பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14)
பதவுரை:-
பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,
யாமிந்யா – இரவினுடைய,
பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,
ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)
ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,
பராம் – உயர்ந்த,
குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,
ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…
எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு
ஸர்வ தர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,
நித்ய கர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ
பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,
பரமகாருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத்கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,
‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,
ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.
ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது –
பங்க்திபாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத்தக்கது.
மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;
குருபரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.
இங்கு குருபரம்பரை என்பது –
பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும்,
ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும். (14)
——————-
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச || (15)
பதவுரை:-
தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,
ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,
த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,
பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,
பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,
ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,
ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…
கருத்துரை:-
ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன –
ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை,
அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை,
அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.
திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே
முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,
இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை –
த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,
கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்
இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.
எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன
(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;
(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;
(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;
(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;
(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.
இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.
இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள்
பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று. (15)
——————-
தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16)
பதவுரை:-
தத: – அதற்குப்பின்பு,
ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,
ஸ்நாத்வா – நீராடி,
பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,
க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,
யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,
சேதஸா – மனஸ்ஸுடன்,
க்ருத்வா – செய்து.
கருத்துரை:-
ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.
இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.
இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.
முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.
ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘
எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள
எம்பெருமானுடைய திருமுகமலர்ச்சிக்காகவே நித்யநைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால்,
மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது. (16)
—————–
அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17)
பதவுரை:-
அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,
நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,
ப்ரபும் – ஸ்வாமியான,
ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,
ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,
ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,
தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,
சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)
சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).
கருத்துரை:-
சாண்டிலஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.
‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண்காப்புகளையணிந்து,
கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப்பொழுதுகளிலும்,
தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும்
மந்த்ரங்களை ஜபித்துக்கொண்டேயிருந்து
அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதிவசநம்.
இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல்தகும்.
இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும்,
தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.
பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய
உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க… (17)
——————-
ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18)
பதவுரை:-
தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,
தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,
ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,
ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),
ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,
ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…
கருத்துரை:-
முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷணவகையால் கொள்க;
அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்தபிறகு,
சோம்பலில்லாதவனாய்க்கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள்
அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன்,
தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்கவேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.
இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில்
ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;
மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க. மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால்,
அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.
நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று
சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது. (18)
——————-
ப்ருத்யை: ப்ரியஹிதைகாக்ரை: ப்ரேமபூர்வமுபாஸிதம் |
தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19)
பதவுரை:-
ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,
ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,
ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,
உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,
தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),
மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,
ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,
ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…
கருத்துரை:-
முன்கூறியபடியே பெருமாள் ஸந்நிதியில் உள்ள கம்பத்தின் கீழ்ப்பகுதியில் மாமுனிகள் எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில்,
அந்தரங்க ஸிஷ்யர்கள் பெருமாள் திருவாராதனத்திற்கு வேண்டியதாய் ஸாஸ்த்ர விரோதமில்லாத
அரிசி, பருப்பு, பழம், பால், தயிர், கறியமுது முதலிய வஸ்துக்களை பக்தியுடன் கொண்டுவந்து எதிரில் ஸமர்ப்பித்துப்
பணிவிடை செய்ய அவற்றை அவர் அங்கீகரித்தருளினார்.
‘மாடாபத்யம் யதி: குர்யாத் விஷ்ணுதர்மாபிவ்ருத்தயே’ [யதியானவர் வைஷ்ணவமான தர்மங்களை
(பஞ்சஸம்ஸ்காரம், உபயவேதாந்த ரஹஸ்யக்ரந்த ப்ரவசநம், அவற்றில் கூறியபடி ஸிஷ்யர்களை அநுஷ்டிக்கச் செய்தல் தொடக்கமானவற்றை) மேன்மேலும் வளர்ப்பதற்காக, மடத்தின் அதிபதியாயிருத்தலை ஏற்றுக்கொள்ளக் கடவர்] என்று
பராஸரஸம்ஹிதையிலுள்ளபடியே மாமுனிகள் மடாதிபதியாக அழகியமணவாளனாலே நியமிக்கப்பட்டாராகையாலே
கோயில் கந்தாடையண்ணன் முதலிய பல மஹான்கள் அவருக்கு ஸிஷ்யர்களாகி, வைஷ்ணவ ததீயாராதனம் நடக்கும்
அம்மடத்தில் பெருமாள் திருவாராதனத்திற்கு உதவும்படி வஸ்துக்களை ஸமர்ப்பிப்பதும்
மாமுனிகள் அவற்றை அங்கீகரிப்பதும் யுக்தமேயாகுமென்க.
முற்கூறப்பட்ட ஸிஷ்யர் பெருமக்கள் மாமுனிகள் ஸந்நிதியில், புதிதாக வந்து முதல்நாள் சேர்ந்த தமக்கு
(எறும்பியப்பாவான தமக்கு) பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்களாம்.
அவர்கள் மிகவும் வேண்டியவர்களாகையால் அவர்கள் செய்த ப்ரார்த்தனையைத் தட்டாமல் மாமுனிகள் அப்படியே செய்தாராம்.
அதனைக் குறிப்பிடுகிறார். பின்னிரண்டடிகளில்
‘ஒரு வருஷகாலம் ஆசார்யனை உபாஸிக்கவேண்டுமென்றும், அப்படியுபாஸித்த ஸிஷ்யனுக்கே ஆசார்யன் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்றும் சாஸ்த்ரம் கட்டளையிடாநிற்கவும்,
மாமுனிகள் அப்பாவிற்கு வந்த மறுநாளே செய்தது குற்றத்தின் பாற்படாது;
அந்தரங்கஸிஷ்யர்களின் ப்ரார்த்தனை – அந்த சாஸ்த்ரத்தைவிட பலமுடையதாகையாலென்க.
பெருமாள் திருவாராதநம் முடிந்த பிறகு இப்பஞ்சஸம்ஸ்காரங்கள் நடைபெற்ற விஷயம்
‘ஆசார்யன் நன்னாளில் காலையில் நீராடி எம்பெருமானுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து,
தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே
பஞ்சஸம்ஸ்காரங்களையும் செய்யக்கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.
அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவபூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,
அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்
இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும்,
புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண்காப்புக்களை அணிதலும்,
ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.
ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதிபெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம்.
ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல். (19)
———————-
அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20
பதவுரை:-
அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,
அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,
தீர்க்கம் – வெகுநேரம்,
ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,
மம – அடியேனுக்கு,
திவ்யம் – மிகவும் உயர்ந்த,
பதத்வயம் – திருவடியிணையை,
தத்வா – தலையில் வைத்து.
கருத்துரை:-
மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக்கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து
பக்திப்பெருக்கினால் அப்படியே வெகுநேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.
ஒருவன் துன்பத்தால் நடுங்காநிற்க, அதுகண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது.
தயையென்பது இதன்பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமரகோஸம் காணத்தக்கது.
‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும்
அது பத்து அஸ்வமேதயாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும்.
பத்துத் தடவைகள் அஸ்வமேதயாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்கபோகத்தை அநுபவித்துவிட்டு
மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால்
பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.
பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக்குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத்
தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.
திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.
ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட,
மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்யஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசநபூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத்தக்கது. (20)
——————
ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21
பதவுரை:-
ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி
பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,
மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,
ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,
வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,
வந்தே – வணங்குகிறேன்.
கருத்துரை:-
மணவாளமாமுனிகள் – தாம் ஸிஷ்யர்களுக்குச் செய்யும் த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாக நினைப்பது
உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் திருந்தி பகவந் மங்களாஸாஸநம் செய்வதொன்றையே.
அப்படி அவர் நினைத்தால்தான் அவர் செய்யும் உபதேஸம் தூய்மையுடையதாகும்.
ஆகையால் அங்ஙனமே அவர் நினைத்துத் தமக்கு த்வயமந்த்ரத்தை ஸுத்தோபதேஸமாகும்படி
உபதேஸித்தாரென்று இதனால் தெரிவித்தாராயிற்று.
முற்கூறியபடி நினையாமல்,
(1) பணம், பணிவிடைகள் முதலிய உலகில் காணும் பலனையோ,
(2) ஸிஷ்யன் மோக்ஷம் பெறுதலையோ,
(3) தான் ஒரு ஸிஷ்யனைத் திருத்தி அதனால் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தையோ,
(4) தன்னுடைய தனிமை தீரும்படி தன்னோடு ஸிஷ்யன் கூடியிருக்கையாகிற ஸஹவாஸத்தையோ பலனாக நினைத்து த்வயத்தை உபதேஸித்தால், அவ்வுபதேஸத்திற்கு தூய்மை குறையுமென்று ஸூசிப்பித்தபடி இது.
இங்கு – ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள்களில் தேஹயாத்ரைக்கு பணமோ பணிவிடையோ தேவைப்படாதா?
ஸிஷ்யன் மோக்ஷம் பெறவேண்டாமா? இங்கிருக்கும் நாள்களில் ஆசார்யன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டாமா?
நல்ல ஸிஷ்யனோடு ஸஹவாஸம் ஆசார்யனுக்கு வாய்க்கவேண்டாமா? இவையெல்லாம் நல்லவையேயன்றித் தீயனவல்லவே?
இவற்றைப் பயனாகக்கருதி ஆசார்யன் செய்யும் த்வயோபதேஸம் தூய்மை குன்றப்பெறுவது எப்படி? என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே.
அதற்கு – ஆசார்யன் விஷயத்தில் ஸிஷ்யனுக்கு உள்ள ஷேஷத்வம்(அடிமையாந்தன்மை) ஏதோ இயன்ற வரையில்
சிறிது தநம் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்தாலன்றி நிலைபெறாதென்று நினைக்கும் ஸிஷ்யனது நினைவால் முதற்பயன் ஸித்திக்கும்.
யாராவது ஒருவன் மோக்ஷம் பெற்று நம்மிடம் வருவானா என்று நினைத்து அதற்கு உறுப்பாக ஒரு ஸிஷ்யனை
ஓராசார்யனோடு சேர்த்து த்வயோபதேஸம் பெற்றவனாக ஆக்கிய எம்பெருமானுடைய நினைவாலே ஸிஷ்யனுக்கு மோக்ஷம் ஸித்திக்கும்.
‘இவன் (நம்ஸிஷ்யன்) நல்ல உபதேஸங்களைச் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு ஆளாம்படி ஒரு ஸிஷ்யனைத் திருத்துவது பகவான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பாகையாலே இது பகவத் கைங்கர்யமன்றோ?’ என்று நினைத்திருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே, ஆசார்யனுக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்.
வெகுகாலமாக ‘யான், எனது’ என்னும் அஹங்கார மமகாரங்களாலே ஸத்தையை இழந்து கிடந்த நம்மை ஹிதோபதேஸம் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு உரியவனாக்கிய மஹோபகாரகனை நாம் ஒரு நாளும் விட்டுப் பிரியக்கூடாதென்று நினைத்திருக்கும் ஸிஷ்யனது க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.
ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்
இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து,
ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே
தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.
இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;
நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.
குருபரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால்
‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய
அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்யபரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று,
அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.
ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில்,
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,
இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று,
எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல்
ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.
இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில்
ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது. (21)
——————-
ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22
பதவுரை:-
தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,
ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,
புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,
புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,
விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.
கருத்துரை:-
இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக்காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்கநகரத்திற்கு அடைமொழியாயிற்று.
ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை.
பின்னையோவென்னில்
எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே
வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமைவாய்க்கப்பெற்றது அரங்கநகரமென்பது இவ்வடைமொழிக்குக் கருத்து.
‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’
(எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றைவிட அதிகமான
ஆசையைப்பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.
இக்கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.
நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக –
பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.
இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப்
பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.
(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரகமநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷ
ஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால்
அப்பெருமானுக்கு உண்டான ஜகத்காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.
(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி.
ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதயகுகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால்
அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.
(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால்,
கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லா வபேக்ஷிதங்களையும்
தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.
இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.
ஆதிஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.
ஸ்ரீரங்கமங்களமாய் புருஷஸப்தவாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது
எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.
‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி. ஒருமனிதனைவிட்டு நீங்காதது
அவனுடைய நிழலேயன்றி வேறொன்றில்லையென்பர் உலகோர்.
நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.
மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.
இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது. (22)
—————-
மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23
பதவுரை:-
ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,
மஹதி – மிகப்பரந்ததுமான,
த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,
சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,
கோபுரம் – கோபுரத்தை,
ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,
ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)
அந்த: – கோவிலுக்குள்ளே,
ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,
தம் – அந்த மணவாள மாமுனிகளை,
பஜாமி – ஸேவிக்கிறேன்.
கருத்துரை:-
ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.
ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்தமாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான
ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி
இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும். இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.
சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது. தெண்டன்
ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,
ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது. (23)
—————–
தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா |
பூமாநீளா குருஜநவ்ருத: புருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24
பதவுரை:-
தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,
யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,
ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,
ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,
விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,
ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,
ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,
பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:
ச – பரமபதநாதன்,
இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,
வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,
நித்யம் – தினந்தோறும்,
ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.
கருத்துரை:-
மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்
ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார்
இவர்களையும், பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான
ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,
ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக
எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார். ஏன்?
அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால்
அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு
இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப்பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.
எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;
இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.
‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும்
பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,
மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார்
தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.
ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும்,
அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த
பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.
ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.
ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குருஜநஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும்
தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று. (24)
——————–
மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25
பதவுரை:-
தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,
மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,
யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,
க்ருத்வா – செய்துவிட்டு ,
தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,
விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,
ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,
ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)
கருத்துரை:-
மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்
தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,
‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.
மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,
அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்
மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘
யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.
‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று
ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘
ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது
ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி
ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.
‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,
அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்
முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க. (25)
—————-
அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26
பதவுரை:-
அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,
ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய்,
ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,
மண்டபே – மண்டபத்தில்,
தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்
பிள்ளையுடைய திருவடித்தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,
(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)
கருத்துரை:-
தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி
அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.
அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.
‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில். இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது –
பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து
சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.
மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ?
அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.
இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.
அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்சாயையின் நடுவில் (தம்மைப்போல்)
எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.
இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’
(திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம்மாமுனிகளை வணங்குகிறேன்)
என்றதனோடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)
————-
தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27
பதவுரை:-
ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)
ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,
திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,
ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,
தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,
ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,
வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,
தம் – அம்மணவாளமாமுனிகளை,
நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.
கருத்துரை:-
திவ்யப்ரபந்தங்கள் ஸரீரஸம்பந்தரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்
‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)
‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11)
முதலிய பலஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.
முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது
மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.
சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.
மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.
ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே
ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.
இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ரப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால்,
அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின்
ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.
ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.
ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.
நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான)
வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்றவேணுமென்பது
ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.
இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.
இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால்
கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க. (27)
————-
தத: ஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநைரர்த்திநஸ்தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் || 28
பதவுரை:-
தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,
ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,
பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,
தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,
அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,
பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,
தம் – அந்த மணவாளமாமுனிகளை,
பஜாமி – ஸேவிக்கிறேன்.
கருத்துரை:-
திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால்
தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து
அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.
எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து
தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.
ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.
மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு
நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.
‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால்
ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.
ஸ்ரீபாததீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற
ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது.
சிலர் ஸ்ரீபாததீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.
‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்தபாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’
என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்தபாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக
இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.
ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால்
அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.
பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை
அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்யப்ரபந்தஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு
இதில் ஸ்ரீபாததீர்த்தபாநத்தை கூறினாராயிற்று.
முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர்,
இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;
வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க. (28)
—————
ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29
பதவுரை:-
பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),
ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,
ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,
அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,
விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,
ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)
பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற
தம் – அந்த மாமுனிகளை,
பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.
கருத்துரை:-
ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,
“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும்
எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.
பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும்,
ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும்
எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று
சாண்டில்யஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.
அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற
பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.
‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்
கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும்,
பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.
சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து
ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.
பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல்
(உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.
ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும்
நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே
உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.
‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே)
மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.
‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும்
நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத்தூய்மையை உண்டாக்குமதும்
பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை
மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார்.
பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில்
குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.
மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது,
‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற
ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து,
இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.
பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.
முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ?
என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை,
தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.
ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது –
அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)
————–
தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30
பதவுரை:-
தத: – அமுதுசெய்த பிறகு,
புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,
புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,
சேத: – தமது மநஸ்ஸை,
ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,
உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,
உபஹ்வரே – தனியடத்தில்,
உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்
என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.
கருத்துரை:-
அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று
ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.
யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.
யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை,
அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.
‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.
எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.
அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால்
திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.
‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று
தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,
ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை)
சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்
‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள
பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.
புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷஸப்தம் பரமபுருஷனாகிய
விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.
யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்மத்யாநத்தைத் தெரிவிக்கிறது. (30)
————–
அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31
பதவுரை:-
அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,
அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,
ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,
அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,
ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,
அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,
உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,
நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு,
நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.
கருத்துரை:-
‘அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில்
முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும்,
அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு
யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.
மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகம் செய்யவேண்டுமென்று தர்ம
ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.
‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும்,
பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய)
யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று
கூறுகிறபடியினால், ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை
எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க. (31)
—————-
தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32
பதவுரை:-
தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,
தஸ்மிந் – முற்கூறிய,
ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,
நிமக்நம் – மூழ்கியதாய்,
நிப்ருதம் – அசையாது நிற்கிற,
மந: – தனது மனத்தை,
யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,
கர்த்தும் – செய்வதற்கு,
யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,
தம் – அந்த மணவாளமாமுனிகளை,
நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.
கருத்துரை:-
இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.
அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை
மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும்
மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,
எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை
‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.
ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும்,
அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹமாகும்.
இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து
அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி
‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .