மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
அவதாரிகை –
இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை போய்
பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள் –
—————————————————————————————
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-
பதவுரை
வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.
—————————————————————————————
வியாக்யானம் –
வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –
வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –
வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-
கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –
சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-
மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே நீராட வென்று நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –
மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –
மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –
நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –
அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –
அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-
ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –
ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –
இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-
மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –
பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்
பாடும் –
பாடுங்கோள்-
சூடும் –
சூடுங்கோள்-
புகும் –
புகுங்கோள்-
—————————————————
ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –
இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )
(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)
(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-
பதவுரை
வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-
(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–
(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)
(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )
கற்பு என்று பாதி வ்ரத்யம் –
(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)
மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்
இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-
(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)
அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-
ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்
பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–
(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)
பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-
——————————————————
திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-
பதவுரை
வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை
யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –
பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-
—————————————————————
செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்
(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )
அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–
பதவுரை
வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை
மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –
வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்
நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்
கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்
(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)
(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)
அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்
—————————————————————
வெற்பென்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பென்று சூடும் கருங் குழல் மேல் – மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும். (ஸ்ரீ பேயாழ்வார் -மூ. தி, 69) வியன் துழாய் – வியக்கத்தக்க துளசி;
மற்பொன்ற – மல் பொன்ற, மல்லர்கள் அழியும்படியான;
மால் – திருமால்;
நீள் கடல் -திருப்பாற்கடல்.
ஆழ்வார் ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார் கூறுவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம் என்பர்.
என் மகளானவள் ஏதேனும் ஒரு மலையைப் பற்றிய பேச்சு நேர்ந்தாலும், திருவேங்கட மலையைப் பற்றிப் பாடுகிறாள்.
தனது கற்புக்குத் தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத் தனது கருங்கூந்தலில் சூடிக் கொள்கிறாள்.
மல்லர்கள் அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால் பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள் தோறும் புறப்படுகின்றாள்.
இப் பாசரத்தில்
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்,
கருங்குழல்” என்று பெண்ணின் கூந்தலையும் கூறுவதால்,
‘என் மகள்’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக் கொள்ள வேண்டும்.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில் புகுந்து மதுகைடபர் என்னும் அசுரர்களைக் கொன்றதையும்,
கிருஷ்ணாவதாரத்தில் சாணூரன், முஷ்டிகன் என்கிற மல்லர்களை அழித்ததையும் கூறுகிறார்.
பூண்ட நாள் எல்லாம்: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப் பூட்டிய நாள் எல்லாம்’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள் தோறும்’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல் பல வகைப்பட்டிருக்கும்:
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி அனுபவித்தல்,
திருக் கல்யாண குணங்களைச் சொல்லி அனுபவித்தல்,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச் செயல்களைச்) சொல்லி அனுபவித்தல்,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின் வளங்களைப் பேசி அனுபவித்தல்,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி அனுபவித்தல்
என்று இப்படிப் பலவகைப்பட்டிருக்கும் பகவதனுபவம்.
இவ் வகைகளில் பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல் (இது அந்யாபதேசம் எனப்படும்).
இப்படி அனுபவிக்கும் இடத்தில் தாய்ப் பாசுரம், தோழிப் பாசுரம், மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில் (பாட்டுகளில்) விசேஷமாக வரும்.
முதலாழ்வார்களின் திருவந்தாதிகளில் ஸ்திரீ பாவனையினாற் பேசும் பாசுரம் வருவதில்லை.
ஸ்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள் அருளி செய்தவர்கள் முதலாழ்வார்கள்.
ஆயினும் இப் பாசுரம் ஒன்று தாய் வார்த்தையாகச் செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின் நிலைமையை அவளைப் பெற்று வளர்த்த திருத்தாயார் பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம் இது.
“என்னுடைய மகளானவள்” என்ற எழுவாய் இதில் இல்லையாதலால் கற்பித்துக் கொள்ள வேண்டும்.
இப்பிரபந்தத்தில் அந்யாபதேசப் பாசுரம் வேறொன்றும் இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக் கொள்ளுதல் சிறவாதென்றும்,
“என் மகள்” என்ற எழுவாய் இல்லாமையாலும்
இவ் வர்த்தம் உசிதமன்று என்றும் சிலர் நினைக்கக் கூடுமாதலால்
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும் பூர்வர்கள் அருளிச் செய்துள்ளனர்.
எங்ஙனே எனில்:
”பாடும், சூடும், புகும்! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில் வந்தனவாகக் கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள் ஏதாவதொரு மலையைப் பாடவேண்டில் திருவேங்கடமலையைப் பாடுங்கள்;
ஏதேனும் ஒரு மலரைக் குழலில் சூடவேண்டில் திருத்துழாய் மலரைச் சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச் சூடுங்கள்;
நீராடுவதற்குத் திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்” என்பதாக.
இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்:
‘*இப்பிரகரணத்தில் (பிரபந்தத்தில்) கீமும் மேலும் அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும் இப்படிக் கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்…
திருமலையைப் பாடுங்கோள்… திருத்துழாயைச் சூடுங்கோள்…
விரோதி நிரஸத சீலனானவன் கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்” என்று.
திருவேங்கடத்தின் புகழைப் பாடியும், துளசியைப் போற்றிச் சூடியும் வந்தால்,
நாம் திருப்பாற்கடலிலே நித்யம் நீராடலாம்; நிச்சயம் வைகுந்தம் புகுவோம் என்பது குறிப்பு …
——————————–
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் – கற்கின்ற
நூல்வலையில். பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண் (ஸ்ரீ திருமழிசையாழ்வார் -நா. தி, 40),
வீடு – மோட்சம்;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில் போற்றப்படும் லட்சுமி;
கேள்வனார் – கணவர், இங்கே திருமால்.
மலைகளின் பெயர்களைச் சொல்லி வருகையில், தற்செயலாக வேங்கடமலை என்றேன்;
இதன் பலனாகவே மோட்சம் நிச்சயம் என்றுணர்ந்து நிற்கின்றேன்…
“*நாம் சொன்ன சிறிய சொல்லுக்குப் பெரிய பேறு கிடைத்த பாக்கியம் எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப் போனேன்!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில் அகப்பட்டிருக்கும் லக்ஷ்மீநாதனின்
திருவடிகளாகிய வலையில் அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம் அடுக்காகச் சொல்லுவோம் என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும் சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும் அறியாமல் ‘திருவேங்கடமலை’ என்று என் வாயில் வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான் என்னைத் திருவேங்கடம் பாடினவனாகக்
கணக்கு செய்து கொண்டான் என்பது இதன் கருத்து.
நின்று நினைக்கின்றேன்: நாம் புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாது இருக்கவும்,
எம்பெருமான் தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன் என்கை.
கால்வலையிற் பட்டிருந்தேன்? மூன்றாமடியில் சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்,
ஈற்றடியில் அவ்வெம்பெருமான் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச் செய்தார்.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான் திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.
எம்பெருமான் ஒரு வலையில் அகப்பட்டான், –
நானொரு வலையில் அகப்பட்டேன் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி.
வேதங்களையும், ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் சம்பிரதாயமாக ஓதும் முறையைப் பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும், பெரிய பிராட்டியும் (லட்சுமியும்) இருவரும் நமக்குத் தெய்வம் என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக் காப்பதாகக் கூறி ௮வன் அதுபடி நடக்கவில்லையாகில் நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்) கேட்பாள்.
ஏதோ வெற்பொன்றைப் பாட நினைத்த போதும் அவனது வேங்கடத்தைப் பாடும்படியாயிற்று,
அதனால் அதை எனக்கு வீடாக்கினான்.
அதே மோட்சத் தானம்.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன் (ஆராய்ந்தேன்).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும் வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல், நிற்றல், நினைத்தல் என்று வாக்கு, காயம், மனோ ரூப முக்கரணங்களின்
வியாபாரங்கள் (செய்கைகள்) மொழியப் பெற்றன.
———————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –