள வேண்டும். சகல லோகநாதனே! சகல ஆத்மநாதனே! இந்த நாகன் உயிரை இழக்க இருக்கிறான். எங்களுக்கு மாங்கல்யப் பிøக்ஷ தந்தருளவேண்டும் என்று நாக கன்னியர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதனால் திருவுள்ளம் பற்றிய ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவடிகளால் துவைப்பதை நிறுத்தியதால், காளிங்கன் மிகவும் மெலிந்து இருந்துங்கூட சிறிது தைரியமடைந்து இளைப்பு நீங்கி, தேவதேவர்களுக்கு அதிபதியே! அருள் செய்ய வேண்டும் என்று மெல்ல மெல்ல விண்ணப்பிக்கலானான்.
எம்பெருமானே! அணிமாவாதி! எண்குணங்களையுடைய ஐசுவரியமானது எப்படி இயல்பாயும் மேலானதாயும் ஒப்பில்லாததாயும் இருக்கின்றதோ அப்படிப்பட்ட உன்னை எப்படித் துதிப்பேன்? நீ பிரகிருதிக்கு மேற்பட்ட ஆன்ம சொரூபியாயும் அவனுக்கு மேற்பட்ட முக்த சொரூபியாயும் இருக்கிறாய் பக்தன் முக்தன் மேலானவன் என்று சொல்லப்பட்டவனும் நீயே! ஆதலின் உன்னை எப்படித் துதிப்பேன்? எவனிலிருந்து பிரமனும் உருத்திரனும், இந்திரன், சந்திரன், மருத்துக்கள், அவிசுகள், வசுக்கள், ஆதித்தர் முதலானவர்களும் உண்டானார்களோ, அப்பேர்ப்பட்ட உன்னை நானெப்படித் துதிப்பேன்? மூர்த்தமாயும் அமூர்த்தமாயுமுள்ள ரூபியான எவனுடைய பரமார்த்த சொரூபத்தைப் பிருமா முதலிய தேவர்களும் அறியமாட்டார்களோ, அவனை நான் எங்ஙனம் துதிப்பேன்? யோகியரெல்லாம் சகல இந்திரியங்களையும் விஷயங்களினின்றும் திருப்பிச் செய்யுந் தியான யோகத்தினாலே எவனை அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்? சணகாதி மகாயோகியரெல்லாம் எவனுடைய சொரூபத்தைத் தியானத்தாலே தங்கள் இதயங்களிலே நிறுத்தி, அஹிம்சை முதலிய மலர்களினாலே அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்; ஓ தேவ தேவேசனே! இவ்வளவு அற்பனாகிய நான் அவ்வளவு மேன்மையுள்ள உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் பணியவும் வல்லமையுடையவனல்லேன்! ஆயினும் உன் கிருபையினாலேயே அடியேனை அனுக்கிரகிக்க வேண்டும். ஸ்ரீகேசவா! அடியேன் பிறந்தது கொடி சர்ப்ப ஜாதியல்லவா? அதனால் என் இயல்பு இப்படி இருக்கிறதேயல்லாது அடியேனிடத்தில் அபராதம் ஒன்றுமில்லை அச்சுதா! நீயே சகல உலகங்களையும் படைத்து, அழிக்கிறாய் ஆகையால் அந்தந்தப் பொருள்களின் ஜாதிரூப சுபாவங்களும் உன்னாலேயே உண்டாக்கப்படுகின்றன. எந்த இயல்பினால் நான் படைக்கப்பட்டேனோ, அதன் நடத்தையே என்னிடம் உள்ளது இதுதான் உண்மை! நீ படைத்த ஜாதி முதலானவைகளுக்கு மாறாக நான் நடப்பேனாகில் உன் கட்டளைக்கு மாறாக நடத்த குற்றம் செய்தவனாவேன் அடியேனை நீ தண்டிப்பதும் நியாயம். உன் சூக்தியும் அப்படித் தானன்றோ இருக்கிறது? ஆயினும் மூடனான அடியேனை தண்டனை செய்தருளினாய். இது அடியேனுக்கு கொடுமை தீர்ப்பதாக இருந்ததால், கொண்டாடும் படியான வரமாகின்றது! இது மற்றொருவரால் கிடைக்குமானால் அது சிறப்புடையதாகாது. பகவானே, பிராணன் ஒன்றுதான். அதைப் போக்காமல் தந்தருள வேண்டுகிறேன். இனிமேல் அடியேன் செய்யத்தக்கது இன்னதென்று நியமித்து அருள் செய்யவேண்டும் என்று காளியங்கன் பிரார்த்தித்தான். அப்போது கிருஷ்ணபகவான் கருணை கூர்ந்து, ஓ சர்ப்பராஜனே! இனி நீ இந்த யமுனை நதியிலே ஒரு கணமும் இருக்கவேண்டாம்; உன் புத்திர களத்திராதி பரிவாரங்களோடு கூட சமுத்திரத்தில் சேர்வாயாக. நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம். உன் சிரசில் என் திருவடியின் அடையாளம் இருப்பதைக் கண்டு உன்னைக் கருடன் எதுவும் செய்யமாட்டான் என்று கூறியருளி காளிங்கனை விட்டு விட்டார்.
பிறகு காளிங்க நாகன், சுவாமியின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கி, தன் புத்திரக் களத்திராதியுடன் கூடி யாவரும் பார்த்துக்கொண்டேயிருக்க அந்த மடுவை விட்டுக் கிளம்பிச் சென்ற பிறகு, கரையேறிவந்த கண்ணனை இறந்து மீண்டுவந்தவனைக் கண்டதைப் போலக் கண்டு, நந்தகோபர் முதலியோரெல்லாம் மிகவும் அன்போடு பாலகிருஷ்ணனை கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டு நனைத்தார்கள். மற்றுமுள்ள யாதவர்கள் கண்ணனின் மேன்மையையும் அந்த யமுனையாற்று நீர் தூய்மைப்பட்டு விட்டதையும் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு கண்ணன் யாதவக் கூட்டத்துடன் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளினார்.

—————-

8. தேநுகாசுரன் வதம்-

பலராமன் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டே, ரமணீயமான ஒரு பனங்காட்டிற்குச் சென்றார்கள். அந்தப் பனங்காட்டிலே தேநுகன் என்ற ஓர் அசுரன் கழுதை வடிவெடுத்து மிருகங்களின் இறைச்சியை ஆகாரமாகக் கொண்டு வசித்து வந்தான். அங்கு மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் அநேகமாய் பனம்பழங்கள் நன்றாகப் பழுத்து குமுகுமுவென்று வாசனை வீசிக் கொண்டிருந்தன. இடையர் குலச் சிறுவர்கள் எல்லாம் அப்பனம் பழங்களை விரும்பி, ஓ, பலராமா ஓகிருஷ்ணா! இந்தக் காடு தேநுகன் என்ற அசுரனின் நடமாட்டத்தால் எப்போதுங் காக்கப்பட்டு வருகிறது. அதனால் இங்கு நன்றாகக் கனிந்த பழங்கள் குலைகுலையாகத் தொங்குகின்றன. அக்கனிகளை நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதமிருந்தால் இவற்றை உதிர்த்துத் தள்ளுங்கள். நீங்கள் பலசாலிகளாகையால் விண்ணப்பம் செய்தோம்! என்று கூறினார்கள்.
உடனே பலபத்திரனும் கிருஷ்ணனும் மரங்களில் ஏறிப் பழங்களை உதிர்த்துத் தள்ளினார்கள். இவ்விதம் அவர்கள் இருவரும் பழங்களை உதிர்க்க, அவை விழுகின்ற ஓசையைக் கேட்டு, துஷ்ட அசுரனான தேநுகன் கோபங்கொண்டு ஓடிவந்தான். கழுதை வடிவமாகவேவந்த அவ்வசுரன் தனது பின்னங் கால்கள் இரண்டினாலும் பலராமனது மார்பில் உதைத்தான். உடனே பலராமன் அதிலாவகமாய் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து அந்த அசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி ஒரு பனைமரத்தின்மீது ஓங்கி வீசினான். அதனால் பெருங்காற்றானது மேகங்களை வீழ்த்துவது போல், அசுரக் கழுதை பல பழங்களை உதிரும்படிச் செய்து, தானும் தரையில் வீழ்ந்து உயிர்விட்டது. பிறகு அந்த அசுரனைச் சேர்ந்த கழுதை வடிவு கொண்ட அசுரர்கள் பலர் ஓடிவந்து ராமகிருஷ்ணர்களுடன் போரிட்டனர். தம்பி கிருஷ்ணன் சிலரையும் மூத்தவன் சிலரையும் பிடித்துச் சுழற்றித் தேநுகனை எறிந்ததைப் போலவே சுழற்றி வேடிக்கையாகப் பனைமரங்களின் மீது எறிய, அவர்களும் பழங்களுடன் விழுந்து உயிரிழந்தனர். அப்போது அந்த நிலம் முழுவதும் பனம்பழங்களும் கழுதையுடல்களும் நிறைந்து விளங்கியது. பின்னர் யாதவர் அனைவரும் பழங்களை வேண்டுமளவு புசித்து மகிழ்ந்து ராமகிருஷ்ணர்களைத் துதித்தனர் பசுக்களும் இனிய பசும் புற்களை மேய்த்து மகிழ்ந்தன.

—————–

9. பிரலம்பாசுரன் வதம்

தேநுகாசுரன் மாண்ட பிறகு, அவன் வசித்த பனங்காடு இடையர் குலச் சிறுவர்கள் விளையாடும் இடமாக மாறிவிட்டது. பிறகு வசுதேவரின் குமாரர்கள் ராமகிருஷ்ணர் இருவரும் பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகே சென்று, தோளில் அணைக் கயிற்றையும் மார்பில் வனமாலையும் அணிந்து, இளங்கொம்புள்ள காளைகளைப் போல் மகிழ்ந்து தங்கள் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சிங்கநாதம் செய்வதும், சிலர் பாடுவதும், மரங்களை ஏறத் தேடுவதும் பசுக்களை அவற்றின் பெயரைக் கூப்பிட்டு அழைப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணர்களில் மூத்தவனான பலராமன் மைப்பொடி யூட்டிய ஆடையையும் இளையவனான கிருஷ்ணன் பொற்பொடி யூட்டிய ஆடையையும் தரித்து வானவில்லோடு வெண்மையும் கருமையுமாகப் பிரகாசிக்கும் மேகங்களைப்போல் தோற்றமளித்தார்கள். இத்தகைய அலங்காரத்துடன் சகலலோக நாதருக்கும் நாதர்களாயிருக்கும் அவ்விரு பாலகரும் பூவுலகுக்கு ஏற்ப மனிதத் தன்மையோடு, மனித பாவனையோடு, லோகத்திலுண்டான பல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இருவர் கைகளைத் தண்டிகை போல் வைக்க, அதில் ஒருவர் தொங்கலாடுவதாலும் மரத்தின் விழுதுகளை முடிந்து அதில் உட்கார்ந்து வீசி ஊஞ்சலாடுவதாலும், ஆந்தோளிகைகளினாலும், ஒருவரோடு ஒருவர் கைச்சண்டையிடுவதனாலும் கட்டைகளையும் கற்களையும் சுழற்றுவது போன்ற குறளிச் செய்கைகளினாலும் இன்னும் பல விளையாடல்களினாலும் மற்றைய இடையச் சிறுவர்களோடு அவ்விருவரும் மகிழ்ந்திருந்தனர்.
அவ்வாறு அவ்விருவரும் விளையாடி வரும் நாட்களில் இவ்விருவரையும் பிடித்துக் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக பிரலம்பன் என்ற அசுரன் ஒருவன் ஆயச் சிறுவனைப் போல் வேடமெடுத்து வந்து இடையர் குலப்பிள்ளைகளில் ஒருவனாக விளையாட்டில் கலந்துகொண்டான். அவன் ஸ்ரீ கிருஷ்ணனை வெல்லக்கூடாத வகையை நினைத்து, பலராமனைக் கொல்ல நினைத்தான். அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் ஹரீணாக் கிரீடனம் என்ற சிறுவர் விளையாட்டு ஒன்றை விளையாடத் துவங்கினார்கள். அதற்காக யாவரும் இரட்டை இரட்டையாக நின்றார்கள். அவர்களுக்குள்ளே தாமா என்பவனோடு கண்ணனும் பிரலம்பன் என்பவனோடு பலராமனும் கூடி நின்று குதித்து வரும்போது தாமாவைக் கண்ணனும் பிரலம்பனை பலராமனும் ஜயித்ததனால், தோல்வியுண்ட இருவரும் தங்களை ஜயித்த இருவரையும் தங்கள் தோள்மீது ஏற்றிச் சுமந்துகொண்டு பாண்டீரம் என்ற ஆலமரத்தடிக்கு வந்து மறுபடியும் அங்கிருந்து திரும்பினார்கள். அப்போது பிரலம் பாசுரன் பலராமனைத் தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு, சந்திரனை ஏந்திய மேகம் போல் குபீரெனக் கிளம்பி ஆகாயத்தில் எழும்பினான். அதைக் கண்டு பலராமன் தன் உடலைப் பாரமாக்கினான். அந்தப் பாரத்தைச் சுமக்கமாட்டாமல் அசுரன் தன் உடலையும்பெரிதாக வளர்த்திக் கொண்டு; மழைக்கால மேகம்போல் வளர்ந்தான், எரிந்த மலை போன்ற உடம்பும் குறுகிய கீரீடமும் கவிழ்ந்த தலையும் தொங்குகின்ற மாலை ஆபரணங்களும், வண்டிச் சக்கரம் போன்ற கண்களும் பயங்கர வடிவும், பூமி நடுங்கத்தக்க நடையும் கொண்ட அந்த அசுரன் சிறிதும் அச்சமின்றித் தன்னைத் தூக்கிக்கொண்டு எழும்புவதை பார்த்து பலராமன் தன் தம்பியைக் கூவியழைத்து, ஓ கிருஷ்ணா! ஓ கிருஷ்ணா! மலை போன்ற தேகங்கொண்டு இடையப்பிள்ளை போன்ற ரூபங்தரித்த அசுரன் ஒருவனாலே நான் தூக்கிக்கொண்டு போகப்படுகிறேன்! மதுசூதனா! இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்! இந்த துராத்துமா வெகு வேகமாக ஓடுகிறான் என்று கூறினான்.
அதைக்கேட்டதும் பாலகிருஷ்ணன், புன்னகையினால் இதழ்கள் மலரக் கூறலானான். ஓ, சர்வாத்துமகனாயும், சகல சூஷ்மங்களுக்கும் காரணனாயும் இருப்பவனே! பிரளயத்திலும் மிகுந்திருக்கும் படியான நித்தியனான நீ ஏன் மானுடத் தன்மையை மெய்யாகவே பற்றுகின்றாய் நீயே சகலலோக காரணங்களுக்குக் காரணமாய், வியக்கப் பிரபஞ்சத்துக்கு முன்பே இருப்பவனும் சகலமும் கடலினாலே மூழ்கடிக்கப்பட்டு, ஏகார்ணவமாக இருக்கும்போது, மிகுந்திருக்கிறவனுமாக இருக்கிறாய். இத்தகைய உன் தன்மையை நினைத்துக்கொள் மேலும் நாம் இருவரும் இந்தப் பூமியின் பாரத்தைப் போக்குவதற்கே அவதரித்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயோ? ஓ! அனந்தனே! ஆகாயம் உன் திருமுடி! மேகங்கள் உன் கேசங்கள், பூமி, உன் திருவடி அக்கினி உன் திருமுகம்! சந்திரன் உன் மனம் வாயு உன் மூச்சு நான்கு திக்குகளும் உன் நான்கு திருத்தோள்கள்! நீ ஆயிரம் திருமுகங்களும் ஆயிரம் திருக்கைகளும் ஆயிரம் திருப்பாதங்களும் கொண்டவனாய், ஆயிரம் பிரம்மாக்களுக்கும் உற்பத்தி ஸ்தானமான முதல்வனாக இருக்கிறாய்! உன் திவ்ய ரூபத்தை ஒருவனும் அறியமாட்டான். தேவதைகளும் உன் திருவவதார ரூபத்தையே அர்ச்சிக்கின்றனர். இந்த உலகம் யாவும் முடிவில் உன்னிடத்திலேயே லயமடைகின்றன. இந்தப் பூமி உன்னால் தாங்கப்பட்டன்றோ சராசர மயமான பிரபஞ்சத்தைத்தாங்குகின்றது? ஓ, உற்பத்தி விநாசங்கள் இல்லாதவனே! நீயே காலரூபமாய் யாவற்றையும் விழுங்கி விடுகின்றாய். தண்ணீரானது வடவாக்கினியினால் உண்ணப்பட்டுக் காற்றால் எறியப்பட்டு இமயமலையிலே பனியாய் நின்று, சூரிய கிரணங்களின் சம்பந்தத்தால் உருகி, மறுபடியும் தண்ணீராவதுபோல் சங்கார காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட பிரபஞ்சமெல்லாம் உன் ஆதீனமாகவே இருந்து, மீண்டும் படைக்க எத்தனிக்கின்ற உனது சங்கற்பத்தினால் முன்போலவே அந்தந்த உருக்கொண்டு பிரபஞ்சமாகத் தோன்றுகின்றன. ஈசுவரனே! கல்பந்தோறும் இப்படியே சிருஷ்டிப் பிரளயங்கள் நிகழ்கின்றன; நீயும் நானும் சேர்ந்து, இந்த உலகங்களுக்கு ஏக காரணமாக இருந்து, இந்தப் பூமியின் சுமையைக் குறைக்கப் பேத ரூபமாக அவதரித்தோம் அன்றோ? இவற்றையெல்லாம் நீ நினைத்துக்கொண்டு, இந்த மனுஷ்ய பாவனையைவிடாமல், அந்த அசுரனை சம்ஹாரம் செய்து, பந்துக்களுக்கு நன்மை செய்வாயாக! என்றான் கண்ணன்.
அதைக்கேட்டதும் பலராமன் சிரித்தான். பிறகு அவன் கண்கள் சிவக்க, தன் கைப்பிடியால் அந்த அசுரனின் தலைமீது அடித்தான். அந்த இடிபட்டவுடனேயே பிரலம்பாசுரனின் கண்கள் பிதுங்கின. கபாலமுடைந்து உதிரங் கக்க அவன் தரையில் விழுந்துமடிந்தான். இவ்விதமாகப்பிரலம்பனைச் சங்கரித்ததனால் யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஸ்ரீ சங்கர்ஷணரான பலராமன் மறுபடியும் கண்ணனுடன் சேர்ந்துகொண்டு ஆயர்பாடிக்குச் சென்றான்.

——————–

10. கோவர்த்தன ஆராதனம்-

ராமகிருஷ்ணர்கள் இருவரும் திருவாய்ப்பாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் காலத்தில், மழைக்காலம் நீங்கியது. தாமரைகள் மலர்ந்து விளங்கும் சரத்காலம் வந்தது. அப்போது சிறிய குளங்களிலிருந்த மீன்கள், புத்திர ÷க்ஷத்திராதிகளிலே பற்றிருத்தலினால் இல்லறத்தான் தாபமடைவது போல், அவை தாபமடைந்தன. சம்சாரம், அசாரம் என்பதை அறிந்த யோகியர் அதில் பற்றற்று மவுனமாக இருப்பதைப்போல் காட்டிலிருந்த மயிலினங்கள் மதம் நீங்கி, மவுனமாயிருந்தன. ஞானம் கைவந்தவர்கள் தங்கள் அகங்காரத்தோடு பொருள் முதலானவற்றை விட்டுச்சுத்த சத்வ குணமுடையவராய் சமுத்திரத்தைத் துறந்திருப்பதைப் போல் மேகங்கள் தம்மிடமிருந்த தண்ணீரையெல்லாம் விட்டுவிட்டு நிர்மலமாயும் வெண்மையான மேனியையுடையவனாகவும் வானத்தை விட்டு நீங்கியவை போலவும் விளங்கின. வறண்ட இருதயமுடையவரைப்போல குளங்களெல்லாம் சூரிய கிரணங்களால் வறண்டிருந்தன. நக்ஷத்திரங்களினாலே நிர்மலமாய் இருக்கும் வானவீதியில், பூரண மண்டலத்தோடு கூடிய சந்திரன் எழுந்து விளங்கினான். நல்ல குலத்திலே ஒரு யோகியானவன் பிறந்து முக்திபெறத் தக்க திருமேனியோடு விளங்குவது போலவே அச்சந்திரன் விளங்கினான். மந்திரம் முதலான யோக முறைகளினாலே மகாயோகத்தை அடைந்து ஒரு யதியானவன் எப்படி நிச்சலனாக இருப்பானோ அவ்வாறு சமுத்திரமானது தண்ணீர் நிறைந்து ததும்பலின்றி நிச்சலமாக இருந்தது. அகங்காரத்தினால் உண்டான துக்கத்தை மகத்தான விவேகம் போக்குவது போல், சூரிய கிரணங்களினால் உண்டான தாபத்தையெல்லாம் சந்திரன் போக்கடித்தான் ஆபரண, ரேசக, கும்பம் என்கின்ற வாயுவை நிறுத்துதல், நிலைப்பித்தல் விடல் முதலானவற்றால் பிராணாயாமம் பயில்வதுபோல் தடாகங்களின் தண்ணீர் வாய்க்கால் முதலானவைகளில் நிறைக்கப்படுதலும் பின்பு ஓரிடத்தில் நிறுத்தப்படுதலும், வேண்டுங் கழனிகளுக்கு விடப்படுதலாகிய செயல்களால் பிராணாயாமம் செய்வன போலிருந்தன! இத்தகைய சரத்காலம் வந்தபோது, இந்திரனைப் பூசிப்பதற்காக ஒரு உற்சவம் நிகழ்ந்தது. அதில் அதிக ஆசையுடைய ஆயர்கள் குதூகலமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் மூப்பர்களாக இருந்தவர்களிடம் கிருஷ்ணன் பின் வருமாறு கேட்டான். பெரியோர்களே நீங்கள் அனைவரும் களிக்கும்படியான இந்திர விழா என்பது என்ன? அதன் சொரூப அனுஷ்டானப் பயன்களை எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டான். அதற்கு தந்தை நந்தகோபரே பதில் கூறலானார். குழந்தாய்! தேவேந்திரன் என்பவன் ஜனங்களுக்கும் மேகங்களுக்கும் அதிபதியாக இருக்கிறான். அவன் கட்டளையிட்டால் மேகங்கள் மழை பொழிகின்றன. அந்த மழையினால் விளையும் பயிர்களைத்தான் நாமும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொண்டு தேவதைகளை ஆராதிக்கிறோம். மேலும் மழையினால் வளரும் பசும் புற்களினால் நம்முடைய மாடுகள் யாவும் நன்றாக வளர்க்கப்பட்டு புஷ்டியாகி நல்ல கன்றுகளை ஈன்று பால் நிறைய கறந்துகொண்டு மகிழ்ந்து திரிகின்றன. எங்கு மழை உண்டோ அங்குள்ள பூமி பயிர் நிறைந்தும் புல் நிறைந்தும் இருக்கும். அங்குள்ள பிரஜைகள் பசி வருத்தமின்றி இருப்பார்கள். இந்தப் பூமியிலுள்ள நீரைச் சூரியன் தனது கிரணங்களினாலே கிரஹித்து மேகங்களில்விட, அவற்றை மேகாதிபதியான இந்திரன் உலக நன்மைக்காக மழையாகப் பெய்விக்கிறான். ஆகையால்தான் அரசர்கள், மழைக்காலம் முடிந்தவுடன் மகிழ்ச்சியோடு யாகங்களினால் இந்திரனைப் பூசித்து வருகிறார்கள். அதுபோலவே நாமும் செய்து வருகிறோம்! என்றார். அதைக்கேட்டதும் கண்ணன் இந்திரனின் செருக்கு அழியும் பொருட்டுப் பின்வருமாறு கூறலானான்.
ஐயா! நான் சொல்வதைச் சற்றுக் கேட்க வேண்டுகிறேன். ஆயர் குலத்தினரான நாம் பயிர் செய்பவர்களல்லர் வாணிபத்தாலும் நாம் ஜீவிப்பதில்லை. நாம் காட்டில் திரிந்து மாடு மேய்த்துப் பிழைப்பவர்கள். ஆகையால் நமக்குப் பசுக்களே தெய்வம்! உலகத்தில் முக்கியமான நான்கு வித்தைகள் உண்டு. அவை ஆன்வீக்ஷகி என்ற தர்க்க வித்தை, இருக்கு முதலிய பிரிவுகளைக் கொண்டதால் திரயீ என்ற வேதம், வார்த்தை எனப்படுகின்ற பயிரிடுதல் பற்றிய சாஸ்திரம், தண்டநிதி என்கின்ற ராஜநீதி நூல் இந்த நான்கிலும் இப்போது வார்த்தா சாஸ்திரத்தை விவரிக்கின்றேன், அதைக் கேட்பீராக கிருஷி, (பயிரிடுதல்) வணிஜயா (வாணிகம்) பசுபாலனம் (மாடு மேய்த்தல்) ஆகிய இந்த மூன்றும் பிழைப்பாக இருப்பது வார்த்தை என்ற வித்தையாகும். உழவர்களுக்குப் பயிரிடுதல் ஜீவனமாகும். கடைத்தெரு வியாபாரிகளுக்கு வணிஜயா ஜீவனமாகும். நமக்கோ பசு மாடுகளே முக்கிய ஜீவனமாக உள்ளது. ஆகையால் எவன் எந்த வித்தைக்கு உரியவனோ, அவனுக்கு அதுவே தெய்வமாதலின் அதையே நாம் கந்த புஷ்பாதிகளினாலே அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வித்தையின் மூலமாகவன்றோ சுவாமி நமக்கு உபகாரஞ் செய்தருளினார்? மேலும் எவன் எதன் பயனை அனுபவித்துக் கொண்டு மற்றொன்றை பூஜிக்கிறானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமடைவதில்லை. உலகத்தின் எல்லை, பயிரிடும் நிலம் வரைக்கும் உள்ளது. காடு என்பது அவ்வெல்லைக்குப் புறத்தேயுள்ளது. மலைகள் என்பவை காட்டின் புறத்தே இருப்பவை. அந்தக் காட்டில் வசிக்கும் நமக்கு மலைகளே முக்கியமானவை. வாயில்களும் கதவடைப்புகளும் இன்றி, நிலவுடைமைக்காரராக இல்லாத மக்களே, எவ்வுலகிலும் வண்டியில் ஏறி இஷ்டமான இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போல சுகமுடையவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த வனத்தில் மலைகள் எல்லாம் தமக்கு விருப்பமான ரூபமெடுக்க வல்லவைகள் என்றும், அந்தந்த உருக்கொண்டு தத்தமது சாரல்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்றும் நாமும் கேள்விப்படுகிறோம். இதற்கு உதாரணம், காட்டில் வாசஞ்செய்கின்றவர்கள் அந்த மலைகளுக்கு அபராதப்பட்டுவிட்டால் அவர்களை அந்தப் பர்வதங்கள் சிங்கம் முதலிய ரூபங்களைக் கொண்டு கொல்கின்றன. ஆகையால் நமக்கு உபகாரியாக இருக்கும் மலைகளையும் பசுக்களையும் குறித்து யாகங்களைச் செய்யவேண்டும். நமக்கு இந்திரன் ஏன்? பிராமணர்களுக்கு மந்திர யக்ஞம் முக்கியமானது. உழவர்களுக்குக் கலப்பையைப் பற்றிய யக்ஞம் முக்கியம்!
ஆனால், மலைகளையும் காட்டையும் பற்றியிருக்கும் நமக்கோ கோபர்வத யக்ஞங்கள் முக்கியமானவை. ஆகவே இந்த கோவர்த்தன கிரியை நீங்கள் பலவகை உபசாரப்பொருள்களைக் கொண்டு, விதிப்படி பசுவாலம்பனஞ் செய்து பூஜிக்க வேண்டும் இதற்காக எதுவும் ஆலோசிக்காமல் இந்த இடைச் சேரியிலுள்ள தயிர், பால், வெண்ணெய் முதலிய யாவற்றையும் எடுத்துப் பிராமணர்களுக்கும் அன்னத்தை வேண்டியவரும் பிறருக்கும் வழங்கி திருப்திப்படுத்தவேண்டும். நாம் இவ்விதம் செய்தவுடன், சரத்காலத்து மலர்களினால் கொம்புகள் அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் எல்லாம் வலம் வரவேண்டும். கோபாலர்களே! இதுதான் என்னுடைய மதம். நீங்கள் இதை விருப்பத்தோடு ஏற்றுச் செய்வீர்களானால் பசுக்களுக்கும் மலைகளுக்கும் எனக்கும் பிரீதியாக இருக்கும்! என்று கண்ணன் கூறினான். அதனால் நந்தகோபர் முதலிய யாதவ மூப்பர்கள் மகிழ்ந்தனர். நந்தகோபர் தம் தனயனான கிருஷ்ணனை, நோக்கி, குழந்தாய்! நீ சொன்னவை மிகவும் நேர்த்தியானவை. எங்கள் மனதுக்கும் பிடித்திருக்கிறது. ஆகையால் அப்படியே கிரியக்ஞம் ஆரம்பிப்போம்! என்றார்.
பிறகு, யாதவர்கள் அனைவரும் பர்வத யாகத்தை ஆரம்பித்தனர். கந்த, புஷ்ப, தூப, தீப, ஆராதனைகளினாலே பூஜித்து, ஓமம் செய்து, தயிர், பாயசம், இறைச்சி முதலியவற்றால் அந்தப் பர்வதத்திற்குப் பலி பிண்டங்களைச் செய்து போட்டு, பிராமணர் பலருக்கும் போஜனம் செய்வித்து, பசுக்களையும் பூஜித்தனர். பிறகு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. அது போலவே ரிஷபங்களும் (காளைகளும்) நீர் நிறைந்த மேகங்களைப்போல் கர்ஜித்துக் கொண்டு வலம் வந்தன. இவ்விதமாக மலை ஆராதனை செய்யும் போது கண்ணன் ஒரு தேவ ரூபமாய் அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து நான்தான் இந்தப் பர்வத தேவதை! என்று கோபாலர்கள் போட்ட அன்ன பலிகளையெல்லாம் அமுது செய்தருளினான். கீழேயிருந்து தானே அதை யாவருக்கும் காட்டிப் புன்முறுவல் செய்து, அவர்களுடன் கூட தானும் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அந்தத் தன் சொரூபத்தையும் அர்ச்சித்துப் பணிந்தான்! இவ்வாறு, யாதவர் அனைவரும் பருவதயாகத்தை நிறைவேற்றி, பகவத் கடாக்ஷத்தால் விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். மலைச் சிகரத்தில் இருந்த அந்தச் சொரூபம் மறைந்தவுடன் அவர்கள் தங்கள் ஆயர்பாடிக்குச் சென்றார்கள்.

——————

11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்

மைத்ரேயரே! இவ்விதம் சுவாமீ இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்ததால், இந்திரன் மிகவும் கோபங்கொண்டான். உடனே அவன் சம்வர்த்தகம் என்ற மேகக் கூட்டத்தை அழைத்து, மேகங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். என் கட்டளையை உடன் ஏற்றுத் தடையின்றி நிறைவேற்றுங்கள் நந்தகோபன் என்ற இடையன் புத்தி கெட்டு கிருஷ்ணன் என்கின்ற ஒரு சின்னப் பையனின் பலத்தைப் பெரிதாக எண்ணிக் கர்வங்கொண்டு, மற்ற இடையர்களையும் சேர்த்துக்கொண்டு, எனக்கு வழக்கமாகச் செய்து வரும் யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால் அகோரமான, பெருமழையைப் பெய்வித்து அந்த இடையருக்குப் பிழைப்பாகவுள்ள மாடுகளையெல்லாம் அழித்து விடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்குச் சகாயமாக நான் மலைச் சிகரம் போன்றுள்ள பெரிய யானை மீது ஏறிக்கொண்டு, வாயுவையும் தண்ணீரையும் விடும் உதவியைச் செய்கிறேன்! என்று கட்டளையிட்டான்.
அதற்கிணங்கி வானத்து மேகங்கள் யாவும், ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படிப் பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும் மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்கும் பயந்தவைபோல் மேகங்கள் திக்குகள் அதிரும்படிக் கர்ச்சித்து மிகவும் கனமான தாரைகளைப் பெய்தன இவ்விதம் ஒழிவில்லாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் உலகம் எல்லாம் இருள் மூடியது. உலகம் கீழும் மேலும் பக்கங்களிலும் ஜலமயமானது போலத் தோன்றியது. அப்பொழுது பசுக்கள் மகா வேகமாக வீசிய காற்று மழையிலே அலைக்கப்பட்டு இடுப்பும், தொடைகளும், கழுத்தும் சுருங்கி, மாண்டன போன்று மூர்ச்சித்து விழுந்தன. மாடுகளில் பல, தமது இளங்கன்றுகளை வயிற்றில் அணைத்துக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தன பலமாடுகள், கன்றுகள் விழுவதைக் கண்டு, கதறியழுதன. சில கன்றுகள் காற்றினாலும் குளிரினாலும் உடம்பெல்லாம் சோர்வடைந்து நடுங்கி அற்பத் தொனியுடன் கூவியதைக் கண்டால், அவை கண்ணனை நோக்கி, கண்ணா! நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீனக் குரலில் வேண்டுவதுபோல் ஒலித்தன.
மைத்ரேயரே! இவ்விதம் கோபியரும், கோபாலரும் நிறைந்த அந்தக் கோகுலம் எல்லாம் இத்தகைய பெருமழையினால் மிகவும் துன்பப்பட்டு நடுங்குவதை கண்ணபிரான் கண்டதும் இந்திரன் தனக்குப் பூஜை நடக்கவில்லையே என்ற கோபத்தால் இப்படிச் செய்கிறான். ஆகையால் நாமே இந்தக் கோகுலத்தைப் பாதுகாப்பது அவசியம்! அதற்காகப் பெரிய கற்பாறைகள் நிறைந்த இந்தப் பர்வதத்தை அடியோடு பெயர்த்து இந்த இடைச் சேரிக்கே ஒரு பெருங்குடையாகப் பிடித்துக் காப்பேன்! என்று திருவுள்ளம் பற்றி, அந்தமலையைப் பெயர்த்து, ஒரே திருக்கையால் விளையாட்டுப் பொருளைத் தூக்குவது போல அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கோபாலரையெல்லாம் கூவியழைத்து, சிரித்துக்கொண்டே, நீங்கள் யாவரும் உங்கள் குழந்தை குட்டிகளோடும், பசுக்களோடும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சவேண்டாம். அதை நான் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள நல்ல இடங்களில் அவரவர் விருப்பம் போலச் சுகமாக இருக்கலாம். மலையானது மேலே விழுந்துவிடும் என்று பயப்படவேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைப் போல் எளிதாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்! என்று கூறிப் புன்முறுவல் பூத்தான்.
இவ்விதம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறியருளியதைக் கேட்டதும் இடையர் அனைவரும் தமது வண்டிகளில் தத்தமது பொருள்களை ஏற்றிக்கொண்டு, மாடுகளையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு, அந்த மலையின் அடியில் வந்து சேர்ந்தனர். இடையரும், இடைச்சியரும் மகிழ்ந்தனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகிமையைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்க, பகவானும் அந்த மலையை ஆடாமல் அசையாமல் ஒரே கையால் தாங்கிக் கொண்டிருந்தான். இதுபோல் ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய சுவாமியும் அந்தப் பருவதத்தை குடைபோல ஏந்தி ஆயர்களையெல்லாம் காத்தருளினான். அதைக் கண்ட தேவேந்திரன் தன் முயற்சி வீணாயிற்றே என்று நினைத்து மேகங்களின் செயல்களை நிறுத்தினான்; இவ்வாறு இந்திரன் நிறுத்தி விட்டதால், ஆகாயம் நிர்மலமாயிற்று திசைகள் தெளிவடைந்தன. ஆயர்கள் அனைவரும் மலையடியிலிருந்து புறப்பட்டு பழையபடி சந்தோஷத்தோடு பாடிக்கொண்டே, ஆயர்பாடியை அடைந்தார்கள். பிறகு கிருஷ்ணபகவான் அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தக் கோவர்த்தன கிரியை அது இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்தருளினான்!

———————–

12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்

கேட்டீரோ, மைத்ரேயரே! இவ்விதமாக கிருஷ்ண பெருமான் கோவர்த்தனகிரியை எடுத்துக் கோகுலத்தைக் காத்ததைக் கண்டு, தேவேந்திரன் வெட்கமடைந்தான், அவன் தன் ஐராவதமென்னும் யானை மீது ஏறிக்கொண்டு, கோவர்த்தன கிரியின் அருகே வந்தான். அங்கே சகல லோகங்களையும் காக்கும் எம் பெருமான் கோபால வேடம் பூண்டு யாதவப் பிள்ளைகளோடு கோக்களைக் காத்து நிற்பதையும் அந்த ஸ்வாமியின் திருமுடிக்கு நேர் மேலாக கருடன் என்னும் பெரியத் திருவடி தன் சிறகுகளால் வெய்யிற்படா வண்ணம் நிழல் செய்துகொண்டு பிறர் கண்களுக்குப் புலனாகாமல் இருப்பதையும் இந்திரன் கண்டான். உடனே அவன் யானை மீதிருந்து கீழே இறங்கி, ஏகாந்தத்தில் பகவானை வணங்கி அந்த மகிழ்ச்சியில் விழிகள் மலர, புன்னகையுடன் விண்ணப்பஞ் செய்யலானான்.
சுவாமீ ! ஸ்ரீகிருஷ்ண பகவானே! அடியேனது விண்ணப்பத்தைக் கேட்டு அருள் செய்யவேண்டும். உன் சன்னதிக்கு அடியேன் வந்தது விரோத புத்தியால் என்று எண்ணவேண்டாம், கிருபா மயமான உன் சங்கல்பத்தினாலேயே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து, இந்தப் பூமியின் பாரத்தை நீக்குவதற்காக இங்கு அவதரித்தாய் என்பதை நான் அறிவேன். ஆயினும் எனக்குச் செய்யும் யாகத்துக்கு பங்கம் நேரிட்டதே என்பதால், தெரியாத்தனமாகக் கோபங்கொண்டு மேகங்களை ஏவி, கோகுலத்தை நாசஞ் செய்யும்படிக் கட்டளையிட்டேன். மஹாசக்தியுடைய நீ, குன்றெடுத்து கோகுலத்தைக் காத்த இந்த அற்புதமான திருவிளையாடலைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். நான் உன் சன்னதிக்கு வந்த முக்கிய காரியத்தைக் கேட்டருள வேண்டும். கோலோகத்தில் இருக்கும் பசுக்கள் எல்லாம் தங்கள் சந்ததியை நீ நன்றாகக் காத்து ரட்சித்ததற்காக உனக்கு ஒரு சத்காரம் செய்யவேண்டும் என்று என்னிடம் கூறின அவற்றின் வாக்கியப்படி உன்னை கோக்களின் இந்திரனாகப் பட்டம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்கிறேன். அதைத் திருவுள்ளம் பற்றி ஏற்றருளவேண்டும். அதனால் நீ கோவிந்தன் என்ற திருப்பெயர் பெறுவாய்! என்று தேவேந்திரன் விண்ணப்பஞ் செய்து, தனது வாகனமான ஐராவதத்தின் மேலிருந்து தீர்த்த கலசத்தை எடுத்து வந்து, தனக்கும் மேலாய்ச் சத்திய லோகத்துக்கும் மேலேயிருக்கும் கோலோகத்துக் கோக்களுக்கு இந்திரனாகையால் உபேந்திரன் நீ என்று பட்டாபிஷேகம் செய்தான்.
இவ்விதமாக ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது, பசுக்கள் எல்லாம் தங்கள் மடிகளில் அளவின்றிச் சுரந்து பெருகிய பாலினால் பூமியை நனைத்தன. உபேந்திரன் என்றும் ஸ்ரீகோவிந்தன் என்றத் திருப்பெயர்கள் வழங்கி கிருஷ்ணபெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்த தேவராஜன் தலை வணங்கி மற்றொரு விண்ணப்பஞ் செய்தான். ஸ்ரீகிருஷ்ண பகவானே! பசுக்களின் வேண்டுதலை ஏற்ற வேணுகோபாலா! மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது. அதையும் திருவுள்ளம்பற்ற வேண்டும். அதாவது உனக்குத் துணையாக இருக்கும் கைங்கரியத்தின் ஆசையினால் என்னுடைய அமிசத்தைக்கொண்டு, பூமியில் அர்ச்சுனன் என்பவனை உண்டாக்கியிருக்கிறேன். அவன்பூபாரம் நீக்குவதில் உனக்குச் சகாயமாக இருக்கும்படி திருவுள்ளம்பற்றி அவனை உன்னைப்போலவே காத்தருளவேண்டும். அவனை நீ எப்போதும் ரக்ஷிக்க வேண்டும்! என்றான். அதைக் கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன், இந்திரா! பாரத குலத்தில் உனது அம்சத்தினால் அர்ச்சுனன் பிறந்திருக்கிறான் என்பதை நான் அறிவேன்! நான் பூவுலகத்தில் இருக்கும் வரையில் அவனைக் காப்பாற்றுகிறேன்! இந்த உலகத்தில் நான் எவ்வளவு காலம் இருப்பேனோ அவ்வளவு காலம்வரை அவனை ஒருவனும் ஜயிக்கமாட்டான். இந்த உலகத்தில் மிகவும் பலசாலிகளான கம்சன், அரிஷ்டன், கேசி, குவாலயாபீடம், நாகன் ஆகிய அநேக அசுரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஹதம் செய்யப்பட்ட பிறகு பாரதயுத்தம் என்ற ஒரு மகாயுத்தம் நடக்கும், அதனால் பூமியின் பாரம் தீரும். ஆகையால் உன் புத்திரனான அர்ச்சுனனுக்காக நீ கவலைப்படவேண்டாம். எனக்கு எதிரில் அர்ச்சுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் தலையெடுக்க மாட்டான் பாரத யுத்தம் நடந்தபிறகு அந்த அர்ச்சுனனுக்காகவே யுதிஷ்டிரன் முதலியோரையும் ஆயுதத் துன்பம் ஒன்றும் இல்லாமல் காத்து ரட்சிப்பேன்! என்று கூறியளினான். வானவர்க்கரசன் சுவாமியை ஆலிங்கனம் செய்து, பணிந்து ஐராவதத்தின்மேல் ஏறி இந்திரலோகம் சென்றான். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் ஆயர்களோடும் பசுக்களுடனும் கோகுலத்துக்கு எழுந்தருளினான்.

———————

13. ராஸக் கிரீடை

இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.
இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.
மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!

——————

14. அரிஷ்டாசுர வதம்

மைத்ரேயரே! ஒருநாள் மாலையில் கண்ணன் ராஸக்ரீடைக்குத் தயாராக இருந்தான். அப்போது அரிஷ்டன் என்ற ஓர் அசுரன் எருது வேடம் பூண்டு, இடைச்சேரியில் அட்டகாசம் செய்து பயப்படுத்திவந்தான். நீருண்ட கருமேகம் போன்ற உடலும், கூர்மையான கொம்புகளும், சூரியன் போன்ற சிவந்து பளபளப்பாக ஜொலிக்கும் கண்களும் திண்மையான கழுத்து முசுப்பும் அண்ட முடியாத பராக்கிரமமும் வாய்ந்த அவன் தன் குளம் புகளால் பூமியைப் பிளப்பவனைப் போல் இடித்துக் கொண்டும் உதடுகளை நாக்கினால் அடிக்கடி துழாவிக் கொண்டும் பரபரப்பாய் வாலைச் சுழித்து உதறிக் கொண்டும், பசுக்கள் எல்லாம் நடுங்கப் பாய்ந்து வந்தான். மாடுகளை முட்டிக் கருக்களை விழச்செய்தான்.
அத்தகைய கொடிய காளையைக் கண்ட இடைச்சிகள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறிக் கொண்டு கிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் கையைத் தட்டிச் சிங்கநாதம் செய்தான். அதைக் கண்டதும் விருஷப அசுரன் தன் கொம்புகளை நீட்டிக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்தான். கண்ணன் அதைக் கண்டு விலகாமல், இருந்த இடத்திலேயே சத்துருவை மடக்கினான். பிறகு விருஷப அசுரனின் கொம்புகளைப் பிடித்து அசையவொட்டாமற் செய்து, தன் முழங்காலினால் அவனது அடிவயிற்றில் இடித்து அவனது கர்வத்தையும் கொழுப்பையும் அடக்கி, அழுக்கு ஆடையைக் கசக்குவதைப் போல் அவனது கழுத்தைப் பிடித்துக் கசக்கி, அவனது கொம்புகளில் ஒன்றை முறுக்கி உடைத்து, அவனை அடித்தான். இதனால் அந்த அசுரன் உதிரத்தைக் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். அதைக் கண்டு தேவர்கள் கண்ணனைத் துதித்தார்கள்.

——————–

15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!

அரிஷ்டன், தேநுகன், பிரலம்பன், முதலிய அசுரர்களை கண்ணன் அழித்ததையும், கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்ததையும் பூதகி கொல்லப்பட்டதையும் கலகக்காரரான நாரதமுனிவர் வந்து கம்சனிடம் கூறினார். தேவகியின் ஆண் குழந்தையான கிருஷ்ணனைக் கொண்டுபோய் இடைச்சேரியிலுள்ள யசோதையின், குழந்தையாக வைத்து விட்டு, யசோதையின் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து தேவகியின் குழந்தையாக மாற்றிவிட்டதுவரை யாவற்றையும் நாரதர் கூறியதும், கம்சன் வெகுண்டெழுந்து தன் மைத்துனரான வசுதேவர் மீது பொல்லாத கோபம் கொண்டான்.
உடனே கம்சன் தன் அரச சபையில் வசுதேவரை நிந்தனை செய்துவிட்டு சபையில் இங்கும் அங்கும் நடந்து இப்போது இளமைப் பருவத்தினராக இருக்கும் ராமகிருஷ்ணர்கள் பலப்படுவதற்கு முன்பே, அவர்களை அழித்து விட வேண்டும். இதற்கு மேல் வளரவிட்டால் அவர்கள் வெல்வதற்கு அசாத்தியராகி விடுவார்கள். ஆகையால், நம்மிடமுள்ள முஷ்டிகன் சாணுரன் என்ற மல்லர்களைக் கொண்டு, மல்யுத்தம் செய்வித்து அவ்விளைஞர்களைக் கொல்வோம். அதற்காக நாம் நடத்தும்வில் எய்யும் திருவிழாவொன்றைச் சாக்கிட்டு, ராமகிருஷ்ணர்கள் இருவரையும் இடையர் சேரியிலிருந்து இங்கே வரவழைத்து விரைவில் அவர்களை அழிக்கும் உபாயத்தைச் செய்யவேண்டும். அதற்கு சுவபல்க குமாரராகிய அக்குரூரனையே கோகுலத்துக்கு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் கேசி என்பவனுக்குக் கட்டளையிட்டால், அவன் அங்கேயே அவர்களை சங்கரித்துவிடுவான். இல்லையெனில் குவலயாபீடம் என்ற என்னுடைய பட்டத்து யானை அவ்விடைப் பிள்ளைகள் இருவரையும் நாசஞ் செய்ய வல்லதாகும் என்று சிந்தித்தான். பிறகு ராம கிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்து வரும்படி அக்குரூரருக்கு கம்சன் கட்டளையிடலானான்.
ஓ தானபதியே! என் மகிழ்ச்சிக்காக என் கட்டளையைத் தடையின்றி நீயே நிறைவேற்றவேண்டும். அதாவது நீர் தேரில் ஏறி, இடையர்குலத் தலைவனான நந்தகோபனின் கோகுலத்துக்குப் போகவேண்டும். அங்கு விஷ்ணு அம்சமாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் வசுதேவரின் பிள்ளைகள் இருவர் ராமகிருஷ்ணர்கள் என்ற பெயர்களில் வளர்கிறார்கள் அல்லவா? அவர்களை வருகின்ற சதுர்த்தசியன்று இங்கு நடக்கவிருக்கும் தனுர்யாக மகோத்சவத்தில் நடக்கும் மல் யுத்தத்திற்கு வரும்படி அழைத்து வரவேண்டும். மல் யுத்தத்தில் வல்லவர்களாக என்னிடமுள்ள சாணுர முஷ்டிகர்களுடன் கூட அவர்கள் சண்டையிடுவதை இங்குள்ள யாவரும் வேடிக்கை பார்க்கட்டும். என்னுடைய குவலயா பீடம் என்ற யானை, மாவுத்தனால் தூண்டப்பட்டு, வசுதேவ குமாரர்களான அந்த துஷ்டச் சிறுவர்களைக் கொன்று விடும்! இவ்விதமாக அவர்கள் இருவரையும் வதைத்த பிறகு வசுதேவனையும், நந்தகோபனையும் துர்புத்தியுள்ள என் தகப்பன் உக்கிரசேனனையும் நான் கொன்றுவிடுவேன். பிறகு என்னைக் கொல்ல நினைத்த இடையருடைய மாடுகளையும் பொருள்களையும் பறித்துக்கொண்டு பிறகு உம்மைத் தவிர இதர யாதவர்களையெல்லாம் கொல்லும்படிக் கட்டளையிடுவேன். இப்படியெல்லாம் செய்து, இந்த ராஜ்யத்தில் யாதவப் பூண்டே இல்லாமலும்; பகைவரேயில்லாமலும் ஆள்வேன்; இதற்காக; அக்குரூரரே; நீர் ஆய்ப்பாடிக்குப் போய் வரவேண்டும். மேலும் அங்குள்ள இடையரிடத்தில்; எருமை நெய், தயிர், பால் இவற்றை விசேஷமாக நம் அரண்மனைக்குக் கொண்டு வரும் படிக் கட்டளையிட்டு வாரும்! என்று கம்சன் கூறினான். அதைக் கேட்டதும் மகா பாகவதரான அக்குரூரர்.. நாளைக்குக் கண்ணனை நாம் சேவிப்போமல்லவா? என்று தம் மனதிற்குள் மிகவும் மகிழ்ந்து கம்சனுக்கு அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தமது தேரில் ஏறிக்கொண்டு; மதுராபுரியிலிருந்து புறப்பட்டார்.

——————-

16. கேசி வதம்

பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேசி என்ற அசுரன், கம்சனுடைய தூதனால் ஏவப்பட்டு; ஸ்ரீகிருஷ்ணனைச் சங்கரிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் குதிரை வடிவம் கொண்டான். அவன் கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்து, குளம்புகளால் பூமியை இடித்துக்கொண்டும்; பிடரி மயிர்களின் நெறிப்பினால் மேகங்களைக் குத்தியும் குதித்தோடும் திறமையினால் சந்திர சூரிய மார்க்கங்களைத் தாவிக்கொண்டும் பெருங்கனைப்புச் செய்து, அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். அந்த அசுரக் குதிரையின் கனைப்பைக் கேட்ட ஆயரும் ஆய்ச்சியரும் நடுங்கிப் பயந்து, ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். கண்ணா! காத்தருள்வாய்! கண்ணா காத்தருள வேண்டும் என்று கோபாலர்கள் கூவுவதைக்கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன் அவர்களை நோக்கி, கோபாலர்களே, நீங்கள் பயப்படவேண்டாம். அற்ப பலமுள்ள இந்தக் கேசிக்கு அஞ்சும் உங்களால், வீரருக்கு உண்டான சக்தியெல்லாம் போக்கடிக்கப்படுகின்றன. இந்த அற்பக் குதிரை சும்மா கனைத்து ஆரவாரம் செய்கிறதே தவிர வேறொன்றுமில்லை குதிரை வடிவமெடுத்து வந்து இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இவன் ஒரு பலமற்ற அசுரன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான். என்று கூறிவிட்டு கேசியை, நோக்கி, டே துஷ்டா! வா! வா! நான் கிருஷ்ணன்! முன்பு தக்ஷயக்ஞத்திலே பூஷா என்பவனின் பற்களை உருத்திரன் உதிர்த்ததைப் போல், இப்போது உன் பற்களையெல்லாம் நான் உதிர்த்துவிடுகிறேன்! என்று வீரமுழக்கம் செய்து கேசியிடம் சென்றான். கேசியெனும் அசுரக் குதிரையோ வாயைத் திறந்துகொண்டு கண்ணன்மீது பாய்ந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் திருக்கையை நன்றாக நீட்டி அந்தக் குதிரையின் வாயினுள் கொடுக்க, அந்தக் கையைக் கடித்த அசுரக் குதிரையின் பற்கள் எல்லாம் தெறித்துக் கீழே விழுந்தன. உள்ளே நுழைந்த கை, வியாதியைப் போல வளர்ந்ததால், அசுரக் குதிரையின் வாய் கிழிந்தது கண்கள் பிதுங்கின. அது கால்களால் பூமியை உதைத்துக் கொண்டும் மல மூத்திரங்களை விட்டுக்கொண்டும் உடம்பு வியர்க்கப் பலமும் கர்வமும் ஒடுங்க நின்றது. கிருஷ்ணன் தன் கையைத் தளர்த்தி அந்தக்குதிரையை இரு பிளவுகளாகப் பிளந்தெறிந்தான். இவ்விதமாக கேசி என்ற அசுரனைக் கண்ணன் அழித்ததால் கோபாலர் துதித்து மகிழ்ந்தனர்.
அப்போது ஆகாய மார்க்கமாக வந்த நாரத முனிவர் கேசியசுரன் பட்ட பாடுகளைக் கண்டு மகிழ்ந்து சுவாமிக்கு விண்ணப்பஞ்செய்ததாவது. ஓ ஜகந்நாதா! சகல தேவர்களுக்கும் துன்பஞ் செய்த கேசியை, விளையாட்டாகவே நீ சங்கரித்தது மிகவும் நன்று இதுவரை நடந்திராத இந்த நராசுவ யுத்தத்தைக் காண்பதற்கே நான் சொர்க்கத்திலிருந்து இங்கு வந்தேன். மதுசூதனா! இந்த அவதாரத்தில் நீ செய்த திருவிளையாடல்கள் சிறப்புடையன. அந்தக் குதிரையரக்கன் கனைப்பைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் நடுங்குவார்கள். அந்தத் துஷ்டாத்மாவான கேசியை நீ சங்கரித்து அருள் செய்ததாலேயே உனக்குக் கேசவன் என்ற திருப்பெயர் வழங்கட்டும்! நாளைக்கு நடக்கவிருக்கும் கம்ச யுத்தத்திற்கு நான் மீண்டும் வருவேன். உக்கிரசேனன் மகனாகிய கம்சனும் அவனைச் சார்ந்த மற்றவர்களும் சங்கரிக்கப்பட்ட பிறகு தான் பூமி பாரத்தைக் குறைத்தவனாவாய்! கோவிந்தா! செய்வதெல்லாம் தேவ காரியங்கள் அதெல்லாம் உனக்கே தெரியும்! நீ பல்லாண்டு வாழ்வாயாக! நான் விடை பெறுகிறேன்! என்று சொல்லி விட்டு நாரதர் சென்றார். ஸ்ரீகிருஷ்ணன் கோபிய கோபாலரோடு, திருவாய்ப்பாடிக்குச் சென்றான்.

———————

17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்

முன்பு கம்சன் இட்ட கட்டளைப்படி அக்குரூரர் மதுரையிலிருந்து ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தம் மனதில் சிந்தித்துக்கொண்டே வந்தார். இந்த உலகத்தில் என்னைவிடப் புண்ணியவான் வேறு யாருமில்லை. ஏனென்றால் அமிசத்தினாலே இங்கு அவதரித்துள்ள சக்கரபாணியின் திருமுகத்தைத் தரிசிக்கப் போகிறேன். செந்தாமரைக் கண்ணனின் திவ்வியத் திருமுக மண்டலத்தைக் காணப்போவதால், இப்போதே என் பிறவி சாபல்யமாயிற்று. நான் பாக்கியசாலி! எவனை இந்திரன் நூறு யாகங்களினால் ஆராதித்து சகல தேவதைகளுக்கும் அதிபதியாக இருக்கும் மேன்மையைப் பெற்றானோ, அந்த ஆதியத்யாந்த ரஹிதனான ஸ்ரீ கேசவனை நான் இந்தக் கண்களினாலேயே காண்பேனன்றோ! சர்வாத்மாவாய் எல்லாமறிந்தவனாய்; சகல சொரூபியாய், சர்வ பூதங்களிலுமுள்ளவனாய், இத்தகையவன் என்று நினைக்கக் கூடாதவனாய் எங்கும் வியாபித்தவனாய் விளங்கும் பகவான் என்னோடு பேசும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமல்லவா? எவன் அனந்த சொரூபியாக இருந்துகொண்டு தனது திருமுடியினினாலே இந்தப் பூமியை அசையாதிருக்கும்படித் தாங்குகிறானோ, பூமிக்காக இப்போது இங்கே அவதரித்தருளின அவன் என்னை அக்குரூரர் என்று அழைப்பானல்லவா? தந்தை என்றும் பிள்ளை என்றும் நண்பன் என்றும் சகோதரன் என்றும் தாய் என்றும் பந்துக்கள் என்றும் பலவகைப் பற்றாக நிற்கிற எவனுடைய இந்த மாயையைக் காப்பதற்கு உலகம் திறமுள்ளதன்றோ. அந்த எம்பெருமானுக்கு நமோ நம லோகாதாரனாக இருக்கும் அவனிடத்தில் சேதனாசேதன ஸ்வரூபமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சங்கள் யாவும் எல்லா விதத்தாலும் நிலைபெற்றிருக்கின்ற சத்தியத்தால், அந்த எம்பெருமான் என்னைக் கம்சனைச் சேர்ந்தவன் என்று திருவுள்ளஞ் சீறாமல் என்னிடம் சாந்தனாக இருக்கவேண்டும். எவனை நினைத்தவுடனேயே புருஷன் சகல நன்மைகளுக்கும் உரியவனாகி விடுவானோ அந்த அஜனாயும் நித்தியனாயும் இருக்கிற ஸ்ரீ ஹரியை நான் அடைக்கலமாக அடைகிறேன்! என்று அக்குரூரர் யோசித்துக்கொண்டே, தேரோட்டிச் சென்றார்.
சூரியன் அஸ்தமிக்கச் சிறிது நேரம் இருக்கும் நேரத்தில் இடையர் குலத்தினர் வசிக்கும் திருவாய்ப்பாடியை அக்குரூரர் அடைந்தார். அங்கே பசுக் கறக்குமிடத்தில் கன்றுகளின் நடுவில், அன்றலர்ந்த கரு நெய்தல் மலர் போன்ற காந்தியும் மலர்ந்த செந்தாமரை போன்ற திருவிழிகளும், ஸ்ரீவச்சம் என்னும் மறுப்பொருந்திய திருமார்பும், திரண்டு நீண்ட திருத்தோள்களும், பரந்தும் உயர்ந்தும் விளங்கும் திருமார்பும் நீண்டு உயர்ந்த கூர்மை நாசியும், வெகு விசாலமான மந்தஹாசமுள்ள திருமுகத்தாமரையும், உயர்ந்தும் சிவந்தும் உள்ள நகங்களுடன் கூடித் தரையில் பதிந்த திருவடித் தாமரைகளும், பொன் நிறமான திருப்பரிவட்டங்களும், வனமாலையும் சாற்றிக்கொண்டு, வெண்தாமரையை சேகரமாகத் திருமுடியில் அணிந்திருப்பதாலே சந்திரன் உதித்த நீலமலை போன்றவனான ஸ்ரீகிருஷ்ணனை முதலில் அக்குரூரர் கண்டார். பிறகு கண்ணனின் பக்கத்தில், அல்லி மலர் போன்ற திருமேனியுடன் நீலநிறத் திருப்பரிவட்டங்களையணிந்து கொண்டு உயரமாகவும்; தாமரை மலர் போன்ற முகமலருடையவருமான பலபத்திரரையும் கண்டார். ஞானியான அக்குரூரர், அம்மகா புருஷர்கள் இருவரையும் கண்ட உள்ளக் களிப்பின் மிகுதியினால், முகம் மலர்ந்து உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடையப்பெற்று, இதோ ஈருருவாய் பிரிந்துள்ள வாசுதேவ பகவானுடைய அம்சம் எதுவுண்டோ அதுதான் உத்தம தேஜசு அடையத்தக்க மேன்மையான பொருள் இதைக் கண்டதால் எனது கண்கள் இரண்டும், மிகவும் சாபல்யமாயின. இந்த உடலும் அந்த எம்பெருமானின் அனுக்கிரகத்தாலே தீண்டப்பெற்றுச் சாபல்யமாகுமோ? எந்தத் திருக்கையின் விரல்பட்டவுடனேயே புருஷர் சகல பாபங்களும் நசிக்கப்பெற்றுக் குற்றமற்ற சித்தியைப் பெறுவார்களோ அந்தத் திருக்கைத் தாமரையை ஸ்ரீமானான அவ்வனந்தன் என் முதுகின் மீது வைக்கப் பெறுவானோ? இந்தச் சுவாமி, சுபாவத்தில் குற்றமற்றவனாக இருக்கின்ற என்னைக் கம்சனது சார்பில் இருப்பதால் குற்றமுடையவனாக எண்ணுவாரோ தெரிவில்லையே! அப்படியானால் இந்தப் பிறவியைச் சுடவேண்டும். ஏனென்றால் யோக்கியரால் அங்கீகரிக்கப்படாமல் துறக்கப்படுகின்றவனுக்குப் பிறவி ஏன்? நாம் இப்படி எண்ணக் கூடாது. ஏனென்றால் ஞான சொரூபியாய், சுத்த சத்வமயனாய் ராகத்வேஷாதி தோஷங்களின்றி எப்பொழுதும் தன் சொரூபம் விளங்க சகல புருஷருடைய இதயத்திலும் எழுந்தருளுகின்ற எம்பெருமானுக்குத் தெரியாதது ஒன்று உண்டோ ஆகையால் எனது இதயத்தில் கவடிருப்பதும் இல்லாததும் அவன் அறிவான். ஆகையால் என்னைத் திரஸ்காரம் செய்யாமல் திருவுள்ளம் பற்றுவான் எனவே பிரம்ம ருத்திராதியருக்கும் ஈஸ்வரனாயும் புரு÷ஷாத்தமனாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமாய் ஆதிமத்யாந்தமில்லாதிருக்கும் இந்த ஸ்ரீகிருஷ்ணனை நான் பக்தியால் மனவணக்கத்தோடு நெருங்கப் பெறுவேனாக என்று மனதால் சிந்தித்தார் மகாஞானி அக்குரூரர்.

————————-

18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!

மைத்ரேயரே! இவ்விதமாக அக்குரூரர் தம் மனதில் நினைத்து கொண்டு, கண்ணன் அருகே சென்று அடியேன் அக்குரூரன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் என்று சிரம் வணங்கித் தண்டமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணனும் புனித ரேகைகளுடன் விளங்கிய தன் திருகைகளால் அவரைத்தீண்டி எடுத்து, வெகு பிரீதியோடு நெருங்கித் தழுவியருளினான். பிறகு மூத்தவரான பலராமனையும் அக்குரூரர் வணங்கினார். அதன் பிறகு அம்மகா புருஷர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அக்குரூரரைத் தங்கள் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அக்குரூரர், அவர்களால் ÷க்ஷமாதிகள் விசாரிக்கப்பட்டார். பிறகு அவர்களுடன் உணவருந்திவிட்டு அக்குரூரர் உட்கார்ந்திருக்கும்போது அசுராம்சமான கம்சன் தன் தங்கை தேவகியையும் வசுதேவரையும் நிந்தித்துக் கொடுமைப்படுத்தியதையும், அவனது தந்தையான உக்கிர சேனனிடம் கம்சன் மனப்பகைமை கொண்டிருப்பதையும் எதன் நிமித்தமாகத் தம்மை கம்ஸன் அனுப்பி வைத்தானோ, அதையும் அவர்களிடம் விண்ணப்பம் செய்தார். அதைக்கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன் புன்முறுவலுடன் தானபதியே! நான் இவற்றை அறிவேன் இதற்குத் தக்கது எதுவோ அதைச் செய்யவும் நான் சித்தமாக இருக்கிறேன். மகாஞானியே! நீர் வேறு எதையும் நினைக்கவேண்டாம் இத்தோடு கம்சன் மடிந்தான் என்று நினையும் நானும் பலராமனும் நாளை உம்முடன் மதுரைக்கு வருகிறோம் யாதவரும் வேண்டும் உலுப்பைகளைக் கொண்டு நாளையே வருவார்கள். இன்றிரவு இங்கேயே தங்கியிருங்கள். இவ்விரவு முதல் மூன்று இரவுகளுக்குள்ளாக கம்சனையும் அவனைச் சார்ந்தோரையும் நாசஞ் செய்கிறேன்! என்று கூறியருளினான். பிறகு கோபால மூப்பர்களுக்கு அக்குரூரரைக்கொண்டும் தானும் கட்டளையிட்டு தமையனோடும் அக்குரூரரோடும் நந்தகோபனின் மாளிகையில் திருக்கண் வளர்த்தியருளினான். பிறகு பொழுது விடிந்ததும் பலபத்திரரும் கண்ணனும் அக்குரூரருடன் மதுரைக்குப் புறப்படத் தயாரானார்கள். அதைக்கண்ட கோபியரெல்லாம் மிகவும் கலங்கிக் கண்களில் கண்ணீர் ததும்ப கைகளில் கை வளைகள் நெகிழ, பெருமூச் செறிந்த வண்ணம் ஒருத்தியோடு ஒருத்தியாகப் பலவாறும் பேசிக்கொள்ளலானார்கள்.
ஓ தோழியரே, ஸ்ரீகோவிந்தன் மதுரைக்குப் போனால் மீண்டும் எப்போது இங்கு வருவான்? அந்த நகரத்திலுள்ள மங்கையரின் மதுரமான பேச்சுக்களாகிய அமுதத்தைப் பானஞ் செய்வானல்லவா? நகரப் பெண்களின் பேச்சைக் கேட்கும் அவன் மனம் மீண்டும் நாட்டுப்புறத்து கோபியரிடம் பற்றுமா? இந்த ஆயர்பாடிக்கே ஒரு சார வஸ்துவான இந்தக் கண்ணனை இங்கிருந்து நீக்கு கொடிய தெய்வம் கோபியரையெல்லாம் ஒருமிக்க மறுபடியும் ஓரடி அடித்ததென்றே நினைக்கவேண்டும். நகரப் பெண்களின் பேச்சிலே கருத்துக்கள் உள்ளடங்கிப் புன்னகையுடன் பொலிவுறும் அந்நகரத்துப் பெண்களின் நடையோ வெகு சுந்தரமாக இருக்கும். கடைக்கண் பார்வையோ மனதைக் கவர்வதாக இருக்கும். ஆகையால் இதுவரை அவற்றையெல்லாம் அறியாமல் நாட்டுப்புறத்தில் வாசஞ் செய்து கொண்டிருந்த இந்தக் கண்ணன் அங்கேபோன பிறகு, அந்நகரத்து நங்கையரின் மயக்க விலங்கினால் கட்டப்படுவானாதலால், மறுபடி அவன் இங்கே திரும்பி வருவானென்று எப்படிச் சொல்ல முடியும்? இதோ பாருங்கள்! அக்குரூரன் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கொடூரனாலே என்னமோ வஞ்சிக்கப்பெற்று, கண்ணன் தேர் ஏறி மதுரைக்குச் சென்றான். கொஞ்சமும் தயையில்லாத இந்தக் காதகன் நாம் எல்லாம் கண்ணனிடத்தில் அன்பினால் உருகுகிறோம் என்பதை அறியானோ அறிந்தவன் என்றால் நமது கண்களின் களிப்பாகிய கண்ணனை மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வானா? அடி இந்தக் கிருஷ்ணன் நமதன்பைச் சிறிதேனும் பாராமல் பலராமரோடு தேரில் ஏறிச் செல்கிறான். அவன் மிகவும் இரக்கமற்றவனாக இருக்கிறான். அவவைப் போகவிடாமல் தடுக்கச் சீக்கிரம் ஏதாவது முயற்சி செய்யுங்கள். ஓ பெண்களே! மாமன் முதலானவர்களுக்கு எதிரில் இதைப்பற்றிப் பேச முடியாதே என்பீரானால் விரகத்தீயில் நாம் வெந்து போகும்போது அவர்கள் என்ன செய்யமுடியும்? நந்தகோபன் முதலியோர்களும் கண்ணனுடன் கூடப்போக முயல்கிறார்களே தவிர ஒருவரும் அவனைத் தடுக்க முயலவில்லையே! தோழிகளே! மதுரைப் பெண்களுக்கு இப்பொழுது நற்பொழுது விடிந்துள்ளது. ஏனென்றால் அவர்களது கண்கள் எனும் வண்டுகள் இன்று கண்ணனின் முகாரவிந்தத்தைப் பானம் பண்ணுமல்லவா? கண்ணனுடன் செல்பவர்கள் மகா புண்ணியஞ் செய்தவர்கள்!
ஏனென்றால் அவனுடைய வடிவழகைப் பார்த்துக் கொண்டே போய் தங்கள் தேகம் புளகாங்கிதமடைய அவர்கள் மகிழ்வார்களல்லவா? மதுரை நகரப் பெண்கள் எந்த நற்கனவைக் கண்டார்களோ? ஐயோ இரக்கமற்ற தெய்வம் இந்தக்கோபியருக்கு ஒரு மகாநிதியைக் காட்டிய பிறகு கண்களைப் பறித்துக்கொண்டதே! நம்மிடம் கண்ணனுக்கு அன்பு தளரத் தளர அவன் அன்பைப் பெறாத நமது கைகளில் அணிந்த வளையல்களும் கூட நம்மோடு இருக்க விரும்பாமல் தளர்கின்றன. அந்த அக்குரூரன் குரூர ஹிருதயமுடையவன் அதனால் தான் தேரை மெதுவாகச் செலுத்தாமல் வெகு வேகமாகச் செலுத்தி நம் கண்ணனை வெகுவேகமாகக் கொண்டுபோகிறேன். பாருங்கள்! இப்படிப் புலம்பும் நம்மிடத்தில் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது! என்ன செய்வோம் தோழியரே! சிறிது நேரம் கண்ணன் நம் கண்களுக்குப் காணப்பட்டுக் கொண்டிருந்தான். பிறகு அவன் ஏறியிருந்ததிருத்தேர் மட்டுமே காணப்பட்டது. இப்போது அந்தத் தேரின் சக்கரங்களால் எழும்பிய துகள் மட்டுமே காணப்படுகிறது. ஒருகணத்தில் இதுவும் மறைந்து போகும். கண்ணனோ வெகு தூரம் சென்றுவிட்டான்! என்று கோபிகைகள் அன்போடு அவன் சென்ற திசையையே பார்த்து, புலம்பிக்கொண்டிருக்கும் போது கண்ணனோ ஆய்ப்பாடியின் எல்லையைத் தாண்டி யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
அப்போது நண்பகல் அக்குரூரர், ராம கிருஷ்ணர்களை நோக்கி, அடியேன் இந்த நதிக்குச் சென்று மாத்தியான்னிக ஆராதனத்தைச் செய்து வருகிறேன். அதுவரையில் சுவாமிகள் இங்கேயே எழுந்தருளியிக்க வேண்டுகிறேன் என்று விண்ணப்பஞ்செய்தார். பிறகு அக்குரூரர் நதியில் நீராடி ஆசமனாதிகளைச் செய்து மந்திர ஜெபத்தோடு பரப்பிரம்மத்தைத் தியானஞ் செய்தார், அப்படித் தியானம் செய்யும்போது, பல பத்திரர் சஹஸ்ரபணா மண்டல மண்டிதராய் மல்லிகை மாலை போன்ற வெண்மையான திருமேனியோடும் மலர்ந்த தாமரை போன்ற திருவிழிகளோடும் பரிமள வனமாலையும் நீலப்பட்டாடைகளும் திவ்விய கிரீட குண்டலங்களும் தரித்துக்கொண்டு வாசுகி முதலிய சர்ப்பரசர்களால் சேவிக்கப்பட்டு, யமுனை ஜலத்தில் விளங்கினார். அவரது மடியிலே கண்ணன் நீலமேகசியாமளனாய், செந்தாமரை போன்ற சிவந்த திருவிழிகளும் நான்கு திருத்தோள்களும் கம்பீரமான திருமேனியும் பிரகாசிக்கும் வண்ணம் திருவாழி முதலிய திவ்விய ஆயுதங்களையும் திவ்விய பீதாம்பரங்களையும் வனமாலையையும் தரித்துக்கொண்டு வானவில்லினாலும் மின்னற் கொடிகளாலும் விசித்திரமாகப் பிரகாசிக்கும், கருமேகம் போலத் தோன்றினார். அவரது திருமார்பில் ஸ்ரீவச்சம் என்ற மறுப்பொருந்தியிருக்க திருக்காதுகளில் மணிமயமான மகர குண்டலங்கள் குலுங்க, திருமுடியில் வெள்ளைத் தாமரை போன்ற கிரீடமும் இலங்க, யோகசித்தி பெற்று சகல குறைகளுமற்ற சனக சனந்தனாதி முனிவர்களால் தியானஞ் செய்ய, அலங்காரமாக வீற்றிருந்தார். அந்தக் காட்சியை அக்குரூரர் கண்டதும் யமுனை நதியில் ஸ்ரீராம கிருஷ்ணர்களே இப்படி எழுந்தருளியிருக்கிறார்கள் என்று தெரிந்து இவ்வளவு சீக்கிரம் அவ்விருவரும் எப்படி இங்கே எழுந்தருளினார்கள் என்று வியந்து, அவர்களைக் கேட்க வாயெடுத்தார். அவ்வளவிலே அவருக்கு வாய் எழுப்பவொட்டாமல் சுவாமி ஸ்தம்பனம் செய்துவிட்டதால் ஒன்றும் சொல்ல முடியாமல், அக்குரூரர், நதியைவிட்டு கரைக்கு வந்தார். திருத்தேரைப் பார்த்தார். அங்கு ராமகிருஷ்ணர்கள் இருவரும் முன் போலவே மனித அவதாரமாகக் காத்திருப்பதைக் கண்டார். மீண்டும் அக்குரூரர் யமுனைக்கு ஓடினார். அங்கும் முன்பு கண்ட தெய்வீகக் காட்சியையே கண்டார். உடனே அக்குரூரர் பரமார்த்தத்தை அறிந்து, எல்லாம் அறிந்த எம்பெருமானான ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்கலானார். எப்பொழுதும் சத்தாக இருக்கும் ரூபமுள்ளவராயும் சிந்திப்பதற்கும் அரியதான மகிமையுள்ளவராயும் அநேக ரூபியாயும் ஒரே ரூபியாயும் இருக்கும் பரமாத்மாவுக்கு நமோ நம என்று தண்டம் சமர்ப்பிக்கிறேன்.
ஓ, மகாப் பிரபுவே! ஞானங்களுக்கு எல்லையாகவும் அறியப்படாத அளவுள்ளவனாகவும், பிரகிருதிக்கு மேம்பட்டவனாகவும் இருக்கும், உன்னை வணங்குகிறேன்! ஓ அளவில்லாமையினாலே சொல்லக்கூடாத குணமுள்ள ஆன்மாவே! சொல்லவொண்ணா உபய விபூதியாலுண்டான ஆனந்தமுள்ளவனே! அளவில்லாத திருநாமங்களுள்ள உன்னைப் பணிகிறேன். பிரம்மம் நீ! எந்தப் பொருளையும் நாமரூப கற்பனைகளில்லாமல் அறியக் கூடாமையால் நீ கிருஷ்ணன் அச்சுதன். அனந்தன், விஷ்ணு முதலிய திருநாமங்களால் துதிக்கப்படுகின்றாய்! ஓ அனந்தா! ஓ சர்வேசுவரா! சூரிய கிரண ரூபியாக இருந்து நீயே பிரபஞ்சத்தைப் படைக்கிறாய். ஆகையால் இந்தப் பிரபஞ்சமெல்லாம் உனக்குச் சேஷ பூதமாக இருக்கிறது. பிரணவபிரதிபாத்தியனான ஸ்ரீபரமாத்மா! உன்னைப் பணிகிறேன். சங்கர்ஷணனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். பிரத்யும்னனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அநிருத்தனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் இவ்விதம் சதுர் வியூக ரூபியான உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்று அக்குரூரர் எம்பெருமானைப்போற்றினார்.

—————-

19. மதுரையை அடைதல்

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! இவ்வாறு யாதவ பாகவதரான அக்குரூரர் யமுனை நதி நீரில் எம்பெருமானைச் சேவித்துத் துதித்து பரப்பிரம்மரூபமான ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே தன் மனதைச் செலுத்தி நெடுநேரம் தியானித்து பிறகு அந்த நிஷ்டையைவிட்டு, கரையேறித் தம்மைக் கிருதகிருத்தியனாக நினைத்துக் கொண்டு தம்முடையதேரினருகே வந்தார். அங்கே மூத்த நம்பியும் இளைய நம்பியும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரது கண்கள் மலர்ந்தன அப்போது கிருஷ்ணன் அவரை நோக்கி அக்குரூரரே ! நீர் யமுனை ஜலத்திலே ஏதோ ஒரு ஆச்சரியத்தைக் கண்டீர் போலத் தோன்றுகிறது. ஏனென்றால் உம்முடைய கண்கள் வியப்பினால் மலர்ந்துள்ளன என்று சிரித்தான். அதற்கு அவர் அச்சுதா! அடியேன் ஜலத்தின் நடுவேயாதொரு அதிசயத்தைக் கண்டேனோ அதுவே இவ்விடத்திலும் ரூபீகரித்து என் எதிரில் இருக்கக் காண்கிறேன் ஸ்ரீகிருஷ்ண பகவானே! அந்த உலகம் எல்லாம் எவனுடைய மகா ஆச்சரிய ஸ்வரூபமோ அத்தகைய திவ்யாச்சரிய சேஷ்டிதனான உன்னோடு நான் சேர்ந்திருக்கும்போது என்ன ஆச்சரியங் கண்டாய் என்று என்னை ஏன் கேட்டருள்கின்றீர்? இனி நாம் மதுரைக்குப் போவோம்!
மதுசூதனா! இப்போதும் அடியேன் கம்சனுக்கு அஞ்சுகிறேன் சீச்சீ! அன்னியனுடைய பிண்டத்தினால் பிழைப்பவனுடைய பிறவியைச் சுடவேண்டும்! என்று சொல்லி வாயுவேகமுடைய தமது குதிரைகளை வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு மதுரை மாநகரை வந்தடைந்தார். அங்கு வந்ததும் அவர் ஸ்ரீராம கிருஷ்ணர்களை நோக்கி, மகா வீரர்களே! இனி, நீங்கள் இறங்கித் திருவடிகளால் நடந்துசெல்லவேண்டும். அடியேன் ஒருவனே தேர்மேல் ஏறிச்செல்வேன். முதலில் உங்கள் தந்தையான வசுதேவருடைய திருமாளிகைக்கு நீங்கள் செல்லவேண்டாம். ஏனென்றால் உங்கள் நிமித்தமாகவே அவரைமகாப் பாதகனான கம்சன் துன்பப்படுத்துகிறான்! என்று விண்ணப்பித்துவிட்டு, மதுரைக்குள் பிரவேசித்தார். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர்கள் இருவரும் இராஜ வீதி மார்க்கமாக நகரத்து மங்கையரும் ஆடவரும் ஆனந்தமாய் கண்களால் சேவித்து நிற்க இளமதயானைகள் போல் வீதியில் விளையாடிக் கொண்டே சென்றார்கள். அப்போது அந்த வழியிலே குசும்பாதி சாயம்போட்டு ஆடைகளைச் சீர்ப்படுத்தும் வண்ணான் ஒருவனை அக்குமாரர்கள் கண்டு அவனிடம் தங்களுக்கு ஏற்ற நல்ல அழகான ஆடைகளைத் தரவேண்டும் என்று யாசித்தார்கள். அந்த வண்ணானோ கம்சனிடம் பணியாற்றியதனால் மிகவும் செருக்குற்று அவர்களை இழிவாகப் பேசினான். அதைக்கேட்டதும் கண்ணன் கோபங்கொண்டு அந்தக்கொடியவனை கையினால் ஓர் அறை அறைந்து வீழ்த்தினார். பிறகு இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களுடன் வேண்டிய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு பூமாலைக்காரனின் மாளிகைக்குச் சென்றார்கள்.
மைத்ரேயரே ! பீதாம்பர நீலாம்பரங்களைத் தரித்து, அதிக அழகுடன் விளங்கும் ராமகிருஷ்ணர்கள் இருவரையும் அந்த பூமாலைக்காரன் கண்டு இவர்கள் யார்? இவர்கள் யாருடைய பிள்ளைகள்? என்று யோசித்தான். பிறகு, இவர்கள் மனிதரல்லர் தேவர்களே இங்கு எழுந்தருளினார்கள் என்று நினைத்தான். பின்னர் ஸ்ரீராம கிருஷ்ணர்கள் இருவரும் அவனை நோக்கி எங்களுக்கு நல்ல மலர் மாலைகளைக் கொடு என்று யாசித்தார்கள். உடனே அவன் அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து தெய்வீகமானவர்களே! அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டி, அடியேனது குடிசைக்கு எழுந்தருளினீர்களே! அடியேன் தன்யனானேன். நியமனப்படித் தங்களை அர்ச்சிக்கிறேன்! என்று சொல்லி மகிழ்ந்து அவர்கள் திருவுள்ளம் வியப்ப சில மலர்களைச் சமர்ப்பித்து சுவாமி இவை முன்னவையிற்சிறந்தவை; இவை மேலும் மிகச் சிறந்தவை! என்று மேலும் மேலும் மிகவும் மணமுள்ள அழகான மலர்களைக் கொடுத்தான். சுகந்தமும் சுத்தமுமான அம்மலர்களை ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மனமுவந்து தங்கள் திருமார்பில் அணிந்து கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர், அவனுக்கு வரங்களைப் பிரசாதிக்க எண்ணி, ஓ யோக்கியனே! என்னைப் பற்றியிருக்கும் திருமகன் உன்னை ஒருபோதும் விடாமல் அனுக்கிரகம் செய்து கொண்டிருப்பாள். ஓ சவுமியனே! உனக்குப் பலஹானியோ, தனஹானியோ வரமாட்டாது காலமுள்ளளவும் உன் சந்ததி நசிக்காமல் இருக்கும். இப்படியாக நீ எனது அனுக்கிரகத்தால் பெரும் போகங்களையெல்லாம் அனுபவித்து இறுதியில் என் ஸ்மரணமும் அடைந்து திவ்வியலோகத்தை அடையக்கடவாய் உனக்கு ஆதி பவுதிகமான தோஷங்கள் வருவதில்லை. மகானுபாவனே! சூரியன் உள்ள வரைக்கும் எனக்கு இத்தகைய சுகங்கள் உண்டாகும் என்று அனுக்கிரகம் செய்து அவனால் விசேஷமாக ஆராதிக்கப்பட்டான். பின்னர் பலபத்திரரோடு, அம்மாலிகனுடைய மாளிகையிலிருந்து கிளம்பிச் சென்றான்.

——————

20. அழகான கூனியும் கம்சவதமும்

பூமாலைக்காரனின் மாளிகையிலிருந்து புறப்பட்ட ராமகிருஷ்ணர்கள் இருவரும், ராஜவீதி வழியாகச் செல்லும்போது, வழியிலே மங்கைப் பருவமுடைய கூனி ஒருத்தி கையிலே சந்தனக்கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் புன்முறுவலுடன், அடி நீலோத்பலம் போன்ற கண்களையுடையவளே! யாருக்கு இந்த வாசனைப் பூச்சைக் கொண்டு போகிறாய்? என்று கேட்டான். அதற்கு அவள் அழகனே! நான் நைகவக்கிரை என்றும் கம்ஸனால் சிந்தனாதிப் பூச்சுக்கள் செய்யும் வேலையில் வைக்கப்பட்டவள் என்றும் நீ ஏன் அறியவில்லை கம்சனுக்கு சந்தனம் யார் பூசினாலும் பிடிக்காது. நான் அரைத்துச் சேர்க்கும் பூச்சே அவனுக்குப் பிரியமானது ஆகையால் கம்சனின் அனுக்கிரகம் என்னும் தனத்துக்கு முக்கிய பாத்திரமாக இருக்கிறேன்! என்றாள். அதைக்கேட்டுக் கொண்டு கிருஷ்ணன் மேலும் புன்முறுவலுடன் அவளை நோக்கி, அடி இளம் பெண்ணே! இதோ நீவைத்திருக்கும் இந்தப் பூச்சு வாசனை கூட்டியதுதானே தவிர இயற்கையான மணமுடையதல்ல! மற்றொன்றோ ராஜசமுள்ள அரசர்களுக்குத் தகுமேயன்றி சாதாரணமானவருக்குத் தக்கதன்று இதுவோ மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. அழகிய முகமுடையவளே! ஆகையால் எங்களது திருமேனிக்கு ஏற்ற இதை எங்களுக்கே கொடுக்கவேண்டும்! என்று கேட்டான். அதற்கு அழகான கூனி ஒப்புக்கொண்டு அன்போடு அவர்களது திருமேனிக்கேற்ற திவ்வியமான பூச்சைச் சமர்ப்பித்தாள். ஸ்ரீராமகிருஷ்ணர் இருவரும் பத்திரபங்கரசனாவிதமாக அந்தப் பூச்சைத் தங்கள் திருமேனிகளில் தடவிக்கொண்டார்கள். பிறகு கிருஷ்ணன் அந்தக்கூனியின் கோணலை நிமிர்த்தும் வகையையும் அறிந்தவனாகையால் அவளிடம் அன்புகொண்டு தனது நடுவிரலும் அதன் முன் விரலும் கொண்ட நுனிக் கையினால் அவளது மோவாய்க்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளால் அவளது பாதங்களை அமுக்கி இழுத்துத் தூக்கி அவளை நிமிர்த்தியருளினான்.
உடனே அவளுடைய கோணல் நிமிர்ந்தது, அவள் பெண்களில் சிறந்தவளானாள்! அவள் கண்ணனின் பரிவட்டத்தைப் பிடித்துக்கொண்டு நீ என் மாளிகைக்கு வா! என்று அழைத்தாள். அதைக் கண்ட கண்ணன் பலராமரைப் பார்த்த வண்ணம் சிரித்துக்கொண்டே, குற்றமற்ற அந்த நைகவக்கிரையை நோக்கி, பெண்ணே! அப்படியே ஆகட்டும்! பிறகு ஒரு சமயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்து உரக்கச் சிரித்தான். இவ்வாறு நம்பிகள் இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களையணிந்து விசித்திரமான சந்தனப் பூச்சோடும் பலவிதமான திவ்விய மலர் மாலைகளையும் அணிந்துகொண்டு விற்கள் வைத்திருந்த ஆயுத சாலைக்குச் சென்றார்கள். அங்கிருந்த காவற்காரர்களை கண்ணன் ஏறிட்டு நோக்கி, காவல்காரர்களே! இந்தத் தனுர்யாகத்துக்கு உத்தேசித்து வைத்துள்ள வில் எங்கே இருக்கிறது? என்று கேட்டான். அவர்கள் அதைத் தெரிவித்தார்கள். உடனே, கண்ணன் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றினான். நாணேற்றியதும் அந்த வில் முறிந்து அந்த மதுரை நகரமெங்கும் செவிடுபடும்படி ஓசையிட்டது வில் ஒடிந்ததும் காவற்காரர்கள் ஸ்ரீராம கிருஷ்ணர்களை எதிர்க்க வந்தார்கள். அவர்களை அம்மகா புருஷர்கள் இருவரும் துவம்சம் செய்து, ஆயுதச் சாலையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இந்நிலையில் கம்ஸனோ தன் மதுராபுரிக்கு அக்குரூரர் திரும்பி வந்ததையும் வில் முறிந்ததையும் அறிந்தான். அவன் சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களை வரவழைத்துச் சொல்லலானான்.
மல்லர்களே, கேளுங்கள்! நாம் எதிர்பார்த்திருந்த இடைப்பயல்கள் வந்துவிட்டார்கள் நீங்கள் என் எதிரில் அவர்களோடு மல்யுத்தம் செய்து அவர்களைக்கொன்று விடவேண்டும். அவர்கள் என் உயிரை வாங்கவே பிறந்தார்களாம். மகாபலசாலிகளே நீங்கள் அவர்களை மல்யுத்தத்தில் வென்று எனக்கு மகிழ்ச்சியளித்தால், நீங்கள் விரும்பும் பொருள்களையெல்லாம் தருவேன். என் எதிரிகளான அவ்விரு இடைச்சேரிப் பயல்களையும் நீங்கள் நியாயமாகவோ, அல்லது அநியாயமாகவோ கொன்றே தீர வேண்டும். அப்படிச் செய்தால் இந்த ராஜ்யத்தை நீங்கள் என்னுடன் சமானமாக அனுபவிக்கலாம் என்று கம்ஸன் தன் இரு மல்லர்களுக்கும் கட்டளையிட்டான். பிறகு அவன் தன் யானைப் பாகனையும் அழைத்து, யானைப்பாகனே! நீ நமது குவலயாபீடம் என்ற பெரிய யானையை இந்த சபா மண்டபத்தின் முன்னால் நிறுத்தி வைத்து, அந்த இடைப் பயல்கள் இங்கு போர் செய்ய வரும்போது, யானையைக் கொண்டே அவர்களைக் கொல்விக்க வேண்டும்! என்று கட்டளையிட்டு சதபயில் போடவேண்டிய மஞ்சங்கள் செவ்வனே போடப்பட்டிருப்பதைப் பார்வையிட்டான். பிறகு தனக்கு மரணம் கிட்டியிருப்பதை உணராமல் பொழுது விடிவதை எதிர்பார்த்திருந்தான்.
மறுநாள் பொழுது விடிந்ததும், மதுரை நகர மக்கள் சபைக்கு வந்து அவரவர் உட்காரத்தக்க மஞ்சங்களில் உட்கார்ந்தார்கள். அரசர்கள் ராஜ மஞ்சங்களில் உட்கார்ந்தனர். பின்னர் கம்சன் மல்யுத்த வீரர்களுடன் உயர்ந்ததொரு மஞ்சத்தில் அமர்ந்தான். அந்தப்புர மங்கையரும் பட்டணத்துப் பாவையரும் வேசியரும் அவரவருக்குரிய மஞ்சங்களில் உட்கார்ந்தனர். நந்தகோபர் முதலியோர் தமக்குரியவற்றில் அமர்ந்தனர். அக்குரூரரும் வசுதேவரும் தனித்துப் பேசிக்கொள்வதற்காக ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார்கள். மகனிடத்தில் பேரன்புடைய தேவகியானவன் முடிவு காலத்திலாவது தன் அன்பு மகனின் முகத்தைப் பார்க்கலாம் என்று பட்டணத்து மங்கையரின் நடுவே உட்கார்ந்திருந்தாள். இன்னிசைக் கருவிகள் முழங்கலாயின. மல்லன் சாணூரன் மிகவும் குதித்துக் கொண்டிருந்தான் மற்றொரு மல்லனான முஷ்டிகனும் தோள் தட்டிக் கொண்டிருந்தான் மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தனர். மாவீரராயும் பாலகராயும் விளங்கும் பலராம கிருஷ்ணர் இருவரும் புன்னகையோடு சபாமண்டப வாயிலை அடைந்தார்கள்.
அப்போது கம்சனின் கட்டளைப்படி யானைப்பாகனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்ற யானை மிக்க கோபத்தோடு அவ்விரு இளைஞரையும் கொல்வதற்கு ஓடிவந்தது; அத்தருணத்தில் அந்தச் சபையின் நடுவே ஒரு ஹாஹாகாரம் உண்டாயிற்று. அப்போது பலராமர் கண்ணனை நோக்கி பகைவனால் ஏவப்பட்ட இந்த யானையைக் கொல்லாமல் இருப்பது நியாயமல்ல அதை அவசியம் கொன்றேயாக வேண்டும் என்றான். உடனே சத்துரு நாசஞ் செய்வதில் வல்லவனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சிம்ம நாதஞ் செய்து ஐராவதத்துக்கு ஈடான பலமுடைய அந்த யானையின் துதிக்கையைத் தன் திருக்கையினால் பிடித்து இழுத்துச் சுழற்றினான். சர்வேசுவரனாக இருந்தும் கண்ணன் திருவவதாரத்திற்கேற்ப, அந்த யானையுடன் நெடுநேரம் போரிட்டான். அதன் தந்தங்களின் நடுவே நின்று விளையாடி, பிறகு தன் வலது கையினால் அதன் இடதுபுறத் தந்தத்தைப் பிடுங்கி, அதன் மேலிருந்த யானைப் பாகனை அடித்தான். அந்த அடியினால் யானைப் பாகனின் தலை பல துண்டுகளாகச் சிதறியுடைந்தது. உடனே மூத்த நம்பியான பலராமன் அந்த யானையின் வலது தந்தத்தைப் பிடுங்கி பக்கத்திலிருந்த யானைக்காப்போரை அடித்துக் கொன்றுவிட்டு, வேகமாக எழும்பித்தாவி, தன் இடது திருவடியால் அந்த யானையின் மத்தகத்தின் மீது ஓங்கி உதைத்தான். இவ்விதம் பலராமன் விளையாட்டாக உதைத்தவுடனேயே அந்தக் குவலயாபீடம் என்ற யானையானது வஜ்ஜிராயுதத்தினால் அடிபட்ட பருவத்தைப் போலக் கீழே விழுந்து இறந்தது. இவ்வண்ணம் புருஷசிரேஷ்டர்கள் இருவரும் இந்த யானையைப் பாகனோடு சங்கரித்து விட்டு அதன் மதநீராலும் இரத்தத்தாலும் பூசப்பட்ட திருமேனியுடையவர்களாய் அதன் தந்தங்களாகிய திவ்விய ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு சிங்க ஏறுகளைப் போலச் சபாமண்டபத்துக்குள் நுழைந்தார்கள்.
உடனே, சபையில் ஹாஹாகாரம் எழும்பியது. அங்கிருந்த நகரத்தார்கள் யாவரும் வியப்புடன் பார்த்தார்கள். இவனன்றோ முன்பு குழந்தைகளைக் கொன்று கொண்டிருந்த பூதனை அரக்கியைக் கொன்றவன்! இவனன்றோ மருத மரங்களை முறித்தவன்! இவனல்லவா காளிங்கன் என்ற மகாசர்ப்பத்தின் மீதேறி நர்த்தனஞ் செய்த சிறுவன்! ஏழு நாட்கள்வரை கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்துக் கோகுலம் காத்தவனும் இவனேதான்! பாருங்கள்! பெண்களின் மனங்களையும் கண்களையும் மகிழ்வித்து விளையாடிக்கொண்டே போகிற இந்த கிருஷ்ணனுக்கு முன்னே போகிறவன் அவன் தமையன் பலபுத்திரனான பலராமன் புராணார்த்தம் தெரிந்த பண்டிதர்கள் அமுங்கியிருந்த யாதவவம்சத்தை ஒரு கோபாலன் தலையெடுக்கச் செய்வான் என்று சொல்வது இந்தக் கிருஷ்ணனையே போலும்! யாவற்றுக்கும் உற்பத்தி ஸ்தானமான ஸ்ரீவிஷ்ணு அம்சமாய் பூமி பாரம் தீர்க்க அவதாரஞ் செய்தவன் இவனே! என்றெல்லாம் ஸ்ரீகிருஷ்ணனையும் பலராமனையும் யாதவரும் நகர மக்களும், வர்ணித்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது தேவகியின் ஸ்தனங்களின்றும் பால் பெருகி, மார்பு திடுக்திடுக் கென்று துடித்தன. வாசுதேவரோ, தன் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்ததால் இளமையாகக் காணப்பட்டார். அந்தப்புரத்து மங்கையர் கண்ணனைக் கண்டு மலர மலர விழித்து ஒருத்தியோடு ஒருத்தி பலவாறும் பேசிக் கொண்டார்கள். தோழியரே! அதோ கண்ணனின் திருமுகத்தைப் பாருங்களடி! மிகவுஞ் சிவந்த கண்கள் யானையோடு போரிட்டதால் உண்டான வியர்வைத் துளிகள்! சரத்காலத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் பனித்துளிகளோடு இருப்பது போலல்லவா தோன்றுகிறது. பெண்கள் நாயகமே! ஸ்ரீவச்சம் என்ற மருப்பொருந்தி, பகைவரின் பலத்தைப் போக்கும்படியான கற்பாறை போன்ற கண்ணனின் திருமுகத்தைப் பாரடி? திரண்ட திருத் தோள்களைப்பாரடி! அந்தக் கண்ணன் மட்டுமா? முன்னே போகிற பலராமரின் சிரிப்பிலே தான் எத்தனைக் கவர்ச்சியடி!
அதோ பாருங்களடி! கிருஷ்ணன் மல்யுத்தஞ் செய்ய சாணூரனோடு சேருகின்றான். இந்த அரசவையில் நியாயமறிந்துவர்கள் இல்லையா? யவுவனத்தை நெருங்கும் சுகுமார மேனியுடைய கண்ணன் எங்கே? வஜ்ராயுதம் போன்ற கடின தேகமுடைய மகாசூரன் எங்கே? இவ்விருவரையும் போரிடச்செய்து வேடிக்கை பார்ப்பது சபையோருக்கு நியாயமா? என்று இவ்விதமாக நகரத்துப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் வஸ்திரங்களை இறுக வரிந்து கட்டிக்கொண்டு பூமியதிர ஜனங்களின் நடுவே குதித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அப்படியே தோள் தட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் குதித்ததால் பூமியானது பிளந்து போகாமல் இருந்ததே விந்தையாகத் தோன்றியது! பிறகு ஸ்ரீகிருஷ்ணன் மல்லனான சாணூரனோடும், பலபத்திரன் மல்லனான முஷ்டிகாசுரனுடனும் போர் செய்யத்துவங்கினார்கள். அத்தனைப் பெரிய கூட்டத்திலே இவர்களிடம் யாதொரு ஆயுதமுமில்லாத நிலையில் சன்னிபாதம் என்கிற முதலில் கைகொடுத்துப் பஞ்சாப் போடுவதனாலும் அவதூதம் என்ற புறங்கையால் கீழே தள்ளுவதாலும், முஷ்டி என்ற கைப்பிடி இடித்தலினாலுங் கீலநிபாதம் என்ற முழங்கை கணைக்கைகளைக் கொண்டு இடித்தலினாலும் வச்ர நிபாதம் என்ற கையோரங்களால் இடிப்பதனாலும் மத்திமை, அனாமிகை என்ற விரல்களின் நடுவே கட்டை விரல் வைத்த முஷ்டியினால் இடித்தலினாலும், பரதோத்தூதம் என்ற காலால் தூக்கி எரிதலினாலும் பிரமிருஷ்டம் என்ற உடம்பையெல்லாம் இறுகப் பீடித்துத் தள்ளியுழக்குவதினாலும், மிக்க கொடிய பயங்கர மற்போர் நிகழ்ந்தது, அந்தப் போரில் சாணூரன் கண்ணனோடு எவ்வளவுகெவ்வளவு வேகமாகப் பொருந்தினானோ அவ்வளவுக்கவ்வளவு பலவீனமடைந்தான் கண்ணன் சர்வ சக்தனாக இருந்ததாலும் கோபத்தாலும் அந்தச் சாணூரனோடு விளையாட்டுப் போலவே போர் செய்து கொண்டிருந்தான்.
அப்போது சாணூரனுக்குப் பலம் குறைவதையும் கிருஷ்ணனுக்கு பலம் வளர்வதையும் கண்ட கம்சன் மிகவும் கோபங்கொண்டு வாத்திய முழக்கத்தை நிறுத்தம்படிக் கட்டளையிட்டான். வாத்தியங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் வானில் தேவ வாத்தியங்கள் முழங்கலாயின. தேவர்கள் வானிலிருந்து ஸ்ரீகேசவா! ஸ்ரீகோவிந்தா! சாணூரனை வெல்வாயாக நீ வெற்றியடைவாயாக என்று வாழ்த்தினர். நெடு நேரம் போர் புரிந்து கொண்டிருந்த கண்ணன் அந்த அசுரனைச் சங்கரிக்க எண்ணி அவனைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றித் தரையில் ஓங்கி அறைந்தான். அவனுக்கு கண்ணன் பூற்றும் போதே உயிர் போய்விட்டது! தரையில் அறைந்ததும் அவனுடல் துண்டம் துண்டமாகப் பிய்ந்து பூமியில் இரத்தச் சேற்றை உண்டாக்கியது. அதுபோலவே பலராமனும் முஷ்டிகனை தன் முஷ்டியால் சிரத்திலிடித்தும் முழங்காலால் மார்பில் இடித்தும் தரையில் தள்ளி உயிரிழந்த அவனை உதைத்துத் தள்ளினான். அவ்விரு மல்லர்களும் மடிந்தவுடன் தோசலகன் என்பவன் போருக்கு வந்தான். அவனையும் ஸ்ரீகிருஷ்ணன் தனது இடது கை முஷ்டியினால் இடித்துத் தரையில் வீழ்த்தினான். இவ்வாறு சாணூரன், முஷ்டிகன், தோசலகன் ஆகிய மூவரும் வதைக்கப்பட்டதும் மற்ற மல்லர்கள் பறந்தோடிப் போனார்கள். பிறகு தங்களோடு போர் செய்ய ஆளில்லாததால் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்குச் சமவயதுள்ள இடைப் பிள்ளைகளை வலுவில் இழுத்து வந்து குதித்து விளையாடி ஆனந்தக் கூத்தாடினார்கள். இதையெல்லாம் கண்ட கம்சனின் கண்கள் சிவந்தன! அவன் அங்கு இருந்த போர் வீரரையழைத்து சேவகரே! இந்த இடைப் பிள்ளைகளைச் சபைக்கு வெளியே இழுத்துச் செல்லுங்கள். நந்தகோபனைப் பிடித்து விலங்கிடுங்கள். வசுதேவனை நல்ல வயதுடையவர்க்குச் செய்யத்தக்க தண்டனை செய்து வதையுங்கள். இதோ கிருஷ்ணனோடு சேர்ந்து துள்ளுகிறார்களே, அந்த இடையர் கூட்டத்தினரின் மாடுகளையும் மற்றுமுள்ள பொருள்களையும் பறிமுதல் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே வேகமாகக் கம்சனின் மஞ்சத்துக்குத் தாவி அவனது கிரீடஞ் சுழன்று கீழே விழ அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்துத் தரையில் தள்ளி அவன் மீது தாவி விழுந்தான்.
மைத்ரேயரே! சர்வ லோகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீகிருஷ்ணன் அவன்மீது வீழ்ந்ததும் அந்தப் பாரம் தாங்கமாட்டாமலேயே கம்ஸ மகாராஜன் உயிர் இழந்தான்! அவன் உயிர் இழந்ததும் ஸ்ரீமதுசூதனன் அவனது தலைமயிரைப்பற்றி, அவனது உடலை அரங்கின் நடுவே இழுத்தான். பாரமுள்ள சரீரத்தை இழுத்ததால், தண்ணீர் வெள்ளம் ஓடி அறுத்தாற் போன்று அவ்விடத்தில் ஓர் அகழி உண்டாயிற்று. கம்ஸன் வதைக்கப் பட்டதைக் கண்ட அவன் தம்பி சுநாமா என்பவன் கோபத்தோடு கண்ணன் மீது பாய்ந்தான். அவனை மூத்த நம்பியான பலராமன் விளையாட்டாகவே சங்காரஞ் செய்தான். இவ்விதம் மதுராபுரி அரசனான கம்சன் கண்ணனால் சங்கரிக்கப்பட்டதைக் கண்டு மக்களும் தேவரும் மகிழ்ந்தனர். கிருஷ்ணன் பலராமனோடு சென்று தந்தை வசுதேவரையும் தாயான தேவகியையும் பணிந்தார்கள். அவர்களும் ஸ்ரீராமகிருஷ்ணர்களைப் பாராட்டித் துதித்தனர்.

——————

21. ராஜசபையும் குருதக்ஷணையும் கொடுத்தல்-

தேவகி வசுதேவர்கள் துதிப்பதைக் கண்ட கண்ணன் யாதவ சமூகத்தை மோகிப்பிக்கும் பொருட்டு தன் தாய் தந்தையரை நோக்கி அம்மா! உங்களைக் காண பலநாட்கள் ஆசைப்பட்டும் நானும் பலராமனும் கம்சனது பயத்தாலேயே காணாமலிருந்தோம். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யாமல் ஒழியும் காலம் பயனற்றது, குருவுக்கும் தேவருக்கும் பிராமணருக்கும் தாய் தந்தையருக்கும் பணிவிடை செய்பவரின் காலம்தான் பயனுள்ளது என்று சொல்லித்தன் தமையனோடு தாய் தந்தையரை வணங்கினான். இந்நிலையில் கம்சனது பத்தினிகளும் தாய்மாரும் கம்சனின் உடலைச் சூழ்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களிடம் இரக்கம் கொண்டு கண்களில் நீர் ததும்ப அவர்களைப் பலவகையாகத் தேற்றியருளினான் பிறகு புத்திரனையிழந்த உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து மதுரையில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தருளினான்.
உக்கிரசேனன் கம்சனுக்கும் மற்ற இறந்தோருக்கும் உரிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்து வந்தான். அப்போது கண்ணன் உக்கிரசேனனை நோக்கி, மகாப்பிரபுவே! செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சங்கையின்றி எனக்குக் கட்டளையிடுங்கள். இந்த யதுவம்சம் யயாதியின் சாபத்தால் ராஜ்ய பரரத்துக்கு யோக்கியம் இல்லாது இருப்பினும் இப்போது நான் உமக்குச் சேவகனாயும் நீர் சகல அரசர்களுக்கும் மேலானவனாகவும் இருப்பதால், எந்த அரசரையும் நீங்கள் கட்டளையிடலாம் ஆனால் அற்ப அரசர்களுக்கு கட்டளையிட்டு என்ன பயன்? தேவர்களுக்குக் கட்டளையிடுங்கள்! என்று சொல்லி வாயுவை நினைத்தான். வாயுவும் வந்தான். மனித அவதாரம் செய்திருந்த கண்ணன் வாயுவே! நீ இந்திரனிடம் சென்று, இந்திரா! நீ கர்வப்பட்டது போதும் இனி கர்வப்படாதே உக்கிரசேன மன்னனுக்கு சுதர்மை என்ற சபா மண்டபத்தைக் கொடுத்துவிடு! என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்வதாக அவனிடம் சொல்வாயாக. சுதர்மை என்ற சபாமண்டபம் நமது அரசருக்கு ஏற்றது அந்தச் சபாமண்டபத்தையே நீயே எடுத்து வா! என்று கட்டளையிட்டான். வாயுதேவன் தேவேந்திரனிடம் சென்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதைச் சொன்னான். இந்திரனும் உடனே அந்தச் சபாமண்டபத்தைச் சமீரணன் வசம் ஒப்படைத்தான். வாயுதேவன் அதைக்கொண்டு வந்து, சுவாமி சன்னதியில் சமர்ப்பித்தான். அதை ஸ்ரீகிருஷ்ணன் உக்கிரசேனனுக்கு வழங்கினான்.
பிறகு ராமகிருஷ்ணர்களான புருஷ சிங்கங்கள் இருவரும் விதிப்படி உபநயனம் செய்விக்கப்பெற்றனர். அவ்விருவரும் இயல்பாகவே முற்றும் அறிந்தவராக இருந்தும் மனித அவதார முறைக்குப் பொருந்தும்படியாகவும் சிஷ்ய ஆசார முறையை உலகுக்கு அறிவிப்பதற்காகவும் காசியிற் பிறந்த சாந்தீபினி என்ற பிராமணோத்தமரிடத்தில் கல்வி கற்கச் சென்றார்கள். குருவுக்குரிய பணிவிடைகளைச் செய்து கற்கவேண்டிய ஒழுக்கங்களைக் கற்று வேதவேதாந்த சாஸ்திரங்களையும் தனுர்வேதத்தையும் கற்றுத் தேர்ந்தார்கள். அவ்விருவரும் அறுபத்து நான்கு தினங்களில் சகல சாஸ்திரங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் அத்யயனம் செய்தார்கள். சாந்தீபினி என்ற அவர்களின் ஆசிரியரும் அவர்களை சூரியர் சந்திரர்களாக நினைத்தார். இப்படியிருக்கும்போது ஒருநாள் ராமகிருஷ்ணர்கள் இருவரும் தங்கள் ஆசிரியரை நோக்கி, குருவே! தங்களுக்கு நாங்கள் குரு தக்ஷணையாக என்ன சமர்ப்பிக்கவேண்டும்? என்று கேட்டார்கள், குருமகான் யோசித்துவிட்டு முன்னொரு சமயம் பிரபாச தீர்த்தக் கட்டத்தில் கடலில் மூழ்கி இறந்துபோன தமது புத்திரனையே கொண்டு வந்து குரு தக்ஷணையாகக் கொடுக்கும்படி வேண்டினார். ராமகிருஷ்ணர்கள் இருவரும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு வில்லம்புகளுடன் கடற்கரைக்குச் சென்றார்கள். உடனே சமுத்திரராஜன் அர்க்கியத்தைக் கையில் ஏந்தி அங்கு வந்து அவர்களை வணங்கி சுவாமி! அந்தச் சாந்தீபினியின் மகனை அடியேன் கொண்டு போகவில்லை சங்கின் ரூபந்தரித்து எனது ஜலத்தில் வாசஞ் செய்கின்ற பஞ்சஜனன் என்ற அசுரனே கொண்டு போனான் என்றான். அதைக் கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன், சமுத்திர ஜலத்தினுள்ளே பிரவேசித்து, அந்த அசுரனைக் கொன்று, அவனது எலும்பினாலான உத்தம சங்கத்தை எடுத்துக்கொண்டார். பிறகு கண்ணன் எதன் ஒலியால் அசுரருக்குப் பலஹானியும் தேவதைகளுக்கு தேஜோவிருத்தியும் உண்டாகுமோ அத்தகைய பாஞ்சஜன்யத்தைப் பூரித்து யமபுரிக்குச் சென்றார். அங்கு அவர் யமனைச் சங்கரித்து, யாதனையிற் கிடந்த சாந்தீபினியின் குமாரனை, முன்பிருந்தது போன்ற தேகம் உடையவனாக ஆக்கிக்கொண்டு வந்து ஆசிரியரின் குருதக்ஷிணையாகக் கொடுத்தருளினான். பின்னர், ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மதுராபுரிக்குச் சென்றார்கள்.

——————-

22. ஜராசந்தனை ஜெயித்தல்

மகத மன்னனான ஜராசந்தனின் பெண்களாகிய அஸ்தி பிராஸ்தி என்பவர்களை கம்சன் மணந்து கொண்டிருந்தான். எனவே கம்சனைக் கிருஷ்ணன் கொன்றதனால், ஜராசந்தன் மிகவும் கோபங்கொண்டு கிருஷ்ணனை வமிசத்தோடு கொல்ல வேண்டும் என்று இருபத்து மூன்று அ÷க்ஷõஹிணி சேனையோடு மதுராபுரியை நோக்கிப்படையெடுத்து வந்தான். தலைநகரை முற்றுகையிட்டான். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர்கள் அற்பமான சேனைகளைக் கொண்டே அவனை எதிர்த்தனர், இப்படிப் போர் செய்யும்போது இராமகிருஷ்ணர்கள் தங்களது பூர்வீக ஆயுதங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமென திருவுள்ளம் கொண்டதால், ஆகாயத்திலிருந்து சார்ங்கம் என்ற வில்லும் அக்ஷய தூணீரங்களும் கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனிடம் வந்தன. பலராமருக்குக் கலப்பையும் பெரியதொரு உலக்கைத் தடியும் வந்தன. இப்படி வந்த திவ்ய ஆயுதங்களை இருவரும் தரித்துக்கொண்டு, பெருஞ் சேனைகொண்ட ஜராசந்தனை வென்று மதுரைக்குத் திரும்பினார்கள். ஜராசந்தனை ஜெயித்திருந்தும் அவன் உயிரோடு திரும்பியதால், தங்களையே அவன் ஜயித்ததாக நினைத்தார்கள். அவன் ஜயிக்கப்பட்டதாக நினைக்கவில்லை கண்ணன் நினைத்ததுபோலவே ஜராசந்தன் சிறிய காலங்கழித்து மீண்டும் பெருஞ்சேனையுடன் யுத்தஞ் செய்ய மதுரைக்கு வந்தான். அப்போதும் ஸ்ரீராமகிருஷ்ணர்களால் ஜெயிக்கப்பட்டு ஓடிவிட்டான். இவ்வாறு பதினெட்டு முறைகள் யாதவருடன் போர் செய்ய ஜராசந்தன் தொடர்ந்து வந்து, கிருஷ்ணனால் தோல்வியடைந்து ஓடிப்போனான். மகாபலசாலியும் ஏராளமான சேனைகளுடையவனுமான ஜராசந்தனே பதினெட்டு முறை படையெடுத்துத் தோற்றான் என்றால் அது ஸ்ரீமந்நாராயணனுடைய வல்லமையே தவிர யாதவருடையதன்று அவருடைய திருவாழி ஒன்றே சத்துரு நாசத்துக்குப் போதுமானதாக இருந்தும் ஸ்ரீகிருஷ்ணன் பற்பல ஆயுதங்களைப் பகைவர் மீது பிரயோகித்தானே என்றால், திருவவதாரத் திருவிளையாடலாக மனுஷ்ய அவதாரம் செய்தருளிய எம்பெருமான் மனிதத் தன்மையை அனுசரித்தே பகவான்களோடு சமாதானமும் ஈனர்களோடு யுத்தமும் செய்தருளுகிறான். இந்தக் காரணத்தாலே இடத்துக்கேற்ப சாம, தான பேத, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களையும் அனுசரிக்கிறான். சிலவிடத்தில் ஓடிப்போவதாகவும் நடிக்கிறான். இந்தத் திருவிளையாடல்களும் இன்னின்ன காலத்தில் இப்படியென்றில்லாமல் அவன் திருவுள்ளத்தின்படியே நடக்கின்றன.

——————-

23. யாதவரின் பரிகாசமும் துவாரகா நிர்மாணமும்!

ஒருநாள் யாதவர்களின் புரோகிதரான கார்க்கியர் என்ற பிராமணரை, அவருடைய மைத்துனன், அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால், யாதவர்கள் கூட்டமாகக் கூடியிருந்த சபையில், இவர் நபும்சகர் என்று பரிகாசம் செய்தான். அதைக் கேட்ட யாதவரெல்லாம் உரக்கச் சிரித்தனர். ஆனால் கார்க்கியர் அவமானமும் கோபமுங் கொண்டு, விந்திய மலையின் தெற்கே வந்து யாதவர்களுக்குப் பகைவரான புத்திரன் ஒருவன் தமக்குப் பிறக்கவேண்டும் என்று எண்ணி இரும்புப் பொடியைத் தின்று, சிவனைக் குறித்து, தவஞ்செய்தார். சிவனார் அவர் முன்பு தோன்றி அவர் வேண்டிய வரத்தை வழங்கினார். அவர் புத்திரனுக்கான வரம் பெற்றதையறிந்த யவனதேசத்தரசன், அவரிடம் வந்து அவரை மிகவும் உபசரித்து பூசித்து, தனக்குப் பிள்ளையில்லாமையால், தன் மனைவியிடத்தில் பிள்ளையுண்டாக்கிக் கொடுக்கும்படி வேண்டினான். அவரும் அவனிடம் இரக்கம்கொண்டு, அவன் பத்தினியோடு கூடியதால், அந்த மங்கையின் வயிற்றில் வண்டு போன்ற நிறமுடைய புத்திரன் ஒருவன் உண்டானான்.
அவனுக்கு அந்த யவனதேசத்தரசன் காலயவனன் என்ற பெயரிட்டு வளர்த்துத் தக்க காலத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுப் பிறகு தவஞ்செய்யக் காட்டுக்குப் போய் விட்டான். காலயவனன் மிகவும் பலசாலியாகவும் உறுதியான மார்புடையவனாகவும் விளங்கினான். அதனால் கர்வம் கொண்டிருந்த அவன், கலகக்காரரான நாரத முனிவரிடம், நாரதரே! இந்தப் பூமியில் பலவான்களான அரசர்கள் யார்? என்று கேட்டான். அதற்கு நாரதர் விஷமச் சிரிப்புடன், இதில் என்ன சந்தேகம்? யாதவர்களின் தலைவர்களான ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமருமே பலசாலிகள்: என்றார். அதைக் கேட்டதும் காலயவனன் அநேக கோடி மிலேச்சரோடும், ரத கஜ துரகங்களோடும், யாதவர் மீது படையெடுக்க வேண்டிய முயற்சிகளைச் செய்தான். நாள்தோறும் தன் பிரயாணத்துக்குத் தடைநேரிடாதவாறு, வழிகளில் அங்கங்கே வாகனங்களை வைத்து, ஒரு வாகனம் அலுத்துப் போனவுடனே அதைவிட்டு வேறு வாகனத்தின்மேல் ஏறி, இப்படியே நெடுந்தூரத்திலிருந்து வெகு சீக்கிரமாக மதுரையை வந்தடைந்தான்.
அப்போது கண்ணன், ஓஹோ! யாதவ சேனையெல்லாம் நாசமாகும்படி நேரிட்டதே! காலயவனன் போர் செய்வானாகில் அற்பமான யாதவர்களை நாசஞ் செய்வான். இதனால் பலவீனப்படும் யாதவரை மகதராஜன் நாசஞ் செய்யக்கூடும். அல்லது மகதராஜனின் சேனை பலவீனப்பட்டிருந்தாலும் காலயவனன் அவர்களோடு சேர்ந்து யாதவரை அழித்துவிடுவான்! ஆகையால் காலயவனனாலும் ஜராசந்தனாலும் யாதவருக்குத் துன்பந்தான் நேரிடும் எனவே, யாதவர்களைக் காப்பதற்குக் கோட்டை ஒன்றை அமைப்போம். அந்தக் கோட்டையிலிருந்து பெண்களும் யுத்தஞ் செய்யத் தக்கதாக அதை அமைக்கவேண்டும் என்று நினைத்து சமுத்திர ராஜனையழைத்துப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம்விடும்படிக் கேட்டான். அதன் பிரகாரம் சமுத்திர ராஜன் இடம்விட்ட அவ்வளவு பெரிய பூமியில் பெரிய மதில்கள், தடாகங்கள் உத்தியான வனங்கள் உப்பரிகைகளுமாக தேவேந்திரனின் அமராவதிப் பட்டணத்தைப்போல துவாரகை நகரை நிர்மாணித்தார். அதில் ஸ்ரீகிருஷ்ணன் தம் பிரஜைகளைச் சேர்த்து வைத்துவிட்டுப் பகைவன் காலயவனன் நெருங்கி வரும் சமயத்தில் தாம் மதுரைக்குச் சென்றார். பகைவன் மதுரையை முற்றுகையிட்டதும் கிருஷ்ணன் யாதொரு ஆயுதமுமில்லாமல் நகரிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும்போது, நாரதர் கூறிய அடையாளத்தால், இவன்தான் கிருஷ்ணன் என்று காலயவனன் நிச்சயித்துக்கொண்டு இவன் ஆயுதமில்லாமல் போவதால் இவனைப் பிடித்துச் சிறை செய்வது எளிது என்று நினைத்துப் பின் தொடர்ந்தான்.
மைத்ரேயரே, கவனமாகக் கேளும் யோகிகளின் இதயங்களும் பின்தொடர முடியாதவனை காலயவனன் பின்தொடர்ந்து பிடிக்க நினைத்தான். அவன் பின்தொடர்வதையறிந்த ஸ்ரீகிருஷ்ணன் ஒரு குகையினுள் புகுந்தார். காலயவனனும் அவரைப் பின்தொடர்ந்து, அந்தக் குகையில் ஒருபுறம் படுக்கையிற் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு அவனையே ஸ்ரீகிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டியுதைத்தான். உடனே, முசுகுந்தன் தூக்கம் தெளிந்து எழுந்து காலயவனனைப் பார்த்தான். பார்த்ததும் முசுகுந்தனின் கோபத்தால் காலயவனன் தன்னுடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பலானான் மைத்ரேயரே! அந்த முசுகுந்த மன்னன் முன்பு நடந்த தேவாசுரப் போரில், அசுரரைச் சங்கரித்துத் தேவர்களுக்கு உதவி செய்தவன் அதனால் தேவர்கள் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும்? என்று அவனைக் கேட்டனர். அப்போது அவன் தூக்கம் இன்றி வெகுநாட்களாக அலுத்துப்போயிருந்ததால், தூங்குவதற்கான வரத்தைக் கேட்டான். தேவர்களும் அந்த வரத்தைக் கொடுத்து, உன்னைத் தூக்கத்திலிருந்து எவன் எழுப்புவானோ, அவன் தனது உடலின் அக்கினியாலேயே எரிக்கப்பட்டுச் சாம்பல் ஆவான்! என்ற வரம் தந்தார்கள். அதனாலேயே முசுகுந்த மன்னனை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான். அதன் பிறகு, முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து, நீ யார்? என்று கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன், அரசனே! நான் சந்திர சூலம் சார்ந்த யதுகுலத்தில் பிறந்தவன். வசுதேவரின் மகன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் முசுகுந்த மன்னன், முன்பு தனக்கு கார்க்கிய முனிவர் கூறியதை நினைத்து, தன் படுக்கையைவிட்டு எழுந்து, சர்வேசுவரனான ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி, ஓ சுவாமி! தேவரீர் ஸ்ரீமந் நாராயணருடைய அம்சாவதாரம் என்பது அடியேனுக்குத் தெரியும். முன்பு கார்க்கிய மகாமுனிவர், இருபத்தெட்டாவது யுகத்தில் துவாபரயுக முடிவில் யதுகுலத்தில் எம்பெருமான் அவதரித்தருள்வான் என்று என்னிடம் சொல்லியிருந்தார். தேவரீர்தாம் அந்த அவதார புருஷன்! மனுஷ்யரின் நலனுக்காக இவ்வாறு அவதரித்திருக்கிறீர்! அடியேன் இந்தச் சம்சாரச்சக்கரத்தில் ஓய்வில்லாமற் சுற்றிக்கொண்டு வருந்துகிறேனேயன்றி எங்கும் ஒரு சுகத்தையும் கண்டேனில்லை. கானல் நீர் என்று மூடர் அடைவதுபோல துக்கங்களையே சுகங்கள் என்று நினைத்து விட்டேன். ராஜ்யாதிகாரம். பூமி, சேனை, பொக்கிஷம், உறவினர் நண்பர், மக்கள், மனைவியர் ஏவலாட்கள் இவை யாவற்றையும் சுகமென்றே நினைத்த நான் முடிவில் அவையெல்லாம் எனக்குத்தாபத்தையே விளைவித்தன என்பதை உணர்ந்தேன். இனி தேவப்பிறவி கிடைத்தால்தான் என்ன! தேவகணங்களே அடியேனது துணையை விரும்புகின்றனர். சர்வதிபதியே! நித்யமான சுகமெங்கே இருக்கிறது? சகல உலகங்களுக்கும் காரணமான தேவரீரை ஆராதனை செய்யாமல், எவன் தான் நிரந்தரமான சுகத்தை அடையமுடியும்? அடியேன் சம்சார வழியில் திரிந்து, மிக்க தாபங்களை அடைந்து அவற்றால் மனந்தவிர்க்கப்பட்டு, ஒப்பற்ற ஒளியுடைய மோக்ஷசுகத்தில் அபிலாøக்ஷகொண்டு, எவனைக் காட்டிலும் வேறு பரமப்பிராப்பியம் இல்லையோ, அத்தகைய அபாரனாகவும் அப்ரமேயனாயுமுள்ள உன்னை அடைக்கலம் புகுந்தேன் என்று முசுகுந்த மன்னன் துதித்தான்.

—————-

24. முசுகுந்தனுக்கு கண்ணனின் அருளும் ஆயர்பாடிக்கு பலராமர் வருகையும்!

முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்து மோக்ஷத்தை வேண்டினான். ஸ்ரீகிருஷ்ணன் அவனை நோக்கி, அரசனே! நீ உத்தம உலகங்களை அடைந்து, என் அனுக்கிரகத்தினால் குறைவற்ற மஹா ஐசுவரியமுள்ளவனாய் திவ்விய போகங்களை அனுபவித்து மறுபடியும் உயர்ந்ததொரு குலத்தில் பூர்வ ஜன்ம ஸ்மரணையுள்ளவனாகப் பிறந்து எனது கடாக்ஷத்தால் மோக்ஷம் அடைவாயாக! என்று அருள் செய்தார். முசுகுந்தன் ஸ்ரீகிருஷ்ணனது திருவடிகளை வணங்கி, குகையிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தான். அங்கே மிகவும் குள்ளமாய்த் திரியும் மனிதர்களைப் பார்த்துக் கலியுகம் வந்துவிட்டது என்பதை முசுகுந்தன் அறிந்து, தவஞ் செய்ய எண்ணம் கொண்டு ஸ்ரீநாராயண முனிவர்கள் வாசஞ் செய்யும் கந்தம தன பருவதத்துக்குப் போனான். கிருஷ்ணனே தன் பகைவனான காலயவனனைத் தந்திரத்தால் கொன்றுவிட்டு, மதுரை சென்று அதை முற்றுகை செய்திருந்த சதுரங்கச் சேனைகளைக் கைப்பற்றித் துவாரகை சென்று உக்கிரசேன மன்னனிடம் ஒப்படைத்தான். இதனால் யாதவர்கள் பகைவர் பயமின்றி வாழ்ந்தனர். போர்கள் ஓய்ந்ததால், பலராமர், தமது உறவினரைக் காண விரும்பி, கோகுலத்துக்குச் சென்றார். கோபியர்களும் கோபாலர்களும் அவரை வரவேற்றனர். கோபியர்களிற் சிலர் அன்பினால் கோபமாகவும் சிலர் பொறாமையுள்ளவர்களாகவும், பலராமரின் பேசினர். கண்ணனிடத்து அன்பு கொண்டிருந்த கோபியர்கள் நகரத்து நாகரிகப் பெண்களிடம் கண்ணன் கவர்ச்சி கொண்டதாக நினைத்து பலராமரிடம் கேள்விகள் கேட்கலானார்கள்.
ஸ்திரமற்ற அற்பப் பிரேமையுடைய அந்த கிருஷ்ணன் சுகமாக இருக்கிறானா? அந்த கிருஷ்ணன் இங்கே ஆடிப்பாடிய போது நாங்கள் அவன் பாட்டுக்கிசைய ஆடிப் பாடியதை நினைக்கிறானா? அவன் தன் தாயைப் பார்க்கவாவது இங்கு வருவானோ? இனி அவன் பேச்சு நமக்கு எதற்கு? எவனுக்கு நாம் இல்லாத பொழுது சுகமாய்க் கழிகிறதோ, அத்தகையவனின் பேச்சை விடுங்கள் நமக்கு யார் இல்லாமல் பொழுது கஷ்டமாகப்போகிறதோ, எவன் தன் தந்தை தாய், உடன் பிறந்தார் பந்துக்கள் ஆகியோரையெல்லாம் விட்டுப் போனானோ, அத்தகையவனுக்காக நாம் ஏன் தவிக்கவேண்டும்? அந்த மாயகண்ணன் நன்றியில்லாதவரில் சிறந்தவன், இருக்கட்டும் ஓ பலராமா! அந்த கிருஷ்ணன் இங்கு வருவதாக ஏதேனும் சொன்னானா? பட்டணத்துப் பாவையரிடம் மனம் பறிகொடுத்துவிட்ட அந்தமாய கண்ணன் எங்களிடம் சிறிதும் அன்பில்லாமல் இருப்பதால் அந்த வஞ்சகனைக் கண்ணால் காணவுங்கூடாதவன் என்று எங்களுக்குத் தோன்றுகிறது! என்று இவ்விதமாக ஆய்ச்சியர் அன்போடும் ஆசையோடும் வெறுப்போடும் பலராமரிடம் ஏதேதோ! பேசி, ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணையினாலேயே தாமோதரா! கோவிந்தா! என்று மூத்த நம்பியையே அழைத்துவிட்டு, உடனே தங்களுக்கு கண்ணன் மீதுள்ள மோக்ஷத்தால்தான் அப்படிப் பேசுவதாக நினைத்துக் கலகல வென்றுச் சிரித்தார்கள். அப்போது பலராமர் அன்போடும் கனிவோடும் கண்ணன் கூறியனுப்பிய வார்த்தைகளை அவர்களிடம் சொல்லி அவர்களைச் சமாதானஞ் செய்தார். பிறகு அவர் ஆயர்ப்பாடியடைந்து ஆயர் ஆய்ச்சியருடன் ஆனந்தமாக ரமித்துக் கொண்டிருந்தார்.

——————

25. பலராமரின் மோகமும் கோபமும்

மனுஷ்ய தேகத்தோடு, காரிய வசத்தால் பூமியில் எழுந்தருளிப் பெரிய காரியங்களை நிறைவேற்றி, இடையரோடு வனத்தில் விளையாடிக்கொண்டிருந்த பலராமனான ஆதிசேஷனுக்குத் திருவுள்ளம் மகிழ்வதற்காக வருணன் வாருணிதேவியை அழைத்து ஓ மதிராதேவி! நீ திருவனந்தாழ்வானுக்கு மிகவும் பிரியமானவள்! ஆகையால் அவருடைய போகத்துக்காக அவர் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு நீ சந்தோஷமாகப் போக வேண்டும்! என்றான். வாருணியும், பலராமர் விளையாடிக் கொண்டிருந்த பிருந்தாவனத்தில் ஒரு கடப்ப மரப்பொந்தில் தங்கியிருந்தாள். அப்போது பலராமர் அந்த வனத்தில் உலாவும் போது, அந்த மதிரையின் வாசனை வீசுவதையறிந்து, அதன் மீது விருப்பம் கொண்டு அந்தத் திசையை நோக்கிச் சென்று, அங்கே கடப்ப மரத்திலிருந்து தாரையாய் ஒழுகிக்கொண்டிருந்த மதிரையைக் கண்டு, மிகவும் மகிழ்ந்து, அதனை வேண்டுமளவும் பானஞ்செய்து, தம்முடனிருந்த கோப கோபிகையருக்கும் கொடுத்து, ஆடியும் பாடியும் மதம் பொருந்தி வீற்றிருந்தார்.
அப்போது தன் பக்கமாக ஓடிய யமுனை நதியை நோக்கி, யமுனா! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும் என்றார் பலராமர். யமுனையோ, அவர் மதத்தினால் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து அவர் வார்த்தையை மதித்துவரவில்லை. அதனால் கோபங்கொண்ட பலராமர், தமது ஹலாயுதத்தை எடுத்து, அதன் நுனியினால் அந்த நதியை இழுத்து, ஏ துஷ்ட நதியே! நான் அழைத்தும் நீ ஏன் வராமல் இருந்தாய்? உனக்குச் சக்தியிருந்தால் இப்போது உன் விருப்பப்படிப் போ! என்றார். அவரால் இழுக்கப்பட்ட அந்த நதி, தான் போகும் வழியை விட்டு, அந்த வனத்தில் பெருகியது. பிறகு அந்த நதி தன் கன்னியுருவோடு அவர் முன்பு வந்து வணங்கி, ஹலாயுதரே! என்மீது இரக்கங் கொண்டு என்னை விட்டுவிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதற்கு அவர் யமுனா! என் பலத்தை நீ அவமதித்தால் நான் உன்னை என் கலப்பையினால் ஆயிரந் துண்டமாக்கிடுவேன்! என்றார். அதைக் கேட்ட யமுனாநதி தேவி நடுநடுங்கி அந்த வனம் முழுவதும் நனைத்தது. அவரும் அந்த நதியை விட்டுவிட்டார். அந்த நதியில் நீராடிய பலராமரிடம் ஒரு புதிய காந்தி உண்டாயிற்று. பிறகு அவர் திருமுடியில் தரிக்கத்தக்கத் தாமரை மலரும், கர்ண குண்டலங்களும் தாமரை மாலையும் நீலமான இரண்டு திருப்பரிவட்டங்களும் வருணனால் அனுப்பப்பட்டுத் திருமகளால் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றையணிந்த பலராமர் மிகவும் பிரகாசமாய் இடைச்சேரியில் கிரீடித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு அப்பால், பலராமர் துவாரகை சென்று ரைவத மன்னனுடைய மகளான ரேவதி என்பவளை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

——————-

26. ருக்மணிப் பிராட்டியார் திருக்கலியாணம்

விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரியில், பீஷ்மகன் என்ற மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ருக்குமி என்ற மகன் ஒருவனும் ருக்குமணி என்ற மகளொருத்தியும் இருந்தார்கள். பேரழகியான அவளை கண்ணன் திருமணஞ் செய்துகொள்ளத் திருவுள்ளங்கொண்டிருந்தார். ருக்மணியும் கண்ணன் மீது காதல் கொண்டிருந்தாள். ஆனால் அந்தக் கன்னிகையைத் தனக்கு கொடுக்கவேண்டும் என்று கிருஷ்ணன் எவ்வளவோ வேண்டியும் ருக்மணியின் சகோதரனான ருக்குமி, துவேஷத்தினால் தன் தங்கையைக் கிருஷ்ணனுக்குக் கொடுக்காமல் ஜராசந்தனின் ஏவுதலால் சிசுபாலனுக்குக் கொடுப்பதாகத் தந்தையைக் கொண்டு வாக்குத் தத்தம் செய்வித்தான். இப்படி அவன் நிச்சயித்து விவாகம் செய்ய ஏற்பாடு செய்யும்போது, அந்தத் திருமணத்துக்கு சிசுபாலனுக்கு நண்பர்களான ஜராசந்தன் முதலான அரசர்கள் குண்டினபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனும் யாதவ சேனையோடு குண்டினபுரத்திற்குச் சென்றார். ருக்மணிக்கு நாளைக்குக் கலியாணம் என்றிருக்கும்போது கண்ணன் பகைவருடன் போர் செய்யும் பொறுப்பை பலராமர் முதலியோரிடம் ஒப்படைத்துவிட்டு மணப்பெண்ணான ருக்மணியைக் கடத்திப் பலாத்காரமாகத் தூக்கிக்கொண்டு போனார். அதனால் மணமகன் சிசுபாலனும் அவனது தோழர்களான பவுண்டரகன், விடூரதன், தந்தவக்ரன், ஜராசந்தன், சாள்வன், சிசுபாலன் முதலான அரசர்களும் மிகவும் கோபங்கொண்டு எதிர்த்து வந்து, கண்ணனைச் சங்கரிக்கப்பெரும் யுத்தம் புரிந்தார்கள். இறுதியில் பலராமரிடம் அவர்கள் தோல்வியடைந்து தன் தன் நாடுகளுக்குச் சென்றனர். ருக்குமி மட்டுமே நான் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லாமல் குண்டினபுரத்துக்குத் திரும்பமாட்டேன் என்று சபதம் செய்து, கண்ணனைப் பின்தொடர்ந்தான். வழியில் அவன் கண்ணனை மடக்கிப் போர் செய்ய கண்ணன் அவனது சேனைகளை நாசஞ் செய்து, அவனையும் தலையெடுக்கவொட்டாமல் அடித்து உயிரோடு தரையில் வீழ்த்தினார். இவ்விதமாக கண்ணன் ருக்குமியை வென்று ருக்குமணியை ராக்ஷச விவாஹ முறையில் விவாகஞ் செய்துகொண்டார். அந்த ருக்மணியின் திருவுதிரத்தில் மன்மத அம்சமாய் மகாவீரியனான பிரத்தியும்னன் பிறந்தான். அவனைப் பூர்வஜன்ம விரோதத்தால் சம்பராசுரன் கொண்டு செல்ல, அவனை பிரத்தியும்னன் சங்காரஞ் செய்தான்.

——————

27. மாயாவதியின் காதலும் சம்பராசுர வதமும்

மைத்ரேய முனிவர் குறுக்கிட்டு பராசர மகரிஷியை நோக்கி குருவே, அந்தப் பிரத்தியும்னனைச் சம்பராசுரன் எப்படித் தூக்கிச் சென்றான்? அந்த சம்பராசுரனை பிரத்தியும்னன் எப்படிச் சம்ஹாரம் செய்தான்: இதை எனக்கத் தெளிவாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டார். அதனால் பராசர மகரிஷி அந்தக் கதையைக் கூறலானார். மைத்ரேயரே கேளும். பிரத்தியும்னன் பிறந்த ஆறாவது நாளில், சம்பராசுரன் என்ற அரக்கன் இவன் நம்மைக் கொன்று விடுவான் என்று நினைத்து அவனைக் கருவுயிர்த்த அறையிலிருந்தே கொண்டு போய்விட்டான். பிறகு திமிங்கலங்களும் முதலைகளும் நிறைந்த லவண சமுத்திரத்தில் அந்தக் குழந்தையை வீசி எறிந்துவிட்டான். அந்தக் குழந்தையை மீன் ஒன்று விழுங்கியது. அந்த மீனின் வயிற்று நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அக்குழந்தை பகவானுடைய வீரியத்தால் உற்பத்தியானதால், மரணமடையாமல் இருந்தது. இது இப்படியிருக்க செம்படவர்கள் மீன் பிடிக்கும்போது அந்த மீனையும் பிடித்து அசுரர்களின் அரசனாகிய சம்பராசுரனிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். அந்த அசுரனுக்கு மாயாவதி என்பவள் பெயரால் மட்டுமே பத்தினியாக இருந்தாள். அவள் சமையற்காரருக்கெல்லாம் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் சமையலுக்காக மீன்களைச் சேதிக்கும்பொழுது, ஒரு மீனினுள் அக்குழந்தை இருப்பதைக் கண்டாள். அதைக் கண்ட அவள், இந்தக் குழந்தை எரிந்துபோன மன்மதனாகிய மரத்தின் முதல் முளையைப்போல அழகாக இருக்கிறது. இது யார்? எப்படி மீன் வயிற்றில் வந்தது? என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு நாரதர் வந்தார், வந்தவர் மாயாவதியிடம் பெண்ணே இந்தக் குழந்தையைக் குறித்து யோசிக்க வேண்டாம். இவன் ஜகத் சிருஷ்டி ஸ்திதி, சம்ஹாரங்களை நடத்துகின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குமாரன்! இவனை உன் கணவனான சம்பராசுரன் கொல்லவேண்டுமென்று நினைத்து, பிள்ளை பெற்ற அறையிலிருந்தே இக்குழந்தையைத் திருடிவந்து, சமுத்திரத்தில் எறிந்தான். அங்கே இந்த மீன் விழுங்கியது. அதன் பிறகு அவன் உன்னிடம் வந்து சேர்ந்தான். ஆகையால் இந்தப் புருஷ ரத்தினத்தை நீயே பயமின்றி பரிபாலனஞ் செய்து வருவாயாக! என்றார். அதைக் கேட்ட மாயாவதி அவர் சொன்னதிலிருந்து, பிரத்தியும்னன் என்ற அக் குழந்தையை மிகவும் அன்போடு போஷித்து வந்தாள். அவன் அழகைக் கண்டு இளமையிலிருந்தே அவன் மீது மாயாவதி காதலும் கொண்டிருந்தாள். அவன் யவுவனப் பருவமடைந்ததும் மாயாவதி அவன் மீது ஆசையுற்று அவனுக்குப் பலவிதமான மாயா வித்தைகளை கற்றுத் தந்து மனமும் கண்ணும் அவனை விட்டுப் பிரியாமல் அவன்மீது வைத்திருந்தாள். இது போல மாயாவதி தன் மீது காமமுற்றிருப்பதை கிருஷ்ண குமாரனான பிரத்தியும்னன் அறிந்ததும் நீ எனக்குத் தாயாக இருக்க அதைவிட்டு வேறு விதமாக என்னிடம் நடப்பதென்ன? என்று கேட்டான் அதற்கு மாயாவதி புருஷ ரத்தினமே கேள்! நீ என் மகன் அல்ல; ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மகன் உன் தாயின் கருவறையில் நீ இருக்கும்போதே உன்னை சம்பராசுரன் திருடிக்கொண்டுபோய்க் கடலில் வீசியெறிந்தான். அங்கு ஒரு மீன் உன்னை விழுங்கிற்று. அந்த மீன் இங்கு வந்தபோது; அதன் வயிற்றிலிருந்து உன்னை எடுத்துக் காப்பாற்றி வந்தேன். உன்னைப் பெற்றவள் உனக்காக அழுது கொண்டிருக்கிறாள். இதுவே உன் வரலாறு என்றாள். அதைக் கேட்டதும் பிரத்தியும்னன் மிகவும் கோபங் கொண்டு, சம்பராசுரனைச் சண்டைக்கு அழைத்தான். அந்த அசுரனும் சகல சேனைகளோடு திரண்டுவந்து பிரத்தியும்னனோடு போரிட்டான். பிரத்தியும்னன் அவனது சேனைகளையெல்லாம் அழித்தான். பிறகு சம்பராசுரன் ஏழு மாயைகளைப் பிரயோகித்தான். பிரத்தியும்னன் அவற்றையெல்லாம் கடந்துவந்து, எட்டாவது மாயையை அவன்மீது பிரயோகித்து அந்த சம்பராசுரனை அழித்தான். பிறகு அவன் மாயாவதியுடன் அங்கிருந்து புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்திற்கு வந்து குதித்தான்.
இவ்விதம் மாயாவதியுடன் அந்தப்புரத்தில் குதித்த அவனைப் பார்த்து, அங்கிருந்த பெண்களனைவரும் வடிவத்தால் ஒத்திருந்ததால் ஸ்ரீகிருஷ்ணன் என்றே நினைத்தார்கள். அப்பொழுது ருக்குமணி அவனைப் பார்த்துவிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் ததும்ப எந்தப் புண்யவதியின் மகனோ-இவன்? நவமான யவுவனத்துடன் திகழ்கிறானோ; என் பிள்ளை பிரத்தியும்னன் பிழைத்திருந்தால் இந்த வயதுடையவனாக இருப்பானல்லவா? என்று நினைத்தாள். அவள் அவனைப் பார்த்து, மகனே! எனக்கு உன்மீது உண்டாகிற அன்பையும் உன் தேக எழிலையும் பார்த்தால் என் நாயகரான ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியின் குமாரனாகவே நீ இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாரதர் கண்ணனையும் அழைத்துக் கொண்டு அங்கேவந்து சேர்ந்துவிட்டார். அவர் ருக்குமணிப் பிராட்டியை நோக்கி பெண்ணரசே! இவன் உன் மகன் பிரத்தியும்னன் தான் உன் சூதிகா கிருகத்திலிருந்து இவனை சம்பராசுரன் கொண்டு போனான். இப்போது இவன் அந்தப் பகைவனை அழித்துவிட்டு இங்கு வந்திருக்கிறான். இவனோடு வந்திருக்கும் இந்தப் பெண்ணின் பெயர் மாயாவதி இவள் இவனுடைய பாரியை, சம்பராசுரனின் பாரியை அல்ல. இதற்கு ஒரு காரணம் உண்டு. அதைச் சொல்கிறேன் கேள். முன்பொரு சமயம் சிவபெருமானால் மன்மதன் அழித்தபோது, அவனது மனைவியான இந்த ரதி தேவி, மிகவும் பதிவிரதையாகையால் மறுபடியும் தன் நாயகனான மன்மதனின் ஜனனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவரையில் காலந்தள்ளும் பொருட்டு பலவாறும் நடிக்கவேண்டியிருந்தது. இவளுடைய அழகான கண்களைக் கண்டு சம்பராசுரன் மயங்கி இவளைத் தன் பத்தினியாகத் தன் அந்தப்புரத்தில் வைத்துக்கொண்டான், அதனால் இவள் அந்த அசுரனைச் சமாளிப்பதற்காகப் பலவகையான போகங்களிலே மாயாமயமான ரூபங்களைக் காட்டித் தான் கிட்டப் போகாமலேயே, அவனது பத்தினியைப்போல், அவனை மோகங்கொள்ளச் செய்து வந்தாள். இவள் கனவிலும் நனவிலும் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருந்த மன்மதன் உனக்குப் புத்திரனாக அவதரித்தான். அந்த மன்மதனின் பத்தினியான இரதி தேவியே இவள்! இதில் சந்தேகப்படவேண்டாம் இவன் உன் மகன்; இவள் உன் மருமகள்! என்றார், அதைக் கேட்டு யாவரும் அதிசயமும் ஆனந்தமும் அடைந்தனர். நாடே அதிசயித்தது!

——————

28. கல்யாணத்தில் சூதாட்டம்

பிரத்தியும்னனுக்குப் பின் சாருதேஷ்ணன்; சுதேஷ்ணன், சாருதேகன் கதேணன் சாருகுப்தன். பத்திரசாரு, சாருவிந்தன் சுசாரு. சாரு என்ற பிள்ளைகளும் சாருமதி என்ற ஒரு பெண்ணும் ருக்குமணிக்குப் பிறந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ருக்மணியைத் தவிர, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி ரோகிணி, சுசீலை; சத்தியபாமை, லக்ஷ்மணை என்ற ஏழு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் மித்திரவிந்தை என்பவள் காளிந்தன் என்பவனின் மகளாகையால், அவளுக்குக் களிந்தி என்று ஒரு பெயருண்டு. சத்தியை, நக்நஜித் என்பவனுடைய மகள். ஜாம்பவதி, ஜாம்பவானின் மகள். சுசீலை மத்திர ராஜனின் மகள். சத்தியபாமை சத்திராஜித்தன் மகள். ரோகிணி என்பவள் விரும்பும் ரூபத்தை எடுக்கவல்லவள். சுசீலை என்பவள் தன் பெயருக்கேற்றச் சிறந்த சீலமுடையவள். லக்ஷ்மணை சிரித்தால் மிகவும் அழகாக விளங்குபவள். அதனால் அவளுக்கு சாருஹாஸினி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஏழு மனைவியரும் தவிர, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பதினாறாயிரம் தேவிமார்களும் உண்டு. ருக்மணியின் குமாரனான பிரத்தியும்னன், சுயம்வரத்திலே தன் மீது காதல் கொண்டிருந்த மாமன் மகளான ருக்குமியின் மகளைத் திருமணஞ் செய்துகொண்டிருந்தான். அவளது கர்ப்பத்தில் மகா பராக்கிரமசாலியும் அளவற்ற வீரியமுடையவனுமான அநிருத்தன் என்பவன் அவதரித்தான். அவனுக்குத் திருமணஞ் செய்ய தம் மைத்துனனான ருக்குமி ராஜனின் பேத்தியையே கண்ணன் நிச்சயித்திருந்தார். ருக்குமிக்கு கண்ணன் பேரில் பகைமை இருந்தும், அவன் கண்ணன் விருப்பப்படி அவர் பேரனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்திருந்தான்.
மைத்ரேயரே கேளும்! அந்தக் கலியாணத்திற்கு பலராமரும் மற்ற யாதவர்களும் போஜகடம் என்ற ருக்குமியின் தலைநகருக்குப் போயிருந்தார்கள். அங்கு அநிருத்தனுக்குத் திருமணம் நடந்தவுடன் கலிங்க ராஜன் முதலியோர் ருக்குமியை நோக்கி, ருக்குமி! பலராமனுக்குச் சொக்கட்டான் ஆடத்தெரியாது, ஆயினும் அவனுக்கு அந்த ஆட்டத்தில் பிரியம் அதிகமுண்டு. ஆகையால் மகா பலசாலியான பலபத்திரனை நாம் சூதிலே வெற்றி பெறுவோம்! என்றார்கள். அதைக் கேட்ட ருக்குமியும் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்தான். சபையிலே பலராமரோடு, ருக்குமியும் மற்ற அரசர்களும் சூதாட ஆரம்பித்தனர். முதல் ஆட்டத்தில் பலராமர் பந்தயம் வைத்த ஆயிரம் வராகனையும் ருக்குமி ஜெயித்தான். இரண்டாவது ஆட்டத்திலும் மேலும் ஆயிரம்வராகன் ருக்குமியே ஜெயித்தான். பிறகு பலராமர், பதினாயிரம் வராகனைப் பந்தயமாக வைத்தார். அதையும் சூதில் வல்ல ருக்குமியே ஜெயித்துவிட்டான். இது போலவே மூன்று ஆட்டங்களிலும் பலராமர் தோற்றார். இதைக்கண்ட கலிங்க ராஜன் சிரித்தான். ருக்குமியும் ஐயோ பாவம்! இந்த பலராமன் சூதாடத் தெரியாதவன். வீணாக என்னோடு ஆடவந்து திரவியமெல்லாம் தோற்று அவமானப்பட்டு விட்டான். ஆனால் இவன் ஓர் அக்கிரமம் செய்து விட்டான். சூது தெரியாதவன் அந்த வித்தையில் வல்லவர்களை அவமானமாகப் பேசலாமா? என்றான்.
அதைக் கேட்டதும் பலராமர் விதர்ப்பராஜனையும் கலிங்க ராஜனையும் பற்றி இழுத்து கோபத்துடன், நல்லது! இந்தத் தடவையும் ஆடுவோம்! என்று ஒருகோடி வராகனைப் பணயமாக வைத்தார். ருக்குமியும் ஒன்றும் பேசாமல் பாசிகைகளை உருட்டினான். அந்த ஆட்டத்தில் பலராமர் ஜெயித்தார். அதனால் நான் ஜெயித்தேன்! என்று அவர் உரக்கக் கூவினார். அதை ருக்குமி மறுக்கும் விதமாக, பலனே! இந்த மட்டும் நீ சொன்ன பொய் போதும்! ஜெயித்தவன் நானே! எப்படியென்றால் நீகோடி வராகன் பந்தயம் என்று சொன்னாய்! அதைநான் ஒப்புக் கொள்ளவில்லை, இப்படியிருக்க நீ ஜெயித்ததாகச் சொல்லுவாயானால் நான் ஏன் ஜயித்தவனாகமாட்டேன்! என்று கூவினான். அப்போது ஆகாயத்தில் ஒரு வானொலி எழுந்தது அது கம்பீர நாதத்துடன் பலராமருக்குக் கோபம் ஏற்படும்படியாக, பலராமர் தருமமாகச் செய்தார். ருக்குமியோ பொய் சொன்னான். ஒரு விஷயம் வாயினால் சொல்லாமற் போனாலும் காரியத்தை நடத்தினால் அது ஒப்புக்கொண்டதே ஆகும் என்றது. அதைக் கேட்ட பலராமரின் கண்கள் சிவந்தன. அவ சூதாடும் சதுரங்கப் பலகையை எடுத்து அதனாலேயே ருக்குமியை அடித்துத் தள்ளி, அதனாலே தந்தவக்கிரனுடைய சிரிப்புடன் வெளிப்பட்ட பற்களையெல்லாம் உதிர்த்துத் தள்ளினார். அங்கிருந்த ஒர