மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.
பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும்
நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது.
அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில்
பூர்த்தியுள்ள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால்,
பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர்.
நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு
திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார்.
மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.
திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து
ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை
மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.
நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.
அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக
யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார்.
இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி
ஸ்ரீ அண்ணா வரவர முநி சதகத்தில் அருளிசெய்துள்ளார்.
ஸ்ரீ யதிராஜ விம்சதியின் அவதாரிகை
இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில்
தம்முடைய ஆசார்யராகிய ஸ்ரீ மணவாளமாமுனிகளை அநுபவித்து,
நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா,
பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும்
ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து,
புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய்,
ஸ்ரீ மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி அருளிச்செய்த
ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.
பரமபூஜ்யரான ஸ்ரீ மணவாளமாமுனிகள், ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே
உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) ஸ்ரீ நம்மாழ்வார் முதலான
பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும்,
திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய –
முடிந்த பொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம்
(மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும்,
ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும்
ஸ்ரீ யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி,
தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக,
தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு ஸ்ரீ யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை
இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.
ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய
இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.
திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக
மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து,
இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க.
விம்சதி = இருபது.
தனியன்
ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||
பதவுரை:-
ய: – யாவரொருவர்,
யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான,
யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய,
ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை,
வ்யாஜஹார – அருளிச்செய்தாரோ,
ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான,
தம் ஸௌம்ய வர யோகி புங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை),
நௌமி – துதி செய்கிறேன்.
கருத்துரை:-
இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது.
யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில்
யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி.
ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர்.
ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து.
யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.
———————————–
ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரமா விலாஸய பராங்குஸ பாத பக்தம்|
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1
பதவுரை:-
ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,
நித்யஸேவா – ப்ரேம ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,
பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,
ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,
காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,
யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,
மூர்த்நா – தலையால்,
ப்ரணமாமி – வணங்குகிறேன்.
கருத்துரை:-
ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள்.
ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன,
பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில்
திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரிய பிராட்டியாரை ஒத்தவன்
அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள்.
இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும்
எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான்
திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்”
(பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1)
என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய
பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று
மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய
பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற் கொண்டு
‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார்.
அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார்.
‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும்.
அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும்.
பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன,
வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு.
அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க.
‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது
அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.
(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார்.
அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம்
லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார்
வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.
மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே,
தம்மை யடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை
முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார்.
தம் மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின் கண் உண்டாகும் குற்றங்களைக்
களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும்.
மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட
தாமரை மலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக-
மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும்,
பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால்
அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல்
‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி
இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும்.
குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும்
ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.
எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு,
அவர் தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை –
பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார்.
“யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால்
ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும்,
காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது.
ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே,
ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது.
திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது.
இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு
வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)
————–
ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் ஸ்ரீமத் பராங்குஸ பதாம் புஜ ப்ருங்க ராஜம் |
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் யதிராஜ மீடே || 2
பதவுரை:-
ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும்,
ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரைமலர்களில் (தேனைப்பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரைமலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும்,
ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,
யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,
ஈடே – துதிக்கிறேன்.
கருத்துரை:-
துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)
[உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,
அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது]
என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது
அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால்,
பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,
அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி
யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –
ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய்
அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.
அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற
ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது.
இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும்.
பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்
அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய –
ஜீவாத்மஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.
காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,
கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம்,
கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர்.
இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.
பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும்
அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.
ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை
இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.
ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய்,
முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும்,
புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல்,
எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.
இத்தகைய மென்மைத்தன்மையை
‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று
தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.
‘ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில்,
சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட
கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை
ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.
தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு
தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான்
எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.
முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.
இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாகிகமங்களம் செய்யப்படுகிறது.
வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின்கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் –
மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிகமங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது.
இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத்தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)
———————
வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாத குருகேஸ முகாத்ய பும்ஸாம் பாதாநுசிந்தந பரஸ் ஸததம் பவேயம் || 3
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
மநஸா – மனத்தினாலும்,
வாசா – நாவினாலும்,
வபுஷா ச – தேஹத்தினாலும்,
யுஷ்மத் – தேவரீருடைய,
பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை,
பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற,
குரூணாம் – ஆசார்யர்களாகிய,
கூராதி நாத குரு கேஸ முக ஆத்ய பும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய்,
ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக,
பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.
கருத்துரை:-
மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு,
அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்.
கூராதிநாதர்-கூரத்தாழ்வான்.
குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான்.
முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க.
குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும்.
மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-
குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும்.
இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும்.
பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால்
பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும்
அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும்.
அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும்.
பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால்
கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று,
யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)
———————
நித்யம் யதீந்த்ரதவ திவ்ய வபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச ||
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே,
மே – அடியேனுடைய,
மந: – மனமானது,
தவ – தேவரீருடைய,
திவ்யவபு: ஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில்,
நித்யம் – எப்போதும்,
ஸக்தம் – பற்றுடையதாக,
பவது – இருந்திடுக.
அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது,
தவ – தேவரீருடைய,
குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில்,
ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக.
மே – அடியேனுடைய,
கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும்,
தவ – தேவரீருக்கு,
தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே,
க்ருத்யம் – கடமையாக,
அஸ்து – இருந்திடுக.
மே – அடியேனுடைய,
கரண த்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும்,
வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்,
விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.
கருத்துரை:-
கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர்,
அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘
க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம்,
மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு,
அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.
இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும்,
நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று.
பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள்.
க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி.
முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)
——————–
அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ர நாத |
ஸிஷ்டாக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)
பதவுரை:-
நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய,
யதீந்த்ர – யதிராஜரே,
அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில்,
அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில்,
மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு,
அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள,
பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய
அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய ஸரணத்வம், அநந்ய போக்யத்வம்
(எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,
எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.)
என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை,
விதர – தந்தருளவேணும்.
ஸிஷ்ட அக்ர கண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில்
திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று
நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய
கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க
தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை,
நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,
அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது,
ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக,
அஸ்து – ஆயிடுக.
கருத்துரை:-
இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும்,
‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன.
‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின் பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும்
யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது.
‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில்
முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது –
ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை
ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை ஆகிய இவை மூன்றுமே ஆகும்.
நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,
பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே.
முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன்.
ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும்
நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து,
பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து,
அதற்குப் பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே
தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன.
ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன்.
ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து,
யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை
(உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை,
தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி
க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று.
மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால்
அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார்.
திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது.
இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான
ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான
தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக்
கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)
————–
அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி: ஸப்தாதி போக ருசிரந்வஹமேத தேஹா |
மத் பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைக ஸிந்தோ || (6)
பதவுரை:-
தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே,
ஆர்ய – ஆசார்யரே,
யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே,
மே – அடியேனுக்கு,
பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது,
அல்பா அபி – சிறிது கூட,
ந (அஸ்தி) – இல்லை,
ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது,
அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும்,
ஏததே – வளர்ந்து வருகிறது,
ஹா – கஷ்டம்,
அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,
நிதாநம் – மூலகாரணம்,
மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும்.
அந்யத் ந – வேறொன்றுமன்று,
தத் – அந்த பாபத்தை,
வாரய – போக்கியருளவேணும்.
கருத்துரை:-
‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில்,
அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்.
வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால்,
இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ?
இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால்.
தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால்,
தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை.
அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால்,
எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும்,
எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது.
ஆர்ய ஸப்தம்
(1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை
அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது.
(2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும்,
கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரம வைதிகர் என்பதைக் காட்டுகிறது.
ஆராத் = அண்மையும் சேய்மையும்.
(3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு,
எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது.
வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே –
தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும்,
குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டு பண்ணும்
எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்.
‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் –
பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை
எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு.
அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது.
‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ,
அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும்
தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்;
பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.
——————–
வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான,
அஹம் – அடியேன்,
நரவபு: – மனிதவுடல் கொண்ட,
பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே)
வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே,
(ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.)
(உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே
அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.)
ஈத்ருஸ: அபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும்,
ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன்,
அயம் – இந்த மணவாளமாமுனிவன்’
இதி – என்றிவ்வாறாக,
க்ருதிந: அபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட,
ஆதரேண – மனமார்ந்த அன்போடு,
மித: – தங்களில் ஒருவர்க்கொருவர்,
ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக,
அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும்,
அத்ய – இப்போது,
வர்த்தே – இருக்கிறேன்.
தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கி யருள வேணும்.
கருத்துரை:-
அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம்
பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும்.
‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால்
மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து
அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால்,
‘அத் தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத்
தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க.
அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத
நாத யாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப் புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே,
இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.
—————
து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|| (8)
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,
ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்,
ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய்,
துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (
அதனால்) தவ – தேவரீருக்கு,
து:க ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற,
அஹம் – அடியேன்,
த்வத் பாத பக்த: இவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல்,
சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில்,
மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன்,
தத: – அக்காரணத்தினால்,
மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன்,
தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.
கருத்துரை:-
அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால்
அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால்.
யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே
மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி.
ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய,
ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி.
ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல்,
தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல்,
தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல்,
வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய
ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம்.
து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது –
‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி.
அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ,
துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய
துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம்.
மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன்.
இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.
——————
நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,
அஹம் – அடியேன்,
குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும்,
மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும்,
தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும்,
நித்யம் து – எப்போதுமே,
பரிபவாமி – அவமதிக்கிறேன்.
கிஞ்சித் அபி – சிறிதும்,
ந பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை.
அஹோ – இது என்ன ஆஸ்சர்யம்.
இத்தம் – இவ்விதமாக,
ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும்,
அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும்,
பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில்,
ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு,
சராமி – ஸஞ்சரிக்கிறேன்.
தத: – அதனால்
அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன்.
தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.
கருத்துரை:-
கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில்
ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குரு மந்த்ர தேவதைகளை
வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து,
இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும்
போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.
குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல்,
பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ
தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம்.
மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம்.
மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட
மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும்.
இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில் காண்க.
அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும்
தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.
———————
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)
பதவுரை:-
யதிராஜ – வாரீர் யதிராஜரே,
ய: அஹம் – எத்தகைய அடியேன்,
மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால்,
த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும்,
ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ,
ஸ:அஹம் – அத்தகைய அடியேன்,
தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு,
அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு,
ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே,
காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.
ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ
தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,
தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.
கருத்துரை:-
மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார்.
‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால்,
வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும்
மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும்,
ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும்,
ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும்,
பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும்
ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.
பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும்,
ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும்,
அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.
பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும்
ஸ்ரீவைஷ்ணவர்க்குப் பண்ணும் விரோதம் ஆகும்.
அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும்,
ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.
இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது.
மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று
மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க.
ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது.
தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில்
‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட
மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப் பற்றிக்
குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.
————–
பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)
பதவுரை:-
யே யதிராஜ – வாரீர் யதிராஜரே ,
பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது,
மம – அடியேனுக்கு,
பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும்,
பவந்தி யதி – உண்டாகுமேயானால்,
அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது,
கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ?
இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில்,
பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட,
மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே,
மே – அடியேனுக்கு,
ந பவதி – உண்டாகிறதில்லை.
தஸ்மாத் – அதனால்,
அகம் – பாவத்தை,
புந: புந: – மறுபடியும் மறுபடியும்,
குர்வே – செய்துவருகிறேன்.
கருத்துரை:-
ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால்
பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம்
என்று ஊஹித்து அருளிச்செய்கிறார்.
அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை.
அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை.
அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்.
ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற
மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை
நீக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும்.
அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக் கொள்ள வேணும்.
——————–
அந்தர்பஹிஸ் ஸகல வஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ் ஸ்திதமிவாஹம வீக்ஷமாந: |
கந்தர் பவஷ்ய ஹ்ருதயஸ் ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரக மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
அஹம் – அடியேன்,
ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும்,
அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து,
ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை,
புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை,
அந்த: இவ – குருடன் போல்,
அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு,
(அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக,
ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன்.
(ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு
(அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை,
ஹந்த – ஐயோ கஷ்டம்.
கருத்துரை:-
‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று
யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி
தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார்.
‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய்,
உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய்
தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி.
யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய
எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை
இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும்.
காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி,
அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும்
இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால்
அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-12-
—————-
தாபத்ரயீ ஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)
பதவுரை:-
ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே,
தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும்,
மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் ,
தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில்,
ருசி: – ஆசையானது,
பவதி – உண்டாகிறது,
தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில்,
ந ருசி: – வெறுப்பு,
பவதி – உண்டாகிறது.
ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு,
காரணம் – காரணமானது,
மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும்.
நாத – ஸ்வாமீ!,
த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே,
தத் – அப்பாவத்தை,
ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே,
ஹர – போக்கியருளவேணும்.
கருத்துரை:-
‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம்,
நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும்.
அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை,
நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து
அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால்.
தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள்,
(1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன,
(2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன.
(3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன.
இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு.
உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை
வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற
நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும்
‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க.
‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து
ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது.
ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும்
உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை
அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால்.
இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம்,
இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு
உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.-13-
—————-
வாசா மகோசர மஹா குண தேஸிகாக்ர்ய கூராதி நாதகதிதாகில நைச்ய பாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர் ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)
பதவுரை:-
ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே,
வாசாம் அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும்,
ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய,
தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால்,
கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட,
அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன்,
ஏஷ: அஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன்,
ஈத்ருஸ: புந: – இத்தகைய மற்றொருவனோவென்னில்,
ஜகதி – உலகில்,
ந (அஸ்தி) – இல்லவேயில்லை.
தத் – அக்காரணத்தினால்,
தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய,
கருணா ஏவ – கருணையே,
மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக,
பவதி – ஆகிறது.
கருத்துரை:-
இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து,
பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும்
தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார்.
கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது –
‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க.
எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் –
தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார்.
தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி.
‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும்,
வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது.
கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன்,
நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான்
பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன்.
என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று
தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.
—————–
சுத்தாத்மயாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்த நைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத் யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில்,
அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில்,
ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான
ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன,
ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன,
பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால்,
உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்),
மயி ஏவ – அடியேனிடத்திலேயே,
அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன)
தஸ்மாத் – ஆகையால்,
தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது,
மத் கதி: ஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.
(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி,
குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)
கருத்துரை:-
ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள்.
ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில்
ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும்.
பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர்.
அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால்
அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது.
அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல்,
‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.
‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல்,
‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம்.
எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது.
அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே.
ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு
‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம்
அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன.
ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம்.
‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி ,
‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும்.
ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு
அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம்.
நல்ல தகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப் பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே
கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.
ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன்,
ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன்,
துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம்
தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.
கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து
இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத
பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன்.
இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை.
அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும்
அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.
ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட
ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை.
வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன்.
மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று
வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும்
‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.
—————–
ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து || (16)
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே,
அஸ்மதீயா – அடியேனுடையதான,
ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய
ருசி: – ஆசையானது,
பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால்,
நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக,
(மேலும்) ய: – எந்த பாக்யஸாலியானவன்,
த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய,
தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது,
சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில்,
பவதி – இருக்கிறானோ,
தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில்,
ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது,
அவிரதா – நித்யமாக ,
பவத்தயயா – தேவரீருடைய தயையினால்,
மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.
கருத்துரை:-
இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது.
இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால்.
இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும்,
யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ
அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய
இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று.
எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால்
அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது.
எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும்.
அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும்.
எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள்
தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது.
இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது.
பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.
——–
ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச் சக்த: ஸ்வகீய ஜந பாப விமோசநே த்வம் || (17)
பதவுரை:-
யே யதிராஜ – வாரீர் யதிராஜரே,
ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய,
நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன,
எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும்
தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய்,
இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில்,
ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த,
ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன்,
தே – தேவரீருக்கு,
ஸதா – எப்போதும்,
வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய்,
பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.
(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.)
தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால்,
ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின்,
ஜந – தாஸஜநங்களினுடைய,
பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில்,
த்வம் – தேவரீர்,
ஸக்த: பவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.
கருத்துரை:-
ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலே
யிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய
தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அ
தற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு,
இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார்.
அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின்
வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார்.
பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே
இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார்.
இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்)
இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார்.
அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி
நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான்.
அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து
ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும்.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து
அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு
ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது –
புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் –
என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார்.
பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால்
பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.
—————
கால த்ரயேSபி கரண த்ரய நிர்மிதாதி பாப க்ரியஸ்ய ஸரணம் பகவத் க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)
பதவுரை:-
யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும்,
கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட,
அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு)
மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு,
ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது,
பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்.
அந்தப் பொறுமையோ எனில்,
த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே,
கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை
வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில்
அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,
ஸ ஏவ – அந்த ப்ரார்த்தனையே,
பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு,
க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?
கருத்துரை:-
கீழ் ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார்.
இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம்.
முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே,
‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’
(முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான
எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று.
அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே.
அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.
(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி
ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும்,
‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று
தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற
ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே
எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும்,
உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும்
அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள்
நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல்
தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும்
யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக
ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’
(தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று
மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும்.
இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும்
பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)
————–
ஸ்ரீமந் யதீந்த்ர! தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம் ஸ்ரீஸைல நாத கருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தய நாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)
பதவுரை:-
ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற
என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே,
த்வம் – தேவரீர்,
மே – அடியேனுக்கு,
ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும்
திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட,
தாம் – மிகச்சிறந்த,
தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,
அந்வஹம் – நாடோறும்,
விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும்,
(அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி
அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி)
நாத – ஸ்வாமியான யதிராஜரே,
தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு,
விருத்தம் – தடையாகிய,
அகிலம் – எல்லாவற்றையும்,
காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.
கருத்துரை:-
கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும்,
‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய –
முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும்
யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்து முடிக்கிறார்.
‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் ,
‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி.
இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும்,
அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று.
திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும்.
யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும்,
யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.
—————–
விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீ குருஷ்வ யதிராஜ! தயாம்பு ராஸே |
அஜ்ஞோSயமாத்ம குண லேஸ விவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா || (20)
பதவுரை:-
தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற,
யதிராஜ – யதிராஜரே,
அத்ய – இப்போது,
மாமகீநம் – அடியேனுடையதான,
யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ,
இதம் – இந்த விண்ணப்பத்தை,
‘அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன்,
ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ் ச – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன்,
தஸ்மாத் – ஆகையால்,
அநந்ய ஸரண: பவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான்,
இதி மத்வா – என்று நினைத்தருளி,
அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.
இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள
யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.
இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை
ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது.
‘தயைகஸிந்தோ’ (6), ‘
ராமாநுஜார்ய கருணைவ து’ (14),
‘யதீந்த்ர கருணைவ து’ (15),
‘பவத்தயயா’ (16),
‘கருணாபரிணாம’ (19),
‘தயாம்புராஸே’ (20) என்று
தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால்,
ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள
தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.
இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள
‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால்,
இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள
‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற
பகுதி நினைவு படுத்தப் பெற்றதும்,
இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள
‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில்
அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால்,
இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள
‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற
பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே
இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.
——————
இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||-ஸ்ரீ வர வர முனி உத்தர தினசர்யா–ஸ்லோகம் 1-
பதவுரை:
இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,
ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,
ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,
உதிதை: – பேச்சுக்களாலே,
யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,
ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,
வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,
சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,
இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,
நிரத்யயம் – நித்யமான,
ப்ரஸாதம் – தெளிவை,
ஏதி – அடைகிறது.
கருத்துரை:
இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த
தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற
மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,
முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.
‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும்
மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.
பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,
ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.
இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச்சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று
மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது
எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும்.
தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்
ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.
கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹாபுருஷர்கள்.
‘ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘
ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்
ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக்கொண்டு
மாமுனிகள் வேறொருபயனை ஸாதித்துக்கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க.
வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான
ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்
எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.
எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.
இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.
ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.
ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.
இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்
தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,
ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,
ஆத்மஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,
‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும் ஏற்குமென்க.
மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி
மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.
(யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.
—————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–