“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
முதல் பாசுரம் – ஆண்டாள் பஞ்ச நாராயண பிரதிஷ்டை :
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில்
எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு
1-தலக்காடு கீர்த்தி நாராயணன்
2-தொண்டனூர் நம்பி நாராயணன்
3-மேலகோட்டை திரு நாராயணன்
4-பேலூர் கேசவ நாராயணன்
5-கடக வீர நாராயணன்
என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.
கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில்
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்
3-கார்மேனி நாராயணன்
4-செங்கண் நாராயணன்
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்
ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள் என்பதை யுக்தி ரசத்தோடு பார்க்கலாம்.
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்–
திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்
தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி ,
கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால்,
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர் கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும்,
நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு
ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –
என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.
கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது
முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு –
ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.
3-கார் மேனி நாராயணன் –
என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற
வர்ஷாகால மேகத்தைப்போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று.
நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை –
செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல –
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும்,
மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்யகுணத்தையும் சொல்லிற்று எனலாம்.
4-செங்கண் நாராயணன் –
என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.
மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும்
இறே இவனுக்கு நிரூபணங்கள்.
இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –
என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.
அப்படிப்பட்ட நாராயணனே
மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும்
பிரேமம் கனக்க உண்டான நமக்கே
ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.
———-
4. ஊழி முதல்வன் –
பொன்னை மெழுகொற்றி தேற்றுமா போலேயாய்
தன்னைக் கொடு தரணி எல்லாமும் — முன்னை போல்
தான் தோற்று மஃது சம நோக்கே! ஊன் உயிர்
கண் ஏற்றல் ஆம் தனி நோக்கு.
நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி
நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.
———–
5. தூயோமாய் வந்து தூய பெருநீர் தூமலர் தூய் :
தன் கை கால் மெய் வாயும் கொடு அளைந்த காளிந்தி
போன் கரணம் மூன்றும் கொடு கண்ணன் — தன் நினைவால்
எண்ணம் மொழி செய்கை ஒன்றிச் செய் கிரியை
வண்ணம் அழகிய பூ நாறு.
———-
6. பிள்ளாய் :
கற்றதன்றி உற்றத வன்னடியார்க் காள் எற்றோ ?
பெற்ற பரமன் நமை உடைத்தாய் — மற்றையார்
விற்கவும் பாற்றென போக்க இசைந்தது
ஏற்கை நம என்பார் சாற்று.
—-
7. கலந்து பேசின பேச்சரவம் :
வதரிவான் வைகுந்தம் பார்த்தன் தேர் முன்னாய்
கதிரொளி மால் கண்ணன் கேசவனன் — றோதிய
மெய்மைப் பெரு வார்த்தை ஒவ்வொன்றும்
மால் மாறன் வாய் மொழிக் குள்ளாதல் கொள்ளு.
———–
8. வந்து நின்றோம் :
காசை இழந்தவன் பொன்னை இழந்தவன்
ஆசை மணியை இழந்தவன் — பேச நின்ற
மால் நிற்க பத்தர் பரவுவார், வீடணன் போல்
கோல் கொழுந்த தற்றே அவர்.
———–
9. பாகவத ஸம்பந்தம் ஸ்வதந்திரோபாயம்:
இருகால் விலங்கு இறகுடை பட்சி
ஒருகால் திருமால் அடியார் — அருள் நோக்
கிலக்கதேல் ஞான மநுட்டான மில்லா
நிலையரேனும் சேரும்மால் வீடு.
———-
9. மாமான் மகளே :உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தொடங்கி
உனக்கும் உனதடிய ராவார் — தமக்குமாய்பின்
மாலே! உனதடியார் பாலேயாய் கோலுமது
ஏலுவதும் என் கொல் குறிப்பு?
ஆசார்ய ருசி பரிகிருஹீத பகவத் சேஷத்வத்திலே இழிந்தவாரே பகவத் பாகவத கைங்கர்யமாகிற
ஈர் அரசு படுதல் தேட்டமேலும் அதுக்கு எல்லை நிலமான ததீயத்வேக சேஷனாகை எம் பிரார்க்கு இனியவாறே.
——-
10. ஆற்ற அனந்தல் :
ஆறும் அடைவும் அவன் தாள் எனவாகக்
கூறும் நினைவும் உறுதியும் — பேறெனத்
தேறி அதன் வழி வாழு நற் சோம்பர்
உறவும் முறையும் விழைவு.
———
11. பொற் கொடி :
தனக்கும் பிறர்க்குமாய் அன்றி உறவு
எனக்கு நீயே அன்றோ? எனவாய் — புனக்காயா
மேனி புனிதன் புணர்தியில் ஆம் உணர்த்திக்
கான கூட்டு மாலடியார் மாட்டு.
———
12. மனத்துக்கினியானை அனைத்தில்லத்தாரும் அறிந்து :
பெண்ணுக்கும், பேதைக்கும் ஞான பக்தி கார்மிகர்க்கும்
நண்ணித் தொழுவார்க்கும் நண்ணல் — விழையார்க்கும்
அண்ணல் இராமா நுசனை இராமனும் போல்
எண்ண இனிக்கும் உளம்.
மண்டோதரி, தாரை, சூர்பணகை ஆகிய பெண்களின் மனத்துக்கு இனியர் பெருமாள் .
திரிபுராதேவி, கொங்கில் பிராட்டி, திருக்கோளூர் பெண்பிள்ளை ஆகிய பெண்சிஷ்யைகள் மனத்துக்கு இனியர் ராமாநுசர்.
பேதையர்களான வானர ஜாதிக்கும், பட்சி ஜாதியான ஜடாயுவுக்கும், திர்யக்கான அணிலுக்கும் மனத்துக்கு இனியர் பெருமாள்.
பேதையான ஒரு ஊமையின் தலையில் தன் திருவடி ஸ்பர்சம் செய்வித்து இனியரானார் ராமாநுசர்.
சத்யேந லோகாந் ஜயதி, தானேந தீன : என்று சகல மநுஜ மனோஹாரி பெருமாள்.
ஞானிகளை ஶ்ரீபாஷ்யம் கொண்டும், பக்தர்களை சரணாகதி சாஸ்திரம் கொண்டும்,
அநுஷ்டான பிரதராய் கர்ம யோகிகளுக்கும் ஸ்வஜன பிரியர் ராமாநுசர்.
அன்னு சராசரங்களை வைகுந்தத்து ஏத்தி என்று சாமான்யர்களுக்கு இனியர் பெருமாள்.
ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று வரம்பறுத்த பெருமாளாய் ஜகதாசார்யர் ஆனார் ராமாநுசர்.
சத்ரு சைன்ய பிரதாபர் என்கிற விருது பெற்ற பெருமாள் ராவண, மாரீசாதிகளின் புகழ்சிக்கு விஷயமானவர் பெருமாள்.
அப்பொழுது ஒரு சிந்தை செய்து- யாதவ பரகாசன், யஞ்ஞ மூர்த்தி போன்ற பரபக்ஷ வாதிகளை சிஷ்ய பிரந்தமாக்கிய மனத்துக்கு இனியர் ராமாநுசர்.
இப்படி அனைத்து கொத்துக்கும் இனிய நற்செல்வன் ராமாநுசர்.
அவர் தங்கையான ஆண்டாள் கோயில் அண்ணர் பிரபாவம் பேசினபடி இது.
———-
13. கீர்த்திமை பாடிப் போய் :
ஆறும் பயனுமாய் தேறாது பாடிப்போம்
பேறு அதுவேயாய் கந்தல் — கழிந்தமை
கூறு மொரு நாலும் மூன்றும் இரண்டும் வான்
ஏற பரமனைப் போய்ப் பாடு.
அறம், பொருள், இன்பம், வீடு என்கிற புருஷார்த்த சதுஷ்டய கோஷ்டிக்கும்;
அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு , ஞானிகளாகிய கோஷ்டி திரயத்துக்கும்;
முனிவர்களும், யோகிகளுமாகிற நித்ய, முக்த உபய கோஷ்டிக்கும்;
உண்ணும் சோறு பருகு நீர் எல்லாம் கண்ணன் – என்று ஆழ்வாருக்கு
திருக்கோளூர் எம்பெருமானும் என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினானான் என்று
காட்கரையப்பனுக்கு ஆழ்வாருமாக அனன்ய சாபீஷ்ட்டா கோஷ்டிக்கும் உத்தேஸ்யம் இதுவேயாய்
இங்குத்தையார்க்கு பகவத் ஸன்னதிக்கு (திருப்பாவை ) பாடிப் போகையே பிரயோஜனம்.
அங்குத்தையார்க்கு பகவத் முக்கோலாசகர கைங்கர்யனுவர்தனமாகிற – போய்ப் (சாமகாயம்) பாடுகையே பிரயோஜனம்.
—————
16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.
பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும்,
உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.
விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ – நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.
மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.
தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற
ஆழ்வார் ஆசார்யர்கள் கைக் கொள்ளாத உபதேசங்களை கழித்து,
எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.
இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித் தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.
நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே
சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .
தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.
நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.
—————
17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம் கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் — அம்மனோய்!
செம்மை சேர் நற் தருமம் என்றாக செய்த வேள்வி
தன்மையார் நற் பேறும் அஃது.
வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?
என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே
அவனை அடைகை உத்தேச்யம்.
அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.
ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய்,
தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.
ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான் எம்பெருமான் என்பது
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது – என்பதிலிருந்து தெரிகிறது.
அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை
தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும்
காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு – அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
ஆந்ரு ஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக் கழஞ்சு பெறும் .
ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் – செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே,
சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று.
பகவத் ப்ரீதிகாரித்த முகோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆந்ரு ஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,
புருஷ தர்மம்
புத்ர தர்மம் –ஆகிய
சாமான்ய
விசேஷ தர
விசேஷ தம
தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே அனுஷ்டித்துப்
போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப் பாசுர ஸ்வாபதேசம்.
——–
17. எம்பெருமான் நந்த கோபாலன் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர் தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் — எள்ளி நமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழு கொம்பாய்
வள்ளி மேய பந்தல் கிடத்து.
——-
உந்து மத களிற்றன் பாசுரம் பிராட்டியின் புருஷகார வைபவம் சொல்ல வந்தது.
நாயகனாய் நின்ற பாசுரத்தில் துவார சேஷிகளின் அனுமதியை பெறுவதன் மூலம் ஸ்தாநீகர்களை முன்னிட்டார்களாய் ,
பின் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, நம்பி மூத்த பிரான் இவர்களை
வேதம் வல்லார்கள் என்ற கணக்கிலே அவர்களையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை துயிலெழுப்ப பார்க்க,
அது பிராட்டி புருஷகார வனந்தரம் மாகவேண்டி, அவனும் வாளா கிடந்தான் .
தூதோஹம் என்று சொன்ன திருவடி, பிராட்டி தரிசனவனந்தரம் தாசோஹம் என்றதும்
அவள் ராவணன் விஷயமாக செய்த மித்ர ஒளபயிதம் கர்த்தும் ஸ்தாநம் பரீப்ஸதா என்கிற உபதேசங்கள்
அவனுக்கு பலித்ததாக கண்டில்லையாயினும் –
கண்ணனெம்பெருமான் தேர்த்தட்டில் சொன்ன வார்த்தை அருச்சனர்க்கு பலிக்காமல் –
மாயன் உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு (நான்முகன் திருவந்தாதி-50) என்று திருமழிசை ஆழ்வாருக்கு
எப்படி காரியகரமாயித்தோ –
அதுபோல ஹநூமானுக்கு சேஷத்வ ஸ்வரூபத்தை உண்டாக்கி
பரீஷ்வங்கோ ஹநூமத : என்று ராம ஆலிங்கன பல பர்யந்தமாயிற்று.
பிராட்டி சன்னதியாலே காகம் தலை பெற்றது. அதில்லாமையால் ராவணன் மாண்டான் – இத்யாதி
பிரபத்தி தர்மங்களை மீறியதான தங்கள் தவற்றை ஆண்டாளும் கோபியர்களும் உணர்ந்து ,
கிருஷ்ணாவதாரத்தில் புருஷகார பூதையாக விளங்குகிற நப்பின்னை பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள் இதில்.
இப்படி இந்த மூன்று பாசுரங்களுக்குமான சங்கதி அமைத்திருக்க, மூன்றிலுமே நந்த கோபனை பிரஸ்தாபித்தாளாய்
நாயகனாய் நின்ற நந்த கோபன் (16)
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலன் (17)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் (18)
என்பதாக அழைக்கிறாள் ஆண்டாள்.
எம்பெருமான் கண்ணன் வகுத்த சேஷியாய் இருக்க, நந்த கோபனை எம்பெருமான் என்றது,
பகவத் சமாஸ்ரயண சாலியான ஆசார்ய கிருதயத்தைக் பண்ணுவிப்பதைக் கொண்டு.
தேவு மற்று அறியேன் என்று இருக்கிற மதுரகவி, வடுக நம்பி நிலையில் நின்றவர்களுக்கு ஆச்சர்யனே பிரதம சேஷி அன்றோ?
நந்தன் என்றால் ஆனந்த வர்த்தகன். பகவத் குணானுபவ கைங்கர்யங்களில் எப்போதும் ஆழ்ந்தவர்களுக்கு
ஆனந்தத்தில் குறைவு இல்லையாய் நந்திதர் ஆவர் இவர்.
கோபன் ரக்ஷகன். தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய ஆத்ம க்ஷேமத்தில் ஊன்றி இருப்பவராய்,
மங்களாஸாசனத்துக்கு அவர்களை ஆளாக்கும் இவருக்கு ரக்ஷகத்வம் ஸ்வாபாவிகம்.
அடுத்து , அம்பரமே, தண்ணீரே,சோறே அறம் செய்யும் நந்த கோபாலன் என்றது
அஹமன்னம் அஹமன்னம் என்பதான ஆத்ம வஸ்துவை சோறாக பகவானுக்கு சமைக்குமவர். அப்படி
எனக்காராவமுதாய் எந்தவியை இன்னுயிரை
மணக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
என்று போக்கிய உண்ணும்போது விக்கித் தடுமாறினால் தண்ணீர் குடிப்பது போல, பிராப்பியத்திலே வந்தால்,
என்னுடைய ஆனந்தத்துக்காக என்கிற ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குமவர்.
உண்டு பசியாறி அடைக்காய் திருத்துவது போலே , தேக விலக்ஷண சின்னங்களான
ஆடை அலங்கார மேனி மினுக்கம் அம்பரம் – அவையும் பகவானோட்டை உண்டான
ராஜகுல மாஹாத்மியத்துக்காக என்னப் பாந்தம்.
இன்னும், உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் என்றது
அகங்கார செருக்காகிற மதம் கொண்டு வாதிட வரும் பரபக்ஷ வாதிகளுக்கு சளைக்காத ஞானாதிகர் ஆசாரியன்
என்பதாக கிருஷ்ணனோடு தங்களை சேர விடுதலாகிற கடக்க கிருத்யம் செய்ய வேண்டி
நந்த கோபரை, ஆச்சாரியனாகவே ஆண்டாள் காட்டினபடி இவை.
————-
19. குத்து விளக்கு :
தன்னையும் காட்டி புறச் சூழலும் காட்டுவதாம்
மின்னனய நல் விளக்கு போல் ஆசான் — துன்னிருள்
நம்மின் துறத்துவனேல் அன்னை அவளுணர்த்த
தம்மின் வழி நடத்தும் மால்.
உன்னுடைய மைத்துனனை எங்கள் மணாளன் ஆக வேண்டும் படியாய்
விசிறி கண்ணாடி அத்தோடு தந்து எம்மை நீராட்ட வேண்டும் என்று நப்பின்னை பிராட்டியை
பிரார்த்திப்பதாக அமைந்த பாசுரம்.
மாஸுச : என்றிருக்கிற பவனுடைய அபய ஹஸ்தம் தாமரைக் கை என்றால் அவன்
ஸ்வாதந்திரனாய் வந்தாய்ப் போல் வாராதான் ஆனபடியால் அதற்கு அஞ்ச வேண்டா என்கிற
பிராட்டியினுடைய கை செந்தாமரைக் கை ஆனபடி.
கேசவன் தமர் பதிகத்தில் ஆழ்வார் – மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றவா – என்றதும்
ஸ்வ பிரயத்னத்தால் பகவானைக் கிட்டுவது இளிம்பு.
பாகவதேக உபாய நிஷ்டராய் அவனுடைய கிருபாதிசயத்தாலே அவனைக் கிட்டுவது சதிர்.
மா – பிராட்டி. அவள் கொடுக்கப் பெறுவது மாசதிர்
என்று காட்டினபடி உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனையம் தந்து இப்போதே எம்மை நீராட்டு என்று
பிராட்டி பரிகாரமாய் நின்று பேசுகிறாள் ஆண்டாள்.
கோதா கீதையான திருப்பாவையும் – ஸ்ரீ கிருஷ்ண கீதையாம் பகவத் கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டு
இருப்பது அதற்கான சிறப்பு. அதுதான் எங்கனே என்னில்?
குத்துவிளக்கு எரிய – ஞானம் பிரஜ்வலிக்கிறது என்ற பொருளில் ஒளி இருந்தால் இருட்டு போய்விடும்.
இங்கு சொல்லப்பட்ட இருட்டுதான் – அகவிருளும், புறவிருளும் . இத்தை போக்க
பொய்கையாழ்வார் ஏற்றிய விளக்கு – வருத்தும் புறவிருள் மாற்ற
பூதத்தாழ்வார் – இறைவனைக் காணும் இதயத்திருள் கெட
பேயாழ்வார் – கோவலூள் மாமலராள் கண்டமை காட்டும்
மூவர் ஏற்றிய ஜ்ஞான விளக்கு.
கீதாசார்யன் காட்டும் சோபான படிக்கட்டில்
படிக்கட்டு – 1
பகவத் ஸாட்சாத்காரத்துக்கு பிரதிபந்தகமாக உள்ள இதயத்திருள் கெட
நியதம் குரு கர்மத்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண : – கீதை 3.8.
அப்படி கர்மாநுஷ்டானங்களை விடாது செய்யச் செய்ய
கர்ம யோகத்தில் வருவதற்கான – தேஹ அதிரிக்த ஆத்ம ஞானம் மாகிற ஓடம் அநாதிகால பாபமாகிற கடலை தாண்டுவிக்கும்.
ஜ்ஞான ப்லவேநைவ வ்ரிஜினம் ஸந்தர்ஷயஸி – கீதை 4.36.
ஓடம் மறுகரைக்கு மீண்டுவிடுமோ என்று பயந்தாயே ஆகில்
ஞாநாக்னி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத் குருதே ததா – கீதை 4.37.
இல்லை அர்ஜுனா – அதே ஜ்ஞானம், அக்கினியைப் போலே பாப கூட்டத்தைப் பஸ்மமாக்கி விடும்.
எல்லா பாபங்களையும் என்றால், பக்தியை ஆரம்பிக்க தடையாய் யாவை பாபங்கள் உள்ளனவோ
அவை அனைத்தும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
படிக்கட்டு – 2
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந : – கீதை 6.19.
எப்படி காற்று வீசாத இடத்தில் தீபமானது அசையாது நின்று ஒளிவிடுமோ அதுபோல
விஷயாந்தர சுகத்தில் மனது லயிக்காத படிக்கு ஆத்ம விஷயத்தில் மனதை உறுதிபடுத்த வேண்டும்.
படிக்கட்டு – 3
ஜ்ஞாநாஞ்சன சலாகையா ஸக்ஷுர் உன்மீலனம் – ஆசார்ய உபதேசம்.
அதற்கு ஆத்ம சிந்தனம் மட்டும் போதாது. ஆத்ம ஜ்ஞானம் பகவத் ஜ்ஞானமளவாக வளர
ஆசார்ய உபதேசங்களாகிற திறவு கோல் கொண்டு ஜ்ஞானக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
அதற்கு ஆச்சார்ய ஸந்நிதி அவசியம்.
அடுத்து பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மேன்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
தத்வித்தி பிரணி பாதேந பரி பிரச்நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிந : தத்வ தர்ஸிந : – கீதை – 4.34.
என்கிற கீதையின் வழியிலேயே ஆண்டாளும்
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று
நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம்
தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
என்பதாக கீதையில் சொல்லப்பட்ட நியதம் குரு கர்மத்வம் என்பதை பேசினாள்.
அதை ஆத்ம வித்தையோடு செய்ய வேண்டும் என்பதையும்
நாராயணனே நமக்கே பறை – என்கிற உபாய-உபேய அத்யாவசாயம் சொன்னபடி.
கர்மாநுஷ்டானங்களால் அநாதிகால கர்ம வாசனா ரூபமான பாபங்கள் கழியும் என்பதை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றாள்.
இனி ஜ்ஞானம் பகவத் விஷயமளாவாக வளர
அஜ்ஞானம் குறைந்து ஜ்ஞானம் வளர வேண்டும் என்பதை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்றும் ,
பாபம் குறைந்து புண்யம் வளர வேண்டும் என்பதை செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
என்று பேசினாள் ஆண்டாள் .
தவிரவும், பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் மென்மேலும் வளர ஆசார்யா அநுவர்த்தனம் பண்ணக் கடவதாய்
பாசுரம் 16-17-18 களில் கடக கிருத்யரான நந்தகோபரைப் பற்றி பிரஸ்தாபித்தாள்.
பாசுரம் 18-19-20 களில்
நப்பின்னையை புருஷகாரமாக பற்றி கண்ணனோடு சேர்ப்பிக்க பிரார்திக்கிறாள்.
இங்கு உள்ள ஸ்வாரஸ்யம் என்ன வென்றால்,
பாசுரம் 18-ல் ஆசார்ய சம்பந்தமும், புருஷகார பிரபத்தியும் சேர்த்து சொன்னதுக்கு தாத்பர்யம்
ஆசார்யன் ஆஸ்ருதரான நமக்கு ஆத்ம-பரமாத்மா விஷயமான ஜ்ஞானத்தை கிளப்பி விடுவதை போலே,
புருஷகார பூதையான பிராட்டி
பகவன் நிக்ரகத்தை அநாஸ்ரிதர்கள் விஷயத்தில் மடை மாற்றி,
ஆஸ்ரிதர்கள் விஷயத்தில் ஸ்வாதந்திரியம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை கிளப்பி விடுகிறாள் –
என்பதான கிருபை இருவருக்கும் பொதுவானதாய்க் கொண்டு.
மேலும்
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத – அந்த நாராயணனையே சரணமாக பற்று என்று கண்ணன் சொல்ல ,
அர்ஜுணன் – கண்ணன் இவன் தானே நாராயணன், அந்த நாராயணனை பற்று என்கிறானே – என்று
குழம்ப அதை விலக்கவே பின்பகுதியில்
மாமேகம் சரணம் விரஜ – என்று பேசினான்.
ஆனால் ஆண்டாளோ – நாராயணனே நமக்கே பறை தருவான் என்றும்
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – உனக்கே நாமாட் செய்வோம் என்றும் ஸு ஸ்பஷ்டமாக பேசினாள்.
இங்கு சாந்தோக்யம் 4வது பிரபாடகத்தில் உள்ள உபகோஸல விதை பிரகரணத்தில் சொல்லப் பட்ட
ஜாபால – உபகோஸல விருத்தாந்தம் ஸ்மரிக்கத்தக்கது .
ஆசாரியரான ஜாபாலர் சிஷ்யனான உபகோஸலனுக்கு பிரஹ்ம வித்யை பூர்ணமாக உபதேசிக்காமல் காலம் தாழ்த்த ,
பிள்ளைக்கு ஆசார்யானுகிரகம் ஏற்படவேயில்லையே என்று ஏக்கம் பிறந்து தவிக்க,
இடையில் ஆசாரியன் காரியாந்தரமாக வெளியூர் சொல்ல வேண்டி வந்தது.
எனவே சிஷ்யனிடத்தில் அக்நி சந்தானத்தை ஆராதித்துக் கொண்டு காத்திரு என்று சொல்லி பயணத்தில் உத்தியுக்தரானார்.
சிஷ்யப் பிள்ளைக்கு சோறு தண்ணீர் செல்லாமல் , ஆசார்யன் நியமித்த கைங்கர்யத்தை நடத்திப் போர ,
ஆச்சார்ய பத்நி விசாரித்தும் நிலைமை சீர்படாது போக, நித்ய ஆராத்ய அக்நி தேவதை மூவரும்,
பிள்ளைக்கு இரங்கி தாங்கள் சில அர்த்தங்களை உபதேசித்தனர்.
பிராணன் தான் பிரஹ்மம்.
அந்த பிரஹ்மத்துக்கான ஸ்தானம், அதை அடைய உண்டான கதி இது விஷயமாக
அக்நி தேவதைகள்
க(1)ம் பிரஹ்ம – சுகம் = பிரஹ்ம ஸ்வரூபம் ஆனந்தம்.
க(2)ம் பிரஹ்ம – ஆகாசம் = பிரஹ்மம் அபரிச்சின்னம் .
யதேவஹ க(1)ம் ததேவ க(2)ம்.
யதேவ க(2)ம் ததேஹ க(1)ம்
என்று பிரஹ்ம ஸ்வரூபத்தைச் அக்நி தேவதைகள் சொல்லி நிற்க,
அந்த பிரஹ்மத்தை அடைய அவன் ஸ்தானத்தை உபாஸிக்க உபயுக்தமான அவன் குணத்தை அவனை அடைவிக்கும் கதி
இவை பற்றி சொல்ல வேண்டும் என்று பிள்ளை கேட்க
ஸம்யக் வாமநத்தவம்
வாமநீத்தவம்
பாமநீத்வம்
அக்ஷி புருஷன் பிரஹ்மம் என்பதாக
முதல் இரண்டுக்கு விளக்கம் ஓரளவு சொல்லி
ஆச்சார்ய ஸ்துதே கதிம் வக்தா – என்று மார்க்கத்தை ஆச்சர்யனிடம் உபதேசமாய் பெற்றுக்கொள் என்று சொல்லி நிறுத்தினர்.
திரும்பி வந்த ஆச்சர்யனிடம் நடந்தத்தைக் கூறி, மார்க்கமான அர்ச்சிராதி கதியை உபதேசமாகப் பெற்றான் உபகோஸலன் என்பது சாந்தோக்யம்.
கீதை 1-6 அத்யாயம் ஆத்மோபாசனம்
7- 12 அத்யாயம் கர்மத்தால் வளர்ந்த ஜ்ஞானத்தால் வந்த பக்தி உபாசனம்.
அந்த பக்தி வளர்வதற்கான பகவத் ரூப, குண, ஒளதார்யங்களைப் பற்றி
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்
ததாமி பக்தி யோகம் யேந மாம் உபயாந்தி தே – கீதை 10.10.
தேஷாமேவ அநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞான ஜந்தமஹ
நாசயாமி ஆத்ம பாவஸ்த : ஜ்ஞான தீபேன பாஸ்வதா – கீதை 10.11.
என்னுடைய அழகான திருமேனியை அவர்கள் உள்ளத்துக்கு விஷயமாக்கி குணாநுபவத்தை வர்த்திப்பித்து,
கர்ம வினை பாசம் கழற்றுகிறேன்.
ஸ்தானம், குணம், கதி என்று மூன்று விஷயங்கள் போலே ஆண்டாளும் அம்பரம், தண்ணீர், சோறு என்பதாக சொல்லி
உபகோசலனுக்கு அருளிய மூன்று அக்நி போலே இவர்களுக்கு அருள நந்தகோபனை மூன்று முறை பிரஸ்தாபித்து,
கீழே சொன்ன விளக்குகளைக் காட்டிலும் பிரஜ்வலமான விளக்கு, பகவத் ஸ்வாதந்திரியமாகிற இருட்டு களைய ,
நப்பின்னை பிராட்டியாகிற விளக்கு என்பதாக இந்த பாசுர ஸ்வாபதேசம்.
——————
20. உன் மணாளனைத் தந்து :
மைத்துணன் உன் மணாளன் மாலோலன் மாலரையன்
மையகண்ணி நாதன் திருவுக்கும் — ஐய
திருவான செல்வன் மலராள் தனத்தன்
ஒருவன் அவன் தா எமக்கு!
—
21. ஏற்ற கலங்கள்:
ஏதிலார் எம்மனோர் ஆதரித்து ஆசரியன்
ஈதானாய் அல்பா வதி ஆயுள் — போதில்
பொழுதறிந்து போற்றி அலகில் தருமம்
விழைந்து கேட்ப்பார் ஏற்ற கலம்.
சிஷ்யன் தன் சரீரம் வஸு விஞ்ஞானம் அனைத்தையும் அதாவது
சரீரம் அர்த்தம் பிராணம் ச ஸத்குருப்யோ நிவேதயேத் என்று ஆசாரியனுக்கு சமர்ப்பித்து
அவர் கைகாட்டிகிற இடத்தில் அவருக்கு பிரதிநிதியாய் இருந்து அவருக்கு அளித்த மிச்சத்தில்
ஜீவனம் நடத்துவதாக பாவிக்க வேண்டும்.அங்கனே ஆசார்யன் தானும் சிஷ்யனுடைய ஆத்ம உஜ்ஜீவனத்தில்
உத்யோகிக்கும் போது தன்னை ஸ்வ-ஆசாரிய சிஷ்யனாய் , தன் சிஷ்யனை ஸ பிரம்மசாரியாய் நினைத்து பரிமாற வேண்டும் .
இதுவே சத் பாத்ர சத் வினியோக ஏற்ற கலத்துக்கான லக்ஷணம். மாறாடி நினைகை அவத்யமாம்.
இப்படி குறைந்த ஆயுசில் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராசையோடே
ஸுக பிரம்மத்திடம் பரீக்ஷித்து ஸ்ரீமத் பாகவதமும் ;
வைசம்பாயனரிடம் ஜனமேஜயன் மஹா பாரதமும் ;
ஸ்ருத்வா தர்மான் அஸேஷேண என்று தர்மங்களை கேட்பதில் விருப்பம் உடையவனாய்
பீஷ்ம பிதாமஹரிடம் யுதிஷ்டிரர் விஷ்ணு ஸகஸ்ரநாம அத்தியாயமும் ;
மைத்ரேயர் கேள்விகள் கேட்க கேட்க விஷ்ணு புராணம் விரிந்தார்ப் போல், ஒருத்தருக்காய் சொன்னது ஊருக்கய்
பராச மஹரிஷியிரிடம் மைத்ரேயர் விஷ்ணு புராணமும்;
தான் கிருபணன். சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம் பிரபும் என்று கீதாரியனிடம் அர்ஜுணன் பகவத் கீதையும்;
ஆழ்வாருடைய மைத்ரேய பகவான் ஆயிற்று அவருடைய அவா என்று பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்தி
இன்னும் சாதன பக்தி, சாத்திய பக்தி, சகஜ பக்தி கொண்டு அவருடைய பிரபந்தம் வளரக் காரணம்
அவருடைய பகவத் பிரேமமாகிற காதல் – பயன் அன்றாகிலும் பாங்கல்லர் ஆயினும் – நெஞ்சில் நிற்கப்பாட்டி –
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே என்கிற கிருதஜ்ஞதை யோடே
நம்மாழ்வாரிடம் மதுரகவி ஆழ்வார் பெற்ற திருவாய் மொழியும் ;
நின்றனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – என்று பேசிய திருமங்கை ஆழ்வாரிடம் ,
தான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் , ஆழ்வார் கலிகன்றிதாஸர் என்கிற நம்பிள்ளையாகவும் பிறக்க –
அவரிடம் சிஷ்ய விருத்தி பண்ணி பிரபந்தங்கள் நாலாயிரத்துக்கும் பொருள் கேட்டு உபகரித்த
திருக்கண்ணமங்கை பத்தராவி பெருமாள் போலேயும்
கேட்டவர்கள் அனைவரும் ஏற்ற கலங்கள் என்றாலும்
ராமனுக்கு விஸ்வாமித்திரரும், கிருஷ்ணனுக்கு சாந்தீபினியும் ஆசார்யனாக கிடைத்தபோது அடைந்த அபூர்த்தி
பெரிய பெருமாள், நம்பெருமாள் இருவரும் கண்ணனும், ராமனுமாய் மணவாள மாமுனி பக்கல்
துவயார்த்த விவரணியும் தீர்க்க சரணாகதி பிரபந்தமாயும் இருக்கிற திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணினார்களாய்,
தாம் அவருக்கு சிஷ்யனான தன்மைக்குச் சேர பகுமானமாக தன்னுடைய
சேஷாபீடத்தையும்
ஸ்ரீசைலேச தனியனும் ஸமர்ப்பித்து
அவருடைய திருவத்யயன உற்சவாதிகளை நடத்திப் போருவர்களாய்
எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம் மேல் சொன்ன மற்றய யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.
பதரியிலே தானே ஆச்சாரியனுமாய், சிஷ்யனுமாய் திருமந்திரத்தை வெளியிட்டருளினது போக ,
மாமுனிகள் பக்கல் ஆசார்ய பிரதிபத்தியோடே , சிஷ்யன் இருக்கும் இருப்பை நாட்டாருக்கு காட்டிய –
ஏற்ற கலத்துக்கு – ஸத்தான திருஷ்டாந்தம் பெரிய பெருமாளே எனலாம்.
——————
22. செங்கண் :
கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பல பல செய்து புகல் அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.
அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி ”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள்.
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்து என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.
காப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி ,
பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :
கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.
ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடியொற்றித் தந்த விளக்கமாகும்.
கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம் என்பதாக
சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.
——–
23. சீரிய சிங்காசனத்து இருந்து :
நடுவிலாச்சிக் கீத்த படுக்கை அறை வார்த்தை
காடேற வாயித்தால் கண்ணா! — அடிசியோம்
காண நடந்து அரி ஆசனத்தே வீற்றிருந்து
வேணுமவை ஆய்ந்து அருள்.
ஸவ்யம் பாதம் பிரசரித துரித ஹரம் தக்ஷிணம் குஞ்சையித்வா
ஜாநூன் ஆதாய ஸ்வே இதர புஜம் நாக போகே நிதாய
பஸ்சாத் பாகுத்துவயேன பிரதிபட ஸமநே தாரயந் சங்கசக்ரே
தேவி பூஷாது ஜூஷ்டோ விதரது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத -என்று பரமபதத்திலான அமரிகை காண அங்குற்றோம் அல்லோம்
வைதேஹி ஸகிதம் ஸுரத்ரு முதலே ஹைமே மஹா மன்டபே
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி–என்று பட்டாபி ராமனாய் இருந்தமை அப்போதுற்றோம் அல்லோம்
எனவே இப்போது எமக்காக நாலெட்டு நடை நடந்து வந்து உன் நடை அழகையும்
சீரிய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அழகையும்
நம்பெருமாள் நமக்கு திருமாமணி மண்டபத்தில் சேர-பாண்டியன் ஒலகத்தில்
அமர்ந்தமை காட்டி, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் என்கிறார்கள்.
——-
24. அஞ்சு குடி :
அன்புடை ஆழ்வார்கள் போற்றி என ஏற்றி
நன்குடனே நாளும் வழுத்துலும் — இன்னும்
பெரியாழ்வார் அஞ்சாமைக் காட்டியதுக் கஞ்சும்
பெருமை ஆண் டாளுக்கும் உண்டு.
பிறர் நன்பொருளான ஆத்மபகரம் திருட்டு. பொருள் சரீம். நன்பொருள் ஆத்மா.
பிறர் நன் பொருள் பகவானுடைய சொத்தான ஆத்மா. இந்திரனுடைய சொத்தான மூன்று லோகங்களை
மஹாபலி தன் சொந்தமாக்கினான். அதை மீட்க அன்று திருவிக்கிரமனாய் மூன்றடி மண் கேட்டு,
இரண்டடியால் அளந்து கொண்டதோடு, மூன்றாவது அடியால் துரபிமானகள் தலையில் கால் வைத்து
அவர்களையும் தனதாக்கிக் கொண்டு தளிர் பொறையும் திருவடி என் தலைமேலவே என்று அபிமானம் களைந்தான்.
அடிபாடி என்று தொடங்கி, அடிபோற்றி என்று இடையில் இந்த பாசுரமும்,
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் என்று முடிவிலுமாய் ஆண்டாள் மங்களாசாசனம்.
அளந்து தன்னதாக்கிக் கொண்டதால் ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது. ஸ்வம் = சொத்து.
தளிர் திருவடி தலை மேலவே என்றதால் சேஷித்வம் பிரகாசிக்கிறது.
உலகமளத்த பொன்னடியே அடந்துய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே என்றதால் சரண்யத்வம் பிரகாசிக்கிறது.
உழலை இன்ப பேய்ச்சி முலையூடவள் உயிருண்டவன் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாகி என்றும்
தன்னைத் தவிர்ந்த வேறு ஒன்றையும் சகியாத நிரபேட்சோபாயத்வம் சொல்லிற்று.
தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்று ஆர்த்தித்தவம் பிரகாசிக்கிறது.
தடந்தாமரை தாள் என்று சொல்லாமல் தடந்தாமரைகட்கே என்று உபமானத்தை சொல்லி உபமேயத்தை சொல்லாமல் விட்டது
முற்றுவமை என்கிற ஸ்வாரஸ்யம் இங்கு நோக்கத் தக்கது.
சதுமுகன் கையில் சதுப்புஜன் தாளில் சங்கரன் சாடையினில் தங்கி வருகிற – விஷ்ணு பாதோதகமாகிற
கங்கை கங்கை என்ற வாசகம் கொண்டு கடுவினை காளையலாமே – கண்டமென்னும் கடிநகர்-தேவபிரயாகை பாசுரம்
இதில் பாவனத்வம் பிரகாசிக்கிறது.
உன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து முகப்பே கூவிப் பணிகொள்ளாய் என்று பரிச்சர்யம் பிரார்த்திக்கிறது .
தாளால் அளந்த அசைவேகொல் ? பின்னும் தன்வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை – என்று சிரமிஸித திருவடிகளை ஆஸ்வாஸ படுத்த அலை அடிப்பதாக ஆழ்வார்.
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூதாமம் சேர்த்து அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன்
தெளிந்ததொழிந்த பைந்துழாயான் பெருமை – என்று பரத்வ சூசகம் .
மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண்முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப்போது ஒன்று விண்செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரை காடு மலர்க்கண்னொடு
மலர்க் கனிவாய் உடையது போல் இரு ஞாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பக காவு பற்பல வன்ன முடிதோள்
ஆயிரம் தழைத்த நெடியோர்க்கல்லதும் அடியதோ உலகே? – என்கிற மாதுர்யம், அழகு பேசப்பட்டது.
இப்படியான உன் விக்கிரமங்களுக்கு அன்று பல்லாண்டு பாடாத குறை தீர, இன்று யாம் வந்தோம்.
அறுசுவை அபதானங்களுக்கு ஆறு முறை போற்றி சொல்லி வந்த எங்களுக்கு நீ இரங்க வேண்டும் என்கிறார்கள்.
அதவா
அவனுடைய இரக்கத்துக்கு விருத்தமாய்
உறங்குமவனை எச்சரப் படுத்துவது,
நாலடி நடக்கும் படியாய் விக்ஞாபிப்பது
இத்யாதி காரியங்கள் – அதிபிரவ்ருத்தியாய் முடியாது இருக்க, ’இரங்கு’ என்கிறார்கள்,
————-
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினைத்தீர்துப்
பேணும் கருணை பெரிது.
ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும்,
ரிஷிகளும் பேசி இருக்க, ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்
ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும். இல்லாதது உண்டாகாது.
இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும். பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி,
ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?
இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே
ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது அவதாரம் (அ)
ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .
ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும், அவர் ஜனன= கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன – ஜனங்களின்
ஜன்மம் – பிறப்புக்கு
ஆதி – நிமித்தம் (அ) பிரயோஜனம் பகவான்கிற அவர்தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக்கொள்வது.
இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.
————
26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :
சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.
ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல மஹா பாரதத்தில்
கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,
அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு
தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய்
அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.
————
இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்யப்பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.
ததா வித்வான் – தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
அதேபோல
ததா வித்வான் – சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாப்பத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் ,
உபாசகனான பக்தியோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.
ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான் என்றாலும்
பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் –
அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .
—————-
27. பாலேபோல் சீர் :
தேமதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம்தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .
கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.
பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில்
2 ஆம் பாட்டில் நெய்உண்ணோம், பாலுண்ணோம், மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை
இப்போது இந்த பாட்டில் சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம்
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை ஸூசிப்பிக்கிறாள்.
————-
சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.
இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.
மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி.
ஆர்த்தி தலை எடுத்து வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.
ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலேபோல் சீர் குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி.
அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும் பால்சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .
இங்கு முழங்கை வழிவார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலேபோல் சீரை அனுபவிக்க முதல்நிலை பசி பரபக்தி.
அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது.
அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.
—————-
28. கறவைகள் :
புறம்புண்டாம் வேத நெறியாவும் விட்டு
திறம் காட்டும் என் ஒருவன் தாள்கிட்டல் — தேறுமென்
உரைத்த மொழி வழியே கை முதல் வேட்டா
குறையில்லா கோவிந்தன் நாட்டு.
திருமந்திரத்தில் பிறந்து, கிருஷ்ண சரம ஸ்லோகத்தில் வளர்ந்து துவாயார்த்த நிரதராய் வர்த்திக்கை ஸ்வரூபம்.
திருமந்திரம் ஜ்ஞான பிரதானமான மந்திரம் என்றால், சரம ஸ்லோகம் விதி ரஹஸ்யம். துவய மஹாமந்திரம் அனுஷ்டான பரமான மந்திரம்.
திருமந்திரத்தில் ஆத்மாவாலே பேறு என்கிறது.
சரம ஸ்லோகத்தில் ஈஸ்வரனாலே பேறு என்கிறது.
துவயத்தில் பிராட்டியாலே பேறு என்கிறது.
ஆசார்ய சம்பந்தம் பெற்று ரஹஸ்ய த்ரய உபதேசமும் பெற்று அனுஷ்டாதாவாய் போருகைக்கு துவயார்த்தம் நன்றாக நெஞ்சில் பட வேண்டும்.
அதில் பூர்வகண்ட வாக்கியம் உபாயத்தையும், உத்தர கண்ட வாக்கியம் பலம்-புருஷார்த்தத்தையும் சொல்லுகிறது.
இதன் விளக்கமாக அவதரித்த ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் 27, 28 இரண்டும்.
ஆக , கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் பாசுரம் உபாய ஸ்வீகாரமும், 29ம் பாசுரம் சிற்றம் சிறுகாலை
கைங்கர்ய பிரார்த்தனையையும் சொல்லுகின்றன.
அனன்ய ஸாத்யே ஸாபீஷ்டே
மஹா விஸ்வாச பூர்வகம்
ததேக உபாயதா யாஞ்சா
இதி பிரார்த்தனா மதி : சரணாகதி : என்ற கணக்கில்
உபாய ஸ்வீகாரம் தானும் விதி வாக்கியத்தில் சொன்னபடி
மற்ற எல்லா தர்மங்களை விடுகையும்
பகவதாஸ்ரயணமுமாக விட்டவை எல்லாம் அவனேயாகப் பற்றுகையும் -சொல்வதே – கறவைகள் பாசுரம்.
1. கறவைகள் பின் சென்று – ஜாத்யுச்சித கருமம் செய்தீர்களாய் பிராபாந்தரங்களை விடீர்கள் இல்லீகோள் என்ன
கானம் சேர்ந்துண்போம் – கோ ரக்ஷணமாக சென்றோம் அல்லோம். உண்கையே பிரதானமாக சென்றோம்.
எங்கள் ஆசாரியன் மாடுகன்றுகள். பகவானுக்கு கண்டருளப்பண்ணி உண்டீர்கள் போலும் என்ன –
அதுவும் இல்லை – சென்று உண்போம் அத்தால் கர்மாநுஷ்டானம் இல்லை –
நீ பரமபதம் விட்டு திருவாய்ப்பாடிக்கு வந்தாயால், நாங்கள் விமுக்த்தர்கள் போலே அங்கிருந்து கானம் சென்றமை கண்டீயே என்கிறாள்.
2. அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் – இதுவரை இல்லையாகிலும், இன்னும் முன்னே சம்பாதிக்க வழியும் இல்லை.
வலக்கை இடக்கை அறியா ஆய்க்குல மாதலால் அறிவில்லாத – ஜ்ஞான யோகம் இல்லாத – அறிவொன்றுமில்லாத –
பக்தி யோகமும் இல்லாத பிள்ளைகளோம். ஆத்தால் ஆர்ஜித ஸுக்ருதம் எதுவும் இல்லை.
3. குறை ஒன்றில்லாத கோவிந்தா! உன் தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாமுடையோம் –
அயத்ன சுக்ருதமாக உன்னையே சித்த புண்யமாக உடையோம். நீயோ நிறைவாளன். நாங்கள் ஜ்ஞான பக்திகளில் குறைவாளர்கள்.
4. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – இருவருக்குமான சம்பந்தம் தானும் அங்கு ஒழிக்க முடியாது வாஸ்தவம்.
இங்கு ஒழிக்கலாமோ என்னில் நித்யம். அநிவாரியம் .
5. அறியாத பிள்ளைகளும் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – பூர்வாபதாரங்களுக்கு க்ஷமணம் வேண்டி
6. இறைவா நீ தாராய் பறை – நீ கொடுத்தன்றி எங்களுக்கு நிறக்க வழியில்லை என்கிறாள்.
அஹம் , மத் ரக்ஷண பரம், மத் ரக்ஷண பலம் ஈஸ்வராதீனம் – ஸ்வாமி தேசிகன்.
பிராப்தாவும், பிராப்யமும், பிராப்திக்கு உகப்பானும் அவரே இனி ஆவாரே – ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்றது தாழ்குலம்,
கர்ம ஜ்ஞான பக்கத்தி நெறிக்கு விலக்கான குலம் என்பதல்ல. இயலாத குலம் என்று பொருள்.
பிராம்மணர்களாக பிறந்தவர்கள் இயன்றவர்களோ என்னில் ?
அவர்களும் விட்டே பற்றுகைக்கு அசக்தி காரணம் அன்று. ஸ்வரூப பிரயுக்தமே பிரதான ஹேது.
அறிவொன்றுமில்லாத என்பது ஜ்ஞான அனுதயமன்று . சாட்சாத் தர்மமான கோவிந்தா நீயே உபாயாம் என்கிற
வேதாந்த விழுப்பொருள் அறிவு ஆண்டாளுக்கு உண்டான படியாலே .
ந வேதாந்தாது சாஸ்திரம்
ந மதுமதனாது தத்வம் அகிலம்
ந ஸத்வாது ஆரோக்கியம்
ந துவயவசனத : க்ஷேமகரம் — ஸ்வாமி தேசிகன்.
பரித்யஜ்ய என்று விடுகை சொன்ன விடத்து ஆண்டாள் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்று கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை
செய்ய பிரசக்தியே இல்லை. விடுகை என் வந்தது என்று சொல்லி விட்டாள்.அடுத்து
மாம் ஏகம் சரணம் விரஜ – ஸ்ரீமந் நாராயண சரணநௌ சரணம் பிரபத்யே என்று பற்றுகையைச் சொன்ன விடத்து –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாமுடையோம் – என்றது ஸ்வீகாரம் தானும் பரகதமான படிக்கு.
மாம் சரணம் விரஜ அல்ல. மாம் ஏகம் சரணம் விரஜ என்ற விதி வழி கண்ணன் தானே நடத்தி கொடுத்த படியுமன்றோ விது.
————-
29. மற்றை நம் காமங்கள் மாற்று :
அடிமைக் கண் அன்பு செய் ஆர்வத் தறிவு
உடைமைக் கண் தேடும் மகிழ்ச்சித் — தடையாம்
அடைந்து அனுபவிக்க புக்கால் நில் என்ன
மிடையாது நிற்றல் தலை.
சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து – பிராபியத்தில் த்வரை
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – அதில் கலக்கம்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாதே போகாது – ஆர்த்தியை ஆவிஷ்கரித்தல்.
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா – உபேக்ஷையைச் சொன்னது.
எற்றைக்கும் ஏழழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் – கைங்கர்ய அபேக்ஷை.
மற்றைநம் காமங்கள் மாற்று – கைங்கர்யத்தில் காளையாகிற வைராக்கியத்தை – ஸ்வபோக்த்ருத்வ புத்தியை விலக்குகிறாள்.
நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.
உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம்.
இத்தால்
நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.
நாம் என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
எப்படிப்பட்ட நாம் என்று விசாரித்தால் – சுவாமி பிள்ளைலோகாசார்யர் காட்டுவது
அஹமர்த்தத்துக்கு ஜ்ஞானந்தங்கள் தடஸ்தமானால் தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம் – என்பதாக.
ஜ்ஞானம் உடையவன் என்பதால் கர்த்ருத்வ- போக்த்ருத்வங்கள் முன் நிற்கும்.
ஆனால்
கர்த்ருத்வத்துக்கு தடைக்கல் பாரதந்திரியம்.
போக்த்ருத்வத்துக்கு தடைக்கல் சேஷத்வம்.
சேஷத்வம் பர-அதிசயத்துக்கே இருப்பது
பாரதந்த்ரியம் பர-வசப்பட்டு செயல் படுவது.
ஆக ஜ்ஞாத்ருத்வத்தால் வந்த கர்த்ருத்வம் பரனான பகவத் ஆதீனப்பட்டுதானே இருக்க வேண்டும்.
அதாவது ஸ்வபிரயர்த்தன நிவிர்த்தி பாரதந்த்ரியத்துக்குப் பலம்.
பிரவிருத்தியே கூடாதோ என்னில் அன்று.
பாரதந்த்ரியத்துக்கு குந்தகமில்லாத கர்த்ருத்வமும்
அதேபோல சேஷத்வத்துக்கு விரோதமில்லாத போக்த்ருத்வமும் நோக்கிக் கொள்ள வேண்டும்.
ஜ்ஞான காரியமான பிரயத்னமும் பலமும்
ஸ்வரூப தர்மமான பாரதந்த்ரியமும், சேஷத்வத்வத்தையும் அனுசரித்தே ஆற்றக் கடவது.
பகவான் ஸ்வதந்திரன். நாம் பரதந்திரர். எனவே பகவத் பிரயோஜனமாக செய்கிற கர்த்ருத்வம் பாரதந்திரியம் –
உனக்கே நாமாட் செய்வோம்.
எனக்கு, எனக்கும் உனக்கும் என்றல்லாமல் உனக்கே என்பதான வழுவிலா அடிமை.
பகவான் சேஷி. நாம் சேஷப்பட்டவர்கள். எனவே தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம்.
பிரகர்ஷயிஷ்யாமி என்பதாக பகவத் ஆனந்த அநுயாக போக்த்ருத்வம் சேஷத்வம் – மற்றை நம் காமங்கள் மாற்று .
ம – என்பது தாயம் என்றால்
நம – என்பது இலக்கம் 2.
பரமபத சோபனா படத்தில் (அஹம்) – ம என்கிற 1 போட்டு விளையாட ஆரம்பித்து , கடைசீ பாம்பு வாயில் விழாமல் தப்பிக்க,
நம – என்று 2 போட்டு பரமபதம் சேருவர். ம – என்கிற 1 போட்டால் பெரிய பாம்பு வாயில் விழுவர்.
அதேபோல பிரணவத்தில் உள்ள மகாரம் அவுக்கு சேஷப்பட்டவன் என்று சொல்வதோடு ,
இடையில் உள்ள நம பதத்தால் பாரதந்த்ரியத்தைச் சொல்கிறது.
அந்த நம பதத்தின் அர்த்தமான ”பாரார்த்யம் ஸ்வம் ” என்பதை சொல்ல வந்ததுதான் திருப்பாவை என்கிற
பட்டர் திருவாக்கு பிறந்ததும் இது கொண்டு.
————–
30. வங்கக் கடல் : ஆண்டாள் அரங்கக்குப் பன்னு திருப்பாவை :
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல் பதியம் – பராசர பட்டர் திருவாக்குப்படி
திருப்பாவை 30 ம் திருவரங்கன் விஷயமானவை . எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||
1. நாராயணன் – ஸக பத்நியா விசாலாக்ஷியா நாராயண உபாகமது –
வால்மீகி வாக்குப்படி ரங்கநாதன் தான் ஜகந்நாதன் – பெருமாள் ஆராதித்த பெரிய பெருமாள்.
2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் – கார்ய வைகுண்டத்திலுள்ள க்ஷீராப்தி நாதன்தனான வியூக வாசுதேவன்தான்
ஸ்ரீ ரங்கத்துக்கு பிரதானம் – பிரத்யக்ஷ பரமம் பதம் ஸ்ரீரங்கம்.
3. திங்கள் மும் மாரி – லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் என்று குருபரம்பரையில் பிரதம குருவாய் நின்று ரஹஸ்ய த்ரயங்களை
ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உபதேசிக்க, அவள் வழி விஸ்வக்ஷேனர் , நம்மாழ்வார் உபதேசித்த கிரமம் – மும்மாரி
4. ஆழி மழை – சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என்று சார்ங்கவில் சேவகனாக இராமபிரானைப் பற்றி பிரஸ்தாவம் இதில். –
ராமோ த்விர் நாவிபாஷதே என்று கத்யத்தில் நம்பெருமாள் தன்னை ராமனாகக் கொண்டு சொன்ன வார்த்தை .
5. மாயனை – அரவின் அணை மிசை மேய மாயனார் என்று திருப்பாணாழ்வார் சொன்ன தாமோதரன் பெரிய பெருமாள் தானே.
6. முனிவர்களும் யோகிகளும் ஹரி என்று – சிற்றெயிற்று முற்ற மூங்கில் அற்ற பற்றர் வாழும் அந்தணீர் அரங்கன் –
விமானத் தூண் ஹ + ரி என்ற வாசகத்தோடே ஆனது .
7. கீச்சு கீசு – கிளிச் சோழன் கிளி மண்டபம் இங்குதான் உண்டு.
8. தேவாதி தேவன் – தேவரையும் அசுரனையும் திசைகளும் படைத்தவனே யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர் துயின்றவனே
என்று குலசேகர ஆழ்வார். தேவாதி பிரம்மா அவன் ஆராதனம் செய்த பெரிய பெருமாள்.
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – ஆண்டாளுக்கு.
9. மாமாயன் மாதவன் வைகுந்தன் – அரங்கன் அழகிய மணவாளன் நம்பெருமாள் என்ற மூன்றும்
பரத்வம் ஸ்ரீயப்பதித்வம் சௌலப்யத்துக்கான திருநாமங்கள் தானே.
10. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – லோக சாரங்க முனி திருப்பாணாழ்வார் விஷயமாக அபசாரப்பட,
பின் அவர் திருவாராதனத்துக்கு வந்த போது அரங்கன் சன்னதி கதவு திறக்காமல் மௌனியாய் காலம் தாழ்த்தி,
பிறகு ஆழ்வாரை எழுந்தருள பண்ணி அவருக்கு அதுவரை திறவாத வாசலை திறந்துவிட்டவன் அரங்கன்.
11. முற்றம் புகுந்து – அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர் – சுற்றத்து தோழிமார் எல்லாரும் 105 திவ்யதேச
எம்பெருமான்கலும் பள்ளி கொள்ளுமிடம் திருவரங்கம்.
12. அனைத்தில்லத்தாரும் அறிந்து – சாத்தின சாத்தாத 10கொத்து பரிவாரங்களை நியமித்து
எம்பெருமானார் திருவரங்கத்தை நிர்வகித்து போந்த படி இங்குதான்.
13. பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் – பிள்ளைகள் திருவரங்கம் காவிரிக்க கரையில் அன்ன கூட உற்சவம் விளையாடும் போது
ஜீயோ! என்று அழைக்க , எம்பெருமானார் மணல்சோற்றை தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்
என்பதாக அதை பிரசாதமாகவே நினைத்து பெற்றறுக் கொண்ட சரித்திர சங்கேத்யம்.
14. வாய் பேசும் நங்காய் நாணாதாய் நாவுடையாய் – வாயழகர் என்னரங்கத்து இன்னமுதர்;
திருவரங்கர் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை ; பேசி இருப்பனவைகள் பேர்க்கவும் பேராவே ;
ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ என்று எம்பெருமானாருக்கு அருளிய வார்த்தைகள் எல்லாம் அரங்கன் நாவுடைமைக்கு சான்று.
15. எல்லாரும் போந்தாரோ ? – அத்யயன உற்சவத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி
இருந்து 21 நாட்கள் தமிழ்மறை திருநாள் கண்டருளுவதில் திருவரங்கம் திருப்பதி பிரதானம்,
காரணம் இவரே பதின்மர் பாடும் பெருமாள் . பாசுரங்களின் எண்ணிக்கை 247 போலே தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் தொகையும் 247.
16. வாசல் காப்பான், கோயில் காப்பான் – உத்தர வீதி, சித்தரை வீதி, நான்முகன் கோட்டை வாசல் (ரங்கா ரங்கா கோபுரம்)
கார்த்திகை கோபுர வாசல், ஆரிய படாள் வாசல் (கருட மண்டபம்), நாழி கேட்டான் வாசல் (துவஜ ஸ்தம்பம்),
ஜெய விஜயாள் வாசல், திருமணத்தூண் திருவாசல் களில் உள்ள துவார பாலர், க்ஷேத்ர பாலர்கள் எழுப்பினது.
17. அம்பரமே தண்ணீரே சோறே அறம் – அரங்கனுலா சென்ற காலத்து ஆழ்வாருக்கு வஸ்திரமும்,
ஸ்ரீவைஷ்ணவ வெள்ளத்தானுக்கு ஈரவாடை தீர்த்தமும்,
ஆழ்வான் திருகுமாரர்கள் அவதரிக்க ஹேதுவாய் பிரசாதம் அனுப்பிய விருத்தாந்தங்கள் இந்த வகை கணக்கு.
18. உன் மைத்துனன் பேர்பாட(வசவு பாட) – ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரமுதல் நாள் நடக்கிற பிரணய கலக்கத்தன்று
அனைவரும் நாச்சியார் பரிகரமாக நின்று, அரங்கனை ஏசினபடிக்கு .
19. மைத்தடம் கண்ணினாய் – உல்லாச பலவித (பட்டர்) , சேதனனை அருளாலே திருத்தும்.
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் தத் இங்கித பராதீன : நம்பெருமாள். (ஆழ்வான்) என்று ஸ்ரீரங்க நாச்சியார் வைபவம் .
20. செப்ப முடையாய், திறலுடையாய் – நம்பி இராமானுசனை முதலில் அரையர் மூலம் நேர்மையாக கேட்டு பெறாது போக,
இரண்டாம் முறை காஞ்சி தேவப்பெருமாளை பாட்டுக்கு போர இசைய வைத்து ,
ஸ்ரீரங்கம் அழைத்துக் கொண்ட திறல் = சாமர்த்தியம் அரங்கனுக்கே அன்றோ?
21. ஏற்ற காலங்கள் எதிர் பொங்க – முதலில் ஆழ்வாரைக் கொடுத்தார். அவர் பவிஷ்யத் ஆச்சாரியரைக் கொடுக்க,
அந்த ராமானுசர் எதி புனராவதாரமான மாமுனிகள் எதிர் பொங்கி மீதளித்த பிரபாவம்,
முதலில் கொடுத்த அரங்கனுக்கே ஆச்சாரியனான படி இது.
22. செங்கண் சிறுச்சிறிதே – திருப்பாணாழ்வார் – காரியவாகி புடை பரந்து என்று பாடிய படி.
உய்யக் கொண்டார் வழி ஆளவந்தாருக்கு ராஜ்ய வியாபாரத்தை விட்டு சம்பிரதாயத்துக்கு ஆக்கின படி;
பிள்ளை உறங்காவில்லி தாஸர் பொன்னாச்சியோடு அரங்கனுக்கு ஆட்பட்டது ராமாநுசர் சொல்லிக் காட்டிய அக் கண்ணழகுதானே.
23. சீரிய சிங்கம் போதருமா போலே – நடைக்கு கோயில். குடைக்கு பெருமாள் கோயில். வடைக்கு திருமலை. முடிக்கு யாதவாத்ரி பிரசித்த மிறே.
24. அன்றிவ் உலகம் அளந்தாய் – எல்லை மண்டபம், ஜீபயர்புரம், உறையூர் என்று எல்லை நடந்து அளந்தது
திருவானைக் காவல் கோஷ்டியாரிடம் இருந்து மீட்டது.
25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – ராமானுசர் கைப்பிள்ளையாய் பிறந்து
பிள்ளை லோகாச்சார்யார் மகனாய் ஜோதிஷ்குடியில் ஒளித்து வளர்ந்தது.
26.மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள் – மார்கழி நீராட்டமாகிற அத்யயன உற்சவமான திருவாயமொழித் திருநாளாக
நம்பெருமாளிடம் பிரார்த்தித்து திருமங்கை ஆழ்வார் தொடங்கி வைக்க , நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து நாளும் சேர்த்து
அது 21 நாள் உற்சவமாக ஆயித்து. அதுவே நமக்கு மேலையார் செய்வனகள் ஆயிற்று.
27. நாடு புகழும் பரிசு – ஸ்ரீரங்க விமானத்தோடு பெரிய பெருமாளை , பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்தது.
உபய விபூதியையும் எம்பெருமானார் இட்ட வழக்காக்கி அவரை உடையவர் என்று நியமித்தது இவை பார் புகழும் பரிசு.
28. சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே – முதலியாண்டான் – வாங்கீபுரத்து நம்பி பேச்சு – பெருமாள் உற்சவமாக எழுத்தருளும்போது
என்ன பாடினீர் என்ன, ஜெய விஜயீ பவ ஸ்ரீரங்க விபோ ஜெய ஜெய என்றேன் என்ன – நெய் உண்பீர் , பாலுண்பீர், பட்டுடுப்பீர்,
நூறு பிராயம் புகுவீர் என்று இன்னொருவர் சொல்ல, முரட்டு சமஸ்கிருத பெரிய பேர்கள் இங்கு எதற்கு என்று,
வர்த்திக்கிற தேசத்தைக் கொண்டு அத்தை சிறுபேறாக அவர்கள் கணிசத்தபடி.
29. பொற்றாமரை அடியே போற்றும் பொருள் – ரங்கமணி பாதுகா பிரபாவம் பற்றி ஸ்வாமி நிகமாந்த தேசிகன் 1000 ஸ்லோகம்
பண்ணக் கூடிய மகிமை. ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடி அவன் கை விட்டாலும்,
அவன் பாதுகையான நம்மாழ்வார் – மாறன் அடிபணிந்துய்ந்த எம்பெருமானார் கைவிட மாட்டார் என்கிற பெருமையும் கொண்ட திருவடி அரங்கனுடையது.
30. ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்து சொல்வது திருமாலால் – பட்டர்- அனந்தாழ்வான் ஸம்வாதம்.
ஸ்ரீ வைஷ்ணவ திவயதேசங்கள் பலதும் இருக்க பட்டரோ ஸ்ரீரங்கநாத பக்ஷபாதி. எப்படி என்றால்
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி ஆயிரமும் வான்திகழும் சோலை மதிள் அரங்கர் வான் புகழ்மேல் ஆன்ற தமிழ்மறை ஆயிரம்
என்று அங்கு சொன்னது போல
திருப்பாவை முப்பதும் அன்ன புகழ் புகழ் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு பன்னு திருப்பாவை என்று ஸ்ரீரங்கநாதன் விஷயமாக்கி தனியன்கள் சாதித்தார்.
அவரைப் பார்த்து அன்னத்தாழ்வார் ஒருமுறை, நீர் வைகுந்தம் சென்றால் அங்கு பரம பத நாதன் த்விபுஜனாக இருந்தால் சேவிப்பீரா,
சதுர் புஜனாக இருந்தால் சேவிப்பீரா என்று வினவ, அதற்கு பட்டர் சதுர் புஜனாக இருந்தால் நம்பெருமாள் என்று நினைப்பேன்.
த்விபுஜனாக இருந்தால் பெரிய பெருமாள் என்று நினைத்து சேவிப்பேன்.
பெரிய பெருமாளாகவோ, நம்பெருமாளாகவோ சேவை தரவில்லை என்றால், கூரயைப் பிய்த்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கே குதித்து விடுவேன் என்றாராம்.
அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டாளும் நான்கு திருத்தோள் என்று சொல்லாமல்
ஈரிரண்டு மால்வரைத் தோள் மாதவன், கேசவன் என்றது நம்பெருமாள், பெரிய பெருமாளாக நினைத்து அவள் பாடினாளாகக் கூறலாம்.
அந்த மாதவன், கேசவன் தான் – ஆண்டாளை திருக் கல்யாணம் பண்ணி அங்கப் பறை கொண்ட மன்னாரும் அரங்கன் தாமே.
————————
“கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதிமணிமாடம் தோன்றுமூர் – நீதியாய்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
“பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும்,
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு”
திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.
ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்யை மனோநந்தன ஹேதவே |
நந்தநந்தன ஸுந்தர்யை கோதாயை நித்யமங்களம் ||
—————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே ஸ்ரீ தரன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.