பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடலைக் கடைந்து அம்ருதம் கொடுத்து அவர்களை சாவாமல்
காத்தவனுடைய பேர் அன்றோ அநாதியான நரகத்தின் நின்றும் கைப்பிடித்து ஏற விடும் பரிகரம்-என்கிறார் –
பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் திரு நாமமே
கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –
ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-
ஆளமர் வென்றி யடுகளத்துள் –ஆள் நிறைந்து வென்றியை யுடைத்தாய் முடிப்பதான யுத்த ஸ்தலத்திலே
வாளமர் வேண்டி-மதிப்புடைத்தான பூசலை வேண்டி –
வரை நட்டு-மந்திரத்தை நட்டு –
அஞ்ஞான்று-அஸூரர்கள் தேவர்களை முறித்து வாயில் இட்டுச் செல்லுகிற அன்று
வாளமர்-தேவர்களுக்கு மதிப்பும் ஆயுஸ்ஸூம் யுண்டாகும் படி
நீளவரைச்-சேதனத்தை
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்-பற்றிக் கடத்தும் படை-அள்ளி எடுத்துக் கொடு போய்
பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –
—————————-
ஆளோடு ஆள் மிடைந்து கிடப்பதாய்-வென்றியை யுடைத்தாய் -எதிரிகளை முடித்து விழ விடுகிற யுத்த பூமியிலே
அஸூரர்கள் தேவர்களை மேலிட்டு நலிகிற அன்று அனுகூலரான தேவர்களுக்கு ஜெயம் யுண்டாகும் படி
ஒளியை யுடைத்தாய் இருபத்தொரு யுத்தம் வேணும் என்று அபேக்ஷித்து -நீரைக் கண்டால் ஆழக் கடவ
கடைந்து அருளினவனுடைய திரு நாமம் அன்றோ பழையதாய் வருகிற சம்சாரம் ஆகிற
நரகத்தை அள்ளி எடுத்துக் கொடு போய்க் கடத்தி விடும் சாதனம் –
—————————————————————–
இப்பாட்டாலே சர்வ ஸமாச்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –
தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –
படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-
படையாரும் வாள் கண்ணார் -வாள் போன்று ஒளி பொருந்திய கண்களை யுடையார்
பாரசி நாள்-துவாதசி அன்று –
படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் –வாள் போன்ற ஒளியை யுடைத்தான கண்களை யுடையரான ஸ்த்ரீகள் -துவாதசி நாள்
பைம்பூம்-தொடையலோ டேந்திய தூபம்-அழகியதாய் தொடுத்த மாலையோடு கூடின தூபம்
இடையிடையில்-மீன் மாய மாசூணும் -பூக்களோடு கூடின புகையானது ஆகாசத்தில் கலக்கத் தோற்றின
நக்ஷத்ரங்களை மாசூணாப் பண்ணா நின்றது –
வேங்கடமே லோருநாள்-மானமாய வெய்தான் வரை –பண்டு ஒரு நாள் ராக்ஷஸன் மாயா மிருகமாய் வர
இத்தைப் பிடித்துத் தர வேணும் என்று பிராட்டி அருளிச் செய்தது மறுக்க மாட்டாமே அத்தை முடித்தவனுடைய மலை
வாள் கண்ணார் -தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்கும் அவர்கள் –
மீன் மாய -ஆகாசம் தோற்றாத படி
பூக்களும் புகையுமாகத் தோற்றுகை
மான் இத்யாதி -பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே
நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —
———————————————————-
வேலாகிற ஆயுதத்தோடு ஒத்து இருப்பதாய் ஒளியை யுடைத்தான கண்களை யுடைய பெண்களானவர்கள்
துவாதசி நாளிலே அழகிய பூக்களால் தொடுத்த மாலைகளோடு கூட தரித்த தூபமானது நடு நடுவே
ஒரோ நக்ஷத்ரங்களை யுடைத்தான ஆகாசமானது மறையும் படி அத்தைச் சென்று மாசு ஏறும்படி பண்ணா நிற்கும் திரு மலையே-
முன்பு ஒரு நாளிலே பிராட்டி வசன பரதந்த்ரனாகக் கொண்டு மாயா ம்ருகம் முடியும் படி எய்து
விழ விட்ட சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திரு மலை —
——————————————————-
ஒரு செயலேயோ –
நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –
வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ் செற்றவா றேன்னே உரவுடைய
நீராழி யுள் கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-
வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –மலை குடையாகவும் தோள் காம்பாகவும் பசுக்களைக் காக்க
ஆயர் நிரை விடை யேழ் செற்றவா றேன்னே –நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான ஏழு வ்ருஷபத்தையும் முடித்தபடி எங்கனே —
உரவுடைய-நீராழி யுள் கிடந்து நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் -உரவு–என்று மிடுக்குக்குப் பெயர் -சர்ப்பம் என்றுமாம் –
திருப் பாற் கடலிலே கிடந்தது
எதிரான மது கைடபர் மேலே திரு வாழியே வாங்கின உபகாரகன் –
இத்தால் ஆஸ்ரிதற்கு விரோதம் வந்த போது தன் உடம்பு நோவக் கார்யம் செய்யும் என்றபடி –
ஒரு செயலேயோ – வந்ததுக்குத் தக்கது கொண்டு கார்யம் செய்வதே – உரவுடைய நீர் -முது நீர்
பேராழி இத்யாதி -இந்திரன் நோவாதபடி உன் தோள் நோவ ரஷிப்பதே –
——————————————————————–
மிடுக்கு யுடைத்தான நீரை யுடைய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து எதிரிட்ட ராக்ஷஸ பிரக்ருதிகளான
மதுகைடபர்கள் மேலே அவர்கள் பொடி படும்படி மிடுக்கால் பெரிய திரு வாழியை எடுத்துக் கொண்ட உபகாரகனே-
இப்படிக் கருதும் இடம் பொருது கை நிற்க வல்ல சக்ரம் யுண்டாய் இருக்க -அத்தை விட்டு –
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத மலை குடையாகவும் திருத் தோள் அதற்கு காம்பாகவும் பசுத் திரள்களை ரக்ஷித்து-
நப்பின்னை பிராட்டையோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமாக இடையர் முன்னிட்ட திரண்ட ரிஷபங்கள் ஏழையும் முடித்த பிரகாரம் எங்கனே –
இத்தால் ஆஸ்ரித விரோதி உண்டானாலும் உன் சங்கல்பத்தால் அன்றிக்கே உடம்பு நோவக் கார்யம் செய்யும் ஸ்வபாவன் அன்றோ நீ என்றபடி –
——————————————————————————————————–
உபகாரகனான உன்னுடைய பெருமையை வேறு சிலரால் அறியப் போமோ —
உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி -84-
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்-உரா யுலகளந்த நான்று–உராய் என்று அநாயாசேன அளந்த அன்று -என்று
அருளிச் செய்தார் -உலாவி -என்றுமாம் -பூமியிலே பொருந்த விட்டு என்னலுமாம் –
எந்தை-அடிக்களவு போந்த படி —– வராகத்-தெயிற்று அளவு போதாவா றென்கொலோ –ஒரு நாள் திருவடிக்குள்
அடங்கியது திரு எயிற்றுக்குப் போந்ததில்லை -என்கிறது –ரஷ்யத்தின் அளவன்று ரக்ஷகன் பாரிப்பு
நான் ஒருவனுமே உன் குணங்களில் குமிழ் நீர் உண்ணா நின்றேன்
—————–
உபகாரகனே -எங்கும் ஓக்க சஞ்சரித்துக் கொண்டு நீ லோகத்தை அளந்து கொண்ட அன்று என் ஸ்வாமியான
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது வராஹ ரூபியான உன்னுடைய திரு எயிற்றில் ஏக தேசத்து அளவும்
போதாதாய் இருக்கிற பிரகாரம் எங்கனேயோ -ஆன பின்பு ஏவம் விதனான உன்னுடைய பெருமையை
சர்வஞ்ஞனான நீ அறிவுதியோ அறியாயோ என்று ஸந்தேஹிக்கும் அத்தனை போக்கி வேறு சிலர் யார் தான் அறிவார்
உராய் உலகளந்த -உலாவிக் கொண்டு உலகு அளந்த -என்றபடி -ரலயோ ரபேத –என்னக் கடவது இறே –
அன்றிக்கே உரோஸிக் கொண்டு உலகு அளந்த -என்றாக்கி எல்லோரோடும் தீண்டிக் கொண்டு -என்றுமாம் –
——————————————————————————————————————–
பிறர் யார் அறிவார் -என்பாரைத் தம்முடைய திரு உள்ளம் நான் அறிந்து இருக்கிறேன் என்ன –
நீயும் இந்திரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்தில் இழிந்தாய் அல்லது சாஷாத்கரித்தாயோ -என்கிறார் –
இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –
படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-
படி கண்டு அறிதியே பாம்பணையினான் -திருமேனி கண்டு அறுதியோ -அவனுடைய படுக்கை கண்டு அறுதியோ —
புட்கொடி கண்டு அறிதியே-த்வஜம் கண்டு அறுதியோ
கூறாய் -சொல்லாய் –
வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-சரீரத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் அடக்கி –வடிவில்லாத இந்திரியங்களை
அடக்கி என்றுமாம் -கண்டவா திரிந்த தொண்டனேன் -என்னுமா போலே என்னவுமாம் –
போதொடு நீரேந்தி-நெறி நின்ற நெஞ்சமே நீ -புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயணத்திலே இழிந்தாய் இத்தனை இறே —
நாம் அறியாது இருக்கப் பெற்ற படி என் என்ன -திரு உள்ளத்தைக் குறித்து -வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-
வடிவிலே -உடம்பிலே அடக்கி -வடிவு இல்லாத படி -ஒரு படிப்பு பட்டு இராது -என்றுமாம் —
———————————————————————
நெஞ்சே யந்த்ர கல்பமான இந்திரியங்கள் ஐந்தையும் பாஹ்ய விஷயங்களில் போகாத படி சரீரத்துக்கு உள்ளே
நியமித்த ஆஸ்ரயண உபகரணங்களான புஷ்ப்பங்களோடே கூட ஜலத்தைத் தரித்துக் கொண்டு ஸமாச்ரயண
மார்க்கத்தில் நிலை நின்று ஆஸ்ரயித்தாயாய் இருக்கிற நீ –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான சர்வேஸ்வரனுடைய தூரத்திலே ஆஸ்ரிதர் கண்டு வாழும் படி
எடுத்துக் கொண்டு வருகிற பெரிய திருவடி யாகிற த்வஜத்தைக் கண்டு அனுபவித்து அறிவுதியோ-
அவன் திரு மேனியைக் கண்டு அறிவுதியோ -அவன் திரு வனந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படி –
தான் கண்டு அறிவுதியோ -இவற்றிலே இன்னது கண்டேன் என்று ஒன்றைச் சொல்லிக் காணாய்-
வடிவு இல்லாத பொறி ஐந்தும் என்றுமாம் -ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபிசந்திகளை உடைத்தாய் இருக்கும் என்கை –
வடிவு இல்லாமை யாவது தெரியாத படி இருக்கை என்றுமாம் -கண்டு அனுபவிப்பதற்கு முன்னே
ஞான லாப மாத்திரம் கொண்டு திருப்தி பிறந்து இருக்க ஒண்ணாது காண் -என்றபடி –
———————————————————————————————————–
இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -சாஷாத் கரித்திலை இறே -என்னத் தரியான் இறே -அவன் –
இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-
நீயும் திருமகளும் நின்றாயால் -தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -என்ற நீயும்
உன்னுடைய பரிகரம்- திருவடி – நலிய புக -நகச்சின் நாபராத்யதி -என்ற அவளுமாய் நின்றாயால் –
குன்றேடுத்துப்-பாயும் பனி மறுத்த பண்பாளா–உடம்பில் விழப் புக்க மழையை மலை எடுத்துப் பரிஹரித்து நீர்மை போலே இருந்தது
இப்போது நெருக்கு அபேக்ஷிதமாக நெருங்கின படி –
வாசல்-கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —இடை கழிக்கு உள்ளும் புறமும்
காட்டுத் தீ போலே இரா நின்றது –
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே
இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே –
சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே
நீயும் இத்யாதி -ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று
உனக்கு முற்படும் பிராட்டியும் / பண்பாளா -அன்று அங்கனம் உதவினாய –
கடை கழியா யுள் புகா–அங்கு அவர்கள் ஆபத்து தீர்த்தான் -இங்கு தன் ஆபத்து தீர்த்த படி -புறம்பு காட்டுத் தீயோடு ஒக்கும் –
————————————————————————-
கண்டதொரு மலையைப் பிடுங்கி எடுத்து மேலே வந்து சொரிகிற மழையைப் பரிஹரித்த நீர்மையை யுடையவனே-
திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்
திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட
திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –
—————————————————————————————————————————–
இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –
இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–
அம் நாவல் சூழ் நாடு -அழகியதாய் ஜம்பூத்வீபம் என்ற பெயர் பெற்ற பரந்த நாட்டில் உள்ள பிராணிகள் –
இனியார் புகுவார் எழு நரக வாசல்–எழு நரக வாசல்-என்கிறது கிளர்த்தியை யுடைத்தான -நரகம் என்னவுமாம் –
ஏழு வகை நரகம் என்னவுமாம் –
முனியாது மூரித்தாள் கோமின்-இனிப்பு புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்
கனிசாயக்-கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு–கனை கழல் -என்றது இலக்கைக் குறித்து
நடக்கிற போது திருவடிகளின் ஆபரணத் த்வனியை
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —ஐம்பூத வீபமானது நன்றாக அறிந்தது –
நன்றாக அறிகை -சம்சாரத்தினின்றும் -போகோம் என்று இருக்கை –
உகந்து அருளின தேசம் இங்கு உண்டாயிற்றே என்று அஸூயை பண்ணாதே பொறுத்து இருக்கை –
இனி இத்யாதி -எங்கள் பதத்துக்கு அழிவு சொல்வதே என்று பொடியாதே — கனை கழல் -ஆபரண த்வனி –
நா வலம் -ஐம்பூத வீபம் -ஏகம் தரணி மாஸ் நிதவ்–ஒரு படுக்கையில் இருப்பார்க்கு பயம் உண்டோ
———————————————————
கன்றாயும் விளவாயும் இரண்டு அஸூரர் தன்னை நலிகைக்கு இடம் பார்த்து நிற்க -அத்தை அறிந்து
முள்ளிட்டு முள்ளைக் களைவாரைப் போலே அஸூரா விஷ்டமான விளவின் பழங்கள் உதிர்ந்து விழும்படியாக
அஸூரா விஷ்டமான கன்றை எறி தடியாக எடுத்து எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்ட திருத் தோள்களை
யுடையனான சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை உடைத்தான திருவடிகளைக் கண்டு அனுபவிக்கைக்கு சாதனம்
நாவலோடே கூடிப் பரந்து நிற்கிற நாட்டில் உள்ள பிராணிகள் ஆனவை அவன் உகந்து வர்த்திக்கிற
திருக் கோவலூருக்குத் தோள் தீண்டியான ஸ்தலத்திலே வாசமே என்று நன்கு அறிந்தன-இப்படியான பின்பு
சப்த விதமான நன்றாக த்வாரங்களிலே இனிப் போய்ப் பிரவேசிக்கக் கடவார் யார் -எங்கள் பதத்துக்கு அழிவாம் படி
இப்படி வார்த்தை சொல்லுவதே என்று பொடியாதே இனி ஒரு நாளும் திறக்க ஒண்ணாத படி பெரிய தாளை பூட்டுங்கோள்-
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடும் இடமே நாடு -அல்லாத இடம் காடு என்று கருத்து
ஏழு நரகம் -எழுகிற சம்சாரிகள் அடங்கலும் சென்று புகு கிற நரகத்வாரம்-என்றுமாம் -கிளர்த்தியை யுடைத்தான நரகம் என்றுமாம் –
——————————————————————————————————————–
இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ்விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –
நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-
நாடிலும் நின்னடியே நாடுவன்-நினைக்கிலும் உன் திருவடியையே நினைப்பான்
நாடோறும்-எப்போதும் -பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்-பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு-
ஒன்றைச் சூடிலும் திரு வாழி ஏந்தின உன்னுடைய வி லக்ஷணமான திருவடிகளை சூடா நின்ற எனக்கு
என்னாகில் என்னே எனக்கு —பரம பதத்தில் போனாலும் வாக் மனஸ் காயங்கள் அங்கே ப்ரவணமாகையாகவே செய்வது-
அது இங்கேயே பெற்றேனாகில் எனக்கு இங்கே இருக்கையை நல்லது -என்கிறார் -அவன் படிக்கு சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கு என்றும் -யதி வா -என்றும் -சொல்லத் தலை அறுப்புண்டிலனோ-
பொன்னடியே -இதுவே பிரயோஜனமாக வாக் காயங்களை ஒழிய நினைக்கிலும்
என்னாகில் என்னே எனக்கு -நாட்டார் நரகம் புகில் என் -தவிரில் என் -ஆர் தான் அழ–
——————————————————————–
நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும் -தேவரீருடைய திருவடிகளையே தேடா நிற்பன் -சர்வ காலத்திலும்
ப்ரீதி பரவசனாய் ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும் -தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய் விட்டுப் பாடா நிற்பன்
நான் என் தலையால் சாதரமாக தரிக்கும் இடத்திலும் ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை அழகு பெற தரித்த
சர்வாதிகனான உன்னுடைய அழகிய திருவடிகளையே ஸீரோ பூஷணமாக தரிக்கக் கடவனாய் இப்படி கரண த்ரயத்தாலும்
உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்ற எனக்கு ஏதானாலும் நல்லது -நாட்டார் அறிந்து இந்த லாபத்தை பெறில் என்-
இழக்கில் என் -எனக்கு ஏதாகில் நல்லது என்றபடி-
அன்றிக்கே இங்கே இருக்கில் என் அங்கே போகில் என் -ஏதானால் எனக்கு நல்லது என்றுமாம் –
——————————————————————————————————————
கீழ்ப் பிறந்த லாபம் தெரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –
எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——-89-
எனக்காவார் ஆரோருவரே –என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை இறே என்னவுமாம் —
எனக்கு ஆவார் எவர் என்னவுமாம்
என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை என்று நீர் சொல்லுவான் என் -பரம சேதனன் உண்டே என்னில்
எம்பெருமான்-தனக்காவான் தானே–என்னோடு ஓத்தார் இல்லை என்றேன் அத்தனை அல்லது எம்பெருமானுடைய
உயர்த்தி இல்லை என்றேனோ –நீர் என்னோடே ஒப்பார் இல்லை என்று சொல்லிற்று எத்தாலே என்னில் –
மற்றல்லால் புனக்காயாம்-பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ-மா மேனி காட்டும் வரம் —–
அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –
புனக்காயாம்-பூ மேனி-புனத்திலே நிற்கிற காயம் பூ மேனியை / காணப் பொதியவிழும் பூவைப் பூ–காணக் காண அலரா நின்ற பூவைப் பூ
இவை இரண்டும் அவனுடைய வரமான மா மேனியைக் காட்டா நின்றது –நாட்டாருக்கு நினைக்கையில் உள்ள வருத்தம் போரும்
எனக்கு மறக்க -நானும் ஒருவனே –வரமாக -தன்னிலும் விசதமாக -என்றுமாம் –
———————————————————————–
நிர்ஹேதுகமாக இப் பேற்றைப் பெற்று சேஷத்வமே வடிவாய் இருக்கிற எனக்கு ஒப்பாக வல்லார் வேறு ஒருவர் உண்டோ
நாட்டில் ஓர் ஒப்பில்லாத அளவன்றிக்கே தான் தோன்றியான பேற்றை யுடையனாய் –
சேஷத்வ ரசத்துக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரன் தானே தனக்கு ஒப்பாம் இத்தனை ஒழிய எனக்கு ஒப்பாக வல்லனோ-
இந்த ஞான லாபம் மாத்திரமே யாய் -சாஷாத் கரிக்கப் பெறாத குறை கிடக்கிறதே என்று சங்கிக்க இடம் அறும் படி
தன்னிலத்திலே நின்று செவ்வி பெற்ற காயாம்பூவின் உடைய நிறமும் -காணாக் காணாக் கட்டு நெகிழ்ந்து வருகிற
பூவைப் பூவினுடைய நிறமும் அவனுடைய சிலாக்யமான வடிவை அழகிதாகக் காட்டா நின்றது –
அன்றிக்கே வ்ரீ யத இத வர –என்றாய் -என்னால் பிரார்த்திக்கப் படுகிற வடிவை அழகிதாகக் காட்டா நிற்கும் என்னுதல் –
———————————————————————————————————
நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –
போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-
வரத்தால் வலி நினைந்து –வரத்தால் தனக்கு மிடுக்கு உண்டாக நினைத்தான் அல்லது
வரம் கொடுத்தவர்கள் சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலேன் –
மாதவ– வரம் கொடுத்தவர்களாலும் வணங்கப் படுமவன்
நின் பாதம்- சிரத்தால் வணங்கானாம் என்றே –அவன் இழவுக்கு வெறுக்கிறார்
உரத்தினால்– ஈரியாய்–மிடுக்காலே ஈரப்படும் அரியானவன்–சத்ருவானவன் –பெரிய சத்ரு என்றுமாம் —
நேர் வலியோனாய இரணியனை-நேரே வலியனான ஹிரண்யனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –நாட்டிலே நடையாடும் ஸிம்ஹம் அன்று -தன்னுடைய இச்சையால் பிறந்த ஸிம்ஹம் என்றுமாம்
ஓரப்படும் அரியாய் –எல்லாரும் த்யானம் பண்ணும் ஸிம்ஹம் -என்றுமாம் –
வரத்தால் -தேவர்கள் வரத்தை மிடுக்காக நினைத்தான் -வணங்கு வித்துக் கொள்ளும் விஷயம் இருக்கும் படி -/
வணங்கானாம் என்றே -பிள்ளை பக்கல் பரிவு -தப்பச் செய்தோம் -என்னாம் -என்றுமாம்
உன் வஸ்து அழியாமைக்கு என்றுமாம் -/ ஈரரி–பெரிய சத்ரு / ஓரரி-சிம்ஹங்களில் ஒப்பு பிடிக்க ஒண்ணாது –
————————————————————————–
சர்வர்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற ஸ்ரீயபதியானவனே–இரண்டு கூறாகக் கிழித்துப் பொகட்டுப் படும் சத்ருவாய்-
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய ஹிரண்யனை -நாட்டில் கண்டு அறியாத அத்விதீயமான நரசிம்ஹமாய்க் கொண்டு
அவன் மிடுக்கும் கீழ்ப் படும் படியான மிடுக்காலே -மாம்சளமான பெரிய சரீரத்தை ஆஸ்ரித வத்சலனான நீ
இடந்து பொகட்டது ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தால் வந்த தன் மிடுக்கைக் கனத்த நினைத்து சர்வாதிகனான
உன்னுடைய திருவடிகளைத் தலையால் வணங்கி ஆஸ்ரயியாதே இருந்தான் என்றோ -அன்று இறே
சிறுக்கனைப் பல கறுவி நலிந்தான் என்னும் இது கொண்டு இறே -என்றபடி –
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –