ஸ்ரீ பொய்கையாழ்வார் ஸ்ரீ காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)
உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.
மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – திருவோணம்
திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார்.
ஸ்ரீ பொய்கையாழ்வார் பாடி திவ்ய தேசங்கள்-6
திருவரங்கம்
திருக்கோவலூர்
திருவெஃகா
திருவேங்கடம்
திருப்பாற்கடல்
திருபரமபதம்
—————-
ஸ்ரீ பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த ஸ்ரீ மாமல்லபுரத்தில் உள்ள
ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.
மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – அவிட்டம்
திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார்.
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாடி திவ்ய தேசங்கள் – 13
திருவரங்கம்
திருக்குடந்தை
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருக்கோவலூர்
திருக்கச்சி
திருப்பாடகம்
திருநீர்மலை
திருகடல்மல்லை
திருவேங்கடம்
திருதண்கால்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்
————–
ஸ்ரீ பேயாழ்வார் சென்னையில் உள்ள ஸ்ரீ திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.
மாதம் – ஐப்பசி
நட்சத்திரம் – சதயம்
திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி
இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார்.
ஸ்ரீ பேயாழ்வார் பாடிய திவ்யதேசங்கள் – 15
திருவரங்கம்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கச்சி
அஷ்டபுயகரம்
திருவேளுக்கை
திருப்பாடகம்
திருவெஃகா
திருவல்லிக்கேணி
திருக்கடிகை
திருவேங்கடம்
திருமாலிருஞ்சோலை
திருக்கோட்டியூர்
திருப்பாற்கடல்
திருபரமபதம்
—————–
ஸ்ரீ திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.
இவர் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.
மாதம் – தை
நட்சத்திரம் – மகம்
திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.
இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.
ஸ்ரீ திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட
உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார்.
இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர்.
பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.
பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு,
அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.
அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.
இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.
அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.
சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு,
தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.
அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.
அவர்களுக்கு ஸ்ரீ கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.
ஸ்ரீ கணிகண்ணன் பின்னர் ஸ்ரீ திருமழிசையாழ்வார் சீடரானார்.
இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-
சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்
இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி
பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.
ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமாளும்
தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.
அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.
கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க,
ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத
அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.
பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.
அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல
ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல,
‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன்,
கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, ஸ்ரீ யதொக்தகாரி பெருமானிடம்-
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்–என்று பாடினார்.
பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு,
அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன்,
தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.
ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.–என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.
ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி செய்தமையால்,
பெருமானுக்கு “ஸ்ரீ சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.
ஸ்ரீ திருக்குடந்தையில் ஸ்ரீ திருமழிசையாழ்வார்
ஸ்ரீ கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.
அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.
இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.
ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.
”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்“
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.
ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.
யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை.
இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-
அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே
பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.
ஸ்ரீ ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)
இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஸ்ரீ ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க,
பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.
இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.
பிறப் பெயர்கள்
ஸ்ரீ பக்திசாரர்
ஸ்ரீ உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
ஸ்ரீ திருமழிசைபிரான்
இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார்.
அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது
———–
ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம்,
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.
மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான ஸ்ரீ கருடனின் அம்சமாக அவதரித்தார்.
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்
அதற்கு ஸ்ரீ நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.
பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீ நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.
இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.
செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,
பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.
தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு,
பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.
ஸ்ரீ மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.
அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணி கொண்டு ஸ்ரீ மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று
ஸ்ரீ நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.
“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார்,
திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”
என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.
அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,
விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.
பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)
என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது.
நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக
நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.
ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே
இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரே பாடலை எழுதினர்.
இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி
அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.
ஸ்ரீ மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்.
அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்,
பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும்.
ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில் இருந்து தவறினால்,
சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால்,
அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.
—————-
ஸ்ரீ நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீ திருக்குறுங்குடி (ஸ்ரீ ஆழ்வார் திருநகரி) என்னும் ஊரில் அவதரித்தார்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஆழ்வார்களுக்கு தலைவராய் கொண்டாடப்படுபவர். அவர் அவயவி என்றுப் போற்றப்படுவர்.
அதாவது, மற்றைய ஆழ்வார்களை உடலாக எடுத்துக்கொண்டால், நம்மாழ்வார் அவர்களுக்கு ஆத்மா அவர்.
மாதம் – வைகாசி
நட்சத்திரம் – விசாகம்
திவ்வியப்பிரபந்தம் – திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி.
காரியார், உடையநங்கை ஆகியோருக்கு இன்றைய கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவண்பரிசாரத்தில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் அவர்கள் ஸ்ரீ திருக்குறுங்குடி திரும்பினர். தங்களுக்கு குழந்தை வேண்டி இருவரும் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியிடத்தில் பிரார்த்திக்க,
அவரும் அர்ச்சகர் முகமா “நாமே வந்து அவதரிக்கிறோம்” என்று சொன்னார்.
அவ்வாறே விஷ்வக்சேனர் அம்சமாக வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், பௌர்ணமி திதியில், விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார்.
அவருக்கு துணையாக ஆதிசேஷனும் திருப்புளி ஆழ்வாராக(புளிய மரம்) அவதரித்தார்.பொலிந்து நின்ற பிரான் சன்னதி
குழந்தையை எடுத்துச்சென்று மாறன் என்றுப் பெயரிட்டனர். பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால்
பெற்றோர் இவருக்கு “மாறன்” என்றுப் பெயரிட்டனர்.
மாறன் கோயிலில் உள்ள புளியமரத்தில் சென்று அமர்ந்துவிட்டார். யாரிடமும் பேசாமல், எதுவும் உண்ணாமல்,
கண்களை மூடிக்கொண்டு த்யானத்தில் 16 வருடம் இருந்தார். பின்னர் மதுரகவி ஆழ்வார் வந்தபின் தான் நம்மாழ்வார் கண் திறந்தார்.
கலி பிறந்த 43வது நாளில் அவதரித்தவர்.
நம்மாழ்வார் வடமொழி வேதங்களை தமிழ் படுத்தியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று போற்றபடுகிறார்.
அவர் பாடியப் பாசுரங்களில், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முறையே
ரிக், யஜுர், அதர்வண,சாமவேத சாரங்களாகும்.
திருவாய்மொழி – 1102 பாசுரங்கள்
திருவிருத்தம் – 100 பாசுரங்கள்
திருவாசிரியம் – 7 பாசுரங்கள்
பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள்
கம்பர் திருவரங்கத்தில் கம்பராமாயணத்தை அரங்கேற்ற சென்ற போது, அரங்கநாதன் “நம்மாழ்வாரை பாடினியோ”
என்று கேட்க கம்பர் நம்மாழ்வாரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டே “சடகோபர் அந்தாதி” இயற்றினார் .
பாடிய திவ்யதேசங்கள்
ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய திவ்ய தேசங்கள் மொத்தம் 37
திருவரங்கம்
திருப்பேர்நகர்
திருக்குடந்தை
திருவிண்ணகர்
திருக்கண்ணபுரம்
திருத்தஞ்சை மாமணிக்கோயில்
திருவெக்கா
திருவயோத்தி
திருவடமதுரை
திருத்வாரகை
திருவேங்கடம்
திருநாவாய்
திருக்காட்கரை
திருமூழிக்களம்
திருவல்லவாழ்
திருக்கடித்தானம்
திருசெங்க்குன்றூர்
திருப்புலியூர்
திருவாறன்வினை
திருவண்வண்டூர்
திருவனந்தபுரம்
திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
திருக்குறுங்குடி
திருச்சிரீவரமங்கை
திருவைகுண்டம்
திருவரகுணமங்கை
திருப்புளிங்குடி
திருத்தொலைவில்லிமங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
தென்திருப்பேரை
திருக்குருகூர்
திருமாலிரும்சோலை
திருமோகூர்
திருப்பாற்கடல்
திருப்பரமபதம்
பிற பெயர்கள் –கீழ் உள்ளவை, நம்மாழ்வாரின் பிற பெயர்கள்.
சடகோபன்
மாறன்
காரிமாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப்பிரான்
குருகூர் நம்பி
திருவாய்மொழி பெருமாள்
பெருநல்துறைவன்
குமரி துறைவன்
பவரோக பண்டிதன்
முனி வேந்து
பரப்ரம்ம யோகி
நாவலன் பெருமாள்
ஞான தேசிகன்
ஞான பிரான்
தொண்டர் பிரான்
நாவீரர்
திருநாவீறு உடையபிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய் ஞானக் கவி
தெய்வ ஞானக் கவி
தெய்வ ஞான செம்மல்
நாவலர் பெருமாள்
பாவலர் தம்பிரான்
வினவாது உணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீவைணவக் குலபதி
பிரபன்ன ஜன கூடஸ்தர்
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.