(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)
————–
471. வத்ஸராய நமஹ (Vathsaraaya namaha)
தர்ஷன் ஹர்ஷன் என்ற இரண்டு நண்பர்கள் பண்டரிபுரத்தில் சந்திரபாகா நதிக்கரையிலே அமர்ந்திருந்தார்கள். தாங்கள் உண்பதற்காக இருவரும் ரொட்டிகள் எடுத்து வந்திருந்தார்கள். தர்ஷன் ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தார். ஹர்ஷன் மூன்று ரொட்டிகள் வைத்திருந்தார்.அப்போது அந்த வழியே வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் இருவரையும் பார்த்து, “நான் நீண்ட நாள்களாகப் பசியால் வாடி வருகிறேன்! எனக்கு ஏதாவது கொஞ்சம் ரொட்டி தர முடியுமா?” என்று கேட்டார். தர்ஷனிடம் உள்ள 5 ரொட்டிகளையும், ஹர்ஷனிடம் உள்ள 3 ரொட்டிகளையும் சேர்த்து மூவருக்குமாகச் சமமாகப் பிரிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. எட்டை மூன்றால் வகுக்க முடியாதல்லவா?
அந்த வழிப்போக்கர், “இதற்கு ரொம்ப எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று மூன்று துண்டு களாக வெட்டி விடுங்கள். எட்டு ரொட்டிகளையும் மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால், 24 துண்டுகள் கிடைக்கும். அதன்பின் ஆளுக்கு எட்டு துண்டுகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமே!” என்று சொல்ல, இந்த ஆலோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது என்று தர்ஷன் ஹர்ஷன் இருவருமே ஏற்றார்கள்.
ஆளுக்கு எட்டுஎட்டு ரொட்டித் துண்டுகள் என்று மூவரும் எடுத்துக் கொண்டபின், அந்த வழிப்போக்கர் தர்ஷன் – ஹர்ஷனிடம் எட்டுத் தங்க நாணயங்களைத் தந்து விட்டுப் போனார். தர்ஷன் ஹர்ஷனிடம், “நான் நான்கு தங்கக் காசுகள் எடுத்துக் கொள்கிறேன். நீ நான்கு தங்கக்காசுகள் எடுத்துக் கொள். நமக்குள் சரிசமமாகப் பிரித்துக் கொள்வோம்!” என்று சொன்னான். ஆனால், ஹர்ஷன் ஒத்துக்கொள்ளவில்லை.
“தர்ஷன்! நீ செய்த தானத்தை விட நான் செய்த தானமே உயர்ந்தது. நீ ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தாய், நான் மூன்றுதான் வைத்திருந்தேன். ஐந்து ரொட்டிகள் வைத்திருப்பவன் தானம் செய்வது பெரிய விஷயம் இல்லை. மூன்று ரொட்டிகள் இருந்தபோதும் தானம் செய்தேனே, அதுதான் உயர்ந்த தானம். அதனால், எனக்குத் தான் நிறைய தங்கக் காசுகள் தரவேண்டும். சரிசமமாகப் பிரிப்பதை நான் ஏற்க மாட்டேன்!” என்றான்.
இதை தர்ஷன் ஏற்கவில்லை. சரிசமமாகத் தான் பிரிக்க வேண்டும் என்றான். இருவருக்குள்ளும் அது பெரிய வாக்குவாதமானது. இருவரும் ராஜாவிடம் சென்றார்கள். ராஜா வழக்கை விசாரித்து விட்டு, “எத்தனையோ அரசுப் பணிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு வழக்கா? நாளை பார்க்கலாம்!” என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விட்டார். அடுத்த நாள் காலை, ராஜா அரசவைக்கு வந்தார். தர்ஷன் ஹர்ஷன் இருவரும் வந்தார்கள். “தர்ஷனுக்கு ஏழு தங்க நாணயங்களும் ஹர்ஷனுக்கு ஒரு தங்க நாணயமும் வழங்கப்படும்!” என்று ராஜா தீர்ப்பு.
தீர்ப்பின் தாத்பரியம் புரியாமல் எல்லோரும் விழிக்க, ராஜா சொன்னார், “தர்ஷனுக்கும் ஹர்ஷனுக்கும் வழிப்போக்கனாக வந்து காட்சி தந்தவன் சாட்சாத் பாண்டுரங்கன். அதே பகவான்தான் என் கனவிலும் வந்து காட்சி தந்து, எனக்கு ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்தார். தர்ஷனிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தன. அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் 15 ரொட்டித் துண்டுகள் தேறும். ஹர்ஷனிடம் மூன்று ரொட்டிகள் இருந்தன.
அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் ஒன்பது ரொட்டித் துண்டுகள் தேறும். 15 துண்டுகள் வைத்திருந்த தர்ஷன், 7 துண்டுகளைத் தானமாக வழங்கிவிட்டான். 9 துண்டுகளை வைத்திருந்த ஹர்ஷன், ஒரு துண்டுதான் தானமாகக் கொடுத்திருக்கிறான். ஏழு ரொட்டித் துண்டுகள் கொடுத்தவனுக்கு ஏழு தங்கக் காசுகள், ஒரே ரொட்டித் துண்டு கொடுத்தவனுக்கு ஒரு தங்கக் காசு. இதுதான் பாண்டுரங்கன் தீர்ப்பு!” என்று விளக்கினார்.
இதன் மூலம் நாம் உணர்வது என்னவென்றால், நாம் செய்யும் தர்மம் அதர்மம் ஆகியவற்றை எல்லாம் பகவான் நம் கூடவே இருந்து கண்காணிக்கிறார். நாம் தர்மத்தைச் செய்தால் நமக்கு நன்மையை வழங்குகிறார். அதர்மத்தைச் செய்தால், அதற்குரிய தண்டனையை வழங்குகிறார். அந்தத் தர்மத்திலுமே ஏழு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஏழு தங்கக் காசுகள், ஒரு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஒரு தங்கக் காசு என்ற ரீதியில், என்ன தர்மம் செய்கிறோமோ அதற்குத் துல்லியமான கூலியைத் தருகிறார்.
இப்படியாக நம்மைக் கண்காணிப்பதற்காக நம் அனைவருள்ளும் எழுந்தருளி இருப்பதாலே, திருமால் ‘வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுதான் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தின் 471-வது திருநாமம். ‘வத்ஸர:’ என்றால் உள்ளே வசிப்பவர் என்று பொருள்.
நாமும் “வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், நம்முடைய தர்மங்களுக்கான சரியான பலன்
நம்மை வந்து சேரும்படி திருமால் நமக்கு அருள்புரிவார்.
———————-
472. வத்ஸலாய நமஹ: (Vathsalaaya namaha)
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய அற்புதமான ஒரு பாசுரம்:
“சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை மரமேழ் எய்தமைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே”
அன்று எந்தத் திருமால், ராமனாக அவதரித்து, சீதையைத் தன்னிடம் இருந்து பிரித்து வைத்த ராவணனையும் அரக்கர்களையும் அழித்தாரோ, அதே திருமால் இப்போது நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்து, ஜீவாத்மாக்கள் தன்னை அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துப் பாபங்களையும் போக்கி அருளிக்கொண்டு இருக்கிறார். தன் பக்தர்களான ஜீவாத்மாக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதைப் பற்றியே அனவரதமும் சிந்தித்துக் கொண்டு இருப்பதால், முனி – எந்நாளும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் – என்று போற்றப்படுகிறார் அந்த ஸ்ரீநிவாசப் பெருமாள்.
ராமாவதாரத்தில், ராமனின் வலிமை மீது சந்தேகம் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக ஒரே பாணத்தால் ஏழு மரங்களைத் துளைத்துக் காட்டினார். கலியுகத்தில், நம்பிக்கை இல்லாதிருக்கும் நம் போன்றோருக்கு நம்பிக்கையை அருள நம்பிக்கை நட்சத்திரமாக நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டுள்ளார்.தெளிந்த ஞானம் பெற்ற மகான்களாலும் கூடக் காணமுடியாதவனாக விளங்கும் அந்த ஸ்ரீநிவாசன், ஞானமில்லாமல் கலங்கிய மனநிலையில் இருக்கும் அடியேனுக்குத் தன் கருணையால் தரிசனம் தந்தருளினான். அவ்வாறு அவனைத் தரிசித்த அளவிலே, என் கண்கள் களிப்பக் களிப்புற்றேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவித்தார் திருமங்கையாழ்வார்.
இந்தத் தமிழ் அமுதைக் கேட்ட நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசன், திருமங்கை ஆழ்வாரிடம், “நான் உங்களுக்கு வலிய வந்து இப்படிக் காட்சி தந்தமைக்கு என்ன காரணம் என்று கூறுங்கள் பார்க்கலாம்!” என்றார். அடுத்த பாடலைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்:
“தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்த தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இவ்வையம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை”
“இறைவா! தாய்ப்பசுவின் ஸ்தானத்தில் இருக்கும் நீ, உன் கன்றுக்குட்டியான அடியேன்மீது இரக்கம் கொண்டாய். கன்றுக்குட்டி தன் தாயை நினைப்பது போல், அடியேன் உன்னை நினைத்திருக்கும்படி நீயே அடியேனுக்கு அருள்செய்தாய். நான் உன்னை நினைத்ததை நீ அங்கீகரிக்கவும் செய்து, இப்பேரருளையும் நீயே தந்து விட்டாய்!” என்று இப்பாசுரத்தில் பதில் உரைக்கிறார் ஆழ்வார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், தன்னிடம் சரணாகதி செய்யும் அடியார்களைத் தனது கன்றுக்குட்டியாய்க் கருதி, அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களின் மனங்களுக்குள் திருமால் குடிவந்துவிடுகிறார். அந்த பக்தர்களையும் தன்னுள் நிலைநிறுத்தி விடுகிறார்.
திருமங்கையாழ்வார் என்னும் கன்றுக்குட்டி, தாய்ப்பசுவான ஸ்ரீநிவாசனை நினைக்கும்படி, ஸ்ரீநிவாசன் அருள்புரிந்தார். அதன்விளைவாக, அவர் மனதில் ஸ்ரீநிவாசன் குடிகொண்டார். இன்றும் திருவாலி திருநகரியில் எழுந்தருளியிருக்கும் திருமங்கை ஆழ்வாரின் திருமார்பில், பதக்க வடிவில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.
இப்படித் தாய்ப்பசு கன்றிடம் அன்பு காட்டுவது போல், சரணாகதியானவர்களிடம் அன்பு காட்டி, அவர்களுக்குள் வசிப்பதால், திருமால் ‘வத்ஸல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வத்ஸல:’ என்றால் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 472-வது திருநாமம்.“வத்ஸலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மீது திருமால் எல்லையற்ற தாயன்பைப் பொழிந்தருள்வார்.
————
473. வத்ஸிநே நமஹ: (Vathsiney namaha)
கண்ணன் பசுக்கள், எருமைகள், ஆடுகள் ஆகிய மூன்றையுமே மேய்த்திருக்கிறான் என்று புராணங்களைப் பார்க்கும்போது நமக்குத் தெரிய வருகிறது. ஆனாலும், நாம் எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றாலும், அங்கே ராஜகோபாலனாகப் பசுவோடுதான் கண்ணன் காட்சி தருகிறானே தவிர, எருமையோடோ ஆடுகளோடோ கண்ணன் காட்சி தருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தேன்.
அடியேனுடைய ஸ்ரீபாஷ்யாதி கிரந்த ஆசார்யன் டாக்டர் ஸ்ரீஉ.வே.கருணாகராச்சாரியார் சுவாமி, நகைச்சுவையோடு ஒரு விஷயம் கூறுவார். “எருமைமாடு யமனுடைய வாகனமாக இருப்பதாலே, கண்ணனை யமன் என்று தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் அஞ்சி விலகிவிடுவார்களோ எனக் கருதி, எருமையைத் தவிர்த்திருப்பார்கள். அவ்வாறே ஆடு என்பதும் வேறு நாடுகளிலும், மதங்களிலும் பயன்படுத்தப்படுவதால், கண்ணன் எந்த மதம் என்று கலக்கம் பிறக்க வாய்ப்பு வரும் என்று கருதி ஆட்டைத் தவிர்த்திருப்பார்கள். மீதமுள்ளது பசுதான், அதனால் அதனைப் பயன்படுத்துகிறார்கள்!” என்று ஹாஸ்யமாக ரசித்துச் சொல்வார்.
அந்த ஆசார்யரது திருவடிகளை அடியேன் தியானித்தபோது, அவரது திருவருளால் இதில் மற்றொரு விஷயம் பிடிபட்டது. மாடு, ஆடு வேறுபாட்டுக்குள் போகாமல், அவை உணர்த்தும் தத்துவங்களின் அடிப்படையில் மட்டும் இக்கருத்தை அணுகுமாறு வேண்டுகிறேன். என்னவென்றால், பசுமாடு சத்துவ குணத்தைக் குறிக்கிறது. ஆடு ரஜோகுணத்தைக் குறிக்கிறது. எருமை மாடு தமோ குணத்தைக் குறிக்கிறது.
பசு, எருமை, ஆடு ஆகிய மொத்தக் கால்நடைகளையும் மேயவிட்டுவிட்டுக் கண்ணன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்வான். அவற்றுள் எருமைகளும் ஆடும் புல் மேய்வதிலேயே தங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்தி விட்டுக் கண்ணனையே மொத்தமாக மறந்துவிடுமாம். ஆனால், பசுமாடுகள் மட்டும் கண்ணனின் குழலோசையில் மனதைப் பறிகொடுத்து, கண்ணனின் திருவடிகளையே நாடி வந்து, அத்திருவடித் தாமரைகளில் பொங்கும் தேனைப் பருகியபடி இருக்குமாம்.
இது உணர்த்துவது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள பல்வேறுபட்ட உயிர்களுக்குள், எருமை மாட்டால் உருவகப் படுத்தப்படும் தமோகுணம் மிக்கவர்களும், ஆடுகளால் உருவகப் படுத்தப்படும் ரஜோ குணம் மிக்கவர்களும் புல் மேய்வது போல் உலகியல் விஷயங்களை அனுபவித்து இன்பம் துய்ப்பதையே தங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டு, கண்ணனாகிய இறைவனை மறந்து தங்கள் காலத்தைக் கழிக்கிறார்கள்.
ஆனால், பசு மாடுகளால் உருவகப் படுத்தப்படும் சத்துவகுணம் மிக்கவர்கள், உலகியல் விஷயங்களாகிய புல்லை மேய்வதில் மனம் செலுத்தாமல், இறைவனான கண்ணனின் திருவடிகளை அடிபணிந்து, அவனையே சிந்தித்தபடி, அவனுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்து உய்கிறார்கள்.அதனால்தான் திருக்கோயில்களில் கண்ணனுக்கு அருகில் பசுமாடும், பசுங்கன்றுகளும் மட்டுமே நிற்பதாகச் சித்தரித்துள்ளார்கள். பல புகைப்படங்களிலும் கூட, எருமைகளும் ஆடுகளும் வெவ்வேறு திசைகளில் மேய்ந்துகொண்டிருக்க, பசுமாடு மட்டும் கண்ணன் திருவடிகளை வருடியபடி இருப்பதைக் காணமுடிகிறது.
ஆனாலும் கண்ணன், தன்னைக் கணிசிக்காத எருமை மாடுகளையோ, ஆடுகளையோ கைவிடுவதில்லை. பசுமாடுகளை மேய்ப்பது போலவே அவற்றையும் மேய்த்து அவைகளுக்குத் தேவையான உணவையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறான். அதுபோலத்தான், இறைவனை அண்டாதவர்களுக்கும் கூட இறைவன் நன்மையைச் செய்து, அவர்கள் மெல்லமெல்லப் பக்குவம் அடையும்படி அருள்புரிந்து, அவர்களும் தன்னை வந்தடைய வழிகாட்டிக் கொண்டேதான் இருக்கிறான்.
இப்படி உயிர்கள் அனைத்தையும் தன் கன்றுகளாகக் கருதி, அவைகளிடம் அன்பு காட்டும் தாயாகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘வத்ஸீ’ என்று அழைக்கப்படுகிறார். வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. ‘வத்ஸீ’ என்றால் கன்றுகளை உடையவர். இங்கே ஜீவாத்மாக்களே திருமாலுக்குக் கன்றுகளின் ஸ்தானத்தில் உள்ளார்கள் என்பதை இத்திருநாமம் குறிக்கிறது. ‘வத்ஸீ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 473-வது திருநாமம்.“வத்ஸினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைக் கண்ணன் நல்வழிப்படுத்திக் காத்தருள்வான்.
—————
474. ரத்னகர்ப்பாய நமஹ (Rathnagarbhaaya namaha)
சுமார் பத்து வருடங்கள் முன்பு கேரளாவில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். குருவாயூரப்பனின் பெருமைகளையும், குருவாயூரப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படும் துலாபாரக் காணிக்கையைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். உடனே, “குருவாயூரப்பா! இன்று பிச்சைக்காரனாக இருக்கும் என்னை, நீ மட்டும் கோடீஸ்வரனாக ஆக்கிவிட்டால், உனக்கு என் எடைக்கு எடை தண்ணீரைத் துலாபாரக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்!” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார். விரைவிலேயே அந்தப் பிச்சைக்காரர், கையில் ஒரு லாட்டரி சீட்டு கிடைத்ததாம்.
அந்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ஒரு கோடி அவருக்குக் கிடைத்துவிட்டது. கண்கண்ட தெய்வமான குருவாயூரப்பன் செய்த இன்னருளை நினைத்து வியந்து போனார் அந்த நபர். பிரார்த்தனை செய்துகொண்ட படிக்காணிக்கையைச் செலுத்தி விடலாம் என்ற முடிவோடு குருவாயூரப்பனின் கோவிலுக்குச் சென்றார். ஆனால், அந்தப் புதிய கோடீஸ்வரருடைய மனதில் ஒரு சிறிய குறை இருந்ததாம். “குருவாயூரப்பனின் பேரருளும் கருணையும் மிகவும் உயர்ந்ததாக இருக்க, அவனுக்குக் காணிக்கையாக வெறும் தண்ணீரையா அளிப்பது?” என்று சிந்தித்து, தண்ணீருக்குப் பதிலாக எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பிக்கத் தீர்மானித்தார் அவர்.
துலாபாரத்தின் ஒரு தட்டில் கோடீஸ்வரர் அமர்ந்தார். மறுதட்டில் அவருடைய எடைக்கு இணையாகக் கற்கண்டை வைத்தார்கள். எவ்வளவு மூட்டை மூட்டையாகக் கற்கண்டு வைத்தாலும், அந்தக் கற்கண்டின் அளவு இவரது எடைக்கு நிகராக வரவில்லை. சுமார், 150 கிலோவுக்கு மேல் கற்கண்டு வைத்தும் கோடீஸ்வரர் அமர்ந்த தட்டுதான் கீழே இருந்தது.அதன்பின் திருக்கோயில் அர்ச்சகரை அழைத்து என்ன செய்வது என்று கேட்டார்கள்.
அவர் சிந்தித்துப் பார்த்து விட்டு, “நீங்கள் கற்கண்டு துலாபாரம்தான் பிரார்த்தித்திருந்தீர் களா? அல்லது வேறு ஏதாவது வேண்டிக் கொண்டீர்களா?” என்று கேட்டார். கோடீஸ்வரர், “நான் தண்ணீரைத் தான் எடைக்கு எடை தருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு செல்வத்தைக் குருவாயூரப்பன் அருளி இருக்கையில், வெறும் தண்ணீரையா அவனுக்குக் கொடுப்பது? அதனால்தான் எடைக்கு எடை கற்கண்டை அளிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன்!” என்றார்.
அர்ச்சகர், “நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதைக் கொடுத்தால்தான் குருவாயூரப்பன் ஏற்பான். அவன் என்ன செல்வம் இல்லாதவனா? சொத்து இல்லாதவனா? இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே அந்த பகவானின் சொத்துதான். நீங்கள் துலாபாரம் சமர்ப்பித்தால், உங்கள் பக்தியின் எடையைத்தான் குருவாயூரப்பன் பார்க்கிறானே ஒழிய, நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளின் எடையை அவன் பார்ப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் பொருளுக்காக அருள்புரிபவன் அல்லன் அவன். நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளால் புதிதாக அவனுக்குச் சொத்து வரவேண்டிய தேவையும் இல்லை. பிரார்த்தித்ததைச் சரியாகச் சமர்ப்பியுங்கள்!” என்றார்.
அவ்வாறே எடைக்கு எடை தண்ணீரைக் காணிக்கையாக இவர் சமர்ப்பித்தவாறே, துலாபாரம் நேராக நின்றது. காணிக்கையைக் குருவாயூரப்பனிடம் சமர்ப்பித்து விட்டு,குருவாயூரப்பனிடம் சென்ற கோடீஸ்வரர், “பகவானே! அடியேனுக்குக் கிடைத்த இந்த ஒரு கோடி ரூபாய் செல்வமும் கூட உன் சொத்தில் இருந்து நீ அருளியது தானே? அதை உணராமல் உனக்குப் புதிதாக ஒரு சொத்தை நான் தருவதாக எண்ணி விட்டேனே! தவறு! என்னை மன்னித்தருள்வாயாக! எல்லையில்லாத சொத்தை உடைய நீ, உன் அடியார்கள் விரும்பினால், அவர்களுக்கு அச்செல்வத்தை அருள்கிறாய் என்று உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டுத் தன் இல்லம் திரும்பினார்.
இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், எல்லையில்லாத சொத்துகளை உடைய திருமால், செல்வம் வேண்டி வரும் அடியார்களுக்கு அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்கிறார். எனவே, நம்மிடம் செல்வம் இருக்கிறது என்று நாம் கர்வம் கொள்ளாமல், அவன் அருளிய செல்வம் என்று உணர்ந்து நன்றியுடன் இருப்பதே நலம்.
இவ்வாறு எல்லையில்லாத செல்வத்தோடு திகழ்வதால் திருமால் ‘ரத்னகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 474-வது திருநாமம்.“ரத்னகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வம் குறைவின்றி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
—————–
475. தனேஸ்வராய நமஹ (Dhaneshwaraaya namaha)
கண்ணபிரானின் பால்ய சினேகிதரான குசேலர் மிகவும் வறுமையில் வாடிவந்தார். அவரது மனைவியின் ஆலோசனையின் பேரில், நான்கு கைப்பிடி அவலை எடுத்துக் கொண்டு, தன் இளமைக்காலத்து நண்பன், கண்ணனைச் சந்திப்பதற்காகத் துவாரகைக்குச் சென்றார் குசேலர்.துவாரகையிலே பிரம்மாண்டமான அரண்மனையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணன், குசேலரைக் கண்டதும் எழுந்து வந்து அவரை வரவேற்றான். தான் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் குசேலரை அமர்த்தினான். அதுவரை தனக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த ருக்மிணியிடம் குசேலருக்குச் சாமரம் வீசுமாறு கூறினான். அவளும் அவ்வாறே செய்தாள்.
பின், குசேலரின் பாதங்களுக்குப் பூஜை செய்து அவரது திருவடி நீரைத் தன் தலை மீதும், ருக்மிணியின் தலைமீதும் தெளித்துக்கொண்டான் கண்ணன். மேற்கொண்டு குசேலரைக் குசலம் விசாரித்த கண்ணன், “எனக்காக என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்று குசேலரைப் பார்த்துக் கேட்டான். கண்ணனின் பிரம்மாண்ட அரண்மனை, அங்கே அவன் அனுபவித்து வரும் ராஜபோகங்கள், அவனது ஆடை அலங்காரங்கள் போன்றவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன குசேலர், நாம் வெறும் அவல் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், அது கண்ணனின் பெருமைக்கு இழுக்காக இருக்குமோ என்று கருதி ஏதும் பேசாமலேயே இருந்துவிட்டார்.
ஆனால், கண்ணன் குசேலரோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவரது மேலாடைக்குள்ளே ஒளித்து வைத்திருந்த அவல் மூட்டையைப் பார்த்துவிட்டான். அதென்ன மூட்டை என்று கேட்டபடி அதை உருவிப் பிரித்துப் பார்த்தான். நான்கு பிடி அவல் அதில் இருந்தது.
முதல் பிடி அவலை எடுத்து கண்ணன் தனது வாயில் போட்டுக் கொண்டான். அடுத்த பிடி அவலை ருக்மிணிக்கு அளித்தான். தொடர்ந்து இன்னொரு பிடி அவலைத் தன் வாயில் கண்ணன் போட முற்படுகையில், ருக்மிணி கண்ணனைத் தடுத்து, “சுவாமி! நீங்கள் குசேலருக்குச் செல்வத்தை அருள்வதற்கு அந்த முதல் பிடி அவலே போதுமானதாயிற்றே. அதற்கு மேலும் ஒரு பிடி அவலை உண்டால்தான் அருள் புரிவீர்களா?” என்று கேட்டாளாம் ருக்மிணி.
அதற்கு கண்ணன் ரகசியமாக ருக்மிணியிடம், “ருக்மிணி! உனக்குத் தெரியாதா? ஏற்கனவே, தான் குசேலர் வீட்டில் தங்கமழை பொழிந்தாகிவிட்டதே!” என்றானாம். “எனக்குத் தெரியாமல் எப்போது பொழிந்தீர்கள்?” என்று ருக்மிணி தன் பார்வையாலேயே கேட்டாள்.அதற்கு ருக்மிணியின் காதில் கண்ணன், “குசேலர் இத்தனை நாட்கள் வறுமையில் வாடியதற்குக் காரணம் அவரைப் பிடித்திருந்த தரித்திரம் எனப்படும் அலக்ஷ்மியே ஆகும்.
அந்த அலக்ஷ்மி அவரை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அழைத்து அவருக்குச் சாமரம் வீசச் சொன்னேன். லக்ஷ்மியான நீ சாமரம் வீசியபின், உன் அக்காளான அலக்ஷ்மி அங்கே இருக்க மாட்டாள் இல்லையா? எனவே நீ எப்போது சாமரம் வீசினாயோ, அப்போதே தங்கமழை அவர் வீட்டில் பொழிந்துவிட்டது. அவர்மீது உள்ள அன்பினால் அவர் தந்த அவலை வாங்கி உட்கொண்டேனே ஒழிய, அவலுக்காகத் தங்க மழை பொழியவில்லை. அவரது அன்புக்காக அப்போதே பொழிந்துவிட்டேன்!” என்று கூறினான்.
ஆனால், அது குசேலருக்குத் தெரியாதே என்றாள் ருக்மிணி. இப்போது சொல்ல வேண்டாம் அவரே தன் இல்லம் திரும்பும் போது அனைத்தையும் புரிந்துகொள்வார் என்று சொல்லிவிட்டான் கண்ணன். இப்படித் தனது அடியார்களுக்குச் செல்வத்தை அருளும் போது, காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அந்தச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளி வழங்கிவிடுவதால், திருமால் ‘தனேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தன’ என்றால் செல்வம், ‘ஈஸ்வர:’ என்றால் இவ்விடத்தில் விரைந்து அருள்பவர் என்று பொருள். ‘தனேஸ்வர:’ என்றால் செல்வத்தை விரைந்து அருள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 475-வது திருநாமம்.“தனேஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு விரும்பிய செல்வம் விரைவில் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.
———————-
476. தர்மகுபே நமஹ (Dharmagupey namaha)
காஞ்சிபுரத்தில் சுவாமி வேதாந்த தேசிகன் வாழ்ந்துவந்த காலம். அதே காஞ்சியில் வசித்து வந்த ஒரு பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்குக் `கன்யாசுல்கம்’ என்று செல்வத்தை அளித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஏழையான இந்த பிரம்மச்சாரி கன்யாசுல்கம் கொடுப்பதற்குச் செல்வம் வேண்டிக் காஞ்சியில் உள்ள பலரை அணுகினான்.
அவர்களுள் சிலரிடம் பணம் இருந்தாலும் அதைத் தருவதற்குரிய மனம் இல்லாததால், அவர்கள் பிரம்மச்சாரியிடம், “நம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் என்று ஒருவர் இருக்கிறாரே! அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர்! நீ அவரது உதவியைப் போய் நாடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். உண்மையில் சுவாமி வேதாந்த தேசிகன், பேரருளாளப் பெருமாளையும் பெருந்தேவித் தாயாரையுமே தமக்குச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாரே ஒழிய, உலகியல் செல்வத்தை எல்லாம் அவர் கையாலும் தொட்ட தில்லை. அவரைச் சோதித்துப் பார்ப்பதாக எண்ணி இந்த பிரம்மச்சாரியை அவரிடம் சிலர் அனுப்பி வைத்தார்கள்.
அந்த பிரம்மச்சாரியும் அவர்களின் கூற்றை நம்பி சுவாமி வேதாந்த தேசிகனிடம் சென்று தான் திருமணம் செய்துகொள்வதற்குரிய செல்வம் வேண்டும் என்று கேட்டான். “நீ எதற்காகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார் தேசிகன். அப்போது அந்த பிரம்மச்சாரி, “நான் வேதங்களைக் கற்று விட்டேன். மேற்கொண்டு அந்த வேதங்கள் கூறும் தருமங்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல இல்வாழ்க்கை வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்றான்.
இதைக் கேட்டு வியந்தார் தேசிகன். “வெறும் இல்லற சுகத்தில் நாட்டம் கொள்ளாமல், இறைவனுக்கு ஆராதனமான தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி இவன் இல்வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறானே!” என்று பெருமைப்பட்டார். அந்த பிரம்மச்சாரியைக் காஞ்சிபுரத்தில் கல்யாணகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டுள்ள பெருந்தேவித் தாயாரின் சந்நதிக்கு அழைத்து வந்தார். பெருந்தேவித் தாயாரைக் குறித்து `ஸ்ரீஸ்துதி’ என்ற அற்புதமான துதியை இயற்றி அருளினார் தேசிகன். அதிலே,
“யோகாரம்ப த்வரிதமனஸோ யுஷ்மத் ஐகாந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமம் இஹ யே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதி க்ருஹாத் அம்பராத் அம்புதேர் வா
தாரா நிர்யாந்தி அதிகம் அதிகம் வாஞ்சி தானாம் வஸூனாம்”
என்ற பதினாறாவது ஸ்லோகத்தை வேதாந்த தேசிகன் சொன்னவாறே, பெருந்தேவித் தாயார் தங்கமழையை அங்கே அப்போதே பொழிந்து விட்டாள். “இல்லற தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி, யார் ஒருவர் திருமகளையும் திருமாலையும் நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு பூமியில் இருந்தும் குபேரன் வீட்டில் இருந்தும் வானில் இருந்தும் கடலில் இருந்தும் எல்லாச் செல்வங்களும் வந்து மழையாகக் கொட்டும்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பெருந்தேவித் தாயார் பொன்மழை பொழிந்த இக்காட்சி இன்றும் காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதியின் பிராகாரத்தில் சித்திர வடிவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.
செல்வத்துடன் புறப்பட்ட பிரம்மச்சாரி, தேசிகனிடம், “சுவாமி! பெருமாளும் தாயாரும் அடியேனுக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைத் தந்து விட்டார்களே! இதனால் என் மனம் மாறி, தருமத்தையும் நான் மறந்து, ஒருவேளை செருக்குற்றுச் சுகபோகத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டால் என்ன ஆவது?” என்று கேட்டார்.
அதற்கு தேசிகன், “இது நீயாகத் தேடிய செல்வம் அன்று. திவ்ய தம்பதியர் அருளிய செல்வம். நாமாக ஈட்டிய செல்வமாக இருந்தால், அது நமக்கு கர்வத்தைக் கொடுக்கும். திவ்ய தம்பதியர் நமக்குச் செல்வத்தை அருளினால், செல்வத்தை அருளியதோடு அப்படியே விட்டு விடாமல், நாம் அதைக் கொண்டு அறவழியால் வாழ்கிறோமா என்பதையும் அவர்களே கண்காணித்து நம்மைக் காப்பார்கள். தன் அடியார்கள் தர்மத்தில் இருந்து விலகாமல் எப்போதும் காக்கும் அந்தப் பேரருளாளனும், பெருந்தேவியும் துணை நிற்க நீ அஞ்ச வேண்டாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இப்படி அடியார்கள் தருமத்தில் இருந்து விலகாமல் அவர்களைக் காப்பதால் திருமால் ‘தர்மகுப்’ – அடியார்களைத் தருமத்தில் இருந்து விலகாதபடி காப்பவர் – என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 476-வது திருநாமம்.“தர்மகுபே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், தருமத்தில் இருந்து என்றும் விலகாதபடி திருமால் காத்தருள்வார்.
—————–
477. தர்மக்ருதே நமஹ (Dharmakruthey namaha)
பட்டாபிஷேகத்தைத் துறந்து ராமன் வனவாசம் புறப்படும் சமயத்தில், தன் தாயான கௌசல்யாதேவியைச் சந்தித்து விடைபெறுவதற்காக அவளது அரண்மனைக்குள்ளே நுழைந்தான் ராமன். அவனை வரவேற்று ரத்தின சிம்மாசனத்தில் அமரச் சொன்னாள் கௌசல்யா. ஆனால் ராமன், “அம்மா! நான் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில் தான் அமர வேண்டும். சிம்மாசனத்தில் அமரக்கூடாது. தந்தை என்னைப் பதினான்கு வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டிருக்கிறார்.
அதை நிறைவு செய்துவிட்டு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன்!” என்றான்.இதைக் கேட்டு அதிர்ந்து போனாள் கௌசல்யா. “என்ன ராமா சொல்கிறாய்? உனக்கு இன்று பட்டாபிஷேகம் என்று நாங்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வனவாசம் என்கிறாயே! உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்? என் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தி ஒருவேளை எனக்கு இருந்தால் இப்போதே என் உயிரை விட்டுவிடுவேன்! ராமா! என்னை விட்டு நீ போகவே கூடாது!” என்றாள்.
மேலும், “ராமா! நான் உனக்கு உயர்ந்த தருமம் ஒன்றைச் சொல்கிறேன்! அதைச் செய்! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தை மனதில் கொண்டு வனம் போக விரும்பினாய்! ஆனால், இந்த உலகிலேயே மிகவும் உத்தமமான தருமம், தாய்க்குத் தனயன் பணிவிடை செய்வதே ஆகும். இப்போது உன் தாயான நான் ஆணை இடுகிறேன். எனக்குப் பணிவிடை செய்து கொண்டு, நீ அயோத்தியில் இருக்க வேண்டும்!” என்று ராமனுக்கு ஆணை இட்டாள் கௌசல்யா.
அதற்கு ராமன், “தாயே! நீங்கள் சொன்னது மிகவும் உயர்ந்த தருமம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், தந்தையின் சொல்படி வனவாசம் என்ற ஒரு விரதத்தை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். இப்படித் தொடங்கிய ஒரு விஷயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது தருமம் ஆகாது. மேலும், நான் தருமத்தின் வழி நடக்க விரும்புவோருக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்க விழைகிறேன். நானே இப்போது திடீரென்று, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தில் இருந்து விலகி, தாய் சொல்லைத் தட்டாதே என்ற தருமத்தைக் கடைபிடிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது பின்னால் வருவோருக்குக் குழப்பத்தையே விளைவிக்கும்.
எனவே, தாயே! நீங்கள் இட்ட கட்டளையை அவசியம் நான் நிறைவேற்றத் தான் போகிறேன். அதை நான் மீற மாட்டேன். ஆனால், முதலில் தந்தையின் கூற்றுப்படி பதினான்கு வருட வனவாசத்தை நிறைவு செய்து விடுகிறேன். அதன்பின் நாட்டுக்குத் திரும்ப வந்து, உங்களுக்குக் கூடவே இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் செய்து உங்கள் கட்டளையையும் நிறைவேற்றுகிறேன்!” என்றான்.
இனியும் ராமனைத் தன்னால் தடுக்க முடியாது என்று உணர்ந்து விடுகிறாள் கௌசல்யா. அதனால், பலவிதமான ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லி ராமனைக் காட்டுக்கு வழியனுப்பி வைக்கிறாள் கௌசல்யா தேவி. இதிலிருந்து, தருமத்தில் இருந்து இம்மிகூட விலகாமல் ராமன் பின்பற்றிக் காட்டினான் என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா? தருமங்களை உலகுக்கு விதித்தவரும், உலகியல் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவருமான திருமால், தானே ராமனாக அவதரித்தார்.
அந்தத் திருமால் எதற்காக இவ்வளவு தூரம் அந்தத் தருமத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் அத்தகைய தேவை அவருக்கு உள்ளதா? அவர் தருமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் தான். ஆனால், மனிதர்கள் எல்லோரும் தருமத்தைப் பின்பற்றி அதன்வழி நடக்க வேண்டும் என்று திருமால் நினைக்கிறார். அதனால், தானே முன்னுதாரணமாக இருந்து பிறருக்கு வழிகாட்டி, அவர்களும் தரும வழியில் நடக்கும்படிச் செய்கிறார்.
அதனால்தான் திருமால் ‘தர்மக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். தர்மக்ருத் என்றால் தருமத்தைக் கடைப்பிடிப்பவர் என்று பொருள். அவருக்கு அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அடியவர்களான நாம் தருமத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக அவர் தருமத்தைக் கடைப்பிடிக்கிறார். ‘தர்மக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 477-வது திருநாமம்.“தர்மக்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தரும சிந்தனை என்றும் நிலைக்கும்படி திருமால் அருள்புரிவார்.
————-
478. தர்மிணே நமஹ (Dharminey namaha)
சீதையோடும் லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் சென்ற ராமன், வனவாசத்தின் இரண்டாம் நாள் இரவு வத்ச தேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தங்கினார்கள். அங்கே சயனித்தபடி தன் தாயான கௌசல்யாவை நினைத்து வருந்தி அழுதான் ராமன்.அதைக் கண்ட லட்சுமணன், “அண்ணா! நீங்கள் அன்னை கௌசல்யாவின் பேச்சைக் கேட்டு நாட்டிலேயே இருந்திருக்கலாமே!” என்று கேட்டான். ஆனால் ராமனோ, “இல்லை லட்சுமணா! தந்தை முதலில் கட்டளையிட்டு, அதை நான் ஏற்றபின் நடுவில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாதல்லவா? அதனால்தான் காட்டுக்கு வந்தேன். ஆனால், ஒரு மகனாக இருப்பவன் தன் தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும். தன் தாய் கண்ணீர் விடுவதற்கு மகனே காரணமாகக் கூடாதல்லவா? இப்போது நான் காட்டுக்கு வந்து, அங்கே என் அன்னை நிராதரவாகக் கண்ணீர் சிந்தி வருந்த நானே காரணமாகி விட்டேனே!” என்று கலங்கி அழுதான்.
மேலும் லட்சுமணனிடம், “இந்த அவதாரத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அவதரித்ததால், இப்படித் தாயைப் பிரியும் சூழல் வந்து விட்டது. அடுத்த அவதாரத்தில் பார்! அவதரித்த நாள் தொடங்கி நான் தாய் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்து காட்டப் போகிறேன்!” என்றானாம் ராமன். அதனால் தான் அடுத்த கிருஷ்ணாவதாரத்தில், ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாள் அன்று நள்ளிரவில், மதுராவில் உள்ள கம்சனின் சிறைச்சாலையில், தேவகி வசுதேவரின் மகனாகக் கண்ணபிரானாக அதே பகவான் வந்து அவதரித்தான்.
அற்புதக் குழந்தையாக, நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், தாமரைக் கண்களோடும், ஆச்சரியமான திரு ஆபரணங்களோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், நீலமேக சியாமள வண்ணத்தோடும் வந்து தோன்றிய கண்ணனைப் பார்த்த தேவகி, “குழந்தாய்! எட்டாவது குழந்தையான நீ நாராயணனாக இருப்பாயோ என்று ஏற்கனவே கம்சன் தேடிக் கொண்டிருக்கிறான். நீ பிறந்தவுடன் உன்னை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறான். இந்த நிலையில் நீயே உன்னை அடையாளம் காட்டிக் கொடுப்பது போல் இப்படி திருமாலுக்குரிய அடையாளங்களோடு வந்து தோன்றி விட்டாயே! கம்சன் இதைப் பார்த்து, நீ திருமால் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்று அஞ்சி நடுங்கினாள்.
மேலும், “குழந்தாய்! தயவு செய்து உனது கூடுதலான இரண்டு திருக்கரங்களையும் சங்கு சக்கரங்களையும் மறைத்துக் கொண்டு சாதாரண மனிதக் குழந்தையாக நீ மாற வேண்டும்!” என்று வேண்டினாள் தேவகி.
“உபஸம்ஹர விச்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்-
(திருநாமங்கள் 471 முதல் 482 வரை – தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)
நான்கு மாணவர்கள் கல்லூரி வகுப்புக்குத் தாமதமாகச் சென்றார்கள். பேராசிரியர் நால்வரிடமும் தாமத வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அப்போது, நால்வரும் ஒரே குரலில், “எங்கள் காரின் சக்கரம் பஞ்சராகி விட்டது. அதனால்தான் தாமதமாக வந்தோம்!” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பேராசிரியர், நால்வரையும் வகுப்புக்குள்ளே அனுமதித்தார். ஆனால், நால்வரையும் வகுப்பின் நான்கு மூலைகளிலே தனித்தனியாக அமர்த்தினார். அதன்பின் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பேப்பரை வழங்கினார். நால்வரையும் பார்த்து, “நீங்கள் வந்த கார் பஞ்சர் ஆனது என்று சொன்னீர்கள் இல்லையா? எந்த டயர் பஞ்சர் ஆனது என்பதை இந்தத் தாளில் நீங்கள் ஒவ்வொருவரும் வரைந்து காட்ட வேண்டும்!” என்று சொன்னார்.
நால்வரும் தாள்களோடு அமர்ந்திருக்க, பாடம் எடுக்கத் தொடங்கினார் பேராசிரியர். “உண்மை என்பது எப்போதும் மாறவே மாறாது. பொய் என்பது மாறிக்கொண்டே இருக்கும்!” என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். இந்த மாணவர்கள் நால்வரும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். பேராசிரியரிடம் வசமாக மாட்டிக் கொண்டோமே, எப்படித் தப்பிப்பது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் நால்வரும் பேராசிரியர் சொன்னபடி அந்தத் தாளில் படத்தை வரைந்து பேராசிரியரிடம் வழங்கினார்கள்.
நான்கு தாள்களையும் எடுத்துக் கொண்டு கரும்பலகை அருகே சென்ற பேராசிரியர், அவற்றைத் தூக்கி வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் காட்டினார். பார்த்தால், முதல் மாணவர் காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கை பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். இரண்டாவது மாணவர், காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கையின் எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். மூன்றாம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநர் பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். நான்காம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநருக்கு எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார்.
நான்கு தாள்களையும் மாணவர்களிடம் காட்டிவிட்டுப் பேராசிரியர் சொன்னாராம், “நான் அப்போதே சொன்னேன் அல்லவா? உண்மை என்பது என்றுமே மாறாது. பொய் என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று! இதோ இந்தத் தாள்களைப் பாருங்கள். இவர்கள் கார் பஞ்சர் என்று சொன்னது பொய். அதனால்தான் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு விதமாக மாறிமாறிப் படம் வருகிறது. உண்மையாகவே கார் பஞ்சர் ஆகியிருந்தால், மாறாமல் ஒரே மாதிரி வந்திருக்கும் அல்லவா?” என்று.
இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், இறைவனை ஸத்யம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஸத்யம் என்றால் உண்மை என்று பொருள். அதாவது, மாறாமல் இருப்பவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடமொழியில், `க்ஷரம்’ என்றால் அழிவது தேய்வது என்று பொருள். `அக்ஷரம்’ என்றால் அழியாமல் தேயாமல் மாறாமல் இருப்பது என்று பொருள். திருமால் எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாமல் இருப்பதால் ‘அக்ஷரம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதனால்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் அவரை ‘அக்ஷரம் ஸத்’ என்று அழைக்கிறது.`அக்ஷரம்’ (Aksharam) என்றால் மாறாதவர்,ஸத் என்றால் உயர்ந்து இருப்பவர் (கடந்த திருநாம விளக்கத்தில் இதன் விரிவு உள்ளது). ‘அக்ஷரம் ஸத்’ (Aksharam sath) என்றால் தன்நிலை மாறாமல் எப்போதும் உயர்ந்து இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 480-வது திருநாமம்.
“அக்ஷரஸதே நமஹ:” (Akshara Sathey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், அறநெறியிலிருந்து மாறாமல் இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.
திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு சனத்குமார முனிவர்கள் நால்வரும் சென்றார்கள். அங்கே வாயில் காப்பாளர்களாக நின்றிருந்த ஜயனும் விஜயனும் தடுத்தார்கள். “அடியார்கள் பகவானைத் தரிசிக்கச் செல்லும்போது, அவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்குமே கிடையாது! அப்படியிருக்க, எங்களை எப்படி நீங்கள் தடுக்க முடியும்? இறைவனின் தொண்டர்களாக இருக்கும் தகுதியே உங்கள் இருவருக்கும் இல்லை! ஆகவே, நீங்கள் பூமியில் போய்ப் பிறக்க வேண்டும்!” என்று சனத்குமாரர்கள் ஜய – விஜயர்களுக்கு சாபம் கொடுத்தார்கள்.
வெளியே நடப்பதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்த திருமால், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து சனத்குமாரர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அவரைத் தரிசித்த சனத்குமாரர்கள், திருமாலைப் பலவாறு துதிசெய்தார்கள். அதன்பின், “இறைவா! உனது அனுமதி இல்லாமல் உன் தொண்டர்களான ஜய – விஜயர்களை நாங்கள் சபித்துவிட்டோம்! எங்களை மன்னித்தருள வேண்டும்! தொண்டர்கள் தவறு செய்தால், தலைவனிடம் முறையிடுவது தானே முறையாகும்? நாங்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளலாமா? எங்களை மன்னிப்பாயாக!” என்று வேண்டினார்கள்.
அப்போது திருமால், “இல்லை முனிவர்களே! என் பக்தர்களுக்கு விரோதமாக இருக்கும் எதையுமே நான் விரும்பமாட்டேன். என் கை, என் பக்தர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால் என் கையை வெட்டிக் கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். எப்போது என் பக்தர்களான உங்களிடம் இவர்கள் அபச்சாரப்பட்டு விட்டார்களோ, இவர்களுக்கு சாபம் தந்ததில் எந்தத் தவறும் இல்லை!” என்றார். மேலும் ஜய – விஜயர்களைப் பார்த்து, “நீங்கள் ஆயிரம் ஜன்மங்கள் பூமியில் பிறக்க வேண்டும்!” என்று சொன்னார் திருமால். “ஆயிரம் ஜன்மங்கள் உன்னைப் பிரிந்திருக்க எங்களால் முடியாதே!” என்று பகவானிடம் கெஞ்சினார்கள் ஜய – விஜயர்கள். சனத்குமாரர்களின் பாதங்களிலும் விழுந்து தங்களை மன்னித்தருளுமாறு கோரினார்கள்.
மனம் இரங்கிய சனத்குமாரர்கள் திருமாலிடம், “இவர்களுக்கு நீங்கள் வழங்கிய தண்டனையைச் சற்றே குறைத்தருள வேண்டும்!” என்றார்கள். உடனே திருமால், “ஜய விஜயர்களே! உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். ஒன்று, நல்ல பக்தர்களாகப் பல பிறவிகள் பிறக்கிறீர்களா? அல்லது தீயவர்களாக மூன்றே பிறவி எடுக்கிறீர்களா?” என்று கேட்டார். “தீயவர்களாயினும் மூன்றே பிறவிகள் போதும்! அதற்கு மேல் பிறவிகள் வேண்டாம்!” என்றார்கள் ஜய – விஜயர்கள். “மூன்று பிறவிகளிலும் நானே உங்களை வந்து அழிப்பேன்! நீங்கள் அதன்பின் இதே காரிய வைகுண்டத்துக்குத் திரும்ப வந்துவிடுவீர்கள்!” என்று பதில் அளித்தார் திருமால்.
அதன்படி ஜயனும் விஜயனும் ஹிரண்ய கசிபுவாகவும், ஹிரண்யாட்சனாகவும் பிறந்தார்கள். அவர்களை முறையே நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் ஆகிய இரு அவதாரங்களால் அழித்தார் திருமால். அடுத்து ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் அவர்களே வந்து பிறக்க, ராமாவதாரத்தில் அவர்களை முடித்தார் திருமால். முடிவாக, சிசுபாலனாகவும் தந்தவக்த்ரனாகவும் வந்து பிறக்க, அவர்களைக் கிருஷ்ணாவதாரத்தில் முடித்தார் திருமால். இப்படி மூன்று பிறவிகளை நிறைவு செய்தபின், அவர்கள் பழையபடி வாயில் காப்பாளர் பதவிகளைப் பெற்றுவிட்டார்கள்.
ஆக, ஜய விஜயர்களைப் போல் அடியார்களுக்குத் தீங்கிழைத்தல் போன்ற பாபச் செயல்களில் ஈடுபடுவோர்க்குப் பிறவிப்பிணி என்னும் தண்டனையைத் திருமால் அளிக்கிறார். உலகியல் வாழ்க்கையாகிய பிறவிச் சுழற்சிக்கு அஸத் என்று பெயர். பாபிகளுக்கு அந்த அஸத் ஆகிய பிறவிச் சுழற்சியைத் தருவதாலே, திருமால் ‘அஸத்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 481-வது திருநாமம்.“அஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எந்தச் சூழலிலும் சிக்கிக் கொள்ளாதபடி திருமால் காத்தருள்வார்.
மகாபாரதப் போர் தொடங்கப் போகிறது. எந்தெந்த மன்னர்கள் யாரோடு கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்பதே அனைவரின் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக இருந்தது. கண்ணபிரானின் ஆதரவு யாருக்கு என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக விவாத மேடைகளில் இடம்பெற்று வந்தது.இந்தச் சூழலில், தர்மபுத்திரர் அர்ஜுனனிடம், “கண்ணன் எப்படியும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார். எனவே, அவரது ஆதரவு நமக்குத்தான். இருந்தாலும்கூட, நாம் பகவானிடம் முறைப்படி சென்று அவரது ஆதரவு வேண்டும் என்று கோருவதுதான் முறை. அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது. எனவே நீ போய்க் கண்ணனைச் சந்தித்து அவரது ஆதரவையும் ஆசியையும் பெற்று வா!” என்று சொல்லித் துவாரகைக்கு அனுப்பிவைத்தார்.மறுபுறம் சகுனி துரியோதனனிடம், “போர் என்று வந்துவிட்டால் மானம் அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது. யார் நம் பக்கம் வந்தாலும் அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாண்டவர்களுக்குக் கண்ணன் மாமன் மகன் என்றால், உனக்குக் கண்ணன் சம்பந்தி ஆவான். எனவே கண்ணனின் ஆதரவைக் கேட்டு நமக்கு வாங்கி வந்து விடு!” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தான். அர்ஜுனன் துரியோதனன் இருவரும் துவாரகையை அடைந்தார்கள். இதை அறிந்த கண்ணன், தனது பணியாட்களை அழைத்து, அரண்மனையில் உள்ள அனைத்து ஆசனங்களையும் ஒளித்து வைக்கச் சொன்னான். தனக்கே உரிய கட்டிலில் கண்ணன் பள்ளிகொள்ள, அவனது தலைமாட்டில் ஓர் ஆசனமும், திருவடிவாரத்தில் ஒரு முக்காலியும் மட்டுமே போடப்பட்டிருந்தன.முதலில் உள்ளே வந்த துரியோதனன், கண்ணன் துயில்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்? இந்த மாடு மேய்ப்பவன் விழிக்கும் வரை காத்திருந்துதான் ஆதரவு பெற வேண்டுமோ?” என்று சிந்தித்தபடி, தனது தலைகனத்துக்கு ஏற்றபடித் தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அடுத்து வந்த அர்ஜுனன், கண்ணன் விழித்துக் கொள்ளும் வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன், அடியவன் என்ற முறையில் கண்ணனின் திருவடிவாரத்தில் இருந்த முக்காலியிலே அமர்ந்து கொண்டான். இருவரும் வந்ததை அறிந்துகொண்ட கண்ணன் கண்விழித்து, “அர்ஜுனா! வா.. வா!” என்ன விஷயம் என்றான். துரியோதனன், “நான்தான் முதலில் வந்தேன்! என்னைக் கவனிக்கவில்லையா?” என்று கேட்டான்.கண்ணனோ, “நீ முதலில்
வந்திருக்கலாம். ஆனால், நான் முதலில்
அர்ஜுனனைத் தானே பார்த்தேன்!”
என்றான்.இருவரும் கண்ணனின் ஆதரவு யாருக்கு என்று கேட்டார்கள். அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்குமே உதவ நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனது நவகோடி நாராயண சேனையை விரும்புவோர் அதைக் கேட்கலாம். ஆயுதமே எடுக்காத என்னை விரும்புவோர் என்னைக் கேட்கலாம்!” என்றான்.“முதல் வாய்ப்பு இளையவனான அர்ஜுனனுக்கே! கேள் அர்ஜுனா!” என்று கண்ணன் சொல்ல, “எனக்கு நீ மட்டும் போதும்!” என்று சொல்லி விட்டான் அர்ஜுனன். துரியோதனனோ, பெரும் மகிழ்ச்சியோடு நவகோடி நாராயண சேனை என்ற மிகப்பெரிய சேனையைக் கண்ணனிடம் வாங்கிச் சென்றான். ஆனால், முடிவில் என்ன ஆனது? கண்ணனின் அருளும் வெற்றியும் அர்ஜுனனுக்குத் தான் கிடைத்தது. தலைக்கனத்தைக் காட்டிய துரியோதனனுக்கோ தோல்வியும் மரணமுமே கிடைத்தது.துரியோதனனைப் போல தீய எண்ணம் கொண்டவர்களுக்கு அஸத் என்று பெயர். க்ஷரம் என்றால் நிலையில்லாதவன் என்று பொருள். ‘அஸத்க்ஷரம்’ என்றால் தீயவர்களிடத்தில் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். நல்லவர்களை இறைவன் சோதித்தாலும் கைவிடமாட்டார், தீயவர்களுக்கு இறைவன் நிறைய கொடுப்பது போல் இருந்தாலும் கைவிட்டுவிடுவார் என்று பிரசித்தமாகச் சொல்லப்படுகிறது அல்லவா?
இப்படித் தீயவர்களிடம் நிலைத்து நில்லாமல் இருப்பதால், திருமால் ‘அஸத்க்ஷரம்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 482-வது திருநாமம். “அஸத்க்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களிடம் திருமால் என்றும் நிலைத்திருந்து, மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி அருள்வார்.
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”என்று பெரியாழ்வார் பாடுகிறார்.இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரையோடு திருமாலிடம் சரண் அடைகிறான். திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங்களேன்!” என்று சொல்கிறாளாம்.இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்!” என்று பதில் சொல்வாராம். அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன்தான் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்!எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடி களில் சேர்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்துவிட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள். “என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடி? யார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்துவிடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:
பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே
உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”
“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.
இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் – அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திருநாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.
“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.
கலி என்ற அசுரன் சிவனைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அவனுக்குப் பரமசிவன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “எனக்கு வைரம் பாய்ந்த உடல் என்னும்படி வலிமை மிக்க உடல் கட்டமைப்பு வேண்டும்! திருமால் என்னைக் கொல்லக் கூடாது!” என்று இரண்டு வரங்களைக் கேட்டான் கலி. சரி என்று வழங்கிவிட்டார் சிவன். வரங்களைப் பெற்று அதனால் கர்வம் அடைந்த கலி, பார்வதியிடம் அபச்சாரப் பட்டு விட்டான். “என் கணவர் தந்த வரங்களைப் பயன்படுத்திக் கொண்டு என்னிடமே தவறிழைக்கப் பார்க்கிறாயா? நீ இடுப்புக்கு மேல் வஜ்ரம் பாய்ந்த உடம்போடு இருந்தாலும் இடுப்புக்குக் கீழே வலிமையற்றவனாக ஆகிவிடுவாய்!” என்று சபித்து விட்டாள் பார்வதி.
பரமசிவனுடைய வரத்தையும், பார்வதியின் சாபத்தையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு, பூமியிலே வந்து பிறவி எடுத்தான் கலி அசுரன். அவன்தான் துரியோதனன். இது வியாச பாரதத்தில் வன பர்வத்தில் கோஷயாத்ரா உப பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை இளம்வயதில் அறிந்து கொண்ட துரியோதனன், கதாயுத்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். ஏனெனில், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. மற்ற போர் முறைகளில் இடுப்புக்குக் கீழே தாக்கப்பட்டால் உடனே துரியோதனன் அழிந்து விடுவான். எனவே தன்னைக்காத்துக்கொள்ள கதாயுத்தம் மட்டுமே புரியவேண்டும் என்று தீர்மானித்து விட்டான் அவன்.
எந்த பலராமனிடம் பீமன் கதாயுத்தம் பயின்றானோ, அதே பலராமனிடம் கதாயுத்தம் கற்றான் துரியோதனன். அதன் விளைவாகவே கர்வம் தலைக்கு ஏறி, பாண்டவர்களைச் சூதுக்கு அழைத்து, திரௌபதியை அவமானப்படுத்தி பல கொடுமைகள் செய்தான். அவமானப்பட்ட திரௌபதி, “எந்தத் தொடையில் வந்து என்னை அமரச் சொன்னாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தனது கதையால் அடித்துப் பிளப்பான்!” என்று சபதம் செய்தாள். நான் அவ்வாறே செய்வேன் என்று பீமனும் சபதம் செய்தான்.
ஆனால், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கவே முடியாதே. எப்படித் தொடையில் அடிப்பது இந்தச் சபதமே தவறான சபதம் ஆகும். ஆனாலும், தனது பக்தர்கள் செய்த சபதத்தை நியாயப் படுத்த விழைந்தான் கண்ணன். அதனால், மைத்ரேய முனிவரைத் துரியோதனனிடம் அனுப்பி அவனுக்கு அறிவுரை வழங்க வைத்தான். பங்காளிகளைப் பகைத்துக் கொள்ளாமல், உரிய பங்கை அவர்களுக்குத் தருமாறு மைத்ரேய முனிவர் அறிவுரை சொல்ல, அதனால் கோபம் கொண்ட துரியோதனன் அலட்சியமாகத் தொடையைத் தட்டி, “நீங்கள் எல்லாம் வந்து எனக்கு அறிவுரை சொல்வதா?” என்றான். கோபம் கொண்ட மைத்ரேயர், “என்னை அவமானப் படுத்தும் விதமாக, எந்தத் தொடையை நீ தட்டினாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தன் கதையால் அடித்துப் பிளந்து விடுவான்!” என்று சாபம் கொடுத்தார். இப்போது இது ஒரு முனிவரின் சாபமாக மாறிவிட்டதால், பீமன் செய்த சபதம் நியாயப்படுத்தப்பட்டு விட்டது.
பாரதப் போரின் முடிவில், துரியோதனனைப் பீமன் தொடையில் அடித்து வென்ற போது, பலராமன் கோபம் கொண்டு பீமனைத் தாக்க வந்தார். “என்னிடம் கதாயுத்தம் பயின்றவன் என்று சொல்லிக்கொண்டு இப்படித் தவறான முறையில் தொடையில் அடிக்கலாமா?” என வெகுண்டார் பலராமன். அப்போது அவரைத் தடுத்த கண்ணன், “அண்ணா! பீமன் சரியாகத் தான் போரிட்டான். ஆனால் என்ன செய்வது? ரிஷியின் சாபம் வலிமையானது அல்லவா? தொடையில் அடிபட்டு இவன் மாளவேண்டும் என்பது மைத்ரேயர் துரியோதனனுக்கு இட்ட சாபம்! அதன்படி அவன் விதி முடிந்து விட்டது!” என்றான். பலராமனும் சமாதானம் அடைந்துவிட்டார்.
இங்கே கண்ணன் எவ்வளவு விஷயங்களை அறிந்து இந்த லீலையைச் செய்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். இடுப்புக்குக் கீழே வலிமையற்றுப் போவான் என்று துரியோதனனுக்குப் பார்வதி தந்த சாபம், நாராயணனால் மரணம் இல்லை என்று சிவன் கொடுத்த வரம், திரௌபதியும் பீமனும் செய்த சபதம் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் பீமன், துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து அவனை வதைக்கும்படி கண்ணன் செய்தான். மேலும், பலராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதையும் முன்கூட்டியே அறிந்து, பீமன் செய்த சபதத்தை முனிவர் தந்த சாபமாகவும் மாற்றிவிட்டான்.
இப்படி அனைவரின் மனப்போக்கையும் அறிந்திருப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ஸஹஸ்ராம்சு:’ என்றழைக்கப்படுகிறார். அம்சு என்றால் பொதுவாகக் கிரணம் என்று பொருள். இங்கே அம்சு என்ற வார்த்தை அறிவுக் கிரணத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ரம் என்றால் ஆயிரக் கணக்கான என்று பொருள். ‘ஸஹஸ்ராம்சு:’ என்றால் ஆயிரக் கணக்கான அறிவுக் கிரணங்களைக் கொண்டவர் அதாவது, எல்லாம் அறிந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 484-வது திருநாமம்.“ஸஹஸ்ராம்சவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தைத் திருமால் அளித்தருள்வார்.
———————–
485. விதாத்ரே நமஹ (Vidhaathrey namaha)
அஜாமிளன் என்பவன் இளமைக் காலத்தில், தருமத்தில் நாட்டம் கொண்டவனாக நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், காலப்போக்கில் தீய சகவாசத்தால், தருமத்தை மறந்து அறநெறிக்குப் புறம்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிப் பற்பல தீய செயல்களிலே ஈடுபடத் தொடங்கினான். வயது முதிர்ந்து அவனது ஆயுள் முடியும் தறுவாய் வந்த போது, யம தூதர்கள் அவன்மீது பாசக் கயிற்றை வீசுவதற்காக வந்தார்கள்.
அச்சமயம், அவன் இளம்வயதில் செய்த பக்தியின் நினைவு அவன் மனதில் தோன்றியது. எப்போதுமே நாம் செய்த சிறிய தருமச்செயல் கூட வீண் போகாது. அந்த நற்செயலின் பயனாக, தனது கடைசி மகனை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் அஜாமிளன் மனதில் தோன்றியது. அந்த மகனின் பெயர் நாராயணன். இவன் திருமாலை எண்ணிக் கூப்பிடாவிட்டாலும், மகனை எண்ணி “நாராயணா!” என்று அழைத்தான்.
உடனே, அங்கே விஷ்ணு தூதர்கள் வந்தார்கள். யம தூதர்களைப் பார்த்து, “இவன் பகவானின் திருநாமத்தை உச்சரித்துவிட்டான். இனி இவனை நாங்கள் விஷ்ணு லோகம் அழைத்துச் செல்வோம்! நீங்கள் யம லோகம் அழைத்துச் செல்லக்கூடாது!” என்றார்கள். இதைக் கேட்ட யமதூதர்கள், “என்ன சொல்கிறீர்கள்? இவன் தனது மகனின் பெயரைத் தானே சொன்னான்?” என்று கேட்டார்கள்.
அதற்கு விஷ்ணு தூதர்கள், “அவன் யாரை நினைத்துச் சொல்லி இருந்தாலும், சொன்னது திருமாலின் திருப்பெயர். அதற்குப் பலன் உண்டு. நீங்கள் நெருப்பில், தெரிந்து கை வைத்தாலும் தெரியாமல் கை வைத்தாலும் சுடும். மருந்தைத் தெரிந்து உட்கொண்டாலும், தெரியாமல் உட்கொண்டாலும் நோய் தீரும். அதுபோலத்தான் பகவானின் திருநாமங்களும்!” என்று விடையளித்தார்கள். “அப்படியே இருந்தாலும், ஒருமுறைதானே இவன் நாராயணா என்று சொன்னான்?” என்று கேட்டார்கள் யமதூதர்கள். விஷ்ணு தூதர்கள், “ஆயிரம் வருடங்கள் இருட்டாக இருந்த ஓர் அறையில், விளக்கை ஏற்றினால், அந்த நொடியே வெளிச்சம் வந்து விடுகிறது அல்லவா? அதுபோலத் தான் எத்தனையோ பிறவிகளாகப் பாபம் செய்திருந்தாலும், ஒருமுறை பகவானின் திருப்பெயரை உச்சரித்தவாறே பாபங்கள் நீங்கி, அவர்கள் தூய்மை அடைந்துவிடுகிறார்கள்.
அதன்பின், அவர்களின் மனம் பாபச் செயலில் ஈடுபடுவதில்லை!” என்று விளக்கினார்கள். அதைக் கேட்ட யமதூதர்கள், யம லோகத்துக்கே திரும்ப வந்துவிட்டார்கள். விஷ்ணு தூதர்கள், அஜாமிளனை நல்லோர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள். அடியார்களோடு கூடியதால், மனம் திருந்தி பக்தி வளரப்பெற்ற அஜாமிளன், அதன்பின் திருமாலைத் தஞ்சம் அடைந்து படிப்படியே முக்தி பெற்றான்.
யமதூதர்கள் யமனிடம், “நாங்கள் அஜாமிளனைப் பிடித்துவரச் சென்றபோது விஷ்ணு தூதர்கள் எங்களைத் தடுத்து விட்டார்கள்! இப்படிக் கடமை செய்யும் போது இடையூறு ஏற்படாமல் நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கோரினார்கள்.யமனோ, “அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? பகவானின் திருநாமங்களைச் சொல்வோருக்கு அருகில் நீங்கள் செல்லவே கூடாது! தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கிறார் என்றால், அவர்களை உங்களுக்குத் தலைவர்களாகக் கருதி வணங்கிவிட்டு நீங்கள் திரும்ப வந்துவிடுங்கள். உலகில் உள்ள மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் தலைவனாக இருக்கலாம். ஆனால், எனக்கும் மேல் தலைவராக இருப்பவர் திருமால். எனவே, அந்தத் திருமாலின் தொண்டர்களிடம் நீங்கள் அபச்சாரப் பட்டு விடாதீர்கள்!” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னானாம்.
இப்படி யமன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்கள், முனிவர்கள், கிரகங்கள் எல்லோரையும் நியமித்து இயக்குபவராகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார். ‘விதாதா’ என்றால் நியமித்து இயக்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 485-வது திருநாமம்.“விதாத்ரே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, யமபயம் வாழ்வில் ஏற்படாதபடித் திருமால் அருள்புரிவார்.
——–
486. க்ருதலக்ஷணாய நமஹ (Krutha Lakshanaaya namaha)
வானமாமலை மடத்தின் முதல் ஜீயரான பொன்னடிக்கால் ஜீயரைத் தரிசிக்க, அவரது சிஷ்யையான சின்னியம்மாள் என்ற பெண் தரிசிக்கச் சென்றார். ஜீயரின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தார் சின்னியம்மாள். வந்து நமஸ்கரித்த சிஷ்யையைப் பார்த்து பொன்னடிக்கால் ஜீயர், “உன் ஊர் என்ன?” என்று கேட்டாராம். சின்னியம்மாள், “நம்மாழ்வாரின் அவதாரத் திருத்தலமான திருக்குருகூர் தான் அடியேனுக்குப் பிறந்த ஊர்!” என்று சொன்னாராம். “நீ எந்தக் குலம்?” என்று ஜீயர் கேட்க, “அச்சுத குலம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.
(இறையடியார்களுக்குள் என்றுமே ஏற்றத்தாழ்வு கிடையாது. அச்சுதனாகிய திருமாலைப் பற்றிய அனைவரும் அச்சுத குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் தானே?) “உன் கோத்திரம்?” என்ன என்று ஜீயர் கேட்க, “பராங்குச கோத்திரம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். (வசிஷ்டர், விஸ்வாமித்ரர், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களின் பெயர்களில் கோத்திரங்கள் உண்டு. ஆனால், அவர்களை விட ஏற்றம் பெற்ற பராங்குசரான நம்மாழ்வாரை இட்டு, அவரது கோத்திரம் என்று இப்பெண் பதில் சொல்லியிருக்கிறார்.)
“நீ எந்த வேதத்தைப் பின்பற்றுகிறாய்?” என்று கேட்டார். ரிக்வேதமோ, யஜுர் வேதமோ, ஸாமவேதமோ, அதர்வண வேதமோ எதையுமே சொல்லாமல், “திராவிட வேதம்!” என்றார் சின்னியம்மாள். தமிழ்வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களின் நெறியில், தான் நிற்பவள் என்று உணர்த்துகிறார். “உன் உறவினர்கள் யார்?” என்று ஜீயர் கேட்க, “ஆத்ம பந்துக்கள்!” என்று சொன்னார் சின்னியம்மாள். (உடல்ரீதியான உறவுகளுள் பக்திக்கு விரோதமாக இருப்போர் உண்மையான உறவினர்கள் அல்லர்.
ஆத்மா பரமாத்மாவை அடைய உதவும் சிறந்த பக்தர்களே உண்மையான உறவினர்கள் ஆவர் என்பது தாத்பரியம்)“உன் பெற்றோர் யாவர்?” என்று கேட்டார் ஜீயர். தனது ஊரான வானமாமலையில் கோவில் கொண்டுள்ள பெருமாள் – தாயாரின் திருப்பெயர்களையே தன் பெற்றோர் பெயராகக் குறிப்பிட்டு, “தெய்வநாயகனும் – ஸ்ரீவரமங்கைத் தாயாரும்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.
“உன் தொழில் என்ன?” என்று ஜீயர் கேட்க, “பாகவத கைங்கர்யம் – அடியார்களுக்குத் தொண்டு செய்வது!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். “அதற்கு என்ன பயன்?” என்று ஜீயர் கேட்டார். “அதுவே பிரயோஜனம், அடியார்களுக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றுக்கு மேல் வேறென்ன கூலி வேண்டும்?” என்று பதில் அளித்தார் சின்னியம்மாள்.
“என்ன பிரார்த்தனையோடு என்னிடம் வந்திருக்கிறாய்?” என்று ஜீயர் கேட்டார். “உங்களுக்கும் இறை அடியார்களுக்கும் இடைவிடாது தொண்டு செய்யும் பேற்றை அடியேனுக்கு அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் சின்னியம்மாள்.இந்த பதில்களைக் கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், “உன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்த போதும், நான் உன்னிடம் இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்டேன் தெரியுமா? ஒரு பக்தனுக்குரிய இலக்கணங்கள் என்ன என்பதை உலகம், உன்மூலம் அறியட்டும் என்பதைக் கருதியே நான் கேட்டேன். நீ சொன்னது போல், தன் ஊருக்கு அருகிலுள்ள ஆழ்வாரின் அவதாரத் தலத்தையே தன் பிறந்த ஊராக ஒவ்வொரு பக்தனும் சொல்லிக்கொள்ளவேண்டும்.
அச்சுத குலம் என்றுதான் தன் குலத்தைக் குறிப்பிட வேண்டும். ஆழ்வாரை இட்டுப் பராங்குச கோத்திரம் என்றும், ஆழ்வார் பாசுரங்களை இட்டு திராவிட வேதம் என்றும் தனது உட்பிரிவுகளைக் குறிப்பிட வேண்டும். இறைவனையும் இறைவியையுமே பெற்றோராகவும், இறை அடியார்களையே உறவினர்களாகவும் கொள்ளவேண்டும். இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வதையே வாழ்வின் பயனாகக் கருதவேண்டும். இந்த இலக்கணங்கள், நீ தந்த எளிய பதில்கள் வாயிலாக உலகத்தோரின் மனங்களில் பதியட்டும்!” என்று ஆசீர்வாதம் செய்து அருளினார்.
இப்படித் தனது அடியார்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக் கணங்களைத் திருமாலே ஆசார்யர்கள் மூலம் வகுத்துக் கொடுத்திருப்பதால், திருமால் ‘க்ருதலக்ஷண:’ என்று அழைக்கப்படுகிறார். க்ருத என்றால் வகுத்தவர். லக்ஷண என்றால் இலக்கணம். ‘க்ருதலக்ஷண:’ என்றால் அடியார்களுக்கான இலக்கணங்களை வகுத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 486-வது திருநாமம். “க்ருதலக்ஷணாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, அடியார்களுக்கு உரித்தான அங்க அடையாளங்கள் அனைத்தும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
————————–
488. ஸத்வஸ்தாய நமஹ (Sathvasthaaya namaha)
ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசைப் பிரான், கும்பகோணத்தில் கோவில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைத் தரிசிக்கும், ஆவலுடன் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டுக் கும்பகோணத்தை நோக்கிப் பயணித்தார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில், ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தார் திருமழிசைப்பிரான். அத்திண்ணையிலே வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் திருமழிசைப் பிரானைக் கண்டு, `தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இவர் கேட்க நாம் வேதம் ஓதுதல் தகாது’ என்று எண்ணி, வேதம் சொல்வதை நிறுத்திவிட்டார்கள்.
திருமழிசைப் பிரான் அவர்களின் கருத்தை அறிந்து திண்ணையை விட்டு இறங்கினார். மறையவர்கள் உடனே வேதம் ஓதத் தொடங்கினார்கள். ஆனால், விட்ட வாக்கியம் தோன்றாமையால் தவறித் தடுமாறினார்கள். ஆழ்வாரும் அதைக் கண்டு, கருநெல்லை நகத்தால் பிளந்து, “க்ருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நக நிர்ப்பின்னம்” என்ற வேதத் தொடரைத்தான் நீங்கள் சொல்லி வந்தீர்கள் என்று குறிப்பால் காட்டியருளினார்.
அவர்கள் தெளிந்து வந்து ஆழ்வாரை வணங்கி, பிழையைப் பொறுத்தருள்க என வேண்ட, திருமழிசைப் பிரானும், அவர்களுக்குப் பல இன்மொழிகளைக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.பின்னர், அந்தப் பெரும்புலியூர் திருக்கோவிலின் வெளிப்புறத்தைத் திருமழிசைப் பிரான் பிரதட்சிணம் செய்ய, உள்ளே எழுந்தருளியிருக்கும் பெருமாள் இவ்வாழ்வார் எழுந்தருளுகிற திருவீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பிக்கொண்டே வந்தார். இந்தச் செயலை அக்கோயில் அர்ச்சகராகிய நம்பி கண்டு, சில பக்தர்களுக்கும் காட்டினார். அந்தக் கிராமத்தில், பெரும்புலியூர் அடிகள் என்ற பெரியவர் யாகம் செய்துவந்தார்.
அந்தப் பெரும்புலியூர் அடிகளின் யாகசாலைக்குச் சென்று ஊர்மக்கள் இவரது பெருமையைக் கூறினார்கள். பெரும்புலியூர் அடிகள் உடனே அங்கு வந்து, திருமழிசைப் பிரானை வணங்கி யாகசாலைக்கு எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். திருமழிசைப் பிரானும் சம்மதிக்கவே, அவரை யாகசாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார் பெரும்புலியூர் அடிகள். பின்னர் யாகத்தில் செய்யும் `அக்கிர பூஜை’ என்ற முதல் மரியாதையை ஆழ்வாருக்குச் செய்தார் பெரும்புலியூர் அடிகள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வேள்விச் சடங்கர்கள், திருமழிசைப் பிரானை இழிவுபடுத்திப் பேசினார்கள். ஆழ்வாரும் வெறும் சடங்குகளை மட்டுமே பற்றி நிற்கும் அவர்களுக்கு நல்லறிவு உண்டாகும்படிச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் எம்பெருமானை எண்ணி,
“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே”
– என்று பாடியருளினார்.
என் இதயத்தில் நீ இருப்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று திருமாலிடம் கோரினார் ஆழ்வார்.திருமாலும், யாவரும் காணும்படி ஆழ்வாரின் உள்ளத்தில், தான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காண்பிக்க, ஆழ்வாரை இகழ்ந்து பேசிய சடங்கர்கள் எல்லோரும் இக்காட்சியினால் உள்ளம் மாறி ஆழ்வாரது திருவடிகளில் விழுந்து வணங்கி, “ஆழ்வாரே அக்கிர பூசைக்கு உரியவர்!” எனப் பன்முறை போற்றி, தாம் செய்த செயல்களை மன்னித்தருளுமாறு வேண்டினர்.
திருமழிசைப் பிரானும் அவர்களுக்குப் பல நன்மொழிகளைக் கூறி, பெரும்புலியூர் அடிகளிடத்தும் விடை பெற்றுக்கொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளினார். ஆக, திருமழிசைப் பிரான் போன்ற சிறந்த அடியார்களின் இதயத்தில் எப்போதும் வசிப்பதால் திருமால், ‘ஸத்வஸ்தஹ’ என்று அழைக்கப்படுகிறார். ஸத்வ என்பது இதயத்தைக் குறிக்கிறது. ஸ்த என்றால் நிலைநிற்பவர். ‘ஸத்வஸ்த:’ என்றால் அடியார்களின் உள்ளத்தில் வசிப்பவர். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 488-வது திருநாமம். “ஸத்வஸ்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் திருமால் எப்போதும் குடியிருப்பார்.
————
489. ஸிம்ஹாய நமஹ (Simhaaya namaha)
அம்பரீஷன் என்ற மன்னன் இட்சுவாகு குலத்திலே தோன்றியவன், ராமனுக்குக் குலமுன்னவர். அம்பரீஷனின் பக்திக்கு உகந்த திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அம்பரீஷனிடம் கொடுத்து, உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தாலும் இந்தச் சக்கரம் உன்னைக் காக்கும் என்று கூறியிருந்தார். இத்தகைய சிறந்த பக்தரான அம்பரீஷன், மதுவனம் என்னும் இடத்தில் ஒரு வருடம் தங்கி இருந்து நிறைய தானங்கள் செய்து ஏகாதசி விரதமும், அனுஷ்டித்து வந்தான்.
இப்படிப் பதினொரு மாதங்கள் ஏகாதசி விரதம் நிறைவு செய்த நிலையில், பன்னிரண்டாவது மாதம் வந்தது. ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் நீராடி, திருமாலுக்குப் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யும் நேரம். அப்போது, துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் அங்கே வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றான் அம்பரீஷன். “இத்தகைய மகான் இங்கே வந்தது அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நீங்கள் தங்கி இருந்து உணவு அருந்தி எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.
துர்வாசரோ, “அம்பரீஷா! நான் எனது அனுஷ்டானங்களை இன்னும் நிறைவு செய்ய வேண்டிய உள்ளது. நான் நிறைவுசெய்துவிட்டு வந்து உண்கிறேன்!” என்றார். “சரி! அதுவரை காத்திருக்கிறேன்!” என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டான் அம்பரீஷன். ஆனால், சிஷ்யர்களோடு நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றச் சென்ற துர்வாசர், வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. துவாதசி திதி நிறைவடைவதற்குள், பாரணை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதால் அம்பரீஷன் கலங்கினான்.
ஒருநிலையில், தன் குருவிடம் அம்பரீஷன், “சுவாமி! துவாதசி திதி முடியும் தறுவாய் வந்துவிட்டது. வந்திருக்கும் விருந்தினரான துர்வாசருக்கு உணவளிக்காமல் உண்டாலும் தவறாகிவிடும். அதே சமயம், துவாதசி திதி நிறைவடைவதற்குள் உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யாவிட்டாலும் தவறாகிவிடும். என்ன செய்வது?” என்று கேட்டான்.
அம்பரீஷனின் குரு, “நீ பெருமாளின் ஸ்ரீபாத தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்து விடு. தண்ணீரை உட்கொண்டதால், விரதம் நிறைவானதாகவும் கொள்ளலாம். அதே சமயம், வேறு உணவு உட்கொள்ளாததால், விருந்தினருக்கு முன் `உண்டாய்’ என்ற தோஷமும் வராது!” என்று வழிகாட்டினார். அப்படியே செய்தான் அம்பரீஷன். இறைவனின் திருவடி தீர்த்தத்தை அம்பரீஷன் உட்கொண்ட அடுத்த நொடி, அங்கே துர்வாசர் சீடர்களோடு வந்துவிட்டார்.
“எனக்கு உணவளிக்காமல் எப்படி நீ விரதத்தை நிறைவு செய்தாய்?” என்று கோபத்துடன் முழங்கினார். அம்பரீஷனை அழிப்பதற்காக ஒரு பிசாசை அவன்மீது ஏவினார் துர்வாசர். பகவான்மீதுள்ள நம்பிக்கையால், கலங்காமல் நின்றான் அம்பரீஷன். அவனுக்குக் காவலாகத் திருமால் தந்திருந்த சுதர்சனச் சக்கரம், துர்வாசர் ஏவிய பிசாசை விழுங்கியது. அந்தச் சக்கரத்தாழ்வார் அதன்பின் துர்வாசரைத் துரத்தத் தொடங்கினார். சக்கரத்தாழ்வார் துரத்த, பிரம்மா, ருத்ரன் என்று எல்லாத் தேவர்களின் உதவியையும் நாடினார் துர்வாசர். யாரும் அடைக்கலம் தரவில்லை.
திருமாலின் திருவடிகளில் விழுந்தார் துர்வாசர். “என் பக்தனிடம் மன்னிப்பு கேட்டாலே ஒழிய என் சக்கரம் உங்களை மன்னிக்காது!” என்று சொல்லிவிட்டார் திருமால். அதன்பின் நிறைவாக, அம்பரீஷனின் பாதங்களில் வந்து விழுந்தார் துர்வாசர். “ஆஹா! சுவாமி! நீங்கள் என் பாதங்களில் விழுவதா?” என்று பதறிய அம்பரீஷன், சக்கரத்தாழ்வாரைத் துதித்தான். அதனால், உகந்து சக்கரத்தாழ்வார் சாந்தம் அடைந்தார். இனி அடியார்களிடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ மோதவே கூடாது என்று சொல்லிக் கொண்டே, அம்பரீஷனிடம் இருந்து விடைபெற்றாராம் துர்வாசர்.
இப்படித் தன் அடியார்களுக்குத் தீங்கு இழைக்க நினைப்போரைத் தண்டிப்பதால், திருமால் ‘ஸிம்ஹ:’ தண்டிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 489-வது திருநாமம்.“ஸிம்ஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்க்கையில் எந்தத் தடைகளும் வராதிருக்கும்படிதிருமால் அருள்புரிவார்.
——————
490. பூதமஹேஸ்வராய நமஹ (Bhootha Maheshwaraaya namaha)
கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரம் என்ற திவ்யதேசத்தின் தலவரலாறு இது.தேவ-அசுரப் போரில் அசுரர்களின் கை ஓங்க, தேவர்கள், திருமாலின் உதவியை நாடினார்கள். தீயசக்திகளான அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதாக திருமால் தேவர்களுக்கு அபயம் அளித்தார். அசுரர்கள் பிரம்மாவின் உதவியை நாடி, எங்களுக்கு ஏதாவது புகலிடம் காட்டுங்கள் என்று கோரினார்கள். நீங்கள் சிவபெருமானின் உதவியை நாடுங்கள் என்று அவர் களிடம் சொன்னார் பிரம்மா. அசுரர்கள் சிவனின் உதவியை நாட, சிவனும் அவர்களைக் காப்பதாக வாக்களித்துவிட்டார். அடுத்து தேவ அசுரப் போர் நடந்தபோது, தேவர்களின் பக்கம் திருமாலும், அசுரர்களின் பக்கம் சிவபெருமானும் நின்றார்கள். திருமாலுக்கும் சிவனுக்கும் எதிராகப் பெரும் போர் மூண்டுவிட்டது.
(அடடா!!! சைவ-வைணவச் சண்டைகளே வேண்டாம் என்று சொல்லும் காலத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை என்று நீ கதை எழுதுகிறாயே என்று நீங்கள் புருவங்களை உயர்த்த வாய்ப்புண்டு. ஆனால் இப்போதே முன் முடிவுக்கு வராமல், கதையை முழுமையாகப் படித்தால் ஒரு தத்துவம் நமக்குக் கிட்டும்.)
சிவபெருமான் தனது சூலத்தைத் திருமாலின் மீது ஏவினார். திருமாலின் சக்ராயுதம், சிவனின் சூலத்தை மறைத்துவிட்டது. “இனி என் கையில் ஆயுதமே இல்லை! நான் நாராயணனைச் சரண் அடையப்போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு, திருமாலிடம் சரணடைந்தார் சிவபெருமான். “அடடா! நமக்குத் தலைவராக வந்த சிவனே திருமாலின் பாதங்களில் விழுந்துவிட்டாரே! இனி நாம் என்ன செய்வது?” என்று தெரியாமல் திகைத்தார்கள் அசுரர்கள். அப்போது, திருமால் மும்மூர்த்தி வடிவமாகத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காட்சி அளித்தார். திருமால் பிரம்மாவுக்குள் அந்தர்யாமியாக இருந்து உலகைப் படைக்கிறார்.
விஷ்ணுவாகத் தானே இருந்து காக்கிறார். ருத்திரனுக்குள் அந்தர்யாமியாக இருந்து அழிக்கிறார். இதை உணர்த்த, தனது திருக்கரத்தில் பிரம்மாவுக்கு அடையாளமான தாமரையை ஏந்தி இருந்தார். சிவபெருமானைக் குறிக்கும் விதமாக நெற்றியிலே மூன்றாவது கண்ணோடு விளங்கினார். அதனால் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் பெயர் பெற்றார்.இந்தக் கோலத்தில் காட்சி அளித்த தெய்வநாயகப் பெருமாள், “ஏ அசுரர்களே! நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! பிரம்மாவும் எனக்கு உடலாக இருக்கிறார். சிவனும் எனக்கு உடலாக இருக்கிறார். என் உடலைக்கொண்டு என்னையே அழிக்கப் பார்க்கிறீர்களா? என் கையைக் கொண்டு என் கண்ணையே குத்தமுடியுமா? முட்டாள்களே! நாங்கள் மூவரும் என்றைக்குமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்!” என்று கூறினார்.
“இனி வேறு வழியில்லை!” என்று உணர்ந்த அசுரர்கள், அத்தனை பேரும் திருமாலின் திருவடிகளை வந்து அடிபணிந்து மனம் திருந்தினார்கள். இன்றும் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரத்தில் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் திருநாமத்தோடு, மூன்றாம் கண்ணோடும் கையில் தாமரையோடும் எழுந்தருளி உள்ளார் திருமால்.
திருமங்கை ஆழ்வாரும் அப்பெருமாளைப் பாடும்போது, “மூவராகிய மூர்த்தியை மூவுலகு உண்டு உமிழ்ந்தானை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இப்படி எல்லாத் தேவர்களையும் தனக்கு சரீரமாகக்கொண்டு, அவர்களையும் இயக்கும் தலைவராகத் திகழ்வதால் திருமால் ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். பூத என்பது உலகில் படைக்கப்பட்ட உயிர்களைக் குறிக்கும். பூதேஸ்வர: என்பது அந்த உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்னும் ஸ்தானத்தில் இருக்கும் பிரம்மா, இந்திரன் போன்றோரைக் குறிக்கும்.
பூதமஹேஸ்வர: என்றால், தலைவர்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களுக்கும் தலைவராக இருப்பவர் என்று பொருள். அப்படி, தேவர்களுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதாலே, ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 490-வது திருநாமம், ‘பூதமஹேஸ்வர:’ என்றால் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தலைவர் என்று பொருள்.
“பூதமஹேஸ்வராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், யாரும் நம்மை வெறுக்காதபடி அனைவரோடும் நல்லிணக்க உணர்வுடன் இணைந்து வாழும் பக்குவத்தைத் திருமால் நமக்கு அருள்வார்.
———–
491. ஆதிதேவாய நமஹ (Aadhi Devaaya namaha)
முதலையிடம் சிக்கிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை,
“நமோ நமஸ்தே அகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய”
– என்று திருமாலை அழைத்தது என்று ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்கிறது.
‘அகிலகாரண’ என்றால் அனைத்து உலகுக்கும் காரணமானவர். ‘நிஷ்காரண’ என்றால் தனக்கொரு காரணம் இல்லாதவர் என்று பொருள். ‘அத்புதகாரண’ என்றால் உலகியலில் நாம் காண்கின்ற காரண-காரியங்கள் போல் அல்லாமல், தானே உலகுக்கு மூலப்பொருளாகவும் படைப்பாளியாகவும் இருப்பவர் என்று பொருள். இதன் சுருக்கமாகவே, ஆதிமூலம் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம்.யானை, முதலில் காரணப் பொருள் என்னைக் காக்கட்டும் என்று அழைத்தவாறே, அதைக் காக்க இந்திரன் புறப்பட்டானாம். “நாம்தான் தேவலோகத்தில் நடைபெறும் பல விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறோம்! எனவே யானை நம்மைத்தான் அழைக்கிறது!” என்ற எண்ணத்தில் போனான் இந்திரன்.
ஆனால், `அகில காரணாய’ என்று யானை சொன்னவாறே, “அடடா! நாம் அகில உலகுக்கும் காரணம் ஆகமாட்டோமே! அனைத்து உலகையும் படைத்தவர் பிரம்ம தேவர்தானே? இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டான் இந்திரன்.`அகில காரணாய’ என்ற வார்த்தையைக் கேட்டு யானையைக் காக்க பிரம்மதேவர் விரைந்தார். ஆனால் யானையோ, `நிஷ்காரணாய’ தனக்கொரு காரணம் இல்லாதவன் என்று மேலே குறிப்பிட்டது. இதைக் கேட்ட பிரம்மா, “நமக்கும் காரணப் பொருளாக நம்மைப் படைத்த திருமால் இருக்கிறாரே! அப்படியானால் இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டார்.
`அத்புத காரணாய’ என்று யானை கூறியவாறே உலகுக்கு ஒப்பற்ற காரணமாக விளங்கும் திருமாலையே யானை குறிப்பிடுகிறது என்பதை எல்லாருமே ஒருவாறு அறிந்து கொண்டார்கள். ஆனால், அதற்குள் யானையைக் காக்க வேண்டும் என்ற துடிப்போடு திருமால் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு கருட வாகனத்திலே பறந்து கொண்டிருந்தாராம்.
அப்போது பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாரும், `இந்த கேஸ்’ அவரது ‘கேஸ்’ என்று சொல்லிவந்தோம்! இது உண்மையிலேயே ‘கேசவரது கேஸ்’ தான்! அதனால் தான் கேசவனே செல்கிறான்!” என்று கொண்டாடினார்களாம் (க என்பது பிரம்மாவைக் குறிக்கும், ஈச என்பது சிவனைக் குறிக்கும். க, ஈச ஆகிய இருவரையும் படைத்து இயக்குபவருக்குக் கேசவன் என்று திருநாமம். நான்முகன், ருத்திரன் போன்றோருக்கும் காரணமான ஆதிமூலம் திருமால் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.)
இப்படி தேவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலே, திருமால் குளக்கரையையே அடைந்துவிட்டார். விரைவாக முதலையை அழித்து கஜேந்திரனைக் காப்பாற்றி அதற்கு முக்தியும் அளித்தார். `ஆதி’ என்றால் மூலக் காரணமாக இருப்பவர் என்று பொருள். நான் முகனை, நாராயணன் படைத்தான் என்ற திரு மழிசைப் பிரான் பாசுரமும், தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதிகவயே என்ற ஸ்ரீமத் பாகவத சுலோகமும் காட்டுவது போல், பிரம்மாவைத் தனது உந்தித் தாமரையில் படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர் திருமால்.
உலகைப் படைக்கும் பிரம்மாவையே படைத்தவர் என்பதன் மூலம், அவரே ஆதிகாரணமானவர் என்பதை அறிகிறோம். தேவர்களுக்கு ஆதிகாரணமாக இருப்பதால் திருமால், ‘ஆதி:’ என்று குறிப்பிடப்படுகிறார்.‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) ஒளிமிக்கவர் என்று பொருள். தனது பொலிவின் முன் தேவர்கள் அத்தனை பேரும் மங்கிப்போகும் படி ஒளி வீசிக்கொண்டு திகழ்வதால் திருமால், தேவ என்று அழைக்கப்படுகிறார்.
ஆக, தேவர்களுக்கு ஆதியாகவும், மற்ற தேவர்களின் ஒளி தன் ஒளியின் முன் மங்கிப் போகும்படியாகவும் விளங்குவதால் திருமால் ‘ஆதிதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 491-வது திருநாமம். ஆதி மற்றும் தேவன் ஆகிய இரு பொருள்களையும் விளக்கும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில், நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழியில்,
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?— என்றும்,
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே– என்றும் போற்றி இருக்கிறார்.
“ஆதிதேவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஒளிமயமான எதிர்காலமும் தலைமைப் பண்பும் நிறையும்படி அருள்புரிவார்.
————
492. மஹாதேவாய நமஹ (Mahaa Devaaya namaha)
ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்ற மகான் திருவேங்கடமலையில் தங்கி, ராமானுஜன் என்ற தோட்டமும், இராமானுஜப் புத்தேரி என்ற பொய்கையும் ஏற்படுத்தி, அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்துத் திருவேங்கடமுடையானுக்குப் புஷ்பகைங்கர்யம் செய்துவந்தார்.ஒருநாள் இரவு அனந்தாழ்வானின் தோட்டத்துக்குள் ஒரு தம்பதியர் நுழைந்தார்கள். அந்தக் கணவன், தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொய்து அவற்றைத் தனது மனைவியின் மீது வீசி விளையாடினான்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த அனந்தாழ்வான், பெருமாளுக்கு என்று உள்ள பூக்களைக் கொய்து, இப்படி ஒரு தம்பதியர் விளையாடுவதைக் கண்டு கோபமுற்றார். அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கணவன் தப்பித்து ஓடிவிட்டான். மனைவியைப் பிடித்து அங்கிருந்த ஒரு சம்பங்கி மரத்தில் கட்டிவைத்தார் அனந்தாழ்வான். “உன்னை மீட்டுச் செல்ல உன் கணவன் வருவான் அல்லவா? அவன் வரும்போது அவனைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி அந்த மரத்தின் எதிரிலேயே ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டார் அனந்தாழ்வான்.
இரவு முழுவதும் அந்த இளைஞனின் வருகைக்காக அனந்தாழ்வான் காத்திருந்தும், மனைவியைக் காப்பதற்காக அவன் வருவதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணும் அனந்தாழ்வானிடம், “சுவாமி! உங்களைப் பார்த்தால் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள்! தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்!” என்று கெஞ்சினாள். அனந்தாழ்வானோ, “நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மலையில் பூக்கும் அனைத்துப் பூக்களும் பெருமாளுக்கு மட்டுமே. ஆனால், அந்தப் பூக்களைக் கொய்து மானிடர்களான நீங்கள் இருவரும் விளையாடி இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? உன் கணவன் வரட்டும் நான் பேசிக்கொள்கிறேன்!” என்று கோபத்துடன் சொன்னார்.
இரவு நகர்ந்து நகர்ந்து, பிரம்ம முகூர்த்த நேரம் வந்தது. அர்ச்சகர்கள் திருவேங்கடமுடையானின் திருக்கோவிலைத் திறந்தார்கள். கருவறையைத் திறந்தால், மலையப்பனின் மார்பை அலங்கரிக்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. அடடா! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனின் மார்பில் அலர்மேல் மங்கை அகன்று விட்டாளே! என்ன ஆனதோ என்று எல்லாரும் திகைத்துப்போனார்கள்.
அப்போது திருவேங்கடமுடையானே வாய் திறந்து, “அலர்மேல் மங்கை நாச்சியார் அனந்தாழ்வானின் தோட்டத்தில் இருக்கிறாள். அனந்தாழ்வானின் பூக்கூடையில் அவளை எழுந்தருளச் செய்து இங்கே அழைத்து வரச்சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார்.இச்செய்தியை அர்ச்சகர்கள் சென்று அனந்தாழ்வானிடம் தெரிவிக்க, “ஆஹா! தம்பதியாக வந்தவர்கள் மலையப்பனும் மகாலட்சுமியுமான திவ்ய தம்பதியரா? அதை அறிந்து கொள்ளாமல் அபச்சாரப்பட்டுவிட்டேனே!” என்று கலங்கினார்.
பக்தனின் கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதவள் போல் கட்டுண்டு கிடந்த மகாலட்சுமியை அவிழ்த்துவிட்டார். பெருமாளின் நியமனப்படி அலர்மேல் மங்கைத் தாயாரைத் தன் பூக் கூடையில் அமரவைத்து, அவளைத் தலைமேல் சுமந்து கொண்டு பெருமாளின் கருவறை நோக்கி நடந்தார் அனந்தாழ்வான். “வாரும் மாமனாரே!” என்று அனந்தாழ்வானை வரவேற்றான் மலையப்பன். “நாச்சியார் உம்மைத் தந்தை என்று நேற்றிரவு அழைத்தாள் அல்லவா? அதனால் இன்று முதல் நீர் எமக்கு மாமனார் ஆவீர்!” என்று திருவாய் மலர்ந்தருளினான் மலையப்பன்.
ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கரியமாக எண்ணி, புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வான் என்ற பக்தரைக் கௌரவிப்பதற்காக இந்த விளையாட்டை அந்த திவ்ய தம்பதியர் செய்திருக்கிறார்கள். இப்படித் தனது பக்தர்களைக் காப்பதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் பற்பல லீலைகள் செய்வதால் திருமால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) விளையாடு பவர் என்று பொருள். ‘மஹாதேவ:’ என்று மிகப்பெரிய விளையாட்டை விளையாடுபவர் என்று பொருள். தோட்டத்தில் பூக்கொய்வது தொடங்கி, உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற அத்தனைச் செயல்களையும் விளையாட்டு போல் அனாயாசமாகச் செய்ய வல்லவர் திருமால். அதனால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 492-வது திருநாமம்.“மஹாதேவாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள், விளையாட்டுத் துறையில் உச்சம் தொடுவதற்குத் திருமால் அருள்புரிவார்.
———–
493. தேவேசாய நமஹ (Deveshaaya namaha)
திருமாலைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட விழைந்தார் பிரம்மா. ஆனால், அவரது முன் வினைகளாகிய கர்மா அவரது தியானத்துக்குத் தடையாக இருந்தன. அதனால், அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்கவில்லை. இறைவனின் வடிவைத் தியானிக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் பிரம்மா. அவரிடம் அசரீரியாகப் பேசிய திருமால், “பிரம்ம தேவனே! உங்கள் பாபங்கள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்ய வேண்டும். அதன்பின்தான் உங்களுக்குத் தியானம் கைகூடும்!” என்றார்.
“ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆயிற்றே! என் துன்பத்தை விட அதற்கான பரிகாரம் கடினமானதாக உள்ளதே!” என்று பிரம்மா கேட்டார். “அப்படியானால் காஞ்சீபுரத்தில் ஒரு அஸ்வமேத வேள்வி செய்யுங்கள். அங்கே ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்விகள் செய்ததற்குச் சமம்!” என்று சொன்னார் திருமால். அதன்படி, காஞ்சீபுரத்தில் வேள்விச் சாலை அமைத்து, கிழக்குமுகமாக அமர்ந்து வேள்வி செய்யத் தொடங்கினார் பிரம்மா. அந்த வேள்வி செய்யும் போது, அவருக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையுமே திருமால் போக்கிக் கொடுத்து, அவரது வேள்வி தொடர்ந்து இடையூறின்றி நடப்பதற்கு அருள்புரிந்தார்.
வேள்வியின் நிறைவுப்பகுதி வந்தது. வேள்வியில் அர்ப்பணிக்கப் படும் குதிரையின் வயிற்றுப் பகுதியைக் கொண்டு செய்யும் `வபா’ ஹோமத்தைச் செய்தபோது, பிரம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட்டதாம். எந்த ஒரு செயலுமே எடுத்து நடத்தும் போது, நிறைவுப் பகுதி வருகையில், அது நன்றாக நிறைவடைய வேண்டுமே என்ற நடுக்கம் வருவது இயற்கையல்லவா? தன் மகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் தந்தை, மகள் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரத்தில் இனிதாகத் திருமணம் நிறைவடைய வேண்டுமே என்ற ஒருவிதப் பதற்றத்தில் இருப்பார் அல்லவா?
அதுபோல் பிரம்மாவும், “யாகத்தின் நிறைவுப் பகுதி நன்றாகப் பூர்த்தியாக வேண்டுமே! அந்தந்த தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகங்களைச் சரியாகத் தந்துவிட வேண்டுமே! யாருக்கும் எந்தக் குறையும் வரக்கூடாதே!” என்றெல்லாம் பலவாறாகப் பதறி நடுங்கிக் கொண்டிருந்தாராம். இந்த நடுக்கத்துடன் வபாஹோமத்தைப் பிரம்மா செய்ய, அந்த வேள்வித் தீயிலேயே அத்திகிரி வரதராஜப் பெருமாளாகத் திருமால், பிரம்மாவுக்குக் காட்சி அளித்தார்.
“அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரந்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்திரவேதிக்கு உள்ளே உதித்தார் வந்தார்
உம்பர்தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!”
என்று தேவர்கள் போற்றிப் பூமாரி பொழியத் தோன்றிய வரதராஜப் பெருமாள், “பிரம்மா! உனது பாபங்கள் நீங்கிவிட்டன. நீ விரும்பியபடி நான் உனக்குக் காட்சி தந்துவிட்டேன் பார்!” என்று சொன்னார்.அப்போது பிரம்மா, “தேவர்கள் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாலும்கூட அவரவர்க்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகம் சரியாகப் போய்ச் சேர்ந்து எல்லாத் தேவர்களும் திருப்தி அடைய வேண்டுமே என்ற பெரும் கவலையோடு இருக்கிறேன்!” என்றாராம்.
அதற்கு வரதராஜன் பெருமான், “பிரம்மனே! அதைக் குறித்து நீங்கள் அஞ்சவே வேண்டாம்! தேவர்களின் தலைவனான நானே இப்போது தோன்றி, நீங்கள் சமர்ப்பித்த ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டுவிட்டேனே! தலைவனே திருப்தியடைந்த பின் தொண்டர்கள் குறைசொல்ல இனி ஒன்றுமில்லை! யாகம் இனிதே நிறைவேறிவிட்டது!” என்று சொல்லி
பிரம்மாவைத் தேற்றினார்.
“முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே!”
என்று ஆண்டாள் பாடிய பாசுரம், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னே யாகசாலைக்கு வந்து, அவர்களுக்கெல்லாம் பிரம்மா கப்பம் கட்ட வேண்டாதபடித் தவிர்த்து, மிடுக்கோடு நின்ற வரதராஜனைக் குறிப்பதாகவும் ரசிப்பதற்கு இடமுள்ளது. இப்படி எல்லாத் தேவர்களுக்கும் தலைவராக, அயர்வறும் அமரர்கள் அதிபதியாக, இமையோர் தலைவராக, தேவராஜனாக – திருமால் விளங்குவதாலே, ‘தேவேச:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 493-வது திருநாமம்.“தேவேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், எடுத்த காரியம் அனைத்தும் இனிதே நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.
————-
494. தேவப்ருதே நமஹ (Devabhruthey namaha)
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதார ஸ்தலமான தேரழுந்தூரின், ஸ்தல புராணத்தில் உள்ள ஒரு சரித்திரம். (அங்குள்ள பெருமாள் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இணைத்து ஸ்தல புராணம் இருப்பதை வேற்றுமை நோக்கில் காணாது, ஒற்றுமைநோக்கில் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)பரமசிவனும் திருமாலும் சொக்கட்டான் விளையாட, பார்வதிதேவி நடுவராக அமர்ந்திருந்தாள். போட்டியில் ஒருநிலையில், “நான்தான் வென்றேன்!” என்று திருமால் கூறினார்.
“ஆம்! ஆம்!” என்று பார்வதி தலை ஆட்டினாள். “ஓஹோ! புகுந்த வீட்டை விடப் பிறந்த வீடுதான் உனக்கு முக்கியமோ? கணவனைவிட உன் அண்ணன்தான் உனக்கு முக்கியமோ? அவர் வென்றேன் என்று சொல்ல, நீயும் மாடு போல் தலை ஆட்டுகிறாயே! நீ மாடாகப் பூமியில் பிறப்பாய்!” என்று பார்வதியைச் சபித்தார் சிவன். (நம் வீட்டில் வரும் சண்டைகளைப் போலே சிவன்-பார்வதிக்குள் சண்டை வருமா என்று எண்ணிவிட வேண்டாம்! பூமியில் தேரழுந்தூர் திருத்தலம் உருவாவதற்காக அவர்கள் செய்யும் விளையாட்டு!)
சோழநாட்டிலுள்ள தேரழுந்தூரில் பசுவாக வந்து தோன்றினாள் பார்வதி. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று சொல்வதற்கேற்ப, பார்வதியைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார் சிவன். அதனால் அவரும் தேரழுந்தூர் க்ஷேத்திரத்துக்கு வந்து, வேதபுரீஸ்வரர் என்ற பெயரோடு தவத்தில் ஈடுபட்டார்.நாம் விளையாடிய சொக்கட்டான் விளையாட்டால்தானே பார்வதியும் பரமசிவனும் பிரிய நேர்ந்தது. நாமே அவர்களை இணைத்து வைத்து விடுவோம் என்று முடிவெடுத்த திருமால், மாடு மேய்க்கும் கண்ணனாக ஆமருவி அப்பன் என்ற திருநாமத்தோடு தேரழுந்தூருக்கு வந்தார். மாடு வடிவில் வந்த பார்வதி தேவியை அவளது சகோதரனாகிய கண்ணன் காத்து ரக்ஷித்தார்.
கண்ணன் மாடு மேய்ப்பதைப் பார்த்த வேதங்கள், கன்றுக்குட்டிகளாக அவனை நாடி வந்துவிட்டன. கண்ணன் மேய்க்கும்போது அவனது திருக்கரத்தின் ஸ்பரிசம் பசுங்கன்றுகள் மீது படும் அல்லவா அதை விரும்பி வேதங்கள் கன்றுகளாயின.இப்படிப் பசுவையும், கன்றுகளையும் கண்ணன் மேய்த்து வருவதைச் சத்தியலோகத்தில் இருந்து பார்த்த பிரம்மா, அந்தப் பசுவையும் கன்றுகளையும் ஒரு குகைக்குள் ஒளித்து வைத்துவிட்டார். ஆமருவியப்பன் தன் திருமேனியில் இருந்தே பசுவையும் கன்றுகளையும் வெளியிட்டார்.
அதைக் கண்ட பிரம்மா தனது கர்வம் நீங்கப்பெற்று, ஆமருவியப்பனை அடிபணிந்தார்.“கண்ணா! நீதான் தேவர்களான எங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அதைப் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் அபச்சாரப் பட்டுவிட்டேனே!” என்று மன்னிப்பு கோரினார். அதன்பின் தொடர்ந்து மாடு கன்றுகளை மேய்த்தபடி சிவபெருமான் தவம் புரிந்து வந்த மரத்தின் அடிக்கு ஆமருவியப்பன் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவாறே, அவர்தான் திருமால் என்று பரமசிவன் புரிந்து கொண்டார்.
பசுவின் வடிவில் இருப்பவள் பார்வதி என்பதையும் புரிந்து கொண்டார். “உங்களிடம் பார்வதியை ஒப்படைக்கப் போகிறேன்!” என்று சிவனிடம் சொன்னார் ஆமருவியப்பன். சிவபெருமான், “நான் உனது ராமாவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டு இருப்பவன். எனவே நீ ராமன் வடிவில் வந்து பார்வதியை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!” என்று ஆமருவியப்பனிடம் கோரினாராம். அப்படியே ஆகட்டும் என்றார் ஆமருவியப்பன். மாசிமாதம் புனர்ப்பூச நட்சத்திர நன்னாளில் சீதா லட்சுமணனோடு கூடிய ஸ்ரீராமனாகப் பரமசிவன் முன்தோன்றிய ஆமருவியப்பன், பசுவின் வடிவில் இருந்த பார்வதியைப் பழைய வடிவத்துக்கு மாற்றிப் பரமசிவனோடு இணைத்துவைத்தார். மீண்டும் பார்வதியை மணந்தபடி வேதபுரீஸ்வரராகத் தேரழுந்தூரிலே கோவில் கொண்டார் சிவபெருமான்.
ஆமருவியப்பனாகத் தேரழுந்தூரிலேயே கோவில் கொண்டார் திருமால். ஆண்டுதோறும் மாசிப் புனர்ப்பூசத்தன்று ஆமருவியப்பன் ராமனாகவும், தேரழுந்தூர் ரங்கநாதப் பெருமாள் சீதையாகவும், தேரழுந்தூர் கோவிந்தராஜப் பெருமாள் லட்சுமணனாகவும் வடிவம்கொண்டு, பசுவோடு புறப்பாடு கண்டருளி, வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமானிடம் பசுமாட்டைச் சேர்ப்பதாக இந்த உற்சவம்நடைபெற்று வருகிறது.
சக்தியால்தான் சிவனுக்குப் பெருமை என்று சொல்லப்படும் நிலையில், அந்தப் பார்வதியைப் பிரிந்த சிவனுக்கு அவளைப் பழையபடி மீட்டுத் தந்து, அவருக்கு அப்பெருமையைப் பெற்றுத் தந்தார் திருமால். அதுபோல், பிரம்மா போன்ற அனைத்துத் தேவர்களுக்கும் அவரவருக்குத் தேவையானவற்றைத் தந்து அவர்களைத் தாங்கிப் பிடிப்பதால், ‘தேவப்ருத்’ – தேவர்களைத் தாங்குபவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். தேரழுந்தூரில் மூலவருக்கு தேவாதிராஜன் என்றே திருநாமம்.
உற்சவர் ஆமருவியப்பன். தேவாதிராஜன் என்பதன் மற்றொரு வடிவமே தேவப்ருத் – தேவர்களுக்குத் தலைவராக இருந்து அவர்களைத் தாங்குபவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 494-வது திருநாமம்.“தேவப்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் அனைத்துப் பெருமைகளும் கிட்டும்படித் திருமால் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.
————-
495. குரவே நமஹ (Guravey namaha)
(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)
தன் உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்திலே அமர்த்தினார். ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் படைப்புக் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது. நாம் வேதம் வல்லவர், நம்மை விஞ்சியவர் யாரும் இலர் என்று கருதினார் பிரம்மா. “பதவி வரும்போது பணிவு வராமல் பகட்டோடு இருக்கிறாரே இவர்!” என்று கருதிய திருமால், ஓர் அசுரனை அனுப்பி வைத்து, பிரம்மாவிடம் உள்ள வேதங்களை அபகரித்து வரச்சொன்னார். அவனும் வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து அபகரித்து வந்துவிட்டான். வேதங்களை இழந்த நிலையில் பிரம்மாவால் படைப்புத் தொழிலைத்தொடர இயலவில்லை.
“அடடா! நாம் பெரியவன் என்று தவறாக நினைத்து, இறுமாந்து இருந்துவிட்டோமே! நம்மைப் படைத்தவன் ஒருவன் உள்ளானே! அந்த பகவான்தானே நமக்கு வேதங்களைத் தந்து இப்பதவியில் நம்மை அமர்த்தினான்? அவனது அருளும் அவன் தந்த வேதங்களும் இல்லாவிட்டால் நமக்கு எந்தப் பெருமையும் கிடையாதே!” என்று அப்போதுதான் உணர்ந்தார் பிரம்மா. மொத்த கர்வத்தையும் விட்டுத் திருமாலின் திருவடிகளைச் சரண் புகுந்தார். “பிரம்மதேவரே உங்களுக்குக் கொஞ்சம்பக்குவம் வர வேண்டிஉள்ளது. அந்தப் பக்குவம் வந்தால்தான் பிரம்மதேவன் என்ற பதவியால் வரும் செருக்குக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள். எனவே மனப்பக்குவம் பெறப் பூமியில் காவிரிக் கரையில் போய்த் தவம் இயற்றுங்கள்!” என்று கூறினார் திருமால்.
அதன்படி பூமிக்கு வந்தார் பிரம்மா. காவிரிக் கரையில் கும்பகோணத்தில் பிரம்மா தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவம் நிறைவடையும் தறுவாயில், மகாலட்சுமியோடு திருமால் வந்து பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.“பிரம்மனே! உங்களுக்கு இப்போது நல்ல மனப்பக்குவம் வந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் பணிகளைப் பணிவோடு தொடர்வீர்கள். நானே உங்களுக்கு வேதங்களை உபதேசிக்கிறேன். இந்த வேதங்கள் உங்களை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்கும். என் அருளையும் இவை உங்களுக்கு நினைவூட்டும்!” என்று சொல்லிப் பிரம்மாவுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்து அவரை மீண்டும் படைப்புக் கடவுள் என்ற பதவியிலே அமர்த்தினார் திருமால்.
இவ்வாறு பிரம்மாவுக்குத் திருமால் வேதங்களை உபதேசித்த அந்த இடம்தான் இன்றும் கும்பகோணத்தில் வேதநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வேதநாராயணனாகத் திருமால் காட்சி தருகிறார். இன்னும் பிரசித்தமாக அது பிரம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் பிரம்மாவுக்கென்று உள்ள வெகுசில கோவில்களில் இந்த பிரம்மன் கோவிலும் ஒன்றாகும். அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை வைபவத்தில் முன்வரிசையில் இந்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம்.
வேதங்களை அவர்மூலம் பெற்ற பிரம்மா, “வேதநாராயணா! முன்பு மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் என்னிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்றார்கள். அப்போது நீ குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளாக அவதாரம் செய்து, அவர்களை அழித்து வேதங்களை எனக்கு மீட்டுத் தந்தாய். இப்போது எனது கர்வத்தின் காரணமாக நான் வேதங்களை இழந்த போதும், மீண்டும் நீயே வேதநாராயணனாக வந்து அவற்றை அடியேனுக்கு உபதேசித்து மீட்டுத் தந்துவிட்டாய். உன்னை என்சொல்லி வாழ்த்துவேன்?” என்று துதித்தார்.
“ஒரு மிகப்பெரிய வேள்வியை இங்கே செய்து உன்னை ஆராதிக்கப் போகிறேன்!” என்று சொல்லி பிரம்மா வேள்விக்கான ஏற்பாடு களைச் செய்தார். வேள்விக்கு உதவியாக ஒரு நீர்நிலை இருந்தால் நன்றாக இருக்குமே என்று பிரம்மா நினைக்க, திருமால் இங்கே ஒரு நதி உருவாகட்டும் என்று சொல்லித் தன் கதையால் நிலத்தைக் கீற, ஓர் ஆறு தோன்றியது. அரியின் சொல்லால் உருவான அந்த ஆறு அரிசொல் ஆறு என்று பெயர் பெற்றது. அதுதான் அரசலாறு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
அதன்பின் அந்நீரைக் கொண்டு வேள்வி செய்து திருமாலை ஆராதித்தார் பிரம்மா.இப்படிப் பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்து வேதங்களை உபதேசிப்பதால் ஹயக்ரீவப் பெருமாள் ‘குரு:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 495-வது திருநாமம்.“குரவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல ஞானத்தைத் திருமால் அருள்வார்.
———-
496. உத்தராய நமஹ (Uttharaaya namaha)
ஆதிகேசி என்று ஓர் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களைப் பலவாறுதுன்புறுத்திவந்தான். அவனால் பெருந்துயருக்கு ஆளான தேவர்கள், பிரம்மாவின் உதவியை நாடினார்கள். ஆதிகேசியை அழிக்கும் ஆற்றல் திருமால் ஒருவருக்கே உண்டு என்று சொல்லித் திருமாலின் உதவியை நாடுமாறு வழிகாட்டினார் பிரம்மா. பிரம்மா தலைமையில் அனைத்துத் தேவர்களும் திருப்பாற்கடலுக்குச் சென்றார்கள். தீராத இன்னல் தரும் ஆதிகேசியைத் தீர்த்துக் கட்டித் தம்மை ரட்சிக்குமாறு திருமாலின்திருவடிகளைப் பணிந்தார்கள். அப்போது திருமால், “தேவர்களே! என் திருவடியில் பணிந்தவர்கள் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதை அப்படியே நிறைவேற்றுபவன் நான்! அந்த அசுரனை நான் எப்படி அழிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்! அப்படியே செய்துவிடுகிறேன்!” என்றார்.
தேவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துவிட்டுத் திருமாலிடம், “இறைவா! ஒவ்வோர் அசுரனும் ஏதோ ஒரு சக்தியைப் பெற்றுக் கொண்டு எங்களைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த ஆதிகேசியை வீழ்த்திவிட்டு அவன்மீதே பள்ளி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தீமை செய்ய நினைக்கும் அசுரர்கள் உனக்குக் கீழ் இருக்கும் ஆதிகேசிக்கு நிகழ்ந்ததைப் பார்த்து அஞ்சியாவது தீங்கு செய்யாதிருக்க வாய்ப்புண்டு!” என்று கோரினார்கள்.அப்படியே செய்கிறேன் என்று தேவர்களுக்கு வாக்களித்தார் திருமால். திருமால் ஆதிகேசியை எதிர்த்து மல்யுத்தம் புரிந்தார். அவனைத் தாக்கிக் கீழே தள்ளியபின் அவனுக்கு மேல் தனது ஆதிசேஷப் படுக்கையை இட்டு, ஆதிகேசியை அழித்தவன் என்பதற்குச் சான்றாக “ஆதிகேசவன்’’ என்ற திருநாமத்தோடு அவ்விடத்தில் பள்ளி கொண்டார்.
ஆதிகேசியின் மனைவியான அசுரப் பெண், கங்கை நதியின் உதவியை நாடினாள். “தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்த என் கணவனை அழித்துவிட்டு அவன்மீது திருமால் பள்ளி கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்தானே அறிவாள்? எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று வேண்டினாள்.அதைக் கேட்ட கங்கை, தாமிரபரணி நதிக்குள்ளே நுழைந்தாள். ஆதிகேசி மீது பள்ளி கொண்டிருந்த ஆதிகேசவன் மீது மோதுவது போல் தாமிரபரணிக்குள் நுழைந்த கங்கை வந்தாள்.
திருமால், பூமிதேவியை ஒரு பார்வை பார்க்க, பூமிதேவி அப்பகுதியை மட்டும் சற்றே நிலப்பரப்புக்கு மேலே உயர்த்திவிட்டாள். வேகமாக வந்த கங்கையும் தாமிரபரணியும் அந்த உயர்ந்த நிலத்தில் மோதி அதைச் சுற்றி வட்டமாக ஓடத் தொடங்கின. மோதிய வேகத்தில் மனமாற்றம் அடைந்த காவிரியும் தாமிரபரணியும் திருமாலின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினார்கள். கங்கை, தாமிரபரணி இருவரையும் பார்த்து, “நீங்கள் எனக்கு வட்டமாக மாலை சூட்டித் தொண்டு செய்ததாக நான் அங்கீகரிக்கிறேன்!” என்று சொல்லி அருள்புரிந்தார் திருமால். ஆறு வட்டமாக ஓடியதால், அவ்விடம் வட்ட ஆறு, (வட்டாறு) என்று பெயர் பெற்றது. அதுவே ‘திருவட்டாறு’ என்ற திவ்யதேசமாக ஆனது. நம்மாழ்வார் ‘திருவாட்டாறு’ என்று இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
“அருள்பெறுவார் அடியார்தம் அடியனேர்க்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்து இனிப்பிறவி யான்வேண்டேன்
மருள் ஒழிநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே”
என்ற பாசுரத்தில், அடியார்கள் எப்படி விதிக்கிறார்களோ, அதாவது கட்டளை இடுகிறார்களோ, அப்படியே அருள்புரியும் பெருமாள் என்ற ஆதிகேசவப் பெருமாளைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். தேவர்கள் விரும்பிய படி ஆதிகேசியை வதைத்தமையைத் திருவுள்ளத்தில் கொண்டு இவ்வாறு ஆழ்வார் பாடியதாகப் பெரியோர்கள் ரசிப்பார்கள்.
பிரம்மாவிடமிருந்து வேதங்களை மது, கைடபர்கள் அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்துக் காத்தார் அல்லவா திருமால்? இதுபோல் தேவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அந்த ஆபத்துகளில் இருந்து காப்பதால் திருமால் ‘உத்தர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உத்தர:’ என்றால் ஆபத்தில் காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 496-வது திருநாமம். “உத்தராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆபத்துகள் நேராதபடித் திருமால் காத்தருள்வார்.
————
497. கோபதயே நமஹ (Gopathaye namaha)
வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.
பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்! இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.
சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.
இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.
பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.
பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.
இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.
இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.
———-
498. கோப்த்ரே நமஹ (Gopthrey namaha)
முன்னொரு சமயம் வாசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த பல முனிவர்கள் நம் தமிழகத்தில் காவிரிக் கரை ஓரமாக வசித்துவந்தார்கள். அம்முனிவர்கள் ஒன்றுகூடித் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறை என்ன என்று அறிய விரும்பினார்கள். அதற்காகப் பல முனிவர்களை அவர்கள் அண்டினார்கள். பாரததேசம் எங்கும் உள்ள பல முனிவர்களிடம் அவர்கள் சென்று பிரார்த்தித்த போதும், “திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையான ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது! அதனால் எங்களுக்குப் பூஜை முறைகள் தெரியாது!” என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின் அவர்கள் கஹோலர் என்ற முனிவரைச் சென்று பற்றினார்கள். கஹோலமுனிவர், “வேதங்களில் சொல்லப்பட்ட வேள்வி முறைகளை நான் அறிவேன். அவற்றின் மூலம் திருமாலை ஆராதித்து வருகிறேன். ஆனால் வீட்டிலோ, கோவிலிலோ, விக்கிரக வடிவில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்குப் பூஜை செய்யும் முறைகளை நான் அறியவில்லை. மேரு மலை அடிவாரத்தில் ஏகதர் என்றொரு முனிவர் உள்ளார். அவரிடம் சென்று பிரார்த்தியுங்கள்!” என்று சொன்னார்.
“யார் அந்த ஏகதர்?” என்று முனிவர்கள் கேட்க, கஹோலர், “பிரம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஏகதர், த்விதர், த்ரிதர் என்று அவர்களுக்குப் பெயர். ஏகதர் என்பவர் மூத்த மகன். த்விதரும், த்ரிதரும் உலகில் க்ஷேமமாக வாழ என்ன வழி என்பதைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஏகதரோ, திருமகளின் கேள்வனான திருமாலுக்குப் பூஜை செய்து வழிபட என்ன வழி என்று சிந்திக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார் ஏகதர். திருமால், அவருக்குக் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்ற கேட்டபோது, திருமாலை ஆராதிக்கும் முறைகளையும், அவரைச் சரண் அடைந்து முக்தி அடையும் முறையையும் தனக்கு உபதேசிக்குமாறு பிரார்த்தனை செய்தார்.
திருமால், தன்னைப் பூஜிக்கும் முறையான “ஸ்ரீபாஞ்சராத்ரம்’’ என்ற ஆகமத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதை’’ என்ற பகுதியை ஏகதருக்கு உபதேசம் செய்தார். எனவே நீங்கள் ஏகத முனிவரை நாடி, அவரிடம் இருந்து ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் அப்பகுதியை அறிந்து கொள்ளலாம்!” என்று சொன்னார்.
அதன்படி மேருமலை அடிவாரத்தில் உள்ள ஏகத முனிவரின் ஆசிரமத்துக்கு இந்த முனிவர்கள் சென்றார்கள். ஏகதரை வணங்கிப் பூஜித்தார்கள். “என்ன காரணமாக என்னைத் தேடி வந்துள்ளீர்கள்?” என்று முனிவர்களிடம் கேட்டார். “ஏகத முனிவரே! நாங்கள் திருமகளையும் திருமாலையும் பூஜிக்கும் முறையை அறிய விரும்பி வந்துள்ளோம்!” என்று முனிவர்கள் ஏகதரிடம் கூறினார்கள்.
ஏகதரும் கருணையோடு அவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் பகுதியான ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையை உபதேசம் செய்தார். அந்தப் பகுதி முழுவதும் மகாலட்சுமி திருமாலிடம் பூஜை முறைகள் குறித்துக் கேள்விகள் கேட்க, அதற்குத் திருமால் பதில் அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உபதேசம் செய்த ஏகதர், “முனிவர்களே! வாருங்கள்! பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள பாஸ்கர க்ஷேத்ரமான கும்பகோணத்தில் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். அவருக்குத் தொன்றுதொட்டு இந்த முறையில்தான் பூஜை நடந்துவந்தது. இடையில் இது வழக்கொழிந்து போய்விட்டது.
நாம் மீண்டும் அவரை இதே ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையின் அடிப்படையில் ஆராதிக்கலாம்!” என்று முனிவர்களை அழைத்தார். மேரு மலையில் இருந்து மீண்டும் காவிரிக் கரைக்கு ஏகதரோடு வந்து அம்முனிவர்கள் ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையில் காட்டப்பட்ட முறையின்படி, ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாளையும், கோமளவல்லித் தாயாரையும் ஆராதித்தார்கள்.
ஸ்ரீசாரங்கபாணி திருக்கோவிலின் சந்நதித் தெருவிலேயே தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு ஏகதர் தங்கிவிட்டார். இன்றும் அந்த ஆசிரமத்தைக் கும்பகோணத்தில் காணலாம். ஆக, உலகில் வேதங்களோ, வேதாந்தமோ, ஆகம சாஸ்திரங்களோ, ஆழ்வார் பாசுரங்களோ அடிக்கடி வழக்கொழிந்து போவதுண்டு. ஆனாலும் இறைவன் அவை அப்படியே அழிந்துபோகும்படி விட்டுவிடுவதில்லை. மறைந்துபோன, மறந்துபோன அந்த வித்யைகளைப் பலவித முறைகளைக் கையாண்டு திருமாலே மீட்டுத் தந்துவிடுகிறார்.
பூஜை முறையான ஸ்ரீபாஞ்சராத்திரம் வழக்கொழிந்துபோன போது, ஏகதர் மூலம் மீட்டார் அல்லவா..? ஆழ்வார்களின் பாசுரங்கள் வழக்கொழிந்து போன போது, நாதமுனிகள் மூலம் மீட்டார் அல்லவா..?அதுபோலத்தான் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் அசுரர்கள் வேதங்களை அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்து வேதங்களை மீட்டுத் தந்தார் திருமால்.
அதனால்தான் கோப்தா – வித்யைகள் அழிந்துபோகாமல் காப்பவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 498-வது திருநாமம். “கோப்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மறதி இல்லாத நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
————-
499. ஞான கம்யாய நமஹ (Gnaana gamyaaya namaha)
1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், திருமலையப்பனின் மணியின் அம்சமாகக் காஞ்சிபுரத்தில் அவதரித்தவர் சுவாமி வேதாந்த தேசிகன். அவரின் இயற்பெயர் வேங்கடநாதன் என்பது. தேசிகனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவரது தாய் மாமாவான அப்புள்ளார் என்பவர் தன் மருமகனைப் பார்ப்பதற்காக அவரது இல்லத்துக்கு வந்திருந்தார். ஐந்து வயது தேசிகனைக் கொஞ்சி விட்டுக் காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார் அப்புள்ளார்.
“மாமா! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் தேசிகன். “குழந்தாய்! அத்திகிரி வரதர் சந்நதியில் நடாதூர் அம்மாள் என்ற மகான் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை விளக்கி வருகிறார். அவரது விளக்கவுரையைக் கேட்கச் செல்கிறேன்!” என்றார் அப்புள்ளார்.“நானும் வருவேன்!” என்று அடம்பிடித்தார் தேசிகன். “ஐந்து வயது குழந்தையான உனக்கு ஸ்ரீபாஷ்யம் புரியாது!” என்றார் அப்புள்ளார். ஆனால், தேசிகன் வந்தே தீருவேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் தேசிகனையும் தம்மோடு வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார்.
நடாதூர் அம்மாள், ஸ்ரீபாஷ்ய விளக்கங்களை வழங்கிக்கொண்டிருக்க, நடுவே ஐந்து வயது பாலதேசிகனோடு அப்புள்ளார் நுழையவே, தேசிகன் முகத்தில் இருக்கும் பொலிவைப் பார்த்து அங்கிருந்தோர் அத்தனை பேரும் மயங்கி விட்டார்கள். உரையாற்றிக் கொண்டிருந்த நடாதூர் அம்மாளும், தான் விட்ட இடத்தை மறந்துவிட்டார், கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யர்களும் மறந்துவிட்டார்கள்.
எல்லாரும், பிரமிப்புடன் தேசிகனையும் அப்புள்ளாரையுமே பார்த்துக்கொண்டிருக்க, “ஏன் மாமா எல்லாரும் விழிக்கிறார்கள்?” என்று அப்புள்ளாரிடம் கேட்டார் தேசிகன். “சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நடுவில் போனால் இப்படித் தான் கவனம் சிதறும். நாம் நடுவில் வந்துவிட்டோம் அல்லவா? அதனால் எங்கே நிறுத்தினோம் என்று தெரியாமல் விழிக்கிறார்கள்! தவறு நம் மீதுதான்!” என்றார் அப்புள்ளார்.
தேசிகன் சிரித்துக்கொண்டே, “இதுதானா பிரச்னை? படஇ பராஸர ஸத்தம் என்ற இடத்தில் நடாதூர் அம்மாள் நிறுத்திவிட்டார்கள்.
மேற்கொண்டு சொல்லச் சொல்லுங்கள், கேட்போம்!” என்றார். ஐந்து வயது குழந்தையின் இந்த ஞானத்தைப் பார்த்து வியந்த நடாதூர் அம்மாள் தேசிகனை அழைத்துத் தம் மடியில் அமர்த்தி, “ப்ரதிஷ்டாபித வேதாந்த: ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயாஸ் த்ரைவித்ய மான்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜனம்” என்று வாழ்த்தினார். நீ வேத நெறியை நன்கு நிலைநாட்டி, சான்றோர்களால் கொண்டாடப் படுபவனாக, மங்கலங்கள் எல்லாம் நிறையப் பெற்றவனாக விளங்குவாய் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.
இப்படி வாழ்த்தியபின் அப்புள்ளாரை அழைத்த நடாதூர் அம்மாள், “நான் உங்களுக்கு உபதேசித்த எல்லா சாஸ்திரங்களையும் உரிய காலத்தில் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்! குறிப்பாக நான் உபதேசித்த கருட மந்திரத்தையும் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார். அதன்படி அப்புள்ளாரும் உரிய காலத்தில் தேசிகனுக்கு எல்லா சாஸ்திரங்களையும் உபதேசிக்க, 20 வயதுக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக ஆகிவிட்டார் தேசிகன். அப்புள்ளார் உபதேசித்த கருட மந்திரத்தை நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டு, கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஔஷதகிரி மலையில் அமர்ந்து, கருட மந்திரத்தை ஜபித்து கருடனைத் தியானித்தார் தேசிகன்.
கருடன் அவருக்குக் காட்சி தந்து, ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த ஹயக்ரீவ மந்திரத்தை தேசிகன் ஜபிக்க, ஹயக்ரீவர் தேசிகனுக்குத் தரிசனம் தந்து, தனது திருவாய் அமுதை தேசிகனுக்கு அருளினார். அந்த அருளால் மிகச்சிறந்த வாக்கு வன்மை பெற்று, கவிபாடுவதிலும், தர்க்கத்திலும் ஒப்பற்றவராக விளங்கினார் தேசிகன். கவிதார்க்கி சிம்மம் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்றும் விருதுகள் பெற்றார்.
தேசிகன், ஹயக்ரீவரின் தரிசனத்தையும்அருளையும் பெற்றதற்கு என்ன காரணம்? முதலில் அவர் பெற்ற நடாதூர் அம்மாள், அப்புள்ளார் போன்ற ஆசார்யர்களின் திருவருள். அதைத் தொடர்ந்து அவர் செய்த கருட மந்திரஜபமும், ஹயக்ரீவ மந்திரஜபமும். இப்படி குருவின் அருளோடு இறைவனை முறைப்படி தியானிப்பதற்குப் பரவித்யை என்றும் ஞானம் என்றும் பெயர்.
அந்தப் பரவித்யையாகிய ஞானத்தால் அறியப்படும் ஹயக்ரீவருக்கு ‘ஞானகம்ய:’ என்று திருநாமம். ‘ஞானகம்ய:’ என்றால் ஞானத்தால் அறியப்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 499-வது திருநாமம்.“ஞானகம்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
————–
500. புராதனாய நமஹ (Puraathanaaya namaha)
(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்) –
ஓர் ஊரிலே ஒரு பெரிய அமுதக் கடல் இருந்ததாம். விவசாயம் செழித்துப் பயிர்கள் விளைய வேண்டும் என்று அக்கடல் ஆசைப்பட்டது. ஆனால் கடல்நீர் நேராக வயலுக்குள் வந்தால் வயல் தாங்குமா அதனால் அக்கடல் ஒரு மேகத்தை அழைத்தது. என்னிடமிருந்து தண்ணீரை மொண்டு சென்று மழையாகப் பொழிவாய் என்றது.மேகம் அமுதை மொண்டு எடுத்துச் சென்று மழைபொழியப் பார்த்தது. ஆனால் பெரு மழையாக நேரே பொழிந்தால், பெரு வெள்ளம் ஆகி விடுமே என்று கருதிய மேகம், முதலில் ஒரு மலை உச்சியின் மேல் மழையைப் பொழிந்தது. அமுத மழையை உள்வாங்கிக் கொண்ட மலை, அதை இரண்டு அருவிகளாகப் பிரித்து விட்டது.
அவ்விரண்டு நீர்வீழ்ச்சிகளும் இணையவே ஒரு பெரும் காட்டாறு உருவானது. அது ஐந்து கிளைகளாகப் பிரிந்தது. அவை ஓர் ஏரியில் போய் இணைந்தன. அந்த ஏரியில் எழுபத்து நான்கு மடுக்களை அமைத்துத் தண்ணீரை நீர்ப்பாசனத்துக்காக வயல்நோக்கித் திருப்பினார்கள். அதன் விளைவாக விவசாயம் நன்றாகச் செழித்தது.அந்த அமுதக் கடல் வேறு யாரும் அல்லர், சாட்சாத் திருமால்தான். ஜீவாத்மாக்கள்தான் நெற்பயிர்கள்.
நெற்கதிர்கள் ஓங்கி வளர்வது போல் நம் உள்ளத்தில் சரணாகதி நிஷ்டை ஓங்கி வளர வேண்டும் என்று அமுதக் கடலாகிய திருமால் விரும்பினார். ஆனால் கடலாகிய அவர் நேரே பாய்ந்தால், அவ்வளவு அருளை நம்மால் தாங்க முடியாதல்லவா -அதனால் திருமால் என்னும் அமுதக் கடல், நம்மாழ்வார் என்னும் மேகத்தை அழைத்து அவரை மழையாகப் பொழியச் சொன்னார். நம்மாழ்வார் திருமால் அருளிய அந்த உபதேசத்தையே திருவாய்மொழி என்னும் அமுத மழையாக நாதமுனிகள் என்னும் மலைக்குமேல் பொழிந்தார்.
நாதமுனிகள் என்ற மலை, உய்யக்கொண்டார் என்றும் மணக்கால்நம்பி என்றும் இரண்டு அருவிகளாக அவ்வுபதேச மழை பாயும்படிச் செய்தார். அவ்விரண்டு அருவிகளும் சேர்ந்து ஆளவந்தார் என்னும் காட்டாறாக ஆயின. அக்காட்டாறு பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் என்னும் ஐந்து கிளைகளாகப் பிரிந்தது.
ஐந்து கிளைகளும் ராமானுஜர் என்னும் ஏரியில் வந்து இணைந்தன. கடல்நீரோ, மழைவெள்ளமோ, அருவியோ, காட்டாறோ விவசாயத்துக்குப் பயன்படாது. ஏரி நீரே பயன்படும். அவ்வாறு ராமானுஜர் என்னும் ஏரியின் மூலம் தான் உலகில் அனைத்து மக்களுக்கும் எல்லா நல் அர்த்தங்களும் சென்று சேரும்.எனவேதான் ராமானுஜர் என்னும் ஏரியிலிருந்து எழுபத்து நான்கு மடுக்களைப் போலே எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் ஆசார்யர்கள் உருவானார்கள். ராமானுஜர் அவர்கள் மூலம் சிஷ்யர்களுக்கு அனைத்து வித உபதேசங்களும் சென்றுசேர ஏற்பாடு செய்தார். குலம், பாலினம், கல்வி, செல்வம் உள்ளிட்ட எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஆசையோடு வருவோர் அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கொள்கையை வலியுறுத்தினார் ராமானுஜர்.
அதன் விளைவு, உலகில் சரணாகதர்கள் என்னும் பயிர்கள் நன்றாக விளைந்தார்கள். நம் போன்ற பாமரர் வரை அனைவருக்கும் ஞானம் என்பது வந்து சேர்ந்தது. அந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளின் வழியில் வந்த மகான்கள் இன்றளவும் எழுந்தருளி இருந்து சிஷ்யர்களைத் திருத்திப் பணிகொண்டு ராமானுஜர் திருவடிகளில் சேர்த்து வருகிறார்கள்.அவர்கள் மூலம் நாம் பெறக்கூடிய அந்த உபதேசம் என்னும் அமுதம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், திருமால் என்னும் அமுதக் கடலிலிருந்தே வந்தது. தினகரன் அருள் தரும் ஆன்மீகம் இதழ்மூலம் நாம் அறியும் இந்தப் பொருள்களும் கூட உண்மையில் அந்த அமுதக் கடலில் இருந்து வந்தவையே.
இப்படி எல்லோருக்கும் புராதனமான, பழமையான குருவாக இருந்து, நாம் பெறும் அனைத்து உபதேசங்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறார் . அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 500வது திருநாமம்.
புராதனாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தையும் குரு பக்தியையும் திருமால் தந்தருள்வார்.
—————–
502. போக்த்ரே நமஹ (Bhokthrey namaha)
தமது பரமாசார்யரான ஆளவந்தாரைத் தரிசிக்கப் பெரிய நம்பிகளோடு திருவரங்கத்துக்கு விரைந்தார் ராமானுஜர். ஆனால் ராமானுஜர் வருவதற்குள் ஆளவந்தார் பரம பதத்தை அடைந்துவிட்டார். ஆசார்யனைப் பிரிந்து துயரால் பலவாறு வாடி வருந்தினார் ராமானுஜர். பெரிய நம்பிகள் உள்ளிட்டோர் ஒருவாறு அவரைத் தேற்றினார்கள்.அதன்பின் ஆளவந்தாரின் சரமத் திருமேனியைத் திருவடி முதல் திருமுடி வரை உற்று நோக்கினார் ராமானுஜர். ஆளவந்தாரின் வலக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பதைக் கண்டார். அதற்கு முன்பு அப்படி மடங்கி இருந்ததில்லை என்று சுற்றி இருந்தவர்களும் வியந்து கூறினார்கள். அப்படியானால் ஆளவந்தாருக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உண்டா என்று விசாரித்தார் ராமானுஜர்.
1. வேத வியாசர், பராசர முனிவர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட இரண்டு ஆசார்யர்களை உருவாக்க வேண்டும்.
2. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரையை உருவாக்க வேண்டும்.
3. போதாயன முனிவர் இயற்றிய விருத்தி நூலின் அடிப்படையில் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுத வேண்டும்.
ஆகிய இம்மூன்றுமே ஆளவந்தாரின் ஆசைகள் என்று சிஷ்யர்கள் தெரிவித்தார்கள். இந்த வரிசையை மாற்றியும் சொல்வதுண்டு, எப்படிக் கொண்டாலும் மூன்று ஆசைகளில் மாற்றமில்லை. இம்மூன்றையும் நிறைவேற்றியே தீருவேன் என்று ராமானுஜர் சபதம் செய்தவாறே மடங்கியிருந்த விரல்கள் மீண்டும் நீண்டுவிட்டன. கூரத்தாழ்வானின் இரு மகன்களுக்குப் பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று பெயர்சூட்டி முதல் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர்.
திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் ஆறாயிரப்படி என்ற திருவாய்மொழி விளக்கவுரையை உருவாக்கி இரண்டாம் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர். மூன்றாவது ஆசையின்படி பிரம்ம சூத்திர விளக்கவுரை எழுத, முதல்நூலான போதாயன விருத்தி என்ற நூலைத் தேடிக் காஷ்மீர் சாரதா பீடத்துக்குத் தம் சீடர் கூரத்தாழ்வானுடன் சென்றார் ராமானுஜர்.
அங்குள்ள பண்டிதர்கள் அவ்வளவு எளிதில் அந்த நூலைத் தருவதாக இல்லை. அவர்கள் அத்தனை பேரோடும் வாதம் செய்து அவர்களை வென்று போதாயன விருத்தி நூலைப் பெற்றார் ராமானுஜர்.அதைத் தமது இருப்பிடத்துக்கு எடுத்து வந்து நான்கு அத்தியாயங்களுள் ஓர் அத்தியாயத்தை மட்டும் முழுமையாகப் படித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர். மறுநாள் காலை காஷ்மீர் பண்டிதர்கள் வந்து இனி நூல் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பறித்துச் சென்று விட்டார்கள். அடடா இன்னும் மூன்று அத்தியாயங்களை நாம் படிக்கவில்லையே என்று ராமானுஜர் வருந்தியபோது, சீடர் கூரத்தாழ்வான், குருவே அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு செயல் செய்துவிட்டேன். இரவு நீங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மொத்த போதாயன விருத்தியையும் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அவற்றை இங்கே ஒப்பிக்கட்டுமா அல்லது இரு காவிரிக்கு மத்தியில் திருவரங்கத்தில் வந்து ஒப்பிக்கட்டுமா என்று கேட்டார்.ஆஹா இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் மகிழ்ந்த ராமானுஜர் கூரத்தாழ்வானோடு திருவரங்கம் திரும்பினார். அவரது உதவியோடு பிரம்ம சூத்திர விளக்கவுரையை எழுதி நிறைவு செய்தார்.
பின்னாளில் ராமானுஜர் காஷ்மீர் யாத்திரை சென்றபோது, காஷ்மீர் சாரதா பீடத்தில் உள்ள சரஸ்வதி தேவி ராமானுஜரின் பிரம்ம சூத்திர விளக்கவுரையைப் பார்த்துவிட்டு, ஆஹா எனக்குக் குருவாய் விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளே இதில் தெரிகிறாரே என்று சொல்லி வியந்து தான் பூஜிக்கும் ஹயக்ரீவர் திருவடிகளில் அந்த நூலை அர்ப்பணித்தார்.
அதன்பின் அதை முழுமையாகப் படித்து விட்டு, இனி இது ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று கொண்டாடினார் சரஸ்வதி. தான் அதுவரை பூஜித்து வந்த ஹயக்ரீவ விக்கிரகத்தை ராமானுஜருக்கு அளித்தார் சரஸ்வதி. அதன்பின் ராமானுஜரின் அந்நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் என்றும், ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யகாரர் என்றும் பெயர் ஏற்பட்டது.வேதங்களை வழங்கிய பிரம்மாவுக்கும் கல்விக்குத் தலைவியான சரஸ்வதிக்கும் என அத்தனை பேருக்கும் குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். எனவேதான் தேவர்கள் எந்த ஒரு பொருளைத் தாங்கள் பெற்றாலும் தங்களுக்கெல்லாம் குருவான ஹயக்ரீவருக்கு முதலில் அதை அர்ப்பணித்துவிட்டு அதன்பின் தான் தாங்கள் எடுத்துக் கொள்வார்களாம்.
எனவே தேவர்களுள் யாருக்கு எதை அர்ப்பணித்தாலும், அது ஹயக்ரீவருக்கு முதலில் போய்ச் சேர்கிறது. அவர் முதலில் அனுபவிக்கிறார். அவரது பிரசாதமாகவே தேவர்கள் அதன்பின் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் நாம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் அனுபவித்து மகிழ்பவர் – போக்தா என்று ஹயக்ரீவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 502-வது திருநாமம்.போக்த்ரே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குறையாத ஞானம் நிறைந்து பாரோர் புகழ விளங்கும்படி ஹயக்ரீவர் அருள்புரிவார்.
———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்