Archive for the ‘ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்’ Category

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-

March 14, 2016

ஸ்ருதீநாம் பூஷணாநாம் தே
சங்கே ரங்கேந்த்ர பாதுகே
மித: ஸங்கர்ஷ ஸஞ்ஜாதம்
ரஜ: கிம் அபி சிஞ்ஜிதம்—-381-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! உன் மீது பலவிதமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நம்பெருமாள் சஞ்சாரம் செய்யும் போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதியபடி, உருண்டு சப்தம் எழுப்புகின்றன.
இதனைக் காணும் போது, வேதங்கள் ஒன்றுடன் ஒன்று உரைதலால் ஏற்படும் தூசிகள் போன்று உள்ளன.

நம்பெருமாள் வீதியில் சஞ்சாரம் செய்யும் போது, அதனைக் காண நிற்பவர்கள் மீது
பாதுகையின் தூசிகள் விழுந்து நன்மை அளிக்கின்றன.
ஆனால் ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத சூழ்நிலை இருக்கலாம்.
அவர்களுக்கு பாதுகையின் ஒலியானது நன்மை அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் ரத்தினங்கள் இழைக்கப் பட்டுள்ளன –
பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு நடக்கும் போது அவை சப்திக்கின்றன –
அவை உனக்கு அலங்காரமான வேதங்கள் உடைய –சாகை– கொடி -கோஷம் -போல் தோன்றுகின்றன –

—————————————————————

முரபித் மணி பாதுகே பவத்யா:
ஸ்துதிம் ஆகர்ணயதாம் மயா நிபத்தாம்
அவதீர யஸீவ மஞ்ஜு நாதை:
அசமத்கார வசாம்ஸி துர் ஜநாநாம்—-382-

முரன் என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னைப் பற்றிய இந்த ஸ்துதியை நான் கூறும் போது, ஒரு சில துர்மதி கொண்டவர்கள் இதனை தூஷித்துப் பேசக் கூடும்.
அந்தச் சொற்களை நீ உனது அழகான இசை போன்று எழும் சப்தம் கொண்டு அடக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய நியமனத்தினால் உன்னைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
உன் மகிமை அறியாத துஷ்டர் செய்யும் தூஷணையை உன் அழகான நாதத்தாலே நீயே தடுக்கிறாய் போலும் –

———————————————————-

விஹிதேஷு அபிவாதநேஷு வேதை:
கமந உதீரித கர்ப்ப ரத்ந நாதா
மதுரம் மது வைரி பாத ரக்ஷே
பவதீ ப்ரத் யபி வாதநம் விதத்தே—-383-

மது என்னும் அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்கு முன்பாக வேதங்கள் உனக்கு அபிவாதநம்
(சிறியவர்கள் பெரியவர்களை வணங்கும் போது, தான் இன்ன கோத்ரம், தனது பெயர் இன்னது போன்ற விவரங்களைக் கூறுதல்)
செய்தபடி உள்ளன. அப்போது உனது இரத்தினக் கற்களின் இனிமையான நாதம் மூலம்,
அவர்களுக்கு ப்ரதி அபிவாதநம் (ஆசி கூறுதல்) செய்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்தில் உன்னுள் இருக்கும் ரத்தினங்கள் சப்திக்கின்றன-
நான்கு வேதங்களும் உன்னை சேவித்து அபிவாதனம் செய்யும் போது
ஆயூஷ்மான் பவ -என்று நீ அவைகட்கு பதில் சொல்வது போல உன் நாதம் த்வநிக்கின்றது –

———————————————————————

ஸ்வததே கிம் இஹ ஏவ ரங்கநாத:
மயி திஷ்டந் யதி வா பதே பரஸ்மிந்
இதி ப்ருச்சஸி தேவி நூநம் அஸ்மாத்
மதுரைஸ் த்வம் மணி பாதுகே நிநாநை:—384-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எப்படி உள்ளது என்றால் –
என் மீது உறைகின்ற ஸ்ரீரங்கநாதன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது
ஸ்ரீரங்க விமானத்தில் உள்ள அவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது
பரம பதத்தில் உள்ளவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா – என்று நீ அனைவரிடமும் கேட்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் தொனியைக் கேட்கும் போது நீ எங்களைப் பார்த்து பெருமாள்
ஸ்ரீ ரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போது நன்றாக இருக்கிறதா
அல்லது இப்பொழுது என் மீது எழுந்து அருளி உலா வரும் பொழுது நன்றாக இருக்கிறதா அல்லது
பரம பதத்தில் இருப்பது நன்றாக இருக்கிறதா என்று கேட்பது போலே இருக்கிறது –

————————————————————————————————–

அவரோக தஸ்ய ரங்க பர்த்து:
கதிஷு வ்யஞ்ஜித கர்ப்ப ரத்ந நாதா
ப்ரதி ஸம்ல்லபஸீவ பாதுகே த்வம்
கமலா நூபுர மஞ்ஜு சிஞ்ஜிதாநாம்—385-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தப் புரத்திற்கு ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரமாக வருகிறான்.
அப்போது உன்னிடமிருந்து இனிய ஒலி எழுகிறது. இதனைக் கேட்கும்போது எவ்விதம் உள்ளது என்றால் –
அந்தப்புரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் உள்ள தண்டைகள் எழுப்பும் ஒலிக்கு, நீ பதில் அளிப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாத்திக் கொண்டு அந்தப் புரத்திற்கு எழுந்து அருளும் போது மஹா லஷ்மி எதிர் கொண்டு வருகிறாள் –
அவள் திருவடிச் சிலம்பின் நாதத்திற்கு உன் நாதம் பதில் சொல்வது எதிர் நாதம் போல் தோன்றும் –

——————————————————————————-

முரபித் சரணாரவிந்த ரூபம்
மஹித ஆனந்தம் அவாப்ய புருஷார்த்தம்
அநகை: மணி பாதுகே நிநாதை:
அஹம் அந்நாத: இதீவ காயஸி தவம்—-386-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளின்
வடிவுக்கு ஏற்றபடி நீ உள்ளாய். அவனது திருவடிகளின் தொடர்பு மூலம் பேரானந்தம் கொண்டு விளங்குகிறாய்.
இதன் மூலம் நீ பெரும் பேறு பெற்றாய் . உன்னுடைய இனிமையான ஒசை மூலம்,
”நான் ப்ரஹ்மம் என்ற அன்னத்தை அனுபவிப்பவள்”, என்று பாடுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய திருவடித் தாமரையின் உருவத்தைப் பெற்று இருப்பதால் நீ பேரானந்தம் அடைந்து
அந்த புருஷார்த்தத்தை அடைந்த மகிழ்ச்சியால் முக்தர்கள் போலே
அஹம் அந்நாத என்று குற்றம் இல்லாத உன் நாதத்தால் பாடுகிறாய் போலும் –

————————————————————————————–

மதுவைரி பதாம்புஜம் பஜந்தீ
மணி பாதாவநி மஞ்ஜு சிஞ்ஜிதேந
படஸீவ முஹு: ஸ்வயம் ப்ரஜாநாம்
அபரோபஜ்ஞம் அரிஷ்ட சாந்தி மந்த்ரம்—-387-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை
நீ அடைந்து, இன்பமாக உள்ளாய். அப்போது உன்னிடம் இனிமையான நாதம் எழுகிறது. இது எப்படி உள்ளது என்றால் –
இந்த உலகில் உள்ள மக்களின் அனைத்துத் துன்பங்களை நீக்கி, யாருக்கும் தெரியாத ஒரு மந்திரத்தை நீ உச்சரிப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் போது உண்டாகும் உன் சப்தம்
ஜனங்களுடைய எல்லை அற்ற துன்பத்தைப் போக்கும் மந்திரம் போலே ஒலிக்கிறது –

பிறவித் துன்பத்தைப் போக்கும் உயர் மந்திரமே திருவாய் மொழி -என்றதாயிற்று –

—————————————————————————————————–

ஸ்ருதிபி: பரமம் பதம் முராரே:
அநிதங்காரம் அநேவம் இதி உபாத்தம்
இதம் இத்தம் இதி ப்ரவீஷி நூநம்
மணி பாதாவநி மஞ்ஜுபி: ப்ரணாதை:–388-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்று
வேதங்கள் கூற முற்பட்டபோது, அவை அந்தத் திருவடிகள்
இது எனக் கூற இயலாது, இப்படிப்பட்டது என்று கூற இயலாது – என்றே கூறுகின்றன.
ஆனால் உனது இனிய நாதங்கள் மூலம் நீ அவன் திருவடிகள் இவை, இப்படிப்பட்டது – என்று தெளிவாகக் கூறுவது உண்மையே.

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய ஒப்புயர்வற்ற ஸ்வரூபத்தையும் ஸ்ரீ வைகுண்டத்தின் ஸ்வரூபத்தையும்
இப்படிப் பட்டது என அறிய முடியாது என்று வேதம் சொல்கின்றது -அப்படிப்பட்ட ரஹஸ்யமான விஷயங்களை
உன்னுடைய இனிய நாதம் இப்படிப் பட்டது என்று தெளியச் சொல்லி விடுகிறது –

—————————————————————————————–

முநய: ப்ரணிதாந ஸந்நிருத்தே
ஹ்ருதி ரங்கேச்வர ரத்ந பாதுகே த்வாம்
விநிவேஸ்ய விபாவயந்தி அநந்யா:
ப்ரணவஸ்ய ப்ரணிதிம் தவ ப்ரணாதம்—-389-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தின மயமான பாதுகையே! யோகிகள் தங்கள் மனதை, தங்களது யோகாப்யாஸம் மூலம்
மற்ற விஷயங்களில் செல்லாதபடி நிலை நிறுத்துகின்றனர். அப்படிப்பட்ட மனதில் உன்னை த்யானிக்கின்றனர்.
மற்ற தேவதைகளையோ, மற்ற பலன்களையோ நாடாமல், ப்ரணவத்திற்கு ஆதாரமாக உள்ள
உனது நாதத்தை மட்டுமே த்யானிக்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் ஏகாக்ரமாக உன்னை மனத்தில் இருத்தி உன் சப்தத்தை
ஓங்காரத்திற்கு சமமாக எண்ணித் தியானிக்கிறார்கள்-

———————————————————————————————–

மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்தில் ஜனங்கள் பெருமாள் இடத்தில் தங்களுக்கு அபயம் வேண்டிப் பிரார்த்திக்க
நீ உன் சப்தத்தால் அப்படியே ஆகட்டும் என்று கூறுவது போல் இருக்கிறது –

——————————————————————————————

ஸ்ரவஸோ: மம பாரணம் திசந்தீ
மணி பாதாவநி மஞ்ஜுலை: பரணாதை:
ரமயா க்ஷமயா ச தத்த ஹஸ்தம்
ஸமயே ரங்க துரீணம் ஆநயேதா:– –391-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
என்னுடைய அந்திம காலத்தில் நீ செய்ய வேண்டியது என்னவென்றால் –
மஹா லக்ஷ்மியாலும், பூமா தேவியாலும் கைகள் தாங்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை உனது இனிமையான நாதம்
என் காதுகளில் இதமாக ஒலிக்கும்படி அழைத்து வரவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவியுடன் ஸ்ரீ ரங்க நாதனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் காதுகளை உன் இன்பமான நாதத்தாலே திருப்தி செய்து அருள வேண்டும் –

————————————————————————————

அநுயாதி நித்யம் அம்ருதாத் மிகாம் கலாம்
தவ ரங்க சந்த்ர மணி பாது ஜங்க்ருதம்
ஸ்ரவஸா முகேந பரிபுஜ்ய யத் க்ஷணாத்
அஜராமரத்வம் உபயாந்தி ஸாதவ:—-392-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
சந்த்ர கலை என்ற அமிர்தத்தை ஒக்கும்படி உன்னுடைய ஜம் என்ற சப்தம் உள்ளது.
சந்த்ர கலை என்னும் அமிர்தத்தைப் பருகினால் மூப்பு மற்றும் மரணம் ஆகிய நிலைகள் ஏற்படாது.
அது போன்றே உன்னுடைய நாதத்தைக் காது என்ற முகம் கொண்டு பருகினால்,
கிழட்டுத் தன்மையையும் மரணம் அற்ற தன்மையையும் நொடிப் பொழுதில் அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய ஜங்காரம் அமுத ஸ்வரூபமான சந்திர கலையை ஒத்து இருக்கிறது
பெரியோர் உன் நாதத்தை கேட்டால் மோஷம் சித்திக்கும் என்கிறார்கள்
ஆகையால் இரு விதமாகவும் அமிருதத்தை ஒத்து இருக்கும் உன் நாதம் நித்யானந்தத்தைத் தருகிறது –

————————————————————————–

பருஷைர் அஜஸ்ரம் அஸதாம் அநர்த்தகை:
பரிவாத பைசுந விகத்தந ஆதிபி:
மது கைடபாரி மணி பாதுகே மம
ச்ருதி துஷ் க்ருதாநி விநிவாரய ஸ்வநை:—-393-

மது மற்றும் கைடபன் ஆகிய இரண்டு அசுரர்களையும் அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
மற்றவர்கள் பற்றிக் கூறப்படும் புறங்கூறும் சொற்கள், தற் புகழ்ச்சி, மற்றவர்களைத் தூஷிக்கும் சொற்கள் ஆகியவை போன்று
எந்தப் பலனும் இல்லாத சொற்களின் ஓசைகள் காரணமாக எனது காதுகள் பாவம் நிறைந்துள்ளன.
உனது இனிமையான நாதம் மூலம் இந்தப் பாவங்களை நீ நீக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே மஹா பாபிகள் பொறுக்க முடியாதபடி சாதுக்களை நிந்தித்தும் கோள் சொல்லியும்
தங்களைத் தாங்களே ஸ்துதித்தும் வருகிறார்கள்
இவைகளைக் கேட்டு துன்புற்ற என் காதுகளின் பாபங்களை உன் நாதம் கழிக்க வேண்டும் —

———————————————————————————–

பாதுகே பரிஜநஸ்ய தூரத:
ஸூசயந்தி கலு தாவகா: ஸ்வநா:
லீலயா புஜகதல்பம் உஜ்ஜத:
ஸ்ரீமத: த்ரி சதுராந் பத க்ரமாந்—-394-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிற சமயத்தில்,
உனது இனிமையான நாதமானது அவனுக்குக் கைங்கர்யம் செய்பவர்களின் காதுகளில் விழுகின்றன.
தனது லீலைக்காக ஆதிசேஷனை விட்டு எழுந்து ஸஞ்சரிக்கும் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தை
இவ்விதமாக உனது ஒலி தெரிவிக்கிறது அல்லவா?

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் திருப் பள்ளியில் இருந்து எழுந்து நடந்து எழுந்து அருளி வருவதைத் தூரத்தில் இருக்கும்
பரிஜனங்களுக்கு உன்னுடைய நாதம் அறிவிக்கின்றது –
அதை அறிந்து அவர்களும் கைங்கர்யம் செய்வதற்கு சித்தர்கள் ஆகிறார்கள் –

——————————————————————

தேவி தைத்ய தமநாய ஸத்வரம்
ப்ரஸ்தி தஸ்ய மணி பாதுகே ப்ரபோ:
விஸ்வ மங்கள விசேஷ ஸூசகம்
சாகுநம் பவதி தாவகம் ருதம்—395-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
அனைத்து அசுரர்களை அழிக்கும் எண்ணத்துடன் நம்பெருமாள் புறப்படுகிறான்.
அப்போது அவனுக்கு அனைத்து வெற்றியையும் உண்டாக்க வல்ல ஸூபமான சகுனங்களை எழுப்பும்
பறவைகளின் ஒலியானது, உனது சப்தம் மூலமாக வெளிப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே அசூர நிரசனதிற்காக எம்பெருமான் வெகு வேகமாக புறப்படும் போது
உன் இனிய நாதம் பஷியின் சப்தம் போல் ஸூப சகுனமாக ஒலிக்கிறது –

——————————————————————————

தாதும் அர்ஹஸி ததா மம ஸ்ருதௌ
தேவி ரங்க பதி ரத்ந பாதுகே
விஹ்வலஸ்ய பவதீய சிஞ்ஜிதம்
ஸ்வாது கர்ண ரஸநா ரஸாயநம்—396-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகா தேவியே!
மரண காலத்தில் வேதனையுடன் உள்ள எனது காதுகள் என்ற நாக்கில், இனிமை அளிக்கும் விதமாக,
மருந்து போன்ற உன்னுடைய நாதத்தை அளிக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் என் இந்த்ரியங்கள் எல்லாம் கலங்கி இருக்கும் .
அப்போது பகவானுடைய நினைவு வந்தால் ஜீவன் சரீரத்தை விட்டு பகவான் இடம் சென்று சேருவான்
உன்னுடைய இனிய சப்தம் என் காதில் பட்டு எனக்கு அந்த நினைவு வர வேண்டும் –

————————————————————–

அஹம் உபரி ஸமஸ்த தேவதாநாம்
உபரி மம ஏஷ: விபாதி வாஸுதேவ:
தத் இஹ பர தரம் ந கிஞ்சித் அஸ்மாத்
இதி வதஸீவ பதாவநி ப்ரணாதை:—397-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து தேவதைகளுக்கும் நான் (பாதுகை) மேலானவளாக உள்ளேன்.
எனக்கு மேல் வாஸுதேவனாகிய நம்பெருமாள் உள்ளான்.
இந்த உலகில் நம்பெருமாளை விட உயர்ந்த வஸ்து வேறு எதுவும் இல்லை – என்று நீ
உனது இனிய நாதங்களால் கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே நீ உன்னுடைய நாதங்களால் என்னை வணங்கும் தேவர்கள் அனைவருக்கும் மேலே நான் இருக்கிறேன் –
எனக்கு மேலே வாஸூ தேவன் இருக்கிறான் -அவனுக்கு மேலே ஒருவரும் இல்லை –
ஆக அவனே பர தமன் என்று அறிவிப்பவள் போல் உள்ளாய்-

—————————————————————————-

அவநத விபுதேந்த்ர மௌளி மாலா
மது மத சிக்ஷித மந்த்ர ப்ரயாதா
ப்ரதயஸி பரிரப்த சௌரி பாதா
மணிகலஹேந வியாத ஜல்பிதாநி—398-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கிப் பணியும் தேவர்களின் தலைகளில் உள்ள மாலைகளின்
மதுவை நீ பருகுகிறாய் போலும். அதனால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக நீ மெதுவாக நடக்கிறாய்.
நம்பெருமாளின் திருவடிகளை எப்போதும் அணைத்தபடி, உன் மீது உள்ள இரத்தினக் கற்கள்
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள, இப்படியாக மது உண்ட மயக்கத்தில் பேசுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை வணங்கி இருக்கும் தேவ ஸ்ரேஷ்டர்கள் உடைய க்ரீடங்களில் இருக்கிற பூக்களின் தேனைப் பருகியதால்
மந்தமான நடை கொண்டு எம்பெருமானின் திருவடிகளை அணைத்துக் கொண்டவளாய்
உன் இனிய நாதத்தால் உயர்ந்த கருத்துக்களை பிரகாசப் படுத்துகிறாய் –

—————————————————————————————-

ஆஸ்தாநேஷு த்ரிதச மஹிதாந் வர்த்தயித்வா விஹாராந்
ஸ்தாநே ஸ்தாநே நிஜ பரிஜநம் வாரயித்வா யதார்ஹம்
வாஸாகாரம் ஸ்வயம் உபஸரந் பாதுகே மஞ்ஜு நாதாம்
ஆபர்யங்காத் ந கலு பவதீம் ரங்கநாத: ஜஹாதி–399-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
சபா மண்டபங்களில் தனக்கு நடத்தப்படும் உபசாரங்களை ஏற்றபடி உள்ள ஸ்ரீரங்கநாதன்,
மீண்டும் அந்தமபுரம் திரும்பும் போது செய்வது என்ன?
அவர்களில் யார் யாரை எந்த எந்த இடங்களில் நிறுத்த வேண்டுமோ அங்கங்கு நிறுத்தியபடி செல்கிறான்.
இனிமையான நாதம் உடைய உன்னை மட்டும் தன்னுடன் தனது கட்டிலைச் சென்று அடையும் வரை அவன் விடுவதில்லை.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் பல பேர் சேவிக்கும் படியாக பெரிய சபைகளில் எழுந்து அருளி பிறகு உள்ளே எழுந்து அருளுகிறார் –
ஏனைய கைங்கர்ய பரர்களை அவரவர் இடங்களில் நிறுத்தி விட்டு இனிய நாதத்துடன் இருக்கும்
உன்னை மட்டும் படுக்கை அரை வரை கூட்டிப் போகிறார் –

திருவாய்மொழி கோஷ்டி சாற்று முறை ஆஸ்தானத்துக்கு உள்ளேயே நடைபெறும் –

——————————————————————————————–

அந்தர் ந்யஸ்தைர் மணி பிருதிதம் பாதுகே ரங்க பந்தௌ
மந்தம் மந்தம் நிஹித சரணே மஞ்ஹுளம் தே நிநாதம்
பச்யந்த்யாதி க்ரம பரிணதே: ப்ராக்தநீம் தாம் பராயா:
மன்யே மித்ரா வருண விஷயாத் உச்சரந்தீம் அவஸ்தாம்—-400-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் வெதுவாகத் தனது திருவடியை வைக்கும் போது,
உன்னுள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் சப்தம் செய்கின்றன. இந்த இனிய நாதம் எப்படி உள்ளது என்றால்,
பஸ்யந்தீ என்ற முதல் அவஸ்தையை உடைய சப்தங்களைக் கொண்ட,
நாபிக் கமலத்தில் இருந்து வெளியே எழும் முதல் அவஸ்தை போன்று உள்ளது.

நாபியில் இருந்து கிளம்பும் காற்றானது சப்தமாக வெளி வருகிறது. இந்தச் சப்தம் நான்கு நிலைகளில் உள்ளது –
பரா, பச்யந்தி, மத்யமா மற்றும் வைகரி என்பதாகும். முதல் மூன்றும் நமது காதுகளால் நாம் கேட்கக் கூடிய சப்தங்கள் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் பெருமாள் மெதுவாய்த் திருவடி வைக்கும் போது உன் குமிழியில் உள்ள ரத்னங்கள்
மிருதுவாக சப்தம் செய்கின்றன -அது சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட சப்தத்தின் நான்கு அவஸ்தைகளுக்குள் –
பரா -என்கிற முதல் அவஸ்தை போல் உள்ளது
மித்ரா வருணா தேவதைகள் ஆட்சி செய்யும் தொப்புள் பகுதியில் இருந்து வரும் நாதம் போல -உள்ளது –

——————————————————————————————-

ப்ரக்யாதாநாம் பரிஷதி ஸதாம் காரயித்வா ப்ரதிஜ்ஞாம்
ப்ராயேண த்வாம் ப்ரதித விபவாம் வர்ணயந்தீ மயா த்வம்
பாதந்யா ஸக்ரமம் அநுகுணாம் ப்ராப்ய ரங்காதி ராஜாந்
பத்ய ஆரம்பாந் கணயஸீ பரம் பாதுகே ஸ்வைர் நிநாதை:—-401-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் புகழுடைய பெரியவர்கள் நிறைந்த கூட்டத்தில் உன்னைப் பற்றிய
ஆயிரம் ஸ்லோகங்களை இயற்றுகிறேன் என்று என்னைச் சபதம் செய்ய வைத்தாய்.
இதன் மூலம் எங்கும் புகழ் கொண்ட நீ, என் மூலமாக உனது புகழை மேலும் புகழ்ந்து கொண்டாய்.
ஒவ்வொரு ஸ்லோகமும் இயற்ற இயற்ற, நம்பெருமாள் திருவடிகளை எடுத்து வைப்பதற்கு ஏற்றபடி உள்ள
உனது நாதம் கொண்டு ஒன்று, இரண்டு என்று லோகங்களின் தொடக்கத்தை எண்ணுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரெங்க நாதன் எழுந்து அருளும் போது உன்னிடம் இருந்து சப்தம் உண்டாகிறது –
ஒரு இரவுக்குள் ஆயிரம் ஸ்லோகங்கள் பிரசித்தமான மண்டபத்தில் பண்ணும் படியாக என்னை நியமித்து
நீயே அவைகளை ஓன்று இரண்டு என எண்ணுவது போலே அந்த சப்தம் அமைந்து உள்ளது –

—————————————————————

விஷ்ணோர்: அஸ்மிந் பத ஸரஸிஜே வ்ருத்தி பேதைர் விசித்ரை:
ஐதம் பர்யம் நிகம வசஸாம் ஐக கண்ட்யேந ஸித்தம்
இத்தம் பும்ஸாம் அநி புணதியாம் பாதுகே த்வம் ததேவ
ஸ்ப்ருஷ்ட்வா ஸத்யம் வதஸி நியதம் மஞ்ஜுநா சிஞ்ஜிதேந—402-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உபநிஷத்துக்களும் சேர்ந்து நின்று ஒரே குரலாக, தங்களது வெவ்வேறு
ஆற்றல்கள் மூலமாக, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பற்றியே பேசுகின்றன.
இந்தச் சப்தமானது உனது இனிய நாதத்தை ஒத்துள்ளது. இதனை இவ்விதம் அறியாமல் உள்ளவர்களுக்கு,
தாமரை மலர் போன்ற நம்பெருமாளின் திருவடிகளைத் தொட்டு, உனது நாதம் மூலமாகவே சத்தியம் செய்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன்னை சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிற காலத்தில் நீ செய்யும் சப்தம் எம்பெருமானே
வேதங்களும் உபநிஷத்துக்களும் பிரதிபாதிக்கும் தெய்வம் என்று அவர் திருவடிகளையே தொட்டு சத்யம் செய்வது போல் இருக்கிறது –

—————————————————————–

ஆம்நாயை: த்வாம் அநிதரபரை: ஸ்தோதும் அப்யுத்யதாநாம்
மந்யே பக்த்யா மதுவிஜயிந: பாதுகே மோஹ பாஜாம்
சிக்ஷா தத்த்வ ஸ்கலித வசஸாம் சிக்ஷயஸ்யேவ பும்ஸாம்
மாத்ராதீநி ஸ்வயம் அநுபதம் மஞ்ஜுபி: ஸ்வைர் நிநாதை:—-403-

மது என்ற அசுரனை வெற்றி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் அனைத்தும் உன்னைத் தவிர
மற்ற யாரையும் உயர்வாகக் கூறுவதில்லை. அப்படிப்பட்ட வேதங்கள் கொண்டு உன்னைக் கூறியபடி வரும்போது,
நடுவில் உன் மீது கொண்டுள்ள ப்ரியம் காரணமாக வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறியபடி உள்ளன.
அப்போது அவர்களுக்கு எழுத்துக்களில் உள்ள குறில், நெடில் முதலானவற்றைப் பற்றிய விளக்கத்தை
உனது இனிமையான நாதம் மூலம் புரிய வைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உயர்ந்த பரதத்வம் ஆகிய எம்பெருமானை வேதங்கள் ஸ்துதிக்கின்றன-
மஹான்கள் அவர் குண நலன்களின் உயர்வில் ஈடுபட்டு இடையில் மயக்கம் உற்று ஸ்துதிக்க முடியாமல் தடுமாறும் போது
உன் நாதம் சரியான சொற்களை அவர்களுக்குச் சொல்லி வைப்பது போல் இருக்கிறது –

————————————————————————————

லக்ஷ்மீ காந்தம் கமபி தருணம் ரத்யாய நிஷ்பதந்தம்
ராகாத் த்ரஷ்டும் த்வரித மநஸாம் ராஜதாதீ வதூநாம்
ப்ரத்யா தேசம் பஜதி மதுரை: பாதுகே சிஞ்ஜிதைஸ்தே
சேதோஹாரீ குஸுமதநுஷ: சிஞ்ஜிநீ மஞ்ஜுநாத:—-404-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு
திருவரங்கத்தின் வீதிகளில் ஸஞ்சாரமாக வருகிறான். மிகவும் அழகான இளைஞனாக உள்ள அவனைக் காண ஆசை கொண்டு,
திருவரங்கத்தின் பெண்கள் ஓடி வருகின்றனர். அவர்களது மனதை இவ்விதம் காமதேவன் தனது வில் கொண்டு சப்தம் செய்கிறான்.
அவனது வில்லின் ஓசையானது, உன் இனிமையான நாதத்தின் மூலம் தள்ளப்பட்டு விடுகிறது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் சௌந்தர்யத்தின் உருவாகத் திருவீதியில் எழுந்து அருளும் போது பெண்கள்
ஆவல் கொண்ட மனத்தவர்களாக தரிசனத்திற்கு வீட்டில் இருந்து வருகின்றனர் –
அப்பொழுது அவர்கள் மனத்தைக் கவர வரும் மன்மதன் புஷ்ப தனுசைத் தட்டி நாண் ஒலி எழுப்புகிறான் –
ஸ்ரீ பாதுகா தேவியே அப்பொழுது உன்னுடைய நாதங்கள் அந்த நாண் ஒலியை விரட்டி விடுகின்றன –
இவர்களும் காமத்தில் இருந்து விடுபட்டு உன்னையே தொடர்கிறார்கள் –

——————————————————————————-

ரங்காதீசே ஸஹ கமலயா ஸாதரம் யாயஜூகை:
ஸாரம் திவ்யம் ஸவநஹ விஷாம் போக்தும் ஆஹூயமாநே
நேதீயோபிர் நிகம வசஸாம் நித்யம் அம்ஹ: ப்ரதீபை:
ப்ரத்யாலாபம் திசதி பவதீ பாதுகே சிஞ்ஜிதை: ஸ்வை:—405-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யாகம் இயற்றுபவர்கள் அந்த வேள்வியின் அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீரங்கராச்சியாருடன் கூடியுள்ளவனான ஸ்ரீரங்கநாதனை அழைக்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
அனைத்து வேதங்களுக்கும் ஒப்பாக உள்ளவையும், கேட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களையும்
தொலைப்பதாக உள்ளதும் ஆகிய உனது இனிய நாதம் மூலம்,
அவர்களிடம், “இதோ! நம்பெருமாள் வந்து விட்டான்”, என்று அறிவிப்பதாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே யாகம் செய்பவர்கள் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்க தாயார் உடன் எம்பெருமானை அழைக்கிறார்கள்
நீ உண்டு பண்ணுகிற தொனி வருகிறேன் என அதற்கு பதில் சொல்வது போல் இருக்கிறது –

—————————————————————————–

உபாஸ்ய நூநம் மணி பாதுகே த்வம்
ரங்கேச பாதாம்புஜ ராஜ ஹம்ஸீம்
பத்யு: ப்ரஜாநாம் அலபந்த பூர்வம்
மஞ்ஜுஸ்வநம் வாஹந ராஜ ஹம்ஸா:—406-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளின் திருவடிகளில் நீ ராஜ ஹம்ஸமாகத் திகழ்கிறாய்.
உனது இனிமையான நாதத்தின் மூலம், உன்னை உபாஸனம் செய்த ப்ரம்மனின் அன்னங்கள்,
அழகான குரலைப் பெற்றன போலும்.

ஸ்ரீ பாதுகையே பிரம்மாவுடைய வாகனமான ராஜ ஹம்சங்கள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு
ஹம்ஸம் போன்ற உன்னை ஆராதித்து இனிமையான சப்தத்தை அடைந்து உள்ளன –

————————————————————————————-

அநாதி மாயா ரஜநீ வசேந
ப்ரஸ்வாப பாஜாம் ப்ரதி போத நார்ஹம்
பஸ்யாமி நித்யாதி வாஸரஸ்ய
ப்ரபாத நாந்தீமிவ பாதுகே த்வாம்—407-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தொடக்கம் என்பதே இல்லாத மாயை போன்றும், எப்போதும் இரவு என்னும்படியாக
உள்ளதும் ஆகிய ஸம்ஸாரத்தில் துன்பம் அடைந்தபடி அனைவரும் உள்ளனர்.
இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய காலை நேரம் என்னும் மோக்ஷத்தை அறிவிக்கும் ஸூப்ரபாதம் போன்று உனது நாதம் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பிரகிருதி என்ற ராத்ரியில் அகப்பட்டு நாங்கள் துன்புற்று இருக்கிறோம் –
உன் இனிய நாதம் ஜனங்களை எழுப்பி எப்போதும் பகலாக இருக்கும் மோஷத்திற்கு அழைத்துச் செல்ல
மங்கள வாத்தியம் வாசிப்பது போல் இருக்கிறது -நிலையான இன்பத்தின் ஸூபாரம்பமாக இருக்கிறது –

————————————————————-

ஸ்ரூணோது ரங்காதிபதி: ப்ரஜாநாம்
ஆர்த்த த்வநீம் க்வாபி ஸமுஜ்ஜிஹாநம்
இதீவ மத்வா மணி பாதுகே த்வம்
மந்த ப்ரசாரைர் ம்ருது சிஞ்ஜிதாஸி—408-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளை நீ உன் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்கிறாய்.
அப்போது ஒரு சிலர் மிகுந்த வருத்தத்தில் இருந்தபடி நம்பெருமாளிடம் தங்கள் குறைகளைக் கூறக் கூடும்.
அவர்கள் கூறுவது அவன் செவிகளில் விழாமல் போய் விடுமோ என்று எண்ணி, மெதுவாக சப்தம் எழுப்பியபடி நீ செல்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே சேதனர்கள் சம்சார துக்கத்தினால் எழுப்பும் அபயக் குரல் எம்பெருமான் திருச் செவிகளில் பட வேண்டும்
என்று நீ மெதுவாக சப்தித்துக் கொண்டு செல்கிறாய் போலும்

———————————————————————

அந்தே மம ஆர்த்திம் சமயிஷ்ய தஸ்தாம்
அக்ரே ஸராணி ஆபதத: முராரே:
ஸ்ரமோ பபந்ந: ஸ்ருணுயாம் பவத்யா:
சீதாநி பாதாவநி சிஞ்ஜாதாநி—-409-

ஸ்ரீரங்க நாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் மிகவும் களைப்புடன் நான் உள்ள போது,
அந்தத் துன்பத்தை நீக்க நம்பெருமாள் மிகவும் வேகமாக ஓடி வருவான்.
அப்போது அவனுக்கும் முன்பாக ஓடி வரும் உனது இனிமையான நாதத்தை நான் கேட்பேனாக.

ஸ்ரீ பாதுகையே கடைசிக் காலத்தில் நான் அதிகமாக ஸ்ரமப்படுவேன் –
அப்போது பெருமாளுடன் நீ எழுந்து அருளும் போது உன் இனிய சப்தம் என் சிரமத்தை போக்க வேண்டும் –

——————————————————–

ஸ்வாதூநி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஸ்ரோத்ரை: பிபந் தஸ்தவ சிஞ்ஜிதாநி
பசந்தி அவித்யா உபசிதாந் அசேஷாந்
அந்தர் கதாந் ஆத்ம வித: கஷாயாந்—-410-

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சிறந்த ருசியுடன் கூடிய உன்னுடைய மருந்து போன்ற நாதங்களை,
தங்களை முழுவதுமாக உணர்த்தவர்கள் தங்கள் காதுகளால் பருகுகின்றனர்.
இதனால் தங்களது அறியாமையால் உள்ளே வளர்ந்துள்ள உலக விஷயங்களின் மீதுள்ள ஆசை என்பதை அவர்கள் எரித்து விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே அதிக இன்பமாய் இருக்கும் உன் நாதத்தைக் கேட்ட மகாநீயர்கள் அவித்யையினால் உண்டான
தங்கள் மனதில் உள்ள ராக த்வேஷாதி தோஷங்களை ஒழிக்கிறார்கள் –

———————————————————————

அவைமி ரங்காதிபதே: ஸகாசாத்
அவேக்ஷ மாணேஷு ஜநேஷு ரக்ஷாம்
உதார நாதாம் மணி பாதுகே த்வாம்
ஓம் இதி அநுஜ்ஞாக்ஷரம் உத் கிரந்தீம்—-411-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் கம்பீரமான முறையில் நம்பெருமாள்
உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிறான். அப்போது ஏற்படும் உனது சப்தம் எவ்விதம் உள்ளது தெரியுமா?
தங்கள் துன்பத்தை நீக்க வேண்டும் என்று நம்பெருமாளிடம் வேண்டுபவர்களிடம், “அப்படியே ஆகட்டும்”, எனக் கூறுவது போல் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே ஜனங்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஸ்ரீ ரங்க நாதனைக் கேட்கிற காலத்தில்
உன் இனிய சப்தம் அப்படியே ஆகட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது –

——————————————————————————-

மதுத் விஷ: ஸ்வைர விஹார ஹேது:
மஞ்ஜு ஸ்வநாந் சிக்ஷயஸீவ மாத:
பர்யந்த பாஜோர் மணி பாத ரக்ஷே
பத்மா தரண்யோர் மணி நூபுராணி—-412-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தாயே! மது என்ற அரக்கனின் சத்ருவாகிய நம்பெருமாளின்
இரு பக்கமும் அமர்ந்துள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இருவரின் தண்டைகள் இனிமையான ஒலி எழுப்புகின்றன.
நம்பெருமாளுடன் உன் விருப்பப்படி ஸஞ்சாரம் செய்யும் நீ, உனது இனிய நாதத்தை அந்தத் தண்டைகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய சஞ்சார காலத்தில் உன் இனிய நாதத்தைக் கேட்டால் பக்கத்தில் உள்ள
ஸ்ரீ தேவி பூமி தேவி யுடைய திருவடித் தண்டைகளுக்கு சப்தங்களைப் பழக்கி வைப்பது போல் இருக்கிறது –

—————————————————————————

ப்ராஸ்தா நிகேஷு ஸம்யேஷு ஸமாகதேஷு
ப்ராப்தா பதம் பரிசிதம் த்விஜ புங்கவேந
புஷ்ணாஸி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வம்
புண்யாஹ கோஷம் இவ கர்ப்ப மணி ப்ரணாதை:—-413-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்ய வேண்டிய கால கட்டங்களில்,
பறவைகளில் உயர்ந்தவனான கருடனால் அடிக்கடி அடையப்படும் திருவடிகளை நீ அடைகிறாய்.
உன்னுள் இருக்கும் இரத்தினக்கற்கள் அப்போது இனிமையான நாதம் ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும் போது க்ஷேமம் அளிக்க வல்ல மந்திரங்களை நீ கூறுவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உடைய சஞ்சார காலத்தில் உன்னுள் இருக்கும் இரத்தினங்களின் சப்தங்களைக் கேட்கிற போது
பகவானுக்கு ஷேமங்களை உண்டு பண்ண ஸ்வஸ்தி மந்த்ரங்களை நீ ஜபிப்பது போல் இருக்கிறது –

————————————————————-

ஆர்த்த த்வநே: உசிதம் உத்தரம் அந்த காலே
கர்ணேஷு மஞ்ஜு நிநதேந கரிஷ்ய ஸீதி
வாஸம் பஜந்தி க்ருதிநோ மணி பாத ரக்ஷே
புண்யேஷு தேவி புளிநேஷு மருத் வ்ருதாயா:—-414-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தங்களது இறுதி காலத்தில் பெரியவர்கள்,
மிகவும் தூய்மையான காவேரியின் மணல்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்கின்றனர். ஏன் தெரியுமா?
தங்களது முடிவு காலத்தில் ஏற்பட வுள்ள வேதனை காரணமாக எழுப்பும் துன்ப ஒலிகளை,
உன்னுடைய செவிகளில் உள் வாங்கி, அவர்களுக்கான மறு மொழியை உனது நாதத்தினால் அளிப்பாய் என்பதால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே பாக்யசாலிகள் சம்சாரத் துன்பம் பெறாமல் செய்யும் அபயக் குரலுக்கு நீ உன் இனிய ஒலியினால் பதில் அளிப்பாய் என்று
தம்முடைய அந்திம காலத்தில் புண்யமான காவேரியின் மணலில் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கின்றனர் –

—————————————————-

தூத்யே பலேர்விமதநே சகடஸ்ய பங்கே
யாத்ரா உத்ஸவேஷு ச விபோ: ப்ரதிபந்ந ஸக்யா
வீராயிதாநி பிருதோ பஹிதாநி நூநம்
மஞ்ஜுஸ்வநை: ப்ரதயஸே மணி பாதுகே த்வம்—-415-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்;
மஹாபலிச் சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கினான்; சகடாஸுரனை முறித்தான். இப்படியாக அவன் நடந்திய வீரச் செயல்கள்
காரணமாக அவனுக்கு ஏற்பட்ட பட்டப் பெயர்களை, அவன் திருவடிகளை விட்டு எப்போதும் பிரியாமல் உள்ள நீ,
உனது இனிய நாதங்கள் மூலம் கூறியபடி உள்ளாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தர்ம புத்திரருக்காகத் தூது போன சந்தர்ப்பத்திலும்
பலி சக்ரவர்த்தியை அடக்கிய போதும் -சகடாசூரனை முறித்த போதும் உத்சவ காலங்களிலும்
எப்போதும் பிரியாத சிநேகத்தை நீ உடைத்தாய் இருக்கிறாய் –
உன் இனிய நாதத்தால் எம்பெருமானுடைய இப்படியான வெற்றிகளை பிரசித்தப் படுத்துகிறாய் –

——————————————————————

ஸ்தோதும் ப்ரவ்ருத்தம் அபி மாம் நிகம ஸ்துதாம் த்வாம்
வ்யாஸஜ்யமாந கரணம் விஷயேஷு அஜஸ்ரம்
அந்தர் மணி த்வநிபி: அச்யுத பாத ரக்ஷே
ஸம்போதயஸி அநுகலம் ஸஹஜ அநு கம்பா—416-

அடியார்களை நழுவ விடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களில் துதிக்கப்பட்ட உன்னை நான் துதிக்கத் தொடங்குகிறேன்.
ஆயினும் நான் அந்தத் துதிகளில் கவனம் செலுத்தாமல், உலக விஷயங்களில் நாட்டம் கொண்டபடி உள்ளேன்.
இதனைக் கண்ட நீ, என் மீது இயல்பாகவே தயையுடன் உள்ளவளான நீ, செய்வது என்ன –
உன்னுடைய இரத்தினக் கற்களின் இனிமையான நாதம் மூலம் எனது கடமையை நினைவு படுத்தியப்படி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே வேதங்களால் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட உன்னை ஸ்துதி செய்யும் இந்த மகத்தான கார்யத்தை ஏற்ற நான்
இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு இருக்கும் நேரம் நீ உன் இரத்தினங்களின் நாதத்தால் என் கடமையை நினைவூட்டுகிறாய்
என்னைத் தெளிவுறச் செய்கிறாய் –

———————————————————————–

தேவஸ்ய தாந வரிபோ: மணி பாத ரக்ஷே
ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதிபந்த நாதாம்
மா பைஷ்ட ஸாதவ இதி ஸ்வயம் ஆலபந்தீம்
ஜாநே ஜகத் த்ரிதய ரக்ஷண தீக்ஷிதாம் த்வாம்—-417-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அசுரர்களுக்கு சத்ருவாக நம்பெருமாள் உள்ளான்.
அவனுடைய ஸஞ்சாரம் என்ற சுப செயலின் இனிமையான நாதத்தை நீ அடைகிறாய்.
மூன்று உலகங்களையும் காப்பதில் நீ உறுதியுடன் உள்ளாய் போலும். அதனால் தான் உனது நாதம் மூலம்,
”நல்லவர்களே! நீங்கள் அஞ்ச வேண்டாம்”, என்று கூறுகிறாய் என நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உத்சவ காலங்களிலே எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
மூன்று உலகங்களையும் காப்பாற்றுவதில் நோக்கு உள்ளவளாக இருக்கும் உன்னுடைய நாதம்
நல்லவர்களே பயப்பட வேண்டாம் என்று சொல்வதாக நினைக்கிறேன் —

——————————————————————————–

ஸ்வச்சந்த விப்ரம கதௌ மணி பாதுகே த்வம்
பாதாரவிந்தம் அதிம்கம்ய பரஸ்ய பும்ஸ:
ஜாதஸ்வநா ப்ரதி பதம் ஜபஸீவ ஸூக்தம்
வித்ராவணம் கிமபி வைரிவரூதிநீநாம்—-418-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாள் தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் என்ற
விளையாட்டைச் செய்தபடி உள்ளான். நீ அப்போது அவனது திருவடிகளை அடைந்து, இனிமையான நாதம் உண்டாகப் பெற்றாய்.
அவன் அருகில் வர முயற்சிக்கும் அவனது சத்ரு சேனைகளை, அவன் அருகில் வர விடாமல்,
உனது நாதம் மூலம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பரம புருஷனுடைய விளையாட்டான சஞ்சார காலத்தில் தாமரை போன்ற அவன் திருவடியை அடைந்து
சத்ரு சைன்யங்களைத் துரத்தக் கூடிய மந்திரங்களை அடி வைப்பு தோறும் ஜபிக்கிறாய் போலும்

திருவாய்மொழியை அத்யயனம் செய்து மனதில் பதித்தால் கோபாதி சத்ருக்கள் ஒழியும் –

—————————————————————————-

ரக்ஷார்த்தம் ஆஸ்ரித ஜநஸ்ய ஸமுஜ்ஜிஹாநே
ரங்கேஸ்வரே சரதி சேஷ புஜங்க தல்பாத்
நாதாஸ்தவ ஸ்ருதி ஸுகா மணி பாத ரக்ஷே
ப்ரஸ்தாந சங்கநி நாதாத் ப்ரதமே பவந்தி—-419-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சரத் காலத்தின் போது (ஐப்பசி மாதம்)
தன்னை அண்டியவர்களைக் காப்பதற்காக ஆதிசேஷன் என்ற படுக்கையை விட்டு எழுகிறான்.
அப்போது அனைவரின் காதுகளுக்கும் இனிமையாக உள்ள உனது நாதங்கள்,
அவனது புறப்பாடு நேரத்தில் ஊதப்படும் சங்கின் ஒலியை விட முந்தியதாக ஒலிக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆஸ்ரிதர்களை காப்பாற்ற சரத் காலத்தில் சேஷன் ஆகிற படுக்கையில் இருந்து
உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
அப்போது உன்னிடம் இருந்து உண்டாகும் சப்தம் சங்கம் முதலிய வாத்திய சப்தங்களுக்கும் முந்தினதாக இருக்கிறது –

——————————————————-

நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரிய தமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதி யுள்ளான் போலும்.

ஸ்ரீ பாதுகையே கோபிகைகளுக்குப் பிரியனான எம்பெருமான் தன் திருவடிகளுக்கு கோபிகையாக -ரஷ்கையாக -இருப்பதால்
உன்னை ஒரு போதும் ப்ரீதியினால் விடுவது இல்லை -உன் நடையினால் நீ கோஷ விபவம் -ஒலியின் பெருமை –
நிறைந்து உள்ளாய் -ஆகவே ஸ்ரீ ரங்கத்தை அடைந்து இருந்தும் ஸ்ரீ ரங்க நாதன் உன்னை விடுவது இல்லை –

————————————————————–

ப்ராய: பதாவநி விபோ: ப்ரணதார்த்தி ஹந்து:
ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதம உத்யதாநி
த்வத் சிஞ்ஜிதாநி ஸபதி ஸ்வயம் ஆர பந்தே
காலோசிதாந் கனக காஹள சங்க நாதான்—-421-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னை வணங்கி நிற்பவர்களின் துயரம் அனைத்தையும் நீக்குபவனாகிய
நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யத் தயாராகிறான்.
அந்த சுப நேரத்தை குறிக்கும் வகையில் உனது இனிமையான நாதங்கள் எழுகின்றன.
இதனைக் கேட்ட எக்காளம், சங்கு ஆகிய வாத்தியங்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு புறப்படும் போது முதலில் உண்டாகும் உன் சப்தம்
பிரயாணத்திற்கு வேண்டிய எக்காளம் சங்கம் பேரி இவைகளின் சப்தங்கள் போல் இருக்கிறது –

ஆழ்வார் திவ்ய ஸூக்தியை முறைப்படி சேவித்தால் பதினெட்டு வாத்தியங்களின் நாதத்தை காட்டிலும் இன்பமாக இருக்குமே –
பாவின் இன்னிசை பாடித் திரியலாமே –

———————————————————————————-

ஆம்ரேடித ஸ்ருதி கணைர் நிநதை: மணீநாம்
ஆம்நாய வேத்யம் அனுபாவம் அபங்குரம் தே
உத்காஸ்யதம் நியதம் இச்சஸி ஸாம காநாம்
காந ப்ரதாநம் இவ சௌரி பதாவநி த்வம்–422-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களால் அறியக்கூடிய உன்னுடைய மேன்மையைக் குறித்து
சாம வேதம் அறிந்தவர்கள் கூறியபடி உள்ளனர்.
நீ அவர்களின் வேதத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மேலும் சங்கீதம் கற்றுக் கொடுக்க விரும்புகிறாய் போலும்.
அதனால் தான் உனது இரத்தினக்கற்கள் கொண்டு இனிய ஒலி எழுப்பியபடி உள்ளாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உன்னுடன் சஞ்சாரம் செய்யும் போது உண்டாகும் உன் நாதம்
பெருமைகளைக் கூறி சாம கானம் செய்யும் மகாநீயர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது போல் இருக்கிறது –

—————————————————————

ரத்யாஸு ரங்க ந்ருபதே மணி பாத ரக்ஷே
த்வத் கர்ப்ப ரத்ந ஜநித: மதுர: ப்ரணாத:
ஸந்தர்சந உத்ஸுக தியாம் புர ஸுந்தரீணாம்
ஸம்பத்யதே ஸ்ரவண மோஹன மந்த்ர கோஷ:—423-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்போது உன்னுள்ளே இருக்கும் இரத்தினக் கற்கள் இனிமையான நாதம் செய்கின்றன.
இதனைக் கேட்ட அங்கிருந்த பெண்களின் காதுகள், எதிரில் நிற்கும் நம்பெருமாளையும் மறந்து, அந்தச் சப்தத்தில் மயங்கி நின்றன.

ஸ்ரீ பாதுகையே திரு வீதியில் பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளும் போது உண்டாகும் இனிய நாதம்
மற்றைய விஷயங்களை மடியச் செய்யும் மந்த்ரமாக ஆகிறது –

———————————————————————-

ஆகஸ்மிகேஷு ஸமயேஷு அபவார்ய ப்ருத்யாந்
அந்த:புரம் விசதி ரங்க பதௌ ஸலீலம்
வ்யாமோஹநேந பவதீ ஸுத்ருசாம் அதீதே
மஞ்ஜுஸ்வநேந மதநோபநிஷத் ரஹஸ்யம்—-424-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திரு வீதிகளில் ஸஞ்சாரமாகச் சென்று கொண்டிருக்கும் நம்பெருமாள்
திடீரென அதனை நிறுத்தி விட்டு, தனது அந்தப்புரத்தில் நுழையக் கூடும்.
அந்த நேரத்தில் அவன் அவ்வாறு வருவதை, நீ முன் கூட்டியே உனது நாதந்தினால் அறிவிக்கிறாய்.
இதனால் அங்குள்ள பிராட்டிகளுக்கு மன்மத சாஸ்த்ரங்களை ஓதி, அவர்களை மயங்க வைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் எதிர்பாராது பிராட்டியின் சந்நிதியில் பிரவேசிக்கும் போது இன்பமான உன் நாதத்தால்
மன்மத வேதாந்தத்தின் அபூர்வமான பொருளை பிராட்டிக்கு சொல்லித் தருகிறாய் –

——————————————————————-

யாத்ரா விஹார ஸமயேஷு ஸமுத்திதம் தே
ரங்காதிபஸ்ய சரணாவநி மஞ்ஜு நாதம்
பர்யாகுல இந்த்ரிய ம்ருக க்ரஹணாய பும்ஸாம்
ஸம் மோஹநம் சபர கீதம் இவ ப்ரதீம:—-425-

ஸ்ரீரங்ககநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மான்களைப் பிடிப்பதற்காகக் கானகத்தில் வேடர்கள் இனிய இசையை எழுப்புவது வழக்கம் ஆகும்.
இது போன்று நம்பெருமாள் வீதிகளில் ஸஞ்சாரம் வரும்போது நீ செய்வது என்ன?
எங்கள் போன்றவர்களின் புலன்கள் என்னும் மானைப் பிடிக்க, உனது நாதம் என்னும் இனிய இசையை
எழுப்பியபடி வருகிறாய் என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானால் தரப்பட்ட கண் முதலிய இந்த்ரியங்கள் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடாமல் கெட்ட வழிகளில் செல்கின்றன –
வேடன் பாட்டுப் பாடி அலைந்து திரியும் மான்களை மறைந்துள்ள குழியில் வீழ்த்துப் பிடிப்பது போல்
உன் நாதம் எங்கள் இந்த்ரியங்களைக் கட்டுப் படுத்துகிறது –

திருவாய்மொழியை அர்த்தத்துடன் அனுசந்தானம் செய்பவர் மனம் கெட்ட வழிகளில் செல்லாது –

———————————————————————–

ப்ராயேண ஸஹ்ய துஹிது: நதராஜ கன்யா:
ஜாமாது: ஆகமந ஸூசநம் ஈஹமாநா
மஞ்ஜு ப்ரணாத ஸுபகை: மணி பாதுகே த்வாம்
அந்தர்யுதாம் அக்ருத யௌதக ரத்ந கண்டை:—-426-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! காவேரியின் மாப்பிள்ளையான நம்பெருமாள்,
காவேரியின் கரைக்கு வருவதை, காவேரிக்கு அறிவிக்க ஸ்ரீரங்கநாச்சியார் விரும்பினாள்.
இதனால் தனக்குச் சீதனமாக வந்த உயர்ந்த இரத்தினக் கற்கள் பலவற்றையும் உனது குமிழுக்குள் வைத்து,
நீ வரும்போது இனிமையான நாதம் ஏற்படும்படிச் செய்தாள் போலும்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளும் போது உன்னுள் இருக்கும் ரத்தினங்கள் இன்பமாக சப்திக்கின்றன –
அதைப் பார்க்கும் போது ஸ்ரீ மஹா லஷ்மி சமுத்திரத்தின் பத்னியாகிய தன் தாயாராகிய காவிரிக்கு அவள்
மாப்பிள்ளையின் வரவை அறிவிக்க உன் குமுழியில் ரத்தினங்களை இட்டாளோ எனத் தோன்றுகிறது

தாயார் தன் இயற்கையின் கருணையால் உயர் குணங்கள் ஆகிய ரத்தினங்களை ஆழ்வாருக்குக் கொடுத்தாள் –
அதுவே திருவாய் மொழியாகிய இனிய நாதத்தை ஏற்படுத்தியது –

—————————————————————————–

நித்யம் விஹார ஸமயே நிகம அநுயாதை:
விக்ஷேப தாண்டவித கர்ப்ப மணி ப்ரஸூதை:
நாதை: ஸ்வயம் நரக மர்த்தந பாத ரக்ஷே
நாத அவஸாந நிலயம் வதஸீவ நாதம்—-427-

நரகாசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸஞ்சார காலங்களில் நம்பெருமாள் வேதங்கள் தன்னைப் பின் தொடர வருகிறான்.
அந்த வேதங்கள் மூலமாக, உனது உள்ளே இருக்கும் இரத்தினங்கள் அசைகின்றன.
அப்போது எழும் இனிய நாதம் மூலம், ஸ்ரீரங்கநாதன் அந்த நாதத்தின் முடிவில் உள்ளவன் என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் எம்பெருமானை சாஷாத்காரம் செய்யத் த்யானம் செய்யும் போது சரீரத்துள் ஒரு சப்தம் உண்டாகிறது –
அந்த சப்தம் நிற்கிற சமயத்தில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார்
எம்பெருமான் சஞ்சார காலத்தில் உண்டாகும் உன் சப்தம் இந்த செய்தியைத் தெரிவிப்பது போல் இருக்கிறது –

———————————————————————————–

ஸாதாரணேஷு யுவயோர் மணி பாத ரக்ஷே
தேவஸ்ய தாநவ ரிபோ: த்ரிஷு விக்ரமேஷு
அத்யாபி சிஞ்ஜித மிஷாத் அநுவர்த்தமாநம்
ந்யூநாதி கத்வ விஷயம் கலஹம் ப்ரதீம:—-428-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உங்கள் இரண்டு பேருக்கும் (இரண்டு பாதுகைகள்) அசுரர்களின் சத்ருவான
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள் பொதுவாகவே உள்ளன.
அப்படி இருந்தும், அவன் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது வைத்த மூன்று அடிகள் விஷயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக,
உங்கள் இருவருக்கும் அடிக்கடி சச்சரவு உள்ளது போலும்.
இதனையே உனது நாதமாக நாங்கள் எண்ணியபடி உள்ளோம் .

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் போது உண்டாகும் உன் சப்தத்தைக் கேட்டால் நீங்கள் இரண்டு பேரும்-ஸ்ரீ பாதுகைகள் இரண்டும் –
சண்டை இடுவது போல் இருக்கிறது -த்ரிவிக்ரம திரு வவதாரம் செய்த போது ஒரு திரு அடிக்கு பூமி -ஒரு திருவடிக்கு ஆகாயம்
மறு திருவடிக்கு மஹா பலியின் சிரஸ் என ஒரு ஸ்ரீ இரண்டும் மற்ற ஒரு ஸ்ரீ பாதுகைக்கு ஒன்றுமாக முறை வந்ததால்
நீங்கள் சண்டையிடுகிறீர்கள் போலும் –

————————————————————————————-

ப்ராய: பதாவநி விபோ: ப்ரணய அபராதே
மாந க்ரஹம் சமயிதும் மஹிஷீ ஜநாநாம்
உச்சாரயந்தி நிநதை: தவ கர்ப்ப ரத்நாநி
உத் காதம் அக்ஷரம் உபாஸ்ரய பாரதீநாம்—429-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாரிடம் சரியாகப் பழகாமல் இருந்தால் அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது.
இந்தக் கோபம் என்னும் பிசாசை எது விரட்டுகிறது? உன்னுடையை இனிய நாதங்களே ஆகும். எப்படி?
அந்த நாதங்கள் மூலம், உன்னையே அண்டியுள்ள வேதங்களின் தொடக்க எழுத்தான ப்ரணவம் உச்சரிக்கப்படுகிறது.
இதனாலேயே அந்தப் பிசாசு ஓடி விடுகிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் மீதுள்ள அத்யந்த அன்பினால் பிராட்டிக்கு அவர் மீது கோபம் வருகிறது –
உன்னைச் சாற்றிக் கொண்டு எம்பெருமான் பிராட்டியிடம் நெருங்கி எழுந்து அருளும் போது நீ உன் நாதத்தால்
பிரணவத்தை உச்சரித்து அவள் கோபம் என்னும் பிசாசத்தைப் போக்கி விடுகிறாய் –

————————————————————————————–

அந்த: சரேஷு பவநேஷு ஜுதேஷு அபிஜ்ஞா:
ப்ருத்யங்முகீம் பரிணமய்ய மந:ப்ரவ்ருத்திம்
ஆஸ்வாத யந்தி ஸரஸம் மணி பாத ரக்ஷே
நாத அவஸாந ஸமயே பவதீ நிநாதம்—-430-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
யோகம் செய்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் ப்ராண வாயுவை வசப்படுத்திய பின்னர்,
அந்தப் ப்ராணவாயு இயங்கும் சப்தமானது சற்றே நிற்கிறது.
அந்த நேரத்தில் அவர்கள் உனது இனிய நாதத்தைக் கேட்டு மிகவும் அனுபவித்தபடி உள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் எம்பெருமானைத் த்யானம் பண்ணுகிற காலத்தில் முதலில் உள்ளே பிராண வாயுவின் சப்தம் புலப்படுகிறது –
அது நிற்கும் காலத்தில் எம்பெருமானை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வரும் உன்னுடைய இன்பமான நாதத்தை அனுபவிக்கிறார்கள் –

—————————————————————————————

தாக்ஷிண்யம் அத்ர நியதம் நியதா ஸுதாஸ்மிந்
இதி உத்கத: நியதம் அச்யுத பாத ரக்ஷே
ப்ரத்யேக ஸம்ச்ரித பதஸ்துதயே பவத்யோ
ஸங்கர்ஷ வாத இவ மத்ய மணிப்ரணாத:—431-

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உங்களுக்குள் இருக்கும் இரத்தினக் கற்கள் ஒன்றுடன் மோதிக் கொள்ளும்போது எழும் நாதம் எவ்விதம் உள்ளது என்று தெரியுமா?
நம்பெருமாளின் இடது திருவடியில் அமிர்தம் உள்ளது என்று இடது பாதுகையும்,
வலது திருவடியில் அளவு கடந்த தாக்ஷிண்யம் (வேண்டுவதை மறுக்க இயலாத தன்மை) உள்ளது என்று வலது பாதுகையும் கூறி,
போட்டி இடுவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உனது சப்தத்தைக் கேட்கும் போது நீவிர் இருவரும் உங்களை அடைந்த திருவடிகளின்
உயர் நலன்களைப் பற்றிச் சண்டை இடுவது போல் இருக்கிறது -அதாவது
வலது திருவடியில் வலதாக இருக்கை என்கிற தாஷிண்யமும்–
இடது திருவடியில் தவறாமல் -வாம பதாங்குஷ்ட நாஹா சீதாம்சு கலாட் திவ்ய அம்ருத ரசம் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்திகள்-
அம்ருதம் இருக்கிறது என்பதும் –

————————————————————————————–

ஸஞ்சார கேளி கலஹாயித கர்ப்ப ரத்நா
ஸாம் ஸித்திகம் ஸகல ஜந்துஷு ஸார்வ பௌமம்
ரக்ஷார்த்தி நாம் ப்ரதய ஸீவ பதாவநி த்வம்
ரங்கேவரஸ்ய நிரவக்ரஹம் ஆந்ரு சம்ஸ்யம்—-432-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸஞ்சாரம் என்றும் விளையாட்டு மூலம்
தன்னுள் இருக்கும் இரத்தினக் கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்படியாக ,
இவ்விதம் அந்தக் கற்களை உன்னுள் இயற்கையாக வைத்துள்ளவளே! இந்தச் சப்தம் மூலம் –
அனைவரும் அறிந்ததும், தடங்கல் இல்லாமல் உள்ளதும், அனைத்து உயிர்களிடத்தில் வெளிப்படுவதும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் கருணையை, அனைவருக்கும் கூறுகிறாய் போலும் .

ஸ்ரீ பாதுகையே நீ உன் இனிய நாதத்தால் மக்கள் எல்லோருக்கும் தடை இன்றிப் பாயும் எம்பெருமான்
கருணையைக் குறித்து பிரகாசப் படுத்துகிறாய் -யாவரையும் அவர் திருவடிகளை ஆஸ்ரயிக்கும் படி செய்கிறாய் –

————————————————————————

ப்ராப்தும் பரம் புரிசயம் புருஷம் முநீநாம்
அப்யஸ்யதாம் அநுதினம் ப்ரணவம் த்ரிமாத்ரம்
ஸ்ரீரங்கநாஜ சரணாவநி சிஞ்ஜிதம் தே
சங்கே ஸமுந்நயன ஸாம விசேஷ கோஷம்—-433-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எவ்விதம் உள்ளது என்றால் –
அனைவரிலும் உயர்ந்தவனாகவும், நம் இதயத்தில் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனை அடைய
மூன்று மாத்திரைகள் அளவுள்ள ப்ரணவத்தை அன்றாடம் ஜபிக்கிறார்கள் அல்லவா,
அந்த யோகிகளை அவனிடம் அழைத்துப் போகும் ஸாமங்களின் இனிய நாதமாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே ரிஷிகளும் முனிவர்களும் பெருமாளை அடைவதற்கு பிரணவ மந்த்ரத்தை த்யானிக்கிறார்கள்-
மூன்று மாத்ரைகளுடன் உச்சரித்து அவனை அப்படிப் பட்டவன் என சாம கானம் செய்து கொண்டே
பெருமான் இடத்தில் அழைத்துப் போவதாக சாஸ்திரம் கூறுகிறது –
உன் நாதம் அந்த சாமகானம் போலே இருக்கிறது -திருவாய் மொழியை பக்தியுடன் கேட்கிறவர்கள் பெருமாளை அடைகிறார்கள் –

——————————————————————

நித்யம் ஸமாஹிததியாம் உபதர்ச யந்தீ
நாகேசயம் கிமபி தாம் நிஜ ஊர்த்வ பாகே
ஹ்ருத் கர்மணிகாம் அநுகதா மணி பாதுகே த்வம்
மஞ்ஜுஸ்வநா ஸ்புரஸி வாக் ப்ரமரீ பரேவ—-434-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மற்ற விஷயங்களில் தங்கள் புத்தியைத் திருப்பாமல்,
தங்கள் வசப்பட்டுள்ள புத்தியுடன் உள்ளவர்களுக்கு நீ செய்வது என்ன?
அவர்களது இதயத்தின் நடுவில் உள்ள ஹ்ருதய கமலத்தில், ஆதிசேஷன் மீது சயனித்துள்ளபடி இருக்கும்
தேஜஸ்ஸான பெரியபெருமாளை, உன் மீது அவன் உள்ளபடி காண்பிக்கிறாய்.
இப்படியாக நீ வேதங்கள் என்னும் வாக்கை இடைவிடாமல் ஒலிக்கின்ற பெண் வண்டு போன்றுள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ வேதம் ஆகிற பெண் வண்டு என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் –
நீயும் உன் இனிய நாதத்தால் வேதத்தின் தலையான உபநிஷத் பெருமாளை தெரிவிப்பது போல உன் மீது
சேஷ சாயியான எம்பெருமானை உடையவளாய் அவரைப் பரம புருஷார்த்தமாக எல்லோருக்கும் தெரிவிக்கிறாய் –

——————————————————————–

மாநேஷு தானவ ரிபோ: மணி பாத ரக்ஷே
த்வாம் ஆஸ்ரிதேஷு நிகமேஷு அவதீரிதேஷு
மஞ்ஜு ஸ்வநை: வதஸி மா ஏவம் இதி இவ மாத:
வேலாம் விலங்கயிஷத: மநுஜாந் நிரோத்தும்—-435-

தாயே! அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
உன்னுடைய இனிமையான ஒலியைக் கேட்கும் ஒரு சிலர், ப்ரமாணங்களாக உள்ள வேதங்களையே ஒதுக்க நினைக்கின்றனர்.
இப்படியாகக் கட்டுப்பாட்டை மீறும் அவர்களை தடுப்பதற்காக, உன்னுடைய இனிமையான நாதம் மூலம்,
“இது போன்று செய்தல் கூடாது”, என்று உணர்த்துகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை அடைந்து இருக்கிற வேதங்கள் ஆகிற பிரமாணங்கள் பௌத்தர் ஜைனர் முதலியவர்களால்
அநாதரவு செய்யப்பட போது மீற நினைப்பவரை இவ்வாறு அன்று -என்று இன்பமான உன் நாதத்தால் தடுக்கிறாய் போலும் –

—————————————————————————

க்ரந்தத்ஸு காதர தயா கரண வ்யபாயே
ரங்க உபசல்ய சயிதேஷு ஜநேஷு அலக்ஷ்யம்
ஆஸீதஸி த்வரிதம் அஸ்கலித அநுகம்பா
மாதேவ மஞ்ஜு நிநதா மணி பாதுகே த்வம்—-436-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! திருவரங்கத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள்,
தங்களது இந்திரியங்கள் உடலை விட்டு நீங்கும் காலத்தில், பயம் காரணமாக அழக்கூடும்.
அப்போது என்றும் தவறாத தயை குணம் உடைய நீ, அவர்களது தாய் போன்று,
இனிமையான ஒலியுடன் கூடியவளாக மிகவும் வேகமாக, அவர்கள் அருகில் ஓடி வருகிறாய்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக் கோடியில் பிராணன் போகும் சமயத்தில் பயத்தால் ஒன்றும் தோன்றாமல்
அழும் ஜனங்களுக்கு நீ தடை யற்ற தயையால் இன்பமாக சப்தித்துக் கொண்டு தாயார் போலே அருகே செல்கிறாய் –
ஸ்ரீ ரங்க திவ்ய ஷேத்ரத்தில் வாசம் செய்யும் பக்தர்களுக்கு -அத்தையே வியாஜ்யமாகக் கொண்டு
பரம புருஷார்த்தத்தையே அருளுகிறாய்-

———————————————————————-

பாஸ்வத் ஸுவர்ண வபுஷாம் மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய பத பத்ம விபூஷணா நாம்
மஞ்ஜீர சிஞ்ஜித விகல்பித மஞ்ஜு நாதா
மஞ்ஜூஷி கேவ பவதீ நிகமாந்த வாசாம்—-437-

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஸ்வர்ணமயமாக உள்ளன.
ஸ்ரீரங்க நாச்சியாரின் நாயகனான அவனது தாமரை போன்ற மென்மையான அந்த திருவடிகளுக்கு
ஆபரணங்கள் போன்று வேதாந்த வாக்கியங்கள் உள்ளன.
அப்படிப்பட்ட வேதாந்த வாக்கியங்களை வைக்கும் பெட்டி போன்று நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னுடைய இனிமையான நாதம், அவனது திருவடிச் சிலம்பின் தண்டை போன்று இனிமையாக ஒலிக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே சிலம்புத் தண்டை போலே இன்பமான நாதமுடைய நீ ஸ்ரீ யபதியின் திருவடிகளுக்கு
அலங்காரமான வேதங்களுக்குப் பெட்டி போலே விளங்குகிறாய் –

———————————————————————

ரங்கேஸ பாத கமலாத் த்வத் அதீந வ்ருத்தே:
அந்யேஷு கேஷுசித் அலக்ஷ்யம் அநந்ய வேத்யம்
ஆம்நாய கூடம் அபஹிர் மணிபி: க்வணத்பி:
நேதீல ஸாம் ப்ரதயஸிவ நிஜாநுபாவம்—438-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய பெருமைகள் என்பது உனக்கு, உன்னுடன் மிகுந்த நட்புடன் உள்ள
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு மட்டுமே தெரியும். இதனை மற்ற எந்த வஸ்துக்களாலும் அறிய இயலாது.
இதனை யாரும் காண இயலாதபடி, வேதங்களில் மறைத்து வைக்கப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட உனது பெருமையை ஸ்ரீரங்கநாதனிடம் தலைவணங்கி நிற்பவர்கள் தலையில் உன்னை வைக்கும் போது,
உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக் கற்களின் நாதம் மூலமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே
உன்னுடைய இனிய நாதம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு உன் பெருமையை எடுத்துச் சொல்வது போல் இருக்கிறது –
உன் பெருமை உன் அதீனமான திருவடிகளுக்கு மட்டுமே உண்டு –
உன்னாலும் எம்பெருமானாலும் மட்டுமே உணரக் கூடிய அப்பெருமை வேதங்களில் மறைந்து இருக்கிறது –

——————————————————————–

கால உபபந்ந கரண அத்யய நிர் விசேஷ்டே
ஜாத ஸ்ரமே மயீ ஜநார்த்தன பாத ரக்ஷே
ஆஸ்வாஸநய புரத: ப்ரஸரந்து மாத:
வார்த்தா ஹராஸ் தவ ரவா: சமித ஆர்த்தய: மே—-439-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் புலன்களின்
தளர்ச்சி காரணமாக நான் அசைவில்லாமல் துன்பத்துடன் கிடக்கக்கூடும்.
அப்போது என்னை சமாதாநம் செய்வதற்காக நீ வருவாய். ஆனால் உனக்கு முன்பாக உன்னுடன் இனிமையான சப்தங்கள்,
”இதோ! ஸ்ரீரங்கநாதனைப் பாதுகைகள் கொண்டு வருகின்றன”, என்று எனக்கு ஆறுதலாக முன்னே கேட்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் இந்த்ரியங்கள் ஒடுங்கி நான் சிரமப்படும் போது
எம்பெருமான் உன்னைக் காப்பாற்றுகிறார் என்று கூறி என்னை சமாதனாப்படுத்துக –

————————————————————————-

ஸம்ரக்ஷணாய ஸமயே ஜகதாம் த்ரயாணாம்
யாத்ராஸு ரங்க ந்ருபதே: உபதஸ்து ஷீஷு
ஸம்பத்ஸ்யதே ஸ்ருதி ஸுகைர் மணி பாத ரக்ஷே
மங்கல்ய ஸூக்தி: அநகா தவ மஞ்ஜுநாதை:—440–

பொருள் – இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த மூன்று உலகங்களையும் காப்பதற்காக ஸ்ரீரங்கநாதன்
அவ்வப்போது, ஆங்காங்கு ப்ரயாணம் செய்கிறான்.
அப்போது வேதங்களை விட இனிமையாக உள்ள உன்னுடைய நாதங்கள் எழுகின்றன.
இவை, தோஷங்கள் இல்லாத ஸூப சகுனத்தை விளக்குகின்ற சொற்களாக உள்ளன.

ஸ்ரீ பாதுகையே மூன்று லோகங்களையும் காப்பாற்றப் பெருமாள் எழுந்து அருளுகிறார் –
அந்தந்த காலத்தில் உன் இனிய நாதத்தால் குற்றம் இல்லாமல் இருக்கிற மங்கள வாசகத்தை நீ ஏற்படுத்துகிறாய்
மூவுலகமும் ஷேமம் அடைகின்றன –

————————————————————————

கர்போபலைர் கமன வேகவசாத் விலோலை:
வாசாலிதா மதுபிதோ மணிபாதுகே த்வம்
ப்ரஸ்தௌஷி பாவித தியாம் பதி தேவயாநே
ப்ரஸ்தாந மங்களம் ம்ருதங்க விசேஷ கோஷம்—-441–

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் அழகான நடையின் வேகத்தால் உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக் கற்கள், அங்கும் இங்கும் அசைந்து,
ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை எப்படி உள்ளது என்றால் –
ஸ்ரீரங்கநாதனிடம் கொண்டு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தில் புத்தியை வைத்துள்ளவர்கள்,
அந்த வழியில் கிளம்புவதற்கான சிறந்த மிருதங்கத்தின் ஒசையை நீ உண்டாக்குவது போல் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன்னிலிட்ட ரத்தினங்கள் சப்திக்கின்றன –
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்களில் ஒன்றை அனுஷ்டித்து அர்ச்சிராதி வழியாக ஆத்மா யாத்ரை கிளம்பும் போது
அந்த யாத்திரைக்கு நீ மிருதங்கம் வாசிப்பது போல் இருக்கிறது –

———————————————————-

பர்யங்கம் ஆஸ்ரித வதோ மணி பாதுகே த்வம்
பாதம் விஹாய பரி கல்பித மௌந முத்ரா
ஸ்ரோதும் ப்ரபோ: அவஸரம் திசஸீவ மாத:
நாபீ ஸரோஜ சயித அர்ப்பக ஸாமகீதிம்—-442-

உயர்ந்த கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகை தாயே! சயனிப்பதற்கான கட்டிலை அடைந்த ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை விட்டு, பேசாமல் உள்ள நிலையை நீ அடைகிறாய். ஏன் என்றால்
ஸ்ரீரங்கநாதனின் திருநாபியில் உள்ள தாமரையில் படுத்துள்ள அவனது குழந்தையான நான்முகனின் ஸாம கானத்தை
ஸ்ரீரங்கநாதன் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை நீ அளிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் சயனதிற்கு சங்கல்பித்துக் கொள்ளும் போது நீ மௌனம் வகித்து
நாபி கமலத்தில் இருக்கும் பிரம்மாவின் சாம கானத்தை பெருமாள் கேட்டு இன்புறுவதற்கு வேண்டிய அவகாசத்தைத் தருகிறாய்
நீ சப்தித்துக் கொண்டு இருந்தால் அவன் செய்யும் சாம கானத்தைக் கேட்க முடியாதன்றோ –

——————————————————————–

போகாய தேவி பவதீ மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய அதிரோப்ய புஜங்க தல்பே
விஸ்வஸ்ய குப்திம் அதி க்ருத்ய விஹார ஹீநா
வாசம்யமா கிமபி சிந்தயதீவ கார்யம்—-443-

இரத்தின மயமான பாதுகா தேவியே! தாமரையில் உதித்த ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை,
ஆதிசேஷன் என்ற படுக்கையில் சுகமாக சயனிப்பதற்காக எழுந்தருளச் செய்தாய்.
அதன் பின் மௌனமாக இருந்து கொண்டு, இந்த உலகத்தை எப்படிக் காப்பது என்று,
ஏதோ ஒரு செயலைப் பற்றி எண்ணுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலம் அல்லாத காலங்களில் ஆதி சேஷன் ஆகிய படுக்கையில் எம்பெருமானை ஏற்றி வைத்து
நீ மௌனமாக இருக்கிறாய் -உலக ஷேமத்தைப் பற்றிக் கவனத்துடன் அப்போது சிந்திக்கிறாய் போலும் –

—————————————————————————-

நித்ய ப்ரபோத ஸுபகே புருஷே பரஸ்மிந்
நித்ராம் உபேயுஷி தத் ஏக விஹார சீலா
மஞ்ஜு ஸ்வநம் விஜஹதீ மணி பாதுகே த்வம்
ஸம்வேசம் இச்சஸி பரம் சரண அந்திகஸ்தா—-444-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! எப்போதும் விழித்தபடி உள்ள உயர்ந்தவனான,
பரம்பொருளான ஸ்ரீரங்கநாதன் உறங்கும்போது, நீ செய்வது என்னவென்றால் –
அவன் ஸஞ்சாரம் செய்யும்போது அந்த நடைக்கு ஏற்றாப்போல் இனிமையான நாதம் எழுப்பி நிற்பவள்,
அவனது திருவடியின் அருகில் நின்று உறங்குவதையும் ரசிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தூங்குவது போலே பாவித்து சயனித்துக் கொண்டு இருக்கும் போது அவனது வியாபாரத்தையே
அனுஷ்டிக்கும் நீயும் அவனது திருவடி பக்கத்தில் தூங்குவது போலே சயனித்துக் கொண்டு இருக்கிறாய் –

——————————————————————–

லாஸ்யம் விஹாய கிமபி ஸிதிதம் ஆச்ரயந்தீ
ரங்கேஸ்வரேண சஹிதா மணி மண்டபேஷு
மஞ்ஜு ஸ்வநேஷு விரதேஷு அபி விஸ்வம் ஏதத்
மௌநேந ஹந்த பவதீ முகரீ கரோதி—445-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடன் கூடியவளாக, அவனது அழகான நடை என்னும் நாட்டியத்தைக்
கொண்டவளாக நீ செல்கிறாய். அப்போது உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட மண்டபங்களில் ஸ்ரீரங்கநாதன் சற்றே நிற்கிறான்.
அந்த நேரத்தில் இனிமையான ஓசைகள் எழுகின்றன. அந்த ஓசைகள் ஓய்ந்த பின்னர்,
சில நொடிகள் உண்டாகும் மௌனத்தினால், உலகத்தினரை அதிகமாகப் பேச வைக்கிறாய் போலும். என்ன வியப்பு!

நம்பெருமாள் பெரியகோவிலில் ஸஞ்சாரம் செய்யும்போது, ஆங்காங்குள்ள மண்டபங்களில் சற்று நிற்கிறான்.
நின்ற வேகத்தில், பாதுகைகளின் உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் பலத்த ஒலியை எழுப்பி அடங்குகின்றன.
அப்போது அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கின்ற மக்கள், அரங்கனையும் பாதுகைகளையும் வெகுவாகப் புகழ்ந்து கூறுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நீ எம்பெருமானுடன் எழுந்து அருளுகிற காலத்தில் நடுவில் உபய மண்டபத்தில் சற்று நிற்கிறாய் –
அப்போது நீ மௌநம் வகித்து நீ எழுந்து அருளிய அழகை சேவித்த ஜனங்கள் அவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்படிச் செய்கிறாய் –

————————————————————————-

விஸ்மாபிதேவ பவதீ மணி பாத ரஷே
வைரோசநேர் விதரணேந ததாவிதேந
ஏதாவதா அலமிதி தேவி க்ருஹீத பாதா
நாதம் த்ரிவிக்ரமம் அவாரய தேவ நாதை:—446-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகாதேவியே! விரோசனன் என்பவனின் புத்திரனாகிய மஹாபலியின்
தாராள குணம் கண்டு நீ வியப்பு அடைந்தாய். மூன்று அடிகளால் உலகம் அளந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை
நீ பிடித்துக் கொண்டு, உனது நாதத்தால், “போதும் போதும்”, என்றாய்.

மூன்றாவது அடியால் மஹாபலியின் தலையில் திருவடியை வைத்து அழுத்தியவுடன், இத்தனை தாராள குணம்
படைத்தவனை மேலும் துன்புறுத்தக்கூடாது என்று எண்ணி, ஸ்ரீரங்கநாதனின் திருவடியைப் பாதுகை தடுத்தது என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே மஹா பலி பெரும் தன்மையுடன் கேட்டதைக் கொடுத்தான் –
இதைப் பற்றி ஆச்சரியப் பட்ட நீ எம்பெருமான் திருவடியைப் பிடித்துக் கொண்டு
இவ்வளவு போதும் என்று தடுப்பது போல் இருக்கிறது உன் நாதம் –

———————————————————————-

ஸாமாநி ரங்க ந்ருபதி: ஸரஸம் ச கீதம்
லீலா கதேஷு விநிவாரயதி ஸ்வ தந்த்ர:
ஸ்ரோதும் தவ ஸ்ருதி ஸுகாநி விசேஷவேதீ
மஞ்ஜூநி காஞ்சந பதாவநி சிஞ்ஜிதாநி—447-

தங்க மயமான பாதுகையே! அனைத்து வஸ்துக்களின் தன்மைகளை அறிந்துள்ள ஸ்ரீரங்கராஜன்,
தனது விருப்பப்படி உற்சாகமாக ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது தனது பின்னே கேட்கின்ற ரசம் நிறைந்த
ஸாம கானங்களையும், ஸங்கீதத்தையும் சற்றே நிறுத்துகிறான். ஏன் என்றால் –
கேட்பதற்கு இனிமையாகவும், காதுகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாகவும் இருக்கின்ற உனது இனிமையான நாதம்,
எங்கும் கேட்பதற்காக ஆகும்.

ஸ்ரீ பாதுகையே உன் உயர்வை அறிந்த பூரண சுதந்திரனான ஸ்ரீ ரங்க நாதன் சாம கானத்தையும்
வீணை பாட்டு முதலியவைகளையும் நிறுத்தி விட்டு உன் நாதத்தைக் கேட்கிறார் –
பெருமாள் மூல ஸ்தானத்திற்கு எழுந்து அருளும் போது பராயணம் பாட்டு இவை இருக்காதே –

————————————————————————-

தத்தாருசீம் ப்ரதயதா ருசிராம் ஸ்வரேகாம்
வர்ண அதிகேந மது ஸூதன பாத ரக்ஷே
பஸ்யந்தி சித்த நிகஷே விநிவேஸ்ய ஸந்தோ
மஞ்ஜு ஸ்வநேந தவ நைகமிகம் ஸுவர்ணம்—-448-

மது என்று அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நன்மை விரும்பும் சாதுக்கள் தங்களது மனதில்
வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதனையும், உன்னுடைய இனிமையான நாதங்களையும்,
சாதாரண எழுத்துக்களில் இருந்து மாறுபட்டதான எழுத்துக்கள் கொண்ட வேதங்களையும்
மனம் என்னும் உரைகல்லில் வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட மனம் என்ற உரை கல்லில், இந்த மூன்றில் எது சிறந்தது என்று ஆராய்ந்து பார்க்கின்றனர்.
அப்படிப் பார்க்கும்போது உயர்ந்த எழுத்துக்களை விட மாறுபட்டதான வேதங்களைக் காட்டிலும்,
ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும், மாறுபட்ட உனது இனிய நாதத்தையே மிகவும் உயர்ந்ததாகக் கொள்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே ஜீவ பரமாத்மா ஸ்வரூபம் தெரிந்தவர்கள் உன் நாதத்தையும் எம்பெருமானைப் பிரதிபாதிக்கும்
வேதத்தையும் மனம் என்ற உரை கல்லில் உறைத்துப் பார்க்கிறார்கள்
வேதத்தையும் வேத ப்ரதிபாத்யமான எம்பெருமானைக் காட்டிலுமே ஆழ்வார் திவ்ய ஸூக்தி சுவை மிக்கது –

—————————————————————————–

முக்தஸ்ய ஹந்த பவதீம் ஸ்துவதோ மம ஏதாநி
ஆகர்ணய நூநம் அயதாயத ஜல்பிதாநி
இத்தம் வத த்வம் இதி சிக்ஷயிதும் ப்ரணாதாந்
மஞ்ஜூந் உதீரயஸீ மாதவ பாதுகே த்வம்–449-

ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஏதும் அறியாதவனாகிய, முட்டாளாகிய எனது
பிழை நிறைந்த சொற்கள் கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் என்னிடம்,
”இந்தச் சொற்களை நீ இவ்விதம் கூறுவாயாக”, என்று என்னைத் திருத்தும் பொருட்டு இனிமையான நாதம் எழுப்புகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன் சப்தத்தைக் கேட்கிற போது உன்னைப் பற்றி எதுவும் அறியாத நான் தாறுமாறாகத் ஸ்துதிக்கும் போது
சரியான ஸ்துதி முறைகளை எனக்குச் சொல்லித் தருவது போல் இருக்கிறது –

————————————————————————————

ஆதௌ ஸஹஸ்ரம் இதி யத் ஸஹஸா மயா உக்தம்
துஷ்டூஷதா நிரவதிம் மஹிம அர்ணவம் தே
ஆம்ரேடயஸி அத கிம் ஏதத் ம்ருஷ்யமாணா
மஞ்ஜு ஸ்வநேந மதுஜித் மணி பாதுகே த்வம்—-450-

மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
முன்பு ஒரு காலத்தில் உன்னைப் பற்றித் துதிக்க ஒப்புக் கொண்டேன். எல்லையற்ற கடல் போன்ற உன்னுடைய
பெருமைகளைத் துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்,
சட்டென்று 1000 ஸ்லோகம் கொண்டு துதிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதனைக் கேட்ட நீ
உன்னுடைய இனிமையான நாதம் கொண்டும், “எனது பெருமை ஆயிரம்தானா, ஆயிரம்தானா”, என்று
மீண்டும் மீண்டும் கேட்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சேவிக்க வந்த காலத்தில் எல்லை யற்ற கடல் போன்ற உன் பெருமையில் ஈடுபட்டு
ஆயிரம் ஸ்லோஹம் கவனம் பண்ணுவதாகச் சொன்னேன் பரபரப்பாக நான் கூறியதை பரிகசித்து
நீ ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணலாமா ஆயிரம் போதுமா என்று உன் நாதத்தால் கேட்பது போல் இருக்கிறது –

—————————————————————————-

பரிமித பரிபர்ஹம் பாதுகே ஸஞ்சரிஷ்ணௌ
த்வயி விநிஹித பாதே லீலயா ரங்கநாதே
நியமயதி விபஞ்சீம் நித்யம் ஏகாந்த ஸேவீ
நிசமயிதும் உதாராந் நாரதஸ்தே நிநாதாந்—-451-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருவடிகளை உன் மீது வைத்து, குடை முதலான
தன்னுடைய வஸ்துக்களுடன் உல்லாசமாக ஸஞ்சாரம் செய்கின்றான். நாரதர் எப்போதும் ஸ்ரீரங்கநாதனை,
அவன் ஏகாந்தமாக உள்ள போது சேவிப்பவர் ஆவார். அப்படிப்பட்ட நாரதர், ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார நேரத்தில்,
தன்னுடைய வீணையை நிறுத்தி விடுகிறார். இதன் காரணம் – உன்னுடைய கம்பீரமான நாதத்தைக் கேட்பதற்கே ஆகும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஏகாந்த காலங்களில் குடை சாமரம் இவற்றைக் குறைவாகக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
அச் சமயங்களில் தேவ ரிஷியான நாரதர் உன் இனிய நாதத்தைச் செவி மடுக்கத் தன் வீணையை மீட்டாமல் நிறுத்துகிறார்

தேவ ரிஷியும் கூட ஆழ்வாரின் திவ்ய ஸூக்தியைக் கொண்டாடுகிறார் –

—————————————————————–

விஹரதி விசிகாயாம் ரங்கநாதே ஸலீலம்
கமந வச விலோலை: கர்ப்ப ரத்நை: க்வணந்த்யா:
மணி வலய நிநாதை: மஞ்ஜுலைஸ் தே திசந்தி
ப்ரதி வசநம் உதாரம் பாதுகே பௌரநார்ய:—-452-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவரங்கத்தின் மாட வீதிகளில் மகிழ்ச்சியுடன் வலம் வருகிறான்.
அப்போது உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினங்கள், “நம்பெருமாள் வந்தான்”, என்று அறிவிப்பதாக ஒலித்தபடி உள்ளன.
அப்போது அங்கு ஓடி வரும் திருவரங்கத்தின் பெண்களின் கைகளில் இருக்கின்ற அழகான கற்கள் பதிக்கப்பட்ட
வலையல்களின் உள்ளே இருக்கின்ற மணிகள் இன்பமாக ஓசை எழுப்புகின்றன.
இவை உன்னிடம், “இதோ வந்தோம்”, என்று மறுமொழி கூறுவது போல் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் விளையாட்டாக எழுந்து அருளும் போது உன்னுள் இனிய சப்தத்திற்கு
பட்டணத்து பெண்கள் எம்பெருமானை சேவிக்க ஓடி வருகிறவர்களாகத் தங்கள் கைகளில் உள்ள
ரத்தின வளைகளின் சப்தத்தால் பதில் சொல்கிறார்கள் –

————————————————————————

அநுக்ருத ஸவநீய ஸ்தோத்ர சஸ்த்ராம் நிநாதை:
அநுகத நிகமாம் த்வம் ஆஸ்திதோ ரங்கநாத:
அநிதர விபுதார்ஹம் ஹவ்யம் ஆஸ்வாத இஷ்யந்
விசதி சரண ரக்ஷே யஞ்ஜவாடம் த்விஜாநாம்—-453-

சரணம் அடைவதற்கு ஏற்றதாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மற்ற தேவதைகளுக்கு ஏற்க இயலாத அவிர்பாகத்தைச் சுவைப்பதற்காக, அந்தணர்கள் யாகம் செய்கின்ற இடத்திற்கு
ஸ்ரீரங்கநாதன் வருகிறான். அப்படி அவன் வரும்போது, அந்த யாகங்களுக்கு ஏற்ற சஸ்த்ரம் என்னும் மந்த்ரம்
ஆகியவை ஒலிப்பது போன்று, உன்னுடைய இனிமையான நாதமும் கேட்கின்றன.

ஸர்வேச்வரன் யாகங்களின் அளிக்கப்படும் அவிர்பாகத்தை, அங்கு முழங்கப்படும் வேத ஒலிகள் கொண்டு ஏற்கிறான் என்று கருத்து.
இங்கு வேத ஒலிகளுடன் பாதுகை உள்ளது. ஆக பாதுகையே வேதம் என்றாகிறது.
இப்படிப்பட்ட வேதமாகிய பாதுகையில் நின்று அவிர்பாகத்தை ஏற்கிறான்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானையே ஆராத்யனாக வரித்து வேதியர் செய்யும் யாகசாலையில் ஹவிஸ்சைப் பெற
உன்னை அணிந்து எம்பெருமான் பிரவேசிக்கிறார்
அந்தக் காலத்தில் உண்டாகும் உன் சப்தங்கள்
ஸ்தோத்ரம் சஸ்த்ரம் என்ற யாக மந்திரங்கள் போலவும் இதர வேதங்கள் போலவும் உள்ளன –

ஹே! பாதுகையே! இராத்திரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்!
(தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது!
இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார். இந்த மனோபாவம் – பக்தி முக்யம். விரோதம் முக்யமல்ல.
நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின்,
மன கஷ்டமுமில்லை! பகையுமில்லை! பரந்தாமன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!)
உன்னுடைய சப்தம் போல (இங்கு அவர் பாதுகையின் சப்தம் என்று கூறுவதற்கு ‘ஆழ்வார்களின் ஸூக்திகளைப் போல என்று பொருள்)
பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமின்றி என் மனதில் தோன்றி அதிவேகமாய்
(குறைந்த பட்ச அவகாசமேயுள்ளதால் பாதுகையினை அவசரப்படுத்துகின்றார்) என் வாக்கில் வரும்படியாக
நீ தயை செய்ய வேண்டும்! இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய்
ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார்.
தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம். கவிமழையை பொழிய வைக்கின்றாள்.
ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள்! ஒரு கருவிதான் தேசிகர்! கரு பாதுகையின் கருணைதான்!

எப்படி ஸ்வாமி ஸ்ரீ இராமானுஜர் மறுபிறப்பில் மணவாள மாமுனியாய் அவதரித்தாரோ, அது போன்று
ஸ்வாமி நம்மாழ்வார், மீண்டும் இறப்பு, பிறப்பற்ற பாதுகையாகவேயானார்.

நம்மாழ்வாராய் இருந்த சமயம் இவர் சிறப்பை வெளிப்படுத்த – மதுரகவி! பாதுகையாய் அவதரித்தப் போது – ஸ்வாமி தேசிகர்!
பெருமாளின் பாதுகையில் வெளுப்பு, சிகப்பு, கருப்பு முதலான பல வர்ணங்களில் ரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகருக்கு பெருமாள் க்ருதயுகத்தில் வெளுப்பாயும், த்ரேதாயுகத்தில் சிகப்பாயும்,
துவாபரயுகத்தில் மஞ்சளாயும், கலியுகத்தில் கருப்பாயும் ஸேவை சாதித்தருளும் நம்பெருமாள் இதையெல்லாம்
ஒரே காலத்தில் தம் திருவடி கீழே காண்பிப்பது போலுள்ளது என்கிறார். (சதுர் யுகத்திற்கும் இவர்தானே அதிபதி!)

நவரத்னங்கள் எனப்படும் (ரத்னம், வைடூர்யம், வைரம்,மாணிக்கம்,நல்முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம்)
ஒன்பது ரத்னங்களில் பாதுகையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகர்,
பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவிருத, பத்ராசல, கேதுமால, ரம்ய, ஹிரண்மய, குரு என்று
ஒன்பது பாகமாயுள்ள இந்த பரந்த பூமி பிறந்தகத்தினை யடைந்தது போல் ஆசையாக பெருமாள்
திருவடிகளை யடைந்தது போலுள்ளது என்று ரசிக்கின்றார்.

———————————————————————————-

சரண கமலம் ஏதத் ரங்க நாதஸ்ய நித்யம்
சரணம் இதி ஜநாநாம் தர்ஸ யந்தீ யதாவத்
ப்ரதிபதம் அபி க்ருத்யம் பாதுகே ஸ்வாது பாவாத்
அநுவததி பரம் தே நாதம் ஆம்நாய பங்க்தி:—-454-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற இந்தத் திருவடிகளே அனைவருக்கும் எப்போதும்
ரக்ஷகம் என்று மக்களுக்கு வேதங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இதனை வேதங்கள் தாமாகவே கூறுவது அல்ல.
ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடி வைப்பிலும் உண்டாகும் இனிமையான உன்னுடைய நாதம் கொண்டு,
இந்தக் கருத்தை நீ கூறுகிறாய். இதனையே வேதங்கள் அனுவாதம் செய்கின்றன.

ஒருவர் கூறுவதை மீண்டும் கூறுதல் என்பது அனுவாதம் எனப்படும். இங்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
என்பதைப் பாதுகைகள் கூற, அதனையே வேதங்கள் மீண்டும் கூறுகின்றன என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி தான் எல்லோரையும் காப்பாற்றுகிறது என்று சொல்கிற சகல
வேதங்களும் மிக இன்பமான உன் சப்தங்களை அனுசரித்தே சொல்கின்றன –

————————————————————————————-

ரஹித புஜக தல்பே த்வத் ஸநாதே ப்ரஜாநாம்
ப்ரதிபய சமநாய ப்ரஸ்திதே ரங்கநாதே
ப்ரதம உதயமாந: பாதுகே தூர்ய கோஷாத்
ப்ரதிபலதி விநாத: பாஞ்ச ஜந்யே த்வதீய:—-455–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனிப்பதை விடுத்து, மக்களின் பயத்திற்கான காரணங்களை நீக்குவதற்காக
ஸ்ரீரங்கநாதன் உன்னுடன் புறப்படுகிறான். அப்போது எழுகின்ற வாத்திய ஒலிகளுக்கும் முன்பாக
உன்னுடைய இனிமையான நாதம் எழுகிறது. அந்த நாதம், ஸ்ரீரங்கநாதனின் திருக்கரத்தில் உள்ள
பாஞ்சஜன்யம் என்ற சங்கின் மீதும் எதிரொலிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் ஜனங்களுடைய கஷ்டத்தைப் போக்க ஆதி சேஷனை விட்டுப் புறப்படுகிறார் –
அப்போது முதலில் உன் நாதம் தான் உண்டாகி அவருடைய ஸ்ரீ சங்கத் தாழ்வான் இடம் பிரதி த்வநிக்கிறது
பிறகு தான் வாத்ய சப்தங்கள் உண்டாகின்றன –

———————————————————————-

வகுள தர தநு: த்வம் ஸம்ஹிதாம் யாம் அபஸ்ய:
ஸ்ருதி பரிஷதி தஸ்யா: சௌரபம் யோஜயந்தீ
ஹரி சரண ஸரோஜ ஆமோத ஸம்மோதிதாயா:
ப்ரதிபத ரமணீயா: பாதுகே தே நிநாதா:—-456–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் எழுகின்ற வாசனை காரணமாக
நீ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அந்த இன்பம் காரணமாக, உன்னுடைய ஒவ்வொரு அடி வைப்பிலும்
இனிமையான நாதங்கள் உண்டாகின்றன. நீ வகுளாபரரான நம்மாழ்வாராக அவதரித்து
எந்தத் திருவாய்மொழியை அருளிச் செய்தாயோ, அவைகளின் சாரத்தையே அல்லவோ வேதங்கள் கூறுகின்றன
(திருவாய்மொழி வேதங்களின் சாரம் அல்ல, வேதங்களே திருவாய்மொழியின் சாரங்கள் என்னும் நயம் காண்க).

ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வாரின் திவ்ய மேனியை உடைத்தான நீ பெருமாள் உடைய தாமரை மலரை ஒத்த திருவடி வாசனையால்
மணம் பரப்பும் உன் திரு அடி வைப்பு தோறும் திருவாய் மொழியை வேதங்கள் உடைய கூட்டத்தில் சேர்க்கிறாய்
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளே பரம புருஷார்த்தம் என்பதை வேதங்களும் திருவாய் மொழியும் சமானமாக ப்ரதி பாலிக்கின்றன —

——————————————————————————

தநு தநய நிஹந்து: ஜைத்ர யாத்ரா அநுகூலே
சரத் உபகம காலே ஸஹ்யஜாம் ஆபதந்தி
ஸ்ருதி மதுரம் உதாரம் சிக்ஷிதும் தே நிநாதம்
பரிஹ்ருத நிஜ வாஸா: பாதுகே ராஜ ஹம்ஸா:—-457-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனு என்பவளின் பிள்ளைகளான அசுரர்களை அழிக்கின்ற வெற்றி ஸஞ்சாரம் செய்வதற்கான
சரத் ருது காலம் வந்துவிட்டது. அப்போது உயர்ந்த அன்னப் பறவைகள் தம்முடைய இருப்பிடத்தை விட்டு,
காவிரிக்குப் பறந்து வருகின்றன. ஏன் என்றால் – ஸ்ரீரங்கநாதன் உன்னைச் சாற்றிக்கொண்டு நடக்கின்ற
அந்த நேரத்தில் எழுகின்ற, இனிமையானதும் கம்பீரமானதும் ஆகிய உன்னுடைய நாதத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஆகும்.

ஸ்ரீ பாதுகையே சரத் காலத்தில் எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
ஹம்சங்கள் எனத் தக்க உயர்ந்த குணம் உடைய பெரியோர் உன் இன்பமான சப்தத்தை பழக்கிக் கொண்டு
சத்வ குணம் மேலிட வேண்டி தங்கள் இருப்பிடம் விட்டு ஸ்ரீ ரங்கம் வருகின்றனர் –

———————————————————————————

விஹரண ஸமயேஷு ப்ரத்யஹம் ரங்க பர்த்து:
சரண நக மயூகை: ஸோத்தரீயா விசுத்தை:
பரிணமயஸி நாதம் பாதுகே கர்ப்ப ரத்நை:
தமயிதுமிவ சிஷ்யாந் தீர்க்கிகா ராஜ ஹம்ஸாந்—-458-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் அன்றாடம் ஸஞ்சாரம் செய்யும் போது, தூய்மையாக உள்ள அவனது
திருவடி நகங்களின் ஒளியானது உன் மீது வெண்மையான மேல் ஆடையைப் போன்று விழுகிறது.
இதனைக் காணு ம்போது ஆசார்யன் போன்று நீ உள்ளாய். யாருக்கு என்றால் –
பெரியகோவிலில் இருக்கின்ற திருச்சுற்றுக்களில் காணப்படும் அன்னங்களுக்கு, நல்ல விஷயங்களை உன் உள்ளே
இருக்கின்ற இரத்நக்கற்களின் நாதம் மூலம் கற்பிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தினமும் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறது வழக்கம் –
அது எம்பெருமான் திருவடி நகங்களின் காந்தியால் நீ உத்தரியம் தரித்துக் கொண்டு உன்னை அண்டிய ராஜ ஹம்சங்களை ஒத்த
சிஷ்யர்களான பெரியோர்க்கு நல்ல விஷயங்களை மட்டுமே கற்பிக்க வேண்டி அவர்களைக் கண்டிப்பது போல் இருக்கிறது –

——————————————————————-

பரிஷதி விரதாயாம் பாதுகே ரங்க பர்த்து:
பரிஜநம் அபவார்ய ப்ரஸ்திதஸ்ய அவரோதாந்
மணி நிகர ஸமுத்யந் மஞ்ஜுநாத உபதேசாத்
அபிலபஸி யதார்ஹம் நூநம் ஆலோக சப்தம்—-459-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருமண்டபத்திலிருந்து புறப்பட்டவுடன் அங்குள்ள
ஊழியர்களை உன்னுடைய நாதத்தின் ஒலி மூலம் புறப்பட்டச் சொல்லுகிறான். அதன் பின்னர் அந்தப்புரத்திற்குப் புறப்படும்
ஸ்ரீரங்கநாதனுக்கு உனது இரத்தினக் கற்களின் மூலம் எழுகின்ற இனிமையன நாதம் கொண்டு,
“ஸ்ரீரங்கநாத விபோ ஜய விஜயீ பவ”, என்று கூறுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் சபையில் எழுந்து அருளி இருந்து பிறகு அந்தப் புரத்துக்கு ஏகாந்தமாக எழுந்து அருளுகிறார்
அப்போது நீ உன் சப்தத்தால் ஜய சப்தங்கள் -ஜய விஜயீ பவ -ஸ்வாமி எத்சரிகை -என்பன
போன்ற சப்தங்களைக் கூறுவது போல் இருக்கிறது –

—————————————————————————–

குரு ஜந நியதம் தத் கோபிகாநாம் ஸஹஸ்ரம்
திநகர தநயாயா: ஸைகதே திவ்ய கோப:
வசம் அநயதீ அயத்நாத் வம்ச நாத அநுயாதை:
தவ கலு பதரக்ஷே தாத்ருசைர் மஞ்ஜுநாதை:—-460-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யமுனையில் மணல் குன்றுகளில், பெரியோர்களால் அடக்கப்பட்ட ஆயிரம் கோபியர்களைக்
கண்ணன் தன்னுடைய புல்லாங்குழலின் நாதத்தால் பின் தொடர வைத்தான் என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்களை உன்னுடைய இனிமையான நாதத்தால் அல்லவோ கண்ணன் எளிதாக வசப்படுத்திக் கொண்டான்?

இதுவரை பாதுகைகளின் நாதத்தை வர்ணிக்கின்ற ப்ரகரணம் (context) முடிந்தது.
இந்த ஸ்லோகம் முதல், ஸ்ரீரங்கநாதன் அளிக்கின்ற ஹிதம் என்னும் மோக்ஷ உபாயம் குறித்துக் கூறப்படும் ப்ரகரணம் தொடங்குகிறது.
மோக்ஷ உபாயத்தைக் கண்ணனாக நின்று சரம ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் உபதேசித்ததால் இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே திருவாய்ப்பாடியில் கண்ணன் ஆயிரக் கணக்கான கோபிகளைக் குழல் ஓசையினால் தன வசப் படுத்தினான் என்பர் –
அப்படி அன்று -குழல் ஓசையையும் விஞ்சிய உன் நாதத்தினால் தான் கண்ணன் கோபிகளைத் தன் வசம் ஆக்கினான்
வீட்டுப் பெரியோர் தடுத்தும் அவர்கள் வீட்டு வேலைகளை மறந்து கண்ணன் இடத்தில் ஓடி வந்தார்கள் -அந்தப் பெருமை உன் நாதத்திற்கே –

————————————————————————————-

நிஜபத விநிவேசாத் நிர்விசேஷ ப்ரசாராந்
பரிணமயதி பக்தாந் ரங்கநாதோ யதா மாம்
இதி விஹரண காலே மஞ்ஜு சிஞ்ஜா விசேஷை:
ஹிதம் உபதிசஸீவ ப்ராணிநாம் பாதுகே த்வம்—-461–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ அனைவரிடமும், “ஸ்ரீரங்கநாதன் என் (பாதுகை) போன்றவர்களைத் தன்னுடைய
திருவடியில் வைப்பதன் மூலம், அவர்களுக்கும் என்னைப் போன்று அவனுடன் சேர்ந்து ஸஞ்சாரம் செய்யும்படியான
நிலையை அளிக்கிறான்”, என்று உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் நன்மையை உபதேசிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சரிக்கும் காலத்தில் நீ மிக நல்ல செய்தியைத் தெரிவிக்கிறாய்-
தன்னிடத்தில் ஆசை கொண்டவர்களுக்குத் தன்னுடைய பதத்தை எம்பெருமான் எனக்குத் தந்தது போலத் தருகிறார் என்று கூறுவது போல் இருக்கிறது –
தன்னுடைய பதமே பரமபதம் -திருவடியை என் மேல் வைத்து இதுவே பரமபதம் என்று காட்டி அருளுகிறான் –

————————————————————————————————

அயமயமிதி தைஸ்தை: கல்பிதாந் அத்வ பேதாந்
ப்ரதிபதம் அவலோக்ய ப்ராணிநாம்
சடுல மணி கலாபை: சௌரி பாதாவநி த்வம்
முகரயஸி விஹாரை: முக்தி கண்டாப தாக்ர்யம்—-462-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முக்தி அடைவதற்கு இதுவே சிறந்த வழி, இதுவே சிறந்த வழி என்று பல மதங்களால்
அடிக்கடிக் கூறப்படும் பல்வேறு முரணான மார்க்கங்களைக் கண்டு மக்கள் கலங்கி நிற்கின்றனர்.
உன்னுடைய அசைகின்ற இரத்தினங்களின் நாதம் மூலமாக மோக்ஷத்திற்கான ராஜமார்க்கம்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே மோஷத்தை அடையும் வழி குறித்துப் பலரும் பலவிதமாயும் சொல்கிறார்கள் –
ஆனால் நீயோ கலங்கிய மனதிற்கு இதமாக ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயிப்பது தான்
மோஷத்திற்கான வழி என்று சொல்லி அருளுகிறாய்-

——————————————————————————————-

பத கமலம் உதாரம் தர்ச யந்தீ முராரே:
கல மதுர நிநாதா கர்ப்ப ரத்நை: விலோலை:
விஷம விஷய த்ருஷ்ணா வ்யாகுலாநி ப்ரஜாநாம்
அபிமுகயஸி நூநம் பாதுகே மாநஸாநி—-463-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அசைகின்ற உன்னுடைய இரத்தினக்கற்களின் இனிமையான நாதம் மூலம்
ஸ்ரீரங்கநாதனின் கருணை மிகுந்த திருவடித் தாமரைகளை மக்களுக்குக் காண்பிக்கிறாய்.
இதன் மூலம் உலக விஷயங்களில் கொண்ட ஆசை என்னும் கானல்நீர் காரணமாக கலங்கி நிற்கும் மனிதர்களின்
மனம் என்னும் விலங்குகளை, உன்னைக் காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே கானல் நீரைப் போன்ற ஆசையால் கலங்கி இருக்கும் மக்களை உன் நாதத்தால் தெளிவித்து
வேண்டிய பலன்களைத் தரக் கூடிய எம்பெருமான் திருவடிகளைக் காட்டுகிறாய் –
அவற்றையே ப்ராப்யமாகக் கொள்ளச் செய்து அருளுகிறாய் –

—————————————————————————————-

மதுரிபு பதரக்ஷே மந்த புத்தௌ மயீத்வாம்
அநவநி மஹிமாநம் த்வத் ப்ரஸாதாத் ஸ்துவாநே
மணி நிகர ஸமுத்தை: மஞ்ஜுநாதை: கவீநாம்
உபரமயஸி தாம்ஸ்தாந் நூநம் உத்ஸேக வாதாந்—-464-

மது என்ன அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அற்பமான அறிவுள்ள நான், எல்லையற்ற பெருமை
நிறைந்த உன்னை, உன்னுடைய அருள் காரணமாகத் துதிக்கிறேன். அந்த நேரத்தில் எனது சொற்களைத் தூஷிக்கின்ற
பல கவிஞர்களின் கர்வம் நிறைந்த சொற்களை உனது இரத்தினக்கற்கள் மூலம் ஏற்படும்
இனிமையான நாதம் கொண்டு நீ அடக்குறாய் என்பது உண்மை.

ஸ்ரீ பாதுகையே எல்லை யற்ற உன் பெருமையை உன் கருணையால் சிற்று அறிவு படைத்த நான் பாடப் புகுந்தேன் –
செருக்குக் கொண்ட கவிகள் என் வார்த்தைகளைத் தூஷிக்கும் போது உன் நாதத்தால் அவர்களைத் தடுக்கிறாய் –

—————————————————————

சரணம் உபகதே த்வாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
ஸக்ருதிதி விதி ஸித்தம் த்யக்து காமே விமோஹாத்
ப்ரசலித மணிஜால வ்யஞ்ஜிதை: சிஞ்ஜிதை: ஸ்வை:
அலமலம் இதி நூநம் வாரயஸி ஆதரேண—465–

சார்ங்கம் என்னும் வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை ஒருமுறை சரணாகதி செய்தாலே
போதுமானது என்று விதிக்கப்பட்ட சாஸ்திரம் அறியாமல் சரணாகதி செய்தவன், மீண்டும் சரணாகதி செய்ய முனைகிறான்.
அப்போது வேகமாக அவனைத் தடுக்க நீ முயலும்போது அசைகின்ற உனது இரத்தினக் கற்களின் நாதம் கொண்டு,
“போதும் போதும்”, என்று மிகுந்த ஆசையுடன் தடுக்கிறாய் என்பது நிச்சயம்.

ஸ்ரீ பாதுகையே சரணா கதி ஒரு பயனுக்காக ஒரு முறையே செய்யத் தக்கது -அடிக்கடி செய்யத் தக்கதன்று என்ற
சாஸ்திர வரம்பை மீறி உன்னைச் சரணம் அடைந்தவர் மீண்டும் சரணா கதி செய்யப்புக முன் செய்த சரணா கதியே போதும் –
மேலும் வேண்டாம் என்று உன் நாதங்களால் ஆதரத்துடன் நீ அவர்களைத் தடுக்கிறாய் போலும் –

—————————————————————————

விகல கரண வ்ருத்தௌ விஹ்வல அங்கே விலக்ஷம்
விலபதி மயி மோஹாத் பிப்ரதீ சௌரி பாதம்
பரிசரம் அதிகந்தும் பஸ்ய பாதாவநி த்வம்
ப்ரதி பயம் அகிலம் மே பர்த்ஸயந்தீ நிநாதை:—-466–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அனைத்தும் தளர்ந்து, உடல் முழுவதும் குன்றி, அறிவு இழந்து,
யாரைக் குறித்து எதனைக் கூறுவது என்று புரியாமல், எதனையோ கூறி அழும் காலம் உண்டாகலாம்.
அப்போது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை நீ தரித்துக் கொண்டு, உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம்
எனக்கு உண்டாகின்ற அனைத்து விதமான பயத்தின் காரணங்களை,
அவை பயந்து ஓடும்படியாக விரட்டியவாறு நீ எனக்கு அருகில் வரவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே இந்திரியங்கள் போய் முழுவதுமாக தளர்ந்து நான் கதறுகிற போது எனக்குப் பயத்தை உண்டு பண்ணுபவைகளை
உன் நாதங்களால் மிரட்டிய படி எம்பெருமானுடன் நீ என் சமீபம் வர வேண்டும் –

————————————————————————

கரண விகம காலே கால ஹுங்கார சங்கீ
த்ருதபதம் உபகச்சந் தத்த ஹஸ்த: ப்ரியாப்யாம்
பரிண மயது கர்ணே ரங்கநாத: ஸ்வயம் ந:
ப்ரணவம் இவ பவத்யா: பாதுகே மஞ்ஜுநாதம்—-467-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அடங்குகின்ற அந்திம காலத்தில் யமன் என்னிடம் வந்து
”ஜும்” என்று அதட்டுவானே என்ற சந்தேகம் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுகிறது. அதனால், அந்த நேரத்தில் தன்னுடைய
இரண்டு பிராட்டிகளும் கை கொடுக்க, மிகவும் வேகமாக என்னிடம் ஓடி வந்து, எனது காதில் ப்ரணவத்தின்
ஓசை போன்ற உன்னுடைய அழகான நாதத்தைக் கேட்கும்படிச் செய்யவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் ஸ்ரீ ரங்க நாதன் உபய நாச்சிமாருடன் யம படர்களின் கொடிய பேச்சுக்கள் என் காதில்
விழாமல் இருக்க வேண்டி வேகமாக எழுந்து அருளி உன் இன்ப நாதம் என் காதில் பிரணவம் போல் ஒலிக்குமாறு செய்து அருள வேண்டும் –

——————————————————————-

கமல வந ஸகீம் தாம் கௌமுதீம் உத்வஹந்தம்
ஸவிதம் உபநயந்தீ தாத்ருஸம் ரங்க சந்த்ரம்
ப்ரளய தின ஸமுத்தாந் பாதுகே மாமகீநாந்
ப்ரசமய பரிதாபாந் சீதளை: சிஞ்ஜிதை: ஸ்வை:—-468–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரணம் சம்பவிக்கின்ற நேரத்தில் என்னுடைய வேதனைகளை நீ போக்கவேண்டும்.
எப்படி என்றால் – தாமரைக் காட்டின் தோழியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் நிலவை வைத்துக் கொண்டிருக்கிற
ஸ்ரீரங்கநாதனை என் அருகில் எழுந்தருளப் பண்ண வேண்டும்.
இதன் மூலம் குளிர்ந்த உன்னுடைய நாதங்கள் மூலமாக எனது வேதனைகளை நீக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம தருணத்தில் சரீரத்திலும் மனத்திலும் பலவித பரிபவங்கள் உண்டாகும்
அப்போது இள நிலவை ஒத்த மகா லஷ்மியை அடைந்த ஸ்ரீ ரங்க விமானத்திற்கு சந்த்ரனாகிய எம்பெருமானை
என்னருகில் கூட்டி வந்து அவரது சந்திர காந்தியாலும் உன் இனிய நாதத்தாலும் என்னைக் குளிர வைக்க வேண்டும் –

——————————————————————————-

ப்ரஸமயது பயம் ந: பஸ்சிம ஸ்வாஸகாலே
ரஹஸி விஹரணம் தே ரங்க நாதேந ஸார்த்தம்
நியதம் அநுவிதத்தே பாதுகே யத் நிநாத:
நிகில புவந ரக்ஷா கோஷணா கோஷலீலாம்—-469–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின்போது உண்டாகும் உன்னுடைய நாதங்கள்,
“ நிச்சயம் அனைத்து உலகங்களையும் காப்பேன் ”, என்று பறைசாற்றுவது போல் உள்ளது.
இப்படிப்பட்ட இந்த சப்தமானது, என்னுடைய இறுதி மூச்சு வெளியில் கிளம்பும்போது, யாரும் அறியாதபடி அங்கு வருகின்ற
ஸ்ரீரங்கநாதனுடன் கூடியபடி இருந்து, எனது பயத்தை நீக்கி விடுகிறது.

சரணாகதி செய்தவன் இறக்கின்ற காலத்தில், அங்கு வேறு யார் கண்ணிலும் புலப்படாத வகையில்
ஸ்ரீரங்கநாதனைப் பாதுகை அழைத்து வந்து சேவை சாதிப்பாள் என்பதைக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உலகம் எங்கும் உன் நாதத்தால் எம்பெருமான் எல்லா உலகங்களையும் ரஷிப்பவர்-என்று நீ கூறி இருக்கிறாய் –
அதனால் என் அந்திம காலத்தில் என்னிடத்தில் ரஹச்யமாக வந்து என் பயத்தைப் -பாபத்தைப் -போக்கி அருள வேண்டும் –

—————————————————–

த்ரிக விநிஹித ஹஸ்தம் சிந்த யித்வா க்ருதாந்தம்
கதவதி ஹ்ருதி மோஹம் கச்சதா ஜீவிதேந
பரிகலயது போதம் பாதுகே சிஞ்ஜிதம் தே
த்வரயிதும் இவ ஸஜ்ஜம் த்வத் விதேயம் முகுந்தம்—-470-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உடலை விட்டு ப்ராணனுடன் கூடிய மனம், எனது கழுத்தில் கையை வைத்து அழுத்துகின்ற
யமனை எண்ணி மயக்கம் அடைந்துவிடும். அப்போது உன் வசப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை வேகமாக வரச்செய்கின்ற
உன்னுடைய நாதம், எனக்கு நல்ல ஞானத்தை அளிக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் யம படர்கள் வந்து நலிவார்கள் என்று அஞ்சி நான் மயங்கி விடுவேன் –
நாழி யாகிறது -புறப்பட வேண்டாமா என்று எம்பெருமானை அப்பொழுது அவசரப் படுத்துகிற
உன் சப்தம் எனக்கு நல்ல ஞானத்தைத் தர வேண்டும் –

—————————————————————————-

உபக்நம் ஸம்வித்தே: உபநிஷத் உபோத்காத வசநம்
தவ ஸ்ராவம் ஸ்ராவம் ஸ்ருதி ஸுபகம் அந்தர் மணிரவம்
விஜ்ரும்பந்தே நூநம் மது மதந பதாவநி மம
த்ரவீபூத த்ராக்ஷா மதுரிம துரீணா: ப்ரணிதய:—-471–

மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அறிவு என்ற கொடியானது படர்வதற்கு ஏற்ற
கொழுகொம்பாக உபநிஷத்துக்கள் உள்ளன. அந்த உபநிஷத்துக்களின் முன்னுரையாக, செவிக்கு இனிய
உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்களின் நாதங்கள் உள்ளன.
அதனைக் கேட்டுக்கேட்டு நன்கு கரைந்த திராக்ஷை பழத்தின் இனிமையைச் சுமக்கின்ற சொற்கள்
மேலும்மேலும் வெளிவருகின்றன என்பது நிச்சயம்.

ஸ்ரீ பாதுகையே -உன் நாதம் ஞானம் என்ற கொடிக்குக் கொழு கொம்பாகவும் உபநிஷத்துக்கு முன்னுரையாகவும் இருக்கிறது-
அப்படிப்பட்ட உன் நாதத்தை அடிக்கடிக் கேட்டதால் ரசப் பெருக்கு ஏற்பட்டு
உன்னைத் துதிக்க இனிய வார்த்தை எல்லை இல்லாமல் எனக்கு ஏற்படுகிறது –

————————————————————–

விலாஸை: க்ரீணந்தோ நிகில ஜந சேதாம்ஸி விவிதா:
விஹாரா: தே ரங்க க்ஷிதி ரமண பாதாவநி முஹு:
விகாஹந்தாம் அந்தர்மம விலுடத் அந்தர் மணி சிலா
கலாத்கார வ்யாஜ க்ஷரத் அம்ருத தாரா தமநய:—-472-

திருவரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் உள்ளே இருக்கின்ற
இரத்தினக் கற்கள் தங்களது விளையாட்டுக்கள் மூலம் அனைவரது மனதையும் வசப்படுத்தி விடுகின்றன.
அவை எழுப்புகின்ற, “களுக், களுக்”, என்ற ஒலியின் இனிமையால் அம்ருத ப்ரவாஹம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட உனது ஸஞ்சாரங்கள் என் மனதில் புகவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே நீ சஞ்சரிக்கும் போது ரத்தினங்கள் கல கல என்று சப்திக்கின்றன –
பெயருக்கு கல் என்கிறதே ஒழிய அமிர்த தாரையைப் போல் யாவரையும் தன் வசம் இழுக்கின்றது
கஜ கதி சிம்ஹ கதி சர்ப்ப கதி என்ற அமிர்தம் போன்ற உன் சஞ்சார நாதம் என் மனசில் எப்போதும் பிரவேசிக்க வேண்டும் –

——————————————————————-

ஸ்ருதி ஸ்ரேணீ ஸ்தேய ஸ்ருதி ஸுபக சிஞ்ஜா முகரிதாம்
பஜேம த்வாம் பத்மா ரமண சரண த்ராயிணி பரம்
ந முத்ரா நித்ராண த்ரவிண கண விஸ்ராண நதசா
விசால அஹங்காரம் கமபி கந ஹுங்கார பருஷம்—-473–

ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மகிழ்வை ஏற்படுத்தும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
வேதவரிகளுக்கு, பலரும் முரண்பட்ட பொருளைக் கூறி விவாதம் செய்ய முற்படும் போது, உன்னுடைய நாதம் மூலம்
செவிக்கினிய தீர்ப்பை நீயே அளிக்கிறாய். இப்படிப்பட்ட உன்னையே நாங்கள் வணங்கி நிற்போம்.
அற்பமான சிறு பொருளைக்கூட ஒரு சிலர் அரக்கு முத்திரை இட்டு, பாதுகாத்து வைத்தபடி,
அதனை ஏதோ ஓர் அற்பமான காரணத்தினால் மற்றவர்களுக்குச் சிறிது வழங்கக்கூடும்.
அந்த நேரத்தில், “தான் தாம் செய்கிறோம்”, என்று கர்வம் காரணமாக, அனைவரையும் அதட்டி,
பயத்தை உண்டாக்குகின்ற மனிதர்களை நாங்கள் அண்ட மாட்டோம்.

ஸ்ரீ பாதுகையே உன் இனிய நாதம் வேதங்களுக்கு மனம் வந்தபடி செய்யப்படும் தவறான
வ்யாக்யானங்களைத் தீர்த்து வைத்து தீர்ந்த பொருளைத் தர வல்லது –
உன் நாதத்திலேயே என் மனம் எப்போதும் லயித்து இருக்க வேண்டும்
செல்வச் செருக்குக் கொண்ட அல்பர் இடத்தில் உதவி நாடி நான் போகாமல் இருக்க வண்டும் –

————————————————————————————————–

தவ ஏதத் ஸ்ரீரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ந்ருணாம்
பவதி ஆக: சிந்தா ரண ரணக பங்காய ரணிதம்
சரீரே ஸ்வம் பாவம் ப்ரதயதி யதா கர்ணநவசாத்
ந ந: கர்ணே பாவீ யம மஹிஷ கண்டா கண கண:—-474–

ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதர்கள் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி
மிகுந்த அச்சம் கொள்ளும்போது, உன்னுடைய இனிய நாதம் அவர்களது பயத்தைப் போக்க ஏதுவாக உள்ளது.
இந்த உடலானது தனது இயல்பான அழிவை அடையும் காலத்தில், உன்னுடைய இந்த நாதத்தைக் கேட்பதன் காரணமாக,
எங்கள் காதுகளில் யமனின் வாகனமாக உள்ள எடுமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் கண கண என்னும் ஓசை கேட்காமல் போய்விடும் .

பாதுகையை அண்டியவர்கள் வாழும் காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து வாழாமல், எந்தவிதமான
அச்சமும் இன்றி வாழ்வார்கள் என்று கடந்த ச்லோகத்தில் கூறினார்.
இங்கு, உயிர் பிரியும் நேரத்திலும் பயம் அற்று இருப்பார்கள் என்றார்.

ஸ்ரீ பாதுகையே ஒருவன் தன் குற்றத்தை நினைத்து நடுங்குகிற போது உனது இனிய நாதம் அந்த பயத்தைப் போக்குகிறது –
காரணம் யாது எனில் உன்னுடைய சப்தத்தை ப்ரீதியுடன் கேட்பவர் காதில்
யமனுடைய வாகனமான எருமை கழுத்தில் தாங்கும் மணியின் சப்தம் படாதன்றோ –

————————————————————————-

பரித்ரஸ்தா புண்யத்ரவ பதந வேகாத் ப்ரதமத:
க்ஷரத்பி: ஸ்ரீரங்க க்ஷிதி ரமண பாதாவநி ததா
விதாமாஸுர் தேவா: பலிமதந ஸம்ரம்பம் அநகை:
ப்ரணாதைஸ் தே ஸத்ய: பத கமல விக்ராந்தி பிஸூநை:—-475-

ஸ்ரீரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே!
த்ரிவிக்ரம அவதாரம் செய்த காலத்தில், மஹாபலியின் புண்ணிய காலம் கழிந்து அவன் மண்ணுலகில் விழும் காலம் வந்ததை,
த்ரிவிக்ரமனாக அறிவிக்கும் வகையில், அவனது திருவடித் தாமரையில் உள்ள குற்றமற்ற உனது இனிய நாதம் மூலம் தெரிவித்தாய்.
இதனால் தேவர்கள், ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமான நின்று மஹாபலியை அடக்குகின்ற செயலை அறிந்தனர்.

மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும் பயம் உண்டு. அவர்களின் பயத்தையும் நீக்குவதாகப்
பாதுகைகளின் செயல்கள் உள்ளதைக் காண்பிக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே திரிவிக்கிரம திருவவதார காலத்தில் பிரம்மா எம்பெருமானுடைய திருவடியை அலம்பினார் –
அது நதியாக பிரவகித்தது -உன் இனிய நாதத்துடன் கூடிய திருவடி வாய்ப்பைக் கவனித்து தேவர்கள் தங்கள் சரணாகதியை
ஏற்ற எம்பெருமான் மகா பலியிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற திருவவதாரம் எடுத்து அருளியதை அறிந்தனர் –

———————————————————————–

ஸ்வேஷு ஸ்வேஷு பதேஷு கிம் நியமயஸி அஷ்டௌ திசாம் ஈஸ்வராந்
ஸ்வைராலாபகதா: ப்ரவர்த்தயஸீ கிம் த்ரய்யா ஸஹாஸீநயா
ரங்கேசஸ்ய ஸமஸ்த லோக மஹிதம் ப்ராப்தா பத அம்போருஹம்
மா பைஷரீதி மாம் உதீரயஸி வா மஞ்ஜுஸ்வநை: பாதுகே—-476-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களும் போற்றுகின்ற ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற அழகிய
திருவடிகளை அடைந்து நீ வீற்றுள்ளாய். அங்கு இருந்தபடியே இனிமையான நாதம் எழுப்பியபடி உள்ளாய்.
இதன் மூலம் – இந்த்ரன் உள்ளிட்ட எட்டுத் திசையின் காவலர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று
பணியாற்றும்படி உத்தரவு இட்டபடி உள்ளாயோ? அல்லது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் அமர்ந்துள்ள
வேதங்களுடன் உரையாடியபடி உள்ளாயோ? அல்லது என்னிடம், “அஞ்சவேண்டாம்”, என்று கூறுகிறாயோ?

ஸ்ரீ பாதுகையே உன் இனிய நாதம் ஏக காலத்தில் பல வேலைகளைச் செய்து அருளுகிறது –
இந்திராதி திக்பாலர்களைத் தங்கள் பட்டங்களில் இருக்கும் படி உத்தரவு செய்கிறது –
உன்னுடன் கூட இருக்கும் வேதங்களோடு வார்த்தை சொல்லிக் கொண்டே
பயப்படாதே என்று எனக்கும் தைர்யம் சொல்வது போலே இருக்கிறாய் –

———————————————————————————————

ரங்கே தேவி ரதாங்கபாணி சரண ஸ்வச்சந்த லீலாஸகி
ஸ்தோக ஸ்பந்தித ரம்ய விப்ரம கதி ப்ரஸ்தாவகம் தாவகம்
கால உபாகத கால கிங்கர சமூ ஹுங்கார பாரம்பரீ
துர்வார ப்ரதி வாவதூகம் அநகம் ஸ்ரோஷ்யாமி சிஞ்ஜாரவம்—-477-

சக்கரத்தைத் திருக்கரத்தில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் இனிமையாக விளையாடி மகிழும்
அதன் தோழியான பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் உல்லாஸமாக ஸஞ்சாரம் செய்கின்ற நம்பெருமாளின்
ஸஞ்சாரத்தை சிறுகச்சிறுக அசைந்தபடி நீ அறிவிக்கிறாய். இப்படிப்பட்ட உனது நாதம் என்ன செய்யவேண்டும் தெரியுமா –
எனது அந்திம காலத்தில் எண்ணற்ற யமதூதர்கள் தொடர்ந்து என்னை அதட்டியபடி இருப்பார்கள்.
அவர்களால் மறுமொழி கூற இயலாதபடி, குற்றமற்றதாக ஒலிக்கவேண்டும். இதனை நான் கேட்டபடி இருப்பேனாக.

தனது அந்திம காலம் திருவரங்கத்திலேயே கழியவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். யம தூதர்கள் வரும்போது,
பாதுகைகளின் ஓசைகள் நம்பெருமாள் வருவதை அறிவிக்க வேண்டும் என்று விண்ணம்பம் செய்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நான் மிகப் பாபியான படியால் யமபடர்கள் அந்திம காலத்தில் ஆயிரக் கணக்கில் வந்து என்னை அதட்டுவார்கள்
அந்த சமயத்தில் உன் இனிய நாதத்தை நான் ஸ்ரீ ரங்கத்தில் கேட்டு இருக்க அருள வேண்டும் –

—————————————————————-

த்வத் சிஞ்ஜாரவ சர்க்கரா ரஸ ஸதாஸ்வாதாத் ஸதாம் உந்மதா
மாதர் மாதவ பாதுகே பஹுவிதாம் ப்ராய: ஸ்ருதி: முஹ்யதி
ஸாராஸார ஸக்ருத் விமர்ஸந பரிம்லந அக்ஷர க்ரந்திபி:
க்ரந்தைஸ் த்வாம் இஹ வர்ணயாமி அஹம் அதஸ் த்ராஸ த்ராபா அபவர்ஜித:—478–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த
அறிஞர்களின் காதுகள், அவற்றை விட மிகவும் இனிமையானதும், சர்க்கரைப்பாகு போன்றதும் ஆகிய
உனது நாதத்தின் சுவையை விடாமல் பருகி, மயக்கம் அடைந்து நிற்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நான், எவ்விதமான அச்சமோ அல்லது நாணமோ இல்லாமல்,
”இந்தச் சொற்கள் நல்லவையா தகாதவையா”, என்று மீண்டும் ஒருமுறை ஆராயாமல்,
எழுத்துக்களின் சேர்க்கை கொண்ட ச்லோகங்களால் உன்னைத் துதித்து விடுகிறேன்.

இங்கு “விமர்சந பரிம்லாந” என்ற பதத்திற்கு – ”மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்” ,
“ விமர்சிக்க முயன்றாலே வாடிவிடும் சொற்கள்” – என்று இரு பொருள் கொள்ளலாம்.
முதல் பொருளில் மேலே உள்ள கருத்து உள்ளது. இரண்டாவது பொருளில் –
தன்னுடைய எழுத்துக்கள் மிகவும் அற்பமானவை என்றும், அவற்றை ஒருமுறை யாராவது விமர்சிக்க முயன்றாலே
அவை வாடிவிடும்படியான தன்மை கொண்டவை என்றும் கூறுவதாகக் கொள்ளலாம்.

ஸ்ரீ பாதுகையே அதிகம் தெரிந்த பெரியவர்கள் கூட உன் நாதத்தைக் கேட்டு மயங்கி விடுகிறார்கள்
என்னுடைய ஸ்லோகங்களில் உள்ள தோஷங்களை விமர்சிக்கவும் முடியாத படியான மயக்கம் அது
ஆகவே பயமும் வெட்கமும் இன்ற நான் துதிக்க முற்படுகிறேன் –

——————————————————————-

தவ அம்ப கில கேலதாம் கதிவசேந கர்ப்பாஸ் மநாம்
ரமா ரமண பாதுகே கிமபி மஞ்ஜுபி: சிஞ்ஜிதை:
பதிஸ்துதி விதாயிபி: த்வதநு பாவ ஸித்தாந்திபி:
ஸயூத்ய கலஹாயிதம் ஸ்ருதிசதம் ஸமாபத்யதே—-479-

ஸ்ரீரங்கநாச்சியாருக்கு இனிமையானவனாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் காரணமாக
ஒலிக்கின்ற இனிமையான இரத்தினக்கற்கள் கொண்ட உனது பெருமை என்பது, அவனது திருவடிகளைக் காட்டிலும்
உயர்ந்தவையே என்று வேதங்கள் முழங்குகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாராட்டித் துதிப்பவர்களுடன்
இந்தச் சூழ்நிலையில், வேதங்கள் ஏனோ முரணாகப் பேசி, கலகம் செய்கின்றன.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் புகழ்ந்து ச்லோகம் இயற்றுவதாக ஒருவர் கூற, ஸ்வாமி தேசிகன் பாதுகைகளைப் புகழ்ந்து
ஸ்லோகம் இயற்றுவதாகக் கூற – இப்படித்தான் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் உண்டானது.
இங்கு திருவடிகளைப் பற்றிப் புகழ்ந்து ஸ்லோகம் இயற்ற முயன்றவரால் சில நூறு ஸ்லோகம் கூட இயற்ற முடியவில்லை.
ஆகவே வேதங்கள் கூட அவருக்குக் கைக்கொடுக்காமல், கலகம் செய்ததோ என்று வியக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ சஞ்சரிக்கும் போது உன்னுள் இருக்கும் ரத்னங்கள் ஒன்றோடு ஓன்று மோதி சப்திக்கின்றன –
அது வேதத்தில் சில வாக்யங்கள் எம்பெருமான் உடையவும் மற்றும் சில வாக்யங்கள் அவர் தாசர்கள் உடையவும் பெருமையை
சமமானமாகக் கூறுவதால் தமக்குள் சண்டையிடுவது போல் இருக்கிறது -நாதம் இரண்டையும் சமன்வயப்படுத்துகிறது –

——————————————————————————-

க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.

எம்பெருமான் கருணை உள்ளவன் என்றாலும், ”என்னைக் காப்பாய்” என்று ஒருவன் கூறாதவரையில்
அவன் ஏதும் செய்யமாட்டான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனைக் கண்ட பாதுகை,
“இது என்ன விபரீதம்! அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காப்பது நம் கடமை அல்லவோ?”, என்று
திருவரங்கனைத் துரிதப்படுத்தி விடுகிறாள் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் தன்னை அடைந்தவர்களைத் தடையின்றி காப்பாற்றுகிறார்
என் விஷயத்தில் கால தாமதம் இருக்குமானால் உன் நாதத்தால் நீ அத்தை போக்கி அருளுகிறாய் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-

March 12, 2016

பாந்து வ: பத்ம நாபஸ்ய பாதுகா கேளி பாம்ஸவ:
அஹல்யா தேஹ நிர்மாண பர்யாய பரமாணவ:—-351-

அழகான தாமரை மலர் போன்ற திருநாபிக் கமலம் உடைய இராமன் ஸஞ்சாரம் செய்த போது,
அவனது பாதுகைகளில் இருந்து தூசிகள் கிளப்பின. அவை அகலிகையின் உடலை மீண்டும் உண்டாக்கும்
பரமாணுக்கள் போன்று தோன்றின. இப்படிப்பட்ட தூசிகள் உங்களையும் காப்பாற்றுவதாக.

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய ஸ்ரீ பாதுகையின் துகள்கள் அஹல்யைக்கு உயர்ந்த சரீரத்தை உண்டு பண்ணின –
நமக்கும் எம்பெருமான் கைகர்யத்துக்கு உகந்த திவ்ய சரீரத்தை அருள வேண்டும் –

———————————————————————

தவ ஸஞ்சரணாத் ரஜோ விதூதம்
யதிதம் ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
அலம் ஏதத் அநாவிலாநி கர்த்தும்
கதக க்ஷோத இவாஸூ மாநஸாநி—-352-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேத்தாங்கொட்டையின் துகள்கள் தண்ணீரை எவ்விதம் தூய்மைப் படுத்துகின்றனவோ
அது போன்று, உனது ஸஞ்சாரத்தின் போது எழும் தூசிகள் மனதைத் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

ஸ்ரீ பாதுகையே -தேத்தாங்கொட்டை கலங்கின ஜலத்தைத் தெளிவிப்பது போலே உன் மீதுள்ள தூசி பக்தர்கள் மேலே பட்டாலும்
அல்லது நினைத்தாலும் -அவர்களுடைய கலங்கின மனது தெளிகின்றது –

—————————————————————————

புநருக்த பிதா மஹ அனுபாவா:
புருஷா: கேசித் அமீ புநந்தி விஸ்வம்
மதுவைரி பதாரவிந்த பந்தோ:
அபராகாஸ் தவ பாதுகே பராகை:—-353-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மதுசூதனனின் திருவடிகளுடைய பந்துவாக உள்ள உனது தூசிகள்,
இந்த உலகில் உள்ள சிலர் மீது விழுகின்றன. அப்படிப்பட்டவர்கள் ப்ரம்ம பதவி பெறவும் தகுதி உள்ளவர்கள் ஆகின்றனர் என்றாலும்,
அவர்கள் அதனை விரும்பாமல் உள்ளனர். இப்படிப்பட்ட உயர்ந்தவர்களே இந்தப் பூமியைத் தூய்மைப்படுத்துகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன் துகள்கள் எவர் மீதுபடுகின்றனவோ அவர் எம்பெருமானுடைய கைங்கர்ய சாம்ராஜ்யத்தைப் பரம புருஷார்த்தமாக
மதித்து மற்றவைகளை விரும்புவதில்லை .அப்படிப்பட்ட மஹான்கள் இவ்வுலகத்தையே சுத்தமாகச் செய்கிறார்கள் –
ஸ்ரீ பாதுகையின் பராக -துகள்கள் -சம்பந்தம் பெற்றவர்கள் அபராகர் -ஆசை அற்றவர்கள் ஆகின்றனர் -இது விசித்ரம் அன்றோ –

————————————————————————–

அபியுக்த ஜநோ நிஜார்ப்ப காணாம்
பஹுசோ ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
அவலேப பிசாச மோசநார்த்தம்
ரஜஸா லிம்பதி தாவகேந தேஹாந்—-354-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பெருமைகளை உணர்த்த பெரியவர்கள் செய்வது என்ன?
அஹங்காரம் போன்ற பல பிசாசுகள் பீடித்துள்ள தங்கள் குழந்தையின் உடம்பை உனது துகள்கள் கொண்டு பூசி,
அந்தப் பிசாசுகளை விரட்டுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நல்லவர்கள் ஆகிய பெரியோர் உன் மீதுள்ள தூசியை எடுத்துத் தங்கள் குழந்தைகள் மீது பூசி
கர்வம் முதலிய துர்க் குணங்கள் ஆகிற பிசாசத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர் –

—————————————————————————

சிரஸா பரி க்ருஹ்ய லோக பாலா:
தவ ரங்கேஸ்வர பாதுகே ரஜாம்ஸி
விஷமேஷு பலேஷு தாநவாநாம்
வ்யபநீத அந்யசிரஸ்த்ரம் ஆவிசந்தி—355-

ஸ்ரீரங்கத்தின் நாயகனாகிய திருவரங்கனின் பாதுகையே! இந்திரன் முதலான தேவர்கள் உனது தூசிகளைத்
தங்கள் தலைகளில் பூசிக் கொள்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் தலைக்கு எந்த விதமான கவசமும்
அணியாமலேயே அசுரர்களுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டு, அவர்கள் கூட்டத்தில் புகுந்து விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே இந்த்ரன் முதலானோர் அஸூரர்களை வெல்லப் புறப்படும் போது உன் மீதுள்ள தூசியை சிரசில் வகித்து
வேறு தலைக் கவசம் இல்லாதவர்களாய் யுத்த பூமியில் பிரவேசிக்கிறார்கள் –

ஆசார்ய பக்தி உள்ளவர்களை ஆசை பொறாமை கர்வம் கோபம் முதலிய தீய குணங்களை அண்ட மாட்டா –

—————————————————————————-

க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூர பூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோ குணம், தமோ குணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வ குணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூசியைத் தரிப்பவர்கள் ப்ரஹ்ம லோகம் வரையிலான சகல ஐஸ்வர்யத்தையும்
வெறுத்து அவற்றுக்கு அப்பாற்பட்ட பரம பதத்தையே பூரணமாகப் பார்த்துக் கொண்டே இருக்கின்றனர் –

———————————————————————–

அதிகம் பதம் ஆஸ்ரித: அபி வேதா:
ப்ரயத: ரங்கதுரீண பாத ரக்ஷே
அபிவாஞ்சதி ஸங்கமம் பராகை:
அபி ஜாதை: தவ தேவி நாபிஜாத:—357-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரம்மன் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவனே என்றாலும்,
அவன் சிறந்த குலப் பெருமை உள்ள உன்னுடைய தூசிகளின் தொடர்பு அடைய விரும்புகிறான்
(இதனால் தான் நல் கதி பெறலாம் என்று எண்ணினான்).

ஸ்ரீ பாதுகையே மிகத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவரும் உன்னுடன் சம்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு
உயர் குலத்தில் பிறந்ததாகத் தம்மைக் கருதுவர் –
உயர்ந்த பதவியில் இருந்தும் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவர் தாம் உயர் குலத்தில்
பிறந்ததாகக் கருதப் படுவதற்கு உன்னுடைய தூள்களை விரும்புகிறார்கள் –

———————————————————————

ஸூத்தஸ்த்த்வ வபுஷா ஏவ பவத்யா
பாதுகே விரஜஸௌ ஹரி பாதௌ
அஸ்து கிம் புநரிதம் ரஜஸா தே
ஸூத்த ஸத்த்வ மயதா மனுஜாநாம்—-358-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ரஜோ குணம், தமோ குணம் இல்லாத தூய்மையான ஸத்வ குணம் மட்டுமே மேலிட்ட
திருமேனி கொண்டவளாக நீ உள்ளாய். உன் காரணமாகவே நம்பெருமாளின் திருவடிகளில் தூசி ஒட்டாமல் உள்ளது.
இது ஒருபுறம் இருக்கட்டும். நம்பெருமாள் பின்னே செல்பவர்களுக்கு உனது ரஜஸ் (தூசி) மூலம், அந்த ரஜஸ் (தூசி)
அவர்கள் மீது பட்டவுடன், அவர்களது ரஜோ குணம் போய் விடுகிறதே, இது எப்படி?
(ரஜஸ் மூலம் ரஜோ குணம் எப்படி நீங்குகிறது என்று வியக்கிறார்)

ஸ்ரீ பாதுகையே நீ சுத்த சத்த்வ மயமான திரு மேனியைக் கொண்டு எம்பெருமான் திருவடிகளை ரஜஸ் -புழுதி -அற்றதாகச் செய்கிறாய் –
ஆனால் பக்தர்கள் உன் ரஜஸ் சினால் -புழுதியினால் -சுத்த சத்வத்தை உடையவர்களாகச் செய்கிறாயே -அது எவ்வாறு –

———————————————————————————-

தத் ரஜஸ் தவ தநோதி பாதுகே
மாநஸாநி அகடிநாநி தேஹிநாம்
ப்ரஸ்தரஸ்ய பதவீக தஸ்ய யத்
வ்யாசகார முநி தர்ம தாரதாம்—-359-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய தூசிகளுக்கு மனிதர்களின் மனதை மென்மை யாக்கும் தன்மை உண்டு போலும்.
காரணம் – உனது தூசியினால் இராமன் சென்ற வழியில் இருந்த கல் ஒன்று மஹிரிஷியின் மனைவி
என்ற மென்மையாக பெண்ணாக ஆனது அல்லவா?

ஹே ஸ்ரீ பாதுகையே –உன்னுடைய துகள்கள் மக்களின் கடினமான மனத்தை மிகவும் மிருதுவாகச் செய்யும் தன்மை வாய்ந்தவை –
மிதிலை செல்லும் வழியில் இருந்த கடினமான ஒரு கல்லை முனிவரின் மனைவியாக அஹல்யையாக மாற்றிய பிறகு இது வெளிப்படை யன்றோ –

——————————————————————————

ரங்கேசயஸ்ய புருஷஸ்ய ஜகத் விபூத்யை
ரத்யா பரிக்ரம விதௌ மணி பாத ரக்ஷே
ஸீமந்த தேசம் அநவத்ய ஸரஸ்வதீநாம்
ஸிந்தூர யந்தி பவதீ சரிதா பராகா:—-360-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பரம புருஷனாகிய ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீரங்கத்தில் சயனித்தபடி உள்ளான்.
அவன் இந்த உலகின் நன்மையை மனதில் கொண்டு வீதி வலம் வருகிறான்.
அப்போது உன்னிடம் இருந்து கிளம்பின தூசிகள், பெண்களின் தலையில் உள்ள வகுடில் வைக்கப்படும் குங்குமம் போன்று மாறின.

ஸ்ரீ பாதுகையே -லோக ஷேமத்தைக் கருத்தில் கொண்டு எம்பெருமான் திரு வீதியில் எழுந்து அருளுகிறார் –
அப்போது உன்னால் உண்டு பண்ணப்பட்ட தூளிகள் வேதங்கள் ஆகிற பெண்களின் வகிட்டிற்கு சிந்தூரம் சாற்றியது போல் ஆயிற்று –

——————————————————————————————–

மாந்யேந ரங்க ந்ருபதே : மணி பாத ரக்ஷே
சூடா பதாநி ரஜஸா தவ பூஷ யந்த:
கால க்ரமேண பஜதாம் கமலாஸ நத்வம்
நாபி ஸரோஜ ரஜஸாம் நிவஸந்தி மத்யே—361-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் பெருமை உடையதும், போற்றத் தக்கதும் ஆகிய
உன்னுடைய தூசிகளை ஒரு சிலர் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.
அவர்கள் காலம் கழியக் கழிய வரிசையாக பகவானின் திருநாபிக் கமலத்தில் அமர வல்ல ப்ரம்ம பட்டம் அடைகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூசியைப் பக்தியுடன் சிரசில் தரிப்பவர்கள் பகவானின் நாபிக் கமல மகரந்த தூள்களின் இடையில்
வாசம் செய்யும் பிரம்ம பட்டம் முதலிய உயர்ந்த பதவிகளை அடைகிறார்கள் –

———————————————————————————

மாதர் முகுந்த சரணாவநி தாவகீநா:
சிந்தா வசீகரண சூர்ண விசேஷ கல்பா:
ஸஞ்சார பாம்ஸு கணிகா: சிரஸா வஹந்தோ
விஸ்வம் புநந்தி பத பத்ம பராக லேசை:—-362-

கண்ணனின் திருவடிகளை அவனது தாயான யசோதை போன்று காப்பாற்றும் பாதுகையே!
இந்த உலகில் உள்ளவர்களின் மனம் முழுவதும் உன் பக்கம் ஈர்க்கும் வண்ணம் உள்ள சொக்குப் பொடியாக உனது தூசிகள் உள்ளன.
அவற்றை ஒரு சிலர் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
அப்படிப் பட்டவர்களின் திருவடித் தூசி மூலமாக அவர்கள் இந்த உலகத்தைத் தூய்மைப் படுத்துகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரு வீதியில் எழுந்து அருளும் போது உன்னால் கிளப்பட்ட தூசி பின்னால் வரும் பக்தர்கள் மீது படுகிறது –
அந்த தூசியைத் தலையில் தரிக்கும் மஹான்கள் சகல லோகங்களையும் தோஷம் இல்லாமல் செய்கிறார்கள் –
தங்கள் திருவடித் தாமரைகளின் தூள்களால் செய்கிறார்கள் என்றபடி –

———————————————————————————

ஆயோஜிதாநி அமலதீபி: அநந்ய லப்யே
பாதாவநி ச்ருதி வதூ படவாஸ க்ருத்யே
த்வத் ஸஞ்சர ப்ரசலிதாநி ரஜாம்ஸி சௌரே:
ப்ரக்யா பயந்தி பத பத்ம பராக சோபாம்—-363-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடமிருந்து கிளம்பும் தூசிகள் அனைத்தும்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் துளிகள் தவிர மற்ற ஏதும் சென்றடைய இயலாத, வேதங்கள் என்ற பெண்ணுக்கு
ஏற்ற வாசனைப் பொடிகளாக உள்ளன. இவ்விதம் மிகவும் கற்றவர்கள் கூறுகிறார்கள்.
அந்தத் தூசிகள் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளிலிருந்து கிளம்பும் தூசிகள் என்று கூறுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் காலத்தில் உன்னால் கிளப்பப்படும் தூள்களை
வேதங்கள் ஆகிற பெண்கள் வாசனைப் பொடியாக தங்கள் உடம்பில் பூசிக் கொள்கிறார்கள் –
அவை பெருமாளுடைய திருவடித் தாமரையின் தூளிகளின் பெருமையை விளக்குகின்றன –

—————————————————————————–

மூர்த்தாநம் அம்ப முரபிந் மணி பாத ரக்ஷே
யேஷாம் கதாபி ரஜஸா பவதீ புநாதி
த்வாம் ஏவ தே ஸுக்ருதிந: ஸ்நபயந்தி காலே
மந்தாரதாம் ரஜஸா மகுட ஸ்யுதேந—-364-

முரன் என்ற அரக்கனை வீழ்த்திய கண்ணனின் திருவடிகளை அவன் தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
நீ ஒரு சிலரின் தலைகளை உன் மீது உள்ள தூசி கொண்டு தெளித்து, அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடும்.
அப்படிப்பட்ட புண்ணிய சாலிகள் சரியான காலம் வந்தவுடன் இந்திரபதவி பெற்று விடுகின்றனர்.
அப்போது தங்கள் க்ரீடங்களிலுள்ள மந்தார மாலை கொண்டு உன்னை நீராட்டுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூள்களை பக்தியுடன் தலையில் தரிப்பவர்கள் இந்திர பட்டத்தைக் கொஞ்ச காலத்திலேயே அடைகிறார்கள் –
தங்கள் கிரீடத்தில் உள்ள மந்தார மாலையின் துகள்களால் வணங்கும் போது உனக்கு அபிஷேகம் செய்கிறார்கள் –

——————————————————————————–

ரத்யா விஹார ரஹஸா பரிதூஸராங்கீம்
ரங்கேஸ்வரஸ்ய லலிதேஷு மஹோத்ஸவேஷு
ப்ரஸ்போடயதி அவநத: மணி பாதுகே த்வாம்
கௌரீபதி: ஸவயம் இபாஜின பல்லவேந—-365-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் உத்ஸவ காலங்களில் உன்னைச் சாற்றிக் கொண்டு
திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்போது அந்த வீதிகளில் உள்ள புழுதி உன் மீது முழுவதுமாகப் படிந்து விடுகிறது.
இதனைக் கண்ட சிவன், உன்னை வணங்கியபடி, தனது தளிர் போன்ற யானைத் தோல் கொண்டு உன்னைத் துடைத்து வைக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே பெரிய உத்சவ காலங்களில் எம்பெருமானுடன் வந்த உன் மீது தூசி படிந்து விடுகிறது –
பரமசிவன் உன்னை வணங்கித் தன் மிருதுவான யானைத் தோலினால் உன்னைப் புழுதி இல்லாமல் துடைத்து விடுகிறார் –

——————————————————————————

நேதீயஸாம் நிஜபராக நிவேச பூர்வம்
ஸ்ப்ருஷ்ட்வா சராம்ஸி பவதீ பவரோக பாஜாம்
காடம் நிபீட்ய கருட த்வஜ பாத ரக்ஷே
மாநக்ரஹம் சமயதீவ பரைர ஸாத்யம்—366-

கருடனைக் கொடியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களின் தலைகள்
உன் அருகில் வந்தவுடன், உன் மீது உள்ள தூசிகளை முதலில் அந்தத் தலைகள் மீது படியச் செய்கிறாய்.
பின்னர் அவற்றைத் தொட்டு, (சடாரி) அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறாய்.
இதன் மூலம் யாராலும் ஓட்ட இயலாத அஹங்காரம் என்ற பிசாசை நீ ஓட்டி விடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே திரு வீதியில் பெருமாளை சேவிக்க வந்தவர்களுக்கு உன்னை சாதிக்கிறார்கள் –
அப்பொழுது உன் துளிகளால் அவர்கள் தலையையும் தோள்களையும் தொட்டு
அவர்கள் இடமிருந்து கர்வம் முதலிய கெட்ட பிசாசுகளை விரட்டுவது போல் இருக்கிறது –

————————————————————————————

ஆபாத வல்லவ தநோ அகுமாரயூந:
பாதாவநி ப்ரவிசதோ யமுநா நிகுஞ்ஜாந்
ஆஸீத் அநங்க ஸமராத் புரத: ப்ரவ்ருத்த:
ஸேநா பராக இவ தே பதவீ பராக:—-367-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காண்பதற்குக் குழந்தை போன்று உள்ளவனும், உண்மையில் இது போன்ற பருவங்கள்
ஏதும் அற்றவனும் ஆகிய பரம புருஷனாகிய கண்ணன், ராஸ லீலைக்காக யமுனை ஆற்றின் கரைக்கு வந்தான்.
அப்போது உன்னிடமிருந்து தூசிகள் பறந்தன.
இவற்றைக் காணும் போது, நடக்க உள்ள மன்மத யுத்த்த்திற்கு முன்பாக சேனை கிளம்புவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே யமுனை ஆற்றங்கரையில் கோபிகைகளுடன் விளையாடக் கண்ணன் எல்லாக் கொடி வீடுகளிலும் புகுந்து வந்தார்
அப்போது உன்னிடம் இருந்து தூளிகள் எம்பெருமானின் காமப் போருக்கு முன் உண்டான சேனையின் தூளிகள் போல் இருந்தன –

——————————————————————————–

கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவந தமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கையின் கரையோரமாக நடந்தான்.
அப்போது உன் மீதுள்ள தூசிகள் அனைத்தும் அந்தக் கரையில் உள்ள புதர்களில் படிந்தன.
அந்தப் புதர்கள் அவற்றை எடுத்துத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்ளும்படியாக உள்ள ஒரு பூச்சை அந்தத் தூசிகள் ஏற்படுத்துகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –

———————————————————————————

அந்தே ததா த்வம் அவிலம்பிதம் ஆநயந்தீ
ரங்காத் புஜங்க சயநம் மணி பாத ரக்ஷே
காமம் நிவர்த்தயிதும் அர்ஹஸி ஸம்ஜ்வரம் மே
கர்ப்பூர சூர்ண படலை: இவ தூளிபிஸ் தே—-369-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! என்னுடைய மரணம் ஏற்படும் நேரத்தில் நீ சிறிதும் தாமதம் செய்யாமல்,
ஸ்ரீரங்க விமானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாளை அந்த இடத்திற்கு அழைத்து வரவேண்டும்.
அப்போது கர்ப்பூரத்தின் துகள்கள் போன்ற உன்னுடைய தூசிகள் என் மீது விழுந்தால், எனது வேதனைகள் முற்றிலுமாக மறைந்து விடும்.

ஸ்ரீ பாதுகையே என் கடைசிக் காலத்தில் நீ ரங்க நாதனை தாமதம் இன்றி எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு
பச்சைக் கற்பூரப் பொடி போன்ற உன் தூசியால் என் சகல பாபங்களையும் -தாபங்களையும் -நீக்க வேண்டும் –

————————————————————————

ரங்கேஸ பாத ஸஹ தர்மசரி த்வதீயாந்
மௌளௌ நிவேஸ்ய மஹிதாந் பதவீ பராகாந்
ஸந்தஸ் த்ரிவர்க்க பதவீம் அதிலங்க யந்த:
மௌளௌ பதம் விதத்தே விபுதேஸ் வரணாம்—-370-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் எப்போதும் சேர்ந்ததே சஞ்சாரம் செய்யும் பாதுகையே!
நன்கு அறிந்தவர்கள் உனது தூசிகளைத் தங்கள் தர்மம், அர்த்தம், காலம் (அறம், பொருள், இன்பம்)
ஆகியவற்றைக் கடந்து செல்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவர்களின் தலைகளில் தங்கள் கால்களை வைக்கும்படி ஆகின்றனர்.
(தேவர்கள் கூட இவர்கள் கால்களில் விழுகின்றனர் என்று கருத்து)

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தாள்களைத் தலையில் வகித்த பெரியோர் தர்ம அர்த்த காமங்களையும்
வெறுத்துப் பரம பதத்தையே யாசிப்பவராய் தேவதைகளாலும் வணங்கப் படுகின்றனர் –

———————————————————————-

மாதஸ் ததா மாதவ பாத ரஷே
த்வயி பிரசக்தம் த்வரயோ பயாந்த்யாம்
பராம்ருசேயம் பதவீபராகம்
பிராணை ப்ரயாணாய சமுஜ்ஜிஹாநை –371-

ஸ்ரீ பாதுகையே என் பிராணன் போகும் சமயம் நீ மிக அவசரமாக வருவாய் -வெளிக் கிளம்பும் என் பிராணன்
உன் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்து அப்போதும் உனக்கு கைங்கர்யம் பண்ணும் பாக்யத்தைப் பெற வேண்டும் –

———————————————————————

ததாகதா ராகவ பாத ரஷே
சம்பச்ய மாநேஷூ தபோத நேஷூ
ஆஸீத ஹல்யா தவ பாம் ஸூலேசை
அபாம் ஸூலாநாம் ஸ்வயமக்ர கண்யா –372-

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனின் பாதுகையே கௌதமர் உடைய சாபத்தினால் கல்லான அஹல்யை உன் தூசி பட்டு
மாசற்றவர்களுள் முதல்வர் ஆனாள்-மஹா பதிவ்ரதை யானாள் –
தூசு படிந்தவர்கள் மாசு படிந்தவர்கள் ஆகத்தானே ஆவார்கள்
அவ்வாறு இன்றி சகல ரிஷிகளாலும் கொண்டாடாத் தகுந்தவள் ஆனாள் –

ஆசார்ய அனுக்ரஹம் மஹா பாபியைக் கூட மஹானாகச் செய்து அருளும் என்றவாறு –

——————————————————————-

பஸ்யாமி பத்மேஷண பாத ரஷே
பவாம்புதிம் பாதுமிவ ப்ரவ்ருத்தான்
பக்தோபயா நத்வரயா பவத்யா
பர்யச்யமாநான் பதவீ பராகான் –373-

ஸ்ரீ பாதுகையே நீ மிக வேகமாக பக்தர்களை அணுகும் போது அதிகமாகத் தூசி கிளம்புகிறது
அவை சம்சாரம் ஆகிற கடலைத் தூர்த்து விடும் போல் இருக்கின்றன

உன்னை வணங்கியவன் ஜனன மரண பயம் நீங்கப் பெறுகிறான் –

—————————————————————————————–

பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-

ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –

———————————————————————————-

பரிணதி மகடோராம் ப்ராப்தயா யத் ப்ரபாவாத்
அலபத சிலயா ஸ்வான் கௌத்மோ தர்ம தாரான்
புநருப ஜநி சந்காவராகம் பாதுகே தத்
ப்ரசமயதி ரஜஸ்தே ராக யோகம் ப்ரஜா நாம் –375-

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய தூளிகளின் பெருமையால் கடினமான கல்லுருவினின்றும் குணத்தாலும் உருவத்தாலும்
மிருதுவான பெண்ணாக தன் தர்ம பத்தினியான அஹல்யையை மீண்டும் கௌதமர் அடைந்தார்
அது போல் சேதனர்களையும் அற்ப ஆசைகளில் ஈடுபாட்டைப் போக்கி மறுபிறப்பு உண்டோ எனும்
சங்கையையும் போக்கி உயர் குணம் கொண்டவராக ஆக்குகின்றன –

——————————————————————————-

ரஜனி விகமகாலே ராமகாதாம் படந்த
குசிகத நயமுக்தா பாதுகே பாவயந்தே
உபல சகல சக்தை த்வத் பராகைர காண்டே
ஜனித முநி களத்ரான் தண்ட காரண்ய பாகன் –376-

ஸ்ரீ பாதுகையே விஸ்வாமித்ரர் முதலிய தண்ட காரண்யத்தில் உள்ள மஹா ரிஷிகள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை
அனுசந்தானம் செய்யும் போது பிரதானமாக உன் தூளிகள் கௌதமரின் மனைவியை உயிர்ப்பித்ததையே அடிக்கடி நினைக்கிறார்கள்

——————————————————————————

ஸூப சரணிர ஜோபி ஸோ பயந்தீ தரித்ரீம்
பரிண திர மணீயான் ப்ரஷரந்தீ புமர்த்தான்
பவதிசி புவந வந்த்யா பாதுகே ரங்க பர்த்து
சரண முபகதாநாம் சாஸ்வதீ காமதேநு –377-

ஸ்ரீ பாதுகையே எல்லோராலும் சேவிக்கத் தகுந்தவளாகவும் தன் மார்கத்தில் தூளியால் உலகம் எல்லாம் ஷேமம் அடையச் செய்பவளும்
கடைசி காலத்தில் நிலையான இன்பத்தைத் தருபவளுமான நீ உன்னை நம்பியவருக்கு உயர்ந்த காம தேனுவாக இருக்கிறாய் –

———————————————————————————-

பவநா தரலி தஸ்தே பாதுகே ரங்க பர்த்து
விஹரண சமயேஷூ வ்யாப்த விஸ்வ பராக
விஷம விஷய வர்த்ம வ்யாகுல நாம ஜஸ்ரம்
வ்யப நயதி ஜநாநாம் வாசநா ரேணு ஜாலம் –378-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய சஞ்சார காலங்களிலே காற்றினால் பரப்பப் பட்ட உன் தூளிகள் விலக்கத் தகுந்த
வழிகளிலே சென்று கலங்கி இருக்கும் மனிதர்களின் மனதை புழுதி சமூகத்தைப் போக்கி சத்தப் படுத்துகின்றது –

தூளி துளியைப் போக்கும் அதிசயம் இங்கே தான் காணலாம்-

—————————————————————————–

நிஷ் பிரத்யூஹ முபாசி ஷீ மஹி முஹூர் நிச் சேஷ தோஷச்சிதோ
நித்யம் ரங்க துரந்த ரஸ்ய நிகமச்த்தோ மார்ச்சிதே பாதுகே
தத்தே மூர்த்த பிராதி பத்ம ஜநிதா தத் தாத்ருசீ சந்ததி
யாத் சஞ்சார பவித்ரித ஷிதிரஜ பங்க்திம் சதுஷ் பஞ்சஷை –379-

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாத்திக் கொண்டு எழுந்து அருளுகிறதனால் பரிசுத்தமான உன் தூளிகளை
பிரம்மா தொடங்கி தலைமுறை தலை முறையாக சிரசில் வகிக்கிறார்கள்-
பெருமாள் ஆசார்யன் மற்றும் பாகவதர் இவர்களுடைய கைங்கர்யத்தில் எந்த விக்னமும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு
வேதங்களால் கொண்டாடப்பட்ட உன்னை த்யானிக்கிறோம் –

—————————————————————

ரஜஸா பரோ ரஜஸ் தந்ந கலு
ந லங்க்யேத பகவதோபி பதம்
கிமுத ஹ்ருதயம் மதீயம் பவதீ
யதி நாம பாதுகே ந ஸ்யாத்–380-

ஸ்ரீ பாதுகையே நீ இல்லாவிட்டால் எம்பெருமான் திருவடிகள் ரஜோ குணம் இல்லாதவையும் கூட ஒரு வேளை
ரஜஸ்ஸினால் பாதிக்கப் படலாம் எனும் போது என் மனம் ரஜோ குணத்தால் பாதிக்கப்படும் என்பதற்குக் கேட்பான் என் –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-

March 12, 2016

சௌரே: ஸஞ்சார காலேஷு புஷ்ப வ்ருஷ்டி: திவஸ் ஸ்யுதா
பர்ய வஸ்யதி யத்ர ஏவ ப்ரபத்யே தாம் பதாவநீம்—-321-

திருவரங்கன் ஸஞ்சாரம் செய்யு ம்போது அவன் மீது பூமாரி பொழிந்தபடி உள்ளது. இத்தகைய மலர்கள்
அவனது திருவடிகளில் உள்ள பாதுகையைச் சென்று அடைகின்றன. அத்தகைய பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.

எம்பெருமான் அசூர நிரசனத்துக்காக புறப்படுகிறார் -அவருடைய வெற்றியைக் கொண்டாட தேவர்கள் புஷ்ப விருஷ்டி செய்கிறார்கள்
அவை கடைசியில் ஸ்ரீ பாதுகையிலே தானே தங்குகின்றன -அந்த ஸ்ரீ பாதுகையையே நான் உபாயமாக எண்ணுகிறேன் –

———————————————————————-

தைவதம் மம ஜக த்ரய அர்ச்சிதா
திவ்ய தம்பதி விஹார பாதுகா
பாணி பாத கமல அர்ப்பணாத் தயோ:
யா பஜத் யநு தினம் ஸபாஜனம்—-322-

மூன்று உலகங்களாலும் வணங்கப்படுகிற ஸ்ரீரங்கநாச்சியாரும் ஸ்ரீரங்கநாதனும் தங்கள் திருக்கரங்கள் மற்றும்
திருவடிகள் என்ற தாமரை மலர்கள் கொண்டு பாதுகையை அன்றாடம் பூஜித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட பாதுகை எனக்கு மட்டும் இன்றி அனைவராலும் வணங்கத் தகுந்தது ஆகும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தன் திருவடித் தாமரைகளையும்
பிராட்டி தன் திருக் கைத் தாமரைகளையும் உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்
அப்படிப்பட்ட திருப் பாதுகையை ஆராதித்து நான் சகல பலன்களையும் அடைய வேண்டும் –

———————————————————————

தவ ரங்கராஜ மணி பாது நதோ
விஹிதார்ஹண: ஸுர ஸரித் பயஸா
அவ தம்ஸ சந்த்ர கலயா கிரிசோ
நவ கேத கீதளம் இவ அர்ப்பயதி—-323–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள
கங்கை நீரைக் கொண்டு உனக்கு அர்க்யம் அளிக்கிறார். தனது தலையில் உள்ள பிறைச் சந்திரன் மூலம்
அழகாக அமைந்துள்ள தாழம் பூவை உனக்கு அளிக்கின்றார்.

ஸ்ரீ பாதுகையே பரம சிவன் உன்னை வந்து சேவித்து தன சிரஸ்ஸில் உள்ள கங்கையை உனக்கு அர்க்க்யமாகவும்
சந்த்ர கலையைத் தாழம் பூ இதழாகவும் சமர்ப்பிக்கிறார் –

———————————————————————-

குஸுமேஷு ஸமர்ப்பிதேஷு பக்தை:
த்வயி ரங்கேச பதாவநி ப்ரதீம:
சடகோப முநே: த்வத் ஏக நாம்ந:
ஸுபகம் யத் ஸுரபி த்வம் அஸ்ய நித்யம்—-324-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் பக்தர்கள் மலர்களைச் சாற்றியபடி உள்ளனர்.
உன்னுடைய திருநாமத்தைக் கொண்ட நம்மாழ்வாருக்கு எத்தகைய நறுமணம் (மகிழம்பூ நறுமணம்) உள்ளதோ,
அதனை உன்னிடம் இப்போது காண்கிறோம்.

ஸ்ரீ பாதுகையே சடகோபன் என்ற உன் திருநாமம் கொண்ட ஆழ்வார் பகவானுடைய பரத்வத்தை அறுதி இட்டு அருளிச் செய்தார் –
அவருக்கு பக்தர்கள் என்றும் மணம் கமழ் மகிழ் மாலையிட்டுக் கொண்டாடுகிறார்கள்
உனக்கு புஷ்பத்தை சமர்ப்பிப்பது இதில் இருந்து இது நன்றாகத் தெரிகிறது –

—————————————————————————–

பதே பரஸ்மிந் புவநே விதாது:
புண்யை: ப்ரஸூநை: புளிநே ஸரய்வா:
மத்யே ச பாதாவநி ஸஹ்ய ஸிந்தோ
ஆஸீத் சதுஸ் ஸ்தாநமிவ அர்ச்சநம் தே—325-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குப் பரமபதம், ப்ரம்மனின் ஸத்ய லோகம், ஸரயு நதியின் கரையில் உள்ள
அயோத்தி மற்றும் காவேரியின் நடுவில் உள்ள திருவரங்கம் ஆகிய நான்கு இடங்களிலும் மலர்கள் கொண்டு அர்ச்சனம் நடைபெறுகிறது.
இது எம்பெருமானுக்கு நான்கு இடங்களில் (கும்பம், அக்னி, ஸ்தண்டிலம், பிம்பம்) நடைபெறும் அர்ச்சனம் போன்றுள்ளது

ஸ்ரீ பாதுகையே -உனக்குப் பரம பதம் சத்ய லோகம் திருவவயோத்தி ஸ்ரீ ரங்கம் ஆகிய நான்கு இடங்களில்
பவித்ரமான புஷ்பங்களால் அர்ச்சனை யுடன் திருவாராதனம் நடந்தது –
இது ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தில் கூறப்பட்ட கடம் அக்னி ஸ்தண்டிலம் பெருமாள் உடைய மூர்த்தி
இந்த நான்கு விதமான ஸ்தானங்களில் திருவாராதனம் செய்வது போல் இருக்கிறது –

—————————————————————————–

தவைவ ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஸௌபாக்யம் அவ்யாஹதம் ஆப்துகாமா:
ஸுரத்ருமாணாம் ப்ரஸவை: ஸுஜாதை:
அப்யர்ச்ச யந்தி அப்ஸரஸோ முஹுஸ் த்வாம்—326-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
எந்தக் காலத்திலும் குறைவு என்பதே இல்லாத உன்னைப் போன்ற நிலை,
தங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று அப்ஸரஸ் பெண்கள் நினைக்கிறார்கள்.
இதனால் அவர்கள் கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு உன்னை அர்ச்சித்தபடி உள்ளனர்.

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையே உன்னைப் போலவே தடையற்ற சம்பத்தைப் பெற
அப்சரஸ் ஸ்திரீகள் கல்பக விருஷத்தின் புஷ்பங்களால் உன்னைப் பூஜிக்கிறார்கள் –

————————————————————————–

நிவேசிதாம் ரங்கபதே: பதாப்ஜே
மந்யே ஸபர்யாம் மணி பாத ரக்ஷே
த்வத் அர்ப்பணாத் ஆபதிதாம் அபஸ்யத்
காண்டீவ தந்வா கிரி சோத்த மாங்கே—-327-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! காண்டீபம் என்ற வில்லை உடைய அர்ஜுனன்,
ஸ்ரீரங்கநாதனாகிய க்ருஷ்ணனின் தாமரை போன்ற திருவடிகளில் மலர்களை இட்டான்.
இவை சிவன் தலையில் உள்ளதைக் கண்டான். இதன் மூலம் நான் நினைப்பது என்னவென்றால் –
உன்னைச் சிவன் தனது தலையில் சூட்டிக் கொண்ட போது, அந்த மலர்கள் அங்கு வந்திருக்க வேண்டும் – என்பதாகும்.

ஸ்ரீ பாதுகையே பாசுபதாஸ்த்ரத்தைப் பெற அர்ஜுனன் சிவனைப் பூஜிக்க மலர்களை ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியில் சமர்ப்பித்தான் –
மறு நாள் அந்த புஷ்பங்கள் சிவனின் தலையில் இருந்தன -அர்ஜுனன் அதைக் கண்டான் –
சிவன் உன்னைத் தினமும் தன் சிரஸில் சாதித்துக் கொள்வதால் இது நிகழ்ந்தது போலும் –

—————————————————————————

பத்ராணி ரங்க ந்ருபதேர் மணி பாத ரக்ஷே
த்வத்ராண்யபி த்வயி ஸமர்ப்ய விபூதி காமா:
பர்யாய லப்த புருஹூதபதா: சசீநாம்
பத்ராங்குராணி விலிகந்தி பயோதரேஷு—-328-

இரத்தினக்கற்களால் பதிக்கப் பெற்ற பாதுகையே! உயர்ந்த ஐச்வர்யம் விரும்புவர்கள் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை
உன்னிடம் சமர்ப்பித்து விட்டால் போதுமானது. அவர்கள் வரிசையாக நின்று அடைய வேண்டிய இந்திர பதவியை
நேரடியாகவே அடைந்து விடுகின்றனர். இந்த்ராணிகளின் ஸ்தனங்களில் ஓவியம் தீட்டும் நிலையை அடைகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -உயர்ந்த சம்பத்தைப் பெற ஆசை கொண்டு யாராவது ஏதோ இரண்டு மூன்று இதழ்களை
உனக்கு சமர்ப்பித்தால் அவர் இந்திரப் பட்டத்தை முறைப்படிப் பெறுகிறார்கள் –

—————————————————————-

நிவர்ர்த்த யந்தி தவ யே நிசிதாநி புஷ்பை:
வைஹாரி காணி உப வநாநி வஸுந்தராயாம்
காலேந தே கமல லோசந பாத ரக்ஷே
க்ரீடந்தி நந்த நவநே க்ருதிந: புமாம்ஸ:—-329-

தாமரை போன்ற அழகான கண்கள் கொண்ட க்ருஷ்ணனின் பாதுகையே! நீ நடந்து செல்வதற்காக, உனது விளையாட்டிற்காக,
இந்த உலகில் ஒரு சிலர் மலர்கள் நிறைந்த தோட்டங்களை உருவாக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள் நாளடைவில்
இந்திரனின் தேவலோக நந்த வனத்தில் விளையாடி மகிழ்கின்றனர் (அதாவது அவர்கள் இந்த்ர பட்டம் அடைகின்றனர்).

ஸ்ரீ பாதுகையே எந்த புண்ணிய சீலர்கள் உனக்கு புஷ்பங்கள் நிறைந்த தோட்டங்களை யமைத்து உன்னை
ஆராதிக்கின்றனரோ -அவர்கள் இந்திர பட்டத்தைப் பெற்று நந்த வனத்தில் விளையாடுகிறார்கள் –

——————————————————————————

அர்ச்சந்தி யே மது பிதோ மணி பாத ரக்ஷே
பாவாத்ம கைரபி பரம் பவதீம் ப்ரஸூநை:
மந்தார தாம ஸுபகை: மகுடை: அஜஸ்ரம்
ப்ருந்தாரகா: ஸுரபயந்தி பதம் ததீயம்—-330-

மது என்ற அரக்கனை அழித்த க்ருஷ்ணனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
தங்களுடைய மனதின் மூலம் நினைக்கப்பட்ட மலர்கள் மட்டுமே கொண்டு ஒரு சிலர் உன்னை அர்ச்சிக்கக் கூடும்.
இப்படிப் பட்டவர்களின் திருவடிகளைத் தேவர்கள் தங்கள் தலைகளில் ஏற்கின்றனர். இதன் மூலம் தங்கள் தலைகளில் சூடி யுள்ளதும்,
மந்தார மலர்கள் நிறைந்ததும் ஆகிய க்ரீடங்கள் கொண்டு நறு மணம் வீசும்படிச் செய்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே எவர்கள் உன்னை அஹிம்சை புலன் அடக்கம் முதலான எட்டு வகைப்பட்டதான புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சிக்கின்றனரோ
அவர்கள் தங்கள் திருவடிகளில் தேவர்களே மந்தார மாலை யணிந்த தங்கள் கிரீடங்களால் வணங்கும் பெருமை பெறுவார்கள் –

——————————————————————————–

அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-

ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்த விதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக் கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.

உன்னிடத்தில் சமர்ப்பிக்கப் பட்ட புஷ்பங்கள் எவ்வித குற்றமும் அற்று எளியனவனான
நால் வகை புருஷார்த்தங்களையும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பலங்களாக தருகின்றன -என்ன ஆச்சர்யம்
செடியைப் விட்டுப் பிரிந்த புஷ்பங்கள் பழங்கள் ஆகின்றன எனபது ஆச்சர்யம் அன்றோ –

————————————————————————

வந்தாரூபி: ஸுர கணை: த்வயி ஸம் ப்ரயுக்தா
மாலா விபாதி மது ஸூதன பாத ரக்ஷே
விக்ரந்த விஷ்ணு பத ஸம்ஸ்ரய பத்த ஸக்யா
பகீரதீவ பரிரம்பண காங்க்ஷிணீ தே—-332-

மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை வணங்கிப் போற்றியபடி உள்ள தேவர்களின் கூட்டங்கள்,
உன் மீது மலர் மாலைகளைச் சமர்ப்பணம் செய்கின்றனர். அந்த மாலையைப் பார்க்கும் போது,
ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக உயர்ந்த போது, அவனது திருவடிகளின் தொடர்பு ஏற்பட வேண்டும்
என்ற ஆவல் கொண்டு உன்னை கட்டித் தழுவிய கங்கை போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -தேவர்கள் உனக்கு ஜாதிப் புஷ்ப மாலையை சமர்ப்பிக்கிறார்கள் -அதைப் பார்க்கும் போது த்ரிவிக்ரம திருவவதார
காலத்தில் பெருமாள் திருவடி சம்பந்தம் பெற்ற கங்கை உன்னுடன் ச்நேஹம் செய்து உன்னை அணைக்க வந்தது போல் உள்ளது –

————————————————————————————-

யே நாம ரங்க ந்ருபதேர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந்தி கமலை: அதி கர்த்து காமா:
ஆரோபயதீ அவஹிதா நியதி: க்ரமாத் தாந்
கல்பாந்தரீய கமலாஸந பத்ரி காஸு—-333-

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உயர்ந்த பதவி பெற விரும்பும்
எண்ணம் உள்ளவர்கள் உன்னைத் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் போதுமானது.
அந்தப் புண்ணியமானது மிகவும் எச்சரிக்கையுடன் அவர்களின் பெயர்களை ப்ரம்ம பட்டத்திற்கான பட்டியலில் சேர்த்து விடுகிறது.
(அதாவது, அவர்கள் ஏதோ ஒரு கால கட்டத்தில் ப்ரம்ம பதவியை அடைவர்)

ஸ்ரீ பாதுகையே -ஒருவர் தனக்கு பிரம்மா பட்டம் வேண்டும் என்று உனக்கு தாமரை மலரை சமர்ப்பிக்கிறார் –
அந்த புண்ணியத்தால் அவருக்கு தெய்வம் முறைப்படி பிரம்மா பட்டத்திற்கான சாசனத்தில் அவர் பெயரைக் கவனத்துடன் எழுதி விடுகிறது

சதாசார்யா கடாஷம் பெற்றவன் ப்ரம்மாதிகளும் வணங்கத் தகுந்தவன் ஆகிறான் –

————————————————————————

த்வயி அர்ப்பிதாநி மநுஜைர் மணி பாத ரக்ஷே
தூர்வாங்குராணி ஸுலபாநி அதவா துளஸ்ய:
ஸாராதிகா: ஸபதி ரங்க நரேந்த்ர சக்த்யா
ஸம்ஸார நாக தமந ஔஷதயோ பவந்தி—-334-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மனிதர்கள் உன் மீது மிகவும் எளிதாகக் கிடைக்க வல்ல
அருகம் புல்லையோ அல்லது துளசி இலைகளையோ சாற்றக்கூடும். இவை விஷத்தை முறிக்கவல்ல வைத்தியனாகிய
ஸ்ரீரங்கநாதனின் சக்தியால் மிகவும் வீர்யம் அடைந்து, ஸம்ஸாரம் என்ற பாம்புகளையும் அடக்கி விடுகின்றன.

ஸ்ரீ பாதுகையே மனிதர்கள் எளிதில் கிடைக்கும் அருகம்புல் துளசி இவற்றைக் கொண்டு உன்னை அர்ச்சிக்கிறார்கள் –
அவை அனைத்தும் ஸ்ரீ ரங்க நாதன் என்ற விசத் வைத்தியனுடைய மகிமையால் சம்சாரம் என்னும்
சர்ப்பத்தின் விஷத்தைப் போக்கும் ஔ ஷதிகளாக மாறுகின்றன –

———————————————————————–

ஆராத்ய நூநம் அஸுரார்த்தந பாதுகே த்வாம்
ஆமுஷ்மிகாய விபவாய ஸஹஸ்ர பத்ரை:
மந்வந்தரேஷு பரிவர்த்திஷு தேவி மர்த்யா:
பர்யாயத: பரிணமந்தி ஸஹஸ்ர நேத்ரா:—-335-

அசுரர்களை அழிக்கும் எம்பெருமானின் பாதுகையே! ஸ்வர்க்கம் முதலான உயர்ந்த செல்வங்களை அனுபவிக்க வேண்டும்
என்ற எண்ணம் கொண்டு, ஒரு சிலர் உனக்கு ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யக் கூடும்.
அவர்கள் தகுந்த கால கட்டங்களில் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திர பதவியை அடைவது உறுதியே ஆகும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்வர்க்க போகத்தை அடையும் கருத்துடன் ஆயிரம் இதழ்த் தாமரையால் உன்னை அர்ச்சிப்பவர்
இந்திர பட்டத்தை கொஞ்ச காலத்திலேயே அடைகின்றனர் –

————————————————————————–

தந்யைஸ் த்வயி த்ரிதச ரக்ஷக பாத ரக்ஷே
புஷ்பாணி காஞ்சந மயாநி ஸமர்ப்பிதாநி
விஷ்ரம்ஸிநா விநமதோ கிரிச உத்தமாங்காத்
ஆரக் வதேந மிலிதாநி அப்ருதக் பவந்தி—-336-

தேவர்களைக் காப்பாற்றும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! புண்ணியம் செய்தவர்கள் உன் மீது தங்கத்தால் செய்யப்பட்ட
மலர்களை இட்டு வழிபடுகின்றனர். அதே நேரம் உன் மீது சிவனின் தலையில் உள்ள
கொன்றை மலர்களும் விழுந்து, இரண்டும் ஒன்றாகின்றன.

ஸ்ரீ பாதுகையே மகா ராஜாக்கள் தங்கத்தாலான புஷ்பத்தால் உனக்கு அர்ச்சிக்கிறார்கள்
பரம சிவன் உன்னை வணங்கி தன் சிரஸில் உள்ள கொன்றைப் பூவை உனக்கு சமர்ப்பிக்கிறார்
இவை இரண்டிற்கும் வேற்றுமை விளங்காமல் இருக்கிறது –

—————————————————————————————–

விச்வ உப ஸர்க சமநம் த்வயி மந்யமாநை:
வைமாநிகை: ப்ரணி ஹிதம் மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய பத பத்ம நக அர்ச்சிஷு: தே
புஷ்ப உபாஹார விபவம் புநருக்த யந்தி—-337-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப் பட்ட பாதுகையே! இந்த உலகிற்கு ஏற்படும் அனைத்து உபத்திரவங்களும்
உன்னால் மட்டுமே நீங்கும் என்று தேவர்கள் எண்ணுகின்றனர். ஆகவே அவர்கள் உன்னிடம் மலர்களைச் சமர்ப்பிக்கின்றனர்.
இந்த மலர்களின் வரிசைகள் அனைத்தும், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின்
திருவடி விரல் நகங்களின் ஒளியால் மேலும் ஒளி பெறுகின்றன.

ஸ்ரீ பாதுகையே தேவதைகள் சகல லோகங்களும் எந்த தொந்தரவும் இல்லாமல் சுகித்து இருக்க உன்னிடம் பல புஷ்பங்களை
சமர்ப்பிக்கிறார்கள் -பெருமாள் திருவடி நகங்களின் வெண்மையான காந்தி அவைகளை இரு மடங்காகப் பண்ணுகிறது –

————————————————————–

நாகௌகஸாம் சமயிதும் பரிபந்தி வர்காந்
நாதே பதம் த்வயி நிவேச யிதும் ப்ரவ்ருத்தே
த்வத் ஸம்ஸ்ரிதாம் விஜஹத: துளஸீம் வமந்தி
ப்ரஸ்தாந காஹள ரவாந் ப்ரதமம் த்விரேபா:—338-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை
உன் மீது மெதுவாக வைக்கின்றான். அப்போது உன் மீது சாற்றப்பட்ட துளசி மாலைகளில் உள்ள வண்டுகள்
ரீங்காரம் செய்யத் தொடங்குகின்றன. இதனைக் கேட்கும் போது, ஸ்ரீரங்கநாதன் புறப்படுகையில்
ஒலிக்கப்படுகின்ற காஹளம் என்ற எக்காளம் போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் சாத்தி இருக்கும் துளசி தளங்களில் வண்டுகள் மொய்க்கின்றன –
எம்பெருமான் அ ஸூரர்களை சம்ஹரிக்கப் புறப்படும் போது உன்னைச் சாத்திக் கொள்ள வந்ததும் அந்த வண்டுகள்
உயரக் கிளம்பி ரீங்காரம் செய்வது அவருடைய புறப்பாட்டுக்கு எக்காளம் வாசிப்பது போல் இருக்கிறது –

——————————————————–

ரங்கேச பாத பரி போக ஸுஜாத கந்தாம்
ஸம் ப்ராப்ய தேவி பவதீம் ஸஹ திவ்ய புஷ்பை:
நித்யம் உப தர்சித ரஸம் ந கில ஆத்ரி யந்தே
நாபீ ஸரோஜம் அபி நந்தன சஞ்சரீகா:—-339-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தே வலோகத்தில் உள்ள வண்டுகள், தேவர்கள் திருவரங்கனின் திருவடிகளில்
பொழிகின்ற மலர்களுடன் இணைந்தபடி திருவரங்கம் வந்து சேர்ந்து விடுகின்றன.
அவை நறு மணம் வீசும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் எப்போதும் தேன் பெருகும்
ஸ்ரீரங்கநாதனின் நாபிக் கமலத்தைக் கூட அடைய முனைவது இல்லை.

ஸ்ரீ பாதுகையே தேவதைகள் இந்த்ரனுடைய நந்தன வனத்தில் இருந்து உயர்ந்த புஷ்பங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்
வண்டுகள் பொதுவாக தேன் நிரம்பிய கமலத்தில் மொய்ப்பது வழக்கம்
பெருமாள் திருவடி சம்பந்தம் பெற்ற உன்னை வாசனை மிக்கதாகக் கருதி தற்போது உன்னையே மொய்க்கின்றன –

—————————————————————-

ப்ராகேவ காஞ்சந பதாவநி புஷ்ப வர்ஷாத்
ஸம் வர்த்திதே சமித தைத்ய பயை: ஸுரேந்த்ரை:
பத்மேக்ஷணஸ்ய பத பத்ம நிவேச லாபே
புஷ்ப அபிஷேகம் உசிதம் ப்ரதிபத்யஸே த்வம்—340-

தங்கம் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் மூலமாக அசுரர்கள் குறித்த பயம் நீங்கப் பெற்ற தேவர்கள்,
உன்னால் அல்லவோ ஸ்ரீரங்கநாதன் தனது பெரிய கோயிலை விட்டு வெளிக் கிளம்பி, அசுரர்களை அழித்தான் என்று என்று எண்ணுகின்றனர்.
அதனால் அவர்கள் உனக்கு மலர்களைத் தூவி வருகின்றனர். ஆயினும் அதற்கு முன்பாகவே திருவரங்கனின்
தாமரை போன்ற திருவடிகள் உன் மீது சாற்றப்பட்டு, உனக்கு ஏற்ற அபிஷேகம் நிறைவேறி விட்டது அல்லவோ
(மற்றொரு விதமான பொருள் கூறலாம்) –
அசுர பயம் நீங்கிய தேவர்கள், உனக்கு மலர் தூவி தங்கள் தலைகளில் உன்னைத் தாங்கியபடி திருவரங்கனின்
முன்பாக எழுந்தருளச் செய்கின்றனர். இப்படியாக அவன் திருவடிகளுக்கு முன்னரே
உனக்கு மலர் தூவி அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது – என்றும் கூறலாம்).

ஸ்ரீ பாதுகையே அஸூரர்களை வென்ற எம்பெருமானின் வெற்றியைக் கொண்டாடத் தேவர்கள் புஷ்பங்களை வர்ஷிக்கின்றார்கள் –
அதற்கு முன்னமேயே எம்பெருமானின் திருவடித் தாமரை உனக்கு அகப்பட்டு விட்டது –

————————————————————————————

திஸி திஸி முநி பத்ந்யோ தண்டகாரண்ய பாகே
ந ஜஹதி பஹுமாநாத் நூநம் அத்யாபி மூலம்
ரகுபதி பத ரக்ஷே த்வத் பரிஷ்கார ஹேதோ:
அபசித குஸுமாநாம் ஆஸ்ரமாநோகஹாநாம்—-341-

ரகுவம்சத்தின் பதியாக உள்ள இராமனின் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்தில் இருந்த போது,
அங்கு இருந்த ரிஷி பத்னிகள், உனக்கு ஏற்ற அலங்காரம் செய்யும் பொருட்டு,
அங்கு இருந்த மலர்களில் இருந்து மலர்கள் பறித்து, உனக்குச் சாற்றினர்.
அந்த மரங்கள் உனக்காக மலர்கள் அளித்தன என்று மரியாதையை மனதில் இன்னமும் நினைத்தபடியே,
இன்றளவும் அந்த மரங்களின் அடியில் அமர்ந்துள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே ரிஷி பத்னிகள் தண்ட காரண்யத்தில் இருந்து புஷ்பங்களைக் கொணர்ந்து உனக்கு சமர்ப்பித்தார்கள் .
அந்த புஷ்பங்களைத் தந்த ஆசிரம மரத்தடிகளை விட்டு அகலாமல் இன்றும் அவர்கள் மரியாதையாகப் போற்றி வருகிறார்கள் –

———————————————————————

கடயஸி பரிபூர்ணாந் க்ருஷ்ணமேக ப்ரசாரே
க்ருதிபி: உபஹ்ருதை: த்வம் கேதகீ கர்ப்ப பத்ரை:
வரதநு பரிணாமாத் வாமத: ஸ்யாமளாநாம்
ப்ரணதி ஸமய லக்நாந் பாதுகே மௌளி சந்த்ராந்—-342-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீர் கொண்ட மேகம் போன்ற திருமேனி உடைய ஸ்ரீரங்கநாதன்
ஸஞ்சாரம் செய்யப் புறப்படும் போது, புண்ணியம் நிறைந்தவர்களால் வெண்மையான தாழை மடல்கள் உன் மீது சாற்றப்படுகிறது.
அப்போது இடது பக்கத்தில் கறுத்த நிறமுள்ள பார்வதியைக் கொண்ட அர்த்தநாரீச்வரன்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றான். அவன் தலையில் உள்ள பிறைச் சந்திரன்
உன் மீது பட்டதால், அந்த தாழை மடல்களின் ஒளியால் முழுச் சந்திரனாகி விடுகிறான்.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமானுடைய சஞ்சார காலத்தில் பக்தர்கள் தாழம்பூ மடலை உனக்கு சமர்ப்பிக்கிறார்க –
அவை உன்னை வந்து சேவிக்கும் பதினோரு ருத்ரர்களின் சிரஸ்ஸூக்களில் உள்ள
அர்த்த சந்திரங்களைப் பூர்ண சந்திரங்களாகச் செய்கின்றன –

—————————————————————-

பரிசரண நியுக்தை: பாதுகே ரங்க பர்த்து:
பவந தநய முக்யை: அர்ப்பிதாம் த்வத் ஸமீபே
விநத விதி முகேப்ய: நிர் விசேஷாம் த்விரேபா:
கதம் அபி விபஜந்தே காஞ்சநீம் பத்ம பங்க்திம்—-343-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஸூக்ரீவனால் ஏவப்பட்ட
அனுமன் முதலானோர், உன் மீது தங்க மயமான மலர்களை இடுகின்றனர்.
அதே நேரம் அங்கு வந்த ப்ரம்மன், தனது தாமரை போன்று ஒளி வீசும் முகங்களைத் தாழ்த்தி வணங்குகின்றான்.
அந்த நேரத்தில் அங்கு வரும் வண்டுகள் ப்ரம்மனின் முகங்கள் எது, தாமரை மலர்கள் எது என்று
அறியாமல் வெகு நேரம் சிரமப்பட்டு , பின்னர் கண்டு பிடித்து அறிகின்றன.

ஸ்ரீ பாதுகையே –ஸூக்ரீவனால் நியமிக்கப்பட்டு ஸ்ரீ ஹனுமான் முதலியவர்கள் உனக்குத் -(ஸ்ரீ ராம சந்த்ர)
தங்கத்தாலான புஷ்பங்களை சமர்ப்பிக்கிறார்கள் -பிரம்மாதி தேவர்களும் உன்னைத் தலைகளால்
வணங்குகிறார்கள் -வண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு முகங்களுக்கும் புஷ்பத்திற்கும் பேதத்தை அறிகின்றன –

—————————————————————–

விதி சிவ புருஹூத ஸ்பர்சிதைர் திவ்ய புஷ்பை:
த்வயி ஸஹ நிபதந்த: தத்ததுத்யாந ப்ருங்கா:
மதுரிபு பத ரக்ஷே மஞ்ஜுபி: ஸ்வைர் நிநாதை:
அவிதித பரமார்த்தாந் நூநம் அத்யாபயந்தி—-344-

மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! ப்ரம்மன், சிவன், இந்திரன் முதலானவர்கள்
தேவலோக மலர்கள் பலவற்றையும் கொணர்ந்து உனக்குச் சமர்ப்பணம் செய்கின்றனர்.
அவரவர்களின் பூந்தோட்டங்களில் இருந்த வண்டுகளும், அந்த மலர்களுடன் வந்து விடுகின்றன.
அவை ரீங்காரம் செய்தபடி உள்ளன. இதனைக் காணும்போது, அவை உன்னுடைய பெருமையை
அறியாதவர்களுக்கு அதனைப் பறை சாற்றி, உண்மையை அறிவிப்பது போல் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -பிரம்மா சிவன் இந்திரன் முதலானவர்கள் தங்கள் தோட்டத்தில் இருந்து உயர்ந்த புஷ்பங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள்-
அங்குள்ள வண்டுகளும் கூடவே வந்து இங்குள்ள ஜனங்களுக்கு உன் உண்மையான செய்தியை -பரதத்வத்தை -தெரிவிக்கின்றன –

உலகில் உள்ள சாரமான விஷயம் ஆழ்வார் என்பதை மஹான்கள் எடுத்துக் கூறுகின்றனர் –

———————————————————————

ப்ரசமயதி ஜநாநாம் ஸஞ்ஜ்வரம் ரங்க பர்த்து:
பரிஸர சலிதாநாம் பாதுகே சாமராணாம்
அநு தினம் உபயாதை: உத்திதம் திவ்ய புஷ்பை:
நிகம பரிமளம் தே நிர்விசந் கந்தவாஹ:—-345-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அன்றாடம் தேவ லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள் உன் மீது பரவப்படுவதால்,
உன்னிடம் வேத வாசனை எப்போதும் சூழ்ந்துள்ளது. ஸ்ரீரங்கநாதனுக்கு வீசப்படும் சாமரங்களில் இருந்து எழும் காற்றானது,
இந்த வேத வாசனையை எடுத்து வந்து, இங்கு உள்ள மக்களின் ஸம்ஸார துன்பத்தை நீக்கி விடுகிறது .

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் சமர்ப்பிக்கும் புஷ்பங்களால் அறியப்படும் உன்னுடைய வேத மணத்தை-அதாவது-
வேதம் கூறும் உன் மகிமையை அனுபவிக்கும் ஸ்ரீ ரங்க நாதனுடைய சாமரக் காற்று ஜனங்களின் சம்சார தாபத்தைப் போக்குகின்றது –

——————————————————————–

அகில புவந ரக்ஷா நாடிகாம் தர்சயிஷ்யந்
அநிமிஷ தரு புஷ்பை: அர்ச்சிதே ரங்க மத்யே
அபிநயம் அநுரூபம் சிக்ஷயதி ஆத்மநா த்வாம்
ப்ரதம விஹித லாஸ்ய: பாதுகே ரங்கநாத:—-346-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கற்பக மரத்தின் மலர்கள் கொண்டு ஸ்ரீரங்கம் என்ற நாடகமேடை
(ரங்கம் என்றால் நாடகம் நடத்தும் மேடை என்பதாகும்) அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அந்த மேடையில் நாயகனாக ஸ்ரீரங்கநாதன் (நாடக எஜமான்), இந்த உலகத்தினைக் காப்பாற்றுதல் என்ற
ஒரு சிறிய நாடகத்தை அரங்கேற்றுகிறான். அதற்காக, தான் ஒரு நாட்டியம் ஆடி, அதற்கான அபிநயம் பிடிக்கும்போது,
அவனுக்கு நீ எவ்விதம் செயல்பட வேண்டும் என்று கற்றுத் தருகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உலகங்களையும் காப்பாற்ற எண்ணம் கொண்டு கற்பக மலர்களால் பூஜிக்கப் பட்ட
ஸ்ரீ ரங்க விமானத்தின் நடுவில் உன் மீது ஏறிக் கூத்தாடுகிறார் –

—————————————————————————

அகளித நிஜ ராகாம் தேவி விஷ்ணோ: பதம் தத்
த்ரிபுவந மஹநீயாம் ப்ராப்ய ஸந்த்யாம் இவ த்வாம்
பவதி விபுத முக்தை: ஸ்பஷ்ட தாரா அநுஷங்கம்
பரிஸர பதிதைஸ் தே பாரிஜாதப் ப்ரஸூநை:—-347-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மிகவும் அன்புடன் உள்ளன.
அவனது திருவடிகள் சிவந்த வானம் போன்றுள்ளன. மூன்று உலகில் உள்ளவர்களாலும் வணங்கப்படுகின்றன.
நீ ஸந்த்யா காலம் போன்று உள்ளாய். ஆக அவனது திருவடிகள் உன்னை வந்து அடைகின்றன.
ஸந்த்யா காலம் அனைவராலும் தொழத்தக்கது என்பது முறை; அது போன்று உன்னை அனைவரும் தொழுகின்றனர்.
அந்த இரவுப் பொழுதில் தோன்றும் நட்சத்திரங்கள் போன்று தேவர்கள் உன் மீது சேர்த்த கற்பக மரத்தின் மலர்கள் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி யாவரிடமும் ஆசை கொண்டது -அது உன்னை அடைந்த போது
உன் மீது தூவப்பட்ட பாரிஜாத புஷ்பங்களைச் சேர்த்துக் கொண்டு நஷத்ரங்ககளால் பிரகாசிக்கும் ஆகாயம் போலே விளங்குகிறது –

——————————————————————————-

வ்யஞ்ஜந்தி ஏதே விபவம் அநகம் ரஞ்ஜயந்த: ஸ்ருதீர்ந:
ப்ராத்வம் ரங்க க்ஷிதிபதி பதம் பாதுகே தாரயந்த்யா:
நாதைர் அந்தர் நிஹித நிகமை: நந்ததோத்யாந ப்ருங்கா:
திவ்யை: புஷ்பை: ஸ்நபித வபுஷோ தேவி ஸௌஸ்நாதிகாஸ் தே—-348-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைத் தரித்துக் கொண்டும், தேவலோகத்து மலர்களால்
ஸ்நானம் செய்விக்கப்பட்டும் நீ உள்ளாய். அந்த மலர்களில் உள்ள வண்டுகள் செய்யும் ரீங்காரம் உன்னிடம் அவை,
“ஸ்நானம் நல்லபடியாக ஆனதா?”, என்று கேட்பது போன்று உள்ளது. இப்படிப்பட்ட நந்தனம் என்ற வண்டுகளின்
வேத ஒலிகள் போன்ற நாதம் எங்கள் காதுகளை மகிழவித்தபடி உள்ளது.
இவை தோஷம் இல்லாத உனது பெருமையை மேன்மேலும் ப்ரகாசப்படுத்துகின்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னைப் பெருமாள் சாத்திக் கொள்கிற போது தேவர்கள் நந்த வனத்தில் இருந்து
அதிகமாகப் புஷ்பங்களை வர்ஷிக்கிறார்கள் –வண்டுகளும் கூட வந்து சப்தித்து அபிஷேகம் நன்கு ஆயிற்றா என
உன்னைக் கேட்டு உன் பெருமையை எங்களுக்கு விளங்க வைப்பது போல் இருக்கிறது –

——————————————————–

கிம் புஷ்பைஸ் துளஸீ தளை: அபி க்ருதம் தூர்வாபி தூரே ஸ்திதா
த்வத் பூஜாஸு முகுந்த பாது க்ருபயா த்வம் காமதேநு: ஸதாம்
ப்ரத்ய க்ராஹ்ருத தர்ப்பல்லவ தல க்ராஸ அபிலாஷ உந்முகீ
தேநுஸ் திஷ்டது ஸா வஸிஷ்ட பவந த்வார உபகண்ட ஸ்தலே—-349-

முகுந்தனின் பாதுகையே! உனக்காகச் செய்யப்படும் ஆராதனங்களில் மலர்கள் கொண்டு ஆவது என்ன?
துளசி தளங்கள் கூட வேண்டியதில்லை. அருகம் புல் கூட தூரத்தில் வைக்கப்படலாம்.
இவ்விதம் உன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்களிடம் எதனையும் எதிர்பாராமல், அவர்களுக்கு உனது கருணை
காரணமாக அனைத்தையும் அளிப்பவளாக நீ உள்ளாய். வசிஷ்டரின் காமதேனுப் பசுவும் கூட, புதிதாகக் கொண்டு வரப்பட்ட
தளிர் இலைகளுக்காகத் தனது முகத்தை நீட்டியபடி அல்லவா உள்ளது? எதனையும் எதிர்பராமல் உள்ள காமதேனு போன்று
நீ உள்ள போது வசிஷ்டரின் அந்தப் பசுவானது, அவரது வீட்டு வாசலிலேயே இருக்கட்டும் (நீ எங்களுக்கு இருந்தால் போதும்).

ஸ்ரீ பாதுகையே வசிஷ்டர் இடம் இருந்தும் காம தேனு ஒரு பிடி அருகம் புல்லை தினமும் அவரிடம் எதிர்பார்த்து
அதைப் பெற்று சகல பலன்களையும் தருவதாம்
நீயோ என்றால் எந்த சிறு பிரயோஜனத்தையும் எதிர் பாராது ஒரு புஷ்பம் கூட சமர்ப்பிக்காத
எளியவனுக்கும் சகல புருஷார்த்தங்களையும் அளிக்கிறாய்

——————————————————-

ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபி ஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்றை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே பரமசிவன் தன சிரஸில் உள்ள கொன்றைப் பூவின் தூளியால் ஸூர்ணாபிஷேகம் செய்து
பிறகு கங்கை ஜலத்தால் உனக்கு அபிஷேகம் செய்கிறார் –

உத்சவ காலத்தில் ஸ்ரீ ரங்க நாதனுக்கு மஞ்சள் பொடியில் அபிஷேகம் பண்ணிப் பிறகு திரு மஞ்சனம் பண்ணுவது வழக்கம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-11- சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-

March 9, 2016

அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குச கண்டகாந்
இதி சீதா அபி யத் வ்ருத்திம் இயேஷ ப்ரணமாமி தாம்—-261-

பாதுகையே! இராமன் கானகம் புறப்பட்ட போது, நீ அவன் முன்பாகச் சென்று தர்ப்பைப் புற்கள், முள்
ஆகியவற்றை மிதித்தபடி, நான் செல்கிறேன் என்று புறப்பட்டாய்.
உனது இந்தக் கைங்கர்யத்தைக் காண்பதற்குச் சீதை மிகவும் ஆசைப்பட்டாள்.
அப்படிப்பட்ட உன்னை நான் வணங்குகிறேன்.

பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் போகும் போது சீதை தான் முன்னே போவதாகக் கூறினாள்-
தர்ப்பத்தின் நுனி முற்கள் இவை கூராக பெருமாள் திருவடிகளை குத்தி விடப் போகிறதே என்று
அவற்றை மிதித்துத் தான் முன் நடப்பதாக ஸ்ரீ பாதுகையின் வியாபாரத்தை அவள் விரும்பினாள்-
அப்படிப்பட்ட ஸ்ரீ பாதுகையை சேவிக்கிறேன்

ஜீவனை ஒழுங்கு செய்து பெருமாள் இடம் சேர்க்கும் கார்யம் ஆசார்யன் செய்வது –
அதைத் தாயார் விரும்பினாள் –

———————————————————————–

சரத: சதம் அம்ப பாதுகே ஸ்யாம்
ஸமய ஆஹூத பிதாமஹ ஸ்துதாநி
மணி மண்டபிகா ஸு ரங்க பர்த்து:
த்வததீநாநி கதாகதாநி பஸ்யந்—262-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! உற்சவ காலத்தில் ப்ரம்மன் உட்பட அனைத்து
தேவதைகளும் இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட மண்டபத்தில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாதனை ஸ்துதிக்கக் காத்து நிற்கின்றனர்.
உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு அரங்கன் வருகிறான்.
இவ்விதமாக உள்ள இந்த ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தை நான் நூறு வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து காண வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உத்சவ காலங்களில் எல்லா தேவர்களையும் சாஸ்திர முறைப்படி அழைப்பது வழக்கம்
அப்போது பகவான் உன்னைச் சாற்றிக் கொண்டு மணி மண்டபத்துக்கு எழுந்து அருளுகிறார் –
ப்ரஹ்மாதி தேவர்கள் அவரை ஸ்துதிக்க இந்த நடை அழகை அனுபவிக்க நான் மேலும் நூறாண்டு வாழ்வேனாக –

————————————————————————

த்வத் அதீந பரிக்ரமோ முகுந்த:
தத் அதீநஸ் தவ பாதுகே விஹார:
இதரேதர பார தந்த்ர்யம் இத்தம்
யுவயோ: ஸித்தம் அநந்ய தந்த்ர பூம் நோ:—-263-

பாதுகையே! நீயும் ஸ்ரீரங்கநாதனும் எதற்காகவும், யாரையும் நாடி இருப்பதில்லை. அதனால் உங்கள் இருவர் விஷயத்தில்
நடப்பது என்ன தெரியுமா? தான் அங்கும் இங்கும் ஸஞ்சாரம் செய்வதற்கு உன்னையே ஸ்ரீரங்கநாதன் நாடி உள்ளான்.
இது போன்று அதே விஷயத்தின் மூலம், உனது கம்பீரம் வெளிப்பட நீ அவனை நாடி இருக்க வேண்டி யுள்ளது.
இப்படி ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளீர்கள்.

ஸ்ரீ பாதுகையே வேறு ஒருவருக்கு அதீநம் இல்லாமல் இருக்கும் நீயும் பெருமாளும்
சஞ்சரிக்கும் விஷயத்தில் மட்டும்
ஒருவருக்கு ஒருவர் அதீனமாக இருக்கிறீர்கள்

பகவத் கடாஷத்தால் ஆசார்யனும்
ஆசார்ய கடாஷத்தால் பகவானும் சேதனனுக்குக் கிடைக்கிறார்கள் –

———————————————————————-

ரஜஸா தமஸா ச துஷ்ட ஸத்த்வே
கஹநே சேதஸி மாமகே முகுந்த:
உசிதம் ம்ருகயா விஹாரம் இச்சந்
பவதீம் ஆத்ருத பாதுகே பதாப்யாம்—-264-

பாதுகையே! என்னுடைய மனமானது ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் கெட்டுப் போய், இருண்ட காடு போன்று உள்ளது.
இந்த மனதில் ஸத்வ குணத்தைச் சேர்ந்த ஏதும் உண்டாவதில்லை. இவ் விதம் என் மனம் இருள் மற்றும் புழுதி அடைந்து உள்ளது.
இந்த இருண்ட கானகத்தில் வேட்டை யாடி, அதில் உள்ள விலங்குகளைத் துரத்த ஸ்ரீரங்கநாதன் விருப்பம் கொண்டான்.
ஆகையால் உன்னைத் தனது திருவடிகளில் சாற்றியபடி எனது மனதிற்குள் வந்தான் போலும்.

ஸ்ரீ பாதுகையே ரஜோ தமோ குணங்களால் கெடுக்கப் பட்ட என் மனதை வேட்டை யாடி
சத்வ குணம் மேலோங்கச் செய்யவே உன்னை பகவான் தரித்துக் கொள்கிறார் –

பாபிகளை ரஷிக்கவே எம்பெருமான் ஆசார்யர்களை திரு அவதரிப்பிக்கிறார் –

————————————————————————–

க்ஷமயா ஜகதாம் அபி த்ரயாணாம்
அவநே தேவி பதாவநி த்வயைவ
அபிகம் யதமோ அபி ஸம்ஸ்ரிதாநாம்
அபி கந்தா பவதி ஸ்வயம் முகுந்த:—-265-

பாதுகா தேவீ! அனைத்து அடியார்களும் தனது இருப்பிடத்திற்கு வந்து தன்னை வணங்கும்படியாக இருக்கும்
ஸ்வபாவம் உடையவன் பெரிய பெருமாள் ஆவான். நீயோ மூன்று உலகங்களையும் பாதுகாப்பதில்
சிந்தனை கொண்டவளாக உள்ளாய். ஆக உன்னால் தான் ஸ்ரீரங்கநாதன், தனது இருப்பிடத்தை விட்டுக் கிளம்பி,
அடியார்கள் உள்ள இடத்தை, தானே தேடிப் போகிறான்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் இருக்கிற இடத்திற்கு நாம் தான் போக வேண்டும் -ஆனால் நீயோ மூவுலகையும்
காப்பாற்றத் தகுந்தவளாய் நாங்கள் இருக்கும் இடத்திற்கு பெருமாளை எழுந்து அருளப் பண்ணுகிறாய் –

ஆசார்ய கடாஷம் பெற்றவன் இடத்தில் பெருமாள் எழுந்து அருளுவார் -என்றவாறு –

————————————————————————————

சிரஸா பவதீம் ததாதி கஸ்சித்
வித்ருத: கோ அபி பதஸ் ப்ருசா பவத்யா
உபயோர் மது வைரி பாத ரக்ஷே
த்வத் அதீநாம் கதிம் ஆம நந்தி ஸந்த:—-266-

மது என்ற அசுரனை அழித்த கண்ணனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
பெரிய பெருமாள் சஞ்சாரம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டவுடன்,
உன்னைத் தனது தலையில் ஏற்றியபடி ஒருவர் வருகிறார்.
பெரிய பெருமாளின் திருவடிகளைத் தாங்கி நிற்கும் ஒருவர் உன்னால் தாங்கப் படுகிறார்.
ஆக இந்த இரண்டு கதிக்கும் நீயே ஆதாரம் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னால் தரிக்கப் படுகிற பெருமாளும்
உன்னைத் தங்கள் சிரசில் தரிப்பவர்களும்
சஞ்சாரத்தில் உன் அதீனமாக இருக்கிறார்கள் –
ஸ்ரீ பாதுகையைத் தலையில் வகிப்பவர் மோஷத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்கள் –

————————————————————

ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம்
கதிம் உத்திஸ்ய முகுந்த பாதுகே த்வௌ
அவரோஹதி பஸ்சிம: பதாத் ஸ்வாத்
அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:—-267-

க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார்,
மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார்.
காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.

ஸ்ரீ பாதுகையே உன்னால் சஞ்சாரத்தை அடைந்த இருவரால் உன்னைத் திருவடியினால் தொட்ட
பெருமாள் இறங்கி கீழே வந்து விட்டார் –
தலையால் உன்னைத் தொட்டவர் -தரித்தவர் -ஸ்ரீ வைகுந்தம் ஏறி விட்டார் –

——————————————————————————

ஸமயேஷு அபதிஸ்ய ஜைத்ர யாத்ராம்
விவிதாந்த: புர வாகுரா வ்யதீத:
நியதம் மணி பாதுகே பவத்யா
ரமதே வர்த்மநி ரங்க ஸார்வ பௌம:—-268-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது அந்தப்புரத்தில்,
மஹா லக்ஷ்மி போன்ற பல விதமான வலைகளில் அகப்பட்டு உள்ளான்.
ஆயினும் உன்னுடன் விளையாடும் ஆவல் கொள்ளும் அவன்,
பல்வேறு காலங்களில், “ஏதோ அரக்கனை அழிக்கப் போகிறேன்”, என்று
தனது வெற்றிக்கான காரணத்தைக் கூறியபடி வெளி வந்து விடுகிறான் .

ஸ்ரீ பாதுகையே மஹா லஷ்மி அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே இருந்து அகலாமல் இருக்க
அசுரர்கள் நிரசன வியாஜத்தில் பெருமாள் உன்னுடன் விளையாடுகிறார் –

—————————————————————————-

நிஜ ஸம் ஹநந ப்ரஸக்த லாஸ்யம்
சரதி த்வாம் அதிருஹ்ய ரங்க நாத:
பத ரக்ஷிணி பாவநத்வம் ஆஸ்தாம்
ரஸிக ஆஸ்வாதம் அத: பரம் ந வித்ம:—-269-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் உன் மீது ஏறிக் கொண்டு,
தனது அழகிய திருமேனியில் நேர்த்தியான நாட்டியம் ஏற்படுவது போன்று, ஒய்யாரமாக நடக்கிறான்.
இத்தகைய திவ்யமான நடையழகைக் காண்பவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நீங்குகின்றன என்பது ஒரு புறம் இருக்கட்டும்,
இது போன்ற மற்றோர் அழகை நாம் அறியவில்லை.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உன்னைத் திருவடிகளில் அணிந்து குதித்த வண்ணம் எழுந்து அருளுவது
நாட்டியம் போலே மிக அழகாக இருக்கிறது
இதை சேவித்து பாபம் போவது ஒரு புறம் இருக்க கண்களுக்கு இதை விட வேறு விருந்து கிடையாது –

———————————————————————-

பதயோரநயோ: பரஸ்ய பும்ஸ:
தத் அநுக்ராஹ்ய விஹார பத்ததேர் வா
சிரஸோ மணி பாதுகே ஸ்ருதீநாம்
மநஸோ வா மம பூஷணம் த்வம் ஏகா—-270-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
பரம புருஷனாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஏற்ற அலங்காரமாக நீ உள்ளாய்.
அந்தத் திருவடிகள் சஞ்சாரம் செய்யத் தகுந்ததாக உள்ள வழி முழுவதற்கும் நீயே அலங்காரமாக உள்ளாய்.
வேதங்களின் தலையில் உள்ள ஒப்பற்ற ஆபரணமாக உள்ளாய்.
என்னுடைய மனதிலும் நீ அலங்காரமாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீயே பெருமாளுடைய திருவடிக்கும் எழுந்து அருளும் வழிக்கும் உப நிஷத்துக்கும்
என் மனதிற்கும் ஓர் ஒப்பற்ற அலங்காரமாக இருக்கிறாய் –

————————————————–

க்ருபயா மது வைரி பாத ரக்ஷே
கடிநே சேதஸி மாமகே விஹார்த்தும்
மகுடேஷு திவௌகஸாம் விதத்தே
பவதீ ரத்ந விஸம்ஸ்து லேஷு யோக்யாம்—-271-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
எனது மனம் மிகவும் கடினமான கல் போன்றதாகும். அந்த மனதுடன் பழக நீ செய்வது என்ன?
தேவர்களின் க்ரீடங்களில் மேடு பள்ளங்களாக உள்ள இரத்தினக் கற்களுடன் நீ பழகிக் கொள்கிறாய் போலும்
(அப்போது என் மனதுடன் பழகுவதற்கு எளிதாகிவிடும் அல்லவா).

ஸ்ரீ பாதுகையே கல்லாகிப் போயிருக்கும் என் இதயத்தில் நீ கனிவுடன் இருக்க விரும்புகிறாய் –
அதனால் தேவர்கள் உடைய கல்லில் இளைத்த க்ரீடங்களின் மேல் இருந்து பழகிக் கொள்கிறாய் –

————————————————————————–

சரண த்வயம் அர்ப்ப கஸ்ய சௌரே:
சரத் அம்போருஹ சாதுரீ துரீணம்
சகடாஸுர தாடநே அபி குப்தம்
தவ சக்த்யா கில பாதுகே ததாஸீத்—-272-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் க்ருஷ்ணனாக அவதரித்த போது அவனது திருவடிகளானவை,
சரத் காலத்தில் மலரும் தாமரை போன்று முழு அழகையும் பெற்றிருந்தன. அப்படிப்பட்ட மென்மையான திருவடிகளைக் கொண்ட
அந்தக் குழந்தை, தனது திருவடிகளால் சகடாசுரனை உதைக்கும் வலிமையை எங்கிருந்து பெற்றது? உனது சக்தியால் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பகவான் பள்ளி கொண்ட திருக் கோலத்தில் தனது சரத் காலத் தாமரைப் பூ போன்ற
வெண்மையான திருவடியால் சகடா ஸூரனை உதைத்துக் கொன்றார் –
திருவடிக்கு உன் பலம் இல்லாத போனால் பூ போன்ற திருவடி எப்படி இதை செய்யும் –

———————————————————————-

உத்தஸ்துஷ: ரங்க சயஸ்ய சேஷாத்
ஆஸ்தாந ஸிம்ஹாஸநம் ஆருருக்ஷோ:
மத்யே நிசாந்தம் மணி பாதுகே த்வாம்
லீலா பத ந்யாஸ ஸகீம் ப்ரபத்யே—-273-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆதிசேஷன் என்னும் தனது படுக்கையிலிருந்து துயில் எழுகின்ற
ஸ்ரீரங்கநாதன், தனது சபையை அடைந்து, ஸிம்ஹாஸனத்தில் அமர வேண்டும் என்று விரும்புகிறான்.
இதற்காக உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு நடந்தான்.
இப்படிப்பட்ட உன்னையே எனக்கு உபாயம் என்று கொள்கிறேன்.

ஸ்ரீ பாதுகையே நம்பெருமாள் இரவில் சயனித்துக் கொண்டு காலையில் சபைக்கு எழுந்து அருளுகிற போது இடையில்
அரண்மனைக்குள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருள்கிறார் -அப்படிப்பட்ட உன்னைச் சரண் அடைகிறேன் –

———————————————————————-

ப்ராப்த அதிகாரா: பதய: ப்ரஜாநாம்
உத்தம் ஸிதாம் இத்தம் பாதுகே த்வாம்
ரங்கேசிது: ஸ்வைர விஹார காலே
ஸம்யோஜ யந்தி அங்கிரி ஸரோஜ யுக்மே—-274–

மிகவும் உயர்ந்த பாதுகையே! பிரம்ம பதவியை அடைபவர்கள் தங்கள் தலைகளில் உன்னை அலங்காரமாக வைத்துக் கொள்கின்றனர்.
ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும் நேரம் வந்தவுடன், உன்னைத் தங்கள் தலையில் இருந்து எடுத்து,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் அவர்கள் சேர்த்து விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தன் சிரசில் வகிக்கத் தகுதி பெற்ற பிரம்மாதிகள் எம்பெருமான் சஞ்சரிக்கும்
சமயங்களில் தாங்களே அவர் திருவடிகளில் உன்னை சமர்ப்பிக்கின்றனர் –

——————————————————————–

த்வயா அநுபத்தாம் மணி பாத ரக்ஷே
லீலா கதிம் ரங்க சயஸ்ய பும்ஸ:
நிஸா மயந்த: ந புநர் பஜந்தே
ஸம்ஸார காந்தார கதாகதாநி—-275-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரம புருஷனாகிய பெரிய பெருமாள்,
உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது
என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தரித்துக் கொண்டு எழுந்து அருளும் எம்பெருமானுடைய நடை அழகை சேவிப்பவர்கள்
ஜனன மரண -சுழல் –சம்சாரம் ஆகிய காட்டு மார்க்கத்தின் நடைகளில் இருந்து விடுபடுகின்றனர் –

————————————————————————-

வ்யூஹ அநுப பூர்வீ ருசிராந் விஹாராந்
பத க்ரமேண ப்ரதிபத்ய மாநா
பிபர்ஷி நித்யம் மணி பாதுகே த்வம்
முரத்விஷோ மூர்த்திரிவ த்ரிலோகீம்—-276-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! வாஸுதேவன், ஸங்கர்ஷணன் போன்று பல வ்யூஹ வரிசை மூலமாகவும்,
அழகாக அடி எடுத்து ஒய்யார நடை நடக்கும் ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின் மூலமாகவும் இந்த உலகத்தைப் பெரிய பெருமாளின்
திருமேனி எவ்விதம் காப்பாற்றுகிறதோ, அதுபோல் நீயும் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் வாஸூ தேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் -அநிருத்தன் -என்ற நான்கு வ்யூஹ மூர்த்தியையும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி விபவ ரூபியாகவும் ரஷிக்கிறான்-அவன் ஒருவனாகவோ பல ரூபமாகவோ ரஷணத்திற்கு போகும் போது
நீயும் அவ்வாறே கூட இருந்து மூவுலகையும் காப்பாற்றுகிறாய் -ஆகையால் பெருமாள் திவ்ய திருமேனி போலவே நீயும் இருக்கிறாய் –

———————————————————————————-

பதேஷு மந்தேஷு மஹத்ஸ்வபி த்வம்
நீரந்த்ர ஸம்ஸ்லேஷவதீ முராரே:
ப்ரத்யாய நார்த்தம் கில பாதுகே ந:
ஸ்வாபாவிகம் தர்சயஸி ப்ரபாவம்—-277-

பாதுகையே! பெரிய பெருமாள் நம்பெருமாளாக நிற்கும் போது அவன் திருவடிகள் மிகவும் சிறியதாக உள்ளன.
சயனித்தவனாக உள்ள போது பெரிதாக உள்ளன. ஆனால் நீ அவனது திருவடிகளுக்கு ஏற்றபடி உன்னை,
சிறிதும் இடைவெளி இன்றி மாற்றிக் கொள்கிறாய். எங்களுக்கு உன் மீது நம்பிக்கை எற்படுவதற்காக அல்லவா
உனது இயற்கையாக உள்ள இந்தப் பெருமைகளை நீ வெளிப் படுத்துகிறாய்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகள் சிறியனவாகவோ அல்லது பெரியவனவாகவோ இருக்கும் போது நீயும்
அதற்கு ஏற்றால் போலே இருந்து என்றும் பிரியாத சம்பந்தத்தை உடையவளாக இருக்கிறாய் –
எங்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையாக உன் ஸ்வபாவமான பெருமையைக் காட்டுகிறாய் –

—————————————————————————

க்ருபா விசேஷாத் க்ஷமயா ஸமேதாம்
ப்ரவர்த்த மாநாம் ஜகதோ விபூத்யை
அவைமி நித்யம் மணி பாதுகே த்வாம்
ஆகஸ்மகீம் ரங்க பதே: ப்ரஸத்திம்—-278-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பூமியுடன் ஒத்த பொறுமை உடையவளும்,
இந்த உலகின் நன்மைக்காக அங்கும் இங்கும் உலவியபடி உள்ளவளுமாக நீ உள்ளாய்.
ஸ்ரீரங்கநாதனின் அனுக்ரஹம் என்பதே வடிவம் எடுத்தவளாக நீ உள்ளாய்.
வேறு எந்தக் காரணத்தினாலும் நீ இல்லை என்றே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ மணி பாதுகையே அகில உலகத்தின் செல்வத்தை உத்தேசித்து சஞ்சாரம் செய்யும் உன்னைப் பார்த்தால் ஜனங்கள் இடத்தில்
தானாகவே வலியப் பாயும் நம்பெருமாளின் கருணை வடிவு கொண்டால் போலே இருக்கிறது –

—————————————————————————

உபா கதாநாம் உபதாப சாந்த்யை
ஸுகா வகாஹாம் கதிம் உத்வ ஹந்தீம்
பஸ்யாமி சௌரே: பத வாஹிநீம் த்வாம்
நிம் நேஷு துங்கேஷு ச நிவி சேஷாம்—279-

பாதுகையே! துன்பம் கொண்டவர்களின் துயரம் நீங்கும்படி ஸ்ரீரங்கநாதன் அழகாக நடந்து வருகிறான்.
அப்படி அவன் சஞ்சாரம் செய்யும்போது உயர்ந்த இடங்கள், தாழ்ந்த இடங்கள் என்று பாராமல், அவன் திருவடிகளைத் தாங்கியபடி நீ வருகிறாய்.
இதனால் நீ உயந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று வேற்றுமை காணாமல் உள்ளவள் என்று அனைவரும் கூறுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -நீ பெருமாளை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வரும் போது ஜனங்கள் சுகமாக
பகவானைத் தர்சிக்க மெதுவாகவே போகிறாய் -உயர்வு தாழ்வு என்ற எல்லா இடங்களிலும் தடையற்ற
உன் நடை கங்கைக்கு ஒப்பாகிறது -ஜனங்களின் தாப த்ரயங்களை போக்கி அருளுகிறாய் –

——————————————————————–

ஸஹ ப்ரயாதா ஸததம் ப்ரயாணே
ப்ராப்தாஸநே ஸம்ஸ்ரித பாத பீடா
அலங்க நீயா ஸஹஜேந பூம்நா
சாயேவ சௌரேர் மணி பாதுகே த்வம்—280-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நடந்து செல்லு ம்போது, நீ அவன் கூடவே செல்கிறாய்.
அவன் தனது ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து விட்டால், அவன் பாத பீடங்களில் நீயும் அமர்ந்து விடுகிறாய்.
உனது இயல்பாகவே அமைந்து விட்ட பெருமை காரணமாக, தனது நிழலை விட்டுப் பிரிய இயலாமல் ஸ்ரீரங்கநாதனின் நிழலாக நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சஞ்சரிக்கும் போது நீ கூட சஞ்சரிக்கிறாய்
சஞ்சாரம் இல்லாத காலங்களில் நீ திருப் பாத பீடத்தில் இருக்கிறாய் –
நீ இப்படி ஆட்பட்டு இருந்தாலும் எம்பெருமான் பெருமை உன்னை விஞ்சியது இல்லை –
தன் நிழலைத் தான் தாண்ட முடியாதல்லவா -எம்பெருமானும் நிழலைப் போன்ற உன் பெருமையைக் கடக்க முடியாது –

———————————————————————

பதஸ் ப்ருசா ரங்க பதிர் பவத்யா
விசக்ரமே விஸ்வம் இதம் க்ஷணேந
ததஸ்ய மந்யே மணி பாத ரக்ஷே
த்வயைவ விக்யாதம் உருக்ர மத்வம்—-281-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ தனது (எம்பெருமானுடைய) திருவடிகளில் இருக்கிறாய்
என்ற காரணத்தினால், உன்னால் தான், இந்த உலகம் முழுவதையும் த்ரிவிக்ரமனாக ஸ்ரீரங்கநாதன் அளந்தான்.
ஆக, உன்னால் அல்லவோ பெரிய பெருமாளுக்கு “உருக்கிரமன்” என்னும் திருநாமம் கிடைத்தது என்று கூறலாம்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருந்ததால் தான் அவர் நொடிப் பொழுதில் உலகை அளந்தார் –
அதனாலேயே -உருக்ரமன் -த்ரிவிக்ரமன் -என்ற பெயரையும் பெற்றார் –

————————————————————————-

ஸஞ்சார யந்தீ பதம் அந்வதிஷ்ட:
ஸஹாய க்ருத்யம் மணி பாத ரக்ஷே
மாதஸ் த்வம் ஏகா மனு வம்ஸ கோப்து:
கோபாயதோ கௌதம தர்ம தாராந்—282-

பெரிய பெருமாளின் திருவடிகளைத் தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அல்லவா இராமனின் திருவடிகளை நடக்கும்படிச் செய்தாய்?
இதனால் அல்லவா இராமனின் திருவடிகள், கௌதமரின் பத்தினியாகிய அகலிகையின் சாபத்தைத் தீர்த்தன?
ஆக, உன்னால் அல்லவா மனு வம்சத்தில் வந்த இராமனுக்கு இந்தப் பெருமை ஏற்பட்டது?

ஸ்ரீ பாதுகையே உன் ஒருவனது துணை கொண்டு தான் பெருமாள் அஹல்யை இருக்கும் இடம் சென்று
அவள் சாபத்தை போக்கி அருளினார் -அங்கு அவரை அழைத்துச் சென்றது நீ யன்றோ –

—————————————————————-

தவத்தஸ் த்ரிவிஷ்டபசராந் அஸபத்நயிஷ்யந்
ஆருஹ்ய தார்க்ஷ்யம் அவருஹ்ய ச தத் க்ஷணேந
ஸூத்தாந்த பூமிஷு புநர் மணி பாத ரக்ஷே
விக்ராம்யதி த்வயி விஹார வசேந சௌரி:—283-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு அசுரர்கள் மூலம்
எழுந்த துயரத்தை நீக்குவதற்காக, பெரிய பெருமாள் உன்னை விட்டு, கருடன் மீது ஏறிச் சென்று அவர்களைக் காத்தான்.
அதன் பின்னர் அவன் மீண்டும் வந்து, அந்தப் புரத்தில் சஞ்சாரம் செய்த போது உன்னை சாற்றிக் கொண்டான்.
அப்போது அல்லவா அவனது களைப்பு நீங்கியது?

ஸ்ரீ பாதுகையே தேவர்களை சம்ரஷிக்கும் பொருட்டு எம்பெருமான் கருடாரூடனாகச் சென்று அஸூரர்களை
அழித்து பின் அந்தப் புரத்தில் ஸ்ரமம் தீர உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சரிக்கிறார் –

—————————————————————-

விக்ரம்ய பூமிம் அகிலாம் பலிநா ப்ரதிஷ்டாம்
தேவே பதாவநி திவம் பரிமாது காமே
ஆஸீ ததோ திநகரஸ்ய கரோப தாபாத்
ஸம் ரக்ஷிதும் பத ஸரோஜம் உபர்ய பூஸ்த்வம்—-284-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பெரிய பெருமாள், மஹாபலி மூலம் தானமாக அளிக்கப்பட்ட
மூன்று உலகங்களையும் அளந்து எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான்.
அப்போது ஆகாயத்தை அளப்பதற்காகத் தனது திருவடியை உயரத் தூக்கினான்.
அந்த நேரம், தாமரை போன்ற அவன் திருவடிகளின் மீது ஸூரியன் பட்டு,
அவை வாடாமல் இருக்கும்படி, அவன் திருவடியை நீ காத்தாய்.

ஸ்ரீ பாதுகையே –எம்பெருமான் முதல் அடியால் பூமியை அளந்து இரண்டாம் அடியாக ஆகாயத்தை அளக்க முற்பட்ட போது
திருவடிக்குக் குடை போல் இருந்தது -ஸூர்யனின் கடும் வெப்பம் படாது காப்பாற்றினாய் –

————————————————————————

த்வத் ஸங்கமாத் நநு ஸக்ருத் விதி ஸம் ப்ரயுக்தா
ஸூத்திம் பராம் அதி ஜகாம சிவத்வ ஹேதும்
ரங்காதி ராஜ பத ரக்ஷிணி கீத்ருசீ ஸா
கங்கா பபூவ பவதீய கதா கதேந—-285-

திருவரங்கத்தின் சக்ரவர்த்தியான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
த்ரிவிக்ரமனாக உலகம் அளந்த போது அவனது திருவடிகளில் ப்ரம்மனால் சேர்க்கப்பட்ட கங்கை,
நீ அவன் திருவடிகளில் இருந்ததால், பெயரில் மட்டும் சிவனாக (தூய்மை) இல்லாமல் உண்மையாகவே தூய்மை பெற்றது.
இப்படி உள்ள போது நீ அந்த கங்கையின் மீது இரு முறை பயணித்தாய் (இராமாவதாரத்தில்).
அப்படி எனில் கங்கை பெற்ற பேறு என்ன?

ஸ்ரீ பாதுகையே– திரி விக்ரமாவதாரம் செய்த போது பிரம்மா நம் பெருமாள் திருவடிக்குக் கங்கை நீரால் திரு அபிஷேகம்
பண்ண உன் சம்பந்தம் பெற்றதால் கங்கை மங்களத்தை பண்ணும் நீராகிறது -ஒரு முறை உன் சம்பந்தம்
இந் நிலையைத் தரும் என்றால் ஸ்ரீ ராமாவதார காலத்தில் இரு முறை ஸ்ரீ தண்ட காரண்யம் போகும் பொழுதும்
திரும்பும் பொழுதும் உன் சம்பந்தம் பெற்ற கங்கைக்கு எவ்வளவு சக்தி உண்டாகி இருக்கும் –

——————————————————————–

வ்ருத்திம் கவாம் ஜநயிதும் பஜதா விஹாராந்
க்ருஷ்ணேந ரங்க ரஸிகேந க்ருதாஸ்ரயாயா:
ஸஞ்சாரதஸ் தவ ததா மணி பாத ரக்ஷே
ப்ருந்தா வநம் ஸபதி நந்தந துல்யம் ஆஸீத்—-286-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பசுக்களைப் பெருக்கவும், அவற்றைக் காக்கவும்
உறுதி செய்த பெரிய பெருமாள், க்ருஷ்ணனாகச் சஞ்சாரம் செய்தான்.
அப்போது அவன் உன்னைச் சாற்றியபடி சஞ்சாரம் செய்தான்.
இதனால் அவன் உலவிய ப்ருந்தாவனம் முழுவதும் இந்திரனின் தோட்டம் போன்று அழகு பெற்றது.

ஸ்ரீ பாதுகையே –பிருந்தா வனம் முன்பு நெருஞ்சிக் காடாக இருந்தது -ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் நம்பெருமாள்
உன்னைச் சாற்றிக் கொண்டு அங்கு சஞ்சாரம் செய்து இந்த்ரனுடைய தோட்டம் போலே அதை ரம்மியமாக ஆக்கி விட்டார் –

பத்து ரதன் புத்திரன் மித்ரன் ஸூக்ரீவன் சத்ரு வாலி தாரை -காலை வாங்கித்தேய் –
தரையில் தேய்ப்பதே நெருஞ்சி முள் குத்தினால் வைத்தியம்
தாரை அன்றோ பரத்வத்தை அறிந்தாள் -பாகவத சேஷத்வமே மருந்து –
ஸ்ரீ பாதுகையே இருதயத்தை நந்தவனம் ஆக்கி அருளும் –

——————————————————-

மாத: த்ரயீ மயதயா சரண ப்ரமாணே
த்வே விக்ரமேஷு விவிதேஷு ஸஹாய பூதே
நாதஸ்ய ஸாது பரி ரக்ஷண கர்மணி த்வம்
துஷ்க்ருத் விநாஸந தசாஸு விஹங்க ராஜ:—-287-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! வேத மயமாகவே இருந்து, ஸ்ரீரங்கநாதனுடைய
திருவடிகளின் சஞ்சாரத்திற்குக் காரணமாக இரண்டு கூறப்பட்டன. அவை என்ன?
ஸ்ரீரங்கநாதன் நல்லவர்களைக் காக்கும் போது, அவன் நடந்து செல்ல நீ உதவுகிறாய்.
நீ தீயவர்களை அழிக்க விரைவாகச் செல்ல கருடன் உதவுகிறான்.

ஸ்ரீ பாதுகையே —வேதத்தின் ஸ்வ ரூபமாக சொல்லப்படும் கருத்மானும் நீயும் பகவானுக்கு வெவ்வேறு விதமான
வியாபாரங்களிலே துணையாய் இருப்பவர்கள் -சாதுக்களை ரஷிக்க எழுந்து அருளும் போது கூட இருந்து உதவுகிறாய் –
வேத ஸ்வ ரூபியாகிய கருத்மானோ எம்பெருமான் துஷ்டர்களை சிஷிக்க புறப்படும் போது வாஹனமாக இருந்து உதவுகிறார்-

ரஷிப்பதற்கு மட்டும் உதவுபவர்கள் ஆசார்யர்கள் –

——————————————————————–

பாதாவநி க்வசந விக்ரமணே புஜாநாம்
பஞ்சாயுதீ கரருஹைர் பஜதே விகல்பம்
நித்யம் த்வம் ஏவ நியதா பதயோர் முராரே:
தேநாஸி நூநம் அவிகல்ப ஸமாதி யோக்யா—-288-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் புஜங்கள் ஒரு சில கால கட்டங்களில், ஆயுதம் என்பது இல்லாமல்
நகங்கள் கொண்டு, தங்கள் செயலை நிறைவேற்றி விடுகின்றன (ஹிரண்யகசிபு வதம்).
ஆனால் திருவடிகள் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலத்தில் நீ எப்போதும் உள்ளாய்.
ஆக உனக்குப் பதிலாக வேறு ஒன்று உள்ளது என்ற நிலை இல்லவே இல்லை.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் துஷ்டர்களை நிக்ரஹம் பண்ணத் தன் திவ்ய ஆயுதங்களை மாற்றியும் –
சில சமயம் நகத்தாலேயும் கூட கார்யத்தை நிறை வேற்றுகிறார் –
ஆனால் திருவடிக்கு மட்டும் உனக்கு பதிலாக எதையும் எக் காலத்திலும் உபயோகிக்க முடியாது –

———————————————————————

அக்ஷேத்ர வித்பி: அதி கந்தும் அசக்ய வ்ருத்தி:
மாதஸ் த்வயா நிரவதிர் நிதிர் அப்ரமேய:
ரத்யாந்தரேஷு சரணாவநி ரங்க ஸங்கீ
வாத்ஸல்ய நிக்ந மநஸா ஜநஸாத் க்ருதோ அஸௌ—-289-

பெரிய பெருமாளின் பாதுகையே! சரீரத்தில் ஆத்மா உள்ளது என்ற உண்மை அறியாமல் உள்ளவர்களால்
அடைவதற்குக் கடினமாக உள்ளது; அளவற்று உள்ளது; இப்படிப்பட்டது என்று அறிய இயலாததாக உள்ளது;
திருவரங்கத்தின் பெரிய நிதியாக உள்ளது – இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனை, அபாரமான கருணை உள்ள
உனது குணம் காரணமாகவே, திருவரங்க வீதிகளில் அனைவரும் காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளையும் அவர் இருப்பிடத்தையும் யாரால் அறிய முடியும் -ஆயினும் எங்கள் மீதுள்ள ப்ரீதியால்
ஒப்புயர்வற்ற எல்லை யற்ற பெரும் நிதியாகிய அந்த எம்பெருமானை ஸ்ரீ ரங்க திவ்ய நகர வீதி தோறும்
எழுந்து அருளப் பண்ணி நாங்களும் சேவிக்கும் படி செய்து அருளுகிறாய் –

————————————————————————

ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆஸ்ரயந்த்யா
ஸத் வர்த்மநா பகவதோ: அபி கதிர் பவத்யா
ஈஷ்டே பதாவநி புந: க இவேத ரேஷாம்
வ்யாவர்த்த நஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்—290-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று
சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடி வைப்பு மூலமே உண்டாகிறது.
இப்படி உள்ள போது, மற்றவர்களைத் தீய வழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் நல்ல வழியில் நடப்பது உன் அதீனமாக இருக்கிறது -அப்படி இருக்க
நம் போல்வார்கள் நல்ல வழியிலேயே நடப்பது உன் அருளால் தான் முடியும் –

———————————————————————

ரங்கேஸ்வரேண ஸஹ லாஸ்ய விசேஷ பாஜோ
லீலோ சிதேஷு தவ ரத்ந சிலா தலேஷு
மத்யே ஸ்திதாநி கசிசிந் மணி பாத ரக்ஷே
ஸப்யாந் விசேஷம் அநுயோக்தும் இதி ப்ரதீம:—291-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரத்தின் போது, அவன் அங்காங்கு
இரத்தினக் கற்கள் பதித்த இடங்களில் சற்றே நிற்கிறான். இவ்விதம் அவனுடன் நாட்டியம் செய்வது போல் செல்லும் நீ,
அவனை நிறுத்த என்ன காரணம்? அந்தக் கோஷ்டியில் உள்ளவர்களிடம்,
“என்னில் பதிக்கப்பட்ட இரத்தினங்களா, இந்த மேடையில் பதிக்கப்பட்ட இரத்தினங்களா – இதில் எவை அழகாக உள்ளன?”
என்று கேட்டு அறிவதற்கே என்று எண்ணுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உல்லாசமாக உன்னுடன் சஞ்சரிக்கும் போது நடுவில் ரத்ன மயமான ஆசனங்களில் ஆங்காங்கு
சில இடங்களில் நிற்கிறார் -அது சபையில் இருப்போரைப் பார்த்து நேர்த்தி எப்படி என்று கேட்பது போல் இருக்கிறது –

——————————————————————

நித்யம் பதாவநி நிவேஸ்ய பதம் பவத்யாம்
நிஷ்பந்த கல்ப பரிமேய பரிச்சதாநி
ஸ்ருங்கார சீதல தராணி பவந்தி காலே
ரங்கேஸ்வரஸ்ய லலிதாநி கதாகதாநி—-292-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பற்றும் பாதுகையே! ஏகாந்த சேவையின் போது உன் மீது திருவடிகளை வைத்து,
அழகிய மணவாளன் நிற்கிறான். அப்போது குடை, சாமரம் போன்றவை அசையாமல், ஓசை எழுப்பாமல் உள்ளன.
இவ் விதம் உள்ள ஸ்ரீரங்கநாதனின் சஞ்சாரம் மிகவும் இன்பம் அளிப்பதாகவும், குளிர்ந்தும் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரெங்க நாதன் உன்னைச் சாற்றிக் கொண்டு ஒய்யார நடை போடுகிறார் –
அந்தந்த சமயத்தில் குடையை வேகமாகச் சுற்றுவர் -அது பார்ப்பதற்கு அசைவின்றி நிற்பது போலத் தென்படுகிறது –
சேவிப்பவர்க்கு அந்த நடைகள் பரம போக்யங்கள் ஆகின்றன -என்கிறார்.

நம்பெருமாள் தோன்றிய காலம் முதல் இன்று வரை இந்த நடையழகு இருப்பதற்குக் காரணம் நம்பெருமாளின் பாதுகையே தவிர நாமன்று!
தேசிகர், நம்பெருமாளின் ஓய்யார நடையழகை கண்ணார கண்டு மகிழ்கின்றார்
அரங்கனுடைய திருவடிகள் தாம் – வேதத்தின் சாரம். -அதன் எல்லை யில்லாத சேமிப்பு!. – நிர்கதியாய் நிற்பவர்களுக்கு அதுவே கதி!.
அனைவரும் துதிக்கும் அந்த திருவடிகளின் புகலிடம் பாதுகையே!
அரங்கனை ஸேவிக்க இயலாது, அவனையே நினைத்து உருகும் நிர்கதியானவர்கள் ஸேவிக்கும் வண்ணம்,
அவனை திருவடியோடு சேர்த்து தெருவிற்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறாள் இந்த பாதுகா தேவி!.

————————————————————————

293. போக அர்ச்சநாநி க்ருதிபி: பரி கல்பிதாநி
ப்ரீத்யைவ ரங்க ந்ருபதி: ப்ரதிபத்யமான:
பஸ்யத்ஸு நித்யம் இதரேஷு பரிச் சதேஷு
ப்ரத்யாஸநம் பஜதி காஞ்சந பாதுகே த்வாம்—293-

தங்கம் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! புண்ணியம் நிறைந்தவர்களால் அடியார்கள் ஸ்ரீரங்கநாதனின்
சஞ்சாரத்தின் போது ஆங்காங்கு வழி நடை உபயம் நடத்தப்படுகிறது. அப்போது அந்த மண்டபங்களில் உள்ள
குடை, சாமரம் போன்றவைகள் அந்த மண்டபங்களில் அப்படியே உள்ளன.
ஆனால் உன்னை மட்டும் திருவடிகளில் சாற்றியபடி அவன் ஒவ்வொரு ஆசனத்தையும் சென்று சேர்கிறான்.

ஸ்ரீ காஞ்சன பாதுகையே குடை மற்ற பரிச்சதங்கள் எம்பெருமானுக்குச் சில ஆசனங்களில் மட்டுமே பயன்படும்
சஞ்சார காலத்தில் எப்போதுமே பெருமாள் உன்னை சாற்றிக் கொள்கிறார் –

————————————————————————-

அந்தஸ் த்ருதீய நயநை: ஸ்வயம் உத்தமாங்கை:
ஆவிர்ப பவிஷ்யத் அதிரிக்த முக அம்புஜைர்வா
ந்யஸ்யந்தி ரங்க ரஸிகஸ்ய விஹார காலே
வார க்ரமேண க்ருதிநோ மணி பாதுகே த்வாம்—-294-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! புண்ணியம் செய்தவர்கள் தங்கள் புண்ணியத்தின் விளைவாக
மூன்றாவது கண்ணையோ (சிவ பதவி) அல்லது நான்கு தலைகளையோ (ப்ரம்ம பதவி) அடைந்து விடுவார்கள்.
இவர்கள் ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செய்யும் போது, தங்கள் தலைகளில் உன்னை ஏந்தியபடி, அவனிடம் சேர்க்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே –தங்கள் முறைப்படி புண்ணிய சாலிகள் உன்னைத் தலை வணங்கி ஏற்று பெருமாள் திருவடிகளில்
சமர்ப்பித்து உயர்ந்தான பிரம்மா ருத்ராதி பதவிகளைப் பெறுகிறார்கள் –

————————————————————————

ரங்கேஸ்வரே ஸமதிரூட விஹங்கராஜே
மாதங்கராஜ வித்ருதாம் மணி பாதுகே த்வாம்
அந்வாஸதே வித்ருதசாரு ஸிதாத பத்ரா:
ஸ்வர்கௌகஸ: ஸுபக சாமர லோல ஹஸ்தா:—-295-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கருடன் மீது எழுந்தருளுகிறான்.
அப்போது உன்னைத் தேவர்கள், ஐராவதத்தின் மீது அமர வைத்தபடியும், சாமரங்கள் வீசியபடியும்,
வெண்குடை கவிழ்த்தபடியும் எழுந்தருளச் செய்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் கருடரூடனாக வெளியே எழுந்து அருளும் பொழுது தேவர்கள் அப்போது
ஐராவதத்தின் மீது உன்னை அமர்த்தி அழகிய வெண் கொற்றக் குடையுடன் சாமரம் போடுகிறார்கள் –

—————————————————————————–

விஷ்ணோ: பதம் கதி வசாத் அபரித்ய ஜந்தீம்
லோகேஷு நித்ய விஷமேஷு ஸம் ப்ரசாராம்
அந்வேதும் அர்ஹதி த்ருதாம் அகிலை: ஸுரேந்த்ரை:
கங்கா கதம் நு கருட த்வஜ பாதுகே த்வாம்—-296-

கருடனைத் தனது கொடியில் கொண்ட பெரிய பெருமாளின் பாதுகையே! கங்கை நதியானது மேடு பள்ளங்களில் ஓடும் போது,
பெரிய பெருமாளின் திருவடிகளை விட்டுப் பிரிந்து ஓட வேண்டி யுள்ளது.
ஆனால் நீயோ எப்போதும் அவன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் உள்ளாய்.
மேலும் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு காணாமல் அனைவரின் தலையிலும் சமமாகவே ஆதரித்தபடி உள்ளாய்.
ஆகவே கங்கை உனக்கு எவ்விதம் ஒப்பாகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எப்பவும் சஞ்சார காலத்தில் உன்னைச் சாற்றிக் கொள்வதால் என்றும்
உனக்கு அவருடைய திருவடி சம்பந்தம் உண்டு
பிரம்மாதி சகல தேவதைகளும் உன்னை வணங்குகிறார்கள்
உயர்வு தாழ்வு இல்லாமல் உன் கருணை எல்லோருக்கும் கிடைக்கிறது
இப்படிப்பட்ட உனக்கு கங்கை எவ் வகையிலும் ஒப்பாக மாட்டாள் –

————————————————————————–

பிக்ஷாம் அபேக்ஷ்ய தநு ஜேந்த்ர க்ருஹம் ப்ரயாது:
குப்த்யை கவாம் விஹரதோ வஹதச் ச தூத்யம்
தத் தாத்ருசாநி சரணாவநி ரங்க பர்த்து:
த்வத் ஸங்கமேந ஸுப காநி விசேஷ்டி தாநி—297-

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மஹாபலி யிடம் யாசகம் சென்றான், பசுக்களைக் காப்பாற்றும் விதமாக அவற்றுடன் திரிந்தான்,
பண்டவர்களுக்காகத் தூது சென்றான் – இத்தனை தாழ்வான செயல்களைச் செய்த போதும்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஏன் தாழ்ந்து போக வில்லை என்றால் – உன்னுடைய தொடர்பினால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -உன்னைச் சாற்றிக் கொண்டதால் தான் நம் எம்பெருமான் மஹா பலியிடம் தானம் வாங்கியது –
மாடு மேய்த்தது -பாண்டவர்களுக்காக தூது போனது போன்ற இகழ்ந்த கார்யங்களைச் செய்தும் ஏற்றத்தைப் பெற்றார் –

——————————————————————————

நிர் வ்யஜ்யமாந நவதாள லய ப்ரதிம்நா
நிர் யந்த்ரணேந நிஜ ஸஞ்சரண க்ரமேண
ம்ருத் நாஸி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வம்
துக்காத் மகாந் ப்ரணமதாம் துரித ப்ரரோஹாந்—-298-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னால் பிரகாசம் பெற்ற ஸ்ரீரங்கநாதனின்
நடை எவ்விதம் உள்ளது என்றால் -அனைவரும் காணும்படியும், வியப்பு அளிக்கும்படியும், தாளம் மற்றும் லயம் இணைந்ததாகவும்,
எந்தத் தடையும் இல்லாமலும் உள்ளது. இப்படிப்பட்ட நம்பெருமாளின் நடை அழகைக் கண்டு வணங்குபவர்களின்
பாவம் அனைத்தையும் நீ நசுக்கி விடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னை சாற்றிக் கொண்டு கூத்தாடுவது போலே எழுந்து அருளுகிறார் –
அதை சேவிக்கிறவர்கள் உடைய பாவம் கழிந்து துக்கம் விலகுகிறது
முளையாகக் கிளம்பும் முட்களை காலால் மிதித்து அழிப்பது போலே ஸ்ரீ பாதுகா தேவியும் தன் சஞ்சாரத்தினால்
வணங்குபவர்கள் உடைய தீவினை முனைகளைத் துகைத்து அழிக்கிறாள் -என்றபடி –

——————————————————————-

நித்யம் ய ஏவ ஜகதோ மணி பாத ரக்ஷே
ஸத்தா ஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம்
யோ அபி ஸ்வதந்த்ர சரிதஸ் தவத் அதீந வ்ருத்தி:
கா வா கதா ததிதரேஷு மிதம்ப சேஷு—-299-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான்.
இப்படி உள்ள போது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?

ஸ்ரீ பாதுகையே முத் தொழில்களையும் தன்னிச்சைப்படி நடத்தும் பகவானே உனக்கு அதீநம் என்னும் போது
மற்ற அல்பர்கள் உனக்கு அதீநம் என்பதைக் கேட்க வேண்டுமோ —

———————————————————————

நிர்விஷ்ட நாக சயநேந பரேண பும்ஸா
ந்யஸ்தே பதே த்வயி பதாவநி லோக ஹேதோ:
ஸ்வர்கௌகஸாம் த்வத் அநுதாவந அதத் பராணாம்
ஸத்ய: பதாநி விபதாம் அபதம் பவந்தி—-300-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆதி சேஷனில் சயனித்துள்ள பெரிய பெருமாள்,
இந்த உலகின் நன்மைக்காக எழுந்து, உன் மீது தனது திருவடிகளை வைக்கிறான்.
இதனால் உன் பின்னே வரும் ஆசை கொண்ட தேவர்களின் பதவிகள் எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றப் படுகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஆதி சேஷனில் சயனித்து இருக்கும் பரமன் லோக சம் ரஷணத்திற்காக உன் மீது திருவடிகளை
வைக்கும் போது சகல தேவதைகளும் உன்னைத் தொடர வேணும் என்ற ஆசையால் உன்னுடன் கூட வருகிறார்கள்
அதனால் அவர்கள் பதவி நிலை பெறுகிறது –

——————————————————————-

சரத் உபகம காலே ஸந்த்யஜந் யோக நித்ராம்
சரணம் உபகதாநாம் த்ராண ஹேதோ: ப்ரயாஸ்யந்
ஜலதி துஹிது: அங்காத் மந்தம் ஆதாய தேவி
த்வயி கலு நிததாநி ஸ்வம் பதம் ரங்கநாத:—-301-

பாதுகா தேவியே! சரத் காலம் வந்தவுடன் பெரிய பெருமாள் தனது யோக நித்திரையில் இருந்து எழுகின்றான்.
தன்னைச் சரணம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டு எழுகின்றான்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் மடி மீது வைத்திருந்த தனது திருவடிகளை, மெதுவாக உன் மீது வைத்தபடி எழுகிறான்.

ஸ்ரீ பாதுகையே மழைக் காலத்தில் மஹா லஷ்மியின் மடியில் திருவடி வைத்து யோக நித்தரை புரியும் பரமன் சரத் காலம் வந்ததும்
சரண் அடைந்தவர்களைக் காக்கும் பொருட்டு உன்னைச் சாற்றிக் கொண்டு புறப்படுகிறார் –

———————————————————————

ஸ்ப்ருசஸி பத ஸரோஜம் பாதுகே நிர் விகாதம்
ப்ரவிசஸி ச ஸமஸ்தாம் தேவி ஸூத்தாந்த கக்ஷ்யாம்
அபரமபி முராரே: பூர்வம் ஆபீர கந்யாஸு
அபி ஸரண விதீநாம் அக்ரிமா ஸாக்ஷிணீ த்வம்—-302-

பாதுகா தேவியே! பெரிய பெருமாளின் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நீ எந்த விதமான தடங்கலும் இன்றி,
மிகவும் எளிதாகத் தொடுகிறாய். அவனது அந்தப் புரங்களிலும் எளிதாகப் புகுந்து செல்கிறாய்.
அவன் க்ருஷ்ணனாக அவதாரம் செய்த போது, இடைப் பெண்களுடன் விளையாடி மகிழ்ந்த நிலைக்கு
நீயே முதல் சாட்சியாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியை எக் காலத்திலும் தொடுகிறவளாய் அந்தப் புரத்திலும் கூடவே இருக்கிறாய்
ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்திலும் இடைப் பெண்களுடன் விளையாடிய போது நீ முதல் சாஷியாக இருந்தாய் –

——————————————————————————

ப்ரதி பவநம் அநந்யே பாதுகே த்வத் ப்ரபாவாத்
விவிதவபுஷி தேவே விப்ரமத் யூத காலே
அபி லஷித ஸபத்நீ கேஹ யாத்ரா விகாதம்
க்லஹயதி ரஹஸி த்வம் ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ரம்—-303-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது மகிமை காரணமாகக் க்ருஷ்ணன் பல உருவங்கள் எடுத்து,
தனது பதினாறாயிரம் தேவிகளின் இல்லங்களில் ஒரே நேரத்தில் நின்றான்.
அவ் விதம் உள்ளபோது, ஒவ்வொரு இல்லத்திலும் இருந்த க்ருஷ்ணன் மற்றவள் பற்றி நினைக்காமல் இருந்தான்.
இவ் விதம் அந்தந்த தேவிமார்கள், க்ருஷ்ணன் தனது இல்லத்தை விட்டு அகன்று விடக் கூடாது என்பதற்காக
உன்னைப் பந்தயமாக வைத்தனர் (பந்தயம் என்றால் சொக்கட்டான் ஆட்டத்தில் பயன்படும் காய் ஆகும்.
ஆக, பாதுகை இல்லாமல் க்ருஷ்ணன் செல்ல மாட்டான் என்று உறுதி).

ஸ்ரீ பாதுகையே -ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் பதினாறாயிரம் பட்ட மகிஷிகளைக் கொண்டு பகவான் ஒவ்வொருவருடன்
ஏக காலத்திலேயே சதுரங்கம் விளையாடினானாம் -ஒவ்வொருவரும் பகவான் தன்னுடனே இருப்பதாக நினைத்து
மறுபடி பிரியாது இருக்க உன்னை பந்தயமாக -வைத்து விளையாடினார் அன்றோ –

—————————————————————

தடபுவி யமுநாயா: சந்ந வ்ருத்தௌ முகுந்தே
முஹு: அதிகமஹேதோ: முஹ்யதாம் யௌவதாநாம்
சமயிதும் அலம் ஆஸீத் சங்க சக்ராதி சிஹ்நா
ப்ரதிபத விசிகித்ஸாம் பாதுகே பத்ததி: தே—-304-

நம்பெருமாளின் பாதுகையே! யமுனை ஆற்றின் கரையில் ஒரு நாள் க்ருஷ்ணன் கோபிகைகளுடன் விளையாடி
நின்ற போது, திடீரென மறைந்து விட்டான். அவனைக் காணாமல் அந்தப் பெண்கள் திகைத்து நின்றனர்.
அங்கு இருந்த திருவடித் தடங்கள் யாருடையது என்ற ஐயம் அவர்களுக்கு எழுந்தது.
சங்கு சக்ரத்துடன் கூடிய உனது அடையாளங்கள், அவை க்ருஷ்ணனின் அடிச் சுவடுகளே என்று அவர்களுக்குக் காண்பித்தன.

ஸ்ரீ பாதுகையே -யமுனை யாற்றங்கரையில் கண்ணன் மறைந்த போது பிரிவாற்றாமையால் தவித்த கோபியர்
பூமியில் ஸ்ரீ பாதுகையின் சின்னத்தாலும் சங்கு சக்ரம் முதலியவற்றாலும் கண்ணனைக் கண்டு பிடித்தனர் –

————————————————————

அதிகத பஹுசாகாந் மஞ்ஜுவாச: ஸூகாதீந்
ஸரஸிஜ நிலயாயா: ப்ரீதயே ஸங்க்ரஹீதும்
ப்ரகடித குண ஜாலம் பாதுகே ரங்க பந்தோ:
உபநிஷத் அடவீஷு க்ரீடிதம் த்வத் ஸநாதம்—-305-

பிரகடித குண ஜாலம் -குணங்கள் என்னும் வலை –

பெரிய பெருமாளின் பாதுகையே! அனைத்து வேதங்களின் சொற்களையும் கொண்ட ஸூகர் போன்ற மஹரிஷிகளை,
தாமரை மலரில் அமர்ந்துள்ள ஸ்ரீரங்க நாச்சியாரின் மகிழ்வுக்காக ஸ்ரீரங்கநாதன் பிடிக்க முயல்கிறான்.
இதனால் அவர்களைத் தேடி உபநிஷத்துக்கள் என்ற காட்டில், தனது உயர்ந்த கல்யாண குணங்கள் என்ற வலை விரித்து,
அவர்களைப் பிடிக்க எத்தனிக்கிறான். இந்தச் செயல் உன்னுடன் இணைந்தே நடைபெறுகிறது.

ஸ்ரீ பாதுகையே மஹா லஷ்மியின் சந்தோஷத்திற்காக ஸ்ரீ ரங்க நாதன் வேத சாஸ்திர விற்பன்னர்களான ஸூகர் முதலிய
ஞானிகளைப் பிடிக்க உபநிஷத்துக்கள் ஆகிற காடுகளில் தனது குணங்களை வழியாக வீசி உன்னுடன் விளையாடுகிறார் –

ஸ்ரீ பாதுகை யுடையவும் எம்பெருமான் யுடையவும் குண நலன்கள் வேத பிரதி பாத்யங்கள் என்றபடி –

————————————————————————-

முநி பரிஷதி கீதம் கௌதமீ ரக்ஷணம் தே
முஹு: அநுகலயந்த: மஞ்ஜுவாச: சகுந்தா:
உஷஸி நிஜ குலாயாத் உத்திதா: தண்டகேஷு
ஸ்வயம் அபி பத ரக்ஷே ஸ்வைரம் ஆம்ரேடயந்தி—-306-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தண்டகாரண்யத்தில் உள்ள முனிவர்கள்,
பர்ண சாலைகளில் நீ செய்த அஹல்யை ரக்ஷணம் குறித்துக் கூறியபடியே இருந்தனர்.
இதனைக் கேட்ட அங்குள்ள கிளிகள், அதே சொற்களைக் காலையில் தங்கள் கூடுகளில்
இருந்து விழித்து எழும் போது, மீண்டும் மீண்டும் கூறியபடியே திரிகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ தண்ட காரண்யத்தில் நீ அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்ததை முனிவர்கள் கூட்டங்களில்
எங்கு எங்கும் பேசுவர் -இதைக் கேள்வி யுற்ற கிளிகள் முதலான பறவைகளும் கூட அதி காலை வேளைகளில்
கூட்டில் இருந்து புறப்பட்டு இதையே திரும்பத் திரும்பச் சொல்ல லாயின —

சாபம் -அம்பு கொண்டு வந்த -பெண்ணைத் தீண்டாத -பெருமாள் அகலிகை சாபம் தீர்த்தான் -பறவைகளும் கடகர்கள் தானே
புன்னை மரம் வேதம் -ஆழ்வார்கள் -பக்ஷிகள் -பேச வைத்து பிராட்டிக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறான் அரங்கன் –

——————————————————————————-

யம நியம விஸூத்தை: யம் ந பஸ்யந்தி சித்தை:
ஸ்ருதிஷு சுளக மாத்ரம் த்ருஸ்யதே யஸ்ய பூமா
ஸுலப நிகில பாவம் மாம்ஸ த்ருஷ்டேர் ஜநஸ்ய
ஸ்வயம் உபஹரஸி த்வம் பாதுகே தம் புமாம்ஸம்—-307-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரம்மசர்யம், அஹிம்சை, ஸத்யம், திருடாமல் உள்ள தன்மை, சொத்து சேர்க்காமல்
உள்ள தன்மை ஆகிய ஐந்தும் யமம் எனப்படும். வேதம் ஓதுதல், ஆசாரம், மனநிறைவு, தவம், எப்போதும் பகவத் நினைவு
ஆகிய ஐந்தும் நியமம் எனப்படும். இவை இரண்டும் உள்ள தூய்மையான மனம் கொண்ட யோகிகளால் கூட
எம்பெருமானைக் காண இயலாது; அவனுடைய பெருமை என்பது அனைத்து வேதங்களின் மூலம் கூட,
உள்ளங்கை அளவு மட்டுமே கூறப்பட்டது; இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனை
மனிதர்களின் மாமிசக் கண்ணாலேயே காணும்படி, நீ அவனை எழுந்தருளப் பண்ணி வருகிறாய்.

ஸ்ரீ பாதுகையே யமம் நியமம் முதலியவற்றால் சுத்தமான மனம் பெற்ற யோகிகளாலும் காண முடியாத பரம் பொருளைப்
பூரணமாக அறியும் வண்ணம் எல்லா ஜனங்களும் மாம்ச மயமான கண்களால் கண்டு களிக்கும் படியாக
அவர்களுக்கு முன்பாக நீ எழுந்து அருளப் பண்ணி விடுகிறாய் –

————————————————————————-

நிதிம் இவ நிரபாயம் த்வாம் அநாத்ருத்ய மோஹாத்
அஹம் இவ மம தோஷம் பாவயந் க்ஷுத்ரம் அர்த்தம்
மயி ஸதி கருணாயா: பூர்ண பாத்ரே த்வயா கிம்
பரம் உபகமநீய: பாதுகே ரங்கநாத:—-308

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரிய பெருமாள் என்ற பெரிய நிதியை உடையவளாக நீ உள்ளாய்.
உன்னை அலட்சியம் செய்து விட்டு, நான் அற்பமான பொருள்களின் பின்னே செல்கிறேன்.
ஸ்ரீரங்கநாதனின் தயை முழுவதும் வந்து நிரம்பும் இடமாக நான் உள்ள போதும்,
அவன் என்னிடம் உள்ள குற்றத்தை மட்டுமே காண்கிறானே! இப்படி உள்ள போது நீ அவனை, என்னை விட்டு
வேறு நல்லவர்களிடம் அழைத்துச் சென்று விடுவது சரியா? (என்னிடம் கொண்டு வந்தால் அல்லவா நான் பிழைப்பேன்)

ஸ்ரீ பாதுகையே உயர்ந்த புதையலான உன்னை விடுத்து என் எண்ணங்கள் அல்பமான வழியிலேயே ஈடுபடுகின்றன –
சர்வஜ்ஞ்ஞனான பகவானும் என் குற்றங்களையே கருதி விமுகனாக இருக்கிறான்
அவன் தயைக்கு பூர்ண அதிகாரியாக என்னை விட்டு ஏன் மற்று ஒருவன் இடம் நீ அவனைக் கொண்டு சேர்க்கிறாய் –
நீயே அவனை என் பால் திருப்ப வேண்டும் –

—————————————————————————

கமபி கநக ஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம்
கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம்
அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம்
ஸு சரித பரிபாகம் ஸூரிபி: ஸேவ நீயம்—-309-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல் திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான்.
அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான்.
நித்ய ஸுரிகளால் என்றும் போற்றப் பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான்.
இப்படிப் பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.

ஸ்ரீ பாதுகையே நித்ய ஸூரிகளும் மகா புண்ணிய சாலிகளுமே உபய நாச்சிமார் உடனும் உன்னுடனும் பொன்னியின் கரையிலே
எழுந்து அருளி வரும் ஸ்ரீ ரங்க நாதனை சேவிக்கத் தகுந்தவர்கள் உன் கிருபையால் எனக்கும் அந்த சேவை எப்போதும் கிடைக்க வேண்டும் –

——————————————————————

பரிஸரம் உபயாதா பாதுகே பஸ்ய மாத:
கரண விலய கேதாத் காந்தி சீகே விவேகே
புருஷம் உபநயந்தீ புண்டரீகாக்ஷம் அக்ரே
புந: உதர நிவாஸ க்லேச விச் சேதநம் ந:—310-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! கண் முதலான புலன்கள் ஒடுங்கும் மரண காலத்தில்,
அந்த வேதனை தாங்காமல் எனது விவேகம் குறையக் கூடும். அந்த நேரத்தில் நீ செய்ய வேண்டியது என்ன?
தாமரை மலர் போன்ற அழகான கண்கள் உடையவனும், மீண்டும் கர்ப்ப வாசம் (பிறவி) ஏற்படாமல் தடுக்கும்
திறன் உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனை என் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி, என்னைக் காண்பாயாக.

ஸ்ரீ பாதுகையே இந்த ஆத்மா சரீரத்தை விட்டு கிளம்பும் சமயம் இந்திரியங்கள் எல்லாம் செயல் அற்று விவேகம் அழிந்து விடும்
அந்த சமயம் மறுபடியும் கர்ப வாச க்லேசம் நேராத படி அதை போக்க வல்ல புண்டரீ காஷனை என்னருகில் கொண்டு வந்து
நிறுத்தி நீ என்னைக் கடாஷித்து அருள வேண்டும் -என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி பிரார்த்திக்கின்றார்.

இந்த பாதுகைகளில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை ஸேவிக்கின்றவர்களுடைய பாவம் ஒழிந்து, துக்கம் அகலுகின்றது.
தன் சஞ்சாரத்தினால் வணங்குபவர்களுடைய தீவினை முனைகளை துகைத்து அழித்து,
பரம பதத்தினில் நமக்கு கைங்கர்ய பிராப்தியினை அளிக்கின்றாள்.
பாதுகை–பாவம் ஒழிந்து-துக்கம் அகலுகின்றது–கைங்கர்ய பிராப்தியினை அளிக்கின்றாள்-

——————————————————————–

ஸா மே பூயாத் ஸபதி பவதீ பாதுகே தாப சாந்த்யை
யாமாரூடோ திவமிவ சுபை: சேவ்ய மாநோ மருத்பி:
ஸௌதாமிந்யா ஸஹ கமலயா ஸஹ்யஜா வ்ருத்தி ஹேது:
காலே காலே சரதி கருணா வர்ஷுக: க்ருஷ்ண மேக:—-311-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆகாயம் போன்ற உன் மீது ஸ்ரீரங்கநாதன் ஏறுகிறான்.
தேவர்கள் என்ற காற்றின் மூலம் ஆராதிக்கப் படுகிறான்.
காவிரியின் பெருமையை அதிகப் படுத்தும் விதமாக, அவள் மீது கருணை என்ற மழையைப் பொழிகிறான்.
மஹாலக்ஷ்மி என்ற மின்னலால் அணைக்கப்பட்ட க்ருஷ்ணன் என்ற அந்தக் கரிய மேகம், இவ்விதமாக சஞ்சாரம் செய்தபடி உள்ளது.
இப்படிப்பட்ட இந்த சஞ்சாரத்திற்கு உதவும் நீ, எனது தாபத்தைத் தீர்க்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே -மழைக் காலத்தில் நீருண்ட மேகங்கள் காற்றுடனும் மின்னலுடன் கூடி மழையை வருஷித்து
காவேரி முதலிய நீர் நிலைகளை நிரப்புகின்றன -அது போலே காள மேகம் போன்ற எம்பெருமானும் உன்னை சாற்றிக் கொண்டு
மின்னல் போன்ற மகா லஷ்மியுடன் வணங்கப்பட்டு சகல ஜகத்திற்கும் கருணையை வர்ஷிக்கிறார்
அந்த எம்பெருமானின் சஞ்சாரத்துக்கு காரணமான நீ கடாஷத்தால் தேஹாவசான சமயத்தில் என் தாபங்களும் அழிய அருள வேண்டும் –

பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை விட்டு க்ஷண நேரம் கூட பிரியாத நீயே எனக்குக் கதி!
எல்லா நலன்களையும் நீ எனக்கு அருள வேண்டும்!

—————————————————————————-

ஸத்யாத் லோகாத் சகல மஹிதாத் ஸ்தாநதோ வா ரகூணாம்
சங்கே மாத ஸமதிக குணம் ஸைகதம் ஸஹ்யஜாயா:
பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத் த்யஜந்த்யா
நீதோ நாதஸ் ததிதம் இதரத் நீயதே ந த்வயா அஸௌ—312-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை! தாயே! அனைவராலும் புகழப்படும் இடமாக உள்ள ஸத்ய லோகம்,
ரகு வம்சத்தினரின் உரிமையான அயோத்தி ஆகியவற்றைக் காட்டிலும் திருவரங்கத்தில் உள்ள காவேரியின் கரையானது
மிகவும் மேன்மை பெற்றது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் –
தான் நீண்ட காலம் இருந்து வந்த இடங்களை விட்டு, உன்னால் இந்தக் கரைக்கு அல்லவோ திருவரங்கன் கொண்டு வரப்பட்டான்.
இங்கிருந்து அவன் வேறு எங்கும் செல்ல வில்லை அல்லவா?

ஸ்ரீ பாதுகையே -முதலில் பெருமாள் பிரம்ம லோகத்தில் இருந்தார் –
அங்கு இருந்து திரு வயோத்திக்கு அவரை நீ அழைத்து வந்தாய் –
அங்கு இருந்து அவரை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வந்தாய் –
அதை விட்டு அவரை வேறு இடத்திற்கு நீ அழைத்துச் செல்ல வில்லை –
அதனாலே ஸ்ரீ ரங்கமே ஸ்ரீ வைகுண்டம் ஆயிற்று –

——————————————————————————————–

அக்ரே தேவி த்வயி ஸுமநஸாம் அக்ரிமை அந்தரங்கை:
விந்யஸ் தாயாம் விநய கரிம் ஆவர்ஜிதாத் உத்தமாங்காத்
தத்தே பாதம் தரமுகுளிதம் த்வத் ப்ரபாவாதி சங்கீ
தேவ: ஸ்ரீமாந் தநுஜமதந: ஜைத்ர யாத்ராஸு அநந்ய:—313-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! அசுரர்களை வெற்றி கொள்ளும் பொருட்டு திருவரங்கன் புறப்படுகிறான்.
அப்போது தேவர்களில் முதல்வர்களாக உள்ள கிங்கரர்கள், மிகவும் வணக்கத்துடன், தங்கள் தலை மீது வைத்திருந்த
உன்னை மிகவும் மெதுவாக திருவரங்கன் முன்பாக வைக்கின்றனர்.
தேவர்களின் தலைவனும், ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனும், அசுரர்களின் சத்ருவும் ஆகிய ஸ்ரீரங்கநாதன்
உனது பெருமையை முழுவதுமாக அறிவான் அல்லவா?
ஆகவே உன் மீது தனது திருவடியை வைக்க வேண்டும் என்று சங்கோஜம் அடைந்து,
மெதுவாகத் தனது திருவடி விரல்களை தயக்கத்துடன் மடக்கியபடி வைக்கிறான் .

ஸ்ரீ பாதுகையே அஸூரர்களைக் கொல்வதற்குப் பெருமாள் எழுந்து அருளும் போது பிரம்மாதி தேவர்கள்
உன்னை வணக்கத்துடன் தங்கள் சிரஸ் ஸூகளினின்றும் எழுந்து அருளச் செய்து சமர்ப்பிக்கிறார்கள் –
எம்பெருமான் உன் பெருமையை நினைத்து காலால் தொட வேண்டி இருக்கிறதே எனத் தயங்குபவர் போலே
விரல்களை மடக்கி ஜாக்கிரதையாய் சாற்றிக் கொள்கிறார் –

————————————————————————-

பௌர உதந்தாத் பரிகலயிதும் பாதுகே ஸஞ்சரிஷ்ணோ:
வ்யக்தா வ்யக்தா வசிக விசிகா வர்த்தநீ ரங்க பர்த்து:
வேலாதீத ஸ்ருதி பரிமளை: வ்யக்திம் அப்யேதி கால்யே
விந்யாஸை: தே விபுத பரிஷத் மௌளி விந்யாஸ த்ருச்யை:—-314–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கத்தில் உள்ள மக்களின் குறை நிறைகளை அறிந்து கொள்ளும் விதமாக
திருவரங்கன் சஞ்சாரம் செய்கிறான். அவன் சென்று விட்டுப் போன வழி எங்கும்
உனது அடையாளங்கள் புலப்பட்டும், புலப்படாமலும் உள்ளன.
வேத வாஸனை உடைய தேவர்கள், அந்தச் சுவடுகளை வணங்கிய போது, அவர்களது க்ரிடங்களின் சுவடுகளும் அங்கு படிந்து விடுகிறது.
இதன் மூலம் அந்தச் சிறு சிறு வீதிகளிலும், மறுநாள் காலையில் உனது சுவடுகள் மிகவும் ப்ரகாசமாகத் தெரிகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன்னை அணிந்து கொண்டு நகர மக்களின் செய்திகளை அறிய அப்ரசித்தமான
தெருக்களில் எல்லாம் கூட எழுந்து அருளுகிறான் –
அப்பொழுது தேவர்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள் -அதனால் அழகியனவும் வேத மணம் கமழ்கின்றனவுமான
உன் அடி வைப்புக்களால் அந்தத் தெருக்கள் பிரசித்தங்கள் ஆகின்றன –

—————————————————–

ஆ சம்ஸ்காராத் த்விஜ பரிஷதா நித்யம் அப்யஸ்யமாநா
ஸ்ரேயா ஹேது சிரஸி ஜகாத ஸ்தாயி நீ ஸ்வேன பூம்நா
ரங்கா தீஸ் ஸ்வயமுதயிநி ஷேப்தும் அந்தம் தமிஸ்ரம்
காயத்ரீவ த்ரி சதுரபதா கண்யசே பாதுகே தவம் –315-

ஸ்ரீ பாதுகையே -நீ காயத்ரீ போல் இருக்கிறாய் -பஞ்ச சம்ஸ்காரம் ஆனவர்கள் உன்னை அனுபவிக்கிறார்கள்
அனைவருக்கும் நன்மை பயந்து அருளுகிறாய்-உயர்ந்த ஸ்தான பெருமை உனக்கும் காயத்ரி மந்த்ரத்துக்கும் உண்டு –
சூரியன் உதிக்கும் பொழுது மூன்று நான்கு பாதங்களை உடையதாய் காயத்ரீ ஜபிக்கப் படுவது போலேவே
ஸ்ரீ ரங்க நாதன் உலகின் அஜ்ஞ்ஞானம் போக்க எழுந்து அருளும் பொழுது
மூன்று நான்கு அடி வாய்ப்புகளை உடையவளாய் நீயும் எண்ணப் படுகிறாய் –

———————————————————-

பவதீம் பரஸ்ய புருஷஸ்ய ரங்கிணோ
மஹிமாநமேவ மணி பாது மந்மஹே
கதம் அந்யதா ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித:
ப்ரதி திஷ்டதி த்வயி பதாத் பதம் ப்ரபு:—-316-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
மிகவும் உயர்ந்தவனும், பரம புருஷனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பெருமைகளே
உனது வடிவம் எடுத்து வந்ததாகவே நாங்கள் எண்ணுகிறோம். அப்படி இல்லை யென்றால்,
நிலை பெற்று நிற்கும் திருவரங்கன் எவ்விதம் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் உன்னிடம் உள்ளான்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் தன பெருமையில் நிலை பெற்று இருக்கிறார் என உபநிஷத் கூறுகிறது
பெருமாளே சஞ்சார காலத்தில் உன்னிடம் இருப்பதால் நீயே தான் அவருடைய பெருமை என்று எண்ணுகிறேன் –

—————————————————————

திதிர் அஷ்டமீ யத் அவதார வைபவாத்
ப்ரதமா திதிஸ் த்ரி ஜகதாம் அஜாயத
மணி பாதுகே தம் உபநீய வீதிகாஸு
அதிதீ கரோஷி தத் அநந்ய சக்ஷுஷாம்—-317-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! திருவரங்கன் க்ருஷ்ணனாக அவதரித்த காரணத்தினால்
அஷ்டமி திதி என்பது மூன்று உலகங்களுக்கும் மிகவும் முக்கியமான திதியானது.
இப்படிப்பட்ட நம்பெருமாளை நீ திருவீதிகளில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவதன் மூலம்,
அவனை மட்டுமே பார்த்து, மற்ற எதனையும் பார்க்காமல் உள்ள பரமை காந்திகளுக்கு,
அவனை நீ அதிதி ஆக்குகின்றாய் (அதிதி என்றால் விருந்தினர்).

ஸ்ரீ பாதுகையே அஷ்டமி திதியானது எம்பெருமான் திருவவதரித்த வைபவத்தால் பிரதமையான உயர்ந்ததான திதி ஆயிற்று –
அந்தப் பெருமாளை திரு வீதிகளில் எழுந்து அருளப் பண்ணி நீ பக்தர்களுக்கு அதிதி -விருந்தாளியாகப் பண்ணுகிறாய் –

————————————————————–

அபார ப்ரக்யாதே: அசரண சரண்யத்வ யசஸா
நநு த்வம் ரங்கேந்தோ: சரண கமலஸ்யாபி சரணம்
யயாலப்ய: பங்கு ப்ரப்ருதிபி: அஸௌ ரங்க நகர
ப்ரதோளீ பர்யந்தே நிதிர் அநகவாசாம் நிரவதி:—-318–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கனின் திருவடித் தாமரைகள், வேறு எந்த விதமான கதி அற்றவர்களையும்
காப்பாற்றும் புகழ் கொண்டதாகும். அத்தகைய திருவடிகளுக்கும் அடைக்கலம் அளிப்பது நீ அல்லவா?
மிகவும் உயர்ந்த வேதங்களுக்கும் நிதி போன்று உள்ளவன் நம்பெருமாள் ஆவான்.
அவன் திருவரங்கத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள் இடம் தேடி வந்து,
அவர்களாலும் அடையத் தக்கவனாக உள்ளது உன்னால் அல்லவா?

ஸ்ரீ பாதுகையே வேதங்களின் எல்லை யில்லா சேமிப்பான திருவரங்கத்து எம்பெருமானுடைய திருவடிகள்
வேறு கதி யற்றவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது -அந்த திருவடிகளுக்கும் நீ புகலிடமாக இருக்கிறாய் –
அதனால் தான் கோயில் வரை வந்து பெருமாளை சேவிக்க முடியாத நொண்டி போன்ற அங்க ஹீனர்கள் கூட
உன் கருணையால் தெரு ஓரத்தில் தான் இருக்கும் இடத்திலேயே பகவானை தர்சிக்கிறார்கள்-

—————————————————————-

தத் தத் வாஸ க்ருஹ அங்கண ப்ரணயிந: ஸ்ரீரங்க ஸ்ருங்காரிண:
வால்லப்யாத் அவி பக்த மந்தர கதி: த்வம் மே கதி: பாதுகே
லீலா பங்கஜ ஹல்லக உத்பல களத் மாத்வீக ஸேக உத்திதா
யத்ர ஆமோத விகல்பநா விவ்ருணுதே ஸூத்தாந்த வார க்ரமம்—-319-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவரங்கன் அந்தந்த பிராட்டிகளின் இல்லத்திற்குச் சென்று வரும் போது,
ஒவ்வொரு மலரின் நறுமணம் அவன் மீது உண்டாகிறது.
ஸ்ரீமஹாலக்ஷ்மியின் இல்லம் சென்றபோது தாமரை மலரின் மணம்,
பூமா தேவியின் இல்லம் சென்று வரும்போது செங்கழுநீர் மலரின் மணம்,
நீளா தேவி இல்லம் சென்று வரும்போது கரு நெய்தல் மலரின் மணம் ஆகியவை அவன் மீது வீசுகிறது.
இதன் மூலம் அவன் எங்கு சென்று வந்தான் என்று அறிய இயல்கிறது.
இவ்விதம் அவனுக்கு அந்தரங்க சேவை செய்பவளாக, அவனுடன் மெதுவாக நடந்து செல்லும் நீயே எனக்குச் சரணம் ஆகிறாய்;
எனக்கு அனைத்து நன்மைகளும் அளிப்பாயாக.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நகரத்து எம்பெருமானை விட்டுக் கணமும் பிரியாத நீயே எனக்கு கதி
எல்லா நலன்களையும் நீ எனக்கு அருள வேண்டும் -மற்றைய தேவியர்க்கு முறை உண்டு –
அவரவர் உபயோகிக்கும் தாமரை செங்கழுநீர் கரு நெய்தல் என்ற புஷ்பங்களின் நின்று பெருகும் தேனின் சேர்க்கையால்
உண்டாகும் வெவ்வேறு மணம் உன் மீது வீசுவதைக் கொண்டு ஸ்ரீ பூமி நீளா தேவிகளின் முறையான ஸ்ருங்கார சேர்க்கை அறியப் படுகிறது –

————————————————————————

ஸம் பவது பாத ரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண:
யத்ராஸு ரங்க பர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ—320-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக் கூடும்.
ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் ஏறத் தகுந்த -சத்யன் -ஸூபர்ணன்-என்று எல்லாம் அழைக்கப் படும் கருடன்
முதலிய எவரானாலும் வாஹன மண்டபம் வரை உன்னைத் தானே சாற்றிக் கொண்டு புறப்படுகிறார் —

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-

March 8, 2016

சௌரே: ஸ்ருங்கார சேஷ்டாநாம் ப்ரஸூதிம் பாதுகாம் பஜே
யாம் ஏஷ புங்க்தே ஸூத்தாந்தாத் பூர்வம் பஸ்சாத் அபி ப்ரபு:—251-

பெரிய பெருமாளின் ஸ்ருங்கார ரஸத்திற்கு ஹேதுவாக உள்ள பாதுகையை நான் வணங்குகிறேன்.
பாதுகை எவ்விதம்ஹேதுவாக உள்ளது என்றால் –
அவன் அந்தப்புரம் செல்வதற்கும்,
அங்கிருந்து மீண்டு வருவதற்கும்
பாதுகையைச் சாற்றிக் கொண்டு அல்லவோ செல்கிறான்?

அந்தப்புரத்துக்கு போகும் போதும் வரும் போதும் சாற்றிக் கொண்டு நாயகனான பகவான்
நாயகியான ஸ்ரீ பாதுகையின் சேர்க்கை ஸூகத்தை அனுபவிக்கிறார் –
அந்தகைய சௌரியின் ஸ்ருங்கார லீலைகளுக்கு காரண பூதையான ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன்

ஆழ்வார் தன்னை நாயகியாக புருஷோத்தமனை அனுபவிக்கிறார் –

—————————————————————–

ப்ரணத த்ரித சேந்தர மௌளி மாலா மகரந்த அர்த்ர பராக பங்கிலேந
அநுலிம்பதி பாதுகே ஸ்வயம் த்வாம் அநு ரூபேண பதேந ரங்க நாத:—252-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றனர்.
அப்போது அவர்கள் அணிந்துள்ள மாலைகளில் உள்ள தேன், அவனது திருவடிகளில் உள்ள தூசிகளுடன் கலந்து, சேறு போன்று ஆகிறது.
இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிச் சேற்றை உன் மீது சந்தனம் போன்று ஸ்ரீரங்கநாதன் எப்போதும் பூசுகிறான்
(நாயகன் நாயகிக்கு சந்தனம் பூசுவதைக் கூறுகிறார்).

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் எம்பெருமானை சேவிக்கும் போது அவர் தம் தலையில் உள்ள புஷ்பங்களின் மகரந்தமும் புழுதியும்
தேனும் சேறுமாய்ப் பெருமாள் திருவடியைச் சேர்ந்தன -பெருமாள் அதை உனக்கு சந்தனமாக பூசி விடுகிறார் –

————————————————————–

அவதாத ஹிமாம் ஸுக அநு ஷக்தம் பத ரக்ஷே த்வயி ரங்கிண கதாசித்
கிம் அபி ஸ்திதம் அத்வதீய மால்யம் விரளாவஸ்தித மௌக்திகம் ஸ்மராமி—253-

ஒரு நேரத்தில் ஸ்ரீரங்கநாதன் வெளுத்த ஈர வஸ்திரத்துடனும்,
நெருக்கம் இல்லாமல் அங்கும் இங்குமாக உள்ள
முத்து மாலையுடனும் அழகாக உன் மீது எழுந்தருளியிருப்பான்.
அப்போது அவன் திருவடிகளில் மலர் மாலையும் சாற்றப் பட்டிருக்கும்.
இதனைக் காணும் போது, சந்தனப் பூச்சிற்குப் பின்னர் (கடந்த ஸ்லோகம் காண்க)
உனக்கு இடப்பட்ட மாலை என்றே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே திரு மஞ்சன காலத்தில் ஒரு வெள்ளை வஸ்த்ரத்தையும் ஒரு முத்து மாலையையும்
ஒரு பூ மாலையையும் மட்டுமே அணிந்து
ஸ்ரீ ரங்க நாதன் உன்னிடத்திலே சேர்ந்து இருப்பதான அபூர்வ சேர்க்கையை நினைத்து மகிழ்கிறேன் –

——————————————————————–

அஸஹாய க்ருஹீத ரங்க நாதாம் அவரோதாங்கண ஸீம்நி பாதுகே த்வாம்
ஸுத்ருஸ: ஸ்வயம் அர்ச்ச யந்தி தூராத் அவதம் ஸோத்பல வாஸிதை: அபாங்கை:—-254-

நம்பெருமாளின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு அந்தப்புரத்திற்குச் செல்கிறான்.
அப்போது அங்குள்ள பெண்கள் செய்வதென்ன? அவர்கள் தங்கள் காதுகளில் அலங்காரமாக வைத்துள்ள
நெய்தல் மலரின் நறுமணம் நிறைந்த கண்களால் உன்னைத் தங்கள் கடைக் கண் பார்வை கொண்டு பார்த்து வணங்கி நிற்கின்றனர்
(இங்கு நாயகனான நம்பெருமாளுடன் வரும் ப்ரதான நாயகியாக பாதுகை கூறப்பட்டது காண்க).

ஸ்ரீ பாதுகையே நீ மற்று ஒருவரின் துணை இன்றியே ஸ்ரீ ரங்க நாதனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு அந்தப்புரத்திற்கு
வரும் போது அங்குள்ள பெண்கள் ஆசையுடன் உன்னைக் கடைக் கண்களால் பார்த்து தூரத்தில் இருந்தே உன்னை அர்ச்சிக்கிறார்கள் –

————————————————————

நிர் விச்ய மாநம் அபி நூதந ஸந்நிவேசம்
கைவல்ய கல்பித விபூஷண காய காந்திம்
காலேஷு நிர் விசஸி ரங்க யுவாநம் ஏகா
ஸ்ருங்கார நித்ய ரஸிகம் மணி பாத ரஷே—255-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! எத்தனை அனுபவித்தாலும் புதியவனாகவே ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
அத்தனை அழகான திவ்யமான திருமேனி கொண்டவனாக உள்ளான்.
எந்தவித ஆபரணங்களும் அணியாமல் இருக்கின்ற போதும், ஆபரணங்கள் அணித்தவன் போலத் தோன்றுகிறான்.
இவ்விதமாக அந்தந்த கால கட்டங்களில் நீ அவனுடனே இருந்து கொண்டு
அவனைத் தனியாக அனுபவித்தபடி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை ஒவ்வொரு முறை சேவிக்கும் போதும் புதிது புதிதாகத் தோற்றம் அளிக்கிறார் –
எந்த ஆபரணமும் இன்றியும் அவர் அழகு கொள்ளை கொள்வதாய் உள்ளது –
நீ மட்டும் கணமும் பிரியாது பல காலங்களிலும் இவ் வண்ணம் அனுபவிக்கிறாய் –

——————————————————————–

நித்ராயி தஸ்ய கமிது: மணி பாதுகே த்வம்
பர்யங்கிகா பரிஸரம் ப்ரதிபத்ய மாநா
ஸ்வாஸாநில ப்ரசலிதேந புஜஸ்ய பீக்ஷ்ணம்
நாபீ ஸரோஜ ரஜஸா நவம் அங்க ராகம்—256–

இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
அப்போது அவன் கட்டிலில் அருகில் நீ உள்ளாய். அவன் விடும் மூச்சுக் காற்றில், அவனது நாபிக் கமலத்தில் உள்ள
மகரந்தத் துளிகள் உன் மீது வந்து படிந்தபடி உள்ளன. இவ்விதம் உனக்கு சந்தனப் பூச்சு நடை பெறுகிறது போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே எம்பெருமான் சயனித்து இருக்கும் போது அவர் மூச்சுக் காற்றினால் அசைக்கப்பட்ட நாபி கமலத்தினின்று
மகரந்த தூள் திருப் பள்ளியின் பக்கத்தில் இருந்த உன் மீது மேன் மேலும் பட அது உனக்கு சந்தனத்தால் பூசியது போலிருந்தது –

—————————————————————————

சயிதவதி ரஜந்யாம் பாதுகே ரங்க பந்தௌ
சரண கமல பார்ஸ்வே ஸாதரம் வர்த்தஸே த்வம்
பணி பதி சய நீயாத் உத்தி தஸ்ய ப்ரபாதே
ப்ரதம நயந பாதம் பாவநம் ப்ராப்து காமா—-257–

பெரிய பெருமாளின் பாதுகையே! பெரிய பெருமாள் இரவில் தனது படுக்கையில் சயனித்துள்ள போது,
தாமரை மலர் போன்ற அவனது அழகான திருவடிகளின் அருகிலேயே நீ உள்ளாய். ஏன் என்றால் –
பெரிய பெருமாள் காலைப் பொழுதில் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் இருந்து துயில் எழும் போது,
அவனது முதல் பார்வையை நீ பெற்று விட வேண்டும் என்ற ஆசை காரணமாக அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சயனித்துக் கொண்டு இருக்கிறார் -விடியற்காலை திரு வனந்த ஆழ்வான் ஆகிய திருப் பள்ளியில் இருந்து
எழுந்து இருக்கும் போது சுத்தி அளிக்கும் முதல் கடாஷம் உன் மீது பட வேண்டும் என்று ஸ்ரத்தை யுடன் அவரது திருவடி பக்கம் நீ இருக்கிறாய் –

——————————————————————————

சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-

அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறு மணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறு மணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே வைஜயந்தி என்ற வனமாலை எம்பெருமான் திருமார்பை -மற்ற மகிஷிகள் உடன் சேர்ந்து அடைந்தது –
நீ மட்டுமே அவர் திருவடித் தாமரையை அடைந்து அதன் ஒப்பற்ற வேத வாசனையை என்றும் பரவ வெளிப்படுத்துபவளாய்
அவ் வனமாலை யினின்றும் மேம்பட்டு விளங்குகிறாய் –
நிகம பரிமளம் அருளிச் செய்த ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிக்கு யாரே நிகர் ஆவார் –

—————————————————————————–

உபநிஷத் அபலாபி: நித்யம் உத்தம் ஸநீயம்
கிம் அபி ஜலதி கந்யா ஹஸ்த ஸம்வாஹ நார்ஹம்
தவ து சரண ரக்ஷே தேவி லீலாரவிந்தம்
சரண ஸரஸிஜம் தத் சாரு சாணூர ஹந்து:—-259-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் பெண்கள்,
பெரிய பெருமாளின் திருவடித் தாமரைகளைத் தங்கள் தலைகளில் சூட்டிக் கொள்கின்றனர்.
திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி அந்த திருவடிகளைத் தனது திருக் கைகளால் பிடித்தபடி உள்ளாள்.
சாணுரனை மாய்த்த க்ருஷ்ணனாகிய பெரிய பெருமாளின் திருவடிகள்,
உனக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக உள்ள தாமரையாக உள்ளது.

ஸ்ரீ பாதுகையே வேதங்கள் சாணுரனைக் கொன்ற பெருமாளின் திருவடிகளை தங்கள் தலையில் தாங்குகின்றன
மஹா லஷ்மி அவைகளைத் தன் கரங்களால் வருடுகிறாள் -பிடிக்கிறாள் –
அந்தத் திருவடிகள் உனக்கு லீலாரவிந்தங்கள் ஆகின்றன –

———————————————————————

அகிலாந்த: புரவாரேஷு அநேகவாரம் பதாவநி ஸ்வைரம்
அநு பவதி ரங்க நாத: விஹார விக்ராந்தி ஸஹ சரீம் பவதீம்—-260-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது அந்தப்புரங்களில் நுழைவதற்கு
“இந்த இந்த நாள், இந்த இந்த அறை” என்று முறை வைத்துள்ளான்.
ஆனால் உன்னை மட்டும் அவன் எப்போதும் விடாமல் உல்லாஸ நடையில் அனுபவித்தபடி உள்ளான்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரெங்க நாதன் மற்ற தேவியர்கள் உடன் அவரவர் முறையில் கூடி மகிழ்கிறார்
எப்பொழுதும் சஞ்சாரத்தில் துணையான உன்னை மட்டும் எல்லாருடைய முறையிலும் தவறாது அனுபவிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-9-வைதாளிக பத்ததி – -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250—

March 8, 2016

நமஸ்தே பாதுகே பும்ஸாம் ஸம்ஸார அர்ணவே ஸேதவே
யதாரோ ஹஸ்ய வேதாந்தா: வந்தி வைதாளிகா: ஸ்வயம்—241-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உயிர்கள் பிறந்து இறப்பதையே தனது இயல்பாக உடையது ஸம்ஸாரம் என்ற கடல் ஆகும்.
இந்தக் கடலில் அணை போன்றுள்ள உனக்கு என் நமஸ்காரங்கள்.
உபநிஷத்துக்கள் செய்வது என்ன?
பெரியபெருமாளைத் துயில் எழுப்பி, உன்னைச் சாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அல்லவா?
(வைதாளிகர்கள் என்பவர்கள் எம்பெருமானைத் துயில் எழுப்புபவர்கள் ஆவர்.
இங்கே வைதாளிகர்களாக உபநிஷத்துக்கள் உள்ளன என்றார்).

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன் மீது உபநிஷத்துக்கள் ஸ்துதிப்பவர்களாயும் எழுப்பு கிறவர்களாயும் இருக்கின்றன –
நீ ஜனங்கள் உடைய பிறப்பு இறப்பு என்கிற துக்கத்தை போக்குகிறாய் –
அப்படிப்பட்ட உன்னை சேவிக்கிறேன் –

———————————————————————–

உசிதம் உபசரிஷ்யந் ரங்கநாத ப்ரபாதே
விதி சிவ ஸநக ஆத்யாந் பாஹ்ய கக்ஷ்யா நிருந்தாந்
சரண கமல ஸேவா ஸௌக்ய ஸாம்ராஜ்ய பாஜாம்
ப்ரதம விஹித பாகாம் பாதுகாம் ஆத்ரியேதா:—242-

ஸ்ரீரங்கநாதா! உனது திருப்பள்ளி யெழுச்சிக்கு முன்பாக வந்து விட்ட சிவன், நான்முகன், ஸநகர் போன்றவர்கள்
முன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நீ தகுந்த வழியில் உபசாரம் செய்ய வேண்டும்.
ஆகவே உனது திருவடிகள் என்னும் தாமரைகளின் சுகம் பெறுபவர்களில் முதல் இடம் பிடித்துள்ள பாதுகையை,
இதன் மூலம் சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்ற பாதுகையை, நீ சாற்றிக் கொண்டு எழ வேண்டும்.

ஸ்ரீ ரங்க நாதனே உங்களுடைய திருவடி ஸூகத்தை அனுபவிக்கும் பேறு பெற்ற
ஸ்ரீ பாதுகையை சாற்றிக் கொண்டு எழுந்து அருள வேண்டும்
விடியற் காலை வேளையில் பிரம்மன் சிவன் சனகர் முதலானவர் வெளி முற்றத்தில்
தங்களைத் தரிசிக்க காத்து இருக்கின்றனர் –

திருப்பள்ளி யெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக,
தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,
உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை
நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

—————————————————–

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்நா: தவ பரிஜநா: ப்ராதரா ஸ்தாந யோக்ய:
அர்த்த உந்மேஷாத் அதிக ஸுபகாம் அர்த்த நித்ரா நுஷங்காம்
நாபீ பத்மே தவ நயந யோர் நாத பஸ்யந்து சோபாம்–243-

ஸ்ரீரங்கநாதா! காலை வேலையில் உனக்குத் தொண்டு புரியும் பணியாளர்கள் வந்து விட்டனர்.
உனது தாமரை போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும் கலையாமலும் உள்ளதால்,
உனது இமை பாதி மூடியும் திறந்தும் உள்ளது.
இந்த அழகைக் கண்டு, நாபிக் கமலத்தில் உள்ள தாமரை மலர், உனது கண்கள் போல மலர்ந்தும் மலராமலும் உள்ளது.
இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
இரவு முழுவதும் உனது திருவடிகளை வணங்கி வருடிய மஹா லக்ஷ்மியின் சேவையை
இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும் (ஆகவே துயில் எழுவாயாக).

ஸ்ரீ ரெங்க நாதனே மகா லஷ்மியால் திருவடிகள் வருடப்பட்டு தாங்கள் நித்திரை செய்யும் போது
பாதி திறந்தும் மூடியும் உள்ள சந்திர ஸூர்யர்கள் ஆகிய உம் திருக் கண்களைக் கண்டு
திரு நாபியில் இருக்கும் தாமரை மலர் பாதியே மலர்ந்து உள்ளது –
தேவரீர் திருவடியைப் பிடிக்க இப்போது ஸ்ரீ பாதுகையின் முறை ஆகையாலே
திருப் பாதுகையைத் தரித்து தேவரீர் வெளியே எழுந்து அருள வேணும் –
தேவரீரின் அடியார்கள் அந்த சோபையைக் கண்டு களிக்கட்டும் –

————————————————–

உபநமதி முஹுர்த்தம் சேஷ ஸித்தாந்த ஸித்தம்
தத் இஹ சரண ரக்ஷா ரங்க நாத த்வயைஷா
ம்ருது பதம் அதிரூடா மஞ்ஜுபி: சிஞ்ஜிதை: ஸ்வை:
உபதி சது ஜநாநாம் உத்ஸவ ஆரம்ப வார்த்தாம்—244-

ஸ்ரீரங்கநாதா! சுபமான முஹுர்த்த காலம் வந்துவிட்டது. ஆதிசேஷனின் அவதாரமாகிய உடையவரின்
”எம்பெருமானார் தரிசனம்” என்னும் முறைப்படிச் செய்ய வேண்டியவைகள் நடை பெற வேண்டும்.
உனது திருவடிகளைக் காப்பதில் குறியாக உள்ள உனது பாதுகைகள் மீது உனது திருவடிகளை மெதுவாக எடுத்து வைப்பாயாக.
பின்னர் நீ அழகாக நடந்து வரும் போது ஒலிக்கின்ற பாதுகைகளின் ஒலி, மக்களுக்கு அன்றைய உற்சவம் தொடங்கியதை அறிவிக்கட்டும்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகைகளைத் தரித்துத் தாங்கள் எழுந்து அருளினால் ஆதிசேஷன் ப்ரவர்த்தித்த ஜ்யோதிட சித்தாந்தப்படி
நல்ல வேளையில் புறப்படுகையில் அந்த ஸ்ரீ பாதுகையின் சலங்கை சப்தம் உத்சவம் ஆரம்பித்ததை எல்லோருக்கும் உணர்த்தட்டும் –

———————————————————————–

ரங்காதீச மருத் கணஸ்ய மகுடா ஆம்நாய ப்ருந்தஸ்ய வா
ப்ரத்யாநீய ஸமர்ப்பிதா விதி முகை: வாரக்ரமாத் ஆகதை:
வாஹா அரோஹண ஸம்ப்ருதம் ஸ்ரம பரம் ஸம்யக் விநேதும் க்ஷமா
சீலா ஸஞ்சரண ப்ரியா ஸ்ப்ருஸ்து தே பாதாம் புஜம் பாதுகா—245-

ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய பாதுகையை நான்முகன் முதலான தேவர்கள் வரிசையாக நின்று தங்கள் தலையில் ஏற்கின்றனர்.
வேதங்களும் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றன.
இவ்விதம் சஞ்சரித்த பாதுகை, இப்போது மீண்டும் உன்னிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
இவ்விதமாக பலவிதமான வாகனங்கள் மீது ஏறி சஞ்சாரம் செய்த காரணத்தினால் பாதுகைக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டிருக்கும்.
இவ்விதம் அமர்ந்தபடி சென்ற பின்னர், சற்று நேரம் நீ பாதுகையை அணிநது கொண்டு
உல்லாசமாக நடப்பதை அல்லவோ பாதுகை விரும்பி நின்றது? ஆகவே உனது திருவடிகளை அவை தொட வேண்டும்.

ஸ்ரீ ரங்க நாதா வாகனத்தில் திரு வீதி வலம் வந்ததால் உண்டான உம்முடைய ஸ்ரமத்தைப் போக்க வல்ல
திரு பாதுகையைத் திருவடிகளிலே சாற்றிக் கொள்ள வேண்டும்
நீர் வாகனத்தில் அமர்ந்து எழுந்து அருளும் போது சேவிக்கும் தேவதைகளின் சிரஸ் அல்லது வேத புருஷர்களின் சிரஸ்
இவற்றின் நின்று திருப்பிக் கொண்டு வந்து சமர்ப்பித்து உள்ளார்கள்
பிரம்மா முதலிய ஆராதகர் உல்லாச சஞ்சாரத்தில் உமக்கு மிகப் பிடித்தவள் இவள் –

———————————————————–

வ்ருத்தம் க்ரமேண பஹுதா நியுதம் விதீநாம்
அர்த்தம் த்வதீயம் இதம் அங்குரிதம் தவாஹ்ந:
நீளா ஸகீபிஸ் உபநீய நிவேஸ்யமாநா
மங்த்தும் ப்ரபோ த்வரயதே மணி பாதுகே த்வாம்—-246-

ப்ரபோ! ஸ்ரீரங்கநாதா! வரிசையாகப் பல லட்சம் நான்முகன்களின் ஆயுள் காலம் முடிந்து விட்டது.
இதோ பார்! உனது தினத்தின் பிற்பகல் வந்து விட்டதை இது உணர்த்துகிறது.
நப்பின்னை பிராட்டியின் தோழிகள் மூலம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையானது,
உன்னைத் திருமஞ்சனம் செய்து கொள்ள அழைக்கிறது.

பெருமாளே அநேக லஷம் பிரம்மாக்கள் கழிந்து ஒழிந்தனர்
நாழிகை வந்து விட்டது -நப்பின்னை பிராட்டி தோழிகள் உடன் உனக்கு
ஸ்ரீ பாதுகை சமர்ப்பித்து அந்த ஸ்ரீ பாதுகை உன்னை நீராட்டத்துக்கு அவசரப் படுத்துகிறார்கள் –

——————————————————————–

திவ்ய அப்ஸரோபி: உபதர்சித தீப வர்கே
ரங்காதி ராஜ ஸுபகே ரஜநீ முகே அஸ்மிந்
ஸம் ரக்ஷிணீ சரணயோ: ஸ விலாஸ வ்ருத்தி:
நீராஜநாஸநம் அஸௌ நயது ஸ்வயம் த்வாம்—-247-

ஸ்ரீரங்க ராஜனே! பரம பதத்தில் உள்ள அப்ஸரஸ்கள் பலரும் ஸந்த்யா காலம் ஆகி விட்டபடியால் தீபம் ஏந்தி,
உனக்கு மங்கள ஆலத்தி எடுக்க வந்துள்ளனர்.
உன்னுடன் எப்போதும் உல்லாசமாக நடக்க வேண்டும் என்ற எண்ணமும்,
உனது திருவடிகளை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட பாதுகையானது,
உன்னை ஆலத்திக்கான ஆஸனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ ரங்க நாதரே தேவ லோகே அப்சரஸ்ஸூக்கள் சாயங்கால வேளையில் தீபங்கள் ஏந்தித்
தங்களுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள் –
அந்த இடத்துக்கு உல்லாசமாக எழுந்து அருளச் செய்யட்டும் –

————————————————————————

ஆஸநாத் உசிதம் ஆஸநாந்தரம் ரங்க நாத யதி கந்தும் ஈஹஸே
ஸந்ந தேந விதிநா ஸமர்ப்பிதாம் ஸ ப்ரஸாதம் அதி ரோஹ பாதுகாம்—-248-

ஸ்ரீரங்கநாதா! நீ ஓர் ஆசனத்தில் இருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்ல விரும்புகின்றாய் போலும்.
அதனால் தான் நான்முகன் தனது கைகளில் உனது பாதுகையைத் தயாராக வைத்துக் கொண்டு நிற்கிறான் போலும்.
அவற்றைச் சாற்றிக் கொள்வாயாக.

ஸ்ரீ ரங்க நாத பிரம்மனால் தங்கள் திருவடியில் சமர்ப்பிக்கப் படும் ஸ்ரீ பாதுகையைச் சாற்றிக் கொண்டு
ஒரு ஆசனத்தில் இருந்து மற்றதற்கு தேவரீர் எழுந்து அருள வேண்டும் –

—————————————————————

பரிஜந வநிதாபி: ப்ரேஷித: ப்ராஞ்ஜலிஸ் த்வாம்
ப்ரணமதி மதநோ அயம் தேவ சுத்தாந்த தாஸஸ்
பணி பதி சயநீயம் ப்ரா பயித்ரீ ஸலீலம்
பத கமலம் இயம் தே பாதுகா பர்யு பாஸ்தாம்—-249-

ஸ்ரீரங்கநாதா! அந்தப்புரத்தில் வேலைக்காரர்கள் மூலம் மன்மதன் அனுப்பப்பட்டுள்ளான்.
அவன் உன் முன்பாக குவிந்த கைகளுடன் நின்று கொண்டு வணங்கியபடி உள்ளான்.
ஆதிசேஷன் என்ற படுக்கைக்கு உன்னை எழுந்தருளிச் செய்ய பாதுகை தயாராக உள்ளது.
ஆகவே தாமரை போன்ற உனது திருவடிகள் பாதுகையை விரைந்து அடைய வேண்டும்.

பெருமாளே அந்தப் புரத்துப் பணிப் பெண்கள் மன்மதனை அனுப்பி உள்ளனர் –
ஸ்ரீ பாதுகையை சாற்றிக் கொண்டு உல்லாசமாக ஆதி சேஷன் ஆகிய சயனத்துக்கு எழுந்து அருள வேணும் –

——————————————————————–

இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்க நாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-

ஸ்ரீ நம் பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்ய வேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.

ஸ்ரீ பாதுகையே உபநிஷத்துக்களாம் வந்திகள் இவ்வாறு தெரிவிக்க
அந்தந்தக் காலங்களில் உரிய இடங்களுக்குச் செல்ல உன்னை
அன்புடன் அடைகிறான் ஸ்ரீ ரங்க நாதன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-

March 7, 2016

அபிஷேகோத்ஸவாத் தஸ்மாத் யஸ்யா நிர்யாதநா உத்ஸவ:
அத்யரிச்யத தர்ம வந்தே பவ்யாம் பரத தேவதாம்—-211-

அனைவராலும் போற்றுபடியாக பாதுகையின் பட்டாபிஷேகம் விளங்கியது.
அந்த விழாவைக் காட்டிலும் இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன்,
இராமனிடம் பாதுகையை பரதன் மீண்டும் சமர்ப்பித்த விழா மிகவும் கோலாகலமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் ஆராதிக்கிறேன்.

பெருமாளுடைய ஸ்ரீ பாதுகைக்கு நடந்த பட்டாபிஷேக உத்சவத்தைக் காட்டிலும் ஸ்ரீ பரதாழ்வான்
பதினான்கு வருடங்கள் கழித்து பெருமாளிடம் அத்தை ஒப்புவித்த மகோத்சவம் சிறப்பாக இருந்ததே –
ஸ்ரீ பாரதாழ்வானுக்கு பிரதான தேவதையான் அந்த ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –

—————————————————————————–

உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–

பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.

ஸ்ரீ பாதுகையே கோசல தேசத்தவர்கள் பதினான்கு வருடங்கள் உனக்குப் பணிவிடைகள் செய்து
சனக சனந்த நாதியரால் கூட அடைய முடியாததான பெரும் பதத்தை அடைந்தனர் –

——————————————————————

பாதாவநி ப்ரத்யயித: ஹநூமாந்
ஸீதாம் இவ த்வாம் சிரவிப்ர யுக்தாம்
ப்ரணம்ய பௌலஸ்த்ய ரிபோ: உதந்தம்
விஜ்ஞாபயாமாஸ விநீத வேஷ:–213–

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
சீதையைப் போன்றே நீயும் இராமனை வெகு காலம் பிரிந்திருந்தாய்.
இதனை உணர்ந்த இராமன் உன்னிடம் (பரதனிடம்) அனுமானை அனுப்பினான்.
இராமனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமான், உன்னிடம் வந்து சீதையைப் போன்றே உன்னை வணங்கி,
இராவணனின் சத்ருவான இராமன் கூறி யனுப்பியதைக் கூறினார்.

ஸ்ரீ பாதுகையே ராவணனை வென்று பெருமாள் எழுந்து அருளும் விஷயத்தை சிறிய திருவடி
சீதையிடம் தெரிவித்தது போலே வணக்கத்துடன் உனக்குத் தெரிவித்தார்
சீதையைப் போலே நீயும் எம்பெருமானைப் பிரிந்து வாடியதால் சீதைக்கு சமமான ஸ்தானம் உனக்கு வழங்கினார் –

————————————————————————-

தவ அபிஷேகாந் மணி பாத ரக்ஷே
மூலே நிஷேகாதிவ வ்ருத்தி யோக்யாத்
ஜஹு: ததைவ த்ரித சாங்கநாநாம்
ப்ரம்லாநதாம் பத்ர லதாங்குராணி—214-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
இலைகள் வளர்வதற்கு ஆதாரமாக வேரில் ஊற்றப்பட்ட நீர் உள்ளது.
உன் மீது உனது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட நீர் எவ்விதம் உள்ளது என்றால் –
அசுரர்களின் தொல்லை இன்றி தேவர்கள் தங்கள் தேவ லோக மங்கையர் உடலில் எழுதும்
சித்திர இலைகள் மீண்டும் தோன்ற வழி செய்தது.

தேவ ஸ்திரீகள் தங்கள் உடலில் அலங்காரத்திற்காக இலை கொடி முதலியவற்றை எழுதிக் கொண்டு இருந்தனர் –
ஸ்ரீ பாதுகையே உனக்குப் பட்டாபிஷேகம் ஆனதும் அவை வாட்டம் இன்றி நன்கு படர்ந்து தளிர்ந்து விளங்கலாயின
இதனால் தேவர்கள் தங்களுக்கு இனி தீங்கு இல்லை என்று மகிழ்ந்தனர் –

——————————————————————————————-

ஸர்வத: த்வத் அபிஷேக வாஸரே
ஸம்யக் உத்த்ருத ஸம்ஸத கண்டகே
ராகவஸ்ய விபிநேஷு பாதுகே
யத்ர காமகமதா வ்யவஸ்திதா—-215-

பாதுகையே! உனக்கு எப்போது பட்டாபிஷேகம் செய்வித்தனரோ, அந்த நேரத்தில் இருந்து,
அனைத்து இடங்களிலும் இருந்த விரோதிகள் அனைவரும் முள் போன்று நீக்கப்பட்டனர்.
அவர்கள் அளித்து வந்த துன்பங்களும் நீக்கப்பட்டன.
இதனால் தான், நீ இல்லா விட்டாலும், இராமன் கானகத்தில் தன் விருப்பப்படி எங்கும் சஞ்சாரம் செய்ய முடிந்தது
(இதன் கருத்து – பாதுகை நாட்டை ஆண்ட காரணத்தால், நாட்டைப் பற்றிய கவலை இல்லாமல் இராமன் சென்றான்).

ஸ்ரீ பாதுகையே நீ பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டது முதல் உலகத்தில் சத்ருக்கள் இல்லாமலும்
பாதைகளில் முற்கள் இல்லாமலும் ஆனதே
பெருமாள் அதனால் தண்ட காரணத்தில் நினைத்த இடத்தில் சஞ்சாரம் செய்தார்
ஆழ்வார் உடைய உபதேச மகிமையால் ஜனங்கள் காம க்ரோதங்களை வென்று பகவானை நினைத்தார்கள் –

————————————————————————————

கிம் சதுர்தசபி: ஏவ வத்ஸரை:
நித்யம் ஏவ மணி பாதுகே யுவாம்
பாதயோஸ் த்ரிபுவந ஆதிராஜ்யோ:
யௌவராஜ்யம் அதி கச்சதம் ஸ்வயம்—216–

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே!
பதினான்கு வருடங்கள் மட்டுமா நீங்கள் (இரண்டு பாதுகைகள்) அரசாளப் போகிறீர்கள்?
இராமனின் திருவடிகள் அனைத்து உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக உள்ளன.
ஆகவே, நீங்கள் எப்போதும் இளவரசர்களாக இருந்து வருவீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே நீங்கள் இருவரும் பதினான்கு வருஷங்கள் மட்டும் தான் அரசாண்டீர்கள் எனபது இல்லை –
பெருமாள் திருவடிகள் எப்பொழுதும் மூவுலகுக்கும் ராஜாவாக இருக்கும் போது
நீங்கள் இருவரும் எப்பொழுதுமே யௌவராஜ்யம் பெறப் போகிறீர்கள் அன்றோ –

——————————————————————–

ராமஸ்ய ராக்ஷஸ வதத்வரிதஸ்ய காலே
பாதாவநி ப்ரகடயந் இவ பார்ஷ்ணி குப்தம்
ஆசித்ர கூடம் அதி கம்ய சசம்ஸ வார்த்தாம்
அவ்யாஹத த்வத் அபிஷேக ம்ருதங்க நாத:—217-

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின் போது ஏற்பட்ட மத்தளங்களின் ஓசை
தடையில்லாமல், இராமன் அப்போது இருந்த சித்ரகூடம் வரை சென்று கேட்டது.
அரக்கர்களை அழிப்பதில் முனைந்துள்ள இராமனிடம் அந்த ஓசையானது,
“நாம் இங்கு நாட்டைப் பாதுகாப்போம். நீவிர் முன் சென்று உமது செயல்களைத் தொடரலாம்”,
என்று கூறுவது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -உனக்கு பட்டாபிஷேகம் செய்த போது வாத்தியங்கள் முழங்கின –
அவை சித்ர கூடம் வரையில் சென்று பெருமாளை அஸூர வதத்திற்கு தேவரீர் எழுந்து அருளலாம் –
நாங்கள் பின் பக்க பலமாக இதோ வந்து விட்டோம் என்று சொல்வது போல் இருந்தது –

————————————————————————

பத்ராணி தேவி ஜகதாம் ப்ரதிபாதயிஷ்யந்
ப்ராகேவ யேந பவதீம் பரதோ அப்யஷிஞ்சத்
மந்யே கபீஸ்வர விபீஷணயோர் யதாவத்
ஸந்தந்யதே ஸ்ம தத ஏவ கிலாபிஷேக:—218–

பாதுகையே! இந்த உலகம் முழுவதற்குமான நன்மைகளை, அவற்றுக்கு அளிக்க விரும்பிய காரணத்தினால்,
பரதன் உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
அதனால் அல்லவோ சுக்ரீவன், விபூஷணன் போன்றவர்களுக்கு முறைப்படி பட்டாபிஷேகம் நிறைவேறியது.
இதனால், உலகின் நன்மைகளும் பெருகின.

ஸ்ரீ பாதுகையே உலகம் எல்லாம் ஷேமத்தை அடைய ஸ்ரீ பரதாழ்வான் உனக்குப் பட்டம் கட்டினார் –
அதனாலேயே ஸூக்ரீவன் விபீஷணன் இவர்களுடைய பட்டாபிஷேகமும் மேன்மேல் எனச் சிறப்பாக தொடர்ந்து நடந்தன –

————————————————————————-

ஸம்பித்யமாந தமஸா ஸரயூ உபநீதை:
ஸம்வர்த்திதை: தவ சுபை: அபிஷேகதோயை:
மந்யே பபூவ ஜலதி: மணி பாத ரக்ஷே
ராம அஸ்த்ர பாவக சிகாபி: அசோஷணீய:—219-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
தமஸா என்னும் நதி, ஸரயூ என்னும் நதி ஆகிய இரண்டின் நீரும் சேர்த்து உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த நதிகள் இரண்டும் கடலில் சென்று கலக்கின்றன. இதனால்தான் இராமன் தனது அக்னி போன்ற
அஸ்திரங்களைக் கடலில் செலுத்திய போதிலும் கடல் வற்றாமல் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

ஸ்ரீ பாதுகையே தமஸா நதியும் சரயூ நதியும் உன் பட்டாபிஷேக ஜலத்தைக் கடலில் சேர்த்தன –
அதனாலேயே கடலை வற்றச் செய்ய பெருமாள் விட்ட ஆக்னேயாஸ்திரம் நிஷ் பலம் ஆயிற்று –
ஆசார்யனுடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பெற்றவனை எம்பெருமானுடைய நிக்ரஹாஸ்த்ரமும் பாதிக்காது –

———————————————————————-

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.

ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேகத்தின் போது அடிக்கப் பட்ட நூற்றுக் கணக்கான பேரிகைகளின் நாதத்தைக் கேட்டு
இலங்கையினுடைய கதவுகள் ஆகிற கண்கள் மூடப் பட்டன –
பெருமாள் நிர் மூலம் செய்வதற்கு முன்பே இலங்கை பாழடைந்து விட்டது –

—————————————————————-

தாப உத்கம: த்வத் அபிஷேக ஜல ப்ரவஹை:
உத்ஸாரிதஸ் த்வரிதம் உத்தர கோஸலேப்ய:
லேபே சிராய ரகு புங்கவ பாத ரக்ஷே
லங்காவரோத ஸுத்ருசாம் ஹ்ருதயேஷு வாஸம்—-221-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட புனித நீரானது,
வடக்குக் கோஸலை நாட்டில் இராமனின் பிரிவால் ஏற்பட்டிருந்த தாபத்தைத் தீர்த்தது.
பின்னர் அந்த வெள்ளம் அங்கிருந்து கிளம்பி, இலங்கையை அடைந்து, அங்குள்ள பெண்களின் மனதை அடைந்து, நீண்ட காலம் இருந்தது.

ஸ்ரீ பாதுகையே உனக்கு அபிஷேகம் செய்தவுடன் அயோத்யா நகரத்து மக்களின் நெஞ்சில் இருந்த தாபம் போய்
லங்கா பட்டணத்து பெண்களின் நெஞ்சில் நிலை பெற்றது –

——————————————————————-

ஆவர்ஜிதம் விதிவிதா மணி பாத ரக்ஷே
பத்மாஸந ப்ரிய ஸுதேந புரோஹிதேந
ஆஸிந் நிதாநம் அபிஷேக ஜலம் த்வதீயம்
நக்தஞ்சர ப்ரணயிநீ நயநோதகாநாம்—-222-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து சாஸ்திரங்களை அறிந்தவரும்,
நான்முகனின் ப்ரியமான புத்திரரும், குலகுருவும் ஆகிய வசிஷ்டர் மூலம், உன் மீது புனிதமான நீர்
பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்டது.
இந்த நீரே, அரக்கர்களின் மனைவிகளின் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீராக மாறியது.

ஸ்ரீ பாதுகையே -சாஸ்திரங்கள் அறிந்தவரும் பிரம்மாவின் புத்திரருமான வசிஷ்டரால் உனக்கு
பட்டாபிஷேகம் செய்யப்பட தீர்த்தம் ராஷசர்களுடைய மனைவியர் அழுகைக்கு மூல காரணம் ஆயிற்று –

—————————————————————-

தேவி த்வயா ஸ்நபந ஸம்பதி ஸம்ஸ்ரிதாயாம்
தக்தே புரே தசமுகஸ்ய வலீமுகேந
ஆஸித் தத: ப்ரப்ருதி விஸ்வ ஜந ப்ரதீதம்
அத்ப்யோ அக்நி: இதி அவிததம் வசநம் முநீநாம்—-223-

பாதுகாதேவியே! உனது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட புனித நீர் முதலானவை இலங்கை வரை சென்றது.
இராவணனின் இலங்கை நகரம், அனுமனால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
வேதங்களின் கூறப்பட்ட “நீரில் இருந்து நெருப்பு உண்டானது” என்னும் வரியானது,
இந்த நிகழ்வுகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே உனக்கு திரு அபிஷேகம் நடந்தது -அதனாலேயே திருவடியால் இலங்கையை கொளுத்த முடிந்தது
ஜலத்தில் நின்றும் அக்னி உண்டாகிறது என்கிற ரிஷிகளின் வாக்கு அது முதல் உண்மை ஆயிற்று –

———————————————————————

ஆயோத்யகைஸ் த்வத் அபிஷேக ஸமித்த ஹர்ஷை:
ஆத்மாபிதா: ஸ்ருதி ஸுகம் நநு தே ததாநீம்
ராமஸ்ய ராக்ஷஸ சிரோ லவநே அபி அசாம்யந்
யேஷாம் த்வநிர் விஜய சங்க ரவோ பபூவ—-224-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின்போது முழங்கப்பட்ட சங்குகளின் நாதம்,
அயோத்தி மக்களின் காதுகளில் இன்பமாகப் புகுந்து, அவர்களுக்கு பெரும் மகிழ்வு உண்டாக்கியது.
ஆனால் அதே சங்குகளின் ஒலியானது, இராமன் அரக்கர்களின் தலையை அறுக்கும் காலம் வரை
இலங்கையில் ஓயாமல் ஒலித்து நின்று, இராமனின் வெற்றியை அறிவிப்பதாக இருந்தன.

ஸ்ரீ பாதுகையே உனக்குப் பட்டாபிஷேகம் செய்த போது அயோத்யா வாசிகள் மிக்க மகிழ்ந்து சங்கு ஊதினார்கள்
பெருமாள் ரஷசர்களை வதம் செய்யும் வரை அது தங்கி அவருக்கு ஜய சப்தமாயிற்று –

——————————————————————

ப்ரதயிதும் அபிஷேகம் பாதுகே தாவகீநம்
துரித சமநதக்ஷே துந்துபௌ தாட்யமாநே
ஸபதி பரிக்ருஹீதம் ஸாத்வஸம் தேவி நூநம்
தசவதந வதூநாம் தக்ஷிணைர் நேத்ர கோசை:—225-

பாதுகாதேவியே! உன்னுடைய பட்டாபிஷேகம் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதால்,
அயோத்தி முழுவதும் வாத்தியங்கள் முழங்கின. இவை மூலம் அனைத்து இடங்களிலும் உள்ள பாவங்கள் அகன்றன.
இலங்கையில் உள்ள இராவணனின் மனைவிமார்களுடைய வலது கண்கள் அந்த ஒலிக்கேற்றாப் போல் துடித்தபடி நின்றன
(பெண்களின் வலது கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேகத்துக்காக துந்துபிகள் கோஷித்தன
அதைக் கேட்ட ராவணனுடைய மனைவிகளின் வலது கண்கள் அபசகுனமாகத் துடித்தன –

——————————————————

ரகுபதி பத ரக்ஷே ரத்ந பீடே யதா த்வாம்
அகில புவந மாந்யம் அப்ய ஷிஞ்சத் வஸிஷ்ட:
தஸமுக மஹிஷீபிர் தேவி: பாஷ்பாயிதாபி:
ஸ்தந யுகம் அபிஷேக்தும் தத் க்ஷணாத் அந்வமம்ஸ்தா—-226–

ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகாதேவியே!
அனைத்து உலகங்களும் போற்றும்படியான தகுதி உள்ளவள் நீ ஆவாய். இப்படிப்பட்ட உன்னை வசிஷ்டர் இரத்தினக் கற்களால்
இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தில் அமர வைத்து, பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அந்த நேரத்திலேயே இராவணனின் மனைவிமார்களின் கண்ணீர், அவர்களின் ஸ்தனங்களை நனைத்தபடி நின்றன.

ஸ்ரீ பாதுகையே உனக்கு வசிஷ்டர் திரு அபிஷேகம் பண்ணி வைத்து உடனேயே ராவணனுடைய மனைவியர்கள்
அழும்படியாக உத்தரவு செய்தாய் –

ஆழ்வார் திரு வவதரித்ததும் இந்த்ரியங்கள் உடைய கெட்ட பிரவ்ருத்திகள் ஒழிந்தன –

————————————————————————–

ராம அஸ்த்ராணி நிமித்த மாத்ரம் இஹ தே லப்த அபிஷேகா ஸதீ
ரக்ஷஸ் தத் க்ஷபயாஞ்சகார பவதீ பத்ர ஆஸநஸ்தாயிநீ
யத் தோஷ்ணாம் அதிவேல தர்பதவது ஜ்வாலா ஊஷ்மளாநாம் ததா
நிஷ்பிஷ்டை: கலதௌ தசைல சிகரை: கர்ப்பூர ஸூர்ணாயிதம்—227-

நம்பெருமாளின் பாதுகையே! இராவணனின் புஜங்கள் இரண்டும் அக்னியின் ஜ்வாலை போன்று இருந்தன.
அவன் கைலாய மலையை அப்படிப்பட்ட புஜங்களால் உயர்த்தியபோது, தீயில் இட்ட கர்ப்பூரம் போன்று,
கைலாய மலையின் சிகரங்கள் பொடியாகிவிட்டன. இப்படிப்பட்ட வலிமை உடைய இராவணனை
இராமன் தனது அஸ்திரம் மூலம் அழித்தான் என்பது பெயரளவில் மட்டுமே! உண்மையாக நடந்தது என்ன?
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தபடி நீயல்லவா இராமனின் பாணங்கள் கொண்டு இராவணனை அழிந்தாய்?

ஸ்ரீ பாதுகையே கைலாய மலையைக் கையில் ஏந்தி அதன் முடிகளைக் கற்பூரப் பொடிகளாகச் செய்த பராக்கிரம சாலியான ராவணனை
நீ சிம்ஹாசனத்தில் அமர்ந்து இருந்த படியே கொன்று ஒழித்தாய் -பெருமாள் பானங்கள் வ்யாஜங்களாக மட்டும் ஆயின –

————————————————————————————

ஸ்ருத் வைவம் ஹனுமன் முகாத் ரக்பதே பிரத்யாகதிம் தத்ஷணாத்
ஆஸீ தத் பரதா நுவர்த்த நவசாத் ஆருட கும்பஸ் தலாம்
காலோன்நித்ர கதுஷ்ணதாந மதி ராமாத்யத்த் விரே பத்வநி
ச்லாகாசாடு பிரஸ்து தேவ பவதீம் ச்த்ருஞ்ஜய குஞ்ஜர

ஸ்ருத்வா ஏவம் ஹநுமந் முகாத் ரகுபதே: ப்ரத்யாகதிம் தத் க்ஷணாத்
ஆஸீதத் பரத அநுவர்த்தன வசாத் ஆரூட கும்பஸ்தலாம்
கால உந்நித்ர கதுஷ்ண தாந மதிரா மாத்யத் த்விரேப த்வநி
ஸ்லாகாசாடுபிர் அஸ்து தேவ பவதீம் சத்ருஞ்ஜய: குஞ்ஜர:—-228–

பாதுகையே! இராமனின் வருகை குறித்து அனுமன் மூலமாகப் பரதன் அறிந்து கொண்டான்.
இந்தச் செய்தியை உன்னிடம் கூறிய பரதன், நீ உடனே இராமனிடம் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தான்.
இதனைக் கேட்ட நீ, உடனே பட்டத்து யானை மீது அமர்ந்தாய். நீ அமர்ந்தவுடன் அந்த யானைக்கு ஏற்பட்ட மகிழ்வு
காரணமாக மெதுவான உஷ்ணத்துடன் கூடிய மதநீர் பெருகியது.
அந்த மத நீரில் வந்து அமர்ந்த வண்டுகள் பெரும் ரீங்காரம் செய்தன.
இதனைக் காணும்போது யானை உன்னைத் துதித்தது போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் மீண்டும் எழுந்து அருளும் போது விஷயத்தை திருவடி உனக்கு விக்ஞாபித்து ஸ்ரீ பரதாழ்வான்
பெருமாளை தர்சிக்க வேண்ட பட்டத்து யானையின் மீது ஏறிய போது அந்த யானை தான் பெருக்கிய மத ஜலத்தை
பருக வந்த வண்டுகளின் ரீங்காரம் உனது புகழ் வார்த்தைகளைக் கொண்டு உன்னை ஸ்துதிப்பதாகவே இருந்தது –

——————————————————————–

ப்ரத்யாக தஸ்ய பவதீம் அவலோக்ய பர்த்து:
பாதாரவிந்த ஸவிதே பரதோப நீதாம்
பூர்வ அபிஷேக விபவ அப்யுசிதாம் ஸபர்யாம்
மத்யே ஸதாம் அக்ருத மைதில ராஜ கன்யா—-229-

பெரியபெருமாளின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுடைய தாமரை போன்ற அழகான
திருவடிகளின் அருகே பரதன் உன்னைச் சமர்ப்பணம் செய்தான். தனது கணவனான இராமனின் திருவடிகளின்
அருகில் வைக்கப்பட்ட உன்னை ஜனகனின் மகளான சீதை பார்த்தாள்.
இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட உன்னைப் பெருமையுடன் கண்ட அவள்,
அங்கிருந்த அனைத்துப் பெரியவர்களும் பார்த்து நிற்க, உனக்கு ஏற்ற மரியாதைகளைச் செய்தாள்
(சீதையும் பாதுகையும் இராமனைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சீதைக்கு முன்பாக பாதுகைகள் ஸிம்ஹாஸனத்தில்
அமர்ந்ததால் பாதுகைக்கு ஏற்றம் அதிகம். ஆகையால் சீதை வணங்கினாள் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ பரதாழ்வான் மீண்டும் உன்னை பெருமாள் திருவடிகளில் சமர்ப்பித்த போது ஜகன் மாதா சீதா பிராட்டி முன்பே
பட்டாபிஷேகம் ஆன உனக்கு ஏற்ற மரியாதையை மகான்களின் மத்தியில் செலுத்தினாள் –

——————————————————–

ஸம்ப்ரேக்ஷ்ய மைதிலி ஸுதா மணி பாத ரக்ஷே
ப்ரத்யுத்க தஸ்ய பவதீம் பரதஸ்ய மௌளௌ
நிர்திச்ய ஸா நிப்ருதம் அஞ்ஜலிநா புரஸ்தாத்
தராதிகா: ப்ரிய ஸகீ: அசிஷத் ப்ரணந்தும்—-230-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் முன்பாக பரதன் உன்னைத் தனது தலையில்
எழுந்தருளிப் பண்ணிக் கொண்டு வந்தான். இதனைப் பார்த்த சீதை தனது கைகள் குவித்து உன்னை வணங்கி,
தனது கண் ஜாடை மூலம் தன் தோழிகளான தாரை போன்றவர்களையும் உன்னை வணங்குமாறு கூறினாள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளை எதிர் கொண்டு அழைக்க வந்த ஸ்ரீ பரதாழ்வான் சிரசில் உன்னைக் கண்டதும் பிராட்டி கை கூப்பி
உன்னைச் சுட்டிக் காட்டி தாரை முதலிய பெண்களை உன்னை சேவிக்கும் படி உத்தரவு செய்தாள் –

—————————————————————————–

துல்யே அபி தேவி ரகுவீர பத ஆஸ்ரயத்வே
பூர்வ அபிஷேகம் அதிகம்ய கரீயஸீ த்வம்
தேநைவ கல்வ பஜதாம் மணி பா தரக்ஷே
ரக்ஷ: ப்லவங்கம் அபதீ பவதீம் ஸ்வ மூர்த்நா—-231-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
இராமனின் திருவடிகளை மட்டுமே அண்டி உள்ளவள் நீ ஆவாய். ஆனாலும் இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு,
அவன் ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய். இதனால் நீ பெரிதும் உயர்ந்தவள் ஆனாய்.
அதனால்தான் உன்னை விபீஷணன் போன்றவர்கள் போற்றி நின்றனர், தங்கள் தலைகளில் உன்னை ஏற்றனர்.

ஸ்ரீ பாதுகையே ஸூக்ரீவன் விபீஷணன் ஆகியவர் பெருமாள் திருவடியை உன்னைப் போல அடைந்து இருந்தாலும் நீயே உயர்ந்தவள் –
ஆகவே தான் அவர்கள் உன்னை தங்கள் சிரசில் வைத்து வணங்கினார்கள் –
ஏன் எனில் நீ முன்னமே திரு பட்டாபிஷேகம் செய்யப் பெற்றவள் அன்றோ –

———————————————————————

நிர்வ்ருத்த ராக்ஷஸசமூ ம்ருகயா விஹார:
ரங்கேஸ்வர: ஸ கலு ராகவ வம்ஸ கோப்தா
வம்ஸ க்ரமாத் உபநதம் பதம் ஆததாந:
மாந்யம் புநஸ் த்வயி பதம் நிததே ஸ்வகீயம்—–232-

அழகிய மணவாளனின் பாதுகையே! ரகு வம்சத்தை நிலை நிறுத்தவும், அரக்கர்களின் படையை வேட்டை ஆடுவது
போன்று எளிதாக ஒரு விளையாட்டாக அழிப்பதற்காகவும் இராமனாக அவதரித்தவன் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
அவன் உன்னிடம் இருந்து தனது பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு,
மிகவும் உயர்ந்த தனது திருவடிகளை உன்னிடம் மீண்டும் அளித்தான்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் பெருமாளாக திருவவதரித்து ராஷசர்களை கொன்று
தன் அவதார கார்யம் முடிந்து தன் பரம்பரையாக வந்த பட்டத்தை ஏற்றுக் கொண்டு
தன் சொத்தாகிய சிறந்த திருவடிகளை உனக்கு மறுபடி தந்தார் –

————————————————————————————–

தத்தாத்ருசோ: சரணயோ: ப்ரணிபத்ய பர்த்து:
பௌராஸ் த்வயா வித்ருதயோ: ப்ரதிபந்ந ஸத்த்வா:
ப்ராப்த அபிஷேக விபவாம் அபி பாதுகே தவாம்
ஆனந்த பாஷ்ப ஸலிலை: புந: அப்ய ஷிஞ்சந்—-233–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் தனது திருவடிகளில் மீண்டும் தரிக்கப்பெற்ற இராமன் அழகு பெற்றான்.
இப்படியாக உள்ள தங்கள் சக்ரவர்த்தியான இராமனின் திருவடிகளில் அந்த நாட்டு மக்கள் விழுந்து வணங்கி,
மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். உனக்கு பட்டாபிஷேகத்தின்போது புண்ணிய நீர் சேர்க்கப்பட்ட போதிலும்,
இப்போது தங்கள் ஆனந்தக் கண்ணீர் கொண்டு மக்கள் மீண்டும் உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.

ஸ்ரீ பாதுகையே முன்னர் அனுபவித்த வாறு பெருமாள் திருவடிகளை ஒரு சேரக் காண்போமா என்று ஏங்கி இருந்த மக்கள்
உங்களைத் திருவடிகளோடு சேர்த்துப் பார்த்ததும் கண்ணீர் பெருக்கி மறுபடி உனக்கு அபிஷேகம் செய்தார்கள் –

—————————————————————————————

மாதஸ் த்வயைவ ஸமயே விஷமே அபி ஸம்யக்
ராஜந்வதீம் வஸுமதிம் அவலோக்ய ராம:
ஸஞ்ஜீவநாய பரதஸ்ய ஸமக்ர பக்தே:
ஸத்ய ப்ரதி ஸ்ரவதயா ஏவ சகார ராஜ்யம்—-234–

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
இராமன் கானகம் சென்ற காலகட்டமானது மிகவும் இக்கட்டானது ஆகும்.
அந்த நேரத்தில் நாட்டை ஆள்வதற்கு ஏற்றவள் நீ என்று அறிந்து, உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
கானகத்தில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய இராமன், தன்னை விட நீயே உயர்ந்தவள் என்று அறிந்திருந்தான்.
ஆயினும், தான் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை என்றால், உறுதியான சபதம் கொண்ட பரதன்,
தன்னை மாய்த்துக் கொள்வான் என்று உணர்ந்து, அவனைப் பிழைக்க வைப்பதற்காக அல்லவோ பட்டம் ஏற்றுக் கொண்டான்?

ஸ்ரீ பாதுகையே ராஜ்ய பாரத்தை துன்ப நிலையிலும் வகிப்பதில் உனக்கு உள்ள திறமையை நன்கு உணர்ந்தும்
பெருமாள் ஸ்ரீ பாரதாழ்வானுக்கு செய்த உறுதி மொழியைக் காத்து அவனை உயிர்ப்பிக்கவே பட்டத்தை ஒப்புக் கொண்டார் –

—————————————————————————————

பாதாவநி ப்ரதிகதஸ்ய புரீம் அயோத்யாம்
பௌலஸ்த்ய ஹந்து: அபிஷேக ஜல அர்த்ர மூர்த்தே:
அம்ஸே யதார்ஹம் அதி வாஸ்ய நிஜைர் யஸோபி:
கஸ்தூரி கேவ நிஹிதா வஸுதா த்வயைவ—-235–

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அயோத்தியை மீண்டும் அடைந்த இராமனின் திருமேனி,
உனது பட்டாபிஷேக நீரால் நனைக்கப்பட்டது. இராவணனை வதம் செய்து முடித்த இராமனின் தோள்கள் மீது,
நீ இத்தனை நாட்கள் உனது பெருமை விளங்கத் தாங்கி நின்ற பூமியை, எளிதான கஸ்தூரி போன்று இறக்கி வைத்தாய்
(பூமியை ஆள்வது என்பது இராமனுக்கும் பாதுகைக்கும் ஓர் அலங்காரம் போன்று அழகுக்கு மட்டுமே ஆகும்,
பாரம் ஆகாது. இதனால்தான் கஸ்தூரி என்றார்).

ஸ்ரீ பாதுகையே ராவணனைக் கொன்று பெருமாள் திரு பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்ட போது உன்
கீர்த்தியால் வாசனை பெற்ற பூமியை அவர் திருத் தோளின் மீது கஸ்தூரி போல வைத்தாய் –

———————————————————————-

யா அளௌ சதுர் தச ஸமா: பதிவிப்ரயுக்தா
விஸ்வம்பரா பகவதீ வித்ருதா பவத்யா
விந்யஸ்ய தாம் ரகுபதேர் புஜசைல ஸ்ருங்கே
பூயோ அபி தேந ஸஹிதாம் பவதீ பபார—236–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அயோத்தியானது தனது கணவனான இராமனை பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருந்தது.
அப்போது நீ அந்த நாட்டை ஆறுதலாகத் தாங்கி நின்றாய்.
இராமன் அயோத்தி திரும்பியதும் அவனது மலைகள் போன்ற தோள்களில் அந்த நாட்டை மீண்டும் ஏற்றினாய்.
அதன் பின்னர் அவனுடன் சேர்ந்து நின்று காணப்பட்ட பூமியைத் தாங்கி நின்றாய்.

ஸ்ரீ பாதுகையே முதலில் பதினான்கு வருடங்கள் பூமியை மட்டும் தாங்கிய நீ பிறகு பெருமாள் தோளின் மீது
அதை வைத்து அவனுடன் அதையும் சேர்த்து தாங்கினாய் –

————————————————————————————

நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–

பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.

ஸ்ரீ பாதுகையே உன்னை மறுபடி பெருமாள் இடம் சமர்ப்பித்து ஸ்ரீ பரதாழ்வான் துக்கம் என்ற மஹா சமுத்ரத்தைத் தாண்டினார்
சனக சனந்தனாதி யோகிகளாலும் காண இயலாத தாஸ்ய சம்பத்தை பெற்று பக்த சிரோமணி யானார் –

———————————————————————-

நிகர்த்ய தேவி பரத அஞ்ஜலி பத்ம மத்யாத்
பூய: ஸமாகதவதீ புருஷோத்தமேந
பத்மேவ பத்ரம் அகிலம் மணி பாத ரக்ஷே
ப்ராதுஸ் ஸகார பவதீ ஜகதாம் த்ரயாணாம்—-238-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பெரியபெருமாளின் பாதுகா தேவியே!
பரதனின் கைகள் தாமரை மலர் போன்று குவித்து இருந்தன.
அதன் நடுவில் இருந்து நீ வெளிக் கிளம்பி இராமனின் திருவடிகளை அடைந்தாய்.
இப்படியாக தாமரையில் இருந்து வெளிப்பட்ட மஹாலக்ஷ்மி போன்று மூன்று உலகங்களுக்கும் ஏற்ற நன்மைகளைச் செய்தாய்.

ஸ்ரீ பாதுகையே துர்வாச ரிஷியின் சாபத்தால் லஷ்மீ இந்திர லோகத்தை விட்டு விலகி
பின்பு திருப் பாற் கடலின் நின்றும் தோன்றி பெருமாளை ஆஸ்ரயித்து
லோகங்களுக்கு ஷேமத்தை செய்தது போலே நீயும் பெருமாளை மறுபடி அடைந்து
மூ வுலகங்களுக்கும் ஷேமத்தைச் செய்து அருளினாய் –

——————————————————————–

ரகுபதிம் அதிரோப்ய ஸ்வோசிதே ரத்ந பீடே
ப்ரகுணம் அபஜதாஸ்த்வம் பாதுகே பாத பீடம்
ததபி பஹுமதி: தே தாத்ருஸீ நித்யம் ஆஸீத்
க்வ நு கலு மஹிதாநாம் கல்ப்யதே தாரதம்யம்—-239–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுக்கு ஏற்ற இடமாகிய
இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை அவனுக்கு அளித்தாய்.
ஆயினும் உனக்கு முன்பிருந்த மரியாதைகளும் கொண்டாட்டங்களும் எப்படி மாறுபடும்.
உன்னை அண்டியவர்களுக்கு ஏற்றத் தாழ்வு எவ்விதம் உண்டாகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பட்டத்தை அடைந்த பிறகு நீ கீழே திருவடி மேடையிலே தான் இருந்தாய்
ஆனாலும் அனைவரும் உன்னை முன் போலவே கொண்டாடினார்கள்
பெருமை பெற்றவர்கள் எங்கு இருந்தால் என்ன –

—————————————————————-

அநுவ்ருத்த ராமபாவ: சங்கே நிர்விஷ்ட சக்ரவர்த்தி பதாம்
அதுநா அபி ரங்கநாத: ஸ சமத்காரம் பதேந பஜதி த்வாம்—240

பெரியபெருமாளின் பாதுகையே! நீ உயர்ந்த சக்ரவர்த்திப் பதவியை வகித்தவள் ஆவாய்.
அதனால்தான் இராமனாகப் பிறந்த ஸ்ரீரங்கநாதன் மிகவும் புத்திகூர்மையுடன் உன்னை எப்போதும்
தனது திருவடிகளில் வைத்துள்ளான் என்று எண்ணுகிறேன்
(அர்ச்சையில் உள்ள விக்ரஹங்களில் திருவடிகளில் பாதுகை இருப்பதில்லை.
ஆயினும் ஸ்ரீரங்கநாதன் மட்டுமே தனது திருவடிகளில் பாதுகையுடன் உள்ளதைக் காணலாம்)

ஸ்ரீ ராமாவதாரத்தில் சக்கரவர்த்தினியாக இருந்த உன்னை ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளால் தொடக் கூசி தன்னையும்
பெருமாளாகவே நினைத்து தன் உடலை வணங்கி சாதுர்யமாகத் திருவடிகளிலே உன்னை தரிக்கிறான் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-7- அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210–

March 7, 2016

பாஹி ந: பாதுகே யஸ்யா விதாஸ்யந் அபிஷேசநம்
ஆபிஷேசநிகம் பாண்டம் சக்ரே ராம: ப்ரதக்ஷிணம்—-181-

பாதுகையே! இராமன் கானகம் புகுதற்கு முன்பாக, தனது பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை
ஒரு முறை வலமாக வந்து பார்வை இட்டான். இதன் மூலம் உனக்கு அப்போதே இராமானால் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டது.
இப்படிப்பட்ட பாதுகையே! எங்களைக் காக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் முன்னர் பட்டாபிஷேகதிர்கான திரவியங்களைப் பிரதஷிணம் செய்து
பெருமாள் யார் பொருட்டு இது பயன்பட வேண்டும் என ப்ரார்த்திதாரோ அப்பேர்பட்ட நீ எம்மைக் காத்தருள வேண்டும் –

—————————————————————

ராகவஸ்ய சரணௌ பதாவநி ப்ரேக்ஷிதும் த்வத் அபிஷேகம் ஈஷது:
ஆபிஷேசநிக பாண்ட ஸந்நிதௌ யத் ப்ரதக்ஷிண கதிர் சநைர் யயௌ—182-

பாதுகையே! இவ் விதமாகப் பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை இராமன் மெதுவாக வலம் வந்தான்.
ஏன்? அவனுடைய திருவடிகள் உனது பட்டாபிஷேகத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டன.
ஆகவே அவனது திருவடிகள், உனது பட்டாபிஷேகம் வரை கால தாமதம் செய்யவே மெதுவாக நடந்தன போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் முன்னர்
திரு அபிஷேகத்திற்கான மங்கள த்ரவியங்களை வலம் வரும் போது
பார்த்துக் கொண்டே தன் திருவடிகள் நன்கு பதியும் படி அடி மேல் அடியாக மெல்ல எழுந்து அருளினார்
அத்தகைய கடாஷ விசேஷம் பெற்ற மங்கள வஸ்துக்கள் உனக்கு திரு அபிஷேகத்தைச் செய்வித்தன –

ஆசார்யரை எவ்வளவு கொண்டாடினாலும் பெருமாளுக்கு உகப்பாகும் என்றவாறு –

—————————————————————-

மூர்த்தா பிஷிக்தைர் நியமேந வாஹ்யௌ
விசிந்த்ய நூநம் ரகு நாத பாதௌ
ரத்ன ஆஸநஸ்த்தாம் மணி பாதுகே த்வாம்
ராமாநு ஜந்மா பரதோ அப்ய ஷிஞ்சத்—-183-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனின் தம்பியான பரதன் எண்ணியது என்ன?
தகுந்த பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் மட்டுமே இராமனின் திருவடிகளைச் சுமந்து, அதன் தொடர்பு பெற இயலும் என்பதாகும்.
இதன் காரணமாகவே மாணிக்கக் கற்கள் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில் உன்னை அமர வைத்து,
உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளைப் பட்டாபிஷேகம் ஆனவர்களே தாங்க வேண்டும் என்று ஸ்ரீ பரதாழ்வான் உன்னை
ரத்ன சிம்மாசனத்திலே எழுந்து அருளச் செய்து உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார் –

—————————————————————

ப்ராது: நியோகே அபி அநி வர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-

பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்க வில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.

ஸ்ரீ பாதுகையே இளைய பெருமாளும் ஸ்ரீ பாரதாழ்வானும் பெருமாள் நியமனத்திற்குக் கட்டுப் படாமல் முறையே
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் இருந்து திரும்பி வராமலும் திரு அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கையில்
நீ மட்டுமே உன் குணத்தினால் அவர்களை விஞ்சி அவர் நியமனப் படி திரும்பி வந்து திரு அபிஷேகம் செய்து கொண்டாய் அன்றோ –

———————————————————————–

நிவேஸ்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
பத்ராஸநே ஸாதரம் அப்ய ஷிஞ்சத்
வசீ வஸிஷ்ட்டோ மனு வம்ச ஜாநாம்
மஹீக்ஷிதாம் வம்ஸ புரோஹிதஸ் த்வாம்—-185-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனு வம்சத்தில் வந்த அனைத்து அரசர்களுக்கும்
குருவாக உள்ளவரும், இந்த்ரியங்களை வென்றவரும் ஆகிய வசிஷ்ட்டர் செய்தது என்ன?
உன்னை ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்து, மிகவும் ஆசையாக உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

ஸ்ரீ பாதுகையே உன் பிரபாவங்களை அறிந்தவரும் இஷ்வாகு வம்சத்தின் உபாத்யாயருமான வசிஷ்டர் உனக்கு
ராஜ்யாசனத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார் –

—————————————————————

க்ருத அபிஷேகா பவதீ யதாவத்
ரங்கேஸ பாதாவநி ரத்ந பீடே
கங்கா நிபாத ஸ்நபிதாம் ஸுமேரோ:
அதித்யகா பூமிம் அதஸ் சகார—-186-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில்
உன்னை எழுந்தருளச் செய்து, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டாய்.
அப்போது உன் மீது புனித நீர் சேர்க்கப்பட்டது. இதனைக் காணும்போது மேரு மலையை விட நீ உயர்ந்தும்,
உன் மீது விடப்பட்ட நீர், கங்கையை விடப் புனிதமானதாகவும் தோன்றியது.

ஸ்ரீ பாதுகையே உன்னை ரத்ன சிம்ஹாசனத்தில் எழுந்து அருளப் பண்ணி திரு அபிஷேகம் செய்த போது
மேரு பர்வதத்தில் கங்கை விழுவதைக் காட்டிலும் அழகுற்று விளங்கியது –

——————————————————–

வசிஷ்ட முக்யைர் விஹித அபிஷேகாம்
ராஜ்யாஸநே ராம நிவேச யோக்யே
துஷ்டாவ ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ப்ராசேதஸஸ் த்வாம் ப்ரதம: கவீநாம்—-187-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் எழுந்தருள வேண்டிய ஸிம்ஹாசனத்தில்
வசிஷ்டர் போன்றவர்கள் உன்னை அமர்த்தி, உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.
உன்னை ஸ்துதிப்பவர்களில் முதன்மையான வால்மீகி முனிவர், இவ்விதம் நீ அமர்ந்தவுடன், உன்னைத் ஸ்துதித்து நின்றார்.

ஸ்ரீ ரங்க பாதுகையே -பெருமாள் எழுந்து அருளி இருக்க வேண்டிய ஸ்ரீ சிம்ஹாசனத்தில் உன்னை எழுந்து அருளப் பண்ணி
வசிஷ்டர் முதலானவர்கள் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர் என ஆதி கவி யாகிற வால்மீகி ஸ்தோத்ரம் பண்ணினார் –

——————————————————

ரக்ஷோ வதார்த்தம் மணி பாத ரக்ஷே
ராமாத்மந: ரங்க பதே: ப்ரவாஸே
ரக்ஷோ பகாராத் பவதீ விதேநே
ராஜந் வதீம் கோஸல ராஜ தாநீம்—-188-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வதம் செய்வதற்காகவே ஸ்ரீரங்கநாதன்
இராமனாக திருஅவதாரம் செய்தான். அவன் தண்டகாரண்ய வனம் சென்றான்.
அப்போது நீ கோஸல நாட்டைக் காக்க முடிவெடுத்தாய். அதனால் கானகத்தை விட்டு அயோத்திக்கு வந்த நீ,
அந்த நாட்டை நல்ல ஓர் அரசன் உடையதாகச் செய்தாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ராஷசர்களை நிரசனம் செய்ய ஸ்ரீ தண்ட காரண்யம் சென்ற பொழுது
ஸ்ரீ கோசல சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பாற்றினாய் –

—————————————————————-

ப்ராப்த அபிஷேகா மணி பாத ரக்ஷே
ப்ரதாபம் உக்ரம் ப்ரதி பத்யமாநா
ஸஸாஸ ப்ருத்வீம் பவதீ யதாவத்
ஸாகேத ஸிம்ஹாஸந ஸார்வ பௌமீ—-189-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு,
அயோத்தியின் ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தாய். மிகவும் கடுமையான பராக்ரமம் அடைந்தாய்.
எந்த விதமான குறைவும் இன்றி இந்தப் பூமியைச் சரியான முறையில் காப்பாற்றினாய்.

ஸ்ரீ பாதுகையே பட்டாபிஷேகத்தாலே அளவற்ற பராக்கிரமம் பெற்று சாகேத சிம்ஹாசனத்தில் ஒப்பற்று விளங்கின நீ
பூமியை முறைப்படிக் காப்பாற்றினாய்

———————————————————————————————

தசாந நாதீந் மணி பாத ரக்ஷே
ஜிகீஷதோ தாசரதேர் வியோகாத்
ஜாதோப தாபா த்வயி ஸம் ப்ரயுக்தை:
தீர்த்தோதகை: உச்ச்வ ஸிதா தரித்ரீ—-190-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனால் ஆளப்பட வேண்டும் என்ற ஆவல் பூமிக்கு இருந்தது.
ஆனால், இராமன் இராவணனை வெல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிட கானகம் சென்றான்.
இதனால் வருத்தம் கொண்ட பூமியானது, உன் மீது பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்ட புண்ணிய நீர்
தன் மீது விழுந்தவுடன் சமாதானம் அடைந்தது.

ஸ்ரீ மணி பாதுகையே -பெருமாள் இராவண வதத்துக்காக எழுந்து அருள பிரிவால் வருந்திய பூமா தேவி
உனது திரு அபிஷேக தீர்த்தம் பட்டவுடன் தாபம் தீர்ந்து பூரித்து நிம்மதி அடைந்தாள் அன்றோ –

————————————————————–

அத்யாஸிதம் மநுமுகை: க்ரமசோ நரேந்த்ரை:
ஆரோப்ய தேவீ பவதீம் தபநீய பீடம்
ராஜ்ய அபிஷேகம் அநகம் மணி பாத ரக்ஷே
ராம உசிதம் தவ வசம் பரத: விதேநே.—191-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மனு முதலான அரசர்கள் வரிசையாக அமர்ந்து
ஆட்சி செய்த தங்க ஸிம்ஹாசனத்தில், உன்னைப் பரதன் அமர வைத்தான்.
இராமனுக்குச் செய்ய வேண்டிய பட்டாபிக்ஷேகத்தை, அதே போன்ற முறையில் எந்த விதமான குறைவும் இன்றி உனக்குச் செய்தான்.

ஸ்ரீ பாதுகையே மநு போன்ற அரசர்கள் வீற்று இருந்த பொன் மயமான சிம்ஹாசனத்தில் உன்னை எழுந்து அருளப் பண்ணி
பெருமாளுக்கு செய்ய வேண்டிய திரு அபிஷேகத்தை உனக்குச் செய்தார் அன்றோ –

———————————————————————-

ஸ்நேஹேந தேவி பவதீம் விஷயே அபிஷிஞ்சந்
த்விஸ் ஸப்த ஸங்க்ய புவ நோதர தீப ரேகாம்
ஜாதம் ரக்ஷத்வஹ திவாகர விப்ர யோகாத்
அந்தம் தமிஸ்ரம் அஹரத் பரத: ப்ரஜாநாம்.—-192-

பாதுகா தேவியே! அனைத்து உலகங்களுக்கும் நடுவே, அவற்றுக்கு ஒளி அளிக்கும் விளக்கு போன்று நீ உள்ளாய்.
இப்படியாக உள்ள உனக்கு, பரதன் தனது அன்பு என்னும் எண்ணெய் கொண்டு, அயோத்தி என்னும் திரியிட்டு,
பட்டாபிஷேகம் என்ற விளக்கு ஏற்றி வைத்தான்.
இதன் மூலம் இராமன் என்ற ஸூரியன் அகன்றதால் சூழ்ந்த இருள் என்னும் பிரிவை அந்நாட்டு மக்கள் அறியாமல் இருக்கச் செய்தான்.

பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள ஈரேழு உலகங்களும் துக்கமாகிய இருள் சூழ ஸ்ரீ பரதாழ்வான் உனக்குப்
பட்டம் கட்டி ஒரு விளக்காக உன்னை ஏற்றி இருள் அனைத்தும் நீக்கி ஒளி பெறச் செய்தார் அன்றோ –

——————————————————–

ஹஸ்தாபசேய புருஷார்த்த பல ப்ரஸூதே:
மூலம் பதாவநி முகுந்த மஹீருஹ: த்வம்
சாயா விசேஷம் அதிமசத் யத் அஸௌ ப்ரஜாநாம்
ஆவர்ஜிதைஸ் த்வயி ஸூபை: அபிஷேக தோயை:—-193-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற
நான்கு பழங்களும் பெரிய பெருமாள் என்ற வ்ருக்ஷத்தில் (மரம்) கனிந்துள்ளன.
இந்த மரத்தின் வேராக நீயே உள்ளாய்.
உன் மீது சேர்க்கப்பட்ட பட்டாபிஷேகத்தின் தூய நீரால் அல்லவா இந்த மரம் இவ்விதம் வளர்ந்து,
மக்களுக்கு நல்ல நிழல் அளித்தபடி உள்ளது?

ஸ்ரீ பாதுகையே புருஷார்த்தங்களை கைக்கு எட்டிய விதத்தில் அளிக்கும் முகுந்தன் -பெருமாள் -ஆகிய
மரத்திற்கு நீ வேர் போன்றவள் -உனக்கு மங்கள தீர்த்தத்தால் பண்ணிய திரு அபிஷேகம் அந்த மரம் வளர்ந்து
உலகத்திற்கு ஒப்பற்ற நிழலையும் அழகையும் தரச் செய்தது –

——————————————————————————-

அஹ்நாய ராம விரஹாத் பரிகிந்ந வ்ருத்தே:
ஆஸ்வாஸநாய பவதீ மணி பாத ரக்ஷே
தீர்த்த அபிஷேகம் அபதிஸ்ய வஸுந்தராயா:
சக்ரே ததா ஸமுசிதம் சிசிரோபசாரம்.—-194-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனுடைய பிரிவைத் தாங்க இயலாமல்
இந்தப் பூமி மிகவும் வருந்தியபடி இருந்தது. அப்போது நீ செய்தது என்ன?
பூமியைச் சமாதானம் செய்வதற்காகப் பட்டாபிஷேகம் என்பதன் மூலம், புண்ணிய தீர்த்தங்களை,
இந்தப் பூமி மீது விழும்படிச் செய்தாய். குளிர்ந்த அவை மூலம், பூமியின் வருத்தம் நீக்கினாய்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளைப் பிரிந்து மிகுந்த தாபத்தை அடைந்த பூமிக்கு -உனக்கு
திரு அபிஷேகம் செய்து கொள்ளும் வ்யாஜத்தினால் -சிசிரோபசாரம் வைத்தாய் –

——————————————————————————-

மாலிந்யம் ஆஸ்ரிதவதீ மணி பாத ரக்ஷே
பங்கேந கேகய ஸுதா கலஹ உத்திதேந
ஸூத்திம் பராம் அதி ஜகாம வஸுந்தரேயம்
த்வத்த: க்ஷணாந் நிபதிதை: அபிஷேக தோயை:—195-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
கேகய நாட்டு மன்னனின் மகளான கைகேயி செய்த கலகம் காரணமாக, இந்த உலகம் பாவம் என்ற
அழுக்கை (துக்கம்) அடைந்து விட்டது. ஆனால் உனக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்ட போது
விழுந்த புண்ணிய நீரால் இந்தப் பூமி கழுவப்பட்டு, உயர்ந்த மகிழ்வை அடைந்து விட்டது.

ஸ்ரீ பாதுகையே கைகேயின் தீச் செயலால் பெருமாளை ஸ்ரீ தண்ட காரண்யம் அனுப்பியதால் அழுக்கு அடைந்து
களங்கம் உற்று இருந்த பூமி உனது அபிஷேக ஜலத்தால் அலம்பப்பட்டு மிகுந்த சக்தியை க்ஷணப் பொழுதில் பெற்றது –

————————————————————-

ஆவர்ஜிதம் முநி கணேந ஜகத் விபூத்யை
தோயம் பதாவநி ததா த்வயி மந்த்ர பூதம்
மூலாவஸே கஸலிலம் நிகம த்ருமாணாம்
சாபோதகம் ச ஸமபூத் க்ஷண தாசராணாம்—-196-

பாதுகையே! இந்த உலகத்தின் ஐச்வர்யத்தின் பொருட்டு முனிவர்கள் உன் மீது புண்ணிய நீரைச் சேர்த்தனர்.
அப்படிப்பட்ட நீரானது, வேதம் என்ற மரம் வளர அவற்றின் வேர்களில் சேர்க்கப்பட்டதாகியது.
மேலும் அந்த நீர், அசுரர்களுக்குச் சாபம் அளிக்க முனிவர்கள் தங்கள் கமண்டலங்களில் இருந்து தெளித்தது போன்றதாகிறது.

ஸ்ரீ பாதுகையே -ரிஷிகள் மந்திரித்து உனக்குச் சேர்த்த தீர்த்தம் இரண்டு வேலைகளைச் செய்தது
ஓன்று வேதமாகிய மரத்தின் வேர் நீராகி அதை வளரச் செய்தது –
ராஷசர்களுக்கு அழிவைக் கொடுக்கிற சாப ஜலமாகவும் வேலை செய்தது –

——————————————————–

விப்ரோஷிதே ரகு பதௌ பவதீ யதார்ஹம்
மாந்யே பதே ஸ்த்திதிமதீ மநு வம்ச ஜாநாம்
ஆத்மநி அதர்வ நிபூணை: ப்ரஹிதை: ப்ரஜாநாம்
அஸ்ரூணி அபாஸ்யத் அபிஷேக ஜல ப்ரவாஹை:—-197-

பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர் நீ செய்தது என்ன?
மனு குலத்தில் வந்த அரசர்களின் போற்றத் தகுந்த உயர்ந்த ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய்.
உனது பெருமைக்கு ஏற்றபடி நீ வீற்றிருந்தாய்.
அதர்வண வேதத்தில் சிறந்தவர்களால் உன் மீது புண்ணிய நீர் சேர்க்கப்பட்டது.
அந்த நீர் வெள்ளம் மூலம், நீ இந்த உலகில் உள்ளவர்களின் கண்களில் வரும் நீரைப் போக்கினாய்.

ஸ்ரீ பாதுகையே மநு வம்ஸ அரசர்களின் உயர்ந்த சிம்ஹாசனத்தில் வீற்று இருந்த நீ அதர்வண வேதத்தில் நிபுணரான
வசிஷ்டர் முதலான ரிஷிகள் சேர்த்த பட்டாபிஷேக தீர்த்தத்தை கொண்டு பெருமாளைப் பிரிந்த ஜனங்கள் விட்ட கண்ணீரை அகற்றி விட்டாய் –

—————————————————————————————–

ப்ராயோ விசோஷி தரஸா பதி விப்ரயோகாத்
பர்யாகுலீக்ருத ஸமுத்ர பயோதரா கௌ:
அம்ப! த்வதீயம் அபிஷேக பய: பிபந்தீ
தேநுர் பபூவ ஜகதாம் தந தான்ய தோக்த்ரீ–198-

தாயே! பாதுகையே! தனது கணவனான இராமன் தன்னை விட்டுப் பிரிந்ததால் பூமி என்ற பசுவிற்கு நேர்ந்தது என்ன?
அதன் ஸமுத்திரங்கள் என்னும் மடிகள் கலங்கின. இதனால் மகிழ்ச்சி என்னும் பாலைச் சொரியாமல் நின்றது.
அந்த நேரத்தில் உனது பட்டாபிஷேகத்தில் விடப்பட்ட புண்ணிய நீரைப் பருகியது.
உடனே அனைத்து உலகங்களுக்கும் தேவையான செல்வம், தானியங்களை அள்ளி வழங்கியது.

ஸ்ரீ பாதுகையே தாயே பெருமாள் பிரிவினால் பூமியாகிற பசுவிற்கு சந்தோஷம் என்கிற பால் வற்றி விட
உனது அபிஷேக தீர்த்தம் கிடைத்தவுடன் பூமி மறுபடியும் பெரும் தன தான்யச் செல்வங்களை சுரக்கும் காம தேனுவாக மாறி விட்டது

ஆசார்யர் உடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பெருமை அளவிட முடியாதே -கௌ -பூமி பசு –

——————————————————————————-

வ்ருத்தே யதாவத் அபிஷேக விதௌ பபாஸே
பஸ்சாத் தவ அம்ப பரதேந த்ருத: க்ரீட:
ஆகஸ்மிக ஸ்வகுல விப்லவ சாந்தி ஹர்ஷாத்
ப்ராப்தஸ் த்விஷாம் இவ பதி மணி பாதுகே த்வாம்—199-

இராமனின் திருவடிகளை, அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
உனது பட்டாபிஷேகம் என்பது பரதனால் மிகவும் நேர்த்தியாக நடத்தபட்டு, உனக்கு அழகான க்ரீடம் சூட்டப்பட்டது.
இராமன் கானகம் சென்றதால் சூரிய வம்சத்திற்கு திடீரென்று துன்பம் ஏற்பட்டது.
இத்தகைய துயரம் உன்னால் நீங்கியது. ஆக உன்னைக் காணும் போது ஸூரியன் வந்தது போன்றே இருந்தது.

ஸ்ரீ பாதுகையே பட்டாபிஷேகம் பண்ணி ஸ்ரீ பரதாழ்வான் உனக்கு மகுடம் சாற்றினார் –
அது தன் குலத்திற்கு நேர்ந்த கஷ்டம் நீங்கியதால் சந்தோஷம் கொண்டு ஸூர்யன் உதித்தது போல் இருந்தது –

———————————————————————–

மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—-200-

பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்து விட்டது.

ஸ்ரீ பாதுகையே மநுகுல குருவான வசிஷ்டர் சேர்த்த மந்த்ரிக்கப் பட்ட திரு அபிஷேக தீர்த்தம்
வேற்று அரசர்களுடைய பராக்கிரமம் என்கிற நெருப்பை அணைத்து விட்டது –

—————————————————————–

பாதபாத் உபஹ்ருதா ரகூத்வஹாத் ஆலவாலமிவ பீடம் ஆஸ்ரிதா
அப்யஷேசி பவதீ தபோதநை: பாரிஜாத லதிகேவ பாதுகே—201-

பாதுகையே! இராமன் என்ற பெரிய மரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பகக் கொடி போன்று நீ உள்ளாய்.
உன்னை ஸிம்ஹாஸனத்தில் அமர்த்தி உயர்ந்த ரிஷிகள் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.

ஸ்ரீ பாதுகையே -ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பெருமாள் திருவடியில் இருந்து எழுந்து அருளப் பண்ணி
சிம்ஹாசனத்தில் முநி ஸ்ரேஷ்டர்களால் அமர்த்தி அபிஷேகம் செய்ததும்
ஒரு கற்பகக் கொடியை நட்டு தீர்த்தம் சேர்த்தால் போலே இருந்தது –

——————————————————————————

அலகுபி: அபிஷேக வ்யாப்ருதை: அம்புபிஸ் தே
திநகர குல தைந்யம் பாதுகே க்ஷாளயிஷ்யந்
ஸ கலு கமல யோநேஸ் ஸூநுராதத்த மந்த்ரேஷு
அதிக நியம யோகாம் சக்திம் ஆதர்வணேஷு—-202-

பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தில் சேர்க்கப்பட்ட புண்ணிய நீர் அனைத்தும் மிகுந்த பெருமை அடைந்தன.
இவற்றை ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் என்ன செய்தார்? இராமன் நாட்டை விட்டு அகன்றதால்
ஸூரிய குலத்திற்குப் பெரும் துன்பம் ஏற்பட்டது. இந்த அழுக்கை, அந்தப் புண்ணிய நீர் கொண்டு அவர் விலக்கினார்.
இதன் மூலம் அதர்வண வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்கள் அனைத்தையும் ஓதி, மிகவும் அதிகமான சக்தி ஏற்படுத்தினார்.

ஸ்ரீ பாதுகையே ஸூர்ய வம்சத்திற்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று பிரம்மா புத்திரன் வசிஷ்டர் உனக்கு
திரு அபிஷேகம் செய்வதற்கு உரிய அதர்வண வேத மந்த்ரங்களில் அதிகமான சக்தியை தனது வ்ரதங்களால் உண்டு பண்ணினார் –

———————————————————————–

திநகர குல ஜாநாம் தேவி ப்ருத்வீ பதீநாம்
நிருபதிம் அதிகாரம் ப்ராப்நுவத்யாம் பவத்யாம்
அஜ நிஷத ஸமஸ்தா: பாதுகே தாவகீந:
ஸ்நபந ஸலில யோகாந் நிம்நகா: துங்கபத்ரா—-203-

பாதுகையே! சூரிய குலத்தில் வந்த அரசர்களுக்கே உரித்தான அதிகாரத்தை நீ அடைந்தாய்.
அப்போது உன் மீது சேர்க்கப்பட்ட புண்ணிய நீரின் தொடர்பு காரணமாக அனைத்து ஆறுகளும் உயர்ந்தன.
வற்றிக் கிடந்த ஆறுகள் கூட, துங்கபத்திரை நதி போன்று பெருக்கெடுத்து, உலகிற்கு நன்மை ஏற்படுத்தும்படி ஆயின.

ஸ்ரீ பாதுகா தேவியே ஸூர்ய வம்ஸ அரசர்களது ஒப்பற்ற அதிகார பீடத்தை ஏற்று நீ பட்டாபிஷேகம் கண்டு அருளிய போது
உனது திரு அபிஷேகப் பெருக்கால் அநேக சிற்றாறுகள் பெருக்கு எடுத்து வரும்
மங்கள கரமான துங்க பத்தரை போல் மங்களத் தன்மையும் பெருமையும் பெற்றன —

———————————————————————

தவ விதிவத் உபாதே ஸார்வ பௌம அபிஷேகே
பரத ஸமய வித்பி: பாதுகே மந்த்ரி முக்யை:
த்வதவதி நிஜ கர்மஸ்த் தாயிநீ நாம் ப்ரஜாநாம்
ப்ரதம யுக விசேஷா: ப்ராதுராஸந் விசித்ரா—-204-

பாதுகையே! பரதனின் வேண்டுகோளுக்கு ஏற்றபடி அனைத்து மந்திரிகளும் இணைந்து, சாஸ்திர முறைப்படி
உனக்குப் பட்டாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது அந்த நாட்டு மக்கள் யாவரும் ஒன்று கூடி,
தங்கள் செயல்கள் அனைத்தையும் உனக்கு அர்ப்பணித்தபடி நின்றனர். இதனைக் காணும்போது
அந்த யுகம் (த்ரேதாயுகம்) பல யுகங்களுக்கு முன்னாலிருந்த க்ருதயுகம் போன்று விளங்கியது
(நாம் நல்ல செயல்கள் செய்துவிட்டு, ”கிருஷ்ணார்ப்பணம்” என்பது போன்று இங்கு ”பாதுகா அர்ப்பணம்” என்றனர்).

ஸ்ரீ பாதுகையே மந்த்ரிகள் ஸ்ரீ பரதாழ்வான் திரு உள்ளம் அறிந்து சாஸ்திரப் படி பட்டாபிஷேகம் பண்ணினார்கள் –
எல்லா ஜனங்களும் தங்கள் கர்மங்களை உன்னிடம் சமர்ப்பித்தார்கள் –
க்ருத யுகம் போலவே உயர்ந்ததாயிற்றே –
ஆசார்யருக்கு அர்ப்பணம் செய்வதே மிகவும் நலம் அளிக்கும் என்றதாயிற்று –

———————————————————

அவஸித ரிபு சப்தாந் அந்வபூ: த்வம் ததாநீம்
ரகுபதி பத ரக்ஷே லப்த்த ராஜ்ய அபிஷேகா
சலித புஜ லதா நாம் சாமர க்ராஹிணீ நாம்
மணி வலய நிநாதைர் மேதுராந் மந்த்ர கோஷாந்—-205-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனக்குப் புண்ணிய தீர்த்தம் கொண்டு பட்டாபிஷேகம்
செய்விக்கப்பட்ட போது நிகழ்ந்தது என்ன? காற்றில் கொடிகள் அசைவது போன்று,
சாமரம் வீசிக் கொண்டிருந்த பெண்களின் கைகள் மெள்ள அசைந்தன.
அவர்கள் கைகளில் இருந்த இரத்தின வளையல்களின் ஒலி எங்கும் ஒலித்தது.
மேலும், அங்கு வேத மந்திரங்களின் ஒலியும் சூழ்ந்திருந்தது.
இதனால் அந்த இட்த்தில் “சத்துரு” என்ற சொல், எங்கும் கேட்காமல் விளங்கியது. இதனை நீ மகிழ்வுடன் அனுபவித்தாய்.

ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேக மகோத்சவத்தின் போது மந்திர கோஷங்களையும் உனக்கு சாமரம் வீசிய
பெண்களின் கை வளைகளின் ரத்னங்கள் உண்டாக்கிய மதுரமான சப்தத்தையும் அனுபவித்தாய்
அவை சத்ரு என்கிற சப்தமே இல்லாமல் செய்து விட்டன –

—————————————————-

ஸமுசிதம் அபிஷேகம் பாதுகே ப்ராப்நுவத்யாம்
த்வயி விநிபதிதாநாம் தேவி தீர்த்த உதகாநாம்
த்வநி: அநுகத மந்திர: ஸீததாம் கோஸலாநாம்
சமயிதும் அலம் ஆஸீத் ஸங்குலாந் ஆர்த்த நாதாந்—-206-

பாதுகை தேவியே! இராமன் கானகம் சென்ற பின்னர் அயோத்தி எங்கும் மக்களின் புலம்பல் ஒலியே கேட்டபடி இருந்தது.
ஆயினும் உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட நேரத்தில், உன் மீது சேர்க்கப்பட்ட நீரின் ஓசையாலும்,
அப்போது ஓதப்பட்ட மந்திரங்களின் ஒலியாலும் மக்களின் புலம்பல் நீக்கப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே பெருமாளை பிரிந்த மக்களின் புலம்பலை உனது அபிஷேக தீர்த்தங்களின்
ஓசை சேர்ந்த மந்த்ரங்களின் சப்தம் அடக்கி விட்டது –

——————————————————

திவிஷத் அநு விதேயம் தேவி ராஜ்ய அபிஷேகம்
பரத இவ யதி த்வம் பாதுகே நாந்வமம்ஸ்த்தா:
கதம் இவ ரகுவீர: கல்பயேத் அல்ப யத்ந:
த்ரி சதுர சர பாதை: தாத்ருசம் தேவ கார்யம்—-207-

பாதுகா தேவியே! அனைத்து தேவர்களாலும் கொண்டாடப்பட்ட பட்டாபிஷேகத்தை நீ பரதன் போன்று
ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் தேவர்களுக்காக இராமன்,
மூன்று நான்கு அம்புகள் மூலமே இராவணனை எந்தவிதமான சிரமமும் இன்றி வதம் செய்ததை எவ்விதம் முடித்திருக்க இயலும்
(பாதுகை அரசப் பொறுப்பை ஏற்ற நிம்மதி காரணமாக அல்லவா இராமன் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சென்றான்?)?

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ பரதாழ்வானைப் போல நீயும் பட்டத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்து இருந்தால் பிரயாசை இல்லாமல்
பெருமாளால் ராவணனை தேவர்களின் பொருட்டு வதம் செய்து இருக்க முடியாது அன்றோ –

———————————————————

கதிசந பத பத்ம ஸ்பர்ச ஸௌக்யம் த்யஜந்தீ
வ்ரதம் அதுலம் அதாஸ் த்வம் வத்ஸராந் ஸாவதாநா
ரகுபதி பத ரக்ஷே ராக்ஷஸைஸ் த்ராஸிதாநாம்
ரண ரணக விமுக்தம் யேந ராஜ்யம் ஸுராணாம்—208-

ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமனுடைய திருவடிகளின் சுகத்தை
நீ எப்போதும் அனுபவித்து வந்தாய். ஆயினும் நாட்டிற்காக அந்தச் சுகத்தை ஒதுக்கி விரதம் மேற்கொண்டாய்.
இது நாள் வரை அசுரர்களால் அச்சம் கொண்டு விளங்கிய தேவர்களின் உலகம், உனது விரதம் காரணமாகத் தனது துக்கம் நீங்கி நின்றது.

ஸ்ரீ பாதுகையே சில வருஷங்கள் பகவான் திருவடியை விட்டுப் பிரிந்து இருப்பதான கடுமையான விரதத்தை அனுஷ்டித்தாய்-
அதனாலேயே ராஷஸர்களால் யுண்டான தேவர்கள் உடைய எல்லை யற்ற துன்பம் நீங்கிற்று –

——————————————————

அதர்வோபஜ்ஞம் தே விதிவத் அபிஷேகம் விதததாம்
விஸிஷ்டா தீநாமபி உபசித சமத்கார பரயா
த்வத் ஆஸ்தாந்யா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ததா
ஸகீயஸ்ய: ஜாதா ரகு பரிஷத் ஆஹோ புருஷிகா—-209-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அதர்வண வேதத்தில் கூறப்பட்ட முறை தவறாமல்
உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வசிஷ்டர் போன்றவர்கள் பெரும் வியப்பு அடைந்தனர்.
என்ன காரணம் ? உன் மீது அந்த நாட்டினர் வைத்த பத்தியே காரணம் ஆகும். இதனால் நேர்ந்தது என்ன?
தங்களுக்கு மட்டுமே இத்தகைய மரியாதையை மக்கள் செய்து வந்தனர் என்று கர்வம் கொண்டிருந்த
ரகு வம்சத்து அரசர்களின் இறுமாப்பு ஒடுங்கி விட்டது.

ஸ்ரீ பாதுகையே இஷ்வாகு முதல் அனைத்து அரசர்களும் அரசாட்சி செய்ததைக் கண்ட
வசிஷ்டாதி முனிவர்கள் நீ சபை நடத்தி மக்களை ஒழுக்கம் ஞானம் பக்தி
இவைகளில் ஓங்கியவர்களாகக் கொண்டு மற்ற அரசர்களை விட விமரிசையாக ஆட்சி செய்ததைக் கண்டு வியந்தார்கள் –

———————————————————————————–

அபிஷே சயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவி சேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்—210-

பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உனக்கு பட்டாபிஷேகம் பண்ணினால் என்ன -திருவடியால் தொட்டால் என்ன –
ஒப்பற்ற உன் பெருமைக்கு ஒரு குறைவும் வாராது -பொறுமை மிக்கவர்களுக்கு தூஷித்தாலும் ஸ்துதித்தாலும் மனது கலங்காது –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-

March 7, 2016

அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேத வாஸிபி:
அந்வய வ்யதிரேகாப்யாம் அந்வயமீயத வைபவம்—-141-

பாதுகை இல்லாதபோதும், அவள் உள்ள போதும் எப்படிப்பட்ட தாழ்வுகளும், பெருமைகளும் ஏற்படுகிறது
என்பதை அயோத்தி மக்கள் அறிந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட பாதுகை எனக்கு எஜமானியாக உள்ளாள்.

அந்வயம் என்பது மழைக்குப் பின்னர் பயிர் விளையும் என்பது போன்றதாகும்.
வ்யதிரேகம் என்பது மழை இல்லையானால் பயிர் இல்லை என்பதாகும்.
இது போன்று பாதுகை இருந்ததால் பரதன் ராஜ்ஜியம் ஆண்டான்;
பாதுகை இல்லாத காரணத்தினால் இராமனுக்கு ராஜ்யம் கிட்டவில்லை, கானகத்தில் இருந்தான்.

ஸ்ரீ பாதுகை திரு அயோத்தியில் இருந்த போது மகோத்சவமாக இருந்தது –
பெருமாள் உடன் ஸ்ரீ தண்டகாரண்யம் எழுந்து அருளின போது துன்பம் சூழ்ந்தது –
மறுபடி மீண்டும் எழுந்து அருளியதும் மகோத்சவமாக இருந்தது கண்டு
ஸ்ரீ பாதுகையின் பிரபாவம் உணர்ந்தார்கள் –
அந்த ஸ்ரீ பாதுகையே எனக்கு அதீஸ்வரீ-

————————————————————————

மோசித ஸ்திர சராந் அயத்நத:
கோஸலாந் ஜந பதாந் உபாஸ்மஹே
யேஷு காம்ச்சந பபூவ வத்ஸராந்
தைவதம் தநுஜ வைரிபாதுகா—-142-

இந்தக் கோசல நாட்டில், அசுரர்களின் சத்ருவான இராமனின் பாதுகைகள் ஆராதிக்கப்பட்டு ஆட்சி செய்து வந்தன.
அப்போது அந்த நாட்டில் உள்ள பலரும் மிகவும் எளிதாக, எந்த விதமான யோகங்களும் பெறாமல்,
ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷம் பெற்றனர். அப்படிப்பட்ட கோசல நாட்டைத் த்யானிப்போமாக.

பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்தபோது, அந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வித மோக்ஷ உபாயங்களும் இன்றி,
மோக்ஷம் கைகூடப் பெற்றனர். இப்படிப்பட்ட அந்தப் புண்ணிய பூமியான கோசல நாட்டை வணங்குவோம் என்றார்.

கோசல தேசத்தில் சில வருஷங்கள் ஆட்சி செய்த ஸ்ரீ பாதுகை தான் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு
திரு அயோத்யையில் இருந்த புல் பூண்டுக்கும் கூட கர்ம யோகாதி பிரயாசை இன்றியே மோஷம் தந்து விட்டது
அப்படிப்பட்ட கோசல தேசத்தை கொண்டாடி அடைவோம் –

—————————————————————————————-

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸ ஜநோசிதா த்வம்
ராமேண ஸத்ய வசஸா பரதாய தத்தா
ஸ த்வாம் நிவேச்ய சரணாவநி பத்ர பீடே
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யச: விபூதிம்—-143-

எம்பெருமானின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே!
ஸத்ய வாக்கு கொண்டவனாகிய இராமனால், அடியார்களுக்கு அளிக்கப்படத் தகுந்தவளாகிய நீ,
ராஜ்ய லக்ஷ்மியாகப் பரதனிடம் அளிக்கப்பட்டாய்.
இப்படியாக வந்த உன்னைப் பரதன் உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்தான்.
இதன் மூலம் இந்த உலகைக் காத்தான். இதனால் ஒப்பற்ற புகழ் பெற்றான்.

இங்கு பரதன் புகழ் பெற்றான் என்று கூறுவதன் கருத்து என்ன?
பாதுகையை இராமனிடம் பெற்று, அவளை அரியணையில் பரதன் அமர்த்தவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் – இராமனின் அரியணையைப் பரதன் அபகரித்தான் என்னும் பழி அல்லவா வந்திருக்கும்?
ஆனால் பாதுகையை அரியணையில் எழுந்தருளச் செய்ததால், இங்கு புகழ் அல்லவா கிட்டியது!

ஸ்ரீ பாதுகையே உன்னை சிம்ஹாசனத்தில் ஏற்று ஸ்ரீ பரதாழ்வான் தான் உனது ஏவுதலில் ஆஜ்ஞை செய்து
அளவற்ற கீர்த்தியையும் ஆளும் அதிகாரத்துடன் பெற்றான் –

ஆசார்ய பக்தி உள்ளவன் அரசனைப் போன்ற செல்வமும் கீர்த்தியும் பெறுகிறான் என்றவாறு –

—————————————————————————–

போகாந் அநந்ய மநஸாம் மணி பாதுகே த்வம்
புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்க ஸித்தாந்
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜ்ஜநீயம்—-144-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது –
அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது!
இதனால் தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே,
உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை,
அவர்கள் கேட்காமலேயே அடைந்து விடுகின்றனர்.
இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை ஆராதித்து அநந்ய பிரயோஜனராய் உள்ளவர்களுக்கு
தானாகவே அனைத்து போகங்களும் வந்து சேர்கின்றன –
இவ்வாறு ஸ்ரீ பரதாழ்வானுக்கு ராஜ்ய அதிகாரம் அவன் கேட்காமலேயே விட முடியாததாக வந்து சேர்ந்தது –

——————————————————————–

ராம ப்ரயாண ஜநிதம் வ்யபநீய சோகம்
ரத்நாஸநே ஸ்திதவதீ மணி பாத ரக்ஷே
ப்ருத்வீம் நிஜேந யசஸா விஹித உத்தரீயாம்
ஏகாத பத்ர திலகாம் பவதீ விதேநே—-145-

ஸ்ரீ பாதுகையே ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருந்து நீ பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் சென்றமையால்
உண்டான பூமியின் வருத்தத்தை போக்கி உன் கீர்த்தியான வஸ்த்ரத்தினால் அவருக்கு மேலாடை அணிவித்து
வெண் கொற்றக் குடையினால் திலகமும் அணிவித்தாய் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நீ இராமனை விட்டுப் பிரிந்து வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டாய்.
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இராமனைப் பிரிந்த உலகின் துக்கத்தை நீக்கினாய் .
உனது கீர்த்தி என்பதையே பூமிக்கு உடையாக உடுத்தி விட்டாய்.
உனது ஆட்சி என்ற வெண் கொற்றக் குடையை, நெற்றியில் பொட்டு போன்று பூமியை இட்டுக் கொள்ளச் செய்தாய்.

இங்கு இராமனைப் பிரிந்த துன்பம் தாங்காமல் அயோத்தி மண்ணானது வருந்துவதைக் கூறுகிறார்.
பூமியாகிய இவள் அந்தத் துன்பம் தாளாமல் சரியாக ஆடை உடுத்துவதில்லை,
நெற்றியில் பொட்டும் வைத்துக் கொள்வதில்லை.
பாதுகையும் இராமனைப் பிரிய நேரிட்டபோது, இதே துன்பங்களை அடைந்தாள்.
ஆயினும் தனது துயரத்தை மறைத்துக் கொண்டு அயோத்திக்கு உதவினாள்.

——————————————————————————–

ராம ஆஜ்ஞயா பரவதீ பரிக்ருஹ்ய ராஜ்யம்
ரத்நாஸநம் ரகு குல உசிதம் ஆஸ்ரயந்தீ
சுத்தாம் பதாவநி புந: பவதீ விதேநே
ஸ்வாதந்த்ர்ய லேச கலுஷாம் பரதஸ்ய கீர்த்திம்—-146-

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பவளே! பாதுகையே!
இராமனின் ஆணையை ஏற்றுக் கொண்ட நீ, ரகு வம்சத்திற்கு மட்டுமே உரித்தான ஸிம்ஹாஸனத்தை அடைந்து,
பட்டத்தை ஏற்றுக் கொண்டாய்.
இராமனின் சொல்லையும் சமாதானங்களையும் கேட்காமல் இருந்த பரதன் சற்று கலக்கம் அடைந்திருந்தான்.
அந்தக் கலக்கம் நீங்கும்படியாகவும், கீர்த்தி பெறும்படியாகவும் நீ செய்தாய்.

இராமனின் ஆணையை பரதன் மீறினான், பரதன் தன் விருப்பப்படி ஸ்வதந்திரமானவனாக செயல்பட்டான்
என்ற பழிச்சொல் பரதனுக்கு வராமல், புகழை வந்து சேரும்படியாகப் பாதுகை செய்தாள்.

ஸ்ரீ பாதுகையே -நீ பெருமாள் உடைய ஆஜ்ஞையைப் படிந்து ரகு வம்சத்தவர்களுக்கு உரிய ரத்னாசனத்தில் அமர்ந்தாய் –
ஸ்ரீ பரதாழ்வனோ பெருமாள் நியமித்தும் அரசேற்க மறுத்தான் –
அதனால் உண்டான ஸ்வாதந்த்ர்யத்தினால் கலங்கி இருந்த கீர்த்தி இப்பொழுது உன்னால் பரிசித்தம் ஆயிற்று –
ஸ்ரீ பரதாழ்வான் உடைய பிடிவாதம் கண்டு முதலில் ஜனங்கள் வருந்தினாலும்
பிறகு உண்டான அதன் பலனைக் கண்டு ஸ்ரீ பரதாழ்வானை புகழ்ந்தனர் –

———————————————————————————-

பௌலஸ்த்ய வீர வதநஸ்த பகா வஸாநாத்
புஷ்பாணி தண்ட கவ நேஷு அபசேதும் இச்சோ:
ரக்ஷா துரம் த்ருதவதீ மணி பாதுகே த்வம்
ராமஸ்ய மைதில ஸுதா ஸஹிதே ப்ரசாரே—-147-

இரத்தினக் கற்கள் கொண்ட பாதுகையே! இராவணனின் தலைகள் என்ற மலர்களைப் பறிக்க இராமன் எண்ணினான்.
இதனால் அல்லவா அவன் சீதையுடன் தண்டகாரண்யம் புகுந்து, அங்கிருந்த மலர்களைக் கொய்தபடி இருந்தான்?
அந்த நேரத்தில் நீ பூமியின் பாரத்தைச் சுமக்கும் வகையில் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய்.
இதனால் தான் இராமன் கவலை இன்றி கானகத்தில் ஸஞ்சாரம் செய்தான்.

மலரைக் கொய்வதற்கு எந்தவிதமான பெரும் முயற்சியும் அவசியம் இல்லை, மிகவும் எளிதாகவே கொய்யலாம்.
இங்கு இராமன் இராவணனின் தலைகளை அது போன்று எளிதாகக் கொய்ய எண்ணினான் என்று கூறுவதன் மூலம் –
இராமனின் வலிமையை உணர்த்தினார். இராமன் தனது நாட்டுப் பொறுப்புகளை பாதுகையிடம் ஒப்படைத்ததால்,
எந்த விதமான கவலையும் இன்றி இருந்தான்.
இராமனுக்கு இப்படி என்றால், நாமும் நமது சுமைகள் பாதுகையிடம் ஒப்படைக்கலாம் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ராவணனுடைய தலைகளைக் கொத்தாக கொய்வதற்காக முன்னோடியாக
ஸ்ரீ தண்டகா வனத்தில் கர தூஷணாதிகளின் உதிரித் தலைகளைக் கொய்ய விரும்பி
ஸ்ரீ சீதா பிராட்டி யுடன் சென்ற போது அவன் ஏற்க வேண்டிய ராஜ்ய பாரத்தை நீ ஏற்றாய் அன்றோ –

—————————————————————-

பாதாவநி ப்ரசல சாமர ப்ருந்த மத்யே
பத்ராஸந ஆஸ்தர கதா பவதீ விரேஜே
ஆகீர்ண திவ்ய ஸலிலே கடகே ஸுமேரோ:
அம்போஜி நீவ கலஹாயித ஹம்ஸ யூதா—-148-

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
அசைந்து கொண்டுள்ள சாமரங்களின் நடுவில் ஸிம்ஹாஸனம் உள்ளது. அதன் மீது இருந்த மெத்தையில் நீ அமர்ந்துள்ளாய்.
இதனைக் காணும்போது எவ்விதம் இருந்தது என்றால் – தங்க மயமாக உள்ள மேரு மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில்,
தாமரை மலர்கள் அசைந்தபடி உள்ளன; அவற்றின் மீது உள்ள அன்னங்கள் சண்டையிடுவதைப் போன்று இருந்தது.

இங்கு மேரு மலையை ஸிம்ஹாஸனம் என்றும், குளத்தின் நீர்ப்பரப்பு என்பதை மெத்தை என்றும்,
தாமரை என்பதைப் பாதுகை என்றும், அன்னம் என்பதை பாதுகைக்கு வீசப்படும் சாமரங்கள் என்றும் கொண்டார்.

ஸ்ரீ பாதுகையே தங்க சிம்ஹாசனத்தில் அசையும் இரு சாமரங்களின் நடுவில் வீற்று இருக்கும் நீ மேரு மலையின்
தாழ் வரையில் உள்ள சண்டையிடும் ஹம்சங்களை இரு பக்கமும் கொண்ட தாமரை ஓடை போல் விளங்குகிறாய் –

————————————————————————-

மாந்யே ரகூத்வஹ பதே மணி த்வாம்
விந்யஸ்ய விக்ரஹ வதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்
ஆலோலம் அக்ஷவலயீ பரதோ ஜடாவாந்
ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா: ஸிஷேவே—-149-

மாணிக்கக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இராமானின் இடத்தில் உன்னைப் பரதன் அமர வைத்தான். இதனைக் காணும் போது, ராஜ்ய லக்ஷ்மியே உருவம் எடுத்து
ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்தது போன்று நீ காணப்பட்டாய்.
அந்த நேரத்தில் தலையில் ஜடாமுடியும், கையில் ஜப மாலையும் உள்ள பரதன்,
தனது மனதை வேறு எங்கும் செலுத்தாதபடி, உன்னைத் த்யானித்தபடி சாமரம் வீசினான்.

இராமன் பூண்ட தவக் கோலத்தைப் பரதனும் உடனேயே கொண்டான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே ராஜ்ய லஷ்மியின் உருக் கொண்டவள் போன்ற உன்னை ரகு வம்ச சிம்ஹாசனத்தில்
எழுந்து அருளச் செய்து ஜடை தரித்து ஸ்ரீ பரதாழ்வான் உன்னையே த்யானித்து உனக்குச் சாமரம் போட்டார் –

——————————————————————————————-

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே
பர்யாகுலேஷு ப்ருசம் உத்தர கோஸலேஷு
த்வம் சேத் உபேக்ஷி தவதீ க இவ அபவிஷ்யத்
கோபாயிதும் குஹ சகஸ்ய விபோ: பதம் தத்—-150-

தசரதன் ஸ்வர்க்க லோகம் அடைந்தார். அவர் உயிர் நீங்க, தானே காரணம் என்று வெட்கப்பட்ட பரதன்,
ஸிம்ஹாஸனம் ஏற்காமல் இருந்தான். இதனைக் கண்ட அயோத்தி மக்கள் அனைவரும் கலங்கி நின்றனர்.
அப்போது நீயும் ஸிம்ஹாஸனத்தில் அமராமல் இருந்திருந்தால்,
குகனின் நண்பனான இராமனின் ஸிம்ஹாஸனத்தை அலங்கரித்து, அயோத்தியை யார் தான் காப்பாற்ற இயலும்?

இங்கு பாதுகையின் பெருந்தன்மை வெளிப்படுகிறது. பரதன் தனது வெட்கம் என்னும் சுயநலம் கருதி நாட்டைக் கைவிட்டான்.
ஆனால் பாதுகையோ, இராமனைப் பிரிவது மிகவும் கடினமான செயலாக இருந்த போதிலும்,
நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு, தனது சுயநலத்த எண்ணாமல், அயோத்திக்கு வந்தாள்.

ஸ்ரீ பாதுகையே தசரதரும் ஸ்வர்க்கம் சென்று ஸ்ரீ பாரதாழ்வானும் புறக்கணித்த உடன்
கோசல ராஜ்யத்தை நீ மட்டும் ஏற்காது போனால் யார் காப்பாற்றுவார் –

—————————————————————————————–

ப்ராது: யதம்ப வரஹாத் பரதே விஷண்ணே
தாக்ஷிண்யம் ஆஸ்ரிதவதீ மணி பாதுகே த்வம்
ஆஸீத் அசேஷ ஜகதாம் ஸ்ரவண அம்ருதம் தத்
வாசால காஹளஸஹம் பிருதம் ததா தே—-151-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தாயே! தனது தமையனான் இராமனின் பிரிவு காரணமாகப் பரதன்
மிகவும் துயரம் கொண்டான். அவனுக்காக நீ மீண்டும் அயோத்தி வந்தாய். இவ்விதம் வந்த நீ ஸிம்ஹாஸனம் ஏற்றாய்.
அப்போது எக்காளம் போன்ற வாத்தியங்கள் முழங்கின. இவை உலகினர் அனைவருக்கும்,
அவர்கள் காதுகளுக்கு இன்பம் அளிப்பதாகவும், உனது புகழைப் பறை சாற்றுவதாகவும் அமைந்தன.

பரதனுக்காகவே பாதுகைகள் அயோத்திக்கு வந்ததாகக் கூறுகிறார். இந்த வரவைக் கொண்டாடும் பொருட்டு,
சக்ரவர்த்திகளுக்கு அளிக்கும் மரியாதைகளான எக்காளம் முழங்குதல் முதலானவை காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் பிரிவால் வாடிய ஸ்ரீ பாரதாழ்வானுக்காக நீ பரிவுடன் பட்டத்தை ஏற்ற போது
மங்கள வாத்தியங்களின் முழக்கம் -திருச் சின்ன ஒலி -பிருதங்களைக் கூறுவது போலே
இருந்து மக்களின் காதுகளுக்கு இனியதாக இருந்தது –

——————————————————————————

ராஜ்யம் ததா தசரதாத் அநு ராமத: ப்ராக்
பிப்ராணயா சரண ரக்ஷிணி வீத கேதம்
துல்யாதிகார பஜநேந பபூவ தந்யோ
வம்சஸ் த்வயா அம்ப மநு வம்ஸ மஹீ பதி நாம்—-152-

சரணம் என்று புகுந்தவர்கள் அடையும் இடமான திருவடிகளைக் காப்பவளே! தாயே! பாதுகையே!
தசரதனுக்கு பின்னால் இராமன் ஸிம்ஹாஸனம் அமரவில்லையே என்ற வருத்தத்தை நீ போக்கினாய்.
அந்த ஸிம்ஹாஸனத்தை இராமனுக்கு முன்பாக நீ அலங்கரித்தாய். இராமனுக்குப் பின் வந்த மனுகுலத்து அரசர்கள் அனைவரும்,
நீ அமர்ந்து ஆண்ட ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்ததால் மிகவும் பெருமை பெற்றனர்.

இங்கு பாதுகையால் இக்ஷ்வாகு குலத்தின் ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை உண்டானது என்றார்.
இக்ஷ்வாகு குலத்தில் உதித்த இராமனால் அந்த குலத்திற்குப் பெருமை, இராமனின் பாதுகைகளால் அந்த ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை,
இக்ஷ்வாகு குலதனமான ஸ்ரீரங்கநாதனுக்கு இராமனால் ஆராதிக்கப்பட்டவன் என்பதால் பெருமை –
ஆக, இப்படியாக இராமனாலேயே இக்ஷ்வாகு குலத்திற்குப் பல பெருமைகள் உண்டாயின.
அந்த இராமனின் ஸிம்ஹாஸனத்தின் மூலம், பின்னே வந்த அரசர்களுக்குப் பெருமை ஏற்பட்டது.

ஸ்ரீ பாதுகையே தசரதற்குப் பிறகும் ஸ்ரீ ராமனுக்கும் முன்னும் நீ அரசாட்சியை ஏற்றது அந்த மனு வம்சத்திற்கு
ஓர் விசேஷ பாக்கியம் ஆயிற்று –

ஸ்ரீ நம்மாழ்வார் பிரதம ஆச்சார்யராக பெற்றது நமது குரு பரம்பரைக்கு ஏற்றம் அன்றோ –

———————————————————————–

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யு வசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போக வில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.

பாதுகையின் ஆட்சியில் எந்தவிதமான குற்றங்களோ அல்லது தோஷங்களோ அயோத்தியைத் தீண்டவில்லை என்றார்.
மக்கள் நிறைவாக இருந்தால், நாட்டில் குற்றங்கள் குறைவது இயல்பே ஆகும்.
இந்த நிலை பாதுகைகள் நாட்டை ஆண்டபோது காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆட்சி காலத்தில் தன் வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி ஒருவன் தவம் செய்த காரணத்தால்
ஒரு குழந்தை இறக்க நேரிட்டது -உன் ஆட்சி காலத்தில் இது போன்ற தோஷம் எதுவும் நேர வில்லையே –

—————————————————————–

விஸ்வம் த்வத் ஆஸ்ரித பதாம்புஜ ஸம்பவாயாம்
யஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம் இதம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் அநந்ய சரணா ஸமயே யதாவத்
ஸ அபி த்வயா வஸுமதீ விஹித ப்ரதிஷ்ட்டா—-154-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்தப் ப்ரபஞ்சம் மிகவும் பெரியது. ஆயினும் இது, இப்போது உன்னால்
காக்கப்படும் திருவடிகளில் இருந்து தோன்றிய பூமியில், பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டது. ஏன் ?
இராமன் கானகம் சென்றபோது உன்னைத் தவிர காக்க ஆளில்லாமல் நின்ற பூமியை நீ காப்பாற்றி வந்தாய்.
அதனால் அல்லவோ ப்ரபஞ்சமானது இந்தப் பூமியில் அடைக்கலமாக வைக்கப்பட்டது?

ப்ரபஞ்சத்தில் ஒரு பகுதியாக உள்ள பூமியை நாடி, ப்ரபஞ்சமே வந்தது என்றார்.
இதன் காரணம் பாதுகையின் பாதுகாப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் திருவடியினின்றும் உண்டான ஸ்ரீ பூமி தேவி பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளியதால்
ஆதரவற்று இருந்த போது அவன் திருவடி சம்பந்தம் பெற்ற உன்னால் அன்றோ காப்பாற்றப் பட்டது –

—————————————————————-

ப்ராயேண ராம விரஹ வ்யதிதா ததாநீம்
உத்ஸங்கம் ஆஸ்ரிதவதீ தவ ராஜ்ய லக்ஷ்மீ:
தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம்
அங்கீசகார பவதீ பரதோப நீதாம்—-155-

தாயே! பாதுகாதேவீ ! இராமன் கானகம் புறப்பட்டவுடன் அயோத்தி என்ற ராஜ்யலக்ஷ்மி மயக்கம் அடைந்து சாய்ந்தாள்.
அவள் உன் மடி மீது வந்து சேர்ந்தாள். அப்போது பரதன் உனக்கு வீசிய விசிறியின் ஈரம் மூலமாகவே
ராஜ்ய லக்ஷ்மியின் மயக்கம் தெளிய வைத்தாய் அன்றோ?

உன்னைச் சரணம் புகுந்த ராஜ்ய லக்ஷ்மியை நீ காக்க எண்ணினாய். இதனால் தான் நீ, பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய் அல்லவா?
“பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய்” – என்பதன் கருத்து என்ன? பொதுவாக மன்னர்களுக்கு விசிறி வீசுவது வழக்கமாகும்.
இங்கு பாதுகை அரியணையில் அரசியாக அமர முன் வந்தாள் என்பதை இவ்விதம் ஸூசகமாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பிரிவால் வருந்திய ராஜ லஷ்மீ உன் மடியில் விழுந்தாள்-
அவளைப் பிழைப்பூட்ட நீ ஸ்ரீ பரதாழ்வான் உடைய குளிர்ந்த சாமர கைங்கர்யத்தை ஏற்றாய் –
ஆச்சாயர் சிஷ்யனுடைய ஷேமதிற்காகவே அவன் உபசாரத்தை ஏற்கிறார் என்றவாறு –

—————————————————————–

வீர வ்ரத ப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்
ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம்
த்யக்த்வா பதாவநி ததா விவிதாந் விஹாராந்
ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம்—-156-

பாதுகையே! இராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும், உலகைக் காப்பதற்காக அசுரர்களை அழிக்கவும் சபதம் மேற்கொண்டான்.
இவற்றை முடிக்கும் வரை அயோத்தி திரும்புவதில்லை என்ற விரதம் பூண்டான். அனைத்து விஷயங்களும் அருகில் உள்ள போதும்,
அவற்றை அனுபவிக்கப் போவதில்லை என்று பரதன் விரதம் பூண்டான். நீ செய்தது என்ன –
இராமனின் திருவடிகள் மீது மிகவும் ப்ரியம் உள்ள நீ, அவற்றைத் துறந்து,
ஒரே இடத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற விரதம் பூண்டாய்.

இங்கு இராமன் பூண்ட விரதமும், பரதன் பூண்ட விரதமும் எப்படிப்பட்டது என்றால் – தங்களுக்குப் ப்ரியமான எதனையும்
இழக்காமலேயே பூண்ட விரதமாகும். ஆனால் பாதுகையின் விரதம் அப்படிப்பட்டது அல்ல.
தனக்கு மிகவும் விருப்பமான திருவடிகளை விட்டுப் பிரிந்த பின்னரே, பாதுகை அயோத்திக்கு வந்தாள்.
ஆக இவளது விரதம் அல்லவோ மேலானது?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் துஷ்டர்களை சம்ஹரிப்பதே த்ருட வ்ரதமாகக் கொண்டு ஸ்ரீ தண்ட காரண்யத்தில் சஞ்சரித்தார் –
ஸ்ரீ பரதாழ்வான் பிடிவாதமாக பட்டத்தை மறுத்து கடின வ்ரதத்தை மேற்கொண்டார்
நீயோ எப்பொழுதும் சஞ்சரிப்பது என்ற உன் ஸ்வ பாவத்தை விட்டுப்
பதினான்கு வருடங்கள் ஒரே இடம் இருந்து ரஷிக்கும் வ்ரதத்தை மேற்கொண்டாய் –

————————————————————————————

காகுத்ஸ்த்த பாத விரஹ ப்ரதிபந்ந மௌநாம்
நிஷ்ப்பந்ததாம் உப கதாம் மணி பாத ரக்ஷே
ஆஸ்வாஸயந் இவ முஹு: பரதஸ் ததாநீம்
சீதைர் அவீஜயத் சாமர மாருதைஸ் த்வாம்—157-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இராமனின் பிரிவைத் தாங்க இயலாமல் நீ மிகவும் சோகம் அடைந்தாய் போலும்.
அதனால் தான் அசையாமல், மௌனமாக நீ அமர்ந்தாய் போலும். இப்படியாக உள்ள உன்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
பரதன் சாமரம் கொண்டு அடிக்கடி குளிர்ந்த காற்றை வீசியபடி இருந்தான்.

இராமனை விட்டுப் பிரிந்த சோகத்தைப் பாதுகையால் தாங்க இயலவில்லை. எனவே அடிக்கடி மூர்ச்சையாகி நின்றாள்.
அப்போது பரதன் சாமரம் கொண்டு குளிர்ந்த காற்று வீசி, மூர்ச்சையைத் தெளிய வைத்தபடி இருந்தான்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் திருவடியைப் பிரிந்து நீ பேச்சு மூச்சற்றவள் போல் இருந்தாய் –
அப்பொழுது ஸ்ரீ பரதாழ்வான் குளிர்ந்த சாமரம் வீசி உன்னை ஆஸ்வாசப் படுத்தினார் அன்றோ –

——————————————————————————-

யத்ர க்வசித் விஹரதோ அபி பதார விந்தம்
ரக்ஷ்யம் மயா ரகுபதே: இதி பாவயந்த்யா
நிஸ் ஷேமேவ ஸஹஸா மணி பாத ரக்ஷே
நிஷ் கண்டகம் ஜகதிதம் விததே பவத்யா—-158-

இரத்தின கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! “இராமன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவனது
திருவடிகளைக் காக்கும் பொறுப்பு என்னுடையது”, என்று நீ எண்ணுகிறாய் போலும்.
அதனால் தான் இந்த உலகம் முழுவதும் விரோதிகள் இல்லாமல் உள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எங்கு எழுந்து அருளினாலும் அவர் திருவடிகளைக் காப்பது உன் கடமை என்று நினைத்து
லோகத்தில் ஓர் இடத்திலும் சத்ருக்கள் -முள் -இல்லாமல் பண்ணி விட்டாய் –

ஆசார்யர் எல்லாருக்கும் நல்வழி காட்டி பெருமாள் இடத்தில் ப்ரீதி உண்டு பண்ணுகிறார் -என்றபடி –

—————————————————————-

ராமம் த்வயா விரஹிதம் பரதம் ச தேந
த்ராதும் பதாவநி ததா யத் அபூத் ப்ரதீதம்
ராமாநுஜஸ்ய தவ ச அம்ப ஜகத் ஸமஸ்தம்
ஜாகர்த்தி தேந கலு ஜாகரண வ்ரதேந—-159-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! உன்னைப் பிரிந்த இராமனை, இலட்சுமணன்
எப்போதும் விழித்துக் கொண்டு காப்பது என்ற விரதம் பூண்டான். இராமனைப் பிரிந்த உள்ள பரதனையும், நாட்டையும்
காப்பது என்று நீ உறுதி பூண்டாய். இதனால் அன்றோ இந்த உலகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன?

இராமனைக் கானகத்தில் கண் உறங்காமல் இலட்சுமணன் காத்தான். இது அவனுடைய தாயின் ஆணையாகும்.
அவள் இலட்சுமணனிடம், “இராமனின் நடை அழகில் மயங்கி நின்றுகூட நீ அவனைக் காக்காமல் இருந்துவிடாதே”, என்றாள்.
இராமனை இலட்சுமணன் எப்படிக் காத்தானோ, அதைவிட அதிகமாகப் பாதுகை பரதனைக் காக்க முடிவு செய்தாள்.
பரதனை மட்டும் அல்லாமல், அவனது நாட்டையும் காப்பாற்றினால் அல்லவோ, முழுமையான காப்பாற்றுதல் ஆகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னை விட்டுப் பிரிந்து அவதி உற்ற போது இளைய பெருமாள்
அவரைக் கண்ணும் கருத்துமாக விழித்து இருந்து காப்பாற்றினார்
பெருமாளைப் பிரிந்த ஸ்ரீ பாரதாழ்வானையும் நீயும் அது போலவே விழித்து இருந்து ரஷித்தாய்-
உங்கள் இருவரின் விழிப்பினால் உலகம் முழுவதும் விழிப்பு அடைந்து இருக்கிறது

பாகவதர்களாலேயே பெருமானுக்கும் உலகோர்களுக்கும் ஷேமம் என்றவாறு –

———————————————————————————————

அந்த:புரே பரிஜநை: ஸமய உபயாதை:
அபி அர்ச்சிதா பவஸி யா விநயோபபந்நை:
ஸா கோஸலேஸ்வர பாதாவநி பூபதீநாம்
ஸங்கட்டநம் மகுட பங்க்திபி: அந்வபூஸ் த்வம்—160-

கோஸல தேசத்தின் ராஜாவாகிய இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
நீ அந்தப்புரத்தில் உள்ள நேரங்களில், அங்கு உள்ள வேலையாட்களால் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறாய்.
ஸிம்ஹாஸனத்தில் வந்து அமர்ந்தவுடன், பல அரசர்களின் க்ரீடங்கள் உன் மீது இடித்தபடி (தலை சாய்த்தபடி) நிற்க,
நீ கம்பீரமாக வீற்றுள்ளாய்.

பாதுகையிடம் உள்ள மரியாதை மற்றும் பயம் காரணமாகப் பல அரசர்களும் மிகவும் வேகமாக ஓடி வந்து,
மென்மையாகப் பாதுகையில் விழுவதற்குப் பதிலாக, வேகமாக வந்து விழுகின்றனரே!
பாதுகைக்குத் துன்பம் ஏற்படப் போகிறதே என்று வருத்தம் கொள்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ அந்தப்புரத்தில் இருந்த போது கைங்கர்ய பரர்கள் மட்டும் உன்னை ஸூகமாய் இருக்கும் படிப் பூஜித்தார்கள்
சிம்ஹாசனத்தில் எழுந்து அருளியவுடன் உன்னை அரசர்கள் எல்லாம் வணங்கும் போது அவர்கள் அணிந்துள்ள
கிரீடங்கள் உன்னை நெருங்க அதையும் ஸூகமாக அனுபவித்தாய் –

————————————————————–

ப்ராப்ய அதிகாரம் உசிதம் புவநஸ்ய குப்த்யை
பத்ராஸநம் பரத வந்திதம் ஆஸ்ரயந்த்யா
மத்யே அவதீர்ணம் இவ மாதவ பாத ரக்ஷே
மாதஸ் த்வயாபி மநு வம்ச மஹி பதீ நாம்—-161-

தாய் போன்ற பாதுகையே! இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு நீ இராமனால் நியமிக்கப்பட்டாய்.
பரதனால் ஆராதிக்கப்பட்டு ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய். உன்னை இவ்விதம் காணும் போது
மநு குலத்தில் உதித்த பேரரசி போன்று, அந்தக் குலத்திற்குப் பொருத்தமாகவே உள்ளாய்.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரும் ஸிம்ஹாஸனத்தில் அமர இயலாது.
ஆனால், பாதுகைக்கு இராமனின் தொடர்பு உள்ளது, பரதனின் ஆராதனை உள்ளது.
ஆகவே இவள் அரியணையில் அமர்வது பொருத்தமே என்றார்.

ஸ்ரீ பாதுகையே -நீ சிம்ஹாசனத்தை அலங்கரித்தது மனு வம்ச ராஜாக்களுக்குள் மிகவும் பொருத்தமாகவும் இருந்தது –
பெருமாள் மனு வம்சத் தரசர்களின் நடுவே பெருமாள் திருவவதரித்து திரு அயோத்தியை அரசாண்டு
உலகத்தை ரஷித்தது போல் இப்போது அரசாள்வதால்
நீயும் மனு வம்சத்தார சர்களின் நடுவில் ஒருவராக அவதாரம் செய்துள்ளாய் போலும்

ஆழ்வார் ஆசார்ய குரு பரம்பரையில் சேர்ந்து குரு பரம்பரைக்கு அலங்காரம் செய்து அருளினது போலவே –

——————————————————————–

ராஜாஸநே ரகு குலோத்வஹ பாத ரக்ஷே
நீராஜநம் ஸம்பவத் ஸம்யோசிதம் தே
ஸ்லாகா வசேந பஹுச: பரிகூர்ணிதாபி:
ஸாமந்த மௌளி மணி மங்கள தீபிகாபி:—162-

ரகு குலத்தில் உதித்த இராமனின் பாதுகையே! உன்னைக் கொண்டாடுவதற்காக உனது ஸிம்ஹாஸனத்தைச் சுற்றி
பல அரசர்கள் நின்றனர். அப்போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களின் ஒளியானது
உன் மீது அசைந்தபடி காணப்பட்டது. இதனைக் காணும்போது உனக்கு மங்கல ஹாரத்தி எடுப்பது போன்று இருந்தது.

பாதுகை அயோத்தி நகரத்தை ஆட்சி செய்து வந்த நேர்த்தியைக் கண்டு பல அரசர்களும் மயங்கி நின்றனர்.
இதனை ஆமோதித்தபடி அவர்கள் தங்கள் தலைகளை அசைத்தனர். இதனால் அவர்களின் க்ரீடங்களில்
பதிக்கப்பட்ட கற்களின் ஒளியானது பாதுகைக்கு ஹாரத்தி எடுப்பது போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாளும் பாங்கைக் கண்டு அண்டை தேசத்து அரசர்கள் தங்கள் மகுடங்களை அசைத்து பாராட்டினார்கள் –
அப்பொழுது அவற்றினின்று வீசும் ரத்ன காந்தியால் உனக்கு மங்கள ஹாரத்தி எடுப்பது போல் இருந்தது –

ஆசார்யர் க்ருத்யங்கள் நம்மாழ்வார் மூலம் உலகம் அறிந்து அவரை கொண்டாடுகிறது என்றவாறு –

—————————————————–

ப்ருத்வீ பதீநாம் யுகபத் க்ரீடா:
ப்ரத்யர்த்திநாம் ப்ராணிதும் அர்த்திநாம் ச
ப்ராபுஸ் ததா ராகவ பாத ரக்ஷே
த்வதீயம் ஆஸ்த்தாநிக பாத பீடம்—-163-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அயோத்தி நாட்டின் ஸிம்ஹாஸனத்தில் விற்றிருந்த போது
உன்னை எதிர்க்க முயன்ற அரசர்கள் தோற்றனர். ஒரு சில அரசர்கள் உன்னை வணங்கி நின்றனர்.
இவ்வாறு உள்ள இருவகையான அரசர்களின் க்ரீடங்களும் ஒரே போன்று உனது ஆஸ்தானத்தை அடைந்தன.

ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து, கால்கள் வைக்கும் இடம் என்பது ஆஸ்தானம் எனப்படும். எதிர்த்துத் தோற்ற அரசர்களையும்,
“அவர்கள் அரசர்கள்” என்னும் மரியாதை அளித்து, அவர்களையும் மற்றவர்களைப் போன்றே நடத்திய விதம் வெளிப்படுவது காண்க.
இந்தப் பண்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாண்ட சமயம் தாங்கள் உயிர் பிழைக்க சரண் அடைந்த அரசர்கள் அனைவரும்
பகைமை பூண்டு அழிக்கப் பட்ட அரசர்கள் இப்படி இருவகையினரது கிரீடங்களும் ஒரே சமயத்தில்
உனது சிம்ஹாசனத்தின் கீழ் வைக்கப்பட்ட திருவடி பீடத்தை அடைந்து இருந்தன —

——————————————————————-

ப்ரணம்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
தூரோபநீதை: உபதா விசேஷை:
ஸபா ஜயந்தி ஸ்ம ததா ஸபாயம்
உச்சைஸ் தராம் உத்தர கோஸலாஸ் த்வாம்—-164-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! நீ அயோத்தியில் ஸிம்ஹாஸனம் ஏறி கம்பீரமாக
ஆட்சி செய்து கொண்டிருந்தாய். அப்போது வடக்கு கோசல நாட்டில் உள்ள மக்கள் பலரும் அயோத்தி வந்தனர்.
வெகுதூரத்தில் இருந்து வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உயர்ந்த காணிக்கைகளை
உன்னிடம் சமர்ப்பித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ரங்கேஸ்வர பாதுகையே நீ ராஜ்ய பரிபாலனம் செய்த காலத்தில் வெகு தொலைவான பிரதேசங்களில் இருந்து
காணிக்கைகளைக் கொணர்ந்து உன்னைப் பூஜிக்கிறார்கள் –

——————————————————————

அபாவ்ருத த்வாரம் அயந்த்ரி தாஸ்வம்
ரங்கேஸ பாதாவநி பூர்வம் ஆஸீத்
த்வயா யத்ருச்சா ஸுக ஸுப்த பாந்த்தம்
ராமே வநஸ்த்தே அபி பதம் ரகூணாம்—-165-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாப்பவளே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ ஸிம்ஹாஸனத்தில்
அமர்ந்திருந்த போது நிகழ்ந்தது என்ன? பகைவர்கள் யாரும் வருவது இல்லாமல் உள்ளதால்
அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தன. யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகளும் குதிரைகளும்
கட்டி வைக்கப்படாமல், அயோத்தியின் வீதிகளில் சுற்றின.
அந்த நாட்டின் அரசனான இராமன் கானகத்தில் உள்ள போதிலும், பாதுகா இராஜ்ஜியம் காரணமாக,
எந்தவிதமான கவலையும் இன்றி வழிப் போக்கர்கள் வந்து உறங்கிச் சென்றபடி நாடு இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் போனதும் கோட்டை வாயில் திறந்தும்
குதிரை முதலியன கட்டுவாரின்றி திரிந்து கொண்டும் இருந்தன –
நீ பட்டம் ஏற்ற பிறகும் வழிப் போக்கர்கள் கவலையின்றி ஸூகமாக நினைத்த இடத்தில் தங்குகின்றனர் –
ஆதலால் கோட்டை வாயிலில் பூட்டவோ குதிரைகளை கட்டவோ அவசியம் இருக்கவில்லை -திருடர் பயமில்லை –

————————————————————————-

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோம ஸதாம் பபூவ—166-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

ஸ்ரீ பாதுகையே வேறு பலன் கருதாமல் உன்னையே பூஜித்ததனால் ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளுக்கு நிகராக
தேவர் உள்ளிட்ட யாவராலும் கொண்டாடப் படப்பட்டான் –

உண்மையான ஆசார்ய பக்தி உள்ளவன் பகவானுக்கு சாம்யமாக கொண்டாடுவார்கள் என்றபடி –

————————————————————————–

அரண்ய யோக்யம் பதம் அஸ்ப்ரு சந்தீ
ராமஸ்ய ராஜார்ஹ பதே நிவிஷ்டா
ஆஸ்த்தாந நித்யா ஸிகயா நிராஸ்த்த:
ஸ்வர்கௌகஸாம் ஸ்வைர கதேர் விகாதம்—-167-

பாதுகையே! இராமனின் திருவடிகளை நீ தொடாதவளாக, ஸிம்ஹாசனத்தில் அமர்ந்து விட்டாய்.
இவ்வாறு நீ எங்கும் நகராமல் இருந்த காரணத்தினால், தேவர்களுக்கு அசுரர்களிடம் இருந்த பயம்
நீங்கப் பெற்று எங்கும் சஞ்சரிக்க இயன்றது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளைப் பிரிந்து நீ எங்கும் சஞ்சரியாமல் நிலையாக சிம்ஹாசனத்தில் இருந்து கொண்டே
ராஷசர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட சஞ்சாரத் தடையையும் உபத்ரவத்தையும் போக்கினாய் –

——————————————————————-

ராஜாஸநே சேத் பவதீ நிஷண்ணா
ரங்கேஸ பாதாவநி தந்ந சித்ரம்
யத்ர அதிரூடா: க்ரமஸ: புரா த்வாம்
உத்தம் ஸயந்தே ரகு ஸார்வ பௌமா:—-168-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இக்ஷ்வாகு போன்ற அரசர்கள் அமர்ந்த ஸிம்ஹாசனத்தில்
நீ அமர்ந்த காரணத்தில் எந்த ஒரு வியப்பும் இல்லை – காரணம்,
அவர்கள் உன்னைத் தங்கள் தலையில் தாங்கியபடி ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தனர்.
உன்னையே தங்கள் தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டனர்.
அப்படி அவர்கள் தலையில் அமராமல் நேரடியாக ஸிம்ஹாசனத்தில் நீ அமர்வதில் என்ன வியப்பு உள்ளது?

ஸ்ரீ பாதுகையே இஷ்வாகு போன்றோர் அலங்கரித்த சிம்ஹாசனத்தில் பெருமாள் ஸ்ரீ பாதுகையான உன்னை
எழுந்து அருளப் பண்ணலாமோ என்று கேட்பது நியாயம் இல்லை -ஏன் எனில்
உனக்கு முன் இந்த ஆசனத்தில் இருந்த ரகு வம்சத்தரசர்கள் உன்னை சிரசில் அணிந்து கொண்டாடுகிறார்களே
அவர்கள் உட்கார்ந்து அனுபவித்த சிம்ஹாசனத்திலேயோ உன்னை வைப்பது என்று வேண்டுமானால் கேட்கலாம் –
அதுதான் நியாயம் ஆகும் –

——————————————————-

பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்
தேவி ஷணம் தக்ஷிண தோமுகம் தே
கதம் பவேத் காஞ்சந பாத ரக்ஷே
ராமஸ்ய ரக்ஷ: ம்ருகயா விஹார;—-169-

பொன்மயமான பாதுகாதேவியே! நீ உனது ஸிம்ஹாசனத்தை ஒரு நொடிப்பொழுது தெற்குத் திசை பார்த்தபடி இட்டிருந்தால் போதுமானது.
இவ்வாறு நீ செய்திருந்தால் இராமன் இலங்கை சென்று அரக்கர்களை அழிப்பது என்ற லீலையே இல்லாமல் போய் இருக்கும் அல்லவா?
(இராமனின் செயலை பாதுகையே செய்திருப்பாள் என்றார்).

ஸ்ரீ பாதுகையே நீ மட்டும் உன் சிம்ஹாசனத்தைத் தெற்கு முகமாகச் சிறிது திருப்பி இருந்தால் கூட பெருமாள்
ராவணாதி நிரசனமாக சென்ற இலங்கையில் ஒரு அரக்கனும் அகப்பட்டு இருக்க மாட்டான் –

———————————————————————-

யாவத் த்வயா ராகவ பாத ரக்ஷே
ஜிகீஷிதா ராக்ஷஸ ராஜ தாநீ
மாலேவ தாவத் லுளிதா மதாந்தை:
உத்யாந சாகாம்ருக யூதபைஸ்தே—-170-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரு கால கட்டங்களில் இலங்கை நகரத்தை வெல்ல வேண்டும் என்று நீ விரும்பினாய்.
அப்போது கொழுத்த வானர வீரர்கள் மூலமாக இலங்கை நகரமானது, மலர்கள் போன்று கசக்கி வெல்லப்பட்டது
(இராவணன் சீதையை அபகரித்தான் என்று அறிந்தவுடன் நீ பரதனின் சேனையை அனுப்ப எண்ணினாய்.
ஆனால் உனது எண்ணம் காரணமாகவே வானர வீரர்கள் அச்செயலை முடித்துவிட்டனர் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே இலங்கையை ஜெயிக்க வேண்டும் என்று சங்கல்பித்தாய் -உடனே உன் தோட்டத்து
கிஷ்கிந்தையைச் சார்ந்த வானரர்களால் ஒரு மாலையைப் போலே இலங்கை பிய்த்து அழிக்கப் பட்டது அன்றோ –

——————————————————————————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ரு சந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ள போதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தொடாமல் நின்ற அரசர்கள் உடைய மகுடங்கள் கல்யாணமாகவே தங்கமாகவே இருந்தன –
உன்னைத் தொட்டு வணங்கியதால் அவை மேலும் கல்யாணம் அடைந்து ஷேமத்தை தருவனவாகவும் பரிணமித்தன

நல்ல புண்யசாலியானாலும் ஆசார்ய சம்பந்தம் ஏற்பட்ட பிறகே ஷேமம் உண்டாகிறது –

————————————————————————

அநிச்சத: பாண்டரம் ஆத பத்ரம்
பித்ரா விதீர்ணம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் த்வத் அர்த்தம் வித்ருதேந தேந
சாயா ஸமக்ரா பரதஸ்ய மௌளௌ—173–

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது தந்தையான தசரதன் தனக்கு அளித்த
வெண்மையான குடையை பரதன் மறுத்தான்.
ஆயினும் உனக்காக அவன் அந்த வெண்கொற்றக் குடையைப் பிடித்தபடி உள்ளான்.
அந்தக் குடையின் நிழல் அவன் தலை மீது அழகாக விழுந்தபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே தகப்பனால் கொடுக்கப்பட்ட வெண் குடையை வேண்டாம் என்று வெறுத்து ஸ்ரீ பரதாழ்வான்
உனக்காக அதைப் பிடித்ததனால் அதன் முழு நிழலும் அவன் சிரசில் இருந்தது –

—————————————————————

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா
ப்ரஸ்திதே வன விஹார கௌதுகாத்
ஆதி ராஜ்யம் அதி கம்ய தே யுவாம்
அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்—173-

ஏ பாதுகே! இராமன் எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல், காட்டில் வாசம் செய்யும் மகிழ்வு கொண்டு புறப்பட்டான்.
அந்த நேரத்தில் நீயும் பரதனும் அயோத்தியை அடைந்து, இந்தப் பூமிக்கு எந்த விதமான குறையும் இன்றி பார்த்துக் கொண்டீர்கள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள அப்போது பட்டத்தை ஏற்றுக் குறைவின்றி நீ ஆட்சி செய்தாய் –

சதாசார்யன் சேதனனை கைவிடமாட்டார் என்பதை காட்டி அருளினாய் –

———————————————————–

ரகுவீர பதாநுஷங்க மாத்ராத்
பரி பர்ஹேஷு நிவேசிதா யதி த்வம்
அதிகார திநே கதம் புநஸ் தே
பரிவாராஸ் தவ பாதுகே பபூவு:—174-

பாதுகையே! இராமனுடைய திருவடித் தொடர்பு உனக்குக் கிட்டியது. இதனால் உன்னை அவனுடைய குடை, சாமரம்
போன்று பொருள்களுடன் ஒப்பிட இயலாது. இவ்விதம் ஒப்பிடலாம் என்றால், நீ சிம்மாசனம் அமர்ந்த போது
அந்தக் குடை, சாமரம் போன்றவை உனக்கு ஏவல் செய்யும் பொருள்களாக எவ்விதம் வந்தன?

ஸ்ரீ பாதுகையே பெருமாளுக்கு உபயோகிக்கப் படும் சத்ர சாமரங்கள் போலே ஒன்றாக உன்னையும் சேர்ப்பது தகாது –
நீ பட்டம் ஏற்ற போது அவை உனக்கும் பகவானுக்கு போலே உபசார உபகரணங்களாக உபயோகப் பட்டன அல்லவா –

பகவானைப் போலவே ஆசார்யரும் சமமாக உபாசிக்கப் பெற்றவர் –

———————————————————————–

புருஷார்த்த சதுஷ்ட யார்த்தீநாம்
பரிஷத் தே மஹிநா வஸிஷ்ட முக்யை:
க்ரய விக்ரய பட்டணம் ப்ரஜாநாம்
அபவத் காஞ்சந பாதுகே ததாநீம்—-175-

பொன் மயமான பாதுகையே! நீ சிம்மாசனத்தில் அமர்ந்த போது உனது அரச சபையானது வசிஷ்டர் முதலான
பல மஹரிஷிகளால் பெரிதும் போற்றப்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய
நான்கு பலன்களையும் விரும்பும் மக்கள், அவை மிகவும் எளிதாக உனது சபையில் கிட்டியது என்று வந்தனர்.
இதனால் உனது சபை வியாபார ஸ்தலம் போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பொன் மயமான பாதுகையே வசிஷ்டாதி மகாநீயர்களாலே கொண்டாடப்பட்ட உன் சபை
சதுர்வித புருஷார்த்தங்களையும் வாங்கவும் விற்கவுமான பட்டணம் ஆயிற்று –

——————————————————–

மநுஜத்வ திரோஹி தேந சக்யே
வபுஷா ஏகேந விரோதி நாம் நிராஸே
அபஜத் பரதாதி பேதம் ஈச:
ஸ்வயம் ஆராதயிதும் பதாவநி த்வாம்—176-

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதனாகப் பிறந்து, ஒரே உடல் எடுத்து மட்டுமே இராவணன் போன்றோரை
இராமன் வதம் செய்வது இயலும். ஆயினும் ஏன் பரதன் போன்று பல உடல்கள் எடுத்துத் தோன்றினான்?
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை ஆராதிக்க அல்லவா இவ்விதம் பகவான் தோன்றினான்
(பகவானே பாதுகையை ஆராதித்தான் என்று கருத்து. எப்படி? தனது பக்தையான பாதுகையை, தானே ஆராதித்துக் கொண்டாடினான்)?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் தான் ஒருவனாகவே திருவவதரித்து ராஷசர்களைக் நிரசிக்க வல்லவனாய் இருந்தும்
உனக்கும் தானே கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையினாலேயே ஸ்ரீ பரதாழ்வான் போன்றோரை பிரிந்தார் –

————————————————————–

மகத அங்க கலிங்க வங்க முக்யாந்
விமதாந் ரந்த்ரக வேஷிண: ஸஸைந்யாந்
ரகு புங்கவ பாதுகே விஜிக்யே
பரதஸ் சாஸநம் உத்வஹந் பவத்யா:—-177-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் அயோத்தியைக் கைப்பற்ற
மகதம், அங்கம், போன்ற நாட்டின் அரசர்கள் முனைந்தனர். அப்போது சிம்மாசனம் அமர்ந்த
உனது ஆணை மூலமாக அவர்களைப் பரதன் தனது படைகளுடன் சென்று வென்றான்.

ஸ்ரீ பாதுகையே உன் நியமனத்தாலே ஸ்ரீ பரதாழ்வான் மகத அங்க கலிங்க முதலான தேசத்து
சகல சத்ருக்களையும் ஜெயித்தார் –

——————————————————————

அநிதர வஹநீயம் மந்த்ரி முக்யைர் யதா தத்
த்வயி விநிஹிதம் ஆஸீத் ஸூர்ய வம்சாதி ராஜ்யம்
ரகு பதி பத ரக்ஷே ரத்ந பீடே ததாநீம்
ஸ்ரியம் இவ தத்ருஸூஸ் த்வாம் ஸாதரம் லோக பாலா:—-178-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்த பின்னர் அயோத்தியை
அந்நாட்டு உயர்ந்த மந்திரிகளால் கூட ஆள முடியவில்லை. யாராலும் சுமக்க இயலாத ராஜ்ய பாரத்தை உன்னிடம் வைத்தனர்.
ஸூரிய வம்சத்தின் அரச சிம்மாசனத்தில் நீ அமர்ந்த போது தேவர்களும் அரசர்களும், இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட
சிம்மாசனத்தில் நீ அமர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தனர்.
மஹாலக்ஷ்மி திருப்பாற்கடலில் உதித்தபோது அவளைப் போற்றியது போன்று, உன்னைப் போற்றி நின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -ஸூமந்திரர் முதலிய மந்திரிகள் மற்ற ஒருவராலும் தாங்க முடியாத ஸூர்ய வம்சப் பட்டத்தை உனக்குத் தர
அதை அலங்கரித்த போது சாஷாத் மஹா லஷ்மியாகவே உன்னை தேவர்களும் திக் பாலர்களும் சேவித்தார்கள் –

————————————————————————————

பரிஹ்ருத தண்டகாத்வ கமநம் பத ரக்ஷிணி தத்
பரிணத விஸ்வ ஸம்பத் உதயம் யுவயோர் த்விதயம்
ரகுபதி ரத்ன பீடம் அதிருஹ்ய ததா விததே
வ்யபகத வைரிபூப நிலயம் வஸுதா வலயம்—-179-

பெரியபெருமாளின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்திற்கு வந்த போது,
நீங்கள் இருவரும் (இரு பாதுகைகள் – ஒரு ஜோடி) அவனுடன் சஞ்சாரம் செய்யாமல் அயோத்திக்குத் திரும்பினீர்கள்.
இராமனின் கற்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்த நீங்கள் இருவரும்,
அனைத்து உலகங்களையும் விருத்தி அடையும்படிச் செய்தீர்கள்.

ஸ்ரீ பாதுகையே நீ திரும்பி வந்து பட்டத்தை ஏற்று சகல லோகங்களையும் ஷேமத்தையும் தந்து
சத்ருக்களை அடியோடு இல்லாமலும் செய்து விட்டாய் –

————————————————————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவதீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பட்டத்தை ஏற்று ஜனங்களுக்கு இருந்த மகத்தான துக்கத்தை
ஸூர்யன் இருளைப் போக்குவது போலப் போக்கி அருளினாய் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்- 5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-

March 6, 2016

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-

இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

பரதன் இராமனைப் பலமுறை கெஞ்சிய போதும், அவன் மனம் மாறவில்லை. ஆனால் பாதுகையின் மனம் துடித்தது.
தனக்கு மிகவும் ப்ரியமான இராமனின் திருவடிகளை உதறி, பரதனுடன் மக்களின் பொருட்டு மீண்டும் ஓடி வந்தாள்.
ஆக இராமனோ, அவனது திருவடிகளோ இங்கு உதவ வில்லை; பாதுகையே உதவினாள்.
“அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்” என்று திரு நாமத்தின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர்
தனது முமுக்ஷுப்படியில் அருளிச் செய்தது ஒப்பு நோக்குக.

திருவடிகளைக் காட்டிலும் பெருமை மிக்கதும் பெருமாளை அண்டினவர்கள் இடம் இடையறா அன்பு பூண்டதும்
கருணை அதிகம் கொண்டு ஸ்ரீ அயோத்யைக்கு எழுந்து அருளி வந்ததுமான ஸ்ரீ பாதுகையே உன்னை த்யானிக்கிறேன்-

————————————————————————–

ப்ருசாம் ஆதுர ஸஹோதர ப்ரணய கண்டந ஸ்வைரிணா
பதேந கிம் அநேந மே வநம் இஹ அவநாத் இச்சதா
இதீவ பரிஹாய தந் நிவவ்ருதே ஸ்வயம் யத் புரா
பதத்ரம் இதம் ஆத்ரியே த்ருத ஜகத் த்ரயம் ரங்கிண:—-122-

இராமன் கானகம் சென்ற வருத்தத்தில் இருந்த பரதன், இராமனிடம் சென்று அவனை மீண்டும் நாட்டிற்குத் திரும்புமாறு அழைத்தான்.
அப்போது பரதனை இராமன் கண்டித்து, மறுத்து விடுகிறான்.
இப்படியாக இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக வந்த இராமன், நாட்டை விட்டுக் கானகம் புகுவதையே பெரிதும் விரும்பியது கண்ட பாதுகை,
”இவன் (இராமன்) திருவடிகளால் நமக்கு ஆவது என்ன?” , என்று மனம் வருந்தினாள்.
ஆதலால் அந்தத் திருவடிகளை விட்டு, தான் மட்டும் நாட்டிற்கு வந்தாள்.
மூன்று உலகையும் காக்கும் அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்கிறேன்.

இராமனின் திருவடிகளை விட்டுப் பாதுகைகள் பிரிந்தமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறார் –
இராமன் பரதனைக் கடிந்து கொண்டது,
நாட்டை ஆள வேண்டிய கடமை இருக்கக் கானகம் விரும்பியது – என்ற காரணங்களைக் காட்டுகிறார்.

மனம் வருந்தி ஸ்துதித்த ஸ்ரீ பரதாழ்வான் வேண்டுதல்களை நிராகரித்து தன்னிச்சையாக ஸ்ரீ தண்ட காரண்யம் நோக்கிச் சென்ற
பெருமாள் உடைய திருவடிகளுடன் என் சம்பந்தம் வேண்டாம் என்பது போலே
அத் திருவடிகளை விட்டு திரு அயோத்யைக்கு எழுந்து அருளிய
மூவுலகங்களையும் ரஷித்து அருளும் ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையை கொண்டாடுகிறேன் –

—————————————————————————-

தசவதந விநாசம் வாஞ்சத: யஸ்ய சக்ரே
தசரதம் அநகோக்திம் தண்டகாரண்ய யாத்ரா
ஸ ச பரத விமர்த்தே ஸத்ய ஸந்தஸ் த்வயா ஆஸீத்
ரகுபதி பத ரக்ஷே ராஜதாநீம் ப்ரயாந்த்யா—-123–

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராவணனை வதம் செய்யும் விருப்பம் கொண்டிருந்த இராமன்,
தண்டகாரண்யம் என்ற கானகம் புகுந்தான். இதன் மூலம் தசரதனின் வாக்கு சத்ய வாக்கே என்று நிலைத்தது.
இது போன்று பரதன் இராமனை அயோத்தி திரும்புமாறு வற்புறுத்தினான். அப்போது இராமன் பரதனிடம் உன்னை அளித்தான்.
நீ அயோத்திக்குப் புறப்பட்டதன் மூலம், “மக்களைக் காப்பேன்”, என்ற இராமனின் சத்தியமும் நிலைத்தது.

இராமன் கானகம் சென்றதால், தசரதனின் வாக்கு நிறைவேற்றப்பட்டது. இராமனுக்குத் தனது நாட்டு மக்களைக் காப்பாற்றும் கடமை இருந்தது.
பாதுகைகளை அவன் மீண்டும் அனுப்பியதன் மூலம் அவனது வாக்கும் காப்பாற்றப்பட்டது.
ஆக, தசரதனின் வாக்கை இராமன் காப்பாற்றினான், இராமனின் வாக்கை பாதுகை காப்பாற்றினாள்.

கைகேயியினுடைய வரனையும் பூர்த்தி செய்யவும் ராவணாதி அசுரர்களை சம்ஹரிக்கவும் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு ஏகினார்
ஸ்ரீ பாதுகையே நீ மட்டும் அயோத்யைக்கு வந்து இரா விட்டால் இரண்டு கார்யங்களும் கெட்டு இருக்குமே

ஆசார்யர் அனுக்ரஹம் இராதே போனால் ஜீவனுக்கு பகவானால் மோஷம் அளிக்க முடியாதே –

————————————————————————-

அப்யுபேத விநிவ்ருத்தி ஸாஹஸா தேவி ரங்க பதி ரத்ந பாதுகே
அத்யசேத பவதீ மஹீயஸா பாரதந்த்ர்ய விபவேந மைதிலீம்—-124–

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளை விட்டுப் பிரிந்து,
அயோத்தி செல்வது என்னும் தீரச் செயலுக்கு நீ உடன்பட்டாய். இப்படியாக மிகவும் உயர்ந்த செயலாகிய
இராமனின் சொற்படி நடத்தல் என்னும் தன்மையில் சீதையை நீ விஞ்சி நிற்கிறாய்.

இராமன் சீதையிடம் கானகம் வர வேண்டாம் என்று கூறினான். ஆனால் சீதையோ இராமனின் சொல் கேளாமல் கானகம் வந்தாள்.
பாதுகையிடம் இராமன் அயோத்திக்குத் திரும்புமாறு கூறினான். அதனை உடனே ஏற்ற பாதுகை, பரதனுடன் அயோத்தி வந்தாள்.
இதன் மூலம் பாதுகை, சீதையை விட மேம்பட்டவள் ஆனாள். அயோத்தி மக்கள் மீது சீதையை விட பாதுகைக்குப் ப்ரியம் அதிகம் எனலாம்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ சீதா பிராட்டி
எதிர் மறையான வார்த்தைகளைப் பேசி பிடிவாதமாக உடன் சென்றாள்-
நீயோ மறு வார்த்தை பேசாமல் ஜன ரஷணத்துக்காக பெருமாளை பிரிந்து ஸ்ரீ சீதா பிராட்டியை விட சிறந்து விட்டாய்

ஆச்சார்யர்கள் பகவானை விட்டாவது ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளுவார்கள் என்றதாயிற்று –

—————————————————————————————

அவ்யாஹதாம் ரகுபதேர் வஹத: ப்ரதிஜ்ஞாம்
அம்சாதி ரோஹண ரஸே விஹதே தரண்யா:
ப்ராதாந் நிவ்ருத்ய பவதீ மணி பாத ரக்ஷே
ஸ்பர்சம் பதே ந விகத வ்யவதாந கேதம்—-125-

இரத்தினக் கற்கள் இழைத்த பாதுகையே! பூமா தேவி இராமனின் தோளில் ஏறுவதற்கு பெரு முயற்சி எடுத்தாள்.
ஆயினும், தான் கானகம் செல்வேன் என்ற சபதத்தில் இராமன் இருந்ததால், அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
இவ்வாறு அவள் மகிழ்வு போக்கடிக்கப் பட்டது. அப்போது நீ அயோத்திக்குத் திரும்பினாய்.
இதன் மூலம் பூமா தேவிக்கு இராமனின் திருவடித் தொடர்பை ஏற்படுத்தி, இழந்த மகிழ்வை மீண்டும் கொணர்ந்தாய்.

தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாக அறிவித்தவுடன் பூமா தேவி மிகவும் மகிழ்ந்தாள்.
தான் இராமனின் தோள்களில் அமர வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ந்தாள்
(ஒரு நாட்டு அரசன் அந்த நாட்டைத் தனது தோள்களில் வைத்துக் காப்பதாகவே கூறுவர்).
ஆனால் இராமன் கானகம் சென்றதால், பூமா தேவியின் அந்த மகிழ்ச்சி பறி போனது. இதனைப் பார்த்த பாதுகை பூமாதேவி
இழந்த மகிழ்வை மீண்டும் பெறும் விதமாக, இராமனின் திருவடிகளை விட்டு அகன்றாள்.
இதன் மூலம், இராமனின் திருவடிகள் நேரடியாகப் பூமியில் பட, பூமா தேவிக்கு
அவனது திருவடித் தொடர்பு கிட்டியதால் மகிழ்ச்சி உண்டானது.

அல்லது, இராமனின் ஸிம்ஹாஸனத்தில் பாதுகை அமர்ந்து ஆண்டதால்,
பூமா தேவி மீண்டும் மகிழ்ச்சி அடைந்தாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

பூமி -ராஜ்ய பாரம் -பெருமாள் திருத் தோளிலே ஏற முயன்றாள்-
பின்பு ஸ்ரீ பாரதாழ்வானும் அரும் பாடு பட்டு பூமியை அவர் தோளில் ஏற்ற முயன்றார் –
இரண்டும் நடை பெறாததால் ஸ்ரீ பாதுகையே நீ அவரைப் பிரிந்து உன்னால் ஏதும் இடையூறு வராத வகையில்
நேரிடையான திருவடி சம்பந்தத்தை பூமிக்கு ஏற்பட வழி வகுத்தாய்

ஆசார்யன் தான் எந்த கஷ்டத்தையும் பட்டாவது பக்தனை பெருமாள் இடம் சேர்ப்பிக்கிறார் என்றவாறு –

——————————————————————

மந்த்ர அபிக்ஷேக விரஹாத் பஜதா விஸூத்திம்
ஸம்ஸ்கார வர்ஜ்ஜந வசாத் அபி ஸம்ஸ் க்ருதேந
மூர்த்நா நிநாய பரதோ மணி பாதுகே த்வாம்
ராம ஆஜ்ஞயா விநிஹிதம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்—-126-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான்.
இயல்பாகவே தூய்மையான பரதன் – மந்த்ரங்கள் ஓதுவது, தலையை வாருவது முதலான சடங்குகள்
ஏதும் இன்றி தனது தலையில், இராமனின் கட்டளையால் அமர்த்தப்பட்ட உன்னை ராஜ்ய லக்ஷ்மி போன்று எழுந்தருளச் செய்தான்.

இந்த உலகில் ஒருவனுக்குப் பட்டம் கட்டுவதற்கு முன்பாக மந்திரங்கள் உரைக்கப்பட்டு, புண்ணிய நீரைத் தெளித்து பின்னரே
பட்டம் கட்டுவார்கள். இது சாதாரண அரச பதவிகளுக்கு மட்டுமே ஆகும். உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான்.
இயல்பாகவே தூய்மையான பரதன், இது போன்ற சடங்குகள் ஏதும் இன்றி உன்னை ஏற்றான்.

ஒருவனுக்கு பட்டம் கட்டுவதானால் புண்ய தீர்த்தங்களை கொணர்ந்து மந்திரங்களை ஜபித்து செய்விப்பார்கள் –
ஸ்ரீ பரதாழ்வான் செய்த தவத்தால் நீ அப்படி எதுவும் அன்றி அவர் தலையில் பட்டம் கட்டிக் கொண்டாய்-

ஸ்ரீ மதுர கவிகளும் ஸ்ரீ நாத முனிகளும் ஆழ்வாரை அடைய வெகு ஸ்ரமம் பட்டார்களே –

——————————————————————–

ரக்ஷார்த்தம் அஸ்ய ஜகதோ மணி பாத ரக்ஷே
ராமஸ்ய பாத கமலம் ஸமயே த்யஜந்த்யா:
கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹோ வா
கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தஸா ஸா—-127–

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஒரு கால கட்டத்தில் இராமனின் தாமரை போன்ற திருவடிகளை
விட்டுப் பிரிந்து ராஜ்ய பாரத்தையும் நீ ஏற்றாய்.
இந்தச் செயல் அரியதா அல்லது இராமனை விட்டுப் பிரிந்த சீதையின் வருத்தத்துடன் கூடிய நிலை கடினமானதா?

இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு கால கட்டத்தில் சீதையும் இராமனை விட்டுப் பிரிந்தாள்;
நீயும் அவனது தாமரை போன்ற திருவடிகளை விட்டுப் பிரிந்தாய். சீதை மிகவும் வருந்தியபடி இருந்தாள்.
நீயோ – அந்த வருத்தத்துடன் நாட்டை ஆட்சி செலுத்தியபடியும் இருந்தாய்.
இந்தச் செயல் அல்லவா (சீதையின் செயலை விட) கடினமானது?

லோகத்தை ரஷிக்க நீயும் ஸ்ரீ சீதா பிராட்டியும் இரு கால கட்டங்களில் பெருமாளை பிரிந்து வந்தீர்கள்
ஸ்ரீ சீதா பிராட்டியோ பிரிவாற்றாமையால் அழுது கொண்டு இருந்தாள்
நீயோ உனது கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து அருளினாய் –

——————————————————————–

ஸீதா ஸகஸ்ய ஸஹஸா சரணார விந்தாத்
பக்த்யா நதே க்ருதபதா பரத உத்தமாங்கே
ஆருஹ்ய நாகம் அபிதோ பவதீ விதேநே
மாயூர சாமர பரம் மணி ரஸ்மி ஜாலை:—-128-

பாதுகையே! சீதைக்கு மிகவும் பிரியமான இராமனின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் இருந்து,
இராமனைப் பக்தியுடன் வணங்கி நின்ற பரதனின் தலையில் விரைவாக ஏறினாய்.
உன்னைப் பரதன் யானை மீது ஏற்றி அமர்த்தினான். உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் யானையின் இரு பக்கமும் ஒளி வீச,
அதனைக் காணும் போது மயில் தோகை கொண்டு செய்யப்பட்ட சாமரம் வீசுவது போன்று இருந்தது.

யானை மீது பாதுகை பேரரசியாக அமர்ந்தாள். அப்போது அந்தப் பாதுகைகளில் பதிக்கப்பட்ட உயர்ந்த கற்கள் பேர் ஒளி வீசின.
இந்த ஒளியானது இரு பக்கங்களிலும் சாமரம் வீசுவது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -பக்திக்கு இணங்கி பெருமாள் திருவடியின் நின்றும் பிரிந்து ஸ்ரீ பரதாழ்வான் தலையை உடனே அலங்கரித்தாய்
அவன் உன்னை சத்ருஜ்ஞயன் என்ற யானையின் மீது ஏற்றினான்
உன் மீதுள்ள ரத்னங்களின் தேஜஸ் மயில் தோகையினால் உனக்கு சாமரம் வீசுவது போல் இருந்தது –

——————————————————

மூர்த்நா முகுந்த பத ரக்ஷிணி பிப்ரதஸ் த்வாம்
ஆவிர் மதஸ்ய ரகுவீர மதாவளஸ்ய
ஆமோதிபிஸ் ஸபதி தாநஜல ப்ரவாஹை:
லேபே சிராத் வஸுமதி ருசிரம் விலேபம்—-129-

முகுந்தனின் பாதுகையே! அவனது திருவடிகளைக் காப்பாற்றுபவளே! உன்னைத் தன் மீது ஏற்றிக் கொண்ட
இராமனின் யானைக்கு மத ஜலம் வெகுவாகப் பெருகியது. அந்த மத ஜலம் மிகுந்த வாசனையுடன் விளங்கிற்று.
அவை பூமி மீது சந்தனம் பூசுவது போன்று விழுந்தன.

பாதுகைகள் யானை மீது அமர்ந்தவுடன், அந்த மகிழ்ச்சியால் யானைக்கு மத நீர் பெருகி நின்றது.
அந்த மதநீரானது பூமியில் ஓடியது. இதனைக் காணும் போது சந்தனப் பூசியது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே சத்ருஜ்ஞயன் உன்னைத் தன் மீது கொண்டதால் அதிகமான மத ஜலத்தைப் பெருகி அதனால்
நெடு நாள்களுக்கு பின்பு அதிக காலம் நிலை நிற்கும் சந்தனப் பூக்களை செய்தது போலே ஆயிற்று –

—————————————————————–

ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-

தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.

சரத் காலம் என்பது மழை நிற்கும் காலம் ஆகும். சரத் காலமாகிற பாதுகை மீண்டும் வந்தவுடன், பெண்களின் கண்கள்
என்னும் மேகங்கள் இராமனைப் பிரிந்து சிந்திய கண்ணீர் என்னும் மழையை நிறுத்தின என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே உன்னையும் பெருமாளையும் ஏக காலத்திலேயே பிரிந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாது
சாகேத பட்டணத்து இளம் பெண் ஜனங்கள் கண்ணீர் சொரிய ப்ரலாபித்துத் தவித்தனர் –
எதிர்பாராது வந்த சரத் காலம் போலே நீ மட்டும் திரும்பி வந்தது அவர்கள் துக்கத்தை மட்டுப் படுத்தி விட்டது –

—————————————————————

அந்தே வஸந் அசரமஸ்ய கவேஸ் ஸ யோகீ
வந்யாந் ப்ரக்ருஹ்ய விவிதாந் உபதாவிசேஷாந்
ஆதஸ்துஷீம் ரகுகுல உசிதம் ஔபவாஹ்யம்
ப்ரத்யுஜ் ஜகாம பவதீம் பரத உபநீதாம்—-131-

பாதுகையே! அனைத்துக் கவிகளுக்கும் முதன்மையானவரான வால்மீகி முனிவரின் சிஷ்யரான பரத்வாஜ முனிவர் செய்தது என்ன?
காட்டில் கிடைத்த பலவிதமான காணிக்கைப் பொருள்களை எடுத்துக் கொண்டு – பரதனால் அழைத்து வரப்பட்டவளும் ,
ரகு குலத்தின் அரசர்கள் மட்டுமே ஏறத் தகுதி உடைய யானையில் அமர்ந்து வந்தவளும் ஆகிய உன்னை எதிர் கொண்டு வணங்கினார்.

ரகு வம்சத்தினர் மட்டுமே ஏறி அமர்வதற்கு உரிமையான யானை மீது பாதுகை கம்பீரமாக அமர்ந்து வந்தாள்.
ஆக இராமனுக்கு முன்பாகவே பாதுகை அந் நாட்டு யானையின் மீதும் அமர்ந்து செல்லும்படியான பெருமை பெற்றாள்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சத்ருஜ்ஞ்ஜயன் யானையின் மீது ஸ்ரீ பரதாழ்வான் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வரும் பொழுது
வால்மீகியின் சிஷ்யரான பரத்வாஜ மகரிஷி எதிர் கொண்டு வந்து அநேக பதார்த்தங்களை சமர்ப்பித்து உன்னை சேவித்தார் –

—————————————————————————

மாதஸ் த்வத் ஆகமந மங்கள தர்ஸ நீநாம்
ஸாகேத பக்ஷ்மள த்ருசாம் சடுல அக்ஷி ப்ருங்கை:
ஜாதாநி தத்ர ஸஹஸா மணி பாத ரக்ஷே
வாதாய நாநி வதநைஸ் சத பத்ரி தாநி—-132-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! அயோத்தி நகரத்திற்குள் வருகை தந்த
உனது வரவைத் திருமணம் போன்று, மங்களகரமான நிகழ்வாகவே கண்டார்கள். யார்?
அந்த நகரத்தின் பெண்கள், தங்கள் மாளிகைகளின் ஜன்னல்கள் வழியே கண்டனர்.
அவர்கள் முகம் உன்னைக் கண்டதும் மலர்ந்தன. இதனைக் காண்பதற்கு – எவ்வாறு இருந்தது என்றால்,
ஜன்னல் தோறும் தாமரை பூத்தது போன்று இருந்தன.
அவர்களது கண்கள், அந்த மலர்களின் மொய்க்கும் வண்டுகள் போன்று விளங்கின.

பாதுகைகள் வருவதை அந்த நகரத்தின் பெண்கள் தங்களது மாளிகைகயின் ஜன்னல்கள் வழியே பார்த்தனர்.
அவர்களது முகம் தாமரை போன்று மலர்ந்தன.
அந்த முகத்தில் உள்ள அவர்களது கண்கள், முகமாகிய தாமரையை மொய்க்கும் வண்டுகள் போன்று காணப்பட்டன.
இப்படியாக ஒவ்வொரு மாளிகையின் ஜன்னல்களிலும் தாமரை மலர்ந்தது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே நீ எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ அயோத்யா நகரத்து பெண் மணிகள் ஜன்னல்கள் வழியாக உன்னை தர்சித்த போது
அங்கு அவர்கள் அழகிய முகங்கள் தாமரைகள் போலவும் அலை பாயும் அவர்கள் கரு விழிகள் வண்டுகள் போலவும் தோன்றின –

—————————————————————-

ஸாகேத ஸீம்நி பவதீ மணி பாத ரக்ஷே
மாங்கல்ய லாஜ நிகரைர் அவகீர்யமாணா:
கீர்த்தி ஸ்வயம் வரபதேர் பரதஸ்ய காலே
வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே—-133-

எங்கள் தாய் போன்ற பாதுகையே! நீ பரதனுடன் அயோத்திக்குள் வந்தாய். அப்போது அங்கிருந்த பெண்கள்,
மங்களத்தின் அடையாளமாக பொரியை வாரி உன் மீது இரைத்தனர். அவை உன் மீது விழுந்தவுடன்,
உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக் கற்கள் காரணமாக அக்னி போன்று தோன்றின.
இதனைக் காண்பதற்கு எவ்விதம் இருந்தது – கீர்த்தி என்ற பெண் தனது கணவனான பரதனுடன் வந்தது போன்று இருந்தது.

லாஜஹோமம் என்றால் பொரியைத் தூவி நிகழ்த்துவதாகும். பரதனுடன் பாதுகை மட்டும் வரவில்லை;
பாதுகை வந்த காரணத்தால் பரதனுடன் கீர்த்தியும் சேர்ந்தே நாட்டிற்குள் வந்ததாகக் கருத்து.

ஸ்ரீ பாதுகையே -நீ ஸ்ரீ அயோத்தியில் நுழைந்த போது மக்கள் பொரியை வாரி இறைத்து மங்களமாக உன்னை வரவேற்றனர்
சிகப்பு கற்கள் இழைத்த உன் மேல் பொரி விழுந்து சுற்றிலும் தென் பட்டது –
அதனால் ஸ்ரீ பரதாழ்வான் உடைய விவாஹ காலத்தில் லாஜ ஹோமம் செய்த போது இருந்த அக்னி சிகை போலே நீ விளங்குகிறாய் –

———————————————————

சத்ர இந்து மண்டலவதீ மணி பாதுகே த்வம்
வ்யாதூத சாமர கலாப சர ப்ரஸூநா
ஸத்யோ பபூவித ஸம்க்ர விகாஸ ஹேது:
ஸாகேத பௌரவநிதா நயந உத்பலாநாம்—-134–

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! வெண் குடைகள் என்னும் சந்த்ர மண்டலம் உடையவளும்,
வரிசையாக வீசப்படும் சாமரம் என்னும் நாணல் மலர்களை உடையவளும் ஆக நீ அயோத்திக்கு வந்தாய்.
இப்படியாக நீ அங்கிருந்த பெண்களின் நெய்தல் மலர் போன்ற கண்கள் மகிழ்வதற்குக் காரணமானாய்.

அயோத்தி நகரத்திற்கு வந்த போது உனக்குப் பிடிக்கப்பட்டிருந்த வெண்மையான குடைகளைக் கண்டால் சந்திரன் போன்று இருந்தன.
உனக்கு வீசப்பட்ட சாமரங்கள் அனைத்தும் நாணல் மலர்கள் போன்று இருந்தன. நீ சரத் காலம் போன்று காணப்பட்டாய்.
இப்படியாக நீ வந்தபோது – உன்னைக் கண்ட அயோத்தியில் இருந்த பெண்களின் கண்கள், கரு நெய்தல் மலர்கள் போன்று மலர்ந்தன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ அயோத்யா பட்டணத்தில் உன் பிரவேசம் கண்டு பெண்களுடைய கண்கள் கரு நெய்தல் போலே விகசித்து மலர்ந்தன
நீ சரத் காலமாகவும் விளங்கினாய் -வெண் குடை சந்திரனைப் போலவும்- சாமரங்கள் நாணல் பூக்கள் போலவும் விளங்கின –

—————————————————-

ப்ரை க்ஷந்த வக்த்ரை: மணி பாத ரக்ஷே
சத்ருஞ்ஜயம் சைலம் இவ அதி ரூடாம்
ராமாபிதாந ப்ரதிபந்ந ஹர்ஷை:
உத்தாநிதை: உத்தர கோஸலாஸ் த்வாம்—-135-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! சத்ருஞ்ஜயம் என்று அழைக்கப்பட்ட மலை போன்ற யானை மீது அமர்ந்து வந்த உன்னை,
வடக்குக் கோஸல தேசத்தில் உள்ளவர்கள் இராமன் என்றே பார்த்தனர். மிகுந்த மகிழ்வுடன் தங்கள் தலை நிமிர்த்தி உன்னைக் கண்டனர்.

மலை போன்ற யானை மீது அமர்ந்து நீ வந்தாய். இப்படி வந்த உன்னைக் கோஸல தேசத்தில் இருந்த அனைவரும் நோக்கினார்கள்.
அவர்கள் உன்னை இராமனாகவே கண்டனர். அவர்கள் முகம் இராமனைக் கண்டது போன்றே மகிழ்ந்து காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே -நீ சத்ருஜ்ஞயன் பட்டத்து யானையின் மீது ஏறி வந்த போது திரு அயோதியை மக்கள் பெருமாளே நேரிலே
வந்ததாகக் கருதி மிகுந்த முக மலர்ச்சி யுடனே சந்தோஷமாக உன்னைப் பார்த்தார்கள் –

ஆசார்யரை பெருமாளுக்கு சாம்யமாகவே கருத வேண்டும் என்றவாறு –

——————————————————————

த்ரஷ்டும் ததா ராகவ பாத ரக்ஷே
ஸீதாம் இவ த்வாம் விநிவர்த்த மாநாம்
ஆஸந் அயோத்யா புர ஸுந்தரீணாம்
ஔத்ஸுக்ய லோலாநி விலோசநாநி—-136-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ மீண்டும் அயோத்திக்கு வந்த போது அங்கிருந்த
பெண்களுக்குச் சீதையைப் போன்றே தோன்றினாய். உன்னை இவ்விதம் காண்பதற்கு அந்தப் பெண்களின்
கண்கள் ஆசை கொண்டு, அங்கும் இங்கும் அசைந்தன.

உத்தமமான பெண்கள் வீதி வழியாகச் செல்லும்போது அவர்களைக் காண்பதற்கு அனைத்துப் பெண்களும் போட்டியிடுவது இயல்பே ஆகும்.
இங்கு பாதுகா தேவி அல்லவோ செல்கிறாள்? சீதையைக் காட்டிலும் உயர்ந்தவள் ஆயிற்றே!
ஆக இவளைக் காண்பதற்குப் பெண்கள் கூடி நின்றதில் வியப்பில்லை.

ஸ்ரீ பாதுகையே திரு அயோத்யா பெண்கள் ஸ்ரீ சீதா பிராட்டியைப் பார்ப்பது போலவே மிகவும் ஆவல் கொண்டவர்களாகக்
கண்களை சிவந்து உன்னைப் பார்க்க முற்பட்டனர் –

ஆசார்யர் பிராட்டிக்கு சமம் என்றவாறு -பின்னை கொல் நில மா மகள் கொல் -இத்யாதி –

—————————————————————

ஆஸ்த்தாய தத்ர ஸ்புட பிந்து நாதம்
ஸ்தம்பேரமம் தாத்ருஸ ஸந்நிவேசம்
அதசயஸ் த்வம் புரமத்யபாகே
பாதாவநி த்வத் ப்ரணவாஸ்ர யத்வம்—-137-

எம்பெருமானின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! நீ கம்பீரமாக யானை மீது அமர்ந்து அயோத்தியின் நடுவில் வந்து நின்றாய்.
அந்த யானை எப்படி இருந்தது – பிந்து என்ற புள்ளிகள் மிகவும் நேர்த்தியாகவும், ஸ்வரம் போன்று
இனிய பிளிறுதலை உடையதுமாக இருந்தது. இவ்விதமாக நீ ப்ரணவாகார விமானத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாய்.

ப்ரணவாகாரம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் விமானம் ஆகும். அதனைப் போன்று இங்கு யானை விளங்கிற்று.
அதில் கம்பீரமாகப் பாதுகை வீற்றிருந்தாள். அங்கு ப்ரணவாகாரம் போன்ற யானையில் வீற்றிருந்தாள்,
இங்கு (திருவரங்கத்தில்) ப்ரணவாகாரத்தின் உள்ளே கண்வளரும் அழகிய மணவாளனின் திருவடிகளில் வீற்றிருக்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே நன்கு அலங்கரிக்கப் பட்ட பட்டத்து யானை மீது பிரணவாகராமான ஸ்ரீ ரங்க விமானத்தில்
பெருமாள் எழுந்து அருளி இருப்பது போலவே தர்சனம் தந்தாயே –

—————————————————————

தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே
விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகு ஸிஹ்மே வந புவம்
ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ
நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்—-138-

இராவணன் என்ற யானையை அழிப்பதில் வேகம் கொண்ட சிங்கமாக இராமன் அடர்ந்த கானகத்தில் புகுந்தான்.
நீ செய்தது என்ன? பரதன் என்ற குட்டி மீது உள்ள வாத்ஸல்யம் காரணமாக,
நீ அந்தக் குட்டியுடன் கோசல நாடு என்னும் குகைக்குத் திரும்பி விட்டாய்.

ஆண் சிங்கமாகிய இராமன் வெளியே கிளம்பியவுடன், பெண் சிங்கமாகிய பாதுகை செய்தது என்ன?
தனது குட்டிச் சிங்கமான பரதனைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு, அயோத்தி என்ற தனது குகைக்குள் புகுந்தாள்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஆகிற ஆண் சிங்கம் ராவணன் என்கிற மத யானையைப் பிளக்க காட்டுக்கு புறப்பட்டவுடன்
பெண் சிங்கம் போன்ற -நீ குட்டி யாகிற ஸ்ரீ பரதாழ்வான் உடன் கோசல குகைக்குள் வந்து தங்கி விட்டாய் –

——————————————————————–

கைகேயீ வரதாந துர்த்திந நிராலோகஸ்ய லோகஸ்ய யத்
த்ராணார்த்தம் பரதேந பவ்ய மநஸா ஸாகேதம் அநீயத
ராம த்யாக ஸஹைர ஸஹ்ய விரஹம் ரங்கக்ஷி தீந்த்ரஸ்ய தத்
பாத த்ராணாம் அநந்ய தந்த்ர பணி தேர் ஆபீடம் இடீமஹி—-139-

எந்த ஒரு பாதுகையானது – தசரதன் கைகேயிக்கு வரம் கொடுத்த நாளன்று துக்கம் என்ற இருள் மூடிய உலகுக்காக,
நல்ல மனம் படைத்த பரதனால் மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரப்பட்டதோ;
இராமனைப் பிரிய நேரிட்டாலும் சகித்துக் கொண்ட மக்களால், இதன் பிரிவைத் தாங்க இயலாமல் உள்ளனவோ;
யாராலும் இயற்றப்படாமல் உள்ள வேதங்களின் தலைக்கு மகுடம் போன்று உள்ளதும் ஆகிய –
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றியபடி இருக்கும் பாதுகையை நாங்கள் ஸ்துதிக்கிறோம்.

இங்கு பாதுகையின் பலவிதமான மேன்மையைப் பட்டியல் இடுகிறார். இராமனின் பிரிவைத் தாங்க முடிந்த அயோத்தி மக்களால்,
பாதுகையின் பிரிவைத் தாங்க இயலவில்லை என்னும் இந்தக் கருத்தை சற்றே மாற்றி –
அயோத்தி மக்களைப் பிரிந்து இராமனால் இருக்க முடிந்தது, ஆனால் பாதுகையால் இருக்க முடியவில்லை – என்று கொள்ளலாம் –
இதன் மூலம் பாதுகையின் வாத்ஸல்யத்தை உணரலாம்.

கைகேயி கேட்ட வரத்தின் பொருட்டு பெருமாள் ஸ்ரீ பாதுகையே உன்னுடன் ஸ்ரீ தண்ட காரண்யம் போன போது
மகத்தான இருள் ஸ்ரீ அயோதியை சூழ்ந்து கொண்டது –
நீ நல்ல மனசால் ஸ்ரீ பரதாழ்வான் உடன் திரும்பியதும் திரு அயோதியை ரஷிக்கப் பட்டது
வேதங்களுக்கு அலங்காரமான உன்னை ஸ்துதிப்போமாக-
பெருமாள் பிரிவையும் தாங்கிக் கொண்ட திரு அயோத்யா மக்கள் உனது பிரிவை
தாங்க முடிய வில்லையே என்றால் உனது பிரபாவம் தான் என்னே –

———————————————————————————-

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-

பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.

தாய்ப் பசுவானது மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்று, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், கன்றின் ஞாபகம் உண்டாகி விட,
விரைவாக கன்றிடம் ஓடி வரும். இது போன்று பாதுகைக்கு அயோத்தியின் நினைவு வந்தது போலும்.
ஆகையால் மிகவும் விரைவாக அயோத்திக்கு ஓடி வந்தாள்.

ஸ்ரீ பாதுகையே மேய்ச்சல்க்குப் போன பசு மாடுகள் அஸ்தமித்ததும் கொட்டிலுக்கு வருவது போலே
ஜனங்கள் இடம் தாய்ப் பாசம் கொண்ட நீ சித்ர கூடத்தில் நின்றும் திரு அயோத்யைக்கு திரும்பி விட்டாயே –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .