அலங்காராசனத்தில் செவிக்கு இன்பம் தரும் இனிய ஸ்தோத்ரங்களால் எம்பெருமானை
இன்புறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் சொல்லும்
குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான்மறையூர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-7-
திருந்து நான்மறை என்றது ஸ்ரீ நம்மாழ்வாருடைய நாலு வேத சாரமான நான்கு திவ்ய பிரபந்தகளை –
அமரர்கள் தம் தலைவனை அந்தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியைப் பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை –ஸ்ரீ குலசேகர பெருமாள் -1-4-
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ஸ்ரீ பெரிய திருமொழி -2-8-2–
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை -2-10-4-
செம்மொழி வாய் நாள் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலை -6-6-10-
செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின்
புகையார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே -7-8-7-
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர் -7-9-3-
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –ஆறங்கம் வல்லவர் தோளும் தேவ தேவ பிரான் கோட்டியூரானே-9-10-9-
————-
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-
தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது
——-
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –நாச்சியார் திரு மொழி–2-9-
உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ -நம்மோடு அணைகை பொல்லாததோ -எத்தனையேனும் யோகிகளும்
நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது -உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும் இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் – அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும் வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ச்லேஷத்தில் உண்டான இசைவை மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –
———–
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –
———-
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-
நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –
நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே
கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்
திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்
கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –
———
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-
ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து
இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை ஸ்வீகரிக்க வல்லனேயோ
ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ –
இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்
வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-
போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பணிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாரும் ஒரு வஸ்துவைக் கொண்டு
அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் –
ஸ்ரீ யபதி ஆஸ்ரயணீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –
நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு
ஆகையால் இறே நாம் இரண்டு இடத்திலும்
அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் –
காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே –
திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —
————-
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-
சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
———
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-
1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —
கைவல்ய கோஷ்டியில் –
மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்
2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே
சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-
3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –
———–
கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே –
மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் –
அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து –
கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-
கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-
—————–
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு
தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது
திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –
மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்
————
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-
இலைத்தலைச் சரம் துரந்து-இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து
நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து
வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-
இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-
——————
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–ஸ்ரீ திரு மாலை-11
நஞ்சீயர் இப்பாட்டைக் கேட்டவன்று
தம்மிலே அனுசந்திதுப் போகா நிற்க
ஒரு சேவகனும் ஸ்திரீயும் விவாதம் பண்ணின அளவிலே
அவனுக்கு இவள் சொன்ன வார்த்தையை கேட்டு
வித்தரான வார்த்தையை அனுசந்திக்கிறது
அதாகிறது
பிணங்கின அளவிலே உன்னால் என் செய்யலாம்
ஏழைக்கும் பேதைக்கும் அன்றோ -சாமந்தனார் -ராஜா -பத்திரம் காட்டிற்று என்றால் –
பட்டரை ஆஸ்ரயித்த சோழ சிகாமணி பல்லவ ராயர்க்கு
ராம லஷ்மண குப்தாஸா – என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்து
கடல்கரையில் வெளியை நினைத்து இருக்கும் என்றத்தை அனுசந்திப்பது
அத்தைக் கூடக் கேட்ட
நஞ்சீயரும்-
பிள்ளை விழுப்பரையரும்-
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசருமாக
இதுக்குச் சேர்ந்து இருந்தது என்று
இலை துணை மற்று என்நெஞ்சே – என்கிற பாட்டை அனுசந்தித்தார்கள்
ஆக
அநந்ய கதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை
———
நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–-ஸ்ரீ பெரிய திருமொழி–3-6-9-
திரு மெய்ய மலையாளா !
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –
நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்
கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக
இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –
—————————————
அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
தான் புறப்படுதல் -வைகாசி கருட சேவை -தானே ஆஸ்ரிதற்கு அருள
அழகு செண்டேற புறப்படுதல்- ஆனி கருடன் -பெரியாழ்வார் சாத்து முறை
ஆடி கருடன் கஜேந்திர யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல்
ஓன்று கேட்டால் மூன்று கருட சேவையும்
ஆழ்வார் போகம் ஓன்று கேட்டால் -இஹ போகம் ஸ்வர்க்காதி போகம் பரம போகம்
ஓன்று கேட்டால் நாலாயிரம் ஆழ்வார் நாத முனிகளுக்கும் ஆழ்வார் அருளினார்
பிள்ளை லோகாச்சார்யார் சாத்து முறை –பொய்கையாழ்வார் ஐப்பசி திரு ஓணம் –
நாள் பாசுரம் அன்னல் முடும்பை பாசுரம் சாதிப்பார்கள் –
திரு ஓணம் தோறும் புறப்பாடு
திருக்காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயிலில் பிள்ளை லோகாச்சார்யார் தனியான சந்நிதி அதனால் இல்லை
ஈடு பெற காரணமும் இவனே -திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் –
ஈ உண்ணி பத்ம நாபர் -சடாரி சாதித்து -மஹா உதாரர்
கார்த்திகை தீபம் முந்திய பரணி தீபம் கச்சி வாய்ந்தான் மண்டபத்தில் மாலை 8 மணிக்கு திரு மஞ்சனம்
திருக்கச்சி நம்பி நினைவாக -அன்று தான்
திரு நாடு எழுந்து அருளிய தினம்
பெருமாள் வந்து செய்தி சொல்லிய பின்பு தாயார் எழுந்து அருளி
சேர்த்தி புறப்பாடு
திரும்பியும் தாயார் ஆஸ்தானம் சேரும் வரை காத்து இருந்து பின்பே கண்ணாடி அறைக்கு எழுந்து அருளுவார்
ஸ்ரீ வல்லபன் அன்றோ –
—————-
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
———–
உய் வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-
வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கை யன்றிக்கே இங்கே யிருக்கச் செய்தே தாங்களிட்ட வழக்காகப் பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.
நஞ்சீயர் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்தபின்பு நெடுங்காலம் பட்டர்பாடே அர்த்த விசேஷங்கள் கேட்டு இன்புறவேணுமென்று இருந்தார்-
இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது;
இந்த வருத்தத்தினால் நஞ்சீயர் “வையம்மன்னி வீற்றிருந்து” என்ற இவ்விடத்தை அருளிச்செய்யும்போது உருத்தோறும் வெகுநிர்வேதப்படுவராம்.
பட்டர் இருபத்தெட்டு (அல்லது 32) பிராயத்திலே திருநாட்டுக்கெழுந்தருளினாரென்று சிலர்கூறுவதுண்டு. இதற்குப் போதுமான பிராமணம் கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில்; பட்டர் ஐம்பது ஐம்பத்தைந்து பிராயம் எழுந்தருளியிருந்தார் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன. நூற்றிருபது திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளியிருந்தது மிகவும் ஸ்வல்பகாலம் என்று சொல்லலாம்படியுள்ளது.
———————
துவளில் மா மணி -6-5- ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –
“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.
“பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது
மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்
‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?
“கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கன புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்தி பண்ணி யன்றோ மீட்பது!
இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?
————–
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-
திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.
இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.
————-
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான் தாளிணை யென் தலை மேலே.–10-6-5-
பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ;
அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம் பற்றித் திருமாலை திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை வரவிட்டருளினவளவிலே
“நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப் பார்த்துச் சிரித்தாராம்.
———–
ஸ்ரீ பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி–76-
ததீய சேஷத்வ பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –
——————
ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-
சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார் பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –
———-
வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-
தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்
சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –
பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –
————
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-
இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-
எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)
————-
எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –-திரு விருத்தம் –82-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது
————-
பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –
இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –
பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –
ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –
வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே –
கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –
நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –
அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – திரு-விருத்தம்-95 – திருமாலிருஞ்சோலை -10-8-–
யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை –
சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –
இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –
திருமாலை –
ஸ்ரீ யபதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –
வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –
———–
பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –
ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –
ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –
கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-
ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே
பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –
———-
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி 76-
எம்பார்-விடியும் பொழுது தொடங்கி ஓவாதே அநுஸந்திக்கும் பாசுரம் –
————
ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-