“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.
கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத் பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத் பரத்தையே இவர் கைவேல்.
திரு மந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.
3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவது போல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.
4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரி யோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.
அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.
———-
பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன திருக் காவேரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்- ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும்
ஆதிரங்கம், மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம் என ஐந்தும் பஞ்சரங்கதலங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒன்று கர்நாடகாவிலும் மற்ற நான்கும் தமிழ்நாட்டிலும் உள்ளன.
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம் – சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர்,மாயவரம் (தமிழ்நாடு)
ஆதிரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டணம்
காவிரிநதியின் முதல் தீவு கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உருவாகிறது.
இங்கு அரங்கநாதருக்கு மாலையிட்டது போல, காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது.
எனவே இது ஆதிரங்கம் எனப்படுகிறது
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது
அரங்கநாதசுவாமி கோவில். சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார்.
பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார்.
பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார்.
இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நதி மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் சிவசமுத்திரம் ஆகும்.
இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவில் மத்தியரங்கம் என்று ஒரு சிலரால் அழைக்கப்படுகிறது.
மத்தியரங்கம்

அரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்
தமிழ்நாட்டில் காவிரி நதி திருச்சிராப்பள்ளி அருகே மீண்டும் இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும்.
இது மத்தியரங்கம் என்று பெயர் பெறுகிறது
சிலர் இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் காவேரிக் கரையில் அமைந்த, பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று.
ஸ்ரீரங்கம் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம்.
இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்.
அப்பாலரங்கம்

அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) கோவில், திருப்பேர்நகர் என்ற கோவிலடி
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றாகவும், பஞ்சரங்க தலங்ளில் அப்பாலரங்கம் என்று சொல்லப்படும்
திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் கொள்ளிடம் இரண்டாகப் பிரியுமிடத்தில்
இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில்,
கொள்ளிடத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ள இந்த தலத்திற்கு திருச்சியிலிருந்து (25 கி.மீ.) கல்லணை சென்று அங்கிருந்து கோவிலடி செல்லவேண்டும்.
இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம்
ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.
உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று.
இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார்.
பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும்,
உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.
தாயாரின் திருப்பெயர்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி என்பனவாகும்.
சதுர்த்தரங்கம்

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம்
பெருமாளின் 108 திருப்பதிகளுள் (உபய பிரதான திவ்யதேசம்) ஒன்றாகவும்,
பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில்,
காவிரி நதி – காவிரி, அரசலாறு என்று – இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது.
தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன.
பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார்
இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.
திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்-
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது.
வேத சக்ர விமானத்தின் கீழ் பரிமள ரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் யமதர்ம ராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாயாரின் திருப் பெயர் பரிமள ரங்கநாயகி ஆகும்.
சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் திரு இந்தளூர் எனப் பெயர் பெற்றது.
————
பஞ்ச சயன ரங்கம்
“பஞ்ச“ என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள்.
இந்த “பஞ்ச“ என்ற ஐந்தின் சிறப்பினை நாம் பஞ்சமேயில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்.
பஞ்ச நிலைகள் ..பகவான் பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகளில் அர்ச்சிக்கப்படுபவன்.
பாஞ்சராத்ரம்..பகவானை ஆராதிக்கும் ஒரு வழிமுறை. ஐந்து ராத்ரிகளில் ஐந்து முனிவர்களுக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஒரு சிறந்த வழிப்பாட்டு முறை.
பஞ்ச சம்ஸ்காரம்,இது ஒவ்வொரு வைணவருக்கும் கட்டாயம் அமைய வேண்டிய “நல்வினை சடங்கு“. (1)தாப ஸம்ஸ்காரம் (2) புண்ட்ர ஸம்ஸ்காரம் (3) நாம ஸம்ஸ்காரம் (4) மந்த்ர ஸம்ஸ்காரம் (5) யாக ஸம்ஸ்காரம் என்ற ஐந்து நிலைகளையும் குருவிடமிருந்து ஒரே சமயத்தில் பெறுதல்.
பஞ்சாங்கம்..பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:
- வாரம் 2.திதி3.கரணம் 4-நட்சத்திரம்,5.யோகம் என்பனவாகும்.
பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் என பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம். சாத்திரப்படி சரீரத்திற்கும், இதர பொருட்கள் சுத்திக்கும் இன்றியமையாதது.
பஞ்சாம்ருதம் பகவானுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்தப்படும் ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவை.
தீபத்திலும் பஞ்ச முக விளக்கு பஞ்ச முக தீபம் முதலியன சிறந்தனவாம்.
இது வரை பகவானோடு தொடர்புடைய சில ஐந்தின் சிறப்பினைப் பார்த்தோம்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐந்து என்ற எண் புதன் கிரகத்திற்குரியது. இந்த புதனின் அதிதேவதை விஷ்ணு அதாவது ஸ்ரீரங்கநாதனே..!. புதன் நன்கு அமையப் பெற்றவர்
அதிபுத்திசாலிகள். கணிதத் திறமை, கணினித் திறமை, கலைத்திறன் வாய்ந்தவர்கள்.ஆக்கப்பூர்வமானவர்கள்….!
ஐந்து என்ற எண் இயக்க சக்தி..! காலில் மற்றும் கைகளில் உள்ள ஐந்து விரல்களின் இயக்கத்தினால் தான் ஒரு செயலை தடையின்றி செய்ய முடிகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வலிமைக் குன்றியவர்கள், மற்றும் நம்முடைய ஜாதகரீதியாக
புதன் மேலும் வலிமைப் பெற ஸ்ரீரெங்கநாதனை வணங்குபவர்கள் நீங்கப் பெறுவர்.
சயனம்‘சயனம்’ என்றால் ‘நித்திரை’ அல்லது ‘உறங்குதல்’ என்று பொருள். இது ஒரு தற்காலிக விடுதலை..! இது ஒரு வரப்பிரஸாதம்..! இது சரிவர அமையப்பெறாதவர் அனைவரும் துர்பாக்கியசாலிகளே..! இது ஜாதகத்தின் 12ம் இடமாகும். இந்த இடம் கெட்டிருந்தால் அந்த ஜாதகரின் நிம்மதியான நித்திரை என்பது சந்தேகமே..!சயனம் கொண்டிருக்கும் பகவானை அனுதினமும் ஸேவிக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்..! நிம்மதியாக வாழ்வர்..!
பஞ்ச சயன ரங்கம்
ரங்கம் என்றால் அரங்கம். இந்த அரங்கமானது பாம்பணையின் மிருதுவான பள்ளிக்கட்டிலின் மேல்பரப்பு. இங்கு பள்ளிக்கொண்டு உறங்குபவன் அரங்கன். அரங்கன் என்றாலே அழகு..! இதனை நான் சொல்லவில்லை..! ஆண்டாளின் திருவாயினால் கேட்போம்..! ஆண்டாளுக்கு 108 திவ்யதேச எம்பெருமான்களில் அரங்கனின் அழகுமட்டுமே நெஞ்சைக்கவர்கிறது…!
எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரேஎன்று பாடுகிறாள்.
01.ஸ்ரீரங்கம்.
வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!
வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..!
எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..! அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை.
ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால் தான் வைணவத்திற்கு சிறப்பு..!
இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..!
அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!
இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.
ஸ்வாமி ஸ்ரீதேசிகர்
“அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம்.
தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில்.
வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..!
செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.
இங்கே பெருமாள் “புஜங்க சயனம்” –
விமானம் ப்ரணவாக்ருதி விமானம்.
தாயார் – ஸ்ரீரெங்கநாயகி.
எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் – ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்….“ என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர்.
இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள். இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!
இங்குள்ள தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி தீர்த்தம்.
தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம்.
இந்த அரங்கன் தர்வவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.
இன்னமும் மெய்யன்போடு இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன்.
தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள்.
இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது.
அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..! உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..! அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு
——–
02. உத்தமர் கோவில்
பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.
ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட ஸ்தலம் –
ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.
ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹா லக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.
இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.
தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம் தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?
கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.
கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.
இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.
விமானம் உத்யோக விமானம்.
தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.
ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ
மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்
ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த ஸ்தலம்.
பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும்
———–
03. கோபுரப்பட்டி
வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.
இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.
அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் – இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.
வைணவம் காத்த ஊர் – வைணவம் வளர்த்த ஊர்.
ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.
பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்
தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்
சயனம் பால சயனம்
தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.
அர்ச்சகரின் அலைபேசி எண் +91 98655 56504.
வழி மண்ணச்சநல்லுார் – அழகிய மணவாளம் – கோபுரப்பட்டி
வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:
வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:
வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:
வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!
யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!. வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!. அவரே பரமஞானம்! கடும்தவமும் அவரை அறிவதற்கே!
மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..! எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..! வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!
03. திருஅன்பில்
கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்’ என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிக்கலாம்
அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் ‘தவளை’ என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு ‘மண்டூக மகரிஷி’ என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ”மண்டூக புஷ்கரிணி’ என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.
வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.
திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.
பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)
தாயார் : அழகிய வல்லித் தாயார்
விமானம் : தாரக விமானம்
சயனம் : புஜங்க சயனம..
05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி
பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது. அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.
‘இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!’ – நம்மாழ்வார் திருவாய்மொழி
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
“இருப்பேன்” அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!” – நம்மாழ்வார் திருவாய்மொழி
பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், ‘திருப்பேர்நகர்’ என்று பெயர்க்காரணம் . நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “…அமுதுண்டு களித்தேனே…“ என்கின்றார். ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம். நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம். நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மோக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்! சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில் இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது! நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேரேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!. நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்! எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்! இந்த பெருமாள், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.
மேற்கு நோக்கி சயனம். தாயார் கமலவல்லித் தாயார். விமானம் – இந்திரவிமானம்.
தீர்த்தம் காவிரி.
இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார். எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார். காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!
—————
பஞ்ச ராமர் தலங்கள் – பஞ்ச ராமர் சேத்தரங்கள் என்றும் அழைக்கின்றனர்.
இத் தலங்கள் அனைத்தும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளன.
இவை முடிகொண்டான், அதம்பார், பருத்தியூர், தில்லைவிளாகம், வடுவூர் ஆகிய இடங்களில் உள்ளன.
முடிகொண்டான் ராமர் கோயில்
அதம்பார் கோதண்டராமர் கோயில்
பருத்தியூர் ராமர் கோயில்
தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் கோயில்
வடுவூர் கோதண்டராமர் கோயில்
உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.
இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.
இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை.
அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும்.
இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.
அருள்மிகு தில்லை விளாகம் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.
அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.
1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
நடராஜருக்கும் இந்தக் கோவிலில் சந்நிதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.
இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.
அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்குப் புறப்படத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர்.
இராமர் தன் உருவத்தை சிலையாகச் செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், “இராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,”என்றனர்.
சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையைத் தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையைக் கொடுத்துவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.
தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜா தலைஞாயிறு எனும் இடத்தில், அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாகக் கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான இராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டை செய்தார்.
இந்த வடுவூர் இராமர் பேரழகு. பிராகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.
அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம்.
அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர்.
தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவுகள் செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை.
ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.
தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார்.
இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது.
இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.
அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம்.
அருள்மிகு முடிகொண்டான் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான்.
ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் இராமர், சீதை, லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார்.
இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சனேயர் இல்லை. இராமரின் வருகை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சனேயர் சென்று விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்க பரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் இராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம்.
ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சந்நிதி உள்ளது. பரத்வாஜர் இராமனுக்கு முடிசூடியதைப் பார்க்காததால் அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சந்நிதி உள்ளது. இந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.
சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.
அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம்
அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார் கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாடகச்சேரி, என்ற சிறிய கிராமங்கள் இராமாயணத்துடன் தொடர்புடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்த இடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமாங்குடி, தன் பாத அணிகலன்களை சீதை கழற்றிய அடையாளம் காட்டிய இடம் பாடகச்சேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனைக் கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் இராமர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சனேயர், மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜப் பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் இராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.
புத்திர் பலம் – அறிவில் வலிமை
யசோ – புகழ்
தைர்யம் – துணிவு(பொறுமை)
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா – நோயின்மை
அஜாட்யம் – ஊக்கம்
வாக் படுத்வம் – பேச்சு வலிமை
ச – இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால்
பவேத் – பிறக்கின்றன.
அஷ்ட ஸித்திகளும் கிட்டுமே
அறிவுக் கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத் திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன.
————
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்
திருக்கண்ணபுரம் நீலமேகப்பெருமாள் கோயில்
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில்
கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை.
கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார்.
சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.
கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.
இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.
108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது.
ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது.
திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.
இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது.
திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.
திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.
இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.
வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும்.
இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.
பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை
இவ்விடம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து 15 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருகண்ணமங்கைஆண்டான் வாழ்ந்து வழிபாடு நடத்திய இடம். ஆதலால் அவருடைய பெயரால் திருகண்ணமங்கை என்று அழைக்கப்படுகிறது.
பாற்கடலில் இருந்து தோன்றிய திருமகள் திருமாலை நோக்கி தவம் இருந்து அவரை கணவராக அடைந்த தலம். திருமகளாகிய லட்சுமி வழிபட்ட இடம் ஆதலால் லட்சுமி வனம் என்று அழைக்கப்படுகிறது.
திருமால் பாற்கடலை விட்டு வெளியே இத்தலத்திற்கு வந்து திருமகளை மணம் புரிந்ததால் பெரும்புறக்கடல் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
திருமால், திருமகள் திருமணம் நடைபெற்ற இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இறைவனின் திருமணத்தை காண தேவர்கள் தேனீக்கள் வடிவில் இத்தலத்திற்கு வந்தனர். நித்தமும் திருமணக்கோலத்தைக் காணும் பொருட்டு தேனீக்கள் வடிவில் இத்தலத்தில் இன்றும் தங்கியுள்ளனர் என்பது இத்தல சிறப்பாகும். இத்தலத்தில் ஓர் இரவு தங்கி வழிபட மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் திருமால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு விரைந்து வருதால் இவர் பத்தராவி என்றுஅழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்த உடனே சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்தீர்த்தம் தர்ஷன புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இத்தலம் 16-வது திவ்ய தேசமாகும்.
இங்கு திருமால் பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணமங்கை நாயகி, அபிசேகவல்லி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
திருமணத்தடை உள்ளவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், நல்ல காரியம் நடக்க வேண்டுபவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் இத்தலஇறைவன் அருளுவார்.
வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
கஜேந்திர வரதப்பெருமாள், கபிஸ்தலம்
இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
திருமால் கருணையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியான கஜேந்திர மோட்சம் இத்தலத்தில் நிகழ்ந்தது. ஆஞ்சநேயருக்கு அருள் வழங்கிய தலமாதலால் இது கபிஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
துர்வாசரின் சாபத்தால் இந்திரஜ்யும்னன் என்ற திருமால் பக்தன் காட்டு யானைகளின் தலைவனான கஜேந்திரனாகப் பிறந்தான். எனினும் திருமாலின் மீது கொண்ட பற்றினால் தினமும் தாமரை கொண்டு வழிபட்டு வந்தான்.
அகத்தியரின் சாபத்தால் கூஹூ என்ற அசுரன் முதலையாக குளத்தில் வசித்தான். ஒருநாள் திருமால் வழிபாட்டிற்காக தாமரையை மலரை எடுக்க கஜேந்திரன் யானை கூஹூ அசுரன் இருந்த குளத்தில் இறக்கினான்.
கஜேந்திரன் யானையின் காலை கூஹூ முதலை பற்றி இழுத்தது. கஜேந்திரன் யானை வலியால் “ஆதிமூலமே காப்பாற்று” என்று கதறியது.
திருமாலும் விரைந்து வந்து சக்ராயுதத்தால் கூஹூவை வதம் செய்து கஜேந்திரனைக் காப்பாற்றி இருவருக்கும் மோட்சம் அளித்தார்.
இங்கு திருமால் கஜேந்திர வரதப் பெருமாள், ஆதிமூலப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 9-வது திவ்ய தேசமாகும்.
ஆடி பௌர்ணமியில் இங்கு கஜேந்திர மோட்ச லீலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தல பெருமாளை உள்ளன்புடன் “ஆதிமூலமே” என்று அழைத்தால் திருமால் விரைந்து நம்மைக் காப்பார் என்று கூறப்படுகிறது. நோய், கடன், வறுமை ஆகியவற்றை இத்தல இறைவனை வழிபட நீங்கும்.
உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்
இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம்.
இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார்.
இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.
பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.
—————–
காயாம் பூ அரணங்கள்
“ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம் கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க் காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப் பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக் காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!
கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது
கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப் போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) “ஆதி மூலமே” எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். “ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்” எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.
கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். “கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்” என்பது திருமங்கையாரின் வாக்கு.
கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.
கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,”நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்” என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.
ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், “ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக” என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.
காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,”வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு” என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.
திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. “வையம் தகளியாய்” என்று பொய்கையாரும், “அன்பே தகளியாய்” என்று பூதத்தாரும், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.
காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.
——————
மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1) மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2) மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில் செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க, செழுங் கோயில் அரையர்(4) வந்து
“எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை எங்கள் முனம் பொய்யா ன..தோ?”(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!
சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், “நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?” என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.
1. கீழ்வீடு – 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் – மால்மேகன்
2. வளநாடன் – சோழன்
3. சென்னி – பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் – திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. “பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?” என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் – கைத்தாளம்
7. திகிரி – சக்கரம்.
—————
வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள் புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும் புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில் நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை, நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!
புரைதல் – ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் – ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி – கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.
இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கைப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,”எங்கள் மாப்பிள்ளை” என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.
———-
“பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும், செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச் செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம் மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய், வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் கண்ணபுரச் செளரி ராசா!
தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, “ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது” என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,”பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்” என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் “அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது” என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத் தான் திருமஞ்சனம் செய்வார்கள்.
————
தமிழ்நாட்டின் மாயவரம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.
திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். அவர் கள்ளர் எனும் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர்.
சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் உண்மையில் யார்?
சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்குறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.
அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால் ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது. அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர். அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள்.
திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது. அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார்.
அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள் தலை மீது தெளிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.
திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத் தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார்.
திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார். அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே. ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார். அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.
திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது. அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அவை உள்ள இடங்கள்:
- குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
- மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
- திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
- திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
- திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்
(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.
(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.
(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.
(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார். இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.
——————
திருக்குருகூர் பஞ்ச க்ஷேத்ரம் என்பர்
குருகு -பறவை சங்கு -சங்கன் வழி பட்ட துறை சங்கணித்துறை -தீர்த்த க்ஷேத்ரம்
குரு -க -அத்ர -மதர்சனம் -நான்முகன் வழி பட்ட -பிரளயம் பின்பு முதலில் தோன்றிய க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம்
சாளக்ராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இகழ -ஆச்சார்யர் சாபத்தால்
தாந்தன் என்ற இழி பிறப்பில் புல் வெட்டி ஜீவனம் செய்பவனாக
முன் செய்த புண்ய பலத்தால் இங்கே பிறக்க வடகரையில் இருந்து ஆதிநாதரை வழி பட்டு வீடு பேறு பெற்றதால் தாந்த க்ஷேத்ரம்
அர்த்த மண்டபத்தில் முதல் படிக்கட்டில் தான்தான் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
அவன் புல் வெட்டி ஜீவனம் செய்த ஸ்தலம் அப்பன் கோயில் -ஆழ்வார் அவதாரம் -இதுவே செம் பொன் மாடத் திரு குருகூர் என்பர்
வராஹ மூர்த்தி முனிவர்களுக்கு தர்சனம் கொடுத்ததால் -இங்கு ஞானப்பிரான் சந்நிதி -வராஹ க்ஷேத்ரம்
திருப்புளி ஆழ்வார் -சேஷ க்ஷேத்ரம்
ஆக -தீர்த்த க்ஷேத்ரம்-ஆதி க்ஷேத்ரம்-தாந்த க்ஷேத்ரம்-வராஹ க்ஷேத்ரம்-சேஷ க்ஷேத்ரம்-பஞ்ச க்ஷேத்ரம் இது
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –